The Old Testament of the Holy Bible

ஆதியாகமம் 1

1 ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். 2 பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார். 3 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று. 4 வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார். 5 தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று. 6 பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார். 7 தேவன் ஆகாயவிரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று. 8 தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று. 9 பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 10 தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 11 அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 12 பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார். 13 சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று. 14 பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார். 15 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 16 தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். 17 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், 18 பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 19 சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று. 20 பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். 21 தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர்வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 22 தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில் பெருகக்கடவது என்றும் சொன்னார். 23 சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள் ஆயிற்று. 24 பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று. 25 தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார். 26 பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். 27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். 28 பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். 29 பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது; 30 பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே ஆயிற்று. 31 அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது; சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று.

ஆதியாகமம் 2

1 இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன. 2 தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார். 3 தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். 4 தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே. 5 நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை. 6 அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது. 7 தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். 8 தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார். 9 தேவனாகிய கர்த்தர், பார்வைக்கு அழகும் புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார். 10 தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று. 11 முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும். 12 அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே பிதோலாகும், கோமேதகக்கல்லும் உண்டு. 13 இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும். 14 மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து என்று பேர். 15 தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார். 16 தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம். 17 ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். 18 பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். 19 தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. 20 அப்படியே ஆதாம் சகலவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. 21 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். 22 தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார். 23 அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான். 24 இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். 25 ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.

ஆதியாகமம் 3

1 தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. 2 ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்; 3 ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக் குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத் தொடவும் வேண்டாம் என்று சொன்னார் என்றாள். 4 அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை; 5 நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது. 6 அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். 7 அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள். 8 பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள். 9 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார். 10 அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான். 11 அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார். 12 அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான். 13 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள். 14 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; 15 உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார். 16 அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார். 17 பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். 18 அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின் பயிர்வகைகளைப் புசிப்பாய். 19 நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார். 20 ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள். 21 தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார். 22 பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, 23 அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். 24 அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.

ஆதியாகமம் 4

1 ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள். 2 பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான். 3 சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான். 4 ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். 5 காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது. 6 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? 7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார். 8 காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன் சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக் கொலைசெய்தான். 9 கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான். 10 அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது. 11 இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப் பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய். 12 நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார். 13 அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட தண்டனை என்னால் சகிக்கமுடியாது. 14 இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான். 15 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார். 16 அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான். 17 காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான். 18 ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான். 19 லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்குச் சில்லாள் என்று பேர். 20 ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன் கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான். 21 அவன் சகோதரனுடைய பேர் யூபால்; அவன் கின்னரக்காரர் நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான். 22 சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன் பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர் யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள். 23 லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, என் சத்தத்துக்குச் செவிகொடுங்கள்; எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்; 24 காயீனுக்காக ஏழுபழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும் என்றான். 25 பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று: காயீன் கொலைசெய்த ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குச் சேத் என்று பேரிட்டாள். 26 சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.

ஆதியாகமம் 5

1 ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார். 2 அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் என்று பேரிட்டார். 3 ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான். 4 ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 5 ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான். 6 சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றான். 7 சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 8 சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பன்னிரண்டு வருஷம்; அவன் மரித்தான். 9 ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான். 10 ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 11 ஏனோசுடைய நாளெல்லாம் தொளாயிரத்து ஐந்து வருஷம்; அவன் மரித்தான். 12 கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றான். 13 கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 14 கேனானுடைய நாளெல்லாம் தொளாயிரத்துப் பத்து வருஷம்; அவன் மரித்தான். 15 மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப் பெற்றான். 16 மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 17 மகலாலெயேலுடைய நாளெல்லாம் எண்ணூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம்; அவன் மரித்தான். 18 யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப் பெற்றான். 19 யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 20 யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்திரண்டு வருஷம்; அவன் மரித்தான். 21 ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றான். 22 ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 23 ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம். 24 ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார். 25 மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது, லாமேக்கைப் பெற்றான். 26 மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 27 மெத்தூசலாவுடைய நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்; அவன் மரித்தான். 28 லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு குமாரனைப் பெற்று, 29 கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான். 30 லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 31 லாமேக்குடைய நாளெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு வருஷம்; அவன் மரித்தான். 32 நோவா ஐந்நூறு வயதானபோது, சேம் காம் யாப்பேத் என்பவர்களைப் பெற்றான்.

ஆதியாகமம் 6

1 மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்குக் குமாரத்திகள் பிறந்தபோது: 2 தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்டார்கள். 3 அப்பொழுது கர்த்தர்: என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார். 4 அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள் அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில் பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள். 5 மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, 6 தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது. 7 அப்பொழுது கர்த்தர்: நான் சிருஷ்டித்த மனுஷனைப் பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு, மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்; நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது என்றார். 8 நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது. 9 நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான். 10 நோவா சேம் காம் யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப் பெற்றான். 11 பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது; பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது. 12 தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல் தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். 13 அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப் பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன். 14 நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை உள்ளும் புறம்புமாகக் கீல்பூசு. 15 நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால், பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும், அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும். 16 நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத் தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து, பேழையின் கதவை அதின் பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின் அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும். 17 வானத்தின்கீழே ஜீவசுவாசமுள்ள சகல மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம். 18 ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள். 19 சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள். 20 ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும் பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரக்கடவது. 21 உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகச் சகலவித போஜனபதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில் வைத்துக்கொள் என்றார். 22 நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.

ஆதியாகமம் 7

1 கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும் பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு முன்பாக நீதிமானாகக் கண்டேன். 2 பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே காக்கும்பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும், ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமல்லாத மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு ஜோடும், 3 ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும் உன்னிடத்தில் சேர்த்துக்கொள். 4 இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான் உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல் இராதபடிக்கு நிக்கிரகம் பண்ணுவேன் என்றார். 5 நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம் செய்தான். 6 ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு வயதாயிருந்தான். 7 ஜலப்பிரளயத்துக்குத் தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசித்தார்கள். 8 தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான மிருகங்களிலும், சுத்தமல்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிலும், 9 ஆணும் பெண்ணும் ஜோடுஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குட்பட்டன. 10 ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று. 11 நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன. 12 நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை பெய்தது. 13 அன்றைத்தினமே நோவாவும், நோவாவின் குமாரராகிய சேமும் காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும், அவன் குமாரரின் மூன்று மனைவிகளும், பேழைக்குள் பிரவேசித்தார்கள். 14 அவர்களோடு ஜாதிஜாதியான சகலவிதக் காட்டு மிருகங்களும், ஜாதிஜாதியான சகலவித நாட்டு மிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற ஜாதிஜாதியான சகலவித ஊரும் பிராணிகளும், ஜாதிஜாதியான சகலவிதப் பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள சகலவிதப் பட்சிகளும் பிரவேசித்தன. 15 இப்படியே ஜீவசுவாசமுள்ள மாம்சஜந்துக்களெல்லாம் ஜோடுஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குள் பிரவேசித்தன. 16 தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும் பெண்ணுமாகச் சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே பிரவேசித்தன; அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளேவிட்டுக் கதவை அடைத்தார். 17 ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது, ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல் மிதந்தது. 18 ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும் பெருகிற்று; பேழையானது ஜலத்தின்மேல் மிதந்துகொண்டிருந்தது. 19 ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப் பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. 20 மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினைந்துமுழ உயரத்திற்கு ஜலம் பெருகிற்று. 21 அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும், நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல் சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன. 22 வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின. 23 மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன. 24 ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும் பிரவாகித்துக்கொண்டிருந்தது.

ஆதியாகமம் 8

1 தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல காட்டு மிருகங்களையும், சகல நாட்டு மிருகங்களையும் நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது. 2 ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும் அடைபட்டன; வானத்து மழையும் நின்றுபோயிற்று. 3 ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே வந்தது; நூற்றைம்பது நாளுக்குப்பின்பு ஜலம் வடிந்தது. 4 ஏழாம் மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும் மலைகளின்மேல் தங்கிற்று. 5 பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டேவந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள் காணப்பட்டன. 6 நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில் செய்திருந்த ஜன்னலைத் திறந்து, 7 ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப் பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும் வருகிறதுமாய் இருந்தது. 8 பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான். 9 பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல், திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப் பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான். 10 பின்னும் ஏழுநாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப் பேழையிலிருந்து வெளியே விட்டான். 11 அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா பூமியின்மேல் ஜலம் குறைந்துபோயிற்று என்று அறிந்தான். 12 பின்னும் ஏழுநாள் பொறுத்து, அவன் புறாவை வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்பி வரவில்லை. 13 அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில், முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்; பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது. 14 இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி காய்ந்திருந்தது. 15 அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: 16 நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன் குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள். 17 உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது என்றார். 18 அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு வந்தார்கள். 19 பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப் பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன. 20 அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி, சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான். 21 சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர்: இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது; நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை. 22 பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும் உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.

ஆதியாகமம் 9

1 பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள். 2 உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும் உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின் மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன. 3 நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத் தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன். 4 மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம். 5 உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப் பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும் பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன் சகோதரனிடத்தில் பழிவாங்குவேன். 6 மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால், மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம் மனுஷனாலே சிந்தப்படக்கடவது. 7 நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து விர்த்தியாகுங்கள் என்றார். 8 பின்னும் தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் நோக்கி: 9 நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியோடும், 10 உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல் இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள்பரியந்தம், பறவைகளோடும், நாட்டு மிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற பூமியிலுள்ள சகல காட்டு மிருகங்களோடும் என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன். 11 இனி மாம்சமானவைகளெல்லாம் ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும், பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம் உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை ஏற்படுத்துகிறேன் என்றார். 12 அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில் இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின் அடையாளமாக: 13 நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். 14 நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில் மேகத்தில் தோன்றும். 15 அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன். 16 அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன். 17 இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும், நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று நோவாவோடே சொன்னார். 18 பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம் காம் யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன். 19 இம்மூவரும் நோவாவின் குமாரர்; இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள். 20 நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான். 21 அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான். 22 அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம் தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான். 23 அப்பொழுது சேமும் யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக்கொண்டு, பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை மூடினார்கள்; அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால், தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை. 24 நோவா திராட்சரசத்தின் வெறிதெளிந்து விழித்தபோது, தன் இளைய குமாரன் தனக்குச் செய்ததை அறிந்து: 25 கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான். 26 சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான். 27 யாப்பேத்தை தேவன் விர்த்தியாக்குவார்; அவன் சேமுடைய கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான் என்றான். 28 ஜலப்பிரளயத்துக்குப்பின்பு நோவா முந்நூற்று ஐம்பது வருஷம் உயிரோடிருந்தான். 29 நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து ஐம்பது வருஷம்; அவன் மரித்தான்.

ஆதியாகமம் 10

1 நோவாவின் குமாரராகிய சேம் காம் யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள். 2 யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள். 3 கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள். 4 யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள். 5 இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன் பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், ஜாதியின்படியேயும், வேறுவேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன. 6 காமுடைய குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள். 7 கூஷுடைய குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள். 8 கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான். 9 இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால், கர்த்தருக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல என்னும் வழக்கச்சொல் உண்டாயிற்று. 10 சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி ஸ்தானங்கள். 11 அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும், 12 நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம். 13 மிஸ்ராயீம், லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும், 14 பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகீமையும், கப்தொரீமையும் பெற்றான். 15 கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும், 16 எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும், 17 ஈவியரையும், அர்கீரியரையும், சீநியரையும், 18 அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும் பரவினார்கள். 19 கானானியரின் எல்லை, சீதோன்முதல் கேரார் வழியாய்க் காசாமட்டுக்கும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா, செபோயிம் வழியாய் லாசாமட்டுக்கும் இருந்தது. 20 இவர்கள் தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் காமுடைய சந்ததியார். 21 சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான். 22 சேமுடைய குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள். 23 ஆராமுடைய குமாரர், ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் என்பவர்கள். 24 அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான். 25 ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பேர் யொக்தான். 26 யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும், 27 அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும், 28 ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும், 29 ஒப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய குமாரர். 30 இவர்களுடைய குடியிருப்பு மேசா துவக்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிமட்டும் இருந்தது. 31 இவர்களே தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும் சேமுடைய சந்ததியார். 32 தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப்பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.

ஆதியாகமம் 11

1 பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரே விதமான பேச்சும் இருந்தது. 2 ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில், சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள். 3 அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது. 4 பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும் சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர் உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். 5 மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் கர்த்தர் இறங்கினார். 6 அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள். 7 நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். 8 அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். 9 பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார். 10 சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றான். 11 சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 12 அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப் பெற்றான். 13 சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 14 சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான். 15 ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 16 ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான். 17 பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 18 பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான். 19 ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 20 ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப் பெற்றான். 21 செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 22 செரூகு முப்பது வயதானபோது, நாகோரைப் பெற்றான். 23 நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 24 நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப் பெற்றான். 25 தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 26 தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான். 27 தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப் பெற்றான். 28 ஆரான் தன் ஜந்மபூமியாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு மரிக்குமுன்னே மரித்தான். 29 ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப் பெண்கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச் சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்; இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன். 30 சாராய்க்குப் பிள்ளையில்லை; மலடியாயிருந்தாள். 31 தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன் ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்துக்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே இருந்துவிட்டார்கள். 32 தேராகுடைய ஆயுசுநாட்கள் இருநூற்றைந்து வருஷம்; தேராகு ஆரானிலே மரித்தான்.

ஆதியாகமம் 12

1 கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. 2 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். 3 உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார். 4 கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன் புறப்பட்டுப்போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். 5 ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்தில் சேர்ந்தார்கள். 6 ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித்திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமிமட்டும் வந்தான்; அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள். 7 கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான். 8 பின்பு அவன் அவ்விடம்விட்டுப் பெயர்ந்து, பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல் தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான். 9 அதின்பின் ஆபிராம் புறப்பட்டு, தெற்கே பிரயாணம்பண்ணிக்கொண்டுபோனான். 10 அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான். 11 அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று அறிவேன். 12 எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை உயிரோடே வைப்பார்கள். 13 ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும், உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி என்று சொல் என்றான். 14 ஆபிராம் எகிப்திலே வந்தபோது, எகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த அழகுள்ளவளென்று கண்டார்கள். 15 பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக் கண்டு, பார்வோனுக்கு முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக் கொண்டுபோகப்பட்டாள். 16 அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்; அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது. 17 ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர் பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால் வாதித்தார். 18 அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து: நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற்போனதென்ன? 19 இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது என்ன? இவளை நான் எனக்கு மனைவியாகக்கொண்டிருப்பேனே; இதோ உன் மனைவி; இவளை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான். 20 பார்வோன் அவனைக் குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவன் மனைவியையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.

ஆதியாகமம் 13

1 ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள். 2 ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான ஆஸ்திகளை உடைய சீமானாயிருந்தான். 3 அவன் தன் பிரயாணங்களிலே தெற்கேயிருந்து பெத்தேல்மட்டும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும், 4 தான் முதல்முதல் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான ஸ்தலமட்டும் போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டான். 5 ஆபிராமுடனே வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும் இருந்தன. 6 அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத் தாங்கக்கூடாதிருந்தது; அவர்களுடைய ஆஸ்தி மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்து வாசம்பண்ண ஏதுவில்லாமற்போயிற்று. 7 ஆபிராமுடைய மந்தைமேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தைமேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும் பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள். 8 ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர். 9 இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான். 10 அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக்கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது. 11 அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே பிரயாணப்பட்டுப்போனான்; இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள். 12 ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம்பண்ணி, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான். 13 சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள். 14 லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார். 15 நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து, 16 உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும். 17 நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன் என்றார். 18 அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

ஆதியாகமம் 14

1 சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகும், ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்; 2 அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநெயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம்பண்ணினார்கள். 3 இவர்களெல்லாரும் உப்புக்கடலாகிய சித்தீம் பள்ளத்தாக்கிலே கூடினார்கள். 4 இவர்கள் பன்னிரண்டு வருஷம் கெதர்லாகோமேரைச் சேவித்து, பதின்மூன்றாம் வருஷத்திலே கலகம்பண்ணினார்கள். 5 பதினாலாம் வருஷத்திலே கெதர்லாகோமேரும், அவனோடே கூடியிருந்த ராஜாக்களும் வந்து, அஸ்தரோத்கர்னாயீமிலே இருந்த ரெப்பாயீமியரையும், காமிலே இருந்த சூசிமியரையும், சாவேகீரியத்தாயீமிலே இருந்த ஏமியரையும், 6 சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும், வனாந்தரத்துக்கு அருகான எல்பாரான்மட்டும் முறியடித்து, 7 திரும்பிக் காதேஸ் என்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து, அமலேக்கியருடைய நாடனைத்தையும், அத்சாத்சோன் தாமாரிலே குடியிருந்த எமோரியரையும்கூடச் சங்கரித்தார்கள். 8 அப்பொழுது சோதோமின் ராஜாவும், கொமோராவின் ராஜாவும், அத்மாவின் ராஜாவும், செபோயீமின் ராஜாவும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவும் புறப்பட்டுச் சித்தீம் பள்ளத்தாக்கிலே, 9 ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலோடும், சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலோடும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம்பண்ணப் புறப்பட்டு, அந்த ஐந்து ராஜாக்களோடும் இந்த நாலு ராஜாக்களும் யுத்தம்பண்ணினார்கள். 10 அந்தச் சித்தீம் பள்ளத்தாக்கு எங்கும் நிலக்கீல் உண்டாகும் கேணிகள் இருந்தது. சோதோம் கொமோராவின் ராஜாக்கள் முறிந்தோடி அங்கே விழுந்தார்கள்; மீந்தவர்கள் மலைகளுக்கு ஓடிப்போனார்கள். 11 அப்பொழுது அவர்கள் சோதோமிலும் கொமோராவிலுமுள்ள பொருள்கள் எல்லாவற்றையும், போஜனபதார்த்தங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள். 12 ஆபிராமின் சகோதரனுடைய குமாரனாகிய லோத்து சோதோமிலே குடியிருந்தபடியால், அவனையும், அவன் பொருள்களையும் கொண்டுபோய்விட்டார்கள். 13 தப்பியோடின ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடத்தில் வந்து அதை அறிவித்தான்; ஆபிராம் தன்னோடே உடன்படிக்கை செய்திருந்த மனிதராகிய எஸ்கோலுக்கும் ஆநேருக்கும் சகோதரனாகிய மம்ரே என்னும் எமோரியனுடைய சமபூமியிலே அப்பொழுது குடியிருந்தான். 14 தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும் ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத் தொடர்ந்து, 15 இராக்காலத்திலே அவனும் அவன் வேலைக்காரரும் பிரிந்து, பவிஞ்சுகளாய் அவர்கள்மேல் விழுந்து, அவர்களை முறியடித்து, தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாமட்டும் துரத்தி, 16 சகல பொருள்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய லோத்தையும், அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக்கொண்டுவந்தான். 17 அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர்கொண்டுபோனான். 18 அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொண்டுவந்து, 19 அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு உண்டாவதாக. 20 உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான். 21 சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: ஜனங்களை எனக்குத் தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும் என்றான். 22 அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும், உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும் எடுத்துக்கொள்ளேன் என்று, 23 வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன். 24 வாலிபர் சாப்பிட்டதுபோக, என்னுடனே வந்த ஆநேர், எஸ்கோல், மம்ரே என்னும் புருஷருடைய பங்குமாத்திரமே வரவேண்டும்; இவர்கள் தங்கள் பங்கை எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.

ஆதியாகமம் 15

1 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார். 2 அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்கர்த்தனாய் இருக்கிறானே என்றான். 3 பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திரசந்தானம் அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச் சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான். 4 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி, 5 அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்துபார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார். 6 அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார். 7 பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்துவந்த கர்த்தர் நானே என்றார். 8 அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச் சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன் என்றான். 9 அதற்கு அவர்: மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும், ஒரு காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில் கொண்டுவா என்றார். 10 அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து, துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்; பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை. 11 பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம் துரத்தினான். 12 சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது. 13 அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார் தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து, அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய் அறியக்கடவாய். 14 இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்; பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள். 15 நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய். 16 நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார். 17 சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜுவாலையும் தோன்றின. 18 அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி, எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய நதிமட்டுமுள்ளதும், 19 கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும், 20 ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும், 21 எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும் என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக் கொடுத்தேன் என்றார்.

ஆதியாகமம் 16

1 ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர்கொண்ட ஒரு அடிமைப்பெண் அவளுக்கு இருந்தாள். 2 சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப்பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான். 3 ஆபிராம் கானான்தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள். 4 அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள். 5 அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப்பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள். 6 அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள். 7 கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு: 8 சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள். 9 அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார். 10 பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார். 11 பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக. 12 அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். 13 அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும் இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி, தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று பேரிட்டாள். 14 ஆகையால், அந்தத் துரவு பெயர் லகாய்ரோயீ என்னப்பட்டது; அது காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கிறது. 15 ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; ஆபிராம் ஆகார் பெற்ற தன் குமாரனுக்கு இஸ்மவேல் என்று பேரிட்டான். 16 ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம் எண்பத்தாறு வயதாயிருந்தான்.

ஆதியாகமம் 17

1 ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. 2 நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார். 3 அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி: 4 நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய். 5 இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும். 6 உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள் தோன்றுவார்கள். 7 உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான் தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். 8 நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும், உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்றார். 9 பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும், உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என் உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள். 10 எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ளவேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால், உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; 11 உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும். 12 உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம்நாளிலே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன் வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக் கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும். 13 உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக் கொள்ளப்பட்டவனும், விருத்தசேதனம் பண்ணப்படவேண்டியது அவசியம்; இப்படி என் உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக இருக்கக்கடவது. 14 நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என் உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார். 15 பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது அவளுக்குப் பேராயிருக்கும். 16 நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார். 17 அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து: நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டு, 18 இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினான். 19 அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள் நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன். 20 இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்; நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப் பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய ஜாதியாக்குவேன். 21 வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப் பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன் என்றார். 22 தேவன் ஆபிரகாமோடே பேசி முடிந்தபின்பு, அவர் அவனைவிட்டு எழுந்தருளினார். 23 அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம்பண்ணினான். 24 ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான். 25 அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று வயதாயிருந்தான். 26 ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும் விருத்தசேதனம் பண்ணப்பட்டார்கள். 27 வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக் கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள் எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.

ஆதியாகமம் 18

1 பின்பு கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத் தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில் கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து, 2 தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே, அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு ஓடித் தரைமட்டும் குனிந்து: 3 ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்துபோகவேண்டாம். 4 கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும், உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில் சாய்ந்துகொண்டிருங்கள். 5 நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக் கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம் நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன் இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ சொன்னபடி செய் என்றார்கள். 6 அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில் சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான். 7 ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப் பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான். 8 ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்துவந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்றுகொண்டிருந்தான்; அவர்கள் புசித்தார்கள். 9 அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான். 10 அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப் பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். 11 ஆபிரகாமும் சாராளும் வயதுசென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்றுபோயிற்று. 12 ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான் கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள். 13 அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்? 14 கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ? உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். 15 சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள். அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார். 16 பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம் விட்டு, சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய் வழிவிட்டனுப்பினான். 17 அப்பொழுது கர்த்தர்: ஆபிரகாம் பெரிய பலத்த ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும், 18 நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ? 19 கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப் பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும் செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார். 20 பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும், 21 நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின் கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ என்று பார்த்து அறிவேன் என்றார். 22 அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம் விட்டுச் சோதோமை நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். 23 அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து: துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ? 24 பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள் இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? 25 துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய் நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான். 26 அதற்குக் கர்த்தர்: நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக் கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன் என்றார். 27 அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும் சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன். 28 ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்; அந்த ஐந்துபேர்நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான். அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார். 29 அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். 30 அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன், ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான் முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை என்றார். 31 அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்; இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். 32 அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார். 33 கர்த்தர் ஆபிரகாமோடே பேசி முடிந்தபின்பு போய்விட்டார்; ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.

ஆதியாகமம் 19

1 அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான். அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும் குனிந்து: 2 ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டு முகமாய் நீங்கள் திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில் எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள். 3 அவன் அவர்களை மிகவும் வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன் புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள். 4 அவர்கள் படுக்கும் முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய வாலிபர்முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும் நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு, 5 லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர் எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை எங்களிடத்தில் வெளியே கொண்டுவா என்றார்கள். 6 அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து, தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்: 7 சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம். 8 இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு; அவர்களை உங்களிடத்திற்கு வெளியே கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள்; இந்தப் புருஷர் என் கூரையின் நிழலிலே வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும் செய்யவேண்டாம் என்றான். 9 அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச் செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி, லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக் கிட்டினார்கள். 10 அப்பொழுது அந்தப் புருஷர்கள் தங்கள் கைகளை வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் அண்டைக்கு வீட்டுக்குள் இழுத்துக்கொண்டு, கதவைப் பூட்டி, 11 தெருவாசலிலிருந்த சிறியோரும் பெரியோருமாகிய மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள்; அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி அலுத்துப்போனார்கள். 12 பின்பு அந்தப் புருஷர் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் இன்னும் உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன் குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டுபோ. 13 நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல் கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக் கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள். 14 அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள் எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப் பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன் பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது. 15 கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை நோக்கி: பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன் மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும் அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத் துரிதப்படுத்தினார்கள். 16 அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர் அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன் கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய் விட்டார்கள். 17 அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு, அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச் சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ என்றார். 18 அதற்கு லோத்து: அப்படியல்ல ஆண்டவரே, 19 உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபை கிடைத்ததே; என் பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப் பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான் மரித்துப்போவேன். 20 அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது, சின்னதுமாய் இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும், அது சின்ன ஊர்தானே என்றான். 21 அதற்கு அவர்: நீ கேட்டுக்கொண்ட ஊரை நான் கவிழ்த்துப்போடாதபடிக்கு, இந்த விஷயத்திலும் உனக்கு அநுக்கிரகம் பண்ணினேன். 22 தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக் கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது. 23 லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது. 24 அப்பொழுது கர்த்தர் சோதோமின்மேலும் கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி, 25 அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார். 26 அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள். 27 விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு முன்பாக நின்ற இடத்திற்குப் போய், 28 சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும், சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப் பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று. 29 தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன் ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம் கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து தப்பிப்போகும்படி அனுப்பிவிட்டார். 30 பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய், அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனுடைய இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள். 31 அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை. 32 நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா என்றாள். 33 அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். 34 மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள். 35 அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய், அவனோடே சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான். 36 இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள். 37 மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன். 38 இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.

ஆதியாகமம் 20

1 ஆபிரகாம் அவ்விடம் விட்டு, தென் தேசத்திற்குப் பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான். 2 அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான். 3 தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயினிமித்தம் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார். 4 அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்: ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ? 5 இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான். 6 அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை. 7 அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச் சொன்னார். 8 அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் ஊழியக்காரரையெல்லாம் அழைப்பித்து, இந்தச் சங்கதிகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனுஷர் மிகவும் பயந்தார்கள். 9 அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து: நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான். 10 பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: என்னத்தைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான். 11 அதற்கு ஆபிரகாம்: இவ்விடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன். 12 அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என் தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல; அவள் எனக்கு மனைவியானாள். 13 என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தரியாய்த் திரியும்படி செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும் இடமெங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன் என்றான். 14 அப்பொழுது அபிமெலேக்கு ஆடுமாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான். 15 பின்னும் அபிமெலேக்கு: இதோ, என் தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; உன் பார்வைக்குச் சம்மதியான இடத்திலே குடியிரு என்று சொன்னான். 16 பின்பு சாராளை நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லார் முன்பாகவும், மற்ற யாவர் முன்பாகவும், இது உன் முகத்து முக்காட்டுக்காவதாக என்றான்; இப்படி அவள் கடிந்துகொள்ளப்பட்டாள். 17 ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளினிமித்தம் கர்த்தர் அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்தபடியால், 18 ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன் மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி, பிள்ளைபெறும்படி அநுக்கிரகம் பண்ணினார்.

ஆதியாகமம் 21

1 கர்த்தர் தாம் சொல்லியிருந்தபடி சாராள்பேரில் கடாட்சமானார்; கர்த்தர் தாம் உரைத்தபடியே சாராளுக்குச் செய்தருளினார். 2 ஆபிரகாம் முதிர்வயதாயிருக்கையில், சாராள் கர்ப்பவதியாகி, தேவன் குறித்திருந்த காலத்திலே அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். 3 அப்பொழுது ஆபிரகாம் தனக்குச் சாராள் பெற்ற குமாரனுக்கு ஈசாக்கு என்று பேரிட்டான். 4 தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த எட்டாம் நாளிலே, ஆபிரகாம் தனக்குத் தேவன் கட்டளையிட்டிருந்தபடி அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். 5 தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்தபோது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான். 6 அப்பொழுது சாராள்: தேவன் என்னை நகைக்கப்பண்ணினார்; இதைக் கேட்கிற யாவரும் என்னோடேகூட நகைப்பார்கள். 7 சாராள் பிள்ளைகளுக்குப் பால்கொடுப்பாள் என்று ஆபிரகாமுக்கு எவன் சொல்லுவான்? அவருடைய முதிர்வயதிலே அவருக்கு ஒரு குமாரனைப் பெற்றேனே என்றாள். 8 பிள்ளை வளர்ந்து, பால் மறந்தது; ஈசாக்கு பால் மறந்தநாளிலே ஆபிரகாம் பெரிய விருந்துபண்ணினான். 9 பின்பு எகிப்துதேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு, 10 ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப்பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப்பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றாள். 11 தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது. 12 அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி: அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள். 13 அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார். 14 ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயெர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள். 15 துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு, 16 பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள். 17 தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு: ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார். 18 நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார். 19 தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள். 20 தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான். 21 அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள். 22 அக்காலத்தில் அபிமெலேக்கும் அவன் சேனாபதியாகிய பிகோலும் ஆபிரகாமை நோக்கி: நீ செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் தேவன் உன்னுடனே இருக்கிறார். 23 ஆகையால், நீ எனக்காவது, என் குமாரனுக்காவது, என் பேரனுக்காவது வஞ்சனை செய்யாமல், நான் உனக்குச் செய்த தயவின்படியே, நீ எனக்கும், நீ தங்கியிருக்கிற இந்தத் தேசத்திற்கும், தயவுசெய்வேன் என்று இங்கே தேவன் பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான். 24 அதற்கு ஆபிரகாம்: நான் ஆணையிட்டுக்கொடுக்கிறேன் என்றான். 25 ஆனாலும், அபிமெலேக்குடைய வேலைக்காரர் கைவசப்படுத்திக்கொண்ட துரவின் நிமித்தம் ஆபிரகாம் அபிமெலேக்கைக் கடிந்துகொண்டான். 26 அதற்கு அபிமெலேக்கு: இந்தக் காரியத்தைச் செய்தவன் இன்னான் என்று எனக்குத் தெரியாது, நீயும் எனக்கு அறிவிக்கவில்லை; இன்று நான் அதைக் கேட்டதேயன்றி, இதற்குமுன் அதை நான் கேள்விப்பட்டதே இல்லை என்றான். 27 அப்பொழுது ஆபிரகாம் ஆடுமாடுகளைக் கொண்டுவந்து அபிமெலேக்குக்குக் கொடுத்தான்; அவர்கள் இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள். 28 ஆபிரகாம் ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளைத் தனியே நிறுத்தினான். 29 அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: நீ தனியே நிறுத்தின இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகள் என்னத்திற்கு என்று கேட்டான். 30 அதற்கு அவன்: நான் இந்தத் துரவு தோண்டினதைக்குறித்து, நீர் சாட்சியாக இந்த ஏழு பெண்ணாட்டுக்குட்டிகளை என் கையில் வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான். 31 அவர்கள் இருவரும் அவ்விடத்தில் ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் பெயெர்செபா என்னப்பட்டது. 32 அவர்கள் பெயெர்செபாவிலே உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின் அபிமெலேக்கும், அவன் சேனாபதியாகிய பிகோலும் எழுந்து பெலிஸ்தருடைய தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். 33 ஆபிரகாம் பெயெர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான். 34 ஆபிரகாம் பெலிஸ்தருடைய தேசத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.

ஆதியாகமம் 22

1 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, தேவன் ஆபிரகாமைச் சோதித்தார்; எப்படியெனில், அவர் அவனை நோக்கி: ஆபிரகாமே என்றார்; அவன்: இதோ அடியேன் என்றான். 2 அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு, மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின்மேல் அவனைத் தகனபலியாகப் பலியிடு என்றார். 3 ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, தன் வேலைக்காரரில் இரண்டுபேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு, தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு, தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப்போனான். 4 மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான். 5 அப்பொழுது ஆபிரகாம் தன் வேலைக்காரரை நோக்கி: நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுதுகொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம் என்றான். 6 ஆபிரகாம் தகனபலிக்குக் கட்டைகளை எடுத்து, தன் குமாரனாகிய ஈசாக்கின்மேல் வைத்து, தன் கையிலே நெருப்பையும் கத்தியையும் எடுத்துக்கொண்டான்; இருவரும் கூடிப்போனார்கள். 7 அப்பொழுது ஈசாக்கு தன் தகப்பனாகிய ஆபிரகாமை நோக்கி: என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: என் மகனே, இதோ, இருக்கிறேன் என்றான்; அப்பொழுது அவன்: இதோ, நெருப்பும் கட்டையும் இருக்கிறது, தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே என்றான். 8 அதற்கு ஆபிரகாம்: என் மகனே, தேவன் தமக்குத் தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைப் பார்த்துக்கொள்வார் என்றான்; அப்புறம் இருவரும் கூடிப்போய், 9 தேவன் அவனுக்குச் சொல்லியிருந்த இடத்துக்கு வந்தார்கள்; அங்கே ஆபிரகாம் ஒரு பலிபீடத்தை உண்டாக்கி, கட்டைகளை அடுக்கி, தன் குமாரனாகிய ஈசாக்கைக் கட்டி, அந்தப் பலிபீடத்தில் அடுக்கிய கட்டைகளின்மேல் அவனைக் கிடத்தினான். 10 பின்பு ஆபிரகாம் தன் குமாரனை வெட்டும்படிக்குத் தன் கையை நீட்டிக் கத்தியை எடுத்தான். 11 அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர் வானத்திலிருந்து, ஆபிரகாமே, ஆபிரகாமே என்று கூப்பிட்டார்; அவன்: இதோ, அடியேன் என்றான். 12 அப்பொழுது அவர்: பிள்ளையாண்டான்மேல் உன் கையைப் போடாதே, அவனுக்கு ஒன்றும் செய்யாதே; நீ அவனை உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் எனக்காக ஒப்புக்கொடுத்தபடியினால் நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார். 13 ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப் பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான். 14 ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. 15 கர்த்தருடைய தூதனானவர் இரண்டாந்தரம் வானத்திலிருந்து ஆபிரகாமைக் கூப்பிட்டு: 16 நீ உன் புத்திரன் என்றும், உன் ஏகசுதன் என்றும் பாராமல் அவனை ஒப்புக்கொடுத்து இந்தக் காரியத்தைச் செய்தபடியால்; 17 நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றும், உன் சந்ததியார் தங்கள் சத்துருக்களின் வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்றும், 18 நீ என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்தபடியினால், உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றும் என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். 19 ஆபிரகாம் தன் வேலைக்காரரிடத்துக்குத் திரும்பிவந்தான்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, ஏகமாய்ப் பெயெர்செபாவுக்குப் போனார்கள்; ஆபிரகாம் பெயெர்செபாவிலே குடியிருந்தான். 20 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, ஒருவன் ஆபிரகாமிடத்தில் வந்து: மில்க்காளும் உன் சகோதரனாகிய நாகோருக்குப் பிள்ளைகளைப் பெற்றாள்; 21 அவர்கள் யாரென்றால், முதற்பேறான ஊத்ஸ், அவன் தம்பியாகிய பூஸ், ஆராமுக்குத் தகப்பனாகிய கேமுவேல், 22 கேசேத், ஆசோ, பில்தாஸ், இத்லாப், பெத்துவேல் என்பவர்கள்; பெத்துவேல் ரெபெக்காளைப் பெற்றான் என்று அறிவித்தான். 23 அந்த எட்டுப்பேரை மில்க்காள் ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோருக்குப் பெற்றாள். 24 ரேயுமாள் என்று பேர்கொண்ட அவனுடைய மறுமனையாட்டியும், தேபா, காகாம், தாகாஸ், மாகா என்பவர்களைப் பெற்றாள்.

ஆதியாகமம் 23

1 சாராள் நூற்று இருபத்தேழு வருஷம் உயிரோடிருந்தாள்; இவ்வளவே சாராளுடைய வயது. 2 கானான் தேசத்திலுள்ள எபிரோன் என்னும் கீரியாத்அர்பாவிலே சாராள் மரித்தாள்; அப்பொழுது ஆபிரகாம் வந்து, சாராளுக்காகப் புலம்பி அழுதான். 3 பின்பு ஆபிரகாம் பிரேதம் இருந்த இடத்திலிருந்து எழுந்துபோய், ஏத்தின் புத்திரரோடே பேசி: 4 நான் உங்களிடத்தில் அந்நியனும் பரதேசியுமாய் இருக்கிறேன்; என்னிடத்திலிருக்கிற இந்தப் பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு நான் அதை அடக்கம்பண்ணுவதற்கு, உங்களிடத்தில் எனக்குச் சொந்தமாக ஒரு கல்லறைப் பூமியைத் தரவேண்டும் என்றான். 5 அதற்கு ஏத்தின் புத்திரர் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக: 6 எங்கள் ஆண்டவனே, நாங்கள் சொல்லுகிறதைக் கேளும்; எங்களுக்குள்ளே நீர் மகா பிரபு; எங்கள் கல்லறைகளில் முக்கியமானதிலே பிரேதத்தை அடக்கம்பண்ணும்; நீர் பிரேதத்தை அடக்கம்பண்ண எங்களில் ஒருவனும் தன் கல்லறையை உமக்குத் தடைசெய்வதில்லை என்றார்கள். 7 அப்பொழுது ஆபிரகாம் எழுந்திருந்து, ஏத்தின் புத்திரராகிய அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து, 8 அவர்களோடே பேசி: என்னிடத்திலிருக்கிற பிரேதம் என் கண்முன் இராதபடிக்கு, நான் அதை அடக்கம்பண்ண உங்களுக்குச் சம்மதியானால், நீங்கள் என் வார்த்தையைக் கேட்டு, சோகாருடைய குமாரனாகிய எப்பெரோன், 9 தன் நிலத்தின் கடைசியிலே இருக்கிற மக்பேலா என்னப்பட்ட குகையை எனக்குச் சொந்தமான கல்லறைப் பூமியாயிருக்கும்படி தரவேண்டும் என்று, அவரிடத்தில் எனக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; அது பெறுமான விலைக்கு அவர் அதைத் தருவாராக என்றான். 10 எப்பெரோன் ஏத்தின் புத்திரர் நடுவிலே உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏத்தியனாகிய எப்பெரோன் தன் ஊர் வாசலுக்குள் பிரவேசிக்கிற ஏத்தின் புத்திரர் அனைவரும் கேட்க ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக: 11 அப்படியல்ல, என் ஆண்டவனே, என் வார்த்தையைக் கேளும்; அந்த நிலத்தை உமக்குத் தருகிறேன், அதிலிருக்கும் குகையையும் உமக்குத் தருகிறேன், என் ஜனப்புத்திரருடைய கண்களுக்கு முன்பாக அதை உமக்குத் தருகிறேன், உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம்பண்ணும் என்றான். 12 அப்பொழுது ஆபிரகாம் அத்தேசத்தாருக்கு வந்தனம் செய்து, 13 தேசத்து ஜனங்கள் கேட்க, எப்பெரோனை நோக்கி: கொடுக்க உமக்கு மனதானால் என் வார்த்தையைக் கேளும்; நிலத்தின் விலையைத் தருகிறேன்; என் கையில் அதை வாங்கிக்கொள்ளும்; அப்பொழுது என்னிடத்திலிருக்கிற பிரேதத்தை அவ்விடத்தில் அடக்கம்பண்ணுவேன் என்றான். 14 அதற்கு எப்பெரோன் ஆபிரகாமுக்குப் பிரதியுத்தரமாக: 15 என் ஆண்டவனே, நான் சொல்லுகிறதைக் கேளும்; அந்த நிலம் நானூறு சேக்கல் நிறை வெள்ளி பெறும்; எனக்கும் உமக்கும் அது எவ்வளவு காரியம்; நீர் உம்மிடத்திலிருக்கிற பிரேதத்தை அடக்கம்பண்ணும் என்றான். 16 அப்பொழுது ஆபிரகாம் எப்பெரோனின் சொல்லைக் கேட்டு, ஏத்தின் புத்திரருக்கு முன்பாக எப்பெரோன் சொன்னபடியே, வர்த்தகரிடத்தில் செல்லும்படியான நானூறு சேக்கல் நிறை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக் கொடுத்தான். 17 இந்தப்பிரகாரம் மம்ரேக்கு எதிரே மக்பேலாவிலுள்ள எப்பெரோனுடைய நிலமாகிய அந்தப் பூமியும், அதிலுள்ள குகையும், நிலத்தின் எல்லையெங்கும் சூழ்ந்திருக்கிற மரங்கள் அடங்கலும், 18 அவனுடைய ஊர்வாசலுக்குள் பிரவேசிக்கும் ஏத்தின் புத்திரர் எல்லாரும் அறிய ஆபிரகாமுக்குச் சொந்தமாக உறுதிப்படுத்தப்பட்டது. 19 அதற்குப்பின் ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைக் கானான்தேசத்தில் எப்பெரோன் ஊர் பூமியான மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்தின் குகையிலே அடக்கம்பண்ணினான். 20 இப்படி ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்ட அந்த நிலமும், அதிலுள்ள குகையும், ஆபிரகாமுக்குச் சொந்த கல்லறைப் பூமியாக உறுதிப்படுத்தப்பட்டது.

ஆதியாகமம் 24

1 ஆபிரகாம் வயதுசென்று முதிர்ந்தவனானான். கர்த்தர் ஆபிரகாமைச் சகல காரியங்களிலும் ஆசீர்வதித்துவந்தார். 2 அப்பொழுது ஆபிரகாம் தன் வீட்டிலுள்ளவர்களில் வயதில் மூத்தவனும், தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் அதிகாரியுமாகிய தன் ஊழியக்காரனை நோக்கி: 3 நான் குடியிருக்கிற கானானியருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல்; 4 நீ என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனாகிய ஈசாக்குக்குப் பெண்கொள்வேன் என்று, வானத்துக்குத் தேவனும் பூமிக்குத் தேவனுமாகிய கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டுக்கொடுக்கும்படிக்கு, நீ உன் கையை என் தொடையின்கீழ் வை என்றான். 5 அதற்கு அந்த ஊழியக்காரன்: அவ்விடத்துப் பெண் என் பின்னே இந்தத் தேசத்துக்கு வர மனதில்லாதிருந்தால், நீர் விட்டுவந்த தேசத்திற்குத்தானே உம்முடைய குமாரனை மறுபடியும் அழைத்துப்போகவேண்டுமோ என்று கேட்டான். 6 அதற்கு ஆபிரகாம்: நீ என் குமாரனை மறுபடியும் அங்கே அழைத்துக்கொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. 7 என்னை என் தகப்பனுடைய வீட்டிலும் என் இனத்தார் இருக்கிற தேசத்திலுமிருந்து அழைத்து வந்தவரும், உன் சந்ததிக்கு இந்த தேசத்தைத் தருவேன் என்று எனக்குச் சொல்லி ஆணையிட்டவருமான வானத்துக்குத் தேவனாகிய கர்த்தர், நீ அங்கேயிருந்து என் குமாரனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவரும்படிக்கு, தம்முடைய தூதனை உனக்கு முன்பாக அனுப்புவார். 8 பெண் உன் பின்னே வர மனதில்லாதிருந்தாளேயாகில், அப்பொழுது நீ இந்த என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அங்கேமாத்திரம் என் குமாரனை மறுபடியும் அழைத்துக்கொண்டு போகவேண்டாம் என்றான். 9 அப்பொழுது அந்த ஊழியக்காரன் தன் கையைத் தன் எஜமானாகிய ஆபிரகாமுடைய தொடையின்கீழ் வைத்து, இந்தக் காரியத்தைக்குறித்து அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். 10 பின்பு அந்த ஊழியக்காரன் தன் எஜமானுடைய ஒட்டகங்களில் பத்து ஒட்டகங்களைத் தன்னுடனே கொண்டுபோனான்; தன் எஜமானுடைய சகலவித உச்சிதமான பொருள்களும் அவன் கையில் இருந்தன; அவன் எழுந்து புறப்பட்டுப்போய், மெசொப்பொத்தாமியாவிலே நாகோருடைய ஊரில் சேர்ந்து, 11 ஊருக்குப் புறம்பே ஒரு தண்ணீர்த் துரவண்டையிலே, தண்ணீர் மொள்ள ஸ்திரீகள் புறப்படுகிற சாயங்கால வேளையிலே, ஒட்டகங்களை மடக்கி, தனக்குள்ளே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: 12 என் எஜமானாகிய ஆபிரகாமுக்கு தேவனாயிருக்கிற கர்த்தாவே, இன்றைக்கு நீர் எனக்குக் காரியம் சித்திக்கப்பண்ணி, என் எஜமானாகிய ஆபிரகாமுக்குத் தயவுசெய்தருளும். 13 இதோ, நான் இந்தத் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், இந்த ஊராருடைய பெண்கள் தண்ணீர் மொள்ளப் புறப்பட்டு வருவார்களே. 14 நான் குடிக்க உன் குடத்தைச் சாய்க்க வேண்டும் என்று நான் சொல்லும்போது: குடி என்றும், உன் ஒட்டகங்களும் குடிக்கும்படி வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண் எவளோ, அவளே நீர் உம்முடைய ஊழியக்காரனாகிய ஈசாக்குக்கு நியமித்தவளாயிருக்கவும், என் எஜமானுக்கு அநுக்கிரகம் செய்தீர் என்று நான் அதினாலே அறியவும் செய்தருளும் என்றான். 15 அவன் இப்படிச் சொல்லி முடிக்கும் முன்னே, இதோ, ஆபிரகாமுடைய சகோதரனாகிய நாகோரின் மனைவி மில்க்காளுடைய குமாரனாயிருக்கிற பெத்துவேலுக்குப் பிறந்த ரெபெக்காள் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டு வந்தாள். 16 அந்தப் பெண் மகா ரூபவதியும், புருஷனை அறியாத கன்னிகையுமாய் இருந்தாள்; அவள் துரவில் இறங்கி, தன் குடத்தை நிரப்பிக்கொண்டு ஏறிவந்தாள். 17 அப்பொழுது அந்த ஊழியக்காரன், அவளுக்கு எதிர்கொண்டோடி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் குடிக்கத் தரவேண்டும் என்றான். 18 அதற்கு அவள்: குடியும் என் ஆண்டவனே என்று சீக்கிரமாய்க் குடத்தைத் தன் கையில் இறக்கிக்கொண்டு, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள். 19 கொடுத்தபின், உம்முடைய ஒட்டகங்களும் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் மொண்டு வார்ப்பேன் என்று சொல்லி; 20 சீக்கிரமாய்த் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்த்தாள். 21 அந்த மனிதன் அவளைக்குறித்து ஆச்சரியப்பட்டு, கர்த்தர் தன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணினாரோ இல்லையோ என்று அறியும்பொருட்டு மவுனமாயிருந்தான். 22 ஒட்டகங்கள் குடித்துத் தீர்ந்தபின், அந்த மனிதன் அரைச்சேக்கல் எடையுள்ள பொற்காதணியையும், அவள் கைகளுக்குப் பத்துச் சேக்கல் எடைப் பொன்னுள்ள இரண்டு கடகங்களையும் எடுத்துக்கொடுத்து, 23 நீ யாருடைய மகள், எனக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் உன் தகப்பன் வீட்டில் இராத்தங்க இடம் உண்டா என்றான். 24 அதற்கு அவள்: நான் நாகோருக்கு மில்க்காள் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்று சொன்னதுமன்றி, 25 எங்களிடத்தில் வைக்கோலும் தீவனமும் வேண்டியமட்டும் இருக்கிறது; இராத்தங்க இடமும் உண்டு என்றாள். 26 அப்பொழுது அந்த மனிதன் தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, 27 என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் தம்முடைய கிருபையையும், தம்முடைய உண்மையையும் என் எஜமானை விட்டு நீக்கவில்லை; நான் பிரயாணம்பண்ணிவருகையில், கர்த்தர் என் எஜமானுடைய சகோதரர் வீட்டுக்கு என்னை அழைத்துக்கொண்டுவந்தார் என்றான். 28 அந்தப் பெண் ஓடி, இந்தக் காரியங்களைத் தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்தாள். 29 ரெபெக்காளுக்கு ஒரு சகோதரன் இருந்தான்; அவனுக்கு லாபான் என்று பேர்; அந்த லாபான் வெளியே துரவண்டையில் இருந்த அந்த மனிதனிடத்துக்கு ஓடினான். 30 அவன் தன் சகோதரி தரித்திருந்த அந்தக் காதணியையும், அவள் கைகளில் போட்டிருந்த கடகங்களையும் பார்த்து, இன்ன இன்னபடி அந்த மனிதன் என்னோடே பேசினானென்று தன் சகோதரி ரெபெக்காள் சொன்ன வார்த்தைகளைக் கேட்டமாத்திரத்தில், அந்த மனிதனிடத்தில் வந்தான்; அவன் துரவு அருகே ஒட்டகங்கள் அண்டையில் நின்றுகொண்டிருந்தான். 31 அப்பொழுது அவன்: கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, உள்ளே வாரும்; நீர் வெளியே நிற்பானேன்? உமக்கு வீடும், ஒட்டகங்களுக்கு இடமும் ஆயத்தம்பண்ணியிருக்கிறேன் என்றான். 32 அப்பொழுது அந்த மனிதன் வீட்டுக்குப் போனான். லாபான் ஒட்டகங்களின் கட்டவிழ்த்து, ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீவனமும் போட்டு, அவனும், அவனோடே வந்தவர்களும் தங்கள் கால்களைக் கழுவிக்கொள்ளத் தண்ணீர் கொடுத்தான். 33 பின்பு, அவனுக்கு முன்பாக போஜனம் வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் என்றான். அதற்கு அவன், சொல்லும் என்றான். 34 அப்பொழுது அவன்: நான் ஆபிரகாமுடைய ஊழியக்காரன். 35 கர்த்தர் என் எஜமானை மிகவும் ஆசீர்வதித்திருக்கிறார், அவர் சீமானாயிருக்கிறார்; கர்த்தர் அவருக்கு ஆடுமாடுகளையும், வெள்ளியையும், பொன்னையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொடுத்திருக்கிறார். 36 என் எஜமானுடைய மனைவியாகிய சாராள் முதிர்வயதானபோது, என் எஜமானுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவர் தமக்கு உண்டான யாவையும் அவனுக்குக் கொடுத்திருக்கிறார். 37 என் எஜமான் என்னை நோக்கி: நான் குடியிருக்கிற கானான் தேசத்தாருடைய குமாரத்திகளில் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்ளாமல், 38 நீ என் தகப்பன் வீட்டுக்கும், என் இனத்தாரிடத்துக்கும் போய், என் குமாரனுக்குப் பெண்கொள்ளவேண்டும் என்று ஆணையிட்டுக்கொடுக்கும்படி சொன்னார். 39 அப்பொழுது நான் என் எஜமானை நோக்கி: ஒருவேளை அந்தப் பெண் என்பின்னே வராதேபோனாலோ என்று கேட்டதற்கு, 40 அவர்: நான் வழிபடும் கர்த்தர் உன்னோடே தம்முடைய தூதனை அனுப்பி, உன் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணுவார்; என் இனத்தாரிடத்திலும், என் தகப்பன் வீட்டிலும் நீ என் குமாரனுக்குப் பெண்கொள்வாய். 41 நீ என் இனத்தாரிடத்துக்குப் போனால், என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பெண்கொடாமற்போனாலும், நீ என் ஆணைக்கு நீங்கலாயிருப்பாய் என்றார். 42 அப்படியே நான் இன்று துரவண்டையிலே வந்து: என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாகிய கர்த்தரே, என் பிரயாணத்தை நீர் இப்பொழுது வாய்க்கப்பண்ணுவீரானால், 43 இதோ, நான் தண்ணீர்த் துரவண்டையிலே நிற்கிறேன், தண்ணீர் மொள்ள வரப்போகிற கன்னிகையை நான் நோக்கி: உன் குடத்திலிருக்கிற தண்ணீரில் கொஞ்சம் எனக்குக் குடிக்கத் தரவேண்டும் என்று கேட்கும்போது: 44 நீ குடி என்றும், உன் ஒட்டகங்களுக்கும் மொண்டு வார்ப்பேன் என்றும் சொல்லும் பெண்ணே கர்த்தர் என் எஜமானுடைய குமாரனுக்கு நியமித்த ஸ்திரீயாகவேண்டும் என்றேன். 45 நான் இதை என் இருதயத்தில் சொல்லி முடிக்குமுன்னே, இதோ, ரெபெக்காள் தன் குடத்தைத் தோள்மேல் வைத்துக்கொண்டு புறப்பட்டுவந்து, துரவில் இறங்கிப்போய்த் தண்ணீர் மொண்டாள். அப்பொழுது நான்: எனக்குக் குடிக்கத் தரவேண்டும் என்றேன். 46 அவள் சீக்கிரமாய்த் தன் தோள்மேலிருந்த குடத்தை இறக்கி, குடியும், உம்முடைய ஒட்டகங்களுக்கும் வார்ப்பேன் என்றாள். நான் குடித்தேன்; ஒட்டகங்களுக்கும் வார்த்தாள். 47 அப்பொழுது: நீ யாருடைய மகள் என்று அவளைக் கேட்டேன்; அதற்கு அவள்: நான் மில்க்காள் நாகோருக்குப் பெற்ற குமாரனாகிய பெத்துவேலின் மகள் என்றாள்; அப்பொழுது அவளுக்குக் காதணியையும், அவள் கைகளிலே கடகங்களையும் போட்டு; 48 தலைகுனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, நான் என் எஜமானுடைய சகோதரன் குமாரத்தியை அவர் குமாரனுக்குக் கொள்ள என்னை நேர்வழியாய் நடத்திவந்த என் எஜமானாகிய ஆபிரகாமின் தேவனாயிருக்கிற கர்த்தரை ஸ்தோத்திரித்தேன். 49 இப்பொழுதும் நீங்களும் என் எஜமானுக்குத் தயையும் உண்மையும் உடையவர்களாய் நடக்க மனதுள்ளவர்களானால், எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது நான் வலதுபுறத்தையாகிலும் இடதுபுறத்தையாகிலும் நோக்கிப் போவேன் என்றான். 50 அப்பொழுது லாபானும் பெத்துவேலும் பிரதியுத்தரமாக: இந்தக் காரியம் கர்த்தரால் வந்தது, உமக்கு நாங்கள் நலம் பொலம் ஒன்றும் சொல்லக்கூடாது. 51 இதோ, ரெபெக்காள் உமக்கு முன்பாக இருக்கிறாள்; கர்த்தர் சொன்னபடியே அவள் உமது எஜமானுடைய குமாரனுக்கு மனைவியாகும்படிக்கு, அவளை அழைத்துக்கொண்டுபோம் என்றார்கள். 52 ஆபிரகாமின் ஊழியக்காரன் அவர்கள் வார்த்தைகளைக் கேட்டபோது, தரைமட்டும் குனிந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டான். 53 பின்பு அந்த ஊழியக்காரன் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமன்றி, அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில உச்சிதங்களையும் கொடுத்தான். 54 பின்பு அவனும் அவனோடிருந்த மனிதரும் புசித்துக் குடித்து, இராத்தங்கினார்கள்; காலையிலே எழுந்திருந்து, அவன்: என் எஜமானிடத்துக்கு என்னை அனுப்பிவிடுங்கள் என்றான். 55 அப்பொழுது அவள் சகோதரனும் அவள் தாயும், பத்து நாளாகிலும் பெண் எங்களோடிருக்கட்டும், பிற்பாடு போகலாம் என்றார்கள். 56 அதற்கு அவன்: கர்த்தர் என் பிரயாணத்தை வாய்க்கப்பண்ணியிருக்க, நீங்கள் எனக்குத் தடைசெய்யாதிருங்கள்; நான் என் எஜமானிடத்துக்குப்போக என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான். 57 அப்பொழுது அவர்கள்: பெண்ணை அழைத்து, அவள் வாய்ப்பிறப்பைக் கேட்போம் என்று சொல்லி, 58 ரெபெக்காளை அழைத்து: நீ இந்த மனிதனோடேகூடப் போகிறாயா என்று கேட்டார்கள். அவள்: போகிறேன் என்றாள். 59 அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்து, 60 ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள். 61 அப்பொழுது ரெபெக்காளும் அவள் வேலைக்காரிகளும் எழுந்து ஒட்டகங்கள்மேல் ஏறி, அந்த மனிதனோடேகூடப் போனார்கள். ஊழியக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டுபோனான். 62 ஈசாக்கு தென்தேசத்தில் குடியிருந்தான். அப்பொழுது அவன்: லகாய்ரோயீ என்னப்பட்ட துரவின் வழியாய்ப் புறப்பட்டுவந்தான். 63 ஈசாக்கு சாயங்காலவேளையிலே தியானம்பண்ண வெளியிலே போயிருந்து, தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, ஒட்டகங்கள் வரக்கண்டான். 64 ரெபெக்காளும் தன் கண்களை ஏறெடுத்து ஈசாக்கைக் கண்டபோது, 65 ஊழியக்காரனை நோக்கி: அங்கே வெளியிலே நமக்கு எதிராக நடந்துவருகிற அந்த மனிதன் யார் என்று கேட்டாள். அவர்தான் என் எஜமான் என்று ஊழியக்காரன் சொன்னான். அப்பொழுது அவள் ஒட்டகத்தை விட்டிறங்கி முக்காடிட்டுக்கொண்டாள். 66 ஊழியக்காரன் தான் செய்த சகல காரியங்களையும் ஈசாக்குக்கு விவரித்துச் சொன்னான். 67 அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதல் அடைந்தான்.

ஆதியாகமம் 25

1 ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான். 2 அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள். 3 யக்ஷான் சேபாவையும், தேதானையும் பெற்றான்; தேதானுடைய குமாரர் அசூரீம், லெத்தூசீம், லெயூமீம் என்பவர்கள். 4 மீதியானுடைய குமாரர் ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் பிள்ளைகள். 5 ஆபிரகாம் தனக்கு உண்டான யாவையும் ஈசாக்குக்குக் கொடுத்தான். 6 ஆபிரகாமுக்கு இருந்த மறுமனையாட்டிகளின் பிள்ளைகளுக்கோ ஆபிரகாம் நன்கொடைகளைக் கொடுத்து, தான் உயிரோடிருக்கும்போதே அவர்களைத் தன் குமாரனாகிய ஈசாக்கைவிட்டுக் கிழக்கே போகக் கீழ்தேசத்துக்கு அனுப்பிவிட்டான். 7 ஆபிரகாம் உயிரோடிருந்த ஆயுசுநாட்கள் நூற்று எழுபத்தைந்து வருஷம். 8 பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். 9 அவன் குமாரராகிய ஈசாக்கும் இஸ்மவேலும் மம்ரேக்கு எதிரே ஏத்தியனான சோகாரின் குமாரனாகிய எப்பெரோனின் நிலத்திலுள்ள மக்பேலா என்னப்பட்ட குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். 10 அந்த நிலத்தை ஏத்தின் புத்திரர் கையிலே ஆபிரகாம் வாங்கியிருந்தான்; அங்கே ஆபிரகாமும் அவன் மனைவியாகிய சாராளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள். 11 ஆபிரகாம் மரித்தபின் தேவன் அவன் குமாரனாகிய ஈசாக்கை ஆசீர்வதித்தார். லகாய்ரோயீ என்னும் துரவுக்குச் சமீபமாய் ஈசாக்கு குடியிருந்தான். 12 சாராளுடைய அடிமைப்பெண்ணாகிய எகிப்து தேசத்தாளான ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரனாகிய இஸ்மவேலின் வம்சவரலாறு: 13 பற்பல சந்ததிகளாய்ப் பிரிந்த இஸ்மவேலின் புத்திரருடைய நாமங்களாவன; இஸ்மவேலுடைய மூத்த மகன் நெபாயோத்; பின்பு கேதார், அத்பியேல், மிப்சாம், 14 மிஷ்மா, தூமா, மாசா, 15 ஆதார், தேமா, யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவைகளே. 16 தங்கள் கிராமங்களிலும் அரண்களிலும் குடியிருந்த தங்கள் ஜனத்தாருக்குப் பன்னிரண்டு பிரபுக்களாகிய இஸ்மவேலின் குமாரர்கள் இவர்களே, இவர்களுடைய நாமங்களும் இவைகளே. 17 இஸ்மவேலின் வயது நூற்று முப்பத்தேழு. பின்பு அவன் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். 18 அவர்கள் ஆவிலா துவக்கி எகிப்துக்கு எதிராக அசீரியாவுக்குப் போகிற வழியிலிருக்கும் சூர்மட்டும் வாசம்பண்ணினார்கள். இது அவன் சகோதரர் எல்லாருக்கும் முன்பாக அவன் குடியேறின பூமி. 19 ஆபிரகாமின் குமாரனாகிய ஈசாக்குடைய வம்சவரலாறு; ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான். 20 ஈசாக்கு ரெபெக்காளை விவாகம்பண்ணுகிறபோது நாற்பது வயதாயிருந்தான்; இவள் பதான்அராம் என்னும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுக்குக் குமாரத்தியும், சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சகோதரியுமானவள். 21 மலடியாயிருந்த தன் மனைவிக்காக ஈசாக்கு கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்; கர்த்தர் அவன் வேண்டுதலைக் கேட்டருளினார்; அவன் மனைவி ரெபெக்காள் கர்ப்பந்தரித்தாள். 22 அவள் கர்ப்பத்திலே பிள்ளைகள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டிருந்தன; அப்பொழுது அவள்: இப்படியானால் எனக்கு எப்படியோ என்று சொல்லி, கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி போனாள். 23 அதற்குக் கர்த்தர்: இரண்டு ஜாதிகள் உன் கர்ப்பத்தில் உண்டாயிருக்கிறது; இரண்டுவித ஜனங்கள் உன் வயிற்றிலிருந்து பிரியும், அவர்களில் ஒரு ஜனத்தார் மற்ற ஜனத்தாரைப்பார்க்கிலும் பலத்திருப்பார்கள், மூத்தவன் இளையவனைச் சேவிப்பான் என்றார். 24 பிரசவகாலம் பூரணமானபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தது. 25 மூத்தவன் சிவந்த நிறமுள்ளவனாயும் சர்வாங்கமும் ரோம அங்கி போர்த்தவன்போலவும் வெளிப்பட்டான்; அவனுக்கு ஏசா என்று பேரிட்டார்கள். 26 பின்பு, அவன் சகோதரன் தன் கையினாலே ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டு வெளிப்பட்டான்; அவனுக்கு யாக்கோபு என்று பேரிட்டார்கள்; இவர்களை அவள் பெற்றபோது ஈசாக்கு அறுபது வயதாயிருந்தான். 27 இந்தப் பிள்ளைகள் பெரியவர்களானபோது, ஏசா வேட்டையில் வல்லவனும் வனசஞ்சாரியுமாய் இருந்தான்; யாக்கோபு குணசாலியும் கூடாரவாசியுமாய் இருந்தான். 28 ஏசா வேட்டையாடிக் கொண்டுவருகிறது ஈசாக்கினுடைய வாய்க்கு ருசிகரமாயிருந்ததினாலே ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான்; ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள். 29 ஒருநாள் ஏசா வெளியிலிருந்து களைத்து வந்தபோது, யாக்கோபு கூழ் சமைத்துக்கொண்டிருந்தான். 30 அப்பொழுது ஏசா யாக்கோபை நோக்கி: அந்தச் சிவப்பான கூழிலே நான் சாப்பிடக் கொஞ்சம் தா, இளைத்திருக்கிறேன் என்றான்; இதனாலே அவனுக்கு ஏதோம் என்கிற பேர் உண்டாயிற்று. 31 அப்பொழுது யாக்கோபு: உன் சேஷ்ட புத்திரபாகத்தை இன்று எனக்கு விற்றுப்போடு என்றான். 32 அதற்கு ஏசா: இதோ, நான் சாகப்போகிறேனே, இந்தச் சேஷ்ட புத்திரபாகம் எனக்கு என்னத்திற்கு என்றான். 33 அப்பொழுது யாக்கோபு: இன்று எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவன் யாக்கோபுக்கு ஆணையிட்டு, தன் சேஷ்ட புத்திரபாகத்தை அவனுக்கு விற்றுப்போட்டான். 34 அப்பொழுது யாக்கோபு ஏசாவுக்கு அப்பத்தையும் பயற்றங்கூழையும் கொடுத்தான்; அவன் புசித்துக் குடித்து எழுந்திருந்து போய்விட்டான். இப்படி ஏசா தன் சேஷ்ட புத்திரபாகத்தை அலட்சியம்பண்ணினான்.

ஆதியாகமம் 26

1 ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், பின்னும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டாயிற்று; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கினிடத்தில் கேராருக்குப் போனான். 2 கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நீ எகிப்துக்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்திலே குடியிரு. 3 இந்தத் தேசத்திலே வாசம்பண்ணு; நான் உன்னோடேகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் யாவையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் இட்ட ஆணையை நிறைவேற்றுவேன். 4 ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டபடியினால், 5 நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார். 6 ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான். 7 அவ்விடத்து மனிதர்கள் அவன் மனைவியைக்குறித்து விசாரித்தபோது: இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்வைக்கு அழகுள்ளவளானபடியால், அவ்விடத்து மனிதர்கள் அவள்நிமித்தம் தன்னைக் கொல்லுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லப் பயந்தான். 8 அவன் அங்கே நெடுநாள் தங்கியிருக்கையில், பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாய்ப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடே விளையாடிக்கொண்டிருக்கிறதைக் கண்டான். 9 அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து: அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்னை ஏன் அவளை உன் சகோதரி என்று சொன்னாய் என்றான். அதற்கு ஈசாக்கு: அவள் நிமித்தம் நான் சாகாதபடிக்கு, இப்படிச் சொன்னேன் என்றான். 10 அதற்கு அபிமெலேக்கு: எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? ஜனங்களுக்குள் யாராகிலும் உன் மனைவியோடே சயனிக்கவும், எங்கள்மேல் பழிசுமரவும் நீ இடமுண்டாக்கினாயே என்றான். 11 பின்பு, அபிமெலேக்கு: இந்தப் புருஷனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படுவான் என்று எல்லா ஜனங்களும் அறியச் சொன்னான். 12 ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதை விதைத்தான்; கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் அந்த வருஷத்தில் நூறுமடங்கு பலன் அடைந்தான்; 13 அவன் ஐசுவரியவானாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான். 14 அவனுக்கு ஆட்டுமந்தையும், மாட்டுமந்தையும், அநேக பணிவிடைக்காரரும் இருந்தபடியினாலே பெலிஸ்தர் அவன் பேரில் பொறாமைகொண்டு, 15 அவன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர் வெட்டின துரவுகளையெல்லாம் தூர்த்து மண்ணினால் நிரப்பிப்போட்டார்கள். 16 அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைப்பார்க்கிலும் மிகவும் பலத்தவனானாய் என்றான். 17 அப்பொழுது ஈசாக்கு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்து, 18 தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டினவைகளும், ஆபிரகாம் மரித்தபின் பெலிஸ்தர் தூர்த்துப்போட்டவைகளுமான துரவுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு இட்டிருந்த பேர்களின்படியே அவைகளுக்குப் பேரிட்டான். 19 ஈசாக்குடைய வேலைக்காரர் பள்ளத்தாக்கிலே வெட்டி, அங்கே சுரக்கும் நீரூற்றைக் கண்டார்கள். 20 கேராரூர் மேய்ப்பர் இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி, ஈசாக்குடைய மேய்ப்பருடனே வாக்குவாதம்பண்ணினார்கள்; அவர்கள் தன்னோடே வாக்குவாதம்பண்ணினபடியால், அந்தத் துரவுக்கு ஏசேக்கு என்று பேரிட்டான். 21 வேறொரு துரவை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம்பண்ணினார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பேரிட்டான். 22 பின்பு அவ்விடம்விட்டுப் பெயர்ந்துபோய், வேறொரு துரவை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம்பண்ணவில்லை; அப்பொழுது அவன்: நாம் தேசத்தில் பலுகும்படிக்கு, இப்பொழுது கர்த்தர் நமக்கு இடம் உண்டாக்கினார் என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பேரிட்டான். 23 அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப் போனான். 24 அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனுக்குத் தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார். 25 அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அவ்விடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர் ஒரு துரவை வெட்டினார்கள். 26 அபிமெலேக்கும் அவன் சிநேகிதனாகிய அகுசாத்தும் அவன் சேனாபதியாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்துக்கு வந்தார்கள். 27 அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டீர்களே என்றான். 28 அதற்கு அவர்கள்: நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஆணை ஏற்பாடு உண்டாகவேண்டும் என்று நாங்கள் நிர்ணயம் பண்ணினோம். 29 நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடே அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்கு செய்யாதபடிக்கு உம்மோடே உடன்படிக்கை பண்ணிக்கொள்ள வந்தோம்; நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே என்றார்கள். 30 அவன் அவர்களுக்கு விருந்துபண்ணினான், அவர்கள் புசித்துக் குடித்தார்கள். 31 அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஆணையிட்டுக்கொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடே போய்விட்டார்கள். 32 அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர் வந்து, தாங்கள் துரவு வெட்டின செய்தியை அவனுக்கு அறிவித்து, தண்ணீர் கண்டோம் என்றார்கள். 33 அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயெர்செபா என்னப்படுகிறது. 34 ஏசா நாற்பது வயதானபோது, ஏத்தியனான பெயேரியினுடைய குமாரத்தியாகிய யூதீத்தையும், ஏத்தியனான ஏலோனுடைய குமாரத்தியாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணினான். 35 அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனநோவாயிருந்தார்கள்.

ஆதியாகமம் 27

1 ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப்போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான். 2 அப்பொழுது அவன்: நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன். 3 ஆகையால், நீ உன் ஆயுதங்களாகிய உன் அம்பறாத்தூணியையும் உன் வில்லையும் எடுத்துக்கொண்டு வனத்துக்குப்போய், எனக்காக வேட்டையாடி, 4 அதை எனக்குப் பிரியமாயிருக்கிற ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்து, நான் புசிக்கவும், நான் மரணமடையுமுன்னே என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கவும், என்னிடத்தில் கொண்டுவா என்றான். 5 ஈசாக்கு தன் குமாரனாகிய ஏசாவோடே பேசுகையில், ரெபெக்காள் கேட்டுக்கொண்டிருந்தாள். ஏசா வேட்டையாடிக்கொண்டுவரும்படி வனத்துக்குப் போனான். 6 அப்பொழுது ரெபெக்காள் தன் குமாரனாகிய யாக்கோபை நோக்கி: உன் தகப்பன் உன் சகோதரனாகிய ஏசாவை அழைத்து: 7 நான் புசித்து, எனக்கு மரணம் வருமுன்னே, கர்த்தரை முன்னிட்டு உன்னை ஆசீர்வதிக்கும்படி, நீ எனக்காக வேட்டையாடி, அதை எனக்கு ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைத்துக்கொண்டுவா என்று சொல்லக்கேட்டேன். 8 ஆகையால், என் மகனே, என் சொல்லைக் கேட்டு, நான் உனக்குக் கற்பிக்கிறபடி செய். 9 நீ ஆட்டுமந்தைக்குப் போய், இரண்டு நல்ல வெள்ளாட்டுக்குட்டிகளைக் கொண்டுவா; நான் அவைகளை உன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களாகச் சமைப்பேன். 10 உன் தகப்பன் தாம் மரணமடையுமுன்னே உன்னை ஆசீர்வதிக்கும்படி அவர் புசிப்பதற்கு நீ அதை அவரிடத்தில் கொண்டுபோகவேண்டும் என்றாள். 11 அதற்கு யாக்கோபு தன் தாயாகிய ரெபெக்காளை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா ரோமம் மிகுத்தவன், நான் ரோமமில்லாதவன். 12 ஒருவேளை என் தகப்பன் என்னைத் தடவிப்பார்ப்பார்; அப்பொழுது நான் அவருக்கு எத்தனாய்க் காணப்பட்டு, என்மேல் ஆசீர்வாதத்தை அல்ல, சாபத்தை வரப்பண்ணிக்கொள்வேனே என்றான். 13 அதற்கு அவன் தாய்: என் மகனே, உன்மேல் வரும் சாபம் என்மேல் வரட்டும்; என் சொல்லைமாத்திரம் கேட்டு, நீ போய், அவைகளை என்னிடத்தில் கொண்டுவா என்றாள். 14 அவன் போய் அவைகளைப் பிடித்து, தன் தாயினிடத்தில் கொண்டுவந்தான்; அவனுடைய தாய் அவன் தகப்பனுக்குப் பிரியமானபடி ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்தாள். 15 பின்பு, ரெபெக்காள் வீட்டிலே தன்னிடத்தில் இருந்த தன் மூத்த மகனாகிய ஏசாவின் நல்ல வஸ்திரங்களை எடுத்து, தன் இளைய மகனாகிய யாக்கோபுக்கு உடுத்தி, 16 வெள்ளாட்டுக்குட்டிகளின் தோலை அவன் கைகளிலேயும் ரோமமில்லாத அவன் கழுத்திலேயும் போட்டு; 17 தான் சமைத்த ருசியுள்ள பதார்த்தங்களையும் அப்பங்களையும் தன் குமாரனாகிய யாக்கோபின் கையிலே கொடுத்தாள். 18 அவன் தன் தகப்பனிடத்தில் வந்து, என் தகப்பனே என்றான்; அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன்; நீ யார், என் மகனே என்றான். 19 அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனை நோக்கி: நான் உமது மூத்த மகனாகிய ஏசா; நீர் எனக்குச் சொன்னபடியே செய்தேன்; உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, நீர் எழுந்து உட்கார்ந்து, நான் வேட்டையாடிக்கொண்டுவந்ததைப் புசியும் என்றான். 20 அப்பொழுது ஈசாக்குத் தன் குமாரனை நோக்கி: என் மகனே, இது உனக்கு இத்தனை சீக்கிரமாய் எப்படி அகப்பட்டது என்றான். அவன்: உம்முடைய தேவனாகிய கர்த்தர் எனக்கு நேரிடப்பண்ணினார் என்றான். 21 அப்பொழுது ஈசாக்கு யாக்கோபை நோக்கி: என் மகனே, நீ என் குமாரனாகிய ஏசாதானோ அல்லவோ என்று நான் உன்னைத் தடவிப்பார்க்கும்படி கிட்ட வா என்றான். 22 யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கண்டையில் கிட்டப் போனான்; அவன் இவனைத் தடவிப்பார்த்து: சத்தம் யாக்கோபின் சத்தம், கைகளோ ஏசாவின் கைகள் என்று சொல்லி, 23 அவனுடைய கைகள் அவன் சகோதரனாகிய ஏசாவின் கைகளைப்போல ரோமமுள்ளவைகளாயிருந்தபடியினாலே, இன்னான் என்று அறியாமல், அவனை ஆசீர்வதித்து, 24 நீ என் குமாரனாகிய ஏசாதானோ என்றான்; அவன்: நான்தான் என்றான். 25 அப்பொழுது அவன்: என் குமாரனே, நீ வேட்டையாடிக் கொண்டுவந்ததை நான் புசித்து, என் ஆத்துமா உன்னை ஆசீர்வதிக்கும்படி அதை என் கிட்டக் கொண்டுவா என்றான்; அவன் அதைக் கிட்டக் கொண்டுபோனான்; அப்பொழுது அவன் புசித்தான்; பிற்பாடு, திராட்சரசம் அவனுக்குக் கொண்டுவந்து கொடுத்தான், அவன் குடித்தான். 26 அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனை நோக்கி: என் மகனே, நீ கிட்ட வந்து என்னை முத்தஞ்செய் என்றான். 27 அவன் கிட்டப் போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல் இருக்கிறது. 28 தேவன் உனக்கு வானத்துப் பனியையும் பூமியின் கொழுமையையும் கொடுத்து, மிகுந்த தானியத்தையும் திராட்சரசத்தையும் தந்தருளுவாராக. 29 ஜனங்கள் உன்னைச் சேவிக்கவும் ஜாதிகள் உன்னை வணங்கவும் கடவர்கள்; உன் சகோதரருக்கு எஜமானாயிருப்பாய்; உன் தாயின் பிள்ளைகள் உன்னை வணங்குவார்கள்; உன்னைச் சபிக்கிறவர்கள் சபிக்கப்பட்டவர்களும், உன்னை ஆசீர்வதிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களுமாய் இருப்பார்கள் என்று சொல்லி அவனை ஆசீர்வதித்தான். 30 ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து முடிந்தபோது, யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டவுடனே, அவன் சகோதரனாகிய ஏசா வேட்டையாடி வந்து சேர்ந்தான். 31 அவனும் ருசியுள்ள பதார்த்தங்களைச் சமைத்து, தன் தகப்பனண்டைக்குக் கொண்டுவந்து, தகப்பனை நோக்கி: உம்முடைய ஆத்துமா என்னை ஆசீர்வதிக்கும்படி, என் தகப்பனார் எழுந்திருந்து, உம்முடைய குமாரனாகிய நான் வேட்டையாடிக் கொண்டுவந்ததைப் புசிப்பாராக என்றான். 32 அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு: நீ யார் என்றான்; அதற்கு அவன்: நான் உமது மூத்த மகனாகிய ஏசா என்றான். 33 அப்பொழுது ஈசாக்கு மிகவும் பிரமித்து நடுங்கி: வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருமுன்னே அவையெல்லாவற்றிலும் நான் புசித்து அவனை ஆசீர்வதித்தேனே, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் என்றான். 34 ஏசா தன் தகப்பனுடைய வார்த்தைகளைக் கேட்டவுடனே, மிகவும் மனங்கசந்து உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்றான். 35 அதற்கு அவன்: உன் சகோதரன் தந்திரமாய் வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் என்றான். 36 அப்பொழுது அவன்: அவன் பெயர் யாக்கோபு என்னப்படுவது சரியல்லவா? இதோடே இரண்டுதரம் என்னை மோசம்போக்கினான்; என் சேஷ்ட புத்திரபாகத்தை எடுத்துக்கொண்டான்; இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான் என்று சொல்லி; நீர் எனக்கு ஒரு ஆசீர்வாதத்தையாகிலும் வைத்துவைக்கவில்லையா என்றான். 37 ஈசாக்கு ஏசாவுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, நான் அவனை உனக்கு எஜமானாக வைத்தேன்; அவன் சகோதரர் எல்லாரையும் அவனுக்கு ஊழியக்காரராகக் கொடுத்து, அவனைத் தானியத்தினாலும் திராட்சரசத்தினாலும் ஆதரித்தேன்; இப்பொழுதும் என் மகனே, நான் உனக்கு என்னசெய்வேன் என்றான். 38 ஏசா தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே, இந்த ஒரே ஆசீர்வாதம் மாத்திரமா உம்மிடத்தில் உண்டு? என் தகப்பனே, என்னையும் ஆசீர்வதியும் என்று சொல்லி, ஏசா சத்தமிட்டு அழுதான். 39 அப்பொழுது அவன் தகப்பனாகிய ஈசாக்கு அவனுக்குப் பிரதியுத்தரமாக: உன் வாசஸ்தலம் பூமியின் சாரத்தோடும் உயர வானத்திலிருந்து இறங்கும் பனியோடும் இருக்கும். 40 உன் பட்டயத்தினாலே நீ பிழைத்து, உன் சகோதரனைச் சேவிப்பாய்; நீ மேற்கொள்ளும் காலம் வரும்போதோ, உன் கழுத்தில் இருக்கிற அவனுடைய நுகத்தடியை முறித்துப்போடுவாய் என்றான். 41 யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டான். 42 மூத்த மகனாகிய ஏசாவின் வார்த்தைகள் ரெபெக்காளுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அவள் தன் இளைய மகனாகிய யாக்கோபை அழைத்து: உன் சகோதரனாகிய ஏசா உன்னைக் கொன்றுபோட நினைத்து, தன்னைத் தேற்றிக்கொள்ளுகிறான். 43 ஆகையால், என் மகனே, நான் சொல்வதைக் கேட்டு, எழுந்து புறப்பட்டு, ஆரானில் இருக்கிற என் சகோதரனாகிய லாபானிடத்துக்கு ஓடிப்போய், 44 உன் சகோதரனுடைய கோபம் தணியுமட்டும் சிலநாள் அவனிடத்திலே இரு. 45 உன் சகோதரன் உன்மேல் வைத்த கோபம் தணிந்து, நீ அவனுக்குச் செய்ததை அவன் மறந்தபின், நான் ஆள் அனுப்பி, அவ்விடத்திலிருந்து உன்னை அழைப்பிப்பேன்; நான் ஒரேநாளில் உங்கள் இருவரையும் ஏன் இழந்துபோகவேண்டும் என்றாள். 46 பின்பு, ரெபெக்காள் ஈசாக்கை நோக்கி: ஏத்தின் குமாரத்திகளினிமித்தம் என் உயிர் எனக்கு வெறுப்பாயிருக்கிறது; இந்தத் தேசத்துப் பெண்களாகிய ஏத்தின் குமாரத்திகளில் யாக்கோபு ஒரு பெண்ணைக் கொள்வானானால் என் உயிர் இருந்து ஆவதென்ன என்றாள்.

ஆதியாகமம் 28

1 ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளாமல், 2 எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப் போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான். 3 சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல ஜனக்கூட்டமாகும்படி உன்னைப் பலுகவும் பெருகவும்பண்ணி; 4 தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாய்த் தங்குகிறதுமான தேசத்தை நீ சுதந்தரித்துக்கொள்ளும்படி ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி; 5 ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய குமாரனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்துக்குப் போகப் புறப்பட்டான். 6 ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, ஒரு பெண்ணைக் கொள்ளும்படி அவனைப் பதான் அராமுக்கு அனுப்பினதையும், அவனை ஆசீர்வதிக்கையில்: நீ கானானியருடைய குமாரத்திகளில் பெண்கொள்ளவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும், 7 யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதினாலும், 8 கானானியருடைய குமாரத்திகள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததினாலும், 9 ஏசா இஸ்மவேலிடத்துக்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய குமாரனாகிய இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் விவாகம்பண்ணினான். 10 யாக்கோபு பெயெர்செபாவை விட்டுப் புறப்பட்டு ஆரானுக்குப் போகப் பிரயாணம்பண்ணி, 11 ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான். 12 அங்கே அவன் ஒரு சொப்பனங் கண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாய் இருந்தார்கள். 13 அதற்கு மேலாகக் கர்த்தர் நின்று: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன். 14 உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும். 15 நான் உன்னோடே இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்துக்கு உன்னைத் திரும்பிவரப்பண்ணுவேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யுமளவும் உன்னைக் கைவிடுவதில்லை என்றார். 16 யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான். 17 அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான். 18 அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து, 19 அந்த ஸ்தலத்திற்குப் பெத்தேல் என்று பேரிட்டான்; அதற்கு முன்னே அவ்வூருக்கு லூஸ் என்னும் பேர் இருந்தது. 20 அப்பொழுது யாக்கோபு: தேவன் என்னோடே இருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண ஆகாரமும், உடுக்க வஸ்திரமும் எனக்குத் தந்து, 21 என்னை என் தகப்பன் வீட்டுக்குச் சமாதானத்தோடே திரும்பிவரப்பண்ணுவாரானால், கர்த்தர் எனக்குத் தேவனாயிருப்பார்; 22 நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொல்லிப் பொருத்தனைபண்ணிக்கொண்டான்.

ஆதியாகமம் 29

1 யாக்கோபு பிரயாணம்பண்ணி, கீழ்த்திசையாரின் தேசத்தில் போய்ச் சேர்ந்தான். 2 அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே மடக்கியிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்லினால் அடைக்கப்பட்டிருந்தது. 3 அவ்விடத்தில் மந்தைகள் எல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள். 4 யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள். 5 அப்பொழுது அவன்: நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள். 6 அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள். 7 அப்பொழுது அவன்: இன்னும் வெகுபொழுதிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, இன்னும் மேயவிடலாம் என்றான். 8 அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக்கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள். 9 அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டுவந்தாள். 10 யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான். 11 பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து, சத்தமிட்டு அழுது, 12 தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் குமாரனென்றும் ராகேலுக்கு அறிவித்தான். அவள் ஓடிப்போய்த் தன் தகப்பனுக்கு அறிவித்தாள். 13 லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விவரமாய் லாபானுக்குச் சொன்னான். 14 அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான். 15 பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலைசெய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான். 16 லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள்; மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல். 17 லேயாளுடைய கண்கள் கூச்சப்பார்வையாயிருந்தது; ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள். 18 யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன் என்றான். 19 அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய புருஷனுக்குக் கொடுக்கிறதைப்பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு என்றான். 20 அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலைசெய்தான்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது. 21 பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியினிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான். 22 அப்பொழுது லாபான் அவ்விடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச்செய்து விருந்துபண்ணினான். 23 அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான். 24 லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான். 25 காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான். 26 அதற்கு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல. 27 இவளுடைய ஏழு நாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய் என்றான். 28 அந்தப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழுநாளை நிறைவேற்றினான். அப்பொழுது தன் குமாரத்தியாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். 29 மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான். 30 யாக்கோபு ராகேலையும் சேர்ந்தான்; லேயாளைப்பார்க்கிலும் ராகேலை அவன் அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் அவனிடத்தில் சேவித்தான். 31 லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள். 32 லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள். 33 மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி, இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன் என்று பேரிட்டாள். 34 பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரரைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள். 35 மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று.

ஆதியாகமம் 30

1 ராகேல் தான் யாக்கோபுக்குப் பிள்ளைகளைப் பெறாததைக் கண்டு, தன் சகோதரியின்மேல் பொறாமைகொண்டு, யாக்கோபை நோக்கி: எனக்குப் பிள்ளை கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன் என்றாள். 2 அப்பொழுது யாக்கோபு ராகேலின்மேல் கோபங்கொண்டு: தேவனல்லவோ உன் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார், நான் தேவனா? என்றான். 3 அப்பொழுது அவள்: இதோ, என் வேலைக்காரியாகிய பில்காள் இருக்கிறாளே; அவள் என் மடிக்குப் பிள்ளைகளைப் பெறவும், அவளாலாகிலும் என் வீடு கட்டப்படவும் அவளிடத்தில் சேரும் என்று சொல்லி, 4 அவனுக்குத் தன் வேலைக்காரியாகிய பில்காளை மனைவியாகக் கொடுத்தாள்; அப்படியே யாக்கோபு அவளைச் சேர்ந்தான். 5 பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். 6 அப்பொழுது ராகேல்: தேவன் என் வழக்கைத் தீர்த்து, என் சத்தத்தையும் கேட்டு, எனக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்குத் தாண் என்று பேரிட்டாள். 7 மறுபடியும் ராகேலின் வேலைக்காரியாகிய பில்காள் கர்ப்பவதியாகி, யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள். 8 அப்பொழுது ராகேல்: நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி மேற்கொண்டேன் என்று சொல்லி, அவனுக்கு நப்தலி என்று பேரிட்டாள். 9 லேயாள் தான் பிள்ளைபெறுகிறது நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள். 10 லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். 11 அப்பொழுது லேயாள்: ஏராளமாகிறதென்று சொல்லி, அவனுக்குக் காத் என்று பேரிட்டாள். 12 பின்பு லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு இரண்டாம் குமாரனைப் பெற்றாள். 13 அப்பொழுது லேயாள்: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள் என்று சொல்லி, அவனுக்கு ஆசேர் என்று பேரிட்டாள். 14 கோதுமை அறுப்பு நாட்களிலே ரூபன் வயல்வெளியிலே போய், தூதாயீம் கனிகளைக் கண்டெடுத்து, அவைகளைக் கொண்டுவந்து தன் தாயாகிய லேயாளிடத்தில் கொடுத்தான். அப்பொழுது ராகேல் லேயாளை நோக்கி: உன் குமாரனுடைய தூதாயீம் கனியில் எனக்குக் கொஞ்சம் தா என்றாள். 15 அதற்கு அவள்: நீ என் புருஷனை எடுத்துக்கொண்டது அற்பகாரியமா? என் குமாரனுடைய தூதாயீம் கனிகளையும் எடுத்துக்கொள்ளவேண்டுமோ என்றாள்; அதற்கு ராகேல்: உன் குமாரனுடைய தூதாயீம் கனிகளுக்கு ஈடாக இன்று இரவு அவர் உன்னோடே சயனிக்கட்டும் என்றாள். 16 சாயங்காலத்தில் யாக்கோபு வெளியிலிருந்து வருகையில் லேயாள் புறப்பட்டு அவனுக்கு எதிர்கொண்டுபோய்: என் குமாரனுடைய தூதாயீம் கனிகளால் உம்மைக் கொண்டேன்; ஆகையால், நீர் என்னிடத்தில் வரவேண்டும் என்றாள்; அவன் அன்று இரவு அவளோடே சயனித்தான். 17 தேவன் லேயாளுக்குச் செவிகொடுத்தார். அவள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஐந்தாம் குமாரனைப் பெற்றாள். 18 அப்பொழுது லேயாள்: நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்குக் கொடுத்த பலனைத் தேவன் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்கு இசக்கார் என்று பேரிட்டாள். 19 அப்புறம் லேயாள் கர்ப்பவதியாகி யாக்கோபுக்கு ஆறாம் குமாரனைப் பெற்றாள். 20 அப்பொழுது லேயாள்: தேவன் எனக்கு நல்ல ஈவைத் தந்தார்; என் புருஷனுக்கு நான் ஆறு குமாரரைப் பெற்றபடியால், இப்பொழுது அவர் என்னுடனே வாசம்பண்ணுவார் என்று சொல்லி, அவனுக்குச் செபுலோன் என்று பேரிட்டாள். 21 பின்பு அவள் ஒரு குமாரத்தியையும் பெற்று, அவளுக்குத் தீனாள் என்று பேரிட்டாள். 22 தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிகொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார். 23 அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: தேவன் என் நிந்தையை நீக்கிவிட்டார் என்றும், 24 இன்னும் ஒரு குமாரனைக் கர்த்தர் எனக்குத் தருவார் என்றும் சொல்லி, அவனுக்கு யோசேப்பு என்று பேரிட்டாள். 25 ராகேல் யோசேப்பைப் பெற்றபின், யாக்கோபு லாபானை நோக்கி: நான் என் ஸ்தானத்திற்கும் என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும். 26 நான் உமக்கு ஊழியஞ்செய்து சம்பாதித்த என் மனைவிகளையும் என் பிள்ளைகளையும் எனக்குத் தாரும்; நான் போவேன், நான் உம்மிடத்தில் சேவித்த சேவகத்தை நீர் அறிந்திருக்கிறீர் என்றான். 27 அப்பொழுது லாபான்: உன் கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால் நீ இரு; உன் நிமித்தம் கர்த்தர் என்னை ஆசீர்வதித்தார் என்று குறிப்பினால் அறிந்தேன். 28 உன் சம்பளம் இன்னதென்று எனக்குச் சொல், நான் அதைத் தருவேன் என்றான். 29 அதற்கு அவன்: நான் உம்மைச் சேவித்த விதமும், உம்முடைய மந்தை என்னிடத்தில் இருந்த விதமும் அறிந்திருக்கிறீர். 30 நான் வருமுன்னே உமக்கு இருந்தது கொஞ்சம்; நான் வந்தபின் கர்த்தர் உம்மை ஆசீர்வதித்ததினால் அது மிகவும் பெருகியிருக்கிறது; இனி நான் என் குடும்பத்துக்குச் சம்பாத்தியம்பண்ணுவது எப்பொழுது என்றான். 31 அதற்கு அவன்: நான் உனக்கு என்ன தரவேண்டும் என்றான்; யாக்கோபு: நீர் எனக்கு ஒன்றும் தரவேண்டியதில்லை; நான் சொல்லுகிறபடி நீர் எனக்குச் செய்தால், உம்முடைய மந்தையைத் திரும்ப மேய்த்துக் காப்பேன். 32 நான் இன்றைக்குப்போய், உம்முடைய மந்தைகளையெல்லாம் பார்வையிட்டு, அவைகளில் புள்ளியும் வரியும் கறுப்புமுள்ள செம்மறியாடுகளையும், வரியும் புள்ளியுமுள்ள வெள்ளாடுகளையும் பிரித்துவிடுகிறேன்; அப்படிப்பட்டவை இனி எனக்குச் சம்பளமாயிருக்கட்டும். 33 அப்படியே இனிமேல் என் சம்பளமாகிய இவற்றை நீர் பார்வையிடும்போது, என் நீதி விளங்கும்; புள்ளியும் வரியுமில்லாத வெள்ளாடுகளும், கறுப்பான செம்மறியாடுகளும் என் வசத்தில் இருந்தால், அவையெல்லாம் என்னால் திருடிக்கொள்ளப்பட்டவைகளாய் எண்ணப்படட்டும் என்றான். 34 அதற்கு லாபான்: நீ சொன்னபடியே ஆகட்டும் என்று சொல்லி, 35 அந்நாளிலே கலப்பு நிறமும் வரியுமுள்ள வெள்ளாட்டுக் கடாக்களையும், புள்ளியும் வரியுமுள்ள வெள்ளாடுகள் யாவையும், சற்று வெண்மையும் கருமையுமுள்ள செம்மறியாடுகள் யாவையும் பிரித்து, தன் குமாரரிடத்தில் ஒப்புவித்து, 36 தனக்கும் யாக்கோபுக்கும் இடையிலே மூன்றுநாள் பிரயாண தூரத்தில் இருக்கும்படி வைத்தான். லாபானுடைய மற்ற ஆடுகளை யாக்கோபு மேய்த்தான். 37 பின்பு யாக்கோபு பச்சையாயிருக்கிற புன்னை, வாதுமை, அர்மோன் என்னும் மரங்களின் கொப்புகளை வெட்டி, இடையிடையே வெண்மை தோன்றும்படி, பட்டையை உரித்து, 38 தான் உரித்த கொப்புகளை ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும் கால்வாய்களிலும் தொட்டிகளிலும் ஆடுகளுக்கு எதிராகப் போட்டுவைப்பான்; ஆடுகள் தண்ணீர் குடிக்க வரும்போது பொலிவதுண்டு. 39 ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால், அவைகள் கலப்புநிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது. 40 அந்த ஆட்டுக்குட்டிகளை யாக்கோபு பிரித்துக்கொண்டு, ஆடுகளை லாபானுடைய மந்தையிலிருக்கும் கலப்புநிறமானவைகளுக்கும் கறுப்பானவைகளெல்லாவற்றிற்கும் எதிராக நிறுத்தி, தன் ஆடுகளை லாபானுடைய மந்தையோடே சேர்க்காமல், தனிப்புறமாக வைத்துக்கொள்வான். 41 பலத்த ஆடுகள் பொலியும்போது, அந்தக் கொப்புகளுக்கு எதிரே பொலியும்படி யாக்கோபு அவைகளை அந்த ஆடுகளின் கண்களுக்கு முன்பாகக் கால்வாய்களிலே போட்டுவைப்பான். 42 பலவீனமான ஆடுகள் பொலியும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன. 43 இவ்விதமாய் அந்தப் புருஷன் மிகவும் விருத்தியடைந்து, திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும் உடையவனானான்.

ஆதியாகமம் 31

1 பின்பு, லாபானுடைய குமாரர்: எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் யாவையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான் என்றும், எங்கள் தகப்பனுடைய பொருளினாலே இந்தச் செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான். 2 லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தைநாள் இருந்ததுபோல் இராமல் வேறுபட்டிருக்கக் கண்டான். 3 கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார். 4 அப்பொழுது யாக்கோபு, ராகேலையும் லேயாளையும் வெளியிலே தன் மந்தையிடத்தில் அழைப்பித்து, 5 அவர்களை நோக்கி: உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தைநாள் இருந்ததுபோல இருக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது; ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடேகூட இருக்கிறார். 6 என்னால் இயன்றமட்டும் நான் உங்கள் தகப்பனுக்கு ஊழியஞ்செய்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 7 உங்கள் தகப்பனோ, என்னை வஞ்சித்து, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான்; ஆனாலும் அவன் எனக்குத் தீங்குசெய்ய தேவன் அவனுக்கு இடங்கொடுக்கவில்லை. 8 புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது; கலப்புநிறமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்புநிறக் குட்டிகளைப் போட்டது. 9 இவ்விதமாய் தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார். 10 ஆடுகள் பொலியும் காலத்திலே நான் கண்ட சொப்பனத்தில் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, ஆடுகளோடே பொலியும் கடாக்கள் கலப்புநிறமும் புள்ளியும் வரியும் உள்ளவைகளாயிருக்கக் கண்டேன். 11 அன்றியும் தேவதூதன் ஒருவர் சொப்பனத்தில்: யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன். 12 அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடே பொலியும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாய் இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற யாவையும் கண்டேன். 13 நீ தூணுக்கு அபிஷேகஞ்செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணின பெத்தேலிலே உனக்குத் தரிசனமான தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்தத் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தாரிருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான். 14 அதற்கு ராகேலும் லேயாளும்: எங்கள் தகப்பன் வீட்டிலே இனி எங்களுக்குப் பங்கும் சுதந்தரமும் உண்டோ? 15 அவரால் நாங்கள் அந்நியராய் எண்ணப்படவில்லையா? அவர் எங்களை விற்று, எங்கள் பணத்தையும் வாயிலே போட்டுக்கொண்டார். 16 ஆகையால் தேவன் எங்கள் தகப்பனிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியம் எல்லாம் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியது; இப்படியிருக்க, தேவன் உமக்குச் சொன்னபடியெல்லாம் செய்யும் என்றார்கள். 17 அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன் பிள்ளைகளையும் தன் மனைவிகளையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றி, 18 தான் பதான் அராமிலே சம்பாதித்த மிருகஜீவன்களாகிய மந்தைகள் அனைத்தையும் தன் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கானான்தேசத்தில் இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்துக்குப் போகப் புறப்பட்டான். 19 லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்தச் சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய சுரூபங்களைத் திருடிக்கொண்டாள். 20 யாக்கோபு தான் ஓடிப்போகிறதைச் சீரியனாகிய லாபானுக்கு அறிவியாமல், திருட்டளவாய்ப் போய்விட்டான். 21 இப்படியே அவன் தனக்கு உண்டானவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஆற்றைக் கடந்து, கீலேயாத் மலையை நோக்கி ஓடிப்போனான். 22 யாக்கோபு ஓடிப்போனது மூன்றாம் நாளிலே லாபானுக்கு அறிவிக்கப்பட்டது. 23 அப்பொழுது அவன், தன் சகோதரரைக் கூட்டிக்கொண்டு, ஏழுநாள் பிரயாணபரியந்தம் அவனைத் தொடர்ந்துபோய், கீலேயாத் மலையிலே அவனைக் கண்டுபிடித்தான். 24 அன்று ராத்திரி தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குச் சொப்பனத்தில் தோன்றி: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்றார். 25 லாபான் யாக்கோபினிடத்தில் வந்தான்; யாக்கோபு மலையிலே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான்; லாபானும் தன் சகோதரரோடேகூடக் கீலேயாத் மலையிலே கூடாரம் போட்டான். 26 அப்பொழுது லாபான் யாக்கோபை நோக்கி: நீ திருட்டளவாய்ப் புறப்பட்டு, என் குமாரத்திகளை யுத்தத்தில் பிடித்த சிறைகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செய்கை? 27 நீ ஓடிப்போவதை மறைத்து, எனக்கு அறிவியாமல், திருட்டளவாய் என்னிடத்திலிருந்து வந்துவிட்டது என்ன? நான் உன்னைச் சந்தோஷமாய், சங்கீதம் மேளதாளம் கின்னரமுழக்கத்துடனே அனுப்புவேனே. 28 என் பிள்ளைகளையும் என் குமாரத்திகளையும் நான் முத்தஞ்செய்ய விடாமல் போனதென்ன? இந்தச் செய்கையை நீ மதியில்லாமல் செய்தாய். 29 உங்களுக்குப் பொல்லாப்புச்செய்ய எனக்கு வல்லமை உண்டு; ஆகிலும், உங்கள் தகப்பனுடைய தேவன்: நீ யாக்கோபோடே நன்மையே அன்றித் தீமை ஒன்றும் பேசாதபடிக்கு எச்சரிக்கையாயிரு என்று நேற்று ராத்திரி என்னோடே சொன்னார். 30 இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள வாஞ்சையினால் நீ புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டுபோகிறாய் என்று கேட்டான். 31 யாக்கோபு லாபானுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய குமாரத்திகளைப் பலாத்காரமாய்ப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் அஞ்சினதினாலே இப்படி வந்துவிட்டேன். 32 ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடே விடவேண்டாம்; உம்முடைய பொருள்கள் ஏதாவது என் வசத்தில் உண்டானால் நீர் அதை நம்முடைய சகோதரருக்கு முன்பாகப் பரிசோதித்தறிந்து, அதை எடுத்துக்கொள்ளும் என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டுவந்ததை யாக்கோபு அறியாதிருந்தான். 33 அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் பிரவேசித்துப்பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்துக்குப் போனான். 34 ராகேல் அந்தச் சுரூபங்களை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான் கூடாரம் எங்கும் தடவிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை. 35 அவள் தன் தகப்பனை நோக்கி: என் ஆண்டவனாகிய உமக்கு முன்பாக நான் எழுந்திராததைக்குறித்துக் கோபங்கொள்ளவேண்டாம்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது என்றாள்; அப்படியே அவன் அந்தச் சுரூபங்களைத் தேடியும் கண்டுபிடிக்கவில்லை. 36 அப்பொழுது யாக்கோபுக்குக் கோபம் எழும்பி, லாபானோடே வாக்குவாதம்பண்ணி: நீர் என்னை இவ்வளவு உக்கிரமாய்த் தொடர்ந்துவரும்படிக்கு நான் செய்த தப்பிதம் என்ன? நான் செய்த துரோகம் என்ன? 37 என் தட்டுமுட்டுகளையெல்லாம் தடவிப்பார்த்தீரே; உம்முடைய வீட்டுத் தட்டுமுட்டுகளில் என்னத்தைக் கண்டுபிடித்தீர்? அதை என்னுடைய சகோதரருக்கும் உம்முடைய சகோதரருக்கும் முன்பாக இங்கே வையும்; அவர்கள் எனக்கும் உமக்கும் நடுத்தீர்க்கட்டும். 38 இந்த இருபது வருஷகாலமாய் நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினையழியவில்லை; உம்முடைய மந்தையின் கடாக்களை நான் தின்னவில்லை. 39 பீறுண்டதை நான் உம்மிடத்துக்குக் கொண்டுவராமல், அதற்காக நான் உத்தரவாதம்பண்ணினேன்; பகலில் களவுபோனதையும், இரவில் களவுபோனதையும் என் கையில் கேட்டு வாங்கினீர். 40 பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இவ்விதமாய்ப் பாடுபட்டேன். 41 இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர். 42 என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடிராமற்போனால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாய் அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கைப்பிரயாசத்தையும் பார்த்து, நேற்று ராத்திரி உம்மைக் கடிந்துகொண்டார் என்று சொன்னான். 43 அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் பிரதியுத்தரமாக: இந்தக் குமாரத்திகள் என் குமாரத்திகள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை; நீ காண்கிற யாவும் என்னுடையவைகள்; என் குமாரத்திகளாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யக்கூடும்? 44 இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருக்கும்பொருட்டு, நீயும் நானும் உடன்படிக்கைபண்ணிக்கொள்ளக்கடவோம் என்றான். 45 அப்பொழுது யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான். 46 பின்னும் யாக்கோபு தன் சகோதரரைப் பார்த்து, கற்களைக் குவியலாகச் சேருங்கள் என்றான்; அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் போஜனம்பண்ணினார்கள். 47 லாபான் அதற்கு ஜெகர்சகதூதா என்று பேரிட்டான்; யாக்கோபு அதற்குக் கலயெத் என்று பேரிட்டான். 48 இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னபடியினாலே, அதின் பேர் கலயெத் என்னப்பட்டது. 49 அல்லாமலும் அவன்: நாம் ஒருவரை ஒருவர் விட்டு மறைந்தபின், நீ என் குமாரத்திகளைத் துயரப்படுத்தி, அவர்களையல்லாமல் வேறே ஸ்திரீகளை விவாகம்பண்ணினாயானால், கர்த்தர் எனக்கும் உனக்கும் நடுநின்று கண்காணிக்கக்கடவர்; 50 நம்முடனே ஒருவரும் இல்லை; பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி என்று சொன்னபடியால், அது மிஸ்பா என்னும் பேர்பெற்றது. 51 பின்னும் லாபான் யாக்கோபை நோக்கி: இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவாக நான் நிறுத்தின தூணையும் பார். 52 தீங்குசெய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்துக்கு வராதபடிக்கும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்துக்கு வராதபடிக்கும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி. 53 ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவர் நமக்குள்ளே நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான். 54 பின்பு, யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, போஜனம்பண்ணும்படி தன் சகோதரரை அழைத்தான்; அப்படியே அவர்கள் போஜனம்பண்ணி மலையிலே இராத்தங்கினார்கள். 55 லாபான் அதிகாலமே எழுந்திருந்து, தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் முத்தஞ்செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான் புறப்பட்டு, தன் இடத்துக்குத் திரும்பிப்போனான்.

ஆதியாகமம் 32

1 யாக்கோபு பிரயாணம்பண்ணுகையில், தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள். 2 யாக்கோபு அவர்களைக் கண்டபோது: இது தேவனுடைய சேனை என்று சொல்லி, அந்த ஸ்தலத்திற்கு மக்னாயீம் என்று பேரிட்டான். 3 பின்பு, யாக்கோபு ஏதோம் சீமையாகிய சேயீர் தேசத்திலிருக்கிற தன் சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போகும்படி ஆட்களை அழைப்பித்து: 4 நீங்கள் என் ஆண்டவனாகிய ஏசாவினிடத்தில் போய், நான் இதுவரைக்கும் லாபானிடத்தில் தங்கியிருந்தேன் என்றும், 5 எனக்கு எருதுகளும், கழுதைகளும், ஆடுகளும், வேலைக்காரரும், வேலைக்காரிகளும் உண்டென்றும், உம்முடைய கண்களில் எனக்குத் தயவுகிடைக்கத்தக்கதாக ஆண்டவனாகிய உமக்கு இதை அறிவிக்கும்படி ஆட்களை அனுப்பினேன் என்றும் உம்முடைய தாசனாகிய யாக்கோபு சொல்லச்சொன்னான் என்று சொல்லும்படி கட்டளைகொடுத்துத் தனக்கு முன்னாக அவர்களை அனுப்பினான். 6 அந்த ஆட்கள் யாக்கோபினிடத்துக்குத் திரும்பிவந்து: நாங்கள் உம்முடைய சகோதரனாகிய ஏசாவினிடத்துக்குப் போய்வந்தோம்; அவரும் நானூறு பேரோடே உம்மை எதிர்கொள்ள வருகிறார் என்றார்கள். 7 அப்பொழுது யாக்கோபு மிகவும் பயந்து, வியாகுலப்பட்டு, தன்னிடத்திலிருந்த ஜனங்களையும் ஆடுமாடுகளையும் ஒட்டகங்களையும் இரண்டு பகுதியாகப் பிரித்து: 8 ஏசா ஒரு பகுதியின்மேல் விழுந்து அதை முறிய அடித்தாலும், மற்றப் பகுதி தப்பித்துக்கொள்ள இடம் உண்டு என்றான். 9 பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே, 10 அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன். 11 என் சகோதரனாகிய ஏசாவின் கைக்கு என்னைத் தப்புவியும், அவன் வந்து என்னையும் பிள்ளைகளையும் தாய்மார்களையும் முறிய அடிப்பான் என்று அவனுக்கு நான் பயந்திருக்கிறேன். 12 தேவரீரோ: நான் உனக்கு மெய்யாகவே நன்மைசெய்து, உன் சந்ததியை எண்ணிமுடியாத கடற்கரை மணலைப்போல மிகவும் பெருகப்பண்ணுவேன் என்று சொன்னீரே என்றான். 13 அன்று ராத்திரி அவன் அங்கே தங்கி, தன் கைக்கு உதவினவைகளிலே தன் சகோதரனாகிய ஏசாவுக்கு வெகுமானமாக, 14 இருநூறு வெள்ளாடுகளையும், இருபது வெள்ளாட்டுக் கடாக்களையும், இருநூறு செம்மறியாடுகளையும், இருபது ஆட்டுக்கடாக்களையும், 15 பால் கொடுக்கிற முப்பது ஒட்டகங்களையும், அவைகளின் குட்டிகளையும், நாற்பது கடாரிகளையும், பத்துக் காளைகளையும், இருபது கோளிகைக் கழுதைகளையும், பத்துக் கழுதைக்குட்டிகளையும் பிரித்தெடுத்து, 16 வேலைக்காரர் கையில் ஒவ்வொரு மந்தையைத் தனித்தனியாக ஒப்புவித்து, நீங்கள் மந்தை மந்தைக்கு முன்னும் பின்னுமாக இடம் விட்டு எனக்கு முன்னாக ஓட்டிக்கொண்டுபோங்கள் என்று தன் வேலைக்காரருக்குச் சொல்லி, 17 முன்னே போகிறவனை நோக்கி: என் சகோதரனாகிய ஏசா உனக்கு எதிர்ப்பட்டு: நீ யாருடையவன்? எங்கே போகிறாய்? உனக்குமுன் போகிற மந்தை யாருடையது? என்று உன்னைக் கேட்டால், 18 நீ: இது உமது அடியானாகிய யாக்கோபுடையது; இது என் ஆண்டவனாகிய ஏசாவுக்கு அனுப்பப்படுகிற வெகுமதி; இதோ, அவனும் எங்கள் பின்னே வருகிறான் என்று சொல் என்றான். 19 இரண்டாம் மூன்றாம் வேலைக்காரனையும், மந்தைகளின் பின்னாலே போகிற அனைவரையும் நோக்கி: நீங்களும் ஏசாவைக் காணும்போது, இந்தப்பிரகாரமாக அவனோடே சொல்லி, 20 இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னாலே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திக்கொண்டு, பின்பு அவன் முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்பேரில் தயவாயிருப்பான் என்றான். 21 அந்தப்படியே வெகுமதி அவனுக்கு முன் போயிற்று; அவனோ அன்று ராத்திரி பாளயத்திலே தங்கி, 22 இராத்திரியில் எழுந்திருந்து, தன் இரண்டு மனைவிகளையும், தன் இரண்டு பணிவிடைக்காரிகளையும், தன்னுடைய பதினொரு குமாரரையும் கூட்டிக்கொண்டு, யாப்போக்கு என்கிற ஆற்றின் துறையைக் கடந்தான். 23 அவர்களையும் சேர்த்து, ஆற்றைக் கடக்கப்பண்ணி, தனக்கு உண்டான யாவையும் அக்கரைப்படுத்தினான். 24 யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்; அப்பொழுது ஒரு புருஷன் பொழுது விடியுமளவும் அவனுடனே போராடி, 25 அவனை மேற்கொள்ளாததைக் கண்டு, அவனுடைய தொடைச்சந்தைத் தொட்டார்; அதினால் அவருடனே போராடுகையில் யாக்கோபின் தொடைச்சந்து சுளுக்கிற்று. 26 அவர்: நான் போகட்டும், பொழுது விடிகிறது என்றார். அதற்கு அவன்: நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன் என்றான். 27 அவர்: உன் பேர் என்ன என்று கேட்டார்; யாக்கோபு என்றான். 28 அப்பொழுது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார். 29 அப்பொழுது யாக்கோபு: உம்முடைய நாமத்தை எனக்கு அறிவிக்கவேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என் நாமத்தைக் கேட்பானேன் என்று சொல்லி, அங்கே அவனை ஆசீர்வதித்தார். 30 அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான். 31 அவன் பெனியேலைக் கடந்துபோகையில், சூரியன் உதயமாயிற்று; அவன் தொடைச்சுளுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான். 32 அவர் யாக்கோபுடைய தொடைச்சந்து நரம்பைத் தொட்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் இந்நாள்வரைக்கும் தொடைச்சந்து நரம்பைப் புசிக்கிறதில்லை.

ஆதியாகமம் 33

1 யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடேகூட நானூறு மனிதரும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு பணிவிடைக்காரிகளிடத்திலும் வெவ்வேறாகப் பிரித்துவைத்து, 2 பணிவிடைக்காரிகளையும் அவர்கள் பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவள் பிள்ளைகளையும் இடையிலும், ராகேலையும் யோசேப்பையும் கடையிலும் நிறுத்தி: 3 தான் அவர்களுக்கு முன்னாக நடந்துபோய், ஏழுவிசை தரைமட்டும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் கிட்டச் சேர்ந்தான். 4 அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள். 5 அவன் தன் கண்களை ஏறெடுத்து, ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் கண்டு: உன்னோடிருக்கிற இவர்கள் யார்? என்றான். அதற்கு அவன்: தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள் என்றான். 6 அப்பொழுது பணிவிடைக்காரிகளும் அவர்கள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். 7 லேயாளும் அவள் பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள். 8 அப்பொழுது அவன்: எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் என்னத்துக்கு என்றான். அதற்கு அவன்: என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்கிறதற்கு என்றான். 9 அதற்கு ஏசா: என் சகோதரனே, எனக்குப் போதுமானது உண்டு; உன்னுடையது உனக்கு இருக்கட்டும் என்றான். 10 அதற்கு யாக்கோபு: அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை என் கையிலிருந்து ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது. 11 தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான். 12 பின்பு அவன்: நாம் புறப்பட்டுப்போவோம் வா, நான் உனக்கு முன் நடப்பேன் என்றான். 13 அதற்கு அவன்: பிள்ளைகள் இளம் பிள்ளைகள் என்றும், கறவையான ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது துரிதமாய் ஓட்டினால், மந்தையெல்லாம் மாண்டுபோம். 14 என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம்; நான் சேயீருக்கு என் ஆண்டவனிடத்தில் வருமளவும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் கால்நடைக்கும் பிள்ளைகளின் கால்நடைக்கும் தக்கதாக, மெதுவாய் அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன் என்றான். 15 அப்பொழுது ஏசா: என்னிடத்திலிருக்கிற ஜனங்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: அது என்னத்திற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவுகிடைத்தால் மாத்திரம் போதும் என்றான். 16 அன்றைத்தினம் ஏசா திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப் போனான். 17 யாக்கோபு சுக்கோத்திற்குப் பிரயாணம்பண்ணி, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களைப் போட்டான்; அதினாலே அந்த ஸ்தலத்துக்குச் சுக்கோத் என்று பேரிட்டான். 18 யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம்போட்டான். 19 தான் கூடாரம்போட்ட வெளியின் நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் புத்திரர் கையிலே நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்டு, 20 அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பேரிட்டான்.

ஆதியாகமம் 34

1 லேயாள் யாக்கோபுக்குப் பெற்ற குமாரத்தியாகிய தீனாள் தேசத்துப் பெண்களைப் பார்க்கப் புறப்பட்டாள். 2 அவளை ஏவியனான ஏமோரின் குமாரனும் அத்தேசத்தின் பிரபுவுமாகிய சீகேம் என்பவன் கண்டு, அவளைக் கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான். 3 அவனுடைய மனம் யாக்கோபின் குமாரத்தியாகிய தீனாள்மேல் பற்றுதலாயிருந்தது; அவன் அந்தப் பெண்ணை நேசித்து, அந்தப் பெண்ணின் மனதுக்கு இன்பமாய்ப் பேசினான். 4 சீகேம் தன் தகப்பனாகிய ஏமோரை நோக்கி: இந்தப் பெண்ணை எனக்குக் கொள்ளவேண்டும் என்று சொன்னான். 5 தன் குமாரத்தியாகிய தீனாளை அவன் தீட்டுப்படுத்தினதை யாக்கோபு கேள்விப்பட்டபோது, அவன் குமாரர் அவனுடைய மந்தையினிடத்தில் வெளியிலே இருந்தார்கள்; அவர்கள் வருமளவும் யாக்கோபு பேசாமலிருந்தான். 6 அத்தருணத்தில் சீகேமின் தகப்பனாகிய ஏமோர் புறப்பட்டு, யாக்கோபோடே பேசும்படி அவனிடத்தில் வந்தான். 7 யாக்கோபின் குமாரர் இந்தச் செய்தியைக் கேட்டவுடனே, வெளியிலிருந்து வந்தார்கள். அவன் யாக்கோபின் குமாரத்தியோடே சயனித்து, செய்யத்தகாத மதிகெட்ட காரியத்தை இஸ்ரவேலில் செய்ததினாலே, அந்த மனிதர் மனங்கொதித்து மிகவும் கோபங்கொண்டார்கள். 8 ஏமோர் அவர்களோடே பேசி: என் குமாரனாகிய சீகேமின் மனது உங்கள் குமாரத்தியின்மேல் பற்றுதலாயிருக்கிறது; அவளை அவனுக்கு மனைவியாகக் கொடுங்கள். 9 நீங்கள் எங்களோடே சம்பந்தங்கலந்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொடுத்து, எங்கள் குமாரத்திகளை உங்களுக்குக் கொண்டு, 10 எங்களோடே வாசம்பண்ணுங்கள்; தேசம் உங்கள் முன்பாக இருக்கிறது; இதிலே குடியிருந்து, வியாபாரம்பண்ணி, பொருள் சம்பாதித்து, அதைக் கையாண்டுகொண்டிருங்கள் என்றான். 11 சீகேமும் அவள் தகப்பனையும் அவள் சகோதரரையும் நோக்கி: உங்கள் கண்களில் எனக்குத் தயவுகிடைக்கவேண்டும்; நீங்கள் என்னிடத்தில் எதைக் கேட்டாலும் தருகிறேன்; 12 பரிசமும் வெகுமதியும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணைமாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான். 13 அப்பொழுது யாக்கோபின் குமாரர் தங்கள் சகோதரியாகிய தீனாளைச் சீகேம் என்பவன் தீட்டுப்படுத்தினபடியால், அவனுக்கும் அவன் தகப்பனாகிய ஏமோருக்கும் வஞ்சகமான மறுமொழியாக: 14 விருத்தசேதனமில்லாத புருஷனுக்கு நாங்கள் எங்கள் சகோதரியைக் கொடுக்கலாகாது; அது எங்களுக்கு நிந்தையாயிருக்கும். 15 நீங்களும், உங்களுக்குள்ளிருக்கும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டு எங்களைப்போலாவீர்களானால், நாங்கள் சம்மதித்து, 16 உங்களுக்கு எங்கள் குமாரத்திகளைக் கொடுத்து, உங்கள் குமாரத்திகளை எங்களுக்குக் கொண்டு, உங்களோடே குடியிருந்து, ஏகஜனமாயிருப்போம். 17 விருத்தசேதனம் பண்ணிக்கொள்வதற்கு எங்கள் சொல் கேளாமற்போவீர்களானால், நாங்கள் எங்கள் குமாரத்தியை அழைத்துக்கொண்டு போய்விடுவோம் என்று சொன்னார்கள். 18 அவர்களுடைய வார்த்தைகள் ஏமோருக்கும் ஏமோரின் குமாரனாகிய சீகேமுக்கும் நலமாய்த் தோன்றினது. 19 அந்த வாலிபன் யாக்கோபுடைய குமாரத்தியின்மேல் பிரியம் வைத்திருந்தபடியால், அந்தக் காரியத்தைச் செய்ய அவன் தாமதம்பண்ணவில்லை. அவன் தன் தகப்பன் வீட்டார் அனைவருக்குள்ளும் மேன்மையுள்ளவனாயிருந்தான். 20 ஏமோரும் அவன் குமாரன் சீகேமும் தங்கள் பட்டணத்து வாசலில் வந்து, தங்கள் பட்டணத்து மனிதரோடே பேசி: 21 இந்த மனிதர் நம்மோடே சமாதானமாயிருக்கிறார்கள்; ஆகையால், அவர்கள் இந்தத் தேசத்தில் வாசம்பண்ணி, இதிலே வியாபாரம்பண்ணட்டும்; அவர்களும் வாசம்பண்ணுகிறதற்கு தேசம் விஸ்தாரமாயிருக்கிறது; அவர்களுடைய குமாரத்திகளை நமக்கு மனைவிகளாகக் கொண்டு, நம்முடைய குமாரத்திகளை அவர்களுக்குக் கொடுப்போம். 22 அந்த மனிதர் விருத்தசேதனம் பண்ணப்பட்டவர்களாயிருக்கிறதுபோல, நம்மிலுள்ள ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டால், அவர்கள் ஏகஜனமாக நம்மோடே வாசம்பண்ணச் சம்மதிப்பார்கள். 23 அவர்களுடைய ஆடுமாடுகள் ஆஸ்திகள் மிருகஜீவன்கள் எல்லாம் நம்மைச் சேருமல்லவா? அவர்களுக்குச் சம்மதிப்போமானால், அவர்கள் நம்முடனே வாசம்பண்ணுவார்கள் என்று சொன்னார்கள். 24 அப்பொழுது ஏமோரின் பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் அனைவரும் அவன் சொல்லையும் அவன் குமாரனாகிய சீகேமின் சொல்லையும் கேட்டு, அவனுடைய பட்டணத்து வாசலில் புறப்பட்டுவரும் ஆண்மக்கள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள். 25 மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக்கொண்டபோது, யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்னும் இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தின்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள். 26 ஏமோரையும் அவன் குமாரன் சீகேமையும் பட்டயக்கருக்காலே கொன்று, சீகேமின் வீட்டிலிருந்த தீனாளை அழைத்துக்கொண்டு போய்விட்டார்கள். 27 மேலும், யாக்கோபின் குமாரர் வெட்டுண்டவர்களிடத்தில் வந்து, தங்கள் சகோதரியை அவர்கள் தீட்டுப்படுத்தினதற்காகப் பட்டணத்தைக் கொள்ளையிட்டு, 28 அவர்களுடைய ஆடுமாடுகளையும் கழுதைகளையும், பட்டணத்திலும் வயல்வெளியிலும் இருந்தவைகள் யாவையும், 29 அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் எடுத்துக்கொண்டு, அவர்களுடைய எல்லாக் குழந்தைகளையும் ஸ்திரீகளையும் சிறைபிடித்து, வீட்டிலிருந்த எல்லாவற்றையும் கொள்ளையிட்டார்கள். 30 அப்பொழுது யாக்கோபு சிமியோனையும் லேவியையும் பார்த்து: இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப்பண்ணினீர்கள்; நான் கொஞ்ச ஜனமுள்ளவன்; அவர்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, நானும் என் குடும்பமும் அழியும்படி என்னை வெட்டிப்போடுவார்களே என்றான். 31 அதற்கு அவர்கள்: எங்கள் சகோதரியை அவர்கள் ஒரு வேசியைப்போல நடத்தலாமோ என்றார்கள்.

ஆதியாகமம் 35

1 தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குத் தரிசனமான தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார். 2 அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் தன்னோடேகூட இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, உங்கள் வஸ்திரங்களை மாற்றுங்கள். 3 நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்துக்கு உத்தரவு அருளிச்செய்து, நான் நடந்த வழியிலே என்னோடேகூட இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான். 4 அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளைச் சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப்போட்டான். 5 பின்பு பிரயாணம் புறப்பட்டார்கள்; அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தாருக்குத் தேவனாலே பயங்கரம் உண்டானதினால், அவர்கள் யாக்கோபின் குமாரரைப் பின்தொடராதிருந்தார்கள். 6 யாக்கோபும் அவனோடேகூட இருந்த எல்லா ஜனங்களும் கானான்தேசத்திலுள்ள பெத்தேல் என்னும் லூசுக்கு வந்தார்கள். 7 அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, தன் சகோதரனுடைய முகத்துக்குத் தப்பி ஓடினபோது, அங்கே தனக்கு தேவன் தரிசனமானபடியால், அந்த ஸ்தலத்திற்கு ஏல்பெத்தேல் என்று பேரிட்டான். 8 ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் மரித்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்பண்ணப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பேர் உண்டாயிற்று. 9 யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் தரிசனமாகி, அவனை ஆசீர்வதித்து: 10 இப்பொழுது உன் பேர் யாக்கோபு, இனி உன் பேர் யாக்கோபு என்னப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பேர் வழங்கும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல் என்று பேரிட்டார். 11 பின்னும் தேவன் அவனை நோக்கி: நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு ஜாதியும் பற்பல ஜாதிகளின் கூட்டங்களும் உன்னிலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள். 12 நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப்பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன் என்று சொல்லி, 13 தேவன் அவனோடே பேசின ஸ்தலத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப்போனார். 14 அப்பொழுது யாக்கோபு தன்னோடே அவர் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணெயையும் வார்த்தான். 15 தேவன் தன்னோடே பேசின அந்த ஸ்தலத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பேரிட்டான். 16 பின்பு, பெத்தேலை விட்டுப் பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டாயிற்று. 17 பிரசவிக்கும்போது, அவளுக்குக் கடும்வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள். 18 மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான். 19 ராகேல் மரித்து, பெத்லெகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணப்பட்டாள். 20 அவள் கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண். 21 இஸ்ரவேல் பிரயாணம்பண்ணி, ஏதேர் என்கிற கோபுரத்திற்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான். 22 இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான். 23 யாக்கோபின் குமாரர் பன்னிரண்டு பேர். யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர். 24 யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற குமாரர். 25 தாண், நப்தலி என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற குமாரர். 26 காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற குமாரர்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த குமாரர். 27 பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்கு தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர். 28 ஈசாக்கு விருத்தாப்பியமும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, நூற்றெண்பது வருஷம் ஜீவித்திருந்து, 29 பிராணன்போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரராகிய ஏசாவும் யாக்கோபும் அவனை அடக்கம்பண்ணினார்கள்.

ஆதியாகமம் 36

1 ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வம்சவரலாறு: 2 ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் குமாரத்தியாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமாகிய அகோலிபாமாளையும், 3 இஸ்மவேலின் குமாரத்தியும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் விவாகம்பண்ணியிருந்தான். 4 ஆதாள் ஏசாவுக்கு எலீப்பாசைப் பெற்றாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றாள். 5 அகோலிபாமாள் எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான்தேசத்திலே பிறந்த குமாரர். 6 ஏசா தன் மனைவிகளையும், தன் குமாரரையும், தன் குமாரத்திகளையும், தன் வீட்டிலுள்ள யாவரையும், தன் ஆடுமாடுகளையும், மற்ற ஜீவஜந்துக்கள் யாவையும், தான் கானான்தேசத்திலே சம்பாதித்த ஆஸ்தி முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபை விட்டுப் பிரிந்து வேறே தேசத்துக்குப் போனான். 7 அவர்களுடைய சம்பத்து மிகுதியாயிருந்தபடியினால் அவர்கள் ஒருமித்துக் குடியிருக்கக் கூடாமற்போயிற்று; அவர்களுடைய மந்தைகளினிமித்தமாய் அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்கக்கூடாததாயிருந்தது. 8 ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பேர். 9 சேயீர்மலையில் இருக்கிற ஏதோமியருடைய தகப்பனாகிய ஏசாவின் சந்ததிகளும், 10 ஏசாவின் குமாரருடைய நாமங்களுமாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய குமாரனுக்கு எலீப்பாஸ் என்று பேர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய குமாரனுக்கு ரெகுவேல் என்று பேர். 11 எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள். 12 திம்னாள் ஏசாவின் குமாரனாகிய எலீப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றாள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய புத்திரர். 13 ரெகுவேலுடைய குமாரர், நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் புத்திரர். 14 சிபியோனின் குமாரத்தியும் ஆனாகின் குமாரத்தியுமான அகோலிபாமாள் என்கிற ஏசாவின் மனைவி எயூஷ், யாலாம், கோராகு என்னும் புத்திரரை ஏசாவுக்குப் பெற்றாள். 15 ஏசாவின் குமாரரில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்த மகனாகிய எலீப்பாசுடைய குமாரரில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனாஸ் பிரபு, 16 கோராகு பிரபு, கத்தாம் பிரபு, அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் எலீப்பாசின் சந்ததியும் ஆதாளின் குமாரருமாயிருந்த பிரபுக்கள். 17 ஏசாவின் குமாரனாகிய ரெகுவேலின் புத்திரரில் நகாத் பிரபு, செராகு பிரபு, சம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் குமாரருமாயிருந்த பிரபுக்கள். 18 ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் குமாரர், எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஆனாகின் குமாரத்தியும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள். 19 இவர்களே ஏதோம் என்னும் ஏசாவின் சந்ததி; இவர்களே அவர்களிலிருந்த பிரபுக்கள். 20 அந்தத் தேசத்தின் குடிகளாகிய ஓரியனான சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு, 21 திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள்; இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் புத்திரராகிய ஓரியருடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள். 22 லோத்தானுடைய குமாரர், ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள். 23 சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள். 24 சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள்; வனாந்தரத்திலே தன் தகப்பனாகிய சிபியோனின் கழுதைகளை மேய்க்கையில், கோவேறு கழுதைகளைக் கண்டுபிடித்த ஆனாகு இவன்தான். 25 ஆனாகின் பிள்ளைகள், திஷோன், அகோலிபாமாள் என்பவர்கள்; இந்த அகோலிபாமாள் ஆனாகின் குமாரத்தி. 26 திஷோனுடைய குமாரர், எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள். 27 ஏத்சேருடைய குமாரர், பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள். 28 திஷானுடைய குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள். 29 ஓரியரின் சந்ததியில் தோன்றிய பிரபுக்கள், லோத்தான் பிரபு, சோபால் பிரபு, சிபியோன் பிரபு, ஆனாகு பிரபு, 30 திஷோன் பிரபு, ஏத்சேர் பிரபு, திஷான் பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர் தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர் சந்ததியான பிரபுக்கள். 31 இஸ்ரவேல் புத்திரர்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்திலே ஆண்ட ராஜாக்களாவன: 32 பேயோருடைய குமாரனாகிய பேலா ஏதோமிலே அரசாண்டான்; அவனுடைய பட்டணத்துக்குத் தின்காபா என்று பேர். 33 பேலா மரித்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய குமாரனாகிய யோபாப் அவன் பட்டத்திற்கு வந்தான். 34 யோபாப் மரித்தபின், தேமானிய தேசத்தானாகிய உஷாம் அவன் பட்டத்திற்கு வந்தான். 35 உஷாம் மரித்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியரை முறிய அடித்த பேதாதின் குமாரனாகிய ஆதாத் அவன் பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு ஆவீத் என்று பேர். 36 ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவனுடைய பட்டத்திற்கு வந்தான். 37 சம்லா மரித்தபின் அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகொபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். 38 சவுல் மரித்தபின், அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். 39 அக்போருடைய குமாரனாகிய பாகால்கானான் மரித்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்குப் பாகு என்று பேர்; அவன் மனைவியின் பேர் மெகேதபேல்; அவள் மத்ரேத்துடைய குமாரத்தியும் மேசகாவின் குமாரத்தியுமாய் இருந்தாள். 40 தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும் வாசஸ்தலங்களின்படியேயும் நாமதேயங்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய நாமங்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, ஏதேத் பிரபு, 41 அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு, 42 கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு, 43 மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு; இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா.

ஆதியாகமம் 37

1 யாக்கோபு தன் தகப்பன் தங்கியிருந்த கானான் தேசத்திலே குடியிருந்தான். 2 யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான். 3 இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான். 4 அவனுடைய சகோதரர் எல்லாரிலும் அவனைத் தங்கள் தகப்பன் அதிகமாய் நேசிக்கிறதை அவன் சகோதரர் கண்டபோது, அவனோடே பட்சமாய்ப் பேசாமல் அவனைப் பகைத்தார்கள். 5 யோசேப்பு ஒரு சொப்பனம் கண்டு, அதைத் தன் சகோதரருக்கு அறிவித்தான்; அதினிமித்தம் அவனை இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள். 6 அவன் அவர்களை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தைக் கேளுங்கள்: 7 நாம் வயலில் அறுத்த அரிகளைக் கட்டிக்கொண்டிருந்தோம்; அப்பொழுது என்னுடைய அரிக்கட்டு நிமிர்ந்திருந்தது; உங்கள் அரிக்கட்டுகள் என் அரிக்கட்டைச் சுற்றி வணங்கி நின்றது என்றான். 8 அப்பொழுது அவன் சகோதரர் அவனைப் பார்த்து: நீ எங்கள்மேல் துரைத்தனம்பண்ணுவாயோ? நீ எங்களை ஆளப்போகிறாயோ? என்று சொல்லி, அவனை அவன் சொப்பனங்களின் நிமித்தமும், அவன் வார்த்தைகளின் நிமித்தமும் இன்னும் அதிகமாய்ப் பகைத்தார்கள். 9 அவன் வேறொரு சொப்பனம் கண்டு, தன் சகோதரரை நோக்கி: நான் இன்னும் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சூரியனும் சந்திரனும் பதினொரு நட்சத்திரங்களும் என்னை வணங்கினது என்றான். 10 இதை அவன் தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் சொன்னபோது, அவன் தகப்பன் அவனைப் பார்த்து: நீ கண்ட இந்தச் சொப்பனம் என்ன? நானும் உன் தாயாரும் உன் சகோதரரும் தரைமட்டும் குனிந்து உன்னை வணங்கவருவோமோ? என்று அவனைக் கடிந்துகொண்டான். 11 அவன் சகோதரர் அவன்மேல் பொறாமைகொண்டார்கள்; அவன் தகப்பனோ அவன் சொன்னதை மனதிலே வைத்துக்கொண்டான். 12 பின்பு, அவன் சகோதரர் சீகேமிலே தங்கள் தகப்பனுடைய ஆடுகளை மேய்க்கப் போனார்கள். 13 அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் சகோதரர் சீகேமிலே ஆடுகளை மேய்க்கிறார்கள் அல்லவா? உன்னை அவர்களிடத்துக்கு அனுப்பப் போகிறேன், வா என்றான். அவன்: இதோ, போகிறேன் என்றான். 14 அப்பொழுது அவன்: நீ போய், உன் சகோதரருடைய ஷேமம் எப்படி என்றும், ஆடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்த்து, எனக்கு மறுசெய்தி கொண்டுவா என்று அவனுக்குச் சொல்லி, எபிரோன் பள்ளத்தாக்கிலே இருந்து அவனை அனுப்பினான்; அந்தப்படியே அவன் சீகேமுக்குப் போனான். 15 அப்பொழுது ஒரு மனிதன் அவன் வெளியிலே வழிதப்பித் திரிகிறதைக் கண்டு, என்ன தேடுகிறாய்? என்று அவனைக் கேட்டான். 16 அதற்கு அவன்: என் சகோதரரைத் தேடுகிறேன், அவர்கள் எங்கே ஆடு மேய்க்கிறார்கள், சொல்லும் என்றான். 17 அந்த மனிதன்: அவர்கள் இவ்விடத்திலிருந்து போய்விட்டார்கள், தோத்தானுக்குப் போவோம் என்று அவர்கள் சொல்லக்கேட்டேன் என்றான்; அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரைத் தொடர்ந்துபோய், அவர்களைத் தோத்தானிலே கண்டுபிடித்தான். 18 அவர்கள் அவனைத் தூரத்தில் வரக்கண்டு, அவன் தங்களுக்குச் சமீபமாய் வருமுன்னே, அவனைக் கொலைசெய்யும்படி சதியோசனைபண்ணி, 19 ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான், 20 நாம் அவனைக் கொன்று, இந்தக் குழிகள் ஒன்றிலே அவனைப் போட்டு, ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்தது என்று சொல்லுவோம் வாருங்கள்; அவனுடைய சொப்பனங்கள் எப்படி முடியும் பார்ப்போம் என்றார்கள். 21 ரூபன் அதைக் கேட்டு, அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்து, அவனை அவன் தகப்பனிடத்துக்குத் திரும்பவும் கொண்டுபோக மனதுள்ளவனாய், 22 அவர்களை நோக்கி: அவனைக் கொல்ல வேண்டாம், நீங்கள் இரத்தம் சிந்தலாகாது; நீங்கள் அவன்மேல் கை வையாமல், அவனை வனாந்தரத்திலுள்ள இந்தக் குழியிலே போட்டுவிடுங்கள் என்று சொல்லி, இவ்விதமாய் ரூபன் அவனை அவர்கள் கைக்குத் தப்புவித்தான். 23 யோசேப்பு தன் சகோதரரிடத்தில் சேர்ந்தபோது, யோசேப்பு உடுத்திக்கொண்டிருந்த பலவருண அங்கியை அவர்கள் கழற்றி, 24 அவனை எடுத்து, அந்தக் குழியிலே போட்டார்கள்; அது தண்ணீரில்லாத வெறுங்குழியாயிருந்தது. 25 பின்பு, அவர்கள் போஜனஞ்செய்யும்படி உட்கார்ந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, இதோ, கீலேயாத்திலிருந்து வருகிற இஸ்மவேலருடைய கூட்டத்தைக் கண்டார்கள்; அவர்கள் எகிப்துக்குக் கொண்டுபோகும்படி கந்தவர்க்கங்களையும் பிசின் தைலத்தையும் வெள்ளைப்போளத்தையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள். 26 அப்பொழுது யூதா தன் சகோதரரை நோக்கி: நாம் நம்முடைய சகோதரனைக் கொன்று, அவன் இரத்தத்தை மறைப்பதினால் லாபம் என்ன? 27 அவனை இந்த இஸ்மவேலருக்கு விற்றுப்போடுவோம் வாருங்கள்; நமது கை அவன்மேல் படாதிருப்பதாக; அவன் நம்முடைய சகோதரனும் நம்முடைய மாம்சமுமாய் இருக்கிறானே என்றான். அவன் சகோதரர் அவன் சொல்லுக்கு இணங்கினார்கள். 28 அந்த வர்த்தகரான மீதியானியர் கடந்துபோகிறபோது, அவர்கள் யோசேப்பை அந்தக் குழியிலிருந்து தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள். அவர்கள் யோசேப்பை எகிப்திற்குக் கொண்டுபோனார்கள். 29 பின்பு, ரூபன் அந்தக் குழியினிடத்துக்குத் திரும்பிப்போனபோது, யோசேப்பு குழியில் இல்லையென்று கண்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, 30 தன் சகோதரரிடத்துக்குத் திரும்பிவந்து: இளைஞன் இல்லையே, ஐயோ! நான் எங்கே போவேன் என்றான். 31 அவர்கள் யோசேப்பின் அங்கியை எடுத்து, ஒரு வெள்ளாட்டுக்கடாவை அடித்து, அந்த அங்கியை இரத்தத்திலே தோய்த்து, 32 பல வருணமான அந்த அங்கியைத் தங்கள் தகப்பனிடத்துக்கு அனுப்பி: இதை நாங்கள் கண்டெடுத்தோம், இது உம்முடைய குமாரன் அங்கியோ, அல்லவோ, பாரும் என்று சொல்லச்சொன்னார்கள். 33 யாக்கோபு அதைக் கண்டு, இது என் குமாரனுடைய அங்கிதான், ஒரு துஷ்டமிருகம் அவனைப் பட்சித்துப்போட்டது, யோசேப்பு பீறுண்டுபோனான் என்று புலம்பி, 34 தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் அரையில் இரட்டுக் கட்டிக்கொண்டு, அநேகநாள் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். 35 அவனுடைய குமாரர் குமாரத்திகள் எல்லாரும் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்து நின்றார்கள்; ஆனாலும் அவன் ஆறுதலுக்கு இடங்கொடாமல், நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன் என்றான். இவ்விதமாய் அவனுடைய தகப்பன் அவனுக்காக அழுதுகொண்டிருந்தான். 36 அந்த மீதியானியர் யோசேப்பை எகிப்திலே பார்வோனின் பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள்.

ஆதியாகமம் 38

1 அக்காலத்திலே யூதா தன் சகோதரரை விட்டு, அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச் சேர்ந்தான். 2 அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தான். 3 அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு ஏர் என்று பேரிட்டான். 4 அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள். 5 அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான். 6 யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான். 7 யூதாவின் மூத்த மகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப்போட்டார். 8 அப்பொழுது யூதா ஓனானை நோக்கி: நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவளை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான். 9 அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததி உண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான். 10 அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார். 11 அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளாகிய தாமாரை நோக்கி: என் குமாரனாகிய சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள். 12 அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான். 13 அப்பொழுது: உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது. 14 சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள். 15 யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து, 16 அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல்: நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள்: நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள். 17 அதற்கு அவன்: நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக்குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள்: நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள். 18 அப்பொழுது அவன்: நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி, 19 எழுந்துபோய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாள். 20 யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல், 21 அவ்விடத்து மனிதரை நோக்கி: வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: இங்கே தாசி இல்லை என்றார்கள். 22 அவன் யூதாவினிடத்தில் திரும்பிவந்து: அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான். 23 அப்பொழுது யூதா: இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான். 24 ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா: அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான். 25 அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி: இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள். 26 யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை. 27 அவளுக்குப் பிரசவகாலம் வந்தபோது, அவள் கர்ப்பத்தில் இரட்டைப் பிள்ளைகள் இருந்தன. 28 அவள் பெறுகிறபோது, ஒரு பிள்ளை கையை நீட்டினது; அப்பொழுது மருத்துவச்சி அதின் கையைப் பிடித்து, அதில் சிவப்புநூலைக் கட்டி, இது முதலாவது வெளிப்பட்டது என்றாள். 29 அது தன் கையைத் திரும்ப உள்ளே வாங்கிக்கொண்டபோது, அதின் சகோதரன் வெளிப்பட்டான். அப்பொழுது அவள்: நீ மீறிவந்ததென்ன, இந்த மீறுதல் உன்மேல் நிற்கும் என்றாள்; அதினாலே அவனுக்குப் பாரேஸ் என்று பேரிடப்பட்டது. 30 பிற்பாடு கையில் சிவப்புநூல் கட்டியிருந்த அவனுடைய தம்பி வெளிப்பட்டான்; அவனுக்கு சேரா என்று பேரிடப்பட்டது.

ஆதியாகமம் 39

1 யோசேப்பு எகிப்துக்குக் கொண்டுபோகப்பட்டான். பார்வோனுடைய பிரதானியும் தலையாரிகளுக்கு அதிபதியுமாகிய போத்திபார் என்னும் எகிப்து தேசத்தான் அவனை அவ்விடத்திற்குக் கொண்டுவந்த இஸ்மவேலரிடத்தில் விலைக்கு வாங்கினான். 2 கர்த்தர் யோசேப்போடே இருந்தார், அவன் காரியசித்தியுள்ளவனானான்; அவன் எகிப்தியனாகிய தன் எஜமானுடைய வீட்டிலே இருந்தான். 3 கர்த்தர் அவனோடே இருக்கிறார் என்றும், அவன் செய்கிற யாவையும் கர்த்தர் வாய்க்கப்பண்ணுகிறார் என்றும், அவன் எஜமான் கண்டு; 4 யோசேப்பினிடத்தில் தயவுவைத்து, அவனைத் தனக்கு ஊழியக்காரனும் தன் வீட்டுக்கு விசாரணைக்காரனுமாக்கி, தனக்கு உண்டான யாவற்றையும் அவன் கையில் ஒப்புவித்தான். 5 அவனைத் தன் வீட்டுக்கும் தனக்கு உண்டான எல்லாவற்றிற்கும் விசாரணைக்காரனாக்கினதுமுதற்கொண்டு, கர்த்தர் யோசேப்பினிமித்தம் அந்த எகிப்தியன் வீட்டை ஆசீர்வதித்தார்; வீட்டிலும் வெளியிலும் அவனுக்கு உண்டானவைகள் எல்லாவற்றிலும் கர்த்தருடைய ஆசீர்வாதம் இருந்தது. 6 ஆகையால், அவன் தனக்கு உண்டானதையெல்லாம் யோசேப்பின் கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு, தான் புசிக்கிற போஜனம்தவிர தன்னிடத்திலிருந்த மற்றொன்றைக்குறித்தும் விசாரியாதிருந்தான். யோசேப்பு அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தான். 7 சிலநாள் சென்றபின், அவனுடைய எஜமானின் மனைவி யோசேப்பின்மேல் கண்போட்டு, என்னோடே சயனி என்றாள். 8 அவனோ தன் எஜமானுடைய மனைவியின் சொல்லுக்கு இணங்காமல், அவளை நோக்கி: இதோ, வீட்டிலே என்னிடத்தில் இருக்கிறவைகளில் யாதொன்றைக்குறித்தும் என் ஆண்டவன் விசாரியாமல், தமக்கு உண்டான எல்லாவற்றையும் என் கையில் ஒப்பித்திருக்கிறார். 9 இந்த வீட்டிலே என்னிலும் பெரியவன் இல்லை; நீ அவருடைய மனைவியாயிருக்கிறபடியால் உன்னைத்தவிர வேறொன்றையும் அவர் எனக்கு விலக்கி வைக்கவில்லை; இப்படியிருக்க, நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான். 10 அவள் நித்தம் நித்தம் யோசேப்போடே இப்படிப் பேசிக்கொண்டு வந்தும், அவன் அவளுடனே சயனிக்கவும் அவளுடனே இருக்கவும் சம்மதிக்கவில்லை. 11 இப்படியிருக்கும்போது, ஒருநாள் அவன் தன் வேலையைச் செய்கிறதற்கு வீட்டுக்குள் போனான்; வீட்டு மனிதரில் ஒருவரும் வீட்டில் இல்லை. 12 அப்பொழுது அவள் அவனுடைய வஸ்திரத்தைப் பற்றிப் பிடித்து, என்னோடே சயனி என்றாள். அவனோ தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனான். 13 அவன் தன் வஸ்திரத்தை அவள் கையிலே விட்டு வெளியே ஓடிப்போனதை அவள் கண்டபோது, 14 அவள் தன் வீட்டு மனிதரைக் கூப்பிட்டு: பாருங்கள், எபிரெய மனுஷன் நம்மிடத்தில் சரசம்பண்ணும்படிக்கு அவனை நமக்குள் கொண்டுவந்தார், அவன் என்னோடே சயனிக்கும்படிக்கு என்னிடத்தில் வந்தான்; நான் மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டேன். 15 நான் சத்தமிட்டுக் கூப்பிடுகிறதை அவன் கேட்டு, தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு, வெளியே ஓடிப்போய்விட்டான் என்று சொன்னாள். 16 அவனுடைய எஜமான் வீட்டுக்கு வருமளவும் அவனுடைய வஸ்திரத்தைத் தன்னிடத்தில் வைத்திருந்து, 17 அவனை நோக்கி: நீர் நம்மிடத்தில் கொண்டுவந்த அந்த எபிரெய வேலைக்காரன் சரசம்பண்ணும்படிக்கு என்னிடத்தில் வந்தான். 18 அப்பொழுது நான் சத்தமிட்டுக் கூப்பிட்டேன், அவன் தன் வஸ்திரத்தை என்னிடத்தில் விட்டு வெளியே ஓடிப்போனான் என்றாள். 19 உம்முடைய வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான் என்று தன் மனைவி தன்னோடே சொன்ன வார்த்தைகளை அவனுடைய எஜமான் கேட்டபோது, அவனுக்குக் கோபம் மூண்டது. 20 யோசேப்பின் எஜமான் அவனைப் பிடித்து, ராஜாவின் கட்டளையால் காவலில் வைக்கப்பட்டவர்கள் இருக்கும் சிறைச்சாலையிலே அவனை ஒப்புவித்தான். அந்தச் சிறைச்சாலையில் அவன் இருந்தான். 21 கர்த்தரோ யோசேப்போடே இருந்து, அவன்மேல் கிருபைவைத்து, சிறைச்சாலைத் தலைவனுடைய தயவு அவனுக்குக் கிடைக்கும்படி செய்தார். 22 சிறைச்சாலைத் தலைவன் சிறைச்சாலையில் வைக்கப்பட்ட யாவரையும் யோசேப்பின் கையிலே ஒப்புவித்தான்; அங்கே அவர்கள் செய்வதெல்லாவற்றையும் யோசேப்பு செய்வித்தான். 23 கர்த்தர் அவனோடே இருந்தபடியினாலும், அவன் எதைச் செய்தானோ அதைக் கர்த்தர் வாய்க்கப்பண்ணினபடியினாலும், அவன் வசமாயிருந்த யாதொன்றையும் குறித்துச் சிறைச்சாலைத் தலைவன் விசாரிக்கவில்லை.

ஆதியாகமம் 40

1 இந்த நடபடிகளுக்குப்பின்பு, எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் எகிப்து ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்குக் குற்றம் செய்தார்கள். 2 பார்வோன் தன் பானபாத்திரக்காரரின் தலைவனும் சுயம்பாகிகளின் தலைவனும் ஆகிய இவ்விரண்டு பிரதானிகள் மேலும் கடுங்கோபங்கொண்டு, 3 அவர்களை யோசேப்பு வைக்கப்பட்டிருந்த இடமும் தலையாரிகளின் அதிபதியின் வீடுமாகிய சிறைச்சாலையிலே காவல் பண்ணுவித்தான். 4 தலையாரிகளின் அதிபதி அவர்களை விசாரிக்கும்படி யோசேப்பின் வசத்தில் ஒப்புவித்தான்; அவன் அவர்களை விசாரித்துவந்தான்; அவர்கள் அநேகநாள் காவலில் இருந்தார்கள். 5 எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியுமாகிய அவ்விரண்டுபேரும் சிறைச்சாலையில் இருக்கும்போது, ஒரே ராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டார்கள். 6 காலமே யோசேப்பு அவர்களிடத்தில் போய், அவர்களைப் பார்க்கும்போது, அவர்கள் கலங்கியிருந்தார்கள். 7 அப்பொழுது அவன் தன் எஜமானுடைய வீட்டில் தன்னோடே காவல்பண்ணப்பட்டிருந்த பார்வோனுடைய பிரதானிகளை நோக்கி: உங்கள் முகங்கள் இன்று துக்கமாயிருக்கிறது என்ன என்று கேட்டான். 8 அதற்கு அவர்கள்: சொப்பனம் கண்டோம், அதற்கு அர்த்தம் சொல்லுகிறவன் ஒருவனும் இல்லை என்றார்கள். அதற்கு யோசேப்பு: சொப்பனத்துக்கு அர்த்தம் சொல்லுதல் தேவனுக்குரியதல்லவா? அவைகளை என்னிடத்தில் சொல்லுங்கள் என்றான். 9 அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே ஒரு திராட்சச்செடி எனக்கு முன்பாக இருக்கக்கண்டேன். 10 அந்தத் திராட்சச்செடியிலே மூன்று கொடிகள் இருந்தது; அது துளிர்க்கிறதாயிருந்தது; அதில் பூக்கள் மலர்ந்திருந்தது; அதின் குலைகள் பழுத்த பழங்களாயிருந்தது. 11 பார்வோனுடைய பாத்திரம் என் கையிலே இருந்தது; நான் அந்தப் பழங்களைப் பறித்து, அவைகளைப் பார்வோனுடைய பாத்திரத்தில் பிழிந்து, அந்தப் பாத்திரத்தைப் பார்வோனுடைய கையிலே கொடுத்தேன் என்று, தன் சொப்பனத்தைச் சொன்னான். 12 அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கொடிகளும் மூன்று நாளாம். 13 மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மறுபடியும் உன் நிலையிலே நிறுத்துவார்; முன்னே அவருக்குப் பானம் கொடுத்துவந்த வழக்கத்தின்படி பார்வோனின் பாத்திரத்தை அவர் கையிலே கொடுப்பாய்; 14 இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னதும் அன்றி, நீ வாழ்வடைந்திருக்கும்போது, என்னை நினைத்து, என்மேல் தயவுவைத்து, என் காரியத்தைப் பார்வோனுக்கு அறிவித்து, இந்த இடத்திலிருந்து என்னை விடுதலையாக்கவேண்டும். 15 நான் எபிரெயருடைய தேசத்திலிருந்து களவாய்க் கொண்டுவரப்பட்டேன்; என்னை இந்தக் காவல் கிடங்கில் வைக்கும்படிக்கும் நான் இவ்விடத்தில் ஒன்றும் செய்யவில்லை என்றும் சொன்னான். 16 அர்த்தம் நன்றாயிருக்கிறது என்று சுயம்பாகிகளின் தலைவன் கண்டு, யோசேப்பை நோக்கி: நானும் என் சொப்பனத்தில் மூன்று வெள்ளைக் கூடைகள் என் தலையின்மேல் இருக்கக்கண்டேன்; 17 மேற்கூடையிலே பார்வோனுக்காகச் சமைக்கப்பட்ட சகலவித பலகாரங்களிலும் கொஞ்சம் கொஞ்சம் இருந்தது; என் தலையின்மேல் கூடையில் இருந்தவைகளைப் பறவைகள் வந்து பட்சித்தது என்றான். 18 அதற்கு யோசேப்பு: அந்த மூன்று கூடைகளும் மூன்று நாளாம். 19 இன்னும் மூன்று நாளைக்குள்ளே பார்வோன் உன் தலையை உயர்த்தி, உன்னை மரத்திலே தூக்கிப்போடுவார்; அப்பொழுது பறவைகள் உன் மாம்சத்தைத் தின்னும், இதுதான் அதின் அர்த்தம் என்று சொன்னான். 20 மூன்றாம் நாள் பார்வோனுடைய ஜன்ம நாளாயிருந்தது; அவன் தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துபண்ணி, பானபாத்திரக்காரருடைய தலைவன் தலையையும் சுயம்பாகிகளுடைய தலைவன் தலையையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே உயர்த்தி, 21 பானபாத்திரக்காரரின் தலைவனைப் பானங்கொடுக்கிற தன் உத்தியோகத்திலே மறுபடியும் வைத்தான்; அந்தப்படியே அவன் பார்வோனுடைய கையிலே பாத்திரத்தைக் கொடுத்தான். 22 சுயம்பாகிகளின் தலைவனையோ தூக்கிப்போட்டான். யோசேப்பு அவர்களுக்குச் சொன்ன அர்த்தத்தின்படியே சம்பவித்தது. 23 ஆனாலும் பானபாத்திரக்காரரின் தலைவன் யோசேப்பை நினையாமல் அவனை மறந்துவிட்டான்.

ஆதியாகமம் 41

1 இரண்டு வருஷம் சென்றபின்பு, பார்வோன் ஒரு சொப்பனம் கண்டான்; அது என்னவென்றால், அவன் நதியண்டையிலே நின்றுகொண்டிருந்தான். 2 அப்பொழுது அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல் மேய்ந்தது. 3 அவைகளின்பின் அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து, நதி ஓரத்தில் மற்றப் பசுக்களண்டையிலே நின்றது. 4 அவலட்சணமும் கேவலமுமான பசுக்கள் அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது; இப்படிப் பார்வோன் கண்டு விழித்துக்கொண்டான். 5 மறுபடியும் அவன் நித்திரைசெய்து, இரண்டாம்விசை ஒரு சொப்பனம் கண்டான்; நல்ல செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது. 6 பின்பு, சாவியானதும் கீழ்க்காற்றினால் தீய்ந்ததுமான ஏழு கதிர்கள் முளைத்தது. 7 சாவியான கதிர்கள் செழுமையும் நிறைமேனியுமான அந்த ஏழு கதிர்களையும் விழுங்கிப்போட்டது; அப்பொழுது பார்வோன் விழித்துக்கொண்டு, அது சொப்பனம் என்று அறிந்தான். 8 காலமே பார்வோனுடைய மனம் கலக்கங்கொண்டிருந்தது; அப்பொழுது அவன் எகிப்திலுள்ள சகல மந்திரவாதிகளையும் சகல சாஸ்திரிகளையும் அழைப்பித்து, அவர்களுக்குத் தன் சொப்பனத்தைச் சொன்னான்; ஒருவராலும் அதின் அர்த்தத்தைப் பார்வோனுக்குச் சொல்லக்கூடாமற்போயிற்று. 9 அப்பொழுது பானபாத்திரக்காரரின் தலைவன் பார்வோனை நோக்கி: நான் செய்த குற்றம் இன்றுதான் என் நினைவில் வந்தது. 10 பார்வோன் தம்முடைய ஊழியக்காரர்மேல் கடுங்கோபங்கொண்டு, என்னையும் சுயம்பாகிகளின் தலைவனையும் தலையாரிகளின் அதிபதி வீடாகிய சிறைச்சாலையிலே வைத்திருந்த காலத்தில், 11 நானும் அவனும் ஒரே ராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டோம். 12 அப்பொழுது தலையாரிகளின் அதிபதிக்கு வேலைக்காரனாகிய எபிரெய பிள்ளையாண்டான் ஒருவன் அங்கே எங்களோடே இருந்தான்; அவனிடத்தில் அவைகளைச் சொன்னோம், அவன் நாங்கள் கண்ட சொப்பனங்களுக்குரிய வெவ்வேறு அர்த்தத்தின்படியே எங்கள் சொப்பனத்தின் பயனைச் சொன்னான். 13 அவன் எங்களுக்குச் சொல்லிய அர்த்தத்தின்படியே நடந்தது; என்னைத் திரும்ப என் நிலையிலே நிறுத்தி, அவனைத் தூக்கிப்போடுவித்தார் என்றான். 14 அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய்க் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம்பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான். 15 பார்வோன் யோசேப்பை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அதின் அர்த்தத்தைச் சொல்ல ஒருவரும் இல்லை; நீ ஒரு சொப்பனத்தைக் கேட்டால், அதின் அர்த்தத்தைச் சொல்லுவாய் என்று உன்னைக்குறித்து நான் கேள்விப்பட்டேன் என்றான். 16 அப்பொழுது யோசேப்பு பார்வோனுக்குப் பிரதியுத்தரமாக: நான் அல்ல, தேவனே பார்வோனுக்கு மங்களமான உத்தரவு அருளிச்செய்வார் என்றான். 17 பார்வோன் யோசேப்பை நோக்கி: என் சொப்பனத்திலே, நான் நதி ஓரத்தில் நின்றுகொண்டிருந்தேன். 18 அழகும் புஷ்டியுமான ஏழு பசுக்கள் நதியிலிருந்து ஏறிவந்து புல்மேய்ந்தது. 19 அவைகளின்பின் இளைத்ததும் மகா அவலட்சணமும் கேவலமுமான வேறே ஏழு பசுக்கள் ஏறிவந்தது; இவைகளைப் போல அவலட்சணமான பசுக்களை எகிப்துதேசமெங்கும் நான் கண்டதில்லை. 20 கேவலமும் அவலட்சணமுமான பசுக்கள் கொழுமையான முந்தின ஏழு பசுக்களையும் பட்சித்துப்போட்டது. 21 அவைகள் இவைகளின் வயிற்றுக்குள் போயும், வயிற்றுக்குள் போயிற்றென்று தோன்றாமல், முன் இருந்தது போலவே அவலட்சணமாயிருந்தது; இப்படிக் கண்டு விழித்துக்கொண்டேன். 22 பின்னும் நான் என் சொப்பனத்திலே, நிறைமேனியுள்ள ஏழு நல்ல கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளரக்கண்டேன். 23 பின்பு சாவியானவைகளும் கீழ்க்காற்றினால் தீய்ந்து பதரானவைகளுமான ஏழு கதிர்கள் முளைத்தது. 24 சாவியான கதிர்கள் அந்த ஏழு நல்ல கதிர்களையும் விழுங்கிப்போட்டது. இதை மந்திரவாதிகளிடத்தில் சொன்னேன்; இதின் பொருளை எனக்கு விடுவிக்கிறவன் ஒருவனும் இல்லை என்றான். 25 அப்பொழுது யோசேப்பு பார்வோனை நோக்கி: பார்வோனின் சொப்பனம் ஒன்றுதான்; தேவன் தாம் செய்யப்போகிறது இன்னதென்று பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார். 26 அந்த ஏழு நல்ல பசுக்களும் ஏழு வருஷமாம்; அந்த ஏழு நல்ல கதிர்களும் ஏழு வருஷமாம்; சொப்பனம் ஒன்றே. 27 அவைகளின்பின் ஏறிவந்த கேவலமும் அவலட்சணமுமான ஏழு பசுக்களும் ஏழு வருஷமாம்; கீழ்க்காற்றினால் தீய்ந்து சாவியான ஏழு கதிர்களும் ஏழு வருஷமாம்; இவைகள் பஞ்சமுள்ள ஏழு வருஷமாம். 28 பார்வோனுக்கு நான் சொல்லவேண்டிய காரியம் இதுவே; தேவன் தாம் செய்யப்போகிறதைப் பார்வோனுக்குக் காண்பித்திருக்கிறார். 29 எகிப்து தேசமெங்கும் பரிபூரணமான விளைவு உண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும். 30 அதன்பின் பஞ்சமுண்டாயிருக்கும் ஏழு வருஷம் வரும்; அப்பொழுது எகிப்து தேசத்தில் அந்தப் பரிபூரணமெல்லாம் மறக்கப்பட்டுப்போம்; அந்தப் பஞ்சம் தேசத்தைப் பாழாக்கும். 31 வரப்போகிற மகா கொடுமையான பஞ்சத்தால் தேசத்தில் முன்னிருந்த பரிபூரணமெல்லாம் ஒழிந்துபோம். 32 இந்தக் காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், தேவன் இதைச் சீக்கிரத்தில் செய்வார் என்பதையும் குறிக்கும்பொருட்டு, இந்தச் சொப்பனம் பார்வோனுக்கு இரட்டித்தது. 33 ஆகையால், விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத் தேடி, அவனை எகிப்துதேசத்துக்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக. 34 இப்படிப் பார்வோன் செய்து, தேசத்தின்மேல் விசாரணைக்காரரை வைத்து, பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களில் எகிப்துதேசத்திலே விளையும் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை வாங்கும்படி செய்வாராக. 35 அவர்கள் வரப்போகிற நல்ல வருஷங்களில் விளையும் தானியங்களையெல்லாம் சேர்த்து, பட்டணங்களில் ஆகாரம் உண்டாயிருக்கும்படிக்கு, பார்வோனுடைய அதிகாரத்துக்குள்ளாகத் தானியங்களைப் பத்திரப்படுத்தி வைத்துவைப்பார்களாக. 36 தேசம் பஞ்சத்தினால் அழிந்து போகாதபடிக்கு, அந்தத் தானியம் இனி எகிப்துதேசத்தில் உண்டாகும் பஞ்சமுள்ள ஏழு வருஷங்களுக்காக தேசத்திற்கு ஒரு வைப்பாயிருப்பதாக என்றான். 37 இந்த வார்த்தை பார்வோனுடைய பார்வைக்கும் அவன் ஊழியக்காரர் எல்லாருடைய பார்வைக்கும் நன்றாய்க் கண்டது. 38 அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான். 39 பின்பு, பார்வோன் யோசேப்பை நோக்கி: தேவன் இவையெல்லாவற்றையும் உனக்கு வெளிப்படுத்தியிருக்கிறபடியால், உன்னைப்போல விவேகமும் ஞானமுமுள்ளவன் வேறொருவனும் இல்லை. 40 நீ என் அரமனைக்கு அதிகாரியாயிருப்பாய்; உன் வாக்கின்படியே என் ஜனங்கள் எல்லாரும் அடங்கி நடக்கக்கடவர்கள்; சிங்காசனத்தில்மாத்திரம் உன்னிலும் நான் பெரியவனாய் இருப்பேன் என்றான். 41 பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: பார், எகிப்துதேசம் முழுமைக்கும் உன்னை அதிகாரியாக்கினேன் என்று சொல்லி, 42 பார்வோன் தன் கையில் போட்டிருந்த தன் முத்திரை மோதிரத்தைக் கழற்றி, அதை யோசேப்பின் கையிலே போட்டு, மெல்லிய வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, பொன் சரப்பணியை அவன் கழுத்திலே தரித்து, 43 தன்னுடைய இரண்டாம் இரதத்தின்மேல் அவனை ஏற்றி, தெண்டனிட்டுப் பணியுங்கள் என்று அவனுக்கு முன்பாகக் கூறுவித்து, எகிப்துதேசம் முழுமைக்கும் அவனை அதிகாரியாக்கினான்; 44 பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: நான் பார்வோன்; ஆனாலும் எகிப்துதேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக்கூடாது என்றான். 45 மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்துதேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான். 46 யோசேப்பு எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு முன்பாக நிற்கும்போது முப்பது வயதாயிருந்தான்; யோசேப்பு பார்வோனுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, எகிப்துதேசம் எங்கும் போய்ச் சுற்றிப்பார்த்தான். 47 பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களிலும் பூமி மிகுதியான பலனைக் கொடுத்தது. 48 அவ்வேழு வருஷங்களில் எகிப்து தேசத்தில் விளைந்த தானியங்களையெல்லாம் அவன் சேர்த்து, அந்தத் தானியங்களைப் பட்டணங்களில் கட்டிவைத்தான்; அந்தந்தப் பட்டணத்தில் அதினதின் சுற்றுப்புறத்துத் தானியங்களைக் கட்டிவைத்தான். 49 இப்படி யோசேப்பு அளவிறந்ததாய்க் கடற்கரை மணலைப்போல மிகுதியாகத் தானியத்தைச் சேர்த்துவைத்தான்; அது அளவுக்கு அடங்காததாயிருந்தது. 50 பஞ்சமுள்ள வருஷங்கள் வருவதற்கு முன்னே யோசேப்புக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்து அவனுக்குப் பெற்றாள். 51 யோசேப்பு: என் வருத்தம் யாவையும் என் தகப்பனுடைய குடும்பம் அனைத்தையும் நான் மறக்கும்படி தேவன் பண்ணினார் என்று சொல்லி, மூத்தவனுக்கு மனாசே என்று பேரிட்டான். 52 நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான். 53 எகிப்துதேசத்தில் வந்த பரிபூரணமுள்ள ஏழு வருஷங்களும் முடிந்தபின், 54 யோசேப்பு சொல்லியபடி ஏழு வருஷ பஞ்சம் தொடங்கினது; சகல தேசங்களிலும் பஞ்சம் உண்டாயிற்று; ஆனாலும் எகிப்துதேசமெங்கும் ஆகாரம் இருந்தது. 55 எகிப்துதேசமெங்கும் பஞ்சம் உண்டானபோது, ஜனங்கள் உணவுக்காகப் பார்வோனை நோக்கி ஓலமிட்டார்கள்; அதற்குப் பார்வோன்: நீங்கள் யோசேப்பினிடத்துக்குப் போய், அவன் உங்களுக்குச் சொல்லுகிறபடி செய்யுங்கள் என்று எகிப்தியர் எல்லாருக்கும் சொன்னான். 56 தேசமெங்கும் பஞ்சம் உண்டானபடியால், யோசேப்பு களஞ்சியங்களையெல்லாம் திறந்து, எகிப்தியருக்கு விற்றான்; பஞ்சம் எகிப்துதேசத்தில் வரவரக் கொடிதாயிற்று. 57 சகல தேசங்களிலும் பஞ்சம் கொடிதாயிருந்தபடியால், சகல தேசத்தார்களும் யோசேப்பினிடத்தில் தானியம் கொள்ளும்படி எகிப்துக்கு வந்தார்கள்.

ஆதியாகமம் 42

1 எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் குமாரரை நோக்கி: நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன? 2 எகிப்திலே தானியம் உண்டென்று கேள்விப்படுகிறேன்; நாம் சாகாமல் உயிரோடிருக்கும்படி நீங்கள் அவ்விடத்துக்குப் போய், நமக்காகத் தானியம் கொள்ளுங்கள் என்றான். 3 யோசேப்பின் சகோதரர் பத்துப்பேர் தானியங்கொள்ள எகிப்துக்குப் போனார்கள். 4 யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதோ மோசம் வரும் என்று சொல்லி, யாக்கோபு அவனை அவன் சகோதரரோடே அனுப்பவில்லை. 5 கானான்தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்தபடியால், தானியம் கொள்ளப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் குமாரரும் போனார்கள். 6 யோசேப்பு அத்தேசத்துக்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் ஜனங்கள் யாவருக்கும் விற்றான். யோசேப்பின் சகோதரர் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள். 7 யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர் என்று அறிந்துகொண்டான்; அறிந்தும் அறியாதவன்போலக் கடினமாய் அவர்களோடே பேசி: நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: கானான் தேசத்திலிருந்து தானியம் கொள்ள வந்தோம் என்றார்கள். 8 யோசேப்பு அவர்களைத் தன் சகோதரர் என்று அறிந்தும், அவர்கள் அவனை அறியவில்லை. 9 யோசேப்பு அவர்களைக்குறித்துத் தான் கண்ட சொப்பனங்களை நினைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் வேவுகாரர், தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள் என்றான். 10 அதற்கு அவர்கள்: அப்படியல்ல, ஆண்டவனே, உமது அடியாராகிய நாங்கள் தானியம் கொள்ள வந்தோம். 11 நாங்கள் எல்லாரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நிஜஸ்தர்; உமது அடியார் வேவுகாரர் அல்ல என்றார்கள். 12 அதற்கு அவன்: அப்படியல்ல, தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்கவே வந்தீர்கள் என்றான். 13 அப்பொழுது அவர்கள்: உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்; கானான் தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பன் புத்திரர்; இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்; ஒருவன் காணாமற்போனான் என்றார்கள். 14 யோசேப்பு அவர்களை நோக்கி: உங்களை வேவுகாரர் என்று நான் சொன்னது சரி. 15 உங்கள் இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய நீங்கள் இங்கேயிருந்து புறப்படுவது இல்லை என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன். 16 இதினாலே நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்கள் சகோதரனை அழைத்துவரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; உங்களிடத்தில் உண்மை உண்டோ இல்லையோ என்று உங்கள் வார்த்தைகள் சோதிக்கப்படுமளவும், நீங்கள் காவலில் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால், நீங்கள் வேவுகாரர்தான் என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்று சொல்லி, 17 அவர்கள் எல்லாரையும் மூன்றுநாள் காவலிலே வைத்தான். 18 மூன்றாம் நாளிலே யோசேப்பு அவர்களை நோக்கி: நான் தேவனுக்குப் பயப்படுகிறவன்; நீங்கள் உயிரோடே இருக்கும்படிக்கு ஒன்று செய்யுங்கள். 19 நீங்கள் நிஜஸ்தரானால், சகோதரராகிய உங்களில் ஒருவன் காவற்கூடத்தில் கட்டுண்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து, 20 உங்கள் இளைய சகோதரனை என்னிடத்துக்கு அழைத்துக்கொண்டுவாருங்கள்; அப்பொழுது உங்கள் வார்த்தைகள் மெய்யென்று விளங்கும்; நீங்கள் சாவதில்லை என்றான். அவர்கள் அப்படிச் செய்கிறதற்கு இசைந்து: 21 நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மன வியாகுலத்தை நாம் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற்போனோமே; ஆகையால், இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள். 22 அப்பொழுது ரூபன் அவர்களைப் பார்த்து: இளைஞனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? நீங்கள் கேளாமற்போனீர்கள்; இப்பொழுது, இதோ, அவன் இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது என்றான். 23 யோசேப்பு துபாசியைக்கொண்டு அவர்களிடத்தில் பேசினபடியால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள். 24 அவன் அவர்களை விட்டு அப்புறம் போய் அழுது, திரும்ப அவர்களிடத்தில் வந்து, அவர்களோடே பேசி, அவர்களில் சிமியோனைப் பிடித்து, அவர்கள் கண்களுக்கு முன்பாகக் கட்டுவித்தான். 25 பின்பு, அவர்கள் சாக்குகளைத் தானியத்தால் நிரப்பவும், அவர்கள் பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே போடவும், வழிக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கவும் யோசேப்பு கட்டளையிட்டான்; அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது. 26 அவர்கள் அந்தத் தானியத்தைத் தங்கள் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு, அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப்போனார்கள். 27 தங்குகிற இடத்திலே அவர்களில் ஒருவன் தன் கழுதைக்குத் தீவனம் போடத் தன் சாக்கைத் திறந்தபோது, சாக்கின் வாயிலே தன் பணம் இருக்கிறதைக் கண்டு, 28 தன் சகோதரரைப் பார்த்து, என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள். 29 அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து: 30 தேசத்துக்கு அதிபதியாயிருக்கிறவன் எங்களை தேசத்தை வேவுபார்க்க வந்தவர்கள் என்று எண்ணி எங்களோடே கடினமாய்ப் பேசினான். 31 நாங்களோ அவனை நோக்கி: நாங்கள் நிஜஸ்தர், வேவுகாரர் அல்ல. 32 நாங்கள் பன்னிரண்டு சகோதரர், ஒரு தகப்பன் புத்திரர், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான்தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான் என்றோம். 33 அப்பொழுது தேசத்தின் அதிபதியானவன்: நீங்கள் நிஜஸ்தர் என்பதை நான் அறியும்படி உங்கள் சகோதரரில் ஒருவனை நீங்கள் என்னிடத்தில் விட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்துக்குத் தானியம் வாங்கிக் கொண்டுபோய்க் கொடுத்து, 34 உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டுவாருங்கள்; அதினாலே நீங்கள் வேவுகாரர் அல்ல, நிஜஸ்தர் என்பதை நான் அறிந்துகொண்டு, உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன்; நீங்கள் இந்தத் தேசத்திலே வியாபாரமும் பண்ணலாம் என்றான் என்று சொன்னார்கள். 35 அவர்கள் தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டுகையில், இதோ, அவனவன் சாக்கிலே அவனவன் பணமுடிப்பு இருந்தது; அந்தப் பணமுடிப்புகளை அவர்களும் அவர்கள் தகப்பனும் கண்டு பயந்தார்கள். 36 அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை; பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது என்றான். 37 அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு குமாரரையும் கொன்றுபோடும் என்று சொன்னான். 38 அதற்கு அவன்: என் மகன் உங்களோடேகூடப் போவதில்லை; அவன் தமையன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்கு மோசம் நேரிட்டால், நீங்கள் என் நரைமயிரைச் சஞ்சலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றான்.

ஆதியாகமம் 43

1 தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருந்தது. 2 எகிப்திலிருந்து அவர்கள் கொண்டுவந்த தானியம் செலவழிந்தபோது, அவர்கள் தகப்பன் அவர்களை நோக்கி: நீங்கள் திரும்பப் போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றான். 3 அதற்கு யூதா: உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னான். 4 எங்கள் சகோதரனை நீர் எங்களோடேகூட அனுப்பினால், நாங்கள் போய், உமக்குத் தானியம் வாங்கிக்கொண்டு வருவோம். 5 அனுப்பாவிட்டால், நாங்கள் போகமாட்டோம்; உங்கள் சகோதரன் உங்களோடேகூட வராவிட்டால், நீங்கள் என் முகத்தைக் காண்பதில்லை என்று அந்த மனிதன் எங்களோடே சொல்லியிருக்கிறான் என்றான். 6 அதற்கு இஸ்ரவேல்: உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டென்று நீங்கள் அந்த மனிதனுக்குச் சொல்லி, ஏன் எனக்கு இந்தத் துன்பத்தை வருவித்தீர்கள் என்றான். 7 அதற்கு அவர்கள்: அந்த மனிதன், உங்கள் தகப்பன் இன்னும் உயிரோடிருக்கிறாரா? உங்களுக்கு இன்னும் ஒரு சகோதரன் உண்டா? என்று எங்களையும் எங்கள் வம்சத்தையும் குறித்து விபரமாய் விசாரித்தான்; அந்தக் கேள்விகளுக்குத் தக்கதாக உள்ளபடி அவனுக்குச் சொன்னோம்; உங்கள் சகோதரனை உங்களோடேகூட இங்கே கொண்டுவாருங்கள் என்று அவன் சொல்லுவான் என்பதை நாங்கள் அறிந்திருந்தோமா என்றார்கள். 8 பின்னும், யூதா தன் தகப்பனாகிய இஸ்ரவேலை நோக்கி: நீரும் நாங்களும் எங்கள் குழந்தைகளும் சாகாமல் உயிரோடிருக்கும்படி, நாங்கள் புறப்பட்டுப்போகிறோம், பிள்ளையாண்டானை என்னோடே அனுப்பும். 9 அவனுக்காக நான் உத்தரவாதம்பண்ணுவேன்; அவனை என்னிடத்திலே கேளும், நான் அவனை உம்மிடத்தில் கொண்டுவந்து, உமக்கு முன்பாக நிறுத்தாமற்போனால், எந்நாளும் அந்தக் குற்றம் என்மேல் இருப்பதாக. 10 நாங்கள் தாமதியாதிருந்தோமானால், இதற்குள்ளே இரண்டாந்தரம் போய்த் திரும்பிவந்திருப்போமே என்றான். 11 அதற்கு அவர்கள் தகப்பனாகிய இஸ்ரவேல்: அப்படியானால், ஒன்று செய்யுங்கள்; இந்தத் தேசத்தின் உச்சிதமான வஸ்துக்களில் கொஞ்சம் பிசின் தைலமும், கொஞ்சம் தேனும், கந்தவர்க்கங்களும், வெள்ளைப்போளமும், தெரபிந்து கொட்டைகளும், வாதுமைக்கொட்டைகளும் உங்கள் சாக்குகளில் போட்டு, அந்த மனிதனுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோய்க் கொடுங்கள். 12 பணத்தை இரட்டிப்பாய் உங்கள் கைகளில் கொண்டுபோங்கள், சாக்குகளின் வாயிலே திரும்பக் கொண்டுவந்த பணத்தையும் கொண்டுபோங்கள்; அது கைப்பிசகாய் வந்திருக்கும். 13 உங்கள் சகோதரனையும் கூட்டிக்கொண்டு, அந்த மனிதனிடத்துக்கு மறுபடியும் போங்கள். 14 அந்த மனிதன் அங்கிருக்கிற உங்கள் மற்றச் சகோதரனையும் பென்யமீனையும் உங்களுடனே அனுப்பிவிடும்படிக்கு, சர்வவல்லமையுள்ள தேவன் அவன் சமுகத்தில் உங்களுக்கு இரக்கங்கிடைக்கப்பண்ணுவாராக; நானோ பிள்ளையற்றுப் போனவனைப்போல் இருப்பேன் என்றான். 15 அப்பொழுது அவர்கள் காணிக்கையையும் தங்கள் கைகளில் இரட்டிப்பான பணத்தையும் எடுத்துக்கொண்டு, பென்யமீனையும் கூட்டிக்கொண்டு, பிரயாணப்பட்டு, எகிப்துக்குப்போய், யோசேப்பின் சமுகத்தில் வந்து நின்றார்கள். 16 பென்யமீன் அவர்களோடேகூட வந்திருக்கிறதை யோசேப்பு கண்டு, தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதரை வீட்டுக்கு அழைத்துப்போய், சாப்பாட்டுக்கு வேண்டியவைகளை அடித்து, ஆயத்தம்பண்ணு, மத்தியானத்திலே இந்த மனிதர் என்னோடே சாப்பிடுவார்கள் என்றான். 17 அவன் தனக்கு யோசேப்பு சொன்னபடியே செய்து, அந்த மனிதரை யோசேப்பின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான். 18 தாங்கள் யோசேப்பின் வீட்டுக்குக் கொண்டுபோகப்படுகிறதை அவர்கள் கண்டு பயந்து, முன்னே நம்முடைய சாக்குகளில் இருந்த பணத்தினிமித்தம் நம்மேல் குற்றம் சுமத்தி, நம்மைப் பிடித்துச் சிறைகளாக்கி, நம்முடைய கழுதைகளை எடுத்துக்கொள்ளும்படி நம்மைக் கொண்டுபோகிறார்கள் என்று சொல்லி, 19 யோசேப்பின் வீட்டு விசாரணைக்காரனண்டையில் சேர்ந்து, வீட்டு வாசற்படியிலே அவனோடே பேசி: 20 ஆண்டவனே, நாங்கள் தானியம் கொள்ளும்படி முன்னே வந்துபோனோமே; 21 நாங்கள் தங்கும் இடத்தில் போய் எங்கள் சாக்குகளைத் திறந்தபோது, நாங்கள் நிறுத்துக்கொடுத்த நிறையின்படியே அவனவன் பணம் அவனவன் சாக்கின் வாயிலே இருக்கக் கண்டோம்; அதை நாங்கள் திரும்பவும் எங்கள் கையிலே கொண்டுவந்திருக்கிறோம். 22 மேலும், தானியம் கொள்ளும்படி வேறே பணமும் எங்கள் கையில் கொண்டுவந்திருக்கிறோம்; நாங்கள் முன் கொடுத்த பணத்தை எங்கள் சாக்குகளில் போட்டது இன்னார் என்று அறியோம் என்றார்கள். 23 அதற்கு அவன்: உங்களுக்குச் சமாதானம்; பயப்படவேண்டாம்; உங்கள் தேவனும் உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்; நீங்கள் கொடுத்த பணம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது என்று சொல்லி, சிமியோனை வெளியே அழைத்துவந்து, அவர்களிடத்தில் விட்டான். 24 மேலும், அந்த மனிதன் அவர்களை யோசேப்பின் வீட்டுக்குள்ளே கூட்டிக்கொண்டுபோய், அவர்கள் தங்கள் கால்களைக் கழுவும்படி தண்ணீர் கொடுத்து, அவர்களுடைய கழுதைகளுக்குத் தீவனம் போட்டான். 25 தாங்கள் அங்கே போஜனம் செய்யப்போகிறதை அவர்கள் கேள்விப்பட்டபடியால், மத்தியானத்தில் யோசேப்பு வருமளவும் காணிக்கையை ஆயத்தமாய் வைத்துக் காத்துக்கொண்டிருந்தார்கள். 26 யோசேப்பு வீட்டுக்கு வந்தபோது, அவர்கள் தங்கள் கையில் இருந்த காணிக்கையை வீட்டுக்குள் அவனிடத்தில் கொண்டுபோய் வைத்து, தரைமட்டும் குனிந்து, அவனை வணங்கினார்கள். 27 அப்பொழுது அவன்: அவர்கள் சுகசெய்தியை விசாரித்து, நீங்கள் சொன்ன முதிர்வயதான உங்கள் தகப்பன் சுகமாயிருக்கிறாரா? அவர் இன்னும் உயிரோடிருக்கிறாரா? என்று அவர்களிடத்தில் விசாரித்தான். 28 அதற்கு அவர்கள்: எங்கள் தகப்பனாராகிய உமது அடியான் சுகமாயிருக்கிறார், இன்னும் உயிரோடிருக்கிறார் என்று சொல்லி, குனிந்து வணங்கினார்கள். 29 அவன் தன் கண்களை ஏறெடுத்து, தன் தாய் பெற்ற குமாரனாகிய தன் சகோதரன் பென்யமீனைக் கண்டு, நீங்கள் எனக்குச் சொன்ன உங்கள் இளைய சகோதரன் இவன்தானா என்று கேட்டு, மகனே, தேவன் உனக்குக் கிருபைசெய்யக்கடவர் என்றான். 30 யோசேப்பின் உள்ளம் தன் சகோதரனுக்காகப் பொங்கினபடியால், அவன் அழுகிறதற்கு இடம் தேடி, துரிதமாய் அறைக்குள்ளே போய், அங்கே அழுதான். 31 பின்பு, அவன் தன் முகத்தைக் கழுவி வெளியே வந்து, தன்னை அடக்கிக்கொண்டு, போஜனம் வையுங்கள் என்றான். 32 எகிப்தியர் எபிரெயரோடே சாப்பிடமாட்டார்கள்; அப்படிச் செய்வது எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கும்; ஆகையால், அவனுக்குத் தனிப்படவும், அவர்களுக்குத் தனிப்படவும், அவனோடே சாப்பிடுகிற எகிப்தியருக்குத் தனிப்படவும் வைத்தார்கள். 33 அவனுக்கு முன்பாக, மூத்தவன் முதல் இளையவன்வரைக்கும் அவனவன் வயதின்படியே அவர்களை உட்காரவைத்தார்கள்; அதற்காக அவர்கள், ஒருவரை ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். 34 அவன் தனக்குமுன் வைக்கப்பட்டிருந்த போஜனத்தில் அவர்களுக்குப் பங்கிட்டு அனுப்பினான்; அவர்கள் எல்லாருடைய பங்குகளைப்பார்க்கிலும் பென்யமீனுடைய பங்கு ஐந்துமடங்கு அதிகமாயிருந்தது; அவர்கள் பானம்பண்ணி, அவனுடனே சந்தோஷமாயிருந்தார்கள்.

ஆதியாகமம் 44

1 பின்பு, அவன் தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ இந்த மனிதருடைய சாக்குகளை அவர்கள் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாய்த் தானியத்தினாலே நிரப்பி, அவனவன் பணத்தை அவனவன் சாக்கின் வாயிலே போட்டு, 2 இளையவனுடைய சாக்கின் வாயிலே வெள்ளிப்பாத்திரமாகிய என் பானபாத்திரத்தையும் தானியத்துக்கு அவன் கொடுத்த பணத்தையும் போடு என்று கட்டளையிட்டான்; யோசேப்பு சொன்னபடியே அவன் செய்தான். 3 அதிகாலையிலே அந்த மனிதர்கள் தங்கள் கழுதைகளை ஓட்டிக்கொண்டு போகும்படி அனுப்பிவிடப்பட்டார்கள். 4 அவர்கள் பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, வெகுதூரம் போவதற்குமுன்னே, யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: நீ புறப்பட்டுப்போய், அந்த மனிதரைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன? 5 அது என் எஜமான் பானம்பண்ணுகிற பாத்திரம் அல்லவா? அது போனவகை ஞானதிருஷ்டியால் அவருக்குத் தெரியாதா? நீங்கள் செய்தது தகாதகாரியம் என்று அவர்களோடே சொல் என்றான். 6 அவன் அவர்களைத் தொடர்ந்து பிடித்து, தன்னிடத்தில் சொல்லியிருந்த வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னான். 7 அதற்கு அவர்கள்: எங்கள் ஆண்டவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறது என்ன? இப்படிப்பட்ட காரியத்துக்கும் உம்முடைய அடியாராகிய எங்களுக்கும் வெகுதூரம். 8 எங்கள் சாக்குகளின் வாயிலே நாங்கள் கண்ட பணத்தைக் கானான்தேசத்திலிருந்து திரும்ப உம்மிடத்துக்குக் கொண்டுவந்தோமே; நாங்கள் உம்முடைய எஜமானின் வீட்டிலிருந்து வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் திருடிக்கொண்டு போவோமா? 9 உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலையுண்கக்கடவன்; நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம் என்றார்கள். 10 அதற்கு அவன்: நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்; எவனிடத்தில் அது காணப்படுமோ, அவன் எனக்கு அடிமையாவான்; நீங்கள் குற்றமற்றிருப்பீர்கள் என்றான். 11 அப்பொழுது அவர்கள் துரிதமாய் அவனவன் தன்தன் சாக்கைத் தரையிலே இறக்கி, தங்கள் சாக்குகளைத் திறந்து வைத்தார்கள். 12 மூத்தவன் சாக்குமுதல் இளையவன் சாக்குமட்டும் அவன் சோதிக்கும்போது, அந்தப் பாத்திரம் பென்யமீனுடைய சாக்கிலே கண்டுபிடிக்கப்பட்டது. 13 அப்பொழுது அவர்கள் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனவன் கழுதையின்மேல் பொதியை ஏற்றிக்கொண்டு, பட்டணத்திற்குத் திரும்பினார்கள். 14 யூதாவும் அவன் சகோதரரும் யோசேப்பின் வீட்டுக்குப் போனார்கள். யோசேப்பு அதுவரையும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள். 15 யோசேப்பு அவர்களை நோக்கி: நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப்போலொத்த மனிதனுக்கு ஞானதிருஷ்டியினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா என்றான். 16 அதற்கு யூதா: என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? என்னத்தைப் பேசுவோம்? எதினாலே எங்கள் நீதியை விளங்கப்பண்ணுவோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கப்பண்ணினார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள் என்றான். 17 அதற்கு அவன்: அப்படிப்பட்ட செய்கை எனக்குத் தூரமாயிருப்பதாக; எவன் வசத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதோ, அவனே எனக்கு அடிமையாயிருப்பான்; நீங்களோ சமாதானத்தோடே உங்கள் தகப்பனிடத்துக்குப் போங்கள் என்றான். 18 அப்பொழுது யூதா அவனண்டையிலே சேர்ந்து: ஆ, என் ஆண்டவனே, உமது அடியேன் உம்முடைய செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன்மேல் உமது கோபம் மூளாதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர். 19 உங்களுக்குத் தகப்பனாவது சகோதரனாவது உண்டா என்று என் ஆண்டவன் உம்முடைய அடியாரிடத்தில் கேட்டீர். 20 அதற்கு நாங்கள்: எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும், அவனுடைய தமையன் இறந்துபோனான் என்றும், அவன் ஒருவன்மாத்திரமே அவனைப் பெற்ற தாயாருக்கு இருப்பதினால் தகப்பனார் அவன்மேல் பட்சமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம். 21 அப்பொழுது நீர்: அவனை என்னிடத்துக்குக் கொண்டுவாருங்கள்; என் கண்களினால் அவனைப் பார்க்கவேண்டும் என்று உமது அடியாருக்குச் சொன்னீர். 22 நாங்கள் ஆண்டவனை நோக்கி: அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக்கூடாது, பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம். 23 அதற்கு நீர்: உங்கள் இளைய சகோதரனைக் கொண்டுவராவிட்டால், நீங்கள் இனி என் முகத்தைக் காண்பதில்லை என்று உமது அடியாருக்குச் சொன்னீர். 24 நாங்கள் உமது அடியானாகிய என் தகப்பனாரிடத்துக்குப் போனபோது, என் ஆண்டவனுடைய வார்த்தைகளை அவருக்கு அறிவித்தோம். 25 எங்கள் தகப்பனார் எங்களை நோக்கி: நீங்கள் திரும்பப்போய், நமக்குக் கொஞ்சம் தானியம் கொள்ளுங்கள் என்று சொன்னார். 26 அதற்கு: நாங்கள் போகக்கூடாது; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வந்தால் போவோம்; எங்கள் இளைய சகோதரன் எங்களோடே வராவிட்டால், நாங்கள் அந்தப் புருஷனுடைய முகத்தைக் காணக்கூடாது என்றோம். 27 அப்பொழுது உம்முடைய அடியானாகிய என் தகப்பனார்: என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றாள்; 28 அவர்களில் ஒருவன் என்னிடத்திலிருந்து போய்விட்டான், அவன் பீறுண்டுபோயிருப்பான் என்றிருந்தேன், இதுவரைக்கும் அவனைக் காணாதிருக்கிறேன், இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 29 நீங்கள் இவனையும் என்னை விட்டுப் பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்கு மோசம் நேரிட்டால், என் நரைமயிரை வியாகுலத்தோடே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவீர்கள் என்றார். 30 ஆகையால் இளையவனை விட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்துக்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடே ஒன்றாய் இணைக்கப்பட்டிருக்கிறபடியினால், 31 அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமயிரை வியாகுலத்துடனே பாதாளத்தில் இறங்கப்பண்ணுவோம். 32 இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்தரவாதி; அன்றியும், நான் இவனை உம்மிடத்துக்குக் கொண்டுவராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன். 33 இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரரோடேகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாயிருக்கிறேன். 34 இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்துக்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன் என்றான்.

ஆதியாகமம் 45

1 அப்பொழுது யோசேப்பு தன் அருகே நின்ற எல்லாருக்கும் முன்பாகத் தன்னை அடக்கிக்கொண்டிருக்கக்கூடாமல்: யாவரையும் என்னைவிட்டு வெளியே போகப்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டான். யோசேப்பு தன் சகோதரருக்குத் தன்னை வெளிப்படுத்துகையில், ஒருவரும் அவன் அருகில் நிற்கவில்லை. 2 அவன் சத்தமிட்டு அழுதான்; அதை எகிப்தியர் கேட்டார்கள், பார்வோனின் வீட்டாரும் கேட்டார்கள். 3 யோசேப்பு தன் சகோதரரைப் பார்த்து: நான் யோசேப்பு; என் தகப்பனார் இன்னும் உயிரோடே இருக்கிறாரா என்றான். அவனுடைய சகோதரர் அவனுக்கு முன்பாகக் கலக்கமுற்றிருந்ததினாலே, அவனுக்கு உத்தரம் சொல்லக்கூடாமல் இருந்தார்கள். 4 அப்பொழுது யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: என் கிட்ட வாருங்கள் என்றான். அவர்கள் கிட்டப்போனார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் எகிப்துக்குப் போகிறவர்களிடத்தில் விற்றுப்போட்ட உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான். 5 என்னை இவ்விடத்தில் வரும்படி விற்றுப்போட்டதினால், நீங்கள் சஞ்சலப்படவேண்டாம்; அது உங்களுக்கு விசனமாயிருக்கவும் வேண்டாம்; ஜீவரட்சணை செய்யும்படிக்குத் தேவன் என்னை உங்களுக்கு முன்னே அனுப்பினார். 6 தேசத்தில் இப்பொழுது இரண்டு வருஷமாகப் பஞ்சம் உண்டாயிருக்கிறது; இன்னும் ஐந்து வருஷம் உழவும் அறுப்பும் இல்லாமல் பஞ்சம் இருக்கும். 7 பூமியிலே உங்கள் வம்சம் ஒழியாமலிருக்க உங்களை ஆதரிக்கிறதற்காகவும், பெரிய ரட்சிப்பினால் உங்களை உயிரோடே காப்பதற்காகவும் தேவன் என்னை உங்களுக்கு முன்னமே அனுப்பினார். 8 ஆதலால் நீங்கள் அல்ல, தேவனே என்னை இவ்விடத்துக்கு அனுப்பி, என்னைப் பார்வோனுக்குத் தகப்பனாகவும், அவர் குடும்பம் அனைத்திற்கும் கர்த்தனாகவும், எகிப்துதேசம் முழுதுக்கும் அதிபதியாகவும் வைத்தார். 9 நீங்கள் சீக்கிரமாய் என் தகப்பனிடத்தில் போய்: தேவன் என்னை எகிப்து தேசம் முழுதுக்கும் அதிபதியாக வைத்தார்; என்னிடத்தில் வாரும், தாமதிக்கவேண்டாம். 10 நீரும், உம்முடைய பிள்ளைகளும், அவர்களுடைய பிள்ளைகளும், உம்முடைய ஆடுமாடுகளோடும் உமக்கு உண்டாயிருக்கிற யாவற்றோடும் கோசேன் நாட்டில் வாசம்பண்ணி என் சமீபத்தில் இருக்கலாம். 11 உமக்கும் உம்முடைய குடும்பத்தாருக்கும் உமக்கு இருக்கிற யாவற்றிற்கும் வறுமை வராதபடிக்கு, அங்கே உம்மைப் பராமரிப்பேன்; இன்னும் ஐந்து வருஷம் பஞ்சம் இருக்கும் என்று, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு சொல்லச்சொன்னான் என்று சொல்லுங்கள். 12 இதோ, உங்களோடே பேசுகிற வாய் என் வாய்தான் என்பதை உங்கள் கண்களும் என் தம்பியாகிய பென்யமீனின் கண்களும் காண்கிறதே. 13 எகிப்திலே எனக்கு உண்டாயிருக்கிற சகல மகிமையையும், நீங்கள் கண்ட யாவையும் என் தகப்பனுக்கு அறிவித்து, அவர் சீக்கிரமாய் இவ்விடத்துக்கு வரும்படி செய்யுங்கள் என்று சொல்லி; 14 தன் தம்பியாகிய பென்யமீனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான்; பென்யமீனும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அழுதான். 15 பின்பு தன் சகோதரர் யாவரையும் முத்தஞ்செய்து, அவர்களையும் கட்டிக்கொண்டு அழுதான். அதற்குப்பின் அவன் சகோதரர் அவனோடே சம்பாஷித்தார்கள். 16 யோசேப்பின் சகோதரர் வந்தார்கள் என்கிற சமாசாரம் பார்வோன் அரமனையில் பிரசித்தமானபோது, பார்வோனும் அவனுடைய ஊழியக்காரரும் சந்தோஷம் அடைந்தார்கள். 17 பார்வோன் யோசேப்பை நோக்கி: நீ உன் சகோதரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் கழுதைகளின்மேல் பொதியேற்றிக்கொண்டு புறப்பட்டு, கானான்தேசத்துக்குப் போய், 18 உங்கள் தகப்பனையும் உங்கள் குடும்பத்தாரையும் கூட்டிக்கொண்டு, என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு எகிப்துதேசத்தின் நன்மையைத் தருவேன்; தேசத்தின் கொழுமையைச் சாப்பிடுவீர்கள். 19 நீங்கள் உங்கள் குழந்தைகளுக்காகவும் உங்கள் மனைவிகளுக்காகவும் வண்டிகளை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுபோய், அவர்களையும் உங்கள் தகப்பனுடனே ஏற்றிக்கொண்டுவாருங்கள். 20 உங்கள் தட்டுமுட்டுகளைக்குறித்துக் கவலைப்படவேண்டாம்; எகிப்துதேசமெங்குமுள்ள நன்மை உங்களுடையதாயிருக்கும் என்று சொல்லச்சொல்லி, உனக்கு நான் இட்ட கட்டளைப்படியே செய் என்றான். 21 இஸ்ரவேலின் குமாரர் அப்படியே செய்தார்கள். யோசேப்பு பார்வோனுடைய கட்டளையின்படியே அவர்களுக்கு வண்டிகளைக் கொடுத்ததுமன்றி, வழிக்கு ஆகாரத்தையும், 22 அவர்களில் ஒவ்வொருவனுக்கும் மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான்; பென்யமீனுக்கோ முந்நூறு வெள்ளிக்காசையும் ஐந்து மாற்று வஸ்திரங்களையும் கொடுத்தான். 23 அப்படியே தன் தகப்பனுக்குப் பத்துக் கழுதைகளின்மேல் எகிப்தின் உச்சிதமான பதார்த்தங்களும், பத்துக் கோளிகைக் கழுதைகளின்மேல் தன் தகப்பனுக்காக வழிக்குத் தானியமும் அப்பமும் மற்றத் தின்பண்டங்களும் ஏற்றி அனுப்பினான். 24 மேலும், நீங்கள் போகும் வழியிலே சண்டைபண்ணிக்கொள்ளாதிருங்கள் என்று அவன் தன் சகோதரருக்குச் சொல்லி அனுப்பினான்; அவர்கள் புறப்பட்டுப்போனார்கள். 25 அவர்கள் எகிப்திலிருந்து போய், கானான்தேசத்திலே தங்கள் தகப்பனாகிய யாக்கோபினிடத்தில் வந்து: 26 யோசேப்பு உயிரோடிருக்கிறான், அவன் எகிப்துதேசத்துக்கெல்லாம் அதிபதியாயிருக்கிறான் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அவன் இருதயம் மூர்ச்சை அடைந்தது; அவன் அவர்களை நம்பவில்லை. 27 அவர்கள் யோசேப்பு தங்களுடனே சொன்ன வார்த்தைகள் யாவையும் அவனுக்குச் சொன்னபோதும், தன்னை ஏற்றிக்கொண்டு போகும்படி யோசேப்பு அனுப்பின வண்டிகளை அவன் கண்டபோதும், அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது. 28 அப்பொழுது இஸ்ரவேல்: என் குமாரனாகிய யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறானே, இது போதும்; நான் மரணமடையுமுன்னே போய் அவனைப் பார்ப்பேன் என்றான்.

ஆதியாகமம் 46

1 இஸ்ரவேல் தனக்கு உண்டான யாவையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுப் பெயெர்செபாவுக்குப் போய், தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்குப் பலியிட்டான். 2 அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குத் தரிசனமாகி: யாக்கோபே, யாக்கோபே என்று கூப்பிட்டார்; அவன் இதோ, அடியேன் என்றான். 3 அப்பொழுது அவர்: நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன்; நீ எகிப்துதேசத்துக்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய ஜாதியாக்குவேன். 4 நான் உன்னுடனே எகிப்துக்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரப்பண்ணுவேன்; யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான் என்று சொன்னார். 5 அதற்குப்பின்பு, யாக்கோபு பெயெர்செபாவிலிருந்து பிரயாணம் புறப்பட்டான். இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு, 6 தங்கள் ஆடுமாடுகளையும், தாங்கள் கானான் தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவன் சந்ததியார் யாவரும் எகிப்துக்குப் போனார்கள். 7 அவன் தன் குமாரரையும் தன் குமாரரின் குமாரரையும் தன் குமாரத்திகளையும் தன் குமாரரின் குமாரத்திகளையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்துக்குத் தன்னோடே அழைத்துக்கொண்டுபோனான். 8 எகிப்துக்கு வந்த இஸ்ரவேலரின் நாமங்களாவன: யாக்கோபும் அவனுடைய குமாரரும்; யாக்கோபுடைய மூத்தகுமாரனான ரூபன். 9 ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள். 10 சிமியோனுடைய குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல் என்பவர்கள். 11 லேவியினுடைய குமாரர் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள். 12 யூதாவினுடைய குமாரர் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான்தேசத்தில் இறந்துபோனார்கள்; பாரேசுடைய குமாரர் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள். 13 இசக்காருடைய குமாரர் தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள். 14 செபுலோனுடைய குமாரர் செரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள். 15 இவர்கள் லேயாளின் சந்ததியார்; அவள் இவர்களையும் தீனாள் என்னும் ஒரு குமாரத்தியையும் பதான்அராமிலே யாக்கோபுக்குப் பெற்றாள்; அவன் குமாரரும் அவன் குமாரத்திகளுமாகிய எல்லாரும் முப்பத்துமூன்று பேர். 16 காத்துடைய குமாரர், சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, அரோதி, அரேலி என்பவர்கள். 17 ஆசேருடைய குமாரர் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி செராக்கு என்பவள்; பெரீயாவின் குமாரர் ஏபேர், மல்கியேல் என்பவர்கள். 18 இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய லேயாளுக்குக் கொடுத்த சில்பாளுடைய பிள்ளைகள்; அவள் இந்தப் பதினாறுபேரையும் யாக்கோபுக்குப் பெற்றாள். 19 யாக்கோபின் மனைவியாகிய ராகேலுடைய குமாரர் யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள். 20 யோசேப்புக்கு எகிப்து தேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன்பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றாள். 21 பென்யமீனுடைய குமாரர் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம், ஆர்து என்பவர்கள். 22 ராகேல் யாக்கோபுக்குப் பெற்ற குமாரராகிய இவர்கள் எல்லாரும் பதினாலுபேர். 23 தாணுடைய குமாரன் உசீம் என்பவன். 24 நப்தலியின் குமாரர் யாத்சியேல், கூனி, எத்செர், சில்லேம் என்பவர்கள். 25 இவர்கள் லாபான் தன் குமாரத்தியாகிய ராகேலுக்குக் கொடுத்த பில்காள் யாக்கோபுக்குப் பெற்றவர்கள்; இவர்கள் எல்லாரும் ஏழுபேர். 26 யாக்கோபுடைய குமாரரின் மனைவிகளைத் தவிர, அவனுடைய கர்ப்பப்பிறப்பாயிருந்து அவன் மூலமாய் எகிப்திலே வந்தவர்கள் எல்லாரும் அறுபத்தாறுபேர். 27 யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த குமாரர் இரண்டுபேர்; ஆக எகிப்துக்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர். 28 கோசேன் நாட்டிலே தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல, யூதாவைத் தனக்கு முன்னாக அவனிடத்தில் யாக்கோபு அனுப்பினான்; அவர்கள் கோசேனிலே சேர்ந்தார்கள். 29 யோசேப்பு தன் இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச் சந்திக்கும்படி போய், அவனைக் கண்டு, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவன் கழுத்தை விடாமல் அழுதான். 30 அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து: நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும் என்றான். 31 பின்பு, யோசேப்பு தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: நான் பார்வோனிடத்துக்குப் போய், கானான்தேசத்திலிருந்து என் சகோதரரும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள். 32 அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்கள் தொழில்; அவர்கள் தங்கள் ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள் என்று அவருக்குச் சொல்லுகிறேன். 33 பார்வோன் உங்களை அழைத்து, உங்கள் தொழில் என்ன என்று கேட்டால், 34 நீங்கள், கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாயிருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லாரும் எகிப்தியருக்கு அருவருப்பாயிருக்கிறார்கள் என்றான்.

ஆதியாகமம் 47

1 யோசேப்பு பார்வோனிடத்தில் போய்: என் தகப்பனும் என் சகோதரரும், தங்கள் ஆடுமாடுகளோடும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடுங்கூடக் கானான்தேசத்திலிருந்து வந்தார்கள்; இப்பொழுது கோசேன் நாட்டில் இருக்கிறார்கள் என்று சொல்லி; 2 தன் சகோதரரில் ஐந்துபேரைப் பார்வோனுக்கு முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினான். 3 பார்வோன் அவனுடைய சகோதரரை நோக்கி: உங்கள் தொழில் என்ன என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: உமது அடியாராகிய நாங்களும் எங்கள் பிதாக்களும் மந்தை மேய்க்கிறவர்கள் என்று பார்வோனிடத்தில் சொன்னதுமன்றி, 4 கானான் தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருக்கிறது; உமது அடியாரின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாமையால், இத்தேசத்திலே தங்கவந்தோம்; உமது அடியாராகிய நாங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். 5 அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கி: உன் தகப்பனும் உன் சகோதரரும் உன்னிடத்தில் வந்திருக்கிறார்களே. 6 எகிப்துதேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; தேசத்திலுள்ள நல்ல இடத்திலே உன் தகப்பனையும் உன் சகோதரரையும் குடியேறும்படி செய்; அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம்; அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்குத் தெரிந்திருந்தால், அவர்களை என் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக வைக்கலாம் என்றான். 7 பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான். 8 பார்வோன் யாக்கோபை நோக்கி: உமக்கு வயது என்ன என்று கேட்டான். 9 அதற்கு யாக்கோபு: நான் பரதேசியாய்ச் சஞ்சரித்த நாட்கள் நூற்றுமுப்பது வருஷம்; என் ஆயுசுநாட்கள் கொஞ்சமும் சஞ்சலமுள்ளதுமாயிருக்கிறது; அவைகள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை என்று பார்வோனுடனே சொன்னான். 10 பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவன் சமுகத்தினின்று புறப்பட்டுப்போனான். 11 பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன் தகப்பனுக்கும் தன் சகோதரருக்கும் எகிப்துதேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டிலே சுதந்தரம் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான். 12 யோசேப்பு தன் தகப்பனையும் தன் சகோதரரையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாய் ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான். 13 பஞ்சம் மிகவும் கொடிதாயிருந்தது; தேசமெங்கும் ஆகாரம் கிடையாமற்போயிற்று; எகிப்துதேசமும் கானான் தேசமும் பஞ்சத்தினாலே மெலிந்து போயிற்று. 14 யோசேப்பு எகிப்து தேசத்திலும் கானான் தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் கொண்டவர்களிடத்தில் வாங்கி, அதைப் பார்வோன் அரமனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான். 15 எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணம் செலவழிந்தபோது, எகிப்தியர் எல்லாரும் யோசேப்பினிடத்தில் வந்து: எங்களுக்கு ஆகாரம் தாரும்; பணம் இல்லை, அதினால் நாங்கள் உமது சமுகத்தில் சாகவேண்டுமோ என்றார்கள். 16 அதற்கு யோசேப்பு: உங்களிடத்தில் பணம் இல்லாமற்போனால், உங்கள் ஆடுமாடுகளைக் கொடுங்கள்; அவைகளுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் கொடுக்கிறேன் என்றான். 17 அவர்கள் தங்கள் ஆடுமாடு முதலானவைகளை யோசேப்பினிடத்தில் கொண்டுவந்தார்கள்; யோசேப்பு குதிரைகளையும் ஆடுகளையும் மாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக்கொண்டு, அந்த வருஷம் அவர்களுடைய ஆடுமாடு முதலான எல்லாவற்றிற்கும் பதிலாக அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களை ஆதரித்தான். 18 அந்த வருஷம் முடிந்தபின், மறுவருஷத்திலே அவர்கள் அவனிடத்தில் வந்து: பணமும் செலவழிந்துபோயிற்று; எங்கள் ஆடுமாடு முதலானவைகளும் எங்கள் ஆண்டவனைச் சேர்ந்தது; எங்கள் சரீரமும் எங்கள் நிலமுமே ஒழிய, எங்கள் ஆண்டவனுக்கு முன்பாக மீதியானது ஒன்றும் இல்லை; இது எங்கள் ஆண்டவனுக்குத் தெரியாத காரியம் அல்ல. 19 நாங்களும் எங்கள் நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா? நீர் எங்களையும் எங்கள் நிலங்களையும் வாங்கிக்கொண்டு, ஆகாரம் கொடுக்கவேண்டும்; நாங்களும் எங்கள் நிலங்களும் பார்வோனுக்கு ஆதீனமாயிருப்போம்; நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும், நிலங்கள் பாழாய்ப்போகாமலிருக்கவும், எங்களுக்கு விதைத் தானியத்தைத் தாரும் என்றார்கள். 20 அப்படியே எகிப்தியர் தங்களுக்குப் பஞ்சம் மேலிட்டபடியால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு எகிப்தின் நிலங்கள் யாவையும் பார்வோனுக்காகக் கொண்டான்; இவ்விதமாய் அந்தப் பூமி பார்வோனுடையதாயிற்று. 21 மேலும் அவன் எகிப்தின் ஒரு எல்லை முதல் மறு எல்லைவரைக்குமுள்ள ஜனங்களை அந்தந்தப் பட்டணங்களில் குடிமாறிப்போகப்பண்ணினான். 22 ஆசாரியருடைய நிலத்தை மாத்திரம் அவன் கொள்ளவில்லை; அது பார்வோனாலே ஆசாரியருக்கு மானியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததினாலும், பார்வோன் அவர்களுக்குக் கொடுத்த மானியத்தினாலே அவர்கள் ஜீவனம்பண்ணிவந்ததினாலும், அவர்கள் தங்கள் நிலத்தை விற்கவில்லை. 23 பின்னும் யோசேப்பு ஜனங்களை நோக்கி: இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத்தானியம்; இதை நிலத்தில் விதையுங்கள். 24 விளைவில் ஐந்தில் ஒரு பங்கைப் பார்வோனுக்குக் கொடுக்கவேண்டும்; மற்ற நாலுபங்கும் வயலுக்கு விதையாகவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஆகாரமாகவும் உங்களுடையதாயிருக்கட்டும் என்றான். 25 அப்பொழுது அவர்கள்: நீர் எங்கள் பிராணனைக் காப்பாற்றினீர்; எங்கள் ஆண்டவனுடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாயிருக்கிறோம் என்றார்கள். 26 ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று யோசேப்பு இட்ட கட்டளைப்படி எகிப்து தேசத்திலே இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறது; ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச் சேராமல் நீங்கலாயிருந்தது. 27 இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலுள்ள கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள்; அங்கே நிலங்களைக் கையாட்சி செய்து, மிகவும் பலுகிப் பெருகினார்கள். 28 யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருஷம் இருந்தான்; யாக்கோபுடைய ஆயுசுநாட்கள் நூற்று நாற்பத்தேழு வருஷம். 29 இஸ்ரவேல் மரணமடையும் காலம் சமீபித்தது. அப்பொழுது அவன் தன் குமாரனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து என்மேல் பட்சமும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம்பண்ணாதிருப்பாயாக. 30 நான் என் பிதாக்களோடே படுத்துக்கொள்ளவேண்டும்; ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், அவர்களை அடக்கம்பண்ணியிருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்பண்ணு என்றான். அதற்கு அவன்: உமது சொற்படி செய்வேன் என்றான். 31 அப்பொழுது அவன்: எனக்கு ஆணையிட்டுக்கொடு என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கட்டிலின் தலைமாட்டிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.

ஆதியாகமம் 48

1 அதற்குப்பின்பு, உம்முடைய தகப்பனாருக்கு வருத்தமாயிருக்கிறது என்று யோசேப்புக்குச் சொல்லப்பட்டது. அப்பொழுது அவன் தன் இரண்டு குமாரராகிய மனாசேயையும் எப்பிராயீமையும் தன்னோடேகூடக் கொண்டுபோனான். 2 இதோ, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னைத் திடப்படுத்திக்கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான். 3 யாக்கோபு யோசேப்பை நோக்கி: சர்வவல்லமையுள்ள தேவன் கானான் தேசத்திலுள்ள லூஸ் என்னும் இடத்தில் எனக்குத் தரிசனமாகி, என்னை ஆசீர்வதித்து: 4 நான் உன்னைப் பலுகவும் பெருகவும் பண்ணி, உன்னைப் பல ஜனக்கூட்டமாக்கி, உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தை நித்திய சுதந்தரமாகக் கொடுப்பேன் என்று என்னோடே சொன்னார். 5 நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வருமுன்னே உனக்கு எகிப்துதேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடைய குமாரர்; ரூபன் சிமியோன் என்பவர்களைப்போல, எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள். 6 இவர்களுக்குப்பின், நீ பெறும் பிள்ளைகள் உன்னுடையவர்கள்; அவர்கள் தங்கள் தங்கள் சகோதரருடைய பேரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சுதந்தரத்தில் பங்குபெறுவார்கள். 7 நான் பதானை விட்டு வருகையில், கானான்தேசத்தில் எப்பிராத்தாவுக்குக் கொஞ்சம் தூரம் இருக்கும்போது, வழியிலே ராகேல் என்னண்டையில் மரணமடைந்தாள்; அவளை அங்கே பெத்லெகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம்பண்ணினேன் என்றான். 8 இஸ்ரவேல் யோசேப்பின் குமாரரைப் பார்த்து: இவர்கள் யார் என்று கேட்டான். 9 யோசேப்பு தன் தகப்பனை நோக்கி: இவர்கள் இவ்விடத்தில் தேவன் எனக்கு அருளின குமாரர் என்றான். அப்பொழுது அவன்: நான் அவர்களை ஆசீர்வதிக்கும்படி அவர்களை என் கிட்டக்கொண்டுவா என்றான். 10 முதிர்வயதினால் இஸ்ரவேலின் கண்கள் மங்கலாயிருந்தபடியால், அவன் நன்றாய்ப் பார்க்கக்கூடாதிருந்தது. அவர்களை அவனண்டையிலே சேரப்பண்ணினான்; அப்பொழுது அவன் அவர்களை முத்தஞ்செய்து அணைத்துக்கொண்டான். 11 இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: உன் முகத்தைக் காண்பேன் என்று நான் நினைக்கவில்லை; ஆனாலும், இதோ, உன் சந்ததியையும் காணும்படி தேவன் எனக்கு அருள்செய்தார் என்றான். 12 அப்பொழுது அவனுடைய முழங்கால்கள் நடுவே இருந்த பிள்ளைகளை யோசேப்பு பின்னிடப்பண்ணி, அவனுடைய முகத்துக்கு முன்பாகத் தரைமட்டும் குனிந்து வணங்கினான். 13 பின்பு, யோசேப்பு அவ்விருவரையும் கொண்டுவந்து, எப்பிராயீமைத் தன் வலதுகையினாலே இஸ்ரவேலின் இடதுகைக்கு நேராகவும், மனாசேயைத் தன் இடதுகையினாலே இஸ்ரவேலின் வலதுகைக்கு நேராகவும் விட்டான். 14 அப்பொழுது இஸ்ரவேல், மனமறிய, தன் வலதுகையை நீட்டி, இளையவனாகிய எப்பிராயீமுடைய தலையின்மேலும், மனாசே மூத்தவனாயிருந்தும், தன் இடது கையை மனாசேயுடைய தலையின்மேலும் வைத்தான். 15 அவன் யோசேப்பை ஆசீர்வதித்து: என் பிதாக்களாகிய ஆபிரகாமும் ஈசாக்கும் வழிபட்டு வணங்கிய தேவனும், நான் பிறந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் என்னை ஆதரித்துவந்த தேவனும், 16 எல்லாத் தீமைக்கும் நீங்கலாக்கி என்னை மீட்ட தூதனுமானவர் இந்தப் பிள்ளைகளை ஆசீர்வதிப்பாராக, என் பேரும் என் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு என்பவர்களின் பேரும் இவர்களுக்கு இடப்படக்கடவது; பூமியில் இவர்கள் மிகுதியாய்ப் பெருகக்கடவர்கள் என்றான். 17 தகப்பன் தன் வலதுகையை எப்பிராயீமுடைய தலையின்மேல் வைத்ததை யோசேப்பு கண்டு, அது தனக்குப் பிரியமில்லாதபடியால், எப்பிராயீமுடைய தலையின்மேல் இருந்த தன் தகப்பனுடைய கையை மனாசேயினுடைய தலையின்மேல் வைக்கும்படிக்கு எடுத்து: 18 என் தகப்பனே, அப்படியல்ல, இவன் மூத்தவன், இவனுடைய தலையின்மேல் உம்முடைய வலதுகையை வைக்கவேண்டும் என்றான். 19 அவன் தகப்பனோ தடுத்து: அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாய்ப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாவார்கள் என்றான். 20 இவ்விதமாக அவன் அன்றைத்தினம் அவர்களை ஆசீர்வதித்து: தேவன் உன்னை எப்பிராயீமைப்போலவும் மனாசேயைப்போலவும் ஆக்குவாராக என்று இஸ்ரவேலர் உன்னை முன்னிட்டு வாழ்த்துவார்கள் என்று சொல்லி, எப்பிராயீமை மனாசேக்கு முன்னே வைத்தான். 21 பின்பு, இஸ்ரவேல் யோசேப்பை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; தேவன் உங்களோடே இருப்பார்; அவர் உங்கள் பிதாக்களின் தேசத்துக்கு உங்களைத் திரும்பவும் போகப்பண்ணுவார் என்றும், 22 உன் சகோதரருக்குக் கொடுத்ததைப்பார்க்கிலும், நான் என் பட்டயத்தாலும், என் வில்லினாலும், எமோரியர் கையிலிருந்து சம்பாதித்த ஒரு நிலத்தை உனக்கு அதிகமான பங்காகக் கொடுத்தேன் என்றும் சொன்னான்.

ஆதியாகமம் 49

1 யாக்கோபு தன் குமாரரை அழைத்து: நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன். 2 யாக்கோபின் குமாரரே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள். 3 ரூபனே, நீ என் சேஷ்டபுத்திரன்; நீ என் சத்துவமும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன். 4 தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய மஞ்சத்தின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே. 5 சிமியோனும், லேவியும் ஏக சகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். 6 என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே. 7 உக்கிரமான அவர்கள் கோபமும் கொடுமையான அவர்கள் மூர்க்கமும் சபிக்கப்படக்கடவது; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் பண்ணுவேன். 8 யூதாவே, சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் உன் சத்துருக்களுடைய பிடரியின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள். 9 யூதா பாலசிங்கம், நீ இரை கவர்ந்துகொண்டு ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப் படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்? 10 சமாதான கர்த்தர் வருமளவும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, நியாயப்பிரமாணிக்கன் அவன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் அவரிடத்தில் சேருவார்கள். 11 அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சச்செடியிலும், தன் கோளிகைக் கழுதையின் குட்டியை நற்குல திராட்சச்செடியிலும் கட்டுவான்; திராட்சரசத்திலே தன் வஸ்திரத்தையும், திராட்சப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் தோய்ப்பான். 12 அவன் கண்கள் திராட்சரசத்தினால் சிவப்பாயும், அவன் பற்கள் பாலினால் வெண்மையாயும் இருக்கும். 13 செபுலோன் கடல்துறை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாய் இருப்பான்; அவன் எல்லை சீதோன்வரைக்கும் இருக்கும். 14 இசக்கார் இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை. 15 அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும், நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, பகுதிகட்டுகிறவனானான். 16 தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான். 17 தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான். 18 கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்குக் காத்திருக்கிறேன். 19 காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான். 20 ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை அவன் தருவான். 21 நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான். 22 யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீர் ஊற்றண்டையிலுள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும். 23 வில்வீரர் அவனை மனமடிவாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள். 24 ஆனாலும், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; அவன் புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கரங்களால் பலத்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான். 25 உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வவல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார். 26 உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுமட்டும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய சிரசின்மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக. 27 பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான் என்றான். 28 இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான். 29 பின்னும் அவன் அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு; 30 அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார். 31 அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன். 32 அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான். 33 யாக்கோபு தன் குமாரருக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு ஜீவித்துப்போய், தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்.

ஆதியாகமம் 50

1 அப்பொழுது யோசேப்பு தன் தகப்பனுடைய முகத்தின்மேல் விழுந்து, அழுது, அவனை முத்தஞ்செய்தான். 2 பின்பு, தன் தகப்பனுக்குச் சுகந்தவர்க்கமிடும்படி யோசேப்பு தன் ஊழியக்காரராகிய வைத்தியருக்குக் கட்டளையிட்டான்; அப்படியே வைத்தியர் இஸ்ரவேலுக்குச் சுகந்தவர்க்கமிட்டார்கள். 3 சுகந்தவர்க்கமிட நாற்பதுநாள் செல்லும்; அப்படியே அந்த நாட்கள் நிறைவேறின. எகிப்தியர் அவனுக்காக எழுபதுநாள் துக்கங்கொண்டாடினார்கள். 4 துக்கங்கொண்டாடும் நாட்கள் முடிந்தபின், யோசேப்பு பார்வோனின் குடும்பத்தாரை நோக்கி: உங்கள் கண்களில் எனக்குத் தயவுகிடைத்ததானால், நீங்கள் பார்வோனுடைய காது கேட்க அவருக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால், 5 என் தகப்பனார் என்னை நோக்கி: இதோ, நான் மரணமடையப்போகிறேன்; கானான் தேசத்திலே நான் எனக்காக வெட்டிவைத்திருக்கிற கல்லறையிலே என்னை அடக்கம்பண்ணுவாயாக என்று என்னிடத்தில் சொல்லி, ஆணையிடுவித்துக்கொண்டார்; நான் அங்கே போய், என் தகப்பனை அடக்கம்பண்ணி வருவதற்கு உத்தரவுகொடுக்க வேண்டிக்கொள்ளுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான். 6 அதற்குப் பார்வோன்: உன் தகப்பன் உன்னிடத்தில் ஆணையிடுவித்தபடியே, நீ போய், அவரை அடக்கம்பண்ணிவா என்றான். 7 அப்படியே யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்பண்ணப் போனான். பார்வோனுடைய அரமனையிலிருந்த பெரியவர்களாகிய அவனுடைய சகல உத்தியோகஸ்தரும் எகிப்து தேசத்திலுள்ள சகல பெரியோரும், 8 யோசேப்பின் வீட்டார் யாவரும், அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரும் அவனோடேகூடப் போனார்கள். தங்கள் குழந்தைகளையும், தங்கள் ஆடுமாடுகளையும்மாத்திரம் கோசேன் நாட்டிலே விட்டுப் போனார்கள். 9 இரதங்களும் குதிரைவீரரும் அவனோடே போனதினால், பரிவாரக்கூட்டம் மிகவும் அதிகமாயிருந்தது. 10 அவர்கள் யோர்தானுக்கு அக்கரையில் இருக்கிற ஆத்தாத்தின் போர்க்களத்தில் வந்தபோது, அவ்விடத்திலே பெரும் புலம்பலாகப் புலம்பினார்கள். அங்கே தன் தகப்பனுக்காக ஏழுநாள் துக்கங்கொண்டாடினான். 11 ஆத்தாத்தின் களத்திலே துக்கங்கொண்டாடுகிறதை அத்தேசத்தின் குடிகளாகிய கானானியர் கண்டு: இது எகிப்தியருக்குப் பெரிய துக்கங்கொண்டாடல் என்றார்கள். அதினால் யோர்தானுக்கு அப்பால் இருக்கிற அந்த ஸ்தலத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பேர் உண்டாயிற்று. 12 யாக்கோபின் குமாரர், தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே, 13 அவனைக் கானான் தேசத்துக்குக் கொண்டுபோய், ஆபிரகாம் மம்ரேக்கு எதிரே இருக்கிற மக்பேலா என்னும் நிலத்திலே தனக்குச் சொந்தக் கல்லறை பூமியாக ஏத்தியனாகிய எப்பெரோனிடத்தில் வாங்கின நிலத்திலுள்ள குகையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள். 14 யோசேப்பு தன் தகப்பனை அடக்கம்பண்ணினபின்பு, அவனும் அவன் சகோதரரும், அவனுடைய தகப்பனை அடக்கம்பண்ணுவதற்கு அவனோடேகூடப் போனவர்கள் யாவரும் எகிப்துக்குத் திரும்பினார்கள். 15 தங்கள் தகப்பன் மரணமடைந்ததை யோசேப்பின் சகோதரர் கண்டு: ஒருவேளை யோசேப்பு நம்மைப் பகைத்து, நாம் அவனுக்குச் செய்த எல்லாப் பொல்லாங்குக்காகவும் நமக்குச் சரிக்குச் சரிகட்டுவான் என்று சொல்லி, யோசேப்பினிடத்தில் ஆள் அனுப்பி, 16 உம்முடைய சகோதரர் உமக்குப் பொல்லாங்கு செய்திருந்தாலும், அவர்கள் செய்த துரோகத்தையும் பாதகத்தையும் நீர் தயவுசெய்து மன்னிக்கவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் மரணமடையுமுன்னே, உமக்குச் சொல்லும்படி கட்டளையிட்டார். 17 ஆகையால், உம்முடைய தகப்பனாருடைய தேவனுக்கு ஊழியக்காரராகிய நாங்கள் செய்த துரோகத்தை மன்னிக்கவேண்டும் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னார்கள். அவர்கள் அதை யோசேப்புக்குச் சொன்னபோது, அவன் அழுதான். 18 பின்பு, அவனுடைய சகோதரரும் போய், அவனுக்கு முன்பாகத் தாழ விழுந்து: இதோ, நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள். 19 யோசேப்பு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நான் தேவனா; 20 நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார். 21 ஆதலால், பயப்படாதிருங்கள்; நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் பராமரிப்பேன் என்று, அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அவர்களோடே பட்சமாய்ப் பேசினான். 22 யோசேப்பும் அவன் தகப்பன் குடும்பத்தாரும் எகிப்திலே குடியிருந்தார்கள். யோசேப்பு நூற்றுப்பத்து வருஷம் உயிரோடிருந்தான். 23 யோசேப்பு எப்பிராயீமுக்குப் பிறந்த மூன்றாம் தலைமுறைப் பிள்ளைகளையும் கண்டான்; மனாசேயின் குமாரனாகிய மாகீரின் பிள்ளைகளும் யோசேப்பின் மடியில் வளர்க்கப்பட்டார்கள். 24 யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப்போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தைவிட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப்பண்ணுவார் என்று சொன்னதுமன்றி; 25 தேவன் உங்களைச் சந்திக்கும்போது, என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக என்றும் சொல்லி; யோசேப்பு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் ஆணையிடுவித்துக்கொண்டான். 26 யோசேப்பு நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரித்தான். அவனுக்குச் சுகந்தவர்க்கமிட்டு, எகிப்து தேசத்தில் அவனை ஒரு பெட்டியிலே வைத்துவைத்தார்கள்.

யாத்திராகமம் 1

1 எகிப்துக்குப் போன இஸ்ரவேலுடைய குமாரரின் நாமங்களாவன: ரூபன், சிமியோன், லேவி, யூதா, 2 இசக்கார், செபுலோன், பென்யமீன், 3 தாண், நப்தலி, காத், ஆசேர் என்பவைகளே. 4 இவர்கள் யாக்கோபுடனே தங்கள் தங்கள் குடும்பத்தோடுங்கூடப் போனார்கள். 5 யோசேப்போ அதற்கு முன்னமே எகிப்தில் போயிருந்தான். யாக்கோபின் கர்ப்பப்பிறப்பாகிய யாவரும் எழுபது பேர். 6 யோசேப்பும் அவனுடைய சகோதரர் யாவரும், அந்தத் தலைமுறையார் எல்லாரும் மரணமடைந்தார்கள். 7 இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது. 8 யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான். 9 அவன் தன் ஜனங்களை நோக்கி: இதோ, இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்கள் நம்மிலும் ஏராளமானவர்களும், பலத்தவர்களுமாய் இருக்கிறார்கள். 10 அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகாதபடிக்கும், நாம் அவர்களைக்குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும் என்றான். 11 அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள். 12 ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள். 13 எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலைவாங்கினார்கள். 14 சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள். 15 அதுவுமன்றி, எகிப்தின் ராஜா, சிப்பிராள் பூவாள் என்னும் பேருடைய எபிரெய மருத்துவச்சிகளோடே பேசி: 16 நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, அவர்கள் மணையின்மேல் உட்கார்ந்திருக்கையில் பார்த்து, ஆண்பிள்ளையானால் கொன்றுபோடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான். 17 மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள். 18 அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து: நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான். 19 அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப்போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்குப் போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள். 20 இதினிமித்தம் தேவன் மருத்துவச்சிகளுக்கு நன்மைசெய்தார். ஜனங்கள் பெருகி மிகுதியும் பலத்துப்போனார்கள். 21 மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். 22 அப்பொழுது பார்வோன், பிறக்கும் ஆண்பிள்ளைகளையெல்லாம் நதியிலே போட்டுவிடவும், பெண்பிள்ளைகளையெல்லாம் உயிரோடே வைக்கவும் தன் ஜனங்கள் எல்லாருக்கும் கட்டளையிட்டான்.

யாத்திராகமம் 2

1 லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான். 2 அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்றுமாதம் ஒளித்துவைத்தாள். 3 அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக்கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். 4 அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் தமக்கை தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள். 5 அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள்; அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். 6 அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள். 7 அப்பொழுது அதின் தமக்கை பார்வோனின் குமாரத்தியை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்றாள். 8 அதற்குப் பார்வோனுடைய குமாரத்தி: அழைத்துக்கொண்டுவா என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டுவந்தாள். 9 பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி: நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்கு வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரீ பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள். 10 பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள்: அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள். 11 மோசே பெரியவனான காலத்தில், அவன் தன் சகோதரரிடத்தில் போய், அவர்கள் சுமைசுமக்கிறதைப் பார்த்து, தன் சகோதரராகிய எபிரெயரில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு, 12 அங்கும் இங்கும் பார்த்து, ஒருவரும் இல்லை என்று அறிந்து, எகிப்தியனை வெட்டி, அவனை மணலிலே புதைத்துப்போட்டான். 13 அவன் மறுநாளிலும் வெளியே போனபோது, எபிரெய மனுஷர் இருவர் சண்டைபண்ணிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவன் அநியாயஞ் செய்கிறவனை நோக்கி: நீ உன் தோழனை அடிக்கிறது என்ன என்று கேட்டான். 14 அதற்கு அவன்: எங்கள்மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்றுபோட்டதுபோல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான். 15 பார்வோன் அந்தக் காரியத்தைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொலைசெய்ய வகைதேடினான். மோசே பார்வோனிடத்தினின்று தப்பியோடி, மீதியான் தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தான். 16 மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள்; அவர்கள் தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டும்படிக்கு அங்கே வந்து, தண்ணீர் மொண்டு, தொட்டிகளை நிரப்பினார்கள். 17 அப்பொழுது மேய்ப்பர்கள் வந்து, அவர்களைத் துரத்தினார்கள்; மோசே எழுந்திருந்து, அவர்களுக்குத் துணைநின்று, அவர்களுடைய ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டினான். 18 அவர்கள் தங்கள் தகப்பனாகிய ரெகுவேலிடத்தில் வந்தபோது, அவன்: நீங்கள் இன்று இத்தனை சீக்கிரமாய் வந்தது என்ன என்று கேட்டான். 19 அதற்கு அவர்கள்: எகிப்தியன் ஒருவன் மேய்ப்பரின் கைகளுக்கு எங்களைத் தப்புவித்து, எங்களுக்குத் தண்ணீர் மொண்டு கொடுத்து, ஆடுகளுக்கும் தண்ணீர் காட்டினான் என்றார்கள். 20 அப்பொழுது அவன் தன் குமாரத்திகளைப் பார்த்து: அவன் எங்கே? அந்த மனிதனை நீங்கள் விட்டுவந்தது என்ன? போஜனம்பண்ணும்படிக்கு அவனை அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான். 21 மோசே அந்த மனிதனிடத்தில் தங்கியிருக்கச் சம்மதித்தான். அவன் சிப்போராள் என்னும் தன் குமாரத்தியை மோசேக்குக் கொடுத்தான். 22 அவள் ஒரு குமாரனைப் பெற்றாள். நான் அந்நிய தேசத்தில் பரதேசியாய் இருக்கிறேன் என்று சொல்லி, அவனுக்கு கெர்சோம் என்று பேரிட்டான். 23 சிலகாலம் சென்றபின், எகிப்தின் ராஜா மரித்தான். இஸ்ரவேல் புத்திரர் அடிமைத்தனத்தினால் தவித்து, முறையிட்டுக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் அடிமைத்தனத்திலிருந்து முறையிடும் சத்தம் தேவசந்நிதியில் எட்டினது. 24 தேவன் அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, தாம் ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். 25 தேவன் இஸ்ரவேல் புத்திரரைக் கண்ணோக்கினார்; தேவன் அவர்களை நினைத்தருளினார்.

யாத்திராகமம் 3

1 மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்துவந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின்புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான். 2 அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது. 3 அப்பொழுது மோசே: இந்த முட்செடி வெந்துபோகாதிருக்கிறது என்ன, நான் கிட்டப்போய் இந்த அற்புதகாட்சியைப் பார்ப்பேன் என்றான். 4 அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான். 5 அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச் சேராயாக; உன் கால்களில் இருக்கிற பாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார். 6 பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப்பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான். 7 அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். 8 அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன். 9 இப்பொழுதும் இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல் என் சந்நிதியில் வந்து எட்டினது; எகிப்தியர் அவர்களை ஒடுக்குகிற ஒடுக்குதலையும் கண்டேன். 10 நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார். 11 அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான். 12 அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்துவந்தபின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார். 13 அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான். 14 அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார். 15 மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம். 16 நீ போய், இஸ்ரவேலின் மூப்பரைக்கூட்டி, அவர்களிடத்தில்: ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் எனக்குத் தரிசனமாகி, உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, எகிப்தில் உங்களுக்குச் செய்யப்பட்டதைக் கண்டேன் என்றும், 17 நான் உங்களை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கானானியர் ஏத்தியர் எமோரியர் பெரிசியர் ஏவியர் எபூசியருடைய தேசத்துக்குக் கொண்டுபோவேன் என்றும் சொன்னேன் என்றார் என்று சொல்லு. 18 அவர்கள் உன் வாக்குக்குச் செவிகொடுப்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பரும் எகிப்தின் ராஜாவினிடத்தில் போய்: எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்றுநாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள். 19 ஆனாலும், எகிப்தின் ராஜா கைவல்லமை கண்டாலொழிய, உங்களைப் போகவிடான் என்று நான் அறிவேன். 20 ஆகையால், நான் என் கையை நீட்டி, எகிப்தின் நடுவிலே நான் செய்யும் சகலவித அற்புதங்களாலும் அதை வாதிப்பேன்; அதற்குப்பின் அவன் உங்களைப் போகவிடுவான். 21 அப்பொழுது இந்த ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவுகிடைக்கப்பண்ணுவேன்; நீங்கள் போகும்போது வெறுமையாய்ப் போவதில்லை. 22 ஒவ்வொரு ஸ்திரீயும், தன்தன் அயலகத்தாளிடத்திலும் தன்தன் வீட்டில் தங்குகிறவளிடத்திலும், வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டு வாங்குவாள்; அவைகளை உங்கள் குமாரருக்கும் உங்கள் குமாரத்திகளுக்கும் தரிப்பித்து, எகிப்தியரைக் கொள்ளையிடுவீர்கள் என்றார்.

யாத்திராகமம் 4

1 அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள்; என் வாக்குக்குச் செவிகொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான். 2 கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார். ஒரு கோல் என்றான். 3 அதைத் தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்டபோது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகியோடினான். 4 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையை நீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று. 5 ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார். 6 மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன் மடியிலே போடு என்றார்; அவன் தன் கையைத் தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும்போது, இதோ, அவன் கை உறைந்த மழையைப்போல வெண்குஷ்டம் பிடித்திருந்தது. 7 அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியிலே போட்டு, தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்றச் சதையைப்போலாயிற்று. 8 அப்பொழுது அவர்: முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உனக்குச் செவிகொடாமலும் போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள். 9 இவ்விரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன் வாக்குக்குச் செவிகொடாமலும் இருப்பார்களானால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக; நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும் என்றார். 10 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்தநாவும் உள்ளவன் என்றான். 11 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா? 12 ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார். 13 அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றான். 14 அப்பொழுது கர்த்தர் மோசேயின்மேல் கோபம்மூண்டவராகி: லேவியனாகிய ஆரோன் உன் சகோதரன் அல்லவா? அவன் நன்றாய்ப் பேசுகிறவன் என்று அறிவேன்; அவன் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டுவருகிறான்; உன்னைக் காணும்போது அவன் இருதயம் மகிழும். 15 நீ அவனோடே பேசி, அவன் வாயில் வார்த்தைகளைப் போடு; நான் உன் வாயிலும் அவன் வாயிலும் இருந்து, நீங்கள் செய்யவேண்டியதை உங்களுக்கு உணர்த்துவேன். 16 அவன் உனக்குப் பதிலாக ஜனங்களோடே பேசுவான்; இவ்விதமாய் அவன் உனக்கு வாயாக இருப்பான்; நீ அவனுக்குத் தேவனாக இருப்பாய். 17 இந்தக் கோலையும் உன் கையிலே பிடித்துக்கொண்டுபோ, இதனால் நீ அடையாளங்களைச் செய்வாய் என்றார். 18 மோசே தன் மாமனாகிய எத்திரோவினிடத்துக்கு வந்து: நான் எகிப்திலிருக்கிற என் சகோதரரிடத்துக்குத் திரும்பிப்போய், அவர்கள் இன்னும் உயிரோடே இருக்கிறார்களா என்று பார்க்கும்படிப் புறப்பட்டுப்போக உத்தரவு தரவேண்டும் என்றான். அப்பொழுது எத்திரோ மோசேயை நோக்கி: சுகமாய்ப் போய்வாரும் என்றான். 19 பின்னும் கர்த்தர் மீதியானிலே மோசேயை நோக்கி: நீ எகிப்துக்குத் திரும்பிப் போ, உன் பிராணனை வாங்கத் தேடின மனிதர் எல்லாரும் இறந்துபோனார்கள் என்றார். 20 அப்பொழுது மோசே தன் மனைவியையும் தன் பிள்ளைகளையும் கழுதையின்மேல் ஏற்றிக்கொண்டு, எகிப்து தேசத்துக்குத் திரும்பினான்; தேவனுடைய கோலையும் மோசே தன் கையிலே பிடித்துக்கொண்டுபோனான். 21 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ எகிப்திலே திரும்பிப்போய்ச் சேர்ந்தபின், நான் உன் கையில் அளித்திருக்கிற அற்புதங்கள் யாவையும் பார்வோனுக்கு முன்பாகச் செய்யும்படி எச்சரிக்கையாயிரு; ஆகிலும், நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்துவேன்; அவன் ஜனத்தைப் போகவிடான். 22 அப்பொழுது நீ பார்வோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் என்னுடைய குமாரன், என் சேஷ்டபுத்திரன். 23 எனக்கு ஆராதனை செய்யும்படி என் குமாரனை அனுப்பிவிடு என்று கட்டளையிடுகிறேன்; அவனை விடமாட்டேன் என்பாயாகில் நான் உன்னுடைய குமாரனை, உன் சேஷ்டபுத்திரனைச் சங்கரிப்பேன் என்று கர்த்தர் சொன்னார் என்று சொல் என்றார். 24 வழியிலே தங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு எதிர்ப்பட்டு, அவனைக் கொல்லப்பார்த்தார். 25 அப்பொழுது சிப்போராள் கருக்கான ஒரு கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து: நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள். 26 பின்பு அவர் அவனைவிட்டு விலகினார். அப்பொழுது அவள்: விருத்தசேதனத்தினிமித்தம் நீர் எனக்கு இரத்தசம்பந்தமான புருஷன் என்றாள். 27 கர்த்தர் ஆரோனை நோக்கி: நீ வனாந்தரத்தில் மோசேக்கு எதிர்கொண்டுபோ என்றார். அவன் போய், தேவபர்வதத்தில் அவனைச் சந்தித்து, அவனை முத்தஞ்செய்தான். 28 அப்பொழுது மோசே தன்னை அனுப்பின கர்த்தருடைய சகல வார்த்தைகளையும் அவர் தனக்குக் கட்டளையிட்ட சகல அடையாளங்களையும் ஆரோனுக்குத் தெரிவித்தான். 29 மோசேயும் ஆரோனும் போய், இஸ்ரவேல் புத்திரரின் மூப்பர் எல்லாரையும் கூடிவரச் செய்தார்கள். 30 கர்த்தர் மோசேக்குச் சொல்லிய சகல வார்த்தைகளையும் ஆரோன் சொல்லி, ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அந்த அடையாளங்களையும் செய்தான். 31 ஜனங்கள் விசுவாசித்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரைச் சந்தித்தார் என்றும், அவர்கள் படும் உபத்திரவங்களைக் கண்ணோக்கிப்பார்த்தார் என்றும், அவர்கள் கேட்டபோது, தலைகுனிந்துத் தொழுதுகொண்டார்கள்.

யாத்திராகமம் 5

1 பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள். 2 அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போகவிடுவதில்லை என்றான். 3 அப்பொழுது அவர்கள்: எபிரெயருடைய தேவன் எங்களைச் சந்தித்தார்; நாங்கள் வனாந்தரத்தில் மூன்றுநாள் பிரயாணம் போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி போகவிடவேண்டும்; போகாதிருந்தால், அவர் கொள்ளைநோயும் பட்டயமும் எங்கள்மேல் வரப்பண்ணுவார் என்றார்கள். 4 எகிப்தின் ராஜா அவர்களை நோக்கி: மோசேயும் ஆரோனுமாகிய நீங்கள் ஜனங்களைத் தங்கள் வேலைகளை விட்டுக் கலையப்பண்ணுகிறது என்ன? உங்கள் சுமைகளைச் சுமக்கப்போங்கள் என்றான். 5 பின்னும் பார்வோன்: இதோ, தேசத்தில் ஜனங்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; அவர்கள் சுமை சுமக்கிறதை விட்டு ஓய்ந்திருக்கும்படி செய்கிறீர்களே என்றான். 6 அன்றியும், அந்நாளிலே பார்வோன் ஜனங்களின் ஆளோட்டிகளையும் அவர்கள் தலைவரையும் நோக்கி: 7 செங்கல் வேலைக்கு நீங்கள் முன்போல இனி ஜனங்களுக்கு வைக்கோல் கொடுக்கவேண்டாம்; அவர்கள் தாங்களே போய்த் தங்களுக்கு வைக்கோல் சேர்க்கட்டும். 8 அவர்கள் முன் செய்துகொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள்; அதிலே நீங்கள் ஒன்றும் குறைக்கவேண்டாம், அவர்கள் சோம்பலாயிருக்கிறார்கள்; அதினால் நாங்கள் போய் எங்கள் தேவனுக்குப் பலியிடுவோம் என்று கூக்குரலிடுகிறார்கள். 9 அந்த மனிதர்மேல் முன்னிலும் அதிகவேலையைச் சுமத்துங்கள், அதில் அவர்கள் கஷ்டப்படட்டும்; வீண்வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்க விடாதிருங்கள் என்று கட்டளையிட்டான். 10 அப்பொழுது ஜனங்களின் ஆளோட்டிகளும் அவர்கள் தலைவர்களும் புறப்பட்டுப்போய் ஜனங்களை நோக்கி: உங்களுக்கு வைக்கோல் கொடுப்பதில்லை; 11 நீங்களே போய் உங்களுக்கு அகப்படுகிற இடங்களில் வைக்கோல் சம்பாதியுங்கள்; ஆனாலும் உங்கள் வேலையில் ஒன்றும் குறைக்கப்படுவதில்லை என்று பார்வோன் சொல்லுகிறார் என்றார்கள். 12 அப்பொழுது வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடிகளைச் சேர்க்கும்படி ஜனங்கள் எகிப்து தேசம் எங்கும் சிதறிப்போனார்கள். 13 ஆளோட்டிகள் அவர்களை நோக்கி: வைக்கோலிருந்த நாளில் செய்தபடியே உங்கள் வேலைகளை ஒவ்வொரு நாளிலும் செய்து முடியுங்கள் என்று சொல்லி, அவர்களைத் துரிதப்படுத்தினார்கள். 14 பார்வோனுடைய ஆளோட்டிகள் இஸ்ரவேல் புத்திரர்மேல் வைத்த அவர்களுடைய தலைவர்களை நோக்கி: செங்கல் வேலையில் நீங்கள் முன்செய்ததுபோல நேற்றும் இன்றும் ஏன் செய்யவில்லை என்று கேட்டு, அவர்களை அடித்தார்கள். 15 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் பார்வோனிடத்தில் போய்ச் சத்தமிட்டு: உமது அடியாருக்கு நீர் இப்படிச் செய்கிறது என்ன? 16 உமது அடியாருக்கு வைக்கோல் கொடாதிருந்தும், செங்கல் அறுத்துத் தீரவேண்டும் என்று எங்களுக்குச் சொல்லுகிறார்கள்; உம்முடைய ஜனங்களிடத்தில் குற்றம் இருக்க, உமது அடியாராகிய நாங்கள் அடிக்கப்படுகிறோம் என்றார்கள். 17 அதற்கு அவன்: நீங்கள் சோம்பலாயிருக்கிறீர்கள், சோம்பலாயிருக்கிறீர்கள்; அதினால்தான் போகவேண்டும், கர்த்தருக்குப் பலியிடவேண்டும் என்கிறீர்கள். 18 போய், வேலைசெய்யுங்கள், உங்களுக்கு வைக்கோல் கொடுக்கப்படுவதில்லை; ஆனாலும் கணக்கின்படியே நீங்கள் செங்கலை ஒப்புவிக்கவேண்டும் என்றான். 19 நீங்கள் ஒவ்வொரு நாளிலும் அறுத்துத் தீரவேண்டிய செங்கலிலே ஒன்றும் குறைக்கப்படாது என்று சொல்லப்பட்டதினாலே, இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் தங்களுக்கு இக்கட்டு வந்தது என்று கண்டார்கள். 20 அவர்கள் பார்வோனுடைய சமுகத்தை விட்டுப் புறப்படுகையில், வழியில் நின்ற மோசேக்கும் ஆரோனுக்கும் எதிர்ப்பட்டு, 21 அவர்களை நோக்கி: நீங்கள் பார்வோனின் கண்களுக்கு முன்பாகவும் அவருடைய ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் எங்கள் வாசனையைக் கெடுத்து, எங்களைக் கொல்லும்படி அவர்கள் கையிலே பட்டயத்தைக் கொடுத்ததினிமித்தம், கர்த்தர் உங்களைப் பார்த்து நியாயந்தீர்க்கக்கடவர் என்றார்கள். 22 அப்பொழுது மோசே கர்த்தரிடத்தில் திரும்பிப்போய்: ஆண்டவரே, இந்த ஜனங்களுக்குத் தீங்குவரப்பண்ணினதென்ன? ஏன் என்னை அனுப்பினீர்? 23 நான் உமது நாமத்தைக்கொண்டு பேசும்படி பார்வோனிடத்தில் பிரவேசித்ததுமுதல் அவன் இந்த ஜனங்களை உபத்திரவப்படுத்துகிறான்; நீர் உம்முடைய ஜனங்களை விடுதலையாக்கவில்லையே என்றான்.

யாத்திராகமம் 6

1 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; பலத்த கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, பலத்த கையைக் கண்டு அவர்களைத் தன் தேசத்திலிருந்து துரத்திவிடுவான் என்றார். 2 மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா, 3 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை. 4 அவர்கள் பரதேசிகளாய்த் தங்கின தேசமாகிய கானான்தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடே என் உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன். 5 எகிப்தியர் அடிமைகொள்ளுகிற இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சையும் நான் கேட்டு, என் உடன்படிக்கையை நினைத்தேன். 6 ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு, 7 உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள். 8 ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார். 9 இந்தப்பிரகாரமாக மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்; அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற்போனார்கள். 10 பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி: 11 நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்தில் போய், அவன் தன் தேசத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடும்படி அவனோடே பேசு என்றார். 12 மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான். 13 கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படிக்கு, அவர்களை இஸ்ரவேல் புத்திரரிடத்துக்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்துக்கும் கட்டளைகொடுத்து அனுப்பினார். 14 அவர்களுடைய பிதாக்கள் வீட்டாரின் தலைவர் யாரென்றால், இஸ்ரவேலுக்கு முதல் பிறந்தவனாகிய ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ; இவர்கள் ரூபனுடைய வம்சங்களின் தலைவர். 15 சிமியோனின் குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே. 16 உற்பத்திக்கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான். 17 அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் குமாரர் லிப்னீ, சிமேயீ என்பவர்கள். 18 கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்று முப்பத்துமூன்று வருஷம் உயிரோடிருந்தான். 19 மெராரியின் குமாரர் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே. 20 அம்ராம் தன் அத்தையாகிய யோகெபேத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு ஆரோனையும் மோசேயையும் பெற்றாள்; அம்ராம் நூற்றுமுப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான். 21 இத்சேயாரின் குமாரர் கோராகு, நெப்பேக், சித்ரி என்பவர்கள். 22 ஊசியேலின் குமாரர் மீசவேல், எல்சாபான், சித்ரி என்பவர்கள். 23 ஆரோன் அம்மினதாபின் குமாரத்தியும் நகசோனின் சகோதரியுமாகிய எலிசபாளை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு நாதாபையும், அபியூவையும், எலேயாசாரையும், இத்தாமாரையும் பெற்றாள். 24 கோராகின் குமாரர் ஆசீர், எல்க்கானா, அபியாசாப் என்பவர்கள்; கோராகியரின் வம்சத்தலைவர் இவர்களே. 25 ஆரோனின் குமாரனாகிய எலெயாசார் பூத்தியேலுடைய குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான், அவள் அவனுக்குப் பினெகாசைப் பெற்றாள்; அவரவர் வம்சங்களின்படி லேவியருடைய பிதாக்களாகிய தலைவர் இவர்களே. 26 இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து நடத்திக்கொண்டுபோவதற்குக் கர்த்தரால் கட்டளைபெற்ற ஆரோனும் மோசேயும் இவர்களே. 27 இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து நடத்திக்கொண்டுபோவதற்கு, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே பேசின மோசேயும் ஆரோனும் இவர்களே. 28 கர்த்தர் எகிப்துதேசத்திலே மோசேயோடே பேசின நாளில்; 29 கர்த்தர் மோசேயை நோக்கி: நானே கர்த்தர்; நான் உன்னோடே சொல்லுகிறவைகளையெல்லாம் நீ எகிப்து ராஜாவாகிய பார்வோனுக்குச் சொல் என்று சொன்னபோது, 30 மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில்: நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன்; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான் என்றான்.

யாத்திராகமம் 7

1 கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான். 2 நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்; பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன் சகோதரனாகிய ஆரோன் அவனிடத்தில் பேசவேண்டும். 3 நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்து தேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன். 4 பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான்; ஆகையால் எகிப்துக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, மகா தண்டனையினால் என் சேனைகளும் என் ஜனங்களுமாகிய இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணுவேன். 5 நான் எகிப்தின்மேல் என் கையை நீட்டி, இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப்பண்ணும்போது, நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிவார்கள் என்றார். 6 மோசேயும் ஆரோனும் கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். 7 அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது. 8 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 9 உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடே சொன்னால்; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக; அது சர்ப்பமாகும் என்றார். 10 மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று. 11 அப்பொழுது பார்வோன் சாஸ்திரிகளையும் சூனியக்காரரையும் அழைப்பித்தான். எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள். 12 அவர்கள் ஒவ்வொருவனாகத் தன் தன் கோலைப் போட்டபோது, அவைகள் சர்ப்பங்களாயின; ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று. 13 கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது, அவர்களுக்குச் செவிகொடாமற்போனான். 14 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பார்வோனின் இருதயம் கடினமாயிற்று; ஜனங்களை விடமாட்டேன் என்கிறான். 15 காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, 16 அவனை நோக்கி: வனாந்தரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடவேண்டும் என்று சொல்லும்படி எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் என்னை உம்மிடத்துக்கு அனுப்பியும், இதுவரைக்கும் நீர் கேளாமற்போனீர். 17 இதோ, என் கையில் இருக்கிற கோலினால் நதியில் இருக்கிற தண்ணீர்மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாய் மாறி, 18 நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக்கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். 19 மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்துக்கொண்டு எகிப்தின் நீர்நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும் நதிகள்மேலும் குளங்கள்மேலும் தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள்மேலும், அவைகள் இரத்தமாகும்படிக்கு, உன் கையை நீட்டு; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மரப்பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார். 20 கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று. 21 நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற்போயிற்று; எகிப்து தேசம் எங்கும் இரத்தமாயிருந்தது. 22 எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற்போனான். 23 பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான். 24 நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள். 25 கர்த்தர் நதியை அடித்து ஏழுநாள் ஆயிற்று.

யாத்திராகமம் 8

1 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு. 2 நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்பாயாகில், உன் எல்லை அடங்கலையும் தவளைகளால் வாதிப்பேன். 3 நதி தவளைகளைத் திரளாய்ப் பிறப்பிக்கும்; அவைகள் உன் வீட்டிலும் உன் படுக்கை அறையிலும், உன் மஞ்சத்தின் மேலும், உன் ஊழியக்காரர் வீடுகளிலும், உன் ஜனங்களிடத்திலும், உன் அடுப்புகளிலும், மாப்பிசைகிற உன் தொட்டிகளிலும் வந்து ஏறும். 4 அந்தத் தவளைகள் உன்மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் ஊழியக்காரர் எல்லார்மேலும் வந்து ஏறும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். 5 மேலும் கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி: நீ உன் கையில் இருக்கிற கோலை நதிகள்மேலும் வாய்க்கால்கள்மேலும் குளங்கள்மேலும் நீட்டி, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல் என்றார். 6 அப்படியே ஆரோன் தன் கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்து தேசத்தை மூடிக்கொண்டது. 7 மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்து தேசத்தின்மேல் தவளைகளை வரப்பண்ணினார்கள். 8 பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான். 9 அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: தவளைகள் நதியிலேமாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படி செய்ய, உமக்காகவும் உம்முடைய ஊழியக்காரருக்காகவும் உம்முடைய ஜனங்களுக்காகவும் நான் விண்ணப்பம்பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான். 10 அதற்கு அவன்: நாளைக்கு என்றான். அப்பொழுது இவன்: எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படிக்கு உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது. 11 தவளைகள் உம்மையும் உம்முடைய வீட்டையும் உம்முடைய ஊழியக்காரரையும் உம்முடைய ஜனங்களையும் விட்டு நீங்கி, நதியிலே மாத்திரம் இருக்கும் என்றான். 12 மோசேயும் ஆரோனும் பார்வோனைவிட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு விரோதமாக வரப்பண்ணின தவளைகள்நிமித்தம் மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். 13 கர்த்தர் மோசேயின் சொற்படி செய்தார்; வீடுகளிலும் முற்றங்களிலும் வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போயிற்று. 14 அவைகளைக் குவியல் குவியலாகச் சேர்த்தார்கள்; அதினால் பூமியெங்கும் நாற்றம் எடுத்தது. 15 இலகுவுண்டாயிற்றென்று பார்வோன் கண்டபோதோ, தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, அவர்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சொல்லியிருந்தபடி ஆயிற்று. 16 அப்பொழுது கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ ஆரோனை நோக்கி: உன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசம் எங்கும் பேன்களாய்ப் போம் என்று சொல் என்றார். 17 அப்படியே செய்தார்கள்; ஆரோன் தன் கையில் இருந்த தன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் பேன்களாய் எகிப்துதேசம் எங்கும் பூமியின் புழுதியெல்லாம் பேன்களாயிற்று. 18 மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் பேன்களைப் பிறப்பிக்கும்படிப் பிரயத்தனஞ்செய்தார்கள்; செய்தும், அவர்களால் கூடாமற்போயிற்று; பேன்கள் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் இருந்தது. 19 அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற்போனான். 20 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நாளை அதிகாலமே நீ எழுந்து போய், பார்வோன் நதிக்குப் புறப்பட்டு வரும்போது, அவனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனை செய்யும்படி என் ஜனங்களைப் போகவிடு. 21 என் ஜனங்களைப் போகவிடாயாகில், நான் உன்மேலும், உன் ஊழியக்காரர்மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் வீடுகள்மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர் வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும். 22 பூமியின் நடுவில் நானே கர்த்தர் என்பதை நீ அறியும்படி என் ஜனங்கள் இருக்கிற கோசேன் நாட்டில் அந்நாளிலே வண்டுகள் வராதபடிக்கு, அந்த நாட்டை விசேஷப்படுத்தி, 23 என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். 24 அப்படியே கர்த்தர் செய்தார்; மகா திரளான வண்டு ஜாதிகள் பார்வோன் வீட்டிலும், அவன் ஊழியக்காரர் வீடுகளிலும், எகிப்து தேசம் முழுவதிலும் வந்தது; வண்டுகளினாலே தேசம் கெட்டுப்போயிற்று. 25 அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள் என்றான். 26 அதற்கு மோசே: அப்படிச் செய்யத்தகாது; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நாங்கள் எகிப்தியருடைய அருவருப்பைப் பலியிடுகிறதாயிருக்குமே, எகிப்தியருடைய அருவருப்பை நாங்கள் அவர்கள் கண்களுக்கு முன்பாகப் பலியிட்டால், எங்களைக் கல்லெறிவார்கள் அல்லவா? 27 நாங்கள் வனாந்தரத்தில் மூன்றுநாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு விதிக்கிறபடியே அவருக்குப் பலியிடுவோம் என்றான். 28 அப்பொழுது பார்வோன்: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வனாந்தரத்தில் பலியிடும்படிக்கு, நான் உங்களைப் போகவிடுவேன்; ஆனாலும், நீங்கள் அதிக தூரமாய்ப் போகவேண்டாம்; எனக்காக வேண்டுதல் செய்யுங்கள் என்றான். 29 அதற்கு மோசே: நான் உம்மை விட்டுப் புறப்பட்டபின், நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவர் ஊழியக்காரரையும் அவர் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி, நான் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்வேன்; ஆனாலும், கர்த்தருக்குப் பலியிடுகிறதற்கு ஜனங்களைப் போகவிடாதபடிப் பார்வோன் இனி வஞ்சனை செய்யாதிருப்பாராக என்றான். 30 மோசே பார்வோனை விட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான். 31 அப்பொழுது கர்த்தர் மோசேயின் சொற்படி, வண்டு ஜாதிகள் பார்வோனையும் அவன் ஊழியக்காரரையும் அவன் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி செய்தார்; ஒன்றாகிலும் மீந்திருக்கவில்லை. 32 பார்வோனோ, இந்த முறையும் தன் இருதயத்தைக் கடினப்படுத்தி, ஜனங்களைப் போகவிடாதிருந்தான்.

யாத்திராகமம் 9

1 பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களைப் போகவிடு. 2 நீ அவர்களை விடமாட்டேன் என்று இன்னும் நிறுத்திவைத்தாயாகில், 3 கர்த்தருடைய கரம் வெளியிலிருக்கிற உன் மிருகஜீவன்களாகிய குதிரைகளின்மேலும் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஆடுமாடுகளின்மேலும் இருக்கும்; மகா கொடிதான கொள்ளைநோய் உண்டாகும். 4 கர்த்தர் இஸ்ரவேலரின் மிருகஜீவன்களுக்கும் எகிப்தியரின் மிருகஜீவன்களுக்கும் வித்தியாசம் பண்ணுவார்; இஸ்ரவேல் புத்திரருக்கு உரியவைகள் எல்லாவற்றிலும் ஒன்றும் சாவதில்லை என்றார். 5 மேலும், நாளைக்குக் கர்த்தர் இந்தக் காரியத்தை தேசத்தில் செய்வார் என்று சொல்லி, கர்த்தர் ஒரு காலத்தைக் குறித்தார் என்றும், எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றும் அவனிடத்தில் சொல் என்றார். 6 மறுநாளில் கர்த்தர் அந்தக் காரியத்தைச் செய்தார்; எகிப்தியருடைய மிருகஜீவன்கள் எல்லாம் செத்துப்போயிற்று; இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை. 7 பார்வோன் விசாரித்து, இஸ்ரவேலரின் மிருகஜீவன்களில் ஒன்றாகிலும் சாகவில்லை என்று அறிந்தான். பார்வோனுடைய இருதயமோ கடினப்பட்டது; அவன் ஜனங்களைப் போகவிடவில்லை. 8 அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: உங்கள் கைப்பிடி நிறைய சூளையின் சாம்பலை அள்ளிக் கொள்ளுங்கள்; மோசே அதைப் பார்வோனுடைய கண்களுக்குமுன் வானத்திற்கு நேராக இறைக்கக்கடவன். 9 அது எகிப்து தேசம் மீதெங்கும் தூசியாகி, எகிப்து தேசமெங்கும் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்களை எழும்பப்பண்ணும் என்றார். 10 அப்படியே அவர்கள் சூளையின் சாம்பலை அள்ளிக்கொண்டு, பார்வோனுக்கு முன்பாக வந்து நின்றார்கள். மோசே அதை வானத்துக்கு நேராக இறைத்தான்; அப்பொழுது மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எரிபந்தமான கொப்புளங்கள் எழும்பிற்று. 11 அந்தக் கொப்புளங்கள் மந்திரவாதிகள்மேலும் எகிப்தியர் எல்லார்மேலும் உண்டானதினால், அந்தக் கொப்புளங்களினிமித்தம் மந்திரவாதிகளும் மோசேக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது. 12 ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. 13 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ அதிகாலமே எழுந்திருந்து போய், பார்வோனுக்கு முன்பாக நின்று: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு. 14 விடாதிருந்தால், பூமியெங்கும் என்னைப்போல வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இந்தமுறை நான் சகலவித வாதைகளையும் உன் இருதயத்திலும், உன் ஊழியக்காரர்மேலும் உன் ஜனங்கள்மேலும் அனுப்புவேன். 15 நீ பூமியில் இராமல் நாசமாய்ப் போகும்படி நான் என் கையை நீட்டி, உன்னையும் உன் ஜனங்களையும் கொள்ளை நோயினால் வாதிப்பேன். 16 என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என் நாமம் பூமியிலெங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும் உன்னை நிலைநிறுத்தினேன். 17 நீ என் ஜனங்களைப் போகவிடாமல், இன்னும் அவர்களுக்கு விரோதமாய் உன்னை உயர்த்துகிறாயா? 18 எகிப்து தோன்றிய நாள்முதல் இதுவரைக்கும் அதில் பெய்யாத மிகவும் கொடிய கல்மழையை நாளை இந்நேரம் பெய்யப்பண்ணுவேன். 19 இப்பொழுதே ஆள் அனுப்பி, உன் மிருகஜீவன்களையும் வெளியில் உனக்கு இருக்கிற யாவையும் சேர்த்துக்கொள்; வீட்டிலே சேர்க்கப்படாமல் வெளியிலிருக்கும் ஒவ்வொரு மனிதனும் மிருகமும் செத்துப்போகத்தக்கதாய் அந்தக் கல்மழை பெய்யும் என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல் என்றார். 20 பார்வோனுடைய ஊழியக்காரரில் எவன் கர்த்தருடைய வார்த்தைக்குப் பயப்பட்டானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வீடுகளுக்கு ஓடிவரப்பண்ணினான். 21 எவன் கர்த்தருடைய வார்த்தையை மதியாமற்போனானோ, அவன் தன் வேலைக்காரரையும் தன் மிருகஜீவன்களையும் வெளியிலே விட்டுவிட்டான். 22 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசம் எங்கும் மனிதர்மேலும் மிருகஜீவன்கள்மேலும் எகிப்து தேசத்திலிருக்கிற சகலவிதமான பயிர்வகைகள்மேலும் கல்மழை பெய்ய, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார். 23 அப்படியே மோசே தன் கோலை வானத்திற்கு நேராக நீட்டினான். அப்பொழுது கர்த்தர் இடிமுழக்கங்களையும் கல்மழையையும் அனுப்பினார்; அக்கினி தரையின்மேல் வேகமாய் ஓடிற்று; எகிப்து தேசத்தின்மேல் கர்த்தர் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்; 24 கல்மழையும் கல்மழையோடே கலந்த அக்கினியும் மிகவும் கொடிதாயிருந்தது; எகிப்து தேசம் குடியேற்றப்பட்ட நாள்முதல் அதில் அப்படி ஒருபோதும் உண்டானதில்லை. 25 எகிப்து தேசம் எங்கும் மனிதரையும் மிருகஜீவன்களையும், வெளியிலே இருந்தவைகள் எவைகளோ அவைகள் எல்லாவற்றையும் அந்தக் கல்மழை அழித்துப்போட்டது; அது வெளியின் பயிர்வகைகளையெல்லாம் அழித்து, வெளியின் மரங்களையெல்லாம் முறித்துப்போட்டது. 26 இஸ்ரவேல் புத்திரர் இருந்த கோசேன் நாட்டிலேமாத்திரம் கல்மழை இல்லாதிருந்தது. 27 அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நான் இந்த முறை பாவம் செய்தேன்; கர்த்தர் நீதியுள்ளவர்; நானும் என் ஜனமும் துன்மார்க்கர். 28 இது போதும்; இந்த மகா இடிமுழக்கங்களும் கல்மழையும் ஒழியும்படிக்கு, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணுங்கள்; நான் உங்களைப் போகவிடுவேன், இனி உங்களுக்குத் தடையில்லை என்றான். 29 மோசே அவனை நோக்கி: நான் பட்டணத்திலிருந்து புறப்பட்டவுடனே, என் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரிப்பேன்; அப்பொழுது இடிமுழக்கங்கள் ஓய்ந்து கல்மழை நின்றுபோம்; அதினால் பூமி கர்த்தருடையது என்பதை நீர் அறிவீர். 30 ஆகிலும் நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இன்னும் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படமாட்டீர்கள் என்பதை அறிவேன் என்றான். 31 அப்பொழுது வாற்கோதுமை கதிர்ப்பயிரும் சணல் தாள்ப்பயிருமாயிருந்தது; அதினால் சணலும் வாற்கோதுமையும் அழிக்கப்பட்டுப்போயிற்று. 32 கோதுமையும் கம்பும் கதிர்விடாதிருந்ததால், அவைகள் அழிக்கப்படவில்லை. 33 மோசே பார்வோனைவிட்டுப் பட்டணத்திலிருந்து புறப்பட்டு, தன் கைகளைக் கர்த்தருக்கு நேராக விரித்தான்; அப்பொழுது இடிமுழக்கமும் கல்மழையும் நின்றது; மழையும் பூமியில் பெய்யாமலிருந்தது. 34 மழையும் கல்மழையும் இடிமுழக்கமும் நின்றுபோனதைப் பார்வோன் கண்டபோது, அவனும் அவன் ஊழியக்காரரும் பின்னும் பாவம்செய்து, தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள். 35 கர்த்தர் மோசேயைக்கொண்டு சொல்லியிருந்தபடியே, பார்வோனின் இருதயம் கடினப்பட்டது; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.

யாத்திராகமம் 10

1 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போ, அவர்கள் நடுவே நான் இந்த என் அடையாளங்களைச் செய்யும்படிக்கும், 2 நான் எகிப்திலே நடப்பித்ததையும் நான் அவர்களுக்குள் செய்த என் அடையாளங்களையும், நீ உன் பிள்ளைகளின் செவிகள் கேட்கவும், உன் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் செவிகள் கேட்கவும் விவரித்துச் சொல்லும்படிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறியும்படிக்கும், நான் அவன் இருதயத்தையும் அவன் ஊழியக்காரரின் இருதயத்தையும் கடினப்படுத்தினேன் என்றார். 3 அப்படியே மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் வந்து: உன்னைத் தாழ்த்த நீ எதுவரைக்கும் மனதில்லாதிருப்பாய்? என் சமுகத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களைப் போகவிடு. 4 நீ என் ஜனங்களைப் போகவிடமாட்டேன் என்பாயாகில், நான் நாளைக்கு உன் எல்லைகளுக்குள்ளே வெட்டுக்கிளிகளை வரப்பண்ணுவேன். 5 தரை காணாதபடிக்கு அவைகள் பூமியின் முகத்தை மூடி, கல்மழைக்குத் தப்பி மீதியாக வைக்கப்பட்டதைப் பட்சித்து, வெளியிலே துளிர்க்கிற செடிகளையெல்லாம் தின்றுபோடும். 6 உன் வீடுகளும் உன் ஊழியக்காரருடைய வீடுகளும் எகிப்தியரின் வீடுகளும் எல்லாம் அவைகளால் நிரம்பும்; உன் பிதாக்களும் உன் பிதாக்களின் பிதாக்களும் தாங்கள் பூமியில் தோன்றின நாள்முதல் இந்நாள்வரைக்கும் அப்படிப்பட்டவைகளைக் கண்டதில்லை என்று எபிரெயரின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, திரும்பிக்கொண்டு பார்வோனை விட்டுப் புறப்பட்டான். 7 அப்பொழுது பார்வோனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி: எந்தமட்டும் இந்த மனிதன் நமக்குக் கண்ணியாயிருப்பான்? தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனைசெய்ய அந்த மனிதரைப் போகவிடும்; எகிப்து அழிந்துபோனதை நீர் இன்னும் அறியவில்லையா என்றார்கள். 8 அப்பொழுது மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்துக்குத் திரும்ப அழைக்கப்பட்டார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் என்று சொல்லி; யாரார் போகிறார்கள் என்று கேட்டான். 9 அதற்கு மோசே: எங்கள் இளைஞரோடும், எங்கள் முதியோரோடும், எங்கள் குமாரரோடும், எங்கள் குமாரத்திகளோடும், எங்கள் ஆடுகளையும் எங்கள் மாடுகளையும் கூட்டிக்கொண்டுபோவோம்; நாங்கள் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும் என்றான். 10 அப்பொழுது அவன்: நான் உங்களையும் உங்கள் குழந்தைகளையும் எப்படி விடுவேனோ, அப்படியே கர்த்தர் உங்களோடிருப்பாராக; எச்சரிக்கையாயிருங்கள், உங்களுக்குப் பொல்லாப்பு நேரிடும்; 11 அப்படி வேண்டாம்; புருஷராகிய நீங்கள் போய், கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள்; இதுதானே நீங்கள் விரும்பிக் கேட்டது என்று சொன்னான். அவர்கள் பார்வோன் சமுகத்தினின்று துரத்திவிடப்பட்டார்கள். 12 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின்மேல் வந்து, கல்மழையினால் அழியாத பூமியின் பயிர்வகைகளையெல்லாம் பட்சிக்கும்படிக்கு, எகிப்து தேசத்தின்மேல் உன் கையை நீட்டு என்றார். 13 அப்படியே மோசே தன் கோலை எகிப்து தேசத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் அன்று பகல் முழுவதும் அன்று இராமுழுவதும் கீழ்க்காற்றைத் தேசத்தின்மேல் வீசப்பண்ணினார்; விடியற்காலத்திலே கீழ்க்காற்று வெட்டுக்கிளிகளைக் கொண்டுவந்தது. 14 வெட்டுக்கிளிகள் எகிப்து தேசம் எங்கும் பரம்பி, எகிப்தின் எல்லையில் எங்கும் மிகவும் ஏராளமாய் இறங்கிற்று; அப்படிப்பட்ட வெட்டுக்கிளிகள் அதற்குமுன் இருந்ததும் இல்லை, அதற்குப்பின் இருப்பதும் இல்லை. 15 அவைகள் பூமியின் முகம் முழுதையும் மூடிற்று; தேசம் அவைகளால் அந்தகாரப்பட்டது; கல்மழைக்குத் தப்பியிருந்த நிலத்தின் பயிர்வகைகள் யாவையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் பட்சித்துப்போட்டது; எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையும் மீதியாயிருக்கவில்லை. 16 அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் தீவிரமாய் அழைப்பித்து: உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் விரோதமாகப் பாவம் செய்தேன். 17 இந்த ஒரு முறைமாத்திரம் நீ என் பாவத்தை மன்னிக்கவேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்தச் சாவைமாத்திரம் என்னைவிட்டு விலக்க அவரை நோக்கி விண்ணப்பம்பண்ணுங்கள் என்றான். 18 அவன் பார்வோனை விட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான். 19 அப்பொழுது கர்த்தர் மகா பலத்த மேல்காற்றை வீசும்படி செய்தார்; அது வெட்டுக்கிளிகளை அடித்துக்கொண்டுபோய்ச் செங்கடலிலே போட்டது; எகிப்தின் எல்லையில் எங்கும் ஒரு வெட்டுக்கிளியாகிலும் மீதியாயிருந்ததில்லை. 20 கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை. 21 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: தடவிக்கொண்டிருக்கத்தக்கதான இருள் எகிப்து தேசத்தின்மேல் உண்டாகும்படிக்கு, உன் கையை வானத்திற்கு நேராக நீட்டு என்றார். 22 மோசே தன் கையை வானத்திற்கு நேராக நீட்டினான்; அப்பொழுது எகிப்து தேசம் எங்கும் மூன்றுநாள்மட்டும் காரிருள் உண்டாயிற்று. 23 மூன்றுநாள்மட்டும் ஒருவரை ஒருவர் காணவும் இல்லை, ஒருவரும் தம்மிடத்தைவிட்டு எழுந்திருக்கவும் இல்லை; இஸ்ரவேல் புத்திரர் யாவருக்குமோவெனில் அவர்கள் வாசஸ்தலங்களிலே வெளிச்சம் இருந்தது. 24 அப்பொழுது பார்வோன் மோசேயை அழைப்பித்து: நீங்கள் போய்க் கர்த்தருக்கு ஆராதனைசெய்யுங்கள்; உங்கள் ஆடுகளும் உங்கள் மாடுகளும்மாத்திரம் நிறுத்தப்படவேண்டும்; உங்கள் குழந்தைகள் உங்களுடன் போகலாம் என்றான். 25 அதற்கு மோசே: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் படைக்கும் பலிகளையும் சர்வாங்க தகனபலிகளையும் நீர் எங்கள் கையிலே கொடுக்கவேண்டும். 26 எங்கள் மிருகஜீவன்களும் எங்களோடேகூட வரவேண்டும்; ஒரு குளம்பும் பின்வைக்கப்படுவதில்லை; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்கு அவைகளிலிருந்து எடுக்கவேண்டும்; இன்னதைக்கொண்டு கர்த்தருக்கு ஆராதனை செய்வோம் என்பது நாங்கள் அங்கே போய்ச் சேருமளவும் எங்களுக்குத் தெரியாது என்றான். 27 கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருந்தான். 28 பார்வோன் அவனை நோக்கி: என்னை விட்டு அப்பாலே போ; நீ இனி என் முகத்தைக் காணாதபடி எச்சரிக்கையாயிரு; நீ இனி என் முகத்தைக் காணும் நாளில் சாவாய் என்றான். 29 அப்பொழுது மோசே: நீர் சொன்னது சரி; இனி நான் உம்முடைய முகத்தைக் காண்பதில்லை என்றான்.

யாத்திராகமம் 11

1 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இன்னும் ஒரு வாதையைப் பார்வோன்மேலும் எகிப்தின்மேலும் வரப்பண்ணுவேன்; அதற்குப்பின் அவன் உங்களை இவ்விடத்திலிருந்து போகவிடுவான்; சமூலமாய் உங்களைப் போகவிடுவதும் அல்லாமல், உங்களை இவ்விடத்திலிருந்து துரத்தியும் விடுவான். 2 இப்பொழுது ஒவ்வொருவனும் அவனவன் அயலானிடத்திலும், ஒவ்வொருத்தியும் அவளவள் அயலாளிடத்திலும் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் கேட்கும்படி ஜனங்களுக்குச் சொல் என்றார். 3 அப்படியே கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவுகிடைக்கும்படி செய்தார். மோசே என்பவன் எகிப்து தேசத்தில் பார்வோனுடைய ஊழியக்காரரின் பார்வைக்கும் ஜனங்களின் பார்வைக்கும் மிகவும் பெரியவனாயிருந்தான். 4 அப்பொழுது மோசே: கர்த்தர் நடுராத்திரியிலே நான் எகிப்தின் மத்தியில் புறப்பட்டுப்போவேன். 5 அப்பொழுது சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் ஏந்திரம் அரைக்கும் அடிமைப்பெண்ணுடைய தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்திலிருக்கிற முதற்பேறனைத்தும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தும் சாகும் என்று உரைக்கிறார் என்று சொன்னதுமன்றி, 6 அதினால் எகிப்து தேசம் எங்கும் முன்னும் பின்னும் ஒருக்காலும் உண்டாகாத பெரிய கூக்குரல் உண்டாகும். 7 ஆனாலும் கர்த்தர் எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் பண்ணுகிற வித்தியாசத்தை நீங்கள் அறியும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரர் அனைவருக்குள்ளும் மனிதர்முதல் மிருகஜீவன்கள்வரைக்கும் ஒரு நாயாகிலும் தன் நாவை அசைப்பதில்லை. 8 அப்பொழுது உம்முடைய ஊழியக்காரராகிய இவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, பணிந்து, நீயும் உன்னைப் பின்பற்றுகிறவர்கள் யாவரும் புறப்பட்டுப்போங்கள் என்று சொல்லுவார்கள்; அதின்பின் புறப்படுவேன் என்று சொல்லி, உக்கிரமான கோபத்தோடே பார்வோனை விட்டுப் புறப்பட்டான். 9 கர்த்தர் மோசேயை நோக்கி: எகிப்து தேசத்தில் என் அற்புதங்கள் அநேகமாகும்படிக்கு, பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டான் என்று சொல்லியிருந்தார். 10 மோசேயும் ஆரோனும் இந்த அற்புதங்களையெல்லாம் பார்வோனுக்கு முன்பாகச் செய்தார்கள். கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினதினால், அவன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து போகவிடவில்லை.

யாத்திராகமம் 12

1 கர்த்தர் எகிப்து தேசத்தில் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 2 இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக. 3 நீங்கள் இஸ்ரவேல் சபையார் யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள். 4 ஒரு வீட்டில் இருக்கிறவர்கள் ஒரு ஆட்டுக்குட்டியைப் புசிக்கிறதற்குப் போதுமான பேர்களாயிராமற்போனால், அவனும் அவன் சமீபத்திலிருக்கிற அவனுடைய அயல்வீட்டுக்காரனும், தங்களிடத்திலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்திற்குத்தக்கதாக ஒரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும்; அவனவன் புசிப்புக்குத்தக்கதாக இலக்கம் பார்த்து, ஆட்டுக்குட்டியைத் தெரிந்துகொள்ளவேண்டும். 5 அந்த ஆட்டுக்குட்டி பழுதற்றதும் ஆணும் ஒரு வயதுள்ளதுமாய் இருக்க வேண்டும்; செம்மறியாடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது அதைத் தெரிந்து கொள்ளலாம். 6 அதை இந்த மாதம் பதினாலாம் தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து, 7 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, தாங்கள் அதைப் புசிக்கும் வீட்டுவாசல் நிலைக்கால்கள் இரண்டிலும் நிலையின் மேற்சட்டத்திலும் தெளித்து, 8 அன்று ராத்திரியிலே அதின் மாம்சத்தை நெருப்பினால் சுட்டு, புளிப்பில்லா அப்பத்தோடும் கசப்பான கீரையோடும் அதைப் புசிக்கக்கடவர்கள். 9 பச்சையாயும் தண்ணீரில் அவிக்கப்பட்டதாயும் அல்ல; அதின் தலையையும் அதின் தொடைகளையும் அதற்குள்ள யாவையும் ஏகமாய் நெருப்பினால் சுட்டதாய் அதைப் புசிப்பீர்களாக. 10 அதிலே ஒன்றையும் விடியற்காலம்மட்டும் மீதியாக வைக்காமல், விடியற்காலம்மட்டும் அதிலே மீதியாய் இருக்கிறதை அக்கினியால் சுட்டெரிப்பீர்களாக. 11 அதைப் புசிக்கவேண்டிய விதமாவது, நீங்கள் உங்கள் அரைகளில் கச்சை கட்டிக்கொண்டும், உங்கள் கால்களில் பாதரட்சை தொடுத்துக்கொண்டும், உங்கள் கையில் தடி பிடித்துக்கொண்டும் அதைத் தீவிரமாய்ப் புசிக்கக்கடவீர்கள்; அது கர்த்தருடைய பஸ்கா. 12 அந்த ராத்திரியிலே நான் எகிப்துதேசம் எங்கும் கடந்துபோய், எகிப்துதேசத்திலுள்ள மனிதர்முதல் மிருகஜீவன்கள்மட்டும், முதற்பேறாயிருக்கிறவைகளையெல்லாம் அதம்பண்ணி, எகிப்து தேவர்களின்மேல் நீதியைச் செலுத்துவேன்; நானே கர்த்தர். 13 நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்து தேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும். 14 அந்த நாள் உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது; அதைக் கர்த்தருக்குப் பண்டிகையாக ஆசரிப்பீர்களாக; அதை உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக ஆசரிக்கக்கடவீர்கள். 15 புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்தமாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள்வரைக்கும் புளித்த அப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டுபோவான். 16 முதலாம் நாளில் பரிசுத்த சபை கூடுதலும், ஏழாம் நாளிலும் பரிசுத்த சபைகூடுதலும் இருக்கவேண்டும்; அவைகளில் ஒரு வேலையும் செய்யப்படலாகாது; அவரவர் சாப்பிடுகிறதற்குத் தேவையானதுமாத்திரம் உங்களால் செய்யப்படலாம். 17 புளிப்பில்லா அப்பப்பண்டிகையை ஆசரிப்பீர்களாக; இந்த நாளில்தான் நான் உங்கள் சேனைகளை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; ஆகையால், உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாக இந்த நாளை ஆசரிக்கக்கடவீர்கள். 18 முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலந்தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம்வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள். 19 ஏழுநாளளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது; எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டுபோவான். 20 புளிப்பிடப்பட்ட யாதொன்றையும் நீங்கள் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள் என்று சொல் என்றார். 21 அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர் யாவரையும் அழைப்பித்து: நீங்கள் உங்கள் குடும்பங்களுக்குத் தக்கதாக உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து, 22 ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்துக் கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; விடியற்காலம்வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலைவிட்டுப் புறப்படவேண்டாம். 23 கர்த்தர் எகிப்தியரை அதம்பண்ணுகிறதற்குக் கடந்துவருவார்; நிலையின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் அந்த இரத்தத்தைக் காணும்போது, கர்த்தர் சங்காரக்காரனை உங்கள் வீடுகளில் உங்களை அதம்பண்ணுகிறதற்கு வரவொட்டாமல், வாசற்படியை விலகிக் கடந்துபோவார். 24 இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள். 25 கர்த்தர் உங்களுக்குத் தாம் சொன்னபடி கொடுக்கப்போகிற தேசத்திலே நீங்கள் போய்ச் சேரும்போது, இந்த ஆராதனையைக் கைக்கொள்ளக்கடவீர்கள். 26 அப்பொழுது உங்கள் பிள்ளைகள்: இந்த ஆராதனையின் கருத்து என்ன என்று உங்களைக் கேட்டால், 27 இது கர்த்தருடைய பஸ்காவாகிய பலி; அவர் எகிப்தியரை அதம்பண்ணி, நம்முடைய வீடுகளைத் தப்பப்பண்ணினபோது, எகிப்திலிருந்த இஸ்ரவேல் புத்திரருடைய வீடுகளைக் கடந்துபோனார் என்று நீங்கள் சொல்லவேண்டும் என்றான். அப்பொழுது ஜனங்கள் தலைவணங்கிப் பணிந்துகொண்டார்கள். 28 இஸ்ரவேல் புத்திரர் போய் அப்படியே செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள். 29 நடுராத்திரியிலே சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் பார்வோனுடைய தலைப்பிள்ளைமுதல் காவல் கிடங்கிலிருக்கும் சிறைப்பட்டவனின் தலைப்பிள்ளைவரைக்கும், எகிப்து தேசத்தில் இருந்த முதற்பேறனைத்தையும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும் கர்த்தர் அழித்தார். 30 அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள்; மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை. 31 இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப் புறப்பட்டுப்போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனைசெய்யுங்கள். 32 நீங்கள் சொன்னபடியே உங்கள் ஆடுமாடுகளையும் ஓட்டிக்கொண்டுபோங்கள்; என்னையும் ஆசீர்வதியுங்கள் என்றான். 33 எகிப்தியர்: நாங்கள் எல்லாரும் சாகிறோமே என்று சொல்லித், தீவிரமாய் ஜனங்களைத் தேசத்திலிருந்து அனுப்பிவிட அவர்களை மிகவும் துரிதப்படுத்தினார்கள். 34 பிசைந்தமா புளிக்குமுன் ஜனங்கள் அதைப் பாத்திரத்துடனே தங்கள் வஸ்திரங்களில் கட்டி, தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டு போனார்கள். 35 மோசே சொல்லியிருந்தபடி இஸ்ரவேல் ஜனங்கள் எகிப்தியரிடத்தில் வெள்ளியுடைமைகளையும் பொன்னுடைமைகளையும் வஸ்திரங்களையும் கேட்டார்கள். 36 கர்த்தர் ஜனங்களுக்கு எகிப்தியரின் கண்களில் தயவு கிடைக்கும்படி செய்ததினால், கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இவ்விதமாய் அவர்கள் எகிப்தியரைக் கொள்ளையிட்டார்கள். 37 இஸ்ரவேல் புத்திரர் ராமசேசை விட்டுக் கால்நடையாய்ப் பிரயாணம்பண்ணி, சுக்கோத்துக்குப் போனார்கள்; அவர்கள், பிள்ளைகள்தவிர ஆறுலட்சம் புருஷராயிருந்தார்கள். 38 அவர்களோடே கூடப் பல ஜாதியான ஜனங்கள் அநேகர் போனதும் அன்றி, மிகுதியான ஆடுமாடுகள் முதலான மிருகஜீவன்களும் போயிற்று. 39 எகிப்திலிருந்து அவர்கள் கொண்டு வந்த பிசைந்தமாவைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டார்கள்; அவர்கள் எகிப்தில் தரிக்கக்கூடாமல் துரத்திவிடப்பட்டதினால், அது புளியாதிருந்தது; அவர்கள் தங்களுக்கு வழிக்கென்று ஒன்றும் ஆயத்தம்பண்ணவில்லை. 40 இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலே குடியிருந்த காலம் நானூற்றுமுப்பது வருஷம். 41 நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது. 42 கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், இது அவருக்கென்று முக்கியமாய் ஆசரிக்கத்தக்க ராத்திரியாயிற்று; இஸ்ரவேல் சந்ததியார் எல்லாரும் தங்கள் தலைமுறைதோறும் கர்த்தருக்கு முக்கியமாய் ஆசரிக்கவேண்டிய ராத்திரி இதுவே. 43 மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம். 44 பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமையானவன் எவனும், நீ அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினபின், அவன் அதைப் புசிக்கலாம். 45 அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம். 46 அதை ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் புசிக்கவேண்டும்; அந்த மாம்சத்தில் கொஞ்சமாகிலும் வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகக்கூடாது; அதில் ஒரு எலும்பையும் முறிக்கக்கூடாது. 47 இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அதை ஆசரிக்கக்கடவர்கள். 48 அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவனும் அதில் புசிக்கவேண்டாம். 49 சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார். 50 இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள். 51 அன்றைத்தினமே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார்.

யாத்திராகமம் 13

1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2 இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார். 3 அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் புசிக்கவேண்டாம். 4 ஆபிப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள். 5 ஆகையால், கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்துக்கு உன்னை வரப்பண்ணும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையைச் செய்வாயாக. 6 புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவாய்; ஏழாம்நாளிலே கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கப்படுவதாக. 7 அந்த ஏழுநாளும் புளிப்பில்லா அப்பம் புசிக்கவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன் எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம். 8 அந்நாளில் நீ உன் புத்திரனை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படுகையில், கர்த்தர் எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல். 9 கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன் வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; 10 ஆகையால், நீ வருஷந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியமத்தை ஆசரித்து வருவாயாக. 11 மேலும், கர்த்தர் உனக்கும் உன் பிதாக்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரப்பண்ணி, அதை உனக்குக் கொடுக்கும்போது, 12 கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள். 13 கழுதையின் தலையீற்றையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை முறித்துப்போடு. உன் பிள்ளைகளில் முதற்பேறான சகல நரஜீவனையும் மீட்டுக்கொள்வாயாக. 14 பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். 15 எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள்வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்று போட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு, என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன். 16 கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான். 17 பார்வோன் ஜனங்களைப் போகவிட்டபின்: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல், 18 சிவந்த சமுத்திரத்தின் வனாந்தரவழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப்பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப்போனார்கள். 19 மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டுபோனான். தேவன் நிச்சயமாய் உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரை உறுதியாய் ஆணையிடும்படி செய்திருந்தான். 20 அவர்கள் சுக்கோத்திலிருந்து பிரயாணப்பட்டு, வனாந்தரத்தின் ஓரமாய் ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள். 21 அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார். 22 பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.

யாத்திராகமம் 14

1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கவேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு; அதற்கு எதிராகச் சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக. 3 அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து: அவர்கள் தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள்; வனாந்தரம் அவர்களை அடைத்துப்போட்டது என்று சொல்லுவான். 4 ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள். 5 ஜனங்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டபோது, ஜனங்களுக்கு விரோதமாகப் பார்வோனும் அவன் ஊழியக்காரரும் மனம் வேறுபட்டு: நமக்கு வேலை செய்யாதபடிக்கு நாம் இஸ்ரவேலரைப் போகவிட்டது என்ன காரியம் என்றார்கள். 6 அவன் தன் இரதத்தைப் பூட்டி, தன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு, 7 பிரதானமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற சகல இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரரையும் கூட்டிக்கொண்டுபோனான். 8 கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப்போனார்கள். 9 எகிப்தியர் பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் அவனுடைய குதிரைவீரரோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்துபோய், சமுத்திரத்தண்டையிலே பாகால்செபோனுக்கு எதிரே இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கியிருக்கிற அவர்களைக் கிட்டினார்கள். 10 பார்வோன் சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். 11 அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர்? நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன? 12 நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா? நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள். 13 அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள். 14 கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான். 15 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன? புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு. 16 நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள். 17 எகிப்தியர் உங்களைப் பின்தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி, பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன். 18 இப்படி நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் அவன் குதிரைவீரராலும் மகிமைப்படும்போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிவார்கள் என்றார். 19 அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேகஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது. 20 அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று. 21 மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுதும் பலத்த கீழ்க்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று. 22 இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது. 23 அப்பொழுது எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் அவர்கள் பிறகாலே சமுத்திரத்தின் நடுவே பிரவேசித்தார்கள். 24 கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் கர்த்தர் அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து எகிப்தியரின் சேனையைப் பார்த்து, அவர்கள் சேனையைக் கலங்கடித்து, 25 அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும், அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும் பண்ணினார்; அப்பொழுது எகிப்தியர்: இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார் என்றார்கள். 26 கர்த்தர் மோசேயை நோக்கி: ஜலம் எகிப்தியர்மேலும் அவர்களுடைய இரதங்கள்மேலும் அவர்களுடைய குதிரைவீரர்மேலும் திரும்பும்படிக்கு, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டு என்றார். 27 அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய்த் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார். 28 ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும், அவர்கள் பின்னாகச் சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை. 29 இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையின் வழியாய் நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது. 30 இவ்விதமாய்க் கர்த்தர் அந்நாளிலே இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்; கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள். 31 கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்.

யாத்திராகமம் 15

1 அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார். 2 கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம்பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன்; 3 கர்த்தரே யுத்தத்தில் வல்லவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம். 4 பார்வோனின் இரதங்களையும் அவன் சேனைகளையும் சமுத்திரத்திலே தள்ளிவிட்டார்; அவனுடைய பிரதான அதிபதிகள் சிவந்த சமுத்திரத்தில் அமிழ்ந்து போனார்கள். 5 ஆழி அவர்களை மூடிக்கொண்டது; கல்லைப்போல ஆழங்களில் அமிழ்ந்துபோனார்கள். 6 கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது. 7 உமக்கு விரோதமாய் எழும்பினவர்களை உமது முக்கியத்தின் மகத்துவத்தினாலே நிர்மூலமாக்கினீர்; உம்முடைய கோபாக்கினியை அனுப்பினீர், அது அவர்களைத் தாளடியைப்போலப் பட்சித்தது. 8 உமது நாசியின் சுவாசத்தினால் ஜலம் குவிந்து நின்றது; வெள்ளம் குவியலாக நிமிர்ந்து நின்றது; ஆழமான ஜலம் நடுக்கடலிலே உறைந்துபோயிற்று. 9 தொடருவேன், பிடிப்பேன், கொள்ளையாடிப் பங்கிடுவேன், என் ஆசை அவர்களிடத்தில் திர்ப்தியாகும், என் பட்டயத்தை உருவுவேன், என் கை அவர்களைச் சங்கரிக்கும் என்று பகைஞன் சொன்னான். 10 உம்முடைய காற்றை வீசப்பண்ணினீர், கடல் அவர்களை மூடிக்கொண்டது; திரளான தண்ணீர்களில் ஈயம்போல அமிழ்ந்துபோனார்கள். 11 கர்த்தாவே, தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்? பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவரும், துதிகளில் பயப்படத்தக்கவரும், அற்புதங்களைச் செய்கிறவருமாகிய உமக்கு ஒப்பானவர் யார்? 12 நீர் உமது வலதுகரத்தை நீட்டினீர்; பூமி அவர்களை விழுங்கிப்போட்டது. 13 நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்து வந்தீர்; உம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்துக்கு நேராக அவர்களை உமது பலத்தினால் வழிநடத்தினீர். 14 ஜனங்கள் அதைக் கேட்டுத் தத்தளிப்பார்கள்; பெலிஸ்தியாவின் குடிகளைத் திகில் பிடிக்கும். 15 ஏதோமின் பிரபுக்கள் கலங்குவார்கள்; மோவாபின் பராக்கிரமசாலிகளை நடுக்கம் பிடிக்கும்; கானானின் குடிகள் யாவரும் கரைந்துபோவார்கள். 16 பயமும் திகிலும் அவர்கள்மேல் விழும். கர்த்தாவே, உமது ஜனங்கள் கடந்துபோகும்வரையும், நீர் மீட்ட ஜனங்களே கடந்துபோகும்வரையும், அவர்கள் உம்முடைய புயத்தின் மகத்துவத்தினால் கல்லைப்போல அசைவற்றிருப்பார்கள். 17 நீர் அவர்களைக் கொண்டுபோய், கர்த்தராகிய தேவரீர் வாசம்பண்ணுகிறதற்கு நியமித்த ஸ்தானமாகிய உம்முடைய சுதந்தரத்தின் பர்வதத்திலும், ஆண்டவராகிய தேவரீருடைய கரங்கள் ஸ்தாபித்த பரிசுத்த ஸ்தலத்திலும் அவர்களை நாட்டுவீர். 18 கர்த்தர் சதாகாலங்களாகிய என்றென்றைக்கும் ராஜரிகம் பண்ணுவார். 19 பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் குதிரைவீரரோடும் சமுத்திரத்தில் பிரவேசித்தது; கர்த்தர் சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள்மேல் திரும்பப்பண்ணினார்; இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவே வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள் என்று பாடினார்கள். 20 ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள். 21 மிரியாம் அவர்களுக்குப் பிரதிவசனமாக: கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள். 22 பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பிரயாணப்படுத்தினான். அவர்கள் சூர்வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்றுநாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள். 23 அவர்கள் மாராவிலே வந்தபோது, மாராவின் தண்ணீர் கசப்பாயிருந்ததினால் அதைக் குடிக்க அவர்களுக்குக் கூடாதிருந்தது; அதினால் அவ்விடத்துக்கு மாரா என்று பேரிடப்பட்டது. 24 அப்பொழுது ஜனங்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: என்னத்தைக் குடிப்போம் என்றார்கள். 25 மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்; அப்பொழுது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார்; அதை அவன் தண்ணீரில் போட்டவுடனே, அது மதுரமான தண்ணீராயிற்று. அவர் அங்கே அவர்களுக்கு ஒரு நியமத்தையும் ஒரு நியாயத்தையும் கட்டளையிட்டு, அங்கே அவர்களைச் சோதித்து: 26 நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்டு, அவர் பார்வைக்குச் செம்மையானவைகளைச் செய்து, அவர் கட்டளைகளுக்குச் செவிகொடுத்து, அவருடைய நியமங்கள் யாவையும் கைக்கொண்டால், நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன்; நானே உன் பரிகாரியாகிய கர்த்தர் என்றார். 27 பின்பு அவர்கள் ஏலிமுக்கு வந்தார்கள்; அங்கே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே தண்ணீர் அருகே பாளயமிறங்கினார்கள்.

யாத்திராகமம் 16

1 இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் ஏலிமைவிட்டுப் பிரயாணம் பண்ணி, எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே, ஏலிமுக்கும் சீனாய்க்கும் நடுவே இருக்கிற சீன்வனாந்தரத்தில் சேர்ந்தார்கள். 2 அந்த வனாந்தரத்திலே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: 3 நாங்கள் இறைச்சிப் பாத்திரங்களண்டையிலே உட்கார்ந்து அப்பத்தைத் திர்ப்தியாகச் சாப்பிட்ட எகிப்து தேசத்திலே, கர்த்தரின் கையால் செத்துப்போனோமானால் தாவிளை; இந்தக் கூட்டம் முழுவதையும் பட்டினியினால் கொல்லும்படி நீங்கள் எங்களைப் புறப்படப்பண்ணி, இந்த வனாந்தரத்திலே அழைத்துவந்தீர்களே என்று அவர்களிடத்தில் சொன்னார்கள். 4 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப்பண்ணுவேன்; ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக்கொள்ளவேண்டும்; அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்கமாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன். 5 ஆறாம் நாளிலோ, அவர்கள் நாள்தோறும் சேர்க்கிறதைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்ச் சேர்த்து, அதை ஆயத்தம்பண்ணிவைக்கக்கடவர்கள் என்றார். 6 அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரையும் நோக்கி: கர்த்தர் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவர் என்பதைச் சாயங்காலத்தில் அறிவீர்கள்; 7 விடியற்காலத்தில் கர்த்தருடைய மகிமையையும் காண்பீர்கள்; கர்த்தருக்கு விரோதமான உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நீங்கள் எங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதற்கு நாங்கள் எம்மாத்திரம் என்றார்கள். 8 பின்னும் மோசே: சாயங்காலத்தில் நீங்கள் புசிக்கிறதற்குக் கர்த்தர் உங்களுக்கு இறைச்சியையும், விடியற்காலத்தில் நீங்கள் திர்ப்தியடைகிறதற்கு அப்பத்தையும் கொடுக்கையில் இது விளங்கும்; கர்த்தருக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுத்த உங்கள் முறுமுறுப்புகளை அவர் கேட்டார்; நாங்கள் எம்மாத்திரம்? உங்கள் முறுமுறுப்புகள் எங்களுக்கு அல்ல, கர்த்தருக்கே விரோதமாய் இருக்கிறது என்றான். 9 அப்பொழுது மோசே ஆரோனைப் பார்த்து; நீ இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் சேருங்கள், அவர் உங்கள் முறுமுறுப்புகளைக் கேட்டார் என்று சொல் என்றான். 10 ஆரோன் இஸ்ரவேல் புத்திரராகிய சபையாருக்கெல்லாம் இதைச் சொல்லுகிறபோது, அவர்கள் வனாந்தரதிசையாகத் திரும்பிப்பார்த்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை மேகத்திலே காணப்பட்டது. 11 கர்த்தர் மோசேயை நோக்கி: 12 இஸ்ரவேல் புத்திரரின் முறுமுறுப்புகளைக் கேட்டிருக்கிறேன்; நீ அவர்களோடே பேசி, நீங்கள் சாயங்காலத்தில் இறைச்சியைப் புசித்து, விடியற்காலத்தில் அப்பத்தால் திர்ப்தியாகி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார். 13 சாயங்காலத்தில் காடைகள் வந்து விழுந்து பாளயத்தை மூடிக்கொண்டது. விடியற்காலத்தில் பாளயத்தைச் சுற்றி பனி பெய்திருந்தது. 14 பெய்திருந்த பனி நீங்கினபின், இதோ, வனாந்தரத்தின்மீதெங்கும் உருட்சியான ஒரு சிறிய வஸ்து உறைந்த பனிக்கட்டிப் பொடியத்தனையாய்த் தரையின்மேல் கிடந்தது. 15 இஸ்ரவேல் புத்திரர் அதைக் கண்டு, அது இன்னது என்று அறியாதிருந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, இது என்ன என்றார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: இது கர்த்தர் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பம். 16 கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால், அவரவர் புசிக்கும் அளவுக்குத்தக்கதாக அதில் எடுத்துச் சேர்க்கக்கடவீர்கள்; உங்களிலுள்ள ஆத்துமாக்களின் இலக்கத்தின்படி, அவனவன் தன் தன் கூடாரத்தில் இருக்கிறவர்களுக்காகத் தலைக்கு ஒரு ஓமர் அளவு எடுத்துக்கொள்ளக்கடவன் என்றான். 17 இஸ்ரவேல் புத்திரர் அப்படியே செய்து, சிலர் மிகுதியாயும் சிலர் கொஞ்சமாயும் சேர்த்தார்கள். 18 பின்பு, அதை ஓமரால் அளந்தார்கள்: மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு மீதியானதும் இல்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதும் இல்லை; அவரவர் தாங்கள் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள். 19 மோசே அவர்களை நோக்கி: ஒருவனும் விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் வைக்கக்கூடாது என்று அவர்களுக்குச் சொல்லியும்; 20 மோசேயின் சொல் கேளாமல், சிலர் அதில் விடியற்காலம்மட்டும் கொஞ்சம் மீதியாய் வைத்தார்கள்; அது பூச்சி பிடித்து நாற்றமெடுத்தது. அவர்கள்மேல் மோசே கோபங்கொண்டான். 21 அதை விடியற்காலந்தோறும் அவரவர் புசிக்கும் அளவுக்குத்தக்கதாகச் சேர்த்தார்கள், வெயில் ஏறஏற அது உருகிப்போம். 22 ஆறாம் நாளில் தலைக்கு இரண்டு ஓமர் வீதமாக இரண்டத்தனையாய் ஆகாரம் சேர்த்தார்கள்; அப்பொழுது சபையின் தலைவர் எல்லாரும் வந்து, அதை மோசேக்கு அறிவித்தார்கள். 23 அவன் அவர்களை நோக்கி: கர்த்தர் சொன்னது இதுதான்; நாளைக்குக் கர்த்தருக்குரிய பரிசுத்த ஓய்வுநாளாகிய ஓய்வு; நீங்கள் சுடவேண்டியதைச்சுட்டு, வேவிக்கவேண்டியதை வேவித்து, மீதியாயிருக்கிறதையெல்லாம் நாளைமட்டும் உங்களுக்காக வைத்துவையுங்கள் என்றான். 24 மோசே கட்டளையிட்டபடியே, அதை மறுநாள்வரைக்கும் வைத்துவைத்தார்கள்; அப்பொழுது அது நாறவும் இல்லை, அதிலே பூச்சிபிடிக்கவும் இல்லை. 25 அப்பொழுது மோசே: அதை இன்றைக்குப் புசியுங்கள்; இன்று கர்த்தருக்குரிய ஓய்வுநாள்; இன்று நீங்கள் அதை வெளியிலே காணமாட்டீர்கள். 26 ஆறுநாளும் அதைச் சேர்ப்பீர்களாக; ஏழாம்நாள் ஓய்வுநாளாயிருக்கிறது; அதிலே அது உண்டாயிராது என்றான். 27 ஏழாம்நாளில் ஜனங்களில் சிலர் அதைச் சேர்க்கப் புறப்பட்டார்கள்; அவர்கள் அதைக் காணவில்லை. 28 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: என் கட்டளைகளையும் என் பிரமாணங்களையும் கைக்கொள்ள எந்தமட்டும் மனதில்லாதிருப்பீர்கள்? 29 பாருங்கள், கர்த்தர் உங்களுக்கு ஓய்வுநாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம் நாளில் இரண்டுநாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார்; ஏழாம்நாளில் உங்களில் ஒருவனும் தன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் ஸ்தானத்திலே இருக்கவேண்டும் என்றார். 30 அப்படியே ஜனங்கள் ஏழாம்நாளில் ஓய்ந்திருந்தார்கள். 31 இஸ்ரவேல் வம்சத்தார் அதற்கு மன்னா என்று பேரிட்டார்கள்; அது கொத்துமல்லி அளவாயும் வெண்மைநிறமாயும் இருந்தது, அதின் ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது. 32 அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட காரியம் என்னவென்றால், நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, வனாந்தரத்தில் உங்களுக்குப் புசிக்கக்கொடுத்த அப்பத்தை உங்கள் சந்ததியார் பார்க்கும்படிக்கு, அவர்களுக்காக அதைக் காப்பதற்கு, அதிலே ஒரு ஓமர் நிறைய எடுத்து வைக்கவேண்டும் என்றான். 33 மேலும், மோசே ஆரோனை நோக்கி: நீ ஒரு கலசத்தை எடுத்து, அதிலே ஒரு ஓமர் அளவு மன்னாவைப் போட்டு, அதை உங்கள் சந்ததியாருக்காகக் காப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியிலே வை என்றான். 34 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அது காக்கப்படும்படி ஆரோன் அதைச் சாட்சி சந்நிதியில் வைத்தான். 35 இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்துக்கு வருமட்டும் நாற்பது வருஷமளவும் மன்னாவைப் புசித்தார்கள்; அவர்கள் கானான் தேசத்தின் எல்லையில் சேரும்வரைக்கும் மன்னாவைப் புசித்தார்கள். 36 ஒரு ஓமரானது எப்பாவிலே பத்தில் ஒரு பங்கு.

யாத்திராகமம் 17

1 பின்பு இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் கர்த்தருடைய கட்டளையின்படியே சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு, பிரயாணம்பண்ணி, ரெவிதீமிலே வந்து பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது. 2 அப்பொழுது ஜனங்கள் மோசேயோடே வாதாடி: நாங்கள் குடிக்கிறதற்கு எங்களுக்குத் தண்ணீர் தரவேண்டும் என்றார்கள். அதற்கு மோசே: என்னோடே ஏன் வாதாடுகிறீர்கள், கர்த்தரை ஏன் பரீட்சை பார்க்கிறீர்கள் என்றான். 3 ஜனங்கள் அவ்விடத்திலே தண்ணீர்த் தவனமாயிருந்தபடியால், அவர்கள் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்து: நீர் எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் எங்கள் ஆடுமாடுகளையும் தண்ணீர்த் தவனத்தினால் கொன்றுபோட எங்களை எகிப்திலிருந்து ஏன் கொண்டுவந்தீர் என்றார்கள். 4 மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: இந்த ஜனங்களுக்கு நான் என்ன செய்வேன், இவர்கள் என்மேல் கல்லெறியப் பார்க்கிறார்களே என்றான். 5 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் மூப்பரில் சிலரை உன்னோடே கூட்டிக்கொண்டு, நீ நதியை அடித்த உன் கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோ. 6 அங்கே ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான். 7 இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரைப் பரீட்சை பார்த்ததினிமித்தமும், அவன் அந்த ஸ்தலத்திற்கு மாசா என்றும் மேரிபா என்றும் பேரிட்டான். 8 அமலேக்கியர் வந்து ரெவிதீமிலே இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள். 9 அப்பொழுது மோசே யோசுவாவை நோக்கி: நீ நமக்காக மனிதரைத் தெரிந்துகொண்டு, புறப்பட்டு, அமலேக்கோடே யுத்தம்பண்ணு; நாளைக்கு நான் மலையுச்சியில் தேவனுடைய கோலை என் கையில் பிடித்துக்கொண்டு நிற்பேன் என்றான். 10 யோசுவா தனக்கு மோசே சொன்னபடியே செய்து, அமலேக்கோடே யுத்தம்பண்ணினான். மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சியில் ஏறினார்கள். 11 மோசே தன் கையை ஏறெடுத்திருக்கையில், இஸ்ரவேலர் மேற்கொண்டார்கள்; அவன் தன் கையைத் தாழவிடுகையில், அமலேக்கு மேற்கொண்டான். 12 மோசேயின் கைகள் அசந்துபோயிற்று, அப்பொழுது அவர்கள் ஒரு கல்லைக் கொண்டுவந்து அவன் கீழே வைத்தார்கள்; அதின்மேல் உட்கார்ந்தான்; ஆரோனும் ஊரும் ஒருவன் ஒரு பக்கத்திலும் ஒருவன் மறு பக்கத்திலும் இருந்து, அவன் கைகளைத் தாங்கினார்கள்; இவ்விதமாய் அவன் கைகள் சூரியன் அஸ்தமிக்கும்வரைக்கும் ஒரே நிலையாயிருந்தது. 13 யோசுவா அமலேக்கையும் அவன் ஜனங்களையும் பட்டயக்கருக்கினாலே முறிய அடித்தான். 14 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதை நினைவுகூரும்பொருட்டு, நீ ஒரு புஸ்தகத்தில் எழுதி, யோசுவாவின் செவிகேட்கும்படி வாசி. அமலேக்கை வானத்தின் கீழெங்கும் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன் என்றார். 15 மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு, 16 அமலேக்கின் கை கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாயிருந்தபடியால், தலைமுறை தலைமுறைதோறும் அவனுக்கு விரோதமாய் கர்த்தரின் யுத்தம் நடக்கும் என்றான்.

யாத்திராகமம் 18

1 தேவன் மோசேக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த யாவையும், கர்த்தர் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதையும், மீதியானில் ஆசாரியனாயிருந்த மோசேயின் மாமனாகிய எத்திரோ கேள்விப்பட்டபோது, 2 மோசேயின் மாமனாகிய எத்திரோ, மோசேயினாலே திரும்பி அனுப்பிவிடப்பட்டிருந்த அவன் மனைவியாகிய சிப்போராளையும், 3 அவளுடைய இரண்டு குமாரரையும் கூட்டிக்கொண்டு பிரயாணப்பட்டான். நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன் என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டிருந்தான். 4 என் பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார் என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் என்று பேரிட்டிருந்தான். 5 மோசேயின் மாமனாகிய எத்திரோ மோசேயின் குமாரரோடும் அவன் மனைவியோடுங்கூட, அவன் பாளயமிறங்கியிருந்த தேவ பர்வதத்தினிடத்தில் வனாந்தரத்துக்கு வந்து: 6 எத்திரோ என்னும் உம்முடைய மாமனாகிய நானும், உம்முடைய மனைவியும், அவளோடேகூட அவளுடைய இரண்டு குமாரரும் உம்மிடத்திற்கு வந்திருக்கிறோம் என்று மோசேக்குச் சொல்லியனுப்பினான். 7 அப்பொழுது மோசே தன் மாமனுக்கு எதிர்கொண்டுபோய், அவனை வணங்கி, முத்தஞ்செய்தான்; ஒருவரை ஒருவர் சுகசெய்தி விசாரித்துக்கொண்டு, கூடாரத்துக்குள் பிரவேசித்தார்கள். 8 பின்பு மோசே கர்த்தர் இஸ்ரவேலினிமித்தம் பார்வோனுக்கும் எகிப்தியருக்கும் செய்த எல்லாவற்றையும், வழியிலே தங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தத்தையும், கர்த்தர் தங்களை விடுவித்து இரட்சித்ததையும் தன் மாமனுக்கு விவரித்துச் சொன்னான். 9 கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து, அவர்களுக்குச் செய்த சகல நன்மைகளையுங்குறித்து எத்திரோ சந்தோஷப்பட்டு: 10 உங்களை எகிப்தியரின் கைக்கும் பார்வோனின் கைக்கும் தப்புவித்து, எகிப்தியருடைய கையின் கீழிருந்த ஜனத்தை விடுவித்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 11 கர்த்தர் எல்லாத் தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; அவர்கள் இடும்பு செய்த காரியத்தில் அவர்களை மேற்கொண்டார் என்று சொல்லி; 12 மோசேயின் மாமனாகிய எத்திரோ சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் தேவனுக்குக் கொண்டுவந்து செலுத்தினான். பின்பு ஆரோனும் இஸ்ரவேல் மூப்பர் அனைவரும் வந்து, மோசேயின் மாமனுடனே தேவசமுகத்தில் போஜனம் பண்ணினார்கள். 13 மறுநாள் மோசே ஜனங்களை நியாயம் விசாரிக்க உட்கார்ந்தான்; ஜனங்கள் காலமே துவக்கிச் சாயங்காலமட்டும் மோசேக்கு முன்பாக நின்றார்கள். 14 ஜனங்களுக்கு அவன் செய்த யாவையும் மோசேயின் மாமன் கண்டு: நீர் ஜனங்களுக்குச் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீர் ஒன்றியாய் உட்கார்ந்திருக்கவும், ஜனங்கள் எல்லாரும் காலமே துவக்கிச் சாயங்காலமட்டும் உமக்கு முன்பாக நிற்கவும் வேண்டியது என்ன என்றான். 15 அப்பொழுது மோசே தன் மாமனை நோக்கி: தேவனிடத்தில் விசாரிக்கும்படி ஜனங்கள் என்னிடத்தில் வருகிறார்கள். 16 அவர்களுக்கு யாதொரு காரியம் உண்டானால், என்னிடத்தில் வருகிறார்கள்; நான் அவர்களுக்குள்ள வழக்கைத் தீர்த்து, தேவகட்டளைகளையும் அவருடைய பிரமாணங்களையும் தெரிவிக்கிறேன் என்றான். 17 அதற்கு மோசேயின் மாமன்: நீர் செய்கிற காரியம் நல்லதல்ல; 18 நீரும் உம்மோடே இருக்கிற ஜனங்களும் தொய்ந்துபோவீர்கள்; இது உமக்கு மிகவும் பாரமான காரியம்; நீர் ஒருவராய் அதைச் செய்ய உம்மாலே கூடாது. 19 இப்பொழுது என் சொல்லைக்கேளும், உமக்கு ஒரு ஆலோசனை சொல்லுகிறேன்; தேவனும் உம்மோடுகூட இருப்பார், நீர் தேவசந்நிதியிலே ஜனங்களுக்காக இரும்; விசேஷித்தவைகளைத் தேவனிடத்தில் கொண்டுபோய்; 20 கட்டளைகளையும் பிரமாணங்களையும் அவர்களுக்கு வெளிப்படுத்தி; அவர்கள் நடக்கவேண்டிய வழியையும், அவர்கள் செய்யவேண்டிய காரியத்தையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தும். 21 ஜனங்கள் எல்லாருக்குள்ளும் தேவனுக்குப் பயந்தவர்களும் உண்மையுள்ளவர்களும் பொருளாசையை வெறுக்கிறவர்களுமான திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஏற்படுத்தும். 22 அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்து, பெரிய காரியங்கள் யாவையும் உம்மிடத்தில் கொண்டுவரட்டும், சிறிய காரியங்கள் யாவையும் தாங்களே தீர்க்கட்டும்; இப்படி அவர்கள் உம்மோடேகூட இந்தப் பாரத்தைச் சுமந்தால், உமக்கு இலகுவாயிருக்கும். 23 இந்தப்பிரகாரம் நீர் செய்வதும், இப்படித் தேவன் உமக்குக் கட்டளையிடுவதும் உண்டானால், உம்மாலே தாங்கக்கூடும்; இந்த ஜனங்கள் எல்லாரும் தாங்கள் போகும் இடத்துக்குச் சுகமாய்ப் போய்ச் சேரலாம் என்றான். 24 மோசே தன் மாமன் சொல்கேட்டு, அவன் சொன்னபடியெல்லாம் செய்தான். 25 மோசே இஸ்ரவேலர் எல்லாரிலும் திறமையுள்ள மனிதரைத் தெரிந்துகொண்டு, அவர்களை ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் ஜனங்கள்மேல் தலைவராக்கினான். 26 அவர்கள் எப்பொழுதும் ஜனங்களை நியாயம் விசாரித்தார்கள்; வருத்தமான காரியங்களைமாத்திரம் மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; சிறிய காரியங்களையெல்லாம் தாங்களே தீர்த்தார்கள். 27 பின்பு மோசே தன் மாமனை அனுப்பிவிட்டான்; அவன் திரும்பத் தன் தேசத்துக்குப் போய்விட்டான்.

யாத்திராகமம் 19

1 இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள். 2 அவர்கள் ரெவிதீமிலிருந்து பிரயாணம் புறப்பட்டு, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்து, அந்த வனாந்தரத்தில் பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேலர் அங்கே மலைக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள். 3 மோசே தேவனிடத்திற்கு ஏறிப்போனான்; கர்த்தர் மலையிலிருந்து அவனைக் கூப்பிட்டு: நீ யாக்கோபு வம்சத்தாருக்குச் சொல்லவும், இஸ்ரவேல் புத்திரருக்கு அறிவிக்கவும் வேண்டியது என்னவென்றால், 4 நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள். 5 இப்பொழுது நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது. 6 நீங்கள் எனக்கு ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டிய வார்த்தைகள் என்றார். 7 மோசே வந்து ஜனங்களின் மூப்பரை அழைப்பித்து, கர்த்தர் தனக்குக் கற்பித்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்கு முன்பாகச் சொன்னான். 8 அதற்கு ஜனங்கள் எல்லாரும் ஏகமாய், கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தரிடத்தில் தெரிவித்தான். 9 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தருக்குச் சொன்னான். 10 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஜனங்களிடத்தில் போய், இன்றைக்கும் நாளைக்கும் அவர்களைப் பரிசுத்தப்படுத்து; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, 11 மூன்றாம் நாளைக்கு ஆயத்தப்பட்டிருக்கக்கடவர்கள்; மூன்றாம் நாளில் கர்த்தர் சகல ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகச் சீனாய்மலையின்மேல் இறங்குவார். 12 ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான். 13 ஒரு கையும் அதைத் தொடலாகாது; தொட்டால், நிச்சயமாகக் கல்லெறியுண்டு, அல்லது ஊடுருவ எய்யுண்டு சாகவேண்டும்; மிருகமானாலும்சரி, மனிதனானாலும்சரி, உயிரோடே வைக்கப்படலாகாது; எக்காளம் நெடுந்தொனியாய்த் தொனிக்கையில், அவர்கள் மலையின் அடிவாரத்தில் வரக்கடவர்கள் என்றார். 14 மோசே மலையிலிருந்து இறங்கி, ஜனங்களிடத்தில் வந்து, அவர்களைப் பரிசுத்தப்படுத்தினான்; அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள். 15 அவன் ஜனங்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள் என்றான். 16 மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள். 17 அப்பொழுது ஜனங்கள் தேவனுக்கு எதிர்கொண்டுபோக, மோசே அவர்களைப் பாளயத்திலிருந்து புறப்படப்பண்ணினான்; அவர்கள் மலையின் அடிவாரத்தில் நின்றார்கள். 18 கர்த்தர் சீனாய்மலையின்மேல் அக்கினியில் இறங்கினபடியால், அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று; மலை முழுவதும் மிகவும் அதிர்ந்தது. 19 எக்காளசத்தம் வரவர மிகவும் பலமாய்த் தொனித்தது; மோசே பேசினான்; தேவன் அவனுக்கு வாக்கினால் மறுமொழி கொடுத்தார். 20 கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான். 21 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அநேகர் அழிந்து போகாதபடிக்கும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி. 22 கர்த்தரின் சமுகத்தில் வருகிற ஆசாரியர்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம் பண்ணாதபடி, தங்களைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். 23 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: மலையைச் சுற்றிலும் எல்லை குறித்து, அதைப் பரிசுத்தப்படுத்துங்கள் என்று தேவரீர் எங்களை உறுதியாக எச்சரித்திருக்கிறீர்; ஆகையால், ஜனங்கள் சீனாய்மலையின்மேல் ஏறிவரமாட்டார்கள் என்றான். 24 கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; பின்பு நீயும் ஆரோனும் கூடி ஏறிவாருங்கள்; ஆசாரியர்களும் ஜனங்களும், கர்த்தர் தங்களுக்குள்ளே சங்காரம்பண்ணாதபடிக்கு, எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதிருக்கக்கடவர்கள் என்றார். 25 அப்படியே மோசே இறங்கி ஜனங்களிடத்தில் போய், அதை அவர்களுக்குச் சொன்னான்.

யாத்திராகமம் 20

1 தேவன் பேசிச் சொல்லிய சகல வார்த்தைகளுமாவன: 2 உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. 3 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். 4 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம்; 5 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். 6 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன். 7 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார். 8 ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; 9 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; 10 ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். 11 கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். 12 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. 13 கொலை செய்யாதிருப்பாயாக. 14 விபசாரம் செய்யாதிருப்பாயாக. 15 களவு செய்யாதிருப்பாயாக. 16 பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. 17 பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். 18 ஜனங்கள் எல்லாரும் இடிமுழக்கங்களையும் மின்னல்களையும் எக்காளச் சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்டார்கள்; அதைக் கண்டு, ஜனங்கள் பின்வாங்கி, தூரத்திலே நின்று, 19 மோசேயை நோக்கி: நீர் எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம்; தேவன் எங்களோடே பேசாதிருப்பாராக, பேசினால் நாங்கள் செத்துப்போவோம் என்றார்கள். 20 மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; உங்களைச் சோதிப்பதற்காகவும், நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்குத் தம்மைப் பற்றும் பயம் உங்கள் முகத்திற்கு முன்பாக இருப்பதற்காகவும், தேவன் எழுந்தருளினார் என்றான். 21 ஜனங்கள் தூரத்திலே நின்றார்கள்; மோசே, தேவன் இருந்த கார்மேகத்துக்குச் சமீபமாய்ச் சேர்ந்தான். 22 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்திலிருந்து உங்களோடே பேசினேன் என்று கண்டீர்கள். 23 நீங்கள் எனக்கு ஒப்பாக வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம். 24 மண்ணினாலே பலிபீடத்தை எனக்கு உண்டாக்கி, அதின்மேல் உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் சர்வாங்க தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்துவாயாக; நான் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தும் எந்த ஸ்தானத்திலும் உன்னிடத்தில் வந்து, உன்னை ஆசீர்வதிப்பேன். 25 எனக்குக் கல்லினால் பலிபீடத்தை உண்டாக்கவேண்டுமாகில், அதை வெட்டின கல்லுகளால் கட்டவேண்டாம்; அதின்மேல் உளியிட்டவுடனே, அதை அசுசிப்படுத்துவாய். 26 என் பலிபீடத்தின்மேல் உன் நிர்வாணம் காணப்படாதபடிக்கு, படிகளால் அதின்மேல் ஏறவும் வேண்டாம்.

யாத்திராகமம் 21

1 மேலும், நீ அவர்களுக்கு அறிவிக்கவேண்டிய பிரமாணங்களாவன: 2 எபிரெயரில் ஒரு அடிமையைக் கொண்டாயானால், அவன் ஆறுவருஷம் சேவித்து, ஏழாம் வருஷத்திலே ஒன்றும் கொடாமல் விடுதலைபெற்றுப் போகக்கடவன். 3 ஒன்றிக்காரனாய் வந்திருந்தானானால், ஒன்றிக்காரனாய்ப் போகக்கடவன்; விவாகம்பண்ணினவனாய் வந்திருந்தானானால், அவன் பெண்ஜாதி அவனோடேகூடப் போகக்கடவள். 4 அவன் எஜமான் அவனுக்கு ஒரு பெண்ணை விவாகஞ்செய்துகொடுத்தும், அவள் அவனுக்கு ஆண்பிள்ளைகளையாவது பெண்பிள்ளைகளையாவது பெற்றும் இருந்தால், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் அவள் எஜமானைச் சேரக்கடவர்கள்; அவன் மாத்திரம் ஒன்றியாய்ப் போகக்கடவன். 5 அந்த வேலைக்காரன்: என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன்; நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாய்ச் சொல்வானானால், 6 அவன் எஜமான் அவனை நியாயாதிபதிகளிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவனைக் கதவின் அருகேயாவது கதவுநிலையின் அருகேயாவது சேரப்பண்ணி, அங்கே அவன் எஜமான் அவன் காதைக் கம்பியினாலே குத்தக்கடவன்; பின்பு அவன் என்றைக்கும் அவனிடத்திலே சேவித்துக்கொண்டிருக்கக்கடவன். 7 ஒருவன் தன் மகளை வேலைக்காரியாக விற்றுப்போட்டானானால், வேலைக்காரன் விடுதலைபெற்றுப் போவதுபோல அவள் போகக்கூடாது. 8 அவளைத் தனக்கு நியமித்துக் கொண்ட எஜமானின் பார்வைக்கு அவள் தகாதவளாய்ப் போனால், அவள் மீட்கப்படலாம்; அவன் அவளுக்குத் துரோகம்பண்ணி, அவளை அந்நியர் கையில் விற்றுப்போட அவனுக்கு அதிகாரம் இல்லை. 9 அவன் தன் குமாரனுக்கு அவளை நியமித்திருந்தானானால், தன் குமாரத்திகளை நடத்துவதுபோல அவளையும் நடத்தக்கடவன். 10 அவன் வேறொரு பெண்ணைக் கொண்டானாகில், இவளுக்குரிய அன்னவஸ்திர விவாகக்கடமை ஆகிய இவைகளில் குறைவுசெய்யாமல் இருப்பானாக. 11 இம்மூன்றும் அவன் அவளுக்குச் செய்யாமற்போனால், அவள் பணங்கொடாமல் விடுதலைபெற்றுப்போகக்கடவள். 12 ஒரு மனிதனைச் சாகும்படி அடித்தவன், நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன். 13 ஒருவன் பதிவிருந்து கொல்லாமல், தேவச்செயலாய்த் தன் கைக்கு நேரிட்டவனைக் கொன்றால், அவன் ஓடிப்போய்ச் சேரவேண்டிய ஸ்தலத்தை உனக்கு நியமிப்பேன். 14 ஒருவன் பிறனுக்கு விரோதமாகச் சதிமோசஞ்செய்து, அவனைத் துணிகரமாய்க் கொன்றுபோட்டால், அவனை என் பலிபீடத்திலிருந்தும் பிடித்துக்கொண்டுபோய்க் கொலைசெய்யவேண்டும். 15 தன் தகப்பனையாவது தன் தாயையாவது அடிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன். 16 ஒருவன் ஒரு மனிதனைத் திருடி விற்றுப்போட்டாலும், இவன் அவன் வசத்திலிருக்கக் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன். 17 தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிறவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன். 18 மனிதர் சண்டைபண்ணி, ஒருவன் மற்றொருவனைக் கல்லால் எறிந்ததினாலாவது கையால் அடித்ததினாலாவது அவன் சாவாமல் கட்டில்கிடையாய்க் கிடந்து, 19 திரும்ப எழுந்திருந்து வெளியிலே தன் ஊன்றுகோலைப் பிடித்துக்கொண்டு நடமாடினால், அடித்தவன் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்; ஆனாலும், அவனுக்கு வேலை மினக்கெட்ட நஷ்டத்தைக் கொடுத்து, அவனை நன்றாய்க் குணமாக்குவிக்கக்கடவன். 20 ஒருவன் தனக்கு அடிமையானவனையாவது தனக்கு அடிமையானவளையாவது, கோலால் அடித்ததினாலே, அவன் கையால் இறந்துபோனால், பழிக்குப்பழி வாங்கப்படவேண்டும். 21 ஒரு நாளாவது இரண்டு நாளாவது உயிரோடிருந்தால், அவர்கள் அவனுடைய உடைமையாகையால், பழிவாங்கவேண்டியதில்லை. 22 மனிதர் சண்டைபண்ணி, கர்ப்பவதியான ஒரு ஸ்திரீயை அடித்ததினால், அவளுக்கு வேறே சேதமில்லாமல் கர்ப்பம் விழுந்துபோனால், அடிபட்ட ஸ்திரீயின் புருஷன் அடித்தவன்மேல் சுமத்துகிறதற்குத்தக்கதாயும் நியாயாதிபதிகள் செய்யும் தீர்ப்பின்படியும் தண்டம் கொடுக்கவேண்டும். 23 வேறே சேதமுண்டானால், ஜீவனுக்கு ஜீவன், 24 கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால், 25 சூட்டுக்குச் சூடு, காயத்துக்குக் காயம், தழும்புக்குத் தழும்பு பழி கொடுக்கவேண்டும். 26 ஒருவன் தன் அடிமையானவன் கண்ணையாகிலும் தன் அடிமைப்பெண்ணின் கண்ணையாகிலும் அடித்ததினால் அதைக் கெடுத்தால், அவன் கண்ணுக்குப் பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும். 27 அவன் தன் அடிமையானவன் பல்லையாவது தன் அடிமைப்பெண்ணின் பல்லையாவது உதிர அடித்தால், அவன் பல்லுக்குப் பதிலாக அவனை விடுதலைபண்ணிவிடவேண்டும். 28 ஒரு மாடு ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது முட்டினதினால் சாவுண்டானால், அந்த மாடு கல்லெறியப்படவேண்டும், அதின் மாம்சம் புசிக்கப்படலாகாது; அப்பொழுது மாட்டின் எஜமான் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான். 29 தன் மாடு வழக்கமாய் முட்டுகிற மாடாயிருந்து, அது அதின் எஜமானுக்கு அறிவிக்கப்பட்டும், அவன் அதைக் கட்டி வைக்காததினால், அது ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது கொன்றுபோட்டால், மாடும் கல்லெறியப்படவேண்டும், அதின் எஜமானும் கொலைசெய்யப்படவேண்டும். 30 அபராதம் கொடுக்கும்படி தீர்க்கப்பட்டதானால், அவன் தன் ஜீவனை மீட்கும்பொருளாக விதிக்கப்பட்ட அபராதத்தைக் கொடுக்கக்கடவன். 31 அது ஒருவன் மகனை முட்டினாலும் சரி, ஒருவன் மகளை முட்டினாலும் சரி, இந்தத் தீர்ப்பின்படியே அவனுக்குச் செய்யப்படவேண்டும். 32 அந்த மாடு ஒரு அடிமையானவனையாவது ஒரு அடிமைப்பெண்ணையாவது முட்டினால், அதற்கு உடையவன் அவர்களுடைய எஜமானுக்கு முப்பது சேக்கல் நிறையான வெள்ளியைக் கொடுக்கக்கடவன்; மாடு கல்லெறியப்படவேண்டும். 33 ஒருவன் ஒரு குழியைத் திறந்து வைத்ததினாலாவது, ஒரு குழியை வெட்டி அதை மூடாதேபோனதினாலாவது, அதிலே ஒரு மாடாவது ஒரு கழுதையாவது விழுந்தால், 34 குழிக்கு உடையவன் அதற்கு ஈடாகப் பணத்தை மிருகத்தின் எஜமானுக்குக் கொடுக்கக்கடவன்; செத்ததோ அவனுடையதாகவேண்டும். 35 ஒருவனுடைய மாடு மற்றவனுடைய மாட்டை முட்டினதினால் அது செத்தால், உயிரோடிருக்கிற மாட்டை அவர்கள் விற்று, அதின் கிரயத்தைப் பங்கிட்டு, செத்ததையும் பங்கிட்டுக்கொள்ளக்கடவர்கள். 36 அந்த மாடு முன்னமே முட்டுகிற மாடென்று அதின் எஜமான் அறிந்திருந்தும், அதைக் கட்டிவைக்காதிருந்தால், அவன் மாட்டுக்கு மாட்டைக் கொடுக்கக்கடவன்; செத்ததோ அவனுடையதாகவேண்டும்.

யாத்திராகமம் 22

1 ஒருவன் ஒரு மாட்டையாவது ஒரு ஆட்டையாவது திருடி, அதைக் கொன்றால், அல்லது அதை விற்றால், அவன் அந்த மாட்டுக்கு ஐந்து மாடுகளையும், அந்த ஆட்டுக்கு நாலு ஆடுகளையும் பதிலாகக் கொடுக்கக்கடவன். 2 திருடன் கன்னமிடுகையில் கண்டுபிடிக்கப்பட்டு, அடிக்கப்பட்டுச் செத்தால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமராது. 3 சூரியன் அவன்மேல் உதித்திருந்ததானால், அவன் நிமித்தம் இரத்தப்பழி சுமரும்; திருடன் பதில் கொடுத்துத் தீர்க்கவேண்டும்; அவன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தால், தான் செய்த களவுக்காக விலைப்படக்கடவன். 4 அவன் திருடின மாடாவது கழுதையாவது ஆடாவது உயிருடனே அவன் கையில் கண்டுபிடிக்கப்பட்டால், இரட்டிப்பாய் அவன் கொடுக்கவேண்டும். 5 ஒருவன் பிறனுடைய வயலிலாவது திராட்சத்தோட்டத்திலாவது தன் மிருகஜீவனை மேயவிட்டால், அவன் தன் சுயவயலிலும் திராட்சத்தோட்டத்திலுமுள்ள பலனில் உத்தமமானதை எடுத்து, பதில் செலுத்தக்கடவன். 6 அக்கினி எழும்பி, முட்களில் பற்றி, தானியப்போரையாவது, விளைந்த பயிரையாவது, வயலிலுள்ள வேறே எதையாவது எரித்துப்போட்டதேயானால், அக்கினியைக் கொளுத்தினவன் அக்கினிச் சேதத்திற்கு உத்தரவாதம் பண்ணவேண்டும். 7 ஒருவன் பிறனுடைய வசத்தில் திரவியத்தையாவது, உடைமைகளையாவது அடைக்கலமாக வைத்திருக்கும்போது, அது அவன் வீட்டிலிருந்து திருடப்பட்டுப்போனால், திருடன் அகப்பட்டானாகில், அவன் அதற்கு இரட்டிப்பாகக் கொடுக்கவேண்டும். 8 திருடன் அகப்படாதேபோனால், அந்த வீட்டுக்காரன் தானே பிறனுடைய பொருளை அபகரித்தானோ இல்லையோ என்று அறியும்படி நியாயாதிபதிகளிடத்தில் அவனைக் கொண்டுபோகவேண்டும். 9 காணாமற்போன மாடு, கழுதை, ஆடு, வஸ்திரம் முதலியவைகளில் யாதொன்றைப் பிறனொருவன் தன்னுடையது என்று சொல்லிக் குற்றஞ்சாற்றினால், இருதிறத்தாருடைய வழக்கும் நியாயாதிபதிகளிடத்தில் வரக்கடவது; நியாயாதிபதிகள் எவனைக் குற்றவாளி என்று தீர்க்கிறார்களோ, அவன் மற்றவனுக்கு இரட்டிப்பாகக் கொடுக்கக்கடவன். 10 ஒருவன் தன் கழுதையையாவது மாட்டையாவது ஆட்டையாவது மற்ற யாதொரு மிருகஜீவனையாவது பிறன் வசத்தில் விட்டிருக்கும்போது, அது செத்தாலும், சேதப்பட்டுப்போனாலும், ஒருவரும் காணாதபடி ஓட்டிக்கொண்டு போகப்பட்டாலும், 11 அவன் தான் பிறனுடைய பொருளை அபகரிக்கவில்லையென்று கர்த்தர் பேரில் இடும் ஆணை அவர்கள் இருவருக்கும் நடுத்தீர்க்கக்கடவது; உடையவன் அதை அங்கிகரிக்கவேண்டும்; மற்றவன் பதிலளிக்கவேண்டுவதில்லை. 12 அது அவன் வசத்திலிருந்து திருடப்பட்டுப்போயிற்றானால், அவன் அதின் எஜமானுக்கு அதற்காக உத்தரவாதம் பண்ணக்கடவன். 13 அது பீறுண்டுபோயிற்றானால், அதற்குச் சாட்சியை ஒப்புவிக்கவேண்டும். பீறுண்டதற்காக அவன் உத்தரவாதம் பண்ணவேண்டுவதில்லை. 14 ஒருவன் பிறனிடத்தில் எதையாகிலும் இரவலாக வாங்கினதுண்டானால், அதற்கு உடையவன் கூட இராதபோது, அது சேதப்பட்டாலும், செத்துப்போனாலும், அவன் அதற்கு உத்தரவாதம்பண்ணவேண்டும். 15 அதற்கு உடையவன் கூட இருந்தானாகில், அவன் உத்தரவாதம் பண்ணவேண்டுவதில்லை; அது வாடகைக்கு வாங்கப்பட்டிருந்தால், அது அவன் வாடகைக்கு வந்த சேதம். 16 நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளை விவாகம்பண்ணக்கடவன். 17 அவள் தகப்பன் அவளை அவனுக்குக் கொடுக்கமாட்டேன் என்றானாகில், கன்னிகைகளுக்காகக் கொடுக்கப்படும் பரிச முறைமையின்படி அவன் பணத்தை நிறுத்துக் கொடுக்கவேண்டும். 18 சூனியக்காரியை உயிரோடே வைக்கவேண்டாம். 19 மிருகத்தோடே புணருகிறவன் எவனும் கொல்லப்படவேண்டும். 20 கர்த்தர் ஒருவருக்கே ஒழிய வேறே தேவர்களுக்குப் பலியிடுகிறவன் சங்கரிக்கப்படக்கடவன். 21 அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே. 22 விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் ஒடுக்காமல் இருப்பீர்களாக; 23 அவர்களை எவ்வளவாகிலும் ஒடுக்கும்போது, அவர்கள் என்னை நோக்கி முறையிட்டால், அவர்கள் முறையிடுதலை நான் நிச்சயமாய்க் கேட்டு, 24 கோபம்மூண்டவராகி, உங்களைப் பட்டயத்தினால் கொலைசெய்வேன்; உங்கள் மனைவிகள் விதவைகளும், உங்கள் பிள்ளைகள் திக்கற்ற பிள்ளைகளுமாவார்கள். 25 உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம். 26 பிறனுடைய வஸ்திரத்தை ஈடாக வாங்கினால், பொழுதுபோகுமுன்னமே அதை அவனுக்குத் திரும்பக் கொடுத்து விடுவாயாக. 27 அவன் போர்வை அதுதானே, அதுவே அவன் தன் உடம்பை மூடிக்கொள்ளுகிற வஸ்திரம்; வேறு எதினாலே போர்த்துப் படுத்துக்கொள்ளுவான்? அவன் என்னை நோக்கி முறையிடும்போது, நான் அவனுக்குச் செவிகொடுப்பேன், நான் இரக்கமுள்ளவராயிருக்கிறேன். 28 நியாயாதிபதிகளைத் தூஷியாமலும், உன் ஜனத்தின் அதிபதியைச் சபியாமலும் இருப்பாயாக. 29 முதல் முதல் பழுக்கும் உன் பழத்தையும், வடியும் உன் இரசத்தையும் காணிக்கையாகச் செலுத்தத் தாமதிக்கவேண்டாம். உன் குமாரரில் முதற்பேறானவனை எனக்குக் கொடுப்பாயாக. 30 உன் மாடுகளிலும் உன் ஆடுகளிலும் அப்படியே செய்வாயாக; குட்டியானது ஏழுநாள் தன் தாயோடே இருக்கட்டும்; எட்டாம் நாளிலே அதை எனக்குச் செலுத்துவாயாக. 31 நீங்கள் எனக்குப் பரிசுத்த மனுஷராயிருக்கக்கடவீர்கள்; வெளியிலே பீறுண்ட மாம்சத்தைப் புசியாமல், அதை நாய்களுக்குப் போட்டுவிடுங்கள்.

யாத்திராகமம் 23

1 அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாயாக; கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக. 2 தீமைசெய்ய திரளானபேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக; வழக்கிலே நியாயத்தைப் புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து, உத்தரவு சொல்லாதிருப்பாயாக. 3 வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தைப் பாராயாக. 4 உன் சத்துருவின் மாடாவது அவனுடைய கழுதையாவது தப்பிப்போகக்கண்டால், அதைத் திரும்ப அவனிடத்தில் கொண்டுபோய் விடுவாயாக. 5 உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடே கூட அதற்கு உதவிசெய்வாயாக. 6 உன்னிடத்திலிருக்கிற எளியவனுடைய வியாச்சியத்தில் அவனுடைய நியாயத்தைப் புரட்டாயாக. 7 கள்ளக்காரியத்துக்குத் தூரமாயிருப்பாயாக; குற்றமில்லாதவனையும் நீதிமானையும் கொலைசெய்யாயாக; நான் துன்மார்க்கனை நீதிமான் என்று தீர்க்கமாட்டேன். 8 பரிதானம் வாங்காதிருப்பாயாக; பரிதானம் பார்வையுள்ளவர்களைக் குருடாக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டும். 9 அந்நியனை ஒடுக்காயாக; எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்த நீங்கள் அந்நியனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறீர்களே. 10 ஆறுவருஷம் நீ உன் நிலத்தில் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்த்துக்கொள். 11 ஏழாம் வருஷத்தில் உன் ஜனத்திலுள்ள எளியவர்கள் புசிக்கவும், மீதியானதை வெளியின் ஜெந்துக்கள் தின்னவும், அந்த நிலம் சும்மா கிடக்க விட்டுவிடுவாயாக; உன் திராட்சத்தோட்டத்தையும் உன் ஒலிவத்தோப்பையும் அப்படியே செய்வாயாக. 12 ஆறுநாள் உன் வேலையைச் செய்து, ஏழாம்நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக. 13 நான் உங்களுக்குச் சொன்னவைகள் யாவற்றிலும் சாவதானமாயிருங்கள். அந்நிய தேவர்களின் பேரைச் சொல்லவேண்டாம்; அது உன் வாயிலிருந்து பிறக்கக் கேட்கப்படவும் வேண்டாம். 14 வருஷத்தில் மூன்றுதரம் எனக்குப் பண்டிகை ஆசரிப்பாயாக. 15 புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஆபிப் மாதத்தின் குறித்த காலத்தில் ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிப்பாயாக; அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என் சந்நிதியில் வெறுங்கையாய் வரவேண்டாம். 16 நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷமுடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக. 17 வருஷத்தில் மூன்றுதரம் உன் ஆண்மக்கள் எல்லாரும் கர்த்தராகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரக்கடவர்கள். 18 எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம், எனக்கு இடும் பலியின் கொழுப்பை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம். 19 உன் நிலத்தில் முதல் விளைச்சல்களில் முதற் கனியை உன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டு வருவாயாக; வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம். 20 வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன். 21 அவர் சமுகத்தில் எச்சரிக்கையாயிருந்து, அவர் வாக்குக்குச் செவிகொடு; அவரைக் கோபப்படுத்தாதே; உங்கள் துரோகங்களை அவர் பொறுப்பதில்லை; என் நாமம் அவர் உள்ளத்தில் இருக்கிறது. 22 நீ அவர் வாக்கை நன்றாய்க் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வாயாகில், நான் உன் சத்துருக்களுக்குச் சத்துருவாயும், உன் விரோதிகளுக்கு விரோதியாயும் இருப்பேன். 23 என் தூதனானவர் உனக்கு முன்சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன். 24 நீ அவர்களுடைய தேவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்கள் செய்கைகளின்படி செய்யாமலும், அவர்களை நிர்மூலம்பண்ணி, அவர்களுடைய சிலைகளை உடைத்துப்போடுவாயாக. 25 உங்கள் தேவனாகிய கர்த்தரையே சேவிக்கக்கடவீர்கள்; அவர் உன் அப்பத்தையும் உன் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார். வியாதியை உன்னிலிருந்து விலக்குவேன். 26 கர்ப்பம் விழுகிறதும் மலடும் உன் தேசத்தில் இருப்பதில்லை; உன் ஆயுசுநாட்களைப் பூரணப்படுத்துவேன். 27 எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன் செல்லும்படி செய்வேன். நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லாரையும் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன். 28 உன் முகத்திற்கு முன்னின்று ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் துரத்திவிட, குளவிகளை உனக்கு முன்னே அனுப்புவேன். 29 தேசம் பாழாய்ப்போகாமலும், காட்டுமிருகங்கள் உனக்கு விரோதமாய்ப் பெருகாமலும் இருக்கும்படி, நான் அவர்களை ஒரே வருஷத்திற்குள்ளே உன் முன்னின்று துரத்திவிடாமல், 30 நீ விருத்தியடைந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்வரைக்கும், அவர்களைக் கொஞ்சம் கொஞ்சமாய் உன் முன்னின்று துரத்திவிடுவேன். 31 சிவந்த சமுத்திரம் தொடங்கி பெலிஸ்தரின் சமுத்திரம்வரைக்கும், வனாந்தரம் தொடங்கி நதிவரைக்கும் உன் எல்லையாயிருக்கும்படி செய்வேன்; நான் அந்தத் தேசத்தின் குடிகளை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுவாய். 32 அவர்களோடும் அவர்கள் தேவர்களோடும் நீ உடன்படிக்கை பண்ணாதிருப்பாயாக. 33 அவர்கள் உன்னை எனக்கு விரோதமாகப் பாவஞ் செய்யப்பண்ணாதபடிக்கு உன் தேசத்திலே குடியிருக்கவேண்டாம்; நீ அவர்கள் தேவர்களைச் சேவித்தால், அது உனக்குக் கண்ணியாயிருக்கும் என்றார்.

யாத்திராகமம் 24

1 பின்பு அவர் மோசேயை நோக்கி: நீயும் ஆரோனும் நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பரில் எழுபதுபேரும் கர்த்தரிடத்தில் ஏறிவந்து, தூரத்திலிருந்து பணிந்துகொள்ளுங்கள். 2 மோசே மாத்திரம் கர்த்தரிடத்தில் சமீபித்து வரலாம்; அவர்கள் சமீபித்து வரலாகாது; ஜனங்கள் அவனோடேகூட ஏறிவரவேண்டாம் என்றார். 3 மோசே வந்து, கர்த்தருடைய வார்த்தைகள் யாவையும் நியாயங்கள் யாவையும் ஜனங்களுக்கு அறிவித்தான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஏகசத்தமாய்: கர்த்தர் அருளின எல்லா வார்த்தைகளின்படியும் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். 4 மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான். 5 இஸ்ரவேல் புத்திரரின் வாலிபரை அனுப்பினான்; அவர்கள் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, கர்த்தருக்குச் சமாதானபலிகளாகக் காளைகளைப் பலியிட்டார்கள். 6 அப்பொழுது மோசே அந்த இரத்தத்தில் பாதி எடுத்து, பாத்திரங்களில் வார்த்து, பாதி இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, 7 உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து, ஜனங்களின் காது கேட்க வாசித்தான்; அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து, கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள். 8 அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து, ஜனங்களின்மேல் தெளித்து, இந்த வார்த்தைகள் யாவையுங்குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றான். 9 பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய், 10 இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழே நீலக்கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது. 11 அவர் இஸ்ரவேல் புத்திரருடைய அதிபதிகள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு புசித்துக் குடித்தார்கள். 12 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ மலையின்மேல் என்னிடத்திற்கு ஏறிவந்து, அங்கே இரு; நான் உனக்குக் கற்பலகைகளையும், நீ அவர்களுக்கு உபதேசிப்பதற்கு, நான் எழுதின நியாயப்பிரமாணத்தையும் கற்பனைகளையும் கொடுப்பேன் என்றார். 13 அப்பொழுது மோசே தன் ஊழியக்காரனாகிய யோசுவாவோடே எழுந்து போனான். மோசே தேவ பர்வதத்தில் ஏறிப்போகையில், 14 அவன் மூப்பரை நோக்கி: நாங்கள் உங்களிடத்தில் திரும்பிவருமட்டும், நீங்கள் இங்கே எங்களுக்காகக் காத்திருங்கள்; ஆரோனும் ஊரும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; ஒருவனுக்கு யாதொரு காரியம் உண்டானால், அவன் அவர்களிடத்தில் போகலாம் என்றான். 15 மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று. 16 கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாள் அதை மூடியிருந்தது; ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார். 17 மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது. 18 மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான்.

யாத்திராகமம் 25

1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2 இஸ்ரவேல் புத்திரர் எனக்குக் காணிக்கையைக் கொண்டுவரும்படி அவர்களுக்குச் சொல்லு; மனப்பூர்வமாய் உற்சாகத்துடன் கொடுப்பவன் எவனோ அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக. 3 நீங்கள் அவர்களிடத்தில் வாங்கவேண்டிய காணிக்கையாவன, பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், 4 இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டுமயிரும், 5 சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும், 6 விளக்கெண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும், 7 ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகக் கற்களும் இரத்தினங்களுமே. 8 அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண, எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்குவார்களாக. 9 நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதினுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக. 10 சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைப் பண்ணக்கடவர்கள்; அதின் நீளம் இரண்டரை முழமும், அதின் அகலம் ஒன்றரை முழமும், அதின் உயரம் ஒன்றரை முழமுமாயிருப்பதாக. 11 அதை எங்கும் பசும்பொன்தகட்டால் மூடுவாயாக; நீ அதின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் அதினால் மூடி, அதின்மேல் சுற்றிலும் பொன்னினால் திரணையை உண்டாக்கி, 12 அதற்கு நாலு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும், மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து, 13 சீத்திம் மரத்தால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, 14 அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களிலிருக்கும் வளையங்களிலே பாய்ச்சக்கடவாய். 15 அந்தத் தண்டுகள் பெட்டியிலிருந்து கழற்றப்படாமல், அதின் வளையங்களிலே இருக்கவேண்டும். 16 நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப் பிரமாணத்தை அந்தப் பெட்டியிலே வைப்பாயாக. 17 பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப் பண்ணுவாயாக; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது. 18 பொன்னினால் இரண்டு கேருபீன்களைச் செய்வாயாக; பொன்னைத் தகடாய் அடித்து, அவைகளைச் செய்து, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் வைப்பாயாக. 19 ஒரு புறத்து ஓரத்தில் ஒரு கேருபீனையும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனையும் பண்ணிவை; அந்தக் கேருபீன்கள் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏகவேலையாயிருக்கும்படி, அவைகளைப் பண்ணக்கடவாய். 20 அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும் ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாய் இருக்கக்கடவது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்குகிறவைகளாயிருப்பதாக. 21 கிருபாசனத்தைப் பெட்டியின்மீதில் வைத்து, பெட்டிக்குள்ளே நான் உனக்குக் கொடுக்கும் சாட்சிப்பிரமாணத்தை வைப்பாயாக. 22 அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின்மீதிலும் சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன். 23 சீத்திம் மரத்தால் ஒரு மேஜையையும் பண்ணுவாயாக; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமாய் இருக்கக்கடவது. 24 அதைப் பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்னினால் திரணையை உண்டாக்கி, 25 சுற்றிலும் அதற்கு நாலு விரற்கடையான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன்னினால் திரணையையும் உண்டாக்கி, 26 அதற்கு நாலு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை அதின் நாலு கால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைக்கக்கடவாய். 27 அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளுக்கு இடங்களாயிருக்கும்படி, சட்டத்தின் அருகே இருக்கவேண்டும். 28 அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தினால் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடக்கடவாய்; அவைகளால் மேஜை சுமக்கப்படவேண்டும். 29 அதற்குரிய தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், கிண்ணங்களையும், பானபலி கரகங்களையும் பண்ணக்கடவாய்; அவைகளைப் பசும்பொன்னினால் பண்ணக்கடவாய். 30 மேஜையின்மேல் நித்தமும் என் சந்நிதியில் சமுகத்தப்பங்களை வைக்கக்கடவாய். 31 பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக; அது பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்படவேண்டும்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்படவேண்டும். 32 ஆறு கிளைகள் அதின் பக்கங்களில் விடவேண்டும்; குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் ஒரு பக்கத்திலும், குத்துவிளக்கின் மூன்று கிளைகள் அதின் மறுபக்கத்திலும் விடவேண்டும். 33 ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும், ஒரு பழமும், ஒரு பூவும் இருப்பதாக; குத்துவிளக்கிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளிலும் அப்படியே இருக்கவேண்டும். 34 விளக்குத்தண்டிலோ, வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும், பழங்களும், பூக்களும் இருப்பதாக. 35 அதிலிருந்து புறப்படும் இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருப்பதாக; விளக்குத்தண்டிலிருந்து புறப்படும் ஆறு கிளைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும். 36 அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பொன்னினால் உண்டானவைகளாயிருப்பதாக; அவையெல்லாம் தகடாய் அடித்த பசும்பொன்னால் செய்யப்பட்ட ஒரே வேலையாயிருக்கவேண்டும். 37 அதில் ஏழு அகல்களைச் செய்வாயாக; அதற்கு நேரெதிராய் எரியும்படிக்கு அவைகள் ஏற்றப்படக்கடவது. 38 அதின் கத்தரிகளும் சாம்பல் பாத்திரங்களும் பசும்பொன்னினால் செய்யப்படுவதாக. 39 அதையும் அதற்குரிய பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் பண்ணவேண்டும். 40 மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே அவைகளைச் செய்ய எச்சரிக்கையாயிரு.

யாத்திராகமம் 26

1 மேலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலினாலும் இளநீலநூலினாலும் இரத்தாம்பரநூலினாலும் சிவப்புநூலினாலும் நெய்யப்பட்ட பத்து மூடுதிரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக; அவைகளில் விசித்திரவேலையாய்க் கேருபீன்களைச் செய்யக்கடவாய். 2 ஒவ்வொரு மூடுதிரையும் இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருப்பதாக; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருக்கவேண்டும். 3 ஐந்து மூடுதிரை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும்; மற்ற ஐந்து மூடுதிரைகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கவேண்டும். 4 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் இளநீலநூலால் காதுகளை உண்டுபண்ணு; இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் கடை ஓரத்திலும் அப்படியே செய்வாயாக. 5 காதுகள் ஒன்றோடொன்று இணையும்படி ஒரு மூடுதிரையில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணுவாயாக. 6 ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, மூடுதிரைகளை ஒன்றோடொன்று அந்தக் கொக்கிகளால் இணைத்துவிடுவாயாக. அப்பொழுது அது ஒரே வாசஸ்தலமாகும். 7 வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரால் பதினொரு மூடுதிரைகளை உண்டுபண்ணுவாயாக. 8 ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாய் இருக்கவேண்டும்; பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருக்கவேண்டும். 9 ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும்; ஆறாம் மூடுதிரையைக் கூடாரத்தின் முகப்பிற்கு முன்னே மடித்துப்போடுவாயாக. 10 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் கடை ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டுபண்ணி, 11 ஐம்பது வெண்கலக் கொக்கிகளைச்செய்து, கொக்கிகளைக் காதுகளில் மாட்டி, ஒரே கூடாரமாகும்படி அதை இணைத்து விடுவாயாக. 12 கூடாரத்தின் மூடுதிரைகளில் மிச்சமான பாதி மூடுதிரை வாசஸ்தலத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும். 13 கூடாரத்தினுடைய மூடுதிரைகளின் நீளத்திலே மீதியானதில், இந்தப்புறத்தில் ஒரு முழமும் அந்தப்புறத்தில் ஒரு முழமும் வாசஸ்தலத்தை மூடும்படி அதின் பக்கங்களிலே தொங்கவேண்டும். 14 சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்திற்கு ஒரு மூடியையும், அதின்மேல் தகசுத்தோலால் ஒரு மூடியையும் உண்டுபண்ணுவாயாக. 15 வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக. 16 ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கவேண்டும். 17 ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றோடொன்று ஒத்து இசைந்திருக்கும் இரண்டு கழுந்துகள் இருக்கவேண்டும்; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்வாயாக. 18 வாசஸ்தலத்துக்காகச் செய்யப்படுகிற பலகைகளில் இருபது பலகை தெற்கே தென்திசைக்கு எதிராக நிற்கக்கடவது. 19 அந்த இருபது பலகைகளின்கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களை உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும். 20 வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்திலும் இருபது பலகைகளையும், 21 அவைகளின்கீழ் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணுவாயாக; ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் இருக்கவேண்டும். 22 வாசஸ்தலத்தின் மேற்புறத்திற்கு ஆறு பலகைகளையும், 23 வாசஸ்தலத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டுபண்ணுவாயாக. 24 அவைகள் கீழே இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருக்கவேண்டும்; இரண்டு மூலைகளுக்கும் அப்படியே இருக்கவேண்டும்; அவைகள் இரண்டு மூலைகளுக்காகும். 25 அந்தப்படி எட்டுப் பலகைகள் இருக்கவேண்டும்; ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டு இரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப் பாதங்களும் இருக்கவேண்டும். 26 சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், 27 வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேற்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணுவாயாக. 28 நடுத்தாழ்ப்பாள் ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப் பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும். 29 பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன் தகட்டால் மூடக்கடவாய். 30 இவ்விதமாக மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே வாசஸ்தலத்தை நிறுத்துவாயாக. 31 இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமான இவற்றால் ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணக்கடவாய்; அதிலே விசித்திரவேலையால் செய்யப்பட்ட கேருபீன்கள் வைக்கப்படவேண்டும். 32 சீத்திம் மரத்தினால் செய்து, பொன் தகட்டால் மூடப்பட்ட நாலு தூண்களிலே அதைத் தொங்கவிடு; அந்தத் தூண்கள் நாலு வெள்ளிப் பாதங்கள்மேல் நிற்கவும், அவைகளின் கொக்கிகள் பொன்னினால் செய்யப்படவும் வேண்டும். 33 கொக்கிகளின்கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு, சாட்சிப்பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக்கடவாய்; அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும். 34 மகா பரிசுத்த ஸ்தலத்திலே சாட்சிப்பெட்டியின்மீதில் கிருபாசனத்தை வைப்பாயாக; 35 திரைக்குப் புறம்பாக மேஜையையும், மேஜைக்கு எதிரே வாசஸ்தலத்தின் தென்புறமாகக் குத்துவிளக்கையும் வைத்து, மேஜையை வடபுறமாக வைப்பாயாக. 36 இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலுமாகிய இவற்றால் சித்திரத் தையல் வேலையான ஒரு தொங்குதிரையும் கூடாரத்தின் வாசலுக்கு உண்டாக்கி, 37 அந்தத் தொங்குதிரைக்குச் சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கி, அவைகளுக்கு ஐந்து வெண்கலப் பாதங்களை வார்ப்பிக்கக்கடவாய்.

யாத்திராகமம் 27

1 ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமுமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டுபண்ணுவாயாக; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாயிருப்பதாக. 2 அதின் நாலு மூலைகளிலும் நாலு கொம்புகளை உண்டாக்குவாயாக; அதின் கொம்புகள் அதனோடே ஏகமாய் இருக்கவேண்டும்; அதை வெண்கலத் தகட்டால் மூடவேண்டும். 3 அதின் சாம்பலை எடுக்கத்தக்க சட்டிகளையும் கரண்டிகளையும் கிண்ணிகளையும் முள்துறடுகளையும் நெருப்புச்சட்டிகளையும் உண்டாக்குவாயாக; அதின் பணிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தால் பண்ணுவாயாக. 4 வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையைப் பண்ணி, அந்தச் சல்லடையின் நாலு மூலைகளிலும் நாலு வெண்கல வளையங்களை உண்டாக்கி, 5 அந்தச் சல்லடை பலிபீடத்தின் பாதியுயரத்தில் இருக்கும்படி அதைத் தாழப் பலிபீடத்தின் சுற்றடைப்புக்குக் கீழாக வைப்பாயாக. 6 பலிபீடத்துக்குச் சீத்திம் மரத்தால் தண்டுகளையும் பண்ணி, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடுவாயாக. 7 பலிபீடத்தைச் சுமக்கத்தக்கதாக அந்தத் தண்டுகள் அதின் இரண்டு பக்கங்களிலும் வளையங்களிலே பாய்ச்சப்பட்டிருக்கவேண்டும். 8 அதை உள் வெளிவிட்டுப் பலகைகளினாலே பண்ணவேண்டும்; மலையில் உனக்குக் காண்பிக்கப்பட்டபடியே அதைப் பண்ணக்கடவர்கள். 9 வாசஸ்தலத்துக்குப் பிராகாரத்தையும் உண்டுபண்ணுவாயாக; தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் செய்யப்பட்ட நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும். 10 அவைகளுக்கு வெண்கலத்தினாலே இருபது தூண்களும், இருபது பாதங்களும் இருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும். 11 அப்படியே வடபக்கத்தின் நீளத்திற்கும் நூறுமுழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்கு இருபது தூண்களும், அவைகளுக்கு இருபது பாதங்களும் வெண்கலமாயிருக்கவேண்டும்; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளியினால் செய்யப்படவேண்டும். 12 பிராகாரத்தின் மேற்பக்கமான அகலத்திற்கு ஐம்பது முழ நீளமான தொங்குதிரைகள் இருக்கவேண்டும்; அவைகளுக்குப் பத்துத் தூண்களும், அவைகளுக்குப் பத்துப் பாதங்களும் இருக்கவேண்டும். 13 சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்தின் பிராகாரம் ஐம்பதுமுழ அகலமாயிருக்கவேண்டும். 14 அங்கே ஒரு புறத்திற்குப் பதினைந்து முழ நீளமான தொங்குதிரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும். 15 மறுபுறத்துக்குப் பதினைந்து முழ நீளமான தொங்குதிரைகளும், அவைகளுக்கு மூன்று தூண்களும், அவைகளுக்கு மூன்று பாதங்களும் இருக்கவேண்டும். 16 பிராகாரத்தின் வாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலையாய்ச் செய்யப்பட்ட இருபதுமுழ நீளமான ஒரு தொங்குதிரையும் அதற்கு நாலு தூண்களும், அவைகளுக்கு நாலு பாதங்களும் இருக்கவேண்டும். 17 சுற்றுப் பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளியினால் பூண் கட்டப்பட்டிருக்கவேண்டும்; அவைகளின் கொக்கிகள் வெள்ளியினாலும் அவைகளின் பாதங்கள் வெண்கலத்தினாலும் செய்யப்பட்டிருக்கவேண்டும். 18 பிராகாரத்தின் நீளம் நூறுமுழமும், இருபுறத்து அகலம் ஐம்பது ஐம்பது முழமும், உயரம் ஐந்து முழமுமாயிருப்பதாக; அதின் தொங்கல்கள் திரித்த மெல்லிய பஞ்சுநூலினால் செய்யப்பட்டு, அதின் தூண்களின் பாதங்கள் வெண்கலமாயிருக்கவேண்டும். 19 வாசஸ்தலத்துக்கடுத்த சகல பணிவிடைக்குத் தேவையான எல்லாப் பணிமுட்டுகளும், அதின் எல்லா முளைகளும், பிராகாரத்தின் எல்லா முளைகளும் வெண்கலமாயிருக்கவேண்டும். 20 குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடுவாயாக. 21 ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சி சந்நிதிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கு வெளிப்புறமாக ஆரோனும் அவன் குமாரரும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதானத்தில் அந்த விளக்கை எரியவைக்கக்கடவர்கள்; இது இஸ்ரவேல் புத்திரருக்கு தலைமுறை தலைமுறையாக நித்திய கட்டளையாயிருக்கக்கடவது.

யாத்திராகமம் 28

1 உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ ஆரோனையும் அவனோடேகூட அவன் குமாரராகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக. 2 உன் சகோதரனாகிய ஆரோனுக்கு, மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும்பொருட்டு, பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணுவாயாக. 3 ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யத்தக்கதாக அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அவனுக்கு வஸ்திரங்களை உண்டாக்கும்பொருட்டு, நான் ஞானத்தின் ஆவியால் நிரப்பின விவேகமான இருதயமுள்ள யாவரோடும் நீ சொல்லுவாயாக. 4 அவர்கள் உண்டாக்கவேண்டிய வஸ்திரங்களாவன; மார்ப்பதக்கமும், ஏபோத்தும், அங்கியும், விசித்திரமான உள்சட்டையும், பாகையும், இடைக்கச்சையுமே. உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவனுக்கும் அவன் குமாரருக்கும் பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணவேண்டும். 5 அவர்கள் பொன்னும் இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலும் மெல்லிய பஞ்சுநூலும் சேகரிப்பார்களாக. 6 ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் விசித்திரவேலையாய்ச் செய்யக்கடவர்கள். 7 அது ஒன்றாக இணைக்கப்படும்பொருட்டு, இரண்டு தோள்துண்டுகளின்மேலும் அதின் இரண்டு முனைகளும் சேர்க்கப்படவேண்டும். 8 அந்த ஏபோத்தின்மேல் இருக்கவேண்டிய விசித்திரமான கச்சை அந்த வேலைக்கு ஒப்பாகவே, பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் பண்ணப்பட்டு, அதனோடே ஏகமாயிருக்கவேண்டும். 9 பின்னும் நீ இரண்டு கோமேதகக்கற்களை எடுத்து, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை அவைகளில் வெட்டுவாயாக. 10 அவர்கள் பிறந்த வரிசையின்படியே, அவர்களுடைய நாமங்களில் ஆறு நாமங்கள் ஒரு கல்லிலும், மற்ற ஆறு நாமங்கள் மறு கல்லிலும் இருக்கவேண்டும். 11 இரத்தினங்களில் முத்திரை வெட்டுகிறவர்கள் செய்யும் வேலைக்கு ஒப்பாக அந்த இரண்டு கற்களிலும் இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதிப்பாயாக. 12 ஆரோன் கர்த்தருக்கு முன்பாகத் தன் இரண்டு தோள்களின்மேலும் இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை ஞாபகக்குறியாகச் சுமந்துவர, அந்த இரண்டு கற்களையும் ஏபோத்துத் தோள்களின்மேல் அவர்களை நினைக்கும்படியான கற்களாக வைக்கக்கடவாய். 13 பொன்னினால் வளையங்களைப் பண்ணி, 14 சரியான அளவுக்குப் பின்னல்வேலையான இரண்டு சங்கிலிகளையும் பசும்பொன்னினால் உண்டாக்கி, அந்தச் சங்கிலிகளை அந்த வளையங்களில் பூட்டுவாயாக. 15 நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திரவேலையாய்ச் செய்வாயாக; அதை ஏபோத்து வேலைக்கு ஒப்பாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்வாயாக. 16 அது சதுரமும் இரட்டையும், ஒரு சாண் நீளமும் ஒரு சாண் அகலமுமாய் இருக்கவேண்டும். 17 அதிலே நாலு பத்தி இரத்தினக்கற்களை நிறையப் பதிப்பாயாக; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும், 18 இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும், 19 மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும், 20 நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமாய் இருப்பதாக; இவைகள் அந்தந்தப் பத்தியில் பொன்னினாலே பதித்திருக்கவேண்டும். 21 இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்கள் அவைகளில் வெட்டப்பட்டவைகளுமாய் இருக்கவேண்டும்; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொன்றினுடைய நாமம் ஒவ்வொன்றிலே முத்திரைவெட்டாய் வெட்டியிருக்கவேண்டும். 22 மார்ப்பதக்கத்திற்கு அதின் பக்கங்களிலே பின்னல்வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி, 23 அந்த மார்ப்பதக்கத்திற்கு இரண்டு பொன் வளையங்களையும் பண்ணி, அந்த இரண்டு வளையங்களையும் மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கங்களிலே வைத்து, 24 பொன்னினால் செய்த அந்த இரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டி, 25 அவ்விரண்டு பின்னல் வேலையான சங்கிலிகளின் இரண்டு நுனிகளை ஏபோத்துத் தோள்துண்டின்மேல் அதின் முன்புறத்தில் இருக்கிற இரண்டு வளையங்களில் மாட்டுவாயாக. 26 நீ இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்புறத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தினுடைய மற்ற இரண்டு பக்கங்களிலும் அதினுடைய ஓரத்திற்குள்ளாக வைத்து, 27 வேறே இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் முன்புறத்து இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாகவும் வைத்து, 28 மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், அது ஏபோத்திலிருந்து நீங்காதபடிக்கும், அதை அதின் வளையங்களால் ஏபோத்து வளையங்களோடே இளநீல நாடாவினால் கட்டவேண்டும். 29 ஆரோன் பரிசுத்த ஸ்தலத்திற்குள் பிரவேசிக்கும்போது, இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களைத் தன் இருதயத்தின்மேலிருக்கும் நியாயவிதி மார்ப்பதக்கத்திலே கர்த்தருடைய சந்நிதானத்தில் ஞாபகக்குறியாக எப்பொழுதும் தரித்துக்கொள்ளக்கடவன். 30 நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும். 31 ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் உண்டாக்கக்கடவாய். 32 தலை நுழைகிற அதின் துவாரம் அதின் நடுவில் இருக்கவும், அதின் துவாரத்துக்கு நெய்யப்பட்ட வேலையான ஒரு நாடா சுற்றிலும் இருக்கவும் வேண்டும்; அது கிழியாதபடிக்கு மார்க்கவசத்தின் துவாரத்துக்கு ஒத்ததாக இருக்கவேண்டும். 33 அதின் கீழோரங்களில் இளநீலநூல் இரத்தாம்பரநூல் சிவப்புநூல் வேலையால் செய்யப்பட்ட மாதளம்பழங்களையும், அவைகளுக்கு இடையிடையே சுற்றிலும் பொன்மணிகளையும் அதின் ஓரங்களில் சுற்றிலும் தொங்கும்படி பண்ணிவைக்கவேண்டும். 34 அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு பொன்மணியும் ஒரு மாதளம்பழமுமாய்த் தொங்குவதாக. 35 ஆரோன் ஆராதனை செய்யக் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போதும், வெளியே வரும்போதும், அவன் சாகாதபடிக்கு, அதின் சத்தம் கேட்கப்படும்படி அதைத் தரித்துக்கொள்ளவேண்டும். 36 பசும்பொன்னினால் ஒரு பட்டத்தைப் பண்ணி, கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று அதிலே முத்திரை வெட்டாக வெட்டி, 37 அது பாகையிலிருக்கும்படி அதை இளநீல நாடாவினால் பாகையின் முகப்பிலே கட்டுவாயாக. 38 இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பரிசுத்த காணிக்கைகளாகப் படைக்கும் பரிசுத்தமானவைகளின் தோஷத்தை ஆரோன் சுமக்கும்படி, அது ஆரோனுடைய நெற்றியின்மேல் இருப்பதாக; கர்த்தருடைய சந்நிதியில் அவர்கள் அங்கிகரிக்கப்படும்படி, அது எப்பொழுதும் அவன் நெற்றியின்மேல் இருக்கவேண்டும். 39 மெல்லிய பஞ்சுநூலால் விசித்திரமான உள்சட்டையையும், மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும் உண்டாக்கி, இடைக்கச்சையைச் சித்திரத்தையல் வேலையாகப் பண்ணுவாயாக. 40 ஆரோனுடைய குமாரருக்கும், மகிமையும் அலங்காரமுமாயிருக்கும் பொருட்டு, அங்கிகளையும், இடைக்கச்சைகளையும், குல்லாக்களையும் உண்டுபண்ணுவாயாக. 41 உன் சகோதரனாகிய ஆரோனும் அவனோடேகூட அவன் குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ அந்த வஸ்திரங்களை அவர்களுக்கு உடுத்தி, அவர்களை அபிஷேகஞ்செய்து, அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக. 42 அவர்களுடைய நிர்வாணத்தை மூடும்படிக்கு, இடுப்புத்தொடங்கி முழங்கால்மட்டும் உடுத்த சணல்நூல் சல்லடங்களையும் உண்டுபண்ணுவாயாக. 43 ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனைசெய்ய ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும் பலிபீடத்தண்டைக்குச் சேரும்போதும், அக்கிரமம் சுமந்து அவர்கள் சாகாதபடிக்கு, அவைகளைத் தரித்திருக்கவேண்டும்; இது அவனுக்கும் அவனுக்குப் பின்வரும் சந்ததிக்கும் நித்திய கட்டளை.

யாத்திராகமம் 29

1 அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி அவர்களைப் பரிசுத்தப்படுத்தும்பொருட்டு, நீ அவர்களுக்குச் செய்ய வேண்டியதாவது: ஒரு காளையையும் பழுதற்ற இரண்டு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொள்வாயாக. 2 புளிப்பில்லா அப்பத்தையும், எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும் கோதுமையின் மெல்லிய மாவினால் பண்ணி, 3 அவைகளை ஒரு கூடையிலே வைத்து, கூடையோடே அவைகளையும் காளையையும் இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, 4 ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசல் முன்பாகச் சேரப்பண்ணி, அவர்களைத் தண்ணீரினால் கழுவி, 5 அந்த வஸ்திரங்களை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் தரித்து, ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்குக் கட்டி, 6 அவன் தலையிலே பாகையையும் வைத்து, பரிசுத்த கிரீடத்தைப் பாகையின்மேல் தரித்து, 7 அபிஷேக தைலத்தையும் எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை அபிஷேகஞ்செய்வாயாக. 8 பின்பு அவன் குமாரரைச் சேரப்பண்ணி, ஆசாரிய ஊழியம் அவர்களுக்கு நித்திய கட்டளையாக இருக்கும்படி, அவர்களுக்கும் அங்கிகளை உடுத்துவாயாக. 9 ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இடைக்கச்சைகளைக் கட்டி, அவன் குமாரருக்குக் குல்லாக்களையும் தரித்து, இப்படியே ஆரோனையும் அவன் குமாரரையும் பிரதிஷ்டைபண்ணுவாயாக. 10 காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவருவாயாக; அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கக்கடவர்கள். 11 பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரத்து வாசலண்டையிலே கர்த்தருடைய சந்நிதானத்தில் அடித்து, 12 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, உன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகள்மேல் இட்டு, மற்ற இரத்தம் முழுவதையும் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி, 13 குடல்களை மூடிய கொழுப்பு யாவையும், கல்லீரலின்மேலுள்ள சவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகித்துப்போட்டு, 14 காளையின் மாம்சத்தையும் அதின் தோலையும் அதின் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய்; இது பாவநிவாரணபலி. 15 பின்பு அந்த ஆட்டுக்கடாக்களில் ஒன்றைக் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள். 16 அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தைப் பிடித்து, பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, 17 ஆட்டுக்கடாவைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் குடல்களையும் அதின் தொடைகளையும் கழுவி, அவைகளை அந்தத் துண்டங்களின்மேலும் அதின் தலையின்மேலும் வைத்து, 18 ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் தகித்துவிடுவாயாக; இது கர்த்தருக்குச் செலுத்தும் சர்வாங்க தகனபலி; இது சுகந்த வாசனையும் கர்த்தருக்குச் செலுத்தும் தகனபலியுமாய் இருக்கும். 19 பின்பு மற்ற ஆட்டுக்கடாவையும் கொண்டுவந்து நிறுத்துவாயாக; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைக்கக்கடவர்கள். 20 அப்பொழுது அந்தக் கடாவை அடித்து, அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனின் வலதுகாது மடலிலும், அவன் குமாரரின் வலதுகாது மடலிலும், அவர்கள் வலதுகையின் பெருவிரலிலும், அவர்கள் வலதுகாலின் பெருவிரலிலும் இட்டு, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, 21 பலிபீடத்தின்மேலிருக்கும் இரத்தத்திலும் அபிஷேகதைலத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோனும் அவன் வஸ்திரங்களும் அவனுடைய குமாரரும் அவர்களுடைய வஸ்திரங்களும் பரிசுத்தமாக்கப்படும்படி, அவன்மேலும் அவன் வஸ்திரங்கள்மேலும் அவனுடைய குமாரர் மேலும் அவர்களுடைய வஸ்திரங்கள் மேலும் தெளிப்பாயாக. 22 அந்த ஆட்டுக்கடா பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவானதால், அதிலுள்ள கொழுப்பையும் வாலையும் குடல்களை மூடிய கொழுப்பையும் கல்லீரலின்மேலுள்ள சவ்வையும் இரண்டு குண்டிக்காய்களையும் அவைகளின்மேலுள்ள கொழுப்பையும் வலதுபக்கத்து முன்னந்தொடையையும், 23 கர்த்தருடைய சந்நிதானத்தில் வைத்திருக்கிற புளிப்பில்லா அப்பங்களுள்ள கூடையில் ஒரு அப்பத்தையும் எண்ணெயிட்ட அப்பமாகிய ஒரு அதிரசத்தையும் ஒரு அடையையும் எடுத்து, 24 அவைகள் எல்லாவற்றையும் ஆரோனின் உள்ளங்கைகளிலும் அவன் குமாரரின் உள்ளங்கைகளிலும் வைத்து, அவைகளைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டி, 25 பின்பு அவைகளை அவர்கள் கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியோடு வைத்து, கர்த்தருடைய சந்நிதானத்தில் சுகந்த வாசனையாகத் தகிக்கக்கடவாய்; இது கர்த்தருக்குச் செலுத்தப்படும் தகனபலி. 26 ஆரோனுடைய பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் அசைவாட்டப்படும் காணிக்கையாக அசைவாட்டக்கடவாய்; அது உன் பங்காயிருக்கும். 27 மேலும், ஆரோனுடைய பிரதிஷ்டைக்கும் அவன் குமாரருடைய பிரதிஷ்டைக்கும் நியமித்த ஆட்டுக்கடாவில் அசைவாட்டப்படுகிற மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப் படைக்கப்படுகிற முன்னந்தொடையையும் பரிசுத்தப்படுத்துவாயாக. 28 அது ஏறெடுத்துப் படைக்கிற படைப்பானதினால், இஸ்ரவேல் புத்திரர் பலியிடுகிறவைகளில் அவைகளே நித்திய கட்டளையாக ஆரோனையும் அவன் குமாரரையும் சேர்வதாக; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருடைய சந்நிதானத்தில் ஏறெடுத்துப் படைக்கிற சமாதானபலிகளில் அவைகளே ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாயிருக்கவேண்டும். 29 ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்கள், அவனுக்குப்பின், அவனுடைய குமாரரைச் சேரும்; அவர்கள் அவைகளை உடுத்திக்கொண்டு, அபிஷேகம்பண்ணப்பட்டுப் பிரதிஷ்டையாக்கப்படுவார்கள். 30 அவனுடைய குமாரரில் அவன் பட்டத்திற்கு வருகிற ஆசாரியன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்வதற்கு ஆசரிப்புக் கூடாரத்தில் பிரவேசிக்கும்போது, அவைகளை ஏழுநாள்மட்டும் உடுத்திக்கொள்ளக்கடவன். 31 பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்து, அதின் மாம்சத்தைப் பரிசுத்த இடத்தில் வேவிப்பாயாக. 32 அந்த ஆட்டுக்கடாவின் மாம்சத்தையும், கூடையிலிருக்கிற அப்பத்தையும், ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே புசிக்கக்கடவர்கள். 33 அவர்களைப் பிரதிஷ்டைபண்ணிப் பரிசுத்தப்படுத்தும்பொருட்டு, அவைகளால் பாவநிவிர்த்தி செய்யப்பட்டபடியால், அவைகளை அவர்கள் புசிக்கக்கடவர்கள்; அந்நியனோ அவைகளைப் புசிக்கலாகாது; அவைகள் பரிசுத்தமானவைகள். 34 பிரதிஷ்டையின் மாம்சத்திலும் அப்பத்திலும் ஏதாகிலும் விடியற்காலம்மட்டும் மீந்திருந்ததானால், அதை அக்கினியாலே சுட்டெரிப்பாயாக; அது புசிக்கப்படலாகாது, அது பரிசுத்தமானது. 35 இந்தப்பிரகாரம் நான் உனக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் செய்வாயாக; ஏழுநாளளவும் நீ அவர்களைப் பிரதிஷ்டைபண்ணி, 36 பாவநிவிர்த்திக்காக ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவநிவாரணபலியாகப் பலியிட்டு; பலிபீடத்துக்காகப் பிராயச்சித்தம் செய்தபின், அந்தப் பலிபீடத்தைச் சுத்திசெய்யவேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம்பண்ணக்கடவாய். 37 ஏழுநாளளவும் பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அதைப் பரிசுத்தமாக்கக்கடவாய்; பலிபீடமானது மகா பரிசுத்தமாயிருக்கும்; பலிபீடத்தைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாகும். 38 பலிபீடத்தின்மேல் நீ பலியிடவேண்டியது என்னவெனில்; இடைவிடாமல் ஒவ்வொருநாளிலும் ஒரு வயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும். 39 ஒரு ஆட்டுக்குட்டியைக் காலையிலும், மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலும் பலியிடுவாயாக. 40 ஒரு மரக்காலிலே பத்திலொரு பங்கானதும், இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும், பானபலியாகக் கால்படி திராட்சரசத்தையும், ஒரு ஆட்டுக்குட்டியுடனே படைப்பாயாக. 41 மற்ற ஆட்டுக்குட்டியை மாலையிலே பலியிட்டு, காலையிலே செலுத்தின போஜனபலிக்கும் பானபலிக்கும் ஒத்தபிரகாரம் அதைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்கக்கடவாய். 42 உன்னுடனே பேசும்படி நான் உங்களைச் சந்திக்கும் இடமாயிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்தினுடைய வாசலாகிய கர்த்தருடைய சந்நிதியிலே, உங்கள் தலைமுறைதோறும் செலுத்தப்படவேண்டிய நித்திய சர்வாங்க தகனபலி இதுவே. 43 அங்கே இஸ்ரவேல் புத்திரரைச் சந்திப்பேன்; அந்த ஸ்தலம் என்னுடைய மகிமையினால் பரிசுத்தமாக்கப்படும். 44 ஆசரிப்புக் கூடாரத்தையும் பலிபீடத்தையும் நான் பரிசுத்தமாக்குவேன்; எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, ஆரோனையும் அவன் குமாரரையும் பரிசுத்தப்படுத்தி, 45 இஸ்ரவேல் புத்திரரின் நடுவே நான் வாசம்பண்ணி, அவர்களுக்குத் தேவனாயிருப்பேன். 46 தங்கள் நடுவே நான் வாசம்பண்ணும்படி, தங்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அவர்கள் அறிவார்கள்; நானே அவர்கள் தேவனாகிய கர்த்தர்.

யாத்திராகமம் 30

1 தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக. 2 அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும், இரண்டு முழ உயரமுமாய் இருக்கவேண்டும், அதின் கொம்புகள் அதனோடே ஏகமுமாயிருக்கவேண்டும். 3 அதின் மேற்புறத்தையும் சுற்றுப்புறத்தையும் அதின் கொம்புகளையும் பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்திரணையை உண்டுபண்ணி, 4 அந்தத் திரணையின்கீழே அதின் இரண்டு பக்கங்களிலும் அதைச் சுமக்கும் தண்டுகளின் இடங்களாகிய அதின் இரண்டு பக்கத்து இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன் வளையங்களை உண்டாக்குவாயாக. 5 அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளையும் பொன்தகட்டால் மூடக்கடவாய். 6 சாட்சிப்பெட்டிக்கு முன்னிருக்கும் திரைச்சீலைக்கும், நான் உன்னைச் சந்திக்கும் இடமாகிய சாட்சி சந்நிதியின்மேலுள்ள கிருபாசனத்துக்கும் முன்பாக அதை வைக்கக்கடவாய். 7 ஆரோன் காலைதோறும் அதின்மேல் சுகந்த தூபங்காட்டவேண்டும்; மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபங்காட்டக்கடவன்; விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபங்காட்டவேண்டும். 8 உங்கள் தலைமுறைதோறும் கர்த்தருடைய சந்நிதியில் காட்டவேண்டிய நித்திய தூபம் இதுவே. 9 அதின்மேல் அந்நிய தூபத்தையாகிலும், தகனபலியையாகிலும், போஜனபலியையாகிலும் படைக்கவேண்டாம்; அதின்மேல் பானபலியை ஊற்றவும்வேண்டாம். 10 வருஷத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தினால் அதின் கொம்புகளின்மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; உங்கள் தலைமுறைதோறும் வருஷத்தில் ஒருமுறை அதின்மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; அது கர்த்தருக்கு மகா பரிசுத்தமானது என்றார். 11 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 12 நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப்பார்க்கும் பொருட்டு, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடிக்கு, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும்பொருளைக் கொடுக்கக்கடவன். 13 எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா; கர்த்தருக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல். 14 எண்ணப்படுகிறவர்களின் தொகையிலே சேருகிற இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஒவ்வொருவனும் அதைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டும். 15 உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்திபண்ணும்படி நீங்கள் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தும்போது, ஐசுவரியவான் அரைச்சேக்கலுக்கு அதிகமாய்க் கொடுக்கவும் வேண்டாம், தரித்திரன் அதற்குக் குறைவாகக் கொடுக்கவும் வேண்டாம். 16 அந்தப் பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாயாக; அது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும் என்றார். 17 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 18 கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக. 19 அதனிடத்தில் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள். 20 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள். 21 அவர்கள் சாகாதபடிக்குத் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்; இது தலைமுறைதோறும் அவனுக்கும் அவன் சந்ததியாருக்கும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். 22 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 23 மேன்மையான சுகந்தவர்க்கங்களாகிய சுத்தமான வெள்ளைப்போளத்தில் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி ஐந்நூறு சேக்கல் இடையையும், சுகந்த கருவாப்பட்டையிலே அதில் பாதியாகிய இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும், சுகந்த வசம்பில் இருநூற்று ஐம்பது சேக்கல் இடையையும், 24 இலவங்கப்பட்டையில் ஐந்நூறு சேக்கல் இடையையும், ஒலிவ எண்ணெயில் ஒரு குடம் எண்ணெயையும் எடுத்து, 25 அதனால், பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமளதைலமாகிய சுத்தமான அபிஷேக தைலத்தை உண்டுபண்ணுவாயாக; அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது. 26 அதினாலே ஆசரிப்புக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும், 27 மேஜையையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், தூபபீடத்தையும், 28 தகன பலிபீடத்தையும், அதின் பணிமுட்டுகள் எல்லாவற்றையும், தொட்டியையும், அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி, 29 அவைகள் மகா பரிசுத்தமாயிருக்கும்படிக்கு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அவைகளைத் தொடுகிறதெல்லாம் பரிசுத்தமாயிருக்கும். 30 ஆரோனும் அவன் குமாரரும் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ அவர்களை அபிஷேகம்பண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக. 31 இஸ்ரவேல் புத்திரரோடே நீ பேசிச் சொல்லவேண்டியதாவது: உங்கள் தலைமுறைதோறும் இது எனக்குரிய பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கவேண்டும். 32 இது மனிதருடைய சரீரத்தின்மேல் வார்க்கப்படலாகாது; இது செய்யப்பட்ட முறையின்படி அவர்கள் வேறொரு தைலத்தைச் செய்யவுங்கூடாது; இது பரிசுத்தமானது, இது உங்களுக்குப் பரிசுத்தமாயிருப்பதாக. 33 இந்த முறையின்படியே தைலங்கூட்டுகிறவனும், அதில் எடுத்து அந்நியன்மேல் வார்க்கிறவனும், தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகக்கடவன் என்று சொல் என்றார். 34 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப்போளமும் குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமநிறையாக எடுத்து, 35 தைலக்காரன் செய்கிறதுபோல அதற்குப் பரிமளமேற்றி, துப்புரவான பரிசுத்த தூபவர்க்கமாக்கி, 36 அதில் கொஞ்சம் எடுத்துப் பொடியாக இடித்து, நான் உன்னைச் சந்திக்கும் ஆசரிப்புக் கூடாரத்திலிருக்கும் சாட்சி சந்நிதியில் வைப்பாயாக; அது உங்களுக்கு மகா பரிசுத்தமாயிருக்கக்கடவது. 37 இந்தத் தூபவர்க்கத்தை நீ செய்யவேண்டிய முறையின்படி உங்களுக்காகச் செய்துகொள்ளலாகாது; இது கர்த்தருக்கென்று உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக. 38 இதற்கு ஒப்பானதை முகருகிறதற்காகச் செய்கிறவன் தன் ஜனத்தில் இராதபடி அறுப்புண்டுபோகக்கடவன் என்றார்.

யாத்திராகமம் 31

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நான் யூதாவின் கோத்திரத்தில் ஊருடைய மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து, 3 விநோதமான வேலைகளை அவன் யோசித்துச் செய்கிறதற்கும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்கிறதற்கும், 4 இரத்தினங்களை முத்திரைவெட்டாக வெட்டிப் பதிக்கிறதற்கும், மரத்தில் சித்திரவேலைகளைச் செய்கிறதற்கும், 5 மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவஆவியினால் நிரப்பினேன். 6 மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபையும் அவனோடே துணையாகக் கூட்டினதுமன்றி, ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள். 7 ஆசரிப்புக் கூடாரத்தையும் சாட்சிப்பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள சகல பணிமுட்டுகளையும், 8 மேஜையையும் அதின் பணிமுட்டுகளையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் சகல கருவிகளையும், தூபபீடத்தையும், 9 தகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும், 10 ஆராதனை வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியம் செய்வதற்கான ஆசாரியனாகிய ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும், 11 அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்துக்குச் சுகந்தவர்க்கங்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் செய்யவேண்டும் என்றார். 12 மேலும், கர்த்தர் மோசேயினிடத்தில்: 13 நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும். 14 ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். 15 ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும். 16 ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள். 17 அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார். 18 சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.

யாத்திராகமம் 32

1 மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள். 2 அதற்கு ஆரோன்: உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். 3 ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள். 4 அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள். 5 ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான். 6 மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள். 7 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள். 8 அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார். 9 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள். 10 ஆகையால் என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார். 11 மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன? 12 மலைகளில் அவர்களைக் கொன்று போடவும், பூமியின்மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்யும்பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும். 13 உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான். 14 அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார். 15 பின்பு மோசே மலையிலிருந்து இறங்கினான்; சாட்சிப்பலகைகள் இரண்டும் அவன் கையில் இருந்தது; அந்தப் பலகைகள் இருபுறமும் எழுதப்பட்டிருந்தது, அவைகள் இந்தப் பக்கத்திலும் அந்தப் பக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது. 16 அந்தப் பலகைகள் தேவனால் செய்யப்பட்டதாயும், அவைகளிலே பதிந்த எழுத்து தேவனால் எழுதப்பட்ட எழுத்துமாயிருந்தது. 17 ஜனங்கள் ஆரவாரம் பண்ணுகிறதை யோசுவா கேட்டு, மோசேயை நோக்கி: பாளயத்தில் யுத்தத்தின் இரைச்சல் உண்டாயிருக்கிறது என்றான். 18 அதற்கு மோசே: அது ஜெயதொனியாகிய சத்தமும் அல்ல, அபஜெயதொனியாகிய சத்தமும் அல்ல; பாடலின் சத்தம் எனக்குக் கேட்கிறது என்றான். 19 அவன் பாளயத்துக்குச் சமீபித்து, அந்தக் கன்றுக்குட்டியையும் நடனத்தையும் கண்டபோது, மோசே கோபம் மூண்டவனாகி, தன் கையிலே இருந்த பலகைகளை மலையின் அடியிலே எறிந்து உடைத்துப்போட்டு; 20 அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான். 21 பின்பு, மோசே ஆரோனை நோக்கி: நீ இந்த ஜனங்கள்மேல் இந்தப் பெரும்பாதகத்தைச் சுமத்துகிறதற்கு, இவர்கள் உனக்கு என்ன செய்தார்கள் என்றான். 22 அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக; இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர். 23 இவர்கள் என்னை நோக்கி: எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும்; எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம் என்றார்கள். 24 அப்பொழுது நான்: பொன்னுடைமை உடையவர்கள் எவர்களோ அவர்கள் அதைக் கழற்றித் தரக்கடவர்கள் என்றேன்; அவர்கள் அப்படியே செய்தார்கள்; அதை அக்கினியிலே போட்டேன், அதிலிருந்து இந்தக் கன்றுக்குட்டி வந்தது என்றான். 25 ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே கண்டு, 26 பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள். 27 அவன் அவர்களை நோக்கி: உங்களில் ஒவ்வொருவனும் தன் பட்டயத்தைத் தன் அரையிலே கட்டிக்கொண்டு, பாளயமெங்கும் உள்ளும் புறம்பும் வாசலுக்கு வாசல் போய், ஒவ்வொருவனும் தன் தன் சகோதரனையும் ஒவ்வொருவனும் தன் தன் சிநேகிதனையும் ஒவ்வொருவனும் தன் தன் அயலானையும் கொன்றுபோடக்கடவன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 28 லேவியின் புத்திரர் மோசே சொன்னபடியே செய்தார்கள்; அந்நாளில் ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் விழுந்தார்கள். 29 கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கு ஆசீர்வாதம் அளிக்கும்படி, இன்றைக்கு நீங்கள் அவனவன் தன்தன் மகனுக்கும் சகோதரனுக்கும் விரோதமாயிருக்கிறதினால், கர்த்தருக்கு உங்களைப் பிரதிஷ்டை பண்ணுங்கள் என்று மோசே சொல்லியிருந்தான். 30 மறுநாளில் மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் மகா பெரிய பாவஞ்செய்தீர்கள்; உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கூடுமோ என்று அறிய இப்பொழுது நான் கர்த்தரிடத்திற்கு ஏறிப்போகிறேன் என்றான். 31 அப்படியே மோசே கர்த்தரிடத்திற்குத் திரும்பிப்போய்: ஐயோ, இந்த ஜனங்கள் பொன்னினால் தங்களுக்குத் தெய்வங்களை உண்டாக்கி, மகா பெரிய பாவம் செய்திருக்கிறார்கள். 32 ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான். 33 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன். 34 இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ; என் தூதனானவர் உனக்குமுன் செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் என்றார். 35 ஆரோன் செய்த கன்றுக்குட்டியை ஜனங்கள் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதித்தார்.

யாத்திராகமம் 33

1 கர்த்தர் மோசேயை நோக்கி: நீயும், எகிப்து தேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டுவந்த ஜனங்களும் இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, உன் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குப் போங்கள். 2 நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன். 3 ஆனாலும், வழியிலே நான் உங்களை நிர்மூலம்பண்ணாதபடிக்கு, நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள் என்றார். 4 துக்கமான இவ்வார்த்தைகளை ஜனங்கள் கேட்டபோது, ஒருவரும் தங்கள் ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள். 5 ஏனென்றால், நீங்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள், நான் ஒரு நிமிஷத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை நிர்மூலம்பண்ணுவேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதை அறிவேன் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல் என்று கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தார். 6 ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் ஓரேப் மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள். 7 மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக் கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத் தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள். 8 மோசே கூடாரத்துக்குப் போகும்போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள். 9 மோசே கூடாரத்துக்குள் பிரவேசிக்கையில், மேகஸ்தம்பம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; கர்த்தர் மோசேயோடே பேசினார். 10 ஜனங்கள் எல்லாரும் மேகஸ்தம்பம் கூடாரவாசலில் நிற்கக்கண்டார்கள்; ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள்தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள். 11 ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான். 12 மோசே கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை அழைத்துக்கொண்டு போ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடேகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டே; 13 உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும் என்றான். 14 அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார். 15 அப்பொழுது அவன் அவரை நோக்கி: உம்முடைய சமுகம் என்னோடேகூடச் செல்லாமற்போனால், எங்களை இவ்விடத்திலிருந்து கொண்டுபோகாதிரும். 16 எனக்கும் உமது ஜனங்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் அறியப்படும்; நீர் எங்களோடே வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள ஜனங்கள் எல்லாரிலும், நானும் உம்முடைய ஜனங்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும் என்றான். 17 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார். 18 அப்பொழுது அவன்: உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான். 19 அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி, 20 நீ என் முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கக்கூடாது என்றார். 21 பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு. 22 என் மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகுமட்டும் என் கரத்தினால் உன்னை மூடுவேன்; 23 பின்பு, என் கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என் பின்பக்கத்தைக் காண்பாய்; என் முகமோ காணப்படாது என்றார்.

யாத்திராகமம் 34

1 கர்த்தர் மோசேயை நோக்கி: முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்துக்கொள்; நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை அவைகளில் எழுதுவேன். 2 விடியற்காலத்தில் நீ ஆயத்தமாகி, சீனாய் மலையில் ஏறி, அங்கே மலையின் உச்சியில் காலமே என் சமுகத்தில் வந்து நில். 3 உன்னோடே ஒருவனும் அங்கே வரக்கூடாது; மலையிலெங்கும் ஒருவனும் காணப்படவுங்கூடாது; இந்த மலையின் சமீபத்தில் ஆடுமாடு மேயவுங்கூடாது என்றார். 4 அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பலகைகளையும் தன் கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய்மலையில் ஏறினான். 5 கர்த்தர் ஒரு மேகத்தில் இறங்கி, அங்கே அவன் அருகே நின்று, கர்த்தருடைய நாமத்தைக் கூறினார். 6 கர்த்தர் அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது, அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். 7 ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார். 8 மோசே தீவிரமாகத் தரைமட்டும் குனிந்து பணிந்துகொண்டு: 9 ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருளவேண்டும்; இந்த ஜனங்கள் வணங்காக் கழுத்துள்ளவர்கள்; நீரோ, எங்கள் அக்கிரமத்தையும் எங்கள் பாவத்தையும் மன்னித்து, எங்களை உமக்குச் சுதந்தரமாக ஏற்றுக்கொள்ளும் என்றான். 10 அதற்கு அவர்: இதோ, நான் ஒரு உடன்படிக்கைபண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத அதிசயங்களை உன் ஜனங்கள் எல்லாருக்கு முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும். 11 இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிறதைக் கைக்கொள்; எமோரியனையும், கானானியனையும், ஏத்தியனையும், பெரிசியனையும், ஏவியனையும், எபூசியனையும் உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறேன். 12 நீ போய்ச் சேருகிற தேசத்தின் குடிகளோடு உடன்படிக்கைபண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; பண்ணினால் அது உன் நடுவில் கண்ணியாயிருக்கும். 13 அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டிப்போடுங்கள். 14 கர்த்தருடைய நாமம் எரிச்சலுள்ளவர் என்பது, அவர் எரிச்சலுள்ள தேவனே; ஆகையால், அந்நிய தேவனை நீ பணிந்துகொள்ளவேண்டாம். 15 அந்தத் தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணுவாயானால், அவர்கள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, தங்களுடைய தேவர்களுக்குப் பலியிடுவார்கள்; ஒருவன் உன்னை அழைக்கையில், நீ போய், அவன் பலியிட்டதிலே புசிப்பாய்; 16 அவர்கள் குமாரத்திகளில் உன் குமாரருக்குப் பெண்களைக் கொள்ளுவாய்; அவர்கள் குமாரத்திகள் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுவதும் அல்லாமல், உன் குமாரரையும் தங்கள் தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றும்படி செய்வார்கள். 17 வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்கவேண்டாம். 18 புளிப்பில்லா அப்பப்பண்டிகையை நீங்கள் கைக்கொண்டு, நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, ஆபீப் மாதத்தில் குறித்த காலத்திலே ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்; ஆபீப் மாதத்திலே எகிப்திலிருந்து புறப்பட்டாயே. 19 கர்ப்பந்திறந்து பிறக்கிற யாவும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றான ஆண்கள் யாவும் என்னுடையவைகள். 20 கழுதையின் தலையீற்றை ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால் அதின் கழுத்தை முறித்துப்போடு; உன் பிள்ளைகளில் முதற்பேறானவைகளையெல்லாம் மீட்டுக்கொள்ளவேண்டும். வெறுங்கையோடே என் சந்நிதியில் ஒருவனும் வரக்கூடாது. 21 ஆறுநாள் வேலைசெய்து, ஏழாம் நாளிலே ஓய்ந்திருப்பாயாக; விதைப்புக்காலத்திலும் அறுப்புக்காலத்திலும் ஓய்ந்திருப்பாயாக. 22 கோதுமை அறுப்பின் முதற்பலனைச் செலுத்தும் ஏழு வாரங்களின் பண்டிகையையும், வருஷமுடிவிலே சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக. 23 வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் ஆண்மக்கள் எல்லாரும் இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரக்கடவர்கள். 24 நான் புறஜாதிகளை உங்கள் முன்னின்று துரத்திவிட்டு, உங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்குவேன்; வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு முன்பாகக் காணப்படப் போயிருக்கும்போது ஒருவரும் உங்கள் தேசத்தை இச்சிப்பதில்லை. 25 எனக்கு இடும் பலியின் இரத்தத்தைப் புளித்தமாவுடன் செலுத்தவேண்டாம்; பஸ்கா பண்டிகையின் பலியை விடியற்காலம்வரைக்கும் வைக்கவும் வேண்டாம். 26 உங்கள் நிலத்தில் முதல் முதல் விளைந்த முதற்பலத்தை உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்துக்குக் கொண்டுவாருங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம் என்றார். 27 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த வார்த்தைகளை நீ எழுது; இந்த வார்த்தைகளின்படியே உன்னோடும் இஸ்ரவேலோடும் உடன்படிக்கைபண்ணினேன் என்றார். 28 அங்கே அவன் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இரவும் பகலும் நாற்பதுநாள் கர்த்தரோடே இருந்தான்; அவன் பத்துக்கற்பனைகளாகிய உடன்படிக்கையின் வார்த்தைகளைப் பலகைகளில் எழுதினான். 29 மோசே சாட்சிப் பலகைகள் இரண்டையும் தன் கையில் எடுத்துக்கொண்டு, சீனாய்மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அவன் அறியாதிருந்தான். 30 ஆரோனும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேயைப் பார்க்கும்போது, அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டு, அவன் சமீபத்தில் சேரப்பயந்தார்கள். 31 மோசே அவர்களை அழைத்தான்; அப்பொழுது ஆரோனும் சபையிலுள்ள பிரபுக்கள் யாவரும் அவனிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; மோசே அவர்களோடே பேசினான். 32 பின்பு இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் சேர்ந்தார்கள்; அப்பொழுது அவன் சீனாய்மலையில் கர்த்தர் தன்னோடே பேசினவைகளையெல்லாம் அவர்களுக்குக் கற்பித்தான். 33 மோசே அவர்களோடே பேசி முடியுமளவும், தன் முகத்தின்மேல் முக்காடு போட்டிருந்தான். 34 மோசே கர்த்தருடைய சந்நிதியில் அவரோடே பேசும்படிக்கு உட்பிரவேசித்ததுமுதல் வெளியே புறப்படும்மட்டும் முக்காடு போடாதிருந்தான்; அவன் வெளியே வந்து தனக்குக் கற்பிக்கப்பட்டதை இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லும்போது, 35 இஸ்ரவேல் புத்திரர் அவன் முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டார்கள். மோசே அவரோடே பேசும்படிக்கு உள்ளே பிரவேசிக்கும்வரைக்கும், முக்காட்டைத் திரும்பத் தன் முகத்தின்மேல் போட்டுக்கொள்ளுவான்.

யாத்திராகமம் 35

1 மோசே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: 2 நீங்கள் ஆறுநாள் வேலைசெய்யவேண்டும், ஏழாம் நாளோ உங்களுக்குப் பரிசுத்த நாளாய் இருப்பதாக; அது கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வுநாள்; அதிலே வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படக்கடவன். 3 ஓய்வுநாளில் உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் நெருப்பு மூட்டாதிருப்பீர்களாக என்னும் இவ்வார்த்தைகளைக் கைக்கொள்ளும்படி கர்த்தர் கட்டளையிட்டார் என்றான். 4 பின்னும் மோசே இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரையும் நோக்கி: 5 உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ, அவன் அதைக் கொண்டுவரட்டும்; கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கை என்னவென்றால், பொன்னும், வெள்ளியும், வெண்கலமும், 6 இளநீலநூலும், இரத்தாம்பரநூலும், சிவப்புநூலும், மெல்லிய பஞ்சுநூலும், வெள்ளாட்டு மயிரும், 7 சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலும், தகசுத்தோலும், சீத்திம் மரமும், 8 விளக்குக்கு எண்ணெயும், அபிஷேகதைலத்துக்குப் பரிமளவர்க்கங்களும், தூபத்துக்குச் சுகந்தவர்க்கங்களும், 9 ஆசாரியருடைய ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கத்தக்க கோமேதகம் முதலிய இரத்தினங்களுமே. 10 உங்களில் ஞான இருதயமுள்ள அனைவரும் வந்து, கர்த்தர் கட்டளையிட்டவைகளையெல்லாம் செய்வார்களாக. 11 வாசஸ்தலத்தையும், அதின் கூடாரத்தையும், அதின் மூடியையும், அதின் கொக்கிகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், 12 பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், மறைவின் திரைச்சீலையையும், 13 மேஜையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும், 14 வெளிச்சங்கொடுக்கும் குத்துவிளக்கையும், அதின் கருவிகளையும், அதின் அகல்களையும், வெளிச்சத்துக்கு எண்ணெயையும், 15 தூபபீடத்தையும், அதின் தண்டுகளையும், அபிஷேகதைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசலுக்குத் தொங்குதிரையையும், 16 தகனபலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும், 17 பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசலின் தொங்குதிரையையும், 18 வாசஸ்தலத்தின் முளைகளையும், பிராகாரத்தின் முளைகளையும், அவைகளின் கயிறுகளையும், 19 பரிசுத்த ஸ்தலத்திலே ஆராதனை செய்வதற்குரிய வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் அவர்கள் செய்யக்கடவர்கள் என்றான். 20 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் மோசேயின் சமுகத்தைவிட்டுப் புறப்பட்டார்கள். 21 பின்பு எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி, எவர்களை அவர்கள் ஆவி உற்சாகப்படுத்தினதோ, அவர்கள் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரத்தின் வேலைக்கும், அதின் சகல ஊழியத்துக்கும், பரிசுத்த வஸ்திரங்களுக்கும் ஏற்றவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். 22 மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகல வித பொன்னாபரணங்களையும் கொண்டுவந்தார்கள்; கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தின ஒவ்வொருவனும் பொன்னைக் காணிக்கையாகச் செலுத்தினான். 23 இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் வெள்ளாட்டு மயிரையும் சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோலையும் தகசுத்தோலையும் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள். 24 வெள்ளியையும் வெண்கலத்தையும் கொடுக்கத்தக்க யாவரும் அவைகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள். பற்பல வேலைகளுக்கு உதவும் சீத்திம் மரத்தைத் தங்களிடத்தில் வைத்திருந்த யாவரும் அவைகளைக் கொண்டுவந்தார்கள். 25 ஞான இருதயமுள்ள ஸ்திரீகள் எல்லாரும் தங்கள் கைகளினால் நூற்று, தாங்கள் நூற்ற இளநீலநூலையும் இரத்தாம்பரநூலையும் சிவப்புநூலையும் மெல்லிய பஞ்சுநூலையும் கொண்டுவந்தார்கள். 26 எந்த ஸ்திரீகளுடைய இருதயம் ஞான எழுப்புதல் அடைந்ததோ, அவர்கள் எல்லாரும் வெள்ளாட்டு மயிரைத் திரித்தார்கள். 27 பிரபுக்கள் ஏபோத்திலும் மார்ப்பதக்கத்திலும் பதிக்கும் கோமேதகம் முதலிய இரத்தினங்களையும், 28 பரிமளவர்க்கங்களையும், விளக்கெண்ணெயையும், அபிஷேகதைலத்துக்கும் சுகந்தவர்க்க தூபத்துக்கும் வேண்டியவைகளையும் கொண்டுவந்தார்கள். 29 செய்யப்படும்படி கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த வேலைக்குரிய யாவையும் கொண்டுவர, இஸ்ரவேல் புத்திரருக்குள் தங்கள் இருதயத்தில் உற்சாகமடைந்த ஸ்திரீ புருஷர் யாவரும் கர்த்தருக்குக் காணிக்கையை மனப்பூர்வமாய்க் கொண்டுவந்தார்கள். 30 பின்பு மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: பாருங்கள், கர்த்தர் யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனான ஊரியின் குமாரன் பெசலெயேலைப் பேர்சொல்லி அழைத்து, 31 அவன் விசித்திரமான வேலைகளை யோசித்துச் செய்யவும், பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் வேலைசெய்யவும், 32 இரத்தினங்களை முத்திரை வெட்டாக வெட்டிப் பதிக்கவும், மரத்தில் சித்திர வேலை செய்து சகல விநோதமான வேலைகளைச் செய்யவும், 33 அவனுக்கு ஞானத்தையும் புத்தியையும் அறிவையும் அருளி, அவன் சகலவித வேலைகளையும் செய்யும்படி தேவஆவியினாலே அவனை நிரப்பினார். 34 அவன் இருதயத்திலும், தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபின் இருதயத்திலும், போதிக்கும் வரத்தையும் அருளினார். 35 சித்திரவேலையையும் சிற்பவேலையையும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்படும் விசித்திரத் தையல்வேலையையும், சகல விசித்திர நெசவு வேலைகளையும் விநோதமான வேலைகளை யூகிக்கிறவர்களும் செய்கிறவர்களும் நிறைவேற்றும் சகலவித வேலைகளையும் செய்யும்படிக்கு அவர்களுடைய இருதயத்தை ஞானத்தினால் நிரப்பினார் என்றான்.

யாத்திராகமம் 36

1 அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்துத் திருப்பணிகளுக்கடுத்த சகல வேலைகளையும், கர்த்தர் கற்பித்தபடியெல்லாம், பெசலெயேலும் அகோலியாபும், செய்ய அறியும்படிக்குக் கர்த்தரால் ஞானமும் புத்தியும் பெற்ற விவேக இருதயமுள்ள மற்ற அனைவரும் செய்யத்தொடங்கினார்கள். 2 பெசலெயேலையும் அகோலியாபையும், கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்கள் இருதயத்தில் எழுப்புதலடைந்த ஞான இருதயத்தாராகிய எல்லாரையும், மோசே வரவழைத்தான். 3 அவர்கள், இஸ்ரவேல் புத்திரர் திருப்பணிக்கடுத்த சகல வேலைகளுக்காகவும் கொண்டுவந்த காணிக்கைப் பொருள்களையெல்லாம், மோசேயினிடத்தில் வாங்கிக்கொண்டார்கள். பின்னும் ஜனங்கள் காலைதோறும் தங்களுக்கு இஷ்டமான காணிக்கைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள். 4 அப்பொழுது பரிசுத்த ஸ்தலத்து வேலைகளைச் செய்கிற விவேகிகள் யாவரும் அவரவர் செய்கிற வேலையின் காரியமாய் வந்து, 5 மோசேயை நோக்கி: கர்த்தர் செய்யும்படி கற்பித்த வேலைக்கு வேண்டியதற்கு அதிகமான பொருள்களை ஜனங்கள் கொண்டுவருகிறார்கள் என்றார்கள். 6 அப்பொழுது மோசே இனி புருஷர்களாவது ஸ்திரீகளாவது பரிசுத்த ஸ்தலத்துக்கென்று காணிக்கையாக ஒரு வேலையும் செய்யவேண்டாம் என்று பாளயம் எங்கும் கூறும்படி கட்டளையிட்டான்; இவ்விதமாய் ஜனங்கள் கொண்டுவருகிறது நிறுத்தப்பட்டது. 7 செய்யவேண்டிய எல்லா வேலைகளுக்கும் போதுமான பொருள்கள் இருந்ததுமல்லாமல் அதிகமாயும் இருந்தது. 8 வேலைசெய்கிறவர்களாகிய ஞான இருதயமுள்ள யாவரும் வாசஸ்தலத்தை உண்டாக்கினார்கள். அதற்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், விநோத நெசவுவேலையாகிய கேருபீன்களுள்ள பத்து மூடுதிரைகளைப் பண்ணினான். 9 ஒவ்வொரு மூடுதிரை இருபத்தெட்டு முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; மூடுதிரைகளெல்லாம் ஒரே அளவாயிருந்தது. 10 ஐந்து மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்து, மற்ற ஐந்து மூடுதிரைகளையும் ஒன்றோடொன்று இணைத்தான். 11 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் இளநீலநூலால் ஐம்பது காதுகளை உண்டுபண்ணி, அப்படியே இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்திலும் உண்டுபண்ணினான். 12 காதுகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவைகளாயிருந்தது. 13 ஐம்பது பொன் கொக்கிகளையும் பண்ணி, அந்தக் கொக்கிகளால் மூடுதிரைகளை ஒன்றோடொன்று இணைத்துவிட்டான். இவ்விதமாக ஒரே வாசஸ்தலமாயிற்று. 14 வாசஸ்தலத்தின்மேல் கூடாரமாகப் போடும்படி ஆட்டுமயிரினால் நெய்த பதினொரு மூடுதிரைகளையும் பண்ணினான். 15 ஒவ்வொரு மூடுதிரை முப்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது. பதினொரு மூடுதிரைகளும் ஒரே அளவாயிருந்தது. 16 ஐந்து மூடுதிரைகளை ஒன்றாகவும், மற்ற ஆறு மூடுதிரைகளை ஒன்றாகவும் இணைத்து, 17 இணைக்கப்பட்ட ஒரு மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும், இணைக்கப்பட்ட மற்ற மூடுதிரையின் ஓரத்தில் ஐம்பது காதுகளையும் உண்டாக்கி, 18 கூடாரத்தை ஒன்றாய் இணைத்துவிட, ஐம்பது வெண்கலக் கொக்கிகளையும் உண்டாக்கினான். 19 சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத் தோலினால் கூடாரத்துக்கு ஒரு மூடியையும் அதின்மேல் போடத் தகசுத்தோலினால் ஒரு மூடியையும் உண்டுபண்ணினான். 20 வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்துநிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் செய்தான். 21 ஒவ்வொரு பலகையும் பத்துமுழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாயிருந்தது. 22 ஒவ்வொரு பலகைக்கும் ஒன்றுக்கொன்று சமதூரமான இரண்டு கழுந்துகள் இருந்தது; வாசஸ்தலத்தின் பலகைகளுக்கெல்லாம் இப்படியே செய்தான். 23 வாசஸ்தலத்திற்காகச் செய்யப்பட்ட பலகைகளில் தெற்கே தென்திசைக்கு இருபது பலகைகளை உண்டாக்கி, 24 அந்த இருபது பலகைகளின் கீழே வைக்கும் நாற்பது வெள்ளிப் பாதங்களையும் உண்டுபண்ணினான்; ஒரு பலகையின் கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும், மற்றப் பலகையின்கீழ் அதின் இரண்டு கழுந்துகளுக்கும் இரண்டு பாதங்களையும் பண்ணிவைத்து; 25 வாசஸ்தலத்தின் மறுபக்கமாகிய வடபுறத்தில் இருபது பலகைகளையும், அவைகளுக்கு நாற்பது வெள்ளிப் பாதங்களையும் செய்தான். 26 ஒரு பலகையின்கீழ் இரண்டு பாதங்களும், மற்றப் பலகையின்கீழ் இரண்டு பாதங்களும் செய்தான். 27 வாசஸ்தலத்தின் மேல்புறத்திற்கு ஆறு பலகைகளையும், 28 வாசஸ்தலத்தின் இருபக்கங்களிலுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் செய்தான். 29 அவைகள் கீழே இசைக்கப்பட்டிருந்தது, மேலேயும் ஒரு வளையத்தினால் இசைக்கப்பட்டிருந்தது; இரண்டு மூலைகளிலுமுள்ள அவ்விரண்டிற்கும் அப்படியே செய்தான். 30 அப்படியே எட்டுப் பலகைகளும், அவைகளுடைய ஒவ்வொரு பலகையின் கீழ் இரண்டிரண்டு பாதங்களாகப் பதினாறு வெள்ளிப்பாதங்களும் இருந்தது. 31 சீத்திம் மரத்தால் வாசஸ்தலத்தின் ஒரு பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், 32 வாசஸ்தலத்தின் மறுபக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும், வாசஸ்தலத்தின் மேல்புறமான பின்பக்கத்துப் பலகைகளுக்கு ஐந்து தாழ்ப்பாள்களையும் பண்ணினான். 33 நடுத்தாழ்ப்பாள் ஒரு முனை தொடங்கி மறுமுனைமட்டும் பலகைகளின் மையத்தில் உருவப்பாயும்படி செய்தான். 34 பலகைகளைப் பொன்தகட்டால் மூடி, தாழ்ப்பாள்களின் இடங்களாகிய அவைகளின் வளையங்களைப் பொன்னினால் பண்ணி, தாழ்ப்பாள்களைப் பொன்தகட்டால் மூடினான். 35 இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்டதும், விசித்திரவேலையாகிய கேருபீன்களுள்ளதுமான ஒரு திரைச்சீலையை உண்டுபண்ணி, 36 அதற்குச் சீத்திம் மரத்தினால் நாலு தூண்களைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, அவைகளின் கொக்கிகளைப் பொன்னினால் பண்ணி, அவைகளுக்கு நான்கு வெள்ளிப்பாதங்களை வார்ப்பித்தான். 37 கூடாரவாசலுக்கு இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்த சித்திரத் தையல்வேலையான ஒரு தொங்குதிரையையும், 38 அதின் ஐந்து தூண்களையும், அவைகளின் வளைவாணிகளையும் உண்டாக்கி, அவைகளின் குமிழ்களையும் வளையங்களையும் பொன்தகட்டால் மூடினான்; அவைகளின் ஐந்து பாதங்களும் வெண்கலமாயிருந்தது.

யாத்திராகமம் 37

1 பெசலெயேல் சீத்திம் மரத்தினால் பெட்டியை உண்டுபண்ணினான்; அதின் நீளம் இரண்டரை முழமும் அதின் அகலம் ஒன்றரை முழமும் அதின் உயரம் ஒன்றரை முழமுமானது. 2 அதை உள்ளும் புறம்பும் பசும்பொன் தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டாக்கி, 3 அதற்கு நான்கு பொன் வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு மூலைகளிலும் போட்டு, ஒரு பக்கத்தில் இரண்டு வளையங்களும் மறுபக்கத்தில் இரண்டு வளையங்களும் இருக்கும்படி தைத்து, 4 சீத்திம் மரத்தினால் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, 5 அந்தத் தண்டுகளால் பெட்டியைச் சுமக்கும்படி, அவைகளைப் பெட்டியின் பக்கங்களில் இருக்கும் வளையங்களிலே பாய்ச்சினான். 6 கிருபாசனத்தையும் பசும்பொன்னினால் பண்ணினான்; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமானது. 7 தகடாய் அடிக்கப்பட்ட பொன்னினால் இரண்டு கேருபீன்களையும் உண்டாக்கி, கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலே, 8 ஒருபுறத்து ஓரத்தில் ஒரு கேருபீனும் மறுபுறத்து ஓரத்தில் மற்றக் கேருபீனுமாக அந்தக் கேருபீன்களைக் கிருபாசனத்தின் இரண்டு ஓரங்களிலும் அதனோடே ஏக வேலைப்பாடாகவே பண்ணினான். 9 அந்தக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை உயர விரித்து, தங்கள் செட்டைகளால் கிருபாசனத்தை மூடுகிறவைகளும், ஒன்றுக்கொன்று எதிர்முகமுள்ளவைகளுமாயிருந்தது; கேருபீன்களின் முகங்கள் கிருபாசனத்தை நோக்கிக்கொண்டிருந்தது. 10 மேஜையையும் சீத்திம் மரத்தால் பண்ணினான்; அது இரண்டு முழ நீளமும் ஒரு முழ அகலமும் ஒன்றரை முழ உயரமுமானது. 11 அதைப் பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டாக்கி, 12 சுற்றிலும் அதற்கு நான்கு விரற்கடையான சட்டத்தையும், அதின் சட்டத்திற்குச் சுற்றிலும் பொன் திரணையையும் உண்டுபண்ணி, 13 அதற்கு நான்கு பொன்வளையங்களை வார்ப்பித்து, அவைகளை அதின் நாலு கால்களுக்கு இருக்கும் நாலு மூலைகளிலும் தைத்தான். 14 அந்த வளையங்கள் மேஜையைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாயிருக்கும்படி சட்டத்தின் அருகே இருந்தது. 15 மேஜையைச் சுமக்கும் அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளைப் பொன்தகட்டால் மூடி, 16 மேஜையின்மேலிருக்கும் பாத்திரங்களாகிய அதின் பணிமுட்டுகளையும், அதின் தட்டுகளையும், தூபக்கரண்டிகளையும், அதின் பானபலி கரகங்களையும், மூடுகிறதற்கான அதின் கிண்ணங்களையும் பசும்பொன்னினால் உண்டாக்கினான். 17 குத்துவிளக்கையும் பசும்பொன்னினால் அடிப்புவேலையாய் உண்டாக்கினான்; அதின் தண்டும் கிளைகளும் மொக்குகளும் பழங்களும் பூக்களும் பொன்னினால் செய்யப்பட்டிருந்தது. 18 குத்துவிளக்கின் ஒரு பக்கத்தில் மூன்று கிளைகளும் அதின் மறுபக்கத்தில் மூன்று கிளைகளுமாக அதின் பக்கங்களில் ஆறு கிளைகள் செய்யப்பட்டது. 19 ஒவ்வொரு கிளையிலே வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான மூன்று மொக்குகளும் ஒரு பழமும் ஒரு பூவும் இருந்தது; குத்துவிளக்கில் செய்யப்பட்ட ஆறு கிளைகளிலும் அப்படியே இருந்தது. 20 விளக்குத்தண்டில் வாதுமைக்கொட்டைக்கு ஒப்பான நாலு மொக்குகளும் பழங்களும் பூக்களும் இருந்தது. 21 அதில் செய்யப்பட்ட இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், வேறு இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும், மற்ற இரண்டு கிளைகளின்கீழ் ஒரு பழமும் இருந்தது; விளக்குத்தண்டில் செய்யப்பட்ட ஆறுகிளைகளுக்கும் அப்படியே இருந்தது. 22 அவைகளின் பழங்களும் அவைகளின் கிளைகளும் பசும்பொன்னினால் ஒரே அடிப்பு வேலையாய்ச் செய்யப்பட்டது. 23 அதின் ஏழு அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும் பசும்பொன்னினால் செய்தான். 24 அதையும் அதின் பணிமுட்டுகள் யாவையும் ஒரு தாலந்து பசும்பொன்னினால் செய்தான். 25 தூபபீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்கினான்; அது ஒரு முழ நீளமும் ஒரு முழ அகலமுமான சதுரமும் இரண்டு முழ உயரமுமாய் இருந்தது; அதின் கொம்புகள் அதனோடே ஏக வேலைப்பாடாயிருந்தது. 26 அதின் மேற்புறத்தையும், அதின் சுற்றுப்புறத்தையும், அதின் கொம்புகளையும், பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன் திரணையை உண்டுபண்ணி, 27 அந்தத் திரணையின்கீழ் அதின் இரண்டு பக்கங்களில் இருக்கும் இரண்டு மூலைகளிலும் இரண்டு பொன்வளையங்களைப் பண்ணி, அதைச் சுமக்கும் தண்டுகளைப் பாய்ச்சும் இடங்களாகத் தைத்து, 28 சீத்திம் மரத்தால் அந்தத் தண்டுகளைச் செய்து, அவைகளைப் பொன்தகட்டால் மூடினான். 29 பரிசுத்த அபிஷேகதைலத்தையும், சுத்தமான சுகந்தங்களின் தூபவர்க்கத்தையும், தைலக்காரன் வேலைக்கு ஒப்பாக உண்டுபண்ணினான்.

யாத்திராகமம் 38

1 தகனபலிபீடத்தையும் சீத்திம் மரத்தால் உண்டாக்கினான்; அது ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமும் சதுரவடிவும் மூன்று முழ உயரமுமானது. 2 அதின் நாலு மூலைகளிலும் அதனோடு ஏகமாயிருக்கிற அதின் நாலு கொம்புகளையும் உண்டாக்கி, அதை வெண்கலத்தகட்டால் மூடி, 3 அந்தப் பீடத்தின் சகல பணிமுட்டுகளாகிய சாம்பல் எடுக்கத்தக்க சட்டிகளையும், கரண்டிகளையும், கிண்ணிகளையும், முள்துறடுகளையும், நெருப்புச் சட்டிகளையும் உண்டாக்கினான்; அதின் பணிமுட்டுகளையெல்லாம் வெண்கலத்தினால் பண்ணினான். 4 வலைப்பின்னல்போன்ற ஒரு வெண்கலச் சல்லடையையும் பலிபீடத்திற்கு உண்டாக்கி, அதை அந்தப் பீடத்தின் சுற்றுக்குக் கீழே பாதி உயரத்தில் இருக்கத்தக்கதாக வைத்து, 5 அந்த வெண்கலச் சல்லடையின் நாலு மூலைகளிலும் தண்டுகளைப் பாய்ச்சுகிறதற்கு நாலு வளையங்களை வார்ப்பித்து, 6 அந்தத் தண்டுகளைச் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளை வெண்கலத்தகட்டால் மூடி, 7 பலிபீடத்தை அவைகளால் சுமக்கத்தக்கதாக, அதின் பக்கங்களிலுள்ள வளையங்களில் பாய்ச்சினான்; பலிபீடத்தை உள்வெளிவிட்டுப் பலகைகளினால் செய்தான். 8 ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டம் கூட்டமாய்க் கூடின ஸ்திரீகளின் தர்ப்பணங்களாலே, வெண்கலத் தொட்டியையும் அதின் வெண்கலப் பாதத்தையும் உண்டாக்கினான். 9 பிராகாரத்தையும் உண்டுபண்ணினான். தெற்கே தென்திசைக்கு எதிரான பிராகாரத்துக்குத் திரித்த மெல்லிய பஞ்சுநூலால் நெய்த நூறு முழ நீளமான தொங்குதிரைகளைச் செய்தான். 10 அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி. 11 வடபக்கத்துத் தொங்குதிரைகள் நூறு முழம்; அவைகளின் தூண்கள் இருபது; அவைகளின் வெண்கலப் பாதங்கள் இருபது; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளி. 12 மேற்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம்; அவைகளின் தூண்கள் பத்து; அவைகளின் பாதங்கள் பத்து; தூண்களின் கொக்கிகளும் அவைகளின் பூண்களும் வெள்ளி. 13 சூரியன் உதிக்கிற திசையாகிய கீழ்ப்பக்கத்துத் தொங்குதிரைகள் ஐம்பது முழம். 14 ஒருபுறத்துத் தொங்குதிரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று. 15 பிராகாரவாசலின் ஒருபுறத்துக்குச் சரியாக மறுபுறத்திலும் தொங்குதிரைகள் பதினைந்து முழம்; அவைகளின் தூண்கள் மூன்று; அவைகளின் பாதங்கள் மூன்று. 16 சுற்றுப்பிராகாரத்துத் தொங்குதிரைகளெல்லாம் மெல்லிய பஞ்சுநூலால் நெய்யப்பட்டிருந்தது. 17 தூண்களின் பாதங்கள் வெண்கலம்; தூண்களின் கொக்கிகளும் பூண்களும் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் வெள்ளி; பிராகாரத்தின் தூண்களெல்லாம் வெள்ளிப்பூண்கள் போடப்பட்டவைகளுமாயிருந்தது. 18 பிராகார வாசலின் தொங்குதிரை இளநீல நூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்யப்பட்ட விசித்திரத்தையல் வேலையாயிருந்தது; அதின் நீளம் இருபது முழம், அதின் அகலமும் உயரமும் பிராகாரத்தின் தொங்குதிரைகளுக்குச் சரியாய் ஐந்து முழம். 19 அவைகளின் தூண்கள் நாலு; அவைகளின் வெண்கலப் பாதங்கள் நாலு; அவைகளின் கொக்கிகள் வெள்ளி; அவைகளின் குமிழ்களை மூடிய தகடும் அவைகளின் பூண்களும் வெள்ளி. 20 வாசஸ்தலத்துக்கும் பிராகாரத்துக்கும் சுற்றிலும் இருந்த முளைகளெல்லாம் வெண்கலம். 21 மோசேயின் கட்டளைப்படி ஆசாரியனான ஆரோனின் குமாரனாகிய இத்தாமாரின் கையிலே லேவியரின் ஊழியத்திற்கென்று எண்ணிக் கொடுக்கப்பட்ட சாட்சியின் வாசஸ்தலத்துப் பொருள்களின் தொகை இதுவே. 22 யூதாவின் கோத்திரத்தில் ஊரின் மகனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் கர்த்தர் மோசேக்குக் கற்பித்ததை எல்லாம் செய்தான். 23 அவனோடேகூடத் தாண் கோத்திரத்து அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாப் சித்திரக் கொத்துவேலைக்காரனும், விநோத வேலைகளைச் செய்கிற தொழிலாளியும், இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய பஞ்சுநூலாலும் சித்திரத் தையல்வேலை செய்கிறவனுமாயிருந்தான். 24 பரிசுத்த ஸ்தலத்தின் வேலைகள் யாவற்றிற்கும் காணிக்கையாகக் கொடுக்கப்பட்டுச் செலவான பொன்னெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி இருபத்தொன்பது தாலந்தும் எழுநூற்று முப்பது சேக்கல் நிறையுமாய் இருந்தது. 25 சபையில் எண்ணப்பட்டவர்கள் கொடுத்த வெள்ளி பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி நூறு தாலந்தும், ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கல் நிறையுமாய் இருந்தது. 26 எண்ணப்பட்டவர்களின் தொகையில் சேர்ந்த இருபது வயது முதற்கொண்டு அதற்கு மேற்பட்ட ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேர்களில் ஒவ்வொரு தலைக்கு பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலின்படி அரைச்சேக்கலாகிய பெக்கா என்னும் விழுக்காடு சேர்ந்தது. 27 அந்த வெள்ளியில் நூறு தாலந்து வெள்ளியினால் பரிசுத்த ஸ்தலத்தின் பாதங்களும் திரையின் பாதங்களும் வார்ப்பிக்கப்பட்டது; பாதத்துக்கு ஒரு தாலந்து விழுக்காடு நூறு பாதங்களுக்கு நூறு தாலந்து செலவாயிற்று. 28 அந்த ஆயிரத்தெழுநூற்று எழுபத்தைந்து சேக்கலால் தூண்களுக்குப் பூண்களைப் பண்ணி, அவைகளின் குமிழ்களைத் தகடுகளால் மூடி, அவைகளுக்குப் பூண்களை உண்டாக்கினான். 29 காணிக்கையாகச் செலுத்தப்பட்ட வெண்கலமானது எழுபது தாலந்தும் இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையுமாய் இருந்தது. 30 அதினாலே ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவின் பாதங்களையும், வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், பலிபீடத்தின் சகல பணிமுட்டுகளையும், 31 சுற்றுப் பிராகாரத்தின் பாதங்களையும், பிராகாரவாசல் மறைவின் பாதங்களையும், வாசஸ்தலத்தின் சகல முளைகளையும், சுற்றுப்பிராகாரத்தின் சகல முளைகளையும் பண்ணினான்.

யாத்திராகமம் 39

1 கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறதற்கு வேண்டிய வஸ்திரங்களையும், ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களையும் செய்தார்கள். 2 ஏபோத்தைப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்பு நூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான். 3 அந்தப் பொன்னை, இளநீலநூலோடும் இரத்தாம்பரநூலோடும் சிவப்புநூலோடும் மெல்லிய பஞ்சுநூலோடும் சேர்த்து விசித்திரவேலையாய் நெய்யும்படிக்கு, மெல்லிய தகடுகளாய் அடித்து, அவைகளைச் சரிகைகளாகப் பண்ணினார்கள். 4 இரண்டு தோள்களின்மேலுள்ள அதின் இரண்டு முனைகளையும் சேர்த்தார்கள்; அது ஒன்றாய் இணைக்கப்பட்டிருந்தது. 5 அந்த ஏபோத்தின்மேலிருக்கும் விசித்திரமான கச்சை, அந்த வேலைக்கு ஒப்பாகவே பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும், திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, செய்யப்பட்டது. 6 இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை முத்திரை வெட்டுவேலையாகக் கோமேதகக் கற்களில் வெட்டி, அவைகளைப் பொன் குவளைகளில் பதித்தார்கள். 7 கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவைகள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து ஞாபகக்குறிக் கற்களாயிருக்கும்படி ஏபோத்துத் தோள்களின்மேல் அவைகளை வைத்தான். 8 மார்ப்பதக்கத்தை ஏபோத்தின் வேலைக்கு ஒத்த விசித்திரவேலையாகப் பொன்னினாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் செய்தான். 9 அந்த மார்ப்பதக்கத்தைச் சதுரமும் இரட்டையுமாய்ச் செய்து, ஒரு ஜாண் நீளமும் ஒரு ஜாண் அகலமுமாக்கி, 10 அதிலே நாலு பத்தி ரத்தினக்கற்களைப் பதித்தார்கள்; முதலாம் பத்தி பத்மராகமும் புஷ்பராகமும் மாணிக்கமும், 11 இரண்டாம் பத்தி மரகதமும் இந்திரநீலமும் வச்சிரமும், 12 மூன்றாம் பத்தி கெம்பும் வைடூரியமும் சுகந்தியும், 13 நாலாம் பத்தி படிகப்பச்சையும் கோமேதகமும் யஸ்பியுமானது. அவைகள் அந்தந்த இடங்களிலே பொன் குவளைகளில் பதிக்கப்பட்டிருந்தது. 14 இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருடைய நாமங்களின்படியே பன்னிரண்டும், அவர்களுடைய நாமங்களுள்ளவைகளுமாயிருந்தது; பன்னிரண்டு கோத்திரங்களில் ஒவ்வொரு கோத்திரத்தின் நாமம் ஒவ்வொன்றில் முத்திரை வெட்டாய் வெட்டியிருந்தது. 15 மார்ப்பதக்கத்துக்கு அதின் பக்கங்களிலே பின்னல் வேலையான பசும்பொன் சங்கிலிகளையும் பண்ணி, 16 இரண்டு பொன் குவளைகளையும் இரண்டு பொன் வளையங்களையும் செய்து, அந்த இரண்டு வளையங்களை மார்ப்பதக்கத்தின் இரண்டு பக்கத்திலும் வைத்து, 17 பொன்னினால் செய்த பின்னல் வேலையான அந்த இரண்டு சங்கிலிகளையும் மார்ப்பதக்கத்தின் பக்கங்களில் இருக்கிற இரண்டு வளையங்களிலும் மாட்டி, 18 பின்னல் வேலையான அவ்விரண்டு சங்கிலிகளின் இரண்டு நுனிகளையும் ஏபோத்தின் தோள்புறத்துத் துண்டுகள்மேல் முன்புறத்தில் இருக்கிற இரண்டு குவளைகளிலும் மாட்டினார்கள். 19 பின்னும் இரண்டு வளையங்களைப் பண்ணி, அவைகளை ஏபோத்தின் கீழ்ப்புறத்திற்கு எதிரான மார்ப்பதக்கத்தின் மற்ற இரண்டு பக்கங்களிலும் அதின் ஓரத்தில் வைத்து, 20 வேறே இரண்டு பொன் வளையங்களையும் பண்ணி, அவைகளை ஏபோத்தின் முன்புறத்தின் இரண்டு கீழ்ப்பக்கங்களில் அதின் இணைப்புக்கு எதிராகவும், ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாகவும் வைத்து, 21 மார்ப்பதக்கம் ஏபோத்தின் விசித்திரமான கச்சைக்கு மேலாக இருக்கும்படிக்கும், ஏபோத்திலிருந்து நீங்கிப்போகாதபடிக்கும், அதை அதின் வளையங்களால் ஏபோத்தின் வளையங்களோடே இளநீல நாடாவினாலே, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, கட்டினார்கள். 22 ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீலநூலால் நெய்தான். 23 அங்கியின் நடுவில் மார்க்கவசத் துவாரத்துக்கு ஒப்பாக ஒரு துவாரமும், அது கிழியாதபடி அந்தத் துவாரத்தைச் சுற்றிலும் ஒரு நாடாவும் தைத்திருந்தது. 24 அங்கியின் கீழ் ஓரங்களில் தொங்கத்தக்கதாகத் திரித்த இளநீலநூலும் இரத்தாம்பரநூலும் சிவப்புநூலுமான வேலையாக மாதளம்பழங்களைப் பண்ணி, 25 பசும்பொன்னினால் மணிகளையும் பண்ணி, அந்த மணிகளை அங்கியின் ஓரங்களில் சுற்றிலும் மாதளம்பழங்களின் இடைஇடையே தொங்கவைத்தார்கள். 26 கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே ஆராதனைக்குரிய அங்கியின் ஓரத்தைச் சுற்றிலும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமும், ஒரு மணியும் ஒரு மாதளம்பழமுமாய் இருந்தது. 27 ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் மெல்லிய பஞ்சுநூலால் நெசவுவேலையான அங்கிகளையும், 28 மெல்லிய பஞ்சுநூலால் பாகையையும், அலங்காரமான குல்லாக்களையும், திரித்த மெல்லிய சணல்நூலால் சல்லடங்களையும், 29 திரித்த மெல்லிய பஞ்சுநூலாலும் இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் சித்திரத் தையல்வேலையான இடைக்கச்சையையும், கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, செய்தார்கள். 30 பரிசுத்த கிரீடத்தின் பட்டத்தையும் பசும்பொன்னினாலே பண்ணி, கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் எழுத்துக்களை அதிலே முத்திரை வெட்டாக வெட்டி, 31 அதை உயரப் பாகையின்மேல் கட்டும்படி, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, இளநீல நாடாவினால் கட்டினார்கள். 32 இப்படியே ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள். 33 பின்பு, வாசஸ்தலத்தை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள்; கூடாரத்தையும், அதற்குரிய எல்லாப் பணிமுட்டுகளையும், அதின் துறடுகளையும், அதின் பலகைகளையும், அதின் தாழ்ப்பாள்களையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், 34 சிவப்புத்தீர்ந்த ஆட்டுக்கடாத்தோல் மூடியையும், தகசுத்தோல் மூடியையும், மறைவின் திரைச்சீலையையும், 35 சாட்சிப்பெட்டியையும், அதின் தண்டுகளையும், கிருபாசனத்தையும், 36 மேஜையையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களையும், 37 சுத்தமான குத்துவிளக்கையும், வரிசையாய் ஒழுங்குபடுத்தப்பட்ட அதின் அகல்களையும், அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், வெளிச்சத்திற்கு எண்ணெயையும், 38 பொற்பீடத்தையும், அபிஷேகதைலத்தையும், சுகந்த தூபவர்க்கத்தையும், வாசஸ்தலத்தின் வாசல் தொங்குதிரையையும், 39 வெண்கலப் பலிபீடத்தையும், அதின் வெண்கலச் சல்லடையையும், அதின் தண்டுகளையும், அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும், அதின் பாதத்தையும், 40 பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், அதின் தூண்களையும், அதின் பாதங்களையும், பிராகாரத்து வாசல் மறைவையும், அதின் கயிறுகளையும், அதின் முளைகளையும், ஆசரிப்புக் கூடாரமான வாசஸ்தலத்தின் வேலைக்கடுத்த சகல பணிமுட்டுகளையும், 41 பரிசுத்த ஸ்தலத்திலே செய்யும் ஆராதனைக்கடுத்த வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியஞ்செய்கிற ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் கொண்டுவந்தார்கள். 42 கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் சகல வேலைகளையும் செய்தார்கள். 43 மோசே அந்த வேலைகளையெல்லாம் பார்த்தான்; கர்த்தர் கற்பித்தபடியே அதைச் செய்திருந்தார்கள். மோசே அவர்களை ஆசீர்வதித்தான்.

யாத்திராகமம் 40

1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணு. 3 அதிலே சாட்சிப்பெட்டியை வைத்து, பெட்டியைத் திரையினால் மறைத்து, 4 மேஜையைக் கொண்டுவந்து, அதில் வைக்கவேண்டியதைக் கிரமமாய் வைத்து, குத்துவிளக்கைக் கொண்டுவந்து, அதின் விளக்குகளை ஏற்றி, 5 பொன் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைத்து, வாசஸ்தலத்து வாசலின் தொங்குதிரையைத் தூக்கிவைக்கக்கடவாய். 6 பின்பு, தகன பலிபீடத்தை ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, 7 தொட்டியை ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்த்து, 8 சுற்றுப் பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரவாசல் தொங்குதிரையைத் தூக்கிவைத்து, 9 அபிஷேக தைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவையும் அபிஷேகம்பண்ணி, அதையும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளையும் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது பரிசுத்தமாயிருக்கும். 10 தகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, அதைப் பரிசுத்தப்படுத்துவாயாக; அப்பொழுது அது மகா பரிசுத்தமான பலிபீடமாயிருக்கும். 11 தொட்டியையும் அதின் பாதத்தையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்துவாயாக. 12 பின்பு ஆரோனையும் அவன் குமாரரையும் ஆசரிப்புக் கூடாரவாசலில் வரச்செய்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து, 13 ஆரோனுக்குப் பரிசுத்த வஸ்திரங்களை உடுத்தி, எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு அவனை அபிஷேகம்பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக. 14 அவன் குமாரரையும் வரச்செய்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி, 15 அவர்கள் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி, அவர்களையும், அவர்கள் தகப்பனை அபிஷேகம்பண்ணினபடியே, அபிஷேகம்பண்ணுவாயாக; அவர்கள் பெறும் அந்த அபிஷேகம் தலைமுறைதோறும் நித்திய ஆசாரியத்துவத்துக்கு ஏதுவாயிருக்கும் என்றார். 16 கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் மோசே செய்தான். 17 இரண்டாம் வருஷம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் ஸ்தாபனம்பண்ணப்பட்டது. 18 மோசே கூடாரத்தை எடுப்பித்தான்; அவன் அதின் பாதங்களை வைத்து, அதின் பலகைகளை நிறுத்தி, அதின் தாழ்ப்பாள்களைப் பாய்ச்சி, அதின் தூண்களை நாட்டி, 19 வாசஸ்தலத்தின்மேல் கூடாரத்தை விரித்து, அதின்மேல் கூடாரத்தின் மூடியை, கர்த்தர் தனக்குக் கற்பித்தபடியே போட்டான். 20 பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, சாட்சிப்பிரமாணத்தை எடுத்து, அதைப் பெட்டியிலே வைத்து, பெட்டியில் தண்டுகளைப்பாய்ச்சி, பெட்டியின்மேல் கிருபாசன மூடியை வைத்து, 21 பெட்டியை வாசஸ்தலத்துக்குள்ளே கொண்டுபோய், மறைவின் திரைச்சீலையைத் தொங்கவைத்து, சாட்சிப்பெட்டியை மறைத்துவைத்தான். 22 பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, மேஜையை ஆசரிப்புக் கூடாரத்தில் வாசஸ்தலத்தின் வடபுறமாய்த் திரைக்குப் புறம்பாக வைத்து, 23 அதின்மேல் கர்த்தருடைய சமுகத்தில் அப்பத்தை வரிசையாக அடுக்கி வைத்தான். 24 பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, குத்துவிளக்கை ஆசரிப்புக் கூடாரத்தில் மேஜைக்கு எதிராக வாசஸ்தலத்தின் தென்புறத்திலே வைத்து, 25 கர்த்தருடைய சந்நிதியில் விளக்குகளை ஏற்றினான். 26 பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, ஆசரிப்புக் கூடாரத்தில் திரைக்கு முன்பாகப் பொற்பீடத்தை வைத்து, 27 அதின்மேல் சுகந்தவர்க்கத்தினால் தூபங்காட்டினான். 28 பின்பு, கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, வாசஸ்தலத்தின் தொங்குதிரையைத் தூக்கிவைத்து, 29 தகனபலிபீடத்தை ஆசரிப்புக் கூடாரமான வாசஸ்தலத்தின் வாசலுக்கு முன்பாக வைத்து, அதின்மேல் சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் செலுத்தினான். 30 அவன் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே தொட்டியை வைத்து, கழுவுகிறதற்கு அதிலே தண்ணீர் வார்த்தான். 31 அவ்விடத்திலே மோசேயும் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள். 32 கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியே, அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்குள்ளே பிரவேசிக்கிறபோதும், பலிபீடத்தண்டையில் சேருகிறபோதும், அவர்கள் கழுவிக்கொள்ளுவார்கள். 33 பின்பு, அவன் வாசஸ்தலத்தையும் பலிபீடத்தையும் சுற்றிப் பிராகாரத்தை நிறுத்தி, பிராகாரத்தின் தொங்குதிரையைத் தொங்கவைத்தான்; இவ்விதமாய் மோசே வேலையை முடித்தான். 34 அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக் கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று. 35 மேகம் அதின்மேல் தங்கி, கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பினதினால், மோசே ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கக்கூடாமல் இருந்தது. 36 வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் பண்ணப் புறப்படுவார்கள். 37 மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பிரயாணம் பண்ணாதிருப்பார்கள். 38 இஸ்ரவேல் வம்சத்தார் பண்ணும் எல்லாப் பிரயாணங்களிலும் அவர்களெல்லாருடைய கண்களுக்கும் பிரத்தியட்சமாகப் பகலில் கர்த்தருடைய மேகமும், இரவில் அக்கினியும், வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருந்தது.

லேவியராகமம் 1

1 கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனை நோக்கி: 2 நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டுமந்தையிலாவது ஆட்டுமந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்த வேண்டும். 3 அவன் செலுத்துவது மாட்டு மந்தையிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், அவன் பழுதற்ற ஒரு காளையைச் செலுத்துவானாக; கர்த்தருடைய சந்நிதியில் தான் அங்கிகரிக்கப்படும்படி, அவன் அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் கொண்டுவந்து, 4 அது தன் பாவநிவிர்த்திக்கென்று அங்கிகரிக்கப்படும்படி தன் கையை அதின் தலையின்மேல் வைத்து, 5 கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தை எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். 6 பின்பு அவன் அந்தச் சர்வாங்க தகனபலியைத் தோலுரித்து, அதைச் சந்துசந்தாகத் துண்டிக்கக்கடவன். 7 அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் பலிபீடத்தின்மேல் அக்கினியைப் போட்டு, அக்கினியின்மேல் கட்டைகளை அடுக்கி, 8 அவன் குமாரராகிய ஆசாரியர்கள், துண்டங்களையும் தலையையும் கொழுப்பையும் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவர்கள். 9 அதின் குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி. 10 அவன் செலுத்துவது செம்மறியாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது வெள்ளாட்டு மந்தையிலுள்ள ஆடுகளிலாவது எடுக்கப்பட்ட சர்வாங்க தகன பலியானால், பழுதற்ற ஒரு கடாவைக் கொண்டுவந்து, 11 கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்தின் வடபுறத்தில் அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்கள் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். 12 பின்பு அவன் அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, அதின் தலையையும் கொழுப்பையும் கூடவைப்பானாக; அவைகளை ஆசாரியன் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் அடுக்கிவைக்கக்கடவன். 13 குடல்களையும் தொடைகளையும் அவன் தண்ணீரினால் கழுவுவானாக; அவைகளையெல்லாம் ஆசாரியன் கொண்டுவந்து பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி. 14 அவன் கர்த்தருக்குச் செலுத்துவது பறவைகளிலிருந்து எடுக்கப்பட்ட சர்வாங்க தகனபலியானால், காட்டுப் புறாக்களிலாவது புறாக்குஞ்சுகளிலாவது எடுத்துச் செலுத்தக்கடவன். 15 அதை ஆசாரியன் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து, அதின் தலையைக்கிள்ளி, பலிபீடத்தில் தகனித்து, அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின் பக்கத்தில் சிந்தவிட்டு, 16 அதின் இரைப்பையை அதின் மலத்தோடுங்கூட எடுத்து, அதைப் பலிபீடத்தண்டையில் கீழ்புறமாகச் சாம்பல் இருக்கிற இடத்திலே எறிந்துவிட்டு, 17 பின்பு அதின் செட்டைகளுடன் அதை இரண்டாக்காமல் பிளப்பானாக; பின்பு ஆசாரியன் அதைப் பலிபீடத்திலுள்ள அக்கினியில் இருக்கிற கட்டைகளின்மேல் தகனிக்கக்கடவன்; இது சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி.

லேவியராகமம் 2

1 ஒருவன் போஜனபலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்தவேண்டுமானால், அவன் காணிக்கை மெல்லிய மாவாயிருப்பதாக; அவன் அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கம் போட்டு, 2 அதை ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களிடத்தில் கொண்டுவருவானாக; அப்பொழுது ஆசாரியன் அந்த மாவிலும் எண்ணெயிலும் ஒரு கைப்பிடி நிறைய தூபவர்க்கம் எல்லாவற்றோடும் எடுத்து, அதைப் பலிபீடத்தின்மேல் ஞாபகக்குறியாகத் தகனிக்கக்கடவன்; அது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி. 3 அந்தப் போஜனபலியில் மீதியாயிருப்பது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனபலிகளில் இது மகா பரிசுத்தமானது. 4 நீ படைப்பது அடுப்பில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்த புளிப்பில்லா அதிரசங்களாயாவது, எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளாயாவது இருப்பதாக. 5 நீ படைப்பது தட்டையான சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா மெல்லிய மாவினால் செய்யப்பட்டதாயிருப்பதாக. 6 அதைத் துண்டு துண்டாகப் பிட்டு, அதின்மேல் எண்ணெய் வார்ப்பாயாக; இது ஒரு போஜனபலி. 7 நீ படைப்பது பொரிக்குஞ் சட்டியில் பாகம்பண்ணப்பட்ட போஜனபலியானால், அது எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் செய்யப்படுவதாக. 8 இப்படிச் செய்யப்பட்ட போஜனபலியைக் கர்த்தருக்குச் செலுத்துவாயாக; அது ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படும்போது, அவன் அதைப் பலிபீடத்தண்டையில் கொண்டுவந்து, 9 அந்தப் போஜனபலியிலிருந்து ஆசாரியன் ஞாபகக்குறியாக ஒரு பங்கை எடுத்துப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி. 10 இந்தப் போஜனபலியில் மீதியானது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; கர்த்தருக்கு இடும் தகனங்களில் இது மகா பரிசுத்தமானது. 11 நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தும் எந்த போஜனபலியும் புளித்தமாவினால் செய்யப்படாதிருப்பதாக; புளித்தமாவுள்ளதொன்றையும் தேனுள்ளதொன்றையும் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கவேண்டாம். 12 முதற்கனிகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்து, அவைகளைக் கர்த்தருக்குச் செலுத்தலாம்; ஆனாலும், பலிபீடத்தின்மேல் அவைகள் சுகந்த வாசனையாகத் தகனிக்கப்படலாகாது. 13 நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனுடைய உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக. 14 முதற்பலன்களை போஜனபலியாக நீ கர்த்தருக்குச் செலுத்தவந்தால், நிறைந்த பச்சையான கதிர்களை நெருப்பிலே வாட்டி உதிர்த்து, அதை உன் முதற்பலனின் போஜனபலியாகக் கொண்டுவரக்கடவாய். 15 அதின்மேல் எண்ணெய் வார்த்து, அதின்மேல் தூபவர்க்கத்தைப் போடுவாயாக; இது ஒரு போஜனபலி. 16 பின்பு ஆசாரியன், உதிர்த்த தானியத்திலும் எண்ணெயிலும் எடுத்து, ஞாபகக்குறியான பங்கை அதின் தூபவர்க்கம் எல்லாவற்றோடுங்கூடத் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகனபலி.

லேவியராகமம் 3

1 ஒருவன் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று, மாட்டுமந்தையில் எடுத்துச் செலுத்துவானாகில், அது காளையானாலும் சரி, பசுவானாலும் சரி, பழுதற்றிருப்பதை கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன். 2 அவன் தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரராகிய ஆசாரியர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். 3 பின்பு சமாதான பலியிலே குடல்களை மூடிய கொழுப்பையும், குடல்களிலுள்ள கொழுப்பு முழுவதையும், 4 இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்துவானாக. 5 அதை ஆரோனின் குமாரர் பலிபீடத்து அக்கினியிலுள்ள கட்டைகளின்மேல் போட்டிருக்கும் சர்வாங்க தகனபலியின்மீதில் போட்டுத் தகனிக்கக்கடவர்கள்; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி. 6 அவன் கர்த்தருக்குச் சமாதான பலியைப் படைக்கவேண்டுமென்று ஆட்டு மந்தையிலிருந்து எடுத்துச் செலுத்துவானாகில், அது ஆண் ஆனாலும் சரி, பெண் ஆனாலும் சரி, பழுதற்றிருப்பதைச் செலுத்துவானாக. 7 அவன் ஆட்டுக்குட்டியைப் பலியாகச் செலுத்தவேண்டுமானால், அதைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, 8 தன் பலியின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். 9 பின்பு அவன் சமாதான பலியிலே அதின் கொழுப்பையும், நடுவெலும்பிலிருந்து எடுத்த முழு வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகளின்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும், 10 இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன். 11 அதை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது கர்த்தருக்கு இடும் தகன ஆகாரம். 12 அவன் செலுத்துவது வெள்ளாடாயிருக்குமானால், அவன் அதை கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, 13 அதின் தலைமேல் தன் கையை வைத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அதைக் கொல்லக்கடவன்; அப்பொழுது ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளிக்கக்கடவர்கள். 14 அவன் அதிலே குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேலிருக்கிற கொழுப்பு முழுவதையும், 15 இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்து, கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தக்கடவன். 16 ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளைத் தகனிக்கக்கடவன்; இது சுகந்த வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் கர்த்தருடையது. 17 கொழுப்பையாவது இரத்தத்தையாவது நீங்கள் புசிக்கலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்கள் எங்கும் உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்று சொல் என்றார்.

லேவியராகமம் 4

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால் அறியவேண்டியதாவது: 3 அபிஷேகம் பெற்ற ஆசாரியன், ஜனங்கள் குற்றத்திற்கு உட்படத்தக்கதாகப் பாவஞ்செய்தால், தான் செய்த பாவத்தினிமித்தம் பழுதற்ற ஒரு இளங்காளையைப் பாவநிவாரணபலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன். 4 அவன் அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அதின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் அதைக் கொல்லக்கடவன். 5 அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அந்தக் காளையின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதை ஆசரிப்புக் கூடாரத்தில் கொண்டுவந்து, 6 தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிக்கக்கடவன். 7 பின்பு, ஆசாரியன் அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் சுகந்த தூபபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, காளையினுடைய மற்ற இரத்தம் முழுவதையும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு, 8 பாவநிவாரணபலியான காளையின் எல்லாக் கொழுப்புமாகிய குடல்களை மூடிய கொழுப்பையும், அவைகள்மேல் இருக்கிற கொழுப்பு முழுவதையும், 9 இரண்டு குண்டிக்காய்களையும், அவைகள்மேல் சிறு குடல்களினிடத்தில் இருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும், 10 சமாதானபலியின் காளையிலிருந்து எடுக்கிறதுபோல அதிலிருந்து எடுத்து, அவைகளைத் தகனபலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன். 11 காளையின் தோலையும், அதின் மாம்சம் முழுவதையும், அதின் தலையையும், தொடைகளையும், அதின் குடல்களையும், அதின் சாணியையும், 12 காளை முழுவதையும் பாளயத்துக்குப் புறம்பே சாம்பல் கொட்டுகிற சுத்தமான இடத்திலே கொண்டுபோய், கட்டைகளின்மேல் போட்டு, அக்கினியாலே சுட்டெரிக்கக்கடவன்; சாம்பல் கொட்டியிருக்கிற இடத்திலே அதைச் சுட்டெரிக்கக்கடவன். 13 இஸ்ரவேல் சபையார் எல்லாரும் அறியாமையினால் பாவஞ்செய்து, காரியம் தங்கள் கண்களுக்கு மறைவாயிருக்கிறதினால், கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளிகளானால், 14 அவர்கள் செய்த பாவம் தெரியவரும்போது, சபையார் அந்தப் பாவத்தினிமித்தம் ஒரு இளங்காளையை ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகப் பலியிடக் கொண்டுவரவேண்டும். 15 சபையின் மூப்பர் கர்த்தருடைய சந்நிதியில் தங்கள் கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லவேண்டும். 16 அப்பொழுது, அபிஷேகம் பெற்ற ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்தில் கொண்டுவந்து, 17 தன் விரலை இரத்தத்தில் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் திரைக்கு எதிரே ஏழுதரம் தெளித்து, 18 ஆசரிப்புக் கூடாரத்தில் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கும் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் அந்த இரத்தத்தில் கொஞ்சம் பூசி, மற்ற இரத்தமெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலில் இருக்கிற தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு, 19 அதின் கொழுப்பு முழுவதையும் அதிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து, 20 பாவநிவாரணபலியின் காளையைச் செய்தபிரகாரம் இந்தக் காளையையும் செய்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவர்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவர்களுக்கு மன்னிக்கப்படும். 21 பின்பு காளையைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், முந்தின காளையைச் சுட்டெரித்ததுபோலச் சுட்டெரிக்கக்கடவன்; இது சபைக்காகச் செய்யப்படும் பாவநிவாரணபலி. 22 ஒரு பிரபு தன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை மீறி, அறியாமையினால் செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால், 23 தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு இளங்கடாவைப் பலியாகக் கொண்டுவந்து, 24 அந்தக் கடாவின் தலைமேல் தன் கையை வைத்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைக் கொல்லக்கடவன்; இது பாவநிவாரணபலி. 25 அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைத் தகனபலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு, 26 அதின் கொழுப்பு முழுவதையும், சமாதானபலியின் கொழுப்பைப்போல, பலிபீடத்தின்மேல் தகனித்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். 27 சாதாரண ஜனங்களில் ஒருவன் அறியாமையினால் கர்த்தரின் கட்டளைகளில் யாதொன்றை மீறி, செய்யத்தகாததைச் செய்து, பாவத்துக்குட்பட்டுக் குற்றவாளியானால், 28 தான் செய்தது பாவம் என்று தனக்குத் தெரியவரும்போது, அவன் தான் செய்த பாவத்தினிமித்தம் வெள்ளாடுகளில் பழுதற்ற ஒரு பெண்குட்டியைப் பலியாகக் கொண்டுவந்து, 29 பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்க தகனபலியிடும் இடத்தில் அந்தப் பாவநிவாரணபலியைக் கொல்லக்கடவன். 30 அப்பொழுது ஆசாரியன் அதின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகனபலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தமெல்லாம் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு, 31 சமாதானபலியிலிருந்து கொழுப்பை எடுப்பதுபோல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனித்து, இவ்வண்ணமாய் அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். 32 அவன் பாவநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டுவருவானாகில், பழுதற்ற பெண்குட்டியைக் கொண்டுவந்து, 33 அந்தப் பாவநிவாரணபலியின் தலைமேல் தன் கையை வைத்து, சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் அதைப் பாவநிவாரணபலியாகக் கொல்லக்கடவன். 34 அப்பொழுது ஆசாரியன் அந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் தன் விரலால் எடுத்து, தகன பலிபீடத்துக் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தமெல்லாம் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிட்டு, 35 சமாதான பலியான ஆட்டுக்குட்டியின் கொழுப்பை எடுக்கிறதுபோல, அதின் கொழுப்பு முழுவதையும் எடுத்து, கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் ஆசாரியன் தகனிக்கவேண்டும்; இவ்வண்ணமாய் அவன் செய்த பாவத்துக்கு ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும்.

லேவியராகமம் 5

1 சாட்சியாகிய ஒருவன், இடப்பட்ட ஆணையைக் கேட்டிருந்தும், தான் கண்டதையும் அறிந்ததையும் தெரிவியாதிருந்து பாவஞ்செய்தால், அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான். 2 அசுத்தமான காட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலையாவது, அசுத்தமான ஊரும் பிராணிகளின் உடலையாவது, இவ்வித அசுத்தமான யாதொரு வஸ்துவையாவது, ஒருவன் அறியாமல் தொட்டால், அவன் தீட்டும் குற்றமும் உள்ளவனாவான். 3 அல்லது, எந்த அசுத்தத்தினாலாகிலும் தீட்டுப்பட்ட ஒரு மனிதனை ஒருவன் அறியாமல் தொட்டு, பின்பு அதை அறிந்துகொண்டால், அவன் குற்றமுள்ளவனாவான். 4 மனிதர் பதறி ஆணையிடும் எந்தக் காரியத்திலானாலும், ஒருவன் தீமை செய்கிறதற்காவது நன்மை செய்கிறதற்காவது, தன் மனம் அறியாமல், தன் உதடுகளினால் பதறி ஆணையிட்டு, பின்பு அவன் அதை அறிந்துகொண்டால், அதைக்குறித்துக் குற்றமுள்ளவனாவான். 5 இப்படிப்பட்டவைகள் ஒன்றில், ஒருவன் குற்றமுள்ளவனாகும்போது, அவன் தான் செய்தது பாவம் என்று அறிக்கையிட்டு, 6 தான் செய்த பாவத்துக்குப் பாவநிவாரணபலியாக, ஆடுகளிலாவது வெள்ளாடுகளிலாவது, ஒரு பெண்குட்டியைக் குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தைக்குறித்து அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். 7 ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், அவன் செய்த குற்றத்தினிமித்தம் இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும், கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன். 8 அவைகளை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் பாவநிவாரண பலிக்கானதை முன்னே செலுத்தி, அதின் தலையை அதின் கழுத்தினிடத்தில் கிள்ளி, அதை இரண்டாக்காமல் வைத்து, 9 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின் பக்கத்தில் தெளித்து, மீதியான இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே வடியவிடுவானாக; இது பாவநிவாரணபலி. 10 மற்றதை நியமத்தின்படியே அவன் தகனபலியாய்ச் செலுத்தக்கடவன்; இவ்விதமாக அவன் செய்த பாவத்தை ஆசாரியன் நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். 11 இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவர அவனுக்குச் சக்தியில்லாதிருந்தால், பாவம் செய்தவன் பாவநிவாரணத்துக்காக ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கைத் தன் காணிக்கையாகக் கொண்டுவருவானாக; அது பாவநிவாரண பலியாயிருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருந்து, 12 அதை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்; அதிலே ஆசாரியன் ஞாபகக்குறியான பங்காகத் தன் கைப்பிடி நிறைய எடுத்து, கர்த்தருக்கு இடும் தகனபலிகளைப்போல, பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன்; இது பாவநிவாரணபலி. 13 இவ்விதமாக மேற்சொல்லிய காரியங்கள் ஒன்றில் அவன் செய்த பாவத்துக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும், மீதியானது போஜனபலியைப்போல ஆசாரியனைச் சேரும் என்றார். 14 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 15 ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படியே, நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ, அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவைக் குற்ற நிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, 16 பரிசுத்தமானதைக்குறித்துத் தான் செய்த தப்பிதத்தினால் உண்டான நஷ்டத்தைச் செலுத்தி, அதினோடு ஐந்தில் ஒரு பங்கை அதிகமாகக் கூட்டி, ஆசாரியனுக்குக் கொடுப்பானாக; குற்றநிவாரணபலியாகிய ஆட்டுக்கடாவினாலே அவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். 17 ஒருவன் செய்யத்தகாதென்று கர்த்தருடைய கட்டளைகளினால் விலக்கப்பட்ட யாதொன்றைச் செய்து பாவத்துக்குட்பட்டால், அதை அவன் அறியாமையினால் செய்தாலும், அவன் குற்றமுள்ளவனாயிருந்து, தன் அக்கிரமத்தைச் சுமப்பான். 18 அதினிமித்தம் அவன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவை ஆசாரியனிடத்தில் கொண்டுவருவானாக; அவன் அறியாமல் செய்த தப்பிதத்தை ஆசாரியன் அவனுக்காக நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு மன்னிக்கப்படும். 19 இது குற்றநிவாரணபலி; அவன் கர்த்தருக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தான் என்பது நிச்சயம் என்றார்.

லேவியராகமம் 6

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 2 ஒருவன் கர்த்தருக்கு விரோதமாக அநியாயம் செய்து, தன் வசத்தில் ஒப்புவிக்கப்பட்ட பொருளிலாவது, கொடுக்கல் வாங்கலிலாவது, தன் அயலானுக்கு மாறாட்டம்பண்ணி, அல்லது ஒரு வஸ்துவைப் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டு, அல்லது தன் அயலானுக்கு இடுக்கண்செய்து, 3 அல்லது காணாமற்போனதைக் கண்டடைந்தும் அதை மறுதலித்து, அதைக்குறித்துப் பொய்யாணையிட்டு, மனிதர் செய்யும் இவைமுதலான யாதொரு காரியத்தில் பாவஞ்செய்தானேயாகில், 4 அவன் செய்த பாவத்தினாலே குற்றவாளியானபடியால், தான் பலாத்காரமாய்ப் பறித்துக்கொண்டதையும், இடுக்கண்செய்து பெற்றுக்கொண்டதையும், தன் வசத்திலே ஒப்புவிக்கப்பட்டதையும், காணாமற்போயிருந்து தான் கண்டெடுத்ததையும், 5 பொய்யாணையிட்டுச் சம்பாதித்த பொருளையும் திரும்பக் கொடுக்கக்கடவன்; அந்த முதலைக் கொடுக்கிறதும் அல்லாமல், அதினோடு ஐந்தில் ஒரு பங்கு அதிகமாகவுங் கூட்டி, அதைத் தான் குற்றநிவாரணபலியை இடும் நாளில், அதற்குரியவனுக்குக் கொடுத்துவிட்டு, 6 தன் குற்றநிவாரணபலியாக, உன் மதிப்புக்குச் சரியான பழுதற்ற ஆட்டுக்கடாவைக் கர்த்தருக்குச் செலுத்தும்படி, அதை ஆசாரியனிடத்தில் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவருவானாக. 7 கர்த்தருடைய சந்நிதியில் அவன் பாவத்தை ஆசாரியன் நிவிர்த்திசெய்யக்கடவன்; அப்பொழுது அவன் குற்றவாளியாகச் செய்த அப்படிப்பட்ட எந்தக் காரியமும் அவனுக்கு மன்னிக்கப்படும் என்றார். 8 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 9 நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின்மேலுள்ள அக்கினி எரிந்துகொண்டே இருக்கவேண்டும். 10 ஆசாரியன் தன் சணல்நூல் அங்கியைத் தரித்து, தன் சணல்நூல் ஜல்லடத்தை அரையில் போட்டுக்கொண்டு, பலிபீடத்தின்மேல் அக்கினியில் எரிந்த சர்வாங்க தகனபலியின் சாம்பலை எடுத்து, பலிபீடத்துப் பக்கத்தில் கொட்டி, 11 பின்பு தன் வஸ்திரங்களைக் கழற்றி, வேறு வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தச் சாம்பலைப் பாளயத்துக்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொண்டுபோய்க் கொட்டக்கடவன். 12 பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான பலிகளின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன். 13 பலிபீடத்தின்மேல் அக்கினி எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கவேண்டும்; அது ஒருபொழுதும் அவிந்துபோகலாகாது. 14 போஜனபலியின் பிரமாணம் என்னவென்றால், ஆரோனின் குமாரர் அதைக் கர்த்தருடைய சந்நிதியில் பலிபீடத்துக்கு முன்னே படைக்கவேண்டும். 15 அவன் போஜனபலியின் மெல்லிய மாவிலும் அதின் எண்ணெயிலும் தன் கைப்பிடி நிறைய எடுத்து, போஜனபலியின்மேலுள்ள தூபவர்க்கம் யாவற்றோடும் கூட அதை ஞாபகக்குறியாகப் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன். 16 அதில் மீதியானதை ஆரோனும் அவன் குமாரரும் புசிப்பார்களாக; அது புளிப்பில்லா அப்பத்துடன் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படக்கடவது; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரத்தில் அதைப் புசிக்கவேண்டும். 17 அதைப் புளித்தமாவுள்ளதாகப் பாகம்பண்ணவேண்டாம்; அது எனக்கு இடப்படும் தகனங்களில் நான் அவர்களுக்குக் கொடுத்த அவர்களுடைய பங்கு; அது பாவநிவாரண பலியைப்போலும் குற்றநிவாரண பலியைப்போலும் மகா பரிசுத்தமானது. 18 ஆரோனின் பிள்ளைகளில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது; அவைகளைத் தொடுகிறவனெவனும் பரிசுத்தமாய் இருப்பான் என்று சொல் என்றார். 19 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 20 ஆரோன் அபிஷேகம் பண்ணப்படும் நாளில், அவனும் அவன் குமாரரும் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய படைப்பு என்னவென்றால், ஒரு எப்பா அளவான மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கை, காலையில் பாதியும் மாலையில் பாதியும், நித்திய போஜனபலியாகச் செலுத்தக்கடவர்கள். 21 அது சட்டியிலே எண்ணெய்விட்டுப் பாகம்பண்ணப்படக்கடவது; பாகம்பண்ணப்பட்டபின்பு அதைக் கொண்டுவந்து, போஜனபலியாகப் பாகம்பண்ணப்பட்ட துண்டுகளைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகப் படைக்கக்கடவாய். 22 அவன் குமாரரில் அவனுடைய ஸ்தலத்திலே அபிஷேகம்பண்ணப்படுகிற ஆசாரியனும் அப்படியே செய்யக்கடவன்; அது முழுவதும் தகனிக்கப்படவேண்டும்; அது கர்த்தர் நியமித்த நித்திய கட்டளை. 23 ஆசாரியனுக்காக இடப்படும் எந்தப் போஜனபலியும் புசிக்கப்படாமல், முழுவதும் தகனிக்கப்படவேண்டும் என்றார். 24 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 25 நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியதாவது, பாவநிவாரணபலியின் பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில் பாவநிவாரணபலியும் கர்த்தருடைய சந்நிதியில் கொல்லப்படக்கடவது; அது மகா பரிசுத்தமானது. 26 பாவநிவிர்த்திசெய்ய அதைப் பலியிடுகிற ஆசாரியன் அதைப் புசிக்கக்கடவன்; ஆசரிப்புக் கூடாரத்தின் பிராகாரமாகிய பரிசுத்த ஸ்தலத்திலே அது புசிக்கப்படவேண்டும். 27 அதின் மாம்சத்தில் படுகிறது எதுவும் பரிசுத்தமாயிருக்கும்; அதின் இரத்தத்திலே கொஞ்சம் ஒரு வஸ்திரத்தில் தெறித்ததானால், இரத்தந்தெறித்த வஸ்திரத்தைப் பரிசுத்த ஸ்தலத்தில் கழுவவேண்டும். 28 அது சமைக்கப்பட்ட மண்பாண்டம் உடைக்கப்படவேண்டும்; செப்புப்பானையில் சமைக்கப்பட்டதானால், அது விளக்கப்பட்டுத் தண்ணீரில் கழுவப்படவேண்டும். 29 ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது மகா பரிசுத்தமானது. 30 எந்தப் பாவநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் பரிசுத்த ஸ்தலத்தில் பாவநிவிர்த்தியின்பொருட்டு ஆசரிப்புக் கூடாரத்திற்குள்ளே கொண்டுவரப்பட்டதோ, அந்தப் பலி புசிக்கப்படலாகாது, அது அக்கினியிலே தகனிக்கப்படவேண்டும்.

லேவியராகமம் 7

1 குற்றநிவாரண பலியின் பிரமாணம் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது. 2 சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில், குற்றநிவாரண பலியும் கொல்லப்படவேண்டும்; அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, 3 அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும், 4 இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின்மேல் சிறு குடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும், குண்டிக்காய்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக. 5 இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குத் தகனபலியாகத் தகனிக்கக்கடவன்; அது குற்றநிவாரண பலி. 6 ஆசாரியரில் ஆண்மக்கள் யாவரும் அதைப் புசிப்பார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது. 7 பாவநிவாரணபலி எப்படியோ குற்றநிவாரணபலியும் அப்படியே; அவ்விரண்டிற்கும் பிரமாணம் ஒன்றே; அதினாலே பாவநிவிர்த்திசெய்த ஆசாரியனை அது சேரும். 8 ஒருவனுடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும். 9 அடுப்பிலே பாகம்பண்ணப்பட்டதும், சட்டியிலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான போஜனபலி யாவும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாயிருக்கும். 10 எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல போஜனபலியும் ஆரோனுடைய குமாரர் யாவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும். 11 கர்த்தருக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் பிரமாணம் என்னவென்றால், 12 அதை ஸ்தோத்திரத்துக்காகச் செலுத்துவானானால், அவன் ஸ்தோத்திர பலியோடுங்கூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லா அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லா அடைகளையும், எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன். 13 அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல், புளித்தமாவினால் செய்த அப்பத்தையும், தன்னுடைய சமாதான பலியாகிய ஸ்தோத்திரபலியோடுகூட படைக்கவேண்டும். 14 அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; அது சமாதான பலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும். 15 சமாதானபலியாகிய ஸ்தோத்திர பலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றைத்தினமே புசிக்கப்படவேண்டும்; அதில் ஒன்றும் விடியற்காலமட்டும் வைக்கப்படலாகாது. 16 அவன் செலுத்தும் பலி பொருத்தனையாயாவது உற்சாகபலியாயாவது இருக்குமானால், அது செலுத்தப்படும் நாளிலும், அதில் மீதியானது மறுநாளிலும் புசிக்கப்படலாம். 17 பலியின் மாம்சத்தில் மீதியாயிருக்கிறது மூன்றாம் நாளில் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது. 18 சமாதானபலியின் மாம்சத்தில் மீதியானது மூன்றாம் நாளில் புசிக்கப்படுமானால், அது அங்கிகரிக்கப்படாது; அதைச் செலுத்தினவனுக்கு அது பலிக்காது; அது அருவருப்பாயிருக்கும்; அதைப் புசிக்கிறவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான். 19 தீட்டான எந்த வஸ்துவிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது புசிக்கப்படாமல் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்ற மாம்சத்தையோ சுத்தமாயிருக்கிறவனெவனும் புசிக்கலாம். 20 ஒருவன் தீட்டுள்ளவனாயிருக்கையில் கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்தைப் புசித்தால், அவன் தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். 21 மனுஷருடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த வஸ்துவையாவது ஒருவன் தொட்டிருந்து, கர்த்தருடைய சமாதானபலியின் மாம்சத்திலே புசித்தால், அவன் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்றார். 22 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 23 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், மாடு ஆடு வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் புசிக்கலாகாது. 24 தானாய்ச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், பீறுண்ட மிருகத்தின் கொழுப்பையும் பலவித வேலைகளுக்கு வழங்கலாம்; ஆனாலும் நீங்கள் அதை ஒருபோதும் புசிக்கலாகாது. 25 கர்த்தருக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைப் புசிக்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். 26 உங்கள் வாசஸ்தலங்களில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது புசிக்கலாகாது. 27 எவ்வித இரத்தத்தையாகிலும் புசிக்கிற எவனும் தன் ஜனங்களில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல் என்றார். 28 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 29 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், கர்த்தருக்குச் சமாதானபலி செலுத்துகிறவன் தான் செலுத்தும் சமாதானபலியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவருவானாக. 30 கர்த்தருக்குத் தகனபலியாகப் படைப்பவைகளை அவன் கைகளே கொண்டுவரவேண்டும்; மார்க்கண்டத்தையும் அதனோடுகூட அதின்மேல் வைத்த கொழுப்பையும் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக்குக் கொண்டுவரக்கடவன். 31 அப்பொழுது ஆசாரியன் அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கவேண்டும்; மார்க்கண்டமோ ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும். 32 உங்கள் சமாதானபலிகளில் வலது முன்னந்தொடையை ஏறெடுத்துப் படைக்கும் பலியாகப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொடுப்பீர்களாக. 33 ஆரோனுடைய குமாரரில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும். 34 இஸ்ரவேல் புத்திரரின் சமாதானபலிகளில் அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் ஏறெடுத்துப்படைக்கும் முன்னந்தொடையையும் நான் அவர்கள் கையில் வாங்கி, அவைகளை ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் இஸ்ரவேல் புத்திரருக்குள் நடக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன் என்று சொல் என்றார். 35 கர்த்தருக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவன் குமாரரும் நியமிக்கப்பட்ட நாளிலே, இது அபிஷேகம்பண்ணப்பட்ட அவர்களுக்குக் கர்த்தருடைய தகனபலிகளில் கிடைக்கும்படி உண்டான கட்டளை. 36 இப்படி அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாகக் கொடுக்கும்படி கர்த்தர் அவர்களை அபிஷேகம்பண்ணின நாளிலே கட்டளையிட்டார். 37 சர்வாங்க தகனபலிக்கும் போஜனபலிக்கும் பாவநிவாரண பலிக்கும் குற்றநிவாரண பலிக்கும் பிரதிஷ்டை பலிகளுக்கும் சமாதான பலிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. 38 கர்த்தருக்குத் தங்கள் பலிகளைச் செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல் புத்திரருக்குச் சீனாய் வனாந்தரத்திலே கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச் சீனாய் மலையில் கட்டளையிட்டார்.

லேவியராகமம் 8

1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நீ ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, வஸ்திரங்களையும், அபிஷேகதைலத்தையும், பாவநிவாரணபலிக்கு ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு கூடையில் புளிப்பில்லா அப்பங்களையும் கொண்டுவந்து, 3 சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடிவரச்செய் என்றார். 4 கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபை ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடின போது, 5 மோசே சபையை நோக்கி: செய்யும்படி கர்த்தர் கட்டளையிட்ட காரியம் இதுவே என்று சொல்லி, 6 கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் வரவழைத்து, அவர்களை ஜலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து, 7 அவனுக்கு உள்ளங்கியைப் போட்டு, இடைக்கச்சையைக் கட்டி, மேலங்கியை உடுத்தி, ஏபோத்தைத் தரித்து, அதின்மேல் ஏபோத்தின் விசித்திரமான கச்சையைக் கட்டி, 8 அவனுக்கு மார்ப்பதக்கத்தை அணிந்து, மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளையும் வைத்து, 9 அவன் தலையிலே பாகையைத் தரித்து, பாகையின்மேல் அவன் நெற்றியிலே பரிசுத்த கிரீடம் என்னும் பொற்பட்டத்தைக் கட்டினான். 10 பின்பு மோசே, அபிஷேகதைலத்தை எடுத்து, வாசஸ்தலத்தையும் அதிலுள்ள யாவற்றையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி, 11 அதில் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்தின்மேல் ஏழுதரம் தெளித்து, பலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும் பரிசுத்தப்படுத்தும்படிக்கு அபிஷேகம்பண்ணி, 12 அபிஷேகதைலத்திலே கொஞ்சம் ஆரோனுடைய சிரசின்மேல் வார்த்து, அவனைப் பரிசுத்தப்படுத்தும்படி அபிஷேகம்பண்ணினான். 13 பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆரோனின் குமாரரை வரவழைத்து, அவர்களுக்கு அங்கிகளை உடுத்தி, இடைக்கச்சைகளைக் கட்டி, குல்லாக்களைத் தரித்து, 14 பாவநிவாரண பலிக்கான காளையைக் கொண்டுவந்தான்; அதினுடைய தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள்; 15 அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தை எடுத்து, தன் விரலினால் பலிபீடத்தின் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி, பலிபீடத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியில் ஊற்றிவிட்டு, அதின்மேல் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு அதைப் பரிசுத்தப்படுத்தினான். 16 பின்பு மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, குடல்கள்மேல் இருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும் எடுத்து, பலிபீடத்தின்மேல் தகனித்து, 17 காளையையும் அதின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான். 18 பின்பு அவன் சர்வாங்க தகனபலிக்கு ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள். 19 அப்பொழுது அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான். 20 ஆட்டுக்கடா சந்து சந்தாகத் துண்டிக்கப்பட்டது; கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே அதின் தலையையும் துண்டங்களையும் கொழுப்பையும் தகனித்தான். 21 குடல்களையும் தொடைகளையும் தண்ணீரால் கழுவினபின், மோசே ஆட்டுக்கடா முழுவதையும் பலிபீடத்தின்மேல் கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான சர்வாங்க தகனபலியாகத் தகனித்தான். 22 பின்பு பிரதிஷ்டைப்படுத்துவதற்குரிய மற்ற ஆட்டுக்கடாவைக் கொண்டுவந்தான்; அதின் தலையின்மேல் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளை வைத்தார்கள். 23 பின்பு அது கொல்லப்பட்டது; மோசே அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆரோனுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலதுகாலின் பெருவிரலிலும் பூசினான். 24 பின்பு ஆரோனுடைய குமாரரையும் அழைத்தான்; மோசே அந்த இரத்தத்திலே கொஞ்சம் அவர்களுடைய வலதுகாதின் மடலிலும் வலதுகையின் பெருவிரலிலும் வலது காலின் பெருவிரலிலும் பூசி, இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, 25 கொழுப்பையும், வாலையும், குடல்கள்மேலிருந்த கொழுப்பு முழுவதையும், கல்லீரலின்மேலிருந்த ஜவ்வையும், இரண்டு குண்டிக்காய்களையும், அவைகளின் கொழுப்பையும், வலது முன்னந்தொடையையும் எடுத்து, 26 கர்த்தருடைய சந்நிதியில் வைத்திருந்த புளிப்பில்லா அப்பங்களின் கூடையிலுள்ள புளிப்பில்லா அதிரசத்தில் ஒன்றையும், எண்ணெயிட்ட அப்பமாகிய அதிரசத்தில் ஒன்றையும், ஒரு அடையையும் எடுத்து, அந்தக் கொழுப்பின்மேலும், முன்னந்தொடையின்மேலும் வைத்து, 27 அவைகளையெல்லாம் ஆரோனுடைய உள்ளங்கைகளிலும் அவன் குமாரருடைய உள்ளங்கைகளிலும் வைத்து, அசைவாட்டும் பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி, 28 பின்பு மோசே அவைகளை அவர்கள் உள்ளங்கைகளிலிருந்து எடுத்து, பலிபீடத்தின்மேலிருக்கிற தகனபலியின்மேல் தகனித்தான்; அவைகள் சுகந்த வாசனையான பிரதிஷ்டைப் பலிகள்; இது கர்த்தருக்குத் தகனபலியானது. 29 பின்பு மோசே மார்க்கண்டத்தை எடுத்து, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே பிரதிஷ்டையின் ஆட்டுக்கடாவிலே அது மோசேயின் பங்காயிற்று. 30 மோசே அபிஷேகதைலத்திலும், பலிபீடத்தின்மேலிருந்த இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, ஆரோன்மேலும் அவன் வஸ்திரங்கள்மேலும், அவன் குமாரர்மேலும் அவர்கள் வஸ்திரங்கள்மேலும் தெளித்து, ஆரோனையும் அவன் வஸ்திரங்களையும், அவன் குமாரரையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும் பரிசுத்தப்படுத்தினான். 31 பின்பு மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் அந்த மாம்சத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலே வேவித்து, ஆரோனும் அவன் குமாரரும் அதைப் புசிப்பார்களாக என்று கட்டளையிட்டிருக்கிறபடியே, அங்கே அதையும் உங்கள் பிரதிஷ்டைப் பலிகளுள்ள கூடையில் இருக்கிற அப்பத்தையும் புசித்து, 32 மாம்சத்திலும் அப்பத்திலும் மீதியானதை அக்கினியிலே சுட்டெரித்து, 33 பிரதிஷ்டையின் நாட்கள் நிறைவேறும்வரைக்கும், ஏழுநாள் ஆசரிப்புக் கூடாரவாசலை விட்டுப் புறப்படாதிருங்கள்; ஏழுநாளளவும் நீங்கள் பிரதிஷ்டைப்படுத்தப்படுவீர்கள். 34 இன்று செய்ததுபோல, உங்கள் பாவநிவிர்த்திக்காக இனிமேலும் செய்யவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டார். 35 நீங்கள் சாகாதபடிக்கு ஏழுநாள் இரவும் பகலும் ஆசரிப்புக் கூடாரவாசலிலிருந்து, கர்த்தருடைய காவலைக் காக்கக்கடவீர்கள்; இப்படி நான் கற்பிக்கப்பட்டேன் என்றான். 36 கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்ட எல்லாக் காரியங்களையும் ஆரோனும் அவன் குமாரரும் செய்தார்கள்.

லேவியராகமம் 9

1 எட்டாம் நாளிலே மோசே ஆரோனையும் அவன் குமாரரையும் இஸ்ரவேலின் மூப்பரையும் அழைத்து, 2 ஆரோனை நோக்கி: நீ பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், சர்வாங்க தகனபலியாகப் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் தெரிந்துகொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் பலியிடக்கடவாய். 3 மேலும் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படிக்கு, நீங்கள் பாவநிவாரணபலியாகப் பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒரு வயதான பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும், 4 சமாதானபலிகளாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், எண்ணெயிலே பிசைந்த போஜனபலியையும் கொண்டுவாருங்கள்; இன்று கர்த்தர் உங்களுக்குத் தரிசனமாவார் என்று சொல் என்றான். 5 மோசே கட்டளையிட்டவைகளை அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். சபையார் எல்லாரும் சேர்ந்து, கர்த்தருடைய சந்நிதியில் நின்றார்கள். 6 அப்பொழுது மோசே: கர்த்தர் கட்டளையிட்ட இந்தக் காரியத்தைச் செய்யுங்கள்; கர்த்தருடைய மகிமை உங்களுக்குக் காணப்படும் என்றான். 7 மோசே ஆரோனை நோக்கி: நீ பலிபீடத்தண்டையில் சேர்ந்து, கர்த்தர் கட்டளையிட்டபடியே, உன் பாவநிவாரண பலியையும் உன் சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, உனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, ஜனங்களுடைய பலியையும் செலுத்தி, அவர்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய் என்றான். 8 அப்பொழுது ஆரோன் பலிபீடத்தண்டையில் சேர்ந்து, தன் பாவநிவாரணபலியாகிய கன்றுக்குட்டியைக் கொன்றான். 9 ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் தன் விரலை அந்த இரத்தத்தில் தோய்த்து, பலிபீடத்தின் கொம்புகளின்மேல் பூசி, மற்ற இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றி, 10 பாவநிவாரணபலியின் கொழுப்பையும், குண்டிக்காய்களையும், கல்லீரலில் எடுத்த ஜவ்வையும், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, பலிபீடத்தின்மேல் தகனித்து, 11 மாம்சத்தையும் தோலையும் பாளயத்துக்குப் புறம்பே அக்கினியிலே சுட்டெரித்தான். 12 பின்பு சர்வாங்க தகனபலியையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அதை அவன் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்தான். 13 சர்வாங்க தகனபலியின் துண்டங்களையும் தலையையும் அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அவைகளைப் பலிபீடத்தின்மேல் தகனித்து, 14 குடல்களையும் தொடைகளையும் கழுவி, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியின்மேல் தகனித்தான். 15 பின்பு அவன் ஜனங்களின் பலியைக் கொண்டுவந்து, ஜனங்களின் பாவநிவிர்த்திக்குரிய வெள்ளாட்டுக்கடாவைக் கொன்று, முந்தினதைப் பலியிட்டதுபோல, அதைப் பாவநிவாரணபலியாக்கி, 16 சர்வாங்க தகனபலியையும் கொண்டுவந்து, நியமத்தின்படி அதைப் பலியிட்டு, 17 போஜனபலியையும் கொண்டுவந்து, அதில் கைநிறைய எடுத்து, அதைக் காலையில் செலுத்தும் சர்வாங்க தகனபலியுடனே பலிபீடத்தின்மேல் தகனித்தான். 18 பின்பு ஜனங்களின் சமாதானபலிகளாகிய காளையையும் ஆட்டுக்கடாவையும் கொன்றான்; ஆரோனின் குமாரர் அதின் இரத்தத்தை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவன் அதைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து, 19 காளையிலும் ஆட்டுக்கடாவிலும் எடுத்த கொழுப்பையும், வாலையும், குடல்களை மூடிய ஜவ்வையும், குண்டிக்காய்களையும், கல்லீரலின்மேல் இருந்த ஜவ்வையும் கொண்டுவந்து, 20 கொழுப்பை மார்க்கண்டங்களின்மேல் வைத்தார்கள்; அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனித்தான். 21 மார்க்கண்டங்களையும் வலது முன்னந்தொடையையும், மோசே கட்டளையிட்டபடியே, ஆரோன் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டினான். 22 பின்பு ஆரோன் ஜனங்களுக்கு நேராகத் தன் கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்து, தான் பாவநிவாரணபலியையும், சர்வாங்க தகனபலியையும், சமாதான பலிகளையும் செலுத்தின இடத்திலிருந்து இறங்கினான். 23 பின்பு மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசித்து, வெளியே வந்து, ஜனங்களை ஆசீர்வதித்தார்கள்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சகல ஜனங்களுக்கும் காணப்பட்டது. 24 அன்றியும் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள்.

லேவியராகமம் 10

1 பின்பு ஆரோனின் குமாரராகிய நாதாபும் அபியூவும் தன்தன் தூபகலசத்தை எடுத்து, அவைகளில் அக்கினியையும் அதின்மேல் தூபவர்க்கத்தையும் போட்டு, கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிடாத அந்நிய அக்கினியை அவருடைய சந்நிதியில் கொண்டுவந்தார்கள். 2 அப்பொழுது அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, அவர்களைப் பட்சித்தது; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் செத்தார்கள். 3 அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் பண்ணப்பட்டு, சகல ஜனங்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று கர்த்தர் சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாதிருந்தான். 4 பின்பு மோசே ஆரோனின் சிறிய தகப்பனான ஊசியேலின் குமாரராகிய மீசவேலையும் எல்சாபானையும் அழைத்து: நீங்கள் கிட்டவந்து, உங்கள் சகோதரரைப் பரிசுத்த ஸ்தலத்துக்கு முன்னின்று எடுத்து, பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோங்கள் என்றான். 5 மோசே சொன்னபடி அவர்கள் கிட்டவந்து, அவர்களை அவர்கள் உடுத்தியிருந்த சட்டைகளோடும் எடுத்துப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோனார்கள். 6 மோசே ஆரோனையும் எலெயாசார் இத்தாமார் என்னும் அவன் குமாரரையும் நோக்கி: நீங்கள் சாகாதபடிக்கும், சபையனைத்தின்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் உங்கள் தலைப்பாகையை எடுத்துப்போடாமலும், உங்கள் வஸ்திரங்களைக் கிழிக்காமலும் இருப்பீர்களாக; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் கர்த்தர் கொளுத்தின இந்த அக்கினிக்காகப் புலம்புவார்களாக. 7 நீங்கள் சாகாதபடிக்கு ஆசரிப்புக் கூடாரவாசலிலிருந்து புறப்படாதிருங்கள்; கர்த்தருடைய அபிஷேகதைலம் உங்கள்மேல் இருக்கிறதே என்றான்; அவர்கள் மோசேயினுடைய வார்த்தையின்படியே செய்தார்கள். 8 கர்த்தர் ஆரோனை நோக்கி: 9 நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம். 10 பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டில்லாததற்கும், வித்தியாசம்பண்ணும்படிக்கும், 11 கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்ன சகல பிரமாணங்களையும் அவர்களுக்குப் போதிக்கும்படிக்கும், இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும் என்றார். 12 மோசே ஆரோனையும் மீதியாயிருந்த அவன் குமாரராகிய எலெயாசாரையும் இத்தாமாரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருடைய தகனபலிகளில் மீதியான போஜனபலியை எடுத்து, பலிபீடத்தண்டையிலே புளிப்பில்லாததாகப் புசியுங்கள்; அது மகா பரிசுத்தமானது. 13 அதைப் பரிசுத்த ஸ்தலத்திலே புசியுங்கள்; அது கர்த்தருடைய தகனபலிகளில் உனக்கும் உன் குமாரருக்கும் ஏற்படுத்தப்பட்டதாயிருக்கிறது; இப்படிக் கட்டளை பெற்றிருக்கிறேன். 14 அசைவாட்டும் மார்க்கண்டத்தையும், ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் குமாரத்திகளும் சுத்தமான ஸ்தலத்திலே புசிப்பீர்களாக; இஸ்ரவேல் புத்திரருடைய சமாதானபலிகளில் அவைகள் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் கிடைக்கும்படி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. 15 கொழுப்பாகிய தகனபலிகளோடே அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படி ஏறெடுத்துப் படைக்கும் முன்னந்தொடையையும், அசைவாட்டும் மார்க்கண்டத்தையும் கொண்டுவருவார்கள்; அது கர்த்தர் கட்டளையிட்டபடியே உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் நித்திய கட்டளையாக ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றான். 16 பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாவை மோசே தேடிப்பார்த்தான்; அது தகனிக்கப்பட்டிருந்தது; ஆகையால், மீதியாயிருந்த எலெயாசார் இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரர்மேல் அவன் கோபங்கொண்டு: 17 பாவநிவாரணபலியை நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் புசியாமற்போனதென்ன? அது மகா பரிசுத்தமாயிருக்கிறதே; சபையின் அக்கிரமத்தைச் சுமந்து தீர்ப்பதற்குக் கர்த்தருடைய சந்நிதியில் அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, அதை உங்களுக்குக் கொடுத்தாரே. 18 அதின் இரத்தம் பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே கொண்டுவரப்படவில்லையே; நான் கட்டளையிட்டபடி நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் புசிக்கவேண்டியதாயிருந்ததே என்றான். 19 அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: அவர்கள் தங்கள் பாவநிவாரணபலியையும், தங்கள் சர்வாங்க தகனபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தின இன்றுதானே எனக்கு இப்படி நேரிட்டதே; பாவநிவாரணபலியை இன்று நான் புசித்தேனானால், அது கர்த்தரின் பார்வைக்கு நன்றாய் இருக்குமோ என்றான். 20 மோசே அதைக் கேட்டபோது அமைதலாயிருந்தான்.

லேவியராகமம் 11

1 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 2 நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்கத்தக்க ஜீவஜந்துக்கள் யாதெனில்: 3 மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம். 4 ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். 5 குழிமுசலானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். 6 முயலானது அசைபோடுகிறதாயிருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். 7 பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். 8 இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. 9 ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம். 10 ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக. 11 அவைகள் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவைகளின் மாம்சத்தைப் புசியாதிருந்து, அவைகளின் உடல்களை அருவருப்பீர்களாக. 12 தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது. 13 பறவைகளில் நீங்கள் புசியாமல் அருவருக்கவேண்டியவைகள் யாதெனில்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும், 14 பருந்தும், சகலவித வல்லூறும், 15 சகலவித காகங்களும், 16 தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும், 17 ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும், 18 நாரையும், கூழக்கடாவும், குருகும், 19 கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலும் ஆகிய இவைகளே. 20 பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற ஊரும் பிராணிகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக. 21 ஆகிலும், பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற யாவிலும், நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே, 22 வெட்டுக்கிளி ஜாதியாயிருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும் நீங்கள் புசிக்கலாம். 23 பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக. 24 அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். 25 அவைகளின் உடலைச் சுமந்தவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். 26 விரிநகங்களுள்ளவைகளாயிருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான். 27 நாலுகாலால் நடக்கிற சகல ஜீவன்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். 28 அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. 29 தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையெனில்: பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும், 30 உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே. 31 சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். 32 அவைகளில் செத்தது ஒன்று யாதொன்றின்மேல் விழுந்தால் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், வஸ்திரமானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் சாயங்காலமட்டும் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும். 33 அவைகளில் ஒன்று மண்பாண்டத்திற்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை யாவும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும். 34 புசிக்கத்தக்க போஜனபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப் பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும். 35 அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுதோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. 36 ஆனாலும், நீரூற்றும் மிகுந்த ஜலம் உண்டாகிய கிணறும் சுத்தமாயிருக்கும்; அவைகளிலுள்ள உடலைத் தொடுகிறவனோ தீட்டுப்படுவான். 37 மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது. 38 அந்த உடலில் யாதொன்று தண்ணீர் வார்க்கப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது. 39 உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத் தொடுகிறவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். 40 அதின் மாம்சத்தைப் புசித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துப்போனவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். 41 தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது. 42 தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நாலுகாலால் நடமாடுகிறவைகளையும், அநேகங் கால்களுள்ளவைகளையும் புசியாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள். 43 ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள். 44 நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக. 45 நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக. 46 சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், புசிக்கத்தக்க ஜந்துக்களுக்கும் புசிக்கத்தகாத ஜந்துக்களுக்கும் வித்தியாசம்பண்ணும்பொருட்டு, 47 மிருகத்துக்கும் பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல ஜீவஜந்துக்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே என்று சொல்லுங்கள் என்றார்.

லேவியராகமம் 12

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு ஸ்திரீ கர்ப்பவதியாகி ஆண்பிள்ளையைப் பெற்றால், அவள் சூதகஸ்திரீ விலக்கமாயிருக்கும் நாட்களுக்குச் சரியாக ஏழுநாள் தீட்டாயிருப்பாள். 3 எட்டாம் நாளிலே அந்தப் பிள்ளையினுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படக்கடவது. 4 பின்பு அவள் முப்பத்துமூன்றுநாள் தன் உதிரச் சுத்திகரிப்பு நிலையிலே இருந்து, சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறுமளவும் பரிசுத்தமான யாதொரு வஸ்துவைத் தொடவும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் வரவுங் கூடாது. 5 பெண்பிள்ளையைப் பெற்றாளாகில், அவள், இரண்டு வாரம் சூதகஸ்திரீயைப்போலத் தீட்டாயிருந்து, பின்பு அறுபத்தாறுநாள் உதிரச் சுத்திகரிப்பு நிலையிலே இருக்கக்கடவள். 6 அவள் ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரணபலியாகவும், ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள். 7 அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் உதிர ஊறலின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள். இது ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றவளைக்குறித்த பிரமாணம். 8 ஆட்டுக்குட்டியைக் கொண்டுவர அவளுக்குச் சக்தியில்லாதிருந்தால், இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் மற்றொன்றைப் பாவநிவாரணபலியாகவும் கொண்டுவரக்கடவள்; அதினால் ஆசாரியன் அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவள் சுத்தமாவாள் என்று சொல் என்றார்.

லேவியராகமம் 13

1 பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 2 ஒரு மனிதனுடைய சரீரத்தின்மேல் குஷ்டரோகம்போலிருக்கிற ஒரு தடிப்பாவது அசறாவது வெள்ளைப்படராவது உண்டானால், அவன் ஆசாரியனாகிய ஆரோனிடத்திலாகிலும், ஆசாரியராகிய அவன் குமாரரில் ஒருவனிடத்திலாகிலும் கொண்டுவரப்படக்கடவன். 3 அப்பொழுது ஆசாரியன் அவன் சரீரத்தின்மேல் இருக்கிற ரோகத்தைப் பார்க்கவேண்டும்; ரோகம் இருக்கும் இடத்தில் மயிர் வெளுத்தும், ரோகமுள்ள இடம் அவனுடைய மற்றச் சரீரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்க் குழிந்தும் இருந்தால் அது குஷ்டரோகம்; ஆசாரியன் அவனைப் பார்த்தபின்பு, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன். 4 அவன் சரீரத்தின்மேல் வெள்ளைப் படர்ந்திருந்தாலும், அவ்விடம் அவனுடைய மற்றத் தோலைப்பார்க்கிலும் அதிக பள்ளமாயிராமலும், அதின் மயிர் வெள்ளையாக மாறாமலும் இருந்தால், ஆசாரியன் அவனை ஏழுநாள் அடைத்து வைத்து, 5 ஏழாம் நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; தோலில் ரோகம் அதிகப்படாமல், அவன் பார்வைக்கு ரோகம் நின்றிருந்தால், ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து, 6 இரண்டாந்தரம் அவனை ஏழாம்நாளில் பார்க்கக்கடவன்; தோலில் ரோகம் அதிகப்படாமல் சுருங்கியிருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது அசறு; அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துச் சுத்தமாயிருப்பானாக. 7 தன்னைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கிறதற்கு அவன் தன்னை ஆசாரியனுக்குக் காண்பித்த பின்பு, அசறு தோலில் அதிகமாய் படர்ந்திருந்தால், அவன் மறுபடியும் ஆசாரியனுக்குத் தன்னைக் காண்பிக்கக்கடவன். 8 அப்பொழுது அசறு தோலிலே படர்ந்தது என்று ஆசாரியன் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகம். 9 குஷ்டரோகம் ஒரு மனிதனுக்கு இருந்தால், அவனை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும். 10 அப்பொழுது ஆசாரியன் அவனைப் பார்த்து, தோலிலே வெள்ளையான தடிப்பிருந்து, அது மயிரை வெண்மையாக மாறப்பண்ணிற்றென்றும், அந்தத் தடிப்புள்ள இடத்திலே இரணமாம்சம் உண்டென்றும் கண்டால், 11 அது அவன் சரீரத்திலுள்ள நாள்பட்ட குஷ்டம்; அவன் தீட்டுள்ளவன். ஆதலால், ஆசாரியன் அவனை அடைத்துவைக்காமல், தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன். 12 ஆசாரியன் பார்க்கிற இடங்களெங்கும் தோலிலே குஷ்டம் தோன்றி, அந்த ரோகமுள்ளவனுடைய தலை தொடங்கி அவன் கால்மட்டும் அது தேகமுழுவதையும் மூடியிருக்கக்கண்டால், 13 அப்பொழுது ஆசாரியன் பார்த்து, குஷ்டம் அவன் சரீரம் முழுவதையும் மூடியிருந்தால், அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் உடம்பெல்லாம் வெண்மையாய்ப்போனபடியால், அவன் சுத்தமுள்ளவன். 14 ஆனாலும், இரணமாம்சம் அவனில் காணப்பட்டால், அவன் தீட்டுள்ளவன். 15 ஆகையால், இரணமாம்சத்தை ஆசாரியன் காணும்போது, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; இரணமாம்சம் தீட்டுள்ளது; அது குஷ்டம். 16 அல்லது, இரணமாம்சம் மாறி வெண்மையானால், அவன் ஆசாரியனிடத்துக்கு வரவேண்டும். 17 ஆசாரியன் அவனைப்பார்த்து, ரோகமுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் சுத்தமுள்ளவன். 18 சரீரத்தின்மேல் புண் உண்டாயிருந்து ஆறிப்போய், 19 அவ்விடத்திலே ஒரு வெள்ளைத் தடிப்பாவது சிவப்புக்கலந்த ஒரு வெள்ளைப்படராவது உண்டானால், அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும். 20 ஆசாரியன் அதைப் பார்த்து, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திருக்கவும், அதின் மயிர் வெள்ளையாக மாறியிருக்கவும் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கவேண்டும்; அது புண்ணில் எழும்பின குஷ்டம். 21 ஆசாரியன் அதைப் பார்த்து, அதில் வெள்ளைமயிர் இல்லை என்றும், அது மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திராமல் சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாள் அடைத்துவைத்து, 22 அது தோலில் அதிகமாய்ப் படர்ந்திருக்கக்கண்டால், அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டந்தான். 23 அந்த வெள்ளைப்படர் அதிகப்படாமல், அவ்வளவில் நின்றிருக்குமாகில், அது புண்ணின் தழும்பாயிருக்கும்; ஆகையால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன். 24 ஒருவனுடைய சரீரத்தின்மேல் நெருப்புப்பட்டதினாலே வெந்து, அந்த வேக்காடு ஆறிப்போன இடத்திலே சிவப்பான படராவது வெண்மையான படராவது உண்டானால், 25 ஆசாரியன் அதைப் பார்க்கக்கடவன்; அந்தப் படரிலே மயிர் வெண்மையாக மாறி, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிருந்தால், அது வேக்காட்டினால் எழும்பின குஷ்டம்; ஆகையால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகந்தான். 26 ஆசாரியன் அதைப் பார்க்கிறபோது, படரிலே வெள்ளைமயிர் இல்லை என்றும், அது மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திராமல், சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாள் அடைத்துவைத்து, 27 ஏழாம்நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; அது தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகம். 28 படரானது தோலில் பெருகாமல், அவ்வளவில் நின்று சுருங்கியிருந்ததாகில், அது சூட்டினால் உண்டான தழும்பு; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது சூட்டினால் வந்த வேக்காடு. 29 புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும் தலையிலாவது தாடியிலாவது ஒரு சொறி உண்டானால், 30 ஆசாரியன் அதைப் பார்த்து, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமும் அதிலே மயிர் பொன் நிறமும் மிருதுவுமாயிருக்கக்கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது தலையிலும் தாடியிலும் உண்டாகிற சொறிகுஷ்டம். 31 ஆசாரியன் அந்தச் சொறிகுஷ்டத்தைப் பார்க்கும்போது, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிராமலும், அதிலே கறுத்த மயிர் இல்லாமலும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து, 32 ஏழாம்நாளில் ஆசாரியன் அதைப் பார்க்கக்கடவன்; அந்தச் சொறி இடங்கொள்ளாமலும், அதிலே பொன்நிறமயிர் இல்லாமலும், அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால், 33 அந்தச் சொறியுள்ள இடந்தவிர, மற்ற யாவையும் அவன் சிரைத்துக்கொள்ளக்கடவன்; பின்பு, ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து, 34 ஏழாம்நாளில் அதைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொள்ளாமலும், அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்தபின் சுத்தமாயிருப்பான். 35 அவன் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கப்பட்டபின், அந்தச் சொறி தோலில் இடங்கொண்டதானால், 36 ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொண்டிருந்தால், அப்பொழுது மயிர் பொன்நிறமா அல்லவா என்று ஆசாரியன் விசாரிக்க வேண்டியதில்லை; அவன் தீட்டுள்ளவனே. 37 அவன் பார்வைக்கு அந்தச் சொறி நீங்கி, அதில் கறுத்தமயிர் முளைத்ததேயாகில், சொறி சொஸ்தமாயிற்று; அவன் சுத்தமுள்ளவன்; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன். 38 ஒரு புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும் அவர்கள் சரீரத்தின்மேல் வெள்ளைப் புள்ளிகள் உண்டாயிருந்தால், 39 ஆசாரியன் பார்க்கக்கடவன்; அவர்கள் சரீரத்திலே மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், அது தோலில் எழும்புகிற வெள்ளைத்தேமல்; அவர்கள் சுத்தமுள்ளவர்கள். 40 ஒருவனுடைய தலைமயிர் உதிர்ந்து, அவன் மொட்டையனானாலும், அவன் சுத்தமாயிருக்கிறான். 41 அவனுடைய முன்னந்தலை மயிர் உதிர்ந்தால், அவன் அரைமொட்டையன்; அவனும் சுத்தமாயிருக்கிறான். 42 மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது சிவப்புக்கலந்த வெண்மையான படர் உண்டானால், அது அதில் எழும்புகிற குஷ்டம். 43 ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; அவனுடைய மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது, மற்ற அங்கங்களின்மேல் உண்டாகும் குஷ்டத்தைப்போல, சிவப்புக்கலந்த வெண்மையான தடிப்பு இருக்கக்கண்டால், 44 அவன் குஷ்டரோகி, அவன் தீட்டுள்ளவன்; ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் வியாதி அவன் தலையிலே இருக்கிறது. 45 அந்த வியாதி உண்டாயிருக்கிற குஷ்டரோகி வஸ்திரம் கிழிந்தவனாயும், தன் தலையை மூடாதவனாயும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, "தீட்டு, தீட்டு" என்று சத்தமிடவேண்டும். 46 அந்த வியாதி அவனில் இருக்கும் நாள்வரைக்கும் தீட்டுள்ளவனாக எண்ணப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவன் குடியிருப்பு பாளயத்துக்குப் புறம்பே இருக்கக்கடவது. 47 ஆட்டுமயிர் வஸ்திரத்திலாவது, பஞ்சுநூல் வஸ்திரத்திலாவது, 48 பஞ்சுநூல், அல்லது ஆட்டுமயிரான பாவிலாவது, ஊடையிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் தோன்றி, 49 வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும். 50 ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழுநாள் அடைத்துவைத்து, 51 ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன்; வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது அது அதிகப்பட்டிருந்தால், அது அரிக்கிற குஷ்டம்; அது தீட்டாயிருக்கும். 52 அந்தத் தோஷம் இருக்கிற ஆட்டுமயிரினாலும் பஞ்சுநூலினாலும் செய்த வஸ்திரத்தையும் பாவையும், ஊடையையும், தோலினால் செய்த எந்தவித வஸ்துவையும் சுட்டெரிக்கக்கடவன்; அது அரிக்கிற குஷ்டம்; ஆகையால் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும். 53 வஸ்திரத்தின் பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது, அந்தத் தோஷம் அதிகப்படவில்லை என்று ஆசாரியன் கண்டால், 54 அப்பொழுது ஆசாரியன் அதைக் கழுவச்சொல்லி, இரண்டாந்தரம் ஏழுநாள் அடைத்துவைத்து, 55 அது கழுவப்பட்டபின்பு, அதைப் பார்க்கக்கடவன்; அந்தத் தோஷம் அதிகப்படாதிருந்தாலும், அது நிறம் மாறாததாயிருந்தால் தீட்டாயிருக்கும்; அக்கினியில் அதைச் சுட்டெரிக்கவேண்டும்; அது அவ்வஸ்திரத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் உருவ அரிக்கும். 56 கழுவப்பட்டபின்பு அது குறுகிற்றென்று ஆசாரியன் கண்டானேயாகில், அதை வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது இராதபடிக்கு எடுத்துப்போடவேண்டும். 57 அது இன்னும் வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது காணப்பட்டால், அது படருகிற தோஷம்; ஆகையினால் அது உள்ளதை அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும். 58 வஸ்திரத்தின் பாவாவது, ஊடையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவாவது கழுவப்பட்டபின்பு, அந்தத் தோஷம் அதைவிட்டுப் போயிற்றேயானால், இரண்டாந்தரம் கழுவப்படவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருக்கும். 59 ஆட்டுமயிராலாகிலும் பஞ்சுநூலாலாகிலும் நெய்த வஸ்திரத்தையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்க்கிறதற்கு, அதினுடைய குஷ்டதோஷத்துக்கடுத்த பிரமாணம் இதுவே என்றார்.

லேவியராகமம் 14

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 2 குஷ்டரோகியினுடைய சுத்திகரிப்பின் நாளில் அவனுக்கடுத்த பிரமாணம் என்னவென்றால்: அவன் ஆசாரியனிடத்தில் கொண்டுவரப்படவேண்டும். 3 ஆசாரியன் பாளயத்துக்குப் புறம்பே போய்; குஷ்டரோகியின் குஷ்டவியாதி சொஸ்தமாயிற்று என்று கண்டால், 4 சுத்திகரிக்கப்படவேண்டியவனுக்காக, உயிரோடிருக்கும் சுத்தமான இரண்டு குருவிகளையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் வாங்கிவரக் கட்டளையிடக்கடவன். 5 பின்பு, ஆசாரியன் அந்தக் குருவிகளில் ஒன்றை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீர்மேல் கொல்லச் சொல்லி, 6 உயிருள்ள குருவியையும், கேதுருக் கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, இவைகளையும் உயிருள்ள குருவியையும் ஊற்றுநீர்மேல் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலே தோய்த்து, 7 குஷ்டம் நீங்கச் சுத்திகரிக்கப்படுகிறவன்மேல் ஏழுதரம் தெளித்து, அவனைச் சுத்தம்பண்ணி, உயிருள்ள குருவியை வெளியிலே விட்டுவிடக்கடவன். 8 சுத்திகரிக்கப்படுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் மயிர் முழுவதையும் சிரைத்து, தான் சுத்தமாகும்படி ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்தில் பிரவேசித்து, தன் கூடாரத்துக்குப் புறம்பே ஏழுநாள் தங்கி, 9 ஏழாம் நாளிலே தன் தலையையும் தாடியையும் புருவங்களையும் தன்னுடைய மயிர் முழுவதையும் சிரைத்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருப்பான். 10 எட்டாம்நாளிலே அவன் பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு வயதான பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், போஜனபலிக்காக எண்ணெயிலே பிசைந்த ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்காகிய மெல்லிய மாவையும், ஆழாக்கு எண்ணெயையும் கொண்டுவரக்கடவன். 11 சுத்திகரிக்கிற ஆசாரியன் சுத்திகரிக்கப்படும் மனிதனையும் அவ்வஸ்துக்களையும் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தக்கடவன். 12 பின்பு, ஆசாரியன் ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவந்து, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டி, 13 பாவநிவாரணபலியும் சர்வாங்க தகனபலியும் இடும் பரிசுத்த ஸ்தலத்திலே அந்த ஆட்டுக்குட்டியைக் கொல்லக்கடவன்; குற்றநிவாரணபலி பாவநிவாரணபலியைப்போல ஆசாரியனுக்கு உரியது; அது மகா பரிசுத்தமானது. 14 அந்தக் குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசக்கடவன். 15 பின்பு, ஆசாரியன் அந்த ஆழாக்கு எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் வார்த்து, 16 தன் இடதுகையிலுள்ள எண்ணெயில் தன் வலதுகையின் விரலைத்தோய்த்து, தன் விரலினால் ஏழுதரம் அந்த எண்ணெயில் எடுத்து, கர்த்தருடைய சந்நிதியில் தெளித்து, 17 தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயிலே கொஞ்சம் எடுத்து சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும், முந்திப் பூசியிருக்கிற குற்றநிவாரணபலியினுடைய இரத்தத்தின்மேல் பூசி, 18 தன் உள்ளங்கையில் இருக்கிற மீதியான எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையிலே வார்த்து, கர்த்தருடைய சந்நிதியில் அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். 19 ஆசாரியன் பாவநிவாரணபலியையும் செலுத்தி, சுத்திகரிக்கப்படுகிறவனின் தீட்டு நீங்க, அவனுக்குப் பாவநிவிர்த்தி செய்து, பின்பு சர்வாங்க தகனபலியைக் கொன்று, 20 சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் பலிபீடத்தின்மேல் வைத்து, அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் சுத்தமாயிருப்பான். 21 அவன் இம்மாத்திரம் செய்யத் திராணியற்ற தரித்திரனாயிருந்தால், அவன் தன் பாவநிவிர்த்திக்கென்று அசைவாட்டும் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்குட்டியையும், போஜனபலிக்கு எண்ணெயில் பிசைந்த ஒரு மரக்கால் மெல்லிய மாவிலே பத்தில் ஒரு பங்கையும், ஆழாக்கு எண்ணெயையும், 22 தன் திராணிக்குத் தக்கபடி இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஒன்று பாவநிவாரணபலியாகவும், மற்றொன்று சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தும்படி வாங்கி, 23 தான் சுத்திகரிக்கப்படும்படி எட்டாம் நாளில் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆசாரியனிடத்துக்குக் கொண்டுவருவானாக. 24 அப்பொழுது ஆசாரியன் குற்றநிவாரணபலிக்குரிய ஆட்டுக்குட்டியையும் அந்த ஆழாக்கு எண்ணெயையும் வாங்கி, கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் போஜனபலியாக அசைவாட்டி, 25 குற்றநிவாரண பலிக்கான அந்த ஆட்டுக்குட்டியைக் கொன்று, குற்றநிவாரணபலியின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் பூசி, 26 அந்த எண்ணெயிலே கொஞ்சம் தன் இடதுகையில் வார்த்து, 27 தன் இடதுகையிலுள்ள எண்ணெயிலே தன் வலதுவிரலைத் தோய்த்து, கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளித்து, 28 தன் உள்ளங்கையில் இருக்கிற எண்ணெயில் கொஞ்சம் எடுத்துச் சுத்திகரிக்கப்படுகிறவன் வலதுகாதின் மடலிலும், அவன் வலதுகையின் பெருவிரலிலும், வலதுகாலின் பெருவிரலிலும் குற்றநிவாரணபலியின் இரத்தம் பூசியிருக்கிற இடத்தின்மேல் பூசி, 29 தன் உள்ளங்கையில் இருக்கிற மற்ற எண்ணெயைச் சுத்திகரிக்கப்படுகிறவன் தலையின்மேல் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யும்படி தடவி, 30 பின்பு, அவன் தன் திராணிக்கும் தகுதிக்கும் தக்கதாய்க் காட்டுப்புறாக்களையாவது புறாக்குஞ்சுகளையாவது கொண்டுவந்து, 31 அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, போஜனபலியோடேகூடச் செலுத்தி, இப்படியே ஆசாரியன் சுத்திகரிக்கப்படுகிறவனுக்காக, கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். 32 தன் சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளைச் சம்பாதிக்கக்கூடாத குஷ்டரோகியைக் குறித்த பிரமாணம் இதுவே என்றார். 33 பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 34 நான் உங்களுக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, உங்கள் காணியாட்சியான தேசத்தில் ஒரு வீட்டிலே குஷ்டதோஷத்தை நான் வரப்பண்ணினால், 35 அந்த வீட்டிற்கு உடையவன் வந்து, வீட்டிலே தோஷம் வந்திருக்கிறதாகத் தோன்றுகிறது என்று ஆசாரியனுக்கு அறிவிக்கக்கடவன். 36 அப்பொழுது வீட்டிலுள்ள யாவும் தீட்டுப்படாதபடிக்கு, ஆசாரியன் அந்தத் தோஷத்தைப் பார்க்கப் போகும்முன்னே வீட்டை ஒழித்துவைக்கும்படி சொல்லி, பின்பு வீட்டைப் பார்க்கும்படி போய், 37 அந்தத் தோஷம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன்; அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்றச் சுவரைப்பார்க்கிலும் பள்ளமாயிருக்கக்கண்டால், 38 ஆசாரியன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வாசற்படியிலே வந்து, வீட்டை ஏழுநாள் அடைத்துவைத்து, 39 ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப் பார்த்து, தோஷம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால், 40 தோஷம் இருக்கும் அவ்விடத்துக் கல்லுகளைப் பெயர்க்கவும், பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே போடவும் அவன் கட்டளையிட்டு, 41 வீட்டை உள்ளே சுற்றிலும் செதுக்கச்சொல்லி, செதுக்கிப்போட்ட மண்ணைப் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான ஒரு இடத்திலே கொட்டவும், 42 வேறே கல்லுகளை எடுத்துவந்து, அந்தக் கல்லுகளுக்குப் பதிலாகக் கட்டி, வேறே சாந்தை எடுத்து வீட்டைப் பூசவும் கட்டளையிடுவானாக. 43 கல்லுகளைப் பெயர்த்து, வீட்டைச் செதுக்கி, நவமாய்ப் பூசினபின்பும், அந்தத் தோஷம் திரும்ப வீட்டில் வந்ததானால், 44 ஆசாரியன் போய்ப் பார்க்கக்கடவன்; தோஷம் வீட்டில் படர்ந்ததானால், அது வீட்டை அரிக்கிற குஷ்டம்; அது தீட்டாயிருக்கும். 45 ஆகையால் வீடுமுழுவதையும் இடித்து, அதின் கல்லுகளையும், மரங்களையும், அதின் சாந்து எல்லாவற்றையும் பட்டணத்துக்குப் புறம்பே அசுத்தமான இடத்திலே கொண்டுபோகவேண்டும். 46 வீடு அடைக்கப்பட்டிருக்கும் நாட்களில் அதற்குள் பிரவேசிக்கிறவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். 47 அந்த வீட்டிலே படுத்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அந்த வீட்டிலே சாப்பிட்டவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன். 48 ஆசாரியன் திரும்ப வந்து, வீடு பூசப்பட்டபின்பு வீட்டிலே அந்தத் தோஷம் படரவில்லை என்று கண்டானேயாகில், தோஷம் நிவிர்த்தியானபடியால், ஆசாரியன் அந்த வீட்டைச் சுத்தம் என்று தீர்க்கக்கடவன். 49 அப்பொழுது வீட்டிற்குத் தோஷங்கழிக்க, இரண்டு குருவிகளையும், கேதுருக்கட்டையையும், சிவப்புநூலையும், ஈசோப்பையும் எடுத்து, 50 ஒரு குருவியை ஒரு மண்பாண்டத்திலுள்ள ஊற்றுநீரின்மேல் கொன்று, 51 கேதுருக்கட்டையையும், ஈசோப்பையும், சிவப்புநூலையும், உயிருள்ள குருவியையும் எடுத்து, இவைகளைக் கொல்லப்பட்ட குருவியின் இரத்தத்திலும் ஊற்று நீரிலும் தோய்த்து, வீட்டின்மேல் ஏழுதரம் தெளித்து, 52 குருவியின் இரத்தத்தினாலும், ஊற்றுநீரினாலும், உயிருள்ள குருவியினாலும், கேதுருக்கட்டையினாலும் ஈசோப்பினாலும், சிவப்புநூலினாலும் வீட்டிற்குத் தோஷங்கழித்து, 53 உயிருள்ள குருவியைப் பட்டணத்துக்குப் புறம்பே வெளியிலே விட்டுவிட்டு, இப்படி வீட்டிற்குப் பிராயச்சித்தம் செய்யக்கடவன்; அப்பொழுது அது சுத்தமாயிருக்கும். 54 இது சகலவித குஷ்டரோகத்துக்கும், சொறிக்கும், 55 வஸ்திரக் குஷ்டத்துக்கும், வீட்டுக் குஷ்டத்துக்கும், 56 தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் அடுத்த பிரமாணம். 57 குஷ்டம் எப்பொழுது தீட்டுள்ளது என்றும், எப்பொழுது தீட்டில்லாதது என்றும் தெரிவிப்பதற்குக் குஷ்டரோகத்துக்கு அடுத்த பிரமாணம் இதுவே என்றார்.

லேவியராகமம் 15

1 பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 2 நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுக்குப் பிரமியம் உண்டானால், அவன் தன் பிரமியத்தினாலே தீட்டானவன். 3 அவனுடைய மாம்சத்திலுள்ள பிரமியம் ஊறிக்கொண்டிருந்தாலும், அவன் பிரமியம் அடைபட்டிருந்தாலும், அதினால் அவனுக்குத் தீட்டுண்டாகும். 4 பிரமியமுள்ளவன் படுக்கிற எந்தப் படுக்கையும் தீட்டாகும்; அவன் எதின்மேல் உட்காருகிறானோ அதுவும் தீட்டாகும். 5 அவன் படுக்கையைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகக்கடவன்; சாயங்காலமட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக. 6 பிரமியம் உள்ளவன் உட்கார்ந்ததின்மேல் உட்காருகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. 7 பிரமியம் உள்ளவனின் சரீரத்தைத் தொடுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. 8 பிரமியம் உள்ளவன் சுத்தமாயிருக்கிற ஒருவன்மேல் துப்பினால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. 9 பிரமியம் உள்ளவன் ஏறும் எந்தச்சேணமும் தீட்டாயிருக்கும். 10 அவனுக்குக் கீழிருந்த எதையாகிலும் தொடுகிறவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதை எடுத்துக்கொண்டு போகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. 11 பிரமியம் உள்ளவன் தன் கைகளைத் தண்ணீரினால் கழுவாமல் ஒருவனைத் தொட்டால், இவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. 12 பிரமியம் உள்ளவன் தொட்ட மண்பாண்டம் உடைக்கப்படவும், மரச்சாமான் எல்லாம் தண்ணீரினால் கழுவப்படவும் வேண்டும். 13 பிரமியம் உள்ளவன் தன் பிரமியம் நீங்கிச் சுத்தமானால், தன் சுத்திகரிப்புக்கென்று ஏழுநாள் எண்ணிக்கொண்டிருந்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் தேகத்தை ஊற்றுநீரில் கழுவக்கடவன்; அப்பொழுது சுத்தமாயிருப்பான். 14 எட்டாம்நாளிலே, அவன் இரண்டு காட்டுப் புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, ஆசாரியனிடத்தில் கொடுக்கக்கடவன். 15 ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும் மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவன் பிரமியத்தினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யவேண்டும். 16 ஒருவனிலிருந்து இந்திரியம் கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் முழுகவேண்டும்; சாயங்காலமட்டும் அவன் தீட்டுப்பட்டிருப்பானாக. 17 கழிந்த இந்திரியம் பட்ட வஸ்திரமும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, சாயங்காலமட்டும் தீட்டாயிருப்பதாக. 18 இந்திரியம் கழிந்தவனோடே ஸ்திரீ படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பார்களாக. 19 சூதகஸ்திரீ தன் சரீரத்திலுள்ள உதிர ஊறலினிமித்தம் ஏழுநாள் தன் விலக்கத்தில் இருக்கக்கடவள்; அவளைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. 20 அவள் விலக்கலாயிருக்கையில், எதின்மேல் படுத்துக்கொள்ளுகிறாளோ எதின்மேல் உட்காருகிறாளோ அதெல்லாம் தீட்டாயிருக்கும். 21 அவள் படுக்கையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. 22 அவள் உட்கார்ந்த மணையைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. 23 அவள் படுக்கையின்மேலாகிலும், அவள் உட்கார்ந்த மணையின்மேலாகிலும் இருந்த எதையாகிலும் தொட்டவன், சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. 24 ஒருவன் அவளோடே படுத்துக்கொண்டதும், அவள் தீட்டு அவன்மேல் பட்டதுமுண்டானால், அவன் ஏழுநாள் தீட்டாயிருப்பானாக; அவன் படுக்கிற படுக்கையும் தீட்டுப்படும். 25 ஒரு ஸ்திரீ விலகியிருக்கவேண்டியகாலம் அல்லாமல் அவளுடைய உதிரம் அநேகநாள் ஊறிக்கொண்டிருந்தால், அல்லது அந்தக் காலத்துக்கு மிஞ்சி அது கண்டிருக்கும் நாளெல்லாம் ஊறிக்கொண்டிருந்தால், தன் விலக்கத்தின் நாட்களிலிருந்ததுபோல அவள் தீட்டாயிருப்பாளாக. 26 அந்த நாட்களெல்லாம் அவள் படுக்கும் எந்தப் படுக்கையும், அவள் விலக்கத்தின் படுக்கையைப்போல, அவளுக்குத் தீட்டாயிருக்கும்; அவள் உட்கார்ந்த மணையும், அவளுடைய விலக்கத்தின் தீட்டைப்போலவே தீட்டாயிருக்கும். 27 அப்படிப்பட்டவைகளைத் தொடுகிறவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பானாக. 28 அவள் தன் உதிர ஊறல் நின்று சுத்தமானபோது, அவள் ஏழுநாள் எண்ணிக்கொள்வாளாக; அதின்பின்பு சுத்தமாயிருப்பாள். 29 எட்டாம் நாளிலே இரண்டு காட்டுப்புறாக்களையாவது, இரண்டு புறாக்குஞ்சுகளையாவது, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவள். 30 ஆசாரியன் அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியுமாக்கி, அவளுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் அவளுடைய உதிர ஊறலினிமித்தம் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். 31 இஸ்ரவேல் புத்திரர் தங்கள் நடுவே இருக்கிற என்னுடைய வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, தங்கள் தீட்டுகளால் சாகாதபடிக்கு, இப்படி நீங்கள் அவர்கள் தீட்டுகளுக்கு அவர்களை விலக்கிவைக்கக்கடவீர்கள். 32 பிரமியமுள்ளவனுக்கும், இந்திரியக் கழிவினாலே தீட்டானவனுக்கும், 33 சூதக பலவீனமுள்ளவளுக்கும், பிரமியமுள்ள ஸ்திரீ புருஷருக்கும், தீட்டாயிருக்கிறவளோடே படுத்துக்கொண்டவனுக்கும் ஏற்ற பிரமாணம் இதுவே என்றார்.

லேவியராகமம் 16

1 ஆரோனின் இரண்டு குமாரர் கர்த்தருடைய சந்நிதியிலே சேர்ந்து மரித்துப்போனபின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி: 2 கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல். 3 ஆரோன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கவேண்டிய விதமாவது: அவன் ஒரு காளையைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு ஆட்டுக்கடாவைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்திப் பிரவேசிக்கவேண்டும். 4 அவன் பரிசுத்தமான சணல்நூல் சட்டையைத் தரித்து, தன் அரைக்குச் சணல்நூல் ஜல்லடத்தைப் போட்டு, சணல்நூல் இடைக்கச்சையைக் கட்டி, சணல்நூல் பாகையைத் தரித்துக்கொண்டிருக்கவேண்டும்; அவைகள் பரிசுத்த வஸ்திரங்கள்; அவன் ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அவைகளைத் தரித்துக்கொண்டு, 5 இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்திலே, பாவநிவாரணபலியாக இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும், சர்வாங்க தகனபலியாக ஒரு ஆட்டுக்கடாவையும் வாங்கக்கடவன். 6 பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு, தன்னுடைய பாவநிவாரணபலியின் காளையைச் சேரப்பண்ணி, 7 அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, 8 அந்த இரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையுங்குறித்துக் கர்த்தருக்கென்று ஒரு சீட்டும், போக்காடாக விடப்படும் வெள்ளாட்டுக்கடாவுக்கென்று ஒரு சீட்டும் போட்டு, 9 கர்த்தருக்கென்று சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணபலியாகச் சேரப்பண்ணி, 10 போக்காடாக விடப்படச் சீட்டு விழுந்த வெள்ளாட்டுக்கடாவை, அதைக்கொண்டு பாவநிவிர்த்தி உண்டாக்கவும் அதைப் போக்காடாக வனாந்தரத்திலே போகவிடவும், கர்த்தருடைய சந்நிதியில் உயிரோடே நிறுத்தி; 11 பின்பு ஆரோன் தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் பாவநிவிர்த்தி செய்யும்படி, தன்னுடைய பாவநிவாரணத்துக்கான காளையைக் கொண்டுவந்து, அதைக் கொன்று, 12 கர்த்தருடைய சந்நிதியிலிருக்கும் பலிபீடத்தின்மேலுள்ள நெருப்புத்தணலினால் தூபகலசத்தை நிரப்பி, பொடியாக்கப்பட்ட சுகந்த தூபவர்க்கத்திலே தன் கைப்பிடிகள் நிறைய எடுத்து, திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, 13 தான் சாகாதபடிக்குத் தூபமேகமானது சாட்சிப்பெட்டியின்மேல் இருக்கும் கிருபாசனத்தை மூடத்தக்கதாக, கர்த்தருடைய சந்நிதியில் அக்கினியின்மேல் தூபவர்க்கத்தைப் போடக்கடவன். 14 பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்துக்கு முன்பாக ஏழுதரம் தன் விரலினால் தெளிக்கக்கடவன். 15 பின்பு ஜனத்தினுடைய பாவநிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்ததுபோல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து, 16 இஸ்ரவேல் புத்திரருடைய தீட்டுகளினிமித்தமும், அவர்களுடைய சகல பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய மீறுதல்களினிமித்தமும், பரிசுத்த ஸ்தலத்திற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, அவர்களிடத்தில் அவர்களுடைய தீட்டுகளுக்குள்ளே நிற்கிற ஆசரிப்புக் கூடாரத்திற்காகவும் அப்படியே செய்யக்கடவன். 17 பாவநிவிர்த்தி செய்யும்படி அவன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் இஸ்ரவேல் சபையார் அனைவருக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, வெளியே வருமளவும் ஆசரிப்புக் கூடாரத்தில் ஒருவரும் இருக்கலாகாது. 18 பின்பு அவன் கர்த்தருடைய சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தண்டை வந்து, அதற்காகப் பிராயச்சித்தஞ்செய்து, காளையின் இரத்தத்திலும் வெள்ளாட்டுக்கடாவின் இரத்தத்திலும் கொஞ்சம் எடுத்து, பலிபீடத்துக் கொம்புகளின்மேல் சுற்றிலும் பூசி, 19 தன் விரலினால் அந்த இரத்தத்தில் எடுத்து, ஏழுதரம் அதின்மேல் தெளித்து, அதை இஸ்ரவேல் புத்திரரின் தீட்டுகள் நீங்கச் சுத்திகரித்து, பரிசுத்தப்படுத்தக்கடவன். 20 அவன் இப்படிப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து தீர்ந்தபின்பு, உயிரோடிருக்கிற வெள்ளாட்டுக்கடாவைச் சேரப்பண்ணி, 21 அதின் தலையின்மேல் ஆரோன் தன் இரண்டு கைகளையும் வைத்து, அதின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய சகல அக்கிரமங்களையும் அவர்களுடைய எல்லாப் பாவங்களினாலும் உண்டான அவர்களுடைய சகல மீறுதல்களையும் அறிக்கையிட்டு, அவைகளை வெள்ளாட்டுக்கடாவினுடைய தலையின்மேல் சுமத்தி, அதை அதற்கான ஆள்வசமாய் வனாந்தரத்துக்கு அனுப்பிவிடக்கடவன். 22 அந்த வெள்ளாட்டுக்கடா அவர்களுடைய அக்கிரமங்களையெல்லாம் தன்மேல் சுமந்துகொண்டு, குடியில்லாத தேசத்துக்குப் போவதாக; அவன் அந்த வெள்ளாட்டுக்கடாவை வனாந்தரத்திலே போகவிடக்கடவன். 23 ஆரோன் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் வந்து, தான் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போது, உடுத்தியிருந்த சணல்நூல் வஸ்திரங்களைக் களைந்து, அங்கே வைத்துவிட்டு, 24 பரிசுத்த இடத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, தன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, வெளியே வந்து, தன் சர்வாங்க தகனபலியையும் ஜனங்களின் சர்வாங்க தகனபலியையும் இட்டு, தனக்காகவும் ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்து, 25 பாவநிவாரணபலியின் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் தகனிக்கக்கடவன். 26 போகவிடப்படும் போக்காடாகிய வெள்ளாட்டுக்கடாவைக் கொண்டுபோய் விட்டவன், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக. 27 பாவநிவிர்த்திக்கென்று பரிசுத்த ஸ்தலத்துக்குள் இரத்தம் கொண்டுவரப்பட்ட பாவநிவாரணபலியாகிய காளையையும், பாவநிவாரணபலியாகிய வெள்ளாட்டுக்கடாவையும், பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவைகளின் தோலையும் மாம்சத்தையும் சாணியையும் அக்கினியிலே சுட்டெரிக்கக்கடவர்கள். 28 அவைகளைச் சுட்டெரித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, பின்பு பாளயத்துக்குள் வருவானாக. 29 ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, சுதேசியானாலும் உங்களுக்குள் தங்கும் பரதேசியானாலும், தங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்துவதுமன்றி, ஒரு வேலையும் செய்யாமல் இருக்கவேண்டும்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாய் இருக்கக்கடவது. 30 கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் பாவமெல்லாம் நீங்கிச் சுத்திகரிக்கப்படும்படி, அந்நாளில் உங்களைச் சுத்திகரிக்கும்பொருட்டு, உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும். 31 உங்களுக்கு அது விசேஷித்த ஓய்வுநாள்; அதிலே உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தக்கடவீர்கள்; இது நித்திய கட்டளை. 32 அபிஷேகம் பெற்றவனும், தன் தகப்பன் பட்டத்திற்கு வந்து ஆசாரிய ஊழியஞ்செய்யப் பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாகிய ஆசாரியனே பாவநிவிர்த்தி செய்யக்கடவன். அவன் பரிசுத்த வஸ்திரங்களாகிய சணல்நூல் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, 33 பரிசுத்த ஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் பிராயச்சித்தஞ்செய்து, ஆசாரியருக்காகவும் சபையின் சகல ஜனங்களுக்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன். 34 இப்படி வருஷத்தில் ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது என்று சொல் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.

லேவியராகமம் 17

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியதாவது; கர்த்தர் கட்டளையிடுகிறது என்னவென்றால்: 3 இஸ்ரவேல் குடும்பத்தாரில் எவனாகிலும் மாட்டையாவது செம்மறியாட்டையாவது வெள்ளாட்டையாவது ஆசரிப்புக் கூடாரவாசலாகிய கர்த்தருடைய வாசஸ்தலத்துக்கு முன்பாக, கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராமல், 4 பாளயத்துக்குள்ளேயாகிலும் பாளயத்துக்குப் புறம்பேயாகிலும் அதைக் கொன்றால், அது அந்த மனிதனுக்கு இரத்தப்பழியாக எண்ணப்படும். அந்த மனிதன் இரத்தம் சிந்தினபடியால், தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டு போவான். 5 ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் வெளியிலே பலியிடுகிற தங்கள் பலிகளை, ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அங்கே அவைகளைக் கர்த்தருக்குச் சமாதானபலிகளாகச் செலுத்தக்கடவர்கள். 6 அங்கே ஆசாரியன் இரத்தத்தை ஆசரிப்புக் கூடாரவாசலிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் தெளித்து, கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையாகத் தகனிக்கக்கடவன். 7 தாங்கள் சோரமார்க்கமாய்ப் பின்பற்றுகிற பேய்களுக்குத் தங்கள் பலிகளை இனிச் செலுத்தாதிருப்பார்களாக; இது அவர்கள் தலைமுறைதோறும் அவர்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது. 8 மேலும் நீ அவர்களை நோக்கி: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் சர்வாங்க தகனபலி முதலானவைகளையிட்டு, 9 அதை ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருக்குச் செலுத்தும்படி கொண்டுவராவிட்டால், அவன் தன் ஜனத்தில் இராமல் அறுப்புண்டுபோவான் என்று சொல். 10 இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் உங்களுக்குள் தங்கும் அந்நியர்களிலும் எவனாகிலும் இரத்தம் என்னப்பட்டதைப் புசித்தால், இரத்தத்தைப் புசித்த அவனுக்கு விரோதமாக நான் என் முகத்தைத் திருப்பி, அவன் தன் ஜனத்தில் இராதபடிக்கு அவனை அறுப்புண்டுபோகப் பண்ணுவேன். 11 மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது; நான் அதை உங்களுக்குப் பலிபீடத்தின்மேல் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்குக் கட்டளையிட்டேன்; ஆத்துமாவிற்காகப் பாவநிவிர்த்தி செய்கிறது இரத்தமே. 12 அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்கவேண்டாம் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன். 13 இஸ்ரவேல் புத்திரரிலும் உங்களுக்குள் தங்குகிற அந்நியர்களிலும் எவனாகிலும் புசிக்கத்தக்க ஒரு மிருகத்தையாவது ஒரு பட்சியையாவது வேட்டையாடிப் பிடித்தால், அவன் அதின் இரத்தத்தைச் சிந்தப்பண்ணி, மண்ணினால் அதை மூடக்கடவன். 14 சகல மாம்சத்துக்கும் இரத்தம் உயிராயிருக்கிறது; இரத்தம் ஜீவனுக்குச் சமானம்; ஆகையால் எந்த மாம்சத்தின் இரத்தத்தையும் புசிக்கவேண்டாம்; சகல மாம்சத்தின் உயிரும் அதின் இரத்தந்தானே; அதைப் புசிக்கிற எவனும் அறுப்புண்டுபோவான் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன். 15 தானாய் இறந்துபோனதையாவது, பீறுண்டதையாவது, புசித்தவன் எவனும், அவன் சுதேசியானாலும் பரதேசியானாலும், தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தண்ணீரில் முழுகி, சாயங்காலமட்டும் தீட்டாயிருப்பானாக; பின்பு சுத்தமாயிருப்பான். 16 அவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்காமலும், ஸ்நானம்பண்ணாமலும் இருந்தால், தன் அக்கிரமத்தைச் சுமப்பான் என்று சொல் என்றார்.

லேவியராகமம் 18

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். 3 நீங்கள் குடியிருந்த எகிப்துதேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், நான் உங்களை அழைத்துப்போகிற கானான் தேசத்தாருடைய செய்கையின்படி செய்யாமலும், அவர்களுடைய முறைமைகளின்படி நடவாமலும், 4 என்னுடைய நியாயங்களின்படி செய்து, என்னுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். 5 ஆகையால் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர். 6 ஒருவனும் தனக்கு நெருங்கின இனமாகிய ஒருத்தியை நிர்வாணமாக்கும்படி அவளைச் சேரலாகாது; நான் கர்த்தர். 7 உன் தகப்பனையாவது உன் தாயையாவது நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாயானவள்; அவளை நிர்வாணமாக்கலாகாது. 8 உன் தகப்பனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் தகப்பனுடைய நிர்வாணம். 9 உன் தகப்பனுக்காவது உன் தாய்க்காவது வீட்டிலாகிலும் புறத்திலாகிலும் பிறந்த குமாரத்தியாகிய உன் சகோதரியை நிர்வாணமாக்கலாகாது. 10 உன் குமாரனுடைய மகளையாவது உன் குமாரத்தியினுடைய மகளையாவது நிர்வாணமாக்கலாகாது; அது உன்னுடைய நிர்வாணம். 11 உன் தகப்பனுடைய மனைவியினிடத்தில் உன் தகப்பனுக்குப் பிறந்த குமாரத்தியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உனக்குச் சகோதரி. 12 உன் தகப்பனுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தகப்பனுக்கு நெருங்கின இனமானவள். 13 உன் தாயினுடைய சகோதரியை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் தாய்க்கு நெருங்கின இனமானவள். 14 உன் தகப்பனுடைய சகோதரனை நிர்வாணமாக்கலாகாது; அவன் மனைவியைச் சேராயாக; அவள் உன் தகப்பனுடைய சகோதரி. 15 உன் மருமகளை நிர்வாணமாக்கலாகாது; அவள் உன் குமாரனுக்கு மனைவி, அவளை நிர்வாணமாக்கலாகாது. 16 உன் சகோதரனுடைய மனைவியை நிர்வாணமாக்கலாகாது; அது உன் சகோதரனுடைய நிர்வாணம். 17 ஒரு ஸ்திரீயையும் அவள் மகளையும் நிர்வாணமாக்கலாகாது; அவளுடைய குமாரரின் மகளையும் அவளுடைய குமாரத்தியின் மகளையும் நிர்வாணமாக்கும்படி விவாகம்பண்ணலாகாது; இவர்கள் அவளுக்கு நெருங்கின இனமானவர்கள்; அது முறைகேடு. 18 உன் மனைவி உயிரோடிருக்கையில், அவளுக்கு உபத்திரவமாக அவள் சகோதரியையும் நிர்வாணமாக்கும்பொருட்டு அவளை விவாகம்பண்ணலாகாது. 19 ஸ்திரீயானவள் சூதகத்தால் விலக்கத்திலிருக்கையில், அவளை நிர்வாணமாக்க அவளோடே சேராதே. 20 பிறனுடைய மனைவியோடே சேரும்படி சயனித்து, அவளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளவேண்டாம். 21 நீ உன் சந்ததியில் யாரையாகிலும் மோளேகுக்கென்று தீக்கடக்கும்படி இடங்கொடாதே; உன் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதே; நான் கர்த்தர். 22 பெண்ணோடு சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம் பண்ணவேண்டாம்; அது அருவருப்பானது. 23 யாதொரு மிருகத்தோடும் நீ புணர்ச்சிசெய்து, அதினாலே உன்னைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; ஸ்திரீயானவள் மிருகத்தோடே புணரும்படி அதற்கு முன்பாக நிற்கலாகாது; அது அருவருப்பான தாறுமாறு. 24 இவைகளில் ஒன்றினாலும் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருங்கள்; நான் உங்கள் முன்னின்று துரத்திவிடுகிற ஜாதிகள் இவைகளெல்லாவற்றினாலும் தங்களைத் தீட்டுப்படுத்தியிருக்கிறார்கள்; தேசமும் தீட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. 25 ஆகையால் அதின் அக்கிரமத்தை விசாரிப்பேன்; தேசம் தன் குடிகளைக் கக்கிப்போடும். 26 இந்த அருவருப்புகளையெல்லாம் உங்களுக்குமுன் இருந்த அந்தத் தேசத்தின் மனிதர் செய்ததினாலே தேசம் தீட்டாயிற்று. 27 இப்பொழுதும் உங்களுக்கு முன் இருந்த ஜாதிகளை தேசம் கக்கிப்போட்டதுபோல, நீங்கள் அதைத் தீட்டுப்படுத்தும்போது அது உங்களையும் கக்கிப்போடாதபடிக்கு, 28 நீங்கள் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொண்டு, தேசத்திலே பிறந்தவனானாலும் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனானாலும் இந்த அருவருப்புகளில் ஒன்றையும் செய்யவேண்டாம். 29 இப்படிப்பட்ட அருவருப்பானவைகளில் யாதொன்றை யாராவது செய்தால், செய்த அந்த ஆத்துமாக்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவார்கள். 30 ஆகையால் உங்களுக்குமுன் செய்யப்பட்ட அருவருப்பான முறைமைகளில் யாதொன்றை நீங்கள் செய்து, அவைகளால் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாதபடிக்கு என் கட்டளையைக் கைக்கொள்ளுங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

லேவியராகமம் 19

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நீ இஸ்ரவேல் புத்திரரின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள். 3 உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தன்தன் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். 4 விக்கிரகங்களை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். 5 நீங்கள் சமாதானபலியைக் கர்த்தருக்குச் செலுத்தினால், அதை மனோற்சாகமாய்ச் செலுத்துங்கள். 6 நீங்கள் அதைச் செலுத்துகிற நாளிலும் மறுநாளிலும் அதைப் புசிக்கவேண்டும்; மூன்றாம் நாள்மட்டும் மீதியானது அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவது. 7 மூன்றாம் நாளில் அதில் ஏதாகிலும் புசிக்கப்பட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கிகரிக்கப்படமாட்டாது. 8 அதைப் புசிக்கிறவன் கர்த்தருக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து, தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். 9 நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்திலிருக்கிறதைத் தீர அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், 10 உன் திராட்சத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். 11 நீங்கள் களவுசெய்யாமலும், வஞ்சனைபண்ணாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள். 12 என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர். 13 பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்மட்டும் உன்னிடத்தில் இருக்கலாகாது. 14 செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வையாமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் கர்த்தர். 15 நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்துக்கு அஞ்சாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக. 16 உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர். 17 உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்துகொள்ளவேண்டும். 18 பழிக்குப்பழி வாங்காமலும், உன் ஜனப்புத்திரர்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் கர்த்தர். 19 என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருகஜீவன்களை வேறுஜாதியோடே பொலியவிடாயாக; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதையாயாக; சணல்நூலும் கம்பளிநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்தாதிருப்பாயாக. 20 ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு புருஷனுக்கு நியமிக்கப்பட்டவளாயிருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாய் விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் சம்யோகமாய்ச் சயனம்பண்ணினால், அவர்கள் கொலைசெய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுயாதீனமுள்ளவள் அல்ல. 21 அவன் தன் குற்றநிவாரணபலியாய் ஆசரிப்புக் கூடாரவாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன். 22 அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும். 23 நீங்கள் அந்தத் தேசத்தில் வந்து, புசிக்கத்தக்க கனிகளைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு, அவைகளின் கனிகளை விருத்தசேதனமில்லாதவைகளென்று எண்ணுவீர்களாக; மூன்று வருஷம் அது புசிக்கப்படாமல், விருத்தசேதனமில்லாததாய் உங்களுக்கு எண்ணப்படவேண்டும். 24 பின்பு நாலாம் வருஷத்திலே அவைகளின் கனிகளெல்லாம் கர்த்தருக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாயிருக்கும். 25 ஐந்தாம் வருஷத்திலே அவைகளின் கனிகளைப் புசிக்கலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். 26 யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்கவேண்டாம். குறிகேளாமலும், நாள்பாராமலும் இருப்பீர்களாக. 27 உங்கள் தலைமயிரைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும், 28 செத்தவனுக்காக உங்கள் சரீரத்தைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துகளை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் கர்த்தர். 29 தேசத்தார் வேசித்தனம்பண்ணி தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடிக்கு உன் குமாரத்தியை வேசித்தனம்பண்ண விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காயாக. 30 என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர். 31 அஞ்சனம்பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். 32 நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர். 33 யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம். 34 உங்களிடத்தில் வாசம்பண்ணுகிற அந்நியனைச் சுதேசிபோல எண்ணி, நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். 35 நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக. 36 சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான நிறைகல்லும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர். 37 ஆகையால் என்னுடைய கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.

லேவியராகமம் 20

1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2 பின்னும் நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரிலும் இஸ்ரவேலில் வாசம்பண்ணுகிற அந்நியர்களிலும் எவனாகிலும் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்தால், அவன் கொலைசெய்யப்படவேண்டும்; தேசத்தின் ஜனங்கள் அவன்மேல் கல்லெறியவேண்டும். 3 அவன் என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தி, என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கும்படிக்கு, தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுத்ததினாலே, நான் அப்படிப்பட்டவனுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டு போகப்பண்ணுவேன். 4 அவன் தன் சந்ததியில் ஒரு பிள்ளையை மோளேகுக்குக் கொடுக்கும்போது, தேசத்தின் ஜனங்கள் அவனைக் கொலைசெய்யாதபடிக்குக் கண்சாடையாயிருந்தால், 5 நான் அந்த மனிதனுக்கும் அவன் குடும்பத்துக்கும் விரோதமாக எதிர்த்துநின்று, அவனையும், அவன் பிறகே மோளேகை விபசாரமார்க்கமாய்ப் பின்பற்றின யாவரையும், தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன். 6 அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்துநின்று, அவனைத் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகப்பண்ணுவேன். 7 ஆதலால் நீங்கள் உங்களைப் பரிசுத்தப்படுத்திப் பரிசுத்தராயிருங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். 8 என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர். 9 தன் தகப்பனையாவது தன் தாயையாவது சபிக்கிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; அவன் தன் தகப்பனையும் தன் தாயையும் சபித்தான், அவன் இரத்தப்பழி அவன்மேல் இருப்பதாக. 10 ஒருவன் பிறனுடைய மனைவியோடே விபசாரம் செய்தால், பிறன் மனைவியோடே விபசாரம் செய்த அந்த விபசாரனும் அந்த விபசாரியும் கொலைசெய்யப்படக்கடவர்கள். 11 தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன் தன் தகப்பனை நிர்வாணமாக்கினபடியால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக. 12 ஒருவன் தன் மருமகளோடே சயனித்தால், இருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அருவருப்பான தாறுமாறு பண்ணினார்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக. 13 ஒருவன் பெண்ணோடே சம்யோகம் பண்ணுகிறதுபோல ஆணோடே சம்யோகம்பண்ணினால், அருவருப்பான காரியம் செய்த அவ்விருவரும் கொலைசெய்யப்படக்கடவர்கள்; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருப்பதாக. 14 ஒருவன் ஒரு ஸ்திரீயையும் அவள் தாயையும் படைத்தால், அது முறைகேடு; இவ்வித முறைகேடு உங்களுக்குள் இராதபடிக்கு, அவனையும் அவர்களையும் அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும். 15 ஒருவன் மிருகத்தோடே புணர்ந்தால், அவன் கொலைசெய்யப்படக்கடவன்; அந்த மிருகத்தையும் கொல்லக்கடவீர்கள். 16 ஒரு ஸ்திரீ யாதொரு மிருகத்தோடே சேர்ந்து சயனித்தால், அந்த ஸ்திரீயையும் அந்த மிருகத்தையும் கொல்லக்கடவாய்; இருஜீவனும் கொலைசெய்யப்படவேண்டும்; அவைகளின் இரத்தப்பழி அவைகளின்மேல் இருப்பதாக. 17 ஒருவன் தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது குமாரத்தியாயிருக்கிற தன் சகோதரியைச் சேர்த்துக்கொண்டு, அவன் அவளுடைய நிர்வாணத்தையும், அவள் அவனுடைய நிர்வாணத்தையும் பார்த்தால், அது பாதகம்; அவர்கள் தங்கள் ஜனங்களின் கண்களுக்கு முன்பாக அறுப்புண்டு போகக்கடவர்கள்; அவன் தன் சகோதரியை நிர்வாணப்படுத்தினான்; அவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான். 18 ஒருவன் சூதகஸ்திரீயோடே சயனித்து, அவளை நிர்வாணமாக்கினால், அவன் அவளுடைய உதிர ஊற்றைத் திறந்து, அவளும் தன் உதிர ஊற்றை வெளிப்படுத்தினபடியால், இருவரும் தங்கள் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும். 19 உன் தாயினுடைய சகோதரியையும் உன் தகப்பனுடைய சகோதரியையும் நிர்வாணமாக்காயாக, அப்படிப்பட்டவன் தன் நெருங்கிய இனத்தை அவமானமாக்கினான்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள். 20 ஒருவன் தன் தகப்பனின் சகோதரனுடைய மனைவியோடே சயனித்தால், அவன் தன் தகப்பனின் சகோதரனை நிர்வாணமாக்கினான்; அவர்கள் தங்கள் பாவத்தைச் சுமப்பார்கள், சந்தானமில்லாமல் சாவார்கள். 21 ஒருவன் தன் சகோதரன் மனைவியை விவாகம்பண்ணினால், அது அசுத்தம்; தன் சகோதரனை நிர்வாணமாக்கினான், அவர்கள் சந்தானமற்றிருப்பார்கள். 22 ஆகையால் நீங்கள் குடியிருப்பதற்காக நான் உங்களைக் கொண்டுபோகிற தேசம் உங்களைக் கக்கிப்போடாதபடிக்கு, நீங்கள் என் கட்டளைகள் யாவையும் என்னுடைய நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு நடவுங்கள். 23 நான் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுகிற ஜனத்தினுடைய வழிபாடுகளில் நடவாதிருங்கள்; அவர்கள் இப்படிப்பட்ட காரியங்களையெல்லாம் செய்தபடியால் நான் அவர்களை அரோசித்தேன். 24 நீங்கள் அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பீர்கள் என்று உங்களோடே சொன்னேன்; பாலும் தேனும் ஓடுகிற அந்த தேசத்தை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்த உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே. 25 ஆகையால் சுத்தமான மிருகங்களுக்கும் அசுத்தமான மிருகங்களுக்கும், சுத்தமான பறவைகளுக்கும் அசுத்தமான பறவைகளுக்கும் நீங்கள் வித்தியாசம்பண்ணி, நான் உங்களுக்குத் தீட்டாக எண்ணச்சொல்லி விலக்கின மிருகங்களாலும் பறவைகளாலும் தரையிலே ஊருகிற யாதொரு பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்காதிருப்பீர்களாக. 26 கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக; நீங்கள் என்னுடையவர்களாயிருக்கும்படிக்கு, உங்களை மற்ற ஜனங்களைவிட்டுப் பிரித்தெடுத்தேன். 27 அஞ்சனம்பார்க்கிறவர்களும் குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கொலைசெய்யப்படவேண்டும்; அவர்கள்மேல் கல்லெறிவார்களாக; அவர்கள் இரத்தப்பழி அவர்கள்மேல் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.

லேவியராகமம் 21

1 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் குமாரராகிய ஆசாரியர்களில் ஒருவனும் தன் ஜனத்தாரில் இறந்துபோன யாதொருவருக்காகத் தங்களைத் தீட்டுப்படுத்தலாகாதென்று அவர்களோடே சொல். 2 தன் தாயும், தன் தகப்பனும், தன் குமாரனும், தன் குமாரத்தியும், தன் சகோதரனும், 3 புருஷனுக்கு வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னியாஸ்திரீயான தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கின இனமான இவர்களுடைய சாவுக்காகத் தீட்டுப்படலாம். 4 தன் ஜனத்தாரில் பெரியவனாகிய அவன் வேறொருவருக்காகவும் தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கித் தீட்டுப்படுத்தலாகாது. 5 அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துப்போடாமலும், தங்கள் தேகத்தைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக. 6 தங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமல் அவருக்கேற்ற பரிசுத்தராயிருப்பார்களாக; அவர்கள் கர்த்தரின் தகனபலிகளையும் தங்கள் தேவனுடைய அப்பத்தையும் செலுத்துகிறவர்களாதலால் பரிசுத்தராயிருக்கவேண்டும். 7 அவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமானவர்கள், ஆகையால் வேசியையாகிலும் கற்புக்குலைந்தவளையாகிலும் விவாகம்பண்ணார்களாக; தன் புருஷனாலே தள்ளப்பட்ட ஸ்திரீயையும் விவாகம்பண்ணார்களாக. 8 அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்துகிறபடியால் நீ அவனைப் பரிசுத்தப்படுத்தவேண்டும்; உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியால், அவனும் உனக்கு முன்பாகப் பரிசுத்தனாயிருப்பானாக. 9 ஆசாரியனுடைய குமாரத்தி வேசித்தனம்பண்ணி, தன்னைப் பரிசுத்தக் குலைச்சலாக்கினால், அவள் தன் தகப்பனையும் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறாள்; அவள் அக்கினியிலே சுட்டெரிக்கப்படக்கடவள். 10 தன் சகோதரருக்குள்ளே பிரதான ஆசாரியனாக தன் சிரசில் அபிஷேகதைலம் வார்க்கப்பட்டவனும், அவனுக்குரிய வஸ்திரங்களைத் தரிக்கும்படி பிரதிஷ்டைபண்ணப்பட்டவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் பாகையை எடுக்காமலும், தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளாமலும், 11 பிரேதம் கிடக்கும் இடத்தில் போகாமலும், தன் தகப்பனுக்காகவும் தன் தாய்க்காகவும் தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளாமலும், 12 பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படாமலும், தன் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பானாக; அவனுடைய தேவனின் அபிஷேகதைலம் என்னும் கிரீடம் அவன்மேல் இருக்கிறதே; நான் கர்த்தர். 13 கன்னிகையாயிருக்கிற பெண்ணை அவன் விவாகம்பண்ணவேண்டும். 14 விதவையையானாலும் தள்ளப்பட்டவளையானாலும் கற்புகுலைந்தவளையானாலும் வேசியையானாலும் விவாகம்பண்ணாமல், தன் ஜனங்களுக்குள்ளே ஒரு கன்னிகையை விவாகம்பண்ணக்கடவன். 15 அவன் தன் வித்தைத் தன் ஜனங்களுக்குள்ளே பரிசுத்தக் குலைச்சலாக்காமல் இருப்பானாக; நான் அவனைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார். 16 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 17 நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் சந்ததியாருக்குள்ளே அங்கவீனமுள்ளவன் தலைமுறைதோறும் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தும்படி சேரலாகாது. 18 அங்கவீனமுள்ள ஒருவனும் அணுகலாகாது; குருடனானாலும், சப்பாணியானாலும், குறுகின அல்லது நீண்ட அவயவமுள்ளவனானாலும், 19 காலொடிந்தவனானாலும், கையொடிந்தவனானாலும், 20 கூனனானாலும், குள்ளனானாலும், பூவிழுந்த கண்ணனானாலும், சொறியனானாலும், அசறுள்ளவனானாலும், விதை நசுங்கினவனானாலும் அணுகலாகாது. 21 ஆசாரியனாகிய ஆரோனின் சந்ததியாரில் அங்கவீனமுள்ள ஒருவனும் கர்த்தரின் தகனபலிகளைச் செலுத்தச் சேரலாகாது; அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் தேவனுடைய அப்பத்தைச் செலுத்தச் சேரலாகாது. 22 அவன் தன் தேவனுடைய அப்பமாகிய மகா பரிசுத்தமானவைகளிலும் மற்ற பரிசுத்தமானவைகளிலும் புசிக்கலாம். 23 ஆனாலும் அவன் அங்கவீனமுள்ளவனாகையால், அவன் என் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்குத் திரைக்குள்ளே போகாமலும் பலிபீடத்தண்டையில் சேராமலும் இருப்பானாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார். 24 மோசே இவைகளை ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொன்னான்.

லேவியராகமம் 22

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 2 இஸ்ரவேல் புத்திரர் எனக்கென்று நியமித்துச் செலுத்துகிற பரிசுத்த வஸ்துக்களைக்குறித்து ஆரோனும் அவன் குமாரரும் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களோடே சொல்; நான் கர்த்தர். 3 அன்றியும் நீ அவர்களை நோக்கி: உங்கள் தலைமுறைகளிலுள்ள சந்ததியாரில் எவனாகிலும் தான் தீட்டுப்பட்டிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தமானவைகளண்டையில் சேர்ந்தால், அந்த ஆத்துமா என் சந்நிதியில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான் என்று சொல்; நான் கர்த்தர். 4 ஆரோனின் சந்ததியாரில் எவன் குஷ்டரோகியோ, எவன் பிரமியமுள்ளவனோ, அவன் சுத்தமாகும்மட்டும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; பிணத்தினாலே தீட்டானவைகளில் எதையாகிலும் தொட்டவனும், இந்திரியங்கழிந்தவனும், 5 தீட்டுப்படுத்துகிற யாதொரு ஊரும் பிராணியையாகிலும் தீட்டுள்ள மனிதனையாகிலும் தொட்டவனும், 6 சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் ஜலத்தில் ஸ்நானம்பண்ணும்வரைக்கும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது. 7 சூரியன் அஸ்தமித்தபின்பு சுத்தமாயிருப்பான்; அதன்பின்பு அவன் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாம்; அது அவனுடைய ஆகாரம். 8 தானாய்ச் செத்ததையும் பீறுண்டதையும் அவன் புசிக்கிறதினாலே தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது; நான் கர்த்தர். 9 ஆகையால் பரிசுத்தமானதை அவர்கள் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறதினாலே, பாவம் சுமந்து அதினிமித்தம் சாகாதபடிக்கு, என் கட்டளையைக் காக்கக்கடவர்கள்; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர். 10 அந்நியன் ஒருவனும் பரிசுத்தமானவைகளில் புசிக்கலாகாது; ஆசாரியன் வீட்டில் தங்கியிருக்கிறவனும் கூலிவேலை செய்கிறவனும் பரிசுத்தமானதில் புசிக்கலாகாது. 11 ஆசாரியனால் பணத்துக்குக் கொள்ளப்பட்டவனும், அவன் வீட்டிலே பிறந்தவனும் அவனுடைய ஆகாரத்தில் புசிக்கலாம். 12 ஆசாரியனுடைய குமாரத்தி அந்நியனுக்கு வாழ்க்கைப்பட்டால், அவள் பரிசுத்தமானவைகளின் படைப்பிலே புசிக்கலாகாது. 13 விதவையாய்ப்போன, அல்லது தள்ளப்பட்டவளான ஆசாரியனுடைய குமாரத்தி பிள்ளையில்லாதிருந்து, தன் தகப்பன் வீட்டில் தன்னுடைய இளவயதில் இருந்ததுபோலத் திரும்பவந்து இருந்தாளேயாகில், அவள் தன் தகப்பன் ஆகாரத்தில் புசிக்கலாம்; அந்நியனாகிய ஒருவனும் அதில் புசிக்கலாகாது. 14 ஒருவன் அறியாமல் பரிசுத்தமானதில் புசித்ததுண்டானால், அவன் அதிலே ஐந்தில் ஒரு பங்கு அதிகமாய்க் கூட்டிப் பரிசுத்தமானவைகளோடுங்கூட ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவன். 15 அவர்கள் கர்த்தருக்குப் படைக்கிற இஸ்ரவேல் புத்திரருடைய பரிசுத்தமானவைகளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காமலும், 16 அவைகளைப் புசிக்கிறதினால் அவர்கள்மேல் குற்றமான அக்கிரமத்தைச் சுமரப்பண்ணாமலும் இருப்பார்களாக; நான் அவர்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர் என்று சொல் என்றார். 17 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 18 நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் குடும்பத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியர்களிலும் தங்களுடைய பொருத்தனைகளின்படியாகிலும் உற்சாகத்தின்படியாகிலும் சர்வாங்க தகனபலிகளாகக் கர்த்தருக்குத் தங்கள் காணிக்கையை எவர்கள் செலுத்தப்போகிறார்களோ, 19 அவர்கள் தங்கள் மனதின்படியே மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் வெள்ளாடுகளிலாகிலும் பழுதற்ற ஒரு ஆணைப் பிடித்துவந்து செலுத்துவார்களாக. 20 பழுதுள்ள ஒன்றையும் செலுத்த வேண்டாம்; அது உங்கள்நிமித்தம் அங்கிகரிக்கப்படுவதில்லை. 21 ஒருவன் விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாகமாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சமாதானபலிகளைச் செலுத்தப்போனால், அது அங்கிகரிக்கப்படும்படி, ஒரு பழுதுமில்லாமல் உத்தமமாயிருக்கவேண்டும். 22 குருடு, நெரிசல், முடம், கழலை, சொறி, புண் முதலிய பழுதுள்ளவைகளை நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளாலே கர்த்தருக்குப் பலிபீடத்தின்மேல் தகனபலியிடாமலும் இருப்பீர்களாக. 23 நீண்ட அல்லது குறுகின அவயவமுள்ள மாட்டையும் ஆட்டையும் நீ உற்சாகபலியாக இடலாம்; பொருத்தனைக்காக அது அங்கிகரிக்கப்படமாட்டாது. 24 விதை நசுங்கினதையும் நொறுங்கினதையும் காயம்பட்டதையும் விதை அறுக்கப்பட்டதையும் நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தாமலும், அவைகளை உங்கள் தேசத்திலே பலியிடாமலும் இருப்பீர்களாக. 25 அந்நிய புத்திரன் கையிலும் இப்படிப்பட்டதை வாங்கி, தேவனுக்கு அப்பமாகச் செலுத்தீர்களாக; அவைகளின் கேடும் பழுதும் அவைகளில் இருக்கிறது; அவைகள் உங்களுக்காக அங்கிகரிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார். 26 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 27 ஒரு கன்றாவது செம்மறியாட்டுக் குட்டியாவது வெள்ளாட்டுக்குட்டியாவது பிறந்தால், அது ஏழுநாள் தன் தாயினிடத்தில் இருக்கக்கடவது; எட்டாம் நாள்முதல் அது கர்த்தருக்குத் தகனபலியாக அங்கிகரிக்கப்படும். 28 பசுவையும் அதின் கன்றையும், ஆட்டையும் அதின் குட்டியையும் ஒரே நாளில் கொல்லவேண்டாம். 29 கர்த்தருக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாய் அதைச் செலுத்துவீர்களாக. 30 அந்நாளிலேதான் அது புசிக்கப்படவேண்டும்; விடியற்காலம்மட்டும் நீங்கள் அதில் ஒன்றும் மீதியாக வைக்கவேண்டாம்; நான் கர்த்தர். 31 நீங்கள் என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யக்கடவீர்கள்; நான் கர்த்தர். 32 என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருப்பீர்களாக; நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே பரிசுத்தர் என்று மதிக்கப்படுவேன்; நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர். 33 நான் உங்களுக்குத் தேவனாயிருப்பதற்காக, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார்.

லேவியராகமம் 23

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: சபைகூடிவந்து பரிசுத்த நாட்களாக ஆசரிக்கும்படி, நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகை நாட்களாவன: 3 ஆறுநாளும் வேலை செய்யவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்த சபைகூடுதலான ஓய்வுநாள், அதில் ஒரு வேலையும் செய்யவேண்டாம்; அது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் நாளாயிருப்பதாக. 4 சபைகூடிவந்து பரிசுத்தமாய் ஆசரிக்கும்படி, நீங்கள் குறித்தகாலத்தில் கூறவேண்டிய கர்த்தரின் பண்டிகைகளாவன: 5 முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்டிகையும், 6 அந்த மாதம் பதினைந்தாம் தேதியிலே, கர்த்தருக்குப் புளிப்பில்லா அப்பப் பண்டிகையுமாய் இருக்கும்; ஏழுநாள் புளிப்பில்லா அப்பங்களைப் புசிக்கவேண்டும். 7 முதலாம் நாள் உங்களுக்குப் பரிசுத்தமான சபைகூடுதல்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம். 8 ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலியிடவேண்டும்; ஏழாம்நாள் பரிசுத்தமான சபைகூடுதல்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது என்று சொல் என்றார். 9 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 10 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையை அறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவீர்கள். 11 உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும். 12 நீங்கள் அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் நாளில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒரு வயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும், 13 கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவாகிய போஜனபலியையும், திராட்சப்பழரசத்திலே காற்படியாகிய பானபலியையும் செலுத்தக்கடவீர்கள். 14 உங்கள் தேவனுக்குக் காணிக்கையை நீங்கள் கொண்டுவரும் அந்நாள்மட்டும், அப்பமும் வாட்டிய கதிரும் பச்சைக்கதிரும் புசியீர்களாக; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை. 15 நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு எண்ணத்துவக்கி, ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு, 16 ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள். 17 நீங்கள் ஒரு மரக்காலிலே பத்தில் இரண்டு பங்காகிய மெல்லிய மாவிலே புளிப்பாகப் பாகம்பண்ணப்பட்ட அசைவாட்டும் காணிக்கையாயிருக்கிற இரண்டு அப்பங்களை உங்கள் வாசஸ்தலங்களிலிருந்து கர்த்தருக்கென்று முதற்பலனாகக் கொண்டுவந்து, 18 அப்பத்தோடேகூடக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக, ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு காளையையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் செலுத்தி, 19 வெள்ளாடுகளில் ஒரு கடாவைப் பாவநிவாரணபலியாகவும், ஒரு வயதான இரண்டு ஆட்டுக்குட்டிகளைச் சமாதான பலியாகவும் இடக்கடவீர்கள். 20 அவைகளை ஆசாரியன் முதற்பலனாகிய அப்பத்தோடும் இரண்டு ஆட்டுக்குட்டிகளோடுங்கூடக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டக்கடவன்; கர்த்தருக்குப் பரிசுத்தமாகிய அவைகள் ஆசாரியனுடையவைகளாகும். 21 அந்த நாள் உங்களுக்குச் சபை கூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை. 22 உங்கள் தேசத்தின் வெள்ளாண்மையை நீங்கள் அறுக்கையில், வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும், எளியவனுக்கும் பரதேசிக்கும் அவைகளை விட்டுவிடவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார். 23 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 24 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காளச் சத்தத்தால் ஞாபகக்குறியாகக் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வுநாளாய் இருப்பதாக. 25 அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யாமல், கர்த்தருக்குத் தகனபலி செலுத்தவேண்டும் என்று சொல் என்றார். 26 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 27 அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவிர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்தநாளுமாயிருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள். 28 அந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யப்படும் பாவநிவாரண நாளாயிருக்கிறபடியால், அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம். 29 அந்நாளிலே தன்னைத் தாழ்மைப்படுத்தாத எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். 30 அந்நாளிலே ஒரு ஆத்துமா யாதொரு வேலையைச் செய்தால், அந்த ஆத்துமாவை அவன் ஜனத்தின் நடுவிலே வைக்காமல் அழிப்பேன். 31 அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை. 32 அது உங்களுக்கு விசேஷித்த ஓய்வுநாள்; அதில் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தவேண்டும்; அந்த மாதத்தின் ஒன்பதாந்தேதி சாயங்காலம் துவக்கி, மறுநாள் சாயங்காலமட்டும் உங்கள் ஓய்வை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார். 33 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 34 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அந்த ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் ஏழுநாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக. 35 முதலாம் நாள் சபைகூடும் பரிசுத்த நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது. 36 ஏழுநாளும் கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; எட்டாம் நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்தநாள்; அதிலே கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்; அது ஆசரிக்கப்படும் நாள்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யவேண்டாம். 37 நீங்கள் கர்த்தருடைய ஓய்வுநாட்களில் செலுத்துவதும் தவிர, நீங்கள் கர்த்தருக்குப் படைக்கிற உங்கள் எல்லாக் காணிக்கைகளும் பொருத்தனைகளும் உற்சாகபலிகளும் தவிர, 38 நீங்கள் அந்தந்த நாளுக்குத்தக்கதாய்க் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலி, போஜனபலி, இரத்தபலி, பானபலி முதலானவைகளைச் செலுத்தும்படி சபைகூடிவந்து, பரிசுத்தமாய் ஆசரிப்பதற்காக நீங்கள் கூறவேண்டிய கர்த்தருடைய பண்டிகைகள் இவைகளே. 39 நிலத்தின் பலனை நீங்கள் சேர்த்துவைக்கும் ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதிமுதல் கர்த்தருக்குப் பண்டிகையை ஏழுநாள் ஆசரிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளிலும் ஓய்வு; எட்டாம் நாளிலும் ஓய்வு. 40 முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள். 41 வருஷந்தோறும் ஏழுநாள் கர்த்தருக்கு இந்தப் பண்டிகையை ஆசரிக்கக்கடவீர்கள்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை; ஏழாம் மாதத்தில் அதை ஆசரிக்கவேண்டும். 42 நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணினதை உங்கள் சந்ததியார் அறியும்படிக்கு, 43 ஏழுநாள் கூடாரங்களில் குடியிருக்கக்கடவீர்கள்; இஸ்ரவேலில் பிறந்தவர்கள் எல்லாரும் கூடாரங்களில் வாசம்பண்ணவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார். 44 அப்படியே மோசே கர்த்தருடைய பண்டிகைகளை இஸ்ரவேல் புத்திரருக்குத் தெரிவித்தான்.

லேவியராகமம் 24

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 2 குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல் புத்திரர் உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு. 3 ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சிசந்நிதியின் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அதை எப்பொழுதும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதியில் எரியும்படி ஏற்றக்கடவன்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை. 4 அவன் எப்பொழுதும் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற விளக்குகளை எரிய வைக்கக்கடவன். 5 அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பம் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும். 6 அவைகளை நீ கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கில் அவ்வாறு அப்பம் இருக்கும்படியாக வைத்து, 7 ஒவ்வொரு அடுக்கினிடத்தில் சுத்தமான தூபவர்க்கம் போடக்கடவாய்; அது அப்பத்தோடிருந்து, ஞாபகக்குறியாகக் கர்த்தருக்கேற்ற தகனபலியாயிருக்கும். 8 அப்பத்தை நித்திய உடன்படிக்கையாக இஸ்ரவேல் புத்திரர் கையிலே வாங்கி, ஓய்வுநாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் அடுக்கிவைக்கக்கடவன். 9 அது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; அதைப் பரிசுத்த இடத்திலே புசிக்கக்கடவர்கள்; நித்திய கட்டளையாகக் கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது அவனுக்கு மகா பரிசுத்தமாயிருக்கும் என்றார். 10 அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும் எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன் இஸ்ரவேல் புத்திரரோடேகூடப் புறப்பட்டு வந்திருந்தான்; இவனும் இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டைபண்ணினார்கள். 11 அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரீயின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள். அவன் தாயின் பேர் செலோமித்; அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி. 12 கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல்படுத்தினார்கள். 13 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: 14 தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோ; கேட்டவர்கள் எல்லாரும் தங்கள் கைகளை அவன் தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியக்கடவர்கள். 15 மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத் தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான். 16 கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும்; பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும். 17 ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும். 18 மிருகத்தைக் கொன்றவன் மிருகத்துக்கு மிருகம் கொடுக்கக்கடவன். 19 ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது. 20 நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும். 21 மிருகத்தைக் கொன்றவன் பதில் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன். 22 உங்களில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார். 23 அப்படியே, தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவனைக் கல்லெறியும்படி மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

லேவியராகமம் 25

1 கர்த்தர் சீனாய்மலையில் மோசேயை நோக்கி: 2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள் போய்ச் சேர்ந்திருக்கும்போது, தேசம் கர்த்தருக்கென்று ஓய்வு கொண்டாடவேண்டும். 3 ஆறுவருஷம் உன் வயலை விதைத்து, உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழித்து, அதின் பலனைச் சேர்ப்பாயாக. 4 ஏழாம் வருஷத்திலோ, கர்த்தருக்கென்று ஓய்ந்திருக்கும் ஓய்வு தேசத்திற்கு இருக்கவேண்டும்; அதில் உன் வயலை விதைக்காமலும், உன் திராட்சத்தோட்டத்தைக் கிளைகழிக்காமலும், 5 தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காதே விட்ட திராட்சச்செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பாயாக; தேசத்துக்கு அது ஓய்வு வருஷமாயிருக்கக்கடவது. 6 தேசத்தின் ஓய்விலே பயிராகிறது உங்களுக்கு ஆகாரமாயிருப்பதாக; உன் வேலைக்காரனுக்கும், உன் வேலைக்காரிக்கும், உன் கூலிக்காரனுக்கும், உன்னிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும், 7 உன் நாட்டு மிருகத்துக்கும், உன் தேசத்தில் இருக்கிற காட்டு மிருகத்துக்கும் அதில் விளைந்திருப்பதெல்லாம் ஆகாரமாயிருப்பதாக. 8 அன்றியும், ஏழு ஓய்வு வருஷங்களுள்ள ஏழு ஏழு வருஷங்களை எண்ணுவாயாக; அந்த ஏழு ஓய்வு வருஷங்களும் நாற்பத்தொன்பது வருஷமாகும். 9 அப்பொழுதும் ஏழாம் மாதம் பத்தாந்தேதியில் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும்; பாவநிவாரணநாளில் உங்கள் தேசமெங்கும் எக்காளச்சத்தம் தொனிக்கும்படி செய்யவேண்டும். 10 ஐம்பதாம் வருஷத்தைப் பரிசுத்தமாக்கி, தேசமெங்கும் அதின் குடிகளுக்கெல்லாம் விடுதலை கூறக்கடவீர்கள்; அது உங்களுக்கு யூபிலி வருஷம்; அதிலே உங்களில் ஒவ்வொருவனும் தன் தன் காணியாட்சிக்கும் தன் தன் குடும்பத்துக்கும் திரும்பிப் போகக்கடவன். 11 அந்த ஐம்பதாம் வருஷம் உங்களுக்கு யூபிலி வருஷமாயிருப்பதாக; அதிலே விதைக்காமலும், தானாய் விளைந்து பயிரானதை அறுக்காமலும், கிளைகழிக்காமல் விடப்பட்ட திராட்சச் செடியின் பழங்களைச் சேர்க்காமலும் இருப்பீர்களாக. 12 அது யூபிலி வருஷம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்கவேண்டும்; அந்த வருஷத்தில் வயல்வெளியில் விளைந்தவைகளை நீங்கள் புசிக்கவேண்டும். 13 அந்த யூபிலி வருஷத்தில் உங்களில் அவனவன் தன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன். 14 ஆகையால், பிறனுக்கு எதையாவது விற்றாலும், அவனிடத்தில் எதையாவது கொண்டாலும் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது. 15 யூபிலி வருஷத்துக்குப் பின்வரும் வருஷங்களின் தொகைக்கேற்கப் பிறனிடத்தில் கொள்ளுவாயாக; பலனுள்ள வருஷங்களின் தொகைக்கேற்க அவன் உனக்கு விற்பானாக. 16 பலனுள்ள வருஷங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிறபடியால், வருஷங்களின் தொகை ஏறினால் விலையேறவும், வருஷங்களின் தொகை குறைந்தால், விலை குறையவும்வேண்டும். 17 உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயம் செய்யக்கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். 18 என் கட்டளைகளின்படி செய்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; அப்பொழுது தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள். 19 பூமி தன் கனியைத் தரும்; நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் சுகமாய்க் குடியிருப்பீர்கள். 20 ஏழாம் வருஷத்தில் எதைப் புசிப்போம்? நாங்கள் விதைக்காமலும், விளைந்ததைச் சேர்க்காமலும் இருக்கவேண்டுமே! என்று சொல்வீர்களானால், 21 நான் ஆறாம் வருஷத்தில் உங்களுக்கு ஆசீர்வாதத்தை அநுக்கிரகம்பண்ணுவேன்; அது உங்களுக்கு மூன்று வருஷத்தின் பலனைத் தரும். 22 நீங்கள் எட்டாம் வருஷத்திலே விதைத்து, ஒன்பதாம் வருஷம்மட்டும் பழைய பலனிலே சாப்பிடுவீர்கள்; அதின் பலன் விளையும்வரைக்கும் பழைய பலனைச் சாப்பிடுவீர்கள். 23 தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்கவேண்டாம்; நீங்கள் பரதேசிகளும் என்னிடத்தில் புறக்குடிகளுமாயிருக்கிறீர்கள். 24 உங்கள் காணியாட்சியான தேசமெங்கும் நிலங்களை மீட்டுக்கொள்ள இடங்கொடுக்கக்கடவீர்கள். 25 உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு, தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து, தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன். 26 அதை மீட்க ஒருவனும் இல்லாமல், தானே அதை மீட்கத்தக்கவனானால், 27 அதை விற்றபின் சென்ற வருஷங்களின் தொகையைத் தள்ளி, மீந்த தொகையை ஏற்றி, கொண்டவனுக்குக் கொடுத்து, அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பிப்போகக்கடவன். 28 அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருஷம்மட்டும் இருந்து, யூபிலி வருஷத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் காணியாட்சிக்குத் திரும்பப்போவான். 29 ஒருவன் மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள தன் வாசஸ்தலமாகிய வீட்டை விற்றால், அதை விற்ற ஒரு வருஷத்துக்குள் அதை மீட்டுக்கொள்ளலாம்; ஒரு வருஷத்துக்குள்ளாகவே அதை மீட்டுக்கொள்ளவேண்டும். 30 ஒரு வருஷத்துக்குள்ளே அதை மீட்டுக்கொள்ளாதிருந்தால், மதில்சூழ்ந்த பட்டணத்திலுள்ள அந்த வீடு தலைமுறைதோறும் அதை வாங்கினவனுக்கே உரியதாகும்; யூபிலி வருஷத்திலும் அது விடுதலையாகாது. 31 மதில்சூழப்படாத கிராமங்களிலுள்ள வீடுகளோ, தேசத்தின் நிலங்கள்போலவே எண்ணப்படும்; அவைகள் மீட்கப்படலாம்; யூபிலி வருஷத்தில் அவைகள் விடுதலையாகும். 32 லேவியரின் காணியாட்சியாகிய பட்டணங்களிலுள்ள வீடுகளையோ லேவியர் எக்காலத்திலும் மீட்டுக்கொள்ளலாம். 33 இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே லேவியருடைய பட்டணங்களிலுள்ள வீடுகள் அவர்களுக்குரிய காணியாட்சியானபடியால், லேவியரிடத்தில் அவனுடைய காணியாட்சிப் பட்டணத்திலுள்ள வீட்டை ஒருவன் வாங்கினால், விற்கப்பட்ட அந்த வீடு யூபிலி வருஷத்தில் விடுதலையாகும். 34 அவர்கள் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலம் விற்கப்படலாகாது; அது அவர்களுக்கு நித்திய காணியாட்சியாயிருக்கும். 35 உன் சகோதரன் தரித்திரப்பட்டு, கையிளைத்துப்போனவனானால், அவனை ஆதரிக்கவேண்டும்; பரதேசியைப்போலும் தங்கவந்தவனைப்போலும் அவன் உன்னோடே பிழைப்பானாக. 36 நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக. 37 அவனுக்கு உன் பணத்தை வட்டிக்கும், உன் தானியத்தைப் பொலிசைக்கும் கொடாயாக. 38 உங்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, உங்களுக்கு தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே. 39 உன் சகோதரன் தரித்திரனாகி, உனக்கு விலைப்பட்டுப்போனால், அவனை அடிமையைப்போல ஊழியஞ்செய்ய நெருக்கவேண்டாம். 40 அவன் கூலிக்காரனைப்போலவும் தங்கவந்தவனைப்போலவும் உன்னோடே இருந்து, யூபிலி வருஷம்மட்டும் உன்னிடத்தில் சேவிக்கக்கடவன். 41 பின்பு, தன் பிள்ளைகளோடுங்கூட உன்னை விட்டு நீங்கலாகி, தன் குடும்பத்தாரிடத்துக்கும் தன் பிதாக்களின் காணியாட்சிக்கும் திரும்பிப்போகக்கடவன். 42 அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என்னுடைய ஊழியக்காரர்; ஆகையால், அவர்கள் அடிமைகளாக விற்கப்படலாகாது. 43 நீ அவனைக் கொடூரமாய் ஆளாமல், உன் தேவனுக்குப் பயந்திரு. 44 உனக்கு இருக்கும் ஆண் அடிமையும் பெண் அடிமையும் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளாயிருக்கவேண்டும்; அவர்களில் நீ ஆண் அடிமையையும் பெண் அடிமையையும் விலைக்கு வாங்கலாம். 45 உங்களிடத்திலே பரதேசிகளாய்த் தங்குகிற அந்நிய புத்திரரிலும், உங்கள் தேசத்தில் உங்களிடத்திலே பிறந்திருக்கிற அவர்களுடைய குடும்பத்தாரிலும் நீங்கள் உங்களுக்கு அடிமைகளைக்கொண்டு, அவர்களை உங்களுக்குச் சுதந்தரமாக்கலாம். 46 அவர்களை உங்களுக்குப் பின்வரும் உங்கள் சந்ததியாரும் சுதந்தரிக்கும்படி நீங்கள் அவர்களைச் சுதந்தரமாக்கிக்கொள்ளலாம்; என்றைக்கும் அவர்கள் உங்களுக்கு அடிமைகளாயிருக்கலாம்; உங்கள் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரோ ஒருவரையொருவர் கொடூரமாக ஆளக்கூடாது. 47 உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் அந்நியனும் செல்வனாயிருக்க, அவனிடத்தில் இருக்கிற உன் சகோதரன் தரித்திரப்பட்டு, அந்தப் பரதேசிக்காவது, அந்நியனுக்காவது, பரதேசியின் குடும்பத்தாரில் எவனுக்காவது அவன் விலைப்பட்டுப்போனால், 48 அவன் விலைப்பட்டுப்போனபின் திரும்ப மீட்கப்படலாம்; அவன் சகோதரரில் ஒருவன் அவனை மீட்கலாம். 49 அவனுடைய பிதாவின் சகோதரனாவது, அந்தச் சகோதரனுடைய புத்திரனாவது, அவன் குடும்பத்திலுள்ள அவனைச் சேர்ந்த இனத்தாரில் எவனாவது அவனை மீட்கலாம்; தன்னால் கூடுமானால், தன்னைத்தானே மீட்டுக்கொள்ளலாம். 50 அவன் தான் விலைப்பட்ட வருஷந்தொடங்கி, யூபிலி வருஷம்வரைக்கும் உண்டான காலத்தைத் தன்னை விலைக்குக் கொண்டவனுடன் கணக்குப்பார்க்கக்கடவன்; அவனுடைய விலைக்கிரயம் கூலிக்காரனுடைய காலக்கணக்குப்போல, வருஷத்தொகைக்கு ஒத்துப்பார்க்கவேண்டும். 51 இன்னும் அநேக வருஷங்கள் இருந்தால், அவன் தன் விலைக்கிரயத்திலே அவைகளுக்குத் தக்கதைத் தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக் கொடுக்கக்கடவன். 52 யூபிலி வருஷம்மட்டும் மீதியாயிருக்கிற வருஷங்கள் கொஞ்சமேயானால், அவனோடே கணக்குப்பார்த்து, தன் வருஷங்களுக்குத்தக்கதை, தன்னை மீட்கும்பொருளாகத் திரும்பக் கொடுக்கவேண்டும். 53 இவன் வருஷத்திற்கு வருஷம் கூலிபொருந்திக்கொண்ட கூலிக்காரனைப்போல, அவனிடத்தில் இருக்கவேண்டும்; அவன் இவனை உனக்கு முன்பாகக் கொடூரமாய் ஆளக்கூடாது. 54 இப்படி இவன் மீட்டுக்கொள்ளப்படாதிருந்தால், இவனும் இவனோடேகூட இவன் பிள்ளைகளும் யூபிலி வருஷத்தில் விடுதலையாவார்கள். 55 இஸ்ரவேல் புத்திரர் என் ஊழியக்காரர்; அவர்கள் நான் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின என் ஊழியக்காரரே; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

லேவியராகமம் 26

1 நீங்கள் உங்களுக்கு விக்கிரகங்களையும் சுரூபங்களையும் உண்டாக்காமலும், உங்களுக்குச் சிலையை நிறுத்தாமலும், சித்திரந்தீர்ந்த கல்லை நமஸ்கரிக்கும்பொருட்டு உங்கள் தேசத்தில் வைக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். 2 என் ஓய்வுநாட்களை ஆசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாயிருப்பீர்களாக; நான் கர்த்தர். 3 நீங்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்தால், 4 நான் ஏற்ற காலத்தில் உங்களுக்கு மழைபெய்யப்பண்ணுவேன்; பூமி தன் பலனையும், வெளியிலுள்ள மரங்கள் தங்கள் கனியையும் கொடுக்கும். 5 திராட்சப்பழம் பறிக்குங் காலம்வரைக்கும் போரடிப்புக் காலம் இருக்கும்; விதைப்புக் காலம்வரைக்கும் திராட்சப்பழம் பறிக்குங் காலம் இருக்கும்; நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு, உங்கள் தேசத்தில் சுகமாய்க் குடியிருப்பீர்கள். 6 தேசத்தில் சமாதானம் கட்டளையிடுவேன்; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் படுத்துக்கொள்வீர்கள்; துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; பட்டயம் உங்கள் தேசத்தில் உலாவுவதில்லை. 7 உங்கள் சத்துருக்களைத் துரத்துவீர்கள்; அவர்கள் உங்கள் முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள். 8 உங்களில் ஐந்துபேர் நூறுபேரைத் துரத்துவார்கள்; உங்களில் நூறுபேர் பதினாயிரம்பேரைத் துரத்துவார்கள்; உங்கள் சத்துருக்கள் உங்களுக்கு முன்பாகப் பட்டயத்தால் விழுவார்கள். 9 நான் உங்கள்மேல் கண்ணோக்கமாயிருந்து, உங்களைப் பலுகவும் பெருகவும்பண்ணி, உங்களோடே என் உடன்படிக்கையைத் திடப்படுத்துவேன். 10 போன வருஷத்துப் பழைய தானியத்தைச் சாப்பிட்டு, புதிய தானியத்துக்கு இடமுண்டாகும்படி, பழையதை விலக்குவீர்கள். 11 உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்; என் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை. 12 நான் உங்கள் நடுவிலே உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள். 13 நீங்கள் எகிப்தியருக்கு அடிமைகளாயிராதபடிக்கு, நான் அவர்கள் தேசத்திலிருந்து உங்களைப் புறப்படப்பண்ணி, உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர். 14 நீங்கள் எனக்குச் செவிகொடாமலும், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படி செய்யாமலும், 15 என் கட்டளைகளை வெறுத்து, உங்கள் ஆத்துமா என் நியாயங்களை அரோசித்து, என் கற்பனைகள் எல்லாவற்றின்படியும் செய்யாதபடிக்கு, என் உடன்படிக்கையை நீங்கள் மீறிப்போடுவீர்களாகில்: 16 நான் உங்களுக்குச் செய்வது என்னவென்றால், கண்களைப் பூத்துப்போகப்பண்ணுகிறதற்கும், இருதயத்தைத் துயரப்படுத்துகிறதற்கும், திகிலையும் ஈளையையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரப்பண்ணுவேன்; நீங்கள் விதைக்கும் விதை விருதாவாயிருக்கும்; உங்கள் சத்துருக்கள் அதின் பலனைத் தின்பார்கள். 17 நான் உங்களுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்புவேன்; உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படுவீர்கள்; உங்கள் பகைஞர் உங்களை ஆளுவார்கள்; துரத்துவார் இல்லாதிருந்தும் ஓடுவீர்கள். 18 இவ்விதமாய் நான் உங்களுக்குச் செய்தும், இன்னும் நீங்கள் எனக்குச் செவிகொடாதிருந்தால், உங்கள் பாவங்களினிமித்தம் பின்னும் ஏழத்தனையாக உங்களைத் தண்டித்து, 19 உங்கள் வல்லமையின் பெருமையை முறித்து, உங்கள் வானத்தை இரும்பைப்போலவும், உங்கள் பூமியை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன். 20 உங்கள் பெலன் விருதாவிலே செலவழியும்; உங்கள் தேசம் தன் பலனையும், தேசத்தின் மரங்கள் தங்கள் கனிகளையும் கொடுக்கமாட்டாது. 21 நீங்கள் எனக்குச் செவிகொடுக்க மனதில்லாமல், எனக்கு எதிர்த்து நடப்பீர்களானால், நான் உங்கள் பாவங்களுக்குத்தக்கதாக இன்னும் ஏழத்தனை வாதையை உங்கள்மேல் வரப்பண்ணி, 22 உங்களுக்குள்ளே வெளியின் துஷ்டமிருகங்களை வரவிடுவேன்; அவைகள் உங்களைப் பிள்ளைகளற்றவர்களாக்கி, உங்கள் மிருகஜீவன்களை அழித்து, உங்களைக் குறைந்துபோகப்பண்ணும்; உங்கள் வழிகள் பாழாய்க் கிடக்கும். 23 நான் செய்யும் தண்டனையினால் நீங்கள் குணப்படாமல், எனக்கு எதிர்த்து நடந்தால், 24 நான் உங்களுக்கு எதிர்த்து நடந்து, உங்கள் பாவங்களினிமித்தம் ஏழத்தனையாக வாதித்து, 25 என் உடன்படிக்கையை மீறினதற்குப் பழிவாங்கும் பட்டயத்தை உங்கள்மேல் வரப்பண்ணி, நீங்கள் உங்கள் பட்டணங்களில் சேர்ந்தபின், கொள்ளைநோயை உங்கள் நடுவிலே அனுப்புவேன்; சத்துருவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர்கள். 26 உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை நான் முறித்துப்போடும்போது, பத்து ஸ்திரீகள் ஒரே அடுப்பில் உங்கள் அப்பத்தைச் சுட்டு, அதைத் திரும்ப உங்களுக்கு நிறுத்துக்கொடுப்பார்கள்; நீங்கள் சாப்பிட்டும் திருப்தியடையமாட்டீர்கள். 27 இன்னும் இவைகளெல்லாவற்றாலும் நீங்கள் எனக்குச் செவிகொடாமல், எனக்கு எதிர்த்து நடந்தால், 28 நானும் உக்கிரத்தோடே உங்களுக்கு எதிர்த்து நடந்து, நானே உங்கள் பாவங்களினிமித்தம் உங்களை ஏழத்தனையாய்த் தண்டிப்பேன். 29 உங்கள் குமாரரின் மாம்சத்தையும் உங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் புசிப்பீர்கள். 30 நான் உங்கள் மேடைகளை அழித்து, உங்கள் விக்கிரகச் சிலைகளை நிர்த்தூளியாக்கி, உங்கள் உடல்களை உங்கள் நரகலான தேவர்களுடைய உடல்கள்மேல் எறிவேன்; என் ஆத்துமா உங்களை அரோசிக்கும். 31 நான் உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் பாழுமாக்கி, உங்கள் சுகந்த வாசனையை முகராதிருப்பேன். 32 நான் தேசத்தைப் பாழாக்குவேன்; அதிலே குடியிருக்கிற உங்கள் சத்துருக்கள் பிரமிப்பார்கள். 33 ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும். 34 நீங்கள் உங்கள் சத்துருக்களின் தேசத்தில் இருக்கும்போது, தேசமானது பாழாய்க்கிடக்கிற நாளெல்லாம் தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்; அப்பொழுது தேசம் ஓய்வடைந்து, தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும். 35 நீங்கள் அதிலே குடியிருக்கும்போது, அது உங்கள் ஓய்வு வருஷங்களில் ஓய்வடையாதபடியினாலே, அது பாழாய்க்கிடக்கும் நாளெல்லாம் ஓய்வடைந்திருக்கும். 36 உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சி அடையும்படி செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள். 37 துரத்துவார் இல்லாமல், பட்டயத்துக்கு முன் விழுவதுபோல, ஒருவர்மேல் ஒருவர் இடறிவிழுவார்கள்; உங்கள் சத்துருக்களுக்குமுன் நிற்க உங்களுக்குப் பெலன் இராது. 38 புறஜாதிகளுக்குள்ளே அழிந்துபோவீர்கள்; உங்கள் சத்துருக்களின் தேசம் உங்களைப் பட்சிக்கும். 39 உங்களில் தப்பினவர்கள் தங்கள் அக்கிரமங்களினிமித்தமும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினிமித்தமும், உங்கள் சத்துருக்களின் தேசங்களில் வாடிப்போவார்கள். 40 அவர்கள் எனக்கு விரோதமாகத் துரோகம்பண்ணி நடப்பித்த தங்கள் அக்கிரமத்தையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் அறிக்கையிடுகிறதுமன்றி, 41 அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்தபடியினால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய சத்துருக்களின் தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்தசேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால், 42 நான் யாக்கோபோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன். 43 தேசம் அவர்களாலே விடப்பட்டு, பாழாய்க்கிடக்கிறதினாலே தன் ஓய்வுநாட்களை இரம்மியமாய் அநுபவிக்கும்; அவர்கள் என் நியாயங்களை அவமதித்து, அவர்களுடைய ஆத்துமா என் கட்டளைகளை வெறுத்தபடியினால் அடைந்த தங்களுடைய அக்கிரமத்தின் தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொள்ளுவார்கள். 44 அவர்கள் தங்கள் சத்துருக்களின் தேசத்திலிருந்தாலும், நான் அவர்களை நிர்மூலமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களோடே பண்ணின என் உடன்படிக்கையை அபத்தமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களைக் கைவிடவும் வெறுக்கவுமாட்டேன்; நான் அவர்கள் தேவனாகிய கர்த்தர். 45 அவர்களுடைய தேவனாயிருக்கும்படிக்கு, நான் புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாக எகிப்துதேசத்திலிருந்து அவர்களைப் புறப்படச்செய்து, அவர்களுடைய முன்னோர்களோடே நான் பண்ணின உடன்படிக்கையை அவர்கள் நிமித்தம் நினைவுகூருவேன்; நான் கர்த்தர் என்று சொல் என்றார். 46 கர்த்தர் தமக்கும் இஸ்ரவேல் சந்ததியாருக்கும் நடுவே இருக்கும்படி மோசேயைக்கொண்டு, சீனாய்மலையின்மேல் கொடுத்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.

லேவியராகமம் 27

1 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: யாதாமொருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை பண்ணியிருந்தால், பொருத்தனை பண்ணப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி கர்த்தருக்கு உரியவர்கள். 3 இருபது வயதுமுதல் அறுபது வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை நீ பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலாகிய ஐம்பது வெள்ளிச் சேக்கலாகவும், 4 பெண்பிள்ளையை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக. 5 ஐந்து வயதுமுதல் இருபது வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை இருபது சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச் சேக்கலாகவும், 6 ஒரு மாதம்முதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட ஆண்பிள்ளையை ஐந்து வெள்ளிச் சேக்கலாகவும், பெண்பிள்ளையை மூன்று வெள்ளிச் சேக்கலாகவும், 7 அறுபது வயது தொடங்கி, அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளையைப் பதினைந்து சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச் சேக்கலாகவும் மதிக்கக்கடவாய். 8 உன் மதிப்பின்படி செலுத்தக்கூடாத தரித்திரனாயிருந்தால், அவன் ஆசாரியனுக்கு முன்பாக வந்து நிற்கக்கடவன்; ஆசாரியன் அவனை மதிப்பானாக; பொருத்தனை பண்ணினவனுடைய திராணிக்கேற்றபடி ஆசாரியன் அவனை மதிக்கக்கடவன். 9 ஒருவன் பொருத்தனைபண்ணினது கர்த்தருக்குப் பலியிடப்படத்தக்க மிருகஜீவனானால் அவன் கர்த்தருக்குக் கொடுக்கிற அப்படிப்பட்டதெல்லாம் பரிசுத்தமாயிருப்பதாக. 10 அதை மாற்றாமலும், வேறுபடுத்தாமலும் இருப்பானாக; இளப்பமானதற்குப் பதிலாக நலமானதையும், நலமானதற்குப் பதிலாக இளப்பமானதையும் செலுத்தாமல் இருப்பானாக; அவன் மிருகத்திற்குப் பதிலாக மிருகத்தை மாற்றிக் கொடுப்பானாகில், அப்பொழுது அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுத்ததும் பரிசுத்தமாயிருப்பதாக. 11 அது கர்த்தருக்குப் பலியிடப்படத்தகாத சுத்தமல்லாத யாதொரு மிருகமானால், அதை ஆசாரியனுக்கு முன்பாக நிறுத்தக்கடவன். 12 ஆசாரியன் அது நல்லதானாலும் இளப்பமானதானாலும் அதை மதிப்பானாக; உன் மதிப்பின்படியே இருக்கக்கடவது. 13 அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானாகில், உன் மதிப்போடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன். 14 ஒருவன் தன் வீட்டைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், ஆசாரியன் அதின் நலத்துக்கும் இளப்பத்துக்கும் தக்கதாக அதை மதிக்கக்கடவன்; ஆசாரியன் மதிக்கிறபடி அது இருக்கக்கடவது. 15 தன் வீட்டைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், நீ மதிக்கும் திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுடையதாகும். 16 ஒருவன் தன் காணியாட்சியான வயலில் யாதொரு பங்கைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், உன் மதிப்பு அதின் விதைப்புக்குத்தக்கதாய் இருக்கவேண்டும்; ஒரு கலம் வாற்கோதுமை விதைக்கிற வயல் ஐம்பது வெள்ளிச் சேக்கலாக மதிக்கப்படவேண்டும். 17 யூபிலி வருஷமுதல் அவன் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், அது உன் மதிப்பின்படி இருக்கவேண்டும். 18 யூபிலி வருஷத்துக்குப்பின் தன் வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டானானால், யூபிலி வருஷம்மட்டுமுள்ள மற்ற வருஷங்களின்படியே ஆசாரியன் திரவியத்தைக் கணக்குப்பார்த்து, அதற்குத்தக்கது உன் மதிப்பிலே தள்ளப்படவேண்டும். 19 வயலைப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டவன் அதை மீட்டுக்கொள்ள மனதாயிருந்தால், உன் மதிப்பான திரவியத்தோடே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; அப்பொழுது அது அவனுக்கு உறுதியாகும். 20 அவன் வயலை மீட்டுக்கொள்ளாமல், வயலை வேறொருவனுக்கு விற்றுப்போட்டால், அது திரும்ப மீட்கப்படாமல், 21 யூபிலி வருஷத்தில் மீட்கப்படும்போது, சாபத்தீடான வயலாகக் கர்த்தருக்கென்று நியமிக்கப்பட்டதாயிருக்கக்கடவது; அது ஆசாரியனுக்குக் காணியாட்சியாகும். 22 ஒருவன் தனக்குக் காணியாட்சி வயலாயிராமல் தான் விலைக்கு வாங்கின ஒரு வயலைக் கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டால், 23 அது யூபிலி வருஷம்மட்டும், உன் மதிப்பின்படி பெறும் விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன். 24 யார் கையிலே அந்த வயலைக் கொண்டானோ, அந்தக் காணியாட்சிக்காரன் வசமாய் அது யூபிலி வருஷத்தில் திரும்பச்சேரும். 25 உன் மதிப்பெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; ஒரு சேக்கலானது இருபது கேரா. 26 தலையீற்றானவைகள் கர்த்தருடையது, ஆகையால் ஒருவரும் தலையீற்றாகிய மிருகஜீவனைப் பரிசுத்தம் என்று நேர்ந்து கொள்ளலாகாது; அது மாடானாலும் ஆடானாலும் கர்த்தருடையது. 27 சுத்தமல்லாத மிருகத்தினுடைய தலையீற்றானால், அதை அவன் உன் மதிப்பின்படி மீட்டுக்கொண்டு, அதனுடனே ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன்; மீட்கப்படாமலிருந்தால், உன் மதிப்பின்படி அது விற்கப்படக்கடவது. 28 ஒருவன் தன் வசத்திலுள்ள நரஜீவனிலாவது, மிருகஜீவனிலாவது, காணியாட்சி நிலத்திலாவது, எதையாகிலும் கர்த்தருக்கென்று சாபத்தீடாக நேர்ந்துகொண்டால், அது விற்கப்படவும் மீட்கப்படவும் கூடாது; நேர்ந்துகொள்ளப்பட்டவைகளெல்லாம் கர்த்தருக்காகப் பரிசுத்தமாயிருக்கும். 29 நரஜீவனில் சாபத்தீடாக நியமிக்கப்பட்டவைகளெல்லாம் மீட்கப்படாமல் கொலைசெய்யப்படக்கடவது. 30 தேசத்திலே நிலத்தின் வித்திலும், விருட்சங்களின் கனியிலும், தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உரியது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது. 31 ஒருவன் தன் தசமபாகத்திலே எவ்வளவாவது மீட்டுக்கொள்ள மனதாயிருந்தானானால், அதனுடன் ஐந்தில் ஒரு பங்கைக் கூட்டிக் கொடுக்கக்கடவன். 32 கோலின் கீழ்ப்பட்ட ஆடுமாடுகளிலே பத்தில் ஒரு பங்காகிறதெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமானது. 33 அது நல்லதோ இளப்பமானதோ என்று அவன் பார்க்கவேண்டாம்; அதை மாற்றவும் வேண்டாம்; மாற்றினால், அதுவும் அதற்குப் பதிலாகக் கொடுக்கப்பட்டதுமாகிய இரண்டும் பரிசுத்தமாகும்; அது மீட்கப்படக்கூடாதென்று அவர்களோடே சொல் என்றார். 34 இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி கர்த்தர் சீனாய்மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.

எண்ணாகமம் 1

1 இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் முதல் தேதியில், கர்த்தர் சீனாய் வனாந்தரத்திலிருக்கிற ஆசரிப்புக் கூடாரத்திலே மோசேயை நோக்கி: 2 நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் முழுச்சபையாயிருக்கிற அவர்கள் பிதாக்களுடைய வீட்டு வம்சங்களிலுள்ள புருஷர்களாகிய சகல தலைகளையும் பேர்பேராக எண்ணித் தொகையேற்றுங்கள். 3 இஸ்ரவேலிலே இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்துக்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் அவர்கள் சேனைகளின்படி நீயும் ஆரோனும் எண்ணிப் பார்ப்பீர்களாக. 4 ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொரு மனிதன் உங்களோடே இருப்பானாக; அவன் தன் பிதாக்களின் வம்சத்துக்குத் தலைவனாயிருக்கவேண்டும். 5 உங்களோடே நிற்கவேண்டிய மனிதருடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சேதேயூருடைய குமாரன் எலிசூர். 6 சிமியோன் கோத்திரத்தில் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல். 7 யூதா கோத்திரத்தில் அம்மினதாபின் குமாரன் நகசோன். 8 இசக்கார் கோத்திரத்தில் சூவாரின் குமாரன் நெதனெயேல். 9 செபுலோன் கோத்திரத்தில் ஏலோனின் குமாரன் எலியாப். 10 யோசேப்பின் குமாரராகிய எப்பிராயீம் கோத்திரத்தில் அம்மியூதின் குமாரன் எலிஷாமா; மனாசே கோத்திரத்தில் பெதாசூரின் குமாரன் கமாலியேல். 11 பென்யமீன் கோத்திரத்தில் கீதெயோனின் குமாரன் அபீதான். 12 தாண் கோத்திரத்தில் அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர். 13 ஆசேர் கோத்திரத்தில் ஓகிரானின் குமாரன் பாகியேல். 14 காத் கோத்திரத்தில் தேகுவேலின் குமாரன் எலியாசாப். 15 நப்தலி கோத்திரத்தில் ஏனானின் குமாரன் அகீரா. 16 இவர்களே சபையில் ஏற்படுத்தப்பட்டவர்களும், தங்கள் தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களில் பிரபுக்களும், இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவருமாயிருப்பவர்கள் என்றார். 17 அப்படியே மோசேயும் ஆரோனும் பேர்பேராகக் குறிக்கப்பட்ட இந்த மனிதரைக் கூட்டிக்கொண்டு, 18 இரண்டாம் மாதம் முதல் தேதியில் சபையார் எல்லாரையும் கூடிவரச்செய்தார்கள். அப்பொழுது அவர்கள் தங்கள் தங்கள் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும், நாமத் தொகையின்படிக்கும், இருபது வயதுள்ளவர்கள் முதல் தலைதலையாகத் தங்கள் வம்ச உற்பத்தியைத் தெரிவித்தார்கள். 19 இப்படிக் கர்த்தர் கட்டளையிட்டபடியே, மோசே அவர்களைச் சீனாய் வனாந்தரத்தில் எண்ணிப்பார்த்தான். 20 இஸ்ரவேலின் மூத்தகுமாரனாகிய ரூபன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள்முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது, 21 ரூபன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர். 22 சிமியோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் தலைதலையாக எண்ணப்பட்டபோது, 23 சிமியோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறுபேர். 24 காத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, 25 காத் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர். 26 யூதா புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, 27 யூதா கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், எழுபத்து நாலாயிரத்து அறுநூறுபேர். 28 இசக்கார் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, 29 இசக்கார் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர். 30 செபுலோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, 31 செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர். 32 யோசேப்பின் குமாரரில் எப்பிராயீம் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, 33 எப்பிராயீம் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர். 34 மனாசே புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, 35 மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தீராயிரத்து இருநூறுபேர். 36 பென்யமீன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, 37 பென்யமீன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தையாயிரத்து நானூறுபேர். 38 தாண் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, 39 தாண் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர். 40 ஆசேர் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, 41 ஆசேர் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர். 42 நப்தலி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சத்தாரில் இருபது வயதுள்ளவர்கள் முதல் யுத்தத்திற்குப் புறப்படத்தக்க புருஷர்கள் எல்லாரும் எண்ணப்பட்டபோது, 43 நப்தலி கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர். 44 எண்ணப்பட்டவர்கள் இவர்களே; மோசேயும் ஆரோனும் இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தில் ஒவ்வொரு வம்சத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகிய பன்னிரண்டுபேரும் எண்ணினார்கள். 45 இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களின் வம்சத்தில் இருபது வயதுள்ளவர்கள்முதல், இஸ்ரவேலில் யுத்தத்திற்குப் புறப்படத்தக்கவர்களாகிய எண்ணப்பட்ட பேர்கள் எல்லாரும், 46 ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள். 47 லேவியர் தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின்படியே, மற்றவர்களுடனே எண்ணப்படவில்லை. 48 கர்த்தர் மோசேயை நோக்கி: 49 நீ லேவி கோத்திரத்தாரைமாத்திரம் எண்ணாமலும், இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே அவர்கள் தொகையை ஏற்றாமலும், 50 லேவியரைச் சாட்சியின் வாசஸ்தலத்திற்கும், அதினுடைய சகல பணிமுட்டுகளுக்கும், அதிலுள்ள சமஸ்த பொருள்களுக்கும் விசாரிப்புக்காரராக ஏற்படுத்து; அவர்கள் வாசஸ்தலத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும் சுமப்பார்களாக; அதினிடத்தில் ஊழியம் செய்து, வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள். 51 வாசஸ்தலம் புறப்படும்போது, லேவியர் அதை இறக்கிவைத்து, அது ஸ்தாபனம் பண்ணப்படும்போது, லேவியர் அதை எடுத்து நிறுத்தக்கடவர்கள்; அந்நியன் அதற்குச் சமீபத்தில் வந்தால் கொலைசெய்யப்படக்கடவன். 52 இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தங்கள் பாளயத்தோடும், தங்கள் தங்கள் சேனையின் கொடியோடும் கூடாரம் போடக்கடவர்கள். 53 இஸ்ரவேல் புத்திரராகிய சபையின்மேல் கடுங்கோபம் வராதபடிக்கு லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைச் சுற்றிலும் பாளயமிறங்கி, லேவியர் சாட்சியின் வாசஸ்தலத்தைக் காவல்காப்பார்களாக என்றார். 54 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி எல்லாவற்றையும் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்.

எண்ணாகமம் 2

1 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 2 இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின் விருதாகிய தங்கள் தங்கள் கொடியண்டையிலே தங்கள் கூடாரங்களைப் போட்டு, ஆசரிப்புக் கூடாரத்திற்கு எதிராகச் சுற்றிலும் பாளயமிறங்கக்கடவர்கள். 3 யூதாவின் பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே பாளயமிறங்கவேண்டும்; அம்மினதாபின் குமாரனாகிய நகசோன் யூதா சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். 4 எண்ணப்பட்ட அவனுடைய சேனை எழுபத்து நாலாயிரத்து அறுநூறுபேர். 5 அவன் அருகே இசக்கார் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூவாரின் குமாரன் நெதனெயேல் இசக்கார் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். 6 எண்ணப்பட்ட அவனுடைய சேனை ஐம்பத்து நாலாயிரத்து நானூறுபேர். 7 அவன் அருகே செபுலோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏலோனின் குமாரனாகிய எலியாப் செபுலோன் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். 8 அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர். 9 எண்ணப்பட்ட யூதாவின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து எண்பத்து ஆறாயிரத்து நானூறுபேர்; இவர்கள் பிரயாணத்திலே முதற்பாளயமாய்ப் போகக்கடவர்கள். 10 ரூபனுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் தென்புறத்தில் பாளயமிறங்கவேண்டும்; சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் ரூபன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். 11 அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தாறாயிரத்து ஐந்நூறுபேர். 12 அவன் அருகே சிமியோன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேல் சிமியோன் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். 13 அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தொன்பதினாயிரத்து முந்நூறுபேர். 14 அவன் அருகே காத் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் காத் சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். 15 அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூற்று ஐம்பதுபேர். 16 எண்ணப்பட்ட ரூபனின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து ஐம்பத்து ஓராயிரத்து நானூற்று ஐம்பதுபேர்; இவர்கள் பிரயாணத்தில் இரண்டாம் பாளயமாய்ப் போகக்கடவர்கள். 17 பின்பு ஆசரிப்புக் கூடாரம் லேவியரின் சேனையோடே பாளயங்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படிப் பாளயமிறங்குகிறார்களோ, அப்படியே அவரவர் தங்கள் வரிசையிலே தங்கள் கொடிகளோடே பிரயாணமாய்ப் போகக்கடவர்கள். 18 எப்பிராயீமுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் மேல்புறத்தில் இறங்கவேண்டும்; அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமா எப்பிராயீமின் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். 19 அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர். 20 அவன் அருகே மனாசே கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். 21 அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர். 22 அவன் அருகே பென்யமீன் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; கீதெயோனின் குமாரனாகிய அபீதான் பென்யமீன் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். 23 அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தையாயிரத்து நானூறுபேர். 24 எண்ணப்பட்ட எப்பிராயீமின் பாளயத்தார் எல்லாரும் தங்கள் சேனைகளின்படியே இலட்சத்து எண்ணாயிரத்து நூறுபேர்; இவர்கள் பிரயாணத்தில் மூன்றாம் பாளயமாய்ப் போகக்கடவர்கள். 25 தாணுடைய பாளயத்துக் கொடியையுடைய சேனைகள் வடபுறத்தில் இறங்கவேண்டும்; அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் தாண் வம்சத்திற்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். 26 அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்தீராயிரத்து எழுநூறுபேர். 27 அவன் அருகே ஆசேர் கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஓகிரானின் குமாரனாகிய பாகியேல் ஆசேர் சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். 28 அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தோராயிரத்து ஐந்நூறுபேர். 29 அவன் அருகே நப்தலி கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; ஏனானின் குமாரனாகிய அகீரா நப்தலி சந்ததியாருக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன். 30 அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர். 31 எண்ணப்பட்ட தாணின் பாளயத்தார் எல்லாரும் இலட்சத்து ஐம்பத்தேழாயிரத்து அறுநூறுபேர்; இவர்கள் தங்கள் கொடிகளோடே பின்பாளயமாய்ப் போகக்கடவர்கள். 32 இவர்களே தங்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தின்படி இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள். பாளயங்களிலே தங்கள் தங்கள் சேனைகளின்படியே எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் ஆறுலட்சத்து மூவாயிரத்து ஐந்நூற்று ஐம்பது பேராயிருந்தார்கள். 33 லேவியரோ, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே எண்ணப்படவில்லை. 34 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்து, தங்கள் தங்கள் கொடிகளின்கீழ் பாளயமிறங்கி, தங்கள் தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே பிரயாணப்பட்டுப்போனார்கள்.

எண்ணாகமம் 3

1 சீனாய் மலையில் கர்த்தர் மோசேயோடே பேசின நாளிலே, ஆரோன் மோசே என்பவர்களுடைய வம்சவரலாறாவது: 2 ஆரோனுடைய குமாரர், முதல் பிறந்தவனாகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்களே. 3 ஆசாரிய ஊழியம்செய்கிறதற்கு அவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேகம்பெற்ற ஆசாரியரான ஆரோனுடைய குமாரரின் நாமங்கள் இவைகளே. 4 நாதாபும் அபியூவும் சீனாய் வனாந்தரத்தில் அந்நிய அக்கினியைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்தபோது, கர்த்தருடைய சந்நிதியில் மரித்துப்போனார்கள்; அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை; எலெயாசாரும் இத்தாமாருமே தங்கள் தகப்பனாகிய ஆரோனுக்கு முன்பாக ஆசாரிய ஊழியம் செய்தார்கள். 5 கர்த்தர் மோசேயை நோக்கி: 6 நீ லேவிகோத்திரத்தாரைச் சேர்த்து, அவர்கள் ஆசாரியனாகிய ஆரோனுக்குப் பணிவிடை செய்யும்படி அவர்களை நிறுத்து. 7 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக அவனுடைய காவலையும் எல்லாச் சபையின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடை வேலைகளைச் செய்யக்கடவர்கள். 8 அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் தட்டுமுட்டு முதலானவைகளையும், இஸ்ரவேல் புத்திரரின் காவலையும் காத்து, வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யக்கடவர்கள். 9 ஆகையால் லேவியரை ஆரோனிடத்திலும் அவன் குமாரரிடத்திலும் ஒப்புக்கொடுப்பாயாக; இஸ்ரவேல் புத்திரரில் இவர்கள் முற்றிலும் அவனுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். 10 ஆரோனையும் அவன் குமாரரையுமோ, தங்கள் ஆசாரிய ஊழியத்தைச் செய்வதற்காக நியமிக்கக்கடவாய், அந்த ஊழியத்தைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார். 11 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 12 இஸ்ரவேல் புத்திரரில் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறான யாவுக்கும் பதிலாக, நான் லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து எடுத்துக்கொண்டேன்; அவர்கள் என்னுடையவர்களாயிருக்கிறார்கள். 13 முதற்பேறானவையெல்லாம் என்னுடையவை; நான் எகிப்துதேசத்தில் முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளில், இஸ்ரவேலில் மனிதர்முதல் மிருகஜீவன்மட்டுமுள்ள முதற்பேறான யாவையும் எனக்கென்று பரிசுத்தப்படுத்தினதினாலே, அவைகள் என்னுடையவைகளாயிருக்கும்; நான் கர்த்தர் என்றார். 14 பின்னும் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் மோசேயை நோக்கி: 15 லேவிபுத்திரரை அவர்கள் பிதாக்களின் வம்சங்களின்படியே எண்ணுவாயாக; அவர்களில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணுவாயாக என்றார். 16 அப்பொழுது கர்த்தருடைய வாக்கின்படி, மோசே தனக்குக் கற்பிக்கப்பட்டபிரகாரம் அவர்களை எண்ணினான். 17 லேவியின் குமாரர் தங்கள் நாமங்களின்படியே, கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள். 18 தங்கள் வம்சத்தின்படியே கெர்சோனுடைய குமாரரின் நாமங்கள், லிப்னீ, சீமேயி என்பவைகள். 19 தங்கள் வம்சங்களின்படியே கோகாத்துடைய குமாரர், அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள். 20 தங்கள் வம்சங்களின்படியே மெராரியினுடைய குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; இவர்களே லேவியருடைய பிதாக்களின் வம்சத்தார். 21 கெர்சோனின் வழியாய் லிப்னீயரின் வம்சமும் சீமேயியர் வம்சமும் தோன்றின; இவைகளே கெர்சோனியரின் வம்சங்கள். 22 அவர்களில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஏழாயிரத்து ஐந்நூறுபேராயிருந்தார்கள். 23 கெர்சோனியரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் பின்புறத்தில் மேற்கே பாளயமிறங்கவேண்டும். 24 கெர்சோனியருடைய தகப்பன் வம்சத்துக்குத் தலைவன் லாயேலின் குமாரனாகிய எலியாசாப் என்பவன். 25 ஆசரிப்புக் கூடாரத்திலே கெர்சோன் புத்திரரின் காவலாவது: வாசஸ்தலமும், கூடாரமும், அதின் மூடியும், ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவும், 26 வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தொங்குதிரைகளும், பிராகாரவாசல் மூடுதிரையும், அவைகளின் வேலைகளுக்கெல்லாம் உரிய அவைகளின் கயிறுகளுமே. 27 கோகாத்தின் வழியாய் அம்ராமியரின் வம்சமும் இத்சேயாரின் வம்சமும் எப்ரோனியரின் வம்சமும் ஊசியேலரின் வம்சமும் தோன்றின; இவைகளே கோகாத்தியரின் வம்சங்கள். 28 ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, பரிசுத்த ஸ்தலத்துக்குரியவைகளைக் காப்பவர்கள், எண்ணாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள். 29 கோகாத் புத்திரரின் வம்சங்கள் வாசஸ்தலத்தின் தென்புறமான பக்கத்திலே பாளயமிறங்கவேண்டும். 30 அவர்களின் தலைவன், ஊசியேலின் குமாரனாகிய எல்சாபான். 31 அவர்களுடைய காவலாவது: பெட்டியும், மேஜையும், குத்துவிளக்கும், பீடங்களும், ஆராதனைக்கேற்ற பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளும், தொங்குதிரையும், அதினுடைய எல்லா வேலைகளுக்கும் ஏற்றவைகளுமே. 32 ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார் என்பவன் லேவியருடைய தலைவர்களுக்குத் தலைவனாய்ப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்கு விசாரிப்புக்காரனாயிருக்கவேண்டும். 33 மெராரியின் வழியாய் மகேலியரின் வம்சமும் மூசியரின் வம்சமும் தோன்றின; இவைகளே மெராரியின் வம்சங்கள். 34 அவர்களில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளெல்லாம் எண்ணப்பட்டபோது, எண்ணப்பட்டவர்கள் ஆறாயிரத்து இருநூறுபேராயிருந்தார்கள். 35 அபியாயேலின் குமாரனாகிய சூரியேல் என்பவன் அவர்களுக்குத் தலைவனாயிருந்தான்; இவர்கள் வாசஸ்தலத்தின் வடபுறமான பக்கத்தில் பாளயமிறங்கவேண்டும். 36 அவர்களுடைய காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும், அதினுடைய எல்லாப் பணிமுட்டுகளும், அதற்கடுத்தவைகள் அனைத்தும், 37 சுற்றுப்பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளுமே. 38 ஆசரிப்புக் கூடாரமாகிய வாசஸ்தலத்துக்கு முன்பாக, சூரியன் உதிக்கும் கீழ்ப்புறத்திலே மோசேயும் ஆரோனும் அவன் குமாரரும் கூடாரங்களைப் போட்டு இறங்கி, இஸ்ரவேல் புத்திரரின் காவலுக்குப் பதிலாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல் காக்கவேண்டும். வாசஸ்தலத்தில் சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன். 39 மோசேயும் ஆரோனும், கர்த்தருடைய வாக்கின்படி, லேவியரில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள ஆண்பிள்ளைகளையெல்லாம் அவர்களுடைய வம்சங்களின்படியே எண்ணினார்கள்; அவர்கள் இருபத்தீராயிரம்பேராயிருந்தார்கள். 40 அதன்பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரில் ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளையெல்லாம் எண்ணி, அவர்கள் நாமங்களைத் தொகையேற்றி, 41 இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவுக்கும் பதிலாக லேவியரையும், இஸ்ரவேல் புத்திரரின் மிருகஜீவன்களிலுள்ள தலையீற்றான யாவுக்கும் பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் எனக்கென்று பிரித்தெடு; நான் கர்த்தர் என்றார். 42 அப்பொழுது மோசே, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவரையும் எண்ணினான். 43 ஒரு மாதம்முதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள முதற்பேறான ஆண்பிள்ளைகளெல்லாரும் பேர்பேராக எண்ணப்பட்டபோது, இருபத்தீராயிரத்து இருநூற்று எழுபத்துமூன்றுபேராயிருந்தார்கள். 44 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: 45 நீ இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறான யாவருக்கும் பதிலாக லேவியரையும், அவர்களுடைய மிருகஜீவன்களுக்குப் பதிலாக லேவியரின் மிருகஜீவன்களையும் பிரித்தெடு; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள்; நான் கர்த்தர். 46 இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறுகளில் லேவியரின் தொகைக்கு அதிகமாயிருந்து, மீட்கப்படவேண்டிய இருநூற்று எழுபத்துமூன்றுபேரிடத்திலும், 47 நீ தலைக்கு ஐந்து சேக்கல் வீதமாகப் பரிசுத்த சேக்கல் கணக்கின்படி வாங்குவாயாக; அந்தச் சேக்கலானது இருபது கேரா. 48 லேவியருடைய தொகைக்கு அதிகமானவர்கள் மீட்கப்படும் திரவியத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கொடுப்பாயாக என்றார். 49 அப்படியே லேவியரால் மீட்கப்பட்டவர்களின் தொகைக்கு அதிகமாயிருந்து, இன்னும் மீட்கப்படவேண்டியவர்களுக்கு ஈடாக மோசே இஸ்ரவேல் புத்திரருடைய முதற்பேறானவர்களிடத்தில், 50 ஆயிரத்து முந்நூற்று அறுபத்தைந்து சேக்கலாகிய திரவியத்தை, பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்கின்படி வாங்கி, 51 கர்த்தருடைய வாக்கின்படியே மீட்கப்பட்டவர்களின் கிரயத்தை ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும், கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே கொடுத்தான்.

எண்ணாகமம் 4

1 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 2 லேவியின் புத்திரருக்குள்ளே இருக்கிற கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில், 3 ஆசரிப்புக் கூடாரத்திலே வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகையிடுவாயாக. 4 ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரரின் பணிவிடை மகா பரிசுத்தமானவைகளுக்குரியது. 5 பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் வந்து, மறைவின் திரைச்சீலையை இறக்கி, அதினாலே சாட்சியின் பெட்டியை மூடி, 6 அதின்மேல் தகசுத்தோல் மூடியைப்போட்டு, அதின்மேல் முற்றிலும் நீலமான துப்பட்டியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சி, 7 சமுகத்தப்ப மேஜையின்மேல் நீலத் துப்பட்டியை விரித்து, தட்டுகளையும் தூபக்கரண்டிகளையும் கிண்ணங்களையும் மூடுகிற தட்டுகளையும் அதின்மேல் வைப்பார்களாக; நித்திய அப்பமும் அதின்மேல் இருக்கக்கடவது. 8 அவைகளின்மேல் அவர்கள் சிவப்புத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி, 9 இளநீலத் துப்பட்டியை எடுத்து, குத்துவிளக்குத்தண்டையும், அதின் அகல்களையும், அதின் கத்தரிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், அதற்குரிய எண்ணெய்ப் பாத்திரங்களையும் மூடி, 10 அதையும் அதற்கடுத்த தட்டுமுட்டுகள் யாவையும் தகசுத்தோல் மூடிக்குள்ளே போட்டு, அதை ஒரு தண்டிலே கட்டி, 11 பொற்பீடத்தின்மேல் இளநீலத் துப்பட்டியை விரித்து, அதைத் தகசுத்தோல் மூடியால் மூடி, அதின் தண்டுகளைப் பாய்ச்சி, 12 பரிசுத்த ஸ்தலத்தில் வழங்கும் ஆராதனைக்கேற்ற சகல தட்டுமுட்டுகளையும் எடுத்து, இளநீலத் துப்பட்டியிலே போட்டு, தகசுத்தோல் மூடியினால் மூடி, தண்டின்மேல் கட்டி, 13 பலிபீடத்தைச் சாம்பலற விளக்கி, அதின்மேல் இரத்தாம்பரத் துப்பட்டியை விரித்து, 14 அதின்மேல் ஆராதனைக்கேற்ற சகல பணிமுட்டுகளாகிய கலசங்களையும், முள் துறடுகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், கலசங்களையும், பலிபீடத்திற்கடுத்த எல்லாப் பாத்திரங்களையும், அதின்மேல் வைத்து, அதின்மேல் தகசுத்தோல் மூடியை விரித்து, அதின் தண்டுகளைப் பாய்ச்சக்கடவர்கள். 15 பாளயம் புறப்படும்போது, ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்த ஸ்தலத்தையும் அதினுடைய சகல பணிமுட்டுகளையும் மூடித் தீர்ந்தபின்பு, கோகாத் புத்திரர் அதை எடுத்துக்கொண்டுபோகிறதற்கு வரக்கடவர்கள்; அவர்கள் சாகாதபடிக்குப் பரிசுத்தமானதைத் தொடாதிருக்கக்கடவர்கள்; ஆசரிப்புக் கூடாரத்திலே கோகாத் புத்திரர் சுமக்கும் சுமை இதுவே. 16 ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார், விளக்குக்கு எண்ணெயையும், சுகந்த தூபவர்க்கத்தையும், தினந்தோறும் இடும் போஜனபலியையும், அபிஷேக தைலத்தையும், வாசஸ்தலம் முழுவதையும், அதிலுள்ள யாவையும், பரிசுத்த ஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும், விசாரிக்கக்கடவன் என்றார். 17 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 18 லேவியருக்குள்ளே கோகாத் வம்சமாகிய கோத்திரத்தார் அழிந்துபோகாதபடி பாருங்கள். 19 அவர்கள் மகா பரிசுத்தமானவைகளைக் கிட்டுகையில், சாகாமல் உயிரோடிருக்கும்படிக்கு, நீங்கள் அவர்களுக்காகச் செய்யவேண்டியதாவது: 20 ஆரோனும் அவன் குமாரரும் வந்து, அவர்களில் அவனவனை அவனவன் செய்யும் வேலைக்கும் அவனவன் சுமக்கும் சுமைக்கும் நியமிக்கக்கடவர்கள்; அவர்களோ சாகாதபடிக்குப் பரிசுத்தமானவைகள் மூடப்படும்போது பார்க்கிறதற்கு உட்பிரவேசியாமல் இருப்பார்களாக என்றார். 21 பின்னும், கர்த்தர் மோசேயை நோக்கி: 22 கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க, 23 முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணி, தொகை ஏற்றுவாயாக. 24 பணிவிடை செய்கிறதிலும் சுமக்கிறதிலும் கெர்சோன் வம்சத்தாரின் வேலையாவது: 25 அவர்கள் வாசஸ்தலத்துக்கும் ஆசரிப்புக் கூடாரத்துக்கும் உரிய தொங்குதிரையையும், மூடியையும், அவைகளின்மேல் இருக்கிற தகசுத்தோல் மூடியையும், ஆசரிப்புக் கூடாரவாசல் மறைவையும், 26 பிராகாரத்தின் தொங்குதிரைகளையும், வாசஸ்தலத்தண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தினுடைய வாசல் தொங்குதிரையையும், அவைகளின் கயிறுகளையும், அவைகளின் வேலைக்கடுத்த கருவிகள் யாவையும் சுமந்து, அவைகளுக்காகச் செய்யவேண்டிய யாவையும் செய்யக்கடவர்கள். 27 கெர்சோன் புத்திரர் சுமக்கவேண்டிய சுமைகளும் செய்யவேண்டிய பணிவிடைகளாகிய சகல வேலைகளும் ஆரோனும் அவன் குமாரரும் சொல்லுகிறபடியே செய்யவேண்டும்; அவர்கள் சுமக்கவேண்டிய சகல சுமைகளையும் நீங்கள் நியமித்து, அவர்களிடத்தில் ஒப்புவியுங்கள். 28 கெர்சோன் புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை இதுதான்; அவர்களை வேலைகொள்ளும் விசாரணை, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் இத்தாமாருடைய கைக்குள் இருக்கவேண்டும். 29 மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை வேலைசெய்யும் சேனைக்கு உட்படத்தக்க, 30 முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணக்கடவாய். 31 ஆசரிப்புக் கூடாரத்தில் அவர்கள் செய்யும் எல்லாப் பணிவிடைக்கும் அடுத்த காவல் விசாரிப்பாவது: வாசஸ்தலத்தின் பலகைகளும், தாழ்ப்பாள்களும், தூண்களும், பாதங்களும், 32 சுற்றிலும் இருக்கிற பிராகாரத்தின் தூண்களும், அவைகளின் பாதங்களும், முளைகளும், கயிறுகளும், அவைகளின் சகல கருவிகளும், அவற்றிற்கு அடுத்த மற்றெல்லா வேலையும்தானே; அவர்கள் சுமந்து காவல்காக்கும்படி ஒப்புவிக்கப்படுகிறவைகளைப் பேர்பேராக எண்ணக்கடவீர்கள். 33 ஆசாரியனாகிய ஆரோனுடைய குமாரனான இத்தாமாருடைய கைக்குள்ளாக மெராரி புத்திரரின் வம்சத்தார் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு அடுத்த எல்லா வேலையும் இதுவே என்றார். 34 அப்படியே மோசேயும் ஆரோனும் சபையின் பிரபுக்களும் கோகாத் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களின்படி ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க, 35 முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரையும் எண்ணினார்கள். 36 அவர்கள் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பதுபேர். 37 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயினாலும் ஆரோனாலும் கோகாத் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலை செய்கிறதற்காக எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே. 38 கெர்சோன் புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க, 39 முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 40 அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அவரவர் குடும்பத்தின்படிக்கும், பிதாக்களுடைய வம்சத்தின்படிக்கும் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பதுபேர். 41 மோசேயினாலும் ஆரோனாலும் கர்த்தர் கட்டளையிட்டபடியே கெர்சோன் புத்திரரின் வம்சத்தாரில் ஆசரிப்புக் கூடாரத்தில் வேலைசெய்ய எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே. 42 மெராரி புத்திரருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களிலும் ஆசரிப்புக் கூடாரத்திலே பணிவிடை செய்யும் சேனைக்கு உட்படத்தக்க, 43 முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுள்ளவர்கள் எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 44 அவர்களில் எண்ணப்பட்டவர்கள் தங்கள் குடும்பங்களின்படியே மூவாயிரத்து இருநூறுபேர். 45 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே மோசேயினாலும் ஆரோனாலும் மெராரி புத்திரரின் குடும்பத்தாரில் எண்ணித் தொகையிடப்பட்டவர்கள் எல்லாரும் இவர்களே. 46 லேவியருடைய பிதாக்களின் வீட்டு வம்சங்களில் முப்பது வயதுமுதல் ஐம்பது வயதுவரைக்குமுள்ளவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடை வேலைக்கும் சுமையின் வேலைக்கும் உட்படத்தக்கவர்களும், 47 மோசேயினாலும் ஆரோனாலும் இஸ்ரவேலின் பிரபுக்களாலும் எண்ணப்பட்டவர்களும் ஆகிய எல்லாரும், 48 எண்ணாயிரத்து ஐந்நூற்று எண்பதுபேராயிருந்தார்கள். 49 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் தங்கள் தங்கள் பணிவிடைக்கென்றும் தங்கள் தங்கள் சுமைக்கென்றும் மோசேயினால் எண்ணப்பட்டார்கள்; இவ்விதமாய், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் அவனால் எண்ணப்பட்டார்கள்.

எண்ணாகமம் 5

1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2 குஷ்டரோகிகள் யாவரையும், பிரமியமுள்ளவர்கள் யாவரையும், சவத்தினால் தீட்டுப்பட்டவர்கள் யாவரையும் பாளயத்திலிருந்து விலக்கிவிட இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு. 3 ஆண்பிள்ளையானாலும் பெண்பிள்ளையானாலும் அப்படிப்பட்டவர்களை நீங்கள் விலக்கி, நான் வாசம்பண்ணுகிற தங்கள் பாளயங்களை அவர்கள் தீட்டுப்படுத்தாதபடிக்கு, நீங்கள் அவர்களைப் பாளயத்திற்குப் புறம்பாக்கிவிடக்கடவீர்கள் என்றார். 4 கர்த்தர் மோசேக்குச் சொன்னபடியே, இஸ்ரவேல் புத்திரர் செய்து, அவர்களைப் பாளயத்திற்குப் புறம்பாக்கிவிட்டார்கள். 5 மேலும் கர்த்தர் மோசேயை நோக்கி: 6 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒரு புருஷனானாலும் ஸ்திரீயானாலும், கர்த்தருடைய கட்டளையை மீறி மனிதர் செய்யும் பாவங்களில் யாதொரு பாவத்தைச் செய்து குற்றவாளியானால், 7 அவர்கள் தாங்கள் செய்த பாவத்தை அறிக்கையிடக்கடவர்கள்; அப்படிப்பட்டவன் தான் செய்த குற்றத்தினிமித்தம் அபராதத்தின் முதலோடே ஐந்தில் ஒரு பங்கை அதிகமாய்க்கூட்டி, தான் குற்றஞ்செய்தவனுக்குச் செலுத்தக்கடவன். 8 அதைக் கேட்டு வாங்குகிறதற்கு இனத்தான் ஒருவனும் இல்லாதிருந்தால், அப்பொழுது அவனுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படி ஆட்டுக்கடா செலுத்தப்படுவதுமல்லாமல், கர்த்தருக்கு அந்த அபராதம் செலுத்தப்பட்டு, அது ஆசாரியனைச் சேரவேண்டும். 9 இஸ்ரவேல் புத்திரர் ஏறெடுத்துப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொண்டுவருகிற எல்லாப் பரிசுத்தமான படைப்பும் அவனுடையதாயிருக்கும். 10 ஒவ்வொருவரும் படைக்கும் பரிசுத்தமான வஸ்துக்கள் அவனுடையதாயிருக்கும்; ஒருவன் ஆசாரியனுக்குக் கொடுக்கிறது எதுவும் அவனுக்கே உரியது என்று சொல் என்றார். 11 கர்த்தர் மோசேயை நோக்கி: 12 நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: ஒருவனுடைய மனைவி பிறர்முகம் பார்த்து, புருஷனுக்குத் துரோகம்பண்ணி, 13 ஒருவனோடே சம்யோகமாய்ச் சயனித்திருந்த விஷயத்தில் அவள் தீட்டுப்பட்டவளாயிருந்தும், அவளுடைய புருஷன் கண்களுக்கு அது மறைக்கப்பட்டு வெளிக்கு வராமல் இருக்கிறபோதும், சாட்சியில்லாமலும் அவள் கையும் களவுமாகப் பிடிக்கப்படாமலும் இருக்கிறபோதும், 14 எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் தன்னுடைய மனைவி தீட்டுப்படுத்தப்பட்டிருக்க, தீட்டுப்படுத்தப்பட்ட தன் மனைவியின்மேல் குரோதங்கொண்டிருந்தாலும், அல்லது அவன் மனைவி தீட்டுப்படுத்தப்படாதிருக்க, எரிச்சலின் ஆவி அவன்மேல் வந்து, அவன் அவள்மேல் குரோதங்கொண்டிருந்தாலும், 15 அந்தப் புருஷன் தன் மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டுவந்து, அவள் நிமித்தம் ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கக்கடவன்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாய் இருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம் போடாமலும் இருப்பானாக. 16 ஆசாரியன் அவளைச் சமீபத்தில் அழைத்து, கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, 17 ஒரு மண்பாண்டத்திலே பரிசுத்த ஜலம் வார்த்து, வாசஸ்தலத்தின் தரையிலிருக்கும் புழுதியிலே கொஞ்சம் எடுத்து, அந்த ஜலத்திலே போட்டு, 18 ஸ்திரீயைக் கர்த்தருடைய சந்நிதியில் நிறுத்தி, அவள் முக்காட்டை நீக்கி, எரிச்சலின் காணிக்கையாகிய நினைப்பூட்டுதலின் காணிக்கையை அவள் உள்ளங்கையிலே வைப்பானாக; சாபகாரணமான கசப்பான ஜலம் ஆசாரியன் கையில் இருக்கவேண்டும். 19 பின்பு ஆசாரியன் அவளை ஆணையிடுவித்து: ஒருவனும் உன்னோடே சயனியாமலும், உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ தீட்டுப்படத்தக்கதாய்ப் பிறர்முகம் பாராமலும் இருந்தால், சாபகாரணமான இந்தக் கசப்பான ஜலத்தின் தோஷத்துக்கு நீங்கலாயிருப்பாய். 20 உன் புருஷனுக்கு உட்பட்டிருக்கிற நீ பிறர்முகம் பார்த்து, உன் புருஷனோடேயன்றி அந்நியனோடே சம்யோகமாய் சயனித்துத் தீட்டுப்பட்டிருப்பாயானால், 21 கர்த்தர் உன் இடுப்பு சூம்பவும், உன் வயிறு வீங்கவும்பண்ணி, உன்னை உன் ஜனங்களுக்குள்ளே சாபமும் ஆணையிடுங் குறியுமாக வைப்பாராக. 22 சாபகாரணமான இந்த ஜலம் உன் வயிறு வீங்கவும் இடுப்பு சூம்பவும் பண்ணும்படி, உன் குடலுக்குள் பிரவேசிக்கக்கடவது என்கிற சாபவார்த்தையாலே ஸ்திரீயை ஆணையிடுவித்துச் சொல்வானாக. அதற்கு அந்த ஸ்திரீ: ஆமென், ஆமென், என்று சொல்லக்கடவள். 23 பின்பு ஆசாரியன் இந்தச் சாபவார்த்தைகளை ஒரு சீட்டில் எழுதி, அவைகளைக் கசப்பான ஜலத்தினால் கழுவிப்போட்டு, 24 சாபகாரணமான அந்தக் கசப்பான ஜலத்தை அவள் குடிக்கும்படி பண்ணுவான்; அப்பொழுது சாபகாரணமான அந்த ஜலம் அவளுக்குள் இறங்கிக் கசப்பாகும். 25 பின்பு ஆசாரியன் எரிச்சலின் காணிக்கையை அந்த ஸ்திரீயின் கையிலிருந்து வாங்கி, அதைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டி, பீடத்தின்மேல் செலுத்தி, 26 ஞாபகக்குறியாக அதிலே ஒரு கைப்பிடி நிறைய எடுத்து, பீடத்தின்மேல் தகனித்து, பின்பு ஸ்திரீக்கு அந்த ஜலத்தைக் குடிக்கும்படி கொடுக்கக்கடவன். 27 அந்த ஜலத்தைக் குடிக்கச் செய்தபின்பு சம்பவிப்பதாவது: அவள் தீட்டுப்பட்டு, தன் புருஷனுக்குத் துரோகம்பண்ணியிருந்தால், சாபகாரணமான அந்த ஜலம் அவளுக்குள் பிரவேசித்துக் கசப்புண்டானதினால், அவள் வயிறுவீங்கி, அவள் இடுப்பு சூம்பும்; இப்படியே அந்த ஸ்திரீ தன் ஜனங்களுக்குள்ளே சாபமாக இருப்பாள். 28 அந்த ஸ்திரீ தீட்டுப்படாமல் சுத்தமாயிருந்தால், அவள் அதற்கு நீங்கலாகி, கர்ப்பந்தரிக்கத்தக்கவளாயிருப்பாள். 29 ஒரு ஸ்திரீ தன் புருஷனோடேயன்றி அந்நிய புருஷனோடே சேர்ந்து தீட்டுப்பட்டதினால் உண்டான எரிச்சலுக்கும், 30 புருஷன்மேல் எரிச்சலின் ஆவி வருகிறதினால், அவன் தன் மனைவியின்மேல் அடைந்த சமுசயத்துக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் கர்த்தருடைய சந்நிதியில் தன் மனைவியை நிறுத்துவானாக; ஆசாரியன் இந்தப் பிரமாணத்தின்படியெல்லாம் அவளுக்குச் செய்யக்கடவன். 31 புருஷனானவன் அக்கிரமத்திற்கு நீங்கலாயிருப்பான்; அப்படிப்பட்ட ஸ்திரீயோ, தன் அக்கிரமத்தைச் சுமப்பாள் என்று சொல் என்றார்.

எண்ணாகமம் 6

1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் கர்த்தருக்கென்று விரதம் பண்ணிக்கொண்டவர்களாயிருக்கும்படி நசரேய விரதமாகிய ஒரு விசேஷித்த பொருத்தனையைப் பண்ணினால், 3 அப்படிப்பட்டவன் திராட்சரசத்தையும் மதுபானத்தையும் விலக்கக்கடவன்; அவன் திராட்சரசத்தின் காடியையும் மற்ற மதுபானத்தின் காடியையும், திராட்சரசத்தினால் செய்த எவ்விதமான பானத்தையும் குடியாமலும், திராட்சப்பழங்களையாவது திராட்ச வற்றல்களையாவது புசியாமலும், 4 தான் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் திராட்சச்செடி விதைமுதல் தோல்வரையிலுள்ளவைகளினால் செய்யப்பட்ட யாதொன்றையும் புசியாமலும் இருக்கக்கடவன். 5 அவன் நசரேய விரதங்காக்கும் நாளெல்லாம் சவரகன் கத்தி அவன் தலையின்மேல் படலாகாது; அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் காலம் நிறைவேறுமளவும் பரிசுத்தமாயிருந்து, தன் தலைமயிரை வளரவிடக்கடவன். 6 அவன் கர்த்தருக்கென்று விரதங்காக்கும் நாளெல்லாம் யாதொரு பிரேதத்தண்டையில் போகக்கூடாது. 7 அவன் தன் தேவனுக்கென்று செய்த நசரேய விரதம் அவன் தலைமேல் இருக்கிறபடியால், மரணமடைந்த தன் தகப்பனாலாகிலும் தாயினாலாகிலும் சகோதரனாலாகிலும் சகோதரியினாலாகிலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாது. 8 அவன் நசரேயனாயிருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான். 9 அவனண்டையிலே ஒருவன் சடுதியில் மரணமடைந்ததினால், நசரேய விரதமுள்ள அவனுடைய தலை தீட்டுப்பட்டதேயாகில், அவன் தன் சுத்திகரிப்பின் நாளாகிய ஏழாம் நாளில் தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டு, 10 எட்டாம் நாளில் இரண்டு காட்டுப்புறாக்களையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்தில் கொண்டுவரக்கடவன். 11 அப்பொழுது ஆசாரியன் ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி, பிணத்தினால் அவனுக்கு உண்டான தீட்டை நிவிர்த்திசெய்து, அவன் தலையை அந்நாளில் பரிசுத்தப்படுத்துவானாக. 12 அவன் திரும்பவும் தன் விரதநாட்களைக் கர்த்தருக்கென்று காத்து, ஒரு வருஷத்து ஆட்டுக்குட்டியைக் குற்றநிவாரணபலியாகக் கொண்டுவரக்கடவன்; அவனுடைய நசரேய விரதம் தீட்டுப்பட்டதினால் சென்ற நாட்கள் விருதாவாகும். 13 நசரேயனுக்குரிய பிரமாணமாவது: அவன் விரதங்காக்கும் நாட்கள் நிறைவேறின அன்றே, அவன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே வந்து, 14 சர்வாங்க தகனபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும், பாவநிவாரணபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், சமாதானபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும், 15 ஒரு கூடையில் எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும், எண்ணெய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், அவைகளுக்கு அடுத்த போஜனபலியையும், பானபலிகளையும் கர்த்தருக்குத் தன் காணிக்கையாகச் செலுத்தக்கடவன். 16 அவைகளை ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து, அவனுடைய பாவநிவாரண பலியையும் அவனுடைய சர்வாங்க தகனபலியையும் செலுத்தி, 17 ஆட்டுக்கடாவைக் கூடையிலிருக்கும் புளிப்பில்லாத அப்பங்களோடுங்கூடக் கர்த்தருக்குச் சமாதான பலியாகச் செலுத்தி, அவனுடைய போஜனபலியையும் பானபலியையும் படைப்பானாக. 18 அப்பொழுது நசரேயன் ஆசரிப்புக் கூடாரவாசலிலே, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலையைச் சிரைத்து, பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரை எடுத்து, சமாதானபலியின்கீழ் எரிகிற அக்கினியில் போடக்கடவன். 19 நசரேயன் பொருத்தனை செய்யப்பட்ட தன் தலைமயிரைச் சிரைத்துக்கொண்டபின்பு, ஆசாரியன் ஆட்டுக்கடாவினுடைய வேவிக்கப்பட்ட ஒரு முன்னந்தொடையையும், கூடையில் இருக்கிறவைகளிலே புளிப்பில்லாத ஒரு அதிரசத்தையும் புளிப்பில்லாத ஒரு அடையையும் எடுத்து, அவனுடைய உள்ளங்கைகளில் வைத்து, 20 அவைகளைக் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டக்கடவன்; அது அசைவாட்டப்பட்ட மார்க்கண்டத்தோடும், ஏறெடுத்துப் படைக்கப்பட்ட முன்னந்தொடையோடும், ஆசாரியனைச் சேரும்; அது பரிசுத்தமானது. பின்பு நசரேயன் திராட்சரசம் குடிக்கலாம். 21 பொருத்தனைபண்ணின நசரேயனுக்கும், அவன் தன் கைக்கு உதவுகிறதையல்லாமல், தன் நசரேய விரதத்தினிமித்தம் கர்த்தருக்குச் செலுத்தும் காணிக்கைக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் செய்த பொருத்தனையின்படியே தன் பொருத்தனையின் பிரமாணத்துக்கேற்க செய்து தீரவேண்டும் என்று சொல் என்றார். 22 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 23 நீ ஆரோனோடும் அவன் குமாரரோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதிக்கும்போது, அவர்களைப் பார்த்துச் சொல்லவேண்டியதாவது: 24 கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர். 25 கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர். 26 கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர் என்பதே. 27 இவ்விதமாய் அவர்கள் என் நாமத்தை இஸ்ரவேல் புத்திரர்மேல் கூறக்கடவர்கள்; அப்பொழுது நான் அவர்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல் என்றார்.

எண்ணாகமம் 7

1 மோசே வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணி, அதையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும், பலிபீடத்தையும் அதின் எல்லாப் பணிமுட்டுகளையும் அபிஷேகம்பண்ணி, பரிசுத்தப்படுத்தி முடித்த நாளில், 2 தங்கள் பிதாக்களுடைய வம்சத்தலைவரும், எண்ணப்பட்டவர்களின் விசாரிப்புக்கு வைக்கப்பட்ட கோத்திரப் பிரபுக்களுமாகிய இஸ்ரவேலின் பிரபுக்கள் காணிக்கைகளைச் செலுத்தினார்கள். 3 தங்கள் காணிக்கையாக, ஆறு கூண்டு வண்டில்களையும், பன்னிரண்டு மாடுகளையும், இரண்டிரண்டு பிரபுக்களுக்கு ஒவ்வொரு வண்டிலும், ஒவ்வொரு பிரபுக்கு ஒவ்வொரு மாடுமாக, கர்த்தருக்குச் செலுத்த வாசஸ்தலத்திற்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். 4 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: 5 நீ அவர்களிடத்தில் ஆசரிப்புக் கூடாரத்தின் ஊழியத்திற்காக அவைகளை வாங்கி, லேவியருக்கு அவரவர் வேலைக்குத் தக்கவைகளாகப் பங்கிட்டுக் கொடு என்றார். 6 அப்பொழுது மோசே அந்த வண்டில்களையும் மாடுகளையும் வாங்கி, லேவியருக்குக் கொடுத்தான். 7 இரண்டு வண்டில்களையும் நான்கு மாடுகளையும் கெர்சோன் புத்திரருக்கு, அவர்கள் வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான். 8 நான்கு வண்டில்களையும் எட்டு மாடுகளையும் மெராரியின் புத்திரருக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரர் இத்தாமாருடைய கையின் கீழிருக்கிற அவர்களுடைய வேலைக்குத்தக்க பங்காகக் கொடுத்தான். 9 கோகாத்தின் புத்திரருக்கோ ஒன்றும் கொடுக்கவில்லை; தோள்மேல் சுமப்பதே அவர்களுக்குரிய பரிசுத்த ஸ்தலத்தின் வேலையாயிருந்தது. 10 பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட நாளிலே, பிரபுக்கள் அதின் பிரதிஷ்டைக்காகக் காணிக்கைகளைச் செலுத்தி, பலிபீடத்துக்கு முன்பாகத் தங்கள் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள். 11 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பலிபீடத்தின் பிரதிஷ்டைக்காக ஒவ்வொரு பிரபுவும் தன்தன் நாளில் தன்தன் காணிக்கையைச் செலுத்தக்கடவன் என்றார். 12 அப்படியே முதலாம் நாளில் தன் காணிக்கையைச் செலுத்தினவன் யூதா கோத்திரத்தானாகிய அம்மினதாபின் குமாரன் நகசோன். 13 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், 14 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், 15 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், 16 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், 17 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மினதாபின் குமாரனாகிய நகசோனின் காணிக்கை. 18 இரண்டாம் நாளில் இசக்காரின் பிரபுவாகிய சூவாரின் குமாரன் நெதனெயேல் காணிக்கை செலுத்தினான். 19 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், 20 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், 21 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், 22 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், 23 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூவாரின் குமாரனாகிய நெதனெயேலின் காணிக்கை. 24 மூன்றாம் நாளில் ஏலோனின் குமாரனாகிய எலியாப் என்னும் செபுலோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். 25 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், 26 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், 27 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், 28 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், 29 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏலோனின் குமாரனாகிய எலியாபின் காணிக்கை. 30 நான்காம் நாளில் சேதேயூரின் குமாரனாகிய எலிசூர் என்னும் ரூபன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். 31 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், 32 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், 33 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், 34 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், 35 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சேதேயூரின் குமாரனாகிய எலிசூரின் காணிக்கை. 36 ஐந்தாம் நாளில் சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேல் என்னும் சிமியோன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். 37 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், 38 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், 39 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், 40 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், 41 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது சூரிஷதாயின் குமாரனாகிய செலூமியேலின் காணிக்கை. 42 ஆறாம் நாளில் தேகுவேலின் குமாரனாகிய எலியாசாப் என்னும் காத் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். 43 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், 44 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், 45 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், 46 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், 47 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது தேகுவேலின் குமாரனாகிய எலியாசாபின் காணிக்கை. 48 ஏழாம் நாளில் அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமா என்னும் எப்பிராயீம் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். 49 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், 50 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், 51 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், 52 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், 53 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மியூதின் குமாரனாகிய எலிஷாமாவின் காணிக்கை. 54 எட்டாம் நாளில் பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் என்னும் மனாசே புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். 55 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், 56 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், 57 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், 58 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், 59 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது பெதாசூரின் குமாரனாகிய கமாலியேலின் காணிக்கை. 60 ஒன்பதாம் நாளில் கீதெயோனின் குமாரனாகிய அபீதான் என்னும் பென்யமீன் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். 61 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், 62 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், 63 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், 64 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், 65 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது கீதெயோனின் குமாரனாகிய அபீதானின் காணிக்கை. 66 பத்தாம் நாளில் அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேர் என்னும் தாண் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். 67 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், 68 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், 69 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், 70 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், 71 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது அம்மிஷதாயின் குமாரனாகிய அகியேசேரின் காணிக்கை. 72 பதினோராம் நாளில் ஓகிரானின் குமாரனாகிய பாகியேல் என்னும் ஆசேர் புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். 73 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், 74 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், 75 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், 76 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், 77 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஓகிரானின் குமாரனாகிய பாகியேலின் காணிக்கை. 78 பன்னிரண்டாம் நாளில் ஏனானின் குமாரனாகிய அகீரா என்னும் நப்தலி புத்திரரின் பிரபு காணிக்கை செலுத்தினான். 79 அவன் காணிக்கையாவது: போஜனபலியாகப் படைக்கும்பொருட்டு எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவினால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்காக நூற்றுமுப்பது சேக்கல் நிறையுள்ளதுமான ஒரு வெள்ளித்தாலமும், எழுபது சேக்கல் நிறையுள்ள ஒரு வெள்ளிக்கலமும் ஆகிய இவ்விரண்டும், 80 தூபவர்க்கம் நிறைந்த பத்துச்சேக்கல் நிறையுள்ள பொன்னினால் செய்த ஒரு தூபகரண்டியும், 81 சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும், 82 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவும், 83 சமாதானபலியாக இரண்டு மாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வயதான ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இது ஏனானின் குமாரனாகிய அகீராவின் காணிக்கை. 84 பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்டபோது, இஸ்ரவேல் பிரபுக்களால் செய்யப்பட்ட பிரதிஷ்டையாவது: வெள்ளித்தாலங்கள் பன்னிரண்டு, வெள்ளிக்கலங்கள் பன்னிரண்டு, பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு. 85 ஒவ்வொரு வெள்ளித்தாலம் நூற்றுமுப்பது சேக்கல் நிறையும், ஒவ்வொரு கலம் எழுபது சேக்கல் நிறையுமாக, இந்தப் பாத்திரங்களின் வெள்ளியெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி இரண்டாயிரத்து நானூறு சேக்கல் நிறையாயிருந்தது. 86 தூபவர்க்கம் நிறைந்த பொன் தூபகரண்டிகள் பன்னிரண்டு, ஒவ்வொன்று பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி பத்துச்சேக்கல் நிறையாக, தூபகரண்டிகளின் பொன்னெல்லாம் நூற்றிருபது சேக்கல் நிறையாயிருந்தது. 87 சர்வாங்க தகனபலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் பன்னிரண்டு, ஆட்டுக்கடாக்கள் பன்னிரண்டு, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் பன்னிரண்டு, அவைகளுக்கடுத்த போஜனபலிகளும்கூடச் செலுத்தப்பட்டது; பாவநிவாரணபலியாகச் செலுத்தப்பட்ட வெள்ளாட்டுக்கடாக்கள் பன்னிரண்டு. 88 சமாதான பலியாகச் செலுத்தப்பட்ட காளைகளெல்லாம் இருபத்துநான்கு; ஆட்டுக்கடாக்கள் அறுபது, வெள்ளாட்டுக்கடாக்கள் அறுபது, ஒரு வயதான ஆட்டுக்குட்டிகள் அறுபது; பலிபீடம் அபிஷேகம்பண்ணப்பட்ட பின்பு செய்யப்பட்ட அதின் பிரதிஷ்டை இதுவே. 89 மோசே தேவனோடே பேசும்படி ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போது, தன்னோடே பேசுகிறவரின் சத்தம் சாட்சிப்பெட்டியின்மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்துண்டாகக் கேட்பான்; அங்கே இருந்து அவனோடே பேசுவார்.

எண்ணாகமம் 8

1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நீ ஆரோனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ விளக்குகளை ஏற்றும்போது ஏழு விளக்குகளும் விளக்குத்தண்டிற்கு நேரே எரியவேண்டும் என்று சொல் என்றார். 3 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபிரகாரம் ஆரோன் செய்து, விளக்குத்தண்டிற்கு நேரே ஒழுங்காக அதின் விளக்குகளை ஏற்றினான். 4 இந்தக் குத்துவிளக்கு, அதின் பாதமுதல் பூக்கள்வரைக்கும் பொன்னினால் அடிப்புவேலையாய்ச் செய்யப்பட்டிருந்தது; கர்த்தர் மோசேக்குக் காண்பித்த மாதிரியின்படியே அவன் குத்துவிளக்கை உண்டாக்கினான். 5 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 6 நீ இஸ்ரவேல் சந்ததியாரினின்று லேவியரைப் பிரித்தெடுத்து, அவர்களைச் சுத்திகரிப்பாயாக. 7 அவர்களைச் சுத்திகரிக்கும்படி அவர்களுக்குச் செய்யவேண்டியதாவது: அவர்கள்மேல் சுத்திகரிக்கும் ஜலத்தைத் தெளிப்பாயாக; பின்பு அவர்கள் சர்வாங்க சவரம்பண்ணி, தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து, தங்களைச் சுத்திகரிக்கக்கடவர்கள். 8 அப்பொழுது ஒரு காளையையும், அதற்கேற்ற எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவாகிய போஜனபலியையும் கொண்டுவரக்கடவர்கள்; பாவநிவாரணபலியாக வேறொரு காளையையும் நீ வாங்கி, 9 லேவியரை ஆசரிப்புக் கூடாரத்துக்குமுன் வரச்செய்து, இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரையும் கூடிவரப்பண்ணுவாயாக. 10 நீ லேவியரைக் கர்த்தருடைய சந்நிதியில் வரப்பண்ணினபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கைகளை லேவியர்மேல் வைக்கக்கடவர்கள். 11 லேவியர் கர்த்தருக்குரிய பணிவிடை செய்யும்பொருட்டு, ஆரோன் அவர்களை இஸ்ரவேல் புத்திரரின் காணிக்கையாகக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டப்படும் காணிக்கையாய் நிறுத்தக்கடவன். 12 அதன்பின் லேவியர் தங்கள் கைகளைக் காளைகளுடைய தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு நீ லேவியருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, கர்த்தருக்கு அவைகளில் ஒன்றைப் பாவநிவாரணபலியாகவும், மற்றொன்றைச் சர்வாங்க தகனபலியாகவும் செலுத்தி, 13 லேவியரை ஆரோனுக்கும் அவன் குமாரனுக்கும் முன்பாக நிறுத்தி, அவர்களைக் கர்த்தருக்கு அசைவாட்டப்படும் காணிக்கையாக்கி, 14 இப்படி நீ லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்தெடுக்கக்கடவாய்; லேவியர் என்னுடையவர்களாயிருப்பார்கள். 15 இப்படி அவர்களைச் சுத்திகரித்து, அவர்களை அசைவாட்டும் காணிக்கையாக்கக்கடவாய்; அதன்பின்பு லேவியர் ஆசரிப்புக் கூடாரத்தில் பணிவிடை செய்யப் பிரவேசிக்கக்கடவர்கள். 16 இஸ்ரவேல் புத்திரரிலிருந்து அவர்கள் எனக்கு முற்றிலும் கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற சகல முதற்பேறுக்கும் பதிலாக அவர்களை எனக்கு எடுத்துக்கொண்டேன். 17 இஸ்ரவேல் புத்திரரில் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் முதற்பேறானதெல்லாம் என்னுடையது; நான் எகிப்துதேசத்திலே முதற்பேறான யாவையும் சங்கரித்த நாளிலே அவைகளை எனக்கென்று பரிசுத்தப்படுத்தி, 18 பின்பு லேவியரை இஸ்ரவேல் புத்திரரிலுள்ள முதற்பேறு சகலத்திற்கும் பதிலாக எடுத்துக்கொண்டு, 19 லேவியர் இஸ்ரவேல் புத்திரருடைய பணிவிடையை ஆசரிப்புக் கூடாரத்தில் செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கும், இஸ்ரவேல் புத்திரர் தாங்களே பரிசுத்த ஸ்தலத்தில் சேருகிறதினால் இஸ்ரவேல் புத்திரரில் வாதையுண்டாகாதபடிக்கும், லேவியரை அவர்களிலிருந்து எடுத்து, ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் தத்தமாகக் கொடுத்தேன் என்றார். 20 அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் சபையார் யாவரும் கர்த்தர் லேவியரைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் லேவியருக்குச் செய்தார்கள். 21 லேவியர் சுத்திகரிக்கப்பட்டு, தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்தார்கள்; பின்பு ஆரோன் அவர்களைக் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் காணிக்கையாக நிறுத்தி, அவர்களைச் சுத்திகரிக்க அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்தான். 22 அதற்குப்பின்பு லேவியர் ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் முன்பாக ஆசரிப்புக் கூடாரத்தில் தங்கள் பணிவிடையைச் செய்யும்படி பிரவேசித்தார்கள்; கர்த்தர் லேவியரைக்குறித்து மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்களுக்குச் செய்தார்கள். 23 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 24 லேவியருக்குரிய கட்டளை என்னவென்றால்: இருபத்தைந்து வயதுமுதல் அதற்கு மேற்பட்ட வயதுள்ள யாவரும் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்யும் சேனையிலே சேவிக்க வரவேண்டும். 25 ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வேலைசெய்யாமல் திருப்பணி சேனையை விட்டு, 26 ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக் காக்கிறதற்குத் தங்கள் சகோதரரோடேகூட ஊழியஞ்செய்வதேயன்றி, வேறொரு சேவகமும் செய்யவேண்டியதில்லை; இப்படி லேவியர் செய்யவேண்டிய வேலைகளைக்குறித்துத் திட்டம்பண்ணக்கடவாய் என்றார்.

எண்ணாகமம் 9

1 அவர்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தர் சீனாய் வனாந்தரத்தில் மோசேயை நோக்கி: 2 குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரர் பஸ்காவை ஆசரிக்கக்கடவர்கள். 3 இந்த மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையாகிய குறித்த காலத்தில் அதை ஆசரிக்கக்கடவீர்கள்; அதற்குரிய எல்லாக் கட்டளையின்படியேயும் முறைமைகளின்படியேயும் அதை ஆசரிக்கக்கடவீர்கள் என்றார். 4 அப்படியே பஸ்காவை ஆசரிக்கும்படி மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டான். 5 அதினால் முதலாம் மாதம் பதினான்காம் தேதி அந்திநேரமான வேளையில், சீனாய் வனாந்தரத்தில் பஸ்காவை ஆசரித்தார்கள்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள். 6 அந்நாளில் சிலர் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டபடியினால் பஸ்காவை ஆசரிக்கத்தகாதவர்களாயிருந்தார்கள்; அவர்கள் அந்நாளிலே மோசேக்கும் ஆரோனுக்கும் முன்பாக வந்து: 7 நாங்கள் மனித பிரேதத்தினால் தீட்டுப்பட்டவர்கள்; குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரரோடேகூடக் கர்த்தருக்குக் காணிக்கையைச் செலுத்தாதபடிக்கு, நாங்கள் விலக்கப்பட்டிருக்கவேண்டியது என்ன என்றார்கள். 8 மோசே அவர்களை நோக்கி: பொறுங்கள்; கர்த்தர் உங்களைக்குறித்துக் கட்டளையிடுவது என்ன என்று கேட்பேன் என்றான். 9 கர்த்தர் மோசேயை நோக்கி: 10 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்களிலாகிலும் உங்கள் சந்ததியாரிலாகிலும் ஒருவன் பிரேதத்தினால் தீட்டுப்பட்டாலும், பிரயாணமாய்த் தூரம்போயிருந்தாலும், கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கவேண்டும். 11 அவர்கள் அதை இரண்டாம் மாதம் பதினாலாந்தேதி அந்திநேரமான வேளையில் ஆசரித்து, அதைப் புளிப்பில்லாத அப்பங்களோடும் கசப்பான கீரைகளோடும் புசித்து, 12 விடியற்காலம்மட்டும் அதில் ஒன்றும் மீதியாக வைக்காமலும், அதில் ஒரு எலும்பையும் முறிக்காமலும், பஸ்காவினுடைய சகல முறைமைகளின்படியும் அதை ஆசரிக்கக்கடவர்கள். 13 ஒருவன் சுத்தமுள்ளவனுமாய்ப் பிரயாணம் போகாதவனுமாயிருந்தும், பஸ்காவை ஆசரிக்காதேபோனால், அந்த ஆத்துமா குறித்த காலத்தில் கர்த்தரின் பலியைச் செலுத்தாதபடியினால் தன் ஜனத்தாரில் இராமல் அறுப்புண்டுபோவான்; அந்த மனிதன் தன் பாவத்தைச் சுமப்பான். 14 ஒரு பரதேசி உங்களிடத்திலே தங்கி, கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்க வேண்டுமானால், அவன் அதைப் பஸ்காவின் கட்டளைப்படியும் அதின் முறைமையின்படியும் ஆசரிக்கக்கடவன்; பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே கட்டளை இருக்கவேண்டும் என்று சொல் என்றார். 15 வாசஸ்தலம் ஸ்தாபனஞ்செய்யப்பட்ட நாளிலே, மேகமானது சாட்சியின் கூடாரமாகிய வாசஸ்தலத்தை மூடிற்று; சாயங்காலமானபோது, வாசஸ்தலத்தின்மேல் அக்கினிமயமான ஒரு தோற்றம் உண்டாயிற்று; அது விடியற்காலமட்டும் இருந்தது. 16 இப்படி நித்தமும் இருந்தது; பகலில் மேகமும், இரவில் அக்கினித்தோற்றமும் அதை மூடிக்கொண்டிருந்தது. 17 மேகம் கூடாரத்திலிருந்து மேலே எழும்பும்போது இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுவார்கள்; மேகம் தங்குமிடத்தில் இஸ்ரவேல் புத்திரர் பாளயமிறங்குவார்கள். 18 கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படுவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; மேகம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும் நாளெல்லாம் அவர்கள் பாளயத்தில் தங்கியிருப்பார்கள். 19 மேகம் நெடுநாள் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்படாமல் கர்த்தரின் காவலைக் காத்துக்கொண்டிருப்பார்கள். 20 மேகம் சிலநாள் மாத்திரம் வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்கியிருந்து, கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணப்படுவார்கள். 21 மேகம் சாயங்காலந்தொடங்கி விடியற்காலமட்டும் இருந்து, விடியற்காலத்தில் உயர எழும்பும்போது, உடனே பிரயாணப்படுவார்கள்; பகலிலாகிலும் இரவிலாகிலும் மேகம் எழும்பும்போது பிரயாணப்படுவார்கள். 22 மேகமானது இரண்டுநாளாவது ஒரு மாதமாவது ஒரு வருஷமாவது வாசஸ்தலத்தின்மேல் தங்கியிருக்கும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணாமல் பாளயமிறங்கியிருப்பார்கள்; அது உயர எழும்பும்போதோ பிரயாணப்படுவார்கள். 23 கர்த்தருடைய கட்டளையின்படியே பாளயமிறங்குவார்கள்; கர்த்தருடைய கட்டளையின்படியே பிரயாணம்பண்ணுவார்கள்; கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிடுகிறபடியே கர்த்தருடைய காவலைக் காத்துக்கொள்வார்கள்.

எண்ணாகமம் 10

1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2 சபையைக் கூடிவரவழைப்பதற்கும் பாளயங்களைப் பிரயாணப்படுத்துவதற்கும் உபயோகமாக இரண்டு வெள்ளிப் பூரிகைகளைச் செய்துகொள்வாயாக; அவைகள் ஒரே வெள்ளித்தகட்டால் செய்யப்படவேண்டும். 3 அவைகளை ஊதும்போது, சபையார் எல்லாரும் ஆசரிப்புக் கூடாரவாசலில் உன்னிடத்தில் கூடிவரவேண்டும். 4 ஒன்றைமாத்திரம் ஊதினால் இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவராகிய பிரபுக்கள் உன்னிடத்தில் கூடிவரக்கடவர்கள். 5 நீங்கள் அவைகளைப் பெருந்தொனியாய் முழக்கும்போது, கிழக்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது. 6 அவைகளை நீங்கள் இரண்டாந்தரம் பெருந்தொனியாய் முழக்கும்போது, தெற்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது; அவர்களைப் பிரயாணப்படுத்துவதற்குப் பெருந்தொனியாய் முழக்கவேண்டும். 7 சபையைக் கூட்டுகிறதற்கு நீங்கள் ஊதவேண்டியதேயன்றி பெருந்தொனியாய் முழக்கவேண்டாம். 8 ஆரோனின் குமாரராகிய ஆசாரியர் பூரிகைகளை ஊதக்கடவர்கள்; உங்கள் தலைமுறைதோறும் இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது. 9 உங்கள் தேசத்தில் உங்களைத் துன்பப்படுத்துகிற சத்துருவுக்கு விரோதமாக யுத்தத்துக்குப் போகும்போது, பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்கக்கடவீர்கள்; அப்பொழுது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்திலே நீங்கள் நினைவுகூரப்பட்டு, உங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவீர்கள். 10 உங்கள் மகிழ்ச்சியின் நாளிலும், உங்கள் பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், உங்கள் சர்வாங்க தகனபலிகளும் சமாதானபலிகளும் செலுத்தப்படும்போது பூரிகைகளை ஊதவேண்டும்; அப்பொழுது அவைகள் உங்கள் தேவனுடைய சமுகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிருக்கும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றார். 11 இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பிற்று. 12 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சீனாய் வனாந்தரத்திலிருந்து தங்கள் பிரயாண வரிசைகளாய்ப் புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்தரத்தில் தங்கிற்று. 13 இப்படியே கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி முதல் பிரயாணம்பண்ணினார்கள். 14 யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான். 15 இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூவாரின் குமாரன் நெதனெயேல் தலைவனாயிருந்தான். 16 செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏலோனின் குமாரன் எலியாப் தலைவனாயிருந்தான். 17 அப்பொழுது வாசஸ்தலம் இறக்கி வைக்கப்பட்டது; அதைக் கெர்சோன் புத்திரரும் மெராரி புத்திரரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள். 18 அதற்குப்பின்பு ரூபன் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்குச் சேதேயூரின் குமாரன் எலிசூர் தலைவனாயிருந்தான். 19 சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல் தலைவனாயிருந்தான். 20 காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குத் தேகுவேலின் குமாரன் எலியாசாப் தலைவனாயிருந்தான். 21 கோகாத்தியர் பரிசுத்தமானவைகளைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்; இவர்கள் வந்து சேருமுன் மற்றவர்கள் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணுவார்கள். 22 அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மியூதின் குமாரன் எலிஷாமா தலைவனாயிருந்தான். 23 மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குப் பெதாசூரின் குமாரன் கமாலியேல் தலைவனாயிருந்தான். 24 பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குக் கீதெயோனின் குமாரன் அபீதான் தலைவனாயிருந்தான். 25 அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர் தலைவனாயிருந்தான். 26 ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஓகிரானின் குமாரன் பாகியேல் தலைவனாயிருந்தான். 27 நப்தலி சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏனானின் குமாரன் அகீரா தலைவனாயிருந்தான். 28 இஸ்ரவேல் புத்திரர் புறப்பட்டபோது, இவ்விதமாய்த் தங்கள் தங்கள் சேனைகளின்படியே பிரயாணம்பண்ணினார்கள். 29 அப்பொழுது மோசே தன் மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய குமாரனான ஓபாவை நோக்கி: உங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள் பிரயாணம்போகிறோம்; நீயும் எங்களோடேகூட வா, உனக்கு நன்மைசெய்வோம்; கர்த்தர் இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்றான். 30 அதற்கு அவன்: நான் வரக்கூடாது; என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போகவேண்டும் என்றான். 31 அப்பொழுது மோசே: நீ எங்களைவிட்டுப் போகவேண்டாம்; வனாந்தரத்திலே நாங்கள் பாளயமிறங்கும் இடங்களை நீ அறிந்திருக்கிறபடியினால், எங்களுக்குக் கண்களைப்போல இருப்பாய். 32 நீ எங்களோடேகூட வந்தால், கர்த்தர் எங்களுக்குச் செய்தருளும் நன்மையின்படியே உனக்கும் நன்மைசெய்வோம் என்றான். 33 அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்றுநாள் பிரயாணம் போனார்கள்; மூன்றுநாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள்முன் சென்றது. 34 அவர்கள் பாளயத்திலிருந்து பிரயாணம்போகிறபோது, கர்த்தருடைய மேகம் பகலில் அவர்கள்மேல் தங்கியிருந்தது. 35 பெட்டியானது புறப்படும்போது, மோசே: கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான். 36 அது தங்கும்போது: கர்த்தாவே, அநேக ஆயிரவர்களாகிய இஸ்ரவேலரிடத்தில் திரும்புவீராக என்று சொல்லுவான்.

எண்ணாகமம் 11

1 பின்பு, ஜனங்கள் முறையிட்டுக் கொண்டிருந்தார்கள்; அது கர்த்தருடைய செவிகளில் பொல்லாப்பாயிருந்தது; கர்த்தர் அதைக் கேட்டபோது, அவருடைய கோபம் மூண்டது; கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து, பாளயத்தின் கடைசியிலிருந்த சிலரைப் பட்சித்தது. 2 அப்பொழுது ஜனங்கள் மோசேயை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மோசே கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; உடனே அக்கினி அவிந்துபோயிற்று. 3 கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்ததினால், அவ்விடத்துக்குத் தபேரா என்று பேரிட்டான். 4 பின்பு அவர்களுக்குள் இருந்த பலஜாதியான அந்நிய ஜனங்கள் மிகுந்த இச்சையுள்ளவர்களானார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் திரும்ப அழுது, நமக்கு இறைச்சியைப் புசிக்கக்கொடுப்பவர் யார்? 5 நாம் எகிப்திலே கிரயமில்லாமல் சாப்பிட்ட மச்சங்களையும், வெள்ளரிக்காய்களையும், கொம்மட்டிக்காய்களையும், கீரைகளையும், வெண்காயங்களையும், வெள்ளைப் பூண்டுகளையும் நினைக்கிறோம். 6 இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள். 7 அந்த மன்னா கொத்துமல்லி விதையம்மாத்திரமும், அதின் நிறம் முத்துப்போலவும் இருந்தது. 8 ஜனங்கள் போய் அதைப் பொறுக்கிக்கொண்டுவந்து, ஏந்திரங்களில் அரைத்தாவது உரல்களில் இடித்தாவது, பானைகளில் சமைப்பார்கள்; அதை அப்பங்களுமாகச் சுடுவார்கள்; அதின் ருசி புது ஒலிவ எண்ணெயின் ருசிபோலிருந்தது. 9 இரவிலே பாளயத்தின்மேல் பனிபெய்யும்போது, மன்னாவும் அதின்மேல் விழும். 10 அந்தந்த வம்சங்களைச் சேர்ந்த ஜனங்கள் தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்று அழுகிறதை மோசே கேட்டான்; கர்த்தருக்கு மிகவும் கோபம் மூண்டது; மோசேயின் பார்வைக்கும் அது பொல்லாப்பாயிருந்தது. 11 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: நீர் இந்த ஜனங்கள் எல்லாருடைய பாரத்தையும் என்மேல் சுமத்தினதினால், உமது அடியானுக்கு உபத்திரவம் வரப்பண்ணினதென்ன? உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடையாதே போனதென்ன? 12 இவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு நீ இவர்களை முலையுண்கிற பாலகனைத் தகப்பன் சுமந்துகொண்டுபோவதுபோல, உன் மார்பிலே அணைத்துக்கொண்டுபோ என்று நீர் என்னோடே சொல்லும்படி இந்த ஜனங்களையெல்லாம் கர்ப்பந்தரித்தேனோ? இவர்களைப் பெற்றது நானோ? 13 இந்த ஜனங்கள் எல்லாருக்கும் கொடுக்கிறதற்கு எனக்கு இறைச்சி எங்கேயிருந்து வரும்? எனக்கு இறைச்சி கொடு என்று என்னைப் பார்த்து அழுகிறார்களே. 14 இந்த ஜனங்களெல்லாரையும் நான் ஒருவனாய்த் தாங்கக்கூடாது; எனக்கு இது மிஞ்சின பாரமாயிருக்கிறது. 15 உம்முடைய கண்களிலே எனக்குக் கிருபை கிடைத்ததானால், இப்படி எனக்குச் செய்யாமல், என் உபத்திரவத்தை நான் காணாதபடிக்கு இப்பொழுதே என்னைக் கொன்றுபோடும் என்று வேண்டிக்கொண்டான். 16 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: இஸ்ரவேல் ஜனங்களுக்கு மூப்பரும் தலைவருமானவர்கள் இன்னார் என்று நீ அறிந்திருக்கிறாயே, அந்த மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, அவர்களை ஆசரிப்புக் கூடாரத்தினிடத்தில் அங்கே உன்னோடேகூட வந்து நிற்கும்படி செய். 17 அப்பொழுது நான் இறங்கிவந்து, அங்கே உன்னோடே பேசி, நீ ஒருவன்மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன். 18 நீ ஜனங்களை நோக்கி: நாளைக்காக உங்களைப் பரிசுத்தம்பண்ணுங்கள்; நீங்கள் இறைச்சி சாப்பிடுவீர்கள்; எங்களுக்கு இறைச்சி சாப்பிடக் கொடுப்பவர் யார் என்றும், எகிப்திலே எங்களுக்குச் சௌக்கியமாயிருந்தது என்றும், கர்த்தருடைய செவிகள் கேட்க அழுதீர்களே; ஆகையால், நீங்கள் சாப்பிடும்படி கர்த்தர் உங்களுக்கு இறைச்சி கொடுப்பார். 19 நீங்கள் ஒருநாள், இரண்டுநாள், ஐந்துநாள், பத்துநாள், இருபதுநாள் மாத்திரமல்ல, 20 ஒரு மாதம்வரைக்கும் புசிப்பீர்கள்; அது உங்கள் மூக்காலே புறப்பட்டு, உங்களுக்குத் தெவிட்டிப்போகுமட்டும் புசிப்பீர்கள்; உங்களுக்குள்ளே இருக்கிற கர்த்தரை அசட்டைபண்ணி, நாங்கள் ஏன் எகிப்திலிருந்து புறப்பட்டோம் என்று அவருக்கு முன்பாக அழுதீர்களே என்று சொல் என்றார். 21 அதற்கு மோசே: என்னோடிருக்கிற காலாட்கள் ஆறுலட்சம்பேர்; ஒரு மாதம் முழுவதும் புசிக்கும்படி அவர்களுக்கு இறைச்சி கொடுப்பேன் என்று சொன்னீரே. 22 ஆடுமாடுகளை அவர்களுக்காக அடித்தாலும் அவர்களுக்குப் போதுமா? சமுத்திரத்து மச்சங்களையெல்லாம் அவர்களுக்காகச் சேர்த்தாலும் அவர்களுக்குப் போதுமா என்றான். 23 அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய் என்றார். 24 அப்பொழுது மோசே புறப்பட்டு, கர்த்தருடைய வார்த்தைகளை ஜனங்களுக்குச் சொல்லி, ஜனங்களின் மூப்பரில் எழுபதுபேரைக் கூட்டி, கூடாரத்தைச் சுற்றிலும் அவர்களை நிறுத்தினான். 25 கர்த்தர் மேகத்தில் இறங்கி, அவனோடே பேசி, அவன்மேலிருந்த ஆவியை மூப்பராகிய அந்த எழுபதுபேர்மேலும் வைத்தார்; அந்த ஆவி அவர்கள்மேல் வந்து தங்கினமாத்திரத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்; சொல்லி, பின்பு ஓய்ந்தார்கள். 26 அப்பொழுது இரண்டுபேர் பாளயத்தில் இருந்துவிட்டார்கள்; ஒருவன்பேர் எல்தாத், மற்றவன்பேர் மேதாத்; அவர்களும் பேர்வழியில் எழுதப்பட்டிருந்தும், கூடாரத்துக்குப் போகப் புறப்படாதிருந்தார்கள்; அவர்கள்மேலும் ஆவி வந்து தங்கினதினால், பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். 27 ஒரு பிள்ளையாண்டான் ஓடிவந்து, எல்தாதும் மேதாதும் பாளயத்தில் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள் என்று மோசேக்கு அறிவித்தான். 28 உடனே மோசேயினிடத்திலுள்ள வாலிபரில் ஒருவனும் அவனுடைய ஊழியக்காரனும் நூனின் குமாரனுமாகிய யோசுவா பிரதியுத்தரமாக: என் ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைபண்ணும் என்றான். 29 அதற்கு மோசே: நீ எனக்காக வைராக்கியம் காண்பிக்கிறாயோ? கர்த்தருடைய ஜனங்கள் எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லத்தக்கதாக, கர்த்தர் தம்முடைய ஆவியை அவர்கள்மேல் இறங்கப்பண்ணினால் நலமாயிருக்குமே என்றான். 30 பின்பு, மோசேயும் இஸ்ரவேலின் மூப்பரும் பாளயத்திலே வந்து சேர்ந்தார்கள். 31 அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும் அந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும், தரையின்மேல் இரண்டுமுழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது. 32 அப்பொழுது ஜனங்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்; கொஞ்சமாய்ச் சேர்த்தவன் பத்து ஓமர் அளவு சேர்த்தான்; அவைகளைப் பாளயத்தைச் சுற்றிலும் தங்களுக்காகக் குவித்துவைத்தார்கள். 33 தங்கள் பற்கள் நடுவே இருக்கும் இறைச்சியை அவர்கள் மென்று தின்னுமுன்னே கர்த்தருடைய கோபம் ஜனங்களுக்குள்ளே மூண்டது; கர்த்தர் ஜனங்களை மகா பெரிய வாதையால் வாதித்தார். 34 இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம்பண்ணினதினால், அந்த ஸ்தலத்துக்குக் கிப்ரோத் அத்தாவா என்று பேரிட்டான். 35 பின்பு, ஜனங்கள் கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை விட்டு, ஆஸரோத்துக்குப் பிரயாணம்பண்ணி, ஆஸரோத்திலே தங்கினார்கள்.

எண்ணாகமம் 12

1 எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்பண்ணியிருந்தபடியினால், மிரியாமும் ஆரோனும் அவன் விவாகம்பண்ணின எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயினிமித்தம் அவனுக்கு விரோதமாய்ப் பேசி: 2 கர்த்தர் மோசேயைக்கொண்டுமாத்திரம் பேசினாரோ, எங்களைக்கொண்டும் அவர் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார். 3 மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான். 4 சடுதியிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் மிரியாமையும் நோக்கி: நீங்கள் மூன்றுபேரும் ஆசரிப்புக் கூடாரத்துக்குப் புறப்பட்டுவாருங்கள் என்றார்; மூன்றுபேரும் போனார்கள். 5 கர்த்தர் மேகத்தூணில் இறங்கி, கூடாரவாசலிலே நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார்; அவர்கள் இருவரும் போனார்கள். 6 அப்பொழுது அவர்: என் வார்த்தைகளைக் கேளுங்கள்; உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் என்னை அவனுக்கு வெளிப்படுத்தி, சொப்பனத்தில் அவனோடே பேசுவேன். 7 என் தாசனாகிய மோசேயோ அப்படிப்பட்டவன் அல்ல, என் வீட்டில் எங்கும் அவன் உண்மையுள்ளவன். 8 நான் அவனுடன் மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்; இப்படியிருக்க, நீங்கள் என் தாசனாகிய மோசேக்கு விரோதமாய்ப் பேச, உங்களுக்குப் பயமில்லாமற்போனதென்ன என்றார். 9 கர்த்தருடைய கோபம் அவர்கள்மேல் மூண்டது; அவர் போய்விட்டார். 10 மேகம் கூடாரத்தை விட்டு நீங்கிப்போயிற்று; மிரியாம் உறைந்த மழையின் வெண்மைபோன்ற குஷ்டரோகியானாள்; ஆரோன் மிரியாமைப் பார்த்தபோது, அவள் குஷ்டரோகியாயிருக்கக் கண்டான். 11 அப்பொழுது ஆரோன் மோசேயை நோக்கி: ஆ, என் ஆண்டவனே, நாங்கள் புத்தியீனமாய்ச் செய்த இந்தப் பாவத்தை எங்கள்மேல் சுமத்தாதிரும். 12 தன் தாயின் கர்ப்பத்தில் பாதி மாம்சம் அழுகிச் செத்துவிழுந்த பிள்ளையைப்போல அவள் ஆகாதிருப்பாளாக என்றான். 13 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: என் தேவனே, அவளைக் குணமாக்கும் என்று கெஞ்சினான். 14 கர்த்தர் மோசேயை நோக்கி: அவள் தகப்பன் அவள் முகத்திலே காறித் துப்பினதுண்டானால், அவள் ஏழுநாள் வெட்கப்படவேண்டாமோ, அதுபோலவே அவள் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்து, பின்பு சேர்த்துக்கொள்ளப்படக்கடவள் என்றார். 15 அப்படியே மிரியாம் ஏழுநாள் பாளயத்துக்குப் புறம்பே விலக்கப்பட்டிருந்தாள்; மிரியாம் சேர்த்துக்கொள்ளப்படுமட்டும் ஜனங்கள் பிரயாணம்பண்ணாதிருந்தார்கள். 16 பின்பு, ஜனங்கள் ஆஸரோத்திலிருந்து புறப்பட்டு, பாரான் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.

எண்ணாகமம் 13

1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கும் கானான்தேசத்தைச் சுற்றிப்பார்ப்பதற்கு நீ மனிதரை அனுப்பு; ஒவ்வொரு பிதாக்களின் கோத்திரத்திலும் ஒவ்வொரு பிரபுவாகிய புருஷனை அனுப்பவேண்டும் என்றார். 3 மோசே கர்த்தருடைய வாக்கின்படியே அவர்களைப் பாரான் வனாந்தரத்திலிருந்து அனுப்பினான்; அந்த மனிதர் யாவரும் இஸ்ரவேல் புத்திரரின் தலைவர்கள். 4 அவர்களுடைய நாமங்களாவன: ரூபன் கோத்திரத்தில் சக்கூரின் குமாரன் சம்முவா. 5 சிமியோன் கோத்திரத்தில் ஓரியின் குமாரன் சாப்பாத். 6 யூதா கோத்திரத்தில் எப்புன்னேயின் குமாரன் காலேப். 7 இசக்கார் கோத்திரத்தில் யோசேப்பின் குமாரன் ஈகால். 8 எப்பிராயீம் கோத்திரத்தில் நூனின் குமாரன் ஓசேயா. 9 பென்யமீன் கோத்திரத்தில் ரப்பூவின் குமாரன் பல்த்தி. 10 செபுலோன் கோத்திரத்தில் சோதியின் குமாரன் காதியேல். 11 யோசேப்பின் கோத்திரத்தைச் சேர்ந்த மனாசே கோத்திரத்தில் சூசின் குமாரன் காதி. 12 தாண் கோத்திரத்தில் கெமல்லியின் குமாரன் அம்மியேல். 13 ஆசேர் கோத்திரத்தில் மிகாவேலின் குமாரன் சேத்தூர். 14 நப்தலி கோத்திரத்தில் ஒப்பேசியின் குமாரன் நாகபி. 15 காத் கோத்திரத்தில் மாகியின் குமாரன் கூவேல். 16 தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதரின் நாமங்கள் இவைகளே; நூனின் குமாரனாகிய ஓசேயாவுக்கு யோசுவா என்று மோசே பேரிட்டிருந்தான். 17 அவர்களை மோசே கானான்தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி அனுப்புகையில், அவர்களை நோக்கி: நீங்கள் இப்படித் தெற்கே போய், மலையில் ஏறி, 18 தேசம் எப்படிப்பட்டதென்றும், அங்கே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்களோ பலவீனர்களோ, கொஞ்சம்பேரோ அநேகம்பேரோ என்றும், 19 அவர்கள் குடியிருக்கிற தேசம் எப்படிப்பட்டது, அது நல்லதோ கெட்டதோ என்றும், அவர்கள் பட்டணங்கள் எப்படிப்பட்டதென்றும், அவர்கள் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களோ கோட்டைகளில் குடியிருக்கிறவர்களோ என்றும், 20 நிலம் எப்படிப்பட்டது, அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும்; அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாயிருந்தது. 21 அவர்கள் போய், சீன் வனாந்தரந்தொடங்கி, ஆமாத்துக்குப் போகிற வழியாகிய ரேகொப்மட்டும், தேசத்தைச் சுற்றிப்பார்த்து, 22 தெற்கேயும் சென்று, எபிரோன்மட்டும் போனார்கள்; அங்கே ஏனாக்கின் குமாரராகிய அகீமானும் சேசாயும் தல்மாயும் இருந்தார்கள். எபிரோன் எகிப்திலுள்ள சோவானுக்கு ஏழுவருஷத்திற்குமுன்னே கட்டப்பட்டது. 23 பின்பு, அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அங்கே ஒரே குலையுள்ள ஒரு திராட்சக்கொடியை அறுத்தார்கள்; அதை ஒரு தடியிலே இரண்டு பேர் கட்டித் தூக்கிக்கொண்டுவந்தார்கள்; மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டுவந்தார்கள். 24 இஸ்ரவேல் புத்திரர் அங்கே அறுத்த திராட்சக்குலையினிமித்தம், அவ்விடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என்னப்பட்டது. 25 அவர்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்து, நாற்பதுநாள் சென்றபின்பு திரும்பினார்கள். 26 அவர்கள் பாரான் வனாந்தரத்தில் இருக்கிற காதேசுக்கு வந்து, மோசே ஆரோன் என்பவர்களிடத்திலும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரிடத்திலும் சேர்ந்து, அவர்களுக்கும் சபையார் அனைவருக்கும் சமாசாரத்தை அறிவித்து, தேசத்தின் கனிகளை அவர்களுக்குக் காண்பித்தார்கள். 27 அவர்கள் மோசேயை நோக்கி: நீர் எங்களை அனுப்பின தேசத்துக்கு நாங்கள் போய்வந்தோம்; அது பாலும் தேனும் ஓடுகிற தேசந்தான்; இது அதினுடைய கனி. 28 ஆனாலும், அந்த தேசத்திலே குடியிருக்கிற ஜனங்கள் பலவான்கள்; பட்டணங்கள் அரணிப்பானவைகளும் மிகவும் பெரியவைகளுமாய் இருக்கிறது; அங்கே ஏனாக்கின் குமாரரையும் கண்டோம். 29 அமலேக்கியர் தென்புறமான தேசத்தில் குடியிருக்கிறார்கள்; ஏத்தியரும், எபூசியரும், எமோரியரும் மலைநாட்டில் குடியிருக்கிறார்கள்; கானானியர் கடல் அருகேயும் யோர்தானண்டையிலும் குடியிருக்கிறார்கள் என்றார்கள். 30 அப்பொழுது காலேப் மோசேக்கு முன்பாக ஜனங்களை அமர்த்தி: நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் ஜெயித்துக்கொள்ளலாம் என்றான். 31 அவனோடேகூடப் போய்வந்த மனிதரோ: நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மாலே கூடாது; அவர்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள். 32 நாங்கள் போய்ச் சுற்றிப் பார்த்துவந்த அந்த தேசம் தன் குடிகளைப் பட்சிக்கிற தேசம்; நாங்கள் அதிலே கண்ட ஜனங்கள் எல்லாரும் மிகவும் பெரிய ஆட்கள். 33 அங்கே இராட்சதப் பிறவியான ஏனாக்கின் குமாரராகிய இராட்சதரையும் கண்டோம்; நாங்கள் எங்கள் பார்வைக்கு வெட்டுக்கிளிகளைப்போல் இருந்தோம், அவர்கள் பார்வைக்கும் அப்படியே இருந்தோம் என்று சொல்லி, இப்படி இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே தாங்கள் சுற்றிப் பார்த்துவந்த தேசத்தைக்குறித்து துர்ச்செய்தி பரம்பச்செய்தார்கள்.

எண்ணாகமம் 14

1 அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுதும் அழுதுகொண்டிருந்தார்கள். 2 இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்தார்கள். சபையார் எல்லாரும் அவர்களை நோக்கி: எகிப்துதேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம். 3 நாங்கள் பட்டயத்தால் மடியும்படிக்கும், எங்கள் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் கொள்ளையாகும்படிக்கும், கர்த்தர் எங்களை இந்த தேசத்துக்குக் கொண்டுவந்தது என்ன? எகிப்துக்குத் திரும்பிப்போகிறதே எங்களுக்கு உத்தமம் அல்லவோ என்றார்கள். 4 பின்பு அவர்கள்: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிப்போவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 5 அப்பொழுது மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் புத்திரரின் சபையாராகிய எல்லாக் கூட்டத்தாருக்குமுன்பாகவும் முகங்குப்புற விழுந்தார்கள். 6 தேசத்தைச் சுற்றிப்பார்த்தவர்களில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, 7 இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையையும் நோக்கி: நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். 8 கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். 9 கர்த்தருக்கு விரோதமாகமாத்திரம் கலகம்பண்ணாதிருங்கள்; அந்த தேசத்தின் ஜனங்களுக்கு நீங்கள் பயப்படவேண்டியதில்லை; அவர்கள் நமக்கு இரையாவார்கள்; அவர்களைக் காத்த நிழல் அவர்களைவிட்டு விலகிப்போயிற்று; கர்த்தர் நம்மோடே இருக்கிறார்; அவர்களுக்குப் பயப்படவேண்டியதில்லை என்றார்கள். 10 அப்பொழுது அவர்கள்மேல் கல்லெறியவேண்டும் என்று சபையார் எல்லாரும் சொன்னார்கள்; உடனே கர்த்தருடைய மகிமை ஆசரிப்புக் கூடாரத்தில் இஸ்ரவேல் புத்திரர் எல்லாருக்கும் முன்பாகக் காணப்பட்டது. 11 கர்த்தர் மோசேயை நோக்கி: எதுவரைக்கும் இந்த ஜனங்கள் எனக்குக் கோபம் உண்டாக்குவார்கள்? தங்களுக்குள்ளே நான் காட்டின சகல அடையாளங்களையும் அவர்கள் கண்டும், எதுவரைக்கும் என்னை விசுவாசியாதிருப்பார்கள்? 12 நான் அவர்களைக் கொள்ளைநோயினால் வாதித்து, சுதந்தரத்துக்குப் புறம்பாக்கிப்போட்டு, அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பெரிதும் பலத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார். 13 மோசே கர்த்தரை நோக்கி: எகிப்தியர் இதைக் கேட்பார்கள், அவர்கள் நடுவிலிருந்து உம்முடைய வல்லமையினாலே இந்த ஜனங்களைக் கொண்டுவந்தீரே. 14 கர்த்தராகிய நீர் இந்த ஜனங்களின் நடுவே இருக்கிறதையும், கர்த்தராகிய நீர் முகமுகமாய்த் தரிசனமாகிறதையும், உம்முடைய மேகம் இவர்கள்மேல் நிற்கிறதையும், பகலில் மேகத்தூணிலும், இரவில் அக்கினித்தூணிலும், நீர் இவர்களுக்கு முன் செல்லுகிறதையும் கேட்டிருக்கிறார்கள்; இந்த தேசத்தின் குடிகளுக்கும் சொல்லுவார்கள். 15 ஒரே மனிதனைக் கொல்லுகிறதுபோல இந்த ஜனங்களையெல்லாம் நீர் கொல்வீரானால், அப்பொழுது உம்முடைய கீர்த்தியைக் கேட்டிருக்கும் புறஜாதியார்: 16 கர்த்தர் அந்த ஜனங்களுக்குக் கொடுப்போம் என்று ஆணையிட்டிருந்த தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய் விடக்கூடாதேபோனபடியினால், அவர்களை வனாந்தரத்திலே கொன்றுபோட்டார் என்பார்களே. 17 ஆகையால் கர்த்தர் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவர் என்றும், அக்கிரமத்தையும் மீறுதலையும் மன்னிக்கிறவர் என்றும், குற்றமுள்ளவர்களைக் குற்றமற்றவர்களாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்றும், நீர் சொல்லியிருக்கிறபடியே, 18 என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதாக. 19 உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தை விட்டதுமுதல் இந்நாள்வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்துவந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான். 20 அப்பொழுது கர்த்தர்: உன் வார்த்தையின்படியே மன்னித்தேன். 21 பூமியெல்லாம் கர்த்தருடைய மகிமையினால் நிறைந்திருக்கும் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். 22 என் மகிமையையும், நான் எகிப்திலும் வனாந்தரத்திலும் செய்த என் அடையாளங்களையும் கண்டிருந்தும், என் சத்தத்துக்குச் செவிகொடாமல், இதனோடே பத்துமுறை என்னைப் பரீட்சைபார்த்த மனிதரில் ஒருவரும், 23 அவர்கள் பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காணமாட்டார்கள்; எனக்குக் கோபம் உண்டாக்கினவர்களில் ஒருவரும் அதைக் காணமாட்டார்கள். 24 என்னுடைய தாசனாகிய காலேப் வேறே ஆவியை உடையவனாயிருக்கிறபடியினாலும், உத்தமமாய் என்னைப் பின்பற்றிவந்தபடியினாலும், அவன் போய்வந்த தேசத்திலே அவனைச் சேரப்பண்ணுவேன்; அவன் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். 25 அமலேக்கியரும் கானானியரும் பள்ளத்தாக்கிலே குடியிருக்கிறபடியினால், நாளைக்கு நீங்கள் திரும்பிச் சிவந்த சமுத்திரத்துக்குப் போகிற வழியாய் வனாந்தரத்துக்குப் பிரயாணம்பண்ணுங்கள் என்றார். 26 பின்னும் கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 27 எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிற இந்தப் பொல்லாத சபையாரை எதுவரைக்கும் பொறுப்பேன்? இஸ்ரவேல் புத்திரர் எனக்கு விரோதமாய் முறுமுறுக்கிறதைக் கேட்டேன். 28 நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் என் செவிகள் கேட்கச் சொன்னபிரகாரம் உங்களுக்குச் செய்வேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார். 29 இந்த வனாந்தரத்தில் உங்கள் பிரேதங்கள் விழும்; உங்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாக எண்ணப்பட்டு, உங்கள் தொகைக்கு உட்பட்டவர்களும் எனக்கு விரோதமாய் முறுமுறுத்திருக்கிறவர்களுமாகிய அனைவரின் பிரேதங்களும் விழும். 30 எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன் என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை. 31 கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளையோ நான் அதில் பிரவேசிக்கச் செய்வேன்; நீங்கள் அசட்டைப்பண்ணின தேசத்தை அவர்கள் கண்டறிவார்கள். 32 உங்கள் பிரேதங்களோ இந்த வனாந்தரத்திலே விழும். 33 அவைகள் வனாந்தரத்திலே விழுந்து தீருமட்டும், உங்கள் பிள்ளைகள் நாற்பது வருஷம் வனாந்தரத்திலே திரிந்து, நீங்கள் சோரம்போன பாதகத்தைச் சுமப்பார்கள். 34 நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பதுநாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலை உணருவீர்கள். 35 கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன்; எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடின இந்தப் பொல்லாத சபையார் யாவருக்கும் இப்படியே செய்வேன்; இந்த வனாந்தரத்திலே அழிவார்கள், இங்கே சாவார்கள் என்று சொல் என்றார். 36 அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கும்படி மோசேயால் அனுப்பப்பட்டுத் திரும்பி, அந்த தேசத்தைக்குறித்துத் துர்ச்செய்தி கொண்டுவந்து, 37 சபையார் எல்லாரும் அவனுக்கு விரோதமாய் முறுமுறுக்கும்படி அந்தத் துர்ச்செய்தியைச் சொன்னவர்களாகிய அந்த மனிதர் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள். 38 தேசத்தைச் சுற்றிப்பார்க்கப்போன அந்த மனிதரில் நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும்மாத்திரம் உயிரோடிருந்தார்கள். 39 மோசே இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் அனைவரோடும் சொன்னபோது, ஜனங்கள் மிகவும் துக்கித்தார்கள். 40 அதிகாலமே அவர்கள் எழுந்திருந்து: நாங்கள் பாவஞ்செய்தோம், கர்த்தர் வாக்குத்தத்தம்பண்ணின இடத்துக்கு நாங்கள் போவோம் என்று சொல்லி மலையின் உச்சியில் ஏறத்துணிந்தார்கள். 41 மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இப்படி கர்த்தரின் கட்டளையை மீறுகிறதென்ன? அது உங்களுக்கு வாய்க்காது. 42 நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிய அடிக்கப்படாதபடிக்கு ஏறிப்போகாதிருங்கள்; கர்த்தர் உங்கள் நடுவில் இரார். 43 அமலேக்கியரும் கானானியரும் அங்கே உங்களுக்குமுன்னே இருக்கிறார்கள்; பட்டயத்தினால் விழுவீர்கள்; நீங்கள் கர்த்தரை விட்டுப் பின்வாங்கினபடியால், கர்த்தர் உங்களோடே இருக்கமாட்டார் என்றான். 44 ஆனாலும் அவர்கள் மலையின் உச்சியில் ஏறத் துணிந்தார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கையின் பெட்டியும் மோசேயும் பாளயத்தை விட்டுப் போகவில்லை. 45 அப்பொழுது அமலேக்கியரும் கானானியரும் அந்த மலையிலே இருந்து இறங்கிவந்து, அவர்களை முறிய அடித்து, அவர்களை ஓர்மாமட்டும் துரத்தினார்கள்.

எண்ணாகமம் 15

1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு, 3 விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாக பலியாயாவது, உங்கள் பண்டிகைகளில் செலுத்தும் பலியாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சர்வாங்க தகனபலியையாவது மற்ற யாதொரு பலியையாவது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகப் பலியிடும்போது, 4 தன் படைப்பைக் கர்த்தருக்குச் செலுத்துகிறவன் சர்வாங்க தகனபலிக்காகிலும் மற்றப் பலிக்காகிலும் ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தக்கடவன். 5 பானபலியாக காற்படி திராட்சரசத்தையும் படைக்கவேண்டும். 6 ஆட்டுக்கடாவாயிருந்ததேயாகில், பத்தில் இரண்டு பங்கானதும், ஒரு படியில் மூன்றில் ஒரு பங்காகிய எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும், 7 பானபலியாக ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சரசத்தையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும். 8 நீ சர்வாங்க தகனபலிக்காகிலும், விசேஷித்த பொருத்தனை பலிக்காகிலும், சமாதான பலிக்காகிலும், ஒரு காளையைக் கர்த்தருக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது, 9 அதனோடே பத்தில் மூன்றுபங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும், 10 பானபலியாக அரைப்படி திராட்சரசத்தையும், கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகப் படைக்க வேண்டும். 11 இந்தப்பிரகாரமாகவே ஒவ்வொரு மாட்டுக்காகிலும், ஆட்டுக்கடாவுக்காகிலும், செம்மறியாட்டுக் குட்டிக்காகிலும், வெள்ளாட்டுக் குட்டிக்காகிலும் செய்து படைக்கவேண்டும். 12 நீங்கள் படைக்கிறவைகளின் இலக்கத்திற்குத்தக்கதாய் ஒவ்வொன்றிற்காகவும் இந்தப்பிரகாரம் செய்யவேண்டும். 13 சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும். 14 உங்களிடத்திலே தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்கள் தலைமுறைதோறும் குடியிருக்கிறவனாவது, கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும். 15 சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் தலைமுறைகளில் நித்திய கட்டளையாயிருக்கக்கடவது; கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்கவேண்டும். 16 உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே முறைமையும் இருக்கக்கடவது என்று சொல் என்றார். 17 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 18 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து, 19 தேசத்தின் ஆகாரத்தைப் புசிக்கும்போது, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தக்கடவீர்கள். 20 உங்கள் பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசத்தை ஏறெடுத்துப் படைப்பீர்களாக; போரடிக்கிற களத்தின் படைப்பை ஏறெடுத்துப் படைக்கிறதுபோல அதையும் ஏறெடுத்துப் படைக்கவேண்டும். 21 இப்படி உங்கள் தலைமுறைதோறும் உங்கள் பிசைந்த மாவின் முதற்பலனிலே கர்த்தருக்குப் படைப்பை ஏறெடுத்துப் படைக்கக்கடவீர்கள். 22 கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும், 23 கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளைகொடுத்த நாள்முதற்கொண்டு அவர் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின்படியேயும் நீங்கள் செய்யாமல், 24 அறியாமல் தவறி நடந்தாலும், சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும், சபையார் எல்லாரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், முறைமைப்படி அதற்கேற்ற போஜனபலியையும், பானபலியையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும். 25 அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அது அறியாமையினால் செய்யப்பட்டபடியாலும், அதினிமித்தம் அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும். 26 அது அறியாமையினாலே ஜனங்கள் யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படும். 27 ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தானாகில், ஒரு வயதான வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தக்கடவன். 28 அப்பொழுது அறியாமையினால் பாவஞ்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும். 29 இஸ்ரவேல் புத்திரராகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவஞ்செய்தவனிமித்தம், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும். 30 அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும் எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும். 31 அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும்; அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார். 32 இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள். 33 விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள். 34 அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள். 35 கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார். 36 அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான். 37 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 38 நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீல நாடாவைக் கட்டவேண்டும் என்று அவர்களுக்குச் சொல். 39 நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப் பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படிக்கு, அது உங்களுக்குத் தொங்கலாய் இருக்கவேண்டும். 40 நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக. 41 நான் உங்களுக்குத் தேவனாயிருக்கும்படி, உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்; நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.

எண்ணாகமம் 16

1 லேவிக்குப் பிறந்த கோகாத்தின் குமாரனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் குமாரனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு, 2 இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும் கூட மோசேக்குமுன்பாக எழும்பி, 3 மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடி, அவர்களை நோக்கி: நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லாரும் பரிசுத்தமானவர்கள்; கர்த்தர் அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, கர்த்தருடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள் என்றார்கள். 4 மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான். 5 பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: நாளைக்குக் கர்த்தர் தம்முடையவன் இன்னான் என்றும், தம்மண்டையிலே சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார். 6 ஒன்று செய்யுங்கள்; கோராகே, கோராகின் கூட்டத்தார்களே, நீங்கள் எல்லாரும் தூபகலசங்களை எடுத்துக்கொண்டு, 7 நாளைக்கு அவைகளில் அக்கினிபோட்டு, கர்த்தருடைய சந்நிதியில் தூபவர்க்கம் இடுங்கள்; அப்பொழுது கர்த்தர் எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவன் பரிசுத்தவானாயிருப்பான்; லேவியின் புத்திரராகிய நீங்களே மிஞ்சிப்போகிறீர்கள் என்றான். 8 பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் புத்திரரே, கேளுங்கள்; 9 கர்த்தருடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன்நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம்மண்டையிலே சேரப்பண்ணும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும், 10 அவர் உன்னையும் உன்னோடேகூட லேவியின் புத்திரராகிய உன்னுடைய எல்லாச் சகோதரரையும் சேரப்பண்ணினதும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ? 11 இதற்காக நீயும் உன் கூட்டத்தார் அனைவரும் கர்த்தருக்கு விரோதமாகவே கூட்டங்கூடினீர்கள்; ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் எம்மாத்திரம் என்றான். 12 பின்பு மோசே எலியாபின் குமாரராகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: நாங்கள் வருகிறதில்லை; 13 இந்த வனாந்தரத்தில் எங்களைக் கொன்றுபோடும்படி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்திலிருந்து எங்களைக் கொண்டுவந்தது அற்பகாரியமோ, எங்கள்மேல் துரைத்தனமும் பண்ணப்பார்க்கிறாயோ? 14 மேலும் நீ எங்களைப் பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்குக் கொண்டுவந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் சுதந்தரமாகக் கொடுத்ததும் இல்லை; இந்த மனிதருடைய கண்களைப் பிடுங்கப்பார்க்கிறாயோ? நாங்கள் வருகிறதில்லை என்றார்கள். 15 அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் கர்த்தரை நோக்கி: அவர்கள் செலுத்துங் காணிக்கையை அங்கிகரியாதிருப்பீராக; நான் அவர்களிடத்தில் ஒரு கழுதையை முதலாய் எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு பொல்லாப்பு செய்யவும் இல்லை என்றான். 16 பின்பு மோசே கோராகை நோக்கி: நீயும் உன் கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் கர்த்தருடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள். 17 உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு, தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய இருநூற்று ஐம்பது தூபகலசங்களையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; நீயும் ஆரோனும் தன் தன் தூபகலசத்தைக் கொண்டுவாருங்கள் என்றான். 18 அப்படியே அவரவர் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் அக்கினியையும் தூபவர்க்கத்தையும் போட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்; மோசேயும் ஆரோனும் அங்கே நின்றார்கள். 19 அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது கர்த்தருடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது. 20 கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி: 21 இந்தச் சபையைவிட்டுப் பிரிந்துபோங்கள்; ஒரு நிமிஷத்திலே அவர்களை அதமாக்குவேன் என்றார். 22 அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபங்கொள்வீரோ என்றார்கள். 23 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: 24 கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல் என்றார். 25 உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடத்தில் போனான்; இஸ்ரவேலின் மூப்பரும் அவனைப் பின்சென்று போனார்கள். 26 அவன் சபையாரை நோக்கி: இந்தத் துஷ்டமனிதரின் சகல பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடிக்கு, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாதிருங்கள் என்றான். 27 அப்படியே அவர்கள் கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய வாசஸ்தலத்தை விட்டு விலகிப்போனார்கள்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து, தங்கள் பெண்ஜாதிகள் பிள்ளைகள் குழந்தைகளோடும் தங்கள் கூடாரவாசலிலே நின்றார்கள். 28 அப்பொழுது மோசே: இந்தக் கிரியைகளையெல்லாம் செய்கிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினார் என்றும், அவைகளை நான் என் மனதின்படியே செய்யவில்லை என்றும், நீங்கள் எதினாலே அறிவீர்களென்றால், 29 சகல மனிதரும் சாகிறபடி இவர்கள் செத்து, சகல மனிதருக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், கர்த்தர் என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள். 30 கர்த்தர் ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன் வாயைத் திறந்து, இவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்கத்தக்கதாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப்போட்டதேயானால், இந்த மனிதர் கர்த்தரை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள் என்றான். 31 அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது; 32 பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் அவர்கள் வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதரையும், அவர்களுக்கு உண்டான சகல பொருள்களையும் விழுங்கிப்போட்டது. 33 அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடே பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள். 34 அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும் என்று சொல்லி ஓடினார்கள். 35 அக்கினி கர்த்தருடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின இருநூற்று ஐம்பது பேரையும் பட்சித்துப்போட்டது. 36 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: 37 அக்கினிக்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவைகளிலிருக்கிற அக்கினியை அப்பாலே கொட்டிப்போடும்படி ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசாருக்குச் சொல்; அந்தத் தூபகலசங்கள் பரிசுத்தமாயின. 38 தங்கள் ஆத்துமாக்களுக்கே கேடுண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடத்தக்க தட்டையான தகடுகளாய் அடிக்கக்கடவர்கள்; அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததினால் அவைகள் பரிசுத்தமாயின; அவைகள் இஸ்ரவேல் புத்திரருக்கு ஒரு அடையாளமாயிருக்கும் என்றார். 39 அப்படியே ஆசாரியனாகிய எலெயாசார் சுட்டெரிக்கப்பட்டவர்கள் கொண்டுவந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்து, 40 ஆரோனின் புத்திரராய் இராத அந்நியன் ஒருவனும் கர்த்தருடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடிக்கும், கோராகைப்போலும் அவன் கூட்டத்தாரைப்போலும் இராதபடிக்கும், இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும்பொருட்டு, கர்த்தர் மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான். 41 மறுநாளில் இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் கர்த்தரின் ஜனங்களைக் கொன்றுபோட்டீர்கள் என்றார்கள். 42 சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடி ஆசரிப்புக் கூடாரத்துக்கு நேரே பார்க்கிறபோது, மேகம் அதை மூடினது, கர்த்தரின் மகிமை காணப்பட்டது. 43 மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்துக்கு முன்பாக வந்தார்கள். 44 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: 45 இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிஷத்தில் அவர்களை அதமாக்குவேன் என்றார். அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள். 46 மோசே ஆரோனை நோக்கி: நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாய்ச் சபையினிடத்தில் போய், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்; கர்த்தருடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது, வாதை தொடங்கிற்று என்றான். 47 மோசே சொன்னபடி ஆரோன் அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்; ஜனங்களுக்குள்ளே வாதை தொடங்கியிருந்தது; அவன் தூபவர்க்கம் போட்டு, ஜனங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து, 48 செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது. 49 கோராகின் காரியத்தினிமித்தம் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் பதினாலாயிரத்து எழுநூறுபேர். 50 வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு மோசேயினிடத்தில் திரும்பிவந்தான்.

எண்ணாகமம் 17

1 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே பேசி, அவர்கள் பிதாக்களின் வம்சங்களாகிய ஒவ்வொரு வம்சத்தினுடைய பிரபுவினிடத்தில், ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோலை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பேரை எழுதுவாயாக. 3 லேவியினுடைய கோலின்மேல் ஆரோனின் பேரை எழுதக்கடவாய்; அவர்களுடைய பிதாக்களின் ஒவ்வொரு வம்சத் தலைவனுக்காகவும் ஒவ்வொரு கோல் இருக்கவேண்டும். 4 அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் ஸ்தானமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கக்கடவாய். 5 அப்பொழுது நான் தெரிந்துகொள்ளுகிறவனுடைய கோல் துளிர்க்கும்; இப்படி இஸ்ரவேல் புத்திரர் உங்களுக்கு விரோதமாய் முறுமுறுக்கிற அவர்கள் முறுமுறுப்பை என்னைவிட்டு ஒழியப்பண்ணுவேன் என்றார். 6 இதை மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; அப்பொழுது அவர்களுடைய பிரபுக்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி ஒவ்வொரு பிரபுவுக்கு ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோல்களை அவனிடத்தில் கொடுத்தார்கள்; ஆரோனின் கோலும் அவர்களுடைய கோல்களுடனே இருந்தது. 7 அந்தக் கோல்களை மோசே சாட்சியின் கூடாரத்திலே கர்த்தருடைய சமுகத்தில் வைத்தான். 8 மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது, இதோ, லேவியின் குடும்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது. 9 அப்பொழுது மோசே கர்த்தருடைய சமுகத்திலிருந்த அந்தக் கோல்களையெல்லாம் எடுத்து, இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் காண வெளியே கொண்டுவந்தான்; அவர்கள் கண்டு, அவரவர் தங்கள் தங்கள் கோல்களை வாங்கிக்கொண்டார்கள். 10 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் கோல் அந்தக் கலகக்காரருக்கு விரோதமான அடையாளமாகும்பொருட்டு, அதைத் திரும்பவும் சாட்சிப்பெட்டிக்கு முன்னே கொண்டுபோய் வை; இப்படி அவர்கள் எனக்கு விரோதமாய் முறுமுறுப்பதை ஒழியப்பண்ணுவாய், அப்பொழுது அவர்கள் சாகமாட்டார்கள் என்றார். 11 கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான். 12 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லாரும் அழிந்துபோகிறோம். 13 கர்த்தரின் வாசஸ்தலத்தின் கிட்டே வருகிற எவனும் சாகிறான்; நாங்கள் எல்லாரும் செத்துத்தான் தீருமோ என்றார்கள்.

எண்ணாகமம் 18

1 பின்பு கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உன் தகப்பன் வம்சத்தாரும் பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்; நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உங்கள் ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும். 2 உன் தகப்பனாகிய லேவியின் கோத்திரத்தாரான உன் சகோதரரையும் உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும் உன் குமாரருமோ சாட்சியின் கூடாரத்துக்குமுன் ஊழியம் செய்யக்கடவீர்கள். 3 அவர்கள் உன் காவலையும் கூடாரம் அனைத்தின் காவலையும் காக்கக்கடவர்கள்; ஆகிலும் அவர்களும் நீங்களும் சாகாதபடிக்கு, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சேராமல், 4 உன்னோடே கூடிக்கொண்டு, கூடாரத்துக்கடுத்த எல்லாப் பணிவிடையையும் செய்ய, ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக் காக்கக்கடவர்கள்; அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் சேரக்கூடாது. 5 இஸ்ரவேல் புத்திரர்மேல் இனிக் கடுங்கோபம் வராதபடிக்கு, நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் பலிபீடத்தின் காவலையும் காக்கக்கடவீர்கள். 6 ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்ய, கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரராகிய லேவியரை நான் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உங்களுக்குத் தத்தமாகக் கொடுத்தேன். 7 ஆகையால் நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் பலிபீடத்துக்கும் திரைக்கு உட்புறத்துக்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்யும்பொருட்டு, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கக்கடவீர்கள்; உங்கள் ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு தத்தமாக அருளினேன்; அதைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார். 8 பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு ஏறெடுத்துப் படைக்கப்படும் படைப்புகளைக் காத்துக்கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக் கொடுத்தேன்; அபிஷேகத்தினிமித்தம் அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன். 9 மகா பரிசுத்தமானவைகளிலே, அக்கினிக்கு உட்படுத்தப்படாமல் உன்னுடையதாயிருப்பது எவையெனில், அவர்கள் எனக்குப் படைக்கும் எல்லாப் படைப்பும், எல்லாப் போஜனபலியும், எல்லாப் பாவநிவாரணபலியும், எல்லாக் குற்றநிவாரணபலியும், உனக்கும் உன் குமாரருக்கும் பரிசுத்தமாயிருக்கும். 10 பரிசுத்த ஸ்தலத்திலே அவைகளைப் புசிக்கவேண்டும்; ஆண்மக்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம்; அவைகள் உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக. 11 இஸ்ரவேல் புத்திரர் ஏறெடுத்துப் படைக்கிறதும் அசைவாட்டுகிறதுமான அவர்களுடைய எல்லாக் காணிக்கைகளின் படைப்பும் உன்னுடையவைகளாயிருக்கும்; அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய நியமமாகக் கொடுத்தேன்; உன் வீட்டிலே சுத்தமானவர்கள் எல்லாரும் அவைகளைப் புசிக்கலாம். 12 அவர்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அவர்களுடைய முதற்பலன்களாகிய உச்சிதமான எண்ணெயையும், உச்சிதமான திராட்சரசத்தையும், தானியத்தையும் உனக்கு உரியதாகக் கொடுத்தேன். 13 தங்கள் தேசத்தில் முதற்பழுத்த பலனில் அவர்கள் கர்த்தருக்குக் கொண்டுவருவதெல்லாம் உனக்கு உரியதாகும்; உன் வீட்டிலே சுத்தமாயிருப்பவர்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம். 14 இஸ்ரவேலிலே சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு உரியதாயிருக்கும். 15 மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் கர்த்தருக்குச் செலுத்தும் சமஸ்த பிராணிகளுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாயிருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை அகத்தியமாய் மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும். 16 மீட்கவேண்டியவைகள் ஒரு மாதத்திற்கு மேற்பட்டதானால், உன் மதிப்புக்கு இசைய பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி ஐந்து சேக்கல் பணத்தாலே அவைகளை மீட்கவேண்டும்; ஒரு சேக்கல் இருபது கேரா. 17 மாட்டின் தலையீற்றும், செம்மறியாட்டின் தலையீற்றும், வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப்படவேண்டாம்; அவைகள் பரிசுத்தமானவைகள்; அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, அவைகளின் கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகத் தகனிக்கவேண்டும். 18 அசைவாட்டும் மார்க்கண்டத்தைப்போலும் வலது முன்னந்தொடையைப்போலும் அவைகளின் மாம்சமும் உன்னுடையதாகும். 19 இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கிற பரிசுத்த படைப்புகளையெல்லாம் உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்; கர்த்தருடைய சந்நிதியில் இது உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் செல்லும் மாறாத உடன்படிக்கை என்றார். 20 பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: அவர்களுடைய தேசத்தில் நீ ஒன்றையும் சுதந்தரித்துக்கொள்ளவேண்டாம், அவர்கள் நடுவே உனக்குப் பங்கு உண்டாயிருக்கவும் வேண்டாம்; இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரமுமாய் இருக்கிறேன். 21 இதோ, லேவியின் புத்திரர் ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்கிற அவர்களுடைய வேலைக்காக, இஸ்ரவேலருக்குள்ளவை எல்லாவற்றிலும் தசமபாகத்தை அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன். 22 இஸ்ரவேல் புத்திரர் குற்றஞ்சுமந்து சாகாதபடிக்கு, இனி ஆசரிப்புக் கூடாரத்தைக் கிட்டாதிருக்கக்கடவர்கள். 23 லேவியர்மாத்திரம் ஆசரிப்புக் கூடாரத்துக்கடுத்த வேலைகளைச் செய்யவேண்டும்; அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; இஸ்ரவேல் புத்திரர் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் இல்லை என்பது உங்கள் தலைமுறைதோறும் நித்திய கட்டளையாயிருக்கும். 24 இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகிய தசமபாகத்தை லேவியருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரமில்லையென்று அவர்களுக்குச் சொன்னேன் என்றார். 25 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 26 நீ லேவியரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கிக்கொள்ளும்படி நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தசமபாகத்தை நீங்கள் அவர்கள் கையில் வாங்கும்போது, தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கைக் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும். 27 நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும் இந்தப் படைப்பு களத்தின் தானியத்தைப்போலும், ஆலையின் இரசத்தைப்போலும் உங்களுக்கு எண்ணப்படும். 28 இப்படியே நீங்கள் இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கும் தசமபாகமாகிய உங்கள் பங்குகளிலெல்லாம் நீங்களும் கர்த்தருக்கு என்று ஒரு படைப்பை ஏறெடுத்துப் படைத்து, அந்தப் படைப்பை ஆசாரியனாகிய ஆரோனுக்குக் கொடுக்கவேண்டும். 29 உங்களுக்குக் கொடுக்கப்படுகிற ஒவ்வொரு காணிக்கையிலுமுள்ள உச்சிதமான பரிசுத்த பங்கையெல்லாம் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாகச் செலுத்தவேண்டும். 30 ஆதலால் நீ அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அதில் உச்சிதமானதை நீங்கள் ஏறெடுத்துப் படைக்கும்போது, அது களத்தின் வரத்திலும் ஆலையின் வரத்திலும் இருந்து எடுத்துச் செலுத்துகிறதுபோல லேவியருக்கு எண்ணப்படும். 31 அதை நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எவ்விடத்திலும் புசிக்கலாம்; அது நீங்கள் ஆசரிப்புக் கூடாரத்திலே செய்யும் பணிவிடைக்கு ஈடான உங்கள் சம்பளம். 32 இப்படி அதில் உச்சிதமானதை ஏறெடுத்துப் படைத்தீர்களானால், நீங்கள் அதினிமித்தம் பாவம் சுமக்கமாட்டீர்கள்; நீங்கள் சாகாதிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரரின் பரிசுத்தமானவைகளைத் தீட்டுப்படுத்தலாகாது என்று சொல் என்றார்.

எண்ணாகமம் 19

1 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 2 கர்த்தர் கற்பித்த நியமப்பிரமாணமாவது: பழுதற்றதும் ஊனமில்லாததும் நுகத்தடிக்கு உட்படாததுமாகிய சிவப்பான ஒரு கிடாரியை உன்னிடத்தில் கொண்டுவரும்படி இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லுங்கள். 3 அதை எலெயாசார் என்னும் ஆசாரியனிடத்தில் ஒப்புக்கொடுங்கள்; அவன் அதைப் பாளயத்துக்கு வெளியே கொண்டுபோகக்கடவன்; அங்கே அது அவனுக்கு முன்பாகக் கொல்லப்படக்கடவது. 4 அப்பொழுது ஆசாரியனாகிய எலெயாசார் தன் விரலினால் அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, ஆசரிப்புக் கூடாரத்துக்கு எதிராக ஏழுதரம் தெளிக்கக்கடவன். 5 பின்பு கிடாரியை அவன் கண்களுக்கு முன்பாக ஒருவன் சுட்டெரிக்கவேண்டும்; அதின் தோலும் அதின் மாம்சமும் அதின் இரத்தமும் அதின் சாணியும் சுட்டெரிக்கப்படவேண்டும். 6 அப்பொழுது ஆசாரியன் கேதுருக் கட்டையையும் ஈசோப்பையும் சிவப்பு நூலையும் எடுத்து, கிடாரி எரிக்கப்படுகிற நெருப்பின் நடுவிலே போடக்கடவன். 7 பின்பு ஆசாரியன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, அதின்பின்பு பாளயத்தில் பிரவேசிக்கக்கடவன்; ஆசாரியன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். 8 அதைச் சுட்டெரித்தவனும் தன் வஸ்திரங்களை ஜலத்தில் தோய்த்து, ஜலத்திலே ஸ்நானம்பண்ணி, சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். 9 சுத்தமாயிருக்கிற ஒருவன் அந்தக் கிடாரியின் சாம்பலை வாரிக்கொண்டு, பாளயத்திற்குப் புறம்பே சுத்தமான ஒரு இடத்திலே கொட்டிவைக்கக்கடவன்; அது இஸ்ரவேல் புத்திரரின் சபைக்காகத் தீட்டுக்கழிக்கும் ஜலத்துக்கென்று காத்து வைக்கப்படவேண்டும்; அது பாவத்தைப் பரிகரிக்கும். 10 கிடாரியின் சாம்பலை வாரினவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது இஸ்ரவேல் புத்திரருக்கும் அவர்கள் நடுவிலே தங்குகிற அந்நியனுக்கும் நித்திய கட்டளையாயிருப்பதாக. 11 செத்துப்போனவனுடைய பிரேதத்தைத் தொட்டவன் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான். 12 அவன் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தீட்டுக்கழிக்கும் ஜலத்தினால் தன்னைச் சுத்திகரிக்கக்கடவன்; அப்பொழுது சுத்தமாவான்; மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தன்னைச் சுத்திகரிக்காமலிருப்பானாகில் சுத்தமாகான். 13 செத்தவனுடைய பிரேதத்தைத் தொட்டும், தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதவன் கர்த்தரின் வாசஸ்தலத்தைத் தீட்டுப்படுத்துகிறான்; அந்த ஆத்துமா இஸ்ரவேலில் இராமல் அறுப்புண்டுபோவான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால், அவன் தீட்டுப்பட்டிருப்பான்; அவன் தீட்டு இன்னும் அவன்மேல் இருக்கும். 14 கூடாரத்தில் ஒரு மனிதன் செத்தால், அதற்கடுத்த நியமமாவது: அந்தக் கூடாரத்தில் பிரவேசிக்கிற யாவரும் கூடாரத்தில் இருக்கிற யாவரும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பார்கள். 15 மூடிக் கட்டப்படாமல் திறந்திருக்கும் பாத்திரங்கள் எல்லாம் தீட்டுப்பட்டிருக்கும். 16 வெளியிலே பட்டயத்தால் வெட்டுண்டவனையாவது, செத்தவனையாவது, மனித எலும்பையாவது, பிரேதக்குழியையாவது, தொட்டவன் எவனும் ஏழுநாள் தீட்டுப்பட்டிருப்பான். 17 ஆகையால் தீட்டுப்பட்டவனுக்காக, பாவத்தைப் பரிகரிக்கும் கிடாரியின் சாம்பலிலே கொஞ்சம் எடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதின்மேல் ஊற்று ஜலம் வார்க்கவேண்டும். 18 சுத்தமான ஒருவன் ஈசோப்பை எடுத்து, அந்த ஜலத்திலே தோய்த்து, கூடாரத்தின்மேலும் அதிலுள்ள சகல பணிமுட்டுகளின்மேலும் அங்கேயிருக்கிற ஜனங்களின்மேலும் தெளிக்கிறதுமல்லாமல், எலும்பையாகிலும் வெட்டுண்டவனையாகிலும் செத்தவனையாகிலும் பிரேதக்குழியையாகிலும் தொட்டவன்மேலும் தெளிக்கக்கடவன். 19 சுத்தமாயிருக்கிறவன் தீட்டுப்பட்டவன்மேல் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தெளிக்கவேண்டும்; ஏழாம் நாளில் இவன் தன்னைச் சுத்திகரித்து, தன் வஸ்திரங்களைத் தோய்த்து, ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சாயங்காலத்திலே சுத்தமாயிருப்பான். 20 தீட்டுப்பட்டிருக்கிறவன் தன்னைச் சுத்திகரித்துக்கொள்ளாதிருந்தால், அவன் சபையில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்; அவன் கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான்; தீட்டுக்கழிக்கும் ஜலம் அவன்மேல் தெளிக்கப்படாததினால் அவன் தீட்டுப்பட்டிருக்கிறான். 21 தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தெளிக்கிறவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; தீட்டுக்கழிக்கும் ஜலத்தைத் தொட்டவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான். 22 தீட்டுப்பட்டிருக்கிறவன் தொடுகிறவைகளெல்லாம் தீட்டுப்படும், அவைகளைத் தொடுகிறவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கும் என்றார்.

எண்ணாகமம் 20

1 இஸ்ரவேல் புத்திரரின் சபையார் எல்லாரும் முதலாம் மாதத்தில் சீன்வனாந்தரத்திலே சேர்ந்து, ஜனங்கள் காதேசிலே தங்கியிருக்கையில், மிரியாம் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்பட்டாள். 2 ஜனங்களுக்குத் தண்ணீர் இல்லாதிருந்தது; அப்பொழுது அவர்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டங்கூடினார்கள். 3 ஜனங்கள் மோசேயோடே வாக்குவாதம்பண்ணி: எங்கள் சகோதரர் கர்த்தருடைய சந்நிதியில் மாண்டபோது நாங்களும் மாண்டுபோயிருந்தால் நலமாயிருக்கும். 4 நாங்களும் எங்கள் மிருகங்களும் இங்கே சாகும்படி, நீங்கள் கர்த்தரின் சபையை இந்த வனாந்தரத்திலே கொண்டுவந்தது என்ன; 5 விதைப்பும், அத்திமரமும், திராட்சச்செடியும், மாதளஞ்செடியும், குடிக்கத்தண்ணீரும் இல்லாத இந்தக் கெட்ட இடத்தில் எங்களைக் கொண்டுவரும்படி, நீங்கள் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன என்றார்கள். 6 அப்பொழுது மோசேயும் ஆரோனும் சபையாரைவிட்டு, ஆசரிப்புக் கூடாரவாசலில் போய், முகங்குப்புற விழுந்தார்கள்; கர்த்தருடைய மகிமை அவர்களுக்குக் காணப்பட்டது. 7 கர்த்தர் மோசேயை நோக்கி: 8 நீ கோலை எடுத்துக்கொண்டு, நீயும் உன் சகோதரனாகிய ஆரோனும் சபையாரைக் கூடிவரச்செய்து, அவர்கள் கண்களுக்குமுன்னே கன்மலையைப் பார்த்துப் பேசுங்கள்; அப்பொழுது அது தன்னிடத்திலுள்ள தண்ணீரைக் கொடுக்கும்; இப்படி நீ அவர்களுக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, சபையாருக்கும் அவர்கள் மிருகங்களுக்கும் குடிக்கக் கொடுப்பாய் என்றார். 9 அப்பொழுது மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே கர்த்தருடைய சந்நிதியிலிருந்த கோலை எடுத்தான். 10 மோசேயும் ஆரோனும் சபையாரைக் கன்மலைக்கு முன்பாகக் கூடிவரச்செய்தார்கள்; அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: கலகக்காரரே, கேளுங்கள், உங்களுக்கு இந்தக் கன்மலையிலிருந்து நாங்கள் தண்ணீர் புறப்படப்பண்ணுவோமோ என்று சொல்லி, 11 தன் கையை ஓங்கி, கன்மலையைத் தன் கோலினால் இரண்டுதரம் அடித்தான்; உடனே தண்ணீர் ஏராளமாய்ப் புறப்பட்டது, சபையார் குடித்தார்கள்; அவர்கள் மிருகங்களும் குடித்தது. 12 பின்பு கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: இஸ்ரவேல் புத்திரரின் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணும்படி, நீங்கள் என்னை விசுவாசியாமற் போனபடியினால், இந்தச் சபையாருக்கு நான் கொடுத்த தேசத்துக்குள் நீங்கள் அவர்களைக் கொண்டுபோவதில்லை என்றார். 13 இங்கே இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரோடே வாக்குவாதம்பண்ணினதினாலும், அவர்களுக்குள்ளே அவருடைய பரிசுத்தம் விளங்கினதினாலும் இது மேரிபாவின் தண்ணீர் என்னப்பட்டது. 14 பின்பு மோசே காதேசிலிருந்து ஏதோமின் ராஜாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: 15 எங்கள் பிதாக்கள் எகிப்துக்குப் போனதும், நாங்கள் எகிப்திலே நெடுநாள் வாசம்பண்ணினதும், எகிப்தியர் எங்களையும் எங்கள் பிதாக்களையும் உபத்திரவப்படுத்தினதும், இவைகளினால் எங்களுக்கு நேரிட்ட எல்லா வருத்தமும் உமக்குத் தெரிந்திருக்கிறது. 16 கர்த்தரை நோக்கி நாங்கள் மன்றாடினோம்; அவர் எங்களுக்குச் செவிகொடுத்து, ஒரு தூதனை அனுப்பி, எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; இப்பொழுது நாங்கள் உமது எல்லைக்கு உட்பட்ட காதேஸ் ஊரில் வந்திருக்கிறோம். 17 நாங்கள் உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும்; வயல்வெளிகள் வழியாகவும், திராட்சத்தோட்டங்கள் வழியாகவும் நாங்கள் போகாமலும், துரவுகளின் தண்ணீரைக் குடியாமலும், ராஜபாதையாகவே நடந்து, உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும், வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்போம் என்று, உமது சகோதரனாகிய இஸ்ரவேல் சொல்லி அனுப்புகிறான் என்று சொல்லச்சொன்னான். 18 அதற்கு ஏதோம்: நீ என் தேசத்தின் வழியாய்க் கடந்துபோகக்கூடாது; போனால் பட்டயத்தோடே உன்னை எதிர்க்கப் புறப்படுவேன் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னான். 19 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் அவனை நோக்கி: நடப்பான பாதையின் வழியாய்ப் போவோம்; நாங்களும் எங்கள் மிருகங்களும் உன் தண்ணீரைக் குடித்தால், அதற்குக் கிரயங்கொடுப்போம்; வேறொன்றும் செய்யாமல், கால்நடையாய் மாத்திரம் கடந்துபோவோம் என்றார்கள். 20 அதற்கு அவன்: நீ கடந்துபோகக்கூடாது என்று சொல்லி, வெகு ஜனங்களோடும் பலத்த கையோடும் அவர்களை எதிர்க்கப் புறப்பட்டான். 21 இப்படி ஏதோம் தன் எல்லைவழியாய்க் கடந்துபோகும்படி இஸ்ரவேலருக்கு உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலர் அவனை விட்டு விலகிப்போனார்கள். 22 இஸ்ரவேல் புத்திரரான சபையார் எல்லாரும் காதேசை விட்டுப் பிரயாணப்பட்டு, ஓர் என்னும் மலைக்குப் போனார்கள். 23 ஏதோம் தேசத்தின் எல்லைக்கு அருகான ஓர் என்னும் மலையிலே கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: 24 ஆரோன் தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான். மேரிபாவின் தண்ணீரைப்பற்றிய காரியத்தில் நீங்கள் என் வாக்குக்குக் கீழ்ப்படியாமற்போனபடியினால், நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கிற தேசத்தில் அவன் பிரவேசிப்பதில்லை. 25 நீ ஆரோனையும் அவன் குமாரனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, அவர்களை ஓர் என்னும் மலையில் ஏறப்பண்ணி, 26 ஆரோன் உடுத்திருக்கிற வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்துவாயாக; ஆரோன் அங்கே மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்படுவான் என்றார். 27 கர்த்தர் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்; சபையார் எல்லாரும் பார்க்க, அவர்கள் ஓர் என்னும் மலையில் ஏறினார்கள். 28 அங்கே ஆரோன் உடுத்திருந்த வஸ்திரங்களை மோசே கழற்றி, அவைகளை அவன் குமாரனாகிய எலெயாசாருக்கு உடுத்தினான்; அப்பொழுது ஆரோன் அங்கே மலையின் உச்சியிலே மரித்தான்; பின்பு மோசேயும் எலெயாசாரும் மலையிலிருந்து இறங்கினார்கள். 29 ஆரோன் ஜீவித்துப்போனான் என்பதைச் சபையார் எல்லாரும் கண்டபோது, இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் ஆரோனுக்காக முப்பது நாள் துக்கங்கொண்டாடினார்கள்.

எண்ணாகமம் 21

1 வேவுகாரர் காண்பித்த வழியாக இஸ்ரவேலர் வருகிறார்கள் என்று தெற்கே வாசம்பண்ணுகிற கானானியனாகிய ஆராத் ராஜா கேள்விப்பட்டபோது, அவன் இஸ்ரவேலருக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அவர்களில் சிலரைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான். 2 அப்பொழுது இஸ்ரவேலர் கர்த்தரை நோக்கி: தேவரீர் இந்த ஜனங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுத்தால், அவர்களுடைய பட்டணங்களைச் சங்காரம் பண்ணுவோம் என்று பிரதிக்கினை பண்ணினார்கள். 3 கர்த்தர் இஸ்ரவேலின் சத்தத்துக்குச் செவிகொடுத்து, அவர்களுக்குக் கானானியரை ஒப்புக்கொடுத்தார்; அப்பொழுது அவர்களையும் அவர்கள் பட்டணங்களையும் சங்காரம்பண்ணி, அவ்விடத்திற்கு ஓர்மா என்று பேரிட்டார்கள். 4 அவர்கள் ஏதோம் தேசத்தைச் சுற்றிப்போகும்படிக்கு, ஓர் என்னும் மலையைவிட்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாய்ப் பிரயாணம்பண்ணினார்கள்; வழியினிமித்தம் ஜனங்கள் மனமடிவடைந்தார்கள். 5 ஜனங்கள் தேவனுக்கும் மோசேக்கும் விரோதமாகப் பேசி: நாங்கள் வனாந்தரத்திலே சாகும்படி நீங்கள் எங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணினதென்ன? இங்கே அப்பமும் இல்லை, தண்ணீரும் இல்லை; இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது என்றார்கள். 6 அப்பொழுது கர்த்தர் கொள்ளிவாய்ச் சர்ப்பங்களை ஜனங்களுக்குள்ளே அனுப்பினார்; அவைகள் ஜனங்களைக் கடித்ததினால் இஸ்ரவேலருக்குள்ளே அநேக ஜனங்கள் செத்தார்கள். 7 அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணினான். 8 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஒரு கொள்ளிவாய்ச் சர்ப்பத்தின் உருவத்தைச் செய்து, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவை; கடிக்கப்பட்டவன் எவனோ அவன் அதை நோக்கிப்பார்த்தால் பிழைப்பான் என்றார். 9 அப்படியே மோசே ஒரு வெண்கலச் சர்ப்பத்தை உண்டாக்கி, அதை ஒரு கம்பத்தின்மேல் தூக்கிவைத்தான்; சர்ப்பம் ஒருவனைக் கடித்தபோது, அவன் அந்த வெண்கலச் சர்ப்பத்தை நோக்கிப்பார்த்துப் பிழைப்பான். 10 இஸ்ரவேல் புத்திரர் பிரயாணப்பட்டுப்போய், ஓபோத்தில் பாளயமிறங்கினார்கள். 11 ஓபோத்திலிருந்து பிரயாணம்பண்ணி, சூரியோதயத்திற்கு நேராய் மோவாபுக்கு எதிரான வனாந்தரத்திலுள்ள அபாரீமின் மேடுகளில் பாளயமிறங்கினார்கள். 12 அங்கேயிருந்து பிரயாணப்பட்டுப்போய், சாரேத் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினார்கள். 13 அங்கேயிருந்து பிரயாணப்பட்டுப்போய், எமோரியரின் எல்லையிலிருந்து வருகிறதும் வனாந்தரத்தில் ஓடுகிறதுமான அர்னோன் ஆற்றுக்கு இப்புறம் பாளயமிறங்கினார்கள்; அந்த அர்னோன் மோவாபுக்கும் எமோரியருக்கும் நடுவே இருக்கிற மோவாபின் எல்லை. 14 அதினால் சூப்பாவிலுள்ள வாகேபும், அர்னோனின் ஆற்றுக்கால்களும், 15 ஆர் என்னும் ஸ்தலத்துக்குப் பாயும் நீரோடையும் மோவாபின் எல்லையைச் சார்ந்திருக்கிறது என்னும் வசனம் கர்த்தருடைய யுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. 16 அங்கேயிருந்து பேயேருக்குப் போனார்கள்; ஜனங்களைக் கூடிவரச்செய், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பேன் என்று கர்த்தர் மோசேக்குச் சொன்ன ஊற்று இருக்கிற இடம் அதுதான். 17 அப்பொழுது இஸ்ரவேலர் பாடின பாட்டாவது: ஊற்றுத் தண்ணீரே, பொங்கிவா; அதைக்குறித்துப் பாடுவோம் வாருங்கள். 18 நியாயப்பிரமாணிக்கனின் ஏவுதலால் அதிபதிகள் கிணற்றைத் தோண்டினார்கள்; ஜனத்தில் மேன்மக்கள் தங்கள் தண்டாயுதங்களைக்கொண்டு தோண்டினார்கள் என்று பாடினார்கள். 19 அந்த வனாந்தரத்திலிருந்து மாத்தனாவுக்கும், மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், நகாலியேலிலிருந்து பாமோத்துக்கும், 20 பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பாமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள். 21 அப்பொழுது இஸ்ரவேலர் எமோரியரின் ராஜாவாகிய சீகோனிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி: 22 உமது தேசத்தின் வழியாய்க் கடந்துபோகும்படி உத்தரவு கொடுக்கவேண்டும்; நாங்கள் வயல்களிலும், திராட்சத்தோட்டங்களிலும் போகாமலும், துரவுகளின் தண்ணீரைக் குடியாமலும், உமது எல்லையைக் கடந்துபோகுமட்டும் ராஜபாதையில் நடந்துபோவோம் என்று சொல்லச்சொன்னார்கள். 23 சீகோன் தன் எல்லைவழியாய்க் கடந்துபோக இஸ்ரவேலுக்கு உத்தரவு கொடாமல், தன் ஜனங்களெல்லாரையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேலருக்கு விரோதமாக வனாந்தரத்திலே புறப்பட்டு, யாகாசுக்கு வந்து, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினான். 24 இஸ்ரவேலர் அவனைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அர்னோன் தொடங்கி அம்மோன் புத்திரரின் தேசத்தைச்சார்ந்த யாப்போக்குவரைக்குமுள்ள அவனுடைய தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்; அம்மோன் புத்திரரின் எல்லை அரணிப்பானதாயிருந்தது. 25 இஸ்ரவேலர் அந்தப் பட்டணங்கள் யாவையும் பிடித்து, எஸ்போனிலும் அதைச் சார்ந்த எல்லாக் கிராமங்களிலும் எமோரியருடைய எல்லாப் பட்டணங்களிலும் குடியிருந்தார்கள். 26 எஸ்போனானது எமோரியரின் ராஜாவாகிய சீகோனின் பட்டணமாயிருந்தது; அவன் மோவாபியரின் முந்தின ராஜாவுக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அர்னோன்வரைக்கும் இருந்த அவன் தேசத்தையெல்லாம் அவன் கையிலிருந்து பறித்துக்கொண்டான். 27 அதினாலே கவிகட்டுகிறவர்கள்: எஸ்போனுக்கு வாருங்கள்; சீகோனின் பட்டணம் ஸ்திரமாய்க் கட்டப்படுவதாக. 28 எஸ்போனிலிருந்து அக்கினியும் சீகோனுடைய பட்டணத்திலிருந்து ஜுவாலையும் புறப்பட்டு, மோவாபுடைய ஆர் என்னும் ஊரையும், அர்னோனுடைய மேடுகளிலுள்ள ஆண்டவமார்களையும் பட்சித்தது. 29 ஐயோ, மோவாபே, கேமோஷ் தேவனின் ஜனமே, நீ நாசமானாய்; தப்பி ஓடின தன் குமாரரையும் தன் குமாரத்திகளையும் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்குச் சிறைகளாக ஒப்புக்கொடுத்தான். 30 அவர்களை எய்துபோட்டோம்; எஸ்போன் பட்டணம் தீபோன் ஊர்வரைக்கும் நாசமாயிற்று; மேதேபாவுக்குச் சமீபமான நோப்பா பட்டணபரியந்தம் அவர்களைப் பாழாக்கினோம் என்று பாடினார்கள். 31 இஸ்ரவேலர் இப்படியே எமோரியரின் தேசத்திலே குடியிருந்தார்கள். 32 பின்பு, மோசே யாசேர் பட்டணத்துக்கு வேவு பார்க்கிறவர்களை அனுப்பினான்; அவர்கள் அதைச்சேர்ந்த கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அங்கே இருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள். 33 பின்பு பாசானுக்குப் போகிற வழியாய்த் திரும்பிவிட்டார்கள்; அப்பொழுது பாசான் ராஜாவாகிய ஓக் என்பவன் தன் சமஸ்த ஜனங்களோடும் அவர்களை எதிர்த்து யுத்தம்பண்ணும்படிக்கு, எத்ரேயுக்குப் புறப்பட்டு வந்தான். 34 கர்த்தர் மோசேயை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவன் ஜனங்கள் எல்லாரையும், அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே வாசமாயிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்தபடியே இவனுக்கும் செய்வாய் என்றார். 35 அப்படியே ஒருவரும் உயிருடன் மீதியாயிராதபடிக்கு அவனையும், அவன் குமாரரையும், அவனுடைய சகல ஜனங்களையும் வெட்டிப்போட்டு, அவன் தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்.

எண்ணாகமம் 22

1 பின்பு இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணி, எரிகோவின் கிட்ட இருக்கும் யோர்தானுக்கு இக்கரையிலே மோவாபின் சமனான வெளிகளில் பாளயமிறங்கினார்கள். 2 இஸ்ரவேலர் எமோரியருக்குச் செய்த யாவையும் சிப்போரின் குமாரனாகிய பாலாக் கண்டான். 3 ஜனங்கள் ஏராளமாயிருந்தபடியினால், மோவாப் மிகவும் பயந்து, இஸ்ரவேல் புத்திரரினிமித்தம் கலக்கமடைந்து, 4 மீதியானியரின் மூப்பரை நோக்கி: மாடு வெளியின் புல்லை மேய்கிறதுபோல, இப்பொழுது இந்தக் கூட்டம் நம்மைச் சுற்றியிருக்கிற யாவையும் மேய்ந்துபோடும் என்றான். அக்காலத்திலே சிப்போரின் குமாரனாகிய பாலாக் மோவாபியருக்கு ராஜாவாயிருந்தான். 5 அவன் பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்துவரும்படி, தன் சந்ததியாருடைய தேசத்தில் நதியருகேயுள்ள பெத்தூருக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: எகிப்திலிருந்து ஒரு ஜனக்கூட்டம் வந்திருக்கிறது; அவர்கள் பூமியின் விசாலத்தை மூடி, எனக்கு எதிரே இறங்கியிருக்கிறார்கள். 6 அவர்கள் என்னிலும் பலவான்கள்; ஆகிலும், நீர் ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், நீர் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று அறிவேன்; ஆதலால், நீர் வந்து, எனக்காக அந்த ஜனத்தைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது ஒருவேளை நான் அவர்களை முறிய அடித்து, அவர்களை இத்தேசத்திலிருந்து துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான். 7 அப்படியே மோவாபின் மூப்பரும் மீதியானின் மூப்பரும் குறிசொல்லுதலுக்குரிய கூலியைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டு, பிலேயாமிடத்தில் போய், பாலாகின் வார்த்தைகளை அவனுக்குச் சொன்னார்கள். 8 அவன் அவர்களை நோக்கி: இராத்திரிக்கு இங்கே தங்கியிருங்கள்; கர்த்தர் எனக்குச் சொல்லுகிறபடியே உங்களுக்கு உத்தரவு கொடுப்பேன் என்றான்; அப்படியே மோவாபின் பிரபுக்கள் பிலேயாமிடத்தில் தங்கினார்கள். 9 தேவன் பிலேயாமிடத்தில் வந்து: உன்னிடத்திலிருக்கிற இந்த மனிதர் யார் என்றார். 10 பிலேயாம் தேவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜா அவர்களை என்னிடத்துக்கு அனுப்பி: 11 பூமியின் விசாலத்தை மூடுகிற ஒரு ஜனக்கூட்டம் எகிப்திலிருந்து வந்திருக்கிறது; ஆகையால், நீ வந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும்; அப்பொழுது நான் அவர்களோடே யுத்தம்பண்ணி, ஒருவேளை அவர்களைத் துரத்திவிடலாம் என்று சொல்லச்சொன்னான் என்றான். 12 அதற்குத் தேவன் பிலேயாமை நோக்கி: நீ அவர்களோடே போகவேண்டாம்; அந்த ஜனங்களைச் சபிக்கவும் வேண்டாம்; அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றார். 13 பிலேயாம் காலமே எழுந்து, பாலாகின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேசத்துக்குப் போய்விடுங்கள்; நான் உங்களோடேகூட வருகிறதற்குக் கர்த்தர் எனக்கு உத்தரவு கொடுக்கமாட்டோம் என்கிறார் என்று சொன்னான். 14 அப்படியே மோவாபியருடைய பிரபுக்கள் எழுந்து, பாலாகினிடத்தில் போய்: பிலேயாம் எங்களோடே வரமாட்டேன் என்று சொன்னான் என்றார்கள். 15 பாலாக் மறுபடியும் அவர்களிலும் கனவான்களான அதிக பிரபுக்களை அனுப்பினான். 16 அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருகிறதற்குத் தடைபடவேண்டாம்; 17 உம்மை மிகவும் கனம்பண்ணுவேன்; நீர் சொல்வதையெல்லாம் செய்வேன்; நீர் வந்து எனக்காக அந்த ஜனங்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னார் என்றார்கள். 18 பிலேயாம் பாலாகின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: பாலாக் எனக்குத் தன் வீடுநிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும் செய்யும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக்கூடாது. 19 ஆகிலும், கர்த்தர் இனிமேல் எனக்கு என்ன சொல்லுவார் என்பதை நான் அறியும்படிக்கு, நீங்களும் இந்த இராத்திரி இங்கே தங்கியிருங்கள் என்றான். 20 இரவிலே தேவன் பிலேயாமிடத்தில் வந்து: அந்த மனிதர் உன்னைக் கூப்பிட வந்திருந்தால், நீ எழுந்து அவர்களோடே கூடப்போ; ஆனாலும், நான் உனக்குச் சொல்லும் வார்த்தையின்படிமாத்திரம் நீ செய்யவேண்டும் என்றார். 21 பிலேயாம் காலமே எழுந்து, தன் கழுதையின்மேல் சேணங்கட்டி, மோவாபின் பிரபுக்களோடேகூடப் போனான். 22 அவன் போகிறதினாலே தேவனுக்குக் கோபம் மூண்டது; கர்த்தருடைய தூதனானவர் வழியிலே அவனுக்கு எதிராளியாக நின்றார். அவன் தன் கழுதையின்மேல் ஏறிப்போனான்; அவன் வேலைக்காரர் இரண்டுபேரும் அவனோடே இருந்தார்கள். 23 கர்த்தருடைய தூதனானவர் உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்துக்கொண்டு வழியிலே நிற்கிறதைக் கழுதை கண்டு, வழியை விட்டு வயலிலே விலகிப்போயிற்று; கழுதையை வழியில் திருப்ப பிலேயாம் அதை அடித்தான். 24 கர்த்தருடைய தூதனானவர் இருபுறத்திலும் சுவர் வைத்திருந்த திராட்சத்தோட்டங்களின் பாதையிலே போய் நின்றார். 25 கழுதை கர்த்தருடைய தூதனைக்கண்டு, சுவர் ஓரமாய் ஒதுங்கி, பிலேயாமின் காலைச் சுவரோடே நெருக்கிற்று; திரும்பவும் அதை அடித்தான். 26 அப்பொழுது கர்த்தருடைய தூதன் அப்புறம் போய், வலதுபுறம் இடதுபுறம் விலக வழியில்லாத இடுக்கமான இடத்திலே நின்றார். 27 கழுதை கர்த்தருடைய தூதனைக் கண்டு, பிலேயாமின் கீழ்ப் படுத்துக்கொண்டது; பிலேயாம் கோபம் மூண்டவனாகி, கழுதையைத் தடியினால் அடித்தான். 28 உடனே கர்த்தர் கழுதையின் வாயைத் திறந்தார்; அது பிலேயாமைப் பார்த்து: நீர் என்னை இப்பொழுது மூன்றுதரம் அடிக்கும்படி நான் உமக்கு என்ன செய்தேன் என்றது. 29 அப்பொழுது பிலேயாம் கழுதையைப் பார்த்து: நீ என்னைப் பரியாசம் பண்ணிக்கொண்டு வருகிறாய்; என் கையில் ஒரு பட்டயம்மாத்திரம் இருந்தால், இப்பொழுதே உன்னைக் கொன்றுபோடுவேன் என்றான். 30 கழுதை பிலேயாமை நோக்கி: நீர் என்னைக் கைக்கொண்ட காலமுதல் இந்நாள்வரைக்கும் நீர் ஏறின கழுதை நான் அல்லவா? இப்படி உமக்கு எப்போதாகிலும் நான் செய்தது உண்டா என்றது. அதற்கு அவன்: இல்லை என்றான். 31 அப்பொழுது கர்த்தர் பிலேயாமின் கண்களைத் திறந்தார்; வழியிலே நின்று உருவின பட்டயத்தைத் தம்முடைய கையிலே பிடித்திருக்கிற கர்த்தருடைய தூதனை அவன் கண்டு, தலைகுனிந்து முகங்குப்புற விழுந்து பணிந்தான். 32 கர்த்தருடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ உன் கழுதையை இதனோடே மூன்றுதரம் அடித்ததென்ன? உன் வழி எனக்கு மாறுபாடாயிருக்கிறதினால், நான் உனக்கு எதிரியாகப் புறப்பட்டு வந்தேன். 33 கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்றுதரம் எனக்கு விலகிற்று; எனக்கு விலகாமல் இருந்ததானால், இப்பொழுது நான் உன்னைக் கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன் என்றார். 34 அப்பொழுது பிலேயாம் கர்த்தருடைய தூதனை நோக்கி: நான் பாவஞ்செய்தேன்; வழியிலே நீர் எனக்கு எதிராக நிற்கிறதை அறியாதிருந்தேன்; இப்பொழுதும் உமது பார்வைக்கு இது தகாததாயிருக்குமானால், நான் திரும்பிப் போய்விடுகிறேன் என்றான். 35 கர்த்தருடைய தூதனானவர் பிலேயாமை நோக்கி: அந்த மனிதரோடே கூடப்போ; நான் உன்னோடே சொல்லும் வார்த்தையைமாத்திரம் நீ சொல்லக்கடவாய் என்றார்; அப்படியே பிலேயாம் பாலாகின் பிரபுக்களோடேகூடப் போனான். 36 பிலேயாம் வருகிறதைப் பாலாக் கேட்டமாத்திரத்தில், கடைசி எல்லையான அர்னோன் நதியின் ஓரத்திலுள்ள மோவாபின் பட்டணமட்டும் அவனுக்கு எதிர்கொண்டுபோனான். 37 பாலாக் பிலேயாமை நோக்கி: உம்மை அழைக்கும்படி நான் ஆவலோடே உம்மிடத்தில் ஆள் அனுப்பவில்லையா? என்னிடத்திற்கு வராமல் இருந்ததென்ன? ஏற்றபிரகாரமாக உம்மை நான் கனம் பண்ணமாட்டேனா என்றான். 38 அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இதோ, உம்மிடத்திற்கு வந்தேன்; ஆனாலும், ஏதாகிலும் சொல்லுகிறதற்கு என்னாலே ஆகுமோ? தேவன் என் வாயிலே அளிக்கும் வார்த்தையையே சொல்லுவேன் என்றான். 39 பிலேயாம் பாலாகுடனேகூடப் போனான்; அவர்கள் கீரியாத் ஊசோத்தில் சேர்ந்தார்கள். 40 அங்கே பாலாக் ஆடுமாடுகளை அடித்து, பிலேயாமுக்கும் அவனோடிருந்த பிரபுக்களுக்கும் அனுப்பினான். 41 மறுநாள் காலமே பாலாக் பிலேயாமைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பாகாலுடைய மேடுகளில் ஏறப்பண்ணினான்; அவ்விடத்திலிருந்து பிலேயாம் ஜனத்தின் கடைசிப் பாளயத்தைப் பார்த்தான்.

எண்ணாகமம் 23

1 பிலேயாம் பாலாகை நோக்கி: நீர் இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் இங்கே எனக்கு ஆயத்தப்படுத்தும் என்றான். 2 பிலேயாம் சொன்னபடியே பாலாக் செய்தான்; பாலாகும் பிலேயாமும் ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டார்கள். 3 பின்பு பிலேயாம் பாலாகை நோக்கி: உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும், நான் போய்வருகிறேன்; கர்த்தர் வந்து என்னைச் சந்திக்கிறதாயிருக்கும்; அவர் எனக்கு வெளிப்படுத்துவதை உமக்கு அறிவிப்பேன் என்று சொல்லி, ஒரு மேட்டின்மேல் ஏறினான். 4 தேவன் பிலேயாமைச் சந்தித்தார்; அப்பொழுது அவன் அவரை நோக்கி: நான் ஏழு பலிபீடங்களை ஆயத்தம்பண்ணி, ஒவ்வொரு பலிபீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டேன் என்றான். 5 கர்த்தர் பிலேயாமின் வாயிலே வாக்கு அருளி: நீ பாலாகினிடத்தில் திரும்பிப்போய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார். 6 அவனிடத்துக்கு அவன் திரும்பிப்போனான்; பாலாக் மோவாபுடைய சகல பிரபுக்களோடுங்கூடத் தன் சர்வாங்க தகனபலியண்டையிலே நின்றுகொண்டிருந்தான். 7 அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: மோவாபின் ராஜாவாகிய பாலாக் என்னைக் கிழக்கு மலைகளிலுள்ள ஆராமிலிருந்து வரவழைத்து: நீ வந்து எனக்காக யாக்கோபைச் சபிக்கவேண்டும்; நீ வந்து இஸ்ரவேலை வெறுத்து விடவேண்டும் என்று சொன்னான். 8 தேவன் சபிக்காதவனை நான் சபிப்பதெப்படி? கர்த்தர் வெறுக்காதவனை நான் வெறுப்பதெப்படி? 9 கன்மலையுச்சியிலிருந்து நான் அவனைக் கண்டு, குன்றுகளிலிருந்து அவனைப் பார்க்கிறேன்; அந்த ஜனங்கள் ஜாதிகளோடே கலவாமல் தனியே வாசமாயிருப்பார்கள். 10 யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுகிறவன் யார்? நீதிமான் மரிப்பது போல் நான் மரிப்பேனாக, என் முடிவு அவன் முடிவுபோல் இருப்பதாக என்றான். 11 அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் எனக்கு என்னசெய்தீர்; என் சத்துருக்களைச் சபிக்கும்படி உம்மை அழைப்பித்தேன்; நீர் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தீர் என்றான். 12 அதற்கு அவன்: கர்த்தர் என் வாயில் அருளினதையே சொல்வது என் கடமையல்லவா என்றான். 13 பின்பு பாலாக் அவனை நோக்கி: நீர் அவர்களைப் பார்க்கத்தக்க வேறொரு இடத்திற்கு என்னோடேகூட வாரும்; அங்கே அவர்கள் எல்லாரையும் பாராமல், அவர்களுடைய கடைசிப் பாளயத்தைமாத்திரம் பார்ப்பீர்; அங்கேயிருந்து எனக்காக அவர்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லி, 14 அவனைப் பிஸ்காவின் கொடுமுடியில் இருக்கிற சோப்பீமின் வெளியிலே அழைத்துக்கொண்டுபோய், ஏழு பலிபீடங்களைக் கட்டி, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான். 15 அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே உம்முடைய சர்வாங்க தகனபலியண்டையில் நில்லும்; நான் அங்கே போய்க் கர்த்தரைச் சந்தித்துவருகிறேன் என்றான். 16 கர்த்தர் பிலேயாமைச் சந்தித்து, அவன் வாயிலே வசனத்தை அருளி: நீ பாலாகினிடத்திற்குத் திரும்பிப்போய், இவ்விதமாய்ச் சொல்லக்கடவாய் என்றார். 17 அவனிடத்திற்கு அவன் வருகிறபோது, அவன் மோவாபின் பிரபுக்களோடுங்கூடத் தன்னுடைய சர்வாங்க தகனபலியண்டையிலே நின்றுகொண்டிருந்தான்; பாலாக் அவனை நோக்கி: கர்த்தர் என்ன சொன்னார் என்று கேட்டான். 18 அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பாலாகே, எழுந்திருந்து கேளும்; சிப்போரின் குமாரனே, எனக்குச் செவிகொடும். 19 பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரா? அவர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பாரா? 20 இதோ, ஆசீர்வதிக்கக் கட்டளைபெற்றேன்; அவர் ஆசீர்வதிக்கிறார், அதை நான் திருப்பக்கூடாது. 21 அவர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காண்கிறதும் இல்லை, இஸ்ரவேலிலே குற்றம் பார்க்கிறதும் இல்லை; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களோடே இருக்கிறார்; ராஜாவின் ஜயகெம்பீரம் அவர்களுக்குள்ளே இருக்கிறது. 22 தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு. 23 யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும். 24 அந்த ஜனம் துஷ்ட சிங்கம்போல எழும்பும், பாலசிங்கம்போல நிமிர்ந்து நிற்கும்; அது தான் பிடித்த இரையைப் பட்சித்து, வெட்டுண்டவர்களின் இரத்தத்தைக் குடிக்குமட்டும் படுத்துக்கொள்வதில்லை என்றான். 25 அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: நீர் அவர்களைச் சபிக்கவும் வேண்டாம், அவர்களை ஆசீர்வதிக்கவும் வேண்டாம் என்றான். 26 அதற்குப் பிலேயாம் பாலாகைப் பார்த்து: கர்த்தர் சொல்லுகிறபடியெல்லாம் செய்வேன் என்று உம்மோடே நான் சொல்லவில்லையா என்றான். 27 அப்பொழுது பாலாக் பிலேயாமை நோக்கி: வாரும், வேறொரு இடத்திற்கு உம்மை அழைத்துக்கொண்டு போகிறேன்; நீர் அங்கேயிருந்தாவது எனக்காக அவர்களைச் சபிக்கிறது தேவனுக்குப் பிரியமாயிருக்கும் என்று சொல்லி, 28 அவனை எஷிமோனுக்கு எதிராயிருக்கிற பேயோரின் கொடுமுடிக்கு அழைத்துக்கொண்டுபோனான். 29 அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: இங்கே எனக்கு ஏழு பலிபீடங்களைக் கட்டி, இங்கே எனக்கு ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக் கடாக்களையும் ஆயத்தம்பண்ணும் என்றான். 30 பிலேயாம் சொன்னபடி பாலாக் செய்து, ஒவ்வொரு பீடத்தில் ஒவ்வொரு காளையையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டான்.

எண்ணாகமம் 24

1 இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாம் கண்ட போது, அவன் முந்திச் செய்துவந்தது போல நிமித்தம்பார்க்கப் போகாமல், வனாந்தரத்திற்கு நேராகத் தன் முகத்தைத் திருப்பி, 2 தன் கண்களை ஏறெடுத்து, இஸ்ரவேல் தன் கோத்திரங்களின்படியே பாளயமிறங்கியிருக்கிறதைப் பார்த்தான்; தேவ ஆவி அவன்மேல் வந்தது. 3 அப்பொழுது அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரனாகிய பிலேயாம் சொல்லுகிறதாவது, கண்திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது, 4 தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழ விழும்போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது, 5 யாக்கோபே, உன் கூடாரங்களும், இஸ்ரவேலே, உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள்! 6 அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும், நதியோரத்திலுள்ள தோட்டங்களைப்போலவும், கர்த்தர் நாட்டின சந்தனமரங்களைப்போலவும், தண்ணீர் அருகே உள்ள கேதுரு விருட்சங்களைப்போலவும் இருக்கிறது. 7 அவர்களுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர் பாயும்; அவர்கள் வித்து திரளான தண்ணீர்களில் பரவும்; அவர்களுடைய ராஜா ஆகாகைப் பார்க்கிலும் உயருவான்; அவர்கள் ராஜ்யம் மேன்மையடையும். 8 தேவன் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; காண்டாமிருகத்துக்கொத்த பெலன் அவர்களுக்கு உண்டு; அவர்கள் தங்கள் சத்துருக்களாகிய ஜாதிகளைப் பட்சித்து, அவர்கள் எலும்புகளை நொறுக்கி, அவர்களைத் தங்கள் அம்புகளாலே எய்வார்கள். 9 சிங்கம்போலவும் துஷ்ட சிங்கம்போலவும் மடங்கிப் படுத்துக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை எழுப்புகிறவன் யார்? உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன், உங்களைச் சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்றான். 10 அப்பொழுது பாலாக் பிலேயாமின்மேல் கோபம் மூண்டவனாகி, கையோடே கைதட்டி, பிலேயாமை நோக்கி: என் சத்துருக்களைச் சபிக்க உன்னை அழைத்தனுப்பினேன்; நீயோ இந்த மூன்றுமுறையும் அவர்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தாய். 11 ஆகையால் உன் இடத்துக்கு ஓடிப்போ; உன்னை மிகவும் கனம்பண்ணுவேன் என்றேன்; நீ கனமடையாதபடிக்குக் கர்த்தர் தடுத்தார் என்றான். 12 அப்பொழுது பிலேயாம் பாலாகை நோக்கி: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் கொடுத்தாலும், நான் என் மனதாய் நன்மையாகிலும் தீமையாகிலும் செய்கிறதற்குக் கர்த்தரின் கட்டளையை மீறக்கூடாது; கர்த்தர் சொல்வதையே சொல்வேன் என்று, 13 நீர் என்னிடத்திற்கு அனுப்பின ஸ்தானாபதிகளிடத்தில் நான் சொல்லவில்லையா? 14 இதோ, நான் என் ஜனத்தாரிடத்திற்குப் போகிறேன்; பிற்காலத்திலே இந்த ஜனங்கள் உம்முடைய ஜனங்களுக்குச் செய்வது இன்னதென்று உமக்குத் தெரிவிப்பேன் வாரும் என்று சொல்லி, 15 அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: பேயோரின் குமாரன் பிலேயாம் சொல்லுகிறதாவது, கண்திறக்கப்பட்டவன் உரைக்கிறதாவது, 16 தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வவல்லவரின் தரிசனத்தைக் கண்டு, தாழவிழும்போது, கண்திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது; 17 அவரைக் காண்பேன், இப்பொழுது அல்ல; அவரைத் தரிசிப்பேன், சமீபமாய் அல்ல; ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும், ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும்; அது மோவாபின் எல்லைகளை நொறுக்கி, சேத்புத்திரர் எல்லாரையும் நிர்மூலமாக்கும். 18 ஏதோம் சுதந்தரமாகும், சேயீர் தன் சத்துருக்களுக்குச் சுதந்தரமாகும்; இஸ்ரவேல் பராக்கிரமஞ்செய்யும். 19 யாக்கோபிலிருந்து தோன்றும் ஒருவர் ஆளுகை செய்வார்; பட்டணங்களில் மீதியானவர்களை அழிப்பார் என்றான். 20 மேலும், அவன் அமலேக்கைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: அமலேக்கு முந்தியெழும்பினவன்; ஆனாலும் அவன் முடிவிலே முற்றிலும் நாசமாவான் என்றான். 21 அன்றியும் அவன் கேனியனைப் பார்த்து, தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: உன் வாசஸ்தலம் அரணிப்பானது; உன் கூட்டைக் கன்மலையில் கட்டினாய். 22 ஆகிலும் கேனியன் அழிந்துபோவான்; அசூர் உன்னைச் சிறைபிடித்துக் கொண்டுபோக எத்தனைநாள் செல்லும் என்றான். 23 பின்னும் அவன் தன் வாக்கியத்தை எடுத்துரைத்து: ஐயோ, தேவன் இதைச் செய்யும்போது யார் பிழைப்பான்; 24 சித்தீமின் கரைதுறையிலிருந்து கப்பல்கள் வந்து, அசூரைச் சிறுமைப்படுத்தி, ஏபேரையும் வருத்தப்படுத்தும்; அவனும் முற்றிலும் அழிந்துபோவான் என்றான். 25 பின்பு பிலேயாம் எழுந்து புறப்பட்டு, தன் இடத்திற்குத் திரும்பினான்; பாலாகும் தன் வழியே போனான்.

எண்ணாகமம் 25

1 இஸ்ரவேல் சித்தீமிலே தங்கியிருக்கையில், ஜனங்கள் மோவாபின் குமாரத்திகளோடே வேசித்தனம் பண்ணத்தொடங்கினார்கள். 2 அவர்கள் தங்கள் தேவர்களுக்கு இட்ட பலிகளை விருந்துண்ணும்படி ஜனங்களை அழைத்தார்கள்; ஜனங்கள் போய்ப் புசித்து, அவர்கள் தேவர்களைப் பணிந்துகொண்டார்கள். 3 இப்படி இஸ்ரவேலர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது. 4 கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய உக்கிரமான கோபம் இஸ்ரவேலைவிட்டு நீங்கும்படி நீ ஜனங்களின் தலைவர் எல்லாரையும் கூட்டிக்கொண்டு, அப்படிச் செய்தவர்களைச் சூரியனுக்கு எதிரே கர்த்தருடைய சந்நிதானத்தில் தூக்கிப்போடும்படி செய் என்றார். 5 அப்படியே மோசே இஸ்ரவேலின் நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் அவரவர் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்ட உங்கள் மனிதரைக் கொன்றுபோடுங்கள் என்றான். 6 அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் அனைவரும் ஆசரிப்புக் கூடாரவாசலுக்கு முன்பாக அழுதுகொண்டு நிற்கையில், அவர்கள் கண்களுக்கு முன்பாக இஸ்ரவேல் புத்திரரில் ஒருவன் ஒரு மீதியானிய ஸ்திரீயைத் தன் சகோதரரிடத்திலே அழைத்துக்கொண்டுவந்தான். 7 அதை ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் கண்டபோது, அவன் நடுச்சபையிலிருந்து எழுந்து, ஒரு ஈட்டியைத் தன் கையிலே பிடித்து, 8 இஸ்ரவேலனாகிய அந்த மனிதன் வேசித்தனம்பண்ணும் அறையிலே அவன் பின்னாலே போய், இஸ்ரவேல் மனிதனும் அந்த ஸ்திரீயுமாகிய இருவருடைய வயிற்றிலும் ஈட்டி உருவிப்போக அவர்களைக் குத்திப்போட்டான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரில் உண்டான வாதை நின்றுபோயிற்று. 9 அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்துநாலாயிரம்பேர். 10 கர்த்தர் மோசேயை நோக்கி: 11 நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர்மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான். 12 ஆகையால், இதோ, அவனுக்கு என் சமாதானத்தின் உடன்படிக்கையைக் கட்டளையிடுகிறேன். 13 அவன் தன் தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று சொல் என்றார். 14 மீதியானிய ஸ்திரீயோடே குத்துண்டு செத்த இஸ்ரவேல் மனிதனுடைய பேர் சிம்ரி; அவன் சல்லூவின் குமாரனும், சிமியோனியரின் தகப்பன் வம்சத்தில் ஒரு பிரபுவுமாயிருந்தான். 15 குத்துண்ட மீதியானிய ஸ்திரீயின் பேர் கஸ்பி, அவள் சூரின் குமாரத்தி, அவன் மீதியானியருடைய தகப்பன் வம்சத்தாரான ஜனங்களுக்குத் தலைவனாயிருந்தான். 16 கர்த்தர் மோசேயை நோக்கி: 17 மீதியானியரை நெருக்கி அவர்களை வெட்டிப்போடுங்கள். 18 பேயோரின் சங்கதியிலும் பேயோரின் நிமித்தம் வாதையுண்டான நாளிலே குத்துண்ட அவர்கள் சகோதரியாகிய கஸ்பி என்னும் மீதியான் பிரபுவினுடைய குமாரத்தியின் சங்கதியிலும், அவர்கள் உங்களுக்குச் செய்த சர்ப்பனைகளினால் உங்களை மோசம்போக்கி நெருக்கினார்களே என்றார்.

எண்ணாகமம் 26

1 அந்த வாதை தீர்ந்தபின்பு, கர்த்தர் மோசேயையும் ஆரோனின் குமாரனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும் நோக்கி: 2 இஸ்ரவேல் புத்திரரின் சமஸ்த சபையாரையும் அவர்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இஸ்ரவேலிலே யுத்தத்திற்குப் புறப்படத்தக்கவர்கள் எல்லாரையும் எண்ணுங்கள் என்றார். 3 அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகே இருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளிலே அவர்களோடே பேசி: 4 கர்த்தர் மோசேக்கும் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருக்கும் கட்டளையிட்டிருக்கிறபடியே, இருபது வயதுமுதற்கொண்டிருக்கிறவர்களை எண்ணுங்கள் என்றார்கள். 5 ரூபன் இஸ்ரவேலின் மூத்த குமாரன்; ரூபனுடைய குமாரர், ஆனோக்கியர் குடும்பத்துக்குத் தகப்பனான ஆனோக்கும், பல்லூவியர் குடும்பத்துக்குத் தகப்பனான பல்லூவும், 6 எஸ்ரோனியர் குடும்பத்துக்குத் தகப்பனான எஸ்ரோனும், கர்மீயர் குடும்பத்துக்குத் தகப்பனான கர்மீயுமே. 7 இவைகளே ரூபனியரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்து மூவாயிரத்து எழுநூற்று முப்பதுபேர். 8 பல்லூவின் குமாரன் எலியாப். 9 எலியாபின் குமாரர் நேமுவேல், தாத்தான், அபிராம் என்பவர்கள்; இந்தத் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பேர்பெற்றவர்களாயிருந்து, கர்த்தருக்கு விரோதமாகப் போராட்டம் பண்ணி, கோராகின் கூட்டாளிகளாகி, மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக விவாதம்பண்ணினவர்கள். 10 பூமி தன் வாயைத் திறந்து, அவர்களையும் கோராகையும் விழுங்கினதினாலும், அக்கினி இருநூற்று ஐம்பதுபேரைப் பட்சித்ததினாலும், அந்தக் கூட்டத்தார் செத்து, ஒரு அடையாளமானார்கள். 11 கோராகின் குமாரரோ சாகவில்லை. 12 சிமியோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: நேமுவேலின் சந்ததியான நேமுவேலரின் குடும்பமும், யாமினின் சந்ததியான யாமினியரின் குடும்பமும், யாகீனின் சந்ததியான யாகீனியரின் குடும்பமும், 13 சேராகின் சந்ததியான சேராகியரின் குடும்பமும், சவுலின் சந்ததியான சவுலியரின் குடும்பமுமே. 14 இவைகளே சிமியோனியரின் குடும்பங்கள்; அவர்கள் இருபத்தீராயிரத்து இருநூறுபேர். 15 காத்துடைய குமாரரின் குடும்பங்களாவன: சிப்போனின் சந்ததியான சிப்போனியரின் குடும்பமும், ஆகியின் சந்ததியான ஆகியரின் குடும்பமும், சூனியின் சந்ததியான சூனியரின் குடும்பமும், 16 ஒஸ்னியின் சந்ததியான ஒஸ்னியரின் குடும்பமும், ஏரியின் சந்ததியான ஏரியரின் குடும்பமும், 17 ஆரோதின் சந்ததியான ஆரோதியரின் குடும்பமும், அரேலியின் சந்ததியான அரேலியரின் குடும்பமுமே. 18 இவைகளே காத் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பதினாயிரத்து ஐந்நூறுபேர். 19 யூதாவின் குமாரர் ஏர் ஓனான் என்பவர்கள்; ஏரும் ஓனானும் கானான் தேசத்தில் செத்தார்கள். 20 யூதாவுடைய மற்றக் குமாரரின் குடும்பங்களாவன: சேலாவின் சந்ததியான சேலாவியரின் குடும்பமும், பாரேசின் சந்ததியான பாரேசியரின் குடும்பமும், சேராவின் சந்ததியான சேராவியரின் குடும்பமுமே. 21 பாரேசுடைய குமாரரின் குடும்பங்களாவன: எஸ்ரோனின் சந்ததியான எஸ்ரோனியரின் குடும்பமும், ஆமூலின் சந்ததியான ஆமூலியரின் குடும்பமுமே. 22 இவைகளே யூதாவின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் எழுபத்தாறாயிரத்து ஐந்நூறுபேர். 23 இசக்காருடைய குமாரரின் குடும்பங்களாவன: தோலாவின் சந்ததியான தோலாவியரின் குடும்பமும், பூவாவின் சந்ததியான பூவாவியரின் குடும்பமும், 24 யாசூபின் சந்ததியான யாசூபியரின் குடும்பமும், சிம்ரோனின் சந்ததியான சிம்ரோனியரின் குடும்பமுமே. 25 இவைகளே இசக்காரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபத்து நாலாயிரத்து முந்நூறுபேர். 26 செபுலோனுடைய குமாரரின் குடும்பங்களாவன: சேரேத்தின் சந்ததியான சேரேத்தியரின் குடும்பமும், ஏலோனின் சந்ததியான ஏலோனியரின் குடும்பமும், யாலேயேலின் சந்ததியான யாலேயேலியரின் குடும்பமுமே. 27 இவைகளே செபுலோனியரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் அறுபதினாயிரத்து ஐந்நூறுபேர். 28 யோசேப்புடைய குமாரரான மனாசே எப்பிராயீம் என்பவர்களின் குடும்பங்களாவன: 29 மனாசேயினுடைய குமாரரின் குடும்பங்கள்; மாகீரின் சந்ததியான மாகீரியரின் குடும்பமும், மாகீர் பெற்ற கிலெயாதின் சந்ததியான கிலெயாதியரின் குடும்பமும், 30 கிலெயாத் பெற்ற ஈயேசேரின் சந்ததியான ஈயேசேரியரின் குடும்பமும், ஏலேக்கின் சந்ததியான ஏலேக்கியரின் குடும்பமும், 31 அஸ்ரியேலின் சந்ததியான அஸ்ரியேலரின் குடும்பமும், சேகேமின் சந்ததியான சேகேமியரின் குடும்பமும், 32 செமீதாவின் சந்ததியான செமீதாவியரின் குடும்பமும், ஏப்பேரின் சந்ததியான ஏப்பேரியரின் குடும்பமுமே. 33 ஏப்பேரின் குமாரனான செலொப்பியாத்திற்குக் குமாரர் இல்லாமல், குமாரத்திகள்மாத்திரம் இருந்தார்கள்; இவர்கள் நாமங்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள். 34 இவைகளே மனாசேயின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தீராயிரத்து எழுநூறுபேர். 35 எப்பிராயீமுடைய குமாரரின் குடும்பங்களாவன: சுத்தெலாகின் சந்ததியான சுத்தெலாகியரின் குடும்பமும், பெகேரின் சந்ததியான பெகேரியரின் குடும்பமும், தாகானின் சந்ததியான தாகானியரின் குடும்பமும், 36 சுத்தெலாக் பெற்ற ஏரானின் சந்ததியான ஏரானியரின் குடும்பமுமே. 37 இவைகளே எப்பிராயீம் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து ஐந்நூறுபேர்; இவர்களே யோசேப்பு புத்திரரின் குடும்பங்கள். 38 பென்யமீனுடைய குமாரரின் குடும்பங்களாவன: பேலாவின் சந்ததியான பேலாவியரின் குடும்பமும், அஸ்பேலின் சந்ததியான அஸ்பேலியரின் குடும்பமும், அகிராமின் சந்ததியான அகிராமியரின் குடும்பமும், 39 சுப்பாமின் சந்ததியான சுப்பாமியரின் குடும்பமும், உப்பாமின் சந்ததியான உப்பாமியரின் குடும்பமும், 40 பேலா பெற்ற ஆரேதின் சந்ததியான ஆரேதியரின் குடும்பமும், நாகமானின் சந்ததியான நாகமானியரின் குடும்பமுமே. 41 இவைகளே பென்யமீன் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து அறுநூறுபேர். 42 தாணுடைய குமாரரின் குடும்பங்களாவன: சூகாமின் சந்ததியான சூகாமியரின் குடும்பமே; இவைகள் தாணின் குடும்பம். 43 சூகாமியரின் வம்சங்களில் எண்ணப்பட்டவர்கள் எல்லாரும் அறுபத்து நாலாயிரத்து நானூறுபேர். 44 ஆசேருடைய குமாரரின் குடும்பங்களாவன: இம்னாவின் சந்ததியான இம்னாவியரின் குடும்பமும், இஸ்வியின் சந்ததியான இஸ்வியரின் குடும்பமும், பெரீயாவின் சந்ததியான பெரீயாவியரின் குடும்பமும், 45 பெரீயா பெற்ற ஏபேரின் சந்ததியான ஏபேரியரின் குடும்பமும், மல்கியேலின் சந்ததியான மல்கியேலியரின் குடும்பமுமே. 46 ஆசேருடைய குமாரத்தியின் பேர் சாராள். 47 இவைகளே ஆசேர் புத்திரரின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்து மூவாயிரத்து நானூறுபேர். 48 நப்தலியினுடைய குமாரரின் குடும்பங்களாவன: யாத்சியேலின் சந்ததியான யாத்சியேலியரின் குடும்பமும், கூனியின் சந்ததியான கூனியரின் குடும்பமும், 49 எத்செரின் சந்ததியான எத்செரியரின் குடும்பமும், சில்லேமின் சந்ததியான சில்லேமியரின் குடும்பமுமே. 50 இவைகளே நப்தலியின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் நாற்பத்தையாயிரத்து நானூறுபேர். 51 இஸ்ரவேல் புத்திரரில் எண்ணப்பட்டவர்கள் ஆறுலட்சத்தோராயிரத்து எழுநூற்று முப்பதுபேராயிருந்தார்கள். 52 கர்த்தர் மோசேயை நோக்கி: 53 இவர்களுடைய பேர்களின் இலக்கத்திற்குத்தக்கதாய் தேசம் இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிடப்படவேண்டும். 54 அநேகம்பேருக்கு அதிக சுதந்தரமும் கொஞ்சம்பேருக்குக் கொஞ்ச சுதந்தரமும் கொடுப்பாயாக; அவர்களில் எண்ணப்பட்ட இலக்கத்திற்குத்தக்கதாக அவரவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும். 55 ஆனாலும் சீட்டுப்போட்டு, தேசத்தைப் பங்கிடவேண்டும்; தங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களுக்குரிய நாமங்களின்படியே சுதந்தரித்துக்கொள்ளக்கடவர்கள். 56 அநேகம்பேர்களாயினும் கொஞ்சம்பேர்களாயினும் சீட்டு விழுந்தபடியே அவரவர்களுடைய சுதந்தரங்கள் பங்கிடப்படவேண்டும் என்றார். 57 எண்ணப்பட்ட லேவியரின் குடும்பங்களாவன: கெர்சோனின் சந்ததியான கெர்சோனியரின் குடும்பமும், கோகாத்தின் சந்ததியான கோகாத்தியரின் குடும்பமும், மெராரியின் சந்ததியான மெராரியரின் குடும்பமும்; 58 லேவியின் மற்றக் குடும்பங்களாகிய லிப்னீயரின் குடும்பமும், எப்ரோனியரின் குடும்பமும், மகலியரின் குடும்பமும், மூசியரின் குடும்பமும், கோராகியரின் குடும்பமுமே. கோகாத் அம்ராமைப் பெற்றான். 59 அம்ராமுடைய மனைவிக்கு யோகெபேத் என்று பேர்; அவள் எகிப்திலே லேவிக்குப் பிறந்த குமாரத்தி; அவள் அம்ராமுக்கு ஆரோனையும் மோசேயையும் அவர்கள் சகோதரியான மிரியாமையும் பெற்றாள். 60 ஆரோனுக்கு நாதாபும் அபியூவும் எலெயாசாரும் இத்தாமாரும் பிறந்தார்கள். 61 நாதாபும் அபியூவும் கர்த்தருடைய சந்நிதியில் அந்நிய அக்கினியைக் கொண்டுவந்தபோது, செத்துப்போனார்கள். 62 அவர்களில் ஒரு மாதத்து ஆண்பிள்ளை முதலாக எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம்பேர்; இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் புத்திரரின் இலக்கத்திற்கு உட்படவில்லை. 63 மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் எரிகோவின் அருகேயிருக்கும் யோர்தானுக்கு இப்பாலே மோவாபின் சமனான வெளிகளில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணுகிறபோது இருந்தவர்கள் இவர்களே. 64 முன்பு மோசேயும் ஆசாரியனாகிய ஆரோனும் சீனாய் வனாந்தரத்தில் இஸ்ரவேல் புத்திரரை எண்ணும்போது இருந்தவர்களில் ஒருவரும் இவர்களுக்குள் இல்லை. 65 வனாந்தரத்தில் சாகவே சாவார்கள் என்று கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாயிருக்கவில்லை.

எண்ணாகமம் 27

1 யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் குடும்பங்களில், மனாசேயின் குமாரனாகிய மாகீரின் மகனான கிலெயாத்துக்குப் பிறந்த ஏபேருக்குப் புத்திரனாயிருந்த செலோப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவர்கள் வந்து, 2 ஆசரிப்புக் கூடாரவாசலிலே மோசேக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், பிரபுக்களுக்கும், சபையனைத்திற்கும் முன்பாக நின்று: 3 எங்கள் தகப்பன் வனாந்தரத்தில் மரணமடைந்தார்; அவர் கர்த்தருக்கு விரோதமாகக் கூடின கோராகின் கூட்டத்தாரில் சேர்ந்தவர் அல்ல, தம்முடைய பாவத்தினாலே மரித்தார்; அவருக்குக் குமாரர் இல்லை. 4 எங்கள் தகப்பனுக்குக் குமாரன் இல்லாததினாலே, அவருடைய பேர் அவருடைய வம்சத்தில் இல்லாமல் அற்றுப்போகலாமா? எங்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே எங்களுக்குக் காணியாட்சி கொடுக்கவேண்டும் என்றார்கள். 5 மோசே அவர்களுடைய நியாயத்தைக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுபோனான். 6 அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: 7 செலோப்பியாத்தின் குமாரத்திகள் சொல்லுகிறது சரிதான்; அவர்களுக்கு அவர்கள் தகப்பனுடைய சகோதரருக்குள்ளே சுதந்தரம் கொடுக்கவேண்டும்; அவர்கள் தகப்பன் பின்வைத்த சுதந்தரத்தை அவர்களுக்குக் கிடைக்கும்படி செய்வாயாக. 8 மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒருவன் குமாரன் இல்லாமல் மரித்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் குமாரத்திக்குக் கொடுக்கவேண்டும். 9 அவனுக்குக் குமாரத்தியும் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் சகோதரருக்குக் கொடுக்கவேண்டும். 10 அவனுக்குச் சகோதரரும் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் தகப்பனுடைய சகோதரருக்குக் கொடுக்கவேண்டும். 11 அவன் தகப்பனுக்குச் சகோதரர் இல்லாதிருந்தால், அவனுக்குரிய சுதந்தரத்தை அவன் வம்சத்திலே அவனுக்குக் கிட்டின உறவின்முறையானுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கவேண்டும்; இது, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, இஸ்ரவேல் புத்திரருக்கு நியாயவிதிப்பிரமாணமாய் இருக்கக்கடவது என்று சொல் என்றார். 12 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இந்த அபாரீம் மலையில் ஏறி, நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்தைப் பார். 13 நீ அதைப் பார்த்தபின்பு, உன் சகோதரனாகிய ஆரோன் சேர்க்கப்பட்டதுபோல, நீயும் உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய்; 14 சபையார் வாக்குவாதம்பண்ணின சீன் வனாந்தரத்தில் தண்ணீருக்கடுத்த விஷயத்தில் அவர்கள் கண்களுக்கு முன்பாக என்னைப் பரிசுத்தம்பண்ணவேண்டிய நீங்கள் என் கட்டளையை மீறினீர்களே என்றார். இது சீன் வனாந்தரத்தில் காதேஸ் ஊர்அருகே உண்டான மேரிபாவின் தண்ணீருக்கடுத்த காரியமே. 15 அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: 16 கர்த்தருடைய சபை மேய்ப்பன் இல்லாத மந்தையைப்போல் இராதபடிக்கு, 17 அந்தச் சபைக்கு முன்பாகப் போக்கும் வரத்துமாய் இருக்கும்படிக்கும், அவர்களைப் போகவும் வரவும் பண்ணும்படிக்கும், மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய கர்த்தர் ஒரு புருஷனை அவர்கள்மேல் அதிகாரியாக ஏற்படுத்தவேண்டும் என்றான். 18 கர்த்தர் மோசேயை நோக்கி: ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா என்னும் நூனின் குமாரனை நீ தெரிந்துகொண்டு, அவன்மேல் உன் கையை வைத்து, 19 அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, அவர்கள் கண்களுக்கு முன்பாக அவனுக்குக் கட்டளைகொடுத்து, 20 இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படியும்படிக்கு, உன் கனத்தில் கொஞ்சம் அவனுக்குக் கொடு. 21 அவன் ஆசாரியனாகிய எலெயாசாருக்கு முன்பாக நிற்கக்கடவன்; அவனிமித்தம் அந்த ஆசாரியன் கர்த்தருடைய சந்நிதானத்தில் வந்து, ஊரீம் என்னும் நியாயத்தினாலே ஆலோசனை கேட்கக்கடவன்; அவருடைய கட்டளையின்படியே, அவனும் அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரராகிய சபையார் எல்லாரும் போகவும் அவருடைய கட்டளையின்படியே வரவும் வேண்டியது என்றார். 22 மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே யோசுவாவை அழைத்துக்கொண்டுபோய், அவனை ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் சபையனைத்திற்கும் முன்பாக நிறுத்தி, 23 அவன்மேல் தன் கைகளை வைத்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே அவனுக்குக் கட்டளைகொடுத்தான்.

எண்ணாகமம் 28

1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2 எனக்குச் சுகந்தவாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும் அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிடு. 3 மேலும் நீ அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குச் செலுத்தவேண்டிய தகனபலி என்னவென்றால்: நித்திய சர்வாங்க தகனபலியாக நாடோறும் ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளைப் பலியிடவேண்டும். 4 காலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும், மாலையில் ஒரு ஆட்டுக்குட்டியையும் பலியிட்டு, 5 போஜனபலியாக ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கானதும் இடித்துப் பிழிந்த காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமாகிய மெல்லிய மாவையும் செலுத்தக்கடவீர்கள். 6 இது சீனாய் மலையிலே கட்டளையிடப்பட்ட நித்திய சர்வாங்க தகனபலி; இது கர்த்தருக்குச் சுகந்த வாசனைக்கான தகனபலி. 7 காற்படி திராட்சரசம் ஒரு ஆட்டுக்குட்டிக்கு அடுத்த பானபலி; பரிசுத்த ஸ்தலத்திலே கர்த்தருக்கு அந்த இரசம் பானபலியாக வார்க்கப்படக்கடவது. 8 காலையின் போஜனபலிக்கும் அதின் பானபலிக்கும் ஒப்பாகவே மாலையில் மற்ற ஆட்டுக்குட்டியையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள். 9 ஓய்வுநாளிலோ போஜனபலிக்காக ஒரு வயதான பழுதற்ற இரண்டு ஆட்டுக்குட்டிகளையும், பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், அதின் பானபலியையும் செலுத்தக்கடவீர்கள். 10 நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியும் அதின் பானபலியும் அன்றி ஒவ்வொரு ஓய்வுநாளிலும் இந்தச் சர்வாங்க தகனபலியும் செலுத்தப்படவேண்டும். 11 உங்கள் மாதப்பிறப்புகளில் நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும் செலுத்தக்கடவீர்கள். 12 போஜனபலியாக ஒவ்வொரு காளைக்குப் பத்தில் மூன்றுபங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவையும், போஜனபலியாக ஒரு ஆட்டுக்கடாவுக்குப் பத்தில் இரண்டு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும், 13 போஜனபலியாக ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள். 14 அவைகளுக்கேற்ற பானபலிகள் திராட்சரசத்தில் காளைக்கு அரைப்படியும், ஆட்டுக்கடாவுக்குப் படியில் மூன்றில் ஒரு பங்கும், ஆட்டுக்குட்டிக்குக் காற்படி ரசமுமாயிருக்கவேண்டும்; இது வருஷ முழுவதும் மாதந்தோறும் செலுத்தப்படவேண்டிய சர்வாங்க தகனபலி. 15 நித்தமும் இடப்படும் சர்வாங்க தகனபலியும் அதின் பானபலியும் அன்றி, பாவநிவாரணபலியாகக் கர்த்தருக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும் செலுத்தப்படவேண்டும். 16 முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா. 17 அந்த மாதம் பதினைந்தாம் தேதி பண்டிகைநாள்; ஏழுநாளளவும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும். 18 முதலாம் நாளிலே பரிசுத்த சபை கூடுதல் இருக்கவேண்டும்; அன்றைத்தினம் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது. 19 அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், 20 அவைகளுக்கேற்ற போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும், 21 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும், 22 உங்கள் பாவநிவிர்த்திக்கென்று பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். 23 காலையிலே நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியையும் அன்றி இவைகளையும் செலுத்தக்கடவீர்கள். 24 இந்தப்பிரகாரம் ஏழுநாளளவும் நாடோறும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தக்கடவீர்கள்; நித்தமும் செலுத்தப்படும் சர்வாங்க தகனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இதையும் செலுத்தவேண்டும். 25 ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது. 26 அந்த வாரங்களுக்குப்பின் நீங்கள் கர்த்தருக்குப் புதிய போஜனபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது. 27 அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான ஏழு ஆட்டுக்குட்டிகளையும், 28 அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும், 29 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும், 30 உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். 31 நித்திய சர்வாங்க தகனபலியையும் அதின் போஜனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்; இவைகள் பழுதற்றவைகளாயிருக்கவேண்டும்.

எண்ணாகமம் 29

1 ஏழாம் மாதம் முதல்தேதி பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; அது உங்களுக்கு எக்காளமூதும் நாளாயிருக்கவேண்டும். 2 அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், 3 அவைகளுக்கு அடுத்த போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும், 4 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும், 5 உங்கள் பாவநிவிர்த்திக்கான பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி, 6 மாதப்பிறப்பின் சர்வாங்க தகனபலியையும் அதின் போஜனபலியையும், தினந்தோறும் இடும் சர்வாங்க தகனபலியையும் அதின் போஜனபலியையும், அவைகளின் முறைமைக்கேற்ற பானபலிகளையும் அன்றி, இவைகளையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள். 7 இந்த ஏழாம் மாதம் பத்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதிலே நீங்கள் யாதொரு வேலையும் செய்யாமல், உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, 8 கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், 9 அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும், 10 ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும், 11 பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி, பாவநிவாரணபலியையும், நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள். 12 ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; ஏழுநாள் கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கக்கடவீர்கள். 13 நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள சர்வாங்க தகனபலியாக பதின்மூன்று காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், 14 அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே அந்தப் பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த இரண்டு ஆட்டுக்கடாக்களில் ஒவ்வொன்றிற்காக இரண்டு பங்கையும், 15 பதினான்கு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும், 16 நித்திய தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். 17 இரண்டாம் நாளிலே பன்னிரண்டு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், 18 காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும், 19 நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். 20 மூன்றாம் நாளிலே பதினொரு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், 21 காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும், 22 நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். 23 நான்காம் நாளிலே பத்துக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், 24 காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும், 25 நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். 26 ஐந்தாம் நாளிலே ஒன்பது காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், 27 காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும், 28 நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். 29 ஆறாம் நாளிலே எட்டுக் காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், 30 காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும், 31 நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலிகளையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். 32 ஏழாம் நாளிலே ஏழு காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒரு வயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும், 33 காளைகளும் ஆட்டுக்கடாக்களும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும், 34 நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். 35 எட்டாம் நாள் உங்களுக்கு விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது. 36 அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள தகனமான சர்வாங்க தகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒரு வயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும், 37 காளையும் ஆட்டுக்கடாவும் ஆட்டுக்குட்டிகளும் இருக்கிற இலக்கத்திற்குத்தக்கதாக முறைமையின்படி அவைகளின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும், 38 நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள். 39 உங்கள் பொருத்தனைகளையும், உங்கள் உற்சாகபலிகளையும், உங்கள் சர்வாங்க தகனபலிகளையும், உங்கள் போஜனபலிகளையும், உங்கள் பானபலிகளையும், உங்கள் சமாதானபலிகளையும் அன்றி, நீங்கள் உங்கள் பண்டிகைகளிலே கர்த்தருக்குச் செலுத்தவேண்டியவைகள் இவைகளே என்று சொல் என்றார். 40 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்.

எண்ணாகமம் 30

1 மோசே இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் தலைவரை நோக்கி: கர்த்தர் கட்டளையிடுவது என்னவென்றால்: 2 ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன். 3 தன் தகப்பன் வீட்டிலிருக்கிற ஒரு பெண்பிள்ளை தன் சிறுவயதிலே கர்த்தருக்குப் பொருத்தனைபண்ணி யாதொரு காரியத்தைச் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டால், 4 அவள் செய்த பொருத்தனையையும், அவள் பண்ணிக்கொண்ட நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்டும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருப்பானானால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் நிறைவேறவேண்டும். 5 அவள் செய்த பொருத்தனைகளையும், அவள் செய்யும்படி தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையையும் அவளுடைய தகப்பன் கேட்கிற நாளில் அவன் வேண்டாம் என்று தடுத்தால், அது நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய தகப்பன் வேண்டாம் என்று தடுத்தபடியால், கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார். 6 அவள் பொருத்தனை பண்ணும்போதும், தன் உதடுகளைத் திறந்து தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளும்போதும், அவளுக்குப் புருஷன் இருந்தால், 7 அப்பொழுது அவளுடைய புருஷன் அதைக் கேட்டிருந்தும், அதைக் கேள்விப்படுகிற நாளில் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தால், அவளுடைய பொருத்தனைகளும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின நிபந்தனையும் நிறைவேறவேண்டும். 8 அவளுடைய புருஷன் அதைக் கேட்கிற நாளில் அவன் வேண்டாம் என்று தடுத்து, அவள் செய்த பொருத்தனையும் அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்ட நிபந்தனையும் செல்லாதபடி செய்தானேயானால், அப்பொழுது கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார். 9 ஒரு விதவையாவது, தள்ளப்பட்டுப்போன ஒரு ஸ்திரீயாவது தன் ஆத்துமாவை எந்த நிபந்தனைக்குட்படுத்திக்கொள்ளுகிறாளோ அந்த நிபந்தனை நிறைவேறவேண்டும். 10 அவள் தன் புருஷனுடைய வீட்டில் யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், 11 அவளுடைய புருஷன் அதைக் கேட்டும் அவளுக்கு அதை வேண்டாமென்று தடுக்காமல் மவுனமாயிருந்தால், அவள் செய்த எல்லாப் பொருத்தனைகளும், அவள் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்தின எல்லா நிபந்தனைகளும் நிறைவேறவேண்டும். 12 அவளுடைய புருஷன் அவைகளைக் கேட்ட நாளில் அவைகளைச் செல்லாதபடி பண்ணினால், அப்பொழுது அவள் செய்த பொருத்தனைகளும், அவள் தன் ஆத்துமாவையுட்படுத்தின நிபந்தனையைக்குறித்து அவள் வாயிலிருந்து புறப்பட்டதொன்றும் நிறைவேறவேண்டியதில்லை; அவளுடைய புருஷன் அவைகளைச் செல்லாதபடி பண்ணினதினாலே கர்த்தர் அதை அவளுக்கு மன்னிப்பார். 13 எந்தப் பொருத்தனையையும், ஆத்துமாவைத் தாழ்மைப்படுத்தும்படி செய்யப்பட்ட எந்த ஆணையையும், அவளுடைய புருஷன் ஸ்திரப்படுத்தவுங்கூடும், செல்லாதபடி பண்ணவும் கூடும். 14 அவளுடைய புருஷன் ஒருநாளும் அவளுக்கு ஒன்றும் சொல்லாதிருந்தானாகில், அவன் அவளுடைய எல்லாப் பொருத்தனைகளையும், அவள்பேரிலிருக்கிற அவளுடைய எல்லா நிபந்தனைகளையும் ஸ்திரப்படுத்துகிறான்; அவன் அதைக் கேட்ட நாளிலே அவளுக்கு ஒன்றும் சொல்லாமற் போனதினால், அவைகளை ஸ்திரப்படுத்துகிறான். 15 அவன் அவைகளைக் கேட்டபின்பு செல்லாதபடி பண்ணினால், அவளுடைய அக்கிரமத்தை அவன் சுமப்பான் என்றார். 16 புருஷனையும் ஸ்திரீயையும், தகப்பனையும் தகப்பனுடைய வீட்டில் சிறுவயதில் இருக்கிற அவன் குமாரத்தியையும் குறித்து, கர்த்தர் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே.

எண்ணாகமம் 31

1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2 இஸ்ரவேல் புத்திரர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்குவாயாக; அதன்பின்பு உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய் என்றார். 3 அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: கர்த்தர் நிமித்தம் மீதியானியரிடத்தில் பழிவாங்கும்பொருட்டு, உங்களில் அவர்கள்மேல் யுத்தத்திற்குப் போகத்தக்கதாக மனிதரைப் பிரித்தெடுங்கள். 4 இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரம்பேரை யுத்தத்திற்கு அனுப்பவேண்டும் என்றான். 5 அப்படியே இஸ்ரவேலராகிய அநேகம் ஆயிரங்களில், ஒவ்வொரு கோத்திரத்தில் ஆயிரமாயிரம் பேராகப் பன்னீராயிரம்பேர் யுத்தசன்னத்தராய் நிறுத்தப்பட்டார்கள். 6 மோசே அவர்களையும் ஆசாரியனாகிய எலெயாசாரின் குமாரன் பினெகாசையும் யுத்தத்திற்கு அனுப்புகையில், அவன் கையிலே பரிசுத்த தட்டுமுட்டுகளையும், தொனிக்கும் பூரிகைகளையும் கொடுத்து அனுப்பினான். 7 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் மீதியானியருடன் யுத்தம்பண்ணி, புருஷர்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள். 8 அவர்களைக் கொன்றுபோட்டதும் அன்றி, மீதியானியரின் ஐந்து ராஜாக்களாகிய ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்பவர்களையும் கொன்றுபோட்டார்கள். பேயோரின் குமாரனாகிய பிலேயாமையும் பட்டயத்தினாலே கொன்றுபோட்டார்கள். 9 அன்றியும் இஸ்ரவேல் புத்திரர் மீதியானியரின் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய மிருகஜீவன்களாகிய ஆடுமாடுகள் யாவையும், மற்ற ஆஸ்திகள் யாவையும் கொள்ளையிட்டு, 10 அவர்கள் குடியிருந்த ஊர்கள் கோட்டைகள் யாவையும் அக்கினியால் சுட்டெரித்து, 11 தாங்கள் கொள்ளையிட்ட பொருளையும் தாங்கள் பிடித்த நரஜீவன் மிருகஜீவன் அனைத்தையும் சேர்த்து, 12 சிறைபிடிக்கப்பட்ட மனிதரையும், மிருகங்களையும், கொள்ளையிட்ட பொருள்களையும் எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இக்கரையில் மோவாபின் சமனான வெளிகளிலுள்ள பாளயத்திலிருந்த மோசேயினிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாரினிடத்துக்கும், இஸ்ரவேல் புத்திரராகிய சபையாரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள். 13 மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையின் பிரபுக்கள் எல்லாரும் அவர்களைச் சந்திக்கப் பாளயத்திற்கு வெளியே புறப்பட்டுப்போனார்கள். 14 அப்பொழுது மோசே யுத்தத்திலிருந்து வந்த ஆயிரம்பேருக்குத் தலைவரும், நூறுபேருக்குத் தலைவருமாகிய சேனாபதிகள்மேல் கோபங்கொண்டு, 15 அவர்களை நோக்கி: ஸ்திரீகள் எல்லாரையும் உயிரோடே விட்டுவிட்டீர்களா? 16 பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே. 17 ஆகையால் குழந்தைகளில் எல்லா ஆண்பிள்ளைகளையும், புருஷசம்யோகத்தை அறிந்த எல்லா ஸ்திரீகளையும் கொன்றுபோடுங்கள். 18 ஸ்திரீகளில் புருஷசம்யோகத்தை அறியாத எல்லாப் பெண்பிள்ளைகளையும் உங்களுக்காக உயிரோடே வையுங்கள். 19 பின்பு நீங்கள் ஏழுநாள் பாளயத்திற்குப் புறம்பே தங்குங்கள்; நரஜீவனைக் கொன்றவர்களும், வெட்டுண்டவர்களைத் தொட்டவர்களுமாகிய நீங்கள் யாவரும் மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் உங்களையும் உங்களால் சிறைபிடிக்கப்பட்டவர்களையும் சுத்திகரித்து, 20 அந்தப்படியே எல்லா வஸ்திரத்தையும், தோலால் செய்த கருவிகளையும், வெள்ளாட்டுமயிரினால் நெய்தவைகளையும், மரச்சாமான்களையும் சுத்திகரிக்கக்கடவீர்கள் என்றான். 21 ஆசாரியனாகிய எலெயாசாரும் யுத்தத்திற்குப் போய்வந்த படைவீரரை நோக்கி: கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட விதிப்பிரமாணம் என்னவென்றால்: 22 அக்கினிக்கு நிற்கத்தக்கவைகளாகிய பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம், ஈயம் ஆகிய இவைகளெல்லாம் சுத்தமாகும்படிக்கு, 23 அவைகளை அக்கினியிலே போட்டெடுக்கக்கடவீர்கள்; தீட்டுக்கழிக்கும் தண்ணீராலும் அவைகள் சுத்திகரிக்கப்படவேண்டும்; அக்கினிக்கு நிற்கத்தகாதவைகளையெல்லாம் தண்ணீரினால் சுத்தம்பண்ணக்கடவீர்கள். 24 ஏழாம் நாளில் உங்கள் வஸ்திரங்களைத் தோய்க்கவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருப்பீர்கள்; பின்பு நீங்கள் பாளயத்திற்குள் வரலாம் என்றான். 25 கர்த்தர் மோசேயை நோக்கி: 26 பிடித்துக்கொண்டு வரப்பட்ட மனிதரையும் மிருகங்களையும் நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சபையினுடைய பிதாக்களாகிய தலைவரும் தொகைபார்த்து, 27 கொள்ளையிடப்பட்டதை இரண்டு பங்காகப் பங்கிட்டு, யுத்தத்திற்குப் படையெடுத்துப்போனவர்களுக்கும் சபையனைத்திற்கும் கொடுங்கள். 28 மேலும் யுத்தத்திற்குப்போன படைவீரரிடத்தில் கர்த்தருக்காக மனிதரிலும் மாடுகளிலும் கழுதைகளிலும் ஆடுகளிலும் ஐந்நூற்றிற்கு ஒரு பிராணி வீதமாக பகுதி வாங்கி, 29 அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் படைப்பாக ஆசாரியனாகிய எலெயாசாருக்குக் கொடுக்கவேண்டும். 30 இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்கிலோ மனிதரிலும், மாடுகள் கழுதைகள் ஆடுகளாகிய சகலவித மிருகங்களிலும், ஐம்பதிற்கு ஒன்று வீதமாய் வாங்கி, அவைகளைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக்காக்கும் லேவியருக்குக் கொடுக்கவேண்டும் என்றார். 31 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் செய்தார்கள். 32 படைவீரர் கொள்ளையிட்ட பொருளில், ஆறுலட்சத்து எழுபத்தையாயிரம் ஆடுகளும், 33 எழுபத்தீராயிரம் மாடுகளும், 34 அறுபத்தோராயிரம் கழுதைகளும் மீதியாயிருந்தது. 35 புருஷசம்யோகத்தை அறியாத ஸ்திரீகளில் முப்பத்தீராயிரம்பேர் இருந்தார்கள். 36 யுத்தஞ்செய்யப் போனவர்களுக்குக் கிடைத்த பாதிப்பங்கின் தொகையாவது: ஆடுகள் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு. 37 இந்த ஆடுகளிலே கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுநூற்று எழுபத்தைந்து. 38 மாடுகள் முப்பத்தாறாயிரம்; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது எழுபத்திரண்டு. 39 கழுதைகள் முப்பதினாயிரத்து ஐந்நூறு; அவைகளில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தது அறுபத்தொன்று. 40 நரஜீவன்கள் பதினாறாயிரம் பேர்; அவர்களில் கர்த்தருக்குப் பகுதியாக வந்தவர்கள் முப்பத்திரண்டுபேர். 41 கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் அந்தப் பகுதியை, மோசே கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, ஆசாரியனாகிய எலெயாசாரிடத்தில் கொடுத்தான். 42 யுத்தம்பண்ணின பேர்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் மோசே பாதி பாதியாகப் பங்கிட்டதின்படியே சபையாருக்கு வந்த பாதிப்பங்காவது: 43 ஆடுகளில் மூன்றுலட்சத்து முப்பத்தேழாயிரத்து ஐந்நூறு, 44 மாடுகளில் முப்பத்தாறாயிரம், 45 கழுதைகளில் முப்பதினாயிரத்து ஐந்நூறு, 46 நரஜீவன்களில் பதினாறாயிரம் பேருமே. 47 இஸ்ரவேல் புத்திரரின் பாதிப்பங்குக்கு வந்த இந்த நரஜீவன்களிலும் மிருகங்களிலும் மோசே ஐம்பதுக்கு ஒன்று வீதமாக எடுத்து, அவைகளைக் கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே, கர்த்தருடைய வாசஸ்தலத்தின் காவலைக் காக்கிற லேவியருக்குக் கொடுத்தான். 48 பின்பு ஆயிரம்பேருக்குத் தலைவரும் நூறுபேருக்குத் தலைவருமான சேனாபதிகள் மோசேயினிடத்தில் வந்து, 49 உமது ஊழியக்காரராகிய நாங்கள் எங்கள் கையின் கீழிருக்கிற யுத்தமனிதரைத் தொகைபார்த்தோம்; அவர்களுக்குள்ளே ஒரு ஆளும் குறையவில்லை. 50 ஆகையால், கர்த்தருடைய சந்நிதியில் எங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, எங்களுக்குக் கிடைத்த பொற்பணிகளாகிய பாதசரங்களையும், அஸ்தகடகங்களையும், மோதிரங்களையும், காதணிகளையும், காப்புகளையும் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தோம் என்றார்கள். 51 அப்பொழுது மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் சகலவித வேலைப்பாடான பணிதிகளான அந்தப் பொன்னாபரணங்களை அவர்களிடத்தில் வாங்கினார்கள். 52 இப்படி ஆயிரம்பேருக்குத் தலைவரானவர்களாலும் நூறுபேருக்குத் தலைவரானவர்களாலும் கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையாகச் செலுத்தப்பட்ட பொன் முழுவதும் பதினாறாயிரத்து எழுநூற்று ஐம்பது சேக்கல் நிறையாயிருந்தது. 53 யுத்தத்திற்குப் போன மனிதர் ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்காகக் கொள்ளையிட்டிருந்தார்கள். 54 அந்தப் பொன்னை மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஆயிரம் பேருக்குத் தலைவரானவர்களின் கையிலும், நூறுபேருக்குத் தலைவரானவர்களின் கையிலும் வாங்கி, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாக ஆசரிப்புக் கூடாரத்திலே கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து வைத்தார்கள்.

எண்ணாகமம் 32

1 ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும் கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது, அது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடமென்று கண்டார்கள். 2 ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் வந்து, மோசேயையும் ஆசாரியனாகிய எலெயாசாரையும் சபையின் பிரபுக்களையும் நோக்கி: 3 கர்த்தர் இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறிய அடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம். 4 உமது அடியாருக்கு ஆடுமாடுகள் உண்டு. 5 உம்முடைய கண்களில் எங்களுக்குத் தயை கிடைத்ததானால், எங்களை யோர்தான் நதிக்கு அப்புறம் கடந்துபோகப் பண்ணீராக; இந்த நாட்டை உமது அடியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கவேண்டும் என்றார்கள். 6 அப்பொழுது மோசே காத் புத்திரரையும் ரூபன் புத்திரரையும் நோக்கி: உங்கள் சகோதரர் யுத்தத்திற்குப் போகையில், நீங்கள் இங்கே இருப்பீர்களோ? 7 கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுத்த தேசத்திற்கு அவர்கள் போகாதபடிக்கு, நீங்கள் அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணுகிறதென்ன? 8 அந்த தேசத்தைப் பார்ப்பதற்கு நான் உங்கள் பிதாக்களைக் காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது அவர்களும் இப்படியே செய்தார்கள். 9 அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அத்தேசத்தைப் பார்த்துவந்து, இஸ்ரவேல் புத்திரர் கர்த்தர் தங்களுக்குக் கொடுத்த தேசத்திற்குப் போகாதபடிக்கு அவர்கள் இருதயத்தைத் திடனற்றுப்போகப்பண்ணினார்கள். 10 அதினால் கர்த்தர் அந்நாளிலே கோபம் மூண்டவராகி: 11 உத்தமமாய் என்னைப் பின்பற்றின கேனேசியனான எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர, 12 எகிப்திலிருந்து வந்தவர்களில் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட மனிதர்களில் ஒருவரும் என்னை உத்தமமாய்ப் பின்பற்றாதபடியால், அவர்கள் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தைக் காண்பதில்லை என்று ஆணையிட்டிருக்கிறார். 13 அப்படியே கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலின்மேல் மூண்டது; கர்த்தருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்த அந்தச் சந்ததியெல்லாம் நிர்மூலமாகுமட்டும் அவர்களை வனாந்தரத்திலே நாற்பது வருஷம் அலையப்பண்ணினார். 14 இப்பொழுதும் இதோ இஸ்ரவேலர்மேலிருக்கும் கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்தை இன்னும் அதிகரிக்கப்பண்ணும்படி, நீங்கள் உங்கள் பிதாக்களின் ஸ்தானத்திலே பாவமுள்ள பெருங்கூட்டமாய் எழும்பியிருக்கிறீர்கள். 15 நீங்கள் அவரைவிட்டுப் பின்வாங்கினால், அவர் இன்னும் அவர்களை வனாந்தரத்தில் இருக்கப்பண்ணுவார்; இப்படி நீங்கள் இந்த ஜனங்களையெல்லாம் அழியப்பண்ணுவீர்கள் என்றான். 16 அப்பொழுது அவர்கள் அவன் சமீபத்தில் வந்து: எங்கள் ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும், எங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும் இங்கே கட்டுவோம். 17 நாங்களோ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் ஸ்தானத்திலே கொண்டுபோய்ச் சேர்க்குமளவும், யுத்தசன்னத்தராய்த் தீவிரத்தோடே அவர்களுக்கு முன்பாக நடப்போம்; எங்கள் பிள்ளைகள் இத்தேசத்துக் குடிகளினிமித்தம் அரணான பட்டணங்களிலே குடியிருக்கக் கேட்டுக்கொள்ளுகிறோம். 18 இஸ்ரவேல் புத்திரர் யாவரும் தங்கள் தங்கள் சுதந்தரத்தைச் சுதந்தரித்துக் கொள்ளும்வரைக்கும், நாங்கள் எங்கள் வீடுகளுக்குத் திரும்புவதில்லை. 19 யோர்தானுக்கு இப்புறத்தில் கிழக்கே எங்களுக்குச் சுதந்தரம் உண்டானபடியினாலே, நாங்கள் அவர்களோடேகூட யோர்தானுக்கு அக்கரையிலும், அதற்கு அப்புறத்திலும் சுதந்தரம் வாங்கமாட்டோம் என்றார்கள். 20 அப்பொழுது மோசே அவர்களை நோக்கி: நீங்கள் இந்த வார்த்தையின்படியே செய்து, கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராகி, 21 கர்த்தர் தம்முடைய சத்துருக்களைத் தம்முடைய முகத்திற்கு முன்னின்று துரத்திவிடுமளவும், நீங்கள் யாவரும் அவருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய் யோர்தானைக் கடந்துபோவீர்களானால், 22 அத்தேசம் கர்த்தருக்கு முன்பாக வசப்படுத்தப்பட்டபின்பு, நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருக்கு முன்பாகவும், இஸ்ரவேலருக்கு முன்பாகவும், குற்றமில்லாதிருப்பீர்கள்; அதற்குப்பின்பு இந்த தேசம் கர்த்தருக்கு முன்பாக உங்களுக்குச் சுதந்தரமாகும். 23 நீங்கள் இப்படிச் செய்யாமற்போனால், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்தவர்களாயிருப்பீர்கள்; உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் என்று நிச்சயமாய் அறியுங்கள். 24 உங்கள் பிள்ளைகளுக்காகப் பட்டணங்களையும், உங்கள் ஆடுமாடுகளுக்காகத் தொழுவங்களையும் கட்டி, உங்கள் வாய்மொழியின்படியே செய்யுங்கள் என்றான். 25 அப்பொழுது காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் மோசேயை நோக்கி: எங்கள் ஆண்டவன் கட்டளையிட்டபடியே உமது ஊழியக்காரராகிய நாங்கள் செய்வோம். 26 எங்கள் பிள்ளைகளும் எங்கள் மனைவிகளும், எங்கள் ஆடுமாடு முதலான எங்களுடைய எல்லா மிருகஜீவன்களோடும், இங்கே கீலேயாத்தின் பட்டணங்களில் இருப்பார்கள். 27 உமது ஊழியக்காரராகிய நாங்களோ எங்கள் ஆண்டவன் சொன்னபடியே, ஒவ்வொருவரும் யுத்தசன்னத்தராய், கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்குப் போவோம் என்றார்கள். 28 அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும், இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு: 29 காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் அவரவர் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய் உங்களோடேகூட யோர்தானைக் கடந்துபோனால், அத்தேசம் உங்களுக்கு வசப்பட்டபின்பு, அவர்களுக்குக் கீலேயாத் தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுக்கக்கடவீர்கள். 30 உங்களோடேகூட யுத்தசன்னத்தராய்க் கடந்து போகாதிருந்தார்களேயானால், அவர்கள் உங்கள் நடுவே கானான் தேசத்திலே சுதந்தரம் அடையக்கடவர்கள் என்றான். 31 காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் பிரதியுத்தரமாக: உம்முடைய ஊழியக்காரராகிய நாங்கள் கர்த்தர் எங்களுக்குச் சொன்னபடியே செய்வோம். 32 யோர்தானுக்கு இக்கரையிலே எங்கள் சுதந்தரத்தின் காணியாட்சி எங்களுக்கு உரியதாகும்படி நாங்கள் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய்க் கானான்தேசத்திற்குப் போவோம் என்றார்கள். 33 அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்யத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்யத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான். 34 பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர், 35 ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா, 36 பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் அரணான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள். 37 ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம், 38 பேர்கள் மாற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பேர்களைக் கொடுத்தார்கள். 39 மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் கீலேயாத்திற்குப் போய், அதைக்கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள். 40 அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள். 41 மனாசேயின் குமாரனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பேரிட்டான். 42 நோபாக் போய், கேனாத்தையும் அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே நோபாக் என்று பேரிட்டான்.

எண்ணாகமம் 33

1 மோசே ஆரோன் என்பவர்களுடைய கையின்கீழ்த் தங்கள்தங்கள் சேனைகளின்படியே எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருடைய பிரயாணங்களின் விபரம்: 2 மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் புறப்பட்டபிரகாரமாக அவர்களுடைய பிரயாணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டுப்பண்ணின பிரயாணங்களாவன: 3 முதலாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியிலே அவர்கள் ராமசேசை விட்டுப் புறப்பட்டார்கள்; பஸ்காவுக்கு மறுநாளிலே, எகிப்தியர் எல்லாரும் பார்க்க, இஸ்ரவேல் புத்திரர் பெலத்தகையுடன் புறப்பட்டார்கள். 4 அப்பொழுது எகிப்தியர் கர்த்தர் தங்களுக்குள்ளே சங்கரித்த தலைச்சன்பிள்ளைகளையெல்லாம் அடக்கம்பண்ணினார்கள்; அவர்கள் தேவர்களின்பேரிலும் கர்த்தர் நீதிசெலுத்தினார். 5 பின்பு இஸ்ரவேல் புத்திரர் ராமசேசிலிருந்து புறப்பட்டுப்போய், சுக்கோத்திலே பாளயமிறங்கினார்கள். 6 சுக்கோத்திலிருந்து புறப்பட்டுப்போய், வனாந்தரத்தின் எல்லையிலிருக்கிற ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள். 7 ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன்பாகப் பாளயமிறங்கினார்கள். 8 ஈரோத்தை விட்டுப் புறப்பட்டு, சமுத்திரத்தை நடுவாகக் கடந்து வனாந்தரத்திற்குப்போய், ஏத்தாம் வனாந்தரத்திலே மூன்றுநாள் பிரயாணம்பண்ணி, மாராவிலே பாளயமிறங்கினார்கள். 9 மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்குப் போனார்கள்; ஏலிமிலே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே பாளயமிறங்கினார்கள். 10 ஏலிமிலிருந்து புறப்பட்டு, சிவந்த சமுத்திரத்தின் அருகே பாளயமிறங்கினார்கள். 11 சிவந்த சமுத்திரத்தை விட்டுப் புறப்பட்டுப்போய், சீன்வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள். 12 சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப்போய், தொப்காவிலே பாளயமிறங்கினார்கள். 13 தொப்காவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆலூசிலே பாளயமிறங்கினார்கள். 14 ஆலூசிலிருந்து புறப்பட்டுப்போய், ரெவிதீமிலே பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது. 15 ரெவிதீமிலிருந்து புறப்பட்டுப்போய், சீனாய் வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள். 16 சீனாய் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப்போய், கிப்ரோத் அத்தாவிலே பாளயமிறங்கினார்கள். 17 கிப்ரோத் அத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆஸரோத்திலே பாளயமிறங்கினார்கள். 18 ஆஸரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், ரித்மாவிலே பாளயமிறங்கினார்கள். 19 ரித்மாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரிம்மோன்பேரேசிலே பாளயமிறங்கினார்கள். 20 ரிம்மோன்பேரேசிலிருந்து புறப்பட்டுப்போய், லிப்னாவிலே பாளயமிறங்கினார்கள். 21 லிப்னாவிலிருந்து புறப்பட்டுப்போய், ரீசாவிலே பாளயமிறங்கினார்கள். 22 ரீசாவிலிருந்து புறப்பட்டுப்போய், கேலத்தாவிலே பாளயமிறங்கினார்கள். 23 கேலத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், சாப்பேர் மலையிலே பாளயமிறங்கினார்கள். 24 சாப்பேர் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், ஆரதாவிலே பாளயமிறங்கினார்கள். 25 ஆரதாவிலிருந்து புறப்பட்டுப்போய், மக்கெலோத்திலே பாளயமிறங்கினார்கள். 26 மக்கெலோத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாகாத்திலே பாளயமிறங்கினார்கள். 27 தாகாத்திலிருந்து புறப்பட்டுப்போய், தாராகிலே பாளயமிறங்கினார்கள். 28 தாராகிலிருந்து புறப்பட்டுப்போய், மித்காவிலே பாளயமிறங்கினார்கள். 29 மித்காவிலிருந்து புறப்பட்டுப்போய், அஸ்மோனாவிலே பாளயமிறங்கினார்கள். 30 அஸ்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், மோசெரோத்திலே பாளயமிறங்கினார்கள். 31 மோசெரோத்திலிருந்து புறப்பட்டுப்போய், பெனெயாக்கானிலே பாளயமிறங்கினார்கள். 32 பெனெயாக்கானிலிருந்து புறப்பட்டுப்போய், கித்காத் மலையிலே பாளயமிறங்கினார்கள். 33 கித்காத் மலையிலிருந்து புறப்பட்டுப்போய், யோத்பாத்தாவிலே பாளயமிறங்கினார்கள். 34 யோத்பாத்தாவிலிருந்து புறப்பட்டுப்போய், எப்ரோனாவிலே பாளயமிறங்கினார்கள். 35 எப்ரோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், எசியோன் கேபேரிலே பாளயமிறங்கினார்கள். 36 எசியோன் கேபேரிலிருந்து புறப்பட்டுப்போய், காதேசாகிய சீன்வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள். 37 காதேசிலிருந்து புறப்பட்டுப்போய், ஏதோம் தேசத்தின் எல்லையிலிருக்கிற ஓர் என்னும் மலையிலே பாளயமிறங்கினார்கள். 38 அப்பொழுது ஆசாரியனாகிய ஆரோன் கர்த்தருடைய கட்டளையின்படியே ஓர் என்னும் மலையின்மேல் ஏறி, அங்கே இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாற்பதாம் வருஷம் ஐந்தாம் மாதம் முதல் தேதியிலே மரணமடைந்தான். 39 ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, நூற்றிருபத்துமூன்று வயதாயிருந்தான். 40 அந்நாட்களிலே கானான் தேசத்தின் தென்திசையில் குடியிருந்த கானானியனாகிய ஆராத் என்னும் ராஜா இஸ்ரவேல் புத்திரர் வருகிறதைக் கேள்விப்பட்டான். 41 ஓர் என்னும் மலையை விட்டுப் புறப்பட்டுப்போய், சல்மோனாவிலே பாளயமிறங்கினார்கள். 42 சல்மோனாவிலிருந்து புறப்பட்டுப்போய், பூனோனிலே பாளயமிறங்கினார்கள். 43 பூனோனிலிருந்து புறப்பட்டுப்போய், ஓபோத்திலே பாளயமிறங்கினார்கள். 44 ஓபோத்திலிருந்து புறப்பட்டுப்போய், மோவாபின் எல்லையிலுள்ள அபாரீமின் மேடுகளிலே பாளயமிறங்கினார்கள். 45 அந்த மேடுகளை விட்டுப் புறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே பாளயமிறங்கினார்கள். 46 தீபோன்காத்திலிருந்து புறப்பட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலே பாளயமிறங்கினார்கள். 47 அல்மோன் திப்லத்தாயிமிலிருந்து புறப்பட்டுப்போய், நேபோவுக்கு எதிரான அபாரீம் மலைகளிலே பாளயமிறங்கினார்கள். 48 அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே பாளயமிறங்கினார்கள். 49 யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளில் அவர்கள் பெத்யெசிமோத்தைத் தொடங்கி, ஆபேல்சித்தீம்மட்டும் பாளயமிறங்கியிருந்தார்கள். 50 எரிகோவின் அருகே யோர்தானைச் சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி: 51 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் போய்ச் சேரும்போது, 52 அத்தேசத்துக் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிட்டு, அவர்களுடைய எல்லாச் சிலைகளையும் வார்ப்பிக்கப்பட்ட அவர்களுடைய எல்லா விக்கிரகங்களையும் அழித்து, அவர்கள் மேடைகளையெல்லாம் நிர்மூலமாக்கி, 53 தேசத்திலுள்ளவர்களைத் துரத்திவிட்டு, அதிலே குடியிருக்கக்கடவீர்கள்; அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன். 54 சீட்டுப்போட்டு, தேசத்தை உங்கள் குடும்பங்களுக்குச் சுதந்தரங்களாகப் பங்கிட்டு, அதிக ஜனங்களுக்கு அதிக சுதந்தரமும், கொஞ்ச ஜனங்களுக்குக் கொஞ்சச் சுதந்தரமும் கொடுக்கக்கடவீர்கள்; அவரவர்க்குச் சீட்டு விழும் இடம் எதுவோ, அவ்விடம் அவரவர்க்கு உரியதாகும்; உங்கள் பிதாக்களுடைய கோத்திரங்களின்படியே சுதந்தரம் பெற்றுக்கொள்ளக்கடவீர்கள். 55 நீங்கள் தேசத்தின் குடிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடாமலிருப்பீர்களானால், அப்பொழுது அவர்களில் நீங்கள் மீதியாக வைக்கிறவர்கள் உங்கள் கண்களில் முள்ளுகளும் உங்கள் விலாக்களிலே கூர்களுமாயிருந்து, நீங்கள் குடியிருக்கிற தேசத்திலே உங்களை உபத்திரவப்படுத்துவார்கள். 56 அன்றியும், நான் அவர்களுக்குச் செய்ய நினைத்ததை உங்களுக்குச் செய்வேன் என்று சொல் என்றார்.

எண்ணாகமம் 34

1 கர்த்தர் மோசேயை நோக்கி: 2 நீ இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கானான்தேசம் அதின் எல்லைகள் உட்பட உங்களுக்குச் சுதந்தரமாகக் கிடைக்கப்போகிறது; நீங்கள் கானான்தேசத்தில் சேரும்போது, 3 உங்கள் தென்புறம் சீன்வனாந்தரம் தொடங்கி ஏதோம் தேசத்தின் ஓரமட்டும் இருக்கும்; கிழக்கே இருக்கிற உப்புக்கடலின் கடைசி தொடங்கி உங்கள் தென் எல்லையாயிருக்கும். 4 உங்கள் எல்லை தெற்கிலிருந்து அக்கராபீம் மேடுகளைச் சுற்றி, சீன்வனாந்தரம்வரையில் போய், தெற்கிலே காதேஸ்பர்னேயாவுக்கும், அங்கேயிருந்து ஆத்சார் அதாருக்கும், அங்கேயிருந்து அஸ்மோனாவுக்கும் போய், 5 அஸ்மோனாவிலிருந்து எகிப்தின் நதிவரைக்கும் சுற்றிப்போய்க் கடலில் முடியும். 6 மேற்றிசைக்குப் பெருங்கடலே உங்களுக்கு எல்லை; அதுவே உங்களுக்கு மேற்புறத்து எல்லையாயிருக்கும். 7 உங்களுக்கு வடதிசை எல்லை பெருங்கடல் தொடங்கி, ஓர் என்னும் மலையை உங்களுக்குக் குறிப்பாக வைத்து, 8 ஓர் என்னும் மலை தொடங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியைக் குறிப்பாக வைத்து, அங்கேயிருந்து அந்த எல்லை சேதாத்திற்குப் போய், 9 அங்கேயிருந்து அது சிப்ரோனுக்குப்போய், ஆத்சார் ஏனானிலே முடியும்; அதுவே உங்களுக்கு வடபுறத்து எல்லையாயிருக்கும். 10 உங்களுக்குக் கீழ்த்திசை எல்லைக்கு ஆத்சார் ஏனானிலிருந்து சேப்பாமைக் குறிப்பாக வைத்து, 11 சேப்பாமிலிருந்து எல்லையானது ஆயினுக்குக் கிழக்கிலுள்ள ரிப்லாபரியந்தமும், அங்கேயிருந்து கின்னரேத் கடல்பரியந்தமும் அதின் கீழ்க்கரையோரமாய், 12 அங்கேயிருந்து யோர்தான்பரியந்தமும் போய், உப்புக்கடலில் முடியும்; இந்தச் சுற்றெல்லைகளையுடைய தேசமே உங்களுக்குரிய தேசம் என்று சொல் என்றார். 13 அப்பொழுது மோசே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: ஒன்பதரைக் கோத்திரத்தாருக்குக் கொடுக்கும்படி கர்த்தர் கட்டளையிட்டதும், நீங்கள் சீட்டுப்போட்டுச் சுதந்தரித்துக்கொள்ளவேண்டியதுமான தேசம் இதுவே. 14 ரூபன் புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும், காத் புத்திரர் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படியும், தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டதும் அல்லாமல், மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள். 15 இந்த இரண்டரைக் கோத்திரத்தாரும் சூரியோதய திசையாகிய கிழக்கே எரிகோவின் அருகேயுள்ள யோர்தானுக்கு இப்புறத்திலே தங்கள் சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள் என்றான். 16 மேலும் கர்த்தர் மோசேயை நோக்கி: 17 உங்களுக்கு தேசத்தைப் பங்கிட்டுக்கொடுக்கும் மனிதரின் நாமங்களாவன: ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவுமே. 18 அன்றியும், தேசத்தைப் பங்கிடும்படி ஒவ்வொரு கோத்திரத்தில் ஒவ்வொரு தலைவனையும் தெரிந்துகொள்ளுங்கள். 19 அந்த மனிதருடைய நாமங்களாவன: யூதா கோத்திரத்துக்கு எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும், 20 சிமியோன் புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய சாமுவேலும், 21 பென்யமீன் கோத்திரத்துக்குக் கிஸ்லோனின் குமாரனாகிய எலிதாதும், 22 தாண் புத்திரரின் கோத்திரத்துக்கு யொக்லியின் குமாரனாகிய புக்கி என்னும் பிரபுவும், 23 யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் கோத்திரத்துக்கு எபோதின் குமாரனாகிய அன்னியேல் என்னும் பிரபுவும், 24 எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்துக்குச் சிப்தானின் குமாரனாகிய கேமுவேல் என்னும் பிரபுவும், 25 செபுலோன் புத்திரரின் கோத்திரத்துக்குப் பர்னாகின் குமாரனாகிய எலிசாப்பான் என்னும் பிரபுவும், 26 இசக்கார் புத்திரரின் கோத்திரத்துக்கு ஆசானின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் பிரபுவும், 27 ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்குச் செலோமியின் குமாரனாகிய அகியூத் என்னும் பிரபுவும், 28 நப்தலி புத்திரரின் கோத்திரத்துக்கு அம்மியூதின் குமாரனாகிய பெதாக்கேல் என்னும் பிரபுவுமே என்றார். 29 கானான்தேசத்திலே இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டுக் கொடுக்கிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டவர்கள் இவர்களே.

எண்ணாகமம் 35

1 எரிகோவின் அருகே யோர்தானைச் சேர்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே கர்த்தர் மோசேயை நோக்கி: 2 இஸ்ரவேல் புத்திரர் தங்கள் காணியாட்சியாகிய சுதந்தரத்திலே லேவியருக்குக் குடியிருக்கும்படி பட்டணங்களைக் கொடுக்கவேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடு; அந்தப் பட்டணங்களைச் சூழ்ந்திருக்கிற வெளிநிலங்களையும் லேவியருக்குக் கொடுக்கவேண்டும். 3 அந்தப் பட்டணங்கள் அவர்கள் குடியிருப்பதற்கும், அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்கள் அவர்களுடைய ஆடுமாடுகளுக்கும், அவர்களுடைய ஆஸ்திகளுக்கும், அவர்களுடைய சகல மிருகஜீவன்களுக்கும் குறிக்கப்படவேண்டும். 4 நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் பட்டணங்களைச் சூழ்ந்த வெளிநிலங்கள் பட்டணத்தின் மதில்தொடங்கி, வெளியிலே சுற்றிலும் ஆயிரமுழ தூரத்துக்கு எட்டவேண்டும். 5 பட்டணம் மத்தியில் இருக்க, பட்டணத்தின் வெளிப்புறந்தொடங்கி, கிழக்கே இரண்டாயிரமுழமும், தெற்கே இரண்டாயிரமுழமும், மேற்கே இரண்டாயிரமுழமும், வடக்கே இரண்டாயிரமுழமும் அளந்துவிடக்கடவீர்கள்; இது அவர்கள் பட்டணங்களுக்கு வெளிநிலங்களாயிருப்பதாக. 6 நீங்கள் லேவியருக்குக் கொடுக்கும் பட்டணங்களில் அடைக்கலத்துக்காக ஆறு பட்டணங்கள் இருக்கவேண்டும்; கொலைசெய்தவன் அங்கே தப்பி ஓடிப்போகிறதற்கு அவைகளைக் குறிக்கக்கடவீர்கள்; அவைகளையல்லாமல், நாற்பத்திரண்டு பட்டணங்களை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும். 7 நீங்கள் லேவியருக்குக் கொடுக்கவேண்டிய பட்டணங்களெல்லாம் நாற்பத்தெட்டுப் பட்டணங்களும் அவைகளைச் சூழ்ந்த வெளிநிலங்களுமே. 8 நீங்கள் இஸ்ரவேல் புத்திரரின் சுதந்தரத்திலிருந்து அந்தப் பட்டணங்களைப் பிரித்துக் கொடுக்கும்போது, அதிகமுள்ளவர்களிடத்திலிருந்து அதிகமும், கொஞ்சமுள்ளவர்களிடத்திலிருந்து கொஞ்சமும் பிரித்துக்கொடுக்கவேண்டும்; அவரவர் சுதந்தரித்துக்கொண்ட சுதந்தரத்தின்படியே தங்கள் பட்டணங்களில் லேவியருக்குக் கொடுக்கக்கடவர்கள் என்றார். 9 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: 10 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் யோர்தானைக் கடந்து, கானான்தேசத்தில் பிரவேசிக்கும்போது, 11 கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றுபோட்டவன் ஓடிப்போயிருக்கத்தக்க அடைக்கலப்பட்டணங்களாகச் சில பட்டணங்களைக் குறிக்கக்கடவீர்கள். 12 கொலைசெய்தவன் நியாயசபையிலே நியாயம் விசாரிக்கப்படுமுன் சாகாமல், பழிவாங்குகிறவன் கைக்குத் தப்பிப்போயிருக்கும்படி, அவைகள் உங்களுக்கு அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கக்கடவது. 13 நீங்கள் கொடுக்கும் பட்டணங்களில் ஆறு பட்டணங்கள் அடைக்கலத்துக்காக இருக்கவேண்டும். 14 யோர்தானுக்கு இப்புறத்தில் மூன்று பட்டணங்களையும், கானான்தேசத்தில் மூன்று பட்டணங்களையும் கொடுக்கவேண்டும்; அவைகள் அடைக்கலப்பட்டணங்களாம். 15 கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ, அவன் அங்கே ஓடிப்போயிருக்கும்படிக்கு, அந்த ஆறு பட்டணங்களும் இஸ்ரவேல் புத்திரருக்கும் உங்கள் நடுவே இருக்கும் பரதேசிக்கும் அந்நியனுக்கும் அடைக்கலப்பட்டணங்களாய் இருக்கவேண்டும். 16 ஒருவன் இருப்பு ஆயுதத்தினால் ஒருவனை வெட்டினதினால் அவன் செத்துப்போனால், வெட்டினவன் கொலைபாதகனாயிருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும். 17 ஒருவன் ஒரு கல்லை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவன்மேல் எறிகிறதினாலே அவன் செத்துப்போனால், கல்லெறிந்தவன் கொலைபாதகனாயிருக்கிறான், அவன் கொலைசெய்யப்படவேண்டும். 18 ஒருவன் தன் கையில் ஒரு மர ஆயுதத்தை எடுத்து, சாகத்தக்கதாக ஒருவனை அடித்ததினால் அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகனாயிருக்கிறான்; கொலைபாதகன் கொலைசெய்யப்படவேண்டும். 19 பழிவாங்கவேண்டியவனே கொலைபாதகனைக் கொல்லவேண்டும்; அவனைக் கண்டமாத்திரத்தில் அவனைக் கொன்றுபோடலாம். 20 ஒருவன் பகையினால் ஒருவனை விழத்தள்ளினதினாலாயினும், பதுங்கியிருந்து அவன் சாகத்தக்கதாய் அவன்மேல் ஏதாகிலும் எறிந்ததினாலாயினும், 21 அவனைப் பகைத்து, தன் கையினால் அடித்ததினாலாயினும், அவன் செத்துப்போனால், அடித்தவன் கொலைபாதகன்; அவன் கொலைசெய்யப்படவேண்டும், பழிவாங்குகிறவன் கொலைபாதகனைக் கண்டமாத்திரத்தில் கொன்றுபோடலாம். 22 ஒருவன் பகையொன்றும் இல்லாமல் சடுதியில் ஒருவனைத் தள்ளி விழப்பண்ணினதினாலாயினும், பதுங்கியிராமல் யாதொரு ஆயுதத்தை அவன்மேல் பட எறிந்ததினாலாயினும், 23 அவனுக்குப் பகைஞனாயிராமலும் அவனுக்குத் தீங்கு செய்ய நினையாமலும் இருக்கையில், ஒருவனைக் கொன்றுபோடத்தக்க ஒரு கல்லினால் அவனைக் காணாமல் எறிய, அது அவன்மேல் பட்டதினாலாயினும், அவன் செத்துப்போனால், 24 அப்பொழுது கொலைசெய்தவனையும் பழிவாங்குகிறவனையும் சபையார் இந்த நியாயப்படி விசாரித்து, 25 கொலைசெய்தவனைப் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் ஓடிப்போயிருந்த அடைக்கலப்பட்டணத்துக்கு அவனைத் திரும்பப் போகும்படி செய்யக்கடவர்கள்; பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அவன் அதிலே இருக்கக்கடவன். 26 ஆனாலும் கொலைசெய்தவன் தான் ஓடிப்போயிருக்கிற அடைக்கலப்பட்டணத்தின் எல்லையை விட்டு வெளிப்பட்டிருக்கும்போது, 27 பழிவாங்குகிறவன் கொலைசெய்தவனை அடைக்கலப்பட்டணத்துக்கு வெளியே கண்டுபிடித்துக் கொன்றுபோட்டால், அவன்மேல் இரத்தப்பழி இல்லை. 28 கொலைசெய்தவன் பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அடைக்கலப் பட்டணத்திலிருக்கவேண்டும்; பிரதான ஆசாரியன் மரணமடைந்தபின்பு, தன் சுதந்தரமான காணியாட்சிக்குத் திரும்பிப் போகலாம். 29 இவைகள் உங்கள் வாசஸ்தலங்களிலெங்கும் உங்கள் தலைமுறைதோறும் உங்களுக்கு நியாயவிதிப் பிரமாணமாயிருக்கக்கடவது. 30 எவனாகிலும், ஒரு மனிதனைக் கொன்றுபோட்டால், அப்பொழுது சாட்சிகளுடைய வாக்குமூலத்தின்படியே அந்தக் கொலைபாதகனைக் கொலைசெய்யக்கடவர்கள்; ஒரே சாட்சியைக்கொண்டுமாத்திரம் ஒரு மனிதன் சாகும்படி தீர்ப்புச்செய்யலாகாது. 31 சாகிறதற்கேற்ற குற்றஞ்சுமந்த கொலைபாதகனுடைய ஜீவனுக்காக நீங்கள் மீட்கும்பொருளை வாங்கக்கூடாது; அவன் தப்பாமல் கொலைசெய்யப்படவேண்டும். 32 தன் அடைக்கலப்பட்டணத்துக்கு ஓடிப்போனவன் ஆசாரியன் மரணமடையாததற்கு முன்னே தன் நாட்டிற்குத் திரும்பிவரும்படி நீங்கள் அவனுக்காக மீட்கும்பொருளை வாங்கக்கூடாது. 33 நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை. 34 நீங்கள் குடியிருக்கும் என் வாசஸ்தலமாகிய தேசத்தைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; கர்த்தராகிய நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே வாசம்பண்ணுகிறேன் என்று சொல் என்றார்.

எண்ணாகமம் 36

1 யோசேப்பின் குமாரனுடைய வம்சத்தாரில் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத்தின் வம்ச பிதாக்களான தலைவர் சேர்ந்து, மோசேக்கும் இஸ்ரவேல் புத்திரருடைய பிதாக்களில் தலைவராகிய பிரபுக்களுக்கும் முன்பாக வந்து, அவர்களை நோக்கி: 2 சீட்டுப்போட்டு, தேசத்தை இஸ்ரவேல் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும்படி எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தர் கட்டளையிட்டாரே; அன்றியும், எங்கள் சகோதரனாகிய செலொப்பியாத்தின் சுதந்தரத்தை அவன் குமாரத்திகளுக்குக் கொடுக்கவேண்டும் என்றும் எங்கள் ஆண்டவனுக்குக் கர்த்தராலே கட்டளையிடப்பட்டதே. 3 இப்படியிருக்க, இவர்கள் இஸ்ரவேல் புத்திரருடைய வேறொரு கோத்திரத்தின் புத்திரருக்கு மனைவிகளானால், அந்தக் குமாரத்திகளுடைய சுதந்தரம் எங்கள் பிதாக்களுடைய சுதந்தரத்திலிருந்து நீங்கி, அவர்கள் உட்படுகிற கோத்திரத்தின் சுதந்தரத்தோடே சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் சுதந்தரத்துக்குச் சீட்டினால் விழுந்த பங்கில் இராமல் அற்றுப்போகுமே. 4 இஸ்ரவேல் புத்திரருக்கு யூபிலி வருஷம் வந்தாலும், அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் உட்பட்டுப்போன கோத்திரத்தின் சுதந்தரத்தோடே சேர்ந்துபோகும்; இப்படி எங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலிருந்து அது நீங்கிப்போகுமே என்றார்கள். 5 அப்பொழுது மோசே கர்த்தருடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: யோசேப்பு புத்திரரின் கோத்திரத்தார் சொல்லுகிறது சரியே. 6 கர்த்தர் செலொப்பியாத்தின் குமாரத்திகளைக்குறித்த காரியத்தில் கட்டளையிடுகிறதாவது: அவர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை விவாகஞ்செய்யலாம்; ஆனாலும், தங்கள் பிதாவின் கோத்திர வம்சத்தாரில்மாத்திரம் அவர்கள் விவாகஞ்செய்யவேண்டும். 7 இப்படியே இஸ்ரவேல் புத்திரரின் சுதந்தரம் ஒரு கோத்திரத்தைவிட்டு, வேறு கோத்திரத்துக்குப் போகாதிருக்கும்; இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள்தங்கள் பிதாக்களுடைய கோத்திரத்தின் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்க வேண்டும். 8 இஸ்ரவேல் புத்திரர் அவரவர் தங்கள்தங்கள் பிதாக்களின் சுதந்தரத்தை அநுபவிக்கும்படி, இஸ்ரவேல் புத்திரருடைய ஒரு கோத்திரத்திலே சுதந்தரம் அடைந்திருக்கிற எந்தக் குமாரத்தியும் தன் பிதாவின் கோத்திர வம்சத்தாரில் ஒருவனுக்கு மனைவியாகவேண்டும். 9 சுதந்தரமானது ஒரு கோத்திரத்தைவிட்டு வேறொரு கோத்திரத்தைச் சேரக்கூடாது; இஸ்ரவேல் புத்திரருடைய ஒவ்வொரு கோத்திரமும் தன்தன் சுதந்தரத்திலே நிலைகொண்டிருக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார் என்றான். 10 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செலொப்பியாத்தின் குமாரத்திகள் செய்தார்கள். 11 செலொப்பியாத்தின் குமாரத்திகளாகிய மக்லாள் திர்சாள் ஒக்லாள் மில்காள் நோவாள் என்பவர்கள் தங்கள் பிதாவின் சகோதரருடைய புத்திரரை விவாகம்பண்ணினார்கள்; அவர்கள் யோசேப்பின் குமாரனாகிய மனாசே புத்திரரின் வம்சத்தாரை விவாகம்பண்ணினபடியால், 12 அவர்களுடைய சுதந்தரம் அவர்கள் பிதாவின் வம்சமான கோத்திரத்தோடே இருந்தது. 13 எரிகோவின் அருகே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள மோவாபின் சமனான வெளிகளில் கர்த்தர் மோசேயைக்கொண்டு இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.

உபாகமம் 1

1 சேயீர் மலைவழியாய் ஓரேபுக்குப் பதினொருநாள் பிரயாண தூரத்திலுள்ள காதேஸ்பர்னேயாவிலிருந்து, 2 சூப்புக்கு எதிராகவும், பாரானுக்கும் தோப்பேலுக்கும் லாபானுக்கும் ஆஸரோத்துக்கும் திசாகாபுக்கும் நடுவாகவும் இருக்கிற யோர்தானுக்கு இக்கரையான வனாந்தரத்தின் சமனான வெளியிலே வந்தபோது, மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கிச் சொன்ன வசனங்களாவன: 3 எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், எத்ரேயின் அருகே அஸ்தரோத்தில் குடியிருந்த பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவனையும், மோசே முறிய அடித்தபின்பு, 4 நாற்பதாம் வருஷம் பதினோராம் மாதம் முதல் தேதியிலே, மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி தனக்குக் கர்த்தர் விதித்த யாவையும் அவர்களுக்குச் சொன்னான். 5 யோர்தானுக்கு இப்புறத்திலிருக்கிற மோவாபின் தேசத்தில் மோசே இந்த நியாயப்பிரமாணத்தை விவரித்துக் காண்பிக்கத் தொடங்கி, 6 ஓரேபிலே நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மோடே சொன்னது என்னவென்றால்: நீங்கள் இந்த மலையருகே தங்கியிருந்தது போதும். 7 நீங்கள் திரும்பிப் பிரயாணம் புறப்பட்டு, எமோரியரின் மலைநாட்டிற்கும், அதற்கு அடுத்த எல்லா சமனான வெளிகளிலும் குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும், தென்திசையிலும் கடலோரத்திலும் இருக்கிற கானானியரின் தேசத்துக்கும், லீபனோனுக்கும், ஐப்பிராத்து நதி என்னும் பெரிய நதிவரைக்கும் போங்கள். 8 இதோ, இந்தத் தேசத்தை உங்களுக்கு முன்பாக வைத்தேன்; நீங்கள் போய், கர்த்தர் உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் அவர்களுக்குப் பின்வரும் அவர்கள் சந்ததிக்கும் ஆணையிட்டுக் கொடுத்த அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்றார். 9 அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: நான் ஒருவனாக உங்கள் பாரத்தைத் தாங்கக்கூடாது. 10 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைப் பெருகப்பண்ணினார்; இதோ, இந்நாளில் நீங்கள் வானத்து நட்சத்திரங்களைப்போலத் திரளாயிருக்கிறீர்கள். 11 நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக. 12 உங்கள் வருத்தத்தையும் பிரயாசத்தையும் வழக்குகளையும் நான் ஒருவனாய்த் தாங்குவது எப்படி? 13 நான் உங்களுக்கு அதிபதிகளை ஏற்படுத்தும்பொருட்டு, உங்கள் கோத்திரங்களில் ஞானமும் விவேகமும் அறிவும் உள்ளவர்கள் என்று பேர்பெற்ற மனிதரைத் தெரிந்துகொள்ளுங்கள் என்று சொன்னேன். 14 நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக: நீர் செய்யச்சொன்ன காரியம் நல்லது என்றீர்கள். 15 ஆகையால் நான் ஞானமும் அறிவுமுள்ள மனிதராகிய உங்கள் கோத்திரங்களின் வம்சபதிகளைத் தெரிந்துகொண்டு, அவர்கள் உங்களுக்குத் தலைவராயிருக்கும்படி, ஆயிரம்பேருக்கு அதிபதிகளாகவும், நூறுபேருக்கு அதிபதிகளாகவும், ஐம்பதுபேருக்கு அதிபதிகளாகவும், பத்துப்பேருக்கு அதிபதிகளாகவும் உங்கள் கோத்திரங்களில் அதிகாரிகளாகவும் ஏற்படுத்திவைத்தேன். 16 அக்காலத்திலே உங்களுடைய நியாயாதிபதிகளை நான் நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரரின் வியாச்சியங்களைக் கேட்டு, இருபட்சத்தாராகிய உங்கள் சகோதரருக்கும், அவர்களிடத்தில் தங்கும் அந்நியனுக்கும், நீதியின்படி தீர்ப்புச்செய்யுங்கள். 17 நியாயத்திலே முகதாட்சிணியம் பாராமல் பெரியவனுக்குச் செவிகொடுப்பதுபோலச் சிறியவனுக்கும் செவிகொடுக்கக்கடவீர்கள்; மனிதன் முகத்திற்குப் பயப்படீர்களாக; நியாயத்தீர்ப்பு தேவனுடையது; உங்களுக்குக் கடினமாயிருக்கும் காரியத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; நான் அதைக் கேட்பேன் என்று சொல்லி, 18 நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் யாவையும் அக்காலத்திலே கட்டளையிட்டேன். 19 நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே, நாம் ஓரேபைவிட்டுப் பிரயாணம்பண்ணி, எமோரியரின் மலைநாட்டிற்கு நேராக நீங்கள் கண்ட அந்தப் பயங்கரமான பெரிய வனாந்தரவழி முழுவதும் நடந்துவந்து, காதேஸ்பர்னேயாவிலே சேர்ந்தோம். 20 அப்பொழுது நான் உங்களை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் எமோரியரின் மலைநாடுமட்டும் வந்து சேர்ந்தீர்கள். 21 இதோ, உன் தேவனாகிய கர்த்தர் அந்த தேசத்தை உனக்கு முன்பாக வைத்திருக்கிறார்; உன் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ போய் அதைச் சுதந்தரித்துக்கொள்; பயப்படாமலும் கலங்காமலும் இரு என்றேன். 22 அப்பொழுது நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து: நமக்காக அந்த தேசத்தைச் சோதித்துப்பார்க்கவும், நாம் இன்னவழியாக அதில் சென்று, இன்னபட்டணங்களுக்குப் போகலாம் என்று நமக்கு மறுசெய்தி கொண்டுவரவும், நமக்கு முன்னாக மனிதரை அனுப்புவோம் என்றீர்கள். 23 அது எனக்கு நன்றாய்க் கண்டது; கோத்திரத்திற்கு ஒருவனாகப் பன்னிரண்டு மனிதரைத் தெரிந்தெடுத்து அனுப்பினேன். 24 அவர்கள் புறப்பட்டு, மலைகளில் ஏறி, எஸ்கோல் பள்ளத்தாக்குமட்டும் போய், அதை வேவுபார்த்து, 25 அத்தேசத்துக் கனிகளில் சிலவற்றைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு நம்மிடத்தில் வந்து, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கொடுக்கும் தேசம் நல்ல தேசம் என்று நம்மிடத்தில் சொன்னார்கள். 26 அப்படியிருந்தும், நீங்கள் போகமாட்டோம் என்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாக எதிர்த்து, 27 உங்கள் கூடாரங்களில் முறுமுறுத்து: கர்த்தர் நம்மை வெறுத்து, நம்மை அழிக்கும்பொருட்டாக நம்மை எமோரியரின் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நம்மை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினார். 28 நாம் எங்கே போகலாம்; அந்த ஜனங்கள் நம்மைப்பார்க்கிலும் பலவான்களும், நெடியவர்களும், அவர்கள் பட்டணங்கள் பெரியவைகளும், வானத்தையளாவும் மதிலுள்ளவைகளுமாய் இருக்கிறதென்றும், ஏனாக்கியரின் புத்திரரையும் அங்கே கண்டோம் என்றும் நம்முடைய சகோதரர் சொல்லி, நம்முடைய இருதயத்தைக் கலங்கப்பண்ணினார்கள் என்று சொன்னீர்கள். 29 அப்பொழுது நான் உங்களை நோக்கி: நீங்கள் கலங்காமலும் அவர்களுக்குப் பயப்படாமலும் இருங்கள். 30 உங்களுக்கு முன் செல்லும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே எகிப்தில் உங்களோடிருந்து, உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்ததெல்லாவற்றைப்போலவும், வனாந்தரத்தில் செய்துவந்ததுபோலவும், உங்களுக்காக யுத்தம்பண்ணுவார். 31 ஒரு மனிதன் தன் பிள்ளையைச் சுமந்துகொண்டு போவதுபோல, நீங்கள் இவ்விடத்திற்கு வருகிறவரைக்கும், நடந்துவந்த வழிகள் எல்லாவற்றிலும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சுமந்துகொண்டு வந்ததைக் கண்டீர்களே. 32 உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் பாளயமிறங்கத்தக்க இடத்தைப் பார்க்கவும், நீங்கள் போகவேண்டிய வழியை உங்களுக்குக் காட்டவும், 33 இரவில் அக்கினியிலும் பகலில் மேகத்திலும் உங்களுக்குமுன் சென்றாரே. இப்படியிருந்தும், இந்தக் காரியத்தில் நீங்கள் அவரை விசுவாசியாமற் போனீர்கள். 34 ஆகையால் கர்த்தர் உங்கள் வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டு, கடுங்கோபங்கொண்டு: 35 உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட அந்த நல்ல தேசத்தை இந்தப் பொல்லாத சந்ததியாராகிய மனிதரில் ஒருவரும் காண்பதில்லை என்றும், 36 எப்புன்னேயின் குமாரனாகிய காலேப்மாத்திரம் அதைக் காண்பான்; அவன் கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், நான் அவன் மிதித்துவந்த தேசத்தை அவனுக்கும் அவன் பிள்ளைகளுக்கும் கொடுப்பேன் என்றும் ஆணையிட்டார். 37 அன்றியும் உங்கள் நிமித்தம் கர்த்தர் என்மேலும் கோபங்கொண்டு: நீயும் அதில் பிரவேசிப்பதில்லை; 38 உனக்கு முன்பாக நிற்கிற நூனின் குமாரனாகிய யோசுவா அதில் பிரவேசிப்பான்; அவனைத் திடப்படுத்து; அவனே அதை இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகப் பங்கிடுவான். 39 கொள்ளையாவார்கள் என்று நீங்கள் சொன்ன உங்கள் குழந்தைகளும், இந்நாளிலே நன்மை தீமை அறியாத உங்கள் பிள்ளைகளும் அதில் பிரவேசிப்பார்கள்; அவர்களுக்கு அதைக் கொடுப்பேன்; அவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். 40 நீங்களோ திரும்பிக்கொண்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாய் வனாந்தரத்திற்குப் பிரயாணப்பட்டுப்போங்கள் என்றார். 41 அப்பொழுது நீங்கள் எனக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் நாங்கள் போய் யுத்தம்பண்ணுவோம் என்று சொல்லி, நீங்கள் யாவரும் உங்கள் ஆயுதங்களைத் தரித்துக்கொண்டு, மலையின்மேல் ஏற ஆயத்தமாயிருந்தீர்கள். 42 அப்பொழுது கர்த்தர் என்னைப் பார்த்து: நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்துபோகாதபடிக்கு, போகாமலும் யுத்தம்பண்ணாமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் நடுவே இரேன் என்று அவர்களுக்குச் சொல் என்றார். 43 அப்படியே நான் உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ செவிகொடாமல், கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமாகத் துணிந்து மலையின்மேல் ஏறினீர்கள். 44 அந்த மலையிலே குடியிருந்த எமோரியர் உங்களை எதிர்க்கும்படி புறப்பட்டுவந்து, தேனீக்கள் துரத்துகிறதுபோல உங்களைத் துரத்தி, உங்களைச் சேயீர் தொடங்கி ஓர்மாமட்டும் முறிய அடித்தார்கள். 45 நீங்கள் திரும்பிவந்து, கர்த்தருடைய சமுகத்தில் அழுதீர்கள்; கர்த்தர் உங்கள் சத்தத்தைக் கேட்கவில்லை, உங்களுக்குச் செவிகொடுக்கவும் இல்லை. 46 இப்படி காதேசிலே தங்கி, அங்கே வெகுநாளாயிருந்தீர்கள்.

உபாகமம் 2

1 கர்த்தர் எனக்குச் சொல்லியபடி நாம் திரும்பி, சிவந்த சமுத்திரத்திற்குப் போகிற வழியாய் வனாந்தரத்திற்குப் பிரயாணம்பண்ணி, அநேக நாள் சேயீர் நாட்டைச் சுற்றித்திரிந்தோம். 2 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: 3 நீங்கள் இந்த மலைநாட்டைச் சுற்றித்திரிந்தது போதும்; வடக்கே திரும்புங்கள். 4 ஜனங்களுக்கு நீ கட்டளையிடவேண்டியது என்னவென்றால்: சேயீரிலே குடியிருக்கிற ஏசாவின் புத்திரரான உங்கள் சகோதரரின் எல்லையைக் கடக்கப்போகிறீர்கள்; அவர்கள் உங்களுக்குப் பயப்படுவார்கள்; நீங்களோ மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; 5 அவர்களோடே போர்செய்யவேண்டாம்; அவர்கள் தேசத்திலே ஒரு அடி நிலமும் உங்களுக்குக் கொடேன்; சேயீர் மலைநாட்டை ஏசாவுக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன். 6 போஜனபதார்த்தங்களை அவர்கள் கையிலே பணத்திற்கு வாங்கிப் புசித்து, தண்ணீரையும் அவர்கள் கையிலே பணத்திற்கு வாங்கிக் குடியுங்கள். 7 உன் தேவனாகிய கர்த்தர் உன் கைக்கிரியைகளிலெல்லாம் உன்னை ஆசீர்வதித்து வருகிறார்; இந்தப் பெரிய வனாந்தரவழியாய் நீ நடந்துவருகிறதை அறிவார்; இந்த நாற்பது வருஷமும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருந்தார்; உனக்கு ஒன்றும் குறைவுபடவில்லை என்று சொல் என்றார். 8 அப்படியே நாம் சேயீரிலே குடியிருக்கிற நம்முடைய சகோதரராகிய ஏசாவின் புத்திரரை விட்டுப் புறப்பட்டு, அந்தரவெளி வழியாய் ஏலாத்மேலும், எசியோன்கேபேர்மேலும் போய், திரும்பிக்கொண்டு, மோவாப் வனாந்தரவழியாய் வந்தோம். 9 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ மோவாபை வருத்தப்படுத்தாமலும், அவர்களோடே போர்செய்யாமலும் இரு; அவர்கள் தேசத்தில் உனக்கு ஒன்றும் சுதந்தரமாகக் கொடேன்; ஆர் என்னும் பட்டணத்தின் சீமையை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்தேன். 10 திரளானவர்களும் ஏனாக்கியரைப்போல நெடியவர்களுமான பலத்த ஜனங்களாகிய ஏமியர் அதில் முன்னே குடியிருந்தார்கள். 11 அவர்களும் ஏனாக்கியரையொத்த இராட்சதர் என்று எண்ணப்பட்டார்கள்; மோவாபியரோ அவர்களை ஏமியர் என்று சொல்லுகிறார்கள். 12 ஓரியரும் சேயீரில் முன்னே குடியிருந்தார்கள்; கர்த்தர் தங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்தாரை இஸ்ரவேல் துரத்தினதுபோல, ஏசாவின் புத்திரர் அந்த ஓரியரைத் துரத்தி, அவர்களைத் தங்கள் முகத்திற்கு முன்பாக அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்தில் குடியேறினார்கள். 13 நீங்கள் எழுந்து, சேரேத் ஆற்றைக் கடந்துபோங்கள் என்று சொன்னார்; அப்படியே சேரேத் ஆற்றைக் கடந்தோம். 14 யுத்த மனிதரான அந்தச் சந்ததியெல்லாம் கர்த்தர் தங்களுக்கு ஆணையிட்டபடியே பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டுபோக, நாம் காதேஸ்பர்னேயாவை விட்டுப் புறப்பட்டது முதற்கொண்டு, சேரேத் ஆற்றைக் கடக்குமட்டும், சென்ற காலம் முப்பத்தெட்டு வருஷமாயிற்று. 15 அவர்கள் பாளயத்தின் நடுவிலிருந்து மாண்டு ஒழியுமட்டும் கர்த்தரின் கை அவர்களை நிர்மூலமாக்கும்படிக்கு அவர்களுக்கு விரோதமாயிருந்தது. 16 யுத்தமனிதர் எல்லாரும் ஜனத்தின் நடுவிலிருந்து செத்துத் தீர்ந்தபின்பு, 17 கர்த்தர் என்னை நோக்கி: 18 நீ ஆர் பட்டணம் இருக்கிற மோவாபின் எல்லையை இன்றைக்குக் கடந்து, 19 அம்மோன் புத்திரருக்கு எதிராகச் சேரப்போகிறாய்; நீ அவர்களை வருத்தப்படுத்தவும் அவர்களோடே போர்செய்யவும் வேண்டாம்; அம்மோன் புத்திரரின் தேசத்தில் ஒன்றும் உனக்குச் சுதந்தரமாகக் கொடேன்; அதை லோத் புத்திரருக்குச் சுதந்தரமாகக் கொடுத்திருக்கிறேன். 20 அதுவும் இராட்சதருடைய தேசமாக எண்ணப்பட்டது; முற்காலத்தில் இராட்சதர் அதிலே குடியிருந்தார்கள், அம்மோனியர் அவர்களைச் சம்சூமியர் என்று சொல்லுகிறார்கள். 21 அவர்கள் திரளானவர்களும் ஏனாக்கியரைப்போல நெடியவர்களுமான பலத்த ஜனங்களாயிருந்தார்கள்; கர்த்தரோ சேயீரில் குடியிருந்த ஏசாவின் புத்திரருக்கு முன்பாக ஓரியரை அழிக்க, அவர்கள் அந்த ஜனங்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த ஸ்தானத்தில் இந்நாள்வரைக்கும் குடியிருக்கிறதுபோலவும், 22 கப்தோரிலிருந்து புறப்பட்ட கப்தோரியர் ஆசேரீம் தொடங்கி ஆசாமட்டும் குடியிருந்த ஆவியரை அழித்து, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினதுபோலவும், 23 கர்த்தர் அவர்களை இவர்களுக்கு முன்பாக அழியப்பண்ண, இவர்கள் அவர்களைத் துரத்திவிட்டு, அவர்கள் இருந்த ஸ்தானத்திலே குடியேறினார்கள். 24 நீங்கள் எழுந்து பிரயாணம்பண்ணி, அர்னோன் ஆற்றைக் கடந்துபோங்கள்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் என்னும் எமோரியனையும் அவன் தேசத்தையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; இதுமுதல் அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அவனோடே யுத்தஞ்செய். 25 வானத்தின்கீழ் எங்குமுள்ள ஜனங்கள் உன்னாலே திகிலும் பயமும் அடையும்படி செய்ய இன்று நான் தொடங்குவேன்; அவர்கள் உன் கீர்த்தியைக் கேட்டு, உன்னிமித்தம் நடுங்கி, வேதனைப்படுவார்கள் என்றார். 26 அப்பொழுது நான் கெதெமோத் வனாந்தரத்திலிருந்து எஸ்போனின் ராஜாவாகிய சீகோனிடத்தில், சமாதான வார்த்தைகளைச் சொல்லும்படி ஸ்தானாபதிகளை அனுப்பி: 27 நான் உம்முடைய தேசத்தைக் கடந்துபோகும்படி உத்தரவுகொடும்; வலதுபுறம் இடதுபுறம் சாயாமல் பெரும்பாதை வழியாய் நடப்பேன். 28 சேயீரில் குடியிருக்கிற ஏசாவின் புத்திரரும், ஆர் பட்டணத்தில் குடியிருக்கிற மோவாபியரும் எனக்குச் செய்ததுபோல, நீரும், நான் யோர்தானைக் கடந்து, எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் சேருமட்டும், 29 எனக்குப் புசிக்க ஆகாரத்தையும் குடிக்கத் தண்ணீரையும் கிரயத்துக்குத் தாரும்; நான் கால்நடையாய்க் கடந்துபோகமாத்திரம் உத்தரவுகொடும் என்று சொல்லி அனுப்பினேன். 30 ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார். 31 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இதோ, சீகோனையும் அவன் தேசத்தையும் உனக்கு ஒப்புக்கொடுக்கப்போகிறேன்; இதுமுதல் அவன் தேசத்தை வசப்படுத்தி, சுதந்தரித்துக்கொள் என்றார். 32 சீகோன் தன்னுடைய எல்லா ஜனங்களோடுங்கூட நம்மோடே யுத்தம்பண்ணப் புறப்பட்டு, யாகாசிலே வந்தான். 33 அவனை நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார்; நாம் அவனையும் அவன் குமாரரையும் அவனுடைய சகல ஜனங்களையும் முறிய அடித்து, 34 அக்காலத்தில் அவன் பட்டணங்களையெல்லாம் பிடித்து, சகல பட்டணங்களிலும் இருந்த ஸ்திரீ புருஷரையும், பிள்ளைகளையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் சங்காரம்பண்ணினோம். 35 மிருகஜீவன்களையும் நாம் பிடித்த பட்டணங்களில் கொள்ளையடித்த பொருள்களையுமாத்திரம் நமக்கென்று வைத்துக்கொண்டோம். 36 அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும் ஆற்றண்டையில் இருக்கிற பட்டணமும் தொடங்கி, கீலேயாத்வரைக்கும் நமக்கு எதிர்த்துநிற்கத்தக்க அரணிப்பான பட்டணம் இருந்ததில்லை, எல்லாவற்றையும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார். 37 அம்மோன் புத்திரருடைய தேசத்தையும், யாபோக் ஆற்றங்கரையிலுள்ள இடங்களையும், மலைகளிலுள்ள பட்டணங்களையும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு விலக்கின மற்ற இடங்களையும் சேராமல் விலகிப்போனாய்.

உபாகமம் 3

1 பின்பு நாம் திரும்பி, பாசானுக்குப் போகிற வழியாய்ப் போனோம்; பாசானின் ராஜாவாகிய ஓக் தன்னுடைய சகல ஜனங்களோடும் நம்மோடே எதிர்த்து யுத்தம்பண்ணும்படி புறப்பட்டு, எத்ரேயிக்கு வந்தான். 2 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவனுக்குப் பயப்படவேண்டாம்; அவனையும் அவனுடைய ஜனங்கள் எல்லாரையும் அவன் தேசத்தையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; எஸ்போனிலே குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கு நீ செய்ததுபோல, அவனுக்கும் செய்வாய் என்றார். 3 அப்படியே நம்முடைய தேவனாகிய கர்த்தர் பாசானின் ராஜாவாகிய ஓகையும் அவனுடைய சகல ஜனங்களையும் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவனுக்கு ஒருவரும் மீதியாயிராமற்போகுமட்டும் அவனை முறிய அடித்தோம். 4 அக்காலத்திலே அவனுடைய பட்டணங்களையெல்லாம் பிடித்தோம்; அவர்களிடத்தில் நாம் பிடித்துக்கொள்ளாத பட்டணம் இல்லை; பாசானிலிருந்த ஓகின் ராஜ்யமான அறுபது பட்டணங்களுள்ள அர்கோப் தேசம் முழுவதையும் பிடித்தோம். 5 அந்தப் பட்டணங்களெல்லாம் உயர்ந்த மதில்களாலும் வாசல்களாலும் தாழ்ப்பாள்களாலும் அரணாக்கப்பட்டிருந்தது; அவைகள் அன்றி, மதிலில்லாத பட்டணங்களும் அநேகம். 6 அவைகளையும் சங்காரம்பண்ணினோம்; நாம் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுக்குச் செய்ததுபோல, அந்த எல்லாப் பட்டணங்களிலுமுள்ள புருஷரையும் ஸ்திரீகளையும் பிள்ளைகளையும் சங்காரம்பண்ணினோம். 7 ஆனாலும் பட்டணங்களிலுள்ள ஆஸ்தியையும் சகல மிருகஜீவன்களையும் நமக்கென்று கொள்ளையிட்டோம். 8 இப்படியே யோர்தானுக்கு இப்புறத்திலுள்ள அர்னோன் நதிதொடங்கி, எர்மோன் மலைவரைக்குமுள்ள தேசத்தை நாம் அக்காலத்தில் எமோரியருடைய இரண்டு ராஜாக்களிடத்திலுமிருந்து பிடித்தோம். 9 சீதோனியர் எர்மோனைச் சீரியோன் என்கிறார்கள்; எமோரியரோ அதைச் சேனீர் என்கிறார்கள். 10 சமனான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்யத்தின் பட்டணங்கள்மட்டுமுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம். 11 மீந்திருந்த இராட்சதரில் பாசானின் ராஜாவாகிய ஓக் என்பவன்மாத்திரம் தப்பியிருந்தான்; இரும்பினாற் செய்த அவனுடைய கட்டில் மனிதருடைய கை முழத்தின்படியே, ஒன்பது முழ நீளமும் நாலு முழ அகலமுமாயிருந்தது; அது அம்மோன் புத்திரருடைய ரப்பாபட்டணத்தில் இருக்கிறதல்லவா? 12 அக்காலத்திலே சுதந்தரமாகப் பெற்றுக்கொண்ட தேசத்தை அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேர் தொடங்கி, கீலேயாத் மலைநாட்டில் பாதியையும், அதிலிருக்கிற பட்டணங்களையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன். 13 கீலேயாத்தின் மற்றப் பங்கையும், ஓகின் ராஜ்யமாயிருந்த பாசான் முழுவதையும், மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்குக் கொடுத்ததும் அன்றி, இராட்சத தேசமென்னப்பட்ட பாசானுக்குள்ளான அர்கோப் சீமை யாவையும் கொடுத்தேன். 14 மனாசேயின் குமாரனாகிய யாவீர் அர்கோப் சீமை முழுவதையும் கேசூரியர் மாகாத்தியர் என்பவர்களுடைய எல்லைமட்டும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே பாசான் அவோத்யாயீர் என்று பேரிட்டான், அது இந்நாள்வரைக்கும் வழங்கிவருகிறது. 15 மாகீருக்குக் கீலேயாத்தைக் கொடுத்தேன். 16 மேலும் கீலேயாத் தொடங்கி அர்னோன் நதி ஓடுகிற பள்ளத்தாக்கும், கடையாந்தரமுமான அம்மோன் புத்திரரின் எல்லையாகிய யாபோக்கு ஆறுமட்டும் இருக்கிற தேசத்தையும், 17 கின்னரேத் தொடங்கி அஸ்தோத்பிஸ்காவுக்குத் தாழ்வாய்க் கிழக்கே இருக்கிற உப்புக்கடலான சமனான வெளியின் கடல்மட்டும், யோர்தானின் எல்லைக்குள் அடங்கிய சமனான வெளியையும், ரூபனியருக்கும் காத்தியருக்கும் கொடுத்தேன். 18 அக்காலத்திலே நான் உங்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு இந்த தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுத்தார்; யுத்தஞ்செய்யத்தக்கவர்களாகிய நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரருக்கு முன்னே ஆயுதபாணிகளாக நடந்து போங்கள். 19 உங்கள் மனைவிகளும் உங்கள் பிள்ளைகளும் உங்கள் ஆடுமாடுகளும்மாத்திரம் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் பட்டணங்களில் இருக்கட்டும்; உங்களுக்குத் திரளான ஆடுமாடுகள் உண்டென்று அறிவேன். 20 ஆனாலும் கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணினதுபோல, உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, யோர்தானுக்கு அப்புறத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் கொடுக்கிற தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும் நீங்கள் இருந்து, பின்பு அவரவர் நான் உங்களுக்குக் கொடுத்த உங்கள் சுதந்தரத்துக்குத் திரும்புவீர்களாக என்றேன். 21 அக்காலத்திலே நான் யோசுவாவை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த இரண்டு ராஜாக்களுக்கும் செய்தவைகளையெல்லாம் உன் கண்கள் கண்டது; நீ போய்ச் சேரும் எல்லா ராஜ்யங்களுக்கும் கர்த்தர் அப்படியே செய்வார். 22 அவர்களுக்குப் பயப்படீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுவார் என்று சொன்னேன். 23 அக்காலத்திலே நான் கர்த்தரை நோக்கி: 24 கர்த்தராகிய ஆண்டவரே, நீர் உமது அடியேனுக்கு உமது மகத்துவத்தையும் உமது வல்லமையுள்ள கரத்தையும் காண்பிக்கத் தொடங்கினீர்; வானத்திலும் பூமியிலும் உம்முடைய கிரியைகளுக்கும் உம்முடைய வல்லமைகளுக்கும் ஒப்பாகச் செய்யத்தக்க தேவன் யார்? 25 நான் கடந்துபோய் யோர்தானுக்கு அப்புறத்திலுள்ள அந்த நல்ல தேசத்தையும், அந்த நல்ல மலையையும், லீபனோனையும் பார்க்கும்படி உத்தரவு கொடுத்தருளும் என்று வேண்டிக்கொண்டேன். 26 கர்த்தரோ உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு, எனக்குச் செவிகொடாமல், என்னை நோக்கி: போதும், இனி இந்தக் காரியத்தைக்குறித்து என்னோடே பேசவேண்டாம். 27 நீ பிஸ்காவின் கொடுமுடியில் ஏறி, உன் கண்களை மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் கிழக்கிலும் ஏறெடுத்து, உன் கண்களினாலே அதைப் பார்; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை. 28 நீ யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த ஜனங்களுக்கு முன்பாகக் கடந்துபோய், அவனே நீ காணும் தேசத்தை அவர்களுக்குப் பங்கிட்டுக்கொடுப்பான் என்றார். 29 பின்பு பெத்பெயோருக்கு எதிரான பள்ளத்தாக்கில் தங்கியிருந்தோம்.

உபாகமம் 4

1 இஸ்ரவேலரே, நீங்கள் பிழைத்திருக்கும்படிக்கும், உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தில் நீங்கள் பிரவேசித்து அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கும், நீங்கள் கைக்கொள்வதற்கு நான் உங்களுக்குப் போதிக்கிற கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள். 2 நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளும்படி, நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம். 3 பாகால்பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது; பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதரையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடிக்கு அழித்துப்போட்டார். 4 ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்ட நீங்களெல்லாரும் இந்நாள்வரைக்கும் உயிரோடிருக்கிறீர்கள். 5 நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி பிரவேசிக்கும் தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தர் எனக்குக் கற்பித்தபடியே, நான் உங்களுக்குக் கட்டளைகளையும் நியாயங்களையும் போதித்தேன். 6 ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்குமுன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள். 7 நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறதுபோல, தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது? 8 இந்நாளில் நான் உங்களுக்கு விதிக்கிற இந்த நியாயப்பிரமாணம் முழுமைக்கும் ஒத்த இவ்வளவு நீதியுள்ள கட்டளைகளையும் நியாயங்களையும் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதியும் எது? 9 ஓரேபிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ நிற்கும்போது, கர்த்தர் என்னை நோக்கி: ஜனங்களை என்னிடத்தில் கூடிவரச்செய்து, என் வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படி பண்ணுவேன்; அவர்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் எனக்குப் பயந்திருக்கும்படி அவைகளைக் கற்றுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்கும் போதிக்கக்கடவர்கள் என்று சொல்லிய நாளில், 10 உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் சாக்கிரதையாய்க் காத்துக்கொள்; அவைகளை உன் பிள்ளைகளுக்கும் உன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய். 11 நீங்கள் சேர்ந்துவந்து, மலையின் அடிவாரத்தில் நின்றீர்கள்; அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும் அந்தகாரமும் சூழ்ந்தது. 12 அந்த அக்கினியின் நடுவிலிருந்து கர்த்தர் உங்களோடே பேசினார்; வார்த்தைகளின் சத்தத்தை நீங்கள் கேட்டீர்கள்; அந்தச் சத்தத்தை நீங்கள் கேட்டதேயன்றி, ஒரு ரூபத்தையும் காணவில்லை. 13 நீங்கள் கைக்கொள்ளவேண்டும் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிட்ட பத்துக் கற்பனைகளாகிய தம்முடைய உடன்படிக்கையை அவர் உங்களுக்கு அறிவித்து, அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதினார். 14 நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளப்போகிற தேசத்தில் நீங்கள் கைக்கொள்ளவேண்டிய கட்டளைகளையும் நியாயங்களையும் உங்களுக்குப் போதிக்கவேண்டுமென்று அக்காலத்திலே கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டார். 15 கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை. 16 ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும், 17 பூமியிலிருக்கிற யாதொரு மிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிற செட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும், 18 பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின்கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும், 19 உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள். 20 இந்நாளில் நீங்கள் இருக்கிறதுபோல, தமக்குச் சுதந்தரமான ஜனமாயிருக்கும்படி, கர்த்தர் உங்களைச் சேர்த்துக்கொண்டு, உங்களை எகிப்து என்னும் இருப்புக்காளவாயிலிருந்து புறப்படப்பண்ணினார். 21 கர்த்தர் உங்கள் நிமித்தம் என்மேல் கோபங்கொண்டு, நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற அந்த நல்ல தேசத்தில் நான் பிரவேசிப்பதில்லை என்றும் ஆணையிட்டார். 22 அதினால் இந்த தேசத்தில் நான் மரணமடையவேண்டும்; நான் யோர்தானைக் கடந்துபோவதில்லை; நீங்களோ கடந்துபோய், அந்த நல்ல தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்கள். 23 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை மறந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். 24 உன் தேவனாகிய கர்த்தர் பட்சிக்கிற அக்கினி, அவர் எரிச்சலுள்ள தேவன். 25 நீங்கள் பிள்ளைகளும் பிள்ளைகளின் பிள்ளைகளும் பெற்று, தேசத்தில் வெகுநாள் இருந்தபின்பு, நீங்கள் உங்களைக் கெடுத்து, யாதொரு விக்கிரகத்தையாவது யாதொரு சாயலான சுரூபத்தையாவது பண்ணி, உன் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தால், 26 நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் இராமல், சீக்கிரமாய் முற்றிலும் அழிந்துபோவீர்கள் என்று, இந்நாளில் உங்களுக்கு விரோதமாய் வானத்தையும் பூமியையும் சாட்சி வைக்கிறேன்; நீங்கள் அதிலே நெடுநாள் இராமல் நிர்மூலமாக்கப்படுவீர்கள். 27 கர்த்தர் உங்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதற அடிப்பார்; கர்த்தர் உங்களைக் கொண்டுபோய் விடப்போகிற ஜாதிகளிடத்திலே கொஞ்ச ஜனங்களாய் மீந்திருப்பீர்கள். 28 அங்கே காணாமலும் கேளாமலும் சாப்பிடாமலும் முகராமலும் இருக்கிற மரமும் கல்லுமான, மனுஷர் கைவேலையாகிய தேவர்களைச் சேவிப்பீர்கள். 29 அப்பொழுது அங்கேயிருந்து உன் தேவனாகிய கர்த்தரைத் தேடுவாய்; உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய். 30 நீ வியாகுலப்பட இவைகளெல்லாம் உன்னைத் தொடர்ந்து பிடிக்கும்போது, கடைசி நாட்களில் உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பி அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவாயானால், 31 உன் தேவனாகிய கர்த்தர் இரக்கமுள்ள தேவனாயிருக்கிறபடியால், அவர் உன்னைக் கைவிடவுமாட்டார், உன்னை அழிக்கவுமாட்டார், உன் பிதாக்களுக்குத் தாம் ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையை மறக்கவுமாட்டார். 32 தேவன் மனுஷனைப் பூமியிலே சிருஷ்டித்த நாள்முதல், உனக்கு முன் இருந்த பூர்வநாட்களில், வானத்தின் ஒருமுனை தொடங்கி அதின் மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இப்படிப்பட்ட பெரிய காரியம் நடந்ததுண்டோ, இப்படிப்பட்ட காரியம் கேள்விப்பட்டதுண்டோ; 33 அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற தேவனுடைய சத்தத்தை நீ கேட்டதுபோல, யாதொரு ஜனமாவது கேட்டதும் உயிரோடிருந்ததும் உண்டோ, 34 அல்லது உங்கள் தேவனாகிய கர்த்தர் எகிப்திலே உங்கள் கண்களுக்கு முன்பாக உங்களுக்குச் செய்தபடியெல்லாம் தேவன் அந்நிய ஜாதிகளின் நடுவிலிருந்து ஒரு ஜனத்தைச் சோதனைகளினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், யுத்தத்தினாலும், வல்லமையுள்ள கரத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரமான செயல்களினாலும், தமக்கென்று தெரிந்துகொள்ள வகைபண்ணினதுண்டோ என்று நீ விசாரித்துப்பார். 35 கர்த்தரே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை என்பதை நீ அறியும்படிக்கு, இது உனக்குக் காட்டப்பட்டது. 36 உன்னை உபதேசிக்கும்படிக்கு, அவர் வானத்திலிருந்து தமது சத்தத்தை உனக்குக் கேட்கப்பண்ணி, பூமியிலே தமது பெரிய அக்கினியை உனக்குக் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய வார்த்தைகளைக் கேட்டாய். 37 அவர் உன் பிதாக்களில் அன்புகூர்ந்தபடியால், அவர்களுடைய பின்சந்ததியைத் தெரிந்துகொண்டு, 38 உன்னிலும் பலத்த பெரிய ஜாதிகளை உனக்கு முன்னின்று துரத்தவும், உன்னை அழைத்துக்கொண்டுபோய், இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்கள் தேசத்தை உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கவும், உன்னைத் தமது முகத்துக்குமுன் தமது மிகுந்த வல்லமையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். 39 ஆகையால், உயர வானத்திலும் தாழ பூமியிலும் கர்த்தரே தேவன், அவரைத் தவிர ஒருவரும் இல்லை என்பதை நீ இந்நாளில் அறிந்து, உன் மனதிலே சிந்தித்து, 40 நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படிக்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு என்றைக்கும் கொடுக்கிற தேசத்திலே நீ நீடித்த நாளாயிருக்கும்படிக்கும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய கட்டளைகளையும் அவருடைய கற்பனைகளையும் கைக்கொள்ளக்கடவாய் என்றான். 41 முற்பகையின்றிக் கைப்பிசகாய் பிறனைக் கொன்றவன் அடைக்கலப்பட்டணங்களில் ஒரு பட்டணத்தில் தப்பியோடிப்போய்ப் பிழைத்திருக்கும்படியாக, 42 ரூபனியரைச் சேர்ந்த சமபூமியாகிய வனாந்தரத்திலுள்ள பேசேரும், காத்தியரைச் சேர்ந்த கீலேயாத்திலுள்ள ராமோத்தும், மனாசேயரைச் சேர்ந்த பாசானிலுள்ள கோலானுமாகிய, 43 மூன்று பட்டணங்களை மோசே யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையிலே ஏற்படுத்தினான். 44 இதுவே மோசே இஸ்ரவேல் புத்திரருக்கு விதித்த பிரமாணம். 45 இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, யோர்தானுக்கு இப்புறத்தில் எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோனுடைய தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே, அவர்களுக்கு மோசே சொன்ன சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே. 46 மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு அந்த ராஜாவை முறிய அடித்து, 47 யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் அர்னோன் ஆற்றங்கரையிலுள்ள ஆரோவேர் தொடங்கி எர்மோன் என்னும் சீயோன் மலைவரைக்குமுள்ள தேசமும், 48 யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியோதய திசையில் அஸ்தோத் பிஸ்காவுக்கும் தாழ்ந்த சமனான வெளியைச்சேர்ந்த கடல்மட்டுமுள்ள சமனான வெளியனைத்துமாகிய, 49 எமோரியருடைய இரண்டு ராஜாக்களின் தேசங்களான சீகோனுடைய தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.

உபாகமம் 5

1 மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: இஸ்ரவேலரே, நான் இன்று உங்கள் காதுகள் கேட்கச் சொல்லும் கட்டளைகளையும் நியாயங்களையும் கேளுங்கள்; நீங்கள் அவைகளின்படியே செய்யும்படிக்கு அவைகளைக் கற்றுக் கைக்கொள்ளக்கடவீர்கள். 2 நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஓரேபிலே நம்மோடே உடன்படிக்கைபண்ணினார். 3 அந்த உடன்படிக்கையைக் கர்த்தர் நம்முடைய பிதாக்களுடன் பண்ணாமல், இந்நாளில் இங்கே உயிரோடிருக்கிற நம்மெல்லாரோடும் பண்ணினார். 4 கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து முகமுகமாய் உங்களோடே பேசினார். 5 கர்த்தருடைய வார்த்தையை உங்களுக்கு அறிவிக்கும்படி, அக்காலத்திலே நான் கர்த்தருக்கும் உங்களுக்கும் நடுவாக நின்றேன்; நீங்கள் அக்கினிக்குப் பயந்து மலையில் ஏறாமல் இருந்தீர்கள்; அப்பொழுது அவர் சொன்னது என்னவென்றால்: 6 உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே. 7 என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். 8 மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவைகளுக்கு ஒப்பான ஒரு சுரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்கவேண்டாம். 9 நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப் பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவராயிருக்கிறேன். 10 என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன். 11 உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார். 12 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக. 13 ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக. 14 ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் எருதானாலும், உன் கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்; 15 நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார். 16 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கும், நீ நன்றாயிருப்பதற்கும், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக. 17 கொலை செய்யாதிருப்பாயாக. 18 விபசாரம் செய்யாதிருப்பாயாக. 19 களவு செய்யாதிருப்பாயாக. 20 பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக. 21 பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். 22 இந்த வார்த்தைகளைக் கர்த்தர் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும் இருந்து உங்கள் சபையார் எல்லாரோடும் மகா சத்தத்துடனே சொன்னார்; அவைகளோடு ஒன்றும் கூட்டாமல், அவைகளை இரண்டு கற்பலகைகளில் எழுதி, என்னிடத்தில் கொடுத்தார். 23 மலை அக்கினியாய் எரிகையில் இருளின் நடுவிலிருந்து உண்டான சத்தத்தை நீங்கள் கேட்டபோது, கோத்திரத் தலைவரும் மூப்பருமாகிய நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து: 24 இதோ, நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குத் தம்முடைய மகிமையையும் தம்முடைய மகத்துவத்தையும் காண்பித்தார்; அக்கினியின் நடுவிலிருந்து உண்டான அவருடைய சத்தத்தையும் கேட்டோம்; தேவன் மனுஷனோடே பேசியும், அவன் உயிரோடிருக்கிறதை இந்நாளிலே கண்டோம். 25 இப்பொழுது நாங்கள் சாவானேன்? இந்தப் பெரிய அக்கினி எங்களைப் பட்சிக்குமே; நாங்கள் இன்னும் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்போமாகில் சாவோம். 26 நாங்கள் கேட்டதுபோல, அக்கினியின் நடுவிலிருந்து பேசுகிற ஜீவனுள்ள தேவனுடைய சத்தத்தை மாம்சமானவர்களில் யாராவது கேட்டு உயிரோடிருந்தது உண்டோ? 27 நீரே சமீபித்துப்போய், நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் கேட்டு, நம்முடைய தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் நீரே எங்களுக்குச் சொல்லவேண்டும்; நாங்கள் கேட்டு, அதின்படியே செய்வோம் என்றீர்கள். 28 நீங்கள் என்னோடே பேசுகையில், கர்த்தர் உங்கள் வார்த்தைகளைக் கேட்டு, கர்த்தர் என்னை நோக்கி: இந்த ஜனங்கள் உன்னோடே சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்; அவர்கள் சொன்னது எல்லாம் நன்றாய்ச் சொன்னார்கள். 29 அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படி, அவர்கள் எந்நாளும் எனக்குப் பயந்து, என் கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வதற்கேற்ற இருதயம் அவர்களுக்கு இருந்தால் நலமாயிருக்கும். 30 நீ போய்: உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள் என்று அவர்களுக்குச் சொல். 31 நீயோ இங்கே என்னிடத்தில் நில்; நான் அவர்களுக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் அவர்கள் செய்யும்படி நீ அவர்களுக்குப் போதிக்கவேண்டிய சகல கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் உனக்குச் சொல்லுவேன் என்றார். 32 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்தபடியே செய்யச் சாவதானமாயிருங்கள்; வலதுபுறம் இடதுபுறம் சாயாதிருப்பீர்களாக. 33 நீங்கள் சுதந்தரிக்கும் தேசத்திலே பிழைத்துச் சுகித்து நீடித்திருக்கும்படி, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழிகளெல்லாவற்றிலும் நடக்கக்கடவீர்கள்.

உபாகமம் 6

1 நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, உயிரோடிருக்கும் நாளெல்லாம், நீயும் உன் குமாரனும் உன் குமாரத்தியும், நான் உனக்கு விதிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளுகிறதினாலே உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்படி, 2 நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலே கைக்கொள்வதற்காக, உங்களுக்குப் போதிக்கவேண்டும் என்று உங்கள் தேவனாகிய கர்த்தர் கற்பித்த கற்பனைகளும் கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே. 3 இஸ்ரவேலே, நீ நன்றாயிருப்பதற்கும், உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீ மிகவும் விருத்தியடைவதற்கும், அவைகளுக்குச் செவிகொடுத்து, அவைகளின்படி செய்யச் சாவதானமாயிரு. 4 இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். 5 நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. 6 இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது. 7 நீ அவைகளை உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசி, 8 அவைகளை உன் கையின்மேல் அடையாளமாகக் கட்டிக்கொள்வாயாக; அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது. 9 அவைகளை உன் வீட்டு நிலைகளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக. 10 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களாகிய உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போதும், நீ கட்டாத வசதியான பெரிய பட்டணங்களையும், 11 நீ நிரப்பாத சகல நல்ல வஸ்துக்களாலும் நிரம்பிய வீடுகளையும், நீ வெட்டாமல் வெட்டப்பட்டிருக்கிற துரவுகளையும், நீ நடாத திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும், அவர் உனக்குக் கொடுப்பதினால், நீ சாப்பிட்டுத் திர்ப்தியாகும்போதும், 12 நீ அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. 13 உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவருக்கே ஆராதனைசெய்து, அவருடைய நாமத்தைக்கொண்டே ஆணையிடுவாயாக. 14 உன் தேவனாகிய கர்த்தருடைய கோபம் உன்மேல் மூண்டு, உன்னைப் பூமியில் வைக்காமல் அழித்துப்போடாதபடிக்கு, உங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களின் தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றாதிருப்பீர்களாக. 15 உன் நடுவிலிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர் எரிச்சலுள்ள தேவனாயிருக்கிறாரே. 16 நீங்கள் மாசாவிலே செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பீர்களாக. 17 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கருத்தாய்க் கைக்கொள்வீர்களாக. 18 நீ நன்றாயிருக்கிறதற்கும், கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த நல்ல தேசத்தில் நீ பிரவேசித்து, அதைச் சுதந்தரிப்பதற்கும், 19 கர்த்தர் தாம் சொன்னபடி, உன் சத்துருக்களையெல்லாம் உன் முகத்திற்கு முன்பாகத் துரத்திவிடுவதற்கும், நீ கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையும் நன்மையுமாய் இருக்கிறதைச் செய்வாயாக. 20 நாளைக்கு உன் புத்திரன்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட இந்தச் சாட்சிகளும் கட்டளைகளும் நியாயங்களும் என்ன என்று உன்னிடத்தில் கேட்டால்; 21 நீ உன் புத்திரனை நோக்கி: நாங்கள் எகிப்திலே பார்வோனுக்கு அடிமைகளாயிருந்தோம்; கர்த்தர் பலத்த கையினாலே எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார். 22 கர்த்தர் எங்கள் கண்களுக்கு முன்பாக, எகிப்தின்மேலும் பார்வோன்மேலும் அவன் குடும்பம் அனைத்தின்மேலும் கொடிதான பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் விளங்கப்பண்ணி, 23 தாம் நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்துக்கு எங்களை அழைத்துக்கொண்டுபோய், அதை நமக்குக் கொடுக்கும்படி எங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார். 24 இந்நாளில் இருக்கிறதுபோல, நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து இந்த எல்லாக் கட்டளைகளின்படியேயும் செய்யக் கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டார். 25 நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்குக் கட்டளையிட்டபடியே நாம் அவர் சமுகத்தில் இந்த எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருந்தால், நமக்கு நீதியாயிருக்கும் என்று சொல்வாயாக.

உபாகமம் 7

1 நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த ஜாதிகளாகிய ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஏழு பலத்த ஜாதிகளை உனக்கு முன்பாகத் துரத்தி, 2 உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும்போது, அவர்களை முறிய அடித்து, அவர்களைச் சங்காரம் பண்ணக்கடவாய்; அவர்களோடே உடன்படிக்கைபண்ணவும் அவர்களுக்கு இரங்கவும் வேண்டாம். 3 அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளை உன் குமாரருக்குக் கொள்ளாமலும் இருப்பாயாக. 4 என்னைப் பின்பற்றாமல், அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்கள் உன் குமாரரை விலகப்பண்ணுவார்கள்; அப்பொழுது கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, உங்களைச் சீக்கிரத்தில் அழிக்கும். 5 நீங்கள் அவர்களுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை வெட்டி, அவர்கள் விக்கிரகங்களை அக்கினியிலே எரித்துப்போடவேண்டும். 6 நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனம், பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார். 7 சகல ஜனங்களிலும் நீங்கள் திரட்சியான ஜனமென்று கர்த்தர் உங்கள்பேரில் அன்புவைத்து உங்களைத் தெரிந்துகொள்ளவில்லை; நீங்கள் சகல ஜனங்களிலும் கொஞ்சமாயிருந்தீர்கள். 8 கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டும் என்பதினாலும்; கர்த்தர் பலத்த கையினால் உங்களைப் புறப்படப்பண்ணி, அடிமைத்தன வீடாகிய எகிப்தினின்றும் அதின் ராஜாவான பார்வோனின் கையினின்றும் உங்களை மீட்டுக்கொண்டார். 9 ஆகையால் உன் தேவனாகிய கர்த்தரே தேவன் என்றும், தம்மில் அன்புகூர்ந்து, தமது கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் ஆயிரம் தலைமுறைமட்டும் உடன்படிக்கையையும் தயவையும் காக்கிற உண்மையுள்ள தேவன் என்றும், 10 தம்மைப் பகைக்கிறவர்களுக்குப் பிரத்தியட்சமாய்ப் பதிலளித்து அவர்களை அழிப்பார் என்றும், தம்மைப் பகைக்கிறவனுக்கு அவர் தாமதியாமல் பிரத்தியட்சமாய்ப் பதிலளிப்பார் என்றும் நீ அறியக்கடவாய். 11 ஆகையால் நீ செய்யும்படி நான் இன்று உனக்குக் கட்டளையிடுகிற கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்வாயாக. 12 இந்த நியாயங்களை நீங்கள் கேட்டு, கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையையும் கிருபையையும் உனக்காகக் காத்து, 13 உன்மேல் அன்புவைத்து, உன்னை ஆசீர்வதித்து, உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்தில் உன்னைப் பெருகப்பண்ணி, உன் கர்ப்பக்கனியையும், உன் நிலத்தின் கனிகளாகிய உன் தானியத்தையும், உன் திராட்சரசத்தையும், உன் எண்ணெயையும், உன் மாடுகளின் பலனையும், உன் ஆட்டுமந்தைகளையும் ஆசீர்வதிப்பார். 14 சகல ஜனங்களைப்பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; உங்களுக்குள்ளும் உங்கள் மிருகஜீவன்களுக்குள்ளும் ஆணிலாகிலும் பெண்ணிலாகிலும் மலடிருப்பதில்லை. 15 கர்த்தர் சகல நோய்களையும் உன்னைவிட்டு விலக்குவார்; உனக்குத் தெரிந்திருக்கிற எகிப்தியரின் கொடிய ரோகங்களில் ஒன்றும் உன்மேல் வரப்பண்ணாமல், உன்னைப் பகைக்கிற யாவர்மேலும் அவைகளை வரப்பண்ணுவார். 16 உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் ஒப்புக்கொடுக்கும் சகல ஜனங்களையும் நிர்மூலமாக்கக்கடவாய்; உன் கண் அவர்களுக்கு இரங்காதிருப்பதாக; அவர்கள் தேவர்களை நீ சேவியாமல் இருப்பாயாக; அது உனக்குக் கண்ணியாயிருக்கும். 17 அந்த ஜாதிகள் என்னிலும் ஜனம் பெருத்தவைகள், நான் அவர்களைத் துரத்திவிடுவது எப்படி என்று உன் இருதயத்தில் சொல்லிக்கொண்டாயானால், 18 உன் தேவனாகிய கர்த்தர் பார்வோனுக்கும் எகிப்தியர் யாவருக்கும் செய்ததையும், 19 உன் கண்கள் கண்ட பெரிய சோதனைகளையும், அடையாளங்களையும் அற்புதங்களையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் புறப்படப்பண்ணிக் காண்பித்த பலத்த கையையும் ஓங்கிய புயத்தையும் நன்றாய் நினைத்து, அவர்களுக்குப் பயப்படாதிரு; நீ பார்த்துப் பயப்படுகிற எல்லா ஜனங்களுக்கும் உன் தேவனாகிய கர்த்தர் அப்படியே செய்வார். 20 மீதியாயிருந்து உனக்குத் தப்பி ஒளித்துக்கொள்ளுகிறவர்களும் அழிந்துபோகுமட்டும் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குள்ளே குளவிகளை அனுப்புவார். 21 அவர்களைப் பார்த்துப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பயங்கரமுமான தேவன். 22 அந்த ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் கொஞ்சம் கொஞ்சமாய் உன்னைவிட்டுத் துரத்திவிடுவார்; நீ அவர்களை ஒருமிக்க நிர்மூலமாக்கவேண்டாம்; நிர்மூலமாக்கினால் காட்டுமிருகங்கள் உன்னிடத்தில் பெருகிப்போகும். 23 உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன்னிடத்தில் ஒப்புக்கொடுத்து, அவர்கள் அழியுமட்டும் அவர்களை மிகவும் கலங்கடிப்பார். 24 அவர்களுடைய ராஜாக்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பார்; அவர்கள் பேர் வானத்தின்கீழ் இராதபடிக்கு அவர்களைச் சங்கரிக்கக்கடவாய்; நீ அவர்களைச் சங்கரித்துத் தீருமட்டும் ஒருவரும் உனக்கு எதிர்த்து நிற்கமாட்டார்கள். 25 அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை அக்கினியினால் சுட்டெரிக்கக்கடவாய்; நீ அவைகளால் சிக்கிக்கொள்ளாதபடிக்கு, அவைகளில் இருக்கிற வெள்ளியையும் பொன்னையும் இச்சியாமலும், அதை எடுத்துக்கொள்ளாமலும் இருப்பாயாக; அவைகள் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள். 26 அவைகளைப்போல நீ சாபத்துக்குள்ளாகாதபடி அருவருப்பானதை உன் வீட்டிலே கொண்டுபோகாயாக; அதைச் சீ என்று வெறுத்து முற்றிலும் அருவருக்கக்கடவாய், அது சாபத்திற்குள்ளானது.

உபாகமம் 8

1 நீங்கள் பிழைத்துப் பெருகி, கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே பிரவேசித்து, அதைச் சுதந்தரிக்கும்படி நான் இன்று உங்களுக்கு விதிக்கிற எல்லாக் கட்டளைகளின்படியும் செய்யச் சாவதானமாயிருப்பீர்களாக. 2 உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. 3 அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார். 4 இந்த நாற்பது வருஷமும் உன்மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை. 5 ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக. 6 ஆகையால், உன் தேவனாகிய கர்த்தருடைய வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படிக்கு, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய். 7 உன் தேவனாகிய கர்த்தர் உன்னை நல்ல தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணுகிறார்; அது பள்ளத்தாக்குகளிலும் மலைகளிலுமிருந்து புறப்படுகிற ஆறுகளும் ஊற்றுகளும் ஏரிகளுமுள்ள தேசம்; 8 அது கோதுமையும் வாற்கோதுமையும் திராட்சச்செடிகளும் அத்திமரங்களும் மாதளஞ்செடிகளுமுள்ள தேசம்; அது ஒலிவமரங்களும், எண்ணெயும் தேனுமுள்ள தேசம்; 9 அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அது கல்லுகள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ளதுமான தேசம். 10 ஆகையால், நீ புசித்துத் திர்ப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய். 11 உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற் போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. 12 நீ புசித்துத் திர்ப்தியாகி, நல்ல வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருக்கும்போதும், 13 உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும்போதும், 14 உன் இருதயம் மேட்டிமையடையாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவரும், 15 உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும்பொருட்டு, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தரவழியாய் உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணினவரும், 16 உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்துவந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும், 17 என் சாமார்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து, 18 உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர். 19 உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து, வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வாயானால், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்கிறேன். 20 உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற்போவதினால், கர்த்தர் உங்களுக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்போல நீங்களும் அழிவீர்கள்.

உபாகமம் 9

1 இஸ்ரவேலே, கேள்: நீ இப்பொழுது யோர்தானைக் கடந்து, உன்னிலும் ஜனம் பெருத்ததும் பலத்ததுமான ஜாதிகளைத் துரத்தி, வானத்தையளாவிய மதில் சூழ்ந்த பெரிய பட்டணங்களைப் பிடித்து, 2 ஏனாக்கின் புத்திரராகிய பெரியவர்களும் நெடியவர்களுமான ஜனங்களைத் துரத்திவிடப்போகிறாய்; இவர்கள் செய்தியை நீ அறிந்து, ஏனாக் புத்திரருக்கு முன்பாக நிற்பவன் யார் என்று சொல்லப்படுவதை நீ கேட்டிருக்கிறாய். 3 உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய்; அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார்; இவ்விதமாய்க் கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ அவர்களைச் சீக்கிரமாய்த் துரத்தி, அவர்களை அழிப்பாய். 4 உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்துகையில், நீ உன் இருதயத்திலே: என் நீதியினிமித்தம் இந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி கர்த்தர் என்னை அழைத்துவந்தார் என்று சொல்லாயாக; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமே கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார். 5 உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகவும், உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார். 6 ஆகையால், உன் நீதியினிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அந்த நல்ல தேசத்தைச் சுதந்தரிக்கக் கொடார் என்பதை அறியக்கடவாய்; நீ வணங்காக் கழுத்துள்ள ஜனம். 7 நீ வனாந்தரத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதை நினை, அதை மறவாயாக; நீங்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள்முதல், இவ்விடத்தில் வந்து சேருமட்டும், கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்கள். 8 ஓரேபிலும் நீங்கள் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதினால், கர்த்தர் உங்களை அழிக்கத்தக்கதான உக்கிரங்கொண்டார். 9 கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாள் இரவும்பகலும் மலையில் தங்கி அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன். 10 அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது. 11 இரவும் பகலும் நாற்பதுநாள் முடிந்து, கர்த்தர் எனக்கு அந்த உடன்படிக்கையின் இரண்டு கற்பலகைகளைக் கொடுக்கிறபோது, 12 கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து, சீக்கிரமாய் இவ்விடம் விட்டு, இறங்கிப்போ; நீ எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்; நான் அவர்களுக்கு விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தைத் தங்களுக்காக உண்டாக்கினார்கள் என்றார். 13 பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; அது வணங்காக் கழுத்துள்ள ஜனம். 14 ஆகையால், நான் அவர்களை அழித்து, அவர்கள் பேரை வானத்தின்கீழ் அற்றுப்போகப்பண்ணும்படி, நீ என்னை விட்டுவிடு; அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பலத்ததும் ஜனம் பெருத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார். 15 அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கினேன், மலையானது அக்கினி பற்றி எரிந்துகொண்டிருந்தது; உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என் இரண்டு கைகளில் இருந்தது. 16 நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை உங்களுக்கு உண்டாக்கி, கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரமாய் விட்டு விலகினதைக் கண்டேன். 17 அப்பொழுது நான் என் இரண்டு கைகளிலும் இருந்த அந்த இரண்டு பலகைகளையும் ஓங்கி எறிந்து, அவைகளை உங்கள் கண்களுக்கு முன்பாக உடைத்துப்போட்டேன். 18 கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்து நடப்பித்த உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தமும், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போல இரவும்பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; நான் அப்பம் புசிக்கவுமில்லை, தண்ணீர் குடிக்கவுமில்லை. 19 கர்த்தர் உங்களை அழிக்கும்படி உங்கள்மேல் கொண்டிருந்த கோபத்திற்கும் உக்கிரத்திற்கும் பயந்திருந்தேன்; கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டார். 20 ஆரோன்மேலும் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு, அவனை அழிக்கவேண்டும் என்றிருந்தார்; அப்பொழுது ஆரோனுக்காகவும் விண்ணப்பம்பண்ணினேன். 21 உங்கள் பாவக்கிரியையாகிய அந்தக் கன்றுக்குட்டியை நான் எடுத்து அக்கினியில் எரித்து, அதை நொறுக்கி, தூளாய்ப்போகுமட்டும் அரைத்து, அந்தத் தூளை மலையிலிருந்து ஓடுகிற ஆற்றிலே போட்டுவிட்டேன். 22 தபேராவிலும், மாசாவிலும், கிப்ரோத் அத்தாவாவிலும் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினீர்கள். 23 நீங்கள் போய், நான் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் காதேஸ்பர்னேயாவிலிருந்து உங்களை அனுப்புகையிலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை விசுவாசியாமலும், அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்கள். 24 நான் உங்களை அறிந்த நாள்முதற்கொண்டு, நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணுகிறவர்களாயிருந்தீர்கள். 25 கர்த்தர் உங்களை அழிப்பேன் என்று சொன்னபடியினால், நான் முன்போல் கர்த்தரின் சமுகத்தில் இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்துகிடந்தேன்; அப்பொழுது நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது: 26 கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் உம்முடைய மகத்துவத்தினாலே மீட்டு, பலத்த கையினால் எகிப்திலிருந்து கொண்டுவந்த உமது ஜனத்தையும், உமது சுதந்தரத்தையும் அழிக்காதிருப்பீராக. 27 கர்த்தர் அவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணியிருந்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணக்கூடாமற் போனபடியினாலும், அவர்களை வெறுத்தபடியினாலும், அவர்களை வனாந்தரத்தில் கொன்றுபோடும்படிக்கே கொண்டுவந்தார் என்று நாங்கள் விட்டுப் புறப்படும்படி நீர் செய்த தேசத்தின் குடிகள் சொல்லாதபடிக்கு, 28 தேவரீர் இந்த ஜனங்களின் முரட்டாட்டத்தையும், இவர்கள் ஆகாமியத்தையும், இவர்கள் பாவத்தையும் பாராமல், உமது தாசராகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களை நினைத்தருளும். 29 நீர் உமது மகா பலத்தினாலும், ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணின இவர்கள் உமது ஜனமும் உமது சுதந்தரமுமாயிருக்கிறார்களே என்று விண்ணப்பம்பண்ணினேன்.

உபாகமம் 10

1 அக்காலத்திலே கர்த்தர் என்னை நோக்கி: நீ முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டிக்கொண்டு, மலையின்மேல் ஏறி, என்னிடத்தில் வா; ஒரு மரப்பெட்டியையும் செய்வாயாக. 2 நீ உடைத்துப்போட்ட முந்தின பலகைகளில் இருந்த வார்த்தைகளை நான் அந்தப் பலகைகளில் எழுதுவேன்; நீ அவைகளைப் பெட்டியிலே வைப்பாயாக என்றார். 3 அப்படியே நான் சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியைச் செய்து, முந்தினவைகளுக்கொத்த இரண்டு கற்பலகைகளை வெட்டி, அவைகளை என் கையிலே எடுத்துக்கொண்டு மலையில் ஏறினேன். 4 முன்னே சபைகூடிவந்த நாளில் கர்த்தர் மலையில் அக்கினி நடுவிலிருந்து உங்களுக்கு விளம்பின பத்துக் கற்பனைகளையும் அவர் முன் எழுதியிருந்தபிரகாரம் அந்தப் பலகைகளில் எழுதி, அவைகளை என்னிடத்தில் தந்தார். 5 அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கி, அந்தப் பலகைகளை நான் செய்த பெட்டியிலே வைத்தேன்; கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அவைகள் அதிலே வைத்திருக்கிறது. 6 பின்பு இஸ்ரவேல் புத்திரர் பெனெயாக்கானுக்கடுத்த பேரோத்திலேயிருந்து மோசெராவுக்குப் பிரயாணம்பண்ணினார்கள்; அங்கே ஆரோன் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய எலெயாசார் ஆசாரியனானான். 7 அங்கேயிருந்து குத்கோதாவுக்கும், குத்கோதாவிலிருந்து ஆறுகளுள்ள நாடாகிய யோத்பாத்துக்கும் பிரயாணம்பண்ணினார்கள். 8 அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தைக்கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார். 9 ஆகையால் லேவிக்கு அவன் சகோதரரோடே பங்கும் சுதந்தரமும் இல்லை; உன் தேவனாகிய கர்த்தர் அவனுக்குச் சொன்னபடி, கர்த்தரே அவனுக்குச் சுதந்தரம். 10 நான் முந்தின பிரகாரமாகவே நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் இருந்தேன்; கர்த்தர் அந்த முறையும் என் மன்றாட்டைக் கேட்டு, உன்னை அழிக்காமல் விட்டார். 11 கர்த்தர் என்னை நோக்கி: நான் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் அவர்கள் போய் அதைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி, நீ எழுந்து, ஜனத்திற்கு முன்பாகப் பிரயாணப்பட்டுப் போ என்றார். 12 இப்பொழுதும் இஸ்ரவேலே, நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரிடத்தில் அன்புகூர்ந்து, உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவித்து, 13 நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ளவேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். 14 இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள். 15 ஆனாலும் கர்த்தர் உன் பிதாக்கள்மேல் அன்புகூரும்பொருட்டு அவர்களிடத்தில் பிரியம் வைத்து, அவர்களுக்குப்பின் அவர்களுடைய சந்ததியாகிய உங்களை, இந்நாளில் இருக்கிறபடியே, சகல ஜாதிகளுக்குள்ளும் தமக்கென்று தெரிந்துகொண்டார். 16 ஆகையால் நீங்கள் இனி உங்கள் பிடரியைக் கடினப்படுத்தாமல், உங்கள் இருதயத்தின் நுனித்தோலை விருத்தசேதனம்பண்ணுங்கள். 17 உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. 18 அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார். 19 நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தபடியால், அந்நியரைச் சிநேகிப்பீர்களாக. 20 உன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவருடைய நாமத்தைக்கொண்டு ஆணையிடுவாயாக. 21 அவரே உன் புகழ்ச்சி; உன் கண் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன் தேவன் அவரே. 22 உன் பிதாக்கள் எழுபதுபேராய் எகிப்துக்குப் போனார்கள்; இப்பொழுதோ உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் திரட்சியிலே வானத்தின் நட்சத்திரங்களைப்போலாக்கினார்.

உபாகமம் 11

1 நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவருடைய பிரமாணங்களையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய நியாயங்களையும், அவருடைய கற்பனைகளையும் எப்பொழுதும் கைக்கொள்வாயாக. 2 உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த சிட்சையையும், அவருடைய மகத்துவத்தையும், அவருடைய பலத்த கையையும், அவருடைய ஓங்கிய புயத்தையும், 3 அவர் எகிப்தின் நடுவிலே எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவன் தேசம் அனைத்திற்கும் செய்த அவருடைய அடையாளங்களையும், அவருடைய கிரியைகளையும், 4 எகிப்திய சேனையும் அவர்கள் குதிரைகளும் இரதங்களும் உங்களைப் பின்தொடர்ந்துவருகையில், கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள்மேல் புரளப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, அவர்களை அழித்த அவருடைய செய்கையையும், 5 நீங்கள் இவ்விடத்திற்கு வருமளவும் அவர் உங்களுக்கு வனாந்தரத்தில் செய்ததையும், 6 பூமி தன் வாயைத் திறந்து, எலியாப் என்னும் ரூபன் குமாரனுடைய மக்களான தாத்தானையும் அபிராமையும், அவர்கள் குடும்பங்களையும், அவர்கள் கூடாரங்களையும், இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் அவர்களுக்கு இருந்த அவர்களுடைய சகல பொருள்களையும் விழுங்கும்படி செய்ததையும், அறியாமலும் காணாமலும் இருக்கிற உங்கள் பிள்ளைகளுடன் நான் பேசவில்லை; இன்று நீங்களே அறிந்துகொள்ளுங்கள். 7 கர்த்தர் செய்த மகத்துவமான கிரியைகளையெல்லாம் உங்கள் கண்கள் அல்லவோ கண்டது. 8 ஆகையால் நீங்கள் பலப்படும்படிக்கும், 9 நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்துக்குள் பிரவேசித்து அதைச் சுதந்தரிக்கும்படிக்கும், கர்த்தர் உங்கள் பிதாக்களுக்கும் அவர்கள் சந்ததிக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் நீங்கள் நீடித்து வாழும்படிக்கும், இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற கற்பனைகளையெல்லாம் கைக்கொள்வீர்களாக. 10 நீ சுதந்தரிக்கப்போகிற தேசம் நீ விட்டுவந்த எகிப்து தேசத்தைப்போல் இராது; அங்கே நீ விதையை விதைத்து, கீரைத்தோட்டத்திற்கு நீர்ப்பாய்ச்சுகிறதுபோல உன் காலால் நீர்ப்பாய்ச்சி வந்தாய். 11 நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசமோ, மலைகளும் பள்ளத்தாக்குகளுமுள்ள தேசம்; அது வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம்; 12 அது உன் தேவனாகிய கர்த்தர் விசாரிக்கிற தேசம், வருஷத்தின் துவக்கமுதல் வருஷத்தின் முடிவுமட்டும் எப்பொழுதும் உன் தேவனாகிய கர்த்தரின் கண்கள் அதின்மேல் வைக்கப்பட்டிருக்கும். 13 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து, அவரைச் சேவிக்கும்படி, நான் இன்று உங்களுக்குக் கற்பிக்கிற என் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தால், 14 நீ உன் தானியத்தையும் உன் திராட்சரசத்தையும் உன் எண்ணெயையும் சேர்க்கும்படிக்கு, நான் ஏற்றகாலத்தில் உங்கள் தேசத்தில் முன்மாரியையும் பின்மாரியையும் பெய்யப்பண்ணி, 15 மிருகஜீவன்களுக்காக உன் வெளிகளிலே புல் முளைக்கும்படி செய்வேன், நீ சாப்பிட்டுத் திர்ப்தியடைவாய் என்கிறார். 16 உங்கள் இருதயம் வஞ்சிக்கப்படாமலும், நீங்கள் வழிவிலகி அந்நிய தேவர்களைச் சேவித்து அவர்களை நமஸ்கரியாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள். 17 இல்லாவிடில் கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் மூண்டு, மழை பெய்யாமற்போகவும், தேசம் தன் பலனைக் கொடாமலிருக்கவும் வானத்தை அடைத்துப்போடுவார்; கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரத்தில் அழிந்துபோவீர்கள். 18 ஆகையால் கர்த்தர் உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் உங்கள் நாட்களும், உங்கள் பிள்ளைகளின் நாட்களும், பூமியின்மேல் வானம் இருக்கும் நாட்களைப்போல அநேகமாயிருக்கும்படிக்கு, 19 நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து, அவைகளை உங்கள் கையின்மேல் அடையாளமாகக் கட்டி, உங்கள் கண்களின் நடுவே ஞாபகக்குறியாக வைத்து, 20 அவைகளை உங்கள் பிள்ளைகளுக்கு உபதேசித்து, நீங்கள் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், வழியிலே நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிறபோதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக்குறித்துப் பேசுவீர்களாக. 21 அவைகளை உங்கள் வீட்டு நிலைகளிலும் உங்கள் வாசல்களிலும் எழுதுவீர்களாக. 22 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து, அவரைப் பற்றிக்கொண்டிருக்கும்படி, நான் உங்களுக்குச் செய்யக் கற்பிக்கிற இந்தக் கற்பனைகளையெல்லாம் ஜாக்கிரதையாய்க் கைக்கொள்வீர்களானால், 23 கர்த்தர் உங்களுக்கு முன்பாக அந்த ஜாதிகளையெல்லாம் துரத்திவிடுவார்; உங்களைப்பார்க்கிலும் ஜனம் பெருத்த பலத்த ஜாதிகளை நீங்கள் துரத்துவீர்கள். 24 உங்கள் உள்ளங்கால் மிதிக்கும் இடமெல்லாம் உங்களுடையதாயிருக்கும்; வனாந்தரத்தையும் லீபனோனையும் தொடங்கி, ஐபிராத்து நதியையும் தொடங்கி, கடைசிச் சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும். 25 உங்கள்முன் ஒருவரும் எதிர்த்து நிற்பதில்லை; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி உங்களால் உண்டாகும் பயமும் கெடியும் நீங்கள் மிதிக்கும் பூமியின்மேலெல்லாம் வரப்பண்ணுவார். 26 இதோ, இன்று நான் உங்களுக்கு முன்பாக ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைக்கிறேன். 27 இன்று நான் உங்களுக்குக் கற்பிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்தீர்களானால் ஆசீர்வாதமும், 28 எங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படியாமல், இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வழியைவிட்டு விலகி, நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றுவீர்களானால் சாபமும் வரும். 29 நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னைப் பிரவேசிக்கப்பண்ணும்போது, கெரிசீம் மலையின்மேல் ஆசீர்வாதத்தையும் ஏபால் மலையின்மேல் சாபத்தையும் கூறக்கடவாய். 30 அவைகள் யோர்தானுக்கு அப்புறத்திலே சூரியன் அஸ்தமிக்கிற மேற்குவழியாய்க் கானானியர் குடியிருக்கிற நாட்டு வெளியிலே கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமபூமியின் அருகேயல்லவோ இருக்கிறது? 31 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கிற தேசத்தைச் சுதந்தரிப்பதற்கு, நீங்கள் யோர்தானைக் கடந்துபோய், அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருப்பீர்கள். 32 ஆகையால் உங்களுக்கு இன்று நான் ஏற்படுத்துகிற சகல கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு நடக்கக்கடவீர்கள்.

உபாகமம் 12

1 உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கிற தேசத்திலே, நீங்கள் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் கைக்கொண்டு நடக்கவேண்டிய கட்டளைகளும் நியாயங்களுமாவன: 2 நீங்கள் துரத்திவிடும் ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்த உயர்ந்த மலைகளின்மேலும், மேடுகளின்மேலும், பச்சையான சகல மரங்களின் கீழுமுள்ள இடங்களையெல்லாம் முற்றிலும் அழித்து, 3 அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளைத் தகர்த்து, அவர்கள் தோப்புகளை அக்கினியால் சுட்டெரித்து, அவர்கள் தேவர்களின் விக்கிரகங்களை நொறுக்கி, அவைகளின் பேரும் அவ்விடத்தில் இராமல் அழியும்படி செய்யக்கடவீர்கள். 4 உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நீங்கள் அப்படிச் செய்யாமல், 5 உங்கள் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் ஸ்தானமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய், 6 அங்கே உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், தசமபாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், உங்கள் பொருத்தனைகளையும், உங்கள் உற்சாகபலிகளையும், உங்கள் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் கொண்டுவந்து, 7 அங்கே உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியிலே புசித்து, நீங்கள் கையிட்டுச் செய்ததும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை ஆசீர்வதித்ததுமான யாவுக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக. 8 இங்கே இந்நாளில் நாம் அவனவன் தன்தன் பார்வைக்குச் சரியானதையெல்லாம் செய்கிறதுபோல நீங்கள் செய்யாதிருப்பீர்களாக. 9 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் இளைப்பாறுதலிலும் சுதந்தரத்திலும் நீங்கள் இன்னும் பிரவேசிக்கவில்லையே. 10 நீங்கள் யோர்தானைக் கடந்துபோய், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில் குடியேறும்போதும், சுற்றிலும் இருக்கிற உங்கள் சத்துருக்களையெல்லாம் அவர் விலக்கி, உங்களை இளைப்பாறப்பண்ணுகிறதினால் நீங்கள் சுகமாய் வசித்திருக்கும்போதும், 11 உங்கள் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஓர் இடம் உண்டாயிருக்கும்; அங்கே நீங்கள் நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் உங்கள் சர்வாங்க தகனங்களையும், உங்கள் பலிகளையும், உங்கள் தசமபாகங்களையும், உங்கள் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீங்கள் கர்த்தருக்கு நேர்ந்துகொள்ளும் விசேஷித்த எல்லாப் பொருத்தனைகளையும் கொண்டுவந்து, 12 உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நீங்களும், உங்கள் குமாரரும், உங்கள் குமாரத்திகளும், உங்கள் வேலைக்காரரும், உங்கள் வேலைக்காரிகளும், உங்களோடு பங்கும் சுதந்தரமும் இல்லாமல் உங்கள் வாசல்களில் இருக்கிற லேவியனும் சந்தோஷப்படுவீர்களாக. 13 கண்ட இடமெல்லாம் நீ உன் சர்வாங்க தகனபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. 14 உன் கோத்திரங்கள் ஒன்றில் கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்தில்மாத்திரம் நீ உன் சர்வாங்க தகனபலிகளையிட்டு, நான் உனக்குக் கற்பிக்கிற யாவையும் அங்கே செய்வாயாக. 15 ஆனாலும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளும் ஆசீர்வாதத்திற்குத்தக்கதாய், நீ உன் வாசல்களிலெங்கும் உன் இஷ்டப்படியே மிருகஜீவன்களை அடித்துப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும், அவைகளை, வெளிமானையும் கலைமானையும் புசிக்கிறதுபோல புசிக்கலாம். 16 இரத்தத்தைமாத்திரம் புசிக்கவேண்டாம்; அதைத் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும். 17 உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும், நீ நேர்ந்துகொள்ளும் உன்னுடைய சகல பொருத்தனைகளையும், உன் உற்சாகக் காணிக்கைகளையும், உன் கை ஏறெடுத்துப் படைக்கும் படைப்புகளையும், நீ உன் வாசல்களில் புசிக்கவேண்டாம். 18 உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் நீயும் உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அதைப் புசித்து, நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியத்திலும் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்படுவாயாக. 19 நீ உன் தேசத்திலிருக்கும் நாளெல்லாம் லேவியனைக் கைவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. 20 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, உன் எல்லையை விஸ்தாரமாக்கும்போது, நீ இறைச்சி புசிக்க ஆசைகொண்டு, இறைச்சி புசிப்பேன் என்பாயானால், நீ உன் இஷ்டப்படி இறைச்சி புசிக்கலாம். 21 உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானம் உனக்குத் தூரமானால், கர்த்தர் உனக்கு அளித்த உன் ஆடுமாடுகளில் எதையாகிலும் நான் உனக்கு விதித்தபடி நீ அடித்து, உன் இஷ்டப்படி உன் வாசல்களிலே புசிக்கலாம். 22 வெளிமானையும் கலைமானையும் புசிக்கிறதுபோல நீ அதைப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைப் புசிக்கலாம். 23 இரத்தத்தைமாத்திரம் புசிக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு; இரத்தமே உயிர்; மாம்சத்தோடே உயிரையும் புசிக்கவேண்டாம். 24 அதை நீ சாப்பிடாமல் தண்ணீரைப்போல் தரையிலே ஊற்றிவிடவேண்டும். 25 நீ கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் நன்றாயிருக்கும்படி நீ அதைச் சாப்பிடலாகாது. 26 உனக்குரிய பரிசுத்த வஸ்துக்களையும், உன் பொருத்தனைகளையும் கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திற்கு நீ கொண்டுவந்து, 27 உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் உன் சர்வாங்க தகனபலிகளை மாம்சத்தோடும் இரத்தத்தோடும்கூடப் பலியிடக்கடவாய்; நீ செலுத்தும் மற்றப் பலிகளின் இரத்தமும் உன் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் ஊற்றப்படக்கடவது; மாம்சத்தையோ நீ புசிக்கலாம். 28 நீ உன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்வதினால், நீயும் உனக்குப் பின்வரும் உன் பிள்ளைகளும் என்றென்றைக்கும் நன்றாயிருக்கும்படிக்கு, நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லா வார்த்தைகளையும் நீ கவனித்துக் கேள். 29 நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகச் சங்கரிக்கும்போதும், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்து அதிலே குடியிருக்கும்போதும், 30 அவர்கள் உனக்கு முன்பாக அழிக்கப்பட்டபின்பு, நீ அவர்களைப் பின்பற்றிச் சிக்கிக்கொள்ளாதபடிக்கும், இந்த ஜாதிகள் தங்கள் தேவர்களைச் சேவித்தபடி நானும் சேவிப்பேன் என்று சொல்லி அவர்களுடைய தேவர்களைக்குறித்துக் கேட்டு விசாரியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. 31 உன் தேவனாகிய கர்த்தருக்கு அப்படிச் செய்யாயாக; கர்த்தர் வெறுக்கிற அருவருப்பான யாவையும் அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்து, தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தங்கள் தேவர்களுக்கு அக்கினியிலே சுட்டெரித்தார்களே. 32 நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்.

உபாகமம் 13

1 உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும், சொப்பனக்காரனாகிலும் எழும்பி: 2 நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, உங்களுக்கு ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும், 3 அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அன்புகூருகிறீர்களோ இல்லையோ என்று அறியும்படிக்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைச் சோதிக்கிறார். 4 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றி, அவருக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவர் சத்தத்தைக் கேட்டு, அவரைச் சேவித்து, அவரைப் பற்றிக்கொள்வீர்களாக. 5 அந்தத் தீர்க்கதரிசியும், அந்தச் சொப்பனக்காரனும் கொலைசெய்யப்படக்கடவன்; நீங்கள் நடக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியை விட்டு உங்களை விலக்கும்படி, அவன், உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் உங்களை அடிமைத்தன வீட்டிலிருந்து நீங்கலாக்கி மீட்டுக்கொண்டவருமான உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான துரோகப்பேச்சைப் பேசினான்; இப்படிப்பட்ட தீமையை உங்களிடத்திலிருந்து விலக்குவீர்களாக. 6 உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனாகிலும், உன் குமாரனாகிலும், உன் குமாரத்தியாகிலும், உன் மார்பிலுள்ள உன் மனைவியாகிலும், உன் பிராணனைப்போலிருக்கிற உன் சிநேகிதனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தேவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, 7 உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை தொடங்கி மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களில், நீயும் உன் பிதாக்களும் அறியாத அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி இரகசியமாய் உன்னை ஏவிவிட்டால், 8 நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கங்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்துவைக்காமலும், 9 அவனைக் கொலைசெய்துபோடவேண்டும்; அவனைக் கொலைசெய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது. 10 அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து உன்னைப் புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தரை விட்டு விலகும்படி அவன் உன்னை ஏவினபடியினால், அவன் சாகும்படி அவன்மேல் கல்லெறியக்கடவாய். 11 இஸ்ரவேலர் யாவரும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உன் நடுவே இப்படிப்பட்ட தீமையான காரியத்தைச் செய்யாதிருப்பார்கள். 12 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் குடியிருக்கும்படி கொடுக்கும் பட்டணங்கள் ஒன்றில் பேலியாளின் மக்களாகிய துஷ்டமனிதர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு, 13 நீங்கள் அறியாத வேறே தேவர்களைச் சேவிக்கப்போவோம் வாருங்கள் என்று தங்கள் பட்டணத்தின் குடிகளை ஏவினார்கள் என்கிற செய்தியைக் கேள்விப்படும்போது, 14 நீ நன்றாய் விசாரித்து, கேட்டாராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய்யும் நிச்சயமும் என்று காண்பாயானால், 15 அந்தப் பட்டணத்தின் குடிகளைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அதையும் அதிலுள்ள யாவற்றையும் அதின் மிருகஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணி, 16 அதில் கொள்ளையிட்டதையெல்லாம் அதின் நடுவீதியிலே கூட்டி, உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று அந்தப் பட்டணத்தையும், அதில் கொள்ளையிடப்பட்ட யாவற்றையும் முழுவதும் அக்கினியில் சுட்டெரிக்கக்கடவாய்; அது இனிக் கட்டப்படாமல், நித்திய மண்மேடாயிருக்கக்கடவது. 17 சபிக்கப்பட்ட பொருளில் ஒன்றும் உன் கையில் இருக்கவேண்டாம். நான் இன்று உனக்குக் கற்பிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நீ கைக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்யும்படி, அவர் சத்தத்திற்குச் செவிகொடுப்பாயானால், 18 கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தைவிட்டுத் திரும்பி, உனக்குத் தயைசெய்து, உனக்கு இரங்கி, அவர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடி உன்னை விருத்தியடையப்பண்ணுவார்.

உபாகமம் 14

1 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்; செத்தவனுக்காகக் கீறிக்கொள்ளாமலும், உங்கள் கண்களுக்கு இடையிலே சவரம்பண்ணாமலும் இருப்பீர்களாக. 2 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின்மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்த ஜனங்களாயிருக்கத் தெரிந்துகொண்டார். 3 அருவருப்பானதொன்றையும் புசிக்கவேண்டாம். 4 நீங்கள் புசிக்கத்தகும் மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும், 5 மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், புல்வாயுமே. 6 மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்; 7 அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக. 8 பன்றியும் புசிக்கத்தகாது; அது விரிகுளம்புள்ளதாயிருந்தும், அசைபோடாதிருக்கும்; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; இவைகளின் மாம்சத்தைப் புசியாமலும் இவைகளின் உடலைத் தொடாமலும் இருப்பீர்களாக. 9 ஜலத்திலிருக்கிற எல்லாவற்றிலும் சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம். 10 சிறகும் செதிளும் இல்லாத யாதொன்றையும் புசிக்கலாகாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக. 11 சுத்தமான சகல பட்சிகளையும் நீங்கள் புசிக்கலாம். 12 நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும், 13 பைரியும், வல்லூறும், சகலவித பருந்தும், 14 சகலவித காகங்களும், 15 தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவிதமான டேகையும், 16 ஆந்தையும், கோட்டானும், நாரையும், 17 கூழக்கடாவும், குருகும், நீர்க்காகமும், 18 கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலுமே. 19 பறக்கிறவைகளில் ஊர்வன யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகள் புசிக்கத்தகாதவைகள். 20 சுத்தமான பறவைகள் யாவையும் நீங்கள் புசிக்கலாம். 21 தானாய் இறந்துபோனதொன்றையும் புசிக்கவேண்டாம்; உங்கள் வாசல்களில் இருக்கிற பரதேசிக்கு அதைப் புசிக்கக்கொடுக்கலாம்; அல்லது அந்நியனுக்கு அதை விற்றுப்போடலாம்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்த ஜனங்கள். வெள்ளாட்டுக்குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம். 22 நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு எப்பொழுதும் பயந்திருக்கப் பழகும்படிக்கு, வருஷந்தோறும் நீ விதைக்கிற விதைப்பினாலே வயலில் விளையும் எல்லாப் பலனிலும் தசமபாகத்தைப் பிரித்து, 23 உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, உன் தானியத்திலும் உன் திராட்சரசத்திலும் உன் எண்ணெயிலும் தசமபாகத்தையும் உன் ஆடுமாடுகளின் தலையீற்றுகளையும் அவருடைய சந்நிதியில் புசிப்பாயாக. 24 உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும் காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்ட ஸ்தானம் உனக்கு வெகு தூரமாயிருக்கிறதினால், வழிப்பிரயாணத்தின் வெகு தொலையினிமித்தம், நீ அதைக் கொண்டுபோகக்கூடாதிருக்குமானால், 25 அதைப் பணமாக்கி, பணமுடிப்பை உன் கையிலே பிடித்துக்கொண்டு, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தலத்திற்குப் போய், 26 அங்கே உன் இஷ்டப்படி ஆடுமாடு, திராட்சரசம், மதுபானம் முதலான சகலத்தையும் பணம்கொடுத்து வாங்கி, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில், நீயும் உன் குடும்பத்தாரும் உன் வாசல்களில் இருக்கிற லேவியனும் புசித்துச் சந்தோஷப்படுவீர்களாக. 27 லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக. 28 மூன்றாம் வருஷத்தின் முடிவிலே அவ்வருஷத்தில் உனக்கு வந்த பலன் எல்லாவற்றிலும் தசமபாகத்தைப் பிரித்து, உன் வாசல்களில் வைக்கக்கடவாய். 29 லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும், விதவையும் வந்து புசித்துத் திர்ப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்.

உபாகமம் 15

1 ஏழாம் வருஷத்தின் முடிவிலே விடுதலைபண்ணுவாயாக. 2 விடுதலையின் விபரமாவது: பிறனுக்குக் கடன்கொடுத்தவன் எவனும், கர்த்தர் நியமித்த விடுதலை கூறப்பட்டபடியால், அந்தக் கடனைப் பிறன் கையிலாகிலும் தன் சகோதரன் கையிலாகிலும் தண்டாமல் விட்டுவிடக்கடவன். 3 அந்நிய ஜாதியான் கையிலே நீ கடனைத் தண்டலாம்; உன் சகோதரனிடத்திலோ உனக்கு வரவேண்டியதை உன் கை விட்டுவிடக்கடவது. 4 எளியவன் உனக்குள் இல்லாதிருக்கும்படியாக இப்படிச் செய்யவேண்டும்; இன்று நான் உனக்குக் கற்பிக்கிற எல்லாக் கற்பனைகளின்படியும் நீ செய்யும்படி, உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கவனமாய்க் கேட்பாயானால், 5 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார். 6 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உன்னை ஆசீர்வதிப்பதினால், நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்குவதில்லை; நீ அநேகம் ஜாதிகளை ஆளுவாய், உன்னையோ அவர்கள் ஆளுவதில்லை. 7 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் எந்த வாசலிலும் உன் சகோதரரில் எளியவனான ஒருவன் இருந்தால், எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும், உன் கையை மூடாமலும், 8 அவனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறந்து, அவனுடைய அவசரத்தினிமித்தம் அவனுக்குத் தேவையானதைக் கடன்கொடுப்பாயாக. 9 விடுதலை வருஷமாகிய ஏழாம் வருஷம் கிட்டியிருக்கிறதென்று சொல்லி, உன் இருதயத்திலே பொல்லாத நினைவு கொண்டு, உன் ஏழைச் சகோதரனுக்குக் கொடாமல் மறுத்து, அவன்மேல் வன்கண் வைக்காதபடிக்கும், அவன் உன்னைக் குறித்துக் கர்த்தரை நோக்கி அபயமிடாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு; அப்படிச் செய்வாயானால் அது உனக்குப் பாவமாயிருக்கும். 10 அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக; அதினிமித்தமாக உன் தேவனாகிய கர்த்தர் உன்னுடைய எல்லாக் கிரியைகளிலும், நீ கையிட்டுச் செய்யும் எல்லாக் காரியங்களிலும் உன்னை ஆசீர்வதிப்பார். 11 தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்கவேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். 12 உன் சகோதரனாகிய எபிரெய புருஷனாகிலும் எபிரெய ஸ்திரீயாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறுவருஷம் உன்னிடத்தில் சேவிக்கவேண்டும்; ஏழாம் வருஷத்தில் அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடுவாயாக. 13 அவனை விடுதலைபண்ணி அனுப்பிவிடும்போது அவனை வெறுமையாய் அனுப்பிவிடாமல், 14 உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததின்படி, உன் ஆட்டுமந்தையிலும் உன் களத்திலும் உன் ஆலையிலும் எடுத்து அவனுக்குத் தாராளமாய்க் கொடுத்து அனுப்பிவிடுவாயாக. 15 நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை மீட்டுக்கொண்டதையும் நினைவுகூரக்கடவாய்; ஆகையால் நான் இன்று இந்தக் காரியத்தை உனக்குக் கட்டளையிடுகிறேன். 16 ஆனாலும், அவன் உன்னிடத்தில் நன்மைபெற்று, உன்னையும் உன் குடும்பத்தையும் நேசிப்பதினால்: நான் உன்னைவிட்டுப் போகமாட்டேன் என்று உன்னுடனே சொல்வானேயாகில், 17 நீ ஒரு கம்பியை எடுத்து, அவன் காதைக் கதவோடே சேர்த்துக் குத்துவாயாக; பின்பு அவன் என்றைக்கும் உனக்கு அடிமையாயிருக்கக்கடவன்; உன் அடிமைப்பெண்ணுக்கும் அப்படியே செய்யக்கடவாய். 18 அவனை விடுதலையாக்கி அனுப்பிவிடுவது உனக்கு விசனமாய்க் காணப்படவேண்டாம்; இரட்டிப்பான கூலிக்கு ஈடாக ஆறு வருஷம் உன்னிடத்தில் சேவித்தானே; இப்படி உன் தேவனாகிய கர்த்தர் நீ செய்யும் எல்லாவற்றிலும் உன்னை ஆசீர்வதிப்பார். 19 உன் ஆடுமாடுகளில் தலையீற்றாகிய ஆணையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கக்கடவாய்; உன் மாட்டின் தலையீற்றை வேலைகொள்ளாமலும், உன் ஆட்டின் தலையீற்றை மயிர் கத்தரியாமலும் இருப்பாயாக. 20 கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தலத்திலே வருஷந்தோறும் நீயும் உன் வீட்டாருமாய் உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அப்படிப்பட்டவைகளைப் புசிக்கக்கடவீர்கள். 21 அதற்கு முடம் குருடு முதலான யாதொரு பழுது இருந்தால், அதை உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம். 22 அப்படிப்பட்டதை நீ உன் வாசல்களிலே, கலைமானையும் வெளிமானையும் புசிப்பதுபோலப் புசிக்கலாம்; தீட்டுப்பட்டவனும் தீட்டுப்படாதவனும் அதைப் புசிக்கலாம். 23 அதின் இரத்தத்தைமாத்திரம் சாப்பிடாமல், அதைத் தண்ணீரைப்போலத் தரையிலே ஊற்றிவிடக்கடவாய்.

உபாகமம் 16

1 ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்; ஆபிப்மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினாரே. 2 கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடுமாடுகளைப் பலியிடுவாயாக. 3 நீ எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்காப்பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள்வரைக்கும் புசிக்கக்கடவாய்; நீ தீவிரமாய் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபடியினால் இப்படிச் செய்யவேண்டும். 4 ஏழுநாளளவும் உன் எல்லைகளிலெங்கும் புளிப்புள்ள அப்பம் உன்னிடத்தில் காணப்படலாகாது; நீ முதல்நாள் சாயங்காலத்தில் இட்ட பலியின் மாம்சத்தில் ஏதாகிலும் இராமுழுதும் விடியற்காலம்வரைக்கும் வைக்கவேண்டாம். 5 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன்னுடைய வாசல்களில் எதிலும் நீ பஸ்காவை அடிக்கவேண்டாம். 6 உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சாயங்காலத்திலே சூரியன் அஸ்தமிக்கிறபோது பஸ்காவை அடித்து, 7 உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திலே, அதைப் பொரித்துப் புசித்து, விடியற்காலத்திலே உன் கூடாரங்களுக்குத் திரும்பிப்போவாயாக. 8 நீ ஆறுநாளும் புளிப்பில்லாத அப்பம் புசிக்கவேண்டும், ஏழாம் நாள் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆசரிக்கப்படும் நாளாயிருக்கும்; அதிலே யாதொரு வேலையும் செய்யவேண்டாம். 9 ஏழு வாரங்களை எண்ணுவாயாக; அறுப்பு அறுக்கத் தொடங்கும் காலமுதல் நீ அந்த ஏழு வாரங்களையும் எண்ணவேண்டும். 10 அவைகள் முடிந்தபோது வாரங்களின் பண்டிகையை உன் தேவனாகிய கர்த்தருக்கு என்று ஆசரித்து, உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்ததற்குத் தக்கதாய் உன் கைக்கு நேர்ந்த மனப்பூர்வமான காணிக்கையாகிய பகுதியைச் செலுத்தி, 11 உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும், உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு, 12 நீ எகிப்தில் அடிமையாயிருந்ததை நினைத்து, இந்தக் கட்டளைகளைக் கைக்கொண்டு இவைகளின்படி செய்யக்கடவாய். 13 நீ உன் களத்தின் பலனையும் உன் ஆலையின் பலனையும் சேர்த்தபின்பு, கூடாரப்பண்டிகையை ஏழுநாள் ஆசரித்து, 14 உன் பண்டிகையில் நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், உன் வேலைக்காரியும், உன் வாசல்களில் இருக்கிற லேவியனும், பரதேசியும், திக்கற்ற பிள்ளையும், விதவையும் சந்தோஷப்படக்கடவீர்கள்; 15 உனக்கு உண்டான எல்லா வரத்திலும் உன் கைகளுடைய எல்லாக் கிரியையிலும் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதித்தபடியினால், கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்துச் சந்தோஷமாயிருப்பாயாக. 16 வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள். 17 ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத்தக்கதாக, அவனவன் தன் தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டுவரக்கடவன். 18 உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிலெல்லாம், நியாயாதிபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்புச் செய்யக்கடவர்கள். 19 நியாயத்தைப் புரட்டாதிருப்பாயாக; முகதாட்சிணியம் பண்ணாமலும், பரிதானம் வாங்காமலும் இருப்பாயாக; பரிதானம் ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நீதிமான்களின் நியாயங்களைத் தாறுமாறாக்கும். 20 நீ பிழைத்து, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நீதியையே பின்பற்றுவாயாக. 21 நீ உன் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தண்டையில் யாதொரு தோப்பையும் உண்டாக்கவேண்டாம்; 22 யாதொரு சிலையையும் நிறுத்தவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் அதை வெறுக்கிறார்.

உபாகமம் 17

1 பழுதும் அவலட்சணமுமுள்ள யாதொரு மாட்டையாவது ஆட்டையாவது உன் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடவேண்டாம்; அது உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பாயிருக்கும். 2 உன் தேவனாகிய கர்த்தரின் கண்களுக்கு முன்பாக எந்தப் புருஷனாவது ஸ்திரீயாவது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற வாசல்கள் ஒன்றில் அக்கிரமஞ்செய்து, அவருடைய உடன்படிக்கையை மீறி, 3 நான் விலக்கியிருக்கிற வேறே தேவர்களையாவது சந்திரசூரியர் முதலான வானசேனைகளையாவது சேவித்து, அவைகளை நமஸ்கரிக்கிறதாகக் காணப்பட்டால், 4 அது உன் செவிகேட்க உனக்கு அறிவிக்கப்படும்போது, நீ அதை நன்றாய் விசாரிக்கக்கடவாய்; அது மெய் என்றும், அப்படிப்பட்ட அருவருப்பு இஸ்ரவேலில் நடந்தது நிச்சயம் என்றும் கண்டாயானால், 5 அந்த அக்கிரமத்தைச் செய்த புருஷனையாவது ஸ்திரீயையாவது உன் வாசல்களுக்கு வெளியே கொண்டுபோய், அப்படிப்பட்டவர்கள் சாகும்படி கல்லெறியக்கடவாய். 6 சாவுக்குப் பாத்திரமானவன் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் கொலைசெய்யப்படக்கடவன்; ஒரே சாட்சியினுடைய வாக்கினால் அவன் கொலைசெய்யப்படலாகாது. 7 அவனைக் கொலைசெய்கிறதற்குச் சாட்சிகளுடைய கைகள் முந்தியும் எல்லா ஜனங்களுடைய கைகள் பிந்தியும் அவன்மேல் இருப்பதாக; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய். 8 உன் வாசல்களில் இரத்தப்பழிகளைக் குறித்தும், வியாச்சியங்களைக் குறித்தும், காயம்பட்ட சேதங்களைக்குறித்தும் வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு அரிதாயிருந்தால், நீ எழுந்து, உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து ஏற்படுத்தின ஸ்தானத்திற்குப் போய், 9 லேவியரான ஆசாரியரிடத்திலும் அந்நாட்களில் இருக்கிற நியாயாதிபதியினிடத்திலும் விசாரிக்கவேண்டும்; நியாயம் இன்னதென்று அவர்கள் உனக்கு அறிவிப்பார்கள். 10 கர்த்தர் தெரிந்துகொண்ட இடத்திலிருந்து அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்புக்கு நீ இணங்கி, அவர்கள் உனக்கு விதிக்கிறபடி செய்யக் கவனமாயிருப்பாயாக. 11 அவர்கள் உனக்கு அறிவிக்கும் தீர்ப்பை விட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், அவர்கள் உனக்கு உணர்த்தும் பிரமாணத்தின்படியும், உனக்குச் சொல்லும் நியாயத்தீர்ப்பின்படியும் செய்யக்கடவாய். 12 அங்கே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படி நிற்கிற ஆசாரியனுடைய சொல்லையாகிலும், நியாயாதிபதியினுடைய சொல்லையாகிலும் கேளாமல், ஒருவன் இடும்புசெய்தால், அவன் சாகக்கடவன்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய். 13 அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் அதைக் கேட்டு, பயந்து, இனி இடும்பு செய்யாதிருப்பார்கள். 14 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ: என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்; 15 உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய்; உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக்கூடாது. 16 அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே. 17 அவன் இருதயம் பின்வாங்கிப் போகாதபடி அவன் அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ணவும் வேண்டாம். 18 அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, அவனுடைய இருதயம் அவன் சகோதரர்பேரில் மேட்டிமைகொள்ளாமலும், கற்பனையைவிட்டு வலதுபுறம் இடதுபுறம் சாயாமலும், 19 இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக்கொள்ளும்பொருட்டு, 20 அவன் லேவியராகிய ஆசாரியரிடத்திலிருக்கிற நியாயப்பிரமாண நூலைப்பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்; இப்படிச் செய்வதினால், தானும் தன் குமாரரும் இஸ்ரவேலின் நடுவே தங்கள் ராஜ்யத்திலே நீடித்து வாழுவார்கள்.

உபாகமம் 18

1 லேவியராகிய ஆசாரியருக்கும் லேவி கோத்திரத்தார் அனைவருக்கும் இஸ்ரவேல் புத்திரருடன் பங்கும் சுதந்தரமும் இல்லாதிருப்பதாக; கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளையும் அவருக்குச் சுதந்தரமானவைகளையும் அவர்கள் புசிப்பார்களாக. 2 அவர்கள் சகோதரருக்குள்ளே அவர்களுக்குச் சுதந்தரமில்லை; கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியபடியே, அவரே அவர்கள் சுதந்தரம். 3 ஜனத்தினிடத்தில் பெற்றுக்கொள்ளவேண்டிய ஆசாரியருக்குரிய வரத்தாவது: ஜனங்கள் பலியிடும் ஆடுமாடுகளில் முன்னந்தொடையையும் தாடைகளையும் இரைப்பையையும் ஆசாரியனுக்குக் கொடுக்கவேண்டும். 4 உன் தானியம், திராட்சரசம், எண்ணெய், ஆட்டுரோமம் என்னும் இவைகளின் முதற்பலனையும் அவனுக்குக் கொடுக்கவேண்டும். 5 அவனும் அவன் குமாரரும் எந்நாளும் கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஆராதனை செய்யும்படி நிற்கும்பொருட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரத்தார் எல்லாருக்குள்ளும் அவனையே தெரிந்துகொண்டார். 6 இஸ்ரவேலில் எவ்விடத்திலுமுள்ள உன் வாசல்கள் யாதொன்றிலே தங்கின ஒரு லேவியன் அவ்விடத்தை விட்டு, கர்த்தர் தெரிந்துகொண்ட ஸ்தானத்திற்கு மனப்பூர்வமாய் வந்தால், 7 அங்கே கர்த்தருடைய சந்நிதியில் நிற்கும் லேவியராகிய தன் எல்லாச் சகோதரரைப்போலும் தன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை முன்னிட்டு ஊழியஞ்செய்வான். 8 அப்படிப்பட்டவர்கள் தங்கள் பிதாக்களுடைய ஆஸ்தியின் விலைக்கிரயத்தை அநுபவிக்கிறதும் அல்லாமல், சாப்பாட்டிற்காகச் சமமான பாகத்தையும் பெற்றுக்கொள்வார்கள். 9 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேரும்போது, அந்த ஜாதிகள் செய்யும் அருவருப்புகளின்படி செய்யக் கற்றுக்கொள்ளவேண்டாம். 10 தன் மகனையாவது தன் மகளையாவது தீக்கடக்கப்பண்ணுகிறவனும், குறிசொல்லுகிறவனும், நாள்பார்க்கிறவனும், அஞ்சனம் பார்க்கிறவனும், சூனியக்காரனும், 11 மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம். 12 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார். 13 உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீ உத்தமனாயிருக்கக்கடவாய். 14 நீ துரத்திவிடப்போகிற இந்த ஜாதிகள் நாள்பார்க்கிறவர்களுக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் செவிகொடுக்கிறார்கள்; நீ அப்படிச் செய்கிறதற்கு உன் தேவனாகிய கர்த்தர் உத்தரவுகொடார். 15 உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. 16 ஓரேபிலே சபை கூட்டப்பட்ட நாளில்: நான் சாகாதபடி என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தை இனி நான் கேளாமலும், இந்தப் பெரிய அக்கினியை இனி நான் காணாமலும் இருப்பேனாக என்று உன் தேவனாகிய கர்த்தரை நீ வேண்டிக்கொண்டதின்படியெல்லாம் அவர் செய்வார். 17 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: அவர்கள் சொன்னது சரியே. 18 உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார். 19 என் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்குச் செவிகொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். 20 சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின் நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன். 21 கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், 22 ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும்போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்தத் தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.

உபாகமம் 19

1 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தின் ஜாதிகளை உன் தேவனாகிய கர்த்தர் வேரற்றுப்போகப் பண்ணுவதினால், நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அவர்கள் பட்டணங்களிலும் அவர்கள் வீடுகளிலும் குடியேறும்போது, 2 நீ உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் உன் தேசத்தின் நடுவிலே, உனக்காக மூன்று பட்டணங்களைப் பிரித்துவைக்கக்கடவாய். 3 கொலைசெய்தவன் எவனும் அங்கே ஓடிப்போகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சுதந்தரிக்கப்பண்ணப்போகிற உன் தேசத்தின் எல்லையை நீ மூன்று பங்காகப் பகுத்து அதற்கு வழியை உண்டுபண்ணக்கடவாய். 4 கொலைசெய்து அங்கே ஓடிப்போய், உயிரோடிருக்கத்தக்கவன் யாரென்றால்: தான் முன்னே பகைத்திராத பிறனொருவனை மனதறியாமல் கொன்றவன்தானே. 5 ஒருவன் விறகுவெட்ட மற்றொருவனோடே காட்டில் போய், மரத்தை வெட்டத் தன் கையிலிருந்த கோடரியை ஓங்கும்போது, இரும்பானது காம்பை விட்டுக் கழன்று மற்றவன்மேல் பட்டதினால் அவன் இறந்துபோனால், 6 இரத்தப்பழிக்காரன் தன் மனம் எரிகையில், கொலைசெய்தவனை வழி தூரமாயிருக்கிறதினாலே பின்தொடர்ந்து பிடித்து, அவனைக் கொன்றுபோடாதபடிக்கு, இவன் அந்தப் பட்டணங்கள் ஒன்றில் ஓடிப்போய் உயிரோடிருப்பானாக; இவன் அவனை முன்னே பகைக்காதபடியினால், இவன்மேல் சாவுக்கான குற்றம் சுமரவில்லை. 7 இதினிமித்தம் மூன்று பட்டணங்களை உனக்காகப் பிரித்துவைக்கக்கடவாய் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். 8 நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, எந்நாளும் அவர் வழிகளில் நடப்பதற்காக, இன்று நான் உனக்குக் கற்பிக்கிற இந்த எல்லாக் கற்பனைகளையும் கைக்கொண்டு அதின்படி செய்து, 9 உன் தேவனாகிய கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, அவர் உன் எல்லையை விஸ்தாரமாக்கி, உன் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று சொன்ன தேசம் முழுவதையும் உனக்குக் கொடுத்தால், 10 அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தில் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படுகிறதினால் உன்மேல் இரத்தப்பழி சுமராதபடிக்கு, இந்த மூன்று பட்டணங்களும் அல்லாமல் இன்னும் மூன்று பட்டணங்களை ஏற்படுத்தக்கடவாய். 11 ஒருவன் பிறனொருவனைப் பகைத்து, அவனுக்குப் பதிவிருந்து, அவனுக்கு விரோதமாய் எழும்பி, அவன் சாகும்படி அவனை அடித்து, இந்தப் பட்டணங்களில் ஒன்றில் ஓடிப்போயிருப்பானாகில், 12 அந்தப் பட்டணத்தின் மூப்பர்கள் ஆள் அனுப்பி, அங்கேயிருந்து அவனைக் கொண்டுவரும்படி செய்து, அவன் சாகும்படிக்கு அவனை இரத்தப்பழி வாங்குகிறவன் கையில் ஒப்புக்கொடுக்கக்கடவர்கள். 13 உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; குற்றமில்லாத இரத்தப்பழியை இஸ்ரவேலை விட்டு விலக்கக்கடவாய்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய். 14 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் உன் கைவசமாயிருக்கும் காணியாட்சியிலே முன்னோர்கள் குறித்திருக்கிற பிறனுடைய எல்லையை ஒற்றிப்போடாயாக. 15 ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக்கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும். 16 ஒருவன்மேல் ஒரு குற்றத்தைச் சுமத்தும்படி, ஒரு பொய்ச்சாட்சிக்காரன் அவன்மேல் சாட்சிசொல்ல எழும்பினால், 17 வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நிதியில் அக்காலத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக. 18 அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாய் விசாரணைசெய்யக்கடவர்கள்; சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதரன்மேல் அபாண்டமாய்க் குற்றஞ்சாற்றினான் என்றும் கண்டால், 19 அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்தபடியே அவனுக்குச் செய்யக்கடவீர்கள்; இவ்விதமாய்த் தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக. 20 மற்றவர்களும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உங்களுக்குள்ளே அப்படிப்பட்ட தீமையைச் செய்யாதிருப்பார்கள். 21 உன் கண் அவனுக்கு இரங்கவேண்டாம்; ஜீவனுக்கு ஜீவன், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால் கொடுக்கப்படவேண்டும்.

உபாகமம் 20

1 நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப் போகையில், குதிரைகளையும் இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார். 2 நீங்கள் யுத்தஞ்செய்யத் தொடங்கும்போது, ஆசாரியன் சேர்ந்துவந்து, ஜனங்களிடத்தில் பேசி: 3 இஸ்ரவேலரே, கேளுங்கள்; இன்று உங்கள் சத்துருக்களுடன் யுத்தஞ்செய்யப் போகிறீர்கள்; உங்கள் இருதயம் துவளவேண்டாம்; நீங்கள் அவர்களைப் பார்த்துப் பயப்படவும் கலங்கவும் தத்தளிக்கவும் வேண்டாம். 4 உங்களுக்காக உங்கள் சத்துருக்களோடே யுத்தம்பண்ணவும் உங்களை இரட்சிக்கவும் உங்களோடேகூடப் போகிறவர் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல்லவேண்டும். 5 அன்றியும் அதிபதிகள் ஜனங்களை நோக்கி: புதுவீட்டைக் கட்டி, அதைப் பிரதிஷ்டைபண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதைப் பிரதிஷ்டைபண்ணவேண்டியதாகும். 6 திராட்சத்தோட்டத்தை நாட்டி, அதை அநுபவியாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அதை அநுபவிக்கவேண்டியதாகும். 7 ஒரு பெண்ணைத் தனக்கு நியமித்துக்கொண்டு, அவளை விவாகம்பண்ணாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன்; அவன் யுத்தத்திலே செத்தால் வேறொருவன் அவளை விவாகம்பண்ணவேண்டியதாகும் என்று சொல்லவேண்டும். 8 பின்னும் அதிபதிகள் ஜனங்களுடனே பேசி: பயங்காளியும் திடனற்றவனுமாயிருக்கிறவன் எவனோ, அவன் தன் சகோதரரின் இருதயத்தைத் தன் இருதயத்தைப்போலக் கரைந்துபோகப்பண்ணாதபடிக்கு, தன் வீட்டுக்குத் திரும்பிப்போகக்கடவன் என்று சொல்லவேண்டும். 9 அதிபதிகள் ஜனங்களோடே பேசி முடிந்தபின்பு, ஜனங்களை நடத்தும்படி, சேனைத்தலைவரை நியமிக்கக்கடவர்கள். 10 நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ண நெருங்கும்போது, அந்தப் பட்டணத்தாருக்குச் சமாதானம் கூறக்கடவாய். 11 அவர்கள் உனக்குச் சமாதானமான உத்தரவுகொடுத்து, வாசலைத் திறந்தால், அதிலுள்ள ஜனங்கள் எல்லாரும் உனக்குப் பகுதிகட்டுகிறவர்களாகி, உனக்கு ஊழியஞ்செய்யக்கடவர்கள். 12 அவர்கள் உன்னோடே சமாதானப்படாமல், உன்னோடே யுத்தம்பண்ணுவார்களானால், நீ அதை முற்றிக்கைபோட்டு, 13 உன் தேவனாகிய கர்த்தர் அதை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, அதிலுள்ள புருஷர்கள் எல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, 14 ஸ்திரீகளையும் குழந்தைகளையும் மிருகஜீவன்களையும் மாத்திரம் உயிரோடே வைத்து, பட்டணத்திலுள்ள எல்லாவற்றையும் கொள்ளையிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு ஒப்புக்கொடுத்த உன் சத்துருக்களின் கொள்ளைப்பொருளை அநுபவிப்பாயாக. 15 இந்த ஜாதிகளைச்சேர்ந்த பட்டணங்களாயிராமல், உனக்கு வெகுதூரத்திலிருக்கிற சகல பட்டணங்களுக்கும் இப்படியே செய்வாயாக. 16 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கிற ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்னும் ஜனங்களின் பட்டணங்களிலேமாத்திரம் சுவாசமுள்ளதொன்றையும் உயிரோடே வைக்காமல், 17 அவர்களை உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே சங்காரம்பண்ணக்கடவாய். 18 அவர்கள் தங்கள் தேவர்களுக்குச் செய்கிற தங்களுடைய சகல அருவருப்புகளின்படியே நீங்களும் செய்ய உங்களுக்குக் கற்றுக்கொடாமலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாமலும் இருக்கும்படி இப்படிச் செய்யவேண்டும். 19 நீ ஒரு பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடிக்க அநேக நாள் அதை முற்றிக்கைபோட்டிருக்கும்போது, நீ கோடரியை ஓங்கி, அதின் மரங்களை வெட்டிச் சேதம்பண்ணாயாக; அவைகளின் கனியை நீ புசிக்கலாமே; ஆகையால் உனக்குக் கொத்தளத்திற்கு உதவும் என்று அவைகளை வெட்டாயாக; வெளியின் விருட்சங்கள் மனுஷனுடைய ஜீவனத்துக்கானவைகள். 20 புசிக்கிறதற்கேற்ற கனிகொடாத மரம் என்று நீ அறிந்திருக்கிற மரங்களைமாத்திரம் வெட்டியழித்து, உன்னோடு யுத்தம்பண்ணுகிற பட்டணம் பிடிபடுமட்டும் அதற்கு எதிராகக் கொத்தளம் போடலாம்.

உபாகமம் 21

1 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தில், கொலைசெய்யப்பட்டுக் கிடக்கிற ஒருவனை வெளியிலே கண்டு, அவனைக் கொன்றவன் இன்னான் என்று தெரியாதிருந்தால், 2 உன் மூப்பரும் உன் நியாயாதிபதிகளும் புறப்பட்டுப்போய், கொலைசெய்யப்பட்டவனைச் சுற்றிலும் இருக்கும் பட்டணங்கள்மட்டும் அளப்பார்களாக. 3 கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்து மூப்பர், வேலையில் பண்படாததும் நுகத்தடியில் பிணைக்கப்படாததுமான ஒரு கிடாரியைப் பிடித்து, 4 உழுது விதையாத தரிசான பள்ளத்தாக்கிலே அதைக் கொண்டுபோய், அந்தப் பள்ளத்தாக்கிலே அதின் தலையை வெட்டிப்போடக்கடவர்கள். 5 உன் தேவனாகிய கர்த்தர் தமக்கு ஆராதனை செய்யவும் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதிக்கவும் லேவியின் குமாரராகிய ஆசாரியரைத் தெரிந்துகொண்டபடியால், அவர்களும் அத்தருணத்தில் வந்திருக்கவேண்டும்; அவர்கள் வாக்கின்படியே சகல வழக்கும் சகல காயச்சேதமும் தீர்க்கப்படவேண்டும். 6 கொலைசெய்யப்பட்டவனுக்குச் சமீபமான பட்டணத்தின் மூப்பர் எல்லாரும் பள்ளத்தாக்கிலே தலை வெட்டப்பட்ட கிடாரியின்மேல் தங்கள் கைகளைக் கழுவி: 7 எங்கள் கைகள் அந்த இரத்தத்தைச் சிந்தினதும் இல்லை, எங்கள் கண்கள் அதைக் கண்டதும் இல்லை; 8 கர்த்தாவே, நீர் மீட்டுக்கொண்ட உமது ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் குற்றமில்லாத இரத்தப்பழியைச் சுமத்தாமல், உமது ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் கிருபையுள்ளவராயிரும் என்று சொல்வார்களாக; அப்பொழுது இரத்தப்பழி அவர்களுக்கு நிவிர்த்தியாகும். 9 இப்படிக் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதை நீ செய்வாயாகில், குற்றமில்லாத இரத்தப்பழியை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடுவாய். 10 நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தத்திற்குப் புறப்பட்டு, உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடித்துவந்து, 11 சிறைகளில் ரூபவதியான ஒரு ஸ்திரீயைக்கண்டு, அவளை விவாகம்பண்ண விரும்பி, 12 அவளை உன் வீட்டிற்குள் அழைத்துக்கொண்டுபோவாயானால், அவள் தன் தலையைச் சிரைத்து, தன் நகங்களைக் களைந்து, 13 தன் சிறையிருப்பின் வஸ்திரத்தையும் நீக்கி, உன் வீட்டிலிருந்து, ஒரு மாதமட்டும் தன் தகப்பனையும் தாயையும் நினைத்துத் துக்கங்கொண்டாடக்கடவள்; அதன்பின்பு நீ அவளோடே சேர்ந்து, அவளுக்குப் புருஷனாயிரு, அவள் உனக்கு மனைவியாயிருப்பாள். 14 அவள்மேல் உனக்குப் பிரியமில்லாமற்போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் இஷ்டப்படி போகவிடலாம்; நீ அவளைத் தாழ்மைப்படுத்தினபடியினால் அவளாலே ஆதாயம் பெறும்படி தேடவேண்டாம். 15 இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும், 16 தகப்பன் தனக்கு உண்டான ஆஸ்தியைத் தன் பிள்ளைகளுக்குப் பங்கிடும் நாளில், வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்த முதற்பேறானவனுக்கு சேஷ்டபுத்திர சுதந்தரத்தைக் கொடுக்கவேண்டுமேயல்லாமல், விரும்பப்பட்டவளிடத்தில் பிறந்தவனுக்குக் கொடுக்கலாகாது. 17 வெறுக்கப்பட்டவளிடத்தில் பிறந்தவனை சேஷ்டபுத்திரனாக அங்கிகரித்து, தனக்கு உண்டான ஆஸ்திகளிலெல்லாம் இரண்டு பங்கை அவனுக்குக் கொடுக்கவேண்டும்; அவன் தன் தகப்பனுடைய முதற்பலன், சேஷ்டபுத்திர சுதந்தரம் அவனுக்கே உரியது. 18 தன் தகப்பன் சொல்லையும் தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும் போகிற அடங்காத துஷ்டப்பிள்ளை ஒருவனுக்கு இருந்தால், 19 அவன் தகப்பனும் அவன் தாயும் அவனைப் பிடித்து, அவன் இருக்கும் பட்டணத்தின் மூப்பரிடத்துக்கும் அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்: 20 எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பரோடே சொல்லுவார்களாக. 21 அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதரெல்லாரும் அவன்மேல் கல்லெறியக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கிப்போடவேண்டும்; இஸ்ரவேலர் எல்லாரும் அதைக் கேட்டுப் பயப்படுவார்கள். 22 கொலைசெய்யப்பட ஒருவன்மேல் சாவுக்குப் பாத்திரமான பாவம் உண்டாயிருக்க, அவனைக் கொலைசெய்யும்படி மரத்திலே தூக்கிப்போடுவாயானால், 23 இரவிலே அவன் பிரேதம் மரத்திலே தொங்கலாகாது; அந்நாளிலேதானே அதை அடக்கம்பண்ணவேண்டும்; தூக்கிப்போடப்பட்டவன் தேவனால் சபிக்கப்பட்டவன்; ஆகையால் உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தைத் தீட்டுப்படுத்தாயாக.

உபாகமம் 22

1 உன் சகோதரனுடைய மாடாவது ஆடாவது வழிதப்பிப்போகிறதைக் கண்டாயானால், அதைக் காணாதவன்போல் இராமல், அதை உன் சகோதரனிடத்துக்குத் திருப்பிக்கொண்டு போகக்கடவாய். 2 உன் சகோதரன் உனக்குச் சமீபமாயிராமலும் உனக்கு அறிமுகமாயிராமலும் இருந்தால், நீ அதை உன் வீட்டிற்குக் கொண்டுபோய், அதை உன் சகோதரன் தேடிவருமட்டும் உன்னிடத்திலே வைத்து, அவனுக்குத் திரும்பக் கொடுக்கக்கடவாய். 3 அப்படியே அவன் கழுதையைக் குறித்தும் செய்யக்கடவாய்; அவன் வஸ்திரத்தைக்குறித்தும் அப்படியே செய்யக்கடவாய்; உன் சகோதரனிடத்திலிருந்து காணாமற்போனவைகளில் எதையாகிலும் கண்டுபிடித்தாயானால் அப்படியே செய்யக்கடவாய்; அவைகளை நீ காணாதவன்போல் விட்டுப்போகலாகாது. 4 உன் சகோதரனுடைய கழுதையாவது அவனுடைய மாடாவது வழியிலே விழுந்துகிடக்கிறதைக் கண்டாயானால், அதைக் காணாதவன்போல விட்டுப்போகாமல், அவனோடேகூட அதைத் தூக்கியெடுத்துவிடுவாயாக. 5 புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவர்கள். 6 வழியருகே ஒரு மரத்திலாவது தரையிலாவது குஞ்சுகளாயினும் முட்டைகளாயினுமுள்ள ஒரு குருவிக்கூடு உனக்குத் தென்படும்போது, தாயானது குஞ்சுகளின்மேலாவது முட்டைகளின்மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளோடே தாயையும் பிடிக்கலாகாது. 7 தாயைப் போகவிட்டு, குஞ்சுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்; உன் நாட்களும் நீடித்திருக்கும். 8 நீ புதுவீட்டைக் கட்டினால், ஒருவன் உன் மெத்தையிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாதபடிக்கு, அதற்குக் கைப்பிடிசுவரைக் கட்டவேண்டும். 9 உன் திராட்சத்தோட்டத்திலே பற்பலவிதமான விதையை விதைக்காயாக; இப்படிச் செய்தால் நீ விதைத்தவைகளின் பயிரையும், திராட்சத்தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய். 10 மாட்டையும் கழுதையையும் பிணைத்து உழாதிருப்பாயாக. 11 ஆட்டுமயிரும் பஞ்சுநூலும் கலந்த வஸ்திரத்தை உடுத்திக்கொள்ளாயாக. 12 நீ தரித்துக்கொள்ளுகிற உன் மேல்சட்டையின் நான்கு ஓரங்களிலும் தொங்கல்களை உண்டுபண்ணுவாயாக. 13 ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணின ஒருவன் அவளிடத்தில் பிரவேசித்தபின்பு அவளை வெறுத்து: 14 நான் இந்த ஸ்திரீயை விவாகம்பண்ணி, அவளிடத்தில் சேர்ந்தபோது கன்னிமையைக் காணவில்லை என்று அவள்மேல் ஆவலாதியான விசேஷங்களைச் சாற்றி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்; 15 அந்த ஸ்திரீயின் தகப்பனும் அவள் தாயும் அவளுடைய கன்னிமையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பரிடத்தில் கொண்டுவரக்கடவர்கள். 16 அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து, 17 நான் உன் மகளிடத்தில் கன்னிமையைக் காணவில்லையென்று ஆவலாதியான விசேஷங்களை அவள்மேல் சாற்றுகிறான்; என் மகளுடைய கன்னிமையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பரிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பருக்கு முன்பாக அந்த வஸ்திரத்தை விரிக்கக்கடவர்கள். 18 அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து, 19 அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுபண்ணினதினாலே, அவன் கையில் நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கக்கடவர்கள்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் தன் ஜீவனுள்ளளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது. 20 அந்தப் பெண்ணிடத்தில் கன்னிமை காணப்படவில்லையென்னும் சங்கதி மெய்ப்பட்டதேயானால், 21 அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டிலே வேசித்தனம்பண்ணினபடியினாலே, அவளுடைய பட்டணத்து மனிதர் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய். 22 புருஷனுக்கு விவாகம்பண்ணப்பட்ட ஸ்திரீயோடே ஒருவன் சயனிக்கக் கண்டுபிடிக்கப்பட்டால், அந்த ஸ்திரீயோடே சயனித்த மனிதனும் அந்த ஸ்திரீயும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய். 23 கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு, அவளோடே சயனித்தால், 24 அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூக்குரலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய். 25 ஒருவனுக்கு நியமிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்தானேயாகில், அவளோடே சயனித்த மனிதன் மாத்திரம் சாகக்கடவன். 26 பெண்ணுக்கு ஒன்றும் செய்யலாகாது; பெண்ணின்மேல் சாவுக்கு ஏதுவான குற்றம் இல்லை; இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனுடைய ஜீவனை வாங்கினதுபோல இருக்கிறது. 27 வெளியிலே அவன் அவளைக் கண்டுபிடித்தான்; நியமிக்கப்பட்ட பெண் அப்பொழுது கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்றுவார் இல்லாமற்போயிற்று. 28 நியமிக்கப்படாத கன்னியாஸ்திரீயாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளோடே சயனிக்கையில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால், 29 அவளோடே சயனித்த மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்தபடியினால், அவள் அவனுக்கு மனைவியாயிருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்குமளவும் அவளைத் தள்ளிவிடக்கூடாது. 30 ஒருவனும் தன் தகப்பனுடைய மனைவியைச் சேரலாகாது; தன் தகப்பன் மானத்தை அவன் வெளிப்படுத்தலாகாது.

உபாகமம் 23

1 விதையடிக்கப்பட்டவனும், கோசமறுபட்டவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. 2 வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. 3 அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது. 4 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அவர்கள் அப்பத்தோடும் தண்ணீரோடும் உங்களுக்கு எதிர்கொண்டு வராததினிமித்தமும், உன்னைச் சபிக்கும்படியாய் மெசொப்பொத்தாமியாவின் ஊராகிய பேத்தோரிலிருந்த பேயோரின் குமாரன் பிலேயாமுக்குக் கூலிபேசி அவனை அழைப்பித்ததினிமித்தமும் இப்படிச் செய்யவேண்டும். 5 உன் தேவனாகிய கர்த்தர் பிலேயாமுக்குச் செவிகொடுக்கச் சித்தமில்லாமல், உன் தேவனாகிய கர்த்தர் உன்மேல் அன்புகூர்ந்தபடியினால், உன் தேவனாகிய கர்த்தர் அந்தச் சாபத்தை உனக்கு ஆசீர்வாதமாக மாறப்பண்ணினார். 6 நீ உன் ஆயுள்நாட்களுள்ளளவும் ஒருக்காலும் அவர்கள் சமாதானத்தையும் நன்மையையும் தேடாதே. 7 ஏதோமியனை அருவருக்காயாக, அவன் உன் சகோதரன்; எகிப்தியனை அருவருக்காயாக, அவன் தேசத்திலே பரதேசியாயிருந்தாய். 8 மூன்றாம் தலைமுறையில் அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாம். 9 நீ படையெடுத்து உன் சத்துருக்களுக்கு விரோதமாய்ப் புறப்படும்போது, தீதான காரியங்கள் எல்லாவற்றிற்கும் விலகியிருப்பாயாக. 10 இராக்காலத்தில் சம்பவித்த தீட்டினாலே அசுத்தமாயிருக்கிற ஒருவன் உங்களிலிருந்தால், அவன் பாளயத்திற்கு வெளியே போய், பாளயத்திற்குள் வராமல், 11 சாயங்காலத்திலே ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, சூரியன் அஸ்தமிக்கும்போது பாளயத்திற்குள் வரக்கடவன். 12 நீ வெளிக்குப் போயிருக்கத்தக்க இடம் பாளயத்திற்குப் புறம்பே இருக்கவேண்டும். 13 உன் ஆயுதங்களோடே ஒரு சிறு கோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதனால் மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடக்கடவாய். 14 உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது. 15 தன் எஜமானுக்குத் தப்பி உன்னிடத்தில் வந்த வேலைக்காரனை அவனுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடாயாக. 16 அவன் உனக்கு இருக்கிற உன் வாசல்கள் ஒன்றிலே தனக்குச் சம்மதியான இடத்தைத் தெரிந்துகொண்டு, அதிலே உன்னுடனே இருப்பானாக; அவனை ஒடுக்கவேண்டாம். 17 இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது; இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக்கூடாது. 18 வேசிப்பணயத்தையும், நாயின் கிரயத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கொண்டுவராயாக; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள். 19 கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிற வேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக. 20 அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும் வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டி வாங்காயாக. 21 நீ உன் தேவனாகிய கர்த்தருக்குப் பொருத்தனை பண்ணியிருந்தால், அதைச் செலுத்தத் தாமதஞ்செய்யாதே; உன் தேவனாகிய கர்த்தர் அதை நிச்சயமாய் உன் கையில் கேட்பார்; அது உனக்குப் பாவமாகும். 22 நீ பொருத்தனைபண்ணாதிருந்தால், உன்மேல் பாவம் இல்லை. 23 உன் வாயினால் சொன்னதை நிறைவேற்றவேண்டும்; உன் தேவனாகிய கர்த்தருக்கு உன் வாயினால் நீ பொருத்தனைபண்ணிச் சொன்ன உற்சாகபலியைச் செலுத்தித் தீர்ப்பாயாக. 24 நீ பிறனுடைய திராட்சத்தோட்டத்தில் பிரவேசித்தால், உன் ஆசைதீர திராட்சப்பழங்களைத் திர்ப்தியாகப் புசிக்கலாம்; உன் கூடையிலே ஒன்றும் எடுத்துக்கொண்டு போகக்கூடாது. 25 பிறனுடைய விளைச்சலில் பிரவேசித்தால், உன் கையினால் கதிர்களைக் கொய்யலாம்; நீ அந்த விளைச்சலில் அரிவாளை இடலாகாது.

உபாகமம் 24

1 ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணிக்கொண்டபின்பு, அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம். 2 அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம். 3 அந்த இரண்டாம் புருஷனும் அவளை வெறுத்து, தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம்பண்ணின அந்த இரண்டாம் புருஷன் இறந்துபோனாலும், 4 அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளைத் தள்ளிவிட்ட அவளுடைய முந்தின புருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக்கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவம் வரப்பண்ணாயாக. 5 ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் விவாகம்பண்ணியிருந்தால், அவன் யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் யாதொரு வேலையும் சுமத்தவேண்டாம்; அவன் ஒரு வருஷபரியந்தம் தன் வீட்டில் தன் இஷ்டப்படியிருந்து, தான் விவாகம்பண்ணின ஸ்திரீயைச் சந்தோஷப்படுத்துவானாக. 6 திரிகையின் அடிக்கல்லையாவது அதின் மேற்கல்லையாவது ஒருவரும் அடகாக வாங்கக்கூடாது; அது ஜீவனை அடகு வாங்குவதுபோலாகும். 7 தன் சகோதரராகிய இஸ்ரவேல் புத்திரரில் ஒருவனைத் திருடி, அதினால் ஆதாயந்தேடி, அவனை விற்றுப்போட்ட ஒருவன் அகப்பட்டால், அந்தத் திருடன் கொலைசெய்யப்படவேண்டும்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்கக்கடவாய். 8 குஷ்டரோகத்தைக்குறித்து லேவியராகிய ஆசாரியர் உங்களுக்குப் போதிக்கும் யாவையும் கவனித்துச் செய்யும்படி மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்யக் கவனமாயிருப்பீர்களாக. 9 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே உங்கள் தேவனாகிய கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள். 10 பிறனுக்கு நீ ஏதாகிலும் கடனாகக் கொடுத்தால், அவன் கொடுக்கும் அடகை வாங்க நீ அவன் வீட்டிற்குள் பிரவேசிக்கவேண்டாம். 11 வெளியே நிற்பாயாக; கடன் வாங்கினவன் அந்த அடகை வெளியே உன்னிடத்தில் கொண்டுவருவானாக. 12 அவன் தரித்திரனானால், நீ அவன் அடகை வைத்துக்கொண்டு நித்திரை செய்யாமல், 13 அவன் தன் வஸ்திரத்தைப் போட்டுப் படுத்துக்கொண்டு உன்னை ஆசீர்வதிக்கும்படி, பொழுதுபோகும்போது, திரும்ப அந்த அடகை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அது உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உனக்கு நீதியாயிருக்கும். 14 உன் சகோதரரிலும், உன் தேசத்தின் வாசல்களிலுள்ள அந்நியரிலும் ஏழையும் எளிமையுமான கூலிக்காரனை ஒடுக்காயாக. 15 அவன் வேலைசெய்த நாளில்தானே, பொழுதுபோகுமுன்னே, அவன் கூலியை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்; அவன் ஏழையும் அதின்மேல் ஆவலுமாயிருக்கிறான்; அதைக் கொடாவிட்டால் அவன் உன்னைக்குறித்துக் கர்த்தரை நோக்கி முறையிடுவான்; அது உனக்குப் பாவமாயிருக்கும். 16 பிள்ளைகளுக்காகப் பிதாக்களும், பிதாக்களுக்காகப் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம்; அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும். 17 நீ அந்நியனுடைய நியாயத்தையும் திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும் புரட்டாமலும், விதவையின் வஸ்திரத்தை அடகாக வாங்காமலும் இருந்து, 18 நீ எகிப்திலே அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அங்கேயிருந்து மீட்டுக்கொண்டுவந்ததையும் நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன். 19 நீ உன் பயிரை அறுக்கையில் உன் வயலிலே ஒரு அரிக்கட்டை மறதியாய் வைத்துவந்தாயானால், அதை எடுத்து வரும்படி திரும்பிப் போகவேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர் உன் கைப்பிரயாசத்திலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி, அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக. 20 நீ உன் ஒலிவமரத்தை உதிர்த்துவிட்டபின்பு, கொம்பிலே தப்பியிருக்கிறதைப் பறிக்கும்படி திரும்பிப் போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக; 21 நீ உன் திராட்சப்பழங்களை அறுத்தபின்பு, மறுபடியும் அதை அறுக்கத் திரும்பிப்போகவேண்டாம்; அதைப் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் விட்டுவிடுவாயாக. 22 நீ எகிப்திலே அடிமையாயிருந்ததை நினைப்பாயாக; ஆகையால், இப்படிச் செய்யும்படி நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்.

உபாகமம் 25

1 மனிதருக்குள்ளே வழக்குண்டாய், அவர்கள் நியாயம் விசாரிக்கப்பட நியாயஸ்தலத்திலே வந்தால், நியாயாதிபதிகள் நீதிமானை நீதிமான் என்றும் குற்றவாளியைக் குற்றவாளி என்றும் தீர்க்கக்கடவர்கள். 2 குற்றவாளி அடிகளுக்குப் பாத்திரவானானால், நியாயாதிபதி அவனைக் கீழே கிடக்கப்பண்ணி, அவன் குற்றத்திற்குத் தக்கதாய்த் தனக்கு முன்பாகக் கணக்கின்படி அவனை அடிப்பிக்கக்கடவன். 3 அவனை நாற்பது அடிவரைக்கும் அடிக்கலாம்; அவனை அதிலும் அதிகமாய் அடிக்கிறதினால் உன் சகோதரன் உன் கண்களுக்கு முன்பாக நீசனாய்த் தோன்றுவான்; ஆதலால் அவனை அதிகமாய் அடிக்கவேண்டாம். 4 போரடிக்கிற மாட்டை வாய்கட்டாயாக. 5 சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் புத்திரசந்தானமில்லாமல் மரித்தால், மரித்தவனுடைய மனைவி புறத்திலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக்கூடாது; அவளுடைய புருஷனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன். 6 மரித்த சகோதரனுடைய பேர் இஸ்ரவேலில் அற்றுப்போகாதபடிக்கு, அவன் பேரை அவள் பெறும் தலைப்பிள்ளைக்குத் தரிக்கவேண்டும். 7 அவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பரிடத்துக்குப்போய்: என் புருஷனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பேரை இஸ்ரவேலில் நிலைக்கப்பண்ணமாட்டேன் என்கிறான்; புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் மனதில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக. 8 அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அவனை அழைப்பித்து அவனோடே பேசியும், அவன் அவளை விவாகம்பண்ணிக்கொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாய்ச் சொன்னால், 9 அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் காலிலிருக்கிற பாதரட்சையைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லக்கடவள். 10 இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, பாதரட்சை கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும். 11 புருஷர் ஒருவரோடொருவர் சண்டைபண்ணிக்கொண்டிருக்கையில், ஒருவனுடைய மனைவி தன் புருஷனை அடிக்கிறவன் கைக்கு அவனைத் தப்புவிக்கும்படி வந்து, தன் கையை நீட்டி, அடிக்கிறவன் மானத்தைப் பிடித்ததுண்டானால், 12 அவளுடைய கையைத் தறிக்கக்கடவாய்; உன் கண் அவளுக்கு இரங்கவேண்டாம். 13 உன் பையிலே பெரிதும் சிறிதுமான பலவித நிறைகற்களை வைத்திருக்கவேண்டாம். 14 உன் வீட்டில் பெரிதும் சிறிதுமான பலவித படிகளையும் வைத்திருக்கவேண்டாம். 15 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருக்கும்படி, குறையற்ற சுமுத்திரையான நிறைகல்லும், குறையற்ற சுமுத்திரையான படியும் உன்னிடத்தில் இருக்கவேண்டும். 16 இவைமுதலான அநியாயத்தைச் செய்கிறவன் எவனும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவன். 17 எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே, அமலேக்கு தேவனுக்குப் பயப்படாமல் உனக்கு எதிராக வந்து, 18 நீ இளைத்து விடாய்த்திருக்கையில், பின்வருகிற உன் பாளயத்திலுள்ள பலவீனரையெல்லாம் வெட்டினான் என்பதை நினைத்திரு. 19 உன் தேவனாகிய கர்த்தர் நீ சுதந்தரித்துக்கொள்ள உனக்குக் கொடுக்கும் தேசத்தின் சுற்றுப்புறத்தாராகிய உன்னுடைய சத்துருக்களையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் விலக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும்போது, நீ அமலேக்கின் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்கு அழியப்பண்ணக்கடவாய்; இதை மறக்கவேண்டாம்.

உபாகமம் 26

1 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைக் கட்டிக்கொண்டு, அதில் வாசம்பண்ணும்போது, 2 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் உன் தேசத்தில் நீ பயிரிடும் நிலத்தின் கனிகளிலெல்லாம் முந்தின பலனை எடுத்து, ஒரு கூடையிலே வைத்து, உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும்படி தெரிந்துகொண்டிருக்கும் ஸ்தானத்திற்குப் போய், 3 அந்நாட்களில் இருக்கும் ஆசாரியனிடத்தில் சென்று, அவனை நோக்கி: கர்த்தர் எங்களுக்குக் கொடுக்க நம்முடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் வந்து சேர்ந்தேன் என்று இன்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் அறிக்கையிடுகிறேன் என்பாயாக. 4 அப்பொழுது ஆசாரியன் அந்தக் கூடையை உன் கையிலிருந்து வாங்கி, அதை உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்திற்கு முன்பாக வைக்கக்கடவன். 5 அப்பொழுது நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் நின்று வசனித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் தகப்பன் அழிவுக்கு நேரான சீரியா தேசத்தானாயிருந்தான்; அவன் கொஞ்சம் ஜனங்களோடே எகிப்துக்குப்போய், அவ்விடத்தில் பரதேசியாய்ச் சஞ்சரித்து, அங்கே பெரிய பலத்த திரட்சியான ஜாதியானான். 6 எகிப்தியர் எங்களை ஒடுக்கி, எங்களைச் சிறுமைப்படுத்தி, எங்கள்மேல் கடினமான வேலையைச் சுமத்தினபோது, 7 எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டோம்; கர்த்தர் எங்கள் சத்தத்தைக் கேட்டு, எங்கள் சிறுமையையும் எங்கள் வருத்தத்தையும் எங்கள் ஒடுக்கத்தையும் பார்த்து, 8 எங்களைப் பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரங்களினாலும், அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, 9 எங்களை இவ்விடத்துக்கு அழைத்துவந்து, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய இந்தத் தேசத்தை எங்களுக்குக் கொடுத்தார். 10 இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகளின் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் பணிந்து, 11 நீயும் லேவியனும், உன்னிடத்தில் இருக்கிற பரதேசியும் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் உன் வீட்டாருக்கும் அநுக்கிரகம்பண்ணின சகல நன்மைகளினிமித்தமும் சந்தோஷப்படுவீர்களாக. 12 தசமபாகம் செலுத்தும் வருஷமாகிய மூன்றாம் வருஷத்திலே, நீ உன் வரத்திலெல்லாம் பத்தில் ஒன்றை எடுத்து, லேவியனும் பரதேசியும் திக்கற்ற பிள்ளையும் விதவையும் உன் வாசல்களில் புசித்துத் திர்ப்தியாகும்படி அவர்களுக்குக் கொடுத்துத் தீர்ந்தபின்பு, 13 நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் போய் அவரை நோக்கி: தேவரீர் எனக்குக் கொடுத்த எல்லாக் கட்டளைகளின்படியும், நான் பரிசுத்தமான பொருள்களை என் வீட்டிலிருந்து எடுத்துவந்து, லேவியனுக்கும் பரதேசிக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் கொடுத்தேன்; உம்முடைய கட்டளைகளில் ஒன்றையும் நான் மீறவும் இல்லை மறக்கவும் இல்லை. 14 நான் துக்கங்கொண்டாடும்போது அதில் புசிக்கவும் இல்லை, தீட்டான காரியத்துக்கு அதில் ஒன்றும் எடுக்கவும் இல்லை; இழவுகாரியத்துக்காக அதில் ஒன்றும் படைக்கவும் இல்லை; நான் என் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தேவரீர் எனக்குக் கட்டளையிட்டபடி சகலமும் செய்தேன். 15 நீர் உமது பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்த்து, உமது ஜனங்களாகிய இஸ்ரவேலரையும், நீர் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டபடியே, எங்களுக்குக் கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தையும் ஆசீர்வதியும் என்று சொல்வாயாக. 16 இந்தக் கட்டளைகளின்படியும் நியாயங்களின்படியும் நீ செய்யும்பொருட்டு, இன்று உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடுகிறார்; ஆகையால் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அவைகளைக் காத்து நடக்கக்கடவாய். 17 கர்த்தர் எனக்கு தேவனாயிருப்பார் என்றும், நான் அவர் வழிகளில் நடந்து, அவர் கட்டளைகளையும் அவர் கற்பனைகளையும் அவர் நியாயங்களையும் கைக்கொண்டு, அவர் சத்தத்திற்குக் கீழ்ப்படிவேன் என்றும் நீ இன்று அவருக்கு வாக்குக்கொடுத்தாய். 18 கர்த்தரும் உனக்கு வாக்குக்கொடுத்து உனக்குச் சொல்லியிருக்கிறபடி: நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாயிருப்பாய் என்றும், 19 நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைப்பார்க்கிலும், புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன் என்றும், நான் சொன்னபடியே, நீ உன் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும், அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார் என்றான்.

உபாகமம் 27

1 பின்பு மோசே, இஸ்ரவேலின் மூப்பர் கூட இருக்கையில், ஜனங்களை நோக்கி: நான் இன்று உங்களுக்கு விதிக்கிற கட்டளைகளையெல்லாம் கைக்கொள்ளுங்கள். 2 உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரிய கல்லுகளை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி, 3 உன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி உனக்குக் கொடுக்கும் பாலும் தேனும் ஓடுகிற தேசத்திற்குள் பிரவேசிக்கும்படி நீ கடந்துபோனபின்பு, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகள் யாவையும் அவைகளில் எழுதக்கடவாய். 4 மேலும் நீங்கள் யோர்தானைக் கடந்தபோது, இன்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி அந்தக் கல்லுகளை ஏபால் மலையிலே நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி, 5 அங்கே இருப்பாயுதம்படாத கற்களாலே உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டக்கடவாய். 6 நீ உன் தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தை முழுக்கற்களாலே கட்டி, அதின்மேல் உன் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும், 7 சமாதானபலிகளையும் இட்டு, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் புசித்துச் சந்தோஷமாயிருந்து, 8 அந்தக் கல்லுகளில் இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளையெல்லாம் துலக்கமாய் எழுதக்கடவாய் என்று கட்டளையிட்டான். 9 பின்னும் மோசே, லேவியராகிய ஆசாரியர்களும் கூட இருக்கையில், இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: இஸ்ரவேலே, கவனித்துக் கேள்; இந்நாளிலே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஜனமானாய். 10 ஆகையால் நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளின்படியும் அவருடைய கட்டளைகளின்படியும் செய்வாயாக என்று சொன்னான். 11 மேலும் அந்நாளிலே மோசே ஜனங்களை நோக்கி: 12 நீங்கள் யோர்தானைக் கடந்தபின்பு, ஜனங்கள் ஆசீர்வதிக்கப்படும்படி கெரிசீம் மலையில் சிமியோன், லேவி, யூதா, இசக்கார், யோசேப்பு, பென்யமீன் என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும். 13 சாபங்கூறப்படும்பொருட்டு ஏபால் மலையில் ரூபன், காத், ஆசேர், செபுலோன், தாண், நப்தலி என்னும் கோத்திரங்கள் நிற்கவேண்டும். 14 அப்பொழுது லேவியர் உரத்த சத்தமிட்டு இஸ்ரவேல் மனிதர் எல்லாரையும் பார்த்து: 15 கர்த்தருக்கு அருவருப்பான காரியமாகிய தொழிலாளிகளுடைய கைவேலையால் செய்யப்பட்டதும் வார்ப்பிக்கப்பட்டதுமான யாதொரு விக்கிரகத்தை உண்டுபண்ணி ஒளிப்பிடத்திலே வைக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; அதற்கு ஜனங்களெல்லாரும் பிரதியுத்தரமாக ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 16 தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 17 பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 18 குருடனை வழிதப்பச்செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 19 பரதேசி திக்கற்றவன் விதவை ஆகிய இவர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 20 தன் தகப்பன் மனைவியோடே சயனிக்கிறவன், தன் தகப்பனுடைய மானத்தைத் திறந்தபடியினாலே, சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 21 யாதொரு மிருகத்தோடே புணர்ச்சி செய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 22 தன் தகப்பனுக்காவது தாய்க்காவது குமாரத்தியாகிய தன் சகோதரியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 23 தன் மாமியோடே சயனிக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 24 ஒளிப்பிடத்திலே பிறனைக் கொலைசெய்கிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 25 குற்றமில்லாதவனைக் கொலைசெய்யும்படி பரிதானம் வாங்குகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள். 26 இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

உபாகமம் 28

1 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார். 2 நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும். 3 நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். 4 உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். 5 உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும். 6 நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய். 7 உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள். 8 கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார். 9 நீ உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்குப் பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார். 10 அப்பொழுது கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம் கண்டு, உனக்குப் பயப்படுவார்கள். 11 உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார். 12 ஏற்றகாலத்தில் உன் தேசத்திலே மழை பெய்யவும், நீ கையிட்டுச்செய்யும் வேலைகளையெல்லாம் ஆசீர்வதிக்கவும், கர்த்தர் உனக்குத் தமது நல்ல பொக்கிஷசாலையாகிய வானத்தைத் திறப்பார்; நீ அநேகம் ஜாதிகளுக்குக் கடன்கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய். 13 இன்று நான் உங்களுக்கு விதிக்கிற வார்த்தைகள் யாவையும் விட்டு விலகி வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, நீ வலதுபுறம் இடதுபுறம் சாயாமல், 14 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி நடக்கவும் அவைகளுக்குச் செவிகொடுத்துவந்தால், கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார், நீ கீழாகாமல் மேலாவாய். 15 இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருக்கிறதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும். 16 நீ பட்டணத்திலும் சபிக்கப்பட்டிருப்பாய், வெளியிலும் சபிக்கப்பட்டிருப்பாய். 17 உன் கூடையும், மாப்பிசைகிற உன் தொட்டியும் சபிக்கப்பட்டிருக்கும். 18 உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளும் சபிக்கப்பட்டிருக்கும். 19 நீ வருகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய், நீ போகையிலும் சபிக்கப்பட்டிருப்பாய். 20 என்னைவிட்டு விலகி நீ செய்துவருகிற உன் துர்க்கிரியைகளினிமித்தம் சீக்கிரத்தில் கெட்டுப்போய் அழியுமட்டும், நீ கையிட்டுச் செய்கிறதெல்லாவற்றிலும் கர்த்தர் உனக்குச் சாபத்தையும் சஞ்சலத்தையும் கேட்டையும் வரப்பண்ணுவார். 21 நீ சுதந்தரிக்கும் தேசத்தில் கர்த்தர் உன்னை நிர்மூலமாக்குமட்டும் கொள்ளைநோய் உன்னைப் பிடித்துக்கொள்ளப்பண்ணுவார். 22 கர்த்தர் உன்னை ஈளையினாலும், காய்ச்சலினாலும், உஷ்ணத்தினாலும், எரிபந்தத்தினாலும், வறட்சியினாலும், கருக்காயினாலும், விஷப்பனியினாலும் வாதிப்பார்; நீ அழியுமட்டும் இவைகள் உன்னைப் பின்தொடரும். 23 உன் தலைக்குமேலுள்ள வானம் வெண்கலமும், உனக்குக் கீழுள்ள பூமி இரும்புமாய் இருக்கும். 24 உன் தேசத்து மழையைக் கர்த்தர் புழுதியும் மண்ணுமாக பெய்யப்பண்ணுவார்; நீ அழியுமட்டும் அப்படியே வானத்திலிருந்து உன்மேல் இறங்கிவரும். 25 உன் சத்துருக்களுக்கு முன்பாக நீ முறிய அடிக்கப்படும்படி கர்த்தர் செய்வார்; ஒரு வழியாய் அவர்களுக்கு எதிராகப் புறப்படுவாய், ஏழு வழியாய் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போவாய்; நீ பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் சிதறுண்டுபோவாய். 26 உன் பிணம் ஆகாயத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை விரட்டுவாரில்லாதிருப்பார்கள். 27 நீ குணமாகாதபடி கர்த்தர் உன்னை எகிப்தின் எரிபந்தமான பருக்களினாலும், மூலவியாதியினாலும், சொறியினாலும், சிரங்கினாலும் வாதிப்பார். 28 கர்த்தர் உன்னைப் புத்திமயக்கத்தினாலும், குருட்டாட்டத்தினாலும், மனத்திகைப்பினாலும் வாதிப்பார். 29 குருடன் அந்தகாரத்திலே தடவித்திரிகிறதுபோல, நீ பட்டப்பகலிலே தடவிக்கொண்டு திரிவாய்; உன் வழிகளில் ஒன்றும் உனக்கு வாய்க்காதேபோம்; உதவிசெய்வாரில்லாமல் நீ எந்நாளும் ஒடுக்கப்படுகிறவனும் பறிகொடுக்கிறவனுமாய் இருப்பாய். 30 பெண்ணை உனக்கு நியமிப்பாய், வேறொருவன் அவளுடன் சயனிப்பான்; வீட்டைக் கட்டுவாய், அதிலே குடியிருக்கமாட்டாய்; திராட்சத்தோட்டத்தை நாட்டுவாய், அதின் பலனை அனுபவிக்கமாட்டாய். 31 உன் மாடுகள் உன் கண்களுக்கு முன்பாக அடிக்கப்படும், நீ அதில் ஒன்றும் புசிப்பதில்லை; உன் கழுதை உனக்கு முன்பாகக் கொள்ளையிட்டுக் கொண்டுபோகப்பட்டு, உனக்குத் திரும்ப அகப்படாமற்போம்; உன் ஆடுகள் உன் சத்துருக்களுக்குக் கொடுக்கப்படும், விடுவிப்பார் ஒருவரும் உனக்கு இல்லாதிருப்பார்கள். 32 உன் குமாரரும் உன் குமாரத்திகளும் அந்நிய ஜனங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்; அவர்களைக் காண உன் கண்கள் நாடோறும் பார்த்துப் பார்த்துப் பூத்துப்போம்; உன் கையில் பெலனில்லாதிருக்கும். 33 உன் நிலத்தின் கனியையும், உன் பிரயாசத்தின் எல்லாப் பலனையும் நீ அறியாத ஜனங்கள் புசிப்பார்கள்; நீ சகல நாளும் ஒடுக்கப்பட்டும் நொறுக்கப்பட்டும் இருப்பாய். 34 உன் கண்கள் காணும் காரியங்களினாலே மதிமயங்கிப்போவாய். 35 உன் உள்ளங்கால் தொடங்கி உன் உச்சந்தலைமட்டும் குணமாகாதபடிக்கு, கர்த்தர் உன்னை முழங்கால்களிலும் தொடைகளிலும் கொடிய எரிபந்தப் பருக்களினாலே வாதிப்பார். 36 கர்த்தர் உன்னையும், உனக்காக நீ ஏற்படுத்திக்கொண்ட ராஜாவையும், நீயும் உன் பிதாக்களும் அறியாத ஜாதிகளிடத்துக்குப் போகப்பண்ணுவார்; அங்கே நீ மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய். 37 கர்த்தர் உன்னைக் கொண்டுபோய் விடும் எல்லா ஜனங்களுக்குள்ளும் பிரமிப்பும் பழமொழியும் பரியாசச் சொல்லுமாவாய். 38 மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதைப் பட்சித்துப்போடும். 39 திராட்சத்தோட்டங்களை நாட்டிப் பயிரிடுவாய், ஆனாலும் நீ திராட்சரசம் குடிப்பதும் இல்லை, திராட்சப்பழங்களைச் சேர்ப்பதும் இல்லை; பூச்சி அதைத் தின்றுபோடும். 40 ஒலிவமரங்கள் உன் எல்லைகளிலெங்கும் இருக்கும், ஆனாலும் அதின் எண்ணெயை நீ பூசிக்கொள்வதில்லை; உன் ஒலிவமரத்தின் பிஞ்சுகள் உதிர்ந்துபோம். 41 நீ குமாரரையும் குமாரத்திகளையும் பெறுவாய், ஆனாலும் அவர்கள் உன்னோடேகூட இரார்கள்; அவர்கள் சிறைப்பட்டுப்போவார்கள். 42 உன் மரங்களெல்லாவற்றையும் உன் நிலத்தின் கனிகளையும் விட்டில் பட்சித்துப்போடும். 43 உன் நடுவிலிருக்கிற அந்நியன் உனக்கு மேற்பட்டு மேன்மேலும் உயர்ந்திருப்பான்; நீ மிகவும் தாழ்த்தப்பட்டுப்போவாய். 44 அவன் உன்னிடத்தில் கடன்படான், நீ அவனிடத்தில் கடன்படுவாய்; அவன் தலையாயிருப்பான், நீ வாலாயிருப்பாய். 45 உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு விதித்த அவருடைய கற்பனைகளையும் கட்டளைகளையும் கைக்கொள்ளும்படி, நீ அவர் சத்தத்திற்குச் செவிகொடாதபடியினால், இந்தச் சாபங்கள் எல்லாம் உன்மேல் வந்து, நீ அழியுமட்டும் உன்னைத் தொடர்ந்து பிடித்து, 46 உன்னிலும் உன் சந்ததியிலும் என்றைக்கும் அடையாளமாகவும் அற்புதமாகவும் இருக்கும். 47 சகலமும் பரிபூரணமாயிருக்கையில், நீ மனமகிழ்ச்சியோடும் களிப்போடும் உன் தேவனாகிய கர்த்தரைச் சேவியாமற்போனதினிமித்தம், 48 சகலமும் குறைவுபட்டு, பட்டினியோடும் தாகத்தோடும் நிர்வாணத்தோடும், கர்த்தர் உனக்கு விரோதமாய் அனுப்பும் சத்துருக்களைச் சேவிப்பாய்; அவர்கள் உன்னை அழித்துத் தீருமட்டும், இருப்பு நுகத்தடியை உன் கழுத்தின்மேல் போடுவார்கள். 49 கிழவன் என்று முகம்பாராமலும், வாலிபன் என்று இரங்காமலும் இருக்கும் கொடிய முகமுள்ளதும், 50 உனக்குத் தெரியாத பாஷையைப் பேசுகிறதுமான ஜாதியை வெகுதூரத்திலுள்ள பூமியின் கடையாந்தரத்திலிருந்து கர்த்தர் உன்மேல் கழுகு பறக்கும் வேகமாய் வரப்பண்ணுவார். 51 நீ அழியுமட்டும் அந்த ஜாதியான் உன் மிருகஜீவன்களின் பலனையும், உன் நிலத்தின் கனியையும் புசிப்பான்; அவன் உன்னை அழித்துத் தீருமட்டும் உன் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், உன் மந்தைகளிலுள்ள ஆடுமாடுகளிலும் உனக்கு ஒன்றும் மீதியாக வைக்கமாட்டான். 52 உன் தேசமெங்கும் நீ நம்பியிருக்கும் உயரமும் அரணிப்புமான உன் மதில்கள் விழுமளவும், அவன் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போடுவான்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன்னுடைய தேசமெங்குமுள்ள உன்னுடைய வாசல்கள்தோறும் உன்னை முற்றிகைப்போடுவான். 53 உன் சத்துருக்கள் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திரபுத்திரிகளின் மாம்சத்தைத் தின்பாய். 54 உன் சத்துருக்கள் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், உன்னிடத்தில் செருக்கும் சுகசெல்வமுமுள்ள மனிதன் சகலத்தையும் இழந்து, தன் இல்லாமையினாலே தான் தின்னும் தன் பிள்ளைகளின் மாம்சத்திலே, 55 தன் சகோதரனுக்காகிலும், தன் மார்பில் இருக்கிற மனைவிக்காகிலும், தனக்கு மீந்திருக்கிற தன் மக்களில் ஒருவனுக்காகிலும் கொஞ்சமேனும் கொடாதபடி அவர்கள்மேல் வன்கண்ணாயிருப்பான். 56 உன்னிடத்தில் சுகசெல்வத்தினாலும் செருக்கினாலும் தன் உள்ளங்காலைத் தரையின்மேல் வைக்க அஞ்சின செருக்கும் சுகசெல்வமுமுள்ள ஸ்திரீ தன் கால்களின் நடுவே புறப்பட்ட தன் நஞ்சுக்கொடியினிமித்தமும், தான் பெற்ற பிள்ளைகளினிமித்தமும், தன் மார்பில் இருக்கிற புருஷன்மேலும் தன் குமாரன்மேலும் தன் குமாரத்தியின்மேலும் வன்கண்ணாயிருப்பாள்; 57 உன் சத்துருக்கள் உன் வாசல்களில் உன்னை முற்றிகைப்போட்டு நெருக்குங்காலத்தில், சகலமும் குறைவுபடுவதினால், அவைகளை இரகசியமாய்த் தின்னுவான். 58 உன் தேவனாகிய கர்த்தர் என்னும் மகிமையும் பயங்கரமுமான நாமத்திற்குப் பயப்படும்படிக்கு, நீ இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் நடக்கக் கவனமாயிராவிட்டால், 59 கர்த்தர் நீங்காத பெரிய வாதைகளாலும் நீங்காத கொடிய ரோகங்களாலும் உன்னையும் உன் சந்ததியையும் அதிசயமாய் வாதித்து, 60 நீ கண்டு பயந்த எகிப்து வியாதிகளெல்லாம் உன்மேல் வருவிப்பார்; அவைகள் உன்னைப் பற்றிக்கொள்ளும். 61 இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிராத எல்லாப் பிணியையும் வாதையையும் நீ அழியுமளவும் கர்த்தர் உன்மேல் வரப்பண்ணுவார். 62 திரட்சியிலே வானத்து நட்சத்திரங்களைப்போல் இருந்த நீங்கள், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடாமற்போனதினால், கொஞ்சம் ஜனமாய்ப்போவீர்கள். 63 கர்த்தர் உங்களுக்கு நன்மை செய்யவும் உங்களைப் பெருகப்பண்ணவும் எப்படி உங்கள்மேல் இரம்மியமாயிருந்தாரோ, அப்படியே கர்த்தர் உங்களை அழிக்கவும் உங்களை அதம்பண்ணவும் இரம்மியமாயிருப்பார்; நீங்கள் சுதந்தரிக்கப்போகிற தேசத்திலிருந்து பிடுங்கிப்போடப்படுவீர்கள். 64 கர்த்தர் உன்னைப் பூமியின் ஒரு முனை துவக்கி பூமியின் மறுமுனைமட்டும் இருக்கிற எல்லா ஜனங்களுக்குள்ளும் சிதற அடிப்பார்; அங்கே நீயும் உன் பிதாக்களும் அறியாத மரமும் கல்லுமான அந்நிய தேவர்களைச் சேவிப்பாய். 65 அந்த ஜாதிகளுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது, உன் உள்ளங்கால்கள் தங்கித் தரிக்க இடமும் இராது; அங்கே கர்த்தர் உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்துபோகிற கண்களையும், மனச்சஞ்சலத்தையும் கொடுப்பார். 66 உன் ஜீவன் உனக்குச் சந்தேகத்தில் ஊசலாடும்; உன் ஜீவனைப்பற்றி நம்பிக்கையில்லாமல் இரவும் பகலும் திகில்கொண்டிருப்பாய். 67 நீ பயப்படும் உன் இருதயத்தின் திகிலினாலும், உன் கண்கள் காணும் காட்சியினாலும், விடியற்காலத்தில் எப்பொழுது சாயங்காலம் வருமோ என்றும், சாயங்காலத்தில், எப்பொழுது விடியற்காலம் வருமோ என்றும் சொல்லுவாய். 68 இனிக் காணாதிருப்பாய் என்று நான் உனக்குச் சொன்னவழியாய், கர்த்தர் உன்னைக் கப்பல்களிலே எகிப்திற்குத் திரும்பக் கொண்டுபோகப்பண்ணுவார்; அங்கே உங்கள் சத்துருக்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் விற்கப்படுவீர்கள்; உங்களைக் கொள்வாரும் இல்லாதிருப்பார்கள் என்றான்.

உபாகமம் 29

1 ஓரேபிலே இஸ்ரவேல் புத்திரரோடே பண்ணிக்கொண்ட உடன்படிக்கையை அல்லாமல், மோவாபின் தேசத்திலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணக் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் இவைகளே. 2 மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் வரவழைத்து, அவர்களை நோக்கி: எகிப்துதேசத்தில் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பார்வோனுக்கும் அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும் அவனுடைய தேசமுழுவதற்கும், 3 கர்த்தர் செய்த பெரிய சோதனைகளையும், பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் கண்ணாரக் கண்டீர்களே. 4 ஆகிலும் கர்த்தர் உங்களுக்கு உணரத்தக்க இருதயத்தையும், காணத்தக்க கண்களையும், கேட்கத்தக்க காதுகளையும் இந்நாள்வரைக்கும் கொடுக்கவில்லை. 5 கர்த்தராகிய நான் உங்கள் தேவன் என்று நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நான் நாற்பது வருஷம் உங்களை வனாந்தரத்தில் நடத்தினேன்; உங்கள்மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உங்கள் காலிலிருந்த பாதரட்சைகள் பழையதாய்ப் போகவும் இல்லை. 6 நீங்கள் அப்பம் சாப்பிடவும் இல்லை, திராட்சரசமும் மதுவும் குடிக்கவும் இல்லை என்றார். 7 நீங்கள் இவ்விடத்துக்கு வந்தபோது, எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும், பாசானின் ராஜாவாகிய ஓகும் நம்மோடே யுத்தஞ்செய்யப் புறப்பட்டார்கள்; நாம் அவர்களை முறிய அடித்து, 8 அவர்களுடைய தேசத்தைப் பிடித்து, அதை ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும் சுதந்தரமாகக் கொடுத்தோம். 9 இப்பொழுதும் நீங்கள் செய்வதெல்லாம் உங்களுக்கு வாய்க்கும்படிக்கு, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களாக. 10 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடியேயும், உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்தபடியேயும், இன்று உன்னைத் தமக்கு ஜனமாக ஏற்படுத்திக்கொள்ளவும், தாம் உனக்கு தேவனாயிருக்கவும், 11 நீ உன் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைக்கும் இன்று அவர் உன்னோடே பண்ணுகிற அவருடைய ஆணையுறுதிக்கும் உட்படும்படிக்கு, 12 உங்கள் கோத்திரங்களின் தலைவரும் உங்கள் மூப்பரும் உங்கள் அதிபதிகளும் இஸ்ரவேலின் சகல புருஷரும், 13 உங்கள் பிள்ளைகளும், உங்கள் மனைவிகளும், உங்கள் பாளயத்துக்குள்ளிருக்கிற உங்கள் விறகுக்காரனும், உங்கள் தண்ணீர்க்காரனுமான அந்நியர் எல்லாரும் இன்று உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தில் நிற்கிறீர்களே. 14 நான் உங்களோடேமாத்திரம் இந்த உடன்படிக்கையையும் இந்த ஆணையையும் உறுதியையும் பண்ணாமல், 15 இன்று இங்கே நம்மோடேகூட நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தில் நிற்கிறவர்களோடேயும், இன்று இங்கே நம்மோடே இராதவர்களோடேயும்கூட அதைப் பண்ணுகிறேன். 16 நாம் எகிப்து தேசத்தில் குடியிருந்ததையும், நாம் கடந்துவந்த இடங்களிலிருந்த ஜாதிகளின் நடுவில் நடந்துவந்ததையும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 17 அவர்களுடைய அருவருப்புகளையும், அவர்களிடத்திலிருக்கிற மரமும் கல்லும் வெள்ளியும் பொன்னுமான அவர்களுடைய நரகலான தேவர்களையும் கண்டிருக்கிறீர்கள். 18 ஆகையால், அந்த ஜாதிகளின் தேவர்களைச் சேவிக்கப் போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய கர்த்தரைவிட்டு அகலுகிற இருதயமுள்ள ஒரு புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இராதபடிக்கும், நஞ்சையும் எட்டியையும் முளைப்பிக்கிற யாதொரு வேர் உங்களில் இராதபடிக்கும் பாருங்கள். 19 அப்படிப்பட்டவன் இந்த ஆணையுறுதியின் வார்த்தைகளைக் கேட்டும், தாகத்தினிமித்தம் வெறிக்கக் குடித்து, மன இஷ்டப்படி நடந்தாலும் எனக்குச் சுகமுண்டாயிருக்கும் என்று தன் உள்ளத்தைத் தேற்றிக்கொண்டால், கர்த்தர் அவனை மன்னிக்கச் சித்தமாயிரார். 20 அப்பொழுது கர்த்தரின் கோபமும் எரிச்சலும் அந்த மனிதன்மேல் புகையும்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்களெல்லாம் அவன்மேல் தங்கும்; கர்த்தர் அவன் பேரை வானத்தின்கீழ் இராதபடிக்குக் குலைத்துப்போடுவார். 21 இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையினுடைய சகல சாபங்களின்படியும் அவனுக்குத் தீங்காக கர்த்தர் இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லாவற்றிற்கும் அவனைப் புறம்பாக்கிப்போடுவார். 22 அப்பொழுது உங்களுக்குப்பின் எழும்பும் தலைமுறையான உங்கள் பிள்ளைகளும், தூரதேசத்திலிருந்து வரும் அந்நியரும், கர்த்தர் இந்த தேசத்துக்கு வருவித்த வாதைகளையும் நோய்களையும் காணும்போதும், 23 கர்த்தர் தமது கோபத்திலும் தமது உக்கிரத்திலும் சோதோமையும் கொமோராவையும் அத்மாவையும் செபோயீமையும் கவிழ்த்துப்போட்டதுபோல, இந்த தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளைவும் யாதொரு பூண்டின் முளைப்பும் இல்லாதபடிக்கு, கந்தகத்தாலும் உப்பாலும் எரிக்கப்பட்டதைக் காணும்போதும், 24 அந்த ஜாதிகளெல்லாம் கர்த்தர் இந்த தேசத்திற்கு ஏன் இப்படிச் செய்தார்; இந்த மகா கோபம் பற்றியெரிந்ததற்குக் காரணம் என்ன என்று சொல்லுவார்கள். 25 அதற்கு: அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் அவர்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையை அவர்கள் விட்டுப்போய், 26 தாங்கள் அறியாமலும் தங்களுக்கு ஒரு பலனும் அளிக்காமலும் இருக்கிற தேவர்களாகிய வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொண்டபடியினாலே, 27 கர்த்தர் இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபங்கள் எல்லாவற்றையும் இந்தத் தேசத்தின்மேல் வரப்பண்ண, அதின்மேல் கோபம் மூண்டவராகி, 28 அவர்களைக் கோபத்தினாலும் உக்கிரத்தினாலும் மகா எரிச்சலினாலும் அவர்களுடைய தேசத்திலிருந்து வேரோடே பிடுங்கி, இந்நாளில் இருக்கிறதுபோல, அவர்களை வேறே தேசத்தில் எறிந்துவிட்டார் என்று சொல்லப்படும். 29 மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.

உபாகமம் 30

1 நான் உனக்கு முன்பாக வைத்த ஆசீர்வாதமும் சாபமுமாகிய இந்தக் காரியங்களெல்லாம் உன்மேல் வரும்போது: நீ உன் தேவனாகிய கர்த்தரால் துரத்திவிடப்பட்டு, எல்லா ஜாதிகளிடத்திலும் போயிருக்கும்போது, நீ உன் இருதயத்திலே சிந்தனைசெய்து, 2 உன் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கிறபடியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தால், 3 உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக்கொள்ளுவார். 4 உன்னுடையவர்கள் வானத்தின் கடையான திசைமட்டும் துரத்துண்டிருந்தாலும், உன் தேவனாகிய கர்த்தர் அங்கே இருக்கிற உன்னைக் கூட்டி, அங்கேயிருந்து உன்னைக் கொண்டுவந்து, 5 உன் பிதாக்கள் சுதந்தரித்திருந்த தேசத்தை நீ சுதந்தரிக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தர் அதில் உன்னைச் சேர்த்து, உனக்கு நன்மைசெய்து, உன் பிதாக்களைப்பார்க்கிலும் உன்னைப் பெருகப்பண்ணுவார். 6 உன் தேவனாகிய கர்த்தரில் நீ உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் அன்புகூர்ந்து பிழைக்கும்படி, உன் தேவனாகிய கர்த்தர் உன் இருதயத்தையும் உன் சந்ததியாரின் இருதயத்தையும் விருத்தசேதனம்பண்ணி, 7 இந்தச் சாபங்களையெல்லாம் உன் சத்துருக்கள்மேலும் உன்னைத் துன்பப்படுத்தின உன் பகைஞர்மேலும் சுமரப்பண்ணுவார். 8 நீயோ மனந்திரும்பி, கர்த்தரின் சத்தத்திற்குச் செவிகொடுத்து, நான் இன்று உனக்குக் கற்பிக்கிற அவருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் செய்வாய். 9 அப்பொழுது உனக்கு நன்மை உண்டாகும்படி உன் தேவனாகிய கர்த்தர் உன் கைகள் செய்யும் எல்லா வேலைகளிலும், உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவனின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரணமுண்டாகச் செய்வார். 10 உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்து, இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அவருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்போதும், உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் திரும்பும்போதும், கர்த்தர் உன் பிதாக்கள்மேல் சந்தோஷமாயிருந்ததுபோல, உன்மேலும் உனக்கு நன்மை உண்டாகத் திரும்பவும் சந்தோஷமாயிருப்பார். 11 நான் இன்று உனக்கு விதிக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல. 12 நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல; 13 நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள்நிமித்தம் சமுத்திரத்தைக் கடந்து, அதைக் கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல; 14 நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது. 15 இதோ, ஜீவனையும் நன்மையையும், மரணத்தையும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன். 16 நீ பிழைத்துப் பெருகும்படிக்கும், நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கும்படிக்கும், நீ உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரவும், அவர் வழிகளில் நடக்கவும், அவர் கற்பனைகளையும் கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொள்ளவும், நான் இன்று உனக்குக் கற்பிக்கிறேன். 17 நீ கேளாதபடிக்கு, மனம் பேதித்து, இழுப்புண்டுபோய், வேறே தேவர்களைப் பணிந்து, அவர்களைச் சேவிப்பாயானால், 18 நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு யோர்தானைக் கடந்துபோகிற தேசத்தில் நெடுநாள் வாழாமல், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்பதை இன்று உங்களுக்கு அறிவிக்கிறேன். 19 நான் ஜீவனையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும் பூமியையும் இன்று சாட்சிவைக்கிறேன்; ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு, நீ ஜீவனைத் தெரிந்துகொண்டு, 20 கர்த்தர் உன் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தேசத்திலே குடியிருக்கும்படிக்கு, உன் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவர் சத்தத்திற்குச் செவிகொடுத்து, அவரைப் பற்றிக்கொள்வாயாக; அவரே உனக்கு ஜீவனும் தீர்க்காயுசுமானவர் என்றான்.

உபாகமம் 31

1 பின்னும் மோசே போய் இஸ்ரவேலர் யாவரையும் நோக்கி: 2 இன்று நான் நூற்றிருபது வயதுள்ளவன்; இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக்கூடாது; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை என்று கர்த்தர் என்னோடே சொல்லியிருக்கிறார். 3 உன் தேவனாகிய கர்த்தர்தாமே உனக்கு முன்பாகக் கடந்துபோவார், அவரே உனக்கு முன்னின்று, அந்த தேசத்தாரை அழிப்பார்; நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பாய்; கர்த்தர் சொன்னபடியே யோசுவா உனக்கு முன்பாகக் கடந்துபோவான். 4 கர்த்தர் அழித்த எமோரியரின் ராஜாக்களாகிய சீகோனுக்கும், ஓகுக்கும், அவர்கள் தேசத்திற்கும் செய்ததுபோலவே அவர்களுக்கும் செய்வார். 5 நான் உங்களுக்கு விதித்த கட்டளைகளின்படி அவர்களுக்குச் செய்வதற்கு கர்த்தர் அவர்களை உங்களுக்கு ஒப்புக்கொடுப்பார். 6 நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான். 7 பின்பு மோசே யோசுவாவை அழைத்து, இஸ்ரவேலர் எல்லாரும் பார்த்திருக்க, அவனை நோக்கி: பலங்கொண்டு திடமனதாயிரு; கர்த்தர் இவர்களுக்குக் கொடுப்பேன் என்று இவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்துக்கு நீ இந்த ஜனத்தை அழைத்துக்கொண்டுபோய், அதை இவர்கள் சுதந்தரிக்கும்படி செய்வாய். 8 கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை; நீ பயப்படவும் கலங்கவும் வேண்டாம் என்றான். 9 மோசே இந்த நியாயப்பிரமாணத்தை எழுதி, அதைக் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவிபுத்திரரான ஆசாரியருக்கும் இஸ்ரவேலுடைய மூப்பர் எல்லாருக்கும் ஒப்புவித்து, 10 அவர்களுக்குக் கட்டளையிட்டது என்னவென்றால்: விடுதலையின் வருஷமாகிய ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலே கூடாரப்பண்டிகையில், 11 உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்தில், இஸ்ரவேலர் எல்லாரும் அவருடைய சந்நிதியில் சேர்ந்து வந்திருக்கும்போது, இந்த நியாயப்பிரமாணத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேட்க அவர்களுக்கு முன்பாக வாசிக்கக்கடவாய். 12 புருஷர்களும் ஸ்திரீகளும் பிள்ளைகளும் உன் வாசல்களிலிருக்கும் அந்நியர்களும் கேட்டு, கற்றுக்கொண்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கும்படிக்கும், 13 அதை அறியாத அவர்கள் பிள்ளைகளும் கேட்டு, நீங்கள் யோர்தானைக் கடந்து சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உயிரோடிருக்கும் நாளெல்லாம், உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படக் கற்றுக்கொள்ளும்படிக்கும் ஜனத்தைக்கூட்டி, அதை வாசிக்கவேண்டும் என்றான். 14 பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: இதோ, நீ மரிக்குங்காலம் சமீபித்திருக்கிறது; நான் யோசுவாவுக்குக் கட்டளை கொடுக்கும்படி, அவனை அழைத்துக்கொண்டு, ஆசரிப்புக் கூடாரத்தில் வந்து நில்லுங்கள் என்றார்; அப்படியே மோசேயும் யோசுவாவும் போய், ஆசரிப்புக் கூடாரத்தில் நின்றார்கள். 15 கர்த்தர் கூடாரத்திலே மேகஸ்தம்பத்தில் தரிசனமானார்; மேகஸ்தம்பம் கூடார வாசல்மேல் நின்றது. 16 கர்த்தர் மோசேயை நோக்கி: நீ உன் பிதாக்களோடே படுத்துக்கொள்ளப்போகிறாய்; இந்த ஜனங்கள் எழும்பி, தாங்கள் போயிருக்கும் தேசத்திலுள்ள அந்நிய தேவர்களைச் சோரமார்க்கமாய்ப் பின்பற்றி, என்னைவிட்டு, தங்களுடனே நான் பண்ணின உடன்படிக்கையை மீறுவார்கள். 17 அந்நாளிலே நான் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களைக் கைவிட்டு, என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அதினால் அவர்கள் பட்சிக்கப்படும்படிக்கு அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்; அந்நாளிலே அவர்கள்: எங்கள் தேவன் எங்கள் நடுவே இராததினாலே அல்லவா இந்தத் தீங்குகள் எங்களைத் தொடர்ந்தது என்பார்கள். 18 அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பிப்போய்ச் செய்த சகல தீமைகளினிமித்தமும் நான் அந்நாளிலே என் முகத்தை மறைக்கவே மறைப்பேன். 19 இப்பொழுது நீங்கள் இந்தப் பாட்டை எழுதிக்கொண்டு, இதை இஸ்ரவேல் புத்திரருக்குப் படிப்பித்து, இந்தப் பாட்டு எனக்குச் சாட்சியாக இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே இருக்கும்படி இதை அவர்கள் வாயில் வழங்கப்பண்ணுங்கள். 20 நான் அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த பாலும் தேனும் ஓடுகிற தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் புசித்துத் திர்ப்தியாகிக் கொழுத்துப்போயிருக்கும்போது, அவர்கள் வேறே தேவர்களிடத்தில் திரும்பி, அவர்களைச் சேவித்து, எனக்குக் கோபம் மூட்டி, என் உடன்படிக்கையை மீறுவார்கள். 21 அநேக தீங்குகளும் இக்கட்டுகளும் அவர்களைத் தொடரும்போது, அவர்கள் சந்ததியாரின் வாயில் மறந்துபோகாதிருக்கும் இந்தப் பாட்டே அவர்களுக்கு விரோதமான சாட்சிபகரும்; நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணாதிருக்கிற இப்பொழுதே அவர்கள் கொண்டிருக்கும் எண்ணம் இன்னது என்று அறிவேன் என்றார். 22 அன்றைக்கே மோசே அந்தப் பாட்டை எழுதி, அதை இஸ்ரவேல் புத்திரருக்குப் படிப்பித்தான். 23 அவர் நூனின் குமாரனாகிய யோசுவாவை நோக்கி: நீ பலங்கொண்டு திடமனதாயிரு, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் நீ அவர்களை நடத்திக்கொண்டுபோவாய்; நான் உன்னோடிருப்பேன் என்று கட்டளையிட்டார். 24 மோசே இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகள் முழுவதையும் ஒரு புஸ்தகத்தில் எழுதி முடித்தபின்பு, 25 மோசே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரை நோக்கி: 26 நீங்கள் இந்த நியாயப்பிரமாண புஸ்தகத்தை எடுத்து, அதை உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியின் பக்கத்திலே வையுங்கள்; அங்கே அது உனக்கு விரோதமான சாட்சியாயிருக்கும். 27 நான் உன் கலகக்குணத்தையும் உன் கடினக் கழுத்தையும் அறிந்திருக்கிறேன்; இன்று நான் இன்னும் உங்களுடன் உயிரோடிருக்கையில், கர்த்தருக்கு விரோதமாகக் கலகம்பண்ணினீர்களே; என் மரணத்திற்குப்பின்பு எவ்வளவு அதிகமாய்க் கலகம்பண்ணுவீர்கள்! 28 உங்கள் கோத்திரங்களிலுள்ள மூப்பர் உங்கள் அதிபதிகள் எல்லாருடைய காதுகளும் கேட்கத்தக்கதாக நான் இந்த வார்த்தைகளைச் சொல்லவும், அவர்களுக்கு விரோதமாக வானத்தையும் பூமியையும் சாட்சிவைக்கவும் அவர்களை என்னிடத்தில் கூடிவரச்செய்யுங்கள். 29 என் மரணத்திற்குப்பின்பு நீங்கள் நிச்சயமாய் உங்களைக் கெடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழியை விட்டு விலகுவீர்கள்; ஆகையால், கடைசி நாட்களில் தீங்கு உங்களுக்கு நேரிடும்; உங்கள் கைக்கிரியைகளினாலே கர்த்தரைக் கோபப்படுத்தும்படிக்கு, அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வீர்கள் என்பதை அறிவேன் என்று சொல்லி, 30 இஸ்ரவேல் சபையார் எல்லாரும் கேட்க மோசே இந்தப் பாட்டின் வார்த்தைகளை முடியும்வரையும் சொன்னான்.

உபாகமம் 32

1 வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன்; பூமியே, என் வாய்மொழிகளைக் கேட்பாயாக. 2 மழையானது இளம்பயிரின்மேல் பொழிவதுபோல, என் உபதேசம் பொழியும்; பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவதுபோல, என் வசனம் இறங்கும். 3 கர்த்தருடைய நாமத்தை பிரசித்தம்பண்ணுவேன்; நம்முடைய தேவனுக்கு மகத்துவத்தைச் செலுத்துங்கள். 4 அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர். 5 அவர்களோ தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள், அவர்கள் அவருடைய பிள்ளைகள் அல்ல; இதுவே அவர்கள் காரியம்; அவர்கள் மாறுபாடும் தாறுமாறுமுள்ள சந்ததியார். 6 விவேகமில்லாத மதிகெட்ட ஜனங்களே, இப்படியா கர்த்தருக்குப் பதிலளிக்கிறீர்கள். உன்னை ஆட்கொண்ட பிதா அவரல்லவா? உன்னை உண்டாக்கி உன்னை நிலைப்படுத்தினவர் அவரல்லவா? 7 பூர்வநாட்களை நினை; தலைமுறை தலைமுறையாய்ச் சென்ற வருஷங்களைக் கவனித்துப்பார்; உன் தகப்பனைக் கேள், அவன் உனக்கு அறிவிப்பான்; உன் மூப்பர்களைக் கேள், அவர்கள் உனக்குச் சொல்லுவார்கள். 8 உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்தகாலத்தில், இஸ்ரவேல் புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார். 9 கர்த்தருடைய ஜனமே அவருடைய பங்கு; யாக்கோபு அவருடைய சுதந்தரவீதம். 10 பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப்போலக் காத்தருளினார். 11 கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளின்மேல் அசைவாடி, தன் செட்டைகளை விரித்து, அவைகளை எடுத்து, அவைகளைத் தன் செட்டைகளின்மேல் சுமந்துகொண்டுபோகிறது போல, 12 கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார்; அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை. 13 பூமியிலுள்ள உயர்ந்த ஸ்தானங்களின்மேல் அவனை ஏறிவரப்பண்ணினார்; வயலில் விளையும் பலனை அவனுக்குப் புசிக்கக் கொடுத்தார்; கன்மலையிலுள்ள தேனையும், கற்பாறையிலிருந்து வடியும் எண்ணெயையும் அவன் உண்ணும்படி செய்தார். 14 பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள் ஆட்டுக்கடாக்கள் வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம்போன்ற சுயமான திராட்சரசத்தையும் சாப்பிட்டாய். 15 யெஷூரன் கொழுத்துப்போய் உதைத்தான்; கொழுத்து, ஸ்தூலித்து, நிணம் துன்னினபோது, தன்னை உண்டாக்கின தேவனை விட்டு, தன் ரட்சிப்பின் கன்மலையை அசட்டைபண்ணினான். 16 அந்நிய தேவர்களால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்; அருவருப்பானவைகளினால் அவரைக் கோபப்படுத்தினார்கள். 17 அவர்கள் தேவனுக்குப் பலியிடவில்லை; தாங்கள் அறியாதவைகளும், தங்கள் பிதாக்கள் பயப்படாதவைகளும், நூதனமாய்த் தோன்றிய புது தெய்வங்களுமாகிய பேய்களுக்கே பலியிட்டார்கள். 18 உன்னை ஜெநிப்பித்த கன்மலையை நீ நினையாமற்போனாய்; உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய். 19 கர்த்தர் அதைக் கண்டு, தமது குமாரரும் தமது குமாரத்திகளும் தம்மைக் கோபப்படுத்தினதினிமித்தம் மனமடிவாகி, அவர்களைப் புறக்கணித்து: 20 என் முகத்தை அவர்களுக்கு மறைப்பேன்; அவர்களுடைய முடிவு எப்படியிருக்கும் என்று பார்ப்பேன்; அவர்கள் மகா மாறுபாடுள்ள சந்ததி; உண்மையில்லாத பிள்ளைகள். 21 தெய்வம் அல்லாதவைகளினால் எனக்கு எரிச்சலை மூட்டி, தங்கள் மாயைகளினால் என்னைக் கோபப்படுத்தினார்கள்; ஆகையால் மதிக்கப்படாத ஜனங்களினால் அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கி, மதிகெட்ட ஜாதியினால் அவர்களைக் கோபப்படுத்துவேன். 22 என் கோபத்தினால் அக்கினி பற்றிக்கொண்டது, அது தாழ்ந்த நரகமட்டும் எரியும்; அது பூமியையும் அதின் பலனையும் அழித்து, பர்வதங்களின் அஸ்திபாரங்களை வேகப்பண்ணும். 23 தீங்குகளை அவர்கள்மேல் குவிப்பேன்; என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பிரயோகிப்பேன். 24 அவர்கள் பசியினால் வாடி, எரிபந்தமான உஷ்ணத்தினாலும், கொடிய வாதையினாலும் மாண்டுபோவார்கள்; துஷ்ட மிருகங்களின் பற்களையும், தரையில் ஊரும் பாம்புகளின் விஷத்தையும் அவர்களுக்குள் அனுப்புவேன். 25 வெளியிலே பட்டயமும், உள்ளே பயங்கரமும், வாலிபனையும் கன்னியையும் குழந்தையையும் நரைத்த கிழவனையும் அழிக்கும். 26 எங்கள் கை உயர்ந்ததென்றும், கர்த்தர் இதையெல்லாம் செய்யவில்லை என்றும் அவர்களுடைய பகைஞர் தப்பெண்ணங்கொண்டு சொல்லுவார்கள் என்று, 27 நான் சத்துருவின் குரோதத்திற்கு அஞ்சாதிருந்தேனானால், நான் அவர்களை மூலைக்குமூலை சிதற அடித்து, மனிதருக்குள் அவர்களுடைய பெயர் அற்றுப் போகப்பண்ணுவேன் என்று சொல்லியிருப்பேன். 28 அவர்கள் யோசனைகெட்ட ஜாதி, அவர்களுக்கு உணர்வு இல்லை. 29 அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக்கொண்டால் நலமாயிருக்கும் என்றார். 30 அவர்களுடைய கன்மலை அவர்களை விற்காமலும், கர்த்தர் அவர்களை ஒப்புக்கொடாமலும் இருந்தாரானால், ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்தி, இரண்டுபேர் பதினாயிரம்பேரை ஓட்டுவதெப்படி? 31 தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப்போல் அல்ல என்று நம்முடைய சத்துருக்களே தீர்மானிக்கிறார்கள். 32 அவர்களுடைய திராட்சச்செடி, சோதோமிலும் கொமோரா நிலங்களிலும் பயிரான திராட்சச்செடியிலும் தாழ்ந்த ஜாதியாயிருக்கிறது, அவைகளின் பழங்கள் பித்தும் அவைகளின் குலைகள் கசப்புமாய் இருக்கிறது. 33 அவர்களுடைய திராட்சரசம் வலுசர்ப்பங்களின் விஷமும் விரியன் பாம்புகளின் கொடிய விஷமுமானது. 34 இது என்னிடத்தில் வைத்துவைக்கப்பட்டு, என் பொக்கிஷங்களில் இது முத்திரை போடப்பட்டிருக்கிறதில்லையோ? 35 பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும். 36 கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்த்து, அவர்கள் பெலன் போயிற்றென்றும், அடைக்கப்பட்டவர்களாவது விடுதலை பெற்றவர்களாவது ஒருவரும் இல்லையென்றும் காணும்போது, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார். 37 அப்பொழுது அவர்: அவர்கள் பலியிட்ட பலிகளின் கொழுப்பைத் தின்று, பானபலிகளின் திராட்சரசத்தைக் குடித்த அவர்களுடைய தெய்வங்களும் அவர்கள் நம்பின கன்மலையும் எங்கே? 38 அவைகள் எழுந்து உங்களுக்குச் சகாயம்பண்ணி உங்களுக்கு மறைவிடமாயிருக்கட்டும். 39 நான் நானே அவர், என்னோடே வேறே தேவன் இல்லை என்பதை இப்பொழுது பாருங்கள்; நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன்; நான் காயப்படுத்துகிறேன், நான் சொஸ்தப்படுத்துகிறேன்; என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை. 40 நான் என் கரத்தை வானத்திற்கு நேராக உயர்த்தி, நான் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் என்கிறேன். 41 மின்னும் என் பட்டயத்தை நான் கருக்காக்கி, என் கையானது நியாயத்தைப் பிடித்துக்கொள்ளுமானால், என் சத்துருக்களிடத்தில் பழிவாங்கி, என்னைப் பகைக்கிறவர்களுக்குப் பதிலளிப்பேன். 42 கொலையுண்டும் சிறைப்பட்டும் போனவர்களுடைய இரத்தத்தாலே என் அம்புகளை வெறிகொள்ளப்பண்ணுவேன்; என் பட்டயம் தலைவர் முதற்கொண்டு சகல சத்துருக்களின் மாம்சத்தையும் பட்சிக்கும். 43 ஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள்; அவர் தமது ஊழியக்காரரின் இரத்தத்திற்குப் பழிவாங்கி, தம்முடைய சத்துருக்களுக்குப் பதிலளித்து, தமது தேசத்தின்மேலும் தமது ஜனங்களின்மேலும் கிருபையுள்ளவராவார். 44 மோசேயும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் வந்து, இந்தப் பாட்டின் வார்த்தைகளையெல்லாம் ஜனங்கள் கேட்கத்தக்கதாகச் சொன்னார்கள். 45 மோசே இந்த வார்த்தைகளையெல்லாம் இஸ்ரவேலர் யாவருக்கும் சொல்லி முடித்தபின்பு, 46 அவர்களை நோக்கி: இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் உங்கள் பிள்ளைகள் செய்யும்படி கவனமாயிருக்க, நீங்கள் அவர்களுக்குக் கற்பிக்கும்படி, நான் இன்று உங்களுக்குச் சாட்சியாய் ஒப்புவிக்கிற வார்த்தைகளையெல்லாம் உங்கள் மனதிலே வையுங்கள். 47 இது உங்களுக்கு வியர்த்தமான காரியம் அல்லவே; இது உங்கள் ஜீவனாயிருக்கிறது, நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி யோர்தானைக் கடந்துபோய்ச் சேரும் தேசத்தில் இதினால் உங்கள் நாட்களை நீடிக்கப்பண்ணுவீர்கள் என்றான். 48 அந்த நாளிலேதானே கர்த்தர் மோசேயை நோக்கி: 49 நீ எரிகோவுக்கு எதிரான மோவாப் தேசத்திலுள்ள இந்த அபாரீம் என்னும் மலைகளிலிருக்கிற நேபோ பர்வதத்தில் ஏறி, நான் இஸ்ரவேல் சந்ததியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப் பார்; 50 நீங்கள் சீன் வனாந்தரத்திலுள்ள காதேசிலே மேரிபாவின் தண்ணீர் சமீபத்தில் இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே என்னைப் பரிசுத்தம்பண்ணாமல், அவர்கள் நடுவே என் கட்டளைகளை மீறினதினாலே, 51 உன் சகோதரனாகிய ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரித்து, தன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்பட்டதுபோல நீயும் ஏறப்போகிற மலையிலே மரித்து, உன் ஜனத்தாரிடத்தில் சேர்க்கப்படுவாய். 52 நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கப்போகிற எதிரேயிருக்கிற தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ பிரவேசிப்பதில்லை என்றார்.

உபாகமம் 33

1 தேவனுடைய மனுஷனாகிய மோசே தான் மரணமடையுமுன்னே இஸ்ரவேல் புத்திரரை ஆசீர்வதித்த ஆசீர்வாதமாவது: 2 கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது. 3 மெய்யாகவே அவர் ஜனங்களைச் சிநேகிக்கிறார்; அவருடைய பரிசுத்தவான்கள் எல்லாரும் உம்முடைய கையில் இருக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய பாதத்தில் விழுந்து, உம்முடைய வார்த்தைகளினால் போதனையடைவார்கள். 4 மோசே நமக்கு ஒரு நியாயப்பிரமாணத்தைக் கற்பித்தான்; அது யாக்கோபின் சபைக்குச் சுதந்தரமாயிற்று. 5 ஜனங்களின் தலைவரும் இஸ்ரவேலின் கோத்திரங்களும் கூட்டங்கூடினபோது அவர் யெஷூரனுக்கு ராஜாவாயிருந்தார். 6 ரூபன் சாவாமல் பிழைப்பானாக; அவன் ஜனம் கொஞ்சமாயிராது என்றான். 7 அவன் யூதாவைக்குறித்து: கர்த்தாவே, யூதாவின் சத்தத்தைக் கேட்டு, அவன் தன் ஜனத்தோடே திரும்பச் சேரப்பண்ணும்; அவன் கை பலக்கக்கடவது; அவனுடைய சத்துருக்களுக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிற சகாயராயிருப்பீராக என்றான். 8 லேவியைக்குறித்து: நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, மேரிபாவின் தண்ணீரிடத்தில் வாக்குவாதம்பண்ணின உன் பரிசுத்த புருஷன் வசமாய் உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக. 9 தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும்: நான் உங்களைப் பாரேன் என்று சொல்லி, தன் சகோதரரை அங்கிகரியாமல், தன் பிள்ளைகளையும் அறியாமலிருக்கிறவன் வசமாய் அவைகள் இருப்பதாக; அவர்கள் உம்முடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு, உம்முடைய உடன்படிக்கையைக் காக்கிறவர்கள். 10 அவர்கள் யாக்கோபுக்கு உம்முடைய நியாயங்களையும், இஸ்ரவேலுக்கு உம்முடைய பிரமாணத்தையும் போதித்து, உமது சந்நிதானத்திலே தூபவர்க்கத்தையும், உமது பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளையும் இடுவார்கள். 11 கர்த்தாவே, அவன் சம்பத்தை ஆசீர்வதித்து, அவன் கைக்கிரியையின்மேல் பிரியமாயிரும்; அவனைப் பகைத்து அவனுக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் திரும்ப எழுந்திராதபடி அவர்களுடைய இடுப்புகளை நொறுக்கிவிடும் என்றான். 12 பென்யமீனைக்குறித்து: கர்த்தருக்குப் பிரியமானவன், அவரோடே சுகமாய்த் தங்கியிருப்பான்; அவனை எந்நாளும் அவர் காப்பாற்றி, அவன் எல்லைக்குள்ளே வாசமாயிருப்பார் என்றான். 13 யோசேப்பைக்குறித்து: கர்த்தரால் அவனுடைய தேசம் ஆசீர்வதிக்கப்படுவதாக; அது வானத்தின் செல்வத்தினாலும், பனியினாலும், ஆழத்திலுள்ள நீரூற்றுகளினாலும், 14 சூரியன் பக்குவப்படுத்தும் அருமையான கனிகளினாலும், சந்திரன் பக்குவப்படுத்தும் அருமையான பலன்களினாலும், 15 ஆதிபர்வதங்களில் உண்டாகும் திரவியங்களினாலும், நித்திய மலைகளில் பிறக்கும் அரும்பொருள்களினாலும், 16 நாடும் அதின் நிறைவும் கொடுக்கும் அருமையான தானியங்களினாலும் ஆசீர்வதிக்கப்படுவதாக. முட்செடியில் எழுந்தருளினவரின் தயை யோசேப்புடைய சிரசின்மேலும், தன் சகோதரரில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக. 17 அவன் அலங்காரம் அவன் தலையீற்றுக் காளையினுடைய அலங்காரத்தைப்போலவும், அவன் கொம்புகள் காண்டாமிருகத்தின் கொம்புகளைப்போலவும் இருக்கும்; அவைகளாலே ஜனங்களை ஏகமாய் தேசத்தின் கடையாந்தரங்கள்மட்டும் முட்டித் துரத்துவான்; அவைகள் எப்பிராயீமின் பதினாயிரங்களும் மனாசேயின் ஆயிரங்களுமானவைகள் என்றான். 18 செபுலோனைக்குறித்து: செபுலோனே, நீ வெளியே புறப்பட்டுப்போகையிலும், இசக்காரே, நீ உன் கூடாரங்களில் தங்குகையிலும் சந்தோஷமாயிரு. 19 ஜனங்களை அவர்கள் மலையின்மேல் வரவழைத்து, அங்கே நீதியின் பலிகளை இடுவார்கள்; கடல்களிலுள்ள சம்பூரணத்தையும் மணலுக்குள்ளே மறைந்திருக்கும் பொருள்களையும் அநுபவிப்பார்கள் என்றான். 20 காத்தைக்குறித்து: காத்துக்கு விஸ்தாரமான இடத்தைக் கொடுக்கிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; அவன் சிங்கத்தைப்போல் தங்கியிருந்து, புயத்தையும் உச்சந்தலையையும் பீறிப்போடுவான். 21 அவன் தனக்காக முதல் இடத்தைப் பார்த்துக்கொண்டான்; அங்கே தனக்கு நியாயப்பிரமாணிகன் கொடுத்த பங்கு பத்திரமாயிருக்கிறது; ஆனாலும் அவன் ஜனத்தின் முன்னணியாய் வந்து, மற்ற இஸ்ரவேலுடனே கர்த்தரின் நீதியையும் அவருடைய நியாயங்களையும் நடப்பிப்பான் என்றான். 22 தாணைக்குறித்து: தாண் ஒரு பாலசிங்கம், அவன் பாசானிலிருந்து பாய்வான் என்றான். 23 நப்தலியைக்குறித்து: நப்தலி கர்த்தருடைய தயவினாலே திர்ப்தியடைந்து, அவருடைய ஆசீர்வாதத்தினாலே நிறைந்திருப்பான். நீ மேற்றிசையையும் தென்திசையையும் சுதந்தரித்துக்கொள் என்றான். 24 ஆசேரைக்குறித்து: ஆசேர் புத்திரபாக்கியமுடையவனாய், தன் சகோதரருக்குப் பிரியமாயிருந்து, தன் காலை எண்ணெயிலே தோய்ப்பான். 25 இரும்பும் வெண்கலமும் உன் பாதரட்சையின் கீழிருக்கும்; உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும் என்றான். 26 யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாயமண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார். 27 அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார். 28 இஸ்ரவேல் சுகமாய்த் தனித்து வாசம்பண்ணுவான்; யாக்கோபின் ஊற்றானது தானியமும் திராட்சரசமுமுள்ள தேசத்திலே இருக்கும்; அவருடைய வானமும் பனியைப் பெய்யும். 29 இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்? உனக்குச் சகாயஞ்செய்யும் கேடகமும் உனக்கு மகிமைபொருந்திய பட்டயமும் அவரே; உன் சத்துருக்கள் உனக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்கள் மேடுகளை மிதிப்பாய், என்று சொன்னான்.

உபாகமம் 34

1 பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தாண்மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும், 2 நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசிச் சமுத்திரம்வரைக்குமுள்ள யூதா தேசம் அனைத்தையும், 3 தென்புறத்தையும், சோவார் வரைக்குமுள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர்முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமனான பூமியையும் காண்பித்தார். 4 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: நான் உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்ட தேசம் இதுதான், இதை உன் கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் நீ அவ்விடத்திற்குக் கடந்துபோவதில்லை என்றார். 5 அப்படியே கர்த்தரின் தாசனாகிய மோசே மோவாப் தேசமான அவ்விடத்திலே கர்த்தருடைய வார்த்தையின்படியே மரித்தான். 6 அவர் அவனை மோவாப் தேசத்திலுள்ள பெத்பேயோருக்கு எதிரான பள்ளத்தாக்கிலே அடக்கம்பண்ணினார். இந்நாள்வரைக்கும் ஒருவனும் அவன் பிரேதக்குழியை அறியான். 7 மோசே மரிக்கிறபோது நூற்றிருபது வயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை. 8 இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் சமனான வெளிகளில் மோசேக்காக முப்பது நாள் அழுதுகொண்டிருந்தார்கள்; மோசேக்காக அழுது துக்கங்கொண்டாடின நாட்கள் முடிந்தது. 9 மோசே நூனின் குமாரனாகிய யோசுவாவின்மேல் தன் கைகளை வைத்தபடியினால் அவன் ஞானத்தின் ஆவியினால் நிறையப்பட்டான்; இஸ்ரவேல் புத்திரர் அவனுக்குக் கீழ்ப்படிந்து, கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள். 10 மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசம் அனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும், 11 அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால், 12 கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.

யோசுவா 1

1 கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு, கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி: 2 என் தாசனாகிய மோசே மரித்துப்போனான்; இப்பொழுது நீயும் இந்த ஜனங்கள் எல்லாரும் எழுந்து, இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள். 3 நான் மோசேக்குச் சொன்னபடி உங்கள் காலடி மிதிக்கும் எவ்விடத்தையும் உங்களுக்குக் கொடுத்தேன். 4 வனாந்தரமும் இந்த லீபனோனும் தொடங்கி ஐபிராத்து நதியான பெரிய நதிமட்டுமுள்ள ஏத்தியரின் தேசம் அனைத்தும், சூரியன் அஸ்தமிக்கிற திசையான பெரிய சமுத்திரம்வரைக்கும் உங்கள் எல்லையாயிருக்கும். 5 நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் உனக்கு முன்பாக எதிர்த்து நிற்பதில்லை; நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. 6 பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். 7 என் தாசனாகிய மோசே உனக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு; நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துகொள்ளும்படிக்கு, அதை விட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. 8 இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக; இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக; அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய். 9 நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு; திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். 10 அப்பொழுது யோசுவா ஜனங்களின் அதிபதிகளை நோக்கி: 11 நீங்கள் பாளயத்தை உருவ நடந்துபோய், ஜனங்களைப் பார்த்து: உங்களுக்கு போஜனபதார்த்தங்களை ஆயத்தம்பண்ணுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சுதந்தரிக்கக் கொடுக்கும் தேசத்தை நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, இன்னும் மூன்றுநாளைக்குள்ளே இந்த யோர்தானைக் கடந்துபோவீர்கள் என்று சொல்லச்சொன்னான். 12 பின்பு யோசுவா: ரூபனியரையும் காத்தியரையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரையும் நோக்கி: 13 கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை இளைப்பாறப்பண்ணி, இந்த தேசத்தை உங்களுக்குக் கொடுத்தாரே. 14 உங்கள் பெண்சாதிகளும் பிள்ளைகளும் மிருகஜீவன்களும், மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்திலே கொடுத்த தேசத்தில் இருக்கட்டும்; உங்களிலுள்ள யுத்தவீரர் யாவரும் உங்கள் சகோதரருக்கு முன்பாக அணியணியாய்க் கடந்துபோய், 15 கர்த்தர் உங்களைப்போல உங்கள் சகோதரரையும் இளைப்பாறப்பண்ணி, அவர்களும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தங்களுக்குக் கொடுக்கும் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுமட்டும், அவர்களுக்கு உதவிசெய்யக்கடவீர்கள்; பின்பு நீங்கள் கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்கு யோர்தானுக்கு இப்புறத்தில் சூரியன் உதிக்கும் திசைக்கு நேராகக் கொடுத்த உங்கள் சுதந்தரமான தேசத்துக்குத் திரும்பி, அதைச் சுதந்தரித்துக்கொண்டிருப்பீர்களாக என்றான். 16 அப்பொழுது அவர்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: நீர் எங்களுக்குக் கட்டளையிடுகிறதையெல்லாம் செய்வோம்; நீர் எங்களை அனுப்பும் இடமெங்கும் போவோம். 17 நாங்கள் மோசேக்குச் செவிகொடுத்ததுபோல உமக்கும் செவிகொடுப்போம்; உம்முடைய தேவனாகிய கர்த்தர்மாத்திரம் மோசேயோடே இருந்ததுபோல, உம்மோடும் இருப்பாராக. 18 நீர் எங்களுக்குக் கட்டளையிடும் சகல காரியத்திலும் உம்முடைய சொல்லைக் கேளாமல், உம்முடைய வாக்குக்கு முரட்டாட்டம்பண்ணுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; பலங்கொண்டு திடமனதாய்மாத்திரம் இரும் என்றார்கள்.

யோசுவா 2

1 நூனின் குமாரனாகிய யோசுவா சித்தீமிலிருந்து வேவுகாரராகிய இரண்டு மனுஷரை இரகசியமாய் வேவுபார்க்கும்படி அனுப்பி: நீங்கள் போய் தேசத்தையும் எரிகோவையும் பார்த்துவாருங்கள் என்றான். அவர்கள் போய், ராகாப் என்னும் பெயர்கொண்ட வேசியின் வீட்டுக்குள் பிரவேசித்து, அங்கே தங்கினார்கள். 2 தேசத்தை வேவுபார்க்கும்படி, இஸ்ரவேல் புத்திரரில் சில மனுஷர் இந்த ராத்திரியிலே இங்கே வந்தார்கள் என்று எரிகோவின் ராஜாவுக்குச் சொல்லப்பட்டது. 3 அப்பொழுது எரிகோவின் ராஜா ராகாபண்டைக்கு ஆள் அனுப்பி: உன்னிடத்தில் வந்து, உன் வீட்டுக்குள் பிரவேசித்த மனுஷரை வெளியே கொண்டுவா; அவர்கள் தேசத்தையெல்லாம் வேவுபார்க்கும்படி வந்தார்கள் என்று சொல்லச்சொன்னான். 4 அந்த ஸ்திரீ அவ்விரண்டு மனுஷரையும் கொண்டுபோய் அவர்களை ஒளித்துவைத்து: மெய்தான், என்னிடத்தில் மனுஷர் வந்திருந்தார்கள்; ஆனாலும் அவர்கள் எவ்விடத்தாரோ எனக்குத் தெரியாது. 5 வாசலை அடைக்கும் நேரத்தில் இருட்டுவேளையிலே, அந்த மனுஷர் புறப்பட்டுப் போய்விட்டார்கள்; அவர்கள் எங்கே போனார்களோ எனக்குத் தெரியாது; அவர்களைச் சீக்கிரமாய்ப் போய்த் தேடுங்கள்; நீங்கள் அவர்களைப் பிடித்துக்கொள்ளலாம் என்றாள். 6 அவள் அவர்களை வீட்டின்மேல் ஏறப்பண்ணி, வீட்டின்மேல் பரப்பப்பட்ட சணல் தட்டைகளுக்குள்ளே மறைத்து வைத்திருந்தாள். 7 அந்த மனுஷர் யோர்தானுக்குப் போகிற வழியில் துறைகள்மட்டும் அவர்களைத் தேடப்போனார்கள்; அவர்களைத் தேடுகிறவர்கள் புறப்பட்டவுடனே வாசல் அடைக்கப்பட்டது. 8 அந்த மனுஷர் படுத்துக்கொள்ளுமுன்னே அவள் வீட்டின்மேல் அவர்களிடத்திற்கு ஏறிப்போய், 9 கர்த்தர் உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும், உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும், உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும் சோர்ந்துபோனார்களென்றும் அறிவேன். 10 நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாகச் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும், நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம் பண்ணின எமோரியரின் இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம். 11 கேள்விப்பட்டபோது எங்கள் இருதயம் கரைந்துபோயிற்று, உங்களாலே எல்லாருடைய தைரியமும் அற்றுப்போயிற்று; உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர். 12 இப்போதும், நான் உங்களுக்குத் தயவுசெய்தபடியினால், நீங்களும் என் தகப்பன் குடும்பத்துக்குத் தயவுசெய்வோம் என்று கர்த்தர்பேரில் எனக்கு ஆணையிட்டு, 13 நீங்கள் என் தகப்பனையும் என் தாயையும் என் சகோதரரையும் என் சகோதரிகளையும் அவர்களுக்கு உண்டான எல்லாவற்றையும் உயிரோடே வைத்து, எங்கள் ஜீவனைச் சாவுக்குத் தப்புவிக்கும்படி, எனக்கு நிச்சயமான அடையாளத்தைக் கொடுக்கவேண்டும் என்றாள். 14 அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: எங்கள் ஜீவனே உங்கள் ஜீவனுக்கு ஈடு; நீங்கள் எங்கள் காரியத்தை வெளிப்படுத்தாதிருந்தால், கர்த்தர் எங்களுக்குத் தேசத்தைக் கொடுக்கும்போது, நாங்கள் தயையும் சத்தியமும் பாராட்டுவோம் என்றார்கள். 15 அப்பொழுது அவர்களைக் கயிற்றினாலே ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள்; அவள் வீடு அலங்கத்தின் மதிலில் இருந்தது; அலங்கத்திலே அவள் குடியிருந்தாள். 16 அப்பொழுது அவள் அவர்களை நோக்கி: தேடுகிறவர்கள் உங்களைக் காணாதபடிக்கு, நீங்கள் மலையிலே போய், அவர்கள் திரும்பிவருமட்டும் அங்கே மூன்றுநாள் ஒளித்திருந்து, பின்பு உங்கள் வழியே போங்கள் என்றாள். 17 அப்பொழுது அந்த மனுஷர் அவளை நோக்கி: இதோ, நாங்கள் தேசத்துக்குள் பிரவேசிக்கும்போது, நீ இந்தச் சிவப்புநூல் கயிற்றை எங்களை இறக்கிவிட்ட ஜன்னலிலே கட்டி, உன் தகப்பனையும் உன் தாயையும் உன் சகோதரர்களையும் உன் தகப்பன் குடும்பத்தார் அனைவரையும் உன்னிடத்தில் உன் வீட்டிலே சேர்த்துக்கொள். 18 இல்லாவிட்டால் நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நீங்கலாயிருப்போம். 19 எவனாகிலும் உன் வீட்டு வாசல்களிலிருந்து வெளியே புறப்பட்டால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் இருக்கும்; எங்கள்மேல் குற்றம் இல்லை; உன்னோடே வீட்டில் இருக்கிற எவன்மேலாகிலும் கைபோடப்பட்டதேயாகில், அவனுடைய இரத்தப்பழி எங்கள் தலையின்மேல் இருக்கும். 20 நீ எங்கள் காரியத்தை வெளிப்படுத்தினாயேயானால், நீ எங்கள் கையில் வாங்கின ஆணைக்கு நீங்கலாயிருப்போம் என்றார்கள். 21 அதற்கு அவள்: உங்கள் வார்த்தையின்படியே ஆகக்கடவது என்று சொல்லி, அவர்களை அனுப்பிவிட்டாள்; அவர்கள் போய்விட்டார்கள்; பின்பு அவள் அந்தச் சிவப்புக் கயிற்றை ஜன்னலிலே கட்டிவைத்தாள். 22 அவர்கள் போய், மலையிலே சேர்ந்து, தேடுகிறவர்கள் திரும்பிவருமட்டும், மூன்றுநாள் அங்கே தரித்திருந்தார்கள்; தேடுகிறவர்கள் வழியிலெல்லாம் அவர்களைத் தேடியும் காணாதேபோனார்கள். 23 அந்த இரண்டு மனுஷரும் திரும்பி, மலையிலிருந்து இறங்கி, ஆற்றைக்கடந்து, நூனின் குமாரனாகிய யோசுவாவினிடத்தில் வந்து, தங்களுக்குச் சம்பவித்த யாவையும் அவனுக்குத் தெரிவித்து; 24 கர்த்தர் தேசத்தையெல்லாம் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; தேசத்தின் குடிகளெல்லாம் நமக்குமுன்பாகச் சோர்ந்துபோனார்கள் என்று அவனோடே சொன்னார்கள்.

யோசுவா 3

1 அதிகாலமே யோசுவா எழுந்திருந்த பின்பு, அவனும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் சித்தீமிலிருந்து பிரயாணம்பண்ணி, யோர்தான்மட்டும் வந்து, அதைக் கடந்துபோகுமுன்னே அங்கே இராத்தங்கினார்கள். 2 மூன்றுநாள் சென்றபின்பு, அதிபதிகள் பாளயம் எங்கும் போய், 3 ஜனங்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அதைச் சுமக்கிற லேவியராகிய ஆசாரியர்களையும் கண்டவுடனே, நீங்களும் உங்கள் இடத்தைவிட்டுப் பிரயாணப்பட்டு, அதற்குப் பின்செல்லுங்கள். 4 உங்களுக்கும் அதற்கும் இடையிலே இரண்டாயிரம் முழத் தூரமான இடம் இருக்கவேண்டும்; நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படிக்கு, அதற்குச் சமீபமாய் வராதிருப்பீர்களாக; இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாய் நடந்துபோகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள். 5 யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான். 6 பின்பு யோசுவா ஆசாரியர்களை நோக்கி: நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்துபோங்கள் என்றான்; அப்படியே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஜனங்களுக்கு முன்னே போனார்கள். 7 கர்த்தர் யோசுவாவை நோக்கி: நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருக்கிறேன் என்பதை இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன். 8 உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியரைப் பார்த்து: நீங்கள் யோர்தான் தண்ணீர் ஓரத்தில் சேரும்போது, யோர்தானில் நில்லுங்கள் என்று நீ கட்டளையிடுவாயாக என்றார். 9 யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் இங்கே சேர்ந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள் என்றான். 10 பின்பு யோசுவா: ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியரையும் ஏத்தியரையும் ஏவியரையும் பெரிசியரையும் கிர்காசியரையும் எமோரியரையும் எபூசியரையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக: 11 இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது. 12 இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களிலே பன்னிரண்டுபேரை, ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள். 13 சம்பவிப்பது என்னவென்றால், சர்வ பூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான். 14 ஜனங்கள் யோர்தானைக் கடந்துபோகத் தங்கள் கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஜனங்களுக்கு முன்னே சுமந்துகொண்டுபோய், யோர்தான்மட்டும் வந்தார்கள். 15 யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம். பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் கால்கள் தண்ணீரின் ஓரத்தில் பட்டவுடனே, 16 மேலேயிருந்து ஓடிவருகிற தண்ணீர் நின்று சார்தானுக்கடுத்த ஆதாம் ஊர்வரைக்கும் ஒரு குவியலாகக் குவிந்தது; உப்புக்கடல் என்னும் சமனான வெளியின் கடலுக்கு ஓடிவருகிற தண்ணீர் பிரிந்து ஓடிற்று; அப்பொழுது ஜனங்கள் எரிகோவுக்கு எதிரே கடந்துபோனார்கள். 17 சகல ஜனங்களும் யோர்தானைக் கடந்து தீருமளவும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய்க் கடந்துபோனார்கள்.

யோசுவா 4

1 ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்து தீர்ந்தபோது, கர்த்தர் யோசுவாவை நோக்கி: 2 நீங்கள், ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஜனங்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, 3 இங்கே யோர்தானின் நடுவிலே ஆசாரியர்களின் கால்கள் நிலையாய் நின்ற இடத்திலே பன்னிரண்டு கற்களை எடுத்து, அவைகளை உங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், நீங்கள் இன்று இரவில் தங்கும் ஸ்தானத்திலே அவைகளை வையுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள் என்றார். 4 அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் புத்திரரில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஆயத்தப்படுத்தியிருந்த பன்னிரண்டுபேரை அழைத்து, 5 அவர்களை நோக்கி: நீங்கள் யோர்தானின் மத்தியில் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகக் கடந்துபோய், உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாயிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாக, உங்களில் ஒவ்வொருவன் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின்மேல் எடுத்துக்கொண்டு போங்கள். 6 நாளை இந்தக் கற்கள் ஏதென்று உங்கள் பிள்ளைகள் உங்களைக் கேட்கும்போது, 7 நீங்கள்: கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோனதினால் அவைகள் வைக்கப்பட்டிருக்கிறது; யோர்தானைக் கடந்துபோகிறபோது, யோர்தானின் தண்ணீர் பிரிந்துபோயிற்று; ஆகையால் இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளம் என்று சொல்லுங்கள் என்றான். 8 யோசுவா கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, கர்த்தர் யோசுவாவோடே சொன்னபடியே, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாகப் பன்னிரண்டு கற்களை யோர்தானின் நடுவில் எடுத்து, அவைகளைத் தங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், தாங்கள் தங்கின இடத்திலே வைத்தார்கள். 9 யோர்தானின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியரின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்நாள்மட்டும் அங்கே இருக்கிறது. 10 மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்த எல்லாவற்றின்படியும் ஜனங்களுக்குச் சொல்லும்படி, கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்டவையெல்லாம் செய்து முடியுமட்டும், பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தானின் நடுவே நின்றார்கள்; ஜனங்கள் தீவிரித்துக் கடந்துபோனார்கள். 11 ஜனமெல்லாம் கடந்துபோனபின்பு, கர்த்தருடைய பெட்டியும் கடந்தது; ஆசாரியர் ஜனத்துக்கு முன்பாகப் போனார்கள். 12 ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மோசே தங்களுக்குச் சொன்னபடியே அணியணியாய் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகக் கடந்துபோனார்கள். 13 ஏறக்குறைய நாற்பதினாயிரம்பேர் யுத்தசன்னத்தராய் யுத்தம்பண்ணும்படி, கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமனான வெளிகளுக்குக் கடந்துபோனார்கள். 14 அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள். 15 கர்த்தர் யோசுவாவை நோக்கி: 16 சாட்சியின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தானிலிருந்து கரையேறும்படி அவர்களுக்குக் கட்டளையிடு என்று சொன்னார். 17 யோசுவா: யோர்தானிலிருந்து கரையேறி வாருங்கள் என்று ஆசாரியர்களுக்குக் கட்டளையிட்டான். 18 அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தான் நடுவிலிருந்து ஏறி, அவர்கள் உள்ளங்கால்கள் கரையில் ஊன்றினபோது, யோர்தானின் தண்ணீர்கள் தங்களிடத்துக்குத் திரும்பி, முன்போல அதின் கரையெங்கும் புரண்டது. 19 இந்தப்பிரகாரமாக முதல் மாதம் பத்தாம் தேதியிலே ஜனங்கள் யோர்தானிலிருந்து கரையேறி, எரிகோவுக்குக் கீழெல்லையான கில்காலிலே பாளயமிறங்கினார்கள். 20 அவர்கள் யோர்தானில் எடுத்துக் கொண்டுவந்த அந்தப் பன்னிரண்டு கற்களையும் யோசுவா கில்காலிலே நாட்டி, 21 இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நாளை உங்கள் பிள்ளைகள் இந்தக் கற்கள் ஏதென்று தங்கள் பிதாக்களைக் கேட்கும்போது, 22 நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலர் வெட்டாந்தரை வழியாய் இந்த யோர்தானைக் கடந்துவந்தார்கள். 23 பூமியின் சகல ஜனங்களும் கர்த்தருடைய கரம் பலத்ததென்று அறியும்படிக்கும், நீங்கள் சகல நாளும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயப்படும்படிக்கும், 24 உங்கள் தேவனாகிய கர்த்தர் சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை நாங்கள் கடந்து தீருமட்டும் எங்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினது போல, உங்கள் தேவனாகிய கர்த்தர் யோர்தானின் தண்ணீருக்கும் செய்து, அதை உங்களுக்கு முன்பாக நீங்கள் கடந்து தீருமளவும் வற்றிப்போகப்பண்ணினார் என்று அறிவிக்கக்கடவீர்கள் என்றான்.

யோசுவா 5

1 இஸ்ரவேல் புத்திரர் கடந்து தீருமளவும், கர்த்தர் யோர்தானின் தண்ணீரை அவர்களுக்கு முன்பாக வற்றிப்போகப்பண்ணினதை, யோர்தானுக்கு மேல்கரையில் குடியிருந்த எமோரியரின் சகல ராஜாக்களும், சமுத்திரத்தருகே குடியிருந்த கானானியரின் சகல ராஜாக்களும் கேட்டதுமுதற்கொண்டு, அவர்கள் இருதயம் கரைந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகச் சோர்ந்துபோனார்கள். 2 அக்காலத்திலே கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ கருக்கான கத்திகளை உண்டாக்கி, திரும்ப இரண்டாம்விசை இஸ்ரவேல் புத்திரரை விருத்தசேதனம்பண்ணு என்றார். 3 அப்பொழுது யோசுவா கருக்கான கத்திகளை உண்டாக்கி, இஸ்ரவேல் புத்திரரை ஆர்லோத் மேட்டிலே விருத்தசேதனம்பண்ணினான். 4 யோசுவா இப்படி விருத்தசேதனம் பண்ணின முகாந்தரம் என்னவென்றால்: எகிப்திலிருந்து புறப்பட்ட சகல ஆண்மக்களாகிய யுத்தபுருஷர் எல்லாரும் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, வழியில் வனாந்தரத்திலே மாண்டுபோனார்கள். 5 எகிப்திலிருந்து புறப்பட்ட எல்லா ஜனங்களும் விருத்தசேதனம்பண்ணப்பட்டிருந்தார்கள்; அவர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபின்பு, வழியில் வனாந்தரத்திலே பிறந்த சகல ஜனங்களும் விருத்தசேதனம்பண்ணப்படாதிருந்தார்கள். 6 கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போன எகிப்திலிருந்து புறப்பட்ட யுத்தபுருஷரான யாவரும் மாளுமட்டும், இஸ்ரவேல் புத்திரர் நாற்பதுவருஷம் வனாந்தரத்தில் நடந்து திரிந்தார்கள்; கர்த்தர் எங்களுக்குக் கொடுக்கும்படி அவர்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை அவர்கள் காண்பதில்லை என்று கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தார். 7 அவர்களுக்குப் பதிலாக அவர் எழும்பப்பண்ணின அவர்கள் பிள்ளைகளை யோசுவா விருத்தசேதனம்பண்ணினான்; வழியிலே அவர்களை விருத்தசேதனம் பண்ணாததினால் அவர்கள் விருத்தசேதனம் இல்லாதிருந்தார்கள். 8 ஜனங்களெல்லாரும் விருத்தசேதனம் பண்ணப்பட்டுத் தீர்ந்தபின்பு, அவர்கள் குணமாகுமட்டும் தங்கள்தங்கள் இடத்திலே பாளயத்தில் தரித்திருந்தார்கள். 9 கர்த்தர் யோசுவாவை நோக்கி: இன்று எகிப்தின் நிந்தையை உங்கள்மேல் இராதபடிக்குப் புரட்டிப்போட்டேன் என்றார்; அதனால் அந்த ஸ்தலம் இந்நாள்வரைக்கும் கில்கால் என்னப்படுகிறது. 10 இஸ்ரவேல் புத்திரர் கில்காலில் பாளயமிறங்கியிருந்து, மாதத்தின் பதினாலாம் தேதி அந்திநேரத்திலே எரிகோவின் சமனான வெளிகளிலே பஸ்காவை ஆசரித்தார்கள். 11 பஸ்காவின் மறுநாளாகிய அன்றையதினம் அவர்கள் தேசத்தினுடைய தானியத்தாலாகிய புளிப்பில்லாத அப்பங்களையும் சுட்ட கதிர்களையும் புசித்தார்கள். 12 அவர்கள் தேசத்தின் தானியத்திலே புசித்த மறுநாளிலே மன்னா பெய்யாமல் ஒழிந்தது; அதுமுதல் இஸ்ரவேல் புத்திரருக்கு மன்னா இல்லாமற்போய், அவர்கள் கானான் தேசத்துப் பலனை அந்த வருஷத்தில்தானே புசித்தார்கள். 13 பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவின பட்டயம் அவர் கையில் இருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான். 14 அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான். 15 அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.

யோசுவா 6

1 எரிகோ இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அடைக்கப்பட்டிருந்தது; ஒருவரும் வெளியே போகவுமில்லை, ஒருவரும் உள்ளே வரவுமில்லை. 2 கர்த்தர் யோசுவாவை நோக்கி: இதோ, எரிகோவையும் அதின் ராஜாவையும் யுத்தவீரரையும் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன். 3 யுத்தபுருஷராகிய நீங்கள் அனைவரும் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவாருங்கள்; இப்படி ஆறுநாள் செய்யக்கடவீர்கள். 4 ஏழு ஆசாரியர் பெட்டிக்கு முன்பாக ஏழு கொம்பு எக்காளங்களைப் பிடித்துக்கொண்டு போகவேண்டும்; ஏழாம்நாளில் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவரக்கடவர்கள்; ஆசாரியர் எக்காளங்களை ஊதவேண்டும். 5 அவர்கள் அந்தக் கொம்புகளினால் நெடுந்தொனி இடும்போதும், நீங்கள் எக்காளசத்தத்தைக் கேட்கும்போதும், ஜனங்கள் எல்லாரும் மகா ஆரவாரத்தோடே ஆர்ப்பரிக்கக்கடவர்கள்; அப்பொழுது பட்டணத்தின் அலங்கம் இடிந்துவிழும்; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராக ஏறக்கடவர்கள் என்றார். 6 அந்தப்படியே நூனின் குமாரனாகிய யோசுவா ஆசாரியரை அழைத்து: உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு போங்கள்; தொனிக்கும் ஏழு எக்காளங்களையும் ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக்கொண்டு போகக்கடவர்கள் என்று சொல்லி; 7 ஜனங்களை நோக்கி: பட்டணத்தைச் சுற்றி நடந்துபோங்கள்; யுத்தசன்னத்தரானவர்கள் கர்த்தரின் பெட்டிக்குமுன் நடக்கக்கடவர்கள் என்றான். 8 யோசுவா ஜனங்களிடத்தில் பேசினவுடனே, தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடித்திருக்கிற ஏழு ஆசாரியர் கர்த்தருக்கு முன்பாக நடந்து எக்காளங்களை ஊதினார்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டி அவர்களுக்குப் பின்சென்றது. 9 எக்காளங்களை ஊதுகிற ஆசாரியருக்குமுன் யுத்தசன்னத்தரானவர்கள் நடந்தார்கள்; பின்தண்டு எக்காளங்கள் ஊதப்படும்போது பெட்டிக்குப் பின்சென்றது. 10 யோசுவா ஜனங்களை நோக்கி: நான் சொல்லும் நாள்மட்டும், நீங்கள் ஆர்ப்பரியாமலும் உங்கள் வாயினால் சத்தங்காட்டாமலும் இருங்கள்; உங்கள் வாயிலிருந்து ஒரு பேச்சும் புறப்படவேண்டாம்; ஆர்ப்பரியுங்கள் என்று உங்களுக்கு நான் சொல்லும் நாளிலே ஆர்ப்பரிப்பீர்களாக என்று கட்டளையிட்டிருந்தான். 11 அப்படியே கர்த்தரின் பெட்டியைப் பட்டணத்தைச் சூழ்ந்து ஒருதரம் சுற்றிவரப்பண்ணினான்; அவர்கள் திரும்பப் பாளயத்திலே வந்து, பாளயத்தில் இராத்தங்கினார்கள். 12 யோசுவா அதிகாலமே எழுந்திருந்தான்; ஆசாரியர்கள் கர்த்தரின் பெட்டியைச் சுமந்துகொண்டு போனார்கள். 13 தொனிக்கும் ஏழு எக்காளங்களைப் பிடிக்கிற ஏழு ஆசாரியர்களும் எக்காளங்களை ஊதிக்கொண்டே கர்த்தரின் பெட்டிக்கு முன்பாக நடந்தார்கள்; யுத்தசன்னத்தரானவர்கள் அவர்களுக்கு முன்னாலே நடந்தார்கள்; பின்தண்டோவெனில் எக்காளங்கள் ஊதப்படுகையில், கர்த்தரின் பெட்டிக்குப் பின்சென்றது. 14 இரண்டாம்நாளிலும் பட்டணத்தை ஒருதரம் சுற்றிவந்து, பாளயத்துக்குத் திரும்பினார்கள்; இந்தப்படி ஆறுநாளும் செய்தார்கள். 15 ஏழாம்நாளில், அதிகாலமே கிழக்கு வெளுக்கும்போது எழுந்திருந்து அந்தப்பிரகாரமே பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள்; அன்றையதினத்தில் மாத்திரம் பட்டணத்தை ஏழுதரம் சுற்றிவந்தார்கள். 16 ஏழாந்தரம் ஆசாரியர் எக்காளங்களை ஊதுகையில், யோசுவா ஜனங்களை நோக்கி: ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தைக் கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். 17 ஆனாலும் இந்தப் பட்டணமும் இதிலுள்ள யாவும் கர்த்தருக்குச் சாபத்தீடாயிருக்கும்; நாம் அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியால், அவளும் அவளோடே வீட்டுக்குள் இருக்கிற அனைவருமாத்திரம் உயிரோடிருக்கக்கடவர்கள். 18 சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே, நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப்பண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்குமாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள். 19 சகல வெள்ளியும் பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும் என்றான். 20 எக்காளங்களை ஊதுகையில், ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள்; எக்காள சத்தத்தை ஜனங்கள் கேட்டு, மகா ஆரவாரத்தோடே முழங்குகையில், அலங்கம் இடிந்துவிழுந்தது; உடனே ஜனங்கள் அவரவர் தங்களுக்கு நேராகப் பட்டணத்தில் ஏறி, பட்டணத்தைப் பிடித்து, 21 பட்டணத்திலிருந்த புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக்கருக்கினால் சங்காரம் பண்ணினார்கள். 22 யோசுவா, தேசத்தை வேவுபார்த்த இரண்டு புருஷரை நோக்கி: நீங்கள் அந்த வேசியின் வீட்டிலே போய், நீங்கள் அவளுக்கு ஆணையிட்டபடி அந்த ஸ்திரீயையும் அவளுக்கு உண்டான யாவையும் அங்கேயிருந்து வெளியே கொண்டுவாருங்கள் என்றான். 23 அப்பொழுது வேவுகாரரான அந்த வாலிபர் உள்ளே போய், ராகாபையும் அவள் தகப்பனையும் அவள் தாயையும் சகோதரர்களையும் அவளுக்குள்ள யாவையும் அவள் குடும்பத்தார் அனைவரையும் வெளியே அழைத்துக்கொண்டுவந்து, அவர்களை இஸ்ரவேல் பாளயத்துக்குப் புறம்பே இருக்கும்படி பண்ணினார்கள். 24 பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; வெள்ளியையும் பொன்னையும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்த பாத்திரங்களையுமாத்திரம் கர்த்தரின் ஆலயப்பொக்கிஷத்தில் சேர்த்தார்கள். 25 எரிகோவை வேவுபார்க்க யோசுவா அனுப்பின ஆட்களை ராகாப் என்னும் வேசி மறைத்துவைத்தபடியினால், அவளையும் அவள் தகப்பன் வீட்டாரையும் அவளுக்குள்ள யாவையும் யோசுவா உயிரோடே வைத்தான்; அவள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலின் நடுவிலே குடியிருக்கிறாள். 26 அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான். 27 இவ்விதமாய்க் கர்த்தர் யோசுவாவோடேகூட இருந்தார்; அவன் கீர்த்தி தேசமெங்கும் பரம்பிற்று.

யோசுவா 7

1 இஸ்ரவேல் புத்திரர் சாபத்தீடானதிலே துரோகம்பண்ணினார்கள்; எப்படியெனில், யூதாகோத்திரத்துச் சேராகுடைய குமாரனாகிய சப்தியின் மகன் கர்மீக்குப் பிறந்த ஆகான் என்பவன், சாபத்தீடானதிலே சிலதை எடுத்துக்கொண்டான்; ஆகையால் இஸ்ரவேல் புத்திரர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது. 2 யோசுவா எரிகோவிலிருந்து பெத்தேலுக்குக் கிழக்கிலுள்ள பெத்தாவேன் சமீபத்திலிருக்கிற ஆயிபட்டணத்துக்குப் போகும்படி ஆட்களை அனுப்பி: நீங்கள் போய், அந்த நாட்டை வேவுபாருங்கள் என்றான்; அந்த மனுஷர் போய், ஆயியை வேவுபார்த்து, 3 யோசுவாவினிடத்தில் திரும்பிவந்து, அவனை நோக்கி: ஜனங்கள் எல்லாரும் போகவேண்டியதில்லை; ஏறக்குறைய இரண்டாயிரம் மூவாயிரம்பேர் போய், ஆயியை முறிய அடிக்கலாம்; எல்லா ஜனங்களையும் அங்கே போகும்படி வருத்தப்படுத்தவேண்டியதில்லை; அவர்கள் கொஞ்சம்பேர்தான் என்றார்கள். 4 அப்படியே ஜனங்களில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அவ்விடத்திற்குப் போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஆயியின் மனுஷருக்கு முன்பாக முறிந்தோடினார்கள். 5 ஆயியின் மனுஷர் அவர்களில் ஏறக்குறைய முப்பத்தாறுபேரை வெட்டிப்போட்டார்கள்; பட்டணவாசலின் வெளி துவக்கிச் செபாரீம்மட்டும் அவர்களைத் துரத்தி, மலையிறக்கத்திலே அவர்களை வெட்டினார்கள்; ஜனங்களின் இருதயம் கரைந்து தண்ணீராய்ப்போயிற்று. 6 அப்பொழுது யோசுவா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, அவனும் இஸ்ரவேலின் மூப்பரும் சாயங்காலமட்டும் கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து, தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு கிடந்தார்கள். 7 யோசுவா: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, எங்களை அழிக்கும்படிக்கு எமோரியர் கைகளில் ஒப்புக்கொடுப்பதற்காகவா தேவரீர் இந்த ஜனத்தை யோர்தானைக் கடக்கப்பண்ணினீர்? நாங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் மனத்திர்ப்தியாக இருந்துவிட்டோமானால் நலமாயிருக்கும். 8 ஆ, ஆண்டவரே, இஸ்ரவேலர் தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; இப்பொழுது நான் என்ன சொல்லுவேன். 9 கானானியரும் தேசத்துக் குடிகள் யாவரும் இதைக் கேட்டு, எங்களை வளைந்துகொண்டு, எங்கள் பேரைப் பூமியிலிராதபடிக்கு வேரற்றுப்போகப்பண்ணுவார்களே; அப்பொழுது உமது மகத்தான நாமத்துக்கு என்ன செய்வீர் என்றான். 10 அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: எழுந்திரு, நீ இப்படி முகங்குப்புற விழுந்துகிடக்கிறது என்ன? 11 இஸ்ரவேலர் பாவஞ்செய்தார்கள்; நான் அவர்களுக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை மீறினார்கள்; சாபத்தீடானதில் எடுத்துக்கொண்டதும், களவுசெய்ததும், வஞ்சித்ததும், தங்கள் பண்டம்பாடிகளுக்குள்ளே வைத்ததும் உண்டே. 12 ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாமல், தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள்; அவர்கள் சாபத்தீடானார்கள்; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து நிக்கிரகம்பண்ணாவிட்டால், இனி உங்களோடு இரேன். 13 எழுந்திரு, நீ ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: நாளையதினத்துக்கு உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேலரே, சாபத்தீடானது உங்கள் நடுவே இருக்கிறது; நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாது என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். 14 காலையிலே நீங்கள் கோத்திரம் கோத்திரமாக வரவேண்டும்; அப்பொழுது கர்த்தர் குறிக்கிற கோத்திரம் வம்சம் வம்சமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற வம்சம் குடும்பம் குடும்பமாக வரவேண்டும்; கர்த்தர் குறிக்கிற குடும்பம் பேர்பேராக வரவேண்டும் என்று சொல். 15 அப்பொழுது சாபத்தீடானதை எடுத்தவனாய்க் கண்டுபிடிக்கப்படுகிறவன், கர்த்தரின் உடன்படிக்கையை மீறி, இஸ்ரவேலிலே மதிகேடான காரியத்தைச் செய்தபடியினால், அவனும் அவனுக்குள்ள யாவும் அக்கினியில் சுட்டெரிக்கப்படக்கடவது என்றார். 16 யோசுவா அதிகாலமே எழுந்திருந்து, இஸ்ரவேலரைக் கோத்திரம் கோத்திரமாக வரப்பண்ணினான்; அப்பொழுது, யூதாவின் கோத்திரம் குறிக்கப்பட்டது. 17 அவன் யூதாவின் வம்சங்களை வரப்பண்ணினபோது, சேராகியரின் வம்சம் குறிக்கப்பட்டது; அவன் சேராகியரின் வம்சத்தைப் பேர்பேராக வரப்பண்ணினபோது, சப்தி குறிக்கப்பட்டான். 18 அவன் வீட்டாரை அவன் பேர்பேராக வரப்பண்ணினபோது, யூதா கோத்திரத்துச் சேராகின் குமாரனாகிய சப்திக்குப் பிறந்த கர்மீயின் மகன் ஆகான் குறிக்கப்பட்டான். 19 அப்பொழுது யோசுவா ஆகானை நோக்கி: மகனே, நீ இப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்து, அவருக்கு முன்பாக அறிக்கைபண்ணி, நீ செய்ததை எனக்குச் சொல்லு; அதை எனக்கு ஒளிக்காதே என்றான். 20 அப்பொழுது ஆகான் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: மெய்யாகவே நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; இன்னின்ன பிரகாரமாகச் செய்தேன். 21 கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச் சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது, வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான். 22 உடனே யோசுவா ஆட்களை அனுப்பினான்; அவர்கள் கூடாரத்துக்கு ஓடினார்கள்; அவனுடைய கூடாரத்தில் அது புதைத்திருந்தது, வெள்ளியும் அதின்கீழ் இருந்தது. 23 அவைகளைக் கூடாரத்தின் மத்தியிலிருந்து எடுத்து, யோசுவாவினிடத்திலும் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் கொண்டுவந்து, கர்த்தருடைய சமுகத்தில் வைத்தார்கள். 24 அப்பொழுது யோசுவாவும் இஸ்ரவேலரெல்லாருங்கூடச் சேராகின் புத்திரனாகிய ஆகானையும், அந்த வெள்ளியையும் சால்வையையும் பொன்பாளத்தையும், அவன் குமாரரையும் குமாரத்திகளையும், அவன் மாடுகளையும் கழுதைகளையும் ஆடுகளையும், அவன் கூடாரத்தையும், அவனுக்குள்ள யாவையும் எடுத்து, ஆகோர் பள்ளத்தாக்குக்குக் கொண்டுபோனார்கள். 25 அங்கே யோசுவா: நீ எங்களைக் கலங்கப்பண்ணினதென்ன? இன்று கர்த்தர் உன்னைக் கலங்கப்பண்ணுவார் என்றான்; அப்பொழுது இஸ்ரவேலரெல்லாரும் அவன்மேல் கல்லெறிந்து, அவைகளை அக்கினியில் சுட்டெரித்து, கற்களினால் மூடி; 26 அவன்மேல் இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இப்படியே கர்த்தர் தமது கோபத்தின் உக்கிரத்தை விட்டு மாறினார்; ஆகையால் அவ்விடம் இந்நாள்வரைக்கும் ஆகோர் பள்ளத்தாக்கு என்னப்படும்.

யோசுவா 8

1 அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ, ஆயியின் ராஜாவையும் அவன் ஜனத்தையும் அவன் பட்டணத்தையும் அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன். 2 நீ எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததுபோல, ஆயிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்யக்கடவாய்; அதில் கொள்ளையிட்ட பொருள்களையும் மிருகஜீவன்களையும் உங்களுக்குக் கொள்ளையாக எடுத்துக்கொள்ளலாம், பட்டணத்துக்குப் பின்னாலே பதிவிடையை வை என்றார். 3 அப்பொழுது ஆயியின்மேல் போக, யோசுவாவும் சகல யுத்தஜனங்களும் எழுந்து புறப்பட்டார்கள்; யோசுவா யுத்தவீரரான முப்பதினாயிரம் பேரைத் தெரிந்தெடுத்து, இராத்திரியிலே அவர்களை அனுப்பி, 4 அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் பட்டணத்தின் பின்னாலே பதிவிருக்கவேண்டும்; பட்டணத்துக்கு வெகுதூரமாய்ப் போகாமல், எல்லாரும் ஆயத்தமாயிருங்கள். 5 நானும் என்னோடிருக்கிற சகல ஜனங்களும் பட்டணத்தண்டையில் கிட்டிச் சேருவோம்; அவர்கள் முன்போல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம். 6 அப்பொழுது அவர்கள்: முன்போல நமக்கு முன்னாக முறிந்து ஓடிப்போகிறார்கள் என்று சொல்லி, எங்களைத் துரத்தப் புறப்படுவார்கள்; நாங்களோ அவர்களைப் பட்டணத்தைவிட்டு இப்பாலே வரப்பண்ணுமட்டும், அவர்களுக்கு முன்னாக ஓடுவோம். 7 அப்பொழுது நீங்கள் பதிவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அதை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுப்பார். 8 நீங்கள் பட்டணத்தைப் பிடிக்கும்போது, அதைத் தீக்கொளுத்திப்போடுங்கள்; கர்த்தருடைய சொற்படி செய்யுங்கள்; இதோ, நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன் என்று சொல்லி, 9 அவர்களை அனுப்பினான்; அவர்கள் போய், பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே, ஆயிக்கு மேற்காகப் பதிவிருந்தார்கள்; யோசுவா அன்றுராத்திரி ஜனங்களுக்குள் தங்கினான். 10 அதிகாலமே யோசுவா எழுந்திருந்து, ஜனங்களை இலக்கம்பார்த்து, இஸ்ரவேலின் மூப்பரோடுங்கூட ஜனங்களுக்கு முன்னாலே நடந்து, ஆயியின்மேல் போனான். 11 அவனோடிருந்த யுத்தஜனங்கள் எல்லாரும் நடந்து, பட்டணத்துக்கு எதிரே வந்துசேர்ந்து, ஆயிக்கு வடக்கே பாளயமிறங்கினார்கள்; அவர்களுக்கும் ஆயிக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. 12 அவன் ஏறக்குறைய ஐயாயிரம் பேரைப் பிரித்தெடுத்து, அவர்களைப் பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே பட்டணத்திற்கு மேலண்டையில் பதிவிடையாக வைத்தான். 13 பட்டணத்திற்கு வடக்கே இருந்த சகல சேனையையும் பட்டணத்திற்கு மேற்கே பதிவிருக்கிறவர்களையும் திட்டம்பண்ணினபின்பு, யோசுவா அன்று ராத்திரி பள்ளத்தாக்கிலே போயிருந்தான். 14 ஆயியின் ராஜா அதைக் கண்டபோது, அவனும் பட்டணத்தின் மனுஷராகிய அவனுடைய சகல ஜனங்களும் தீவிரித்து, அதிகாலமே குறித்த வேளையில் இஸ்ரவேலருக்கு எதிரே யுத்தம்பண்ணச் சமனான வெளிக்கு நேராகப் புறப்பட்டார்கள்; பட்டணத்துக்குப் பின்னாலே தனக்குப் பதிவிடை வைத்திருக்கிறதை அவன் அறியாதிருந்தான். 15 யோசுவாவும் இஸ்ரவேலர் எல்லாரும் அவர்களுக்கு முன்னாக முறிந்து, வனாந்தரத்துக்குப் போகிற வழியே ஓடிப்போனார்கள். 16 அப்பொழுது பட்டணத்துக்குள் இருந்த ஜனங்கள் எல்லாரும் அவர்களைத் துரத்தும்படி கூப்பிட்டுக்கொண்டு யோசுவாவைப் பின்தொடர்ந்து பட்டணத்தைவிட்டு அப்புறப்பட்டார்கள். 17 ஆயியிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலரைப் பின்தொடராத மனுஷன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலரைத் துரத்திக்கொண்டு போனார்கள். 18 அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: உன் கையில் இருக்கிற ஈட்டியை ஆயிக்கு நேராக நீட்டு; அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்; அப்படியே யோசுவா தன் கையில் இருந்த ஈட்டியைப் பட்டணத்துக்கு நேராக நீட்டினான். 19 அவன் தன் கையை நீட்டினவுடனே, பதிவிருந்தவர்கள் தீவிரமாய்த் தாங்கள் இருந்த இடத்திலிருந்து எழும்பி ஓடி, பட்டணத்துக்கு வந்து, அதைப் பிடித்து, தீவிரத்தோடே பட்டணத்தைத் தீக்கொளுத்தினார்கள். 20 ஆயியின் மனுஷர் பின்னிட்டுப் பார்த்தபோது, இதோ, பட்டணத்தின் புகை ஆகாசத்தில் எழும்புகிறதைக் கண்டார்கள்; அப்பொழுது அங்கும் இங்கும் ஓடிப்போகிறதற்கு அவர்களுக்கு இடம் இல்லாமற்போயிற்று; வனாந்தரத்துக்கு ஓடின ஜனங்கள் தங்களைத் தொடர்ந்தவர்கள் முகமாய்த் திரும்பினார்கள். 21 பதிவிருந்தவர்கள் பட்டணத்தைப் பிடித்ததையும், பட்டணத்தின் புகை எழும்புகிறதையும், யோசுவாவும் இஸ்ரவேலரும் பார்த்தபோது, திரும்பிக்கொண்டு, ஆயியின் மனுஷரை முறிய அடித்தார்கள். 22 பட்டணத்திலிருந்தவர்களும் அவர்களுக்கு எதிர்ப்பட்டதினால், சிலர் இப்புறத்திலும் சிலர் அப்புறத்திலும் இருந்த இஸ்ரவேலின் நடுவே அகப்பட்டுக்கொண்டார்கள்; ஆகையால் அவர்களில் ஒருவரும் தப்பி மீந்திராதபடிக்கு அவர்களை வெட்டிப்போட்டு, 23 ஆயியின் ராஜாவை உயிரோடே பிடித்து, யோசுவாவினிடத்தில் கொண்டுவந்தார்கள். 24 இஸ்ரவேலர் வனாந்தரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயியின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும், அவர்கள் அனைவரும் நாசமாகுமட்டும் பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும், இஸ்ரவேலர் எல்லாரும் ஆயிக்குத் திரும்பி, அதைப் பட்டயக்கருக்கினால் சங்கரித்தார்கள். 25 அந்நாளிலே ஆணும் பெண்ணுமாக ஆயியின் மனுஷர் எல்லாரும் பன்னீராயிரம்பேர் விழுந்தார்கள். 26 ஆயியின் குடிகளையெல்லாம் சங்கரித்துத் தீருமட்டும், யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை. 27 கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்ட வார்த்தையின்படி, மிருகஜீவனையும் அந்தப் பட்டணத்தின் கொள்ளையையும்மாத்திரம் இஸ்ரவேலர் எடுத்துக்கொண்டார்கள். 28 யோசுவா ஆயியைச் சுட்டெரித்து, அதை இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி என்றைக்கும் பாழாய்க்கிடக்கும் மண்மேடாக்கி, 29 ஆயியின் ராஜாவை ஒரு மரத்திலே தூக்கிப்போடுவித்து, சாயங்காலமட்டும் அதிலே தொங்கவிட்டான்; சூரியன் அஸ்தமித்தபின்பு யோசுவா அவன் உடலை மரத்தைவிட்டு இறக்கச் சொன்னான்; அதைப் பட்டணவாசலில் போட்டு, இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை அதின்மேல் குவித்தார்கள். 30 அப்பொழுது யோசுவா: கர்த்தரின் தாசனாகிய மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டபடியும், மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியும், ஏபால் பர்வதத்தில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு இருப்பாயுதம்படாத முழுக்கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டினான். 31 அதின்மேல் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தி, சமாதானபலிகளையும் இட்டார்கள். 32 இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் பேர்த்தெழுதினான். 33 இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி கர்த்தரின் தாசனாகிய மோசே முதலில் கட்டளையிட்டிருந்தபடியே, இஸ்ரவேலர் எல்லாரும், அவர்களுடைய மூப்பரும், அதிபதிகளும், நியாயாதிபதிகளும், அந்நியர்களும், இஸ்ரவேலில் பிறந்தவர்களும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரான ஆசாரியருக்கு முன்பாக, பெட்டிக்கு இருபுறத்திலும், பாதிபேர் கெரிசீம் மலைக்கு எதிர்புறமாகவும், பாதிபேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாகவும் நின்றார்கள். 34 அதற்குப்பின்பு அவன் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி நியாயப்பிரமாணத்தில் சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் வாசித்தான். 35 மோசே கட்டளையிட்ட எல்லாவற்றிலும் யோசுவா, இஸ்ரவேலின் முழுச்சபைக்கும், ஸ்திரீகளுக்கும் பிள்ளைகளுக்கும், அவர்களுக்குள் நடமாடி சஞ்சரித்த அந்நியர்களுக்கும் முன்பாக, ஒரு வார்த்தையையும் விடாமல் வாசித்தான்.

யோசுவா 9

1 யோர்தானுக்கு இப்புறத்திலே மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் லீபனோனுக்கு எதிரான பெரிய சமுத்திரத்தின் கரையோரமெங்குமுள்ள ஏத்தியரும் எமோரியரும் கானானியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியருமானவர்களுடைய சகல ராஜாக்களும் அதைக் கேள்விப்பட்டபோது, 2 அவர்கள் ஒருமனப்பட்டு, யோசுவாவோடும் இஸ்ரவேலரோடும் யுத்தம்பண்ண ஏகமாய்க் கூடினார்கள். 3 எரிகோவுக்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது, 4 ஒரு தந்திரமான யோசனைபண்ணி, தங்களை ஸ்தானாபதிகள்போலக் காண்பித்து, பழைய இரட்டுப் பைகளையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்சரசத் துருத்திகளையும் தங்கள் கழுதைகள்மேல் வைத்து, 5 பழுதுபார்க்கப்பட்ட பழைய பாதரட்சைகளைத் தங்கள் கால்களில் போட்டு, பழைய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டார்கள்; வழிக்கு அவர்கள் கொண்டுபோன அப்பமெல்லாம் உலர்ந்ததும் பூசணம் பூத்ததுமாயிருந்தது. 6 அவர்கள் கில்காலில் இருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் போய், அவனையும் இஸ்ரவேல் மனுஷரையும் நோக்கி: நாங்கள் தூரதேசத்திலிருந்து வந்தவர்கள், எங்களோடே உடன்படிக்கைபண்ணுங்கள் என்றார்கள். 7 அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் அந்த ஏவியரை நோக்கி: நீங்கள் எங்கள் நடுவிலே குடியிருக்கிறவர்களாக்கும்; நாங்கள் எப்படி உங்களோடே உடன்படிக்கைபண்ணலாம் என்றார்கள். 8 அவர்கள் யோசுவாவை நோக்கி: நாங்கள் உமக்கு அடிமைகள் என்றார்கள்; அதற்கு யோசுவா: நீங்கள் யார், எங்கேயிருந்து வந்தீர்கள் என்று கேட்டான். 9 அதற்கு அவர்கள்: உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் பிரஸ்தாபத்தைக் கேட்டு, உமது அடியாராகிய நாங்கள் வெகு தூரதேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய கீர்த்தியையும், அவர் எகிப்திலே செய்த யாவையும், 10 அவர் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும் அஸ்தரோத்திலிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகும் என்கிற யோர்தானுக்கு அப்புறத்திலிருந்த எமோரியரின் இரண்டு ராஜாக்களுக்கும் செய்த யாவையும் கேள்விப்பட்டோம். 11 ஆகையால், எங்கள் மூப்பரும் எங்கள் தேசத்துக் குடிகளெல்லாரும் எங்களை நோக்கி: உங்கள் கைகளில் வழிக்கு ஆகாரம் எடுத்துக்கொண்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களிடத்தில்: நாங்கள் உங்கள் அடியார், எங்களோடே உடன்படிக்கை பண்ணவேண்டும் என்று சொல்லச்சொன்னார்கள். 12 உங்களிடத்தில் வர நாங்கள் புறப்படுகிற அன்றே, எங்கள் வழிப்பிரயாணத்துக்கு இந்த அப்பத்தைச் சுடச்சுட எங்கள் வீட்டிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தோம்; இப்பொழுது, இதோ, உலர்ந்து பூசணம் பூத்திருக்கிறது. 13 நாங்கள் இந்தத் திராட்சரசத் துருத்திகளை நிரப்புகையில் புதிதாயிருந்தது; ஆனாலும், இதோ, கிழிந்துபோயிற்று; எங்கள் வஸ்திரங்களும் பாதரட்சைகளும் நெடுந்தூரமான பிரயாணத்தினாலே பழசாய்ப்போயிற்று என்றார்கள். 14 அப்பொழுது இஸ்ரவேலர்: கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் அவர்களுடைய போஜனபதார்த்தத்தில் சிறிது வாங்கிக்கொண்டார்கள். 15 யோசுவா அவர்களோடே சமாதானம்பண்ணி, அவர்களை உயிரோடே காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடே பண்ணினான்; அதற்காகச் சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தார்கள். 16 அவர்களோடே உடன்படிக்கைபண்ணி, மூன்றுநாள் சென்றபின்பு, அவர்கள் தங்கள் அயலார் என்றும் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள். 17 இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுகையில், மூன்றாம் நாளில் அவர்கள் பட்டணங்களுக்கு வந்தார்கள்; அந்தப் பட்டணங்கள் கிபியோன், கெபிரா, பெயெரோத், கீரியாத்யெயாரீம் என்பவைகள். 18 சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் ஆணையிட்டிருந்தபடியினால், இஸ்ரவேல் புத்திரர் அவர்களைச் சங்காரம்பண்ணவில்லை; ஆனாலும் சபையார் எல்லாரும் பிரபுக்கள்மேல் முறுமுறுத்தார்கள். 19 அப்பொழுது சகல பிரபுக்களும், சபையார் யாவரையும் நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தோம்; ஆதலால் அவர்களை நாம் தொடக்கூடாது. 20 கடுங்கோபம் நம்மேல் வராதபடிக்கு, நாம் அவர்களுக்கு இட்ட ஆணையினிமித்தம் நாம் அவர்களை உயிரோடே வைத்து, அவர்களுக்கு ஒன்று செய்வோம். 21 பிரபுக்களாகிய நாங்கள் அவர்களுக்குச் சொன்னபடி அவர்கள் உயிரோடிருந்து, சபையார் எல்லாருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும், தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருக்கக்கடவர்கள் என்று பிரபுக்கள் அவர்களோடே சொன்னார்கள். 22 பின்பு யோசுவா அவர்களை அழைப்பித்து: நீங்கள் எங்கள் நடுவே குடியிருக்கும்போது: நாங்கள் உங்களுக்கு வெகுதூரமாயிருக்கிறவர்கள் என்று சொல்லி, எங்களை வஞ்சித்தது என்ன? 23 இப்போதும் நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; என் தேவனுடைய ஆலயத்துக்கு விறகுவெட்டுகிறவர்களும், தண்ணீர் எடுக்கிறவர்களுமான பணிவிடைக்காரராயிருப்பீர்கள்; இந்த ஊழியம் உங்களைவிட்டு நீங்கமாட்டாது என்றான். 24 அவர்கள் யோசுவாவுக்குப் பிரதியுத்தரமாக: தேசத்தையெல்லாம் உங்களுக்கு ஒப்புக்கொடுக்கவும், தேசத்தின் குடிகளையெல்லாம் உங்களுக்கு முன்பாக அழிக்கவும் உம்முடைய தேவனாகிய கர்த்தர் தமது தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்டது உமது அடியாருக்கு நிச்சயமாகவே அறிவிக்கப்பட்டதினால், நாங்கள் எங்கள் ஜீவன்நிமித்தம் உங்களுக்கு மிகவும் பயந்து, இந்தக் காரியத்தைச் செய்தோம். 25 இப்போதும், இதோ, உமது கையிலிருக்கிறோம், உம்முடைய பார்வைக்கு நன்மையும் நியாயமுமாய்த் தோன்றுகிறபடி எங்களுக்குச் செய்யும் என்றார்கள். 26 அப்படியே யோசுவா அவர்களுக்குச் செய்து, இஸ்ரவேல் புத்திரர் அவர்களைக் கொன்றுபோடாதபடிக்கு, அவர்களை இவர்கள் கைக்குத் தப்புவித்தான். 27 இந்நாள்மட்டும் இருக்கிறபடியே, அந்நாளில் அவர்களைச் சபைக்கும், கர்த்தர் தெரிந்துகொள்ளும் இடத்திலிருக்கும் அவருடைய பலிபீடத்துக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவுமாக்கினான்.

யோசுவா 10

1 யோசுவா ஆயியைப் பிடித்து, சங்காரம்பண்ணி, எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தபடி, ஆயிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலோடே சமாதானம்பண்ணி அவர்களுக்குள் வாசமாயிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது, 2 கிபியோன் ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல் பெரிய பட்டணமும், ஆயியைப்பார்க்கிலும் பெரிதுமாயிருந்தபடியினாலும், அதின் மனுஷரெல்லாரும் பலசாலிகளாயிருந்தபடியினாலும், மிகவும் பயந்தார்கள். 3 ஆகையால், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் எபிரோனின் ராஜாவாகிய ஓகாமுக்கும், யர்மூத்தின் ராஜாவாகிய பீராமுக்கும், லாகீசின் ராஜாவாகிய யப்பியாவுக்கும், எக்லோனின் ராஜாவாகிய தெபீருக்கும் ஆள் அனுப்பி: 4 நாங்கள் கிபியோனைச் சங்கரிக்கும்படி, நீங்கள் என்னிடத்தில் வந்து, எனக்குத் துணைசெய்யுங்கள்; அவர்கள் யோசுவாவோடும் இஸ்ரவேல் புத்திரரோடும் சமாதானம்பண்ணினார்கள் என்று சொல்லி அனுப்பினான். 5 அப்படியே எருசலேமின் ராஜா, எபிரோனின் ராஜா, யர்மூத்தின் ராஜா, லாகீசின் ராஜா, எக்லோனின் ராஜா என்கிற எமோரியரின் ஐந்து ராஜாக்களும் கூடிக்கொண்டு, அவர்களும் அவர்களுடைய எல்லாச் சேனைகளும் போய், கிபியோனுக்கு முன்பாகப் பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினார்கள். 6 அப்பொழுது கிபியோனின் மனுஷர் கில்காலிலிருக்கிற பாளயத்துக்கு யோசுவாவினிடத்தில் ஆளனுப்பி: உமது அடியாரைக் கைவிடாமல், சீக்கிரமாய் எங்களிடத்தில் வந்து, எங்களை ரட்சித்து, எங்களுக்குத் துணைசெய்யும்; பர்வதங்களிலே குடியிருக்கிற எமோரியரின் ராஜாக்களெல்லாரும் எங்களுக்கு விரோதமாய்க் கூடினார்கள் என்று சொல்லச்சொன்னார்கள். 7 உடனே யோசுவாவும் அவனோடேகூடச் சகல யுத்தமனுஷரும் சகல பராக்கிரமசாலிகளும் கில்காலிலிருந்து போனார்கள். 8 கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை என்றார். 9 யோசுவா கில்காலிலிருந்து இராமுழுதும் நடந்து, திடீரென்று அவர்கள்மேல் வந்துவிட்டான். 10 கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக் கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள். 11 அவர்கள் பெத்தொரோனிலிருந்து இறங்குகிற வழியிலே இஸ்ரவேலுக்கு முன்பாக ஓடிப்போகையில், அசெக்காமட்டும் ஓடுகிற அவர்கள்மேல் கர்த்தர் வானத்திலிருந்து பெரிய கற்களை விழப்பண்ணினார், அவர்கள் செத்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப்பார்க்கிலும் கல்மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள். 12 கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்துநில்லுங்கள் என்றான். 13 அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒரு பகல்முழுதும் நடுவானத்தில் நின்றது. 14 இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்தநாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார். 15 பின்பு யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடும்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான். 16 அந்த ஐந்து ராஜாக்களும் ஓடிப்போய், மக்கெதாவிலிருக்கிற ஒரு கெபியில் ஒளித்துக்கொண்டார்கள். 17 ஐந்து ராஜாக்களும் மக்கெதாவிலிருக்கிற ஒரு கெபியில் ஒளித்திருந்து அகப்பட்டார்கள் என்று யோசுவாவுக்கு அறிவிக்கப்பட்டது. 18 அப்பொழுது யோசுவா: பெரிய கற்களைக் கெபியின் வாயிலே புரட்டி, அவ்விடத்தில் அவர்களைக் காவல்காக்க மனுஷரை வையுங்கள். 19 நீங்களோ நில்லாமல், உங்கள் சத்துருக்களைத் துரத்தி, அவர்களுடைய பின்படைகளை வெட்டிப்போடுங்கள்; அவர்களைத் தங்கள் பட்டணங்களிலே பிரவேசிக்கவொட்டாதிருங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார் என்றான். 20 யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் அவர்களை மகா பெரிய சங்காரமாய் அவர்கள் அழியுமளவும் சங்கரித்தார்கள்; அவர்களில் மீதியானவர்கள் அரணான பட்டணங்களுக்குள் புகுந்தார்கள். 21 ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளயத்திலே, யோசுவாவினிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை. 22 அப்பொழுது யோசுவா: கெபியின் வாயைத் திறந்து, அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து என்னிடத்திற்கு வெளியே கொண்டுவாருங்கள் என்றான். 23 அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவும், எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து அவனிடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்கள். 24 அவர்களை யோசுவாவினிடத்திற்குக் கொண்டுவந்தபோது, யோசுவா இஸ்ரவேல் மனுஷரையெல்லாம் அழைப்பித்து, தன்னோடேகூட வந்த யுத்தமனுஷரின் அதிபதிகளை நோக்கி: நீங்கள் கிட்டவந்து, உங்கள் கால்களை இந்த ராஜாக்களுடைய கழுத்துகளின்மேல் வையுங்கள் என்றான்; அவர்கள் கிட்டவந்து, தங்கள் கால்களை அவர்கள் கழுத்துகளின்மேல் வைத்தார்கள். 25 அப்பொழுது யோசுவா அவர்களை நோக்கி: நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலத்துத் திடமனதாயிருங்கள்; நீங்கள் யுத்தம்பண்ணும் உங்கள் சத்துருக்களுக்கெல்லாம் கர்த்தர் இப்படியே செய்வார் என்றான். 26 அதற்குப்பின்பு யோசுவா அவர்களை வெட்டிக் கொன்று, ஐந்து மரங்களிலே தூக்கிப்போட்டான்; சாயங்காலமட்டும் மரங்களில் தொங்கினார்கள். 27 சூரியன் அஸ்தமிக்கிற வேளையிலே, யோசுவா அவர்களை மரங்களிலிருந்து இறக்கக் கட்டளையிட்டான். அவர்கள் ஒளித்துக்கொண்டிருந்த கெபியிலே அவர்களைப் போட்டு; இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெரிய கற்களைக் கெபியின் வாயிலே அடைத்தார்கள். 28 அந்நாளிலே யோசுவா மக்கெதாவைப் பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதின் ராஜாவையும் அதிலுள்ள மனுஷராகிய சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணி, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, மக்கெதாவின் ராஜாவுக்கும் செய்தான். 29 மக்கெதாவிலிருந்து யோசுவா இஸ்ரவேலர் அனைவரோடுங்கூட லிப்னாவுக்குப் புறப்பட்டு, லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணினான். 30 கர்த்தர் அதையும் அதின் ராஜாவையும் இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் அதிலே மீதியாக வைக்காமல், பட்டயக்கருக்கினால் அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, அதின் ராஜாவுக்கும் செய்தான். 31 லிப்னாவிலிருந்து யோசுவா இஸ்ரவேல் அனைத்தோடுங்கூட லாகீசுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணினான். 32 கர்த்தர் லாகீசை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதை இரண்டாம் நாளிலே பிடித்து, லிப்னாவுக்குச் செய்ததுபோல, அதையும் அதிலுள்ள எல்லா நரஜீவன்களையும் பட்டயக்கருக்கினால் அழித்தான். 33 அப்பொழுது கேசேரின் ராஜாவாகிய ஓராம் லாகீசுக்குத் துணைசெய்யும்படி வந்தான்; யோசுவா அவனையும் அவன் ஜனத்தையும், ஒருவனும் மீதியாயிராதபடி, வெட்டிப்போட்டான். 34 லாகீசிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவரும் எக்லோனுக்குப் புறப்பட்டு, அதற்கு எதிரே பாளயமிறங்கி, அதின்மேல் யுத்தம்பண்ணி, 35 அதை அந்நாளிலே பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; லாகீசுக்குச் செய்ததுபோல, அதிலுள்ள சகல நரஜீவன்களையும் அந்நாளிலேதானே சங்காரம்பண்ணினான். 36 பின்பு எக்லோனிலிருந்து யோசுவாவும் இஸ்ரவேலர் அனைவருமாய் எபிரோனுக்குப் புறப்பட்டு, அதின்மேல் யுத்தம்பண்ணி, 37 அதைப் பிடித்து, எக்லோனுக்குச் செய்ததுபோல, அதையும் அதின் ராஜாவையும் அதற்கு அடுத்த எல்லாப் பட்டணங்களையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், பட்டயக்கருக்கினால் அழித்தார்கள்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும் சங்காரம்பண்ணினான். 38 பின்பு யோசுவா இஸ்ரவேலர் அனைவரோடுங்கூடத் தெபீருக்குத் திரும்பிப்போய், அதின்மேல் யுத்தம்பண்ணி, 39 அதையும் அதின் ராஜாவையும் அதைச் சேர்ந்த எல்லாப் பட்டணங்களையும் பிடித்தான்; அவைகளைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதிலுள்ள நரஜீவன்களையெல்லாம், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணினார்கள்; எபிரோனுக்கும் லிப்னாவுக்கும் அவைகளின் ராஜாவுக்கும் செய்ததுபோலத் தெபீருக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தான். 40 இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி, 41 காதேஸ்பர்னேயாதுவக்கிக் காத்சாமட்டும் இருக்கிறதையும் கிபியோன்மட்டும் இருக்கிற கோசேன் தேசம் அனைத்தையும் அழித்தான். 42 அந்த ராஜாக்கள் எல்லாரையும் அவர்கள் தேசத்தையும் யோசுவா ஒருமிக்கப் பிடித்தான்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார். 43 பின்பு யோசுவா இஸ்ரவேலனைத்தோடும்கூடக் கில்காலிலிருக்கிற பாளயத்துக்குத் திரும்பினான்.

யோசுவா 11

1 ஆத்சோரின் ராஜாவாகிய யாபீன் அதைக் கேள்விப்பட்டபோது, அவன் மாதோனின் ராஜாவாகிய யோபாபிடத்திற்கும், சிம்ரோனின் ராஜாவிடத்திற்கும், அக்சாபின் ராஜாவிடத்திற்கும், 2 வடக்கேயிருக்கிற மலைகளிலும் கின்னரோத்துக்குத் தெற்கேயிருக்கிற நாட்டுப்புறத்திலும் சமபூமியிலும் மேற்கு எல்லையாகிய தோரிலும் இருக்கிற ராஜாக்களிடத்திற்கும், 3 கிழக்கேயும் மேற்கேயுமிருக்கிற கானானியரிடத்திற்கும், மலைகளிலிருக்கிற எமோரியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியரிடத்திற்கும், எர்மோன் மலையின் அடியிலே மிஸ்பா சீமையிலிருக்கிற ஏவியரிடத்திற்கும் ஆள் அனுப்பினான். 4 அவர்கள் கடற்கரை மணலைப்போல் ஏராளமான திரண்ட ஜனமாகிய தங்களுடைய எல்லாச் சேனைகளோடும், மகா ஏராளமான குதிரைகளோடும் இரதங்களோடுங்கூடப் புறப்பட்டார்கள். 5 இந்த ராஜாக்களெல்லாரும் கூடி, இஸ்ரவேலோடே யுத்தம்பண்ணவந்து, மேரோம் என்கிற ஏரியண்டையிலே ஏகமாய்ப் பாளயமிறங்கினார்கள். 6 அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: அவர்களுக்குப் பயப்படாயாக; நாளை இந்நேரத்திலே நான் அவர்களையெல்லாம் இஸ்ரவேலுக்கு முன்பாக வெட்டுண்டவர்களாக ஒப்புக்கொடுப்பேன்; நீ அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரிக்கக்கடவாய் என்றார். 7 யோசுவாவும், அவனோடேகூட யுத்த ஜனங்கள் அனைவரும், திடீரென்று மேரோம் ஏரியண்டையிலிருக்கிற அவர்களிடத்தில் வந்து, அவர்கள்மேல் விழுந்தார்கள். 8 கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்து, பெரிய சீதோன்மட்டும் மிஸ்ரபோத்மாயீம்மட்டும், கிழக்கேயிருக்கிற மிஸ்பே பள்ளத்தாக்குமட்டும் துரத்தி, அவர்களில் ஒருவரும் மீதியாயிராதபடி, அவர்களை வெட்டிப்போட்டார்கள். 9 யோசுவா கர்த்தர் தனக்குச் சொன்னபடி அவர்களுக்குச் செய்து, அவர்கள் குதிரைகளின் குதிகால் நரம்புகளை அறுத்து, அவர்கள் இரதங்களை அக்கினியால் சுட்டெரித்தான். 10 அக்காலத்திலே யோசுவா திரும்பி, ஆத்சோரைப் பிடித்து, அதின் ராஜாவைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டான்; ஆத்சோர் முன்னே அந்த ராஜ்யங்களுக்கெல்லாம் தலைமையான பட்டணமாயிருந்தது. 11 அதிலிருந்த நரஜீவன்களையெல்லாம் பட்டயக்கருக்கினால் வெட்டி, சங்காரம்பண்ணினார்கள்; சுவாசமுள்ளது ஒன்றும் மீதியானதில்லை; ஆத்சோரையோ அக்கினியால் சுட்டெரித்தான். 12 அந்த ராஜாக்களுடைய எல்லாப் பட்டணங்களையும் அவைகளுடைய எல்லா ராஜாக்களையும் யோசுவா பிடித்து, பட்டயக்கருக்கினால் வெட்டி, கர்த்தருடைய தாசனாகிய மோசே கட்டளையிட்டபடி, அவர்களைச் சங்காரம்பண்ணினான். 13 ஆனாலும் தங்கள் அரணிப்போடே இருந்த பட்டணங்களையெல்லாம் இஸ்ரவேலர் சுட்டெரித்துப்போடாமல் வைத்தார்கள்; ஆத்சோரைமாத்திரம் யோசுவா சுட்டெரித்துப்போட்டான். 14 அந்தப் பட்டணங்களிலுள்ள மிருகஜீவன்களையும் மற்றக் கொள்ளைப்பொருள்களையும் இஸ்ரவேல் புத்திரர் தங்களுக்கென்று எடுத்துக்கொண்டார்கள்; ஆனாலும் எல்லா மனுஷரையும் அழித்துத் தீருமட்டும் அவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; சுவாசமுள்ள ஒன்றையும் அவர்கள் மீதியாக வைக்கவில்லை. 15 கர்த்தர் தமது தாசனாகிய மோசேக்கு எப்படிக் கட்டளையிட்டிருந்தாரோ, அப்படியே மோசே யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தான்; அப்படியே யோசுவா செய்தான்; அவன், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டதில் ஒன்றையும் செய்யாமல் விடவில்லை. 16 இந்தப்பிரகாரமாக யோசுவா சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக் மலைதுவக்கி லீபனோனின் பள்ளத்தாக்கில் எர்மோன் மலையடியில் இருக்கிற பாகால் காத்மட்டுமுள்ள அந்த முழுத்தேசமாகிய மலைகளையும், தென்தேசம் யாவையும், கோசேன் தேசத்தையும், சமனான பூமியையும், நாட்டுப்புறத்தையும், இஸ்ரவேலின் மலைகளையும் அதின் சமபூமியையும் பிடித்துக்கொண்டு, 17 அவைகளின் ராஜாக்களையெல்லாம் பிடித்து, அவர்களை வெட்டிக் கொன்று போட்டான். 18 யோசுவா நெடுநாளாய் அந்த ராஜாக்களெல்லாரோடும் யுத்தம்பண்ணினான். 19 கிபியோனின் குடிகளாகிய ஏவியரைத் தவிர, ஒரு பட்டணமும் இஸ்ரவேல் புத்திரரோடே சமாதானம் பண்ணவில்லை; மற்றெல்லாப் பட்டணங்களையும் யுத்தம்பண்ணிப் பிடித்தார்கள். 20 யுத்தம்பண்ண இஸ்ரவேலுக்கு எதிராக வரும்படிக்கு, அவர்களுடைய இருதயம் கடினமானதும், இப்படியே அவர்கள்பேரில் இரக்கம் உண்டாகாமல், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துச் சங்காரம்பண்ணினதும் கர்த்தரால் வந்த காரியமாயிருந்தது. 21 அக்காலத்திலே யோசுவா போய், மலைத்தேசமாகிய எபிரோனிலும் தெபீரிலும் ஆனாபிலும் யூதாவின் சகல மலைகளிலும் இஸ்ரவேலின் சகல மலைகளிலும் இருந்த ஏனாக்கியரை நிக்கிரகம்பண்ணி, அவர்களை அவர்கள் பட்டணங்களோடும்கூடச் சங்கரித்தான். 22 இஸ்ரவேல் புத்திரரின் தேசத்தில் ஏனாக்கியர் ஒருவரும் மீதியாக வைக்கப்படவில்லை; காசாவிலும் காத்திலும் அஸ்தோத்திலும்மாத்திரம் சிலர் மீதியாயிருந்தார்கள். 23 அப்படியே யோசுவா, கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்னபடியெல்லாம் தேசமனைத்தையும் பிடித்து, அதை இஸ்ரவேலருக்கு, அவர்கள் கோத்திரங்களுடைய பங்குகளின்படியே, சுதந்தரமாகக் கொடுத்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.

யோசுவா 12

1 யோர்தானுக்கு அப்புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவக்கி எர்மோன் மலைமட்டும், கிழக்கே சமபூமி எல்லையிலெல்லாமுள்ள ராஜாக்களை இஸ்ரவேல் புத்திரர் முறிய அடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள். 2 அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியரின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேர் தொடங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத்துமுட்பட அம்மோன் புத்திரரின் எல்லையான யாபோக்கு ஆறுமட்டுமுள்ள தேசத்தையும், 3 சமனான வெளி துவக்கிக் கிழக்கேயிருக்கிற கின்னரோத் கடல்மட்டும் பெத்யெசிமோத் வழியாய்க் கிழக்கேயிருக்கிற சமனான வெளியின் கடலாகிய உப்புக்கடல்மட்டும் இருக்கிற தேசத்தையும் தெற்கே அஸ்தோத்பிஸ்காவுக்குத் தாழ்வாயிருக்கிற தேசத்தையும் ஆண்டான். 4 இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாசம்பண்ணி, 5 எர்மோன் மலையையும் சல்காவையும், கெசூரியர், மாகாத்தியர் எல்லைமட்டும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாயிருந்த பாதிக் கீலேயாத்மட்டும் இருக்கும் பாசான் அனைத்தையும் ஆண்டான். 6 அவர்களைக் கர்த்தரின் தாசனாகிய மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தார்கள்; அத்தேசத்தைக் கர்த்தரின் தாசனாகிய மோசே ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகக் கொடுத்தான். 7 யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத்முதற்கொண்டு சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைமட்டும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த புறங்களிலும் வனாந்தரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும், 8 யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரரும் முறிய அடித்தவர்களுமான ராஜாக்கள் யாரெனில்: 9 எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயியின் ராஜா ஒன்று, 10 எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று, 11 யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று, 12 எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று, 13 தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று, 14 ஒர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று, 15 லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று, 16 மக்கேதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று, 17 தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று, 18 ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று, 19 மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று, 20 சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று, 21 தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று, 22 கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று, 23 தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலுக்கடுத்த ஜாதிகளின் ராஜா ஒன்று, 24 திர்சாவின் ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லாரும் முப்பத்தொரு ராஜாக்கள்.

யோசுவா 13

1 யோசுவா வயதுசென்று முதிர்ந்தவனானபோது, கர்த்தர் அவனை நோக்கி: நீ வயதுசென்றவனும் முதிர்ந்தவனுமானாய்; சுதந்தரித்துக்கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விஸ்தாரமாயிருக்கிறது. 2 மீதியாயிருக்கிற தேசம் எவையெனில், எகிப்துக்கு எதிரான சீகோர் ஆறுதுவக்கிக் கானானியரைச் சேர்ந்ததாக எண்ணப்படும் வடக்கேயிருக்கிற எக்ரோனின் எல்லைமட்டுமுள்ள பெலிஸ்தரின் எல்லா எல்லைகளும், கெசூரிம் முழுவதும், 3 காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் என்கிற பட்டணங்களிலிருக்கிற பெலிஸ்தருடைய ஐந்து அதிபதிகளின் நாடும், ஆவியரின் நாடும், 4 தெற்கே துவக்கி ஆப்பெக்மட்டும் எமோரியர் எல்லைவரைக்கும் இருக்கிற கானானியரின் சகல தேசமும், சீதோனியருக்கடுத்த மெயாரா நாடும், 5 கிப்லியரின் நாடும், சூரியோதயப் புறத்தில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத் முதற்கொண்டு ஆமாத்துக்குள் பிரவேசிக்குமட்டுமுள்ள லீபனோன் முழுவதும், 6 லீபனோன் துவக்கி மிஸ்ரபோத்மாயீம்மட்டும் மலைகளில் குடியிருக்கிற யாவருடைய நாடும், சீதோனியருடைய எல்லா நாடும்தானே. நான் அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்துவேன்; நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, நீ இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகச் சீட்டுகளைமாத்திரம் போட்டுத் தேசத்தைப் பங்கிடவேண்டும். 7 ஆதலால் இந்தத் தேசத்தை ஒன்பது கோத்திரங்களுக்கும், மனாசேயின் பாதிக்கோத்திரத்துக்கும் சுதந்தரமாகப் பங்கிடு என்றார். 8 மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரும் ரூபனியரும் காத்தியரும் தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது; அதைக் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான். 9 அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், நதியின் மத்தியிலிருக்கிற பட்டணமும் துவக்கித் தீபோன்மட்டுமிருக்கிற மெதெபாவின் சமனான பூமி யாவையும், 10 எஸ்போனிலிருந்து அம்மோன் புத்திரரின் எல்லைமட்டும் ஆண்ட எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்குரிய சகல பட்டணங்களையும், 11 கீலேயாத்தையும், கெசூரியர் மாகாத்தியருடைய எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன் மலை முழுவதையும், 12 அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆண்டு, மோசே முறிய அடித்துத் துரத்தின இராட்சதரில் மீதியாயிருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காமட்டுமிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான். 13 இஸ்ரவேல் புத்திரரோ கெசூரியரையும் மாகாத்தியரையும் துரத்திவிடவில்லை, கெசூரியரும் மாகாத்தியரும் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலின் நடுவே குடியிருக்கிறார்கள். 14 லேவியரின் கோத்திரத்துக்குமாத்திரம் அவன் சுதந்தரம் கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய சுதந்தரம். 15 மோசே ரூபன் புத்திரரின் கோத்திரத்துக்கு அவர்களுடைய வம்சங்களுக்குத்தக்கதாகச் சுதந்தரம் கொடுத்தான். 16 அர்னோன் ஆற்றங்கரையிலிருக்கிற ஆரோவேரும், ஆற்றின் மத்தியிலிருக்கிற பட்டணம் தொடங்கி மெதெபாவரைக்கும்முள்ள சமபூமி முழுவதும், 17 சமபூமியிலிருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப் பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால்மெயோன், 18 யாகசா, கெதெமோத், மேபாகாத், 19 கீரியாத்தாயீம், சிப்மா, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரேத்சகார், 20 பெத்பேயோர், அஸ்தோத்பிஸ்கா, பெத்யெசிமோத் முதலான 21 சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில் ஆண்டிருந்த சீகோன் என்னும் எமோரியருடைய ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று; அந்தச் சீகோனையும், தேசத்திலே குடியிருந்து சீகோனின் அதிபதியாயிருந்த ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின் பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான். 22 இஸ்ரவேல் புத்திரர் வெட்டின மற்றவர்களோடுங்கூட, பேயோரின் குமாரனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள். 23 அப்படியே யோர்தானும் அதற்கடுத்ததும் ரூபன் புத்திரரின் எல்லையாயிற்று; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ரூபன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி வந்த சுதந்தரம். 24 காத் புத்திரரின் கோத்திரத்துக்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத்தக்கதாகக் கொடுத்தது என்னவெனில்: 25 யாசேரும், கீலேயாத்தின் சகல பட்டணங்களும், ரபாவுக்கு எதிரே இருக்கிற ஆரோவேர்மட்டுமுள்ள அம்மோன் புத்திரரின் பாதித் தேசமும், 26 எஸ்போன் துவக்கி ராமாத் மிஸ்பேமட்டும் பெத்தொனீம்வரைக்கும் இருக்கிறதும், மகனாயீம் துவக்கித் தெபீரின் எல்லைமட்டும் இருக்கிறதும், 27 எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய ராஜ்யத்தின் மற்றப் பங்காகிய பள்ளத்தாக்கிலிருக்கிற பெத்தாராமும், பெத்நிம்ராவும், சுக்கோத்தும், சாப்போனும், யோர்தான்மட்டும் இருக்கிறதும், கிழக்கே யோர்தானின் கரையோரமாய்க் கின்னரேத் கடலின் கடையாந்தரமட்டும் இருக்கிறதும், அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று. 28 இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் காத் புத்திரருக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி வந்த சுதந்தரம். 29 மனாசே புத்திரரின் பாதிக் கோத்திரத்துக்கும் மோசே அவர்கள் வம்சத்துக்குத்தக்கதாகக் கொடுத்தான். 30 மகனாயீம் துவக்கி, பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாயிருக்கிற பாசான் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின் சகல ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று. 31 பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே அஸ்தரோத், எத்ரேயி என்னும் ஓகு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் பாதிபேருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே கொடுத்தான். 32 மோசே கிழக்கே எரிகோவின் அருகே யோர்தானுக்கு அக்கரையிலிருக்கிற மோவாபின் சமனான வெளிகளில் சுதந்தரமாகக் கொடுத்தவைகள் இவைகளே. 33 லேவி கோத்திரத்திற்கு மோசே சுதந்தரம் கொடுக்கவில்லை, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியிருக்கிறபடி, அவரே அவர்களுடைய சுதந்தரம்.

யோசுவா 14

1 கானான் தேசத்திலே இஸ்ரவேல் புத்திரர் சுதந்தரித்துக்கொண்ட தேசங்களை ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களின் தலைவரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி சீட்டுப்போட்டு, 2 ஒன்பதரைக் கோத்திரங்களுக்கும் சுதந்தரமாகப் பங்கிட்டார்கள். 3 மற்ற இரண்டரைக் கோத்திரங்களுக்கும் மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே சுதந்தரம் கொடுத்திருந்தான்; லேவியருக்குமாத்திரம் அவர்கள் நடுவே சுதந்தரம் கொடுக்கவில்லை. 4 மனாசே எப்பிராயீம் என்னும் யோசேப்பின் புத்திரர் இரண்டு கோத்திரங்களானார்கள்; ஆதலால் அவர்கள் லேவியருக்குத் தேசத்திலே பங்குகொடாமல், குடியிருக்கும்படி பட்டணங்களையும், அவர்களுடைய ஆடுமாடுகள் முதலான சொத்துக்காக வெளிநிலங்களையுமாத்திரம் அவர்களுக்குக் கொடுத்தார்கள். 5 கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி இஸ்ரவேல் புத்திரர் செய்து, தேசத்தைப் பங்கிட்டார்கள். 6 அப்பொழுது யூதாவின் புத்திரர் கில்காலிலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள்; கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் அவனை நோக்கி: காதேஸ்பர்னெயாவிலே கர்த்தர் என்னைக்குறித்தும் உம்மைக்குறித்தும் தேவனுடைய மனுஷனாகிய மோசேயோடே சொன்ன வார்த்தையை நீர் அறிவீர். 7 தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பர்னெயாவிலிருந்து அனுப்புகிறபோது, எனக்கு நாற்பது வயதாயிருந்தது; என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன். 8 ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன். 9 அந்நாளிலே மோசே: நீ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், உன் கால் மிதித்த தேசம் உனக்கும் உன் பிள்ளைகளுக்கும் என்றைக்கும் சுதந்தரமாயிருக்கக்கடவது என்று சொல்லி ஆணையிட்டார். 10 இப்போதும், இதோ, கர்த்தர் சொன்னபடியே என்னை உயிரோடே காத்தார்; இஸ்ரவேலர் வனாந்தரத்தில் சஞ்சரிக்கையில், கர்த்தர் அந்த வார்த்தையை மோசேயோடே சொல்லி இப்போது நாற்பத்தைந்து வருஷமாயிற்று; இதோ, இன்று நான் எண்பத்தைந்து வயதுள்ளவன். 11 மோசே என்னை அனுப்புகிற நாளில், எனக்கு இருந்த அந்தப் பெலன் இந்நாள்வரைக்கும் எனக்கு இருக்கிறது; யுத்தத்திற்குப் போக்கும் வரத்துமாயிருக்கிறதற்கு அப்போது எனக்கு இருந்த பெலன் இப்போதும் எனக்கு இருக்கிறது. 12 ஆகையால் கர்த்தர் அந்நாளிலே சொன்ன இந்த மலைநாட்டை எனக்குத் தாரும்; அங்கே ஏனாக்கியரும், அரணிப்பான பெரிய பட்டணங்களும் உண்டென்று நீர் அந்நாளிலே கேள்விப்பட்டீரே; கர்த்தர் என்னோடிருப்பாரானால், கர்த்தர் சொன்னபடி, அவர்களைத் துரத்திவிடுவேன் என்றான். 13 அப்பொழுது யோசுவா: எப்புன்னேயின் குமாரனாகிய காலேபை ஆசீர்வதித்து, எபிரோனை அவனுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தான். 14 ஆதலால் கேனாசியனான எப்புன்னேயின் குமாரனாகிய காலேப் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினபடியினால், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எபிரோன் அவனுக்குச் சுதந்தரமாயிற்று. 15 முன்னே எபிரோனுக்குக் கீரியாத்அர்பா என்று பேரிருந்தது; அர்பா என்பவன் ஏனாக்கியருக்குள்ளே பெரிய மனுஷனாயிருந்தான்; யுத்தம் ஓய்ந்ததினால் தேசம் அமைதலாயிருந்தது.

யோசுவா 15

1 யூதா புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குவீதமாவது: ஏதோமின் எல்லைக்கு அருகான சீன்வனாந்தரமே தென்புறத்தின் கடையெல்லை. 2 தென்புறமான அவர்களுடைய எல்லை உப்புக்கடலின் கடைசியில் தெற்கு முகமாயிருக்கிற முனைதுவக்கி, 3 தென்புறத்திலிருக்கிற அக்ராபீமின் மேடுகளுக்கும், அங்கேயிருந்து சீனுக்கும் போய், தெற்கேயிருக்கிற காதேஸ்பர்னெயாவுக்கு ஏறி, எஸ்ரோனைக் கடந்து, ஆதாருக்கு ஏறி, கர்க்காவைச் சுற்றிப்போய், 4 அஸ்மோனுக்கும், அங்கேயிருந்து எகிப்தின் ஆற்றுக்கும் சென்று, கடல்மட்டும் போய் முடியும்; இதுவே உங்களுக்குத் தென்புறமான எல்லையாயிருக்கும் என்றான். 5 கீழ்ப்புறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமட்டும் இருக்கிற உப்புக்கடல். வடபுறமான எல்லை, யோர்தான் முகத்துவாரமிருக்கிற கடலின் முனை துவக்கி, 6 பெத்எக்லாவுக்கு ஏறி, வடக்கேயிருக்கிற பெத்அரபாவைக் கடந்து, ரூபனின் குமாரனாகிய போகனின் கல்லுக்கு ஏறிப்போய், 7 அப்புறம் ஆகோர் பள்ளத்தாக்கை விட்டுத் தெபீருக்கு ஏறி, வடக்கே ஆற்றின் தென்புறமான அதும்மீமின் மேட்டுக்கு முன்பாக இருக்கிற கில்காலுக்கு நேராகவும், அங்கேயிருந்து என்சேமேசின் தண்ணீரிடத்துக்கும் போய், என்ரோகேல் என்னும் கிணற்றுக்குச் சென்று, 8 அப்புறம் எபூசியர் குடியிருக்கிற எருசலேமுக்குத் தென்புறமாய் இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கைக் கடந்து, வடக்கேயிருக்கிற இராட்சதருடைய பள்ளத்தாக்கின் கடைசியில் மேற்காக இன்னோம் பள்ளத்தாக்கின் முன்னிருக்கிற மலையின் சிகரமட்டும் ஏறிப்போய், 9 அந்த மலையின் சிகரத்திலிருந்து நெப்தோவாவின் நீரூற்றுக்குப் போய், எப்பெரோன் மலையின் பட்டணங்களுக்குச் சென்று, கீரியாத்யெயாரீமாகிய பாலாவுக்குப் போய், 10 பாலாவிலிருந்து மேற்கே சேயீர் மலைக்குத் திரும்பி, வடக்கே இருக்கிற கெசலோனாகிய யெயாரீம் மலைக்குப் பக்கமாகப் போய், பெத்ஷிமேசுக்கு இறங்கி, திம்னாவுக்குப் போய், 11 அப்புறம் வடக்கேயிருக்கிற எக்ரோனுக்குப் பக்கமாய்ச் சென்று, சிக்ரோனுக்கு ஓடி, பாலாமலையைக் கடந்து, யாப்னியேலுக்குச் சென்று, கடலிலே முடியும். 12 மேற்புறமான எல்லை, பெரிய சமுத்திரமே; இது யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலுமிருக்கும் எல்லை. 13 எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்கு, யோசுவா, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடி, ஏனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனை, யூதா புத்திரரின் நடுவே, பங்காகக் கொடுத்தான். 14 அங்கேயிருந்த சேசாய், அகீமான், தல்மாய் என்னும் ஏனாக்கின் மூன்று குமாரரையும் காலேப் துரத்திவிட்டு, 15 அங்கேயிருந்து தெபீரின் குடிகளிடத்திற்குப் போனான்; முற்காலத்திலே தெபீரின் பேர் கீரியாத்செப்பேர். 16 கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு, என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்று காலேப் சொன்னான். 17 அப்பொழுது காலேபின் சகோதரனாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தி அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக் கொடுத்தான். 18 அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான். 19 அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான். 20 யூதா புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரம் என்னவென்றால்: 21 கடையாந்தரத் தென்புறமான ஏதோமின் எல்லைக்கு நேராய், யூதா புத்திரரின் கோத்திரத்திற்குக் கிடைத்த பட்டணங்களாவன: கப்செயேல், எதேர், யாகூர், 22 கீனா, திமோனா, அதாதா, 23 கேதேஸ், ஆத்சோர், இத்னான், 24 சீப், தேலெம், பெயாலோத், 25 ஆத்சோர், அதாத்தா, கீரியோத், எஸ்ரோன் என்னும் ஆத்சோர், 26 ஆமாம், சேமா, மொலாதா, 27 ஆத்சார்காதா, எஸ்மோன், பெத்பாலேத், 28 ஆத்சார்சூகால், பெயெர்செபா, பிஸ்யோத்யா, 29 பாலா, ஈயிம், ஆத்சேம், 30 எல்தோலாத், கெசீல், ஒர்மா, 31 சிக்லாக், மத்மன்னா, சன்சன்னா, 32 லெபாயோத், சில்லீம், ஆயின், ரிம்மோன் என்பவைகள்; எல்லாப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இருபத்தொன்பது. 33 பள்ளத்தாக்கு நாட்டில் எஸ்தாவோல், சோரியா, அஷ்னா, 34 சனோகா, என்கன்னீம், தப்புவா, ஏனாம், 35 யர்மூத், அதுல்லாம், சோக்கோ, அசேக்கா, 36 சாராயீம், அதித்தாயீம், கெதேரா, கேதெரொத்தாயீம்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினான்கு. 37 சேனான், அதாஷா, மிக்தால்காத், 38 திலியான், மிஸ்பே, யோக்தெயேல், 39 லாகீஸ், போஸ்காத், எக்லோன், 40 காபோன், லகமாம், கித்லீஷ், 41 கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினாறு. 42 லிப்னா, ஏத்தேர், ஆஷான், 43 இப்தா, அஸ்னா, நெத்சீப், 44 கேகிலா, அக்சீப், மரேஷா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது. 45 எக்ரோனும் அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், 46 எக்ரோன் துவக்கிச் சமுத்திரம்மட்டும், அஸ்தோத்தின் புறத்திலிருக்கிற சகல ஊர்களும், அவைகளின் கிராமங்களும், 47 அஸ்தோத்தும், அதின் வெளிநிலங்களும் கிராமங்களும், காசாவும் எகிப்தின் நதிமட்டுமிருக்கிற அதின் வெளிநிலங்களும் கிராமங்களுமே; பெரிய சமுத்திரமே எல்லை. 48 மலைகளில், சாமீர், யாத்தீர், சோக்கோ, 49 தன்னா, தெபீர் என்னப்பட்ட கீரியாத்சன்னா, 50 ஆனாப், எஸ்தெமொ, ஆனீம், 51 கோசேன், ஓலோன், கிலொ; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினொன்று. 52 அராப், தூமா, எஷியான், 53 யானூம், பெத்தப்புவா, ஆப்பெக்கா, 54 உம்தா, எபிரோனாகிய கீரியாத்அர்பா, சீயோர்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஒன்பது. 55 மாகோன், கர்மேல், சீப், யுத்தா, 56 யெஸ்ரயேல், யொக்தெயாம், சனோகா, 57 காயின், கிபியா, திம்னா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பத்து. 58 அல்கூல், பெத்சூர், கெதோர், 59 மகாராத், பெதானோத், எல்தெகோன்; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு. 60 கீரியாத்யெயாரீமாகிய கீரியாத்பாகால், ரபா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட இரண்டு. 61 வனாந்தரத்தில், பெத்அரபா, மித்தீன், செக்காக்கா, 62 நிப்சான், உப்புப்பட்டணம், என்கேதி; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்பட ஆறு. 63 எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக்கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடே எருசலேமிலே குடியிருக்கிறார்கள்.

யோசுவா 16

1 யோசேப்பின் புத்திரருக்கு விழுந்த சீட்டினால் அகப்பட்ட பங்குவீதமாவது: எரிகோவின் அருகே இருக்கிற யோர்தானிலிருந்து, யோர்தானுக்குக் கிழக்கான தண்ணீருக்குப் போய், எரிகோ துவக்கிப் பெத்தேலின் மலைகள் மட்டுமுள்ள வனாந்தரவழியாகவும் சென்று, 2 பெத்தேலிலிருந்து லூசுக்குப் போய், அர்கீயினுடைய எல்லையாகிய அதரோத்தைக் கடந்து, 3 மேற்கே யப்லெத்தியரின் எல்லைக்கும் தாழ்வான பெத்தொரோன் காசேர் என்னும் எல்லைகள்மட்டும் இறங்கி, சமுத்திரம்வரைக்கும் போய் முடியும். 4 இதை யோசேப்பின் புத்திரராகிய மனாசேயும் எப்பிராயீமும் சுதந்தரித்தார்கள். 5 எப்பிராயீம் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான சுதந்தரத்தினுடைய கிழக்கு எல்லை, அதரோத் அதார் துவக்கி, மேலான பெத்தொரோன்மட்டும் போகிறது. 6 மேற்கு எல்லை மிக்மேத்தாத்திற்கு வடக்காகச் சென்று, கிழக்கே தானாத் சீலோவுக்குத் திரும்பி, அதை யநோகாவுக்குக் கிழக்காகக் கடந்து, 7 யநோகாவிலிருந்து அதரோத்திற்கும் நாராத்திற்கும் இறங்கி, எரிகோவின் அருகே வந்து, யோர்தானுக்குச் செல்லும். 8 தப்புவாவிலிருந்து மேற்கு எல்லை, கானாநதிக்குப் போய், சமுத்திரத்திலே முடியும்; இது எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம். 9 பின்னும் எப்பிராயீம் புத்திரருக்குப் பிரத்தியேகமாய்க் கொடுக்கப்பட்ட பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமெல்லாம் மனாசே புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது. 10 அவர்கள் காசேரிலே குடியிருந்த கானானியரைத் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர், இந்நாள்மட்டும் இருக்கிறபடி, எப்பிராயீமருக்குள்ளே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களாய்ச் சேவிக்கிறார்கள்.

யோசுவா 17

1 மனாசே கோத்திரத்திற்கும் பங்கு கிடைத்தது; அவன் யோசேப்புக்கு முதற்பேறானவன்; மனாசேயின் மூத்தகுமாரனும் கிலெயாத்தின் தகப்பனுமான மாகீர் யுத்தமனுஷனானபடியினால், கீலேயாத்தும் பாசானும் அவனுக்குக் கிடைத்தது. 2 அபியேசரின் புத்திரரும், ஏலேக்கின் புத்திரரும், அஸ்ரியேலின் புத்திரரும், செகேமின் புத்திரரும், எப்பேரின் புத்திரரும், செமீதாவின் புத்திரருமான மனாசேயினுடைய மற்றக் குமாரரின் புத்திரராகிய அபியேசரின் வம்சங்களுக்குத்தக்க சுதந்தரம் கொடுக்கப்பட்டது. தங்கள் வம்சங்களுக்குள்ளே அவர்களே யோசேப்புடைய குமாரனாகிய மனாசேயின் ஆண்பிள்ளைகளாயிருந்தார்கள். 3 மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கிலெயாத்தின் குமாரனாகிய எப்பேரின் மகன் செலொப்பியாத்துக்குக் குமாரத்திகள் தவிர குமாரர் இல்லை; அவன் குமாரத்திகளின் நாமங்கள், மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என்பவைகள். 4 அவர்கள் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்பாகச் சேர்ந்துவந்து: எங்கள் சகோதரர் நடுவே எங்களுக்குச் சுதந்தரம் கொடுக்கும்படி கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் என்றார்கள்; ஆகையால் அவர்கள் தகப்பனுடைய சகோதரரின் நடுவே, கர்த்தருடைய வாக்கின்படி, அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான். 5 யோர்தானுக்கு அப்புறத்திலே இருக்கிற கீலேயாத், பாசான் என்னும் தேசங்களையல்லாமல், மனாசேக்குச் சீட்டிலே விழுந்தது பத்துப் பங்குகளாம். 6 மனாசேயின் குமாரத்திகள் அவன் குமாரருக்குள்ளே சுதந்தரம் பெற்றார்கள்; மனாசேயின் மற்றப் புத்திரருக்குக் கீலேயாத் தேசம் கிடைத்தது. 7 மனாசேயின் எல்லை, ஆசேர் தொடங்கிச் சீகேமின் முன்னிருக்கிற மிக்மேத்தாவுக்கும், அங்கேயிருந்து வலதுபுறமாய் என்தப்புவாவின் குடிகளிடத்திற்கும் போகிறது. 8 தப்புவாவின் நிலம் மனாசேக்குக் கிடைத்தது; மனாசேயின் எல்லையோடிருக்கிற தப்புவாவோ, எப்பிராயீம் புத்திரரின் வசமாயிற்று. 9 அப்புறம் அந்த எல்லை கானா என்னும் ஆற்றுக்குப் போய், ஆற்றுக்குத் தெற்காக இறங்குகிறது; மனாசேயினுடைய பட்டணங்களின் நடுவே இருக்கிற அவ்விடத்துப் பட்டணங்கள் எப்பிராயீமுடையவைகள்; மனாசேயின் எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து சமுத்திரத்திற்குப் போய் முடியும். 10 தென்நாடு எப்பிராயீமுடையது; வடநாடு மனாசேயினுடையது; சமுத்திரம் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும், கிழக்கே இசக்காரையும் தொடுகிறது. 11 இசக்காரிலும் ஆசேரிலுமிருக்கிற மூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் ஊர்களும், இப்லெயாமும் அதின் ஊர்களும், தோரின் குடிகளும் அதின் ஊர்களும், எந்தோரின் குடிகளும் அதின் ஊர்களும், தானாகின் குடிகளும் அதின் ஊர்களும், மெகிதோவின் குடிகளும் அதின் ஊர்களும் மனாசேயினுடையவைகள். 12 மனாசேயின் புத்திரர் அந்தப் பட்டணங்களின் குடிகளைத் துரத்திவிடக்கூடாமற்போயிற்று; கானானியர் அந்தச் சீமையிலேதானே குடியிருக்கவேண்டுமென்று இருந்தார்கள். 13 இஸ்ரவேல் புத்திரர் பலத்தபோதும், கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல், அவர்களைப் பகுதிகட்டுகிறவர்களாக்கிக்கொண்டார்கள். 14 யோசேப்பின் புத்திரர் யோசுவாவை நோக்கி: கர்த்தர் எங்களை இதுவரைக்கும் ஆசீர்வதித்துவந்ததினால், நாங்கள் ஜனம்பெருத்தவர்களாயிருக்கிறோம்; நீர் எங்களுக்குச் சுதந்தரமாக ஒரே வீதத்தையும் ஒரே பங்கையும் கொடுத்தது என்ன என்று கேட்டார்கள். 15 அதற்கு யோசுவா: நீங்கள் ஜனம் பெருத்தவர்களாயும், எப்பிராயீம் மலைகள் உங்களுக்கு நெருக்கமாயுமிருந்தால், பெரிசியர் ரெப்பாயீமியர் குடியிருக்கிற காட்டுத் தேசத்துக்குப் போய் உங்களுக்கு இடம் உண்டாக்கிக்கொள்ளுங்கள் என்றான். 16 அதற்கு யோசேப்பின் புத்திரர்: மலைகள் எங்களுக்குப் போதாது; பள்ளத்தாக்கு நாட்டிலிருக்கிற பெத்செயானிலும், அதின் ஊர்களிலும், யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலும் குடியிருக்கிற எல்லாக் கானானியரிடத்திலும் இருப்புரதங்கள் உண்டு என்றார்கள். 17 யோசுவா யோசேப்பு வம்சத்தாராகிய எப்பிராயீமியரையும் மனாசேயரையும் நோக்கி: நீங்கள் ஜனம்பெருத்தவர்கள், உங்களுக்கு மகா பராக்கிரமமும் உண்டு, ஒரு பங்குமாத்திரம் அல்ல, மலைத்தேசமும் உங்களுடையதாகும். 18 அது காடானபடியினாலே, அதை வெட்டித் திருத்துங்கள், அப்பொழுது அதின் கடையாந்தரமட்டும் உங்களுடையதாயிருக்கும்; கானானியருக்கு இருப்புரதங்கள் இருந்தாலும், அவர்கள் பலத்தவர்களாயிருந்தாலும், நீங்கள் அவர்களைத் துரத்திவிடுவீர்கள் என்றான்.

யோசுவா 18

1 இஸ்ரவேல் புத்திரரின் சபையெல்லாம் சீலோவிலே கூடி, அங்கே ஆசரிப்புக் கூடாரத்தை நிறுத்தினார்கள். தேசம் அவர்கள் வசமாயிற்று. 2 இஸ்ரவேல் புத்திரரில் தங்கள் சுதந்தரத்தை இன்னும் பங்கிட்டுக்கொள்ளாத ஏழு கோத்திரங்கள் இருந்தது. 3 ஆகையால் யோசுவா இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப்போகிறதற்கு, நீங்கள் எந்தமட்டும் அசதியாயிருப்பீர்கள். 4 கோத்திரத்திற்கு மும்மூன்று மனுஷரைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்கள் எழுந்து புறப்பட்டு, தேசத்திலே சுற்றித்திரிந்து அதைத் தங்கள் சுதந்தரத்திற்குத்தக்கதாக விவரமாய் எழுதி, என்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களை அனுப்புவேன். 5 அதை ஏழு பங்காகப் பகிரக்கடவர்கள்; யூதா வம்சத்தார் தெற்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும், யோசேப்பு வம்சத்தார் வடக்கேயிருக்கிற தங்கள் எல்லையிலும் நிலைத்திருக்கட்டும். 6 நீங்கள் தேசத்தை ஏழு பங்காக விவரித்து எழுதி, இங்கே என்னிடத்தில் கொண்டுவாருங்கள்; அப்பொழுது இவ்விடத்திலே நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன். 7 லேவியருக்கு உங்கள் நடுவே பங்கில்லை; கர்த்தருடைய ஆசாரியபட்டமே அவர்கள் சுதந்தரம்; காத்தும் ரூபனும் மனாசேயின் பாதிக் கோத்திரமும் யோர்தானுக்கு அப்புறத்திலே கிழக்கே கர்த்தரின் தாசனாகிய மோசே தங்களுக்குக் கொடுத்த தங்கள் சுதந்தரத்தை அடைந்து தீர்ந்தது என்றான். 8 அப்பொழுது அந்த மனுஷர் எழுந்து புறப்பட்டுப்போனார்கள்; தேசத்தைக்குறித்து விவரம் எழுதப்போகிறவர்களை யோசுவா நோக்கி: நீங்கள் போய், தேசத்திலே சுற்றித்திரிந்து, அதின் விவரத்தை எழுதி, என்னிடத்தில் திரும்பிவாருங்கள்; அப்பொழுது இங்கே சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் உங்களுக்காகச் சீட்டுப்போடுவேன் என்று சொன்னான். 9 அந்த மனுஷர் போய், தேசம் எங்கும் அந்தந்தப் பட்டணங்களின்படியே ஏழு பங்காக ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொண்டு, சீலோவில் இருக்கிற பாளயத்திலே யோசுவாவினிடத்தில் வந்தார்கள். 10 அப்பொழுது யோசுவா அவர்களுக்காகச் சீலோவிலே கர்த்தருடைய சந்நிதியில் சீட்டுப்போட்டு, அங்கே இஸ்ரவேல் புத்திரருக்குத் தேசத்தை அவர்கள் பங்குவீதப்படி பங்கிட்டான். 11 பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே அவர்களுடைய கோத்திரத்துக்குச் சீட்டு விழுந்தது; அவர்கள் பங்கு வீதத்தின் எல்லையானது யூதா புத்திரருக்கும் யோசேப்புப் புத்திரருக்கும் நடுவே இருந்தது. 12 அவர்களுடைய வட எல்லை, யோர்தானிலிருந்து வந்து, எரிகோவுக்கு வடபக்கமாய்ச் சென்று, அப்புறம் மேற்கே மலையில் ஏறி, பெத்தாவேன் வனாந்தரத்தில் போய் முடியும். 13 அங்கேயிருந்து அந்த எல்லை, பெத்தேலாகிய லூசுக்கு வந்து, லூசுக்குத் தென்பக்கமாய்ப் போய், அதரோத்அதாருக்குத் தாழ்வான பெத்தொரோனுக்குத் தெற்கேயிருக்கிற மலையருகே இறங்கும். 14 அங்கேயிருந்து எல்லை மேற்கு மூலைக்குப் பெத்தொரோனுக்கு எதிரே தெற்காக இருக்கிற மலைக்குத் தென்புறமாய்ப் போய்த் திரும்பி, கீரியாத்பாகால் என்னப்பட்ட யூதா புத்திரரின் பட்டணமாகிய கீரியாத்யெயாரீம் அருகே போய் முடியும்; இது மேற்கு எல்லை. 15 தென் எல்லை கீரியாத்யெயாரீமின் முடிவிலிருக்கிறது; அங்கேயிருந்து எல்லை மேற்கே போய், நெப்தோவாவின் நீரூற்றிற்குச் சென்று, 16 அங்கேயிருந்து இராட்சதரின் பள்ளத்தாக்கில் வடக்கேயிருக்கிற இன்னோமுடைய குமாரரின் பள்ளத்தாக்குக்கு எதிரான மலையடிவாரத்திற்கு இறங்கி, அப்புறம் தெற்கே எபூசியருக்குப் பக்கமான இன்னோமின் பள்ளத்தாக்குக்கும், அங்கேயிருந்து என்ரோகேலுக்கும் இறங்கிவந்து, 17 வடக்கே போய், என்சேமேசுக்கும், அங்கேயிருந்து அதும்மீம் மேட்டுக்கு எதிரான கெலிலோத்திற்கும், அங்கேயிருந்து ரூபன் குமாரனாகிய போகனின் கல்லினிடத்திற்கும் இறங்கிவந்து, 18 அராபாவுக்கு எதிரான வடபக்கமாய்ப் போய், அராபாவுக்கு இறங்கும். 19 அப்புறம் அந்த எல்லை, பெத்ஓக்லாவுக்கு வடபக்கமாய்ப் போய், யோர்தானின் முகத்துவாரத்திற்குத் தெற்கான உப்புக்கடலின் வடமுனையிலே முடிந்துபோம்; இது தென் எல்லை. 20 கிழக்குப்புறத்தின் எல்லை யோர்தானே; இது பென்யமீன் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி சுற்றிலும் இருக்கிற எல்லைகளுக்குள்ளான சுதந்தரம். 21 பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களின்படி இருக்கிற பட்டணங்களாவன: எரிகோ, பெத்ஓக்லா, கேசீஸ் பள்ளத்தாக்கு, 22 பெத்அரபா, செமராயிம், பெத்தேல், 23 ஆவீம், பாரா, ஓப்ரா, 24 கேப்பார்அமோனாய், ஒப்னி, காபா என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே. 25 கிபியோன், ராமா, பேரோத், 26 மிஸ்பே, கெப்பிரா, மோத்சா, 27 ரெக்கேம், இர்பெயேல், தாராலா, 28 சேலா, ஏலேப், எருசலேமாகிய எபூசி, கீபெயாத், கீரேயாத் என்னும் பதினான்கு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே; பென்யமீன் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி இருக்கிற சுதந்தரம் இதுவே.

யோசுவா 19

1 இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம், யூதா புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது. 2 அவர்களுக்குச் சுதந்தரமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா, சேபா, மொலாதா, 3 ஆத்சார்சூகால், பாலா, ஆத்சேம், 4 எல்தோலாத், பெத்தூல், ஒர்மா, 5 சிக்லாக், பெத்மார்காபோத், ஆத்சார் சூசா, 6 பெத்லெபாவோத், சருகேன் பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும் உட்படப் பதின்மூன்று. 7 மேலும் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் என்னும் நாலு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே. 8 இந்தப் பட்டணங்களைச் சுற்றிலும் பாலாத்பெயேர்மட்டும், தெற்கேயிருக்கிற ராமாத்மட்டும் இருக்கிற எல்லாக் கிராமங்களுமே; இவை சிமியோன் புத்திரருடைய கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம். 9 சிமியோன் புத்திரருடைய சுதந்தரம் யூதா புத்திரரின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிச்சமாயிருந்தபடியால், சிமியோன் புத்திரர் அவர்கள் சுதந்தரத்தின் நடுவிலே சுதந்தரம் பெற்றார்கள். 10 மூன்றாம் சீட்டு செபுலோன் புத்திரருக்கு விழுந்தது; அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரபங்குவீதம் சாரீத்மட்டுமுள்ளது. 11 அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்துக்கு வந்து, யொக்கினேயாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போம். 12 சாரீதிலிருந்து அது கிழக்கே சூரியன் உதிக்கும் முனையாய்க் கிஸ்லோத்தாபோரின் எல்லையினிடத்துக்குத் திரும்பி, தாபராத்துக்குச் சென்று, யப்பியாவுக்கு ஏறி, 13 அங்கேயிருந்து கிழக்குப்புறத்திலே கித்தாஏபேரையும் இத்தாகாத்சீனையும் கடந்து, ரிம்மோன்மெத்தோவாருக்கும் நேயாவுக்கும் போம். 14 அப்புறம் அந்த எல்லை வடக்கே அன்னத்தோனுக்குத் திரும்பி, இப்தாவேலின் பள்ளத்தாக்கிலே முடியும். 15 காத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லெகேம் முதலான பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களும், 16 செபுலோன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம். 17 நாலாம் சீட்டு இசக்காருக்கு விழுந்தது. 18 இசக்கார் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம், 19 அப்பிராயீம், சீகோன், அனாகராத், 20 ராப்பித், கிஷியோன், அபெத்ஸ், 21 ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் இவைகளே. 22 அப்புறம் அந்த எல்லை தாபோருக்கும், சகசீமாவுக்கும், பெத்ஷிமேசுக்கும் வந்து யோர்தானிலே முடியும்; அதற்குள் பதினாறு பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுண்டு. 23 இந்தப் பட்டணங்களும் இவைகளைச்சேர்ந்த கிராமங்களும் இசக்கார் புத்திரரின் கோத்திரத்திற்கு, அவர்களுடைய வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம். 24 ஐந்தாம் சீட்டு ஆசேர் புத்திரருடைய கோத்திரத்துக்கு விழுந்தது. 25 அவர்களுடைய வம்சங்களின்படி அவர்களுக்குக் கிடைத்த எல்லை, எல்காத், ஆலி, பேதேன், அக்சாப், 26 அலம்மேலெக், ஆமாத், மிஷயால் இவைகளே; பின்பு அது மேற்கே கர்மேலுக்கும் சீகோர்லிப்னாத்திற்கும் சென்று, 27 கிழக்கே பெத்தாகோனுக்குத் திரும்பி, செபுலோனுக்கு வடக்கேயிருக்கிற இப்தாவேலின் பள்ளத்தாக்குக்கும் பெத்தேமேக்குக்கும் நேகியெலுக்கும் வந்து, இடதுபுறமான காபூலுக்கும், 28 எபிரோனுக்கும், ரேகோபுக்கும், அம்மோனுக்கும், கானாவுக்கும், பெரிய சீதோன்மட்டும் போம். 29 அப்புறம் அந்த எல்லை ராமாவுக்கும் தீரு என்னும் அரணிப்பான பட்டணம்மட்டும் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவுக்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்திலுள்ள சமுத்திரத்திலே முடியும். 30 உம்மாவும், ஆப்பெக்கும், ரேகோபும் அதற்கு அடுத்திருக்கிறது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் இருபத்திரண்டு. 31 இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ஆசேர் புத்திரரின் கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, கிடைத்த சுதந்தரம். 32 ஆறாம் சீட்டு நப்தலி புத்திரருக்கு விழுந்தது. 33 நப்தலி புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த எல்லை, ஏலேப்பிலும், சானானிமிலுள்ள அல்லோனிலுமிருந்து வந்து, ஆதமி, நெக்கேபின்மேலும் யாப்னியேலின்மேலும், லக்கூம்மட்டும் போய், யோர்தானில் முடியும். 34 அப்புறம் அந்த எல்லை மேற்கே அஸ்னோத்தாபோருக்குத் திரும்பி, அங்கேயிருந்து உக்கோகுக்குச் சென்று, தெற்கே செபுலோனையும், மேற்கே ஆசேரையும் சூரியோதயப்புறத்திலே யோர்தானிலே யூதாவையும் சேர்ந்து வரும். 35 அரணிப்பான பட்டணங்களாவன: சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத், 36 ஆதமா, ராமா, ஆத்சோர், 37 கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர், 38 ஈரோன், மிக்தாலேல், ஓரேம், பெதானாத், பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமுட்படப் பத்தொன்பது. 39 இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி புத்திரருடைய கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, உண்டான சுதந்தரம். 40 ஏழாம் சீட்டு தாண் புத்திரருடைய கோத்திரத்திற்கு விழுந்தது. 41 அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ், 42 சாலாபீன், ஆயலோன், யெத்லா, 43 ஏலோன், திம்னாதா, எக்ரோன், 44 எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத், 45 யேகூத், பெனபெராக், காத்ரிம்மோன், 46 மேயார்கோன், ராக்கோன் என்னும் பட்டணங்களும், யாப்போவுக்கு எதிரான எல்லையுமே. 47 தாண் புத்திரரின் எல்லை அவர்களுக்கு ஒடுக்கமாயிருந்தபடியால், அவர்கள் புறப்பட்டுப்போய், லேசேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, பட்டயக்கருக்கினால் சங்கரித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதிலே குடியிருந்து, லேசேமுக்குத் தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள். 48 இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் தாண் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம். 49 தேசத்தை அதின் எல்லைகளின்படி சுதந்தரமாகப் பங்கிட்டுத் தீர்ந்தபோது, இஸ்ரவேல் புத்திரர் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்குத் தங்கள் நடுவிலே ஒரு சுதந்தரத்தைக் கொடுத்தார்கள். 50 எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற திம்னாத்சேரா என்னும் அவன் கேட்ட பட்டணத்தை அவனுக்குக் கர்த்தருடைய வாக்கின்படியே கொடுத்தார்கள்; அந்தப் பட்டணத்தை அவன் கட்டி, அதிலே குடியிருந்தான். 51 ஆசாரியனாகிய எலெயாசாரும், நூனின் குமாரனாகிய யோசுவாவும், கோத்திரப் பிதாக்களுடைய தலைவரும் சீலோவிலே ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலிலே கர்த்தருடைய சந்நிதியில் இஸ்ரவேல் புத்திரரின் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுக் கொடுத்த சுதந்தரங்கள் இவைகளே; இவ்விதமாய் அவர்கள் தேசத்தைப் பங்கிட்டு முடித்தார்கள்.

யோசுவா 20

1 கர்த்தர் யோசுவாவை நோக்கி: 2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அறியாமல் கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போயிருக்கும்படி, நான் மோசேயைக்கொண்டு உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப்பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 3 அவைகள் உங்களுக்கு இரத்தப்பழி வாங்குகிறவனுடைய கைக்குத் தப்பிப்போயிருக்கத்தக்க அடைக்கலமாயிருக்கும். 4 அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பரின் செவிகள் கேட்க, தன் காரியத்தைச் சொல்வானாக; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடே குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கக்கடவர்கள். 5 பழிவாங்குகிறவன் அவனைத் தொடர்ந்துவந்தால், அவன் பிறனை முற்பகையின்றி அறியாமல் கொன்றதினால், அவனை இவன் கையில் ஒப்புக்கொடாதிருக்கவேண்டும். 6 நியாயம் விசாரிக்கும் சபைக்கு முன்பாக அவன் நிற்கும்வரைக்கும், அந்நாட்களிலிருக்கிற பிரதான ஆசாரியன் மரணமடையும்வரைக்கும், அவன் அந்தப் பட்டணத்திலே குடியிருக்கக்கடவன்; பின்பு கொலைசெய்தவன் தான் விட்டோடிப்போன தன் பட்டணத்திற்கும் தன் வீட்டிற்கும் திரும்பிப்போகவேண்டும் என்று சொல் என்றார். 7 அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும், எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள். 8 எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசேரையும், காத் கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள ராமோத்தையும், மனாசே கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள கோலானையும் குறித்துவைத்தார்கள். 9 கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ அவன் சபைக்கு முன்பாக நிற்கும்வரைக்கும், பழிவாங்குகிறவன் கையினால் சாகாதபடிக்கு, ஓடிப்போய் ஒதுங்கும்படி, இஸ்ரவேல் புத்திரர் யாவருக்கும், அவர்கள் நடுவே தங்குகிற பரதேசிக்கும், குறிக்கப்பட்ட பட்டணங்கள் இவைகளே.

யோசுவா 21

1 அப்பொழுது லேவியரின் வம்சப் பிதாக்களின் தலைவர்; கானான்தேசத்திலிருக்கிற சீலோவிலே ஆசாரியனாகிய எலெயாசாரிடத்திலும், நூனின் குமாரனாகிய யோசுவாவினிடத்திலும், இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரப் பிதாக்களிலுள்ள தலைவரிடத்திலும் சேர்ந்து வந்து: 2 நாங்கள் குடியிருக்கும் பட்டணங்களையும், எங்கள் மிருகஜீவனுக்காக வெளிநிலங்களையும் எங்களுக்குக் கொடுக்கும்படி, கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டாரே என்றார்கள். 3 கர்த்தருடைய வாக்கின்படியே, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சுதந்தரத்திலே லேவியருக்குப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள். 4 கோகாத்தியரின் வம்சங்களுக்குச் சீட்டு விழுந்தது; அந்தச் சீட்டின்படி லேவியரில் ஆசாரியனாகிய ஆரோனின் குமாரருக்கு யூதா கோத்திரத்திலும், சிமியோன் கோத்திரத்திலும், பென்யமீன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று. 5 கோகாத்தின் மற்றப் புத்திரருக்கு, எப்பிராயீம் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், தாண் கோத்திரத்திலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பத்து. 6 கெர்சோன் புத்திரருக்கு, இசக்கார் கோத்திரத்தின் வம்சங்களுக்குள்ளும், ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானிலிருக்கிற மனாசேயின் பாதிக் கோத்திரத்திலும், சீட்டினால் கிடைத்த பட்டணங்கள் பதின்மூன்று. 7 மெராரி புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் கிடைத்த பட்டணங்கள் பன்னிரண்டு. 8 இந்தப் பட்டணங்களையும் அவைகளின் வெளிநிலங்களையும் இஸ்ரவேல் புத்திரர், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே, சீட்டுப்போட்டு லேவியருக்குக் கொடுத்தார்கள். 9 லேவியின் குமாரரில் முதலாம் சீட்டைப்பெற்ற கோகாத்தியரின் வம்சங்களிலே இருக்கிற ஆரோனின் குமாரருக்கு, 10 யூதா புத்திரரின் கோத்திரத்திலும், சிமியோன் புத்திரரின் கோத்திரத்திலும், அவர்கள் கொடுத்தவைகளும் பேர்பேராகச் சொல்லப்பட்டவைகளுமான பட்டணங்களின் நாமங்களாவன: 11 யூதாவின் மலைத்தேசத்தில் ஆனாக்கின் தகப்பனாகிய அர்பாவின் பட்டணமான எபிரோனையும் அதைச் சூழ்ந்த வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள். 12 பட்டணத்தைச் சேர்ந்த வயல்களையும் அதின் பட்டிகளையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் காணியாட்சியாகக் கொடுத்தார்கள். 13 இப்படியே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக ஆசாரியனாகிய ஆரோனின் குமாரருக்கு எபிரோனையும் அதின் வெளிநிலங்களையும், லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும், 14 யாத்தீரையும் அதின் வெளிநிலங்களையும், எஸ்தெமோவாவையும் அதின் வெளிநிலங்களையும், 15 ஓலோனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும், 16 ஆயினையும் அதின் வெளிநிலங்களையும், யுத்தாவையும் அதின் வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; அந்த இரண்டு கோத்திரங்களிலிருக்கிற பட்டணங்கள் ஒன்பது. 17 பென்யமீன் கோத்திரத்திலே அவர்களுக்குக் கிபியோனையும் அதின் வெளிநிலங்களையும் கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், 18 ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும், அல்மோனையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு. 19 ஆசாரியரான ஆரோனுடைய குமாரரின் பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட பதின்மூன்று. 20 லேவியரான கோகாத்தின் புத்திரரில் மீதியான அவர்களுடைய மற்ற வம்சங்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே அவர்களுக்குப் பங்குவீதமாக அவர்கள் கொடுத்த பட்டணங்களாவன: 21 கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும், 22 கிப்சாயீமையும் அதின் வெளிநிலங்களையும், பெத்தொரோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு. 23 தாண் கோத்திரத்திலே எல்தெக்கேயையும் அதின் வெளிநிலங்களையும், கிபெத்தோனையும் அதின் வெளிநிலங்களையும், 24 ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு. 25 மனாசேயின் பாதிக் கோத்திரத்திலே தானாகையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும் அவர்களுக்குக் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு. 26 கோகாத் புத்திரரின் மீதியான வம்சங்களுக்கு உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்படப் பத்து. 27 லேவியரின் வம்சங்களிலே கெர்சோன் புத்திரருக்கு மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான பாசானிலுள்ள கோலானையும் அதின் வெளிநிலங்களையும், பெயேஸ்திராவையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் இரண்டு. 28 இசக்காரின் கோத்திரத்திலே கீசோனையும் அதின் வெளிநிலங்களையும், தாபராத்தையும் அதின் வெளிநிலங்களையும், 29 யர்மூத்தையும் அதின் வெளிநிலங்களையும், என்கன்னீமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு. 30 ஆசேரின் கோத்திரத்திலே மிஷயாலையும் அதின் வெளிநிலங்களையும், அப்தோனையும் அதின் வெளிநிலங்களையும், 31 எல்காத்தையும் அதின் வெளிநிலங்களையும், ரேகோபையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு. 32 நப்தலி கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாகக் கலிலேயாவிலுள்ள கேதேசையும் அதின் வெளிநிலங்களையும், அம்மோத்தோரையும் அதின் வெளிநிலங்களையும், கர்தானையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் மூன்று. 33 கெர்சோனியருக்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்படப் பதின்மூன்று. 34 மற்ற லேவியராகிய மெராரி புத்திரரின் வம்சங்களுக்குச் செபுலோன் கோத்திரத்திலே யொக்னியாமையும் அதின் வெளிநிலங்களையும், கர்தாவையும் அதின் வெளிநிலங்களையும், 35 திம்னாவையும் அதின் வெளிநிலங்களையும், நகலாலையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு. 36 ரூபன் கோத்திரத்திலே பேசேரையும் அதின் வெளிநிலங்களையும், யாகசாவையும் அதின் வெளிநிலங்களையும், 37 கெதெமோத்தையும் அதின் வெளிநிலங்களையும், மெபாகாத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு. 38 காத் கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாக, கீலேயாத்திலுள்ள ராமோத்தையும் அதின் வெளிநிலங்களையும், மக்னாயீமையும் அதின் வெளிநிலங்களையும், 39 எஸ்போனையும் அதின் வெளிநிலங்களையும், யாசேரையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு. 40 இவைகளெல்லாம் லேவியரின் மற்ற வம்சங்களாகிய மெராரி புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த பட்டணங்கள்; அவர்களுடைய பங்குவீதம் பன்னிரண்டு பட்டணங்கள். 41 இஸ்ரவேல் புத்திரருடைய காணியாட்சியின் நடுவிலே இருக்கிற லேவியரின் பட்டணங்களெல்லாம், அவைகளின் வெளிநிலங்களுட்பட நாற்பத்தெட்டு. 42 இந்தப் பட்டணங்களில் ஒவ்வொன்றிற்கும் அததைச் சூழ்ந்த வெளிநிலங்கள் இருந்தது; எல்லாப் பட்டணங்களுக்கும் அப்படியே இருந்தது. 43 இந்தப்பிரகாரமாகக் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்; அவர்கள் அவைகளைச் சுதந்தரித்துக்கொண்டு, அவைகளிலே குடியிருந்தார்கள். 44 கர்த்தர் அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்டபடியெல்லாம் அவர்களைச் சுற்றிலும் யுத்தமில்லாமல் இளைப்பாறப்பண்ணினார்; அவர்களுடைய எல்லாச் சத்துருக்களிலும் ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கவில்லை; அவர்கள் சத்துருக்களையெல்லாம் கர்த்தர் அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார். 45 கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று.

யோசுவா 22

1 அப்பொழுது யோசுவா ரூபனியரையும் காத்தியரையும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தையும் அழைத்து, 2 அவர்களை நோக்கி: கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கட்டளையிட்டவைகளையெல்லாம் நீங்கள் கைக்கொண்டீர்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவிலும் என் சொற்படி செய்தீர்கள். 3 நீங்கள் இதுவரைக்கும் அநேக நாளாக உங்கள் சகோதரரைக் கைவிடாமல், உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள். 4 இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் உங்கள் சகோதரருக்குச் சொல்லியிருந்தபடியே, அவர்களை இளைப்பாறப்பண்ணினார்; ஆகையால் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே உங்களுக்குக் கொடுத்த உங்கள் காணியாட்சியான தேசத்திலிருக்கிற உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப் போங்கள். 5 ஆனாலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழு ஆத்துமாவோடும் சேவிக்கிறதற்காக, கர்த்தரின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கற்பனையின்படியேயும் நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யும்படிமாத்திரம் வெகு சாவதானமாயிருங்கள் என்றான். 6 இவ்விதமாய் யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள். 7 மனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கு மோசே பாசானிலே சுதந்தரம் கொடுத்தான்; அதின் மற்றப் பாதிக்கு, யோசுவா யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே அவர்கள் சகோதரரோடேகூடச் சுதந்தரம் கொடுத்தான்; யோசுவா அவர்களை அவர்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிடுகிறபோது, அவர்களை ஆசீர்வதித்து: 8 நீங்கள் மிகுந்த ஐசுவரியத்தோடும், மகா ஏராளமான ஆடுமாடுகளோடும், பொன் வெள்ளி வெண்கலம் இரும்போடும், அநேக வஸ்திரங்களோடும் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பி, உங்கள் சத்துருக்களிடத்திலே கொள்ளையிட்டதை உங்கள் சகோதரரோடே பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்றான். 9 அப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடியே, தாங்கள் கைவசம் பண்ணிக்கொண்ட தங்கள் காணியாட்சி தேசமான கீலேயாத் தேசத்துக்குப் போகும்படிக்கு, கானான்தேசத்திலுள்ள சீலோவிலிருந்த இஸ்ரவேல் புத்திரரை விட்டுத் திரும்பிப்போனார்கள். 10 கானான்தேசத்தில் இருக்கிற யோர்தானின் எல்லைகளுக்கு வந்தபோது, ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், அங்கே யோர்தானின் ஓரத்திலே பார்வைக்குப் பெரிதான ஒரு பீடத்தைக் கட்டினார்கள். 11 ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான்தேசத்துக்கு எதிரே இஸ்ரவேல் புத்திரருக்கு அடுத்த யோர்தானின் எல்லைகளில் ஒரு பீடத்தைக் கட்டினார்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேள்விப்பட்டார்கள். 12 அவர்கள் அதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் சபையாரெல்லாரும் அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணும்படி சீலோவிலே கூடி, 13 கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபன் புத்திரரிடத்துக்கும் காத் புத்திரரிடத்துக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருடைய குமாரனாகிய பினெகாசையும், 14 அவனோடேகூட இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு பிதாவின் குடும்பத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகப் பத்துப் பிரபுக்களையும் அனுப்பினார்கள்; இஸ்ரவேலின் சேனைகளிலே ஆயிரவர்களுக்குள்ளே ஒவ்வொருவனும் தன் தன் பிதாவின் குடும்பத்துக்குத் தலைவனாயிருந்தான். 15 அவர்கள் கீலேயாத் தேசத்திலே ரூபன் புத்திரர் காத் புத்திரர் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாராகிய இவர்களிடத்திற்கு வந்து: 16 நீங்கள் இந்நாளிலே கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரண்டு, இந்நாளிலே கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் பண்ணும்படியாக உங்களுக்கு ஒரு பீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின் தேவனுக்கு விரோதமாகப் பண்ணின இந்தத் துரோகம் என்ன? 17 பேயோரின் அக்கிரமம் நமக்குப் போதாதா? கர்த்தருடைய சபையிலே வாதை உண்டாயிருந்ததே; இந்நாள்வரைக்கும் நாம் அதினின்று நீங்கிச் சுத்தமாகவில்லையே. 18 நீங்கள் இந்நாளில் கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரளுவீர்களோ? இன்று கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் பண்ணுவீர்களோ? அவர் நாளைக்கு இஸ்ரவேல் சபையனைத்தின்மேலும் கடுங்கோபங்கொள்வாரே. 19 உங்கள் காணியாட்சியான தேசம் தீட்டாயிருந்ததானால், கர்த்தருடைய வாசஸ்தலம் தங்குகிற கர்த்தருடைய காணியாட்சியான அக்கரையிலுள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே காணியாட்சி பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தையல்லாமல் உங்களுக்கு வேறொரு பீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கும் எங்களுக்கும் விரோதமான இரண்டகம் பண்ணாதிருங்கள். 20 சேராவின் குமாரனாகிய ஆகான் சாபத்தீடான பொருளைக்குறித்துத் துரோகம்பண்ணினதினாலே, இஸ்ரவேல் சபையின்மேலெல்லாம் கடுங்கோபம் வரவில்லையா? அவன் ஒருவன்மாத்திரம் தன் அக்கிரமத்தினாலே மடிந்துபோகவில்லையென்று கர்த்தருடைய சபையார் எல்லாரும் சொல்லச்சொன்னார்கள் என்றார்கள். 21 அப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், இஸ்ரவேலின் ஆயிரவரின் தலைவருக்குப் பிரதியுத்தரமாக: 22 தேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலரும் அறிந்துகொள்வார்கள்; அது இரண்டகத்தினாலாவது, கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருக்கக்கடவர். 23 ஒரு காரியத்தைக்குறித்து நாங்கள் எங்களுக்கு அந்தப் பீடத்தைக் கட்டினதே அல்லாமல், கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதற்காவது, அதின்மேல் சர்வாங்க தகனபலியையாகிலும் போஜனபலியையாகிலும் சமாதானபலிகளையாகிலும் செலுத்துகிறதற்காவது அதைச் செய்ததுண்டானால், கர்த்தர் அதை விசாரிப்பாராக. 24 நாளைக்கு உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் என்ன? 25 ரூபன் புத்திரர் காத் புத்திரர் ஆகிய உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே கர்த்தர் யோர்தானை எல்லையாக வைத்தார்; கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று சொல்லி, எங்கள் பிள்ளைகளைக் கர்த்தருக்குப் பயப்படாதிருக்கச் செய்வார்கள் என்கிற ஐயத்தினாலே நாங்கள் சொல்லிக்கொண்டது என்னவென்றால்: 26 சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்கள் சர்வாங்க தகனங்களாலும் பலிகளாலும் சமாதானபலிகளாலும் நாங்கள் கர்த்தரின் சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் என்று எங்களுக்கும் உங்களுக்கும், நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியாருக்கும் நடுவே சாட்சி உண்டாயிருக்கும்படிக்கும், 27 கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று உங்கள் பிள்ளைகள் நாளைக்கு எங்கள் பிள்ளைகளோடே சொல்லாதபடிக்குமே, ஒரு பீடத்தை நமக்காக உண்டுபண்ணுவோம் என்றோம். 28 நாளைக்கு எங்களோடாவது, எங்கள் சந்ததியாரோடாவது அப்படிச் சொல்வார்களானால், அப்பொழுது சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே சாட்சிக்காக எங்கள் பிதாக்கள் உண்டுபண்ணின கர்த்தருடைய பலிபீடத்தின் சாயலான பீடத்தைப் பாருங்கள் என்று சொல்லலாம் என்றோம். 29 நம்முடைய தேவனாகிய கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத்தவிர, நாங்கள் சர்வாங்க தகனத்திற்கும், போஜனபலிக்கும், மற்றப் பலிக்கும் வேறொரு பீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணுவதும், இன்று கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதும், எங்களுக்குத் தூரமாயிருப்பதாக என்றார்கள். 30 ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசே புத்திரரும் சொல்லுகிற வார்த்தைகளை ஆசாரியனாகிய பினெகாசும், அவனோடே இருந்த சபையின் பிரபுக்களும், இஸ்ரவேலுடைய ஆயிரவரின் தலைவரும் கேட்டபோது, அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது. 31 அப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின் குமாரனாகிய பினெகாஸ் ரூபன் புத்திரரையும் காத் புத்திரரையும் மனாசே புத்திரரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய் அப்படிக்கொத்த துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, கர்த்தர் நம்முடைய நடுவே இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் புத்திரரைக் கர்த்தரின் கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான். 32 ஆசாரியனான எலெயாசாரின் குமாரனாகிய பினெகாசும், பிரபுக்களும், கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபன் புத்திரரையும் காத் புத்திரரையும் விட்டு, கானான் தேசத்திற்கு இஸ்ரவேல் புத்திரரிடத்தில் திரும்பிவந்து, அவர்களுக்கு மறுசெய்தி சொன்னார்கள். 33 அந்தச் செய்தி இஸ்ரவேல் புத்திரரின் பார்வைக்கு நன்றாயிருந்தது; ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட, அவர்கள்மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சை விட்டு, இஸ்ரவேல் புத்திரர் தேவனை ஸ்தோத்திரித்தார்கள். 34 கர்த்தரே தேவன் என்பதற்கு அந்தப் பீடம் நமக்குள்ளே சாட்சியாயிருக்கும் என்று சொல்லி, ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் அதற்கு ஏத் என்று பேரிட்டார்கள்.

யோசுவா 23

1 கர்த்தர் இஸ்ரவேலைச் சுற்றிலும் இருந்த அவர்களுடைய எல்லாச் சத்துருக்களாலும் யுத்தமில்லாதபடிக்கு இளைப்பாறப்பண்ணி அநேகநாள் சென்றபின்பு, யோசுவா வயதுசென்று முதிர்ந்தவனானபோது, 2 யோசுவா இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும், மற்ற எல்லாரையும் அழைப்பித்து, அவர்களை நோக்கி: நான் வயதுசென்று முதிர்ந்தவனானேன். 3 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு முன்பாக இந்தச் சகல ஜாதிகளுக்கும் செய்த யாவையும் நீங்கள் கண்டீர்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணினார். 4 பாருங்கள், யோர்தான் முதல் நான் நிர்மூலமாக்கினவைகளும், மேற்கிலுள்ள பெரிய சமுத்திரமட்டும் இன்னும் மீதியாயிருக்கிறவைகளுமான சகல ஜாதிகளின் தேசத்தையும் சீட்டுப்போட்டு; உங்களுக்கு, உங்கள் கோத்திரங்களுக்குத்தக்கதாய், சுதந்தரமாகப் பங்கிட்டேன். 5 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் அவர்களுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு, உங்கள் தேவனாகிய கர்த்தர்தாமே அவர்களை உங்களுக்கு முன்பாகத்துரத்தி, உங்கள் பார்வையினின்று அகற்றிப்போடுவார். 6 ஆகையால், மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதைவிட்டு, வலதுபுறமாகிலும் இடதுபுறமாகிலும் விலகிப்போகாமல், அதையெல்லாம் கைக்கொள்ளவும் செய்யவும் நிர்ணயம் பண்ணிக்கொள்ளுங்கள். 7 உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளோடு கலவாமலும், அவர்களுடைய தேவர்களின் பேரை நினையாமலும், அவைகளைக்கொண்டு ஆணையிடாமலும், அவைகளைச் சேவியாமலும், பணிந்துகொள்ளாமலும் இருக்கும்படி எச்சரிக்கையாயிருங்கள். 8 இந்நாள்மட்டும் நீங்கள் செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள். 9 கர்த்தர் உங்களுக்கு முன்பாகப் பெரியவைகளும் பலத்தவைகளுமான ஜாதிகளைத் துரத்தியிருக்கிறார்; இந்நாள்மட்டும் ஒருவரும் உங்களுக்கு முன்பாக நிற்கவில்லை. 10 உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர்தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார். 11 ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள். 12 நீங்கள் பின்வாங்கிப்போய், உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளைச் சேர்ந்து, அவர்களோடே சம்பந்தங் கலந்து, நீங்கள் அவர்களிடத்திலும் அவர்கள் உங்களிடத்திலும் உறவாடினால், 13 உங்கள் தேவனாகிய கர்த்தர் இனி இந்த ஜாதிகளை உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடமாட்டார் என்றும், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து அழிந்துபோகுமட்டும், அவர்கள் உங்களுக்குக் கண்ணியாகவும், வலையாகவும், உங்கள் விலாக்களுக்குச் சவுக்காகவும், உங்கள் கண்களுக்கு முள்ளுகளாகவும் இருப்பார்கள் என்றும் நிச்சயமாய் அறியுங்கள். 14 இதோ, இன்று நான் பூலோகத்தார் எல்லாரும் போகிறவழியே போகிறேன்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்காகச் சொன்ன நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை என்பதை உங்கள் முழு இருதயத்தாலும் உங்கள் முழு ஆத்துமாவாலும் அறிந்திருக்கிறீர்கள்; அவைகளெல்லாம் உங்களுக்கு நிறைவேறிற்று; அவைகளில் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை. 15 இப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே சொன்ன நல்ல காரியமெல்லாம் உங்களிடத்திலே எப்படி நிறைவேறிற்றோ, அப்படியே, உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய உடன்படிக்கையை நீங்கள் மீறி, அந்நிய தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொள்ளுங்காலத்தில், 16 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை நிர்மூலமாக்குமட்டும், கர்த்தர் உங்கள்மேல் சகல தீமையான காரியங்களையும் வரப்பண்ணுவார்; கர்த்தருடைய கோபம் உங்கள்மேல் பற்றியெரியும்; அவர் உங்களுக்குக் கொடுத்த நல்ல தேசத்திலிருந்து நீங்கள் சீக்கிரமாய் அழிந்துபோவீர்கள் என்றான்.

யோசுவா 24

1 பின்பு யோசுவா இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சீகேமிலே கூடிவரப்பண்ணி, இஸ்ரவேலின் மூப்பரையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், அதிபதிகளையும் வரவழைத்தான்; அவர்கள் தேவனுடைய சந்நிதியில் வந்து நின்றார்கள். 2 அப்பொழுது யோசுவா சகல ஜனங்களையும் நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன், நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள். 3 நான் நதிக்கு அப்புறத்தில் இருந்த உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டுவந்து, அவனைக் கானான்தேசமெங்கும் சஞ்சரிக்கச்செய்து, அவன் சந்ததியைத் திரட்சியாக்கி, அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன். 4 ஈசாக்குக்கு யாக்கோபையும் ஏசாவையும் கட்டளையிட்டு, ஏசாவுக்குச் சேயீர் மலைத்தேசத்தைச் சுதந்தரிக்கும்படி கொடுத்தேன்; யாக்கோபும் அவன் பிள்ளைகளுமோ எகிப்துக்குப் போனார்கள். 5 நான் மோசேயையும் ஆரோனையும் அனுப்பி, எகிப்தியரை வாதித்தேன்; அப்படி அவர்கள் நடுவிலே நான் செய்தபின்பு உங்களைப் புறப்படப்பண்ணினேன். 6 நான் உங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, சமுத்திரக்கரைக்கு வந்தீர்கள்; எகிப்தியர் இரதங்களோடும் குதிரைவீரரோடும் உங்கள் பிதாக்களைச் சிவந்த சமுத்திரமட்டும் பின்தொடர்ந்தார்கள். 7 அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அப்பொழுது அவர் உங்களுக்கும் எகிப்தியருக்கும் நடுவே அந்தகாரத்தை வரப்பண்ணி, சமுத்திரத்தை அவர்கள்மேல் புரளச்செய்து, அவர்களை மூடிப்போட்டார்; நான் எகிப்திலே செய்ததை உங்கள் கண்கள் கண்டது; பின்பு வனாந்தரத்தில் அநேகநாள் சஞ்சரித்தீர்கள். 8 அதற்குப்பின்பு உங்களை யோர்தானுக்கு அப்புறத்திலே குடியிருந்த எமோரியரின் தேசத்திற்குக் கொண்டுவந்தேன்; அவர்கள் உங்களோடு யுத்தம்பண்ணுகிறபோது, அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அவர்கள் தேசத்தைக் கட்டிக்கொண்டீர்கள்; அவர்களை உங்கள் முகத்தினின்று அழித்துவிட்டேன். 9 அப்பொழுது சிப்போரின் குமாரன் பாலாக் என்னும் மோவாபியரின் ராஜா எழும்பி, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணி, உங்களைச் சபிக்கும்படி, பேயோரின் குமாரனாகிய பிலேயாமை அழைத்தனுப்பினான். 10 பிலேயாமுக்குச் செவிகொடுக்க எனக்குச் சித்தமில்லாததினாலே, அவன் உங்களை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்தான், இவ்விதமாய் உங்களை அவன் கைக்குத் தப்புவித்தேன். 11 பின்பு யோர்தானைக் கடந்து எரிகோவுக்கு வந்தீர்கள்; எரிகோவின் குடிகளும், எமோரியரும், பெரிசியரும், கானானியரும், ஏத்தியரும், கிர்காசியரும், ஏவியரும், எபூசியரும், உங்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினார்கள்; ஆனாலும் அவர்களை நான் உங்கள் கையிலே ஒப்புக்கொடுத்தேன். 12 எமோரியரின் இரண்டு ராஜாக்களையும் உங்கள் பட்டயத்தாலும் உங்கள் வில்லாலும் நீங்கள் துரத்தவில்லை; நான் உங்களுக்கு முன்பாகக் குளவிகளை அனுப்பினேன்; அவைகள் அவர்களை உங்கள் முன்னின்று துரத்திவிட்டது. 13 அப்படியே நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சத்தோட்டங்களின் பலனையும், ஒலிவத்தோப்புகளின் பலனையும் புசிக்கிறீர்கள் என்றார். 14 ஆகையால் நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவித்து, உங்கள் பிதாக்கள் நதிக்கு அப்புறத்திலும் எகிப்திலும் சேவித்த தேவர்களை அகற்றிவிட்டு, கர்த்தரைச் சேவியுங்கள். 15 கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள் வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ? நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான். 16 அப்பொழுது ஜனங்கள் பிரதியுத்தரமாக: வேறே தேவர்களைச் சேவிக்கும்படி, கர்த்தரை விட்டு விலகுகிற காரியம் எங்களுக்குத் தூரமாயிருப்பதாக. 17 நம்மையும் நம்முடைய பிதாக்களையும் அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, நம்முடைய கண்களுக்கு முன்பாகப் பெரிய அடையாளங்களைச் செய்து, நாம் நடந்த எல்லா வழியிலும், நாம் கடந்து வந்த எல்லா ஜனங்களுக்குள்ளும் நம்மைக் காப்பாற்றினவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தாமே. 18 தேசத்திலே குடியிருந்த எமோரியர் முதலான சகல ஜனங்களையும் கர்த்தர் நமக்கு முன்பாகத் துரத்தினாரே; ஆகையால் நாங்களும் கர்த்தரைச் சேவிப்போம், அவரே நம்முடைய தேவன் என்றார்கள். 19 யோசுவா ஜனங்களை நோக்கி: நீங்கள் கர்த்தரைச் சேவிக்கமாட்டீர்கள்; அவர் பரிசுத்தமுள்ள தேவன், அவர் எரிச்சலுள்ள தேவன்; உங்கள் மீறுதலையும் உங்கள் பாவங்களையும் மன்னியார். 20 கர்த்தர் உங்களுக்கு நன்மைசெய்திருக்க, நீங்கள் கர்த்தரை விட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தால், அவர் திரும்பி உங்களுக்குத் தீமை செய்து, உங்களை நிர்மூலமாக்குவார் என்றான். 21 ஜனங்கள் யோசுவாவை நோக்கி: அப்படியல்ல, நாங்கள் கர்த்தரையே சேவிப்போம் என்றார்கள். 22 அப்பொழுது யோசுவா ஜனங்களை நோக்கி: கர்த்தரைச் சேவிக்கும்படி நீங்கள் அவரைத் தெரிந்துகொண்டதற்கு நீங்களே உங்களுக்குச் சாட்சிகள் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களே சாட்சிகள் என்றார்கள். 23 அப்பொழுது அவன்: அப்படியானால், இப்பொழுதும் உங்கள் நடுவே இருக்கிற அந்நிய தேவர்களை அகற்றிவிட்டு, உங்கள் இருதயத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு நேராகத் திருப்புங்கள் என்றான். 24 அப்பொழுது ஜனங்கள் யோசுவாவை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தரையே சேவித்து, அவர் சத்தத்திற்கே கீழ்ப்படிவோம் என்றார்கள். 25 அந்தப்படி யோசுவா அந்நாளில் சீகேமிலே ஜனங்களோடே உடன்படிக்கைபண்ணி, அவர்களுக்கு அதைப் பிரமாணமும் நியாயமுமாக ஏற்படுத்தினான். 26 இந்த வார்த்தைகளை யோசுவா தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதி, ஒரு பெரிய கல்லை எடுத்து, அதை அங்கே கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலத்தின் அருகில் இருந்த கர்வாலி மரத்தின்கீழ் நாட்டி, 27 எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, இந்தக் கல் நமக்குள்ளே சாட்சியாயிருக்கக்கடவது; கர்த்தர் நம்மோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் இது கேட்டது; நீங்கள் உங்கள் தேவனுக்கு விரோதமாகப் பொய்சொல்லாதபடிக்கு, இது உங்களுக்குச் சாட்சியாயிருக்கக்கடவது என்று சொல்லி, 28 யோசுவா ஜனங்களை அவரவர் சுதந்தரத்திற்கு அனுப்பிவிட்டான். 29 இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தருடைய ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான். 30 அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கே இருக்கிற திம்னாத் சேரா என்னும் அவனுடைய சுதந்தரத்தின் எல்லைக்குள்ளே அடக்கம்பண்ணினார்கள். 31 யோசுவா உயிரோடிருந்த சகல நாட்களிலும், கர்த்தர் இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய கிரியைகள் யாவையும் அறிந்து யோசுவாவுக்குப்பின்பு வெகுநாள் உயிரோடிருந்த மூப்பருடைய சகல நாட்களிலும், இஸ்ரவேலர் கர்த்தரைச் சேவித்தார்கள். 32 இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலேயிருந்து கொண்டுவந்த யோசேப்பின் எலும்புகளை, அவர்கள் சீகேமிலே யாக்கோபு சீகேமின் தகப்பனாகிய எமோரியருடைய புத்திரரின் கையில் நூறு வெள்ளிக்காசுக்குக் கொண்ட நிலத்தின் பங்கிலே அடக்கம்பண்ணினார்கள்; அந்த நிலம் யோசேப்பின் புத்திரருக்குச் சுதந்தரமாயிற்று. 33 ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரும் மரணமடைந்தான், அவன் குமாரனாகிய பினெகாசுக்கு எப்பிராயீமின் மலைத்தேசத்திலே கொடுக்கப்பட்ட மேட்டிலே அவனை அடக்கம் பண்ணினார்கள்.

நியாயாதிபதிகள் 1

1 யோசுவா மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: கானானியரை எதிர்த்து யுத்தம்பண்ணும்படி, எங்களில் யார் முதல்முதல் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள். 2 அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்து புறப்படக்கடவன்; இதோ, அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார். 3 அப்பொழுது யூதா தன் சகோதரனாகிய சிமியோனை நோக்கி: நாம் கானானியரோடே யுத்தம்பண்ண நீ என் சுதந்தரப் பங்குவீதத்தில் என்னோடேகூட எழுந்துவா; உன் சுதந்தரப் பங்கு வீதத்தில் நானும் உன்னோடுகூட வருவேன் என்றான்; அப்படியே சிமியோன் அவனோடேகூடப் போனான். 4 யூதா எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே பதினாயிரம்பேரை வெட்டினார்கள். 5 பேசேக்கிலே அதோனிபேசேக்கைக் கண்டு, அவனோடு யுத்தம்பண்ணி, கானானியரையும் பெரிசியரையும் வெட்டினார்கள். 6 அதோனிபேசேக் ஓடிப்போகையில், அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவன் கைகால்களின் பெருவிரல்களைத் தறித்துப்போட்டார்கள். 7 அப்பொழுது அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள், கைகால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய், என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் செத்துப்போனான். 8 யூதாவின் புத்திரர் எருசலேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அதிலுள்ளவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினிக்கு இரையாக்கிவிட்டார்கள். 9 பின்பு யூதாவின் புத்திரர் மலைத்தேசத்திலேயும், தெற்கேயும், பள்ளத்தாக்குகளிலேயும் குடியிருக்கிற கானானியரோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டுப்போனார்கள். 10 அப்படியே யூதா கோத்திரத்தார் எபிரோனிலே குடியிருக்கிற கானானியருக்கு விரோதமாய்ப் போய், சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முற்காலத்தில் அந்த எபிரோனுக்குக் கீரியாத்அர்பா என்று பேர். 11 அங்கேயிருந்து தெபீரின் குடிகளுக்கு விரோதமாகப் போனார்கள்; முற்காலத்தில் தெபீருக்குக் கீரியாத்செப்பேர் என்று பேர். 12 அப்பொழுது காலேப்: கீரியாத்செப்பேரைச் சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக்கொடுப்பேன் என்றான். 13 அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் குமாரன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தியாகிய அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக்கொடுத்தான். 14 அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளை நோக்கி: உனக்கு என்னவேண்டும் என்றான். 15 அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப் மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான். 16 மோசேயின் மாமனாகிய கேனியனின் புத்திரரும் யூதாவின் புத்திரரோடேகூடப் பேரீச்சமரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கேயிருக்கிற யூதாவின் வனாந்தரத்திற்கு வந்து, ஜனங்களோடே குடியேறினார்கள். 17 யூதா தன் சகோதரனாகிய சிமியோனோடுங்கூடப் போனான்; அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியரை முறிய அடித்து, அதைச் சங்காரம்பண்ணி, அந்தப் பட்டணத்திற்கு ஒர்மா என்று பேரிட்டார்கள். 18 யூதா காசாவையும் அதின் எல்லையையும், அஸ்கலோனையும் அதின் எல்லையையும், எக்ரோனையும் அதின் எல்லையையும் பிடித்தான். 19 கர்த்தர் யூதாவோடேகூட இருந்ததினால், மலைத்தேசத்தாரைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கின் குடிகளுக்கு இருப்புரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தக்கூடாமற்போயிற்று. 20 மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று குமாரரையும் துரத்திவிட்டான். 21 பென்யமீன் புத்திரர் எருசலேமிலே குடியிருந்த எபூசியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் எபூசியர் இந்நாள்மட்டும் பென்யமீன் புத்திரரோடேகூட எருசலேமில் குடியிருக்கிறார்கள். 22 யோசேப்பின் குடும்பத்தாரும் பெத்தேலுக்கு விரோதமாய்ப் போனார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருந்தார். 23 யோசேப்பின் புத்திரர் பெத்தேலை வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள்; முன்னே அந்தப் பட்டணத்திற்கு லூஸ் என்று பேர். 24 அந்த வேவுகாரர் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிற ஒரு மனுஷனைக் கண்டு: பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள். 25 அப்படியே பட்டணத்திற்குள் பிரவேசிக்கும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான்; அப்பொழுது அவர்கள் வந்து, பட்டணத்திலுள்ளவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அந்த மனுஷனையும் அவன் குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள். 26 அப்பொழுது அந்த மனுஷன் ஏத்தியரின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லூஸ் என்று பேரிட்டான்; அதுதான் இந்நாள்மட்டும் அதின் பேர். 27 மனாசே கோத்திரத்தார் பெத்செயான் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தானாக் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், தோரின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், இப்லெயாம் பட்டணத்தாரையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும், மெகிதோவின் குடிகளையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனுஷரையும் துரத்திவிடவில்லை; கானானியர் அந்த தேசத்திலேதானே குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள். 28 இஸ்ரவேலர் பலத்தபோது, கானானியரை முற்றிலும் துரத்திவிடாமல் பகுதி கட்டப்பண்ணினார்கள். 29 எப்பிராயீம் கோத்திரத்தார் கேசேரிலே குடியிருந்த கானானியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர் கேசேரில் அவர்கள் நடுவே குடியிருந்தார்கள். 30 செபுலோன் கோத்திரத்தார் கித்ரோனின் குடிகளையும், நாகலோலின் குடிகளையும் துரத்திவிடவில்லை, ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களானார்கள். 31 ஆசேர் கோத்திரத்தார் அக்கோவின் குடிகளையும், சீதோனின் குடிகளையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் பட்டணங்களின் குடிகளையும் துரத்திவிடவில்லை. 32 ஆசேரியர் தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை. 33 நப்தலி கோத்திரத்தார் பெத்ஷிமேசின் குடிகளையும் பெத்தானாத்தின் குடிகளையும் துரத்திவிடாமல், தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; பெத்ஷிமேஸ், பெத்தானாத் பட்டணங்களின் குடிகள் அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள். 34 எமோரியர் தாண் புத்திரரைப் பள்ளத்தாக்கில் இறங்கவொட்டாமல், மலைத்தேசத்திற்குப் போகும்படி நெருக்கினார்கள். 35 எமோரியர் ஏரேஸ் மலைகளிலும் ஆயலோனிலும் சால்பீமிலும் குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்; ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தாரின் கை பலத்தபடியினால், அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள். 36 எமோரியரின் எல்லை அக்கராபீமுக்குப் போகிற மேடுதொடங்கி அதற்கு அப்புறமும் போயிற்று.

நியாயாதிபதிகள் 2

1 கர்த்தருடைய தூதனானவர் கில்காலிலிருந்து போகீமுக்கு வந்து: நான் உங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில் நான் உங்களைக் கொண்டுவந்து விட்டு, உங்களோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் ஒருக்காலும் முறித்துப்போடுவதில்லை என்றும், 2 நீங்கள் இந்த தேசத்தின் குடிகளோடே உடன்படிக்கைபண்ணாமல், அவர்கள் பலிபீடங்களை இடித்துவிடக்கடவீர்கள் என்றும் சொன்னேன்; ஆனாலும் என் சொல்லைக் கேளாதேபோனீர்கள்; ஏன் இப்படிச் செய்தீர்கள்? 3 ஆகையால் நான் அவர்களை உங்கள் முகத்திற்கு முன்பாகத் துரத்துவதில்லை என்றேன்; அவர்கள் உங்களை நெருக்குவார்கள்; அவர்களுடைய தேவர்கள் உங்களுக்குக் கண்ணியாவார்கள் என்றார். 4 கர்த்தருடைய தூதனானவர் இந்த வார்த்தைகளை இஸ்ரவேல் புத்திரர் எல்லாரோடும் சொல்லுகையில், ஜனங்கள் உரத்த சத்தமிட்டு அழுதார்கள். 5 அவ்விடத்திற்குப் போகீம் என்று பேரிட்டு, அங்கே கர்த்தருக்குப் பலியிட்டார்கள். 6 யோசுவா இஸ்ரவேல் புத்திரராகிய ஜனங்களை அனுப்பிவிட்டபோது, அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ள அவரவர் தங்கள்தங்கள் சுதந்தர வீதத்திற்குப் போனார்கள். 7 யோசுவாவின் சகல நாட்களிலும் கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் செய்த அவருடைய பெரிய கிரியைகளையெல்லாம் கண்டவர்களும், யோசுவாவுக்குப் பின்பு உயிரோடிருந்தவர்களுமாகிய மூப்பரின் சகல நாட்களிலும் ஜனங்கள் கர்த்தரைச் சேவித்தார்கள். 8 நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் கர்த்தரின் ஊழியக்காரன் நூற்றுப்பத்து வயதுள்ளவனாய் மரணமடைந்தான். 9 அவனை எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள காயாஸ் மலைக்கு வடக்கேயிருக்கிற அவனுடைய சுதந்தரத்தின் எல்லையாகிய திம்னாத்ஏரேசிலே அடக்கம்பண்ணினார்கள். 10 அக்காலத்தில் இருந்த அந்தச் சந்ததியார் எல்லாரும் தங்கள் பிதாக்களுடன் சேர்க்கப்பட்டபின்பு, கர்த்தரையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாத வேறொரு சந்ததி அவர்களுக்குப்பின் எழும்பிற்று. 11 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவித்து, 12 தங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின அவர்களுடைய தேவனாகிய கர்த்தரை விட்டு, தங்களைச் சுற்றிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களாகிய அந்நிய தேவர்களைப் பின்பற்றிப்போய், அவர்களைப் பணிந்துகொண்டு, கர்த்தருக்குக் கோபமூட்டினார்கள். 13 அவர்கள் கர்த்தரை விட்டு, பாகாலையும் அஸ்தரோத்தையும் சேவித்தார்கள். 14 அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி, அவர்கள் அப்புறம் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதபடி கொள்ளையிடுகிற கொள்ளைக்காரர் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்களைச் சுற்றிலும் இருக்கிற அவர்கள் பகைஞரின் கையிலே விற்றுப்போட்டார். 15 கர்த்தர் சொல்லியபடியும், கர்த்தர் அவர்களுக்கு ஆணையிட்டிருந்தபடியும், அவர்கள் புறப்பட்டுப்போகிற இடமெல்லாம் கர்த்தருடைய கை தீமைக்கென்றே அவர்களுக்கு விரோதமாயிருந்தது; மிகவும் நெருக்கப்பட்டார்கள். 16 கர்த்தர் நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணினார்; அவர்கள் கொள்ளையிடுகிறவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்கள். 17 அவர்கள் தங்கள் நியாயாதிபதிகளின் சொல்லைக் கேளாமல், அந்நிய தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போய், அவைகளைப் பணிந்துகொண்டார்கள்; தங்கள் பிதாக்கள் கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகி, அவர்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள். 18 கர்த்தர் அவர்களுக்கு நியாயாதிபதிகளை எழும்பப்பண்ணுகிறபோது, கர்த்தர் நியாயாதிபதியோடேகூட இருந்து, அந்த நியாயாதிபதியின் நாட்களிலெல்லாம் அவர்கள் சத்துருக்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சித்துவருவார்; அவர்கள் தங்களை இறுகப்பிடித்து ஒடுக்குகிறவர்களினிமித்தம் தவிக்கிறதினாலே, கர்த்தர் மனஸ்தாபப்படுவார். 19 நியாயாதிபதி மரணமடைந்த உடனே, அவர்கள் திரும்பி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவும் சேவிக்கவும் பணிந்துகொள்ளவும், தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் கேடாய் நடந்து, தங்கள் கிர்த்தியங்களையும் தங்கள் முரட்டாட்டமான வழியையும் விடாதிருப்பார்கள். 20 ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி: இந்த ஜனங்கள் தங்கள் பிதாக்களுக்கு நான் கற்பித்த என் உடன்படிக்கையை மீறி என் சொல்லைக் கேளாதேபோனபடியால், 21 யோசுவா மரித்துப் பின்வைத்துப்போன ஜாதிகளில் ஒருவரையும், நான் இனி அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிடாதிருப்பேன். 22 அவர்கள் பிதாக்கள் கர்த்தரின் வழியைக் கவனித்ததுபோல, அவர்கள் அதிலே நடக்கும்படிக்கு, அதைக் கவனிப்பார்களோ இல்லையோ என்று, அவர்களைக்கொண்டு இஸ்ரவேலைச் சோதிப்பதற்காக அப்படிச் செய்வேன் என்றார். 23 அதற்காகக் கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடாமலும், அவைகளைச் சீக்கிரமாய்த் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.

நியாயாதிபதிகள் 3

1 கானான் தேசத்தில் நடந்த சகல யுத்தங்களையும் அறியாதிருந்த இஸ்ரவேலராகிய அனைவரையும் சோதிப்பதற்காகவும், 2 இஸ்ரவேல் புத்திரரின் சந்ததியாரும் அதற்குமுன் யுத்தஞ்செய்ய அறியாதிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும், கர்த்தர் விட்டுவைத்த ஜாதிகள் யாரென்றால்: 3 பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும், சகல கானானியரும், சீதோனியரும், பாகால்எர்மோன் துவக்கி ஆமாத்திற்குள் பிரவேசிக்கும்வரைக்கும் லீபனோனின் மலைகளிலே குடியிருக்கிற ஏவியருமே. 4 கர்த்தர் மோசேயைக்கொண்டு தங்கள் பிதாக்களுக்கு விதித்த கற்பனைகளுக்கு இஸ்ரவேலர் கீழ்ப்படிவார்களோ என்று அறியும்படி, இஸ்ரவேலரை அவர்களாலே சோதிப்பதற்காக அவர்கள் விடப்பட்டிருந்தார்கள். 5 இப்படி இஸ்ரவேல் புத்திரர், கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியராகிய இவர்கள் நடுவே குடியிருந்து, 6 அவர்களுடைய குமாரத்திகளை விவாகம்பண்ணி, தங்களுடைய குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடுத்து, அவர்கள் தேவர்களைச் சேவித்தார்கள். 7 இப்படி இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் சேவிக்கிறபோது, 8 கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டவராகி, அவர்களை மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமின் கையிலே விற்றுப்போட்டார்; இப்படியே இஸ்ரவேல் புத்திரர் கூசான்ரிஷதாயீமை எட்டு வருஷம் சேவித்தார்கள். 9 இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை இரட்சிக்கும்படி காலேபின் தம்பியான கேனாசுடைய குமாரனாகிய ஒத்னியேல் என்னும் ஒரு ரட்சகனை அவர்களுக்கு எழும்பப்பண்ணினார். 10 அவன்மேல் கர்த்தருடைய ஆவி வந்திருந்ததினால், அவன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, யுத்தம்பண்ணப் புறப்பட்டான்; கர்த்தர் மெசொப்பொத்தாமியாவின் ராஜாவாகிய கூசான்ரிஷதாயீமை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார்; ஆகையால் அவன் கை கூசான்ரிஷதாயீமின்மேல் பலங்கொண்டது. 11 தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது. கேனாசின் குமாரனாகிய ஒத்னியேல் மரணமடைந்தான். 12 இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அவர்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவை இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலக்கப்பண்ணினார். 13 அவன் அம்மோன் புத்திரரையும் அமலேக்கியரையும் கூட்டிக்கொண்டுவந்து, இஸ்ரவேலை முறிய அடித்தான்; பேரீச்சமரங்களின் பட்டணத்தையும் பிடித்தான். 14 இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எக்லோன் என்னும் மோவாபின் ராஜாவைப் பதினெட்டு வருஷம் சேவித்தார்கள். 15 இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டபோது, கர்த்தர் அவர்களுக்குப் பென்யமீன் கோத்திரத்தானாகிய கேராவின் மகன் ஏகூத் என்னும் இரட்சகனை எழும்பப்பண்ணினார்; அவன் இடதுகைப் பழக்கமுள்ளவனாயிருந்தான்; அவன் கையிலே இஸ்ரவேல் புத்திரர் மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குக் காணிக்கை அனுப்பினார்கள். 16 ஏகூத், இருபுறமும் கருக்கும் ஒரு முழ நீளமுமான ஒரு கத்தியை உண்டுபண்ணி, அதைத் தன் வஸ்திரத்துக்குள்ளே தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டிக்கொண்டு, 17 காணிக்கையை மோவாபின் ராஜாவாகிய எக்லோனுக்குச் செலுத்தினான்; எக்லோன் மிகவும் ஸ்தூலித்த மனுஷனாயிருந்தான். 18 அவன் காணிக்கையைச் செலுத்தித் தீர்ந்தபின்பு, காணிக்கையைச் சுமந்துவந்த ஜனங்களை அனுப்பிவிட்டான். 19 அவனோ கில்காலிலுள்ள சிலைகள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பிவந்து: ராஜாவே, உம்மிடத்தில் சொல்லவேண்டிய இரகசியமான ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு அவன்: பொறு என்றான்; அப்பொழுது அவனிடத்தில் நின்ற யாவரும் அவனை விட்டு வெளியே போய்விட்டார்கள். 20 ஏகூத் அவன் கிட்டே போனான்; அவனோ தனக்குத் தனிப்புற இருந்த குளிர்ச்சியான அறைவீட்டில் உட்கார்ந்திருந்தான்; அப்பொழுது ஏகூத்: உம்மிடத்தில் சொல்லவேண்டிய தேவவாக்கு எனக்கு உண்டு என்றான்; அவன் தன் ஆசனத்திலிருந்து எழுந்திருந்தான். 21 உடனே ஏகூத் தன் இடதுகையை நீட்டி, தன் வலதுபுறத்து இடுப்பிலே கட்டியிருந்த கத்தியை உருவி, அதை அவன் வயிற்றிற்குள் பாய்ச்சினான். 22 அலகோடேகூடக் கைப்பிடியும் உள்ளே புகுந்தது; அவனுடைய வயிற்றிற்குள் போன கத்தியை இவன் இழுக்கக்கூடாதபடிக்கு, நிணம் அலகைச் சுற்றிக்கொண்டு அடைத்தது; அது பின்புறத்திலே புறப்பட்டது. 23 ஏகூத் புறப்பட்டு, அறைவீட்டின் கதவைச் சாத்திப் பூட்டிப்போட்டு, கொலுக்கூடத்தின் வழியாய்ப் போய்விட்டான். 24 அவன் போனபின்பு ஊழியக்காரர் வந்து பார்த்தார்கள்; இதோ, அறைவீட்டின் கதவு பூட்டியிருந்தது; ஆகையால் அவர் அந்தக் குளிர்ச்சியான அறையிலே மலஜலாதிக்கிருக்கிறாராக்கும் என்றார்கள். 25 அவர்கள் சலித்துப்போகுமட்டும் காத்திருந்தார்கள்; அவன் அறைவீட்டின் கதவைத் திறக்கவில்லை; ஆகையால் ஒரு திறவுகோலை எடுத்துத் திறந்தார்கள்; இதோ, அவர்கள் ஆண்டவன் தரையிலே செத்துக்கிடந்தான். 26 அவர்கள் தாமதித்துக்கொண்டிருந்தபோது, ஏகூத் ஓடிப்போய், சிலைகளுள்ள இடத்தைக் கடந்து, சேயிராத்தைச் சேர்ந்து தப்பினான். 27 அங்கே வந்தபோது எப்பிராயீம் மலையில் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் அவனோடேகூட மலையிலிருந்து இறங்கினார்கள்; அவன் அவர்களுக்கு முன்பாக நடந்து: 28 என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள்; கர்த்தர் உங்கள் பகைஞராகிய மோவாபியரை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்றான். அவர்கள் அவனைப் பின்தொடர்ந்துபோய், மோவாபுக்கு எதிரான யோர்தான் துறைகளைப் பிடித்து, ஒருவனையும் கடந்துபோகவொட்டாமல், 29 அக்காலத்திலே மோவாபியரில் ஏறக்குறையப் பதினாயிரம்பேரை வெட்டினார்கள்; அவர்களெல்லாரும் புஷ்டியுள்ளவர்களும் பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; அவர்களில் ஒருவனும் தப்பவில்லை. 30 இப்படியே அந்நாளிலே மோவாப் இஸ்ரவேலுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டது; அதனாலே தேசம் எண்பது வருஷம் அமைதலாயிருந்தது. 31 அவனுக்குப்பிற்பாடு ஆனாத்தின் குமாரன் சம்கார் எழும்பினான்; அவன் பெலிஸ்தரில் அறுநூறுபேரை ஒரு தாற்றுக்கோலால் முறிய அடித்தான்; அவனும் இஸ்ரவேலை இரட்சித்தான்.

நியாயாதிபதிகள் 4

1 ஏகூத் மரணமடைந்தபின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்துவந்தார்கள். 2 ஆகையால் கர்த்தர் அவர்களை ஆத்சோரில் ஆளுகிற யாபீன் என்னும் கானானியருடைய ராஜாவின் கையிலே விற்றுப்போட்டார்; அவனுடைய சேனாபதிக்குச் சிசெரா என்று பேர்; அவன் புறஜாதிகளுடைய பட்டணமாகிய அரோசேத்திலே குடியிருந்தான். 3 அவனுக்குத் தொளாயிரம் இருப்புரதங்கள் இருந்தது; அவன் இஸ்ரவேல் புத்திரரை இருபது வருஷம் கொடுமையாய் ஒடுக்கினான்; இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள். 4 அக்காலத்திலே லபிதோத்தின் மனைவியாகிய தெபொராள் என்னும் தீர்க்கதரிசியானவள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தாள். 5 அவள் எப்பிராயீம் மலைத்தேசமான ராமாவுக்கும் பெத்தேலுக்கும் நடுவிலிருக்கிற தெபொராளின் பேரீச்சமரத்தின்கீழே குடியிருந்தாள்; அங்கே இஸ்ரவேல் புத்திரர் அவளிடத்திற்கு நியாயவிசாரணைக்குப் போவார்கள். 6 அவள் நப்தலியிலுள்ள கேதேசிலிருக்கிற அபினோகாமின் குமாரன் பாராக்கை வரவழைத்து: நீ நப்தலி புத்திரரிலும், செபுலோன் புத்திரரிலும் பதினாயிரம் பேரைக் கூட்டிக்கொண்டு, தாபோர் மலைக்குப் போகக்கடவாய் என்றும், 7 நான் யாபீனின் சேனாபதியாகிய சிசெராவையும், அவன் ரதங்களையும், அவன் சேனையையும், கீசோன் பள்ளத்தாக்கிலே உன்னிடத்திற்கு வர இழுத்து, அவனை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிடவில்லையா என்றாள். 8 அதற்குப் பாராக்: நீ என்னோடேகூட வந்தால் போவேன்; என்னோடேகூட வராவிட்டால், நான் போகமாட்டேன் என்றான். 9 அதற்கு அவள்: நான் உன்னோடேகூட நிச்சயமாய் வருவேன்; ஆனாலும் நீ போகிற பிரயாணத்தில் உண்டாகிற மேன்மை உனக்குக் கிடையாது; கர்த்தர் சிசெராவை ஒரு ஸ்திரீயின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்று சொல்லி, தெபொராள் எழும்பி, பாராக்கோடேகூடக் கேதேசுக்குப் போனாள். 10 அப்பொழுது பாராக்: செபுலோன் மனுஷரையும் நப்தலி மனுஷரையும் கேதேசுக்கு வரவழைத்து, தன்னைப் பின்செல்லும் பதினாயிரம் பேரோடே போனான்; தெபொராளும் அவனோடேகூடப் போனாள். 11 கேனியனான ஏபேர் என்பவன் மோசேயின் மாமனாகிய ஒபாபின் புத்திரராயிருக்கிற கேனியரை விட்டுப் பிரிந்து, கேதேசின் கிட்ட இருக்கிற சானாயிம் என்னும் கர்வாலிமரங்கள் அருகே தன் கூடாரத்தைப் போட்டிருந்தான். 12 அபினோகாமின் குமாரன் பாராக் தாபோர் மலையில் ஏறிப்போனான் என்று சிசெராவுக்கு அறிவிக்கப்பட்டபோது, 13 சிசெரா தொளாயிரம் இருப்புரதங்களாகிய தன்னுடைய எல்லா ரதங்களையும், தன்னோடிருக்கும் எல்லா ஜனங்களையும், புறஜாதிகளின் பட்டணமாகிய அரோசேத்திலிருந்து கீசோன் பள்ளத்தாக்கிலே வரவழைத்தான். 14 அப்பொழுது தெபொராள் பாராக்கை நோக்கி: எழுந்துபோ; கர்த்தர் சிசெராவை உன் கையில் ஒப்புக்கொடுக்கும் நாள் இதுவே; கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்படவில்லையா என்றாள்; அப்பொழுது பாராக்கும், அவன் பின்னாலே பதினாயிரம்பேரும், தாபோர் மலையிலிருந்து இறங்கினார்கள். 15 கர்த்தர் சிசெராவையும் அந்த எல்லா ரதங்களையும் சேனையனைத்தையும் பாராக்குக்கு முன்பாகப் பட்டயக்கருக்கினால் கலங்கடித்தார்; சிசெரா ரதத்தைவிட்டிறங்கி கால்நடையாய் ஓடிப்போனான். 16 பாராக் ரதங்களையும் சேனையையும் புறஜாதிகளுடைய அரோசேத்மட்டும் துரத்தினான்; சிசெராவின் சேனையெல்லாம் பட்டயக்கருக்கினால் விழுந்தது; ஒருவனும் மீதியாயிருக்கவில்லை. 17 சிசெரா கால்நடையாய்க் கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்கு ஓடிவந்தான்; அப்பொழுது யாபீன் என்னும் ஆத்சோரின் ராஜாவுக்கும், கேனியனான ஏபேரின் வீட்டுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது. 18 யாகேல் வெளியே சிசெராவுக்கு எதிர்கொண்டுபோய்: உள்ளே வாரும்; என் ஆண்டவனே, என்னண்டை உள்ளே வாரும், பயப்படாதேயும் என்று அவனோடே சொன்னாள்; அப்படியே அவளண்டை கூடாரத்தில் உள்ளே வந்தபோது, அவனை ஒரு சமுக்காளத்தினாலே மூடினாள். 19 அவன் அவளைப் பார்த்து: குடிக்க எனக்குக் கொஞ்சம் தண்ணீர் தா, தாகமாயிருக்கிறேன் என்றான்; அவள் பால் துருத்தியைத் திறந்து, அவனுக்குக் குடிக்கக்கொடுத்து, திரும்பவும் அவனை மூடினாள். 20 அப்பொழுது அவன்: நீ கூடாரவாசலிலே நின்று, யாராவது ஒருவன் வந்து, இங்கே யாராகிலும் இருக்கிறார்களா என்று உன்னிடத்தில் கேட்டால், இல்லை என்று சொல் என்றான். 21 பின்பு ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஒரு கூடார ஆணியை எடுத்து, தன் கையிலே சுத்தியைப் பிடித்துக் கொண்டு, மெள்ள அவனண்டையில் வந்து, அவன் நெற்றியிலே அந்த ஆணியை அடித்துப்போட்டாள்; அது உருவிப்போய், தரையிலே புதைந்தது; அப்பொழுது ஆயாசமாய்த் தூங்கின அவன் செத்துப்போனான். 22 பின்பு சிசெராவைத் தொடருகிற பாராக் வந்தான்; அப்பொழுது யாகேல் வெளியே அவனுக்கு எதிர்கொண்டுபோய்: வாரும், நீர் தேடுகிற மனுஷனை உமக்குக் காண்பிப்பேன் என்று சொன்னாள்; அவன் அவளிடத்திற்கு வந்தபோது, இதோ, சிசெரா செத்துக்கிடந்தான்; ஆணி அவன் நெறியில் அடித்திருந்தது. 23 இப்படி தேவன் அந்நாளிலே கானானியரின் ராஜாவாகிய யாபீனை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தினார். 24 இஸ்ரவேல் புத்திரரின் கை கானானியரின் ராஜாவாகிய யாபீனை நிர்மூலமாக்குமட்டும் அவன்மேல் பலத்துக் கொண்டேயிருந்தது.

நியாயாதிபதிகள் 5

1 அந்நாளிலே தெபொராளும் அபினோகாமின் குமாரன் பாராக்கும் பாடினதாவது: 2 கர்த்தர் இஸ்ரவேலுக்காக நீதியைச் சரிக்கட்டினதினிமித்தமும், ஜனங்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக்கொடுத்ததினிமித்தமும் அவரை ஸ்தோத்திரியுங்கள். 3 ராஜாக்களே, கேளுங்கள்; அதிபதிகளே, செவிகொடுங்கள்; நான் கர்த்தரைப் பாடி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுவேன். 4 கர்த்தாவே, நீர் சேயீரிலிருந்து புறப்பட்டு, ஏதோமின் வெளியிலிருந்து நடந்துவருகையில், பூமி அதிர்ந்தது, வானம் சொரிந்தது, மேகங்களும் தண்ணீராய்ப் பொழிந்தது. 5 கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்கள் கரைந்தது; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக சீனாயும் கரைந்தது. 6 ஆனாத்தின் குமாரனாகிய சம்காரின் நாட்களிலும், யாகேலின் நாட்களிலும், பெரும்பாதைகள் பாழாய்க் கிடந்தது; வழி நடக்கிறவர்கள் பக்கவழியாய் நடந்தார்கள். 7 தெபொராளாகிய நான் எழும்புமளவும், இஸ்ரவேலிலே நான் தாயாக எழும்புமளவும், கிராமங்கள் பாழாய்ப்போயின, இஸ்ரவேலின் கிராமங்கள் பாழாய்ப்போயின. 8 நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே நாற்பதினாயிரம்பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ? 9 ஜனங்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்த இஸ்ரவேலின் அதிபதிகளை என் இருதயம் நாடுகிறது; கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். 10 வெள்ளைக் கழுதைகளின்மேல் ஏறுகிறவர்களே, நியாயஸ்தலத்தில் வீற்றிருக்கிறவர்களே, வழியில் நடக்கிறவர்களே, இதைப் பிரஸ்தாபியுங்கள். 11 தண்ணீர் மொண்டுகொள்ளும் இடங்களில் வில்வீரரின் இரைச்சலுக்கு நீங்கினவர்கள் அங்கே கர்த்தரின் நீதிநியாயங்களையும், அவர் இஸ்ரவேலிலுள்ள தமது கிராமங்களுக்குச் செய்த நீதிநியாயங்களையுமே பிரஸ்தாபப்படுத்துவார்கள்; அதுமுதல் கர்த்தரின் ஜனங்கள் ஒலிமுகவாசல்களிலே போய் இறங்குவார்கள். 12 விழி, விழி, தெபொராளே, விழி, விழி, பாட்டுப்பாடு; பாராக்கே, எழும்பு; அபினோகாமின் குமாரனே, உன்னைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோ. 13 மீதியாயிருந்தவர்கள் ஜனத்தின் பிரபுக்களை ஆளும்படி செய்தார்; கர்த்தர் எனக்குப் பராக்கிரமசாலிகளின்மேல் ஆளுகை தந்தார். 14 அமலேக்குக்கு விரோதமாக இவர்களுடைய வேர் எப்பிராயீமிலிருந்து துளிர்த்தது; உன் ஜனங்களுக்குள்ளே பென்யமீன் மனுஷர் உனக்குப் பின்சென்றார்கள்; மாகீரிலிருந்து அதிபதிகளும், செபுலோனிலிருந்து எழுதுகோலைப் பிடிக்கிறவர்களும் இறங்கிவந்தார்கள். 15 இசக்காரின் பிரபுக்களும் தெபொராளோடே இருந்தார்கள்; பாராக்கைப்போல இசக்கார் மனுஷரும் பள்ளத்தாக்கில் கால்நடையாய் அனுப்பப்பட்டுப் போனார்கள்; ரூபனின் பிரிவினைகளால் உண்டான இருதயத்தின் நினைவுகள் மிகுதி. 16 மந்தைகளின் சத்தத்தைக் கேட்க, நீ தொழுவங்களின் நடுவே இருந்துவிட்டதென்ன? ரூபனின் பிரிவினைகளால் மனோவிசாரங்கள் மிகுதி. 17 கீலேயாத் மனுஷர் யோர்தானுக்கு அக்கரையிலே இருந்துவிட்டார்கள்; தாண் மனுஷர் கப்பல்களில் தங்கியிருந்ததென்ன? ஆசேர் மனுஷர் கடற்கரையிலே தங்கி, தங்கள் குடாக்களில் தாபரித்தார்கள். 18 செபுலோனும் நப்தலியும் போர்க்களத்து முனையிலே தங்கள் உயிரை எண்ணாமல் மரணத்துக்குத் துணிந்து நின்றார்கள். 19 ராஜாக்கள் வந்து யுத்தம்பண்ணினார்கள்; அப்பொழுது கானானியரின் ராஜாக்கள் மெகிதோவின் தண்ணீர் அருகான தானாக்கிலே யுத்தம்பண்ணினார்கள்; அவர்களுக்குத் திரவியக்கொள்ளை கிடைக்கவில்லை. 20 வானத்திலிருந்து யுத்தம் உண்டாயிற்று; நட்சத்திரங்கள் தங்கள் அயனங்களிலிருந்து சிசெராவோடே யுத்தம்பண்ணின. 21 கீசோன் நதி, பூர்வ நதியாகிய கீசோன் நதியே, அவர்களை அடித்துக்கொண்டுபோயிற்று; என் ஆத்துமாவே, நீ பலவான்களை மிதித்தாய். 22 அப்பொழுது குதிரைகளின் குளம்புகள், பாய்ச்சலினாலே, பலவான்களின் பாய்ச்சலினாலேயே, பிளந்துபோயின. 23 மேரோசைச் சபியுங்கள்; அதின் குடிகளைச் சபிக்கவே சபியுங்கள் என்று கர்த்தருடைய தூதனானவர் சொல்லுகிறார்; அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லை; பராக்கிரமசாலிகளுக்கு விரோதமாய் அவர்கள் கர்த்தர் பட்சத்தில் துணைநிற்க வரவில்லையே. 24 ஸ்திரீகளுக்குள்ளே கேனியனான ஏபேரின் மனைவியாகிய யாகேல் ஆசீர்வதிக்கப்பட்டவள்; கூடாரத்தில் வாசமாயிருக்கிற ஸ்திரீகளுக்குள்ளே அவள் ஆசீர்வதிக்கப்பட்டவளே. 25 தண்ணீரைக் கேட்டான், பாலைக் கொடுத்தாள்; ராஜாக்களின் கிண்ணியிலே வெண்ணெயைக் கொண்டுவந்து கொடுத்தாள். 26 தன் கையால் ஆணியையும், தன் வலதுகையால் தொழிலாளரின் சுத்தியையும் பிடித்து, சிசெராவை அடித்தாள்; அவன் நெற்றியில் உருவக்கடாவி, அவன் தலையை உடைத்துப்போட்டாள். 27 அவள் கால் அருகே அவன் மடங்கி விழுந்துகிடந்தான், அவள் கால் அருகே மடங்கி விழுந்தான்; அவன் எங்கே மடங்கி விழுந்தானோ அங்கே மடிந்து கிடந்தான். 28 சிசெராவின் தாய் ஜன்னலில் நின்று பலகணிவழியாய்ப் பார்த்துக்கொண்டிருந்து: அவனுடைய ரதம் வராமல் பிந்திப்போனதென்ன? அவனுடைய ரதங்களின் ஓட்டம் தாமதிக்கிறதென்ன என்று புலம்பினாள். 29 அவளுடைய நாயகிகளில் புத்திசாலிகள் அவளுக்கு உத்தரவுசொன்னதுமன்றி, அவள் தானும் தனக்கு மறுமொழியாக: 30 அவர்கள் கொள்ளையைக் கண்டு பிடிக்கவில்லையோ, அதைப் பங்கிடவேண்டாமோ, ஆளுக்கு இரண்டொரு பெண்களையும், சிசெராவுக்குக் கொள்ளையிட்ட பலவருணமான ஆடைகளையும், கொள்ளையிட்ட பலவருணமான சித்திரத் தையலாடைகளையும், கொள்ளையிட்டவர்களின் கழுத்துக்கு இருபுறமும் பொருந்தும் சித்திரத்தையலுள்ள பலவருணமான ஆடையையும் கொடுக்கவேண்டாமோ என்றாள். 31 கர்த்தாவே, உம்மைப் பகைக்கிற யாவரும் இப்படியே அழியக்கடவர்கள்; அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப்போல இருக்கக்கடவர்கள் என்று பாடினார்கள். பின்பு தேசம் நாற்பது வருஷம் அமைதலாயிருந்தது.

நியாயாதிபதிகள் 6

1 பின்னும் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் அவர்களை ஏழு வருஷம் மீதியானியரின் கையில் ஒப்புக்கொடுத்தார். 2 மீதியானியரின் கை இஸ்ரவேலின்மேல் பலத்துக்கொண்டபடியால், இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் அரணான ஸ்தலங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள். 3 இஸ்ரவேலர் விதை விதைத்திருக்கும்போது, மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரரும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பி வந்து; 4 அவர்களுக்கு எதிரே பாளயமிறங்கி, காசாவின் எல்லைமட்டும் நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையாகிலும், ஆடுமாடுகள் கழுதைகளையாகிலும் வைக்காதே போவார்கள். 5 அவர்கள் தங்கள் மிருகஜீவன்களோடும், தங்கள் கூடாரங்களோடும், வெட்டுக்கிளிகளைப்போல் திரளாய் வருவார்கள்; அவர்களும் அவர்கள் ஒட்டகங்களும் எண்ணிமுடியாததாயிருக்கும்; இந்தப்பிரகாரமாக தேசத்தைக் கெடுத்துவிட அதிலே வருவார்கள். 6 இப்படி மீதியானியராலே இஸ்ரவேலர் மிகவும் சிறுமைப்பட்டார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள். 7 இஸ்ரவேல் புத்திரர் மீதியானியர் நிமித்தம் கர்த்தரை நோக்கி முறையிட்டபோது, 8 கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடத்திற்கு அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமைத்தன வீட்டிலிருந்து புறப்படவும் செய்து, 9 எகிப்தியர் கையினின்றும், உங்களை ஒடுக்கின யாவருடைய கையினின்றும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து, 10 நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோரியருடைய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள் என்றும், உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ என் சொல்லைக் கேளாதேபோனீர்கள் என்கிறார் என்று சொன்னான். 11 அதற்குப்பின்பு கர்த்தருடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய குமாரன் கிதியோன் கோதுமையை மீதியானியரின் கைக்குத் தப்புவிக்கிறதற்காக, ஆலைக்குச் சமீபமாய் அதைப் போரடித்தான். 12 கர்த்தருடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார். 13 அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவனே, கர்த்தர் எங்களோடே இருந்தால், இவையெல்லாம் எங்களுக்கு நேரிடுவானேன்? கர்த்தர் எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்கள் பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது கர்த்தர் எங்களைக் கைவிட்டு, மீதியானியர் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான். 14 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கிப்பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பலத்தோடே போ; நீ இஸ்ரவேலை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார். 15 அதற்கு அவன்: ஆ என் ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே ரட்சிப்பேன்; இதோ, மனாசேயில் என் குடும்பம் மிகவும் எளியது; என் தகப்பன் வீட்டில் நான் எல்லாரிலும் சிறியவன் என்றான். 16 அதற்குக் கர்த்தர்: நான் உன்னோடேகூட இருப்பேன்; ஒரே மனுஷனை முறிய அடிப்பதுபோல நீ மீதியானியரை முறிய அடிப்பாய் என்றார். 17 அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத் தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டும். 18 நான் உம்மிடத்திற்கு என் காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்குமளவும், இவ்விடம் விட்டுப் போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பிவருமட்டும் நான் இருப்பேன் என்றார். 19 உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, ஆணத்தை ஒரு கிண்ணத்தில் வார்த்து, அதை வெளியே கர்வாலிமரத்தின் கீழிருக்கிற அவரிடத்தில் கொண்டுவந்து வைத்தான். 20 அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின்மேல் வைத்து ஆணத்தை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான். 21 அப்பொழுது கர்த்தருடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் பட்சித்தது; கர்த்தரின் தூதனோவென்றால், அவன் கண்களுக்கு மறைந்துபோனார். 22 அப்பொழுது கிதியோன், அவர் கர்த்தருடைய தூதன் என்று கண்டு: ஐயோ, கர்த்தரான ஆண்டவரே, நான் கர்த்தருடைய தூதனை முகமுகமாய்க் கண்டேனே என்றான். 23 அதற்குக் கர்த்தர்: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார். 24 அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்; அது இந்நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது. 25 அன்று ராத்திரியிலே கர்த்தர் அவனை நோக்கி: நீ உன் தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழு வயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன் தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருக்கிற தோப்பை வெட்டிப்போட்டு, 26 இந்தக் கற்பாறை உச்சியிலே பாங்கான ஒரு இடத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டுவந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின்மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடக்கடவாய் என்றார். 27 அப்பொழுது கிதியோன், தன் வேலையாட்களில் பத்துப்பேரைச் சேர்த்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே செய்தான்; அவன் தன் தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனுஷருக்கும் பயப்பட்டபடியினாலே, அதைப் பகலிலே செய்யாமல், இரவிலே செய்தான். 28 அந்த ஊர் மனுஷர் காலமே எழுந்திருந்தபோது, இதோ, பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டதும், அதின் அருகேயிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டதும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின்மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டதுமாயிருக்க அவர்கள் கண்டு; 29 ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள். 30 அப்பொழுது ஊரார் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டுவா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகேயிருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள். 31 யோவாஸ் தனக்கு விரோதமாக நிற்கிற அனைவரையும் பார்த்து: நீங்களா பாகாலுக்காக வழக்காடுவீர்கள்? நீங்களா அதை இரட்சிப்பீர்கள்? அதற்காக வழக்காடுகிறவன் இன்று காலையிலேதானே சாகக்கடவன்; அது தேவனானால் தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம், அது தானே தனக்காக வழக்காடட்டும் என்றான். 32 தன் பலிபீடத்தைத் தகர்த்ததினிமித்தம் பாகால் அவனோடே வழக்காடட்டும் என்று சொல்லி, அந்நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பேரிடப்பட்டது. 33 மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கத்திப் புத்திரர் யாவரும் ஏகமாய்க் கூடி, ஆற்றைக் கடந்துவந்து, யெஸ்ரயேல் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினார்கள். 34 அப்பொழுது கர்த்தருடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியரைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து, 35 மனாசே நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி, அவர்களையும் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து, ஆசேர், செபுலோன், நப்தலி நாடுகளிலும் ஆட்களை அனுப்பினான்; அவர்களும் அவனுக்கு எதிர்கொண்டு வந்தார்கள். 36 அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: தேவரீர் சொன்னபடி என் கையினாலே இஸ்ரவேலை இரட்சிக்கவேண்டுமானால், 37 இதோ, நான் மயிருள்ள ஒரு தோலைக் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல்மாத்திரம் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என் கையினால் இரட்சிப்பீர் என்று அதினாலே அறிவேன் என்றான். 38 அப்படியே ஆயிற்று. அவன் மறுநாள் காலமே எழுந்திருந்து, தோலைக் கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான். 39 அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒருவிசைமாத்திரம் பேசுகிறேன், உமது கோபம் என்மேல் மூளாதிருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரேவிசை சோதனைபண்ணட்டும்; தோல்மாத்திரம் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான். 40 அப்படியே தேவன் அன்று ராத்திரி செய்தார்; தோல்மாத்திரம் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.

நியாயாதிபதிகள் 7

1 அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த ஜனங்கள் யாவரும் காலமே எழுந்து புறப்பட்டு, ஆரோத் என்னும் நீரூற்றின் கிட்டப் பாளயமிறங்கினார்கள்; மீதியானியரின் பாளயம் அவனுக்கு வடக்கே மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது. 2 அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நான் மீதியானியரை உன்னோடிருக்கிற ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு அவர்கள் மிகுதியாயிருக்கிறார்கள்; என் கை என்னை ரட்சித்தது என்று இஸ்ரவேல் எனக்கு விரோதமாக வீம்பு பேசுகிறதற்கு இடமாகும். 3 ஆகையால் பயமும் திகிலும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயாத் மலைகளிலிருந்து விரைவாய் ஓடிப்போகக்கடவன் என்று, நீ ஜனங்களின் செவிகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்றார்; அப்பொழுது ஜனத்தில் இருபத்தீராயிரம் பேர் திரும்பிப் போய்விட்டார்கள்; பதினாயிரம்பேர் மீதியாயிருந்தார்கள். 4 கர்த்தர் கிதியோனை நோக்கி: ஜனங்கள் இன்னும் அதிகம், அவர்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப்பண்ணு; அங்கே அவர்களைப் பரிட்சித்துக்காட்டுவேன்; உன்னோடேகூட வரலாம் என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடேகூட வரக்கடவன்; உன்னோடேகூட வரலாகாது என்று நான் யாரைக் குறிக்கிறேனோ, அவன் உன்னோடேகூட வராதிருக்கக்கடவன் என்றார். 5 அப்படியே அவன் ஜனங்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப் பண்ணினான்; அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: தண்ணீரை ஒரு நாய் நக்கும் பிரகாரமாக அதைத் தன் நாவினாலே நக்குகிறவன் எவனோ அவனைத் தனியேயும், குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிகிறவன் எவனோ, அவனைத் தனியேயும் நிறுத்து என்றார். 6 தங்கள் கையால் அள்ளி, தங்கள் வாய்க்கெடுத்து, நக்கிக்கொண்டவர்களின் லக்கம் முந்நூறுபேர்; மற்ற ஜனங்களெல்லாம் தண்ணீர் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிந்தார்கள். 7 அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: நக்கிக்குடித்த அந்த முந்நூறுபேராலே நான் உங்களை இரட்சித்து, மீதியானியரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன், மற்ற ஜனங்களெல்லாரும் தங்கள் தங்கள் இடத்திற்குப் போகக்கடவர்கள் என்றார். 8 அப்பொழுது ஜனங்கள் தங்கள் கையில் தின்பண்டங்களையும் எக்காளங்களையும் எடுத்துக்கொண்டார்கள்; மற்ற இஸ்ரவேலரெல்லாரையும் தங்கள் தங்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டு, அந்த முந்நூறு பேரைமாத்திரம் வைத்துக்கொண்டான்; மீதியானியரின் சேனை அவனுக்குத் தாழ்விடமான பள்ளத்தாக்கில் இருந்தது. 9 அன்று ராத்திரி கர்த்தர் அவனை நோக்கி: நீ எழுந்து, அந்தச் சேனையினிடத்திற்குப் போ; அதை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன். 10 போகப் பயப்பட்டாயானால், முதல் நீயும் உன் வேலைக்காரனாகிய பூராவும் சேனையினிடத்திற்குப் போய், 11 அங்கே என்ன பேசுகிறார்கள் என்று கேள்; பின்பு சேனையிடத்திற்குப் போக, உன் கைகள் திடப்படும் என்றார்; அப்படியே அவனும் அவன் வேலைக்காரனாகிய பூராவும் சேனையின் முன்னணியிலே ஜாமம் காக்கிறவர்களின் இடமட்டும் போனார்கள். 12 மீதியானியரும், அமலேக்கியரும், சகல கிழக்கத்திப் புத்திரரும், வெட்டுக்கிளிகளைப் போலத் திரளாய்ப் பள்ளத்தாக்கிலே படுத்துக்கிடந்தார்கள்; அவர்களுடைய ஒட்டகங்களுக்கும் கணக்கில்லை, கடற்கரை மணலைப்போலத் திரளாயிருந்தது. 13 கிதியோன் வந்தபோது, ஒருவன் மற்றொருவனுக்கு ஒரு சொப்பனத்தைச் சொன்னான். அதாவது: இதோ ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; சுட்டிருந்த ஒரு வாற்கோதுமை அப்பம் மீதியானியரின் பாளயத்திற்கு உருண்டுவந்தது, அது கூடாரமட்டும் வந்தபோது, அதை விழத்தள்ளிக் கவிழ்த்துப்போட்டது, கூடாரம் விழுந்துகிடந்தது என்றான். 14 அப்பொழுது மற்றவன்: இது யோவாசின் குமாரனாகிய கிதியோன் என்னும் இஸ்ரவேலனுடைய பட்டயமே அல்லாமல் வேறல்ல; தேவன் மீதியானியரையும், இந்தச் சேனை அனைத்தையும் அவன் கையிலே ஒப்புக்கொடுத்தார் என்றான். 15 கிதியோன் அந்தச் சொப்பனத்தையும் அதின் வியார்த்தியையும் கேட்டபோது, அவன் பணிந்துகொண்டு, இஸ்ரவேலின் பாளயத்திற்குத் திரும்பிவந்து: எழுந்திருங்கள், கர்த்தர் மீதியானியரின் பாளயத்தை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, 16 அந்த முந்நூறுபேரை மூன்று படையாக வகுத்து, அவர்கள் ஒவ்வொருவன் கையிலும் ஒரு எக்காளத்தையும், வெறும் பானையையும், அந்தப் பானைக்குள் வைக்கும் தீவட்டியையும் கொடுத்து, 17 அவர்களை நோக்கி: நான் செய்வதைப் பார்த்து, அப்படியே நீங்களும் செய்யுங்கள். இதோ, நான் பாளயத்தின் முன்னணியில் வந்திருக்கும்போது, நான் எப்படிச் செய்கிறேனோ அப்படியே நீங்களும் செய்யவேண்டும். 18 நானும் என்னோடே இருக்கும் சகலமானபேரும் எக்காளம் ஊதும்போது, நீங்களும் பாளயத்தைச் சுற்றி எங்கும் எக்காளங்களை ஊதி, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்பீர்களாக என்று சொன்னான். 19 நடுஜாமத்தின் துவக்கத்தில், ஜாமக்காரரை மாற்றிவைத்தபின்பு, கிதியோனும் அவனோடிருந்த நூறுபேரும் அந்த ஜாமத்தின் துவக்கத்திலே பாளயத்தின் முன்னணியில் வந்து, எக்காளங்களை ஊதி, தங்கள் கையிலிருந்த பானைகளை உடைத்தார்கள். 20 மூன்று படைகளின் மனுஷரும் எக்காளங்களை ஊதி, பானைகளை உடைத்து, தீவட்டிகளைத் தங்கள் இடதுகைகளிலும், ஊதும் எக்காளங்களைத் தங்கள் வலதுகைகளிலும் பிடித்துக்கொண்டு, கர்த்தருடைய பட்டயம் கிதியோனுடைய பட்டயம் என்று சத்தமிட்டு, 21 பாளயத்தைச் சுற்றிலும் அவரவர் தங்கள் நிலையிலே நின்றார்கள்; அப்பொழுது பாளயத்தில் இருந்தவர்கள் எல்லாரும் சிதறிக் கூக்குரலிட்டு, ஓடிப்போனார்கள். 22 முந்நூறுபேரும் எக்காளங்களை ஊதுகையில், கர்த்தர் பாளயமெங்கும் ஒருவர் பட்டயத்தை ஒருவருக்கு விரோதமாய் ஓங்கப்பண்ணினார்; சேனையானது சேரோத்திலுள்ள பெத்சித்தாமட்டும், தாபாத்திற்குச் சமீபமான ஆபேல்மேகொலாவின் எல்லைமட்டும் ஓடிப்போயிற்று. 23 அப்பொழுது நப்தலி மனுஷரும், ஆசேர் மனுஷரும், மனாசேயின் சகல மனுஷருமாகிய இஸ்ரவேலர் கூடிவந்து, மீதியானியரைப் பின்தொடர்ந்துபோனார்கள். 24 கிதியோன் எப்பிராயீம் மலைகளெங்கும் ஆட்களை அனுப்பி: மீதியானியருக்கு விரோதமாயிறங்கி, பெத்தாபரா இருக்கும் யோர்தான்மட்டும் வந்து, அவர்களுக்கு முந்தித் துறைகளைக் கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லச்சொன்னான்; அப்படியே எப்பிராயீமின் மனுஷர் எல்லாரும் கூடி, பெத்தாபரா இருக்கும் யோர்தான்மட்டும் வந்து, துறைகளைக் கட்டிக்கொண்டு, 25 மீதியானியரின் இரண்டு அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் பிடித்து, ஓரேபை ஓரேப் என்னப்பட்ட கன்மலையிலும், சேபை சேப் என்னப்பட்ட ஆலையிலும் கொன்றுபோட்டு, மீதியானியரைத் துரத்தி, ஓரேப் சேப் என்பவர்களின் தலைகளை யோர்தானுக்கு இக்கரையிலிருந்த கிதியோனிடத்துக்குக் கொண்டுவந்தார்கள்.

நியாயாதிபதிகள் 8

1 அப்பொழுது எப்பிராயீம் மனுஷர் அவனை நோக்கி: நீ மீதியானியர்மேல் யுத்தம்பண்ணப்போகிறபோது, எங்களை அழைப்பிக்கவில்லையே, இப்படி நீ எங்களுக்குச் செய்தது என்ன என்று, அவனோடே பலத்த வாக்குவாதம்பண்ணினார்கள். 2 அதற்கு அவன்: நீங்கள் செய்ததற்கு நான் செய்தது எம்மாத்திரம்? அபியேஸ்ரியரின் திராட்சப்பழத்தின் முழு அறுப்பைப்பார்க்கிலும், எப்பிராயீமரின் மீதியான அறுப்பு அதிகம் அல்லவா? 3 தேவன் உங்கள் கையிலே மீதியானியரின் அதிபதிகளாகிய ஓரேபையும் சேபையும் ஒப்புக்கொடுத்தாரே; நீங்கள் செய்ததிலும் நான் செய்யக்கூடியது எம்மாத்திரம் என்றான்; இந்த வார்த்தையை அவன் சொன்னபோது, அவன்மேலிருந்த அவர்களுடைய கோபம் ஆறிற்று. 4 கிதியோன் யோர்தானுக்கு வந்தபோது, அவனும் அவனோடிருந்த முந்நூறுபேரும் அதைக் கடந்துபோய், விடாய்த்திருந்தும் (சத்துருவை) பின்தொடர்ந்தார்கள். 5 அவன் சுக்கோத்தின் மனுஷரை நோக்கி: என்னோடிருக்கிற ஜனத்திற்குச் சில அப்பங்களைக் கொடுங்கள்; அவர்கள் விடாய்த்திருக்கிறார்கள், நான் மீதியானியரின் ராஜாக்களாகிய சேபாவையும் சல்முனாவையும் பின்தொடருகிறேன் என்றான். 6 அதற்குச் சுக்கோத்தின் பிரபுக்கள்: உன் சேனைக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்றார்கள். 7 அப்பொழுது கிதியோன் அவர்களை நோக்கி: கர்த்தர் சேபாவையும் சல்முனாவையும் என் கையில் ஒப்புக்கொடுக்கும்போது, உங்கள் மாம்சத்தை வனாந்தரத்தின் முள்ளுகளாலும் நெரிஞ்சில்களாலும் கிழித்துவிடுவேன் என்று சொல்லி, 8 அவ்விடம் விட்டு, பெனூவேலுக்குப் போய், அவ்வூராரிடத்தில் அந்தப்படியே கேட்டான்; சுக்கோத்தின் மனுஷர் பிரதியுத்தரமாகச் சொன்னபடியே பெனூவேலின் மனுஷரும் அவனுக்குச் சொன்னார்கள். 9 அப்பொழுது அவன், பெனூவேலின் மனுஷரைப் பார்த்து: நான் சமாதானத்தோடே திரும்பிவரும்போது, இந்தக் கோபுரத்தை இடித்துப்போடுவேன் என்றான். 10 சேபாவும் சல்முனாவும் அவர்களோடேகூட அவர்களுடைய சேனைகளும் ஏறக்குறைய பதினையாயிரம்பேர் கர்கோரில் இருந்தார்கள்; பட்டயம் உருவத்தக்க லட்சத்து இருபதினாயிரம்பேர் விழுந்தபடியால், கிழக்கத்தியாரின் சகல சேனையிலும் இவர்கள்மாத்திரம் மீந்திருந்தார்கள். 11 கிதியோன் கூடாரங்களிலே குடியிருக்கிறவர்கள் வழியாய் நோபாகுக்கும், யொகிபெயாவுக்கும் கிழக்கே போய், அந்தச் சேனை பயமில்லை என்றிருந்தபோது, அதை முறிய அடித்தான். 12 சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள்; அவனோ அவர்களைத் தொடர்ந்து, சேபா சல்முனா என்னும் மீதியானியரின் இரண்டு ராஜாக்களையும் பிடித்து, சேனை முழுவதையும் கலங்கடித்தான். 13 யோவாசின் குமாரனாகிய கிதியோன் யுத்தம்பண்ணி, சூரியன் உதிக்கும் முன்னே திரும்பிவந்தபோது, 14 சுக்கோத்தின் மனுஷரில் ஒரு வாலிபனைப் பிடித்து, அவனிடத்தில் விசாரித்தான்; அவன் சுக்கோத்தின் பிரபுக்களும் அதின் மூப்பருமாகிய எழுபத்தேழு மனுஷரின் பேரை அவனுக்கு எழுதிக்கொடுத்தான். 15 அவன் சுக்கோத்து ஊராரிடத்தில் வந்து: இதோ, விடாய்த்திருக்கிற உன் மனுஷருக்கு நாங்கள் அப்பம் கொடுக்கிறதற்குச் சேபா சல்முனா என்பவர்களின் கை உன் கைவசமாயிற்றோ என்று நீங்கள் என்னை நிந்தித்துச் சொன்ன சேபாவும் சல்முனாவும் இங்கே இருக்கிறார்கள் என்று சொல்லி, 16 பட்டணத்தின் மூப்பரைப் பிடித்து, வனாந்தரத்தின் முள்ளுகளையும் நெரிஞ்சில்களையும் கொண்டுவந்து, அவைகளால் சுக்கோத்தின் மனுஷருக்குப் புத்திவரப்பண்ணி, 17 பெனூவேலின் கோபுரத்தை இடித்து, அவ்வூர் மனுஷரையும் கொன்றுபோட்டான். 18 பின்பு அவன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி: நீங்கள் தாபோரிலே கொன்றுபோட்ட அந்த மனுஷர் எப்படிப்பட்டவர்கள் என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: நீர் எப்படிப்பட்டவரோ அவர்களும் அப்படிப்பட்டவர்களே; ஒவ்வொருவனும் பார்வைக்கு ராஜகுமாரனைப்போலிருந்தான் என்றார்கள். 19 அப்பொழுது அவன்: அவர்கள் என் சகோதரரும் என் தாயின் பிள்ளைகளுமாயிருந்தார்கள்; அவர்களை உயிரோடே வைத்திருந்தீர்களானால், உங்களைக் கொல்லாதிருப்பேன் என்று கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி, 20 தன் மூத்தகுமாரனாகிய யெத்தேரை நோக்கி: நீ எழுந்து, இவர்களை வெட்டிப்போடு என்றான்; அந்த வாலிபன் இளைஞனானபடியால் பயந்து தன் பட்டயத்தை உருவாதிருந்தான். 21 அப்பொழுது சேபாவும் சல்முனாவும்: நீரே எழுந்து எங்கள்மேல் விழும்; மனுஷன் எப்படியோ அப்படியே அவன் பெலனும் இருக்கும் என்றார்கள்; கிதியோன் எழுந்து, சேபாவையும் சல்முனாவையும் கொன்றுபோட்டு, அவர்கள் ஒட்டகங்களின் கழுத்துகளில் இருந்த சாந்துக்காறைகளை எடுத்துக்கொண்டான். 22 அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் கிதியோனை நோக்கி: நீர் எங்களை மீதியானியர் கைக்கு நீங்கலாக்கிவிட்டபடியினால் நீரும் உம்முடைய குமாரனும், உம்முடைய குமாரனின் குமாரனும், எங்களை ஆளக்கடவீர்கள் என்றார்கள். 23 அதற்குக் கிதியோன்: நான் உங்களை ஆளமாட்டேன்; என் குமாரனும் உங்களை ஆளமாட்டான்; கர்த்தரே உங்களை ஆளுவாராக என்றான். 24 பின்பு கிதியோன் அவர்களை நோக்கி: உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன்; நீங்கள் அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். அவர்கள் இஸ்மவேலராயிருந்தபடியினால் அவர்களிடத்தில் பொன்கடுக்கன்கள் இருந்தது. 25 இஸ்ரவேலர்: சந்தோஷமாய்க் கொடுப்போம் என்று சொல்லி, ஒரு வஸ்திரத்தை விரித்து, அவரவர் கொள்ளையிட்ட கடுக்கன்களை அதிலே போட்டார்கள். 26 பிறைச் சிந்தாக்குகளும், ஆரங்களும், மீதியானியரின் ராஜாக்கள் போர்த்துக்கொண்டிருந்த இரத்தாம்பரங்களும், அவர்களுடைய ஒட்டகங்களின் கழுத்துகளிலிருந்த சரப்பணிகளும் அல்லாமல், அவன் கேட்டு வாங்கின பொன்கடுக்கன்களின் நிறை ஆயிரத்து எழுநூறு பொன் சேக்கலின் நிறையாயிருந்தது. 27 அதினால் கிதியோன் ஒரு ஏபோத்தை உண்டாக்கி, அதைத் தன் ஊரான ஒப்ராவிலே வைத்தான்; இஸ்ரவேலரெல்லாரும் அதைப் பின்பற்றிச் சோரம்போனார்கள்; அது கிதியோனுக்கும் அவன் வீட்டாருக்கும் கண்ணியாயிற்று. 28 இந்தப்பிரகாரம் மீதியானியர் திரும்ப தலையெடுக்கக்கூடாதபடிக்கு, இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள்; தேசமானது கிதியோனின் நாட்களில் நாற்பதுவருஷம் அமைதலாயிருந்தது. 29 யோவாசின் குமாரனாகிய யெருபாகால் போய், தன் வீட்டிலே வாசமாயிருந்தான். 30 கிதியோனுக்கு அநேகம் ஸ்திரீகள் இருந்தார்கள்; அவனுடைய கர்ப்பப்பிறப்பான குமாரர் எழுபதுபேர். 31 சீகேமிலிருந்த அவனுடைய மறுமனையாட்டியும் அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு அபிமெலேக்கு என்று பேரிட்டான். 32 பின்பு யோவாசின் குமாரனாகிய கிதியோன் நல்ல விருத்தாப்பியத்திலே மரித்து, ஒப்ராவிலே தன் தகப்பனாகிய யோவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான். 33 கிதியோன் மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் திரும்பவும் பாகால்களைப் பின்பற்றிச் சோரம்போய், பாகால்பேரீத்தைத் தங்களுக்குத் தேவனாக வைத்துக்கொண்டார்கள். 34 இஸ்ரவேல் புத்திரர் தங்களைச் சுற்றிலுமிருந்த தங்கள் எல்லாச் சத்துருக்களின் கையினின்றும் தங்களை இரட்சித்த தங்கள் தேவனாகிய கர்த்தரை நினையாமலும், 35 கிதியோன் என்னும் யெருபாகால் இஸ்ரவேலுக்குச் செய்த சகல நன்மைக்குந்தக்க தயவை அவன் வீட்டாருக்குப் பாராட்டாமலும் போனார்கள்.

நியாயாதிபதிகள் 9

1 யெருபாகாலின் குமாரன் அபிமெலேக்கு சீகேமிலிருக்கிற தன் தாயின் சகோதரரிடத்திற்குப் போய், அவர்களையும் தன் தாயின் தகப்பனுடைய வம்சமான அனைவரையும் நோக்கி: 2 யெருபாகாலின் குமாரர் எழுபதுபேராகிய எல்லாரும் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ, ஒருவன்மாத்திரம் உங்களை ஆளுவது உங்களுக்கு நல்லதோ என்று நீங்கள் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்கப் பேசுங்கள்; நான் உங்கள் எலும்பும் உங்கள் மாம்சமுமானவன் என்று நினைத்துக்கொள்ளுங்கள் என்றான். 3 அப்படியே அவன் தாயின் சகோதரர் சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரின் காதுகளும் கேட்க இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்காகப் பேசினார்கள்; அப்பொழுது: அவன் நம்முடைய சகோதரன் என்று அவர்கள் சொன்னதினால், அவர்கள் இருதயம் அபிமெலேக்கைப் பின்பற்றச் சாய்ந்தது. 4 அவர்கள் பாகால் பேரீத்தின் கோவிலிலிருந்து எழுபது வெள்ளிக்காசை எடுத்து அவனுக்குக் கொடுத்தார்கள்; அவைகளால் அபிமெலேக்கு வீணரும் போக்கிரிகளுமான மனுஷரைச் சேவகத்தில் வைத்தான்; அவர்கள் அவனைப் பின்பற்றினார்கள். 5 அவன் ஒப்ராவிலிருக்கிற தன் தகப்பன் வீட்டிற்குப்போய், யெருபாகாலின் குமாரராகிய தன் சகோதரர் எழுபது பேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்தான்; ஆனாலும் யெருபாகாலின் இளைய குமாரனாகிய யோதாம் ஒளித்திருந்தபடியினால் அவன் தப்பினான். 6 பின்பு சீகேமிலிருக்கிற சகல பெரிய மனுஷரும், மில்லோவின் குடும்பத்தாரனைவரும் கூடிக்கொண்டுபோய், சீகேமிலிருக்கிற உயர்ந்த கர்வாலிமரத்தண்டையிலே அபிமெலேக்கை ராஜாவாக்கினார்கள். 7 இது யோதாமுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் போய், கெரிசீம் மலையின் உச்சியில் ஏறிநின்று, உரத்தசத்தமிட்டுக் கூப்பிட்டு, அவர்களை நோக்கி: சீகேமின் பெரிய மனுஷரே, தேவன் உங்களுக்குச் செவிகொடுக்கும்படி நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள். 8 விருட்சங்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை அபிஷேகம்பண்ணும்படி போய், ஒலிவமரத்தைப் பார்த்து: நீ எங்களுக்கு ராஜாவாயிரு என்றது. 9 அதற்கு ஒலிவமரம்: தேவர்களும் மனுஷரும் புகழுகிற என்னிலுள்ள என் கொழுமையை நான் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது. 10 அப்பொழுது மரங்கள் அத்திமரத்தைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது. 11 அதற்கு அத்திமரம்: நான் என் மதுரத்தையும் என் நற்கனியையும் விட்டு, மரங்களை அரசாளப்போவேனோ என்றது. 12 அப்பொழுது மரங்கள் திராட்சசெடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது. 13 அதற்குத் திராட்சச்செடி: தேவர்களையும் மனுஷரையும் மகிழப்பண்ணும் என் ரசத்தை நான் விட்டு மரங்களை அரசாளப்போவேனோ என்றது. 14 அப்பொழுது மரங்களெல்லாம் முட்செடியைப் பார்த்து: நீ வந்து, எங்களுக்கு ராஜாவாயிரு என்றது. 15 அதற்கு முட்செடியானது மரங்களைப் பார்த்து: நீங்கள் என்னை உங்களுக்கு ராஜாவாக அபிஷேகம்பண்ணுகிறது மெய்யானால், என் நிழலிலே வந்தடையுங்கள்; இல்லாவிட்டால் முட்செடியிலிருந்து அக்கினி புறப்பட்டு லீபனோனின் கேதுருமரங்களைப் பட்சிக்கக்கடவது என்றது. 16 என் தகப்பன் உங்களுக்காக யுத்தம்பண்ணி, தன் ஜீவனை எண்ணாமற்போய், உங்களை மீதியானியரின் கையினின்று இரட்சித்தார். 17 நீங்களோ இன்று என் தகப்பனுடைய குடும்பத்துக்கு விரோதமாய் எழும்பி, அவருடைய குமாரரான எழுபதுபேரையும் ஒரே கல்லின்மேல் கொலைசெய்து, அவருடைய வேலைக்காரியின் மகனாகிய அபிமெலேக்கு உங்கள் சகோதரனானபடியினால், அவனைச் சீகேம் பட்டணத்தாருக்கு ராஜாவாக்கினீர்கள். 18 இப்போதும் நீங்கள் அவனை ராஜாவாக்கின செய்கை உண்மையும் உத்தமமுமான செய்கையாயிருக்குமானால், 19 நீங்கள் யெருபாகாலையும் அவர் குடும்பத்தாரையும் நன்மையாக நடத்தி, அவர் கைகளின் செய்கைக்குத்தக்கதை அவருக்குச் செய்து, இப்படி இந்நாளில் அவரையும் அவர் குடும்பத்தாரையும் நடத்தினது உண்மையும் உத்தமுமாயிருக்குமானால், அபிமெலேக்கின்மேல் நீங்களும் சந்தோஷமாயிருங்கள்; உங்கள்மேல் அவனும் சந்தோஷமாயிருக்கட்டும். 20 இல்லாவிட்டால் அபிமெலேக்கிலிருந்து அக்கினி புறப்பட்டு, சீகேம் பட்டணத்தாரையும், மில்லோவின் குடும்பத்தாரையும் பட்சிக்கவும், சீகேம் பட்டணத்தாரிலும் மில்லோவின் குடும்பத்தாரிலுமிருந்து அக்கினி புறப்பட்டு, அபிமெலேக்கைப் பட்சிக்கவும்கடவது என்று யோதாம் சொல்லி, 21 தன் சகோதரனாகிய அபிமெலேக்குக்குப் பயந்து, தப்பியோடி, பேயேருக்குப் போய், அங்கே குடியிருந்தான். 22 அபிமெலேக்கு இஸ்ரவேலை மூன்று வருஷம் அரசாண்டபின்பு, 23 அபிமெலேக்குக்கும் சீகேமின் பெரிய மனுஷருக்கும் நடுவே பொல்லாப்பு உண்டாக்கும் ஆவியைத் தேவன் வரப்பண்ணினார். 24 யெருபாகாலின் எழுபது குமாரருக்குச் செய்யப்பட்ட கொடுமை வந்து பலித்து, அவர்களுடைய இரத்தப்பழி அவர்களைக் கொன்ற அவர்களுடைய சகோதரனாகிய அபிமெலேக்கின்மேலும், தன் சகோதரரைக் கொல்ல அவன் கைகளைத் திடப்படுத்தின சீகேம் மனுஷர் மேலும் சுமரும்படியாகச் சீகேமின் பெரிய மனுஷர் அபிமெலேக்குக்கு இரண்டகம்பண்ணினார்கள். 25 சீகேமின் மனுஷர் மலைகளின் உச்சியில் அவனுக்குப் பதிவிருக்கிறவர்களை வைத்தார்கள்; அவர்கள் தங்கள் அருகே வழிநடந்துபோகிற யாவரையும் கொள்ளையிட்டார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டது. 26 ஏபேதின் குமாரனாகிய காகால் தன் சகோதரரோடே சீகேமுக்குள் போனான்; சீகேமின் பெரிய மனுஷர் அவனை நம்பி, 27 வெளியே புறப்பட்டு, தங்கள் திராட்சத்தோட்டங்களின் பழங்களை அறுத்து, ஆலையாட்டி, ஆடிப்பாடி, தங்கள் தேவனின் வீட்டிற்குள் போய், புசித்துக் குடித்து, அபிமெலேக்கை சபித்தார்கள். 28 அப்பொழுது ஏபேதின் குமாரனாகிய காகால்: அபிமெலேக்கு யார்? சீகேம் யார்? நாம் அவனைச் சேவிக்கவேண்டியதென்ன? அவன் யெருபாகாலின் மகன் அல்லவா? சேபூல் அவனுடைய காரியக்காரன் அல்லவா? சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் மனுஷரையே சேவியுங்கள்; அவனை நாங்கள் சேவிப்பானேன்? 29 இந்த ஜனங்கள்மாத்திரம் என் கைக்குள் இருக்கட்டும்; நான் அபிமெலேக்கைத் துரத்திவிடுவேன் என்றான். உன் சேனையைப் பெருகப்பண்ணிப் புறப்பட்டுவா என்று, அவன் அபிமெலேக்குக்குச் சொல்லியனுப்பினான். 30 பட்டணத்தின் அதிகாரியாகிய சேபூல் ஏபேதின் குமாரனாகிய காகாலின் வார்த்தைகளைக் கேட்டபோது, கோபமூண்டு, 31 இரகசியமாய் அபிமெலேக்கினிடத்துக்கு ஆட்களை அனுப்பி: இதோ, ஏபேதின் குமாரனாகிய காகாலும் அவனுடைய சகோதரரும் சீகேமுக்கு வந்திருக்கிறார்கள்; பட்டணத்தை உமக்கு விரோதமாக எழுப்புகிறார்கள். 32 ஆகையால் நீர் உம்மோடிருக்கும் ஜனங்களோடேகூட இரவில் எழுந்துவந்து வெளியிலே பதிவிருந்து, 33 காலமே சூரியன் உதிக்கையில் எழும்பி, பட்டணத்தின்மேல் விழுந்து, அவனும் அவனோடிருக்கிற ஜனங்களும் உமக்கு எதிரே புறப்படும்போது, உம்முடைய கைக்கு நேரிடுகிறபடி அவனுக்குச் செய்யும் என்று சொல்லியனுப்பினான். 34 அப்படியே அபிமெலேக்கும், அவனோடிருந்த சகல ஜனங்களும், இரவில் எழுந்துபோய், சீகேமுக்கு விரோதமாக நாலு படையாகப் பதிவிருந்தார்கள். 35 ஏபேதின் குமாரன் காகால் புறப்பட்டு, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றான்; அப்பொழுது பதிவிருந்த அபிமெலேக்கு தன்னோடிருக்கிற ஜனங்களோடேகூட எழும்பிவந்தான். 36 காகால் அந்த ஜனங்களைக் கண்டு: இதோ, மலைகளின் உச்சிகளிலிருந்து ஜனங்கள் இறங்கிவருகிறார்கள் என்று சேபூலோடே சொன்னான். அதற்குச் சேபூல்: நீ மலைகளின் நிழலைக் கண்டு, மனுஷர் என்று நினைக்கிறாய் என்றான். 37 காகாலோ திரும்பவும்: இதோ, ஜனங்கள் தேசத்தின் மேட்டிலிருந்து இறங்கிவந்து, ஒரு படை மெயொனெனீமின் கர்வாலிமரத்தின் வழியாய் வருகிறது என்றான். 38 அதற்குச் சேபூல்: அபிமெலேக்கை நாம் சேவிக்கிறதற்கு அவன் யார் என்று நீ சொன்ன உன் வாய் இப்பொழுது எங்கே? நீ நிந்தித்த ஜனங்கள் அவர்கள் அல்லவா? இப்பொழுது நீ புறப்பட்டு, அவர்களோடே யுத்தம்பண்ணு என்றான். 39 அப்பொழுது காகால் சீகேமின் மனுஷருக்கு முன்பாகப் புறப்பட்டுப்போய், அபிமெலேக்கோடே யுத்தம்பண்ணினான். 40 அபிமெலேக்கு அவனைத் துரத்த, அவன் அவனுக்கு முன்பாக ஓடினான்; பட்டணவாசல்மட்டும் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள். 41 அபிமெலேக்கு அருமாவில் இருந்துவிட்டான்; சேபூல் காகாலையும் அவன் சகோதரரையும் சீகேமிலே குடியிராதபடிக்குத் துரத்திவிட்டான். 42 மறுநாளிலே ஜனங்கள் வெளியிலே வயலுக்குப் போனார்கள்; அது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது, 43 அவன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு, அவர்களை மூன்று படையாக வகுத்து, வெளியிலே பதிவிருந்து, அந்த ஜனங்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டு வருகிறதைக் கண்டு, அவர்கள்மேல் எழும்பி, அவர்களை வெட்டினான். 44 அபிமெலேக்கும் அவனோடிருந்த படையும் பாய்ந்துவந்து, பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றார்கள்; மற்ற இரண்டு படைகளோ வெளியிலிருக்கிற யாவர்மேலும் விழுந்து, அவர்களை வெட்டினார்கள். 45 அபிமெலேக்கு அந்நாள் முழுதும் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, பட்டணத்தைப் பிடித்து, அதிலிருந்த ஜனங்களைக் கொன்று, பட்டணத்தை இடித்து விட்டு, அதில் உப்பு விதைத்தான். 46 அதைச் சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் கேள்விப்பட்டபோது, அவர்கள் பேரீத் தேவனுடைய கோவில் அரணுக்குள் பிரவேசித்தார்கள். 47 சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் அங்கே கூடியிருக்கிறது அபிமெலேக்குக்கு அறிவிக்கப்பட்டபோது, 48 அபிமெலேக்கு தன்னோடிருந்த எல்லா ஜனங்களோடுங்கூடச் சல்மோன் மலையில் ஏறி, தன் கையிலே கோடரியைப் பிடித்து, ஒரு மரத்தின் கொம்பை வெட்டி, அதை எடுத்து, தன் தோளின்மேல் போட்டுக்கொண்டு, தன்னோடிருந்த ஜனங்களை நோக்கி: நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறீர்களே, நீங்களும் தீவிரமாய் என்னைப்போலச் செய்யுங்கள் என்றான். 49 அப்படியே சகல ஜனங்களும் அவரவர் ஒவ்வொரு கொம்பை வெட்டி, அபிமெலேக்குக்குப் பின்சென்று, அவைகளை அந்த அரணுக்கு அருகே போட்டு, அக்கினி கொளுத்தி அந்த அரணைச் சுட்டுப்போட்டார்கள்; அதினால் புருஷரும் ஸ்திரீகளும் ஏறக்குறைய ஆயிரம்பேராகிய சீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் செத்தார்கள். 50 பின்பு அபிமெலேக்கு தேபேசுக்குப்போய், அதற்கு விரோதமாய்ப் பாளயமிறங்கி, அதைப் பிடித்தான். 51 அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்த துருக்கம் இருந்தது; அங்கே சகல புருஷரும் ஸ்திரீகளும் பட்டணத்து மனுஷர் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, துருக்கத்தின்மேல் ஏறினார்கள். 52 அபிமெலேக்கு அந்தத் துருக்கம்மட்டும் வந்து, அதின்மேல் யுத்தம்பண்ணி, துருக்கத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படிக்கு, அதின் கிட்டச் சேர்ந்தான். 53 அப்பொழுது ஒரு ஸ்திரீ ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை அபிமெலேக்குடைய தலையின்மேல் போட்டாள்; அது அவன் மண்டையை உடைத்தது. 54 உடனே அவன் தன் ஆயுததாரியாகிய வேலைக்காரனைக் கூப்பிட்டு: ஒரு ஸ்திரீ என்னைக் கொன்றாள் என்று என்னைக்குறித்துச் சொல்லாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் கொன்றுபோடு என்று அவனோடே சொன்னான்; அப்படியே அவன் வேலைக்காரன் அவனை உருவக் குத்தினான், அவன் செத்துப்போனான். 55 அபிமெலேக்குச் செத்துப்போனதை இஸ்ரவேல் மனுஷர் கண்டபோது, அவர்கள் தங்கள்தங்கள் இடங்களுக்குப் போய்விட்டார்கள். 56 இப்படியே அபிமெலேக்கு தன்னுடைய எழுபது சகோதரரைக் கொலைசெய்ததினால், தன் தகப்பனுக்குச் செய்த பொல்லாப்பை தேவன் அவன்மேல் திரும்பும்படி செய்தார். 57 சீகேம் மனுஷர் செய்த எல்லாப் பொல்லாப்பையும் தேவன் அவர்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்தார்; யெருபாகாலின் குமாரன் யோதாமின் சாபம் அவர்களுக்குப் பலித்தது.

நியாயாதிபதிகள் 10

1 அபிமெலேக்குக்குப்பின்பு, தோதோவின் மகனாகிய பூவாவின் குமாரன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை இரட்சிக்க எழும்பினான்; அவன் எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான். 2 அவன் இஸ்ரவேலை இருபத்துமூன்று வருஷம் நியாயம் விசாரித்து, பின்பு மரித்து, சாமீரிலே அடக்கம்பண்ணப்பட்டான். 3 அவனுக்குப்பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான். 4 முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது குமாரர் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்களென்கிற பேர் இருக்கிறது. 5 யாவீர் மரித்து, காமோனிலே அடக்கம்பண்ணப்பட்டான். 6 இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப் போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள். 7 அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைப் பெலிஸ்தர் கையிலும், அம்மோன் புத்திரர் கையிலும் விற்றுப்போட்டார். 8 அவர்கள் அந்த வருஷம் முதற்கொண்டு பதினெட்டு வருஷமாய் யோர்தானுக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியரின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் புத்திரரையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள். 9 அம்மோன் புத்திரர் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தார்மேலும் யுத்தம்பண்ண யோர்தானைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர் மிகவும் நெருக்கப்பட்டார்கள். 10 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்கள் தேவனைவிட்டு, பாகால்களைச் சேவித்தோம் என்றார்கள். 11 கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எகிப்தியரும், எமோரியரும், அம்மோன் புத்திரரும், பெலிஸ்தியரும், 12 சீதோனியரும், அமலேக்கியரும், மாகோனியரும், உங்களை ஒடுக்கும் சமயங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கவில்லையா? 13 அப்படியிருந்தும் நீங்கள் என்னைவிட்டு, அந்நிய தேவர்களைச் சேவித்தீர்கள்; ஆகையால் இனி உங்களை இரட்சியேன். 14 நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தேவர்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்கள் ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார். 15 இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமாத்திரம் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி, 16 அந்நிய தேவர்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, கர்த்தருக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் வருத்தத்தைப் பார்த்து மனதுருகினார். 17 அம்மோன் புத்திரர் கூட்டங்கூடி, கீலேயாத்திலே பாளயமிறங்கினார்கள்; இஸ்ரவேல் புத்திரரும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே பாளயமிறங்கினார்கள். 18 அப்பொழுது கீலேயாத்தின் ஜனங்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோன் புத்திரர்மேல் முந்தி யுத்தம்பண்ணப்போகிற மனுஷன் யார்? அவனே கீலேயாத்தின் குடிகளுக்கெல்லாம் தலைவனாயிருப்பான் என்றார்கள்.

நியாயாதிபதிகள் 11

1 கீலேயாத்தியனான யெப்தா பலத்த பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் பரஸ்திரீயின் குமாரன்; கிலெயாத் அவனைப் பெற்றான். 2 கிலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் குமாரர்களைப் பெற்றாள்; அவன் மனைவி பெற்ற குமாரர் பெரியவர்களான பின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லை; நீ அந்நிய ஸ்திரீயின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள். 3 அப்பொழுது யெப்தா: தன் சகோதரரை விட்டு ஓடிப்போய், தோப்தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனுஷர் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடேகூட யுத்தத்திற்குப் போவார்கள். 4 சிலநாளைக்குப்பின்பு, அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ணினார்கள். 5 அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ணும்போது கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைத் தோப்தேசத்திலிருந்து அழைத்துவரப்போய், 6 யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ண எங்கள் சேனாபதியாயிருக்க வேண்டும் என்றார்கள். 7 அதற்கு யெப்தா கீலேயாத்தின் மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து நேரிட்டிருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான். 8 அதற்குக் கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களுடனேகூட வந்து, அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ணி, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாயிருக்கவேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடத்தில் வந்தோம் என்றார்கள். 9 அதற்கு யெப்தா: அம்மோன் புத்திரரோடே யுத்தம்பண்ண, நீங்கள் என்னைத் திரும்ப அழைத்துப்போனபின்பு, கர்த்தர் அவர்களை என் முன்னிலையாய் ஒப்புக்கொடுத்தால், என்னை உங்களுக்குத் தலைவனாய் வைப்பீர்களா என்று கீலேயாத்தின் மூப்பரைக் கேட்டான். 10 கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைப் பார்த்து: நாங்கள் உன் வார்த்தையின்படியே செய்யாவிட்டால், கர்த்தர் நமக்கு நடுநின்று கேட்பாராக என்றார்கள். 11 அப்பொழுது யெப்தா கீலேயாத்தின் மூப்பரோடே கூடப்போனான்; ஜனங்கள் அவனைத் தங்கள்மேல் தலைவனும் சேனாபதியுமாக வைத்தார்கள். யெப்தா தன் காரியங்களையெல்லாம் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியிலே சொன்னான். 12 பின்பு யெப்தா அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நீ என் தேசத்தில் எனக்கு விரோதமாக யுத்தம்பண்ண வருகிறதற்கு, எனக்கும் உனக்கும் என்ன வழக்கு இருக்கிறது என்று கேட்கச்சொன்னான். 13 அம்மோன் புத்திரரின் ராஜா யெப்தாவின் ஸ்தானாபதிகளை நோக்கி: இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது, அர்னோன் துவக்கி யாபோக்மட்டும், யோர்தான்மட்டும் இருக்கிற என் தேசத்தைக் கட்டிக்கொண்டார்களே; இப்பொழுது அதை எனக்குச் சமாதானமாய்த் திரும்பக் கொடுத்துவிடவேண்டும் என்று சொல்லுங்கள் என்றான். 14 யெப்தா மறுபடியும் அம்மோன் புத்திரரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி, அவனுக்குச் சொல்லச்சொன்னதாவது: 15 யெப்தா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலர் மோவாபியரின் தேசத்தையாகிலும், அம்மோன் புத்திரரின் தேசத்தையாகிலும் கட்டிக்கொண்டதில்லையே. 16 இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வருகிறபோது, வனாந்தரத்தில் சிவந்த சமுத்திரமட்டும் நடந்து, பின்பு காதேசுக்கு வந்து, 17 இஸ்ரவேலர் ஏதோமின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்துவழியாய்க் கடந்துபோகட்டும் என்று சொல்லச்சொன்னார்கள்; அதற்கு ஏதோமின் ராஜா செவிகொடுக்கவில்லை; அப்படியே மோவாபின் ராஜாவினிடத்திற்கும் அனுப்பினார்கள்; அவனும் சம்மதிக்கவில்லை. ஆதலால் இஸ்ரவேலர் காதேசிலே தரித்திருந்து, 18 பின்பு வனாந்தரவழியாய் நடந்து ஏதோம் தேசத்தையும் மோவாப் தேசத்தையும் சுற்றிப்போய், மோவாபின் தேசத்திற்குக் கிழக்கேவந்து, மோவாபின் எல்லைக்குள் பிரவேசியாமல், மோவாபின் எல்லையான அர்னோன் நதிக்கு அப்பாலே பாளயமிறங்கினார்கள். 19 அப்பொழுது இஸ்ரவேலர் எஸ்போனில் ஆளுகிற சீகோன் என்னும் எமோரியரின் ராஜாவினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நாங்கள் உன் தேசத்து வழியாய் எங்கள் ஸ்தானத்திற்குக் கடந்துபோக இடங்கொடு என்று சொல்லச்சொன்னார்கள். 20 சீகோன் இஸ்ரவேலரை நம்பாததினால், தன் எல்லையைக் கடந்துபோகிறதற்கு இடங்கொடாமல் தன் ஜனங்களையெல்லாம் கூட்டி, யாகாசிலே பாளயமிறங்கி, இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினான். 21 அப்பொழுது இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சீகோனையும் அவனுடைய எல்லா ஜனங்களையும் இஸ்ரவேலரின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களை முறிய அடித்தார்கள்; அப்படியே இஸ்ரவேலர் அந்த தேசத்திலே குடியிருந்த எமோரியரின் சீமையையெல்லாம் பிடித்து, அர்னோன் துவக்கி, 22 யாபோக்மட்டும், வனாந்தரம்துவக்கி யோர்தான்மட்டும் இருக்கிற எமோரியரின் எல்லையையெல்லாம் சுதந்தரமாய்க் கட்டிக்கொண்டார்கள். 23 இப்படி இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எமோரியரைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாகத் துரத்தியிருக்க, நீர் அந்த தேசத்தைக் கட்டிக்கொள்ளத்தகுமா? 24 உம்முடைய தேவனாகிய காமோஸ் உமக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தை நீர் கட்டிக்கொள்ளமாட்டீரோ? அப்படியே எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு முன்பாகத் துரத்துகிறவர்களின் தேசத்தையெல்லாம் நாங்களும் கட்டிக்கொள்ளுகிறோம். 25 மேலும் சிப்போரின் குமாரனாகிய பாலாக் என்னும் மோவாபின் ராஜாவைப்பார்க்கிலும் உமக்கு அதிக நியாயம் உண்டோ? அவன் இஸ்ரவேலோடே எப்போதாகிலும் வழக்காடினானா? எப்போதாகிலும் அவர்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினானா? 26 இஸ்ரவேலர் எஸ்போனிலும் அதின் கிராமங்களிலும், ஆரோவேரிலும் அதின் கிராமங்களிலும், அர்னோன் நதியருகான எல்லா ஊர்களிலும், முந்நூறு வருஷம் குடியிருக்கையில், இவ்வளவுகாலமாய் நீங்கள் அதைத் திருப்பிக்கொள்ளாதே போனதென்ன? 27 நான் உமக்கு விரோதமாய்க் குற்றம் செய்யவில்லை; நீர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறதினால் நீர்தான் எனக்கு அநியாயம் செய்கிறீர்; நியாயாதிபதியாகிய கர்த்தர் இன்று இஸ்ரவேல் புத்திரருக்கும் அம்மோன் புத்திரருக்கும் நடுநின்று நியாயம் தீர்க்கக்கடவர் என்று சொல்லி அனுப்பினான். 28 ஆனாலும் அம்மோன் புத்திரரின் ராஜா தனக்கு யெப்தா சொல்லியனுப்பின வார்த்தைகளுக்குச் செவிகொடாதே போனான். 29 அப்பொழுது கர்த்தருடைய ஆவி யெப்தாவின்மேல் இறங்கினார்; அவன் கீலேயாத்தையும் மனாசே நாட்டையும் கடந்துபோய், கீலேயாத்திலிருக்கிற மிஸ்பாவுக்கு வந்து, அங்கேயிருந்து அம்மோன் புத்திரருக்கு விரோதமாகப் போனான். 30 அப்பொழுது யெப்தா கர்த்தருக்கு ஒரு பொருத்தனையைப் பண்ணி: தேவரீர் அம்மோன் புத்திரரை என் கையில் ஒப்புக்கொடுக்கவே ஒப்புக்கொடுத்தால், 31 நான் அம்மோன் புத்திரரிடத்திலிருந்து சமாதானத்தோடே திரும்பிவரும்போது, என் வீட்டு வாசற்படியிலிருந்து எனக்கு எதிர்கொண்டு வருவது எதுவோ அது கர்த்தருக்கு உரியதாகும், அதைச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்துவேன் என்றான். 32 யெப்தா அம்மோன் புத்திரரின்மேல் யுத்தம்பண்ண, அவர்களுக்கு விரோதமாய்ப் புறப்பட்டுப்போனான்; கர்த்தர் அவர்களை அவன் கையில் ஒப்புக்கொடுத்தார். 33 அவன் அவர்களை ஆரோவேர் துவக்கி மின்னித்திற்குப் போகுமட்டும், திராட்சத்தோட்டத்து நிலங்கள்வரைக்கும், மகா சங்காரமாய் முறிய அடித்து, இருபது பட்டணங்களைப் பிடித்தான்; இப்படி அம்மோன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் தாழ்த்தப்பட்டார்கள். 34 யெப்தா மிஸ்பாவிலிருக்கிற தன் வீட்டுக்கு வருகிறபோது, இதோ, அவன் குமாரத்தி தம்புரு வாசித்து நடனஞ்செய்து, அவனுக்கு எதிர்கொண்டு வந்தாள்; அவள் அவனுக்கு ஒரே பிள்ளையானவள்; அவளையல்லாமல் அவனுக்குக் குமாரனும் இல்லை குமாரத்தியும் இல்லை. 35 அவன் அவளைக் கண்டவுடனே தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஐயோ! என் மகளே, என்னை மிகவும் மனமடியவும் கலங்கவும் பண்ணுகிறாய்; நான் கர்த்தரை நோக்கி என் வாயைத் திறந்து சொல்லிவிட்டேன்; அதை நான் மாற்றக்கூடாது என்றான். 36 அப்பொழுது அவள்: என் தகப்பனே, நீர் கர்த்தரை நோக்கி உம்முடைய வாயைத் திறந்து பேசினீரல்லவோ? அம்மோன் புத்திரராகிய உம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டும் ஜெயத்தைக் கர்த்தர் உமக்குக் கட்டளையிட்டபடியினால், உம்முடைய வாயிலிருந்து புறப்பட்டபடியே எனக்குச் செய்யும் என்றாள். 37 பின்னும் அவள் தன் தகப்பனை நோக்கி: நீர் எனக்கு ஒரு காரியம் செய்யவேண்டும்; நான் மலைகளின்மேல் போய்த் திரிந்து, நானும் என் தோழிமார்களும் என் கன்னிமையினிமித்தம் துக்கங்கொண்டாட, எனக்கு இரண்டுமாதம் தவணைகொடும் என்றாள். 38 அதற்கு அவன்: போய்வா என்று அவளை இரண்டு மாதத்திற்கு அனுப்பிவிட்டான்; அவள் தன் தோழிமார்களோடும் கூடப்போய், தன் கன்னிமையினிமித்தம் மலைகளின்மேல் துக்கங்கொண்டாடி, 39 இரண்டுமாதம் முடிந்தபின்பு, தன் தகப்பனிடத்திற்குத் திரும்பிவந்தாள்; அப்பொழுது அவன் பண்ணியிருந்த தன் பொருத்தனையின்படி அவளுக்குச் செய்தான்; அவள் புருஷனை அறியாதிருந்தாள். 40 இதினிமித்தம் இஸ்ரவேலின் குமாரத்திகள் வருஷந்தோறும் போய், நாலு நாள் கீலேயாத்தியனான யெப்தாவின் குமாரத்தியைக்குறித்துப் புலம்புவது இஸ்ரவேலிலே வழக்கமாயிற்று.

நியாயாதிபதிகள் 12

1 எப்பிராயீம் மனுஷர் ஏகமாய்க் கூடி வடக்கே புறப்பட்டுப்போய், யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடேகூட வரும்படி அழைப்பியாமல் அம்மோன் புத்திரர்மேல் யுத்தம்பண்ணப்போனதென்ன? உன் வீட்டையும் உன்னையும்கூட அக்கினியால் சுட்டுப்போடுவோம் என்றார்கள். 2 அதற்கு யெப்தா: எனக்கும் என் ஜனத்திற்கும் அம்மோன் புத்திரரோடே பெரிய வழக்கு இருக்கும்போது, நான் உங்களைக் கூப்பிட்டேன்; நீங்கள் என்னை அவர்கள் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கவில்லை. 3 நீங்கள் என்னை ரட்சிக்கவில்லை என்று நான் கண்டபோது, நான் என் ஜீவனை என் கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் புத்திரருக்கு விரோதமாய்ப் போனேன்; கர்த்தர் அவர்களை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என்மேல் யுத்தம்பண்ண, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான். 4 பின்பு யெப்தா கீலேயாத் மனுஷரையெல்லாம் கூட்டி, எப்பிராயீமரோடு யுத்தம்பண்ணினான்; எப்பிராயீமுக்கும் மனாசேக்கும் நடுவே குடியிருக்கிற கீலேயாத்தியரான நீங்கள் எப்பிராயீமைவிட்டு ஓடிப்போனவர்கள் என்று எப்பிராயீமர் சொன்னபடியினால், கீலேயாத் மனுஷர் அவர்களை முறிய அடித்தார்கள். 5 கீலேயாத்தியர் எப்பிராயீமருக்கு முந்தி யோர்தானின் துறைகளைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமரிலே தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத் மனுஷர்: நீ எப்பிராயீமனா என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்றால், 6 நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்கக்கூடாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறையிலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் நாற்பத்தீராயிரம்பேர் விழுந்தார்கள். 7 யெப்தா இஸ்ரவேலை ஆறு வருஷம் நியாயம் விசாரித்தான்; பின்பு கீலேயாத்தியனான யெப்தா மரித்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம்பண்ணப்பட்டான். 8 அவனுக்குப்பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். 9 அவனுக்கு முப்பது குமாரரும் முப்பது குமாரத்திகளும் இருந்தார்கள்; முப்பது குமாரத்திகளையும் புறத்திலே விவாகம்பண்ணிக்கொடுத்து, தன் குமாரருக்கு முப்பது பெண்களைப் புறத்திலே கொண்டான்; அவன் இஸ்ரவேலை ஏழு வருஷம் நியாயம் விசாரித்தான். 10 பின்பு இப்சான் மரித்து, பெத்லெகேமிலே அடக்கம்பண்ணப்பட்டான். 11 அவனுக்குப்பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்; அவன் பத்து வருஷம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். 12 பின்பு செபுலோனியனாகிய ஏலோன் மரித்து, செபுலோன் தேசமான ஆயலோன் ஊரில் அடக்கம்பண்ணப்பட்டான். 13 அவனுக்குப்பின்பு இல்லேலின் குமாரனாகிய பிரத்தோனியனான அப்தோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். 14 அவனுக்கு நாற்பது குமாரரும் முப்பது பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் எழுபது கழுதைகளின்மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருஷம் நியாயம் விசாரித்தான். 15 பின்பு பிரத்தோனியனான இல்லேலின் குமாரனாகிய அப்தோன் மரித்து, எப்பிராயீம் தேசத்தில் அமலேக்கியர் மலையிலிருக்கிற பிரத்தோனிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

நியாயாதிபதிகள் 13

1 இஸ்ரவேல் புத்திரர் மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தபடியால், கர்த்தர் அவர்களை நாற்பது வருஷமளவும் பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுத்தார். 2 அப்பொழுது தாண் வம்சத்தானாகிய சோரா ஊரானான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பேர் மனோவா; அவன் மனைவி பிள்ளைபெறாத மலடியாயிருந்தாள். 3 கர்த்தருடைய தூதனானவர் அந்த ஸ்திரீக்குத் தரிசனமாகி, அவளை நோக்கி: இதோ, பிள்ளைபெறாத மலடியான நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய். 4 ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு. 5 நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது; அந்தப் பிள்ளை பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான்; அவன் இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கத் தொடங்குவான் என்றார். 6 அப்பொழுது அந்த ஸ்திரீ தன் புருஷனிடத்தில் வந்து: தேவனுடைய மனுஷன் ஒருவர் என்னிடத்தில் வந்தார்; அவருடைய சாயல் தேவனுடைய தூதரின் சாயலைப்போல மகா பயங்கரமாயிருந்தது; எங்கேயிருந்து வந்தீர் என்று நான் அவரிடத்தில் கேட்கவில்லை; அவர் தம்முடைய நாமத்தை எனக்குச் சொல்லவுமில்லை. 7 அவர் என்னை நோக்கி: இதோ, நீ கர்ப்பந்தரித்து, ஒரு குமாரனைப் பெறுவாய்; ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானது ஒன்றும் புசியாமலும் இரு; அந்தப் பிள்ளை பிறந்தது முதல் தன் மரணநாள்மட்டும் தேவனுக்கென்று நசரேயனாயிருப்பான் என்று சொன்னார் என்றாள். 8 அப்பொழுது மனோவா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனுஷன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து, பிறக்கப்போகிற பிள்ளைக்காக நாங்கள் செய்யவேண்டியதை எங்களுக்குக் கற்பிப்பாராக என்று வேண்டிக்கொண்டான். 9 தேவன் மனோவாவின் சத்தத்துக்குச் செவிகொடுத்தார்; அந்த ஸ்திரீ வயல்வெளியில் இருக்கும்போது தேவனுடைய தூதனானவர் திரும்பவும் அவளிடத்தில் வந்தார்; அப்பொழுது அவள் புருஷனாகிய மனோவா அவளோடே இருக்கவில்லை. 10 ஆகையால் அந்த ஸ்திரீ சீக்கிரமாய் ஓடி, இதோ, அன்று என்னிடத்தில் வந்தவர் எனக்குத் தரிசனமானார் என்று தன் புருஷனுக்கு அறிவித்தாள். 11 அப்பொழுது மனோவா எழுந்திருந்து, தன் மனைவியின் பின்னாலே போய், அவரிடத்துக்கு வந்து: இந்த ஸ்திரீயோடே பேசினவர் நீர்தானா என்று அவரிடத்தில் கேட்டான்; அவர் நான்தான் என்றார். 12 அப்பொழுது மனோவா: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்கவேண்டும், அதை எப்படி நடத்தவேண்டும் என்று கேட்டான். 13 கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நான் ஸ்திரீயோடே சொன்ன யாவற்றிற்கும், அவள் எச்சரிக்கையாயிருந்து, 14 திராட்சச்செடியிலே உண்டாகிறதொன்றும் சாப்பிடாமலும், திராட்சரசமும் மதுபானமும் குடியாமலும், தீட்டானதொன்றும் புசியாமலும், நான் அவளுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் கைக்கொள்ளக்கடவள் என்றார். 15 அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை உமக்காகச் சமைத்துக்கொண்டுவருமட்டும் தரித்திரும் என்றான். 16 கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான். 17 அப்பொழுது மனோவா கர்த்தருடைய தூதனை நோக்கி: நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, நாங்கள் உம்மைக் கனம்பண்ணும்படி, உம்முடைய நாமம் என்ன என்று கேட்டான். 18 அதற்குக் கர்த்தருடைய தூதனானவர்: என் நாமம் என்ன என்று நீ கேட்கவேண்டியது என்ன? அது அதிசயம் என்றார். 19 மனோவா போய், வெள்ளாட்டுக்குட்டியையும், போஜனபலியையும் கொண்டுவந்து, அதைக் கன்மலையின்மேல் கர்த்தருக்குச் செலுத்தினான்; அப்பொழுது மனோவாவும் அவன் மனைவியும் பார்த்துக்கொண்டிருக்கையில், அதிசயம் விளங்கினது. 20 அக்கினிஜுவாலை பலிபீடத்திலிருந்து வானத்திற்கு நேராக எழும்புகையில், கர்த்தருடைய தூதனானவர் பலிபீடத்தின் ஜுவாலையிலே ஏறிப்போனார்; அதை மனோவாவும் அவன் மனைவியும் கண்டு, தரையிலே முகங்குப்புற விழுந்தார்கள். 21 பின்பு கர்த்தருடைய தூதனானவர் மனோவாவுக்கும் அவன் மனைவிக்கும் காணப்படவில்லை; அப்பொழுது அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறிந்து, 22 தன் மனைவியைப் பார்த்து: நாம் தேவனைக் கண்டோம், சாகவே சாவோம் என்றான். 23 அதற்கு அவன் மனைவி: கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார், இவைகளையெல்லாம் நமக்குக் காண்பிக்கவுமாட்டார், இவைகளை நமக்கு அறிவிக்கவுமாட்டார் என்றாள். 24 பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது; கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். 25 அவன் சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளயத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் அவனை ஏவத்துவக்கினார்.

நியாயாதிபதிகள் 14

1 சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு, 2 திரும்ப வந்து, தன் தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டேன்; அவளை எனக்குக் கொள்ளவேண்டும் என்றான். 3 அப்பொழுது அவன் தாயும் அவன் தகப்பனும் அவனை நோக்கி: நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தரிடத்தில் ஒரு பெண்ணைக் கொள்ளவேண்டியதென்ன? உன் சகோதரரின் குமாரத்திகளிலும், எங்கள் ஜனமனைத்திலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன் தகப்பனை நோக்கி: அவள் என் கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே எனக்குக் கொள்ளவேண்டும் என்றான். 4 அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்; அக்காலத்திலே பெலிஸ்தர் இஸ்ரவேலை ஆண்டார்கள். 5 அப்படியே சிம்சோனும் அவன் தாயும் தகப்பனும் திம்னாத்துக்குப் போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத் ஊர் திராட்சத்தோட்டங்கள்மட்டும் வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற பாலசிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது. 6 அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன் தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை. 7 அவன் போய் அந்தப் பெண்ணோடே பேசினான்; அவள் சிம்சோனின் கண்ணுக்குப் பிரியமாயிருந்தாள். 8 சிலநாளைக்குப்பின்பு, அவன் அவளை விவாகம்பண்ணத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப் போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது. 9 அவன் அதைத் தன் கைகளில் எடுத்து, சாப்பிட்டுக்கொண்டே நடந்து, தன் தாய்தகப்பனிடத்தில் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார்கள்; ஆனாலும் தான் அந்தத் தேனைச் சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை. 10 அவன் தகப்பன் அந்தப் பெண் இருக்கும் இடத்தில் போனபோது, சிம்சோன் அங்கே விருந்துசெய்தான்; வாலிபர் அப்படிச் செய்வது வழக்கம். 11 அவர்கள் அவனைக் கண்டபோது, அவனோடேகூட இருக்கும்படி முப்பது தோழரை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள். 12 சிம்சோன் அவர்களை நோக்கி: ஒரு விடுகதையை உங்களுக்குச் சொல்லுகிறேன்; அதை நீங்கள் விருந்துண்கிற ஏழுநாளைக்குள்ளே கண்டுபிடித்து எனக்கு விடுவித்தால், நான் உங்களுக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுப்பேன். 13 அதை எனக்கு விடுவிக்காதேபோனால், நீங்கள் எனக்கு முப்பது துப்பட்டிகளையும் முப்பது மாற்று வஸ்திரங்களையும் கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: உன் விடுகதையைச் சொல்லு; நாங்கள் அதைக் கேட்கட்டும் என்றார்கள். 14 அப்பொழுது அவன்: பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது என்றான்; அந்த விடுகதை அவர்களால் மூன்றுநாள்மட்டும் விடுவிக்கக்கூடாதே போயிற்று. 15 ஏழாம்நாளிலே அவர்கள் சிம்சோனின் பெண்சாதியைப் பார்த்து: உன் புருஷன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படிக்கு நீ அவனை நயம்பண்ணு; இல்லாவிட்டால் நாங்கள் உன்னையும் உன் தகப்பன் வீட்டையும் அக்கினியால் சுட்டெரித்துப்போடுவோம்; எங்களுக்குள்ளவைகளைப் பறித்துக்கொள்ளவா எங்களை அழைத்தீர்கள் என்றார்கள். 16 அப்பொழுது சிம்சோனின் பெண்சாதி அவனுக்கு முன்பாக அழுது, நீ என்னை நேசியாமல் என்னைப் பகைக்கிறாய், என் ஜனங்களுக்கு ஒரு விடுகதையைச் சொன்னாய், அதை எனக்காவது விடுவிக்கவில்லையே என்றாள்; அதற்கு அவன்: இதோ, நான் என் தாய்தகப்பனுக்கும் அதை விடுவிக்கவில்லையே, உனக்கு அதை விடுவிப்பேனோ என்றான். 17 விருந்துண்கிற ஏழுநாளும் அவள் அவன் முன்பாக அழுதுகொண்டே இருந்தாள்; ஏழாம்நாளிலே அவள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால், அதை அவளுக்கு விடுவித்தான்; அப்பொழுது அவள் தன் ஜனங்களுக்கு அந்த விடுகதையை விடுவித்தாள். 18 ஆகையால் ஏழாம்நாளிலே பொழுது போகுமுன்னே, அந்த ஊர் மனுஷர் அவனை நோக்கி: தேனைப்பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்றார்கள்; அதற்கு அவன்: நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால், என் விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான். 19 கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவன் அஸ்கலோனுக்குப் போய், அவ்வூராரில் முப்பதுபேரைக் கொன்று, அவர்களுடைய வஸ்திரங்களை உரிந்துகொண்டுவந்து, விடுகதையை விடுவித்தவர்களுக்கு அந்த மாற்று வஸ்திரங்களைக் கொடுத்து, கோபம் மூண்டவனாய்ப் புறப்பட்டு, தன் தகப்பன் வீட்டுக்குப் போய்விட்டான். 20 சிம்சோனின் பெண்சாதியோவென்றால், அவனுடைய தோழரில் அவனோடே சிநேகமாயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.

நியாயாதிபதிகள் 15

1 சிலநாள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியைக் காணப்போய்: நான் என் பெண்சாதியினிடத்தில் அறைவீட்டிற்குள் போகட்டும் என்றான்; அவள் தகப்பனோ, அவனை உள்ளே போக ஒட்டாமல்: 2 நீ அவளை முற்றிலும் பகைத்துவிட்டாய் என்று நான் எண்ணி, அவளை உன் சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டேன்; அவள் தங்கை அவளைப்பார்க்கிலும் அழகானவள் அல்லவா, அவளுக்குப் பதிலாக இவள் உனக்கு இருக்கட்டும் என்று சொன்னான். 3 அப்பொழுது சிம்சோன்: நான் பெலிஸ்தருக்குப் பொல்லாப்புச் செய்தாலும், என்மேல் குற்றமில்லை என்று அவர்களுக்குச் சொல்லி, 4 புறப்பட்டுப்போய், முந்நூறு நரிகளைப் பிடித்து, பந்தங்களை எடுத்து, வாலோடே வால் சேர்த்து, இரண்டு வால்களுக்கும் நடுவே ஒவ்வொரு பந்தத்தை வைத்துக் கட்டி, 5 பந்தங்களைக் கொளுத்தி, பெலிஸ்தரின் வெள்ளாண்மையிலே அவைகளை ஓடவிட்டு, கதிர்க்கட்டுகளையும் வெள்ளாண்மையையும் திராட்சத்தோட்டங்களையும் ஒலிவத்தோப்புகளையும் சுட்டெரித்துப் போட்டான். 6 இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனாகிய சிம்சோன்தான்; அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டபடியால் அப்படிச் செய்தான் என்றார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் போய், அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள். 7 அப்பொழுது சிம்சோன் அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிச் செய்தபடியால் நான் உங்கள் கையிலே பழிவாங்கினாலொழிய இளைப்பாறேன் என்று சொல்லி, 8 அவர்களைச் சின்னபின்னமாகச் சங்காரம்பண்ணி, பின்பு போய், ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திலே குடியிருந்தான். 9 அப்பொழுது பெலிஸ்தர் போய், யூதாவிலே பாளயமிறங்கி, லேகி என்கிற வெளியிலே பரவியிருந்தார்கள். 10 நீங்கள் எங்களுக்கு விரோதமாக வந்தது என்ன என்று யூதா மனுஷர் கேட்டதற்கு, அவர்கள்: சிம்சோன் எங்களுக்குச் செய்ததுபோல, நாங்களும் அவனுக்குச் செய்யும்படி அவனைக் கட்டுகிறதற்காக வந்தோம் என்றார்கள். 11 அப்பொழுது யூதாவிலே மூவாயிரம்பேர் ஏத்தாம் ஊர்க் கன்மலைச் சந்திற்குப் போய்: பெலிஸ்தர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் என்று சிம்சோனிடத்தில் சொன்னார்கள். அதற்கு அவன்: அவர்கள் எனக்குச் செய்தபடியே நானும் அவர்களுக்குச் செய்தேன் என்றான். 12 அப்பொழுது அவர்கள்: உன்னைக் கட்டி, பெலிஸ்தர் கையில் ஒப்புக்கொடுக்க வந்திருக்கிறோம் என்றார்கள். அதற்குச் சிம்சோன்: நீங்களே என்மேல் விழுகிறதில்லை என்று எனக்கு ஆணையிடுங்கள் என்றான். 13 அதற்கு அவர்கள்: நாங்கள் உன்னை இறுகக்கட்டி, அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்போமே அல்லாமல், உன்னைக் கொன்றுபோடமாட்டோம் என்று சொல்லி, இரண்டு புதுக் கயிறுகளாலே அவனைக் கட்டி, கன்மலையிலிருந்து கொண்டுபோனார்கள். 14 அவன் லேகிவரைக்கும் வந்து சேர்ந்தபோது, பெலிஸ்தர் அவனுக்கு விரோதமாய் ஆரவாரம் பண்ணினார்கள்; அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்துபோயிற்று. 15 உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான். 16 அப்பொழுது சிம்சோன்: கழுதையின் தாடையெலும்பினால் குவியல் குவியலாகப் பட்டுக்கிடக்கிறார்கள், கழுதையின் தாடையெலும்பினால் ஆயிரம்பேரைக் கொன்றேன் என்றான். 17 அப்படிச் சொல்லித் தீர்ந்தபின்பு, தன் கையில் இருந்த தாடையெலும்பை எறிந்துவிட்டு, அவ்விடத்திற்கு ராமாத்லேகி என்று பேரிட்டான். 18 அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: தேவரீர் உமது அடியேன் கையினால் இந்தப் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டிருக்க, இப்பொழுது நான் தாகத்தினால் செத்து, விருத்தசேதனம் இல்லாதவர்கள் கையிலே விழவேண்டுமோ என்றான். 19 அப்பொழுது தேவன் லேகியிலுள்ள பள்ளத்தைப் பிளக்கப்பண்ணினார்; அதிலிருந்து தண்ணீர் ஓடிவந்தது; அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது, அவன் பிழைத்தான்; ஆனபடியால் அதற்கு எந்நக்கோரி என்று பேரிட்டான்; அது இந்நாள்வரையும் லேகியில் இருக்கிறது. 20 அவன் பெலிஸ்தரின் நாட்களில் இஸ்ரவேலை இருபது வருஷம் நியாயம் விசாரித்தான்.

நியாயாதிபதிகள் 16

1 பின்பு சிம்சோன் காசாவுக்குப் போய், அங்கே ஒரு வேசியைக் கண்டு, அவளிடத்தில் போனான். 2 அப்பொழுது: சிம்சோன் இங்கே வந்திருக்கிறான் என்று காசா ஊராருக்குச் சொல்லப்பட்டது. அவர்கள்: காலையில் வெளிச்சமாகிறபோது அவனைக் கொன்றுபோடுவோம் என்று சொல்லி, அவனை வளைந்துகொண்டு இராமுழுதும் அவனுக்காகப் பட்டணவாசலில் பதிவிருந்து இராமுழுதும் பேசாதிருந்தார்கள். 3 சிம்சோன் நடுராத்திரிமட்டும் படுத்திருந்து, நடுராத்திரியில் எழுந்து, பட்டணத்து வாசல் கதவுகளையும் அதின் இரண்டு நிலைகளையும் பிடித்து, தாழ்ப்பாளோடேகூடப் பேர்த்து, தன் தோளின்மேல் வைத்து, எபிரோனுக்கு எதிரேயிருக்கிற மலையின் உச்சிக்குச் சுமந்துகொண்டுபோனான். 4 அதற்குப்பின்பு அவன் சோரேக் ஆற்றங்கரையில் இருக்கிற தெலீலாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயோடே சிநேகமாயிருந்தான். 5 அவளிடத்திற்குப் பெலிஸ்தரின் அதிபதிகள் போய்: நீ அவனை நயம்பண்ணி, அவனுடைய மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்றும், நாங்கள் அவனைக் கட்டிச் சிறுமைப்படுத்துகிறதற்கு எதினாலே அவனை மேற்கொள்ளலாம் என்றும் அறிந்துகொள்; அப்பொழுது நாங்கள் ஒவ்வொருவரும் ஆயிரத்துநூறு வெள்ளிக்காசு உனக்குக் கொடுப்போம் என்றார்கள். 6 அப்படியே தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: உன் மகா பலம் எதினாலே உண்டாயிருக்கிறது, உன்னைச் சிறுமைப்படுத்த உன்னை எதினாலே கட்டலாம் என்று நீ எனக்குச் சொல்லவேண்டும் என்றாள். 7 அதற்குச் சிம்சோன்: உலராத பச்சையான ஏழு அகணிநார்க் கயிறுகளாலே என்னைக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான். 8 அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் உலராத பச்சையான ஏழு அகணி நார்க் கயிறுகளை அவளிடத்திற்குக் கொண்டுவந்தார்கள்; அவைகளால் அவள் அவனைக் கட்டினாள். 9 பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டிலே காத்திருக்கும்போது, அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அப்பொழுது, சணல்நூலானது நெருப்புப்பட்டவுடனே இற்றுப்போகிறதுபோல, அவன் அந்தக் கயிறுகளை அறுத்துப்போட்டான்; அவன் பலம் இன்னதினாலே உண்டாயிருக்கிறது என்று அறியப்படவில்லை. 10 அப்பொழுது தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதோ, என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; இப்போதும் உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள். 11 அதற்கு அவன்: இதுவரைக்கும் ஒரு வேலைக்கும் வழங்காதிருக்கிற புதுக்கயிறுகளால் என்னை இறுகக் கட்டினால், நான் பலட்சயமாகி, மற்ற மனுஷனைப்போல் ஆவேன் என்றான். 12 அப்பொழுது தெலீலாள், புதுக்கயிறுகளை வாங்கி, அவைகளால் அவனைக் கட்டி: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; பதிவிருக்கிறவர்கள் அறைவீட்டில் இருந்தார்கள்; ஆனாலும் அவன் தன் புயங்களில் இருந்த கயிறுகளை ஒரு நூலைப்போல அறுத்துப்போட்டான். 13 பின்பு தெலீலாள் சிம்சோனைப் பார்த்து: இதுவரைக்கும் என்னைப் பரியாசம்பண்ணி, எனக்குப் பொய்சொன்னாய்; உன்னை எதினாலே கட்டலாம் என்று எனக்குச் சொல்லவேண்டும் என்றாள்; அதற்கு அவன்: நீ என் தலைமயிரின் ஏழு ஜடைகளை நெசவுநூல் பாவோடே பின்னிவிட்டால் ஆகும் என்றான். 14 அப்படியே அவள் செய்து, அவைகளை ஆணியடித்து மாட்டி: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டெழும்பி, நெசவு ஆணியையும் நூல்பாவையும்கூடப் பிடுங்கிக்கொண்டுபோனான். 15 அப்பொழுது அவள் அவனைப் பார்த்து: உன் இருதயம் என்னோடு இராதிருக்க, உன்னைச் சிநேகிக்கிறேன் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? நீ இந்த மூன்றுவிசையும் என்னைப் பரியாசம்பண்ணினாய் அல்லவா, உன்னுடைய மகாபலம் எதினாலே உண்டாயிருக்கிறது என்று எனக்குச் சொல்லாமற்போனாயே என்று சொல்லி, 16 இப்படி அவனைத் தினம்தினம் தன் வார்த்தைகளினாலே நெருக்கி அலட்டிக் கொண்டிருக்கிறதினால், சாகத்தக்கதாய் அவன் ஆத்துமா விசனப்பட்டு, 17 தன் இருதயத்தையெல்லாம் அவளுக்கு வெளிப்படுத்தி: சவரகன் கத்தி என் தலையின்மேல் படவில்லை; நான் என் தாயின் கர்ப்பத்தில் பிறந்ததுமுதல் தேவனுக்கென்று நசரேயனானவன்; என் தலை சிரைக்கப்பட்டால், என் பலம் என்னை விட்டுப்போம்; அதினாலே நான் பலட்சயமாகி, மற்ற எல்லா மனுஷரைப்போலும் ஆவேன் என்று அவளிடத்தில் சொன்னான். 18 அவன் தன் இருதயத்தையெல்லாம் தனக்கு வெளிப்படுத்தினதைத் தெலீலாள் கண்டபோது, அவள் பெலிஸ்தரின் அதிபதிகளுக்கு ஆள் அனுப்பி: இந்த ஒருவிசை வாருங்கள், அவன் தன் இருதயத்தையெல்லாம் எனக்கு வெளிப்படுத்தினான் என்று சொல்லச்சொன்னாள்; அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் வெள்ளிக்காசுகளைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டு அவளிடத்துக்கு வந்தார்கள். 19 அவள் அவனைத் தன் மடியிலே நித்திரைசெய்யப்பண்ணி, ஒருவனை அழைத்து, அவன் தலைமயிரின் ஏழு ஜடைகளையும் சிரைப்பித்து, அவனைச் சிறுமைப்படுத்தத் தொடங்கினாள்; அவன் பலம் அவனைவிட்டு நீங்கிற்று. 20 அப்பொழுது அவள்: சிம்சோனே, பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்; அவன் நித்திரைவிட்டு விழித்து, கர்த்தர் தன்னைவிட்டு விலகினதை அறியாமல், எப்போதும்போல உதறிப்போட்டு வெளியே போவேன் என்றான். 21 பெலிஸ்தர் அவனைப் பிடித்து, அவன் கண்களைப் பிடுங்கி, அவனைக் காசாவுக்குக் கொண்டுபோய், அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குபோட்டுச் சிறைச்சாலையிலே மாவரைத்துக்கொண்டிருக்க வைத்தார்கள். 22 அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு, திரும்பவும் முளைக்கத் தொடங்கிற்று. 23 பெலிஸ்தரின் பிரபுக்கள்: நம்முடைய பகைஞனாகிய சிம்சோனை நம்முடைய தேவன் நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, தங்கள் தேவனாகிய தாகோனுக்கு ஒரு பெரிய பலிசெலுத்தவும், சந்தோஷம் கொண்டாடவும் கூடிவந்தார்கள். 24 ஜனங்கள் அவனைக் கண்டவுடனே: நம்முடைய தேசத்தைப் பாழாக்கி, நம்மில் அநேகரைக் கொன்றுபோட்ட நம்முடைய பகைஞனை நம்முடைய தேவன் நமது கையில் ஒப்புக்கொடுத்தார் என்றுசொல்லி, தங்கள் தேவனைப் புகழ்ந்தார்கள். 25 இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கைகாட்டும்படிக்கு, சிம்சோனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றார்கள்; அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள், அவர்களுக்கு முன்பாக வேடிக்கை காட்டினான்; அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள். 26 சிம்சோன் தனக்குக் கைலாகு கொடுத்து நடத்துகிற பிள்ளையாண்டானோடே, வீட்டைத் தாங்குகிற தூண்களிலே நான் சாய்ந்துகொண்டிருக்கும்படி அவைகளை நான் தடவிப்பார்க்கட்டும் என்றான். 27 அந்த வீடு புருஷராலும் ஸ்திரீகளாலும் நிறைந்திருந்தது; அங்கே பெலிஸ்தரின் சகல பிரபுக்களும், வீட்டின்மேல் புருஷரும் ஸ்திரீகளுமாக ஏறக்குறைய மூவாயிரம்பேர், சிம்சோன் வேடிக்கை காட்டுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 28 அப்பொழுது சிம்சோன் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தராகிய ஆண்டவரே, நான் என் இரண்டு கண்களுக்காக ஒரே தீர்வையாய்ப் பெலிஸ்தர் கையிலே பழிவாங்கும்படிக்கு, இந்த ஒருவிசைமாத்திரம் என்னை நினைத்தருளும், தேவனே, பலப்படுத்தும் என்று சொல்லி, 29 சிம்சோன் அந்த வீட்டைத் தாங்கி நிற்கிற இரண்டு நடுத்தூண்களில், ஒன்றைத் தன் வலதுகையினாலும், மற்றொன்றைத் தன் இடதுகையினாலும் பிடித்துக்கொண்டு, 30 என் ஜீவன் பெலிஸ்தரோடே கூட மடியக்கடவது என்று சொல்லி, பலமாய்ச் சாய்க்க, அந்த வீடு அதில் இருந்த பிரபுக்கள்மேலும் எல்லா ஜனங்கள்மேலும் விழுந்தது; இவ்விதமாய் அவன் உயிரோடிருக்கையில் அவனால் கொல்லப்பட்டவர்களைப்பார்க்கிலும், அவன் சாகும்போது அவனால் கொல்லப்பட்டவர்கள் அதிகமாயிருந்தார்கள். 31 பின்பு அவன் சகோதரரும், அவன் தகப்பன் வீட்டாரனைவரும் போய், அவனை எடுத்துக்கொண்டுவந்து, சோராவுக்கும் எஸ்தாவோலுக்கும் நடுவே அவன் தகப்பனாகிய மனோவாவின் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள். அவன் இஸ்ரவேலை இருபதுவருஷம் நியாயம் விசாரித்தான்.

நியாயாதிபதிகள் 17

1 எப்பிராயீம் மலைத்தேசத்தானாகிய மீகா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் இருந்தான். 2 அவன் தன் தாயை நோக்கி: உன்னிடத்திலிருந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசு களவுபோயிற்றே, அதைக்குறித்து என் காதுகள் கேட்க நீ சாபமிட்டாயே, அந்தப் பணம், இதோ, என்னிடத்தில் இருக்கிறது; அதை எடுத்தவன் நான்தான் என்றான். அதற்கு அவன் தாய்: என் மகனே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாய் என்றாள். 3 அவன் அந்த ஆயிரத்து நூறு வெள்ளிக்காசைத் தன் தாயினிடத்தில் திரும்பக் கொடுத்தான்; அவள்: வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் உண்டுபண்ண, நான் என் கையிலிருந்த இந்த வெள்ளியை என் மகனுக்காக முற்றிலும் கர்த்தருக்கென்று நியமித்தேன்; இப்போதும் இதை உனக்குத் திரும்பக் கொடுக்கிறேன் என்றாள். 4 அவன் அந்த வெள்ளியைத் தன் தாய்க்குத் திரும்பக் கொடுத்தான்; அப்பொழுது அவன் தாய் இருநூறு வெள்ளிக்காசை எடுத்து, தட்டான் கையிலே கொடுத்தாள்; அவன் அதினாலே, வெட்டப்பட்ட ஒரு சுரூபத்தையும் வார்ப்பிக்கப்பட்ட ஒரு விக்கிரகத்தையும் பண்ணினான்; அவைகள் மீகாவின் வீட்டில் இருந்தது. 5 மீகா, சுவாமிக்கு ஒரு அறைவீட்டை நியமித்து வைத்திருந்தான்; அவன் ஒரு ஏபோத்தையும் சுரூபங்களையும் உண்டுபண்ணி, தன் குமாரரில் ஒருவனைப் பிரதிஷ்டைபண்ணினான்; இவன் அவனுக்கு ஆசாரியனானான். 6 அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை, அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான். 7 யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானும் லேவியனுமான ஒரு வாலிபன் அங்கே தங்கியிருந்தான். 8 அந்த மனுஷன் எங்கேயாகிலும் பரதேசியாய்ப் போய்த் தங்கும்படிக்கு, யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைவிட்டுப் புறப்பட்டுப் பிரயாணம் போகையில், எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீட்டில் வந்து சேர்ந்தான். 9 எங்கே இருந்து வந்தாய் என்று மீகா அவனைக் கேட்டதற்கு, அவன்: நான் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய லேவியன், எங்கேயாகிலும் போய்த் தங்கப்போகிறேன் என்றான். 10 அப்பொழுது மீகா: நீ என்னிடத்தில் இரு, நீ எனக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிருப்பாய்; நான் உனக்கு வருஷத்திலே பத்து வெள்ளிக்காசையும், மாற்று வஸ்திரத்தையும், உனக்கு வேண்டிய ஆகாரத்தையும் கொடுப்பேன் என்று அவனிடத்தில் சொன்னான்; அப்படியே லேவியன் உள்ளே போனான். 11 அந்த லேவியன் அந்த மனிதனிடத்தில் இருக்கச் சம்மதித்தான்; அந்த வாலிபன் அவனுக்கு அவன் குமாரரில் ஒருவனைப்போல் இருந்தான். 12 மீகா அந்த லேவியனைப் பிரதிஷ்டைபண்ணினான்; அந்த வாலிபன் அவனுக்கு ஆசாரியனாகி, மீகாவின் வீட்டில் இருந்தான். 13 அப்பொழுது மீகா: எனக்கு ஆசாரியனாக ஒரு லேவியன் அகப்பட்டபடியினால், கர்த்தர் எனக்கு நன்மைசெய்வார் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றான்.

நியாயாதிபதிகள் 18

1 அந்நாட்களில் இஸ்ரவேலிலே ராஜா இல்லை; தாண் கோத்திரத்தார் குடியிருக்கிறதற்கு, தங்களுக்குச் சுதந்தரம் தேடினார்கள்; அந்நாள்வரைக்கும் அவர்களுக்கு இஸ்ரவேல் கோத்திரங்கள் நடுவே போந்த சுதந்தரம் கிடைக்கவில்லை. 2 ஆகையால் தேசத்தை உளவுபார்த்து வரும்படி, தாண் புத்திரர் தங்கள் கோத்திரத்திலே பலத்த மனுஷராகிய ஐந்துபேரைத் தங்கள் எல்லைகளில் இருக்கிற சோராவிலும் எஸ்தாவோலிலுமிருந்து அனுப்பி: நீங்கள் போய், தேசத்தை ஆராய்ந்துபார்த்து வாருங்கள் என்று அவர்களோடே சொன்னார்கள்; அவர்கள் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருக்கிற மீகாவின் வீடுமட்டும் போய், அங்கே இராத்தங்கினார்கள். 3 அவர்கள் மீகாவின் வீட்டண்டை இருக்கையில், லேவியனான வாலிபனுடைய சத்தத்தை அறிந்து, அங்கே அவனிடத்தில் போய்: உன்னை இங்கே அழைத்துவந்தது யார்? இவ்விடத்தில் என்ன செய்கிறாய்? உனக்கு இங்கே இருக்கிறது என்ன என்று அவனிடத்தில் கேட்டார்கள். 4 அதற்கு அவன்: இன்ன இன்னபடி மீகா எனக்குச் செய்தான்; எனக்குச் சம்பளம் பொருந்தினான்; அவனுக்கு ஆசாரியனானேன் என்றான். 5 அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: எங்கள் பிரயாணம் அநுகூலமாய் முடியுமா என்று நாங்கள் அறியும்படி தேவனிடத்தில் கேள் என்றார்கள். 6 அவர்களுக்கு அந்த ஆசாரியன்: சமாதானத்தோடே போங்கள்; உங்கள் பிரயாணம் கர்த்தருக்கு ஏற்றது என்றான். 7 அப்பொழுது அந்த ஐந்து மனுஷரும் புறப்பட்டு, லாயீசுக்குப் போய், அதில் குடியிருக்கிற ஜனங்கள் சீதோனியருடைய வழக்கத்தின்படியே, பயமில்லாமல் அமரிக்கையும் சுகமுமாய் இருக்கிறதையும், தேசத்திலே அவர்களை அடக்கி ஆள யாதொரு அதிகாரியும் இல்லை என்பதையும், அவர்கள் சீதோனியருக்குத் தூரமானவர்கள் என்பதையும், அவர்களுக்கு ஒருவரோடும் கவை காரியம் இல்லை என்பதையும் கண்டு, 8 சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தங்கள் சகோதரரிடத்திற்குத் திரும்பிவந்தார்கள். அவர்கள் சகோதரர்: நீங்கள் கொண்டுவருகிற செய்தி என்ன என்று அவர்களைக் கேட்டார்கள். 9 அதற்கு அவர்கள்: எழும்புங்கள், அவர்களுக்கு விரோதமாய்ப் போவோம் வாருங்கள்; அந்த தேசத்தைப் பார்த்தோம், அது மிகவும் நன்றாயிருக்கிறது, நீங்கள் சும்மாயிருப்பீர்களா? அந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி புறப்பட்டுப்போக அசதியாயிராதேயுங்கள். 10 நீங்கள் அங்கே சேரும்போது, சுகமாய்க் குடியிருக்கிற ஜனங்களிடத்தில் சேருவீர்கள்; அந்த தேசம் விஸ்தாரமாயிருக்கிறது; தேவன் அதை உங்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அது பூமியிலுள்ள சகல வஸ்துவும் குறைவில்லாமலிருக்கிற இடம் என்றார்கள். 11 அப்பொழுது சோராவிலும் எஸ்தாவோலிலும் இருக்கிற தாண் கோத்திரத்தாரில் அறுநூறுபேர் ஆயுதபாணிகளாய் அங்கேயிருந்து புறப்பட்டுப்போய், 12 யூதாவிலுள்ள கீரியாத்யாரீமிலே பாளயமிறங்கினார்கள்; ஆதலால் அது இந்நாள்வரைக்கும் மக்னிதான் என்னப்படும்; அது கீரியாத்யாரீமின் பின்னாலே இருக்கிறது. 13 பின்பு அவர்கள் அங்கேயிருந்து எப்பிராயீம் மலைக்குப் போய், மீகாவின் வீடுமட்டும் வந்தார்கள். 14 அப்பொழுது லாயீசின் நாட்டை உளவுபார்க்கப் போய்வந்த ஐந்து மனுஷர் தங்கள் சகோதரரைப் பார்த்து: இந்த வீடுகளில் ஏபோத்தும் சுரூபங்களும் வெட்டப்பட்ட விக்கிரகமும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகமும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா; இப்போதும் நீங்கள் செய்யவேண்டியதை யோசித்துக்கொள்ளுங்கள் என்றார்கள். 15 அப்பொழுது அவ்விடத்திற்குத் திரும்பி, மீகாவின் வீட்டில் இருக்கிற லேவியனான வாலிபனின் வீட்டிலே வந்து, அவனிடத்தில் சுகசெய்தி விசாரித்தார்கள். 16 ஆயுதபாணிகளாகிய தாண் புத்திரர் அறுநூறுபேரும் வாசற்படியிலே நின்றார்கள். 17 ஆசாரியனும் ஆயுதபாணிகளாகிய அறுநூறுபேரும் வாசற்படியிலே நிற்கையில், தேசத்தை உளவுபார்க்கப் போய்வந்த அந்த ஐந்து மனுஷர் உள்ளே புகுந்து, வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் சுரூபங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வந்தார்கள். 18 அவர்கள் மீகாவின் வீட்டிற்குள் புகுந்து, வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் ஏபோத்தையும் சுரூபங்களையும் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு வருகிறபோது, ஆசாரியன் அவர்களைப் பார்த்து: நீங்கள் செய்கிறது என்ன என்று கேட்டான். 19 அதற்கு அவர்கள்: நீ பேசாதே, உன் வாயை மூடிக்கொண்டு, எங்களோடேகூட வந்து எங்களுக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிரு; நீ ஒரே ஒருவன் வீட்டுக்கு ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? இஸ்ரவேலில் ஒரு கோத்திரத்திற்கும் வம்சத்திற்கும் ஆசாரியனாயிருக்கிறது நல்லதோ? என்றார்கள். 20 அப்பொழுது ஆசாரியனுடைய மனது இதமியப்பட்டு, அவன் ஏபோத்தையும் சுரூபங்களையும் வெட்டப்பட்ட விக்கிரகத்தையும் எடுத்துக்கொண்டு, ஜனங்களுக்குள்ளே புகுந்தான். 21 அவர்கள் திரும்பும்படி புறப்பட்டு, பிள்ளைகளையும், ஆடுமாடுகளையும், பண்டம் பாடிகளையும், தங்களுக்குமுன்னே போகும்படி செய்தார்கள். 22 அவர்கள் புறப்பட்டு, மீகாவின் வீட்டை விட்டுக் கொஞ்சந்தூரம் போனபோது, மீகாவின் வீட்டிற்கு அயல்வீட்டார் கூட்டங்கூடி, தாண் புத்திரரைத் தொடர்ந்துவந்து, 23 அவர்களைப் பார்த்துக் கூப்பிட்டார்கள்; அவர்கள் திரும்பிப்பார்த்து, மீகாவை நோக்கி: நீ இப்படிக் கூட்டத்துடன் வருகிற காரியம் என்ன என்று கேட்டார்கள். 24 அதற்கு அவன்: நான் உண்டுபண்ணின என்னுடைய தெய்வங்களையும் அந்த ஆசாரியனையுங்கூட நீங்கள் கொண்டுபோகிறீர்களே; இனி எனக்கு என்ன இருக்கிறது; நீ கூப்பிடுகிற காரியம் என்ன என்று நீங்கள் என்னிடத்தில் எப்படிக் கேட்கலாம் என்றான். 25 தாண் புத்திரர் அவனைப் பார்த்து: எங்கள் காதுகள் கேட்கக் கூக்குரல் இடாதே, இட்டால் கோபிகள் உங்கள்மேல் விழுவார்கள்; அப்பொழுது உன் ஜீவனுக்கும் உன் வீட்டாரின் ஜீவனுக்கும் மோசம் வருவித்துக்கொள்வாய் என்று சொல்லி, 26 தங்கள் வழியே நடந்துபோனார்கள்; அவர்கள் தன்னைப்பார்க்கிலும் பலத்தவர்கள் என்று மீகா கண்டு, அவன் தன் வீட்டுக்குத் திரும்பினான். 27 அவர்களோ மீகா உண்டுபண்ணினவைகளையும், அவனுடைய ஆசாரியனையும் கொண்டுபோய், பயமில்லாமல் சுகமாயிருக்கிற லாயீஸ் ஊர் ஜனங்களிடத்தில் சேர்த்து, அவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினியால் சுட்டெரித்துப்போட்டார்கள். 28 அது சீதோனுக்குத் தூரமாயிருந்தது; வேறே மனுஷரோடே அவர்களுக்குச் சம்பந்தமில்லாமலும் இருந்தபடியால், அவர்களைத் தப்புவிப்பார் ஒருவரும் இல்லை; அந்தப் பட்டணம் பெத்ரேகோபுக்குச் சமீபமான பள்ளத்தாக்கில் இருந்தது; அவர்கள் அதைத் திரும்பக் கட்டி, அதிலே குடியிருந்து, 29 பூர்வத்திலே லாயீஸ் என்னும் பேர் கொண்டிருந்த அந்தப் பட்டணத்திற்கு இஸ்ரவேலுக்குப் பிறந்த தங்கள் தகப்பனாகிய தாணுடைய நாமத்தின்படியே தாண் என்று பேரிட்டார்கள். 30 அப்பொழுது தாண் புத்திரர் அந்தச் சுரூபத்தைத் தங்களுக்கு ஸ்தாபித்துக்கொண்டார்கள்; மனாசேயின் குமாரனாகிய கெர்சோனின் மகன் யோனத்தானும், அவன் குமாரரும் அந்தத் தேசத்தார் சிறைப்பட்டுப்போன நாள்மட்டும், தாண் கோத்திரத்தாருக்கு ஆசாரியராயிருந்தார்கள். 31 தேவனுடைய ஆலயம் சீலோவிலிருந்த காலமுழுதும் அவர்கள் மீகா உண்டுபண்ணின சுரூபத்தை வைத்துக் கொண்டிருந்தார்கள்.

நியாயாதிபதிகள் 19

1 இஸ்ரவேலில் ராஜா இல்லாத அந்நாட்களிலே, எப்பிராயீம் மலைகள் அருகே பரதேசியாய்த் தங்கின ஒரு லேவியன் இருந்தான்; அவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராளாகிய ஒரு ஸ்திரீயைத் தனக்கு மறுமனையாட்டியாகக் கொண்டிருந்தான். 2 அவள் அவனுக்குத் துரோகமாய் விபசாரம்பண்ணி, அவனை விட்டு, யூதா தேசத்துப் பெத்லெகேம் ஊரிலிருக்கிற தன் தகப்பன் வீட்டுக்குப் போய், அங்கே நாலுமாதம்வரைக்கும் இருந்தாள். 3 அவள் புருஷன் அவளோடே நலவு சொல்லவும், அவளைத் திரும்ப அழைத்துவரவும், இரண்டு கழுதைகளை ஆயத்தப்படுத்தி, தன் வேலைக்காரனைக் கூட்டிக்கொண்டு, அவளிடத்துக்குப் போனான்; அப்பொழுது அவள் அவனைத் தன் தகப்பன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனாள்; ஸ்திரீயின் தகப்பன் அவனைக் கண்டபோது சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு, 4 ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன் அவனை இருத்திக்கொண்டதினால், மூன்றுநாள் அவனோடிருந்தான்; அவர்கள் அங்கே புசித்துக் குடித்து இராத்தங்கினார்கள். 5 நாலாம்நாள் காலமே அவர்கள் எழுந்திருந்தபோது, அவன் பிரயாணப்படுகையில், ஸ்திரீயின் தகப்பன் தன் மருமகனை நோக்கி: கொஞ்சம் அப்பம் புசித்து, உன் மனதைத் தேற்றிக்கொள்; பிற்பாடு நீங்கள் போகலாம் என்றான். 6 அவர்கள் உட்கார்ந்து, இருவரும்கூடப் புசித்துக் குடித்தார்கள்; ஸ்திரீயின் தகப்பன் அந்த மனுஷனைப் பார்த்து: நீ தயவுசெய்து, உன் இருதயம் மகிழ்ச்சியடைய இராத்திரிக்கும் இரு என்றான். 7 அப்படியே போகிறதற்கு அந்த மனுஷன் எழுந்தபோது, அவனுடைய மாமன் அவனை வருந்திக்கொண்டதினால், அவன் அன்று இராத்திரியும் அங்கே இருந்தான். 8 ஐந்தாம் நாளிலே அவன் போகிறதற்கு அதிகாலமே எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பன்: இருந்து உன் இருதயத்தைத் தேற்றிக்கொள் என்றான்; அப்படியே அந்திநேரமட்டும் தாமதித்திருந்து, இருவரும் போஜனம்பண்ணினார்கள். 9 பின்பு அவனும், அவன் மறுமனையாட்டியும், அவன் வேலைக்காரனும் போகிறதற்கு எழுந்திருந்தபோது, ஸ்திரீயின் தகப்பனாகிய அவனுடைய மாமன்: இதோ, பொழுது அஸ்தமிக்கப்போகிறது, சாயங்காலமுமாயிற்று; இங்கே இராத்திரிக்கு இருங்கள்; பார், மாலைமயங்குகிற வேளையாயிற்று: உன் இருதயம் சந்தோஷமாயிருக்கும்படி, இங்கே இராத்தங்கி நாளை இருட்டோடே எழுந்திருந்து, உன் வீட்டுக்குப் போகலாம் என்றான். 10 அந்த மனுஷனோ, இராத்திரிக்கு இருக்க மனதில்லாமல், இரண்டு கழுதைகள்மேலும் சேணம்வைத்து, தன் மறுமனையாட்டியைக் கூட்டிக்கொண்டு, எழுந்து புறப்பட்டு, எருசலேமாகிய எபூசுக்கு நேராக வந்தான். 11 அவர்கள் எபூசுக்குச் சமீபமாய் வருகையில், பொழுதுபோகிறதாயிருந்தது; அப்பொழுது வேலைக்காரன் தன் எஜமானை நோக்கி: எபூசியர் இருக்கிற இந்தப் பட்டணத்திற்குப் போய், அங்கே இராத்தங்கலாம் என்றான். 12 அதற்கு அவன் எஜமான் நாம் வழியைவிட்டு, இஸ்ரவேல் புத்திரரில்லாத மறுஜாதியார் இருக்கிற பட்டணத்துக்குப் போகப்படாது; அப்பாலே கிபியாமட்டும் போவோம் என்று சொல்லி, 13 தன் வேலைக்காரனைப் பார்த்து: நாம் கிபியாவிலாகிலும் ராமாவிலாகிலும் இராத்தங்கும்படிக்கு, அவைகளில் ஒரு இடத்திற்குப் போய்ச் சேரும்படி நடந்துபோவோம் வா என்றான். 14 அப்படியே அப்பாலே நடந்துபோனார்கள்; பென்யமீன் நாட்டைச் சேர்ந்த கிபியாவின் கிட்ட வருகையில், சூரியன் அஸ்தமனமாயிற்று. 15 ஆகையால் கிபியாவிலே வந்து இராத்தங்கும்படிக்கு, வழியைவிட்டு அவ்விடத்திற்குப் போனார்கள்; அவன் பட்டணத்துக்குள் போனபோது, இராத்தங்குகிறதற்கு அவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்வார் இல்லாததினால், வீதியில் உட்கார்ந்தான். 16 வயலிலே வேலைசெய்து, மாலையிலே திரும்புகிற ஒரு கிழவன் வந்தான்; அந்த மனுஷனும் எப்பிராயீம் மலைத்தேசத்தான், அவன் கிபியாவிலே சஞ்சரிக்கவந்தான்; அவ்விடத்து மனுஷரோ பென்யமீனர். 17 அந்தக் கிழவன் தன் கண்களை ஏறெடுத்துப் பட்டணத்து வீதியில் அந்தப் பிரயாணக்காரன் இருக்கக் கண்டு: எங்கே போகிறாய், எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டான். 18 அதற்கு அவன்: நாங்கள் யூதாவிலுள்ள ஊராகிய பெத்லெகேமிலிருந்து வந்து, எப்பிராயீம் மலைத்தேசத்தின் புறங்கள்மட்டும் போகிறோம்; நான் அவ்விடத்தான்; யூதாவிலுள்ள பெத்லெகேம்மட்டும் போய்வந்தேன், நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போகிறேன்; இங்கே என்னை வீட்டிலே ஏற்றுக்கொள்வார் ஒருவரும் இல்லை. 19 எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும் தீபனமும் உண்டு; எனக்கும் உமது அடியாளுக்கும் உமது அடியானோடிருக்கிற வேலைக்காரனுக்கும் அப்பமும் திராட்சரசமும் உண்டு; ஒன்றிலும் குறைவில்லை என்றான். 20 அப்பொழுது அந்தக் கிழவன்: உனக்குச் சமாதானம்; உன் குறைவுகளெல்லாம் என்மேல் இருக்கட்டும்; வீதியிலேமாத்திரம் இராத்தங்கவேண்டாம் என்று சொல்லி, 21 அவனைத் தன் வீட்டுக்குள் அழைத்துக்கொண்டுபோய், கழுதைகளுக்குத் தீபனம்போட்டான்; அவர்கள் தங்கள் கால்களைக் கழுவிக்கொண்டு, புசித்துக் குடித்தார்கள். 22 அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கிறபோது, இதோ, பேலியாளின் மக்களாகிய அந்த ஊர் மனுஷரில் சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டு, கதவைத் தட்டி: உன் வீட்டிலே வந்த அந்த மனுஷனை நாங்கள் அறியும்படிக்கு, வெளியே கொண்டுவா என்று வீட்டுக்காரனாகிய அந்தக் கிழவனோடே சொன்னார்கள். 23 அப்பொழுது வீட்டுக்காரனாகிய அந்த மனுஷன் வெளியே அவர்களிடத்தில் போய்: இப்படிச் செய்யவேண்டாம்; என் சகோதரரே, இப்படிப்பட்ட பொல்லாப்பைச் செய்யவேண்டாம்; அந்த மனுஷன் என் வீட்டிற்குள் வந்திருக்கையில், இப்படிக்கொத்த மதிகேட்டைச் செய்யீர்களாக. 24 இதோ, கன்னியாஸ்திரீயாகிய என் மகளும், அந்த மனிதனுடைய மறுமனையாட்டியும் இருக்கிறார்கள்; அவர்களை உங்களிடத்தில் வெளியே கொண்டுவருகிறேன்; அவர்களை அவமானப்படுத்தி, உங்கள் பார்வைக்குச் சரிபோனபிரகாரம் அவர்களுக்குச் செய்யுங்கள்; ஆனாலும் இந்த மனுஷனுக்கு அப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம் என்றான். 25 அந்த மனுஷர் அவன் சொல்லைக் கேட்கவில்லை; அப்பொழுது அந்த மனுஷன் தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவர்களிடத்தில் வெளியே கொண்டுவந்து விட்டான்; அவர்கள் அவளை அறிந்துகொண்டு, இராமுழுதும் விடியுங்காலமட்டும் அவளை இலச்சையாய் நடத்தி, கிழக்கு வெளுக்கும்போது அவளைப் போகவிட்டார்கள். 26 விடியுங்காலத்திற்கு முன்னே அந்த ஸ்திரீ வந்து, வெளிச்சமாகுமட்டும் அங்கே தன் எஜமான் இருந்த வீட்டு வாசற்படியிலே விழுந்துகிடந்தாள். 27 அவள் எஜமான் காலமே எழுந்திருந்து வீட்டின் கதவைத் திறந்து, தன் வழியே போகப் புறப்படுகிறபோது, இதோ, அவன் மறுமனையாட்டியாகிய ஸ்திரீ வீட்டுவாசலுக்கு முன்பாகத் தன் கைகளை வாசற்படியின்மேல் வைத்தவளாய்க் கிடந்தாள். 28 எழுந்திரு போவோம் என்று அவன் அவளோடே சொன்னதற்குப் பிரதியுத்தரம் பிறக்கவில்லை. அப்பொழுது அந்த மனுஷன் அவளைக் கழுதையின்மேல் போட்டுக்கொண்டு, பிரயாணப்பட்டு, தன் இடத்திற்குப் போனான். 29 அவன் தன் வீட்டுக்கு வந்தபோது, ஒரு கத்தியை எடுத்து, தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவளை அவளுடைய எலும்புகளோடுங்கூடப் பன்னிரண்டு துண்டமாக்கி, இஸ்ரவேலின் எல்லைகளுக்கெல்லாம் அனுப்பினான். 30 அப்பொழுது அதைக் கண்டவர்களெல்லாரும், இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் இதைப்போலொத்த காரியம் செய்யப்படவும் இல்லை, காணப்படவும் இல்லை; இந்தக் காரியத்தை யோசித்து ஆலோசனைபண்ணிச் செய்யவேண்டியது இன்னதென்று சொல்லுங்கள் என்றார்கள்.

நியாயாதிபதிகள் 20

1 அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள். 2 சகல ஜனங்களின் அதிபதிகளும், இஸ்ரவேலின் சகல கோத்திரத்தாரும் தேவனுடைய ஜனமாகிய சபையாகக் கூடிநின்றார்கள்; அவர்கள் பட்டயம் உருவுகிற நாலு லட்சம் காலாட்கள். 3 இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவுக்கு வந்த செய்தியைப் பென்யமீன் புத்திரர் கேள்விப்பட்டார்கள்; அந்த அக்கிரமம் நடந்தது எப்படி, சொல்லுங்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேட்டார்கள். 4 அப்பொழுது கொலைசெய்யப்பட்ட ஸ்திரீயின் புருஷனாகிய லேவியன் மாறுத்தரமாக: நானும் என் மறுமனையாட்டியும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே இராத்தங்க வந்தோம். 5 அப்பொழுது கிபியாபட்டணத்தார் எனக்கு விரோதமாய் எழும்பி, என்னைக் கொலைசெய்ய நினைத்து, நான் இருந்த வீட்டை இராத்திரியிலே வளைந்துகொண்டு, என் மறுமனையாட்டியை அவமானப்படுத்தினார்கள்; அதினாலே அவள் செத்துப்போனாள். 6 ஆகையால் இஸ்ரவேலிலே அவர்கள் இப்படிப்பட்ட முறைகேட்டையும் மதிகேட்டையும் செய்தபடியினால், நான் என் மறுமனையாட்டியைப் பிடித்துத் துண்டித்து, இஸ்ரவேலின் சுதந்தரமான சகல நாடுகளுக்கும் அனுப்பினேன். 7 நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரராமே, இங்கே ஆலோசித்துத் தீர்மானம்பண்ணுங்கள் என்றான். 8 அப்பொழுது எல்லா ஜனங்களும் ஏகமாய் எழும்பி: நம்மில் ஒருவரும் தன் கூடாரத்திற்குப் போகவும்படாது, ஒருவனும் தன் வீட்டிற்குத் திரும்பவும்படாது. 9 இப்பொழுது கிபியாவுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: சீட்டுப்போட்டு அதற்கு விரோதமாகப் போவோம். 10 பென்யமீன் கோத்திரமான கிபியா பட்டணத்தார் இஸ்ரவேலிலே செய்த எல்லா மதிகேட்டுக்கும் தக்கதாக ஜனங்கள் வந்து செய்யும்படிக்கு, நாம் தானியதவசங்களைச் சம்பாதிக்கிறதற்கு, இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நூறுபேரில் பத்துப்பேரையும், ஆயிரம்பேரில் நூறுபேரையும், பதினாயிரம்பேரில் ஆயிரம்பேரையும், தெரிந்தெடுப்போம் என்றார்கள். 11 இஸ்ரவேலரெல்லாரும் ஒன்றுபோல ஏகோபித்துப் பட்டணத்திற்கு முன்பாகக் கூட்டங்கூடி, 12 அங்கே இருந்த இஸ்ரவேலின் கோத்திரத்தார் பென்யமீன் கோத்திரமெங்கும் ஆட்களை அனுப்பி: உங்களுக்குள்ளே நடந்த இந்த அக்கிரமம் என்ன? 13 இப்பொழுது கிபியாவில் இருக்கிற பேலியாளின் மக்களாகிய அந்த மனுஷரை நாங்கள் கொன்று, பொல்லாப்பை இஸ்ரவேலை விட்டு விலக்கும்படிக்கு, அவர்களை ஒப்புக்கொடுங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்; பென்யமீன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரராகிய தங்கள் சகோதரரின் சொல்லைக் கேட்க மனமில்லாமல், 14 இஸ்ரவேல் புத்திரரோடு யுத்தம்பண்ணப் புறப்படும்படிக்கு, பட்டணங்களிலிருந்து கிபியாவுக்கு வந்து கூடினார்கள். 15 கிபியாவின் குடிகளிலே தெரிந்துகொள்ளப்பட்ட எழுநூறுபேரையல்லாமல் அந்நாளில் பட்டணங்களிலிருந்து வந்து கூடின பட்டயம் உருவுகிற மனுஷரின் லக்கம் இருபத்தாறாயிரம்பேர் என்று தொகையிடப்பட்டது. 16 அந்த ஜனங்களெல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட இடதுகை வாக்கான எழுநூறுபேர் இருந்தார்கள்; அவர்கள் அனைவரும் ஒரு மயிரிழையும் தப்பாதபடிக்குக் கவண்கல் எறிவார்கள். 17 பென்யமீன் கோத்திரத்தையல்லாமல் இஸ்ரவேலிலே பட்டயம் உருவுகிற மனுஷர் நாலு லட்சம்பேர் என்று தொகையிடப்பட்டது; இவர்களெல்லாரும் யுத்தவீரராயிருந்தார்கள். 18 இஸ்ரவேல் புத்திரரான அவர்கள் எழும்பி, தேவனுடைய வீட்டிற்குப்போய்: எங்களில் யார் முந்திப் போய் பென்யமீன் புத்திரரோடு யுத்தம்பண்ணவேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்; அதற்குக் கர்த்தர்: யூதா முந்திப் போகவேண்டும் என்றார். 19 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் காலமே எழுந்து புறப்பட்டு, கிபியாவுக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள். 20 பின்பு இஸ்ரவேல் மனுஷர் பென்யமீனோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டு, கிபியாவிலே அவர்களுக்கு எதிராகப் போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள். 21 ஆனாலும் பென்யமீன் புத்திரர் கிபியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலில் இருபத்தீராயிரம்பேரை அன்றையதினம் தரையிலே விழும்படி சங்கரித்தார்கள். 22 இஸ்ரவேல் ஜனங்கள் தங்களைத் திடப்படுத்திக்கொண்டு, முதல்நாளில் அணிவகுத்து நின்ற ஸ்தலத்திலே, மறுபடியும் போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள். 23 அவர்கள் போய், கர்த்தருடைய சந்நிதியில் சாயங்காலமட்டும் அழுது: எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே திரும்பவும் யுத்தம் கலக்கப்போவோமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்: அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள் என்றார். 24 மறுநாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீன் புத்திரர் கிட்டச் சேருகிறபோது, 25 பென்யமீன் கோத்திரத்தாரும் அந்நாளிலே கிபியாவிலிருந்து அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டுவந்து, பின்னும் இஸ்ரவேல் புத்திரரில் பட்டயம் உருவுகிற பதினெண்ணாயிரம்பேரைத் தரையிலே விழும்படி சங்கரித்தார்கள். 26 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனங்களும் புறப்பட்டு, தேவனுடைய வீட்டிற்குப் போய், அங்கே கர்த்தருடைய சந்நிதியில் அழுது, தரித்திருந்து, அன்று சாயங்காலமட்டும் உபவாசித்து, கர்த்தருடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டு, 27 கர்த்தரிடத்தில் விசாரித்தார்கள்; தேவனுடைய உடன்படிக்கையின் பெட்டி அந்நாட்களில் அங்கே இருந்தது. 28 ஆரோனின் குமாரனாகிய எலெயாசாரின் மகன் பினெகாஸ் அந்நாட்களில் அவருடைய சந்நிதியில் நின்றான்; எங்கள் சகோதரராகிய பென்யமீன் புத்திரரோடே பின்னும் யுத்தம்பண்ணப் புறப்படலாமா புறப்படலாகாதா என்று அவர்கள் விசாரித்தார்கள்; அப்பொழுது கர்த்தர்: போங்கள்; நாளைக்கு அவர்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார். 29 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கிபியாவைச்சுற்றிலும் பதிவிடையாட்களை வைத்து, 30 மூன்றாம் நாளிலே பென்யமீன் புத்திரருக்கு விரோதமாய்ப் போய், முன் இரண்டுதரம் செய்ததுபோல, கிபியாவுக்குச் சமீபமாய்ப் போருக்கு அணிவகுத்து நின்றார்கள். 31 அப்பொழுது பென்யமீன் புத்திரர் ஜனத்திற்கு விரோதமாய்ப் புறப்பட்டுப் பட்டணத்தை விட்டு, அப்பாலே வந்து, வெளியிலே பெத்தேலுக்கும் கிபியாவுக்கும் போகிற இரண்டு வழிகளில் இஸ்ரவேல் ஜனத்தில் ஏறக்குறைய முப்பதுபேரை, முதல் இரண்டுதரம் செய்தது போல, வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள். 32 முன்போல நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன் புத்திரர் சொன்னார்கள்; இஸ்ரவேல் புத்திரரோ: அவர்களைப் பட்டணத்தை விட்டு அப்பாலேயிருக்கிற வழிகளிலே வரப்பண்ணும்படிக்கு, நாம் ஓடவேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். 33 அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தங்கள் ஸ்தானத்திலிருந்து எழும்பி, பாகால்தாமாரிலே யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள்; இஸ்ரவேலரில் கிபியாவின் பள்ளத்தாக்கிலே பதிவிருந்தவர்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, 34 அவர்களில் எல்லா இஸ்ரவேலிலும் தெரிந்துகொள்ளப்பட்ட பதினாயிரம்பேர் கிபியாவுக்கு எதிரே வந்தார்கள்; யுத்தம் பலத்தது; ஆனாலும் தங்களுக்கு விக்கினம் நேரிட்டது என்று அவர்கள் அறியாதிருந்தார்கள். 35 கர்த்தர் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பென்யமீனை முறிய அடித்தார்; அந்நாளிலே இஸ்ரவேல் புத்திரர் பென்யமீனிலே பட்டயம் உருவுகிற ஆட்களாகிய இருபத்தையாயிரத்து நூறுபேரைச் சங்கரித்தார்கள். 36 இஸ்ரவேலர் கிபியாவுக்கு அப்பாலே வைத்த பதிவிடையை நம்பியிருந்தபடியினாலே, பென்யமீனருக்கு இடம் கொடுத்தார்கள்; அதினாலே அவர்கள் முறிய அடிக்கப்படுகிறார்கள் என்று பென்யமீன் புத்திரருக்குக் காணப்பட்டது. 37 அப்பொழுது பதிவிடையிருந்தவர்கள் தீவிரமாய்க் கிபியாவின்மேல் பாய்ந்து பரவி, பட்டணத்தில் இருக்கிறவர்களெல்லாரையும் பட்டயக்கருக்கினால் வெட்டினார்கள். 38 பட்டணத்திலிருந்து மகா பெரிய புகையை எழும்பப்பண்ணுவதே இஸ்ரவேலருக்கும் பதிவிடைக்காரருக்கும் குறிக்கப்பட்ட அடையாளமாயிருந்தது. 39 ஆகையால் இஸ்ரவேலர் யுத்தத்திலே பின்வாங்கினபோது, பென்யமீனர்: முந்தின யுத்தத்தில் நடந்ததுபோல, அவர்கள் நமக்கு முன்பாக முறிய அடிக்கப்படுகிறார்களே என்று சொல்லி, இஸ்ரவேலரில் ஏறக்குறைய முப்பதுபேரை வெட்டவும் கொல்லவும் தொடங்கினார்கள். 40 பட்டணத்திலிருந்து புகையானது ஸ்தம்பம்போல உயர எழும்பினபோது, பென்யமீனர் பின்னாகப் பார்த்தார்கள்; இதோ, பட்டணத்தின் அக்கினிஜுவாலை வானபரியந்தம் எழும்பிற்று. 41 அப்பொழுது இஸ்ரவேலர் திரும்பிக் கொண்டார்கள்; பென்யமீன் மனுஷரோ, தங்களுக்கு விக்கினம் நேரிட்டதைக் கண்டு திகைத்து, 42 இஸ்ரவேல் புத்திரரைவிட்டு, வனாந்தரத்திற்குப் போகிற வழிக்கு நேராய்த் திரும்பி ஓடிப்போனார்கள்; ஆனாலும் யுத்தம் அவர்களைத் தொடர்ந்தது; பட்டணங்களில் இருந்தவர்களும் தங்கள் நடுவே அகப்பட்டவர்களைக் கொன்றுபோட்டார்கள். 43 இப்படியே பென்யமீனரை வளைந்துகொண்டு துரத்தி, கிபியாவுக்குக் கிழக்குப்புறமாக வருமட்டும், அவர்களை லேசாய் மிதித்துப்போட்டார்கள். 44 இதினால் பென்யமீனரிலே பதினெண்ணாயிரம்பேர் விழுந்தார்கள்; அவர்களெல்லாரும் பலவான்களாயிருந்தார்கள். 45 மற்றவர்கள் விலகி, வனாந்தரத்தில் இருக்கிற ரிம்மோன் கன்மலைக்கு ஓடிப்போனார்கள்; அவர்களில் இன்னும் ஐயாயிரம்பேரை வழிகளிலே கொன்று, மற்றவர்களைக் கீதோம்மட்டும் பின்தொடர்ந்து, அவர்களில் இரண்டாயிரம் பேரை வெட்டிப்போட்டார்கள். 46 இவ்விதமாய் பென்யமீனரில் அந்நாளில் விழுந்தவர்களெல்லாரும் இருபத்தையாயிரம்பேர்; அவர்களெல்லாரும் பட்டயம் உருவுகிற பலவான்களாயிருந்தார்கள். 47 அறுநூறுபேர் திரும்பிக்கொண்டு ஓடி, வனாந்தரத்திலிருக்கிற ரிம்மோன் கன்மலைக்குப் போய், ரிம்மோன் கன்மலையிலே நாலு மாதம் இருந்தார்கள். 48 இஸ்ரவேலரோ பென்யமீன் புத்திரர்மேல் திரும்பி, பட்டணத்தில் மனுஷர் தொடங்கி மிருகங்கள்மட்டும் கண்டவைகள் எல்லாவற்றையும் பட்டயக்கருக்கினால் வெட்டி, கண்ட பட்டணங்களையெல்லாம் அக்கினியால் கொளுத்திப்போட்டார்கள்.

நியாயாதிபதிகள் 21

1 இஸ்ரவேலர் மிஸ்பாவிலே இருக்கும்போது: நம்மில் ஒருவனும் தன் குமாரத்தியைப் பென்யமீனருக்கு விவாகம்பண்ணிக்கொடுப்பதில்லை என்று ஆணையிட்டிருந்தார்கள். 2 ஆகையால் ஜனங்கள் தேவனுடைய வீட்டிற்குப்போய், அங்கே தேவசந்நிதியில் சாயங்காலமட்டும் இருந்து, சத்தமிட்டு, மிகவும் அழுது: 3 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் குறைந்துபோகத்தக்கதாக இஸ்ரவேலில் இந்தக் காரியம் நேரிட்டது என்ன என்றார்கள். 4 மறுநாளிலே, ஜனங்கள் காலமே எழுந்திருந்து, அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தினார்கள். 5 கர்த்தருடைய சந்நிதியில் மிஸ்பாவுக்கு வராதவன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படக்கடவன் என்று அவர்கள் பெரிய ஆணையிட்டிருந்தபடியால், இஸ்ரவேல் புத்திரர்: கர்த்தருடைய சந்நிதியில் சபைகூடினபோது, இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமிருந்து வராதே போனவர்கள் யார் என்று விசாரித்தார்கள். 6 இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரராகிய பென்யமீனரை நினைத்து, மனஸ்தாபப்பட்டு: இன்று இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் அறுப்புண்டுபோயிற்றே. 7 மீந்திருப்பவர்களுக்கு மனைவிகள் கிடைக்கும்படி நாம் அவர்களுக்காக என்னசெய்யலாம்? நம்முடைய குமாரத்திகளில் ஒருத்தியையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்று நாம் கர்த்தர்மேல் ஆணையிட்டுக்கொண்டோமே. 8 இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் வராதேபோன யாதொருவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனுஷரில் ஒருவரும் பாளயத்தில் சபைகூடினபோது வரவில்லை. 9 ஜனங்கள் இலக்கம்பார்க்கப்பட்டபோது, கீலேயாத்திலிருக்கிற யாபேசின் குடிகளில் அங்கே ஒருவரும் இருந்ததில்லை. 10 உடனே சபையார் பலவான்களில் பன்னீராயிரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் போய், கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளை ஸ்திரீகளோடும் பிள்ளைகளோடும் பட்டயக்கருக்கினால் வெட்டுங்கள். 11 சகல ஆண்பிள்ளைகளையும், புருஷரை அறிந்த சகல பெண்பிள்ளைகளையும் சங்கரிக்கக்கடவீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார்கள். 12 இவர்கள் கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளிடத்திலே புருஷரை அறியாத நானூறு கன்னிப்பெண்களைக் கண்டு பிடித்து, அவர்களைக் கானான்தேசமான சீலோவிலிருக்கிற பாளயத்திற்குக் கொண்டுவந்தார்கள். 13 அப்பொழுது ரிம்மோன் கன்மலையிலிருக்கிற பென்யமீன் புத்திரரோடே பேசவும், அவர்களுக்குச் சமாதானம் கூறவும், சபையார் எல்லாரும் மனுஷரை அனுப்பினார்கள். 14 அப்படியே அக்காலத்தில் பென்யமீனர் திரும்ப வந்தார்கள்; கீலேயாத்திலிருக்கிற யாபேசின் ஸ்திரீகளில் உயிரோடே வைத்த பெண்களை அவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படிச் செய்தும் அவர்கள் தொகைக்குக் காணாதிருந்தது. 15 இஸ்ரவேல் கோத்திரங்களிலே கர்த்தர் ஒரு பிளப்பை உண்டாக்கினார் என்று ஜனங்கள் பென்யமீனருக்காக மனஸ்தாபப்பட்டார்கள். 16 பென்யமீன் கோத்திர ஸ்திரீகள் அழிந்தபடியினாலே, மீதியான மற்றப்பேர்களுக்கும் மனைவிகள் கிடைக்கும்படி என்னசெய்யலாம் என்று சபையின் மூப்பரானவர்கள் கேட்டு, 17 இஸ்ரவேலில் ஒரு கோத்திரம் நிர்மூலமாகாதபடிக்கு, தப்பினவர்களுடைய சுதந்தரம் பென்யமீனுக்கு இருக்கவேண்டுமே, 18 நாமோ நம்முடைய குமாரத்திகளில் அவர்களுக்குப் பெண் கொடுக்கக்கூடாது; பென்யமீனருக்குப் பெண்கொடுக்கிறவன் சபிக்கப்பட்டவன் என்று, இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டார்களே என்றார்கள். 19 பின்னும், இதோ, பெத்தேலுக்கு வடக்கே பெத்தேலிலிருந்து சீகேமுக்குப் போகிற பாதைக்குக் கிழக்காகவும் லிபோனாவுக்குத் தெற்காகவும் இருக்கிற சீலோவிலே வருஷந்தோறும் கர்த்தருக்குப் பண்டிகை கொண்டாடப்படுகிறதே என்று சொல்லி, 20 அவர்கள் பென்யமீன் புத்திரரை நோக்கி: நீங்கள் போய், திராட்சத்தோட்டங்களிலே பதிவிருந்து, 21 சீலோவின் குமாரத்திகள் கீதவாத்தியத்தோடே நடனம்பண்ணுகிறவர்களாய்ப் புறப்பட்டு வருகிறதை நீங்கள் காணும்போது, திராட்சத்தோட்டங்களிலிருந்து புறப்பட்டு, உங்களில் அவரவர் சீலோவின் குமாரத்திகளில், ஒவ்வொரு பெண்ணைப் பிடித்துப் பென்யமீன் தேசத்திற்குக் கொண்டுபோங்கள். 22 அவர்களுடைய தகப்பன்மாராகிலும், சகோதரராகிலும் எங்களிடத்தில் முறையிட வரும்போது, நாங்கள் அவர்களை நோக்கி: எங்கள் நிமித்தம் அவர்களுக்குத் தயவுசெய்யுங்கள்; நாங்கள் யுத்தம்பண்ணி, அவனவனுக்கு மனைவியை வாங்கிக்கொடுக்கவில்லை; உங்கள்மேல் குற்றமுண்டாக இப்போது நீங்கள் அவர்களுக்கு மனைவிகளைக் கொடுக்கவும் இல்லை என்போம் என்று சொன்னார்கள். 23 பென்யமீன் புத்திரர் அப்படியே செய்து, நடனம்பண்ணுகிறவர்களிலே தங்கள் தொகைக்குச் சரியான பெண்களை மனைவிகளாகப் பிடித்துக்கொண்டு, தங்கள் சுதந்தரத்திற்குத் திரும்பிப்போய், பட்டணங்களைப் புதுப்பித்துக் கட்டி, அவைகளில் குடியிருந்தார்கள். 24 இஸ்ரவேல் புத்திரரும் அக்காலத்திலே அவ்விடம் விட்டு அவரவர் தங்கள் கோத்திரத்துக்கும் தங்கள் குடும்பத்துக்கும் போய், அவரவர் தங்கள் சுதந்தரத்தில் சேர்ந்தார்கள். 25 அந்நாட்களிலே இஸ்ரவேலில் ராஜா இல்லை; அவனவன் தன்தன் பார்வைக்குச் சரிப்போனபடி செய்துவந்தான்.

ரூத் 1

1 நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான். 2 அந்த மனுஷனுடைய பேர் எலிமெலேக்கு, அவன் மனைவியின் பேர் நகோமி, அவனுடைய இரண்டு குமாரரில் ஒருவன் பேர் மக்லோன், மற்றொருவன் பேர் கிலியோன்; யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊராகிய எப்பிராத்தியராகிய அவர்கள் மோவாப்தேசத்திற்குப் போய், அங்கே இருந்துவிட்டார்கள். 3 நகோமியின் புருஷனாகிய எலிமெலேக்கு இறந்துபோனான்; அவளும் அவளுடைய இரண்டு குமாரரும்மாத்திரம் இருந்தார்கள். 4 இவர்கள் மோவாபியரில் பெண்கொண்டார்கள்; அவர்களில் ஒருத்தி பேர் ஒர்பாள், மற்றவள் பேர் ரூத்; அங்கே ஏறக்குறையப் பத்துவருஷம் வாசம்பண்ணினார்கள். 5 பின்பு மக்லோன் கிலியோன் என்னும் அவர்கள் இருவரும் இறந்துபோனார்கள்; அந்த ஸ்திரீ தன் குமாரர் இருவரையும் தன் புருஷனையும் இழந்து தனித்தவளானாள். 6 கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப்தேசத்திலே கேள்விப்பட்டு, தன் மருமக்களோடேகூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவரும்படி எழுந்து, 7 தன் இரண்டு மருமக்களோடுங்கூடத் தானிருந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்பட்டாள். யூதா தேசத்திற்குத் திரும்பிப்போக, அவர்கள் வழிநடக்கையில், 8 நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள்; மரித்துப்போனவர்களுக்கும் எனக்கும் நீங்கள் தயைசெய்ததுபோல, கர்த்தர் உங்களுக்கும் தயைசெய்வாராக. 9 கர்த்தர் உங்கள் இருவருக்கும் வாய்க்கும் புருஷனுடைய வீட்டிலே நீங்கள் சுகமாய் வாழ்ந்திருக்கச் செய்வாராக என்று சொல்லி, அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது, அவளைப் பார்த்து: 10 உம்முடைய ஜனத்தண்டைக்கே உம்முடன்கூட வருவோம் என்றார்கள். 11 அதற்கு நகோமி: என் மக்களே, நீங்கள் திரும்பிப்போங்கள்; என்னோடே ஏன் வருகிறீர்கள்? உங்களுக்குப் புருஷராகும்படிக்கு, இனிமேல் என் கர்ப்பத்திலே எனக்குப் பிள்ளைகள் உண்டாகுமோ? 12 என் மக்களே, திரும்பிப்போங்கள்; நான் வயதுசென்றவள்; ஒரு புருஷனுடன் வாழத்தக்கவளல்ல; அப்படிப்பட்ட நம்பிக்கை எனக்கு உண்டாயிருந்து, நான் இன்று இரவில் ஒரு புருஷனுக்கு வாழ்க்கைப்பட்டு, பிள்ளைகளைப் பெற்றாலும், 13 அவர்கள் பெரியவர்களாகுமட்டும், புருஷருக்கு வாழ்க்கைப்படாதபடிக்கு நீங்கள் பொறுத்திருப்பீர்களோ? அது கூடாது; என் மக்களே, கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள்நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள். 14 அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அதிகமாய் அழுதார்கள்; ஒர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப்போனாள்; ரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள். 15 அப்பொழுது அவள்: இதோ, உன் சகோதரி தன் ஜனங்களிடத்துக்கும் தன் தேவர்களிடத்துக்கும் திரும்பிப் போய்விட்டாளே; நீயும் உன் சகோதரியின் பிறகே திரும்பிப்போ என்றாள். 16 அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப்போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். 17 நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள். 18 அவள் தன்னோடேகூட வர மனஉறுதியாயிருக்கிறதைக் கண்டு, அப்புறம் அதைக்குறித்து அவளோடே ஒன்றும் பேசவில்லை. 19 அப்படியே இருவரும் பெத்லெகேம்மட்டும் நடந்துபோனார்கள்; அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, ஊரார் எல்லாரும் அவர்களைக்குறித்து ஆச்சரியப்பட்டு, இவள் நகோமியோ என்று பேசிக்கொண்டார்கள். 20 அதற்கு அவள்: நீங்கள் என்னை நகோமி என்று சொல்லாமல், மாராள் என்று சொல்லுங்கள்; சர்வவல்லவர் எனக்கு மிகுந்த கசப்பைக் கட்டளையிட்டார். 21 நான் நிறைவுள்ளவளாய்ப் போனேன்; கர்த்தர் என்னை வெறுமையாய்த் திரும்பிவரப்பண்ணினார்; கர்த்தர் என்னைச் சிறுமைப்படுத்தி, சர்வவல்லவர் என்னைக் கிலேசப்படுத்தியிருக்கையில், நீங்கள் என்னை நகோமி என்பானேன் என்றாள். 22 இப்படி நகோமி மோவாபிய ஸ்திரீயான தன் மருமகள் ரூத்தோடுங்கூட மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்தாள்; வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தார்கள்.

ரூத் 2

1 நகோமிக்கு அவளுடைய புருஷனாகிய எலிமெலேக்கின் உறவின்முறையில் போவாஸ் என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான். 2 மோவாபிய ஸ்திரீயான ரூத் என்பவள் நகோமியைப் பார்த்து: நான் வயல்வெளிக்குப் போய், யாருடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்குமோ, அவர் பிறகே கதிர்களைப் பொறுக்கிக்கொண்டுவருகிறேன் என்றாள்; அதற்கு இவள்: என் மகளே, போ என்றாள். 3 அவள் போய், வயல்வெளியில் அறுக்கிறவர்கள் பிறகே பொறுக்கினாள்; தற்செயலாய் அவளுக்கு நேரிட்ட அந்த வயல்நிலம் எலிமெலேக்கின் வம்சத்தானாகிய போவாசுடையதாயிருந்தது. 4 அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து: கர்த்தர் உங்களோடே இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள்: கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள். 5 பின்பு போவாஸ் அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி: இந்தப் பெண்பிள்ளை யாருடையவள் என்று கேட்டான். 6 அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட அந்த வேலைக்காரன் பிரதியுத்தரமாக: இவள் மோவாப் தேசத்திலிருந்து நகோமியோடேகூடவந்த மோவாபிய பெண்பிள்ளை. 7 அறுக்கிறவர்கள் பிறகே அரிக்கட்டுகளிலிருந்து சிந்தினதைப் பொறுக்கிக்கொள்ளுகிறேன் என்று அவள் என்னிடத்தில் கேட்டுக்கொண்டாள்; காலமே துவக்கி இதுவரைக்கும் இங்கே இருக்கிறாள்; இப்பொழுது அவள் குடிசைக்கு வந்து கொஞ்சநேரந்தான் ஆயிற்று என்றான். 8 அப்பொழுது போவாஸ் ரூத்தைப்பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடுகூடவே இரு. 9 அவர்கள் அறுப்பறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பிறகே போ; ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங்களண்டைக்குப் போய், வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான். 10 அப்பொழுது அவள் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: நான் அந்நியதேசத்தாளாயிருக்க, நீர் என்னை விசாரிக்கும்படி எனக்கு எதினாலே உம்முடைய கண்களில் தயைகிடைத்தது என்றாள். 11 அதற்குப் போவாஸ் பிரதியுத்தரமாக: உன் புருஷன் மரணமடைந்த பின்பு, நீ உன் மாமியாருக்காகச் செய்ததும், நீ உன் தகப்பனையும் உன் தாயையும், உன் ஜந்மதேசத்தையும் விட்டு, முன்னே நீ அறியாத ஜனங்களிடத்தில் வந்ததும் எல்லாம் எனக்கு விவரமாய்த் தெரிவிக்கப்பட்டது. 12 உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான். 13 அதற்கு அவள்: என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும்; நான் உம்முடைய வேலைக்காரிகளில் ஒருத்திக்கும் சமானமாயிராவிட்டாலும், நீர் எனக்கு ஆறுதல் சொல்லி உம்முடைய அடியாளோடே பட்சமாய்ப் பேசினீரே என்றாள். 14 பின்னும் போவாஸ் சாப்பாட்டு வேளையில் அவளைப் பார்த்து: நீ இங்கே வந்து, இந்த அப்பத்திலே புசித்து, காடியிலே உன் துணிக்கையைத் தோய்த்துக்கொள் என்றான். அப்படியே அவள் அறுப்பறுக்கிறவர்கள் அருகே உட்கார்ந்தாள்; அவளுக்கு வறுத்த கோதுமையைக் கொடுத்தான்; அவள் சாப்பிட்டு, திர்ப்தியடைந்து, மீந்ததை வைத்துக்கொண்டாள். 15 அவள் கதிர் பொறுக்கிக்கொள்ள எழுந்தபோது, போவாஸ் தன் வேலைக்காரரை நோக்கி: அவள் அரிக்கட்டுகள் நடுவே பொறுக்கிக்கொள்ளட்டும்; அவளை ஈனம்பண்ணவேண்டாம். 16 அவள் பொறுக்கிக்கொள்ளும்படிக்கு அவளுக்காக அரிகளிலே சிலதைச் சிந்தவிடுங்கள், அவளை அதட்டாதிருங்கள் என்று கட்டளையிட்டான். 17 அப்படியே அவள் சாயங்காலமட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டி அடித்துத் தீர்ந்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது. 18 அவள் அதை எடுத்துக்கொண்டு, ஊருக்குள் வந்தாள்; அவள் பொறுக்கினதை அவளுடைய மாமி பார்த்தாள்; தான் திருப்தியாய்ச் சாப்பிட்டு மீதியாக வைத்ததையும் எடுத்து அவளுக்குக் கொடுத்தாள். 19 அப்பொழுது அவளுடைய மாமி: இன்று எங்கே கதிர்பொறுக்கினாய், எவ்விடத்தில் வேலைசெய்தாய் என்று அவளிடத்தில் கேட்டு; உன்னை விசாரித்தவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; அப்பொழுது அவள்: இன்னாரிடத்திலே வேலைசெய்தேன் என்று தன் மாமிக்கு அறிவித்து: நான் இன்று வேலை செய்த வயல்காரன் பேர் போவாஸ் என்றாள். 20 அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவுசெய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்; பின்னும் நகோமி அவளைப் பார்த்து: அந்த மனுஷன் நமக்கு நெருங்கின உறவின் முறையானும் நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாய் இருக்கிறான் என்றாள். 21 பின்னும் மோவாபிய ஸ்திரீயான ரூத்: அவர் என்னை நோக்கி, என் அறுப்பெல்லாம் அறுத்துத் தீருமட்டும், நீ என் வேலைக்காரிகளோடே கூடவே இரு என்று சொன்னார் என்றாள். 22 அப்பொழுது நகோமி தன் மருமகளாகிய ரூத்தைப் பார்த்து: என் மகளே, வேறொரு வயலிலே மனுஷர் உன்னை எதிர்க்காதபடிக்கு நீ அவன் வேலைக்காரிகளோடே போகிறது நல்லது என்றாள். 23 அப்படியே கோதுமை அறுப்பும் வாற்கோதுமை அறுப்பும் தீருமட்டும் அவள் கதிர் பொறுக்கும்படிக்கு, போவாசுடைய வேலைக்காரிகளோடே கூடியிருந்து, தன் மாமியினிடத்தில் தங்கினாள்.

ரூத் 3

1 பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ? 2 நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின்முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான். 3 நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப் போ; அந்த மனுஷன் புசித்துக் குடித்துத் தீருமட்டும் அவன் கண்ணுக்கு எதிர்ப்படாமலிரு. 4 அவன் படுத்துக்கொண்டபோது, அவன் படுத்திருக்கும் இடத்தை நீ பார்த்திருந்து போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கி நீ படுத்துக்கொள்; அப்பொழுது நீ செய்யவேண்டியது இன்னதென்று அவன் உனக்குச் சொல்லுவான் என்றாள். 5 அதற்கு அவள்: நீர் எனக்குச் சொன்னபடியெல்லாம் செய்வேன் என்றாள். 6 அவள் களத்திற்குப்போய், தன் மாமி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தாள். 7 போவாஸ் புசித்துக் குடித்து, மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அம்பாரத்து அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெள்ளப்போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக்கொண்டாள். 8 பாதிராத்திரியிலே, அந்த மனுஷன் அருண்டு, திரும்பி, ஒரு ஸ்திரீ தன் பாதத்தண்டையிலே படுத்திருக்கிறதைக் கண்டு, 9 நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள். 10 அதற்கு அவன்: மகளே, நீ கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவாயாக; நீ தரித்திரரும் ஐசுவரியவான்களுமான வாலிபர்களின் பிறகே போகாததினால், உன் முந்தின நற்குணத்தைப்பார்க்கிலும் உன் பிந்தின நற்குணம் உத்தமமாயிருக்கிறது. 11 இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள். 12 நான் சுதந்தரவாளி என்பது மெய்தான்; ஆனாலும் என்னிலும் கிட்டின சுதந்தரவாளி ஒருவன் இருக்கிறான். 13 இராத்திரிக்குத் தங்கியிரு; நாளைக்கு அவன் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணச் சம்மதித்தால் நல்லது, அவன் விவாகம்பண்ணட்டும்; அவன் உன்னை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தானேயாகில், நான் உன்னைச் சுதந்தரமுறையாய் விவாகம்பண்ணுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுகிறேன்; விடியற்காலமட்டும் படுத்துக்கொண்டிரு என்றான். 14 அவள் விடியற்காலமட்டும் அவன் பாதத்தண்டையில் படுத்திருந்து, களத்திலே ஒரு ஸ்திரீ வந்ததாக ஒருவருக்கும் தெரிவிக்கவேண்டாம் என்று அவன் சொல்லியிருந்தபடியால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாததற்கு முன்னே எழுந்திருந்தாள். 15 அவன் அவளை நோக்கி: நீ போர்த்துக்கொண்டிருக்கிற போர்வையை விரித்துப்பிடி என்றான்; அவள் அதைப் பிடித்தபோது, அவன் அதிலே ஆறுபடி வாற்கோதுமையை அளந்துபோட்டு, அவள்மேல் தூக்கிவிட்டு, பட்டணத்திற்குப் புறப்பட்டுவந்தான். 16 அவள் தன் மாமியினிடத்தில் வந்தபோது, அவள்: என் மகளே, உன் செய்தி என்ன என்று கேட்டாள்; அப்பொழுது அவள்: அந்த மனுஷன் தனக்குச் செய்ததையெல்லாம் அவளுக்கு விவரித்தாள். 17 மேலும் அவர், நீ உன் மாமியாரண்டைக்கு வெறுமையாய்ப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள். 18 அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள்.

ரூத் 4

1 போவாஸ் பட்டணவாசலில் போய், உட்கார்ந்துகொண்டிருந்தான்; அப்பொழுது போவாஸ் சொல்லியிருந்த அந்தச் சுதந்தரவாளி அந்த வழியே வந்தான்; அவனை நோக்கி: ஓய், என்று பேர் சொல்லிக் கூப்பிட்டு, இங்கே வந்து சற்று உட்காரும் என்றான்; அவன் வந்து உட்கார்ந்தான். 2 அப்பொழுது அவன் பட்டணத்து மூப்பரானவர்களில் பத்துப்பேரை அழைத்து, இங்கே உட்காருங்கள் என்றான்; அவர்களும் உட்கார்ந்தார்கள். 3 அப்பொழுது அவன் அந்தச் சுதந்தரவாளியை நோக்கி: எலிமெலேக் என்னும் நம்முடைய சகோதரனுக்கு இருந்த வயல்நிலத்தின் பங்கை, மோவாப் தேசத்திலிருந்து திரும்பிவந்த நகோமி விற்கப்போகிறாள். 4 ஆகையால் நீர் அதை ஊராருக்கு முன்பாகவும், என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும் வாங்கிக்கொள்ளும்படி உமக்கு அறியப்பண்ணவேண்டும் என்றிருந்தேன்; நீர் அதைச் சுதந்தரமுறையாக மீட்டுக்கொள்ள மனதிருந்தால், மீட்டுக்கொள்ளும்; அதை மீட்டுக்கொள்ள மனதில்லாதிருந்தால், நான் அதை அறியும்படிக்கு எனக்குச் சொல்லும்; உம்மையும் உமக்குப்பின்பு என்னையும் தவிர, அதை மீட்கத்தக்கவன் வேறொருவனும் இல்லை என்றான்; அதற்கு அவன்: நான் அதை மீட்டுக்கொள்ளுகிறேன் என்றான். 5 அப்பொழுது போவாஸ்: நீர் நகோமியின் கையிலே அந்த வயல்நிலத்தை வாங்குகிற நாளிலே மரித்தவனுடைய சுதந்தரத்தில் அவன் பேரை நிலைநிற்கப்பண்ணும்படிக்கு, அதை மரித்தவன் மனைவியாகிய மோவாபிய ஸ்திரீயான ரூத் கையிலும் வாங்கவேண்டியது என்றான். 6 அப்பொழுது அந்தச் சுதந்தரவாளி: நான் என் சுதந்தரத்தைக் கெடுக்காதபடிக்கு, நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன்; நான் மீட்கத்தக்கதை நீர் மீட்டுக்கொள்ளும்; நான் அதை மீட்டுக்கொள்ளமாட்டேன் என்றான். 7 மீட்கிறதிலும் மாற்றுகிறதிலும் சகல காரியத்தையும் உறுதிப்படுத்தும்படிக்கு, இஸ்ரவேலிலே பூர்வகால வழக்கம் என்னவென்றால், ஒருவன் தன் பாதரட்சையைக் கழற்றி, மற்றவனுக்குக் கொடுப்பான், இது இஸ்ரவேலிலே வழங்கின உறுதிப்பாடு. 8 அப்படியே அந்தச் சுதந்தரவாளி போவாசை நோக்கி: நீர் அதை வாங்கிக்கொள்ளும் என்று சொல்லி, தன் பாதரட்சையைக் கழற்றிப் போட்டான். 9 அப்பொழுது போவாஸ் மூப்பரையும் சகல ஜனங்களையும் நோக்கி: எலிமெலேக்குக்கு இருந்த எல்லாவற்றையும் கிலியோனுக்கும் மக்லோனுக்கும் இருந்த எல்லாவற்றையும் நகோமியின் கையிலே வாங்கிக்கொண்டேன் என்பதற்கு இன்றையதினம் நீங்கள் சாட்சி. 10 இதுவுமல்லாமல், மரித்தவனுடைய சகோதரருக்குள்ளும், ஊராருக்குள்ளும், அவனுடைய பேர் அற்றுப்போகாமல், மரித்தவனுடைய சுதந்தரத்திலே அவன் பேரை நிலைநிறுத்த, நான் மக்லோனின் மனைவியாயிருந்த மோவாபிய ஸ்திரீயான ரூத்தை எனக்கு மனைவியாகக் கொண்டேன்; அதற்கும் இன்றையதினம் நீங்கள் சாட்சி என்றான். 11 அப்பொழுது ஒலிமுகவாசலில் இருக்கிற சகல ஜனங்களும் மூப்பரானவர்களும் அவனை நோக்கி: நாங்கள் சாட்சிதான்; உன் வீட்டிலே வருகிற மனைவியைக் கர்த்தர் இஸ்ரவேல் வீட்டைக் கட்டுவித்த இரண்டுபேராகிய ராகேலைப்போலவும் லேயாளைப்போலவும் வாழ்ந்திருக்கச் செய்வாராக; நீ எப்பிராத்தாவிலே பாக்கியவானாயிருந்து, பெத்லெகேமிலே புகழ்பெற்றிருக்கக்கடவாய். 12 இந்தப் பெண்ணிடத்திலே கர்த்தர் உனக்கு அருளிச்செய்யப்போகிற சந்தானத்தினாலே, உன் வீடு தாமார் யூதாவுக்குப் பெற்ற பேரேசின் வீட்டைப்போல ஆகக்கடவது என்றார்கள். 13 போவாஸ் ரூத்தை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது, அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார். 14 அப்பொழுது ஸ்திரீகள் நகோமியைப் பார்த்து: சுதந்தரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயைசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது. 15 அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்; உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள். 16 நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள். 17 அயல்வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன். 18 பேரேசுடைய சந்ததியின் வரலாறு: பேரேஸ் எஸ்ரோனைப் பெற்றான். 19 எஸ்ரோன் ராமைப் பெற்றான்; ராம் அம்மினதாபைப் பெற்றான். 20 அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான். 21 சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான். 22 ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.

1 சாமுவேல் 1

1 எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன். 2 அவனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்; ஒருத்திபேர் அன்னாள், மற்றவள்பேர் பெனின்னாள்; பெனின்னாளுக்குப் பிள்ளைகள் இருந்தார்கள்; அன்னாளுக்கோ பிள்ளை இல்லை. 3 அந்த மனுஷன் சீலோவிலே சேனைகளின் கர்த்தரைப் பணிந்துகொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து போய்வருவான்; அங்கே கர்த்தரின் ஆசாரியரான ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் இருந்தார்கள். 4 அங்கே எல்க்கானா பலியிடும் நாளிலே, அவன் தன் மனைவியாகிய பெனின்னாளுக்கும், அவளுடைய எல்லாக் குமாரருக்கும் குமாரத்திகளுக்கும், பங்குபோட்டுக் கொடுப்பான். 5 அன்னாளைச் சிநேகித்தபடியினால், அவளுக்கு இரட்டிப்பான பங்கு கொடுப்பான்; கர்த்தரோ அவள் கர்ப்பத்தை அடைத்திருந்தார். 6 கர்த்தர் அவள் கர்ப்பத்தை அடைத்தபடியினால், அவளுடைய சக்களத்தி அவள் துக்கப்படும்படியாக அவளை மிகவும் விசனப்படுத்துவாள். 7 அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போகும் சமயத்தில், அவன் வருஷந்தோறும் அந்தப்பிரகாரமாய்ச் செய்வான்; இவள் அவளை மனமடிவாக்குவாள்; அப்பொழுது அவள் சாப்பிடாமல் அழுதுகொண்டிருப்பாள். 8 அவள் புருஷனாகிய எல்க்கானா அவளைப் பார்த்து: அன்னாளே, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் சஞ்சலப்படுகிறாய்? பத்துக் குமாரரைப்பார்க்கிலும் நான் உனக்கு அதிகமல்லவா என்றான். 9 சீலோவிலே அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அன்னாள் எழுந்திருந்தாள்; ஆசாரியனாகிய ஏலி கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நிலையண்டையிலே ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தான். 10 அவள் போய், மனங்கசந்து, மிகவும் அழுது, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: 11 சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள். 12 அவள் கர்த்தருடைய சந்நிதியில் வெகுநேரம் விண்ணப்பம்பண்ணுகிறபோது, ஏலி அவள் வாயைக் கவனித்துக்கொண்டிருந்தான். 13 அன்னாள் தன் இருதயத்திலே பேசினாள்; அவளுடைய உதடுகள் மாத்திரம் அசைந்தது, அவள் சத்தமோ கேட்கப்படவில்லை; ஆகையால் அவள் வெறித்திருக்கிறாள் என்று ஏலி நினைத்து, 14 அவளை நோக்கி: நீ எதுவரைக்கும் வெறித்திருப்பாய்? உன் குடியை உன்னைவிட்டு விலக்கு என்றான். 15 அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள ஸ்திரீ; நான் திராட்சரசமாகிலும் மதுவாகிலும் குடிக்கவில்லை; நான் கர்த்தருடைய சந்நிதியில் என் இருதயத்தை ஊற்றிவிட்டேன். 16 உம்முடைய அடியாளைப் பேலியாளின் மகளாக எண்ணாதேயும்; மிகுதியான விசாரத்தினாலும் கிலேசத்தினாலும் இந்நேரமட்டும் விண்ணப்பம்பண்ணினேன் என்றாள். 17 அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான். 18 அப்பொழுது அவள்: உம்முடைய அடியாளுக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கக்கடவது என்றாள்; பின்பு அந்த ஸ்திரீ புறப்பட்டுப்போய், போஜனஞ்செய்தாள்; அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை. 19 அவர்கள் அதிகாலையில் எழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டு, ராமாவிலிருக்கிற தங்கள் வீட்டுக்குத் திரும்பிப்போனார்கள்; எல்க்கானா தன் மனைவியாகிய அன்னாளை அறிந்தான்; கர்த்தர் அவளை நினைந்தருளினார். 20 சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனைப் பெற்று, கர்த்தரிடத்தில் அவனைக் கேட்டேன் என்று சொல்லி, அவனுக்கு சாமுவேல் என்று பேரிட்டாள். 21 எல்க்கானா என்பவன் கர்த்தருக்கு வருஷாந்தரம் செலுத்தும் பலியையும் தன் பொருத்தனையையும் செலுத்தும்படியாக, தன் வீட்டார் அனைவரோடுங்கூடப் போனான். 22 அன்னாள் கூடப்போகவில்லை; அவள்: பிள்ளை பால்மறந்தபின்பு, அவன் கர்த்தரின் சந்நிதியிலே காணப்படவும், அங்கே எப்பொழுதும் இருக்கவும், நான் அவனைக் கொண்டுபோய் விடுவேன் என்று தன் புருஷனிடத்தில் சொன்னாள். 23 அப்பொழுது அவள் புருஷனாகிய எல்க்கானா அவளை நோக்கி: நீ உன் இஷ்டப்படி செய்து, அவனைப் பால்மறக்கப்பண்ணுமட்டும் இரு; கர்த்தர் தம்முடைய வார்த்தையைமாத்திரம் நிறைவேற்றுவாராக என்றான்; அப்படியே அந்த ஸ்திரீ தன் பிள்ளையைப் பால் மறக்கப்பண்ணுமட்டும் அதற்கு முலைகொடுத்தாள். 24 அவள் அவனைப் பால்மறக்கப் பண்ணினபின்பு, மூன்று காளைகளையும், ஒரு மரக்கால் மாவையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும் எடுத்துக்கொண்டு, அவனையும் கூட்டிக்கொண்டு, சீலோவிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனாள்; பிள்ளை இன்னும் குழந்தையாயிருந்தது. 25 அவர்கள் ஒரு காளையைப் பலியிட்டு, பிள்ளையை ஏலியினிடத்தில் கொண்டுவந்து விட்டார்கள். 26 அப்பொழுது அவள்: என் ஆண்டவனே, இங்கே உம்மண்டையிலே நின்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணின ஸ்திரீ நான்தான் என்று என் ஆண்டவனாகிய உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். 27 இந்தப் பிள்ளைக்காக விண்ணப்பம்பண்ணினேன்; நான் கர்த்தரிடத்தில் கேட்ட என் விண்ணப்பத்தின்படி எனக்குக் கட்டளையிட்டார். 28 ஆகையால் அவன் கர்த்தருக்கென்று கேட்கப்பட்டபடியினால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் அவனைக் கர்த்தருக்கே ஒப்புக்கொடுக்கிறேன் என்றாள்; அவன் அங்கே கர்த்தரைப் பணிந்துகொண்டான்.

1 சாமுவேல் 2

1 அப்பொழுது அன்னாள் ஜெபம்பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது; என் பகைஞரின்மேல் என் வாய் திறந்திருக்கிறது; உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன். 2 கர்த்தரைப்போலப் பரிசுத்தமுள்ளவர் இல்லை; உம்மையல்லாமல் வேறொருவரும் இல்லை; எங்கள் தேவனைப்போல ஒரு கன்மலையும் இல்லை. 3 இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ? 4 பலவான்களின் வில் முறிந்தது; தள்ளாடினவர்களோ பலத்தினால் இடைகட்டப்பட்டார்கள். 5 திருப்தியாயிருந்தவர்கள் அப்பத்துக்காக கூலிவேலை செய்கிறார்கள்; பசியாயிருந்தவர்களோ இனிப் பசியாயிரார்கள்; மலடியாயிருந்தவள் ஏழு பெற்றாள்; அநேகம் பிள்ளைகளைப் பெற்றவளோ பலட்சயப்பட்டாள். 6 கர்த்தர் கொல்லுகிறவரும் உயிர்ப்பிக்கிறவருமாயிருக்கிறார்; அவரே பாதாளத்தில் இறங்கவும் அதிலிருந்து ஏறவும் பண்ணுகிறவர். 7 கர்த்தர் தரித்திரம் அடையச்செய்கிறவரும், ஐசுவரியம் அடையப்பண்ணுகிறவருமாயிருக்கிறார்; அவர் தாழ்த்துகிறவரும், உயர்த்துகிறவருமானவர். 8 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார்; பூமியின் அஸ்திபாரங்கள் கர்த்தருடையவைகள்; அவரே அவைகளின்மேல் பூச்சக்கரத்தை வைத்தார். 9 அவர் தமது பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மௌனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை. 10 கர்த்தரோடே வழக்காடுகிறவர்கள் நொறுக்கப்படுவார்கள்; வானத்திலிருந்து அவர்கள்மேல் முழங்குவார்; கர்த்தர் பூமியின் கடையாந்தரங்களை நியாயந்தீர்த்து, தாம் ஏற்படுத்தின ராஜாவுக்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம் பண்ணினவரின் கொம்பை உயரப்பண்ணுவார் என்று துதித்தாள். 11 பின்பு எல்க்கானா ராமாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; அந்தப் பிள்ளையோ, ஆசாரியனாகிய ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான். 12 ஏலியின் குமாரர் பேலியாளின் மக்களாயிருந்தார்கள்; அவர்கள் கர்த்தரை அறியவில்லை. 13 அந்த ஆசாரியர்கள் ஜனங்களை நடப்பித்த விதம் என்னவென்றால், எவனாகிலும் ஒரு பலியைச் செலுத்துங்காலத்தில் இறைச்சி வேகும்போது, ஆசாரியனுடைய வேலைக்காரன் மூன்று கூறுள்ள ஒரு ஆயுதத்தைத் தன் கையிலே பிடித்துவந்து, 14 அதினாலே, கொப்பரையிலாவது பானையிலாவது சருவத்திலாவது சட்டியிலாவது குத்துவான்; அந்த ஆயுதத்தில் வருகிறதையெல்லாம் ஆசாரியன் எடுத்துக்கொள்ளுவான்; அப்படி அங்கே சீலோவிலே வருகிற இஸ்ரவேலருக்கெல்லாம் செய்தார்கள். 15 கொழுப்பைத் தகனிக்கிறதற்கு முன்னும், ஆசாரியனுடைய வேலைக்காரன் வந்து பலியிடுகிற மனுஷனை நோக்கி: ஆசாரியனுக்குப் பொரிக்கும்படி இறைச்சி கொடு; பச்சை இறைச்சியே அல்லாமல், அவித்ததை உன் கையிலே வாங்குகிறதில்லை என்பான். 16 அதற்கு அந்த மனுஷன்: இன்று செய்யவேண்டியபடி முதலாவது கொழுப்பைத் தகனித்துவிடட்டும்; பிற்பாடு உன் மனவிருப்பத்தின்படி எடுத்துக்கொள் என்று சொன்னாலும்; அவன்: அப்படியல்ல, இப்பொழுதே கொடு, இல்லாவிட்டால் பலவந்தமாய் எடுத்துக்கொள்ளுவேன் என்பான். 17 ஆதலால் அந்த வாலிபரின் பாவம் கர்த்தருடைய சந்நிதியில் மிகவும் பெரிதாயிருந்தது; மனுஷர் கர்த்தரின் காணிக்கையை வெறுப்பாய் எண்ணினார்கள். 18 சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் சணல்நூல் ஏபோத்தைத் தரித்தவனாய்க் கர்த்தருக்கு முன்பாகப் பணிவிடை செய்தான். 19 அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக்கொண்டு வருவாள். 20 ஏலி எல்க்கானாவையும் அவன் மனைவியையும் ஆசீர்வதித்து: இந்த ஸ்திரீ கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுத்ததற்குப் பதிலாகக் கர்த்தர் உனக்கு அவளாலே சந்தானம் கட்டளையிடுவாராக என்றான்; அவர்கள் தங்கள் ஸ்தானத்திற்குத் திரும்பப் போய்விட்டார்கள். 21 அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார்; அவள் கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்; சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான். 22 ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்; அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும் கேள்விப்பட்டு, 23 அவர்களை நோக்கி: நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறது என்ன? இந்த ஜனங்கள் எல்லாரும் உங்கள் பொல்லாத நடக்கைகளைச் சொல்லக்கேட்கிறேன். 24 என் குமாரரே, வேண்டாம்; நான் கேள்விப்படுகிற இந்தச் செய்தி நல்லதல்ல; கர்த்தருடைய ஜனங்கள் மீறி நடக்கிறதற்குக் காரணமாயிருக்கிறீர்களே. 25 மனுஷனுக்கு விரோதமாக மனுஷன் பாவஞ்செய்தால், நியாயாதிபதிகள் அதைத் தீர்ப்பார்கள்; ஒருவன் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்வானேயாகில், அவனுக்காக விண்ணப்பஞ்செய்யத்தக்கவன் யார் என்றான்; அவர்களோ தங்கள் தகப்பன் சொல்லைக் கேளாமற்போனார்கள்; அவர்களைச் சங்கரிக்கக் கர்த்தர் சித்தமாயிருந்தார். 26 சாமுவேல் என்னும் பிள்ளையாண்டானோ, பெரியவனாக வளர்ந்து, கர்த்தருக்கும் மனுஷருக்கும் பிரியமாக நடந்துகொண்டான். 27 தேவனுடைய மனுஷன் ஒருவன் ஏலியினிடத்தில் வந்து: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், உன் பிதாவின் வீட்டார் எகிப்திலே பார்வோனின் வீட்டில் இருக்கையில், நான் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி, 28 என் பலிபீடத்தின்மேல் பலியிடவும், தூபங்காட்டவும், என் சமுகத்தில் ஏபோத்தைத் தரிக்கவும், இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் அவனை எனக்கு ஆசாரியனாகத் தெரிந்துகொண்டு, உன் பிதாவின் வீட்டாருக்கு இஸ்ரவேல் புத்திரருடைய தகனபலிகளையெல்லாம் கொடுக்கவில்லையா? 29 என் வாசஸ்தலத்திலே செலுத்தும்படி நான் கட்டளையிட்ட என் பலியையும், என் காணிக்கையையும், நீங்கள் உதைப்பானேன்? என் ஜனமாகிய இஸ்ரவேலின் காணிக்கைகளிலெல்லாம் பிரதானமானவைகளைக் கொண்டு உங்களைக் கொழுக்கப்பண்ணும்படிக்கு, நீ என்னைப்பார்க்கிலும் உன் குமாரரை மதிப்பானேன் என்கிறார். 30 ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: உன் வீட்டாரும் உன் பிதாவின் வீட்டாரும் என்றைக்கும் என் சந்நிதியில் நடந்து கொள்வார்கள் என்று நான் நிச்சயமாய்ச் சொல்லியிருந்தும், இனி அது எனக்குத் தூரமாயிருப்பதாக; என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டைபண்ணுகிறவர்கள் கனஈனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 31 உன் வீட்டில் ஒரு கிழவனும் இராதபடிக்கு உன் புயத்தையும் உன் பிதாவின் வீட்டாருடைய புயத்தையும் நான் தறித்துப்போடும் நாட்கள் வரும். 32 இஸ்ரவேலுக்குச் செய்யப்படும் சகல நன்மைக்கும் மாறாக என் வாசஸ்தலத்திலே உபத்திரவத்தைக் காண்பாய்; ஒருபோதும் உன் வீட்டில் ஒரு கிழவனும் இருப்பதில்லை. 33 என் பலிபீடத்தில் சேவிக்க, நான் உன் சந்ததியில் நிர்மூலமாக்காதவர்களோ, உன் கண்களைப் பூத்துப்போகப்பண்ணவும், உன் ஆத்துமாவை வேதனைப்படுத்தவும் வைக்கப்படுவார்கள்; உன் வம்சத்திலுள்ள யாவரும் வாலவயதிலே சாவார்கள். 34 ஓப்னி பினெகாஸ் என்னும் உன் இரண்டு குமாரரின்மேல் வருவதே உனக்கு அடையாளமாயிருக்கும்; அவர்கள் இருவரும் ஒரேநாளில் சாவார்கள். 35 நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணி, அவனுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன்; அவன் என்னால் அபிஷேகம்பண்ணப்பட்டவனுக்கு முன்பாகச் சகல நாளும் நடந்துகொள்ளுவான். 36 அப்பொழுது உன் வீட்டாரில் மீதியாயிருப்பவன் எவனும் ஒரு வெள்ளிப்பணத்துக்காகவும் ஒரு அப்பத்துணிக்கைக்காகவும் அவனிடத்தில் வந்து பணிந்து: நான் கொஞ்சம் அப்பம் சாப்பிட யாதொரு ஆசாரிய ஊழியத்தில் என்னைச் சேர்த்துக்கொள்ளும் என்று கெஞ்சுவான் என்று சொல்லுகிறார் என்றான்.

1 சாமுவேல் 3

1 சாமுவேல் என்னும் பிள்ளையாண்டான் ஏலிக்கு முன்பாகக் கர்த்தருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தான்; அந்நாட்களிலே கர்த்தருடைய வசனம் அபூர்வமாயிருந்தது; பிரத்தியட்சமான தரிசனம் இருந்ததில்லை. 2 ஒருநாள் ஏலி தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; அவன் பார்க்கக்கூடாதபடிக்கு அவனுடைய கண்கள் இருளடைந்திருந்தது. 3 தேவனுடைய பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் தேவனுடைய விளக்கு அணைந்துபோகுமுன்னே சாமுவேலும் படுத்துக்கொண்டிருந்தான். 4 அப்பொழுது கர்த்தர், சாமுவேலைக் கூப்பிட்டார். அதற்கு அவன்: இதோ, இருக்கிறேன் என்று சொல்லி, 5 ஏலியினிடத்தில் ஓடி, இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: நான் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான்; அவன் போய்ப் படுத்துக்கொண்டான். 6 மறுபடியும் கர்த்தர் சாமுவேலே என்று கூப்பிட்டார்; அப்பொழுது சாமுவேல் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய்: இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அதற்கு அவன்: என் மகனே, நான் உன்னைக் கூப்பிடவில்லை, திரும்பிப்போய்ப் படுத்துக்கொள் என்றான். 7 சாமுவேல் கர்த்தரை இன்னும் அறியாதிருந்தான்; கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இன்னும் வெளிப்படவில்லை. 8 கர்த்தர் மறுபடியும் மூன்றாம்விசை: சாமுவேலே என்று கூப்பிட்டார். அவன் எழுந்திருந்து ஏலியினிடத்தில் போய், இதோ, இருக்கிறேன்; என்னைக் கூப்பிட்டீரே என்றான். அப்பொழுது கர்த்தர் பிள்ளையாண்டானைக் கூப்பிடுகிறார் என்று ஏலி அறிந்து, 9 சாமுவேலை நோக்கி: நீ போய்ப் படுத்துக்கொள்; உன்னைக் கூப்பிட்டால், அப்பொழுது நீ: கர்த்தாவே சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்று சொல் என்றான்; சாமுவேல் போய், தன்னுடைய ஸ்தானத்திலே படுத்துக்கொண்டான். 10 அப்பொழுது கர்த்தர் வந்து நின்று, முன்போல: சாமுவேலே சாமுவேலே என்று கூப்பிட்டார்; அதற்குச் சாமுவேல்: சொல்லும்; அடியேன் கேட்கிறேன் என்றான். 11 கர்த்தர் சாமுவேலை நோக்கி: இதோ, நான் இஸ்ரவேலில் ஒரு காரியத்தைச் செய்வேன்; அதைக் கேட்கிற ஒவ்வொருவனுடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும். 12 நான் ஏலியின் குடும்பத்திற்கு விரோதமாகச் சொன்ன யாவையும், அவன்மேல் அந்நாளிலே வரப்பண்ணுவேன்; அதைத் தொடங்கவும் அதை முடிக்கவும் போகிறேன். 13 அவன் குமாரர் தங்கள்மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை அவன் அறிந்திருந்தும், அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் அவன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன் என்று அவனுக்கு அறிவித்தேன். 14 அதினிமித்தம் ஏலியின் குடும்பத்தார் செய்த அக்கிரமம் ஒருபோதும் பலியினாலாவது காணிக்கையினாலாவது நிவிர்த்தியாவதில்லை என்று ஏலியின் குடும்பத்தைக்குறித்து ஆணையிட்டிருக்கிறேன் என்றார். 15 சாமுவேல் விடியற்காலமட்டும் படுத்திருந்து, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்தான்; சாமுவேல் ஏலிக்கு அந்தத் தரிசனத்தை அறிவிக்கப் பயந்தான். 16 ஏலியோ: சாமுவேலே, என் மகனே என்று சாமுவேலைக் கூப்பிட்டான். அவன்: இதோ, இருக்கிறேன் என்றான். 17 அப்பொழுது அவன்: கர்த்தர் உன்னிடத்தில் சொன்ன காரியம் என்ன? எனக்கு அதை மறைக்கவேண்டாம்; அவர் உன்னிடத்தில் சொன்ன சகல காரியத்திலும் யாதொன்றை எனக்கு மறைத்தாயானால், தேவன் உனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்வாராக என்றான். 18 அப்பொழுது சாமுவேல் ஒன்றையும் அவனுக்கு மறைக்காமல், அந்தக் காரியங்களையெல்லாம் அவனுக்கு அறிவித்தான். அதற்கு அவன்: அவர் கர்த்தர்; அவர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான். 19 சாமுவேல் வளர்ந்தான்; கர்த்தர் அவனுடனேகூட இருந்தார்; அவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்துபோக விடவில்லை. 20 சாமுவேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிதான் என்று தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் விளங்கினது. 21 கர்த்தர் பின்னும் சீலோவிலே தரிசனம் தந்தருளினார்; கர்த்தர் சீலோவிலே தம்முடைய வார்த்தையினாலே சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்.

1 சாமுவேல் 4

1 சாமுவேலின் வார்த்தை இஸ்ரவேலுக்கெல்லாம் வந்தது. இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு விரோதமாய் யுத்தஞ் செய்யப்புறப்பட்டு, எபெனேசருக்குச் சமீபத்தில் பாளயமிறங்கினார்கள்; பெலிஸ்தரோ ஆப்பெக்கிலே பாளயமிறங்கியிருந்தார்கள். 2 பெலிஸ்தர் இஸ்ரவேலருக்கு விரோதமாய் அணிவகுத்து நின்றார்கள்; யுத்தம் அதிகரித்து, இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அவர்கள் சேனையில் போர்க்களத்திலே ஏறக்குறைய நாலாயிரம்பேர் வெட்டுண்டுபோனார்கள். 3 ஜனங்கள் திரும்பப் பாளயத்துக்கு வந்தபோது, இஸ்ரவேலின் மூப்பரானவர்கள், இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன? சீலோவிலிருக்கிற கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைக் கொண்டுவருவோம்; அது நம்மை நம்முடைய பகைஞரின் கைக்கு விலக்கி ரட்சிக்கும்படி, நம்முடைய நடுவிலே வரவேண்டியது என்றார்கள். 4 அப்படியே கேருபீன்களின் மத்தியிலே வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை எடுத்துவர, ஜனங்கள் சீலோவுக்குச் சொல்லியனுப்பினார்கள்; அங்கே ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியண்டையில் இருந்தார்கள். 5 கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி பாளயத்திலே வருகிறபோது, இஸ்ரவேலரெல்லாரும் பூமி அதிரத்தக்கதாக மகா ஆர்ப்பரிப்பாய்ச் சத்தமிட்டார்கள். 6 அவர்கள் ஆர்ப்பரிக்கிற சத்தத்தைப் பெலிஸ்தர் கேட்டபோது: எபிரெயருடைய பாளயத்தில் இந்த மகா ஆர்ப்பரிப்பின் சத்தம் என்ன என்றார்கள்; பின்பு கர்த்தரின் பெட்டி பாளயத்தில் வந்தது என்று அறிந்துகொண்டார்கள். 7 தேவன் பாளயத்தில் வந்தார் என்று சொல்லப்பட்டபடியினால், பெலிஸ்தர் பயந்து, ஐயோ, நமக்கு மோசம் வந்தது; இதற்குமுன் ஒருபோதும் இப்படி நடக்கவில்லையே. 8 ஐயோ, அந்த மகத்துவமான தேவர்களின் கைக்கு நம்மைத் தப்புவிப்பவர் யார்? எகிப்தியரைச் சகலவித வாதைகளினாலும் வனாந்தரத்திலே அடித்த தேவர்கள் இவர்கள்தானே. 9 பெலிஸ்தரே, திடங்கொண்டு புருஷரைப்போல நடந்துகொள்ளுங்கள்; எபிரெயர் உங்களுக்கு அடிமைகளாயிருந்ததுபோல, நீங்களும் அவர்களுக்கு அடிமைகளாகாதபடிக்கு, புருஷராயிருந்து, யுத்தம்பண்ணுங்கள் என்று சொல்லிக்கொண்டார்கள். 10 அப்பொழுது பெலிஸ்தர் யுத்தம்பண்ணினார்கள்; இஸ்ரவேலர் முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள்; மகா பெரிய சங்காரம் உண்டாயிற்று; இஸ்ரவேலிலே முப்பதினாயிரம் காலாட்கள் விழுந்தார்கள். 11 தேவனுடைய பெட்டி பிடிக்கப்பட்டது; ஏலியின் இரண்டு குமாரராகிய ஓப்னியும் பினெகாசும் மாண்டார்கள். 12 பென்யமீன் கோத்திரத்தானாகிய ஒருவன் படையிலிருந்து ஓடி, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் தலையின்மேல் புழுதியை வாரிப் போட்டுக்கொண்டு, அன்றையதினமே சீலோவுக்கு வந்தான். 13 அவன் வந்தபோது: ஏலி ஒரு ஆசனத்தின்மேல் உட்கார்ந்து வழியைப் பார்த்துக்கொண்டிருந்தான்; தேவனுடைய பெட்டிக்காக அவன் இருதயம் தத்தளித்துக்கொண்டிருந்தது. ஊரிலே செய்தியை அறிவிக்க அந்த மனுஷன் வந்தபோது, ஊரெங்கும் புலம்பல் உண்டாயிற்று. 14 புலம்புகிற இந்தச் சத்தத்தை ஏலி கேட்டபோது: இந்த அமளியின் இரைச்சல் என்ன என்று கேட்டான்; அப்பொழுது அந்த மனுஷன் தீவிரித்து வந்து, ஏலிக்கு அறிவித்தான். 15 ஏலி தொண்ணூற்றெட்டு வயதுள்ளவனாயிருந்தான்; அவன் பார்க்கக்கூடாதபடிக்கு, அவன் கண்கள் மங்கலாயிருந்தது. 16 அந்த மனுஷன் ஏலியைப் பார்த்து: படையிலிருந்து வந்தவன் நான்தான்; இன்று தான் படையிலிருந்து ஓடிவந்தேன் என்றான். அப்பொழுது அவன்: என் மகனே, நடந்த காரியம் என்ன என்று கேட்டான். 17 செய்தி கொண்டுவந்தவன் பிரதியுத்தரமாக: இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களுக்குள்ளே பெரிய சங்காரம் உண்டாயிற்று; உம்முடைய குமாரராகிய ஓப்னி பினெகாஸ் என்னும் இருவரும் இறந்துபோனார்கள்; தேவனுடைய பெட்டியும் பிடிபட்டுப்போயிற்று என்றான். 18 அவன் தேவனுடைய பெட்டியைக் குறித்துச் சொன்னவுடனே, ஏலி ஆசனத்திலிருந்து வாசலின் பக்கமாய் மல்லாக்க விழுந்தான்; அவன் கிழவனும் ஸ்தூலித்தவனுமாயிருந்தபடியால், அவன் பிடரி முறிந்து செத்துப்போனான். அவன் இஸ்ரவேலை நாற்பது வருஷம் நியாயம் விசாரித்தான். 19 பினெகாசின் மனைவியாகிய அவன் மருமகள் நிறைகர்ப்பிணியாயிருந்தாள்; அவள் தேவனுடைய பெட்டி பிடிபட்ட செய்தியையும், தன் மாமனும் தன் புருஷனும் இறந்து போனதையும் கேள்விப்பட்டபோது, அவள் கர்ப்பவேதனைப்பட்டு குனிந்து பிரசவித்தாள். 20 அவள் சாகப்போகிற நேரத்தில் அவளண்டையிலே நின்ற ஸ்திரீகள்: நீ பயப்படாதே, ஆண்பிள்ளையைப் பெற்றாய் என்றார்கள்; அவளோ அதற்கு ஒன்றும் சொல்லவுமில்லை, அதின்மேல் சிந்தைவைக்கவுமில்லை. 21 தேவனுடைய பெட்டி பிடிபட்டு, அவளுடைய மாமனும் அவளுடைய புருஷனும் இறந்துபோனபடியினால், அவள்: மகிமை இஸ்ரவேலை விட்டுப்போயிற்று என்று சொல்லி, அந்தப் பிள்ளைக்கு இக்கபோத் என்று பேரிட்டாள். 22 தேவனுடைய பெட்டி பிடிபட்டுப் போனபடியினால், மகிமை இஸ்ரவேலை விட்டு விலகிப்போயிற்று என்றாள்.

1 சாமுவேல் 5

1 பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, அதை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுபோனார்கள். 2 பெலிஸ்தர் தேவனுடைய பெட்டியைப் பிடித்து, தாகோனின் கோவிலிலே கொண்டுவந்து, தாகோனண்டையிலே வைத்தார்கள். 3 அஸ்தோத் ஊரார் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தது; அப்பொழுது அவர்கள் தாகோனை எடுத்து, அதை அதின் ஸ்தானத்திலே திரும்பவும் நிறுத்தினார்கள். 4 அவர்கள் மறுநாள் காலமே எழுந்திருந்து வந்தபோது, இதோ, தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்ததுமல்லாமல், தாகோனின் தலையும் அதின் இரண்டு கைகளும் வாசற்படியின்மேல் உடைபட்டுக் கிடந்தது; தாகோனுக்கு உடல்மாத்திரம் மீதியாயிருந்தது. 5 ஆதலால் இந்நாள்வரைக்கும் தாகோனின் பூஜாசாரிகளும் தாகோனின் கோவிலுக்குள் பிரவேசிக்கிற யாவரும் அஸ்தோத்திலிருக்கிற தாகோனுடைய வாசற்படியை மிதிக்கிறதில்லை. 6 அஸ்தோத் ஊராரைப் பாழாக்கும்படிக்கு கர்த்தருடைய கை அவர்கள்மேல் பாரமாயிருந்தது; அவர் அஸ்தோத்தின் ஜனங்களையும், அதின் எல்லைகளுக்குள் இருக்கிறவர்களையும் மூலவியாதியினால் வாதித்தார். 7 இப்படி நடந்ததை அஸ்தோத்தின் ஜனங்கள் கண்டபோது: இஸ்ரவேலின் தேவனுடைய கை நமதுமேலும், நம்முடைய தேவனாகிய தாகோனின்மேலும் கடினமாயிருக்கிறபடியால், அவருடைய பெட்டி நம்மிடத்தில் இருக்கலாகாது என்று சொல்லி; 8 பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் அழைப்பித்து, தங்களண்டையிலே கூடிவரச் செய்து: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நாம் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை காத்பட்டணமட்டும் எடுத்துச் சுற்றிக்கொண்டு போகவேண்டும் என்றார்கள்; அப்படியே இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்துச் சுற்றிக்கொண்டுபோனார்கள். 9 அதை எடுத்துச் சுற்றிக்கொண்டு போனபின்பு, கர்த்தருடைய கை அந்தப் பட்டணத்தின்மேல் மகா உக்கிரமாக இறங்கிற்று; அந்தப் பட்டணத்தின் மனுஷருக்குள், சிறியவர்துவக்கிப் பெரியவர்மட்டும், மூலவியாதியை உண்டாக்கி, அவர்களை வாதித்தார். 10 அதினால் அவர்கள் தேவனுடைய பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினார்கள்; தேவனுடைய பெட்டி எக்ரோனுக்கு வருகிறபோது, எக்ரோன் ஊரார்: எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோட, இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை எடுத்து, எங்களண்டைக்குச் சுற்றிக்கொண்டு வந்தார்கள் என்று கூக்குரலிட்டார்கள். 11 அவர்கள் பெலிஸ்தரின் அதிபதிகளையெல்லாம் கூடிவரும்படி அழைத்து: இஸ்ரவேலின் தேவன் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொன்றுபோடாதபடிக்கு, அவருடைய பெட்டியை அதின் ஸ்தானத்திற்குத் திரும்ப அனுப்பிவிடுங்கள் என்றார்கள்; அந்தப் பட்டணமெங்கும் சாவு மும்முரமாயிருந்தது; தேவனுடைய கை அங்கே மகா பாரமாயிருந்தது. 12 செத்துப்போகாதிருந்தவர்கள் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டதினால், அந்தப் பட்டணத்தின் கூக்குரல் வானபரியந்தம் எழும்பிற்று.

1 சாமுவேல் 6

1 கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழுமாதம் இருந்தது. 2 பின்பு பெலிஸ்தர் பூஜாசாரிகளையும் குறிசொல்லுகிறவர்களையும் அழைப்பித்து: கர்த்தருடைய பெட்டியைப்பற்றி நாங்கள் என்ன செய்யவேண்டும்? அதை நாங்கள் எவ்விதமாய் அதின் ஸ்தானத்திற்கு அனுப்பிவிடலாம் என்று எங்களுக்குச் சொல்லுங்கள் என்றார்கள். 3 அதற்கு அவர்கள்: இஸ்ரவேலின் தேவனுடைய பெட்டியை நீங்கள் அனுப்பினால், அதை வெறுமையாய் அனுப்பாமல், குற்றநிவாரண காணிக்கையை எவ்விதத்திலும் அவருக்குச் செலுத்தவேண்டும்; அப்பொழுது நீங்கள் சொஸ்தமடைகிறதும் அல்லாமல், அவருடைய கை உங்களை விடாதிருந்த முகாந்தரம் இன்னது என்றும் உங்களுக்குத் தெரியவரும் என்றார்கள். 4 அதற்கு அவர்கள்: குற்றநிவாரண காணிக்கையாக நாங்கள் அவருக்கு என்னத்தைச் செலுத்தவேண்டுமென்று கேட்டதற்கு, அவர்கள்: உங்களெல்லாருக்கும் உங்கள் அதிபதிகளுக்கும் ஒரே வாதையுண்டானபடியால், பெலிஸ்தருடைய அதிபதிகளின் இலக்கத்திற்குச் சரியாக மூலவியாதியின் சாயலானபடி செய்த ஐந்து பொன் சுரூபங்களும், பொன்னால் செய்த ஐந்து சுண்டெலிகளும் செலுத்தவேண்டும். 5 ஆகையால் உங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களையும், உங்கள் தேசத்தைக் கெடுத்துப்போட்ட சுண்டெலிகளின் சாயலான சுரூபங்களையும் நீங்கள் உண்டுபண்ணி, இஸ்ரவேலின் தேவனுக்கு மகிமையைச் செலுத்துங்கள்; அப்பொழுது ஒருவேளை உங்கள்மேலும், உங்கள் தேவர்கள்மேலும், உங்கள் தேசத்தின்மேலும் இறங்கியிருக்கிற அவருடைய கை உங்களை விட்டு விலகும். 6 எகிப்தியரும் பார்வோனும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தினதுபோல, நீங்கள் உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்துவானேன்? அவர்களை அவர் தீங்காய் வாதித்தபின்பு, ஜனங்களை அவர்கள் அனுப்பிவிட்டதும், அவர்கள் போய்விட்டதும் இல்லையோ? 7 இப்போதும் நீங்கள் ஒரு புதுவண்டில் செய்து, நுகம் பூட்டாதிருக்கிற இரண்டு கறவைப்பசுக்களைப் பிடித்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை அவைகளுக்குப் பின்னாகப் போகவிடாமல், வீட்டிலே கொண்டுவந்து விட்டு, 8 பின்பு கர்த்தருடைய பெட்டியை எடுத்து, அதை வண்டிலின்மேல் வைத்து, நீங்கள் குற்றநிவாரணகாணிக்கையாக அவருக்குச் செலுத்தும் பொன்னுருப்படிகளை அதின் பக்கத்தில் ஒரு சிறிய பெட்டியிலே வைத்து, அதை அனுப்பிவிடுங்கள். 9 அப்பொழுது பாருங்கள்; அது தன் எல்லைக்குப் போகிறவழியாய்ப் பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்; போகாதிருந்தால், அவருடைய கை நம்மைத் தொடாமல், அது தற்செயலாய் நமக்கு நேரிட்டது என்று அறிந்துகொள்ளலாம் என்றார்கள். 10 அந்த மனுஷர் அப்படியே செய்து, இரண்டு கறவைப்பசுக்களைக் கொண்டுவந்து, அவைகளை வண்டிலிலே கட்டி, அவைகளின் கன்றுக்குட்டிகளை வீட்டிலே அடைத்துவைத்து, 11 கர்த்தருடைய பெட்டியையும், பொன்னால் செய்த சுண்டெலிகளும் தங்கள் மூலவியாதியின் சாயலான சுரூபங்களும் வைத்திருக்கிற சிறிய பெட்டியையும், அந்த வண்டிலின்மேல் வைத்தார்கள். 12 அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியிலே செவ்வையாய்ப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கூப்பிட்டுக்கொண்டே நடந்தது; பெலிஸ்தரின் அதிபதிகள் பெத்ஷிமேசின் எல்லைமட்டும் அவைகளின் பிறகே போனார்கள். 13 பெத்ஷிமேசின் மனுஷர் பள்ளத்தாக்கிலே கோதுமை அறுப்பு அறுத்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, பெட்டியைக் கண்டு, அதைக் கண்டதினால் சந்தோஷப்பட்டார்கள். 14 அந்த வண்டில் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் வந்து, அங்கே நின்றது; அங்கே ஒரு பெரிய கல்லிருந்தது; அப்பொழுது வண்டிலின் மரங்களைப் பிளந்து, பசுக்களைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தினார்கள். 15 லேவியர் கர்த்தருடைய பெட்டியையும், அதனோடிருந்த பொன்னுருப்படிகளுள்ள சிறிய பெட்டியையும் இறக்கி, அந்தப் பெரிய கல்லின்மேல் வைத்தார்கள்; பெத்ஷிமேசின் மனுஷர், அன்றையதினம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனங்களைச் செலுத்திப் பலிகளை இட்டார்கள். 16 பெலிஸ்தரின் ஐந்து அதிபதிகளும் இவைகளைக்கண்டு, அன்றையதினம் எக்ரோனுக்குத் திரும்பிப்போனார்கள். 17 பெலிஸ்தர் குற்றநிவாரணத்திற்காக, கர்த்தருக்குச் செலுத்தின மூலவியாதியின் சாயலான பொன் சுரூபங்களாவன, அஸ்தோத்திற்காக ஒன்று, காசாவுக்காக ஒன்று, அஸ்கலோனுக்காக ஒன்று, காத்துக்காக ஒன்று, எக்ரோனுக்காக ஒன்று. 18 பொன்னால் செய்த சுண்டெலிகளோவென்றால், அரணான பட்டணங்கள் துவக்கி நாட்டிலுள்ள கிராமங்கள்மட்டும், கர்த்தருடைய பெட்டியை வைத்த பெரிய கல் இருக்கிற ஆபேல்மட்டும், ஐந்து அதிபதிகளுக்கும் ஆதீனமாயிருக்கிற பெலிஸ்தருடைய சகல ஊர்களின் இலக்கத்திற்குச் சரியாயிருந்தது. அந்தக் கல் இந்நாள்வரைக்கும் பெத்ஷிமேஸ் ஊரானாகிய யோசுவாவின் வயலில் இருக்கிறது. 19 ஆனாலும் பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டிக்குள் பார்த்தபடியினால், கர்த்தர் ஜனங்களில் ஐம்பதினாயிரத்து எழுபதுபேரை அடித்தார்; அப்பொழுது கர்த்தர் ஜனங்களைப் பெரிய சங்காரமாக அடித்ததினிமித்தம், ஜனங்கள் துக்கித்துக்கொண்டிருந்தார்கள். 20 இந்தப் பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார்? பெட்டி நம்மிடத்திலிருந்து யாரிடத்துக்குப் போகும் என்று பெத்ஷிமேசின் மனுஷர் சொல்லி, 21 கீரியாத்யாரீமின் குடிகளுக்கு ஆட்களை அனுப்பி: பெலிஸ்தர் கர்த்தருடைய பெட்டியைத் திரும்ப அனுப்பினார்கள்; நீங்கள் வந்து, அதை உங்களிடத்துக்கு எடுத்துக்கொண்டு போங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்.

1 சாமுவேல் 7

1 அப்படியே கீரியாத்யாரீமின் மனுஷர் வந்து, கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின்மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டுவந்து வைத்து, கர்த்தருடைய பெட்டியைக் காக்கும்படிக்கு, அவன் குமாரனாகிய எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள். 2 பெட்டி கீரியாத்யாரீமிலே அநேகநாள் தங்கியிருந்தது; இருபது வருஷம் அங்கேயே இருந்தது; இஸ்ரவேல் குடும்பத்தாரெல்லாரும் கர்த்தரை நினைத்து, புலம்பிக்கொண்டிருந்தார்கள். 3 அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்புகிறவர்களானால், அந்நிய தேவர்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் கர்த்தருக்கு நேராக்கி, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தருடைய கைக்கு நீங்கலாக்கி விடுவார் என்றான். 4 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு, கர்த்தர் ஒருவருக்கே ஆராதனைசெய்தார்கள். 5 பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் கர்த்தரை மன்றாடும்படிக்கு, இஸ்ரவேலர் எல்லாரையும் மிஸ்பாவிலே கூட்டுங்கள் என்றான். 6 அவர்கள் அப்படியே மிஸ்பாவிலே கூடிவந்து தண்ணீர் மொண்டு, கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றி, அன்றையதினம் உபவாசம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம் என்று அங்கே சொன்னார்கள்; மிஸ்பாவிலே சாமுவேல் இஸ்ரவேல் புத்திரரை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான். 7 இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் புத்திரர் கேட்டு, பெலிஸ்தரினிமித்தம் பயப்பட்டு, 8 சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய கர்த்தர் எங்களைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிக்கும்படிக்கு, எங்களுக்காக அவரை நோக்கி ஓயாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள். 9 அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் கர்த்தரை நோக்கி வேண்டிக்கொண்டான்; கர்த்தர் அவனுக்கு மறுமொழி அருளிச்செய்தார். 10 சாமுவேல் சர்வாங்க தகனபலியைச் செலுத்துகையில், பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண நெருங்கினார்கள்; கர்த்தர் மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்மேல் அந்நாளிலே முழங்கப்பண்ணி, அவர்களைக் கலங்கடித்ததினால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாகப் பட்டு விழுந்தார்கள். 11 அப்பொழுது இஸ்ரவேலர் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தரைப் பின்தொடர்ந்துபோய், பெத்காரீம் பள்ளத்தாக்குமட்டும் அவர்களை முறிய அடித்தார்கள். 12 அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான். 13 இந்தப்பிரகாரம் பெலிஸ்தர் அப்புறம் இஸ்ரவேலின் எல்லையிலே வராதபடிக்குத் தாழ்த்தப்பட்டார்கள்; சாமுவேலின் நாளெல்லாம் கர்த்தருடைய கை பெலிஸ்தருக்கு விரோதமாய் இருந்தது. 14 பெலிஸ்தர் இஸ்ரவேல் கையிலிருந்து பிடித்திருந்த எக்ரோன் துவக்கிக் காத்மட்டுமுள்ள பட்டணங்களும் இஸ்ரவேலுக்குத் திரும்பக் கிடைத்தது; அவைகளையும் அவைகளின் எல்லைகளையும் இஸ்ரவேலர் பெலிஸ்தர் கையிலே இராதபடிக்கு, விடுவித்துக் கொண்டார்கள்; இஸ்ரவேலுக்கும் எமோரியருக்கும் சமாதானம் உண்டாயிருந்தது. 15 சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான். 16 அவன் வருஷாவருஷம் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப்போய், அவ்விடங்களிலெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்த பின்பு, 17 அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது; அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

1 சாமுவேல் 8

1 சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான். 2 அவனுடைய மூத்தகுமாரனுக்குப் பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாயிருந்தார்கள். 3 ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள். 4 அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து: 5 இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள். 6 எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான். 7 அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: ஜனங்கள் உன்னிடத்தில் சொல்வதெல்லாவற்றிலும் அவர்கள் சொல்லைக் கேள்; அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள். 8 நான் அவர்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதல் இந்நாள்மட்டும் அவர்கள் என்னைவிட்டு, வேறே தேவர்களைச் சேவித்துவந்த தங்கள் எல்லாச் செய்கைகளின்படியும் செய்ததுபோல, அவர்கள் உனக்கும் செய்கிறார்கள். 9 இப்போதும் அவர்கள் சொல்லைக் கேள்; ஆனாலும் உன் அபிப்பிராயத்தைக் காட்டும்படி அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார். 10 அப்பொழுது சாமுவேல், ஒரு ராஜா வேண்டும் என்று தன்னிடத்தில் கேட்ட ஜனங்களுக்குக் கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் சொல்லி: 11 உங்களை ஆளும் ராஜாவின் காரியம் என்னவென்றால், தன் ரதத்திற்குமுன் ஓடும்படி அவன் உங்கள் குமாரரை எடுத்து, தன் ரதசாரதிகளாகவும் தன் குதிரைவீரராகவும் வைத்துக்கொள்ளுவான். 12 ஆயிரம்பேருக்கும் ஐம்பதுபேருக்கும் தலைவராகவும், தன் நிலத்தை உழுகிறவர்களாகவும், தன் விளைச்சலை அறுக்கிறவர்களாகவும், தன் யுத்தஆயுதங்களையும் தன் ரதங்களின் பணிமுட்டுகளையும் பண்ணுகிறவர்களாகவும், அவர்களை வைத்துக்கொள்ளுவான். 13 உங்கள் குமாரத்திகளைப் பரிமளதைலம் செய்கிறவர்களாகவும், சமையல் பண்ணுகிறவர்களாகவும், அப்பம் சுடுகிறவர்களாகவும் வைத்துக்கொள்ளுவான். 14 உங்கள் வயல்களிலும், உங்கள் திராட்சத்தோட்டங்களிலும், உங்கள் ஒலிவத்தோப்புகளிலும், நல்லவைகளை எடுத்துக்கொண்டு, தன் ஊழியக்காரருக்குக் கொடுப்பான். 15 உங்கள் தானியத்திலும் உங்கள் திராட்சப்பலனிலும் தசமபாகம் வாங்கி, தன் பிரதானிகளுக்கும் தன் சேவகர்களுக்கும் கொடுப்பான். 16 உங்கள் வேலைக்காரரையும், உங்கள் வேலைக்காரிகளையும், உங்களில் திறமையான வாலிபரையும், உங்கள் கழுதைகளையும் எடுத்து தன்னுடைய வேலைக்கு வைத்துக்கொள்ளுவான். 17 உங்கள் ஆடுகளிலே பத்தில் ஒன்று எடுத்துக்கொள்ளுவான்; நீங்கள் அவனுக்கு வேலையாட்களாவீர்கள். 18 நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான். 19 ஜனங்கள் சாமுவேலின் சொல்லைக் கேட்க மனதில்லாமல்: அப்படியல்ல, எங்களுக்கு ஒரு ராஜா இருக்கத்தான் வேண்டும். 20 சகல ஜாதிகளையும்போல நாங்களும் இருப்போம்; எங்கள் ராஜா எங்களை நியாயம் விசாரித்து, எங்களுக்கு முன்பாகப் புறப்பட்டு, எங்கள் யுத்தங்களை நடத்தவேண்டும் என்றார்கள். 21 சாமுவேல் ஜனங்களின் வார்த்தைகளையெல்லாம் கேட்டு, அவைகளைக் கர்த்தரிடத்தில் தெரியப்படுத்தினான். 22 கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ அவர்கள் சொல்லைக் கேட்டு, அவர்களை ஆள ஒரு ராஜாவை ஏற்படுத்து என்றார்; அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களைப் பார்த்து: அவரவர் தங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்றான்.

1 சாமுவேல் 9

1 பென்யமீன் கோத்திரத்தாரில் கீஸ் என்னும் பேருள்ள மகா பராக்கிரமசாலியான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய அபியாவின் மகனான பெகோராத்திற்குப் பிறந்த சேரோரின் புத்திரனாகிய அபீயேலின் குமாரன். 2 அவனுக்குச் சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான்; இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை; எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான். 3 சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் காணாமற்போயிற்று; ஆகையால் கீஸ் தன் குமாரனாகிய சவுலை நோக்கி: நீ வேலைக்காரரில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு, கழுதைகளைத் தேட, புறப்பட்டுப்போ என்றான். 4 அப்படியே அவன் எப்பிராயீம் மலைகளையும் சலீஷா நாட்டையும் கடந்துபோனான்; அங்கே அவைகளைக் காணாமல் சாலீம் நாட்டைக்கடந்தார்கள். அங்கேயும் காணவில்லை; பென்யமீன் நாட்டை உருவக்கடந்தும் அவைகளைக் காணவில்லை. 5 அவர்கள் சூப் என்னும் நாட்டிற்கு வந்தபோது, சவுல் தன்னோடிருந்த வேலைக்காரனை நோக்கி: என் தகப்பன், கழுதைகளின்மேலுள்ள கவலையை விட்டு, நமக்காகக் கவலைப்படாதபடிக்குத் திரும்பிப்போவோம் வா என்றான். 6 அதற்கு அவன்: இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார்; அவர் பெரியவர்; அவர் சொல்லுகிறதெல்லாம் தப்பாமல் நடக்கும்; அங்கே போவோம்; ஒருவேளை அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான். 7 அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனைப் பார்த்து: நாம் போனாலும் அந்த மனுஷனுக்கு என்னத்தைக் கொண்டுபோவோம்; நம்முடைய பைகளில் இருந்த தின்பண்டங்கள் செலவழிந்துபோயிற்று; தேவனுடைய மனுஷனாகிய அவருக்குக் கொண்டு போகத்தக்க காணிக்கை நம்மிடத்தில் ஒன்றும் இல்லையே என்றான். 8 அந்த வேலைக்காரன் பின்னும் சவுலைப் பார்த்து: இதோ, என் கையில் இன்னும் கால்சேக்கல் வெள்ளியிருக்கிறது; தேவனுடைய மனுஷன் நமக்கு நம்முடைய வழியை அறிவிக்கும்படிக்கு, அதை அவருக்குக் கொடுப்பேன் என்றான். 9 முற்காலத்தில் இஸ்ரவேலில் யாதொருவர் தேவனிடத்தில் விசாரிக்கப்போனால், ஞானதிருஷ்டிக்காரனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்பார்கள்; இந்நாளிலே தீர்க்கதரிசி என்னப்படுகிறவன் முற்காலத்தில் ஞானதிருஷ்டிக்காரன் என்னப்படுவான். 10 அப்பொழுது சவுல் தன் வேலைக்காரனை நோக்கி: நல்லகாரியம் சொன்னாய், போவோம் வா என்றான்; அப்படியே தேவனுடைய மனுஷன் இருந்த அந்தப் பட்டணத்திற்குப் போனார்கள். 11 அவர்கள் பட்டணத்து மேட்டின் வழியாய் ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிருஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள். 12 அதற்கு அவர்கள்: இருக்கிறார்; இதோ, உங்களுக்கு எதிரே இருக்கிறார்; தீவிரமாய்ப் போங்கள்; இன்றைக்கு ஜனங்கள் மேடையில் பலியிடுகிறபடியினால், இன்றையதினம் பட்டணத்திற்கு வந்தார். 13 நீங்கள் பட்டணத்திற்குள் பிரவேசித்தவுடனே, அவர் மேடையின்மேல் போஜனம் பண்ணப்போகிறதற்கு முன்னே அவரைக் காண்பீர்கள்; அவர் வருமட்டும் ஜனங்கள் போஜனம் பண்ணமாட்டார்கள்; பலியிட்டதை அவர் ஆசீர்வதிப்பார்; பின்பு அழைக்கப்பட்டவர்கள் போஜனம்பண்ணுவார்கள்; உடனே போங்கள்; இந்நேரத்திலே அவரைக் கண்டுகொள்ளலாம் என்றார்கள். 14 அவர்கள் பட்டணத்திற்குப் போய், பட்டணத்தின் நடுவே சேர்ந்தபோது, இதோ, சாமுவேல் மேடையின்மேல் ஏறிப்போகிறதற்காக, அவர்களுக்கு எதிரே புறப்பட்டுவந்தான். 15 சவுல் வர ஒருநாளுக்கு முன்னே கர்த்தர் சாமுவேலின் காதுகேட்க: 16 நாளை இந்நேரத்திற்குப் பென்யமீன் நாட்டானாகிய ஒரு மனுஷனை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவனை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாக அபிஷேகம்பண்ணக்கடவாய்; அவன் என் ஜனத்தைப் பெலிஸ்தரின் கைக்கு நீங்கலாக்கி ரட்சிப்பான்; என் ஜனத்தின் முறையிடுதல் என்னிடத்தில் வந்து எட்டினபடியினால், நான் அவர்களைக் கடாட்சித்தேன் என்று வெளிப்படுத்தியிருந்தார். 17 சாமுவேல் சவுலைக் கண்டபோது, கர்த்தர் அவனிடத்தில்: இதோ, நான் உனக்குச் சொல்லியிருந்த மனுஷன் இவனே; இவன்தான் என் ஜனத்தை ஆளுவான் என்றார். 18 சவுல் நடுவாசலிலே சாமுவேலிடத்தில் வந்து: ஞானதிருஷ்டிக்காரன் வீடு எங்கே, சொல்லும் என்று கேட்டான். 19 சாமுவேல் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: ஞானதிருஷ்டிக்காரன் நான்தான்; நீ எனக்கு முன்னே மேடையின்மேல் ஏறிப்போ; நீங்கள் இன்றைக்கு என்னோடே போஜனம்பண்ணவேண்டும்; நாளைக்காலமே நான் உன் இருதயத்தில் உள்ளது எல்லாவற்றையும் உனக்கு அறிவித்து, உன்னை அனுப்பிவிடுவேன். 20 மூன்றுநாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் அகப்பட்டது; இதல்லாமல் சகல இஸ்ரவேலின் அபேட்சையும் யாரை நாடுகிறது? உன்னையும் உன் வீட்டார் அனைவரையும் அல்லவா? என்றான். 21 அப்பொழுது சவுல் பிரதியுத்தரமாக: நான் இஸ்ரவேல் கோத்திரங்களிலே சிறிதான பென்யமீன் கோத்திரத்தான் அல்லவா? பென்யமீன் கோத்திரத்துக் குடும்பங்களிலெல்லாம் என் குடும்பம் அற்பமானது அல்லவா? நீர் இப்படிப்பட்ட வார்த்தையை என்னிடத்தில் சொல்வானேன் என்றான். 22 சாமுவேல் சவுலையும் அவன் வேலைக்காரனையும் போஜனசாலைக்குள் அழைத்துக்கொண்டுபோய், அவர்களை அழைக்கப்பட்டவர்களுக்குள்ளே தலைமையான இடத்திலே வைத்தான்; அழைக்கப்பட்டவர்கள் ஏறக்குறைய முப்பதுபேராயிருந்தார்கள். 23 பின்பு சாமுவேல் சமையற்காரனைப் பார்த்து: நான் உன் கையிலே ஒரு பங்கைக் கொடுத்துவைத்தேனே, அதைக் கொண்டுவந்து வை என்றான். 24 அப்பொழுது சமையற்காரன், ஒரு முன்னந்தொடையையும், அதனோடிருந்ததையும் எடுத்துக்கொண்டுவந்து, அதை சவுலுக்குமுன் வைத்தான்; அப்பொழுது சாமுவேல்: இதோ, இது உனக்கென்று வைக்கப்பட்டது, இதை உனக்கு முன்பாக வைத்துச் சாப்பிடு; நான் ஜனங்களை விருந்துக்கு அழைத்ததுமுதல், இதுவரைக்கும் இது உனக்காக வைக்கப்பட்டிருந்தது என்றான்; அப்படியே சவுல் அன்றையதினம் சாமுவேலோடே சாப்பிட்டான். 25 அவர்கள் மேடையிலிருந்து பட்டணத்திற்கு இறங்கிவந்தபின்பு, அவன் மேல்வீட்டிலே சவுலோடே பேசிக்கொண்டிருந்தான். 26 அவர்கள் அதிகாலமே கிழக்கு வெளுக்கிற நேரத்தில் எழுந்திருந்தபோது, சாமுவேல் சவுலை மேல்வீட்டின்மேல் அழைத்து: நான் உன்னை அனுப்பிவிடும்படிக்கு ஆயத்தப்படு என்றான்; சவுல் ஆயத்தப்பட்டபோது, அவனும் சாமுவேலும் இருவருமாக வெளியே புறப்பட்டார்கள். 27 அவர்கள் பட்டணத்தின் கடைசிமட்டும் இறங்கி வந்தபோது, சாமுவேல் சவுலைப் பார்த்து: வேலைக்காரனை நமக்கு முன்னே நடந்துபோகச் சொல் என்றான்; அப்படியே அவன் நடந்து போனான்; இப்பொழுது நான் தேவனுடைய வார்த்தையை உனக்குத் தெரிவிக்கும்படிக்கு, நீ சற்றே தரித்துநில் என்றான்.

1 சாமுவேல் 10

1 அப்பொழுது சாமுவேல் தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து, அவனை முத்தஞ்செய்து: கர்த்தர் உன்னைத் தம்முடைய சுதந்தரத்தின்மேல் தலைவனாக அபிஷேகம் பண்ணினார் அல்லவா? 2 நீ இன்றைக்கு என்னைவிட்டுப் போகிறபோது, பென்யமீன் எல்லையாகிய செல்சாகில் ராகேலின் கல்லறையண்டையில் இரண்டு மனுஷரைக் காண்பாய்; அவர்கள் உன்னைப் பார்த்து: நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டது; இதோ, உன் தகப்பன் கழுதைகளின்மேலிருந்த கவலையை விட்டு, உங்களுக்காக விசாரப்பட்டு, என் மகனுக்காக என்னசெய்வேன்? என்கிறான் என்று சொல்லுவார்கள். 3 நீ அவ்விடத்தை விட்டு அப்புறம் கடந்துபோய், தாபோரிலுள்ள சமபூமியில் சேரும்போது, தேவனைப் பணியும்படி பெத்தேலுக்குப் போகிற மூன்று மனுஷர் அங்கே உன்னைக் கண்டு சந்திப்பார்கள்; ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், இன்னொருவன் மூன்று அப்பங்களையும், வேறொருவன் திராட்சரசமுள்ள ஒரு துருத்தியையும் கொண்டுவந்து, 4 உன்னுடைய சுகசெய்தியை விசாரித்து, உனக்கு இரண்டு அப்பங்களைக் கொடுப்பார்கள்; அவைகளை நீ அவர்கள் கையிலே வாங்கவேண்டும். 5 பின்பு பெலிஸ்தரின் தாணையம் இருக்கிற தேவனுடைய மலைக்குப் போவாய்; அங்கே நீ பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில், மேடையிலிருந்து இறங்கிவருகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்திற்கு எதிர்ப்படுவாய்; அவர்களுக்கு முன்பாகத் தம்புரும் மேளமும் நாகசுரமும் சுரமண்டலமும் போகும்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுவார்கள். 6 அப்பொழுது கர்த்தருடைய ஆவி உன்மேல் இறங்குவார்; நீ அவர்களோடேகூடத் தீர்க்கதரிசனம் சொல்லி, வேறு மனுஷனாவாய். 7 இந்த அடையாளங்கள் உனக்கு நேரிடும்போது, சமயத்துக்கு ஏற்றபடி நீ செய்; தேவன் உன்னோடே இருக்கிறார். 8 நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படிக்கு, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்ய வேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும், ஏழுநாள் காத்திரு என்றான். 9 அவன் சாமுவேலை விட்டுப் போகும்படி திரும்பினபோது, தேவன் அவனுக்கு வேறே இருதயத்தைக் கொடுத்தார்; அந்த அடையாளங்கள் எல்லாம் அன்றையதினமே நேரிட்டது. 10 அவர்கள் அந்த மலைக்கு வந்தபோது, இதோ, தீர்க்கதரிசிகளின் கூட்டம் அவனுக்கு எதிராக வந்தது; அப்பொழுது தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவனும் அவர்களுக்குள்ளே தீர்க்கதரிசனம் சொன்னான். 11 அதற்கு முன்னே அவனை அறிந்தவர்கள் எல்லாரும் அவன் தீர்க்கதரிசிகளோடிருந்து, தீர்க்கதரிசனம் சொல்லுகிறதைக் கண்டபோது: கீசின் குமாரனுக்கு வந்தது என்ன? சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்று அந்த ஜனங்கள் ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 12 அதற்கு அங்கே இருக்கிறவர்களில் ஒருவன்: இவர்களுக்குத் தகப்பன் யார் என்றான்; ஆதலால் சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ? என்பது பழமொழியாயிற்று. 13 அவன் தீர்க்கதரிசனம் சொல்லி முடிந்தபின்பு, மேடையின்மேல் வந்தான். 14 அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: நீங்கள் எங்கே போனீர்கள் என்று அவனையும் அவன் வேலைக்காரனையும் கேட்டான். அதற்கு அவன்: நாங்கள் கழுதைகளைத் தேடப்போய், அவைகளை எங்குங் காணாதபடியினால், சாமுவேலிடத்துக்குப் போனோம் என்றான். 15 அப்பொழுது சவுலின் சிறியதகப்பன்: சாமுவேல் உங்களுக்குச் சொன்னது என்ன? அதைச் சொல் என்றான். 16 சவுல் தன் சிறியதகப்பனைப் பார்த்து: கழுதைகள் அகப்பட்டது என்று எங்களுக்குத் தீர்மானமாய்ச் சொன்னார் என்றான்; ஆனாலும் ராஜ்யபாரத்தைப்பற்றிச் சாமுவேல் சொன்னதை அவனுக்கு அறிவிக்கவில்லை. 17 சாமுவேல் ஜனங்களை மிஸ்பாவிலே கர்த்தரிடத்தில் வரவழைத்து, 18 இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணி, உங்களை எகிப்தியர் கைக்கும், உங்களை இறுகப்பிடித்த எல்லா ராஜ்யத்தாரின் கைக்கும் நீங்கலாக்கிவிட்டேன். 19 நீங்களோ உங்களுடைய எல்லாத் தீங்குகளுக்கும் நெருக்கங்களுக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்த உங்கள் தேவனை இந்நாளிலே புறக்கணித்து, ஒரு ராஜாவை எங்கள்மேல் ஏற்படுத்தும் என்று அவரிடத்தில் கேட்டுக்கொண்டீர்கள்; இப்பொழுது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் வம்சங்களின்படியேயும், ஆயிரங்களான உங்கள் சேர்வைகளின்படியேயும், வந்து நில்லுங்கள் என்றான். 20 சாமுவேல் இஸ்ரவேலின் கோத்திரங்களையெல்லாம் சேரப்பண்ணினபின்பு பென்யமீன் கோத்திரத்தின்மேல் சீட்டு விழுந்தது. 21 அவன் பென்யமீன் கோத்திரத்தை அதினுடைய குடும்பங்களின்படியே சேரப்பண்ணினபின்பு, மாத்திரி குடும்பத்தின்மேலும், அதிலே கீசின் குமாரனாகிய சவுலின்மேலும், சீட்டு விழுந்தது; அவனைத் தேடினபோது, அவன் அகப்படவில்லை. 22 அவன் இனி இங்கே வருவானா என்று அவர்கள் திரும்பக் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது: இதோ, அவன் தளவாடங்களிருக்கிற இடத்திலே ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்று கர்த்தர் சொன்னார். 23 அப்பொழுது அவர்கள் ஓடி, அங்கேயிருந்து அவனை அழைத்துக்கொண்டுவந்தார்கள்; அவன் ஜனங்கள் நடுவே வந்து நின்றபோது, எல்லா ஜனங்களும் அவன் தோளுக்குக் கீழாயிருக்கத்தக்க உயரமுள்ளவனாயிருந்தான். 24 அப்பொழுது சாமுவேல் எல்லா ஜனங்களையும் நோக்கி: கர்த்தர் தெரிந்துகொண்டவனைப் பாருங்கள், சமஸ்த ஜனங்களுக்குள்ளும் அவனுக்குச் சமானமானவன் இல்லை என்றான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் ஆர்ப்பரித்து: ராஜா வாழ்க என்றார்கள். 25 சாமுவேல் ராஜாங்கத்தின் முறையை ஜனங்களுக்குத் தெரிவித்து, அதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, ஜனங்களையெல்லாம் அவரவர் வீட்டுக்கு அனுப்பிவிட்டான். 26 சவுலும் கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போனான்; இராணுவத்தில் தேவன் எவர்கள் மனதை ஏவினாரோ, அவர்களும் அவனோடேகூடப் போனார்கள். 27 ஆனாலும் பேலியாளின் மக்கள்: இவனா நம்மை ரட்சிக்கப்போகிறவன் என்று சொல்லி, அவனுக்குக் காணிக்கை கொண்டுவராமல் அவனை அசட்டைபண்ணினார்கள்; அவனோ காதுகேளாதவன்போல இருந்தான்.

1 சாமுவேல் 11

1 அக்காலத்தில் நாகாஸ் என்னும் அம்மோனியன் வந்து, கீலேயாத்திலிருக்கிற யாபேசை முற்றிக்கைபோட்டான்; அப்பொழுது யாபேசின் மனுஷர் எல்லாரும் நாகாசை நோக்கி: எங்களோடே உடன்படிக்கைபண்ணும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள். 2 அதற்கு அம்மோனியனாகிய நாகாஸ்: நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் பிடுங்கி, இதினாலே இஸ்ரவேல் எல்லாவற்றின்மேலும் நிந்தைவரப்பண்ணுவதே நான் உங்களோடே பண்ணும் உடன்படிக்கை என்றான். 3 அதற்கு யாபேசின் மூப்பர்கள்: நாங்கள் இஸ்ரவேல் நாடெங்கும் ஸ்தானாபதிகளை அனுப்பும்படி, ஏழுநாள் எங்களுக்குத் தவணைகொடும், எங்களை ரட்சிப்பார் இல்லாவிட்டால், அப்பொழுது உம்மிடத்தில் வருவோம் என்றார்கள். 4 அந்த ஸ்தானாபதிகள் சவுலின் ஊராகிய கிபியாவிலே வந்து, ஜனங்களின் காதுகேட்க அந்தச் செய்திகளைச் சொன்னார்கள்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் சத்தமிட்டு அழுதார்கள். 5 இதோ, சவுல் மாடுகளின் பின்னாலே வயலிலிருந்து வந்து, ஜனங்கள் அழுகிற முகாந்தரம் என்ன என்று கேட்டான்; யாபேசின் மனுஷர் சொல்லிய செய்திகளை அவனுக்குத் தெரிவித்தார்கள். 6 சவுல் இந்தச் செய்திகளைக் கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால் அவன் மிகவும் கோபம் மூண்டவனாகி, 7 ஓரிணைமாட்டைப் பிடித்து, துண்டித்து, அந்த ஸ்தானாபதிகள் கையிலே கொடுத்து, இஸ்ரவேலின் நாடுகளுக்கெல்லாம் அனுப்பி: சவுலின் பின்னாலேயும், சாமுவேலின் பின்னாலேயும் புறப்படாதவன் எவனோ, அவனுடைய மாடுகளுக்கு இப்படிச் செய்யப்படும் என்று சொல்லியனுப்பினான்; அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள். 8 அவர்களைப் பேசேக்கிலே இலக்கம்பார்த்தான்; இஸ்ரவேல் புத்திரரில் மூன்றுலட்சம்பேரும், யூதா மனுஷரில் முப்பதினாயிரம்பேரும் இருந்தார்கள். 9 வந்த ஸ்தானாபதிகளை அவர்கள் நோக்கி: நாளைக்கு வெயில் ஏறுகிறதற்கு முன்னே உங்களுக்கு ரட்சிப்புக் கிடைக்கும் என்று கீலேயாத்திலிருக்கிற யாபேசின் மனுஷருக்குச் சொல்லுங்கள் என்றார்கள்; ஸ்தானாபதிகள் வந்து யாபேசின் மனுஷரிடத்தில் அதை அறிவித்தார்கள்; அதற்கு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். 10 பின்பு யாபேசின் மனுஷர்: நாளைக்கு உங்களிடத்தில் வருவோம், அப்பொழுது உங்கள் இஷ்டப்படியெல்லாம் எங்களுக்குச் செய்யுங்கள் என்றார்கள். 11 மறுநாளிலே சவுல் ஜனங்களை மூன்று படையாக வகுத்து, கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் பாளயத்திற்குள் வந்து வெயில் ஏறும்வரைக்கும் அம்மோனியரை முறிய அடித்தான்; தப்பினவர்களில் இரண்டுபேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி எல்லாரும் சிதறிப்போனார்கள். 12 அப்பொழுது ஜனங்கள் சாமுவேலை நோக்கி: சவுலா நமக்கு ராஜாவாயிருக்கப்போகிறவன் என்று சொன்னவர்கள் யார்? அந்த மனுஷரை நாங்கள் கொன்றுபோடும்படிக்கு ஒப்புக்கொடுங்கள் என்றார்கள். 13 அதற்குச் சவுல்: இன்றையதினம் ஒருவரும் கொல்லப்படலாகாது; இன்று கர்த்தர் இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அருளினார் என்றான். 14 அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: நாம் கில்காலுக்குப் போய், அங்கே ராஜ்யபாரத்தை ஸ்திரப்படுத்துவோம் வாருங்கள் என்றான். 15 அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை ராஜாவாக ஏற்படுத்தி, அங்கே கர்த்தருடைய சந்நிதியில் சமாதானபலிகளைச் செலுத்தி, அங்கே சவுலும் இஸ்ரவேல் மனுஷர் யாவரும் மிகவும் சந்தோஷங்கொண்டாடினார்கள்.

1 சாமுவேல் 12

1 அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேலர் அனைவரையும் நோக்கி: இதோ, நீங்கள் எனக்குச் சொன்னபடியெல்லாம் உங்கள் சொற்கேட்டு உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினேன். 2 இப்போதும் இதோ, ராஜாவானவர் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவருகிறார்; நானோ கிழவனும் நரைத்தவனுமானேன்; என் குமாரர் உங்களோடிருப்பார்கள்; நான் என் சிறுவயதுமுதல் இந்நாள்வரைக்கும் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவந்தேன். 3 இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக்குறித்துச் சாட்சி சொல்லுங்கள்; நான் யாருடைய எருதை எடுத்துக்கொண்டேன்? யாருடைய கழுதையை எடுத்துக்கொண்டேன்? யாருக்கு அநியாயஞ்செய்தேன்? யாருக்கு இடுக்கண்செய்தேன்? யார் கையில் பரிதானம் வாங்கிக்கொண்டு கண்சாடையாயிருந்தேன்? சொல்லுங்கள்; அப்படியுண்டானால் அதை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பேன் என்றான். 4 அதற்கு அவர்கள்: நீர் எங்களுக்கு அநியாயஞ் செய்யவும் இல்லை; எங்களுக்கு இடுக்கண் செய்யவும் இல்லை; ஒருவர் கையிலும் ஒன்றும் வாங்கவும் இல்லை என்றார்கள். 5 அதற்கு அவன்: நீங்கள் என் கையில் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை என்பதற்குக் கர்த்தர் உங்களுக்கு எதிராகச் சாட்சியாயிருக்கிறார்; அவர் அபிஷேகம்பண்ணினவரும் இன்று அதற்குச் சாட்சி என்றான்; அதற்கு அவர்கள்: அவர் சாட்சிதான் என்றார்கள். 6 அப்புறம் சாமுவேல் ஜனங்களை நோக்கி: மோசேயையும் ஆரோனையும் ஏற்படுத்தினவரும், உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினவரும் கர்த்தரே. 7 இப்போதும் கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான கிரியைகளைக்குறித்தும், நான் கர்த்தருடைய சந்நிதியில் உங்களோடே நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள். 8 யாக்கோபு எகிப்திலே போயிருக்கும்போது, உங்கள் பிதாக்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள், அப்பொழுது கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் அனுப்பினார்; அவர்கள் உங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து அழைத்துவந்து, அவர்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணினார்கள். 9 அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்துபோகிறபோது, அவர் அவர்களை ஆத்சோரின் சேனாபதியாகிய சிசெராவின் கையிலும், பெலிஸ்தரின் கையிலும், மோவாபிய ராஜாவின் கையிலும் விற்றுப்போட்டார்; இவர்கள் அவர்களுக்கு விரோதமாக யுத்தம்பண்ணினார்கள். 10 ஆகையால் அவர்கள் கர்த்தரை நோக்கி முறையிட்டு: நாங்கள் கர்த்தரை விட்டுப் பாகால்களையும் அஸ்தரோத்தையும் சேவித்ததினாலே, பாவஞ்செய்தோம்; இப்போதும் எங்கள் சத்துருக்களின் கைக்கு எங்களை நீங்கலாக்கி ரட்சியும்; இனி உம்மைச் சேவிப்போம் என்றார்கள். 11 அப்பொழுது கர்த்தர் எருபாகாலையும் பேதானையும் யெப்தாவையும் சாமுவேலையும் அனுப்பி, நீங்கள் பயமில்லாமல் குடியிருக்கும்படிக்குச் சுற்றிலும் இருந்த உங்கள் சத்துருக்களின் கைக்கும் உங்களை நீங்கலாக்கி ரட்சித்தார். 12 அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் உங்களுக்கு விரோதமாய் வருகிறதை நீங்கள் கண்டபோது, உங்கள் தேவனாகிய கர்த்தரே உங்களுக்கு ராஜாவாயிருந்தும், நீங்கள் என்னை நோக்கி: அப்படியல்ல, ஒரு ராஜா எங்கள்மேல் ஆளவேண்டும் என்றீர்கள். 13 இப்போதும் நீங்கள் வேண்டும் என்று விரும்பித் தெரிந்துகொண்ட ராஜா, இதோ, இருக்கிறார்; இதோ, கர்த்தர் உங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தினார். 14 நீங்கள் கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணாமல் கர்த்தருக்குப் பயந்து, அவரைச் சேவித்து, அவருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிந்தால், நீங்களும் உங்களை ஆளுகிற ராஜாவும் உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களாயிருப்பீர்கள். 15 நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்களானால், கர்த்தருடைய கை உங்கள் பிதாக்களுக்கு விரோதமாயிருந்தது போல உங்களுக்கும் விரோதமாயிருக்கும். 16 இப்பொழுது கர்த்தர் உங்கள் கண்களுக்கு முன்பாகச் செய்யும் பெரிய காரியத்தை நின்று பாருங்கள். 17 இன்று கோதுமை அறுப்பின் நாள் அல்லவா? நீங்கள் உங்களுக்கு ஒரு ராஜாவைக் கேட்டதினால், கர்த்தரின் பார்வைக்குச் செய்த உங்களுடைய பொல்லாப்புப் பெரியதென்று நீங்கள் கண்டு உணரும்படிக்கு, நான் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணுவேன்; அப்பொழுது இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிடுவார் என்று சொல்லி, 18 சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அன்றையதினமே கர்த்தர் இடிமுழக்கங்களையும் மழையையும் கட்டளையிட்டார்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் கர்த்தருக்கும் சாமுவேலுக்கும் மிகவும் பயந்து; 19 சாமுவேலைப் பார்த்து: நாங்கள் சாகாதபடிக்கு உம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்தில் உம்முடைய அடியாருக்காக விண்ணப்பம் செய்யும்; நாங்கள் செய்த எல்லாப் பாவங்களோடும் எங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்ட இந்தப் பாவத்தையும் கூட்டிக்கொண்டோம் என்று ஜனங்கள் எல்லாரும் சொன்னார்கள். 20 அப்பொழுது சாமுவேல் ஜனங்களை நோக்கி: பயப்படாதேயுங்கள்; நீங்கள் இந்தப் பொல்லாப்பையெல்லாம் செய்தீர்கள்; ஆகிலும் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் கர்த்தரை உங்கள் முழு இருதயத்தோடும் சேவியுங்கள். 21 விலகிப்போகாதிருங்கள்; மற்றப்படி பிரயோஜனமற்றதும் ரட்சிக்கமாட்டாததுமாயிருக்கிற வீணானவைகளைப் பின்பற்றுவீர்கள்; அவைகள் வீணானவைகளே. 22 கர்த்தர் உங்களைத் தமக்கு ஜனமாக்கிக்கொள்ளப் பிரியமானபடியினால், கர்த்தர் தம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தம் தமது ஜனத்தைக் கைவிடமாட்டார். 23 நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனாயிருப்பேன்; அது எனக்குத் தூரமாயிருப்பதாக; நன்மையும் செவ்வையுமான வழியை நான் உங்களுக்குப் போதிப்பேன். 24 நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழு இருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். 25 நீங்கள் இன்னும் பொல்லாப்பைச் செய்யவே செய்வீர்களானால், நீங்களும் உங்கள் ராஜாவும் நாசமடைவீர்கள் என்றான்.

1 சாமுவேல் 13

1 சவுல் ராஜ்யபாரம்பண்ணி, ஒரு வருஷமாயிற்று; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருஷம் அரசாண்டபோது, 2 இஸ்ரவேலில் மூவாயிரம்பேரைத் தனக்குத் தெரிந்துகொண்டான்; அவர்களில் இரண்டாயிரம்பேர் சவுலோடேகூட மிக்மாசிலும் பெத்தேல் மலையிலும், ஆயிரம்பேர் யோனத்தானோடேகூடப் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலும் இருந்தார்கள்; மற்ற ஜனங்களை அவரவர் கூடாரங்களுக்கு அனுப்பிவிட்டான். 3 யோனத்தான் கேபாவிலே தாணையம் இருந்த பெலிஸ்தரை முறிய அடித்தான்; பெலிஸ்தர் அதைக் கேள்விப்பட்டார்கள்; ஆகையினால் இதை எபிரெயர் கேட்கக்கடவர்கள் என்று சவுல் தேசமெங்கும் எக்காளம் ஊதுவித்தான். 4 தாணையம் இருந்த பெலிஸ்தரைச் சவுல் முறிய அடித்தான் என்றும், இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு அருவருப்பானார்கள் என்றும், இஸ்ரவேலெல்லாம் கேள்விப்பட்டபோது, ஜனங்கள் சவுலுக்குப் பின்செல்லும்படி கில்காலுக்கு வரவழைக்கப்பட்டார்கள். 5 பெலிஸ்தர் இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள். 6 அப்பொழுது இஸ்ரவேலர் தங்களுக்கு உண்டான இக்கட்டைக் கண்டபோது, ஜனங்கள் தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும், துருக்கங்களிலும், குகைகளிலும் ஒளித்துக்கொண்டார்கள். 7 எபிரெயரில் சிலர் யோர்தானையும் கடந்து, காத் நாட்டிற்கும் கீலேயாத் தேசத்திற்கும் போனார்கள்; சவுலோ இன்னும் கில்காலில் இருந்தான்; சகல ஜனங்களும் பயந்துகொண்டு அவனுக்குப் பின்சென்றார்கள். 8 அவன் தனக்குச் சாமுவேல் குறித்த காலத்தின்படி ஏழுநாள்மட்டும் காத்திருந்தான்; சாமுவேல் கில்காலுக்கு வரவில்லை, ஜனங்கள் அவனை விட்டுச் சிதறிப்போனார்கள். 9 அப்பொழுது சவுல்: சர்வாங்க தகனபலியையும் சமாதானபலிகளையும் என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்று சொல்லி, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினான். 10 அவன் சர்வாங்க தகனபலியிட்டு முடிகிறபோது, இதோ, சாமுவேல் வந்தான்; சவுல் அவனைச் சந்தித்து வந்தனஞ்செய்ய அவனுக்கு எதிர்கொண்டுபோனான். 11 நீர் செய்தது என்ன என்று சாமுவேல் கேட்டதற்கு, சவுல்: ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர் வராததையும், பெலிஸ்தர் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் கண்டபடியினாலே, 12 கில்காலில் பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் வந்துவிடுவார்கள் என்றும், நான் இன்னும் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணவில்லை என்றும், எண்ணித் துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான். 13 சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். 14 இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது; கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்; கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையை நீர் கைக்கொள்ளவில்லையே என்று சொன்னான். 15 சாமுவேல் எழுந்திருந்து, கில்காலை விட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகைபார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள். 16 சவுலும் அவன் குமாரனாகிய யோனத்தானும் அவர்களோடேகூட இருக்கிற ஜனங்களும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவில் இருந்துவிட்டார்கள்; பெலிஸ்தரோ மிக்மாசிலே பாளயமிறங்கியிருந்தார்கள். 17 கொள்ளைக்காரர் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து மூன்று படையாய்ப் புறப்பட்டுவந்தார்கள்; ஒரு படை ஒப்ராவழியாய்ச் சூவால் நாட்டிற்கு நேராகப் போயிற்று. 18 வேறொரு படை பெத்தொரோன் வழியாய்ப் போயிற்று; வேறொருபடை வனாந்தரத்தில் இருக்கிற செபோயீமின் பள்ளத்தாக்குக்கு எதிரான எல்லைவழியாய்ப் போயிற்று. 19 எபிரெயர் பட்டயங்களையாகிலும் ஈட்டிகளையாகிலும் உண்டுபண்ணாதபடிக்குப் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று பெலிஸ்தர் சொல்லியிருந்தபடியால், இஸ்ரவேல் தேசத்தில் எங்கும் ஒரு கொல்லன் அகப்படவில்லை. 20 இஸ்ரவேலர் யாவரும் அவரவர் தங்கள் கொழுவிரும்புகளையும், தங்கள் மண்வெட்டிகளையும், தங்கள் கோடரிகளையும், தங்கள் கடப்பாரைகளையும் தீட்டிக் கூர்மையாக்குகிறதற்கு, பெலிஸ்தரிடத்துக்குப் போகவேண்டியதாயிருந்தது. 21 கடப்பாரைகளையும், மண்வெட்டிகளையும், முக்கூருள்ள ஆயுதங்களையும், கோடரிகளையும், தாற்றுக்கோல்களையும் கூர்மையாக்குகிறதற்கு அரங்கள் மாத்திரம் அவர்களிடத்தில் இருந்தது. 22 யுத்தநாள் வந்தபோது, சவுலுக்கும் அவன் குமாரனாகிய யோனத்தானுக்குமேயன்றி, சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற ஜனங்களில் ஒருவர் கையிலும் பட்டயமும் ஈட்டியும் இல்லாதிருந்தது. 23 பெலிஸ்தரின் பாளயம் மிக்மாசிலிருந்து போகிற வழிமட்டும் பரம்பியிருந்தது.

1 சாமுவேல் 14

1 ஒருநாள் சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போவோம் வா என்று சொன்னான்; அதை அவன் தன் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை. 2 சவுல் கிபியாவின் கடைசிமுனையாகிய மிக்ரோனிலே ஒரு மாதளமரத்தின்கீழ் இருந்தான்; அவனோடேகூட இருந்த ஜனங்கள் ஏறக்குறைய அறுநூறுபேராயிருந்தார்கள். 3 சீலோவிலே கர்த்தருடைய ஆசாரியனாயிருந்த ஏலியின் குமாரனாகிய பினெகாசுக்குப் பிறந்த இக்கபோத்தின் சகோதரனும் அகிதூபின் குமாரனுமாகிய அகியா என்பவன் ஏபோத்தைத் தரித்தவனாயிருந்தான்; யோனத்தான் போனதை ஜனங்கள் அறியாதிருந்தார்கள். 4 யோனத்தான் பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போகப்பார்த்த வழிகளின் நடுவே, இந்தப்பக்கம் ஒரு செங்குத்தான பாறையும், அந்தப்பக்கம் ஒரு செங்குத்தான பாறையும் இருந்தது; ஒன்றுக்குப் போசேஸ் என்று பேர், மற்றொன்றுக்குச் சேனே என்று பேர். 5 அந்தப் பாறைகளில் ஒன்று வடக்கே மிக்மாசுக்கு எதிராகவும், மற்றொன்று தெற்கே கிபியாவுக்கு எதிராகவும் இருந்தது. 6 யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: விருத்தசேதனம் இல்லாதவர்களுடைய அந்தத் தாணையத்திற்குப் போவோம் வா; ஒருவேளை கர்த்தர் நமக்காக ஒரு காரியம் செய்வார்; அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம்பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான். 7 அப்பொழுது அவன் ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; அப்படியே போம்; இதோ, உம்முடைய மனதுக்கு ஏற்றபடி நானும் உம்மோடேகூட வருகிறேன் என்றான். 8 அதற்கு யோனத்தான்: இதோ, நாம் கடந்து, அந்த மனுஷரிடத்திற்குப் போகிறவர்கள்போல அவர்களுக்கு நம்மைக் காண்பிப்போம். 9 நாங்கள் உங்களிடத்துக்கு வருமட்டும் நில்லுங்கள் என்று நம்மோடே சொல்வார்களானால், நாம் அவர்களிடத்துக்கு ஏறிப்போகாமல், நம்முடைய நிலையிலே நிற்போம். 10 எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள் என்று சொல்வார்களானால், ஏறிப்போவோம்; கர்த்தர் அவர்களை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இது நமக்கு அடையாளம் என்றான். 11 அப்படியே அவர்கள் இருவரும் பெலிஸ்தரின் தாணையத்திற்முன் தங்களைக் காண்பித்தார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்: இதோ, எபிரெயர் ஒளித்துக்கொண்டிருந்த வளைகளைவிட்டுப் புறப்படுகிறார்கள் என்று சொல்லி, 12 தாணையம் இருக்கிற மனுஷர் யோனத்தானையும் அவன் ஆயுததாரியையும் பார்த்து: எங்களிடத்துக்கு ஏறிவாருங்கள், உங்களுக்குப் புத்தி கற்பிப்போம் என்றார்கள்; அப்பொழுது யோனத்தான் தன் ஆயுததாரியை நோக்கி: என் பின்னாலே ஏறிவா; கர்த்தர் அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார் என்று சொல்லி, 13 யோனத்தான் தன் கைகளாலும் தன் கால்களாலும் தவழ்ந்து ஏறினான்; அவன் ஆயுததாரி அவன் பின்னாலே ஏறினான்; அப்பொழுது அவர்கள் யோனத்தானுக்கு முன்பாக மடிந்து விழுந்தார்கள்; அவன் ஆயுததாரியும் அவன் பின்னாலே வெட்டிக்கொண்டே போனான். 14 யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அடித்த அந்த முந்தின அடியிலே ஏறக்குறைய இருபதுபேர் அரையேர் நிலமான விசாலத்திலே விழுந்தார்கள். 15 அப்பொழுது பாளயத்திலும் வெளியிலும், சகல ஜனங்களிலும், பயங்கரம் உண்டாகி, தாணையம் இருந்தவர்களும் கொள்ளையிடப்போன தண்டிலுள்ளவர்களுங்கூடத் திகில் அடைந்தார்கள்; பூமியும் அதிர்ந்தது; அது தேவனால் உண்டான பயங்கரமாயிருந்தது. 16 பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே சவுலுக்கு இருந்த ஜாமக்காரர் பார்த்து: இதோ, அந்த ஏராளமான கூட்டம் கலைந்து, ஒருவர்மேல் ஒருவர் விழுகிறதைக் கண்டார்கள். 17 அப்பொழுது சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனங்களை நோக்கி: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று இலக்கம்பாருங்கள் என்றான்; அவர்கள் இலக்கம் பார்க்கிறபோது, இதோ, யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள். 18 அப்பொழுது சவுல் அகீயாவை நோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்; தேவனுடைய பெட்டி அந்நாட்களில் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் இருந்தது. 19 இப்படிச் சவுல் ஆசாரியனோடே பேசுகையில், பெலிஸ்தரின் பாளயத்தில் உண்டான கலகம் வரவர அதிகரித்தது; அப்பொழுது சவுல் ஆசாரியனைப் பார்த்து: இருக்கட்டும் என்றான். 20 சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்; ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாயிருந்தபடியால் மகா அமளியுண்டாயிற்று. 21 இதற்குமுன் பெலிஸ்தருடன் கூடி அவர்களோடேகூடப் பாளயத்திலே திரிந்து வந்த எபிரெயரும், சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற இஸ்ரவேலரோடே கூடிக்கொண்டார்கள். 22 எப்பிராயீம் மலைகளில் ஒளித்துக்கொண்டிருந்த சகல இஸ்ரவேலரும் பெலிஸ்தர் முறிந்தோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள். 23 இப்படிக் கர்த்தர் அன்றையதினம் இஸ்ரவேலை ரட்சித்தார்; அந்த யுத்தம் பெத்தாவேன்மட்டும் நடந்தது. 24 இஸ்ரவேலர் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்: நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்கவேண்டும், சாயங்காலமட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ, அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் ஜனங்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், ஜனங்களில் ஒருவரும் எவ்வளவேனும் போஜனம்பண்ணாதிருந்தார்கள். 25 தேசத்து ஜனங்கள் எல்லாரும் ஒரு காட்டிலே வந்தார்கள்; அங்கே வெளியிலே தேன்கூடு கட்டியிருந்தது. 26 ஜனங்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள். 27 யோனத்தான் தன் தகப்பன் ஜனங்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டி, அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டுக்கொண்டான்; அதினால் அவன் கண்கள் தெளிந்தது. 28 அப்பொழுது ஜனங்களில் ஒருவன்: இன்றைக்கு போஜனம் சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் ஜனங்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார்; ஆகையினால் ஜனங்கள் விடாய்த்திருக்கிறார்கள் என்றான். 29 அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் ஜனங்களைக் கலக்கப்படுத்தினார்; நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததினாலே, என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள். 30 இன்றையதினம் ஜனங்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் சத்துருக்களின் கொள்ளையிலே ஏதாகிலும் புசித்திருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான சங்காரம் மிகவும் அதிகமாயிருக்குமே என்றான். 31 அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன்மட்டும் பெலிஸ்தரை முறிய அடித்தபோது, ஜனங்கள் மிகவும் விடாய்த்திருந்தார்கள். 32 அப்பொழுது ஜனங்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் புசித்தார்கள். 33 அப்பொழுது: இதோ, இரத்தத்தோடிருக்கிறதைப் புசிக்கிறதினால் ஜனங்கள் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு அறிவித்தார்கள்; அவன்: நீங்கள் துரோகம்பண்ணினீர்கள்; இப்போதே ஒரு பெரிய கல்லை என்னிடத்தில் உருட்டிக்கொண்டுவாருங்கள். 34 நீங்கள் ஜனத்திற்குள்ளே போய், இரத்தத்தோடிருக்கிறதைச் சாப்பிடுகிறதினாலே, கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்யாதபடிக்கு, அவரவர் தங்கள் மாட்டையும் அவரவர் தங்கள் ஆட்டையும் என்னிடத்தில் கொண்டுவந்து, இங்கே அடித்து, பின்பு சாப்பிடவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; ஆகையால் ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் மாடுகளை அன்று இராத்திரி தாங்களே கொண்டுவந்து, அங்கே அடித்தார்கள். 35 பின்பு சவுல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் கர்த்தருக்குக் கட்டின முதலாவது பலிபீடம். 36 அதற்குப்பின்பு சவுல்: நாம் இந்த இராத்திரியிலே பெலிஸ்தரைத் தொடர்ந்துபோய், விடியற்கால வெளிச்சமாகுமட்டும் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான். அதற்கு அவர்கள்: உம்முடைய கண்களுக்கு நலமானபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கே தேவசந்நிதியில் சேரக்கடவோம் என்றான். 37 அப்படியே: பெலிஸ்தரைத் தொடர்ந்துபோகலாமா? அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுப்பீரா? என்று சவுல் தேவனிடத்தில் விசாரித்தான்; அவர் அந்த நாளிலே அவனுக்கு மறுஉத்தரவு அருளவில்லை. 38 அப்பொழுது சவுல்: ஜனத்தின் தலைவர்களே, நீங்கள் எல்லாரும் இங்கே சேர்ந்துவந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்தறியுங்கள். 39 அது என் குமாரனாகிய யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும், அவன் சாகவே சாகவேண்டும் என்று இஸ்ரவேலை ரட்சிக்கிற கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பிரதியுத்தரம் சொல்லவில்லை. 40 அதற்குப்பின் அவன் இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: நீங்கள் அந்தப்பக்கத்திலே இருங்கள்; நானும் என் குமாரனாகிய யோனத்தானும் இந்தப்பக்கத்தில் இருப்போம் என்றான்; ஜனங்கள் சவுலைப் பார்த்து: உம்முடைய கண்களுக்கு நலமானபடி செய்யும் என்றார்கள். 41 அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு யதார்த்தத்தை விளங்கப்பண்ணும் என்றான்; அப்பொழுது யோனத்தான்மேலும் சவுலின்மேலும் சீட்டு விழுந்தது, ஜனங்களோ தப்பினார்கள். 42 எனக்கும் என் குமாரனாகிய யோனத்தானுக்கும் சீட்டுப்போடுங்கள் என்று சவுல் சொன்னபோது, யோனத்தான்மேல் சீட்டு விழுந்தது. 43 அப்பொழுது சவுல் யோனத்தானைப் பார்த்து: நீ செய்தது என்ன? எனக்குச் சொல் என்று கேட்டான். அதற்கு யோனத்தான்: என் கையில் இருக்கிற கோலின் நுனியினாலே கொஞ்சம் தேன் எடுத்து ருசிபார்த்தேன்; அதற்காக நான் சாகவேண்டும் என்றான். 44 அப்பொழுது சவுல்: யோனத்தானே, நீ சாகத்தான்வேண்டும்; இல்லாவிட்டால் தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்றான். 45 ஜனங்களோ சவுலை நோக்கி: இஸ்ரவேலிலே இந்தப் பெரிய இரட்சிப்பைச் செய்த யோனத்தான் கொலைசெய்யப்படலாமா? அது கூடாது; அவன் தலையில் இருக்கிற ஒரு மயிரும் தரையிலே விழப்போகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறோம்; தேவன் துணை நிற்க அவன் இன்று காரியத்தை நடப்பித்தான் என்றார்கள்; அப்படியே யோனத்தான் சாகாதபடிக்கு, ஜனங்கள் அவனைத் தப்புவித்தார்கள். 46 சவுல் பெலிஸ்தரைத் தொடராமல் திரும்பிவிட்டான்; பெலிஸ்தரும் தங்கள் ஸ்தலத்திற்குப் போய்விட்டார்கள். 47 இப்படிச் சவுல் இஸ்ரவேலை ஆளுகிற ராஜ்யபாரத்தைப் பெற்றுக்கொண்டு, சுற்றிலும் இருக்கிற தன்னுடைய எல்லாச் சத்துருக்களுமாகிய மோவாபியருக்கும், அம்மோன் புத்திரருக்கும், ஏதோமியருக்கும், சோபாவின் ராஜாக்களுக்கும், பெலிஸ்தருக்கும் விரோதமாக யுத்தம்பண்ணி, எவர்கள்மேல் படையெடுத்தானோ, அவர்களையெல்லாம் அடக்கினான். 48 அவன் பலத்து, அமலேக்கியரை முறிய அடித்து, இஸ்ரவேலரைக் கொள்ளையிடுகிற யாவர் கைக்கும் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தான். 49 சவுலுக்கு இருந்த குமாரர்: யோனத்தான், இஸ்வி, மல்கிசூவா என்பவர்கள்; அவனுடைய இரண்டு குமாரத்திகளில், மூத்தவள் பேர் மேரப், இளையவள் பேர் மீகாள். 50 சவுலுடைய மனைவியின் பேர் அகினோவாம், அவள் அகிமாசின் குமாரத்தி; அவனுடைய சேனாபதியின் பேர் அப்னேர், அவன் சவுலுடைய சிறியதகப்பனாகிய நேரின் குமாரன். 51 கீஸ் சவுலின் தகப்பன்; அப்னேரின் தகப்பனாகிய நேர் ஆபியேலின் குமாரன். 52 சவுல் இருந்த நாளெல்லாம் பெலிஸ்தரின்மேல் கடினமான யுத்தம் நடந்தது; சவுல் ஒரு பராக்கிரமசாலியையாகிலும் ஒரு பலசாலியையாகிலும் காணும்போது, அவர்கள் எல்லாரையும் தன்னிடமாகச் சேர்த்துக்கொள்ளுவான்.

1 சாமுவேல் 15

1 பின்பு சாமுவேல் சவுலை நோக்கி: இஸ்ரவேலராகிய தம்முடைய ஜனங்கள்மேல் உம்மை ராஜாவாக அபிஷேகம் பண்ணுகிறதற்குக் கர்த்தர் என்னை அனுப்பினாரே; இப்போதும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேளும்: 2 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். 3 இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், ஆடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும் கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான். 4 அப்பொழுது சவுல்: இதை ஜனங்களுக்கு அறியப்படுத்தி, தெலாயிமிலே அவர்களைத் தொகைபார்த்தான்; அவர்கள் இரண்டு லட்சம் காலாட்களும், யூதா ஜனங்கள் பதினாயிரம்பேருமாயிருந்தார்கள். 5 சவுல் அமலேக்குடைய பட்டணமட்டும் வந்து, பள்ளத்தாக்கிலே ஒரு பதிவிடையை வைத்தான். 6 சவுல் கேனியரை நோக்கி: நான் அமலேக்கியரோடேகூட உங்களையும் வாரிக்கொள்ளாதபடிக்கு, நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டு விலகிப்போங்கள்; இஸ்ரவேல் எகிப்திலிருந்து வந்தபோது, நீங்கள் அவர்கள் எல்லாருக்கும் தயவுசெய்தீர்கள் என்றான்; அப்படியே கேனியர் அமலேக்கியரின் நடுவிலிருந்து விலகிப்போனார்கள். 7 அப்பொழுது சவுல்: ஆவிலா துவக்கி எகிப்திற்கு எதிரேயிருக்கிற சூருக்குப் போகும் எல்லைமட்டும் இருந்த அமலேக்கியரை மடங்கடித்து, 8 அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம்பண்ணினான். 9 சவுலும் ஜனங்களும் ஆகாகையும், ஆடுமாடுகளில் முதல்தரமானவைகளையும், இரண்டாந்தரமானவைகளையும், ஆட்டுக்குட்டிகளையும், நலமான எல்லாவற்றையும், அழித்துப்போட மனதில்லாமல் தப்பவைத்து, அற்பமானவைகளும் உதவாதவைகளுமான சகல வஸ்துக்களையும் முற்றிலும் அழித்துப்போட்டார்கள். 10 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாமுவேலுக்கு உண்டாகி, அவர் சொன்னது: 11 நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான். 12 மறுநாள் அதிகாலமே சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்; அப்பொழுது சவுல் கர்மேலுக்கு வந்து, தனக்கு ஒரு ஜெயஸ்தம்பம் நாட்டி, பின்பு பல இடங்களில் சென்று கில்காலுக்குப் போனான் என்று, சாமுவேலுக்கு அறிவிக்கப்பட்டது. 13 சாமுவேல் சவுலினிடத்தில் போனான்; சவுல் அவனை நோக்கி: நீர் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்; கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன் என்றான். 14 அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான். 15 அதற்குச் சவுல்: அமலேக்கியரிடத்திலிருந்து அவைகளைக் கொண்டுவந்தார்கள்; ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான். 16 அப்பொழுது சாமுவேல்: அந்தப் பேச்சை விடும், கர்த்தர் இந்த இராத்திரியிலே எனக்குச் சொன்னதை உமக்கு அறிவிக்கிறேன் என்று சவுலோடே சொன்னான். அவன்: சொல்லும் என்றான். 17 அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்; கர்த்தர் உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் பண்ணுவித்தாரே. 18 இப்போதும் கர்த்தர்: நீ போய் அமலேக்கியராகிய அந்தப் பாவிகளைச் சங்கரித்து, அவர்களை நிர்மூலமாக்கித் தீருமட்டும், அவர்களோடு யுத்தம்பண்ணு என்று சொல்லி, உம்மை அந்த வழியாய் அனுப்பினார். 19 இப்படியிருக்க, நீர் கர்த்தருடைய சொல்லைக்கேளாமல், கொள்ளையின்மேல் பறந்து, கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தது என்ன என்றான். 20 சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன். 21 ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான். 22 அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம். 23 இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான். 24 அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி: நான் கர்த்தருடைய கட்டளையையும் உம்முடைய வார்த்தைகளையும் மீறினதினாலே பாவஞ்செய்தேன்; நான் ஜனங்களுக்குப் பயந்து, அவர்கள் சொல்லைக் கேட்டேன். 25 இப்போதும் நீர் என் பாவத்தை மன்னித்து, நான் கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான். 26 சாமுவேல் சவுலைப் பார்த்து: நான் உம்மோடேகூடத் திரும்பிவருவதில்லை; கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தீர்; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, கர்த்தர் உம்மையும் புறக்கணித்துத் தள்ளினார் என்றான். 27 போகும்படி சாமுவேல் திரும்புகிறபோது, சவுல், அவன் சால்வையின் தொங்கலைப் பிடித்துக்கொண்டான், அது கிழிந்துபோயிற்று. 28 அப்பொழுது சாமுவேல் அவனை நோக்கி: கர்த்தர் இன்று உம்மிடத்திலிருந்த இஸ்ரவேலின் ராஜ்யத்தைக் கிழித்துப்போட்டு; உம்மைப்பார்க்கிலும் உத்தமனாயிருக்கிற உம்முடைய தோழனுக்கு அதைக் கொடுத்தார். 29 இஸ்ரவேலின் ஜெயபலமானவர் பொய்சொல்லுகிறதும் இல்லை; தாம் சொன்னதைப்பற்றி மனஸ்தாபப்படுகிறதும் இல்லை; மனம்மாற அவர் மனுஷன் அல்ல என்றான். 30 அதற்கு அவன்: நான் பாவஞ்செய்தேன்; இப்போது என் ஜனத்தின் மூப்பருக்கு முன்பாகவும், இஸ்ரவேலுக்கு முன்பாகவும் நீர் என்னைக் கனம்பண்ணி, நான் உம்முடைய தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொள்ளும்படிக்கு, என்னோடேகூடத் திரும்பிவாரும் என்றான். 31 அப்பொழுது சாமுவேல் திரும்பிச் சவுலுக்குப் பின்சென்றான்; சவுல் கர்த்தரைப் பணிந்துகொண்டான். 32 பின்பு சாமுவேல்: அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; ஆகாக் சந்தோஷமாய் அவனிடத்தில் வந்து, மரணத்தின் கசப்பு அற்றுப்போனது நிச்சயம் என்றான். 33 சாமுவேல்: உன் பட்டயம் ஸ்திரீகளைப் பிள்ளையற்றவர்களாக்கினதுபோல, ஸ்திரீகளுக்குள்ளே உன் தாயும் பிள்ளையற்றவளாவாள் என்று சொல்லி; சாமுவேல் கில்காலிலே கர்த்தருக்கு முன்பாக ஆகாகைத் துண்டித்துப்போட்டான். 34 பின்பு சாமுவேல் ராமாவுக்குப் போனான்; சவுலோ தன் ஊராகிய கிபியாவிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய்விட்டான். 35 சவுல் மரணமடையும் நாள்மட்டும் சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை; இஸ்ரவேலின்மேல் சவுலை ராஜாவாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டதினிமித்தம், சாமுவேல் சவுலுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான்.

1 சாமுவேல் 16

1 கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார். 2 அதற்குச் சாமுவேல்: நான் எப்படிப் போவேன்; சவுல் இதைக் கேள்விப்பட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்; அப்பொழுது கர்த்தர்: நீ ஒரு காளையைக் கையோடே கொண்டுபோய், கர்த்தருக்குப் பலியிடவந்தேன் என்று சொல்லி, 3 ஈசாயைப் பலிவிருந்துக்கு அழைப்பாயாக; அப்பொழுது நீ செய்யவேண்டியதை நான் உனக்கு அறிவிப்பேன்; நான் உனக்குச் சொல்லுகிறவனை எனக்காக அபிஷேகம்பண்ணுவாயாக என்றார். 4 கர்த்தர் சொன்னபடியே சாமுவேல் செய்து, பெத்லெகேமுக்குப் போனான்; அப்பொழுது அவ்வூரின் மூப்பர் தத்தளிப்போடே அவனுக்கு எதிர்கொண்டுவந்து, நீர் வருகிறது சமாதானமா என்றார்கள். 5 அதற்கு அவன்: சமாதானந்தான்; கர்த்தருக்குப் பலியிடவந்தேன்; நீங்கள் உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொண்டு, என்னுடனேகூடப் பலிவிருந்துக்கு வாருங்கள் என்றான்; மேலும் ஈசாயையும் அவன் குமாரரையும் பரிசுத்தம்பண்ணி, அவர்களைப் பலிவிருந்துக்கு அழைத்தான். 6 அவர்கள் வந்தபோது, அவன் எலியாபைப் பார்த்தவுடனே: கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்படுபவன் இவன்தானாக்கும் என்றான். 7 கர்த்தர் சாமுவேலை நோக்கி: நீ இவனுடைய முகத்தையும், இவனுடைய சரீரவளர்ச்சியையும் பார்க்கவேண்டாம்; நான் இவனைப் புறக்கணித்தேன்; மனுஷன் பார்க்கிறபடி நான் பாரேன்; மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார் என்றார். 8 அப்பொழுது ஈசாய் அபினதாபை அழைத்து, அவனைச் சாமுவேலுக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான். 9 ஈசாய் சம்மாவையும் கடந்துபோகப்பண்ணினான்; அவன்: இவனையும் கர்த்தர் தெரிந்துகொள்ளவில்லை என்றான். 10 இப்படி ஈசாய் தன் குமாரரில் ஏழுபேரை சாமுவேலுக்கு முன்பாகக் கடந்து போகப்பண்ணினான்; பின்பு சாமுவேல் ஈசாயைப் பார்த்து: கர்த்தர் இவர்களில் ஒருவனையும் தெரிந்துகொள்ளவில்லை என்று சொல்லி; 11 உன் பிள்ளைகள் இவ்வளவுதானா என்று ஈசாயைக் கேட்டான். அதற்கு அவன்: இன்னும் எல்லாருக்கும் இளையவன் ஒருவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறான் என்றான்; அப்பொழுது சாமுவேல் ஈசாயை நோக்கி: ஆள் அனுப்பி அவனை அழைப்பி; அவன் இங்கே வருமட்டும் நான் பந்தியிருக்கமாட்டேன் என்றான். 12 ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தான்; அவன் சிவந்தமேனியும், அழகிய கண்களும், நல்ல ரூபமுமுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது கர்த்தர்: இவன்தான், நீ எழுந்து இவனை அபிஷேகம்பண்ணு என்றார். 13 அப்பொழுது சாமுவேல்: தைலக்கொம்பை எடுத்து, அவனை அவன் சகோதரர் நடுவிலே அபிஷேகம்பண்ணினான்; அந்நாள்முதற்கொண்டு, கர்த்தருடைய ஆவியானவர் தாவீதின்மேல் வந்து இறங்கியிருந்தார்; சாமுவேல் எழுந்து ராமாவுக்குப் போய்விட்டான். 14 கர்த்தருடைய ஆவி சவுலை விட்டு நீங்கினார்; கர்த்தரால் வரவிடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி அவனைக் கலங்கப்பண்ணிக்கொண்டிருந்தது. 15 அப்பொழுது சவுலின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, தேவனால் விடப்பட்ட ஒரு பொல்லாத ஆவி உம்மைக் கலங்கப்பண்ணுகிறதே. 16 சுரமண்டலம் வாசிக்கிறதில் தேறின ஒருவனைத் தேடும்படிக்கு, எங்கள் ஆண்டவனாகிய நீர் உமக்கு முன்பாக நிற்கிற உம்முடைய அடியாருக்குக் கட்டளையிடும்; அப்பொழுது தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி உம்மேல் இறங்குகையில், அவன் தன் கையினால் அதை வாசித்தால் உமக்குச் சவுக்கியமுண்டாகும் என்றார்கள். 17 சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நன்றாய் வாசிக்கத்தக்க ஒருவனைத் தேடி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். 18 அப்பொழுது அந்த வேலைக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இதோ, பெத்லெகேமியனாகிய ஈசாயின் குமாரன் ஒருவனைக் கண்டிருக்கிறேன்; அவன் வாசிப்பதில் தேறினவன், அவன் பராக்கிரமசாலி, யுத்தவீரன், காரியசமர்த்தன், சவுந்தரியமுள்ளவன்; கர்த்தர் அவனோடேகூட இருக்கிறார் என்றான். 19 அப்பொழுது சவுல்: ஈசாயினிடத்தில் ஆட்களை அனுப்பி, ஆட்டுமந்தையில் இருக்கிற உன் குமாரனாகிய தாவீதை என்னிடத்தில் அனுப்பு என்று சொல்லச்சொன்னான். 20 அப்பொழுது ஈசாய்: அப்பத்தையும், ஒரு துருத்தி திராட்சரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் கழுதையின்மேல் ஏற்றி, தன் குமாரனாகிய தாவீதின் வசமாய் சவுலுக்கு அனுப்பினான். 21 அப்படியே தாவீது சவுலிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றான்; அவன் இவனை மிகவும் சிநேகித்தான்; அவனுக்கு இவன் ஆயுததாரியானான். 22 சவுல் ஈசாயினிடத்தில் ஆள் அனுப்பி, தாவீது எனக்கு முன்பாக நிற்கட்டும்; என் கண்களில் அவனுக்குத் தயவுகிடைத்தது என்று சொல்லச்சொன்னான். 23 அப்படியே தேவனால் விடப்பட்ட ஆவி சவுலைப் பிடிக்கும்போது, தாவீது சுரமண்டலத்தை எடுத்து, தன் கையினால் வாசிப்பான்; அதினாலே பொல்லாத ஆவி அவனைவிட்டு நீங்க, சவுல் ஆறுதலடைந்து, சொஸ்தமாவான்.

1 சாமுவேல் 17

1 பெலிஸ்தர் யுத்தம்பண்ணுகிறதற்குத் தங்கள் சேனைகளைச் சேர்த்து, யூதாவிலுள்ள சோக்கோவிலே ஒருமித்துக் கூடி, சோக்கோவுக்கும் அசெக்காவுக்கும் நடுவே இருக்கிற எபேஸ்தம்மீமிலே பாளயமிறங்கினார்கள். 2 சவுலும் இஸ்ரவேல் மனுஷரும் ஒருமித்துக் கூடி, ஏலா பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கி, பெலிஸ்தருக்கு எதிராக யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள். 3 பெலிஸ்தர் அந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும், இஸ்ரவேலர் இந்தப்பக்கத்தில் ஒரு மலையின்மேலும் நின்றார்கள்; அவர்களுக்கு நடுவே பள்ளத்தாக்கு இருந்தது. 4 அப்பொழுது காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள ஒரு வீரன் பெலிஸ்தரின் பாளயத்திலிருந்து புறப்பட்டுவந்து நடுவே நிற்பான்; அவன் உயரம் ஆறுமுழமும் ஒரு ஜாணுமாம். 5 அவன் தன் தலையின்மேல் வெண்கலச் சீராவைப் போட்டு, ஒரு போர்க்கவசம் தரித்துக்கொண்டிருப்பான்; அந்தக் கவசத்தின் நிறை ஐயாயிரம் சேக்கலான வெண்கலமாயிருக்கும். 6 அவன் தன் கால்களிலே வெண்கலக் கவசத்தையும் தன் தோள்களின்மேல் வெண்கலக் கேடகத்தையும் தரித்திருப்பான். 7 அவனுடைய ஈட்டித்தாங்கு நெசவுக்காரரின் படைமரத்தின் கனதியும் அவன் ஈட்டியின் அலகு அறுநூறுசேக்கல் இரும்புமாயிருக்கும்; பரிசைபிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடப்பான். 8 அவன் வந்துநின்று, இஸ்ரவேல் சேனைகளைப் பார்த்துச் சத்தமிட்டு, நீங்கள் யுத்தத்திற்கு அணிவகுத்து நிற்கிறது என்ன? நான் பெலிஸ்தன் அல்லவா? நீங்கள் சவுலின் சேவகர் அல்லவா? உங்களில் ஒருவனைத் தெரிந்துகொள்ளுங்கள்; அவன் என்னிடத்தில் வரட்டும். 9 அவன் என்னோடு யுத்தம்பண்ணவும் என்னைக் கொல்லவும் சமர்த்தனானால், நாங்கள் உங்களுக்கு வேலைக்காரராயிருப்போம்; நான் அவனை ஜெயித்து அவனைக் கொல்வேனானால், நீங்கள் எங்களுக்கு வேலைக்காரராயிருந்து, எங்களைச் சேவிக்கவேண்டும் என்று சொல்லி, 10 பின்னும் அந்தப் பெலிஸ்தன்: நான் இன்றையதினம் இஸ்ரவேலுடைய சேனைகளை நிந்தித்தேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம்பண்ண ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக்கொண்டுவருவான். 11 சவுலும் இஸ்ரவேலர் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய வார்த்தைகளைக் கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள். 12 தாவீது என்பவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஈசாய் என்னும் பேருள்ள எப்பிராத்திய மனுஷனுடைய குமாரனாயிருந்தான்; ஈசாயுக்கு எட்டுக் குமாரர் இருந்தார்கள்; இவன் சவுலின் நாட்களிலே மற்ற ஜனங்களுக்குள்ளே வயதுசென்ற கிழவனாய் மதிக்கப்பட்டான். 13 ஈசாயினுடைய மூன்று மூத்த குமாரர் சவுலோடேகூட யுத்தத்திற்குப் போயிருந்தார்கள்; யுத்தத்திற்குப் போயிருந்த அவனுடைய மூன்று குமாரரில் மூத்தவனுக்கு எலியாப் என்றும், இரண்டாங்குமாரனுக்கு அபினதாப் என்றும், மூன்றாங்குமாரனுக்குச் சம்மா என்றும் பேர். 14 தாவீது எல்லாருக்கும் இளையவன்; மூத்தவர்களாகிய அந்த மூன்றுபேரும் சவுலோடேகூடப் போயிருந்தார்கள். 15 தாவீது சவுலைவிட்டுத் திரும்பிப் போய் பெத்லெகேமிலிருக்கிற தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான். 16 அந்தப் பெலிஸ்தன் காலையிலும் மாலையிலும் நாற்பதுநாள் வந்துவந்து நிற்பான். 17 ஈசாய் தன் குமாரனாகிய தாவீதை நோக்கி: உன் சகோதரருக்கு இந்த ஒரு மரக்கால் வறுத்த பயற்றையும், இந்தப் பத்து அப்பங்களையும் எடுத்துக்கொண்டு, பாளயத்திலிருக்கிற உன் சகோதரரிடத்தில் ஓட்டமாய்ப் போய், 18 இந்தப் பத்துப் பால்கட்டிகளை ஆயிரம்பேருக்கு அதிபதியானவனிடத்தில் கொடுத்து, உன் சகோதரர் சுகமாயிருக்கிறார்களா என்று விசாரித்து, அவர்களிடத்தில் அடையாளம் வாங்கிக் கொண்டுவா என்றான். 19 அப்பொழுது சவுலும், அவர்களும், இஸ்ரவேலர் எல்லாரும், ஏலா பள்ளத்தாக்கிலே பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். 20 தாவீது அதிகாலையில் எழுந்து, ஆடுகளைக் காவலாளி வசமாய் விட்டு, ஈசாய் தனக்குக் கற்பித்தபடியே எடுத்துக்கொண்டுபோய், இரதங்கள் இருக்கிற இடத்திலே வந்தான்; சேனைகள் அணிவகுத்து நின்று, யுத்தத்திற்கென்று ஆர்ப்பரித்தார்கள். 21 இஸ்ரவேலரும் பெலிஸ்தரும் ஒருவருக்கு எதிராக ஒருவர் அணிவகுத்துக்கொண்டிருந்தார்கள். 22 அப்பொழுது தாவீது: தான் கொண்டுவந்தவைகளை இறக்கி, ரஸ்துக்களைக் காக்கிறவன் வசமாக வைத்துவிட்டு, சேனைக்குள் ஓடி, தன் சகோதரரைப் பார்த்து: சுகமாயிருக்கிறீர்களா என்று கேட்டான். 23 அவன் இவர்களோடே பேசிக்கொண்டிருக்கையில், இதோ, காத் ஊரானாகிய கோலியாத் என்னும் பேருள்ள அந்தப் பெலிஸ்த வீரன் பெலிஸ்தரின் சேனைகளிலிருந்து எழும்பிவந்து நின்று, முன் சொன்ன வார்த்தைகளையே சொன்னான்; அதைத் தாவீது கேட்டான். 24 இஸ்ரவேலர் எல்லாரும் அந்த மனுஷனைக் காணும்போது மிகவும் பயப்பட்டு, அவன் முகத்துக்கு விலகி ஓடிப்போவார்கள். 25 அந்நேரத்திலே இஸ்ரவேலர்: வந்து நிற்கிற அந்த மனுஷனைக் கண்டீர்களா, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்லுகிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து, அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் கொடுப்பார் என்றார்கள். 26 அப்பொழுது தாவீது தன்னண்டையிலே நிற்கிறவர்களைப் பார்த்து, இந்தப் பெலிஸ்தனைக் கொன்று இஸ்ரவேலுக்கு நேரிட்ட நிந்தையை நீக்குகிறவனுக்கு என்ன செய்யப்படும்; ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்திக்கிறதற்கு விருத்தசேதனம் இல்லாத இந்த பெலிஸ்தன் எம்மாத்திரம் என்றான். 27 அதற்கு ஜனங்கள்: அவனைக் கொல்லுகிறவனுக்கு இன்ன இன்னபடி செய்யப்படும் என்று முன் சொன்ன வார்த்தைகளையே அவனுக்குச் சொன்னார்கள். 28 அந்த மனுஷரோடே அவன் பேசிக்கொண்டிருக்கிறதை அவன் மூத்த சகோதரனாகிய எலியாப் கேட்டபோது, அவன் தாவீதின்மேல் கோபங்கொண்டு: நீ இங்கே வந்தது என்ன? வனாந்தரத்திலுள்ள அந்தக் கொஞ்ச ஆடுகளை நீ யார் வசத்தில் விட்டாய்? யுத்தத்தைப் பார்க்க அல்லவா வந்தாய்? உன் துணிகரத்தையும், உன் இருதயத்தின் அகங்காரத்தையும் நான் அறிவேன் என்றான். 29 அதற்குத் தாவீது: நான் இப்பொழுது செய்தது என்ன? நான் வந்ததற்கு முகாந்தரம் இல்லையா என்று சொல்லி, 30 அவனை விட்டு, வேறொருவனிடத்தில் திரும்பி, அந்தப்பிரகாரமாகவே கேட்டான்; ஜனங்கள் முன்போலவே உத்தரவு சொன்னார்கள். 31 தாவீது சொன்ன வார்த்தைகளை அவர்கள் கேட்டு, அதைச் சவுலின் சமுகத்தில் அறிவித்தார்கள்; அப்பொழுது அவன் அவனை அழைப்பித்தான். 32 தாவீது சவுலை நோக்கி: இவனிமித்தம் ஒருவனுடைய இருதயமும் கலங்க வேண்டியதில்லை; உம்முடைய அடியானாகிய நான் போய், இந்தப் பெலிஸ்தனோடே யுத்தம்பண்ணுவேன் என்றான். 33 அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம்பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறுவயதுமுதல் யுத்தவீரன் என்றான். 34 தாவீது சவுலைப்பார்த்து: உம்முடைய அடியான் என் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறபோது, ஒருவிசை ஒரு சிங்கமும், ஒருவிசை ஒரு கரடியும் வந்து, மந்தையிலிருக்கிற ஒரு ஆட்டைப் பிடித்துக்கொண்டது. 35 நான் அதைத் தொடர்ந்துபோய், அதை அடித்து, அதை அதின் வாய்க்குத் தப்புவித்தேன்; அது என்மேல் பாய்ந்தபோது, நான் அதின் தாடியைப் பிடித்து, அதை அடித்துக் கொன்றுபோட்டேன். 36 அந்தச் சிங்கத்தையும் அந்தக் கரடியையும் உம்முடைய அடியானாகிய நான் கொன்றேன்; விருத்தசேதனமில்லாத இந்தப் பெலிஸ்தனும் அவைகளில் ஒன்றைப்போல இருப்பான்; அவன் ஜீவனுள்ள தேவனுடைய சேனைகளை நிந்தித்தானே என்றான். 37 பின்னும் தாவீது: என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த கர்த்தர் இந்தப் பெலிஸ்தனுடைய கைக்கும் தப்புவிப்பார் என்றான்; அப்பொழுது சவுல் தாவீதைப் பார்த்து: போ, கர்த்தர் உன்னுடனேகூட இருப்பாராக என்றான். 38 சவுல் தாவீதுக்குத் தன் வஸ்திரங்களை உடுத்துவித்து வெண்கலமான ஒரு சீராவை அவன் தலையின்மேல் போட்டு, ஒரு கவசத்தையும் அவனுக்குத் தரிப்பித்தான். 39 அவனுடைய பட்டயத்தை தாவீது தன் வஸ்திரங்கள்மேல் கட்டிக்கொண்டு, அதிலே அவனுக்குப் பழக்கமில்லாததினால் நடந்துபார்த்தான்; அப்பொழுது தாவீது சவுலை நோக்கி: நான் இவைகளைப் போட்டுக்கொண்டு போகக்கூடாது; இந்த அப்பியாசம் எனக்கு இல்லை என்று சொல்லி, அவைகளைக் களைந்துபோட்டு, 40 தன் தடியைக் கையிலே பிடித்துக்கொண்டு, ஆற்றிலிருக்கிற ஐந்து கூழாங்கல்லுகளைத் தெரிந்தெடுத்து, அவைகளை மேய்ப்பருக்குரிய தன்னுடைய அடைப்பப்பையிலே போட்டு, தன் கவணைத் தன் கையிலே பிடித்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனண்டையிலே போனான். 41 பெலிஸ்தனும் நடந்து, தாவீதண்டைக்குக் கிட்டிவந்தான்; பரிசையைப் பிடிக்கிறவன் அவனுக்கு முன்னாக நடந்தான். 42 பெலிஸ்தன் சுற்றிப்பார்த்து: தாவீதைக் கண்டு, அவன் இளைஞனும் சவுந்தரிய ரூபமான சிவந்த மேனியுள்ளவனுமாயிருந்தபடியினால், அவனை அசட்டைபண்ணினான். 43 பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: நீ தடிகளோடே என்னிடத்தில் வர நான் நாயா என்று சொல்லி, அவன் தன் தேவர்களைக்கொண்டு தாவீதைச் சபித்தான். 44 பின்னும் அந்தப் பெலிஸ்தன் தாவீதைப் பார்த்து: என்னிடத்தில் வா; நான் உன் மாம்சத்தை ஆகாயத்துப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன் என்றான். 45 அதற்குத் தாவீது: பெலிஸ்தனை நோக்கி: நீ பட்டயத்தோடும், ஈட்டியோடும், கேடகத்தோடும் என்னிடத்தில் வருகிறாய்; நானோ நீ நிந்தித்த இஸ்ரவேலுடைய இராணுவங்களின் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் நாமத்திலே உன்னிடத்தில் வருகிறேன். 46 இன்றையதினம் கர்த்தர் உன்னை என் கையில் ஒப்புக்கொடுப்பார்; நான் உன்னைக் கொன்று, உன் தலையை உன்னை விட்டு வாங்கி, பெலிஸ்தருடைய பாளயத்தின் பிணங்களை இன்றையதினம் ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் காட்டு மிருகங்களுக்கும் கொடுப்பேன்; அதனால் இஸ்ரவேலில் தேவன் ஒருவர் உண்டு என்று பூலோகத்தார் எல்லாரும் அறிந்துகொள்ளுவார்கள். 47 கர்த்தர் பட்டயத்தினாலும் ஈட்டியினாலும் ரட்சிக்கிறவர் அல்ல என்று இந்த ஜனக்கூட்டமெல்லாம் அறிந்துகொள்ளும்; யுத்தம் கர்த்தருடையது; அவர் உங்களை எங்கள் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான். 48 அப்பொழுது அந்தப் பெலிஸ்தன் எழும்பி, தாவீதுக்கு எதிராகக் கிட்டிவருகையில், தாவீது தீவிரமாய் அந்தச் சேனைக்கும் அந்தப் பெலிஸ்தனுக்கும் எதிராக ஓடி, 49 தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான். 50 இவ்விதமாகத் தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்; தாவீதின் கையில் பட்டயம் இல்லாதிருந்தது. 51 ஆகையால் தாவீது பெலிஸ்தனண்டையில் ஓடி அவன்மேல் நின்று, அவன் பட்டயத்தை எடுத்து, அதை அதின் உறையிலிருந்து உருவி, அவனைக் கொன்று, அதினாலே அவன் தலையை வெட்டிப்போட்டான்; அப்பொழுது தங்கள் வீரன் செத்துப்போனான் என்று பெலிஸ்தர் கண்டு, ஓடிப்போனார்கள். 52 அப்பொழுது இஸ்ரவேலரும் யூதா மனுஷரும் எழும்பி, ஆர்ப்பரித்து, பள்ளத்தாக்கின் எல்லைமட்டும், எக்ரோனின் வாசல்கள்மட்டும், பெலிஸ்தரைத் துரத்தினார்கள்; சாராயீமின் வழியிலும், காத்பட்டணமட்டும், எக்ரோன் பட்டணமட்டும், பெலிஸ்தர் வெட்டுண்டு விழுந்தார்கள். 53 இஸ்ரவேல் புத்திரர் பெலிஸ்தரை மூர்க்கமாய்த் துரத்தினபிற்பாடு, திரும்பிவந்து, அவர்களுடைய பாளயங்களைக் கொள்ளையிட்டார்கள். 54 தாவீது பெலிஸ்தனுடைய தலையை எடுத்து, அதை எருசலேமுக்குக் கொண்டு வந்தான்; அவன் ஆயுதங்களையோ தன் கூடாரத்திலே வைத்தான். 55 தாவீது பெலிஸ்தனுக்கு எதிராகப் புறப்பட்டுப்போகிறதைச் சவுல் கண்டபோது, அவன் சேனாபதியாகிய அப்னேரைப் பார்த்து: அப்னேரே, இந்த வாலிபன் யாருடைய மகன் என்று கேட்டான்; அதற்கு அப்னேர்: ராஜாவே, எனக்குத் தெரியாது என்று உம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். 56 அப்பொழுது ராஜா: அந்தப் பிள்ளையாண்டான் யாருடைய மகன் என்று விசாரி என்றான். 57 தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்புகையில், அப்னேர் அவனைச் சவுலுக்கு முன்பாக அழைத்துக்கொண்டு போய்விட்டான்; பெலிஸ்தனுடைய தலை அவன் கையில் இருந்தது. 58 அப்பொழுது சவுல்: வாலிபனே, நீ யாருடைய மகன் என்று அவனைக் கேட்டதற்கு, தாவீது: நான் பெத்லெகேம் ஊரானாயிருக்கிற உம்முடைய அடியானாகிய ஈசாயின் மகன் என்றான்.

1 சாமுவேல் 18

1 அவன் சவுலோடே பேசி முடிந்தபின்பு, யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான். 2 சவுல் அவனை அவன் தகப்பன் வீட்டுக்குத் திரும்பிப்போக ஒட்டாமல், அன்றுமுதல் தன்னிடத்தில் வைத்துக்கொண்டான். 3 யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப்போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள். 4 யோனத்தான் போர்த்துக்கொண்டிருந்த சால்வையைக் கழற்றி, அதையும், தன் வஸ்திரத்தையும், தன் பட்டயத்தையும், தன் வில்லையும், தன் கச்சையையும்கூடத் தாவீதுக்குக் கொடுத்தான். 5 தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்; அவன் எல்லா ஜனத்தின் கண்களுக்கும், சவுலுடைய ஊழியக்காரரின் கண்களுக்கும்கூடப் பிரியமாயிருந்தான். 6 தாவீது பெலிஸ்தனைக் கொன்று திரும்பிவந்தபின்பு, ஜனங்கள் திரும்ப வரும்போதும், ஸ்திரீகள் இஸ்ரவேலின் சகல பட்டணங்களிலுமிருந்து, ஆடல்பாடலுடன் புறப்பட்டு, மேளங்களோடும் கீதவாத்தியங்களோடும் சந்தோஷமாய் ராஜாவாகிய சவுலுக்கு எதிர்கொண்டுவந்தார்கள். 7 அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள். 8 அந்த வார்த்தை சவுலுக்கு விசனமாயிருந்தது; அவன் மிகுந்த எரிச்சலடைந்து, தாவீதுக்குப் பதினாயிரம், எனக்கோ ஆயிரம் கொடுத்தார்கள்; இன்னும் ராஜாங்கமாத்திரம் அவனுக்குக் குறைவாயிருக்கிறது என்று சொல்லி, 9 அந்நாள்முதற்கொண்டு சவுல் தாவீதைக் காய்மகாரமாய்ப் பார்த்தான். 10 மறுநாளிலே தேவனால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் இறங்கிற்று; அவன் வீட்டிற்குள்ளே தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டிருந்தான்; அப்பொழுது தாவீது தினந்தோறும் செய்கிறபடி, தன் கையினால் சுரமண்டலத்தை வாசித்துக்கொண்டிருந்தான்; சவுலின் கையிலே ஈட்டியிருந்தது. 11 அப்பொழுது சவுல் தாவீதைச் சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடுவேன் என்று ஈட்டியை அவன்மேல் எறிந்தான்; ஆனாலும் தாவீது விலகி இரண்டுதரம் அவனுக்குத் தப்பினான். 12 கர்த்தர் தாவீதோடேகூட இருக்கிறார் என்றும் தன்னை விட்டு விலகிப்போனார் என்றும், சவுல் கண்டு, தாவீதுக்குப் பயந்து, 13 அவனைத் தன்னைவிட்டு அப்புறப்படுத்தி, அவனை ஆயிரம்பேருக்கு அதிபதியாக வைத்தான்; அப்படியே அவன் ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருந்தான். 14 தாவீது தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்தான்; கர்த்தர் அவனோடேகூட இருந்தார். 15 அவன் மகா புத்திமானாய் நடக்கிறதைச் சவுல் கண்டு, அவனுக்குப் பயந்திருந்தான். 16 இஸ்ரவேலரும் யூதா ஜனங்களுமாகிய யாவரும் தாவீதைச் சிநேகித்தார்கள்; அவர்களுக்கு முன்பாக அவன் போக்கும் வரத்துமாயிருந்தான். 17 என் கை அல்ல, பெலிஸ்தரின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன்; நீ எனக்கு நல்ல சேவகனாய்மாத்திரம் இருந்து, கர்த்தருடைய யுத்தங்களை நடத்து என்றான். 18 அப்பொழுது தாவீது சவுலைப் பார்த்து: ராஜாவுக்கு மருமகனாகிறதற்கு நான் எம்மாத்திரம், என் ஜீவன் எம்மாத்திரம், இஸ்ரவேலிலே என் தகப்பன் வம்சமும் எம்மாத்திரம் என்றான். 19 சவுலின் குமாரத்தியாகிய மேராப் தாவீதுக்குக் கொடுக்கப்படுங் காலம் வந்தபோது, அவள் மேகோலாத்தியனாகிய ஆதரியேலுக்கு மனைவியாகக் கொடுக்கப்பட்டாள். 20 சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதை நேசித்தாள்; அது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அது அவனுக்குச் சந்தோஷமாயிருந்தது. 21 அவள் அவனுக்குக் கண்ணியாயிருக்கவும், பெலிஸ்தரின் கை அவன்மேல் விழவும், அவளை அவனுக்குக் கொடுப்பேன் என்று சவுல் எண்ணி, தாவீதை நோக்கி: நீ என்னுடைய இரண்டாம் குமாரத்தியினால் இன்று எனக்கு மருமகனாவாய் என்றான். 22 பின்பு சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நீங்கள் தாவீதோடே இரகசியமாய்ப் பேசி: இதோ, ராஜா உன்மேல் பிரியமாயிருக்கிறார்; அவருடைய ஊழியக்காரர் எல்லாரும் உம்மைச் சிநேகிக்கிறார்கள்; இப்போதும் நீர் ராஜாவுக்கு மருமகனானால் நலம் என்று சொல்லுங்கள் என்று கற்பித்தான். 23 சவுலின் ஊழியக்காரர் இந்த வார்த்தைகளைத் தாவீதின் செவிகள் கேட்கப் பேசினார்கள்; அப்பொழுது தாவீது, நான் ராஜாவுக்கு மருமகனாகிறது லேசான காரியமா? நான் எளியவனும், அற்பமாய் எண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன் என்றான். 24 தாவீது இன்ன இன்னபடி சொன்னான் என்று சவுலின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவித்தார்கள். 25 அப்பொழுது சவுல்: ராஜா பரிசத்தை விரும்பாமல், பெலிஸ்தரின் நூறு நுனித்தோல்களினால் ராஜாவின் சத்துருக்களிடத்தில் பழிவாங்க விருப்பமாயிருக்கிறார் என்று தாவீதுக்குச் சொல்லுங்கள் என்றான்; தாவீதை பெலிஸ்தரின் கையினால் விழப்பண்ணுவதே சவுலுடைய எண்ணமாயிருந்தது. 26 அவன் ஊழியக்காரர் தாவீதுக்கு இந்த வார்த்தைகளைச் சொன்னபோது, ராஜாவுக்கு மருமகனாகிறது தாவீதுக்குப் பிரியமாயிருந்தது. 27 அதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறுமுன்னே, தாவீது எழுந்து, தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோய், பெலிஸ்தரில் இருநூறுபேரை வெட்டி, அவர்கள் நுனித்தோல்களைக் கொண்டுவந்து, தான் ராஜாவுக்கு மருமகனாகும்படிக்கு, அவைகளை ராஜாவுக்கு எண்ணிச் செலுத்தினான்; அப்பொழுது சவுல் தன் குமாரத்தியாகிய மீகாளை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். 28 கர்த்தர் தாவீதோடிருக்கிறார் என்று சவுல் கண்டறிந்துகொண்டான்; சவுலின் குமாரத்தியாகிய மீகாளும் அவனை நேசித்தாள். 29 ஆகையால் சவுல் இன்னும் அதிகமாய்த் தாவீதுக்குப் பயந்து, தான் உயிரோடிருந்த நாளெல்லாம் தாவீதுக்குச் சத்துருவாயிருந்தான். 30 பெலிஸ்தருடைய பிரபுக்கள் புறப்படுகிறபோதெல்லாம் தாவீது சவுலுடைய ஊழியக்காரர் எல்லாரைப்பார்க்கிலும் புத்திமானாய் நடந்துகொண்டான்; அவன் பேர் மிகவும் கனம்பெற்றது.

1 சாமுவேல் 19

1 தாவீதைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் தன் குமாரனாகிய யோனத்தானோடும் தன் ஊழியக்காரர் எல்லாரோடும் பேசினான். 2 சவுலின் குமாரனாகிய யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்; அதனால் யோனத்தான் தாவீதுக்கு அதை அறிவித்து: என் தகப்பனாகிய சவுல் உம்மைக் கொன்றுபோட வகைதேடுகிறார்; இப்போதும் நாளைக்காலமே நீர் எச்சரிக்கையாயிருந்து, மறைவான இடத்தில் ஒளித்துக்கொண்டிரும். 3 நான் புறப்பட்டுவந்து, நீர் வெளியிலிருக்கும் இடத்தில் என் தகப்பன் பக்கத்திலே நின்று, உமக்காக என் தகப்பனோடே பேசி, நடக்கும் காரியத்தைக் கண்டு, உமக்கு அறிவிப்பேன் என்றான். 4 அப்படியே யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலோடே தாவீதுக்காக நலமாய்ப் பேசி, ராஜா தம்முடைய அடியானாகிய தாவீதுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதிருப்பாராக; அவன் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்யவில்லை; அவன் செய்கைகள் உமக்கு மெத்த உபயோகமாயிருக்கிறதே. 5 அவன் தன் பிராணனைத் தன் கையிலே வைத்துக்கொண்டு, அந்தப் பெலிஸ்தனைக் கொன்றதினாலே, கர்த்தர் இஸ்ரவேலுக்கெல்லாம் பெரிய இரட்சிப்பைக் கட்டளையிட்டதை நீர் கண்டு, சந்தோஷப்பட்டீரே; இப்போதும் முகாந்தரமில்லாமல் தாவீதைக் கொல்லுகிறதினால், குற்றமில்லாத இரத்தத்திற்கு விரோதமாக நீர் பாவஞ்செய்வானேன் என்றான். 6 சவுல் யோனத்தானுடைய சொல்லைக் கேட்டு: அவன் கொலைசெய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான். 7 பின்பு யோனத்தான் தாவீதை அழைத்து, அந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து, அவனைச் சவுலண்டையிலே கூட்டிக்கொண்டுபோய் விட்டான்; அப்படியே அவன் முன்போலவே அவனுடைய சமுகத்தில் இருந்தான். 8 மறுபடியும் ஒரு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது தாவீது புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடே யுத்தம்பண்ணி, அவர்களுக்குள் மகா சங்காரம்பண்ணினதினால் அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடிப்போனார்கள். 9 கர்த்தரால் விடப்பட்ட பொல்லாத ஆவி சவுலின்மேல் வந்தது; அவன் தன் வீட்டில் உட்கார்ந்து, தன் ஈட்டியைக் கையிலே பிடித்துக்கொண்டிருந்தான்; தாவீது தன் கையினாலே சுரமண்டலம் வாசித்தான். 10 அப்பொழுது சவுல்: தாவீதை ஈட்டியினாலே சுவரோடே சேர்த்து உருவக் குத்திப்போடப் பார்த்தான்; ஆனாலும் இவன் சவுலுக்கு விலகினதினாலே, அவன் எறிந்த ஈட்டி சுவரிலே பட்டது; தாவீதோ அன்று இராத்திரி ஓடிப்போய், தன்னைத் தப்புவித்துக்கொண்டான். 11 தாவீதைக் காவல்பண்ணி, மறுநாள் காலமே அவனைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் அவன் வீட்டிற்குச் சேவகரை அனுப்பினான்; இதைத் தாவீதுக்கு அவன் மனைவியாகிய மீகாள் அறிவித்து: நீர் இன்று இராத்திரியில் உம்முடைய பிராணனைத் தப்புவித்துக்கொள்ளாவிட்டால், நாளைக்கு நீர் கொன்றுபோடப்படுவீர் என்று சொல்லி, 12 மீகாள் தாவீதை ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள்; அவன் தப்பி ஓடிப்போனான். 13 மீகாளோ ஒரு சுரூபத்தை எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத்தோலைப்போட்டு, துப்பட்டியினால் மூடிவைத்தாள். 14 தாவீதைக் கொண்டுவரச் சவுல் சேவகரை அனுப்பினபோது, அவர் வியாதியாயிருக்கிறார் என்றாள். 15 அப்பொழுது தாவீதைப் பார்க்கிறதற்குச் சவுல் சேவகரை அனுப்பி, அவனைக் கொன்றுபோடும்படிக்கு, கட்டிலோடே அவனை என்னிடத்திற்கு எடுத்துக்கொண்டுவாருங்கள் என்றான். 16 சேவகர் வந்தபோது, இதோ, சுரூபம் கட்டிலின்மேலும், வெள்ளாட்டுத்தோல் அதின் தலைமாட்டிலும் கிடக்கக் கண்டார்கள். 17 அப்பொழுது சவுல்: நீ இப்படி என்னை ஏய்த்து, என் பகைஞனைத் தப்பவிட்டு அனுப்பினது என்ன என்று மீகாளிடத்தில் கேட்டான். மீகாள் சவுலை நோக்கி: என்னைப் போகவிடு, நான் உன்னை ஏன் கொல்லவேண்டும் என்று அவர் என்னிடத்தில் சொன்னார் என்றாள். 18 தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள். 19 தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டது. 20 அப்பொழுது சவுல்: தாவீதைக் கொண்டுவரச் சேவகரை அனுப்பினான்; அவர்கள் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் கூட்டத்தையும், சாமுவேல் அவர்களின் தலைவனாக நிற்கிறதையும் கண்டார்கள்; அப்பொழுது சவுலினுடைய சேவகரின்மேல் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 21 இது சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் வேறே சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்; மூன்றாந்தரமும் சவுல் சேவகரை அனுப்பினான்; அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 22 அப்பொழுது அவனும் ராமாவுக்குப் போய், சேக்குவிலிருக்கிற பெரிய கிணற்றண்டையிலே வந்து, சாமுவேலும் தாவீதும் எங்கே என்று கேட்டான்; அதோ ராமாவுக்கடுத்த நாயோதிலே இருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டது. 23 அப்பொழுது ராமாவுக்கடுத்த நாயோதிற்குப் போனான்; அவன்மேலும் தேவனுடைய ஆவி இறங்கினதினால் அவன் ராமாவுக்கடுத்த நாயோதிலே சேருமட்டும், தீர்க்கதரிசனம் சொல்லிக்கொண்டே நடந்துவந்து, 24 தானும் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போட்டு, சாமுவேலுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, அன்று பகல் முழுவதும் இராமுழுவதும் வஸ்திரம் இல்லாமல் விழுந்துகிடந்தான்; ஆகையினாலே சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனோ என்பார்கள்.

1 சாமுவேல் 20

1 தாவீது ராமாவுக்கடுத்த நாயோதிலிருந்து ஓடிப்போய், யோனத்தான் முன்பாக வந்து: உம்முடைய தகப்பன் என் பிராணனை வாங்கத்தேடுகிறாரே, நான் செய்தது என்ன? என் அக்கிரமம் என்ன? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன? என்றான். 2 அதற்கு அவன்: அப்படி ஒருக்காலும் வாராது; நீர் சாவதில்லை, இதோ, எனக்கு அறிவிக்காமல் என் தகப்பன் பெரிய காரியமானாலும் சிறிய காரியமானாலும் ஒன்றும் செய்கிறதில்லை; இந்தக் காரியத்தை என் தகப்பன் எனக்கு மறைப்பானேன்? அப்படி இருக்கமாட்டாது என்றான். 3 அப்பொழுது தாவீது: உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று உம்முடைய தகப்பன் நன்றாய் அறிவார்; ஆகையால் யோனத்தானுக்கு மனநோவு உண்டாகாதபடிக்கு அவன் இதை அறியப்போகாது என்பார்; மரணத்திற்கும் எனக்கும் ஒரு அடி தூரமாத்திரம் இருக்கிறது என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு நிச்சயமாய்ச் சொல்லுகிறேன் என்று மறுமொழி சொல்லி ஆணையிட்டான். 4 அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: உமது மனவிருப்பம் இன்னது என்று சொல்லும், அதின்படி உமக்குச் செய்வேன் என்றான். 5 தாவீது யோனத்தானை நோக்கி: இதோ, நாளைக்கு அமாவாசி, நான் ராஜாவோடே பந்தியிருந்து சாப்பிடவேண்டியதாயிருக்கும்; ஆனாலும் நான் மூன்றாம் நாள் சாயங்காலமட்டும் வெளியிலே ஒளித்திருக்கும்படி எனக்கு உத்தரவு கொடும். 6 உம்முடைய தகப்பன் என்னைக்குறித்து விசாரித்தால், தன் ஊராகிய பெத்லெகேமிலே தன் குடும்பத்தார் யாவரும் வருஷத்துக்கு ஒருதரம் பலியிட வருகிறபடியால் தாவீது அவ்விடத்திற்குப்போக என்னிடத்தில் வருந்திக் கேட்டான் என்று நீர் சொல்லும். 7 அதற்கு அவர் நல்லது என்றால், உம்முடைய அடியானுக்குச் சமாதானம் இருக்கும்; அவருக்கு எரிச்சலுண்டானால், அவராலே பொல்லாப்புத் தீர்மானப்பட்டிருக்கிறது என்று அறிந்துகொள்வீர். 8 ஆகையால் உம்முடைய அடியானுக்குத் தயைசெய்யவேண்டும்; கர்த்தருக்கு முன்பாக உம்முடைய அடியானோடே உடன்படிக்கை பண்ணியிருக்கிறீரே; என்னில் ஒரு அக்கிரமம் இருந்ததேயானால், நீரே என்னைக் கொன்றுபோடும்; நீர் என்னை உம்முடைய தகப்பனிடத்துக்குக் கொண்டுபோகவேண்டியது என்ன என்றான். 9 அப்பொழுது யோனத்தான்: அப்படி உமக்கு வராதிருப்பதாக; உமக்குப் பொல்லாப்புச் செய்ய என் தகப்பனாலே தீர்மானித்திருக்கிறது என்று நான் நிச்சயமாய் அறிந்தேனானால் நான் அதை உமக்கு அறிவிக்காதிருப்பேனா என்றான். 10 தாவீது யோனத்தானை நோக்கி: உம்முடைய தகப்பன் கடினமான உத்தரம் சொன்னால் அதை யார் எனக்கு அறிவிப்பார் என்றான். 11 அப்பொழுது யோனத்தான் தாவீதைப் பார்த்து: ஊருக்கு வெளியே போவோம் வாரும் என்றான்; இருவரும் வெளியே புறப்பட்டுப்போனார்கள். 12 அப்பொழுது யோனத்தான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை முன்னிட்டுத் தாவீதை நோக்கி: நான் நாளையாவது மறுநாளிலாவது என் தகப்பனுடைய மனதை அறிந்துகொண்டு, அவர் தாவீதின்மேல் தயவாயிருக்கிறார் என்று கண்டும், அதை அப்போது உமது செவிகளுக்கு வெளிப்படுத்தும்படிக்கு, உமக்குச் சொல்லியனுப்பாதிருந்தால், 13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் யோனத்தானுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர்; ஆனாலும் உமக்குத் தீங்கு செய்ய என் தகப்பனுக்குப் பிரியமாயிருந்தால், அதை உமது செவிகளுக்கு வெளிப்படுத்தி, நீர் சமாதானத்தோடே போகும்படிக்கு உம்மை அனுப்பிவிடுவேன்; கர்த்தர் என் தகப்பனோடு இருந்ததுபோல், உம்மோடும் இருப்பாராக. 14 மேலும், நான் உயிரோடிருக்கையில், நான் சாகாதபடிக்கு நீர் கர்த்தரின் நிமித்தமாய் எனக்குத் தயைசெய்யவேண்டியதும் அல்லாமல், 15 கர்த்தர் தாவீதின் சத்துருக்களாகிய ஒவ்வொருவரையும் பூமியின்மேல் இராதபடிக்கு, வேர்அறுக்கும்போதும், நீர் என்றைக்கும் உமது தயவை என் வீட்டைவிட்டு அகற்றிவிடாமலும் இருக்கவேண்டும் என்றான். 16 இப்படி யோனத்தான் தாவீதின் குடும்பத்தோடே உடன்படிக்கைபண்ணி, தாவீதுடைய சத்துருக்களின் கையிலே கர்த்தர் கணக்குக் கேட்பாராக என்று சொல்லி, 17 யோனத்தான் தாவீதை மிகவும் சிநேகித்தபடியினால், பின்னும் அவனுக்கு ஆணையிட்டான்; தன் உயிரைச் சிநேகித்ததுபோல அவனைச் சிநேகித்தான். 18 பின்பு யோனத்தான் தாவீதைப் பார்த்து: நாளைக்கு அமாவாசி, நீர் உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதினால் உம்மைக்குறித்து விசாரிக்கப்படும். 19 காரியம் நடந்தபோது, மூன்றாம் நாளிலே நீர் ஒளித்திருக்கும் இடத்திற்குத் தீவிரித்து வந்து, ஏசேல் என்னும் கல்லண்டையில் உட்கார்ந்திரும். 20 அப்பொழுது நான் குறிப்புவைத்து எய்கிறதுபோல, அதற்குப் பக்கமாக மூன்று அம்புகளை எய்து: 21 நீ போய், அந்த அம்புகளைத் தேடி வா என்று ஒரு பிள்ளையாண்டானை அனுப்புவேன்; இதோ, அம்புகள் உனக்கு இப்புறத்திலே கிடக்கிறது, அவைகளை எடுத்துக்கொண்டுவா என்று பிள்ளையாண்டானிடத்தில் நான் சொன்னால், நீர் வாரும்; அப்பொழுது ஒன்றும் இல்லை, உமக்குச் சமாதானம் இருக்கும் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். 22 இதோ, அம்புகள் உனக்கு அப்புறத்திலே கிடக்கிறது என்று நான் அந்தப் பிள்ளையாண்டானிடத்தில் சொன்னால், நீர் போய்விடும்; அப்பொழுது கர்த்தர் உம்மைப் போகச்சொல்லுகிறார் என்று அறியும். 23 நீரும் நானும் பேசிக்கொண்ட காரியத்திற்கு, இதோ, கர்த்தர் எனக்கும் உமக்கும் என்றைக்கும் நடுநிற்கும் சாட்சி என்றான். 24 அப்படியே தாவீது வெளியிலே ஒளித்துக்கொண்டிருந்தான்; அமாவாசியானபோது ராஜா போஜனம்பண்ண உட்கார்ந்தான். 25 ராஜா சுவரண்டையிலிருக்கிற தன் இடத்தில் எப்போதும்போல் உட்கார்ந்தபோது, யோனத்தான் எழுந்திருந்தான்; அப்னேரோ சவுலுடைய பக்கத்தில் உட்கார்ந்தான்; தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது. 26 ஆனாலும் அவன் தீட்டாயிருக்கிறானாக்கும், அவன் தீட்டுப்பட்டுத்தான் இருக்கவேண்டும் என்று அன்றையதினம் சவுல் ஒன்றும் சொல்லவில்லை. 27 அமாவாசிக்கு மறுநாளிலும் தாவீது இருக்கும் இடம் காலியாயிருந்தது; அப்பொழுது சவுல்: ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் போஜனத்துக்கு வராதேபோனது என்ன என்று தன் குமாரனாகிய யோனத்தானைக் கேட்டான். 28 யோனத்தான் சவுலுக்குப் பிரதியுத்தரமாக: பெத்லெகேம்மட்டும் போக, தாவீது என்னிடத்தில் வருந்திக்கேட்டு, 29 அங்கே நான் போகவேண்டும்; எங்கள் குடும்பத்தார் ஊரிலே பலியிடப் போகிறார்கள்; என் தமையன் என்னை வரும்படி கட்டளையிட்டார்; உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைத்ததானால், நான் என் சகோதரரைப் பார்க்கிறதற்குப் போக எனக்கு உத்தரவு கொடும் என்றான்; இதனாலேதான் அவன் ராஜாவின் பந்திக்கு வரவில்லை என்றான். 30 அப்பொழுது சவுல் யோனத்தான்மேல் கோபமூண்டவனாகி, அவனைப் பார்த்து: இரண்டகமும் மாறுபாடுமுள்ளவளின் மகனே, நீ உனக்கு வெட்கமாகவும், உன் தாயின் மானத்திற்கு வெட்கமாகவும், ஈசாயின் மகனைத் தோழனாகத் தெரிந்துகொண்டிருக்கிறதை நான் அறியேனோ? 31 ஈசாயின் மகன் பூமியின்மேல் உயிரோடிருக்கும் நாள்வரையும் நீயானாலும் உன் ராஜ்யபாரமானாலும் நிலைப்படுவதில்லை; இப்போதே அவனை அழைப்பித்து, என்னிடத்தில் கொண்டுவா; அவன் சாகவேண்டும் என்றான். 32 யோனத்தான் தன் தகப்பனாகிய சவுலுக்குப் பிரதியுத்தரமாக: அவன் ஏன் கொல்லப்படவேண்டும்? அவன் என்ன செய்தான் என்றான். 33 அப்பொழுது சவுல்: அவனைக் குத்திப்போட அவன்மேல் ஈட்டியை எறிந்தான்; ஆகையால் தாவீதைக் கொன்றுபோடத் தன் தகப்பன் தீர்மானித்திருக்கிறான் என்பதை யோனத்தான் அறிந்துகொண்டு, 34 கோபதாபமாய் பந்தியைவிட்டு எழுந்திருந்துபோய், அமாவாசியின் மறுநாளாகிய அன்றையதினம் போஜனம்பண்ணாதிருந்தான்; தன் தகப்பன் தாவீதை நிந்தித்துச் சொன்னது அவனுக்கு மனநோவாயிருந்தது. 35 மறுநாள் காலமே, யோனத்தான் தாவீதுக்குக் குறித்தநேரத்திலே ஒரு சிறுபிள்ளையாண்டானைக் கூட்டிக்கொண்டு, வெளியே புறப்பட்டுப்போய்: 36 பிள்ளையாண்டானை நோக்கி: நீ ஓடி, நான் எய்கிற அம்புகளைத் தேடி எடுத்துக்கொண்டுவா என்று சொல்லி, அந்தப் பிள்ளையாண்டான் ஓடும்போது, அவனுக்கு அப்பாலே போகும்படி ஒரு அம்பை எய்தான். 37 யோனத்தான் எய்த அம்பிருக்கும் இடமட்டும் பிள்ளையாண்டான் போனபோது, அம்பு உனக்கு இன்னும் அப்பால் இருக்கிறது அல்லவா என்று யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான். 38 நீ தரித்துநிற்காமல் தீவிரித்துப் பொட்டெனப்போ என்றும் யோனத்தான் பிள்ளையாண்டானுக்குப் பிறகேயிருந்து கூப்பிட்டான்; அப்படியே யோனத்தானின் பிள்ளையாண்டான் அம்புகளைப் பொறுக்கி, தன் எஜமானிடத்தில் கொண்டுவந்தான். 39 அந்தக் காரியம் யோனத்தானுக்கும் தாவீதுக்கும் தெரிந்திருந்ததேயல்லாமல், அந்தப் பிள்ளையாண்டானுக்கு ஒன்றும் தெரியாதிருந்தது. 40 அப்பொழுது யோனத்தான்: தன் ஆயுதங்களைப் பிள்ளையாண்டானிடத்தில் கொடுத்து, இவைகளைப் பட்டணத்திற்குக் கொண்டுபோ என்றான். 41 பிள்ளையாண்டான் போனபின்பு, தாவீது தென்புறமான இடத்திலிருந்து எழுந்துவந்து, தரையிலே முகங்குப்புற விழுந்து, மூன்றுவிசை வணங்கினான்; அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தஞ்செய்து அழுதார்கள்; தாவீது மிகவும் அழுதான். 42 அப்பொழுது யோனத்தான் தாவீதை நோக்கி: நீர் சமாதானத்தோடே போம், கர்த்தர் என்றைக்கும் எனக்கும் உமக்கும், என் சந்ததிக்கும் உமது சந்ததிக்கும், நடுநிற்கும் சாட்சி என்று சொல்லி, கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு நாம் இருவரும் ஆணையிட்டுக் கொண்டதை நினைத்துக் கொள்ளும் என்றான். (43) பின்பு அவன் எழுந்து புறப்பட்டுப்போனான்; யோனத்தானோ பட்டணத்திற்குப் போய்விட்டான்.

1 சாமுவேல் 21

1 தாவீது நோபிலிருக்கிற ஆசாரியனாகிய அகிமெலேக்கினிடத்தில் போனான்; அகிமெலேக்கு நடுக்கத்தோடே தாவீதுக்கு எதிர்கொண்டுபோய்: ஒருவரும் உம்மோடே கூடவராமல், நீர் ஒண்டியாய் வருகிறது என்ன என்று அவனைக் கேட்டான். 2 தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்த்து: ராஜா எனக்கு ஒரு காரியத்தைக் கட்டளையிட்டு, நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவரும் அறியாதிருக்கவேண்டும் என்று என்னோடே சொன்னார்; இன்ன இடத்திற்கு வரவேண்டும் என்று சேவகருக்குச் சொல்லியிருக்கிறேன். 3 இப்போதும் உம்முடைய கையில் இருக்கிறது என்ன? ஐந்து அப்பமாகிலும், என்னவாகிலும், இருக்கிறதை என் கையிலே கொடும் என்றான். 4 ஆசாரியன் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த அப்பம் இருக்கிறதே ஒழிய, சாதாரண அப்பம் என் கையில் இல்லை; வாலிபர் ஸ்திரீகளோடேமாத்திரம் சேராதிருந்தால் கொடுப்பேன் என்றான். 5 தாவீது ஆசாரியனுக்குப் பிரதியுத்தரமாக: நான் புறப்படுகிறதற்கு முன் நேற்றும் முந்தாநாளும் ஸ்திரீகள் எங்களுக்கு விலக்கமாயிருந்தார்கள்; வாலிபருடைய அசம்பிகளும் சுத்தமாயிருக்கிறது; இன்றையதினம் வேறே அப்பம் பாத்திரத்தில் பிரதிஷ்டைபண்ணப்பட்டதினால், இது சாதாரணமாயிற்றே என்றான். 6 அப்பொழுது கர்த்தருடைய சந்நிதியிலிருந்து எடுக்கப்பட்ட சமுகத்தப்பங்களைத்தவிர, வேறே அப்பம் அங்கே இராதபடியினால் ஆசாரியன் அவனுக்குப் பரிசுத்த அப்பத்தைக் கொடுத்தான்; அவைகள் எடுக்கப்படுகிற நாளிலே அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் வைக்கப்படும். 7 சவுலுடைய வேலைக்காரரில் ஏதோமியனாகிய தோவேக்கு என்னும் பேருள்ள ஒருவன் அன்றையதினம் அங்கே கர்த்தருடைய சந்நிதியில் தடைபட்டிருந்தான்; அவன் சவுலுடைய மேய்ப்பருக்குத் தலைவனாயிருந்தான். 8 தாவீது அகிமெலேக்கைப் பார்த்து: இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியானாலும் பட்டயமானாலும் இல்லையா? ராஜாவின் காரியம் அவசரமானபடியினால், என் பட்டயத்தையாகிலும், என் ஆயுதங்களையாகிலும், நான் எடுத்துக் கொண்டுவரவில்லை என்றான். 9 அதற்கு ஆசாரியன்: நீர் ஏலே பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம், இதோ, ஏபோத்துக்குப் பின்னாக ஒரு புடவையிலே சுருட்டி வைத்திருக்கிறது; அதை நீர் எடுக்க மனதானால் எடுத்துக்கொண்டுபோம், அதுவே அல்லாமல் வேறொன்றும் இங்கே இல்லை என்றான்; அப்பொழுது தாவீது: அதற்கு நிகரில்லை; அதை எனக்குத் தாரும் என்றான். 10 அன்றையதினம் தாவீது எழுந்து சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான். 11 ஆகீசின் ஊழியக்காரர் அவனைப் பார்த்து: தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ? சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இவனைக்குறித்தல்லவோ ஆடல்பாடலோடே கொண்டாடினார்கள் என்றார்கள். 12 இந்த வார்த்தைகளைத் தாவீது தன் மனதிலே வைத்துக்கொண்டு, காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு, 13 அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன்போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக் கொண்டிருந்தான். 14 அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரரை நோக்கி: இதோ, இந்த மனுஷன் பித்தங்கொண்டவன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டுவந்தது என்ன? 15 எனக்கு முன்பாகப் பயித்திய சேஷ்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டுவருகிறதற்கு, பயித்தியக்காரர் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிலே வரலாமா என்றான்.

1 சாமுவேல் 22

1 தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்; அதை அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள். 2 ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப்பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள். 3 தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும், என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவுசெய்யும் என்று சொல்லி, 4 அவர்களை மோவாபின் ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டுபோய்விட்டான்; தாவீது அரணில் இருந்த நாளெல்லாம் அவர்கள் அங்கே அவனோடிருந்தார்கள். 5 பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதாதேசத்திற்குப் புறப்பட்டுவாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான். 6 தாவீதும் அவனோடிருந்த மனுஷரும் காணப்பட்ட செய்தியைச் சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர் எல்லாரும் தன்னைச் சூழ்ந்துநிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும்போது, 7 சவுல் தன்னண்டையில் நிற்கிற தன் ஊழியக்காரரைப் பார்த்து: பென்யமீன் புத்திரரே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்களெல்லாருக்கும் வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களெல்லாரையும் ஆயிரத்துக்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ? 8 நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா? இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண, என் குமாரன் என் வேலைக்காரனை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டானே என்றான். 9 அப்பொழுது சவுலின் ஊழியக்காரரோடே நின்ற ஏதோமியனாகிய தோவேக்கு பிரதியுத்தரமாக: ஈசாயின் மகனை நோபிலிருக்கிற அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கிடத்தில் வரக்கண்டேன். 10 இவன் அவனுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு போஜனத்தைக் கொடுத்து, பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான். 11 அப்பொழுது ராஜா: அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக் என்னும் ஆசாரியனையும், நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டாராகிய எல்லா ஆசாரியரையும் அழைப்பித்தான்; அவர்களெல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள். 12 அப்பொழுது சவுல்: அகிதூபின் குமாரனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என் ஆண்டவனே என்றான். 13 அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண அவன் எனக்கு விரோதமாக எழும்பும்படிக்கு, நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான். 14 அகிமெலேக் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: உம்முடைய எல்லா ஊழியக்காரரிலும் தாவீதைப்போல, ராஜாவுக்கு மருமகனும், உம்முடைய கட்டளைகளின்படி செய்துவருகிறவனும், உம்முடைய வீட்டிலே கனமுள்ளவனுமாயிருக்கிற உண்மையுள்ளவன் யார்? 15 இன்றையதினம் அவனுக்காக தேவ சந்நிதியில் விசாரிக்கத் தொடங்கினேனோ? அது எனக்குத் தூரமாயிருப்பதாக; ராஜா தம்முடைய அடியானாகிய என்மேலாகிலும் என் தகப்பன் வீட்டாரில் எவன்மேலாகிலும் குற்றம் சுமத்தவேண்டாம்; உம்முடைய அடியான் இவைகளிலெல்லாம் ஒரு சிறிய காரியமாகிலும் பெரிய காரியமாகிலும் அறிந்திருந்ததில்லை என்றான். 16 ராஜாவோ: அகிமெலேக்கே, நீயும் உன் தகப்பன் வீட்டார் அனைவரும் சாகவே சாகவேண்டும் என்றான். 17 பின்பு ராஜா தன்னண்டையிலே நிற்கிற சேவகரை நோக்கி: நீங்கள் போய், கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள்; அவர்கள் கையும் தாவீதோடே இருக்கிறது; அவன் ஓடிப்போகிறதை அவர்கள் அறிந்திருந்தும், அதை எனக்கு வெளிப்படுத்தவில்லை என்றான்; ராஜாவின் வேலைக்காரரோ, கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லத் தங்கள் கைகளை நீட்ட சம்மதிக்கவில்லை. 18 அப்பொழுது ராஜா தோவேக்கை நோக்கி: நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுபோடு என்றான்; ஏதோமியனாகிய தோவேக்கு ஆசாரியர்கள்மேல் விழுந்து, சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருக்கும் எண்பத்தைந்துபேரை அன்றையதினம் கொன்றான். 19 ஆசாரியர்களின் பட்டணமாகிய நோபிலுமுள்ள புருஷரையும், ஸ்திரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும், மாடுகளையும், கழுதைகளையும், ஆடுகளையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டான். 20 அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கின் குமாரரில் அபியத்தார் என்னும் பேருள்ள ஒருவன் தப்பி, தாவீது இருக்கும் புறமாக ஓடிப்போய், 21 சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றுபோட்ட செய்தியை தாவீதுக்கு அறிவித்தான். 22 அப்பொழுது தாவீது அபியத்தாரைப் பார்த்து: ஏதோமியனாகிய தோவேக்கு அங்கே இருந்தபடியினாலே, அவன் எவ்விதத்திலும் சவுலுக்கு அதை அறிவிப்பான் என்று அன்றையதினமே அறிந்திருந்தேன்; உன் தகப்பன் வீட்டாராகிய எல்லாருடைய மரணத்துக்கும் காரணம் நானே. 23 நீ என்னிடத்தில் இரு, பயப்படவேண்டாம்; என் பிராணனை வாங்கத்தேடுகிறவனே உன் பிராணனையும் வாங்கத்தேடுகிறான்; நீ என் ஆதரவிலே இரு என்றான்.

1 சாமுவேல் 23

1 இதோ, பெலிஸ்தர் கேகிலாவின்மேல் யுத்தம்பண்ணி, களஞ்சியங்களைக் கொள்ளையிடுகிறார்கள் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது. 2 அப்பொழுது தாவீது: நான் போய், அந்தப் பெலிஸ்தரை முறிய அடிக்கலாமா என்று கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, கர்த்தர்: நீ போ; பெலிஸ்தரை முறிய அடித்து, கேகிலாவை ரட்சிப்பாயாக என்று தாவீதுக்குச் சொன்னார். 3 ஆனாலும் தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நாங்கள் இங்கே யூதாவிலே இருக்கும்போதே பயப்படுகிறோம்; நாங்கள் பெலிஸ்தருடைய சேனைகளை எதிர்க்கிறதற்கு கேகிலாவுக்குப் போனால், எவ்வளவு அதிகம் என்றார்கள். 4 அப்பொழுது தாவீது திரும்பவும் கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர் அவனுக்கு உத்தரமாக: நீ எழும்பி, கேகிலாவுக்குப் போ; நான் பெலிஸ்தரை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார். 5 அப்படியே தாவீது தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, கேகிலாவுக்குப் போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, அவர்களில் அநேகம்பேரை வெட்டி, அவர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டுபோனான்; இவ்விதமாய்க் கேகிலாவின் குடிகளை ரட்சித்தான். 6 அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் கேகிலாவில் இருக்கிற தாவீதினிடத்தில் தப்பியோடுகிறபோது, அவனிடத்தில் ஒரு ஏபோத்து இருந்தது. 7 தாவீது கேகிலாவுக்கு வந்தான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தேவன் அவனை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள பட்டணத்திற்குள் பிரவேசித்ததினால், அடைபட்டிருக்கிறான் என்று சவுல் சொல்லி, 8 தாவீதையும் அவன் மனுஷரையும் முற்றிக்கை போடும்படிக்கு, கேகிலாவுக்குப் போக, எல்லா ஜனத்தையும் யுத்தத்திற்கு அழைப்பித்தான். 9 தனக்குப் பொல்லாப்புச் செய்யச் சவுல் எத்தனம்பண்ணுகிறான் என்று தாவீது அறிந்துகொண்டபோது, ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: ஏபோத்தை இங்கே கொண்டுவா என்றான். 10 அப்பொழுது தாவீது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சவுல் கேகிலாவுக்கு வந்து, என்னிமித்தம் பட்டணத்தை அழிக்க வகைதேடுகிறான் என்று உமது அடியானாகிய நான் நிச்சயமாய்க் கேள்விப்பட்டேன். 11 கேகிலா பட்டணத்தார் என்னை அவன் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ, உம்முடைய அடியான் கேள்விப்பட்டபடி சவுல் வருவானோ, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, இதை உம்முடைய அடியானுக்குத் தெரிவிக்கவேண்டும் என்றான். அதற்குக் கர்த்தர்: அவன் வருவான் என்றார். 12 கேகிலாபட்டணத்தார் என்னையும் என் மனுஷரையும் சவுலின் கையில் ஒப்புக்கொடுப்பார்களோ என்று தாவீது கேட்டதற்கு, கர்த்தர்: ஒப்புக்கொடுப்பார்கள் என்றார். 13 ஆகையால் தாவீதும் ஏறக்குறைய அறுநூறுபேராகிய அவன் மனுஷரும் எழும்பி, கேகிலாவை விட்டுப் புறப்பட்டு, போகக்கூடிய இடத்திற்குப் போனார்கள்; தாவீது கேகிலாவிலிருந்து தப்பிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தான் புறப்படுகிறதை நிறுத்திவிட்டான். 14 தாவீது வனாந்தரத்திலுள்ள அரணான ஸ்தலங்களிலே தங்கி, சீப் என்னும் வனாந்தரத்திலிருக்கிற ஒரு மலையிலே தரித்திருந்தான்; சவுல் அநுதினமும் அவனைத் தேடியும், தேவன் அவனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கவில்லை. 15 தன் பிராணனை வாங்கத் தேடும்படிக்கு, சவுல் புறப்பட்டான் என்று தாவீது அறிந்தபடியினாலே, தாவீது சீப் வனாந்தரத்திலுள்ள ஒரு காட்டிலே இருந்தான். 16 அப்பொழுது சவுலின் குமாரனாகிய யோனத்தான் எழுந்து, காட்டிலிருக்கிற தாவீதினிடத்தில் போய், தேவனுக்குள் அவன் கையைத் திடப்படுத்தி: 17 நீர் பயப்படவேண்டாம்; என் தகப்பனாகிய சவுலின் கை உம்மைக் கண்டு பிடிக்கமாட்டாது; நீர் இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிருப்பீர்; அப்பொழுது நான் உமக்கு இரண்டாவதாயிருப்பேன்; அப்படி நடக்கும் என்று என் தகப்பனாகிய சவுலும் அறிந்திருக்கிறார் என்றான். 18 அவர்கள் இருவரும் கர்த்தருக்கு முன்பாக உடன்படிக்கை பண்ணினபின்பு, தாவீது காட்டில் இருந்துவிட்டான்; யோனத்தானோ தன் வீட்டிற்குப் போனான். 19 பின்பு சீப் ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எங்களிடத்தில் எஷிமோனுக்குத் தெற்கே ஆகிலா என்னும் மலைக்காட்டிலுள்ள அரணிப்பான இடங்களில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் அல்லவா? 20 இப்போதும் ராஜாவே, நீர் உம்முடைய மனவிருப்பத்தின்படி இறங்கி வாரும்; அவனை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்க, எங்களால் ஆகும் என்றார்கள். 21 அதற்கு சவுல்: நீங்கள் என்மேல் தயை வைத்ததினாலே, கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பீர்களாக. 22 நீங்கள் போய், அவன் கால் நடமாடுகிற இடத்தைப் பார்த்து, அங்கே அவனைக் கண்டவன் யார் என்பதையும் இன்னும் நன்றாய் விசாரித்து அறியுங்கள்; அவன் மகா தந்திரவாதி என்று எனக்குத் தெரியவந்தது. 23 அவன் ஒளித்துக்கொண்டிருக்கும் எல்லா மறைவிடங்களையும் பார்த்தறிந்து கொண்டு, நிச்சய செய்தி எனக்குக் கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் உங்களோடே கூடவந்து, அவன் தேசத்தில் இருந்தால், யூதாவிலிருக்கிற சகல ஆயிரங்களுக்குள்ளும் அவனைத் தேடிப் போவேன் என்றான். 24 அப்பொழுது அவர்கள் எழுந்து, சவுலுக்கு முன்னாலே சீப் ஊருக்குப் போனார்கள்; தாவீதும் அவன் மனுஷரும் எஷிமோனுக்குத் தெற்கான அந்தர வெளியாகிய மாகோன் வனாந்தரத்தில் இருந்தார்கள். 25 சவுலும் அவன் மனுஷரும் தாவீதைத் தேடவருகிறார்கள் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் கன்மலையிலிருந்து இறங்கி, மாகோன் வனாந்தரத்திலே தங்கினான்; அதைச் சவுல் கேள்விப்பட்டு, மாகோன் வனாந்தரத்திலே தாவீதைப் பின் தொடர்ந்தான். 26 சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும் அவன் மனுஷரும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும் அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத்தக்கதாய் அவர்களை வளைந்துகொண்டார்கள். 27 அந்தச் சமயத்தில் ஒரு ஆள் சவுலிடத்தில் வந்து: நீர் சீக்கிரமாய் வாரும்; பெலிஸ்தர் தேசத்தின்மேல் படையெடுத்து வந்திருக்கிறார்கள் என்றான். 28 அதனால் சவுல் தாவீதைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பி, பெலிஸ்தரை எதிர்க்கும்படி போனான்; ஆதலால் அவ்விடத்திற்குச் சேலா அம்மாலிகோத் என்று பேரிட்டார்கள். 29 தாவீது அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு, என்கேதியிலுள்ள அரணிப்பான இடங்களில் தங்கினான்.

1 சாமுவேல் 24

1 சவுல் பெலிஸ்தரைப் பின்தொடர்ந்து திரும்பிவந்தபோது, இதோ, தாவீது என்கேதியின் வனாந்தரத்தில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. 2 அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின்மேல் தேடப்போனான். 3 வழியோரத்திலிருக்கிற ஆட்டுத்தொழுவங்களிடத்தில் அவன் வந்தபோது, அங்கே ஒரு கெபி இருந்தது; அதிலே சவுல் மலஜலாதிக்குப் போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அந்தக் கெபியின் பக்கங்களில் உட்கார்ந்திருந்தார்கள். 4 அப்பொழுது தாவீதின் மனுஷர் அவனை நோக்கி: இதோ, நான் உன் சத்துருவை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன்; உன் பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்வாயாக என்று கர்த்தர் உன்னோடே சொன்ன நாள் இதுதானே என்றார்கள்; தாவீது எழுந்திருந்துபோய், சவுலுடைய சால்வையின் தொங்கலை மெள்ள அறுத்துக்கொண்டான். 5 தாவீது சவுலின் சால்வைத் தொங்கலை அறுத்துக்கொண்டதினிமித்தம் அவன் மனது அடித்துக்கொண்டிருந்தது. 6 அவன் தன் மனுஷரைப் பார்த்து: கர்த்தர் அபிஷேகம்பண்ணின என் ஆண்டவன்மேல் என் கையைப் போடும்படியான இப்படிப்பட்ட காரியத்தை நான் செய்யாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காப்பாராக; அவர் கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்டவர் என்று சொல்லி, 7 தன் மனுஷரைச் சவுலின்மேல் எழும்ப ஒட்டாமல், இவ்வார்த்தைகளினால் அவர்களைத் தடைபண்ணினான்; சவுல் எழுந்திருந்து, கெபியைவிட்டு, வழியே நடந்துபோனான். 8 அப்பொழுது தாவீதும் எழுந்து, கெபியிலிருந்து புறப்பட்டு, சவுலுக்குப் பின்னாகப் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே என்று கூப்பிட்டான்; சவுல் திரும்பிப்பார்த்தபோது, தாவீது தரைமட்டும் முகங்குனிந்து வணங்கி, 9 சவுலை நோக்கி: தாவீது உமக்குப் பொல்லாப்புச் செய்யப்பார்க்கிறான் என்று சொல்லுகிற மனுஷருடைய வார்த்தைகளை ஏன் கேட்கிறீர்? 10 இதோ, கர்த்தர் இன்று கெபியில் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்தார் என்பதை இன்றையதினம் உம்முடைய கண்கள் கண்டதே, உம்மைக் கொன்றுபோடவேண்டும் என்று சிலர் சொன்னார்கள்; ஆனாலும் என் கை உம்மைத் தப்பவிட்டது; என் ஆண்டவன்மேல் என் கையைப் போடேன்; அவர் கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவராமே என்றேன். 11 என் தகப்பனே பாரும்; என் கையிலிருக்கிற உம்முடைய சால்வையின் தொங்கலைப் பாரும்; உம்மைக் கொன்றுபோடாமல், உம்முடைய சால்வையின் தொங்கலை அறுத்துக்கொண்டேன்; என் கையிலே பொல்லாப்பும் துரோகமும் இல்லை என்றும், உமக்கு நான் குற்றம் செய்யவில்லை என்றும் அறிந்துகொள்ளும்; நீரோ என் பிராணனை வாங்க, அதை வேட்டையாடுகிறீர். 12 கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயம் விசாரித்து, கர்த்தர் தாமே என் காரியத்தில் உமக்கு நீதியைச் சரிக்கட்டுவாராக; உம்முடைய பேரில் நான் கைபோடுவதில்லை. 13 முதியோர் மொழிப்படியே, ஆகாதவர்களிடத்திலே ஆகாமியம் பிறக்கும்; ஆகையால் உம்முடையபேரில் நான் கைபோடுவதில்லை. 14 இஸ்ரவேலின் ராஜா யாரைத் தேடப் புறப்பட்டார்? ஒரு செத்த நாயையா, ஒரு தெள்ளுப்பூச்சியையா, நீர் யாரைப் பின்தொடருகிறீர்? 15 கர்த்தர் நியாயாதிபதியாயிருந்து, எனக்கும் உமக்கும் நியாயந்தீர்த்து, எனக்காக வழக்காடி, நான் உம்முடைய கைக்குத் தப்ப என்னை விடுவிப்பாராக என்றான். 16 தாவீது இந்த வார்த்தைகளைச் சவுலோடே சொல்லி முடிந்தபின்பு, சவுல்: என் குமாரனாகிய தாவீதே, இது உன்னுடைய சத்தமல்லவா என்று சொல்லி, சத்தமிட்டு அழுது, 17 தாவீதைப் பார்த்து: நீ என்னைப்பார்க்கிலும் நீதிமான்; நீ எனக்கு நன்மை செய்தாய்; நானோ உனக்கு தீமை செய்தேன். 18 நீ எனக்கு நன்மை செய்ததை இன்று விளங்கப்பண்ணினாய்; கர்த்தர் என்னை உன் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், நீ என்னைக் கொன்றுபோடவில்லை. 19 ஒருவன் தன் மாற்றானைக் கண்டுபிடித்தால், அவனைச் சுகமே போகவிடுவானோ? இன்று நீ எனக்குச் செய்த நன்மைக்காகக் கர்த்தர் உனக்கு நன்மை செய்வாராக. 20 நீ நிச்சயமாக ராஜாவாய் இருப்பாய் என்றும், இஸ்ரவேலின் ராஜ்யபாரம் உன் கையில் நிலைவரப்படும் என்றும் அறிவேன். 21 இப்போதும் நீ எனக்குப் பின்னிருக்கும் என் சந்ததியை வேரறுப்பதில்லை என்றும், என் தகப்பன் வீட்டாரில் என் பெயரை அழித்துப்போடுவதில்லை என்றும் கர்த்தர்மேல் எனக்கு ஆணையிட்டுக் கொடு என்றான். 22 அப்பொழுது தாவீது சவுலுக்கு ஆணையிட்டுக் கொடுத்தான்; பின்பு, சவுல் தன் வீட்டுக்குப் புறப்பட்டுப்போனான்; தாவீதும் அவன் மனுஷரும் அரணிப்பான இடத்திற்கு ஏறிப்போனார்கள்.

1 சாமுவேல் 25

1 சாமுவேல் மரணமடைந்தான். இஸ்ரவேலர் எல்லாரும் கூடிவந்து, அவனுக்காகத் துக்கங்கொண்டாடி, ராமாவிலிருக்கிற அவனுடைய வளவிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; தாவீது எழுந்து, பாரான் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப்போனான். 2 மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான்; அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது; அந்த மனுஷன் மகா பாரிக் குடித்தனக்காரனாயிருந்தான்; அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது; அவன் அப்பொழுது கர்மேலில் தன் ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான். 3 அந்த மனுஷனுக்கு நாபால் என்றும், அவன் மனைவிக்கு அபிகாயில் என்றும் பெயர்; அந்த ஸ்திரீ மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்தாள்; அந்தப் புருஷனோ முரடனும் துராகிருதனுமாயிருந்தான்; அவன் காலேபுடைய சந்ததியான். 4 நாபால் தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கிற செய்தியை வனாந்தரத்தில் இருக்கிற தாவீது கேட்டபோது, 5 தாவீது பத்து வாலிபரை அழைத்து: நீங்கள் கர்மேலுக்குப் போய், நாபாலிடத்தில் சென்று, என் பேரைச்சொல்லி, அவன் சுகசெய்தியை விசாரித்து, 6 அவனை நோக்கி: நீர் வாழ்க, உமக்குச் சமாதானமும், உம்முடைய வீட்டுக்குச் சமாதானமும், உமக்கு உண்டான எல்லாவற்றிற்கும் சமாதானமும் உண்டாவதாக என்று அவனை வாழ்த்தி, 7 இப்பொழுது ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்கள் உம்மிடத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்; உம்முடைய மேய்ப்பர் எங்களோடேகூட இருந்தார்கள்; அவர்கள் கர்மேலில் இருந்த நாளெல்லாம் நாங்கள் அவர்களை வருத்தப்படுத்தவில்லை; அவர்களுடைய பொருள் ஒன்றும் காணாமற்போனதும் இல்லை. 8 உம்முடைய வேலைக்காரரைக் கேளும்; அவர்கள் உமக்குச் சொல்லுவார்கள்; ஆதலால் இந்த வாலிபருக்கு உம்முடைய கண்களிலே தயைகிடைக்கவேண்டும்; நல்ல நாளில் வந்தோம்; உம்முடைய கைக்கு உதவுவதை உம்முடைய ஊழியக்காரருக்கும், உம்முடைய குமாரனாகிய தாவீதுக்கும் கொடுக்கும்படி வேண்டுகிறேன் என்று சொல்லுங்கள் என்றான். 9 தாவீதின் வாலிபர் போய், இந்த வார்த்தைகளையெல்லாம் தாவீதின் நாமத்தினாலே நாபாலிடத்தில் சொல்லி, பின்னொன்றும் பேசாதிருந்தார்கள். 10 நாபால் தாவீதின் ஊழியக்காரருக்குப் பிரதியுத்தரமாக: தாவீது என்பவன் யார்? ஈசாயின் குமாரன் யார்? தங்கள் எஜமான்களை விட்டு ஓடிப்போகிற வேலைக்காரர் இந்நாளில் அநேகர் உண்டு. 11 நான் என் அப்பத்தையும், என் தண்ணீரையும், என் ஆடுகளை மயிர்கத்தரிக்கிறவர்களுக்காக நான் அடித்துச் சமையல் பண்ணுவித்ததையும் எடுத்து, இன்ன இடத்தார் என்று நான் அறியாத மனுஷருக்குக் கொடுப்பேனோ என்றான். 12 தாவீதின் வாலிபர் தங்கள் வழியே திரும்பி, மறுபடியும் தாவீதினிடத்தில் வந்து, இந்த வார்த்தைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்தார்கள். 13 அப்பொழுது தாவீது தன் மனுஷரைப் பார்த்து: நீங்கள் அவரவர் உங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொள்ளுங்கள் என்றான்; அவரவர் தங்கள் பட்டயத்தைக் கட்டிக்கொண்டார்கள்; தாவீதும் தன் பட்டயத்தைக் கட்டிக்கொண்டான்; ஏறக்குறைய நானூறுபேர் தாவீதுக்குப் பின்சென்று புறப்பட்டுப்போனார்கள்; இருநூறுபேர் ரஸ்துக்கள் அண்டையில் இருந்துவிட்டார்கள். 14 அப்பொழுது வேலைக்காரரில் ஒருவன் நாபாலுடைய மனைவியாகிய அபிகாயிலை நோக்கி: இதோ, நம்முடைய எஜமானுடைய சுகசெய்தி விசாரிக்கத் தாவீது வனாந்தரத்திலிருந்து ஆட்களை அனுப்பினான்; அவர்கள்பேரில் அவர் சீறினார். 15 அந்த மனுஷரோ எங்களுக்கு மிகவும் உபகாரிகளாயிருந்தார்கள்; நாங்கள் வெளிகளில் இருக்கும்போது, அவர்கள் எங்களிடத்தில் நடமாடின நாளெல்லாம் அவர்கள் எங்களை வருத்தப்படுத்தினதுமில்லை; நமது பொருளில் ஒன்றும் காணாமற் போனதுமில்லை. 16 நாங்கள் ஆடுகளை மேய்த்து, அவர்களிடத்தில் இருந்த நாளெல்லாம் அவர்கள் இரவும்பகலும் எங்களைச் சுற்றிலும் மதிலாயிருந்தார்கள். 17 இப்போதும் நீர் செய்யவேண்டியதைக் கவனித்துப்பாரும்; நம்முடைய எஜமான் மேலும், அவருடைய வீட்டார் யாவர்மேலும், நிச்சயமாய் ஒரு பொல்லாப்பு வருகிறதாயிருக்கிறது; இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக்கூடாதபடிக்கு, பேலியாளின் மகனாயிருக்கிறார் என்றான். 18 அப்பொழுது அபிகாயில் தீவிரமாய் இருநூறு அப்பங்களையும், இரண்டு துருத்தி திராட்சரசத்தையும், சமையல்பண்ணப்பட்ட ஐந்து ஆடுகளையும், ஐந்து படி வறுத்த பயற்றையும், வற்றலாக்கப்பட்ட நூறு திராட்சக்குலைகளையும், வற்றலான இருநூறு அத்திப்பழ அடைகளையும் எடுத்து, கழுதைகள்மேல் ஏற்றி, 19 தன் வேலைக்காரரைப் பார்த்து: நீங்கள் எனக்கு முன்னே போங்கள்; இதோ, நான் உங்கள் பின்னே வருகிறேன் என்று சொல்லி அனுப்பினாள்; தன் புருஷனாகிய நாபாலுக்கு அதை அறிவிக்கவில்லை. 20 அவள் ஒரு கழுதையின்மேல் ஏறி, மலையின் மறைவில் இறங்கிவருகையில், இதோ, தாவீதும் அவன் மனுஷரும் அவளுக்கு எதிராக இறங்கிவந்தார்கள்; அவர்களைச் சந்தித்தாள். 21 தாவீது தன் ஜனங்களை நோக்கி: அவனுக்கு வனாந்தரத்தில் இருக்கிறதையெல்லாம் வீணாகவே காப்பாற்றினேன்; அவனுக்கு உண்டானதிலெல்லாம் ஒன்றும் காணாமற்போனதில்லை; என்றாலும் நன்மைக்குப் பதிலாக அவன் எனக்குத் தீமை செய்தான். 22 அவனுக்கு உண்டான எல்லாவற்றிலும் சுவரில் நீர்விடும் ஒரு நாயைமுதலாய்ப் பொழுதுவிடியுமட்டும் நான் உயிரோடே வைத்தால், தேவன் தாவீதின் சத்துருக்களுக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று சொல்லியிருந்தான். 23 அபிகாயில் தாவீதைக் காண்கையில், தீவிரமாய்க் கழுதையை விட்டு இறங்கி, தாவீதுக்கு நேராகத் தரையில் முகங்குப்புற விழுந்து பணிந்து, 24 அவன் பாதத்திலே விழுந்து: என் ஆண்டவனே, இந்தப் பாதகம் என்மேல் சுமரட்டும்; உம்முடைய அடியாளுடைய வார்த்தைகளை நீர் கேட்கும்பொருட்டாக உம்முடைய அடியாள் உமது செவிகேட்கப் பேசவேண்டும். 25 என் ஆண்டவனாகிய நீர் நாபால் என்னும் இந்தப் பேலியாளின் மனுஷனை ஒரு பொருட்டாக எண்ணவேண்டாம்; அவன் பெயர் எப்படியோ அப்படியே அவனும் இருக்கிறான்; அவன் பெயர் நாபால், அவனுக்குப் பயித்தியமும் இருக்கிறது; உம்முடைய அடியாளாகிய நானோ, என் ஆண்டவன் அனுப்பின வாலிபரைக் காணவில்லை. 26 இப்போதும் என் ஆண்டவனே, நீர் இரத்தம் சிந்த வரவும், உம்முடைய கை நீதியைச் சரிக்கட்டவும், கர்த்தர் உமக்கு இடங்கொடுக்கவில்லை என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டும், உம்முடைய ஜீவனைக்கொண்டும் சொல்லுகிறேன்; இப்போதும் உம்முடைய சத்துருக்களும், என் ஆண்டவனுக்கு விரோதமாகப் பொல்லாப்புத் தேடுகிறவர்களும், நாபாலைப்போல ஆகக்கடவர்கள். 27 இப்போதும் உமது அடியாள் என் ஆண்டவனுக்குக் கொண்டுவந்த காணிக்கையை ஏற்றுக்கொண்டு, என் ஆண்டவனைப் பின்பற்றுகிற வாலிபருக்குக் கொடுப்பீராக. 28 உமது அடியாளின் பாதகத்தை மன்னியும், கர்த்தர் என் ஆண்டவனுக்கு நிலையான வீட்டை நிச்சயமாய்க் கட்டுவார்; என் ஆண்டவன் கர்த்தருடைய யுத்தங்களை நடத்துகிறவராமே; நீர் உயிரோடே இருக்கும் நாளில் ஒரு பொல்லாப்பும் உம்மிலே காணப்படாதிருப்பதாக. 29 உம்மைத் துன்பப்படுத்தவும், உம்முடைய பிராணனை வாங்க வகைதேடவும், ஒரு மனுஷன் எழும்பினாலும் என் ஆண்டவனுடைய ஆத்துமா உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஆதரவில் இருக்கிற ஜீவனுள்ளோருடைய கட்டிலே கட்டப்பட்டிருக்கும்; உம்முடைய சத்துருக்களின் ஆத்துமாக்களோ கவணில் வைத்து எறிந்தாற்போல எறியப்பட்டுப்போம். 30 கர்த்தர் உம்மைக்குறித்துச் சொன்ன நன்மையின்படி எல்லாம் இனி என் ஆண்டவனுக்குச் செய்து, இஸ்ரவேலுக்கு அதிபதியாக உம்மை நேமிக்கும் போது, 31 நீர் விருதாவாய் இரத்தம் சிந்தாமலும், என் ஆண்டவனாகிய நீர் பழிவாங்காமலும் இருந்ததுண்டானால், அப்பொழுது என் ஆண்டவனாகிய உமக்குத் துக்கமும் இராது, மன இடறலும் இராது; கர்த்தர் என் ஆண்டவனுக்கு நன்மை செய்யும்போது, உம்முடைய அடியாளை நினைப்பீராக என்றாள். 32 அப்பொழுது தாவீது அபிகாயிலை நோக்கி: உன்னை இன்றையதினம் என்னைச் சந்திக்க அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 33 நீ சொல்லிய யோசனை ஆசீர்வதிக்கப்படுவதாக; நான் இரத்தம் சிந்த வராதபடிக்கும், என் கையே பழிவாங்காதபடிக்கும், நீ இன்றையதினம் எனக்குத் தடை பண்ணினபடியினால், நீயும் ஆசீர்வதிக்கப்படுவாயாக. 34 நீ தீவிரமாய் என்னைச் சந்திக்க வராமல் இருந்தாயானால், பொழுது விடியுமட்டும் நாபாலுக்கு ஒரு நாயும் உயிரோடே வைக்கப்படுவதில்லை என்று, உனக்குப் பொல்லாப்புச் செய்ய எனக்கு இடங்கொடாதிருக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு மெய்யாய்ச் சொல்லுகிறேன் என்று சொல்லி, 35 அவள் தனக்குக் கொண்டுவந்ததைத் தாவீது அவள் கையிலே வாங்கிக்கொண்டு, அவளைப் பார்த்து: நீ சமாதானத்தோடே உன் வீட்டுக்குப் போ; இதோ, நான் உன் சொல்லைக்கேட்டு, உன் முகத்தைப் பார்த்து, இப்படிச் செய்தேன் என்றான். 36 அபிகாயில் நாபாலிடத்தில் வந்தபோது, இதோ, ராஜவிருந்துக்கு ஒப்பான விருந்து அவன் வீட்டிலே நடந்தது; அவன் இருதயம் களித்திருந்தது; அவன் மிகவும் வெறித்துமிருந்தான்; ஆகையால் பொழுது விடியுமட்டும் சிறிய காரியமானாலும் பெரிய காரியமானாலும், ஒன்றையும் அவனுக்கு அறிவிக்கவில்லை. 37 பொழுது விடிந்து, நாபாலின் வெறி தெளிந்தபின்பு, அவன் மனைவி இந்த வர்த்தமானங்களை அவனுக்கு அறிவித்தாள்; அப்பொழுது அவன் இருதயம் அவனுக்குள்ளே செத்து, அவன் கல்லைப்போலானான். 38 கர்த்தர் நாபாலை வாதித்ததினால், ஏறக்குறையப் பத்து நாளுக்குப்பின்பு, அவன் செத்தான். 39 நாபால் செத்துப்போனான் என்று தாவீது கேள்விப்பட்டபோது: என் நிந்தையின் வழக்கை நாபாலின் கையில் விசாரித்து, தம்முடைய அடியானைப் பொல்லாப்புச் செய்யாதபடிக்குத் தடுத்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; கர்த்தர் தாமே நாபாலின் பொல்லாப்பை அவன் தலையின்மேல் திரும்பப்பண்ணினார் என்று சொல்லி, அபிகாயிலை விவாகம்பண்ணுகிறதற்காக அவளோடே பேச, தாவீது ஆட்களை அனுப்பினான். 40 தாவீதின் ஊழியக்காரர் கர்மேலில் இருக்கிற அபிகாயிலண்டைக்கு வந்து, தாவீது உன்னை விவாகம்பண்ண மனதாய், எங்களை உன்னிடத்தில் அனுப்பினார் என்று அவளோடே சொல்லுகிறபோது, 41 அவள் எழுந்திருந்து, தரைமட்டும் முகங்குனிந்து, இதோ, நான் என் ஆண்டவனுடைய ஊழியக்காரரின் கால்களைக் கழுவத்தக்க பணிவிடைக்காரியாகிய அவருடைய அடியாள் என்றாள். 42 பின்பு அபிகாயில் தீவிரித்து எழுந்து, ஒரு கழுதையின்மேல் ஏறி, ஐந்து தாதிப் பெண்களைக் கூட்டிக்கொண்டு, தாவீதின் ஸ்தானாபதிகளுக்குப் பின்சென்று போய், அவனுக்கு மனைவியானாள். 43 யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமையும் தாவீது விவாகம்பண்ணினான்; அவர்கள் இருவரும் அவனுக்கு மனைவிகளானார்கள். 44 சவுல் தாவீதின் மனைவியாகிய மீகாள் என்னும் தன் குமாரத்தியைக் காலீம் ஊரானாகிய லாயீசின் குமாரனான பல்த்திக்குக் கொடுத்திருந்தான்.

1 சாமுவேல் 26

1 பின்பு சீப்ஊரார் கிபியாவிலிருக்கிற சவுலிடத்தில் வந்து: தாவீது எஷிமோனுக்கு எதிரான ஆகிலாமேட்டில் ஒளித்துக்கொண்டிருக்கிறான் என்றார்கள். 2 அப்பொழுது சவுல்: சீப்வனாந்தரத்திலே தாவீதைத் தேடும்படி எழுந்து, இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம் பேரோடுங்கூட, சீப் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப்போனான். 3 சவுல் எஷிமோனுக்கு எதிரே வழியண்டையிலிருக்கிற ஆகிலாமேட்டிலே பாளயமிறங்கினான்; தாவீது வனாந்தரத்தில் தங்கி, சவுல் தன்னைத் தொடர்ந்து வனாந்தரத்திற்கு வருகிறதைக் கண்டு, 4 தாவீது வேவுகாரரை அனுப்பி, சவுல் வந்தது நிச்சயம் என்று அறிந்துகொண்டான். 5 பின்பு தாவீது எழுந்து, சவுல் பாளயமிறங்கின இடத்திற்குப் போய், சவுலும் நேரின் குமாரனாகிய அப்னேர் என்னும் அவன் படைத்தலைவனும் படுத்துக்கொண்டிருக்கிற இடத்தைப் பார்த்தான்; சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்துக்கொண்டிருந்தான்; ஜனங்கள் அவனைச் சுற்றிலும் பாளயமிறங்கியிருந்தார்கள். 6 தாவீது ஏத்தியனாகிய அகிமெலேக்கையும், செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாயையும் பார்த்து: என்னோடேகூடச் சவுலிடத்திற்குப் பாளயத்தில் இறங்கிவருகிறவன் யார் என்றதற்கு, அபிசாய்: நான் உம்மோடேகூட வருகிறேன் என்றான். 7 அப்படியே தாவீதும் அபிசாயும் இராத்திரியிலே அந்த ஜனங்களுக்குள்ளே வந்தார்கள்; இதோ, சவுல் இரதங்களிருக்கிற இடத்திலே படுத்து நித்திரைபண்ணினான்; அவன் தலைமாட்டில் அவனுடைய ஈட்டி நிலத்திலே குத்தியிருந்தது; அவனைச் சுற்றிலும் அப்னேரும் ஜனங்களும் படுத்துக்கொண்டிருந்தார்கள். 8 அப்பொழுது அபிசாய் தாவீதைப் பார்த்து: இன்று தேவன் உம்முடைய சத்துருவை உம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் நான் அவனை ஈட்டியினால் இரண்டு குத்தாகக் குத்தாமல், ஒரே குத்தாக நிலத்தில் உருவக் குத்தட்டுமா என்றான். 9 தாவீது அபிசாயைப் பார்த்து: அவரைக் கொல்லாதே; கர்த்தர் அபிஷேகம் பண்ணுவித்தவர்மேல் தன் கையைப் போட்டு, குற்றமில்லாமற்போகிறவன் யார்? என்று சொன்னான். 10 பின்னும் தாவீது: கர்த்தர் அவரை அடித்து, அல்லது அவருடைய காலம் வந்து, அவர் மரித்து, அல்லது அவர் யுத்தத்திற்குப்போய் மாண்டாலொழிய, 11 நான் என் கையைக் கர்த்தர் அபிஷேகம்பண்ணுவித்தவர்மேல் போடாதபடிக்கு, கர்த்தர் என்னைக் காக்கக்கடவர் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இப்போதும் அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும், தண்ணீர்ச் செம்பையும் எடுத்துக்கொண்டு போவோம் என்றான். 12 தாவீது சவுலின் தலைமாட்டில் இருந்த ஈட்டியையும், தண்ணீர்ச்செம்பையும் எடுத்துக்கொண்டபின்பு, புறப்பட்டுப்போனார்கள்; அதை ஒருவரும் காணவில்லை, அறியவுமில்லை, ஒருவரும் விழித்துக்கொள்ளவுமில்லை; கர்த்தர் அவர்களுக்கு அயர்ந்த நித்திரை வருவித்ததினால், அவர்களெல்லாரும் தூங்கினார்கள். 13 தாவீது கடந்து, அந்தப் பக்கத்திற்குப் போய், தங்களுக்கும் அவர்களுக்கும் நடுவே போந்த இடமுண்டாக, தூரத்திலிருக்கிற மலையின் கொடுமுடியிலே, 14 ஜனங்களுக்கும் நேரின் குமாரனாகிய அப்னேருக்கும் நேராக நின்று கூப்பிட்டு: அப்னேரே, உத்தரவு சொல்லமாட்டீரா என்றான்; அதற்கு அப்னேர்: ராஜாவுக்கு நேராகக் கூக்குரலிடுகிற நீ யார் என்றான். 15 அப்பொழுது தாவீது அப்னேரை நோக்கி: நீர் வீரன் அல்லவா? இஸ்ரவேலில் உமக்குச் சரியானவன் யார்? பின்னை நீர் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் காக்காமற் போனதென்ன? ஜனத்தில் ஒருவன் உம்முடைய ஆண்டவனாகிய ராஜாவைக் கொல்லும்படி வந்திருந்தானே. 16 நீர் செய்த இந்தக் காரியம் நல்லதல்ல; கர்த்தர் அபிஷேகம்பண்ணின உங்கள் ஆண்டவனை நீங்கள் காக்காமற் போனபடியினால், நீங்கள் மரணத்திற்குப் பாத்திரவான்கள்; இப்போதும் ராஜாவின் தலைமாட்டில் இருந்த அவருடைய ஈட்டியும் தண்ணீர்ச் செம்பும் எங்கே என்று பாரும் என்றான். 17 அப்பொழுது சவுல்: தாவீதின் சத்தத்தை அறிந்து, என் குமாரனாகிய தாவீதே, இது உன் சத்தமல்லவா என்றான். அதற்குத் தாவீது: ராஜாவாகிய என் ஆண்டவனே, இது என் சத்தந்தான் என்று சொல்லி, 18 பின்னும்: என் ஆண்டவனாகிய நீர் உம்முடைய அடியானை இப்படிப் பின்தொடருகிறது என்ன? நான் என்ன செய்தேன்? என்னிடத்தில் என்ன பொல்லாப்பு இருக்கிறது? 19 இப்பொழுது ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய அடியானுடைய வார்த்தைகளைக் கேட்பாராக; கர்த்தர் உம்மை எனக்கு விரோதமாக எடுத்து விட்டதுண்டானால், அதற்கு அவர் காணிக்கையை ஏற்றுக்கொள்வாராக; மனுபுத்திரர் அதைச் செய்தார்களேயாகில், அவர்கள் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்படக்கடவர்கள்; அவர்கள்: நீ போய்; அந்நிய தேவர்களைச் சேவி என்று சொல்லி, அவர்கள் இன்று என்னைக் கர்த்தருடைய சுதந்தரத்திற்கு அடுத்தவனாயிராதபடிக்கு, துரத்திவிட்டார்களே. 20 இப்போதும் கர்த்தருடைய சமுகத்தில் என் இரத்தம் தரையில் விழாதிருப்பதாக; மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுகிறதுபோல, இஸ்ரவேலின் ராஜா ஒரு தெள்ளுப்பூச்சியைத் தேடவந்தாரோ என்றான். 21 அப்பொழுது சவுல்: நான் பாவஞ்செய்தேன்; என் குமாரனாகிய தாவீதே, திரும்பிவா; என் ஜீவன் இன்றையதினம் உன் பார்வைக்கு அருமையாயிருந்தபடியால், இனி உனக்கு ஒரு பொல்லாப்புஞ் செய்யேன்; இதோ, நான் மதியற்றவனாய் மகா பெரிய தப்பிதஞ்செய்தேன் என்றான். 22 அதற்குத் தாவீது: இதோ, ராஜாவின் ஈட்டி இங்கே இருக்கிறது; வாலிபரில் ஒருவன் இப்புறம் வந்து, அதை வாங்கிக் கொண்டுபோகட்டும். 23 கர்த்தர் அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப் பலன் அளிப்பாராக; இன்று கர்த்தர் உம்மை என் கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம்பண்ணினவர்மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன். 24 இதோ, உம்முடைய ஜீவன் இன்றையதினம் என் பார்வைக்கு எப்படி அருமையாயிருந்ததோ, அப்படியே என் ஜீவனும் கர்த்தரின் பார்வைக்கு அருமையாயிருப்பதினால், அவர் என்னை எல்லா உபத்திரவத்திற்கும் நீங்கலாக்கி விடுவாராக என்றான். 25 அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: என் குமாரனாகிய தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ பெரிய காரியங்களைச் செய்வாய், மேன்மேலும் பலப்படுவாய் என்றான்; அப்படியே தாவீது தன் வழியே போனான்; சவுலும் தன் ஸ்தானத்திற்குத் திரும்பினான்.

1 சாமுவேல் 27

1 பின்பு தாவீது: நான் எந்த நாளிலாகிலும் ஒருநாள் சவுலின் கையினால் மடிந்துபோவேன்; இனிச் சவுல் இஸ்ரவேலின் எல்லைகளில் எங்கேயாவது என்னைக் கண்டுபிடிக்கலாம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகும்படிக்கும், நான் அவன் கைக்கு நீங்கலாயிருக்கும்படிக்கும், நான் பெலிஸ்தரின் தேசத்திற்குப் போய், தப்பித்துக்கொள்வதைப்பார்க்கிலும் நலமான காரியம் வேறில்லை என்று தன் இருதயத்தில் யோசித்தான். 2 ஆகையால் தாவீது தன்னோடிருந்த அறுநூறுபேரோடுங்கூட எழுந்திருந்து, மாயோகின் குமாரனாகிய ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்தில் போய்ச் சேர்ந்தான். 3 அங்கே தாவீதும், அவன் மனுஷரும், அவரவர் வீட்டாரும், தாவீதோடேகூட அவன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளாகிய அகினோவாமும்; நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளாகிய அபிகாயிலும், காத்பட்டணத்தில் ஆகீசிடத்தில் தங்கியிருந்தார்கள். 4 தாவீது காத்பட்டணத்திற்கு ஓடிப்போனான் என்று சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் அப்புறம் அவனைத் தேடவில்லை. 5 தாவீது ஆகீசை நோக்கி: உம்முடைய கண்களில் எனக்குத் தயை கிடைக்குமானால், நான் வாசம்பண்ணும்படி நாட்டிலுள்ள ஊர்களிலே ஒன்றில் எனக்கு இடந்தாரும்; உம்முடைய அடியான் உம்மோடேகூட ராஜதானி பட்டணத்திலே வாசமாயிருப்பானேன் என்றான். 6 அப்பொழுது ஆகீஸ்: அன்றையதினம் சிக்லாகை அவனுக்குக் கொடுத்தான்; அதினிமித்தம் சிக்லாக் இந்நாள்வரைக்கும் யூதாவின் ராஜாக்களைச் சேர்ந்திருக்கிறது. 7 தாவீது பெலிஸ்தரின் நாட்டிலே ஒரு வருஷமும் நாலு மாதமும் குடியிருந்தான். 8 அங்கேயிருந்து தாவீதும் அவன் மனுஷரும் கெசூரியர்மேலும் கெஸ்ரியர்மேலும் அமலேக்கியர்மேலும் படையெடுத்துப்போனார்கள்; சூருக்குப் போகிற எல்லைதுவக்கி எகிப்துதேசமட்டும் இருக்கிற நாட்டிலே பூர்வகாலம் துவக்கிக் குடியிருந்தவர்கள் இவர்களே. 9 தாவீது அந்த நாட்டைக் கொள்ளையடிக்கிறபோது, புருஷர்களையும் ஸ்திரீகளையும் உயிரோடே வைக்காமல், ஆடுமாடுகளையும் கழுதைகளையும் ஒட்டகங்களையும் வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டு, ஆகீசிடத்துக்குத் திரும்பிவருவான். 10 இன்று எத்திசையில் போய்க் கொள்ளையடித்தீர்கள் என்று ஆகீஸ் கேட்கும்போது, தாவீது: யூதாவுடைய தென்திசையிலும், யெராமியேலருடைய தென்திசையிலும், கேனியருடைய தென்திசையிலும் என்பான். 11 இன்ன இன்னபடி தாவீது செய்தான் என்று தங்களுக்கு விரோதமான செய்தியை அறிவிக்கத்தக்க ஒருவரையும் தாவீது காத்பட்டணத்திற்குக் கொண்டு வராதபடிக்கு, ஒரு புருஷனையாகிலும் ஸ்திரீயையாகிலும் உயிரோடே வைக்காதிருப்பான்; அவன் பெலிஸ்தரின் நாட்டுப்புறத்திலே குடியிருக்கிற நாளெல்லாம் இவ்வண்ணம் செய்துகொண்டுவந்தான். 12 ஆகீஸ் தாவீதை நம்பி: அவன் இஸ்ரவேலராகிய தன்னுடைய ஜனங்கள் தன்னை வெறுக்கும்படி செய்கிறான்; என்றைக்கும் அவன் என் ஊழியக்காரனாயிருப்பான் என்பான்.

1 சாமுவேல் 28

1 அந்நாட்களிலே பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ண, தங்கள் சேனைகளைப் போருக்குக் கூட்டினார்கள்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: நீயும் உன் மனுஷரும் எவ்விதத்திலும் என்னோடேகூட யுத்தத்துக்கு வரவேண்டும் என்று அறியக்கடவாய் என்றான். 2 தாவீது ஆகீசைப் பார்த்து: உம்முடைய அடியான் செய்யப்போகிறதை நீர் நிச்சயமாய் அறிந்துகொள்வீர் என்றான்; அப்பொழுது ஆகீஸ் தாவீதை நோக்கி: இதற்காக உன்னை எந்நாளும் எனக்கு மெய்காவலனாக வைப்பேன் என்றான். 3 சாமுவேல் இதற்கு முன்னமே மரித்துப்போனான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குத் துக்கங்கொண்டாடி, அவன் ஊராகிய ராமாவிலே அவனை அடக்கம் பண்ணினார்கள். சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் தேசத்தில் இராதபடிக்குத் துரத்திவிட்டான். 4 பெலிஸ்தர் கூடிவந்து, சூநேமிலே பாளயமிறங்கினார்கள்; சவுலும் இஸ்ரவேலர் எல்லாரையும் கூட்டினான்; அவர்கள் கில்போவாவிலே பாளயமிறங்கினார்கள். 5 சவுல் பெலிஸ்தரின் பாளயத்தைக் கண்டபோது பயந்தான்; அவன் இருதயம் மிகவும் தத்தளித்துக்கொண்டிருந்தது. 6 சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறுஉத்தரவு அருளவில்லை. 7 அப்பொழுது சவுல் தன் ஊழியக்காரரை நோக்கி: அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீயைத் தேடுங்கள்; நான் அவளிடத்தில் போய் விசாரிப்பேன் என்றான்; அதற்கு அவனுடைய ஊழியக்காரர்: இதோ, எந்தோரில் அஞ்சனம்பார்க்கிற ஒரு ஸ்திரீ இருக்கிறாள் என்றார்கள். 8 அப்பொழுது சவுல் வேஷம் மாறி, வேறு வஸ்திரம் தரித்துக்கொண்டு, அவனும் அவனோடேகூட இரண்டுபேரும் இராத்திரியிலே அந்த ஸ்திரீயினிடத்தில் போய்ச் சேர்ந்தார்கள்; அவளை அவன் நோக்கி: நீ அஞ்சனம்பார்த்து எனக்குக் குறிசொல்லி, நான் உன்னிடத்தில் சொல்லுகிறவனை எழும்பிவரச்செய் என்றான். 9 அதற்கு அந்த ஸ்திரீ: சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே; என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணிவைக்கிறது என்ன என்றாள். 10 அப்பொழுது சவுல்: இந்தக் காரியத்திற்காக உனக்குப் பொல்லாப்பு வராது என்பதைக் கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று அவளுக்குக் கர்த்தர்மேல் ஆணையிட்டான். 11 அப்பொழுது அந்த ஸ்திரீ: உமக்கு நான் யாரை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றதற்கு, அவன்: சாமுவேலை எழும்பிவரப்பண்ணவேண்டும் என்றான். 12 அந்த ஸ்திரீ சாமுவேலைக் கண்டமாத்திரத்தில் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, சவுலை நோக்கி: ஏன் என்னை மோசம்போக்கினீர்? நீர்தான் சவுலாச்சுதே என்றாள். 13 ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே; நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறிவருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள். 14 அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பிவருகிறான் என்றாள்; அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்துகொண்டு, தரைமட்டும் முகங்குனிந்து வணங்கினான். 15 சாமுவேல் சவுலை நோக்கி: நீ என்னை எழும்பிவரப்பண்ணி, என்னைக் கலைத்தது என்ன என்று கேட்டான். அதற்குச் சவுல்: நான் மிகவும் நெருக்கப்பட்டிருக்கிறேன்; பெலிஸ்தர் எனக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார்கள்; தேவனும் என்னைக் கைவிட்டார்; அவர் தீர்க்கதரிசிகளினாலாவது, சொப்பனங்களினாலாவது எனக்கு மறுஉத்தரவு அருளுகிறதில்லை; ஆகையால் நான் செய்யவேண்டியதை நீர் எனக்கு அறிவிக்கும்படிக்கு, உம்மை அழைப்பித்தேன் என்றான். 16 அதற்குச் சாமுவேல்: கர்த்தர் உன்னைவிட்டு விலகி, உனக்குச் சத்துருவாய் இருக்கும்போது, நீ என்னிடத்தில் கேட்பானேன்? 17 கர்த்தர் என்னைக்கொண்டு சொன்னபடியே செய்து முடித்து, ராஜ்யத்தை உன் கையிலிருந்து பறித்து, அதை உன் தோழனாகிய தாவீதுக்குக் கொடுத்துவிட்டார். 18 நீ கர்த்தருடைய சொற்கேளாமலும், அமலேக்கின்மேல் அவருக்கு இருந்த கோபத்தின் உக்கிரத்தைத் தீர்க்காமலும் போனபடியினால், கர்த்தர் இன்றையதினம் உனக்கு இந்தப்பிரகாரமாகச் செய்தார். 19 கர்த்தர் உன்னுடைய ஜனமாகிய இஸ்ரவேலரையும் பெலிஸ்தர் கையில் ஒப்புக் கொடுப்பார்; நாளைக்கு நீயும் உன் குமாரரும் என்னோடிருப்பீர்கள்; இஸ்ரவேலின் பாளயத்தையும் கர்த்தர் பெலிஸ்தரின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான். 20 அந்தக்ஷணமே சவுல் நெடிதாங்கிடையாய்த் தரையிலே விழுந்து, சாமுவேலின் வார்த்தைகளினாலே மிகவும் பயப்பட்டான்; அவன் இராப்பகல் முழுதும் ஒன்றும் சாப்பிடாதிருந்தபடியினால், அவன் பலவீனமாயிருந்தான். 21 அப்பொழுது அந்த ஸ்திரீ சவுலிடத்தில் வந்து, அவன் மிகவும் கலங்கியிருக்கிறதைக் கண்டு, அவனை நோக்கி: இதோ, உம்முடைய அடியாளாகிய நான் உம்முடைய சொற்கேட்டு, என் பிராணனை என் கையிலே பிடித்துக்கொண்டு, நீர் எனக்குச் சொன்ன உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தேன். 22 இப்பொழுது நீர் உம்முடைய அடியாளுடைய சொல்லைக் கேளும், நான் உமக்கு முன்பாகக் கொஞ்சம் அப்பம் வைக்கிறேன், அதைப் புசிப்பீராக; அப்பொழுது நீர் வழிநடந்து போகத்தக்க பெலன் உமக்குள் இருக்கும் என்றாள். 23 அவனோ தட்டுதல்பண்ணி, நான் புசிக்கமாட்டேன் என்றான்; ஆனாலும் அவனுடைய ஊழியக்காரரும் அந்த ஸ்திரீயும் அவனை மிகவும் வருந்திக்கொண்டதினால், அவன் அவர்கள் சொற்கேட்டு, தரையிலிருந்து எழுந்திருந்து கட்டிலின்மேல் உட்கார்ந்தான். 24 அந்த ஸ்திரீயினிடத்தில் கொழுத்த கன்றுக்குட்டி ஒன்று வீட்டில் இருந்தது; அதைத் தீவிரமாய் அடித்து, மா எடுத்துப் பிசைந்து, அதைப் புளிப்பில்லா அப்பங்களாகச் சுட்டு, 25 சவுலுக்கும் அவன் ஊழியக்காரருக்கும் முன்பாகக் கொண்டுவந்து வைத்தாள்; அவர்கள் புசித்து எழுந்திருந்து, அந்த இராத்திரியிலேயே புறப்பட்டுப்போனார்கள்.

1 சாமுவேல் 29

1 பெலிஸ்தர் தங்கள் சேனைகளையெல்லாம் ஆப்பெக்கிலே கூடிவரச்செய்தார்கள்; இஸ்ரவேலர் யெஸ்ரயேலிலிருக்கிற துரவண்டையிலே பாளயமிறங்கினார்கள். 2 அப்பொழுது பெலிஸ்தரின் அதிபதிகள் நூறும் ஆயிரமுமான சேர்வைகளோடே போனார்கள்; தாவீதும் அவன் மனுஷரும் ஆகீசோடே பின்தண்டிலே போனார்கள். 3 அப்பொழுது பெலிஸ்தரின் பிரபுக்கள்: இந்த எபிரெயர் என்னத்திற்கு என்றார்கள்; ஆகீஸ் அவர்களைப் பார்த்து: இஸ்ரவேலின் ராஜாவாகிய சவுலின் ஊழியக்காரனாயிருந்த இந்தத் தாவீது இத்தனை நாட்களும் இத்தனை வருஷங்களும் என்னோடு இருக்கவில்லையா? இவன் என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இந்நாள்வரைக்கும் ஒரு குற்றமும் நான் இவனில் கண்டுபிடிக்கவில்லை என்றான். 4 அதனால் பெலிஸ்தரின் பிரபுக்கள் அவன்மேல் கடுங்கோபமாகி, அவனைப் பார்த்து: இந்த மனுஷன் நீர் குறித்த தன் இடத்திற்குத் திரும்பிப்போகும்படிக்கு, அங்கே அவனை மறுபடியும் அனுப்பிவிடும்; யுத்தத்தில் இவன் நமக்குச் சத்துருவாயிராதபடிக்கு, இவன் நம்மோடே கூட யுத்தத்திற்கு வரவேண்டியதில்லை; இவன் எதினாலே தன் ஆண்டவனோடே ஒப்புரவாவான்? இந்த மனுஷருடைய தலைகளினால் அல்லவா? 5 சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இந்தத் தாவீதைக்குறித்து அல்லவோ ஆடிப்பாடிச் சொன்னார்கள் என்றார்கள். 6 அப்பொழுது ஆகீஸ் தாவீதை அழைத்து: நீ உத்தமன் என்றும், நீ பாளயத்தில் என்னோடே போக்கும் வரத்துமாயிருக்கிறது என் பார்வைக்கு நல்லது என்றும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ என்னிடத்தில் வந்து சேர்ந்த நாள்முதல் இன்றையவரைக்கும் நான் உன்னில் ஒரு பொல்லாப்பும் காணவில்லை; ஆகிலும் பிரபுக்களின் பார்வைக்கு நீ பிரியமானவன் அல்ல. 7 ஆகையால் பெலிஸ்தருடைய பிரபுக்கள் உன்மேல் தாங்கல் அடையாதபடிக்கு, இப்போது சமாதானத்தோடே திரும்பிப் போய்விடு என்றான். 8 தாவீது ஆகீசை நோக்கி: ஏன்? நான் செய்தது என்ன? நான் வந்து, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களோடே யுத்தம்பண்ணாதபடிக்கு, நான் உம்மிடத்தில் வந்த நாள்முதற்கொண்டு இன்றையவரைக்கும் உமது அடியேனிடத்தில் கண்டுபிடித்தது என்ன என்றான். 9 ஆகீஸ் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: அதை அறிவேன்; நீ தேவனுடைய தூதனைப்போல என் பார்வைக்குப் பிரியமானவன்; ஆனாலும் இவன் எங்களோடேகூட யுத்தத்திற்கு வரக்கூடாது என்று பெலிஸ்தரின் பிரபுக்கள் சொல்லுகிறார்கள். 10 இப்போதும் நீ நாளை அதிகாலையில் உன்னோடே வந்த உன் ஆண்டவனுடைய வேலைக்காரரைக் கூட்டிக்கொண்டு, விடியற்காலத்திலே வெளிச்சமாகிறபோது, புறப்பட்டுப்போ என்றான். 11 அப்படியே தாவீது அதிகாலையில் தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, பொழுதுவிடிகிற நேரத்திலே, பெலிஸ்தரின் தேசத்திற்குத் திரும்பிப்போகப் புறப்பட்டான்; பெலிஸ்தரோவெனில் யெஸ்ரயேலுக்குப் போனார்கள்.

1 சாமுவேல் 30

1 தாவீதும் அவன் மனுஷரும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருகிறதற்குள்ளே, அமலேக்கியர் தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாகின்மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, 2 அதிலிருந்த ஸ்திரீகளாகிய சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைபிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்கள் வழியே போய்விட்டார்கள். 3 தாவீதும் அவன் மனுஷரும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்கள் மனைவிகளும் தங்கள் குமாரரும் தங்கள் குமாரத்திகளும் சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள். 4 அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த ஜனங்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகுமட்டும் சத்தமிட்டு அழுதார்கள். 5 தாவீதின் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், கர்மேல் ஊராளான நாபாலின் மனைவியாயிருந்த அபிகாயிலும், சிறைபிடித்துக் கொண்டுபோகப்பட்டார்கள். 6 தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான். 7 தாவீது அகிமெலேக்கின் குமாரனாகிய அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான். 8 தாவீது கர்த்தரை நோக்கி: நான் அந்தத் தண்டைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்; அதை நீ பிடித்து, சகலத்தையும் திருப்பிக்கொள்வாய் என்றார். 9 அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த அறுநூறுபேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றண்டைக்கு வந்தபோது அங்கே சிலர் நின்றுபோனார்கள். 10 தாவீதோ, நானூறுபேரோடுங்கூடத் தொடர்ந்துபோனான்; இருநூறுபேர் விடாய்த்துப்போனபடியினால் பேசோர் ஆற்றைக் கடக்கமாட்டாமல் நின்றுபோனார்கள். 11 ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, புசிக்க அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து, 12 அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், வற்றலான இரண்டு திராட்சப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்ட பின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இராப்பகல் மூன்றுநாளாய் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தான். 13 தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்துதேசத்துப் பிள்ளையாண்டான்; மூன்று நாளைக்குமுன் நான் வியாதிப்பட்டபோது, என் எஜமான் என்னைக் கைவிட்டான். 14 நாங்கள் கிரேத்தியருடைய தென்புறத்தின்மேலும், யூதாவுக்கடுத்த எல்லையின்மேலும், காலேபுடைய தென்புறத்தின்மேலும், படையெடுத்துப்போய் சிக்லாகை அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டோம் என்றான். 15 தாவீது அவனை நோக்கி: நீ என்னை அந்தத் தண்டினிடத்துக்குக் கொண்டு போவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என் எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் தண்டினிடத்துக்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என்றான். 16 இவன் அவனைக் கொண்டுபோய் விட்டபோது, இதோ, அவர்கள் வெளியெங்கும் பரவி, புசித்துக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர் தேசத்திலும் யூதாதேசத்திலும் கொள்ளையிட்டுவந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள். 17 அவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள்மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை. 18 அமலேக்கியர் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான். 19 அவர்கள் கொள்ளையாடிக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும் பெரியதிலும், குமாரரிலும், குமாரத்திகளிலும், ஒன்றும் குறைபடாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான். 20 எல்லா ஆடுமாடுகளையும் தாவீது பிடித்துக்கொண்டான்; அவைகளைத் தங்கள் மிருகஜீவன்களுக்கு முன்னாலே ஓட்டி, இது தாவீதின் கொள்ளை என்றார்கள். 21 விடாய்த்துப்போனதினாலே தாவீதுக்குப் பின்செல்லாமல், பேசோர் ஆற்றண்டையிலே தங்கியிருந்த இருநூறுபேரிடத்துக்குத் தாவீது வருகிறபோது, இவர்கள் தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனத்திற்கும் எதிர்கொண்டு வந்தார்கள்; தாவீது அந்த ஜனத்தினிடத்தில் சேர்ந்து, அவர்கள் சுகசெய்தியை விசாரித்தான். 22 அப்பொழுது தாவீதோடே நடந்து வந்த மனுஷரில் பொல்லாதவர்களும் பேலியாளின் மக்களுமான எல்லாரும்: அவர்கள் எங்களோடே வராதபடியினால் நாங்கள் திருப்பிக்கொண்ட கொள்ளையுடைமைகளில் அவர்களுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை; அவர்களில் ஒவ்வொருவனும் தன்தன் மனைவியையும் தன்தன் பிள்ளைகளையுமே அழைத்துக்கொண்டு போகட்டும் என்றார்கள். 23 அதற்குத் தாவீது: என் சகோதரரே, கர்த்தர் நமக்குத் தந்ததை நீங்கள் இப்படிச் செய்யவேண்டாம்; கர்த்தர் நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாய் வந்திருந்த அந்தத் தண்டை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார். 24 இந்தக் காரியத்தில் உங்கள் சொற்கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அவ்வளவு ரஸ்துக்களண்டையில் இருந்தவர்களுக்கும் பங்குவீதம் கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான். 25 அப்படியே அந்நாள்முதற்கொண்டு நடந்துவருகிறது; அதை இஸ்ரவேலிலே இந்நாள்வரைக்கும் இருக்கும் கட்டளையும் பிரமாணமுமாக ஏற்படுத்தினான். 26 தாவீது சிக்லாகுக்கு வந்தபோது, அவன் கொள்ளையாடினவைகளிலே தன் சிநேகிதராகிய யூதாவின் மூப்பருக்குச் சிலவற்றை அனுப்பி: இதோ, கர்த்தருடைய சத்துருக்களின் கொள்ளையில் உங்களுக்கு உண்டாயிருக்கும் ஆசீர்வாத பாகம் என்று சொல்லச்சொன்னான். 27 யார்யாருக்கு அனுப்பினானென்றால், பெத்தேலில் இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும், யாத்தீரில் இருக்கிறவர்களுக்கும், 28 ஆரோவேரில் இருக்கிறவர்களுக்கும், சிப்மோத்தில் இருக்கிறவர்களுக்கும், எஸ்தெமோவாவில் இருக்கிறவர்களுக்கும், 29 ராக்காலில் இருக்கிறவர்களுக்கும், யெராமியேலியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், கேனியரின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், 30 ஒர்மாவில் இருக்கிறவர்களுக்கும், கொராசானில் இருக்கிறவர்களுக்கும், ஆற்றாகில் இருக்கிறவர்களுக்கும், 31 எப்ரோனில் இருக்கிறவர்களுக்கும், தாவீதும் அவன் மனுஷரும் நடமாடின எல்லா இடங்களில் இருக்கிறவர்களுக்கும் அனுப்பினான்.

1 சாமுவேல் 31

1 பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள்; இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள். 2 பெலிஸ்தர் சவுலையும் அவன் குமாரரையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் குமாரராகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூகாவையும் வெட்டிப்போட்டார்கள். 3 சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக் கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரரால் மிகவும் காயப்பட்டு, 4 தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து, என்னைக் குத்திப்போட்டு, என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால், அப்படிச் செய்யமாட்டேன் என்றான்; அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான். 5 சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் தன் பட்டயத்தின்மேல் விழுந்து, அவனோடேகூடச் செத்துப்போனான். 6 அப்படியே அன்றையதினம் சவுலும், அவன் மூன்று குமாரரும், அவன் ஆயுததாரியும், அவனுடைய எல்லா மனுஷரும் ஒருமிக்கச் செத்துப்போனார்கள். 7 இஸ்ரவேலர் முறிந்தோடினார்கள் என்றும், சவுலும் அவன் குமாரரும் செத்துப் போனார்கள் என்றும், பள்ளத்தாக்குக்கு இப்பாலும் யோர்தானுக்கு இப்பாலும் இருந்த இஸ்ரவேலர் கண்டபோது, அவர்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் வந்து, அவைகளிலே குடியிருந்தார்கள். 8 வெட்டுண்டவர்களை உரிந்துகொள்ள, பெலிஸ்தர் மறுநாள் வந்தபோது, அவர்கள், சவுலும் அவன் மூன்று குமாரரும் கில்போவா மலையிலே விழுந்து கிடக்கிறதைக் கண்டு, 9 அவன் தலையை வெட்டி, அவன் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு, தங்கள் விக்கிரகங்களின் கோவில்களிலும் ஜனங்களுக்குள்ளும் செய்தியைப் பிரசித்தப்படுத்தும்படி, அவைகளைப் பெலிஸ்தர் தேசத்திலே சுற்றிலும் அனுப்பி, 10 அவன் ஆயுதங்களை அஸ்தரோத் தேவனுடைய கோவிலிலே வைத்து, அவன் உடலைப் பெத்சானின் அலங்கத்திலே தூக்கிப்போட்டார்கள். 11 பெலிஸ்தர் சவுலுக்குச் செய்ததைக் கீலேயாத்தேசத்து யாபேஸ் பட்டணத்தார் கேட்டபோது, 12 அவர்களிலே பலசாலிகள் எல்லாரும் எழுந்து இராமுழுதும் நடந்துபோய், பெத்சானின் அலங்கத்திலிருந்த சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவைகளை அங்கே தகனம் பண்ணி, 13 அவர்களுடைய எலும்புகளை எடுத்து, யாபேசிலிருக்கிற தோப்பிலே அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள்.

2 சாமுவேல் 1

1 சவுல் மரித்தபின்பு, தாவீது அமலேக்கியரை முறிய அடித்து, சிக்லாகுக்குத் திரும்பிவந்து, இரண்டுநாள் அங்கே இருந்தபிற்பாடு, 2 மூன்றாம் நாளிலே ஒரு மனுஷன் சவுலின் பாளயத்திலிருந்து புறப்பட்டு, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தன் தலையின்மேல் புழுதியைப் போட்டுக் கொண்டு, தாவீதினிடத்தில் வந்து, தரையிலே விழுந்து வணங்கினான். 3 தாவீது அவனைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வந்தாய் என்று கேட்டதற்கு, அவன்: இஸ்ரவேலின் பாளயத்திலிருந்து தப்பிவந்தேன் என்றான். 4 தாவீது அவனைப் பார்த்து: நடந்த செய்தி என்ன? சொல் என்று கேட்டதற்கு, அவன்: ஜனங்கள் யுத்தத்தைவிட்டு முறிந்தோடிப்போனார்கள்; ஜனங்களில் அநேகம்பேர் விழுந்து மடிந்துபோனார்கள்; சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்தார்கள் என்றான். 5 சவுலும் அவர் குமாரனாகிய யோனத்தானும் மடிந்துபோனது உனக்கு எப்படித் தெரியும் என்று தாவீது தனக்கு அதை அறிவிக்கிற வாலிபனிடத்தில் கேட்டதற்கு, 6 அந்த வாலிபன்: நான் தற்செயலாய்க் கில்போவா மலைக்குப் போனேன்; அப்பொழுது இதோ, சவுல் தம்முடைய ஈட்டியின்மேல் சாய்ந்துகொண்டிருந்தார்; இரதங்களும் குதிரைவீரரும் அவரைத் தொடர்ந்து நெருங்கினார்கள். 7 அவர் திரும்பிப் பார்த்து: என்னைக் கண்டு கூப்பிட்டார்; அதற்கு நான்: இதோ, இருக்கிறேன் என்றேன். 8 அப்பொழுது அவர்: நீ யார் என்று என்னைக் கேட்டார்; நான் அமலேக்கியன் என்று சொன்னேன். 9 அவர் என்னை நோக்கி: நீ என்னண்டையில் கிட்டவந்து நின்று, என்னைக் கொன்றுபோடு; என் பிராணன் முழுதும் இன்னும் போகாததினால் எனக்கு வேதனையாயிருக்கிறது என்றார். 10 அப்பொழுது நான், அவர் விழுந்தபின்பு பிழைக்கமாட்டார் என்று நிச்சயித்து, அவரண்டையில் போய் நின்று, அவரைக் கொன்றுபோட்டேன்; பிற்பாடு அவர் தலையின்மேல் இருந்த முடியையும் அவர் புயத்தில் இருந்த அஸ்தகடகத்தையும் எடுத்துக்கொண்டு, அவைகளை இங்கே என் ஆண்டவனிடத்திற்குக் கொண்டுவந்தேன் என்றான். 11 அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல மனுஷரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, 12 சவுலும், அவன் குமாரனாகிய யோனத்தானும், கர்த்தருடைய ஜனங்களும், இஸ்ரவேல் குடும்பத்தாரும், பட்டயத்தாலே விழுந்தபடியினால் புலம்பி அழுது சாயங்காலமட்டும் உபவாசமாயிருந்தார்கள். 13 தாவீது அதைத் தனக்கு அறிவித்த வாலிபனைப் பார்த்து: நீ எவ்விடத்தான் என்று கேட்டதற்கு, அவன்: நான் அந்நிய ஜாதியானுடைய மகன், நான் அமலேக்கியன் என்றான். 14 தாவீது அவனை நோக்கி: கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரைக் கொன்றுபோடும்படி நீ உன் கையை நீட்டப் பயப்படாமற்போனது என்ன என்று சொல்லி, 15 வாலிபரில் ஒருவனைக் கூப்பிட்டு, நீ கிட்டப்போய் அவன்மேல் விழுந்து, அவனை வெட்டு என்றான்; அவன் அவனை வெட்டினான்; அவன் செத்தான். 16 தாவீது அவனைப் பார்த்து: உன் இரத்தப்பழி உன் தலையின்மேல் இருப்பதாக; கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரை நான் கொன்றுபோட்டேன் என்று உன் வாயே உனக்கு விரோதமான சாட்சி சொல்லிற்று என்றான். 17 தாவீது சவுலின்பேரிலும், அவன் குமாரனாகிய யோனத்தானின்பேரிலும், புலம்பல் பாடினான். 18 (வில்வித்தையை யூதா புத்திரருக்குக் கற்றுக்கொடுக்கும்படி கட்டளையிட்டான்; அது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.) அவன் பாடின புலம்பலாவது: 19 இஸ்ரவேலின் அலங்காரம் உயர்ந்த ஸ்தானங்களில் அதமாயிற்று; பராக்கிரமசாலிகள் விழுந்துபோனார்கள். 20 பெலிஸ்தரின் குமாரத்திகள் சந்தோஷப்படாதபடிக்கும், விருத்தசேதனம் இல்லாதவர்களின் குமாரத்திகள் களிகூராதபடிக்கும், அதைக் காத்பட்டணத்தில் அறிவியாமலும் அஸ்கலோனின் வீதிகளில் பிரஸ்தாபப்படுத்தாமலும் இருங்கள். 21 கில்போவா மலைகளே, உங்கள்மேல் பனியும் மழையும் பெய்யாமலும், காணிக்கைக்கு ஏற்ற பலன்தரும் வயல்கள் இராமலும் போவதாக; அங்கே பராக்கிரமசாலிகளுடைய கேடகம் அவமதிக்கப்பட்டது; சவுல் தைலத்தால் அபிஷேகம்பண்ணப்படாதவர்போல அவர் கேடகமும் அவமதிக்கப்பட்டதே. 22 கொலையுண்டவர்களின் இரத்தத்தைக் குடியாமலும், பராக்கிரமசாலிகளின் நிணத்தை உண்ணாமலும், யோனத்தானுடைய வில் பின்வாங்கினதில்லை; சவுலின் பட்டயம் வெறுமையாய்த் திரும்பினதில்லை. 23 உயிரோடே இருக்கையில் சவுலும் யோனத்தானும் பிரியமும் இன்பமுமாயிருந்தார்கள்; மரணத்திலும் பிரிந்துபோனதில்லை; கழுகுகளைப்பார்க்கிலும் வேகமும், சிங்கங்களைப்பார்க்கிலும் பலமுமுள்ளவர்களாயிருந்தார்கள். 24 இஸ்ரவேலின் குமாரத்திகளே, உங்களுக்கு இரத்தாம்பரத்தைச் சிறப்பாய் உடுப்பித்து, உங்கள் உடையின்மேல் பொன் ஆபரணங்களைத் தரிப்பித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள். 25 போர்முகத்தில் பராக்கிரமசாலிகள் விழுந்தார்களே, யோனத்தானே, உயரமான ஸ்தலங்களிலே வெட்டுண்டு போனாயே. 26 என் சகோதரனாகிய யோனத்தானே, உனக்காக நான் வியாகுலப்படுகிறேன்; நீ எனக்கு வெகு இன்பமாயிருந்தாய்; உன் சிநேகம் ஆச்சரியமாயிருந்தது; ஸ்திரீகளின் சிநேகத்தைப்பார்க்கிலும் அதிகமாயிருந்தது. 27 பராக்கிரமசாலிகள் விழுந்துபோனார்களே; யுத்த ஆயுதங்கள் எல்லாம் அழிந்துபோயிற்றே, என்று பாடினான்.

2 சாமுவேல் 2

1 பின்பு தாவீது கர்த்தரை நோக்கி: நான் யூதாவின் பட்டணங்கள் ஒன்றிலே போய் இருக்கலாமா என்று விசாரித்தான். அதற்குக் கர்த்தர்: போ என்றார்; எவ்விடத்திற்குப் போகலாம் என்று தாவீது கேட்டதற்கு, அவர்: எப்ரோனுக்குப் போ என்றார். 2 அப்படியே தாவீது தன் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமோடும், நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலோடும்கூட அவ்விடத்திற்குப் போனான். 3 அன்றியும் தன்னோடிருந்த மனுஷரையும், அவர்கள் குடும்பங்களையும் கூட்டிக்கொண்டுபோனான்; அவர்கள் எப்ரோனின் சுற்றூர்களிலே குடியேறினார்கள். 4 அப்பொழுது யூதாவின் மனுஷர் வந்து, அங்கே தாவீதை யூதா வம்சத்தாரின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள். கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷர் சவுலை அடக்கம்பண்ணினவர்கள் என்று அவர்கள் தாவீதுக்கு அறிவித்தபோது, 5 தாவீது கீலேயாத்தேசத்து யாபேசின் மனுஷரிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி, நீங்கள் உங்கள் ஆண்டவனாகிய சவுலுக்கு இந்தத் தயவைச் செய்து, அவரை அடக்கம்பண்ணினபடியினாலே, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 6 கர்த்தர் உங்களைக் கிருபையும் உண்மையுமாய் நடத்துவாராக; நீங்கள் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், நானும் இந்த நன்மைக்குத்தக்கதாக உங்களை நடத்துவேன். 7 இப்போதும் நீங்கள் உங்கள் கைகளைத் திடப்படுத்திக்கொண்டு நல்ல சேவகராயிருங்கள்; உங்கள் ஆண்டவனாகிய சவுல் மரித்தபின்பு, யூதா வம்சத்தார் என்னைத் தங்கள்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று அவர்களுக்குச் சொல்லச்சொன்னான். 8 சவுலின் படைத்தலைவனான நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தை மகனாயீமுக்கு அழைத்துக்கொண்டுபோய், 9 அவனைக் கீலேயாத்தின்மேலும், அஷூரியர்மேலும், யெஸ்ரயேலின்மேலும், எப்பிராயீமின்மேலும், பென்யமீனின்மேலும், இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக்கினான். 10 சவுலின் குமாரனாகிய இஸ்போசேத் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிறபோது, நாற்பது வயதாயிருந்தான்; அவன் இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; யூதா கோத்திரத்தார்மாத்திரம் தாவீதைப் பின்பற்றினார்கள். 11 தாவீது எப்ரோனிலே யூதா கோத்திரத்தின்மேல் ராஜாவாயிருந்த நாட்களின் இலக்கம் ஏழு வருஷமும் ஆறு மாதமுமாம். 12 நேரின் குமாரனாகிய அப்னேர் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் சேவகரைக் கூட்டிக்கொண்டு, மகனாயீமிலிருந்து கிபியோனுக்குப் புறப்பட்டுப்போனான். 13 அப்பொழுது செருயாவின் குமாரனாகிய யோவாபும் தாவீதின் சேவகரும் புறப்பட்டுப்போய், கிபியோனின் குளத்தண்டையில் ஒருவருக்கொருவர் எதிர்ப்பட்டு, குளத்திற்கு அந்தப்பக்கத்தில் அவர்களும், குளத்திற்கு இந்தப்பக்கத்தில் இவர்களும் இறங்கினார்கள். 14 அப்னேர் யோவாபை நோக்கி: வாலிபர் எழுந்து, நமக்கு முன்பாகச் சிலம்பம் பண்ணட்டும் என்றான். அதற்கு யோவாப்: அவர்கள் எழுந்து, அப்படிச் செய்யட்டும் என்றான். 15 அப்பொழுது சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் பக்கத்திற்குப் பென்யமீன் மனுஷரில் பன்னிரண்டுபேரும், தாவீதுடைய சேவகரிலே பன்னிரண்டுபேரும் எழுந்து ஒரு பக்கமாய்ப் போய், 16 ஒருவர் தலையை ஒருவர் பிடித்து, ஒருவருடைய விலாவிலே ஒருவர் பட்டயத்தினாலே குத்தி, ஒருமிக்க விழுந்தார்கள்; அதினாலே கிபியோனிலிருக்கிற அந்த ஸ்தலம் எல்காத் அசூரிம் என்னப்பட்டது. 17 அன்றையதினம் மிகவும் கடினமான யுத்தமாகி, அப்னேரும் இஸ்ரவேல் மனுஷரும் தாவீதின் சேவகரால் முறிய அடிக்கப்பட்டார்கள். 18 அங்கே செருயாவின் மூன்று குமாரராகிய யோவாபும் அபிசாயும் ஆசகேலும் இருந்தார்கள்; ஆசகேல் வெளியிலிருக்கிற கலைமான்களில் ஒன்றைப்போல வேகமாய் ஓடுகிறவனாயிருந்தான். 19 அவன் அப்னேரைப் பின்தொடர்ந்து, வலதுபுறத்திலாகிலும் இடதுபுறத்திலாகிலும், அவனைவிட்டு விலகாமல் துரத்திக்கொண்டுபோனான். 20 அப்னேர் திரும்பிப் பார்த்து: நீ ஆசகேல் அல்லவா என்றான். அவன்: நான்தான் என்றான். 21 அப்பொழுது அப்னேர் அவனை நோக்கி: நீ வலதுபக்கத்திற்காகிலும் இடதுபக்கத்திற்காகிலும் விலகி, வாலிபரில் ஒருவனைப் பிடித்து, அவனை உரிந்துகொள் என்றான்; ஆசகேலோ விடமாட்டேன் என்று தொடர்ந்துபோனான். 22 பின்னும் அப்னேர் ஆசகேலை நோக்கி: நீ என்னை விட்டுப்போ; நான் உன்னைத் தரையோடே ஏன் வெட்டவேண்டும்? பிற்பாடு உன் சகோதரனாகிய யோவாபின் முகத்திலே எப்படி விழிப்பேன் என்றான். 23 ஆனாலும் அவன் விலகிப்போகமாட்டேன் என்றபடியினால், அப்னேர் அவனை ஈட்டியின் பின்புற அலகினால் அவன் வயிற்றிலே குத்தினான்; ஈட்டி முதுகிலே புறப்பட்டது; அவன் அங்கேதானே விழுந்து செத்தான்; ஆசகேல் விழுந்துகிடக்கிற இடத்திலே வந்தவர்களெல்லாரும் தரித்து நின்றார்கள். 24 யோவாபும் அபிசாயும் சூரியன் அஸ்தமிக்குமட்டும் அப்னேரைப் பின்தொடர்ந்தார்கள்; கிபியோன் வனாந்தரவழிக்கு அருகான கீயாவுக்கு எதிரே இருக்கிற அம்மா மேடுமட்டும் வந்தார்கள். 25 அப்பொழுது அப்னேரைப் பின்சென்ற பென்யமீன் புத்திரர் ஒரே படையாகக் கூடி, ஒரு மலையின் உச்சியிலே நின்றார்கள். 26 அப்பொழுது அப்னேர் யோவாபைப் பார்த்துக் கூப்பிட்டு, பட்டயம் எப்போதும் சங்காரம் பண்ணிக்கொண்டிருக்கவேண்டுமோ, முடிவிலே கசப்புண்டாகும் என்று அறியீரோ, தங்கள் சகோதரரை விட்டுப் பின்வாங்கும்படிக்கு எந்தமட்டும் ஜனங்களுக்குச் சொல்லாதிருப்பீர் என்றான். 27 அதற்கு யோவாப்: இன்று காலமே நீர் பேசாதிருந்தீரானால் ஜனங்கள் அவரவர் தங்கள் சகோதரரைப் பின்தொடராமல், அப்போதே திரும்பிவிடுவார்கள் என்று தேவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். 28 யோவாப் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் இஸ்ரவேலைத் தொடராமலும், யுத்தம்பண்ணாமலும் நின்றுவிட்டார்கள். 29 அன்று ராமுழுதும் அப்னேரும் அவன் மனுஷரும் அந்தரவெளி வழியாய்ப் போய், யோர்தானைக் கடந்து, பித்ரோனை உருவ நடந்து தாண்டி, மகனாயீமுக்குப் போனார்கள். 30 யோவாப் அப்னேரைத் தொடராமல் ஜனங்களையெல்லாம் கூடிவரச்செய்தான்; தாவீதின் சேவகரில் பத்தொன்பதுபேரும் ஆசகேலும் குறைந்திருந்தார்கள். 31 தாவீதின் சேவகரோ பென்யமீனரிலும், அப்னேரின் மனுஷரிலும், முந்நூற்றறுபதுபேரை மடங்கடித்தார்கள். 32 அவர்கள் ஆசகேலை எடுத்து, பெத்லெகேமிலுள்ள அவனுடைய தகப்பன் கல்லறையிலே அவனை அடக்கம்பண்ணினார்கள்; யோவாபும் அவன் மனுஷரும் இராமுழுவதும் நடந்து, பொழுது விடியும்போது எப்ரோனிலே சேர்ந்தார்கள்.

2 சாமுவேல் 3

1 சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் நெடுநாள் யுத்தம் நடந்தது; தாவீது வரவரப் பலத்தான்; சவுலின் குடும்பத்தாரோ வரவரப் பலவீனப்பட்டுப் போனார்கள். 2 எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்த குமாரர்: யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமிடத்திலே பிறந்த அம்னோன் அவனுக்கு முதல் பிறந்தவன். 3 நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊராளான அபிகாயிலிடத்திலே பிறந்த கீலேயாப் அவனுடைய இரண்டாம் குமாரன்; மூன்றாம் குமாரன் கேசூரின் ராஜாவான தல்மாய் குமாரத்தியாகிய மாக்காள் பெற்ற அப்சலோம் என்பவன். 4 நாலாம் குமாரன் ஆகீத் பெற்ற அதொனியா என்பவன்; ஐந்தாம் குமாரன் அபித்தாள் பெற்ற செப்பத்தியா என்பவன். 5 ஆறாம் குமாரன் தாவீதின் மனைவியாகிய எக்லாளிடத்தில் பிறந்த இத்ரேயாம் என்பவன்; இவர்கள் எப்ரோனிலே தாவீதுக்குப் பிறந்தவர்கள். 6 சவுலின் குடும்பத்துக்கும் தாவீதின் குடும்பத்துக்கும் யுத்தம் நடந்துவருகிறபோது, அப்னேர் சவுலின் குடும்பத்திலே பலத்தவனானான். 7 சவுலுக்கு ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் என்னும் பேருள்ள ஒரு மறுமனையாட்டி இருந்தாள்; இஸ்போசேத் அப்னேரை நோக்கி: நீ என் தகப்பனாருடைய மறுமனையாட்டியினிடத்தில் பிரவேசித்தது என்ன என்றான். 8 அப்னேர் இஸ்போசேத்தின் வார்த்தைகளுக்காக மிகவும் கோபங்கொண்டு: உம்மைத் தாவீதின் கையில் ஒப்புக்கொடாமல், இந்நாள்மட்டும் உம்முடைய தகப்பனாகிய சவுலின் குடும்பத்துக்கும், அவருடைய சகோதரருக்கும், சிநேகிதருக்கும், தயவுசெய்கிறவனாகிய என்னை நீர் இன்று ஒரு ஸ்திரீயினிமித்தம் குற்றம்பிடிக்கிறதற்கு, நான் யூதாவுக்கு உட்கையான ஒரு நாய்த்தலையா? 9 நான் ராஜ்யபாரத்தைச் சவுலின் குடும்பத்தை விட்டுத் தாண்டப்பண்ணி, தாவீதின் சிங்காசனத்தைத் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் நிலைநிறுத்தும்படிக்கு, 10 கர்த்தர் தாவீதுக்கு ஆணையிட்டபடியே, நான் அவனுக்குச் செய்யாமற்போனால், தேவன் அப்னேருக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்றான். 11 அப்பொழுது அவன் அப்னேருக்குப் பயப்பட்டதினால், அப்புறம் ஒரு மறுமொழியும் அவனுக்குச் சொல்லாதிருந்தான். 12 அப்னேர் தன் நாமத்தினாலே தாவீதினிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: தேசம் யாருடையது? என்னோடு உடன்படிக்கைபண்ணும்; இதோ, இஸ்ரவேலையெல்லாம் உம்மிடத்தில் திருப்ப, என் கை உம்மோடிருக்கும் என்று சொல்லச்சொன்னான். 13 அதற்குத் தாவீது: நல்லது, உன்னோடே நான் உடன்படிக்கைபண்ணுவேன்; ஆனாலும் ஒரே காரியம் உன்னிடத்தில் கேட்டுக்கொள்ளுகிறேன்; அது என்னவெனில், நீ என் முகத்தைப் பார்க்க வரும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாளை நீ அழைத்துவரவேண்டும்; அதற்குமுன் நீ என் முகத்தைப் பார்ப்பதில்லை என்று சொல்லச்சொல்லி, 14 அவன் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தினிடத்திற்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி: நான் பெலிஸ்தருடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து, விவாகம்பண்ணின என் மனைவியாகிய மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச்சொன்னான். 15 அப்பொழுது, இஸ்போசேத் அவளை லாயீசின் குமாரனாகிய பல்த்தியேல் என்னும் புருஷனிடத்திலிருந்து அழைத்துவர ஆட்களை அனுப்பினான். 16 அவள் புருஷன் பகூரீம்மட்டும் அவள் பிறகாலே அழுதுகொண்டுவந்தான். அப்னேர் அவனை நோக்கி: நீ திரும்பிப்போ என்றான்; அவன் திரும்பிப்போய்விட்டான். 17 அப்னேர் இஸ்ரவேலின் மூப்பரோடே பேசி: தாவீதை உங்கள்மேல் ராஜாவாக வைக்கும்படிக்கு நீங்கள் அநேகநாளாய்த் தேடினீர்களே. 18 இப்போதும் அப்படிச் செய்யுங்கள்; என் தாசனாகிய தாவீதின் கையினால், என் ஜனமாகிய இஸ்ரவேலைப் பெலிஸ்தரின் கைக்கும், அவர்களுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும் நீங்கலாக்கி ரட்சிப்பேன் என்று கர்த்தர் தாவீதைக்குறித்துச் சொல்லியிருக்கிறாரே என்றான். 19 இந்தப்பிரகாரமாக அப்னேர் பென்யமீன் மனுஷர் காதுகள் கேட்கப் பேசினான்; பின்பு அப்னேர் இஸ்ரவேலர் பார்வைக்கும், பென்யமீனுடைய எல்லாக் குடும்பத்தாரின் பார்வைக்கும், சம்மதியானதையெல்லாம் எப்ரோனிலே தாவீதின் காதுகள் கேட்கப் பேசுகிறதற்குப் போனான். 20 அப்னேரும், அவனோடேகூட இருபதுபேரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்தபோது, தாவீது அப்னேருக்கும், அவனோடே வந்த மனுஷருக்கும் விருந்துசெய்தான். 21 பின்பு அப்னேர் தாவீதை நோக்கி: நான் எழுந்துபோய், இஸ்ரவேலரை எல்லாம் உம்மோடே உடன்படிக்கைபண்ணும்படிக்கு, ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் சேர்த்துக்கொண்டு வருகிறேன்; அதினாலே உம்முடைய ஆத்துமா அரசாள விரும்புகிற இடமெல்லாம் அரசாளுவீர் என்றான்; அப்படியே தாவீது அப்னேரை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடே போனான். 22 தாவீதின் சேவகரும் யோவாபும் அநேகம் பொருட்களைக் கொள்ளையிட்டு, தண்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அப்பொழுது அப்னேர் எப்ரோனில் தாவீதினிடத்தில் இல்லை; அவனை அனுப்பிவிட்டான்; அவன் சமாதானத்தோடே போய்விட்டான். 23 யோவாபும் அவனோடிருந்த எல்லாச் சேனையும் வந்தபோது, நேரின் குமாரனாகிய அப்னேர் ராஜாவினிடத்தில் வந்தான் என்றும், அவர் அவனைச் சமாதானமாய்ப்போக அனுப்பிவிட்டார் என்றும், யோவாபுக்கு அறிவித்தார்கள். 24 அப்பொழுது யோவாப் ராஜாவண்டையில் பிரவேசித்து: என்ன செய்தீர்? இதோ, அப்னேர் உம்மிடத்தில் வந்தானே, நீர் அவனைப் போகவிட்டது என்ன? 25 நேரின் குமாரனாகிய அப்னேரை அறிவீரே; அவன் உம்மை மோசம்போக்கவும், உம்முடைய போக்குவரத்தை அறியவும், நீர் செய்கிறதையெல்லாம் ஆராயவும் வந்தான் என்று சொன்னான். 26 யோவாப் தாவீதை விட்டுப் புறப்பட்டவுடனே, அவன் அப்னேரைத் தாவீதுக்குத் தெரியாமல் கூட்டிக்கொண்டு வரும்படி ஆட்களை அனுப்பினான்; அவர்கள் சீரா என்னும் துரவுமட்டும்போய் அவனை அழைத்துக்கொண்டு வந்தார்கள். 27 அப்னேர் எப்ரோனுக்குத் திரும்பி வருகிறபோது, யோவாப் அவனோடே இரகசியமாய்ப் பேசப்போகிறவன்போல, அவனை ஒலிமுகவாசலின் நடுவே ஒரு பக்கமாய் அழைத்துப்போய், தன் தம்பி ஆசகேலுடைய இரத்தப்பழியை வாங்க, அங்கே அவனை வயிற்றிலே குத்திக்கொன்றுபோட்டான். 28 தாவீது அதைக் கேட்டபோது: நேரின் குமாரனாகிய அப்னேரின் இரத்தத்திற்காக, என்மேலும் என் ராஜ்யத்தின்மேலும் கர்த்தருக்கு முன்பாக என்றைக்கும் பழியில்லை. 29 அது யோவாபுடைய தலையின்மேலும், அவன் தகப்பன் குடும்பத்தின்மேலும் சுமந்திருப்பதாக; யோவாபின் வீட்டாரிலே பிரமியக்காரனும், குஷ்டரோகியும், கோல் ஊன்றி நடக்கிறவனும், பட்டயத்தால் விழுகிறவனும், அப்பம் குறைச்சலுள்ளவனும், ஒருக்காலும் ஒழிந்துபோவதில்லை என்றான். 30 அப்னேர் கிபியோனில் நடந்த யுத்தத்திலே தங்கள் தம்பியாகிய ஆசகேலைக் கொன்றதினிமித்தம் யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் அவனைச் சங்காரம்பண்ணினார்கள். 31 தாவீது யோவாபையும், அவனோடிருந்த சகல ஜனங்களையும் பார்த்து: நீங்கள் உங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, இரட்டுடுத்தி, அப்னேருக்கு முன்னாக நடந்து துக்கங்கொண்டாடுங்கள் என்று சொல்லி, தாவீதுராஜா தானும் பாடைக்குப் பின்சென்றான். 32 அவர்கள் அப்னேரை எப்ரோனிலே அடக்கம்பண்ணுகையில், ராஜா அப்னேரின் கல்லறையண்டையிலே சத்தமிட்டு அழுதான்; சகல ஜனங்களும் அழுதார்கள். 33 ராஜா அப்னேருக்காகப் புலம்பி: மதிகெட்டவன் சாகிறதுபோல, அப்னேர் செத்துப்போனானோ? 34 உன் கைகள் கட்டப்படவும் இல்லை; உன் கால்களில் விலங்கு போடப்படவும் இல்லை; துஷ்டர் கையில் மடிகிறதுபோல மடிந்தாயே என்றான்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் பின்னும் அதிகமாய் அவனுக்காக அழுதார்கள். 35 பொழுது இன்னும் இருக்கையில், ஜனங்கள் எல்லாரும் வந்து: அப்பம் புசியும் என்று தாவீதுக்குச் சொன்னபோது, தாவீது: சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னே நான் அப்பத்தையாகிலும் வேறெதையாகிலும் ருசிபார்த்தால், தேவன் எனக்கு அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் செய்யக்கடவர் என்று ஆணையிட்டுச் சொன்னான். 36 ஜனங்கள் எல்லாரும் அதைக் கவனித்தார்கள், அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது; அப்படியே ராஜா செய்ததெல்லாம் சகல ஜனங்களுக்கும் நலமாய்த் தோன்றினது. 37 நேரின் குமாரனாகிய அப்னேரைக் கொன்றுபோட்டது ராஜாவினால் உண்டானதல்லவென்று அந்நாளிலே சகல ஜனங்களும், இஸ்ரவேலர் அனைவரும் அறிந்துகொண்டார்கள். 38 ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: இன்றையதினம் இஸ்ரவேலில் பிரபுவும் பெரிய மனுஷனுமாகிய ஒருவன் விழுந்தான் என்று அறியீர்களா? 39 நான் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டவனாயிருந்தபோதிலும், நான் இன்னும் பலவீனன்; செருயாவின் குமாரராகிய இந்த மனுஷர் என் பலத்துக்கு மிஞ்சினவர்களாயிருக்கிறார்கள், அந்தப் பொல்லாப்பைச் செய்தவனுக்குக் கர்த்தர் அவன் பொல்லாப்புக்குத்தக்கதாய்ச் சரிக்கட்டுவாராக என்றான்.

2 சாமுவேல் 4

1 அப்னேர் எப்ரோனிலே செத்துப்போனதைச் சவுலின் குமாரன் கேட்டபோது, அவன் கைகள் திடனற்றுப்போயிற்று; இஸ்ரவேலரெல்லாரும் கலங்கினார்கள். 2 சவுலின் குமாரனுக்குப் படைத்தலைவரான இரண்டுபேர் இருந்தார்கள்; ஒருவனுக்குப் பேர் பானா, மற்றவனுக்குப் பேர் ரேகாப்; அவர்கள் பென்யமீன் புத்திரரில் பேரோத்தியனாகிய ரிம்மோனின் குமாரர்கள். பேரோத்தும் பென்யமீனுக்கு அடுத்ததாய் எண்ணப்பட்டது. 3 பேரோத்தியர் கித்தாயீமுக்கு ஓடிப்போய், இந்நாள்வரைக்கும் அங்கே சஞ்சரிக்கிறார்கள். 4 சவுலின் குமாரன் யோனத்தானுக்கு இரண்டு காலும் முடமான ஒரு குமாரன் இருந்தான்; சவுலும் யோனத்தானும் மடிந்த செய்தி யெஸ்ரயேலிலிருந்து வருகிறபோது, அவன் ஐந்து வயதுள்ளவனாயிருந்தான்; அப்பொழுது அவனுடைய தாதி அவனை எடுத்துக்கொண்டு ஓடிப்போனாள்; அவள் ஓடிப்போகிற அவசரத்தில் அவன் விழுந்து முடவனானான்; அவனுக்கு மேவிபோசேத் என்று பேர். 5 பேரோத்தியனான அந்த ரிம்மோனின் குமாரராகிய ரேகாபும் பானாவும் போய், இஸ்போசேத் மத்தியானத்திலே வெயில் நேரத்தில் படுக்கையின்மேல் சயனித்திருக்கும்போது அவன் வீட்டிற்குள் பிரவேசித்து, 6 கோதுமை வாங்க வருகிறவர்கள்போல, நடுவீடுமட்டும் வந்து, அவனை வயிற்றிலே குத்திப்போட்டார்கள்; பின்பு ரேகாபும் அவன் சகோதரன் பானாவும் தப்பி ஓடிப்போனார்கள். 7 அவன் தன் பள்ளி அறையிலே தன் கட்டிலின்மேல் படுத்திருக்கும்போது இவர்கள் உள்ளே போய், அவனைக் குத்திக்கொன்றுபோட்டு, அவன் தலையை வெட்டிப்போட்டார்கள்; பின்பு அவன் தலையை எடுத்துக்கொண்டு, இராமுழுதும் அந்தரவெளி வழியாய் நடந்து, 8 எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் இஸ்போசேத்தின் தலையைக் கொண்டுவந்து, ராஜாவை நோக்கி: இதோ, உம்முடைய பிராணனை வாங்கத்தேடின உம்முடைய சத்துருவாயிருந்த சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தின் தலை; இன்றையதினம் கர்த்தர் ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்காகச் சவுலின் கையிலும் அவன் குடும்பத்தாரின் கையிலும் பழி வாங்கினார் என்றார்கள். 9 ஆனாலும் தாவீது பேரோத்தியனான ரிம்மோனின் குமாரராகிய ரேகாபுக்கும், அவன் சகோதரன் பானாவுக்கும் பிரதியுத்தரமாக: என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு நான் சொல்லுகிறதைக் கேளுங்கள். 10 இதோ, ஒருவன் எனக்கு நற்செய்தி கொண்டுவருகிறவன் என்று எண்ணி, சவுல் செத்துப்போனான் என்று எனக்கு அறிவித்து, தனக்கு வெகுமானம் கிடைக்கும் என்று நினைத்தபோது, அவனை நான் பிடித்து சிக்லாகிலே கொன்றுபோட்டேனே. 11 தமது வீட்டிற்குள் தமது படுக்கையின்மேல் படுத்திருந்த நீதிமானைக் கொலைசெய்த பொல்லாத மனுஷருக்கு எவ்வளவு அதிகமாய் ஆக்கினை செய்யவேண்டும்? இப்போதும் நான் அவருடைய இரத்தப்பழியை உங்கள் கைகளில் வாங்கி, உங்களை பூமியிலிருந்து அழித்துப்போடாதிருப்பேனோ என்று சொல்லி, 12 அவர்களைக் கொன்றுபோடவும், அவர்கள் கைகளையும் கால்களையும் தறித்து, எப்ரோனிலிருக்கிற குளத்தண்டையிலே தூக்கிப்போடவும் தன் சேவகருக்குக் கட்டளையிட்டான். இஸ்போசேத்தின் தலையை எடுத்து, எப்ரோனிலிருக்கிற அப்னேரின் கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள்.

2 சாமுவேல் 5

1 அக்காலத்திலே இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள். 2 சவுல் எங்கள்மேல் ராஜாவாயிருக்கும்போதே இஸ்ரவேலை நடத்திக்கொண்டு போனவரும் நடத்திக்கொண்டு வந்தவரும் நீரே; கர்த்தர்: என் ஜனமாகிய இஸ்ரவேலை நீ மேய்த்து, நீ இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பாய் என்று உம்மிடத்தில் சொன்னாரே என்றார்கள். 3 இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள்; தாவீதுராஜா எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடே உடன்படிக்கைபண்ணினபின்பு, அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள். 4 தாவீது ராஜாவாகும்போது, முப்பது வயதாயிருந்தான்; அவன் நாற்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான். 5 அவன் எப்ரோனிலே யூதாவின்மேல் ஏழு வருஷமும் ஆறு மாதமும், எருசலேமிலே சமஸ்த இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் முப்பத்துமூன்று வருஷமும் ராஜ்யபாரம்பண்ணினான். 6 தேசத்திலே குடியிருக்கிற எபூசியர்மேல் யுத்தம்பண்ண ராஜாவானவன் தன் மனுஷரோடேகூட எருசலேமுக்குப் போனான். அவர்கள்: இதிலே பிரவேசிக்க தாவீதினால் கூடாது என்று எண்ணி, தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை; குருடரும் சப்பாணிகளும் உன்னைத் தடுப்பார்கள் என்று சொன்னார்கள். 7 ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று. 8 எவன் சாலகத்தின் வழியாய் ஏறி, எபூசியரையும் தாவீதின் ஆத்துமா பகைக்கிற சப்பாணிகளையும், குருடரையும் முறிய அடிக்கிறானோ, அவன் தலைவனாயிருப்பான் என்று தாவீது அன்றையதினம் சொல்லியிருந்தான்; அதனால் குருடனும் சப்பாணியும் வீட்டிலே வரலாகாது என்று சொல்லுகிறதுண்டு. 9 அந்தக் கோட்டையிலே தாவீது வாசம்பண்ணி, அதற்குத் தாவீதின் நகரம் என்று பேரிட்டு, மில்லோ என்னும் ஸ்தலந்துவக்கி, உட்புறமட்டும் சுற்றிலும் இருக்கிற மதிலைக் கட்டினான். 10 தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் அவனோடேகூட இருந்தார். 11 தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், கேதுருமரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான்; அவர்கள் தாவீதுக்கு ஒரு வீட்டைக் கட்டினார்கள். 12 கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை உயர்த்தினார் என்று தாவீது கண்டறிந்தபோது, 13 அவன் எப்ரோனிலிருந்து வந்தபின்பு, எருசலேமில் இன்னும் அதிகமான மறுமனையாட்டிகளையும் ஸ்திரீகளையும் கொண்டான்; இன்னும் அதிக குமாரரும் குமாரத்திகளும் தாவீதுக்குப் பிறந்தார்கள். 14 எருசலேமில் அவனுக்குச் சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன், 15 இப்பார், எலிசூவா, நெப்பேக், யப்பியா, 16 எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத் என்னும் பேர்களையுடைய குமாரர் பிறந்தார்கள். 17 தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, அவர்கள் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது, ஒரு அரணிப்பான இடத்துக்குப் போனான். 18 பெலிஸ்தரோ வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள். 19 பெலிஸ்தருக்கு விரோதமாய்ப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்தபோது, கர்த்தர்: போ, பெலிஸ்தரை உன் கையில் நிச்சயமாய் ஒப்புக்கொடுப்பேன் என்று தாவீதுக்குச் சொன்னார். 20 தாவீது பாகால் பிராசீமுக்கு வந்து, அங்கே அவர்களை முறிய அடித்து: தண்ணீர்கள் உடைத்தோடுகிறதுபோல, கர்த்தர் என் சத்துருக்களை எனக்கு முன்பாக உடைத்து ஓடப்பண்ணினார் என்று சொல்லி, அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்று பேரிட்டான். 21 அங்கே பெலிஸ்தர் தங்கள் விக்கிரகங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அவைகளைத் தாவீதும் அவன் மனுஷரும் சுட்டெரித்தார்கள். 22 பெலிஸ்தர் திரும்பவும் வந்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள். 23 தாவீது கர்த்தரிடத்தில் விசாரித்ததற்கு, அவர்: நீ நேராய்ப் போகாமல், அவர்களுக்குப் பின்னாலே சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து, 24 முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, சீக்கிரமாய் எழும்பிப்போ; அப்பொழுது பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, கர்த்தர் உனக்கு முன்பாகப் புறப்பட்டிருப்பார் என்றார். 25 கர்த்தர் தாவீதுக்குக் கட்டளையிட்டபிரகாரம் அவன் செய்து, பெலிஸ்தரைக் கேபா துவக்கிக் கேசேர் எல்லைமட்டும் முறிய அடித்தான்.

2 சாமுவேல் 6

1 பின்பு தாவீது இஸ்ரவேலர் எல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட முப்பதினாயிரம்பேரைக் கூட்டி, 2 கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்துபோய், 3 தேவனுடைய பெட்டியை ஒரு புது இரதத்தின்மேல் ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து கொண்டுவந்தார்கள்; அபினதாபின் குமாரராகிய ஊசாவும் அகியோவும் அந்தப் புது இரதத்தை நடத்தினார்கள். 4 அவர்கள் தேவனுடைய பெட்டியை ஏற்றி, அதைக் கிபியாவிலிருக்கிற அபினதாபின் வீட்டிலிருந்து நடத்திக்கொண்டு வருகிறபோது, அகியோ பெட்டிக்கு முன்னாலே நடந்தான். 5 தாவீதும் இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் தேவதாரு மரத்தால் பண்ணப்பட்ட சகலவித கீதவாத்தியங்களோடும், சுரமண்டலம் தம்புரு மேளம் வீணை கைத்தாளம் ஆகிய இவைகளோடும், கர்த்தருக்கு முன்பாக ஆடிப்பாடிக்கொண்டுபோனார்கள். 6 அவர்கள் நாகோனின் களம் இருக்கிற இடத்துக்கு வந்தபோது, மாடுகள் மிரண்டு பெட்டியை அசைத்தபடியினால், ஊசா தேவனுடைய பெட்டியினிடமாய்த் தன் கையை நீட்டி, அதைப் பிடித்தான். 7 அப்பொழுது கர்த்தருக்கு ஊசாவின்மேல் கோபம் மூண்டது; அவனுடைய துணிவினிமித்தம் தேவன் அங்கே அவனை அடித்தார்; அவன் அங்கே தேவனுடைய பெட்டியண்டையில் செத்தான். 8 அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிற பேரேஸ்ஊசா என்னும் பேரிட்டான். 9 தாவீது அன்றையதினம் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தருடைய பெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்று சொல்லி, 10 அதைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்தில் கொண்டுவர மனதில்லாமல், கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே கொண்டுபோய் வைத்தான். 11 கர்த்தருடைய பெட்டி கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே மூன்றுமாதம் இருக்கையில் கர்த்தர் ஓபேத்ஏதோமையும் அவன் வீட்டார் அனைவரையும் ஆசீர்வதித்தார். 12 தேவனுடைய பெட்டியினிமித்தம் கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார் என்று தாவீதுராஜாவுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது தாவீது தேவனுடைய பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து தாவீதின் நகரத்துக்கு மகிழ்ச்சியுடனே கொண்டுவந்தான். 13 கர்த்தருடைய பெட்டியைச் சுமந்துபோகிறவர்கள் ஆறு தப்படி நடந்தபோது, மாடுகளையும் கொழுத்த ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டான். 14 தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்துக்கொண்டு, தன் முழுப் பலத்தோடும் கர்த்தருக்கு முன்பாக நடனம்பண்ணினான். 15 அப்படியே தாவீதும், இஸ்ரவேல் சந்ததியார் அனைவரும் கர்த்தருடைய பெட்டியைக் கெம்பீர சத்தத்தோடும் எக்காள தொனியோடும் கொண்டுவந்தார்கள். 16 கர்த்தருடைய பெட்டி தாவீதின் நகரத்திற்குள் பிரவேசிக்கிறபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணிவழியாய்ப் பார்த்து, தாவீதுராஜா கர்த்தருக்கு முன்பாகக் குதித்து, நடனம்பண்ணுகிறதைக் கண்டு, தன் இருதயத்திலே அவனை அவமதித்தாள். 17 அவர்கள் கர்த்தருடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்து, அதற்குத் தாவீது போட்ட கூடாரத்திற்குள் இருக்கிற அதின் ஸ்தானத்திலே அதை வைத்தபோது, தாவீது கர்த்தருடைய சந்நிதியிலே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டான். 18 தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் இட்டபின்பு, சேனைகளின் கர்த்தருடைய நாமத்தினாலே ஜனங்களை ஆசீர்வதித்து, 19 இஸ்ரவேலின் திரள்கூட்டமான ஸ்திரீ புருஷராகிய சகல ஜனங்களுக்கும், அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித்துண்டையும், ஒவ்வொரு படி திராட்சரசத்தையும் பங்கிட்டான்; பிற்பாடு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போய்விட்டார்கள். 20 தாவீது தன் வீட்டாரை ஆசீர்வதிக்கிறதற்குத் திரும்பும்போது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் தாவீதுக்கு எதிர்கொண்டுவந்து, அற்பமனுஷரில் ஒருவன் தன் வஸ்திரங்களைக் கழற்றிப்போடுகிறதுபோல, இன்று தம்முடைய ஊழியக்காரருடைய பெண்களின் கண்களுக்கு முன்பாகத் தம்முடைய வஸ்திரங்களை உரிந்துபோட்டிருந்த இஸ்ரவேலின் ராஜா இன்று எத்தனை மகிமைப்பட்டிருந்தார் என்றாள். 21 அதற்குத் தாவீது மீகாளைப் பார்த்து: உன் தகப்பனைப்பார்க்கிலும், அவருடைய எல்லா வீட்டாரைப்பார்க்கிலும், என்னை இஸ்ரவேலாகிய கர்த்தருடைய ஜனத்தின்மேல் தலைவனாகக் கட்டளையிடும்படிக்குத் தெரிந்துகொண்ட கர்த்தருடைய சமுகத்திற்கு முன்பாக ஆடிப்பாடினேன். 22 இதைப்பார்க்கிலும் இன்னும் நான் நீசனும் என் பார்வைக்கு அற்பனுமாவேன்: அப்படியே நீ சொன்ன பெண்களுக்குங்கூட மகிமையாய் விளங்குவேன் என்றான். 23 அதினால் சவுலின் குமாரத்தியாகிய மீகாளுக்கு மரணமடையும் நாள்மட்டும் பிள்ளை இல்லாதிருந்தது.

2 சாமுவேல் 7

1 கர்த்தர் ராஜாவைச் சுற்றிலும் இருந்த அவனுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் அவனை நீங்கலாக்கி, இளைப்பாறப்பண்ணினபோது, அவன் தன் வீட்டிலே வாசமாயிருக்கையில், 2 ராஜா தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், கேதுருமரங்களால் செய்யப்பட்ட வீட்டிலே நான் வாசம்பண்ணும்போது, தேவனுடைய பெட்டி திரைகளின் நடுவே வாசமாயிருக்கிறதே என்றான். 3 அப்பொழுது நாத்தான் ராஜாவை நோக்கி: நீர் போய் உம்முடைய இருதயத்தில் உள்ளபடியெல்லாம் செய்யும்; கர்த்தர் உம்மோடு இருக்கிறாரே என்றான். 4 அன்று ராத்திரியிலே கர்த்தருடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்: 5 நீ போய் என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் வாசமாயிருக்கத்தக்க ஆலயத்தை நீ எனக்குக் கட்டுவாயோ? 6 நான் இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும், நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், கூடாரத்திலும் வாசஸ்தலத்திலும் உலாவினேன். 7 நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தை மேய்க்கும்படி கட்டளையிட்ட இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரத்தையாவது நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுருமரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று நான் இஸ்ரவேல் புத்திரருக்குள் உலாவிவந்த எவ்விடத்திலாவது யாதொரு வார்த்தையைச் சொன்னதுண்டோ? 8 இப்போதும் நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ இஸ்ரவேல் என்கிற என் ஜனங்களுக்கு அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை நான் ஆட்டுமந்தையை விட்டு எடுத்து, 9 நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன். 10 நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தை ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்வரையில் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கும்படி அவர்களை நாட்டினேன். 11 உன்னுடைய எல்லாச் சத்துருக்களுக்கும் உன்னை நீங்கலாக்கி, இளைப்பாறவும் பண்ணினேன்; இப்போதும் கர்த்தர் உனக்கு வீட்டை உண்டுபண்ணுவார் என்பதைக் கர்த்தர் உனக்கு அறிவிக்கிறார். 12 உன் நாட்கள் நிறைவேறி, நீ உன் பிதாக்களோடே நித்திரைபண்ணும்போது, நான் உனக்குப்பின்பு உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன். 13 அவன் என் நாமத்திற்கென்று ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன். 14 நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; அவன் அக்கிரமம் செய்தால், நான் அவனை மனுஷருடைய மிலாற்றினாலும் மனுபுத்திரருடைய அடிகளினாலும் தண்டிப்பேன். 15 உனக்கு முன்பாக நான் தள்ளிவிட்ட சவுலிடத்திலிருந்து என் கிருபையை விலக்கினதுபோல அவனைவிட்டு விலக்கமாட்டேன். 16 உன் வீடும், உன் ராஜ்யமும், என்றென்றைக்கும் உனக்கு முன்பாக ஸ்திரப்பட்டிருக்கும்; உன் ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்கிறார் என்று சொல்லச்சொன்னார். 17 நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும், இந்த எல்லாத் தரிசனத்தின்படியும், தாவீதுக்குச் சொன்னான். 18 அப்பொழுது தாவீதுராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்? 19 கர்த்தராகிய ஆண்டவரே, இது இன்னும் உம்முடைய பார்வைக்குக் கொஞ்ச காரியமாயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற தேவரீர் உம்முடைய அடியானுடைய வீட்டைக்குறித்து, வெகுதூரமாயிருக்கும் காலத்துச்செய்தியை மனுஷர் முறைமையாய்ச் சொன்னீரே. 20 இனி தாவீது உம்மிடத்தில் சொல்லவேண்டியது என்ன? கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நீர் உமது அடியானை அறிவீர். 21 உம்முடைய வாக்குத்தத்தத்தினிமித்தமும், உம்முடைய சித்தத்தின்படியேயும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் உமது அடியானுக்கு அறிவிக்கும்படிக்குத் தயவு செய்தீர். 22 ஆகையால் தேவனாகிய கர்த்தரே, நீர் பெரியவர் என்று விளங்குகிறது; நாங்கள் எங்கள் காதுகளாலே கேட்ட சகல காரியங்களின்படியும், தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத்தவிர வேறே தேவனும் இல்லை. 23 உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு நிகரான ஜனமும் உண்டோ? பூலோகத்து ஜாதிகளில் இந்த ஒரே ஜாதியைத் தேவன் தமக்கு ஜனமாக மீட்கிறதற்கும், தமக்குக் கீர்த்தி விளங்கப்பண்ணுகிறதற்கும் ஏற்பட்டாரே; தேவரீர் எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டுவந்த உம்முடைய ஜனத்திற்குமுன்பாகப் பயங்கரமான பெரிய காரியங்களை நடத்தி, உம்முடைய தேசத்திற்கும், அதிலிருந்த ஜாதிகளுக்கும், அவர்கள் தேவர்களுக்கும், உமது மகிமையை விளங்கச்செய்து, 24 உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலர் என்றைக்கும் உம்முடைய ஜனமாயிருப்பதற்கு, அவர்களைத் திடப்படுத்தி, கர்த்தராகிய நீர்தாமே அவர்களுக்குத் தேவனானீர். 25 இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைவரப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும். 26 அப்படியே சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் தேவனானவர் என்று சொல்லி, உம்முடைய நாமம் என்றென்றைக்கும் மகிமைப்படுவதாக; உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாக நிலைநிற்பதாக. 27 உனக்கு வீடுகட்டுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானின் செவிக்கு வெளிப்படுத்தினீர்: ஆகையால் உம்மை நோக்கி இந்த விண்ணப்பத்தைச் செய்ய உமது அடியானுக்கு மனத்தைரியம் கிடைத்தது. 28 இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; தேவரீர் உமது அடியானுக்கு இந்த நல்விசேஷங்களை வாக்குத்தத்தம்பண்ணினீர். 29 இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படி அதை ஆசீர்வதித்தருளும்; கர்த்தரான ஆண்டவராகிய தேவரீர் அதைச் சொன்னீர், உம்முடைய ஆசீர்வாதத்தினாலே உமது அடியானின் வீடு என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதாக என்றான்.

2 சாமுவேல் 8

1 இதற்குப்பின்பு தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, மேத்தேக் அம்மாவைப் பிடித்துக்கொண்டான். 2 அவன் மோவாபியரையும் முறிய அடித்து, அவர்களைத் தரைமட்டும் பணியப்பண்ணி, அவர்கள்மேல் நூல்போட்டு, இரண்டுபங்கு மனுஷரைக் கொன்றுபோட்டு, ஒரு பங்கை உயிரோடே வைத்தான்; இவ்விதமாய் மோவாபியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டுகிறவர்களானார்கள். 3 ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜா ஐபிராத்து நதியண்டையில் இருக்கிற சீமையைத் திரும்பத் தன் வசமாக்கிக்கொள்ளப்போகையில், தாவீது அவனையும் முறிய அடித்து, 4 அவனுக்கு இருந்த இராணுவத்தில் ஆயிரத்து எழுநூறு குதிரைவீரரையும், இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான். 5 சோபாவின் ராஜாவாகிய ஆதாதேசருக்கு உதவிசெய்ய தமஸ்குப் பட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்; தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு, 6 தமஸ்குக்கடுத்த சீரியாவிலே தாணையங்களை வைத்தான்; சீரியர் தாவீதைச் சேவித்து, அவனுக்குக் கப்பங்கட்டினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம், கர்த்தர் அவனைக் காப்பாற்றினார். 7 ஆதாதேசரின் சேவகருடைய பொற்பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான். 8 ஆதாதேசரின் பட்டணங்களாகிய பேத்தாகிலும் பேரொத்தாயிலுமிருந்து தாவீது ராஜா மகா திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான். 9 தாவீது ஆதாதேசருடைய எல்லா இராணுவத்தையும் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயீ கேட்டபோது, 10 ஆதாதேசர் தோயீயின்மேல் எப்போதும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தபடியால், ராஜாவாகிய தாவீதின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாதேசரோடே யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வாழ்த்துதல் சொல்லவும், தோயீ தன் குமாரனாகிய யோராமை ராஜாவினிடத்தில் அனுப்பினான். மேலும் யோராம் தன் கையிலே வெள்ளியும் பொன்னும் வெண்கலமுமான தட்டுமுட்டுகளைக் கொண்டுவந்தான். 11 அவன் கொண்டுவந்தவைகளைத் தாவீதுராஜா கீழ்ப்படுத்தின சீரியர், மோவாபியர், அம்மோன் புத்திரர், பெலிஸ்தர், அமலேக்கியர் என்னும் சகல ஜாதியார்களிடத்திலும், 12 ரேகோபின் குமாரனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவினிடத்திலும் கொள்ளையிட்டதிலும் எடுத்து, கர்த்தருக்கு நியமித்த வெள்ளியோடும் பொன்னோடுங்கூடக் கர்த்தருக்குப் பிரதிஷ்டைபண்ணினான். 13 தாவீது உப்புப்பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் சீரியரை முறிய அடித்துத் திரும்பினதினால் கீர்த்திபெற்றான். 14 ஏதோமில் தாணையங்களை வைத்தான்; ஏதோம் எங்கும் அவன் தாணையங்களை வைத்ததினாலே, ஏதோமியர் எல்லாரும் தாவீதைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன எல்லா இடத்திலும் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார். 15 இப்படியே தாவீது இஸ்ரவேல் அனைத்தின்மேலும் ராஜாவாயிருந்தான்; அவன் தன்னுடைய எல்லா ஜனத்திற்கும் நியாயமும் நீதியும் செய்துவந்தான். 16 செருயாவின் குமாரனாகிய யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்; அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான். 17 அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அகிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; செராயா சம்பிரதியாயிருந்தான். 18 யோய்தாவின் குமாரன் பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான்; தாவீதின் குமாரரோ பிரதானிகளாயிருந்தார்கள்.

2 சாமுவேல் 9

1 யோனத்தான்நிமித்தம் என்னால் தயவுபெறத்தக்கவன் எவனாவது சவுலின் வீட்டாரில் இன்னும் மீதியாயிருக்கிறவன் உண்டா என்று தாவீது கேட்டான். 2 அப்பொழுது சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபா என்னும் பேருள்ளவனைத் தாவீதினிடத்தில் அழைத்துவந்தார்கள்; ராஜா அவனைப் பார்த்து: நீதானா சீபா என்று கேட்டான்; அவன் அடியேன்தான் என்றான். 3 அப்பொழுது ராஜா: தேவன்நிமித்தம் நான் சவுலின் குடும்பத்தாருக்குத் தயைசெய்யும்படி அவன் வீட்டாரில் யாதொருவன் இன்னும் மீதியாய் இருக்கிறானா என்று கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இன்னும் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு குமாரன் இருக்கிறான் என்றான். 4 அவன் எங்கே என்று ராஜா கேட்டதற்கு, சீபா ராஜாவைப் பார்த்து: இதோ, அவன் லோதேபாரிலே அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டில் இருக்கிறான் என்றான். 5 அப்பொழுது தாவீதுராஜா அவனை லோதேபாரிலிருக்கிற அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலிருந்து அழைப்பித்தான். 6 சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத் தாவீதினிடத்தில் வந்தபோது, முகங்குப்புற விழுந்து வணங்கினான்; அப்பொழுது தாவீது: மேவிபோசேத்தே என்றான்; அவன்: இதோ, அடியேன் என்றான். 7 தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே; உன் தகப்பனாகிய யோனத்தான்நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயைசெய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக் கொடுப்பேன்; நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான். 8 அப்பொழுது அவன் வணங்கி: செத்த நாயைப்போலிருக்கிற என்னை நீர் நோக்கிப்பார்க்கிறதற்கு, உமது அடியான் எம்மாத்திரம் என்றான். 9 ராஜா சவுலின் வேலைக்காரனாகிய சீபாவை அழைப்பித்து, அவனை நோக்கி: சவுலுக்கும் அவர் வீட்டார் எல்லாருக்கும் இருந்த யாவையும் உன் எஜமானுடைய குமாரனுக்குக் கொடுத்தேன். 10 ஆகையால் நீ உன் குமாரரையும் உன் வேலைக்காரரையும் கூட்டிக்கொண்டு, உன் எஜமானுடைய குமாரன் புசிக்க அப்பம் உண்டாயிருக்கும்படி, அந்த நிலத்தைப் பயிரிட்டு, அதின் பலனைச் சேர்ப்பாயாக; உன் எஜமானுடைய குமாரன் மேவிபோசேத் நித்தம் என் பந்தியிலே அப்பம் புசிப்பான் என்றான்; சீபாவுக்குப் பதினைந்து குமாரரும் இருபது வேலைக்காரரும் இருந்தார்கள். 11 சீபா, ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் உமது அடியானாகிய நான் செய்வேன் என்றான். ராஜகுமாரரில் ஒருவனைப்போல, மேவிபோசேத் என் பந்தியிலே அசனம் பண்ணுவான் என்று ராஜா சொன்னான். 12 மேவிபோசேத்திற்கு மீகா என்னும் பேருள்ள சிறுவனாகிய ஒரு குமாரன் இருந்தான், சீபாவின் வீட்டிலே குடியிருந்த யாவரும் மேவிபோசேத்திற்கு வேலைக்காரராயிருந்தார்கள். 13 மேவிபோசேத் ராஜாவின் பந்தியில் நித்தம் அசனம்பண்ணுகிறவனாயிருந்தபடியினால், எருசலேமிலே குடியிருந்தான்; அவனுக்கு இரண்டு காலும் முடமாயிருந்தது.

2 சாமுவேல் 10

1 அதன்பின்பு அம்மோன் புத்திரரின் ராஜா மரித்துப்போனான்; அவன் குமாரனாகிய ஆனூன் அவன் பட்டத்திற்கு ராஜாவானான். 2 அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயைசெய்ததுபோல, அவன் குமாரனாகிய இவனுக்கு நான் தயைசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல, தன் ஊழியக்காரரை அனுப்பினான்; தாவீதின் ஊழியக்காரர் அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது, 3 அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் தங்கள் ஆண்டவனாகிய ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனைக் கனம்பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ? இந்தப் பட்டணத்தை ஆராய்ந்து, உளவுபார்த்து, அதைக் கவிழ்த்துப்போட அல்லவோ தாவீது தன் ஊழியக்காரரை உம்மிடத்திற்கு அனுப்பினான் என்றார்கள். 4 அப்பொழுது ஆனூன்: தாவீதின் ஊழியக்காரரைப் பிடித்து, அவர்களுடைய ஒருபக்கத்துத் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்துவிட்டு, மற்றப்பாதியைக் கத்தரித்துப்போட்டு, அவர்களை அனுப்பிவிட்டான். 5 அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜா, அந்த மனுஷர் மிகவும் வெட்கப் பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ஆட்களை அனுப்பி, உங்கள் தாடி வளருமட்டும் நீங்கள் எரிகோவிலிருந்து, பிற்பாடு வாருங்கள் என்று சொல்லச்சொன்னான். 6 அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஸ்தானாபதிகளை அனுப்பி, பெத்ரேகோப் தேசத்துச் சீரியரிலும், சோபாவிலிருக்கிற சீரியரிலும் இருபதினாயிரம் காலாட்களையும், மாக்காதேசத்து ராஜாவினிடத்தில் ஆயிரம்பேரையும், இஷ்தோபிலிருக்கிற பன்னீராயிரம்பேரையும், கூலிப்படையாக அழைப்பித்தார்கள். 7 அதைத் தாவீது கேள்விப்பட்டபோது, யோவாபையும் பராக்கிரமசாலிகளாகிய சமஸ்த இராணுவத்தையும் அனுப்பினான். 8 அம்மோன் புத்திரர் புறப்பட்டு, ஒலிமுகவாசலண்டையிலே போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள்; ஆனாலும் சோபாவிலும் ரேகோபிலுமிருந்துவந்த சீரியரும், இஷ்தோபிலும் மாக்காவிலுமிருந்து வந்த மனுஷரும், வெளியிலே பிரத்தியேகமாயிருந்தார்கள். 9 யோவாபோ இராணுவங்களின் படைமுகம் தனக்கு முன்னும் பின்னும் இருக்கிறதைக் காண்கையில், அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா இராணுவங்களிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து, அதைச் சீரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தி, 10 மற்ற ஜனத்தை அம்மோன் புத்திரருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தும்படி தன் சகோதரனாகிய அபிசாயினிடத்தில் ஒப்புவித்து: 11 சீரியர் கைமிஞ்சுகிறதாயிருந்தால் நீ எனக்கு உதவிசெய்யவேண்டும்; அம்மோன் புத்திரர் கை மிஞ்சுகிறதாயிருந்தால் நான் உனக்கு உதவிசெய்ய வருவேன். 12 தைரியமாயிரு; நம்முடைய ஜனத்திற்காகவும், நம்முடைய தேவனுடைய பட்டணங்களுக்காகவும் சவுரியத்தைக் காட்டுவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான். 13 யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியர்மேல் யுத்தம்பண்ணக் கிட்டினார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள். 14 சீரியர் முறிந்தோடுகிறதை அம்மோன் புத்திரர் கண்டபோது, அவர்களும் அபிசாயிக்கு முன்பாக முறிந்தோடிப் பட்டணத்திற்குள் புகுந்தார்கள்; அப்பொழுது யோவாப் அம்மோன் புத்திரரை விட்டுத் திரும்பி எருசலேமுக்கு வந்தான். 15 தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைச் சீரியர் கண்டபோது, ஒருமிக்கக் கூடினார்கள். 16 ஆதாரேசர் நதிக்கு அப்பாலிருந்த சீரியரையும் அழைத்தனுப்பினான்; அவர்கள் ஏலாமுக்கு வந்தார்கள்; ஆதாரேசருடைய படைத்தலைவனாகிய சோபாக் அவர்களுக்கு முன்னாலே சென்றான். 17 அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, ஏலாமுக்குப் போனான்; சீரியர் தாவீதுக்கு எதிராக இராணுவங்களை அணிவகுத்து நின்றார்கள்; அவனோடு யுத்தம்பண்ணுகிறபோது, 18 சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் எழுநூறு இரதவீரரையும் நாற்பதினாயிரம் குதிரைவீரரையும் கொன்று, அவர்களுடைய படைத்தலைவனாகிய சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான். 19 அப்பொழுது ஆதாரேசரைச் சேவிக்கிற சகல ராஜாக்களும் தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைக் கண்டு, இஸ்ரவேலரோடே சமாதானம்பண்ணி, அவர்களைச் சேவித்தார்கள். அப்புறம் அம்மோன் புத்திரருக்கு உதவிசெய்யச் சீரியர் பயப்பட்டார்கள்.

2 சாமுவேல் 11

1 மறுவருஷம் ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படுங்காலம் வந்தபோது, தாவீது யோவாபையும், அவனோடேகூடத் தன் சேவகரையும், இஸ்ரவேல் அனைத்தையும், அம்மோன் புத்திரரை அழிக்கவும், ரப்பாவை முற்றிக்கைபோடவும் அனுப்பினான். தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான். 2 ஒருநாள் சாயங்காலத்தில் தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, அரமனை உப்பரிகையின்மேல் உலாத்திக்கொண்டிருக்கும்போது, ஸ்நானம்பண்ணுகிற ஒரு ஸ்திரீயை உப்பரிகையின்மேலிருந்து கண்டான்; அந்த ஸ்திரீ வெகு சௌந்தரவதியாயிருந்தாள். 3 அப்பொழுது தாவீது, அந்த ஸ்திரீ யார் என்று விசாரிக்க ஆள் அனுப்பினான்; அவள் எலியாமின் குமாரத்தியும், ஏத்தியனான உரியாவின் மனைவியுமாகிய பத்சேபாள் என்றார்கள். 4 அப்பொழுது தாவீது ஆள் அனுப்பி அவளை அழைத்துவரச்சொன்னான்; அவள் அவனிடத்தில் வந்தபோது, அவளோடே சயனித்தான்; பிற்பாடு அவள் தன் தீட்டு நீங்கும்படி சுத்திகரித்துக்கொண்டு தன் வீட்டுக்குப் போனாள். 5 அந்த ஸ்திரீ கர்ப்பம் தரித்து, தான் கர்ப்பவதியென்று தாவீதுக்கு அறிவிக்கும்படி ஆள் அனுப்பினாள். 6 அப்பொழுது தாவீது: ஏத்தியனாகிய உரியாவை என்னிடத்தில் அனுப்பு என்று யோவாபினண்டைக்கு ஆள் அனுப்பினான்; அப்படியே யோவாப் உரியாவைத் தாவீதினிடத்திற்கு அனுப்பினான். 7 உரியா அவனிடத்தில் வந்தபோது, தாவீது அவனைப் பார்த்து: யோவாப் சுகமாயிருக்கிறானா, ஜனங்கள் சுகமாயிருக்கிறார்களா, யுத்தத்தின் செய்தி நற்செய்தியா என்று விசாரித்தான். 8 பின்பு தாவீது உரியாவை நோக்கி: நீ உன் வீட்டிற்குப் போய், பாதசுத்தி செய் என்றான்; உரியா ராஜ அரமனையிலிருந்து புறப்பட்டபோது, ராஜாவினிடத்திலிருந்து உச்சிதமான பதார்த்தங்கள் அவன் பின்னாலே அனுப்பப்பட்டது. 9 ஆனாலும் உரியா தன் வீட்டிற்க்குப்போகாமல், ராஜ அரமனையின் வாசலிலே தன் ஆண்டவனுடைய எல்லாச் சேவகரோடுங்கூடப் படுத்துக்கொண்டிருந்தான். 10 உரியா தன் வீட்டிற்குப் போகவில்லையென்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது உரியாவை நோக்கி: நீ பயணத்திலிருந்து வந்தவன் அல்லவா, நீ உன் வீட்டிற்குப் போகாதிருக்கிறது என்ன என்று கேட்டான். 11 உரியா தாவீதை நோக்கி: பெட்டியும் இஸ்ரவேலும் யூதாவும் கூடாரங்களிலே தங்கி, என் ஆண்டவனாகிய யோவாபும் என் ஆண்டவனின் சேவகரும் வெளியிலே பாளயமிறங்கியிருக்கையில், நான் புசிக்கிறதற்கும், குடிக்கிறதற்கும், என் மனைவியோடே சயனிக்கிறதற்கும், என் வீட்டுக்குள் பிரவேசிப்பேனா? நான் அப்படிச் செய்கிறதில்லை என்று உம்முடையபேரிலும் உம்முடைய ஆத்துமாவின்பேரிலும் ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்றான். 12 அப்பொழுது தாவீது உரியாவை நோக்கி: இன்றைக்கும் நீ இங்கேயிரு; நாளைக்கு உன்னை அனுப்பிவிடுவேன் என்றான்; அப்படியே உரியா அன்றும் மறுநாளும் எருசலேமில் இருந்தான். 13 தாவீது அவனைத் தனக்கு முன்பாகப் புசித்துக் குடிக்கிறதற்கு அழைத்து, அவனை வெறிக்கப்பண்ணினான்; ஆனாலும் அவன் தன் வீட்டுக்குப் போகாமல், சாயங்காலத்திலே தன் ஆண்டவனின் சேவகரோடே தன் படுக்கையிலே படுத்துக்கொண்டான். 14 காலமே தாவீது யோவாபுக்கு ஒரு நிருபத்தை எழுதி, உரியாவின் கையில் கொடுத்து அனுப்பினான். 15 அந்த நிருபத்திலே: மும்முரமாய் நடக்கிற போர்முகத்திலே நீங்கள் உரியாவை நிறுத்தி, அவன் வெட்டுண்டு சாகும்படிக்கு, அவனை விட்டுப் பின்வாங்குங்கள் என்று எழுதியிருந்தான். 16 அப்படியே யோவாப் அந்தப் பட்டணத்தைச் சூழக் காவல்போட்டிருக்கையில் பராக்கிரமசாலிகள் இருக்கிறார்கள் என்று தான் அறிந்த இடத்தில் உரியாவை நிறுத்தினான். 17 பட்டணத்து மனுஷர் புறப்பட்டுவந்து யோவாபோடே யுத்தம்பண்ணுகையில், தாவீதின் சேவகராகிய ஜனத்தில் சிலர் பட்டார்கள்; ஏத்தியனாகிய உரியாவும் செத்தான். 18 அப்பொழுது யோவாப் அந்த யுத்தத்தின் செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவிக்க ஆள் அனுப்பி, 19 தான் அனுப்புகிற ஆளை நோக்கி: நீ யுத்தத்தின் செய்திகளையெல்லாம் ராஜாவுக்குச் சொல்லித் தீர்ந்தபோது, 20 ராஜாவுக்குக் கோபம் எழும்பி, அவர்: நீங்கள் பட்டணத்திற்கு இத்தனை கிட்டப்போய் யுத்தம்பண்ணவேண்டியது என்ன? அலங்கத்தில் நின்று எய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? 21 எருப்பேசேத்தின் குமாரன் அபிமெலேக்கைக் கொன்றது யார்? தேபேசிலே ஒரு பெண்பிள்ளை அலங்கத்திலிருந்து ஒரு ஏந்திரக்கல்லின் துண்டை அவன்மேல் போட்டதினால் அல்லவோ அவன் செத்தான்; நீங்கள் அலங்கத்திற்கு இத்தனை கிட்டப்போனது என்ன என்று உன்னோடே சொன்னால், அப்பொழுது நீ, உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்று சொல் என்றான். 22 அந்த ஆள் போய், உட்பிரவேசித்து, யோவாப் தன்னிடத்தில் சொல்லியனுப்பின செய்திகளையெல்லாம் தாவீதுக்கு அறிவித்து, 23 தாவீதைப் பார்த்து: அந்த மனுஷர் கைமிஞ்சி, அவர்கள் வெளியே எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வந்தபோது, நாங்கள் பட்டணவாசல்மட்டும் அவர்களைத் துரத்தினோம். 24 அப்பொழுது வில்வீரர் அலங்கத்திலிருந்து உம்முடைய சேவகரின்மேல் எய்ததினால், ராஜாவின் சேவகரில் சிலர் செத்தார்கள்; உம்முடைய சேவகனாகிய உரியா என்னும் ஏத்தியனும் செத்தான் என்றான். 25 அப்பொழுது தாவீது அந்த ஆளை நோக்கி: நீ யோவாபினிடத்தில் போய், இந்தக் காரியத்தைப்பற்றி விசாரப்படவேண்டாம்; பட்டயம் ஒருவேளை ஒருவனையும், ஒருவேளை வேறொருவனையும் பட்சிக்கும்; நீ யுத்தத்தைப் பலக்கப்பண்ணி, பட்டணத்தை இடித்துப்போடு என்று அவனுக்குத் திடஞ்சொல் என்றான். 26 தன் புருஷனாகிய உரியா செத்தான் என்று அவன் மனைவி கேள்விப்பட்டபோது, அவள் தன் நாயகனுக்காக இழவு கொண்டாடினாள். 27 துக்கநாள் சென்றபின்பு, தாவீது அவளை அழைத்தனுப்பி, தன் வீட்டிலே சேர்த்துக்கொண்டான்; அவள் அவனுக்கு மனைவியாகி, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். தாவீது செய்த இந்தக் காரியம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்தது.

2 சாமுவேல் 12

1 கர்த்தர் நாத்தானைத் தாவீதினிடத்தில் அனுப்பினார்; இவன் அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: ஒரு பட்டணத்தில் இரண்டு மனுஷர் இருந்தார்கள், ஒருவன் ஐசுவரியவான், மற்றவன் தரித்திரன். 2 ஐசுவரியவானுக்கு ஆடுமாடுகள் வெகு திரளாயிருந்தது. 3 தரித்திரனுக்கோ தான் கொண்டு வளர்த்த ஒரே ஒரு சின்ன ஆட்டுக்குட்டியைத்தவிர வேறொன்றும் இல்லாதிருந்தது; அது அவனோடும் அவன் பிள்ளைகளோடுங்கூட இருந்து வளர்ந்து, அவன் வாயின் அப்பத்தைத் தின்று, அவன் பாத்திரத்திலே குடித்து, அவன் மடியிலே படுத்துக்கொண்டு, அவனுக்கு ஒரு மகளைப்போல இருந்தது. 4 அந்த ஐசுவரியவானிடத்தில் வழிப்போக்கன் ஒருவன் வந்தான்; அவன் தன்னிடத்தில் வந்த வழிப்போக்கனுக்குச் சமையல் பண்ணுவிக்க, தன்னுடைய ஆடுமாடுகளில் ஒன்றைப் பிடிக்க மனதில்லாமல், அந்தத் தரித்திரனுடைய ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைத் தன்னிடத்தில் வந்த மனுஷனுக்குச் சமையல் பண்ணுவித்தான் என்றான். 5 அப்பொழுது தாவீது: அந்த மனுஷன்மேல் மிகவும் கோபமூண்டவனாகி, நாத்தானைப் பார்த்து: இந்தக் காரியத்தைச் செய்த மனுஷன் மரணத்திற்குப் பாத்திரன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். 6 அவன் இரக்கமற்றவனாயிருந்து, இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், அந்த ஆட்டுக்குட்டிக்காக நாலத்தனை திரும்பச் செலுத்தவேண்டும் என்றான். 7 அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: நீயே அந்த மனுஷன்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, உன்னைச் சவுலின் கைக்குத் தப்புவித்து, 8 உன் ஆண்டவனுடைய வீட்டை உனக்குக் கொடுத்து, உன் ஆண்டவனுடைய ஸ்திரீகளையும் உன் மடியிலே தந்து, இஸ்ரவேல் வம்சத்தையும், யூதா வம்சத்தையும் உனக்குக் கையளித்தேன்; இது போதாதிருந்தால், இன்னும் உனக்கு வேண்டியதைத் தருவேன். 9 கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பான இந்தக் காரியத்தைச் செய்து, அவருடைய வார்த்தையை நீ அசட்டைபண்ணினது என்ன? ஏத்தியனாகிய உரியாவை நீ பட்டயத்தால் மடிவித்து, அவன் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டு, அவனை அம்மோன் புத்திரரின் பட்டயத்தாலே கொன்றுபோட்டாய். 10 இப்போதும் நீ என்னை அசட்டைபண்ணி, ஏத்தியனாகிய உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக எடுத்துக்கொண்டபடியினால், பட்டயம் என்றைக்கும் உன் வீட்டைவிட்டு விலகாதிருக்கும். 11 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன் வீட்டிலே பொல்லாப்பை உன்மேல் எழும்பப்பண்ணி, உன் கண்கள் பார்க்க, உன் ஸ்திரீகளை எடுத்து, உனக்கு அடுத்தவனுக்குக் கொடுப்பேன்; அவன் இந்தச் சூரியனுடைய வெளிச்சத்திலே உன் ஸ்திரீகளோடே சயனிப்பான். 12 நீ ஒளிப்பிடத்தில் அதைச் செய்தாய்; நானோ இந்தக் காரியத்தை இஸ்ரவேலர் எல்லாருக்கு முன்பாகவும், சூரியனுக்கு முன்பாகவும் செய்விப்பேன் என்றார் என்று சொன்னான். 13 அப்பொழுது தாவீது நாத்தானிடத்தில்: நான் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன் என்றான். நாத்தான் தாவீதை நோக்கி: நீ சாகாதபடிக்கு, கர்த்தர் உன் பாவம் நீங்கச்செய்தார். 14 ஆனாலும் இந்தக் காரியத்தினாலே கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க நீ காரணமாயிருந்தபடியினால், உனக்குப் பிறந்த பிள்ளை நிச்சயமாய்ச் சாகும் என்று சொல்லி, நாத்தான் தன் வீட்டுக்குப் போய்விட்டான். 15 அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார்; அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது. 16 அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காகத் தேவனிடத்தில் பிரார்த்தனைபண்ணி, உபவாசித்து, உள்ளே போய், இராமுழுதும் தரையிலே கிடந்தான். 17 அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கப்பண்ண, அவன் வீட்டிலுள்ள மூப்பரானவர்கள் எழுந்து, அவனண்டையில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடே அப்பம் சாப்பிடாமல் இருந்தான். 18 ஏழாம்நாளில், பிள்ளை செத்துப்போயிற்று. பிள்ளை செத்துப்போயிற்று என்று தாவீதின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவிக்க ஐயப்பட்டார்கள்: பிள்ளை உயிரோடிருக்கையில், நாம் அவரோடே பேசுகிறபோது, அவர் நம்முடைய சொற்கேட்கவில்லை; பிள்ளை செத்துப்போயிற்று என்று அவரோடே எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக வியாகுலப்படுவாரே என்று பேசிக்கொண்டார்கள். 19 தாவீது தன் ஊழியக்காரர் இரகசியமாய்ப் பேசிக்கொள்ளுகிறதைக்கண்டு, பிள்ளை செத்துப்போயிற்று என்று அறிந்து, தன் ஊழியக்காரரை நோக்கி: பிள்ளை செத்துப்போயிற்றோ என்று கேட்டான்; செத்துப்போயிற்று என்றார்கள். 20 அப்பொழுது தாவீது தரையைவிட்டு எழுந்து, ஸ்நானம்பண்ணி, எண்ணெய் பூசிக்கொண்டு, தன் வஸ்திரங்களை மாற்றி, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, பணிந்துகொண்டு, தன் வீட்டுக்குவந்து, போஜனம் கேட்டான்; அவன் முன்னே அதை வைத்தபோது புசித்தான். 21 அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனை நோக்கி: நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர்; பிள்ளை மரித்த பின்பு, எழுந்திருந்து அசனம்பண்ணுகிறீரே என்றார்கள். 22 அதற்கு அவன்: பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்குக் கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன். 23 அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்கவேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப்பண்ணக்கூடுமோ? நான் அதினிடத்துக்குப் போவேனே அல்லாமல், அது என்னிடத்துக்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான். 24 பின்பு தாவீது தன் மனைவியாகிய பத்சேபாளுக்கு ஆறுதல் சொல்லி, அவளிடத்தில் போய், அவளோடே சயனித்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்குச் சாலொமோன் என்று பேரிட்டான்; அவனிடத்தில் கர்த்தர் அன்பாயிருந்தார். 25 அவர் தீர்க்கதரிசியாகிய நாத்தானை அனுப்ப, அவன் கர்த்தரின் நிமித்தம் அவனுக்கு யெதிதியா என்று பேரிட்டான். 26 அதற்குள்ளே யோவாப் அம்மோன் புத்திரருடைய ரப்பாபட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணி, ராஜதானியைப் பிடித்து, 27 தாவீதினிடத்தில் ஆள் அனுப்பி, நான் ரப்பாவின்மேல் யுத்தம்பண்ணி, தண்ணீர் ஓரமான பட்டணத்தைப் பிடித்துக்கொண்டேன். 28 நான் பட்டணத்தைப் பிடிக்கிறதினால், என் பேர் வழங்காதபடிக்கு, நீர் மற்ற ஜனங்களைக் கூட்டிக்கொண்டுவந்து, பட்டணத்தை முற்றிக்கைபோட்டு, பிடிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னான். 29 அப்படியே தாவீது ஜனங்களையெல்லாம் கூட்டிக்கொண்டு, ரப்பாவுக்குப்போய், அதின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்தான். 30 அவர்களுடைய ராஜாவின் தலைமேலிருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து நிறைபொன்னும், இரத்தினங்கள் பதித்ததுமாயிருந்தது; அது தாவீதினுடைய தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளையைக் கொண்டுபோனான். 31 பின்பு அதிலிருந்த ஜனங்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களுக்கும், இருப்புப் பாரைகளுக்கும், இருப்புக் கோடரிகளுக்கும் உட்படுத்தி, அவர்களைச் செங்கற்சூளையையும் கடக்கப்பண்ணினான்; இப்படி அம்மோன் புத்திரரின் பட்டணங்களுக்கெல்லாம் செய்து, தாவீது எல்லா ஜனத்தோடுங்கூட எருசலேமுக்குத் திரும்பினான்.

2 சாமுவேல் 13

1 இதற்குப்பின்பு தாவீதின் குமாரனாகிய அப்சலோமுக்குத் தாமார் என்னும் பேருள்ள சவுந்தரியமுள்ள ஒரு சகோதரி இருந்தாள்; அவள்மேல் தாவீதின் குமாரன் அம்னோன் மோகங்கொண்டான். 2 தன் சகோதரியாகிய தாமாரினிமித்தம் ஏக்கங்கொண்டு வியாதிப்பட்டான்; அவள் கன்னியாஸ்திரீயாயிருந்தாள்; அவளுக்குப் பொல்லாப்புச் செய்ய, அம்னோனுக்கு வருத்தமாய்க் கண்டது. 3 அம்னோனுக்குத் தாவீதுடைய தமையன் சிமியாவின் குமாரனாகிய யோனதாப் என்னும் பேருள்ள ஒரு சிநேகிதன் இருந்தான்; அந்த யோனதாப் மகா தந்திரவாதி. 4 அவன் இவனைப் பார்த்து: ராஜகுமாரனாகிய நீ, நாளுக்குநாள் எதினாலே இப்படி மெலிந்துபோகிறாய், எனக்குச் சொல்லமாட்டாயா என்றான். அதற்கு அம்னோன்: என் சகோதரன் அப்சலோமின் சகோதரியாகிய தாமாரின்மேல் நான் ஆசைவைத்திருக்கிறேன் என்றான். 5 அப்பொழுது யோனதாப் அவனைப்பார்த்து: நீ வியாதிக்காரனைப்போல உன் படுக்கையின்மேல் படுத்துக்கொள்; உன்னைப் பார்க்கிறதற்கு உன் தகப்பனார் வரும்போது, நீ, என் சகோதரியாகிய தாமார் வந்து, எனக்குப் போஜனம்கொடுத்து, அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு நான் பார்க்க, என் கண்களுக்கு முன்பாகச் சமைக்கும்படி தயவுசெய்யவேண்டும் என்று சொல் என்றான். 6 அப்படியே அம்னோன் வியாதிக்காரன்போல் படுத்துக்கொண்டு, ராஜா தன்னைப் பார்க்கவந்தபோது, ராஜாவை நோக்கி: என் சகோதரியாகிய தாமார் வந்து நான் அவள் கையினாலே சாப்பிடும்படிக்கு, என் கண்களுக்கு முன்பாக இரண்டு நல்ல பணியாரங்களைப் பண்ணும்படி உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். 7 அப்பொழுது தாவீது: வீட்டுக்குத் தாமாரிடத்தில் ஆள் அனுப்பி, நீ உன் சகோதரனாகிய அம்னோன் வீட்டுக்குப் போய், அவனுக்குச் சமையல் பண்ணிக்கொடு என்று சொல்லச்சொன்னான். 8 தாமார் தன் சகோதரனாகிய அம்னோன் படுத்துக்கொண்டிருக்கிற வீட்டுக்குப் போய், மாவெடுத்துப் பிசைந்து, அவன் கண்களுக்கு முன்பாகத் தட்டி, பணியாரங்களைச் சுட்டு, 9 சட்டியை எடுத்து, அவனுக்கு முன்பாக அவைகளை வைத்தாள்; ஆனாலும் அவன் சாப்பிடமாட்டேன் என்றான்; பின்பு அம்னோன்: எல்லாரும் என்னைவிட்டு வெளியே போகட்டும் என்றான்; எல்லாரும் அவனை விட்டு வெளியே போனார்கள். 10 அப்பொழுது அம்னோன் தாமாரைப் பார்த்து: நான் உன் கையினாலே சாப்பிடும்படிக்கு, அந்தப் பலகாரத்தை அறைவீட்டிலே கொண்டுவா என்றான்; அப்படியே தாமார் தான் செய்த பணியாரங்களை அறைவீட்டில் இருக்கிற தன் சகோதரனாகிய அம்னோனிடத்தில் கொண்டு போனாள். 11 அவன் சாப்பிடும்படிக்கு அவள் அவைகளைக் கிட்ட கொண்டுவருகையில், அவன் அவளைப் பிடித்து, அவளைப் பார்த்து: என் சகோதரியே, நீ வந்து என்னோடே சயனி என்றான். 12 அதற்கு அவள்: வேண்டாம், என் சகோதரனே, என்னை அவமானப்படுத்தாதே, இஸ்ரவேலிலே இப்படிச் செய்யத்தகாது; இப்படிப்பட்ட மதிகேடான காரியத்தைச் செய்யவேண்டாம். 13 நான் என் வெட்கத்தோடே எங்கே போவேன்? நீயும் இஸ்ரவேலிலே மதிகெட்டவர்களில் ஒருவனைப்போல ஆவாய்; இப்போதும் நீ ராஜாவோடே பேசு, அவர் என்னை உனக்குத் தராமல் மறுக்கமாட்டார் என்றாள். 14 அவன் அவள் சொல்லைக் கேட்கமாட்டேன் என்று அவளைப் பலவந்தமாய்ப் பிடித்து, அவளோடே சயனித்து, அவளைக் கற்பழித்தான். 15 பிற்பாடு அம்னோன் அவளை மிகவும் வெறுத்தான்; அவன் அவளை விரும்பின விருப்பத்தைப் பார்க்கிலும், அவளை வெறுத்த வெறுப்பு அதிகமாயிருந்தது. ஆகையால்: நீ எழுந்து போய்விடு என்று அம்னோன் அவளோடே சொன்னான். 16 அப்பொழுது அவள்: நீ எனக்கு முந்தி செய்த அநியாயத்தைப்பார்க்கிலும், இப்பொழுது என்னைத் துரத்திவிடுகிற அந்த அநியாயம் கொடுமையாயிருக்கிறது என்றாள்; ஆனாலும் அவன் அவள் சொல்லைக் கேட்க மனதில்லாமல், 17 தன்னிடத்தில் சேவிக்கிற தன் வேலைக்காரனைக் கூப்பிட்டு: நீ இவளை என்னை விட்டு வெளியே தள்ளி, கதவைப் பூட்டு என்றான். 18 அப்படியே அவனிடத்தில் சேவிக்கிறவன் அவளை வெளியே தள்ளி, கதவைப் பூட்டினான்; அவள் பலவருணமான வஸ்திரத்தை உடுத்திக்கொண்டிருந்தாள்; ராஜகுமாரத்திகளாகிய கன்னிகைகள் இப்படிக்கொத்த சால்வைகளைத் தரித்துக்கொள்வார்கள். 19 அப்பொழுது தாமார்: தன் தலையின்மேல் சாம்பலை வாரிப் போட்டுக்கொண்டு, தான் தரித்திருந்த பலவருணமான வஸ்திரத்தைக் கிழித்து, தன் கையைத் தன் தலையின்மேல் வைத்து, சத்தமிட்டு அழுதுகொண்டுபோனாள். 20 அப்பொழுது அவள் சகோதரனாகிய அப்சலோம் அவளைப் பார்த்து: உன் சகோதரனாகிய அம்னோன் உன்னோடிருந்தானோ? இப்போதும் என் சகோதரியே, நீ மவுனமாயிரு; அவன் உன்னுடைய சகோதரன்; இந்தக் காரியத்தை உன் மனதிலே வைக்காதே என்றான்; அப்படியே தாமார் தன் சகோதரனாகிய அப்சலோமின் வீட்டில் தனித்துக் கிலேசப்பட்டுக்கொண்டிருந்தாள். 21 தாவீதுராஜா இந்தச் செய்திகளையெல்லாம் கேள்விப்பட்டபோது, வெகுகோபமாயெரிந்தான். 22 அப்சலோம் அம்னோனோடே நன்மையாகிலும் தீமையாகிலும் பேசவில்லை; தன் சகோதரியாகிய தாமாரை அம்னோன் கற்பழித்த காரியத்தினிமித்தம் அப்சலோம் அவனைப் பகைத்தான். 23 இரண்டு வருஷம் சென்றபின்பு, அப்சலோம் எப்பிராயீமுக்குச் சமீபமான பாலாத்சோரிலே ஆட்களை வைத்து, ஆடுகளை மயிர்கத்தரிக்கிற வேலையில் இருந்தான்; அங்கே ராஜகுமாரர் எல்லாரையும் விருந்துக்கு அழைத்தான். 24 அவன் ராஜாவினிடத்தில் போய், ஆட்களை வைத்து ஆடுகளை மயிர்கத்தரிக்கிறேன்; ராஜாவும் அவருடைய ஊழியக்காரரும் உமது அடியானோடே வரும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். 25 ராஜா அப்சலோமைப் பார்த்து: அப்படி வேண்டாம், என் மகனே; நாங்கள் எல்லாரும் வருவோமாகில் உனக்கு வெகு செலவுண்டாகும் என்றான்; அவனை வருந்திக்கேட்டாலும், அவன் போக மனதில்லாமல், அவனை ஆசீர்வதித்தான். 26 அப்பொழுது அப்சலோம்: அது கூடாதிருந்தால், என் சகோதரனாகிய அம்னோனாவது எங்களோடே வரும்படி அவனுக்கு உத்தரவு செய்யும் என்றான். அதற்கு ராஜா: அவன் உன்னோடே வரவேண்டியது என்ன என்றான். 27 அப்சலோம் பின்னையும் அவனை வருந்திக் கேட்டுக்கொண்டபடியினால், அவன் அம்னோனையும், ராஜாவின் குமாரர் அனைவரையும் அவனோடே போகவிட்டான். 28 அப்சலோம் தன் வேலைக்காரரை நோக்கி: அம்னோன் திராட்சரசம் குடித்துக் களித்திருக்கும் சமயத்தை நன்றாய்ப் பார்த்திருங்கள்; அப்பொழுது நான்: அம்னோனை அடியுங்கள் என்று சொல்லுவேன்; உடனே நீங்கள் பயப்படாமல் அவனைக் கொன்றுபோடுங்கள்; நான் அல்லவோ அதை உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்; திடன்கொண்டு தைரியமாயிருங்கள் என்று சொல்லியிருந்தான். 29 அப்சலோம் கற்பித்தபடியே அப்சலோமின் வேலைக்காரர் அம்னோனுக்குச் செய்தார்கள்; அப்பொழுது ராஜகுமாரர் எல்லாரும் எழுந்திருந்து, அவரவர் தம்தம் கோவேறு கழுதையின்மேல் ஏறி ஓடிப்போனார்கள். 30 அவர்கள் வழியில் இருக்கிறபோதே, அப்சலோம் ராஜகுமாரரையெல்லாம் அடித்துக் கொன்றுபோட்டான், அவர்களில் ஒருவரும் மீந்திருக்க விடவில்லை என்கிறதாய், தாவீதுக்குச் செய்தி வந்தது. 31 அப்பொழுது ராஜா எழுந்திருந்து, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, தரையிலே விழுந்துகிடந்தான்; அவன் ஊழியக்காரர் எல்லாரும் தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு நின்றார்கள். 32 அப்பொழுது தாவீதின் தமையனாகிய சிமியாவின் குமாரன் யோனதாப் வந்து: ராஜகுமாரரான வாலிபரையெல்லாம் கொன்றுபோட்டார்கள் என்று என் ஆண்டவன் நினைக்கவேண்டாம்; அம்னோன்மாத்திரம் செத்துப்போனான்; அவன் தன் சகோதரியாகிய தாமாரைக் கற்பழித்த நாள்முதற்கொண்டு, அது அப்சலோமின் நெஞ்சில் இருந்தது. 33 இப்போதும் ராஜகுமாரர்கள் எல்லாரும் செத்தார்கள் என்கிற பேச்சை ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய மனதிலே வைக்கவேண்டாம்; அம்னோன் ஒருவனே செத்தான் என்றான்; அப்சலோம் ஓடிப்போனான். 34 ஜாமக்காரச் சேவகன் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, அநேகம் ஜனங்கள் தனக்குப் பின்னாலே மலை ஓரமாய் வருகிறதைக் கண்டான். 35 அப்பொழுது யோனதாப் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜகுமாரர் வருகிறார்கள்; உமது அடியேன் சொன்னபடியே ஆயிற்று என்றான். 36 அவன் பேசி முடிந்தபோது, ராஜகுமாரர் வந்து, சத்தமிட்டு அழுதார்கள்; ராஜாவும் அவனுடைய எல்லா ஊழியக்காரரும் மிகவும் புலம்பி அழுதார்கள். 37 அப்சலோமோ அம்மியூதின் குமாரனாகிய தல்மாய் என்னும் கேசூரின் ராஜாவினிடத்திற்கு ஓடிப்போனான். தாவீது தினந்தோறும் தன் குமாரனுக்காகத் துக்கித்துக்கொண்டிருந்தான். 38 அப்சலோம் கேசூருக்கு ஓடிப்போய், அங்கே மூன்று வருஷம் இருந்தான். 39 தாவீதுராஜா அம்னோன் செத்தபடியினால், அவனுக்காகத் துக்கித்து ஆறுதல் அடைந்தபோது அப்சலோமைப் பின்தொடரும் நினைவை விட்டுவிட்டான்.

2 சாமுவேல் 14

1 ராஜாவின் இருதயம் அப்சலோமின்மேல் இன்னும் தாங்கலாயிருக்கிறதைச் செரூயாவின் குமாரன் யோவாப் கண்டு, 2 அவன் தெக்கோவாவிலிருக்கிற புத்தியுள்ள ஒரு ஸ்திரீயை அழைத்து: நீ இழவு கொண்டாடுகிறவளைப்போல, துக்கவஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, எண்ணெய் பூசிக்கொள்ளாமல், இறந்துபோனவனுக்காக நெடுநாள் துக்கிக்கிற ஸ்திரீயைப்போலக் காண்பித்து, 3 ராஜாவினிடத்தில் போய், அவரை நோக்கி: இன்ன இன்ன பிரகாரமாகச் சொல் என்று அவள் சொல்லவேண்டிய வார்த்தைகளை யோவாப் அவள் வாயிலே போட்டான். 4 அப்படியே தெக்கோவா ஊராளான அந்த ஸ்திரீ ராஜாவோடே பேசப்போய், தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி: ராஜாவே, இரட்சியும் என்றாள். 5 ராஜா அவளைப் பார்த்து: உனக்கு என்ன வேண்டும் என்றதற்கு, அவள்: நான் விதவையானவள், என் புருஷன் சென்றுபோனான். 6 உமது அடியாளுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; அவர்கள் இருவரும் வெளியிலே சண்டைபண்ணி, அவர்களை விலக்க ஒருவரும் இல்லாதபடியினால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்றுபோட்டான். 7 வம்சத்தார் எல்லாரும் உம்முடைய அடியாளுக்கு விரோதமாய் எழும்பி, தன் சகோதரனைக் கொன்றுபோட்டவனை ஒப்பி; அவன் கொன்ற அவன் சகோதரனுடைய பிராணனுக்காக நாங்கள் அவனைக் கொன்றுபோடுவோம்; சுதந்தரவாளனாயினும் அவனையும் அழித்துப்போடுவோம் என்கிறார்கள். இப்படி என் புருஷனுக்குப் பேரும் நீதியும் பூமியின்மேல் வைக்கப்படாதபடிக்கு, எனக்கு இன்னும் மீதியாயிருக்கிற பொறியையும் அவித்துப்போட மனதாயிருக்கிறார்கள் என்றாள். 8 ராஜா அந்த ஸ்திரீயைப் பார்த்து: நீ உன் வீட்டுக்குப் போ, உன் காரியத்தைக்குறித்து உத்தரவு கொடுப்பேன் என்றான். 9 பின்னும் அந்தத் தெக்கோவாவூர் ஸ்திரீ ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவின்மேலும் அவர் சிங்காசனத்தின்மேலும் குற்றமில்லாதபடிக்கு, அந்தப் பழி என்மேலும் என் தகப்பன் வீட்டின்மேலும் சுமரக்கடவது என்றாள். 10 அதற்கு ராஜா: உனக்கு விரோதமாகப் பேசுகிறவனை என்னிடத்தில் கொண்டுவா; அப்பொழுது அவன் இனி உன்னைத் தொடாதிருப்பான் என்றான். 11 பின்னும் அவள்: இரத்தப்பழி வாங்குகிறவர்கள் அழிம்புசெய்து, என் குமாரனை அதம்பண்ணப் பெருகிப்போகாதபடிக்கு, ராஜாவானவர் தம்முடைய தேவனாகிய கர்த்தரை நினைப்பாராக என்றாள். அதற்கு ராஜா: உன் குமாரனுடைய மயிரில் ஒன்றாவது தரையில் விழுவதில்லை என்று கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். 12 அப்பொழுது அந்த ஸ்திரீ: ராஜாவாகிய என் ஆண்டவனோடே உமது அடியாள் ஒரு வார்த்தைசொல்ல உத்தரவாக வேண்டும் என்றாள். அவன்: சொல்லு என்றான். 13 அப்பொழுது அந்த ஸ்திரீ: பின்னை ஏன் தேவனுடைய ஜனத்திற்கு விரோதமாய் இப்படிப்பட்ட நினைவை நீர் கொண்டிருக்கிறீர், துரத்துண்ட தம்முடையவனை ராஜா திரும்ப அழைக்காததினாலே, ராஜா இப்பொழுது சொன்ன வார்த்தையினால் குற்றமுள்ளவரைப்போல் இருக்கிறார். 14 நாம் மரிப்பது நிச்சயம், திரும்பச் சேர்க்கக்கூடாதபடிக்கு, தரையிலே சுவறுகிற தண்ணீரைப்போல் இருக்கிறோம்; தேவன் ஜீவனை எடுத்துக்கொள்ளாமல், துரத்துண்டவன் முற்றிலும் தம்மைவிட்டு விலக்கப்படாதிருக்கும் நினைவுகளை நினைக்கிறார். 15 இப்போதும் நான் என் ஆண்டவனாகிய ராஜாவோடே இந்த வார்த்தையைப் பேசவந்த முகாந்தரம் என்னவென்றால்: ஜனங்கள் எனக்குப் பயமுண்டாக்கினதினால், நான் ராஜாவோடே பேசவந்தேன்; ஒருவேளை ராஜா தமது அடியாளுடைய வார்த்தையின்படி செய்வார் என்று உமது அடியாளாகிய நான் நினைத்ததினாலும் வந்தேனே ஒழிய வேறில்லை. 16 என்னையும் என் குமாரனையும் ஏகமாய்த் தேவனுடைய சுதந்தரத்திற்குப் புறம்பாக்கி, அழிக்க நினைக்கிற மனுஷனுடைய கைக்குத் தமது அடியாளை நீங்கலாக்கிவிடும்படிக்கு ராஜா கேட்பார். 17 ராஜாவாகிய என் ஆண்டவனுடைய வார்த்தை எனக்கு ஆறுதலாயிருக்கும் என்று உமது அடியாளாகிய நான் எண்ணினேன்; நன்மையையும் தீமையையும் கேட்கும்படி, ராஜாவாகிய என் ஆண்டவன் தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்; இதற்காக உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்றாள். 18 அப்பொழுது ராஜா அந்த ஸ்திரீக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னிடத்தில் கேட்கும் காரியத்தை நீ எனக்கு மறைக்கவேண்டாம் என்றான். அதற்கு அந்த ஸ்திரீ, ராஜாவாகிய என் ஆண்டவர் சொல்வாராக என்றாள். 19 அப்பொழுது ராஜா: இதிலெல்லாம் யோவாப் உனக்கு உட்கையாய் இருக்கவில்லையா என்று கேட்டான். அதற்கு ஸ்திரீ பிரதியுத்தரமாக, ராஜாவாகிய என் ஆண்டவன் சொன்னதற்கெல்லாம் வலதுபக்கத்திலாவது இடதுபக்கத்திலாவது விலகுவதற்கு ஒருவராலும் கூடாது என்று ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; உமது அடியானாகிய யோவாப்தான் இதை எனக்குக் கற்பித்து, அவனே இந்த எல்லா வார்த்தைகளையும் உமது அடியாளின் வாயிலே போட்டான். 20 நான் இந்தக் காரியத்தை உபமானமாய்ப் பேசுகிறதற்கு உமது அடியானாகிய யோவாப் அதற்குக் காரணமாயிருந்தான்; ஆனாலும் தேசத்தில் நடக்கிறதையெல்லாம் அறிய, என் ஆண்டவனுடைய ஞானம் தேவதூதனுடைய ஞானத்தைப்போல் இருக்கிறது என்றாள். 21 அப்பொழுது ராஜா யோவாபைப்பார்த்து: இதோ, இந்தக் காரியத்தைச் செய்கிறேன், நீ போய் அப்சலோம் என்னும் பிள்ளையாண்டானைத் திரும்ப அழைத்துக்கொண்டுவா என்றான். 22 அப்பொழுது யோவாப் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கி, ராஜாவை வாழ்த்தி: ராஜா தமது அடியானுடைய வார்த்தையின்படி செய்ததினால், என் ஆண்டவனாகிய ராஜாவின் கண்களில் எனக்குத் தயைகிடைத்தது என்று இன்று உமது அடியானுக்குத் தெரியவந்தது என்றான். 23 பின்பு யோவாப் எழுந்து, கேசூருக்குப் போய், அப்சலோமை எருசலேமுக்கு அழைத்துக்கொண்டுவந்தான். 24 ராஜா: அவன் என் முகத்தைப் பார்க்கவேண்டியதில்லை; தன் வீட்டுக்குத் திரும்பிப்போகட்டும் என்றான்; அப்படியே அப்சலோம் ராஜாவின் முகத்தைப் பார்க்காமல் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான். 25 இஸ்ரவேலர் அனைவருக்குள்ளும் அப்சலோமைப்போல் சவுந்தரியமுள்ளவனும் மெச்சிக்கொள்ளப்பட்டவனும் இல்லை; உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அவனில் ஒரு பழுதும் இல்லாதிருந்தது. 26 அவன் தன் தலைமயிர் தனக்குப் பாரமாயிருப்பதினால் வருஷாந்தரம் சிரைத்துக்கொள்ளுவான்; சிரைக்கும்போது, அவன் தலைமயிர் ராஜாவுடைய நிறையின்படி இருநூறு சேக்கல் நிறையாயிருக்கும். 27 அப்சலோமுக்கு மூன்று குமாரரும், தாமார் என்னும் பேர்கொண்ட ஒரு குமாரத்தியும் பிறந்திருந்தார்கள்; இவள் ரூபவதியான பெண்ணாயிருந்தாள். 28 அப்சலோம், ராஜாவின் முகத்தைக்காணாமலே, இரண்டு வருஷம் எருசலேமிலே குடியிருந்தான். 29 ஆகையால் அப்சலோம் யோவாபை ராஜாவினிடத்தில் அனுப்பும்படி அழைப்பித்தான்; அவனோ அவனிடத்திற்கு வரமாட்டேன் என்றான்; இரண்டாம்விசையும் அவன் அழைத்தனுப்பினான்; அவன் வரமாட்டேன் என்றான். 30 அப்பொழுது அவன் தன் வேலைக்காரரைப் பார்த்து: இதோ என் நிலத்திற்கு அருகே யோவாபின் நிலம் இருக்கிறது; அதிலே அவனுக்கு வாற்கோதுமை விளைந்திருக்கிறது; நீங்கள் போய் அதைத் தீக்கொளுத்திப்போடுங்கள் என்றான்; அப்படியே அப்சலோமின் வேலைக்காரர் அந்த நிலத்தை தீக்கொளுத்திப்போட்டார்கள். 31 அப்பொழுது யோவாப் எழுந்திருந்து, அப்சலோமிடத்தில் வீட்டிற்குள் போய், என்னுடைய நிலத்தை உம்முடைய வேலைக்காரர் தீக்கொளுத்திப்போட்டது என்ன என்று அவனைக் கேட்டான். 32 அப்சலோம் யோவாபைப் பார்த்து: இதோ, நான் ஏன் கேசூரிலிருந்து வந்தேன்; நான் அங்கே இருந்துவிட்டால் நலம் என்று ராஜாவுக்குச் சொல்லும்படி உம்மை ராஜாவினிடத்தில் அனுப்புவதற்காக உம்மை இங்கே வரும்படி அழைப்பித்தேன்; இப்போதும் நான் ராஜாவின் முகத்தைப் பார்க்கட்டும்; என்மேல் குற்றமிருந்தால் அவர் என்னைக் கொன்றுபோடட்டும் என்றான். 33 யோவாப் ராஜாவினிடத்தில் போய், அதை அவனுக்கு அறிவித்தபோது, அப்சலோமை அழைப்பித்தான்; அவன் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவுக்கு முன்பாகத் தரையிலே முகங்குப்புற விழுந்து வணங்கினான், அப்பொழுது ராஜா அப்சலோமை முத்தமிட்டான்.

2 சாமுவேல் 15

1 இதற்குப்பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன் ஓட ஐம்பது சேவகரையும் சம்பாதித்தான். 2 மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்திருந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, எவனாகிலும் தனக்கு இருக்கிற வழக்கு முகாந்தரமாய் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரான் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றுக்கடுத்த இன்ன ஊரான் என்றால், 3 அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன் காரியம் நேர்மையும் நியாயமுமாயிருக்கிறது; ஆனாலும் ராஜாவினிடத்திலே உன் காரியத்தை விசாரிப்பார் ஒருவரும் இல்லை என்பான். 4 பின்னும் அப்சலோம்: வழக்கு வியாஜ்யமுள்ளவர்கள் எல்லாரும் என்னிடத்தில் வந்து, நான் அவர்களுக்கு நியாயஞ்செய்யும்படிக்கு, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாயிருக்கும் என்பான். 5 எவனாகிலும் ஒருவன் அவனை வணங்கவரும்போது, அவன் தன் கையை நீட்டி அவனைத் தழுவி, முத்தஞ்செய்வான். 6 இந்தப்பிரகாரமாக அப்சலோம் ராஜாவினிடத்தில் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலருக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனுஷருடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான். 7 நாற்பது வருஷம் சென்றபின்பு, அப்சலோம் ராஜாவை நோக்கி: நான் கர்த்தருக்குப் பண்ணின என் பொருத்தனையை எப்ரோனில் செலுத்தும்படிக்கு நான் போக உத்தரவுகொடும். 8 கர்த்தர் என்னை எருசலேமுக்குத் திரும்பி வரப்பண்ணினால், கர்த்தருக்கு ஆராதனை செய்வேன் என்று உமது அடியானாகிய நான் சீரியாதேசத்தில் கேசூரிலே குடியிருக்கும்போது, பொருத்தனைபண்ணினேன் என்றான். 9 அதற்கு ராஜா, சமாதானத்தோடே போ என்றான்; அப்பொழுது அவன் எழுந்து எப்ரோனுக்குப் போனான். 10 அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் வேவுகாரரை அனுப்பி, நீங்கள் எக்காளத்தொனியைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான். 11 எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட இருநூறுபேர் அப்சலோமோடே கூடப்போனார்கள்; அவர்கள் வஞ்சகமின்றி அறியாமையினால் போனார்கள். 12 அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனாகிய அகித்தோப்பேல் என்னும் கீலோனியனையும் அவன் ஊராகிய கீலோவிலிருந்து வரவழைப்பித்தான்; அப்படியே கட்டுப்பாடு பலத்து, ஜனங்கள் அப்சலோமினிடத்தில் திரளாய் வந்து கூடினார்கள். 13 அதை அறிவிக்கிற ஒருவன் தாவீதினிடத்தில் வந்து, இஸ்ரவேலில் ஒவ்வொருவருடைய இருதயமும் அப்சலோமைப்பற்றிப்போகிறது என்றான். 14 அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்திலுள்ள தன்னுடைய எல்லா ஊழியக்காரரையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை; அவன் தீவிரித்து நம்மிடத்தில் வந்து, நம்மைப் பிடித்து, நம்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, நகரத்தைப் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணாதபடிக்குத் தீவிரமாய்ப் புறப்படுங்கள் என்றான். 15 ராஜாவின் ஊழியக்காரர் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜாவாகிய எங்கள் ஆண்டவன் கட்டளையிடும் காரியத்தையெல்லாம் செய்ய உமது அடியாராகிய நாங்கள் ஆயத்தமாயிருக்கிறோம் என்றார்கள். 16 அப்படியே ராஜாவும் அவனுடைய வீட்டார் எல்லாரும் கால்நடையாய்ப் புறப்பட்டார்கள்; வீட்டைக்காக்க ராஜா மறுமனையாட்டிகளாகிய பத்து ஸ்திரீகளைப் பின்வைத்தான். 17 ராஜாவும் சமஸ்த ஜனங்களும் கால்நடையாய்ப் புறப்பட்டு, சற்றுத்தூரம் போய், ஒரு இடத்திலே தரித்து நின்றார்கள். 18 அவனுடைய ஊழியக்காரர் எல்லாரும், கிரேத்தியர் யாவரும் பிலேத்தியர் யாவரும் அவன் பக்கத்திலே நடந்துபோனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாய் வந்திருந்த அறுநூறுபேராகிய கித்தியர் எல்லாரும் ராஜாவுக்குமுன்பாக நடந்தார்கள். 19 அப்பொழுது ராஜா கித்தியனாகிய ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடனேகூட வருவானேன்? நீ திரும்பிப்போய், ராஜாவுடனேகூட இரு; நீ அந்நியதேசத்தான்; நீ உன் இடத்திற்குத் திரும்பிப் போகலாம். 20 நீ நேற்றுதானே வந்தாய்; இன்று நான் உன்னை எங்களோடே நடந்துவரும்படிக்கு அழைத்துக்கொண்டு போகலாமா? நான் போகக்கூடிய இடத்திற்குப் போகிறேன்; நீ உன் சகோதரரையும் அழைத்துக்கொண்டு திரும்பிப்போ; கிருபையும் உண்மையும் உன்னோடே இருப்பதாக என்றான். 21 ஆனாலும் ஈத்தாய் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவாகிய என் ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்று கர்த்தருடைய ஜீவனையும் ராஜாவாகிய என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான். 22 அப்பொழுது தாவீது ஈத்தாயை நோக்கி: நடந்துவா என்றான்; அப்படியே கித்தியனாகிய ஈத்தாயும் அவனுடைய எல்லா மனுஷரும் அவனோடிருக்கிற எல்லாப் பிள்ளைகளும் நடந்துபோனார்கள். 23 சகல ஜனங்களும் நடந்துபோகிறபோது, தேசத்தார் எல்லாரும் மகா சத்தமாய் அழுதார்கள்; ராஜா கீதரோன் ஆற்றைக் கடந்தான்; ஜனங்கள் எல்லாரும் வனாந்தரத்திற்குப் போகிற வழியே நடந்துபோனார்கள். 24 சாதோக்கும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை அவனோடேகூட இருந்து சுமக்கிற சகல லேவியரும் வந்து, தேவனுடைய பெட்டியை அங்கே வைத்தார்கள்; ஜனங்கள் எல்லாரும் நகரத்திலிருந்து கடந்துதீருமட்டும், அபியத்தார் திரும்பிப்போயிருந்தான். 25 ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; கர்த்தருடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், நான் அதையும் அவர் வாசஸ்தலத்தையும் பார்க்கிறதற்கு, என்னைத் திரும்ப வரப்பண்ணுவார். 26 அவர்: உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்பாராகில், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான். 27 பின்னும் ராஜா ஆசாரியனாகிய சாதோக்கை நோக்கி: நீ ஞானதிருஷ்டிக்காரன் அல்லவோ? நீ சமாதானத்தோடே நகரத்திற்குத் திரும்பு; உன் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானுமாகிய உங்கள் குமாரர் இரண்டுபேரும் உங்களோடேகூடத் திரும்பிப் போகட்டும். 28 எனக்கு அறிவிக்கிறதற்கு உங்களிடத்திலிருந்து செய்திவருமட்டும், நான் வனாந்தரத்தின் வெளிகளிலே தரித்திருப்பேன் என்றான். 29 அப்படியே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பெட்டியை எருசலேமுக்குத் திரும்பக் கொண்டுபோய், அங்கே இருந்தார்கள். 30 தாவீது தன் முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு, ஒலிவமலையின்மேல் ஏறிப்போனான்; அவனோடிருந்த சகல ஜனங்களும் முகத்தை மூடி அழுதுகொண்டு ஏறினார்கள். 31 அப்சலோமோடே கட்டுப்பாடுபண்ணினவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது: கர்த்தாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பயித்தியமாக்கிவிடுவீராக என்றான். 32 தாவீது மலையின் உச்சிமட்டும்வந்து, அங்கே தேவனைப் பணிந்துகொண்டபோது, இதோ, அற்கியனாகிய ஊசாய் தன் வஸ்திரத்தைக் கிழித்துக்கொண்டு, தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவனாய் அவனுக்கு எதிர்ப்பட்டான். 33 தாவீது அவனைப் பார்த்து: நீ என்னோடேகூட நடந்துவந்தால் எனக்குப் பாரமாயிருப்பாய். 34 நீ நகரத்திற்குத் திரும்பிப்போய், அப்சலோமை நோக்கி: ராஜாவே, உம்முடைய ஊழியக்காரனாயிருப்பேன்; முன் நான் உம்முடைய தகப்பனுக்கு ஊழியக்காரனாயிருந்தேன்; இப்போது நான் உமக்கு ஊழியக்காரன் என்றாயேயாகில், எனக்காக அகித்தோப்பேலின் ஆலோசனையை அபத்தமாக்குவாய். 35 உன்னோடே அங்கே சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருக்கிறார்கள் அல்லவா? ராஜாவின் வீட்டிலே பிறக்கிற ஏதேது செய்தி உண்டோ, என்னென்ன கேள்விப்படுகிறாயோ, அதையெல்லாம் சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களுக்கு அறிவிப்பாய். 36 அங்கே அவர்களோடே சாதோக்கின் மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானும், அவர்கள் இரண்டு குமாரரும் இருக்கிறார்கள்; நீங்கள் கேள்விப்படுகிற செய்தியையெல்லாம் அவர்கள்வசமாய் எனக்கு அனுப்புவீர்களாக என்றான். 37 அப்படியே தாவீதின் சிநேகிதனாகிய ஊசாய் நகரத்திற்கு வந்தான்; அப்சலோமும் எருசலேமுக்கு வந்தான்.

2 சாமுவேல் 16

1 தாவீது மலையுச்சியிலிருந்து சற்றப்புறம் நடந்துபோனபோது, இதோ, மேவிபோசேத்தின் காரியக்காரனாகிய சீபா, பொதிகளைச் சுமக்கிற இரண்டு கழுதைகளை ஓட்டிக்கொண்டுவந்து, அவனைச் சந்தித்தான்; அவைகளில் இருநூறு அப்பங்களும், வற்றலான நூறு திராட்சப்பழக்குலைகளும், வசந்தகாலத்துப் பலனான நூறு குலைகளும், ஒரு துருத்தி திராட்சரசமும் இருந்தது. 2 ராஜா சீபாவைப்பார்த்து: இவைகள் என்னத்திற்கு என்று கேட்டதற்கு, சீபா: கழுதைகள் ராஜாவின் வீட்டார் ஏறுகிறதற்கும், அப்பங்களும் பழங்களும் வாலிபர் புசிக்கிறதற்கும், திராட்சரசம் வனாந்தரத்தில் விடாய்த்துப்போனவர்கள் குடிக்கிறதற்குமே என்றான். 3 அப்பொழுது ராஜா: உன் ஆண்டவனுடைய குமாரன் எங்கே என்று கேட்டதற்கு, சீபா ராஜாவை நோக்கி: எருசலேமில் இருக்கிறான்; இன்று இஸ்ரவேல் வீட்டார் என் தகப்பனுடைய ராஜ்யத்தை என் வசமாய்த் திரும்பப்பண்ணுவார்கள் என்றான் என்று சொன்னான். 4 அப்பொழுது ராஜா சீபாவை நோக்கி: மேவிபோசேத்திற்கு உண்டானதெல்லாம் உன்னுடையதாயிற்று என்றான். அதற்குச் சீபா: ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய கண்களில் எனக்குத் தயைகிடைக்கவேண்டும் என்று நான் பணிந்து கேட்டுக்கொள்ளுகிறேன் என்றான். 5 தாவீதுராஜா பகூரிம்மட்டும் வந்தபோது, இதோ, சவுல் வீட்டு வம்சத்தானாயிருக்கிற கேராவின் குமாரனாகிய சீமேயி என்னும் பேருள்ள ஒரு மனுஷன் அங்கேயிருந்து புறப்பட்டு, தூஷித்துக்கொண்டே நடந்துவந்து, 6 சகல ஜனங்களும், சகல பலசாலிகளும், தாவீதின் வலதுபுறமாகவும் இடதுபுறமாகவும் நடக்கையில், தாவீதின்மேலும், தாவீதுராஜாவுடைய சகல ஊழியக்காரர்மேலும் கற்களை எறிந்தான். 7 சீமேயி அவனைத் தூஷித்து: இரத்தப்பிரியனே, பேலியாளின் மனுஷனே, தொலைந்துபோ, தொலைந்துபோ. 8 சவுலின் ஸ்தலத்தில் ராஜாவான உன்மேல் கர்த்தர் சவுல் வீட்டாரின் இரத்தப்பழியைத் திரும்பப்பண்ணினார்; கர்த்தர் ராஜ்யபாரத்தை உன் குமாரனாகிய அப்சலோமின் கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்போதும் இதோ, உன் அக்கிரமத்தில் அகப்பட்டாய்; நீ இரத்தப்பிரியனான மனுஷன் என்றான். 9 அப்பொழுது செருயாவின் குமாரன் அபிசாய் ராஜாவை நோக்கி: அந்தச் செத்தநாய் ராஜாவாகிய என் ஆண்டவனை தூஷிப்பானேன்? நான் போய் அவன் தலையை வாங்கிப்போடட்டுமே என்றான். 10 அதற்கு ராஜா: செருயாவின் குமாரரே, எனக்கும் உங்களுக்கும் என்ன? அவன் என்னைத் தூஷிக்கட்டும்; தாவீதைத் தூஷிக்கவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார்; ஆகையால் ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்கத்தக்கவன் யார் என்றான். 11 பின்னும் தாவீது அபிசாயையும் தன் ஊழியக்காரர் எல்லாரையும் பார்த்து: இதோ, என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத்தேடும்போது, இந்தப் பென்யமீனன் எத்தனை அதிகமாய்ச் செய்வான், அவன் தூஷிக்கட்டும்; அப்படிச் செய்யக் கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். 12 ஒருவேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து, இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான். 13 அப்படியே தாவீதும் அவன் மனுஷரும் வழியே நடந்துபோனார்கள்; சீமேயியும் மலையின் பக்கத்திலே அவனுக்கு எதிராக நடந்து தூஷித்து, அவனுக்கு எதிராகக் கற்களை எறிந்து, மண்ணைத் தூற்றிக்கொண்டே வந்தான். 14 ராஜாவும் அவனோடிருந்த சகல ஜனங்களும் விடாய்த்தவர்களாய், தங்குமிடத்திலே சேர்ந்து, இளைப்பாறினார்கள். 15 அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷராகிய சகல ஜனங்களும் அவனோடேகூட அகித்தோப்பேலும் எருசலேமுக்கு வந்தார்கள். 16 அற்கியனாகிய ஊசாய் என்னும் தாவீதின் சிநேகிதன் அப்சலோமிடத்தில் வந்தபோது, ஊசாய் அப்சலோமை நோக்கி: ராஜாவே வாழ்க, ராஜாவே வாழ்க என்றான். 17 அப்பொழுது அப்சலோம் ஊசாயைப் பார்த்து: உன் சிநேகிதன்மேல் உனக்கு இருக்கிற தயை இதுதானோ? உன் சிநேகிதனோடே நீ போகாதேபோனது என்ன என்று கேட்டான். 18 அதற்கு ஊசாய் அப்சலோமை நோக்கி: அப்படி அல்ல, கர்த்தரும் இந்த ஜனங்களும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும் தெரிந்துகொள்ளுகிறவரையே நான் சேர்ந்து அவரோடே இருப்பேன். 19 இதுவும் அல்லாமல், நான் யாரிடத்தில் சேவிப்பேன்? அவருடைய குமாரனிடத்தில் அல்லவா? உம்முடைய தகப்பனிடத்தில் எப்படிச் சேவித்தேனோ, அப்படியே உம்மிடத்திலும் சேவிப்பேன் என்றான். 20 அப்சலோம் அகித்தோப்பேலைப் பார்த்து, நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று ஆலோசனை சொல்லும் என்றான். 21 அப்பொழுது அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: வீட்டைக்காக்க உம்முடைய தகப்பன் பின்வைத்த அவருடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசியும், அப்பொழுது உம்முடைய தகப்பனுக்கு நாற்றமாய்ப்போனீர் என்பதை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, உம்மோடிருக்கிற எல்லாருடைய கைகளும் பலக்கும் என்றான். 22 அப்படியே அப்சலோமுக்கு உப்பரிகையின்மேல் ஒரு கூடாரத்தைப் போட்டார்கள்; அங்கே அப்சலோம் சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாக, தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளிடத்தில் பிரவேசித்தான். 23 அந்நாட்களில் அகித்தோப்பேல் சொல்லும் ஆலோசனை தேவனுடைய வாக்கைப்போல இருந்தது, அப்படி அகித்தோப்பேலின் ஆலோசனையெல்லாம் தாவீதுக்கும் இருந்தது, அப்சலோமுக்கும் அப்படியே இருந்தது.

2 சாமுவேல் 17

1 பின்பு அகித்தோப்பேல் அப்சலோமை நோக்கி: நான் பன்னீராயிரம்பேரைத் தெரிந்துகொண்டு எழுந்து, இன்று இராத்திரி தாவீதைப் பின்தொடர்ந்து போகட்டும். 2 அவன் விடாய்த்தவனும் கைதளர்ந்தவனுமாயிருக்கையில், நான் அவனிடத்தில் போய், அவனைத் திடுக்கிடப்பண்ணுவேன்; அப்பொழுது அவனோடிருக்கும் ஜனங்களெல்லாரும் ஓடிப்போவதினால், நான் ராஜா ஒருவனைமாத்திரம் வெட்டி, 3 ஜனங்களையெல்லாம் உம்முடைய வசமாய்த் திரும்பப்பண்ணுவேன், இப்படிச்செய்ய நீர் வகைதேடினால், எல்லாரும் திரும்பினபின் ஜனங்கள் சமாதானத்தோடு இருப்பார்கள் என்றான். 4 இந்த வார்த்தை அப்சலோமின் பார்வைக்கும், இஸ்ரவேலுடைய சகல மூப்பரின் பார்வைக்கும் நலமாய்த் தோன்றினது. 5 ஆகிலும் அப்சலோம்: அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிட்டு, அவன் வாய்மொழியையும் கேட்போம் என்றான். 6 ஊசாய் அப்சலோமிடத்தில் வந்தபோது, அப்சலோம் அவனைப் பார்த்து: இந்தப்பிரகாரமாக அகித்தோப்பேல் சொன்னான்; அவன் வார்த்தையின்படி செய்வோமா? அல்லவென்றால், நீ சொல் என்றான். 7 அப்பொழுது ஊசாய் அப்சலோமை நோக்கி: அகித்தோப்பேல் இந்தவிசை சொன்ன ஆலோசனை நல்லதல்ல என்றான். 8 மேலும் ஊசாய்: உம்முடைய தகப்பனும் அவன் மனுஷரும் பலசாலிகள் என்றும், வெளியிலே குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல மனமெரிகிறவர்கள் என்றும் நீர் அறிவீர்; உம்முடைய தகப்பன் யுத்தவீரனுமாயிருக்கிறார்; அவர் இராக்காலத்தில் ஜனங்களோடே தங்கமாட்டார். 9 இதோ, அவர் இப்பொழுது ஒரு கெபியிலாவது, வேறே யாதோரிடத்திலாவது ஒளித்திருப்பார்; துவக்கத்திலேதானே நம்முடையவர்களில் சிலர் பட்டார்களேயானால், அதைக் கேட்கிற யாவரும் அப்சலோமைப் பின்செல்லுகிற ஜனங்களில் சங்காரம் உண்டாயிற்று என்பார்கள். 10 அப்பொழுது சிங்கத்தின் இருதயத்திற்கொத்த இருதயமுள்ள பலவானாயிருக்கிறவனுங்கூட கலங்கிப்போவான்; உம்முடைய தகப்பன் சவுரியவான் என்றும், அவரோடிருக்கிறவர்கள் பலசாலிகள் என்றும், இஸ்ரவேலர் எல்லாரும் அறிவார்கள். 11 ஆதலால் நான் சொல்லுகிற யோசனையாவது, தாண்முதல் பெயெர்செபாமட்டும் இருக்கிற கடற்கரை மணலத்தனை திரட்சியான இஸ்ரவேலர் எல்லாரும் உம்மண்டையில் கூட்டப்பட்டு, நீர்தானேகூட யுத்தத்திற்குப் போகவேண்டும். 12 அப்பொழுது அவரைக் கண்டுபிடிக்கிற எவ்விடத்திலாகிலும் நாம் அவரிடத்தில் போய், பனி பூமியின்மேல் இறங்குவதுபோல அவர்மேல் இறங்குவோம்; அப்படியே அவரோடிருக்கிற எல்லா மனுஷரிலும் ஒருவனும் அவருக்கு மீந்திருப்பதில்லை. 13 ஒரு பட்டணத்திற்குள் புகுந்தாரேயானால், இஸ்ரவேலர் எல்லாரும் அந்தப் பட்டணத்தின்மேல் கயிறுகளைப் போட்டு, அங்கே ஒரு பொடிக்கல்லும் காணப்படாதே போகுமட்டும், அதை இழுத்து ஆற்றிலே போடுவார்கள் என்றான். 14 அப்பொழுது அப்சலோமும் இஸ்ரவேல் மனுஷர் அனைவரும்: அகித்தோப்பேலின் ஆலோசனையைப்பார்க்கிலும் அற்கியனாகிய ஊசாயின் ஆலோசனை நல்லது என்றார்கள்; இப்படி கர்த்தர் அப்சலோமின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணும் பொருட்டு, அகித்தோப்பேலின் நல்ல ஆலோசனையை அபத்தமாக்குகிறதற்குக் கர்த்தர் கட்டளையிட்டார். 15 பின்பு ஊசாய், சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களைப் பார்த்து: இன்ன இன்னபடி அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் மூப்பருக்கும் ஆலோசனை சொன்னான்; நானோ இன்ன இன்னபடி ஆலோசனை சொன்னேன். 16 இப்பொழுதும் நீங்கள் சீக்கிரமாய்த் தாவீதுக்கு அறிவிக்கும்படிக்குச் செய்தி அனுப்பி: நீர் இன்று இராத்திரி வனாந்தரத்தின் வெளிகளிலே தங்கவேண்டாம்; ராஜாவும் அவரோடிருக்கிற சகல ஜனங்களும் விழுங்கப்படாதபடிக்குத் தாமதம் இல்லாமல் அக்கரைப்படவேண்டும் என்று சொல்லச்சொல்லுங்கள் என்றான். 17 யோனத்தானும் அகிமாசும், தாங்கள் நகரத்தில் பிரவேசிக்கிறதினால் காணப்படாதபடிக்கு, என்ரோகேல் அண்டை நின்றுகொண்டிருந்தார்கள்; ஒரு வேலைக்காரி போய், அதை அவர்களுக்குச் சொன்னாள்; அவர்கள் தாவீது ராஜாவுக்கு அதை அறிவிக்கப்போனார்கள். 18 ஒரு பிள்ளையாண்டான் அவர்களைக் கண்டு, அப்சலோமுக்கு அறிவித்தான்; ஆகையால் அவர்கள் இருவரும் சீக்கிரமாய்ப் போய், பகூரிமிலிருக்கிற ஒரு மனுஷன் வீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; அவன் முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது; அதில் இறங்கினார்கள். 19 வீட்டுக்காரி ஒரு பாயை எடுத்து, கிணற்றுவாயின்மேல் விரித்து, காரியம் வெளிப்படாதபடிக்கு, அதின்மேல் நொய்யைப் பரப்பிவைத்தாள். 20 அப்சலோமின் சேவகர் அந்த ஸ்திரீயினிடத்தில் வீட்டிற்குள் வந்து: அகிமாசும் யோனத்தானும் எங்கே என்று கேட்டார்கள்; அவர்களுக்கு அந்த ஸ்திரீ: வாய்க்காலுக்கு அப்பாலே போய்விட்டார்கள் என்றாள்; இவர்கள் தேடிக்காணாதேபோய், எருசலேமுக்குத் திரும்பினார்கள். 21 இவர்கள் போனபிற்பாடு, அவர்கள் கிணற்றிலிருந்து ஏறிவந்து, தாவீதுராஜாவுக்கு அறிவித்து, தாவீதை நோக்கி: சீக்கிரமாய் எழுந்து ஆற்றைக் கடந்துபோங்கள்; இன்னபடி அகித்தோப்பேல் உங்களுக்கு விரோதமாய் ஆலோசனை சொன்னான் என்றார்கள். 22 அப்பொழுது தாவீதும் அவனோடிருந்த சகல ஜனங்களும் எழுந்து யோர்தானைக் கடந்துபோனார்கள்; பொழுது விடிகிறதற்குள்ளாக யோர்தானைக் கடவாதவன் ஒருவனும் இல்லை. 23 அகித்தோப்பேல் தன் யோசனையின்படி நடக்கவில்லை என்று கண்டபோது, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் ஊரிலிருக்கிற தன் வீட்டுக்குப் போய், தன் வீட்டுக்காரியங்களை ஒழுங்குபடுத்தி, நான்றுகொண்டு செத்தான்; அவன் தகப்பன் கல்லறையில் அவனை அடக்கம்பண்ணினார்கள். 24 தாவீது மக்னாயீமுக்கு வந்தான்; அப்சலோமும் சகல இஸ்ரவேலரோடுங்கூட யோர்தானைக் கடந்தான். 25 அப்சலோம், யோவாபுக்குப் பதிலாக அமாசாவை இராணுவத்தலைவனாக்கினான்; இந்த அமாசா, நாகாசின் குமாரத்தியும் செருயாவின் சகோதரியும் யோவாபின் அத்தையுமாகிய அபிகாயிலைப் படைத்த இஸ்ரவேலனாகிய எத்திரா என்னும் பேருள்ள ஒரு மனுஷனுடைய குமாரனாயிருந்தான். 26 இஸ்ரவேல் ஜனங்களும் அப்சலோமும் கீலேயாத் தேசத்திலே பாளயமிறங்கினார்கள். 27 தாவீது மக்னாயீமில் சேர்ந்தபோது, அம்மோன் புத்திரரின் தேசத்து ரப்பா பட்டணத்தானாகிய சோபி என்னும் நாகாசின் குமாரனும், லோதேபார் ஊரானான அம்மியேலின் குமாரன் மாகீரும், ரோகிலிம் ஊரானும் கீலேயாத்தியனுமாகிய பர்சிலாவும், 28 மெத்தைகளையும், கலங்களையும், மண்பாண்டங்களையும், கோதுமையையும், வாற்கோதுமையையும், மாவையும், வறுத்த பயற்றையும், பெரும் பயற்றையும், சிறு பயற்றையும், வறுத்த சிறு பயற்றையும், 29 தேனையும், வெண்ணெயையும், ஆடுகளையும், பால்கட்டிகளையும், தாவீதுக்கும் அவனோடிருந்த ஜனங்களுக்கும் சாப்பிடுகிறதற்குக் கொண்டுவந்தார்கள்; அந்த ஜனங்கள் வனாந்தரத்திலே பசியும் இளைப்பும் தவனமுமாயிருப்பார்கள் என்று இப்படிச் செய்தார்கள்.

2 சாமுவேல் 18

1 தாவீது தன்னோடிருந்த ஜனங்களை இலக்கம் பார்த்து, அவர்கள்மேல் ஆயிரத்துக்கு அதிபதிகளையும், நூற்றுக்கு அதிபதிகளையும் வைத்து, 2 பின்பு தாவீது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கை யோவாபின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைச் செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைக் கித்தியனாகிய ஈத்தாயின் வசமாகவும் அனுப்பி: நானும் உங்களோடேகூடப் புறப்பட்டு வருவேன் என்று ராஜா ஜனங்களிடத்தில் சொன்னான். 3 ஜனங்களோ: நீர் புறப்படவேண்டாம்; நாங்கள் முறிந்தோடிப்போனாலும், அவர்கள் எங்கள் காரியத்தை ஒரு பொருட்டாக எண்ணமாட்டார்கள்; எங்களில் பாதிப்பேர் செத்துப்போனாலும், எங்கள் காரியத்தைப்பற்றிக் கவலைப்படமாட்டார்கள்; நீரோ, எங்களில் பதினாயிரம்பேருக்குச் சரி; நீர் பட்டணத்தில் இருந்துகொண்டு, எங்களுக்கு உதவிசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்கும் என்றார்கள். 4 அப்பொழுது ராஜா அவர்களைப் பார்த்து: உங்களுக்கு நலமாய்த் தோன்றுகிறதைச் செய்வேன் என்று சொல்லி, ராஜா ஒலிமுகவாசல் ஓரத்திலே நின்றான்; ஜனங்கள் எல்லாரும் நூறுநூறாகவும், ஆயிரம் ஆயிரமாகவும் புறப்பட்டார்கள். 5 ராஜா யோவாபையும், அபிசாயையும், ஈத்தாயையும் நோக்கி: பிள்ளையாண்டானாகிய அப்சலோமை என்னிமித்தம் மெதுவாய் நடப்பியுங்கள் என்று கட்டளையிட்டான்; இப்படி ராஜா அப்சலோமைக்குறித்து அதிபதிகளுக்கெல்லாம் கட்டளையிட்டதை ஜனங்கள் எல்லாரும் கேட்டிருந்தார்கள். 6 ஜனங்கள் வெளியே இஸ்ரவேலருக்கு எதிராகப் புறப்பட்டபிற்பாடு, எப்பிராயீம் காட்டிலே யுத்தம் நடந்தது. 7 அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் சேவகருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அங்கே அன்றையதினம் இருபதினாயிரம்பேர் மடியத்தக்கதாக பெரிய சங்காரம் உண்டாயிற்று. 8 யுத்தம் அந்த தேசம் எங்கும் பரந்தது; அன்றையதினம் பட்டயம் பட்சித்த ஜனங்களைப்பார்க்கிலும், காடு பட்சித்த ஜனம் அதிகம். 9 அப்சலோம் தாவீதின் சேவகருக்கு எதிர்ப்பட்டான்; அப்சலோம் கோவேறு கழுதையின்மேல் ஏறிவரும்போது, அந்தக் கோவேறுகழுதை சன்னல்பின்னலான ஒரு பெரிய கர்வாலி மரத்தின்கீழ் வந்ததினால், அவனுடைய தலை கர்வாலிமரத்தில் மாட்டிக்கொண்டு, அவன் வானத்துக்கும் பூமிக்கும் நடுவே தொங்கினான்; அவன் ஏறியிருந்த கோவேறுகழுதை அப்பாலே போயிற்று. 10 அதை ஒருவன் கண்டு, யோவாபுக்கு அறிவித்து: இதோ, அப்சலோமை ஒரு கர்வாலிமரத்திலே தொங்கக்கண்டேன் என்றான். 11 அப்பொழுது யோவாப் தனக்கு அதை அறிவித்தவனை நோக்கி: நீ அதைக் கண்டாயே; பின்னை ஏன் அவனை அங்கே வெட்டி, தரையிலே தள்ளிப்போடவில்லை? நான் உனக்குப் பத்து வெள்ளிக்காசையும் ஒரு கச்சையையும் கொடுக்கக் கடமையுள்ளவனாயிருப்பேனே என்றான். 12 அந்த மனுஷன் யோவாபை நோக்கி: என் கைகளில் ஆயிரம் வெள்ளிக்காசு நிறுத்துக் கொடுக்கப்பட்டாலும், நான் ராஜாவுடைய குமாரன்மேல் என் கையை நீட்டமாட்டேன்; பிள்ளையாண்டானாகிய அப்சலோமை நீங்கள் அவரவர் காப்பாற்றுங்கள் என்று ராஜா உமக்கும் அபிசாய்க்கும் ஈத்தாய்க்கும் எங்கள் காதுகள் கேட்கக் கட்டளையிட்டாரே. 13 ராஜாவுக்கு ஒரு காரியமும் மறைவாயிருக்கமாட்டாது; ஆதலால், நான் அதைச் செய்வேனாகில், என் பிராணனுக்கே விரோதமாகச் செய்பவனாவேன், நீரும் எனக்கு விரோதமாயிருப்பீர் என்றான். 14 ஆதலால் யோவாப்: நான் இப்படி உன்னோடே பேசி, தாமதிக்கமாட்டேன் என்று சொல்லி, தன் கையிலே மூன்று வல்லயங்களை எடுத்துக்கொண்டு, அப்சலோம் இன்னும் கர்வாலிமரத்தின் நடுவிலே உயிரோடே தொங்குகையில், அவைகளை அவன் நெஞ்சிலே குத்தினான். 15 அப்பொழுது யோவாபின் ஆயுததாரிகளாகிய பத்து சேவகர் அப்சலோமைச் சூழ்ந்து அவனை அடித்துக் கொன்றுபோட்டார்கள். 16 அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதி ஜனங்களை நிறுத்திப்போட்டபடியினால், ஜனங்கள் இஸ்ரவேலைப் பின்தொடருகிறதை விட்டுத் திரும்பினார்கள். 17 அவர்கள் அப்சலோமை எடுத்து, அவனைக் காட்டிலுள்ள ஒரு பெரிய குழியிலே போட்டு, அவன்மேல் மகா பெரிய கற்குவியலைக் குவித்தார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். 18 அப்சலோம் உயிரோடே இருக்கையில்: என் பேரை நினைக்கப்பண்ணும்படியாக எனக்குக் குமாரன் இல்லை என்று சொல்லி, ராஜாவின் பள்ளத்தாக்கிலே தனக்கென்று ஒரு தூணை நிறுத்தி, அந்தத் தூணுக்குத் தன் பேரைத் தரித்திருந்தான்; அது இந்நாள்வரைக்கும் அப்சலோமின் அடையாளம் என்று சொல்லப்படும். 19 சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ்: கர்த்தர் ராஜாவை அவர் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்னும் செய்தியை அவருக்குக் கொண்டுபோக, நான் ஓடட்டுமே என்றான். 20 யோவாப் அவனை நோக்கி: இன்றையதினம் நீ செய்தியைக் கொண்டுபோகக்கூடாது; இன்னொருநாளிலே நீ செய்தியைக் கொண்டுபோகலாம்; ராஜாவின் குமாரன் செத்தபடியினால், இன்றைக்கு நீ செய்தியைக் கொண்டுபோகவேண்டாம் என்று சொல்லி, 21 யோவாப் கூஷியை நோக்கி: நீ போய் கண்டதை ராஜாவுக்கு அறிவி என்றான்; கூஷி யோவாபை வணங்கி ஓடினான். 22 சாதோக்கின் குமாரனாகிய அகிமாஸ் இன்னும் யோவாபை நோக்கி: எப்படியானாலும் கூஷியின் பிறகாலே நானும் ஓடட்டுமே என்று திரும்பக் கேட்டதற்கு, யோவாப்: என் மகனே, சொல்லும்படி உனக்கு நல்ல செய்தி இல்லாதிருக்கையில், நீ ஓடவேண்டியது என்ன என்றான். 23 அதற்கு அவன்: எப்படியானாலும் நான் ஓடுவேன் என்றான்; அப்பொழுது யோவாப்: ஓடு என்றான்; அப்படியே அகிமாஸ் சமனான பூமிவழியாயோடிக் கூஷிக்கு முந்திக்கொண்டான். 24 தாவீது இரண்டு ஒலிமுகக் கெவுனி வாசலுக்கு நடுவாக உட்கார்ந்திருந்தான்; ஜாமங்காக்கிறவன் அலங்கத்திலிருக்கிற கெவுனியின்மேல் நடந்து, தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஒரு மனுஷன் தனியே ஓடிவருகிறதைக் கண்டு, 25 கூப்பிட்டு ராஜாவுக்கு அறிவித்தான். அப்பொழுது ராஜா: அவன் ஒருவனாய் வந்தால், அவன் வாயிலே நல்லசெய்தி இருக்கும் என்றான்; அவன் ஓடி கிட்டவரும்போது, 26 ஜாமங்காக்கிறவன், வேறொருவன் ஓடிவருகிறதைக் கண்டு: அதோ பின்னொருவன் தனியே ஓடிவருகிறான் என்று வாசல் காக்கிறவனோடே கூப்பிட்டுச் சொன்னான்; அப்பொழுது ராஜா: அவனும் நல்ல செய்தி கொண்டுவருகிறவன் என்றான். 27 மேலும் ஜாமங்காக்கிறவன்: முந்தினவனுடைய ஓட்டம் சாதோக்கின் குமாரன் அகிமாசுடைய ஓட்டம்போலிருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது என்றான்; அப்பொழுது ராஜா: அவன் நல்ல மனுஷன்; அவன் நல்ல செய்தி சொல்ல வருகிறான் என்றான். 28 அகிமாஸ் வந்து ராஜாவை நோக்கி: சமாதானம் என்று சொல்லி, முகங்குப்புற விழுந்து, ராஜாவை வணங்கி, ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு விரோதமாய்த் தங்கள் கைகளை எடுத்த மனுஷரை ஒப்புக்கொடுத்திருக்கிற உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றான். 29 அப்பொழுது ராஜா: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, அகிமாஸ் யோவாப் ராஜாவின் வேலைக்காரனையும் உம்முடைய அடியானையும் அனுப்புகிறபோது, ஒரு பெரிய சந்தடியிருந்தது; ஆனாலும் அது இன்னதென்று தெரியாது என்றான். 30 அப்பொழுது ராஜா: நீ அங்கே போய் நில் என்றான்; அவன் ஒரு பக்கத்தில் போய் நின்றான். 31 இதோ, கூஷி வந்து: ராஜாவாகிய என் ஆண்டவனே, நற்செய்தி, இன்று கர்த்தர் உமக்கு விரோதமாயெழும்பின எல்லாரின் கைக்கும் உம்மை நீங்கலாக்கி நியாயஞ்செய்தார் என்றான். 32 அப்பொழுது ராஜா கூஷியைப் பார்த்து: பிள்ளையாண்டானாகிய அப்சலோம் சுகமாயிருக்கிறானா என்று கேட்டதற்கு, கூஷி என்பவன்: அந்தப் பிள்ளையாண்டானுக்கு நடந்ததுபோல, ராஜாவாகிய என் ஆண்டவனுடைய சத்துருக்களுக்கும், பொல்லாப்புச் செய்ய உமக்கு விரோதமாய் எழும்புகிற யாவருக்கும் நடக்கக்கடவது என்றான். 33 அப்பொழுது ராஜா மிகவும் கலங்கி, கெவுனிவாசலின் மேல்வீட்டிற்குள் ஏறிப்போய் அழுதான்; அவன் ஏறிப்போகையில்: என் மகனாகிய அப்சலோமே, என் மகனே, என் மகனாகிய அப்சலோமே, நான் உனக்குப் பதிலாகச் செத்தேனானால் நலமாயிருக்கும்; அப்சலோமே, என் மகனே, என் மகனே, என்று சொல்லி அழுதான்.

2 சாமுவேல் 19

1 இதோ, ராஜா அப்சலோமுக்காக அழுது புலம்புகிறார் என்று யோவாபுக்கு அறிவிக்கப்பட்டது. 2 ராஜா தம்முடைய குமாரனுக்காக மனம்நொந்திருக்கிறார் என்று அன்றையதினம் ஜனங்கள் கேள்விப்பட்டார்கள்; அதினிமித்தம் அன்றையதினம் அந்த ஜெயம் ஜனத்திற்கெல்லாம் துக்கமாய் மாறிற்று. 3 யுத்தத்தில் முறிந்தோடுகிறதினால் வெட்கப்பட்டுத் திருட்டளவாய் வருகிறவர்கள்போல, ஜனங்கள் அன்றையதினம் திருட்டளவாய்ப் பட்டணத்திற்குள் வந்தார்கள். 4 ராஜா தன் முகத்தை மூடிக்கொண்டு, மகா சத்தமாய்: என் மகனாகிய அப்சலோமே, அப்சலோமாகிய என் மகனே, என் மகனே என்று அலறிக்கொண்டிருந்தான். 5 அப்பொழுது யோவாப் வீட்டிற்குள்ளே ராஜாவினிடத்தில் போய்: இன்று உம்முடைய ஜீவனையும், உம்முடைய குமாரர் குமாரத்திகளின் ஜீவனையும், உம்முடைய மனைவிகளின் ஜீவனையும், உம்முடைய மறுமனையாட்டிகளின் ஜீவனையும் தப்புவித்த உம்முடைய ஊழியக்காரர் எல்லாரின் முகத்தையும் வெட்கப்படுத்தினீர்; இன்று நீர் உம்மைப் பகைக்கிறவர்களைச் சிநேகித்து, உம்மைச் சிநேகிக்கிறவர்களைப் பகைக்கிறீர் என்று விளங்குகிறது. 6 அதிபதிகளும் சேவகரும் உமக்கு அற்பமானவர்கள் என்று இன்று விளங்கப்பண்ணுகிறீர்; அப்சலோம் உயிரோடிருந்து, நாங்கள் அனைவரும் இன்று செத்துப்போனால், அப்பொழுது உம்முடைய பார்வைக்கு நலமாயிருக்கும் என்று இன்று அறிந்துகொண்டேன். 7 இப்போதும் எழுந்திருந்து வெளியே வந்து, உம்முடைய ஊழியக்காரரோடே அன்பாய்ப் பேசும்; நீர் வெளியே வராதிருந்தால், இன்று இரவு ஒருவரும் உம்மோடே தங்கியிருப்பதில்லை என்று கர்த்தர்மேல் ஆணையிடுகிறேன்; அப்பொழுது உம்முடைய சிறுவயதுமுதல் இதுவரைக்கும் உமக்கு நேரிட்ட எல்லாத் தீமையைப்பார்க்கிலும், அது உமக்கு அதிக தீமையாயிருக்கும் என்றான். 8 அப்பொழுது ராஜா எழுந்துபோய், ஒலிமுகவாசலில் உட்கார்ந்தான்; இதோ, ராஜா ஒலிமுகவாசலில் உட்கார்ந்திருக்கிறார் என்று சகல ஜனங்களுக்கும் அறிவிக்கப்பட்டபோது, ஜனங்கள் எல்லாரும் ராஜாவுக்கு முன்பாக வந்தார்கள்; இஸ்ரவேலரோவெனில் அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். 9 இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களிலுமுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் வாக்குவாதம் உண்டாகி, அவர்கள்: ராஜா நம்முடைய சத்துருக்களின் கைக்கு நம்மை நீங்கலாக்கிவிட்டார், அவர்தானே பெலிஸ்தரின் கைக்கு நம்மைத் தப்புவித்தார்; இப்போதோ அப்சலோமுக்குத் தப்ப, தேசத்தைவிட்டு ஓடிப்போனார். 10 நமக்கு ராஜாவாக அபிஷேகம்பண்ணிவைத்த அப்சலோம் யுத்தத்திலே செத்தான்; இப்போதும் ராஜாவைத் திரும்ப அழைத்து வராமல் நீங்கள் சும்மாயிருப்பானேன் என்று சொல்லிக்கொண்டார்கள். 11 இப்படி இஸ்ரவேலர் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறது, ராஜா இருக்கிற வீட்டிலே அவனுக்குக் கேள்வியானபடியினால், தாவீதுராஜா சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களிடத்துக்கு ஆள் அனுப்பி, நீங்கள் யூதாவின் மூப்பரோடே பேசி: ராஜாவைத் தம்முடைய வீட்டுக்குத் திரும்ப அழைத்துவர நீங்கள் மற்றவர்களுக்குப் பிந்திப்போவானேன்? 12 நீங்கள் என் சகோதரர், நீங்கள் என் எலும்பும் என் மாம்சமுமானவர்கள்; ராஜாவைத் திரும்ப அழைத்துவர நீங்கள் பிந்தினவர்களாயிருப்பானேன் என்று சொல்லுங்கள். 13 நீங்கள் அமாசாவையும் நோக்கி: நீ என் எலும்பும் என் மாம்சமும் அல்லவோ? நீ யோவாபுக்குப் பதிலாக எந்நாளும் எனக்கு முன்பாகப் படைத்தலைவனாயிராவிட்டால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொல்லச்சொன்னான். 14 இப்படியே யூதாவின் சகல மனுஷருடைய இருதயத்தையும் ஒரு மனுஷனுடைய இருதயத்தைப்போல் இணங்கப்பண்ணினதினால், அவர்கள் ராஜாவுக்கு: நீர் உம்முடைய எல்லா ஊழியக்காரரோடும் திரும்பிவாரும் என்று சொல்லி அனுப்பினார்கள். 15 ராஜா திரும்ப வருகிறதற்கு யோர்தான்மட்டும் வந்தபோது, யூதா கோத்திரத்தார் ராஜாவுக்கு எதிர்கொண்டுபோய், ராஜாவை யோர்தானைக் கடக்கப்பண்ண கில்கால்மட்டும் வந்தார்கள். 16 பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயியும் தீவிரித்து, யூதா மனுஷரோடுங்கூடத் தாவீது ராஜாவுக்கு எதிர்கொண்டுபோனான். 17 அவனோடே பென்யமீன் மனுஷர் ஆயிரம்பேரும், சவுலின் வீட்டு வேலைக்காரனாகிய சீபாவும், அவனோடேகூட அவனுடைய பதினைந்து குமாரரும், அவனுடைய இருபது வேலைக்காரரும் இருந்தார்கள்; அவர்கள் ராஜாவுக்கு முன்பாக யோர்தானை வேகமாய்க் கடந்துபோனார்கள். 18 அவர்கள் ராஜாவின் வீட்டாரை இக்கரைப்படுத்தவும், அவன் விரும்பும் காரியத்துக்கு உதவவும், ஒரு படகு இக்கரையிலே வந்தது; அப்பொழுது கேராவின் குமாரனாகிய சீமேயி யோர்தானைக் கடக்கப்போகிற ராஜாவுக்கு முன்பாகத் தாழவிழுந்து, 19 ராஜாவை நோக்கி: என் ஆண்டவன் என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமலும், ராஜாவாகிய என் ஆண்டவன் எருசலேமிலிருந்து புறப்பட்டு வருகிற நாளிலே, உமது அடியான் செய்த துரோகத்தை ராஜா நினைக்காமலும், தமது மனதில் வைக்காமலும் இருப்பாராக. 20 உமது அடியானாகிய நான் பாவஞ்செய்தேன் என்று அறிந்திருக்கிறேன்; இப்போதும், இதோ, ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு எதிர்கொண்டுவர, யோசேப்பு வீட்டார் அனைவருக்கும் நான் இன்று முந்திக்கொண்டேன் என்றான். 21 அப்பொழுது செருயாவின் குமாரனாகிய அபிசாய் பிரதியுத்தரமாக: கர்த்தர் அபிஷேகம்பண்ணினவரைச் சீமேயி தூஷித்தபடியினால், அவனை அதற்காகக் கொல்லவேண்டாமா என்றான். 22 அதற்குத் தாவீது: செருயாவின் குமாரரே, இன்று நீங்கள் எனக்குச் சத்துருக்களாகிறதற்கு, எனக்கும் உங்களுக்கும் என்ன? இன்று இஸ்ரவேலில் ஒருவன் கொல்லப்படலாமா? இன்று நான் இஸ்ரவேலின்மேல் ராஜாவானேன் என்று எனக்குத் தெரியாதா என்று சொல்லி, 23 ராஜா சீமேயியைப் பார்த்து: நீ சாவதில்லை என்று அவனுக்கு ஆணையிட்டான். 24 சவுலின் குமாரனாகிய மேவிபோசேத்தும் ராஜாவுக்கு எதிர்கொண்டுவந்தான்; ராஜா போனநாள்முதல், அவன் சமாதானத்தோடே திரும்பிவருகிற நாள்மட்டும், அவன் தன் கால்களைச் சுத்தம்பண்ணவுமில்லை, தன் தாடியைச் சவரம்பண்ணவுமில்லை; தன் வஸ்திரங்களை வெளுக்கவுமில்லை. 25 அவன் எருசலேமிலிருந்து ராஜாவுக்கு எதிர்கொண்டு வருகிறபோது, ராஜா அவனைப் பார்த்து: மேவிபோசேத்தே, நீ என்னோடுகூட வராமல்போனது என்ன என்று கேட்டான். 26 அதற்கு அவன்: ராஜாவாகிய என் ஆண்டவனே, என் வேலைக்காரன் என்னை மோசம்போக்கினான்; உமது அடியானாகிய நான் முடவனானபடியினால், ஒரு கழுதையின்மேல் சேணம்வைத்து அதின்மேல் ஏறி, ராஜாவோடேகூடப் போகிறேன் என்று அடியேன் சொன்னேன். 27 அவன் ராஜாவாகிய என் ஆண்டவனிடத்தில் உமது அடியான்மேல் வீண்பழி சொன்னான்; ராஜாவாகிய என் ஆண்டவனோ தேவனுடைய தூதனைப்போல இருக்கிறார்; உமது பார்வைக்கு நலமாய்த் தோன்றுகிறபடி செய்யும். 28 ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு முன்பாக என் தகப்பன் வீட்டார் எல்லாரும் சாவுக்கு ஏதுவாயிருந்தார்களே ஒழிய, மற்றப்படி அல்ல; ஆனாலும் உமது பந்தியிலே சாப்பிடுகிறவர்களோடே உமது அடியேனை வைத்தீர்; இன்னும் நான் ராஜாவிடத்தில் முறையிட, இனி எனக்கு என்ன நியாயம் இருக்கிறது என்றான். 29 அப்பொழுது ராஜா அவனைப் பார்த்து: உன் காரியத்தைக்குறித்து அதிகமாய்ப் பேசுவானேன்? நீயும் சீபாவும் நிலத்தைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்று நான் சொல்லுகிறேன் என்றான். 30 அதற்கு மேவிபோசேத் ராஜாவை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் சமாதானத்தோடே தம்முடைய வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவனே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளட்டும் என்றான். 31 கீலேயாத்தியனாகிய பர்சிலாவும் ரோகிலிமிலிருந்து வந்து, யோர்தான்மட்டும் ராஜாவை வழிவிட்டனுப்ப, அவனோடேகூட யோர்தானின் துறைமட்டும் கடந்துவந்தான். 32 பர்சிலா எண்பது வயதுசென்ற கிழவனாயிருந்தான்; ராஜா மக்னாயீமிலே தங்கியிருக்குமட்டும் அவனைப் பராமரித்து வந்தான்; அவன் மகா பெரிய மனுஷனாயிருந்தான். 33 ராஜா பர்சிலாவை நோக்கி: நீ என்னோடேகூடக் கடந்துவா, எருசலேமிலே உன்னை என்னிடத்தில் வைத்துப் பராமரிப்பேன் என்றான். 34 பர்சிலா ராஜாவைப் பார்த்து: நான் ராஜாவோடேகூட எருசலேமுக்கு வர, நான் இன்னும் உயிரோடிருக்கும் ஆயுசின் நாட்கள் எம்மாத்திரம்? 35 இப்பொழுது நான் எண்பது வயதுள்ளவன்; இனி நலமானது இன்னதென்றும் தீதானது இன்னதென்றும் எனக்குத் தெரியுமோ? புசிக்கிறதும் குடிக்கிறதும் உமது அடியேனுக்கு ருசிகரமாயிருக்குமோ? சங்கீதக்காரர் சங்கீதக்காரிகளுடைய சத்தத்தை இனிக் கேட்கக்கூடுமோ? உமது அடியேனாகிய நான் இனி ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப் பாரமாயிருக்கவேண்டியது என்ன? 36 அடியேன் கொஞ்சதூரம் யோர்தான்மட்டும் ராஜாவோடேகூட வருவேன்; அதற்கு ராஜா இவ்வளவு பெரிய உபகாரத்தை எனக்குச் செய்யவேண்டியது என்ன? 37 நான் என் ஊரிலே மரித்து, என் தாய் தகப்பன்மார் கல்லறையிலே அடக்கம்பண்ணப்படும்படிக்கு, உமது அடியான் திரும்பிப்போகட்டும்; ஆனாலும், இதோ, உமது அடியானாகிய கிம்காம் ராஜாவாகிய என் ஆண்டவனோடேகூட வருவான்; உம்முடைய பார்வைக்கு நலமானபடி அவனுக்குச் செய்யும் என்றான். 38 அப்பொழுது ராஜா: கிம்காம் என்னோடேகூட வரட்டும்; உன் பார்வைக்கு நலமானபடியே நான் அவனுக்கு நடப்பித்து, நீ என்னிடத்தில் வேண்டிக்கொள்வதையெல்லாம் நான் உனக்குச் செய்வேன் என்றான். 39 ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்தபோது, ராஜா பர்சிலாவை முத்தமிட்டு அவனை ஆசீர்வதித்து, தானும் கடந்துபோனான்; அவனோ தன்னிடத்திற்குத் திரும்பிப்போய்விட்டான். 40 ராஜா கடந்து, கில்கால்மட்டும் போனான்; கிம்காம் அவனோடேகூடக் கடந்துவந்தான்; யூதா ஜனம் அனைத்தும், இஸ்ரவேலில் பாதிஜனமும், ராஜாவை இக்கரைப்படுத்தி வந்தபின்பு, 41 இதோ, இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவை நோக்கி: எங்கள் சகோதரராகிய யூதா மனுஷர் திருட்டளவாய் உம்மை அழைத்துவந்து, ராஜாவையும், அவர் வீட்டாரையும், அவரோடேகூட இருக்கிற தாவீதின் மனுஷர் அனைவரையும், யோர்தானைக் கடக்கப்பண்ணினது என்ன என்றார்கள். 42 அப்பொழுது யூதா மனுஷர் எல்லாரும் இஸ்ரவேல் மனுஷருக்குப் பிரதியுத்தரமாக: ராஜா எங்களைச் சேர்ந்தவரானபடியினால் இதைச் செய்தோம்; இதற்காக நீங்கள் கோபிப்பானேன்? நாங்கள் ராஜாவின் கையிலே ஏதாகிலும் வாங்கித் தின்றோமோ? எங்களுக்கு வெகுமானம் கொடுக்கப்பட்டதோ? என்றார்கள். 43 இஸ்ரவேல் மனுஷரோ யூதா மனுஷருக்குப் பிரதியுத்தரமாக: ராஜாவினிடத்தில் எங்களுக்குப் பத்துப்பங்கு இருக்கிறது; உங்களைப்பார்க்கிலும் எங்களுக்குத் தாவீதினிடத்தில் அதிக உரிமை உண்டு; பின்னை ஏன் எங்களை அற்பமாய் எண்ணினீர்கள்; எங்கள் ராஜாவைத் திரும்ப அழைத்துவரவேண்டும் என்று முந்திச் சொன்னவர்கள் நாங்கள் அல்லவா என்றார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் மனுஷரின் பேச்சைப்பார்க்கிலும் யூதா மனுஷரின் பேச்சு பலத்தது.

2 சாமுவேல் 20

1 அப்பொழுது பென்யமீன் மனுஷனான பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள பேலியாளின் மனுஷன் ஒருவன் தற்செயலாய் அங்கே இருந்தான்; அவன் எக்காளம் ஊதி: எங்களுக்குத் தாவீதினிடத்தில் பங்கும் இல்லை, ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரமும் இல்லை; இஸ்ரவேலே, நீங்கள் அவரவர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விடுங்கள் என்றான். 2 அப்பொழுது இஸ்ரவேல் மனுஷர் எல்லாரும் தாவீதை விட்டுப் பின்வாங்கி, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்பற்றிப் போனார்கள்; யோர்தான் தொடங்கி எருசலேம்மட்டுமுள்ள யூதாமனுஷர் தங்கள் ராஜாவைச் சார்ந்திருந்தார்கள். 3 தாவீது எருசலேமிலுள்ள தன் வீட்டுக்கு வந்தபோது, வீட்டைக் காக்க ராஜா பின்வைத்துப்போன பத்து மறுமனையாட்டிகளையும் வருவித்து, அவர்களை ஒரு காவல் வீட்டிலே வைத்துப் பராமரித்தான்; அப்புறம் அவர்களிடத்தில் அவன் பிரவேசிக்கவில்லை; அப்படியே அவர்கள் சாகிற நாள்மட்டும் அடைக்கப்பட்டு, உயிரோடிருக்கிற நாளெல்லாம் விதவைகள்போல் இருந்தார்கள். 4 பின்பு ராஜா அமாசாவைப் பார்த்து: நீ யூதா மனுஷரை மூன்றுநாளைக்குள்ளே என்னிடத்தில் வரவழைத்து, நீயும் கூடவந்து இருக்கவேண்டும் என்றான். 5 அப்பொழுது அமாசா: யூதாவை அழைப்பிக்கப் போய், தனக்குக் குறித்த காலத்திலே வராமல் தாமதித்திருந்தான். 6 அப்பொழுது தாவீது அபிசாயைப் பார்த்து: அப்சலோமைப்பார்க்கிலும் பிக்கிரியின் குமாரனாகிய சேபா, இப்பொழுது நமக்குப் பொல்லாப்புச் செய்வான்; அவன் அரணான பட்டணங்களில் வந்தடைந்து, நம்முடைய கண்களுக்குத் தப்பிப்போகாதபடிக்கு, நீ உன் எஜமானுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பின்தொடர்ந்துபோ என்றான். 7 அப்படியே யோவாபின் மனுஷரும், கிரேத்தியரும் பிலேத்தியரும், சகல பலசாலிகளும் அவன் பிறகாலே புறப்பட்டு, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்தொடர எருசலேமிலிருந்து போனார்கள். 8 அவர்கள் கிபியோன் கிட்ட இருக்கிற பெரிய கல்லண்டையிலே வந்தபோது, அமாசா அவர்களுக்கு எதிர்ப்பட்டுவந்தான்; யோவாபோ, தான் உடுத்திக்கொண்டிருக்கிற தன் சட்டையின்மேல் ஒரு கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; அதில் உறையோடே ஒரு பட்டயம் அவன் இடுப்பண்டையிலே தொங்கிற்று; அவன் புறப்படுகையில் அது விழுந்தது. 9 அப்பொழுது யோவாப் அமாசாவைப் பார்த்து: என் சகோதரனே, சுகமாயிருக்கிறாயா என்று சொல்லி, அமாசாவை முத்தஞ்செய்யும்படி, தன் வலதுகையினால் அவன் தாடியைப் பிடித்து, 10 தன் கையிலிருக்கிற பட்டயத்திற்கு அமாசா எச்சரிக்கையாயிராதபோது, யோவாப் அவனை அவன் குடல்கள் தரையிலே சரிந்துபோகத்தக்கதாய், அதினால் வயிற்றிலே ஒரே குத்தாகக் குத்தினான்; அவன் செத்துப்போனான்; அப்பொழுது யோவாபும் அவன் சகோதரனாகிய அபிசாயும் பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்தொடர்ந்தார்கள். 11 யோவாபுடைய வாலிபரில் ஒருவன் செத்தவனண்டையிலே நின்று, யோவாபின்மேல் பிரியப்படுகிறவன் எவனோ, தாவீதின் பட்சத்தில் இருக்கிறவன் எவனோ, அவன் யோவாபைப் பின்பற்றிப்போவானாக என்றான். 12 அமாசா நடுவழியிலே இரத்தத்திலே புரண்டு கிடந்தபடியினால், ஜனங்கள் எல்லாரும் தரித்துநிற்பதை அவன் கண்டு, அமாசாவை வழியிலிருந்து வயலிலே இழுத்துப்போட்டான்; அவனண்டையில் வருகிறவர்கள் எல்லாரும் தரித்துநிற்பதைக் கண்டு, ஒரு வஸ்திரத்தை அவன்மேல் போட்டான். 13 அவன் வழியிலிருந்து எடுத்துப்போடப்பட்ட பிற்பாடு, எல்லாரும் கடந்து, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைத் தொடர, யோவாபுக்குப் பின்சென்றார்கள். 14 அவன் இஸ்ரவேல் கோத்திரங்களையெல்லாம் சுற்றி, பெத்மாக்காவாகிய ஆபேல்மட்டாகவும், பேரீமின் கடைசிமட்டாகவும் வந்திருந்தான்; அவ்விடத்தாரும் கூடி, தாங்களும் அவனுக்குப் பின்சென்றார்கள். 15 அவர்கள் போய் பெத்மாக்காவாகிய ஆபேலிலே அவனை முற்றிக்கைபோட்டு, பட்டணத்திற்கு எதிராகத் தெற்றுவரைக்கும் கொத்தளம் போட்டார்கள்; யோவாபோடே இருக்கிற ஜனங்கள் எல்லாரும் அலங்கத்தை விழப்பண்ணும்படி அழிக்க எத்தனம்பண்ணினார்கள். 16 அப்பொழுது புத்தியுள்ள ஒரு ஸ்திரீ பட்டணத்திலிருந்து சத்தமிட்டு: கேளுங்கள், கேளுங்கள்; நான் யோவாபோடே பேசவேண்டும்; அவரை இங்கே கிட்டவரச் சொல்லுங்கள் என்றாள். 17 அவன் அவளுக்குச் சமீபத்தில் வந்தபோது, அந்த ஸ்திரீ: நீர்தானா யோவாப் என்று கேட்டாள்; அவன் நான்தான் என்றான்; அப்பொழுது, அவள் அவனைப் பார்த்து: உமது அடியாளின் வார்த்தைகளைக் கேளும் என்றாள்; அவன்: கேட்கிறேன் என்றான். 18 அப்பொழுது அவள்: பூர்வகாலத்து ஜனங்கள் ஆபேலிலே விசாரித்தால் வழக்குத் தீரும் என்பார்கள். 19 இஸ்ரவேலிலே நான் சமாதானமும் உண்மையுமுள்ளவளாயிருக்கையில், நீர் இஸ்ரவேலிலே தாய் பட்டணமாயிருக்கிறதை நிர்மூலமாக்கப் பார்க்கிறீரோ? நீர் கர்த்தருடைய சுதந்தரத்தை விழுங்கவேண்டியது என்ன என்றாள். 20 யோவாப் பிரதியுத்தரமாக: விழுங்கவேண்டும் அழிக்கவேண்டும் என்கிற ஆசை எனக்கு வெகுதூரமாயிருப்பதாக. 21 காரியம் அப்படியல்ல, பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள எப்பிராயீம் பர்வதத்தானாயிருக்கிற ஒரு மனுஷன், ராஜாவாகிய தாவீதுக்கு விரோதமாய்த் தன் கையை ஓங்கினான்; அவனைமாத்திரம் ஒப்புக்கொடுங்கள்; அப்பொழுது பட்டணத்தை விட்டுப்போவேன் என்றான். அப்பொழுது அந்த ஸ்திரீ யோவாபைப் பார்த்து: இதோ, அவன் தலை மதிலின்மேலிருந்து உம்மிடத்திலே போடப்படும் என்று சொல்லி, 22 அவள் ஜனங்களிடத்தில் போய்ப் புத்தியாய்ப் பேசினதினால், அவர்கள் பிக்கிரியின் குமாரனாகிய சேபாவின் தலையை வெட்டி, யோவாபிடத்திலே போட்டார்கள்; அப்பொழுது அவன் எக்காளம் ஊதினான்; அவரவர் பட்டணத்தை விட்டுக் கலைந்து, தங்கள் கூடாரங்களுக்குப் புறப்பட்டுப்போனார்கள்; யோவாபும் ராஜாவிடத்துக்குப் போகும்படி எருசலேமுக்குத் திரும்பினான். 23 யோவாப் இஸ்ரவேலுடைய எல்லா இராணுவத்தின்மேலும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயா கிரேத்தியர்மேலும் பிலேத்தியர்மேலும் தலைவராயிருந்தார்கள். 24 அதோராம் பகுதிகளை வாங்குகிறவனும், அகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியும், 25 சேவா சம்பிரதியும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியருமாயிருந்தார்கள். 26 யயீரியனாகிய ஈராவும் தாவீதுக்குப் பிரதானியாயிருந்தான்.

2 சாமுவேல் 21

1 தாவீதின் நாட்களில் மூன்று வருஷம் ஓயாத பஞ்சம் உண்டாயிருந்தது; அப்பொழுது தாவீது கர்த்தருடைய சமுகத்தில் விசாரித்தான். கர்த்தர்: கிபியோனியரைக் கொன்றுபோட்ட சவுலுக்காகவும், இரத்தப்பிரியரான அவன் வீட்டாருக்காகவும் இது உண்டாயிற்று என்றார். 2 அப்பொழுது ராஜா: கிபியோனியரை அழைப்பித்தான்; கிபியோனியரோ, இஸ்ரவேல் புத்திரராயிராமல் எமோரியரில் மீதியாயிருந்தவர்கள்; அவர்களுக்கு இஸ்ரவேல் புத்திரர் ஆணையிட்டிருந்தும், சவுல் இஸ்ரவேல் புத்திரருக்காகவும் யூதாவுக்காகவும் காண்பித்த வைராக்கியத்தினால் அவர்களை வெட்ட வகைதேடினான். 3 ஆகையால் தாவீது கிபியோனியரைப் பார்த்து: நான் உங்களுக்குச் செய்யவேண்டியது என்ன? நீங்கள் கர்த்தருடைய சுதந்தரத்தை ஆசீர்வதிக்கும்படிக்கு, நான் செய்யவேண்டிய பிராயச்சித்தம் என்ன என்று கேட்டான். 4 அப்பொழுது கிபியோனியர் அவனைப் பார்த்து: சவுலோடும் அவன் வீட்டாரோடும் எங்களுக்கு இருக்கிற காரியத்திற்காக எங்களுக்கு வெள்ளியும் பொன்னும் தேவையில்லை; இஸ்ரவேலில் ஒருவனைக் கொன்றுபோடவேண்டும் என்பதும் எங்கள் விருப்பம் அல்ல என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால், நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டான். 5 அவர்கள் ராஜாவை நோக்கி: நாங்கள் இஸ்ரவேலின் எல்லையிலெங்கும் நிலைக்காதபடிக்கு, அழிந்துபோக எவன் எங்களை நிர்மூலமாக்கி எங்களுக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்தானோ, 6 அவன் குமாரரில் ஏழுபேர் கர்த்தர் தெரிந்துகொண்ட சவுலின் ஊராகிய கிபியாவிலே நாங்கள் அவர்களைக் கர்த்தருக்கென்று தூக்கிப்போட, எங்களுக்கு ஒப்புக்கொடுக்கப்படவேண்டும் என்றார்கள். நான் அவர்களை ஒப்புக்கொடுப்பேன் என்று ராஜா சொன்னான். 7 ஆனாலும் தாவீதும் சவுலின் குமாரனாகிய யோனத்தானும் கர்த்தரைக்கொண்டு இட்ட ஆணையினிமித்தம், ராஜா சவுலின் குமாரனாகிய யோனத்தானின் மகன் மேவிபோசேத்தைத் தப்பவிட்டு, 8 ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் சவுலுக்குப் பெற்ற அவளுடைய இரண்டு குமாரராகிய அர்மோனியையும் மேவிபோசேத்தையும், சவுலின் குமாரத்தியாகிய மீகாள் மேகோலாத்தியனான பர்சிலாவின் குமாரனாகிய ஆதரியேலுக்குப் பெற்ற அவளுடைய ஐந்து குமாரரையும் பிடித்து, 9 அவர்களைக் கிபியோனியர் கையில் ஒப்புக்கொடுத்தான்; அவர்களைக் கர்த்தருடைய சமுகத்தில் மலையின்மேல் தூக்கிப்போட்டார்கள்; அப்படியே அவர்கள் ஏழுபேரும் ஒருமிக்க விழுந்தார்கள்; வாற்கோதுமை அறுப்பு துவக்குகிற அறுப்புக்காலத்தின் முந்தினநாட்களிலே அவர்கள் கொன்றுபோடப்பட்டார்கள். 10 அப்பொழுது ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் இரட்டுப்புடவையை எடுத்துக்கொண்டுபோய், அதைப் பாறையின்மேல் விரித்து, அறுப்புநாளின் துவக்கம் முதற்கொண்டு வானத்திலிருந்து அவர்கள்மேல் மழை பெய்யுமட்டும் பகலில் ஆகாயத்துப் பறவைகளாகிலும் இரவில் காட்டுமிருகங்களாகிலும் அவர்கள்மேல் விழவொட்டாதிருந்தாள். 11 ஆயாவின் குமாரத்தியாகிய ரிஸ்பாள் என்னும் சவுலின் மறுமனையாட்டி செய்தது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, 12 தாவீது போய், பெலிஸ்தர் கில்போவாவிலே சவுலை வெட்டினபோது, பெத்சானின் வீதியிலே தூக்கிப்போடப்பட்டதும், கீலேயாத்திலுள்ள யாபேஸ் பட்டணத்தார் அங்கே போய்த் திருட்டளவாய்க் கொண்டுவந்ததுமான சவுலின் எலும்புகளையும், அவன் குமாரனான யோனத்தானின் எலும்புகளையும், அவர்களிடத்திலிருந்து எடுத்து, 13 அங்கே இருந்து அவர்களைக் கொண்டுவந்து, தூக்கிப்போடப்பட்டவர்களின் எலும்புகளையும் அவைகளோடே சேர்த்து, 14 சவுலின் எலும்புகளையும் அவன் குமாரனாகிய யோனத்தானின் எலும்புகளையும், பென்யமீன் தேசத்துச் சேலா ஊரிலிருக்கிற அவன் தகப்பனாகிய கீசின் கல்லறையில் அடக்கம்பண்ணுவித்தான்; ராஜா கட்டளையிட்டபடியெல்லாம் செய்தார்கள்; அதற்குப்பின்பு தேவன் தேசத்திற்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார். 15 பின்பு பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்தார்கள்; அப்பொழுது தாவீதும் அவனோடேகூட அவன் சேவகரும்போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணினார்கள்; தாவீது விடாய்த்துப்போனான். 16 அப்பொழுது முந்நூறு சேக்கல்நிறை வெண்கலமான ஈட்டியைப் பிடிக்கிறவனும், புதுப்பட்டயத்தை அரையிலே கட்டிக்கொண்டவனுமான இஸ்பிபெனோப் என்னும் இராட்சத புத்திரரில் ஒருவன் தாவீதை வெட்டவேண்டும் என்று இருந்தான். 17 செருயாவின் குமாரனாகிய அபிசாய் ராஜாவுக்கு உதவியாக வந்து, பெலிஸ்தனை வெட்டிக் கொன்றுபோட்டான். அப்பொழுது தாவீதின் மனுஷர்: இஸ்ரவேலின் விளக்கு அணைந்துபோகாதபடிக்கு, நீர் இனி எங்களோடே யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம் என்று அவனுக்கு ஆணையிட்டுச் சொன்னார்கள். 18 அதற்குப் பின்பு பெலிஸ்தரோடே திரும்பவும் கோபிலே யுத்தம் நடந்தது; ஊசாத்தியனாகிய சீபேக்காய் இராட்சத சந்ததியான சாப்பை வெட்டிப்போட்டான். 19 பெலிஸ்தரோடு இன்னும் வேறொரு யுத்தம் கோபிலே உண்டானபோது, யாரெயொர்கிமின் குமாரனாகிய எல்க்கானான் என்னும் பெத்லெகேமியன் காத் ஊரானாகிய கோலியாத்தின் சகோதரனை வெட்டினான்; அவன் ஈட்டித் தாங்கானது நெய்கிறவர்களின் படைமரம் அவ்வளவு பெரிதாயிருந்தது. 20 இன்னும் ஒரு யுத்தம் காத் ஊரிலே நடந்தபோது, அங்கே நெட்டையனான ஒரு மனுஷன் இருந்தான்; அவன் கைகளில் அவ்வாறு விரல்களும் அவன் கால்களில் அவ்வாறு விரல்களும், ஆக இருபத்து நான்கு விரல்களுள்ளவன்; இவனும் இராட்சத பிறவியாயிருந்து, 21 இஸ்ரவேலை நிந்தித்தான்; தாவீதின் சகோதரனான சீமேயாவின் குமாரனாகிய யோனத்தான் அவனை வெட்டினான். 22 இந்த நாலுபேரும் காத்தூரிலே இராட்சதனுக்குப் பிறந்தவர்கள்; இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.

2 சாமுவேல் 22

1 கர்த்தர் தாவீதை அவனுடைய எல்லாச் சத்துருக்களின் கைக்கும், சவுலின் கைக்கும், நீங்கலாக்கி விடுவித்தபோது, அவன் கர்த்தருக்கு முன்பாகப் பாடின பாட்டு: 2 கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர். 3 தேவன் நான் நம்பியிருக்கிற துருக்கமும், என் கேடகமும், என் ரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமும், என் புகலிடமும், என் ரட்சகருமானவர்; என்னை வல்லடிக்கு நீங்கலாக்கி ரட்சிக்கிறவர் அவரே. 4 ஸ்துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாக்கி ரட்சிக்கப்படுவேன். 5 மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டு, துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது. 6 பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. 7 எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார்; என் கூப்பிடுதல் அவர் செவிகளில் ஏறிற்று. 8 அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது; அவர் கோபங்கொண்டபடியால் வானத்தின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது. 9 அவர் நாசியிலிருந்து பட்சிக்கிற புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து அக்கினி புறப்பட்டது, அதனால் தழல் மூண்டது. 10 வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. 11 கேருபீனின்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார். காற்றின் செட்டைகளின்மீதில் தரிசனமானார். 12 ஆகாயத்து மேகங்களிலே கூடிய தண்ணீர்களின் இருளைத் தம்மைச் சுற்றிலும் இருக்கும் கூடாரமாக்கினார். 13 அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் நெருப்புத்தழலும் எரிந்தது. 14 கர்த்தர் வானத்திலிருந்து குமுறி, உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார். 15 அவர் அம்புகளை எய்து, அவர்களைச் சிதற அடித்து, மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார். 16 கர்த்தருடைய கண்டிதத்தினாலும், அவருடைய நாசியின் சுவாசக் காற்றினாலும் சமுத்திரத்தின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது. 17 உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார். 18 என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என் பகைஞருக்கும் என்னை விடுவித்தார். 19 என் ஆபத்துநாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார். 20 என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார். 21 கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதில் அளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார். 22 கர்த்தருடைய வழிகளைக் காத்துக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை. 23 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; நான் அவருடைய பிரமாணங்களை விட்டு விலகாமல், 24 அவர் முன்பாக மனஉண்மையாயிருந்து, என் துர்க்குணத்திற்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். 25 ஆகையால் கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாகவும், தம்முடைய கண்களுக்குமுன் இருக்கிற என் சுத்தத்திற்குத்தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார். 26 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும், 27 புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடானவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர். 28 சிறுமைப்பட்ட ஜனத்தை ரட்சிப்பீர்; மேட்டிமையானவர்களைத் தாழ்த்த, உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பப்பட்டிருக்கிறது. 29 கர்த்தராகிய தேவரீர் என் விளக்காயிருக்கிறீர்; கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குகிறவர். 30 உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன். 31 தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார். 32 கர்த்தரை அல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றி கன்மலையும் யார்? 33 தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர். 34 அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார். 35 வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார். 36 உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும். 37 என் கால்கள் வழுவாதபடிக்கு நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். 38 என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து அவர்களை அழிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும்வரைக்கும் திரும்பேன். 39 அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு என் பாதங்களின் கீழ் விழுந்தார்கள்; அவர்களை முறிய அடித்து வெட்டினேன். 40 யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என்கீழ் மடங்கப்பண்ணினீர். 41 நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர். 42 அவர்கள் நோக்கிப் பார்க்கிறார்கள், அவர்களை ரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிப்பார்க்கிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை. 43 அவர்களை பூமியின் தூளாக இடித்து, தெருக்களின் சேற்றைப்போல அவர்களை மிதித்து சிதறப்பண்ணுகிறேன். 44 என் ஜனத்தின் சண்டைகளுக்கு நீர் என்னை விலக்கிவிட்டு, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக வைக்கிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள். 45 அந்நியர் இச்சகம் பேசி எனக்கு அடங்கி, என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள். 46 அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள். 47 கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் ரட்சிப்பின் கன்மலையாகிய தேவன் உயர்ந்திருப்பாராக. 48 அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர். 49 அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை உயர்த்திக் கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். 50 இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள் உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன். 51 தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான ரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.

2 சாமுவேல் 23

1 தாவீதுடைய கடைசி வார்த்தைகள்: மேன்மையாய் உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, இஸ்ரவேலின் சங்கீதங்களை இன்பமாய்ப் பாடின ஈசாயின் குமாரனாகிய தாவீது என்னும் புருஷன் சொல்லுகிறது என்னவென்றால்; 2 கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்; அவருடைய வசனம் என்னுடைய நாவில் இருந்தது. 3 இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர் இருப்பார். 4 அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப்பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார் என்றார். 5 என்னுடைய வீடு தேவனிடத்தில் இப்படியிராதோ? சகலமும் திட்டம்பண்ணப்பட்டிருக்கிற நிச்சயமான நித்திய உடன்படிக்கையை என்னுடன் அவர் செய்திருக்கிறார்; ஆதலால் என்னுடைய எல்லா ரட்சிப்பும் எல்லா வாஞ்சையும் வளர்ந்தோங்கச் செய்யாரோ? 6 பேலியாளின் மக்கள் அனைவருமோ, கையினால் பிடிக்கப்படக்கூடாததாய் எறிந்துபோடப்படவேண்டிய முள்ளுக்குச் சமானமானவர்கள். 7 அவைகளை ஒருவன் தொடப்போனால், இருப்பாயுதத்தையும் ஈட்டித்தாங்கையும் கெட்டியாய்ப் பிடித்துக்கொள்ளவேண்டும்; அவைகள் இருக்கிற இடத்தில்தானே அக்கினியினால் முற்றும் சுட்டெரிக்கப்படும் என்றான். 8 தாவீதுக்கு இருந்த பராக்கிரமசாலிகளின் நாமங்களாவன: தக்கெமோனியின் குமாரனாகிய யோசேப்பாசெபெத் என்பவன் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் எண்ணூறுபேர்களின்மேல் விழுந்து, அவர்களை ஒருமிக்க வெட்டிப்போட்ட அதீனோஏஸ்னி ஊரானானவன். 9 இவனுக்கு இரண்டாவது, அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார் என்பவன்; இவன் பெலிஸ்தர் யுத்தத்திற்குக் கூடின ஸ்தலத்திலே இஸ்ரவேல் மனுஷர் போகையில், தாவீதோடே இருந்து, பெலிஸ்தரை நிந்தித்த மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவனாயிருந்தான். 10 இவன் எழும்பித் தன் கைசலித்து, தன் கை பட்டயத்தோடு ஒட்டிக்கொள்ளுமட்டும் பெலிஸ்தரை வெட்டினான்; அன்றையதினம் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார்; ஜனங்கள் கொள்ளையிடமாத்திரம் அவனைப் பின்சென்றார்கள். 11 இவனுக்கு மூன்றாவது, ஆகேயின் குமாரனாகிய சம்மா என்னும் ஆராரியன்; சிறுபயறு நிறைந்த வயலிருந்த இடத்திலே பெலிஸ்தர் ஏராளமாய்க் கூடி, ஜனங்கள் பெலிஸ்தரைக் கண்டு ஓடுகிறபோது, 12 இவன் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றி, பெலிஸ்தரை மடங்கடித்துப்போட்டான்; அதனால் கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார். 13 முப்பது தலைவருக்குள்ளே இந்த மூன்றுபேரும் அறுப்புநாளிலே அதுல்லாம் கெபியிலே தாவீதிடத்தில் போயிருந்தார்கள்; பெலிஸ்தரின் தண்டு ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பாளயமிறங்கினபோது, 14 தாவீது அரணான ஒரு இடத்தில் இருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லெகேமிலே இருந்தது. 15 தாவீது பெத்லெகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றின் தண்ணீரின்மேல் ஆவல்கொண்டு: என் தாகத்திற்குக் கொஞ்சந் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான். 16 அப்பொழுது இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் பெலிஸ்தரின் பாளயத்திலே துணிந்து புகுந்துபோய், பெத்லெகேமின் ஒலிமுகவாசலில் இருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு: 17 கர்த்தாவே, தங்கள் பிராணனை எண்ணாமல் போய்வந்த அந்த மனுஷரின் இரத்தத்தைக் குடிக்கும் இந்தச்செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக என்று சொல்லி, அதைக் குடிக்க மனதில்லாதிருந்தான்; இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள். 18 யோவாபின் சகோதரனும் செருயாவின் குமாரனுமான அபிசாய் என்பவன், அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி முந்நூறுபேரை மடங்கடித்ததினால், இந்த மூன்றுபேர்களில் பேர்பெற்றவனானான். 19 இந்த மூன்றுபேர்களில் அவன் மேன்மையுள்ளவனாயிருந்ததினாலல்லவோ, அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்று பேருக்கு அவன் சமமானவன் அல்ல. 20 பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும் கப்செயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைகாலத்தில் அவன் இறங்கிப்போய், ஒரு கெபிக்குள் இருந்த ஒரு சிங்கத்தையும் கொன்றுபோட்டான். 21 அவன் பயங்கர ரூபமான ஒரு எகிப்தியனையும் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் ஒரு ஈட்டியிருக்கையில், இவன் ஒரு தடியைப் பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான். 22 இவைகளை யோய்தாவின் குமாரனாகிய பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாயிருந்தான். 23 முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்று பேருக்கும் இவன் சமானமானவன் அல்ல; இவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான். 24 யோவாபின் தம்பி ஆசகேல் மற்ற முப்பதுபேரில் ஒருவன்; அவர்கள் யாரெனில், பெத்லெகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான், 25 ஆரோதியனாகிய சம்மா, ஆரோதியனாகிய எலிக்கா, 26 பல்தியனாகிய ஏலெஸ், இக்கேசின் குமாரனாகிய ஈரா என்னும் தெக்கோவியன். 27 ஆனதோத்தியனாகிய அபியேசர், ஊசாத்தியனாகிய மெபுன்னாயி, 28 அகோகியனாகிய சல்மோன், நெத்தோபாத்தியனாகிய மகராயி, 29 பானாவின் குமாரனாகிய ஏலேப் என்னும் நெத்தோபாத்தியன், பென்யமீன் புத்திரரின் கிபியா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி, 30 பிரத்தோனியனாகிய பெனாயா, காகாஸ் நீரோடைகளின் தேசத்தானாகிய ஈத்தாயி, 31 அர்பாத்தியனாகிய அபிஅல்பொன், பருமியனாகிய அஸ்மாவேத், 32 சால்போனியனாகிய எலியூபா, யாசேனின் குமாரரில் யோனத்தான் என்பவன். 33 ஆராரியனாகிய சம்மா, சாராரின் குமாரனாகிய அகியாம் என்னும் ஆராரியன், 34 மாகாத்தியனின் குமாரனாகிய அகஸ்பாயிம் மகன் எலிப்பெலேத், கீலோனியனாகிய அகித்தோப்பேலின் குமாரன் எலியாம் என்பவன். 35 கர்மேலியனாகிய எஸ்ராயி, அர்பியனாகிய பாராயி, 36 சோபா ஊரானாகிய நாத்தானின் குமாரன் ஈகால், காதியனாகிய பானி, 37 அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நகராய், 38 இத்ரியனாகிய ஈரா, இத்ரியனாகிய காரேப், 39 ஏத்தியனாகிய உரியா என்பவர்களே; ஆக முப்பத்தேழுபேர்.

2 சாமுவேல் 24

1 கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான். 2 அப்படியே ராஜா தன்னோடிருக்கிற சேனாபதியாகிய யோவாபைப் பார்த்து: ஜனங்களின் இலக்கத்தை நான் அறியும்படிக்கு நீ தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேலரின் கோத்திரமெங்கும் சுற்றித்திரிந்து ஜனங்களைத் தொகையிடுங்கள் என்றான். 3 அப்பொழுது யோவாப் ராஜாவைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஜனங்களை இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும், நூறுமடங்கு அதிகமாய் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் என் ஆண்டவனாகிய ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான். 4 ஆகிலும் யோவாபும் இராணுவத்தலைவரும் சொன்ன வார்த்தை செல்லாதபடிக்கு, ராஜாவின் வார்த்தை பலத்தது; அப்படியே இஸ்ரவேல் ஜனங்களைத் தொகையிட, யோவாபும் இராணுவத்தலைவரும் ராஜாவைவிட்டுப் புறப்பட்டுப்போய், 5 யோர்தானைக் கடந்து, காத் என்னும் ஆறுகளின் நடுவே இருக்கிற பட்டணத்திற்கு வலதுபுறமான ஆரோவேரிலும் யாசேரிடத்திலும் பாளயமிறங்கி, 6 அங்கேயிருந்து கீலேயாத்திற்கும் தாதீம்ஒத்சிக்கும் போய், அங்கேயிருந்து தாண்யானுக்கும், சீதோனின் சுற்றுப்புறங்களுக்கும் போய், 7 பிற்பாடு தீரு என்னும் கோட்டைக்கும் ஏவியர் கானானியருடைய சகல பட்டணங்களுக்கும் போய், அங்கேயிருந்து யூதாவின் தென்புறமான பெயெர்செபாவுக்குப் போய், 8 இப்படித் தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதமும் இருபது நாளும் ஆனபிற்பாடு எருசலேமுக்கு வந்தார்கள். 9 யோவாப் ஜனத்தை இலக்கம்பார்த்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டுலட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம் பேர் இருந்தார்கள். 10 இவ்விதமாய் ஜனங்களை எண்ணின பின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது; அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; நான் மகா புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான். 11 தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது: 12 நீ தாவீதினிடத்தில் போய், மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். 13 அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ? அல்லது மூன்றுமாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான். 14 அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான். 15 அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமே தொடங்கிக் குறித்தகாலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள். 16 தேவதூதன் எருசலேமை அழிக்கத் தன் கையை அதின்மேல் நீட்டினபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தான். 17 ஜனத்தை உபாதிக்கிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான்தான் அக்கிரமம்பண்ணினேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான். 18 அன்றையதினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான். 19 காத்துடைய வார்த்தையின்படியே தாவீது கர்த்தர் கற்பித்த பிரகாரமாகப் போனான். 20 அர்வனா ஏறிட்டுப்பார்த்து: ராஜாவும் அவனுடைய ஊழியக்காரரும் தன்னிடத்தில் வருகிறதைக்கண்டு, அர்வனா எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி, 21 ராஜாவாகிய என் ஆண்டவன் தமது அடியானிடத்தில் வருகிற காரியம் என்ன என்று கேட்டதற்கு, தாவீது: வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்படக் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு இந்தக் களத்தை உன் கையிலே கொள்ள வந்தேன் என்றான். 22 அர்வனா தாவீதைப் பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவன் இதை வாங்கிக்கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி பலியிடுவாராக; இதோ, தகனபலிக்கு மாடுகளும் விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும் மாடுகளின் நுகத்தடிகளும் இங்கே இருக்கிறது என்று சொல்லி, 23 அர்வனா ராஜயோக்கியமாய் அவை எல்லாவற்றையும் ராஜாவுக்குக் கொடுத்தபின்பு, அர்வனா ராஜாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மிடத்தில் கிருபையாயிருப்பாராக என்றான். 24 ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல; நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறை வெள்ளிக்குக் கொண்டான். 25 அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்; அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார்; இஸ்ரவேலின்மேலிருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.

1 இராஜாக்கள் 1

1 தாவீதுராஜா வயதுசென்ற விர்த்தாப்பியனானபோது, வஸ்திரங்களினால் அவனை மூடினாலும், அவனுக்கு அனல் உண்டாகவில்லை. 2 அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி: ராஜசமுகத்தில் நின்று, அவருக்குப் பணிவிடை செய்யவும், ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்கு அனல் உண்டாகும்படி உம்முடைய மடியிலே படுத்துக்கொள்ளவும் கன்னியாகிய ஒரு சிறு பெண்ணை ராஜாவாகிய எங்கள் ஆண்டவனுக்குத் தேடுவோம் என்று சொல்லி, 3 இஸ்ரவேலின் எல்லையிலெல்லாம் அழகான ஒரு பெண்ணைத் தேடி, சூனேம் ஊராளாகிய அபிஷாகைக் கண்டு, அவளை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள். 4 அந்தப் பெண் வெகு அழகாயிருந்தாள்; அவள் ராஜாவுக்கு உதவியாயிருந்து அவனுக்குப் பணிவிடைசெய்தாள்; ஆனாலும் ராஜா அவளை அறியவில்லை. 5 ஆகீத்திற்குப் பிறந்த அதோனியா என்பவன்: நான் ராஜா ஆவேன் என்று சொல்லி, தன்னைத்தான் உயர்த்தி, தனக்கு இரதங்களையும் குதிரைவீரரையும், தனக்குமுன் ஓடும் ஐம்பது காலாட்களையும் சம்பாதித்தான். 6 அவனுடைய தகப்பன்: நீ இப்படிச் செய்வானேன் என்று அவனை ஒருக்காலும் கடிந்துகொள்ளவில்லை; அவன் மிகவும் அழகுள்ளவனாயிருந்தான்; அப்சலோமுக்குப்பின் அவனுடைய தாய் அவனைப் பெற்றாள். 7 அவன் செருயாவின் குமாரனாகிய யோவாபோடும், ஆசாரியனாகிய அபியத்தாரோடும் ஆலோசனைபண்ணிவந்தான்; அவர்கள் அவனிடத்திலிருந்து அவனுக்கு உதவிசெய்துவந்தார்கள். 8 ஆசாரியனாகிய சாதோக்கும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், சீமேயியும், ரேயியும், தாவீதோடிருக்கிற பராக்கிரமசாலிகளும், அதோனியாவுக்கு உடந்தையாயிருக்கவில்லை. 9 அதோனியா என்ரோகேலுக்குச் சமீபமான சோகெலெத் என்னும் கல்லின் அருகே ஆடுமாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் அடித்து, ராஜாவின் குமாரராகிய தன் சகோதரரெல்லாரையும், ராஜாவின் ஊழியக்காரரான யூதாவின் மனுஷர் அனைவரையும் அழைத்தான். 10 தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், பெனாயாவையும், பராக்கிரமசாலிகளையும், தன் சகோதரனாகிய சாலொமோனையும் அழைக்கவில்லை. 11 அப்பொழுது நாத்தான் சாலொமோனின் தாயாகிய பத்சேபாளை நோக்கி: நம்முடைய ஆண்டவனாகிய தாவீதுக்குத் தெரியாமல், ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா ராஜாவாகிற செய்தியை நீ கேட்கவில்லையா? 12 இப்போதும் உன் பிராணனையும், உன் குமாரனாகிய சாலொமோனின் பிராணனையும் தப்புவிக்கும்படிக்கு நீ வா, உனக்கு நான் ஆலோசனை சொல்லுவேன். 13 நீ தாவீதுராஜாவினிடத்தில் போய்: ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உமது அடியாளுக்கு ஆணையிடவில்லையா? அப்படியிருக்க, அதோனியா ராஜாவாகிறது என்ன? என்று அவரிடத்தில் கேள். 14 நீ அங்கே ராஜாவோடே பேசிக்கொண்டிருக்கையில், நானும் உனக்குப் பின்வந்து, உன் வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன் என்றான். 15 அப்படியே பத்சேபாள் பள்ளியறைக்குள் ராஜாவிடத்தில் போனாள்; ராஜா மிகவும் வயதுசென்றவனாயிருந்தான்; சூனேம் ஊராளாகிய அபிஷாக் ராஜாவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள். 16 பத்சேபாள் குனிந்து, ராஜாவை வணங்கினாள்; அப்பொழுது ராஜா: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். 17 அதற்கு அவள்: என் ஆண்டவனே, எனக்குப்பின் உன் குமாரனாகிய சாலொமோன் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைக்கொண்டு, உமது அடியாளுக்கு ஆணையிட்டீரே. 18 இப்பொழுது, இதோ, அதோனியா ராஜாவாகிறான்; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் அதை அறியவில்லை. 19 அவன் மாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் ஆடுகளையும் திரளாக அடித்து, ராஜாவின் குமாரர் அனைவரையும் ஆசாரியனாகிய அபியத்தாரையும், யோவாப் என்னும் படைத்தலைவனையும் அழைத்தான்; ஆனாலும் உமது அடியானாகிய சாலொமோனை அழைக்கவில்லை. 20 ராஜாவாகிய என் ஆண்டவனே, ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப்பிறகு அவருடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பவன் இன்னான் என்று தங்களுக்கு அறிவிக்கவேண்டும் என்று இஸ்ரவேலர் அனைவரின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது. 21 அறிவியாமற்போனால் ராஜாவாகிய என் ஆண்டவன் தம்முடைய பிதாக்களோடே படுத்துக்கொண்டபின்பு, நானும் என் குமாரனாகிய சாலொமோனும் குற்றவாளிகளாய் எண்ணப்படுவோம் என்றாள். 22 அவள் ராஜாவோடே பேசிக்கொண்டிருக்கையில், தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்தான். 23 தீர்க்கதரிசியாகிய நாத்தான் வந்திருக்கிறார் என்று ராஜாவுக்குத் தெரிவித்தார்கள்; அவன் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்து முகங்குப்புற விழுந்து ராஜாவை வணங்கினான். 24 நாத்தான்: ராஜாவாகிய என் ஆண்டவனே, அதோனியா எனக்குப்பின் ராஜாவாகி, அவனே என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நீர் சொன்னதுண்டோ? 25 அவன் இன்றையதினம் போய், மாடுகளையும் கொழுத்த ஜந்துக்களையும் ஆடுகளையும் திரளாக அடித்து, ராஜாவின் குமாரர் அனைவரையும் இராணுவத்தலைவரையும், ஆசாரியனாகிய அபியத்தாரையும் அழைத்தான்; அவர்கள் அவனுக்கு முன்பாகப் புசித்துக் குடித்து, ராஜாவாகிய அதோனியா வாழ்க என்று சொல்லுகிறார்கள். 26 ஆனாலும் உமது அடியானாகிய என்னையும், ஆசாரியனாகிய சாதோக்கையும், யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவையும், உமது அடியானாகிய சாலொமோனையும் அவன் அழைக்கவில்லை. 27 ராஜாவாகிய என் ஆண்டவனுக்குப்பின் தமது சிங்காசனத்தில் வீற்றிருப்பவன் இவன்தான் என்று நீர் உமது அடியானுக்குத் தெரிவிக்காதிருக்கையில், இந்தக் காரியம் ராஜாவாகிய என் ஆண்டவன் கட்டளையால் நடந்திருக்குமோ என்றான். 28 அப்பொழுது தாவீதுராஜா பிரதியுத்தரமாக: பத்சேபாளை என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான்; அவள் ராஜசமுகத்தில் பிரவேசித்து ராஜாவுக்கு முன்னே நின்றாள். 29 அப்பொழுது ராஜா: உன் குமாரனாகிய சாலொமோன் எனக்குப்பின் அரசாண்டு, அவனே என் ஸ்தானத்தில் என் சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பான் என்று நான் உனக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்மேல் ஆணையிட்டபடியே, இன்றைக்குச் செய்து தீர்ப்பேன் என்பதை, 30 என் ஆத்துமாவை எல்லா இக்கட்டுக்கும் நீங்கலாக்கி மீட்ட கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று ஆணையிட்டான். 31 அப்பொழுது பத்சேபாள் தரைமட்டும் குனிந்து ராஜாவை வணங்கி, என் ஆண்டவனாகிய தாவீதுராஜா என்றைக்கும் வாழ்க என்றாள். 32 பின்பு தாவீதுராஜா, ஆசாரியனாகிய சாதோக்கையும் தீர்க்கதரிசியாகிய நாத்தானையும் யோய்தாவின் குமாரன் பெனாயாவையும் என்னிடத்தில் வரவழையுங்கள் என்றான். 33 அவர்கள் ராஜாவுக்கு முன்பாகப் பிரவேசித்தபோது, ராஜா அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, என் குமாரனாகிய சாலொமோனை என் கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு அழைத்துக்கொண்டு போங்கள். 34 அங்கே ஆசாரியனாகிய சாதோக்கும் தீர்க்கதரிசியாகிய நாத்தானும் அவனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணக்கடவர்கள்; பின்பு எக்காளம் ஊதி, ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்துங்கள். 35 அதின்பின்பு அவன் நகர்வலம் வந்து, என் சிங்காசனத்தில் வீற்றிருக்கும்படி, அவனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்; அவனே என் ஸ்தானத்தில் ராஜாவாயிருப்பான்; அவன் இஸ்ரவேலின்மேலும் யூதாவின்மேலும் தலைவனாயிருக்கும்படி அவனை ஏற்படுத்தினேன் என்றான். 36 அப்பொழுது யோய்தாவின் குமாரன் பெனாயா ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆமென், ராஜாவாகிய என் ஆண்டவனுடைய தேவனாகிய கர்த்தரும் இப்படியே சொல்வாராக. 37 கர்த்தர் ராஜாவாகிய என் ஆண்டவனோடே எப்படி இருந்தாரோ, அப்படியே அவர் சாலொமோனோடும் இருந்து, தாவீதுராஜாவாகிய என் ஆண்டவனுடைய சிங்காசனத்தைப் பார்க்கிலும் அவருடைய சிங்காசனத்தைப் பெரிதாக்குவாராக என்றான். 38 அப்படியே ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், யோய்தாவின் குமாரன் பெனாயாவும், கிரேத்தியரும் பிலேத்தியரும் போய், சாலொமோனைத் தாவீதுராஜாவினுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்றி, அவனைக் கீகோனுக்கு நடத்திக்கொண்டுபோனார்கள். 39 ஆசாரியனாகிய சாதோக்கு தைலக்கொம்பைக் கூடாரத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், சாலொமோனை அபிஷேகம்பண்ணினான்; அப்பொழுது எக்காளம் ஊதி, ஜனங்களெல்லாரும் ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்தினார்கள். 40 பிற்பாடு ஜனங்களெல்லாரும் அவன் பிறகாலே போனார்கள்; ஜனங்கள் நாகசுரங்களை ஊதி, பூமி அவர்கள் சத்தத்தினால் அதிரத்தக்கதாக மகா பூரிப்பாய்ச் சந்தோஷித்தார்கள். 41 அதோனியாவும் அவனோடிருந்த எல்லா விருந்தாளிகளும் போஜனம்பண்ணி முடிந்தபோது அதைக் கேட்டார்கள்; யோவாப் எக்காளசத்தத்தைக் கேட்டபோது, நகரத்தில் உண்டாயிருக்கிற ஆரவாரம் என்ன என்று விசாரித்தான். 42 அவன் பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியனாகிய அபியத்தாரின் குமாரன் யோனத்தான் வந்தான்; அப்பொழுது அதோனியா, உள்ளே வா, நீ கெட்டிக்காரன், நீ நற்செய்தி கொண்டுவருகிறவன் என்றான். 43 யோனத்தான் அதோனியாவுக்குப் பிரதியுத்தரமாக: ஏது, தாவீதுராஜாவாகிய நம்முடைய ஆண்டவன் சாலொமோனை ராஜாவாக்கினாரே. 44 ராஜா ஆசாரியனாகிய சாதோக்கையும், தீர்க்கதரிசியாகிய நாத்தானையும், யோய்தாவின் குமாரன் பெனாயாவையும், கிரேத்தியரையும் பிலேத்தியரையும் அவனோடே அனுப்பினார்; அவர்கள் அவனை ராஜாவுடைய கோவேறுகழுதையின்மேல் ஏற்றினார்கள். 45 ஆசாரியனாகிய சாதோக்கும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும், அவனைக் கீகோனிலே ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள்; நகரமெல்லாம் முழங்கத்தக்கதாக அங்கேயிருந்து பூரிப்போடே புறப்பட்டுப்போனார்கள்; நீங்கள் கேட்ட இரைச்சல் அதுதான். 46 அல்லாமலும் சாலொமோன் ராஜாங்கத்துக்குரிய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறான். 47 ராஜாவின் ஊழியக்காரரும் தாவீது ராஜாவாகிய நம்முடைய ஆண்டவனை வாழ்த்துதல் செய்யவந்து: தேவன் சாலொமோனின் நாமத்தை உம்முடைய நாமத்தைப்பார்க்கிலும் பிரபலப்படுத்தி, அவருடைய சிங்காசனத்தை உம்முடைய சிங்காசனத்தைப் பார்க்கிலும் பெரிதாக்குவாராக என்றார்கள்; ராஜா தம்முடைய கட்டிலின்மேல் குனிந்து பணிந்துகொண்டார். 48 பின்னும் ராஜா: என்னுடைய கண்கள் காண இன்றையதினம் என் சிங்காசனத்தின்மேல் ஒருவனை வீற்றிருக்கச்செய்த இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொன்னார் என்றான். 49 அப்பொழுது அதோனியாவின் விருந்தாளிகளெல்லாரும் அதிர்ந்து எழுந்திருந்து, அவரவர் தங்கள் வழியே போய்விட்டார்கள். 50 அதோனியா, சாலொமோனுக்குப் பயந்ததினால் எழுந்துபோய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான். 51 இதோ, அதோனியா ராஜாவாகிய சாலொமோனுக்குப் பயப்படுகிறான் என்றும், இதோ, அவன் பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டு, ராஜாவாகிய சாலொமோன் தமது அடியானைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று இன்று எனக்கு ஆணையிடுவாராக என்கிறான் என்றும், சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டது. 52 அப்பொழுது சாலொமோன்: அவன் யோக்கியன் என்று விளங்க நடந்துகொண்டால் அவன் தலைமயிரில் ஒன்றும் தரையிலே விழப்போகிறதில்லை; அவனிடத்தில் பொல்லாப்புக் காணப்படுமேயாகில், அவன் சாகவேண்டும் என்றான். 53 அவனைப் பலிபீடத்திலிருந்து கொண்டுவர, ராஜாவாகிய சாலொமோன் ஆட்களை அனுப்பினான்; அவன் வந்து, ராஜாவாகிய சாலொமோனை வணங்கினான்; சாலொமோன் அவனைப் பார்த்து: உன் வீட்டிற்குப் போ என்றான்.

1 இராஜாக்கள் 2

1 தாவீது மரணமடையும் காலம் சமீபித்தபோது, அவன் தன் குமாரனாகிய சாலொமோனுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது: 2 நான் பூலோகத்தார் யாவரும் போகிற வழியே போகிறேன்; நீ திடன்கொண்டு புருஷனாயிரு. 3 நீ என்ன செய்தாலும், நீ எங்கே போனாலும், எல்லாவற்றிலும் புத்திமானாயிருக்கிறதற்கும், கர்த்தர் என்னைக்குறித்து: உன் பிள்ளைகள் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் எனக்கு முன்பாக உண்மையாய் நடக்கும்படிக்குத் தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கத்தக்க புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்ன தம்முடைய வார்த்தையைத் திடப்படுத்துகிறதற்கும், 4 மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி, நீ உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும், சாட்சிகளையும் கைக்கொள்ள, அவர் வழிகளில் நடக்கும்படிக்கு அவருடைய காவலைக் காப்பாயாக. 5 செருயாவின் குமாரனாகிய யோவாப், இஸ்ரவேலின் இரண்டு சேனாபதிகளாகிய நேரின் குமாரன் அப்னேருக்கும், ஏத்தேரின் குமாரன் அமாசாவுக்கும் செய்த காரியத்தினால் எனக்குச் செய்த குற்றத்தை நீ அறிந்திருக்கிறாயே; அவன் அவர்களைக் கொன்று, சமாதானகாலத்திலே யுத்தகாலத்து இரத்தத்தைச் சிந்தி, யுத்தகாலத்து இரத்தத்தைத் தன் அரையிலுள்ள கச்சையிலும் தன் கால்களில் இருந்த பாதரட்சையிலும் வடியவிட்டானே. 6 ஆகையால் உன் யுக்தியின்படியே நீ செய்து, அவனுடைய நரைமயிர் சமாதானமாய்ப் பாதாளத்தில் இறங்கவொட்டாதிரு. 7 கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரருக்குத் தயைசெய்வாயாக; அவர்கள் உன் பந்தியிலே சாப்பிடுகிறவர்களுடன் இருப்பார்களாக; உன் சகோதரனாகிய அப்சலோமுக்கு முன்பாக நான் ஓடிப்போகையில், அவர்கள் என்னை ஆதரித்தார்கள். 8 மேலும் பகூரிம் ஊரானான பென்யமீனனாகிய கேராவின் மகன் சீமேயி உன்னிடத்தில் இருக்கிறான்; நான் மக்னாயீமுக்குப் போகிற நாளிலே, அவன் என்னைக் கொடிய தூஷணமாய்த் தூஷித்தான்; ஆனாலும் அவன் யோர்தானிலே எனக்கு எதிர்கொண்டுவந்தபடியினால்: நான் உன்னைப் பட்டயத்தாலே கொன்றுபோடுவதில்லை என்று கர்த்தர்மேல் அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தேன். 9 ஆகிலும் நீ அவனைக் குற்றமற்றவன் என்று எண்ணாதே; நீ புத்திமான்; அவனுடைய நரைமயிரை இரத்தத்துடன் பாதாளத்தில் இறங்கப்பண்ண, நீ அவனுக்குச் செய்யவேண்டியதை அறிவாய் என்றான். 10 பின்பு தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான். 11 தாவீது இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம்; அவன் எப்ரோனில் ஏழு வருஷமும், எருசலேமில் முப்பத்துமூன்று வருஷமும் அரசாண்டான். 12 சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்; அவன் ராஜ்யபாரம் மிகவும் ஸ்திரப்பட்டது. 13 ஆகீத்தின் குமாரனாகிய அதோனியா சாலொமோனின் தாயாகிய பத்சேபாளிடத்தில் வந்தான். நீ சமாதானமாய் வருகிறாயா என்று அவள் கேட்டதற்கு: சமாதானமாய்த்தான் வருகிறேன் என்றான். 14 பின்பு அவன்: உம்மோடே நான் பேசவேண்டிய ஒரு காரியம் இருக்கிறது என்றான். அதற்கு அவள்: சொல் என்றாள். 15 அப்பொழுது அவன்: ராஜ்யம் என்னுடையதாயிருந்தது என்றும், நான் அரசாளுகிறதற்கு இஸ்ரவேலரெல்லாரும் என்மேல் நோக்கமாய் இருந்தார்கள் என்றும் நீர் அறிவீர்; ஆனாலும் ராஜ்யபாரம் என்னைவிட்டுத் தாண்டி, என் சகோதரனுக்கு ஆயிற்று; கர்த்தரால் அது அவருக்குக் கிடைத்தது. 16 இப்பொழுது நான் உம்மிடத்தில் ஒரு மன்றாட்டைக் கேட்கிறேன்; அதை எனக்கு மறுக்கவேண்டாம் என்றான். அவள்: சொல் என்றாள். 17 அப்பொழுது அவன்: ராஜாவாகிய சாலொமோன் உம்முடைய சொல்லை மறுப்பதில்லை; சூனேம் ஊராளாகிய அபிஷாகை எனக்கு அவர் விவாகம்பண்ணிக்கொடுக்க, அவரோடே பேசும்படி வேண்டுகிறேன் என்றான். 18 அதற்குப் பத்சேபாள்: நல்லது, நான் உனக்காக ராஜாவிடத்தில் பேசுவேன் என்றாள். 19 பத்சேபாள் அதோனியாவுக்காக ராஜாவாகிய சாலொமோனிடத்தில் பேசும்படி போனாள்; அப்பொழுது ராஜா எழுந்திருந்து, அவளுக்கு எதிர்கொண்டுவந்து அவளை வணங்கி, தன் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, ராஜாவின் தாயார் தன் வலதுபுறமாக உட்கார, அவளுக்கு ஒரு ஆசனத்தை வைத்தான். 20 அப்பொழுது அவள்: நான் உம்மை ஒரு சிறிய மன்றாட்டைக் கேட்க விரும்புகிறேன்; எனக்கு அதை மறுக்கவேண்டாம் என்றாள். அதற்கு ராஜா: என் தாயாரே, கேளும்; நான் உமக்கு மறுப்பதில்லை என்றான். 21 அப்பொழுது அவள்: சூனேம் ஊராளாகிய அபிஷாகை உம்முடைய சகோதரனாகிய அதோனியாவுக்கு விவாகம்பண்ணிக்கொடுக்கவேண்டும் என்றாள். 22 ராஜாவாகிய சாலொமோன் தன் தாயாருக்குப் பிரதியுத்தரமாக: நீர் சூனேம் ஊராளாகிய அபிஷாகை அதோனியாவுக்குக் கேட்பானேன்? அப்படியானால் ராஜ்யபாரத்தையும் அவனுக்குக் கேளும்; அவன் எனக்கு மூத்த சகோதரன்; அவனுக்கும் ஆசாரியனாகிய அபியத்தாருக்கும் செருயாவின் குமாரன் யோவாபுக்குமே அதைக் கேளும் என்றான். 23 பின்பு சாலொமோன் ராஜா: அதோனியா இந்த வார்த்தையைத் தன் பிராணனுக்குச் சேதமாகச் சொல்லாதிருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று கர்த்தர்மேல் ஆணையிட்டு, 24 இப்போதும் இன்றைக்கு அதோனியா கொலையுண்பான் என்று என்னைத் திடப்படுத்தினவரும், என்னை என் தகப்பனாகிய தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கப்பண்ணி, தாம் சொன்னபடி எனக்கு வீட்டைக் கட்டுவித்தவருமாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று சொல்லி, 25 ராஜாவாகிய சாலொமோன் யோய்தாவின் குமாரன் பெனாயாவுக்குக் கட்டளைகொடுத்து அவனை அனுப்பினான்; இவன் அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான். 26 ராஜா: ஆசாரியனாகிய அபியத்தாரை நோக்கி: நீ உன் நிலங்கள் இருக்கிற ஆனதோத்திற்குப் போய்விடு; நீ மரணத்திற்குப் பாத்திரவானாயிருந்தும், நீ என் தகப்பனாகிய தாவீதுக்கு முன்பாகக் கர்த்தராகிய ஆண்டவருடைய பெட்டியைச் சுமந்தபடியினாலும், என் தகப்பன் அநுபவித்த உபத்திரவத்தையெல்லாம் நீ கூட அநுபவித்தபடியினாலும், இன்றையதினம் நான் உன்னைக் கொலைசெய்யமாட்டேன் என்றான். 27 அப்படியே கர்த்தர் சீலோவிலே ஏலியின் வீட்டாரைக்குறித்துச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாக, சாலொமோன் அபியத்தாரைக் கர்த்தருடைய ஆசாரியனாயிராதபடிக்குத் தள்ளிப்போட்டான். 28 நடந்த இந்தச் செய்தி யோவாபுக்கு வந்தபோது, அவன் கர்த்தருடைய கூடாரத்திற்கு ஓடிப்போய், பலிபீடத்தின் கொம்புகளைப் பிடித்துக்கொண்டான்; யோவாப் அப்சலோமின் பட்சம் சாயாதவனாயிருந்தும், அதோனியாவின் பட்சம் சாய்ந்திருந்தான். 29 யோவாப் கர்த்தரின் கூடாரத்திற்கு ஓடிப்போனான் என்றும், இதோ, பலிபீடத்தண்டையில் நிற்கிறான் என்றும், ராஜாவாகிய சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, சாலொமோன் யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவை அனுப்பி, நீ போய் அவன்மேல் விழு என்றான். 30 பெனாயா கர்த்தரின் கூடாரத்திற்குப் போய், அவனைப் பார்த்து: வெளியே வா என்று ராஜா சொல்லுகிறார் என்றான். அதற்கு அவன்: நான் வரமாட்டேன்; இங்கேயே சாவேன் என்றான்; ஆகையால் பெனாயா ராஜாவினிடத்தில் போய், யோவாப் இன்னபடி சொல்லி, இன்னபடி எனக்கு மறுஉத்தரவு கொடுத்தான் என்று மறுசெய்தி சொன்னான். 31 அப்பொழுது ராஜா அவனை நோக்கி: அவன் சொன்னபடியே நீ செய்து, அவனைக் கொன்று, அடக்கம்பண்ணி, இவ்விதமாய் யோவாப் முகாந்தரமில்லாமல் சிந்தின இரத்தத்தை என்னைவிட்டும் என் பிதாவின் வீட்டைவிட்டும் விலக்கிப்போடு. 32 அவன் தன்னைப்பார்க்கிலும் நீதியும் நற்குணமுமுள்ள இரண்டுபேராகிய நேரின் குமாரன் அப்னேர் என்னும் இஸ்ரவேலின் படைத்தலைவன்மேலும், ஏதேரின் குமாரன் அமாசா என்னும் யூதாவின் படைத்தலைவன்மேலும் விழுந்து, என் தகப்பனாகிய தாவீதுக்குத் தெரியாமல் அவர்களைப் பட்டயத்தால் கொன்ற அவனுடைய இரத்தப்பழியைக் கர்த்தர் அவனுடைய தலையின்மேல் திரும்பப்பண்ணுவாராக. 33 இப்படியே அவர்களுடைய இரத்தப்பழி என்றும் யோவாபுடைய தலையின் மேலும், அவன் சந்ததியாரின் தலையின் மேலும் திரும்பவும், தாவீதுக்கும் அவர் சந்ததியாருக்கும் அவர் வீட்டாருக்கும் அவர் சிங்காசனத்திற்கும் என்றென்றைக்கும் கர்த்தராலே சமாதானம் உண்டாயிருக்கவும் கடவது என்றான். 34 அப்படியே யோய்தாவின் குமாரன் பெனாயா போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான்; அவன் வனாந்தரத்திலிருக்கிற தன்னுடைய வீட்டிலே அடக்கம்பண்ணப்பட்டான். 35 அவனுக்குப் பதிலாக ராஜா யோய்தாவின் குமாரன் பெனாயாவை இராணுவத்தின்மேலும், ஆசாரியனாகிய சாதோக்கை அபியத்தாரின் ஸ்தானத்திலும் வைத்தான். 36 பின்பு ராஜா சீமேயியை அழைப்பித்து, அவனை நோக்கி: நீ எருசலேமிலே உனக்கு ஒரு வீட்டைக் கட்டி, அங்கேயிருந்து எங்கேயாவது வெளியே போகாமல், அங்கேதானே குடியிரு. 37 நீ வெளியே போய்க் கீதரோன் ஆற்றைக் கடக்கும் நாளில், நீ சாகவே சாவாய்; அப்பொழுது உன் இரத்தப்பழி உன் தலையின்மேல் இருக்கும் என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள் என்றான். 38 சீமேயி ராஜாவைப் பார்த்து: அது நல்ல வார்த்தை; ராஜாவாகிய என் ஆண்டவன் சொன்னபடியே, உமது அடியானாகிய நான் செய்வேன் என்று சொல்லி, சீமேயி அநேகநாள் எருசலேமிலே குடியிருந்தான். 39 மூன்று வருஷம் சென்றபோது, சீமேயியின் வேலைக்காரர் இரண்டுபேர் மாக்காவின் குமாரனாகிய ஆகீஸ் என்னும் காத்தின் ராஜாவினிடத்துக்கு ஓடிப்போனார்கள்; உன் வேலைக்காரர் காத் ஊரில் இருக்கிறார்கள் என்று சீமேயிக்கு அறிவித்தார்கள். 40 அப்பொழுது சீமேயி எழுந்து, தன் கழுதையின்மேல் சேணம்வைத்து, தன் வேலைக்காரரைத் தேட, காத் ஊரிலிருக்கிற ஆகீசிடத்துக்குப் புறப்பட்டுப்போனான்; இப்படிச் சீமேயி போய், தன் வேலைக்காரரைக் காத் ஊரிலிருந்து கொண்டுவந்தான். 41 சீமேயி எருசலேமிலிருந்து காத் ஊருக்குப் போய், திரும்பிவந்தான் என்று சாலொமோனுக்கு அறிவிக்கப்பட்டபோது, 42 ராஜா சீமேயியை அழைப்பித்து: நீ வெளியே புறப்பட்டு எங்கேயாவது போகிறநாளிலே சாகவே சாவாய் என்பதை நீ நிச்சயமாய் அறிந்துகொள் என்று நான் உன்னைக் கர்த்தர்மேல் ஆணையிடச் செய்து, உனக்குத் திடச்சாட்சியாகச் சொல்லியிருக்க, அதற்கு நீ: நான் கேட்ட வார்த்தை நல்லதென்று சொல்லவில்லையா? 43 நீ கர்த்தரின் ஆணையையும், நான் உனக்குக் கற்பித்த கட்டளையையும் கைக்கொள்ளாதே போனதென்ன? என்று சொல்லி, 44 பின்னும் ராஜா சீமேயியைப் பார்த்து: நீ என் தகப்பனாகிய தாவீதுக்குச் செய்ததும் உன் மனதுக்குத் தெரிந்திருக்கிறதுமான எல்லாப் பொல்லாப்பையும் அறிந்திருக்கிறாய்; ஆகையால் கர்த்தர் உன் பொல்லாப்பை உன் தலையின்மேல் திரும்பப்பண்ணுவார். 45 ராஜாவாகிய சாலொமோனோ ஆசீர்வதிக்கப்பட்டவனாயிருப்பான்; தாவீதின் சிங்காசனம் என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக உறுதியாயிருக்கும் என்று சொல்லி, 46 ராஜா யோய்தாவின் குமாரனாகிய பெனாயாவுக்குக் கட்டளைகொடுத்தான்; அவன் வெளியே போய், அவன்மேல் விழுந்து அவனைக் கொன்றுபோட்டான். ராஜ்யபாரம் சாலொமோனின் கையிலே ஸ்திரப்பட்டது.

1 இராஜாக்கள் 3

1 சாலொமோன் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடே சம்பந்தங்கலந்து, பார்வோனின் குமாரத்தியை விவாகம்பண்ணி, தன்னுடைய அரமனையையும் கர்த்தருடைய ஆலயத்தையும் எருசலேமின் சுற்றுமதிலையும் கட்டித் தீருமட்டும் அவன் அவளைத் தாவீதின் நகரத்தில் கொண்டுவந்து வைத்தான். 2 அந்நாட்கள்மட்டும் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயம் கட்டப்படாதிருந்ததினால், ஜனங்கள் மேடைகளிலே பலியிட்டுவந்தார்கள். 3 சாலொமோன் கர்த்தரிடத்தில் அன்புகூர்ந்து, தன் தகப்பனாகிய தாவீதின் கட்டளைகளில் நடந்தான்; ஆனாலும் அவன் மேடைகளிலே பலியிட்டுத் தூபங்காட்டி வந்தான். 4 அப்படியே ராஜா பலியிட கிபியோனுக்குப் போனான்; அது பெரிய மேடையாயிருந்தது; அந்தப் பலிபீடத்தின்மேல் சாலொமோன் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான். 5 கிபியோனிலே கர்த்தர் சாலொமோனுக்கு இராத்திரியில் சொப்பனத்திலே தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்று தேவன் சொன்னார். 6 அதற்குச் சாலொமோன்: என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியான் உம்மைப்பற்றி உண்மையும் நீதியும் மன நேர்மையுமாய் உமக்கு முன்பாக நடந்தபடியே தேவரீர் அவருக்குப் பெரிய கிருபைசெய்து, அந்தப் பெரிய கிருபையை அவருக்குக் காத்து, இந்நாளில் இருக்கிறபடியே அவருடைய சிங்காசனத்தில் வீற்றிருக்கிற ஒரு குமாரனை அவருக்குத் தந்தீர். 7 இப்போதும் என் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியேனை என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீரே, நானோவென்றால் போக்கு வரவு அறியாத சிறுபிள்ளையாயிருக்கிறேன். 8 நீர் தெரிந்துகொண்டதும் ஏராளத்தினால் எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களாகிய உமது ஜனத்தின் நடுவில் அடியேன் இருக்கிறேன். 9 ஆகையால் உமது ஜனங்களை நியாயம் விசாரிக்கவும், நன்மைதீமை இன்னதென்று வகையறுக்கவும், அடியேனுக்கு ஞானமுள்ள இருதயத்தைத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உமது ஜனங்களை நியாயம் விசாரிக்க யாராலே ஆகும் என்றான். 10 சாலொமோன் இந்தக் காரியத்தைக் கேட்டது ஆண்டவருடைய பார்வைக்கு உகந்த விண்ணப்பமாயிருந்தது. 11 ஆகையினால் தேவன் அவனை நோக்கி: நீ உனக்கு நீடித்த நாட்களைக் கேளாமலும், ஐசுவரியத்தைக் கேளாமலும், உன் சத்துருக்களின் பிராணனைக் கேளாமலும், நீ இந்தக் காரியத்தையே கேட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு ஏற்ற ஞானத்தை உனக்கு வேண்டிக்கொண்டபடியினால், 12 உன் வார்த்தைகளின்படி செய்தேன்; ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை உனக்குத் தந்தேன்; இதிலே உனக்குச் சரியானவன் உனக்குமுன் இருந்ததுமில்லை, உனக்குச் சரியானவன் உனக்குப்பின் எழும்புவதுமில்லை. 13 இதுவுமன்றி, நீ கேளாத ஐசுவரியத்தையும் மகிமையையும் உனக்குத் தந்தேன்; உன் நாட்களில் இருக்கிற ராஜாக்களில் ஒருவனும் உனக்குச் சரியானவன் இருப்பதில்லை. 14 உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல, நீயும் என் கட்டளைகளையும் என் நியமங்களையும் கைக்கொண்டு, என் வழிகளில் நடப்பாயாகில், உன் நாட்களையும் நீடித்திருக்கப்பண்ணுவேன் என்றார். 15 சாலொமோனுக்கு நித்திரை தெளிந்தபோது, அது சொப்பனம் என்று அறிந்தான்; அவன் எருசலேமுக்கு வந்து, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக நின்று, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தி, தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துசெய்தான். 16 அப்பொழுது வேசிகளான இரண்டு ஸ்திரீகள் ராஜாவினிடத்தில் வந்து, அவனுக்கு முன்பாக நின்றார்கள். 17 அவர்களில் ஒருத்தி: என் ஆண்டவனே, நானும் இந்த ஸ்திரீயும் ஒரே வீட்டிலே குடியிருக்கிறோம்; நான் இவளோடே வீட்டிலிருக்கையில் ஆண்பிள்ளை பெற்றேன். 18 நான் பிள்ளைபெற்ற மூன்றாம் நாளிலே, இந்த ஸ்திரீயும் ஆண்பிள்ளை பெற்றாள்; நாங்கள் ஒருமித்திருந்தோம், எங்கள் இருவரையும் தவிர, வீட்டுக்குள்ளே வேறொருவரும் இல்லை. 19 இராத்திரி தூக்கத்திலே இந்த ஸ்திரீ தன் பிள்ளையின்மேல் புரண்டுபடுத்ததினால் அது செத்துப்போயிற்று. 20 அப்பொழுது, உமது அடியாள் நித்திரைபண்ணுகையில், இவள் நடுஜாமத்தில் எழுந்து, என் பக்கத்திலே கிடக்கிற என் பிள்ளையை எடுத்து, தன் மார்பிலே கிடத்திக்கொண்டு, செத்த தன் பிள்ளையை எடுத்து, என் மார்பிலே கிடத்திவிட்டாள். 21 என் பிள்ளைக்குப் பால்கொடுக்கக் காலமே நான் எழுந்திருந்தபோது, அது செத்துக்கிடந்தது; பொழுது விடிந்தபின் நான் அதை உற்றுப்பார்க்கும்போது, அது நான் பெற்ற பிள்ளை அல்லவென்று கண்டேன் என்றாள். 22 அதற்கு மற்ற ஸ்திரீ: அப்படியல்ல, உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்றாள். இவளோ: இல்லை, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்றாள்; இப்படி ராஜாவுக்கு முன்பாக வாதாடினார்கள். 23 அப்பொழுது ராஜா: உயிரோடிருக்கிறது என் பிள்ளை, செத்தது உன் பிள்ளை என்று இவள் சொல்லுகிறாள்; அப்படியல்ல, செத்தது உன் பிள்ளை, உயிரோடிருக்கிறது என் பிள்ளை என்று அவள் சொல்லுகிறாள் என்று சொல்லி, 24 ஒரு பட்டயத்தைக் கொண்டுவாருங்கள் என்றான்; அவர்கள் ஒரு பட்டயத்தை ராஜாவினிடத்தில் கொண்டுவந்தார்கள். 25 ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையை இரண்டாகப் பிளந்து, பாதியை இவளுக்கும் பாதியை அவளுக்கும் கொடுங்கள் என்றான். 26 அப்பொழுது உயிரோடிருக்கிற பிள்ளையின் தாய், தன் பிள்ளைக்காக அவள் குடல் துடித்ததினால், ராஜாவை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லவேண்டாம்; அதை அவளுக்கே கொடுத்துவிடும் என்றாள்; மற்றவள் அது எனக்கும் வேண்டாம், உனக்கும் வேண்டாம், பிளந்து போடுங்கள் என்றாள். 27 அப்பொழுது ராஜா உயிரோடிருக்கிற பிள்ளையைக் கொல்லாமல், அவளுக்குக் கொடுத்துவிடுங்கள்; அவளே அதின் தாய் என்றான். 28 ராஜா தீர்த்த இந்த நியாயத்தை இஸ்ரவேலர் எல்லாரும் கேள்விப்பட்டு, நியாயம் விசாரிக்கிறதற்கு தேவன் அருளின ஞானம் ராஜாவுக்கு உண்டென்று கண்டு, அவனுக்குப் பயந்தார்கள்.

1 இராஜாக்கள் 4

1 ராஜாவாகிய சாலொமோன் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாயிருந்தான். 2 அவனுக்கு இருந்த பிரபுக்கள்: சாதோக்கின் குமாரனாகிய அசரியா பிரதான மந்திரியாயிருந்தான். 3 சீசாவின் குமாரராகிய ஏலிகோரேப்பும் அகியாவும் சம்பிரதிகளாயிருந்தார்கள்; அகிலூதின் குமாரன் யோசபாத் மந்திரியாயிருந்தான். 4 யோய்தாவின் குமாரன் பெனாயா படைத்தலைவனும், சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களுமாயிருந்தார்கள். 5 நாத்தானின் குமாரன் அசரியா மணியக்காரரின் தலைவனாயிருந்தான்; நாத்தானின் குமாரன் சாபூத் ராஜாவின் பிரதானியும் இஷ்டனுமாயிருந்தான். 6 அகீஷார் அரமனை விசாரிப்புக்காரனும், அப்தாவின் குமாரன் அதோனீராம் பகுதி விசாரிப்புக்காரனுமாய் இருந்தான். 7 ராஜாவுக்கும் அவன் அரமனைக்கும் வேண்டிய உணவுப்பொருள்களைச் சேகரிக்கிற பன்னிரண்டு மணியக்காரர் சாலொமோனுக்கு இஸ்ரவேல் தேசமெங்கும் வைக்கப்பட்டிருந்தார்கள்; அவர்கள் மாதத்துக்கு ஒவ்வொருவராக வருஷமுழுவதும் பராமரித்துவந்தார்கள். 8 அவர்கள் நாமங்களாவன: ஊரின் குமாரன், இவன் எப்பிராயீம் மலைத்தேசத்தில் இருந்தான். 9 தேக்கேரின் குமாரன், இவன் மாக்காத்சிலும், சால்பீமிலும், பெத்ஷிமேசிலும், ஏலோன்பெத்தானானிலும் இருந்தான். 10 ஏசேதின் குமாரன், இவன் அறுபோத்தில் இருந்தான்; சோகோவும் எப்பேர் சீமையனைத்தும் இவன் விசாரிப்பில் இருந்தது. 11 அபினதாபின் குமாரன், இவன் தோரின் நாட்டுப்புறமனைத்திற்கும் விசாரிப்புக்காரனாயிருந்தான்; சாலொமோனின் குமாரத்தியாகிய தாபாத் இவனுக்கு மனைவியாயிருந்தாள். 12 அகிலூதின் குமாரனாகிய பானா, இவன் விசாரிப்பில், தானாகும், மெகிதோவும், சர்த்தனாவுக்குப் பக்கமாகவும் யெஸ்ரயேலுக்குக் கீழாகவும் பெத்செயான் தொடங்கி ஆபேல் மெகொல்லாமட்டும் யக்மெயாமுக்கு அப்புறத்துமட்டும் இருக்கிற பெத்செயான் அனைத்தும் இருந்தது. 13 கேபேரின் குமாரன், இவன் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் இருந்தான்; கீலேயாத்திலுள்ள மனாசேயின் குமாரனாகிய யாவீரின் கிராமங்களும் மதில்களும் வெண்கலத் தாழ்ப்பாள்களுமுள்ள பாசான்தேசத்தினுடைய அறுபது பெரிய பட்டணங்களுள்ள அர்கோப் சீமையும் இவன் விசாரிப்பில் இருந்தது. 14 இத்தோவின் குமாரன் அகினதாப், இவன் மக்னாயீமில் இருந்தான். 15 அகிமாஸ், இவன் நப்தலியில் இருந்தான்; இவன் சாலொமோனுக்கு இருந்த ஒரு குமாரத்தியாகிய பஸ்மாத் என்பவளை விவாகம்பண்ணினான். 16 ஊசாயின் குமாரன் பானா, இவன் ஆசேரிலும் ஆலோத்திலும் இருந்தான். 17 பருவாவின் குமாரன் யோசபாத், இவன் இசக்காரில் இருந்தான். 18 ஏலாவின் குமாரன் சீமேயி, இவன் பென்யமீனில் இருந்தான். 19 ஊரியின் குமாரன் கேபேர், இவன் எமோரியரின் ராஜாவாகிய சீகோனுக்கும் பாசானின் ராஜாவாகிய ஓகுக்கும் இருந்த தேசமாகிய கீலேயாத்தேசத்தில் இருந்தான்; இவன்மாத்திரம் அத்தேசத்தில் அதிபதியாய் இருந்தான். 20 யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள். 21 நதிதொடங்கி, பெலிஸ்தர் தேசவழியாய் எகிப்தின் எல்லைமட்டும் இருக்கிற சகல ராஜ்யங்களையும் சாலொமோன் ஆண்டுகொண்டிருந்தான்; அவர்கள் சாலொமோனுக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனைச் சேவித்தார்கள். 22 நாள் ஒன்றிற்குச் சாலொமோனுக்குச் செல்லும் சாப்பாட்டுச் செலவு, முப்பது மரக்கால் மெல்லிய மாவும், அறுபது மரக்கால் மாவும், 23 கலைமான்களையும் வெளிமான்களையும் வரையாடுகளையும் கொழுமையான பறவைகளையும் தவிர, கொழுக்கப்பட்ட பத்து மாடுகளும், மேய்ச்சலிலிருந்து வந்த இருபது மாடுகளும் நூறு ஆடுகளுமாம். 24 நதிக்கு இப்புறத்தில் இருக்கிற திப்சாமுதற்கொண்டு ஆசாமட்டுமுள்ளவையெல்லாவற்றையும், நதிக்கு இப்புறத்திலுள்ள சகல ராஜாக்களையும் ஆண்டுவந்தான்; அவனைச் சுற்றி எங்கும் சமாதானமாயிருந்தது. 25 சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள். 26 சாலொமோனுக்கு நாலாயிரம் இரதக் குதிரைலாயங்களும், பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள். 27 மேற்சொல்லிய மணியக்காரரில் ஒவ்வொருவரும் தன்தன் மாதத்திலே சாலொமோன் ராஜாவுக்கும், ராஜாவின் பந்திக்கு வரும் யாவருக்கும் வேண்டியவைகளை ஒரு குறைவுமின்றி பராமரித்து, 28 குதிரைகளுக்கும் ஒட்டகங்களுக்கும் வேண்டிய வாற்கோதுமையையும், வைக்கோலையும், அவரவர் தங்களுக்கு இடப்பட்ட கட்டளையின்படி அவைகள் இருக்கும் ஸ்தலத்திற்குக் கொண்டுவருவார்கள். 29 தேவன் சாலொமோனுக்கு மிகுதியான ஞானத்தையும் புத்தியையும், கடற்கரை மணலத்தனையான மனோவிருத்தியையும் கொடுத்தார். 30 சகல கிழக்கத்திப் புத்திரரின் ஞானத்தையும் எகிப்தியரின் சகல ஞானத்தையும் பார்க்கிலும் சாலொமோனின் ஞானம் சிறந்ததாயிருந்தது. 31 அவன் எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் குமாரரிலும், மற்ற எல்லா மனுஷரிலும் ஞானவானாயிருந்தான்; சுற்றிலும் இருந்த சகல ஜாதிகளிலும் அவன் கீர்த்தி பிரபலமாயிருந்தது. 32 அவன் மூவாயிரம் நீதிமொழிகளைச் சொன்னான்; அவனுடைய பாட்டுகள் ஆயிரத்து ஐந்து. 33 லீபனோனில் இருக்கிற கேதுருமரங்கள் முதற்கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்புப் பூண்டுவரைக்குமுள்ள மரமுதலிய தாபரங்களைக்குறித்தும், மிருகங்கள் பறவைகள் ஊரும் பிராணிகள் மச்சங்கள் ஆகிய இவைகளைக்குறித்தும் வாக்கியங்களைச் சொன்னான். 34 சாலொமோனின் ஞானத்தைக் குறித்துக் கேள்விப்பட்ட பூமியின் சகல ராஜாக்களிடத்திலுமிருந்து நானாஜாதியான ஜனங்களும் அவனுடைய ஞானத்தைக் கேட்கிறதற்கு வந்தார்கள்.

1 இராஜாக்கள் 5

1 சாலொமோனை அவனுடைய பிதாவின் ஸ்தானத்தில் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள் என்று தீருவின் ராஜாவாகிய ஈராம் கேள்விப்பட்டு, தன் ஊழியக்காரரை அவனிடத்தில் அனுப்பினான்; ஈராம் தாவீதுக்குச் சகலநாளும் சிநேகிதனாயிருந்தான். 2 அப்பொழுது சாலொமோன் ஈராமினிடத்தில் ஆட்களை அனுப்பி: 3 என் தகப்பனாகிய தாவீதின் சத்துருக்களைக் கர்த்தர் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்திவிடுமளவும், அவர்கள் தம்மைச் சுற்றிலும் செய்கிற யுத்தத்தினால், அவர் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட, அவருக்குக் கூடாதிருந்தது என்று நீர் அறிந்திருக்கிறீர். 4 ஆனாலும் இப்பொழுதோ என் தேவனாகிய கர்த்தர் எங்கும் எனக்கு இளைப்பாறுதலைத் தந்தார்; விரோதியும் இல்லை, இடையூறும் இல்லை. 5 ஆகையால்: நான் உன் ஸ்தானத்தில் உன் சிங்காசனத்தின்மேல் வைக்கும் உன் குமாரனே என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான் என்று கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதினிடத்தில் சொன்னபடியே, என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று இருக்கிறேன். 6 ஆதலால் லீபனோனில் எனக்காக கேதுருமரங்களை வெட்டக் கட்டளையிடும்; சீதோனியரைப்போல மரவெட்டு வேலை அறிந்தவர்கள் எங்களுக்குள்ளே ஒருவருமில்லை என்பது உமக்குத் தெரியும்; அதற்காக என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடே இருப்பார்கள்; நீர் சொல்வதின்படியெல்லாம் உம்முடைய வேலைக்காரரின் சம்பளத்தை உமக்குக் கொடுப்பேன் என்று சொல்லச்சொன்னான். 7 ஈராம் சாலொமோனின் வார்த்தைகளைக் கேட்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு: அந்த ஏராளமான ஜனங்களை ஆளும்படி, தாவீதுக்கு ஒரு ஞானமுள்ள குமாரனைக் கொடுத்த கர்த்தர் இன்று ஸ்தோத்திரிக்கப்படுவாராக என்று சொல்லி; 8 ஈராம் சாலொமோனிடத்தில் மனுஷரை அனுப்பி: நீர் எனக்குச் சொல்லியனுப்பின காரியத்தை நான் கேட்டேன்; கேதுருமரங்களுக்காகவும், தேவதாரி விருட்சங்களுக்காகவும், உம்முடைய விருப்பத்தின்படியெல்லாம் நான் செய்வேன். 9 என் வேலைக்காரர் லீபனோனில் இருந்து அவைகளை இறக்கிக் கடலிலே கொண்டுவருவார்கள்; அங்கே நான் அவைகளைத் தெப்பங்களாகக் கட்டி, நீர் நியமிக்கும் இடத்துக்குக் கடல்வழியாய் அனுப்பி, அவைகளை அவிழ்த்து ஒப்பிப்பேன்; அங்கே நீர் அவைகளை ஒப்புக்கொண்டு என் ஜனங்களுக்கு ஆகாரங்கொடுத்து, என் விருப்பத்தின்படி செய்யவேண்டும் என்று சொல்லச்சொன்னான். 10 அப்படியே ஈராம் சாலொமோனுக்கு வேண்டியமட்டும் கேதுருமரங்களையும் தேவதாரி விருட்சங்களையும் கொடுத்துக்கொண்டுவந்தான். 11 சாலொமோன் ஈராமின் அரமனைக்குப் போஜனத்திற்காக இருபதினாயிரக்கலம் கோதுமையையும், இடித்துப்பிழிந்த ஒலிவமரங்களின் இருபதுகல எண்ணெயையும் கொடுத்தான்; இப்படிச் சாலொமோன் ஈராமுக்கு வருஷாந்தரம் கொடுத்துவந்தான். 12 கர்த்தர் சாலொமோனுக்குச் சொல்லியிருந்தபடியே அவனுக்கு ஞானத்தைத் தந்தருளினார்; ஈராமுக்கும் சாலொமோனுக்கும் சமாதானம் உண்டாயிருந்து, இருவரும் உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள். 13 ராஜாவாகிய சாலொமோன் இஸ்ரவேலரெல்லாரிலும் ஊழியத்துக்கு முப்பதினாயிரம் அமஞ்சி ஆட்களைப் பிடித்தான். 14 அவர்களில் ஒவ்வொரு மாதத்திற்குப் பதினாயிரம்பேரை மாற்றி மாற்றி, லீபனோனுக்கு அனுப்பினான்; அவர்கள் ஒரு மாதம் லீபனோனிலும், இரண்டு மாதம் தங்கள் வீடுகளிலும் இருப்பார்கள்; அதோனீராம் அந்த அமஞ்சி ஆட்களின்மேல் விசாரிப்புக்காரனாயிருந்தான். 15 சாலொமோனிடத்தில் சுமை சுமக்கிறவர்கள் எழுபதினாயிரம்பேரும், மலைகளில் மரம் வெட்டுகிறவர்கள் எண்பதினாயிரம்பேரும், 16 இவர்களைத்தவிர வேலையை விசாரித்து வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்கு தலைமையான விசாரிப்புக்காரர் மூவாயிரத்து முந்நூறுபேரும் இருந்தார்கள். 17 வெட்டின கல்லால் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட, பெரிதும் விலையேறப்பெற்றதுமான கற்களைக் கொண்டுவர ராஜா கட்டளையிட்டான். 18 ஆலயத்தைக் கட்ட, சாலொமோனின் சிற்பாசாரிகளும், ஈராமின் சிற்பாசாரிகளும், கிபலி ஊராரும், அந்த மரங்களையும் கற்களையும் வெட்டி ஆயத்தப்படுத்தினார்கள்.

1 இராஜாக்கள் 6

1 இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட நானூற்று எண்பதாம் வருஷத்திலும், சாலொமோன் இஸ்ரவேலின்மேல் ராஜாவான நாலாம் வருஷம் சீப்மாதமாகிய இரண்டாம் மாதத்திலும், அவன் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டத்தொடங்கினான். 2 சாலொமோன் ராஜா கர்த்தருக்குக் கட்டின ஆலயம் அறுபது முழ நீளமும், இருபது முழ அகலமும், முப்பது முழ உயரமுமாயிருந்தது. 3 ஆலயமாகிய அந்த மாளிகையின் முகப்பிலே அவன் கட்டின மண்டபம் ஆலயத்தின் அகலத்திற்குச் சரியாய் இருபது முழ நீளமும், ஆலயத்துக்கு முன்னே பத்துமுழ அகலமுமாயிருந்தது. 4 பார்வைக்குக் குறுகிப்போகிற ஒடுக்கமான ஜன்னல்களை ஆலயத்திற்குச் செய்வித்தான். 5 அவன் தேவாலயத்தின் சுவரும் சந்நிதி ஸ்தானச்சுவருமாகிய ஆலயத்தின் சுவர்களுக்கு அடுத்ததாய்ச் சுற்றுக்கட்டுகளைக் கட்டி, அவைகளில் அறைகளைச் சுற்றிலும் உண்டாக்கினான். 6 கீழே இருக்கிற சுற்றுக்கட்டு ஐந்து முழ அகலமும், நடுவே இருக்கிறது ஆறு முழ அகலமும், மூன்றாவதாயிருக்கிறது ஏழுமுழ அகலமுமாயிருந்தது; அவைகள் ஆலயத்தினுடைய சுவர்களிலே தாங்காதபடிக்கு ஆலயத்தைச் சுற்றிலும் புறம்பே ஒட்டுச்சுவர்களைக் கட்டுவித்தான். 7 ஆலயம் கட்டப்படுகையில், அது பணிதீர்ந்து கொண்டுவரப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; ஆகையால் அது கட்டப்படுகிறபோது, சுத்திகள் வாச்சிகள் முதலான எந்த இருப்பு ஆயுதங்களின் சத்தமும் அதிலே கேட்கப்படவில்லை. 8 நடு அறைகளுக்குப் போகிற வாசற்படி ஆலயத்தின் வலதுபுறத்தில் இருந்தது; சுழற்படிகளால் நடு அறைகளுக்கும், நடு அறைகளிலிருந்து மூன்றாவது அறைகளுக்கும் ஏறுவார்கள். 9 இவ்விதமாய் அவன் ஆலயத்தைக் கட்டி, கேதுருமர உத்திரங்களாலும் பலகைகளாலும் ஆலயத்தை மச்சுப்பாவி முடித்தான். 10 அவன் ஐந்துமுழ உயரமான சுற்றுக்கட்டுகளை ஆலயத்தின்மேலெங்கும் கட்டுவித்தான்; அவைகள் கேதுருமரங்களால் ஆலயத்தோடே இணைக்கப்பட்டிருந்தது. 11 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை சாலொமோனுக்கு உண்டாயிற்று; அவர்: 12 நீ என் கட்டளைகளின்படி நடந்து, என் நீதிநியாயங்களை நிறைவேற்றி, என் கற்பனைகளின்படியெல்லாம் நடந்துகொள்ளும்படிக்கு, அவைகளைக் கைக்கொண்டால், நீ கட்டுகிற இந்த ஆலயத்தைக்குறித்து நான் உன் தகப்பனாகிய தாவீதோடே சொன்ன என் வார்த்தையை உன்னிடத்தில் நிறைவேற்றி, 13 இஸ்ரவேல் புத்திரர் நடுவிலே வாசம்பண்ணி, என் ஜனமாகிய இஸ்ரவேலைக் கைவிடாதிருப்பேன் என்றார். 14 அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டி முடித்தான். 15 ஆலயத்துச் சுவர்களின் உட்புறத்தை, தளம்தொடங்கிச் சுவர்களின் மேல்மச்சுமட்டும், கேதுருப்பலகைகளால் மூடி, இப்படி உட்புறத்தை மரவேலையாக்கி, ஆலயத்தின் தளத்தை தேவதாரி விருட்சங்களின் பலகைகளால் தளவரிசைப்படுத்தினான். 16 தளவரிசை தொடங்கிச் சுவர்களின் உயரமட்டும் ஆலயத்தின் பக்கங்களைத் தொடர்ந்திருக்கிற இருபதுமுழ நீளமான மறைப்பையும் கேதுருப்பலகைகளால் உண்டாக்கி, உட்புறத்தை மகா பரிசுத்தமான சந்நிதி ஸ்தானமாகக் கட்டினான். 17 அதின் முன்னிருக்கிற தேவாலயமாகிய மாளிகை நாற்பதுமுழ நீளமாயிருந்தது. 18 ஆலயத்திற்குள் இருக்கிற கேதுருமரங்களில் மொக்குகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரவேலை செய்திருந்தது; பார்வைக்கு ஒரு கல்லாகிலும் காணப்படாமல் எல்லாம் கேதுருமரமாயிருந்தது. 19 கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை வைக்கிறதற்கு ஆலயத்துக்குள்ளே சந்நிதி ஸ்தானத்தை ஆயத்தப்படுத்தினான். 20 சந்நிதி ஸ்தானம் முன்புறமட்டும் இருபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், இருபதுமுழ உயரமுமாயிருந்தது; அதைப் பசும்பொன் தகட்டால் மூடினான்; கேதுருமரப் பலிபீடத்தையும் அப்படியே மூடினான். 21 ஆலயத்தின் உட்புறத்தைச் சாலொமோன் பசும்பொன்தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தானத்தின் மறைப்புக்கும் பொன் சங்கிலிகளைக் குறுக்கே போட்டு, அதைப் பொன் தகட்டால் மூடினான். 22 இப்படி ஆலயம் முழுவதும் கட்டித்தீருமட்டும், அவன் ஆலயம் முழுவதையும் பொன்தகட்டால் மூடி, சந்நிதி ஸ்தானத்திற்கு முன்பாக இருக்கிற பலிபீடத்தை முழுவதும் பொன்தகட்டால் மூடினான். 23 சந்நிதி ஸ்தானத்தில் ஒலிவமரங்களால் இரண்டு கேருபீன்களைச் செய்து வைத்தான்; ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமாயிருந்தது. 24 கேருபீனுக்கு இருக்கிற ஒரு செட்டை ஐந்து முழமும் கேருபீனின் மற்றச் செட்டை ஐந்து முழமுமாய், இப்படி ஒரு செட்டையின் கடைசிமுனைதொடங்கி மற்றச் செட்டையின் கடைசிமுனைமட்டும் பத்து முழமாயிருந்தது. 25 மற்றக் கேருபீனும் பத்து முழமாயிருந்தது; இரண்டு கேருபீன்களும் ஒரே அளவும் ஒரே திட்டமுமாயிருந்தது. 26 ஒரு கேருபீன் பத்துமுழ உயரமாயிருந்தது; மற்றக் கேருபீனும் அப்படியே இருந்தது. 27 அந்தக் கேருபீன்களை உள் ஆலயத்திலே வைத்தான்; கேருபீன்களின் செட்டைகள் விரித்திருந்ததினால், ஒரு கேருபீனின் செட்டை ஒருபக்கத்ததுச் சுவரிலும், மற்றக் கேருபீனின் செட்டை மறுபக்கத்துச் சுவரிலும் தொடத்தக்கதாயிருந்தது; ஆலயத்தின் நடுமையத்தில், அவைகளின் செட்டைகள் ஒன்றோடொன்று தொடத்தக்கதாயிருந்தது. 28 அந்தக் கேருபீன்களைப் பொன்தகட்டால் மூடினான். 29 ஆலயத்தின் சுவர்களையெல்லாம் அவன் சுற்றிலும் உள்ளும் புறம்புமாகக் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களும் கொத்து வேலைகளுமாக்கினான். 30 உள்ளும் புறம்புமாயிருக்கிற ஆலயத்துத் தளவரிசையையும் பொன்தகட்டால் மூடினான். 31 சந்நிதி ஸ்தானத்தின் வாசலுக்கு ஒலிவமரங்களால் இரட்டைக் கதவுகளைச் செய்தான்; மேல்சட்டமும் நிலைகளும் மறைப்பின் அளவில் ஐந்தில் ஒரு பங்காயிருந்தது. 32 ஒலிவமரமான அந்த இரட்டைக் கதவுகளில் அவன் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திரங்களைச் செய்து, அந்தக் கேருபீன்களிலும் பேரீந்துகளிலும் பொன்பதியத்தக்கதாய்ப் பொன்தகட்டால் மூடினான். 33 இப்படி தேவாலயத்தின் வாசலுக்கும் ஒலிவமர நிலைகளைச் செய்தான்; அது சுவர் அளவில் நாலத்தொரு பங்காயிருந்தது. 34 அதின் இரண்டு கதவுகளும் தேவதாரிப் பலகைகளால் செய்யப்பட்டிருந்தது; ஒரு கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும், மற்றக் கதவுக்கு இரண்டு மடிப்புப் பலகைகளும் இருந்தது. 35 அவைகளில் கேருபீன்களும் பேரீந்துகளும் மலர்ந்த பூக்களுமான சித்திர வேலையைச் செய்து, சித்திரங்களுக்குச் சரியாகச் செய்யப்பட்ட பொன்தகட்டால் அவைகளை மூடினான். 36 அவன் உட்பிராகாரத்தை மூன்று வரிசை வெட்டின கற்களாலும், ஒரு வரிசை கேதுருப் பலகைகளாலும் கட்டினான். 37 நாலாம் வருஷம் சீப்மாதத்திலே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டு, 38 பதினோராம் வருஷம் பூல் என்னும் எட்டாம் மாதத்திலே, அந்த ஆலயமுழுதும் சகல சட்டதிட்டத்தின்படியே ஒரு பங்கும் குறையாமல் கட்டித் தீர்ந்தது; அவன் அதைக் கட்டிமுடிக்க ஏழுவருஷம் சென்றது.

1 இராஜாக்கள் 7

1 சாலொமோன் தன் அரமனை முழுதையும் கட்டிமுடிக்க பதின்மூன்று வருஷம் சென்றது. 2 அவன் லீபனோன் வனம் என்னும் மாளிகையையும் கட்டினான்; அது நூறு முழ நீளமும், ஐம்பதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமுமாயிருந்தது; அதைக் கேதுருமர உத்திரங்கள் பாவப்பட்ட கேதுருமரத்தூண்களின் நாலு வரிசைகளின்மேல் கட்டினான். 3 ஒவ்வொரு வரிசைக்குப் பதினைந்து தூண்களாக நாற்பத்தைந்து தூண்களின்மேல் வைக்கப்பட்ட உத்திரங்களின்மேல் கேதுருக்களால் மச்சுப்பாவியிருந்தது. 4 மூன்று வரிசை ஜன்னல்கள் இருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள், ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது. 5 ஜன்னல்களின் வாசல்களும் சட்டங்களும் எல்லாம் சதுரமாயிருந்தது; மூன்று வரிசையிலும் ஜன்னல்கள் ஒன்றுக்கொன்று எதிராயிருந்தது. 6 ஐம்பதுமுழ நீளமும் முப்பதுமுழ அகலமுமான மண்டபத்தையும் தூண்கள் நிறுத்திக் கட்டினான்; அந்த மண்டபமும், அதின் தூண்களும், உத்திரங்களும், மாளிகையின் தூண்களுக்கும் உத்திரங்களுக்கும் எதிராயிருந்தது. 7 தான் இருந்து நியாயம் தீர்க்கிறதற்கு நியாயாசனம் போட்டிருக்கும் ஒரு நியாயவிசாரணை மண்டபத்தையும் கட்டி, அதின் ஒருபக்கம் துவக்கி மறுபக்கமட்டும் கேதுருப்பலகைகளால் தளவரிசைப் படுத்தினான். 8 அவன் வாசம்பண்ணும் அவனுடைய அரமனை மண்டபத்திற்குள்ளே அதேமாதிரியாகச் செய்யப்பட்ட வேறொரு மண்டபமும் இருந்தது. சாலொமோன் விவாகம்பண்ணின பார்வோனின் குமாரத்திக்கும் அந்த மண்டபத்தைப்போல ஒரு மாளிகையைக் கட்டுவித்தான். 9 இவைகளெல்லாம், உள்ளும் புறம்பும், அஸ்திபாரமுதல் மேல்திரணைகள்மட்டும், வெளியே இருக்கும் பெரிய முற்றம்வரைக்கும், அளவுபடி வெட்டி வாளால் அறுக்கப்பட்ட விலையேறப்பெற்ற கற்களால் செய்யப்பட்டது. 10 அஸ்திபாரம் பத்துமுழக் கற்களும், எட்டுமுழக் கற்களுமான விலையேறப்பெற்ற பெரிய கற்களாயிருந்தது. 11 அதின்மேல் உயர அளவுபடி பணிப்படுத்தின விலையேறப்பெற்ற கற்களும், கேதுருமரங்களும் வைக்கப்பட்டிருந்தது. 12 பெரிய முற்றத்திற்குச் சுற்றிலும் மூன்று வரிசைக் கேதுருமர உத்திரங்களாலும் ஒரு வரிசை பணிப்படுத்தின கற்களாலும் செய்யப்பட்டிருந்தது; கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திற்கும், அதின் முன்மண்டபத்திற்கும் அப்படியே செய்யப்பட்டிருந்தது. 13 ராஜாவாகிய சாலொமோன் ஈராம் என்னும் ஒருவனைத் தீருவிலிருந்து அழைப்பித்தான். 14 இவன் நப்தலி கோத்திரத்தாளாகிய ஒரு கைம்பெண்ணின் மகன்; இவன் தகப்பன் தீருநகரத்தானான கன்னான்; இவன் சகலவித வெண்கலவேலையையும் செய்யத்தக்க யுக்தியும் புத்தியும் அறிவும் உள்ளவனாயிருந்தான்; இவன் ராஜாவாகிய சாலொமோனிடத்தில் வந்து, அவன் வேலையையெல்லாம் செய்தான். 15 இவன் இரண்டு வெண்கலத் தூண்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு தூண் பதினெட்டு முழ உயரமும், ஒவ்வொரு தூணின் சுற்றளவு பன்னிரண்டு முழ நூலளவுமாயிருந்தது. 16 அந்தத் தூண்களுடைய தலைப்பில் வைக்க, வெண்கலத்தால் வார்க்கப்பட்ட இரண்டு கும்பங்களை உண்டாக்கினான்; ஒவ்வொரு கும்பமும் ஐந்துமுழ உயரமாயிருந்தது. 17 தூண்களுடைய முனையின்மேலுள்ள கும்பங்களுக்கு வலைபோன்ற பின்னல்களும், சங்கிலிபோன்ற தொங்கல்களும், ஒவ்வொரு கும்பத்திற்கும் எவ்வேழாக இருந்தது. 18 தூண்களைப் பண்ணின விதமாவது: தலைப்பின்மேலுள்ள கும்பங்களை மூடும்படிக்கு, கும்பங்கள் ஒவ்வொன்றிலும் பின்னலின்மேல் சுற்றிலும் இரண்டு வரிசை மாதளம்பழங்களைச் செய்வித்தான். 19 மண்டபத்தின் முன்னிருக்கும் அந்தத் தூண்களுடைய தலைப்பின்மேலுள்ள கும்பங்கள் லீலிபுஷ்பங்களின் வேலையும், நாலுமுழ உயரமுமாயிருந்தது. 20 இரண்டு தூண்களின்மேலுமுள்ள கும்பங்களில் செய்யப்பட்ட பின்னலுக்கு அருகே இருந்த இடத்தில் விம்மிய இருநூறு மாதளம்பழங்களின் வரிசைகள் சுற்றிலும் இருந்தது; மற்றக் கும்பத்திலும் அப்படியே இருந்தது. 21 அந்தத் தூண்களை தேவாலய வாசல் மண்டபத்தில் நிறுத்தினான்; அவன் வலதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு யாகீன் என்றும், இடதுபுறத்தில் நிறுத்தின தூணுக்கு போவாஸ் என்றும் பேரிட்டான். 22 தூண்களுடைய சிகரத்தில் லீலிபுஷ்பவேலை செய்யப்பட்டிருந்தது; இவ்விதமாய்த் தூண்களின் வேலை முடிந்தது. 23 வெண்கலக் கடல் என்னும் தொட்டியையும் வார்ப்பித்தான்; சுற்றிலும் சக்கராகாரமான அதினுடைய ஒரு விளிம்பு தொடங்கி மறுவிளிம்புமட்டும், அகலம் பத்துமுழமும், உயரம் ஐந்துமுழமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது. 24 அந்தக் கடல்தொட்டியைச் சுற்றி விளிம்புக்குக் கீழே அதைச் சுற்றிலும் மொக்குகள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து பத்தாகச் செய்யப்பட்டிருந்தது; வார்க்கப்பட்ட அந்த மொக்குகளின் வரிசைகள் இரண்டும் தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்டிருந்தது. 25 அது பன்னிரண்டு ரிஷபங்களின்மேல் நின்றது; அவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தது; கடல்தொட்டி ரிஷபங்களின் மேலாகவும், அவைகளின் பின்புறங்களெல்லாம் உள்ளாகவும் இருந்தது. 26 அதின் கனம் நாலு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம்போலும் இருந்தது; அது இரண்டாயிரம் குடம் தண்ணீர் பிடிக்கும். 27 பத்து வெண்கல ஆதாரங்களையும் செய்தான்; ஒவ்வொரு ஆதாரம் நாலுமுழ நீளமும், நாலுமுழ அகலமும், மூன்றுமுழ உயரமுமாயிருந்தது. 28 அந்த ஆதாரங்களின் வேலைப்பாடு என்னவெனில், அவைகளுக்குச் சவுக்கைகள் உண்டாயிருந்தது; சவுக்கைகளோ சட்டங்களின் நடுவில் இருந்தது. 29 சட்டங்களுக்கு நடுவே இருக்கிற அந்தச் சவுக்கைகளில் சிங்கங்களும், காளைகளும், கேருபீன்களும், சட்டங்களுக்கு மேலாக ஒரு திரணையும், சிங்கங்களுக்கும் காளைகளுக்கும் கீழாக சாய்வான வேலைப்பாடுள்ள ஜலதாரைகளும் அதனோடே இருந்தது. 30 ஒவ்வொரு ஆதாரத்திற்கு நாலு வெண்கல உருளைகளும், வெண்கலத் தட்டுகளும், அதின் நாலு கோடிகளுக்கு அச்சுகளும் இருந்தது; கொப்பரையின் கீழிருக்க, அந்தக் கொம்மைகள் ஒவ்வொன்றும் வார்ப்பு வேலையாக ஜலதாரைகளுக்கு நேராயிருந்தது. 31 திரணைகளுக்குள்ளான அதின் வாய் மேலாக ஒருமுழம் உயர்ந்திருந்தது; அதின் வாய் ஒன்றரைமுழ சக்கராகாரமும் தட்டையுமாய், அதின் வாயின்மேல் சித்திரங்களும் செய்யப்பட்டிருந்தது; அவைகளின் சவுக்கைகள் விருத்தமாயிராமல் சதுரமாயிருந்தது. 32 அந்த நாலு உருளைகள் சவுக்கைகளின் கீழும், உருளைகளின் அச்சுகள் ஆதாரத்திலும் இருந்தது; ஒவ்வொரு உருளை ஒன்றரைமுழ உயரமாயிருந்தது. 33 உருளைகளின் வேலை இரதத்து உருளைகளின் வேலைக்கு ஒத்திருந்தது; அவைகளின் அச்சுகளும், சக்கரங்களும், வட்டங்களும், கம்பிகளும் எல்லாம் வார்ப்புவேலையாயிருந்தது. 34 ஒவ்வொரு ஆதாரத்தினுடைய நாலு கோடிகளிலும், ஆதாரத்திலிருந்து புறப்படுகிற நாலு கொம்மைகள் இருந்தது. 35 ஒவ்வொரு ஆதாரத்தின் தலைப்பிலும் அரைமுழ உயரமான சக்கராகாரமும், ஒவ்வொரு ஆதாரத்தினுடைய தலைப்பின்மேலும் அதிலிருந்து புறப்படுகிற அதின் கைப்பிடிகளும் சவுக்கைகளும் இருந்தது. 36 அவைகளிலிருக்கிற கைப்பிடிகளுக்கும் சவுக்கைகளுக்கும் இருக்கிற சந்துகளிலே, கேருபீன்கள் சிங்கங்கள் பேரீந்துகளுடைய சித்திரங்களைத் தீர்த்திருந்தான்; சுற்றிலும் ஒவ்வொன்றிலும், ஜலதாரைகளிலும் இருக்கும் இடங்களுக்குத் தக்கதாய்ச் செய்தான். 37 இந்தப்பிரகாரமாக அந்தப் பத்து ஆதாரங்களையும் செய்தான்; அவைகளெல்லாம் ஒரே வார்ப்பும், ஒரே அளவும், ஒரேவித கொத்துவேலையுமாயிருந்தது. 38 பத்து வெண்கலக் கொப்பரைகளையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கொப்பரை நாற்பது குடம் பிடிக்கும்; நாலுமுழ அகலமான ஒவ்வொரு கொப்பரையும் அந்தப் பத்து ஆதாரங்களில் ஒவ்வொன்றின்மேலும் வைக்கப்பட்டது. 39 ஐந்து ஆதாரங்களை ஆலயத்தின் வலதுபுறத்திலும், ஐந்து ஆதாரங்களை ஆலயத்தின் இடதுபுறத்திலும் வைத்தான்; கடல்தொட்டியைக் கிழக்கில் ஆலயத்தின் வலதுபுறத்திலே தெற்குக்கு நேராக வைத்தான். 40 பின்பு ஈராம் கொப்பரைகளையும் சாம்பல் எடுக்கிற கரண்டிகளையும் கலங்களையும் செய்தான். இவ்விதமாய் ஈராம் கர்த்தருடைய ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய எல்லா வேலையையும் செய்து முடித்தான். 41 அவைகள் என்னவெனில்: இரண்டு தூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களும், தூண்களுடைய முனையின்மேல் இருக்கிற இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும் இரண்டு வலைப் பின்னல்களும், 42 தூண்களின்மேலுள்ள இரண்டு உருண்டைக் கும்பங்களை மூடும்படி ஒவ்வொரு வலைப்பின்னலுக்கும் பண்ணின இரண்டு வரிசை மாதளம்பழங்களும், ஆக இரண்டு வலைப்பின்னலுக்கும் நானூறு மாதளம்பழங்களும், 43 பத்து ஆதாரங்களும், ஆதாரங்களின்மேல் வைத்த பத்துக் கொப்பரைகளும், 44 ஒரு கடல்தொட்டியும், கடல்தொட்டியின் கீழிருக்கிற பன்னிரண்டு ரிஷபங்களும், 45 செப்புச்சட்டிகளும், சாம்பல் கரண்டிகளும், கலங்களும் செய்தான்; கர்த்தரின் ஆலயத்துக்காக ராஜாவாகிய சாலொமோனுக்கு ஈராம் செய்த இந்த எல்லாப் பணிமுட்டுகளும் சுத்தமான வெண்கலமாயிருந்தது. 46 யோர்தானுக்கு அடுத்த சமனான பூமியிலே, சுக்கோத்துக்கும் சர்தானுக்கும் நடுவே களிமண்தரையிலே ராஜா இவைகளை வார்ப்பித்தான். 47 இந்தச் சகல பணிமுட்டுகளின் வெண்கலம் மிகவும் ஏராளமுமாயிருந்தபடியால், சாலொமோன் அவைகளை நிறுக்கவில்லை; அதினுடைய நிறை இவ்வளவென்று ஆராய்ந்து பார்க்கவுமில்லை. 48 பின்னும் கர்த்தருடைய ஆலயத்துக்குத் தேவையான பணிமுட்டுகளையெல்லாம் சாலொமோன் உண்டாக்கினான்; அவையாவன, பொன் பலிபீடத்தையும், சமுகத்தப்பங்களை வைக்கும் பொன்மேஜையையும், 49 சந்நிதி ஸ்தானத்திற்கு முன்பாக வைக்கும் பசும்பொன் விளக்குத்தண்டுகள், வலதுபுறமாக ஐந்தையும் இடதுபுறமாக ஐந்தையும், பொன்னான அதின் பூக்களோடும் விளக்குகளோடும் கத்தரிகளோடுங்கூட உண்டாக்கினான். 50 பசும்பொன் கிண்ணங்களையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும், மகா பரிசுத்தமான உள் ஆலயத்தினுடைய கதவுகளின் பொன்னான முளைகளையும், தேவாலயமாகிய மாளிகைக் கதவுகளின் பொன்னான முளைகளையும் செய்தான். 51 இவ்விதமாய் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்த வேலைகளெல்லாம் முடிந்தது; அப்பொழுது சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் கொண்டுவந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.

1 இராஜாக்கள் 8

1 அப்பொழுது கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரிலுள்ள பிதாக்களின் தலைவர் அனைவரையும், எருசலேமில் ராஜாவாகிய சாலொமோன் தன்னிடத்திலே கூடிவரச்செய்தான். 2 இஸ்ரவேல் மனுஷரெல்லாரும் ஏழாம் மாதமாகிய ஏத்தானீம்மாதத்துப் பண்டிகையிலே, ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கூடிவந்தார்கள். 3 இஸ்ரவேலின் மூப்பர் அனைவரும் வந்திருக்கையில், ஆசாரியர் கர்த்தருடைய பெட்டியை எடுத்து, 4 பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருந்த பரிசுத்த பணிமுட்டுகள் அனைத்தையும் சுமந்து கொண்டுவந்தார்கள்; ஆசாரியரும், லேவியரும், அவைகளைச் சுமந்தார்கள். 5 ராஜாவாகிய சாலொமோனும் அவனோடேகூடின இஸ்ரவேல் சபையனைத்தும் பெட்டிக்கு முன்பாக நடந்து, எண்ணிக்கையும் கணக்குமில்லாத திரளான ஆடுகளையும் மாடுகளையும் பலியிட்டார்கள். 6 அப்படியே ஆசாரியர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை ஆலயத்தின் சந்நிதி ஸ்தானமாகிய மகாபரிசுத்த ஸ்தானத்திலே கேருபீன்களுடைய செட்டைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள். 7 கேருபீன்கள் பெட்டியிருக்கும் ஸ்தானத்திலே தங்கள் இரண்டு செட்டைகளையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது. 8 தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தானத்திற்கு முன்னான பரிசுத்த ஸ்தலத்திலே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை முன்னுக்கு இழுத்தார்கள்; ஆகிலும் வெளியே அவைகள் காணப்படவில்லை; அவைகள் இந்நாள்வரைக்கும் அங்கேதான் இருக்கிறது. 9 இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்டபின் கர்த்தர் அவர்களோடே உடன்படிக்கை பண்ணுகிறபோது, மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை. 10 அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையில், மேகமானது கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று. 11 மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்கிறதற்கு நிற்கக்கூடாமற் போயிற்று; கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பிற்று. 12 அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும், 13 தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன் என்றும் சொல்லி, 14 ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையாரெல்லாரும் நின்றார்கள். 15 அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதைத் தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார். 16 அவர் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு, என் நாமம் விளங்கும்படி, ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று நான் இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமுள்ள ஒரு பட்டணத்தையும் தெரிந்துகொள்ளாமல் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிகாரியாயிருக்கும்படி தாவீதையே தெரிந்துகொண்டேன் என்றார். 17 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தில் இருந்தது. 18 ஆனாலும் கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதை நோக்கி: என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் உன் மனதிலே இருந்தது நல்லகாரியந்தான். 19 ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய், உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார். 20 இப்போதும் கர்த்தர் சொல்லிய தம்முடைய வார்த்தையை நிறைவேற்றினார்; கர்த்தர் சொன்னபடியே, நான் என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்தில் எழும்பி, இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டினேன். 21 கர்த்தர் நம்முடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணினபோது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கை இருக்கிற பெட்டிக்காக அதிலே ஒரு ஸ்தானத்தை உண்டாக்கினேன் என்றான். 22 பின்பு சாலொமோன்: கர்த்தருடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையாரெல்லாருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராய்த் தன் கைகளை விரித்து: 23 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர். 24 தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்நாளில் இருக்கிறபடி, உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர். 25 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் குமாரரும் எனக்கு முன்பாக நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும். 26 இஸ்ரவேலின் தேவனே, என் தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய தாசனுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை மெய்யென்று விளங்குவதாக. 27 தேவன் மெய்யாக பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்? 28 என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் இன்று உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும். 29 உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்கும்படி என்னுடைய நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக. 30 உமது அடியானும், இந்த ஸ்தலத்திலே விண்ணப்பஞ் செய்யப்போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபத்தைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே அதை நீர் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக. 31 ஒருவன் தன் அயலானுக்குக் குற்றஞ்செய்திருக்கையில், இவன் அவனை ஆணையிடச்சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன் வந்தால், 32 அப்பொழுது பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரப்பண்ணி, அவனைக் குற்றவாளியாகத் தீர்க்கவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத்தக்கதாய்ச் செய்து அவனை நீதிமானாக்கவும் தக்கதாய் உமது அடியாரை நியாயந்தீர்ப்பீராக. 33 உம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினிமித்தம் சத்துருவுக்கு முன்பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, இந்த ஆலயத்துக்கு நேராக உம்மை நோக்கி விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால், 34 பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்கள் பிதாக்களுக்கு நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவீராக. 35 அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினால் வானம் அடைபட்டு மழைபெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த ஸ்தலத்திற்கு நேராக விண்ணப்பஞ்செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, தங்களை தேவரீர் கிலேசப்படுத்துகையில் தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால், 36 பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உமது தேசத்தில் மழைபெய்யக் கட்டளையிடுவீராக. 37 தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்கள் சத்துருக்கள் தேசத்திலுள்ள பட்டணங்களை முற்றிக்கைபோடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வருகிறபோதும், 38 உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனுஷனானாலும் தன் இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்துக்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும், 39 உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து, 40 தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படிக்கு தேவரீர் ஒருவரே எல்லா மனுபுத்திரரின் இருதயத்தையும் அறிந்தவராதலால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத்தக்கதாகச் செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக. 41 உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே. 42 அப்படிக்கொத்த அந்நிய ஜாதியானும், உமது நாமத்தினிமித்தம் தூரதேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக விண்ணப்பம்பண்ணினால், 43 உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படிக்கும், நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கும், உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக. 44 நீர் உம்முடைய ஜனங்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் சத்துருக்களோடு யுத்தம்பண்ணப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்துக்கும், உம்முடைய நாமத்துக்கு நான் கட்டின இந்த ஆலயத்துக்கும் நேராகக் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினால், 45 பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக. 46 பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே; ஆகையால், அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்கள் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அந்தச் சத்துருக்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகும்போது, 47 அவர்கள் சிறைப்பட்டுப் போயிருக்கிற தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமம்பண்ணி, துன்மார்க்கமாய் நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கி வேண்டுதல் செய்து, 48 தங்களைச் சிறைபிடித்துக்கொண்ட தங்கள் சத்துருக்களின் தேசத்திலே தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம்பண்ணும்போது, 49 உமது வாசஸ்தலமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து, 50 உம்முடைய ஜனங்கள் உமக்கு விரோதமாய்ச் செய்த பாவத்தையும், அவர்கள் உம்முடைய கட்டளையை மீறிய அவர்கள் துரோகங்களையும் எல்லாம் மன்னித்து, அவர்களைச் சிறைபிடித்துக் கொண்டுபோகிறவர்கள் அவர்களுக்கு இரங்கத்தக்கதான இரக்கத்தை அவர்களுக்குக் கிடைக்கப்பண்ணுவீராக. 51 அவர்கள் எகிப்தென்கிற இருப்புக் காளவாயின் நடுவிலிருந்து தேவரீர் புறப்படப்பண்ணின உம்முடைய ஜனமும் உம்முடைய சுதந்தரமுமாய் இருக்கிறார்களே. 52 அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி, உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது ஜனமாகிய இஸ்ரவேலின் வேண்டுதலுக்கும் திறந்திருப்பதாக. 53 கர்த்தராகிய ஆண்டவரே, நீர் எங்கள் பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணும்போது, உம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்னபடியே, தேவரீர் பூமியின் சகல ஜனங்களிலும் அவர்களை உமக்குச் சுதந்தரமாகப் பிரித்தெடுத்தீரே என்று விண்ணப்பம்பண்ணினான். 54 சாலொமோன் கர்த்தரை நோக்கி, இந்த ஜெபத்தையும் வேண்டுதலையும் எல்லாம் செய்து முடித்தபின்பு, அவன் கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்பாகத் தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து, முழங்காற்படியிட்டிருந்ததை விட்டெழுந்து, 55 நின்றுகொண்டு, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்து, உரத்த சத்தத்தோடே சொன்னது: 56 தாம் வாக்குத்தத்தம் பண்ணினபடியெல்லாம் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலை அருளின கர்த்தருக்கு ஸ்தோத்திரம், அவர் தம்முடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் எல்லாம் ஒரு வார்த்தையானாலும் தவறிப்போகவில்லை. 57 நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைக் கைவிடாமலும், நம்மை நெகிழவிடாமலும், அவர் நம்முடைய பிதாக்களோடு இருந்ததுபோல, நம்மோடும் இருந்து, 58 நாம் அவருடைய வழிகளில் எல்லாம் நடக்கிறதற்கும், அவர் நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய கற்பனைகளையும், அவருடைய கட்டளைகளையும், அவருடைய நியாயங்களையும் கைக்கொள்ளுகிறதற்கும், நம்முடைய இருதயத்தைத் தம்மிடத்தில் சாயப்பண்ணுவாராக. 59 கர்த்தரே தேவன், வேறொருவரும் இல்லையென்பதைப் பூமியின் ஜனங்களெல்லாம் அறியும்படியாக, 60 அவர் தமது அடியானுடைய நியாயத்தையும், தமது ஜனமாகிய இஸ்ரவேலின் நியாயத்தையும், அந்தந்த நாளில் நடக்கும் காரியத்துக்குத்தக்கதாய் விசாரிப்பதற்கு, நான் கர்த்தருக்கு முன்பாக விண்ணப்பம்பண்ணின இந்த என்னுடைய வார்த்தைகள் இரவும்பகலும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் இருப்பதாக. 61 ஆதலால் இந்நாளில் இருக்கிறதுபோல, நீங்கள் அவர் கட்டளைகளில் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்ள, உங்கள் இருதயம் நம்முடைய தேவனாகிய கர்த்தரோடு உத்தமமாய் இருக்கக்கடவது என்றான். 62 பின்பு ராஜாவும் அவனோடே இருந்த இஸ்ரவேலர் அனைவரும், கர்த்தருடைய சந்நிதியில் பலிகளைச் செலுத்தினார்கள். 63 சாலொமோன் கர்த்தருக்குச் சமாதானபலிகளாக, இருபத்தீராயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாய் ராஜாவும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கர்த்தருடைய ஆலயத்தைப் பிரதிஷ்டைபண்ணினார்கள். 64 கர்த்தருடைய சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதான பலிகளின் நிணத்தையும் கொள்ளமாட்டாமல் சிறிதாயிருந்தபடியினால், ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்குமுன் இருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைப் பரிசுத்தப்படுத்தி, அன்றையதினம் அங்கே சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதான பலிகளின் நிணத்தையும் செலுத்தினான். 65 அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லைதொடங்கி எகிப்தின் நதிமட்டும் இருந்துவந்து, அவனோடே இருந்த பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் நம்முடைய தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும், அதற்குப்பின்பு வேறே ஏழுநாளும், ஆகப் பதினாலு நாள்வரைக்கும் பண்டிகையை ஆசரித்தார்கள். 66 எட்டாம்நாளிலே ஜனங்களுக்கு விடைகொடுத்து அனுப்பினான்; அவர்கள் ராஜாவை வாழ்த்தி, கர்த்தர் தமது தாசனாகிய தாவீதுக்கும் தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த எல்லா நன்மைக்காகவும் சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடே தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.

1 இராஜாக்கள் 9

1 சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும், தான் செய்யவேண்டும் என்று விரும்பின எல்லாவற்றையும் கட்டி முடித்தபின்பு, 2 கர்த்தர் கிபியோனிலே சாலொமோனுக்குத் தரிசனமானதுபோல, இரண்டாந்தரமும் அவனுக்குத் தரிசனமானார். 3 கர்த்தர் அவனை நோக்கி: நீ என் சமுகத்தில் செய்த உன் விண்ணப்பத்தையும் உன் வேண்டுதலையும் கேட்டேன்; நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும். 4 நான் உனக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் நீ செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளும்படிக்கு, என் சமுகத்தில் மன உத்தமமும் செம்மையுமாய் உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல நடப்பாயானால், 5 இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்காரும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று உன் தகப்பனாகிய தாவீதோடே நான் சொன்னபடியே, இஸ்ரவேலின்மேலுள்ள உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன். 6 நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்னைவிட்டுப் பின்வாங்கி, நான் உங்களுக்கு முன்வைத்த என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவைகளைப் பணிந்துகொள்வீர்களாகில், 7 நான் இஸ்ரவேலுக்குக் கொடுத்த தேசத்திலே அவர்களை வைக்காதபடிக்கு நிர்மூலமாக்கி, என் நாமம் விளங்க நான் பரிசுத்தமாக்கின இந்த ஆலயத்தை என் சமுகத்தைவிட்டுத் தள்ளுவேன்; அப்பொழுது இஸ்ரவேல் சகல ஜனங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச்சொல்லாகவும் இருப்பார்கள். 8 அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, பகிடியாய் ஈசலிட்டு: கர்த்தர் இந்த தேசத்துக்கும் இந்த ஆலயத்துக்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள். 9 அதற்கு அவர்கள்: தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரைவிட்டு, வேறே தேவர்களைப் பற்றிக்கொண்டு, அவர்களை நமஸ்கரித்துச் சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார் என்று சொல்லுவார்கள் என்றார். 10 சாலொமோன் கர்த்தருடைய ஆலயமும் ராஜ அரமனையுமாகிய இரண்டு மாளிகைகளையும் கட்டி நிறைவேற்றுகிற இருபதாம் வருஷம் முடிவிலே, 11 தன்னுடைய விருப்பத்தின்படியெல்லாம் தனக்குக் கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், பொன்னையும் கொடுத்துவந்த தீருவின் ராஜாவாகிய ஈராமுக்கு, ராஜாவாகிய சாலொமோன் கலிலேயா நாட்டிலுள்ள இருபது பட்டணங்களைக் கொடுத்தான். 12 ஈராம் தனக்குச் சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்க்கிறதற்குத் தீருவிலிருந்து புறப்பட்டுவந்தான்; அவைகளில் அவன் பிரியப்படவில்லை. 13 அதனாலே அவன்: என் சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்நாள்மட்டும் வழங்கி வருகிறபடி காபூல் நாடு என்று பேரிட்டான். 14 ஈராம் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன் அனுப்பியிருந்தான். 15 பிடித்த அமஞ்சி ஆட்களைக்கொண்டு சாலொமோன் ராஜா தான் கர்த்தருடைய ஆலயத்தையும், தன் அரமனையையும், மில்லோவையும், எருசலேமின் மதிலையும், ஆத்சோரையும், மெகிதோவையும், கேசேரையும் கட்டினான். 16 கேசேரை ஏன் கட்டினான் என்றால், எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் புறப்பட்டுவந்து, அந்தக் கேசேர்பட்டணத்தைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து, அதிலே குடியிருந்த கானானியரைக் கொன்றுபோட்டு, அதைச் சாலொமோனின் மனைவியாகிய தன் குமாரத்திக்குச் சீதனமாகக் கொடுத்திருந்தான். 17 சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும், 18 பாலாத்தையும், வனாந்தரவெளியிலுள்ள தத்மோரையும், 19 தனக்கு இருக்கிற ரஸ்துக்களை வைக்கும் சகல பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் பட்டணங்களையும், குதிரை வீரர் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும், தான் அரசாண்ட தேசமெங்கும் தனக்கு இஷ்டமானதையெல்லாம் கட்டினான். 20 இஸ்ரவேல் புத்திரர் சங்காரம் பண்ணக்கூடாமல் மீந்திருந்த இஸ்ரவேல் புத்திரரின் ஜாதியல்லாத எமோரியர், ஏத்தியர், பெரிசியர், ஏவியர், எபூசியருமான சகல ஜனத்திலும், 21 அவர்களுக்குப் பிறகு தேசத்தில் மீந்திருந்த சகல ஜனங்களுடைய பிள்ளைகளையும், சாலொமோன் இந்நாள்வரைக்கும் நடக்கிறதுபோல, அமஞ்சிவேலை செய்ய அடிமைப்படுத்திக்கொண்டான். 22 இஸ்ரவேல் புத்திரரில் ஒருவரையும் சாலொமோன் அடிமைப்படுத்தவில்லை; அவர்கள் யுத்தமனுஷரும், அவனுக்குப் பணிவிடைக்காரரும், பிரபுக்களும், சேர்வைக்காரரும், இரதவீரரும், குதிரைவீரருமாயிருந்தார்கள். 23 ஐந்நூற்றைம்பதுபேர் சாலொமோனின் வேலையை விசாரித்து, வேலையாட்களைக் கண்காணிக்கிறதற்குத் தலைமையான விசாரிப்புக்காரராயிருந்தார்கள். 24 பார்வோனின் குமாரத்தி, தாவீதின் நகரத்திலிருந்து சாலொமோன் தனக்குக் கட்டின தன் மாளிகையிலே குடிவந்தாள்; அப்பொழுது மில்லோவைக் கட்டினான். 25 சாலொமோன் கர்த்தரின் ஆலயத்தை முடித்தபின்பு, அவருக்குக் கட்டின பலிபீடத்தின்மேல் வருஷத்தில் மூன்றுமுறை சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் இட்டு, கர்த்தரின் சந்நிதியில் இருக்கிற பலிபீடத்தின்மேல் தூபங்காட்டிவந்தான். 26 ராஜாவாகிய சாலொமோன் ஏதோம் தேசத்தில் சிவந்த சமுத்திரக்கரையிலே ஏலோத்துக்குச் சமீபத்திலுள்ள எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்வித்தான். 27 அந்தக் கப்பல்களில் ஈராம் சமுத்திர யாத்திரையில் பழகின கப்பலாட்களாகிய தன் வேலைக்காரரைச் சாலொமோனுடைய வேலைக்காரரோடேகூட அனுப்பினான். 28 அவர்கள் ஓப்பீருக்குப்போய், அவ்விடத்திலிருந்து நானூற்று இருபது தாலந்து பொன்னை ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

1 இராஜாக்கள் 10

1 கர்த்தருடைய நாமத்தைக்குறித்துச் சாலொமோனுக்கு உண்டாயிருந்த கீர்த்தி சேபாவின் ராஜஸ்திரீக்குக் கேள்வியானபோது, அவள் விடுகதைகளினால் அவனைச் சோதிக்கிறதற்காக, 2 மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும், எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதில் இருந்த எல்லாவற்றையுங்குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள். 3 அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான், அவளுக்கு விடுவிக்கக்கூடாதபடிக்கு, ஒன்றாகிலும் ராஜாவுக்கு மறைபொருளாயிருக்கவில்லை. 4 சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய சகல ஞானத்தையும், அவன் கட்டின அரமனையையும், 5 அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு, 6 ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து நான் என் தேசத்தில் கேட்ட செய்தி மெய்யாயிற்று. 7 நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அந்த வார்த்தைகளை நான் நம்பவில்லை; இவைகளில் பாதியாகிலும் எனக்கு அறிவிக்கப்படவில்லை என்று காண்கிறேன்; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும், உம்முடைய ஞானமும் செல்வமும் அதிகமாயிருக்கிறது. 8 உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள். 9 உம்மை இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் வைக்க, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக: கர்த்தர் இஸ்ரவேலை என்றைக்கும் சிநேகிக்கிறபடியினால், நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை ராஜாவாக ஏற்படுத்தினார் என்றாள். 10 அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அவ்வளவு கந்தவர்க்கங்கள் பிற்பாடு ஒருக்காலும் வரவில்லை. 11 ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் கப்பல்களும், ஓப்பீரிலிருந்து மிகுந்த வாசனைமரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தது. 12 அந்த வாசனைமரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்திற்கும் ராஜ அரமனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரருக்குச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்ட வாசனைமரங்கள் பிற்பாடு வந்ததுமில்லை, இந்நாள்வரைக்கும் காணப்படவுமில்லை. 13 ராஜாவாகிய சாலொமோன்தானே சந்தோஷமாய்ச் சேபாவின் ராஜஸ்திரீக்கு வெகுமதிகள் கொடுத்ததும் அல்லாமல், அவள் விருப்பப்பட்டுக் கேட்டது எல்லாவற்றையும் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன் பரிவாரத்தோடே தன் தேசத்திற்குத் திரும்பிப் போனாள். 14 சாலொமோனுக்கு வியாபாரிகளாலும், சுகந்த திரவிய வர்த்தகராலும், அரபிதேசத்து சகல ராஜாக்களாலும், மாகாணங்களின் அதிபதிகளாலும் வந்த பொன்னையல்லாமல், 15 ஒவ்வொரு வருஷத்தில் அவனுக்கு வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது. 16 சாலொமோன் ராஜா, அடித்த பொன்தகட்டால் இருநூறு பரிசைகளைச் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறைபொன் சென்றது. 17 அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் செய்வித்தான்; ஒவ்வொரு கேடகத்திற்கும் மூன்று இராத்தல் பொன் சென்றது; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான். 18 ராஜா தந்தத்தினால் பெரிய ஒரு சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான். 19 அந்தச் சிங்காசனத்திற்கு ஆறு படிகள் இருந்தது; சிங்காசனத்தின் தலைப்பு பின்னாக வளைவாயிருந்தது; உட்காரும் இடத்திற்கு இருபுறமும் கைச் சாய்மானங்கள் இருந்தது; இரண்டு சிங்கங்கள் கைச்சாய்மானங்கள் அருகே நின்றது. 20 ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும், பன்னிரண்டு சிங்கங்கள் நின்றது; எந்த ராஜ்யத்திலும் இப்படிப் பண்ணப்படவில்லை. 21 ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்கிற மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை. 22 ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும். 23 பூமியின் சகல ராஜாக்களைப்பார்க்கிலும், ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான். 24 சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்கிறதற்காக, சகல தேசத்தாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள். 25 வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள். 26 சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் வைத்திருந்தான். 27 எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்தி மரங்கள்போலவும் அதிகமாக்கினான். 28 சாலொமோன் தனக்குக் குதிரைகளையும் புடவைகளையும் எகிப்திலிருந்து அழைப்பித்தான்; ராஜாவின் வர்த்தகர் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்திற்கு வாங்கினார்கள். 29 எகிப்திலிருந்து வந்த ஒவ்வொரு இரதத்தின் விலை அறுநூறு வெள்ளிக்காசும், ஒவ்வொரு குதிரையின் விலை நூற்றைம்பது வெள்ளிக்காசுமாயிருந்தது; இந்தப்பிரகாரம் ஏத்தியரின் ராஜாக்களெல்லாருக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும், அவர்கள் மூலமாய்க் கொண்டுவரப்பட்டது.

1 இராஜாக்கள் 11

1 ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான். 2 கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான். 3 அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப் பண்ணினார்கள். 4 சாலொமோன் வயதுசென்றபோது, அவனுடைய மனைவிகள் அவன் இருதயத்தை அந்நிய தேவர்களைப் பின்பற்றும்படி சாயப்பண்ணினார்கள்; அதினால் அவனுடைய இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல, தன் தேவனாகிய கர்த்தரோடே உத்தமமாயிருக்கவில்லை. 5 சாலொமோன் சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், அம்மோனியரின் அருவருப்பாகிய மில்கோமையும் பின்பற்றினான். 6 சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல கர்த்தரைப் பூரணமாய்ப் பின்பற்றாமல், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 7 அப்பொழுது சாலொமோன் எருசலேமுக்கு எதிரான மலையிலே மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மோளோகுக்கும் மேடையைக் கட்டினான். 8 இப்படியே தங்கள் தேவர்களுக்குத் தூபங்காட்டிப் பலியிடுகிற அந்நியஜாதியாரான தன் ஸ்திரீகள் எல்லாருக்காகவும் செய்தான். 9 ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சாலொமோனுக்கு இரண்டுவிசை தரிசனமாகி, அந்நிய தேவர்களைப் பின்பற்றவேண்டாம் என்று கட்டளையிட்டிருந்தும், அவன் கர்த்தரை விட்டுத் தன் இருதயத்தைத் திருப்பி, 10 அவர் கற்பித்ததைக் கைக்கொள்ளாமற்போனதினால் கர்த்தர் அவன்மேல் கோபமானார். 11 ஆகையால் கர்த்தர் சாலொமோனை நோக்கி: நான் உனக்குக் கட்டளையிட்ட என் உடன்படிக்கையையும் என் கட்டளைகளையும் நீ கைக்கொள்ளாமற்போய் இந்தக் காரியத்தைச் செய்தபடியினால், ராஜ்யபாரத்தை உன்னிடத்திலிருந்து பிடுங்கி, அதை உன் ஊழியக்காரனுக்குக் கொடுப்பேன். 12 ஆகிலும் உன் தகப்பனாகிய தாவீதினிமித்தம், நான் அதை உன் நாட்களிலே செய்வதில்லை; உன் குமாரனுடைய கையினின்று அதைப் பிடுங்குவேன். 13 ஆனாலும் ராஜ்யம் முழுவதையும் நான் பிடுங்காமல், என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட எருசலேமினிமித்தமும், ஒரு கோத்திரத்தை நான் உன் குமாரனுக்குக் கொடுப்பேன் என்றார். 14 கர்த்தர் ஏதோமியனாகிய ஆதாத் என்னும் ஒரு விரோதியைச் சாலொமோனுக்கு எழுப்பினார்; இவன் ஏதோமிலிருந்த ராஜகுலமானவன். 15 தாவீது ஏதோமில் இருக்கும்போது படைத்தலைவனாகிய யோவாப் ஏதோமிலுள்ள ஆண்மக்களையெல்லாம் சங்கரித்து, வெட்டுண்டவர்களை அடக்கம்பண்ணப்போனான். 16 அவர்களையெல்லாம் சங்கரிக்குமளவும், தானும் இஸ்ரவேல் அனைத்தும் அங்கே ஆறுமாதம் இருக்கும்போது, 17 ஆதாதும் அவனோடேகூட அவன் தகப்பனுடைய ஊழியக்காரரில் சில ஏதோமியரும் எகிப்திற்குப்போக ஓடிப்போனார்கள்; ஆதாத் அப்பொழுது ஒரு சிறுபிள்ளையாயிருந்தான். 18 அவர்கள் மீதியானிலிருந்து எழுந்து, பாரானுக்குச் சென்று, பாரானிலே சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, எகிப்திற்குப் பார்வோன் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்திற்குப் போனார்கள்; அவன் இவனுக்கு ஒரு வீடுகொடுத்து, இவனுக்கு ஆகாரத்தைத் திட்டம்பண்ணி, நிலத்தையும் கொடுத்தான். 19 ஆதாதுக்குப் பார்வோனின் கண்களில் மிகுந்த தயைகிடைத்தபடியினால், அவன் ராஜஸ்திரீயாகிய தாப்பெனேஸ் என்னும் தன் மனைவியின் சகோதரியை அவனுக்கு விவாகஞ்செய்துகொடுத்தான். 20 தாப்பெனேசின் சகோதரியாகிய இவள் அவனுக்குக் கேனுபாத் என்னும் ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனைத் தாப்பெனேஸ் பார்வோனின் வீட்டிலே வளர்த்தாள்; அப்படியே கேனுபாத் பார்வோனின் வீட்டில் அவனுடைய குமாரருடன் இருந்தான். 21 தாவீது தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான் என்றும், படைத்தலைவனாகிய யோவாப் இறந்துபோனான் என்றும், எகிப்திலே ஆதாத் கேள்விப்பட்டபோது, ஆதாத் பார்வோனை நோக்கி: நான் என் சுயதேசத்துக்குப் போக என்னை அனுப்பவேண்டும் என்றான். 22 அதற்குப் பார்வோன்: இதோ, நீ உன் சுயதேசத்துக்குப்போக விரும்புகிறதற்கு, என்னிடத்தில் உனக்கு என்ன குறைவு இருக்கிறது என்றான்; அதற்கு அவன்: ஒரு குறைவும் இல்லை; ஆகிலும் என்னை அனுப்பிவிடவேண்டும் என்றான். 23 எலியாதாவின் குமாரனாகிய ரேசோன் என்னும் வேறொரு விரோதியை தேவன் எழுப்பினார்; இவன் தன் ஆண்டவனாகிய ஆதாதேசர் என்னும் சோபாவின் ராஜாவை விட்டு ஓடிப்போய், 24 தாவீது சோபாவில் உள்ளவர்களைக் கொன்றுபோடுகையில், அவன் தன்னோடே சில மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, அந்தக் கூட்டத்திற்குத் தலைவனானான்; இவர்கள் தமஸ்குவுக்குப் போய், அங்கே குடியிருந்து, தமஸ்குவில் ஆண்டார்கள். 25 ஆதாத் பொல்லாப்புச் செய்ததுமல்லாமல், ரேசோன் சாலொமோனுடைய நாளெல்லாம் இஸ்ரவேலுக்கு விரோதியாகி, சீரியாவின்மேல் ராஜாவாயிருந்து, இஸ்ரவேலைப் பகைத்தான். 26 சேரேதா ஊரிலுள்ள எப்பிராயீம் மனுஷனாகிய நேபாத்தின் குமாரன் யெரொபெயாம் என்னும் சாலொமோனின் ஊழியக்காரனும் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்தான்; அவனுடைய தாய் செரூகாள் என்னும் பேருள்ள ஒரு விதவை. 27 அவன் ராஜாவுக்கு விரோதமாய்க் கையெடுத்த முகாந்தரம் என்னவென்றால், சாலொமோன் மில்லோவைக்கட்டி, தன் தகப்பனாகிய தாவீதுடைய நகரத்தின் இடிந்துபோன இடங்களைப் பழுதுபார்த்தபோது, 28 யெரொபெயாம் என்பவன் பராக்கிரமசாலியாயிருந்தான்; அவன் காரிய சமர்த்தனான வாலிபன் என்று சாலொமோன் கண்டு, யோசேப்பு வம்சத்தாரின் காரியத்தையெல்லாம் அவன் விசாரிப்புக்கு ஒப்புவித்தான். 29 அக்காலத்திலே யெரொபெயாம் எருசலேமிலிருந்து வெளியே போகிறபோது, சீலோனியனான அகியா என்னும் தீர்க்கதரிசி புதுச்சால்வையைப் போர்த்துக்கொண்டிருந்து, வழியிலே அவனைக் கண்டான்; இருவரும் வயல்வெளியிலே தனித்திருக்கையில், 30 அகியா தான் போர்த்துக்கொண்டிருந்த புதுச்சால்வையைப் பிடித்து, அதைப் பன்னிரண்டு துண்டாகக் கிழித்துப்போட்டு, 31 யெரொபெயாமை நோக்கி: பத்துத் துண்டுகளை எடுத்துக்கொள்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜ்யபாரத்தைச் சாலொமோனுடைய கையிலிருந்து எடுத்துக் கிழித்து, உனக்குப் பத்துக் கோத்திரங்களைக் கொடுப்பேன். 32 ஆனாலும் என் தாசனாகிய தாவீதுக்காகவும், நான் இஸ்ரவேல் கோத்திரங்களில் எல்லாம் தெரிந்துகொண்ட எருசலேம் நகரத்துக்காகவும், ஒரு கோத்திரம் அவனுக்கு இருக்கும். 33 அவர்கள் என்னைவிட்டு, சீதோனியரின் தேவியாகிய அஸ்தரோத்தையும், மோவாபியரின் தேவனாகிய காமோசையும், அம்மோன் புத்திரரின் தேவனாகிய மில்கோமையும் பணிந்துகொண்டு, அவன் தகப்பனாகிய தாவீதைப்போல என் பார்வைக்குச் செம்மையாய் இருக்கிறதைச் செய்யவும், என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளவும், அவர்கள் என் வழிகளில் நடவாமற்போனபடியினால் அப்படிச் செய்வேன். 34 ஆனாலும் ராஜ்யபார முழுவதையும் நான் அவன் கையிலிருந்து எடுத்துப் போடுவதில்லை; நான் தெரிந்துகொண்டவனும், என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டவனுமான என் தாசனாகிய தாவீதினிமித்தம், அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனை அதிபதியாக வைப்பேன். 35 ஆனாலும் ராஜ்யபாரத்தை அவன் குமாரன் கையிலிருந்து எடுத்து, அதிலே பத்துக் கோத்திரங்களை உனக்குத் தருவேன். 36 என் நாமம் விளங்கும்படிக்கு, நான் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே என் சமுகத்தில் என் தாசனாகிய தாவீதுக்கு எந்நாளும் ஒரு விளக்கு இருக்கத்தக்கதாக, அவன் குமாரனுக்கு ஒரு கோத்திரத்தைக் கொடுப்பேன். 37 நீ உன் மனவிருப்பத்தின்படி ஆண்டுகொண்டு, இஸ்ரவேலின்மேல் ராஜாவாய் இருப்பதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்டேன். 38 நான் உனக்குக் கட்டளையிட்டதையெல்லாம் நீ கேட்டுக் கைக்கொண்டு, நீ என் வழிகளில் நடந்து, என் தாசனாகிய தாவீது செய்ததுபோல, என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் கைக்கொள்ளும்படிக்கு என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்கிறதுண்டானால், நான் உன்னோடிருந்து, நான் தாவீதுக்குக் கட்டினதுபோல உனக்கும் நிலையான வீட்டைக் கட்டி இஸ்ரவேலை உனக்குத் தருவேன். 39 இப்படி நான் இந்தக் காரியத்தினிமித்தம் தாவீதின் சந்ததியைச் சிறுமைப்படுத்துவேன்; ஆகிலும் எந்நாளும் அப்படியிராது என்று சொன்னான். 40 அதினிமித்தம் சாலொமோன் யெரொபெயாமைக் கொல்ல வகைதேடினான்; யெரொபெயாம் எழுந்து, எகிப்திற்குச் சீஷாக் என்னும் எகிப்தின் ராஜாவினிடத்தில் ஓடிப்போய், சாலொமோன் மரணமடையுமட்டும் எகிப்தில் இருந்தான். 41 சாலொமோனின் மற்ற நடபடிகளும், அவன் செய்தவை அனைத்தும், அவனுடைய ஞானமும், சாலொமோனுடைய நடபடிப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 42 சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலையெல்லாம் அரசாண்ட நாட்கள் நாற்பது வருஷம். 43 சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ரெகொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

1 இராஜாக்கள் 12

1 ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி, இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப் போனான். 2 ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலே குடியிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமோ, எகிப்தில் இருக்கையில் இதைக் கேள்விப்பட்டான். 3 அவர்கள் யெரொபெயாமுக்கு ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; அவனும் இஸ்ரவேல் சபை அனைத்தும் வந்து, ரெகொபெயாமை நோக்கி: 4 உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் லகுவாக்கும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள். 5 அதற்கு அவன்: நீங்கள் போய், மூன்றுநாள் பொறுத்து என்னிடத்தில் திரும்பிவாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள். 6 அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான். 7 அதற்கு அவர்கள்: நீர் இன்று இந்த ஜனங்களுக்கு சேவகனாகி, அவர்களுக்கு இணங்கி, அவர்கள் சொற்படி செய்து, மறுமொழியாக நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், எந்நாளும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள். 8 முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்து தன் சமுகத்தில் நிற்கிற வாலிபரோடே ஆலோசனைபண்ணி, 9 அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த நுகத்தை லகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த ஜனங்களுக்கு மறுமொழி கொடுக்க, நீங்கள் என்ன யோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான். 10 அப்பொழுது அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு லகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனாருடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும். 11 இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று நீர் அவர்களோடே சொல்லவேண்டும் என்றார்கள். 12 மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள். 13 ராஜா முதியோர் தனக்குச் சொன்ன ஆலோசனையைத் தள்ளிவிட்டு, வாலிபருடைய ஆலோசனையின்படியே அவர்களோடே பேசி: 14 என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று ஜனங்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான். 15 ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தம்முடைய வார்த்தையை உறுதிப்படுத்தும்படி கர்த்தரால் இப்படி நடந்தது. 16 ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரவாக: தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள். 17 ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான். 18 பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் பகுதிவிசாரிப்புக்காரனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தீவிரமாய் இரதத்தின்மேல் ஏறி, எருசலேமுக்கு ஓடிப்போனான். 19 அப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர் தாவீதின் வம்சத்தை விட்டு கலகம்பண்ணிப் பிரிந்து போயிருக்கிறார்கள். 20 யெரொபெயாம் திரும்பிவந்தான் என்று இஸ்ரவேலருக்கெல்லாம் கேள்வியானபோது, அவனைச் சபையினிடத்தில் அழைத்தனுப்பி, அவனைச் சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்கினார்கள்; யூதாகோத்திரம்மாத்திரமேயன்றி வேறொருவரும் தாவீதின் வம்சத்தைப் பின்பற்றவில்லை. 21 ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேல் வம்சத்தாரோடே யுத்தம்பண்ணவும், ராஜ்யத்தைச் சாலொமோனின் குமாரனாகிய தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தார் பென்யமீன் கோத்திரத்தார் அனைவருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரர் லட்சத்து எண்பதினாயிரம்பேரைக் கூட்டினான். 22 தேவனுடைய மனுஷனாகிய சேமாயாவுக்கு தேவனுடைய வார்த்தையுண்டாகி, அவர் சொன்னது: 23 நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் குமாரனையும் யூதா வம்சத்தார் அனைவரையும், பென்யமீனரையும், மற்ற ஜனங்களையும் நோக்கி: 24 நீங்கள் போகாமலும், இஸ்ரவேல் புத்திரரான உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டிற்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள்: கர்த்தருடைய சொல்லைக் கேட்டு, கர்த்தருடைய வார்த்தையின்படியே திரும்பிப் போய்விட்டார்கள். 25 யெரொபெயாம் எப்பிராயீம் மலைத்தேசத்தில் சீகேமைக் கட்டி, அதிலே வாசம்பண்ணி, அங்கிருந்து போய்ப் பெனூவேலைக் கட்டினான். 26 யெரொபெயாம்: இப்போது ராஜ்யபாரம் தாவீது வம்சவசமாய்த் திரும்புகிறதாயிருக்கும். 27 இந்த ஜனங்கள் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்திலே பலிகளைச் செலுத்தப்போனால், இந்த ஜனங்களின் இருதயம் யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் தங்கள் ஆண்டவன் வசமாய்த் திரும்பி, அவர்கள் என்னைக் கொன்றுபோட்டு, யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாமின் பாரிசமாய்ப் போய்விடுவார்கள் என்று தன் மனதிலே சிந்தித்துக்கொண்டிருந்தான். 28 ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி, 29 ஒன்றைப் பெத்தேலிலும், ஒன்றைத் தாணிலும் ஸ்தாபித்தான். 30 இந்தக் காரியம் பாவமாயிற்று; ஜனங்கள் இந்த ஒரு கன்றுக்குட்டிக்காகத் தாண்மட்டும் போவார்கள். 31 அவன் மேடையாகிய ஒரு கோவிலையும் கட்டி, லேவியின் புத்திரராயிராத ஜனத்தில் ஈனமானவர்களை ஆசாரியராக்கினான். 32 யூதாவில் ஆசரிக்கப்படும் பண்டிகைக்கொப்பாக எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே யெரொபெயாம் ஒரு பண்டிகையையும் கொண்டாடி, பலிபீடத்தின்மேல் பலியிட்டான்; அப்படியே பெத்தேலிலே தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்குப் பலியிட்டு, தான் உண்டுபண்ணின மேடைகளின் ஆசாரியர்களைப் பெத்தேலிலே ஸ்தாபித்து, 33 தன் மனதிலே தானே நியமித்துக்கொண்ட எட்டாம் மாதம் பதினைந்தாம் தேதியிலே பெத்தேலில் தான் உண்டாக்கின பலிபீடத்தின்மேல் பலியிட்டு, இஸ்ரவேல் புத்திரருக்குப் பண்டிகையை ஏற்படுத்தி, பலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டினான்.

1 இராஜாக்கள் 13

1 யெரொபெயாம் தூபங்காட்ட பலிபீடத்தண்டையிலே நிற்கையில், இதோ, தேவனுடைய மனுஷன் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படியே, யூதாவிலிருந்து பெத்தேலுக்கு வந்து, 2 அந்தப் பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறி; 3 அன்றையதினம் அவன் ஒரு அடையாளத்தையும் சொல்லி, இதோ, இந்தப் பலிபீடம் வெடித்து, அதின்மேலுள்ள சாம்பல் கொட்டுண்டுபோம்; கர்த்தர் உரைத்ததற்கு இதுவே அடையாளம் என்றான். 4 பெத்தேலில் இருக்கிற அந்தப் பலிபீடத்திற்கு எதிராக தேவனுடைய மனுஷன் கூறின வார்த்தையை ராஜாவாகிய யெரொபெயாம் கேட்டபோது, அவனைப் பிடியுங்கள் என்று தன் கையைப் பலிபீடத்திலிருந்து நீட்டினான்; அவனுக்கு விரோதமாய் நீட்டின கை தன்னிடமாக முடக்கக்கூடாதபடிக்கு மரத்துப்போயிற்று. 5 தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய வார்த்தையால் குறித்திருந்த அடையாளத்தின்படியே பலிபீடம் வெடித்து, சாம்பல் பலிபீடத்திலிருந்து கொட்டுண்டுபோயிற்று. 6 அப்பொழுது ராஜா, தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: நீ உன் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வேண்டிக்கொண்டு, என் கை முன்போலிருக்கும்படிக்கு எனக்காக விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றான்; அப்பொழுது தேவனுடைய மனுஷன் கர்த்தருடைய சமுகத்தை நோக்கி வருந்தி விண்ணப்பம் செய்தான், ராஜாவின் கை முன்னிருந்தபடி சீர்ப்பட்டது. 7 அப்பொழுது ராஜா தேவனுடைய மனுஷனை நோக்கி: நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தருவேன் என்றான். 8 தேவனுடைய மனுஷன் ராஜாவை நோக்கி: நீர் எனக்கு உம்முடைய வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடே வருவதுமில்லை, இந்த ஸ்தலத்தில் அப்பம் புசிப்பதுமில்லை, தண்ணீர் குடிப்பதுமில்லை. 9 ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், தண்ணீர் குடியாமலும், போனவழியாய்த் திரும்பாமலும் இருவென்று கர்த்தர் தம்முடைய வார்த்தையால் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார் என்று சொல்லி, 10 அவன் பெத்தேலுக்கு வந்தவழியாய்த் திரும்பாமல், வேறுவழியாய்ப் போய்விட்டான். 11 கிழவனான ஒரு தீர்க்கதரிசி பெத்தேலிலே குடியிருந்தான்; அவன் குமாரர் வந்து தேவனுடைய மனுஷன் அன்றையதினம் பெத்தேலிலே செய்த எல்லாச் செய்கைகளையும், அவன் ராஜாவோடே சொன்ன வார்த்தைகளையும் தங்கள் தகப்பனுக்கு அறிவித்தார்கள். 12 அப்பொழுது அவர்கள் தகப்பன்: அவன் எந்த வழி போனான் என்று அவர்களைக் கேட்டான். யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷன் போனவழி இன்னதென்று அவன் குமாரர் பார்த்திருந்தபடியால், 13 அவன் தன் குமாரருடனே: கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தபின், அவன் அதின்மேல் ஏறி, 14 தேவனுடைய மனுஷனைத் தொடர்ந்துபோய், ஒரு கர்வாலி மரத்தின்கீழ் உட்கார்ந்திருக்கிற அவனைக் கண்டு: யூதாவிலிருந்துவந்த தேவனுடைய மனுஷன் நீர்தானா என்று அவனைக் கேட்டதற்கு; அவன், நான்தான் என்றான். 15 அப்பொழுது அவனை நோக்கி: என்னோடே வீட்டுக்கு வந்து அப்பம் புசியும் என்றான். 16 அதற்கு அவன்: நான் உம்மோடே திரும்பவும் உம்மோடே உள்ளே போகவுமாட்டேன்; இந்த ஸ்தலத்திலே உம்மோடே நான் அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவுமாட்டேன். 17 ஏனென்றால் நீ அப்பம் புசியாமலும், அங்கே தண்ணீர் குடியாமலும், நீ போனவழியாய்த் திரும்பிவராமலும் இரு என்று கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிருக்கிறது என்றான். 18 அதற்கு அவன்: உம்மைப்போல நானும் தீர்க்கதரிசிதான்; அவன் அப்பம் புசித்துத் தண்ணீர் குடிக்க, நீ அவனைத் திருப்பி, உன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுவா என்று ஒரு தூதன் கர்த்தருடைய வார்த்தையாக என்னோடே சொன்னான் என்று அவனிடத்தில் பொய்சொன்னான். 19 அப்பொழுது அவன் இவனோடே திரும்பிப் போய், இவன் வீட்டிலே அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தான். 20 அவர்கள் பந்தியில் உட்கார்ந்திருக்கிறபோது, அவனைத் திருப்பிக்கொண்டு வந்த தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டானதினால், 21 அவன் யூதாவிலிருந்து வந்த தேவனுடைய மனுஷனைப் பார்த்துச் சத்தமிட்டு, உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்த கட்டளையை நீ கைக்கொள்ளாமல் கர்த்தருடைய வாக்கை மீறி, 22 அப்பம் புசிக்கவும் தண்ணீர் குடிக்கவும் வேண்டாம் என்று அவர் விலக்கின ஸ்தலத்திற்கு நீ திரும்பி, அப்பம் புசித்துத் தண்ணீர் குடித்தபடியினால், உன்னுடைய பிரேதம் உன் பிதாக்களின் கல்லறையிலே சேருவதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 23 அவன் போஜனபானம்பண்ணி முடிந்தபின்பு, அந்தத் தீர்க்கதரிசியைத் திருப்பிக்கொண்டுவந்தவன் அவனுக்குக் கழுதையின்மேல் சேணம்வைத்துக் கொடுத்தான். 24 அவன் போனபிற்பாடு வழியிலே ஒரு சிங்கம் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனைக் கொன்றுபோட்டது; அவன் பிரேதம் வழியிலே கிடந்தது; கழுதை அதினண்டையிலே நின்றது; சிங்கமும் பிரேதத்தண்டையிலே நின்றது. 25 அந்த வழியே கடந்துவருகிற மனுஷர், வழியிலே கிடக்கிற பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே நிற்கிற சிங்கத்தையும் கண்டு, கிழவனான தீர்க்கதரிசி குடியிருந்த பட்டணத்திலே வந்து சொன்னார்கள். 26 அவனை வழியிலிருந்து திரும்பப்பண்ணின தீர்க்கதரிசி அதைக் கேட்டபோது, அவன் கர்த்தருடைய வாக்கை மீறின தேவனுடைய மனுஷன்தான், கர்த்தர் அவனுக்குச் சொன்ன வார்த்தையின்படியே, கர்த்தர் அவனை ஒரு சிங்கத்திற்கு ஒப்புக்கொடுத்தார்; அது அவனை முறித்துக் கொன்றுபோட்டது என்று சொல்லி, 27 தன் குமாரரை நோக்கி: எனக்குக் கழுதையின்மேல் சேணம் வைத்துக் கொடுங்கள் என்றான்; அவர்கள் சேணம் வைத்துக் கொடுத்தார்கள். 28 அப்பொழுது அவன் போய், வழியிலே கிடக்கிற அவன் பிரேதத்தையும், பிரேதத்தண்டையிலே கழுதையும் சிங்கமும் நிற்கிறதையும் கண்டான்; அந்தச் சிங்கம் பிரேதத்தைத் தின்னவுமில்லை, கழுதையை முறித்துப்போடவுமில்லை. 29 அப்பொழுது கிழவனான அந்தத் தீர்க்கதரிசி தேவனுடைய மனுஷனின் பிரேதத்தை எடுத்து, அதைக் கழுதையின்மேல் வைத்து, அதற்காகத் துக்கங்கொண்டாடவும் அதை அடக்கம்பண்ணவும், அதைத் தன் பட்டணத்திற்குக் கொண்டுவந்து, 30 அவன் பிரேதத்தைத் தன்னுடைய கல்லறையிலே வைத்தான். அவனுக்காக: ஐயோ, என் சகோதரனே என்று புலம்பி, துக்கங்கொண்டாடினார்கள். 31 அவனை அடக்கம்பண்ணினபின்பு, அவன் தன் குமாரரை நோக்கி: நான் மரிக்கும்போது, தேவனுடைய மனுஷன் அடக்கம்பண்ணப்பட்ட கல்லறையிலே என்னையும் நீங்கள் அடக்கம்பண்ணி, அவன் எலும்புகளண்டையிலே என் எலும்புகளையும் வையுங்கள். 32 அவன் பெத்தேலில் இருக்கிற பலிபீடத்திற்கும், சமாரியாவின் பட்டணங்களில் இருக்கிற மேடைகளாகிய சகல கோவில்களுக்கும் விரோதமாகக் கூறின கர்த்தருடைய வார்த்தை நிச்சயமாய் நிறைவேறும் என்றான். 33 இந்த நடபடிக்குப்பின்பு, யெரொபெயாம் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பாமல், மறுபடியும் ஜனத்தில் ஈனமானவர்களை மேடைகளின் ஆசாரியராக்கினான்; எவன்மேல் அவனுக்கு மனதிருந்ததோ அவனைப் பிரதிஷ்டைபண்ணினான்; அப்படிப்பட்டவர்கள் மேடைகளின் ஆசாரியரானார்கள். 34 யெரொபெயாமின் வீட்டாரை பூமியின்மேல் வைக்காமல் அதம்பண்ணி அழிக்கும்படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமாயிற்று.

1 இராஜாக்கள் 14

1 அக்காலத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய அபியா வியாதியில் விழுந்தான். 2 அப்பொழுது யெரொபெயாம் தன் மனைவியைப் பார்த்து: நீ எழுந்து, நீ யெரொபெயாமின் மனைவியென்று ஒருவரும் அறியாதபடிக்கு வேஷம்மாறி சீலோவுக்குப் போ; இந்த ஜனத்தின்மேல் நான் ராஜாவாவேன் என்று என்னோடே சொன்ன தீர்க்கதரிசியாகிய அகியா அங்கே இருக்கிறான். 3 நீ உன் கையிலே பத்து அப்பங்களையும், பணியாரங்களையும், ஒரு கலசம் தேனையும் எடுத்துக்கொண்டு அவனிடத்துக்குப் போ; பிள்ளைக்குச் சம்பவிக்கப்போகிறது இன்னதென்று அவன் உனக்கு அறிவிப்பான் என்றான். 4 அப்படியே யெரொபெயாமின் மனைவி செய்தாள்; அவள் எழுந்து சீலோவுக்குப் போய், அகியாவின் வீட்டிற்குள் பிரவேசித்தாள்; அகியாவோ முதிர் வயதானதினால் அவன் கண்கள் மங்கலடைந்து பார்க்கக்கூடாதிருந்தான். 5 கர்த்தர் அகியாவினிடத்தில்: இதோ, யெரொபெயாமின் மனைவி வியாதியாயிருக்கிற தன் குமாரனுக்காக உன்னை ஒரு விசேஷம்கேட்க வருகிறாள்; நீ அவளுக்கு இன்ன இன்ன பிரகாரமாகச் சொல்லவேண்டும்; அவள் உட்பிரவேசிக்கிறபோது, தன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிப்பாள் என்றார். 6 ஆகையால் வாசற்படிக்குள் பிரவேசிக்கும் அவளுடைய நடையின் சத்தத்தை அகியா கேட்டவுடனே, அவன்: யெரொபெயாமின் மனைவியே, உள்ளே வா; உன்னை அந்நிய ஸ்திரீயாகக் காண்பிக்கிறதென்ன? துக்கசெய்தியை உனக்கு அறிவிக்க நான் அனுப்பப்பட்டேன். 7 நீ போய் யெரொபெயாமை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஜனத்தினின்று உன்னை நான் உயர்த்தி, உன்னை இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தின்மேல் அதிபதியாக வைத்தேன். 8 நான் ராஜ்யபாரத்தைத் தாவீது வம்சத்தாரின் கையிலிருந்து பிடுங்கி உனக்குக் கொடுத்தேன்; ஆனாலும் என் கற்பனைகளைக் கைக்கொண்டு, என் பார்வைக்குச் செம்மையானதையே செய்ய, தன் முழு இருதயத்தோடும் என்னைப் பின்பற்றின என் தாசனாகிய தாவீதைப்போல நீ இராமல், 9 உனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் பொல்லாப்புச் செய்தாய்; எனக்குக் கோபம் உண்டாக்க, நீ போய் உனக்கு அந்நிய தேவர்களையும் வார்க்கப்பட்ட விக்கிரகங்களையும் உண்டுபண்ணி, உனக்குப் புறம்பே என்னைத் தள்ளிவிட்டாய். 10 ஆகையால் இதோ, நான் யெரொபெயாமுடைய வீட்டின்மேல் பொல்லாப்பை வரப்பண்ணி, யெரொபெயாமுக்கு, சுவர்மேல் நீர்விடும் ஒரு நாய் முதலாயிராதபடிக்கு, இஸ்ரவேலிலே அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்காரம்பண்ணி, குப்பை கழித்துப்போடப்படுகிறதுபோல யெரொபெயாமின் பின்னடியாரை அவர்கள் கட்டோடே அற்றுப்போகுமட்டும் கழித்துப்போடுவேன் என்றார். 11 யெரொபெயாமின் சந்ததியாரில் பட்டணத்திலே சாகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்தின் பறவைகள் தின்னும்; கர்த்தர் இதை உரைத்தார். 12 ஆகையால் நீ எழுந்து, உன் வீட்டுக்குப் போ, உன் கால்கள் பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில் பிள்ளையாண்டான் செத்துப்போவான். 13 அவனுக்காக இஸ்ரவேலரெல்லாரும் துக்கங்கொண்டாடி அவனை அடக்கம்பண்ணுவார்கள்; யெரொபெயாமின் வீட்டாரில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக அவனிடத்திலே நல்ல காரியம் காணப்பட்டதினால், யெரொபெயாமின் சந்ததியில் அவன் ஒருவனே கல்லறைக்குட்படுவான். 14 ஆனாலும் கர்த்தர் தமக்கு இஸ்ரவேலின்மேல் ஒரு ராஜாவை எழும்பப்பண்ணுவார்; அவன் அந்நாளிலே யெரொபெயாமின் வீட்டாரைச் சங்கரிப்பான்; இப்போதே இது நடந்தேறும். 15 தண்ணீரிலே நாணல் அசைகிறதுபோல, கர்த்தர் இஸ்ரவேலை முறிந்தசையப்பண்ணி, அவர்கள் பிதாக்களுக்குத் தாம் கொடுத்த இந்த நல்ல தேசத்திலிருந்து இஸ்ரவேலை வேரோடே பிடுங்கி, அவர்கள் தங்களுக்கு தோப்பு விக்கிரகங்களை வைத்து, கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், அவர்களை நதிக்கப்பாலே சிதறடித்து, 16 யெரொபெயாம் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவத்தினிமித்தம் இஸ்ரவேலை ஒப்புக்கொடுத்துவிடுவார் என்றான். 17 அப்பொழுது யெரொபெயாமின் மனைவி எழுந்து புறப்பட்டு திர்சாவுக்கு வந்தாள்; அவள் வாசற்படியிலே வருகையில் பிள்ளையாண்டான் செத்துப்போனான். 18 கர்த்தர் தீர்க்கதரிசியாகிய அகியா என்னும் தமது ஊழியக்காரனைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, அவர்கள் அவனை அடக்கம்பண்ணி, இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள். 19 யெரொபெயாம் யுத்தம்பண்ணினதும் ஆண்டதுமான அவனுடைய மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. 20 யெரொபெயாம் ராஜ்யபாரம்பண்ணின காலம் இருபத்திரண்டு வருஷம்; அவன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய நாதாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 21 சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் யூதாவிலே ராஜ்யபாரம் பண்ணினான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின்பேர் நாமாள். 22 யூதாஜனங்கள் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தாங்கள் செய்துவருகிற தங்களுடைய பாவங்களினால் தங்கள் பிதாக்கள் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் அவருக்கு அதிக எரிச்சலை மூட்டினார்கள். 23 அவர்களும் உயர்ந்த சகல மேட்டின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்பு விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள். 24 தேசத்திலே இலச்சையான புணர்ச்சிக்காரரும் இருந்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியெல்லாம் செய்தார்கள். 25 ரெகொபெயாம் ராஜ்யபாரம்பண்ணும் ஐந்தாம் வருஷத்திலே, எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, 26 கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன் பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான். 27 அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்பித்தான். 28 ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச் சேவகர் அவைகளைப் பிடித்துக்கொண்டு போய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள். 29 ரெகொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 30 ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. 31 ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அம்மோன் ஜாதியான அவன் தாய்க்கு நாமாள் என்று பேர்; அவன் குமாரனாகிய அபியாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

1 இராஜாக்கள் 15

1 நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் என்னும் ராஜாவின் பதினெட்டாம் வருஷத்திலே அபியாம் யூதாவின்மேல் ராஜாவாகி, 2 மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள். 3 தன் தகப்பன் தனக்கு முன்செய்த எல்லாப் பாவங்களிலும் அவன் நடந்தான்; அவன் இருதயம் அவன் தகப்பனாகிய தாவீதின் இருதயத்தைப்போல், தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உத்தமமாயிருக்கவில்லை. 4 ஆனாலும் தாவீதினிமித்தம் அவனுடைய தேவனாகிய கர்த்தர், அவனுக்குப் பிற்பாடு அவன் குமாரனை எழும்பப்பண்ணுகிறதினாலும், எருசலேமை நிலை நிறுத்துகிறதினாலும், அவனுக்கு எருசலேமில் ஒரு விளக்கைக் கட்டளையிட்டு வந்தார். 5 தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்றுதவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான். 6 ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் அவர்கள் இருந்த நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. 7 அபியாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது; அபியாமுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. 8 அபியாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆசா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 9 இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபதாம் வருஷத்திலே ஆசா யூதாவின்மேல் ராஜாவாகி, 10 நாற்பத்தொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள். 11 ஆசா தன் தகப்பனாகிய தாவீதைப்போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். 12 அவன் இலச்சையான புணர்ச்சிக்காரரை தேசத்திலிருந்து அகற்றி, தன் பிதாக்கள் உண்டுபண்ணின நரகலான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி, 13 தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின தன் தாயாகிய மாகாளையும் ராஜாத்தியாய் இராதபடிக்கு விலக்கிவிட்டான்; அவளுடைய விக்கிரகத்தையும் ஆசா நிர்மூலமாக்கி, கீதரோன் ஆற்றண்டையிலே சுட்டெரித்துப்போட்டான். 14 மேடைகளோ தகர்க்கப்படவில்லை; ஆனாலும் ஆசா உயிரோடிருந்த நாளெல்லாம் அவன் இருதயம் கர்த்தரோடே உத்தமமாயிருந்தது. 15 தன் தகப்பனும் தானும் பரிசுத்தப்படுத்தும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் கர்த்தருடைய ஆலயத்திலே கொண்டுவந்தான். 16 ஆசாவுக்கும் இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்களுடைய நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. 17 ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்குவரத்தாயிராதபடிக்கு, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து ராமாவைக் கட்டினான். 18 அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் மீதியான எல்லா வெள்ளியையும் பொன்னையும், ராஜாவின் அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்து, அவைகளைத் தன் ஊழியக்காரர் கையிலே தமஸ்குவில் வாசமாயிருக்கிற எசியோனின் மகனாகிய தப்ரிமோனின் குமாரன் பெனாதாத் என்னும் சீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தனுப்பி: 19 எனக்கும் உமக்கும் என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, உமக்கு வெகுமதியாய் வெள்ளியையும் பொன்னையும் அனுப்புகிறேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப் போகும்படிக்கு, நீர் வந்து அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லச்சொன்னான். 20 பெனாதாத், ராஜாவாகிய ஆசாவுக்குச் செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பி, ஈயோனையும், தாணையும் பெத்மாக்கா என்னும் ஆபேலையும் கின்னரோத் அனைத்தையும் நப்தலியின் முழுத்தேசத்தோடுங்கூட முறிய அடித்தான். 21 பாஷா அதைக் கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை விட்டுத் திர்சாவிலிருந்துவிட்டான். 22 அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா எங்கும் ஒருவரும் தப்பாமல் எல்லாரும் போய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவர பறைமுறை இடுவித்து; அவைகளினால் பென்யமீன் கோத்திரத்திலுள்ள கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான். 23 ஆசாவின் மற்ற எல்லா வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் செய்தவை யாவும், அவன் கட்டின பட்டணங்களின் வரலாறும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது; அவன் முதிர்வயதான காலத்தில் அவனுடைய கால்களில் வியாதி கண்டிருந்தது. 24 ஆசா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோசபாத் அவன் ஸ்தானத்திலே ராஜாவானான். 25 யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இரண்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய நாதாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, இரண்டு வருஷம் இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணினான். 26 அவன் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பன் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான். 27 இசக்கார் வம்சத்தானாகிய அகியாவின் குமாரனான பாஷா, அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, நாதாபும் இஸ்ரவேலனைத்தும் பெலிஸ்தருக்கு இருந்த கிபெத்தோனை முற்றிக்கைபோட்டிருக்கையில், பாஷா அவனைக் கிபெத்தோனிலே வெட்டிப்போட்டான். 28 பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அவனைக் கொன்றுபோட்டபின், அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 29 அப்பொழுது யெரொபெயாம் செய்ததும், இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான பாவங்களினிமித்தமும், அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கின கோபத்தினிமித்தமும், கர்த்தர் சீலோனியனான அகியா என்னும் தமது ஊழியக்காரனைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, 30 அவன் ராஜாவானபின் அவன் யெரொபெயாமின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; யெரொபெயாமுக்கு இருந்த சுவாசமுள்ளதொன்றையும் அவன் அழிக்காமல் விடவில்லை. 31 நாதாபின் மற்ற வர்த்தமானங்களும் அவன் செய்தவை யாவும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 32 ஆசாவுக்கும் இஸ்ரவேல் ராஜாவாகிய பாஷாவுக்கும் அவர்கள் நாட்களிலெல்லாம் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. 33 யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அகியாவின் குமாரனாகிய பாஷா, இஸ்ரவேலனைத்தின் மேலும் திர்சாவிலே ராஜாவாகி இருபத்து நாலு வருஷம் ஆண்டு, 34 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும், அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவத்திலும் நடந்தான்.

1 இராஜாக்கள் 16

1 பாஷாவுக்கு விரோதமாகக் கர்த்தருடைய வார்த்தை ஆனானியின் குமாரனாகிய யெகூவுக்கு உண்டாயிற்று, அவர்: 2 நான் உன்னைத் தூளிலிருந்து உயர்த்தி, உன்னை என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் தலைவனாக வைத்திருக்கையில், நீ யெரொபெயாமின் வழியிலே நடந்து, என் ஜனமாகிய இஸ்ரவேல் தங்கள் பாவங்களால் எனக்குக் கோபமுண்டாக்கும்படி அவர்களைப் பாவஞ்செய்யப்பண்ணுகிறபடியினால், 3 இதோ, நான் பாஷாவின் பின்னடியாரையும் அவன் வீட்டாரின் பின்னடியாரையும் அழித்துப்போட்டு, உன் வீட்டை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் வீட்டைப்போல ஆக்குவேன். 4 பாஷாவின் சந்ததியிலே பட்டணத்தில் சாகிறவனை நாய்கள் தின்னும்; வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகள் தின்னும் என்றார். 5 பாஷாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்ததும், அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 6 பாஷா தன் பிதாக்களோடே நித்திரையடைந்து திர்சாவில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஏலா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 7 பாஷா தன் கைகளின் செய்கையால் கர்த்தருக்குக் கோபமுண்டாக்கி, அவர் பார்வைக்குச் செய்த எல்லாப் பொல்லாப்பினிமித்தமும், அவன் யெரொபெயாமின் வீட்டாரை வெட்டிப்போட்டதினிமித்தமும், இவர்களைப்போல் ஆவான் என்று அவனுக்கும் அவன் வீட்டுக்கும் விரோதமாக ஆனானியின் குமாரனாகிய யெகூ என்னும் தீர்க்கதரிசியினால் கர்த்தருடைய வார்த்தை பின்னும் உண்டாயிற்று. 8 யூதாவின் ராஜாவான ஆசாவின் இருபத்தாறாம் வருஷத்திலே பாஷாவின் குமாரனாகிய ஏலா இஸ்ரவேலின்மேல் திர்சாவிலே ராஜாவாகி இரண்டு வருஷம் அரசாண்டான். 9 இரதங்களில் பாதிபங்குக்குத் தலைவனாகிய சிம்ரி என்னும் அவன் ஊழியக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் திர்சாவிலே அவ்விடத்து அரமனை உக்கிராணக்காரனாகிய அர்சாவின் வீட்டிலே குடித்து வெறி கொண்டிருக்கையில், 10 சிம்ரி உள்ளே புகுந்து, யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருஷத்தில் அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 11 அவன் ராஜாவாகி, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தபோது, அவன் பாஷாவின் வீட்டாரையெல்லாம் வெட்டிப்போட்டான்; அவன் இனத்தாரையாகிலும், அவன் சிநேகிதரையாகிலும், சுவரில் நீர்விடும் ஒரு நாயையாகிலும், அவன் உயிரோடே வைக்கவில்லை. 12 அப்படியே பாஷாவும், அவன் குமாரனாகிய ஏலாவும், தங்கள் வீணான விக்கிரகங்களினாலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமுண்டாக்கிச் செய்ததும் இஸ்ரவேலைச் செய்யப்பண்ணினதுமான அவர்களுடைய எல்லாப் பாவங்களினிமித்தமும், 13 கர்த்தர் தீர்க்கதரிசியாகிய யெகூவினால் பாஷாவைக்குறித்துச் சொல்லியிருந்த அவருடைய வார்த்தையின்படியே, சிம்ரி பாஷாவின் வீட்டாரையெல்லாம் அழித்துப்போட்டான். 14 ஏலாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 15 யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் இருபத்தேழாம் வருஷத்திலே சிம்ரி திர்சாவிலே ஏழுநாள் ராஜாவாயிருந்தான்; ஜனங்கள் அப்பொழுது பெலிஸ்தருக்கு இருக்கிற கிபெத்தோனுக்கு எதிராகப் பாளயமிறங்கியிருந்தார்கள். 16 சிம்ரி கட்டுப்பாடுபண்ணி, ராஜாவைக் கொன்றுபோட்டான் என்பதை அங்கே பாளயமிறங்கின ஜனங்கள் கேட்டபோது, இஸ்ரவேலரெல்லாம் அந்நாளிலேதானே பாளயத்திலே படைத்தலைவனாகிய உம்ரியை இஸ்ரவேல்மேல் ராஜாவாக்கினார்கள். 17 அப்பொழுது உம்ரியும் அவனோடேகூட இஸ்ரவேல் அனைத்தும் கிபெத்தோனிலிருந்து வந்து, திர்சாவை முற்றிக்கை போட்டார்கள். 18 பட்டணம் பிடிபட்டதைச் சிம்ரி கண்டபோது, அவன் ராஜாவின் வீடாகிய அரமனைக்குள் பிரவேசித்து, தான் இருக்கிற ராஜ அரமனையைத் தீக்கொளுத்தி, அதிலே செத்தான். 19 அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, யெரொபெயாமின் வழியிலும் அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவன் பாவத்திலும் நடந்ததினால், கட்டிக்கொண்ட அவனுடைய பாவங்களினிமித்தம் அப்படி நடந்தது. 20 சிம்ரியின் மற்ற வர்த்தமானங்களும், அவன் பண்ணின அவனுடைய கட்டுப்பாடும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 21 அப்பொழுது இஸ்ரவேல் ஜனங்கள் இரண்டு வகுப்பாய்ப் பிரிந்து, பாதி ஜனங்கள் கீனாத்தின் குமாரனாகிய திப்னியை ராஜாவாக்க, அவனைப் பின்பற்றினார்கள்; பாதி ஜனங்கள் உம்ரியைப் பின்பற்றினார்கள். 22 ஆனாலும் கீனாத்தின் குமாரனாகிய திப்னியைப் பின்பற்றின ஜனங்களைப்பார்க்கிலும், உம்ரியைப் பின்பற்றின ஜனங்கள் பலத்துப்போனார்கள்; திப்னி செத்துப்போனான்; உம்ரி அரசாண்டான். 23 யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அவன் திர்சாவிலே ஆறுவருஷம் அரசாண்டு, 24 பின்பு சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாயிருந்த சேமேருடைய பேரின்படியே சமாரியா என்னும் பேரைத் தரித்தான். 25 உம்ரி கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கேடாய் நடந்து, 26 நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் சகல வழியிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குத் தங்கள் வீணான விக்கிரகங்களாலே கோபம் மூட்டும்படியாய் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின அவனுடைய பாவங்களிலும் நடந்தான். 27 உம்ரி செய்த அவனுடைய மற்ற வர்த்தமானங்களும், அவன் காண்பித்த வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 28 உம்ரி தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, சமாரியாவிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 29 யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தெட்டாம் வருஷத்தில் உம்ரியின் குமாரனாகிய ஆகாப் இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவில் இஸ்ரவேலின்மேல் இருபத்திரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான். 30 உம்ரியின் குமாரனாகிய ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப்பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 31 நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களில் நடப்பது அவனுக்குக் கொஞ்சக்காரியமென்று நினைத்தாற்போல் அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம்பண்ணினதுமல்லாமல், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு, 32 தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தை எடுப்பித்தான். 33 ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும்படிக்கு தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்துவந்தான். 34 அவன் நாட்களிலே பெத்தேல் ஊரானாகிய ஈயேல் எரிகோவைக் கட்டினான்; கர்த்தர் நூனின் குமாரனாகிய யோசுவாவைக்கொண்டு சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது, அபிராம் என்னும் தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது செகூப் என்னும் தன் இளையகுமாரனையும் சாகக்கொடுத்தான்.

1 இராஜாக்கள் 17

1 கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். 2 பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்: 3 நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு. 4 அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார். 5 அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான். 6 காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான். 7 தேசத்தில் மழை பெய்யாதபடியினால், சிலநாளுக்குப்பின்பு அந்த ஆறு வற்றிப்போயிற்று. 8 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்: 9 நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார். 10 அப்படியே அவன் எழுந்து, சாறிபாத்துக்குப் போனான்; அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவன் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவன் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான். 11 கொண்டுவர அவள் போகிறபோது அவன் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றான். 12 அதற்கு அவள்: பானையில் ஒரு பிடிமாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள். 13 அப்பொழுது எலியா அவளைப் பார்த்து: பயப்படாதே; நீ போய் உன் வார்த்தையின்படி ஆயத்தப்படுத்து; ஆனாலும் முதல் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா; பின்பு உனக்கும் உன் குமாரனுக்கும் பண்ணலாம். 14 கர்த்தர் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடும் நாள்மட்டும் பானையின் மா செலவழிந்துபோவதும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோவதும் இல்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 15 அவள் போய், எலியாவின் சொற்படி செய்தாள்; அவளும், இவனும், அவள் வீட்டாரும் அநேகநாள் சாப்பிட்டார்கள். 16 கர்த்தர் எலியாவைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே, பானையிலே மா செலவழிந்துபோகவும் இல்லை; கலசத்தின் எண்ணெய் குறைந்துபோகவும் இல்லை. 17 இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான்; அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது. 18 அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா? என்னிடத்தில் வந்தீர் என்றாள். 19 அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் வைத்து: 20 என் தேவனாகிய கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணினதினால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு; 21 அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுதரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான். 22 கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பி வந்தது; அவன் பிழைத்தான். 23 அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான். 24 அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள்.

1 இராஜாக்கள் 18

1 அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார். 2 அப்பொழுது எலியா ஆகாபுக்குத் தன்னைக் காண்பிக்கப்போனான்; பஞ்சமோவெனில் சமாரியாவிலே கொடிதாயிருந்தது. 3 ஆனபடியால் ஆகாப் அரமனை விசாரிப்புக்காரனாகிய ஒபதியாவை அழைப்பித்தான்; ஒபதியா கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவனாயிருந்தான். 4 யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்துவந்தான். 5 ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் சகல மிருகஜீவன்களையும் சாகக்கொடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடே காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் அகப்படுமா என்று பார் என்றான். 6 அப்படியே தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி, அதைப் பகுத்துக்கொண்டு, ஆகாப் ஒரு வழியாயும், ஒபதியா வேறொரு வழியாயும் போனார்கள். 7 ஒபதியா வழியில் போகும்போது, எலியா அவனுக்கு எதிர்ப்பட்டான்; அவன் இவனை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என் ஆண்டவனாகிய எலியா அல்லவா என்று கேட்டதற்கு; 8 அவன், நான்தான்; நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவனுக்குச் சொல் என்றான். 9 அதற்கு அவன்: ஆகாப் என்னைக் கொன்றுபோடும்படிக்கு, நீர் உமது அடியானை அவன் கையில் ஒப்புக்கொடுக்க நான் என்ன பாவம் செய்தேன். 10 உம்மைத் தேடும்படி என் ஆண்டவன் மனுஷரை அனுப்பாத ஜாதியும் ராஜ்யமும் இல்லை என்று உம்முடைய தேவனாகிய கர்த்தரின் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீர் இல்லையென்று அவர்கள் சொன்னபோது, அவன் அந்த ராஜ்யத்தையும் அந்த ஜாதியையும் உம்மைக் காணவில்லை என்று சத்தியம் வாங்கிக்கொண்டான். 11 இப்போதும் நீ போய், உன் ஆண்டவனுக்கு, இதோ, எலியா வந்திருக்கிறான் என்று சொல் என்று நீர் சொல்லுகிறீரே. 12 நான் உம்மை விட்டுப்போனவுடனே ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் உம்மை எடுத்து, நான் அறியாத இடத்திற்குக் கொண்டுபோவார்; அப்பொழுது நான் ஆகாபிடத்திற்குப் போய் அறிவித்த பின்பு, அவன் உம்மைக் காணாவிட்டால், என்னைக் கொன்றுபோடுவானே; உமது அடியானாகிய நான் சிறுவயதுமுதல் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறவன். 13 யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோடுகிறபோது, நான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறுபேரை ஒவ்வொரு கெபியிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, பராமரித்துவந்த என்னுடைய செய்கை என் ஆண்டவனுக்கு அறிவிக்கப்படவில்லையோ? 14 இப்போதும் என் ஆண்டவன் என்னைக் கொன்றுபோடும்படியாக, நீர்: இதோ, எலியா வந்திருக்கிறான் என்று போய் அவனுக்குச் சொல் என்று சொல்லுகிறீரே என்றான். 15 அதற்கு எலியா: இன்றைக்கு என்னை அவனுக்குக் காண்பிப்பேன் என்று சேனைகளின் கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். 16 அப்பொழுது ஒபதியா போய், ஆகாபைச் சந்தித்து அவனுக்கு அதை அறிவித்தவுடனே, ஆகாப் எலியாவைச் சந்திக்கப்போனான். 17 ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான். 18 அதற்கு அவன்: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள். 19 இப்போதும் கர்மேல் பர்வதத்திலே இஸ்ரவேலனைத்தையும், பாகாலின் தீர்க்கதரிசிகள் நானூற்றைம்பதுபேரையும், யேசபேலின் பந்தியிலே சாப்பிடுகிற தோப்பு விக்கிரகத்தின் தீர்க்கதரிசிகள் நானூறுபேரையும் என்னிடத்தில் கூட்டிக்கொண்டுவர ஆட்களை அனுப்பும் என்றான். 20 அப்படியே ஆகாப்: இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கதரிசிகளைக் கூடிவரும்படி செய்தான். 21 அப்பொழுது எலியா சகல ஜனத்தண்டைக்கும் வந்து: நீங்கள் எந்தமட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக்குந்தி நடப்பீர்கள்; கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள்; பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள் என்றான், ஜனங்கள் பிரதியுத்தரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. 22 அப்பொழுது எலியா ஜனங்களை நோக்கி: கர்த்தரின் தீர்க்கதரிசிகளில் மீந்திருக்கிறவன் நான் ஒருவன்; பாகாலின் தீர்க்கதரிசிகளோ நானூற்றைம்பதுபேர். 23 இப்போதும் இரண்டு காளைகளை எங்களிடத்தில் கொண்டுவரட்டும்; ஒரு காளையை அவர்கள் தெரிந்துகொண்டு, அதைச் சந்துசந்தாகத் துண்டித்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைக்கக்கடவர்கள்; நான் மற்றக் காளையை அப்படியே செய்து, நெருப்புப் போடாமல் விறகுகளின்மேல் வைப்பேன். 24 நீங்கள் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்; நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன்; அப்பொழுது அக்கினியினால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம் என்றான்; அதற்கு ஜனங்களெல்லாரும் இது நல்ல வார்த்தை என்றார்கள். 25 அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் அநேகரானதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்துகொண்டு அதை ஆயத்தம்பண்ணி, நெருப்புப்போடாமல் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள் என்றான். 26 தங்களுக்குக் கொடுக்கப்பட்ட காளையை அவர்கள் வாங்கி, அதை ஆயத்தம்பண்ணி: பாகாலே, எங்களுக்கு உத்தரவு அருளும் என்று காலைதொடங்கி மத்தியானமட்டும் பாகாலின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிட்டார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறுஉத்தரவு கொடுப்பாரும் இல்லை. அவர்கள் கட்டின பலிபீடத்திற்கு எதிரே குதித்து ஆடினார்கள். 27 மத்தியானவேளையிலே எலியா அவர்களைப் பரியாசம்பண்ணி: உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்; அவன் தேவனாமே, அவன் தியானத்தில் இருப்பான்; அல்லது அலுவலாயிருப்பான்; அல்லது பிரயாணம்போயிருப்பான்; அல்லது தூங்கினாலும் தூங்குவான்; அவனை எழுப்பவேண்டியதாக்கும் என்றான். 28 அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள். 29 மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலி செலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறுஉத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை. 30 அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு: 31 உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து, 32 அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி, 33 விறகுகளை அடுக்கி, ஒரு காளையைச் சந்துசந்தாகத் துண்டித்து விறகுகளின்மேல் வைத்தான். 34 பிற்பாடு அவன்: நீங்கள் நாலுகுடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; இரண்டாந்தரமும் ஊற்றினார்கள்; அதற்குப்பின்பு மூன்றாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; மூன்றாந்தரமும் ஊற்றினார்கள். 35 அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடினது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான். 36 அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து: ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும். 37 கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான். 38 அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது. 39 ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள். 40 அப்பொழுது எலியா அவர்களை நோக்கி: நீங்கள் பாகாலின் தீர்க்கதரிசிகளில் ஒருவனும் தப்பிப்போகாதபடிக்கு அவர்களைப் பிடியுங்கள் என்றான்; அவர்களைப் பிடித்தபோது, எலியா அவர்களைக் கீழே கீசோன் ஆற்றங்கரையிலே கொண்டுபோய், அங்கே அவர்களை வெட்டிப்போட்டான். 41 பின்பு எலியா ஆகாபை நோக்கி: நீர் போம், போஜனபானம்பண்ணும்; பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றான். 42 ஆகாப் போஜனபானம் பண்ணப்போனான்; பின்பு எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின்மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் படக்குனிந்து, 43 தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றான்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றான். 44 ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான்; அப்பொழுது அவன் நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றான். 45 அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான். 46 கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்குமுன் ஓடினான்.

1 இராஜாக்கள் 19

1 எலியா செய்த எல்லாவற்றையும், அவன் தீர்க்கதரிசிகளெல்லாரையும் பட்டயத்தாலே கொன்றுபோட்ட செய்தி அனைத்தையும், ஆகாப் யேசபேலுக்கு அறிவித்தான். 2 அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களில் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள். 3 அவனுக்கு அது தெரிந்தபோது எழுந்து, தன் பிராணனைக் காக்க யூதாவைச்சேர்ந்த பெயெர்செபாவுக்குப் புறப்பட்டுப்போய், தன் வேலைக்காரனை அங்கே நிறுத்திவிட்டான். 4 அவன் வனாந்தரத்தில் ஒருநாள் பிரயாணம் போய், ஒரு சூரைச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாகவேண்டும் என்று கோரி: போதும் கர்த்தாவே, என் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்; நான் என் பிதாக்களைப்பார்க்கிலும் நல்லவன் அல்ல என்று சொல்லி, 5 ஒரு சூரைச்செடியின்கீழ்ப் படுத்துக்கொண்டு நித்திரைபண்ணினான்; அப்பொழுது ஒரு தூதன் அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு என்றான். 6 அவன் விழித்துப் பார்க்கிறபோது, இதோ, தழலில் சுடப்பட்ட அடையும், ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் அவன் தலைமாட்டில் இருந்தது; அப்பொழுது அவன், புசித்துக் குடித்துத் திரும்பப் படுத்துக்கொண்டான். 7 கர்த்தருடைய தூதன் திரும்ப இரண்டாந்தரம் வந்து அவனைத் தட்டியெழுப்பி: எழுந்திருந்து போஜனம்பண்ணு; நீ பண்ணவேண்டிய பிரயாணம் வெகுதூரம் என்றான். 8 அப்பொழுது அவன் எழுந்திருந்து புசித்துக் குடித்து, அந்தப் போஜனத்தின் பலத்தினால் நாற்பதுநாள் இரவுபகல் ஓரேப் என்னும் தேவனுடைய பர்வதமட்டும் நடந்துபோனான். 9 அங்கே அவன் ஒரு கெபிக்குள் போய்த் தங்கினான்; இதோ, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர்: எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்றார். 10 அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான். 11 அப்பொழுது அவர்: நீ வெளியே வந்து கர்த்தருக்கு முன்பாகப் பர்வதத்தில் நில் என்றார்; அப்பொழுது, இதோ, கர்த்தர் கடந்துபோனார்; கர்த்தருக்கு முன்பாகப் பர்வதங்களைப் பிளக்கிறதும் கன்மலைகளை உடைக்கிறதுமான பலத்த பெருங்காற்று உண்டாயிற்று; ஆனாலும் அந்தக் காற்றிலே கர்த்தர் இருக்கவில்லை; காற்றிற்குப்பின் பூமி அதிர்ச்சி உண்டாயிற்று; பூமி அதிர்ச்சியிலும் கர்த்தர் இருக்கவில்லை. 12 பூமி அதிர்ச்சிக்குப்பின் அக்கினி உண்டாயிற்று; அக்கினியிலும் கர்த்தர் இருக்கவில்லை; அக்கினிக்குப்பின் அமர்ந்த மெல்லியசத்தம் உண்டாயிற்று. 13 அதை எலியா கேட்டபோது, தன் சால்வையினால் தன் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து, கெபியின் வாசலில் நின்றான். அப்பொழுது, இதோ, எலியாவே, இங்கே உனக்கு என்ன காரியம் என்கிற சத்தம் அவனுக்கு உண்டாயிற்று. 14 அதற்கு அவன்: சேனைகளின் தேவனாகிய கர்த்தருக்காக வெகு பக்திவைராக்கியமாயிருந்தேன்; இஸ்ரவேல் புத்திரர் உமது உடன்படிக்கையைத் தள்ளிவிட்டார்கள்; உம்முடைய பலிபீடங்களை இடித்து, உம்முடைய தீர்க்கதரிசிகளைப் பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள், நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன்; என் பிராணனையும் வாங்கத் தேடுகிறார்கள் என்றான். 15 அப்பொழுது கர்த்தர் அவனைப் பார்த்து: நீ தமஸ்குவின் வழியாய் வனாந்தரத்திற்குத் திரும்பிப்போய், ஆசகேலைச் சீரியாவின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, 16 பின்பு நிம்சியின் குமாரனாகிய யெகூவை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணி, ஆபேல்மேகொலா ஊரானான சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு. 17 சம்பவிப்பதாவது: ஆசகேலின் பட்டயத்திற்குத் தப்பினவனை யெகூ கொன்றுபோடுவான்; யெகூவின் பட்டயத்திற்குத் தப்பினவனை எலிசா கொன்றுபோடுவான். 18 ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார். 19 அப்படியே அவன் அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போய், பன்னிரண்டு ஏர் பூட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவைக் கண்டான்; அவன் பன்னிரண்டாம் ஏரை ஓட்டிக்கொண்டிருந்தான்; எலியா அவன் இருக்கும் இடமட்டும் போய், அவன்மேல் தன் சால்வையைப் போட்டான். 20 அப்பொழுது அவன் மாடுகளைவிட்டு, எலியாவின் பிறகே ஓடி: நான் என் தகப்பனையும் என் தாயையும் முத்தஞ்செய்ய உத்தரவுகொடும், அதற்குப்பின் உம்மைப் பின்தொடர்வேன் என்றான். அதற்கு அவன்: போய்த் திரும்பிவா; நான் உனக்குச் செய்ததை நினைத்துக்கொள் என்றான். 21 அப்பொழுது அவன் இவனை விட்டுப் போய், ஓர் ஏர்மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான்; அவர்கள் சாப்பிட்டபிற்பாடு, அவன் எழுந்து, எலியாவுக்குப் பின்சென்று அவனுக்கு ஊழியஞ்செய்தான்.

1 இராஜாக்கள் 20

1 சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் சேனையையெல்லாம் கூட்டிக்கொண்டுபோய், சமாரியாவை முற்றிக்கைபோட்டு அதின்மேல் யுத்தம்பண்ணினான்; அவனோடேகூட முப்பத்திரண்டு ராஜாக்கள் இருந்ததுமல்லாமல், குதிரைகளும் இரதங்களும் இருந்தது. 2 அவன் நகரத்திற்குள் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி: 3 உன்னுடைய வெள்ளியும் உன்னுடைய பொன்னும் என்னுடையது; உன்னுடைய ஸ்திரீகளும் உன்னுடைய குமாரருக்குள் சமர்த்தராயிருக்கிறவர்களும் என்னுடையவர்கள் என்று பெனாதாத் சொல்லுகிறான் என்று அவனுக்குச் சொல்லச்சொன்னான். 4 இஸ்ரவேலின் ராஜா அதற்குப் பிரதியுத்தரமாக: ராஜாவாகிய என் ஆண்டவனே, உம்முடைய வார்த்தையின்படியே, நானும் எனக்கு உண்டான யாவும் உம்முடையவைகள்தான் என்று சொல்லியனுப்பினான். 5 அந்த ஸ்தானாபதிகள் திரும்பவும் வந்து: பெனாதாத் சொல்லுகிறது என்னவென்றால், உன் வெள்ளியையும், உன் பொன்னையும், உன் ஸ்திரீகளையும், உன் குமாரர்களையும் நீ எனக்குக் கொடுக்கவேண்டும் என்று உமக்குச் சொல்லியனுப்பினேனே. 6 ஆனாலும் நாளை இந்நேரத்தில் என் ஊழியக்காரரை உன்னிடத்தில் அனுப்புவேன்; அவர்கள் உன் வீட்டையும் உன் ஊழியக்காரரின் வீடுகளையும் சோதித்து, உன் கண்ணுக்குப் பிரியமானவைகள் எல்லாவற்றையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டுபோவார்கள் என்றார் என்று சொன்னார்கள். 7 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, தேசத்தின் மூப்பரையெல்லாம் அழைப்பித்து: இவன் பொல்லாப்புத் தேடுகிற விதத்தைக் கவனித்துப்பாருங்கள்; என் ஸ்திரீகளையும், என் குமாரர்களையும், என் வெள்ளியையும், என் பொன்னையும் கேட்க, இவன் என்னிடத்தில் ஆள் அனுப்பினபோது, நான் கொடுக்கமாட்டேன் என்று இவனுக்கு மறுக்கவில்லையே என்றான். 8 அப்பொழுது சகல மூப்பரும் சகல ஜனங்களும் அவனைப் பார்த்து: நீர் அவனுக்குச் செவிகொடுக்கவும், அவனுக்குச் சம்மதிக்கவும் வேண்டாம் என்றார்கள். 9 அதினால் அவன் பெனாதாத்தின் ஸ்தானாபதிகளை நோக்கி: நீங்கள் ராஜாவாகிய என் ஆண்டவனுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், நீர் முதல்விசை உமது அடியானுக்குச் சொல்லியனுப்பின யாவும் செய்வேன்; இந்தக் காரியத்தையோ நான் செய்யக்கூடாது என்று சொல்லுங்கள் என்றான்; ஸ்தானாபதிகள் போய், இந்த மறுமொழியை அவனுக்குச் சொன்னார்கள். 10 அப்பொழுது பெனாதாத் அவனிடத்தில் ஆள் அனுப்பி: எனக்குப் பின் செல்லுகிற ஜனங்கள் எல்லாரும் கைக்கு ஒரு பிடியாவது வாரிக்கொள்ள சமாரியாவின் தூள் போதுமானதாயிருந்தால், தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னான். 11 அதற்கு இஸ்ரவேலின் ராஜா பிரதியுத்தரமாக: ஆயுதம் தரித்திருக்கிறவன், ஆயுதம் உரிந்து போடுகிறவனைப்போலப் பெருமைபாராட்டலாகாது என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றான். 12 பெனாதாத்தும், மற்ற ராஜாக்களும் கூடாரங்களிலே குடித்துக்கொண்டிருக்கையில், இந்த வார்த்தையைக் கேட்டு, தன் ஊழியக்காரரை நோக்கி: ஆயத்தம்பண்ணுங்கள் என்றான்; அப்படியே நகரத்தின்மேல் சண்டைசெய்ய ஆயத்தம்பண்ணினார்கள். 13 அப்பொழுது ஒரு தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபிடத்தில் வந்து: அந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் கண்டாயா? இதோ, நானே கர்த்தர் என்று நீ அறியும்படி இன்றைக்கு அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 14 யாரைக்கொண்டு என்று ஆகாப் கேட்டான்; அதற்கு அவன்: மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரைக்கொண்டு என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்; பின்பு அவன், யுத்தத்தை யார் துவக்கவேண்டும் என்று கேட்டதற்கு; அவன், நீர்தான் என்றான். 15 அவன் மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரை இலக்கம்பார்த்தான், அவர்கள் இருநூற்று முப்பத்திரண்டுபேர்; அவர்களுக்குப்பின்பு, இஸ்ரவேல் புத்திரராகிய சகல ஜனத்தின் இலக்கமும் பார்த்து ஏழாயிரம்பேர் என்று கண்டான். 16 அவர்கள் மத்தியானவேளையிலே வெளியே புறப்பட்டார்கள்; பெனாதாத்தும், அவனுக்கு உதவியாக வந்த முப்பத்திரண்டு ராஜாக்களாகிய மற்ற ராஜாக்களும், கூடாரங்களில் குடித்து வெறிகொண்டிருந்தார்கள். 17 மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகர் முன் தண்டாகப் புறப்படுகிறபோது, பெனாதாத் அனுப்பின மனுஷர்: சமாரியாவிலிருந்து மனுஷர் புறப்பட்டு வருகிறார்கள் என்று அவனுக்கு அறிவித்தார்கள். 18 அப்பொழுது அவன்: அவர்கள் சமாதானத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள்; அவர்கள் யுத்தத்திற்காகப் புறப்பட்டுவந்தாலும் அவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான். 19 மாகாணங்களுடைய அதிபதிகளின் சேவகரான அவர்களும், அவர்கள் பின்னே வருகிற இராணுவமும், நகரத்திலிருந்து வெளியே வந்தபோது, 20 அவர்கள் அவரவர் தங்களுக்கு எதிர்ப்படுகிறவர்களை வெட்டினார்கள்; சீரியர் முறிந்தோடிப்போனார்கள்; இஸ்ரவேலர் அவர்களைத் துரத்தினார்கள்; சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத், குதிரையின்மேல் ஏறிச் சில குதிரைவீரரோடுங்கூடத் தப்பியோடிப்போனான். 21 இஸ்ரவேலின் ராஜா புறப்பட்டு, குதிரைகளையும் இரதங்களையும் முறிய அடித்து, சீரியரில் மகா சங்காரம் உண்டாக வெட்டினான். 22 பின்பு அந்தத் தீர்க்கதரிசி இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய் உம்மைப் பலப்படுத்திக்கொண்டு, நீர் செய்யத்தக்கது இன்னதென்று கவனித்துப்பாரும்; மறுவருஷத்திலே சீரியாவின் ராஜா உமக்கு விரோதமாக வருவான் என்றான். 23 சீரியாவின் ராஜாவுடைய ஊழியக்காரர் அவனைப் பார்த்து: அவர்களுடைய தேவர்கள் மலைத்தேவர்கள், அதினால் அவர்கள் நம்மை மேற்கொண்டார்கள்; நாம் அவர்களோடே சமபூமியிலே யுத்தம்பண்ணினால் நல்லது; அப்பொழுது அவர்களை மேற்கொள்வது நிச்சயம். 24 அதற்காக நீர் செய்யவேண்டியது என்னவென்றால், இந்த ராஜாக்கள் ஒவ்வொருவரையும் தங்கள் ஸ்தலத்திலிருந்து மாற்றி, அவர்களுக்குப் பதிலாகச் சேனாபதிகளை ஏற்படுத்தி; 25 நீர் மடியக்கொடுத்த சேனைக்குச் சரியாய்ச் சேனையையும், அந்தக் குதிரைகளுக்குச் சரியாய்க் குதிரைகளையும், இரதங்களுக்குச் சரியாய் இரதங்களையும் இலக்கம்பார்த்துக்கொள்ளும்; பிற்பாடு சமபூமியிலே நாம் அவர்களோடு யுத்தம்பண்ணி, நிச்சயமாய் அவர்களை மேற்கொள்வோம் என்றார்கள்; அவன் அவர்கள் சொற்கேட்டு அப்படியே செய்தான். 26 மறுவருஷத்திலே பெனாதாத் சீரியரை இலக்கம்பார்த்து, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ண ஆப்பெக்குக்கு வந்தான். 27 இஸ்ரவேல் புத்திரரும் இலக்கம் பார்க்கப்பட்டு, தேவையானதைச் சம்பாதித்துக்கொண்டு, அவர்களை எதிர்க்கப் புறப்பட்டு, அவர்களுக்கு எதிரே இரண்டு சிறிய வெள்ளாட்டுக் கிடைகளைப்போலப் பாளயமிறங்கினார்கள்; தேசம் சீரியரால் நிறைந்திருந்தது. 28 அப்பொழுது தேவனுடைய மனுஷன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர் சொல்லியிருக்கிறபடியினால், நான் இந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 29 ஏழுநாளளவும் அவர்கள் முகமுகமாய்ப் பாளயமிறங்கியிருந்தார்கள்; ஏழாம் நாளில் யுத்தம் கலந்து, இஸ்ரவேல் புத்திரர் ஒரேநாளிலே சீரியரில் லட்சம் காலாட்களை மடங்கடித்தார்கள். 30 மீதியானவர்கள் ஆப்பெக்பட்டணத்திற்குள் ஓடிப்போனார்கள்; அங்கே மீதியாயிருந்த இருபத்தேழாயிரம்பேரின்மேல் அலங்கம் இடிந்து விழுந்தது; பெனாதாத்தும் ஓடிப்போய் நகரத்திற்குள் புகுந்து, உள்ளறையிலே பதுங்கினான். 31 அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, இஸ்ரவேல் வம்சத்து ராஜாக்கள் தயவுள்ள ராஜாக்கள் என்று கேட்டிருக்கிறோம்; நாங்கள் இரட்டுகளை எங்கள் அரைகளில் கட்டி, கயிறுகளை எங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் போவோம்; ஒருவேளை உம்மை உயிரோடே வைப்பார் என்று சொல்லி, 32 இரட்டைத் தங்கள் அரைகளில் கட்டி, கயிறுகளைத் தங்கள் தலைகளில் சுற்றிக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் வந்து: என்னை உயிரோடே வையும் என்று உமது அடியானாகிய பெனாதாத் விண்ணப்பம்பண்ணுகிறான் என்றார்கள். அதற்கு அவன், இன்னும் அவன் உயிரோடே இருக்கிறானா, அவன் என் சகோதரன் என்றான். 33 அந்த மனுஷர் நன்றாய்க் கவனித்து, அவன் வாயின் சொல்லை உடனே பிடித்து: உமது சகோதரனாகிய பெனாதாத் இருக்கிறான் என்றார்கள்; அப்பொழுது அவன்: நீங்கள் போய், அவனை அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான்; பெனாதாத் அவனிடத்தில் வந்தபோது, அவனைத் தன் இரதத்தில் ஏற்றிக்கொண்டான். 34 அப்பொழுது பெனாதாத் இவனைப் பார்த்து: என் தகப்பன் உம்முடைய தகப்பனார் கையிலே பிடித்த பட்டணங்களைத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன்; என் தகப்பன் சமாரியாவிலே செய்ததுபோல, நீரும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக்கொள்ளலாம் என்றான். அதற்கு அவன், இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி, அவனோடு உடன்படிக்கைபண்ணி அவனை அனுப்பிவிட்டான். 35 அப்பொழுது தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவன் கர்த்தருடைய வார்த்தையின்படி தன் தோழனை நோக்கி: நீ என்னை அடி என்றான்; அந்த மனுஷன் அவனைப்பார்த்து அடிக்கமாட்டேன் என்றான். 36 அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமற்போனபடியால், இதோ, நீ என்னைவிட்டுப் புறப்பட்டுப் போனவுடனே ஒரு சிங்கம் உன்னைக் கொல்லும் என்றான்; அப்படியே இவன் அவனை விட்டுப் புறப்பட்டவுடனே, ஒரு சிங்கம் இவனைக் கண்டு கொன்றுபோட்டது. 37 அதின்பின் அவன் வேறொருவனைக் கண்டு: என்னை அடி என்றான்; அந்த மனுஷன், அவனைக் காயமுண்டாக அடித்தான். 38 அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி போய், தன் முகத்தின்மேல் சாம்பலைப்போட்டு, வேஷமாறினவனாய் வழியிலே ராஜாவுக்காகக் காத்திருந்தான். 39 ராஜா அவ்வழியாய் வருகிறபோது, இவன் ராஜாவைப்பார்த்துக் கூப்பிட்டு: உமது அடியான் யுத்தத்தில் நின்றபோது, ஒருவன் விலகி, என்னிடத்தில் ஒருவனைக் கொண்டுவந்து, இந்த மனுஷனைப் பத்திரம்பண்ணு; இவன் தப்பிப்போனால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாயிருக்கும், அல்லது ஒரு தாலந்து வெள்ளியை நீ கொடுக்கவேண்டும் என்றான். 40 ஆனாலும் உமது அடியான் இங்கும் அங்கும் அலுவலாயிருக்கும்போது, அவன் போய்விட்டான் என்றான். இஸ்ரவேலின் ராஜா அவனைப் பார்த்து: நீ சொன்ன தீர்ப்பின்படியே ஆகும் என்றான். 41 அப்பொழுது அவன் சீக்கிரமாய்த் தன் முகத்தின்மேலிருக்கும் சாம்பலைத் துடைத்துவிட்டதினால், இஸ்ரவேலின் ராஜா அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்று அறிந்துகொண்டான். 42 அப்பொழுது இவன் அவனை நோக்கி: சங்காரத்திற்கு நான் நியமித்த மனுஷனை உன் கையிலிருந்து தப்பிப்போகும்படி நீ விட்டபடியினால், உன் பிராணன் அவன் பிராணனுக்கு ஈடாகவும், உன் ஜனம் அவன் ஜனத்திற்கு ஈடாகவும் இருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 43 அதினால் இஸ்ரவேலின் ராஜா சலிப்பும் விசனமுமாய்த் தன் வீட்டிற்குப் போகப் புறப்பட்டுச் சமாரியாவுக்கு வந்தான்.

1 இராஜாக்கள் 21

1 இவைகளுக்குப்பின்பு, யெஸ்ரயேலனாகிய நாபோத்துக்கு யெஸ்ரயேலிலே சமாரியாவின் ராஜாவாகிய ஆகாபின் அரமனை அண்டையில் ஒரு திராட்சத்தோட்டம் இருந்தது. 2 ஆகாப் நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டம் என் வீட்டிற்கு அடுத்திருக்கிறபடியால், அதைக் கீரைக்கொல்லையாக்கும்படி எனக்குக் கொடு, அதைப்பார்க்கிலும் நல்ல திராட்சத்தோட்டத்தை அதற்குப் பதிலாக உனக்குத் தருவேன்; அல்லது உனக்கு வேண்டுமானால், அதின் விலைக்கிரயமான பணத்தைத் தருவேன் என்றான். 3 நாபோத் ஆகாபை நோக்கி: நான் என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடாதபடி கர்த்தர் என்னைக் காப்பாராக என்றான். 4 இப்படி என் பிதாக்களின் சுதந்தரத்தை உமக்குக் கொடேன் என்று யெஸ்ரயேலனாகிய நாபோத் தன்னோடே சொன்ன வார்த்தைக்காக ஆகாப் சலிப்பும் சினமுமாய், தன் வீட்டிற்கு வந்து, போஜனம்பண்ணாமல், தன் கட்டிலின்மேல் படுத்து, தன் முகத்தைத் திருப்பிக்கொண்டிருந்தான். 5 அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனிடத்தில் வந்து: நீர் போஜனம்பண்ணாதபடிக்கு, உம்முடைய மனம் சலிப்பாயிருக்கிறது என்ன என்று அவனைக் கேட்டதற்கு, 6 அவன் அவளைப் பார்த்து: நான் யெஸ்ரயேலனாகிய நாபோத்தோடே பேசி: உன் திராட்சத்தோட்டத்தை எனக்கு விலைக்கிரயமாய்க் கொடு; அல்லது உனக்கு ராசியானால் அதற்குப் பதிலாக வேறே திராட்சத்தோட்டத்தை உனக்குத் தருவேன் என்றேன். அதற்கு அவன்: என் திராட்சத்தோட்டத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன் என்று சொன்னான் என்றான். 7 அப்பொழுது அவன் மனைவியாகிய யேசபேல் அவனை நோக்கி: நீர் இப்போது இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிறவர் அல்லவா? நீர் எழுந்து போஜனம்பண்ணி மனமகிழ்ச்சியாயிரும்; யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை நான் உமக்குக் கொடுப்பேன் என்று சொன்னாள். 8 அவள் ஆகாபின் பெயரால் நிருபங்களை எழுதி, அவன் முத்திரையை அவைகளுக்குப் போட்டு, அந்த நிருபங்களை நாபோத் இருக்கும் பட்டணத்தில் அவனோடே குடியிருக்கிற மூப்பரிடத்துக்கும் பெரியோரிடத்துக்கும் அனுப்பினாள். 9 அந்த நிருபங்களில் அவள் எழுதினது என்னவென்றால்: நீங்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி, நாபோத்தை ஜனத்தின் முன் நிறுத்தி, 10 தேவனையும் ராஜாவையும் தூஷித்தாய் என்று அவன்மேல் சாட்சிசொல்லுகிற பேலியாளின் மக்களாகிய இரண்டுபேரை அவனுக்கு எதிராக நிறுத்தி, அவனை வெளியே கொண்டுபோய் அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறியுங்கள் என்று எழுதினாள். 11 அவன் பட்டணத்திலே குடியிருக்கிற மூப்பரும் பெரியோருமாகிய அவன் பட்டணத்து மனுஷர், யேசபேல் தங்களுக்கு அனுப்பின நிருபங்களில் எழுதிக் கட்டளையிட்டிருந்தபடியே செய்தார்கள். 12 அவர்கள் உபவாசம் என்று பிரசித்தப்படுத்தி நாபோத்தை ஜனத்தின் முன்னே நிறுத்தினார்கள். 13 அப்பொழுது பேலியாளின் மக்களாகிய இரண்டுபேர் வந்து, அவனுக்கு எதிராக உட்கார்ந்து: நாபோத் தேவனையும் ராஜாவையும் தூஷித்தான் என்று ஜனத்திற்கு முன்பாக அவன்மேல் சாட்சி சொன்னார்கள்; அதற்குப்பின்பு அவனைப் பட்டணத்திற்கு வெளியே கொண்டுபோய், அவன் சாகும்படிக்கு அவனைக் கல்லெறிந்து, 14 பிற்பாடு யேசபேலுக்கு, நாபோத் கல்லெறியுண்டு செத்தான் என்று சொல்லியனுப்பினார்கள். 15 நாபோத் கல்லெறியுண்டு செத்ததை யேசபேல் கேட்டபோது, ஆகாபை நோக்கி: நீர் எழுந்திருந்து, யெஸ்ரயேலனாகிய நாபோத் உமக்கு விலைக்கிரயமாய்க் கொடுக்கமாட்டேன் என்று சொன்ன திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்; நாபோத் உயிரோடில்லை, அவன் செத்துப்போனான் என்றாள். 16 நாபோத் செத்துப்போனதை ஆகாப் கேட்டபோது, அவன் யெஸ்ரயேலனாகிய நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ளும்படி எழுந்துபோனான். 17 கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்: 18 நீ எழுந்து, சமாரியாவிலிருக்கிற இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபைச் சந்திக்கும்படி போ; இதோ, அவன் நாபோத்தின் திராட்சத்தோட்டத்தைச் சொந்தமாய் எடுத்துக்கொள்ள அங்கே போயிருக்கிறான். 19 நீ அவனைப் பார்த்து: நீ கொலைசெய்ததும் எடுத்துக்கொண்டதும் இல்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். 20 அப்பொழுது ஆகாப் எலியாவை நோக்கி: என் பகைஞனே, என்னைக் கண்டுபிடித்தாயா என்றான். அதற்கு அவன்: கண்டுபிடித்தேன்; கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய நீ உன்னை விற்றுப்போட்டாய். 21 நான் உன்மேல் பொல்லாப்பு வரப்பண்ணி, உன் சந்ததியை அழித்துப்போட்டு, ஆகாபுக்கு சுவரில் நீர்விடும் ஒரு நாயாகிலும் இராதபடிக்கு இஸ்ரவேலில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் சங்கரித்து, 22 நீ எனக்குக் கோபம் உண்டாக்கி, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணினதினிமித்தம், உன்னுடைய குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சமானமாக்குவேன் என்றார் என்று சொன்னான். 23 யேசபேலையும் குறித்துக் கர்த்தர்: நாய்கள் யேசபேலை யெஸ்ரயேலின் மதில் அருகே தின்னும். 24 ஆகாபின் சந்ததியில் பட்டணத்திலே சாகிறவனை நாய்களும், வெளியிலே சாகிறவனை ஆகாயத்துப் பறவைகளும் தின்னும் என்றார். 25 தன் மனைவியாகிய யேசபேல் தூண்டிவிட்டபடியே, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்ய, தன்னை விற்றுப்போட்ட ஆகாபைப்போல ஒருவனுமில்லை. 26 கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்னின்று துரத்திவிட்ட எமோரியர் செய்தபடியெல்லாம், அவன் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, மகா அருவருப்பாய் நடந்துகொண்டான். 27 ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப் போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான். 28 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்: 29 ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறபடியினால், நான் அவன் நாட்களில் அந்தப் பொல்லாப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின்மேல் வரப்பண்ணுவேன் என்றார்.

1 இராஜாக்கள் 22

1 சீரியருக்கும் இஸ்ரவேலருக்கும் மூன்று வருஷம் யுத்தமில்லாமலிருந்தது. 2 மூன்றாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவினிடத்திற்குப் போயிருக்கும்போது, 3 இஸ்ரவேலின் ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி, 4 யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ண என்னோடேகூட வருகிறீரா என்று கேட்டான். யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான். 5 பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான். 6 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள். 7 பின்பு யோசபாத்: நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான். 8 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத், ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான். 9 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா பிரதானிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் குமாரனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான். 10 இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் ஒலிமுகவாசலுக்கு முன்னிருக்கும் விசாலத்திலே ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டவர்களாய், அவரவர் தம்தம் சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள்; சகல தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள். 11 கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப் போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 12 சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப்போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள். 13 மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான். 14 அதற்கு மிகாயா: கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். 15 அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: "போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார்" என்றான். 16 ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான். 17 அப்பொழுது அவன்: இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான். 18 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று நான் உம்மோடே சொல்லவில்லையா என்றான். 19 அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவர் வலதுபக்கத்திலும் அவர் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன். 20 அப்பொழுது கர்த்தர்: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படிக்கு, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள். 21 அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது. 22 எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படிச் செய் என்றார். 23 ஆதலால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லாருடைய வாயிலும் கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான். 24 அப்பொழுது கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டேவந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்தவழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான். 25 அதற்கு மிகாயா: நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான். 26 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடத்திற்கும், ராஜாவின் குமாரனாகிய யோவாசிடத்திற்கும் திரும்பக் கொண்டுபோய், 27 இவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே வருமளவும், இவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக்கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான். 28 அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பிவருகிறது உண்டானால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள் என்றான். 29 பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள். 30 இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: நான் வேஷம்மாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி, யுத்தத்தில் பிரவேசித்தான். 31 சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் முப்பத்திரண்டு தலைவரையும் நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான். 32 ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனுக்கு நேராகச் சாய்ந்துவந்தார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான். 33 இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டு அவனைவிட்டு, விலகிப்போனார்கள். 34 ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள் பட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து: நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ; எனக்குக் காயம்பட்டது என்றான். 35 அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியருக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்துபோனான்; காயத்தின் இரத்தம் இரதத்தின் தட்டிலே வடிந்தது. 36 பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம்தம் தேசத்திற்கும் போகலாம் என்று இராணுவத்தில் பறைசாற்றப்பட்டது. 37 அப்படியே ராஜா இறந்தபின்பு, சமாரியாவுக்குக் கொண்டுவரப்பட்டான்; ராஜாவைச் சமாரியாவில் அடக்கம்பண்ணினார்கள். 38 அந்த இரதத்தையும் அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது, கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவன் இரத்தத்தை நக்கினது. 39 ஆகாபின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் கட்டின தந்த அரமனையின் வரலாறும், அவன் கட்டின எல்லாப் பட்டணங்களின் வரலாறும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 40 ஆகாப் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய அகசியா அவன் ஸ்தலத்தில் ராஜாவானான். 41 ஆசாவின் குமாரனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் நாலாம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான். 42 யோசபாத் ராஜாவாகிறபோது முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் அசுபாள். 43 அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதை விட்டு விலகாமல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆகிலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள். 44 யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவோடே சமாதானமாயிருந்தான். 45 யோசபாத்தின் மற்ற வர்த்தமானங்களும், அவன் காட்டிய வல்லமையும், அவன் பண்ணின யுத்தமும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 46 தன் தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாய் விட்டிருந்த இலச்சையான புணர்ச்சிக்காரரையும் அவன் தேசத்திலிருந்து அற்றுப்போகப்பண்ணினான். 47 அப்பொழுது ஏதோமில் ராஜா இல்லை; பிரதிராஜா ஒருவன் இருந்தான். 48 பொன்னுக்காக ஓப்பீருக்குப் போகும்படி, யோசபாத் தர்ஷீஸ் கப்பல்களைச் செய்தான்; ஆனால் அவைகள் போகவில்லை; அவைகள் எசியோன்கேபேரிலே உடைந்துபோயின. 49 அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய அகசியா யோசபாத்தை நோக்கி: என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூடக் கப்பல்களிலே போகட்டும் என்றான்; அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை. 50 யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களோடே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 51 ஆகாபின் குமாரனாகிய அகசியா யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினேழாம் வருஷத்திலே சமாரியாவில் ராஜாவாகி, இஸ்ரவேலின்மேல் இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி, 52 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பன் வழியிலும், தன் தாயின் வழியிலும், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரன் யெரொபெயாமின் வழியிலும் நடந்து, 53 பாகாலைச் சேவித்து, அவனைப் பணிந்துகொண்டு, தன் தகப்பன் செய்தபடியெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமுண்டாக்கினான்.

2 இராஜாக்கள் 1

1 ஆகாப் மரணமடைந்தபின், மோவாபியர் இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணிப் பிரிந்துபோனார்கள். 2 அகசியா சமாரியாவிலிருக்கிற தன் மேல்வீட்டிலிருந்து கிராதியின் வழியாய் விழுந்து, வியாதிப்பட்டு: இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் போய் விசாரியுங்கள் என்று ஆட்களை அனுப்பினான். 3 கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவை நோக்கி: நீ எழுந்து, சமாரியாவுடைய ராஜாவின் ஆட்களுக்கு எதிர்ப்படப்போய்: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீங்கள் எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப்போகிறீர்கள்? 4 இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல், சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவர்களோடே சொல் என்றான்; அப்படியே எலியா போய்ச் சொன்னான். 5 அந்த ஆட்கள் அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது: நீங்கள் திரும்பி வந்தது என்ன என்று அவன் அவர்களிடத்தில் கேட்டான். 6 அதற்கு அவர்கள்: ஒரு மனுஷன் எங்களுக்கு எதிர்ப்பட்டுவந்து: நீங்கள் உங்களை அனுப்பின ராஜாவினிடத்தில் திரும்பிப்போய், இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்கப்போகிறாய்; இதினிமித்தம் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதை அவனோடே சொல்லுங்கள் என்றான் என்று சொன்னார்கள். 7 அப்பொழுது அவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு எதிர்ப்பட்டு வந்து, இந்த வார்த்தைகளை உங்களிடத்தில் சொன்ன மனுஷன் எப்படிப்பட்டவன் என்று கேட்டான். 8 அதற்கு அவர்கள்: அவன் மயிர் உடையைத் தரித்து, வார்க்கச்சையைத் தன் அரையிலே கட்டிக்கொண்டிருந்தான் என்றார்கள்; அப்பொழுது அவன்: திஸ்பியனாகிய எலியாதான் என்று சொல்லி; 9 அவனிடத்திற்கு ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; மலையின் உச்சியில் உட்கார்ந்திருக்கிற அவனிடத்தில் இவன் ஏறிப்போய்: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னை வரச்சொல்லுகிறார் என்றான். 10 அப்பொழுது எலியா, அந்த ஐம்பதுபேரின் தலைவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பதுபேரையும் பட்சித்தது. 11 மறுபடியும் அவனிடத்திற்கு வேறொரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான். இவன் அவனை நோக்கி: தேவனுடைய மனுஷனே, ராஜா உன்னைச் சீக்கிரமாய் வரச்சொல்லுகிறார் என்றான். 12 எலியா அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவனுடைய மனுஷனானால், அக்கினி வானத்திலிருந்து இறங்கி, உன்னையும் உன் ஐம்பதுபேரையும் பட்சிக்கக்கடவது என்றான்; உடனே தேவனுடைய அக்கினி வானத்திலிருந்து இறங்கி, அவனையும் அவன் ஐம்பதுபேரையும் பட்சித்தது. 13 திரும்பவும் மூன்றாந்தரம் ஒரு தலைவனையும், அவனுடைய ஐம்பது சேவகரையும் அனுப்பினான்; இந்த மூன்றாந்தலைவன் ஏறிவந்தபோது, எலியாவுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு, அவனை வேண்டிக்கொண்டு: தேவனுடைய மனுஷனே, என்னுடைய பிராணனும், உமது அடியாராகிய இந்த ஐம்பதுபேரின் பிராணனும் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக. 14 இதோ, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, முந்தின இரண்டு தலைவரையும், அவரவருடைய ஐம்பது சேவகரையும் பட்சித்தது; இப்போதும் என்னுடைய பிராணன் உமது பார்வைக்கு அருமையாயிருப்பதாக என்றான். 15 அப்பொழுது கர்த்தருடைய தூதன் எலியாவை நோக்கி: அவனோடேகூட இறங்கிப்போ, அவனுக்குப் பயப்படாதே என்றான்; அப்படியே அவன் எழுந்து அவனோடேகூட ராஜாவினிடத்திற்கு இறங்கிப்போய், 16 அவனைப் பார்த்து: இஸ்ரவேலிலே தேவன் இல்லையென்றா நீ எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் விசாரிக்க ஆட்களை அனுப்பினாய்; ஆதலால் நீ ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 17 எலியா சொன்ன கர்த்தருடைய வார்த்தையின்படியே அவன் இறந்துபோனான்; அவனுக்குக் குமாரன் இல்லாதபடியினால், அவன் ஸ்தானத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத்துடைய குமாரனான யோராமின் இரண்டாம் வருஷத்தில் யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 18 அகசியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

2 இராஜாக்கள் 2

1 கர்த்தர் எலியாவைச் சுழல்காற்றிலே பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப் போகிறபோது, எலியா எலிசாவோடேகூடக் கில்காலிலிருந்து புறப்பட்டுப்போனான். 2 எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள். 3 அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான். 4 பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; கர்த்தர் என்னை எரிகோமட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். 5 எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான். 6 பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் போனார்கள். 7 தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஐம்பதுபேர் போய், தூரத்திலே பார்த்துக்கொண்டு நின்றார்கள்; அவர்கள் இருவரும் யோர்தான் கரையிலே நின்றார்கள். 8 அப்பொழுது எலியா, தன் சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தான்; அது இருபக்கமாகப் பிரிந்தது; அவர்கள் இருவரும் உலர்ந்த தரைவழியாய் அக்கரைக்குப் போனார்கள். 9 அவர்கள் அக்கரைப்பட்டபின்பு, எலியா எலிசாவை நோக்கி: நான் உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளப்படுமுன்னே நான் உனக்குச் செய்யவேண்டியது என்ன, கேள் என்றான். அதற்கு எலிசா: உம்மிடத்திலுள்ள ஆவியின் வரம் எனக்கு இரட்டிப்பாய்க் கிடைக்கும்படி வேண்டுகிறேன் என்றான். 10 அதற்கு அவன்: அரிதான காரியத்தைக் கேட்டாய்; உன்னைவிட்டு நான் எடுத்துக்கொள்ளப்படுகையில் என்னை நீ கண்டால் உனக்குக் கிடைக்கும்; இல்லாவிட்டால் கிடையாது என்றான். 11 அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினி ரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான். 12 அதை எலிசா கண்டு: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவரே என்று புலம்பினான்; அவனை அப்புறம் காணாமல், தன் வஸ்திரத்தைப் பிடித்து இரண்டு துண்டாகக் கிழித்தான். 13 பின்பு அவன் எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையை எடுத்துத் திரும்பிப்போய், யோர்தானின் கரையிலே நின்று, 14 எலியாவின்மேலிருந்து கீழே விழுந்த சால்வையைப் பிடித்து: எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று சொல்லித் தண்ணீரை அடித்தான்; தண்ணீரை அடித்தவுடனே அது இருபக்கமாகப் பிரிந்ததினால் எலிசா இக்கரைப்பட்டான். 15 எரிகோவில் பார்த்துக்கொண்டு நின்ற தீர்க்கதரிசிகளின் புத்திரர் அவனைக் கண்டவுடனே, எலியாவின் ஆவி எலிசாவின்மேல் இறங்கியிருக்கிறது என்று சொல்லி, அவனுக்கு எதிர்கொண்டுபோய்த் தரைமட்டும் குனிந்து அவனை வணங்கி: 16 இதோ, உமது அடியாரோடே ஐம்பது பலவான்கள் இருக்கிறார்கள்; அவர்கள் போய் உம்முடைய எஜமானைத் தேடும்படி உத்தரவுகொடும்; ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் அவரை எடுத்து, பர்வதங்களில் ஒன்றின்மேலாகிலும், பள்ளத்தாக்குகளில் ஒன்றிலாகிலும் கொண்டுபோய் வைத்திருப்பார் என்றார்கள். அதற்கு அவன்: அவர்களை அனுப்பவேண்டாம் என்றான். 17 அவன் சலித்துப்போகுமட்டும் அவர்கள் அவனை அலட்டிக்கொண்டிருந்தபடியால் அனுப்புங்கள் என்றான்; அப்படியே ஐம்பதுபேரை அனுப்பினார்கள்; அவர்கள் மூன்றுநாள் அவனைத் தேடியும் காணாமல், 18 எரிகோவிலிருந்த அவனிடத்திற்குத் திரும்பிவந்தபோது, அவன் இவர்களைப் பார்த்து: போகவேண்டாம் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா என்றான். 19 பின்பு அந்தப் பட்டணத்தின் மனுஷர் எலிசாவை நோக்கி: இதோ, எங்கள் ஆண்டவன் காண்கிறபடி இந்தப் பட்டணம் குடியிருப்புக்கு நல்லது; தண்ணீரோ கெட்டது, நிலமும் பாழ்நிலம் என்றார்கள். 20 அப்பொழுது அவன்: ஒரு புதுத்தோண்டியை எடுத்து, அதிலே உப்புப்போட்டுக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவனிடத்தில் கொண்டுவந்தபோது, 21 அவன் நீரூற்றண்டைக்குப் போய், உப்பை அதிலே போட்டு: இந்தத் தண்ணீரை ஆரோக்கியமாக்கினேன்; இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் இராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 22 எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று. 23 அவன் அவ்விடத்தைவிட்டுப் பெத்தேலுக்குப் போனான்; அவன் வழிநடந்துபோகையில் பிள்ளைகள் பட்டணத்திலிருந்து வந்து, அவனைப் பார்த்து: மொட்டைத்தலையா ஏறிப்போ, மொட்டைத்தலையா ஏறிப்போ என்று சொல்லி நிந்தித்தார்கள். 24 அப்பொழுது அவன் திரும்பி அவர்களைப் பார்த்து: கர்த்தரின் நாமத்திலே அவர்களைச் சபித்தான்; உடனே காட்டிலிருந்து இரண்டு கரடிகள் புறப்பட்டு வந்து, அவர்களில் நாற்பத்திரண்டு பிள்ளைகளைப் பீறிப்போட்டது. 25 அவன் அவ்விடத்தைவிட்டுக் கர்மேல் பர்வதத்திற்குப்போய், அங்கேயிருந்து சமாரியாவுக்குத் திரும்பினான்.

2 இராஜாக்கள் 3

1 யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினெட்டாம் வருஷத்தில் ஆகாபின் குமாரனாகிய யோராம் சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிப் பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி, 2 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனைப்போலும் தன் தாயைப்போலும் அல்ல; தன் தகப்பன் பண்ணுவித்த பாகாலின் சிலையை அகற்றிவிட்டான். 3 என்றாலும் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு நீங்காமல் அவைகளிலே சிக்கிக்கொண்டிருந்தான். 4 மோவாபின் ராஜாவாகிய மேசா ஆடுமாடுகள் பெருத்தவனாயிருந்து, இஸ்ரவேலின் ராஜாவுக்கு இலட்சம் ஆட்டுக்குட்டிகளையும், இலட்சம் குறும்பாட்டுக்கடாக்களையும் செலுத்திவந்தான். 5 ஆகாப் இறந்துபோனபின் மோவாபின் ராஜா இஸ்ரவேலின் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினான். 6 அக்காலத்திலே யோராம் என்னும் ராஜா சமாரியாவிலிருந்து புறப்பட்டு, இஸ்ரவேலையெல்லாம் இலக்கம் பார்த்துப்போய்: 7 மோவாபின் ராஜா எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினான்; மோவாபியர்மேல் யுத்தம்பண்ண, என்னோடேகூட வருகிறீரா என்று யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தைக் கேட்டனுப்பினதற்கு; அவன் நான் வருகிறேன்; நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான். 8 எந்த வழியாய்ப் போவோம் என்று கேட்டான்; அதற்கு அவன்: ஏதோம் வனாந்தரவழியாய் என்றான். 9 அப்படியே இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவும் ஏதோமின் ராஜாவும் சேர்ந்து போனார்கள்; ஆனாலும் அவர்கள் ஏழுநாள் சுற்றித்திரிந்தபோது, அவர்களைப் பின்செல்லுகிற இராணுவத்துக்கும் மிருகஜீவன்களுக்கும் தண்ணீர் இல்லாமற்போயிற்று. 10 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: ஐயோ, இந்த மூன்று ராஜாக்களையும் கர்த்தர் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்க வரவழைத்தாரே என்றான். 11 அப்பொழுது யோசபாத்: நாம் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா என்று கேட்டதற்கு, எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்த சாப்பாத்தின் குமாரனாகிய எலிசா இங்கே இருக்கிறான் என்று இஸ்ரவேல் ராஜாவின் ஊழியக்காரரில் ஒருவன் மறுமொழியாகச் சொன்னான். 12 அப்பொழுது யோசபாத் அவனை நோக்கி: கர்த்தருடைய வார்த்தை அவனிடத்தில் இருக்கிறது என்றான்; இஸ்ரவேலின் ராஜாவும் யோசபாத்தும் ஏதோமின் ராஜாவும் அவனிடத்தில் போனார்கள். 13 எலிசா இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: எனக்கும் உமக்கும் என்ன? நீர் உம்முடைய தகப்பனின் தீர்க்கதரிசிகளிடத்திலும், உம்முடைய தாயாரின் தீர்க்கதரிசிகளிடத்திலும் போம் என்றான். அதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல, கர்த்தர் இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு வரவழைத்தார் என்றான். 14 அதற்கு எலிசா: நான் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் முகத்தைப் பாராதிருந்தால் நான் உம்மை நோக்கவுமாட்டேன், உம்மைப் பார்க்கவுமாட்டேன் என்று சேனைகளுடைய கர்த்தருக்கு முன்நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். 15 இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்; சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது கர்த்தருடைய கரம் அவன்மேல் இறங்கி, 16 அவன்: கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள். 17 நீங்கள் காற்றையும் காணமாட்டீர்கள், மழையையும் காணமாட்டீர்கள்; ஆனாலும் நீங்களும் உங்கள் ஆடுமாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். 18 இது கர்த்தரின் பார்வைக்கு அற்பகாரியம்; மோவாபியரையும் உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார். 19 நீங்கள் சகல கோட்டைகளையும் சகல சிறந்த பட்டணங்களையும் தகர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல நிலத்தையெல்லாம் கல்மேடுகளாக்கிக் கெடுப்பீர்கள் என்றான். 20 மறுநாள் காலமே பலிசெலுத்தப்படும் நேரத்தில், இதோ, தண்ணீர் ஏதோம் தேசவழியாய் வந்ததினால் தேசம் தண்ணீரால் நிரம்பிற்று. 21 தங்களோடு யுத்தம்பண்ண ராஜாக்கள் வருகிறதை மோவாபியரெல்லாரும் கேட்டபோது, அவர்கள் ஆயுதம் தரிக்கத்தக்க வயதுள்ளவர்களையும், அதற்கு மேல்தரமானவர்கள் எல்லாரையும் கூட்டி அழைத்துக்கொண்டுவந்து எல்லையிலே நின்றார்கள். 22 மோவாபியர் அதிகாலமே எழுந்தபோது சூரியன் தண்ணீரின்மேல் பிரகாசித்ததினால் அந்தத் தண்ணீர் அவர்களுக்கு இரத்தம்போல் சிவப்பாய்க் காணப்பட்டது. 23 அதினால் அவர்கள்: இது இரத்தம், அந்த ராஜாக்கள் தங்களைத் தாங்களே ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாண்டுபோனார்கள்; ஆதலால் மோவாபியரே, கொள்ளைக்கு வாருங்கள் என்று சொன்னார்கள். 24 அவர்கள் இஸ்ரவேலின் பாளயத்திற்கு வந்தபோதோவெனில், இஸ்ரவேலர் எழும்பி, மோவாபியரைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாய் முறிய அடித்து, அவர்கள் தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாபியரை முறிய அடித்து, 25 பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலத்திலும் கல்லெறிந்து நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத்திலேமாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிபடாதிருக்கிறபோது; கவண்காரர் அதைச் சுற்றிக்கொண்டு அதையும் சேதமாக்கினார்கள். 26 யுத்தம் மும்முரமாகிறதென்று மோவாபியரின் ராஜா கண்டபோது, அவன் ஏதோமின் ராஜாவின்மேல் வலுமையாய் விழுகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டுபோனான்; ஆனாலும் அவர்களாலே கூடாமற்போயிற்று. 27 அப்பொழுது அவன் தன் ஸ்தானத்தில் ராஜாவாகப்போகிற தன் சேஷ்டபுத்திரனைப் பிடித்து, அலங்கத்தின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாகப் பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்மேல் கடுங்கோபம்மூண்டதினால், அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டு, தங்கள் தேசத்திற்குத் திரும்பிவிட்டார்கள்.

2 இராஜாக்கள் 4

1 தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்துபோனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன்கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் என்றாள். 2 எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்னசெய்யவேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள். 3 அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அயல்வீட்டுக்காரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும்பாத்திரங்களைக் கேட்டுவாங்கி, 4 உள்ளே போய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான். 5 அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் கதவைப் பூட்டிக்கொண்டு, இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள். 6 அந்தப் பாத்திரங்கள் நிறைந்தபின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்றுபோயிற்று. 7 அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம்பண்ணுங்கள் என்றான். 8 பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனைப் போஜனம்பண்ண வருந்திக்கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான். 9 அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன். 10 நாம் மெத்தையின்மேல் ஒரு சிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள். 11 ஒருநாள் அவன் அங்கே வந்து, அந்த அறைவீட்டிலே தங்கி, அங்கே படுத்துக்கொண்டிருந்தான். 12 அவன் தன் வேலைக்காரனாகிய கேயாசை நோக்கி: இந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டுவந்தான்; அவள் அவனுக்குமுன்பாக நின்றாள். 13 அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள். 14 அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குப் பிள்ளை இல்லை, அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன் என்றான். 15 அப்பொழுது அவன்: அவளைக் கூப்பிடு என்றான்; அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து வாசற்படியிலே நின்றாள். 16 அப்பொழுது அவன்: ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: ஏது? தேவனுடைய மனுஷனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்றாள். 17 அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து, எலிசா தன்னோடே சொன்னபடி, ஒரு உற்பத்திகாலத்திட்டத்தில் ஒரு குமாரனைப் பெற்றாள். 18 அந்தப் பிள்ளை வளர்ந்தான், ஒருநாள் அவன் அறுப்பறுக்கிறவர்களிடத்திலிருந்த தன் தகப்பனண்டைக்குப் போயிருக்கும்போது, 19 தன் தகப்பனைப் பார்த்து: என் தலை நோகிறது, என் தலை நோகிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய்விடு என்றான். 20 அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானமட்டும் அவள் மடியில் இருந்து செத்துப்போனான். 21 அப்பொழுது அவள் ஏறிப்போய், அவனை தேவனுடைய மனுஷன் கட்டிலின்மேல் வைத்து, அவன் வைக்கப்பட்ட அறையின் கதவைப் பூட்டிக்கொண்டுபோய், 22 தன் புருஷனிடத்தில் ஆள் அனுப்பி: நான் சீக்கிரமாய் தேவனுடைய மனுஷன் இருக்கும் இடமட்டும் போய்வரும்படிக்கு, வேலைக்காரரில் ஒருவனையும் ஒரு கழுதையையும் எனக்கு அனுப்பவேண்டும் என்று சொல்லச்சொன்னாள். 23 அப்பொழுது அவன்: இது அமாவாசியும் அல்ல ஓய்வுநாளும் அல்லவே; நீ இன்றைக்கு அவரிடத்துக்குப் போகவேண்டியது என்ன என்று கேட்கச்சொன்னான். அதற்கு அவள்: எல்லாம் சரிதான், நான் போகவேண்டியிருக்கிறது என்று சொல்லியனுப்பி, 24 கழுதையின்மேல் சேணம்வைத்து ஏறி, தன் வேலைக்காரனை நோக்கி: இதை ஓட்டிக்கொண்டுபோ; நான் உனக்குச் சொன்னால் ஒழிய போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே என்று சொல்லிப் புறப்பட்டு, 25 கர்மேல் பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்திற்குப் போனாள்; தேவனுடைய மனுஷன் தூரத்திலே அவளை வரக்கண்டு, தன் வேலைக்காரனாகிய கேயாசியைப் பார்த்து: அதோ சூனேமியாள் வருகிறாள். 26 நீ அவளுக்கு எதிர்கொண்டு ஓடி, நீ சுகமாயிருக்கிறாயா? உன் புருஷன் சுகமாயிருக்கிறானா? அந்தப் பிள்ளை சுகமாயிருக்கிறதா என்று அவளிடத்தில் கேள் என்றான். அவள்: சுகந்தான் என்று சொல்லி, 27 பர்வதத்திலிருக்கிற தேவனுடைய மனுஷனிடத்தில் வந்து, அவன் காலைப் பிடித்துக்கொண்டாள்; அப்பொழுது கேயாசி அவளை விலக்கிவிட வந்தான்; தேவனுடைய மனுஷன்: அவளைத் தடுக்காதே; அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது; கர்த்தர் அதை எனக்கு அறிவியாமல் மறைத்துவைத்தார் என்றான். 28 அப்பொழுது அவள், நான் என் ஆண்டவனிடத்தில் ஒரு குமாரனை வேண்டும் என்று கேட்டதுண்டா? எனக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்று நான் சொல்லவில்லையா என்றாள். 29 அப்பொழுது அவன் கேயாசியைப் பார்த்து: நீ உன் இடையைக் கட்டிக்கொண்டு, என் தடியை உன் கையில் பிடித்துக்கொண்டு, வழியில் ஒருவனைச் சந்தித்தாலும் அவனை வினவாமலும், உன்னை ஒருவன் வினவினாலும் அவனுக்கு மறுமொழி சொல்லாமலும் போய், என் தடியை அந்தப் பிள்ளையின் முகத்தின்மேல் வை என்றான். 30 பிள்ளையின் தாயோ: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றாள்; அப்பொழுது அவன் எழுந்திருந்து அவள் பின்னே போனான். 31 கேயாசி அவர்களுக்கு முன்னே போய், அந்தத் தடியைப் பிள்ளையின் முகத்தின்மேல் வைத்தான்; ஆனாலும் சத்தமும் இல்லை, உணர்ச்சியும் இல்லை; ஆகையால் அவன் திரும்பி அவனுக்கு எதிர்கொண்டுவந்து: பிள்ளை விழிக்கவில்லை என்று அவனுக்கு அறிவித்தான். 32 எலிசா வீட்டிற்குள் வந்தபோது, இதோ, அந்தப் பிள்ளை அவன் கட்டிலின்மேல் செத்துக்கிடந்தான். 33 உள்ளே போய்த் தங்கள் இருவருக்கும் பின்னாக அவன் கதவைப் பூட்டி, கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்து, 34 கிட்டேபோய், தன் வாய் பிள்ளையின் வாயின்மேலும், தன் கண்கள் அவன் கண்களின்மேலும், தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின்மேலும் படும்படியாக அவன்மேல் குப்புறப் படுத்துக்கொண்டான்; அப்பொழுது பிள்ளையின் உடல் அனல்கொண்டது. 35 அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பக் கிட்டப் போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தப் பிள்ளை ஏழுதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான். 36 அப்பொழுது அவன்: கேயாசியைக் கூப்பிட்டு, அந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டுவந்தான்; அவள் அவனிடத்தில் வந்தபோது; அவன், உன் குமாரனை எடுத்துக்கொண்டுபோ என்றான். 37 அப்பொழுது அவள் உள்ளே போய், அவன் பாதத்திலே விழுந்து, தரைமட்டும் பணிந்து, தன் குமாரனை எடுத்துக்கொண்டு வெளியே போனாள். 38 எலிசா கில்காலுக்குத் திரும்பிப்போய் இருக்கையில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தீர்க்கதரிசிகளின் புத்திரர், அவனுக்கு முன்பாக உட்கார்ந்திருந்தார்கள்; அவன் தன் வேலைக்காரனை நோக்கி: நீ பெரிய பானையை அடுப்பிலே வைத்துத் தீர்க்கதரிசிகளின் புத்திரருக்குக் கூழ்காய்ச்சு என்றான். 39 ஒருவன் கீரைகளைப் பறிக்க வெளியிலே போய், ஒரு பேய்க்கொம்மட்டிக் கொடியைக் கண்டு, அதன் காய்களை மடி நிறைய அறுத்துவந்து, அவைகளை அரிந்து கூழ்ப்பானையிலே போட்டான்; அது இன்னதென்று அவர்களுக்குத் தெரியாதிருந்தது. 40 சாப்பிட அதை ஜனங்களுக்கு வார்த்தார்கள்; அவர்கள் அந்தக் கூழில் எடுத்துச் சாப்பிடுகிறபோது, அதைச் சாப்பிடக்கூடாமல்: தேவனுடைய மனுஷனே, பானையில் சாவு இருக்கிறது என்று சத்தமிட்டார்கள். 41 அப்பொழுது அவன், மாவைக் கொண்டுவரச்சொல்லி, அதைப் பானையிலே போட்டு, ஜனங்கள் சாப்பிடும்படி அவர்களுக்கு வார் என்றான்; அப்புறம் பானையிலே தோஷம் இல்லாமற்போயிற்று. 42 பின்பு பாகால் சலீஷாவிலிருந்து ஒரு மனுஷன் தேவனுடைய மனுஷனுக்கு முதற்பலனான வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் தாள் கதிர்களையும் கொண்டுவந்தான்; அப்பொழுது அவன்: ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு என்றான். 43 அதற்கு அவனுடைய பணிவிடைக்காரன்: இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்றான். அதற்கு அவன்: அதை ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு; சாப்பிட்டபிற்பாடு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 44 அப்பொழுது அவர்களுக்கு முன்பாக அதை வைத்தான்; கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது.

2 இராஜாக்கள் 5

1 சீரிய ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்பவன் தன் ஆண்டவனிடத்தில் பெரிய மனுஷனும் எண்ணிக்கையுள்ளவனுமாயிருந்தான்; அவனைக் கொண்டு கர்த்தர் சீரியாவுக்கு இரட்சிப்பைக் கட்டளையிட்டார்; மகா பராக்கிரமசாலியாகிய அவனோ குஷ்டரோகியாயிருந்தான். 2 சீரியாவிலிருந்து தண்டுகள் புறப்பட்டு, இஸ்ரவேல் தேசத்திலிருந்து ஒரு சிறு பெண்ணைச் சிறைபிடித்துக்கொண்டு வந்திருந்தார்கள்; அவள் நாகமானின் மனைவிக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தாள். 3 அவள் தன் நாச்சியாரைப் பார்த்து: என் ஆண்டவன் சமாரியாவிலிருக்கிற தீர்க்கதரிசியினிடத்தில் போவாரானால் நலமாயிருக்கும்; அவர் இவருடைய குஷ்டரோகத்தை நீக்கிவிடுவார் என்றாள். 4 அப்பொழுது அவன் போய், இஸ்ரவேல் தேசத்துப் பெண் இன்ன இன்ன பிரகாரமாய்ச் சொல்லுகிறாள் என்று தன் ஆண்டவனிடத்தில் அறிவித்தான். 5 அப்பொழுது சீரியாவின் ராஜா: நல்லது போகலாம், இஸ்ரவேலின் ராஜாவுக்கு நிருபம் தருகிறேன் என்றான்; அப்படியே அவன் தன் கையிலே பத்துத் தாலந்து வெள்ளியையும், ஆறாயிரம் சேக்கல் நிறைபொன்னையும், பத்து மாற்றுவஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டுபோய், 6 இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் அந்த நிருபத்தைக் கொடுத்தான். அதிலே: இந்த நிருபத்தை உம்மிடத்தில் என் ஊழியக்காரனாகிய நாகமான் கொண்டுவருவான்; நீர் அவன் குஷ்டரோகத்தை நீக்கி விட அவனை உம்மிடத்தில் அனுப்பியிருக்கிறேன் என்று எழுதியிருந்தது. 7 இஸ்ரவேலின் ராஜா அந்த நிருபத்தை வாசித்தபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: ஒரு மனுஷனை அவன் குஷ்டரோகத்தினின்று நீக்கி விடவேண்டும் என்று, அவன் என்னிடத்தில் நிருபம் அனுப்புகிறதற்கு, கொல்லவும் உயிர்ப்பிக்கவும் நான் தேவனா? இவன் என்னை விரோதிக்கச் சமயம் தேடுகிறான் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள் என்றான். 8 இஸ்ரவேலின் ராஜா தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்ட செய்தியைத் தேவனுடைய மனுஷனாகிய எலிசா கேட்டபோது, அவன்: நீர் உம்முடைய வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்வானேன்? அவன் என்னிடத்தில் வந்து, இஸ்ரவேலிலே தீர்க்கதரிசி உண்டென்பதை அறிந்துகொள்ளட்டும் என்று ராஜாவுக்குச் சொல்லியனுப்பினான். 9 அப்படியே நாகமான் தன் குதிரைகளோடும் தன் இரதத்தோடும் வந்து எலிசாவின் வாசற்படியிலே நின்றான். 10 அப்பொழுது எலிசா: அவனிடத்தில் ஆள் அனுப்பி, நீ போய், யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு; அப்பொழுது உன் மாம்சம் மாறி, நீ சுத்தமாவாய் என்று சொல்லச்சொன்னான். 11 அதற்கு நாகமான் கடுங்கோபங்கொண்டு, புறப்பட்டுப்போய்: அவன் வெளியே வந்து நின்று, தன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் தொழுது, தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய்க் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று எனக்குள் நினைத்திருந்தேன். 12 நான் ஸ்நானம்பண்ணிச் சுத்தமாகிறதற்கு இஸ்ரவேலின் தண்ணீர்கள் எல்லாவற்றைப்பார்க்கிலும் தமஸ்குவின் நதிகளாகிய ஆப்னாவும் பர்பாரும் நல்லதல்லவோ என்று சொல்லி, உக்கிரத்தோடே திரும்பிப்போனான். 13 அவன் ஊழியக்காரர் சமீபத்தில் வந்து, அவனை நோக்கி: தகப்பனே, அந்தத் தீர்க்கதரிசி ஒரு பெரிய காரியத்தைச் செய்ய உமக்குச் சொல்லியிருந்தால் அதை நீர் செய்வீர் அல்லவா? ஸ்நானம்பண்ணும், அப்பொழுது சுத்தமாவீர் என்று அவர் உம்மோடே சொல்லும்போது, அதைச் செய்யவேண்டியது எத்தனை அதிகம் என்று சொன்னார்கள். 14 அப்பொழுது அவன் இறங்கி, தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே யோர்தானில் ஏழுதரம் முழுகினபோது, அவன் மாம்சம் ஒரு சிறுபிள்ளையின் மாம்சத்தைப்போல மாறி, அவன் சுத்தமானான். 15 அப்பொழுது அவன் தன் கூட்டத்தோடெல்லாம் தேவனுடைய மனுஷனிடத்துக்குத் திரும்பிவந்து, அவனுக்கு முன்பாக நின்று: இதோ, இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத்தவிரப் பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன்; இப்போதும் உமது அடியேன் கையில் ஒரு காணிக்கை வாங்கிக்கொள்ளவேண்டும் என்றான். 16 அதற்கு அவன்: நான் வாங்குகிறதில்லை என்று கர்த்தருக்கு முன்பாக அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; வாங்கவேண்டும் என்று அவனை வருந்தினாலும் தட்டுதல் பண்ணிவிட்டான். 17 அப்பொழுது நாகமான்: ஆனாலும் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கத்தக்க இரண்டு பொதி மண் உமது அடியேனுக்குக் கட்டளையிடவேண்டும்; உமது அடியேன் இனிக் கர்த்தருக்கே அல்லாமல், அந்நிய தேவர்களுக்குச் சர்வாங்க தகனத்தையும் பலியையும் செலுத்துவதில்லை. 18 ஒரு காரியத்தையே கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக; என் ஆண்டவன் பணிந்துகொள்ள ரிம்மோன் கோவிலுக்குள் பிரவேசிக்கும்போது, நான் அவருக்குக் கைலாகு கொடுத்து ரிம்மோன் கோவிலிலே பணியவேண்டியதாகும்; இப்படி ரிம்மோன் கோவிலில் நான் பணியவேண்டிய இந்தக் காரியத்தைக் கர்த்தர் உமது அடியேனுக்கு மன்னிப்பாராக என்றான். 19 அதற்கு அவன்: சமாதானத்தோடே போ என்றான்; இவன் புறப்பட்டுக் கொஞ்சதூரம் போனபோது, 20 தேவனுடைய மனுஷனாகிய எலிசாவின் வேலைக்காரன் கேயாசி என்பவன், அந்தச் சீரியனாகிய நாகமான் கொண்டுவந்ததை என் ஆண்டவன் அவன் கையிலே வாங்காமல் அவனை விட்டுவிட்டார்; நான் அவன் பிறகே ஓடி, அவன் கையிலே ஏதாகிலும் வாங்குவேன் என்று கர்த்தருடைய ஜீவன்மேல் ஆணையிட்டு, 21 நாகமானைப் பின்தொடர்ந்தான்; அவன் தன் பிறகே ஓடிவருகிறதை நாகமான் கண்டபோது, அவனுக்கு எதிர்கொண்டுபோக இரதத்திலிருந்து குதித்து: சுகசெய்தியா என்று கேட்டான். 22 அதற்கு அவன்: சுகசெய்திதான்; தீர்க்கதரிசிகளின் புத்திரரில் இரண்டு வாலிபர் இப்பொழுதுதான் எப்பிராயீம் மலைத்தேசத்திலிருந்து என்னிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்கு ஒரு தாலந்து வெள்ளியையும், இரண்டு மாற்றுவஸ்திரங்களையும் தரவேண்டும் என்று கேட்க, என் எஜமான் என்னை அனுப்பினார் என்றான். 23 அதற்கு நாகமான்: தயவுசெய்து, இரண்டு தாலந்தை வாங்கிக்கொள் என்று சொல்லி, அவனை வருந்தி, இரண்டு தாலந்து வெள்ளியை இரண்டு பைகளில் இரண்டு மாற்று வஸ்திரங்களோடே கட்டி, அவனுக்கு முன்பாகச் சுமந்துபோக, தன் வேலைக்காரரான இரண்டு பேர்மேல் வைத்தான். 24 அவன் மேட்டண்டைக்கு வந்தபோது, அவன் அதை அவர்கள் கையிலிருந்து வாங்கி, வீட்டிலே வைத்து, அந்த மனுஷரை அனுப்பிவிட்டான்; அவர்கள் போய்விட்டார்கள். 25 பின்பு அவன் உள்ளே போய்த் தன் எஜமானுக்கு முன்பாக நின்றான்; கேயாசியே, எங்கேயிருந்து வந்தாய் என்று எலிசா அவனைக் கேட்டதற்கு, அவன்: உமது அடியான் எங்கும் போகவில்லை என்றான். 26 அப்பொழுது அவன் இவனைப் பார்த்து: அந்த மனுஷன் உனக்கு எதிர்கொண்டுவரத் தன் இரதத்திலிருந்து இறங்கித் திரும்புகிறபோது என் மனம் உன்னுடன்கூடச் செல்லவில்லையா? பணத்தை வாங்குகிறதற்கும், வஸ்திரங்களையும் ஒலிவத்தோப்புகளையும் திராட்சத்தோட்டங்களையும் ஆடுமாடுகளையும் வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் வாங்குகிறதற்கும் இது காலமா? 27 ஆகையால் நாகமானின் குஷ்டரோகம் உன்னையும் உன் சந்ததியாரையும் என்றைக்கும் பிடித்திருக்கும் என்றான்; உடனே அவன் உறைந்த மழை நிறமான குஷ்டரோகியாகி, அவன் சமுகத்தை விட்டுப் புறப்பட்டுப்போனான்.

2 இராஜாக்கள் 6

1 தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவை நோக்கி: இதோ, நாங்கள் உம்முடன் குடியிருக்கிற இந்த இடம் எங்களுக்கு நெருக்கமாய் இருக்கிறது. 2 நாங்கள் யோர்தான்மட்டும் போய் அவ்விடத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உத்திரத்தை வெட்டி, குடியிருக்க அங்கே எங்களுக்கு ஒரு இடத்தை உண்டாக்குவோம் என்றார்கள். அதற்கு அவன்: போங்கள் என்றான். 3 அவர்களில் ஒருவன்: நீர் தயவு செய்து உமது அடியாரோடேகூட வரவேண்டும் என்றான். அதற்கு அவன்: நான் வருகிறேன் என்று சொல்லி, 4 அவர்களோடேகூடப் போனான்; அவர்கள் யோர்தான் நதியருகே வந்தபோது மரங்களை வெட்டினார்கள். 5 ஒருவன் ஒரு உத்திரத்தை வெட்டி விழுத்துகையில் கோடரி தண்ணீரில் விழுந்தது; அவன்: ஐயோ என் ஆண்டவனே, அது இரவலாக வாங்கப்பட்டதே என்று கூவினான். 6 தேவனுடைய மனுஷன் அது எங்கே விழுந்தது என்று கேட்டான்; அவன் அந்த இடத்தைக் காண்பித்தபோது, ஒரு கொம்பை வெட்டி, அதை அங்கே எறிந்து, அந்த இரும்பை மிதக்கப்பண்ணி, 7 அதை எடுத்துக்கொள் என்றான்; அப்படியே அவன் தன் கையை நீட்டி அதை எடுத்துக்கொண்டான். 8 அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனைபண்ணினான். 9 ஆகிலும் தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச்சொன்னான். 10 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான். 11 இந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான். 12 அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான். 13 அப்பொழுது அவன்: நான் மனுஷரை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது. 14 அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள். 15 தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான். 16 அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான். 17 அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான். 18 அவர்கள் அவனிடத்தில் வருகையில், எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: இந்த ஜனங்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்தார். 19 அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பிறகே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக்கொண்டுபோனான். 20 அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது, இதோ, அவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள். 21 இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான். 22 அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறையாக்கிக் கொண்டவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் புசித்துக் குடித்து, தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போகும்படிக்கு, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கெதிரில் வையும் என்றான். 23 அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துபண்ணி, அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போய்விட்டார்கள்; சீரியரின் தண்டுகள் இஸ்ரவேல் தேசத்திலே அப்புறம் வரவில்லை. 24 இதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் தன் இராணுவத்தையெல்லாம் கூட்டிக்கொண்டுவந்து சமாரியாவை முற்றிக்கைபோட்டான். 25 அதினால் சமாரியாவிலே கொடிய பஞ்சமுண்டாயிற்று; ஒரு கழுதைத் தலை எண்பது வெள்ளிக்காசுக்கும், புறாக்களுக்குப் போடுகிற காற்படி பயறு ஐந்து வெள்ளிக்காசுக்கும் விற்கப்படுமட்டும் அதை முற்றிக்கைபோட்டார்கள். 26 இஸ்ரவேலின் ராஜா அலங்கத்தின்மேல் நடந்துபோகையில், ஒரு ஸ்திரீ அவனைப்பார்த்துக் கூப்பிட்டு, ராஜாவாகிய என் ஆண்டவனே, இரட்சியும் என்றாள். 27 அதற்கு அவன்: கர்த்தர் உன்னை இரட்சிக்காதிருந்தால் நான் எதிலிருந்து எடுத்து உன்னை இரட்சிக்கலாம்? களஞ்சியத்திலிருந்தா, ஆலையிலிருந்தா என்று சொல்லி, 28 ராஜா பின்னையும் அவளைப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள்: இந்த ஸ்திரீ என்னை நோக்கி: உன் மகனைத் தா, அவனை இன்று தின்போம்; நாளைக்கு என் மகனைத் தின்போம் என்றாள். 29 அப்படியே என் மகனை ஆக்கித் தின்றோம்; மறுநாளில் நான் இவளை நோக்கி: நாம் உன் மகனைத் தின்ன அவனைத் தா என்றேன்; அவள் தன் மகனை ஒளித்துவிட்டாள் என்றாள். 30 அந்த ஸ்திரீயின் வார்த்தைகளை ராஜா கேட்டவுடனே, அலங்கத்தின்மேல் நடந்துபோகிற அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டான்; அவன் உள்ளே தன் சரீரத்தின்மேல் இரட்டு உடுத்தியிருக்கிறதை ஜனங்கள் கண்டார்கள். 31 அவன்: சாப்பாத்தின் குமாரனாகிய எலிசாவின் தலை இன்றைக்கு அவன்மேல் இருந்தால், தேவன் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்று சொன்னான். 32 எலிசா தன் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; மூப்பரும் அவனோடு உட்கார்ந்திருந்தார்கள். அப்பொழுது ராஜா: ஒரு மனுஷனைத் தனக்கு முன்னே அனுப்பினான்; இந்த ஆள் எலிசாவினிடத்துக்கு வருமுன்னே, அவன் அந்த மூப்பரை நோக்கி: என் தலையை வாங்க, அந்தக் கொலைபாதகனுடைய மகன் ஆள் அனுப்பினான்; பார்த்தீர்களா? அந்த ஆள் வரும்போது, நீங்கள் அவனை உள்ளே வரவொட்டாமல் கதவைப் பூட்டிப்போடுங்கள்; அவனுக்குப் பின்னாக அவன் ஆண்டவனுடைய காலின் சத்தம் கேட்கிறது அல்லவா என்றான். 33 அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கையில், அந்த ஆள் அவனிடத்தில் வந்து: இதோ, இந்தப் பொல்லாப்புக் கர்த்தரால் உண்டானது; நான் இனிக் கர்த்தருக்காகக் காத்திருக்க வேண்டியது என்ன என்று ராஜா சொல்லுகிறார் என்றான்.

2 இராஜாக்கள் 7

1 அப்பொழுது எலிசா: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நாளை இந்நேரத்தில் சமாரியாவின் வாசலிலே ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 2 அப்பொழுது ராஜாவுக்குக் கைலாகு கொடுக்கிற பிரதானி ஒருவன் தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும் இப்படி நடக்குமா என்றான். அதற்கு அவன்: உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய்; ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றான். 3 குஷ்டரோகிகளான நாலுபேர் ஒலிமுகவாசலில் இருந்தார்கள்; அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் இங்கே இருந்து சாகவேண்டியது என்ன? 4 பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதினால் அங்கே சாவோம்; நாம் இங்கே இருந்தாலும் சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி, 5 சீரியருடைய இராணுவத்திற்குப்போக இருட்டோடே எழுந்திருந்து, சீரியருடைய பாளயத்தின் முன்னணியில் வந்தார்கள்; அங்கே ஒருவருமில்லை. 6 ஆண்டவர் சீரியரின் இராணுவத்திற்கு இரதங்களின் இரைச்சலையும், குதிரைகளின் இரைச்சலையும், மகா இராணுவத்தின் இரைச்சலையும் கேட்கப்பண்ணினதினால், அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, நம்மிடத்தில் போருக்கு வர, இஸ்ரவேலின் ராஜா ஏத்தியரின் ராஜாக்களையும் எகிப்தியரின் ராஜாக்களையும் நமக்கு விரோதமாகக் கூலி பொருத்தினான் என்று சொல்லி, 7 இருட்டோடே எழுந்திருந்து ஓடிப்போய், தங்கள் கூடாரங்களையும் தங்கள் குதிரைகளையும் தங்கள் கழுதைகளையும் தங்கள் பாளயத்தையும் அவைகள் இருந்த பிரகாரமாக விட்டு, தங்கள் பிராணன்மாத்திரம் தப்பும்படி ஓடிப்போனார்கள். 8 அந்தக் குஷ்டரோகிகள் பாளயத்தின் முன்னணிமட்டும் வந்தபோது, ஒரு கூடாரத்திற்குள் பிரவேசித்துப் புசித்துக் குடித்து, அதிலிருந்து வெள்ளியையும் பொன்னையும் வஸ்திரங்களையும் எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்து, திரும்பிவந்து, வேறொரு கூடாரத்திற்குள் பிரவேசித்து, அதிலிருந்தும் அப்படியே எடுத்துக்கொண்டுபோய் ஒளித்துவைத்து, 9 பின்பு அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி: நாம் செய்கிறது நியாயமல்ல, இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்; இப்போதும் நாம் போய் ராஜாவின் அரமனையாருக்கு இதை அறிவிப்போம் வாருங்கள் என்றார்கள். 10 அப்படியே அவர்கள் வந்து, பட்டணத்து வாசல் காவலாளனை நோக்கிக் கூப்பிட்டு: நாங்கள் சீரியரின் பாளயத்திற்குப் போய்வந்தோம்; அங்கே ஒருவரும் இல்லை, ஒரு மனுஷனுடைய சத்தமும் இல்லை, கட்டியிருக்கிற குதிரைகளும் கட்டியிருக்கிற கழுதைகளும், கூடாரங்களும் இருந்தபிரகாரம் இருக்கிறது என்று அவர்களுக்குச் சொன்னார்கள். 11 அப்பொழுது அவன் வாசல்காக்கிற மற்றவர்களைக் கூப்பிட்டான்; அவர்கள் உள்ளே போய் ராஜாவின் அரமனையாருக்கு அதை அறிவித்தார்கள். 12 அப்பொழுது இராஜா இராத்திரியில் எழுந்து, தன் ஊழியக்காரரை நோக்கி: சீரியர் நமக்குச் செய்கிற காரியத்தை உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நாம் பட்டினியாயிருக்கிறோம் என்று அவர்கள் அறிவார்கள்; ஆகையால் நாம் பட்டணத்திலிருந்து புறப்பட்டுப்போனால் நம்மை உயிரோடே பிடித்துக்கொண்டு பட்டணத்திற்குள் பிரவேசிக்கலாம் என்று எண்ணி, அவர்கள் பாளயத்தை விட்டுப் புறப்பட்டு வெளியில் ஒளித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றான். 13 அவன் ஊழியக்காரரில் ஒருவன் பிரதியுத்தரமாக: இங்கே மீதியான குதிரைகளில் ஐந்து குதிரைகளைக் கொண்டுபோக உத்தரவு கொடும்; இதோ, இங்கே மீதியான இஸ்ரவேலின் சகல ஏராளத்திலும், மாண்டுபோன இஸ்ரவேலின் சகல கூட்டத்திலும், அவைகள் மாத்திரம் மீந்திருக்கிறது; அவைகளை நாம் அனுப்பிப்பார்ப்போம் என்றான். 14 அப்படியே இரண்டு இரதக் குதிரைகளைக் கொண்டுவந்தார்கள்; ராஜா போய் வாருங்கள் என்று சொல்லி, சீரியரின் இராணுவத்தைத் தொடர்ந்துபோகும்படி அனுப்பினான். 15 அவர்கள் யோர்தான்மட்டும் அவர்களைப் பின்தொடர்ந்துபோனார்கள்; சீரியர் தீவிரித்து ஓடுகையில், அவர்கள் எறிந்துபோட்ட வஸ்திரங்களாலும் தட்டுமுட்டுகளாலும் வழியெல்லாம் நிறைந்திருந்தது; அனுப்பப்பட்டவர்கள் திரும்பிவந்து ராஜாவுக்கு அதை அறிவித்தார்கள். 16 அப்பொழுது ஜனங்கள் புறப்பட்டு, சீரியரின் பாளயத்தைக் கொள்ளையிட்டார்கள்; கர்த்தருடைய வார்த்தையின்படியே, ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும் விற்கப்பட்டது. 17 ராஜா தனக்குக் கைலாகுகொடுக்கிற அந்தப் பிரதானியை ஒலிமுகவாசலில் விசாரிப்பாயிருக்கக் கட்டளையிட்டிருந்தான்; ஒலிமுகவாசலிலே ஜனங்கள் அவனை நெருங்கி மிதித்ததினாலே, ராஜா தேவனுடைய மனுஷனிடத்தில் வந்தபோது சொல்லியிருந்தபடியே, அவன் செத்துப்போனான். 18 இரண்டு மரக்கால் வாற்கோதுமை ஒரு சேக்கலுக்கும், ஒரு மரக்கால் கோதுமை மா ஒரு சேக்கலுக்கும், நாளை இந்நேரத்திலே சமாரியாவின் ஒலிமுகவாசலில் விற்கும் என்று தேவனுடைய மனுஷன் ராஜாவோடே சொன்னதின்படியே நடந்தது. 19 அதற்கு அந்தப் பிரதானி தேவனுடைய மனுஷனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, கர்த்தர் வானத்திலே மதகுகளை உண்டாக்கினாலும், இந்த வார்த்தையின்படி நடக்குமா என்று சொல்ல; இவன், இதோ, உன்னுடைய கண்களினாலே அதைக் காண்பாய், ஆனாலும் அதிலே சாப்பிடமாட்டாய் என்றானே. 20 அந்தப் பிரகாரமாகத்தானே அவனுக்கு நடந்தது; ஒலிமுகவாசலிலே ஜனங்கள் அவனை நெருங்கி மிதித்ததினாலே அவன் செத்துப்போனான்.

2 இராஜாக்கள் 8

1 எலிசா தான் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய ஸ்திரீயை நோக்கி: நீ உன் வீட்டாரோடுங்கூட எழுந்து புறப்பட்டுப்போய் எங்கேயாகிலும் சஞ்சரி; கர்த்தர் பஞ்சத்தை வருவிப்பார்; அது ஏழுவருஷம் தேசத்தில் இருக்கும் என்று சொல்லியிருந்தான். 2 அந்த ஸ்திரீ எழுந்து, தேவனுடைய மனுஷன் சொன்ன வார்த்தையின்படி செய்து, தன் வீட்டாரோடுங்கூடப் புறப்பட்டு, பெலிஸ்தரின் தேசத்தில் போய், ஏழுவருஷம் சஞ்சரித்தாள். 3 ஏழுவருஷம் சென்றபின்பு, அவள் பெலிஸ்தரின் தேசத்தை விட்டுத் திரும்ப வந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிடும்படி போனாள். 4 அந்நேரத்தில் ராஜா, தேவனுடைய மனுஷனின் வேலைக்காரனாயிருந்த கேயாசியுடனே பேசி: எலிசா செய்த அதிசயங்களையெல்லாம் நீ எனக்கு விவரமாய்ச் சொல் என்றான். 5 செத்துப்போனவனை உயிர்ப்பித்தார் என்பதை அவன் ராஜாவுக்கு அறிவிக்கிறபோது, இதோ, அவன் உயிர்ப்பித்த பிள்ளையின் தாயாகிய அந்த ஸ்திரீ வந்து, தன் வீட்டுக்காகவும் தன் வயலுக்காகவும் ராஜாவினிடத்தில் முறையிட்டாள்; அப்பொழுது கேயாசி: ராஜாவாகிய என் ஆண்டவனே, இவள்தான் அந்த ஸ்திரீ; எலிசா உயிர்ப்பித்த இவளுடைய குமாரன் இவன்தான் என்றான். 6 ராஜா அந்த ஸ்திரீயைக் கேட்டதற்கு, அவள்: அதை அவனுக்கு விவரித்துச் சொன்னாள்; அப்பொழுது ராஜா அவளுக்கு ஒரு பிரதானியை நியமித்து, அவளுக்கு உண்டானது எல்லாவற்றையும், அவள் தேசத்தை விட்டுப்போன நாள்முதல் இதுவரைக்கும் உண்டான அந்த வயலின் வருமானம் அனைத்தையும் அவளுக்குக் கிடைக்கும்படி செய் என்றான். 7 சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதியாயிருந்தான்; எலிசா தமஸ்குவுக்கு வந்தான்; தேவனுடைய மனுஷன் இவ்விடத்தில் வந்திருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது, 8 ராஜா ஆசகேலை நோக்கி: நீ உன் கையிலே ஒரு காணிக்கையை எடுத்துக்கொண்டு, தேவனுடைய மனுஷனுக்கு எதிர்கொண்டுபோய், நான் இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று அவனைக்கொண்டு கர்த்தரிடத்தில் விசாரிக்கச் சொன்னான். 9 ஆசகேல் தமஸ்குவின் சகல உச்சிதங்களிலும் நாற்பது ஒட்டகங்களின் சுமையான காணிக்கையை எடுத்துக்கொண்டு, அவனுக்கு எதிர்கொண்டு போய், அவனுக்கு முன்பாக நின்று, சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் என்னும் உம்முடைய குமாரன் என்னை உம்மிடத்தில் அனுப்பி, இந்த வியாதி நீங்கிப் பிழைப்பேனா என்று கேட்கச்சொன்னார் என்றான். 10 எலிசா அவனை நோக்கி: நீ போய், வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று அவனுக்குச் சொல்லும்; ஆனாலும் அவன் சாகவே சாவான் என்பதைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார் என்றான். 11 பின்பு தேவனுடைய மனுஷன்: தன் முகத்தைத் திருப்பாமல் அவன் சலித்துப்போகுமட்டும் அவனை நோக்கிக்கொண்டே அழுதான். 12 அப்பொழுது ஆசகேல்: என் ஆண்டவன் அழுகிறது என்ன என்று கேட்டான். அதற்கு அவன்: நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் செய்யும் தீங்கை நான் அறிந்திருக்கிறபடியினால் அழுகிறேன்; நீ அவர்கள் கோட்டைகளை அக்கினிக்கு இரையாக்கி, அவர்கள் வாலிபரைப் பட்டயத்தால் கொன்று, அவர்கள் குழந்தைகளைத் தரையோடே மோதி, அவர்கள் கர்ப்பவதிகளைக் கீறிப்போடுவாய் என்றான். 13 அப்பொழுது ஆசகேல்: இத்தனை பெரிய காரியத்தைச் செய்ய நாயாகிய உமது அடியான் எம்மாத்திரம் என்றான். அதற்கு எலிசா: நீ சீரியாவின்மேல் ராஜாவாவாய் என்பதைக் கர்த்தர் எனக்குத் தெரிவித்தார் என்றான். 14 இவன் எலிசாவைவிட்டுப் புறப்பட்டு, தன் ஆண்டவனிடத்தில் வந்தபோது, அவன்: எலிசா உனக்கு என்ன சொன்னான் என்று கேட்டதற்கு; இவன் நீர் வியாதி நீங்கிப் பிழைப்பீர் என்று எனக்குச் சொன்னான் என்று சொல்லி, 15 மறுநாளிலே ஒரு சமுக்காளத்தை எடுத்து, தண்ணீரிலே தோய்த்து அவன் முகத்தின்மேல் விரித்தான்; அதினால் அவன் செத்துப்போனான்; ஆசகேல் அவனுக்குப் பதிலாய் ராஜாவானான். 16 இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் குமாரன் யோராமுடைய ஐந்தாம் வருஷத்தில், யோசபாத் யூதாவிலே இன்னும் ராஜாவாயிருக்கையில், யோசபாத்தின் குமாரனாகிய யோராம் என்னும் யூதாவின் ராஜா ராஜ்யபாரம்பண்ணத் துவக்கினான். 17 அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான். 18 அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 19 கர்த்தர்: உன் குமாரருக்குள்ளே எந்நாளும் ஒரு விளக்கை உனக்குக் கட்டளையிடுவேன் என்று தம்முடைய தாசனாகிய தாவீதுக்குச் சொன்னதின்படியே, அவனிமித்தம் அவர் யூதாவை முற்றிலும் கெடுக்கவில்லை. 20 அவன் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம்பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள். 21 அதினாலே யோராம் சகல இரதங்களோடுங்கூடச் சாயீருக்குப் புறப்பட்டுப்போனான்; அவன் இராத்திரியில் எழுந்திருந்து, தன்னை வளைந்துகொண்ட ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும் முறிய அடித்தபோது, ஜனங்கள் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். 22 அப்படியே யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர், இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம்பண்ணினார்கள்; அக்காலத்தில்தானே லிப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள். 23 யோராமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 24 யோராம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுக்குப் பதிலாக அவன் குமாரனாகிய அகசியா ராஜாவானான். 25 இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் குமாரன் யோராமுடைய பன்னிரண்டாம் வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா ராஜாவானான். 26 அகசியா ராஜாவாகிறபோது, இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரே வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; இஸ்ரவேலின் ராஜாவாகிய ஒம்ரியின் குமாரத்தியான அவன் தாயின் பேர் அத்தாலியாள். 27 அவன் ஆகாபுடைய வீட்டாரின் வழியே நடந்து, ஆகாபின் வீட்டாரைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் ஆகாப் வீட்டாரோடே சம்பந்தங்கலந்திருந்தான். 28 அவன் ஆகாபின் குமாரனாகிய யோராமோடே கூடக் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம்பண்ணப்போனான்; சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள். 29 ராஜாவாகிய யோராம் தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம்பண்ணுகையில், சீரியர் ராமாவிலே தன்னை வெட்டின காயங்களை ஆற்றிக்கொள்ள யெஸ்ரயேலுக்குப் போயிருந்தான்; ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால், யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா யெஸ்ரயேலில் இருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான்.

2 இராஜாக்கள் 9

1 அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலிசா தீர்க்கதரிசிகளின் புத்திரரில் ஒருவனை அழைத்து: நீ இடைகட்டிக்கொண்டு, இந்தத் தைலக்குப்பியை உன் கையில் எடுத்துக்கொண்டு, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போ. 2 நீ அங்கே சேர்ந்தபோது, நிம்சியின் மகனான யோசபாத்தின் குமாரன் யெகூ எங்கே இருக்கிறான் என்று பார்த்து, அங்கே உட்பிரவேசித்து, அவனைத் தன் சகோதரரின் நடுவிலிருந்து எழுந்திருக்கப்பண்ணி, அவனை உள்ளான ஒரு அறையிலே அழைத்துக்கொண்டுபோய், 3 தைலக்குப்பியை எடுத்து, அவன் தலையின்மேல் வார்த்து: உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து தாமதியாமல் ஓடிப்போ என்றான். 4 அப்படியே தீர்க்கதரிசியின் ஊழியக்காரனாகிய அந்த வாலிபன் கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப் போனான். 5 அவன் உட்பிரவேசித்தபோது, சேனாபதிகள் அங்கே உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது அவன்: சேனாபதியே, உமக்குச் சொல்லவேண்டிய ஒரு வார்த்தை உண்டு என்றான். அதற்கு யெகூ: எங்களெல்லாருக்குள்ளும் யாருக்கு என்று கேட்டதற்கு, அவன், சேனாபதியாகிய உமக்குத்தான் என்றான். 6 அவன் எழுந்து, அறைவீட்டிற்குள் பிரவேசித்தான்; அவன் அந்தத் தைலத்தை அவன் தலையின்மேல் வார்த்து, அவனை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன்னைக் கர்த்தருடைய ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன். 7 நான் என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழியையும், கர்த்தருடைய சகல ஊழியக்காரரின் இரத்தப்பழியையும், யேசபேலின் கையிலே வாங்கும்படிக்கு நீ உன் ஆண்டவனாகிய ஆகாபின் குடும்பத்தை அழித்துவிடக்கடவாய். 8 ஆகாபின் குடும்பமெல்லாம் அழியும்படிக்கு, நான் ஆகாபுக்குச் சுவரில் நீர்விடும் ஒரு நாய் முதலாய் இராதபடிக்கு, இஸ்ரவேலிலே அவனுடையவர்களில் அடைபட்டவனையும் விடுபட்டவனையும் கருவறுத்து, 9 ஆகாபின் குடும்பத்தை நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் குடும்பத்துக்கும், அகியாவின் குமாரனாகிய பாஷாவின் குடும்பத்துக்கும் சரியாக்குவேன். 10 யேசபேலை யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் தின்றுவிடும்; அவளை அடக்கம்பண்ணுகிறவன் இல்லையென்கிறார் என்று சொல்லி, கதவைத் திறந்து ஓடிப்போனான். 11 யெகூ தன் ஆண்டவனுடைய ஊழியக்காரரிடத்துக்குத் திரும்பிவந்தபோது, அவர்கள் அவனை நோக்கி: சுகசெய்தியா? அந்தப் பயித்தியக்காரன் உன்னிடத்தில் வந்தது என்ன என்று கேட்டார்கள். அதற்கு அவன்: அந்த மனுஷனையும், அவன் சொன்ன காரியத்தையும் நீங்கள் அறிவீர்கள் என்றான். 12 அதற்கு அவர்கள்: அது பொய், அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். அப்பொழுது அவன்: நான் உன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று இன்ன இன்ன பிரகாரமாக என்னிடத்தில் சொன்னான் என்றான். 13 அப்பொழுது அவர்கள் தீவிரமாய் அவரவர் தங்கள் வஸ்திரத்தைப் படிகளின் உயரத்தில் அவன் கீழே விரித்து, எக்காளம் ஊதி: யெகூ ராஜாவானான் என்றார்கள். 14 அப்படியே நிம்சியின் மகனாகிய யோசபாத்தின் குமாரன் யெகூ என்பவன் யோராமுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடு பண்ணினான்; யோராமோ இஸ்ரவேலர் எல்லாரோடுங்கூடக் கீலேயாத்திலுள்ள ராமோத்திலே சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலினிமித்தம் காவல் வைத்துவைத்தான். 15 ஆனாலும் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடே பண்ணின யுத்தத்திலே, சீரியர் தன்னை வெட்டின காயங்களை யெஸ்ரயேலிலே ஆற்றிக்கொள்ளுகிறதற்கு, ராஜாவாகிய யோராம் திரும்பிப்போயிருந்தான். யெகூ என்பவன்: இது உங்களுக்குச் சம்மதியாயிருந்தால் யெஸ்ரயேலில் இதை அறிவிக்கிறதற்கு ஒருவரும் பட்டணத்திலிருந்து தப்பிப்போகும்படி விடாதிருங்கள் என்றான். 16 அப்பொழுது யெகூ இரதத்தின்மேல் ஏறி, யெஸ்ரயேலுக்கு நேராகப் போனான், யோராம் அங்கே வியாதியாய்க் கிடந்தான்; யோராமைப்பார்க்க, யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அங்கே வந்திருந்தான். 17 யெஸ்ரயேலில் கோபுரத்தின்மேல் நிற்கிற ஜாமக்காரன், யெகூவின் கூட்டம் வருகிறதைக் கண்டு: ஒரு கூட்டத்தைக் காண்கிறேன் என்றான். அப்பொழுது யோராம்: நீ ஒரு குதிரைவீரனைக் கூப்பிட்டு, அவர்களுக்கு எதிராக அனுப்பிச் சமாதானமா என்று கேட்கச்சொல் என்றான். 18 அந்தக் குதிரைவீரன்: அவனுக்கு எதிர்கொண்டுபோய், சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ: சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பிறகே திரும்பிவா என்றான். அப்பொழுது ஜாமக்காரன்: அனுப்பப்பட்டவன் அவர்கள் இருக்கும் இடமட்டும் போனபோதிலும் திரும்பி வரவில்லை என்றான். 19 ஆகையால் வேறொரு குதிரைவீரனை அனுப்பினான், அவன் அவர்களிடத்தில் போய்: சமாதானமா என்று ராஜா கேட்கச்சொன்னார் என்றான். அதற்கு யெகூ: சமாதானத்தைப்பற்றி உனக்கு என்ன? என் பிறகே திரும்பிவா என்றான். 20 அப்பொழுது ஜாமக்காரன்: அவன் அவர்கள் இருக்கும் இடமட்டும் போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றும், ஓட்டுகிறது நிம்சியின் குமாரனாகிய யெகூ ஓட்டுகிறதுபோல இருக்கிறது; அதிவேகமாய் ஓட்டுகிறான் என்றும் சொன்னான். 21 அப்பொழுது யோராம்: இரதத்தை ஆயத்தப்படுத்து என்றான்; அவனுடைய இரதத்தை ஆயத்தப்படுத்தினபோது, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராமும், யூதாவின் ராஜாவாகிய அகசியாவும் அவனவன் தன் தன் இரதத்தில் ஏறி யெகூவுக்கு நேராகப் புறப்பட்டு, யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் நிலத்திலே அவனுக்கு எதிர்ப்பட்டார்கள். 22 யோராம் யெகூவைக் கண்டவுடனே: யெகூவே, சமாதானமா என்றான். அதற்கு யெகூ: உன் தாயாகிய யேசபேலின் வேசித்தனங்களும் அவளுடைய பில்லிசூனியங்களும், இத்தனை ஏராளமாயிருக்கையில் சமாதானம் ஏது என்றான். 23 அப்பொழுது யோராம் தன் இரதத்தைத் திருப்பிக்கொண்டு ஓடிப்போய், அகசியாவை நோக்கி: அகசியாவே, இது சதி என்றான். 24 யெகூ தன் கையால் வில்லை நாணேற்றி, அம்பு யோராமுடைய நெஞ்சில் உருவிப் புறப்படத்தக்கதாய், அவனை அவன் புயங்களின் நடுவே எய்தான்; அதினால் அவன் தன் இரதத்திலே சுருண்டு விழுந்தான். 25 அப்பொழுது யெகூ, தன் சேனாபதியாகிய பித்காரை நோக்கி: அவனை எடுத்து, யெஸ்ரயேலியனாகிய நாபோத்தின் வயல்நிலத்தில் எறிந்துபோடு; நானும் நீயும் ஒரு சோடாய் அவன் தகப்பனாகிய ஆகாபின் பிறகே குதிரை ஏறி வருகிறபோது, கர்த்தர் இந்த ஆக்கினையை அவன்மேல் சுமத்தினார் என்பதை நினைத்துக்கொள். 26 நேற்று நாபோத்தின் இரத்தத்தையும், அவன் குமாரரின் இரத்தத்தையும் கண்டேன் அல்லவா என்றும், இந்த நிலத்தில் உனக்கு நீதியைச் சரிக்கட்டுவேன் என்றும் அப்பொழுது கர்த்தர் சொன்னாரே; இப்போதும் அவனை எடுத்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே இந்த நிலத்தில் எறிந்துபோடு என்றான். 27 இதை யூதாவின் ராஜாவாகிய அகசியா கண்டு, தோட்டத்தின் வீட்டுவழியாய் ஓடிப்போனான்; யெகூ அவனைப் பின்தொடர்ந்து: அவனையும் இரதத்திலே வெட்டிப்போடுங்கள் என்றான்; அவர்கள் இப்லேயாம் கிட்ட இருக்கிற கூர்மலையின்மேல் ஏறுகிற வழியிலே அப்படிச் செய்தார்கள்; அவன் மெகிதோவுக்கு ஓடிப்போய் அங்கே செத்துப்போனான். 28 அவனுடைய ஊழியக்காரர் அவனை இரதத்தின்மேல் எருசலேமுக்குக் கொண்டுபோய், அவனைத் தாவீதின் நகரத்தில் அவன் பிதாக்களோடு அவனுடைய கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள். 29 இந்த அகசியா, ஆகாபுடைய குமாரனாகிய யோராமின் பதினோராம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான். 30 யெகூ யெஸ்ரயேலுக்கு வந்தான்; அதை யேசபேல் கேட்டபோது, தன் கண்களுக்கு மையிட்டு, தன் தலையைச் சிங்காரித்துக்கொண்டு, ஜன்னல்வழியாய் எட்டிப்பார்த்து, 31 யெகூ ஒலிமுகவாசலில் வந்தபோது, அவள்: தன் ஆண்டவனைக் கொன்ற சிம்ரி ஷேமம் அடைந்தானா என்றாள். 32 அப்பொழுது அவன் தன் முகத்தை அந்த ஜன்னலுக்கு நேராக ஏறெடுத்து: என் பட்சத்தில் இருக்கிறது யார்? யார்? என்று கேட்டதற்கு, இரண்டு மூன்று பிரதானிகள் அவனை எட்டிப்பார்த்தார்கள். 33 அப்பொழுது அவன்: அவளைக் கீழே தள்ளுங்கள் என்றான்; அப்படியே அவளைக் கீழே தள்ளினதினால், அவளுடைய இரத்தம் சுவரிலும் குதிரைகளிலும் தெறித்தது; அவன் அவளை மிதித்துக்கொண்டு, 34 உள்ளே போய், புசித்துக் குடித்த பின்பு: நீங்கள் போய்ச் சபிக்கப்பட்ட அந்த ஸ்திரீயைப் பார்த்து, அவளை அடக்கம்பண்ணுங்கள்; அவள் ஒரு ராஜகுமாரத்தி என்றான். 35 அவர்கள் அவளை அடக்கம்பண்ணப்போகிறபோது, அவளுடைய தலையோட்டையும் கால்களையும் உள்ளங்கைகளையுமே அல்லாமல் வேறொன்றையும் காணவில்லை. 36 ஆகையால் அவர்கள் திரும்பவந்து அவனுக்கு அறிவித்தார்கள்; அப்பொழுது அவன்: இது கர்த்தர் திஸ்பியனாகிய எலியா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு சொன்ன வார்த்தை; யெஸ்ரயேலின் நிலத்திலே நாய்கள் யேசபேலின் மாம்சத்தைத் தின்னும் என்றும், 37 இன்னது யேசபேலென்று சொல்லக்கூடாதபடிக்கு, யேசபேலின் பிரேதம் யெஸ்ரயேலின் நிலத்திலே வயல்வெளியின்மேல் போடும் எருவைப்போல் ஆகும் என்றும் சொன்னாரே என்றான்.

2 இராஜாக்கள் 10

1 ஆகாபுக்குச் சமாரியாவிலே எழுபது குமாரர் இருந்தபடியினால், யெகூ சமாரியாவிலிருக்கிற யெஸ்ரயேலின் பிரபுக்களாகிய மூப்பரிடத்துக்கும், ஆகாபுடைய பிள்ளைகளை வளர்க்கிறவர்களிடத்துக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான். 2 அதில்: உங்கள் ஆண்டவனுடைய குமாரர்கள் உங்களோடிருக்கிறார்களே; இரதங்களும், குதிரைகளும், அரணான பட்டணமும் ஆயுதங்களும் உங்களுக்கு உண்டே. 3 இப்போதும் இந்த நிருபம் உங்களிடத்தில் வரும்போது நீங்கள் உங்கள் ஆண்டவனுடைய குமாரரில் உத்தமமும் செம்மையுமாயிருக்கிறவனைப் பார்த்து, அவனை அவன் தகப்பனுடைய சிங்காசனத்தின்மேல் வைத்து, உங்கள் ஆண்டவனுடைய குடும்பத்துக்காக யுத்தம்பண்ணுங்கள் என்று எழுதியிருந்தது. 4 அவர்கள் மிகவும் பயந்து: இதோ, இரண்டு ராஜாக்கள் அவனுக்கு முன்பாக நிற்கவில்லையே; நாங்கள் எப்படி நிற்போம் என்றார்கள். 5 ஆகையால் அரமனை விசாரிப்புக்காரனும், நகர விசாரிப்புக்காரனும், மூப்பரும், பிள்ளைகளின் விசாரிப்புக்காரரும்: நாங்கள் உமது அடியார்கள், நீர் எங்களுக்குச் சொல்வதையெல்லாம் செய்வோம்; நாங்கள் ஒருவரையும் ராஜாவாக்குவதில்லை; உமது பார்வைக்குச் சம்மதியானதைச் செய்யும் என்று யெகூவுக்குச் சொல்லியனுப்பினார்கள். 6 அப்பொழுது அவன்: அவர்களுக்கு இரண்டாம் நிருபத்தை எழுதினான்; அதில்: நீங்கள் என் பட்சத்தில் சேர்ந்து என் சொல்லைக் கேட்பீர்களானால், உங்கள் ஆண்டவனுடைய குமாரரின் தலைகளை வாங்கி, நாளை இந்நேரத்தில் யெஸ்ரயேலுக்கு என்னிடத்தில் வாருங்கள் என்று எழுதியிருந்தது. ராஜாவின் குமாரராகிய எழுபதுபேரும் தங்களை வளர்க்கிற பட்டணத்தின் பெரிய மனுஷரோடு இருந்தார்கள். 7 இந்த நிருபம் அவர்களிடத்தில் வந்தபோது, அவர்கள் ராஜாவின் குமாரராகிய எழுபதுபேரையும் பிடித்து வெட்டி, அவர்கள் தலைகளைக் கூடைகளில் வைத்து, யெஸ்ரயேலிலிருக்கிற அவனிடத்திற்கு அனுப்பினார்கள். 8 அனுப்பப்பட்ட ஆள் வந்து: ராஜகுமாரரின் தலைகளைக் கொண்டுவந்தார்கள் என்று அவனுக்கு அறிவித்தபோது, அவன் விடியற்காலமட்டும் அவைகளை ஒலிமுகவாசலில் இரண்டு குவியலாகக் குவித்துவையுங்கள் என்றான். 9 மறுநாள் காலமே அவன் வெளியே வந்து நின்று, சகல ஜனங்களையும் நோக்கி: நீங்கள் நீதிமான்களல்லவா? இதோ, நான் என் ஆண்டவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி அவனைக் கொன்றுபோட்டேனே; ஆனாலும் இவர்கள் எல்லாரையும் கொன்றவன் யார்? 10 ஆதலால் கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாருக்கு விரோதமாகச் சொன்ன கர்த்தருடைய வார்த்தைகளில் ஒன்றும் தரையிலே விழவில்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள்; கர்த்தர் தம்முடைய ஊழியக்காரனாகிய எலியாவைக்கொண்டு சொன்னதைச் செய்தார் என்றான். 11 யெஸ்ரயேலிலும் ஆகாபின் குடும்பத்தாரில் மீதியான யாவரையும், அவனுக்கு இருந்த எல்லா மந்திரிகளையும், அவனைச்சேர்ந்த மனுஷரையும், அவனுடைய ஆசாரியர்களையும், அவனுக்கு ஒருவரையும் மீதியாக வைக்காதபடிக்கு, யெகூ கொன்றுபோட்டான். 12 பின்பு அவன் எழுந்து சமாரியாவுக்குப் போகப் புறப்பட்டான்; வழியிலே அவன் ஆட்டுமயிர் கத்தரிக்கிற மேய்ப்பரின் ஊர் இருக்கும் இடத்துக்கு வந்தபோது, 13 யூதாவின் ராஜாவாகிய அகசியாவின் சகோதரரை அங்கே கண்டு, நீங்கள் யார் என்று கேட்டான். அவர்கள்: நாங்கள் அகசியாவின் சகோதரர்; நாங்கள் ராஜாவின் பிள்ளைகளையும் ராஜஸ்திரீயின் பிள்ளைகளையும் வினவுகிறதற்குப் போகிறோம் என்றார்கள். 14 அப்பொழுது அவன்: இவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்; அவர்களை உயிரோடே பிடித்து, நாற்பத்திரண்டு பேர்களாகிய அவர்களை ஆட்டுமயிர் கத்தரிக்கிற துரவண்டையிலே வெட்டிப்போட்டார்கள்; அவர்களில் ஒருவனையும் அவன் மீதியாக விடவில்லை. 15 அவன் அவ்விடம்விட்டுப் புறப்பட்டபோது, தனக்கு எதிர்ப்பட்ட ரேகாபின் குமாரனாகிய யோனதாபைச் சந்தித்து, அவனை உபசரித்து: என் இருதயம் உன் இருதயத்தோடே செம்மையாய் இருக்கிறதுபோல உன் இருதயமும் செம்மையாயிருக்கிறதா என்று கேட்டான். அதற்கு யோனதாப்: அப்படியே இருக்கிறது என்றான்; அப்படியிருக்கிறதானால், உன் கையைத் தா என்று சொன்னான்; அவன் தன் கையைக் கொடுத்தபோது, அவனைத் தன்னிடத்தில் இரதத்தின்மேல் ஏறிவரச்சொல்லி, 16 நீ என்னோடே கூடவந்து கர்த்தருக்காக எனக்கு இருக்கிற பக்திவைராக்கியத்தைப் பார் என்றான்; அப்படியே இவனை அவன் இரதத்தின்மேல் ஏற்றினார்கள். 17 அவன் சமாரியாவுக்கு வந்தபோது, கர்த்தர் எலியாவோடே சொன்ன வார்த்தையின்படியே, சமாரியாவில் ஆகாபுக்கு மீதியான யாவரையும் அழித்துத் தீருமளவும் சங்காரஞ்செய்தான். 18 பின்பு யெகூ ஜனங்களையெல்லாம் கூட்டி, அவர்களை நோக்கி: ஆகாப் பாகாலைச் சேவித்தது கொஞ்சம், யெகூ அவனைச் சேவிப்பது மிகுதி. 19 இப்போதும் பாகாலின் சகல தீர்க்கதரிசிகளையும், அவனுடைய சகல பணிவிடைக்காரரையும், அவனுடைய சகல ஆசாரியரையும் என்னிடத்தில் அழைப்பியுங்கள்; ஒருவனும் குறையலாகாது; நான் பாகாலுக்குப் பெரிய பலியிடப்போகிறேன்; வராதவன் எவனோ அவன் உயிரோடிருப்பதில்லை என்றான்; பாகாலின் பணிவிடைக்காரரை அழிக்கும்படி யெகூ இதைத் தந்திரமாய்ச் செய்தான். 20 பாகாலுக்குப் பண்டிகையின் ஆசரிப்பைக் கூறுங்கள் என்று யெகூ சொன்னான்; அப்படியே கூறினார்கள். 21 யெகூ இஸ்ரவேல் தேசமெங்கும் அதைச் சொல்லியனுப்பினபடியினால், பாகாலின் பணிவிடைக்காரர் எல்லாரும் வந்தார்கள்; வராதவன் ஒருவனுமில்லை; அவர்கள் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்ததினால் பாகாலின் கோவில் நாற்சாரியும் நிறைந்திருந்தது. 22 அப்பொழுது அவன், வஸ்திரசாலை விசாரிப்புக்காரனை நோக்கி: பாகாலின் பணிவிடைக்காரருக்கெல்லாம் வஸ்திரங்களை எடுத்துக்கொண்டுவா என்றான்; அவர்களுக்கு வஸ்திரங்களை எடுத்துக்கொண்டுவந்தான். 23 பின்பு யெகூ: ரேகாபின் குமாரனாகிய யோனதாபோடுங்கூடப் பாகாலின் கோவிலுக்குள் பிரவேசித்து, பாகாலின் பணிவிடைக்காரரை நோக்கி: பாகாலின் ஊழியக்காரரே அல்லாமல் கர்த்தரின் ஊழியக்காரரில் ஒருவரும் இங்கே உங்களோடு இராதபடிக்குத் திட்டமாய்ப் பாருங்கள் என்றான். 24 அவர்கள் பலிகளையும் சர்வாங்க தகனங்களையும் செலுத்த உட்பிரவேசித்த பின்பு, யெகூ வெளியிலே எண்பது பேரைத் தனக்கு ஆயத்தமாக வைத்து: நான் உங்கள் கையில் ஒப்புவிக்கிற மனுஷரில் ஒருவனை எவன் தப்பவிடுகிறானோ அவனுடைய ஜீவனுக்குப் பதிலாக அவனைத் தப்பவிட்டவனுடைய ஜீவன் ஈடாயிருக்கும் என்றான். 25 சர்வாங்க தகனபலியிட்டுத் தீர்ந்தபோது, யெகூ சேவகரையும் சேர்வைக்காரரையும் நோக்கி: உள்ளே போய், அவர்களை வெட்டிப்போடுங்கள்; ஒருவரையும் வெளியே விடவேண்டாம் என்றான்; அப்படியே பட்டயக்கருக்கினால் சேவகரும் சேர்வைக்காரரும் அவர்களை வெட்டி எறிந்துபோட்டு, பாகால் கோவிலைச் சேர்ந்த ஸ்தலம் எங்கும் போய், 26 பாகால் கோவில் விக்கிரகங்களை வெளியே எடுத்துவந்து, அவைகளைத் தீக்கொளுத்தி, 27 பாகாலின் சிலையைத் தகர்த்து, பாகாலின் கோவிலை இடித்து, அதை இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல மலஜலாதி இடமாக்கினார்கள். 28 இப்படியே யெகூ பாகாலை இஸ்ரவேலில் இராதபடிக்கு அழித்துப்போட்டான். 29 ஆனாலும் பெத்தேலிலும் தாணிலும் வைத்த பொற்கன்றுக்குட்டிகளால், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை யெகூ விட்டு விலகவில்லை. 30 கர்த்தர் யெகூவை நோக்கி: என் பார்வைக்குச் செம்மையானதை நீ நன்றாய்ச் செய்து, என் இருதயத்தில் இருந்தபடியெல்லாம் ஆகாபின் குடும்பத்துக்குச் செய்தபடியினால், உன் குமாரர் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் நாலு தலைமுறையாக வீற்றிருப்பார்கள் என்றார். 31 ஆனாலும் யெகூ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தின்படி தன் முழு இருதயத்தோடும் நடக்கக் கவலைப்படவில்லை; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின யெரொபெயாமின் பாவங்களை விட்டு அவன் விலகவும் இல்லை. 32 அந்நாட்கள்முதல் கர்த்தர் இஸ்ரவேலைக் குறைந்துபோகப்பண்ணினார்; ஆசகேல் அவர்களை இஸ்ரவேலின் எல்லைகளிலெல்லாம் முறிய அடித்து, 33 யோர்தான் துவக்கிக் கிழக்கிலுள்ள அர்னோன் நதிக்குச் சமீபமான ஆரோவேர் முதற்கொண்டிருக்கிற கீலேயாத்திலும் பாசானிலுமுள்ள காதியர், ரூபேனியர், மனாசேயர் இவர்களுடைய தேசமாகிய கீலேயாத் முழுவதையும் முறிய அடித்தான். 34 யெகூவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய எல்லா வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 35 யெகூ தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோவாகாஸ் ராஜாவானான். 36 யெகூ சமாரியாவிலே இஸ்ரவேலின்மேல் ராஜ்யபாரம்பண்ணின நாட்கள் இருபத்தெட்டு வருஷம்.

2 இராஜாக்கள் 11

1 அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, எழும்பி ராஜவம்சஸ்தர் யாவரையும் சங்காரம்பண்ணினாள். 2 யோராம் என்னும் ராஜாவின் குமாரத்தியும் அகசியாவின் சகோதரியுமாகிய யோசேபாள், கொலையுண்ணப்படுகிற ராஜகுமாரரின் நடுவிலிருக்கிற அகசியாவின் மகனாகிய யோவாசைக் களவாய் எடுத்தாள்; அவன் கொல்லப்படாதபடி, அவனையும் அவன் தாதியையும் அத்தாலியாளுக்குத் தெரியாமல் பள்ளி அறையில் ஒளித்துவைத்தார்கள். 3 இவளோடேகூட அவன் ஆறுவருஷம் கர்த்தருடைய ஆலயத்தில் ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள். 4 ஏழாம் வருஷத்திலே யோய்தா நூறு பேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் அழைப்பித்து, அவர்களைத் தன்னிடத்தில் கர்த்தருடைய ஆலயத்திலே வரச்சொல்லி, அவர்களோடு உடன்படிக்கைபண்ணி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்திலே ஆணையிடுவித்துக்கொண்டு, அவர்களுக்கு ராஜாவின் குமாரனைக் காண்பித்து, 5 அவர்களை நோக்கி: நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், ஓய்வுநாளில் முறைப்படி இங்கே வருகிற உங்களில் மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரமனைக் காவல் காக்கவேண்டும். 6 மூன்றில் ஒருபங்கு சூர் என்னும் வாசலிலும், மூன்றில் ஒருபங்கு காவலாளரின் காவலின் பிறகே இருக்கிற வாசலிலுமிருந்து ஆலயக்காவலைப் பத்திரமாய்க் காக்கவேண்டும். 7 இப்படியே ஓய்வுநாளில் முறைப்படியே உங்களில் இரண்டுபங்குபேர், ராஜாவினிடத்தில் கர்த்தருடைய ஆலயத்தைக் காவல் காக்கவேண்டும். 8 நீங்கள் அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்தவர்களாய், ராஜாவைச் சுற்றிலும் வரிசையாய் நின்றுகொண்டிருக்கவேண்டும்; வரிசைகளுக்குள் புகுந்துவருகிறவன் கொலைசெய்யப்படக்கடவன்; ராஜா வெளியே போகும்போதும் உள்ளே வரும்போதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான். 9 ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் நூறுபேருக்கு அதிபதிகள் செய்து, அவரவர் ஓய்வுநாளில் முறைப்படி வருகிறவர்களும் முறைப்படி போகிறவர்களுமாகிய தங்கள் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ஆசாரியனாகிய யோய்தாவினிடத்தில் வந்தார்கள். 10 ஆசாரியன் கர்த்தரின் ஆலயத்தில் தாவீதுராஜா வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் நூறுபேருக்கு அதிபதிகளிடத்தில் கொடுத்தான். 11 காவலாளர் அவரவர் தங்கள் ஆயுதங்களைப் பிடித்தவர்களாய், ஆலயத்தின் வலதுபக்கம்தொடங்கி அதின் இடதுபக்கமட்டும், பலிபீடத்திற்கு எதிராகவும் ஆலயத்திற்கு எதிராகவும் ராஜாவைச் சுற்றிலும் நின்றார்கள். 12 அப்பொழுது அவன்: ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்தான்; இப்படி அவனை ராஜாவாக்கி அபிஷேகம்பண்ணி: ராஜா வாழ்க என்று சொல்லி கைகொட்டினார்கள். 13 ஓடிவருகிற ஜனங்கள் செய்த ஆரவாரத்தை அத்தாலியாள் கேட்டபோது: அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து, 14 இதோ, ராஜா முறைமையின்படியே தூணண்டையிலே நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளம் ஊதுகிறதையும் கண்டவுடனே, அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள். 15 ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவராகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களுக்குக் கட்டளையிட்டு: இவளை வரிசைகளுக்குப் புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தாலே வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தருடைய ஆலயத்தில் அவளைக் கொல்லலாகாது என்று ஆசாரியன் சொல்லியிருந்தான். 16 அவர்கள் அவளுக்கு இடம் உண்டாக்கினபோது, ராஜாவின் அரமனைக்குள் குதிரைகள் பிரவேசிக்கிற வழியிலே அவள் போகையில், அவளைக் கொன்றுபோட்டார்கள். 17 அப்பொழுது யோய்தா, அவர்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, ராஜாவும் ஜனங்களும் கர்த்தரோடே உடன்படிக்கைபண்ணவும், ராஜாவும் ஜனங்களும் ஒருவரோடொருவர் உடன்படிக்கைபண்ணவும் செய்து, 18 பின்பு தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் பாகாலின் கோவிலில் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும் அதின் விக்கிரகங்களையும் முற்றிலும் உடைத்து, பாகாலின் பூஜாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். ஆசாரியன் கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகஸ்தரை ஏற்படுத்தினான். 19 நூறுபேருக்கு அதிபதிகளையும் தலைவரையும் காவலாளரையும் தேசத்தின் ஜனங்களையும் கூட்டி, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, அவனைக் காவலாளரின் வாசல் வழியாய் ராஜ அரமனைக்கு அழைத்துக்கொண்டுபோனார்கள்; அங்கே அவன் ராஜாக்களுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தான். 20 தேசத்தின் ஜனங்கள் எல்லாரும் மகிழ்ந்து நகரம் அமைதலாயிற்று. அத்தாலியாளையோ ராஜாவின் அரமனையண்டையில் பட்டயத்தால் கொன்றுபோட்டார்கள். 21 யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழு வயதாயிருந்தான்.

2 இராஜாக்கள் 12

1 யெகூவின் ஏழாம் வருஷத்தில் யோவாஸ் ராஜாவாகி, எருசலேமிலே நாற்பதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; பெயெர்செபா ஊராளாகிய அவனுடைய தாயின் பேர் சிபியாள். 2 ஆசாரியனாகிய யோய்தா யோவாசைப் போதகம்பண்ணின நாளெல்லாம் அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். 3 மேடைகளைமாத்திரம் அகற்றவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள். 4 யோவாஸ் ஆசாரியரை நோக்கி: பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களாகிய கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்படுகிற எல்லாப் பணங்களையும், இலக்கத்திற்குட்படுகிறவர்களின் பணத்தையும், மீட்புக்காக மதிக்கப்படுகிற ஆட்களின் பணத்தையும், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரும்படி, அவரவர் தம்தம் மனதிலே நியமித்திருக்கும் எல்லாப் பணத்தையும், 5 ஆசாரியர்கள் அவரவர் தங்களுக்கு அறிமுகமானவர்கள் கையில் வாங்கிக்கொண்டு, ஆலயத்தில் எங்கெங்கே பழுதுகாண்கிறதோ, அங்கேயெல்லாம் ஆலயத்தைப் பழுதுபார்க்கவேண்டும் என்றான். 6 ஆனாலும் ராஜாவாகிய யோவாசின் இருபத்துமூன்றாம் வருஷமட்டும் ஆசாரியர்கள் ஆலயத்தைப் பழுதுபாராதே போனபடியினால், 7 ராஜாவாகிய யோவாஸ் ஆசாரியனாகிய யோய்தாவையும் மற்ற ஆசாரியர்களையும் அழைப்பித்து: நீங்கள் ஆலயத்தைப் பழுதுபாராதேபோனதென்ன? இனி நீங்கள் உங்களுக்கு அறிமுகமானவர்கள் கையிலே பணத்தை வாங்காமல், அதை ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்காக விட்டுவிடுங்கள் என்றான். 8 அப்பொழுது ஆசாரியர்கள் ஜனத்தின் கையிலே பணத்தை வாங்கிக்கொள்ளாமலும், ஆலயத்தைப் பழுதுபாராமலும் இருக்கிறதற்குச் சம்மதித்தார்கள். 9 ஆசாரியனாகிய யோய்தா ஒரு பெட்டியை எடுத்து, அதின் மூடியிலே ஒரு துவாரமிட்டு, அதைப் பலிபீடத்தண்டையிலே கர்த்தருடைய ஆலயத்தில் ஜனங்கள் உட்பிரவேசிக்கும் வலதுபக்கத்தில் வைத்தான்; வாசற்படியைக் காக்கிற ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரப்பட்ட பணத்தையெல்லாம் அதிலே போட்டார்கள். 10 பெட்டியிலே மிகுந்த பணம் உண்டென்று அவர்கள் காணும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனும் வந்து: கர்த்தருடைய ஆலயத்திலே சேகரிக்கப்பட்ட பணத்தை எண்ணி முடிப்புக்கட்டி, 11 எண்ணின பணத்தைக் கர்த்தருடைய ஆலயத்திலே விசாரிப்புக்காரர் கையிலே கொடுப்பார்கள்; அதை அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கிற தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும், 12 கொற்றருக்கும், கல்தச்சருக்கும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கத் தேவையான மரங்களையும் வெட்டின கற்களையும் கொள்ளுகிறதற்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்குச் செல்லும் எல்லாச் செலவுக்கும் கொடுப்பார்கள். 13 கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தினாலே வெள்ளிக்கிண்ணங்களும், கீதவாத்தியங்களும், கலங்களும், எக்காளங்களும், பொற்பாத்திரங்களும், வெள்ளிப் பாத்திரங்களும் பண்ணப்படாமல், 14 கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படிக்கு வேலைசெய்கிறவர்களுக்கே அதைக் கொடுத்தார்கள். 15 வேலைசெய்கிறவர்களுக்குக் கொடுக்கும்படிக்கு, பணத்தை வரப்பற்றிக்கொண்ட மனுஷர் கையிலே கணக்குக் கேளாதிருந்தார்கள்; அவர்கள் உண்மையாய் அதை நடப்பித்தார்கள். 16 குற்றப்பிராயச்சித்தப் பணமும் பாவப்பிராயச்சித்தப் பணமும் கர்த்தருடைய ஆலயத்திற்காகக் கொண்டுவரப்படவில்லை; அது ஆசாரியரைச் சேர்ந்தது. 17 அதற்குப்பின்பு சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் வந்து, காத்தூரின்மேல் யுத்தம்பண்ணி அதைப் பிடித்தான்; அதின்பின்பு எருசலேமுக்கு விரோதமாய்ப் போக ஆசகேல் தன் முகத்தைத் திருப்பினான். 18 அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோவாஸ், தன் பிதாக்களாகிய யோசபாத் யோராம் அகசியா என்னும் யூதாவின் ராஜாக்கள் பரிசுத்தம்பண்ணிவைத்த எல்லாவற்றையும், தான் பரிசுத்தம்பண்ணிவைத்ததையும், கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களில் அகப்பட்ட பொன் யாவையும் எடுத்துச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு அனுப்பினான்; அப்பொழுது அவன் எருசலேமை விட்டுத் திரும்பிப்போனான். 19 யோவாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 20 யோவாசின் ஊழியக்காரர் எழும்பி கட்டுப்பாடு பண்ணிக்கொண்டு, சில்லாவுக்குப் போகிற வழியிலிருக்கிற மில்லோ வீட்டிலே அவனைக் கொன்றுபோட்டார்கள். 21 சிமியாதின் குமாரன், யோசகார் சோமேரின் குமாரன் யோசபாத் என்னும் அவனுடைய ஊழியக்காரர் அவனைக் கொன்றார்கள்; இறந்துபோன அவனைத் தாவீதின் நகரத்தில் அவனுடைய பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய அமத்சியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 13

1 அகசியா என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய யோவாசுடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் யெகூவின் குமாரனாகிய யோவாகாஸ் இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே பதினேழுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி, 2 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களைப் பின்பற்றி நடந்தான்; அவைகளை விட்டு அவன் விலகவில்லை. 3 ஆகையால் கர்த்தருக்கு இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலின் கையிலும் ஆசகேலின் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலும் அந்நாட்களிலெல்லாம் ஒப்புக்கொடுத்தார். 4 யோவாகாஸ் கர்த்தருடைய சமுகத்தை நோக்கிப் பிரார்த்தித்தான்; சீரியாவின் ராஜா இஸ்ரவேலை ஒடுக்குகிறதினால் அவர்கள் ஒடுங்கிப்போகிறதைப் பார்த்து: கர்த்தர் அவனுக்குச் செவிகொடுத்தார். 5 கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஒரு ரட்சகனைக் கொடுத்ததினால், அவர்கள் சீரியருடைய கையின்கீழிருந்து நீங்கலானார்கள்; ஆதலால் இஸ்ரவேல் புத்திரர் முன்போல் தங்கள் கூடாரங்களிலே குடியிருந்தார்கள். 6 ஆகிலும் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின யெரொபெயாம் வீட்டாரின் பாவங்களை அவர்கள் விட்டு விலகாமல் அதிலே நடந்தார்கள்; சமாரியாவிலிருந்த விக்கிரகத்தோப்பும் நிலையாயிருந்தது. 7 யோவாகாசுக்குச் சீரியாவின் ராஜா, ஐம்பது குதிரைவீரரையும், பத்து இரதங்களையும், பதினாயிரம் காலாட்களையுமே அல்லாமல், ஜனங்களில் வேறொன்றும் மீதியாக வைக்கவில்லை; அவன் அவர்களை அழித்துப் போரடிக்கும் இடத்துத் தூளைப்போல ஆக்கிப்போட்டான். 8 யோவாகாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவனுடைய வல்லமையும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 9 யோவாகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோவாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 10 யூதாவின் ராஜாவாகிய யோவாசுடைய முப்பத்தேழாம் வருஷத்தில் யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ், இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிய சமாரியாவிலே பதினாறுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி, 11 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாமல் அவைகளிலெல்லாம் நடந்தான். 12 யோவாசின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு அவன் யுத்தம்பண்ணின வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 13 யோவாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், யெரொபெயாம் அவன் சிங்காசனத்தில் வீற்றிருந்தான்; யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான். 14 அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப் போய், அவன்மேல் விழுந்து, அழுது: என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாயிருந்தவரே என்றான். 15 எலிசா அவனைப் பார்த்து: வில்லையும் அம்புகளையும் பிடியும் என்றான்; அப்படியே வில்லையும் அம்புகளையும் பிடித்துக்கொண்டான். 16 அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: உம்முடைய கையை வில்லின்மேல் வையும் என்றான்; அவன் தன் கையை வைத்தபோது, எலிசா தன் கைகளை ராஜாவுடைய கைகள்மேல் வைத்து: 17 கிழக்கே இருக்கிற ஜன்னலைத் திறவும் என்றான்; அவன் அதைத் திறந்தபோது, எலிசா: எய்யும் என்றான்; இவன் எய்தபோது, அவன்: அது கர்த்தருடைய ரட்சிப்பின் அம்பும், சீரியரினின்று விடுதலையாக்கும் ரட்சிப்பின் அம்புமானது; நீர் ஆப்பெக்கிலே சீரியரைத் தீர முறிய அடிப்பீர் என்றான். 18 பின்பு அம்புகளைப் பிடியும் என்றான்; அவைகளைப் பிடித்தான். அப்பொழுது அவன் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: தரையிலே அடியும் என்றான்; அவன் மூன்றுதரம் அடித்து நின்றான். 19 அப்பொழுது தேவனுடைய மனுஷன் அவன்மேல் கோபமாகி: நீர் ஐந்து ஆறுவிசை அடித்தீரானால், அப்பொழுது சீரியரைத் தீர முறிய அடிப்பீர்; இப்பொழுதோ சீரியரை மூன்றுவிசைமாத்திரம் முறிய அடிப்பீர் என்றான். 20 எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது. 21 அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான். 22 யோவாகாசின் நாட்களிலெல்லாம் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இஸ்ரவேலை ஒடுக்கினான். 23 ஆனாலும் கர்த்தர் அவர்களுக்கு இரங்கி, ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடு செய்த தமது உடன்படிக்கையினிமித்தம் அவர்களை அழிக்கச் சித்தமாயிராமலும், அவர்களை இன்னும் தம்முடைய முகத்தைவிட்டுத் தள்ளாமலும் அவர்கள்மேல் மனதுருகி, அவர்களை நினைத்தருளினார். 24 சீரியாவின் ராஜாவாகிய ஆசகேல் இறந்துபோய், அவன் குமாரனாகிய பெனாதாத் அவன் ஸ்தானத்திலே ராஜாவான பின்பு, 25 யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ், ஆசகேலோடே யுத்தம்பண்ணி, தன் தகப்பனாகிய யோவாகாசின் கையிலிருந்து பிடித்துக்கொண்ட பட்டணங்களை அவன் குமாரனாகிய பெனாதாத்தின் கையிலிருந்து திரும்பப் பிடித்துக்கொண்டான்; மூன்றுவிசை யோவாஸ் அவனை முறிய அடித்து இஸ்ரவேலின் பட்டணங்களைத் திரும்பக் கட்டிக்கொண்டான்.

2 இராஜாக்கள் 14

1 இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாசுடைய இரண்டாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா ராஜாவானான். 2 அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின்பேர் யொவதானாள். 3 அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் தன் தகப்பனாகிய தாவீதைப்போலல்ல; தன் தகப்பனாகிய யோவாஸ் செய்தபடியெல்லாம் செய்தான். 4 மேடைகள்மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள். 5 ராஜ்யபாரம் அவன் கையிலே ஸ்திரப்பட்டபோது, அவனுடைய தகப்பனாகிய ராஜாவைக் கொன்றுபோட்ட தன் ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான். 6 ஆனாலும் பிள்ளைகளினிமித்தம் பிதாக்கள் கொலைசெய்யப்படாமலும் பிதாக்களினிமித்தம் பிள்ளைகள் கொலைசெய்யப்படாமலும், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டும் என்று மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி, கர்த்தர் கட்டளையிட்டபிரகாரம் கொலைசெய்தவர்களின் பிள்ளைகளை அவன் கொல்லாதிருந்தான். 7 அவன் உப்புப்பள்ளத்தாக்கிலே ஏதோமியரில் பதினாயிரம்பேரை மடங்கடித்து, யுத்தஞ்செய்து சேலாவைப் பிடித்து, அதற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிற யொக்தியேல் என்னும் பேரைத் தரித்தான். 8 அப்பொழுது அமத்சியா யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா என்று சொல்லச்சொன்னான். 9 அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது, லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி, நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ்செய்துகொடு என்று சொல்லச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது. 10 நீ ஏதோமியரை முறிய அடித்ததினால் உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; நீ பெருமைபாராட்டிக்கொண்டு உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடேகூட யூதாவும் விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான். 11 ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; ஆகையால் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலுள்ள பெத்ஷிமேசிலே அவனும், யூதாவின் ராஜா அமத்சியாவும், தங்கள் சாமர்த்தியத்தைப் பார்க்கிறபோது, 12 யூதா ஜனங்கள் இஸ்ரவேலருக்கு முன்பாக முறிந்து அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். 13 அகசியாவின் குமாரனாகிய யோவாசின் குமாரன் அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவையோ, இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் பெத்ஷிமேசிலே பிடித்து, எருசலேமுக்கு வந்து, எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல் தொடங்கி மூலைவாசல்மட்டும் நானூறு முழ நீளம் இடித்துப்போட்டு, 14 கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட பொன் வெள்ளி யாவையும், சகல பணிமுட்டுகளையும், கிரியிருப்பவர்களையும் பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான். 15 யோவாஸ் செய்த மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய வல்லமையும், அவன் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவோடு யுத்தம்பண்ணின விதமும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 16 யோவாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், சமாரியாவில் இஸ்ரவேலின் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யெரொபெயாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 17 இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாகாசின் குமாரன் யோவாஸ் மரணமடைந்தபின், யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியா பதினைந்துவருஷம் உயிரோடிருந்தான். 18 அமத்சியாவின் மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 19 எருசலேமிலே அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணினார்கள்; அப்பொழுது லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவர்கள் அவன் பிறகே லாகீசுக்கு மனுஷரை அனுப்பி, அங்கே அவனைக் கொன்றுபோட்டு, 20 குதிரைகள்மேல் அவனை எடுத்துக்கொண்டுவந்தார்கள்; அவன் எருசலேமில் இருக்கிற தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான். 21 யூதா ஜனங்கள் யாவரும் பதினாறு வயதுள்ள அசரியாவை அழைத்துவந்து அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள். 22 ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலாதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான். 23 யூதாவின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் அமத்சியாவின் பதினைந்தாம் வருஷத்தில், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசின் குமாரன் யெரொபெயாம் ராஜாவாகி சமாரியாவில் நாற்பத்தொரு வருஷம் அரசாண்டு, 24 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்கள் ஒன்றையும் அவன் விட்டு விலகவில்லை. 25 காத்தேப்பேர் ஊரானாகிய அமித்தாய் என்னும் தீர்க்கதரிசியின் குமாரன் யோனா என்னும் தம்முடைய ஊழியக்காரனைக்கொண்டு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, அவன் ஆமாத்தின் எல்லை முதற்கொண்டு சமபூமியின் கடல்மட்டுமுள்ள இஸ்ரவேலின் எல்லைகளைத் திரும்பச் சேர்த்துக்கொண்டான். 26 இஸ்ரவேலின் உபத்திரவம் மிகவும் கொடிது என்றும், அடைபட்டவனுமில்லை, விடுபட்டவனுமில்லை, இஸ்ரவேலுக்கு ஒத்தாசை செய்கிறவனுமில்லை என்றும் கர்த்தர் பார்த்தார். 27 இஸ்ரவேலின் பேரை வானத்தின் கீழிருந்து குலைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லாமல், யோவாசின் குமாரனாகிய யெரொபெயாமின் கையால் அவர்களை ரட்சித்தார். 28 யெரொபெயாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் யுத்தம்பண்ணி, யூதாவுக்கு இருந்த தமஸ்குவையும் ஆமாத்தையும் இஸ்ரவேலுக்காகத் திரும்பச் சேர்த்துக்கொண்ட அவனுடைய வல்லமையும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 29 யெரொபெயாம் இஸ்ரவேலின் ராஜாக்களாகிய தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய சகரியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 15

1 இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் இருபத்தேழாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவின் குமாரன் அசரியா ராஜாவானான். 2 அவன் ராஜாவாகிறபோது பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின் பேர் எக்கோலியாள். 3 அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். 4 மேடைகள் மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகள்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள். 5 கர்த்தர் இந்த ராஜாவை வாதித்ததினால், அவன் தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, தனித்து ஒரு வீட்டிலே வாசம்பண்ணினான்; ராஜாவின் குமாரனாகிய யோதாம் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான். 6 அசரியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 7 அசரியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்திலே அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 8 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருஷத்திலே யெரொபெயாமின் குமாரனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறுமாதம் ராஜ்யபாரம்பண்ணி, 9 தன் பிதாக்கள் செய்ததுபோல, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகவில்லை. 10 யாபேசின் குமாரனாகிய சல்லூம் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணி, ஜனத்தின் முன்பாக அவனை வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 11 சகரியாவின் மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 12 உன் குமாரர் நாலாம் தலைமுறைமட்டும் இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்கள் என்று கர்த்தர் யெகூவோடே சொன்ன வார்த்தை இதுதான்; அப்படியே ஆயிற்று. 13 யூதாவின் ராஜாவாகிய உசியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில் யாபேசின் குமாரனாகிய சல்லூம் ராஜாவாகி, சமாரியாவில் ஒரு மாதம் அரசாண்டான். 14 காதியின் குமாரனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து, யாபேசின் குமாரனாகிய சல்லூமைச் சமாரியாவிலே வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 15 சல்லூமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த கட்டுப்பாடும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 16 அப்பொழுது மெனாகேம் திப்சா பட்டணத்தையும், அதிலுள்ள யாவையும், திர்சாதொடங்கி அதின் எல்லைகளையும் முறிய அடித்தான்; அவர்கள் தனக்கு வாசலைத் திறக்கவில்லை என்று அவர்களை வெட்டி, அவர்களுடைய கர்ப்பவதிகளையெல்லாம் கீறிப்போட்டான். 17 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தொன்பதாம் வருஷத்தில், காதியின் குமாரனாகிய மெனாகேம் இஸ்ரவேல்மேல் ராஜாவாகிச் சமாரியாவிலே பத்துவருஷம் ராஜ்யபாரம்பண்ணி, அவன் தன் நாட்களிலெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 18 இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகாதிருந்தான். 19 அசீரியாவின் ராஜாவாகிய பூல், தேசத்திற்கு விரோதமாய் வந்தான்; அப்பொழுது மெனாகேம் பூலின் உதவியினால் ராஜ்யபாரத்தைத் தன் கையில் பலப்படுத்தும்பொருட்டு, அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளி கொடுத்தான். 20 இந்தப் பணத்தை அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுக்கும்படி, மெனாகேம் இஸ்ரவேலில் பலத்த ஐசுவரியவான்களிடத்தில் ஆள் ஒன்றிற்கு ஐம்பது வெள்ளிச் சேக்கல் தண்டினான்; அப்படியே அசீரியாவின் ராஜா தேசத்திலே நிற்காமல் திரும்பிப்போனான். 21 மெனாகேமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 22 மெனாகேம் தன் பிதாக்களோடு நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய பெக்காகியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 23 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பதாம் வருஷத்தில், மெனாகேமின் குமாரனாகிய பெக்காகியா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி சமாரியாவிலே இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி, 24 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை விட்டு விலகவில்லை. 25 ஆனாலும் ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் அவனுடைய சேர்வைக்காரன் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கீலேயாத் புத்திரரில் ஐம்பதுபேரைக் கூட்டிக்கொண்டு, அவனையும் அர்கோபையும் ஆரியேயையும் ராஜாவின் வீடாகிய அரமனையிலே சமாரியாவில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 26 பெக்காகியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 27 யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் ஐம்பத்திரண்டாம் வருஷத்தில், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகிச் சமாரியாவிலே இருபதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி, 28 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை அவன் விட்டு விலகவில்லை. 29 இஸ்ரவேலின் ராஜாவாகிய பெக்காவின் நாட்களில் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசர் வந்து, ஈயோனையும், பெத்மாக்கா என்னும் ஆபேலையும், யனோவாகையும், கேதேசையும், ஆத்சோரையும், கீலேயாத்தையும், கலிலேயாவாகிய நப்தலி தேசமனைத்தையும் பிடித்து, குடிகளைச் சிறையாக அசீரியாவுக்குக் கொண்டுபோனான். 30 ஏலாவின் குமாரனாகிய ஓசெயா ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவனை உசியாவின் குமாரனாகிய யோதாமின் இருபதாம் வருஷத்தில் வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 31 பெக்காவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 32 இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவின் இரண்டாம் வருஷத்தில், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் குமாரன் யோதாம் ராஜாவானான். 33 அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருஷம் அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின் பேர் எருசாள். 34 அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் செய்தான். 35 மேடைகள்மாத்திரம் அகற்றப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்; இவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினான். 36 யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 37 அந்நாட்களிலே கர்த்தர் சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனையும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவையும் யூதாவுக்கு விரோதமாக அனுப்பத்தொடங்கினார். 38 யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் பிதாக்களண்டையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 16

1 ரெமலியாவின் குமாரனாகிய பெக்காவின் பதினேழாம் வருஷத்தில் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் ராஜாவானான். 2 ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறு வருஷம் அரசாண்டான்; அவன் தன் தகப்பனாகிய தாவீதைப்போல் தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல், 3 இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரனை முதலாய்த் தீக்கடக்கப்பண்ணினான். 4 மேடைகளிலும் மலைகளின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தான். 5 அப்பொழுது சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் குமாரன் பெக்காவும், எருசலேமின்மேல் யுத்தம்பண்ண வந்து ஆகாசை முற்றிக்கை போட்டார்கள்; ஆனாலும் ஜெயிக்கமாட்டாதே போனார்கள். 6 அக்காலத்திலே சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பச் சீரியாவோடே சேர்த்துக்கொண்டு, யூதரை ஏலாத்திலிருந்து துரத்தினான்; சீரியர் ஏலாத்திற்கு வந்து இந்நாள்வரைக்கும் அவ்விடத்திலே குடியாயிருக்கிறார்கள். 7 ஆகாஸ் அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசரிடத்திற்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: நான் உம்முடைய அடியானும் உம்முடைய குமாரனுமாயிருக்கிறேன்; நீர் வந்து, எனக்கு விரோதமாயெழும்பின சீரியா ராஜாவின் கைக்கும், இஸ்ரவேல் ராஜாவின் கைக்கும் என்னை நீங்கலாக்கிவிடும் என்று சொல்லச்சொல்லி; 8 கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனைப் பொக்கிஷங்களிலும் அகப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் காணிக்கையாக அனுப்பினான். 9 அசீரியா ராஜா அவனுக்குச் செவிகொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிகளைக் கீர்பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான். 10 அப்பொழுது ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலுள்ள அசீரியாவின் ராஜாவாகிய திகிலாத்பிலேசருக்கு எதிர்கொண்டுபோய்த் தமஸ்குவிலுள்ள பலிபீடத்தைக் கண்டான். ராஜாவாகிய ஆகாஸ் அந்தப் பலிபீடத்தின் சாயலையும், அதினுடைய சகல வேலைப்பாடாகிய அதின் மாதிரியையும் ஆசாரியனாகிய உரியாவுக்கு அனுப்பினான். 11 ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து வருகிறதற்குள் ஆசாரியனாகிய உரியா அப்படிக்கொத்த பலிபீடத்தைக் கட்டி, ராஜாவாகிய ஆகாஸ் தமஸ்குவிலிருந்து அனுப்பின கட்டளையின்படியெல்லாம் செய்தான். 12 ராஜா தமஸ்குவிலிருந்து வந்தபோது, அவன் அந்தப் பலிபீடத்தைப் பார்த்து, அந்தப் பலிபீடத்தண்டையில் சேர்ந்து, அதின்மேல் பலியிட்டு, 13 தன் சர்வாங்க தகனபலியையும் தன் போஜனபலியையும் தகனித்து, தன் பானபலியை வார்த்து, தன் சமாதானபலிகளின் இரத்தத்தை அந்தப் பலிபீடத்தின்மேல் தெளித்தான். 14 கர்த்தரின் சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடத்தை அவன் தன் பலிபீடத்திற்கும் கர்த்தரின் ஆலயத்திற்கும் நடுவே ஆலயத்தின் முகப்பிலிருந்து எடுத்து, அதைத் தன் பலிபீடத்திற்கு வடபுறமாய் வைத்தான். 15 ராஜாவாகிய ஆகாஸ் ஆசாரியனாகிய உரியாவை நோக்கி: இந்தப் பெரிய பலிபீடத்தின்மேல் நீ காலைச் சர்வாங்க தகனபலியையும், மாலைப்போஜனபலியையும், ராஜாவின் சர்வாங்க தகனபலியையும், அவருடைய போஜனபலியையும், தேசத்தினுடைய சகல ஜனத்தின் சர்வாங்க தகனபலியையும், அவர்கள் போஜனபலியையும், அவர்கள் பானபலிகளையும் செலுத்தி, அதின்மேல் சர்வாங்க தகனங்களின் சகல இரத்தத்தையும், பலிகளின் சகல இரத்தத்தையும் தெளிப்பாயாக; அந்த வெண்கலப் பலிபீடமோ, நான் சன்னதம் கேட்கிறதற்கு உதவும் என்றான். 16 ராஜாவாகிய ஆகாஸ் கட்டளையிட்டபடியெல்லாம் ஆசாரியனாகிய உரியா செய்தான். 17 பின்னும் ராஜாவாகிய ஆகாஸ் ஆதாரங்களின் சவுக்கைகளை அறுத்துவிட்டு, அவைகளின்மேலிருந்த கொப்பரைகளை எடுத்து, கடல்தொட்டியைக் கீழே நிற்கிற வெண்கல ரிஷபங்களின்மேலிருந்து இறக்கி, அதைக் கற்களின் தளவரிசையிலே வைத்து, 18 ஆலயத்தின் அருகே கட்டியிருந்த ஓய்வுநாளின் மண்டபத்தையும், ராஜா பிரவேசிக்கும் மண்டபத்தையும், அசீரியருடைய ராஜாவினிமித்தம் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அப்புறப்படுத்தினான். 19 ஆகாஸ் செய்த மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 20 ஆகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 17

1 யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் பன்னிரண்டாம் வருஷத்தில், ஏலாவின் குமாரனாகிய ஓசெயா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவிலே ஒன்பதுவருஷம் ராஜ்யபாரம்பண்ணி, 2 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; ஆனாலும் தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களைப்போல் செய்யவில்லை. 3 அவனுக்கு விரோதமாக அசீரியாவின் ராஜாவாகிய சல்மனாசார் வந்தான்; அப்பொழுது ஓசெயா அவனைச் சேவிக்கிறவனாகி, அவனுக்குப் பகுதிகட்டினான். 4 ஓசெயா எகிப்தின் ராஜாவாகிய சோ என்பவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பினதும், தனக்கு வருஷந்தோறும் செய்ததுபோல், பகுதி அனுப்பாதே போனதுமான கலக யோசனையை அசீரியாவின் ராஜா ஓசெயாவினிடத்திலே கண்டு, அவனைப் பிடித்துக் கட்டிச் சிறைச்சாலையிலே வைத்தான். 5 அசீரியா ராஜா தேசம் எங்கும் போய், சமாரியாவுக்கும் வந்து அதை மூன்று வருஷம் முற்றிக்கைபோட்டிருந்தான். 6 ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்தில் அசீரியா ராஜா சமாரியாவைப் பிடித்து, இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறையாகக் கொண்டுபோய், அவர்களைக் கோசான் நதி ஓரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான். 7 எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய கையின்கீழிருந்த தங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இஸ்ரவேல் புத்திரர் பாவஞ்செய்து, அந்நிய தேவர்களுக்குப் பயந்து நடந்து, 8 கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளின் வழிபாடுகளிலும் இஸ்ரவேல் ராஜாக்களின் வழிபாடுகளிலும் நடந்துகொண்டிருந்தார்கள். 9 செய்யத்தகாத காரியங்களை இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக இரகசியத்தில் செய்ததுமன்றி, காவல்காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான பட்டணங்கள்மட்டுமுள்ள தங்கள் ஊர்களிலெல்லாம் தங்களுக்கு மேடைகளையும் கட்டி, 10 உயரமான சகல மேட்டின்மேலும் பச்சையான சகல மரத்தின்கீழும் தங்களுக்குச் சிலைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் நிறுத்தி, 11 கர்த்தர் தங்களை விட்டுக் குடிவிலக்கின ஜாதிகளைப்போல, சகல மேடைகளிலும் தூபங்காட்டி, கர்த்தருக்குக் கோபமுண்டாகத் துர்க்கிரியைகளைச் செய்து, 12 இப்படிச் செய்யத்தகாது என்று கர்த்தர் தங்களுக்குச் சொல்லியிருந்தும், நரகலான விக்கிரகங்களைச் சேவித்துவந்தார்கள். 13 நீங்கள் உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பி, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டதும், என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பினதுமான நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் தீர்க்கதரிசிகள் ஞானதிருஷ்டிக்காரர் எல்லாரையுங்கொண்டு இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் திடச்சாட்சியாய் எச்சரித்துக்கொண்டிருந்தும், 14 அவர்கள் செவிகொடாமல், தங்கள் தேவனாகிய கர்த்தர்மேல் விசுவாசியாமற்போன கடினக் கழுத்துள்ள தங்கள் பிதாக்களைப்போல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, 15 அவருடைய கட்டளைகளையும், அவர் தங்கள் பிதாக்களோடே பண்ணின அவருடைய உடன்படிக்கையையும், அவர் தங்களுக்குத் திடச்சாட்சியாய்க் காண்பித்த அவருடைய சாட்சிகளையும் வெறுத்துவிட்டு, வீணான விக்கிரகங்களைப் பின்பற்றி வீணராகி, அவர்களைச் சுற்றிலும் இருக்கிறவர்களைப்போல, செய்ய வேண்டாமென்று கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டு விலக்கியிருந்த ஜாதிகளுக்குப் பின்சென்று, 16 தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் விட்டுவிட்டு, இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, விக்கிரகத் தோப்புகளை நாட்டி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு, பாகாலைச் சேவித்தார்கள். 17 அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணி, குறிகேட்டு நிமித்தங்கள் பார்த்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப் போட்டார்கள். 18 ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்; யூதாகோத்திரமாத்திரமே மீதியாயிற்று. 19 யூதா ஜனங்களும் தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளைக் கைக்கொள்ளாமல் இஸ்ரவேல் உண்டாக்கின வழிபாடுகளில் நடந்தார்கள். 20 ஆகையால் கர்த்தர் இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தைவிட்டுத் தள்ளுமட்டாக ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர் கையில் ஒப்புக்கொடுத்தார். 21 இஸ்ரவேலர் தாவீது வம்சத்தைவிட்டுப் பிரிந்து, நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமை ராஜாவாக்கினார்கள்; அப்பொழுது யெரொபெயாம் இஸ்ரவேலைக் கர்த்தரை விட்டுப் பின்வாங்கவும், பெரிய பாவத்தைச் செய்யவும்பண்ணினான். 22 அப்படியே இஸ்ரவேல் புத்திரர் யெரொபெயாம் செய்த எல்லாப் பாவங்களிலும் நடந்து, 23 கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரர் எல்லாரையும் கொண்டு சொல்லியிருந்தபடி, அவர்களைத் தமது சமுகத்தைவிட்டு அகற்றுகிறவரைக்கும், அவைகளை விட்டு விலகாதிருந்தார்கள்; இப்படியே இஸ்ரவேலர் தங்கள் தேசத்தினின்று அசீரியாவுக்குக் கொண்டுபோகப்பட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள். 24 அசீரியா ராஜா, பாபிலோனிலும், கூத்தாவிலும், ஆபாவிலும், ஆமாத்திலும், செப்பர்வாயிமிலும் இருந்து மனுஷரை வரப்பண்ணி, அவர்களை இஸ்ரவேல் புத்திரருக்குப் பதிலாகச் சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றினான்; இவர்கள் சமாரியாவைச் சொந்தமாய்க் கட்டிக்கொண்டு அதின் பட்டணங்களிலே குடியிருந்தார்கள். 25 அவர்கள் அங்கே குடியேறினதுமுதல், கர்த்தருக்குப் பயப்படாததினால், கர்த்தர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அவைகள் அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டது. 26 அப்பொழுது ஜனங்கள் அசீரியா ராஜாவை நோக்கி: நீர் இங்கேயிருந்து அனுப்பி, சமாரியாவின் பட்டணங்களிலே குடியேற்றுவித்த ஜாதிகள் அந்தத் தேசத்துத் தேவனுடைய காரியத்தை அறியாதபடியினால், அவர் அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அந்தத் தேசத்துத் தேவனுடைய காரியத்தை அவர்கள் அறியாதபடியினால், அவைகள் அவர்களைக் கொன்றுபோடுகிறது என்று சொன்னார்கள். 27 அதற்கு அசீரியா ராஜா: நீங்கள் அங்கேயிருந்து கொண்டுவந்த ஆசாரியர்களில் ஒருவனை அங்கே அழைத்துக்கொண்டுபோங்கள்; அவர்கள் அங்கே குடியிருக்கும்படிக்கு, அவன் அவர்களுக்கு அந்தத் தேசத்துத் தேவனுடைய காரியத்தைப் போதிக்கக்கடவன் என்று கட்டளையிட்டான். 28 அப்படியே அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டுபோயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து, பெத்தேலிலே குடியிருந்து, கர்த்தருக்குப் பயந்து நடக்கவேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான். 29 ஆனாலும் அந்தந்த ஜாதி தங்கள் தங்கள் தேவர்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி, அந்தந்த ஜாதியார் குடியேறின தங்கள் தங்கள் பட்டணங்களில் சமாரியர் உண்டுபண்ணின மேடைகளின் கோவில்களில் வைத்தார்கள். 30 பாபிலோனின் மனுஷர் சுக்கோத் பெனோத்தையும், கூத்தின் மனுஷர் நேர்காலையும், ஆமாத்தின் மனுஷர் அசிமாவையும், 31 ஆவியர் நிபேகாசையும் தர்தாக்கையும் உண்டாக்கினார்கள், செப்பர்வியர் செப்பர்வாயிமின் தேவர்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை அக்கினியில் தகனித்து வந்தார்கள். 32 அவர்கள் கர்த்தருக்குப் பயந்ததுமன்றி, மேடைகளிலுள்ள கோவில்களில் தங்களுக்காக ஆராதனை செய்கிறதற்கு, தங்களுக்குள் ஈனமானவர்களை ஆசாரியர்களாகவும் ஏற்படுத்தினார்கள். 33 அப்படியே கர்த்தருக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த ஜாதிகளுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களைச் சேவித்தும் வந்தார்கள். 34 இந்நாள்வரைக்கும் அவர்கள் தங்கள் முந்தின முறைகளின்படியே செய்து வருகிறார்கள்; அவர்கள் கர்த்தருக்குப் பயந்து நடக்கிறதுமில்லை, தங்கள் சுயதிட்டங்கள் முறைமைகளின்படியாகிலும், கர்த்தர் இஸ்ரவேல் என்று பேரிட்ட யாக்கோபின் புத்திரருக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் ஒத்தபடியாகிலும் செய்கிறதுமில்லை. 35 கர்த்தர் இவர்களோடே உடன்படிக்கைபண்ணி, இவர்களுக்குக் கற்பித்தது என்னவென்றால்: நீங்கள் அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும், அவர்களைப் பணிந்துகொள்ளாமலும், சேவியாமலும், அவர்களுக்குப் பலியிடாமலும், 36 உங்களை மகா வல்லமையினாலும் ஓங்கிய புயத்தினாலும் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருக்கே பயந்து, அவரையே பணிந்துகொண்டு, அவருக்கே பலியிட்டு, 37 அவர் உங்களுக்கு எழுதிக்கொடுத்த திட்டங்களின்படியும், முறைமைகளின்படியும், நியாயப்பிரமாணத்தின்படியும், கற்பனைகளின்படியும், நீங்கள் சகல நாளும் செய்கிறதற்குக் கவனமாயிருந்து அந்நிய தேவர்களுக்குப் பயப்படாதிருங்கள். 38 நான் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை நீங்கள் மறவாமலும், அந்நிய தேவர்களுக்குப் பயப்படாமலும், 39 உங்கள் தேவனாகிய கர்த்தருக்கே பயந்து நடப்பீர்களாக; அப்பொழுது அவர் உங்கள் எல்லாச் சத்துருக்களின் கைக்கும் உங்களைத் தப்புவிப்பார் என்று அவர்களுக்குச் சொல்லியிருந்தார். 40 ஆனாலும் அவர்கள் செவிகொடாமல் தங்கள் முந்தின முறைமைகளின்படியே செய்தார்கள். 41 அப்படியே அந்த ஜாதிகள் கர்த்தருக்குப் பயந்தும், தங்கள் விக்கிரகங்களைச் சேவித்தும் வந்தார்கள்; அவர்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் தங்கள் பிதாக்கள் செய்தபடியே இந்நாள்வரைக்கும் செய்துவருகிறார்கள்.

2 இராஜாக்கள் 18

1 இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் மூன்றாம் வருஷத்திலே ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் குமாரனாகிய எசேக்கியா ராஜாவானான். 2 அவன் ராஜாவாகிறபோது, இருபத்தைந்து வயதாயிருந்து, எருசலேமிலே இருபத்தொன்பது வருஷம் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் ஆபி. 3 அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். 4 அவன் மேடைகளை அகற்றி, சிலைகளைத் தகர்த்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, மோசே பண்ணியிருந்த வெண்கலச் சர்ப்பத்தை உடைத்துப்போட்டான்; அந்நாட்கள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் அதற்குத் தூபங்காட்டி வந்தார்கள்; அதற்கு நிகுஸ்தான் என்று பேரிட்டான். 5 அவன் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை. 6 அவன் கர்த்தரை விட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, கர்த்தர் மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான். 7 ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று; அவன் அசீரியா ராஜாவைச் சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான். 8 அவன் பெலிஸ்தரைக் காசாமட்டும் அதின் எல்லைகள் பரியந்தமும், காவலாளர் காக்கிற கோபுரங்கள் தொடங்கி அரணான நகரங்கள் பரியந்தமும் முறிய அடித்தான். 9 இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் குமாரன் ஓசெயாவின் ஏழாம் வருஷத்திற்குச் சரியான எசேக்கியா ராஜாவின் நாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சல்மனாசார் சமாரியாவுக்கு விரோதமாய் வந்து அதை முற்றிக்கைபோட்டான். 10 மூன்று வருஷம் சென்றபின்பு, அவர்கள் அதைப் பிடித்தார்கள்; எசேக்கியாவின் ஆறாம் வருஷத்திலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருஷத்திலும் சமாரியா பிடிபட்டது. 11 அசீரியா ராஜா இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், கோசான் நதியோரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான். 12 அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், அவருடைய உடன்படிக்கையையும் கர்த்தரின் தாசனாகிய மோசே கற்பித்த யாவற்றையும் மீறி, அதற்குச் செவிகொடாமலும் அதின்படி செய்யாமலும் போனார்கள். 13 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து அவைகளைப் பிடித்தான். 14 அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா லாகீசிலுள்ள அசீரியா ராஜாவுக்கு ஆள் அனுப்பி: நான் குற்றஞ்செய்தேன்; என்னைவிட்டுத் திரும்பிப்போம்; நீர் என்மேல் சுமத்துவதைச் சுமப்பேன் என்று சொன்னான்; அப்படியே அசீரியா ராஜா யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின்மேல் முந்நூறு தாலந்து வெள்ளியையும் முப்பது தாலந்து பொன்னையும் சுமத்தினான். 15 ஆதலால் எசேக்கியா கர்த்தரின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரமனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான். 16 அக்காலத்திலே யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா கர்த்தருடைய ஆலயக்கதவுகளிலும் நிலைகளிலும் தான் அழுத்தியிருந்த பொன் தகடுகளைக் கழற்றி அவைகளை அசீரியா ராஜாவுக்குக் கொடுத்தான். 17 ஆகிலும் அசீரியா ராஜா லாகீசிலிருந்து தர்தானையும் ரப்சாரீசையும் ரப்சாக்கேயையும் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவர்கள் எருசலேமுக்கு வந்து, வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்று, 18 ராஜாவை அழைப்பித்தார்கள்; அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவர்களிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள். 19 ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன? 20 யுத்தத்திற்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்று நீ சொல்லுகிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கைவைத்திருக்கிறாய்? 21 இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டு உருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் இப்படியே இருப்பான். 22 நீங்கள் என்னிடத்தில்: எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்லுவீர்களாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும் எருசலேமையும் நோக்கி: எருசலேமிலிருக்கிற இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே. 23 நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக்கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு. 24 கூறாதேபோனால், நீ என் ஆண்டவனுடைய ஊழியக்காரரில் ஒரே ஒரு சிறிய தலைவனின் முகத்தை எப்படித் திருப்புவாய்? இரதங்களோடு குதிரைவீரரும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்? 25 இப்போதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்த ஸ்தலத்தை அழிக்கவந்தேனோ? இந்தத் தேசத்திற்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்றான். 26 அப்பொழுது இல்க்கியாவின் குமாரன் எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும் ரப்சாக்கேயைப் பார்த்து: உமது அடியாரோடே சீரியபாஷையிலே பேசும்; அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள். 27 அதற்கு ரப்சாக்கே: உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும் தங்கள் நீரைக் குடிக்கவும் அலங்கத்திலே தங்கியிருக்கிற மனுஷரண்டைக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும் உன்னண்டைக்குமா என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி, 28 ரப்சாக்கே நின்றுகொண்டு யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தையைக் கேளுங்கள். 29 எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களை என் கையிலிருந்து தப்புவிக்கமாட்டான். 30 கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார்; இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார். 31 எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள்; அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே ராசியாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள்; நான் வந்து, உங்களை உங்கள் தேசத்துக்கு ஒப்பான தானியமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசமும், ஒலிவ எண்ணெயும் தேனுமுள்ள தேசமுமாகிய சீமைக்கு அழைத்துக்கொண்டுபோகுமளவும், 32 அவனவன் தன்தன் திராட்சச்செடியின் கனியையும் தன்தன் அத்திமரத்தின் கனியையும் புசித்து, அவனவன் தன் தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள்; இவ்விதமாய் நீங்கள் சாகாமல் பிழைப்பீர்கள்; கர்த்தர் நம்மைத் தப்புவிப்பார் என்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள். 33 ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ? 34 ஆமாத், அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயிம், ஏனா, ஈவாப் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ? 35 கர்த்தர் எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, அந்தத் தேசங்களுடைய எல்லா தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்கிறார் என்று சொன்னான். 36 ஆனாலும் ஜனங்கள் அவனுக்கு ஒரு வார்த்தையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான். 37 அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரன் யோவாக் என்னும் கணக்கனும் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்குத் தெரிவித்தார்கள்.

2 இராஜாக்கள் 19

1 ராஜாவாகிய எசேக்கியா அதைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்திக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, 2 அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்துக்கு இரட்டு உடுத்திக்கொண்டவர்களாக அனுப்பினான். 3 இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும் கண்டிதமும் தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைபேறு நோக்கியிருக்கிறது, பெறவோ பெலனில்லை. 4 ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளையெல்லாம் உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனைசெய்வார்; ஆகையால் இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள். 5 இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள். 6 அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும். 7 இதோ, அவன் ஒரு செய்தியைக் கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான். 8 அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான். 9 இதோ, எத்தியோப்பியா ராஜாவாகிய தீராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அப்பொழுது அவன் திரும்ப எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: 10 நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லையென்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்த ஒட்டாதே. 11 இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே, நீ தப்புவாயோ? 12 என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும் ஆரானையும் ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ? 13 ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயிம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே? என்று சொல்லுங்கள் என்றான். 14 எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்து நிருபத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப் போய், அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து, 15 கர்த்தரை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர். 16 கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக் கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும்; சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளைக் கேளும். 17 கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும் அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி, 18 அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லும்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள். 19 இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே தேவனாகிய கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்கள் எல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான். 20 அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபின்நிமித்தம் நீ என்னை நோக்கிப் பண்ணின விண்ணப்பத்தைக் கேட்டேன். 21 அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள். 22 யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாயல்லவோ உன் கண்களை மேட்டிமையாக ஏறெடுத்தாய்? 23 உன் ஸ்தானாபதிகளைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரி விருட்சங்களையும் நான் வெட்டி, அதின் கடையாந்தரத் தாபரமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும், 24 நான் அந்நியதேசங்களில் கிணறு வெட்டித் தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்கால்களினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும் பண்ணினேன் என்றும் சொன்னாய். 25 நான் வெகுகாலத்திற்குமுன் அதை நியமித்து, பூர்வநாட்கள்முதல் அதைத் திட்டம்பண்ணினேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகள் ஆக்கும்படிக்கு நானே அதைச் சம்பவிக்கப்பண்ணினேன். 26 அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கிவளருமுன் தீய்ந்துபோம் பயிருக்கும் சமானமானார்கள். 27 உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன். 28 நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளித்து, வீரியம் பேசினது என் செவிகளில் ஏறினபடியினால், நான் என் துறட்டை உன் மூக்கிலும் என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்தவழியே உன்னைத் திருப்பிக்கொண்டுபோவேன் என்று அவனைக்குறித்துச் சொல்லுகிறார். 29 உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள். 30 யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள். 31 மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலும் இருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும். 32 ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்குமுன் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை. 33 அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான். 34 என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான். 35 அன்று இராத்திரியில் சம்பவித்தது என்னவென்றால்: கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம்பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்கள் எல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள். 36 அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டு, திரும்பிப்போய் நினிவேயில் இருந்துவிட்டான். 37 அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, ஆரராத் தேசத்திற்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.

2 இராஜாக்கள் 20

1 அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும்; நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 2 அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி: 3 ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணினான். எசேக்கியா மிகவும் அழுதான். 4 ஏசாயா பாதி முற்றத்தைவிட்டு அப்புறம் போகிறதற்குமுன்னே, கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி, அவர் சொன்னது: 5 நீ திரும்பிப்போய், என் ஜனத்தின் அதிபதியாகிய எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; மூன்றாம் நாளிலே நீ கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவாய். 6 உன் நாட்களோடே பதினைந்து வருஷங்களைக் கூட்டுவேன்; உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் இந்த நகரத்துக்கு ஆதரவாய் இருப்பேன் என்று சொல் என்றார். 7 பின்பு ஏசாயா: அத்திப்பழத்து அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, பிளவையின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான். 8 எசேக்கியா ஏசாயாவை நோக்கி: கர்த்தர் என்னைக் குணமாக்குவதற்கும், மூன்றாம் நாளிலே நான் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவதற்கும் அடையாளம் என்ன என்றான். 9 அதற்கு ஏசாயா: கர்த்தர் தாம் சொன்ன வார்த்தையின்படியே செய்வாரென்பதற்கு, கர்த்தரால் உனக்கு உண்டாகும் அடையாளமாகச் சாயை பத்துப்பாகை முன்னிட்டுப் போகவேண்டுமோ, பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்ப வேண்டுமோ என்று கேட்டான். 10 அதற்கு எசேக்கியா: சாயை பத்துப்பாகை முன்னிட்டுப்போகிறது லேசான காரியம்; அப்படி வேண்டாம்; சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பவேண்டும் என்றான். 11 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில், அவர் ஆகாசுடைய சூரிய கடியாரத்தில் பாகைக்குப் பாகை முன்போன சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார். 12 அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய பெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா எசேக்கியா வியாதிப்பட்டிருக்கிறதைக் கேட்டு, அவனிடத்துக்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான். 13 எசேக்கியா அவர்களை அங்கிகரித்து, பின்பு அவர்களுக்குத் தன் பொக்கிஷசாலை அனைத்தையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும் தன் பொக்கிஷசாலைகளிலுள்ள எல்லாவற்றையும் காண்பித்தான்; தன் அரமனையிலும் தன் ராஜ்யத்தில் எங்கும் எசேக்கியா அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை. 14 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனுஷர் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து வந்தார்கள் என்றான். 15 அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான். 16 அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும். 17 இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும். 18 நீர் பெறப்போகிற உமது சந்தானமாகிய உமது குமாரர்களிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 19 அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான். 20 எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய எல்லா வல்லமையும், அவன் ஒரு குளத்தையும் சாலகத்தையும் உண்டாக்கினதினாலே தண்ணீரை நகரத்திற்குள்ளே வரப்பண்ணினதும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 21 எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 21

1 மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; அவன் தாயின்பேர் எப்சிபாள். 2 கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, 3 தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகாலுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் செய்ததுபோல விக்கிரகத்தோப்பை உண்டாக்கி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு அவைகளைச் சேவித்தான். 4 எருசலேமிலே என் நாமத்தை விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லிக் குறித்த கர்த்தருடைய ஆலயத்திலே அவன் பலிபீடங்களைக் கட்டி, 5 கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டி, 6 தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாள்பார்க்கிறவனும் நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தான். 7 இந்த ஆலயத்திலும், நான் இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் நாமத்தை என்றைக்கும் விளங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லிக் குறித்த ஆலயத்திலே அவன் பண்ணின தோப்புவிக்கிரகத்தை வைத்தான். 8 நான் அவர்களுக்குக் கற்பித்த எல்லாவற்றின்படியேயும், என் தாசனாகிய மோசே அவர்களுக்குக் கற்பித்த எல்லா நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்ய ஜாக்கிரதையாய் இருந்தார்களேயானால், நான் இனி இஸ்ரவேலின் காலை அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தைவிட்டு அலையப்பண்ணுவதில்லை என்று சொல்லியிருந்தார். 9 ஆனாலும் அவர்கள் கேளாதேபோனார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகள் செய்த பொல்லாப்பைப்பார்க்கிலும் அதிகமாய்ச் செய்ய மனாசே அவர்களை ஏவிவிட்டான். 10 ஆகையால் கர்த்தர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு உரைத்தது: 11 யூதாவின் ராஜாவாகிய மனாசே தனக்கு முன்னிருந்த எமோரியர் செய்த எல்லாவற்றைப்பார்க்கிலும் கேடாக இந்த அருவருப்புகளைச் செய்து, தன் நரகலான விக்கிரகங்களால் யூதாவையும் பாவஞ்செய்யப்பண்ணினபடியினால், 12 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, கேட்கப்போகிற யாவருடைய இரண்டு காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும்படியான பொல்லாப்பை நான் எருசலேமின்மேலும் யூதாவின்மேலும் வரப்பண்ணி, 13 எருசலேமின்மேல் சமாரியாவின் மட்டநூலையும் ஆகாப் வீட்டின் தூக்குநூலையும் பிடிப்பேன்; ஒருவன் ஒரு தாலத்தைத் துடைத்துப் பின்பு அதைக் கவிழ்த்துவைக்கிறதுபோல எருசலேமைத் துடைத்துவிடுவேன். 14 அவர்கள் தங்கள் பிதாக்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குக் கோபம் மூட்டிவந்தபடியினால், என் சுதந்தரத்தில் மீதியானதைக் கைவிட்டு, அவர்கள் பகைஞரின் கையில் அவர்களை ஒப்புக்கொடுப்பேன். 15 தங்கள் பகைஞருக்கெல்லாம் கொள்ளையும் சூறையுமாய்ப் போவார்கள் என்றார். 16 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்யும்படியாக, மனாசே யூதாவைப் பாவஞ்செய்யப்பண்ணின அந்தப் பாவமும் தவிர, அவன் எருசலேமை நாலு மூலைவரையும் இரத்தப்பழிகளால் நிரப்பத்தக்கதாய், குற்றமில்லாத இரத்தத்தையும் மிகுதியாகச் சிந்தினான். 17 மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் செய்த பாவமும் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 18 மனாசே தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் ஊசாவின் தோட்டமாகிய தன் அரமனைத் தோட்டத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆமோன் ராஜாவானான். 19 ஆமோன் ராஜாவானபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; யோத்பா ஊரானாகிய ஆரூத்சின் குமாரத்தியான அவன் தாயின்பேர் மெசுல்லேமேத். 20 அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, 21 தன் தகப்பன் நடந்த எல்லா வழியிலும் நடந்து, தன் தகப்பன் சேவித்த நரகலான விக்கிரகங்களைச் சேவித்து அவைகளைப் பணிந்துகொண்டு, 22 கர்த்தரின் வழியிலே நடவாமல், தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டான். 23 ஆமோனின் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, ராஜாவை அவன் அரமனையிலே கொன்றுபோட்டார்கள். 24 அதினால் தேசத்து ஜனங்கள் ராஜாவாகிய ஆமோனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணினவர்களையெல்லாம் வெட்டிப்போட்டு, அவன் குமாரனாகிய யோசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள். 25 ஆமோன் செய்த மற்ற வர்த்தமானங்கள் யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 26 அவன் ஊசாவின் தோட்டத்திலுள்ள அவனுடைய கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசியா ராஜாவானான்.

2 இராஜாக்கள் 22

1 யோசியா ராஜாவாகிறபோது, எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; போஸ்காத் ஊரானாகிய அதாயாவின் குமாரத்தியான அவன் தாயின்பேர் எதிதாள். 2 அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழியிலெல்லாம் வலது இடதுபுறம் விலகாமல் நடந்தான். 3 ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே, ராஜா மெசுல்லாமின் குமாரனாகிய அத்சலியாவின் மகன் சாப்பான் என்னும் சம்பிரதியைக் கர்த்தரின் ஆலயத்துக்கு அனுப்பி: 4 நீ பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் போய், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்டதும் வாசல்காக்கிறவர்கள் ஜனத்தின் கையிலே வாங்கப்பட்டதுமான பணத்தை அவன் தொகைபார்த்து, 5 பிற்பாடு அவர்கள் அதைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்கள் கையிலே கொடுத்து, அவர்கள் அதைக் கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்க்கிறதற்காக அதிலிருக்கிற வேலைக்காரராகிய, 6 தச்சருக்கும், சிற்பாசாரிகளுக்கும், கொற்றருக்கும், ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி வேண்டிய மரங்களையும் வெட்டின கற்களையும் வாங்குகிறதற்கும் செலவழிக்கவேண்டும். 7 ஆகிலும் அந்தப் பணத்தைத் தங்கள் கையில் ஒப்புவித்துக்கொள்ளுகிறவர்களோ காரியத்தை உண்மையாய் நடப்பிக்கிறபடியினால், அவர்களிடத்தில் அதின் கணக்கைக் கேட்கவேண்டியதில்லை என்று சொல் என்றான். 8 அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: நான் கர்த்தரின் ஆலயத்திலே நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கண்டுபிடித்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பானிடத்தில் கொடுத்தான்; அவன் அதை வாசித்தான். 9 அப்பொழுது சம்பிரதியாகிய சாப்பான் ராஜாவினிடத்தில் வந்து, ராஜாவுக்கு மறுஉத்தரவு சொல்லி, ஆலயத்திலே தொகையிட்டுக் கண்ட பணத்தை உமது அடியார் சேர்த்துக் கட்டி, அதைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்கள் கையிலே கொடுத்தார்கள் என்று சொன்னான். 10 சம்பிரதியாகிய சாப்பான் பின்னையும் ராஜாவை நோக்கி: ஆசாரியனாகிய இல்க்கியா என்னிடத்தில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்று அறிவித்து, அதை ராஜாவுக்கு முன்பாக வாசித்தான். 11 ராஜா நியாயப்பிரமாண புஸ்தகத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, 12 ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமுக்கும், மிகாயாவின் குமாரனாகிய அக்போருக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் ராஜா கட்டளையிட்டது: 13 கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் ஜனத்திற்காகவும் யூதாவனைத்திற்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; நமக்காக எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்ய நம்முடைய பிதாக்கள் இந்தப் புஸ்தகத்தின் வார்த்தைகளுக்குச் செவிகொடாதபடியினால், நம்மேல் பற்றியெரிந்த கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான். 14 அப்பொழுது ஆசாரியனாகிய இல்க்கியாவும், அகீக்காமும், அக்போரும், சாப்பானும், அசாயாவும், அர்காசின் குமாரனாகிய திக்வாவின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போய் அவளோடே பேசினார்கள்; அவள் எருசலேமின் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள். 15 அவள் அவர்களை நோக்கி: உங்களை என்னிடத்தில் அனுப்பினவரிடத்தில் நீங்கள் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: 16 இதோ, யூதாவின் ராஜா வாசித்த புஸ்தகத்தின் வார்த்தைகளிலெல்லாம் காட்டியிருக்கிற பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும், அதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன். 17 அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபமுண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் இந்த ஸ்தலத்தின்மேல் பற்றியெரியும்; அது அவிந்துபோவது இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லுங்கள். 18 கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீர் கேட்ட வார்த்தைகளைக் குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: 19 நான் இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாக, அவர்கள் பாழும் சாபமுமாவார்கள் என்று சொன்னதை நீ கேட்டபோது, உன் இருதயம் இளகி, நீ கர்த்தருக்கு முன்பாக உன்னைத் தாழ்த்தி, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்குமுன்பாக அழுதபடியினால் நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன். 20 ஆகையால், இதோ, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேர்த்துக்கொள்ளுவேன்; நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்வாய்; நான் இந்த ஸ்தலத்தின்மேல் வரப்பண்ணும் சகல பொல்லாப்பையும் உன் கண்கள் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்பதைச் சொல்லுங்கள் என்றாள்; இந்த மறுஉத்தரவை அவர்கள் போய் ராஜாவுக்குச் சொன்னார்கள்.

2 இராஜாக்கள் 23

1 அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலும் இருந்த மூப்பரையெல்லாம் அழைப்பித்தான்; அவர்கள் அவனிடத்தில் கூடினபோது, 2 ராஜாவும், அவனோடு யூதாவின் மனுஷர் யாவரும் எருசலேமின் குடிகள் அனைவரும், ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சிறியோர்துவக்கிப் பெரியோர்மட்டுமுள்ள சகலரும் கர்த்தரின் ஆலயத்துக்குப் போனார்கள்; கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான். 3 அப்பொழுது ராஜா, தூண் அருகே நின்று, கர்த்தரைப் பின்பற்றி நடக்கவும், அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கைக்கொள்ளவும், அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றவும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணினான்; ஜனங்கள் எல்லாரும் உடன்படிக்கைக்கு உட்பட்டார்கள். 4 பின்பு ராஜா: பாகாலுக்கும் விக்கிரகத்தோப்புக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் பண்ணப்பட்டிருந்த சகல பணிமுட்டுகளையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறம்பாக்க, பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும் இரண்டாம் வகுப்பிலுள்ள ஆசாரியர்களுக்கும் வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு, அவைகளை எருசலேமுக்குப் புறம்பாய்க் கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து, அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகப்பண்ணினான். 5 யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமைச் சுற்றிலும் மேடைகளின்மேல் தூபங்காட்ட, யூதாவின் ராஜாக்கள் வைத்த பூஜாசாரிகளையும், பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் தூபங்காட்டினவர்களையும் அகற்றிவிட்டான். 6 தோப்பு விக்கிரகத்தைக் கர்த்தரின் ஆலயத்திலிருந்து எருசலேமுக்குப் புறம்பே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோய், அதைக் கீதரோன் ஆற்று ஓரத்திலே சுட்டெரித்து, அதைத் தூளாக்கி, அந்தத் தூளை ஜனபுத்திரருடைய பிரேதக் குழிகளின்மேல் போடுவித்தான். 7 கர்த்தரின் ஆலயத்திற்கு அருகே ஸ்திரீகள் தோப்பு விக்கிரகத்துக்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளை இடித்துப்போட்டான். 8 அவன் யூதாவின் பட்டணங்களிலுள்ள எல்லா ஆசாரியரையும் வரச்சொல்லி, கேபாமுதல் பெயெர்செபாமட்டும் ஆசாரியர்கள் தூபங்காட்டியிருந்த மேடைகளைத் தீட்டாக்கி, ஒலிமுகவாசல்களின் மேடைகளையும், பட்டணத்து வாசலுக்குப்போகும் வழிக்கு இடதுபுறமாயிருக்கிற பட்டணத்தலைவனாகிய யோசுவாவின் வாசற்படியில் இருந்த மேடையையும் இடித்துப்போட்டான். 9 மேடைகளின் ஆசாரியர்கள் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடாமல், தங்கள் சகோதரருக்குள்ளே புளிப்பில்லாத அப்பங்களைப் புசிக்கிறதற்குமாத்திரம் உத்தாரம் பெற்றார்கள். 10 ஒருவனும் மோளேகுக்கென்று தன் குமாரனையாகிலும் தன் குமாரத்தியையாகிலும் தீக்கடக்கப்பண்ணாதபடிக்கு, இன்னோம் புத்திரரின் பள்ளத்தாக்கிலிருக்கிற தோப்பேத் என்னும் ஸ்தலத்தையும் அவன் தீட்டாக்கி, 11 கர்த்தரின் ஆலயத்திற்குள் போகிற இடந்தொடங்கி, பட்டணத்துக்குப் புறம்பே இருக்கிற நாத்தான்மெலெக் என்னும் பிரதானியின் அறைவீடுமட்டும் யூதாவின் ராஜாக்கள் சூரியனுக்கென்று வைத்திருந்த குதிரைகளை அகற்றி, சூரியனின் இரதங்களை அக்கினியில் சுட்டெரித்தான். 12 யூதாவின் ராஜாக்கள் உண்டாக்கினதும், ஆகாசுடைய மேல்வீட்டில் இருந்ததுமான பலிபீடங்களையும், மனாசே கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் உண்டாக்கின பலிபீடங்களையும் ராஜா இடித்து, அவைகளின் தூளை அங்கேயிருந்து எடுத்துக் கீதரோன் ஆற்றில் கொட்டினான். 13 எருசலேமுக்கு எதிரே இருக்கிற நாசமலையின் வலதுபுறத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் சீதோனியரின் அருவருப்பாகிய அஸ்தரோத்திற்கும், மோவாபியரின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோன் புத்திரரின் அருவருப்பாகிய மில்கோமுக்கும் கட்டியிருந்த மேடைகளையும் ராஜா தீட்டாக்கி, 14 சிலைகளை உடைத்து, விக்கிரகத் தோப்புகளை நிர்மூலமாக்கி, அவைகளின் ஸ்தலத்தை மனுஷரின் எலும்புகளால் நிரப்பினான். 15 இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் பெத்தேலில் உண்டாக்கியிருந்த பலிபீடமும் மேடையும் ஆகிய அவ்விரண்டையும் அவன் இடித்து, அந்த மேடையைச் சுட்டெரித்துத் தூளாக்கி, விக்கிரகத்தோப்பையும் சுட்டெரித்தான். 16 யோசியா திரும்பிப்பார்க்கிறபோது அங்கே அந்த மலையிலிருக்கிற கல்லறைகளைக் கண்டு, ஆட்களை அனுப்பி, அந்தக் கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்துவரச்செய்து, இப்படி நடக்கும் என்று தேவனுடைய மனுஷன் கூறின கர்த்தருடைய வார்த்தையின்படியே, அவைகளை அந்தப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து அதைத் தீட்டாக்கினான். 17 அப்பொழுது அவன்: நான் காண்கிற அந்தக் குறிப்படையாளம் என்ன என்று கேட்டதற்கு, அந்தப் பட்டணத்து மனுஷர்: அது யூதாவிலிருந்து வந்து, நீர் செய்த இந்தக் கிரியைகளைப் பெத்தேலின் பலிபீடத்திற்கு விரோதமாய்க் கூறி, அறிவித்த தேவனுடைய மனுஷனின் கல்லறை என்றார்கள். 18 அதற்கு அவன்: இருக்கட்டும், ஒருவனும் அவன் எலும்புகளைத் தொடவேண்டாம் என்றான்; அப்படியே அவன் எலும்புகளைச் சமாரியாவிலிருந்து வந்த தீர்க்கதரிசியின் எலும்புகளோடு விட்டுவிட்டார்கள். 19 கர்த்தருக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேலின் ராஜாக்கள் சமாரியாவின் பட்டணங்களில் உண்டாக்கியிருந்த மேடைகளின் கோவில்களையெல்லாம் யோசியா தகர்த்து, பெத்தேலிலே தான் செய்த செய்கைகளின்படியே அவைகளுக்குச் செய்து, 20 அவ்விடங்களில் இருக்கிற மேடைகளின் ஆசாரியர்களையெல்லாம் பலிபீடங்களின்மேல் கொன்றுபோட்டு, அவைகளின்மேல் மனுஷரின் எலும்புகளைச் சுட்டெரித்து, எருசலேமுக்குத் திரும்பினான். 21 பின்பு ராஜா: இந்த உடன்படிக்கையின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரியுங்கள் என்று சகல ஜனங்களுக்கும் கட்டளையிட்டான். 22 இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளின் நாட்கள் தொடங்கி, இஸ்ரவேலின் ராஜாக்கள் யூதாவின் ராஜாக்கள் ஆகிய அவர்களுடைய சகல நாட்களிலும் இந்தப் பஸ்காவைப்போல் பஸ்கா ஆசரிக்கப்படவில்லை. 23 ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருஷத்திலே கர்த்தருக்கு இந்தப் பஸ்கா எருசலேமிலே ஆசரிக்கப்பட்டது. 24 ஆசாரியனாகிய இல்க்கியா கர்த்தருடைய ஆலயத்தில் கண்டெடுத்த புஸ்தகத்தில் எழுதியிருக்கிற நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை நிறைவேற்றும்படிக்கு, யோசியா அஞ்சனக்காரரையும், குறிசொல்லுகிறவர்களையும், சுரூபங்களையும் நரகலான விக்கிரகங்களையும், யூதாதேசத்திலும் எருசலேமிலும் காணப்பட்ட எல்லா அருவருப்புகளையும் நிர்மூலமாக்கினான். 25 கர்த்தரிடத்துக்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போலொத்த ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை. 26 ஆகிலும், மனாசே கர்த்தருக்குக் கோபமுண்டாக்கின சகல காரியங்களினிமித்தமும் அவர் யூதாவின்மேல் கொண்ட தம்முடைய மகா கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பாமல்: 27 நான் இஸ்ரவேலைத் தள்ளிவிட்டதுபோல யூதாவையும் என் முகத்தை விட்டுத் தள்ளி, நான் தெரிந்துகொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொன்னார். 28 யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 29 அவன் நாட்களில் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்நேகோ அசீரியா ராஜாவுக்கு விரோதமாய் ஐபிராத்து நதிக்குப் போகிறபோது ராஜாவாகிய யோசியா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; பார்வோன்நேகோ அவனை மெகிதோவிலே கண்டபோது, அவனைக் கொன்றுபோட்டான். 30 மரணமடைந்த அவனை அவனுடைய ஊழியக்காரர் ரதத்தின்மேல் ஏற்றி, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அவனை அவன் கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; அப்பொழுது தேசத்தின் ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை அபிஷேகம்பண்ணி, அவன் தகப்பன் ஸ்தானத்தில் அவனை ராஜாவாக்கினார்கள். 31 யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்றுமாதம் எருசலேமில் அரசாண்டான்; லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தியான அவன் தாயின்பேர் அமுத்தாள். 32 அவன் தன் பிதாக்கள் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 33 அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு, பார்வோன்நேகோ அவனை ஆமாத் தேசமான ரிப்லாவிலே பிடித்துக் கட்டுவித்து, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாகச் சுமத்தி, 34 யோசியாவின் குமாரனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் ஸ்தானத்தில் ராஜாவாக வைத்து, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றி, யோவாகாசைக் கொண்டுபோய்விட்டான்; இவன் எகிப்திலே போய் அங்கே மரணமடைந்தான். 35 அந்த வெள்ளியையும் பொன்னையும் யோயாக்கீம் பார்வோனுக்குக் கொடுத்தான்; ஆனாலும் பார்வோனுடைய கட்டளையின்படி அந்தப் பணத்தைக் கொடுக்கும்படி அவன் தேசத்தை மதிப்பிட்டு, அவரவர் மதிப்பின்படி அந்த வெள்ளியையும் பொன்னையும் பார்வோன் நேகோவுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தேசத்து ஜனங்களின் கையிலே தண்டினான். 36 யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ரூமா ஊரானாகிய பெதாயாமின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் செபுதாள். 37 அவன் தன் பிதாக்கள் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

2 இராஜாக்கள் 24

1 அவன் நாட்களிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்தான்; யோயாக்கீம் மூன்று வருஷம் அவனைச் சேவித்து, பின்பு அவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான். 2 அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும் அவன்மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார். 3 மனாசே தன் எல்லாச் செய்கைகளினாலும் செய்த பாவங்களினிமித்தம் யூதாவைத் தமது சமுகத்தை விட்டு அகற்றும்படி கர்த்தருடைய கட்டளையினால் அப்படி நடந்தது. 4 அவன் சிந்தின குற்றமற்ற இரத்தத்திற்காகவும் எருசலேமைக் குற்றமற்ற இரத்தத்தால் நிரப்பினதற்காகவும் கர்த்தர் மன்னிக்கச் சித்தமில்லாதிருந்தார். 5 யோயாக்கீமின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 6 யோயாக்கீம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய யோயாக்கீன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 7 எகிப்தின் ராஜா அப்புறம் தன் தேசத்திலிருந்து புறப்பட்டு வரவில்லை; எகிப்தின் நதிதுவக்கி ஐபிராத்து நதிமட்டும் எகிப்தின் ராஜாவுக்கு இருந்த யாவையும் பாபிலோன் ராஜா பிடித்திருந்தான். 8 யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு வயதாயிருந்து, எருசலேமிலே மூன்றுமாதம் அரசாண்டான்; எருசலேம் ஊரானாகிய எல்நாத்தானின் குமாரத்தியான அவன் தாயின்பேர் நெகுஸ்தாள். 9 அவன் தன் தகப்பன் செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 10 அக்காலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் சேவகர் எருசலேமுக்கு வந்தார்கள்; நகரம் முற்றிக்கை போடப்பட்டது. 11 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய சேவகர் நகரத்தை முற்றிக்கை போடுகையில் அவன் தானும் அதற்கு விரோதமாய் வந்தான். 12 அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனும், அவன் தாயும், அவன் ஊழியக்காரரும், அவன் பிரபுக்களும், பிரதானிகளும் பாபிலோன் ராஜாவினிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள்; அவனைப் பாபிலோன் ராஜா தன் ஆளுகையின் எட்டாம் வருஷத்திலே பிடித்துக்கொண்டான். 13 அங்கேயிருந்து கர்த்தருடைய ஆலயத்தின் சகல பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தில் உண்டாக்கியிருந்த பொன் பணிமுட்டுகளையெல்லாம், கர்த்தர் சொல்லியிருந்தபடியே உடைத்துப்போட்டு, 14 எருசலேமியர் அனைவரும் சகல பிரபுக்களும் சகல பராக்கிரமசாலிகளுமாகிய பதினாயிரம்பேரையும், சகல தச்சரையும் கொல்லரையும் சிறைபிடித்துக்கொண்டுபோனான்; தேசத்தில் ஏழை ஜனங்களே அல்லாமல் வேறொருவரும் மீதியாயிருக்கவில்லை. 15 அவன் யோயாக்கீனையும், ராஜாவின் தாயையும், ராஜாவின் ஸ்திரீகளையும், அவன் பிரதானிகளையும், தேசத்தின் பராக்கிரமசாலிகளையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோனான். 16 இப்படியே பாபிலோன் ராஜா பராக்கிரமசாலிகளான மனுஷராகிய ஏழாயிரம்பேரையும், தச்சரும் கொல்லருமாகிய ஆயிரம்பேரையும், யுத்தம்பண்ணத்தக்க பலசாலிகளையும் பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோனான். 17 அவனுக்குப் பதிலாகப் பாபிலோன் ராஜா அவன் சிறியதகப்பனாகிய மத்தனியாவை ராஜாவாக வைத்து, அவனுக்குச் சிதேக்கியா என்று மறுபேரிட்டான். 18 சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினொரு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; லிப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தியான அவன் தாயின்பேர் அமுத்தாள். 19 யோயாக்கீம் செய்தபடியெல்லாம் அவனும் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 20 எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின்மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாகக் கலகமும்பண்ணினான்.

2 இராஜாக்கள் 25

1 அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிரே பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள். 2 அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது. 3 நாலாம் மாதம் ஒன்பதாந்தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனத்திற்கு ஆகாரம் இல்லாமற்போயிற்று; நகரத்தின் மதிலில் திறப்பு கண்டது. 4 அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ராஜாவுடைய தோட்டத்தின் வழியாய் இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் தப்பி, அவர்களும் ராஜாவுமாய்ச் சமனான பூமியை நோக்கி ஓடிப்போனார்கள். 5 கல்தேயரின் இராணுவத்தார் ராஜாவைப் பின்தொடர்ந்து எரிகோவின் சமனான பூமியில் அவனைப் பிடித்தார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவமெல்லாம் அவனை விட்டுச் சிதறிப்போயிற்று. 6 அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ரிப்லாவிலிருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோய், அவனை நியாயந்தீர்த்து, 7 சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டி, சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டு, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். 8 ஐந்தாம் மாதம் ஏழாந்தேதியிலே நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் பத்தொன்பதாம் வருஷத்திலே, பாபிலோன் ராஜாவின் ஊழியக்காரனாகிய நெபுசராதான் என்னும் காவல் சேனாபதி எருசலேமுக்கு வந்து, 9 கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமின் சகல கட்டடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்துவிட்டான். 10 காவல் சேனாபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச்சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள். 11 நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற ஜனக்கூட்டத்தையும், காவல் சேனாபதியாகிய நெபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான். 12 தேசத்தில் ஏழையான சிலரைத் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டிருந்தான். 13 கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள். 14 செப்புச்சட்டிகளையும், சாம்பல் பாத்திரங்களையும், கத்திகளையும், தூபகலசங்களையும், ஆராதனைக்கடுத்த சகல வெண்கலப் பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டார்கள். 15 சுத்தப் பொன்னும் சுத்த வெள்ளியுமான தூபகலசங்களையும் கலங்களையும் காவல் சேனாபதி எடுத்துக்கொண்டான். 16 சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்துக்காகப் பண்ணுவித்த இரண்டு தூண்களும், ஒரு கடல்தொட்டியும் ஆதாரங்களுமாகிய அந்தச் சகல பணிமுட்டுகளுடைய வெண்கலத்திற்கும் நிறையில்லை. 17 ஒரு தூணின் உயரம் பதினெட்டு முழமாயிருந்தது; அதின்மேல் அதற்கு மூன்றுமுழ உயரமான வெண்கலத் தலைப்பும் உண்டாயிருந்தது; குமிழிலே சுற்றிலும் செய்யப்பட்டிருந்த பின்னலும் மாதளம்பழங்களும் எல்லாம் வெண்கலமாயிருந்தது; மற்றத் தூணும் அதின் பின்னலும் அதைப்போல் இருந்தது. 18 காவல் சேனாபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரரையும் பிடித்தான். 19 நகரத்திலே அவன் யுத்தமனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளிலே நகரத்தில் அகப்பட்ட ஐந்துபேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைவனான இராணுவச்சம்பிரதியையும், தேசஜனத்திலே நகரத்தில் அகப்பட்ட அறுபதுபேரையும் பிடித்தான். 20 அவர்களைக் காவல் சேனாபதியாகிய நெபுசராதான் பிடித்து, ரிப்லாவில் இருக்கிற பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனான். 21 அவர்களைப் பாபிலோன் ராஜா ஆமாத் தேசத்தின் பட்டணமான ரிப்லாவிலே வெட்டிக் கொன்றுபோட்டான்; இப்படியே யூதா ஜனங்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறையிருப்புக்குக் கொண்டுபோகப்பட்டார்கள். 22 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யூதேயாதேசத்தில் மீதியாக வைத்த ஜனத்தின்மேல், சாப்பானின் குமாரனாகிய அகீக்காமின் மகன் கெதலியாவை அதிகாரியாக வைத்தான். 23 பாபிலோன் ராஜா கெதலியாவை அதிகாரியாக வைத்ததை, சகல இராணுவச் சேர்வைக்காரரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது, அவர்கள் மிஸ்பாவில் இருக்கிற கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; அவர்கள் யாரெனில், நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேலும், கரேயாவின் குமாரன் யோகனானும், நெத்தோப்பாத்தியனாகிய தன்கூமேத்தின் குமாரன் செராயாவும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரன் யசனியாவும் அவர்கள் மனுஷருமே. 24 அப்பொழுது கெதலியா அவர்களுக்கும் அவர்கள் மனுஷருக்கும் ஆணையிட்டு: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம்; தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மை உண்டாகும் என்றான். 25 ஏழாம் மாதத்திலே, ராஜவம்சத்திலே பிறந்த எலிசாமாவின் குமாரனாகிய நெத்தனியாவின் குமாரன் இஸ்மவேல் பத்து மனுஷரோடேகூட வந்து, கெதலியாவையும், அவனோடே மிஸ்பாவிலிருந்த யூதரையும், கல்தேயரையும் வெட்டிக் கொன்றுபோட்டான். 26 அப்பொழுது சிறியோரும் பெரியோருமாகிய ஜனங்கள் யாவரும் சேனாபதிகளும் கல்தேயருக்குப் பயந்ததினாலே எழுந்து புறப்பட்டு எகிப்திற்குப் போனார்கள். 27 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தேழாந்தேதியிலே, ஏவில்மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து புறப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி, 28 அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய சிங்காசனத்தைத் தன்னோடே பாபிலோனிலிருந்து ராஜாக்களின் சிங்காசனங்களுக்கு உயரமாக வைத்து, 29 அவனுடைய சிறைச்சாலை வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் நித்தம் தனக்கு முன்பாகப் போஜனம்பண்ணும்படி செய்தான். 30 அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய செலவுக்காக, ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் கொடுக்கப்பட்டுவந்தது.

1 நாளாகமம் 1

1 ஆதாம், சேத், ஏனோஸ், 2 கேனான், மகலாலெயேல், யாரேத், 3 ஏனோக்கு, மெத்தூசலா, லாமேக்கு, 4 நோவா, சேம், காம், யாப்பேத், 5 யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள். 6 கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள். 7 யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள். 8 காமின் குமாரர், கூஷ், மிஸ்ராயிம், பூத், கானான் என்பவர்கள். 9 கூஷின் குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்; ராமாவின் குமாரர், சேபா, திதான் என்பவர்கள். 10 கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான். 11 மிஸ்ராயிம் லூதீமியரையும், ஆனாமியரையும், லெகாபியரையும், நப்தூகியரையும், 12 பத்ரூசியரையும், பெலிஸ்தரைப் பெற்ற கஸ்லூகியரையும், கப்தோரியரையும் பெற்றான். 13 கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், கேத்தையும், 14 எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும், 15 ஏவியரையும், அர்கீயரையும், சீனியரையும், 16 அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும் பெற்றான். 17 சேமின் குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம், ஊத்ஸ், கூல், கேத்தெர், மேசக் என்பவர்கள். 18 அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப் பெற்றான். 19 ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான். 20 யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், ஆசர்மாவேத்தையும், யேராகையும், 21 அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும், 22 ஏபாலையும், அபிமாவேலையும், சேபாவையும், 23 ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்; இவர்கள் எல்லாரும் யொக்தானின் குமாரர். 24 சேம், அர்பக்சாத், சாலா, 25 ஏபேர், பேலேகு, ரெகூ, 26 செரூகு, நாகோர், தேராகு, 27 ஆபிராமாகிய ஆபிரகாம். 28 ஆபிரகாமின் குமாரர், ஈசாக்கு, இஸ்மவேல் என்பவர்கள். 29 இவர்களுடைய சந்ததிகளாவன: இஸ்மவேலின் மூத்த குமாரனாகிய நெபாயோத், கேதார், அத்பியேல், மிப்சாம், 30 மிஷ்மா, தூமா, மாசா, ஆதாத், தேமா, 31 யெத்தூர், நாபீஸ், கேத்மா என்பவர்கள்; இவர்கள் இஸ்மவேலின் குமாரர். 32 ஆபிரகாமின் மறுமனையாட்டியாகிய கேத்தூராள் பெற்ற குமாரர், சிம்ரான், யக்ஷான், மேதான், மீதியான், இஸ்பாக், சூவா என்பவர்கள்; யக்ஷானின் குமாரர், சேபா, தேதான் என்பவர்கள். 33 மீதியானின் குமாரர், ஏப்பா, ஏப்பேர், ஆனோக்கு, அபீதா, எல்தாகா என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் கேத்தூராளின் குமாரர். 34 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் குமாரர், ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள். 35 ஏசாவின் குமாரர், எலீப்பாஸ், ரெகுவேல், எயூஷ், யாலாம், கோராகு என்பவர்கள். 36 எலீப்பாசின் குமாரர், தேமான், ஓமார், செப்பி, கத்தாம், கேனாஸ், திம்னா, அமலேக்கு என்பவர்கள். 37 ரெகுவேலின் குமாரர், நகாத், சேராகு, சம்மா, மீசா என்பவர்கள். 38 சேயீரின் குமாரர், லோத்தான், சோபால், சிபியோன், ஆனா, தீசோன், எத்சேர், தீசான் என்பவர்கள். 39 லோத்தானின் குமாரர், ஓரி, ஓமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள். 40 சோபாலின் குமாரர், அல்வான், மானகாத், ஏபால், செப்பி, ஓனாம் என்பவர்கள்; சிபியோனின் குமாரர், அயா, ஆனாகு என்பவர்கள். 41 ஆனாகின் குமாரரில் ஒருவன் திஷோன் என்பவன்; திஷோனின் குமாரர், அம்ராம், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள். 42 ஏத்சேரின் குமாரர், பில்கான், சகவான், யாக்கான் என்பவர்கள்; திஷானின் குமாரர், ஊத்ஸ், அரான் என்பவர்கள். 43 இஸ்ரவேல் புத்திரரை ஒரு ராஜா ஆளாததற்குமுன்னே, ஏதோம் தேசத்தில் அரசாண்ட ராஜாக்களானவர்கள்: பேயோரின் குமாரன் பேலா என்பவன்; இவன் பட்டணத்தின் பேர் தின்காபா. 44 பேலா மரித்தபின் போஸ்ரா ஊரானாகிய சேராகின் குமாரன் யோபாப் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 45 யோபாப் மரித்தபின், தேமானியரின் தேசத்தானாகிய ஊசாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 46 ஊசாம் மரித்தபின், பேதாதின் குமாரன் ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான், இவன் மீதியானியரை மோவாபின் நாட்டிலே முறிய அடித்தவன்; இவன் பட்டணத்தின்பேர் ஆவீத். 47 ஆதாத் மரித்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 48 சம்லா மரித்தபின், நதியோரமான ரேகோபோத்தானாகிய சவுல் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 49 சவுல் மரித்தபின், அக்போரின் குமாரன் பாகாலானான் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 50 பாகாலானான் மரித்தபின், ஆதாத் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்; இவன் பட்டணத்தின்பேர் பாகி; மேசகாபின் குமாரத்தியாகிய மாத்திரேத்தின் மகளான அவன் மனைவியின் பேர் மெகேதபேல். 51 ஆதாத் மரித்தபின், ஏதோமில் ஏற்பட்ட பிரபுக்களானவர்கள்; திம்னா பிரபு, அல்யா பிரபு, எதேத் பிரபு, 52 அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு, 53 கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு, 54 மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு, இவர்களே ஏதோமின் பிரபுக்கள்.

1 நாளாகமம் 2

1 இஸ்ரவேலின் குமாரர், ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன், 2 தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள். 3 யூதாவின் குமாரர், ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூன்று குமாரர் சூவாவின் மகளான கானான் ஸ்திரீயினிடத்தில் அவனுக்குப் பிறந்தவர்கள்; ஏர் என்னும் யூதாவின் மூத்த குமாரன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனானபடியால் அவர் அவனைக் கொன்றுபோட்டார். 4 அவன் மருமகளாகிய தாமார் அவனுக்குப் பாரேசையும் சேராவையும் பெற்றாள்; யூதாவின் குமாரர் எல்லாரும் ஐந்துபேர். 5 பாரேசின் குமாரர், எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள். 6 சேராவின் குமாரர் எல்லாரும், சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர். 7 சாபத்தீடான விஷயத்திலே துரோகம்பண்ணி இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணின ஆகார் என்பவன், கர்மீ புத்திரரில் ஒருவன். 8 ஏத்தானின் குமாரர் அசரியா முதலானவர்கள். 9 எஸ்ரோனுக்குப் பிறந்த குமாரர், யெர்மெயேல், ராம், கெலுபா என்பவர்கள். 10 ராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் யூதா புத்திரரின் பிரபுவாகிய நகசோனைப் பெற்றான். 11 நகசோன் சல்மாவைப் பெற்றான்; சல்மா போவாசைப் பெற்றான். 12 போவாஸ் ஓபேதைப் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான். 13 ஈசாய் தன் மூத்தகுமாரன் எலியாபையும், அபினதாப் என்னும் இரண்டாம் குமாரனையும், சிம்மா என்னும் மூன்றாம் குமாரனையும், 14 நெதனெயேல் என்னும் நாலாம் குமாரனையும், ரதாயி என்னும் ஐந்தாம் குமாரனையும், 15 ஓத்சேம் என்னும் ஆறாம் குமாரனையும், தாவீது என்னும் ஏழாம் குமாரனையும் பெற்றான். 16 அவர்கள் சகோதரிகள் செருயாள், அபிகாயில் என்பவர்கள்; செருயாளின் குமாரர், அபிசாய், யோவாப், ஆசகேல் என்னும் மூன்றுபேர். 17 அபிகாயில் அமாசாவைப் பெற்றாள்; அமாசாவின் தகப்பன் இஸ்மவேலியனாகிய யெத்தேர் என்பவன். 18 எஸ்ரோனின் குமாரன் காலேப் எரீயோத் என்னப்பட்ட தன் பெண்ஜாதியாகிய அசுபாளாலே பெற்ற குமாரர், ஏசேர், சோபாப், அர்தோன் என்பவர்கள். 19 அசுபாள் சென்றுபோனபின் காலேப் எப்ராத்தை விவாகம்பண்ணினான்; இவள் அவனுக்கு ஊரைப் பெற்றாள். 20 ஊர் ஊரியைப் பெற்றான்; ஊரி பெசலெயேலைப் பெற்றான். 21 பிற்பாடு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரத்தியை விவாகம்பண்ணி, அவளிடத்தில் பிரவேசித்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள். 22 செகூப் யாவீரைப் பெற்றான்; இவனுக்குக் கீலேயாத் தேசத்தில் இருபத்துமூன்று ஊர்கள் இருந்தது. 23 கேசூரையும் ஆராமையும் யாவீரின் கிராமங்களையும், கேனாத்திலுள்ள கிராமங்களாகிய அறுபது ஊர்களையும் அவர்கள் கையிலே வாங்கினார்கள்; இவர்கள் எல்லாரும் கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரர். 24 காலேபின் ஊரான எப்ராத்தாவில் எஸ்ரோன் இறந்துபோனபின், எஸ்ரோனின் பெண்ஜாதியாகிய அபியாள் அவனுக்குத் தெக்கொவாவின் தகப்பனாகிய அசூரைப் பெற்றாள். 25 எஸ்ரோனுக்கு முதற்பிறந்த யெர்மெயேலின் குமாரர், ராம் என்னும் மூத்தவனும், பூனா, ஓரென், ஓத்சேம், அகியா என்பவர்களுமே. 26 அத்தாராள் என்னும் பேருள்ள வேறொரு மனைவியும் யெர்மெயேலுக்கு இருந்தாள்; இவள் ஓனாமின் தாய். 27 யெர்மெயேலுக்கு முதற்பிறந்த ராமின் குமாரர், மாஸ், யாமின், எக்கேர் என்பவர்கள். 28 ஓனாமின் குமாரர், சம்மாய், யாதா என்பவர்கள்; சம்மாயின் குமாரர், நாதாப், அபிசூர் என்பவர்கள். 29 அபிசூருடைய மனைவியின் பேர் அபியாயேல்; அவள் அவனுக்கு அக்பானையும் மோளிதையும் பெற்றாள். 30 நாதாபின் குமாரர், சேலேத், அப்பாயிம் என்பவர்கள்; சேலேத் புத்திரரில்லாமல் மரித்தான். 31 அப்பாயிமின் குமாரர் இஷி முதலானவர்கள்; இஷியின் குமாரர் சேசான் முதலானவர்கள்; சேசானின் குமாரத்தி அக்லாய். 32 சம்மாயின் சகோதரனாகிய யாதாவின் குமாரர், யெத்தெர், யோனத்தான் என்பவர்கள்; யெத்தெர் குமாரரில்லாமல் மரித்தான். 33 யோனத்தானின் குமாரர், பேலேத், சாசா என்பவர்கள்; இவர்கள் யெர்மெயேலின் புத்திரர். 34 சேசானுக்குக் குமாரத்திகளேயன்றிக் குமாரர்கள் இல்லை; சேசானுக்கு யர்கா என்னும் பேருள்ள எகிப்திய வேலைக்காரன் ஒருவன் இருந்தான். 35 சேசான் தன் குமாரத்தியைத் தன் வேலைக்காரனாகிய யர்காவுக்குக் கொடுத்தான்; அவள் அவனுக்கு அத்தாயியைப் பெற்றாள். 36 அத்தாயி நாதானைப் பெற்றான். நாதான் சாபாதைப் பெற்றான். 37 சாபாத் எப்லாலைப் பெற்றான்; எப்லால் ஓபேதைப் பெற்றான். 38 ஓபேத் ஏகூவைப் பெற்றான்; ஏகூ அசரியாவைப் பெற்றான். 39 அசரியா ஏலேத்சைப் பெற்றான்; ஏலேத்ஸ் எலெயாசாவைப் பெற்றான். 40 எலெயாசா சிஸ்மாயைப் பெற்றான்; சிஸ்மாய் சல்லூமைப் பெற்றான். 41 சல்லூம் எக்கமியாவைப் பெற்றான்; எக்கமியா எலிசாமாவைப் பெற்றான். 42 யெர்மெயேலின் சகோதரனாகிய காலேபின் குமாரர், சீப்பின் தகப்பனாகிய மேசா என்னும் முதற்பிறந்தவனும், எப்ரோனின் தகப்பனாகிய மெரேசாவின் குமாரருமே. 43 எப்ரோனின் குமாரர், கோராகு, தப்புவா, ரெக்கேம், செமா என்பவர்கள். 44 செமா யோர்க்கேயாமின் தகப்பனாகிய ரெக்கேமைப் பெற்றான்; ரெக்கேம் சம்மாயைப் பெற்றான். 45 சம்மாயின் குமாரன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன். 46 காலேபின் மறுமனையாட்டியாகிய எப்பாள் ஆரானையும், மோசாவையும், காசேசையும் பெற்றாள்; ஆரான் காசேசைப் பெற்றான். 47 யாதாயின் குமாரர், ரேகேம், யோதாம், கேசாம், பேலேத், எப்பா, சாகாப் என்பவர்கள். 48 காலேபின் மறுமனையாட்டியாகிய மாகாள் சேபேரையும் திர்கானாவையும் பெற்றாள். 49 அவள் மத்மன்னாவின் தகப்பனாகிய சாகாபையும், மக்பேனாவுக்கும் கீபேயாவுக்கும் தகப்பனாகிய சேவாவையும் பெற்றாள்; காலேபின் குமாரத்தி அக்சாள் என்பவள். 50 எப்ராத்தாளிடத்தில் முதற்பிறந்த ஊருடைய குமாரனாகிய காலேபின் குமாரர், கீரியாத்யாரீமின் மூப்பனான சோபாலும், 51 பெத்லெகேமின் மூப்பனான சல்மாவும், பெத்காதேரின் மூப்பனான ஆரேப்புமே. 52 கீரியாத்யாரிமின் மூப்பனான சோபாலின் குமாரர், ஆரோவே, ஆசியம் மெனுகோத் என்பவர்கள். 53 கீரியாத்யாரிமிலிருந்த வம்சங்கள், எத்திரியரும் பூகியரும் சுமாத்தியரும் மிஸ்ராவியருமே; இவர்களிடத்தில் சோராத்தியரும், எஸ்தவோலியரும் பிறந்தார்கள். 54 சல்மாவின் சந்ததிகள், பெத்லெகேமியரும், நேத்தோப்பாத்தியரும், பெத்யோவாப் என்னும் அதரோத் ஊராரும், மானாத்தியரிலும் சோரியரிலும் பாதி ஜனங்களுமே. 55 யாபேசில் குடியிருந்த கணக்கரின் வம்சங்கள், திராத்தியரும் சிமாத்தியரும் சுக்காத்தியருமே; ரேகாப் வீட்டாரின் தகப்பனாகிய அம்மாத்தின் சந்ததியாரான கேனியர் இவர்களே.

1 நாளாகமம் 3

1 தாவீதுக்கு எப்ரோனிலே பிறந்த குமாரர்: யெஸ்ரெயேல் ஊராளான அகிநோவாமிடத்தில் பிறந்த அம்னோன் முதற்பேறானவன்; கர்மேலின் ஊராளான அபிகாயேலிடத்தில் பிறந்த தானியேல் இரண்டாம் குமாரன். 2 கேசூரின் ராஜாவாகிய தல்மாயின் குமாரத்தி மாக்காள் பெற்ற அப்சலோம் மூன்றாம் குமாரன்; ஆகீத் பெற்ற அதோனியா நாலாம் குமாரன். 3 அபித்தாள் பெற்ற செப்பத்தியா ஐந்தாம் குமாரன்; அவன் பெண்ஜாதியாகிய எக்லாள் பெற்ற இத்ரேயாம் ஆறாம் குமாரன். 4 இந்த ஆறு குமாரர் அவனுக்கு எப்ரோனிலே பிறந்தார்கள்; அங்கே ஏழுவருஷமும் ஆறுமாதமும் அரசாண்டான்; எருசலேமிலோ முப்பத்துமூன்று வருஷம் அரசாண்டான். 5 எருசலேமில் அவனுக்குப் பிறந்தவர்கள்: அம்மியேலின் குமாரத்தியாகிய பத்சுவாளிடத்தில் சிமீயா, சோபாப், நாத்தான், சாலொமோன் என்னும் நாலுபேரும், 6 இப்கார், எலிசாமா, எலிப்பெலேத், 7 நோகா, நேபேக், யப்பியா, 8 எலிசாமா, எலியாதா, எலிபேலேத் என்னும் ஒன்பதுபேருமே. 9 மறுமனையாட்டிகளின் குமாரரையும் இவர்கள் சகோதரியாகிய தாமாரையும் தவிர, இவர்களெல்லாரும் தாவீதின் குமாரர். 10 சாலொமோனின் குமாரன் ரெகொபெயாம்; இவனுடைய குமாரன் அபியா; இவனுடைய குமாரன் ஆசா; இவனுடைய குமாரன் யோசபாத். 11 இவனுடைய குமாரன் யோராம்; இவனுடைய குமாரன் அகசியா; இவனுடைய குமாரன் யோவாஸ். 12 இவனுடைய குமாரன் அமத்சியா; இவனுடைய குமாரன் அசரியா; இவனுடைய குமாரன் யோதாம். 13 இவனுடைய குமாரன் ஆகாஸ்; இவனுடைய குமாரன் எசேக்கியா; இவனுடைய குமாரன் மனாசே. 14 இவனுடைய குமாரன் ஆமோன்; இவனுடைய குமாரன் யோசியா. 15 யோசியாவின் குமாரர், முதல் பிறந்த யோகனானும், யோயாக்கீம் என்னும் இரண்டாம் குமாரனும், சிதேக்கியா என்னும் மூன்றாம் குமாரனும், சல்லூம் என்னும் நாலாம் குமாரனுமே. 16 யோயாக்கீமின் குமாரர், எகொனியா முதலானவர்கள்; இவனுக்கு மகனானவன் சிதேக்கியா. 17 கட்டுண்ட எகொனியாவின் குமாரர் சலாத்தியேல், 18 மல்கீராம், பெதாயா, சேனாசார், யெகமியா, ஒசாமா, நெதபியா என்பவர்கள். 19 பெதாயாவின் குமாரர், செருபாபேல், சிமேயி என்பவர்கள்; செருபாபேலின் குமாரர், மெசுல்லாம், அனனியா என்பவர்கள்; இவர்கள் சகோதரி செலோமீத் என்பவள். 20 அசூபா, ஒகேல், பெரகியா, அசதியா, ஊசாபேசேத் என்னும் ஐந்துபேருமே. 21 அனனியாவின் குமாரர், பெலத்தியா, எசாயா என்பவர்கள்; இவனுடைய குமாரன் ரெபாயா; இவனுடைய குமாரன் அர்னான்; இவனுடைய குமாரன் ஒபதியா; இவனுடைய குமாரன் செக்கனியா. 22 செக்கனியாவின் குமாரர், செமாயா முதலானவர்கள்; செமாயாவின் குமாரர், அத்தூஸ், எகெயால், பாரியா, நெயாரியா, செப்பாத் என்னும் ஆறுபேர். 23 நெயாரியாவின் குமாரர், எலியோனாய், எசேக்கியா, அஸ்ரீக்காம் என்னும் மூன்றுபேர். 24 எலியோனாயின் குமாரர், ஒதாயா, எலியாசிப், பெலாயா, அக்கூப், யோகனான், தெலாயா, ஆனானி என்னும் ஏழுபேர்.

1 நாளாகமம் 4

1 யூதாவின் குமாரர், பாரேஸ், எஸ்ரோன், கர்மீ, ஊர், சோபால் என்பவர்கள். 2 சோபாலின் குமாரன் ராயா யாகாத்தைப் பெற்றான்; யாகாத் அகுமாயியையும், லாகாதையும் பெற்றான்; சோராத்தியரின் வம்சங்கள் இவைகளே. 3 ஏதாம் என்னும் மூப்பனின் சந்ததியார், யெஸ்ரெயேல், இஷ்மா, இத்பாஸ் என்பவர்கள்; இவர்களுடைய சகோதரியின் பேர் அத்செலெல்போனி; 4 கேதோருக்கு மூப்பனான பெனுவெல், உஷாவுக்கு மூப்பனான எசேர் என்பவர்கள்; இவர்கள் பெத்லெகேமுக்கு மூப்பனான எப்ராத்தாவுக்கு முதற்பிறந்த ஊரின் குமாரர். 5 தெக்கோவாவுக்கு மூப்பனான அசூருக்கு ஏலாள், நாராள் என்னும் இரண்டு பெண்ஜாதிகள் இருந்தார்கள். 6 நாராள் அவனுக்கு அகுசாமையும், எப்பேரையும், தெமனியையும், ஆகாஸ்தாரியையும் பெற்றாள்; நாராளின் குமாரர்கள் இவர்களே. 7 ஏலாளின் குமாரர், சேரேத், எத்சோகார், எத்னான் என்பவர்கள். 8 கோஸ் என்பவன் அனூபையும், சோபேபாகையும், ஆருமின் குமாரனாகிய அகர்கேலின் வம்சங்களையும் பெற்றான். 9 யாபேஸ் தன் சகோதரரைப்பார்க்கிலும் கனம்பெற்றவனாயிருந்தான். அவன் தாய்: நான் துக்கத்தோடே அவனைப் பெற்றேன் என்று சொல்லி அவனுக்கு யாபேஸ் என்று பேரிட்டாள். 10 யாபேஸ் இஸ்ரவேலின் தேவனை நோக்கி: தேவரீர் என்னை ஆசீர்வதித்து, என் எல்லையைப் பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னைத் துக்கப்படுத்தாதபடிக்கு அதற்கு என்னை விலக்கிக் காத்தருளும் என்று வேண்டிக்கொண்டான்; அவன் வேண்டிக்கொண்டதைத் தேவன் அருளினார். 11 சூகாவின் சகோதரனாகிய கேலூப் மேகீரைப் பெற்றான்; இவன் எஸ்தோனின் தகப்பன். 12 எஸ்தோன் பெத்ராபாவையும், பசேயாகையும், இர்நாகாஷின் தகப்பனாகிய தெகினாகையும் பெற்றான்; இவர்கள் ரேகாவூர் மனுஷர். 13 கேனாசின் குமாரர், ஒத்னியேல், செராயா என்பவர்கள்; ஒத்னியேலின் குமாரரில் ஒருவன் ஆத்தாத். 14 மெயோனத்தாய் ஒபிராவைப் பெற்றான்; செராயா கராஷீமன் பள்ளத்தாக்குக்கு மூப்பனாகிய யோவாபைப் பெற்றான்; அவர்கள் தொழிலாளிகளாயிருந்தார்கள். 15 எப்புன்னேயின் குமாரனாகிய காலேபின் குமாரர், ஈரு, ஏலா, நாகாம்; ஏலாவின் குமாரரில் ஒருவன் கேனாஸ். 16 எகலெலேலின் குமாரர், சீப், சீப்பா, திரியா, அசாரெயேல். 17 எஸ்றாவின் குமாரர், யெத்தேர், மேரேத், ஏப்பேர், யாலோன்; மேரேத்தின் பெண்ஜாதி மிரியாமையும், சம்மாயியையும், எஸ்தெமோவா ஊருக்கு மூப்பனான இஸ்பாவையும் பெற்றாள். 18 அவன் பெண்ஜாதியாகிய எகுதியாள், கேதோரின் தகப்பனாகிய யாரேதையும், சோக்கோவின் தகப்பனாகிய ஏபேரையும், சனோவாவின் தகப்பனாகிய எக்குத்தியேலையும் பெற்றாள்; மேரேத் விவாகம்பண்ணின பார்வோனின் குமாரத்தியாகிய பித்தியாளின் குமாரர் இவர்களே. 19 நாகாமின் சகோதரியாகிய ஒதியாவினுடைய பெண்ஜாதியின் குமாரர், கர்மியனாகிய ஆபிகேயிலாவும், மாகாத்தியனாகிய எஸ்தெமோவாவுமே. 20 ஷீமோனின் குமாரர், அம்னோன், ரின்னா, பென்கானான், தீலோன் என்பவர்கள், இஷியின் குமாரர், சோகேதும் பென்சோகேதுமே. 21 யூதாவின் குமாரனாகிய சேலாகின் புத்திரர்: லேக்காவூர் மூப்பனான ஏரும், மரேசாவூர் மூப்பனான லாதாகும், மெல்லிய புடவை நெய்த அஸ்பெயா வீட்டு வம்சங்களும், 22 யோக்கீமும், கோசேபாவின் மனுஷரும், மோவாபியரை ஆண்ட யோவாஸ், சாராப் என்பவர்களும், யசுபிலெகேமுமே; இவைகள் பூர்வகாலத்தின் செய்திகள். 23 இவர்கள் குயவராயிருந்து, நெத்தாயிமிலும் கெதேராவிலும் குடியிருந்தார்கள்; ராஜாவின் வேலையை விசாரிக்கிறதற்கு அங்கே வாசம்பண்ணினார்கள். 24 சிமியோனின் குமாரர், நெமுவேல், யாமின், யாரீப், சேரா, சவுல் என்பவர்கள். 25 இவன் குமாரன் சல்லூம்; இவன் குமாரன் மிப்சாம்; இவன் குமாரன் மிஸ்மா. 26 மிஸ்மாவின் குமாரரில் ஒருவன் அம்முவேல்; இவன் குமாரன் சக்கூர்; இவன் குமாரன் சீமேயி. 27 சீமேயிக்குப் பதினாறு குமாரரும் ஆறு குமாரத்திகளும் இருந்தார்கள்; அவன் சகோதரருக்கு அநேகம் பிள்ளைகள் இருந்ததில்லை; அவர்கள் வம்சமெல்லாம் யூதாவின் புத்திரரைப்போலப் பெருகினதுமில்லை. 28 அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆத்சார்சூகாலிலும், 29 பில்லாவிலும், ஏத்சாமிலும், தோலாதிலும், 30 பெத்தூவேலிலும், ஓர்மாவிலும், சிக்லாகிலும், 31 பெத்மர்காபோத்திலும், ஆத்சார்சூசிமிலும், பெத்பிரியிலும், சாராயிமிலும் குடியிருந்தார்கள்; தாவீது ராஜாவாகுமட்டும் இவைகள் அவர்கள் பட்டணங்களாயிருந்தது. 32 அவர்களுடைய பேட்டைகள், ஏத்தாம், ஆயின், ரிம்மோன், தோகேன், ஆசான் என்னும் ஐந்து பட்டணங்கள். 33 அந்தப் பட்டணங்களைச் சுற்றிலும், பாகால்மட்டுமுள்ள அவர்களுடைய எல்லாப் பேட்டைகளும், அவர்கள் வாசஸ்தலங்களும், அவர்களுடைய வம்ச அட்டவணையும் இவைகளே. 34 மெசோபாபும், யம்லேகும், அமத்சியாவின் குமாரன் யோஷாவும், 35 யோவேலும், ஆசியேலின் மகன் செராயாவுக்குப் பிறந்த யோசிபியாவின் குமாரன் ஏகூவும், 36 எலியோனாயும், யாக்கோபாவும், யெசொகாயாவும், அசாயாவும், ஆதியேலும், யெசிமியேலும், பெனாயாவும், 37 செமாயா பெற்ற சிம்ரியின் மகன் யெதாயாவுக்குப் பிறந்த அல்லோனின் புத்திரனாகிய சீப்பியின் குமாரன் சீசாவும் என்று, 38 பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் தங்கள் வம்சங்களில் பிரபுக்களாயிருந்தார்கள்; இவர்கள் பிதாக்களின் வீட்டார் ஏராளமாய்ப் பரம்பினார்கள். 39 தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சலைத் தேடும்படிக்குத் தேதோரின் எல்லையாகிய பள்ளத்தாக்கின் கீழ்ப்புறமட்டும் போய், 40 நல்ல செழிப்பான மேய்ச்சலையும், அமரிக்கையும், சுகமுமுள்ள விஸ்தாரமான தேசத்தையும் கண்டுபிடித்தார்கள்; பூர்வத்திலே காமின் சந்ததியார் அங்கே குடியிருந்தார்கள். 41 பேர்பேராய் எழுதியிருக்கிற இவர்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களிலே அங்கே போய், அங்கே கண்டுபிடித்தவர்களின் கூடாரங்களையும் தாபரங்களையும் அழித்து, இந்நாளிலே இருக்கிறதுபோல, அவர்களைச் சங்காரம்பண்ணி, அங்கே தங்கள் ஆடுகளுக்கு மேய்ச்சல் இருந்தபடியினால், அவர்கள் அந்த ஸ்தலத்திலே குடியேறினார்கள். 42 சிமியோனின் புத்திரராகிய இவர்களில் ஐந்நூறு மனுஷரும், அவர்கள் தலைமைக்காரராகிய இஷியின் குமாரரான பெலத்தியாவும், நெகரியாவும், ரெப்பாயாவும், ஊசியேலும், சேயீர் மலைத்தேசத்திற்குப் போய், 43 அமலேக்கியரில் தப்பி மீதியாயிருந்தவர்களை மடங்கடித்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி அங்கே குடியேறினார்கள்.

1 நாளாகமம் 5

1 ரூபன் இஸ்ரவேலுக்கு முதற்பிறந்த சேஷ்டபுத்திரன்; ஆனாலும் அவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தினபடியினால், கோத்திரத்து அட்டவணையிலே அவன் முதற் பிறந்தவனாக எண்ணப்படாமல், அவனுடைய சேஷ்டபுத்திர சுதந்தரம் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் குமாரருக்குக் கொடுக்கப்பட்டது. 2 யூதா தன் சகோதரரிலே பலத்ததினால் ராஜாதிபத்தியம் அவன் சந்ததியில் உண்டானது; ஆகிலும் சேஷ்டபுத்திர சுதந்தரம் யோசேப்புடையதாயிற்று. 3 இஸ்ரவேலின் முதற்பேறான ரூபனின் குமாரன் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள். 4 யோவேலின் குமாரரில் ஒருவன் செமாயா; இவன் குமாரன் கோக்; இவன் குமாரன் சிமேய். 5 இவன் குமாரன் மீகா; இவன் குமாரன் ராயா; இவன் குமாரன் பாகால். 6 இவன் குமாரன் பேரா; ரூபனியரின் பிரபுவான இவனை அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசர் சிறைபிடித்துப்போனான். 7 தங்கள் சந்ததிகளின்படியே தங்கள் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட அவன் சகோதரரில் தலைவர் ஏயேலும், சகரியாவும், 8 யோவேலின் மகனாகிய சேமாவுக்குப் பிறந்த ஆசாசின் குமாரன் பேலாவும்; இவன் சந்ததியார் ஆரோவேரிலும், நேபோமட்டும், பாகால்மெயோன்மட்டும் வாசம்பண்ணினார்கள். 9 கிழக்கே ஐபிராத்து நதிதொடங்கி வனாந்தரத்தின் எல்லைமட்டும் அவர்கள் வாசம்பண்ணினார்கள்; அவர்கள் ஆடுமாடுகள் கீலேயாத்தேசத்தில் மிகுதியாயிற்று. 10 சவுலின் நாட்களில் ஆகாரியரோடு அவர்கள் யுத்தம்பண்ணி, தங்கள் கையால் அவர்கள் விழுந்தபின், அவர்கள் கூடாரங்களிலே கீலேயாத்தின் கீழ்ப்புறமெல்லாம் குடியேறினார்கள். 11 காத்தின் புத்திரர் அவர்களுக்கு எதிரே பாசான்தேசத்திலே சல்காமட்டும் வாசம்பண்ணினார்கள். 12 அவர்களில் யோவேல் தலைவனும், சாப்பாம் அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; யானாயும் சாப்பாத்தும் பாசானில் இருந்தார்கள். 13 அவர்கள் பிதாக்களின் வீட்டாராகிய அவர்கள் சகோதரர், மிகாவேல், மெசுல்லாம், சேபா, யோராயி, யாக்கான், சீகா, ஏபேர் என்னும் ஏழுபேர். 14 இவர்கள் ஊரிக்குப் பிறந்த அபியேலின் குமாரர்; ஊரி என்பவன் யெரொவாவுக்கும், யெரொவா கீலேயாத்துக்கும், கீலேயாத் மிகாவேலுக்கும், மிகாவேல் எசிசாயிக்கும், எசிசாயி யாதோவுக்கும், யாதோ பூசுக்கும் குமாரராயிருந்தவர்கள். 15 கூனியின் குமாரனாகிய அப்தியேலின் மகன் அகி, அவர்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவனாயிருந்தான். 16 அவர்கள் கீலேயாத்திலிருக்கிற பாசானிலும், அதின் வெளிநிலங்களிலும், சாரோனின் எல்லாப் பேட்டைகளிலும் அவைகளின் கடையாந்தரங்கள்மட்டும் வாசம்பண்ணினார்கள். 17 இவர்களெல்லாரும் யூதாவின் ராஜாவாகிய யோதாமின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமின் நாட்களிலும் தங்கள் வம்சத்து அட்டவணைப்படி தொகை ஏற்றப்பட்டார்கள். 18 ரூபன் புத்திரரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும் கேடகமும் பட்டயமும் எடுத்து, வில்லெய்து, யுத்தத்திற்குப் பழகி, படைக்குப் போகத்தக்க சேவகர் நாற்பத்துநாலாயிரத்து எழுநூற்று அறுபதுபேராயிருந்தார்கள். 19 அவர்கள் ஆகாரியரோடும், யெத்தூர் நாப்பீஸ் நோதாப் என்பவர்களோடும் யுத்தம்பண்ணுகிறபோது, 20 அவர்களோடே எதிர்க்கத் துணை பெற்றபடியினால், ஆகாரியரும் இவர்களோடிருக்கிற யாவரும் அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டார்கள்; அவர்கள் யுத்தத்திலே தேவனை நோக்கிக் கூப்பிட்டு, அவர்மேல் நம்பிக்கைவைத்தபடியினால் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார். 21 அவர்கள் இவர்களுக்கு இருந்த மிருகஜீவன்களாகிய ஐம்பதினாயிரம் ஒட்டகங்களையும், இரண்டுலட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், மனுஷரில் லட்சம்பேர்களையும் பிடித்தார்கள். 22 யுத்தம் தேவனால் நடந்தபடியினால் அநேகர் வெட்டுண்டு விழுந்தார்கள்; தாங்கள் சிறைப்பட்டுப்போகுமட்டும் இவர்களுடைய ஸ்தலத்திலே குடியிருந்தார்கள். 23 மனாசேயின் பாதிக்கோத்திரத்துப் புத்திரரும் அந்தத் தேசத்தில் குடியிருந்து, பாசான்தொடங்கிப் பாகால் எர்மோன்மட்டும், செனீர்மட்டும், எர்மோன் பர்வதமட்டும் பெருகியிருந்தார்கள். 24 அவர்கள் தங்கள் பிதாக்களின் வீட்டுத் தலைவராகிய ஏப்பேர், இஷி, ஏலியேல், அஸ்ரியேல், எரேமியா, ஒதாவியா, யாதியேல் என்பவர்கள் பராக்கிரம வீரரான மனுஷரும் பேர்பெற்ற தலைவருமாயிருந்தார்கள். 25 அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனுக்குத் துரோகம்பண்ணி, தேவன் அவர்களுக்கு முன்பாக அழித்திருந்த தேச ஜனங்களின் தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போனார்கள். 26 ஆகையால் இஸ்ரவேலின் தேவன் அசீரியா ராஜாவாகிய பூலின் ஆவியையும், அசீரியா ராஜாவாகிய தில்காத்பில்நேசரின் ஆவியையும் எழுப்பினதினாலே, அவன் ரூபனியரும் காத்தியரும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருமாகிய அவர்களைச் சிறைபிடித்து, இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, ஆலாவுக்கும் ஆபோருக்கும் ஆராவுக்கும் கோசான் ஆற்றங்கரைக்கும் கொண்டுபோனான்.

1 நாளாகமம் 6

1 லேவியின் குமாரர், கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள். 2 கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள். 3 அம்ராமின் பிள்ளைகள், ஆரோன், மோசே, மிரியாம் என்பவர்கள்; ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள். 4 எலெயாசார் பினெகாசைப் பெற்றான்; பினெகாஸ் அபிசுவாவைப் பெற்றான். 5 அபிசுவா புக்கியைப் பெற்றான்; புக்கி ஊசியைப் பெற்றான். 6 ஊசி செராகியாவைப் பெற்றான்; செராகியா மெராயோதைப் பெற்றான். 7 மெராயோத் அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான். 8 அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் அகிமாசைப் பெற்றான். 9 அகிமாஸ் அசரியாவைப் பெற்றான்; அசரியா யோகனானைப் பெற்றான். 10 யோகனான் அசரியாவைப் பெற்றான்; சாலொமோன் எருசலேமில் கட்டின ஆலயத்திலே ஆசாரிய பணிவிடையைச் செய்தவன் இவன்தான். 11 அசரியா அமரியாவைப் பெற்றான்; அமரியா அகிதூபைப் பெற்றான். 12 அகிதூப் சாதோக்கைப் பெற்றான்; சாதோக் சல்லூமைப் பெற்றான். 13 சல்லூம் இல்க்கியாவைப் பெற்றான்; இல்க்கியா அசரியாவைப் பெற்றான். 14 அசரியா செராயாவைப் பெற்றான்; செராயா யோசதாக்கைப் பெற்றான். 15 கர்த்தர் நேபுகாத்நேச்சாரைக்கொண்டு யூதா ஜனங்களையும் எருசலேமியரையும் சிறைபிடித்துக்கொண்டுபோகச் செய்தபோது யோசதாக்கும் சிறைப்பட்டுப்போனான். 16 லேவியின் குமாரர், கெர்சோம், கோகாத், மெராரி என்பவர்களே. 17 கெர்சோமுடைய குமாரரின் நாமங்கள், லிப்னி, சிமேயி என்பவைகள். 18 கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள். 19 மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள். லேவியருக்கு அவர்கள் பிதாக்கள் வழியாய் உண்டான வம்சங்கள்: 20 கெர்சோமின் குமாரன் லிப்னி; இவன் குமாரன் யாகாத்; இவன் குமாரன் சிம்மா. 21 இவன் குமாரன் யோவா; இவன் குமாரன் இத்தோ; இவன் குமாரன் சேரா; இவன் குமாரன் யாத்திராயி. 22 கோகாத்தின் குமாரரில் ஒருவன் அம்மினதாப், இவன் குமாரன் கோராகு; இவன் குமாரன் ஆசீர். 23 இவன் குமாரன் எல்க்கானா; இவன் குமாரன் அபியாசாப்; இவன் குமாரன் ஆசீர். 24 இவன் குமாரன் தாகாத்; இவன் குமாரன் ஊரியேல்; இவன் குமாரன் ஊசியா; இவன் குமாரன் சவுல். 25 எல்க்கானாவின் குமாரர், அமாசாயி, ஆகிமோத் என்பவர்கள். 26 எல்க்கானாவின் குமாரரில் ஒருவன் சோபாய்; இவன் குமாரன் நாகாத். 27 இவன் குமாரன் எலியாப்; இவன் குமாரன் எரோகாம்; இவன் குமாரன் எல்க்கானா. 28 சாமுவேலின் குமாரர், அவனுடைய முதற்பேறான வஷ்னீ அபியா என்பவர்கள். 29 மெராரியின் குமாரரில் ஒருவன் மகேலி; இவன் குமாரன் லிப்னி; இவன் குமாரன் சிமேயி; இவன் குமாரன் ஊசா. 30 இவன் குமாரன் சிமெயா; இவன் குமாரன் அகியா; இவன் குமாரன் அசாயா. 31 கர்த்தருடைய பெட்டி நிலைபெற்றபோது, தாவீது கர்த்தருடைய ஆலயத்தில் சங்கீத சேவையை நடத்துகிறதற்கு ஸ்தாபித்தவர்களும், 32 சாலொமோன் எருசலேமிலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டித் தீருமட்டும் ஆசரிப்புக் கூடார வாசஸ்தலத்திற்கு முன்பாகச் சங்கீத சேவனையுடன் தங்கள் முறைமையின்படியே பணிவிடை செய்துவந்தவர்களுமாகிய மனுஷரும் அவர்கள் குமாரருமானவர்கள். 33 கோகாத்தியரின் குமாரரில் ஏமான் என்னும் பாடகன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் சாமுவேலின் குமாரன். 34 இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யெரொகாமின் குமாரன்; இவன் எலியேலின் குமாரன்; இவன் தோவாகின் குமாரன். 35 இவன் சூப்பின் குமாரன்; இவன் இல்க்கானாவின் குமாரன்; இவன் மாகாத்தின் குமாரன்; இவன் அமாசாயின் குமாரன். 36 இவன் எல்க்கானாவின் குமாரன்; இவன் யோவேலின் குமாரன்; இவன் அசரியாவின் குமாரன்; இவன் செப்பனியாவின் குமாரன். 37 இவன் தாகாதின் குமாரன்; இவன் ஆசீரின் குமாரன்; இவன் எபியாசாப்பின் குமாரன்; இவன் கோராகின் குமாரன். 38 இவன் இத்சாரின் குமாரன்; இவன் கோகாத்தின் குமாரன்; இவன் இஸ்ரவேலின் குமாரனாகிய லேவியின் குமாரன். 39 இவன் சகோதரனாகிய ஆசாப் இவன் வலதுபக்கத்திலே நிற்பான்; ஆசாப் பெரகியாவின் குமாரன்; இவன் சிமேயாவின் குமாரன். 40 இவன் மிகாவேலின் குமாரன்; இவன் பாசெயாவின் குமாரன்; இவன் மல்கியாவின் குமாரன். 41 இவன் எத்னியின் குமாரன்; இவன் சேராவின் குமாரன்; இவன் அதாயாவின் குமாரன். 42 இவன் ஏத்தானின் குமாரன்; இவன் சிம்மாவின் குமாரன்; இவன் சீமேயின் குமாரன். 43 இவன் யாகாதின் குமாரன்; இவன் கெர்சோமின் குமாரன்; இவன் லேவியின் குமாரன். 44 மெராரியின் புத்திரராகிய இவர்களுடைய சகோதரர் இடதுபக்கத்திலே நிற்பார்கள்; அவர்களில் ஏதான் என்பவன் கிஷியின் குமாரன்; இவன் அப்தியின் குமாரன்; இவன் மல்லூகின் குமாரன். 45 இவன் அஸபியாவின் குமாரன்; இவன் அமத்சியாவின் குமாரன்; இவன் இல்க்கியாவின் குமாரன். 46 இவன் அம்சியின் குமாரன்; இவன் பானியின் குமாரன்; இவன் சாமேரின் குமாரன். 47 இவன் மகேலியின் குமாரன்; இவன் மூசியின் குமாரன்; இவன் மெராரியின் குமாரன்; இவன் லேவியின் குமாரன். 48 அவர்கள் சகோதரராகிய மற்ற லேவியர் தேவனுடைய ஆலயமாகிய வாசஸ்தலத்தின் பணிவிடைக்கெல்லாம் வைக்கப்பட்டிருந்தார்கள். 49 ஆரோனும் அவன் குமாரரும் சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டும் பீடத்தின்மேல் தூபங்காட்டி, மகா பரிசுத்த ஸ்தலத்தின் எல்லாவேலைக்கும், தேவனுடைய தாசனாகிய மோசே கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தியுண்டாக்குகிறதற்கும் வைக்கப்பட்டிருந்தார்கள். 50 ஆரோனின் குமாரரில் எலெயாசார் என்பவனுடைய குமாரன் பினேகாஸ்; இவன் குமாரன் அபிசுவா. 51 இவன் குமாரன் புக்கி; இவன் குமாரன் ஊசி; இவன் குமாரன் செராகியா. 52 இவன் குமாரன் மெராயோத்; இவன் குமாரன் அமரியா; இவன் குமாரன் அகித்தூப். 53 இவன் குமாரன் சாதோக்; இவன் குமாரன் அகிமாஸ். 54 அவர்கள் பேட்டைகளின்படியே அவர்கள் எல்லைக்குள்ளான அவர்கள் வாசஸ்தலங்களாவன: கோகாத்தியரின் வம்சமான ஆரோனின் புத்திரருக்கு விழுந்த சீட்டின்படியே, 55 யூதாதேசத்திலிருக்கிற எப்ரோனையும் அதைச் சுற்றியிருக்கிற வெளிநிலங்களையும் கொடுத்தார்கள். 56 அந்தப் பட்டணத்தின் வயல்களையும் அதின் பட்டிகளையும் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபுக்குக் கொடுத்தார்கள். 57 இப்படியே ஆரோனின் புத்திரருக்கு எப்ரோன் என்னும் அடைக்கலப்பட்டணங்களில் ஒன்றையும், லிப்னாவையும் அதின் வெளிநிலங்களையும், யாத்தீரையும் எஸ்தெமோவாவையும் அவற்றின் வெளிநிலங்களையும், 58 ஈலேனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும், 59 ஆசானையும் அதின் வெளிநிலங்களையும், பெத்சேமேசையும் அதின் வெளிநிலங்களையும், 60 பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று. 61 கோகாத்தின் மற்றப் புத்திரருக்கு வேறொரு கோத்திர வம்சத்திலும், பாதிக்கோத்திரமாகிய மனாசேயின் பாதியிலும் விழுந்த சீட்டின்படியே பத்துப் பட்டணங்கள் இருந்தது. 62 கெர்சோமின் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படியே, இசக்கார் கோத்திரத்திலும், ஆசேர் கோத்திரத்திலும், நப்தலி கோத்திரத்திலும், பாசானிலிருக்கிற மனாசே கோத்திரத்திலும் பதின்மூன்று பட்டணங்கள் இருந்தது. 63 மெராரியின் புத்திரருக்கு அவர்கள் வம்சங்களின்படியே, ரூபன் கோத்திரத்திலும், காத் கோத்திரத்திலும், செபுலோன் கோத்திரத்திலும் விழுந்த சீட்டின்படி பன்னிரண்டு பட்டணங்கள் இருந்தது. 64 அப்படியே இஸ்ரவேல் புத்திரர் லேவியருக்குக் கொடுத்த பட்டணங்களும் அவைகளின் வெளிநிலங்களும் என்னவென்றால், 65 சீட்டுப்போட்டு, சிலருக்கு யூதா புத்திரரின் கோத்திரத்திலும், சிமியோன் புத்திரரின் கோத்திரத்திலும், பென்யமீன் புத்திரரின் கோத்திரத்திலும், பேர்பேராகச் சொல்லப்பட்ட அந்தப் பட்டணங்களைக் கொடுத்தார்கள். 66 கோகாத் புத்திரரில் மற்ற வம்சங்களுக்கு அவர்கள் எல்லையான பட்டணங்கள் அவர்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே இருந்தது. 67 எவையெனில், அடைக்கலப்பட்டணங்களில் அவர்களுக்கு எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும், 68 யோக்மேயாமையும் அதின் வெளிநிலங்களையும், பேத்ஓரோனையும் அதின் வெளிநிலங்களையும், 69 ஆயலோனையும் அதின் வெளிநிலங்களையும், காத்ரிம்மோனையும் அதின் வெளிநிலங்களையும், 70 மனாசேயின் பாதிக்கோத்திரத்திலே ஆனேரையும் அதின் வெளிநிலங்களையும், பீலியாமையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவைகள் காகாத் புத்திரரிலுள்ள மற்ற வம்சங்களுக்கு இருந்தது. 71 கெர்சோம் புத்திரருக்கு மனாசேயின் பாதிக்கோத்திர வம்சத்திலே பாசானிலிருக்கிற கோலானும் அதின் வெளிநிலங்களும், அஸ்தரோத்தும் அதின் வெளிநிலங்களும், 72 இசக்கார் கோத்திரத்திலே கேதேசும் அதின் வெளிநிலங்களும், தாபிராத்தும் அதின் வெளிநிலங்களும், 73 ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், ஆனேமும் அதின் வெளிநிலங்களும், 74 ஆசேர் கோத்திரத்திலே மாஷாலும் அதின் வெளிநிலங்களும், அப்தோனும் அதின் வெளிநிலங்களும், 75 உக்கோக்கும் அதின் வெளிநிலங்களும், ரேகோபும் அதின் வெளிநிலங்களும், 76 நப்தலி கோத்திரத்திலே கலிலேயாவிலிருக்கிற கேதேசும் அதின் வெளிநிலங்களும், அம்மோனும் அதின் வெளிநிலங்களும், கீரியாத்தாயிமும் அதின் வெளிநிலங்களும் இருந்தது. 77 மெராரியின் மற்றப் புத்திரருக்கு செபுலோன் கோத்திரத்திலே ரிம்மோனும் அதின் வெளிநிலங்களும், தாபோரும் அதின் வெளிநிலங்களும், 78 எரிகோவுக்கு அப்புறமாயிருக்கிற யோர்தானுக்கு அப்பாலே யோர்தானுக்குக் கிழக்கே இருக்கிற ரூபன் கோத்திரத்திலே வனாந்தரத்திலுள்ள பேசேரும் அதின் வெளிநிலங்களும், யாத்சாவும் அதின் வெளிநிலங்களும், 79 கேதேமோத்தும் அதின் வெளிநிலங்களும், மேப்பாத்தும் அதின் வெளிநிலங்களும், 80 காத் கோத்திரத்திலே கீலேயாத்திலுள்ள ராமோத்தும் அதின் வெளிநிலங்களும், மக்னாயீமும் அதின் வெளிநிலங்களும், 81 எஸ்போனும் அதின் வெளிநிலங்களும், யாசேரும் அதின் வெளிநிலங்களும் இருந்தது.

1 நாளாகமம் 7

1 இசக்காருடைய குமாரர், தோலா, பூவா, யசுப், சிம்ரோன் என்னும் நாலுபேர். 2 தோலாவின் குமாரர், ஊசி, ரெப்பாயா, யெரியேல், யக்மாயி, இப்சாம், சாமுவேல் என்பவர்கள்; தோலாவுக்குப் பிறந்த இவர்கள் தங்கள் பிதாக்கள் வம்சத்தலைவரும் தங்கள் சந்ததிகளிலே பராக்கிரமசாலிகளுமாயிருந்தார்கள்; தாவீதின் நாட்களில் அவர்கள் தொகை இருபதினாயிரத்து அறுநூறுபேராயிருந்தது. 3 ஊசியின் குமாரரில் ஒருவன் இஸ்ரகியா; இஸ்ரகியாவின் குமாரர், மிகாயேல், ஒபதியா, யோவேல், இஷியா என்பவர்கள்; இவர்கள் ஐந்துபேரும் தலைவராயிருந்தார்கள். 4 அவர்கள் பிதாக்கள் வம்சத்தாரான அவர்கள் சந்ததிகளில் யுத்தமனுஷரான கூட்டங்கள் முப்பத்தாறாயிரம்பேர் அவர்களோடிருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் பெண்ஜாதிகளும் பிள்ளைகளும் இருந்தார்கள். 5 இசக்காருடைய மற்ற எல்லா வம்சங்களிலும் அவர்களுக்குச் சகோதரரான பராக்கிரமசாலிகள் தங்கள் வம்ச அட்டவணைகளின்படியெல்லாம் எண்பத்தேழாயிரம்பேராயிருந்தார்கள். 6 பென்யமீன் குமாரர், பேலா, பெகேர், யெதியாயேல் என்னும் மூன்றுபேர். 7 பேலாவின் குமாரர், எஸ்போன், ஊசி, ஊசியேல், யெரிமோத், இரி என்பவர்கள்; இவர்கள் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பராக்கிரமசாலிகளான ஐந்து தலைவராயிருந்தார்கள்; இவர்கள் வம்ச அட்டவணைக்குள்ளானவர்கள் இருபத்தீராயிரத்து முப்பத்துநாலுபேர். 8 பெகேரின் குமாரர், செமிரா, யோவாஸ், எலியேசர், எலியோனாய், உம்ரி, யெரிமோத், அபியா, ஆனதோத், அலமேத் என்பவர்கள்; இவர்கள் எல்லாரும் பெகேரின் குமாரர். 9 தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவராகிய அவர்கள் சந்ததிகளின் அட்டவணைக்குள்ளான பராக்கிரமசாலிகள் இருபதினாயிரத்து இருநூறுபேர். 10 யெதியாயேலின் குமாரரில் ஒருவன் பில்கான்; பில்கானின் குமாரர், ஏயூஷ், பென்யமீன், ஏகூத், கெனானா, சேத்தான், தர்ஷீஸ், அகிஷாகார் என்பவர்கள். 11 யெதியாயேலின் குமாரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்கள் வம்சத்தாரில் தலைவராயிருந்தார்கள்; இவர்களில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரான பராக்கிரமசாலிகள் பதினேழாயிரத்து இருநூறுபேர். 12 சுப்பீமும் உப்பீமும் ஈரின் குமாரர், ஊசிம் ஆகேரின் குமாரரில் ஒருவன். 13 நப்தலியின் குமாரரான பில்காளின் பேரன்மார், யாத்சியேல், கூனி, எத்சேர், சல்லூம் என்பவர்கள். 14 மனாசேயின் புத்திரரில் ஒருவன் குலஸ்திரீயினிடத்தில் பிறந்த அஸ்ரியேல்; அவன் மறுமனையாட்டியாகிய அராமிய ஸ்திரீயினிடத்தில் கீலேயாத்தின் தகப்பனாகிய மாகீர் பிறந்தான். 15 மாகீர் மாக்காள் என்னும் பேருள்ள உப்பீம் சுப்பீம் என்பவர்களின் சகோதரியை விவாகம்பண்ணினான்; மனாசேயின் இரண்டாம் குமாரன் செலோப்பியாத்; செலோப்பியாத்திற்குக் குமாரத்திகள் இருந்தார்கள். 16 மாகீரின் பெண்ஜாதியாகிய மாக்காள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பேரேஸ் என்று பேரிட்டாள்; இவன் சகோதரன் பேர் சேரேஸ்; இவனுடைய குமாரர் ஊலாம், ரேகேம் என்பவர்கள். 17 ஊலாமின் குமாரரில் ஒருவன் பேதான்; இவர்கள் மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குப் பிறந்த கீலேயாத் புத்திரர். 18 இவன் சகோதரியாகிய அம்மொளெகேத் இஸ்கோதையும் அபியேசரையும் மாகலாவையும் பெற்றாள். 19 செமிதாவின் குமாரர், அகியான், சேகேம், லிக்கே, அனியாம் என்பவர்கள். 20 எப்பிராயீமின் குமாரரில் ஒருவன் சுத்தெலாக்; இவனுடைய குமாரன் பேரேத்; இவனுடைய குமாரன் தாகாத்; இவனுடைய குமாரன் எலாதா; இவனுடைய குமாரன் தாகாத். 21 இவனுடைய குமாரன் சாபாத்; இவனுடைய குமாரர் சுத்தெலாக், எத்சேர், எலியாத்; இவர்கள் தேசத்தில் பிறந்த காத்தூராருடைய ஆடுமாடுகளைப் பிடிக்கப்போனபடியால் அவர்கள் இவர்களைக் கொன்றுபோட்டார்கள். 22 அவர்கள் தகப்பனாகிய எப்பிராயீம் அநேகநாள் துக்கங்கொண்டாடுகையில், அவன் சகோதரர் அவனுக்கு ஆறுதல் சொல்லவந்தார்கள். 23 பின்பு அவன் தன் பெண்ஜாதியினிடத்தில் பிரவேசித்ததினால், அவள் கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள்; அவன், தன் குடும்பத்துக்குத் தீங்கு உண்டானதினால், இவனுக்குப் பெரீயா என்று பேரிட்டான். 24 இவனுடைய குமாரத்தியாகிய சேராள் கீழ்ப்புறமும் மேற்புறமுமான பெத்தோரோனையும், ஊசேன்சேராவையும் கட்டினவள். 25 அவனுடைய குமாரர், ரேப்பாக், ரேசேப் என்பவர்கள்; இவனுடைய குமாரன் தேலாக்; இவனுடைய குமாரன் தாகான். 26 இவனுடைய குமாரன் லாதான்; இவனுடைய குமாரன் அம்மியூத்; இவனுடைய குமாரன் எலிஷாமா. 27 இவனுடைய குமாரன் நூன்; இவனுடைய குமாரன் யோசுவா. 28 அவர்களுடைய காணியாட்சியும், வாசஸ்தலங்களும், கிழக்கேயிருக்கிற நாரானும், மேற்கேயிருக்கிற கேசேரும் அதின் கிராமங்களும், பெத்தேலும் அதின் கிராமங்களும், சீகேமும் அதின் கிராமங்களும், காசாமட்டுக்குமுள்ள அதின் கிராமங்களும், 29 மனாசே புத்திரரின் பக்கத்திலே பெத்செயானும் அதின் கிராமங்களும், தானாகும் அதின் கிராமங்களும், மெகிதோவும் அதின் கிராமங்களும், தோரும் அதின் கிராமங்களுமே; இவ்விடங்களில் இஸ்ரவேலின் குமாரனாகிய யோசேப்பின் புத்திரர் குடியிருந்தார்கள். 30 ஆசேரின் குமாரர், இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்கள் சகோதரி சேராள். 31 பெரீயாவின் குமாரர், ஏபேர், மல்கியேல் என்பவர்கள்; இவன் பிர்சாவீத்தின் தகப்பன். 32 ஏபேர் யப்லேத்தையும், சோமேரையும், ஒத்தாமையும், இவர்கள் சகோதரியாகிய சூகாளையும் பெற்றான். 33 யப்லேத்தின் குமாரர், பாசாக், பிம்மால், அஸ்வாத் என்பவர்கள்; இவர்களே யப்லேத்தின் குமாரர். 34 சோமேரின் குமாரர் அகி, ரோகா, எகூபா, ஆராம் என்பவர்கள். 35 அவன் சகோதரனாகிய ஏலேமின் குமாரர், சோபாக், இம்னா, சேலேஸ், ஆமால் என்பவர்கள். 36 சோபாக்கின் குமாரர், சூவாக், அர்னெப்பர், சூகால், பேரி, இம்ரா, 37 பேசேர், ஓத், சம்மா, சில்சா, இத்ரான், பேரா என்பவர்கள். 38 யெத்தேரின் குமாரர், எப்புனே, பிஸ்பா, ஆரா என்பவர்கள். 39 உல்லாவின் குமாரர், ஆராக், அன்னியேல், ரித்சியா என்பவர்கள். 40 ஆசேரின் புத்திரராகிய இவர்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவரும் தெரிந்துகொள்ளப்பட்ட பராக்கிரமசாலிகளும், பிரபுக்களின் தலைவருமாயிருந்தார்கள்; அவர்கள் வம்ச அட்டவணைகளில் யுத்தத்திற்குப் போகத்தக்க சேவகரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர்.

1 நாளாகமம் 8

1 பென்யமீன், பேலா என்னும் தன் மூத்த குமாரனையும், அஸ்பால் என்னும் இரண்டாம் குமாரனையும், அகராக் என்னும் மூன்றாம் குமாரனையும், 2 நோகா என்னும் நாலாம் குமாரனையும், ரப்பா என்னும் ஐந்தாம் குமாரனையும் பெற்றான். 3 பேலாவுக்கு இருந்த குமாரர், ஆதார், கேரா, அபியூத் என்பவர்கள். 4 அபிசுவா, நாமான், அகோவா, 5 கேரா, செப்புப்பான், ஊராம் என்பவர்கள் எகூதின் குமாரர். 6 கேபாவின் குடிகளுக்கு மூப்பான தலைவராயிருந்து, இவர்களை மனாகாத்திற்கு அழைத்துக்கொண்டுபோனவர்கள், நாமான், அகியா, கேரா என்பவர்களே. 7 கேரா அவர்களை அங்கே அழைத்துக்கொண்டுபோனபின்பு, ஊசாவையும் அகியூதையும் பெற்றான். 8 அவர்களை அனுப்பிவிட்டபின், சகராயீம் மோவாப் தேசத்திலே ஊசிம் பாராள் என்னும் தன் பெண்ஜாதிகளிடத்திலே பெற்ற பிள்ளைகளைத்தவிர, 9 தன் பெண்ஜாதியாகிய ஓதேசாலே யோவாபையும், சீபீயாவையும், மேசாவையும், மல்காமையும், 10 எயூசையும், சாகியாவையும், மிர்மாவையும் பெற்றான்; பிதாக்களின் தலைவரான இவர்கள் அவனுடைய குமாரர். 11 ஊசிம் வழியாய் அவன் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான். 12 எல்பாலின் குமாரர், ஏபேர், மீஷாம், சாமேத்; இவன் ஓனோவையும் லோதையும் அதின் கிராமங்களையும் உண்டாக்கினவன். 13 பெரீயாவும் சேமாவும் ஆயலோன் குடிகளுடைய பிதாக்களிலே தலைவராயிருந்தார்கள்; இவர்கள் காத்தின் குடிகளை ஓட்டிவிட்டார்கள். 14 அகியோ, சாஷாக், எரேமோத், 15 செபதியா, ஆராத், ஆதேர், 16 மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் குமாரர். 17 செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர், 18 இஸ்மெராயி, இஸ்லியா, யோபாப் என்பவர்கள் எல்பாலின் குமாரர். 19 யாக்கிம், சிக்ரி, சப்தி, 20 எலியேனாய், சில்தாய், எலியேல், 21 அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சிமியின் குமாரர். 22 இஸ்பான், ஏபேர், ஏலியேல், 23 அப்தோன், சிக்ரி, ஆனான், 24 அனனியா, ஏலாம், அந்தோதியா, 25 இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் குமாரர். 26 சம்சேராய், செகரியா, அத்தாலியா, 27 யரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரொகாமின் குமாரர். 28 இவர்கள் தங்கள் சந்ததிகளின் பிதாக்களிலே தலைவராயிருந்து, எருசலேமிலே குடியிருந்தார்கள். 29 கிபியோனிலே குடியிருந்தவன், கிபியோனின் மூப்பன்; அவன் பெண்ஜாதியின்பேர் மாக்காள். 30 அவன் மூத்த குமாரன் அப்தோன் என்பவன்; மற்றவர்கள் சூர், கீஸ், பாகால், நாதாப், 31 கேதோர், அகியோ, சேகேர் என்பவர்கள். 32 மிக்லோத் சிமியாவைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலே தங்கள் சகோதரருக்குச் சமீபத்தில் குடியிருந்தார்கள். 33 நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான். 34 யோனத்தானின் குமாரன் மேரிபால்; மேரிபால் மீகாவைப் பெற்றான். 35 மீகாவின் குமாரர், பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள். 36 ஆகாஸ் யோகதாவைப் பெற்றான்; யோகதா அலமேத்தையும், அஸ்மாவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான். 37 மோசா பினியாவைப் பெற்றான்; இவன் குமாரன் ரப்பா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல். 38 ஆத்சேலுக்கு ஆறுகுமாரர் இருந்தார்கள்; அவர்கள் நாமங்களாவன, அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், செகரியா, ஒபதியா, ஆனான்; இவர்கள் எல்லாரும் ஆத்சேலின் குமாரர். 39 அவன் சகோதரனாகிய எசேக்கின் குமாரர், ஊலாம் என்னும் மூத்தகுமாரனும், ஏகூஸ் என்னும் இரண்டாம் குமாரனும், எலிபேலேத் என்னும் மூன்றாம் குமாரனுமே. 40 ஊலாமின் குமாரர் பராக்கிரமசாலிகளான வில்வீரராய் இருந்தார்கள்; அவர்களுக்கு அநேகம் புத்திரர் பௌத்திரர் இருந்தார்கள்; அவர்கள் தொகை நூற்றைம்பதுபேர்; இவர்கள் எல்லாரும் பென்யமீன் புத்திரர்.

1 நாளாகமம் 9

1 இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் வம்ச வரலாற்றின்படி எண்ணப்பட்டார்கள்; இவர்கள் நாமங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது, யூதா கோத்திரத்தார் தங்கள் துரோகத்தினிமித்தம், பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள். 2 தங்கள் காணியாட்சியிலும் தங்கள் பட்டணங்களிலும் முன் குடியிருந்தவர்கள் இஸ்ரவேலரும் ஆசாரியரும் லேவியரும் நிதினீமியருமே. 3 யூதா புத்திரரிலும், பென்யமீன் புத்திரரிலும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் புத்திரரிலும், எருசலேமில் குடியிருந்தவர்கள் யாரென்றால், 4 யூதாவின் புத்திரனாகிய பேரேசின் சந்ததியில் பானியின் குமாரனாகிய இம்ரியின் மகனான உம்ரிக்குப் பிறந்த அம்மியூதின் குமாரன் ஊத்தாய். 5 சேலாவின் சந்ததியில் மூத்தவனாகிய அசாயாவும், அவன் பிள்ளைகளும், 6 சேராவின் சந்ததியில் யெகுவேலும், அவன் சகோதரராகிய அறுநூற்றுத்தொண்ணூறுபேருமே. 7 பென்யமீன் புத்திரரில் அசெனூவாவின் குமாரனாகிய ஓதாவியாவுக்குப் பிறந்த மெசுல்லாமின் மகன் சல்லு. 8 எரோகாமின் குமாரன் இப்னெயா; மிக்கிரியின் குமாரனாகிய ஊசியின் மகன் ஏலா; இப்னியாவின் குமாரனாகிய ரேகுவேலுக்குப் பிறந்த செபதியாவின் மகன் மெசுல்லாம் என்பவர்களும்; 9 தங்கள் சந்ததிகளின்படி இருந்த இவர்கள் சகோதரராகிய தொளாயிரத்து ஐம்பத்தாறுபேருமே; இந்த மனுஷர் எல்லாரும், தங்கள் பிதாக்களின் வம்சத்திலே பிதாக்களின் தலைவராயிருந்தார்கள். 10 ஆசாரியர்களில் யெதாயா, யோயாரீப், யாகின். 11 அகிதூபின் குமாரனாகிய மெராயோதின் மகன் சாதோக்குக்குப் பிறந்த மெசுல்லாவின் குமாரனாகிய இல்க்கியாவின் மகன் அசரியா என்பவன் தேவாலயத்து விசாரணைக்கர்த்தன். 12 மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூருக்குப் பிறந்த எரோகாமின் மகன் அதாயா; இம்மெரின் குமாரனாகிய மெசில்லேமித்தின் மகன் மெசுல்லாமுக்குப் பிறந்த யாசெராவின் குமாரனாகிய ஆதியேலின் மகன் மாசாய் என்பவர்களும், 13 அவர்கள் சகோதரரும், தங்கள் பிதாக்களின் வம்சத்தலைவரான ஆயிரத்துஎழுநூற்று அறுபதுபேர் தேவாலயத்துக்கடுத்த பணிவிடைக்குத் திறமையுள்ளவர்களாயிருந்தார்கள். 14 லேவியரில் மெராரியின் சந்ததியான அசபியாவின் குமாரனாகிய அஸ்ரீகாமுக்குப் பிறந்த அசூபின் மகன் செமாயா, 15 பக்பக்கார், ஏரேஸ், காலால், ஆசாபின் குமாரனாகிய சிக்ரிக்குப் பிறந்த மிகாவின் மகன் மத்தனியா, 16 எதுத்தூனின் குமாரனாகிய காலாலுக்குப் பிறந்த செமாயாவின் மகன் ஒபதியா; நெத்தோபாத்தியரின் கிராமங்களில் குடியிருந்த எல்க்கானாவின் குமாரனாகிய ஆசாவின் மகன் பெரகியா, 17 வாசல் காவலாளிகளாகிய சல்லூம், அக்கூப், தல்மோன், அகிமான் என்பவர்களும், இவர்கள் சகோதரருமே; இவர்கள் தலைவன் சல்லூம். 18 லேவிபுத்திரரின் சேனைகளில் இவர்கள் கிழக்கேயிருக்கிற ராஜாவின் வாசலைக் காவல்காத்துவந்தார்கள். 19 கோராகின் குமாரனாகிய எபியாசாபுக்குப் பிறந்த கோரேயின் மகன் சல்லூமும், அவன் பிதாவின் வம்சத்தாராகிய அவனுடைய சகோதரருமான கோராகியர் பணிவிடைவேலையை விசாரித்து, அவர்கள் பிதாக்கள் கர்த்தருடைய பாளயத்திலே வாசஸ்தலத்திற்குப்போகிற வழியைக் காவல்காத்ததுபோல, வாசஸ்தலத்து வாசல்களைக் காத்துவந்தார்கள். 20 எலெயாசாரின் குமாரனாகிய பினேகாசுடனே கர்த்தர் இருந்தபடியினால், அவன் முற்காலத்திலே அவர்கள்மேல் விசாரணைக்காரனாயிருந்தான். 21 மெசெல்மியாவின் குமாரனாகிய சகரியா ஆசரிப்புக் கூடாரவாசல் காவல்காரனாயிருந்தான். 22 வாசல்களைக் காக்கிறதற்குத் தெரிந்துகொள்ளப்பட்ட இவர்களெல்லாரும் இருநூற்றுப் பன்னிரண்டுபேராயிருந்து, தங்கள் கிராமங்களின்படியே தங்கள் வம்சத்து அட்டவணைகளில் எழுதப்பட்டார்கள்; தாவீதும், ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலும், அவர்களைத் தங்கள் வேலைகளில் வைத்தார்கள். 23 அப்படியே அவர்களும், அவர்கள் குமாரரும் கர்த்தருடைய ஆலயமாகிய வாசஸ்தலத்து வாசல்களைக் காக்கிறவர்களை முறைமுறையாய் விசாரித்து வந்தார்கள். 24 வாசல்களைக் காக்கிறவர்கள் நாலுதிசைகளாகிய கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்தார்கள். 25 அவர்கள் சகோதரர் தங்கள் கிராமங்களிலிருந்து, ஏழுநாளுக்கு ஒருவிசை மாறிமாறி அவர்களோடிருக்க வருவார்கள். 26 தேவாலயத்தின் பண்டகசாலைகள்மேலும் பொக்கிஷசாலைகள்மேலுமுள்ள விசாரணை உத்தியோகம் லேவியரான அந்த நாலு பிரதான காவலாளர்வசத்தில் ஒப்புவிக்கப்பட்டது. 27 காவல் அவர்களுக்கு ஒப்புவித்திருந்தபடியால் அவர்கள் தேவாலயத்தைச் சுற்றிலும் இராத்தங்கியிருந்து, காலமே கதவுகளைத் திறந்துவிடுவார்கள். 28 அவர்களில் சிலரிடத்தில் ஆராதனை பணிமுட்டுகள் ஒப்புவித்திருந்தது; அவர்கள் அவைகளை எண்ணி உள்ளே கொண்டுபோய், எண்ணி வெளியே கொண்டுவருவார்கள். 29 அவர்களில் சிலர் மற்றப் பணிமுட்டுகளின்மேலும், பரிசுத்த பாத்திரங்கள் எல்லாவற்றின்மேலும், மெல்லிய மா, திராட்சரசம், எண்ணெய், சாம்பிராணி, சுகந்தவர்க்கங்களின்மேலும் விசாரணைக்காரராயிருந்தார்கள். 30 ஆசாரியரின் குமாரரில் சிலர் சுகந்தவர்க்கத்தால் பரிமளதைலம் இறக்குவார்கள். 31 லேவியரில் கோராகியனான சல்லூமின் மூத்த குமாரனாகிய மத்தித்தியாவுக்குப் பலகாரம் சுடுகிற வேலையின் விசாரிப்பு ஒப்புவித்திருந்தது. 32 அவர்கள் சகோதரராகிய கோகாத்தியரின் புத்திரரில் சிலருக்கு ஓய்வுநாள்தோறும் சமுகத்து அப்பங்களை ஆயத்தப்படுத்தும் விசாரிப்பு இருந்தது. 33 இவர்களில் லேவியருடைய பிதாக்களின் தலைவராகிய சங்கீதக்காரர் இரவும்பகலும் தங்கள் வேலையை நடத்தவேண்டியிருந்தபடியால், மற்ற வேலைக்கு நீங்கலாய்த் தங்கள் அறைகளில் இருந்தார்கள். 34 லேவியரில் பிதாக்களின் தலைவராகிய இவர்கள் தங்கள் சந்ததிகளுக்குத் தலைமையானவர்கள்; இவர்கள் எருசலேமிலே குடியிருந்தார்கள். 35 கிபியோனிலே குடியிருந்தவர்கள் யாரென்றால், கிபியோனின் மூப்பனாகிய யெகியேல், இவன் பெண்ஜாதியின்பேர் மாக்காள். 36 அவன் மூத்த குமாரனாகிய அப்தோனும், சூர், கீஸ், பாகால், நேர், நாதாப், 37 கேதோர், அகியோ, சகரியா, மிக்லோத் என்பவர்களுமே. 38 மிக்லோத் சீமியாமைப் பெற்றான்; இவர்களும் தங்கள் சகோதரரோடுங்கூட எருசலேமிலிருக்கிற தங்கள் சகோதரருக்குச் சமீபத்தில் குடியிருந்தார்கள். 39 நேர் கீசைப் பெற்றான்; கீஸ் சவுலைப் பெற்றான்; சவுல் யோனத்தானையும், மல்கிசூவாவையும், அபினதாபையும், எஸ்பாலையும் பெற்றான். 40 யோனத்தானின் குமாரன் மெரிபால்; மெரிபால் மீகாவைப் பெற்றான். 41 மீகாவின் குமாரர், பித்தோன், மேலேக், தரேயா, ஆகாஸ் என்பவர்கள். 42 ஆகாஸ் யாராகைப் பெற்றான்; யாராக் அலெமேத்தையும், அஸ்மவேத்தையும், சிம்ரியையும் பெற்றான்; சிம்ரி மோசாவைப் பெற்றான். 43 மோசா பினியாவைப் பெற்றான்; இவன் குமாரன் ரப்பாயா; இவன் குமாரன் எலியாசா; இவன் குமாரன் ஆத்சேல். 44 ஆத்சேலுக்கு ஆறு குமாரர் இருந்தார்கள்; அவர்கள் நாமங்களாவன, அசரீக்காம், பொக்குரு, இஸ்மவேல், சேராயா, ஒபதியா, ஆனான்; இவர்கள் ஆத்சேலின் குமாரர்.

1 நாளாகமம் 10

1 பெலிஸ்தர் இஸ்ரவேலரோடே யுத்தம்பண்ணினார்கள்; இஸ்ரவேல் பெலிஸ்தருக்கு முன்பாக முறிந்தோடி, கில்போவா மலையிலே வெட்டுண்டு விழுந்தார்கள். 2 பெலிஸ்தர் சவுலையும் அவன் குமாரரையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் குமாரராகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூவாவையும் வெட்டிப்போட்டார்கள். 3 சவுலுக்கு விரோதமாய் யுத்தம் பலத்தது; வில்வீரர் அவனைக்கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரருக்கு மிகவும் பயப்பட்டு, 4 தன் ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து என்னை அவமானப்படுத்தாதபடிக்கு, நீ உன் பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதினால் அப்படிச் செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது சவுல் பட்டயத்தை நட்டு அதின்மேல் விழுந்தான். 5 சவுல் செத்துப்போனதை அவன் ஆயுததாரி கண்டபோது, அவனும் பட்டயத்தின்மேல் விழுந்து செத்துப்போனான். 6 அப்படியே சவுலும், அவன் மூன்றுகுமாரரும், அவன் வீட்டு மனுஷர் அனைவரும் கூடச் செத்துப்போனார்கள். 7 ஜனங்கள் முறிந்தோடினதையும், சவுலும் அவன் குமாரரும் செத்துப்போனதையும், பள்ளத்தாக்கிலுள்ள இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது தங்கள் பட்டணங்களை விட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் வந்து, அவைகளில் குடியிருந்தார்கள். 8 வெட்டுண்டவர்களின் வஸ்திரங்களை உரிந்துகொள்ளப் பெலிஸ்தர் மறுநாளில் வந்தபோது, அவர்கள் சவுலையும் அவன் குமாரரையும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கக் கண்டு, 9 அவன் வஸ்திரங்களை உரிந்து, அவன் தலையையும் அவன் ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, தங்கள் விக்கிரகங்களுக்கும் ஜனங்களுக்கும் அதைப் பிரசித்தப்படுத்தும்படி பெலிஸ்தருடைய தேசத்திலே சுற்றிலும் செய்தி அனுப்பி, 10 அவன் ஆயுதங்களைத் தங்கள் தேவர்களின் கோவிலிலே வைத்து, அவன் தலையைத் தாகோன் கோவிலிலே தூக்கிவைத்தார்கள். 11 பெலிஸ்தர் சவுலுக்குச் செய்த எல்லாவற்றையுங் கீலேயாத்தேசத்து யாபேஸ் பட்டணத்தார் யாவரும் கேட்டபோது, 12 பராக்கிரமசாலிகள் எல்லாரும் எழுந்துபோய், சவுலின் உடலையும் அவன் குமாரரின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவர்கள் எலும்புகளை யாபேசிலிருக்கிற ஒரு கர்வாலிமரத்தின்கீழ் அடக்கம்பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள். 13 அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமல், கர்த்தருக்குச் செய்த தன் துரோகத்தினிமித்தமும், அவன் கர்த்தரைத் தேடாமல் அஞ்சனம் பார்க்கிறவர்களைக் கேட்கும்படிக்குத் தேடினதினிமித்தமும் செத்துப்போனான். 14 அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்யபாரத்தை ஈசாயின் குமாரனாகிய தாவீது வசமாகத் திருப்பினார்.

1 நாளாகமம் 11

1 இஸ்ரவேலர் எல்லாரும் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் கூடிவந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள். 2 சவுல் இன்னும் ராஜாவாயிருக்கும்போதே, நீர் இஸ்ரவேலை நடத்திக்கொண்டுபோய் நடத்திக்கொண்டுவருவீர்; என் ஜனமாகிய இஸ்ரவேலை நீர் மேய்த்து, என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் தலைவனாயிருப்பீர் என்று உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்குச் சொல்லியும் இருக்கிறார் என்றார்கள். 3 அப்படியே இஸ்ரவேலின் மூப்பரெல்லாரும் எப்ரோனிலே ராஜாவினிடத்தில் வந்தார்கள்; தாவீது எப்ரோனிலே கர்த்தருக்கு முன்பாக அவர்களோடு உடன்படிக்கை பண்ணிக்கொண்டபின்பு, கர்த்தர் சாமுவேலைக்கொண்டு சொன்ன வார்த்தையின்படியே அவர்கள் தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம்பண்ணினார்கள். 4 பின்பு தாவீது இஸ்ரவேலனைத்தோடுங்கூட எபூசாகிய எருசலேமுக்குப் போனான்; எபூசியர் அத்தேசத்தின் குடிகளாயிருந்தார்கள். 5 அப்பொழுது எபூசின் குடிகள் தாவீதை நோக்கி: நீ இதற்குள் பிரவேசிப்பதில்லை என்றார்கள்; ஆனாலும் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான்; அது தாவீதின் நகரமாயிற்று. 6 எபூசியரை முறிய அடிக்கிறதில் எவன் முந்தினவனாயிருக்கிறானோ, அவன் தலைவனும் சேனாபதியுமாயிருப்பானென்று தாவீது சொல்லியிருந்தான்; செருயாவின் குமாரனாகிய யோவாப் முந்தி ஏறித் தலைவனானான். 7 தாவீது அந்தக் கோட்டையில் வாசம்பண்ணினபடியினால், அது தாவீதின் நகரம் என்னப்பட்டது. 8 பிற்பாடு அவன் நகரத்தை மில்லோ தொடங்கிச் சுற்றிலும் கட்டினான்; யோவாப் நகரத்தின் மற்ற இடங்களைப் பழுதுபார்த்தான். 9 தாவீது நாளுக்குநாள் விருத்தியடைந்தான்; சேனைகளுடைய கர்த்தர் அவனோடேகூட இருந்தார். 10 கர்த்தர் இஸ்ரவேலுக்காகச் சொன்ன வார்த்தையின்படியே, தாவீதை ராஜாவாக்கும்படி அவன் வசமாயிருந்து ராஜ்யபாரம்பண்ணுகிற அவனிடத்திலும், சகல இஸ்ரவேலரிடத்திலும், வீரதத்துவத்தைப் பாராட்டின பிரதான பராக்கிரமசாலிகளும், 11 தாவீதுக்கு இருந்த அந்தப் பராக்கிரமசாலிகளின் இலக்கமுமாவது: அக்மோனியின் குமாரனாகிய யாஷோபியாம் என்னும் சேர்வைக்காரரின் தலைவன்; இவன் முந்நூறுபேர்களின்மேல் தன் ஈட்டியை ஓங்கி அவர்களை ஒருமிக்கக்கொன்றுபோட்டான். 12 இவனுக்கு இரண்டாவது அகோயின் குமாரனாகிய தோதோவின் மகன் எலெயாசார்; இவன் மூன்று பராக்கிரமசாலிகளில் ஒருவன். 13 பெலிஸ்தர் பாஸ்தம்மீமிலிருக்கிற வாற்கோதுமை நிறைந்த வயல்நிலத்தில் யுத்தத்திற்குக் கூடிவந்தபோதும், ஜனம் பெலிஸ்தரைக் கண்டு ஓடினபோதும் இவன் தாவீதோடே அங்கே இருந்தான். 14 அப்பொழுது அவர்கள் அந்த நிலத்தின் நடுவிலே நின்று அதைக் காப்பாற்றிப் பெலிஸ்தரை மடங்கடித்தார்கள்; அதினாலே கர்த்தர் பெரிய ரட்சிப்பை நடப்பித்தார். 15 முப்பது தலைவரில் மூன்றுபேர் அதுல்லாம் என்னும் கன்மலைக் கெபியிலிருக்கிற தாவீதினிடத்தில் போயிருந்தார்கள்; பெலிஸ்தரின் பாளயம் ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் இறங்குகிறபோது, 16 தாவீது அரணான ஒரு இடத்திலிருந்தான்; அப்பொழுது பெலிஸ்தரின் தாணையம் பெத்லெகேமில் இருந்தது. 17 தாவீது பெத்லெகேமின் ஒலிமுகவாசலிலிருக்கிற கிணற்றின் தண்ணீர்மேல் ஆவல்கொண்டு, என் தாகத்திற்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவருகிறவன் யார் என்றான். 18 அப்பொழுது அந்த மூன்றுபேர் பெலிஸ்தரின் பாளயத்திற்குள் துணிந்து புகுந்துபோய், பெத்லெகேமின் ஒலிமுக வாசலிலிருக்கிற கிணற்றிலே தண்ணீர் மொண்டு, தாவீதினிடத்தில் கொண்டுவந்தார்கள்; ஆனாலும் அவன் அதைக் குடிக்க மனதில்லாமல் அதைக் கர்த்தருக்கென்று ஊற்றிப்போட்டு: 19 நான் இதைச் செய்யாதபடிக்கு, என் தேவன் என்னைக் காத்துக்கொள்ளக்கடவர்; தங்கள் பிராணனை எண்ணாமல் போய் அதைக் கொண்டுவந்த இந்த மனுஷரின் ரத்தத்தைக் குடிப்பேனோ என்று சொல்லி அதைக் குடிக்கமாட்டேன் என்றான். இப்படி இந்த மூன்று பராக்கிரமசாலிகளும் செய்தார்கள். 20 யோவாபின் சகோதரனாகிய அபிசாய் அந்த மூன்றுபேரில் பிரதானமானவன்; அவன் தன் ஈட்டியை ஓங்கி, முந்நூறுபேரை மடங்கடித்ததினால் இந்த மூன்றுபேரில் பேர்பெற்றவனானான். 21 இந்த மூன்றுபேரில் அவன் மற்ற இரண்டுபேரிலும் மேன்மையுள்ளவனானதினால், அவர்களில் தலைவனானான்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கு அவன் சமானமானவனல்ல. 22 பராக்கிரமசாலியாகிய யோய்தாவின் குமாரனும், கப்சேயேல் ஊரானுமாகிய பெனாயாவும் செய்கைகளில் வல்லவனாயிருந்தான்; அவன் மோவாப் தேசத்தின் இரண்டு வலுமையான சிங்கங்களைக் கொன்றதுமல்லாமல், உறைந்த மழைபெய்த நாளில் அவன் ஒரு கெபிக்குள்ளே இறங்கிப்போய், ஒரு சிங்கத்தைக் கொன்றான். 23 ஐந்துமுழ உயரமான ஒரு எகிப்தியனையும் அவன் கொன்றுபோட்டான்; அந்த எகிப்தியன் கையில் நெய்கிறவர்களின் படைமரக் கனதியான ஒரு ஈட்டி இருக்கையில், இவன் ஒரு தடியைப் பிடித்து, அவனிடத்தில் போய், அந்த எகிப்தியன் கையிலிருந்த ஈட்டியைப் பறித்து, அவன் ஈட்டியினாலே அவனைக் கொன்றுபோட்டான். 24 இவைகளை யோய்தாவின் குமாரனான பெனாயா செய்தபடியினால், மூன்று பராக்கிரமசாலிகளுக்குள்ளே பேர்பெற்றவனாய் இருந்தான். 25 முப்பதுபேரிலும் இவன் மேன்மையுள்ளவன்; ஆனாலும் அந்த முந்தின மூன்றுபேருக்கும் இவன் சமானமானவனல்ல; அவனைத் தாவீது தன் மெய்க்காவலருக்குத் தலைவனாக வைத்தான். 26 இராணுவத்திலிருந்த மற்றப் பராக்கிரமசாலிகள்: யோவாபின் தம்பி ஆசகேல், பெத்லெகேம் ஊரானாகிய தோதோவின் குமாரன் எல்க்கானான், 27 ஆரோதியனாகிய சம்மோத், பெலோனியனாகிய ஏலெஸ், 28 தெக்கோவியனாகிய இக்கேசின் குமாரன் ஈரா, ஆனதோத்தியனாகிய அபியேசர், 29 ஊசாத்தியனாகிய சிபெக்காய், அகோகியனாகிய ஈலாய், 30 நெத்தோபாத்தியனாகிய மகராயி, நெத்தோபாத்தியனாகிய பானாவின் குமாரன் ஏலேத், 31 பென்யமீன் புத்திரரின் கிபேயா ஊரானாகிய ரிபாயின் குமாரன் இத்தாயி, பிரத்தோனியனாகிய பெனாயா, 32 காகாஸ் நீரோடைத் தேசத்தானாகிய ஊராயி, அர்பாத்தியனாகிய அபியேல், 33 பகரூமியனாகிய அஸ்மாவேத், சால்போனியனாகிய எலியாபா, 34 கீசோனியனாகிய ஆசேமின் குமாரர், ஆராரியனாகிய சாகியின் குமாரன் யோனத்தான். 35 ஆராரியனாகிய சாக்காரின் குமாரன் அகியாம், ஊரின் குமாரன் எலிபால், 36 மெகராத்தியனாகிய எப்பேர், பெலோனியனாகிய அகியா, 37 கர்மேலியனாகிய எஸ்ரோ, எஸ்பாயின் குமாரன் நாராயி, 38 நாத்தானின் சகோதரன் யோவேல், அகரியின் குமாரன் மிப்கார், 39 அம்மோனியனாகிய சேலேக், செருயாவின் குமாரனாகிய யோவாபின் ஆயுததாரியான பெரோத்தியனாகிய நாராயி, 40 இத்தரியனாகிய ஈரா, இத்தரியனாகிய காரெப், 41 ஏத்தியனாகிய உரியா, அக்லாயின் குமாரன் சாபாத், 42 ரூபனியரின் தலைவனாகிய சீசாவின் குமாரன் அதினா என்னும் ரூபனியன்; அவனோடே முப்பதுபேர் இருந்தார்கள். 43 மாகாவின் குமாரன் ஆனான், மிதினியனாகிய யோசபாத், 44 அஸ்தரேத்தியனாகிய உசியா, ஆரோவேரியனாகிய ஓத்தாமின் குமாரர் சமாவும், யேகியேலும், 45 சிம்ரியின் குமாரன் எதியாயேல், தித்சியனாகிய அவன் சகோதரன் யோகா, 46 மாகாவியரின் புத்திரன் எலியேல், எல்நாமின் குமாரர் எரிபாயும், யொசவியாவும், மோவாபியனான இத்மாவும், 47 மெசோபாயா ஊராராகிய எலியேலும், ஓபேதும், யாசீயேலுமே.

1 நாளாகமம் 12

1 தாவீது கீசின் குமாரனாகிய சவுலினிமித்தம் இன்னும் மறைவாயிருக்கையில், சிக்லாகிலிருக்கிற அவனிடத்திற்கு வந்து, 2 யுத்தத்திற்கு ஒத்தாசை செய்த வில்வீரரும், கவண்கல் எறிகிறதற்கும் வில்லினால் அம்பு எய்கிறதற்கும் வலது இடது கைவாட்டமான பராக்கிரமசாலிகளான மற்ற மனுஷருமானவர்கள்: சவுலின் சகோதரராகிய பென்யமீன் கோத்திரத்தில், 3 கிபேயா ஊரானாகிய சேமாவின் குமாரர் அகியேசர் என்னும் தலைவனும், யோவாசும், அஸ்மாவேத்தின் குமாரராகிய எசியேலும், பேலேத்தும், பெராக்கா, ஆனதோத்தியனான ஏகூ என்பவர்களும், 4 முப்பதுபேரில் பராக்கிரமனும் முப்பதுபேருக்குப் பெரியவனுமான இஸ்மாயா என்னும் கிபியோனியனும், எரேமியா, யகாசியேல், யோகனான், கெதேரூரானான யோசபாத், 5 எலுசாயி, எரிமோத், பிகலியா, செமரியா, அருப்பியனான செப்பத்தியா, 6 எல்க்கானா, எஷியா, அசாரியேல், யொவேசேர், யசொபெயாம் என்னும் கோரேகியரும், 7 யொவேலா, செபதியா என்னும் கேதோர் ஊரானான எரோகாமின் குமாரருமே. 8 காத்தியரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, சிங்கமுகம்போன்ற முகமும், மலைகளிலிருக்கிற வெளிமான் வேகம்போன்ற வேகமுமுள்ளவர்களாயிருந்து, யுத்தசேவகரான பராக்கிரமசாலிகள் சிலரும் வனாந்தரத்திலுள்ள அரணான இடத்தில் இருக்கிற தாவீது பட்சமாய்ச் சேர்ந்தார்கள். 9 யாரென்றால், எத்சேர் என்னும் தலைவன், அவனுக்கு இரண்டாவது ஒபதியா; மூன்றாவது எலியாப், 10 நாலாவது மிஸ்மன்னா, ஐந்தாவது எரேமியா, 11 ஆறாவது அத்தாயி, ஏழாவது எலியேல், 12 எட்டாவது யோகனான், ஒன்பதாவது எல்சபாத், 13 பத்தாவது எரேமியா, பதினோராவது மக்பன்னாயி; 14 காத் புத்திரரான இவர்கள் இராணுவத்தலைவராயிருந்தார்கள்; அவர்களில் சிறியவன் நூறுபேருக்கும் பெரியவன் ஆயிரம்பேருக்கும் சேர்வைக்காரராயிருந்தார்கள். 15 யோர்தான் கரைபுரண்டுபோயிருக்கிற முதலாம் மாதத்தில் அதைக் கடந்து, கிழக்கேயும் மேற்கேயும் பள்ளத்தாக்குகளில் இருக்கிற யாவரையும் துரத்திவிட்டவர்கள் இவர்களே. 16 பின்னும் பென்யமீன் புத்திரரிலும் யூதாபுத்திரரிலும் சிலர் அரணான ஸ்தலத்தில் இருக்கிற தாவீதினிடத்தில் வந்தார்கள். 17 தாவீது புறப்பட்டு, அவர்களுக்கு எதிர்கொண்டுபோய், அவர்களுக்கு உத்தரவுகொடுத்து: நீங்கள் எனக்கு உதவி செய்யச் சமாதானமாய் என்னிடத்தில் வந்தீர்களானால், என் இருதயம் உங்களோடு இசைந்திருக்கும்; என் கைகளில் கொடுமை இல்லாதிருக்க, என்னை என் சத்துருக்களுக்குக் காட்டிக்கொடுக்க வந்தீர்களேயாகில், நம்முடைய பிதாக்களின் தேவன் அதைப் பார்த்துக் கண்டிப்பாராக என்றான். 18 அப்பொழுது அதிபதிகளுக்குத் தலைவனான அமாசாயின்மேல் ஆவி இறங்கினதினால், அவன்: தாவீதே, நாங்கள் உம்முடையவர்கள்; ஈசாயின் குமாரனே, உமது பட்சமாயிருப்போம்; உமக்குச் சமாதானம், சமாதானம்; உமக்கு உதவிசெய்கிறவர்களுக்கும் சமாதானம்; உம்முடைய தேவன் உமக்குத் துணை நிற்கிறார் என்றான்; அப்பொழுது தாவீது அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களைத் தண்டுக்குத் தலைவராக்கினான். 19 சவுலின்மேல் யுத்தம்பண்ணப்போகிற பெலிஸ்தருடனேகூடத் தாவீது வருகிறபோது, மனாசேயிலும் சிலர் அவன் பட்சமாய்ச் சேர்ந்தார்கள்; பெலிஸ்தரின் பிரபுக்கள் யோசனைபண்ணி, அவன் நம்முடைய தலைகளுக்கு மோசமாய்த் தன் ஆண்டவனாகிய சவுலின் பட்சமாய்ப் போவான் என்று அவனை அனுப்பிவிட்டார்கள்; அதனால் அவர்கள் இவர்களுக்கு உதவிசெய்யவில்லை. 20 அப்படியே அவன் சிக்லாகுக்குத் திரும்பிப்போகையில், மனாசேயில் அத்னாக், யோசபாத், எதியாவேல், மிகாயேல், யோசபாத், எலிகூ, சில்த்தாயி என்னும் மனாசே கோத்திரத்தாரின் ஆயிரத்துச் சேர்வைக்காரர் அவன் பட்சமாய் வந்தார்கள். 21 அந்தத் தண்டுக்கு விரோதமாய் இவர்கள் தாவீதுக்கு உதவிசெய்தார்கள்; இவர்களெல்லாரும் பராக்கிரமசாலிகளும் இராணுவத்தில் சேர்வைக்காரருமாயிருந்தார்கள். 22 அக்காலத்திலே நாளுக்குநாள் தாவீதுக்கு உதவிசெய்யும் மனுஷர் அவனிடத்தில் வந்து சேர்ந்தபடியால், அவர்கள் தேவசேனையைப்போல மகா சேனையானார்கள். 23 கர்த்தருடைய வாக்கின்படியே, சவுலின் ராஜ்யபாரத்தைத் தாவீதினிடமாய்த் திருப்ப, எப்ரோனிலிருக்கிற அவனிடத்துக்கு வந்த யுத்தசன்னத்தரான தலைவரின் இலக்கமாவன: 24 யூதாபுத்திரரில் பரிசையும் ஈட்டியும் பிடித்து, யுத்தசன்னத்தரானவர்கள் ஆறாயிரத்து எண்ணூறுபேர். 25 சிமியோன் புத்திரரில் பராக்கிரமசாலிகளாகிய யுத்தவீரர் ஏழாயிரத்து நூறுபேர். 26 லேவி புத்திரரில் நாலாயிரத்து அறுநூறுபேர். 27 ஆரோன் சந்ததியாரின் அதிபதியாகிய யோய்தாவும், அவனோடிருந்த மூவாயிரத்து எழுநூறுபேரும், 28 பராக்கிரமசாலியான சாதோக் என்னும் வாலிபனும், அவன் தகப்பன் வம்சத்தாரான இருபத்திரண்டு தலைவருமே. 29 பென்யமீன் புத்திரரான சவுலின் சகோதரரில் மூவாயிரம்பேர்; அதுவரைக்கும் அவர்களில் மிச்சமானவர்கள் சவுலின் குடும்பத்தைக் காப்பாற்றப் பார்த்தார்கள். 30 எப்பிராயீம் புத்திரரில் தங்கள் பிதாக்களின் வம்சத்தில் பேர்பெற்ற மனுஷரான பராக்கிரமசாலிகள் இருபதினாயிரத்து எண்ணூறுபேர். 31 மனாசேயின் பாதிக்கோத்திரத்தில் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு வரும்படி, பேர்பேராகக் குறிக்கப்பட்டவர்கள் பதினெண்ணாயிரம்பேர். 32 இசக்கார் புத்திரரில், இஸ்ரவேலர் செய்யவேண்டியது இன்னதென்று அறிந்து காலாகாலங்களுக்குத் தகுந்த யோசனை சொல்லத்தக்க தலைவர்கள் இருநூறுபேரும், இவர்கள் வாக்குக்குச் செவிகொடுத்த இவர்களுடைய எல்லாச் சகோதரருமே. 33 செபுலோன் புத்திரரில் சகலவித யுத்த ஆயுதங்களாலும் யுத்தம் செய்கிறதற்கும், தங்கள் அணியைக் காத்துநிற்கிறதற்கும் பழகி, வஞ்சனைசெய்யாமல் யுத்தத்திற்குப் போகத்தக்கவர்கள் ஐம்பதினாயிரம்பேர். 34 நப்தலி புத்திரரில் ஆயிரம் தலைவர்கள் பரிசையும் ஈட்டியும் பிடித்த அவர்களோடேகூட இருந்தவர்கள் முப்பத்தேழாயிரம்பேர். 35 தாண் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்கள் இருபத்து எண்ணாயிரத்து அறுநூறுபேர். 36 ஆசேர் புத்திரரில் யுத்தத்திற்குத் தேறினவர்களாய்ச் சேவகம்பண்ணப் போகத்தக்கவர்கள் நாற்பதினாயிரம்பேர். 37 யோர்தானுக்கு அக்கரையான ரூபனியரிலும், காத்தியரிலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தாரிலும், யுத்தம்பண்ணச் சகலவித ஆயுதங்களையும் தரித்தவர்கள் நூற்றிருபதினாயிரம்பேர். 38 தாவீதை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்குகிறதற்கு, இந்த யுத்தமனுஷர் எல்லாரும் அணி அணியாய் வைக்கப்பட்டவர்களாக, உத்தம இருதயத்தோடே எப்ரோனுக்கு வந்தார்கள்; இஸ்ரவேலில் மற்ற யாவரும் தாவீதை ராஜாவாக்குகிறதற்கு ஒருமனப்பட்டிருந்தார்கள். 39 அவர்கள் அங்கே தாவீதோடேகூட மூன்றுநாள் இருந்து, போஜனபானம்பண்ணினார்கள்; அவர்கள் சகோதரர் அவர்களுக்காகச் சகலத்தையும் ஆயத்தம்பண்ணியிருந்தார்கள். 40 இசக்கார், செபுலோன், நப்தலியின் எல்லைமட்டும் அவர்களுக்குச் சமீபமாயிருந்தவர்களும், கழுதைகள்மேலும் ஒட்டகங்கள்மேலும் கோவேறு கழுதைகள்மேலும் மாடுகள்மேலும், தின்பண்டங்களாகிய மா, அத்திப்பழ அடைகள், வற்றலான திராட்சப்பழங்கள், திராட்சரசம், எண்ணெய், ஆடுமாடுகள் ஆகிய இவைகளை வேண்டியமட்டும் ஏற்றிக்கொண்டுவந்தார்கள்; இஸ்ரவேலிலே மகிழ்ச்சியுண்டாயிற்று.

1 நாளாகமம் 13

1 தாவீது ஆயிரம்பேருக்குத் தலைவரோடும் நூறுபேருக்குத் தலைவரோடும் சகல அதிபதிகளோடும் ஆலோசனைபண்ணி, 2 இஸ்ரவேல் சபையையெல்லாம் நோக்கி: உங்களுக்குச் சம்மதியும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சித்தமுமாயிருந்தால், இஸ்ரவேலின் தேசங்களிலெல்லாம் இருக்கிற நம்முடைய மற்றச் சகோதரரும், அவர்களோடே தங்கள் வெளிநிலங்களில் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் நம்மோடே கூடும்படிக்கு நாம் சீக்கிரமாய் அவர்களிடத்துக்கு ஆள் அனுப்பி, 3 நமது தேவனுடைய பெட்டியைத் திரும்ப நம்மிடத்துக்குக் கொண்டுவருவோமாக; சவுலின் நாட்களில் அதைத் தேடாதேபோனோம் என்றான். 4 இந்தக் காரியம் சகல ஜனத்தின் பார்வைக்கும் செம்மையாயிருந்தபடியால், சபையார் எல்லாரும் அப்படியே செய்வோம் என்றார்கள். 5 அப்படியே தேவனுடைய பெட்டியைக் கீரியாத்யாரீமிலிருந்து கொண்டுவரும்படி, தாவீது எகிப்தைச்சேர்ந்த சீகோர் நதிதுவக்கி ஆமாத்தின் எல்லைமட்டுமுள்ள இஸ்ரவேலையெல்லாங்கூட்டி, 6 கேருபீன்களின் நடுவே வாசம்பண்ணுகிற கர்த்தராகிய தேவனுடைய நாமம் தொழுதுகொள்ளப்படுகிற அவருடைய பெட்டியை யூதாவிலிருக்கிற கீரியாத்யாரீமுக்கடுத்த பாலாவிலிருந்து கொண்டுவரும்படிக்கு, அவனும் இஸ்ரவேலர் அனைவரும் அவ்விடத்திற்குப்போனார்கள். 7 அவர்கள் தேவனுடைய பெட்டியை அபினதாபின் வீட்டிலிருந்து ஒரு புதுரதத்தின்மேல் ஏற்றிக்கொண்டு வந்தார்கள்; ஊசாவும் அகியோவும் ரதத்தை நடத்தினார்கள். 8 தாவீதும் சகல இஸ்ரவேலரும் தங்கள் முழுப் பலத்தோடும் தேவனுக்குமுன்பாகச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் மேளங்களையும் கைத்தாளங்களையும் பூரிகைகளையும் சேவித்து மகிழ்ச்சியாய் ஆடிப்பாடினார்கள். 9 அவர்கள் கீதோனின் களமட்டும் வந்தபோது, மாடுகள் இடறினபடியினால், ஊசா பெட்டியைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான். 10 அப்பொழுது கர்த்தர் ஊசாவின்மேல் கோபம் மூண்டவராகி, அவன் தன்கையை பெட்டியண்டைக்கு நீட்டினதினிமித்தம் அவனை அடித்தார்; அங்கே அவன் தேவசமுகத்தில் செத்தான். 11 அப்பொழுது கர்த்தர் ஊசாவை அடித்ததினிமித்தம் தாவீது விசனப்பட்டு, அந்த ஸ்தலத்திற்கு இந்நாள்மட்டும் வழங்கிவருகிற பேரேஸ் ஊசா என்னும் பேரிட்டு, 12 அன்றையதினம் தேவனுக்குப்பயந்து: தேவனுடைய பெட்டியை நான் என்னிடத்துக்குக் கொண்டுவருவது எப்படியென்று சொல்லி, 13 பெட்டியைத் தன்னிடத்தில் தாவீதின் நகரத்திலே கொண்டுவராமல், அதைக் கித்தியனாகிய ஓபேத்ஏதோமின் வீட்டிலே சேர்த்தான். 14 தேவனுடைய பெட்டி ஓபேத்ஏதோமின் வீட்டிலே அவனிடத்தில் மூன்றுமாதம் இருக்கையில், கர்த்தர் ஓபேத்ஏதோமின் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் ஆசீர்வதித்தார்.

1 நாளாகமம் 14

1 தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதினிடத்தில் ஸ்தானாபதிகளையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுகிறதற்குக் கேதுருமரங்களையும், தச்சரையும், கல்தச்சரையும் அனுப்பினான். 2 கர்த்தர் தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாகத் திடப்படுத்தி, இஸ்ரவேல் என்னும் தம்முடைய ஜனத்தினிமித்தம் தன்னுடைய ராஜ்யத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான். 3 எருசலேமிலே தாவீது பின்னும் அநேக ஸ்திரீகளை விவாகம்பண்ணி, பின்னும் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 4 எருசலேமிலே அவனுக்குப் பிறந்த குமாரரின் நாமங்களாவன: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன், 5 இப்கார், எலிசூவா, எல்பெலேத், 6 நோகா, நெப்பேக், யப்பியா, 7 எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள். 8 தாவீது சமஸ்த இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக அபிஷேகம்பண்ணப்பட்டதைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர் எல்லாரும் தாவீதைத் தேடும்படி வந்தார்கள்; அதைத் தாவீது கேட்டபோது அவர்களுக்கு விரோதமாகப் புறப்பட்டான். 9 பெலிஸ்தர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள். 10 பெலிஸ்தருக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என் கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, கர்த்தர்: போ, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார். 11 அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களை முறிய அடித்து: தண்ணீர்கள் உடைந்தோடுகிறதுபோல, தேவன் என் கையினால் என் சத்துருக்களை உடைந்தோடப்பண்ணினார் என்றான்; அதினிமித்தம் அந்த ஸ்தலத்திற்குப் பாகால்பிராசீம் என்னும் பேரிட்டார்கள். 12 அங்கே அவர்கள் தங்கள் தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியாலே சுட்டெரிக்கப்பட்டன. 13 பெலிஸ்தர் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள். 14 அப்பொழுது தாவீது திரும்பத் தேவனிடத்தில் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களுக்குப் பக்கமாய்ச் சுற்றி, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிரேயிருந்து, அவர்கள்மேல் பாய்ந்து, 15 முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தரின் பாளயத்தை முறிய அடிக்க, தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார். 16 தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தரின் இராணுவத்தைக் கிபியோன் துவக்கிக் காசேர்மட்டும் முறிய அடித்தார்கள். 17 அப்படியே தாவீதின் கீர்த்தி சகல தேசங்களிலும் பிரசித்தமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் கர்த்தர் சகல ஜாதிகளின்மேலும் வரப்பண்ணினார்.

1 நாளாகமம் 15

1 அவன் தனக்குத் தாவீதின் நகரத்தில் வீடுகளை உண்டாக்கி, தேவனுடைய பெட்டிக்கு ஒரு ஸ்தலத்தை ஆயத்தப்படுத்தி, அதற்கு ஒரு கூடாரத்தைப் போட்டான். 2 பிற்பாடு தாவீது: லேவியர் ஒழிய வேறொருவரும் தேவனுடைய பெட்டியை எடுக்கலாகாது; தேவனுடைய பெட்டியை எடுக்கவும், என்றைக்கும் அவருக்குப் பணிவிடைசெய்யவும், அவர்களையே கர்த்தர் தெரிந்துகொண்டார் என்றான். 3 அப்படியே கர்த்தருடைய பெட்டிக்குத் தான் ஆயத்தப்படுத்தின அதின் ஸ்தலத்திற்கு அதைக் கொண்டுவரும்படி, தாவீது இஸ்ரவேலையெல்லாம் எருசலேமிலே கூடிவரச்செய்தான். 4 ஆரோனின் புத்திரரையும், 5 லேவியராகிய கோகாத் புத்திரரில் பிரபுவாகிய ஊரியேலையும், அவன் சகோதரராகிய நூற்றிருபதுபேரையும், 6 மெராரியின் புத்திரரில் பிரபுவாகிய அசாயாவையும், அவன் சகோதரராகிய இருநூற்றிருபதுபேரையும், 7 கெர்சோன் புத்திரரில் பிரபுவாகிய யோவேலையும், அவன் சகோதரராகிய நூற்றுமுப்பதுபேரையும், 8 எலிசாப்பான் புத்திரரில் பிரபுவாகிய செமாயாவையும், அவன் சகோதரராகிய இருநூறுபேரையும், 9 எப்ரோன் புத்திரரில் பிரபுவாகிய எலியேலையும், அவன் சகோதரராகிய எண்பதுபேரையும், 10 ஊசியேல் புத்திரரில் பிரபுவாகிய அம்மினதாபையும், அவன் சகோதரராகிய நூற்றுப் பன்னிரண்டுபேரையும் தாவீது கூடிவரப்பண்ணினான். 11 பின்பு தாவீது ஆசாரியராகிய சாதோக்கையும், அபியத்தாரையும், லேவியராகிய ஊரியேல், அசாயா, யோவேல், செமாயா, எலியேல், அம்மினதாப் என்பவர்களையும் அழைத்து, 12 அவர்களை நோக்கி: லேவியரில் நீங்கள் பிதாக்களுடைய சந்ததிகளின் தலைவர், நீங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியை அதற்கு நான் ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கொண்டுவரும்படி, உங்களையும் உங்கள் சகோதரரையும் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள். 13 முதலில் நீங்கள் அதைச் சுமக்காதபடியினாலும், நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரை நியாயமானபடியே தேடாதேபோனபடியினாலும், அவர் நமக்குள்ளே அடிவிழப்பண்ணினார் என்றான். 14 அப்படியே ஆசாரியரும் லேவியரும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் பெட்டியைக் கொண்டுவரத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டார்கள். 15 பின்பு லேவி புத்திரர் கர்த்தருடைய வார்த்தையின்படியே, மோசே கற்பித்தபிரகாரம் தேவனுடைய பெட்டியை அதின் தண்டுகளினாலே தங்கள் தோள்மேல் எடுத்துக்கொண்டுவந்தார்கள். 16 தாவீது லேவியரின் பிரபுக்களை நோக்கி: நீங்கள் உங்கள் சகோதரராகிய பாடகரைத் தம்புரு சுரமண்டலம் கைத்தாள முதலிய கீதவாத்தியங்கள் முழங்க, தங்கள் சத்தத்தை உயர்த்தி, சந்தோஷம் உண்டாகப் பாடும்படி நிறுத்தவேண்டும் என்று சொன்னான். 17 அப்படியே லேவியர் யோவேலின் குமாரனாகிய ஏமானையும், அவன் சகோதரரில் பெரகியாவின் குமாரனாகிய ஆசாப்பையும், மெராரியின் புத்திரரான தங்கள் சகோதரரில் குஷாயாவின் குமாரனாகிய ஏத்தானையும், 18 இவர்களோடுங்கூட இரண்டாவது வரிசையாகத் தங்கள் சகோதரராகிய சகரியா, பேன், யாசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், பெனாயா, மாசெயா, மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்னும் வாசல் காவலாளரையும் நிறுத்தினார்கள். 19 பாடகராகிய ஏமானும், ஆசாப்பும், ஏத்தானும், பஞ்சலோகக் கைத்தாளங்களைத் தொனிக்கப்பண்ணிப் பாடினார்கள். 20 சகரியா, ஆசியேல், செமிரமோத், யெகியேல், உன்னி, எலியாப், மாசெயா, பெனாயா என்பவர்கள் அல்மோத் என்னும் இசையில் பாடி, தம்புருகளை வாசித்தார்கள். 21 மத்தித்தியா, எலிப்பெலேகு, மிக்னேயா, ஓபேத்ஏதோம், ஏயெல், அசசியா என்பவர்கள் செமனீத் என்னும் இசையில் பாடி, சுரமண்டலங்களை நேர்த்தியாய் வாசித்தார்கள். 22 லேவியருக்குள்ளே கெனானியா என்பவன் சங்கீதத்தலைவனாயிருந்தான்; அவன் நிபுணனானபடியால், கீதவித்தையைப் படிப்பித்தான். 23 பெரகியாவும் எல்க்கானாவும் பெட்டிக்கு முன்பாகக் காவல்காத்துவந்தார்கள். 24 செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் என்னும் ஆசாரியர் தேவனுடைய பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதினார்கள்; ஓபேத்ஏதோமும், எகியாவும் பெட்டிக்கு வாசல் காவலாளராயிருந்தார்கள். 25 இப்படித் தாவீதும், இஸ்ரவேலின் மூப்பரும், ஆயிரத்துச் சேர்வைக்காரரும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து மகிழ்ச்சியோடே கொண்டுவரப்போனார்கள். 26 கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைச் சுமக்கிற லேவியருக்குத் தேவன் அநுக்கிரகம்பண்ணினபடியால், அவர்கள் ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பலியிட்டார்கள். 27 தாவீதும், பெட்டியைச் சுமக்கிற சகல லேவியரும், பாடகரும், பாடகரின் வேலையை விசாரிக்கிற தலைவனாகிய கெனானியாவும், மெல்லிய புடவையான சால்வைகளைத் தரித்திருந்தார்கள்; தாவீது சணல்நூல் ஏபோத்தைத் தரித்திருந்தான். 28 அப்படியே இஸ்ரவேலனைத்தும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் தொனியோடும், தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டுவந்தார்கள். 29 கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி தாவீதின் நகரமட்டும் வந்தபோது, சவுலின் குமாரத்தியாகிய மீகாள் பலகணிவழியாய்ப் பார்த்து, தாவீது ராஜா ஆடிப்பாடி வருகிறதைக் கண்டு, அவனைத் தன் இருதயத்திலே அவமதித்தாள்.

1 நாளாகமம் 16

1 அவர்கள் தேவனுடைய பெட்டியை உள்ளே கொண்டுவந்தபோது, தாவீது அதற்குப் போட்ட கூடாரத்தின் நடுவே அவர்கள் அதை வைத்து, தேவனுடைய சந்நிதியில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினார்கள். 2 தாவீது சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தித் தீர்ந்தபின்பு, அவன் ஜனத்தைக் கர்த்தருடைய நாமத்திலே ஆசீர்வதித்து, 3 புருஷர் தொடங்கி ஸ்திரீகள்மட்டும், இஸ்ரவேலராகிய அனைவருக்கும் அவரவருக்கு ஒவ்வொரு அப்பத்தையும், ஒவ்வொரு இறைச்சித் துண்டையும், ஒவ்வொருபடி திராட்சரசத்தையும் பங்கிட்டுக் கொடுத்தான். 4 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணித் துதித்துப் புகழுகிறதற்கு கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகச் சேவிக்கத்தக்க லேவியரில் சிலரை நியமித்தான். 5 அவர்களில் ஆசாப் தலைவனும், சகரியா அவனுக்கு இரண்டாவதுமாயிருந்தான்; ஏயெல், செமிரமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத்ஏதோம், ஏயெல் என்பவர்கள் தம்புரு சுரமண்டலம் என்னும் கீதவாத்தியங்களை வாசிக்கவும், ஆசாப் கைத்தாளங்களைக் கொட்டவும், 6 பெனாயா, யாகாசியேல் என்னும் ஆசாரியர் எப்போதும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதவும் நியமிக்கப்பட்டார்கள். 7 அப்படி ஆரம்பித்த அந்நாளிலேதானே கர்த்தருக்குத் துதியாகப் பாடும்படி தாவீது ஆசாப்பிடத்திலும் அவன் சகோதரரிடத்திலும் கொடுத்த சங்கீதமாவது: 8 கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். 9 அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். 10 அவருடைய பரிசுத்த நாமத்தைக்குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. 11 கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள். 12 அவருடைய தாசனாகிய இஸ்ரவேலின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே! 13 அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள். 14 அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர்; அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். 15 ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும், 16 அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருங்கள். 17 அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி: 18 உங்கள் சுதந்தரபாகமாக கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார். 19 அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத்தொகைக்குட்பட்ட சொற்பஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள். 20 அவர்கள் ஒரு ஜனத்தை விட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தைவிட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள். 21 அவர்களை யொடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்துகொண்டு: 22 நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்குசெய்யாமலும் இருங்கள் என்றார். 23 பூமியின் சகல குடிகளே, கர்த்தரைப் பாடி, நாளுக்குநாள் அவருடைய ரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள். 24 ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். 25 கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே. 26 சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர். 27 மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது; வல்லமையும் மகிழ்ச்சியும் அவர் ஸ்தலத்தில் இருக்கிறது. 28 ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். 29 கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள். 30 பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள்; அவர் பூச்சக்கரத்தை அசையாதபடிக்கு உறுதிப்படுத்துகிறவர். 31 வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பதாக; கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவதாக. 32 சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்கி, நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக. 33 அப்பொழுது கர்த்தருக்கு முன்பாகக் காட்டுவிருட்சங்களும் கெம்பீரிக்கும்; அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார். 34 கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. 35 எங்கள் ரட்சிப்பின் தேவனே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப் போற்றி, உம்மைத் துதிக்கிறதினால் மேன்மைபாராட்டும்படிக்கு, எங்களை ரட்சித்து, எங்களைச் சேர்த்துக்கொண்டு, ஜாதிகளுக்கு எங்களை நீங்கலாக்கியருளும் என்று சொல்லுங்கள். 36 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குச் சதாகாலங்களிலும் ஸ்தோத்திரம் உண்டாவதாக; அதற்கு ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லிக் கர்த்தரைத் துதித்தார்கள். 37 பின்பு பெட்டிக்கு முன்பாக நித்தம் அன்றாடக முறையாய்ச் சேவிக்கும்படி, அவன் அங்கே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டிக்கு முன்பாக ஆசாப்பையும், அவன் சகோதரரையும், ஓபேத்ஏதோமையும், அவர்களுடைய சகோதரராகிய அறுபத்தெட்டுப்பேரையும் வைத்து, 38 எதித்தூனின் குமாரனாகிய இந்த ஓபேத்ஏதோமையும் ஓசாவையும் வாசல்காக்கிறவர்களாக வைத்தான். 39 கிபியோனிலுள்ள மேட்டின்மேலிருக்கிற கர்த்தருடைய வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனங்களை நித்தமும், அந்திசந்தியில், கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியெல்லாம் கர்த்தருக்குச் செலுத்துவதற்காக, 40 அங்கே அவன் ஆசாரியனாகிய சாதோக்கையும், அவன் சகோதரராகிய ஆசாரியரையும் வைத்து, 41 இவர்களோடுங்கூட ஏமானையும், எதித்தூனையும், பேர்பேராகக் குறித்துத் தெரிந்துகொள்ளப்பட்ட மற்றச் சிலரையும்: கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதிக்கவும், 42 பூரிகைகளையும் கைத்தாளங்களையும் தேவனைப் பாடுகிறதற்குரிய கீதவாத்தியங்களையும் தொனிக்கச்செய்யவும் அவர்களுடன் ஏமானையும் எதித்தூனையும் வைத்து, எதித்தூனின் குமாரரை வாசல்காக்கிறவர்களாகக் கட்டளையிட்டான். 43 பின்பு ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வீட்டிற்குப் போனார்கள்; தாவீதும் தன் வீட்டாரை ஆசீர்வதிக்கத்திரும்பினான்.

1 நாளாகமம் 17

1 தாவீது தன் வீட்டிலே வாசமாயிருக்கிறபோது, அவன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை நோக்கி: பாரும், நான் கேதுருமரவீட்டிலே வாசம்பண்ணுகிறேன்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியோ திரைகளின்கீழ் இருக்கிறது என்றான். 2 அப்பொழுது நாத்தான் தாவீதை நோக்கி: உம்முடைய இருதயத்தில் இருக்கிறதையெல்லாம் செய்யும்; தேவன் உம்மோடு இருக்கிறார் என்றான். 3 அன்று ராத்திரியிலே, தேவனுடைய வார்த்தை நாத்தானுக்கு உண்டாகி, அவர்: 4 நீ போய், என் தாசனாகிய தாவீதை நோக்கி: கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் வாசமாயிருக்க நீ எனக்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம். 5 நான் இஸ்ரவேலை வரப்பண்ணின நாள்முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் நான் ஒரு ஆலயத்திலே வாசம்பண்ணாமல், ஒரு கூடாரத்திலிருந்து மறு கூடாரத்துக்கும், ஒரு வாசஸ்தலத்திலிருந்து மறு வாசஸ்தலத்துக்கும் போனேன். 6 நான் சகல இஸ்ரவேலோடும் உலாவி வந்த எவ்விடத்திலாகிலும், நான் என் ஜனத்தை மேய்க்கக் கற்பித்த இஸ்ரவேலின் நியாயாதிபதிகளில் யாதொருவனை நோக்கி: நீங்கள் எனக்குக் கேதுருமரத்தால் செய்யப்பட்ட ஆலயத்தைக் கட்டாதிருக்கிறது என்ன என்று யாதொரு வார்த்தை சொன்னது உண்டோ? 7 இப்போதும், நீ என் தாசனாகிய தாவீதை நோக்கி: சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும்படி, ஆடுகளின் பின்னே நடந்த உன்னை ஆட்டுமந்தையை விட்டு எடுத்து, 8 நீ போன இடமெல்லாம் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியிலிருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த நாமத்தை உனக்கு உண்டாக்கினேன். 9 நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு ஒரு இடத்தையும் ஏற்படுத்தி, அவர்கள் தங்கள் ஸ்தானத்திலே குடியிருக்கவும், இனி அவர்கள் அலையாமலும், முன்போலும், நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளைக் கட்டளையிட்ட நாள்முதல் நடந்ததுபோலும், நியாயக்கேட்டின் மக்களால் இனிச் சிறுமைப்படாமலும் இருக்கவும் அவர்களை நாட்டினேன். 10 உன் சத்துருக்களையெல்லாம் கீழ்ப்படுத்தினேன். இப்போதும் கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்பதை உனக்கு அறிவிக்கிறேன். 11 நீ உன் பிதாக்களிடத்திலே போக, உன் நாட்கள் நிறைவேறும்போது, நான் உனக்குப்பின்பு உன் புத்திரரில் ஒருவனாகிய உன் சந்ததியை எழும்பப்பண்ணி, அவன் ராஜ்யத்தை நிலைப்படுத்துவேன். 12 அவன் எனக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் சிங்காசனத்தை என்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன். 13 நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன், அவன் எனக்குக் குமாரனாயிருப்பான்; உனக்கு முன்னிருந்தவனை விட்டு என் கிருபையை நான் விலகப்பண்ணினதுபோல, அவனை விட்டு விலகப்பண்ணாமல், 14 அவனை என் ஆலயத்திலும் என் ராஜ்யத்திலும் என்றென்றைக்கும் நிலைக்கப்பண்ணுவேன்; அவனுடைய ராஜாசனம் என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும் என்று சொல் என்றார். 15 நாத்தான் இந்த எல்லா வார்த்தைகளின்படியும் இந்த எல்லாத் தரிசனத்தின்படியும் தாவீதுக்குச் சொன்னான். 16 அப்பொழுது தாவீதுராஜா உட்பிரவேசித்து, கர்த்தருடைய சமுகத்திலிருந்து: தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டுவந்ததற்கு நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்? 17 தேவனே, இது இன்னும் உம்முடைய பார்வைக்குக் கொஞ்சக்காரியமாயிருக்கிறது என்று தேவனான கர்த்தராயிருக்கிற நீர் உமது அடியானுடைய வீட்டைக்குறித்து வெகுதூரமாயிருக்கும் காலத்துச் செய்தியையும் சொல்லி, என்னை மகா மேன்மையான சந்ததியின் மனுஷனாகப் பார்த்தீர். 18 உமது அடியானுக்கு உண்டாகும் கனத்தைப்பற்றி, தாவீது அப்புறம் உம்மோடே சொல்வது என்ன? தேவரீர் உமது அடியானை அறிவீர். 19 கர்த்தாவே, உமது அடியானின் நிமித்தமும், உமது இருதயத்தின்படியும், இந்தப் பெரிய காரியங்களையெல்லாம் அறியப்பண்ணும்படிக்கு, இந்தப் பெரிய காரியத்தையெல்லாம் செய்தீர். 20 கர்த்தாவே, நாங்கள் எங்கள் காதுகளால் கேட்ட எல்லாவற்றின்படியும் தேவரீருக்கு நிகரானவர் இல்லை; உம்மைத்தவிர வேறே தேவனும் இல்லை. 21 உமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கு நிகரான ஜனமும் உண்டோ? பூலோகத்தில் இந்த ஒரே ஜாதியைத் தேவனாகிய நீர் உமக்கு ஜனமாக மீட்கும்படி, பயங்கரமான பெரிய காரியங்களினால் உமக்குக் கீர்த்தியை உண்டாக்கி, நீர் எகிப்திற்கு நீங்கலாக்கி மீட்ட உமது ஜனத்திற்குமுன்பாக ஜாதிகளைத் துரத்தி, 22 உமது ஜனமாகிய இஸ்ரவேலர் என்றைக்கும் உமது ஜனமாயிருப்பதற்கு அவர்களை நிலைப்படுத்தி, கர்த்தராகிய நீர்தாமே அவர்களுக்குத் தேவனானீர். 23 இப்போதும் கர்த்தாவே, தேவரீர் அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தை என்றென்றைக்கும் நிலைவரப்பட்டிருப்பதாக; தேவரீர் சொன்னபடியே செய்தருளும். 24 ஆம், அது நிலைவரப்பட்டிருக்கவும், இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலுக்குத் தேவன் என்றும், உமது அடியானாகிய தாவீதின் வீடு உமக்கு முன்பாகத் திடமானதென்றும் சொல்லப்படுவதினால், உமது நாமம் என்றைக்கும் மகிமைப்படவும்கடவது. 25 உனக்கு வீடு கட்டுவேன் என்று என் தேவனாகிய நீர் உமது அடியான் செவிகேட்க வெளிப்படுத்தினீர்; ஆகையால் உமக்கு முன்பாக விண்ணப்பம்பண்ண, உமது அடியானுக்கு மனத்தைரியம் கிடைத்தது. 26 இப்போதும் கர்த்தாவே, நீரே தேவன்; நீர் உமது அடியானைக்குறித்து இந்த நல்ல விசேஷத்தைச் சொன்னீர். 27 இப்போதும் உமது அடியானின் வீடு என்றைக்கும் உமக்கு முன்பாக இருக்கும்படிக்கு, அதை ஆசீர்வதித்தருளினீர்; கர்த்தராகிய தேவரீர் அதை ஆசீர்வதித்தபடியினால், அது என்றைக்கும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும் என்றான்.

1 நாளாகமம் 18

1 இதற்குப்பின்பு, தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, காத்பட்டணத்தையும் அதின் கிராமங்களையும் பெலிஸ்தரின் கையிலிருந்து பிடித்துக்கொண்டான். 2 அவன் மோவாபியரையும் முறிய அடித்ததினால், மோவாபியர் தாவீதைச் சேவித்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள். 3 சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசர் ஐபிராத் நதியண்டையில் தன் இராணுவத்தை நிறுத்தப்போகிறபோது, தாவீது அவனையும் ஆமாத்தின் கிட்டே முறிய அடித்தான். 4 அவனுக்கு இருந்த ஆயிரம் இரதங்களையும் ஏழாயிரம் குதிரைவீரரையும் இருபதினாயிரம் காலாட்களையும் பிடித்து, இரதங்களில் நூறு இரதங்களை வைத்துக்கொண்டு, மற்றவைகளையெல்லாம் துண்டாடிப்போட்டான். 5 சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசருக்கு உதவிசெய்யத் தமஸ்குபட்டணத்தாராகிய சீரியர் வந்தார்கள்; தாவீது சீரியரில் இருபத்தீராயிரம்பேரை வெட்டிப்போட்டு, 6 தமஸ்குவுக்கடுத்த சீரியாவிலே தாணையங்களை வைத்தான்; சீரியர் தாவீதைச் சேவித்து அவனுக்குக் காணிக்கைகளைச் செலுத்தினார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார். 7 ஆதாரேசரின் சேவகருக்கு இருந்த பொன் பரிசைகளைத் தாவீது எடுத்து, அவைகளை எருசலேமுக்குக் கொண்டுவந்தான். 8 ஆதாரேசரின் பட்டணங்களாகிய திப்காத்திலும் கூனிலுமிருந்து தாவீது வெகு திரளான வெண்கலத்தையும் எடுத்துக்கொண்டுவந்தான்; அதினாலே சாலொமோன் வெண்கலக் கடல்தொட்டியையும் தூண்களையும் வெண்கலத் தட்டுமுட்டுகளையும் உண்டாக்கினான். 9 தாவீது சோபாவின் ராஜாவாகிய ஆதாரேசரின் இராணுவத்தையெல்லாம் முறிய அடித்த செய்தியை ஆமாத்தின் ராஜாவாகிய தோயூ கேட்டபோது, 10 அவன் தாவீது ராஜாவின் சுகசெய்தியை விசாரிக்கவும், அவன் ஆதாரேசரோடு யுத்தம்பண்ணி, அவனை முறிய அடித்ததற்காக அவனுக்கு வினவுதல் சொல்லவும், தன் குமாரனாகிய அதோராமையும், பொன்னும் வெள்ளியும் வெண்கலமுமான சகலவிதத் தட்டுமுட்டுகளையும், அவனிடத்துக்கு அனுப்பினான்; ஆதாரேசர் தோயூவின்மேல் யுத்தம்பண்ணுகிறவனாயிருந்தான். 11 அந்தத் தட்டுமுட்டுகளையும், தான் ஏதோமியர், மோவாபியர், அம்மோன் புத்திரர், பெலிஸ்தர், அமலேக்கியர் என்னும் சகல ஜாதிகளின் கையிலும் வாங்கின வெள்ளியையும், பொன்னையும்கூடத் தாவீதுராஜா கர்த்தருக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்டான். 12 செருயாவின் குமாரன் அபிசாயி உப்புப் பள்ளத்தாக்கிலே பதினெண்ணாயிரம் ஏதோமியரை முறிய அடித்தான். 13 ஆகையால் தாவீது ஏதோமிலே தாணையம் போட்டான்; ஏதோமியர் எல்லாரும் அவனைச் சேவிக்கிறவர்களானார்கள்; தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார். 14 தாவீது இஸ்ரவேலையெல்லாம் ஆண்டு, தன்னுடைய ஜனத்திற்கெல்லாம் நியாயமும் நீதியும் செய்தான். 15 செருயாவின் குமாரன் யோவாப் இராணுவத்தலைவனாயிருந்தான்; ஆகிலூதின் குமாரனாகிய யோசபாத் மந்திரியாயிருந்தான். 16 அகிதூபின் குமாரன் சாதோக்கும், அபியத்தாரின் குமாரன் அபிமெலேக்கும் ஆசாரியராயிருந்தார்கள்; சவிஷா சம்பிரதியாயிருந்தான். 17 யோய்தாவின் குமாரன் பெனாயா கிரேத்தியருக்கும் பிலேத்தியருக்கும் தலைவனாயிருந்தான்; தாவீதின் புத்திரர் ராஜாவினிடத்தில் பிரதானிகளாயிருந்தார்கள்.

1 நாளாகமம் 19

1 அதன்பின்பு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் மரித்து, அவன் குமாரன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 2 அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவுசெய்ததுபோல, நானும் அவன் குமாரனாகிய இவனுக்குத் தயவுசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல்சொல்ல ஸ்தானாபதிகளை அனுப்பினான்; தாவீதின் ஊழியக்காரர் ஆனூனுக்கு ஆறுதல்சொல்ல அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது, 3 அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனைக் கனம்பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ? தேசத்தை ஆராயவும், அதைக் கவிழ்த்துப்போடவும், உளவுபார்க்கவும் அல்லவோ, அவன் ஊழியக்காரர் உம்மிடத்தில் வந்தார்கள் என்று சொன்னார்கள். 4 அப்பொழுது ஆனூன்: தாவீதின் ஊழியக்காரரைப் பிடித்து, அவர்கள் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்துவிட்டு, மற்றப் பாதியைக் கத்தரித்துப்போட்டு, அவர்களை அனுப்பிவிட்டான். 5 அந்த மனுஷர் வருகையில், அவர்கள் செய்தி தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அந்த மனுஷர் மிகவும் வெட்கப்பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ராஜா ஆட்களை அனுப்பி: உங்கள் தாடி வளருமட்டும் நீங்கள் எரிகோவிலிருந்து, பிற்பாடு வாருங்கள் என்று சொல்லச்சொன்னான். 6 அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஆனூனும் அம்மோன் புத்திரரும் மெசொப்பொத்தாமியாவிலும் மாக்கா சோபா என்னும் சீரியரின் தேசத்திலுமிருந்து தங்களுக்கு இரதங்களும் குதிரைவீரரும் கூலிக்கு வரும்படி ஆயிரம்தாலந்து வெள்ளி அனுப்பி, 7 முப்பத்தீராயிரம் இரதங்களையும், மாக்காவின் ராஜாவையும், அவன் ஜனத்தையும் கூலிப்படையாக அழைப்பித்தான்; இவர்கள் வந்து, மேதேபாவுக்கு முன்புறத்திலே பாளயமிறங்கினார்கள்; அம்மோன் புத்திரரும் தங்கள் பட்டணங்களிலிருந்து கூடிக்கொண்டு யுத்தம்பண்ணவந்தார்கள். 8 அதைத் தாவீது கேட்டபோது, யோவாபையும் பலசாலிகளின் இராணுவம் முழுவதையும் அனுப்பினான். 9 அம்மோன் புத்திரர் புறப்பட்டுவந்து, பட்டணத்து வாசலண்டையில் அணிவகுத்தார்கள்; வந்த ராஜாக்கள் தனித்து வெளியிலே போருக்கு ஆயத்தமாய் நின்றார்கள். 10 யுத்த இராணுவங்களின் முகப்புத் தனக்கு முன்னும் பின்னும் இருக்கிறதை யோவாப் கண்டு, அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட அனைவரிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து, அதைச் சீரியருக்கு எதிராக நிறுத்தி, 11 மற்ற ஜனத்தை அம்மோன் புத்திரருக்கு எதிராகப் போருக்கு ஆயத்தப்படுத்தி, தன் சகோதரனாகிய அபிசாயிக்கு ஒப்புவித்து, அவனை நோக்கி: 12 என்னைப்பார்க்கிலும் சீரியர் பலங்கொண்டால் நீ எனக்குத் துணைநில்; உன்னைப்பார்க்கிலும் அம்மோன் புத்திரர் பலங்கொண்டால் நான் உனக்குத் துணைநிற்பேன். 13 தைரியமாயிரு; நாம் நம்முடைய ஜனத்திற்காகவும், நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் திடன்கொண்டிருக்கக்கடவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான். 14 பின்பு யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியரோடு யுத்தம்பண்ணச் சேர்ந்தார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள். 15 சீரியர் முறிந்தோடுகிறதை அம்மோன் புத்திரர் கண்டபோது, அவர்களும் அவன் சகோதரனாகிய அபிசாயிக்கு முன்பாக முறிந்தோடிப் பட்டணத்திற்கு உட்பட்டார்கள்; யோவாப் திரும்ப எருசலேமுக்கு வந்தான். 16 தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைக் கண்டபோது, அவர்கள் நதிக்கு அப்புறத்திலிருக்கிற சீரியரை வரவழைத்தார்கள்; ஆதாரேசரின் படைத்தலைவனாகிய சோப்பாக் அவர்களுக்கு முன்னாலே நடந்துபோனான். 17 அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, அவர்களுக்குச் சமீபமாய் வந்தபோது, அவர்களுக்கு எதிராக இராணுவங்களை நிறுத்தினான்; தாவீது சீரியருக்கு எதிராக இராணுவங்களைப் போருக்கு ஆயத்தப்படுத்தினபின் அவனோடு யுத்தம்பண்ணினார்கள். 18 சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் ஏழாயிரம் இரதங்களின் மனுஷரையும், நாற்பதினாயிரம் காலாட்களையும் கொன்று, படைத்தலைவனாகிய சோப்பாக்கையும் கொன்றான். 19 தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதை ஆதாரேசரின் சேவகர் கண்டபோது, அவர்கள் தாவீதோடே சமாதானம்பண்ணி, அவனைச் சேவித்தார்கள்; அப்புறம் அம்மோன் புத்திரருக்கு உதவிசெய்ய சீரியர் மனதில்லாதிருந்தார்கள்.

1 நாளாகமம் 20

1 மறுவருஷம், ராஜாக்கள் யுத்தத்திற்குப் புறப்படும் காலம் வந்தபோது, யோவாப் இராணுவபலத்தைக் கூட்டிக்கொண்டுபோய், அம்மோன் புத்திரரின் தேசத்தைப் பாழ்க்கடித்து ரப்பாவுக்கு வந்து அதை முற்றிக்கைபோட்டான்; தாவீதோ எருசலேமில் இருந்துவிட்டான்; யோவாப் ரப்பாவை அடித்துச் சங்கரித்தான். 2 தாவீது வந்து, அவர்கள் ராஜாவுடைய தலையின்மேல் இருந்த கிரீடத்தை எடுத்துக்கொண்டான்; அது ஒரு தாலந்து பொன்நிறையும் ரத்தினங்கள் பதித்ததுமாயிருந்தது; அது தாவீதின் தலையில் வைக்கப்பட்டது; பட்டணத்திலிருந்து ஏராளமான கொள்ளையையும் கொண்டுபோனான். 3 பின்பு அதிலிருந்த ஜனங்களை அவன் வெளியே கொண்டுபோய், அவர்களை வாள்களுக்கும், இருப்புப்பாரைகளுக்கும், கோடரிகளுக்கும் உட்படுத்தி; இப்படி அம்மோன் புத்திரரின் பட்டணங்களுக்கெல்லாம் தாவீது செய்து, எல்லா ஜனத்தோடுங்கூட எருசலேமுக்குத் திரும்பினான். 4 அதற்குப்பின்பு கேசேரிலே பெலிஸ்தரோடு யுத்தம் உண்டாயிற்று; அப்பொழுது ஊசாத்தியனாகிய சிபெக்காய் இராட்சத புத்திரரில் ஒருவனான சிப்பாயி என்பவனைக் கொன்றான்; அதினால் அவர்கள் வசப்படுத்தப்பட்டார்கள். 5 திரும்பப் பெலிஸ்தரோடு யுத்தம் உண்டாகிறபோது, யாவீரின் குமாரனாகிய எல்க்கானான் காத்தூரானாகிய கோலியாத்தின் சகோதரனான லாகேமியைக் கொன்றான்; அவன் ஈட்டித் தாங்கு நெய்கிறவர்களின் படைமரம் அவ்வளவு பெரிதாயிருந்தது. 6 மறுபடியும் ஒரு யுத்தம் காத்திலே நடந்தபோது, அங்கே நெட்டையனான ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு அவ்வாறு விரலாக இருபத்துநாலு விரல்கள் இருந்தது, அவனும் இராட்சத சந்ததியாயிருந்து, 7 இஸ்ரவேலை நிந்தித்தான்; தாவீதின் சகோதரனாகிய சிமேயாவின் குமாரன் யோனத்தான் அவனைக் கொன்றான். 8 காத்தூரிலிருந்த இராட்சதனுக்குப் பிறந்த இவர்கள் தாவீதின் கையினாலும் அவன் சேவகரின் கையினாலும் மடிந்தார்கள்.

1 நாளாகமம் 21

1 சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது. 2 அப்படியே தாவீது யோவாபையும், ஜனத்தின் சேர்வைக்காரரையும் நோக்கி: நீங்கள் போய், பெயெர்செபாதொடங்கித் தாண்மட்டும் இருக்கிற இஸ்ரவேலை எண்ணி, அவர்கள் இலக்கத்தை நான் அறியும்படிக்கு, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான். 3 அப்பொழுது யோவாப்: கர்த்தருடைய ஜனங்கள் இப்போது இருக்கிறதைப்பார்க்கிலும் நூறத்தனையாய் அவர் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் ராஜாவாகிய என் ஆண்டவனே, அவர்களெல்லாரும் என் ஆண்டவனின் சேவகரல்லவா? என் ஆண்டவன் இதை விசாரிப்பானேன்? இஸ்ரவேலின்மேல் குற்றமுண்டாக இது நடக்கவேண்டியது என்ன என்றான். 4 யோவாப் அப்படிச் சொல்லியும், ராஜாவின் வார்த்தை மேலிட்டபடியினால், யோவாப் புறப்பட்டு, இஸ்ரவேல் எங்கும் சுற்றித்திரிந்து எருசலேமுக்கு வந்து, 5 ஜனத்தை இலக்கம்பார்த்து, தொகையைத் தாவீதிடத்தில் கொடுத்தான்; இஸ்ரவேலிலெல்லாம் பட்டயம் உருவத்தக்கவர்கள் பதினொருலட்சம்பேரும், யூதாவில் பட்டயம் உருவத்தக்கவர்கள் நாலுலட்சத்து எழுபதினாயிரம்பேரும் இருந்தார்கள். 6 ஆனாலும் ராஜாவின் வார்த்தை யோவாபுக்கு அருவருப்பாயிருந்தபடியினால், லேவி பென்யமீன் கோத்திரங்களில் உள்ளவர்களை அவர்களுடைய இலக்கத்திற்குட்பட எண்ணாதேபோனான். 7 இந்தக் காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததானபடியினால் அவர் இஸ்ரவேலை வாதித்தார். 8 தாவீது தேவனை நோக்கி: நான் இந்தக் காரியத்தைச் செய்ததினால் மிகவும் பாவஞ்செய்தேன்; இப்போதும் உம்முடைய அடியேனின் அக்கிரமத்தை நீக்கிவிடும்; வெகு புத்தியீனமாய்ச் செய்தேன் என்றான். 9 அப்பொழுது கர்த்தர், தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்துடனே பேசி, 10 நீ தாவீதினிடத்தில் போய்: மூன்று காரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள்; அதை நான் உனக்குச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். 11 அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: 12 மூன்று வருஷத்துப் பஞ்சமோ? அல்லது உன் பகைஞரின் பட்டயம் உன்னைப் பின்தொடர நீ உன் சத்துருக்களுக்கு முன்பாக முறிந்தோடிப்போகச் செய்யும் மூன்றுமாதச் சங்காரமோ? அல்லது மூன்றுநாள் கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் சங்காரம் உண்டாகும்படி தேசத்தில் நிற்கும் கர்த்தருடைய பட்டயமாகிய கொள்ளை நோயோ? இவைகளில் ஒன்றைத் தெரிந்துகொள் என்று கர்த்தர் உரைக்கிறார். இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறுஉத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை யோசித்துப்பாரும் என்றான். 13 அப்பொழுது தாவீது காத்தை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன்; இப்போது நான் கர்த்தருடைய கையிலே விழுவேனாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான். 14 ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் இஸ்ரவேலில் எழுபதினாயிரம்பேர் மடிந்தார்கள். 15 எருசலேமையும் அழிக்கத் தேவன் ஒரு தூதனை அனுப்பினார்; ஆனாலும் அவன் அழிக்கையில் கர்த்தர் பார்த்து, அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும்; இப்போது உன் கையை நிறுத்து என்றார்; கர்த்தருடைய தூதன் எபூசியனாகிய ஒர்னானின் களத்தண்டையிலே நின்றான். 16 தாவீது தன் கண்களை ஏறெடுத்து, பூமிக்கும் வானத்திற்கும் நடுவே நிற்கிற கர்த்தருடைய தூதன் உருவின பட்டயத்தைத் தன் கையில் பிடித்து, அதை எருசலேமின்மேல் நீட்டியிருக்கக் கண்டான்; அப்பொழுது தாவீதும் மூப்பர்களும் இரட்டுப் போர்த்துக்கொண்டு முகங்குப்புற விழுந்தார்கள். 17 தாவீது தேவனை நோக்கி: ஜனத்தை எண்ணச்சொன்னவன் நான் அல்லவோ? நான்தான் பாவஞ்செய்தேன்; பொல்லாப்பு நடப்பித்தேன்; இந்த ஆடுகள் என்னசெய்தது? என் தேவனாகிய கர்த்தாவே, வாதிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய ஜனத்திற்கு விரோதமாயிராமல், எனக்கும் என் தகப்பன் வீட்டிற்கும் விரோதமாயிருப்பதாக என்றான். 18 அப்பொழுது எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும்படி, தாவீது அங்கே போகவேண்டுமென்று தாவீதுக்குச் சொல் என்று கர்த்தருடைய தூதன் காத்துக்குக் கட்டளையிட்டான். 19 அப்படியே தாவீது கர்த்தரின் நாமத்திலே காத் சொன்ன வார்த்தையின்படியே போனான். 20 ஒர்னான் திரும்பிப்பார்த்தான்; அவனும் அவனோடிருக்கிற அவனுடைய நாலு குமாரரும் அந்த தேவதூதனைக் கண்டு ஒளித்துக்கொண்டார்கள்; ஒர்னானோ போரடித்துக்கொண்டிருந்தான். 21 தாவீது ஒர்னானிடத்தில் வந்தபோது, ஒர்னான் கவனித்துத் தாவீதைப் பார்த்து, அவன் களத்திலிருந்து புறப்பட்டுவந்து, தரைமட்டும் குனிந்து தாவீதை வணங்கினான். 22 அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு அதை எனக்குக் கொடு; வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதைப் பெறும் விலைக்குக் கொடு என்றான். 23 ஒர்னான் தாவீதை நோக்கி: ராஜாவாகிய என் ஆண்டவன் அதை வாங்கிக்கொண்டு, தம்முடைய பார்வைக்கு நலமானபடி செய்வாராக; இதோ, சர்வாங்கதகனங்களுக்கு மாடுகளும், விறகுக்குப் போரடிக்கிற உருளைகளும், போஜனபலிக்குக் கோதுமையும் ஆகிய யாவையும் கொடுக்கிறேன் என்றான். 24 அதற்குத் தாவீதுராஜா ஒர்னானை நோக்கி: அப்படியல்ல, நான் உன்னுடையதை இலவசமாய் வாங்கி, கர்த்தருக்குச் சர்வாங்க தகனத்தைப் பலியிடாமல், அதைப் பெறும் விலைக்கு வாங்குவேன் என்று சொல்லி, 25 தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறைபொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து, 26 அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அப்பொழுது அவர் வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியினால் அவனுக்கு மறுஉத்தரவு கொடுத்ததுமல்லாமல், 27 தேவதூதன் தன்னுடைய பட்டயத்தை உறையிலே திரும்பப் போடவேண்டும் என்று கர்த்தர் அவனுக்குச் சொன்னார். 28 எபூசியனாகிய ஒர்னானின் களத்திலே கர்த்தர் தனக்கு உத்தரவு அருளினதைத் தாவீது அக்காலத்திலே கண்டு அங்கேதானே பலியிட்டான். 29 மோசே வனாந்தரத்தில் உண்டாக்கின கர்த்தருடைய வாசஸ்தலமும் சர்வாங்க தகனபலிபீடமும் அக்காலத்திலே கிபியோனின் மேட்டில் இருந்தது. 30 தாவீது கர்த்தருடைய தூதனின் பட்டயத்திற்குப் பயந்திருந்தபடியால், அவன் தேவசந்நிதியில் போய் விசாரிக்கக்கூடாதிருந்தது.

1 நாளாகமம் 22

1 அப்பொழுது தாவீது: தேவனாகிய கர்த்தருடைய ஆலயம் இருக்கும் ஸ்தலம் இதுவே; இஸ்ரவேல் பலியிடும் சர்வாங்க தகனபலிபீடம் இருக்கும் ஸ்தலமும் இதுவே என்றான். 2 பின்பு தாவீது இஸ்ரவேல் தேசத்திலிருக்கிற அந்நியஜாதியாரைக் கூடிவரச்செய்து, தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கான கல்லுகளை வெட்டிப் பணிப்படுத்தும் கல்தச்சரை ஏற்படுத்தினான். 3 தாவீது வாசல்களின் கதவுகளுக்கு வேண்டிய ஆணிகளுக்கும் கீல்களுக்கும் மிகுதியான இரும்பையும், நிறுத்து முடியாத ஏராளமான வெண்கலத்தையும், 4 எண்ணிறந்த கேதுருமரங்களையும் சம்பாதித்தான்; சீதோனியரும் தீரியரும் தாவீதுக்குத் திரளான கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள். 5 தாவீது: என் குமாரனாகிய சாலொமோன் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; கர்த்தருக்குக் கட்டப்படும் ஆலயம் சகல தேசங்களிலும் கீர்த்தியும் மகிமையும் உடையதாய் விளங்கும்படி மகா பெரியதாயிருக்கவேண்டும்; ஆகையால் அதற்காக வேண்டியவைகளை இப்பொழுதே சேகரம்பண்ணவேண்டும் என்று சொல்லி, தாவீது தன் மரணத்திற்கு முன்னே திரளாய்ச் சவதரித்துவைத்தான். 6 அவன் தன் குமாரனாகிய சாலொமோனை அழைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்காக அவனுக்குக் கட்டளைகொடுத்து, 7 சாலொமோனை நோக்கி: என் குமாரனே, நான் என் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட என் இருதயத்தில் நினைத்திருந்தேன். 8 ஆனாலும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி: நீ திரளான இரத்தத்தைச் சிந்தி, பெரிய யுத்தங்களைப் பண்ணினாய்; நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; எனக்கு முன்பாக மிகுதியான இரத்தத்தைத் தரையிலே சிந்தப்பண்ணினாய். 9 இதோ, உனக்குப் பிறக்கப்போகிற குமாரன் அமைதியுள்ள புருஷனாயிருப்பான்; சுற்றிலுமிருக்கும் அவன் சத்துருக்களையெல்லாம் விலக்கி அவனை அமர்ந்திருக்கச் செய்வேன்; ஆகையால் அவன் பேர் சாலொமோன் என்னப்படும்; அவன் நாட்களில் இஸ்ரவேலின்மேல் சமாதானத்தையும் அமரிக்கையையும் அருளுவேன். 10 அவன் என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்குக் குமாரனாயிருப்பான், நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்; இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார். 11 இப்போதும் என் குமாரனே, நீ பாக்கியவானாயிருந்து, கர்த்தர் உன்னைக்குறித்துச் சொன்னபடியே உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனேகூட இருப்பாராக. 12 கர்த்தர் உனக்கு ஞானத்தையும் உணர்வையும் அருளிச்செய்து, உன் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக. 13 கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த நியமங்களையும் நியாயங்களையும் செய்ய நீ கவனமாயிருந்தால் பாக்கியவானாயிருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாயிரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு. 14 இதோ, நான் என் சிறுமையிலே கர்த்தருடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்துலட்சம் தாலந்து வெள்ளியையும், நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும் சவதரித்தும், மரங்களையும் கற்களையும் சவதரித்தும் வைத்தேன்; நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாய்ச் சவதரிப்பாய். 15 வேலைசெய்யத்தக்க திரளான சிற்பாசாரிகளும், தச்சரும் கல்தச்சரும், எந்த வேலையிலும் நிபுணரானவர்களும் உன்னோடிருக்கிறார்கள். 16 பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்துக்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழும்பிக் காரியத்தை நடப்பி; கர்த்தர் உன்னோடே இருப்பாராக என்றான். 17 தன் குமாரனாகிய சாலொமோனுக்கு உதவிசெய்ய, தாவீது இஸ்ரவேலின் பிரபுக்கள் அனைவருக்கும் கற்பித்துச் சொன்னது: 18 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடிருந்து நான்கு திசையிலும் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தந்தார் அல்லவா? தேசத்தின் குடிகளை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; கர்த்தருக்கு முன்பாகவும், அவருடைய ஜனத்திற்கு முன்பாகவும் தேசம் கீழ்ப்பட்டிருக்கிறது. 19 இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமத்தையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும், தேவனுடைய பரிசுத்தப் பணிமுட்டுகளையும், கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் எழும்பி, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள் என்றான்.

1 நாளாகமம் 23

1 தாவீது கிழவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன் குமாரனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான். 2 இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியரையும், லேவியரையும் கூடிவரும்படி செய்தான். 3 அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர் பேர்பேராக எண்ணப்பட்டார்கள்; தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய இலக்கம் முப்பத்தெண்ணாயிரம். 4 அவர்களில் இருபத்துநாலாயிரம்பேர் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவரும் மணியக்காரருமாயிருக்கவேண்டும் என்றும், 5 நாலாயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும், துதிசெய்கிறதற்குத் தான் பண்ணுவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி, 6 அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான். 7 கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள். 8 லாதானின் குமாரர், யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான். 9 சிமேயின் குமாரர், செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்றுபேர்; இவர்கள் லாதான் வம்சப் பிதாக்களில் தலைமையாயிருந்தார்கள். 10 யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நாலுபேரும் சிமேயின் குமாரராயிருந்தார்கள். 11 யாகாத் தலைமையாயிருந்தான்; சீனா இரண்டாம் குமாரனாயிருந்தான்; எயூஷுக்கும் பெரீயாவுக்கும் அநேகம் குமாரர் இராதபடியினால், அவர்கள் பிதாக்களின் குடும்பத்தாரில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள். 12 கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலுபேர். 13 அம்ராமின் குமாரர், ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான ஸ்தலத்தை என்றைக்கும் பரிசுத்தமாய்க் காக்கிறதற்கும், என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாகத் தூபங்காட்டுகிறதற்கும், அவருக்கு ஆராதனை செய்கிறதற்கும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கிறதற்கும் பிரித்துவைக்கப்பட்டார்கள். 14 தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் குமாரரோவெனில், லேவிகோத்திரத்தாருக்குள் எண்ணப்பட்டார்கள். 15 மோசேயின் குமாரர், கெர்சோம், எலியேசர் என்பவர்கள். 16 கெர்சோமின் குமாரரில் செபுவேல் தலைமையாயிருந்தான். 17 எலியேசருடைய குமாரரில் ரெகபியா என்னும் அவன் குமாரன் தலைமையாயிருந்தான்; எலியேசருக்கு வேறே குமாரர் இல்லை; ரெகபியாவின் குமாரர் அநேகராயிருந்தார்கள். 18 இத்சாரின் குமாரரில் செலோமித் தலைமையாயிருந்தான். 19 எப்ரோனின் குமாரரில் எரியா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நாலாவது எக்காமியாம். 20 ஊசியேலின் குமாரரில் மீகா என்பவன் தலைமையாயிருந்தான்; இரண்டாவது இஷியா. 21 மெராரியின் குமாரர், மகேலி, மூசி என்பவர்கள்; மகேலியின் குமாரர், எலெயாசார், கீஸ் என்பவர்கள். 22 எலெயாசார் மரிக்கிறபோது, அவனுக்குக் குமாரத்திகளே அல்லாமல் குமாரர் இல்லை; கீசின் குமாரராகிய இவர்களுடைய சகோதரர் இவர்களை விவாகம்பண்ணினார்கள். 23 மூசியின் குமாரர், மகலி, ஏதேர், எரேமோத் என்னும் மூன்றுபேர். 24 தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, பிதாக்களில் தலைமையாயிருந்த லேவி புத்திரரின் பேர்டாப்பின்படியே, தலைதலையாக எண்ணப்பட்ட இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட இவர்களுடைய சந்ததியார் கர்த்தருடைய ஆலயத்துப் பணிவிடையைச் செய்தார்கள். 25 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை இளைப்பாறியிருக்கப்பண்ணினார்; அவர் என்றென்றைக்கும் எருசலேமில் வாசம்பண்ணுவாரென்றும், 26 இனி லேவியர் வாசஸ்தலத்தையாகிலும் அதின் ஊழியத்திற்கடுத்த அதின் பணிமுட்டுகளில் எதையாகிலும் சுமக்கத்தேவையில்லை என்றும், 27 தாவீது அவர்களைக் குறித்துச்சொன்ன கடைசி வார்த்தைகளின்படியே, லேவி புத்திரரில் தொகைக்குட்பட்டவர்கள் இருபது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்களாயிருந்தார்கள். 28 அவர்கள் ஆரோனுடைய குமாரரின்கீழ்க் கர்த்தருடைய ஆலயத்தின் ஊழியமாய் நின்று, பிராகாரங்களையும், அறைகளையும், சகல பரிசுத்த பணிமுட்டுகளின் சுத்திகரிப்பையும், தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்கடுத்த வேலையையும் விசாரிப்பதும், 29 சமுகத்தப்பங்களையும், போஜனபலிக்கு மெல்லிய மாவையும், புளிப்பில்லாத அதிரசங்களையும், சட்டிகளிலே செய்கிறதையும் சுடுகிறதையும், திட்டமான சகல நிறையையும் அளவையும் விசாரிப்பதும், 30 நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதித்து, ஓய்வுநாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற சகல வேளைகளிலும், 31 இலக்கத்திற்குள்ளான அவர்கள் தங்களுக்கு நியமிக்கப்பட்டபடியே, எப்பொழுதும் அந்தப் பிரகாரமாய்ச் செய்ய, கர்த்தருக்கு முன்பாக நிற்பதும், 32 ஆசரிப்புக் கூடாரத்தின் காவலையும் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் தங்கள் சகோதரராகிய ஆரோனுடைய குமாரரின் காவலையும் காப்பதும், கர்த்தருடைய ஆலயத்தின் பணிவிடையைச் செய்வதும், அவர்கள் வேலையாயிருந்தது.

1 நாளாகமம் 24

1 ஆரோன் புத்திரரின் வகுப்புகளாவன: ஆரோனின் குமாரர், நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்பவர்கள். 2 நாதாபும் அபியூவும் குமாரர் இல்லாமல் தங்கள் தகப்பனுக்கு முன்னே மரித்தபடியினால், எலெயாசாரும் இத்தாமாரும் ஆசாரிய ஊழியம் செய்தார்கள். 3 தாவீது சாதோக்கைக்கொண்டு எலெயாசாரின் புத்திரரையும், அகிமெலேக்கைக்கொண்டு இத்தாமாரின் புத்திரரையும் அவர்கள் செய்யவேண்டிய ஊழியத்துக்கு முறைப்படி அவர்களை வகுத்தான். 4 அவர்களை வகுக்கிறபோது, இத்தாமாரின் புத்திரரைப்பார்க்கிலும் எலெயாசாரின் புத்திரருக்குள்ளே தலைமையானவர்கள் அதிகமானபேர் காணப்பட்டபடியினால், எலெயாசாரின் புத்திரரில் பதினாறுபேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும், இத்தாமாரின் புத்திரரில் எட்டுப்பேர் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்துக்கும் தலைமையாக வைக்கப்பட்டார்கள். 5 எலெயாசாரின் புத்திரரிலும் இத்தாமாரின் புத்திரரிலும், பரிசுத்த ஸ்தலத்துக்கும், தேவனுக்கு அடுத்த காரியங்களில் பிரபுக்களாயிருக்கும்படிக்கும், இவர்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசம்பண்ணாமல் சீட்டுப்போட்டு அவர்களை வகுத்தார்கள். 6 லேவியரில் சம்பிரதியாகிய செமாயா என்னும் நெதனெயேலின் குமாரன், ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் ஆசாரியனாகிய சாதோக்குக்கும் அபியத்தாரின் குமாரனாகிய அகிமெலேக்குக்கும் ஆசாரியரும் லேவியருமான பிதாக்களின் தலைவருக்கும் முன்பாக அவர்கள் நாமங்களை எழுதினான்; ஒரு பிதாவின் வீட்டுச் சீட்டு எலெயாசாருக்கு விழுந்தது; பின்பு அந்தப்படியே இத்தாமாருக்கும் விழுந்தது. 7 முதலாவது சீட்டு யோயாரீபின் பேர்வழிக்கும், இரண்டாவது யெதாயாவின் பேர்வழிக்கும், 8 மூன்றாவது ஆரிமின் பேர்வழிக்கும், நான்காவது செயோரீமின் பேர்வழிக்கும், 9 ஐந்தாவது மல்கியாவின் பேர்வழிக்கும், ஆறாவது மியாமீனின் பேர்வழிக்கும், 10 ஏழாவது அக்கோத்சின் பேர்வழிக்கும், எட்டாவது அபியாவின் பேர்வழிக்கும், 11 ஒன்பதாவது யெசுவாவின் பேர்வழிக்கும், பத்தாவது செக்கனியாவின் பேர்வழிக்கும், 12 பதினோராவது எலியாசீபின் பேர்வழிக்கும், பன்னிரண்டாவது யாக்கீமின் பேர்வழிக்கும், 13 பதின்மூன்றாவது உப்பாவின் பேர்வழிக்கும், பதினான்காவது எசெபெயாபின் பேர்வழிக்கும், 14 பதினைந்தாவது பில்காவின் பேர்வழிக்கும், பதினாறாவது இம்மேரின் பேர்வழிக்கும், 15 பதினேழாவது ஏசீரின் பேர்வழிக்கும், பதினெட்டாவது அப்சேசின் பேர்வழிக்கும், 16 பத்தொன்பதாவது பெத்தகியாவின் பேர்வழிக்கும், இருபதாவது எகெசெக்கியேலின் பேர்வழிக்கும், 17 இருபத்தோராவது யாகினின் பேர்வழிக்கும், இருபத்திரண்டாவது காமுவேலின் பேர்வழிக்கும், 18 இருபத்துமூன்றாவது தெலாயாவின் பேர்வழிக்கும், இருபத்துநான்காவது மாசியாவின் பேர்வழிக்கும் விழுந்தது. 19 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவர்கள் தகப்பனாகிய ஆரோனுக்குக் கற்பித்தபடியே, அவர்கள் அவனுடைய கட்டளையின்பிரகாரம், தங்கள் முறைவரிசைகளில் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கும் அவர்களுடைய ஊழியத்திற்காகப் பண்ணப்பட்ட வகுப்புகள் இவைகளே. 20 லேவியின் மற்றப் புத்திரருக்குள்ளே இருக்கிற அம்ராமின் புத்திரரில் சூபவேலும், சூபவேலின் குமாரரில் எகேதியாவும், 21 ரெகபியாவின் குமாரரில் மூத்தவனாகிய இஷியாவும், 22 இத்சாரியரில் செலெமோத்தும், செலெமோத்தின் குமாரரில் யாகாத்தும், 23 எப்ரோனின் குமாரரில் மூத்தவனாகிய எரியாவும், இரண்டாம் குமாரனாகிய அம்ரியாவும், மூன்றாம் குமாரனாகிய யாகாசியேலும், நான்காம் குமாரனாகிய எக்காமியாமும், 24 ஊசியேலின் குமாரரில் மீகாவும், மீகாவின் குமாரரில் சாமீரும், 25 மீகாவின் சகோதரனாகிய இஷியாவும், இஷியாவின் குமாரரில் சகரியாவும், 26 மெராரியின் குமாரராகிய மகேலி, மூசி என்பவர்களும், யாசியாவின் குமாரனாகிய பேனோவும், 27 மெராரியின் குமாரனாகிய யாசியாவின் குமாரரான பேனோ, சோகாம், சக்கூர், இப்ரி என்பவர்களும், 28 மகேலியின் குமாரரில் புத்திரனில்லாத எலெயாசாரும், 29 கீசின் புத்திரரில் யெராமியேலும், 30 மூசியின் குமாரரான மகேலி, ஏதேர், எரிமோத் என்பவர்களுமாகிய இவர்கள் தங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே லேவியரின் புத்திரரானவர்கள். 31 இவர்களும் ராஜாவாகிய தாவீதுக்கும் சாதோக்குக்கும் அகிமெலேக்குக்கும் ஆசாரியரிலும் லேவியரிலும் பிதாக்களாயிருக்கிற தலைவருக்கும் முன்பாக, தங்கள் சகோதரராகிய ஆரோனின் புத்திரர் செய்ததுபோல, தங்களிலிருக்கிற பிதாக்களான தலைவருக்கும், அவர்களுடைய சிறிய சகோதரருக்கும், சரிசமானமாய்ச் சீட்டுப் போட்டுக்கொண்டார்கள்.

1 நாளாகமம் 25

1 மேலும் சுரமண்டலங்களாலும் தம்புருகளாலும் கைத்தாளங்களாலும், தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப், ஏமான், எதுத்தூன் என்பவர்களின் குமாரரில் சிலரை, தாவீதும் தேவாலயச் சேனைகளின் பிரபுக்களும் ஊழியத்திற்கென்று பிரித்துவைத்தார்கள்; தங்கள் ஊழியத்தின் கிரியைக்குக் குறித்துவைக்கப்பட்ட மனுஷர்களின் தொகையாவது: 2 ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லுகிற ஆசாப்பின் வசத்திலிருக்கிற, ஆசாப்பின் குமாரரில் சக்கூர், யோசேப்பு, நெதானியா, அஷாரேலா என்பவர்களும், 3 கர்த்தரைப் போற்றித் துதித்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தங்கள் தகப்பனாகிய எதுத்தூனின் வசத்திலே சுரமண்டலங்களை வாசிக்க, எதுத்தூனின் குமாரராகிய கெதலியா, சேரீ, எஷாயா, அஷபியா, மத்தித்தியா என்னும் ஆறுபேரும், 4 கொம்பைத் தொனிக்கப்பண்ண, தேவவிஷயத்தில் ராஜாவுக்கு ஞானதிருஷ்டியுள்ள புருஷனாகிய ஏமானின் குமாரரான புக்கியா, மத்தனியா, ஊசியேல், செபுவேல், எரிமோத், அனனியா, அனானி, எலியாத்தா, கிதல்தி, ரொமந்தியேசர், யோஸ்பெகாஷா, மலோத்தி, ஒத்திர், மகாசியோத் என்பவர்களுமே. 5 இவர்களெல்லாரும் ஏமானின் குமாரராயிருந்தார்கள்; தேவன் ஏமானுக்குப் பதினாலு குமாரரையும் மூன்று குமாரத்திகளையும் கொடுத்தார். 6 இவர்கள் அனைவரும் ராஜாவுடைய கட்டளைப்பிரமாணமாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் தாளங்கள் தம்புருகள் சுரமண்டலங்களாகிய கீதவாத்தியம் வாசிக்க, தேவனுடைய ஆலயத்தின் ஊழியமாக அவரவர் தங்கள் தங்கள் தகப்பன்மாராகிய ஆசாப், எதுத்தூன், ஏமான் என்பவர்கள் வசத்தில் இருந்தார்கள். 7 கர்த்தரைப் பாடும் பாட்டுகளைக் கற்றுக்கொண்டு, நிபுணரான தங்கள் சகோதரரோடுங்கூட அவர்கள் இலக்கத்திற்கு இருநூற்றெண்பத்தெட்டுப்பேராயிருந்தார்கள். 8 அவர்களில் சிறியவனும் பெரியவனும், ஆசானும் மாணாக்கனும், சரிசமானமாய் முறைவரிசைக்காகச் சீட்டுப்போட்டுக்கொண்டார்கள். 9 முதலாவது சீட்டு ஆசாப் வம்சமான யோசேப்பின் பேர்வழிக்கும், இரண்டாவது கெதலியா, அவன் சகோதரர், அவன் குமாரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 10 மூன்றாவது சக்கூர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 11 நான்காவது இஸ்ரி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 12 ஐந்தாவது நெத்தனியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 13 ஆறாவது புக்கியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 14 ஏழாவது எசரேலா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 15 எட்டாவது எஷாயா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 16 ஒன்பதாவது மத்தனீயா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 17 பத்தாவது சிமேயா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 18 பதினோராவது அசாரியேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 19 பன்னிரண்டாவது அஷாபியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 20 பதின்மூன்றாவது சுபவேல், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 21 பதினான்காவது மத்தித்தியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 22 பதினைந்தாவது எரேமோத், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 23 பதினாறாவது அனனியா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 24 பதினேழாவது யோஸ்பேக்காஷா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 25 பதினெட்டாவது ஆனானி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 26 பத்தொன்பதாவது மலோத்தி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 27 இருபதாவது எலியாத்தா, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 28 இருபத்தோராவது ஒத்திர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 29 இருபத்திரண்டாவது கிதல்தி, அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 30 இருபத்துமூன்றாவது மகாசியோத், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும், 31 இருபத்துநான்காவது ரொமந்தியேசர், அவன் குமாரர், அவன் சகோதரரென்னும் பன்னிரண்டு பேர்வழிக்கும் விழுந்தது.

1 நாளாகமம் 26

1 வாசல்காக்கிறவர்களின் வகுப்புகளாவன: கோராகியர் சந்ததியான ஆசாபின் புத்திரரிலே கோரேயின் குமாரன் மெஷெலேமியா என்பவன், 2 மெஷெலேமியாவின் குமாரர், மூத்தவனாகிய சகரியாவும், 3 எதியாயேல், செபதியா, யதனியேல், ஏலாம், யோகனான், எலியோனாய் என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் குமாரரும்; 4 ஓபேத்ஏதோமின் குமாரர், மூத்தவனாகிய செமாயாவும், 5 யோசபாத், யோவாக், சாக்கார், நெதனெயேல், அம்மியேல், இசக்கார், பெயுள்தாயி என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் ஐந்தாம் ஆறாம் ஏழாம் எட்டாம் குமாரருமே; தேவன் அவனை ஆசீர்வதித்திருந்தார். 6 அவன் குமாரனாகிய செமாயாவுக்கும் குமாரர் பிறந்து, அவர்கள் பராக்கிரமசாலிகளாயிருந்து, தங்கள் தகப்பன் குடும்பத்தாரை ஆண்டார்கள். 7 செமாயாவுக்கு இருந்த குமாரர் ஒத்னியும், பலசாலிகளாகிய ரெப்பாயேல், ஓபேத், எல்சாபாத் என்னும் அவன் சகோதரரும், எலிகூவும் செமகியாவுமே. 8 ஓபேத்ஏதோமின் புத்திரரும் அவர்கள் குமாரரும் அவர்கள் சகோதரருமாகிய ஊழியத்திற்குப் பலத்த பராக்கிரமசாலிகளான அவர்களெல்லாரும் அறுபத்திரண்டுபேர். 9 மெஷெலேமியாவின் குமாரரும் சகோதரருமான பராக்கிரமசாலிகள் பதினெட்டுப்பேர். 10 மெராரியின் புத்திரரில் ஓசா என்பவனுடைய குமாரர்கள்: சிம்ரி என்னும் தலைமையானவன்; இவன் மூத்தவனாயிராவிட்டாலும் இவன் தகப்பன் இவனைத் தலைவனாக வைத்தான். 11 இல்க்கியா, தெபலியா, சகரியா என்னும் இரண்டாம் மூன்றாம் நான்காம் குமாரரானவர்கள்; ஓசாவின் குமாரரும் சகோதரரும் எல்லாம் பதின்மூன்றுபேர். 12 காவல்காரரான தலைவரின்கீழ்த் தங்கள் சகோதரருக்கொத்த முறையாய்க் கர்த்தருடைய ஆலயத்தில் வாசல்காக்கிறவர்களாய்ச் சேவிக்க இவர்கள் வகுக்கப்பட்டு, 13 தங்கள் பிதாக்களின் குடும்பத்தாராகிய சிறியவர்களும் பெரியவர்களுமாய் இன்ன வாசலுக்கு இன்னாரென்று சீட்டுப்போட்டுக்கொண்டார்கள். 14 கீழ்ப்புறத்திற்குச் செலேமியாவுக்குச் சீட்டு விழுந்தது; விவேகமுள்ள யோசனைக்காரனாகிய சகரியா என்னும் அவன் குமாரனுக்குச் சீட்டுப் போட்டபோது, அவன் சீட்டு வடபுறத்திற்கென்று விழுந்தது. 15 ஓபேத்ஏதோமுக்குத் தென்புறத்திற்கும், அவன் குமாரருக்கு அசுப்பீம் வீட்டிற்கும், 16 சூப்பீமுக்கும், ஓசாவுக்கும் மண்போட்டு உயர்த்தப்பட்ட வழியும் காவலுக்கு எதிர்காவலும் இருக்கிற மேற்புறமான வாசலுக்கும் சீட்டு விழுந்தது. 17 கிழக்கே லேவியரான ஆறுபேரும், வடக்கே பகலிலே நாலுபேரும், தெற்கே பகலிலே நாலுபேரும், அசுப்பீம் வீட்டண்டையில் இரண்டிரண்டுபேரும், 18 வெளிப்புறமான வாசல் அண்டையில் மேற்கே இருக்கிற உயர்ந்த வழிக்கு நாலுபேரும், வெளிப்புறமான வழியில் இரண்டுபேரும் வைக்கப்பட்டார்கள். 19 கோராகின் புத்திரருக்குள்ளும், மெராரியின் புத்திரருக்குள்ளும், வாசல்காக்கிறவர்களின் வகுப்புகள் இவைகளே. 20 மற்ற லேவியரில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்பட்ட பொருள்களின் பொக்கிஷங்களையும் விசாரிக்கிறவனாயிருந்தான். 21 லாதானின் குமாரர் யாரென்றால், கெர்சோனியனான அவனுடைய குமாரரில் தலைமையான பிதாக்களாயிருந்த யெகியேலியும், 22 யெகியேலியின் குமாரராகிய சேத்தாமும், அவன் சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள். 23 அம்ராமீயரிலும், இத்சாகாரியரிலும், எப்ரோனியரிலும், ஊசியேரியரிலும் சிலர் அப்படியே விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள். 24 மோசேயின் குமாரனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷப் பிரதானியாயிருந்தான். 25 எலியேசர் மூலமாய் அவனுக்கு இருந்த சகோதரரானவர்கள், இவன் குமாரன் ரெகபியாவும், இவன் குமாரன் எஷாயாவும், இவன் குமாரன் யோராமும், இவன் குமாரன் சிக்கிரியும், இவன் குமாரன் செலோமித்துமே. 26 ராஜாவாகிய தாவீதும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளுமான பிதாக்களின் தலைவரும், சேனாபதிகளும் யுத்தத்தில் அகப்பட்ட கொள்ளைகளில் எடுத்து, 27 கர்த்தருடைய ஆலயத்தைப் பரிபாலிக்கும்படிக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட பொருள்களின் பொக்கிஷங்களையெல்லாம் அந்தச் செலோமித்தும் அவனுடைய சகோதரரும் விசாரித்தார்கள். 28 ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலும், கீசின் குமாரனாகிய சவுலும், நேரின் குமாரனாகிய அப்னேரும், செருயாவின் குமாரனாகிய யோவாபும், அவரவர் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட அனைத்தும் செலோமித்தின் கையின்கீழும் அவன் சகோதரர் கையின்கீழும் இருந்தது. 29 இத்சாகாரியரில் கெனானியாவும் அவன் குமாரரும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரரும் மணியக்காரருமாயிருந்தார்கள். 30 எப்ரோனியரில் அசபியாவும் அவன் சகோதரருமாகிய ஆயிரத்து எழுநூறு பராக்கிரமசாலிகள் யோர்தானுக்கு இப்பாலே மேற்கே இருக்கிற இஸ்ரவேலின்மேல் கர்த்தருடைய எல்லா ஊழியத்திற்கும் ராஜாவின் வேலைக்கும் வைக்கப்பட்டார்கள். 31 எப்ரோனியரில் எரியாவும் இருந்தான்; அவன் தன் பிதாக்களின் வம்சங்களான எப்ரோனியரில் தலைமையானவன்; தாவீது அரசாண்ட நாற்பதாம் வருஷத்திலே அவர்கள் தேடப்பட்டபோது அவர்களுக்குள்ளே கீலேயாத்தேசத்து ஏசேரிலே பராக்கிரம வீரர் காணப்பட்டார்கள். 32 பலசாலிகளாகிய அவனுடைய சகோதரர் இரண்டாயிரத்து எழுநூறு பிரதான தலைவராயிருந்தார்கள்; அவர்களைத் தாவீதுராஜா தேவனுக்கடுத்த சகல காரியத்திற்காகவும், ராஜாவின் காரியத்திற்காகவும், ரூபனியர்மேலும், காதியர்மேலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தின்மேலும் வைத்தான்.

1 நாளாகமம் 27

1 தங்கள் இலக்கத்தின்படி இருக்கிற இஸ்ரவேல் புத்திரருக்கு வம்சங்களின் தலைவரும், ஆயிரத்துக்குச் சேர்வைக்காரரும், நூற்றிற்குச் சேர்வைக்காரரும், இவர்களுடைய தலைவரும் வைக்கப்பட்டிருந்தார்கள்; இவர்கள் வருஷத்திலுண்டான மாதங்களிலெல்லாம் மாதத்திற்கு மாதம் ராஜாவைச் சேவிக்கிறதற்கு வகுக்கப்பட்ட வரிசைகளின்படியெல்லாம் மாறிமாறி வருவார்கள்; ஒவ்வொரு வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள். 2 முதலாவது மாதத்துக்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின் குமாரன் யஷொபெயாம் இருந்தான்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள். 3 அவன் பேரேசின் சந்ததியாரில் சகல சேனாபதிகளின் தலைவனாயிருந்து முதல் மாதம் விசாரித்தான். 4 இரண்டாவது மாதத்தின் வகுப்பின்மேல் அகோகியனான தோதாயி இருந்தான்; அவன் வகுப்பிலே மிக்லோத் தளகர்த்தனாயிருந்தான்; அவன் வகுப்பிலே இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள். 5 மூன்றாவது மாதத்தின் மூன்றாம் சேனாபதி யோய்தாவின் குமாரனாகிய பெனாயா என்னும் தலைமையான பிரதானி; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள். 6 இந்தப் பெனாயா அந்த முப்பது பராக்கிரமசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாயிருந்தான்; அவனுடைய வகுப்பை அவன் குமாரனாகிய அமிசபாத் விசாரித்தான். 7 நாலாவது மாதத்தின் நாலாம் சேனாபதி யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும், அவனுக்குப்பின்பு அவன் குமாரன் செப்தியாவுமே; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள். 8 ஐந்தாவது மாதத்தின் ஐந்தாம் சேனாபதி இஸ்ராகியனான சம்கூத் என்பவன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள். 9 ஆறாவது மாதத்தின் ஆறாம் சேனாபதி இக்கேசின் குமாரன் ஈரா என்னும் தெக்கோவியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள். 10 ஏழாவது மாதத்தின் ஏழாம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் ஒருவனாகிய ஏலேஸ் என்னும் பெலோனியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள். 11 எட்டாவது மாதத்தின் எட்டாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய சிபெக்காயி என்னும் ஊஷாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள். 12 ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாம் சேனாபதி பென்யமீனரில் அபியேசர் என்னும் ஆனதோத்தான்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள். 13 பத்தாவது மாதத்தின் பத்தாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய மக்ராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள். 14 பதினோராவது மாதத்தின் பதினோராம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் பெனாயா என்னும் பிரத்தோனியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள். 15 பன்னிரண்டாவது மாதத்தின் பன்னிரண்டாம் சேனாபதி ஒத்னியேல் சந்ததியான எல்தாயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள். 16 இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவர்கள்: ரூபனியருக்குத் தலைவன் சிக்ரியின் குமாரன் எலியேசர்; சிமியோனியருக்கு மாக்காவின் குமாரன் செப்பத்தியா. 17 லேவியருக்குக் கேமுவேலின் குமாரன் அஷாபியா; ஆரோன் சந்ததிக்குச் சாதோக். 18 யூதாவுக்குத் தாவீதின் சகோதரரில் ஒருவனாகிய எலிகூ; இசக்காருக்கு மிகாவேலின் குமாரன் ஒம்ரி. 19 செபுலோனுக்கு ஒப்தியாவின் குமாரன் இஸ்மாயா; நப்தலிக்கு அஸ்ரியேலின் குமாரன் எரிமோத். 20 எப்பிராயீம் புத்திரருக்கு அசசியாவின் குமாரன் ஓசெயா; மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குப் பெதாயாவின் குமாரன் யோவேல். 21 கீலேயாத்திலுள்ள மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்குச் சகரியாவின் குமாரன் இத்தோ; பென்யமீனுக்கு அப்னேரின் குமாரன் யாசியேல். 22 தாணுக்கு எரோகாமின் குமாரன் அசாரியேல்; இவர்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவராயிருந்தார்கள். 23 இஸ்ரவேலை வானத்தின் நட்சத்திரங்கள் அத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால், தாவீது இருபது வயதுமுதல் அதற்குக் கீழ்ப்பட்டவர்களின் இலக்கத்தைத் தொகையேற்றவில்லை. 24 செருயாவின் குமாரன் யோவாப் எண்ணத்துவக்கியும் முடிக்காதே போனான்; அதற்காக இஸ்ரவேலின்மேல் கடுங்கோபம் வந்தது; ஆதலால் அந்தத்தொகை தாவீதுராஜாவின் நாளாகமக்கணக்கிலே ஏறவில்லை. 25 ராஜாவுடைய பொக்கிஷங்களின்மேல் ஆதியேலின் குமாரன் அஸ்மாவேத்தும், பட்டணங்களிலும் கிராமங்களிலும் துருக்கங்களிலுமுள்ள நிலத்தின் வருமான பண்டகசாலைகளின்மேல் உசியாவின் குமாரன் யோனத்தானும், 26 நிலத்தைப் பயிரிட வயல்வெளியின் வேலைசெய்கிறவர்களின்மேல் கேலூப்பின் குமாரன் எஸ்ரியும், 27 திராட்சத்தோட்டங்களின்மேல் ராமாத்தியனான சீமேயும், திராட்சத்தோட்டங்களின் வரத்தாகிய திராட்சரசம் வைக்கும் இடங்களின்மேல் சிப்மியனாகிய சப்தியும், 28 பள்ளத்தாக்குகளிலுள்ள ஒலிவமரங்களின்மேலும் முசுக்கட்டை விருட்சங்களின்மேலும் கெதேரியனான பால்கானானும், எண்ணெய் கிடங்குகளின்மேல் யோவாசும், 29 சாரோனில் மேய்கிற மாடுகளின்மேல் சாரோனியனான சித்ராயும், பள்ளத்தாக்குகளிலுள்ள மாடுகளின்மேல் அத்லாயின் குமாரன் சாப்பாத்தும், 30 ஒட்டகங்களின்மேல் இஸ்மவேலியனாகிய ஓபிலும், கழுதைகளின்மேல் மெரோனோத்தியனாகிய எகெதியாவும், 31 ஆடுகளின்மேல் ஆகாரியனான யாசிசும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இவர்களெல்லாரும் தாவீதுராஜாவின் பொருள்களுக்கு விசாரிப்புக்காரராயிருந்தார்கள். 32 தாவீதின் சிறிய தகப்பனாகிய யோனத்தான் என்னும் புத்தியும் படிப்புமுள்ள மனுஷன் ஆலோசனைக்காரனாயிருந்தான்; அக்மோனியின் குமாரன் யெகியேல் ராஜாவின் குமாரரோடிருந்தான். 33 அகித்தோப்பேல் ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாயிருந்தான்; அர்கியனான ஊஷாயி ராஜாவின் தோழனாயிருந்தான். 34 பெனாயாவின் குமாரன் யோய்தாவும் அபியத்தாரும் அகித்தோப்பேலுக்கு உதவியாயிருந்தார்கள்; யோவாப் ராஜாவின் படைத்தலைவனாயிருந்தான்.

1 நாளாகமம் 28

1 கோத்திரங்களின் தலைவரும், ராஜாவைச் சேவிக்கிற வகுப்புகளின் தலைவரும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், ராஜாவுக்கும் ராஜகுமாரருக்கும் உண்டான எல்லா ஆஸ்தியையும் மிருகஜீவன்களையும் விசாரிக்கிற தலைவருமாகிய இஸ்ரவேலின் சகல பிரபுக்களையும், பிரதானிகளையும், பலசாலிகளையும், சகல பராக்கிரமசாலிகளையும் தாவீது எருசலேமிலே கூடிவரச்செய்தான். 2 அப்பொழுது ராஜாவாகிய தாவீது எழுந்திருந்து காலூன்றி நின்று: என் சகோதரரே, என் ஜனமே, நான் சொல்வதைக் கேளுங்கள்; கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் நமது தேவனுடைய பாதபடியும் தங்குவதற்கு ஒரு ஆலயத்தைக் கட்ட நான் என் மனதிலே நினைத்து, கட்டுகிறதற்கு ஆயத்தமும் பண்ணினேன். 3 ஆனாலும் தேவன்: நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டாம்; நீ யுத்த மனுஷனாயிருந்து, ரத்தத்தைச் சிந்தினாய் என்றார். 4 இப்போதும் இஸ்ரவேல் அனைத்தின்மேலும் என்றைக்கும் ராஜாவாயிருக்க, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என் தகப்பனுடைய வீட்டாரிலெல்லாம் என்னைத் தெரிந்துகொண்டார்; அவர் யூதாவையும் யூதாவின் வம்சத்தில் என் தகப்பன் குடும்பத்தையும் தலைமையாகத் தெரிந்துகொண்டு, என்னை எல்லா இஸ்ரவேலின்மேலும் ராஜாவாக்க, என் தகப்பனுடைய குமாரருக்குள் என்மேல் பிரியம் வைத்தார். 5 கர்த்தர் எனக்கு அநேகம் குமாரரைத் தந்தருளினார்; ஆனாலும் இஸ்ரவேலை ஆளும் கர்த்தருடைய ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காருகிறதற்கு, அவர் என்னுடைய எல்லாக் குமாரரிலும் என் குமாரனாகிய சாலொமோனைத் தெரிந்துகொண்டு, 6 அவர் என்னை நோக்கி: உன் குமாரனாகிய சாலொமோனே என் ஆலயத்தையும் என் பிராகாரங்களையும் கட்டக்கடவன்; அவனை எனக்குக் குமாரனாகத் தெரிந்துகொண்டேன்; நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன். 7 இந்நாளில் நடக்கிறபடியே அவன் என் கற்பனைகளின்படியும் என் நியாயங்களின்படியும் செய்ய உறுதியாயிருப்பானானால், அவன் ராஜ்யபாரத்தை என்றென்றைக்கும் திடப்படுத்துவேன் என்றார். 8 இப்போதும் நீங்கள் என்றென்றைக்கும் இந்த நல்ல தேசத்தைச் சுதந்தரமாய் அநுபவித்து, உங்களுக்குப்பிறகு அதை உங்கள் பிள்ளைகளுக்குச் சுதந்தரமாய்ப் பின்வைக்கும்பொருட்டாக, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு விசாரியுங்கள் என்று கர்த்தரின் சபையாகிய இஸ்ரவேல் அனைத்தின் கண்களுக்குமுன்பாகவும், நமது தேவனுடைய செவிகேட்கவும் உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 9 என் குமாரனாகிய சாலொமோனே, நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடும் உற்சாக மனதோடும் சேவி; கர்த்தர் எல்லா இருதயங்களையும் ஆராய்ந்து, நினைவுகளின் தோற்றங்களையெல்லாம் அறிகிறார்; நீ அவரைத் தேடினால் உனக்குத் தென்படுவார்; நீ அவரை விட்டுவிட்டால் அவர் உன்னை என்றைக்கும் கைவிடுவார். 10 இப்போதும் எச்சரிக்கையாயிரு; பரிசுத்த ஸ்தலமாக ஒரு ஆலயத்தைக்கட்டுவதற்குக் கர்த்தர் உன்னைத் தெரிந்துகொண்டார்; நீ திடன்கொண்டு அதை நடப்பி என்று சொன்னான். 11 தாவீது தன் குமாரனாகிய சாலொமோனுக்கு மண்டபமும், அதின் அறைகளும், அதின் பொக்கிஷசாலைகளும், அதின் மேல்வீடுகளும், அதின் உள்ளறைகளும், கிருபாசன ஸ்தானமும் இருக்கவேண்டிய மாதிரியையும், 12 ஆவியினால் தனக்குக் கட்டளையிடப்பட்டபடியெல்லாம் அவன் செய்யவேண்டிய கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களும், தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பரிசுத்தமாக நேர்ந்துகொள்ளப்பட்டவைகளின் பொக்கிஷங்களையும் வைக்கும் சகல சுற்றறைகளும் இருக்கவேண்டிய மாதிரியையும், 13 ஆசாரியரையும் லேவியரையும் வரிசைகளாக வகுக்கிறதற்கும், கர்த்தருடைய ஆலயப்பணிவிடை வேலை அனைத்திற்கும், கர்த்தருடைய ஆலயத்து வேலையின் பணிமுட்டுகள் அனைத்திற்குமுரிய கட்டளையையும் கொடுத்தான். 14 அவன் பற்பல வேலைக்கு வேண்டிய சகல பொற்பாத்திரங்களுக்காக நிறையின்படி பொன்னையும், பற்பல வேலைக்கு வேண்டிய சகல வெள்ளிப்பாத்திரங்களுக்காக நிறையின்படி வெள்ளியையும், 15 பொன் விளக்குத்தண்டுகளுக்கும் அவைகளின் பொன் விளக்குகளுக்கும், ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி விளக்குத்தண்டுகளில் ஒவ்வொரு விளக்குத்தண்டுக்கும் அதின் விளக்குகளுக்கும் நிறையின்படி வேண்டிய வெள்ளியையும், 16 சமுகத்தப்பங்களை வைக்கும் ஒவ்வொரு மேஜைக்கும் நிறையின்படி வேண்டிய பொன்னையும், வெள்ளி மேஜைகளுக்கு வேண்டிய வெள்ளியையும், 17 முள்குறடுகளுக்கும் கலங்களுக்கும் தட்டுகளுக்கும் வேண்டிய பசும்பொன்னையும், பொன் கிண்ணிகளில் ஒவ்வொரு கிண்ணிக்கும் நிறையின்படி வேண்டியதையும், வெள்ளிக்கிண்ணிகளில் ஒவ்வொரு கிண்ணிக்கும் நிறையின்படி வேண்டியதையும், 18 தூபங்காட்டும் பீடத்திற்கு நிறையின்படி வேண்டிய புடமிடப்பட்ட பொன்னையும் கொடுத்து, செட்டைகளை விரித்துக் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியை மூடும் பொன் கேருபீன்களான வாகனத்தின் மாதிரியையும் கொடுத்து, 19 இந்த மாதிரியின்படி சகல வேலைகளும் எனக்குத் தெரியப்படுத்த, இவையெல்லாம் கர்த்தருடைய கரத்தினால் எனக்கு எழுதிக்கொடுக்கப்பட்டது என்றான். 20 தாவீது தன் குமாரனாகிய சாலொமோனை நோக்கி: நீ பலங்கொண்டு தைரியமாயிருந்து, இதை நடப்பி; நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; தேவனாகிய கர்த்தர் என்னும் என் தேவன் உன்னோடே இருப்பார்; கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கடுத்த சகல கிரியைகளையும் நீ முடித்துத் தீருமட்டும், அவர் உன்னைவிட்டு விலகவுமாட்டார், உன்னைக் கைவிடவுமாட்டார். 21 இதோ, தேவனுடைய ஆலயத்துவேலைக்கெல்லாம் ஆசாரியர் லேவியருடைய வகுப்புகள் இருக்கிறது; அந்த எல்லாக் கிரியைக்கும் சகலவித வேலையிலும் நிபுணரான மனப்பூர்வமுள்ள சகல மனுஷரும், உன் சொற்படியெல்லாம் கேட்கும் பிரபுக்களும், சகல ஜனங்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள் என்றான்.

1 நாளாகமம் 29

1 பின்பு தாவீதுராஜா சபையார் எல்லாரையும் நோக்கி: தேவன் தெரிந்துகொண்ட என் குமாரனாகிய சாலொமோன் இன்னும் வாலிபனும் இளைஞனுமாயிருக்கிறான்; செய்யவேண்டிய வேலையோ பெரியது; அது ஒரு மனுஷனுக்கு அல்ல, தேவனாகிய கர்த்தருக்குக் கட்டும் அரமனை. 2 நான் என்னாலே இயன்றமட்டும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று பொன்வேலைக்குப் பொன்னையும், வெள்ளிவேலைக்கு வெள்ளியையும், வெண்கலவேலைக்கு வெண்கலத்தையும், இரும்புவேலைக்கு இரும்பையும், மரவேலைக்கு மரத்தையும், பதிக்கப்படத்தக்க காந்தியுள்ள கற்களையும், பலவருணக் கற்களையும், விலையேறப்பெற்ற சகலவித ரத்தினங்களையும், வெண்கற்பாளங்களையும், கோமேதக முதலிய கற்களையும் ஏராளமாகச் சவதரித்தேன். 3 இன்னும் என் தேவனுடைய ஆலயத்தின்மேல் நான் வைத்திருக்கிற வாஞ்சையினால், பரிசுத்த ஆலயத்துக்காக நான் சவதரித்த அனைத்தையும் தவிர, எனக்குச் சொந்தமான பொன்னையும் வெள்ளியையும் என் தேவனுடைய ஆலயத்துக்கென்று கொடுக்கிறேன். 4 அறைகளின் சுவர்களை மூடுவதற்காகவும், பொன்வேலைக்குப் பொன்னும், வெள்ளிவேலைக்கு வெள்ளியும் உண்டாயிருக்கிறதற்காகவும், கம்மாளர் செய்யும் வேலை அனைத்திற்காகவும், ஓப்பீரின் தங்கமாகிய மூவாயிரம் தாலந்து தங்கத்தையும், சுத்த வெள்ளியாகிய ஏழாயிரம் தாலந்து வெள்ளியையும் கொடுக்கிறேன். 5 இப்போதும் உங்களில் இன்றையதினம் கர்த்தருக்குத் தன் கைக்காணிக்கைகளைச் செலுத்த மனப்பூர்வமானவர்கள் யார் என்றான். 6 அப்பொழுது வம்சங்களின் பிரபுக்களும், இஸ்ரவேல் கோத்திரங்களின் பிரபுக்களும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், ராஜாவின் வேலைக்காரராகிய பிரபுக்களும் மனப்பூர்வமாய், 7 தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பதினாயிரம் தங்கக்காசையும், பதினாயிரம் தாலந்து வெள்ளியையும், பதினெண்ணாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள். 8 யார் கையில் ரத்தினங்கள் இருந்ததோ, அவர்கள் அவைகளையும் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷத்திற்கென்று கெர்சோனியனான யெகியேலின் கையிலே கொடுத்தார்கள். 9 இப்படி மனப்பூர்வமாய்க் கொடுத்ததற்காக ஜனங்கள் சந்தோஷப்பட்டார்கள்; உத்தம இருதயத்தோடே உற்சாகமாய்க் கர்த்தருக்குக் கொடுத்தார்கள்; தாவீது ராஜாவும் மிகவும் சந்தோஷப்பட்டான். 10 ஆகையால் தாவீது சபை அனைத்தின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்திச் சொன்னது: எங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, சதாகாலங்களிலும் தேவரீருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 11 கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள்; வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது; தேவரீர் எல்லாருக்கும் தலைவராய் உயர்ந்திருக்கிறீர். 12 ஐசுவரியமும் கனமும் உம்மாலே வருகிறது; தேவரீர் எல்லாவற்றையும் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே சத்துவமும் வல்லமையும் உண்டு; எவரையும் மேன்மைப்படுத்தவும் பலப்படுத்தவும் உம்முடைய கரத்தினால் ஆகும். 13 இப்போதும் எங்கள் தேவனே, நாங்கள் உமக்கு ஸ்தோத்திரம் செலுத்தி, உமது மகிமையுள்ள நாமத்தைத் துதிக்கிறோம். 14 இப்படி மனப்பூர்வமாய்க் கொடுக்கும் திராணி உண்டாவதற்கு நான் எம்மாத்திரம்? என் ஜனங்கள் எம்மாத்திரம்? எல்லாம் உம்மால் உண்டானது; உமது கரத்திலே வாங்கி உமக்குக் கொடுத்தோம். 15 உமக்கு முன்பாக நாங்கள் எங்களுடைய பிதாக்கள் எல்லாரைப்போலும் அரதேசிகளும் பரதேசிகளுமாயிருக்கிறோம்; பூமியின்மேல் எங்கள் நாட்கள் ஒரு நிழலைப்போல இருக்கிறது; நிலைத்திருப்போம் என்னும் நம்பிக்கையில்லை. 16 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய பரிசுத்த நாமத்திற்கென்று உமக்கு ஒரு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, நாங்கள் சவதரித்திருக்கிற இந்தப்பொருள்கள் எல்லாம் உமது கரத்திலிருந்து வந்தது; எல்லாம் உம்முடையது. 17 என் தேவனே, நீர் இருதயத்தைச் சோதித்து, உத்தம குணத்தில் பிரியமாயிருக்கிறீர் என்பதை அறிவேன்; இவையெல்லாம் நான் உத்தம இருதயத்தோடே மனப்பூர்வமாய்க் கொடுத்தேன்; இப்பொழுது இங்கேயிருக்கிற உம்முடைய ஜனமும் உமக்கு மனப்பூர்வமாய்க் கொடுக்கிறதைக் கண்டு சந்தோஷித்தேன். 18 ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்னும் எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் இருதயத்தில் உண்டான இந்தச் சிந்தையையும் நினைவையும் என்றைக்கும் காத்து, அவர்கள் இருதயத்தை உமக்கு நேராக்கியருளும். 19 என் குமாரனாகிய சாலொமோன் உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய சாட்சிகளையும் உம்முடைய கட்டளைகளையும் கைக்கொள்ளும்படிக்கும், இவைகள் எல்லாவற்றையும் செய்து, நான் ஆயத்தம்பண்ணின இந்த அரமனையைக் கட்டும்படிக்கும், அவனுக்கு உத்தம இருதயத்தைத் தந்தருளும் என்றான். 20 அதின்பின்பு தாவீது சபை அனைத்தையும் நோக்கி: இப்போது உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்றான்; அப்பொழுது சபையார் எல்லாரும் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்து, தலைகுனிந்து கர்த்தரையும் ராஜாவையும் பணிந்துகொண்டு, 21 கர்த்தருக்குப் பலியிட்டு, மறுநாளிலே சர்வாங்க தகனபலிகளாக ஆயிரம் காளைகளையும், ஆயிரம் ஆட்டுக்கடாக்களையும், ஆயிரம் ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த பானபலிகளையும் இஸ்ரவேல் அனைத்திற்காகவும் கர்த்தருக்குச் செலுத்தினார்கள். 22 அவர்கள் அன்றையதினம் மிகுந்த சந்தோஷத்தோடே கர்த்தருக்கு முன்பாகப் போஜனபானம்பண்ணி, தாவீதின் குமாரனாகிய சாலொமோனை இரண்டாம்விசை ராஜாவாக்கி, கர்த்தருக்கு முன்பாக அவனை அதிபதியாகவும், சாதோக்கை ஆசாரியனாகவும் அபிஷேகம்பண்ணினார்கள். 23 அப்படியே சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்திலே கர்த்தருடைய சிங்காசனத்தில் ராஜாவாய் வீற்றிருந்து பாக்கியசாலியாயிருந்தான்; இஸ்ரவேலர் எல்லாரும் அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்கள். 24 சகல பிரபுக்களும் பராக்கிரமசாலிகளும் தாவீது ராஜாவினுடைய சகல குமாரருங்கூட ராஜாவாகிய சாலொமோனுக்கு அடங்கியிருந்தார்கள். 25 இஸ்ரவேலர் எல்லாரும் காணக் கர்த்தர் சாலொமோனை மிகவும் பெரியவனாக்கி, அவனுக்கு முன்னே இஸ்ரவேலில் ராஜாவான ஒருவனுக்கும் இல்லாதிருந்த ராஜரிக மகத்துவத்தை அவனுக்குக் கட்டளையிட்டார். 26 இவ்விதமாய் ஈசாயின் குமாரனாகிய தாவீது இஸ்ரவேல் அனைத்துக்கும் ராஜாவாயிருந்தான். 27 அவன் இஸ்ரவேலை அரசாண்ட நாட்கள் நாற்பதுவருஷம்; எப்ரோனிலே ஏழு வருஷமும், எருசலேமிலே முப்பத்துமூன்று வருஷமும் ராஜாவாயிருந்தான். 28 அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுமுள்ளவனாய், நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தபின், அவன் குமாரனாகிய சாலொமோன் அவன் ஸ்தானத்திலே அரசாண்டான். 29 தாவீது ராஜாவினுடைய ஆதியோடந்தமான நடபடிகளும், அவன் அரசாண்ட விபரமும், அவனுடைய வல்லமையும், அவனுக்கும் இஸ்ரவேலுக்கும், அந்தந்தத் தேசங்களின் ராஜ்யங்கள் அனைத்துக்கும் நடந்த காலசம்பவங்களும், 30 ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலின் பிரபந்தத்திலும், தீர்க்கதரிசியாகிய நாத்தானின் பிரபந்தத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தின் பிரபந்தத்திலும் எழுதியிருக்கிறது.

2 நாளாகமம் 1

1 தாவீதின் குமாரனாகிய சாலொமோன் தன் ராஜ்யத்திலே பலப்பட்டான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனுடனே இருந்து அவனை மிகவும் பெரியவனாக்கினார். 2 சாலொமோன் ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளும், நியாயாதிபதிகளும், இஸ்ரவேல் எங்குமிருக்கிற வம்சங்களின் தலைவராகிய சகல பிரபுக்களுமான இஸ்ரவேல் அனைவரோடும் பேசி, 3 அவனும் அவனோடேகூடச் சபையார் அனைவரும், கிபியோனிலிருக்கிற மேடைக்குப் போனார்கள். 4 தாவீது தேவனுடைய பெட்டிக்கு எருசலேமிலே கூடாரம்போட்டு ஆயத்தம்பண்ணின ஸ்தலத்திற்குக் கீரியாத்யாரீமிலிருந்து அதைக் கொண்டுவந்தான்; கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்திலே பண்ணின தேவனுடைய ஆசரிப்புக் கூடாரம் அங்கே இருந்தது. 5 ஊரின் புத்திரனாகிய ஊரியின் குமாரன் பெசலெயேல் உண்டுபண்ணின வெண்கலப் பலிபீடமும் அங்கே கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருந்தது; சாலொமோனும் சபையாரும் அதை நாடிப்போனார்கள். 6 அங்கே சாலொமோன் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாகக் கர்த்தரின் சந்நிதியிலிருக்கிற வெண்கலப் பலிபீடத்தின்மேல் ஆயிரம் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திப் பலியிட்டான். 7 அன்று ராத்திரியிலே தேவன் சாலொமோனுக்குத் தரிசனமாகி: நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார். 8 சாலொமோன் தேவனை நோக்கி: தேவரீர் என் தகப்பனாகிய தாவீதுக்குப் பெரிய கிருபை செய்து, என்னை அவன் ஸ்தானத்திலே ராஜாவாக்கினீர். 9 இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் தகப்பனாகிய தாவீதுக்கு அருளின உமது வாக்குத்தத்தம் உறுதிப்படுவதாக; தேவரீர் பூமியின் தூளத்தனை ஏராளமான ஜனத்தின்மேல் என்னை ராஜாவாக்கினீர். 10 இப்போதும் நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்; ஏராளமாயிருக்கிற இந்த உம்முடைய ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்கவன் யார் என்றான். 11 அப்பொழுது தேவன் சாலொமோனை நோக்கி: இந்த விருப்பம் உன் இருதயத்தில் இருந்தபடியாலும், நீ ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும், உன் பகைஞரின் பிராணனையும், நீடித்த ஆயுசையும் கேளாமல், நான் உன்னை அரசாளப்பண்ணின என் ஜனத்தை நியாயம் விசாரிக்கத்தக்க ஞானத்தையும் விவேகத்தையும் நீ கேட்டபடியினாலும், 12 ஞானமும் விவேகமும் தந்திருக்கிறதுமல்லாமல், உனக்குமுன் இருந்த ராஜாக்களுக்காகிலும் உனக்குப்பின் இருக்கும் ராஜாக்களுக்காகிலும் இல்லாத ஐசுவரியத்தையும் சம்பத்தையும் கனத்தையும் உனக்குத் தருவேன் என்றார். 13 இப்படிச் சாலொமோன் கிபியோனிலிருக்கிற மேட்டிற்குப் போய், ஆசரிப்புக் கூடாரத்தின் சந்நிதியிலிருந்து எருசலேமுக்கு வந்து, இஸ்ரவேலை அரசாண்டான். 14 சாலொமோன் இரதங்களையும் குதிரைவீரரையும் சேர்த்தான்; அவனுக்கு ஆயிரத்து நானூறு இரதங்கள் இருந்தது; பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்களின் பட்டணங்களிலும், அவர்களை ராஜாவாகிய தன்னிடத்தில் எருசலேமிலும் வைத்திருந்தான். 15 ராஜா எருசலேமிலே வெள்ளியையும் பொன்னையும் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்கில் இருக்கிற காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான். 16 சாலொமோனுக்கு இருந்த குதிரைகளும் புடவைகளும் எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்டது; ராஜாவின் வர்த்தகர் புடவைகளை ஒப்பந்த விலைக்கிரயத்துக்கு வாங்கினார்கள். 17 அவர்கள் எகிப்திலிருந்து ஒரு இரதத்தை அறுநூறு வெள்ளிக்காசுக்கும், ஒரு குதிரையை நூற்றைம்பது வெள்ளிக்காசுக்கும் கொண்டுவருவார்கள்; அந்தப்படியே ஏத்தியரின் சகல ராஜாக்களுக்கும், சீரியாவின் ராஜாக்களுக்கும் அவர்கள் மூலமாய்க் கொண்டுவரப்பட்டது.

2 நாளாகமம் 2

1 சாலொமோன் கர்த்தருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தையும், தன் ராஜரிகத்திற்கு ஒரு அரமனையையும் கட்ட நிர்ணயம்பண்ணி, 2 சுமைசுமக்கிறதற்கு எழுபதினாயிரம்பேரையும், மலையில் மரம் வெட்டுகிறதற்கு எண்பதினாயிரம்பேரையும், இவர்கள்மேல் தலைவராக மூவாயிரத்து அறுநூறுபேரையும் எண்ணி ஏற்படுத்தினான். 3 தீருவின் ராஜாவாகிய ஈராமிடத்தில் ஆள் அனுப்பி: என் தகப்பனாகிய தாவீது தாம் வாசமாயிருக்கும் அரமனையைத் தமக்குக் கட்டும்படிக்கு, நீர் அவருக்குத் தயவுசெய்து, அவருக்குக் கேதுருமரங்களை அனுப்பினதுபோல எனக்கும் தயவுசெய்யும். 4 இதோ, என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் சுகந்தவர்க்கங்களின் தூபம் காட்டுகிறதற்கும், சமுகத்தப்பங்களை எப்போதும் வைக்கிறதற்கும், காலையிலும் மாலையிலும், ஓய்வுநாட்களிலும், மாதப்பிறப்புகளிலும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் பண்டிகைகளிலும், இஸ்ரவேல் நித்தியகாலமாகச் செலுத்தவேண்டியபடி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துகிறதற்கும், அவருடைய நாமத்திற்கு ஒரு ஆலயத்தைக் கட்டி அதை அவருக்குப் பிரதிஷ்டைபண்ணும்படி நான் எத்தனித்திருக்கிறேன். 5 எங்கள் தேவன் எல்லா தேவர்களைப்பார்க்கிலும் பெரியவர்; ஆகையால் நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதாயிருக்கும். 6 வானங்களும் வானாதிவானங்களும் அவரைக் கொள்ளக்கூடாதிருக்க, அவருக்கு ஒரு ஆலயத்தைக் கட்ட வல்லவன் யார்? அவர் சந்நிதியில் தூபங்காட்டுகிறதற்கே ஒழிய, வேறே முகாந்தரமாய் அவருக்கு ஆலயம்கட்டுகிறதற்கு நான் எம்மாத்திரம்? 7 இப்போதும் என் தகப்பனாகிய தாவீது குறித்தவர்களும், என்னிடத்தில் யூதாவிலும் எருசலேமிலும் இருக்கிறவர்களுமாகிய நிபுணரோடு, பொன்னிலும் வெள்ளியிலும் வெண்கலத்திலும் இரும்பிலும் இரத்தாம்பரநூலிலும் சிவப்புநூலிலும் இளநீலநூலிலும் வேலைசெய்ய நிபுணனும், கொத்துவேலைசெய்ய அறிந்தவனுமாகிய ஒரு மனுஷனை என்னிடத்தில் அனுப்பும். 8 லீபனோனிலிருந்து கேதுருமரங்களையும், தேவதாரி விருட்சங்களையும், வாசனை மரங்களையும் எனக்கு அனுப்பும்; லீபனோனின் மரங்களை வெட்ட உம்முடைய வேலைக்காரர் பழகினவர்களென்று அறிவேன்; எனக்கு மரங்களைத் திரளாக ஆயத்தப்படுத்த என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூட இருப்பார்கள். 9 நான் கட்டப்போகிற ஆலயம் பெரியதும் ஆச்சரியப்படத்தக்கதுமாயிருக்கும். 10 அந்த மரங்களை வெட்டுகிற உம்முடைய வேலைக்காரருக்கு இருபதினாயிரம் மரக்கால் கோதுமை அரிசியையும், இருபதினாயிரம் மரக்கால் வாற்கோதுமையையும், இருபதினாயிரம் குடம் திராட்சரசத்தையும், இருபதினாயிரம் குடம் எண்ணெயையும் கொடுப்பேன் என்று சொல்லி அனுப்பினான். 11 அப்பொழுது தீருவின் ராஜாவாகிய ஈராம் சாலொமோனுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தர் தம்முடைய ஜனத்தைச் சிநேகித்ததினால், உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார். 12 கர்த்தருக்கு ஒரு ஆலயத்தையும், தமது ராஜரிகத்திற்கு ஒரு அரமனையையும் கட்டத்தக்க யுக்தியும் புத்தியுமுடைய ஞானமுள்ள குமாரனை, தாவீதுராஜாவுக்குக் கட்டளையிட்டவராகிய வானத்தையும் பூமியையும் உண்டாக்கின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. 13 இப்போதும் ஈராம் அபியென்னும் புத்திமானாகிய நிபுணனை அனுப்புகிறேன். 14 அவன் தாணின் குமாரத்திகளில் ஒரு ஸ்திரீயின் குமாரன்; அவன் தகப்பன் தீருதேசத்தான்; அவன் பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், கற்களிலும், மரங்களிலும், இரத்தாம்பரநூலிலும் இளநீலநூலிலும் மெல்லியநூலிலும் சிவப்புநூலிலும் வேலைசெய்யவும், சகலவிதக் கொத்துவேலை செய்யவும், என்னென்ன செய்யவேண்டுமென்று அவனுக்குச் சொல்லப்படுமோ, அவைகளையெல்லாம் உம்மிடத்திலுள்ள நிபுணரோடும், உம்முடைய தகப்பனாகிய தாவீது என்னும் என் ஆண்டவனின் நிபுணரோடுங்கூட யூகித்துச் செய்யவும் அறிந்தவன். 15 என் ஆண்டவன் தாம் சொன்னபடி கோதுமையையும், வாற்கோதுமையையும், எண்ணெயையும், திராட்சரசத்தையும் தம்முடைய ஊழியக்காரருக்கு அனுப்புவாராக. 16 நாங்கள் உமக்குத் தேவையான மரங்களையெல்லாம் லீபனோனிலே வெட்டி, அவைகளைத் தெப்பங்களாய்க் கட்டிக் கடல்வழியாய் யோப்பாமட்டும் கொண்டுவருவோம்; பிற்பாடு நீர் அவைகளை எருசலேமுக்குக் கொண்டுபோகலாம் என்று எழுதி அனுப்பினான். 17 தன் தகப்பனாகிய தாவீது இஸ்ரவேல் தேசத்திலுண்டான மறுஜாதியாரையெல்லாம் எண்ணித் தொகையிட்டதுபோல, சாலொமோனும் அவர்களை எண்ணினான்; அவர்கள் லட்சத்து ஐம்பத்துமூவாயிரத்து அறுநூறுபேராயிருந்தார்கள். 18 இவர்களில் அவன் எழுபதினாயிரம்பேரைச் சுமைசுமக்கவும், எண்பதினாயிரம்பேரை மலையில் மரம்வெட்டவும், மூவாயிரத்து அறுநூறுபேரை ஜனத்தின் வேலையை விசாரிக்கும் தலைவராயிருக்கவும் வைத்தான்.

2 நாளாகமம் 3

1 பின்பு சாலொமோன் எருசலேமிலே தன் தகப்பனாகிய தாவீதுக்குக் காண்பிக்கப்பட்ட மோரியா என்னும் மலையில் எபூசியனாகிய ஒர்னானின் களம் என்னும் தாவீது குறித்துவைத்த ஸ்தலத்திலே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டத்துவக்கினான். 2 அவன் தான் ராஜ்யபாரம்பண்ணின நாலாம் வருஷம் இரண்டாம் மாதம் இரண்டாம் தேதியிலே கட்டத்தொடங்கினான். 3 தேவனுடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு, சாலொமோன் போட்ட அஸ்திபாரமானது, முற்காலத்து அளவின்படியே அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமுமாயிருந்தது. 4 முகப்பு மண்டபம் ஆலயத்தினுடைய அகலத்தின்படியே இருபதுமுழ நீளமும், நூற்றிருபதுமுழ உயரமுமாயிருந்தது; அதின் உட்புறத்தைப் பசும்பொன்தகட்டால் மூடினான். 5 ஆலயத்தின் பெரிய மாளிகையைத் தேவதாரு பலகைகளினால் செய்து பசும்பொன்னினால் இழைத்து, அதின்மேல் பேரீச்சுவேலையையும் சங்கிலிவேலையையும் சித்திரித்து, 6 அந்த மாளிகையை ரத்தினங்களால் அலங்கரித்தான்; பொன்னானது பர்வாயீமின் பொன்னாயிருந்தது. 7 அந்த மாளிகையின் உத்திரங்களையும், நிலைகளையும், அதின் சுவர்களையும், அதின் கதவுகளையும் பொன்தகட்டால் மூடி, கொத்துவேலையால் சுவர்களிலே கேருபீன்களைச் செய்வித்தான். 8 மகா பரிசுத்தமான ஆலயத்தையும் கட்டினான்; அதின் நீளம் ஆலயத்தினுடைய அகலத்தின்படி இருபதுமுழமும், அதின் அகலம் இருபதுமுழமுமாயிருந்தது; அதை அறுநூறு தாலந்து பசும்பொன்னினால் இழைத்தான். 9 ஆணிகளின் நிறை ஐம்பது பொன் சேக்கலானது; மேல் அறைகளையும் பொன்னினால் இழைத்தான். 10 அவன் மகா பரிசுத்தமான ஆலயத்திலே இரண்டு கேருபீன்களையும் சித்திரவேலையாய் உண்டுபண்ணினான்; அவைகளைப் பொன்தகட்டால் மூடினான். 11 அந்தக் கேருபீன்களுடைய செட்டைகளின் நீளம் இருபது முழமானது; ஒன்றினுடைய ஒரு செட்டை ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச் சுவரைத் தொட்டது; மறுசெட்டை ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது. 12 மற்றக் கேருபீனின் ஒரு செட்டையும் ஐந்துமுழமாயிருந்து, ஆலயத்துச்சுவரைத் தொட்டது; அதின் மறு செட்டையும் ஐந்துமுழமாயிருந்து, மற்றக் கேருபீனின் செட்டையைத் தொட்டது. 13 இப்படியே அந்தக் கேருபீன்களின் செட்டைகள் இருபதுமுழ விரிவாயிருந்தன; அவைகள் தங்கள் கால்களால் ஊன்றி நின்றன; அவைகளின் முகங்கள் ஆலயத்து உட்புறமாய் நோக்கியிருந்தது. 14 இளநீலநூலாலும் இரத்தாம்பரநூலாலும் சிவப்புநூலாலும் மெல்லிய நூலாலும் திரையையும், அதிலே கேருபீன்களின் உருவங்களையும் உண்டுபண்ணினான். 15 ஆலயத்திற்கு முன்னாக முப்பத்தைந்துமுழ உயரமான இரண்டு தூண்களையும், அவைகளுடைய முனைகளின்மேலிருக்கும் ஐந்துமுழ உயரமான கும்பங்களையும் உண்டாக்கி, 16 சந்நிதிக்கு முன்னிருக்கச் சங்கிலிகளையும் பண்ணி, தூண்களின் முனைகளின்மேல் பற்றவைத்து, நூறு மாதளம்பழங்களையும் பண்ணி அந்தச் சங்கிலிகளில் கோத்தான். 17 அந்தத் தூண்களை அவன் தேவாலயத்திற்கு முன்பாக ஒன்றை வலதுபுறத்திலும் ஒன்றை இடதுபுறத்திலும் நாட்டி, வலதுபுறமானதற்கு யாகீன் என்றும், இடதுபுறமானதற்குப் போவாஸ் என்றும் பேரிட்டான்.

2 நாளாகமம் 4

1 அன்றியும் இருபதுமுழ நீளமும் இருபதுமுழ அகலமும் பத்துமுழ உயரமுமான வெண்கலப் பலிபீடத்தையும் பண்ணினான். 2 வெண்கலக் கடல்தொட்டியையும் வார்ப்பித்தான்; சக்கராகாரமான அதினுடைய ஒரு விளிம்புதொடங்கி மறுவிளிம்புமட்டும் பத்துமுழ அகலமும், ஐந்துமுழ உயரமும், சுற்றளவு முப்பதுமுழ நூலளவுமாயிருந்தது. 3 அதின் கீழ்ப்புறமாய் ரிஷபங்களின் உருவங்கள் ஒவ்வொரு முழத்திற்குப் பத்து உருவமாக அந்தக் கடல்தொட்டியின் சக்கரத்தில் இருந்தன; தொட்டியோடு ஒன்றாய் வார்க்கப்பட்ட அந்த ரிஷபங்களின் இரண்டு வரிசைகள் இருந்தன. 4 அது பன்னிரண்டு ரிஷபங்களின்மேல் நின்றது; இவைகளில் மூன்று வடக்கேயும், மூன்று மேற்கேயும், மூன்று தெற்கேயும், மூன்று கிழக்கேயும் நோக்கியிருந்தன; கடல்தொட்டி அவைகளின்மேல் உயர இருந்தது; அவைகளின் பின்பக்கமெல்லாம் உட்புறமாய் இருந்தது. 5 அதின் கனம் நாலு விரற்கடையும், அதின் விளிம்பு பானபாத்திரத்தின் விளிம்புபோலும், லீலிபுஷ்பம்போலும் இருந்தது; அது மூவாயிரங்குடம் தண்ணீர் பிடிக்கத்தக்கதாயிருந்தது. 6 கழுவுகிறதற்குப் பத்துக் கொப்பரைகளையும் உண்டாக்கி, ஐந்தை வலதுபுறத்திலும், ஐந்தை இடதுபுறத்திலும் வைத்தான்; சர்வாங்க தகனமாகிறவைகளை அவைகளில் அலைசுவார்கள்; கடல்தொட்டியோ ஆசாரியர்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளுகிறதற்கு இருந்தது. 7 பத்துப் பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளுடைய பிரமாணத்தின்படி செய்வித்து, அவைகளைத் தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்தான். 8 பத்து மேஜைகளையும் செய்து, அவைகளைத் தேவாலயத்தில் வலதுபுறத்திலே ஐந்தும் இடதுபுறத்திலே ஐந்துமாக வைத்து, நூறு பொன் கலங்களையும் பண்ணினான். 9 மேலும் ஆசாரியரின் பிராகாரத்தையும், பெரிய பிராகாரத்தையும், பிராகாரத்தின் வாசல்களையும் உண்டாக்கி, அவைகளின் கதவுகளை வெண்கலத்தால் மூடினான். 10 கடல்தொட்டியைக் கீழ்த்திசையான வலதுபுறத்திலே தெற்குமுகமாக வைத்தான். 11 ஈராம் செப்புச்சட்டிகளையும், சாம்பலெடுக்கிற கரண்டிகளையும், கலங்களையும் செய்தான்; இவ்விதமாய் ஈராம் கர்த்தருடைய ஆலயத்திற்காக ராஜாவாகிய சாலொமோனுக்குச் செய்யவேண்டிய வேலையைச் செய்துமுடித்தான். 12 அவைகள் என்னவெனில், இரண்டு தூண்களும், இரண்டு தூண்களுடைய முனையின்மேலிருக்கிற கும்பங்களும், குமிழ்களும், தூண்களுடைய முனையின் மேலிருக்கிற குமிழ்களான இரண்டு கும்பங்களை மூடுகிறதற்கு இரண்டு வலைப்பின்னல்களும், 13 தூண்களின்மேலுள்ள குமிழ்களான இரண்டு கும்பங்களை மூடுகிறதற்கு, ஒவ்வொரு வலைப்பின்னலின் இரண்டு வரிசை மாதளம்பழங்களாக, இரண்டு வலைப்பின்னலிலுமிருக்கிற நானூறு மாதளம்பழங்களுமே. 14 ஆதாரங்களையும், ஆதாரங்களின்மேலிருக்கும் கொப்பரைகளையும், 15 ஒரு கடல்தொட்டியையும், அதின் கீழிருக்கும் பன்னிரண்டு ரிஷபங்களையும், 16 செப்புச்சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், முள்துறடுகள் முதலான பணிமுட்டுகளையும், ஈராம்அபி ராஜாவாகிய சாலொமோனுக்குக் கர்த்தரின் ஆலயத்திற்காகச் சுத்தமான வெண்கலத்தால் பண்ணினான். 17 யோர்தானுக்கடுத்த சமனான பூமியில் சுக்கோத்திற்கும் சரேத்தாவுக்கும் நடுவே களிமண் தரையிலே ராஜா அவைகளை வார்ப்பித்தான். 18 இந்தப் பணிமுட்டுகளையெல்லாம் சாலொமோன் வெகு ஏராளமாய் உண்டுபண்ணினான்; வெண்கலத்தின் நிறை தொகைக்கு அடங்காததாயிருந்தது. 19 தேவனுடைய ஆலயத்துக்கு வேண்டிய சகல பணிமுட்டுகளையும்; பொற்பீடத்தையும், சமுகத்தப்பங்களை வைக்கும் மேஜைகளையும், 20 முறையின்படியே சந்நிதிக்கு முன்பாக விளக்குக் கொளுத்துகிறதற்குப் பசும்பொன் விளக்குத்தண்டுகளையும், அவைகளின் விளக்குகளையும், 21 சுத்த தங்கத்தினால் செய்த பூக்களையும், விளக்குகளையும், கத்தரிகளையும், 22 பசும்பொன் கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும் சாலொமோன் பண்ணினான்; மகா பரிசுத்த ஸ்தலத்தின் உட்கதவுகளும், ஆலயமாகிய வீட்டின் கதவுகளும், ஆலயத்தின் வாசல் கதவுகளும் எல்லாம் பொன்னாயிருந்தது.

2 நாளாகமம் 5

1 கர்த்தருடைய ஆலயத்துக்காகச் சாலொமோன் செய்த வேலையெல்லாம் முடிந்தபோது, சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்தவைகளைக் கொண்டுவந்து, வெள்ளியையும், பொன்னையும், சகல பணிமுட்டுகளையும், தேவனுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான். 2 பின்பு கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பரையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவர் எல்லாரையும் எருசலேமிலே கூடிவரச்செய்தான். 3 அப்படியே இஸ்ரவேலர் எல்லாரும் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே ராஜாவினிடத்தில் கூடிவந்தார்கள். 4 இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் வந்தபின்பு லேவியர் பெட்டியை எடுத்து, 5 பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருக்கிற பரிசுத்த பணிமுட்டுகளையும் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கொண்டுவந்தவர்கள் லேவியரான ஆசாரியரே. 6 ராஜாவாகிய சாலொமோனும், அவனோடே கூடின இஸ்ரவேல் சபையார் அனைவரும், பெட்டிக்கு முன்பாக எண்ணிக்கைக்கும் தொகைக்கும் அடங்காத ஏராளமான ஆடுமாடுகளைப் பலியிட்டார்கள். 7 அப்படியே ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை, ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமான ஸ்தலத்திலே, கேருபீன்களுடைய செட்டைகளுக்குக் கீழாகக் கொண்டுவந்து வைத்தார்கள். 8 கேருபீன்கள், பெட்டியிருக்கும் ஸ்தானத்தின்மேல், தங்கள் இரண்டிரண்டு செட்டைகளை விரித்து உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தன. 9 பெட்டியிலிருக்கிற தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தலத்திற்கு முன்னே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை இழுத்தார்கள்; புறம்பே அவைகள் காணப்படவில்லை; அது இந்நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது. 10 இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபின், கர்த்தர் ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கை பண்ணினபோது, மோசே அந்தப் பெட்டியிலே வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை. 11 வகுப்புகளின் முறைகளைப் பாராமல், ஆசாரியர் எல்லோரும் தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொண்டார்கள். 12 ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய குமாரர் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகரான லேவியரனைவரும் மெல்லிய புடவைகளைத் தரித்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்துப் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடும் கூடப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள். 13 அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும், பாடகர் பூரிகைகள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது. 14 அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக்கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று.

2 நாளாகமம் 6

1 அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும், 2 தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன் என்றும் சொல்லி, 3 ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையார் எல்லாரையும் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையார் எல்லாரும் நின்றார்கள். 4 அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதை, தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார். 5 அவர்: நான் என் ஜனத்தை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு, என் நாமம் விளங்கும்படி, ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டுமென்று நான் இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலுமுள்ள வேறே யாதொரு பட்டணத்தைத் தெரிந்துகொள்ளாமலும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும்படி வேறே ஒருவரைத் தெரிந்துகொள்ளாமலும், 6 என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார். 7 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் மனதில் இருந்தது. 8 ஆனாலும் கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதை நோக்கி: என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் உன் மனதிலே இருந்தது நல்ல காரியந்தான். 9 ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய்; உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார். 10 இப்போதும் கர்த்தர் சொல்லிய தமது வார்த்தையை நிறைவேற்றினார்; கர்த்தர் சொன்னபடியே, நான் என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்தில் எழும்பி, இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டி, 11 கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருடனே பண்ணின உடன்படிக்கையிருக்கிற பெட்டியை அதிலே வைத்தேன் என்று சொல்லி, 12 கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்னே இஸ்ரவேல் சபையார் எல்லாருக்கும் எதிராக நின்று தன் கைகளை விரித்தான். 13 சாலொமோன் ஐந்து முழ நீளமும், ஐந்து முழ அகலமும், மூன்று முழ உயரமுமான ஒரு வெண்கலப் பிரசங்கபீடத்தை உண்டாக்கி, அதை நடுப்பிராகாரத்திலே வைத்திருந்தான்; அதின்மேல் அவன் நின்று, இஸ்ரவேலின் சபையார் எல்லாருக்கும் எதிராக முழங்காற்படியிட்டு, தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து: 14 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர். 15 தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; உம்முடைய வாக்கினால் அதைச் சொன்னீர்; உம்முடைய கரத்தினால் அதை இந்நாளில் இருக்கிறபடி நிறைவேற்றினீர். 16 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் குமாரரும் என் நியாயப்பிரமாணத்தில் நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும். 17 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் உமது அடியானாகிய தாவீதுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை மெய் என்று விளங்குவதாக. 18 தேவன் மெய்யாக மனுஷரோடே பூமியிலே வாசம்பண்ணுவாரோ? இதோ, வானங்களும், வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்? 19 என் தேவனாகிய கர்த்தாவே, உமது அடியேன் உமது சந்நிதியில் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் திருவுளத்தில் கொண்டருளும். 20 உமது அடியேன் இவ்விடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்க, என் நாமம் விளங்குமென்று நீர் சொன்ன ஸ்தலமாகிய இந்த ஆலயத்தின்மேல் உம்முடைய கண்கள் இரவும்பகலும் திறந்திருப்பதாக. 21 உமது அடியேனும், இந்த ஸ்தலத்திலே விண்ணப்பம் செய்யப்போகிற உமது ஜனமாகிய இஸ்ரவேலும் பண்ணும் ஜெபங்களைக் கேட்டருளும்; பரலோகமாகிய உம்முடைய வாசஸ்தலத்திலே நீர் அதைக் கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக. 22 ஒருவன் தன் அயலானுக்குக் குற்றம் செய்திருக்கையில், இவன் அவனை ஆணையிடச் சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பாக வந்தால், 23 அப்பொழுது பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய நடக்கையை அவன் தலையின்மேல் சுமரப்பண்ணி, அவனுக்கு நீதியைச் சரிக்கட்டவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத்தக்கதாய்ச் செய்து அவனை நீதிமானாக்கவுந்தக்கதாய், உமது அடியாரை நியாயந்தீர்ப்பீராக. 24 உம்முடைய ஜனங்களாகிய இஸ்ரவேலர் உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்ததினிமித்தம் சத்துருவுக்கு முன்பாக முறிந்துபோய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, இந்த ஆலயத்திலே உம்முடைய சந்நிதியில் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால், 25 பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நீர் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவீராக. 26 அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்ததினால், வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும்போது, அவர்கள் இந்த ஸ்தலத்திற்கு நேராக விண்ணப்பஞ்செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைபண்ணி, தேவரீர் தங்களைக் கிலேசப்படுத்துகையில் தங்கள் பாவங்களை விட்டுத் திரும்பினால், 27 பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியாரும் உமது ஜனமாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது ஜனத்திற்குச் சுதந்தரமாகக் கொடுத்த உம்முடைய தேசத்தில் மழைபெய்யக் கட்டளையிடுவீராக. 28 தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, சாவி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்களுடைய சத்துருக்கள் அவர்கள் வாசஞ்செய்கிற தேசத்திலே அவர்களை முற்றிக்கை போடுகிறபோதும், யாதொரு வாதையாகிலும் யாதொரு வியாதியாகிலும் வந்திருக்கிறபோதும், 29 எந்த மனுஷனானாலும், இஸ்ரவேலாகிய உம்முடைய ஜனத்தில் எவனானாலும், தன் தன் வாதையையும் வியாகுலத்தையும் உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன் கைகளை விரித்துச் செய்யும் சகல விண்ணப்பத்தையும், சகல வேண்டுதலையும், 30 உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து, 31 தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்குத் தேவரீர் ஒருவரே மனுபுத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய எல்லா வழிகளுக்கும் தக்கதாய்ச் செய்து பலன் அளிப்பீராக. 32 உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் உம்முடைய மகத்துவமான நாமத்தினிமித்தமும், உம்முடைய பலத்த கரத்தினிமித்தமும், ஓங்கிய உம்முடைய புயத்தினிமித்தமும், தூரதேசங்களிலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக நின்று விண்ணப்பம்பண்ணினால், 33 உமது வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலைப்போல, உம்முடைய நாமத்தை அறிந்து உமக்குப் பயப்பட்டு, நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் தரிக்கப்பட்டதென்று அறியும்படிக்கு, அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியே தேவரீர் செய்வீராக. 34 நீர் உம்முடைய ஜனங்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் சத்துருக்களோடு யுத்தம்பண்ணப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்துக்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக விண்ணப்பம்பண்ணினால், 35 பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரிப்பீராக. 36 பாவஞ்செய்யாத மனுஷன் இல்லையே; ஆகையால் அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்கள் சத்துருக்கள் கையில் அவர்களை ஒப்புக்கொடுக்கிறதினால், அவர்களைச் சிறைபிடிக்கிறவர்கள் அவர்களைத் தூரத்திலாகிலும் சமீபத்திலாகிலும் இருக்கிற தங்கள் தேசத்திற்குக் கொண்டுபோயிருக்கையில், 37 அவர்கள் சிறைபட்டுப்போன தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவஞ்செய்து அக்கிரமம்பண்ணி, துன்மார்க்கமாய் நடந்தோம் என்று தங்கள் சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கிக் கெஞ்சி, 38 தாங்கள் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்ட தங்கள் சிறையிருப்பான தேசத்திலே, தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தங்கள் தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம்பண்ணினால், 39 உம்முடைய வாசஸ்தலமாகிய பரலோகத்திலிருக்கிற தேவரீர் அவர்கள் விண்ணப்பத்தையும் ஜெபங்களையும் கேட்டு, அவர்கள் நியாயத்தை விசாரித்து, உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்த உம்முடைய ஜனத்திற்கு மன்னித்தருளும். 40 இப்போதும் என் தேவனே, இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் விண்ணப்பத்திற்கு உம்முடைய கண்கள் திறந்தவைகளும், உம்முடைய செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருப்பதாக. 41 தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய தாபர ஸ்தலத்திற்குத் தேவரீர் உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் எழுந்தருளும்; தேவனாகிய கர்த்தாவே, உமது ஆசாரியர் இரட்சிப்பைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் நன்மையிலே மகிழ்வார்களாக. 42 தேவனாகிய கர்த்தாவே, நீர் அபிஷேகம்பண்ணினவனின் முகத்தைப் புறக்கணியாமல், உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்பண்ணின கிருபைகளை நினைத்தருளும் என்றான்.

2 நாளாகமம் 7

1 சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று. 2 கர்த்தருடைய மகிமை கர்த்தருடைய ஆலயத்தை நிரப்பினதினால், ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாதிருந்தது. 3 அக்கினி இறங்குகிறதையும், கர்த்தருடைய மகிமை ஆலயத்தின்மேல் தங்கியிருக்கிறதையும், இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் கண்டபோது, தளவரிசைமட்டும் தரையிலே முகங்குப்புறக் குனிந்து பணிந்து, கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று சொல்லி, அவரைத் துதித்தார்கள். 4 அப்பொழுது ராஜாவும் சகல ஜனங்களும் கர்த்தருடைய சந்நிதியில் பலிகளைச் செலுத்தினார்கள். 5 ராஜாவாகிய சாலொமோன் இருபத்தீராயிரம் மாடுகளையும், லட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாய் ராஜாவும் சகல ஜனங்களும் தேவனுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டைபண்ணினார்கள். 6 ஆசாரியர்கள் தங்கள் பணிவிடைகளைச்செய்து நின்றார்கள்; தாவீதுராஜா லேவியரைக்கொண்டு, கர்த்தருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைத் துதித்துப் பாடும்படியாகச் செய்வித்த கர்த்தரின் கீதவாத்தியங்களை அவர்களும் வாசித்துச் சேவித்து நின்றார்கள்; ஆசாரியர்கள் அவர்களுக்கு எதிராக நின்று பூரிகைகளை ஊதினார்கள்; இஸ்ரவேலர் எல்லாரும் நின்றுகொண்டிருந்தார்கள். 7 சாலொமோன் உண்டாக்கின வெண்கலப்பலிபீடம் சர்வாங்க தகனபலிகளையும் போஜனபலிகளையும் நிணத்தையும் கொள்ளமாட்டாதிருந்தபடியினால், கர்த்தருடைய ஆலயத்துக்கு முன்னிருக்கிற பிராகாரத்தின் நடுமையத்தைச் சாலொமோன் பரிசுத்தப்படுத்தி, அங்கே சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளின் நிணத்தையும் செலுத்தினான். 8 அக்காலத்தில்தானே சாலொமோனும், ஆமாத்தின் எல்லையிலிருந்து எகிப்தின் நதிமட்டும் வந்து, அவனோடேகூட இருந்த மகா பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் அனைத்தும் ஏழுநாளளவும் பண்டிகையை ஆசரித்து, 9 எட்டாம்நாளை விசேஷித்த ஆசரிப்பு நாளாய்க் கொண்டாடினார்கள்; ஏழுநாள் பலிபீடத்துப் பிரதிஷ்டையையும், ஏழுநாள் பண்டிகையையும் ஆசரித்தார்கள். 10 ஏழாம் மாதத்தின் இருபத்துமூன்றாம் தேதியிலே தங்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போக ஜனங்களுக்கு விடைகொடுத்தான்; கர்த்தர் தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தமது ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் செய்த நன்மைக்காகச் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் போனார்கள். 11 இவ்விதமாய் சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் ராஜ அரமனையையும் கட்டித் தீர்த்தான்; கர்த்தருடைய ஆலயத்திலும் தன் அரமனையிலும் சாலொமோன் செய்ய மனதாயிருந்ததெல்லாம் அநுகூலமாயிற்று. 12 கர்த்தர் இரவிலே சாலொமோனுக்குத் தரிசனமாகி: நான் உன் விண்ணப்பத்தைக் கேட்டு, இந்த ஸ்தலத்தை எனக்குப் பலியிடும் ஆலயமாகத் தெரிந்துகொண்டேன். 13 நான் மழையில்லாதபடிக்கு வானத்தை அடைத்து, அல்லது தேசத்தை அழிக்க வெட்டுக்கிளிகளுக்குக் கட்டளையிட்டு, அல்லது என் ஜனத்திற்குள் கொள்ளைநோயை அனுப்பும்போது, 14 என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன். 15 இந்த ஸ்தலத்திலே செய்யப்படும் ஜெபத்திற்கு, என் கண்கள் திறந்தவைகளும், என் செவிகள் கவனிக்கிறவைகளுமாயிருக்கும். 16 என் நாமம் இந்த ஆலயத்தில் என்றென்றைக்கும் இருக்கும்படி, நான் இதைத் தெரிந்துகொண்டு பரிசுத்தப்படுத்தினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் இங்கே இருக்கும். 17 உன் தகப்பனாகிய தாவீது நடந்ததுபோல, நீ எனக்கு முன்பாக நடந்து, நான் உனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்து, என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்வாயானால், 18 அப்பொழுது இஸ்ரவேலை அரசாளும் புருஷன் உனக்கு இல்லாமற்போவதில்லை என்று நான் உன் தகப்பனாகிய தாவீதோடே உடன்படிக்கைபண்ணினபடியே, உன் ராஜ்யபாரத்தின் சிங்காசனத்தை நிலைக்கப்பண்ணுவேன். 19 நீங்கள் வழிவிலகி, நான் உங்களுக்கு முன்வைத்த என் கட்டளைகளையும் என் கற்பனைகளையும் விட்டுப்போய், வேறே தேவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வீர்களேயாகில், 20 நான் அவர்களுக்குக் கொடுத்த என் தேசத்தில் இருந்து அவர்களைப் பிடுங்கி, என் நாமத்திற்கென்று நான் பரிசுத்தப்படுத்தின இந்த ஆலயத்தை என் சமுகத்தினின்று தள்ளி, அதை எல்லா ஜனசதளங்களுக்குள்ளும் பழமொழியாகவும் வசைச்சொல்லாகவும் வைப்பேன். 21 அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து: கர்த்தர் இந்தத் தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன என்று கேட்பான். 22 அதற்கு அவர்கள்: தங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின தங்கள் தேவனாகிய கர்த்தரைவிட்டு, வேறே தேவர்களைப் பற்றிக்கொண்டு, அவைகளை நமஸ்கரித்து, சேவித்தபடியினால், கர்த்தர் இந்தத் தீங்கையெல்லாம் அவர்கள்மேல் வரப்பண்ணினார் என்று சொல்லுவார்கள் என்றார்.

2 நாளாகமம் 8

1 சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தையும் தன் அரமனையையும் கட்ட இருபது வருஷகாலம் சென்றபின்பு, 2 ஈராம் தனக்குக் கொடுத்திருந்த பட்டணங்களைச் சாலொமோன் கட்டி, அவைகளில் இஸ்ரவேல் புத்திரரைக் குடியேற்றினான். 3 பின்பு சாலொமோன் ஆமாத்சோபாவுக்குப் போய், அதை ஜெயித்தான். 4 அவன் வனாந்தரத்திலுள்ள தத்மோரையும், ஆமாத்தேசத்திலே இரஸ்துக்களின் பட்டணங்கள் அனைத்தையும் கட்டினான். 5 சாலொமோன் மேல்பெத்தொரோனையும், கீழ்ப்பெத்தொரோனையும், அலங்கங்களும் கதவுகளும் தாழ்ப்பாள்களுமுள்ள அரணான பட்டணங்களாகக் கட்டி, 6 பாலாத்தையும், தனக்கு இருக்கிற இரஸ்துக்களை வைக்கும் சகல பட்டணங்களையும், இரதங்கள் இருக்கும் சகல பட்டணங்களையும், குதிரைவீரர் இருக்கும் பட்டணங்களையும், எருசலேமிலும் லீபனோனிலும் தான் ஆளும் தேசமெங்கும் தனக்கு இஷ்டமானதையெல்லாம் கட்டினான். 7 இஸ்ரவேல் புத்திரர் சங்காரம்பண்ணாதிருந்த இஸ்ரவேல் ஜாதியல்லாத ஏத்தியர், எமோரியர், பெரிசியர், ஏவியர், எபூசியரில் மீதியான சகல ஜனத்திலும், 8 அவர்களுக்குப்பிறகு தேசத்திலிருந்த அவர்கள் பிள்ளைகளை சாலொமோன் இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பகுதி கட்டச்செய்தான். 9 இஸ்ரவேல் புத்திரரில் ஒருவரையும் சாலொமோன் தன் வேலையைச் செய்ய அடிமைப்படுத்தவில்லை; அவர்கள் யுத்தமனுஷரும், அவனுடைய சேர்வைக்காரரின் தலைவரும், அவனுடைய இரதங்களுக்கும் குதிரைவீரருக்கும் தலைவருமாயிருந்தார்கள். 10 ராஜாவாகிய சாலொமோனுடைய ஊழியக்காரரின் தலைவராகிய இவர்களில் இருநூற்று ஐம்பதுபேர் ஜனத்தை ஆண்டார்கள். 11 சாலொமோன்: கர்த்தருடைய பெட்டி வந்த ஸ்தலங்கள் பரிசுத்தமாயிருக்கிறது; ஆதலால், இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதின் அரமனையிலே என் மனைவி வாசம்பண்ணலாகாது என்று சொல்லி, பார்வோனின் குமாரத்தியைத் தாவீதின் நகரத்திலிருந்து தான் அவளுக்குக் கட்டின மாளிகைக்குக் குடிவரப்பண்ணினான். 12 அதுமுதற்கொண்டு சாலொமோன் தான் மண்டபத்திற்கு முன்பாகக் கட்டியிருந்த கர்த்தருடைய பலிபீடத்தின்மேல், 13 ஒவ்வொரு நாளின் கட்டளைக்குந்தக்கதாய் மோசேயுடைய கற்பனையின்படியே ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும், வருஷத்தில் மூன்றுதரம் ஆசரிக்கிற பண்டிகைகளாகிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினான். 14 அவன் தன் தகப்பனாகிய தாவீதுடைய பிரமாணத்தின்படியே, ஆசாரியர்கள் தங்கள் தங்கள் ஊழியத்தைச் செய்யும் வகுப்புகளையும், லேவியர் ஒவ்வொரு நாளின் கட்டளைப்படியே துதித்துச் சேவித்து ஆசாரியருக்கு முன்பாகத் தங்கள் ஊழியத்தைச் செய்யும் முறைகளையும், வாசல் காப்பவர்கள் ஒவ்வொரு வாசலில் காவல்காக்கும் வகுப்புகளையும் நிற்கப்பண்ணினான்; தேவனுடைய மனுஷனாகிய தாவீது இப்படிக் கட்டளையிட்டிருந்தான். 15 சகல காரியத்தையும் பொக்கிஷங்களின் காரியத்தையும் குறித்து, ராஜா ஆசாரியருக்கும் லேவியருக்கும் கொடுத்த கட்டளையை விட்டு அவர்கள் விலகாதிருந்தார்கள். 16 இப்படியே கர்த்தருடைய ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்ட நாள்முதல் அதை முடிக்குமட்டும் சாலொமோனின் வேலையெல்லாம் நடந்தேறிக் கர்த்தருடைய ஆலயம் கட்டித்தீர்ந்தது. 17 பின்பு சாலொமோன் ஏதோம் தேசத்துக் கடல் ஓரத்திலிருக்கும் எசியோன்கேபேருக்கும் ஏலோத்துக்கும் போனான். 18 அவனுக்கு ஈராம் தன் ஊழியக்காரர் முகாந்தரமாய்க் கப்பல்களையும், சமுத்திர யாத்திரையில் பழகின வேலையாட்களையும் அனுப்பினான்; அவர்கள் சாலொமோனின் வேலைக்காரரோடேகூட ஓப்பீருக்குப்போய், அங்கேயிருந்து நானூற்று ஐம்பது தாலந்து பொன்னை ஏற்றி ராஜாவாகிய சாலொமோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.

2 நாளாகமம் 9

1 சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனின் கீர்த்தியைக் கேள்விப்பட்டபோது, விடுகதைகளினாலே சாலொமோனைச் சோதிக்கிறதற்காக, மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும் எருசலேமுக்கு வந்தாள்; அவள் சாலொமோனிடத்தில் வந்தபோது, தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் குறித்து அவனிடத்தில் சம்பாஷித்தாள். 2 அப்பொழுது சாலொமோன் அவள் கேட்டவைகளையெல்லாம் விடுவித்தான்; அவளுக்கு விடுவிக்காதபடிக்கு ஒன்றாகிலும் சாலொமோனுக்கு மறைபொருளாயிருக்கவில்லை. 3 சேபாவின் ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தையும் அவன் அரமனையையும், 4 அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவர்கள் வஸ்திரங்களையும், கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு, 5 ராஜாவை நோக்கி: உம்முடைய வர்த்தமானங்களையும் உம்முடைய ஞானத்தையும் குறித்து, நான் என் தேசத்திலே கேட்ட செய்தி மெய்யாயிற்று. 6 நான் வந்து அதை என் கண்களால் காணுமட்டும் அவர்கள் வார்த்தைகளை நம்பவில்லை; உம்முடைய பெரிய ஞானத்தில் பாதியாகிலும் அவர்கள் எனக்கு அறிவிக்கவில்லை; நான் கேள்விப்பட்ட பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் அதிகம் உண்டாயிருக்கிறது. 7 உம்முடைய ஜனங்கள் பாக்கியவான்கள்; எப்போதும் உமக்கு முன்பாக நின்று, உம்முடைய ஞானத்தைக் கேட்கிற உம்முடைய ஊழியக்காரரும் பாக்கியவான்கள். 8 உம்முடைய தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நீர் ராஜாவாயிருக்கும்படிக்கு, உம்மைத் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கப்பண்ண, உம்மேல் பிரியங்கொண்ட உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; உம்முடைய தேவன் இஸ்ரவேலை என்றென்றைக்கும் நிலைநிறுத்தும்படிக்குச் சிநேகிக்கிறதினாலே, அவர் நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை அவர்கள்மேல் ராஜாவாக வைத்தார் என்றாள். 9 அவள் ராஜாவுக்கு நூற்றிருபது தாலந்து பொன்னையும், மிகுதியான கந்தவர்க்கங்களையும், இரத்தினங்களையும் கொடுத்தாள்; சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவாகிய சாலொமோனுக்குக் கொடுத்த அப்படிப்பட்ட கந்தவர்க்கங்களைப்போல ஒருக்காலும் வரவில்லை. 10 ஓப்பீரிலிருந்து பொன்னைக் கொண்டுவருகிற ஈராமின் வேலைக்காரரும் சாலொமோனின் வேலைக்காரரும் வாசனை மரங்களையும் இரத்தினங்களையும் கொண்டுவந்தார்கள். 11 அந்த வாசனைமரங்களால் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்கும் ராஜ அரமனைக்கும் ஊன்றுகால்களையும், சங்கீதக்காரருக்குச் சுரமண்டலங்களையும் தம்புருகளையும் உண்டாக்கினான்; அப்படிப்பட்டவைகள் அதற்கு முன்னே யூதேயா தேசத்தில் ஒருக்காலும் காணப்படவில்லை. 12 சேபாவின் ராஜஸ்திரீ ராஜாவுக்குக் கொண்டுவந்தவைகளைப்பார்க்கிலும் அதிகமாய் அவள் ஆசைப்பட்டுக்கேட்ட எல்லாவற்றையும் ராஜாவாகிய சாலொமோன் அவளுக்குக் கொடுத்தான்; பின்பு அவள் தன் பரிவாரத்தோடுங்கூட தன் தேசத்திற்குத் திரும்பிப்போனாள். 13 வியாபாரிகளும் வர்த்தகரும் கொண்டுவரும் பொன்னைத்தவிர, சாலொமோனுக்கு ஒவ்வொரு வருஷத்திலும் வந்த பொன் அறுநூற்று அறுபத்தாறு தாலந்து நிறையாயிருந்தது. 14 அரபிதேசத்துச் சகல ராஜாக்களும் மாகாணங்களின் அதிபதிகளும் சாலொமோனுக்குப் பொன்னையும் வெள்ளியையும் கொண்டுவருவார்கள். 15 ராஜாவாகிய சாலொமோன் இருநூறு பரிசைகளை அடித்த பொன்தகட்டால் செய்வித்தான்; ஒவ்வொரு பரிசைக்கு அறுநூறு சேக்கல் நிறை பொன்தகட்டைச் செலவழித்தான். 16 அடித்த பொன்தகட்டால் முந்நூறு கேடகங்களையும் உண்டாக்கினான்; ஒவ்வொரு கேடகத்திற்கு முந்நூறு சேக்கல்நிறை பொன்னைச் செலவழித்தான்; அவைகளை ராஜா லீபனோன் வனம் என்னும் மாளிகையிலே வைத்தான். 17 ராஜா தந்தத்தினால் ஒரு பெரிய சிங்காசனத்தையும் செய்வித்து, அதைப் பசும்பொன்தகட்டால் மூடினான். 18 அந்தச் சிங்காசனத்துக்குப் பொன்னினால் செய்யப்பட்ட ஆறு படிகளும், ஒரு பாதபடியும், உட்காரும் இடத்திற்கு இருபுறத்திலும் கைச்சாய்மானங்களும் இருந்தன; இரண்டு சிங்கங்கள் கைச்சாய்மானங்கள் அருகே நின்றது. 19 அந்த ஆறு படிகளின்மேலும், இரண்டு பக்கத்திலும் பன்னிரண்டு சிங்கங்கள் நின்றன; எந்த ராஜ்யத்திலும் இப்படிப் பண்ணப்படவில்லை. 20 ராஜாவாகிய சாலொமோனுக்கு இருந்த பானபாத்திரங்களெல்லாம் பொன்னும், லீபனோன் வனம் என்னும் மாளிகையின் பணிமுட்டுகளெல்லாம் பசும்பொன்னுமாயிருந்தது; ஒன்றும் வெள்ளியினால் செய்யப்படவில்லை; சாலொமோனின் நாட்களில் வெள்ளி ஒரு பொருளாய் எண்ணப்படவில்லை. 21 ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரருடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும். 22 பூமியின் சகல ராஜாக்களைப்பார்க்கிலும் ராஜாவாகிய சாலொமோன் ஐசுவரியத்திலும் ஞானத்திலும் சிறந்தவனாயிருந்தான். 23 சாலொமோனின் இருதயத்திலே தேவன் அருளிய ஞானத்தைக் கேட்பதற்குப் பூமியின் ராஜாக்கள் எல்லாரும் அவன் முகதரிசனத்தைத் தேடினார்கள். 24 வருஷாவருஷம் அவரவர் தங்கள் காணிக்கையாகிய வெள்ளிப்பாத்திரங்களையும், பொற்பாத்திரங்களையும், வஸ்திரங்களையும், ஆயுதங்களையும், கந்தவர்க்கங்களையும், குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும் கொண்டுவருவார்கள். 25 சாலொமோனுக்கு நாலாயிரம் குதிரைலாயங்களும் இரதங்களும் இருந்தன, பன்னீராயிரம் குதிரைவீரரும் இருந்தார்கள்; அவைகளை இரதங்கள் வைக்கும் பட்டணங்களிலும், அவர்களை எருசலேமில் தன்னிடத்திலும் ராஜா வைத்திருந்தான். 26 நதிதுவக்கிப் பெலிஸ்தரின் தேசமட்டுக்கும் எகிப்தின் எல்லைவரைக்கும் இருக்கிற சகல ராஜாக்களையும் அவன் ஆண்டான். 27 எருசலேமிலே ராஜா வெள்ளியைக் கற்கள்போலவும், கேதுருமரங்களைப் பள்ளத்தாக்குகளில் இருக்கும் காட்டத்திமரங்கள்போலவும் அதிகமாக்கினான். 28 எகிப்திலும் மற்ற தேசங்களிலுமிருந்து சாலொமோனுக்குக் குதிரைகள் கொண்டுவரப்பட்டது. 29 சாலொமோனுடைய ஆதியந்தமான மற்ற நடபடிகள் தீர்க்கதரிசியாகிய நாத்தானின் புஸ்தகத்திலும், சீலோனியனாகிய அகியா எழுதின தீர்க்கதரிசனத்திலும், நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமைக்குறித்து ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோ எழுதின தரிசனங்களிலும் அல்லவோ எழுதியிருக்கிறது. 30 சாலொமோன் எருசலேமிலே இஸ்ரவேலையெல்லாம் நாற்பது வருஷம் அரசாண்டான். 31 பின்பு சாலொமோன் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான்; அவனை அவன் தகப்பனாகிய தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ரெகொபெயாம் ராஜாவானான்.

2 நாளாகமம் 10

1 ரெகொபெயாமை ராஜாவாக்கும்படி இஸ்ரவேலர் எல்லாரும் சீகேமுக்கு வந்திருந்தபடியால், அவனும் சீகேமுக்குப் போனான். 2 ராஜாவாகிய சாலொமோனை விட்டு ஓடிப்போய், எகிப்திலிருந்த நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாம் அதைக் கேட்டபோது, அவன் எகிப்திலிருந்து திரும்பிவந்தான். 3 ஆள் அனுப்பி அவனை அழைப்பித்தார்கள்; பின்பு யெரொபெயாமும் இஸ்ரவேலனைத்துமாய் வந்து, ரெகொபெயாமை நோக்கி: 4 உம்முடைய தகப்பன் பாரமான நுகத்தை எங்கள்மேல் வைத்தார்; இப்போதும் நீர் உம்முடைய தகப்பன் சுமத்தின கடினமான வேலையையும், அவர் எங்கள்மேல் வைத்த பாரமான நுகத்தையும் லகுவாக்கும்; அப்பொழுது உம்மைச் சேவிப்போம் என்றார்கள். 5 அதற்கு அவன்: நீங்கள் மூன்று நாளைக்குப்பிற்பாடு திரும்ப என்னிடத்தில் வாருங்கள் என்றான்; அப்படியே ஜனங்கள் போயிருந்தார்கள். 6 அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தன் தகப்பனாகிய சாலொமோன் உயிரோடிருக்கையில் அவன் சமுகத்தில் நின்ற முதியோரோடே ஆலோசனைபண்ணி, இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான். 7 அதற்கு அவர்கள்: நீர் இந்த ஜனங்களுக்குத் தயவையும் பட்சத்தையும் காண்பித்து, அவர்களுக்கு நல்வார்த்தைகளைச் சொல்வீரானால், என்றைக்கும் அவர்கள் உமக்கு ஊழியக்காரராயிருப்பார்கள் என்றார்கள். 8 முதியோர் சொன்ன ஆலோசனையை அவன் தள்ளிவிட்டு, தன்னோடே வளர்ந்தவர்களும் தன் சமுகத்தில் நிற்கிறவர்களுமாகிய வாலிபரோடே ஆலோசனைபண்ணி, 9 அவர்களை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள்மேல் வைத்த நுகத்தை லகுவாக்கும் என்று என்னிடத்தில் சொன்ன இந்த ஜனங்களுக்கு மறுஉத்தரவு கொடுக்க நீங்கள் என்ன ஆலோசனை சொல்லுகிறீர்கள் என்று கேட்டான். 10 அவனோடே வளர்ந்த வாலிபர் அவனை நோக்கி: உம்முடைய தகப்பன் எங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நீர் அதை எங்களுக்கு லகுவாக்கும் என்று உம்மிடத்தில் சொன்ன இந்த ஜனத்திற்கு நீர் சொல்லவேண்டியது என்னவென்றால்: என் சுண்டுவிரல் என் தகப்பனுடைய இடுப்பைப்பார்க்கிலும் பருமனாயிருக்கும். 11 இப்போதும் என் தகப்பன் பாரமான நுகத்தை உங்கள்மேல் வைத்தார், நான் உங்கள் நுகத்தை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொல்லும் என்றார்கள். 12 மூன்றாம் நாள் என்னிடத்தில் வாருங்கள் என்று ராஜா சொல்லியிருந்தபடியே, யெரொபெயாமும் சகல ஜனங்களும் மூன்றாம் நாளிலே ரெகொபெயாமிடத்தில் வந்தார்கள். 13 ராஜாவாகிய ரெகொபெயாம் முதியோர் ஆலோசனையைத் தள்ளிவிட்டு, அவர்களுக்குக் கடினமான உத்தரவு கொடுத்தான். 14 வாலிபருடைய ஆலோசனையின்படியே அவர்களோடே பேசி, என் தகப்பன் உங்கள் நுகத்தைப் பாரமாக்கினார், நான் அதை அதிக பாரமாக்குவேன்; என் தகப்பன் உங்களைச் சவுக்குகளினாலே தண்டித்தார், நான் உங்களைத் தேள்களினாலே தண்டிப்பேன் என்று சொன்னான். 15 ராஜா ஜனங்களுக்குச் செவிகொடாமற்போனான்; கர்த்தர் சீலோனியனான அகியாவைக்கொண்டு நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமுக்குச் சொன்ன தமது வார்த்தையை உறுதிப்படுத்தும்படி தேவனாலே இப்படி நடந்தது. 16 ராஜா தங்களுக்குச் செவிகொடாததை இஸ்ரவேலர் எல்லாரும் கண்டபோது, ஜனங்கள் ராஜாவுக்கு மறுஉத்தரமாக: தாவீதோடே எங்களுக்குப் பங்கேது? ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரம் இல்லை; இஸ்ரவேலே, உன் கூடாரங்களுக்குப் போய்விடு; இப்போது தாவீதே, உன் சொந்த வீட்டைப் பார்த்துக்கொள் என்று சொல்லி, இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள். 17 ஆனாலும் யூதாவின் பட்டணங்களிலே குடியிருந்த இஸ்ரவேல் புத்திரர்மேல் ரெகொபெயாம் ராஜாவாயிருந்தான். 18 பின்பு ராஜாவாகிய ரெகொபெயாம் பகுதி விசாரிப்புக்காரனாகிய அதோராமை அனுப்பினான்; இஸ்ரவேல் புத்திரர் அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்; அப்பொழுது ராஜாவாகிய ரெகொபெயாம் தீவிரமாய் இரதத்தின்மேல் ஏறி எருசலேமுக்கு ஓடிப்போனான். 19 அப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி இஸ்ரவேலர் தாவீதின் வம்சத்தை விட்டுக் கலகம்பண்ணிப் பிரிந்துபோயிருக்கிறார்கள்.

2 நாளாகமம் 11

1 ரெகொபெயாம் எருசலேமுக்கு வந்தபோது, இஸ்ரவேலோடு யுத்தம்பண்ணவும், ராஜ்யத்தைத் தன்னிடமாகத் திருப்பிக்கொள்ளவும், யூதா வம்சத்தாரும் பென்யமீன் வம்சத்தாருமாகிய தெரிந்துகொள்ளப்பட்ட யுத்தவீரரான லட்சத்து எண்பதினாயிரம்பேரைக் கூட்டினான். 2 தேவனுடைய மனுஷனாகிய செமாயாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர் சொன்னது: 3 நீ யூதாவின் ராஜாவாகிய ரெகொபெயாம் என்னும் சாலொமோனின் குமாரனையும், யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற எல்லா இஸ்ரவேலரையும் நோக்கி: 4 நீங்கள் போகாமலும், உங்கள் சகோதரரோடு யுத்தம்பண்ணாமலும், அவரவர் தம்தம் வீட்டுக்குத் திரும்புங்கள்; என்னாலே இந்தக் காரியம் நடந்தது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்; அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, யெரொபெயாமுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுவதை விட்டுத் திரும்பிப் போய்விட்டார்கள். 5 ரெகொபெயாம் எருசலேமில் வாசமாயிருந்து, யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான். 6 அவன் பெத்லெகேமும், ஏத்தாமும், தெக்கொவாவும், 7 பெத்சூரும், சோகோவும், அதுல்லாமும், 8 காத்தும், மரேஷாவும், சீப்பும், 9 அதோராயீமும், லாகீசும், அசேக்காவும், 10 சோராவும், ஆயிலோனும், எப்ரோனும் ஆகிய யூதாவிலும் பென்யமீனிலும் இருக்கிற அரணிப்பான பட்டணங்களைக்கட்டி, 11 அந்த அரணிப்புகளைப் பலப்படுத்தி, அவைகளிலே தலைவரையும், ஆகாரமும் எண்ணெயும் திராட்சரசமுமுள்ள பண்டகசாலைகளையும், 12 யூதாவும் பென்யமீனும் அவன் பட்சத்திலிருக்க, ஒவ்வொரு பட்டணத்திலும் பரிசைகளையும் ஈட்டிகளையும் வைத்து, அவைகளை மிகுதியும் பலப்படுத்தினான். 13 இஸ்ரவேலெங்கும் இருக்கிற ஆசாரியரும் லேவியரும் தங்கள் எல்லா எல்லைகளிலுமிருந்து அவனிடத்தில் வந்தார்கள். 14 லேவியர் கர்த்தருக்கு ஆசாரிய ஊழியஞ்செய்யாதபடிக்கு யெரொபெயாமும் அவன் குமாரரும் அவர்களைத் தள்ளிப்போட்டபடியினால், தங்கள் வெளிநிலங்களையும் தங்கள் காணியாட்சிகளையும் விட்டு, யூதாதேசத்துக்கும் எருசலேமுக்கும் வந்தார்கள். 15 அவன் மேடைகளுக்கென்றும், பேய்களுக்கென்றும், தான் உண்டாக்கின கன்றுக்குட்டிகளுக்கென்றும் ஆசாரியர்களை ஏற்படுத்தினான். 16 அந்த லேவியரின் பிறகாலே இஸ்ரவேலின் கோத்திரங்களிலெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படிக்கு எருசலேமுக்கு வந்தார்கள். 17 இப்படி மூன்று வருஷமட்டும் யூதாவின் ராஜ்யத்தைப் பலப்படுத்தி, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாமைத் திடப்படுத்தினார்கள்; தாவீதும் சாலொமோனும் நடந்த வழியிலே மூன்று வருஷமட்டும் நடந்தார்கள். 18 ரெகொபெயாம் தாவீதின் குமாரனாகிய எரிமோத்தின் குமாரத்தி மகலாத்தையும், ஈசாயின் குமாரனாகிய எலியாபின் குமாரத்தி அபியாயேலையும் விவாகம்பண்ணினான். 19 இவள் அவனுக்கு ஏயூஸ் சமரியா சாகாம் என்னும் குமாரரைப் பெற்றாள். 20 அவளுக்குப்பிறகு அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளை விவாகம்பண்ணினான்; அவள் அவனுக்கு அபியாவையும், அத்தாயியையும், சீசாவையும், செலோமித்தையும் பெற்றாள். 21 ரெகொபெயாம் தன்னுடைய மனைவிகள் மறுமனையாட்டிகள் எல்லாரிலும், அப்சலோமின் குமாரத்தியாகிய மாகாளைச் சிநேகித்தான்; பதினெட்டு மனைவிகளையும் அறுபது மறுமனையாட்டிகளையும் விவாகம்பண்ணி, இருபத்தெட்டுக் குமாரரையும் அறுபது குமாரத்திகளையும் பெற்றான். 22 ரெகொபெயாம் மாகாளின் குமாரனாகிய அபியாவை அவன் சகோதரருக்குள்ளே தலைவனும் பெரியவனுமாக ஏற்படுத்தினான்; அவனை ராஜாவாக்க நினைத்தான். 23 அவன் புத்தியாய் நடந்து, யூதா பென்யமீனுடைய எல்லா தேசங்களிலுமுள்ள அரணான சகல பட்டணங்களிலும் தன் குமாரர் யாவரையும் பிரித்துவைத்து, அவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுத்து, அவர்களுக்கு அநேகம் பெண்களைத் தேடினான்.

2 நாளாகமம் 12

1 ரெகொபெயாம் ராஜ்யத்தைத் திடப்படுத்தித் தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின், அவனும் அவனோடே இஸ்ரவேலர் அனைவரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை விட்டுவிட்டார்கள். 2 அவர்கள் கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினபடியினால், ராஜாவாகிய ரெகொபெயாமின் ஐந்தாம் வருஷத்தில் எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் ஆயிரத்து இருநூறு இரதங்களோடும், அறுபதினாயிரம் குதிரைவீரரோடும் எருசலேமுக்கு விரோதமாய் வந்தான். 3 அவனோடேகூட எகிப்திலிருந்து வந்த லூபியர், சூக்கியர், எத்தியோப்பியரான ஜனங்கள் எண்ணிக்கைக்கு அடங்காதவர்களாயிருந்தார்கள். 4 அவன் யூதாவுக்கு அடுத்த அரணான பட்டணங்களைப் பிடித்து, எருசலேம்மட்டும் வந்தான். 5 அப்பொழுது செமாயா தீர்க்கதரிசி ரெகொபெயாமிடத்துக்கும், சீஷாக்கினிமித்தம் எருசலேமிலே வந்து கூடியிருக்கிற யூதாவின் பிரபுக்களிடத்துக்கும் வந்து, அவர்களை நோக்கி: நீங்கள் என்னை விட்டுவிட்டீர்கள், ஆகையால் நான் உங்களையும் சீஷாக்கின் கையிலே விழும்படி விட்டுவிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 6 அப்பொழுது இஸ்ரவேலின் பிரபுக்களும் ராஜாவும் தங்களைத் தாழ்த்திக் கர்த்தர் நீதியுள்ளவர் என்றார்கள். 7 அவர்கள் தங்களைத் தாழ்த்தினதைக் கர்த்தர் கண்டபோது, கர்த்தருடைய வார்த்தை செமாயாவுக்கு உண்டாகி, அவர் சொன்னது: அவர்கள் தங்களைத் தாழ்த்தினார்கள், ஆகையால் அவர்களை அழிக்கமாட்டேன்; என் உக்கிரம் சீஷாக்கைக்கொண்டு எருசலேமின்மேல் ஊற்றப்படாதபடிக்கு, அவர்களுக்குக் கொஞ்சம் சகாயத்தைக் கட்டளையிடுவேன். 8 ஆனாலும் என்னைச் சேவிக்கிறதற்கும், அந்நிய தேசங்களின் ராஜ்யங்களைச் சேவிக்கிறதற்கும் இருக்கிற வித்தியாசத்தை அவர்கள் அறியும்படிக்கு அவனைச் சேவிக்கிறவர்களாவார்கள் என்றார். 9 அப்படியே எகிப்தின் ராஜாவாகிய சீஷாக் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனைப் பொக்கிஷங்களையும், சாலொமோன் செய்வித்த பொன்பரிசைகள் ஆகிய சகலத்தையும் எடுத்துக்கொண்டு போய்விட்டான். 10 அவைகளுக்குப் பதிலாக ராஜாவாகிய ரெகொபெயாம் வெண்கலப் பரிசைகளைச் செய்வித்து, அவைகளை ராஜாவின் வாசற்படியைக் காக்கிற சேவகருடைய தலைவரின் கையில் ஒப்புவித்தான். 11 ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும்போது, அரமனைச் சேவகர் வந்து, அவைகளை எடுத்துக்கொண்டுபோய், திரும்பத் தங்கள் அறையிலே வைப்பார்கள். 12 அவன் தன்னைத் தாழ்த்தினபடியினால், கர்த்தர் அவனை முழுதும் அழிக்காதபடிக்கு அவருடைய கோபம் அவனைவிட்டுத் திரும்பிற்று; யூதாவிலே இன்னும் சில காரியங்கள் சீராயிருந்தது. 13 அப்படியே ராஜாவாகிய ரெகொபெயாம் எருசலேமிலே தன்னைத் திடப்படுத்திக்கொண்டு அரசாண்டான்; ரெகொபெயாம் ராஜாவாகிறபோது நாற்பத்தொரு வயதாயிருந்து, கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் தெரிந்துகொண்ட நகரமாகிய எருசலேமிலே பதினேழு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அம்மோன் ஜாதியான அவனுடைய தாயின்பேர் நாமாள். 14 அவன் கர்த்தரைத் தேடுகிறதற்குத் தன் இருதயத்தை நேராக்காமல் பொல்லாப்பானதைச் செய்தான். 15 ரெகொபெயாமின் ஆதியோடந்தமான நடபடிகள் செமாயாவின் புஸ்தகத்திலும், ஞானதிருஷ்டிக்காரனாகிய இத்தோவின் வம்ச அட்டவணையிலும் அல்லவோ எழுதியிருக்கிறது; ரெகொபெயாமுக்கும் யெரொபெயாமுக்கும் சகல நாளும் யுத்தம் நடந்துகொண்டிருந்தது. 16 ரெகொபெயாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய அபியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 நாளாகமம் 13

1 ராஜாவாகிய யெரொபெயாமின் பதினெட்டாம் வருஷத்தில் அபியா யூதாவின்மேல் ராஜாவாகி, 2 மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; கிபியா ஊரானாகிய ஊரியேலின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மிகாயாள்; அபியாவுக்கும் யெரொபெயாமுக்கும் யுத்தம் நடந்தது. 3 அபியா தெரிந்துகொள்ளப்பட்ட நாலுலட்சம்பேராகிய பராக்கிரம சேவகரின் இராணுவத்தாரை யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணினான்; யெரொபெயாம் தெரிந்துகொள்ளப்பட்ட எட்டுலட்சம் பேராகிய பலத்த பராக்கிரமசாலிகளை அவனுக்கு எதிராக யுத்தத்திற்கு நிறுத்தினான். 4 அப்பொழுது அபியா எப்பிராயீம் மலைத்தேசத்திலுள்ள செமராயீம் என்னும் மலையின்மேல் ஏறிநின்று: யெரொபெயாமே, எல்லா இஸ்ரவேலரே, கேளுங்கள். 5 இஸ்ரவேலை என்றைக்கும் ஆளும் ராஜ்யபாரத்தை இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் மாறாத உடன்படிக்கையாய்க் கட்டளையிட்டதை நீங்கள் அறியீர்களா? 6 ஆகிலும் தாவீதின் குமாரனாகிய சாலொமோனின் ஊழியக்காரனான யெரொபெயாம் என்னும் நேபாத்தின் குமாரன் எழும்பி, தன் எஜமானுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான். 7 பேலியாளின் மக்களாகிய வீணர் அவனோடேகூடி, சாலொமோனின் குமாரனாகிய ரெகொபெயாம் அவர்களை எதிர்க்கக்கூடாமல் வாலவயதும் திடனற்ற மனதுமாயிருக்கையில், அவனுக்கு விரோதமாய்த் தங்களைப் பலப்படுத்திக்கொண்டார்கள். 8 இப்போதும் தாவீதுடைய குமாரன் கையிலிருக்கிற கர்த்தருடைய ராஜ்யத்திற்கு விரோதமாக நீங்கள் பெலன்கொள்ளலாமென்று நினைக்கிறீர்கள்; நீங்கள் ஏராளமான கூட்டம்; யெரொபெயாம் உங்களுக்குத் தேவர்களாக உண்டாக்கின பொன் கன்றுக்குட்டிகளும் உங்களிடத்தில் இருக்கிறதே. 9 நீங்கள் ஆரோனின் குமாரராகிய கர்த்தருடைய ஆசாரியரையும் லேவியரையும் தள்ளிவிட்டு, தேசாதேசங்களின் ஜனங்களைப்போல உங்களுக்கு ஆசாரியர்களை உண்டுபண்ணவில்லையோ? இளங்காளையினாலும், ஏழு கடாக்களினாலும், தன்னைப் பிரதிஷ்டையாக்கும்படி வருகிற எவனும் தெய்வம் அல்லாதவைகளுக்கு ஆசாரியனாகிறானே. 10 எங்களுக்கோ கர்த்தரே தேவன்; நாங்கள் அவரைவிட்டு விலகவில்லை; கர்த்தருக்கு ஊழியஞ்செய்கிற ஆசாரியர்கள் ஆரோனின் குமாரரும், பணிவிடை செய்கிறவர்கள் லேவியருமாமே. 11 அவர்கள் தினந்தோறும் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளையும் சுகந்த வாசனையான தூபத்தையும் செலுத்தி, காலையிலும் மாலையிலும் பரிசுத்தமான மேஜையின்மேல் சமுகத்தப்பங்களை அடுக்கிவைக்கிறதையும், பொன் குத்துவிளக்கையும் அதின் விளக்குகளைச் சாயங்காலந்தோறும் ஏற்றுகிறதையும் விசாரிக்கிறார்கள்; நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரின் காவலைக் காக்கிறோம்; நீங்களோ அவரை விட்டு விலகினீர்கள். 12 இதோ, தேவன் எங்கள் சேனாபதியாய் எங்களோடேகூட இருக்கிறார்; உங்களுக்கு விரோதமாகப் பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்குகிற ஆசாரியர்களும் இருக்கிறார்கள்; இஸ்ரவேல் புத்திரரே, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக யுத்தஞ்செய்யாதேயுங்கள்; செய்தால் உங்களுக்குச் சித்திக்காது என்றான். 13 யெரொபெயாம் அவர்களுக்குப் பின்னாக வரத்தக்கதாக ஒரு பதிவிடையைச் சுற்றிப்போகப்பண்ணினான்; அப்படியே அவர்கள் யூதாவுக்கு முன் இருந்தார்கள்; அந்தப் பதிவிடை அவர்களுக்குப்பின் இருந்தது. 14 யூதா ஜனங்கள் திரும்பிப்பார்க்கிறபோது, முன்னும் பின்னும் யுத்தம் நடக்கிறதைக் கண்டு, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; ஆசாரியர்கள் பூரிகைகளை முழக்கினார்கள். 15 யூதா மனுஷர் ஆர்ப்பரித்தார்கள்; யூதா மனுஷர் ஆர்ப்பரிக்கிறபோது, தேவன் யெரொபெயாமையும் இஸ்ரவேலனைத்தையும் அபியாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்தார். 16 இஸ்ரவேல் புத்திரர் யூதாவுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தேவன் அவர்களை இவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார். 17 அபியாவும் அவனுடைய ஜனங்களும் அவர்களில் மகா சங்காரம்பண்ணினார்கள்; தெரிந்துகொள்ளப்பட்ட ஐந்துலட்சம்பேர் இஸ்ரவேலிலே வெட்டுண்டு விழுந்தார்கள். 18 அப்படியே இஸ்ரவேல் புத்திரர் அக்காலத்திலே தாழ்த்தப்பட்டார்கள்; யூதா புத்திரரோ தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொண்டதினால் மேற்கொண்டார்கள். 19 அபியா யெரொபெயாமைப் பின்தொடர்ந்து, அவனுக்கு உண்டான பட்டணங்களாகிய பெத்தேலையும் அதின் கிராமங்களையும், எஷானாவையும் அதின் கிராமங்களையும், எப்பெரோனையும் அதின் கிராமங்களையும் பிடித்தான். 20 அப்புறம் அபியாவின் நாட்களில் யெரொபெயாம் பலங்கொள்ளமாட்டாதேபோய், கர்த்தர் அவனை அடித்ததினால் மரணமடைந்தான். 21 அபியா பலத்துப்போனான்; அவன் பதினாலு ஸ்திரீகளை விவாகம்பண்ணி, இருபத்திரண்டு குமாரரையும் பதினாறு குமாரத்திகளையும் பெற்றான். 22 அபியாவின் மற்றக் கிரியைகளும், அவன் நடபடிகளும் அவன் வர்த்தமானங்களும், தீர்க்கதரிசியாகிய இத்தோவின் சரித்திரத்தில் எழுதியிருக்கிறது.

2 நாளாகமம் 14

1 அபியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய ஆசா ராஜாவானான்; இவனுடைய நாட்களில் தேசம் பத்து வருஷமட்டும் அமரிக்கையாயிருந்தது. 2 ஆசா தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்கு நன்மையும் செம்மையுமானதைச் செய்தான். 3 அந்நிய தேவர்களின் பலிபீடங்களையும் மேடைகளையும் அகற்றி, சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை வெட்டி, 4 தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தேடவும், நியாயப்பிரமாணத்தின்படியும் கற்பனையின்படியும் செய்யவும் யூதாவுக்குக் கற்பித்து, 5 யூதாவுடைய எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மேடைகளையும் விக்கிரகங்களையும் அகற்றினான்; அவனுக்கு முன்பாக ராஜ்யம் அமரிக்கையாயிருந்தது. 6 கர்த்தர் அவனுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டதினால், அந்த வருஷங்களில் அவனுக்கு விரோதமான யுத்தம் இல்லாதிருந்தது; தேசம் அமரிக்கையாயிருந்தபடியினால் யூதாவிலே அரணான பட்டணங்களைக் கட்டினான். 7 அவன் யூதாவை நோக்கி: தேசம் நமக்கு முன்பாக அமர்ந்திருக்கையில், நாம் இந்தப் பட்டணங்களைக் கட்டி, அவைகளுக்கு அலங்கங்கள், கோபுரங்கள், வாசல்கள் உண்டுபண்ணி, தாழ்ப்பாள் போட்டுப் பலப்படுத்துவோமாக; நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடினோம், தேடினபோது, சுற்றிலும் நமக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிட்டார் என்றான்; அப்படியே கட்டினார்கள்; அவர்களுக்குக் காரியம் வாய்த்தது. 8 யூதாவிலே பரிசையும் ஈட்டியும் பிடிக்கிற மூன்றுலட்சம்பேரும், பென்யமீனிலே கேடகம் பிடித்து வில்லை நாணேற்றுகிற இரண்டுலட்சத்து எண்பதினாயிரம்பேருமான சேனை ஆசாவுக்கு இருந்தது, இவர்களெல்லாரும் பராக்கிரமசாலிகள். 9 அவர்களுக்கு விரோதமாக எத்தியோப்பியனாகிய சேரா பத்துலட்சம்பேர்கள் சேர்ந்த சேனையோடும் முந்நூறு இரதங்களோடும் புறப்பட்டு மரேசாமட்டும் வந்தான். 10 அப்பொழுது ஆசா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; மரேசாவுக்கு அடுத்த செப்பத்தா என்னும் பள்ளத்தாக்கில் யுத்தத்திற்கு அணிவகுத்து நின்றார்கள். 11 ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசான காரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச் சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான். 12 அப்பொழுது கர்த்தர் அந்த எத்தியோப்பியரை ஆசாவுக்கும் யூதாவுக்கும் முன்பாக முறிய அடித்ததினால் எத்தியோப்பியர் ஓடிப்போனார்கள். 13 அவர்களை ஆசாவும் அவனோடிருந்த ஜனங்களும் கேரார்மட்டும் துரத்தினார்கள்; எத்தியோப்பியர் திரும்பப் பலங்கொள்ளாதபடிக்கு முறிந்து விழுந்தார்கள்; கர்த்தருக்கும் அவருடைய சேனைக்கும் முன்பாக நொறுங்கிப்போனார்கள்; அவர்கள் மிகுதியாகக் கொள்ளை அடித்து, 14 கேராரின் சுற்றுப்பட்டணங்களையெல்லாம் முறிய அடித்தார்கள்; கர்த்தரால் அவர்களுக்குப் பயங்கரம் உண்டாயிற்று; அந்தப் பட்டணங்களையெல்லாம் கொள்ளையிட்டார்கள், அவைகளில் கொள்ளை மிகுதியாய் அகப்பட்டது. 15 மிருகஜீவன்கள் இருந்த கொட்டாரங்களையும் அவர்கள் இடித்துப்போட்டு, திரளான ஆடுகளையும் ஒட்டகங்களையும் சாய்த்துக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பினார்கள்.

2 நாளாகமம் 15

1 அப்பொழுது தேவனுடைய ஆவி ஓதேதின் குமாரனாகிய அசரியாவின்மேல் இறங்கினதினால், 2 அவன் வெளியே ஆசாவுக்கு எதிர்கொண்டுபோய், அவனை நோக்கி: ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார். 3 இஸ்ரவேலிலே அநேக நாளாய் மெய்யான தேவனும் இல்லை, உபதேசிக்கிற ஆசாரியனும் இல்லை, வேதமும் இல்லை. 4 தங்கள் நெருக்கத்திலே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார். 5 அக்காலங்களிலே வெளியே போகிறவர்களுக்கும் உள்ளே வருகிறவர்களுக்கும் சமாதானம் இல்லை; தேசங்களின் குடிகள் எல்லாருக்குள்ளும் மகா அமளி உண்டாயிருந்து, 6 ஜாதியை ஜாதியும், பட்டணத்தைப் பட்டணமும் நொறுக்கினது; தேவன் அவர்களைச் சகலவித இடுக்கத்தினாலும் கலங்கப்பண்ணினார். 7 நீங்களோ உங்கள் கைகளை நெகிழவிடாமல் திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு என்றான். 8 ஆசா இந்த வார்த்தைகளையும் தீர்க்கதரிசியாகிய ஓதேதின் தீர்க்கதரிசனத்தையும் கேட்டபோது, அவன் திடன்கொண்டு, அருவருப்புகளை யூதா பென்யமீன் தேசம் அனைத்திலும், எப்பிராயீமின் மலைத்தேசத்தில் தான் பிடித்த பட்டணங்களிலுமிருந்து அகற்றி, கர்த்தருடைய மண்டபத்தின் முன்னிருக்கிற கர்த்தருடைய பலிபீடத்தைப் புதுப்பித்து, 9 அவன் யூதா பென்யமீன் ஜனங்களையும், அவர்களோடேகூட எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமியோனிலும் இருந்து வந்து அவர்களோடு சஞ்சரித்தவர்களையும் கூட்டினான்; அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருக்கிறதைக் கண்டு, இஸ்ரவேலிலிருந்து திரளான ஜனங்கள் அவன் பட்சத்தில் சேர்ந்தார்கள். 10 ஆசா அரசாண்ட பதினைந்தாம் வருஷம் மூன்றாம் மாதத்திலே அவர்கள் எருசலேமிலே கூடி, 11 தாங்கள் கொள்ளையிட்டு ஓட்டிக்கொண்டுவந்தவைகளில் அந்நாளிலே எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கர்த்தருக்குப் பலியிட்டு, 12 தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் தங்கள் முழு இருதயத்தோடும் தங்கள் முழு ஆத்துமாவோடும் தேடுவோம் என்றும்; 13 சிறியோர் பெரியோர் ஸ்திரீ புருஷர் எல்லாரிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைத் தேடாதவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும் என்றும் ஒரு உடன்படிக்கை செய்து, 14 மகா சத்தத்தோடும் கெம்பீரத்தோடும் பூரிகைகளோடும் எக்காளங்களோடும் கர்த்தருக்கு முன்பாக ஆணையிட்டார்கள். 15 இந்த ஆணைக்காக யூதா ஜனங்கள் யாவரும் சந்தோஷப்பட்டார்கள்; தங்கள் முழு இருதயத்தோடும் ஆணையிட்டு, தங்கள் முழுமனதோடும் அவரைத் தேடினார்கள்; கர்த்தர் அவர்களுக்கு வெளிப்பட்டு, சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாதபடிக்கு அவர்களை இளைப்பாறப்பண்ணினார். 16 தோப்பிலே அருவருப்பான விக்கிரகத்தை உண்டுபண்ணின ராஜாவாகிய ஆசாவின் தாயான மாகாளையும் ராஜாத்தியாய் இராதபடிக்கு ஆசா விலக்கிப்போட்டு, அவளுடைய விக்கிரகத்தையும் நிர்மூலமாக்கித் தகர்த்து, கீதரோன் ஆற்றண்டையிலே சுட்டெரித்துப்போட்டான். 17 மேடைகளோ இஸ்ரவேலிலிருந்து தகர்க்கப்படவில்லை; ஆனாலும், ஆசாவின் இருதயம் அவன் நாட்களிலெல்லாம் உத்தமமாயிருந்தது. 18 தன் தகப்பனும் தானும் பரிசுத்தம்பண்ணும்படி நேர்ந்துகொண்ட வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் அவன் தேவனுடைய ஆலயத்திலே கொண்டுவந்தான். 19 ஆசா அரசாண்ட முப்பத்தைந்தாம் வருஷமட்டும் யுத்தம் இல்லாதிருந்தது.

2 நாளாகமம் 16

1 ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான். 2 அப்பொழுது ஆசா கர்த்தருடைய ஆலயத்திலும் ராஜாவின் அரமனையிலுமுள்ள பொக்கிஷங்களிலுள்ள வெள்ளியும் பொன்னும் எடுத்து, தமஸ்குவில் வாசம்பண்ணுகிற பென்னாதாத் என்னும் சீரியாவின் ராஜாவினிடத்துக்கு அனுப்பி: 3 எனக்கும் உமக்கும், என் தகப்பனுக்கும் உம்முடைய தகப்பனுக்கும் உடன்படிக்கை உண்டே; இதோ, வெள்ளியும் பொன்னும் உமக்கு அனுப்பினேன்; இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா என்னைவிட்டு விலகிப்போகும்படிக்கு நீர் வந்து, அவனோடு செய்த உடன்படிக்கையைத் தள்ளிப்போடும் என்று சொல்லி அனுப்பினான். 4 பென்னாதாத் ராஜாவாகிய ஆசாவுக்குச் செவிகொடுத்து, தனக்கு உண்டான சேனாபதிகளை இஸ்ரவேலின் பட்டணங்களுக்கு விரோதமாக அனுப்பினான்; அவர்கள் ஈயோனையும், தாணையும், ஆபேல்மாயீமையும், நப்தலி பட்டணங்களின் எல்லாப் பண்டகசாலைகளையும் முறிய அடித்தார்கள். 5 இதைப் பாஷா கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதை நிறுத்தி, தன் வேலையைவிட்டு ஒழிந்தான். 6 அப்பொழுது ராஜாவாகிய ஆசா யூதா அனைத்தையுங் கூட்டிக்கொண்டுபோய், பாஷா கட்டின ராமாவின் கற்களையும் அதின் மரங்களையும் எடுத்துவந்து, அவைகளால் கேபாவையும் மிஸ்பாவையும் கட்டினான். 7 அக்காலத்திலே ஞானதிருஷ்டிக்காரனாகிய அனானி யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உம்முடைய தேவனாகிய கர்த்தரைச் சார்ந்துகொள்ளாமல், சீரியாவின் ராஜாவைச் சார்ந்துகொண்டபடியினால், சீரியா ராஜாவின் இராணுவம் உமது கைக்குத் தப்பிப்போயிற்று. 8 மிகவும் ஏராளமான இரதங்களும் குதிரைவீரருமுள்ள எத்தியோப்பியரும் லூபியரும் மகா சேனையாயிருந்தார்கள் அல்லவா? நீர் கர்த்தரைச் சார்ந்துகொண்டபோதோவெனில், அவர்களை உமது கையில் ஒப்புக்கொடுத்தாரே. 9 தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது; இந்த விஷயத்தில் மதியில்லாதவராயிருந்தீர்; ஆகையால் இதுமுதற்கொண்டு உமக்கு யுத்தங்கள் நேரிடும் என்றான். 10 அதினிமித்தம் ஆசா ஞானதிருஷ்டிக்காரன்மேல் சினந்து கடுங்கோபங்கொண்டு அவனைக் காவலறையிலே வைத்தான்; இதல்லாமலும் அக்காலத்தில் ஜனங்களுக்குள் சிலரைக் கொடூரமாய் நடப்பித்தான். 11 ஆசாவின் ஆதியோடந்தமான நடபடிகளெல்லாம் யூதாவையும் இஸ்ரவேலையும் சேர்ந்த ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. 12 ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதிகண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான். 13 ஆசா தான் அரசாண்ட நாற்பத்தோராம் வருஷத்தில் மரித்து, தன் பிதாக்களோடே நித்திரையடைந்தான். 14 தைலக்காரரால் செய்யப்பட்ட கந்தவர்க்கங்களினாலும் பரிமளங்களினாலும் நிறைந்த ஒரு மெத்தையின்மேல் அவனை வளர்த்தி, அவனுக்காக வெகு திரளான கந்தவர்க்கங்களைக் கொளுத்தின பின்பு, அவன் தாவீதின் நகரத்தில் தனக்கு வெட்டிவைத்திருந்த அவனுடைய கல்லறையிலே, அவனை அடக்கம்பண்ணினார்கள்.

2 நாளாகமம் 17

1 அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோசபாத் ராஜாவாகி, இஸ்ரவேலுக்கு விரோதமாய்ப் பலப்பட்டான். 2 அவன் யூதாவின் அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தையும், யூதா தேசத்திலும், தன் தகப்பனாகிய ஆசா பிடித்த எப்பிராயீமின் பட்டணங்களிலும் தாணையங்களையும் வைத்தான். 3 கர்த்தர் யோசபாத்தோடிருந்தார்; அவன் பாகால்களைத் தேடாமல், தன் தகப்பனாகிய தாவீது முன்நாட்களில் நடந்த வழிகளில் நடந்து, 4 தன் தகப்பனுடைய தேவனைத் தேடி, இஸ்ரவேலுடைய செய்கையின்படி நடவாமல், அவருடைய கற்பனைகளின்படி நடந்துகொண்டான். 5 ஆகையால் கர்த்தர் அவன் கையில் ராஜ்யபாரத்தைத் திடப்படுத்தினார்; யூதா கோத்திரத்தார் எல்லாரும் யோசபாத்துக்குக் காணிக்கைகளைக் கொண்டுவந்தார்கள்; அவனுக்கு ஐசுவரியமும் கனமும் மிகுதியாயிருந்தது. 6 கர்த்தருடைய வழிகளில் அவன் இருதயம் உற்சாகங்கொண்டது; அவன் மேடைகளையும் விக்கிரகத் தோப்புகளையும் யூதாவை விட்டகற்றினான். 7 அவன் அரசாண்ட மூன்றாம் வருஷத்தில் யூதாவின் பட்டணங்களிலே உபதேசம்பண்ணும்படிக்கு, அவன் தன் பிரபுக்களாகிய பென்னாயிலையும், ஒபதியாவையும், சகரியாவையும், நெதனெயேலையும், மிகாயாவையும், 8 இவர்களோடேகூடச் செமாயா, நெதனியா, செபதியா, ஆசகேல், செமிரமோத், யோனத்தான், அதோனியா, தொபியா, தோபத்தோனியா என்னும் லேவியரையும், இவர்களோடேகூட ஆசாரியரான எலிஷமாவையும், யோராமையும் அனுப்பினான். 9 இவர்கள் யூதாவிலே உபதேசித்து, கர்த்தருடைய வேத புஸ்தகத்தை வைத்துக்கொண்டு, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் திரிந்து ஜனங்களுக்குப் போதித்தார்கள். 10 யூதாவைச் சுற்றியிருக்கிற தேசங்களுடைய ராஜ்யங்களின்மேலெல்லாம் கர்த்தரால் உண்டான பயங்கரம் வந்ததினால், யோசபாத்தோடு யுத்தம்பண்ணாதிருந்தார்கள். 11 பெலிஸ்தரிலும் சிலர் யோசபாத்துக்குப் பகுதிப்பணத்தோடேகூடக் காணிக்கைகளையும் கொண்டுவந்தார்கள்; அரபியரும் அவனுக்கு ஏழாயிரத்து எழுநூறு ஆட்டுக்கடாக்களையும், ஏழாயிரத்து எழுநூறு வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்தார்கள். 12 இப்படியே யோசபாத் வரவர மிகவும் பெரியவனாகி, யூதாவிலே கோட்டைகளையும், ரஸ்துக்களை வைக்கும் பட்டணங்களையும் கட்டினான். 13 யூதாவின் பட்டணங்களில் அவன் பெரிய வேலைகளை நடத்தினான்; எருசலேமிலே பராக்கிரமசாலிகளான சேவகர் அவனுக்கு இருந்தார்கள். 14 தங்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படி அவர்களுடைய இலக்கமாவது: யூதாவிலே ஆயிரத்துக்கு அதிபதிகளில் அத்னா தலைமையானவன்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் மூன்றுலட்சம்பேர் இருந்தார்கள். 15 அவனுக்கு உதவியாக யோகனான் என்னும் சேனாபதியிருந்தான்; அவனிடத்திலே இரண்டுலட்சத்து எண்பதினாயிரம்பேர் இருந்தார்கள். 16 அவனுக்கு உதவியாகக் கர்த்தருக்குத் தன்னை உற்சாகமாய் ஒப்புக்கொடுத்த சிக்ரியின் குமாரனாகிய அமசியா இருந்தான்; அவனிடத்திலே பராக்கிரமசாலிகள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள். 17 பென்யமீனிலே எலியாதா என்னும் பராக்கிரமசாலி இருந்தான்; அவனிடத்திலே வில்லும் கேடகமும் பிடிக்கிறவர்கள் இரண்டுலட்சம்பேர் இருந்தார்கள். 18 அவனுக்கு உதவியாக யோசபாத் இருந்தான்; அவனிடத்திலே சேவகத்திற்கு ஆயுதபாணிகள் லட்சத்து எண்பதினாயிரம்பேர் இருந்தார்கள். 19 ராஜா யூதா எங்குமுள்ள அரணான பட்டணங்களில் வைத்தவர்களைத்தவிர இவர்களே ராஜாவைச் சேவித்தவர்கள்.

2 நாளாகமம் 18

1 யோசபாத்துக்கு மிகுந்த ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; அவன் ஆகாபோடே சம்பந்தங்கலந்து, 2 சில வருஷங்கள் சென்றபின்பு, சமாரியாவிலிருக்கிற ஆகாபிடத்துக்குப் போனான்; அப்பொழுது ஆகாப் அவனுக்கும் அவனோடிருக்கிற ஜனத்திற்கும் அநேகம் ஆடுமாடுகளை அடிப்பித்து, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு வரும்படி அவனை ஏவினான். 3 எப்படியெனில், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்துக்கு என்னோடே வருகிறீரா என்று கேட்டதற்கு, அவன்: நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், உம்மோடேகூட யுத்தத்திற்கு வருகிறேன் என்றான். 4 பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான். 5 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள்: போம், தேவன் ராஜாவின் கையில் அதை ஒப்புக்கொடுப்பார் என்றார்கள். 6 பின்பு யோசபாத்: நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான். 7 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் மற்றொருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே எப்பொழுதும் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத்: ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான். 8 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா பிரதானிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் குமாரனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான். 9 இஸ்ரவேலின் ராஜாவும் யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் ஒலிமுக வாசலுக்கு முன்னிருக்கும் விசாலமான இடத்திலே ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டவர்களாய், அவரவர் தம்தம் சிங்காசனத்திலே உட்கார்ந்திருந்தார்கள்; சகல தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள். 10 கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப்போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 11 சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குப்போம், உமக்கு வாய்க்கும், கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள். 12 மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடனே பேசி: இதோ, தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படிக்கு நன்மையாகச் சொல்லும் என்றான். 13 அதற்கு மிகாயா: என் தேவன் சொல்வதையே சொல்வேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான். 14 அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப் போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: போங்கள்; உங்களுக்கு வாய்க்கும்; உங்கள் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள் என்றான். 15 ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான். 16 அப்பொழுது அவன்: இஸ்ரவேலர் எல்லாரும் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல மலைகளில் சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம்தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான். 17 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னைக்குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்று நான் உம்மோடே சொல்லவில்லையா என்றான். 18 அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறதையும், பரம சேனையெல்லாம் அவர் வலதுபக்கத்திலும் அவர் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன். 19 அப்பொழுது கர்த்தர்: இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாப் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் போய் விழும்படிக்கு, அவனுக்குப் போதனைசெய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள். 20 அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டுவந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனைசெய்வேன் என்றது; எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். 21 அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படியே செய் என்றார். 22 ஆனதினால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளின் வாயிலே கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக்குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான். 23 அப்பொழுது கெனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டே வந்து: மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்தவழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான். 24 அதற்கு மிகாயா: நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான். 25 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: நீங்கள் மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடத்துக்கும், ராஜகுமாரனாகிய யோவாசிடத்துக்கும் திரும்பக் கொண்டுபோய், 26 அவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே திரும்பிவருமளவும், அவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக் கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான். 27 அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பிவந்தால், கர்த்தர் என்னைக்கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் கேளுங்கள் என்றான். 28 பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள். 29 இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தைப் பார்த்து: நான் வேஷமாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷமாறி யுத்தத்தில் பிரவேசித்தான். 30 சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் தலைவரை நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல், இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான். 31 ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன்தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனைச் சூழ்ந்துகொண்டார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரல் இட்டான்; கர்த்தர் அவனுக்கு அநுசாரியாயிருந்தார்; அவர்கள் அவனை விட்டு விலகும்படி தேவன் செய்தார். 32 இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டபோது அவனைவிட்டுத் திரும்பினார்கள். 33 ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான், அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துக்கிடையிலே பட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து: நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ, எனக்குக் காயம்பட்டது என்றான். 34 அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; இஸ்ரவேலின் ராஜா சீரியருக்கு எதிராக இரதத்தில் சாயங்காலமட்டும் நின்றிருந்து, சூரியன் அஸ்தமிக்கும்போது இறந்துபோனான்.

2 நாளாகமம் 19

1 யூதாவின் ராஜாவாகிய யோசபாத், எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பிவந்தான். 2 அப்பொழுது அனானியின் குமாரனாகிய யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் புறப்பட்டு, அவனைச் சந்தித்து, ராஜாவாகிய யோசபாத்தை நோக்கி: துன்மார்க்கனுக்குத் துணைநின்று, கர்த்தரைப் பகைக்கிறவர்களை நீர் சிநேகிக்கலாமா? இதினிமித்தம் கர்த்தருடைய கடுங்கோபம் உம்மேல் வர இருந்தது. 3 ஆகிலும் நீர் விக்கிரகத்தோப்புகளை தேசத்தை விட்டகற்றி, தேவனைத் தேட உம்முடைய இருதயத்தை நேராக்கின விஷயத்தில் நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது உண்டு என்றான். 4 யோசபாத் எருசலேமிலே வாசமாயிருந்து, திரும்பப் பெயெர்செபாதொடங்கி, எப்பிராயீம் மலைத்தேசமட்டுமுள்ள ஜனத்திற்குள்ளே பிரயாணமாய்ப் போய், அவர்களைத் தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் இடத்திற்குத் திரும்பப்பண்ணினான். 5 அவன் யூதாவின் அரணான பட்டணங்களாகிய ஒவ்வொரு பட்டணத்திலும் நியாயாதிபதிகளை வைத்து, 6 அந்த நியாயாதிபதிகளை நோக்கி: நீங்கள் செய்கிற காரியத்தைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; நீங்கள் மனுஷனுடைய கட்டளையினால் அல்ல, கர்த்தருடைய கட்டளையினால் நியாயம் விசாரிக்கிறீர்கள்; நியாயம் விசாரிக்கிற விஷயத்திலே அவர் உங்களுடனே இருக்கிறார். 7 ஆதலால் கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் உங்களிடத்தில் இருக்கக்கடவது, எச்சரிக்கையாயிருந்து காரியத்தை நடத்துங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்திலே அநியாயமும் முகதாட்சிணியமும் இல்லை, பரிதானமும் அவரிடத்திலே செல்லாது என்றான். 8 அவர்கள் எருசலேமில் வந்திருக்கும்போது, யோசபாத் லேவியரிலும், ஆசாரியரிலும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவரிலும், சிலரைக் கர்த்தருடைய நியாயங்களைக்குறித்தும் விவாதவிஷயங்களைக் குறித்தும் விசாரிக்கும்படி எருசலேமிலே நியமித்து, 9 அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் கர்த்தருக்குப் பயந்து, உண்மையோடும் உத்தம இருதயத்தோடும் நடந்து செய்யவேண்டியது என்னவென்றால், 10 நானாவித இரத்தப்பழிச் சங்கதிகளும், பிரமாணத்திற்கும், கற்பனைக்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் அடுத்த நானாவித வழக்குச் சங்கதிகளும், தங்கள் பட்டணங்களிலே குடியிருக்கிற உங்கள் சகோதரரிடத்திலிருந்து உங்களிடத்தில் வரும்போது, அவர்கள் கர்த்தருக்கு நேரஸ்தராகாதபடிக்கும், உங்கள்மேலும் உங்கள் சகோதரர்மேலும் கடுங்கோபம் வராதபடிக்கும், நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்; நீங்கள் இப்படிச் செய்தால் நேரஸ்தராகமாட்டீர்கள். 11 இதோ, ஆசாரியனாகிய அமரியா கர்த்தருக்கடுத்த எல்லா நியாயத்திலும், இஸ்மவேலின் குமாரனாகிய செபதியா என்னும் யூதா வம்சத்தின் தலைவன் ராஜாவுக்கடுத்த எல்லா நியாயத்திலும் உங்களுக்கு மேலான நியாயாதிபதிகள்; லேவியரும் உங்கள் கைக்குள் உத்தியோகஸ்தராயிருக்கிறார்கள்; நீங்கள் திடமனதாயிருந்து காரியங்களை நடத்துங்கள், உத்தமனுக்குக் கர்த்தர் துணை என்றான்.

2 நாளாகமம் 20

1 இதற்குப்பின்பு மோவாப் புத்திரரும், அம்மோன் புத்திரரும், அவர்களோடே அம்மோனியருக்கு அப்புறத்திலுள்ள மனுஷருங்கூட யோசபாத்திற்கு விரோதமாய் யுத்தம்பண்ண வந்தார்கள். 2 சிலர் வந்து, யோசபாத்தை நோக்கி: உமக்கு விரோதமாய் ஏராளமான ஜனங்கள் கடலுக்கு அக்கரையிலிருக்கிற சீரியாவிலிருந்து வருகிறார்கள்; இதோ, அவர்கள் எங்கேதியாகிய ஆசாசோன்தாமாரில் இருக்கிறார்கள் என்று அறிவித்தார்கள். 3 அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான். 4 அப்படியே யூதா ஜனங்கள் கர்த்தரிடத்திலே சகாயந்தேடக் கூடினார்கள்; யூதாவிலுள்ள எல்லாப் பட்டணங்களிலும் இருந்து அவர்கள் கர்த்தரைத் தேடவந்தார்கள். 5 அப்பொழுது யோசபாத் கர்த்தருடைய ஆலயத்திலே புதுப்பிராகாரத்து முகப்பிலே, யூதா ஜனங்களும் எருசலேமியரும் கூடின சபையிலே நின்று: 6 எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன்; தேவரீர் ஜாதிகளுடைய ராஜ்யங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக்கூடாது. 7 எங்கள் தேவனாகிய நீர் உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முன்பாக இந்தத் தேசத்துக் குடிகளைத் துரத்திவிட்டு இதை உம்முடைய சிநேகிதனாகிய ஆபிரகாமுடைய சந்ததிக்கு என்றைக்குமென்று கொடுக்கவில்லையா? 8 ஆதலால் அவர்கள் இங்கே குடியிருந்து, இதிலே உம்முடைய நாமத்திற்கென்று ஒரு பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டினார்கள். 9 எங்கள்மேல் பட்டயம், நியாயதண்டனை, கொள்ளைநோய், பஞ்சம் முதலான தீமைகள் வந்தால், அப்பொழுது உம்முடைய நாமம் இந்த ஆலயத்தில் விளங்குகிறபடியால், நாங்கள் இந்த ஆலயத்திலும் உமது சந்நிதியிலும் வந்து நின்று, எங்கள் இடுக்கணில் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், தேவரீர் கேட்டு இரட்சிப்பீர் என்று சொல்லியிருக்கிறார்கள். 10 இப்போதும், இதோ, இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்து வருகிறபோது, அம்மோன் புத்திரர், மோவாபியர், சேயீர் மலைத்தேசத்தாருடைய சீமைகள் வழியாய்ப் போக நீர் உத்தரவு கொடுக்கவில்லை; ஆகையால் அவர்களை விட்டு விலகி, அவர்களை நாசப்படுத்தாதிருந்தார்கள். 11 இப்போதும், இதோ, அவர்கள் எங்களுக்கு நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டி, தேவரீர் எங்களைச் சுதந்தரிக்கப்பண்ணின உம்முடைய சுதந்தரத்திலிருந்து எங்களைத் துரத்திவிட வருகிறார்கள். 12 எங்கள் தேவனே, அவர்களை நீர் நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களுக்கு விரோதமாக வந்த இந்த ஏராளமான கூட்டத்திற்கு முன்பாக நிற்க எங்களுக்குப் பெலனில்லை; நாங்கள் செய்யவேண்டியது இன்னதென்று எங்களுக்குத் தெரியவில்லை; ஆகையால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கிறது என்றான். 13 யூதா கோத்திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண்ஜாதிகளும், அவர்கள் குமாரருங்கூடக் கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள். 14 அப்பொழுது சபையின் நடுவிலிருக்கிற மத்தனியாவின் குமாரனாகிய ஏயெலின் மகனான பெனாயாவுக்குப் பிறந்த சகரியாவின் புத்திரன் யகாசியேல் என்னும் ஆசாப்பின் புத்திரரில் ஒருவனான லேவியன்மேல் கர்த்தருடைய ஆவி இறங்கினதினால் அவன் சொன்னது: 15 சகல யூதா கோத்திரத்தாரே, எருசலேமின் குடிகளே, ராஜாவாகிய யோசபாத்தே, கேளுங்கள்; நீங்கள் அந்த ஏராளமான கூட்டத்திற்குப் பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிறார்; இந்த யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது. 16 நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு விரோதமாய்ப் போங்கள்; இதோ, அவர்கள் சிஸ் என்னும் மேட்டுவழியாய் வருகிறார்கள்; நீங்கள் அவர்களை யெருவேல் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் கடையாந்தரத்திலே கண்டு சந்திப்பீர்கள். 17 இந்த யுத்தத்தைப் பண்ணுகிறவர்கள் நீங்கள் அல்ல; யூதா மனுஷரே, எருசலேம் ஜனங்களே, நீங்கள் தரித்துநின்று கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; பயப்படாமலும் கலங்காமலும் இருங்கள்; நாளைக்கு அவர்களுக்கு எதிராகப் புறப்படுங்கள்; கர்த்தர் உங்களோடே இருக்கிறார் என்றான். 18 அப்பொழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனிந்தான்; சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்துகொள்ளக் கர்த்தருக்கு முன்பாகத் தாழவிழுந்தார்கள். 19 கோகாத்தியரின் புத்திரரிலும் கோராகியரின் புத்திரரிலும் இருந்த லேவியர் எழுந்திருந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகா சத்தத்தோடே கெம்பீரமாய்த் துதித்தார்கள். 20 அவர்கள் அதிகாலமே எழுந்திருந்து, தெக்கொவாவின் வனாந்தரத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; புறப்படுகையில் யோசபாத் நின்று: யூதாவே, எருசலேமின் குடிகளே, கேளுங்கள்; உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள், அப்பொழுது நிலைப்படுவீர்கள்; அவருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள், அப்பொழுது சித்திபெறுவீர்கள் என்றான். 21 பின்பு அவன் ஜனத்தோடே ஆலோசனைபண்ணி, பரிசுத்தமுள்ள மகத்துவத்தைத் துதிக்கவும், ஆயுதம் அணிந்தவர்களுக்கு முன்னாக நடந்துபோய், கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றும் உள்ளதென்று கர்த்தரைப் பாடவும், பாடகரை நிறுத்தினான். 22 அவர்கள் பாடித் துதிசெய்யத் தொடங்கினபோது, யூதாவுக்கு விரோதமாய் வந்து பதிவிருந்த அம்மோன் புத்திரரையும், மோவாபியரையும், சேயீர் மலைத்தேசத்தாரையும், ஒருவருக்கு விரோதமாய் ஒருவரைக் கர்த்தர் எழும்பப்பண்ணினதினால் அவர்கள் வெட்டுண்டு விழுந்தார்கள். 23 எப்படியெனில், அம்மோன் புத்திரரும் மோவாபியரும், சேயீர் மலைத்தேசக் குடிகளைச் சங்கரிக்கவும் அழிக்கவும் அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள்; சேயீர் குடிகளை அழித்துத் தீர்ந்தபோது, தாங்களும் தங்களில் ஒருவரையொருவர் அழிக்கத்தக்கவிதமாய்க் கைகலந்தார்கள். 24 யூதா மனுஷர் வனாந்தரத்திலுள்ள சாமக்கூட்டண்டையிலே வந்து, அந்த ஏராளமான கூட்டமிருக்கும் திக்கை நோக்குகிறபோது, இதோ, அவர்கள் தரையிலே விழுந்துகிடக்கிற பிரேதங்களாகக் கண்டார்கள்; ஒருவரும் தப்பவில்லை. 25 யோசபாத்தும் அவனுடைய ஜனங்களும் அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிட வந்தபோது, அவர்கள் கண்ட ஏராளமான பொருள்களும் பிரேதங்களிலிருந்து உரிந்துபோட்ட ஆடை ஆபரணங்களும், தாங்கள் எடுத்துக்கொண்டு போகக்கூடாதிருந்தது; மூன்றுநாளாய்க் கொள்ளையிட்டார்கள்; அது அவ்வளவு மிகுதியாயிருந்தது. 26 நாலாம் நாளில் பெராக்காவிலே கூடினார்கள்; அங்கே கர்த்தருக்கு ஸ்தோத்திரம் செலுத்தினார்கள்; ஆதலால் அவ்விடத்திற்கு இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி பெராக்கா என்னும் பேர் தரித்தார்கள். 27 பின்பு கர்த்தர் அவர்களை அவர்கள் சத்துருக்கள்பேரில் களிகூரச் செய்தபடியால் யூதா மனுஷர் யாவரும் எருசலேம் ஜனங்களும், அவர்களுக்கு முன்னாலே யோசபாத்தும் மகிழ்ச்சியோடே எருசலேமுக்குத் திரும்பினார்கள். 28 அவர்கள் தம்புருகளோடும் சுரமண்டலங்களோடும் பூரிகைகளோடும் எருசலேமிலிருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வந்தார்கள். 29 கர்த்தர் இஸ்ரவேலின் சத்துருக்களோடு யுத்தம்பண்ணினார் என்று கேள்விப்பட்ட அந்தந்தத் தேசத்து ராஜ்யத்தார்மேல் தேவனால் உண்டான பயங்கரம் வந்தது. 30 இவ்விதமாய்த் தேவன் சுற்றுப்புறத்தாரால் யுத்தமில்லாத இளைப்பாறுதலை அவனுக்குக் கட்டளையிட்டதினால், யோசபாத்தின் ராஜ்யபாரம் அமரிக்கையாயிருந்தது. 31 யோசபாத் யூதாவை அரசாண்டான்; அவன் ராஜாவாகிறபோது, முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அசுபாள். 32 அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழியிலே நடந்து, அதைவிட்டு விலகாதிருந்து, கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். 33 ஆனாலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; ஜனங்கள் தங்கள் இருதயத்தைத் தங்கள் பிதாக்களின் தேவனுக்கு இன்னும் நேராக்காதிருந்தார்கள். 34 யோசபாத்தின் ஆதியந்தமான மற்ற வர்த்தமானங்கள் இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் கண்டிருக்கிற ஆனானியின் குமாரனாகிய யெகூவின் வசனங்களில் எழுதியிருக்கிறது. 35 அதற்குப்பின்பு யூதாவின் ராஜாவாகிய யோசபாத் பொல்லாப்புச் செய்கிறவனான அகசியா என்னும் இஸ்ரவேலின் ராஜாவோடே தோழமைபண்ணினான். 36 தர்ஷீசுக்குப் போகும்படிக்குக் கப்பல்களைச் செய்ய அவனோடே கூடிக்கொண்டான்; அப்படியே எசியோன்கேபேரிலே கப்பல்களைச் செய்தார்கள். 37 மரேசா ஊரானாகிய தொதாவாவின் குமாரனான எலியேசர் யோசபாத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லி: நீர் அகசியாவோடே கூடிக்கொண்டபடியினால், கர்த்தர் உம்முடைய கிரியைகளை முறித்துப்போட்டார் என்றான்; அந்தக் கப்பல்கள் உடைந்துபோயிற்று, அவர்கள் தர்ஷீசுக்குப் போகக்கூடாமற்போயிற்று.

2 நாளாகமம் 21

1 யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்தில் தன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் ஸ்தானத்திலே அவன் குமாரனாகிய யோராம் ராஜாவானான். 2 அவனுக்கு யோசபாத்தின் குமாரராகிய அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாவேல், செப்பத்தியா என்னும் சகோதரர் இருந்தார்கள்; இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோசபாத்தின் குமாரர். 3 அவர்களுடைய தகப்பன் வெள்ளியும் பொன்னும் உச்சிதங்களுமான அநேகம் நன்கொடைகளையும், யூதாவிலே அரணான பட்டணங்களையும் அவர்களுக்குக் கொடுத்தான்; யோராம் சேஷ்டபுத்திரனானபடியினால், அவனுக்கு ராஜ்யத்தைக் கொடுத்தான். 4 யோராம் தன் தகப்பனுடைய ராஜ்யபாரத்திற்கு வந்து தன்னைப் பலப்படுத்திக்கொண்டபின்பு, அவன் தன்னுடைய சகோதரர் எல்லாரையும் இஸ்ரவேலின் பிரபுக்களில் சிலரையும் பட்டயத்தால் கொன்றுபோட்டான். 5 யோராம் ராஜாவாகிறபோது, முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான். 6 அவன் இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபின் வீட்டார் செய்ததுபோலச் செய்தான்; ஆகாபின் குமாரத்தி அவனுக்கு மனைவியாயிருந்தாள்; அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 7 கர்த்தர் தாவீதுக்கும் அவன் குமாரருக்கும் என்றென்றைக்கும் ஒரு விளக்கைக் கட்டளையிடுவேன் என்று சொல்லி, அவனோடே பண்ணின உடன்படிக்கையினிமித்தம் தாவீதின் வம்சத்தை அழிக்கச் சித்தமில்லாதிருந்தார். 8 அவன் நாட்களில் யூதாவுடைய கையின்கீழிருந்த ஏதோமியர் கலகம்பண்ணி, தங்களுக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள். 9 அதினால் யோராம் தன் பிரபுக்களோடும் தன் சகல இரதங்களோடும் புறப்பட்டுப்போனான்; அவன் இராத்திரியில் எழுந்திருந்து, தன்னை வளைந்துகொண்ட ஏதோமியரையும் இரதங்களின் தலைவரையும் முறிய அடித்தான். 10 ஆகிலும் யூதாவுடைய கையின் கீழிருந்த ஏதோமியர் இந்நாள்வரைக்கும் இருக்கிறதுபோல, கலகம்பண்ணிப் பிரிந்தார்கள்; அவன் தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால், அக்காலத்திலே லீப்னா பட்டணத்தாரும் கலகம்பண்ணினார்கள். 11 அவன் யூதாவுடைய மலைகளின்மேல் மேடைகளை உண்டாக்கி, எருசலேமின் குடிகளைச் சோரம்போகப்பண்ணி, யூதாவையும் அதற்கு ஏவிவிட்டான். 12 அப்பொழுது தீர்க்கதரிசியாகிய எலியா எழுதின ஒரு நிருபம் அவனிடத்திற்கு வந்தது; அதில்: உம்முடைய தகப்பனான தாவீதின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ உன் தகப்பனாகிய யோசபாத்தின் வழிகளிலும், யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் வழிகளிலும் நடவாமல், 13 இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, ஆகாபுடைய குடும்பத்தின் சோரமார்க்கத்திற்கு ஒத்தபடியே யூதாவையும் எருசலேமின் குடிகளையும் சோரம்போகப்பண்ணி, உன்னைப்பார்க்கிலும் நல்லவர்களாயிருந்த உன் தகப்பன் வீட்டாரான உன் சகோதரரையும் கொன்றுபோட்டபடியினால், 14 இதோ, கர்த்தர் உன் ஜனத்தையும், உன் பிள்ளைகளையும், உன் மனைவிகளையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையாக வாதிப்பார். 15 நீயோ உனக்கு உண்டாகும் குடல் நோயினால் உன் குடல்கள் நாளுக்குநாள் இற்று விழுமட்டும் கொடிய வியாதியினால் வாதிக்கப்படுவாய் என்று எழுதியிருந்தது. 16 அப்படியே கர்த்தர் பெலிஸ்தரின் ஆவியையும், எத்தியோப்பியாவுக்கடுத்த தேசத்தாரான அரபியரின் ஆவியையும் யோராமுக்கு விரோதமாக எழுப்பினார். 17 அவர்கள் யூதாவில் வந்து, பலாத்காரமாய்ப் புகுந்து, ராஜாவின் அரமனையில் அகப்பட்ட எல்லாப் பொருள்களையும், அவன் பிள்ளைகளையும், அவன் மனைவிகளையும் பிடித்துக்கொண்டுபோனார்கள்; யோவாகாஸ் என்னும் அவன் குமாரரில் இளையவனை அல்லாமல் ஒரு குமாரனும் அவனுக்கு மீதியாக வைக்கப்படவில்லை. 18 இவைகள் எல்லாவற்றிற்கும் பிற்பாடு கர்த்தர் அவன் குடல்களில் உண்டான தீராத நோயினால் அவனை வாதித்தார். 19 அப்படி நாளுக்குநாள் இருந்து, இரண்டு வருஷம் முடிகிறகாலத்தில் அவனுக்கு உண்டான நோயினால் அவன் குடல்கள் சரிந்து கொடிய வியாதியினால் செத்துப்போனான்; அவனுடைய பிதாக்களுக்காகக் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல், அவனுடைய ஜனங்கள் அவனுக்காகக் கொளுத்தவில்லை. 20 அவன் ராஜாவாகிறபோது முப்பத்திரண்டு வயதாயிருந்து, எட்டு வருஷம் எருசலேமில் அரசாண்டு, விரும்புவாரில்லாமல் இறந்துபோனான்; அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை.

2 நாளாகமம் 22

1 எருசலேமின் குடிகள், அவன் இளையகுமாரனாகிய அகசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்; அரபியரோடே கூடவந்து பாளயமிறங்கின தண்டிலிருந்தவர்கள் மூத்தகுமாரரையெல்லாம் கொன்றுபோட்டார்கள்; இவ்விதமாய் அகசியா என்னும் யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அரசாண்டான். 2 அகசியா ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, ஒரு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஒம்ரியின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் அத்தாலியாள். 3 அவனும் ஆகாப் குடும்பத்தாரின் வழிகளில் நடந்தான்; துன்மார்க்கமாய் நடக்க, அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனைக்காரியாயிருந்தாள். 4 அவன் ஆகாபின் குடும்பத்தாரைப்போல் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் தகப்பன் சென்றுபோனபின்பு, அவர்கள் அவனுக்குக் கேடாக அவனுடைய ஆலோசனைக்காரராயிருந்தார்கள். 5 அவர்களுடைய ஆலோசனைக்கு உட்பட்டவனாய், அவன் இஸ்ரவேலின் ராஜாவாகிய யோராம் என்னும் ஆகாபின் குமாரனோடேகூட, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்குச் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலுக்கு விரோதமாக யுத்தம்பண்ணப்போனான்; அங்கே சீரியர் யோராமைக் காயப்படுத்தினார்கள். 6 அப்பொழுது தான் சீரியாவின் ராஜாவாகிய ஆசகேலோடு யுத்தம்பண்ணுகையில், தன்னை அவர்கள் ராமாவிலே வெட்டின காயங்களை யெஸ்ரெயேலிலே ஆற்றிக்கொள்ள அவன் திரும்பினான்; அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய யோராம் வியாதியாயிருந்தபடியினால் யூதாவின் ராஜாவாகிய யோராமின் குமாரன் அகசியா, யெஸ்ரெயேலிலிருக்கிற அவனைப் பார்க்கிறதற்குப் போனான். 7 அகசியா யோராமிடத்துக்கு வந்தது அவனுக்குத் தேவனால் உண்டான கேடாக லபித்தது; எப்படியென்றால், அவன் வந்தபோது யோராமுடனேகூட, கர்த்தர் ஆகாபின் குடும்பத்தாரைச் சங்கரிக்க அபிஷேகம்பண்ணுவித்த நிம்சியின் குமாரனாகிய யெகூவுக்கு நேராக வெளியே போனான். 8 யெகூ, ஆகாபின் குடும்பத்தாருக்கு ஆக்கினை நடப்பிக்கும்போது, அவன் அகசியாவைச் சேவிக்கிற யூதாவின் பிரபுக்களையும், அகசியாவுடைய சகோதரரின் குமாரரையும் கண்டுபிடித்துக் கொன்றுபோட்டான். 9 பின்பு அவன் அகசியாவைத் தேடினான்; சமாரியாவில் ஒளித்துக்கொண்டிருந்த அவனை அவர்கள் பிடித்து, யெகூவினிடத்தில் கொண்டுவந்து, அவனைக் கொன்றுபோட்டு: இவன் தன் முழு இருதயத்தோடும் கர்த்தரைத் தேடின யோசபாத்தின் குமாரன் என்று சொல்லி, அவனை அடக்கம்பண்ணினார்கள்; அப்படியே அரசாளுகிறதற்குப் பெலன்கொள்ளத்தக்க ஒருவரும் அகசியாவின் குடும்பத்திற்கு இல்லாமற்போயிற்று. 10 அகசியாவின் தாயாகிய அத்தாலியாள் தன் குமாரன் இறந்துபோனதைக் கண்டபோது, அவள் எழும்பி, யூதா குடும்பத்திலுள்ள ராஜவம்சமான யாவரையும் சங்காரம்பண்ணினாள். 11 ராஜாவின் குமாரத்தியாகிய யோசேபியாத், கொன்றுபோடப்படுகிற ராஜகுமாரருக்குள் இருக்கிற அகசியாவின் ஆண்பிள்ளையாகிய யோவாசைக் களவாயெடுத்துக்கொண்டு, அவனையும் அவன் தாதியையும் சயனவீட்டிலே வைத்தாள்; அப்படியே அத்தாலியாள் அவனைக் கொன்றுபோடாதபடிக்கு, ராஜாவாகிய யோராமின் குமாரத்தியும் ஆசாரியனாகிய யோய்தாவின் பெண்ஜாதியுமாகிய யோசேபியாத் அவனை ஒளித்துவைத்தாள்; அவள் அகசியாவின் சகோதரியாயிருந்தாள். 12 இவர்களோடு அவன் ஆறுவருஷமாய்க் கர்த்தருடைய ஆலயத்திலே ஒளித்துவைக்கப்பட்டிருந்தான்; அத்தாலியாள் தேசத்தின்மேல் ராஜ்யபாரம்பண்ணினாள்.

2 நாளாகமம் 23

1 ஏழாம் வருஷத்திலே யோய்தா திடன்கொண்டு, நூறுபேருக்கு அதிபதிகளாகிய எரோகாமின் குமாரன் அசரியாவையும், யோகனானின் குமாரன் இஸ்மவேலையும், ஓபேதின் குமாரன் அசரியாவையும், ஆதாயாவின் குமாரன் மாசெயாவையும், சிக்ரியின் குமாரன் எலிஷாபாத்தையும் தன் உடன்படிக்கைக்கு உட்படுத்தினான். 2 அவர்கள் யூதாவிலே சுற்றித்திரிந்து, யூதாவின் பட்டணங்களிலெல்லாம் இருக்கிற லேவியரையும், இஸ்ரவேலுடைய பிதாக்களின் வம்சத்தலைவரையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு வந்தார்கள். 3 அந்தச் சபையார் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தில் ராஜாவோடே உடன்படிக்கை செய்தார்கள்; யோய்தா அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் தாவீதின் குமாரரைக்குறித்துச் சொன்னபடியே ராஜாவின் குமாரன் ராஜாவாக வேண்டும். 4 நீங்கள் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால், இவ்வாரத்தில், முறைப்படி வருகிற ஆசாரியரும் லேவியருமான உங்களில் மூன்றில் ஒருபங்கு ஒலிமுகவாசல்களையும், 5 மூன்றில் ஒருபங்கு ராஜாவின் அரமனையையும், மூன்றில் ஒருபங்கு அஸ்திபார வாசலையும் காக்கவும், ஜனங்களெல்லாம் கர்த்தருடைய ஆலயப் பிராகாரங்களில் இருக்கவும் வேண்டும். 6 ஆசாரியரும் லேவியரில் ஊழியம்செய்கிறவர்களும் தவிர, ஒருவரும் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கவேண்டாம்; அவர்களே உட்பிரவேசிப்பார்களாக; அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்கள்; ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய காவலைக் காப்பார்களாக. 7 லேவியர் அவரவர் தங்கள் ஆயுதங்களைத் தங்கள் கையிலே பிடித்துக்கொண்டவர்களாய், ராஜாவைச் சுற்றிலும் வரிசையாய் நின்றுகொண்டிருக்கவேண்டும்; ஆலயத்துக்குட்படுகிற எவனும் கொலைசெய்யப்படக்கடவன்; ராஜா உட்பிரவேசிக்கிறபோதும் வெளியே புறப்படுகிறபோதும் நீங்கள் அவரோடே இருங்கள் என்றான். 8 ஆசாரியனாகிய யோய்தா கட்டளையிட்டபடியெல்லாம் லேவியரும் யூதாகோத்திரத்தார் அனைவரும் செய்து, அவரவர் அவ்வாரத்து முறைப்படி வருகிறவர்களும், முறைதீர்ந்து போகிறவர்களுமான தம்தம் மனுஷரைக் கூட்டிக்கொண்டுபோனார்கள்; வகுப்புகள் பிரிந்துபோக ஆசாரியனாகிய யோய்தா உத்தரவுகொடுக்கவில்லை. 9 தாவீதுராஜா தேவனுடைய ஆலயத்தில் வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் பரிசைகளையும் ஆசாரியனாகிய யோய்தா நூறுபேருக்கு அதிபதியினிடத்தில் கொடுத்து, 10 அவரவர் தங்கள் ஆயுதங்களைக் கையிலே பிடித்துக்கொண்டவர்களாய் ஆலயத்தின் வலதுபக்கந்தொடங்கி, ஆலயத்தின் இடதுபக்கமட்டும், பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் எதிரே ராஜாவைச் சுற்றிலும் நிற்க ஜனங்களையெல்லாம் நிறுத்தினான். 11 பின்பு ராஜகுமாரனை வெளியே கொண்டுவந்து, கிரீடத்தை அவன்மேல் வைத்து, சாட்சியின் ஆகமத்தை அவன் கையிலே கொடுத்து, அவனை ராஜாவாக்கினார்கள்; யோய்தாவும் அவன் குமாரரும் அவனை அபிஷேகம்பண்ணி, ராஜா வாழ்க என்றார்கள். 12 ஜனங்கள் ஓடிவந்து, ராஜாவைப் புகழுகிற சத்தத்தை அத்தாலியாள் கேட்டபோது, அவள் கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்களிடத்தில் வந்து, 13 இதோ, நடையிலுள்ள தன்னுடைய தூணண்டையிலே ராஜா நிற்கிறதையும், ராஜாவண்டையில் நிற்கிற பிரபுக்களையும், எக்காளம் ஊதுகிறவர்களையும், தேசத்து ஜனங்களெல்லாரும் சந்தோஷப்பட்டு எக்காளங்கள் ஊதுகிறதையும், கீதவாத்தியங்களைப் பிடித்துக்கொண்டு பாடகரும் சங்கீதத்தலைவரும் துதிக்கிறதையும் கண்டாள்; அப்பொழுது அத்தாலியாள் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: துரோகம் துரோகம் என்று கூவினாள். 14 ஆசாரியனாகிய யோய்தா இராணுவத்தலைவராகிய நூறுபேருக்கு அதிபதிகளானவர்களை வெளியே அழைத்து, அவர்களை நோக்கி: இவளை வரிசைக்குப் புறம்பே கொண்டுபோங்கள்; இவளைப் பின்பற்றுகிறவனைப் பட்டயத்தால் வெட்டிப்போடுங்கள் என்றான். கர்த்தரின் ஆலயத்திலே அவளைக் கொன்றுபோடாதேயுங்கள் என்று ஆசாரியன் சொல்லியிருந்தான். 15 அவர்கள் அவளுக்கு இடமுண்டாக்கினபோது, அவள் ராஜாவின் அரமனையிலிருக்கிற குதிரைகளின் வாசலுக்குள் பிரவேசிக்கும் இடமட்டும் போனாள்; அங்கே அவளைக் கொன்றுபோட்டார்கள். 16 அப்பொழுது யோய்தா தாங்கள் கர்த்தருடைய ஜனமாயிருக்கும்படிக்கு, தானும் சகல ஜனங்களும் ராஜாவும் உடன்படிக்கை பண்ணிக்கொள்ளும்படி செய்தான். 17 அப்பொழுது ஜனங்களெல்லாரும் பாகாலின் கோவிலுக்குப் போய், அதை இடித்து, அதின் பலிபீடங்களையும், அதின் விக்கிரகங்களையும் தகர்த்து, பாகாலின் பூசாசாரியாகிய மாத்தானைப் பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றுபோட்டார்கள். 18 தாவீது கட்டளையிட்டபிரகாரம் சந்தோஷத்தோடும் சங்கீதத்தோடும் கர்த்தரின் சர்வாங்க தகனபலிகளை மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே செலுத்தத்தக்கதாக, யோய்தா கர்த்தருடைய ஆலயத்தை விசாரிக்கும் உத்தியோகங்களைத் தாவீது கர்த்தருடைய ஆலயத்துக்கென்று பகுத்துவைத்த லேவியரான ஆசாரியர்களின் கையில் ஒப்புவித்து, 19 யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாதபடிக்கு, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான். 20 நூறுபேருக்கு அதிபதிகளையும், பெரியவர்களையும், ஜனத்தை ஆளுகிறவர்களையும், தேசத்துச் சமஸ்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, ராஜாவைக் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து இறங்கப்பண்ணி, உயர்ந்த வாசல்வழியாய் ராஜ அரமனைக்குள் அழைத்துவந்து அரசாளும் சிங்காசனத்தின்மேல் ராஜாவை உட்காரப்பண்ணினார்கள். 21 தேசத்து ஜனங்களெல்லாரும் மகிழ்ந்தார்கள்; அத்தாலியாளைப் பட்டயத்தால் கொன்றபின்பு நகரம் அமரிக்கையாயிற்று.

2 நாளாகமம் 24

1 யோவாஸ் ராஜாவாகிறபோது ஏழுவயதாயிருந்து, நாற்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; பெயெர்செபா பட்டணத்தாளான அவன் தாயின் பேர் சிபியாள். 2 ஆசாரியனாகிய யோய்தாவின் நாளெல்லாம் யோவாஸ் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். 3 அவனுக்கு யோய்தா இரண்டு ஸ்திரீகளை விவாகஞ்செய்து கொடுத்தான்; அவர்களால் குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான். 4 அதற்குப்பின்பு கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்க யோவாஸ் விருப்பங்கொண்டான். 5 அவன் ஆசாரியரையும் லேவியரையும் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: நீங்கள் யூதா பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், உங்கள் தேவனுடைய ஆலயத்தை வருஷாவருஷம் பழுதுபார்க்கிறதற்கு, இஸ்ரவேலெங்கும் பணம் சேகரியுங்கள்; இந்தக் காரியத்தைத் தாமதமில்லாமல் செய்யுங்கள் என்றான்; ஆனாலும் லேவியர் தாமதம்பண்ணினார்கள். 6 அப்பொழுது ராஜா யோய்தா என்னும் தலைவனை அழைப்பித்து: சாட்சியின் வாசஸ்தலத்துக்குக் கொடுக்க, கர்த்தரின் தாசனாகிய மோசே கட்டளையிட்ட வரியை யூதாவினிடத்திலும், எருசலேமியரிடத்திலும், இஸ்ரவேல் சபையாரிடத்திலும் வாங்கிவருகிறதற்கு, லேவியரை நீர் விசாரியாமற்போனதென்ன? 7 அந்தப் பொல்லாத ஸ்திரீயாகிய அத்தாலியாளுடைய மக்கள் தேவனுடைய ஆலயத்தைப் பலவந்தமாய்த் திறந்து, கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பிரதிஷ்டை பண்ணப்பட்டவைகளையெல்லாம் பாகால்களுக்காகச் செலவுபண்ணிப் போட்டார்களே என்றான். 8 அப்பொழுது ராஜாவின் சொற்படி ஒரு பெட்டியை உண்டாக்கி, அதைக் கர்த்தருடைய ஆலயத்து வாசலுக்குப் புறம்பே வைத்து, 9 கர்த்தரின் தாசனாகிய மோசே வனாந்தரத்தில் இஸ்ரவேலுக்குக் கட்டளையிட்ட வரியைக் கர்த்தருக்குக் கொண்டுவாருங்கள் என்று யூதாவிலும் எருசலேமிலும் பறைசாற்றுவித்தார்கள். 10 அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் எல்லா ஜனங்களும் சந்தோஷமாய்க் கொண்டுவந்து பெட்டிநிறைய அதிலே போட்டார்கள். 11 வெகுபணம் உண்டென்று கண்டு, லேவியர் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர் அண்டையிலே கொண்டுவரப்படும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனுடைய விசாரிப்புக்காரனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் ஸ்தானத்திலே வைப்பார்கள்; இப்படி நாளுக்குநாள் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள். 12 அதை ராஜாவும் யோய்தாவும் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கும் ஊழியக்காரர் கையிலே கொடுத்தார்கள்; அதினால் அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி, கல்தச்சரையும் தச்சரையும், கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படி கொற்றரையும் கன்னாரையும் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள். 13 அப்படி வேலையை விசாரிக்கிறவர்கள் தங்கள் கையினாலே வேலையை நடந்தேறப்பண்ணி, தேவனுடைய ஆலயத்தை அதின் முந்தின சீருக்குக் கொண்டுவந்து அதைப் பலப்படுத்தினார்கள். 14 அதை முடித்துத் தீர்ந்தபின்பு, மீந்த பணத்தை ராஜாவுக்கும் யோய்தாவுக்கும் முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அதினாலே கர்த்தருடைய ஆலயத்தில் செய்யப்படும் பணிமுட்டுகளையும், ஆராதனை பலி முதலியவைகளுக்கு வேண்டிய பணிமுட்டுகளையும், கலசங்களையும், பொற்பாத்திரங்களையும், வெள்ளிப்பாத்திரங்களையும் பண்ணுவித்தான்; யோய்தாவின் நாளெல்லாம் நித்தம் கர்த்தருடைய ஆலயத்திலே சர்வாங்க தகனபலிகளைச் செலுத்திவந்தார்கள். 15 யோய்தா தீர்க்காயுசுள்ளவனாய் முதிர்வயதில் மரித்தான்; அவன் மரணமடைகிறபோது நூற்றுமுப்பது வயதாயிருந்தான். 16 அவன் தேவனுக்காகவும் அவருடைய ஆலயத்திற்காகவும் இஸ்ரவேலுக்கு நன்மைசெய்தபடியினால், அவனைத் தாவீதின் நகரத்தில் ராஜாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள். 17 யோய்தா மரணமடைந்தபின்பு யூதாவின் பிரபுக்கள் வந்து, ராஜாவைப் பணிந்துகொண்டார்கள்; அப்பொழுது ராஜா அவர்களுக்குச் செவிகொடுத்தான். 18 அப்படியே அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தை விட்டுவிட்டு, தோப்பு விக்கிரகங்களையும் சிலைகளையும் சேவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் செய்த இந்தக் குற்றத்தினிமித்தம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது. 19 அவர்களைத் தம்மிடத்திற்குத் திரும்பப்பண்ணக் கர்த்தர் அவர்களிடத்திலே தீர்க்கதரிசிகளை அனுப்பினார்; அவர்கள் ஜனங்களைத் திடச்சாட்சியாகக் கடிந்துகொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் செவிகொடுக்கவில்லை. 20 அப்பொழுது தேவனுடைய ஆவி ஆசாரியனாகிய யோய்தாவின் குமாரனான சகரியாவின்மேல் இறங்கினதினால், அவன் ஜனத்திற்கு எதிரே நின்று: நீங்கள் கர்த்தருடைய கற்பனைகளை மீறுகிறது என்ன? இதினால் நீங்கள் சித்திபெறமாட்டீர்கள் என்று தேவன் சொல்லுகிறார்; நீங்கள் கர்த்தரை விட்டுவிட்டதினால் அவர் உங்களைக் கைவிடுவார் என்றான். 21 அதினால் அவர்கள் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் ராஜாவினுடைய கற்பனையின்படி அவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். 22 அப்படியே அவனுடைய தகப்பனாகிய யோய்தா தனக்குச் செய்த தயையை ராஜாவாகிய யோவாஸ் நினையாமல் அவனுடைய குமாரனைக் கொன்றுபோட்டான்; இவன் சாகும்போது: கர்த்தர் அதைப் பார்ப்பார், அதைக் கேட்பார் என்றான். 23 மறு வருஷத்திலே சீரியாவின் சேனைகள் அவனுக்கு விரோதமாக யூதாவிலும் எருசலேமிலும் வந்து, ஜனத்திலிருக்கிற பிரபுக்களையெல்லாம் அழித்து, கொள்ளையிட்ட அவர்கள் உடைமைகளையெல்லாம் தமஸ்குவின் ராஜாவுக்கு அனுப்பினார்கள். 24 சீரியாவின் சேனை சிறுகூட்டமாய் வந்திருந்தாலும், அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுவிட்டபடியினால், கர்த்தர் மகா பெரிய சேனையை அவர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் யோவாசுக்கு தண்டனை செய்தார்கள். 25 அவர்கள் அவனை மகா வேதனைக்குள்ளானவனாக விட்டுப்போனார்கள்; அவர்கள் புறப்பட்டுப்போனபின்பு, அவனுடைய ஊழியக்காரர் ஆசாரியனாகிய யோய்தாவுடைய குமாரரின் இரத்தப்பழியினிமித்தம், அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் படுக்கையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள்; செத்துப்போன அவனைத் தாவீதின் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் ராஜாக்களின் கல்லறைகளில் அவனை வைக்கவில்லை. 26 அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடுபண்ணினவர்கள், அம்மோனிய ஸ்திரீயான சீமாத்தின் குமாரனாகிய சாபாத்தும், மோவாப் ஸ்திரீயான சிம்ரீத்தின் குமாரனாகிய யோசபாத்துமே. 27 அவன் குமாரரைப்பற்றியும், அவன்மேல் சுமந்த பெரிய பாரத்தைப்பற்றியும், தேவனுடைய ஆலயத்தை அவன் பலப்படுத்தினதைப்பற்றியும் ராஜாக்களின் புஸ்தகமான சரித்திரத்தில் எழுதியிருக்கிறது; அவன் குமாரனாகிய அமத்சியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 நாளாகமம் 25

1 அமத்சியா இருபத்தைந்தாம் வயதிலே ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளாகிய அவனுடைய தாயின்பேர் யோவதானாள். 2 அவன் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் முழுமனதோடே அப்படிச் செய்யவில்லை. 3 ராஜ்யபாரம் அவனுக்கு ஸ்திரப்பட்டபோது, அவன் தன் தகப்பனாகிய ராஜாவைக் கொலைசெய்த தன்னுடைய ஊழியக்காரரைக் கொன்றுபோட்டான். 4 ஆனாலும் பிள்ளைகளினிமித்தம் பிதாக்களும், பிதாக்களினிமித்தம் பிள்ளைகளும் கொலைசெய்யப்படாமல், அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவன் கொலைசெய்யப்படவேண்டுமென்று மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி, கர்த்தர் கட்டளையிட்டபிரகாரம், அவர்களுடைய பிள்ளைகளை அவன் கொல்லாதிருந்தான். 5 அமத்சியா யூதா மனுஷரைக் கூடிவரச் செய்து, அவர்கள் பிதாக்களுடைய வம்சங்களின்படியே, யூதா பென்யமீன் தேசங்கள் எங்கும் ஆயிரம்பேருக்கு அதிபதிகளையும் நூறுபேருக்கு அதிபதிகளையும் வைத்து, இருபது வயதுமுதற்கொண்டு அதற்கு மேற்பட்டவர்களை இலக்கம்பார்த்து, யுத்தத்திற்குப் புறப்படவும், ஈட்டியையும் கேடகத்தையும் பிடிக்கவுந்தக்க யுத்தவீரர் மூன்றுலட்சம்பேரென்று கண்டான். 6 இஸ்ரவேலிலும் லட்சம் பராக்கிரமசாலிகளை நூறுதாலந்து வெள்ளி கொடுத்துக் கூலிக்கு அமர்த்தினான். 7 தேவனுடைய மனுஷன் ஒருவன் அவனிடத்தில் வந்து: ராஜாவே, இஸ்ரவேலின் சேனை உம்முடனே வரலாகாது; கர்த்தர் எப்பிராயீமின் சகல புத்திரராகிய இஸ்ரவேலோடும் இருக்கவில்லை. 8 போக மனதானால் நீர் போம், காரியத்தை நடத்தும்; யுத்தத்திற்குத் திடன்கொண்டு நில்லும்; தேவன் உம்மைச் சத்துருவுக்கு முன்பாக விழப்பண்ணுவார்; ஒத்தாசை செய்யவும் விழப்பண்ணவும் தேவனாலே கூடும் என்றான். 9 அப்பொழுது அமத்சியா: அப்படியானால் நான் இஸ்ரவேலின் சேனைக்குக் கொடுத்த நூறு தாலந்திற்காகச் செய்யவேண்டியது என்ன என்று தேவனுடைய மனுஷனைக் கேட்டான். அதற்குத் தேவனுடைய மனுஷன்: அதைப்பார்க்கிலும் அதிகமாய்க் கர்த்தர் உமக்குக் கொடுக்கக்கூடும் என்றான். 10 அப்பொழுது அமத்சியா எப்பிராயீமரில் தன்னிடத்துக்கு வந்த சேனையைத் தங்கள் வீட்டிற்குப் போய்விடப் பிரித்துவிட்டான்; அதினால் அவர்களுக்கு யூதாவின்மேல் மிகுந்த கோபமூண்டு, உக்கிரமான எரிச்சலோடே தங்களிடத்திற்குத் திரும்பிப்போனார்கள். 11 அமத்சியாவோ திடன்கொண்டு, தன் ஜனத்தைக் கூட்டி, உப்புப் பள்ளத்தாக்குக்குப் போய், சேயீர் புத்திரரில் பதினாயிரம்பேரை வெட்டினான். 12 யூதா புத்திரர், பதினாயிரம்பேரை உயிரோடு பிடித்து, ஒரு கன்மலையுச்சியிலே கொண்டுபோய், அவர்களெல்லாரும் நொறுங்கிப்போகத்தக்கதாய் அந்தக் கன்மலையுச்சியிலிருந்து கீழே தள்ளிவிட்டார்கள். 13 தன்னோடுகூட யுத்தத்திற்கு வராதபடிக்கு, அமத்சியா திருப்பிவிட்ட யுத்தபுருஷர், சமாரியா துவக்கிப் பெத்தொரோன்மட்டுமுள்ள யூதா பட்டணங்களின்மேல் விழுந்து, அவைகளில் மூவாயிரம்பேரை வெட்டி, திரளாய்க் கொள்ளையிட்டார்கள். 14 அமத்சியா ஏதோமியரை முறிய அடித்து, சேயீர் புத்திரரின் தெய்வங்களைக் கொண்டுவந்தபின்பு, அவன் அவைகளைத் தனக்குத் தெய்வங்களாக வைத்து, அவைகளுக்கு முன்பாகப் பணிந்து அவைகளுக்குத் தூபங்காட்டினான். 15 அப்பொழுது, கர்த்தர் அமத்சியாவின்மேல் கோபமூண்டவராகி, அவனிடத்துக்கு ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார்; இவன் அவனை நோக்கி: தங்கள் ஜனத்தை உமது கைக்குத் தப்புவிக்காதேபோன ஜனத்தின் தெய்வங்களை நீர் நாடுவானேன் என்றான். 16 தன்னோடே அவன் இப்படிப் பேசினபோது, ராஜா அவனை நோக்கி: உன்னை ராஜாவுக்கு ஆலோசனைக்காரனாக வைத்தார்களோ? அதை விட்டுவிடு; நீ ஏன் வெட்டப்படவேண்டும் என்றான்; அப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அதை விட்டுவிட்டு: நீர் இப்படிச் செய்து, என் ஆலோசனையைக் கேளாமற்போனபடியினால், தேவன் உம்மை அழிக்க யோசனையாயிருக்கிறார் என்பதை அறிவேன் என்றான். 17 பின்பு யூதாவின் ராஜாவாகிய அமத்சியா யோசனைபண்ணி, யெகூவின் குமாரனாகிய யோவாகாசின் புத்திரன் யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜாவுக்கு: நம்முடைய சாமர்த்தியத்தைப் பார்ப்போம் வா என்று சொல்லியனுப்பினான். 18 அதற்கு இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் யூதாவின் ராஜாவாகிய அமத்சியாவுக்கு ஆள் அனுப்பி: லீபனோனிலுள்ள முட்செடியானது லீபனோனிலுள்ள கேதுருமரத்தை நோக்கி: நீ உன் மகளை என் மகனுக்கு மனைவியாக விவாகஞ்செய்து கொடு என்று கேட்கச்சொல்லிற்று; ஆனாலும் லீபனோனிலுள்ள ஒரு காட்டுமிருகம் அந்த வழி போகையில் ஓடி அந்த முட்செடியை மிதித்துப்போட்டது. 19 நீ ஏதோமியரை அடித்தாய் என்று பெருமைபாராட்ட உன் இருதயம் உன்னைக் கர்வங்கொள்ளப்பண்ணினது; இப்போதும் நீ உன் வீட்டிலே இரு; நீயும் உன்னோடே யூதாவும்கூட விழும்படிக்கு, பொல்லாப்பைத் தேடிக்கொள்வானேன் என்று சொல்லச்சொன்னான். 20 ஆனாலும் அமத்சியா செவிகொடாதேபோனான்; அவர்கள் ஏதோமின் தெய்வங்களை நாடினதினிமித்தம் அவர்களை அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படிக்குத் தேவனாலே இப்படி நடந்தது. 21 அப்படியே இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் வந்தான்; யூதாவிலிருக்கிற பெத்ஷிமேசிலே அவனும், அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவும் தங்கள் சாமர்த்தியத்தைப் பார்த்தார்கள். 22 யூதா இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்து, அவரவர் தங்கள் கூடாரங்களுக்கு ஓடிப்போனார்கள். 23 இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அகசியாவின் குமாரனாகிய யோவாசுக்குப் பிறந்த அமத்சியா என்னும் யூதாவின் ராஜாவைப் பெத்ஷிமேசிலே பிடித்து, அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்து, எருசலேமின் அலங்கத்திலே எப்பிராயீம் வாசல்தொடங்கி மூலைவாசல்மட்டும் நானூறுமுழ நீளம் இடித்துப்போட்டு, 24 தேவனுடைய ஆலயத்தில் ஓபேத் ஏதோமின் வசத்திலே அகப்பட்ட சகல பொன்னையும், வெள்ளியையும், சகல பணிமுட்டுகளையும், ராஜாவின் அரமனைப் பொக்கிஷங்களையும், கிரியிருப்பவர்களையும், பிடித்துக்கொண்டு சமாரியாவுக்குத் திரும்பிப்போனான். 25 யோவாகாசின் குமாரனாகிய யோவாஸ் என்னும் இஸ்ரவேலின் ராஜா மரணமடைந்தபின்பு, யோவாசின் குமாரனாகிய அமத்சியா என்னும் யூதாவின் ராஜா பதினைந்து வருஷம் உயிரோடிருந்தான். 26 அமத்சியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்கள் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 27 அமத்சியா கர்த்தரை விட்டுப் பின்வாங்கின காலமுதற்கொண்டு எருசலேமிலிருந்தவர்கள் அவனுக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டார்கள்; அதினிமித்தம் அவன் லாகீசுக்கு ஓடிப்போனான்; ஆனாலும் அவன் பிறகே லாகீசுக்கு மனுஷரை அனுப்பினார்கள்; அவர்கள் அங்கே அவனைக் கொன்றுபோட்டு, 28 குதிரைகள்மேல் அவனை எடுத்துவந்து, யூதாவின் நகரத்தில் அவன் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணினார்கள்.

2 நாளாகமம் 26

1 அப்பொழுது யூதா ஜனங்கள் எல்லாரும் பதினாறு வயதான உசியாவை அழைத்துவந்து, அவனை அவன் தகப்பனாகிய அமத்சியாவின் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள். 2 ராஜா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, இவன் ஏலோதைக் கட்டி, அதைத் திரும்ப யூதாவின் வசமாக்கிக்கொண்டான். 3 உசியா ராஜாவாகிறபோது, பதினாறு வயதாயிருந்து, ஐம்பத்திரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; எருசலேம் நகரத்தாளான அவன் தாயின்பேர் எக்கோலியாள். 4 அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, 5 தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச்செய்தார். 6 அவன் புறப்பட்டுப்போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, காத்தின் அலங்கத்தையும், யப்னேயின் அலங்கத்தையும், அஸ்தோத்தின் அலங்கத்தையும் இடித்துப்போட்டு, அஸ்தோத் நாட்டிலும் பெலிஸ்தருக்குள்ளும் பட்டணங்களைக் கட்டினான். 7 பெலிஸ்தரையும் கூர்பாகாலிலே குடியிருக்கிற அரபியரையும் மெகுனியரையும் வெல்ல, தேவன் அவனுக்குத் துணைநின்றார். 8 அம்மோனியர் உசியாவுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தார்கள்; அவனுடைய கீர்த்தி எகிப்தின் எல்லைமட்டும் எட்டினது; அவன் மிகவும் பெலங்கொண்டான். 9 உசியா எருசலேமிலே மூலைவாசல்மேலும், பள்ளத்தாக்கு வாசல்மேலும், அலங்கத்துக் கோடிகள்மேலும் கோபுரங்களைக் கட்டி அவைகளைப் பலப்படுத்தினான். 10 அவனுக்குப் பள்ளத்தாக்கிலும் சமபூமியிலும் அநேகம் ஆடுமாடுகளும், மலைகளிலேயும் வயல்வெளியிலேயும் பயிர்க்குடிகளும், திராட்சத்தோட்டக்காரரும் உண்டாயிருந்தபடியினால், அவன் வனாந்தரத்திலே கோபுரங்களைக் கட்டி, அநேக துரவுகளை வெட்டினான்; அவன் வெள்ளாண்மைப் பிரியனாயிருந்தான். 11 உசியாவுக்கு யுத்தவீரரின் சேனையும் இருந்தது; அது சம்பிரதியாகிய ஏயெலினாலும் ஆதிக்கக்காரனாகிய மாசேயாவினாலும் இலக்கம்பார்க்கப்பட்டபடியே, ராஜாவின் பிரபுக்களில் ஒருவனாகிய அனனியாவின்கீழ் வகுப்பு வகுப்பாய்ச் சேவகம்பண்ணப் புறப்பட்டது. 12 பராக்கிரமசாலிகளான வம்சத்தலைவரின் தொகையெல்லாம் இரண்டாயிரத்து அறுநூறு. 13 இவர்கள் கையின்கீழ்ச் சத்துருக்களுக்கு விரோதமாக ராஜாவுக்குத் துணைநிற்க, பராக்கிரமத்தோடே யுத்தம்பண்ணுகிற மூன்றுலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூறுபேரான சேனை இருந்தது. 14 இந்தச் சேனையிலுள்ளவருக்கெல்லாம் உசியா கேடகங்களையும், ஈட்டிகளையும், தலைச்சீராக்களையும், மார்க்கவசங்களையும், வில்லுகளையும், கல்லெறிகிற கவண்களையும் ஆயத்தப்படுத்தினான். 15 கோபுரங்கள்மேலும் அலங்கக்கோடிகள்மேலும் நின்று அம்புகளையும் பெரிய கற்களையும் பிரயோகிக்கிறதற்கு நிபுணரான தொழிலாளிகள் கற்பித்த யந்திரங்களையும் அவன் எருசலேமில் உண்டாக்கினான்; அப்படியே அவன் கீர்த்தி வெகுதூரம் பரம்பிற்று; அவன் பலப்படுமட்டும் ஆச்சரியமாய் அவனுக்கு அநுகூலமுண்டாயிற்று. 16 அவன் பலப்பட்டபோது, தனக்குக் கேடுண்டாகுமட்டும், அவனுடைய மனம் மேட்டிமையாகி, தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து, தூபபீடத்தின்மேல் தூபங்காட்டக் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான். 17 ஆசாரியனாகிய அசரியாவும், அவனோடேகூடக் கர்த்தரின் ஆசாரியரான பராக்கிரமசாலிகளாகிய எண்பதுபேரும், அவன் பிறகே உட்பிரவேசித்து, 18 ராஜாவாகிய உசியாவோடு எதிர்த்துநின்று: உசியாவே, கர்த்தருக்குத் தூபங்காட்டுகிறது உமக்கு அடுத்ததல்ல; தூபங்காட்டுகிறது பரிசுத்தமாக்கப்பட்ட ஆரோனின் குமாரராகிய ஆசாரியருக்கே அடுக்கும்; பரிசுத்த ஸ்தலத்தை விட்டு வெளியே போம்; மீறுதல் செய்தீர்; இது தேவனாகிய கர்த்தராலே உமக்கு மேன்மையாக லபியாது என்றார்கள். 19 அப்பொழுது உசியா கோபங்கொண்டான்; அவன் தூபகலசத்தைத் தன் கையிலே பிடித்து, ஆசாரியரோடே கோபமாய்ப் பேசுகிறபோது, ஆசாரியருக்கு முன்பாகக் கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று. 20 பிரதான ஆசாரியனாகிய அசரியாவும் சகல ஆசாரியரும் அவனைப் பார்க்கும்போது, இதோ, அவன் தன் நெற்றியிலே குஷ்டரோகம் பிடித்தவனென்றுகண்டு, அவனைத் தீவிரமாய் அங்கேயிருந்து வெளிப்படப்பண்ணினார்கள்; கர்த்தர் தன்னை அடித்ததினால் அவன் தானும் வெளியே போகத் தீவிரப்பட்டான். 21 ராஜாவாகிய உசியா தன் மரணநாள்மட்டும் குஷ்டரோகியாயிருந்து, கர்த்தருடைய ஆலயத்துக்குப் புறம்பாக்கப்பட்டபடியினால், ஒரு தனித்த வீட்டிலே குஷ்டரோகியாய் வாசம்பண்ணினான்; அவன் குமாரனாகிய யோதாம் ராஜாவின் அரமனை விசாரிப்புக்காரனாயிருந்து, தேசத்தின் ஜனங்களை நியாயம் விசாரித்தான். 22 உசியாவின் ஆதியோடந்த நடபடியான மற்ற வர்த்தமானங்களை ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எழுதினான். 23 உசியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, ஜனங்கள் அவனைக் குஷ்டரோகியென்று சொல்லி, அவனை அவன் பிதாக்களண்டையில், ராஜாக்களை அடக்கம்பண்ணுகிற இடத்திற்கு அருகான நிலத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோதாம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 நாளாகமம் 27

1 யோதாம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமிலே அரசாண்டான்; சாதோக்கின் குமாரத்தியாகிய அவன் தாயின்பேர் எருசாள். 2 அவன் தன் தகப்பனாகிய உசியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆனாலும் அவனைப்போலக் கர்த்தரின் ஆலயத்திற்குள் பிரவேசியாதிருந்தான்; ஜனங்கள் இன்னும் தங்களைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள். 3 அவன் கர்த்தருடைய ஆலயத்தின் உயர்ந்த வாசலைக் கட்டினதுமல்லாமல், ஓபேலின் மதிலின்மேல் அநேக கட்டடங்களையும் கட்டினான். 4 யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான். 5 அவன் அம்மோன் புத்திரருடைய ராஜாவோடு யுத்தம்பண்ணி அவர்களை மேற்கொண்டான்; ஆதலால் அம்மோன் புத்திரர் அவனுக்கு அந்த வருஷத்திலே நூறுதாலந்து வெள்ளியையும், பதினாயிரங்கலக் கோதுமையையும், பதினாயிரங்கல வாற்கோதுமையையும் கொடுத்தார்கள்; இரண்டாம் மூன்றாம் வருஷத்திலும் அம்மோன் புத்திரர் அப்படியே அவனுக்குச் செலுத்தினார்கள். 6 யோதாம் தன் வழிகளைத் தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நேராக்கினதினால் பலப்பட்டான். 7 யோதாமின் மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய சகல யுத்தங்களும், அவனுடைய நடைகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. 8 அவன் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான். 9 யோதாம் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீதின் நகரத்திலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆகாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 நாளாகமம் 28

1 ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, பதினாறு வருஷம் எருசலேமில் அரசாண்டான்; ஆனாலும் அவன், தன் தகப்பனாகிய தாவீதைப்போல், கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல், 2 இஸ்ரவேல் ராஜாக்களின் வழிகளில் நடந்து, பாகால்களுக்கு வார்ப்பு விக்கிரகங்களைச் செய்தான். 3 அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தூபங்காட்டி, கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரரை அக்கினியிலே தகித்துப்போட்டு, 4 மேடைகளிலும், மலைகளிலும், பச்சையான சகல மரங்களின் கீழும் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தான். 5 ஆகையால் அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனைச் சீரியருடைய ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் அவனை முறிய அடித்து, அவனுக்கு இருக்கிறவர்களிலே பெரிய கூட்டத்தைச் சிறைபிடித்துத் தமஸ்குவுக்குக் கொண்டுபோனார்கள்; அவன் இஸ்ரவேலுடைய ராஜாவின் கையிலும் ஒப்புக்கொடுக்கப்பட்டான்; இவன் அவனை வெகுவாய் முறிய அடித்தான். 6 எப்படியெனில், யூதா மனுஷர் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டபடியினால், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா அவர்களில் ஒரேநாளில் லட்சத்திருபதினாயிரம்பேரைக் கொன்றுபோட்டான்; அவர்கள் எல்லாரும் மகா வீரராயிருந்தவர்கள். 7 அன்றியும் எப்பிராயீமின் பராக்கிரமசாலியான சிக்ரியும், ராஜாவின் குமாரனாகிய மாசேயாவையும், அரமனைத் தலைவனாகிய அஸ்ரிக்காமையும், ராஜாவுக்கு இரண்டாவதான எல்க்கானாவையும் கொன்றுபோட்டான். 8 இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சகோதரரில் இரண்டு லட்சம்பேராகிய ஸ்திரீகளையும் குமாரரையும் குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவர்களுடைய அநேக திரவியங்களைக் கொள்ளையிட்டு, கொள்ளைப்பொருளைச் சமாரியாவுக்குக் கொண்டுபோனார்கள். 9 அங்கே ஓதேத் என்னும் பேருள்ள கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான்; அவன் சமாரியாவுக்கு வருகிற சேனைக்கு எதிராகப் போய், அவர்களை நோக்கி: இதோ, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் யூதாவின்மேல் கோபங்கொண்டபடியினால் அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார்; நீங்களோ வானபரியந்தம் எட்டுகிற உக்கிரத்தோடே அவர்களைச் சங்காரம்பண்ணினீர்கள். 10 இப்போதும் யூதாவின் புத்திரரையும் எருசலேமியரையும் நீங்கள் உங்களுக்கு வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கீழ்ப்படுத்தவேண்டும் என்று நினைக்கிறீர்கள்; ஆனாலும் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமான குற்றங்கள் உங்களிடத்திலும் இல்லையோ? 11 ஆதலால் நீங்கள் எனக்குச் செவிகொடுத்து, நீங்கள் உங்கள் சகோதரரிடத்தில் சிறைபிடித்துக்கொண்டுவந்தவர்களைத் திரும்ப அனுப்பிவிடுங்கள்; கர்த்தருடைய உக்கிரமான கோபம் உங்கள்மேல் இருக்கிறது என்றான். 12 அப்பொழுது எப்பிராயீம் புத்திரரின் தலைவரில் சிலபேராகிய யோகனானின் குமாரன் அசரியாவும், மெஷிலெமோத்தின் குமாரன் பெரகியாவும், சல்லூமின் குமாரன் எகிஸ்கியாவும், அத்லாயின் குமாரன் அமாசாவும் யுத்தத்திலிருந்து வந்தவர்களுக்கு விரோதமாக எழும்பி, 13 அவர்களை நோக்கி: நீங்கள் சிறைபிடித்த இவர்களை இங்கே உள்ளே கொண்டுவரவேண்டாம்; நம்மேல் திரளான குற்றமும், இஸ்ரவேலின்மேல் உக்கிரமான கோபமும் இருக்கையில், நீங்கள் கர்த்தருக்கு முன்பாக நம்மேல் குற்றம் சுமரப்பண்ணத்தக்கதாய், நம்முடைய பாவங்களையும் நம்முடைய குற்றங்களையும் அதிகமாக்க நினைக்கிறீர்கள் என்றார்கள். 14 அப்பொழுது ஆயுதபாணிகளானவர்கள் சிறைபிடித்தவர்களையும், கொள்ளையுடைமைகளையும், பிரபுக்களுக்கு முன்பாகவும் சமஸ்த சபைக்கு முன்பாகவும் விட்டுவிட்டார்கள். 15 அப்பொழுது பேர் குறிக்கப்பட்ட மனுஷர் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் வஸ்திரமில்லாத சகலருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட வஸ்திரங்களைக் கொடுத்து, உடுப்பையும் பாதரட்சைகளையும் போடுவித்து, அவர்களுக்குச் சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுக்கு எண்ணெய் வார்த்து, அவர்களில் பலட்சயமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சமரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரரிடத்துக்குக் கொண்டுவந்து விட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள். 16 அக்காலத்திலே ஆகாஸ் என்னும் ராஜா, அசீரியாவின் ராஜாக்கள் தனக்கு ஒத்தாசைபண்ண அவர்களிடத்துக்கு ஆட்களை அனுப்பினான். 17 ஏதோமியரும் கூடவந்து, யூதாவை முறிய அடித்து, சிலரைச் சிறைபிடித்துப் போயிருந்தார்கள். 18 பெலிஸ்தரும் யூதாவிலே சமபூமியிலும் தெற்கேயும் இருக்கிற பட்டணங்களின்மேல் விழுந்து, பெத்ஷிமேசையும், ஆயலோனையும், கெதெரோத்தையும், சொக்கோவையும் அதின் கிராமங்களையும், திம்னாவையும் அதின் கிராமங்களையும், கிம்சோவையும் அதின் கிராமங்களையும் பிடித்து அங்கே குடியேறினார்கள். 19 யூதாவின் ராஜாவாகிய ஆகாசினிமித்தம் கர்த்தர் யூதாவைத் தாழ்த்தினார்; அவன் யூதாவைச் சீர்குலைத்து, கர்த்தருக்கு விரோதமாய் மிகவும் துரோகம்பண்ணினான். 20 அசீரியாவின் ராஜாவாகிய தில்காத்பில்நேசர் அவனிடத்தில் வந்தான்; அவனை நெருக்கினானே அல்லாமல் அவனைப் பலப்படுத்தவில்லை. 21 ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்தில் ஒரு பங்கும், ராஜ அரமனையில் ஒரு பங்கும், பிரபுக்களின் கையில் ஒரு பங்கும் எடுத்து, அசீரியாவின் ராஜாவுக்குக் கொடுத்தும், அவனுக்கு உதவிகிடைக்கவில்லை. 22 தான் நெருக்கப்படுகிற காலத்திலும் கர்த்தருக்கு விரோதமாய் அந்த ஆகாஸ் என்னும் ராஜா துரோகம்பண்ணிக்கொண்டே இருந்தான். 23 எப்படியென்றால்: சீரியா ராஜாக்களின் தெய்வங்கள் அவர்களுக்குத் துணை செய்கிறபடியினால், அவர்கள் எனக்கும் துணைசெய்ய அவர்களுக்குப் பலியிடுவேன் என்று சொல்லி, தன்னை முறிய அடித்த தமஸ்குவின் தெய்வங்களுக்கு அவன் பலியிட்டான்; ஆனாலும் அது அவனும் இஸ்ரவேல் அனைத்தும் நாசமாகிறதற்கு ஏதுவாயிற்று. 24 ஆகாஸ் தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைச் சேர்த்து, தேவனுடைய ஆலயத்தின் பணிமுட்டுகளைத் துண்டுதுண்டாக்கி, கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைப் பூட்டிப்போட்டு, எருசலேமில் மூலைக்குமூலை பலிபீடங்களை உண்டுபண்ணி, 25 அந்நிய தெய்வங்களுக்குத் தூபங்காட்டும்படிக்கு, யூதாவின் ஒவ்வொரு பட்டணத்திலும் மேடைகளை உண்டுபண்ணி, தன் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமூட்டினான். 26 அவனுடைய மற்ற வர்த்தமானங்களும், அவனுடைய ஆதியோடந்தமான சகல நடபடிகளும் யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. 27 ஆகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை எருசலேம் நகரத்தில் அடக்கம்பண்ணினார்கள்; ஆனாலும் இஸ்ரவேல் ராஜாக்களின் கல்லறைகளில் அவனைக் கொண்டுவந்து வைக்கவில்லை; அவன் குமாரனாகிய எசேக்கியா அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 நாளாகமம் 29

1 எசேக்கியா இருபத்தைந்தாம் வயதில் ராஜாவாகி, இருபத்தொன்பது வருஷம் எருசலேமில் அரசாண்டான்; சகரியாவின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின்பேர் அபியாள். 2 அவன் தன் தகப்பனாகிய தாவீது செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். 3 அவன் தன் ராஜ்யபாரத்தின் முதலாம் வருஷம் முதலாம் மாதத்தில் கர்த்தருடைய ஆலயத்தின் கதவுகளைத் திறந்து, அவைகளைப் பழுதுபார்த்து, 4 ஆசாரியரையும் லேவியரையும் அழைத்துவந்து, அவர்களைக் கிழக்கு வீதியிலே கூடிவரச்செய்து, 5 அவர்களை நோக்கி: லேவியரே, கேளுங்கள்; நீங்கள் இப்போது உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொண்டு, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைப் பரிசுத்தம்பண்ணி, அசுத்தமானதைப் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளியே கொண்டுபோங்கள். 6 நம்முடைய பிதாக்கள் துரோகம்பண்ணி, நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, அவரை விட்டு விலகி, தங்கள் முகங்களைக் கர்த்தருடைய வாசஸ்தலத்தை விட்டுத் திருப்பி, அதற்கு முதுகைக் காட்டினார்கள். 7 அவர்கள் பரிசுத்தஸ்தலத்தில் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலி செலுத்தாமலும், தூபங்காட்டாமலும், விளக்குகளை அணைத்துப்போட்டு, மண்டபத்தின் கதவுகளையும் பூட்டிப்போட்டார்கள். 8 ஆகையால் கர்த்தருடைய கடுங்கோபம் யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் வந்து, அவர் இவர்களை, நீங்கள் உங்கள் கண்களினால் காண்கிறபடி, துயரத்துக்கும் திகைப்புக்கும் பழிப்புக்கும் ஒப்புக்கொடுத்தார். 9 இதோ, இதினிமித்தம் நம்முடைய பிதாக்கள் பட்டயத்தினால் விழுந்து, நம்முடைய குமாரரும் நம்முடைய குமாரத்திகளும் நம்முடைய மனைவிகளும் சிறையிருப்பில் அகப்பட்டார்கள். 10 இப்போதும் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பும்படிக்கு, அவரோடே உடன்படிக்கைபண்ண என் மனதிலே நிர்ணயித்துக்கொண்டேன். 11 என் குமாரரே, இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியஞ்செய்கிறவர்களும் தூபங்காட்டுகிறவர்களுமாயிருக்கவும் உங்களை அவர் தெரிந்துகொண்டார் என்றான். 12 அப்பொழுது கோகாத் புத்திரரில் அமாசாயின் குமாரன் மாகாத்தும், அசரியாவின் குமாரன் யோவேலும், மெராரியின் புத்திரரில் அப்தியின் குமாரன் கீசும், எகலேலின் குமாரன் அசரியாவும், கெர்சோனியரில் சிம்மாவின் குமாரன் யோவாகும், யோவாகின் குமாரன் ஏதேனும், 13 எலிச்சாப்பான் புத்திரரில் சிம்ரியும், ஏயெலும், ஆசாப்பின் புத்திரரில் சகரியாவும், மத்தனியாவும், 14 ஏமானின் புத்திரரில் எகியேலும், சிமேயியும், எதுத்தூனின் புத்திரரில் செமாயாவும், ஊசியேலும் ஆகிய இந்த லேவியர் எழும்பி, 15 தங்கள் சகோதரரைக் கூடிவரச்செய்து, பரிசுத்தம்பண்ணிக்கொண்டு, கர்த்தருடைய வசனங்களுக்கொத்த ராஜாவினுடைய கற்பனையின்படியே கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்க வந்தார்கள். 16 ஆசாரியர்கள் கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்கும்படி உட்புறத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தில் கண்ட சகல அசுத்தத்தையும் வெளியே கர்த்தருடைய ஆலயப்பிராகாரத்தில் கொண்டுவந்தார்கள்; அப்பொழுது லேவியர் அதை எடுத்து, வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோனார்கள். 17 முதல் மாதம் முதல் தேதியிலே அவர்கள் பரிசுத்தம்பண்ணத்துவக்கி, எட்டாந்தேதியிலே கர்த்தருடைய மண்டபத்திலே பிரவேசித்து, கர்த்தருடைய ஆலயத்தை எட்டுநாளில் பரிசுத்தம்பண்ணி, முதலாம் மாதம் பதினாறாம் தேதியில் அதை முடித்தார்கள். 18 அவர்கள் ராஜாவாகிய எசேக்கியாவினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தரின் ஆலயத்தையும், சர்வாங்க தகனபலிபீடத்தையும், அதினுடைய சகல பணிமுட்டுகளையும், சமுகத்தப்பங்களின் மேஜையையும், அதின் சகல பணிமுட்டுகளையும் சுத்திகரித்து, 19 ராஜாவாகிய ஆகாஸ் அரசாளும்போது தம்முடைய பாதகத்தினால் எறிந்துபோட்ட சகல பணிமுட்டுகளையும் முஸ்திப்பாக்கிப் பரிசுத்தம்பண்ணினோம்; இதோ, அவைகள் கர்த்தரின் ஆலயத்திற்கு முன்பாக இருக்கிறது என்றார்கள். 20 அப்பொழுது ராஜாவாகிய எசேக்கியா காலமே எழுந்திருந்து, நகரத்தின் பிரபுக்களைக் கூட்டிக்கொண்டு, கர்த்தரின் ஆலயத்திற்குப் போனான். 21 அப்பொழுது ராஜ்யபாரத்திற்காகவும் பரிசுத்த ஸ்தலத்திற்காகவும் யூதாவுக்காகவும் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும், ஏழு ஆட்டுக்குட்டிகளையும், ஏழு வெள்ளாட்டுக்கடாக்களையும் பாவநிவாரணபலியாகக் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் பலியிடுங்கள் என்று அவன் ஆசாரியராகிய ஆரோனின் புத்திரருக்குச் சொன்னான். 22 அப்படியே ஆசாரியர் காளைகளை அடித்து, அந்த இரத்தத்தைப் பிடித்துப் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்கடாக்களை அடித்து, அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள்; ஆட்டுக்குட்டிகளையும் அடித்து, அவைகளின் இரத்தத்தையும் பலிபீடத்தின்மேல் தெளித்தார்கள். 23 பிற்பாடு பாவநிவாரண பலிக்கான வெள்ளாட்டுக்கடாக்களை ராஜாவுக்கும் சபையாருக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; அவைகள்மேல் அவர்கள் தங்கள் கைகளை வைத்தார்கள். 24 இஸ்ரவேல் அனைத்திற்காகவும், சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரண பலியையும் செலுத்துங்கள் என்று ராஜா சொல்லியிருந்தான்; ஆதலால் ஆசாரியர் அவைகளை அடித்து, இஸ்ரவேல் அனைத்திற்கும் பாவநிவிர்த்தி உண்டாக்க, அவைகளின் இரத்தத்தால் பலிபீடத்தின்மேல் பிராயச்சித்தஞ்செய்தார்கள். 25 அவன், தாவீதும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்தும், தீர்க்கதரிசியாகிய நாத்தானும் கற்பித்தபடியே, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்திலே நிறுத்தினான்; இப்படிச் செய்யவேண்டும் என்கிற கற்பனை கர்த்தரால் அவருடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு உண்டாயிருந்தது. 26 அப்படியே லேவியர் தாவீதின் கீதவாத்தியங்களையும், ஆசாரியர் பூரிகைகளையும் பிடித்து நின்றார்கள். 27 அப்பொழுது எசேக்கியா சர்வாங்க தகனபலிகளைப் பலிபீடத்தின்மேல் செலுத்தக் கட்டளையிட்டான்; அதைச் செலுத்தத் துவக்கின நேரத்தில் கர்த்தரைத் துதிக்கும் கீதமும் பூரிகைகளும், இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீது ஏற்படுத்தின கீதவாத்தியங்களும் முழங்கத் தொடங்கினது. 28 கீதத்தைப்பாடி, பூரிகைகளை ஊதிக்கொண்டிருக்கையில், சர்வாங்க தகனபலியைச் செலுத்தித் தீருமட்டும் சபையார் எல்லாரும் பணிந்துகொண்டிருந்தார்கள். 29 பலியிட்டுத் தீர்ந்தபோது, ராஜாவும் அவனோடிருந்த அனைவரும் தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள். 30 பின்பு எசேக்கியா ராஜாவும் பிரபுக்களும் லேவியரை நோக்கி: நீங்கள் தாவீதும் ஞானதிருஷ்டிக்காரனாகிய ஆசாபும் பாடின வார்த்தைகளினால் கர்த்தரைத் துதியுங்கள் என்றார்கள்; அப்பொழுது மகிழ்ச்சியோடே துதிசெய்து தலைகுனிந்து பணிந்துகொண்டார்கள். 31 அதின்பின்பு எசேக்கியா: இப்போதும் நீங்கள் கர்த்தருக்கென்று உங்களைப் பரிசுத்தம்பண்ணினீர்கள்; ஆகையால் கிட்டவந்து, கர்த்தருடைய ஆலயத்திற்குத் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் கொண்டுவாருங்கள் என்றான்; அப்பொழுது சபையார் தகனபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும், இஷ்டமுள்ளவர்களெல்லாம் சர்வாங்க தகனபலிகளையும் கொண்டுவந்தார்கள். 32 சபையார் கொண்டுவந்த சர்வாங்க தகனபலிகளின் தொகை எழுபது காளைகளும், நூறு ஆட்டுக்கடாக்களும், இருநூறு ஆட்டுக்குட்டிகளுமே; இவைகளெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனமாயின. 33 அறுநூறு காளைகளும் மூவாயிரம் ஆடுகளும் பிரதிஷ்டையாக்கப்பட்டது. 34 ஆனாலும் ஆசாரியர்கள் கொஞ்சம் பேரானதினால் அவர்களால் அந்தச் சர்வாங்க தகனமான ஜீவன்களையெல்லாம் அடித்துத் தோலுரிக்க முடியாதிருந்தது; அதினாலே அந்த வேலை தீருமட்டாகவும், மற்ற ஆசாரியர் தங்களைப் பரிசுத்தம்பண்ணுமட்டாகவும், அவர்கள் சகோதரராகிய லேவியர் அவர்களுக்கு உதவிசெய்தார்கள்; தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ள லேவியர் ஆசாரியரைப்பார்க்கிலும் மன உற்சாகமுள்ளவர்களாயிருந்தார்கள். 35 சர்வாங்க தகனபலிகளும், ஸ்தோத்திரபலிகளின் கொழுப்பும், சர்வாங்க தகனங்களுக்கடுத்த பானபலிகளும் மிகுதியாயிருந்தது; இவ்விதமாய்க் கர்த்தருடைய ஆலயத்தின் ஆராதனை திட்டம்பண்ணப்பட்டது. 36 தேவன் ஜனத்தை ஆயத்தப்படுத்தினதைக்குறித்து எசேக்கியாவும் ஜனங்கள் எல்லாரும் சந்தோஷப்பட்டார்கள்; இந்தக் காரியத்தைச் செய்யும்படியான யோசனை சடுதியாய் உண்டாயிற்று.

2 நாளாகமம் 30

1 அதன்பின்பு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி, எருசலேமில் இருக்கிற கர்த்தருடைய ஆலயத்திற்கு வாருங்கள் என்று எசேக்கியா இஸ்ரவேல் யூதா எங்கும் ஆட்களை அனுப்பினதும் அன்றி, எப்பிராயீம் மனாசே கோத்திரங்களுக்கும் நிருபங்களை எழுதியனுப்பினான். 2 பஸ்காவை இரண்டாம் மாதத்தில் ஆசரிக்கும்படி, ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் எருசலேமிலுள்ள சபையார் யாவரும் யோசனைபண்ணியிருந்தார்கள். 3 ஆசாரியர் போதுமானபேர் தங்களைப் பரிசுத்தம்பண்ணாமலும், ஜனங்கள் எருசலேமில் இன்னும் கூடிவராமலும் இருந்தபடியினால், அதின் காலத்தில் அதை ஆசரிக்கக்கூடாமற்போயிற்று. 4 இந்தக் காரியம் ராஜாவின் பார்வைக்கும் சமஸ்த சபையின் பார்வைக்கும் நியாயமாய்க் காணப்பட்டது. 5 எழுதியிருக்கிறபடி வெகுகாலமாய் அவர்கள் அதை ஆசரிக்கவில்லை; ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கும்படி எருசலேமுக்கு வாருங்கள் என்று பெயெர்செபாமுதல் தாண்மட்டுமுள்ள இஸ்ரவேல் தேசமெங்கும் பறைசாற்றுவிக்கத் தீர்மானம்பண்ணினார்கள். 6 அப்படியே ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் கொடுத்த நிருபங்களை அஞ்சல்காரர் வாங்கி, ராஜாவுடைய கட்டளையின்படியே இஸ்ரவேல் யூதா எங்கும்போய்: இஸ்ரவேல் புத்திரரே, ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்பவர்களுடைய தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்புங்கள்; அப்பொழுது அசீரியருடைய ராஜாக்களின் கைக்குத் தப்பியிருக்கிற மீதியான உங்களண்டைக்கு அவர் திரும்புவார். 7 தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்குத் துரோகம்பண்ணின உங்கள் பிதாக்களைப்போலவும் உங்கள் சகோதரரைப்போலவும் இராதேயுங்கள்; அதற்காக, நீங்கள் காண்கிறபடியே, அவர்கள் பாழாய்ப்போகிறதற்கு ஒப்புக்கொடுத்தாரே. 8 இப்போதும் உங்கள் பிதாக்களைப்போல உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்கு உடன்பட்டு, அவர் சதாகாலத்துக்கும் பரிசுத்தம்பண்ணின அவருடைய பரிசுத்தஸ்தலத்திற்கு வந்து, உங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவியுங்கள்; அப்பொழுது அவருடைய உக்கிரமான கோபம் உங்களைவிட்டுத் திரும்பும். 9 நீங்கள் கர்த்தரிடத்துக்குத் திரும்பினால், உங்கள் சகோதரரும் உங்கள் பிள்ளைகளும் தங்களைச் சிறைபிடித்தவர்களுக்கு முன்பாக இரக்கம் பெறுகிறதற்கும், இந்தத் தேசத்திற்குத் திரும்புகிறதற்கும் அது ஏதுவாகும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் கிருபையும் இரக்கமுமுள்ளவர்; நீங்கள் அவரிடத்திற்குத் திரும்பினால், அவர் தம்முடைய முகத்தை உங்களைவிட்டு விலக்குவதில்லை என்றார்கள். 10 அப்படி அந்த அஞ்சல்காரர் எப்பிராயீம் மனாசே தேசங்களில் செபுலோன் மட்டுக்கும் ஊரூராகத் திரிந்தார்கள்; ஆனாலும் அவர்கள் இவர்களைப்பார்த்து நகைத்துப் பரிகாசம்பண்ணினார்கள். 11 ஆகிலும் ஆசேரிலும், மனாசேயிலும், செபுலோனிலும், சிலர் மனத்தாழ்மையாகி எருசலேமுக்கு வந்தார்கள். 12 யூதாவிலும் கர்த்தருடைய வார்த்தையின்படியே, ராஜாவும் பிரபுக்களும் கட்டளையிட்டபிரகாரம் செய்கிறதற்கு, தேவனுடைய கரம் அவர்களை ஒருமனப்படுத்திற்று. 13 அப்படியே இரண்டாம் மாதத்தில் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஆசரிக்க வெகு ஜனங்கள் எருசலேமில் மகாபெரிய சபையாய்க் கூடினார்கள். 14 அவர்கள் எழும்பி, எருசலேமில் உண்டான பலிபீடங்களையும், தூபபீடங்களையும் அகற்றிக் கீதரோன் ஆற்றிலே போட்டார்கள். 15 பின்பு அந்த இரண்டாம் மாதம் பதினாலாந்தேதியில் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள்; ஆசாரியரும் லேவியரும் வெட்கி, தங்களைச் சுத்தம்பண்ணி, சர்வாங்க தகனபலிகளைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்து, 16 தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்ற தங்கள் முறைமையின்படியே தங்கள் ஸ்தானத்திலே நின்றார்கள்; ஆசாரியர் லேவியரின் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித் தெளித்தார்கள். 17 சபையிலே அநேகர் தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தார்கள்; ஆகையால் சுத்தமில்லாத எல்லாரையும் கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ண, லேவியர் அவர்களுக்காகப் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடிக்கும் காரியத்தை விசாரித்தார்கள். 18 அதேனென்றால் எப்பிராயீம், மனாசே, இசக்கார், செபுலோன் மனுஷரில் ஏராளமான அநேகம் ஜனங்கள் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொள்ளாதிருந்தும், எழுதியிராதபிரகாரமாகப் பஸ்காவைச் சாப்பிட்டார்கள். 19 எசேக்கியா அவர்களுக்காக விண்ணப்பம்பண்ணி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரான தேவனைத் தேடும்படிக்கு, தங்கள் இருதயத்தை நேராக்கினவர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்கேற்ற சுத்தாங்கம் அடையாதிருந்தாலும், கிருபையுள்ள கர்த்தர் அவர்கள் எல்லாருக்கும் மன்னிப்பாராக என்றான். 20 கர்த்தர் எசேக்கியாவின் விண்ணப்பத்தைக் கேட்டு, ஜனங்களுக்கு அநுகூலஞ்செய்தார். 21 அப்படியே எருசலேமிலே காணப்பட்ட இஸ்ரவேல் புத்திரர் புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளளவும் மகா ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள்; லேவியரும் ஆசாரியரும் தினந்தினம் கர்த்தருக்கென்று பேரோசையாய்த் தொனிக்கும் கீதவாத்தியங்களால் கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள். 22 கர்த்தருக்கு அடுத்த காரியத்தில் நல்ல உணர்வுள்ள எல்லா லேவியரோடும் எசேக்கியா பட்சமாய்ப் பேசினான்; இப்படி அவர்கள் பண்டிகையின் ஏழுநாளளவும் புசித்து, ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைத் துதித்துக்கொண்டிருந்தார்கள். 23 பின்பு வேறே ஏழுநாளளவும் ஆசரிக்கச் சபையார் எல்லாரும் யோசனைபண்ணி, அந்த ஏழுநாளும் ஆனந்தத்தோடே ஆசரித்தார்கள். 24 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சபைக்கு ஆயிரம் காளைகளையும் ஏழாயிரம் ஆடுகளையும் கொடுத்தான்; பிரபுக்களும் சபைக்கு ஆயிரம் காளைகளையும் பதினாயிரம் ஆடுகளையும் கொடுத்தார்கள்; ஆசாரியரில் அநேகம்பேர் தங்களைச் சுத்தம்பண்ணினார்கள். 25 யூதாவின் சபையனைத்தும், ஆசாரியரும், லேவியரும், இஸ்ரவேலிலிருந்து வந்தவர்களுடைய சபையனைத்துமாகிய இஸ்ரவேல் தேசத்திலிருந்துவந்த அந்நியரும், யூதாவில் குடியிருந்தவர்களும் மகிழ்ச்சியாயிருந்தார்கள். 26 அப்படியே எருசலேமில் மகா சந்தோஷம் உண்டாயிருந்தது; தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலுடைய ராஜாவின் நாட்கள்முதற்கொண்டு இப்படி எருசலேமில் நடந்ததில்லை. 27 லேவியரான ஆசாரியர்கள் எழுந்து நின்று, ஜனத்தை ஆசீர்வதித்தார்கள்; அவர்களுடைய சத்தம் கேட்கப்பட்டு, அவர்களுடைய விண்ணப்பம் அவருடைய பரிசுத்த வாசஸ்தலமாகிய பரலோகத்தில் வந்து எட்டினது.

2 நாளாகமம் 31

1 இவையெல்லாம் முடிந்தபின்பு, வந்திருந்த இஸ்ரவேலர் எல்லாரும் யூதாவின் பட்டணங்களுக்குப் புறப்பட்டுப்போய், யூதா பென்யமீனெங்கும் எப்பிராயீமிலும் மனாசேயிலுங்கூட உண்டான சிலைகளை உடைத்து, விக்கிரகத் தோப்புகளை வெட்டி, மேடைகளையும் பீடங்களையும் இடித்து, அவைகளையெல்லாம் தகர்த்துப்போட்டார்கள்; பின்பு இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் அவரவர் தங்கள் ஊர்களிலிருக்கிற தங்கள் காணியாட்சிக்குத் திரும்பினார்கள். 2 எசேக்கியா ஆசாரியர் லேவியருடைய வகுப்புகளை அவர்கள் வரிசைகளின்படியேயும், அவரவரை அவர்கள் ஊழியத்தின்படியேயும் திட்டப்படுத்தி, ஆசாரியரையும் லேவியரையும், சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தவும், கர்த்தருடைய பாளயத்தின் வாசல்களில் ஊழியஞ்செய்து துதித்து ஸ்தோத்திரிக்கவும் ஒழுங்குப்படுத்தினான். 3 ராஜா கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே அந்திசந்திகளில் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும், ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் பண்டிகைகளிலும் செலுத்தவேண்டிய சர்வாங்க தகனபலிகளுக்கும் தன் ஆஸ்தியிலிருந்தெடுத்துத் தன் பங்கைக் கொடுத்தான். 4 ஆசாரியரும் லேவியரும் கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தை உற்சாகமாய்க் கைக்கொள்ளும்படி, அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுக்க ஜனங்களுக்கும் எருசலேமின் குடிகளுக்கும் கட்டளையிட்டான். 5 இந்த வார்த்தை பிரசித்தமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தானியத்திலும், திராட்சரசத்திலும், எண்ணெயிலும், தேனிலும், நிலத்தின் எல்லா வரத்திலும் முதற்பலன்களைத் திரளாகக் கொண்டுவந்து, சகலத்திலும் தசமபாகத்தைப் பரிபூரணமாய்க் கொடுத்தார்கள். 6 யூதாவின் பட்டணங்களில் குடியிருந்த இஸ்ரவேல் புத்திரரும், யூதா புத்திரரும், மாடுகளிலும் ஆடுகளிலும் தசமபாகத்தையும், தங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளில் தசமபாகத்தையும் கொண்டுவந்து குவியல் குவியலாக வைத்தார்கள். 7 மூன்றாம் மாதத்தில் குவியல் செய்யத்தொடங்கி ஏழாம் மாதத்தில் முடித்தார்கள். 8 எசேக்கியாவும் பிரபுக்களும் வந்து, அந்தக் குவியல்களைக் காணும்போது, கர்த்தருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலைப் புகழ்ந்தார்கள். 9 அந்தக் குவியல்களைக் குறித்து எசேக்கியா ஆசாரியரையும் லேவியரையும் விசாரித்தபோது, 10 சாதோக்கின் சந்ததியானாகிய அசரியா என்னும் பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: இந்தக் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டுவரத் தொடங்கினதுமுதல் நாங்கள் சாப்பிட்டுத் திர்ப்தியடைந்தோம்; இன்னும் மிச்சமும் இருக்கிறது; கர்த்தர் தம்முடைய ஜனத்தை ஆசீர்வதித்ததினால் இந்தத் திரட்சியான அம்பாரம் மீந்திருக்கிறது என்றான். 11 அப்பொழுது எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்தில் பண்டகசாலைகளை ஆயத்தப்படுத்தச் சொன்னான். 12 அவர்கள் அவைகளை ஆயத்தப்படுத்தினபின்பு, அவைகளிலே காணிக்கைகளையும், தசம பாகத்தையும், பரிசுத்தம்பண்ணப்பட்டவைகளையும் உண்மையாய் எடுத்துவைத்தார்கள்; அவைகளின்மேல் லேவியனாகிய கொனனியா தலைவனும், அவன் தம்பியாகிய சிமேயி இரண்டாவதுமாயிருந்தான். 13 ராஜாவாகிய எசேக்கியாவும், தேவனுடைய ஆலய விசாரணைக்காரனாகிய அசரியாவும் பண்ணின கட்டளையின்படியே, யெகியேலும், அசசியாவும், நாகாத்தும், ஆசகேலும், யெரிமோத்தும், யோசபாத்தும், ஏலியேலும், இஸ்மகியாவும், மாகாத்தும், பெனாயாவும், கொனனியாவின் கீழும் அவன் தம்பியாகிய சிமேயியின் கீழும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள். 14 கிழக்குவாசலைக் காக்கிற இம்னாவின் குமாரனாகிய கோரே என்னும் லேவியன், கர்த்தருக்குச் செலுத்தப்பட்ட காணிக்கைகளையும் மகா பரிசுத்தமானவைகளையும் பங்கிடும்படிக்கு, தேவனுக்குச் செலுத்தும் உற்சாகக் காணிக்கைகள்மேல் அதிகாரியாயிருந்தான். 15 அவனுடைய கைக்கு உதவியாக ஆசாரியரின் பட்டணங்களில் வகுப்புகளின்படியிருக்கிற தங்கள் சகோதரரிலே பெரியவனுக்கும் சிறியவனுக்கும் சரிசமானமாய்க் கொடுக்கும்படிக்கு, உண்மையுள்ளவர்களாக எண்ணப்பட்ட ஏதேனும், மின்யமீனும், யெசுவாவும், செமாயாவும், அமரியாவும், செக்கனியாவும் ஏற்படுத்தப்பட்டார்கள். 16 வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட மூன்று வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகளைத்தவிர, கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசிக்கிற அவரவருக்கும் தங்கள் வகுப்புகளின்படியே, தங்கள் முறைகளிலே தாங்கள் செய்கிற தங்கள் பணிவிடைக்குத்தக்கதாய் அநுதின படி கொடுக்கப்பட்டது. 17 தங்கள் பிதாக்களின் வம்ச அட்டவணைகளில் எழுதப்பட்ட தங்கள் வகுப்புகளின்படியே தங்கள் முறைகளிலிருக்கிற இருபது வயதுமுதல், அதற்கு மேற்பட்ட ஆசாரியருக்கும், லேவியருக்கும், 18 அவர்களுடைய எல்லாக் கூட்டத்தின் அட்டவணையிலும் எழுதப்பட்ட அவர்களுடைய எல்லாக் குழந்தைகளுக்கும், மனைவிகளுக்கும், குமாரருக்கும், குமாரத்திகளுக்கும் பங்கு கொடுத்தார்கள்; அவர்கள் பரிசுத்தமானதை உண்மையின்படி பரிசுத்தமாய் விசாரித்தார்கள். 19 ஆசாரியரில் எல்லா ஆண்பிள்ளைகளுக்கும் லேவியருக்குள்ளே அட்டவணையில் எழுதப்பட்டவர்கள் எல்லாருக்கும் படிகொடுக்க, ஆசாரியருடைய ஒவ்வொரு பட்டணத்துக்கடுத்த வெளிநிலங்களிலும் ஆரோன் புத்திரரில் பேர்பேராகக் குறிக்கப்பட்ட மனுஷர் இருந்தார்கள். 20 இந்தப்பிரகாரமாக எசேக்கியா யூதாவெங்கும் நடப்பித்து, தன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நன்மையும் செம்மையும் உண்மையுமானதைச் செய்தான். 21 அவன் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலும், தன் தேவனைத் தேடும்படிக்கு நியாயப்பிரமாணத்திற்கும் கற்பனைக்கும் அடுத்த காரியத்திலும் என்ன செய்யத் தொடங்கினானோ, அதையெல்லாம் தன் முழு இருதயத்தோடும் செய்து சித்திபெற்றான்.

2 நாளாகமம் 32

1 இக்காரியங்கள் நடந்தேறிவருகையில் அசீரியா ராஜாவாகிய சனகெரிப் வந்து, யூதாவுக்குள் பிரவேசித்து, அரணான பட்டணங்களுக்கு எதிராகப் பாளயமிறங்கி, அவைகளைத் தன் வசமாக்கிக்கொள்ள நினைத்தான். 2 சனகெரிப் வந்து, எருசலேமின்மேல் யுத்தம்பண்ண நோக்கங்கொண்டிருப்பதை எசேக்கியா கண்டபோது, 3 நகரத்திற்குப் புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட, தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைபண்ணினான்; அதற்கு அவர்கள் உதவியாயிருந்தார்கள். 4 அசீரியா ராஜாக்கள் வந்து, அதிக தண்ணீரைக் கண்டுபிடிப்பானேன் என்று சொல்லி, அநேகம் ஜனங்கள் கூடி, எல்லா ஊற்றுகளையும் நாட்டின் நடுவில் பாயும் ஓடையையும் தூர்த்துப்போட்டார்கள். 5 அவன் திடன்கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும் வெளியிலுள்ள மற்ற மதிலையும் கொத்தளங்கள்மட்டும் உயர்த்தி, தாவீது நகரத்தின் கோட்டையைப் பலப்படுத்தி, திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும்பண்ணி, 6 ஜனத்தின்மேல் படைத்தலைவரை வைத்து, அவர்களை நகரவாசலின் வீதியிலே தன்னண்டையில் கூடிவரச்செய்து, அவர்களை நோக்கி: 7 நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம். 8 அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே என்று சொல்லி, அவர்களைத் தேற்றினான்; யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள். 9 இதின்பின்பு அசீரியா ராஜாவாகிய சனகெரிப் தன் முழுச் சேனையுடன் லாகீசுக்கு எதிராய் முற்றிக்கைபோட்டிருக்கையில், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவிடத்துக்கும், எருசலேமிலுள்ள யூதா ஜனங்கள் யாவரிடத்துக்கும் தன் ஊழியக்காரரை அனுப்பி: 10 அசீரியா ராஜாவாகிய சனகெரிப் சொல்லுகிறது என்னவென்றால், முற்றிக்கை போடப்பட்ட எருசலேமிலே நீங்கள் இருக்கும்படிக்கு, நீங்கள் எதின்மேல் நம்பிக்கையாயிருக்கிறீர்கள்? 11 நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மை அசீரியருடைய ராஜாவின் கைக்குத் தப்புவிப்பார் என்று எசேக்கியா சொல்லி, நீங்கள் பசியினாலும் தாகத்தினாலும் சாகும்படி உங்களைப் போதிக்கிறான் அல்லவா? 12 அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் தள்ளிவிட்டவனும், ஒரே பலிபீடத்திற்கு முன்பாகப் பணிந்து, அதின்மேல் தூபங்காட்டுங்கள் என்று யூதாவுக்கும் எருசலேமியருக்கும் சொன்னவனும் அந்த எசேக்கியாதான் அல்லவா? 13 நானும் என் பிதாக்களும் தேசத்துச் சகல ஜனங்களுக்கும் செய்ததை அறியீர்களோ? அந்தத் தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் அவர்கள் தேசத்தை நம்முடைய கைக்குத் தப்புவிக்க அவர்களுக்குப் பெலன் இருந்ததோ? 14 உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிக்கக்கூடும்படிக்கு, என் பிதாக்கள் பாழாக்கின அந்த ஜாதிகளுடைய எல்லா தேவர்களிலும் எவன் தன் ஜனத்தை என் கைக்குத் தப்புவிக்கப் பலவானாயிருந்தான்? 15 இப்போதும் எசேக்கியா உங்களை வஞ்சிக்கவும், இப்படி உங்களைப் போதிக்கவும் இடங்கொடுக்கவேண்டாம்; நீங்கள் அவனை நம்பவும் வேண்டாம்; ஏனென்றால் எந்த ஜாதியின் தேவனும், எந்த ராஜ்யத்தின் தேவனும் தன் ஜனத்தை என் கைக்கும் என் பிதாக்களின் கைக்கும் தப்புவிக்கக்கூடாதிருந்ததே; உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிப்பது எப்படி என்கிறார் என்று சொல்லி, 16 அவனுடைய ஊழியக்காரர் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகவும், அவருடைய தாசனாகிய எசேக்கியாவுக்கு விரோதமாகவும் பின்னும் அதிகமாய்ப் பேசினார்கள். 17 தேசங்களுடைய ஜாதிகளின் தேவர்கள் தங்கள் ஜனங்களை என் கைக்குத் தப்புவிக்காதிருந்ததுபோல, எசேக்கியாவின் தேவனும் தன் ஜனங்களை என் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நிந்திக்கவும், அவருக்கு விரோதமாகப் பேசவும் அவன் நிருபங்களையும் எழுதினான். 18 அவர்கள் அலங்கத்தின்மேலிருக்கிற எருசலேமின் ஜனங்களைப் பயப்படுத்தி, கலங்கப்பண்ணி, தாங்கள் நகரத்தைப் பிடிக்கும்படி, அவர்களைப் பார்த்து: யூதபாஷையிலே மகா சத்தமாய்க் கூப்பிட்டு, 19 மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள். 20 இதினிமித்தம் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தித்து, வானத்தை நோக்கி அபயமிட்டார்கள். 21 அப்பொழுது கர்த்தர் ஒரு தூதனை அனுப்பினார்; அவன் அசீரியருடைய ராஜாவின் பாளயத்திலுள்ள சகல பராக்கிரமசாலிகளையும், தலைவரையும், சேனாபதிகளையும் அதம்பண்ணினான்; அப்படியே சனகெரிப் செத்தமுகமாய்த் தன் தேசத்திற்குத் திரும்பினான்; அங்கே அவன் தன் தேவனுடைய கோவிலுக்குள் பிரவேசிக்கிறபோது, அவனுடைய கர்ப்பப்பிறப்பான சிலர் அவனைப் பட்டயத்தால் வெட்டிப்போட்டார்கள். 22 இப்படிக் கர்த்தர் எசேக்கியாவையும் எருசலேமின் குடிகளையும் அசீரியருடைய ராஜாவாகிய சனகெரிபின் கைக்கும் மற்ற எல்லாருடைய கைக்கும் நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுற்றுப்புறத்தாருக்கு விலக்கி ஆதரித்து நடத்தினார். 23 அநேகம்பேர் கர்த்தருக்கென்று எருசலேமுக்குக் காணிக்கைகளையும், யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்கு உச்சிதங்களையும் கொண்டுவந்தார்கள்; அவன் இதற்குப்பிற்பாடு சகல ஜாதிகளின் பார்வைக்கும் மேன்மைப்பட்டவனாயிருந்தான். 24 அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அவன் கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும்போது, அவர் அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணி, அவனுக்கு ஒரு அற்புதத்தைக் கட்டளையிட்டார். 25 எசேக்கியா தனக்குச் செய்யப்பட்ட உபகாரத்திற்குத்தக்கதாய் நடவாமல் மனமேட்டிமையானான்; ஆகையால் அவன்மேலும், யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் கடுங்கோபம் மூண்டது. 26 எசேக்கியாவின் மனமேட்டிமையினிமித்தம் அவனும் எருசலேமின் குடிகளும் தங்களைத் தாழ்த்தினபடியினால், கர்த்தருடைய கடுங்கோபம் எசேக்கியாவின் நாட்களிலே அவர்கள்மேல் வரவில்லை. 27 எசேக்கியாவுக்கு மிகுதியான ஐசுவரியமும் கனமும் உண்டாயிருந்தது; வெள்ளியும் பொன்னும் இரத்தினங்களும் கந்தவர்க்கங்களும் கேடகங்களும் விநோதமான ஆபரணங்களும் வைக்கும்படியான பொக்கிஷசாலைகளையும், 28 தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும், சகல வகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான். 29 அவன் தனக்குப் பட்டணங்களைக் கட்டுவித்து ஏராளமான ஆடுமாடுகளை வைத்திருந்தான்; தேவன் அவனுக்கு மகா திரளான ஆஸ்தியைக் கொடுத்தார். 30 இந்த எசேக்கியா கீயோன் என்னும் ஆற்றிலே அணைகட்டி, அதின் தண்ணீரை மேற்கேயிருந்து தாழத் தாவீதின் நகரத்திற்கு நேராகத் திருப்பினான்; எசேக்கியா செய்ததெல்லாம் வாய்த்தது. 31 ஆகிலும் பாபிலோன் பிரபுக்களின் ஸ்தானாபதிகள் தேசத்திலே நடந்த அற்புதத்தைக் கேட்க அவனிடத்துக்கு அனுப்பப்பட்ட விஷயத்தில் அவன் இருதயத்தில் உண்டான எல்லாவற்றையும் அறியும்படி அவனைச் சோதிக்கிறதற்காக தேவன் அவனைக் கைவிட்டார். 32 எசேக்கியாவின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்த நன்மைகளும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகத்திலும், யூதா இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்திலும் எழுதியிருக்கிறது. 33 எசேக்கியா தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனைத் தாவீது வம்சத்தாரின் கல்லறைகளில் பிரதானமான கல்லறையில் அடக்கம்பண்ணினார்கள்; யூதாவனைத்தும் எருசலேமின் குடிகளும் அவன் மரித்தபோது அவனைக் கனம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய மனாசே அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

2 நாளாகமம் 33

1 மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருஷம் எருசலேமில் அரசாண்டான். 2 கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்தின ஜாதிகளுடைய அருவருப்புகளின்படியே, அவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 3 அவன் தன் தகப்பனாகிய எசேக்கியா தகர்த்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகால்களுக்குப் பலிபீடங்களை எடுப்பித்து, விக்கிரகத்தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் சேனையையெல்லாம் பணிந்துகொண்டு, அவைகளைச் சேவித்து, 4 எருசலேமிலே என் நாமம் என்றென்றைக்கும் விளங்கும் என்று கர்த்தர் சொன்ன தம்முடைய ஆலயத்திலே பலிபீடங்களைக் கட்டி, 5 கர்த்தருடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் சேனைகளுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான். 6 அவன் இன்னோம் குமாரரின் பள்ளத்தாக்கிலே தன் குமாரரைத் தீமிதிக்கப்பண்ணி, நாளும் நிமித்தமும் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான். 7 இந்த ஆலயத்திலும், இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் நாமத்தை என்றென்றைக்கும் விளங்கப்பண்ணுவேன் என்றும், 8 நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும் கட்டளைகளுக்கும் நியாயங்களுக்கும் ஒத்தபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யச் சாவதானமாய் இருந்தார்களேயாகில், நான் இனி அவர்கள் காலை அவர்கள் பிதாக்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகப்பண்ணுவதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் குமாரனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் பண்ணுவித்த விக்கிரகமாகிய சிலையை ஸ்தாபித்தான். 9 அப்படியே கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்பார்க்கிலும், யூதாவும் எருசலேமின் குடிகளும் பொல்லாப்புச் செய்யத்தக்கதாய், மனாசே அவர்களை வழிதப்பிப்போகப்பண்ணினான். 10 கர்த்தர் மனாசேயோடும் அவனுடைய ஜனத்தோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதேபோனார்கள். 11 ஆகையால் கர்த்தர்: அசீரியா ராஜாவின் சேனாபதிகளை அவர்கள்மேல் வரப்பண்ணினார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டிப் பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். 12 இப்படி அவன் நெருக்கப்படுகையில், தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கெஞ்சி, தன் பிதாக்களின் தேவனுக்கு முன்பாக மிகவும் தன்னைத் தாழ்த்தினான். 13 அவரை நோக்கி, அவன் விண்ணப்பம்பண்ணிக்கொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவன் ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய ராஜ்யத்திற்கு வரப்பண்ணினார்; கர்த்தரே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான். 14 பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி அலங்கத்தைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்குதொடங்கி மீன்வாசல்மட்டும் கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தலைவரை வைத்து, 15 கர்த்தருடைய ஆலயத்திலிருந்து அந்நிய தேவர்களையும் அந்த விக்கிரகத்தையும் எடுத்துப்போட்டு, கர்த்தருடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லாப் பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்குப் புறம்பாகப் போடுவித்து, 16 கர்த்தருடைய பலிபீடத்தைச் செப்பனிட்டு, அதின்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான். 17 ஆகிலும் ஜனங்கள் இன்னும் மேடைகளில் பலியிட்டுவந்தார்கள்; என்றாலும் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே அப்படிச் செய்தார்கள். 18 மனாசேயின் மற்ற வர்த்தமானங்களும், அவன் தன் தேவனை நோக்கிப் பண்ணின விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் அவனோடே பேசின ஞானதிருஷ்டிக்காரரின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. 19 அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் கர்த்தர் இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்கு முன்னே பண்ணின அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் ஸ்தாபித்த இடங்களும், ஓசாயின் பிரபந்தத்தில் எழுதியிருக்கிறது. 20 மனாசே தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின்பு, அவனை அவன் வீட்டிலே அடக்கம்பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய ஆமோன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான். 21 ஆமோன் ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருஷம் எருசலேமில் அரசாண்டான். 22 அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோலக் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய மனாசே பண்ணுவித்திருந்த விக்கிரகங்களுக்கெல்லாம் ஆமோன் பலியிட்டு, அவைகளைச் சேவித்தான். 23 தன் தகப்பனாகிய மனாசே தன்னைத் தாழ்த்திக்கொண்டதுபோல, இந்த ஆமோன் என்பவன் கர்த்தருக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தாமல் மேன்மேலும் அக்கிரமம் செய்துவந்தான். 24 அவன் ஊழியக்காரர் அவனுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, அவன் அரமனையிலே அவனைக் கொன்றுபோட்டார்கள். 25 அப்பொழுது தேசத்து ஜனங்கள் ஆமோன் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணின யாவரையும் வெட்டிப்போட்டு, அவன் குமாரனாகிய யோசியாவை அவன் ஸ்தானத்தில் ராஜாவாக்கினார்கள்.

2 நாளாகமம் 34

1 யோசியா ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, முப்பத்தொரு வருஷம் எருசலேமில் அரசாண்டான். 2 அவன் கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தன் தகப்பனாகிய தாவீதின் வழிகளில், வலது இடதுபுறமாக விலகாமல் நடந்தான். 3 அவன் தன் ராஜ்யபாரத்தின் எட்டாம் வருஷத்தில், தான் இன்னும் இளவயதாயிருக்கையில், தன் தகப்பனாகிய தாவீதின் தேவனைத் தேட ஆரம்பித்து, பன்னிரண்டாம் வருஷத்தில் மேடைகள் தோப்புகள் சுரூபங்கள் விக்கிரகங்கள் ஆகிய இவைகள் அற்றுப்போகும்படி, யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினான். 4 அவனுக்கு முன்பாகப் பாகால்களின் பலிபீடங்களை இடித்தார்கள்; அவைகளின்மேலிருந்த சிலைகளை வெட்டி, விக்கிரகத் தோப்புகளையும் வார்ப்பு விக்கிரகங்களையும் வெட்டு விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கி, அவைகளுக்குப் பலியிட்டவர்களுடைய பிரேதக்குழிகளின்மேல் தூவி, 5 பூஜாசாரிகளின் எலும்புகளை அவர்களுடைய பீடங்களின்மேல் சுட்டெரித்து, இவ்விதமாய் யூதாவையும் எருசலேமையும் சுத்திகரித்தான். 6 அப்படியே அவன் மனாசே எப்பிராயீம் சிமியோன் என்னும் பட்டணங்களிலும், நப்தலிமட்டும், பாழான அவைகளின் சுற்றுப்புறங்களிலும் செய்தான். 7 அவன் இஸ்ரவேல் தேசம் எங்குமுள்ள பலிபீடங்களையும் விக்கிரகத் தோப்புகளையும் தகர்த்து, விக்கிரகங்களை நொறுக்கித் தூளாக்கி, எல்லாச் சிலைகளையும் வெட்டிப்போட்டபின்பு எருசலேமுக்குத் திரும்பினான். 8 அவன் தேசத்தையும் ஆலயத்தையும் சுத்திகரித்தபின்பு, அவன் தன் ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே, அத்சலியாவின் குமாரனாகிய சாப்பானையும், நகரத்தலைவனாகிய மாசெயாவையும், யோவாகாசின் குமாரனாகிய யோவாக் என்னும் மந்திரியையும், தன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைப் பழுதுபார்க்கும்படிக்கு அனுப்பினான். 9 அவர்கள் பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவினிடத்தில் வந்து, வாசற்படியைக் காக்கிற லேவியர் மனாசேயிலும் எப்பிராயீமிலும் இஸ்ரவேலில் மீதியானவர்களெல்லாரின் கையிலும் யூதா பென்யமீன் எங்கும் சேர்த்து, எருசலேமுக்குத் திரும்பித் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுவந்த பணத்தை ஒப்புவித்து, 10 வேலையைச் செய்விக்கும்படி, கர்த்தருடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரரானவர்களின் கையில் அதைக் கொடுத்தார்கள்; இவர்கள் அதைக் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்துச் சீர்ப்படுத்துகிறதற்கு ஆலயத்தில் வேலைசெய்கிறவர்கள் கையிலே கொடுத்தார்கள். 11 அப்படியே யூதாவின் ராஜாக்கள் கெடுத்துப்போட்ட அறைகளைப் பழுதுபார்க்க வெட்டின கற்களையும், இணைப்புக்கு மரங்களையும், பாவுகிறதற்குப் பலகைகளையும் வாங்கத் தச்சருக்கும் சிற்பாசாரிகளுக்கும் அதைக் கொடுத்தார்கள். 12 இந்த மனுஷர் வேலையை உண்மையாய்ச் செய்தார்கள்; வேலையை நடத்த மெராரியின் புத்திரரில் யாகாத் ஒபதியா என்னும் லேவியரும், கோகாதியரின் புத்திரரில் சகரியாவும், மெசுல்லாமும் அவர்கள்மேல் விசாரிப்புக்காரராயிருந்தார்கள்; இந்த லேவியர் எல்லாரும் கீதவாத்தியங்களை வாசிக்க அறிந்தவர்கள். 13 அவர்கள் சுமைகாரரை விசாரிக்கிறவர்களாயும், பற்பல வேலைகளைச் செய்கிறவர்கள் எல்லாரையும் கண்காணிக்கிறவர்களாயும் இருந்தார்கள்; லேவியரில் இன்னும் சிலர் கணக்கரும் மணியக்காரரும் வாசற்காவலாளருமாயிருந்தார்கள். 14 கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவரப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்கிறபோது மோசேயைக்கொண்டு கட்டளையிடப்பட்ட கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை ஆசாரியனாகிய இல்க்கியா கண்டெடுத்தான். 15 அப்பொழுது இல்க்கியா சம்பிரதியாகிய சாப்பானை நோக்கி: கர்த்தருடைய ஆலயத்திலே நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைக் கண்டெடுத்தேன் என்று சொல்லி, அந்தப் புஸ்தகத்தைச் சாப்பான் கையில் கொடுத்தான். 16 சாப்பான் அந்தப் புஸ்தகத்தை ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய், அவனை நோக்கி: உம்முடைய ஊழியக்காரருக்குக் கட்டளையிடப்பட்டவைகளையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள். 17 கர்த்தருடைய ஆலயத்திலே சேர்ந்த பணத்தை அவர்கள் கூட்டி, அதை விசாரிப்புக்காரர் கையிலும், வேலைசெய்கிறவர்கள் கையிலும் கொடுத்தார்கள் என்று ராஜாவுக்கு மறுசெய்தி சொன்னதும் அல்லாமல், 18 ஆசாரியனாகிய இல்க்கியா என் கையில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்பதைச் சம்பிரதியாகிய சாப்பான் ராஜாவுக்கு அறிவித்து, ராஜாவுக்கு முன்பாக அதை வாசித்தான். 19 நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை ராஜா கேட்டபோது, அவன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, 20 இல்க்கியாவுக்கும், சாப்பானின் குமாரனாகிய அகிக்காமுக்கும், மீகாவின் குமாரனாகிய அப்தோனுக்கும், சம்பிரதியாகிய சாப்பானுக்கும், ராஜாவின் ஊழியக்காரனாகிய அசாயாவுக்கும் கட்டளையிட்டுச் சொன்னது: 21 கண்டெடுக்கப்பட்ட இந்தப் புஸ்தகத்தினுடைய வார்த்தைகளினிமித்தம் நீங்கள் போய், எனக்காகவும் இஸ்ரவேலிலும் யூதாவிலும் மீதியானவர்களுக்காகவும் கர்த்தரிடத்தில் விசாரியுங்கள்; இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற எல்லாவற்றின்படியேயும் செய்யும்படிக்குக் கர்த்தருடைய வார்த்தையை நம்முடைய பிதாக்கள் கைக்கொள்ளாதேபோனபடியினால், நம்மேல் மூண்ட கர்த்தருடைய உக்கிரம் பெரியது என்றான். 22 அப்பொழுது இல்க்கியாவும் ராஜா அனுப்பின மற்றவர்களும் அஸ்ராவின் குமாரனாகிய திக்வாதின் மகனான சல்லூம் என்னும் வஸ்திரசாலை விசாரிப்புக்காரன் மனைவியாகிய உல்தாள் என்னும் தீர்க்கதரிசியானவளிடத்திற்குப் போனார்கள்; அவள் எருசலேமில் இரண்டாம் வகுப்பிலே குடியிருந்தாள்; அவளோடே அதைப்பற்றிப் பேசினார்கள். 23 அவள் இவர்களை நோக்கி: உங்களை என்னிடத்தில் அனுப்பினவருக்கு நீங்கள் சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறதாவது, 24 இதோ, யூதாவின் ராஜாவுக்கு முன்பாக வாசிக்கப்பட்ட புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சகல சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன். 25 அவர்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டினபடியினால், என் உக்கிரம் அவிந்துபோகாதபடி இந்த ஸ்தலத்தின்மேல் இறங்கும் என்று கர்த்தர் உரைக்கிறார். 26 கர்த்தரிடத்தில் விசாரிக்கிறதற்கு உங்களை அனுப்பின யூதாவின் ராஜாவினிடத்தில் நீங்கள் போய்: நீ கேட்ட வார்த்தைகளைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், 27 இந்த ஸ்தலத்திற்கும் அதின் குடிகளுக்கும் விரோதமாகத் தேவன் சொன்ன அவருடைய வார்த்தைகளை நீ கேட்கையில், உன் இருதயம் இளகி, எனக்கு முன்பாக நீ உன்னைத் தாழ்த்தி, எனக்கு முன்பாகப் பணிந்து, உன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எனக்கு முன்பாக அழுதபடியினால், நானும் உன் விண்ணப்பத்தைக் கேட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 28 இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணும் எல்லாப் பொல்லாப்பையும் உன் கண்கள் காணாதபடிக்கு, நீ சமாதானத்தோடே உன் கல்லறையில் சேர்த்துக்கொள்ளப்பட, நான் உன்னை உன் பிதாக்களண்டையிலே சேரப்பண்ணுவேன் என்கிறார் என்று சொன்னாள்; அவர்கள் ராஜாவுக்கு மறுசெய்தி கொண்டுபோனார்கள். 29 அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலுமுள்ள மூப்பரையெல்லாம் அழைப்பித்துக் கூடிவரச்செய்து, 30 ராஜாவும், சகல யூதா மனுஷரும், எருசலேமின் குடிகளும், ஆசாரியரும், லேவியரும், பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சகலருமாய்க் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போனார்கள்; கர்த்தருடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கைப் புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான். 31 ராஜா தன் ஸ்தானத்திலே நின்று, அந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற உடன்படிக்கையின் வார்த்தைகளின்படியே தான் செய்வதினாலே, கர்த்தரைப் பின்பற்றி நடப்பேன் என்றும், தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளுவேன் என்றும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கைபண்ணி, 32 எருசலேமிலும் பென்யமீனிலும் காணப்பட்ட யாவரையும் அதற்கு உட்படப்பண்ணினான்; அப்படியே எருசலேமின் குடிகள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய அந்தத் தேவனுடைய உடன்படிக்கையின்படியே செய்தார்கள். 33 யோசியா இஸ்ரவேல் புத்திரருடைய தேசங்கள் எங்கும் உண்டான அருவருப்புகளையெல்லாம் அகற்றி, இஸ்ரவேலிலே காணப்பட்டவர்களையெல்லாம் தங்கள் தேவனாகிய கர்த்தரைச் சேவிக்கும்படி செய்தான்; அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவர்கள் தங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரை விட்டுப் பின்வாங்கினதில்லை.

2 நாளாகமம் 35

1 அதற்குப் பின்பு யோசியா எருசலேமிலே கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரித்தான்; அவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள். 2 அவன் ஆசாரியர்களை அவர்கள் முறைவரிசைகளில் வைத்து, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தில் ஆராதனைசெய்யத் திட்டப்படுத்தி, 3 இஸ்ரவேலையெல்லாம் உபதேசிக்கிறவர்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுமாகிய லேவியரை நோக்கி: பரிசுத்தப் பெட்டியைத் தாவீதின் குமாரனாகிய சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா கட்டின ஆலயத்திலே வையுங்கள்; தோளின்மேல் அதைச் சுமக்கும் பாரம் உங்களுக்குரியதல்ல; இப்போது நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கும், அவருடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கும் ஊழியஞ்செய்து, 4 இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது எழுதின கட்டளைக்கும், அவன் குமாரனாகிய சாலொமோன் எழுதின கட்டளைக்கும் ஒத்தபடியே உங்கள் பிதாக்களின் குடும்பத்தாருக்காகக் குறிக்கப்பட்ட வரிசையிலே உங்களை ஆயத்தப்படுத்தி, 5 ஜனங்களாகிய உங்கள் சகோதரருக்காகப் பரிசுத்த ஸ்தலத்திலே பிதாக்களுடைய வம்சப் பிரிவுகளின்படியேயும், லேவியருடைய வம்சத்தார் வகுக்கப்பட்டபடியேயும் நின்று, 6 பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்து, உங்களைப் பரிசுத்தம்பண்ணி, மோசேயைக்கொண்டு கர்த்தர் சொன்னபடியே உங்கள் சகோதரர் செய்யும்படி, அவர்களுக்கு அவைகளை ஆயத்தப்படுத்துங்கள் என்றான். 7 வந்திருந்த ஜனங்கள் எல்லாருக்கும், அவர்கள் இலக்கத்தின்படியே, பஸ்கா பலிக்காக முப்பதினாயிரம் ஆட்டுக்குட்டிகளையும், வெள்ளாட்டுக்குட்டிகளையும், மூவாயிரம் காளைகளையும், ராஜாவாகிய யோசியா தன்னுடைய ஆஸ்தியிலிருந்து கொடுத்தான். 8 அவனுடைய பிரபுக்களும் மனப்பூர்வமான காணிக்கையாக ஜனத்திற்கும் ஆசாரியருக்கும் லேவியருக்கும் கொடுத்தார்கள்; தேவனுடைய ஆலய விசாரணைக்கர்த்தாவாகிய இல்க்கியாவும் சகரியாவும் யெகியேலும் ஆசாரியர்களுக்குப் பஸ்கா பலிக்கென்று இரண்டாயிரத்து அறுநூறு ஆட்டுக்குட்டிகளையும், முந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள். 9 கொனானியா, செமாயா, நெதனெயேல் என்னும் அவர்கள் சகோதரரும், அசபியா, ஏயெல், யோசபாத் என்னும் லேவியரின் பிரபுக்களும், லேவியருக்குப் பஸ்கா பலிக்கென்று ஐயாயிரம் ஆட்டுக்குட்டிகளையும் ஐந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள். 10 இப்படி ஆராதனை திட்டம்பண்ணப்பட்டபோது, ராஜாவினுடைய கட்டளையின்படியே, ஆசாரியர் தங்கள் ஸ்தானத்திலும், லேவியர் தங்கள் வகுப்புகளின் வரிசையிலும் நின்று, 11 பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்; ஆசாரியர் அவர்கள் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித் தெளித்தார்கள்; லேவியர் தோலுரித்தார்கள். 12 மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி ஜனங்கள் கர்த்தருக்குப் பலி செலுத்தும்படி, அவர்கள் தகனபலி மிருகங்களைப் பிதாக்களுடைய வம்சப்பிரிவுகளின்படியே, இவர்களுக்குக் கொடுக்கத்தக்கதாய் அவைகளைப் பிரித்துவைத்தார்கள்; காளைகளையும் அப்படியே செய்தார்கள். 13 அவர்கள் பஸ்கா ஆட்டுக்குட்டியை நியாயமுறைமையின்படியே அக்கினியில் பொரித்து, பரிசுத்தமாக்கப்பட்ட மற்றவைகளைப் பானைகளிலும் கொப்பரைகளிலும் சட்டிகளிலும் சமைத்து, ஜனங்களுக்கெல்லாம் தீவிரமாய்ப் பங்கிட்டுக்கொடுத்தார்கள். 14 பின்பு தங்களுக்காகவும் ஆசாரியருக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்; ஆரோனின் புத்திரராகிய ஆசாரியர்கள் சர்வாங்க தகனபலிகளையும் நிணத்தையும் செலுத்துகிறதில், இரவுமட்டும் வேலையாயிருந்தபடியினால், லேவியர் தங்களுக்காகவும், ஆரோனின் புத்திரராகிய ஆசாரியருக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள். 15 தாவீதும், ஆசாபும், ஏமானும், ராஜாவின் ஞானதிருஷ்டிக்காரனாகிய எதுத்தூனும் கற்பித்தபடியே, ஆசாபின் புத்திரராகிய பாடகர் தங்கள் ஸ்தானத்திலும், வாசல்காவலாளர் ஒவ்வொரு வாசலிலும் நின்றார்கள்; அவர்கள் தங்கள் ஊழியத்தை விட்டு விலகக்கூடாதிருந்தது; லேவியரான அவர்கள் சகோதரர் அவர்களுக்காக ஆயத்தப்படுத்தினார்கள். 16 அப்படியே ராஜாவாகிய யோசியாவினுடைய கட்டளைப்படி, பஸ்காவை ஆசரிக்கிறதற்கும், கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் சர்வாங்க தகனபலிகளை இடுகிறதற்கும் அடுத்த கர்த்தருடைய ஆராதனையெல்லாம் அன்றையதினம் திட்டமாய்ச் செய்யப்பட்டது. 17 அங்கே வந்திருந்த இஸ்ரவேல் புத்திரர் அக்காலத்தில் பஸ்காவையும், புளிப்பில்லாத அப்பப்பண்டிகையையும் ஏழுநாளளவும் ஆசரித்தார்கள். 18 தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் நாள் தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை; யோசியாவும், ஆசாரியரும், லேவியரும், யூதாவனைத்தும், இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமின் குடிகளும் ஆசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் ஆசரித்ததில்லை. 19 யோசியாவுடைய ராஜ்யபாரத்தின் பதினெட்டாம் வருஷத்திலே இந்தப் பஸ்கா ஆசரிக்கப்பட்டது. 20 யோசியா தேவாலயத்திற்கு அடுத்ததைத் திட்டப்படுத்தின இந்த எல்லா நடபடிகளுக்கும்பின்பு, எகிப்தின் ராஜாவாகிய நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் பட்டணத்தின்மேல் யுத்தம்பண்ணவந்தான்; அப்பொழுது யோசியா அவனுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப் புறப்பட்டான். 21 அவன் இவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல, என்னோடே யுத்தம்பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்; நான் தீவிரிக்க வேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடை செய்வதை விட்டுவிடும் என்று சொல்லச்சொன்னான். 22 ஆனாலும் யோசியா தன் முகத்தை அவனை விட்டுத் திருப்பாமலும், நேகோ சொன்ன தேவனுடைய வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடாமலும், அவனோடே யுத்தம்பண்ண வேஷம்மாறி, மெகிதோவின் பள்ளத்தாக்கிலே யுத்தம்பண்ணுகிறதற்கு வந்தான். 23 வில்வீரர் யோசியா ராஜாவின்மேல் அம்பெய்தார்கள்; அப்பொழுது ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது என்றான். 24 அப்பொழுது அவனுடைய ஊழியக்காரர் அந்த இரதத்தின்மேலிருந்த அவனை இறக்கி, அவனுக்கு இருந்த இரண்டாவது இரதத்தின்மேல் ஏற்றி அவனை எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவன் மரணமடைந்து தன் பிதாக்களின் கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்; யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யாவரும் யோசியாவுக்காகத் துக்கங்கொண்டாடினார்கள். 25 எரேமியா யோசியாவின்மேல் புலம்பல் பாடினான்; சகல பாடகரும் பாடகிகளும் இந்நாள்வரைக்கும் தங்கள் புலம்பல்களில் யோசியாவின்மேல் பாடுகிறார்கள்; அவைகள் இந்நாள்வரைக்கும் இஸ்ரவேலிலே வழங்கிவருகிறது; அவைகள் புலம்பலின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. 26 யோசியாவின் மற்ற வர்த்தமானங்களும், கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறதற்கொத்த அவன் செய்த நன்மைகளும், 27 அவனுடைய ஆதியோடந்த நடபடிகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது.

2 நாளாகமம் 36

1 அப்பொழுது ஜனங்கள் யோசியாவின் குமாரனாகிய யோவாகாசை அழைத்து, அவனை எருசலேமிலே அவன் தகப்பன் ஸ்தானத்திலே ராஜாவாக்கினார்கள். 2 யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்றுமாதம் எருசலேமில் அரசாண்டான். 3 அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு எகிப்தின் ராஜா அவனைத் தள்ளிவிட்டு, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியும் ஒரு தாலந்து பொன்னுமான தண்டத்தைச் சுமத்தி, 4 அவனுடைய அண்ணனாகிய எலியாக்கீமை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கி, அவன் பேரை யோயாக்கீம் என்று மாற்றினான்; அவன் தம்பியாகிய யோவாகாசை எகிப்தின் ராஜாவாகிய நேகோ எகிப்திற்குக் கொண்டுபோனான். 5 யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொரு வருஷம் எருசலேமில் அரசாண்டு, தன் தேவனாகிய கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 6 அவனுக்கு விரோதமாகப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வந்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக இரண்டு வெண்கலச் சங்கிலியால் அவனைக் கட்டினான். 7 கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளிலும் சிலவற்றை நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவைகளைப் பாபிலோனிலுள்ள தன்னுடைய கோவிலிலே வைத்தான். 8 யோயாக்கீமுடைய மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்ததும், அவனிடத்திலே கண்டுபிடிக்கப்பட்டதுமான அவனுடைய அருவருப்புகளும், இஸ்ரவேல் யூதா ராஜாக்களின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது; அவன் ஸ்தானத்தில் அவன் குமாரனாகிய யோயாக்கீன் ராஜாவானான். 9 யோயாக்கீன் ராஜாவாகிறபோது எட்டு வயதாயிருந்து, மூன்று மாதமும் பத்து நாளும் எருசலேமில் அரசாண்டு, கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 10 மறுவருஷத்தின் ஆரம்பத்திலே நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், கர்த்தருடைய ஆலயத்தின் திவ்வியமான பணிமுட்டுகளையும் பாபிலோனுக்குக் கொண்டுவரப்பண்ணி, அவன் சிறிய தகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான். 11 சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்து, பதினொருவருஷம் எருசலேமில் அரசாண்டு, 12 தன் தேவனாகிய கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் கர்த்தருடைய வாக்கை உரைத்த எரேமியா என்கிற தீர்க்கதரிசிக்குமுன்பாகத் தன்னைத் தாழ்த்தவில்லை. 13 தேவன்மேல் தன்னை ஆணையிடுவித்துக்கொண்ட நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரிடத்துக்குத் திரும்பாதபடிக்கு, தன் கழுத்தை அழுத்தமாக்கி, தன் இருதயத்தைக் கடினப்படுத்தினான். 14 ஆசாரியரில் பிரதானமானவர்கள் யாவரும் ஜனங்களும் கூடிப் புறஜாதிகளுடைய சகல அருவருப்புகளின்படியும் மிகவும் துரோகம்பண்ணி, கர்த்தர் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணின அவருடைய ஆலயத்தைத் தீட்டுப்படுத்தினார்கள். 15 அவர்களுடைய பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தையும் தமது வாசஸ்தலத்தையும் காப்பதற்கான இரக்கமுள்ளவராயிருந்தபடியால், அவர்களிடத்துக்குத் தம்முடைய ஸ்தானாபதிகளை ஏற்கனவே அனுப்பினார். 16 ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று. 17 ஆதலால் அவர் அவர்கள்மேல் கல்தேயரின் ராஜாவை வரப்பண்ணினார்; அவன் அவர்கள் வாலிபரை அவர்களுடைய பரிசுத்தமான ஆலயத்திலே பட்டயத்தினால் கொன்று, வாலிபரையும் கன்னியாஸ்திரீகளையும் முதியோரையும் விருத்தாப்பியரையும் தப்பவிடவில்லை; எல்லாரையும் தேவன் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார். 18 அவன் தேவனுடைய ஆலயத்தின் பெரிதும் சிறிதுமான பணிமுட்டுகள் அனைத்தையும், கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களும் ராஜாவுக்கும் அவன் பிரபுக்களுக்கும் இருந்த பொக்கிஷங்களுமாகிய அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். 19 அவர்கள் தேவனுடைய ஆலயத்தைத் தீக்கொளுத்தி, எருசலேமின் அலங்கத்தை இடித்து, அதின் மாளிகைகளையெல்லாம் அக்கினியால் சுட்டெரித்து, அதிலிருந்த திவ்வியமான பணிமுட்டுகளையெல்லாம் அழித்தார்கள். 20 பட்டயத்திற்குத் தப்பின மீதியானவர்களை அவன் பாபிலோனுக்குச் சிறைபிடித்துப்போனான்; பெர்சியா ராஜ்யபாரம் ஸ்தாபிக்கப்படுமட்டும் அங்கே அவர்கள் அவனுக்கும் அவன் குமாரருக்கும் அடிமைகளாயிருந்தார்கள். 21 கர்த்தர் எரேமியாவின் வாயினாலே சொன்ன வார்த்தை நிறைவேறும்படிக்கு, தேசம் தன்னுடைய ஓய்வு வருஷங்களை இரம்மியமாய் அநுபவித்துத் தீருமட்டும், அது பாழாய்க்கிடந்த நாளெல்லாம், அதாவது, எழுபதுவருஷம் முடியுமட்டும் ஓய்ந்திருந்தது. 22 எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே, அவன்: பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டுவிக்கும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். 23 அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ அவன் போகட்டும், அவனுடைய தேவனாகிய கர்த்தர் அவனோடிருப்பாராக என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று, தன் ராஜ்யம் எங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணினான்.

எஸ்றா 1

1 எரேமியாவின் வாயினாலே கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்படி, பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசுடைய முதலாம் வருஷத்திலே, கர்த்தர் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் ஆவியை ஏவினதினாலே அவன்: 2 பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் பூமியின் ராஜ்யங்களையெல்லாம் எனக்குத் தந்தருளி, யூதாவிலுள்ள எருசலேமிலே தமக்கு ஆலயத்தைக் கட்டும்படி எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார். 3 அவருடைய ஜனங்கள் எல்லாரிலும் எவன் உங்களுக்குள் இருக்கிறானோ, அவனோடே அவனுடைய தேவன் இருப்பாராக; அவன் யூதாவிலுள்ள எருசலேமுக்குப்போய், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டக்கடவன்; எருசலேமில் வாசம்பண்ணுகிற தேவனே தேவன். 4 அந்த ஜனங்களில் மீதியாயிருக்கிறவன் எவ்விடத்தில் தங்கியிருக்கிறானோ, அவ்விடத்து ஜனங்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்துக்கென்று அவனிடத்தில் உற்சாகமாய்க் காணிக்கை கொடுத்து அனுப்புகிறதுமன்றி, அவனுக்குப் பொன் வெள்ளி முதலிய திரவியங்களையும், மிருகஜீவன்களையும் கொடுத்து, உதவிசெய்யவேண்டும் என்று பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அறிவிக்கிறார் என்று தன் ராஜ்யமெங்கும் எழுதியனுப்பி விளம்பரம்பண்ணுவித்தான். 5 அப்பொழுது எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்குப் போகும்படி யூதா பென்யமீன் வம்சங்களின் தலைவரும் ஆசாரியரும் லேவியருமன்றி, எவர்கள் ஆவியை தேவன் ஏவினாரோ அவர்கள் எல்லாரும் எழும்பினார்கள். 6 அவர்களைச் சுற்றிலும் குடியிருக்கிற யாவரும் மனஉற்சாகமாய்க் காணிக்கை கொடுத்ததுமன்றி, வெள்ளிப் பணிமுட்டுகளையும் பொன்னையும் மற்ற வஸ்துக்களையும் மிருகஜீவன்களையும் உச்சிதமான பொருள்களையும் கொடுத்து, அவர்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள். 7 நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து கொண்டுவந்து, தன் தேவனுடைய கோவிலிலே வைத்திருந்த கர்த்தருடைய ஆலயத்துப் பணிமுட்டுகளையும் கோரேஸ் ராஜா எடுத்துக்கொடுத்தான். 8 அவைகளைப் பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் பொக்கிஷக்காரனாகிய மித்திரேதாத்தின் கையினால் எடுக்கச்செய்து, யூதாவின் அதிபதியாகிய சேஸ்பாத்சாரிடத்தில் எண்ணிக்கொடுத்தான். 9 அவைகளின் தொகையாவது: பொன் தட்டுகள் முப்பது, வெள்ளித்தாலங்கள் ஆயிரம், கத்திகள் இருபத்தொன்பது. 10 பொற்கிண்ணங்கள் முப்பது, வெள்ளிக்கிண்ணங்கள் நானூற்றுப்பத்து, மற்றப் பணிமுட்டுகள் ஆயிரம். 11 பொன் வெள்ளிப் பணிமுட்டுகளெல்லாம் ஐயாயிரத்து நானூறு, இவைகளையெல்லாம் சேஸ்பாத்சார், சிறையிருப்பினின்று விடுதலைபெற்றவர்கள் பாபிலோனிலிருந்து எருசலேமுக்குப் போகையில், எடுத்துக்கொண்டுபோனான்.

எஸ்றா 2

1 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோனவர்களுக்குள்ளே, சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கும் யூதாவிலுள்ள தங்கள் தங்கள் பட்டணங்களுக்கும், 2 செருபாபேல், யெசுவா, நெகேமியா, செராயா, ரெலாயா, மொர்தெகாய், பில்சான், மிஸ்பார், பிக்வாய், ரேகூம், பானா என்பவர்களோடேகூடத் திரும்பிவந்த தேசத்துப் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனமான மனிதரின் தொகையாவது: 3 பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர். 4 செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர். 5 ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர். 6 யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர். 7 ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர். 8 சத்தூவின் புத்திரர் தொளாயிரத்து நாற்பத்தைந்துபேர். 9 சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர். 10 பானியின் புத்திரர் அறுநூற்று நாற்பத்திரண்டுபேர். 11 பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்துமூன்றுபேர். 12 அஸ்காதின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று இருபத்திரண்டுபேர். 13 அதொனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தாறுபேர். 14 பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து ஐம்பத்தாறுபேர். 15 ஆதீனின் புத்திரர் நானூற்று ஐம்பத்து நான்குபேர். 16 எசேக்கியாவின் சந்ததியான அதேரின் புத்திரர் தொண்ணூற்றெட்டுப்பேர். 17 பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துமூன்றுபேர். 18 யோராகின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர். 19 ஆசூமின் புத்திரர் இருநூற்று இருபத்துமூன்றுபேர். 20 கிபாரின் புத்திரர் தொண்ணூற்றைந்துபேர். 21 பெத்லெகேமின் புத்திரர் நூற்றிருபத்துமூன்றுபேர். 22 நெத்தோபாவின் மனிதர் ஐம்பத்தாறுபேர். 23 ஆனதோத்தின் மனிதர் நூற்றிருபத்தெட்டுப்பேர். 24 அஸ்மாவேத்தின் புத்திரர் நாற்பத்திரண்டுபேர். 25 கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் என்பவைகளின் புத்திரர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர். 26 ராமா, காபா என்பவைகளின் புத்திரர் அறுநூற்று இருபத்தொருபேர். 27 மிக்மாசின் மனிதர் நூற்றிருபத்திரண்டுபேர். 28 பெத்தேல், ஆயி என்பவைகளின் மனிதர் இருநூற்று இருபத்துமூன்றுபேர். 29 நேபோவின் புத்திரர் ஐம்பத்திரண்டுபேர். 30 மக்பீஷின் புத்திரர் நூற்றைம்பத்தாறுபேர். 31 மற்ற ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்து நான்குபேர். 32 ஆரீமின் புத்திரர் முந்நூற்று இருபதுபேர். 33 லோத், ஆதீத், ஓனோ என்பவைகளின் புத்திரர் எழுநூற்று இருபத்தைந்துபேர். 34 எரிகோவின் புத்திரர் முந்நூற்று நாற்பத்தைந்துபேர். 35 சேனாகின் புத்திரர் மூவாயிரத்துஅறுநூற்று முப்பதுபேர். 36 ஆசாரியரானவர்கள்: யெசுவாவின் குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர். 37 இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர். 38 பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர். 39 ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப்பதினேழுபேர். 40 லேவியரானவர்கள்: ஒதாயாவின் சந்ததியான யெசுவா கத்மியேல் என்பவர்களின் புத்திரர் எழுபத்து நான்குபேர். 41 பாடகர்களானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்றிருபத்தெட்டுப்பேர். 42 வாசல் காவலாளரின் புத்திரரானவர்கள்: சல்லூமின் புத்திரரும், அதேரின் புத்திரரும், தல்மோனின் புத்திரரும், அக்கூபின் புத்திரரும், அதிதாவின் புத்திரரும், சோபாயின் புத்திரருமானவர்களெல்லாரும் நூற்றுமுப்பத்தொன்பதுபேர். 43 நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர், 44 கேரோசின் புத்திரர், சீயாகாவின் புத்திரர், பாதோனின் புத்திரர், 45 லெபானாகின் புத்திரர், அகாபாவின் புத்திரர், அக்கூபின் புத்திரர், 46 ஆகாபின் புத்திரர், சல்மாயின் புத்திரர், ஆனானின் புத்திரர், 47 கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர், ராயாகின் புத்திரர், 48 ரேத்சீனின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், காசாமின் புத்திரர், 49 ஊசாவின் புத்திரர், பாசெயாகின் புத்திரர், பேசாயின் புத்திரர், 50 அஸ்னாவின் புத்திரர், மெயூனீமின் புத்திரர், நெபுசீமின் புத்திரர், 51 பக்பூக்கின் புத்திரர், அகுபாவின் புத்திரர், அர்கூரின் புத்திரர், 52 பஸ்லூதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர், 53 பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர், 54 நெத்சியாவின் புத்திரர், அதிபாவின் புத்திரருமே. 55 சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெருதாவின் புத்திரர், 56 யாலாகின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர், 57 செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், செபாயீமிலுள்ள பொகெரேத்தின் புத்திரர், ஆமியின் புத்திரருமே. 58 நிதனீமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் எல்லாரும் முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர். 59 தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலுமிருந்து வந்து, தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்: 60 தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர். 61 ஆசாரியரின் புத்திரரில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கீலேயாத்தியனான பர்சிலாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரரே. 62 இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்திற்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள். 63 ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், இவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான். 64 சபையார் எல்லாரும் ஏகத்திற்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள். 65 அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூறு பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள். 66 அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்களுடைய கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து, 67 அவர்களுடைய ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது. 68 வம்சங்களின் தலைவரில் சிலர் எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்துக்கு வந்தபோது, தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே எடுப்பிக்கும்படிக்கு, அதற்காக மனஉற்சாகமாய்க் காணிக்கைகளைக் கொடுத்தார்கள். 69 அவர்கள் தங்கள் சக்திக்குத்தக்கதாக திருப்பணிப் பொக்கிஷத்திற்கு அறுபத்தோராயிரம் தங்கக்காசையும், ஐயாயிரம் இராத்தல் வெள்ளியையும், நூறு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள். 70 ஆசாரியரும், லேவியரும், ஜனங்களில் சிலரும், பாடகரும், வாசல்காவலாளரும், நிதனீமியரும், தங்கள்தங்கள் பட்டணங்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் தங்கள் தங்கள் பட்டணங்களிலும் குடியேறினார்கள்.

எஸ்றா 3

1 இஸ்ரவேல் புத்திரர் பட்டணங்களிலே குடியேறி, ஏழாம் மாதமானபோது, ஜனங்கள் ஏகோபித்து எருசலேமிலே கூடினார்கள். 2 அப்பொழுது யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், அவன் சகோதரராகிய ஆசாரியரும், செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், அவன் சகோதரரும் எழும்பி, தேவனுடைய மனிதனாகிய மோசேயின் நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி சர்வாங்க தகனங்களைப் பலியிடும்படிக்கு, இஸ்ரவேலுடைய தேவனின் பலிபீடத்தைக் கட்டினார்கள். 3 அவர்கள் அத்தேசத்தின் ஜனங்களுக்குப் பயந்ததினால், பலிபீடத்தை அதின் ஆதாரங்களின்மேல் ஸ்தாபித்து, அதின்மேல் அவர்கள் கர்த்தருக்கு அந்திசந்தி சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தினார்கள். 4 எழுதியிருக்கிறபடியே அவர்கள் கூடாரப்பண்டிகையை ஆசரித்து, நித்திய நியமத்தின்படியும் அன்றாடகக் கணக்கின்படியும் ஒவ்வொருநாளிலும் பலியிட்டார்கள். 5 அதற்குப்பின்பு நித்தமும், மாதப்பிறப்புகளிலும், கர்த்தருடைய சகல பரிசுத்த பண்டிகைகளிலும் செலுத்தும் சர்வாங்க தகனபலியையும், கர்த்தருக்கு அவரவர் செலுத்தும் உற்சாகபலியையும் செலுத்தினார்கள். 6 ஏழாம் மாதம் முதல்தேதியில் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தத் தொடங்கினார்கள்; ஆனாலும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் இன்னும் போடப்படவில்லை. 7 அப்பொழுது பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் தங்களுக்குப் பிறப்பித்த உத்தரவின்படியே அவர்கள் கல்தச்சருக்கும் தச்சருக்கும் பணத்தையும், லீபனோனிலிருந்து கேதுருமரங்களைச் சமுத்திரவழியாய் யோபாமட்டும் கொண்டுவரச் சீதோனியருக்கும் தீரியருக்கும் போஜனபானத்தையும் எண்ணெயையும் கொடுத்தார்கள். 8 அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்திற்கு வந்த இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதத்திலே, செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும், மற்றுமுள்ள அவர்கள் சகோதரராகிய ஆசாரியரும் லேவியரும், சிறையிருப்பிலிருந்து எருசலேமுக்கு வந்த அனைவரும், ஆரம்பஞ்செய்து, இருபதுவயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியரைக் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை நடத்தும்படி வைத்தார்கள். 9 அப்படியே தேவனுடைய ஆலயத்தின் வேலையைச் செய்கிறவர்களை நடத்தும்படி யெசுவாவும் அவன் குமாரரும் சகோதரரும், கத்மியேலும் அவன் குமாரரும், யூதாவின் குமாரரும், எனாதாத்தின் குமாரரும், அவர்கள் சகோதரராகிய லேவியரும் ஒருமனப்பட்டு நின்றார்கள். 10 சிற்பாசாரிகள் கர்த்தருடைய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடுகிறபோது, இஸ்ரவேல் ராஜாவாகிய தாவீதுடைய கட்டளையின்படியே, கர்த்தரைத் துதிக்கும்படிக்கு, வஸ்திரங்கள் தரிக்கப்பட்டு, பூரிகைகளை ஊதுகிற ஆசாரியரையும், தாளங்களைக் கொட்டுகிற ஆசாபின் குமாரராகிய லேவியரையும் நிறுத்தினார்கள். 11 கர்த்தர் நல்லவர், இஸ்ரவேலின்மேல் அவருடைய கிருபை என்றுமுள்ளது என்று அவரைப் புகழ்ந்து துதிக்கையில், மாறிமாறிப் பாடினார்கள்; கர்த்தரைத் துதிக்கையில், ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்படுகிறதினிமித்தம் மகா கெம்பீரமாய் ஆரவாரித்தார்கள். 12 முந்தின ஆலயத்தைக் கண்டிருந்த முதிர்வயதான ஆசாரியரிலும், லேவியரிலும், பிதாக்கள் வம்சங்களின் தலைவரிலும் அநேகர் இந்த ஆலயத்துக்குத் தங்கள் கண்களுக்கு முன்பாக அஸ்திபாரம் போடப்படுகிறதைக் கண்டபோது, மகா சத்தமிட்டு அழுதார்கள்; வேறே அநேகம்பேரோ கெம்பீர சந்தோஷமாய் ஆர்ப்பரித்தார்கள். 13 ஜனங்கள் மகா கெம்பீரமாய் ஆர்ப்பரிக்கிறதினால் அவர்கள் சத்தம் வெகுதூரம் கேட்கப்பட்டது; ஆனாலும் சந்தோஷ ஆரவாரத்தின் சத்தம் இன்னதென்றும், ஜனங்களுடைய அழுகையின் சத்தம் இன்னதென்றும் பகுத்தறியக்கூடாதிருந்தது.

எஸ்றா 4

1 சிறையிருப்பிலிருந்து வந்த ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஆலயத்தைக் கட்டுகிறார்கள் என்று யூதாவுக்கும் பென்யமீனுக்கும் இருந்த சத்துருக்கள் கேள்விப்பட்டபோது, 2 அவர்கள் செருபாபேலிடத்துக்கும் தலைவரான பிதாக்களிடத்துக்கும் வந்து: உங்களோடேகூட நாங்களும் கட்டுவோம்; உங்களைப்போல நாங்களும் உங்கள் தேவனை நாடுவோம்; இவ்விடத்துக்கு எங்களை வரப்பண்ணின அசீரியாவின் ராஜாவாகிய எசரத்தோன் நாட்கள் முதற்கொண்டு அவருக்கு நாங்களும் பலியிட்டுவருகிறோம் என்று அவர்களோடே சொன்னார்கள். 3 அதற்குச் செருபாபேலும், யெசுவாவும், இஸ்ரவேலில் மற்றுமுள்ள தலைவரான பிதாக்களும் அவர்களை நோக்கி: எங்கள் தேவனுக்கு ஆலயத்தைக் கட்டுகிறதற்கு உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை; பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் ராஜா எங்களுக்குக் கட்டளையிட்டபடி, நாங்களே இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு அதைக் கட்டுவோம் என்றார்கள். 4 அதினால் அந்த தேசத்து ஜனங்கள் யூதா ஜனத்தின் கைகளைத் தளரப்பண்ணி, கட்டாதபடிக்கு அவர்களைச் சங்கடப்படுத்தி, 5 பெர்சியாவின் ராஜாவாகிய கோரேசின் காலமுழுதும், தரியு என்னும் பெர்சியா ராஜா அரசாண்டகாலமட்டும், அவர்கள் யோசனையை அவத்தமாக்கும்படி அவர்களுக்கு விரோதமாய் ஆலோசனைக்காரருக்குக் கைக்கூலி கட்டினார்கள். 6 அகாஸ்வேரு அரசாளுகிறபோது, அவனுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, யூதாவிலும் எருசலேமிலும் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகப் பிரியாது எழுதினார்கள். 7 அர்தசஷ்டாவின் நாட்களிலும், பிஸ்லாமும், மித்திரேதாத்தும், தாபெயேலும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவும், பெர்சியா ராஜாவான அர்தசஷ்டாவுக்கு ஒரு மனு எழுதினார்கள்; அந்த மனு சீரிய எழுத்திலும் சீரிய பாஷையிலும் எழுதியிருந்தது. 8 ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும் கணக்கனாகிய சிம்சாவும் எருசலேமுக்கு விரோதமாக அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு எழுதின மனுவிலே கையொப்பம் போட்டவர்கள் யாரென்றால்: 9 ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமும், கணக்கனாகிய சிம்சாயும், மற்றுமுள்ள அவர்கள் வகையராவாகிய தீனாவியர், அபற்சாத்தியர், தர்பேலியர், அப்பார்சியர், அற்கேவியர், பாபிலோனியர், சூஷங்கியர், தெகாவியர், ஏலாமியரானவர்களும், 10 பெரியவரும் பேர்பெற்றவருமான அஸ்னாப்பார் அவ்விடங்களிலிருந்து அழைத்துக்கொண்டுவந்து சமாரியாவின் பட்டணத்திலே குடியேறப்பண்ணின மற்ற ஜனங்களும், நதிக்கு இப்பாலே இருக்கிற மற்ற ஜனங்களுமே. 11 அவர்கள் அர்தசஷ்டா என்னும் ராஜாவுக்கு அனுப்பின மனுவின் நகலாவது: நதிக்கு இப்புறத்தில் இருக்கிற உமது அடியார் முதலானவர்கள் அறிவிக்கிறது என்னவென்றால், 12 உம்மிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்த யூதர் எருசலேமிலே கூடி, கலகமும் பொல்லாப்புமான அந்தப் பட்டணத்திற்கு அஸ்திபாரங்களை இணைத்து, அதின் மதில்களை எழுப்பிக் கட்டுகிறார்கள் என்பது ராஜாவுக்கு அறியலாவதாக. 13 இப்போதும் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால், அவர்கள் பகுதியையும் தீர்வையையும் ஆயத்தையும் கொடுக்கமாட்டார்கள்; அதினால் ராஜாக்களின் வருமானத்திற்கு நஷ்டம் வரும் என்று ராஜாவுக்கு அறியலாவதாக. 14 இப்போதும் நாங்கள் அரமனை உப்புத் தின்கிறபடியினால், ராஜாவுக்குக் குறைவுவரப் பார்த்திருக்கிறது எங்களுக்கு அடாதகாரியம்; ஆகையால் நாங்கள் இதை அனுப்பி, ராஜாவுக்குத் தெரியப்படுத்துகிறோம். 15 உம்முடைய பிதாக்களின் நடபடி புஸ்தகங்களில் சோதித்துப்பார்க்க உத்தரவாகவேண்டும்; அப்பொழுது இந்தப் பட்டணம் கலகமும், ராஜாக்களுக்கும் சீமைகளுக்கும் நஷ்டமும் உண்டாக்குகிற பட்டணம் என்றும், பூர்வகாலமுதல் கலாதி உள்ளதாயிருந்தபடியினால் இந்தப் பட்டணம் பாழ்க்கடிக்கப்பட்டது என்றும், அந்த நடபடி புஸ்தகங்களில் கண்டறியலாம். 16 ஆகையால் இந்தப் பட்டணம் கட்டப்பட்டு, இதின் அலங்கங்கள் எடுப்பிக்கப்பட்டுத் தீர்ந்தால், நதிக்கு இப்புறத்திலே உமக்கு ஒன்றும் இராதேபோம் என்பதை ராஜாவுக்கு அறியப்படுத்துகிறோம் என்று எழுதி அனுப்பினார்கள். 17 அப்பொழுது ராஜா ஆலோசனைத் தலைவனாகிய ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், சமாரியாவில் குடியிருக்கிற மற்றுமுள்ள அவர்களுடைய வகையராவுக்கும், நதிக்கு அப்புறத்தில் இருக்கிற மற்றவர்களுக்கும் எழுதியனுப்பின பிரதியுத்தரமாவது: உங்களுக்குச் சமாதானம், 18 நீங்கள் அனுப்பின மனு நமது சமுகத்தில் தீர்க்கமாய் வாசிக்கப்பட்டது. 19 நம்முடைய உத்தரவினால் சோதித்துப் பார்க்கும்போது, அந்தப் பட்டணம் பூர்வகாலமுதல் ராஜாக்களுக்கு விரோதமாய் எழும்பினது என்றும், அதிலே கலகமும் ராஜதுரோகமும் காணப்பட்டது என்றும், 20 எருசலேமில் வல்லமையுள்ள ராஜாக்கள் இருந்தார்கள் என்றும், அவர்கள் நதிக்கு அப்புறத்தில் இருக்கிற சகல தேசங்களையும் ஆண்டுவந்தார்கள் என்றும், பகுதியும் தீர்வையும் ஆயமும் அவர்களுக்குச் செலுத்தப்பட்டது என்றும் தெரியவருகிறது. 21 இப்பொழுதும் நம்மிடத்திலிருந்து மறுஉத்தரவு பிறக்கும்வரையும் அந்த மனிதர் அந்தப் பட்டணத்தைக் கட்டாமல் நிறுத்திவிடும்படி கட்டளையிடுங்கள். 22 இதிலே நீங்கள் தவறாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ராஜாக்களுக்கு நஷ்டமும் சேதமும் வரவேண்டியது என்ன என்று எழுதி அனுப்பினான். 23 ராஜாவாகிய அர்தசஷ்டாவுடைய உத்தரவின் நகல் ரெகூமுக்கும், கணக்கனாகிய சிம்சாயிக்கும், அவர்கள் வகையராவுக்கு முன்பாக வாசிக்கப்பட்டபோது, அவர்கள் தீவிரத்துடனே எருசலேமிலிருக்கிற யூதரிடத்திற்குப் போய், பலவந்தத்தோடும் கட்டாயத்தோடும் அவர்களை வேலைசெய்யாதபடிக்கு நிறுத்திப்போட்டார்கள். 24 அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் வேலை தடைபட்டு, பெர்சியாவின் ராஜாவாகிய தரியு ராஜ்யபாரம்பண்ணின இரண்டாம் வருஷமட்டும் நிறுத்தப்பட்டிருந்தது.

எஸ்றா 5

1 அப்பொழுது ஆகாய் தீர்க்கதரிசியும், இத்தோவின் குமாரனாகிய சகரியா என்னும் தீர்க்கதரிசியும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள யூதருக்கு இஸ்ரவேல் தேவனின் நாமத்திலே தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 2 அப்பொழுது செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலும் யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவும் எழும்பி, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்டத்தொடங்கினார்கள்; அவர்களுக்குத் திடன்சொல்ல தேவனுடைய தீர்க்கதரிசிகளும் இருந்தார்கள். 3 அக்காலத்திலே நதிக்கு இப்புறத்தில் இருக்கிற நாடுகளுக்கு அதிபதியாகிய தத்னாய் என்பவனும், சேத்தார்பொஸ்னாயும், அவர்கள் வகையராவும் அவர்களிடத்துக்கு வந்து, இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டவன் யார் என்று அவர்களைக் கேட்டார்கள். 4 அப்பொழுது அதற்கு ஏற்ற உத்தரவையும், இந்த மாளிகையைக் கட்டுகிற மனிதரின் நாமங்களையும் அவர்களுக்குச் சொன்னோம். 5 ஆனாலும் இந்தச் செய்தி தரியுவினிடத்திற்குப் போய் எட்டுகிறவரைக்கும் இவர்கள் யூதருடைய மூப்பரின் வேலையைத் தடுக்காதபடிக்கு, அவர்களுடைய தேவனின் கண் அவர்கள்மேல் வைக்கப்பட்டிருந்தது; அப்பொழுது இதைக்குறித்து அவர்கள் சொன்ன மறுமொழியைக் கடிதத்தில் எழுதியனுப்பினார்கள். 6 நதிக்கு இப்புறத்திலிருக்கிற தத்னாய் என்னும் தேசாதிபதியும், சேத்தார்பொஸ்னாயும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான அவன் வகையராவும், ராஜாவாகிய தரியுவுக்கு எழுதியனுப்பின கடிதத்தின் நகலாவது: 7 ராஜாவாகிய தரியுவுக்குச் சகல சமாதானமும் உண்டாவதாக. 8 நாங்கள் யூதர் சீமையிலுள்ள மகா தேவனுடைய ஆலயத்துக்குப் போனோம்; அது பெருங்கற்களால் கட்டப்படுகிறது; மதில்களின்மேல் உத்திரங்கள் பாய்ச்சப்பட்டு, அந்த வேலை துரிசாய் நடந்து, அவர்களுக்குக் கைகூடிவருகிறதென்பது ராஜாவுக்குத் தெரியலாவதாக. 9 அப்பொழுது நாங்கள் அவர்கள் மூப்பர்களை நோக்கி: இந்த ஆலயத்தைக் கட்டவும், இந்த மதிலை எடுப்பிக்கவும் உங்களுக்குக் கட்டளையிட்டது யார் என்று கேட்டோம். 10 இதுவுமல்லாமல், அவர்களுக்குள்ளே தலைவரான மனிதர் இன்னாரென்று உமக்கு எழுதி அறியப்படுத்தும்படி அவர்கள் நாமங்கள் என்னவென்றும் கேட்டோம். 11 அவர்கள் எங்களுக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் பரலோகத்துக்கும் பூலோகத்துக்கும் தேவனாயிருக்கிறவருக்கு அடியாராயிருந்து, இஸ்ரவேலின் பெரிய ராஜா ஒருவன் அநேக வருஷங்களுக்குமுன்னே கட்டித்தீர்த்த இந்த ஆலயத்தை நாங்கள் மறுபடியும் கட்டுகிறோம். 12 எங்கள் பிதாக்கள் பரலோகத்தின் தேவனுக்குக் கோபமூட்டினபடியினால், அவர் இவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் கல்தேயன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் இந்த ஆலயத்தை நிர்மூலமாக்கி, ஜனத்தைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். 13 ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்திலே கோரேஸ் ராஜாவானவர் தேவனுடைய இந்த ஆலயத்தைக் கட்டும்படி கட்டளையிட்டார். 14 நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்த தேவாலயத்திலிருந்து எடுத்து, பாபிலோன் கோவிலில் கொண்டுபோய் வைத்திருந்த தேவனுடைய ஆலயத்தின் பொன் வெள்ளிப் பணிமுட்டுகளையும் ராஜாவாகிய கோரேஸ் பாபிலோன் கோவிலிலிருந்து எடுத்து, அவர் தேசாதிபதியாக நியமித்த செஸ்பாத்சாரென்னும் நாமமுள்ளவனிடத்தில் அவைகளை ஒப்புவித்து, 15 அவனை நோக்கி: நீ இந்தப் பணிமுட்டுகளை எடுத்து, எருசலேமிலிருக்கும் தேவாலயத்துக்குக் கொண்டுபோ; தேவனுடைய ஆலயம் அதின் ஸ்தானத்திலே கட்டப்படவேண்டும் என்றார். 16 அப்பொழுது அந்தச் செஸ்பாத்சார் வந்து, எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தின் அஸ்திபாரத்தைப் போட்டான்; அந்நாள்முதல் இதுவரைக்கும் அது கட்டப்பட்டுவருகிறது; அது இன்னும் முடியவில்லை என்றார்கள். 17 இப்பொழுதும் ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கட்ட, ராஜாவாகிய கோரேஸ் கட்டளையிட்டதுண்டோ என்று பாபிலோனில் இருக்கிற ராஜாவின் கஜானாவிலே ஆராய்ந்து பார்க்கவும், இந்த விஷயத்தில் ராஜாவினுடைய சித்தம் இன்னதென்று எங்களுக்கு எழுதியனுப்பவும் உத்தரவாகவேண்டும் என்று எழுதியனுப்பினார்கள்.

எஸ்றா 6

1 அப்பொழுது ராஜாவாகிய தரியு இட்ட கட்டளையின்படியே பாபிலோன் கஜானாவிலுள்ள தஸ்திர அறையைச் சோதித்தார்கள். 2 மேதிய சீமையிலிருக்கிற அக்மேதா பட்டணத்தின் அரமனையிலே ஒரு சுருள் அகப்பட்டது; அதிலே எழுதியிருந்த விபரமாவது: 3 ராஜாவாகிய கோரேசின் முதலாம் வருஷத்தில், கோரேஸ் ராஜா எருசலேமிலிருந்த தேவாலயத்தைக்குறித்துப் பிறப்பித்த உத்தரவு என்னவென்றால்: தேவாலயமானது பலிசெலுத்தப்பட்டுவந்த ஸ்தானத்திலே கட்டப்படக்கடவது; அதின் அஸ்திபாரங்கள் பலமாயிருப்பதாக; அது அறுபது முழ உயரமும், அறுபது முழ அகலமுமாயிருக்கவேண்டும். 4 அது மூன்று வரிசை பெருங்கற்களாலும், ஒரு மச்சுவரிசை புது உத்திரங்களாலும் கட்டப்படக்கடவது; அதற்குச் செல்லும் செலவு ராஜாவின் அரமனையிலிருந்து கொடுக்கப்படுவதாக. 5 அன்றியும் நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்த ஆலயத்திலிருந்து எடுத்து, பாபிலோனுக்குக் கொண்டுவந்த தேவனுடைய ஆலயத்துக்கடுத்த பொன் வெள்ளிப் பணிமுட்டுகள் எருசலேமிலுள்ள தேவாலயமாகிய தங்கள் ஸ்தானத்திற்குப் போய்ச் சேரும்படிக்குத் திரும்பக் கொடுக்கப்படக்கடவது; அவைகளை தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகக்கடவர்கள் என்று எழுதியிருந்தது. 6 அப்பொழுது தரியுராஜா எழுதியனுப்பினதாவது: இப்பொழுதும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும் சேத்தார்பொஸ்னாயுமாகிய நீங்களும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற அப்பற்சாகியரான உங்கள் வகையரா யாவரும் அவ்விடத்தைவிட்டு விலகியிருங்கள். 7 தேவனுடைய ஆலயத்தின் வேலையை அவர்கள் செய்யட்டும், யூதருடைய அதிபதியும், யூதரின் மூப்பரும், தேவனுடைய ஆலயத்தை அதின் ஸ்தானத்திலே கட்டக்கடவர்கள். 8 தேவனுடைய ஆலயத்தை யூதரின் மூப்பர் கட்டும் விஷயத்தில் நீங்கள் அவர்களுக்குச் செய்யத்தக்கதாய், நம்மால் உண்டான கட்டளை என்னவென்றால், அந்த மனிதருக்குத் தடை உண்டாகாதபடிக்கு, நதிக்கு அப்புறத்தில் வாங்கப்படும் பகுதியாகிய ராஜாவின் திரவியத்திலே அவர்களுக்குத் தாமதமில்லாமல் செல்லும் செலவு கொடுக்கவேண்டும். 9 பரலோகத்தின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளையிடத் தேவையான இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சரசம், எண்ணெய் முதலானவை தினந்தினம் அவர்கள் சொற்படி தாழ்ச்சியில்லாமல் கொடுக்கப்படக்கடவது. 10 எருசலேமிலிருக்கிற ஆசாரியர்கள் பரலோகத்தின் தேவனுக்குச் சுகந்த வாசனையான பலிகளைச் செலுத்தி, ராஜாவுக்கும் அவர் குமாரருக்கும் தீர்க்காயுசுண்டாக மன்றாடும்படிக்கு இப்படிச் செய்யப்படுவதாக. 11 பின்னும் நம்மால் பிறக்கும் கட்டளை என்னவென்றால்: எந்த மனிதனாவது இந்தக் கட்டளையை மாற்றினால், அவன் வீட்டிலிருந்து ஒரு உத்திரம் பிடுங்கி நாட்டப்பட்டு, அவன் அதில் தூக்கிப்போடப்படவும், அதினிமித்தமாக அவனுடைய வீடு குப்பைமேடாக்கப்படவுங்கடவது. 12 ஆகையால் இதை மாற்றவும், எருசலேமிலுள்ள தேவனுடைய ஆலயத்தைக் கெடுக்கவும், தங்கள் கையை நீட்டப்போகிற சகல ராஜாக்களையும் சகல ஜனங்களையும் தம்முடைய நாமத்தை அங்கே விளங்கப்பண்ணின தேவன் நிர்மூலமாக்கக்கடவர்; தரியுவாகிய நாம் இந்தக் கட்டளையைக் கொடுத்தோம்; இதின்படி ஜாக்கிரதையாய்ச் செய்யப்படக்கடவது என்று எழுதியனுப்பினான். 13 அப்பொழுது நதிக்கு இப்புறத்திலிருக்கிற தேசாதிபதியாகிய தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்கள் வகையராவும், தரியுராஜா கட்டளையிட்டபிரகாரம் ஜாக்கிரதையாய்ச் செய்தார்கள். 14 அப்படியே யூதரின் மூப்பர் கட்டினார்கள்; தீர்க்கதரிசியாகிய ஆகாயும் இத்தோவின் குமாரனாகிய சகரியாவும் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தபடியினால் அவர்களுடைய காரியம் கைகூடி வந்தது; அவர்கள் இஸ்ரவேலின் தேவனுடைய கட்டளைப்படியேயும், கோரேஸ், தரியு, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா என்பவர்களுடைய கட்டளைப்படியேயும் அதைக் கட்டி முடித்தார்கள். 15 ராஜாவாகிய தரியு அரசாளுகிற ஆறாம் வருஷம் ஆதார் என்னும் மாதம் மூன்றாந்தேதியிலே அந்த ஆலயம் கட்டி முடிந்தது. 16 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரும், ஆசாரியரும், லேவியரும், சிறையிருப்பிலிருந்து வந்த மற்றவர்களும், தேவனுடைய ஆலயப் பிரதிஷ்டையைச் சந்தோஷமாய்க் கொண்டாடினார்கள். 17 தேவனுடைய ஆலயத்தின் பிரதிஷ்டைக்காக நூறு காளைகளையும், இருநூறு ஆட்டுக்கடாக்களையும், நானூறு ஆட்டுக்குட்டிகளையும், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, இஸ்ரவேல் அனைத்தின் பாவநிவாரணபலிக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு, 18 மோசேயின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே, அவர்கள் எருசலேமிலுள்ள தேவனுடைய ஆராதனைக்கென்று ஆசாரியரை அவர்கள் வகுப்புகளின்படியும், லேவியரை அவர்கள் முறைவரிசைகளின்படியும் நிறுத்தினார்கள். 19 சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே பஸ்காவையும் ஆசரித்தார்கள். 20 ஆசாரியரும் லேவியரும் ஒருமனப்பட்டுத் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டதினால், எல்லாரும் சுத்தமாயிருந்து, சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாருக்காகவும், ஆசாரியரான தங்கள் சகோதரருக்காகவும், தங்களுக்காகவும் பஸ்காவின் ஆட்டுக்குட்டிகளை அடித்தார்கள். 21 அப்படியே சிறையிருப்பிலிருந்து திரும்பிவந்த இஸ்ரவேல் புத்திரரும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நாடும்படி, பூலோக ஜாதிகளின் அசுத்தத்தை விட்டு, அவர்களண்டையிலே சேர்ந்த அனைவரும் அதைப் புசித்து, 22 புளிப்பில்லாத அப்பப்பண்டிகையை ஏழுநாளாகச் சந்தோஷத்துடனே ஆசரித்தார்கள்; கர்த்தர் அவர்களை மகிழ்ச்சியாக்கி, அவர்கள் கைகளை இஸ்ரவேலின் தேவன் என்னும் தேவனுடைய ஆலயத்தின் வேலையிலே பலப்படுத்தத்தக்கதாய் அசீரியருடைய ராஜாவின் இருதயத்தை அவர்கள் பட்சத்தில் சார்ந்திருக்கப்பண்ணினார்.

எஸ்றா 7

1 இந்த வர்த்தமானங்களுக்குப்பின்பு, செராயாவின் குமாரனாகிய எஸ்றா, பெர்சியாவின் ராஜாவாகிய அர்தசஷ்டா அரசாளுகிற காலத்திலே பாபிலோனிலிருந்து வந்தான்; இந்தச் செராயா அசரியாவின் குமாரன், இவன் இல்க்கியாவின் குமாரன், 2 இவன் சல்லூமின் குமாரன், இவன் சாதோக்கின் குமாரன், இவன் அகிதூபின் குமாரன், 3 இவன் அமரியாவின் குமாரன், இவன் அசரியாவின் குமாரன், இவன் மெராயோதின் குமாரன், 4 இவன் சேராகியாவின் குமாரன், இவன் ஊசியின் குமாரன், இவன் புக்கியின் குமாரன், 5 இவன் அபிசுவாவின் குமாரன், இவன் பினெகாசின் குமாரன், இவன் எலெயாசாரின் குமாரன், இவன் பிரதான ஆசாரியனான ஆரோனின் குமாரன். 6 இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான்; அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான். 7 அவனோடேகூட இஸ்ரவேல் புத்திரரிலும், ஆசாரியரிலும், லேவியரிலும், பாடகரிலும், வாசல் காவலாளரிலும், நிதனீமியரிலும், சிலர் அர்தசஷ்டா ராஜாவின் ஏழாம் வருஷத்திலே எருசலேமுக்குப் போனார்கள். 8 ஐந்தாம் மாதத்தில் அவன் எருசலேமுக்கு வந்தான்; அது அந்த ராஜாவின் ஏழாம் வருஷமானது. 9 முதலாம் மாதம் முதல்தேதியிலே அவன் பாபிலோனிலிருந்து பிரயாணமாகப் புறப்பட்டு, ஐந்தாம் மாதம் முதல்தேதியிலே தன் தேவனுடைய தயவுள்ள கரம் தன்மேலிருந்ததினால் எருசலேமுக்கு வந்தான். 10 கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதின்படி செய்யவும், இஸ்ரவேலிலே கட்டளைகளையும் நீதிநியாயங்களையும் உபதேசிக்கவும், எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான். 11 கர்த்தருடைய கற்பனைகளின் வார்த்தைகளிலும், அவர் இஸ்ரவேலுக்குக் கொடுத்த கட்டளைகளிலும், படித்துத் தேறின வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்கு, ராஜாவாகிய அர்தசஷ்டா கொடுத்த சன்னதின் நகலாவது: 12 ராஜாதிராஜாவாகிய அர்தசஷ்டா பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கிற உத்தம வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனுக்குப் பூரண சமாதானமுண்டாக வாழ்த்தி எழுதுகிறது என்னவென்றால்: 13 நம்முடைய ராஜ்யத்தில் இருக்கிற இஸ்ரவேல் ஜனத்திலும், அதின் ஆசாரியரிலும், லேவியரிலும், உன்னோடேகூட எருசலேமுக்குப் போக மனப்பூர்வமாயிருக்கிற யாவரும் போகலாம் என்று நம்மாலே உத்தரவாகிறது. 14 நீ உன் கையிலிருக்கிற உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி, யூதாவையும் எருசலேமையும் விசாரித்து நடத்தவும், 15 ராஜாவும் அவருடைய மந்திரிமாரும் எருசலேமில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனுக்கு மனப்பூர்வமாய்க் கொடுத்த வெள்ளியையும் பொன்னையும், 16 பாபிலோன் சீமையெங்கும் உனக்குக் கிடைக்கும் எல்லா வெள்ளியையும் பொன்னையும், உன்னுடைய ஜனமும் ஆசாரியரும் எருசலேமிலுள்ள தங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று மனஉற்சாகமாய்க் கொடுக்கும் காணிக்கைகளையும் நீ கொண்டுபோகவும், நீ ராஜாவினாலும் அவருடைய ஏழு மந்திரிமாராலும் அனுப்பப்படுகிறாய். 17 ஆகையால் அந்தத் திரவியத்தினால் நீ தாமதமின்றி காளைகளையும், ஆட்டுக்கடாக்களையும், ஆட்டுக்குட்டிகளையும், அவைகளுக்கடுத்த போஜனபலிகளையும், பானபலிகளையும் வாங்கி, அவைகளை எருசலேமிலுள்ள உங்கள் தேவனுடைய ஆலயத்துப் பலிபீடத்தின்மேல் செலுத்துவாயாக. 18 மீதியான வெள்ளியையும் பொன்னையும் கொண்டு செய்யவேண்டியதின்னதென்று உனக்கும் உன் சகோதரருக்கும் நலமாய்த் தோன்றுகிறபடி அதை உங்கள் தேவனுடைய சித்தத்தின்படியே செய்யுங்கள். 19 உன் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக உனக்குக் கொடுக்கப்பட்ட பணிமுட்டுகளையும் நீ எருசலேமின் தேவனுடைய சந்நிதியில் ஒப்புவிக்கக்கடவாய். 20 பின்னும் உன் தேவனுடைய ஆலயத்துக்கு அவசியமாய்க் கொடுக்கவேண்டியிருப்பதை, நீ ராஜாவின் கஜானாவிலிருந்து வாங்கிக் கொடுப்பாயாக. 21 நதிக்கு அப்புறத்திலிருக்கிற எல்லா கஜான்சிகளுக்கும் அர்தசஷ்டா என்னும் ராஜாவாகிய நாம் இடுகிற கட்டளை என்னவென்றால், பரலோகத்தின் தேவனுடைய நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியன் நூறு தாலந்து வெள்ளி, நூற்றுக்கலக் கோதுமை, நூற்றுக்கலத் திராட்சரசம், நூற்றுக்கல எண்ணெய்மட்டும் உங்களைக் கேட்பவை எல்லாவற்றையும், 22 வேண்டிய உப்பையும், தாமதமில்லாமல் கொடுக்கவும், 23 பரலோகத்தின் தேவனுடைய கற்பனையின்படியே, எது தேவையாயிருக்குமோ அதுவெல்லாம் பரலோகத்தின் தேவனுடைய ஆலயத்திற்கு ஜாக்கிரதையாய்ச் செலுத்தப்படவும் வேண்டும்; ராஜாவும் அவர் குமாரரும் ஆளும் ராஜ்யத்தின்மேல் கடுங்கோபம் வருவானேன். 24 பின்னும் ஆசாரியரும், லேவியரும், பாடகரும், வாசல் காவலாளரும், நிதனீமியரும், தேவனுடைய ஆலயத்தின் பணிவிடைக்காரருமான ஒருவன்மேலும் பகுதியாகிலும் தீர்வையாகிலும் ஆயமாகிலும் சுமத்தலாகாதென்று அவர்களைக்குறித்து உங்களுக்கு அறியப்படுத்துகிறோம். 25 பின்னும் நதிக்கு அப்புறத்திலிருந்து உன் தேவனுடைய நியாயப்பிரமாணங்களை அறிந்த சகல ஜனங்களையும் நியாயம் விசாரிக்கத்தக்க துரைகளையும், நியாயாதிபதிகளையும், எஸ்றாவாகிய நீ உன்னிலுள்ள உன் தேவனுடைய ஞானத்தின்படியே ஏற்படுத்துவாயாக; அந்தப் பிரமாணங்களை அறியாதவர்களுக்கு அவைகளை உபதேசிக்கவுங்கடவாய். 26 உன் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும், ராஜாவினுடைய நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யாதவனெவனும் உடனே மரணத்துக்காகிலும், தேசத்துக்குப் புறம்பாக்குதலுக்காகிலும், அபராதத்துக்காகிலும், காவலுக்காகிலும் தீர்க்கப்பட்டுத் தண்டிக்கப்படக்கடவன் என்று எழுதியிருந்தது. 27 எருசலேமிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தை அலங்கரிக்க, இப்படிப்பட்ட யோசனையை ராஜாவின் இருதயத்தில் அருளி, ராஜாவுக்கும் அவருடைய மந்திரிமார்களுக்கும் ராஜாவின் கைக்குள்ளான பலத்த எல்லா மகாப் பிரபுக்களுக்கும் முன்பாக எனக்குத் தயவு கிடைக்கப்பண்ணின எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 28 அப்படியே என் தேவனாகிய கர்த்தருடைய கரம் என்மேல் இருந்ததினால் நான் திடன்கொண்டு, இஸ்ரவேலில் சில தலைவரை என்னோடேகூட வரும்படி சேர்த்துக்கொண்டேன்.

எஸ்றா 8

1 அர்தசஷ்டா ராஜா அரசாளும் காலத்தில் பாபிலோனிலிருந்து என்னோடேகூட வந்த தங்கள் பிதாக்கள் வம்சங்களின் தலைவரும் அவர்கள் வம்ச அட்டவணைகளுமாவன: 2 பினெகாசின் புத்திரரில் கெர்சோம், இத்தாமாரின் புத்திரரில் தானியேல், தாவீதின் புத்திரரில் அத்தூஸ், 3 பாரோஷின் புத்திரரில் ஒருவனான செக்கனியாவின் புத்திரரில் சகரியாவும், அவனோடேகூட வம்ச அட்டவணையில் எழுதியிருக்கிற நூற்றைம்பது ஆண்மக்களும், 4 பாகாத்மோவாபின் புத்திரரில் செரகியாவின் குமாரனாகிய எலியோனாயும், அவனோடேகூட இருநூறு ஆண்மக்களும், 5 செக்கனியாவின் புத்திரரில் யகசியேலின் குமாரனும், அவனோடேகூட முந்நூறு ஆண்மக்களும், 6 ஆதினின் புத்திரரில் யோனத்தானின் குமாரனாகிய ஏபேதும், அவனோடேகூட ஐம்பது ஆண்மக்களும், 7 ஏலாமின் புத்திரரில் அதலியாவின் குமாரனாகிய எஷாயாவும், அவனோடேகூட எழுபது ஆண்மக்களும், 8 செப்பதியாவின் புத்திரரில் மிகவேலின் குமாரனாகிய செப்பதியாவும், அவனோடேகூட எண்பது ஆண்மக்களும், 9 யோவாபின் புத்திரரில் யெகியேலின் குமாரனாகிய ஒபதியாவும், அவனோடேகூட இருநூற்றுப் பதினெட்டு ஆண்மக்களும், 10 செலோமித்தின் புத்திரரில் யொசிபியாவின் குமாரனும், அவனோடேகூட நூற்றறுபது ஆண்மக்களும், 11 பெயாயின் புத்திரரில் பெயாயின் குமாரனாகிய சகரியாவும், அவனோடேகூட இருபத்தெட்டு ஆண்மக்களும், 12 அஸ்காதின் புத்திரரில் காத்தானின் குமாரனாகிய யோகனானும், அவனோடேகூட நூற்றுப்பத்து ஆண்மக்களும், 13 அதோனிகாமின் கடைசிப்புத்திரரான எலிபேலேத், ஏயெல், செமாயா என்னும் நாமங்களுள்ளவர்களும், அவர்களோடேகூட அறுபது ஆண்மக்களும், 14 பிக்வாயின் புத்திரரில் ஊத்தாயும், சபூதும், அவர்களோடேகூட எழுபது ஆண்மக்களுமே. 15 இவர்களை நான் அகாவாவுக்கு ஓடுகிற நதியண்டையிலே கூட்டிக்கொண்டுபோனேன்; அங்கே மூன்றுநாள் தங்கியிருந்தோம்; நான் ஜனங்களையும் ஆசாரியரையும் பார்வையிடும்போது, லேவியின் புத்திரரில் ஒருவரையும் அங்கே காணவில்லை. 16 ஆகையால் நான் எலியேசர், அரியேல், செமாயா, எல்நாத்தான், யாரிப், எல்நாத்தான், நாத்தான், சகரியா, மிசுல்லாம் என்னும் தலைவரையும், யோயாரிப், எல்நாத்தான் என்னும் புத்திமான்களையும் அழைப்பித்து, 17 கசிப்பியா என்னும் ஸ்தலத்திலிருக்கிற தலைவனாகிய இத்தோவிடத்திற்குச் செய்தி கொண்டுபோக அவர்களுக்குக் கற்பித்து, நமது தேவனுடைய ஆலயத்துப் பணிவிடைக்காரரை எங்களிடத்திற்கு அழைத்துவரும்படி, அவர்கள் கசிப்பியா என்னும் ஸ்தலத்திலிருக்கிற தங்கள் சகோதரனாகிய இத்தோவுக்கும், நிதனீமியருக்கும் சொல்லவேண்டிய வார்த்தைகளைச் சொல்லிக்கொடுத்தேன். 18 அவர்கள் எங்கள்மேலிருந்த எங்கள் தேவனுடைய தயையுள்ள கரத்தின்படியே, இஸ்ரவேலுக்குப் பிறந்த லேவியின் குமாரனாகிய மகேலியின் புத்திரரில் புத்தியுள்ள மனுஷனாகிய செரெபியாவும் அவன் குமாரரும் சகோதரருமான பதினெட்டுப்பேரையும், 19 மெராரியரின் புத்திரரில் அஷபியாவும் அவனோடே எஷாயாவும் அவன் சகோதரரும் அவர்கள் குமாரருமான இருபதுபேரையும், 20 தாவீதும் பிரபுக்களும் லேவியருக்குப் பணிவிடைக்காரராக வைத்த நிதனீமியரில் இருநூற்று இருபதுபேரையும், எங்களிடத்தில் அழைத்துக்கொண்டுவந்தார்கள்; அவர்கள் எல்லாருடைய பேர்களும் குறிக்கப்பட்டன. 21 அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும், நான் அங்கே அந்த அகாவா நதியண்டையிலே உபவாசத்தைக் கூறினேன். 22 வழியிலே சத்துருவை விலக்கி, எங்களுக்குத் துணைசெய்யும்படிக்கு, நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரரையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன்; எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரை விட்டு விலகுகிறவர்கள் எல்லார்மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம். 23 அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார். 24 பின்பு நான் ஆசாரியரின் தலைவரிலே பன்னிரண்டுபேராகிய செரெபியாவையும், அஷ்பியாவையும், அவர்கள் சகோதரரிலே பத்துப்பேரையும் பிரித்தெடுத்து, 25 ராஜாவும், அவருடைய ஆலோசனைக்காரரும், அவருடைய பிரபுக்களும், அங்கேயிருந்த சகல இஸ்ரவேலரும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கென்று எடுத்துக்கொடுத்த காணிக்கையாகிய வெள்ளியையும், பொன்னையும், பணிமுட்டுகளையும் அவர்களிடத்தில் நிறுத்துக் கொடுத்தேன். 26 அவர்கள் கையிலே நான் அறுநூற்று ஐம்பது தாலந்து வெள்ளியையும், நூறுதாலந்து நிறையான வெள்ளிப் பணிமுட்டுகளையும், நூறுதாலந்து பொன்னையும், 27 ஆயிரம் தங்கக்காசு பெறுமான இருபது பொற்கிண்ணங்களையும், பொன்னைப்போல எண்ணப்பட்ட பளபளப்பான இரண்டு நல்ல வெண்கலப் பாத்திரங்களையும் நிறுத்துக்கொடுத்து, 28 அவர்களை நோக்கி: நீங்கள் கர்த்தருக்குப் பரிசுத்தமானவர்கள்; இந்தப் பணிமுட்டுகளும், உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தருக்கு மனஉற்சாகமாய்ச் செலுத்தப்பட்ட இந்த வெள்ளியும், இந்தப் பொன்னும் பரிசுத்தமானவைகள். 29 நீங்கள் அதை எருசலேமிலிருக்கிற தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் ஆசாரியர் லேவியருடைய பிரபுக்களுக்கும், இஸ்ரவேலுடைய வம்சத்தலைவர்களுக்கும் முன்பாக நிறுத்து ஒப்புவிக்குமட்டும் விழிப்பாயிருந்து, அதைக் காத்துக்கொள்ளுங்கள் என்றேன். 30 அப்படியே அந்த ஆசாரியரும் லேவியரும், அந்த வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் எருசலேமிலிருக்கிற எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகும்படிக்கு, நிறுத்து வாங்கிக்கொண்டார்கள். 31 நாங்கள் எருசலேமுக்குப்போக, முதலாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே, அகாவா நதியைவிட்டுப் பயணம் புறப்பட்டோம்; எங்கள் தேவனுடைய கரம் எங்கள்மேலிருந்து, வழியிலே சத்துருவின் கைக்கும், பதிவிருக்கிறவர்களின் கைக்கும் எங்களைத் தப்புவித்தது. 32 நாங்கள் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாள் இருந்தபின்பு, 33 நாலாம் நாளிலே அந்த வெள்ளியும் பொன்னும் பணிமுட்டுகளும், எங்கள் தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியனாகிய உரியாவின் குமாரன் மெரேமோத்தின் கையிலும், பினெகாசின் குமாரன் எலெயாசாரின் கையிலும், எல்லாவற்றிற்கும் இருந்த நிறையின்படியேயும் நிறுத்து, ஒப்புவிக்கப்பட்டது; யெசுவாவின் குமாரன் யோசபாத்தும், பின்னூயின் குமாரன் நொவதியாவும் என்கிற லேவியரும் அவர்களோடேகூட இருந்தார்கள். 34 அந்த நிறையெல்லாம் அக்காலத்தில் எழுதப்பட்டது. 35 சிறைப்பட்டு மீண்டவர்கள் இஸ்ரவேலின் தேவனுக்குச் சர்வாங்க தகனபலிகளாக இஸ்ரவேல் அனைத்தினிமித்தம் பன்னிரண்டு காளைகளையும், தொண்ணூற்றாறு ஆட்டுக்கடாக்களையும், எழுபத்தேழு ஆட்டுக்குட்டிகளையும், பாவநிவாரணத்துக்காகப் பன்னிரண்டு வெள்ளாட்டுக்கடாக்களையும் பலியிட்டு, அவையெல்லாம் கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தினார்கள். 36 பின்பு ராஜாவின் சன்னதுகளை நதிக்கு இப்புறத்திலிருக்கிற ராஜாவின் தேசாதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஒப்புவித்தார்கள்; அப்பொழுது அவர்கள் ஜனங்களுக்கும் தேவனுடைய ஆலயத்துக்கும் உதவியாயிருந்தார்கள்.

எஸ்றா 9

1 இவைகள் செய்து முடிந்தபின்பு, பிரபுக்கள் என்னிடத்தில் சேர்ந்து: இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும் லேவியரும் ஆகிய இவர்கள், கானானியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், அம்மோரியர் என்னும் இந்த தேசங்களின் ஜனங்களுக்கும், அவர்களுடைய அருவருப்புகளுக்கும் விலகியிருக்கவில்லை. 2 எப்படியென்றால், அவர்களுடைய குமாரத்திகளிலே தங்களுக்கும் தங்கள் குமாரருக்கும் பெண்களைக் கொண்டார்கள்; இப்படியே பரிசுத்த வித்துத் தேசங்களின் ஜனங்களோடே கலந்துபோயிற்று; பிரபுக்களின் கையும், அதிகாரிகளின் கையும், இந்தக் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது என்றார்கள். 3 இந்த வர்த்தமானத்தை நான் கேட்டபொழுது, என் வஸ்திரத்தையும் என் சால்வையையும் நான் கிழித்து, என் தலையிலும் என் தாடியிலுமுள்ள மயிரைப் பிடுங்கித் திகைத்தவனாய் உட்கார்ந்திருந்தேன். 4 அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் இஸ்ரவேலுடைய தேவனின் வார்த்தைகளுக்கு நடுங்குகிற யாவரும் என்னோடே கூடிக்கொண்டார்கள்; நானோ அந்திப்பலி செலுத்தப்படுமட்டும் திகைத்தவனாய் உட்கார்ந்துகொண்டிருந்தேன். 5 அந்திப்பலி நேரத்திலே நான் துக்கத்தோடே எழுந்து, கிழித்துக்கொண்ட வஸ்திரத்தோடும் சால்வையோடும் முழங்காற்படியிட்டு, என் கைகளை என் தேவனாகிய கர்த்தருக்கு நேராக விரித்து: 6 என் தேவனே, நான் என் முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்குமேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று. 7 எங்கள் பிதாக்களின் நாட்கள்முதல் இந்நாள்மட்டும் நாங்கள் பெரிய குற்றத்துக்கு உள்ளாயிருக்கிறோம்; எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நாங்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் ஆசாரியர்களும், இந்நாளிலிருக்கிறதுபோல, அந்நியதேச ராஜாக்களின் கையிலே, பட்டயத்துக்கும், சிறையிருப்புக்கும், கொள்ளைக்கும், வெட்கத்துக்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டோம். 8 இப்பொழுதும் எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களிலே தப்பின சிலரை மீதியாக வைக்கவும், தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தில் எங்களுக்கு ஒரு குச்சைக் கொடுக்கவும், இப்படியே எங்கள் தேவன் எங்கள் கண்களைப் பிரகாசிப்பித்து, எங்கள் அடிமைத்தனத்திலே எங்களுக்குக் கொஞ்சம் உயிர் கொடுக்கவும், அவராலே கொஞ்சநேரமாவது கிருபைகிடைத்தது. 9 நாங்கள் அடிமைகளாயிருந்தோம்; ஆனாலும் எங்கள் அடிமைத்தனத்திலே எங்கள் தேவன் எங்களைக் கைவிடாமல், எங்களுக்கு உயிர்கொடுக்கவும்; நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தை எடுப்பித்து, பாழாய்ப்போன அதைப் புதுப்பிக்கும்படிக்கும் எங்களுக்கு யூதாவிலும் எருசலேமிலும் ஒரு வேலியைக் கட்டளையிடும்படிக்கும், பெர்சியாவின் ராஜாக்கள் சமுகத்தில் எங்களுக்குத் தயைகிடைக்கச்செய்தார். 10 இப்பொழுதும் எங்கள் தேவனே, நாங்கள் இனி என்னசொல்லுவோம்; தேவரீர் உமது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளைக்கொண்டு கற்பித்த உமது கற்பனைகளை விட்டுவிட்டோம். 11 நீங்கள் சுதந்தரிக்கிறதற்கு உட்பிரவேசிக்கும் தேசமானது, தேசாதேசங்களுடைய ஜனங்களின் அசங்கியத்தினாலும், அவர்கள் அதை ஒரு முனைதொடங்கி மறுமுனைமட்டும் நிறையப்பண்ணின அவர்களுடைய அருவருப்புகளினாலும் அவர்களுடைய அசுத்தத்தினாலும், தீட்டுப்பட்டதாயிருக்கிறது. 12 ஆதலால் நீங்கள் பலத்துக்கொண்டு, தேசத்தின் நன்மையைப் புசித்து, அதை நித்தியகாலமாக உங்கள் பிள்ளைகளுக்கு உம்பிளிக்கையாகப் பின்வைக்கும்படிக்கு, நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்களுடைய குமாரருக்குக் கொடாமலும், அவர்களுடைய குமாரத்திகளை உங்கள் குமாரருக்குக் கொள்ளாமலும், அவர்களுடைய சமாதானத்தையும் நன்மையையும் ஒருக்காலும் நாடாமலும் இருப்பீர்களாக என்றீரே. 13 இப்பொழுதும் எங்கள் தேவனே, எங்கள் பொல்லாத செய்கைகளினாலும், எங்கள் பெரிய குற்றத்தினாலும், இவைகளெல்லாம் எங்கள்மேல் வந்தும், தேவரீர் எங்கள் அக்கிரமத்துக்குத்தக்க ஆக்கினையை எங்களுக்கு இடாமல், எங்களை இப்படித் தப்பவிட்டிருக்கையில், 14 நாங்கள் உமது கற்பனைகளை வீணாக்கவும், இந்த அருவருப்புகளுள்ள ஜனங்களோடே சம்பந்தங்கலக்கவும் தகுமோ? அப்படிச் செய்தால், எங்களில் ஒருவரும் மீந்து தப்பாதபடிக்கு, தேவரீர் எங்களை நிர்மூலமாக்குமட்டும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரல்லவோ? 15 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நீதியுள்ளவர்; ஆகையால் இந்நாளில் இருக்கிறதுபோல, நாங்கள் தப்பி மீந்திருக்கிறோம்; இதோ, நாங்கள் உமக்கு முன்பாகக் குற்றத்திற்குள்ளானவர்கள்; இதினிமித்தம் நாங்கள் உமக்கு முன்பாக நிற்கத்தக்கவர்கள் அல்ல என்று பிரார்த்தித்தேன்.

எஸ்றா 10

1 எஸ்றா இப்படி விண்ணப்பம்பண்ணி, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்துக்கு முன்பாகத் தாழ விழுந்துகிடக்கையில், இஸ்ரவேலில் புருஷரும் ஸ்திரீகளும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடிற்று; ஜனங்கள் மிகவும் அழுதார்கள். 2 அப்பொழுது ஏலாமின் புத்திரரில் ஒருவனாகிய யெகியேலின் குமாரன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து ஜனங்களிலுள்ள அந்நிய ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்டதினால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு. 3 இப்பொழுதும் அந்த ஸ்திரீகள் எல்லாரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனோடே உடன்படிக்கைப் பண்ணக்கடவோம்; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக. 4 எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்கு அடுத்தது; நாங்களும் உம்மோடேகூட இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான். 5 அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியரிலும் லேவியரிலும் பிரதானமானவர்களும் இஸ்ரவேல் அனைவரும் இந்த வார்த்தையின்படி செய்யும்படிக்கு, அவர்களை ஆணையிடச் சொன்னான்; அவர்கள் ஆணையிட்டார்கள். 6 அதின்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்துக்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் அறைக்குள் பிரவேசித்தான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் துக்கித்துக்கொண்டிருந்தான். 7 அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லாரும் எருசலேமிலே வந்து கூடவேண்டும் என்றும், 8 மூன்றுநாளைக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராதேபோனால், அவனுடைய பொருளெல்லாம் ஜப்தி செய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபைக்கு அவன் புறம்பாக்கப்படுவான் என்றும், யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம்பண்ணினார்கள். 9 அப்படியே யூதா பென்யமீன் கோத்திரத்தார் எல்லாரும் மூன்று நாளைக்குள்ளே எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாந் தேதியாயிருந்தது; ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். 10 அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேலிருக்கிற குற்றத்தை அதிகரிக்கப்பண்ண, மறுஜாதியான ஸ்திரீகளை விவாகம்பண்ணினதினால் பாவஞ்செய்தீர்கள். 11 இப்பொழுதும் நீங்கள் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் ஜனங்களையும், மறுஜாதியான ஸ்திரீகளையும் விட்டு விலகுங்கள் என்றான். 12 அப்பொழுது சபையார் யாவரும் மகா சத்தத்தோடே பிரதியுத்தரமாக: ஆம், நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான். 13 ஆனாலும் ஜனங்கள் திரளாயிருக்கிறார்கள், இது மாரிகாலமுமாயிருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே கூடாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர். 14 ஆகையால் இதற்குச் சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரராக வைக்கப்படவேண்டும்; இந்தக் காரியத்தினிமித்தம் நம்முடைய தேவனுக்கு இருக்கிற உக்கிரகோபம் எங்களை விட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் மறுஜாதியான ஸ்திரீகளைக்கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரக்கடவர்கள் என்றார்கள். 15 ஆசகேலின் குமாரன் யோனத்தானும், திக்காவின் குமாரன் யக்சியாவுமாத்திரம் அதை விசாரிக்கும்படிக்கு வைக்கப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதா என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள். 16 சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய எஸ்றாவும், தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதா வம்சங்களின் தலைவர் அனைவரும், இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி, பத்தாம் மாதம் முதல்தேதியிலே, தனித்து உட்கார்ந்து, 17 அந்நியஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள் எல்லாருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல்தேதியிலே விசாரித்து முடித்தார்கள். 18 ஆசாரிய புத்திரரில் மறுஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோசதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரரிலும் அவன் சகோதரரிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள். 19 இவர்கள் தங்கள் ஸ்திரீகளைத் தள்ளிவிடுவோம் என்று கையடித்துக்கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானபடியினால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள். 20 இம்மேரின் புத்திரரில் அனானியும், செபதியாவும், 21 ஆரீமின் புத்திரரில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்; 22 பஸ்கூரின் புத்திரரில் எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்; 23 லேவியரில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பேருமுள்ள கெலாயா, பெத்தகீயா, யூதா, எலியேசர் என்பவர்களும்; 24 பாடகரில் எலியாசிபும், வாசல்காவலாளரில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும்; 25 மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் புத்திரரில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்; 26 ஏலாமின் புத்திரரில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும்; 27 சத்தூவின் புத்திரரில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா என்பவர்களும்; 28 பெபாயின் புத்திரரில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்; 29 பானியின் புத்திரரில் மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் என்பவர்களும்; 30 பாகாத்மோவாபின் புத்திரரில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும்; 31 ஆரீமின் புத்திரரில் எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன், 32 பென்யமீன், மல்லூக், செமரியா என்பவர்களும்; 33 ஆசூமின் புத்திரரில் மத்னாயி, மத்தத்தா, சாபாத், எலிபெலேத், எரெமாயி, மனாசே, சிமெயி என்பவர்களும்; 34 பானியின் புத்திரரில் மாதாயி, அம்ராம், ஊவேல், 35 பெனாயா, பெதியா, கெல்லூ, 36 வனியா, மெரெமோத், எலெயாசீப், 37 மத்தனியா, மதனாய், யாசாய், 38 பானி, பின்னூயி, சிமெயி, 39 செலேமியா, நாத்தான், அதாயா, 40 மக்நாத்பாயி, சாசாயி, சாராயி, 41 அசரெயேல், செலேமியா, செமரியா, 42 சல்லூம், அமரியா, யோசேப் என்பவர்களும்; 43 நேபோவின் புத்திரரில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே. 44 இவர்கள் எல்லாரும் மறுஜாதியான ஸ்திரீகளைக் கொண்டவர்கள்; இவர்களில் சிலர் கொண்டிருந்த ஸ்திரீகளிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.

நெகேமியா 1

1 அகலியாவின் குமாரனாகிய நெகேமியாவின் நடபடிகள்: இருபதாம் வருஷம் கிஸ்லேயுமாதத்தில் நான் சூசான் என்னும் அரமனையில் இருக்கும்போது சம்பவித்தது என்னவென்றால், 2 என் சகோதரரில் ஒருவனாகிய ஆனானியும், வேறே சில மனுஷரும் யூதாவிலிருந்து வந்தார்கள்; அவர்களிடத்தில் நான் சிறையிருப்பில் மீந்து தப்பின யூதரின் செய்தியையும், எருசலேமின் செய்தியையும் விசாரித்தேன். 3 அதற்கு அவர்கள்: சிறையிருப்பில் மீந்திருக்கிறவர்கள் அந்தத் தேசத்திலே மகா தீங்கையும் நிந்தையையும் அநுபவிக்கிறார்கள்; எருசலேமின் அலங்கம் இடிபட்டதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கிறது என்றார்கள். 4 இந்த வார்த்தைகளைக் கேட்டபோது நான் உட்கார்ந்து அழுது, சில நாளாய்த் துக்கித்து, உபவாசித்து, மன்றாடி, பரலோகத்தின் தேவனை நோக்கி: 5 பரலோகத்தின் தேவனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே, 6 உமது அடியாராகிய இஸ்ரவேல் புத்திரருக்காக இன்று இரவும்பகலும் உமக்கு முன்பாக மன்றாடி, இஸ்ரவேல் புத்திரராகிய நாங்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவங்களை அறிக்கையிடுகிற அடியேனுடைய ஜெபத்தைக் கேட்கிறதற்கு, உம்முடைய செவி கவனித்தும், உம்முடைய கண்கள் திறந்தும் இருப்பதாக; நானும் என் தகப்பன் வீட்டாரும் பாவஞ்செய்தோம். 7 நாங்கள் உமக்கு முன்பாக மிகவும் கெட்டவர்களாய் நடந்தோம்; நீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கற்பித்த கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளாதேபோனோம். 8 நீங்கள் கட்டளையை மீறினால், நான் உங்களை ஜாதிகளுக்குள்ளே சிதறடிப்பேன் என்றும், 9 நீங்கள் என்னிடத்தில் திரும்பி, என் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வீர்களானால், உங்களிலே தள்ளுண்டு போனவர்கள் வானத்தின் கடையாந்தரத்தில் இருந்தாலும், நான் அங்கேயிருந்து அவர்களைச் சேர்த்து, என் நாமம் விளங்கும்படி நான் தெரிந்துகொண்ட ஸ்தலத்துக்கு அவர்களைக் கொண்டுவருவேன் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய மோசேக்குக் கட்டளையிட்ட வார்த்தையை நினைத்தருளும். 10 தேவரீர் உமது மகா வல்லமையினாலும், உமது பலத்த கரத்தினாலும், மீட்டுக்கொண்ட உமது அடியாரும் உமது ஜனங்களும் இவர்கள்தானே. 11 ஆண்டவரே, உமது அடியானின் ஜெபத்தையும், உமது நாமத்துக்குப் பயப்படவேண்டும் என்று விரும்புகிற உமது அடியாரின் ஜெபத்தையும் உமது செவிகள் கவனித்திருப்பதாக; இன்றைக்கு உமது அடியானுக்குக் காரியத்தைக் கைகூடி வரப்பண்ணி, இந்த மனுஷனுக்கு முன்பாக எனக்கு இரக்கம் கிடைக்கப்பண்ணியருளும் என்று பிரார்த்தித்தேன். நான் ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனாயிருந்தேன்.

நெகேமியா 2

1 அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்; நான் முன் ஒருபோதும் அவர் சமுகத்தில் துக்கமாயிருந்ததில்லை. 2 அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து, 3 ராஜாவை நோக்கி: ராஜா என்றைக்கும் வாழ்க; என் பிதாக்களின் கல்லறைகள் இருக்கும் ஸ்தலமாகிய நகரம் பாழானதும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டதுமாய்க் கிடக்கும்போது, நான் துக்கமுகத்தோடு இராதிருப்பது எப்படி என்றேன். 4 அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ கேட்கிற காரியம் என்ன என்றார். அப்பொழுது நான்: பரலோகத்தின் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, 5 ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்கு உமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின் கல்லறைகளிலிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, யூதா தேசத்துக்கு நீர் என்னை அனுப்பவேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன். 6 அப்பொழுது ராஜஸ்திரீயும் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். ராஜா என்னைப் பார்த்து: உன் பிரயாணம் எத்தனைநாள் செல்லும், நீ எப்பொழுது திரும்பிவருவாய் என்று கேட்டார். இவ்வளவுகாலம் செல்லுமென்று நான் ராஜாவுக்குச் சொன்னபோது, என்னை அனுப்ப அவருக்குச் சித்தமாயிற்று. 7 பின்னும் நான் ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், நான் யூதா தேசத்துக்குப் போய்ச்சேருமட்டும், நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு அவர்களுக்குக் கடிதங்கள் கொடுக்கும்படிக்கும், 8 தேவாலயத்துக்கு இருக்கிற அரணின் கதவு வேலைக்கும், நகர அலங்கத்தின் வேலைக்கும், நான் தங்கப்போகிற வீட்டின் வேலைக்கும் வேண்டிய மரங்களை ராஜாவின் வனத்துக் காவலாளனாகிய ஆசாப் எனக்குக் கொடுக்கும்படிக்கும், அவனுக்கும் ஒரு கடிதம் கட்டளையிடப்படுவதாக என்றேன்; என் தேவனுடைய தயவுள்ள கரம் என்மேல் இருந்தபடியால், ராஜா அவைகளை எனக்குக் கட்டளையிட்டார். 9 அப்படியே நான் நதிக்கு அப்புறத்திலிருக்கிற தேசாதிபதிகளிடத்துக்கு வந்து, ராஜாவின் கடிதங்களை அவர்களுக்குக் கொடுத்தேன்; ராஜா என்னோடேகூட இராணுவச் சேர்வைக்காரரையும், குதிரைவீரரையும் அனுப்பியிருந்தார். 10 இதை ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும் கேட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் நன்மையை விசாரிக்க ஒருவன் வந்தான் என்பது அவர்களுக்கு மிகவும் விசனமாயிருந்தது. 11 நான் எருசலேமுக்கு வந்து, அங்கே மூன்றுநாள் இருந்தபின்பு, 12 நான் சில மனுஷரைக் கூட்டிக்கொண்டு, ராத்திரியில் எழுந்து நகர சோதனை செய்தேன்; ஆனாலும் எருசலேமுக்காகச் செய்யும்படி என் தேவன் என் மனதிலே வைத்ததை நான் ஒருவருக்கும் அறிவிக்கவில்லை; நான் ஏறிப்போன மிருகமேயல்லாமல் வேறொரு மிருகமும் என்னோடிருந்ததில்லை. 13 நான் அன்று ராத்திரி பள்ளத்தாக்கின் வாசல்வழியாய்ப் புறப்பட்டு, வலுசர்ப்பத் துரவைக் கடந்து, குப்பைமேட்டு வாசலுக்கு வந்து, எருசலேமில் இடிந்துபோன அலங்கத்தையும், அக்கினியால் சுட்டெரிக்கப்பட்ட அதின் வாசல்களையும் பார்வையிட்டேன். 14 அவ்விடத்தை விட்டு ஊருணி வாசலண்டைக்கும், ராஜாவின் குளத்தண்டைக்கும் போனேன்; நான் ஏறியிருந்த மிருகம் அங்கே நடந்துபோகிறதற்கு வழியில்லாதிருந்தது. 15 அன்று ராத்திரியிலேயே நான் ஆற்றோரமாய்ப் போய், அலங்கத்தைப் பார்வையிட்டுத் திரும்பி, பள்ளத்தாக்கின் வாசல்வழியாய் வந்துவிட்டேன். 16 நான் போனதும், நான் செய்ததும் அதிகாரிகள் ஒருவருக்கும் தெரியாது; அதுவரையிலும் நான் யூதருக்காகிலும், ஆசாரியர்கள் பெரியவர்கள் அதிகாரிகளுக்காகிலும், வேலைசெய்கிற மற்றவர்களுக்காகிலும் ஒன்றும் அறிவிக்கவில்லை. 17 பின்பு நான் அவர்களை நோக்கி: எருசலேம் பாழாயிருக்கிறதையும், அதின் வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டுக்கிடக்கிறதையும், நாம் இருக்கிற சிறுமையையும் பார்க்கிறீர்களே; நாம் இனி நிந்தைக்குள்ளாயிராதபடிக்கு, எருசலேமின் அலங்கத்தைக் கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, 18 என் தேவனுடைய கரம் என்மேல் நன்மையாக இருக்கிறதையும், ராஜா என்னோடே சொன்ன வார்த்தைகளையும் அவர்களுக்கு அறிவித்தேன்; அப்பொழுது அவர்கள்: எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்று சொல்லி, அந்த நல்ல வேலைக்குத் தங்கள் கைகளைத் திடப்படுத்தினார்கள். 19 ஓரோனியனான சன்பல்லாத்தும், அம்மோனியனான தொபியா என்னும் ஊழியக்காரனும், அரபியனான கேஷேமும் இதைக் கேட்டபோது, எங்களைப் பரியாசம்பண்ணி, எங்களை நிந்தித்து: நீங்கள் செய்கிற இந்தக் காரியம் என்ன? நீங்கள் ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணப்போகிறீர்களோ என்றார்கள். 20 அதற்கு நான் மறுமொழியாக: பரலோகத்தின் தேவனானவர் எங்களுக்குக் காரியத்தைக் கைகூடிவரப்பண்ணுவார்; அவருடைய ஊழியக்காரராகிய நாங்கள் எழுந்து கட்டுவோம்; உங்களுக்கோவென்றால் எருசலேமிலே பங்குமில்லை பாத்தியமுமில்லை; உங்கள் பேர் விளங்க ஒன்றும் இல்லையென்று அவர்களுடனே சொன்னேன்.

நெகேமியா 3

1 அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய எலியாசீபும், அவன் சகோதரராகிய ஆசாரியர்களும் எழுந்து, ஆட்டுவாசலைக் கட்டினார்கள்; அதைக் கட்டி, அவர்கள் பிரதிஷ்டைபண்ணி, அதின் கதவுகளை வைத்து, மேயா என்கிற கொம்மைமுதல் அனானெயேலின் கொம்மைமட்டும் கட்டிப் பிரதிஷ்டைபண்ணினார்கள். 2 அவன் அருகே எரிகோவின் மனுஷர் கட்டினார்கள்; அவர்கள் அருகே இம்ரியின் குமாரனாகிய சக்கூர் கட்டினான். 3 மீன்வாசலை அசெனாவின் குமாரர் கட்டினார்கள்; அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள். 4 அவர்கள் அருகே கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே மெஷேசாபெயேலின் குமாரனாகிய பெரகியாவின் மகன் மெசுல்லாம் பழுதுபார்த்துக் கட்டினான்; அவர்கள் அருகே பானாவின் குமாரனாகிய சாதோக் பழுதுபார்த்துக் கட்டினான். 5 அவர்கள் அருகே தெக்கோவா ஊரார் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுடைய பிரபுக்களோ, தங்கள் ஆண்டவருடைய வேலைக்குத் தங்கள் கழுத்தைக் கொடுக்கவில்லை. 6 பழைய வாசலைப் பசெயாகின் குமாரனாகிய யோய்தாவும், பேசோதியாவின் குமாரனாகிய மெசுல்லாமும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதற்கு உத்தரம்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டார்கள். 7 அவர்கள் அருகே கிபியோன் மிஸ்பா ஊர்களின் மனுஷரான மெலதீயா என்னும் கிபியோனியனும், யாதோன் என்னும் மெரொனோத்தியனும், நதிக்கு இப்புறத்திலிருக்கிற அதிபதியின் சமஸ்தானமட்டும் பழுதுபார்த்துக் கட்டினார்கள். 8 அவர்கள் அருகே தட்டாரில் ஒருவனாகிய அராயாவின் குமாரன் ஊசியேல் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே தைலக்காரரில் ஒருவன் குமாரனாகிய அனனியா பழுதுபார்த்துக் கட்டினான்; அதுமுதற்கொண்டு அகலமான மதில்மட்டும் எருசலேம் இடிக்காமல் விட்டிருந்தது. 9 அவர்கள் அருகே எருசலேம் பட்டணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய ஊரின் குமாரன் ரெப்பாயா பழுதுபார்த்துக் கட்டினான். 10 அவர்கள் அருகே அருமாப்பின் குமாரன் யெதாயா தன் வீட்டுக்கு எதிரானதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவன் அருகே ஆசாப்நெயாவின் குமாரன் அத்தூஸ் பழுதுபார்த்துக் கட்டினான். 11 மற்றப் பங்கையும், சூளைகளின் கொம்மையையும், ஆரீமின் குமாரன் மல்கிஜாவும், பாகாத்மோவாபின் குமாரன் அசூபும் பழுதுபார்த்துக் கட்டினார்கள். 12 அவன் அருகே எருசலேம் பட்டணத்தின் மறுபாதிக்குப் பிரபுவாகிய அலோகேசின் குமாரன் சல்லூமும், அவன் குமாரத்திகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள். 13 பள்ளத்தாக்கின் வாசலை ஆனூனும், சானோவாகின் குடிகளும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்கள் அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, குப்பைமேட்டு வாசல்மட்டாக அலங்கத்தில் ஆயிரம் முழம் கட்டினார்கள். 14 குப்பைமேட்டு வாசலைப் பெத்கேரேமின் மாகாணத்துப் பிரபுவாகிய ரெக்காவின் குமாரன் மல்கியா பழுதுபார்த்து, அதைக் கட்டி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டான். 15 ஊருணிவாசலை மிஸ்பாவின் மாகாணத்துப் பிரபுவாகிய கொல்லோசேயின் குமாரன் சல்லூம் பழுதுபார்த்து, அதைக் கட்டி, மச்சுப்பாவி, அதற்குக் கதவுகளையும் பூட்டுகளையும் தாழ்ப்பாள்களையும் போட்டு, ராஜாவின் சிங்காரத் தோட்டத்தண்டையிலிருக்கிற சீலோவாவின் குளத்து மதிலையும், தாவீதின் நகரத்திலிருந்து இறங்குகிற படிகள்மட்டாக இருக்கிறதையும் கட்டினான். 16 அவனுக்குப் பின்னாகப் பெத்சூர் மாகாணத்தின் பாதிக்குப் பிரபுவாகிய அஸ்பூகின் குமாரன் நெகேமியா தாவீதின் கல்லறைகளுக்கு எதிரான இடமட்டாகவும், வெட்டப்பட்ட குளமட்டாகவும், பராக்கிரமசாலிகளின் வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான். 17 அவனுக்குப் பின்னாக லேவியரில் பானியின் குமாரன் ரேகூமும், அவன் அருகே கேகிலா மாகாணத்தில் தன்னுடைய பாதிப்பங்குக்குப் பிரபுவாகிய அசபியாவும் பழுதுபார்த்துக் கட்டினார்கள். 18 அவனுக்குப் பின்னாக அவனுடைய சகோதரரில் கேகிலா மாகாணத்து மறுபாதிக்குப் பிரபுவாகிய எனாதாதின் குமாரன் பாபாயி பழுதுபார்த்துக் கட்டினான். 19 அவன் அருகே மிஸ்பாவின் பிரபுவாகிய யெசுவாவின் குமாரன் ஏசர் என்பவன் மதிலின் கோடியிலே ஆயுதசாலையின் படிகளுக்கு எதிரேயிருக்கிற வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான். 20 அவனுக்குப் பின்னாகச் சாபாயின் குமாரன் பாரூக் அந்தக் கோடி துவக்கிப் பிரதான ஆசாரியனாகிய எலியாசீபின் வாசற்படிமட்டும் இருக்கிற பின்னொரு பங்கை வெகு ஜாக்கிரதையோடே பழுதுபார்த்துக் கட்டினான். 21 அவனுக்குப் பின்னாகக் கோசின் குமாரனாகிய உரியாவின் மகன் மெரெமோத் எலியாசீபின் வீட்டு வாசற்படி துவக்கி அவனுடைய வீட்டின் கடைக்கோடிமட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான். 22 அவனுக்குப் பின்னாகச் சமனான பூமியில் வாசமாயிருக்கிற ஆசாரியர்கள் பழுதுபார்த்துக் கட்டினார்கள். 23 அவர்களுக்குப் பின்னாக பென்யமீனும், அசூபும் தங்கள் வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்குப் பின்னாக அனனியாவின் குமாரனாகிய மாசேயாவின் மகன் அசரியா தன் வீட்டின் அருகே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான். 24 அவனுக்குப் பின்னாக எனாதாதின் குமாரன் பின்னூவி அசரியாவின் வீடு துவக்கி அலங்கத்துக் கோடி வளைவுவரைக்கும் இருக்கிற வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினான். 25 ஊசாயின் குமாரன் பாலால் வளைவுக்கு எதிரேயும், காவல் வீட்டின் முற்றத்துக்கடுத்த ராஜாவின் உயரமான அரமனைக்கு வெளிப்புறமாயிருக்கிற கொம்மைக்கு எதிரேயும் இருக்கிறதைக் கட்டினான்; அவனுக்குப் பின்னாகப் பாரோஷின் குமாரன் பெதாயாவும், 26 ஓபேலிலே குடியிருக்கிற நிதனீமியரைச் சேர்ந்த மனிதரும் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசலுக்கு வெளிப்புறமான கொம்மைக்கு எதிரேயிருக்கிற இடமட்டும் கட்டினார்கள். 27 அவர்களுக்குப் பின்னாகத் தெக்கோவா ஊரார் வெளிப்புறமான பெரிய கொம்மைக்கு எதிரே ஓபேலின் மதில்மட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள். 28 குதிரைவாசல் முதற்கொண்டு ஆசாரியர்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள். 29 அவர்களுக்குப் பின்னாக இம்மேரின் குமாரன் சாதோக் தன் வீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான்; அவனுக்குப் பின்னாகக் கிழக்கு வாசலைக் காக்கிற செக்கனியாவின் குமாரன் செமாயா பழுதுபார்த்துக் கட்டினான். 30 அவனுக்குப் பின்னாகச் செல்மீயாவின் குமாரன் அனனியாவும், சாலாபின் ஆறாவது குமாரனாகிய ஆனூனும், வேறொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்; அவர்களுக்குப் பின்னாகப் பெரகியாவின் குமாரன் மெசுல்லாம், தன் அறைவீட்டுக்கு எதிரே இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான். 31 அவனுக்குப் பின்னாகத் தட்டானின் குமாரன் மல்கியா மிப்காத் என்னும் வாசலுக்கு எதிரே நிதனீமியரும் மளிகைக்காரரும் குடியிருக்கிற ஸ்தலமுதல் கோடியின் மேல்வீடுமட்டாகவும் இருக்கிறதைப் பழுதுபார்த்துக் கட்டினான். 32 கோடியின் மேல்வீட்டுக்கும் ஆட்டுவாசலுக்கும் நடுவே இருக்கிறதைத் தட்டாரும் மளிகைக்காரரும் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

நெகேமியா 4

1 நாங்கள் அலங்கத்தைக் கட்டுகிற செய்தியைச் சன்பல்லாத் கேட்டபோது, அவன் கோபித்து, எரிச்சலடைந்து, யூதரைச் சக்கந்தம்பண்ணி: 2 அந்த அற்பமான யூதர் செய்கிறது என்ன, அவர்களுக்கு இடங்கொடுக்கப்படுமோ, பலியிடுவார்களோ, ஒருநாளிலே முடித்துப்போடுவார்களோ, சுட்டெரித்துப் போடப்பட்டு மண்மேடுகளான கற்களுக்கு உயிர் கொடுப்பார்களோ, என்று தன் சகோதரருக்கும் சமாரியாவின் சேனைக்கும் முன்பாகச் சொன்னான். 3 அப்பொழுது அம்மோனியனாகிய தொபியா அவன் பக்கத்தில் நின்று: அவர்கள் கட்டினாலும் என்ன, ஒரு நரி ஏறிப்போனால் அவர்களுடைய கல்மதில் இடிந்துபோகும் என்றான். 4 எங்கள் தேவனே, நாங்கள் அவமதிக்கப்படுகிறதைக் கேட்டு, அவர்கள் நிந்திக்கிற நிந்தையை அவர்கள் தலையின்மேல் திருப்பி, அவர்களைச் சிறையிருப்பின் தேசத்திலே சூறைக்கு ஒப்புக்கொடும். 5 அவர்கள் அக்கிரமத்தை மூடிப்போடாதேயும்; அவர்கள் பாவம் உமக்கு முன்பாகக் கொலைக்கப்படாதிருப்பதாக; கட்டுகிறவர்களுக்கு மனமடிவுண்டாகப் பேசினார்களே. 6 நாங்கள் அலங்கத்தைக் கட்டிவந்தோம்; அலங்கமெல்லாம் பாதிமட்டும் ஒன்றாய் இணைந்து உயர்ந்தது; ஜனங்கள் வேலைசெய்கிறதற்கு ஆவலாயிருந்தார்கள். 7 எருசலேமின் அலங்கத்தைக் கட்டுகிற வேலை வளர்ந்தேறுகிறது என்றும், இடிக்கப்பட்ட இடங்கள் அடைபட்டுவருகிறது என்றும் சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியரும், அம்மோனியரும், அஸ்தோத்தியரும் கேட்டபோது, அவர்கள் மிகவும் எரிச்சலாகி, 8 எருசலேமின்மேல் யுத்தம்பண்ண எல்லாரும் ஏகமாய் வரவும், வேலையைத் தடுக்கவும் கட்டுப்பாடு பண்ணினார்கள். 9 ஆனாலும் நாங்கள் எங்கள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணி, அவர்கள் நிமித்தம் இரவும்பகலும் ஜாமங்காக்கிறவர்களை வைத்தோம். 10 அப்பொழுது யூதா மனிதர்: சுமைகாரரின் பெலன் குறைந்துபோகிறது; மண்மேடு மிச்சமாயிருக்கிறது; நாங்கள் அலங்கத்தைக் கட்டக்கூடாது என்றார்கள். 11 எங்கள் சத்துருக்களோவென்றால்: நாங்கள் அவர்கள் நடுவே வந்து, அவர்களைக் கொன்றுபோடுமட்டும், அவர்கள் அதை அறியாமலும் பாராமலும் இருக்கவேண்டும்; இவ்விதமாய் அந்த வேலையை ஓயப்பண்ணுவோம் என்றார்கள். 12 அதை அவர்களண்டையிலே குடியிருக்கிற யூதரும், பல இடங்களிலுமிருந்து எங்களிடத்துக்கு வந்து, பத்துவிசை எங்களுக்குச் சொன்னார்கள். 13 அப்பொழுது நான்: அலங்கத்துக்குப் பின்னாக இருக்கிற பள்ளமான இடங்களிலும் மேடுகளிலும், பட்டயங்களையும், ஈட்டிகளையும், வில்லுகளையும் பிடித்திருக்கிற ஜனங்களைக் குடும்பங் குடும்பமாக நிறுத்தினேன். 14 அதை நான் பார்த்து எழும்பி, பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; நீங்கள் மகத்துவமும் பயங்கரமுமான ஆண்டவரை நினைத்து, உங்கள் சகோதரருக்காகவும், உங்கள் குமாரருக்காகவும், உங்கள் குமாரத்திகளுக்காகவும், உங்கள் மனைவிகளுக்காகவும், உங்கள் வீடுகளுக்காகவும் யுத்தம்பண்ணுங்கள் என்றேன். 15 எங்களுக்குச் செய்தி தெரியவந்ததென்றும், தேவன் அவர்கள் ஆலோசனையை அபத்தமாக்கினாரென்றும், எங்கள் பகைஞர் கேட்டபோது, நாங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் வேலையைச் செய்ய அலங்கத்துக்குத் திரும்பினோம். 16 அன்றுமுதற்கொண்டு என் வேலைக்காரரில் பாதிப்பேர் வேலைசெய்தார்கள், பாதிப்பேர் ஈட்டிகளையும் பரிசைகளையும் வில்லுகளையும் கவசங்களையும் பிடித்து நின்றார்கள்; அதிகாரிகள் யூதா வம்சத்தார் எல்லாருக்கும் பின்னாக நின்றார்கள். 17 அலங்கத்திலே கட்டுகிறவர்களும், சுமைசுமக்கிறவர்களும், சுமையேற்றுகிறவர்களும், அவரவர் ஒரு கையினாலே வேலைசெய்து, மறுகையினாலே ஆயுதம் பிடித்திருந்தார்கள். 18 கட்டுகிறவர்கள் அவரவர் தங்கள் பட்டயத்தைத் தங்கள் இடுப்பிலே கட்டிக்கொண்டவர்களாய் வேலைசெய்தார்கள்; எக்காளம் ஊதுகிறவன் என்னண்டையிலே நின்றான். 19 நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் மற்ற ஜனங்களையும் நோக்கி: வேலை பெரிதும் விஸ்தாரமுமாயிருக்கிறது; நாம் அலங்கத்தின்மேல் சிதறப்பட்டு ஒருவருக்கு ஒருவர் தூரமாயிருக்கிறோம். 20 நீங்கள் எவ்விடத்திலே எக்காளச் சத்தத்தைக் கேட்கிறீர்களோ அவ்விடத்திலே வந்து, எங்களோடே கூடுங்கள்; நம்முடைய தேவன் நமக்காக யுத்தம்பண்ணுவார் என்றேன். 21 இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம்; அவர்களிலே பாதிப்பேர் கிழக்கு வெளுக்கும் நேரமுதல் நட்சத்திரங்கள் காணுமட்டும் ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள். 22 அக்காலத்திலே நான் ஜனங்களைப் பார்த்து: இராமாறு நமக்குக் காவலுக்கும் பகல்மாறு வேலைக்கும் உதவ, அவரவர் தங்கள் வேலைக்காரரோடுங்கூட எருசலேமுக்குள்ளே இராத்தங்கக்கடவர்கள் என்று சொல்லி, 23 நானாகிலும், என் சகோதரராகிலும், என் வேலைக்காரராகிலும், என்னைப் பின்பற்றிக் காவல்காக்கிற சேவகராகிலும் எங்கள் வஸ்திரங்களைக் களைந்துபோடாதிருந்தோம்; அவரவருக்கு ஆயுதமும் தண்ணீரும் இருந்தது.

நெகேமியா 5

1 ஜனங்களுக்குள் அநேகரும் அவர்களுடைய ஸ்திரீகளும் யூதராகிய தங்கள் சகோதரர்மேல் முறையிடுகிற பெரிய கூக்குரலுண்டாயிற்று. 2 அதென்னவென்றால், அவர்களில் சிலர்: நாங்கள் எங்கள் குமாரரோடும் எங்கள் குமாரத்திகளோடும் அநேகரானபடியினால், சாப்பிட்டுப் பிழைக்கும்படிக்கு நாங்கள் தானியத்தைக் கடனாக வாங்கினோம் என்றார்கள். 3 வேறு சிலர்: எங்கள் நிலங்களையும் எங்கள் திராட்சத்தோட்டங்களையும் எங்கள் வீடுகளையும் நாங்கள் அடைமானமாக வைத்து, இந்தப் பஞ்சத்திலே தானியம் வாங்கினோம் என்றார்கள். 4 இன்னும் சிலர்: ராஜாவுக்குத் தீர்வைசெலுத்த, நாங்கள் எங்கள் நிலங்கள்மேலும் எங்கள் திராட்சத்தோட்டங்கள்மேலும், பணத்தைக் கடனாக வாங்கினோம் என்றும்; 5 எங்கள் உடலும் எங்கள் சகோதரர் உடலும் சரி; எங்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளும் சரி; ஆனாலும், இதோ, நாங்கள் எங்கள் குமாரரையும் எங்கள் குமாரத்திகளையும் அடிமைத்தனத்திற்கு உட்படுத்தவேண்டியதாயிருக்கிறது; அப்படியே எங்கள் குமாரத்திகளில் சிலர் அடிமைப்பட்டுமிருக்கிறார்கள்; அவர்களை மீட்க எங்களுக்கு நிர்வாகமில்லை; எங்கள் நிலங்களும் எங்கள் திராட்சத்தோட்டங்களும் வேறே மனிதர் கைவசமாயிற்று என்றார்கள். 6 அவர்கள் கூக்குரலையும், இந்த வார்த்தைகளையும் நான் கேட்டபோது, மிகவும் கோபங்கொண்டு, 7 என் மனதிலே ஆலோசனைபண்ணி, பிற்பாடு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபை கூடிவரச்செய்து, 8 அவர்களை நோக்கி: புறஜாதியாருக்கு விற்கப்பட்ட யூதராகிய எங்கள் சகோதரரை நாங்கள் எங்கள் சக்திக்குத்தக்கதாய் மீட்டிருக்கையில், நீங்கள் திரும்ப உங்கள் சகோதரரை விற்கலாமா? இவர்கள் நமக்கு விலைப்பட்டுப்போகலாமா என்றேன்; அப்பொழுது அவர்கள் மறுஉத்தரவு சொல்ல இடமில்லாமல் மவுனமாயிருந்தார்கள். 9 பின்னும் நான் அவர்களை நோக்கி: நீங்கள் செய்கிற காரியம் நல்லதல்ல; நம்முடைய பகைஞராகிய புறஜாதியார் நிந்திக்கிறதினிமித்தம் நீங்கள் நம்முடைய தேவனுக்குப் பயந்து நடக்கவேண்டாமா? 10 நானும் என் சகோதரரும் என் வேலைக்காரரும் இவ்விதமாகவா அவர்களுக்குப் பணமும் தானியமும் கடன்கொடுத்திருக்கிறோம்? இந்த வட்டியை விட்டுவிடுவோமாக. 11 நீங்கள் இன்றைக்கு அவர்கள் நிலங்களையும், அவர்கள் திராட்சத்தோட்டங்களையும், அவர்கள் ஒலிவத்தோப்புகளையும், அவர்கள் வீடுகளையும், நீங்கள் பணத்திலும் தானியத்திலும் திராட்சரசத்திலும் எண்ணெயிலும் நூற்றுக்கொன்று வீதமாக அவர்களிடத்தில் தண்டிவருகிற வட்டியையும், அவர்களுக்குத் திரும்பக் கொடுத்துவிடுங்கள் என்றேன். 12 அதற்கு அவர்கள்: நாங்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிட்டு, இனி அப்படி அவர்களிடத்தில் கேட்கமாட்டோம்; நீர் சொல்லுகிறபடியே செய்வோம் என்றார்கள்; அப்பொழுது நான் ஆசாரியர்களை அழைத்து, அவர்கள் இந்த வார்த்தையின்படி செய்ய அவர்களை ஆணையிடுவித்துக்கொண்டேன். 13 நான் என் வஸ்திரத்தை உதறிப்போட்டு, இப்படி இந்த வார்த்தையை நிறைவேற்றாத எந்த மனிதனையும் அவன் வீட்டிலும் அவன் சம்பாத்தியத்திலும் இருந்து தேவன் உதறிப்போடக்கடவர்; இந்தப்பிரகாரமாக அவன் உதறிப்போடப்பட்டு, வெறுமையாய்ப் போவானாக என்றேன்; அதற்குச் சபையார் எல்லாரும் ஆமென் என்று சொல்லி, கர்த்தரைத் துதித்தார்கள்; பின்பு ஜனங்கள் இந்த வார்த்தையின்படியே செய்தார்கள். 14 நான் யூதாதேசத்திலே அதிபதியாயிருக்கும்படி ராஜாவாகிய அர்தசஷ்டா எனக்குக் கற்பித்த நாளாகிய அவருடைய இருபதாம் வருஷம் தொடங்கி, அவருடைய முப்பத்திரண்டாம் வருஷம்வரைக்குமிருந்த பன்னிரண்டு வருஷகாலமாய், நானும் என் சகோதரரும் அதிபதிகள் வாங்குகிற படியை வாங்கிச் சாப்பிடவில்லை. 15 எனக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், நாற்பது சேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்கள் வேலைக்காரர் முதலாய் ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை. 16 ஒரு வயலையாவது நாங்கள் கொள்ளவில்லை; அந்த அலங்கத்தின் வேலையிலே முயன்று நின்றேன்; என் வேலைக்காரரனைவரும் கூட்டமாய் அந்த வேலைக்குக் கூடிவந்தார்கள். 17 யூதரும் மூப்பருமான நூற்றைம்பதுபேரும், எங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளிடத்திலிருந்து எங்களிடத்திற்கு வந்தவர்களும் என் பந்தியில் சாப்பிட்டார்கள். 18 நாளொன்றுக்கு ஒரு காளையும், முதல்தரமான ஆறு ஆடும் சமைக்கப்பட்டது; பட்சிகளும் சமைக்கப்பட்டது; பத்துநாளைக்கு ஒருதரம் நானாவிதத் திராட்சரசமும் செலவழிந்தது; இப்படியெல்லாம் இருந்தபோதும், இந்த ஜனங்கள் பட்டபாடு கடினமாயிருந்தபடியால், அதிபதிகள் வாங்குகிற படியை நான் வாங்கவில்லை. 19 என் தேவனே, நான் இந்த ஜனத்துக்காகச் செய்த எல்லாவற்றின்படியும் எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.

நெகேமியா 6

1 நான் அலங்கத்தைக் கட்டிமுடித்ததையும், இனி அதிலே திறப்பு ஒன்றுமில்லை என்பதையும், சன்பல்லாத்தும், தொபியாவும், அரபியனான கேஷேமும் எங்களுக்குண்டாயிருந்த மற்றப் பகைஞரும் கேள்விப்பட்டபோது, 2 நான் வாசல்களுக்கு இன்னும் கதவுபோடாதிருக்கையில், சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டார்கள்; அவர்களோவென்றால் எனக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்தார்கள். 3 அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக்கூடாது; நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன். 4 அவர்கள் இந்தப்பிரகாரமாக நாலுதரம் எனக்குச் சொல்லியனுப்பினார்கள்; நானும் இந்தப்பிரகாரமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன். 5 ஐந்தாந்தரமும் சன்பல்லாத்து அந்தப் பிரகாரமாகவே தன் வேலைக்காரனையும், அவன் கையிலே முத்திரைபோடாத ஒரு கடிதத்தையும் எனக்கு அனுப்பினான். 6 அதிலே: நீரும் யூதரும் கலகம்பண்ண நினைக்கிறீர்கள் என்றும், அதற்காக நீர் அலங்கத்தைக் கட்டுகிறீர் என்றும், இவ்விதமாக நீர் அவர்களுக்கு ராஜாவாகப் போகிறீர் என்றும், 7 யூதாவிலே ஒரு ராஜா இருக்கிறார் என்று உம்மைக்குறித்து எருசலேமிலே கூறுகிற தீர்க்கதரிசிகளையும் சம்பாதித்தீரென்றும் புறஜாதிகளுக்குள்ளே பிரஸ்தாபமாயிருக்கிறது, கஷ்மூவும் அப்படிச் சொல்லுகிறான்; இப்போதும் இந்தச் செய்தி ராஜாவுக்கு எட்டுமே; ஆகையால் நாம் ஒருவரோடொருவர் ஆலோசனைபண்ணுகிறதற்காக நீர் வரவேண்டும் என்று எழுதியிருந்தது. 8 அதற்கு நான்: நீர் சொல்லுகிற அந்தக் காரியங்களில் ஒன்றும் நடக்கவில்லை; அவைகள் உம்முடைய மனோராஜ்யமே ஒழிய வேறல்ல என்று சொல்லியனுப்பினேன். 9 அந்த வேலை நடந்தேறாதபடிக்கு, எங்கள் கை சலித்துப்போம் என்று சொல்லி, அவர்கள் எல்லாரும் எங்களைப் பயமுறுத்தப்பார்த்தார்கள். ஆதலால் தேவனே, நீர் என் கைகளைத் திடப்படுத்தியருளும். 10 மெகதாபெயேலின் குமாரனாகிய தெலாயாவின் மகன் செமாயா தன் வீட்டிலே அடைக்கப்பட்டிருக்கும்போது, நான் அவனிடத்தில் போனேன்; அப்பொழுது அவன்: நாம் இருவருமாய் தேவனுடைய வீடாகிய ஆலயத்துக்குள்ளே போய், தேவாலயத்தின் கதவுகளைப் பூட்டுவோம் வாரும்; உம்மைக் கொன்றுபோட வருவார்கள், இரவிலே உம்மைக் கொன்றுபோட வருவார்கள் என்றான். 11 அதற்கு நான்: என்னைப்போன்ற மனிதன் ஓடிப்போவானோ? என்னைப் போன்றவன் உயிர் பிழைக்கும்படி தேவாலயத்திலே போய்ப் பதுங்குவானோ? நான் போவதில்லை என்றேன். 12 தேவன் அவனை அனுப்பவில்லையென்றும், தொபியாவும் சன்பல்லாத்தும் அவனுக்குக் கூலிகொடுத்ததினால், அவன் எனக்கு விரோதமாய் அந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொன்னான் என்றும் அறிந்துகொண்டேன். 13 நான் பயந்து அப்படிச் செய்து பாவங்கட்டிக்கொள்ளுகிறதற்கும், என்னை நிந்திக்கத்தக்க அபகீர்த்திக்கு முகாந்தரம் உண்டாக்குகிறதற்கும் அவனுக்குக் கைக்கூலி கொடுத்திருந்தார்கள். 14 என் தேவனே, தொபியாவும் சன்பல்லாத்தும் செய்த இந்தச் செய்கைகளுக்குத்தக்கதாக நீர் அவர்களையும், நொவதியாள் என்னும் தீர்க்கதரிசியானவளையும், எனக்குப் பயமுண்டாக்கப் பார்த்த மற்றத் தீர்க்கதரிசிகளையும் நினைத்துக்கொள்ளும். 15 அப்படியே அலங்கமானது ஐம்பத்திரண்டு நாளைக்குள்ளே கட்டப்பட்டு, எலூல் மாதம் இருபத்தைந்தாந்தேதியிலே முடிந்தது. 16 எங்கள் பகைஞர் எல்லாரும் அதைக் கேட்டபோதும், எங்கள் சுற்றுப்புறத்தாராகிய புறஜாதியான அனைவரும் கண்டபோதும், மிகவும் முனையற்றுப்போய், இந்தக் கிரியை எங்கள் தேவனால் கைகூடி வந்ததென்று அறிந்தார்கள். 17 அந்த நாட்களில் யூதாவிலுள்ள பெரிய மனிதரிடத்திலிருந்து தொபியாவுக்குப் போகிறதும், தொபியாவினிடத்திலிருந்து அவர்களுக்கு வருகிறதுமான கடிதங்கள் அநேகமாயிருந்தது. 18 அவன் ஆராகின் குமாரனாகிய செகனியாவுக்கு மருமகனாயிருந்ததும் அல்லாமல், அவன் குமாரனாகிய யோகனான் பெரகியாவின் குமாரனாகிய மெசுல்லாமின் குமாரத்தியை விவாகம்பண்ணியிருந்தபடியாலும், யூதாவில் அநேகர் அவனுக்கு ஆணையிட்டுக் கொடுத்திருந்தார்கள். 19 அவன் செய்யும் நன்மைகளையும் அவர்கள் எனக்கு முன்பாக விவரித்து, என் வார்த்தைகளை அவனுக்குக் கொண்டுபோவார்கள்; தொபியா எனக்குப் பயமுண்டாகக் கடிதங்களை அனுப்புவான்.

நெகேமியா 7

1 அலங்கம் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும், பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தினபின்பு, 2 நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப்பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல் விசாரணைக்கு ஏற்படுத்தினேன். 3 அவர்களை நோக்கி: வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம்; நீங்கள் நிற்கும்போதே கதவுகளைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு, எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன். 4 பட்டணம் விஸ்தாரமும் பெரிதுமாயிருந்தது, அதற்குள்ளே ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை. 5 அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்க்கிறதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்ய, என் தேவன் என் மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முந்தி வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புஸ்தகம் அப்பொழுது எனக்கு அகப்பட்டது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்: 6 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து, 7 எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியிறங்கினவர்களுமான இந்தத் தேசத்தின் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனங்களான மனிதரின் தொகையாவது: 8 பாரோஷின் புத்திரர் இரண்டாயிரத்து நூற்று எழுபத்திரண்டுபேர். 9 செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர். 10 ஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர். 11 யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத்மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப்பேர். 12 ஏலாமின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர். 13 சத்தூவின் புத்திரர் எண்ணூற்று நாற்பத்தைந்துபேர். 14 சக்காயின் புத்திரர் எழுநூற்று அறுபதுபேர். 15 பின்னூவின் புத்திரர் அறுநூற்று நாற்பத்தெட்டுப்பேர். 16 பெபாயின் புத்திரர் அறுநூற்று இருபத்தெட்டுப்பேர். 17 அஸ்காதின் புத்திரர் இரண்டாயிரத்து முந்நூற்று இருபத்திரண்டுபேர். 18 அதோனிகாமின் புத்திரர் அறுநூற்று அறுபத்தேழுபேர். 19 பிக்வாயின் புத்திரர் இரண்டாயிரத்து அறுபத்தேழுபேர். 20 ஆதீனின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்தைந்துபேர். 21 எசேக்கியாவின் சந்ததியான ஆதேரின் புத்திரர் தொண்ணூற்று எட்டுப்பேர். 22 ஆசூமின் புத்திரர் முந்நூற்று இருபத்தெட்டுப்பேர். 23 பேசாயின் புத்திரர் முந்நூற்று இருபத்துநாலுபேர். 24 ஆரீப்பின் புத்திரர் நூற்றுப்பன்னிரண்டுபேர். 25 கிபியோனின் புத்திரர் தொண்ணூற்று ஐந்துபேர். 26 பெத்லெகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும் நூற்று எண்பத்தெட்டுப்பேர். 27 ஆனதோத்தூர் மனிதர் நூற்று இருபத்தெட்டுப்பேர். 28 பெத்அஸ்மாவேத் ஊரார் நாற்பத்திரண்டுபேர். 29 கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர். 30 ராமா, காபா ஊர்களின் மனிதர் அறுநூற்று இருபத்தொருபேர். 31 மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர். 32 பெத்தேல், ஆயி ஊர்களின் மனிதர் நூற்று இருபத்துமூன்றுபேர். 33 வேறொரு நேபோ ஊரார் ஐம்பத்திரண்டுபேர். 34 மற்றொரு ஏலாம் புத்திரர் ஆயிரத்து இருநூற்று ஐம்பத்துநாலுபேர். 35 ஆரீம் புத்திரர் முந்நூற்று இருபதுபேர். 36 எரிகோ புத்திரர் முந்நூற்று நாற்பத்தைந்துபேர். 37 லோத், ஆதீத், ஓனோ ஊர்களின் புத்திரர் எழுநூற்று இருபத்தொருபேர். 38 செனாகா புத்திரர் மூவாயிரத்துத் தொளாயிரத்து முப்பதுபேர். 39 ஆசாரியரானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர். 40 இம்மேரின் புத்திரர் ஆயிரத்து ஐம்பத்திரண்டுபேர். 41 பஸ்கூரின் புத்திரர் ஆயிரத்து இருநூற்று நாற்பத்தேழுபேர். 42 ஆரீமின் புத்திரர் ஆயிரத்துப் பதினேழுபேர். 43 லேவியரானவர்கள்: ஒதியாவின் புத்திரருக்குள்ளே கத்மியேலின் குமாரனாகிய யெசுவாவின் புத்திரர் எழுபத்துநாலுபேர். 44 பாடகரானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்று நாற்பத்தெட்டுப்பேர். 45 வாசல் காவலாளரானவர்கள்: சல்லூமின் புத்திரர், அதேரின் புத்திரர், தல்மோனின் புத்திரர், அக்கூபின் புத்திரர், அதிதாவின் புத்திரர், சோபாயின் புத்திரர், ஆக நூற்று முப்பத்தெட்டுப்பேர். 46 நிதனீமியரானவர்கள்: சீகாவின் புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர், 47 கேரோசின் புத்திரர், சீயாவின் புத்திரர், பாதோனின் புத்திரர், 48 லெபானாவின் புத்திரர், அகாபாவின் புத்திரர், சல்மாயின் புத்திரர், 49 ஆனானின் புத்திரர், கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர், 50 ராயாகின் புத்திரர், ரேத்சீனின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், 51 காசாமின் புத்திரர், ஊசாவின் புத்திரர், பாசெயாகின் புத்திரர், 52 பேசாயின் புத்திரர், மெயுநீமின் புத்திரர், நெபிஷசீமின் புத்திரர், 53 பக்பூக்கின் புத்திரர், அகுபாவின் புத்திரர், அர்கூரின் புத்திரர், 54 பஸ்லீதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர், 55 பர்கோசின் புத்திரர், சிசெராவின் புத்திரர், தாமாவின் புத்திரர், 56 நெத்சியாகின் புத்திரர், அதிபாவின் புத்திரர், 57 சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெரிதாவின் புத்திரர், 58 யாலாவின் புத்திரர், தர்கோனின் புத்திரர், கித்தேலின் புத்திரர், 59 செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், பொகெரேத் செபாயிமிலுள்ள புத்திரர், ஆமோனின் புத்திரர். 60 நிதனீமியரும், சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் ஏகத்துக்கு முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர். 61 தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்: 62 தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டுபேர். 63 ஆசாரியர்களில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கிலேயாத்தியனான பர்சில்லாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரர். 64 இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய், ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள். 65 ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், அவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான். 66 சபையார் எல்லாரும் ஏகத்துக்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள். 67 அவர்களைத்தவிர ஏழாயிரத்து முந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும் வேலைக்காரிகளும், இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள். 68 அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்கள் கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து. 69 ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது. 70 வம்சத்தலைவரில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா ஆயிரம் தங்கக்காசையும், ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய வஸ்திரங்களையும் பொக்கிஷத்துக்குக் கொடுத்தான். 71 வம்சத்தலைவரில் சிலர் வேலையின் பொக்கிஷத்துக்கு இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரத்து இருநூறு ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள். 72 மற்ற ஜனங்கள் இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரம் ராத்தல் வெள்ளியையும், அறுபத்தேழு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள். 73 ஆசாரியரும், லேவியரும், வாசல்காவலாளரும், பாடகரும், ஜனங்களில் சிலரும், நிதனீமியரும், இஸ்ரவேலர் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.

நெகேமியா 8

1 ஜனங்கள் எல்லாரும் தண்ணீர்வாசலுக்கு முன்னான வீதியிலே ஒருமனப்பட்டுக் கூடி, கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கற்பித்த மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தைக் கொண்டுவரவேண்டுமென்று வேதபாரகனாகிய எஸ்றாவுக்குச் சொன்னார்கள். 2 அப்படியே ஏழாம் மாதம் முதல்தேதியில் ஆசாரியனாகிய எஸ்றா நியாயப்பிரமாணத்தைப் புருஷரும் ஸ்திரீகளும், கேட்டு அறியத்தக்க அனைவருமாகிய சபைக்கு முன்பாகக் கொண்டுவந்து, 3 தண்ணீர் வாசலுக்கு முன்னான வீதிக்கு எதிரேயிருந்து காலமேதொடங்கி மத்தியானமட்டும் புருஷருக்கும் ஸ்திரீகளுக்கும், கேட்டு அறியத்தக்க மற்றவர்களுக்கும் முன்பாக அதை வாசித்தான்; சகல ஜனங்களும் நியாயப்பிரமாண புஸ்தகத்திற்குக் கவனமாய்ச் செவிகொடுத்தார்கள். 4 வேதபாரகனாகிய எஸ்றா அதற்கென்று மரத்தால் செய்யப்பட்ட ஒரு பிரசங்கபீடத்தின்மேல் நின்றான்; அவனண்டையில் அவனுக்கு வலதுபக்கமாக மத்தித்தியாவும், செமாவும், அனாயாவும், உரியாவும், இல்க்கியாவும், மாசெயாவும், அவனுக்கு இடதுபக்கமாகப் பெதாயாவும், மீசவேலும், மல்கியாவும், அசூமும், அஸ்பதானாவும், சகரியாவும், மெசுல்லாமும் நின்றார்கள். 5 எஸ்றா சகல ஜனங்களுக்கும் உயரநின்று, சகல ஜனங்களும் காணப் புஸ்தகத்தைத் திறந்தான்; அவன் அதைத்திறந்தபோது, ஜனங்கள் எல்லாரும் எழுந்துநின்றார்கள். 6 அப்பொழுது எஸ்றா மகத்துவமுள்ள தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரித்தான்; ஜனங்களெல்லாரும் தங்கள் கைகளைக் குவித்து, அதற்கு மறுமொழியாக, ஆமென் ஆமென் என்று சொல்லி, குனிந்து, முகங்குப்புறவிழுந்து, கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள். 7 யெசுவா, பானி, செரெபியா, யாமின், அக்கூப், சபெதாயி, ஒதியா, மாசெயா, கேலிதா, அசரியா, யோசபாத், ஆனான், பெலாயா என்பவர்களும், லேவியரும், நியாயப்பிரமாணத்தை ஜனங்களுக்கு விளங்கப்பண்ணினார்கள்; ஜனங்கள் தங்கள் நிலையிலே நின்றார்கள். 8 அவர்கள் தேவனுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை தீர்க்கமாக வாசித்து, அர்த்தஞ்சொல்லி, வாசித்ததை அவர்களுக்கு விளங்கப்பண்ணினார்கள். 9 ஜனங்கள் எல்லாரும் நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, அழுதபடியால், திர்ஷாதா என்னப்பட்ட நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும், ஜனங்களுக்கு விளக்கிக்காட்டின லேவியரும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த நாள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான நாள்; நீங்கள் துக்கப்படவும் அழவும் வேண்டாம் என்றார்கள். 10 பின்னும் அவன் அவர்களை நோக்கி: நீங்கள் போய்க் கொழுமையானதைப் புசித்து, மதுரமானதைக் குடித்து, ஒன்றுமில்லாதவர்களுக்குப் பங்குகளை அனுப்புங்கள்; இந்த நாள் நம்முடைய ஆண்டவருக்குப் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம்; கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன் என்றான். 11 லேவியரும் ஜனங்களையெல்லாம் அமர்த்தி: அழாதிருங்கள், இந்த நாள் பரிசுத்தமான நாள், விசாரப்படவேண்டாம் என்றார்கள். 12 அப்பொழுது ஜனங்கள் எல்லாரும் தங்களுக்கு அறிவிக்கப்பட்ட வார்த்தைகளை உணர்ந்துகொண்டபடியால், புசித்துக் குடிக்கவும், பங்குகளை அனுப்பவும், மிகுந்த சந்தோஷம் கொண்டாடவும் போனார்கள். 13 மறுநாளில் ஜனத்தின் சகல வம்சத்தலைவரும், ஆசாரியரும், லேவியரும், நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை அறிந்துகொள்ளவேண்டும் என்று வேதபாரகனாகிய எஸ்றாவினிடத்தில் கூடிவந்தார்கள். 14 அப்பொழுது நியாயப்பிரமாணத்திலே, இஸ்ரவேல் புத்திரர் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே கூடாரங்களில் குடியிருக்கவேண்டும் என்று கர்த்தர் மோசேயைக்கொண்டு கற்பித்த காரியம் எழுதியிருக்கிறதைக் கண்டார்கள். 15 ஆகையால் எழுதியிருக்கிறபடி கூடாரங்களைப் போடும்படிக்கு, நீங்கள் மலைகளுக்குப் புறப்பட்டுப்போய் ஒலிவக்கிளைகளையும், காட்டு ஒலிவக்கிளைகளையும், மிருதுச் செடிகளின் கிளைகளையும், பேரீச்ச மட்டைகளையும், அடர்ந்தமரக்கிளைகளையும் கொண்டுவாருங்கள் என்று தங்களுடைய சகல பட்டணங்களிலும், எருசலேமிலும் கூறிப் பிரசித்தப்படுத்தினார்கள். 16 அப்படியே ஜனங்கள் வெளியே போய் அவைகளைக் கொண்டுவந்து, அவரவர் தங்கள் வீடுகள்மேலும், தங்கள் முற்றங்களிலும், தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும், தண்ணீர்வாசல் வீதியிலும், எப்பிராயீம் வாசல் வீதியிலும் தங்களுக்குக் கூடாரங்களைப் போட்டார்கள். 17 இந்தப்பிரகாரமாகச் சிறையிருப்பிலிருந்து திரும்பி வந்தவர்களின் சபையார் எல்லாரும் கூடாரங்களைப் போட்டு, கூடாரங்களில் குடியிருந்தார்கள்; இப்படியே நூனின் குமாரனாகிய யோசுவாவின் நாட்கள்முதல் அந்நாள்மட்டும் இஸ்ரவேல் புத்திரர் செய்யாதிருந்து இப்பொழுது செய்தபடியால், மிகுந்த சந்தோஷமுண்டாயிருந்தது. 18 முதலாம் நாள் தொடங்கிக் கடைசிநாள்மட்டும், தினம்தினம் தேவனுடைய நியாயப்பிரமாண புஸ்தகம் வாசிக்கப்பட்டது; ஏழுநாள் பண்டிகையை ஆசரித்தார்கள்; எட்டாம்நாளோவெனில், முறைமையின்படியே விசேஷித்த ஆசரிப்பு நாளாயிருந்தது.

நெகேமியா 9

1 அந்த மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இஸ்ரவேல் புத்திரர் உபவாசம்பண்ணி, இரட்டுடுத்தி, தங்கள்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவர்களாய்க் கூடிவந்தார்கள். 2 இஸ்ரவேல் சந்ததியார் மறுஜாதியாரையெல்லாம் விட்டுப்பிரிந்து வந்து நின்று, தங்கள் பாவங்களையும், தங்கள் பிதாக்களின் அக்கிரமங்களையும் அறிக்கையிட்டார்கள். 3 அவர்கள் எழுந்திருந்து, தங்கள் நிலையில் நின்றார்கள்; அப்பொழுது ஒரு ஜாமமட்டும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணப் புஸ்தகம் வாசிக்கப்பட்டது; பின்பு ஒரு ஜாமமட்டும் அவர்கள் பாவ அறிக்கை பண்ணி, தங்கள் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டார்கள். 4 யெசுவா, பானி, கத்மியேல், செப்பனியா, புன்னி, செரெபியா, பானி, கெனானி என்பவர்கள் லேவியருடைய படிகளின்மேல் நின்று, தங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி மகா சத்தமாய் ஓலமிட்டார்கள். 5 பின்பு லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா என்பவர்கள் ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எழுந்திருந்து, அநாதியாய் என்றென்றைக்குமிருக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள் என்று சொல்லி, கர்த்தரை நோக்கி: எந்த ஸ்துதி ஸ்தோத்திரத்துக்கும் மேலான உம்முடைய மகிமையுள்ள நாமத்துக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. 6 நீர் ஒருவரே கர்த்தர்; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும், பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மைப் பணிந்துகொள்ளுகிறது. 7 ஆபிராமைத் தெரிந்துகொண்டு, அவனை ஊர் என்னும் கல்தேயரின் பட்டணத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவனுக்கு ஆபிரகாம் என்னும் பேரிட்ட தேவனாகிய கர்த்தர் நீர். 8 அவன் இருதயத்தை உமக்கு முன்பாக உண்மையுள்ளதாகக்கண்டு, கானானியர், ஏத்தியர், எமோரியர், பெரிசியர், எபூசியர், கிர்காசியருடைய தேசத்தை அவன் சந்ததிக்குக் கொடுக்கும்படி, அவனோடு உடன்படிக்கைபண்ணி, உம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினீர்; நீர் நீதியுள்ளவர். 9 எகிப்திலே எங்கள் பிதாக்கள் அநுபவித்த சிறுமையை நீர் கண்டு, சிவந்த சமுத்திரத்தில் அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டீர். 10 பார்வோனிடத்திலும், அவனுடைய எல்லா ஊழியக்காரரிடத்திலும், அவன் தேசத்தின் சகல ஜனத்தினிடத்திலும், அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்தீர்; அவர்கள் உமது ஜனங்களை அகந்தையாய் நடத்தினார்கள் என்பதை அறிந்திருந்தீர்; இப்படியே இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி உமக்குக் கீர்த்தியை உண்டாக்கினீர். 11 நீர் அவர்களுக்கு முன்பாகச் சமுத்திரத்தைப் பிரித்ததினால், கடலின் நடுவாகக் கால்நனையாமல் நடந்தார்கள்; வலுவான தண்ணீர்களிலே கல்லைப்போடுகிறதுபோல, அவர்களைத் தொடர்ந்தவர்களை ஆழங்களிலே போட்டுவிட்டீர். 12 நீர் பகலிலே மேகஸ்தம்பத்தினாலும், அவர்கள் நடக்கவேண்டிய வழியை அவர்களுக்கு வெளிச்சமாக்க இரவிலே அக்கினிஸ்தம்பத்தினாலும், அவர்களை வழிநடத்தினீர். 13 நீர் சீனாய் மலையிலிறங்கி, வானத்திலிருந்து அவர்களோடே பேசி, அவர்களுக்குச் செம்மையான நீதிநியாயங்களையும், நல்ல கட்டளைகளும் கற்பனைகளுமாகிய உண்மையான பிரமாணங்களையும் கொடுத்தீர். 14 உமது பரிசுத்த ஓய்வுநாளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, உமது தாசனாகிய மோசேயைக்கொண்டு, அவர்களுக்குக் கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயப்பிரமாணங்களையும் கற்பித்தீர். 15 அவர்கள் பசிக்கு வானத்திலிருந்து அப்பம் கொடுத்து, அவர்கள் தாகத்துக்குக் கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணி, நீர் அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளப் பிரவேசியுங்கள் என்று அவர்களுக்குச் சொன்னீர். 16 எங்கள் பிதாக்களாகிய அவர்களோ அகங்காரமாய் நடந்து, தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாதே போனார்கள். 17 அவர்கள் செவிகொடுக்க மனதில்லாமலும், அவர்களிடத்திலே நீர் செய்த உம்முடைய அற்புதங்களை நினையாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் அடிமைத்தனத்துக்குத் திரும்பும்படிக்கு அவர்கள் கலகம்பண்ணி, ஒரு தலைவனை ஏற்படுத்தினார்கள்; ஆகிலும் வெகுவாய் மன்னிக்கிறவரும், இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும், மகா கிருபையுமுள்ளவருமான தேவனாகிய நீர் அவர்களைக் கைவிடவில்லை. 18 அவர்கள் வார்ப்பிக்கப்பட்ட ஒரு கன்றுக்குட்டியைத் தங்களுக்கு உண்டாக்கி: இது உன்னை எகிப்திலிருந்து கொண்டுவந்த உன் தெய்வம் என்று சொல்லி, கோபமூட்டத்தக்க பெரிய அக்கிரமங்களைச் செய்திருந்தாலும், 19 நீர் உம்முடைய மிகுந்த மனஉருக்கத்தின்படியே, அவர்களை வனாந்தரத்திலே கைவிடவில்லை; அவர்களை வழிநடத்தப் பகலிலே மேகஸ்தம்பமும், அவர்களுக்கு வெளிச்சத்தையும் அவர்கள் நடக்கவேண்டிய வழியையும் காட்ட இரவிலே அக்கினிஸ்தம்பமும், அவர்களை விட்டு விலகவில்லை. 20 அவர்களுக்கு அறிவை உணர்த்த உம்முடைய நல் ஆவியைக் கட்டளையிட்டீர்; அவர்கள் வாய்க்கு உம்முடைய மன்னாவை அருளி, அவர்கள் தாகத்துக்குத் தண்ணீரைக் கொடுத்தீர். 21 இப்படி நாற்பது வருஷமாக வனாந்தரத்தில் அவர்களுக்கு ஒன்றும் குறைவுபடாதபடிக்கு, அவர்களைப் பராமரித்து வந்தீர்; அவர்கள் வஸ்திரங்கள் பழமையாய்ப்போகவுமில்லை, அவர்கள் கால்கள் வீங்கவுமில்லை. 22 அவர்களுக்கு ராஜ்யங்களையும் ஜனங்களையும் ஒப்புக்கொடுத்து, அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும், பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள். 23 அவர்கள் பிள்ளைகளை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, சுதந்தரித்துக்கொள்ளும்படி நீர் அவர்கள் பிதாக்களுக்குச் சொன்ன தேசத்திலே அவர்களை அழைத்துவந்தீர். 24 அப்படியே பிள்ளைகள் உட்பிரவேசித்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டார்கள்; நீர் அவர்களுக்கு முன்பாகத் தேசத்தின் குடிகளாகிய கானானியரைத் தாழ்த்தி, அவர்களையும் அவர்கள் ராஜாக்களையும், தேசத்தின் ஜனங்களையும், தங்கள் இஷ்டப்படி செய்ய, அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தீர். 25 அவர்கள் அரணான பட்டணங்களையும், செழுமையான பூமியையும் கட்டிக்கொண்டு, சகலவித உடைமைகள் நிறைந்த வீடுகளையும், வெட்டப்பட்ட துரவுகளையும், ஏராளமான திராட்சத்தோட்டங்களையும், ஒலிவத்தோப்புகளையும், கனிகொடுக்கும் விருட்சங்களையும் சுதந்தரித்துக்கொண்டு, புசித்துத் திருப்தியாகிக் கொழுத்து, உம்முடைய பெரிய தயையினால் செல்வமாய் வாழ்ந்தார்கள். 26 ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகி, உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உம்முடைய நியாயப்பிரமாணத்தைத் தங்களுக்குப் புறம்பே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திருப்பும்படி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமூட்டுகிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள். 27 ஆகையால் அவர்களை நெருக்குகிற அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தீர்; அவர்கள் நெருக்கம் அநுபவிக்கிற காலத்தில் அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உம்முடைய மிகுந்த இரக்கத்தினால் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கிவிடுகிற இரட்சகர்களை அவர்களுக்குக் கொடுத்தீர். 28 அவர்களுக்கு இளைப்பாறுதல் உண்டானபோதோ, உமக்கு முன்பாக மறுபடியும் பொல்லாப்புச் செய்யத்தொடங்கினார்கள்; ஆகையால் அவர்கள் சத்துருக்கள் அவர்களை ஆளும்படிக்கு, அவர்கள் கையிலே ஒப்புவித்தீர்; அவர்கள் மனந்திரும்பி, உம்மை நோக்கிக் கூப்பிட்டபோதோ, நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, அவர்களை உம்முடைய இரக்கங்களின்படியே அநேகந்தரம் விடுதலையாக்கிவிட்டீர். 29 அவர்களை உம்முடைய நியாயப்பிரமாணத்துக்குத் திருப்ப அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டீர்; ஆனாலும் அவர்கள் அகங்காரங்கொண்டு, உம்முடைய கற்பனைகளுக்குச் செவிகொடாமல், கீழ்ப்படிந்து நடக்கிற மனுஷன் செய்து பிழைக்கிற உம்முடைய நீதிநியாயங்களுக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, தங்கள் தோளை முரண்டுத்தனமாய் விலக்கி, செவிகொடாமல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்திக்கொண்டார்கள். 30 நீர் அநேக வருஷமாக அவர்கள்மேல் பொறுமையாயிருந்து, உம்முடைய ஆவியினால் பேசின உம்முடைய தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டாலும், அவர்கள் செவிகொடாதபடியினாலே, அவர்களை அந்நிய தேசஜனங்களின் கையில் ஒப்புக்கொடுத்தீர். 31 ஆகிலும் உம்முடைய மிகுந்த இரக்கங்களின்படியே, அவர்களை நிர்மூலமாக்காமலும் அவர்களைக் கைவிடாமலும் இருந்தீர்; நீர் கிருபையும் இரக்கமுமுள்ள தேவன். 32 இப்பொழுதும் உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற வல்லமையும் பயங்கரமுமுள்ள மகா தேவனாகிய எங்கள் தேவனே, அசீரியா ராஜாக்களின் நாட்கள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் எங்களுக்கும், எங்கள் ராஜாக்களுக்கும், எங்கள் பிரபுக்களுக்கும், எங்கள் ஆசாரியர்களுக்கும், எங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், எங்கள் பிதாக்களுக்கும், உம்முடைய ஜனங்கள் அனைவருக்கும் நேரிட்ட சகல வருத்தமும் உமக்கு முன்பாக அற்பமாய்க் காணப்படாதிருப்பதாக. 33 எங்களுக்கு நேரிடப்பண்ணின எல்லாவற்றிலும் நீர் நீதியுள்ளவர்; நீர் உண்மையாய் நடப்பித்தீர்; நாங்களோ ஆகாமியம்பண்ணினோம். 34 எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், எங்கள் ஆசாரியர்களும், எங்கள் பிதாக்களும், உம்முடைய நியாயப்பிரமாணத்தின்படி செய்யாமலும், உம்முடைய கற்பனைகளையும், நீர் அவர்களைக் கடிந்துகொண்ட உம்முடைய சாட்சிகளையும் கவனியாமலும் போனார்கள். 35 அவர்கள் தங்கள் ராஜ்யத்திலும், நீர் அவர்களுக்குக் கொடுத்த உம்முடைய பெரிய தயையிலும், நீர் அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்த விசாலமும் செழிப்புமான தேசத்திலும் உமக்கு ஊழியஞ்செய்யாமலும், தங்கள் துர்க்கருமங்களை விட்டுத் திரும்பாமலும் போனார்கள். 36 இதோ, இன்றையதினம் நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம்; இதோ, பலனையும் நன்மையையும் அனுபவிக்கும்படி நீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த இந்தத் தேசத்தில்தானே நாங்கள் அடிமைகளாயிருக்கிறோம். 37 அதின் வருமானம் எங்கள் பாவங்களினிமித்தம் நீர் எங்கள்மேல் வைத்த ராஜாக்களுக்குத் திரளாகப்போகிறது; அவர்கள் தங்களுக்கு இஷ்டமானபடியே எங்கள் சரீரங்களையும் எங்கள் மிருகஜீவன்களையும் ஆளுகிறார்கள்; நாங்கள் மகா இக்கட்டில் அகப்பட்டிருக்கிறோம். 38 இவையெல்லாம் இப்படி இருக்கிறபடியால், நாங்கள் உறுதியான உடன்படிக்கைபண்ணி அதை எழுதிவைக்கிறோம்; எங்கள் பிரபுக்களும், எங்கள் லேவியரும், எங்கள் ஆசாரியரும் அதற்கு முத்திரைபோடுவார்கள் என்றார்கள்.

நெகேமியா 10

1 முத்திரைபோட்டவர்கள் யாரென்றால்: அகலியாவின் குமாரனாகிய திர்ஷாதா என்னும் நெகேமியா, சிதேகியா, 2 செராயா, அசரியா, எரேமியா, 3 பஸ்கூர், அமரியா, மல்கிஜா, 4 அத்தூஸ், செபனியா, மல்லூக், 5 ஆரீம், மெரெமோத், ஒபதியா, 6 தானியேல், கிநேதோன், பாருக், 7 மெசுல்லாம், அபியா, மீயாமின், 8 மாசியா, பில்காய், செமாயா என்னும் ஆசாரியர்களும், 9 லேவியராகிய அசனியாவின் குமாரன் யெசுவா, எனாதாதின் குமாரரில் ஒருவனாகிய பின்னூயி, கத்மியேல் என்பவர்களும், 10 அவர்கள் சகோதரராகிய செபனியா, ஒதியா, கேலிதா, பெலாயா, ஆனான், 11 மீகா, ரேகோப், அசபியா, 12 சக்கூர், செரெபியா, செபனியா, 13 ஒதியா, பானி, பெனினு என்பவர்களும், 14 ஜனத்தின் தலைவராகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி, 15 புன்னி, அஸ்காத், பெபாயி, 16 அதோனியா, பிக்வாய், ஆதின், 17 ஆதேர், இஸ்கியா, அசூர், 18 ஒதியா, ஆசூம், பெத்சாய், 19 ஆரீப், ஆனதோத், நெபாய், 20 மக்பியாஸ், மெசுல்லாம், ஏசீர், 21 மெஷெசாபெயேல், சாதோக், யதுவா, 22 பெலத்தியா, ஆனான், ஆனாயா, 23 ஓசெயா, அனனியா, அசூப், 24 அல்லோகேஸ், பிலகா, சோபேக், 25 ரேகூம், அஷபனா, மாசெயா, 26 அகியா, கானான், ஆனான், 27 மல்லூக், ஆரிம், பானா என்பவர்களுமே. 28 ஜனங்களில் மற்றவர்களாகிய ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், நிதனீமியரும், தேசங்களின் ஜனங்களைவிட்டுப் பிரிந்து விலகி தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குத் திரும்பின அனைவரும், அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளுமாகிய அறிவும் புத்தியும் உள்ளவர்களெல்லாரும், 29 தங்களுக்குப் பெரியவர்களாகிய தங்கள் சகோதரரோடே கூடிக்கொண்டு: தேவனுடைய தாசனாகிய மோசேயைக்கொண்டு கொடுக்கப்பட்ட தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்வோம் என்றும், எங்கள் ஆண்டவராகிய கர்த்தரின் கற்பனைகளையும் சகல நீதிநியாயங்களையும், கட்டளைகளையும் எல்லாம் கைக்கொண்டு, அவைகளின்படி செய்வோம் என்றும், 30 நாங்கள் எங்கள் குமாரத்திகளை தேசத்தின் ஜனங்களுக்குக் கொடாமலும், எங்கள் குமாரருக்கு அவர்கள் குமாரத்திகளைக் கொள்ளாமலும் இருப்போம் என்றும், 31 தேசத்தின் ஜனங்கள் ஓய்வுநாளிலே சரக்குகளையும், எந்தவிதத் தானியதவசத்தையும் விற்கிறதற்குக் கொண்டுவந்தால், நாங்கள் அதை ஓய்வுநாளிலும் பரிசுத்தநாளிலும் அவர்கள் கையில் கொள்ளாதிருப்போம் என்றும், நாங்கள் ஏழாம் வருஷத்தை விடுதலை வருஷமாக்கிச் சகல கடன்களையும் விட்டுவிடுவோம் என்றும் ஆணையிட்டுப் பிரமாணம்பண்ணினார்கள். 32 மேலும்: நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தின் ஆராதனைக்காக சமுகத்தப்பங்களுக்கும், நித்திய போஜனபலிக்கும், ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் செலுத்தும் நித்திய சர்வாங்க தகனபலிகளுக்கும், பண்டிகைகளுக்கும், பிரதிஷ்டையான பொருள்களுக்கும், இஸ்ரவேலுக்காகப் பாவநிவிர்த்தி உண்டாக்கும் பலிகளுக்கும், 33 எங்கள் தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும், வருஷந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற கடனை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம். 34 நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே எங்கள் தேவனாகிய கர்த்தருடைய பலிபீடத்தின்மேல் எரிகிறதற்காக, குறிக்கப்பட்ட காலங்களில் வருஷாவருஷம் எங்கள் பிதாக்களுடைய குடும்பங்களின்படியே, எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுவரவேண்டிய விறகு காணிக்கைக்காகவும், ஆசாரியருக்கும், லேவியருக்கும், ஜனத்துக்கும் சீட்டுப்போட்டோம். 35 நாங்கள் வருஷந்தோறும் எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கு எங்கள் தேசத்தின் முதற்பலனையும், சகலவித விருட்சங்களின் எல்லா முதற்கனிகளையும் கொண்டுவரவும், 36 நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடியே, எங்கள் குமாரரில் முதற்பேறுகளையும், எங்கள் ஆடுமாடுகளாகிய மிருகஜீவன்களின் தலையீற்றுகளையும், எங்கள் தேவனுடைய ஆலயத்துக்கும் எங்கள் தேவனுடைய ஆலயத்திலே ஊழியஞ்செய்கிற ஆசாரியரிடத்துக்கும் கொண்டுவரவும், 37 நாங்கள் எங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும், எங்கள் படைப்புகளையும், சகல மரங்களின் முந்தின பலனாகிய திராட்சப்பழரசத்தையும், எண்ணெயையும், எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளில் வைக்கும்படி ஆசாரியரிடத்துக்கும், எங்கள் நிலப்பயிர்களில் தசமபாகம் லேவியரிடத்துக்கும் கொண்டுவரவும், லேவியராகிய இவர்கள் எங்கள் வெள்ளாண்மையின் பட்டணங்களிலெல்லாம் தசமபாகம் சேர்க்கவும், 38 லேவியர் தசமபாகம் சேர்க்கும்போது ஆரோனின் குமாரனாகிய ஒரு ஆசாரியன் லேவியரோடேகூட இருக்கவும், தசமபாகமாகிய அதிலே லேவியர் பத்தில் ஒரு பங்கை எங்கள் தேவனுடைய ஆலயத்திலுள்ள பொக்கிஷ அறைகளில் கொண்டுவரவும் திட்டம்பண்ணிக்கொண்டோம். 39 பரிசுத்தஸ்தலத்தின் பணிமுட்டுகளும், ஊழியஞ்செய்கிற ஆசாரியரும், வாசல் காவலாளரும், பாடகரும் இருக்கிற அந்த அறைகளிலே இஸ்ரவேல் புத்திரரும் லேவிபுத்திரரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளின் படைப்புகளைக் கொண்டுவரவேண்டியது; இவ்விதமாய் நாங்கள் எங்கள் தேவனுடைய ஆலயத்தைப் பராமரியாமல் விடுவதில்லையென்று திட்டம்பண்ணிக்கொண்டோம்.

நெகேமியா 11

1 ஜனத்தின் அதிகாரிகள் எருசலேமிலே குடியிருந்தார்கள்; மற்ற ஜனங்கள், தங்களுக்குள்ளே பத்துப்பேரில் ஒருவனை எருசலேமென்னும் பரிசுத்த நகரத்திலும் ஒன்பதுபேரை மற்றப் பட்டணங்களிலும் குடியிருக்கப்பண்ண, சீட்டுகளைப் போட்டார்கள். 2 ஆனாலும் எருசலேமிலே குடியிருக்க மனப்பூர்வமாய்ச் சம்மதித்த மனுஷர்களையெல்லாம் ஜனங்கள் வாழ்த்தினார்கள். 3 யூதாவின் பட்டணங்களில் இஸ்ரவேலரும், ஆசாரியரும், லேவியரும், நிதனீமியரும், சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரும், அவரவர் தங்கள் பட்டணங்களிலுள்ள தங்கள் காணிபூமியிலே குடியிருந்தார்கள்; எருசலேமிலே குடியிருந்த நாடுகளின் தலைவர் யாரென்றால்: 4 எருசலேமிலே யூதா புத்திரரில் சிலரும், பென்யமீன் புத்திரரில் சிலரும் குடியிருந்தார்கள்; யூதா புத்திரரிலே பேரேசின் புத்திரருக்குள் ஒருவனான மகலாலெயேலின் குமாரனாகிய செபதியாவின் குமாரன் அமரியாவுக்குப் பிறந்த சகரியாவுக்குக் குமாரனான உசியாவின் மகன் அத்தாயாவும், 5 சீலோனின் குமாரன் சகரியாவுக்குக் குமாரனாகிய யோயாரிபுக்குக் குமாரனான அதாயாவுக்குப் பிறந்த அசாயாவின் குமாரன் கொல்லோசே பெற்ற பாருக்கின் மகன் மாசெயாவுமே. 6 எருசலேமிலே குடியிருக்கிற பேரேசின் புத்திரரெல்லாரும் நானூற்று அறுபத்தெட்டுப் பராக்கிரமசாலிகளாயிருந்தார்கள். 7 பென்யமீன் புத்திரரில் யாரென்றால், சல்லு என்பவன்; இவன் மெசுல்லாமுக்கும், இவன் யோவேலுக்கும், இவன் பெதாயாவுக்கும், இவன் கொலாயாவுக்கும், இவன் மாசெயாவுக்கும், இவன் இதியேலுக்கும், இவன் எசாயாவுக்கும் குமாரனானவன். 8 அவனுக்குப்பின் கப்பாய், சல்லாய் முதலானவர்கள் தொளாயிரத்து இருபத்தெட்டுப்பேர். 9 அவர்கள்மேல் விசாரிப்புக்காரனான சிக்ரியின் குமாரன் யோவேலும், பட்டணத்தின்மேல் இரண்டாவது விசாரிப்புக்காரனான செனுவாவின் குமாரன் யூதாவுமே. 10 ஆசாரியர்களில் யோயாரிபின் குமாரன் யெதாயா, யாகின் என்பவர்களும், 11 அகிதூபின் குமாரன் மெராயோத்துக்குப் பிறந்த சாதோக்கின் குமாரன் மெசுல்லாம் பெற்ற இல்க்கியாவின் மகன் செராயா என்னும் தேவனுடைய ஆலயத்தின் விசாரணைக்கர்த்தனும், 12 ஆலயத்திலே பணிவிடை செய்கிற அவர்கள் சகோதரராகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும், மல்கியாவின் குமாரன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் குமாரன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் குமாரன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும், 13 பிதா வம்சத்தலைவராகிய அவனுடைய சகோதரர் இருநூற்று நாற்பத்திரண்டுபேரும், இம்மேரின் குமாரன் மெசில்லேமோத்தின் மகனாகிய அகசாய்க்குப் பிறந்த அசரெயேலின் மகன் அமாசாயும், 14 அவர்களுடைய சகோதரராகிய பராக்கிரமசாலிகள் நூற்று இருபத்தெட்டுப்பேருமே; இவர்கள்மேல் அகெதோலிமின் குமாரன் சப்தியேல் விசாரிப்புக்காரனாயிருந்தான். 15 லேவியரிலே புன்னியின் குமாரன் அசபியாவின் மகனாகிய அஸ்ரிக்காமின் குமாரனான அசூபின் மகன் செமாயாவும், 16 தேவனுடைய ஆலயத்தின் வெளிவேலையை விசாரிக்கிற லேவியரின் தலைவரிலே சபெதாயும், யோசபாத்தும், 17 ஆசாபின் குமாரன் சப்தியின் குமாரனாகிய மீகாவின் மகன் மத்தனியா ஜெபத்தில் ஸ்தோத்திரப்பாட்டைத் துவக்குகிற தலைவனும் அவன் சகோதரரில் இரண்டாவதான பக்பூக்கியா என்னும் ஒருவனும், எதுத்தூனின் குமாரன் காலாவின் மகனாகிய சமுவாவின் குமாரன் அப்தாவுமே. 18 பரிசுத்த பட்டணத்திலிருந்த லேவியர் எல்லாரும் இருநூற்று எண்பத்துநாலுபேர். 19 வாசல் காவலாளர் அக்கூபும், தல்மோனும், வாசல்களில் காவல்காக்கிற அவர்கள் சகோதரரும் நூற்றுஎழுபத்திரண்டுபேர். 20 மற்ற இஸ்ரவேலரும், ஆசாரியரும், லேவியரும், யூதாவின் சகல பட்டணங்களிலும், அவரவர் தங்கள் சுதந்தரத்திலிருந்தார்கள். 21 நிதனீமியர் ஓபேலிலே குடியிருந்தார்கள்; அவர்கள்மேல் சீகாவும் கிஸ்பாவும் விசாரிப்புக்காரராயிருந்தார்கள். 22 எருசலேமிலிருக்கிற லேவியரின் விசாரிப்புக்காரன் மீகாவின் குமாரன் மத்தனியாவின் மகனாகிய அசபியாவுக்குப் பிறந்த பானியின் குமாரன் ஊசி என்பவன் தேவனுடைய ஆலயத்தின் ஊழியத்துக்கு நிற்கிற பாடகராகிய ஆசாபின் குமாரரில் ஒருவன். 23 பாடகராகிய அவர்களுக்காக அன்றாடகப்படி கொடுக்கப்படும்படி ராஜாவினால் கட்டளையிடப்பட்டிருந்தது. 24 யூதாவின் குமாரனாகிய சேராக்கின் புத்திரரில் மெசெசாபெயேலின் குமாரன் பெத்தகியா ஜனத்தின் காரியங்களுக்கெல்லாம் ராஜாவின் சமுகத்தில் நின்றான். 25 தங்கள் நாட்டுப்புறங்களான கிராமங்களில் இருக்கிறவர்களுக்குள்ளே யூதாவின் புத்திரரில் சிலர் கீரியாத்அர்பாவிலும் அதின் கிராமங்களிலும், தீபோனிலும் அதின் கிராமங்களிலும், எகாப்செயேலிலும் அதின் கிராமங்களிலும், 26 யெசுவாவிலும், மோலாதாகிலும், பெத்பெலேதிலும், 27 ஆத்சார்சூகாலிலும், பெயெர்செபாவிலும் அதின் கிராமங்களிலும், 28 சிக்லாகிலும், மேகோனாகிலும் அதின் கிராமங்களிலும், 29 என்ரிம்மோனிலும், சாரேயாகிலும், யர்மூத்திலும், 30 சானோவாகிலும், அதுல்லாமிலும் அவைகளின் கிராமங்களிலும், லாகீசிலும் அதின் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதின் கிராமங்களிலும், பெயெர்செபாதொடங்கி இன்னோமின் பள்ளத்தாக்குமட்டும் குடியேறினார்கள். 31 கேபாவின் ஊராராயிருந்த பென்யமீன் புத்திரர், மிக்மாஸ், ஆயா, பெத்தேல் ஊர்களிலும் அதின் கிராமங்களிலும், 32 ஆனதோத், நோப், அனனியா, 33 ஆத்சோர், ராமா, கித்தாயிம், 34 ஆதீத், செபோயிம், நெபலாத், 35 லோத், ஓனோ என்னும் ஊர்களிலும், சிற்பாசாரிகளின் பள்ளத்தாக்கிலும் குடியிருந்தார்கள். 36 லேவியரிலே சில வகுப்பார் யூதாவிலும், சிலர் பென்யமீனிலும் இருந்தார்கள்.

நெகேமியா 12

1 செயல்தியேலின் குமாரனாகிய செருபாபேலோடும் யெசுவாவோடும் வந்த ஆசாரியரும் லேவியரும் யாரென்றால்: செராயா, எரேமியா, எஸ்றா, 2 அமரியா, மல்லூக், அத்தூஸ், 3 செகனியா, ரெகூம், மெரெமோத், 4 இத்தோ, கிநேதோ, அபியா, 5 மியாமின், மாதியா, பில்கா, 6 செமாயா, யோயாரிப், யெதாயா, 7 சல்லு, ஆமோக், இல்க்கியா, யெதாயா என்பவர்கள்; இவர்கள் யெசுவாவின் நாட்களில், ஆசாரியருக்கும் தங்கள் சகோதரருக்கும் தலைவராயிருந்தார்கள். 8 லேவியர் யாரென்றால்: யெசுவா, பின்னூயி, கத்மியேல், செரெபியா, யூதா, மத்தனியா என்பவர்கள்; இவனும் இவன் சகோதரரும் துதிசெய்தலை விசாரித்தார்கள். 9 பக்புக்கியா, உன்னி என்கிற அவர்கள் சகோதரர் அவர்களுக்கு எதிரே காவல்காத்திருந்தார்கள். 10 யெசுவா யொயகீமைப் பெற்றான், யொயகீம் எலியாசிபைப் பெற்றான், எலியாசிப் யொயதாவைப் பெற்றான். 11 யொயதா யோனத்தானைப் பெற்றான், யோனத்தான் யதுவாவைப் பெற்றான். 12 யொயகீமின் நாட்களிலே பிதா வம்சங்களின் தலைவரான ஆசாரியர்கள் யாரென்றால்: செராயாவின் சந்ததியில் மெராயா, எரேமியாவின் சந்ததியில் அனனியா, 13 எஸ்றாவின் சந்ததியில் மெசுல்லாம், அமரியாவின் சந்ததியில் யோகனான், 14 மெலிகுவின் சந்ததியில் யோனத்தான், செபனியாவின் சந்ததியில் யோசேப்பு, 15 ஆரீமின் சந்ததியில் அத்னா, மெராயோதின் சந்ததியில் எல்காய், 16 இத்தோவின் சந்ததியில் சகரியா, கிநெதோனின் சந்ததியில் மெசுல்லாம், 17 அபியாவின் சந்ததியில் சிக்ரி, மினியா மீன்மொவதியா என்பவர்களின் சந்ததியில் பில்தாய். 18 பில்காவின் சந்ததியில் சம்முவா, செமாயாவின் சந்ததியில் யோனத்தான், 19 யோயரிபின் சந்ததியில் மத்தனா, யெதாயாவின் சந்ததியில் ஊசி, 20 சல்லாயின் சந்ததியில் கல்லாய், ஆமோக்கின் சந்ததியில் ஏபேர், 21 இல்க்கியாவின் சந்ததியில் அசபியா, யெதாயாவின் சந்ததியில் நெதனெயேல் என்பவர்கள். 22 எலியாசிபின் நாட்களில் யொயதா, யோகனான், யதுவா என்கிற லேவியர் பிதா வம்சங்களின் தலைவராக எழுதப்பட்டார்கள்; பெர்சியனாகிய தரியுவின் ராஜ்யபாரமட்டும் இருந்த ஆசாரியர்களும் அப்படியே எழுதப்பட்டார்கள். 23 லேவி புத்திரராகிய பிதா வம்சங்களின் தலைவர் எலியாசிபின் குமாரனாகிய யோகனானின் நாட்கள்மட்டும் நாளாகமப் புஸ்தகத்தில் எழுதப்பட்டார்கள். 24 லேவியரின் தலைவராகிய அசபியாவும், செரெபியாவும், கத்மியேலின் குமாரன் யெசுவாவும், அவர்களுக்கு எதிரே நிற்கிற அவர்கள் சகோதரரும், தேவனுடைய மனுஷனாகிய தாவீதினுடைய கற்பனையின்படியே துதிக்கவும் தோத்திரிக்கவும், ஒருவருக்கொருவர் எதிர்முகமாக முறைமுறையாயிருந்தார்கள். 25 மத்தனியா, பக்புக்கியா, ஒபதியா, மெசுல்லாம், தல்மோன், அக்கூப் என்பவர்கள் வாசல்களிலிருக்கிற பொக்கிஷ அறைகளைக் காவல்காக்கிறவர்களாயிருந்தார்கள். 26 யோத்சதாக்கின் குமாரனாகிய யெசுவாவின் குமாரன் யொயகீமின் நாட்களிலும், அதிபதியாகிய நெகேமியாவும், வேதபாரகனாகிய எஸ்றா என்னும் ஆசாரியனும் இருக்கிற நாட்களிலும் அவர்கள் இருந்தார்கள். 27 எருசலேமின் அலங்கத்தைப் பிரதிஷ்டைபண்ணுகையில், துதியினாலும் பாடலினாலும், கைத்தாளம் தம்புரு சுரமண்டலம் முதலான கீதவாத்தியங்களினாலும், பிரதிஷ்டையை மகிழ்ச்சியோடே கொண்டாட எல்லா இடங்களிலும் இருக்கிற லேவியரை எருசலேமுக்கு வரும்படி தேடினார்கள். 28 அப்படியே பாடகரின் புத்திரர் எருசலேமின் சுற்றுப்புறங்களான சமபூமியிலும், நெத்தோபாத்தியரின் கிராமங்களிலும், 29 பெத்கில்காலிலும், கேபா, அஸ்மாவேத் ஊர்களின் நாட்டுப்புறங்களிலும் இருந்துவந்து கூடினார்கள்; பாடகர் எருசலேமைச் சுற்றிலும் தங்களுக்குக் கிராமங்களைக் கட்டியிருந்தார்கள். 30 ஆசாரியரும் லேவியரும் தங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு, ஜனத்தையும் பட்டணவாசல்களையும் அலங்கத்தையும் சுத்தம்பண்ணினார்கள். 31 அப்பொழுது நான் யூதாவின் பிரபுக்களை அலங்கத்தின்மேல் ஏறப்பண்ணி, துதிசெய்து நடந்துபோகும்படி இரண்டு பெரிய கூட்டத்தாரை நிறுத்தினேன்; அவர்களில் ஒரு கூட்டத்தார் அலங்கத்தின்மேல் வலதுபுறமாகக் குப்பைமேட்டு வாசலுக்குப் போனார்கள். 32 அவர்கள் பிறகாலே ஒசாயாவும், யூதாவின் பிரபுக்களில் பாதிப்பேரும், 33 அசரியா, எஸ்றா, மெசுல்லாம், 34 யூதா, பென்யமீன், செமாயா, எரேமியா என்பவர்களும், 35 பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியரின் புத்திரரில் ஆசாப்பின் குமாரன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்குக் குமாரனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் குமாரன் சகரியாவும், 36 தேவனுடைய மனுஷனாகிய தாவீதின் கீதவாத்தியங்களை வாசிக்கிற அவன் சகோதரரான செமாயா, அசரெயேல், மிலாலாய், கிலாலாய், மகாய், நெதனெயேல், யூதா, அனானி என்பவர்களும் போனார்கள்; வேதபாரகனாகிய எஸ்றா இவர்களுக்கு முன்பாக நடந்தான். 37 அங்கேயிருந்து அவர்கள் தங்களுக்கு எதிரான ஊருணிவாசலுக்கு வந்தபோது, அலங்கத்தைப்பார்க்கிலும் உயரமான தாவீது நகரத்தின் படிகளில் ஏறி, தாவீது வீட்டின்மேலாகக் கிழக்கேயிருக்கிற தண்ணீர் வாசல்மட்டும் போனார்கள். 38 துதிசெய்கிற இரண்டாம் கூட்டத்தார் எதிரேயிருக்கிற வழியாய் நடந்துபோனார்கள், அவர்கள் பிறகாலே நான் போனேன்; ஜனத்தில் பாதிப்பேர் அலங்கத்தின்மேல் சூளைகளின் கொம்மையைக் கடந்து, அகழ் மதில்மட்டும் நெடுகப்போய், 39 எப்பிராயீம் வாசலையும், பழைய வாசலையும், மீன் வாசலையும், அனானெயேலின் கொம்மையையும், மேயா என்கிற கொம்மையையும் கடந்து, ஆட்டுவாசல்மட்டும் புறப்பட்டுக் காவல்வீட்டுவாசலிலே நின்றார்கள். 40 அதற்குப்பின்பு துதிசெய்கிற இரண்டு கூட்டத்தாரும் தேவனுடைய ஆலயத்திலே வந்து நின்றார்கள்; நானும் என்னோடேகூட இருக்கிற தலைவரில் பாதிப்பேரும், 41 பூரிகைகளைப் பிடிக்கிற எலியாக்கீம், மாசெயா, மினியாமீன், மிகாயா, எலியோனாய், சகரியா, அனானியா என்கிற ஆசாரியர்களும், 42 மாசெயா, செமாயா, எலெயாசார், ஊசி, யோகனான், மல்கியா, ஏலாம், ஏசேர் என்பவர்களும் நின்றோம்; பாடகரும், அவர்கள் விசாரிப்புக்காரனாகிய யெஷரகியாவும் சத்தமாய்ப் பாடினார்கள். 43 அந்நாளிலே மிகுதியான பலிகளைச் செலுத்தி, தேவன் தங்களுக்கு மகா சந்தோஷத்தை உண்டாக்கினதினால் மகிழ்ச்சியாயிருந்தார்கள்; ஸ்திரீகளும் பிள்ளைகளுங்கூடக் களிகூர்ந்தார்கள்; எருசலேமின் களிப்பு தூரத்திலே கேட்கப்பட்டது. 44 அன்றையதினம் பொக்கிஷங்களையும், படைப்புகளையும், முதல் கனிகளையும், தசமபாகங்களையும் வைக்கும் அறைகளின்மேல், ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் நியாயப்பிரமாணத்தின்படியே வரவேண்டிய பட்டணங்களுடைய நிலங்களின் பங்குகளை அவைகளில் சேர்க்கும்படிக்கு, சில மனுஷர் விசாரிப்புக்காரராக வைக்கப்பட்டார்கள்; ஊழியஞ்செய்து நிற்கிற ஆசாரியர்மேலும் லேவியர்மேலும் யூதா மனிதர் சந்தோஷமாயிருந்தார்கள். 45 பாடகரும், வாசல் காவலாளரும், தாவீதும் அவன் குமாரனாகிய சாலொமோனும் கற்பித்தபடியே தங்கள் தேவனுடைய காவலையும், சுத்திகரிப்பின் காவலையும் காத்தார்கள். 46 தாவீதும் ஆசாப்பும் இருந்த பூர்வநாட்களில் பாடகரின் தலைவரும் வைக்கப்பட்டு, தேவனுக்குத் துதியும் தோத்திரங்களும் செலுத்துகிற சங்கீதங்கள் திட்டம்பண்ணப்பட்டிருந்தது. 47 ஆகையால் செருபாபேலின் நாட்களிலும், நெகேமியாவின் நாட்களிலும், இஸ்ரவேலர் எல்லாரும் பாடகருக்கும் வாசல் காவலாளருக்கும் அன்றாடகத் திட்டமாகிய பங்குகளைக் கொடுத்தார்கள்; அவர்கள் லேவியருக்கென்று பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்; லேவியர் ஆரோனின் புத்திரருக்கென்று அவர்கள் பங்கைப் பிரதிஷ்டைபண்ணிக் கொடுத்தார்கள்.

நெகேமியா 13

1 அன்றையதினம் ஜனங்கள் கேட்க, மோசேயின் புஸ்தகத்தை வாசித்தார்கள்; அதிலே அம்மோனியரும் மோவாபியரும், இஸ்ரவேல் புத்திரருக்கு அப்பமும் தண்ணீரும் கொடுக்க எதிர்கொண்டுவராமல், அவர்களைச் சபிக்க அவர்களுக்கு விரோதமாய்ப் பிலேயாமைக் கூலிபொருந்திக்கொண்டபடியினால், 2 அவர்கள் என்றைக்கும், அந்தச் சாபத்தை ஆசீர்வாதமாகத் திருப்பின எங்கள் தேவனுடைய சபைக்குட்படலாகாது என்று எழுதியிருக்கிறதாகக் காணப்பட்டது. 3 ஆகையால் அவர்கள் அந்தக் கட்டளையைக் கேட்டபோது, பல ஜாதியான ஜனங்களையெல்லாம் இஸ்ரவேலைவிட்டுப் பிரித்துவிட்டார்கள். 4 இதற்குமுன்னே எங்கள் தேவனுடைய ஆலயத்தின் அறைகளை விசாரிக்க வைக்கப்பட்ட ஆசாரியனாகிய எலியாசிப் தொபியாவோடே சம்பந்தங்கலந்தவனாயிருந்து, 5 முற்காலத்தில் காணிக்கைகளும், சாம்பிராணியும், பணிமுட்டுகளும், லேவியருக்கும் பாடகருக்கும் வாசல்காவலாளருக்கும் கட்டளைபண்ணப்பட்ட தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளிலே தசமபாகமும், ஆசாரியரைச் சேருகிற படைப்பான காணிக்கைகளும் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு பெரிய அறையை அவனுக்கு ஆயத்தம்பண்ணியிருந்தான். 6 இதெல்லாம் நடக்கும்போது நான் எருசலேமில் இல்லை; பாபிலோன் ராஜாவாகிய அர்தசஷ்டாவின் முப்பத்திரண்டாம் வருஷத்திலே நான் ராஜாவினிடத்திற்குப்போய், சிலநாளுக்குப்பின்பு திரும்ப ராஜாவினிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, 7 எருசலேமுக்கு வந்தேன்; அப்பொழுது எலியாசிப் தொபியாவுக்குத் தேவனுடைய ஆலயத்துப் பிராகாரங்களில் ஒரு அறையை ஆயத்தம்பண்ணினதினால், செய்த பொல்லாப்பை அறிந்துகொண்டேன். 8 அதினால் நான் மிகவும் மனமடிவாகி, தொபியாவின் வீட்டுத் தட்டுமுட்டுகளையெல்லாம் அந்த அறையிலிருந்து வெளியே எறிந்துவிட்டேன். 9 பின்பு நான் அறைவீடுகளைச் சுத்திகரிக்கச்சொல்லி, தேவனுடைய ஆலயப்பணிமுட்டுகளையும் காணிக்கைகளையும் சாம்பிராணியையும் அங்கே திரும்பக்கொண்டுவந்து வைத்தேன். 10 பின்னையும் லேவியருக்கு அவர்கள் பங்குகள் கொடுக்கப்படவில்லையென்பதையும், பணிவிடை செய்கிற லேவியரும் பாடகரும் அவரவர் தங்கள் வெளிநிலங்களுக்கு ஓடிப்போனார்கள் என்பதையும் நான் அறிந்துகொண்டேன். 11 அப்பொழுது நான் தலைமையானவர்களோடே வழக்காடி, தேவனுடைய ஆலயம் கைவிடப்பட்டுப்போவானேன் என்று சொல்லி, அவர்களைச் சேர்த்து, அவரவர் நிலையில் அவர்களை வைத்தேன். 12 அப்பொழுது யூதர் எல்லாரும் தானியம் திராட்சரசம் எண்ணெய் என்பவைகளில் தசமபாகத்தைப் பொக்கிஷ அறைகளில் கொண்டுவந்தார்கள். 13 அப்பொழுது நான் ஆசாரியனாகிய செலேமியாவையும், வேதபாரகனாகிய சாதோக்கையும், லேவியரில் பெதாயாவையும், இவர்களுக்குக் கைத்துணையாக மத்தனியாவின் குமாரன் சக்கூரின் மகனாகிய ஆனானையும் பொக்கிஷ அறைகளின்மேல் விசாரிப்புக்காரராக வைத்தேன்; அவர்கள் உண்மையுள்ளவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்; ஆகையால் தங்கள் சகோதரருக்குப் பங்கிடுகிற வேலை அவர்களுக்கு ஒப்புவிக்கப்பட்டது. 14 என் தேவனே, நான் என் தேவனுடைய ஆலயத்துக்காகவும் அதின் முறைமைகளுக்காகவும் செய்த நற்கிரியைகளைக் குலைத்துப்போடாமல், இந்தக் காரியத்திலே என்னை நினைத்தருளும். 15 அந்த நாட்களில் நான் யூதாவிலே ஓய்வுநாளில் சிலர் ஆலைகளை மிதிக்கிறதையும், சிலர் தானியப் பொதிகளைக் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு வருகிறதையும், திராட்சரசம், திராட்சப்பழம், அத்திப்பழம் முதலானவைகளின் பற்பல சுமைகளை ஓய்வுநாளிலே எருசலேமுக்குக் கொண்டுவருகிறதையும் கண்டு, அவர்கள் தின்பண்டம் விற்கிற நாளைப்பற்றி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டேன். 16 மீனையும் சகலவித சரக்குகளையும் கொண்டுவந்து, ஓய்வுநாளிலே யூதா புத்திரருக்கும் எருசலேமில் இருக்கிறவர்களுக்கும் விற்கிற சில தீரியரும் உள்ளே குடியிருந்தார்கள். 17 ஆகையால் நான் யூதாவின் பெரியவர்களைக் கடிந்துகொண்டு: நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிற இந்தப் பொல்லாத செய்கையென்ன? 18 உங்கள் பிதாக்கள் இப்படிச் செய்ததினாலல்லவா, நமது தேவன் நம்மேலும் இந்த நகரத்தின்மேலும் இந்தத் தீங்கையெல்லாம் வரப்பண்ணினார்; நீங்களோவென்றால் ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறதினால், இஸ்ரவேலின்மேலிருக்கிற உக்கிரத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்கள் என்று அவர்களுக்குச் சொன்னேன். 19 ஆகையால் ஓய்வுநாளுக்கு முன்னே எருசலேமின் பட்டணவாசலில், மாலைமயங்கும்போது, கதவுகளைப் பூட்டவும், ஓய்வுநாள் முடியுமட்டும் அவைகளைத் திறவாதிருக்கவும் வேண்டுமென்று கட்டளையிட்டு, ஓய்வுநாளிலே ஒரு சுமையும் உள்ளே வராதபடிக்கு வாசலண்டையிலே என் வேலைக்காரரில் சிலரை நிறுத்தினேன். 20 அதினால் வர்த்தகரும், சகலவித சரக்குகளை விற்கிறவர்களும், இரண்டொருதரம் எருசலேமுக்குப் புறம்பே இராத்தங்கினார்கள். 21 அப்பொழுது நான் அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்டு, நீங்கள் அலங்கத்தண்டையிலே இராத்தங்குகிறது என்ன? நீங்கள் மறுபடியும் இப்படிச் செய்தால், உங்கள்மேல் கைபோடுவேன் என்று அவர்களோடே சொன்னேன்; அதுமுதல் அவர்கள் ஓய்வுநாளில் வராதிருந்தார்கள். 22 ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கு, உங்களைச் சுத்தம்பண்ணிக்கொண்டு வாசல்களைக் காக்க வாருங்கள் என்று லேவியருக்கும் சொன்னேன். என் தேவனே, இதைக்குறித்து நீர் என்னை நினைத்தருளி, உம்முடைய மிகுந்த கிருபையின்படி எனக்கு இரங்குவீராக. 23 அஸ்தோத், அம்மோன், மோவாப் ஜாதிகளான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொண்ட சில யூதரையும் அந்த நாட்களில் கண்டேன். 24 அவர்கள் பிள்ளைகள் பேசின பேச்சில் பாதி அஸ்தோத் பாஷையாயிருந்தது; இவர்கள் அந்தந்த ஜாதிகளின் பாஷையைத்தவிர, யூதபாஷையைத் திட்டமாய்ப் பேச அறியாதிருந்தார்கள். 25 அவர்களையும் நான் கடிந்துகொண்டு, அவர்கள்மேல் வரும் சாபத்தைக் கூறி, அவர்களில் சிலரை அடித்து, மயிரைப் பிய்த்து: நீங்கள் உங்கள் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள் குமாரத்திகளில் ஒருவரையும் உங்கள் குமாரருக்காகிலும் உங்களுக்காகிலும் கொள்ளாமலும் இருக்கவேண்டுமென்று அவர்களை தேவன்மேல் ஆணையிடப்பண்ணி, நான் அவர்களை நோக்கி: 26 இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதினாலே பாவஞ்செய்தானல்லவா? அவனைப்போன்ற ராஜா அநேகம் ஜாதிகளுக்குள்ளே உண்டாயிருந்ததில்லை; அவன் தன் தேவனாலே சிநேகிக்கப்பட்டவனாயிருந்தான்; தேவன் அவனை இஸ்ரவேலனைத்தின்மேலும் ராஜாவாக வைத்தார்; அப்படிப்பட்டவனையும் மறுஜாதியான ஸ்திரீகள் பாவஞ்செய்யப்பண்ணினார்களே. 27 நீங்கள் மறுஜாதியான ஸ்திரீகளைச் சேர்த்துக்கொள்ளுகிறதினால், நம்முடைய தேவனுக்குத் துரோகிகளாகி, இந்தப் பெரிய பொல்லாப்பையெல்லாம் செய்யும்படி, உங்களுக்கு இடங்கொடுப்போமோ என்றேன். 28 யொயதாவின் புத்திரரிலே பிரதான ஆசாரியனாகிய எலியாசிபினுடைய குமாரன் ஒருவன் ஓரோனியனான சன்பல்லாத்துக்கு மருமகனானான்; ஆகையால் அவனை என்னைவிட்டுத் துரத்தினேன். 29 என் தேவனே, அவர்கள் ஆசாரிய ஊழியத்தையும், ஆசாரிய ஊழியத்துக்கும் லேவியருக்கும் இருக்கிற உடன்படிக்கையையும் தீட்டுப்படுத்தினார்கள் என்று அவர்களை நினைத்துக்கொள்ளும். 30 இப்படியே நான் மறுஜாதியாரையெல்லாம் நீக்கி, ஆசாரியரையும் லேவியரையும் சுத்திகரித்து, அவரவரை அவர்கள் வேலையின் முறைகளில் நிறுத்தி, 31 குறிக்கப்பட்ட காலங்களிலே செலுத்தப்படவேண்டிய விறகுகாணிக்கையையும், முதற்பலன்களையுங்குறித்துத் திட்டம்பண்ணினேன். என் தேவனே எனக்கு நன்மையுண்டாக என்னை நினைத்தருளும்.

எஸ்தர் 1

1 இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது: 2 ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரமனையிலிருக்கிற தன் ராஜ்யத்தின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான். 3 அவன் தன் ராஜ்யபாரத்தின் மூன்றாம் வருஷத்திலே தன்னுடைய பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும் விருந்துபண்ணினான்; அப்பொழுது பெர்சியா மேதியா தேசங்களிலுள்ள மகத்தானவர்களும், நாடுகளின் அதிபதிகளும், பிரபுக்களும், அவன் சமுகத்தில் வந்திருந்தார்கள். 4 அவன் தன் ராஜ்யத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன் மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும் அநேக நாளாகிய நூற்றெண்பதுநாளளவும் விளங்கச்செய்துகொண்டிருந்தான். 5 அந்த நாட்கள் முடிந்தபோது, ராஜா சூசான் அரமனையில் வந்திருந்த பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சமஸ்த ஜனங்களுக்கும் ராஜ அரமனையைச்சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழுநாள் விருந்து செய்வித்தான். 6 அங்கே வெண்கலத் தூண்களின்மேலுள்ள வெள்ளி வளையங்களில் மெல்லிய நூலும் சிவப்புநூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் விதானித்திருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது. 7 பொன்னால் செய்யப்பட்ட நானாவித பாத்திரங்களிலே பானம் கொடுக்கப்பட்டது; முதல்தரமான திராட்சரசம் ராஜஸ்திதிக்கு ஏற்கப் பரிபூரணமாய்ப் பரிமாறப்பட்டது. 8 அவரவருடைய மனதின்படியே செய்யலாம் என்று ராஜா தன் அரமனையின் பெரிய மனுஷருக்கெல்லாம் கட்டளையிட்டிருந்தபடியினால், முறைப்படி பானம்பண்ணினார்கள்; ஒருவனும் பலவந்தம் பண்ணவில்லை. 9 ராஜஸ்திரீயாகிய வஸ்தியும் ராஜாவாகிய அகாஸ்வேருவின் அரமனையிலே ஸ்திரீகளுக்கு ஒரு விருந்து செய்தாள். 10 ஏழாம் நாளிலே ராஜா திராட்சரசத்தினால் களிப்பாயிருக்கும்போது, மகா ரூபவதியாயிருந்த ராஜஸ்திரீயாகிய வஸ்தியின் சௌந்தரியத்தை ஜனங்களுக்கும் பிரபுக்களுக்கும் காண்பிக்கும்படி, ராஜகிரீடம் தரிக்கப்பட்டவளாக, அவளை ராஜாவுக்குமுன்பாக அழைத்துவரவேண்டுமென்று, 11 ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் சேவிக்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் கட்டளையிட்டான். 12 ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராஜஸ்திரீயாகிய வஸ்தி வரமாட்டேன் என்றாள்; அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே மூர்க்கவெறிகொண்டான். 13 அச்சமயத்தில் ராஜசமுகத்தைத் தரிசிக்கிறவர்களும், ராஜ்யத்தின் முதல் ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான கர்ஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர் மேதியருடைய ஏழு பிரபுக்களும் அவன் சமீபத்தில் இருந்தார்கள். 14 ராஜா நியாயப்பிரமாணத்தையும் ராஜநீதியையும் அறிந்தவர்களிடத்தில் பேசுவது தனக்கு வழக்கமானபடியால், காலாகால வர்த்தமானங்களை அறிந்த பண்டிதர்களை நோக்கி: 15 ராஜாவாகிய அகாஸ்வேரு பிரதானிகள் மூலமாய்ச் சொல்லியனுப்பின கட்டளையின்படி ராஜஸ்திரீயாகிய வஸ்தி செய்யாமற்போனதினிமித்தம், தேசச்சட்டத்தின்படி அவளுக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டான். 16 அப்பொழுது மெமுகான் ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்னே பிரதியுத்தரமாக: ராஜஸ்திரீயாகிய வஸ்தி ராஜாவுக்குமாத்திரம் அல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய சகல நாடுகளிலுமுள்ள சகல பிரபுக்களுக்கும் சகல ஜனங்களுக்குங்கூட அநியாயஞ்செய்தாள். 17 ராஜாவாகிய அகாஸ்வேரு ராஜஸ்திரீயாகிய வஸ்தியைத் தமக்கு முன்பாக அழைத்துவரச் சொன்னபோது, அவள் வரமாட்டோம் என்கிற செய்தி எல்லா ஸ்திரீகளுக்கும் பிரசித்தமானால், அவர்களும் தங்கள் புருஷரைத் தங்கள் பார்வையில் அற்பமாய் எண்ணுவார்கள். 18 இன்றையதினமே பெர்சியாவிலும் மேதியாவிலுமுள்ள பிரபுக்களின் ஸ்திரீகள் ராஜஸ்திரீயின் செய்தியைக் கேட்கும்போது, ராஜாவின் பிரபுக்களுக்கெல்லாம் அப்படியே சொல்லுவார்கள்; மிகுந்த அசட்டையும் எரிச்சலும் விளையும். 19 ராஜாவுக்குச் சம்மதியாயிருந்தால், வஸ்தி இனி ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு முன்பாக வரக்கூடாது என்றும், அவளுடைய ராஜமேன்மையை அவளைப்பார்க்கிலும் உத்தமியாகிய மற்றொரு ஸ்திரீக்கு ராஜா கொடுப்பாராக என்றும், அவரால் ஒரு ராஜகட்டளை பிறந்து, அது மீறப்படாதபடிக்கு, பெர்சியாவுக்கும் மேதியாவுக்கும் உரிய தேசச் சட்டத்திலும் எழுதப்படவேண்டும். 20 இப்படி ராஜா தீர்த்த காரியம் தமது விஸ்தீரணமான ராஜ்யமெங்கும் கேட்கப்படும்போது, பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள எல்லா ஸ்திரீகளும் தங்கள் புருஷரைக் கனம்பண்ணுவார்கள் என்றான். 21 இந்த வார்த்தை ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் நலமாய்த் தோன்றினதினால், ராஜா மெமுகானுடைய வார்த்தையின்படியே செய்து, 22 எந்தப் புருஷனும் தன் வீட்டுக்குத்தானே அதிகாரியாயிருக்கவேண்டும் என்றும், இதை அந்தந்த ஜனங்களுடைய பாஷையிலே பிரசித்தம்பண்ணவேண்டும் என்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசுகிற பாஷையிலும், ராஜாவின் சகல நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான்.

எஸ்தர் 2

1 இவைகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவின் உக்கிரம் தணிந்தபோது, அவன் வஸ்தியையும் அவள் செய்ததையும் அவளைக்குறித்துத் தீர்மானிக்கப்பட்டதையும் நினைத்தான். 2 அப்பொழுது ராஜாவைச் சேவிக்கிற அவனுடைய ஊழியக்காரர் அவனை நோக்கி: ரூபவதிகளாயிருக்கிற கன்னிப்பெண்களை ராஜாவுக்காகத் தேடவேண்டும். 3 அதற்காக ராஜா தம்முடைய ராஜ்யத்தின் நாடுகளிலெல்லாம் விசாரிப்புக்காரரை வைக்கவேண்டும்; இவர்கள் ரூபவதிகளாயிருக்கிற சகல கன்னிப்பெண்களையும் கூட்டி, சூசான் அரமனையிலிருக்கிற கன்னிமாடத்துக்கு அழைத்துவந்து, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாயின் வசத்திலே ஒப்புவிக்கவேண்டும்; அவர்களுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகள் அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டும். 4 அப்பொழுது ராஜாவின் கண்களுக்குப் பிரியமான கன்னி வஸ்திக்குப் பதிலாகப் பட்டத்து ஸ்திரீயாக வேண்டும் என்றார்கள்; இந்த வார்த்தை ராஜாவுக்கு நலமாய்த் தோன்றினபடியால் அப்படியே செய்தான். 5 அப்பொழுது சூசான் அரமனையிலே பென்யமீனியனாகிய கீசின் குமாரன் சீமேயினுடைய மகனாகிய யாவீரின் குமாரன் மொர்தெகாய் என்னும் பேருள்ள ஒரு யூதன் இருந்தான். 6 அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டு போகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான். 7 அவன் தன் சிறிய தகப்பன் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் அத்சாளை வளர்த்தான்; அவளுக்குத் தாய்தகப்பனில்லை; அந்தப் பெண் ரூபவதியும் சௌந்தரியமுடையவளுமாயிருந்தாள்; அவள் தகப்பனும் அவள் தாயும் மரணமடைந்தபோது, மொர்தெகாய் அவளைத் தன் குமாரத்தியாக எடுத்துக்கொண்டான். 8 ராஜாவின் கட்டளையும் தீர்மானமும் பிரசித்தமாகி, அநேகம் பெண்கள் கூட்டப்பட்டு, சூசான் அரமனையிலுள்ள யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்படுகிறபோது, எஸ்தரும் ராஜாவின் அரமனைக்கு அழைத்துக்கொண்டுபோகப்பட்டு, ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்பட்டாள். 9 அந்தப் பெண் அவன் பார்வைக்கு நன்றாயிருந்ததினால், அவளுக்கு அவன் கண்களிலே தயைகிடைத்தது; ஆகையால் அவளுடைய சுத்திகரிப்புக்கு வேண்டியவைகளையும், அவளுக்குத் தேவையான மற்றவைகளையும் அவளுக்குக் கொடுக்கவும், ராஜ அரமனையிலிருக்கிற ஏழு தாதிமார்களை அவளுக்கு நியமிக்கவும் ஜாக்கிரதைப்பட்டு கன்னிமாடத்தில் சிறந்த ஒரு இடத்திலே அவளையும் அவள் தாதிமார்களையும் வைத்தான். 10 எஸ்தரோவென்றால் தன் குலத்தையும், தன் பூர்வோத்தரத்தையும் அறிவிக்காதிருந்தாள்; மொர்தெகாய் அதைத் தெரிவிக்கவேண்டாமென்று அவளுக்குக் கற்பித்திருந்தான். 11 எஸ்தருடைய சுகசெய்தியையும் அவளுக்கு நடக்குங்காரியத்தையும் அறிய மொர்தெகாய் நாடோறும் கன்னிமாடத்து முற்றத்துக்கு முன்பாக உலாவுவான். 12 ஒவ்வொரு பெண்ணும் ஆறுமாதம் வெள்ளைப்போளத் தைலத்தினாலும், ஆறுமாதம் சுகந்தவர்க்கங்களினாலும், ஸ்திரீகளுக்குரிய மற்றச் சுத்திகரிப்புகளினாலும் ஜோடிக்கப்படுகிற நாட்கள் நிறைவேறி, இவ்விதமாய் ஸ்திரீகளின் முறைமைப்படி பன்னிரண்டு மாதமாகச் செய்யப்பட்டுத் தீர்ந்தபின்பு, ராஜாவாகிய அகாஸ்வேருவினிடத்தில் பிரவேசிக்க, அவளவளுடைய முறை வருகிறபோது, 13 இப்படி ஜோடிக்கப்பட்ட பெண் ராஜாவினிடத்தில் பிரவேசிப்பாள்; கன்னிமாடத்திலிருந்து தன்னோடேகூட ராஜ அரமனைக்குப்போக, அவள் தனக்கு வேண்டுமென்று கேட்பவையெல்லாம் அவளுக்குக் கொடுக்கப்படும். 14 சாயங்காலத்திலே அவள் உள்ளே பிரவேசித்து, காலமே, அபிமான ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய சாஸ்காசுடைய விசாரிப்புக்குள்ளிருக்கிற ஸ்திரீகளின் இரண்டாம் மாடத்துக்குத் திரும்பிவருவாள்; ராஜா தன்னை விரும்பிப் பேர்சொல்லி அழைப்பித்தாலொழிய அவள் ஒருபோதும் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கக்கூடாது. 15 மொர்தெகாய் தனக்குக் குமாரத்தியாய் ஏற்றுக்கொண்டவளும், அவன் சிறியதகப்பனாகிய அபியாயேலின் குமாரத்தியுமான எஸ்தர் ராஜாவினிடத்தில் பிரவேசிக்கிறதற்கு முறைவந்தபோது, அவள் ஸ்திரீகளைக் காவல்பண்ணுகிற ராஜாவின் பிரதானியாகிய யேகாய் நியமித்த காரியமேயல்லாமல் வேறொன்றும் கேட்கவில்லை; எஸ்தருக்குத் தன்னைக் காண்கிற எல்லார் கண்களிலும் தயைகிடைத்தது. 16 அப்படியே எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேரு அரசாளுகிற ஏழாம் வருஷம் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்திலே ராஜாவினிடத்தில் அரமனைக்கு அழைத்துக்கொண்டு போகப்பட்டாள். 17 ராஜா சகல ஸ்திரீகளைப்பார்க்கிலும் எஸ்தர்மேல் அன்புவைத்தான்; சகல கன்னிகைகளைப்பார்க்கிலும் அவளுக்கு அவன் சமுகத்தில் அதிக தயையும் பட்சமும் கிடைத்தது; ஆகையால் அவன் ராஜகிரீடத்தை அவள் சிரசின்மேல் வைத்து, அவளை வஸ்தியின் ஸ்தானத்திலே பட்டத்து ஸ்திரீயாக்கினான். 18 அப்பொழுது ராஜா தன்னுடைய எல்லாப் பிரபுக்களுக்கும் ஊழியக்காரருக்கும், எஸ்தரினிமித்தம் ஒரு பெரிய விருந்துசெய்து, நாடுகளுக்குச் சலக்கரணை உண்டாக்கி, ராஜஸ்திதிக்குத்தக்க வெகுமானங்களைக் கொடுத்தான். 19 இரண்டாந்தரம் கன்னிகைகள் சேர்க்கப்படும்போது, மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருந்தான். 20 எஸ்தர் மொர்தெகாய் தனக்குக் கற்பித்திருந்தபடி, தன் பூர்வோத்தரத்தையும் தன் குலத்தையும் தெரிவிக்காதிருந்தாள்; எஸ்தர் மொர்தெகாய் இடத்திலே வளரும்போது அவன் சொற்கேட்டு நடந்ததுபோல, இப்பொழுதும் அவன் சொற்கேட்டு நடந்துவந்தாள். 21 அந்நாட்களில் மொர்தெகாய் ராஜாவின் அரமனை வாசலில் உட்கார்ந்திருக்கிறபோது, வாசல்காக்கிற ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானும் தேரேசும் வர்மம் வைத்து, ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோட வகைதேடினார்கள். 22 இந்தக் காரியம் மொர்தெகாய்க்குத் தெரியவந்ததினால், அவன் அதை ராஜாத்தியாகிய எஸ்தருக்கு அறிவித்தான்; எஸ்தர் மொர்தெகாயின் பேரால் அதை ராஜாவுக்குச் சொன்னாள். 23 அந்தக் காரியம் விசாரிக்கப்படுகிறபோது, அது மெய்யென்று காணப்பட்டது; ஆகையால் அவர்கள் இருவரும் மரத்திலே தூக்கிப்போடப்பட்டார்கள்; இது ராஜ சமுகத்திலே நாளாகமப்புஸ்தகத்திலே எழுதப்பட்டிருக்கிறது.

எஸ்தர் 3

1 இந்த நடபடிகளுக்குப்பின்பு, ராஜாவாகிய அகாஸ்வேரு அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியனை மேன்மைப்படுத்தி, தன்னிடத்திலிருக்கிற சகல பிரபுக்களுக்கும் மேலாக அவனுடைய ஆசனத்தை உயர்த்திவைத்தான். 2 ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை. 3 அப்பொழுது ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள். 4 இப்படி அவர்கள் நாளுக்குநாள் அவனுடனே சொல்லியும், அவன் தங்களுக்குச் செவிகொடாதபோது, தான் யூதன் என்று அவன் அவர்களுக்கு அறிவித்திருந்தபடியால், மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்க்கிறதற்கு, அதை ஆமானுக்கு அறிவித்தார்கள். 5 ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான். 6 ஆனாலும் மொர்தெகாயின்மேல்மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பக்காரியமாகக் கண்டது; மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால், அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகைதேடினான். 7 ராஜாவாகிய அகாஸ்வேருவின் பன்னிரண்டாம் வருஷம் நிசான் மாதமாகிய முதலாம் மாதத்திலே ஆமானுக்கு முன்பாகப் பூர் என்னப்பட்ட சீட்டு ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு மாதத்தையும் குறித்துப் போடப்பட்டு, ஆதார்மாதமான பன்னிரண்டாம் மாதத்தின்மேல் விழுந்தது. 8 அப்பொழுது ஆமான் அகாஸ்வேரு ராஜாவை நோக்கி: உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் சட்டங்களைக் கைக்கொள்ளுகிறதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல. 9 ராஜாவுக்குச் சம்மதியானால், அவர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பவேண்டியது; அப்பொழுது நான் ராஜாவின் கஜானாவிலே கொண்டுவந்து செலுத்த பதினாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணிக் காரியக்காரர் கையில் கொடுப்பேன் என்றான். 10 அப்பொழுது ராஜா தன் கையிலிருக்கிற தன் மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான அம்மெதாத்தாவின் குமாரனும் யூதரின் சத்துருவுமாகிய ஆமானிடத்தில் கொடுத்து, 11 ஆமானை நோக்கி: அந்த வெள்ளியை நீ வைத்துக்கொள்; அந்த ஜனத்துக்கு உன் இஷ்டப்படி செய்யலாம் என்றான். 12 முதலாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் தேசாதிபதிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும், ஒவ்வொரு ஜனத்தின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் எழுதப்பட்டது; ராஜாவாகிய அகாஸ்வேருவின் பேரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது. 13 ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய ஒரேநாளிலே சிறியோர் பெரியோர் குழந்தைகள் ஸ்திரீகள் ஆகிய சகல யூதரையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்களைக் கொள்ளையிடவும், அஞ்சற்காரர் கையிலே ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது. 14 அந்த நாளுக்கு ஆயத்தப்பட்டிருக்கவேண்டும் என்று சகல ஜனங்களுக்கும் கூறி அறிவிக்கிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே, இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது. 15 அந்த அஞ்சற்காரர் ராஜாவின் உத்தரவினால் தீவிரமாய்ப் புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் பிறந்தது. ராஜாவும் ஆமானும் குடிக்கும்படி உட்கார்ந்தார்கள்; சூசான் நகரம் கலங்கிற்று.

எஸ்தர் 4

1 நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள மகா சத்தத்துடனே அலறிக்கொண்டு, 2 ராஜாவின் அரமனை வாசல் முகப்புமட்டும் வந்தான்; இரட்டுடுத்தினவனாய் ராஜாவின் அரமனை வாசலுக்குள் பிரவேசிக்க ஒருவனுக்கும் உத்தரவில்லை. 3 ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாய், அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள். 4 அப்பொழுது எஸ்தரின் தாதிமார்களும், அவளுடைய பிரதானிகளும்போய், அதை அவளுக்கு அறிவித்தார்கள்; அதினாலே ராஜாத்தி மிகவும் துக்கப்பட்டு, மொர்தெகாய் உடுத்திருந்த இரட்டை எடுத்துப்போட்டு, அவனை உடுத்துவிக்கிறதற்கு வஸ்திரங்களை அனுப்பினாள்; அவனோ அவைகளை ஏற்றுக்கொள்ளாதிருந்தான். 5 அப்பொழுது எஸ்தர் தன் பணிவிடைக்கென்று ராஜாவினால் நியமித்திருந்த அவனுடைய பிரதானிகளில் ஒருவனாகிய ஆத்தாகை அழைப்பித்து: காரியம் என்ன? அதின் முகாந்தரம் என்ன? என்று அறியும்படி, மொர்தெகாயினிடத்தில் விசாரிக்க அவனுக்குக் கட்டளையிட்டாள். 6 அப்படியே ஆத்தாகு ராஜாவின் அரமனை வாசலுக்கு முன்னான பட்டணவீதியிலிருக்கிற மொர்தெகாயினிடத்தில் புறப்பட்டுப்போனான். 7 அப்பொழுது மொர்தெகாய் தனக்குச் சம்பவித்த எல்லாவற்றைப்பற்றியும், யூதரை அழிக்கும்படி ஆமான் ராஜாவின் கஜானாவுக்கு எண்ணிக்கொடுப்பேன் என்று சொன்ன பணத்தொகையைப்பற்றியும் அவனுக்கு அறிவித்ததும் அன்றி, 8 யூதர்களை அழிக்கும்படி சூசானில் பிறந்த கட்டளையின் நகலையும் அவனிடத்தில் கொடுத்து, அதை எஸ்தருக்குக் காண்பித்துத் தெரியப்படுத்தவும், அவள் அகத்தியமாய் ராஜாவினிடத்திற் போய், அவனிடத்தில் தன் ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணவும் மன்றாடவும் வேண்டுமென்று அவளுக்குச் சொல்லச்சொன்னான். 9 ஆத்தாகு வந்து, மொர்தெகாயின் வார்த்தைகளை எஸ்தருக்கு அறிவித்தான். 10 அப்பொழுது எஸ்தர் ஆத்தாகினிடத்தில் மொர்தெகாய்க்குச் சொல்லியனுப்பினது: 11 யாராவது அழைப்பிக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால், புருஷரானாலும் ஸ்திரீயானாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படிக்கு அவர்களுக்கு ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு தவறாத சட்டமுண்டு, இது ராஜாவின் சகல ஊழியக்காரருக்கும், ராஜாவினுடைய நாடுகளிலுள்ள சகல ஜனங்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பதுநாளளவும் ராஜாவினிடத்தில் வரவழைப்பிக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள். 12 எஸ்தரின் வார்த்தைகளை மொர்தெகாய்க்குத் தெரிவித்தார்கள். 13 மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக்கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே. 14 நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான். 15 அப்பொழுது எஸ்தர் மொர்தெகாய்க்கு மறுபடியும் சொல்லச்சொன்னது: 16 நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள். 17 அப்பொழுது மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.

எஸ்தர் 5

1 மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜவஸ்திரந் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள்; ராஜா அரமனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் ராஜாசனத்திலே வீற்றிருந்தான். 2 ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினால், ராஜா தன் கையிலிருக்கிற பொற்செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள். 3 ராஜா அவளை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உனக்கு என்னவேண்டும்? நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும், உனக்குக் கொடுக்கப்படும் என்றான். 4 அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமானால், நான் தமக்குச் செய்வித்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் இன்றைக்கு வரவேண்டும் என்றாள். 5 அப்பொழுது ராஜா எஸ்தர் சொற்படி செய்ய, ஆமானைத் தீவிரித்து வரும்படி சொல்லி, எஸ்தர் செய்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் வந்தார்கள். 6 விருந்திலே திராட்சரசம் பரிமாறப்படுகையில், ராஜா எஸ்தரைப் பார்த்து: உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிறது என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான். 7 அதற்கு எஸ்தர் பிரதியுத்தரமாக: 8 ராஜாவின் கண்களில் எனக்குக் கிருபைகிடைத்து, என் வேண்டுதலைக் கட்டளையிடவும், என் விண்ணப்பத்தின்படி செய்யவும், ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், ராஜாவும் ஆமானும் நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்துக்கு வரவேண்டும் என்பதே என் வேண்டுதலும் என் விண்ணப்பமுமாயிருக்கிறது; நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன் என்றாள். 9 அன்றையதினம் ஆமான் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் புறப்பட்டான்; ஆனாலும் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற மொர்தெகாய் தனக்கு முன் எழுந்திராமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது, அவன் மொர்தெகாயின்மேல் உக்கிரம் நிறைந்தவனானான். 10 ஆகிலும் ஆமான் அதை அடக்கிக்கொண்டு, தன் வீட்டுக்கு வந்து, தன் சிநேகிதரையும் தன் மனைவியாகிய சிரேஷையும் அழைத்து, 11 தன் ஐசுவரியத்தின் மகிமையையும், தன் பிள்ளைகளின் திரட்சியையும், ராஜா தன்னைப் பெரியவனாக்கி, தன்னைப் பிரபுக்கள்மேலும் ராஜாவின் ஊழியக்காரர்மேலும் உயர்த்தின எல்லாவற்றையும் ஆமான் அவர்களுக்கு விவரித்துச்சொன்னான். 12 பின்னையும் ஆமான்: ராஜஸ்திரீயாகிய எஸ்தரும் தான் செய்த விருந்துக்கு ராஜாவுடனேகூட என்னைத்தவிர வேறொருவரையும் அழைக்கவில்லை; நாளைக்கும் ராஜாவுடனேகூட நான் விருந்துக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறேன். 13 ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணுமளவும் அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லையென்றான். 14 அப்பொழுது அவன் மனைவியாகிய சிரேஷும் அவனுடைய சிநேகிதர் எல்லாரும் அவனைப் பார்த்து: ஐம்பதுமுழ உயரமான ஒரு தூக்குமரம் செய்யப்படவேண்டும்; அதிலே மொர்தெகாயை தூக்கிப்போடும்படி நாளையத்தினம் நீர் ராஜாவுக்குச் சொல்லவேண்டும்; பின்பு சந்தோஷமாய் ராஜாவுடனேகூட விருந்துக்குப் போகலாம் என்றார்கள்; இந்தக் காரியம் ஆமானுக்கு நன்றாய்க் கண்டதினால் தூக்குமரத்தைச் செய்வித்தான்.

எஸ்தர் 6

1 அந்த ராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது. 2 அப்பொழுது வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது. 3 அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள். 4 ஆமான் தான் செய்த தூக்குமரத்திலே மொர்தெகாயைத் தூக்கிப்போடவேண்டுமென்று, ராஜாவிடத்தில் பேசும்படி ராஜ அரமனையின் வெளிமுற்றத்திலே வந்திருந்தான். அப்பொழுது ராஜா: முற்றத்திலிருக்கிறது யார் என்று கேட்டான். 5 ராஜாவின் ஊழியக்காரர் அவனை நோக்கி: இதோ, ஆமான் முற்றத்திலே நிற்கிறான் என்றார்கள்; ராஜா: அவன் உள்ளே வரட்டும் என்றான். 6 ஆமான் உள்ளே வந்தபோது, ராஜா அவனை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு என்ன செய்யப்படவேண்டும் என்று கேட்டான்; அதற்கு ஆமான், என்னையன்றி, யாரை ராஜா கனம்பண்ண விரும்புவார் என்று தன் மனதிலே நினைத்து, 7 ராஜாவை நோக்கி: ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால், 8 ராஜா உடுத்திக்கொள்ளுகிற ராஜவஸ்திரமும், ராஜா ஏறுகிற குதிரையும், அவர் சிரசிலே தரிக்கப்படும் ராஜமுடியும் கொண்டுவரப்படவேண்டும். 9 அந்த வஸ்திரமும் குதிரையும் ராஜாவுடைய பிரதான பிரபுக்களில் ஒருவனுடைய கையிலே கொடுக்கப்படவேண்டும்; ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனை அலங்கரித்தபின், அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறப்படவேண்டும் என்றான். 10 அப்பொழுது ராஜா ஆமானை நோக்கி: சீக்கிரமாய் நீ சொன்னபடி வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், ராஜ அரமனையின் வாசலில் உட்கார்ந்திருக்கிற யூதனாகிய மொர்தெகாய்க்கு அந்தப்பிரகாரம் செய்; நீ சொன்ன எல்லாவற்றிலும் ஒன்றும் தவறாதபடி பார் என்றான். 11 அப்படியே ஆமான் வஸ்திரத்தையும் குதிரையையும் கொண்டுபோய், மொர்தெகாயை அலங்கரித்து, அவனைக் குதிரையின்மேல் ஏற்றி, நகரவீதியில் உலாவும்படி செய்து, ராஜா கனம்பண்ண விரும்புகிற மனுஷனுக்கு இப்படியே செய்யப்படும் என்று அவனுக்கு முன்பாகக் கூறினான். 12 பின்பு மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலுக்குத் திரும்பிவந்தான்; ஆமானோவென்றால் சஞ்சலப்பட்டு முக்காடிட்டுக்கொண்டு தன் வீட்டுக்குத் தீவிரித்துப்போனான். 13 ஆமான் தனக்கு நேரிட்ட எல்லாவற்றையும் தன் மனைவியாகிய சிரேஷுக்கும் தன் சிநேகிதர் எல்லாருக்கும் அறிவித்தபோது, அவனுடைய ஆலோசனைக்காரரும் அவன் மனைவியாகிய சிரேஷும் அவனைப் பார்த்து: மொர்தெகாய்க்கு முன்பாக நீர் தாழ்ந்துபோகத் தொடங்கினீர்; அவன் யூதகுலமானால், நீர் அவனை மேற்கொள்ளாமல் அவனுக்கு முன்பாகத் தாழ்ந்துபோவது நிச்சயம் என்றார்கள். 14 அவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே, ராஜாவின் பிரதானிகள் வந்து, எஸ்தர் செய்த விருந்துக்கு வர ஆமானைத் துரிதப்படுத்தினார்கள்.

எஸ்தர் 7

1 ராஜாத்தியாகிய எஸ்தருடனே விருந்துண்ண, ராஜாவும் ஆமானும் வந்தபோது, 2 இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான். 3 அப்பொழுது ராஜாத்தியாகிய எஸ்தர் பிரதியுத்தரமாக: ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக. 4 எங்களை அழித்துக் கொன்று நிர்மூலமாக்கும்படி நானும் என் ஜனங்களும் விற்கப்பட்டோம்; அடிமைகளாகவும் வெள்ளாட்டிகளாகவும் விற்கப்பட்டுப்போனாலும் நான் மவுனமாயிருப்பேன்; இப்பொழுதோ ராஜாவுக்கு உண்டாகும் நஷ்டத்துக்கு அந்தச் சத்துரு உத்தரவாதம்பண்ண முடியாது என்றாள். 5 அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத் துணிகரங்கொண்டவன் யார்? அவன் எங்கே? என்றான். 6 அதற்கு எஸ்தர்: சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான். 7 ராஜா உக்கிரத்தோடே திராட்சரசப்பந்தியை விட்டெழுந்து, அரமனைத் தோட்டத்திற்குப் போனான்; ராஜாவினால் தனக்குப் பொல்லாப்பு நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு, ராஜாத்தியாகிய எஸ்தரிடத்தில் தன் பிராணனுக்காக விண்ணப்பம்பண்ண எழுந்துநின்றான். 8 ராஜா அரமனைத் தோட்டத்திலிருந்து திராட்சரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவருகையில், எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரமனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள். 9 அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற பிரதானிகளில் அற்போனா என்னும் ஒருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானின் வீட்டண்டை நாட்டப்பட்டிருக்கிறது என்றான்; அப்பொழுது ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான். 10 அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது.

எஸ்தர் 8

1 அன்றையதினம் அகாஸ்வேரு ராஜா யூதரின் சத்துருவாயிருந்த ஆமானின் வீட்டை ராஜாத்தியாகிய எஸ்தருக்குக் கொடுத்தான்; மொர்தெகாய் ராஜசமுகத்தில் வந்தான்; அவன் தனக்கு இன்ன உறவு என்று எஸ்தர் அறிவித்திருந்தாள். 2 ராஜா ஆமானின் கையிலிருந்து வாங்கிப்போட்ட தம்முடைய மோதிரத்தை எடுத்து, அதை மொர்தெகாய்க்குக் கொடுத்தான்; எஸ்தர் மொர்தெகாயை ஆமானின் அரமனைக்கு அதிகாரியாக வைத்தாள். 3 பின்னும் எஸ்தர் ராஜசமுகத்தில் பேசி, அவன் பாதங்களில் விழுந்து அழுது, ஆகாகியனான ஆமானின் தீவினையையும் அவன் யூதருக்கு விரோதஞ்செய்ய யோசித்த யோசனையையும் பரிகரிக்க அவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினாள். 4 அப்பொழுது ராஜா பொற்செங்கோலை எஸ்தருக்கு நீட்டினான்; எஸ்தர் எழுந்திருந்து ராஜசமுகத்தில் நின்று: 5 ராஜாவுக்குச் சித்தமாயிருந்து அவர் சமுகத்தில் எனக்குக் கிருபைகிடைத்து, ராஜசமுகத்தில் நான் சொல்லும் வார்த்தை சரியென்று காணப்பட்டு, அவருடைய கண்களுக்கு நான் பிரியமாயிருந்தால், ராஜாவின் நாடுகளிலெல்லாம் இருக்கிற யூதரை அழிக்கவேண்டும் என்று அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன் தீவினையாய் எழுதின கட்டளைகள் செல்லாமற்போகப்பண்ணும்படி எழுதி அனுப்பப்படவேண்டும். 6 என் ஜனத்தின்மேல் வரும் பொல்லாப்பை நான் எப்படிப் பார்க்கக்கூடும்? என் குலத்துக்கு வரும் அழிவை நான் எப்படிச் சகிக்கக்கூடும்? என்றாள். 7 அப்பொழுது அகாஸ்வேரு ராஜா ராஜாத்தியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி: இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன்; அவன் யூதர்மேல் தன் கையைப்போட எத்தனித்தபடியினால் அவனை மரத்திலே தூக்கிப்போட்டார்கள். 8 இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடுங்கள்; ராஜாவின்பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடப்பட்டதைச் செல்லாமற் போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான். 9 சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது. 10 அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டபின், குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது. 11 அவைகளில், அகாஸ்வேரு ராஜாவுடைய எல்லா நாடுகளிலும் ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய அந்த ஒரேநாளிலே, 12 அந்தந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதருக்குக் கட்டளையிட்டார் என்று எழுதியிருந்தது. 13 யூதர் தங்கள் பகைஞருக்குச் சரிக்குச் சரிக்கட்டும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாயிருக்கவேண்டுமென்று அந்தந்த நாட்டிலுள்ள சகல ஜனங்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே; இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது. 14 அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின அஞ்சற்காரர் ராஜாவின் வார்த்தையினாலே ஏவப்பட்டு, தீவிரத்தோடே புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் கொடுக்கப்பட்டது. 15 அப்பொழுது மொர்தெகாய் இளநீலமும் வெள்ளையுமான ராஜவஸ்திரமும், பெரிய பொன்முடியும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாய் ராஜாவினிடத்திலிருந்து புறப்பட்டான்; சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது. 16 இவ்விதமாய் யூதருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டாயிற்று. 17 ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதருக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது; யூதருக்குப் பயப்படுகிற பயம் தேசத்து ஜனங்களைப் பிடித்ததினால், அவர்களில் அநேகர் யூதமார்க்கத்தில் அமைந்தார்கள்.

எஸ்தர் 9

1 ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே, யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது. 2 யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப் பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது; அவர்களைப்பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று. 3 நாடுகளின் சகல அதிகாரிகளும், தேசாதிபதிகளும், துரைகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும், யூதருக்குத் துணைநின்றார்கள்; மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் அவர்களைப் பிடித்தது. 4 மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான். 5 அப்படியே யூதர் தங்கள் சத்துருக்களையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக் கொன்று நிர்மூலமாக்கி, தங்கள் இஷ்டப்படி தங்கள் பகைஞருக்குச் செய்தார்கள். 6 யூதர் சூசான் அரமனையிலும் ஐந்நூறுபேரைக் கொன்று நிர்மூலமாக்கினார்கள். 7 அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் யூதருடைய சத்துருவின் குமாரரான பர்சான்தாத்தா, தல்போன், அஸ்பாதா, 8 பொராதா, அதலியா, அரிதாத்தா, 9 பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்சாதா ஆகிய பத்துப்பேரையும் கொன்றுபோட்டார்கள். 10 ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை. 11 அன்றையதினம் சூசான் அரமனையில் கொன்றுபோடப்பட்டவர்களின் தொகை ராஜசமுகத்தில் கொண்டுவரப்பட்டது. 12 அப்பொழுது ராஜா, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: யூதர் சூசான் அரமனையில் ஐந்நூறுபேரையும் ஆமானின் பத்துக் குமாரரையும் கொன்று நிர்மூலமாக்கினார்கள்; ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ! இப்போதும் உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன் மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்றான். 13 அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், இன்றையதினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்றாள். 14 அப்படியே செய்யும்படிக்கு ராஜா உத்தரவு கொடுத்தான்; அதற்குச் சூசானிலே கட்டளை பிறந்தது; ஆமானின் பத்துக் குமாரருடைய உடலையும் தூக்கிப்போட்டார்கள். 15 சூசானிலிருக்கிற யூதர் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியிலும் கூடிச்சேர்ந்து, சூசானில் முந்நூறுபேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை. 16 ராஜாவின் நாடுகளிலுள்ள மற்ற யூதர்கள் தங்கள் பிராணனைத் தற்காக்கவும், தங்கள் பகைஞருக்கு விலகி இளைப்பாறுதல் அடையவும் ஒருமிக்கச் சேர்ந்து, தங்கள் விரோதிகளில் எழுபத்தையாயிரம் பேரைக் கொன்றுபோட்டார்கள்; ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை. 17 ஆதார் மாதத்தின் பதின்மூன்றாந்தேதியிலே இப்படிச் செய்து, பதினாலாந்தேதியிலே இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள். 18 சூசானிலுள்ள யூதரோவென்றால், அந்த மாதத்தின் பதின்மூன்றாந்தேதியிலும் பதினாலாந்தேதியிலும் ஏகமாய்க் கூடி, பதினைந்தாந்தேதியில் இளைப்பாறி, அதை விருந்துண்டு சந்தோஷப்படுகிற பண்டிகை நாளாக்கினார்கள். 19 ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள். 20 மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலும் இருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி, 21 வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளை, யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து, 22 அந்நாட்களில் விருந்துண்டு சந்தோஷங்கொண்டாடவும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்பவும், எளியவர்களுக்குத் தானதர்மஞ்செய்யவும் வேண்டுமென்று திட்டம்பண்ணினான். 23 அப்பொழுது யூதர் தாங்கள் செய்யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள். 24 அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் ஆகாகியன், யூதருக்கெல்லாம் சத்துருவாயிருந்து யூதரைச் சங்கரிக்க நினைத்து, அவர்களை அழிக்கவும் நிர்மூலமாக்கவும், பூர் என்னப்பட்ட சீட்டைப் போடுவித்தான். 25 ஆனாலும் எஸ்தர், ராஜசமுகத்தில் போய், யூதருக்கு விரோதமாய் அவன் நினைத்த அவனுடைய பொல்லாத யோசனை அவனுடைய தலையின்மேல் திரும்பும்படி கட்டளை பிறப்பித்ததினாலே, அவனையும் அவன் குமாரரையும் மரத்திலே தூக்கிப்போட்டார்கள். 26 ஆகையினால் அந்த நாட்கள் பூர் என்னும் பேரினால் பூரீம் என்னப்பட்டது; அவன் அந்த நிருபத்தில் எழுதியிருந்த எல்லா வார்த்தைகளினிமித்தமும், தாங்களே இந்த விஷயத்தில் அநுபவித்தவைகளினிமித்தமும், தங்களுக்கு நேரிட்டவைகளினிமித்தமும், 27 யூதர் அதைத் திட்டப்படுத்தி, அந்த இரண்டு நாட்களைக்குறித்து எழுதியிருக்கிறபடியே, அவைகளை வருஷந்தோறும், அவைகளின் சரியான காலத்திலே ஆசரியாமலிருப்பதில்லை என்பதையும், 28 இந்த நாட்கள் எல்லாத் தலைமுறைகளிலும், வம்சங்களிலும், தேசங்களிலும், ஊர்களிலும் நினைவுகூரப்பட்டு ஆசரிக்கப்படவேண்டும் என்பதையும், இந்தப் பூரீம் என்னும் பண்டிகை நாட்கள் யூதருக்குள்ளே தவறிப்போகாமலும், அவைகளை நினைவுகூருதல் தங்கள் சந்ததியாருக்குள்ளே ஒழிந்துபோகாமலும் இருக்கவேண்டும் என்பதையும், தங்கள்மேலும், தங்கள் சந்ததியார்மேலும், தங்கள் மார்க்கத்தில் அமையப்போகிற மற்ற யாவர்மேலும் கடனாக நியமித்துக்கொண்டார்கள். 29 பூரீமைக்குறித்து எழுதியிருக்கிற இந்த இரண்டாம் நிருபத்தைத் திடப்படுத்தும்படிக்கு, அபியாயேலின் குமாரத்தியாகிய எஸ்தர் என்னும் ராஜாத்தியும், யூதனாகிய மொர்தெகாயும், பின்னும் மகா உறுதியாய் எழுதினார்கள். 30 யூதனாகிய மொர்தெகாயும், ராஜாத்தியாகிய எஸ்தரும் யூதருக்கு உறுதிப்பாடுபண்ணினதும், அவர்கள்தானே உபவாசத்தோடும் அலறுதலோடும் ஆசரிப்போம் என்று தங்கள்மேலும் தங்கள் சந்ததியார்மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமான, பூரீம் என்னப்பட்ட இந்த நாட்கள் அவைகளின் சரியான காலங்களில் ஆசரிக்கப்படும் காரியத்தை உறுதியாக்க, 31 அவன் அகாஸ்வேருவின் ராஜ்யத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலும் இருக்கிற எல்லா யூதருக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை அனுப்பினான். 32 இப்படியே எஸ்தரின் கட்டளையானது பூரீம் நாட்களைப்பற்றின இந்த வர்த்தமானங்களைத் திடப்படுத்தினது; அது ஒரு புஸ்தகத்தில் எழுதப்பட்டது.

எஸ்தர் 10

1 ராஜாவாகிய அகாஸ்வேரு தேசத்தின்மேலும், சமுத்திரத்திலுள்ள தீவுகளின்மேலும், பகுதி ஏற்படுத்தினான். 2 வல்லமையும் பராக்கிரமமுமான அவனுடைய எல்லாச் செய்கைகளும், ராஜா பெரியவனாக்கின மொர்தெகாயினுடைய மேன்மையின் விர்த்தாந்தமும், மேதியா பெர்சியா ராஜாக்களின் நடபடி புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது. 3 யூதனாகிய மொர்தெகாய் ராஜாவாகிய அகாஸ்வேருவுக்கு இரண்டாவதானவனும், யூதருக்குள் பெரியவனும், தன் திரளான சகோதரருக்குப் பிரியமானவனுமாயிருந்ததும் அன்றித் தன் ஜனங்களுடைய நன்மையை நாடி, தன் குலத்தாருக்கெல்லாம் சமாதானமுண்டாகப் பேசுகிறவனுமாயிருந்தான்.Job

யோபு 1

1 ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் இருந்தான்; அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான். 2 அவனுக்கு ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் பிறந்தார்கள். 3 அவனுக்கு ஏழாயிரம் ஆடுகளும், மூவாயிரம் ஒட்டகங்களும், ஐந்நூறு ஏர்மாடுகளும், ஐந்நூறு கழுதைகளுமாகிய மிருகஜீவன்கள் இருந்ததுமன்றி, திரளான பணிவிடைக்காரரும் இருந்தார்கள்; அதினால் அந்த மனுஷன் கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாயிருந்தான். 4 அவன் குமாரர், அவனவன் தன்தன் நாளிலே தன்தன் வீட்டிலே விருந்துசெய்து, தங்கள் மூன்று சகோதரிகளையும் தங்களோடே போஜனம் பண்ணும்படி அழைப்பார்கள். 5 விருந்துசெய்கிற அவரவருடைய நாள்முறை முடிகிறபோது, யோபு: ஒருவேளை என் குமாரர் பாவஞ்செய்து, தேவனைத் தங்கள் இருதயத்திலே தூஷித்திருப்பார்கள் என்று சொல்லி, அவர்களை அழைத்தனுப்பி, பரிசுத்தப்படுத்தி, அதிகாலமே எழுந்து, அவர்கள் எல்லாருடைய இலக்கத்தின்படியேயும் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவான்; இந்தப்பிரகாரமாக யோபு அந்நாட்களிலெல்லாம் செய்துவருவான். 6 ஒருநாள் தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே வந்து நின்றான். 7 கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார். சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான். 8 கர்த்தர் சாத்தானை நோக்கி: என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப்போலப் பூமியில் ஒருவனும் இல்லை என்றார். 9 அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? 10 நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று. 11 ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான். 12 கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல்மாத்திரம் உன் கையை நீட்டாதே என்றார்; அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டுப்போனான். 13 பின்பு ஒருநாள் யோபுடைய குமாரரும், அவன் குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்து, திராட்சரசம் குடிக்கிறபோது, 14 ஒரு ஆள் அவனிடத்தில் வந்து: எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்துகொண்டிருக்கையில், 15 சபேயர் அவைகள்மேல் விழுந்து, அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். 16 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். 17 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: கல்தேயர் மூன்று பவுஞ்சாய் வந்து, ஒட்டகங்கள்மேல் விழுந்து, அவைகளை ஓட்டிக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். 18 இவன் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், வேறொருவன் வந்து: உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது, 19 வனாந்தரவழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின்மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்துபோனார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன் என்றான். 20 அப்பொழுது யோபு எழுந்திருந்து, தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்து: 21 நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன்; நிர்வாணியாய் அவ்விடத்துக்குத் திரும்புவேன்; கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான். 22 இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.

யோபு 2

1 பின்னொருநாளிலே தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றபோது, சாத்தானும் அவர்கள் நடுவிலே கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றான். 2 கர்த்தர் சாத்தானைப் பார்த்து: நீ எங்கேயிருந்து வருகிறாய் என்றார்; சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன் என்றான். 3 அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: நீ என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமான மனுஷனாகிய அவனைப்போல பூமியில் ஒருவனுமில்லை; முகாந்தரமில்லாமல் அவனை நிர்மூலமாக்கும்படி நீ என்னை ஏவினபோதிலும், அவன் இன்னும் தன் உத்தமத்திலே உறுதியாய் நிற்கிறான் என்றார். 4 சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும், மனுஷன் கொடுத்துவிடுவான். 5 ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும் என்றான். 6 அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆகிலும் அவன் பிராணனைமாத்திரம் தப்பவிடு என்றார். 7 அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, யோபின் உள்ளங்கால்தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான். 8 அவன் ஒரு ஓட்டை எடுத்து, தன்னைச் சுறண்டிக்கொண்டு சாம்பலில் உட்கார்ந்தான். 9 அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள். 10 அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை. 11 யோபுடைய மூன்று சிநேகிதராகிய தேமானியனான எலிப்பாசும், சூகியனான பில்தாதும், நாகமாத்தியனான சோப்பாரும், யோபுக்கு நேரிட்ட தீமைகள் யாவையும் கேள்விப்பட்டபோது, அவனுக்காகப் பரிதபிக்கவும், அவனுக்கு ஆறுதல்சொல்லவும், ஒருவரோடொருவர் யோசனைபண்ணிக்கொண்டு, அவரவர் தங்கள் ஸ்தலங்களிலிருந்து வந்தார்கள். 12 அவர்கள் தூரத்தில் வருகையில் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, அவனை உருத்தெரியாமல், சத்தமிட்டு அழுது, அவரவர் தங்கள் சால்வையைக் கிழித்து, வானத்தைப் பார்த்து: தங்கள் தலைகள்மேல் புழுதியைத் தூற்றிக்கொண்டு, 13 வந்து, அவன் துக்கம் மகாகொடிய துக்கம் என்று கண்டு, ஒருவரும் அவனோடு ஒரு வார்த்தையையும் பேசாமல், இரவுபகல் ஏழுநாள், அவனோடுகூடத் தரையிலே உட்கார்ந்திருந்தார்கள்.

யோபு 3

1 அதற்குப்பின்பு யோபு தன் வாயைத் திறந்து, தான் பிறந்த நாளைச் சபித்து, 2 வசனித்துச் சொன்னது என்னவென்றால்: 3 நான் பிறந்தநாளும் ஒரு ஆண்பிள்ளை உற்பத்தியாயிற்றென்று சொல்லப்பட்ட ராத்திரியும் அழிவதாக. 4 அந்த நாள் அந்தகாரப்படுவதாக; தேவன் உயரத்திலிருந்து அதை விசாரியாமலும், ஒளி அதின்மேல் பிரகாசியாமலும், 5 அந்தகாரமும் மரண இருளும் அதைக் கறைப்படுத்தி, மப்பு அதை மூடி, மந்தாரநாளின் பயங்கரங்கள் அதை அருக்களிப்பாக்குவதாக. 6 அந்த ராத்திரியை அந்தகாரம் பிடிப்பதாக; வருஷத்தின் நாட்களில் அது சந்தோஷப்படுகிற நாளாயிராமலும் மாதங்களின் கணக்கிலே அது வராமலும் போவதாக. 7 அந்த ராத்திரி தனிமையாயிருப்பதாக; அதிலே கெம்பீரசத்தம் இல்லாமற்போவதாக. 8 நாளைச் சபிக்கிறவர்களும், லிவியாதானை எழும்பப்பண்ணத்தக்கவர்களும், அதைச் சபிப்பார்களாக. 9 அதின் அஸ்தமனகாலத்தில் தோன்றிய நட்சத்திரங்கள் இருண்டு, அது எதிர்பார்த்திருந்த வெளிச்சம் உண்டாகாமலும், விடியற்காலத்து வெளுப்பை அது காணாமலும் இருப்பதாக. 10 நான் இருந்த கர்ப்பத்தின் வாசலை அது அடைக்காமலும், என் கண்கள் காண்கிற வருத்தத்தை மறைத்துவிடாமலும் இருந்ததே. 11 நான் கர்ப்பத்தில்தானே அழியாமலும், கர்ப்பத்திலிருந்து புறப்படுகிறபோதே சாகாமலும் போனதென்ன? 12 என்னை ஏந்திக்கொள்ள மடியும், நான் பாலுண்ண ஸ்தனங்களும் உண்டாயிருந்ததென்ன? 13 அப்படியில்லாதிருந்தால், அசையாமல் கிடந்து அமர்ந்திருந்து, 14 பாழ்நிலங்களில் தங்களுக்கு மாளிகையைக்கட்டின பூமியின் ராஜாக்களோடும் மந்திரிமார்களோடும், 15 அல்லது, பொன்னை உடையவர்களும், தங்கள் வீடுகளை வெள்ளியினால் நிரப்பினவர்களுமான பிரபுக்களோடுங்கூட நான் இப்பொழுது தூங்கி இளைப்பாறுவேனே. 16 அல்லது, வெளிப்படாத முதிராப்பிண்டம்போலவும், வெளிச்சத்தைக் காணாத சிசுக்கள்போலவும் இருப்பேனே. 17 துன்மார்க்கருடைய தொந்தரவு அங்கே ஓய்ந்திருக்கிறது; பெலனற்று விடாய்த்துப்போனவர்கள் அங்கே இளைப்பாறுகிறார்கள். 18 கட்டுண்டிருந்தவர்கள் அங்கே ஏகமாக அமைந்திருக்கிறார்கள்; ஒடுக்குகிறவனுடைய சத்தம் அங்கே கேட்கப்படுகிறதில்லை. 19 சிறியவனும் பெரியவனும் அங்கே சரியாயிருக்கிறார்கள்; அடிமை தன் எஜமானுக்கு நீங்கலாயிருக்கிறான். 20 மரணத்துக்கு ஆசையாய்க் காத்திருந்து, புதையலைத் தேடுகிறதுபோல அதைத் தேடியும் அடையாமற்போகிறவர்களும், 21 பிரேதக்குழியைக் கண்டுபிடித்ததினால் மிகவும் களிகூர்ந்து, 22 அதற்காகச் சந்தோஷப்படுகிற நிர்ப்பாக்கியருமாகிய இவர்களுக்கு வெளிச்சமும், மனச்சஞ்சலமுள்ள இவர்களுக்கு ஜீவனும் கொடுக்கப்படுகிறதினால் பலன் என்ன? 23 தன் வழியைக் காணக்கூடாதபடிக்கு, தேவனால் வளைந்துகொள்ளப்பட்டவனுக்கு வெளிச்சத்தினால் பலன் என்ன? 24 என் போஜனத்துக்கு முன்னே எனக்குப் பெருமூச்சு உண்டாகிறது; என் கதறுதல் வெள்ளம்போல் புரண்டுபோகிறது. 25 நான் பயந்த காரியம் எனக்கு நேரிட்டது; நான் அஞ்சினது எனக்கு வந்தது. 26 எனக்குச் சுகமுமில்லை, இளைப்பாறுதலுமில்லை, அமைதலுமில்லை; எனக்குத் தத்தளிப்பே நேரிட்டது.

யோபு 4

1 அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக: 2 நாங்கள் உம்முடனே பேசத்துணிந்தால், ஆயாசப்படுவீரோ? ஆனாலும் பேசாமல் அடக்கிக்கொள்ளத்தக்கவன் யார்? 3 இதோ, நீர் அநேகருக்குப் புத்திசொல்லி, இளைத்த கைகளைத் திடப்படுத்தினீர். 4 விழுகிறவனை உம்முடைய வார்த்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர். 5 இப்பொழுதோ துன்பம் உமக்கு நேரிட்டபடியினால் ஆயாசப்படுகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர். 6 உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாயும் இருக்கவேண்டியதல்லவோ? 7 குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப்பட்டது எப்போ? இதை நினைத்துப்பாரும். 8 நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள். 9 தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, அவருடைய நாசியின் காற்றினாலே நிர்மூலமாகிறார்கள். 10 சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்டசிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்து போம். 11 கிழச்சிங்கம் இரையில்லாமையால் மாண்டுபோம், பாலசிங்கங்கள் சிதறுண்டுபோம். 12 இப்போதும் ஒரு வார்த்தை என்னிடத்தில் இரகசியமாய் அறிவிக்கப்பட்டது, அதினுடைய மெல்லிய ஓசை என் செவியில் விழுந்தது. 13 மனுஷர்மேல் அயர்ந்த நித்திரை இறங்குகையில், இராத்தரிசனங்களில் பலவித தோற்றங்கள் உண்டாகும்போது, 14 திகிலும் நடுக்கமும் என்னைப் பிடித்தது, என் எலும்புகளெல்லாம் நடுங்கினது. 15 அப்பொழுது ஒரு ஆவி என் முகத்துக்கு முன்பாகக் கடந்தது, என் உடலின் மயிர் சிலிர்த்தது. 16 அது ஒரு உருப்போல என் கண்களுக்குமுன் நின்றது, ஆனாலும் அதின் ரூபம் இன்னதென்று விளங்கவில்லை; அமைதலுண்டாயிற்று, அப்பொழுது நான் கேட்ட சத்தமாவது: 17 மனுஷன் தேவனைப்பார்க்கிலும் நீதிமானாயிருப்பானோ? மனுபுத்திரன் தன்னை உண்டாக்கினவரைப்பார்க்கிலும் சுத்தமாயிருப்பானோ? 18 கேளும், அவர் தம்முடைய பணிவிடைக்காரரிடத்தில் நம்பிக்கை வைப்பதில்லை; தம்முடைய தூதரின்மேலும் புத்தியீனத்தைச் சுமத்துகிறாரே, 19 புழுதியில் அஸ்திபாரம் போட்டு, மண் வீடுகளில் வாசம்பண்ணி, பொட்டுப்பூச்சியால் அரிக்கப்படுகிறவர்கள்மேல் அவர் நம்பிக்கை வைப்பது எப்படி? 20 காலைமுதல் மாலைவரைக்கும் மடிந்து, கவனிப்பார் ஒருவருமில்லாமல், நித்திய அழிவடைகிறார்கள். 21 அவர்களிலிருக்கிற அவர்களுடைய மேன்மை போய்விடுமல்லவோ? ஞானமடையாமல் சாகிறார்களே என்று சொன்னான்.

யோபு 5

1 இப்போது கூப்பிடும், உமக்கு உத்தரவு கொடுப்பார் உண்டோ பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்? 2 கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும். 3 நிர்மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவன் வாசஸ்தலத்தைச் சபித்தேன். 4 அவன் பிள்ளைகள் இரட்சிப்புக்குத் தூரமாகி, தப்புவிப்பாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள். 5 பசித்தவன் அவன் விளைச்சலை முட்செடிகளுக்குள்ளுமிருந்து பறித்துத் தின்றான்; பறிகாரன் அவன் ஆஸ்தியை விழுங்கினான். 6 தீங்கு புழுதியிலிருந்து உண்டாகிறதுமில்லை; வருத்தம் மண்ணிலிருந்து முளைக்கிறதுமில்லை. 7 அக்கினிப்பொறிகள் மேலே பறக்கிறதுபோல, மனுஷன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான். 8 ஆனாலும் நான் தேவனை நாடி, என் நியாயத்தைத் தேவனிடத்தில் ஒப்புவிப்பேன். 9 ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். 10 தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார். 11 அவர் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, வெளிநிலங்களின்மேல் தண்ணீர்களை வருவிக்கிறார். 12 தந்திரக்காரரின் கைகள் காரியத்தை முடிய நடத்தக்கூடாதபடிக்கு, அவர்களுடைய உபாயங்களை அவர் அபத்தமாக்குகிறார். 13 அவர் ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறார்; திரியாவரக்காரரின் ஆலோசனை கவிழ்க்கப்படும். 14 அவர்கள் பகற்காலத்திலே அந்தகாரத்துக்குள்ளாகி, மத்தியான வேளையிலே இரவில் தடவுகிறதுபோலத் தடவித் திரிகிறார்கள். 15 ஆனாலும் எளியவனை அவர்கள் வாயிலிருக்கிற பட்டயத்துக்கும், பெலவானின் கைக்கும் விலக்கி இரட்சிக்கிறார். 16 அதினால் தரித்திரனுக்கு நம்பிக்கை உண்டு; தீமையானது தன் வாயை மூடும். 17 இதோ, தேவன் தண்டிக்கிற மனுஷன் பாக்கியவான்; ஆகையால் சர்வவல்லவருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதிரும். 18 அவர் காயப்படுத்திக் காயங்கட்டுகிறார்; அவர் அடிக்கிறார், அவருடைய கை ஆற்றுகிறது. 19 ஆறு இக்கட்டுகளுக்கு உம்மை நீங்கலாக்குவார்; ஏழாவதிலும் பொல்லாப்பு உம்மைத் தொடாது. 20 பஞ்சகாலத்திலே அவர் உம்மை மரணத்துக்கும், யுத்தத்திலே பட்டயத்தின் வெட்டுக்கும் விலக்கி மீட்பார். 21 நாவின் சவுக்குக்கும் மறைக்கப்படுவீர்; பாழாக்குதல் வரும்போதும் பயப்படாமலிருப்பீர். 22 பாழாக்குதலையும் பஞ்சத்தையும் பார்த்து நகைப்பீர்; காட்டுமிருகங்களுக்கும் பயப்படாமலிருப்பீர். 23 வெளியின் கல்லுகளோடும் உமக்கு உடன்படிக்கையிருக்கும்; வெளியின் மிருகங்களும் உம்மோடே சமாதானமாயிருக்கும். 24 உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர். 25 உம்முடைய சந்தானம் பெருகி, உம்முடைய சந்ததியார் பூமியின் பூண்டுகளைப்போல இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்வீர். 26 தானியம் ஏற்றகாலத்திலே அம்பாரத்தில் சேருகிறதுபோல, முதிர்வயதிலே கல்லறையில் சேருவீர். 27 இதோ, நாங்கள் ஆராய்ந்து அறிந்தது இதுதான்; காரியம் இப்படியிருக்கிறது; இதை நீர் கேட்டு உமக்கு நன்மையுண்டாக அறிந்துகொள்ளும் என்றான்.

யோபு 6

1 யோபு பிரதியுத்தரமாக: 2 என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும். 3 அப்பொழுது அது கடற்கரை மணலைப்பார்க்கிலும் பாரமாயிருக்கும்; ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது. 4 சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது. 5 புல்லிருக்கிற இடத்திலே காட்டுக்கழுதை கத்துமோ? தனக்குத் தீவனமிருக்கிற இடத்திலே எருது கதறுமோ? 6 ருசியில்லாத பதார்த்தத்தை உப்பில்லாமல் சாப்பிடக்கூடுமோ? முட்டையின் வெள்ளைக்கருவில் சுவை உண்டோ? 7 உங்கள் வார்த்தைகளை என் ஆத்துமா தொடமாட்டேன் என்கிறது; அவைகள் அரோசிகமான போஜனம்போல் இருக்கிறது. 8 ஆ, என் மன்றாட்டு எனக்கு அருளப்பட்டு, நான் வாஞ்சிப்பதைத் தேவன் எனக்குத் தந்து, 9 தேவன் என்னை நொறுக்கச் சித்தமாய், தம்முடைய கையை நீட்டி என்னைத் துண்டித்துப்போட்டால் நலமாயிருக்கும். 10 அப்பொழுதாவது எனக்கு ஆறுதல் இருக்குமே; அப்பொழுது என்னைத் தப்பவிடாத நோவிலே மரத்திருப்பேன்; பரிசுத்தருடைய வார்த்தைகளை நான் மறைத்துவைக்கவில்லை, அவர் என்னைத் தப்பவிடாராக. 11 நான் காத்துக்கொண்டிருக்க என் பெலன் எம்மாத்திரம்? என் ஜீவனை நீடித்திருக்கப்பண்ண என் முடிவு எப்படிப்பட்டது? 12 என் பெலன் கற்களின் பெலனோ? என் மாம்சம் வெண்கலமோ? 13 எனக்கு உதவியானது ஒன்றும் இல்லையல்லவோ? சகாயம் என்னைவிட்டு நீங்கிற்றே. 14 உபாதிக்கப்படுகிறவனுக்கு அவனுடைய சிநேகிதனால் தயைகிடைக்கவேண்டும்; அவனோ சர்வவல்லவருக்குப் பயப்படாதேபோகிறான். 15 என் சகோதரர் காட்டாறுபோல மோசம்பண்ணுகிறார்கள்; ஆறுகளின் வெள்ளத்தைப்போலக் கடந்துபோகிறார்கள். 16 அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி, 17 உஷ்ணங்கண்டவுடனே உருகி வற்றி, அனல்பட்டவுடனே தங்கள் ஸ்தலத்தில் உருவழிந்துபோகின்றன. 18 அவைகளுடைய வழிகளின் போக்குகள் இங்குமங்கும் பிரியும்; அவைகள் விருதாவிலே பரவி ஒன்றும் இல்லாமற்போகும். 19 தேமாவின் பயணக்காரர் தேடி, சேபாவின் பயணக்கூட்டங்கள் அவைகள்மேல் நம்பிக்கை வைத்து, 20 தாங்கள் இப்படி நம்பினதினாலே வெட்கப்படுகிறார்கள்; அவ்விடமட்டும் வந்து கலங்கிப்போகிறார்கள். 21 அப்படியே நீங்களும் இப்பொழுது ஒன்றுக்கும் உதவாமற்போனீர்கள்; என் ஆபத்தைக் கண்டு பயப்படுகிறீர்கள். 22 எனக்கு ஏதாகிலும் கொண்டுவாருங்கள் என்றும், உங்கள் ஆஸ்தியிலிருந்து எனக்கு யாதொரு வெகுமானம் கொடுங்கள் என்றும்; 23 அல்லது சத்துருவின் கைக்கு என்னைத் தப்புவியுங்கள், வல்லடிக்காரரின் கைக்கு என்னை நீங்கலாக்கி மீட்டு விடுங்கள் என்றும் நான் சொன்னதுண்டோ? 24 எனக்கு உபதேசம்பண்ணுங்கள், நான் மவுனமாயிருப்பேன்; நான் எதிலே தவறினேனோ அதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். 25 செம்மையான வார்த்தைகளில் எவ்வளவு வல்லமை உண்டு? உங்கள் கடிந்துகொள்ளுதலினால் காரியம் என்ன? 26 கடிந்துகொள்ள நீங்கள் வார்த்தைகளை யோசித்து, நம்பிக்கையற்றவனுடைய வார்த்தைகளைக் காற்றிலே விட்டுவிடுகிறீர்களோ? 27 இப்படிச் செய்து திக்கற்றவன்மேல் நீங்கள் விழுந்து, உங்கள் சிநேகிதனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள். 28 இப்போதும் உங்களுக்குச் சித்தமானால் என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது நான் பொய்சொல்லுகிறேனோ என்று உங்களுக்குப் பிரத்தியட்சமாய் விளங்கும். 29 நீங்கள் திரும்புங்கள், அக்கிரமம் காணப்படாதிருக்கும்; திரும்புங்கள் என் நீதி அதிலே விளங்கும். 30 என் நாவிலே அக்கிரமம் உண்டோ? என் வாய் ஆகாதவைகளைப் பகுத்தறியாதோ?

யோபு 7

1 பூமியிலே போராட மனுஷனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ? அவன் நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல் இருக்கிறதல்லவோ? 2 ஒரு வேலையாள் நிழலை வாஞ்சித்து, ஒரு கூலிக்காரன் தன் கூலியை வரப்பார்த்திருக்கிறதுபோல, 3 மாயையான மாதங்கள் என்னுடைய சுதந்தரமாகி, சஞ்சலமான ராத்திரிகள் எனக்குக் குறிக்கப்பட்டது. 4 நான் படுத்துக்கொள்ளுகிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்? இராக்காலம் எப்பொழுது முடியும் என்று சொல்லி, கிழக்கு வெளுக்குமட்டும் அரண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்று போகிறது. 5 என் மாம்சம் பூச்சிகளினாலும், அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று. 6 என் நாட்கள் நெய்கிறவன் எறிகிற நாடாவிலும் தீவிரமாய் ஓடுகிறது; அவைகள் நம்பிக்கையில்லாமல் முடிந்துபோகும். 7 என் பிராணன் காற்றைப்போலிருக்கிறதென்றும், என் கண்கள் இனி நன்மையைக் காணப்போகிறதில்லையென்றும் நினைத்தருளும். 8 இப்போது என்னைக் காண்கிறவர்களின் கண்கள் இனி என்னைக் காண்பதில்லை; உம்முடைய கண்கள் என்மேல் நோக்கமாயிருக்கிறது; நானோ இல்லாமற்போகிறேன். 9 மேகம் பறந்துபோகிறதுபோல, பாதாளத்தில் இறங்குகிறவன் இனி ஏறிவரான். 10 இனி தன் வீட்டுக்குத் திரும்பான், அவன் ஸ்தலம் இனி அவனை அறியாது. 11 ஆகையால் நான் என் வாயை அடக்காமல், என் ஆவியின் வேதனையினால் பேசி, என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன். 12 தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ? நான் ஒரு திமிங்கிலமோ? 13 என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேனாகில், 14 நீர் சொப்பனங்களால் என்னைக் கலங்கப்பண்ணி, தரிசனங்களால் எனக்குத் திகிலுண்டாக்குகிறீர். 15 அதினால் என் ஆத்துமா, நெருக்குண்டு சாகிறதையும், என் எலும்புகளோடே உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும், மரணத்தையும் விரும்புகிறது. 16 இப்படியிருக்கிறதை அரோசிக்கிறேன்; எந்நாளும் உயிரோடிருக்க விரும்பேன், என்னை விட்டுவிடும்; என் நாட்கள் மாயைதானே. 17 மனுஷனை நீர் ஒரு பொருட்டாக எண்ணுகிறதற்கும், அவன்மேல் சிந்தை வைக்கிறதற்கும், 18 காலைதோறும் அவனை விசாரிக்கிறதற்கும், நிமிஷந்தோறும் அவனைச் சோதிக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்? 19 நான் என் உமிழ்நீரை விழுங்காதபடி எத்தனைகாலம் என்னை நெகிழாமலும், என்னை விடாமலும் இருப்பீர். 20 மன்னுயிரைக் காப்பவரே, பாவஞ்செய்தேனானால் உமக்கு நான் செய்யவேண்டியது என்ன? நான் எனக்குத்தானே பாரமாயிருக்கும்படிக்கு, நீர் என்னை உமக்கு இலக்காக வைத்தது என்ன? 21 என் மீறுதலை நீர் மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடியற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இரேன் என்றான்.

யோபு 8

1 அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக: 2 நீர் எந்தமட்டும் இப்படிப்பட்டவைகளைப் பேசுவீர்? எதுவரைக்கும் உம்முடைய வாயின் வார்த்தைகள் பலமான காற்றைப்போலிருக்கும்? 3 தேவன் நியாயத்தைப் புரட்டுவாரோ? சர்வவல்லவர் நீதியைப் புரட்டுவாரோ? 4 உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்திருந்தாலும் அவர்களுடைய பாதகத்தின் ஆக்கினைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும், 5 நீர் தேவனை ஏற்கனவே தேடி, சர்வவல்லவரை நோக்கி விண்ணப்பஞ்செய்து, 6 சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார். 7 உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும். 8 ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும். 9 நாம் நேற்று உண்டானவர்கள், ஒன்றும் அறியோம்; பூமியின்மேல் நம்முடைய நாட்கள் நிழலைப்போலிருக்கிறது. 10 அவர்கள் உமக்கு உபதேசித்து, உமக்குத் தெரிவித்து, தங்கள் இருதயத்திலிருக்கும் நியாயங்களை வெளிப்படுத்துவார்கள் அல்லவோ? 11 சேறில்லாமல் நாணல் ஓங்கி வளருமோ? தண்ணீரில்லாமல் கோரைப்புல் முளைக்குமோ? 12 அது இன்னும் பச்சையாயிருக்கும்போதே, அறுக்கப்படாதிருந்தும் மற்ற எந்தப் புல்லைப்பார்க்கிலும் சீக்கிரமாய் வாடிப்போம் அல்லவோ? 13 தேவனை மறக்கிற எல்லாருடைய வழிகளும் அப்படியே இருக்கும்; மாயக்காரரின் நம்பிக்கை அழிந்துபோம். 14 அவனுடைய வீண் எண்ணம் அற்றுப்போய், அவனுடைய நம்பிக்கை சிலந்திப்பூச்சி வீடுபோலிருக்கும். 15 ஒருவன் அதின் வீட்டின்மேல் சாய்ந்தால், அது நிலைக்கமாட்டாது, அதைப் பிடித்தால், அது நிற்காது. 16 வெயில் எரிக்காததற்கு முன்னே அவன் பச்சைச்செடி, அதின் கொடிகள் அவன் தோட்டத்தின்மேலே படரும்; 17 அதின் வேர்கள் கற்குவியலில் சிக்கி, கற்பாறையை நாடும். 18 அது அதினிடத்தில் இராதபடிக்கு நிர்மூலமானபின், அது இருந்த இடம் உன்னை நான் கண்டதில்லையென்று மறுதலிக்கும். 19 இதோ, அவன் வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே பேர் மண்ணிலிருந்து முளைப்பார்கள். 20 இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை. 21 இனி அவர் உம்முடைய வாயை நகைப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார். 22 உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.

யோபு 9

1 அதற்கு யோபு பிரதியுத்தரமாக: 2 ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன்; தேவனுக்கு முன்பாக மனுஷன் நீதிமானாயிருப்பதெப்படி? 3 அவர் அவனோடே வழக்காடச் சித்தமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு உத்தரவு சொல்லமாட்டானே. 4 அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்? 5 அவர் பர்வதங்களைச் சடிதியாய்ப் பேர்க்கிறார்; தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார். 6 பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் ஸ்தானத்தினின்று அசையப்பண்ணுகிறார். 7 அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார். 8 அவர் ஒருவரே வானங்களை விரித்து, சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர். 9 அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும், அறுமீனையும், தட்சண மண்டலங்களையும் உண்டாக்கினவர். 10 ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார். 11 இதோ, அவர் என் அருகில் போகிறார், நான் அவரைக் காணேன்; அவர் கடந்துபோகிறார், நான் அவரை அறியேன். 12 இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை மறிப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்? 13 தேவன் தம்முடைய கோபத்தைத் திருப்பமாட்டார்; ஒருவருக்கொருவர் துணைநிற்கிற அகங்காரிகள் அவருக்கு அடங்கவேண்டும். 14 இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும், அவரோடே வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்துகொள்ளவும் நான் எம்மாத்திரம்? 15 நான் நீதிமானாயிருந்தாலும் அவரோடே வழக்காடாமல், என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்குக் கெஞ்சுவேன். 16 நான் கெஞ்ச, அவர் எனக்கு உத்தரவு அருளினாலும், அவர் என் விண்ணப்பத்துக்குச் செவிகொடுத்தார் என்று நம்பேன். 17 அவர் புசலினால் என்னை முறிக்கிறார்; முகாந்தரமில்லாமல் அநேகம் காயங்களை எனக்கு உண்டாக்குகிறார். 18 நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், கசப்பினால் என்னை நிரப்புகிறார். 19 பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால், என் பட்சத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார்? 20 நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும். 21 நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன்; என் ஜீவனை அரோசிப்பேன். 22 ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார். 23 சவுக்கானது அசுப்பிலே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப்பார்த்து நகைக்கிறார். 24 உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; அவர் இதைச் செய்கிறதில்லையென்றால், பின்னை யார் இதைச் செய்கிறார். 25 என் நாட்கள் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது; அவைகள் நன்மையைக் காணாமல் பறந்துபோம். 26 அவைகள் வேகமாய் ஓடுகிற கப்பல்களைப்போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது. 27 என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன்கொள்வேன் என்று சொன்னால், 28 என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்; என்னைக் குற்றமில்லாதவனாக எண்ணமாட்டீர் என்று அறிவேன். 29 நான் பொல்லாதவனாயிருந்தால், விருதாவாய்ப் போராடவேண்டியது என்ன? 30 நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும், 31 நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். அப்பொழுது என் வஸ்திரமே என்னை அருவருக்கும். 32 நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறதற்கும், நாங்கள் கூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனுஷன் அல்லவே. 33 எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே. 34 அவர் தமது மிலாற்றை என்னை விட்டு அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக. 35 அப்பொழுது நான் அவருக்குப் பயப்படாமல் பேசுவேன்; இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.

யோபு 10

1 என் ஆத்துமா ஜீவனை அரோசிக்கிறது, நான் என் துயரத்துக்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன். 2 நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும்; நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன். 3 நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் கிரியையை வெறுத்து, துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாய்ப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ? 4 மாம்சக் கண்கள் உமக்கு உண்டோ? மனுஷன் பார்க்கிறபிரகாரமாய்ப் பார்க்கிறீரோ? 5 நீர் என் அக்கிரமத்தைக் கிண்டிக்கிளப்பி, என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு, 6 உம்முடைய நாட்கள் ஒரு மனுஷனுடைய நாட்களைப்போலவும், உம்முடைய வருஷங்கள் ஒரு புருஷனுடைய ஜீவகாலத்தைப்போலவும் இருக்கிறதோ? 7 நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; உம்முடைய கைக்கு என்னைத் தப்புவிக்கிறவன் இல்லை. 8 உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், என்னை நிர்மூலமாக்குகிறீர். 9 களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும். 10 நீர் என்னைப் பால்போல் வார்த்து, தயிர்போல் உறையப்பண்ணினீர் அல்லவோ? 11 தோலையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர். 12 எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது. 13 இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும், இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன். 14 நான் பாவஞ்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடீர். 15 நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ! நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்கமாட்டேன்; அவமானத்தால் நிரப்பப்பட்டேன்; நீர் என் சிறுமையைப் பார்த்தருளும், அது அதிகரிக்கிறது. 16 சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, எனக்கு விரோதமாய் உமது அதிசய வல்லமையை விளங்கப்பண்ணுகிறீர். 17 நீர் உம்முடைய சாட்சிகளை எனக்கு விரோதமாய் இரட்டிக்கப்பண்ணுகிறீர்; என்மேல் உம்முடைய கோபத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்; போராட்டத்தின்மேல் போராட்டம் அதிகரிக்கிறது. 18 நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன? ஒரு கண்ணும் என்னைக் காணாதபடி, நான் அப்பொழுதே ஜீவித்துப்போனால் நலமாமே. 19 நான் ஒருக்காலும் இல்லாதது போலிருந்து, கர்ப்பத்திலிருந்து பிரேதக்குழிக்குக் கொண்டுபோகப்பட்டிருப்பேன். 20 என் நாட்கள் கொஞ்சமல்லவோ? 21 காரிருளும் மரணாந்தகாரமுமான இருண்ட தேசமும், இருள்சூழ்ந்த ஒழுங்கில்லாத மரணாந்தகாரமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்துக்கு, நான் போகுமுன்னே, 22 நான் சற்று இளைப்பாறும்படி நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும் என்றான்.

யோபு 11

1 அப்பொழுது நாகமாத்தியனாகிய சோப்பார் பிரதியுத்தரமாக: 2 ஏராளமான வார்த்தைகளுக்கு உத்தரவு சொல்லவேண்டாமோ? வாய்ச்சாலகன் நீதிமானாய் விளங்குவானோ? 3 உம்முடைய வீம்புவார்த்தைகளுக்கு மனுஷர் மவுனமாயிருப்பார்களோ? நீர் பரியாசம்பண்ணும்போது, ஒருவரும் உம்மை வெட்கப்படுத்த வேண்டாமோ? 4 என் சொல் சுத்தம் என்றும், நான் தேவரீருடைய பார்வைக்குத் துப்புரவானவன் என்றும் நீர் சொல்லுகிறீர். 5 ஆனாலும் தேவன் பேசி, உமக்கு விரோதமாய்த் தம்முடைய உதடுகளைத் திறந்து, 6 உமக்கு ஞானத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தினால் நலமாயிருக்கும்; உள்ளபடி பார்த்தால், அது இரட்டிப்புள்ளதாயிருக்கிறது; ஆகையால் உம்முடைய அக்கிரமத்திற்கேற்றபடி தேவன் உம்மைத் தண்டிக்கவில்லையென்று அறிந்துகொள்ளும். 7 தேவனுடைய அந்தரங்க ஞானத்தை நீர் ஆராய்ந்து, சர்வவல்லவருடைய சம்பூரணத்தை நீர் அறியக்கூடுமோ? 8 அது வானபரியந்தம் உயர்ந்தது; உம்மால் என்ன ஆகும்? அது பாதாளத்திலும் ஆழமானது, நீர் அறியக்கூடியது என்ன? 9 அதின் அளவு பூமியைப்பார்க்கிலும் நீளமும், சமுத்திரத்தைப்பார்க்கிலும் அகலமுமாயிருக்கிறது. 10 அவர் பிடித்தாலும், அவர் அடைத்தாலும், அவர் நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்தினாலும், அவரைத் தடைபண்ணுகிறவன் யார்? 11 மனுஷருடைய மாயத்தை அவர் அறிவார்; அக்கிரமத்தை அவர் கண்டும், அதைக் கவனியாதிருப்பாரோ? 12 புத்தியில்லாத மனுஷன் காட்டுக்கழுதைக்குட்டிக்கு ஒப்பாகப் பிறந்திருந்தாலும், பெருநெஞ்சுள்ளவனாயிருக்கிறான். 13 நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும். 14 உம்முடைய கையிலே அக்கிரமம் இருந்தால், அதைத் தூரத்தில் அகற்றிவிட்டு, அநியாயம் உம்முடைய கூடாரங்களில் வாசமாயிருக்கவொட்டாதிரும். 15 அப்பொழுது உம்முடைய முகத்தை மாசில்லாமல் ஏறெடுத்து, பயப்படாமல் திடன்கொண்டிருப்பீர். 16 அப்பொழுது நீர் வருத்தத்தை மறந்து, கடந்துபோன தண்ணீரைப்போல அதை நினைப்பீர். 17 அப்பொழுது உம்முடைய ஆயுசுகாலம் பட்டப்பகலைப்பார்க்கிலும் பிரகாசமாயிருக்கும்; இருள் அடைந்த நீர் விடியற்காலத்தைப்போலிருப்பீர். 18 நம்பிக்கை உண்டாயிருக்கிறதினால் திடனாயிருப்பீர்; தோண்டி ஆராய்ந்து சுகமாய்ப் படுத்துக்கொள்வீர். 19 பயப்படுத்துவாரில்லாமல் நித்திரை செய்வீர்; அநேகர் உமது முகத்தை நோக்கி விண்ணப்பம்பண்ணுவார்கள். 20 துன்மார்க்கருடைய கண்கள் பூத்துப்போய், அவர்கள் அடைக்கலம் அவர்களை விட்டொழிந்து, அவர்கள் நம்பிக்கை சாகிறவன் சுவாசம்போல் அழிந்துபோகும் என்றான்.

யோபு 12

1 யோபு பிரதியுத்தரமாக: 2 ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும். 3 உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்? 4 என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறுஉத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான். 5 ஆபத்துக்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; காலிடறினவர்களுக்கு இது நேரிடும். 6 கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார். 7 இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள், அவைகள் உனக்கு அறிவிக்கும். 8 அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும். 9 கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றினாலும் அறியாதவன் யார்? 10 சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது. 11 வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா? 12 முதியோரிடத்தில் ஞானமும் வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே. 13 அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு. 14 இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது. 15 இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைக் கீழதுமேலதாக்கும். 16 அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம்போகிறவனும் மோசம்போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள். 17 அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளை மதிமயக்குகிறார். 18 அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளைக் கச்சைகட்டுகிறார். 19 அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக்கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார். 20 அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வாக்கை விலக்கி, முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையை வாங்கிப்போடுகிறார். 21 அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணுகிறார்; பலவான்களின் கச்சையைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறார். 22 அவர் அந்தகாரத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார். 23 அவர் ஜாதிகளைப் பெருகவும் அழியவும் பண்ணுகிறார்; அவர் ஜாதிகளைப் பரவவும் குறுகவும் பண்ணுகிறார். 24 அவர் பூமியிலுள்ள ஜனத்தினுடைய அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, அவர்களை வழியில்லாத அந்தரத்திலே அலையப்பண்ணுகிறார். 25 அவர்கள் வெளிச்சமற்ற இருளிலே தடவித்திரிகிறார்கள்; வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறித் திரியப்பண்ணுகிறார்.

யோபு 13

1 இதோ, இவைகளெல்லாவற்றையும் என் கண் கண்டு, என் காது கேட்டு அறிந்திருக்கிறது. 2 நீங்கள் அறிந்திருக்கிறதை நானும் அறிந்திருக்கிறேன்; நான் உங்களுக்குத் தாழ்ந்தவன் அல்ல. 3 சர்வவல்லவரோடே நான் பேசினால் நல்லது; தேவனோடே நியாயத்திற்காக வழக்காட விரும்புவேன். 4 நீங்கள் பொய்யைப் பிணைக்கிறவர்கள்; நீங்கள் எல்லாரும் காரியத்துக்குதவாத வைத்தியர்கள். 5 நீங்கள் பேசாமலிருந்தால் நலமாகும்; அது உங்களுக்கு ஞானமாயிருக்கும். 6 நீங்கள் என் நியாயத்தைக் கேட்டு, என் உதடுகள் சொல்லும் விசேஷங்களைக் கவனியுங்கள். 7 நீங்கள் தேவனுக்காக நியாயக்கேடாய்ப் பேசி, அவருக்காக வஞ்சகமாய் வசனிக்கவேண்டுமோ? 8 அவருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்களோ? தேவனுக்காக வழக்காடுவீர்களோ? 9 அவர் உங்களை ஆராய்ந்துபார்த்தால் அது உங்களுக்கு நலமாயிருக்குமோ? மனுஷனைப் பரியாசம்பண்ணுகிறதுபோல அவரைப் பரியாசம்பண்ணுவீர்களோ? 10 நீங்கள் அந்தரங்கமாய் முகதாட்சிணியம்பண்ணினால், அவர் உங்களை எவ்விதத்திலும் கண்டிப்பார். 11 அவருடைய மகத்துவம் உங்களைத் திடுக்கிடப்பண்ணாதோ? அவருடைய பயங்கரம் உங்களைப் பிடிக்கமாட்டாதோ? 12 உங்கள் பேரை நினைக்கப்பண்ணும் அடையாளங்கள் சாம்பலுக்குச் சரி; உங்கள் மேட்டிமைகள் சேற்றுக்குவியல்களுக்குச் சமானம். 13 நீங்கள் மவுனமாயிருங்கள், நான் பேசுகிறேன், எனக்கு வருகிறது வரட்டும். 14 நான் என் பற்களினால் என் சதையைப் பிடுங்கி, என் பிராணனை என் கையிலே வைப்பானேன்? 15 அவர் என்னைக் கொன்றுபோட்டாலும், அவர்மேல் நம்பிக்கையாயிருப்பேன்; ஆனாலும் என் வழிகளை அவருக்கு முன்பாக ரூபகாரம்பண்ணுவேன். 16 அவரே என் இரட்சிப்பு; மாயக்காரனோ அவர் சந்நிதியில் சேரான். 17 என் வசனத்தையும், நான் சொல்லிக் காண்பிக்கிறதையும், உங்கள் செவிகளால் கவனமாய்க் கேளுங்கள். 18 இதோ, என் நியாயங்களை அணியணியாக வைத்தேன்; என் நீதி விளங்கும் என்று அறிவேன். 19 என்னோடே வழக்காடவேண்டுமென்று இருக்கிறவன் யார்? நான் மவுனமாயிருந்தால் ஜீவித்துப்போவேனே. 20 இரண்டு காரியங்களைமாத்திரம் எனக்குச் செய்யாதிருப்பீராக; அப்பொழுது உமது முகத்துக்கு முன்பாக ஒளித்துக்கொள்ளாதிருப்பேன். 21 உம்முடைய கையை என்னைவிட்டுத் தூரப்படுத்தும்; உம்முடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக. 22 நீர் கூப்பிடும், நான் உத்தரவு கொடுப்பேன்; அல்லது நான் பேசுவேன்; நீர் எனக்கு மறுமொழி சொல்லும். 23 என் அக்கிரமங்களும் பாவங்களும் எத்தனை? என் மீறுதலையும் என் பாவத்தையும் எனக்கு உணர்த்தும். 24 நீர் உமது முகத்தை மறைத்து, என்னை உமக்குப் பகைஞனாக எண்ணுவானேன்? 25 காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ? 26 மகா கசப்பான தீர்ப்புகளை என்பேரில் எழுதுகிறீர்; என் சிறுவயதின் அக்கிரமங்களை எனக்குப் பலிக்கப்பண்ணுகிறீர். 27 என் கால்களைத் தொழுவடித்துப்போட்டு, என் வழிகளையெல்லாம் காவல்பண்ணுகிறீர்; என் காலடிகளில் அடையாளத்தைப் போடுகிறீர். 28 இப்படிப்பட்டவன் அழுகிப்போகிற வஸ்துபோலவும், பொட்டரித்த வஸ்திரம்போலவும் அழிந்துபோவான்.

யோபு 14

1 ஸ்திரீயினிடத்தில் பிறந்த மனுஷன் வாழ்நாள் குறுகினவனும் சஞ்சலம் நிறைந்தவனுமாயிருக்கிறான். 2 அவன் பூவைப்போலப் பூத்து அறுப்புண்கிறான்; நிழலைப்போல நிலைநிற்காமல் ஓடிப்போகிறான். 3 ஆகிலும் இப்படிப்பட்டவன்மேல் நீர் உம்முடைய கண்களைத் திறந்துவைத்து, உம்முடைய நியாயத்துக்கு என்னைக் கொண்டுபோவீரோ? 4 அசுத்தமானதிலிருந்து சுத்தமானதைப் பிறப்பிக்கத்தக்கவன் உண்டோ? ஒருவனுமில்லை. 5 அவனுடைய நாட்கள் இம்மாத்திரம் என்று குறிக்கப்பட்டிருக்கையால், அவனுடைய மாதங்களின் தொகை உம்மிடத்தில் இருக்கிறது; அவன் கடந்துபோகக்கூடாத எல்லையை அவனுக்கு ஏற்படுத்தினீர். 6 அவன் ஒரு கூலிக்காரனைப்போல் தன் நாளின் வேலையாயிற்று என்று ரம்மியப்படுமட்டும் அவன் ஓய்ந்திருக்கும்படி உமது பார்வையை அவனை விட்டு விலக்கும். 7 ஒரு மரத்தைக்குறித்தாவது நம்பிக்கையுண்டு; அது வெட்டிப்போடப்பட்டாலும் திரும்பத் தழைக்கும், அதின் இளங்கிளைகள் துளிர்க்கும்; 8 அதின் வேர் தரையிலே பழையதாகி, அதின் அடிக்கட்டை மண்ணிலே செத்தாலும், 9 தண்ணீரின் வாசனையினால் அது துளிர்த்து, இளமரம்போலக் கிளைவிடும். 10 மனுஷனோவென்றால் செத்தபின் ஒழிந்துபோகிறான், மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே? 11 தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து, வெள்ளம் வற்றிச் சுவறிப்போகிறதுபோல, 12 மனுஷன் படுத்துக்கிடக்கிறான், வானங்கள் ஒழிந்துபோகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை, நித்திரை தெளிந்து விழிக்கிறதும் இல்லை. 13 நீர் என்னைப் பாதாளத்தில் ஒளித்து, உமது கோபம் தீருமட்டும் என்னை மறைத்து, என்னைத் திரும்ப நினைக்கும்படிக்கு எனக்கு ஒரு காலத்தைக் குறித்தால் நலமாயிருக்கும். 14 மனுஷன் செத்தபின் பிழைப்பானோ? எனக்கு மாறுதல் எப்போது வருமென்று எனக்குக் குறிக்கப்பட்ட போராட்டத்தின் நாளெல்லாம் நான் காத்திருக்கிறேன். 15 என்னைக் கூப்பிடும், அப்பொழுது நான் உமக்கு உத்தரவு சொல்லுவேன்; உமது கைகளின் கிரியையின்மேல் விருப்பம் வைப்பீராக. 16 இப்பொழுது என் நடைகளை எண்ணுகிறீர்; என் பாவத்தின்மேலல்லவோ கவனமாயிருக்கிறீர். 17 என் மீறுதல் ஒரு கட்டாகக் கட்டப்பட்டு முத்திரைபோடப்பட்டிருக்கிறது, என் அக்கிரமத்தை ஒருமிக்கச் சேர்த்தீர். 18 மலைமுதலாய் விழுந்து கரைந்துபோம்; கன்மலை தன் இடத்தைவிட்டுப் பேர்ந்துபோம். 19 தண்ணீர் கற்களைக் குடையும்; ஜலப்பிரவாகம் பூமியின் தூளில் முளைத்ததை மூடும்; அப்படியே மனுஷன் கொண்டிருக்கும் நம்பிக்கையை அழிக்கிறீர். 20 நீர் என்றைக்கும் அவனைப் பெலனாய் நெருக்குகிறதினால் அவன் போய் விடுகிறான்; அவன் முகரூபத்தை மாறப்பண்ணி அவனை அனுப்பிவிடுகிறீர். 21 அவன் பிள்ளைகள் கனமடைந்தாலும் அவன் உணரான்; அவர்கள் சிறுமைப்பட்டாலும் அவர்களைக் கவனியான். 22 அவன் மாம்சம் அவனிலிருக்குமளவும் அதற்கு நோவிருக்கும்; அவன் ஆத்துமா அவனுக்குள்ளிருக்குமட்டும் அதற்குத் துக்கமுண்டு என்றான்.

யோபு 15

1 அப்பொழுது தேமானியனாகிய எலிப்பாஸ் பிரதியுத்தரமாக: 2 ஞானவான் காற்றைப்போன்ற நியாயங்களைச் சொல்லி, தன் வயிற்றைக் கொண்டல்காற்றினால் நிரப்பி, 3 பிரயோஜனமில்லாத வார்த்தைகளாலும், உபயோகமில்லாத வசனங்களாலும் தர்க்கிக்கலாமோ? 4 நீர் பயபக்தியை வீணென்று சொல்லி, தேவனுக்கு முன்பாக ஜெபத்தியானத்தைக் குறையப்பண்ணுகிறீர். 5 உம்முடைய வாய் உம்முடைய அக்கிரமத்தைச் சொல்லிக்காட்டுகிறது; நீர் தந்திரமுள்ளவர்களின் நாவைத் தெரிந்துகொண்டீர். 6 நான் அல்ல, உம்முடைய வாயே உம்மைக் குற்றவாளி என்று தீர்க்கிறது; உம்முடைய உதடுகளே உமக்கு விரோதமாகச் சாட்சியிடுகிறது. 7 மனுஷரில் முந்திப் பிறந்தவர் நீர்தானோ? பர்வதங்களுக்குமுன்னே உருவாக்கப்பட்டீரோ? 8 நீர் தேவனுடைய இரகசிய ஆலோசனையைக் கேட்டு, ஞானத்தை உம்மிடமாய்ச் சேர்த்துக்கொண்டீரோ? 9 நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்? எங்களுக்கு விளங்காத எந்தக் காரியமாவது உமக்கு விளங்கியிருக்கிறதோ? 10 உம்முடைய தகப்பனைப்பார்க்கிலும் பெரிய வயதுள்ள நரைத்தோரும் விருத்தாப்பியரும் எங்களுக்குள் இருக்கிறார்களே. 11 தேவன் அருளிய ஆறுதல்களும், உம்மோடே சொல்லப்படுகிற மிருதுவான பேச்சும் உமக்கு அற்பகாரியமாயிருக்கிறதோ? 12 உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? உம்முடைய கண்கள் நெறித்துப்பார்க்கிறது என்ன? 13 தேவனுக்கு விரோதமாக உம்முடைய ஆவியை எழுப்பி, உம்முடைய வாயிலிருந்து வசனங்களைப் புறப்படப்பண்ணுகிறீர். 14 மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்? 15 இதோ, தம்முடைய பரிசுத்தவான்களையும் அவர் நம்புகிறதில்லை; வானங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல. 16 அநியாயத்தைத் தண்ணீரைப்போலக் குடிக்கிற மனுஷன் எத்தனை அதிகமாய் அருவருப்பும் அசுத்தமுமாயிருக்கிறான்? 17 உமக்குக் காரியத்தைத் தெரியப்பண்ணுவேன், என்னைக் கேளும்; நான் கண்டதை உமக்கு விவரித்துச் சொல்லுவேன். 18 ஞானிகள் தங்கள் பிதாக்கள் சொல்லக் கேட்டு மறைக்காமல் அறிவித்ததையே நான் சொல்லுவேன். 19 அவர்களுக்குமாத்திரம் பூமி அளிக்கப்பட்டது; அந்நியர் அவர்கள் நடுவே கடந்துபோக இடமில்லை. 20 துன்மார்க்கன் உயிரோடிருக்கிற நாளெல்லாம் துன்பத்தால் வாதிக்கப்படுகிறான்; பலவந்தம்பண்ணுகிறவனுக்கு அவன் வருஷங்களின் தொகை மறைக்கப்பட்டிருக்கிறது. 21 பயங்கரமான சத்தம் அவன் காதுகளில் தொனிக்கிறது; அவன் சமாதானமாயிருக்கையில் பாழாக்கிறவன் அவன்மேல் வருவான். 22 இருளிலிருந்து திரும்பிவர அவனுக்கு நம்பிக்கையில்லாமல், பதிவிருக்கிறவர்களின் பட்டயத்துக்கு அவன் பயப்படுகிறான். 23 அப்பம் எங்கே கிடைக்கும் என்று அவன் அலைந்து திரிகிறான்; அந்தகாரநாள் தனக்குச் சமீபித்திருக்கிறதை அறிவான். 24 இக்கட்டும் நெருக்கமும் அவனைக் கலங்கப்பண்ணி, யுத்தசன்னத்தனான ராஜாவைப்போல அவனை மேற்கொள்ளும். 25 அவன் தேவனுக்கு விரோதமாகக் கை நீட்டி, சர்வவல்லவருக்கு விரோதமாகப் பராக்கிரமம் பாராட்டுகிறான். 26 கடினக்கழுத்தோடும், பருத்த குமிழுள்ள தன் கேடயங்களோடும் அவருக்கு எதிராக ஓடுகிறான். 27 அவன் முகத்தைக் கொழுப்பு மூடியிருக்கிறது; அடிவயிறு தொந்தி விட்டிருக்கிறது. 28 ஆனாலும் பாழான பட்டணங்களிலும், குடிபோன கற்குவியலான வீடுகளிலும் வாசம்பண்ணுவான். 29 அவன் ஐசுவரியவானாவதுமில்லை, அவன் ஆஸ்தி நிலைப்பதுமில்லை; அப்படிப்பட்டவர்களின் செல்வம் பூமியில் நீடித்திருப்பதில்லை. 30 இருளுக்கு அவன் தப்புவதில்லை; அக்கினிஜுவாலை அவனுடைய கிளையைக் காய்ந்துபோகப்பண்ணும்; அவருடைய வாயின் சுவாசத்தால் அற்றுப்போவான். 31 வழிதப்பினவன் மாயையை நம்பானாக; நம்பினால் மாயையே அவன் பலனாயிருக்கும். 32 அது அவன் நாள் வருமுன்னே அவனுக்குப் பூரணமாய்ப் பலிக்கும்; அவனுடைய கொப்புப் பச்சைகொள்வதில்லை. 33 பிஞ்சுகள் உதிர்ந்துபோகிற திராட்சச்செடியைப்போலவும், பூக்கள் உதிர்ந்துபோகிற ஒலிவமரத்தைப்போலவும் அவன் இருப்பான். 34 மாயக்காரரின் கூட்டம் வெறுமையாய்ப் போம்; பரிதானம் வாங்கினவர்களின் கூடாரங்களை அக்கினி பட்சிக்கும். 35 அப்படிப்பட்டவன் அநியாயத்தைக் கர்ப்பந்தரித்து அக்கிரமத்தைப் பெறுகிறான்; அவர்கள் கர்ப்பம் மாயையைப் பிறப்பிக்கும் என்றான்.

யோபு 16

1 அதற்கு யோபு பிரதியுத்தரமாக: 2 இப்படிப்பட்ட அநேகங் காரியங்களை நான் கேட்டிருக்கிறேன்; நீங்கள் எல்லாரும் அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர். 3 காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? இப்படி நீ உத்தரவுசொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன? 4 உங்களைப்போல நானும் பேசக்கூடும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோர்த்து, உங்களுக்கு எதிரே என் தலையைத் துலுக்கவுங்கூடும். 5 ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்குத் திடன்சொல்லுவேன், என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும். 6 நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது; நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்? 7 இப்போது அவர் என்னை இளைத்துப்போகச் செய்தார்; என் கூட்டத்தையெல்லாம் பாழாக்கினீர். 8 நீர் என்னைச் சுருங்கிப்போகப்பண்ணினது அதற்குச் சாட்சி; என் மெலிவு என்னில் அத்தாட்சியாக நின்று, என் முகத்துக்கு முன்பாக உத்தரவு சொல்லும். 9 என்னைப் பகைக்கிறவனுடைய கோபம் என்னைப் பீறுகிறது, என்பேரில் பற்கடிக்கிறான்; என் சத்துரு கொடிய கண்ணினால் என்னைப் பார்க்கிறான். 10 எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்தார்கள்; நிந்தையாக என்னைக் கன்னத்தில் அடித்தார்கள்; எனக்கு விரோதமாக ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள். 11 தேவன் என்னை அநியாயக்காரன் வசமாக ஒப்புவித்து, துன்மார்க்கரின் கையில் என்னை அகப்படப்பண்ணினார். 12 நான் சுகமாய் வாழ்ந்திருந்தேன்; அவர் என்னை நருக்கி, என் பிடரியைப் பிடித்து, என்னை நொறுக்கி, என்னைத் தமக்கு இலக்காக நிறுத்தினார். 13 அவருடைய வில்லாளர் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் ஈரலைத் தப்பவிடாமல் பிளந்தார்; என் பிச்சைத் தரையில் ஊற்றிவிட்டார். 14 நொறுக்குதலின்மேல் நொறுக்குதலை என்மேல் வரப்பண்ணினார்; பராக்கிரமசாலியைப்போல என்மேல் பாய்ந்தார். 15 நான் இரட்டுச்சேலையைத் தைத்து, என் தோளின்மேல் போர்த்துக்கொண்டேன்; என் மகிமையைப் புழுதியிலே போட்டுவிட்டேன். 16 அழுகிறதினால் என் முகம் அழுக்கடைந்தது; மரண இருள் என் கண்ணிமைகளின்மேல் உண்டாயிருக்கிறது. 17 என் கைகளிலே கொடுமையில்லாதிருக்கையிலும், என் ஜெபம் சுத்தமாயிருக்கையிலும், அப்படியாயிற்று. 18 பூமியே, என் இரத்தத்தை மூடிப்போடாதே; என் அலறுதலுக்கு மறைவிடம் உண்டாகாதிருப்பதாக. 19 இப்போதும் இதோ, என் சாட்சி பரலோகத்திலிருக்கிறது, எனக்குச் சாட்சி பகருகிறவர் உன்னதங்களில் இருக்கிறார். 20 என் சிநேகிதர் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; என் கண் தேவனை நோக்கிக் கண்ணீர் சொரிகிறது. 21 ஒரு மனுபுத்திரன் தன் சிநேகிதனுக்காக வழக்காடுகிறதுபோல, தேவனோடே மனுஷனுக்காக வழக்காடுகிறவர் ஒருவர் உண்டானால் நலமாயிருக்கும். 22 குறுகின வருஷங்களுக்கு முடிவு வருகிறது; நான் திரும்பிவராத வழியே போவேன்.

யோபு 17

1 என் சுவாசம் ஒழிகிறது, என் நாட்கள் முடிகிறது; பிரேதக்குழி எனக்கு ஆயத்தமாயிருக்கிறது. 2 பரியாசம்பண்ணுகிறவர்கள் என்னிடத்தில் இல்லையோ? அவர்கள் செய்யும் அநியாயங்களை என் கண் பார்த்துக்கொண்டிருக்கிறது. 3 தேவரீர் என் காரியத்தை மேல்போட்டுக்கொண்டு, எனக்காகப் பிணைப்படுவீராக; வேறே யார் எனக்குக் கைகொடுக்கத்தக்கவர்? 4 நீர் அவர்கள் இருதயத்துக்கு ஞானத்தை மறைத்தீர்; ஆகையால் அவர்களை உயர்த்தாதிருப்பீர். 5 எவன் தன் சிநேகிதருக்குக் கேடாகத் துரோகம் பேசுகிறானோ, அவன் பிள்ளைகளின் கண்களும் பூத்துப்போகும். 6 ஜனங்களுக்குள்ளே அவர் என்னைப் பழமொழியாக வைத்தார்; அவர்கள் முகத்துக்குமுன் நான் அருவருப்பானேன். 7 இதினிமித்தம் என் கண்கள் சஞ்சலத்தினால் இருளடைந்தது; என் அவயவங்களெல்லாம் நிழலைப்போலிருக்கிறது. 8 சன்மார்க்கர் இதற்காகப் பிரமிப்பார்கள்; குற்றமில்லாதவன் மாயக்காரனுக்கு விரோதமாக எழும்புவான். 9 நீதிமான் தன் வழியை உறுதியாய்ப் பிடிப்பான்; சுத்தமான கைகளுள்ளவன் மேன்மேலும் பலத்துப்போவான். 10 இப்போதும் நீங்கள் எல்லாரும் போய்வாருங்கள்; உங்களில் ஞானமுள்ள ஒருவனையும் காணேன். 11 என் நாட்கள் போயிற்று; என் இருதயத்தில் எனக்கு உண்டாயிருந்த சிந்தனைகள் அற்றுப்போயிற்று. 12 அவைகள் இரவைப் பகலாக்கிற்று; இருளை வெளிச்சம் தொடர்ந்துவரும் என்று எண்ணச்செய்தது. 13 அப்படி நான் காத்துக்கொண்டிருந்தாலும், பாதாளம் எனக்கு வீடாயிருக்கும்; இருளில் என் படுக்கையைப் போடுவேன். 14 அழிவைப்பார்த்து, நீ எனக்குத் தகப்பன் என்கிறேன்; புழுக்களைப் பார்த்து, நீங்கள் எனக்குத் தாயும் எனக்குச் சகோதரியும் என்கிறேன். 15 என் நம்பிக்கை இப்போது எங்கே? நான் நம்பியிருந்ததைக் காண்பவன் யார்? 16 அது பாதாளத்தின் காவலுக்குள் இறங்கும்; அப்போது தூளில் ஏகமாய் இளைப்பாறுவோம் என்றான்.

யோபு 18

1 அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக: 2 நீங்கள் எந்தமட்டும் பேச்சுகளை முடிக்காதிருப்பீர்கள்? புத்திமான்களாயிருங்கள்; நாங்களும் பேசட்டும். 3 நாங்கள் மிருகங்களைப்போல எண்ணப்பட்டு, உங்கள் பார்வைக்குத் தீழ்ப்பானவர்களாயிருப்பானேன்? 4 கோபத்தினால் உம்மைத்தானே பீறுகிற உமதுநிமித்தம் பூமி பாழாய்ப்போகுமோ? கன்மலை தன்னிடத்தை விட்டுப் பேருமோ? 5 துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோம். 6 அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோம். 7 அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோம்; அவன் ஆலோசனை அவனை விழப்பண்ணும். 8 அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலிலே நடக்கிறான். 9 கண்ணி அவன் குதிகாலைப் பிடிக்கும்; பறிகாரர் அவனை மேற்கொள்வார்கள். 10 அவனுக்காகச் சுருக்கு தரையிலும், அவனுக்காகக் கண்ணி வழியிலும் வைக்கப்பட்டிருக்கிறது. 11 சுற்றிலுமிருந்துண்டாகும் பயங்கரங்கள் அவனைத் திடுக்கிடப்பண்ணி, அவன் கால்களைத் திசைதெரியாமல் அலையப்பண்ணும். 12 அவன் பெலனைப் பட்டினி தின்றுபோடும்; அவன் பக்கத்தில் கேடு ஆயத்தப்பட்டு நிற்கும். 13 அது அவன் அங்கத்தின் பலத்தைப் பட்சிக்கும்; பயங்கரமான மரணமே அவன் அவயவங்களைப் பட்சிக்கும். 14 அவன் நம்பிக்கை அவன் கூடாரத்திலிருந்து வேரோடே பிடுங்கப்படும்; அது அவனைப் பயங்கர ராஜாவினிடத்தில் துரத்தும். 15 அவனுக்கு ஒன்றுமில்லாமற்போனதினால், பயங்கரம் அவன் கூடாரத்தில் குடியிருக்கும்; கந்தகம் அவன் வாசஸ்தலத்தின்மேல் தெளிக்கப்படும். 16 கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும். 17 அவனை நினைக்கும் நினைப்புப் பூமியிலிருந்தழியும், வீதிகளில் அவன் பேரில்லாமற்போகும். 18 அவன் வெளிச்சத்திலிருந்து இருளில் துரத்திவிடப்பட்டு, பூலோகத்திலிருந்து தள்ளுண்டுபோவான். 19 அவன் ஜனத்துக்குள்ளே அவனுக்குப் புத்திரனும் இல்லை பௌத்திரனும் இல்லை; அவன் வீட்டில் மீதியாயிருக்கத்தக்கவன் ஒருவனும் இல்லை. 20 அவன் காலத்தோர் அவன் நாளுக்காகத் திடுக்கிட்டதுபோல, பின்னடியாரும் பிரமிப்பார்கள். 21 அக்கிரமக்காரன் குடியிருந்த ஸ்தானங்கள் இவைகள்தான்; தேவனை அறியாமற்போனவனுடைய ஸ்தலம் இதுவே என்பார்கள் என்றான்.

யோபு 19

1 யோபு பிரதியுத்தரமாக: 2 நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்? 3 இப்போது பத்துதரம் என்னை நிந்தித்தீர்கள்; நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை. 4 நான் தப்பிநடந்தது மெய்யானாலும், என் தப்பிதம் என்னோடேதான் இருக்கிறது. 5 நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்றிருப்பீர்களாகில், 6 தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள். 7 இதோ, கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை; கூக்குரலிடுகிறேன், நியாயவிசாரணை இல்லை. 8 நான் கடந்துபோகக்கூடாதபடிக்கு அவர் என் பாதையை வேலியடைத்து, என் வழிகளை இருளாக்கிவிட்டார். 9 என்னிலிருந்த என் மகிமையை அவர் உரிந்துகொண்டு, என் சிரசின் கிரீடத்தை எடுத்துப்போட்டார். 10 அவர் என்னை நான்குபுறத்திலும் நாசமாக்கினார், நான் அற்றுப்போகிறேன்; என் நம்பிக்கையை ஒரு செடியைப்போலப் பிடுங்கிப்போட்டார். 11 அவர் தமது கோபத்தை என்மேல் எரியப்பண்ணினார்; என்னைத் தம்முடைய சத்துருக்களில் ஒருவனாக எண்ணிக்கொள்ளுகிறார். 12 அவருடைய தண்டுப்படைகள் ஏகமாய் வந்து, எனக்கு விரோதமாய்த் தங்கள் வழியை உயர்த்தி, என் கூடாரத்தைச் சுற்றிப் பாளயமிறங்கினார்கள். 13 என் சகோதரரை என்னைவிட்டுத் தூரப்படுத்தினார்; எனக்கு அறிமுகமானவர்கள் எனக்கு அந்நியராய்ப் போனார்கள். 14 என் பந்துஜனங்கள் விலகிப்போனார்கள்; என் சிநேகிதர் என்னை மறந்துவிட்டார்கள். 15 என் வீட்டு ஜனங்களும், என் வேலைக்காரிகளும், என்னை அந்நியனாக எண்ணுகிறார்கள்; அவர்கள் பார்வைக்கு நான் பரதேசியானேன். 16 நான் என் வேலைக்காரனைக் கூப்பிடுகிறபோது அவன் எனக்கு உத்தரவுகொடான்; என் வாயினால் நான் அவனைக் கெஞ்சவேண்டியதாயிற்று. 17 என் சுவாசம் என் மனைவிக்கு வேறுபட்டிருக்கிறது; என் கர்ப்பத்தின் பிள்ளைகளுக்காகப் பரிதபிக்கிறேன். 18 சிறுபிள்ளைகளும் என்னை அசட்டைபண்ணுகிறார்கள்; நான் எழுந்தால், அவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள். 19 என் பிராணசிநேகிதர் எல்லாரும் என்னை வெறுக்கிறார்கள்; நான் சிநேகித்தவர்கள் எனக்கு விரோதிகளானார்கள். 20 என் எலும்புகள் என் தோலோடும் என் மாம்சத்தோடும் ஒட்டிக்கொண்டிருக்கிறது; என் பற்களை மூடக் கொஞ்சம் தோல்மாத்திரம் தப்பினது. 21 என் சிநேகிதரே, எனக்கு இரங்குங்கள், எனக்கு இரங்குங்கள்; தேவனுடைய கை என்னைத் தொட்டது. 22 தேவனைப்போல நீங்களும் என்னைத் துன்பப்படுத்துவானேன்? என் மாம்சம் பட்சிக்கப்பட்டாலும் நீங்கள் திருப்தியற்றிருக்கிறதென்ன? 23 ஆ, நான் இப்பொழுது சொல்லும் வார்த்தைகள் எழுதப்பட்டால் நலமாயிருக்கும்; அவைகள் ஒரு புஸ்தகத்தில் வரையப்பட்டு, 24 அல்லது என்றைக்கும் நிலைக்க அவைகள் கருங்கல்லிலே உளிவெட்டாகவும் ஈய எழுத்தாகவும் பதிந்தால் நலமாயிருக்கும். 25 என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும், அவர் கடைசிநாளில் பூமியின்மேல் நிற்பார் என்றும் நான் அறிந்திருக்கிறேன். 26 இந்த என் தோல்முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன். 27 அவரை நானே பார்ப்பேன்; அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரைக் காணும்; இந்த வாஞ்சையால் என் உள்ளிந்திரியங்கள் எனக்குள் சோர்ந்துபோகிறது. 28 காரியத்தின் மூலம் எனக்குள் கண்டுபிடிக்கப்படுகையில், நாம் ஏன் அவனைத் துன்பப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்லவேண்டியதாமே. 29 பட்டயத்துக்குப் பயப்படுங்கள்; நியாயத்தீர்ப்பு உண்டென்கிறதை நீங்கள் அறியும்பொருட்டு, மூர்க்கமானது பட்டயத்தினால் உண்டாகும் ஆக்கினையை வரப்பண்ணும் என்றான்.

யோபு 20

1 அப்பொழுது நாகமாத்தியனான சோப்பார் பிரதியுத்தரமாக: 2 இதற்காக மறுஉத்தரவு கொடுக்க என் சிந்தனைகள் என்னை ஏவுகிறபடியால் நான் தீவிரித்துச் சொல்லுகிறேன். 3 நிந்தித்தேன் என்று நான் கடிந்துகொள்ளப்பட்டதைக் கேட்டேன்; ஆனாலும் உணர்வினால் என் ஆவி பிரதியுத்தரம் சொல்ல என்னை ஏவுகிறது. 4 துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும், மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிஷம்மாத்திரம் நிற்கும் என்பதையும், 5 அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ? 6 அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும், அவனுடைய தலை மேகங்கள்மட்டும் எட்டினாலும், 7 அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்; அவனைக் கண்டவர்கள், அவன் எங்கே? என்பார்கள். 8 அவன் ஒரு சொப்பனத்தைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான். 9 அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை; அவன் இருந்த ஸ்தலம் இனி அவனைக் காண்பதில்லை. 10 அவன் பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; அவன் பறித்ததை அவன் கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும். 11 அவன் எலும்புகள் அவனுடைய வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக்கொள்ளும். 12 பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால், அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி, 13 அதை விடாமல் பதனம்பண்ணி, தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும், 14 அவன் போஜனம் அவன் குடல்களில் மாறி, அவனுக்குள் விரியன்பாம்புகளின் பிச்சாய்ப்போகும். 15 அவன் விழுங்கின ஆஸ்தியைக் கக்குவான்; தேவன் அதை அவன் வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார். 16 அவன் விரியன் பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; விரியனின் நாக்கு அவனைக் கொல்லும். 17 தேனும் நெய்யும் ஓடும் வாய்க்கால்களையும் ஆறுகளையும் அவன் காண்பதில்லை. 18 தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக் கொடுப்பான்; அவன் திரும்பக்கொடுக்கிறது அவன் ஆஸ்திக்குச் சரியாயிருக்கும்; அவன் களிகூராதிருப்பான். 19 அவன் ஒடுக்கி, ஏழைகளைக் கைவிட்டு, தான் கட்டாத வீட்டைப் பறித்தபடியினாலும், 20 தன் வயிறு திருப்தியற்றிருந்தபடியினாலும், அவன் இச்சித்த காரியங்களில் அவனுக்கு ஒன்றும் இருப்பதில்லை. 21 அவன் போஜனத்தில் ஒன்றும் மீதியாவதில்லை; ஆகையால் அவன் ஆஸ்தி நிலைநிற்பதில்லை. 22 அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின், அவனுக்கு வியாகுலம் உண்டாகும்; சிறுமைப்படுகிற ஒவ்வொருவருடைய கையும் அவன்மேல் வரும். 23 தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும், அவர் அவன்மேல் தமது கோபத்தின் உக்கிரத்தை வரவிட்டு, அவன் போஜனம்பண்ணுகையில், அதை அவன்மேல் சொரியப்பண்ணுவார். 24 இருப்பு ஆயுதத்துக்கு அவன் தப்பியோடினாலும் உருக்குவில் அவனை உருவ எய்யும். 25 உருவின பட்டயம் அவன் சரீரத்தையும், மின்னுகிற அம்பு அவன் பிச்சையும் உருவிப்போகும்; பயங்கரங்கள் அவன்மேல் வரும். 26 அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்; அவியாத அக்கினி அவனைப் பட்சிக்கும்; அவன் கூடாரத்தில் மீதியாயிருக்கிறவன் தீங்கு அநுபவிப்பான். 27 வானங்கள் அவன் அக்கிரமத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும். 28 அவன் வீட்டின் சம்பத்துப் போய்விடும்; அவருடைய கோபத்தின் நாளிலே அவைகள் கரைந்துபோகும். 29 இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும், அவன் செய்கைக்குத் தேவனால் அவனுக்கு வரும் சுதந்தரமுமாம் என்றான்.

யோபு 21

1 யோபு பிரதியுத்தரமாக: 2 என் வசனத்தைக் கவனமாய்க் கேளுங்கள்; இது நீங்கள் என்னைத் தேற்றரவுபண்ணுவதுபோல இருக்கும். 3 நான் பேசப்போகிறேன், சகித்திருங்கள்; நான் பேசினபின்பு பரியாசம்பண்ணுங்கள். 4 நான் மனுஷனைப்பார்த்தா அங்கலாய்க்கிறேன்? அப்படியானாலும் என் ஆவி விசனப்படாதிருக்குமா? 5 என்னைக் கவனித்துப்பாருங்கள், அப்பொழுது நீங்கள் பிரமித்து, உங்கள் வாயைக் கையால் பொத்திக்கொள்வீர்கள். 6 இதை நான் நினைக்கையில் கலங்குகிறேன்; நடுக்கம் என் மாம்சத்தைப் பிடிக்கும். 7 துன்மார்க்கர் ஜீவித்து விருத்தராகி, வல்லவராவானேன்? 8 அவர்களோடுங்கூட அவர்கள் சந்ததியார் அவர்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிள்ளைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாகவும் திடப்படுகிறார்கள். 9 அவர்கள் வீடுகள் பயமில்லாமல் பத்திரப்பட்டிருக்கும்; தேவனுடைய மிலாறு அவர்கள்மேல் வருகிறதில்லை. 10 அவர்களுடைய எருது பொலிந்தால், வீணாய்ப்போகாது; அவர்களுடைய பசு சினை அழியாமல் ஈனுகிறது. 11 அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒரு மந்தையைப்போல வெளியே போகவிடுகிறார்கள்; அவர்கள் பிள்ளைகள் குதித்து விளையாடுகிறார்கள். 12 அவர்கள் தம்புரையும் சுரமண்டலத்தையும் எடுத்துப் பாடி, கின்னரத்தின் ஓசைக்குச் சந்தோஷப்படுகிறார்கள். 13 அவர்கள் செல்வவான்களாய்த் தங்கள் நாட்களைப் போக்கி, ஒரு க்ஷணப்பொழுதிலே பாதாளத்தில் இறங்குகிறார்கள். 14 அவர்கள் தேவனை நோக்கி: எங்களைவிட்டு விலகியிரும், உம்முடைய வழிகளை அறிய விரும்போம்; 15 சர்வவல்லவரை நாம் சேவிக்க அவர் யார்? அவரை நோக்கி ஜெபம்பண்ணுவதினால் நமக்குப் பிரயோஜனம் என்ன என்கிறார்கள். 16 ஆனாலும் அவர்கள் வாழ்வு அவர்கள் கையிலிராது; துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. 17 எத்தனைச் சடுதியில் துன்மார்க்கரின் விளக்கு அணைந்துபோம்; அவர் தமது கோபத்தினால் வேதனைகளைப் பகிர்ந்துகொடுக்கையில், அவர்கள் ஆபத்து அவர்கள்மேல் வரும். 18 அவர்கள் காற்றுமுகத்திலிருக்கிற துரும்பைப்போலவும், பெருங்காற்று பறக்கடிக்கிற பதரைப்போலவும் இருக்கிறார்கள். 19 தேவன் அவனுடைய அக்கிரமத்தை அவன் பிள்ளைகளுக்கு வைத்து வைக்கிறார்; அவன் உணரத்தக்கவிதமாய் அதை அவனுக்குப் பலிக்கப்பண்ணுகிறார். 20 அவனுடைய அழிவை அவனுடைய கண்கள் காணும், சர்வவல்லவருடைய உக்கிரத்தைக் குடிப்பான். 21 அவன் மாதங்களின் தொகை குறுக்கப்படும்போது, அவனுக்குப் பிற்பாடு அவன் வீட்டைப்பற்றி அவனுக்கு இருக்கும் விருப்பமென்ன? 22 உயர்ந்தோரை நியாயந்தீர்க்கிற தேவனுக்கு அறிவை உணர்த்த யாராலாகும்? 23 ஒருவன் நிர்வாகத்தோடும் சுகத்தோடும் வாழ்ந்து குறையற்ற பெலனுள்ளவனாய்ச் சாகிறான். 24 அவனுடைய பால்பாத்திரங்கள் பாலால் நிரம்பியிருக்கிறது, அவன் எலும்புகளில் ஊன் புஷ்டியாயிருக்கிறது. 25 வேறொருவன் ஒரு நாளாவது சந்தோஷத்தோடே சாப்பிடாமல், மனக்கிலேசத்தோடே சாகிறான். 26 இருவரும் சமமாய் மண்ணிலே படுத்துக்கொள்ளுகிறார்கள்; புழுக்கள் அவர்களை மூடும். 27 இதோ, நான் உங்கள் நினைவுகளையும், நீங்கள் என்னைப்பற்றி அநியாயமாய்க் கொண்டிருக்கும் ஆலோசனைகளையும் அறிவேன். 28 பிரபுவினுடைய வீடு எங்கே? துன்மார்க்கருடைய கூடாரம் எங்கே? என்று சொல்லுகிறீர்கள். 29 வழிநடந்துபோகிறவர்களை நீங்கள் கேட்கவில்லையா, அவர்கள் சொல்லும் குறிப்புகளை நீங்கள் அறியவில்லையா? 30 துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான். 31 அவன் வழியை அவன் முகத்துக்கு முன்பாகத் தூண்டிக் காண்பிக்கிறவன் யார்? அவன் செய்கைக்குத்தக்க பலனை அவனுக்குச் சரிக்கட்டுகிறவன் யார்? 32 அவன் கல்லறைக்குக் கொண்டுவரப்படுகிறான்; அவன் கோரி காக்கப்பட்டிருக்கும். 33 பள்ளத்தாக்கின் புல்பத்தைகள் அவனுக்கு இன்பமாயிருக்கும்; அவனுக்கு முன்னாக எண்ணிறந்த ஜனங்கள் போனதுபோல, அவனுக்குப் பின்னாக ஒவ்வொருவரும் அவ்விடத்துக்குச் செல்லுவார்கள். 34 நீங்கள் வீணான ஆறுதலை எனக்குச் சொல்லுகிறது என்ன? உங்கள் மறுமொழிகளில் உண்மைக்கேடு இருக்கிறது என்றான்.

யோபு 22

1 அப்பொழுது தேமானியனான எலிப்பாஸ் பிரதியுத்தரமாக: 2 ஒரு மனுஷன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் பிரயோஜனமாயிருக்கிறதினால் தேவனுக்குப் பிரயோஜனமாயிருப்பானோ? 3 நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது அவருக்கு ஆதாயமாயிருக்குமோ? 4 அவர் உமக்குப் பயந்து உம்மோடே வழக்காடி, உம்மோடே நியாயத்துக்கு வருவாரோ? 5 உம்முடைய பொல்லாப்புப் பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாய் இருக்கிறதல்லவோ? 6 முகாந்தரமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகுவாங்கி, ஏழைகளின் வஸ்திரங்களைப் பறித்துக்கொண்டீர். 7 விடாய்த்தவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடாமலும், பசித்தவனுக்குப் போஜனம் கொடாமலும் போனீர். 8 பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிற்று; கனவான் அதில் குடியேறினான். 9 விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் புயங்கள் முறிக்கப்பட்டது. 10 ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; அசுப்பிலே உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கப்பண்ணுகிறது. 11 நீர் பார்க்கக்கூடாதபடிக்கு இருள் வந்தது, ஜலப்பிரவாகம் உம்மை மூடுகிறது. 12 தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது. 13 நீர்: தேவன் எப்படி அறிவார், அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ? 14 அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர். 15 அக்கிரம மாந்தர் பூர்வத்தில் நடந்த மார்க்கத்தைக் கவனித்துப் பார்த்தீரோ? 16 காலம் வருமுன்னே அவர்கள் வாடிப்போனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது. 17 தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள். 18 ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக. 19 எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல், அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள். 20 குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து நகைக்கிறான். 21 நீர் அவரோடே பழகிச் சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மை வரும். 22 அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ளவேண்டுகிறேன். 23 நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர். 24 அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்து வைப்பீர். 25 அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சொக்கவெள்ளியுமாயிருப்பார். 26 அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர். 27 நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர். 28 நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும். 29 மனுஷர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் ரட்சிக்கப்படுவார்கள். 30 குற்றமற்றிராதவனையுங்கூடத் தப்புவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினிமித்தம் அவன் தப்பிப்போவான் என்றான்.

யோபு 23

1 யோபு பிரதியுத்தரமாக: 2 இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைப்பார்க்கிலும் என் வாதை கடினமானது. 3 நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்துசேர்ந்து, 4 என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தை ரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன். 5 அவருடைய மறுமொழிகளை நான் அறிந்து, அவர் எனக்குச் சொல்வதை உணர்ந்துகொள்ளுவேன். 6 அவர் தம்முடைய மகா வல்லமையின்படியே என்னோடே வழக்காடுவாரோ? அவர் அப்படிச் செய்யாமல் என்மேல் தயை வைப்பார். 7 அங்கே சன்மார்க்கன் அவரோடே வழக்காடலாம்; அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் நீங்கலாய்த் தப்புவித்துக்கொள்வேன். 8 இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன். 9 இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலதுபுறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார். 10 ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன். 11 என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன். 12 அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன். 13 அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார். 14 எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு. 15 ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன். 16 தேவன் என் இருதயத்தை இளக்கரிக்கப்பண்ணினார்; சர்வவல்லவர் என்னைக் கலங்கப்பண்ணினார். 17 அந்தகாரம் வராததற்கு முன்னே நான் சங்கரிக்கப்படாமலும், இருளை அவர் எனக்கு மறைக்காமலும்போனதினால் இப்படியிருக்கிறேன்.

யோபு 24

1 சர்வவல்லவருக்குக் காலங்கள் மறைக்கப்படாதிருக்க, அவரை அறிந்தவர்கள் அவர் நியமித்த நாட்களை அறியாதிருக்கிறதென்ன? 2 சிலர் எல்லைக்குறிப்புகளை ஒற்றி, மந்தைகளைப் பலாத்காரமாய்ச் சாய்த்துக்கொண்டுபோய்ப் பட்சிக்கிறார்கள். 3 தாய் தகப்பன் இல்லாதவர்களின் கழுதையை ஓட்டிக்கொண்டுபோய், விதவையின் மாட்டை ஈடாக எடுத்துக்கொள்ளுகிறார்கள். 4 தேசத்தில் சிறுமைப்பட்டவர்கள் ஏகமாய் ஒளித்துக்கொள்ளத்தக்கதாக, எளிமையானவர்களை வழியைவிட்டு விலக்குகிறார்கள். 5 இதோ, அவர்கள் காட்டுக்கழுதைகளைப்போல இரைதேட அதிகாலமே தங்கள் வேலைக்குப் புறப்படுகிறார்கள்; வனாந்தரவெளிதான் அவர்களுக்கும் அவர்கள் பிள்ளைகளுக்கும் ஆகாரம் கொடுக்கவேண்டும். 6 துன்மார்க்கனுடைய வயலில் அவர்கள் அவனுக்காக அறுப்பு அறுத்து, அவனுடைய திராட்சத்தோட்டத்தின் பழங்களைச் சேர்க்கிறார்கள். 7 குளிரிலே போர்த்துக்கொள்ளுகிறதற்கு ஒன்றும் இல்லாததினால், வஸ்திரமில்லாமல் இராத்தங்கி, 8 மலைகளிலிருந்துவரும் மழைகளிலே நனைந்து, ஒதுக்கிடமில்லாததினால் கன்மலையிலே அண்டிக்கொள்ளுகிறார்கள். 9 அவர்களோ தகப்பனில்லாத பிள்ளையை முலையைவிட்டுப் பறித்து, தரித்திரன் போர்த்துக்கொண்டிருக்கிறதை அடகுவாங்குகிறார்கள். 10 அவனை வஸ்திரமில்லாமல் நடக்கவும், பட்டினியாய் அரிக்கட்டுகளைச் சுமக்கவும், 11 தங்கள் மதில்களுக்குள்ளே செக்காட்டவும், தாகத்தவனமாய் ஆலையாட்டவும் பண்ணுகிறார்கள். 12 ஊரில் மனுஷர் தவிக்கிறார்கள், குற்றுயிராய்க் கிடக்கிறவர்களின் ஆத்துமா கூப்பிடுகிறது; என்றாலும், தேவன் அதைக் குற்றமாக அவர்கள்மேல் சுமத்துகிறதில்லை. 13 அவர்கள் வெளிச்சத்துக்கு விரோதமாய் நடக்கிறவர்களின் கூட்டத்தார்; அவர்கள் அவருடைய வழிகளை அறியாமலும், அவருடைய பாதைகளில் தரிக்காமலும் இருக்கிறார்கள். 14 கொலைபாதகன் பொழுது விடிகிறபோது எழுந்து, சிறுமையும் எளிமையுமானவனைக் கொன்று, இராக்காலத்திலே திருடனைப்போல் திரிகிறான். 15 விபசாரனுடைய கண் மாலை மயங்குகிற வேளைக்குக் காத்திருந்து: என்னை ஒரு கண்ணும் காணமாட்டாதென்று முகத்தை மூடிக்கொள்ளுகிறான். 16 அவர்கள் பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இருட்டிலே கன்னமிடுகிறார்கள்; அவர்கள் வெளிச்சத்தை அறியார்கள். 17 விடியுங்காலமும் அவர்களுக்கு மரண இருள்போல் இருக்கிறது; அப்படிப்பட்டவன் மரண இருளின் பயங்கரத்தோடு பழகியிருக்கிறான். 18 நீரோட்டத்தைப்போல் தீவிரமாய்ப் போவான்; தேசத்தில் அவன் பங்கு சபிக்கப்பட்டுப் போகிறதினால், அவன் திராட்சத்தோட்டங்களின் வழியை இனிக் காண்பதில்லை. 19 வறட்சியும் உஷ்ணமும் உறைந்த மழையைப் பட்சிக்கும்; அப்படியே பாதாளமானது பாவிகளைப் பட்சிக்கும். 20 அவனைப் பெற்ற கர்ப்பம் அவனை மறக்கும்; புழு திருப்திகரமாய் அவனைத் தின்னும்; அவன் அப்புறம் நினைக்கப்படுவதில்லை; அக்கிரமமானது பட்டமரத்தைப்போல முறிந்துவிழும். 21 பிள்ளைபெறாத மலடியின் ஆஸ்தியைப் பட்சித்துவிட்டு, விதவைக்கு நன்மை செய்யாதேபோகிறான். 22 தன் பலத்தினாலே வல்லவர்களைத் தன் பாரிசமாக்குகிறான்; அவன் எழும்புகிறபோது ஒருவனுக்கும் பிராணனைப்பற்றி நிச்சயமில்லை. 23 தேவன் அவனுக்குச் சுகவாழ்வைக் கட்டளையிட்டால், அதின்மேல் உறுதியாய் நம்பிக்கை வைக்கிறான்; ஆனாலும் அவருடைய கண்கள் அப்படிப்பட்டவர்களின் வழிகளுக்கு விரோதமாயிருக்கிறது. 24 அவர்கள் கொஞ்சக்காலம் உயர்ந்திருந்து, காணாமற்போய், தாழ்த்தப்பட்டு, மற்ற எல்லாரைப்போலும் அடக்கப்படுகிறார்கள்; கதிர்களின் நுனியைப்போல அறுக்கப்படுகிறார்கள். 25 அப்படியில்லையென்று என்னைப் பொய்யனாக்கி, என் வார்த்தைகளை வியர்த்தமாக்கத்தக்கவன் யார் என்றான்.

யோபு 25

1 அப்பொழுது சூகியனான பில்தாத் பிரதியுத்தரமாக: 2 அதிகாரமும் பயங்கரமும் அவரிடத்தில் இருக்கிறது; அவர் தமது உன்னதமான ஸ்தலங்களில் சமாதானத்தை உண்டாக்குகிறார். 3 அவருடைய சேனைகளுக்குத் தொகையுண்டோ? அவருடைய வெளிச்சம் யார்மேல் உதிக்காமலிருக்கிறது? 4 இப்படியிருக்க, மனுஷன் தேவனுக்கு முன்பாக நீதிமானாயிருப்பது எப்படி? ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் சுத்தமாயிருப்பது எப்படி? 5 சந்திரனை அண்ணாந்துபாரும், அதுவும் பிரகாசியாமலிருக்கிறது; நட்சத்திரங்களும் அவர் பார்வைக்குச் சுத்தமானவைகள் அல்ல. 6 புழுவாயிருக்கிற மனிதனும், பூச்சியாயிருக்கிற மனுபுத்திரனும் எம்மாத்திரம் என்றான்.

யோபு 26

1 யோபு மறுமொழியாக: 2 திடனில்லாதவனுக்கு நீ எப்படி ஒத்தாசைபண்ணினாய்? பெலனற்ற கையை நீ எப்படி ஆதரித்தாய்? 3 நீ ஞானமில்லாதவனுக்கு எப்படி உசாவுதுணையாயிருந்து, மெய்ப்பொருளைக் குறைவற அறிவித்தாய்? 4 யாருக்கு அறிவைப் போதித்தாய்? உன்னிடத்திலிருந்து புறப்பட்ட ஆவி யாருடையது? 5 ஜலத்தின் கீழ் மடிந்தவர்களுக்கும், அவர்களோடே தங்குகிறவர்களுக்கும் தத்தளிப்பு உண்டு. 6 அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது. 7 அவர் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார். 8 அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை. 9 அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாசத்தை ஸ்திரப்படுத்தி, அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார். 10 அவர் தண்ணீர்கள்மேல் சக்கரவட்டம் தீர்த்தார்; வெளிச்சமும் இருளும் முடியுமட்டும் அப்படியே இருக்கும். 11 அவருடைய கண்டிதத்தால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும். 12 அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரப்பண்ணி, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார். 13 தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று. 14 இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார் என்றான்.

யோபு 27

1 யோபு பின்னும் தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது: 2 என் சுவாசம் என்னிலும், தேவன் தந்த ஆவி என் நாசியிலும் இருக்குமட்டும், 3 என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லையென்று, 4 என் நியாயத்தைத் தள்ளிவிடுகிற தேவனும், என் ஆத்துமாவைக் கசப்பாக்குகிற சர்வவல்லவருமானவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். 5 நீங்கள் பேசுகிறது நீதியென்று நான் ஒத்துக்கொள்வது எனக்குத் தூரமாயிருப்பதாக; என் ஆவி பிரியுமட்டும் என் உத்தமத்தை என்னைவிட்டு விலக்கேன். 6 என் நீதியைக் கெட்டியாய்ப் பிடித்திருக்கிறேன்; அதை நான் விட்டுவிடேன்; நான் உயிரோடிருக்குமளவும் என் இருதயம் என்னை நிந்திக்காது. 7 என் பகைஞன் ஆகாதவனைப்போலும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவன் அக்கிரமக்காரனைப்போலும் இருப்பானாக. 8 மாயக்காரன் பொருளைத் தேடி வைத்திருந்தாலும், தேவன் அவன் ஆத்துமாவை எடுத்துக்கொள்ளும்போது, அவன் நம்பிக்கை என்ன? 9 ஆபத்து அவன்மேல் வரும்போது, தேவன் அவன் கூப்பிடுதலைக் கேட்பாரோ? 10 அவன் சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருப்பானோ? அவன் எப்பொழுதும் தேவனைத் தொழுதுகொண்டிருப்பானோ? 11 தேவனுடைய கரத்தின் கிரியையைக் குறித்து உங்களுக்கு உபதேசிப்பேன்; சர்வவல்லவரிடத்தில் இருக்கிறதை நான் மறைக்கமாட்டேன். 12 இதோ, நீங்கள் எல்லாரும் அதைக் கண்டிருந்தும், நீங்கள் இத்தனை வீண் எண்ணங்கொண்டிருக்கிறது என்ன? 13 பொல்லாத மனுஷனுக்குத் தேவனிடத்திலிருந்து வருகிற பங்கும், கொடூரக்காரர் சர்வவல்லவரால் அடைகிற சுதந்தரமும் என்னவெனில், 14 அவனுடைய குமாரர் பெருகினால் பட்டயத்துக்கு இரையாவார்கள்; அவன் கர்ப்பப்பிறப்புகள் ஆகாரத்தினால் திருப்தியாவதில்லை. 15 அவனுக்கு மீதியானவர்கள் செத்துப் புதைக்கப்படுவார்கள்; அவனுடைய விதவைகள் புலம்புவதில்லை. 16 அவன் புழுதியைப்போலப் பணத்தைக் குவித்துக்கொண்டாலும், மண்ணைப்போல வஸ்திரங்களைச் சவதரித்தாலும், 17 அவன் சவதரித்ததை நீதிமான் உடுத்திக்கொண்டு, குற்றமில்லாதவன் அவன் பணத்தைப் பகிர்ந்துகொள்ளுவான். 18 அவனுடைய வீடு பொட்டுப்பூச்சி கட்டின வீட்டைப்போலும், காவல்காக்கிறவன் போட்ட குடிசையைப்போலுமாகும். 19 அவன் ஐசுவரியவானாய்த் தூங்கிக் கிடந்து, ஒன்றும் பறிகொடாதேபோனாலும், அவன் தன் கண்களைத் திறக்கும்போது ஒன்றுமில்லாதிருக்கும். 20 வெள்ளத்தைப்போலத் திகில்கள் அவனை வாரிக்கொண்டுபோகும்; இராக்காலத்தில் பெருங்காற்று அவனை அடித்துக்கொண்டுபோகும். 21 கொண்டல்காற்று அவனைத் தூக்கிக்கொண்டுபோக, அவன் போய்விடுவான்; அது அவனை அவன் ஸ்தலத்திலிருந்து தள்ளிக்கொண்டுபோகும். 22 அவர் இவைகளை அவன்மேல் வரப்பண்ணி அவனைத் தப்பவிடாதிருப்பார்; அவருடைய கைக்குத் தப்பியோடப் பார்ப்பான். 23 ஜனங்கள் அவனைப் பார்த்துக் கைகொட்டி, அவனை அவன் ஸ்தலத்தைவிட்டு வெருட்டிவிடுவார்கள்.

யோபு 28

1 வெள்ளிக்கு விளைவிடம் உண்டு, பொன்னுக்குப் புடமிடும் ஸ்தலமுமுண்டு. 2 இரும்பு மண்ணிலிருந்து எடுக்கப்படும்; செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும். 3 மனிதன் அந்தகாரத்திலும் மரண இருளிலும் இருக்கிற கற்களைக் கடையாந்தரமட்டும் ஆராய்ந்து தேடி, இருளுக்கும் அங்கே முடிவுண்டாக்குகிறான். 4 கடக்கக்கூடாததும் நிலையாததுமான ஆறு எழும்பினாலும், உழைப்பாளியானவன் அதை மனுஷரால் வற்றிப்போகப்பண்ணிச் செல்லுகிறான். 5 பூமியின்மேல் ஆகாரம் விளையும்; அதின் கீழிடங்களிலிருக்கிறவைகளோ, அக்கினியால் மாறினதுபோலிருக்கும். 6 அதின் கல்லுகளில் இந்திரநீலம் விளையும்; அதின் பொடியில் பொன்பொடிகளும் உண்டாயிருக்கும். 7 ஒரு வழியுண்டு, அது ஒரு பட்சிக்கும் தெரியாது; வல்லூறின் கண்ணும் அதைக் கண்டதில்லை; 8 துஷ்டமிருகங்களின் கால் அதில் படவில்லை; சிங்கம் அதைக் கடந்ததில்லை. 9 அவன் தன் கைகளைக் கற்பாறையின்மேல் நீட்டி, மலைகளை வேரோடே புரட்டுகிறான். 10 கன்மலைகளுக்குள்ளும் நீர்க்கால்களை வெட்டுகிறான்; அவன் கண் விலையுயர்ந்த எல்லாவற்றையும் காணும். 11 ஒரு துளியும் கசியாதபடி ஆறுகளை அடைக்கிறான்; மறைவிடத்திலிருக்கிறதை வெளிச்சத்திலே கொண்டுவருகிறான். 12 ஆனாலும் ஞானம் கண்டெடுக்கப்படுவது எங்கே? புத்தி விளைகிற இடம் எது? 13 அதின் விலை மனுஷனுக்குத் தெரியாது; அது ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அகப்படுகிறதில்லை. 14 ஆழமானது: அது என்னிடத்தில் இல்லையென்கிறது; சமுத்திரமானதும், அது என்னிடத்தில் இல்லையென்கிறது. 15 அதற்கு ஈடாகத் தங்கத்தைக் கொடுக்கவும், அதற்குக் கிரயமாக வெள்ளியை நிறுக்கவும் கூடாது. 16 ஓப்பீரின் தங்கமும், விலையேறப்பெற்ற கோமேதகமும், இந்திர நீலக்கல்லும் அதற்கு ஈடல்ல. 17 பொன்னும் பளிங்கும் அதற்கு ஒப்பல்ல; பசும்பொன்னாபரணங்களுக்கு அதை மாற்றக்கூடாது. 18 பவளத்தையும் ஸ்படிகத்தையும் அத்தோடே ஒப்பிட்டுப் பேசலாகாது; முத்துக்களைப்பார்க்கிலும் ஞானத்தின் விலை உயர்ந்தது. 19 எத்தியோப்பியாவின் புஷ்பராகம் அதற்கு நிகரல்ல; பசும்பொன்னும் அதற்குச் சரியல்ல. 20 இப்படியிருக்க, ஞானம் எங்கேயிருந்து வரும்; புத்தி தங்கும் இடம் எங்கே? 21 அது ஜீவனுள்ள சகலருடைய கண்களுக்கும் ஒளித்தும், ஆகாசத்துப் பறவைகளுக்கு மறைந்தும் இருக்கிறது. 22 நாசமும் மரணமும், நாங்கள் எங்கள் காதுகளினாலேமாத்திரம் அதின் கீர்த்தியைக் கேட்டோம் என்கிறது. 23 தேவனோ அதின் வழியை அறிவார், அதின் ஸ்தானம் அவருக்கே தெரியும். 24 அவர் பூமியின் கடையாந்தரங்களைப் பார்த்து, வானங்களின்கீழ் இருக்கிறதையெல்லாம் காண்கிறார். 25 அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து, 26 மழைக்குத் திட்டத்தையும், இடிமுழக்கத்தோடே கூடிய மின்னலுக்கு வழியையும் ஏற்படுத்துகிறார். 27 அவர் அதைப் பார்த்துக் கணக்கிட்டார்; அதை ஆராய்ந்து ஆயத்தப்படுத்தி, 28 மனுஷனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார் என்று சொன்னான்.

யோபு 29

1 பின்னும் யோபு தன் பிரசங்கவாக்கியத்தைத் தொடர்ந்து சொன்னது: 2 சென்றுபோன மாதங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்த சீர் இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும். 3 அப்பொழுது அவர் தீபம் என் தலையின்மேல் பிரகாசித்தது; அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன். 4 தேவனுடைய இரகசியச்செயல் என் கூடாரத்தின்மேல் இருந்தது. 5 அப்பொழுது சர்வவல்லவர் என்னோடிருந்தார்; என் பிள்ளைகள் என்னைச் சூழ்ந்திருந்தார்கள். 6 என் பாதங்களை நான் நெய்யினால் கழுவினேன்; கன்மலைகளிலிருந்து எனக்காக எண்ணெய் நதிபோல ஓடிவந்தது; அந்தச் செல்வநாட்களின் சீர் இப்போதிருந்தால் நலமாயிருக்கும். 7 நான் பட்டணவீதியால் வாசலுக்குள் புறப்பட்டுப்போய், வீதியில் என் ஆசனத்தைப் போடும்போது, 8 வாலிபர் என்னைக் கண்டு ஒளித்துக்கொள்வார்கள்; முதியோர் எழுந்திருந்து நிற்பார்கள். 9 பிரபுக்கள் பேசுகிறதை நிறுத்தி, கையினால் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள். 10 பெரியோரின் சத்தம் அடங்கி, அவர்கள் நாக்கு அவர்கள் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளும். 11 என்னைக் கேட்ட காது என்னைப் பாக்கியவான் என்றது; என்னைக் கண்ட கண் எனக்குச் சாட்சியிட்டது. 12 முறையிடுகிற ஏழையையும், திக்கற்ற பிள்ளையையும், உதவியற்றவனையும் இரட்சித்தேன். 13 கெட்டுப்போக இருந்தவனுடைய ஆசீர்வாதம் என்மேல் வந்தது; விதவையின் இருதயத்தைக் கெம்பீரிக்கப்பண்ணினேன். 14 நீதியைத் தரித்துக்கொண்டேன்; அது என் உடுப்பாயிருந்தது; என் நியாயம் எனக்குச் சால்வையும் பாகையுமாய் இருந்தது. 15 நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன். 16 நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன். 17 நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன். 18 என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்; என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன். 19 என் வேர் தண்ணீர்களின் ஓரமாய்ப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இராமுழுதும் தங்கியிருந்தது. 20 என் மகிமை என்னில் செழித்தோங்கி, என் கையிலுள்ள என் வில் புதுப்பெலன் கொண்டது. 21 எனக்குச் செவிகொடுத்துக் காத்திருந்தார்கள்; என் ஆலோசனையைக் கேட்டு மவுனமாயிருந்தார்கள். 22 என் பேச்சுக்குப் பேசாமலிருந்தார்கள்; என் வசனம் அவர்கள்மேல் துளிதுளியாய் விழுந்தது. 23 மழைக்குக் காத்திருக்கிறதுபோல் எனக்குக் காத்திருந்து, பின்மாரிக்கு ஆசையுள்ளவர்கள்போல் தங்கள் வாயை ஆவென்று திறந்திருந்தார்கள். 24 நான் அவர்களைப் பார்த்து நகைக்கும்போது, அவர்கள் துணிகரங்கொள்ளவில்லை; என் முகக்களையை மாறச்செய்யவும் இல்லை. 25 அவர்கள் வழியேபோக எனக்குச் சித்தமாகும்போது, நான் தலைவனாய் உட்கார்ந்து, இராணுவத்துக்குள் ராஜாவைப்போலும், துக்கித்தவர்களைத் தேற்றரவுபண்ணுகிறவனைப்போலும் இருந்தேன்.

யோபு 30

1 இப்போதோ என்னிலும் இளவயதானவர்கள் என்னைப் பரியாசம்பண்ணுகிறார்கள்; இவர்களுடைய பிதாக்களை நான் என் மந்தையைக் காக்கும் நாய்களோடே வைக்கவுங்கூட வெட்கப்பட்டிருப்பேன். 2 விருத்தாப்பியத்தினாலே பெலனற்றுப்போன அவர்கள் கைகளினால் எனக்கு என்ன உதவியிருந்தது. 3 குறைச்சலினாலும் பசியினாலும் அவர்கள் வாடி, வெகுநாளாய்ப் பாழும் வெறுமையுமான அந்தரவெளிக்கு ஓடிப்போய், 4 செடிகளுக்குள் இருக்கிற தழைகளைப் பிடுங்குவார்கள்; காட்டுப்பூண்டுகளின் கிழங்குகள் அவர்களுக்கு ஆகாரமாயிருந்தது. 5 அவர்கள் மனுஷரின் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள்; கள்ளனைத் துரத்துகிறதுபோல்: கள்ளன் கள்ளன் என்று அவர்களைத் துரத்திவிட்டார்கள். 6 அவர்கள் பள்ளத்தாக்குகளின் வெடிப்புகளிலும், பூமியின் கெபிகளிலும், கன்மலைகளிலும் போய் குடியிருந்தார்கள். 7 செடிகளுக்குள்ளிருந்து கதறி, காஞ்சொறிகளின்கீழ் ஒதுங்கினார்கள். 8 அவர்கள் மூடரின் மக்களும், நீசரின் பிள்ளைகளும், தேசத்திலிருந்து துரத்துண்டவர்களுமாய் இருந்தார்கள். 9 ஆனாலும் இப்போது நான் அவர்களுக்குப் பாட்டும் பழமொழியும் ஆனேன். 10 என்னை அருவருத்து, எனக்குத் தூரமாகி, என் முகத்துக்கு முன்பாகத் துப்பக் கூசாதிருக்கிறார்கள். 11 நான் கட்டின கட்டை அவர் அவிழ்த்து, என்னைச் சிறுமைப்படுத்தினபடியினால், அவர்களும் கடிவாளத்தை என் முகத்துக்கு முன்பாக உதறிவிட்டார்கள். 12 வலதுபாரிசத்தில் வாலிபர் எழும்பி, என் கால்களைத் தவறிவிழப்பண்ணி, தங்கள் கேடான வழிகளை எனக்கு நேராக ஆயத்தப்படுத்துகிறார்கள். 13 என் பாதையைக் கெடுத்து, என் ஆபத்தை வர்த்திக்கப்பண்ணுகிறார்கள்; அதற்கு அவர்களுக்கு ஒத்தாசைபண்ணுகிறவர்கள் தேவையில்லை. 14 பெரிதான திறப்புண்டாக்கி, தாங்கள் கெடுத்த வழியில் புரண்டுவருகிறார்கள். 15 பயங்கரங்கள் என்மேல் திரும்பிவருகிறது, அவைகள் காற்றைப்போல என் ஆத்துமாவைப் பின்தொடருகிறது; என் சுகவாழ்வு ஒரு மேகத்தைப்போல் கடந்துபோயிற்று. 16 ஆகையால் இப்போது என் ஆத்துமா என்னில் முறிந்துபோயிற்று; உபத்திரவத்தின் நாட்கள் என்னைப் பிடித்துக்கொண்டது. 17 இராக்காலத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது. 18 நோயின் உக்கிரத்தினால் என் உடுப்பு வேறுபட்டுப்போயிற்று; அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல, என்னைச் சுற்றிக்கொண்டது. 19 சேற்றிலே தள்ளப்பட்டேன்; தூளுக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன். 20 உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மறுஉத்தரவு கொடாதிருக்கிறீர்; கெஞ்சிநிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர். 21 என்மேல் கொடூரமுள்ளவராக மாறினீர்; உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர். 22 நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, என்னைப் பயத்தினால் உருகிப்போகப்பண்ணுகிறீர். 23 சகல ஜீவாத்துமாக்களுக்கும் குறிக்கப்பட்ட தாவரமாகிய மரணத்துக்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன். 24 ஆனாலும் நான் யாதொருவனை அவன் ஆபத்திலே தவிக்கப்பண்ணினதும், 25 துன்னாளைக் கண்டவனுக்காக நான் அழாதிருந்ததும், எளியவனுக்காக என் ஆத்துமா வியாகுலப்படாதிருந்ததும் உண்டானால், அவர் என் மனுவுக்கு இடங்கொடாமல், எனக்கு விரோதமாய்த் தமது கையை நீட்டுவாராக. 26 நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சத்தை வரப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது. 27 என் குடல்கள் கொதித்து, அமராதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது. 28 வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்துத் திரிகிறேன்; நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன். 29 நான் மலைப்பாம்புகளுக்குச் சகோதரனும், கோட்டான்களுக்குத் தோழனுமானேன். 30 என் தோல் என்மேல் கறுத்துப்போயிற்று; என் எலும்புகள் உஷ்ணத்தினால் காய்ந்துபோயிற்று. 31 என் சுரமண்டலம் புலம்பலாகவும், என் கின்னரம் அழுகிறவர்களின் ஓலமாகவும் மாறின.

யோபு 31

1 என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி? 2 அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ? 3 மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும். 4 அவர் என் வழிகளைப் பார்த்து, என் நடைகளையெல்லாம் எண்ணுகிறார் அல்லவோ? 5 நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் கபடுசெய்யத் தீவிரித்ததோ என்று, 6 சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக. 7 என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், ஏதாகிலும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் உண்டானால், 8 அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் புசிப்பானாக; என் பயிர்கள் வேரற்றுப்போகக்கடவது. 9 என் மனம் யாதொரு ஸ்திரீயின்மேல் மயங்கி, அயலானுடைய வாசலை நான் எட்டிப்பார்த்ததுண்டானால், 10 அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; வேற்றுமனிதர் அவள்மேல் சாய்வார்களாக. 11 அது தோஷம், அது நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் அக்கிரமமாமே. 12 அது பாதாளபரியந்தம் பட்சிக்கும் அக்கினியாய் என் சம்பத்தையெல்லாம் நிர்மூலமாக்கும். 13 என் வேலைக்காரனானாலும், என் வேலைக்காரியானாலும், என்னோடு வழக்காடும்போது, அவர்கள் நியாயத்தை நான் அசட்டைபண்ணியிருந்தால், 14 தேவன் எழும்பும்போது, நான் என்னசெய்வேன்; அவர் விசாரிக்கும்போது, நான் அவருக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன். 15 தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டுபண்ணினவர் அவனையும் உண்டுபண்ணினார் அல்லவோ? ஒரேவிதமான கர்ப்பத்தில் எங்களை உருவாக்கினார் அல்லவோ? 16 எளியவர்கள் வாஞ்சித்ததை நான் கொடாதிருந்து, விதவையின் கண்களைப் பூத்துப்போகப்பண்ணி, 17 தாய்தகப்பனில்லாத பிள்ளை என் ஆகாரத்தில் சாப்பிடாமல், நான் ஒருவனாய்ச் சாப்பிட்டதுண்டோ? 18 என் சிறுவயதுமுதல் அவன் தகப்பனிடத்தில் வளர்வதுபோல என்னோடே வளர்ந்தான்; நான் என் தாயின் கர்ப்பத்திலே பிறந்ததுமுதல் அப்படிப்பட்டவர்களைக் கைலாகுகொடுத்து நடத்தினேன். 19 ஒருவன் உடுப்பில்லாததினால் மடிந்துபோகிறதையும், ஏழைக்கு மூட வஸ்திரமில்லாதிருக்கிறதையும் நான் கண்டபோது, 20 அவன் என் ஆட்டுமயிர்க் கம்பளியினாலே அனல்கொண்டதினால், அவன் இடை என்னைப் புகழாதிருந்ததும், 21 ஒலிமுகவாசலில் எனக்குச் செல்வாக்கு உண்டென்று நான் கண்டு, திக்கற்றவனுக்கு விரோதமாய் என் கையை நீட்டினதும் உண்டானால், 22 என் கைப்பட்டை தோளிலிருந்து சரிந்து, என் புயத்து எலும்பு முறிந்துபோவதாக. 23 தேவன் ஆக்கினையிடுவார் என்றும், அவருடைய மகத்துவத்தை உத்தரிக்கக்கூடாது என்றும், எனக்குப் பயங்கரமாயிருந்தது. 24 நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, தங்கத்தைப்பார்த்து: நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும், 25 என் ஆஸ்திபெரியதென்றும், என் கைக்கு மிகுதியும் கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும், 26 சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாய்ச் செல்லும்போதும், நான் அதை நோக்கி: 27 என் மனம் இரகசியமாய் மயக்கப்பட்டு, என் வாய் என் கையை முத்தி செய்ததுண்டானால், 28 இதுவும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படத்தக்க அக்கிரமமாயிருக்கும்; அதினால் உன்னதத்திலிருக்கிற தேவனை மறுதலிப்பேனே. 29 என் பகைஞனுடைய ஆபத்திலே நான் மகிழ்ந்து, பொல்லாப்பு அவனுக்கு நேரிட்டபோது களிகூர்ந்திருந்தேனோ? 30 அவன் ஜீவனுக்குச் சாபத்தைக் கொடுக்கும்படி விரும்பி, வாயினால் பாவஞ்செய்ய நான் இடங்கொடுக்கவில்லை. 31 அவன் இனத்தார்களில் திருப்தியாகாதவனைக் காண்பிப்பவன் யாரென்று என் கூடாரத்தின் மனுஷர் சொல்லார்களோ? 32 பரதேசி வீதியிலே இராத்தங்கினதில்லை; வழிப்போக்கனுக்கு என் வாசல்களைத் திறந்தேன். 33 நான் ஆதாமைப்போல என் மீறுதல்களை மூடி, என் அக்கிரமத்தை என் மடியிலே ஒளித்துவைத்தேனோ? 34 திரளான என் கூட்டத்துக்கு நான் பயந்ததினாலாவது, இனத்தார் ஜனத்தார் பண்ணும் இகழ்ச்சி என்னைத் திடுக்கிடப்பண்ணினதினாலாவது, நான் பேசாதிருந்து, வாசற்படியை விட்டுப் புறப்படாதிருந்தேனோ? 35 ஆ, என் வழக்கைக் கேட்கிறவன் ஒருவன் இருந்தால் நலமாயிருக்கும்; இதோ, சர்வவல்லவர் எனக்கு உத்தரவு அருளிச்செய்யவும், என் எதிராளி தன் வழக்கை எழுதிக்கொடுக்கவும் எனக்கு விருப்பமுண்டு. 36 அதை நான் என் தோளின்மேல் வைத்து, எனக்குக் கிரீடமாகத் தரித்துக்கொள்வேனே. 37 அவனுக்கு நான் என் நடைகளைத் தொகை தொகையாய்க் காண்பித்து, ஒரு பிரபுவைப்போல அவனிடத்தில் போவேன். 38 எனக்கு விரோதமாக என் காணிபூமி கூப்பிடுகிறதும், அதின் படைச்சால்கள்கூட அழுகிறதும், 39 கூலிகொடாமல் நான் அதின் பலனைப் புசித்து, பயிரிட்டவர்களின் ஆத்துமாவை உபத்திரவப்படுத்தினதும் உண்டானால், 40 அதில் கோதுமைக்குப் பதிலாக முள்ளும், வாற்கோதுமைக்குப் பதிலாகக் களையும் முளைக்கக்கடவது என்றான். யோபின் வார்த்தைகள் முடிந்தது.

யோபு 32

1 யோபு தன் பார்வைக்கு நீதிமானாயிருந்தபடியினால், அவனுக்கு அந்த மூன்று மனுஷரும் பிரதியுத்தரம் சொல்லி ஓய்ந்தார்கள். 2 அதினால் ராமின் வம்சத்தானான பூசியனாகிய பரகெயேலின் குமாரன் எலிகூவுக்குக் கோபம் மூண்டது; யோபு, தேவனைப்பார்க்கிலும் தன்னைத்தான் நீதிமானாக்கினதினிமித்தம், அவன்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது. 3 கொடுக்கத்தக்க மறுமொழி யோபின் மூன்று சிநேகிதருக்கும் அகப்படாதிருந்தும், அவர்கள் அவனை ஆகாதவனென்று தீர்த்ததினிமித்தம், அவர்கள்மேலும் அவனுக்குக் கோபம் மூண்டது. 4 அவர்கள் தன்னைப்பார்க்கிலும் வயதுசென்றவர்களானபடியினால், எலிகூ யோபின் வார்த்தைகள் முடிந்து தீருமட்டும் காத்திருந்தான். 5 அந்த மூன்று மனுஷரின் வாயிலும் மறுஉத்தரவு பிறக்கவில்லையென்று எலிகூ கண்டபோது, அவனுக்குக் கோபம் மூண்டது. 6 ஆதலால் பரகெயேலின் குமாரன் எலிகூ என்னும் பூசியன் பிரதியுத்தரமாக: நான் இளவயதுள்ளவன், நீங்களோ விருத்தாப்பியர்; ஆகையால் நான் அஞ்சி, என் அபிப்பிராயத்தை உங்களுக்கு முன்பாக வெளிப்படுத்தப் பயந்திருந்தேன். 7 முதியோர் பேசட்டும், வயதுசென்றவர்கள் ஞானத்தை அறிவிக்கட்டும் என்றிருந்தேன். 8 ஆனாலும் மனுஷரில் ஒரு ஆவியுண்டு; சர்வவல்லவருடைய சுவாசமே அவர்களை உணர்வுள்ளவர்களாக்கும். 9 பெரியோரெல்லாம் ஞானிகளல்ல; முதியோரெல்லாம் நீதியை அறிந்தவர்களுமல்ல. 10 ஆகையால் எனக்குச் செவிகொடுங்கள்; நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன் என்றேன். 11 இதோ, உங்கள் வசனங்கள் முடியுமட்டும் காத்திருந்தேன்; நீங்கள் சொல்லத்தக்கதை ஆராய்ந்து தேடுமட்டும், உங்கள் நியாயங்களுக்குச் செவிகொடுத்தேன். 12 நான் உங்கள் சொல்லைக் கவனித்தேன்; ஆனாலும் இதோ, உங்களில் யோபுக்கு நியாயத்தைத் தெரியக்காட்டி, அவருடைய வசனங்களுக்கு ஏற்ற பிரதியுத்தரம் சொல்லுகிறவனில்லை. 13 ஞானத்தைக் கண்டுபிடித்தோம் என்று நீங்கள் சொல்லாதபடி பாருங்கள்; மனுஷனல்ல, தேவனே அவரை ஜெயங்கொள்ளவேண்டும். 14 அவர் என்னைப்பார்த்துப் பேசினதில்லை; நீங்கள் சொன்ன வார்த்தைகளினால் நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்வதுமில்லை. 15 அவர்கள் கலங்கி, அப்புறம் பிரதியுத்தரம் சொல்லாதிருக்கிறார்கள்; அவர்களுக்குப் பேச்சு அற்றுப்போயிற்று. 16 அவர்கள் பேசார்களோ என்று காத்திருந்தேன்; ஆனாலும் அவர்கள் அப்புறம் மறுமொழி கொடாமலிருந்தபடியினால், 17 நானும் பிரதியுத்தரமாக எனக்குத் தோன்றியமட்டும் சொல்லுவேன்; நானும் என் அபிப்பிராயத்தை வெளிப்படுத்துவேன். 18 வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது. 19 இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புதுத் துருத்திகளை முதலாய்ப் பீறப்பண்ணுகிற புது ரசத்தைப்போலிருக்கிறது. 20 நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து பிரதியுத்தரம் சொல்லுவேன். 21 நான் ஒருவனுடைய முகத்தைப் பாராமலும், ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும் இருப்பேனாக. 22 நான் இச்சகம் பேச அறியேன்; பேசினால் என்னை உண்டாக்கினவர் சீக்கிரமாய் என்னை எடுத்துக்கொள்வார்.

யோபு 33

1 யோபே, என் நியாயங்களைக் கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும். 2 இதோ, என் வாயை இப்போது திறந்தேன்; என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும். 3 என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாய் வசனிக்கும். 4 தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது. 5 உம்மாலே கூடுமானால் எனக்கு மறுமொழி கொடும்; நீர் ஆயத்தப்பட்டு எனக்கு எதிராக நில்லும். 6 இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன். 7 இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; என் கை உம்மேல் பாரமாயிருக்கமாட்டாது. 8 நான் காதாரக் கேட்க நீர் சொன்னதும், எனக்குக் கேள்வியான உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்: 9 நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமமில்லை. 10 இதோ, என்னில் அவர் குற்றம்பிடிக்கப் பார்க்கிறார், என்னைத் தமக்குச் சத்துருவாக எண்ணிக்கொள்ளுகிறார். 11 அவர் என் கால்களைத் தொழுவிலே மாட்டி, என் நடைகளையெல்லாம் காவல்படுத்துகிறார் என்று சொன்னீர். 12 இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்குப் பிரதியுத்தரமாகச் சொல்லுகிறேன்; மனுஷனைப்பார்க்கிலும் தேவன் பெரியவராயிருக்கிறார். 13 அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையுங்குறித்துக் காரணம் சொல்லவில்லையென்று நீர் அவரோடே ஏன் வழக்காடுகிறீர்? 14 தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே. 15 கனநித்திரை மனுஷர்மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில், 16 அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே முத்திரைபோட்டு, 17 மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும், மனுஷருடைய பெருமை அடங்கவும் செய்கிறார். 18 இவ்விதமாய் அவன் ஆத்துமாவைப் படுகுழிக்கும், அவன் ஜீவனைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார். 19 அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான். 20 அவன் ஜீவன் அப்பத்தையும், அவன் ஆத்துமா ருசிகரமான போஜனத்தையும் அரோசிக்கும். 21 அவன் மாம்சம் காணப்படாதபடிக்கு அழிந்து, மூடப்பட்டிருந்த அவன் எலும்புகள் வெளிப்படுகிறது. 22 அவன் ஆத்துமா பாதாளத்துக்கும், அவன் பிராணன் சாவுக்கும் சமீபிக்கிறது. 23 ஆயிரத்தில் ஒருவராகிய சாமாசிபண்ணுகிற தூதனானவர் மனுஷனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிக்கும்படிக்கு, அவனுக்கு அநுசாரியாயிருந்தாரேயாகில், 24 அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காதபடிக்கு: நீர் அவனை இரட்சியும்; மீட்கும்பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார். 25 அப்பொழுது அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப்பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயது நாட்களுக்குத் திரும்புவான். 26 அவன் தேவனை நோக்கி விண்ணப்பம்பண்ணும்போது, அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார். 27 அவன் மனுஷரை நோக்கிப்பார்த்து: நான் பாவஞ்செய்து செம்மையானதைப் புரட்டினேன், அது எனக்குப் பிரயோஜனமாயிருக்கவில்லை. 28 என் ஆத்துமா படுகுழியில் இறங்காதபடி, அவர் அதை இரட்சிப்பார்; ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான். 29 இதோ, தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பிக்கிறதற்கும், 30 அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார். 31 யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும். 32 சொல்லத்தக்க நியாயங்கள் இருந்ததேயானால், எனக்கு மறுஉத்தரவு கொடும்; நீர் பேசும், உம்மை நீதிமானாகத் தீர்க்க எனக்கு ஆசையுண்டு. 33 ஒன்றும் இல்லாதிருந்ததேயாகில் நீர் என் சொல்லைக் கேளும், மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தை உபதேசிப்பேன் என்றான்.

யோபு 34

1 பின்னும் எலிகூ மாறுத்தரமாக: 2 ஞானிகளே, என் வார்த்தைகளைக் கேளுங்கள்; அறிவாளிகளே, எனக்குச் செவிகொடுங்கள். 3 வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கும். 4 நமக்காக நியாயமானதைத் தெரிந்துகொள்வோமாக; நன்மை இன்னதென்று நமக்குள்ளே அறிந்துகொள்வோமாக. 5 யோபு: நான் நீதிமான்; தேவன் என் நியாயத்தைத் தள்ளிவிட்டார் என்றும், 6 நியாயம் என்னிடத்தில் இருந்தும் நான் பொய்யனென்று எண்ணப்படுகிறேன்; மீறுதல் இல்லாதிருந்தும், அம்பினால் எனக்கு உண்டான காயம் ஆறாததாயிருக்கிறதென்றும் சொன்னாரே. 7 யோபைப்போலவே, பரியாசம்பண்ணுதலைத் தண்ணீரைப்போல் குடித்து, 8 அக்கிரமக்காரரோடே கூடிக்கொண்டு, துன்மார்க்கரோடே திரிகிறவன் யார்? 9 எப்படியெனில், தேவன்மேல் பிரியம் வைக்கிறது மனுஷனுக்குப் பிரயோஜனம் அல்ல என்றாரே. 10 ஆகையால் புத்திமான்களே, எனக்குச் செவிகொடுங்கள்; அக்கிரமம் தேவனுக்கும், அநீதி சர்வவல்லவருக்கும் தூரமாயிருக்கிறது. 11 மனுஷனுடைய செய்கைக்குத்தக்கதை அவனுக்குச் சரிக்கட்டி, அவனவன் நடக்கைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிக்கிறார். 12 தேவன் அநியாயஞ் செய்யாமலும், சர்வவல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது மெய்யே. 13 பூமியின்மேல் மனுஷனுக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? பூச்சக்கரம் முழுதையும் ஒழுங்குப்படுத்தினவர் யார்? 14 அவர் தம்முடைய இருதயத்தை அவனுக்கு விரோதமாகத் திருப்பினாராகில், அவனுடைய ஆவியையும் அவனுடைய சுவாசத்தையும் தம்மிடத்தில் இழுத்துக்கொள்ளுவார். 15 அப்படியே மாம்சமான யாவும் ஏகமாய் ஜீவித்துப்போம், மனுஷன் தூளுக்குத் திரும்புவான். 16 உமக்கு உணர்விருந்தால் இதைக் கேளும், என் வார்த்தைகளின் சத்தத்துக்குச் செவிகொடும். 17 நீதியைப் பகைக்கிற ஒருவன் ஆளக்கூடுமோ? மகா நீதிபரரைக் குற்றப்படுத்துவீரோ? 18 ஒரு ராஜாவைப் பார்த்து, நீ பொல்லாதவன் என்றும், அதிபதிகளைப் பார்த்து, நீங்கள் அக்கிரமக்காரர் என்றும் சொல்லத்தகுமோ? 19 இப்படியிருக்க, பிரபுக்களின் முகத்தைப்பாராமலும், ஏழையைப்பார்க்கிலும் ஐசுவரியவானை அதிகமாய் எண்ணாமலும் இருக்கிறவரை நோக்கி இப்படிச் சொல்லலாமா? இவர்கள் எல்லாரும் அவர் கரங்களின் கிரியையே. 20 இப்படிப்பட்டவர்கள் சடிதியில் சாவார்கள்; ஜனங்கள் பாதிஜாமத்தில் கலங்கி ஒழிந்துபோவார்கள்; காணாத கையினால் பலவந்தர் அழிந்துபோவார்கள். 21 அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார். 22 அக்கிரமக்காரர் ஒளித்துக்கொள்ளத்தக்க அந்தகாரமுமில்லை, மரண இருளுமில்லை. 23 மனுஷன் தேவனோடே வழக்காடும்படி அவர் அவன்மேல் மிஞ்சினதொன்றையும் சுமத்தமாட்டார். 24 ஆராய்ந்து முடியாத நியாயமாய் அவர் வல்லமையுள்ளவர்களை நொறுக்கி, வேறே மனுஷரை அவர்கள் ஸ்தானத்திலே நிறுத்துகிறார். 25 அவர்கள் கிரியைகளை அவர் அறிந்தவரானபடியால், அவர்கள் நசுங்கிப்போகத்தக்கதாய் இராக்காலத்தில் அவர்களைக் கவிழ்த்துப்போடுகிறார். 26 அவர்கள் அவரை விட்டுப் பின்வாங்கி, அவருடைய எல்லா வழிகளையும் உணர்ந்துகொள்ளாமல் போனபடியினாலும், 27 எளியவர்களின் கூக்குரல் அவரிடத்தில் சேரும்படி செய்ததினாலும், சிறுமையானவனுடைய கூக்குரலைக் கேட்கிற அவர், 28 எல்லாரும் பார்க்கும்படி அவர்களைத் துன்மார்க்கரென்று அடிக்கிறார். 29 மாயக்காரன் ஆளாதபடிக்கும், ஜனங்கள் சிக்கிக்கொள்ளப்படாதபடிக்கும், 30 ஒரு ஜனத்துக்கானாலும் ஒரு மனுஷனுக்கானாலும், அவர் சமாதானத்தை அருளினால் யார் கலங்கப்பண்ணுவான்? அவர் தமது முகத்தை மறைத்தால் அவரைக் காண்கிறவன் யார்? 31 நான் தண்டிக்கப்பட்டேன்; நான் இனிப் பாவஞ்செய்யமாட்டேன். 32 நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம் பண்ணினேனானால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லத்தகுமே. 33 நீர் அப்படிச் செய்யமாட்டோமென்கிறபடியினால், உம்மோடிருக்கிறவர்களில் ஒருவனை உமக்குப் பதிலாக அதைச் செய்யச்சொல்வீரோ? நான் அல்ல, நீரே தெரிந்துகொள்ளவேண்டும்; அல்லவென்றால், நீர் அறிந்திருக்கிறதைச் சொல்லும். 34 யோபு அறிவில்லாமல் பேசினார்; அவர் வார்த்தைகள் ஞானமுள்ளவைகள் அல்லவென்று, 35 புத்தியுள்ள மனுஷர் என் பட்சமாய்ப் பேசுவார்கள்; ஞானமுள்ள மனுஷனும் எனக்குச் செவிகொடுப்பான். 36 அக்கிரமக்காரர் சொன்ன மறுஉத்தரவுகளினிமித்தம் யோபு முற்றமுடிய சோதிக்கப்படவேண்டியதே என் அபேட்சை. 37 தம்முடைய பாவத்தோடே மீறுதலைக் கூட்டினார்; அவர் எங்களுக்குள்ளே கைகொட்டி, தேவனுக்கு விரோதமாய்த் தம்முடைய வார்த்தைகளை மிகுதியாக வசனித்தார் என்றான்.

யோபு 35

1 பின்னும் எலிகூ மாறுத்தரமாக: 2 என் நீதி தேவனுடைய நீதியைப்பார்க்கிலும் பெரியதென்று நீர் சொன்னது நியாயம் என்று எண்ணுகிறீரோ? 3 நான் பாவியாயிராததினால் எனக்குப் பிரயோஜனமென்ன? பலன் என்ன? என்று சொன்னீர். 4 உமக்கும் உம்மோடே இருக்கிற உம்முடைய சிநேகிதருக்கும் நான் பிரதியுத்தரம் சொல்லுகிறேன். 5 நீர் வானத்தை அண்ணாந்துபார்த்து, உம்மைப்பார்க்கிலும் உயரமாயிருக்கிற ஆகாயமண்டலங்களைக் கண்ணோக்கும். 6 நீர் பாவஞ்செய்தால் அதினாலே அவருக்கு என்ன நஷ்டம்? உம்முடைய மீறுதல்கள் மிகுதியானாலும், அதினாலே அவருக்கு என்ன சேதம்? 7 நீர் நீதிமானாயிருந்தால், அதினாலே அவருக்கு என்ன கிடைக்கும்? அல்லது அவர் உம்முடைய கையில் என்ன லாபத்தைப் பெறுவார்? 8 உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனுஷனுக்கு நஷ்டமும், உம்முடைய நீதியினால் மனுபுத்திரனுக்கு லாபமும் உண்டாகும். 9 அநேகரால் பலவந்தமாய் ஒடுக்கப்பட்டவர்கள் முறையிட்டு, வல்லவர்களுடைய புயத்தினிமித்தம் அலறுகிறார்கள். 10 பூமியின் மிருகங்களைப்பார்க்கிலும் எங்களைப் புத்திமான்களும், ஆகாசத்துப் பறவைகளைப்பார்க்கிலும் எங்களை ஞானவான்களுமாக்கி, 11 என்னை உண்டாக்கினவரும், இரவிலும் கீதம்பாட அருள்செய்கிறவருமாகிய என் சிருஷ்டிகர்த்தாவாகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை. 12 அங்கே அவர்கள் பொல்லாதவர்களின் பெருமையினிமித்தம் கூப்பிடுகிறார்கள்; அவரோ மறுஉத்தரவு கொடுக்கிறதில்லை. 13 தேவன் வீண்வார்த்தைக்குச் செவிகொடார், சர்வவல்லவர் அதைக் கவனியார். 14 அவருடைய தரிசனம் உமக்குக் கிடைக்கிறதில்லை என்று நீர் சொல்லுகிறீரே; ஆனாலும் நியாயத்தீர்ப்பு அவரிடத்தில் இருக்கிறது; ஆகையால் அவருக்குக் காத்துக்கொண்டிரும். 15 இப்போது அவருடைய கோபமானது நியாயத்தை முற்றிலும் விசாரியாது; அவர் இன்னும் ஒன்றையும் குறையற்றவிதமாய்த் தீர்க்கவில்லை. 16 ஆகையால் யோபு வீணாய்த் தம்முடைய வாயைத் திறந்து, அறிவில்லாமல் வார்த்தைகளை மிகுதியாய் வசனிக்கிறார் என்றான்.

யோபு 36

1 பின்னும் எலிகூ: 2 நான் பேசிமுடியுமட்டும் சற்றே பொறும்; இன்னும் தேவன்பட்சத்தில் நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக்காண்பிப்பேன். 3 நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கப்பண்ணுவேன். 4 மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யற்றிருக்கும்; உம்மோடே பேசுகிறவன் அறிவில் தேறினவன். 5 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் புறக்கணியார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர். 6 அவர் துன்மார்க்கரைப் பிழைக்க ஒட்டாதிருக்கிறார்; சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார். 7 அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களோடே கூடச் சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த ஸ்தலத்தில் என்றைக்கும் உட்கார்ந்திருக்கவும் செய்கிறார். 8 அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும், 9 அவர், அவர்கள் கிரியையையும், மிஞ்சிப்போன அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி, 10 அக்கிரமத்தை விட்டுத் திரும்பும்படி அவர்கள் செவியைத் திறந்து கடிந்துகொள்ளுகிறார். 11 அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள். 12 அடங்கார்களேயாகில் பட்டயத்துக்கு இரையாகி, ஞானம் அடையாமல் மாண்டுபோவார்கள். 13 மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள். 14 அவர்கள் வாலவயதிலே மாண்டுபோவார்கள்; இலச்சையானவர்களுக்குள்ளே அவர்கள் பிராணன் முடியும். 15 சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு நீங்கலாக்கி, அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கையில் அவர்கள் செவியைத் திறக்கிறார். 16 அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்தினின்று விலக்கி, ஒடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; உம்முடைய போஜனபந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும். 17 ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேறப் பார்ப்பீர்; நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும். 18 உக்கிரமுண்டாயிருக்கிறதினால் அவர் உம்மை ஒரு அடியினால் வாரிக்கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; அப்பொழுது மீட்கும்பொருளை மிகுதியாய்க் கொடுத்தாலும் அதற்கு நீர் நீங்கலாகமாட்டீர். 19 உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ? உம்முடைய பொன்னையும், பூரண பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே. 20 ஜனங்கள் தங்கள் இடத்தைவிட்டு வாரிக்கொள்ளப்படப்போகிற இரவை வாஞ்சிக்காதிரும். 21 அக்கிரமத்துக்குத் திரும்பாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; உபத்திரவத்தைப்பார்க்கிலும் அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே. 22 இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப்போல் போதிக்கிறவர் யார்? 23 அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தக்கவன் யார்? நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்? 24 மனுஷர் நோக்கிப்பார்க்கிற அவருடைய கிரியையை நீர் மகிமைப்படுத்த நினையும். 25 எல்லா மனுஷரும் அதைக் காண்கிறார்களே; தூரத்திலிருந்து அது மனுஷருக்கு வெளிப்படுகிறது. 26 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது. 27 அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது. 28 அதை மேகங்கள் பெய்து, மனுஷர்மேல் மிகுதியாய்ப் பொழிகிறது. 29 மேகங்களின் பரவுதலையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ? 30 இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை விரிக்கிறார்; சமுத்திரத்தின் ஆழங்களையும் மூடுகிறார். 31 அவைகளால் ஜனங்களை தண்டிக்கிறவரும், ஆகாரங்கொடுத்து இரட்சிக்கிறவருமாயிருக்கிறார். 32 அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, அது இன்னின்னதை அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார். 33 அதினால் அவர் செய்ய நினைக்கிறதையும், மந்தாரம் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் அறியப்படுத்தும்.

யோபு 37

1 இதினால் என் இருதயம் தத்தளித்து, தன்னிடத்தைவிட்டுத் தெறிக்கிறது. 2 அவருடைய சத்தத்தினால் உண்டாகிற அதிர்ச்சியையும், அவர் வாயிலிருந்து புறப்படுகிற முழக்கத்தையும் கவனமாய்க் கேளுங்கள். 3 அவர் வானத்தின் கீழெங்கும் அந்தத் தொனியையும், பூமியின் கடையாந்தரங்கள்மேல் அதின் மின்னலையும் செல்லவிடுகிறார். 4 அதற்குப்பின்பு அவர் சத்தமாய் முழங்கி, தம்முடைய மகத்துவத்தின் சத்தத்தைக் குமுறப்பண்ணுகிறார்; அவருடைய சத்தம் கேட்கப்படும்போது அதைத் தவிர்க்கமுடியாது. 5 தேவன் தம்முடைய சத்தத்தை ஆச்சரியமானவிதமாய்க் குமுறப்பண்ணுகிறார்; நாம் கிரகிக்கக்கூடாத பெரியகாரியங்களை அவர் செய்கிறார். 6 அவர் உறைந்த மழையையும், கல்மழையையும், தம்முடைய வல்லமையின் பெருமழையையும் பார்த்து: பூமியின்மேல் பெய்யுங்கள் என்று கட்டளையிடுகிறார். 7 தாம் உண்டாக்கின சகல மனுஷரும் தம்மை அறியும்படிக்கு, அவர் சகல மனுஷருடைய கையையும் முத்திரித்துப்போடுகிறார். 8 அப்பொழுது காட்டுமிருகங்கள் தங்கள் குகைகளில் புகுந்து, தங்கள் கெபிகளில் தங்கும். 9 தெற்கேயிருந்து சூறாவளியும், வடகாற்றினால் குளிரும் வரும். 10 தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது ஜலத்தின் மேற்பரப்பானது உறைந்துபோம். 11 அவர் நீர்த்துளிகளை மேகத்தில் ஏற்றி, மின்னலினால் மேகத்தைச் சிதறப்பண்ணுகிறார். 12 அவர் அவைகளுக்குக் கட்டளையிடுகிற யாவையும், அவைகள் பூச்சக்கரத்தில் நடப்பிக்கும்படி, அவர் அவைகளைத் தம்முடைய ஞான ஆலோசனைகளின்படியே சுற்றித் திரியப்பண்ணுகிறார். 13 ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரப்பண்ணுகிறார். 14 யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும். 15 தேவன் அவைகளைத் திட்டம்பண்ணி, தம்முடைய மேகத்தின் மின்னலைப் பிரகாசிக்கப்பண்ணும் விதத்தை அறிவீரோ? 16 மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும், 17 தென்றலினால் அவர் பூமியை அமையப்பண்ணும்போது, உம்முடைய வஸ்திரங்கள் உஷ்ணமாயிருக்கும் வகையையும் அறிவீரோ? 18 வார்க்கப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவரோடேகூட இருந்து விரித்தீரோ? 19 அவருக்கு நாம் சொல்லத்தக்கதை எங்களுக்குப் போதியும்; அந்தகாரத்தினிமித்தம் முறைதப்பிப் பேசுகிறோம். 20 நான் பேசத்துணிந்தேன் என்று யாதாமொருவன் அவருக்கு முன்பாகச் சொல்லத்தகுமோ? ஒருவன் பேசத்துணிந்தால் அவன் விழுங்கப்பட்டுப்போவானே. 21 இப்போதும் காற்று வீசி ஆகாயமண்டலங்களிலுள்ள மப்பு நீங்கப்பண்ணியிருக்கிற சமயத்தில் வடக்கேயிருந்து பொன்மயமான காந்தி வருகிறபோது, 22 ஆகாயமண்டலத்திலே பிரகாசிக்கிற சூரியனை முதலாய் ஒருவரும் நோக்கிப் பார்க்கக்கூடாதே; தேவனிடத்திலோ பயங்கரமான மகத்துவமுண்டு. 23 சர்வவல்லவரை நாம் கண்டுபிடிக்கக்கூடாது; அவர் வல்லமையிலும் நியாயத்திலும் பெருத்தவர்; அவர் மகாநீதிபரர்; அவர் ஒடுக்கமாட்டார். 24 ஆகையால் மனுஷர் அவருக்குப் பயப்படவேண்டும்; தங்கள் எண்ணத்தில் ஞானிகளாயிருக்கிற எவர்களையும் அவர் மதிக்கமாட்டார் என்றான்.

யோபு 38

1 அப்பொழுது கர்த்தர்: பெருங்காற்றிலிருந்து யோபுக்கு உத்தரவாக: 2 அறிவில்லாத வார்த்தைகளினால் ஆலோசனையை அந்தகாரப்படுத்துகிற இவன் யார்? 3 இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு. 4 நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. 5 அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. 6 அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? 7 அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப் பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. 8 கர்ப்பத்திலிருந்து உதிக்கிறதுபோல் சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்? 9 மேகத்தை அதற்கு வஸ்திரமாகவும், இருளை அதற்குப் புடவையாகவும் நான் உடுத்தினபோதும், 10 நான் அதற்கு எல்லையைக் குறித்து, அதற்குத் தாழ்ப்பாள்களையும் கதவுகளையும் போட்டு: 11 இம்மட்டும் வா, மிஞ்சி வராதே; உன் அலைகளின் பெருமை இங்கே அடங்கக்கடவது என்று நான் சொல்லுகிறபோதும் நீ எங்கேயிருந்தாய்? 12 துஷ்டர்கள் பூமியிலிருந்து உதறிப்போடப்படும்படிக்கு, அதின் கடையாந்தரங்களைப் பிடிக்கும்பொருட்டு, 13 உன் ஜீவகாலத்தில் எப்போதாவது நீ விடியற்காலத்துக்குக் கட்டளைகொடுத்து, அருணோதயத்துக்கு அதின் இடத்தைக் காண்பித்ததுண்டோ? 14 பூமி முத்திரையிடப்பட்ட களிமண்போல் வேறே ரூபங்கொள்ளும்; சகலமும் வஸ்திரம் தரித்திருக்கிறதுபோல் காணப்படும். 15 துன்மார்க்கரின் ஒளி அவர்களை விட்டு எடுபடும்; மேட்டிமையான புயம் முறிக்கப்படும். 16 நீ சமுத்திரத்தின் அடித்தலங்கள்மட்டும் புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ? 17 மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ? 18 நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்லு. 19 வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்துக்கு வழியெங்கே? இருள் குடிகொண்டிருக்கும் ஸ்தானமெங்கே? 20 அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? அதின் வீட்டுக்குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ? 21 நீ அதை அறியும்படி அப்போது பிறந்திருந்தாயோ? உன் நாட்களின் தொகை அவ்வளவு பெரிதோ? 22 உறைந்த மழையின் பண்டசாலைகளுக்குள் நீ பிரவேசித்தாயோ? கல்மழையிருக்கிற பண்டசாலைகளைப் பார்த்தாயோ? 23 ஆபத்து வருங்காலத்திலும், கலகமும் யுத்தமும் வருங்காலத்திலும், பிரயோகிக்கும்படி நான் அவைகளை வைத்துவைத்திருக்கிறேன். 24 வெளிச்சம் பரவப்படுகிறதற்கும், கீழ்க்காற்று பூமியின்மேல் வீசுகிறதற்குமான வழி எங்கே? 25 பாழும் அந்தரவெளியுமான தரையைத் திருப்தியாக்கி, இளம்பூண்டுகளின் முளைகளை முளைக்கப்பண்ணும்படி, 26 பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி, 27 வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்? 28 மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்? 29 உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப் பெற்றவர் யார்? 30 ஜலம் கல்லுருவங்கொண்டு மறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாய் உறைந்திருக்கிறதே. 31 அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்த சம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ? 32 இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ? 33 வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ? 34 ஏராளமான தண்ணீர் உன்மேல் சொரியவேணும் என்று உன் சத்தத்தை மேகங்கள்பரியந்தம் உயர்த்துவாயோ? 35 நீ மின்னல்களை அழைத்தனுப்பி, அவைகள் புறப்பட்டுவந்து: இதோ, இங்கேயிருக்கிறோம் என்று உனக்குச் சொல்லும்படி செய்வாயோ? 36 அந்தக்கரணங்களில் ஞானத்தை வைத்தவர் யார்? உள்ளத்தில் புத்தியைக் கொடுத்தவர் யார்? 37 ஞானத்தினாலே கொடிமாசிகளை எண்ணுபவர் யார்? 38 தூளானது ஏகபாளமாகவும், மண்கட்டிகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளவும், ஆகாயத்துருத்திகளிலுள்ள தண்ணீரைப் பொழியப்பண்ணுகிறவர் யார்? 39 நீ சிங்கத்துக்கு இரையை வேட்டையாடி, 40 சிங்கக்குட்டிகள் தாங்கள் தங்கும் இடங்களிலே கிடந்து கெபியிலே பதிவிருக்கிறபோது, அவைகளின் ஆசையைத் திருப்தியாக்குவாயோ? 41 காக்கைக்குஞ்சுகள் தேவனை நோக்கிக் கூப்பிட்டு, ஆகாரமில்லாமல் பறந்து அலைகிறபோது, அவைகளுக்கு இரையைச் சவதரித்துக் கொடுக்கிறவர் யார்?

யோபு 39

1 வரையாடுகள் ஈனுங்காலத்தை அறிவாயோ? மான்கள் குட்டிபோடுகிறதைக் கவனித்தாயோ? 2 அவைகள் சினைப்பட்டிருந்து வருகிற மாதங்களை நீ எண்ணி, அவைகள் ஈனுங்காலத்தை அறிவாயோ? 3 அவைகள் நொந்து குனிந்து தங்கள் குட்டிகளைப் போட்டு, தங்கள் வேதனைகளை நீக்கிவிடும். 4 அவைகளின் குட்டிகள் பலத்து, வனத்திலே வளர்ந்து, அவைகளண்டைக்குத் திரும்ப வராமற்போய்விடும். 5 காட்டுக்கழுதையைத் தன்னிச்சையாய்த் திரியவிட்டவர் யார்? அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்? 6 அதற்கு நான் வனாந்தரத்தை வீடாகவும், உவர்நிலத்தை வாசஸ்தலமாகவும் கொடுத்தேன். 7 அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்பண்ணி, ஓட்டுகிறவனுடைய கூக்குரலை மதிக்கிறதில்லை. 8 அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து, சகலவிதப் பச்சைப்பூண்டுகளையும் தேடித்திரியும். 9 காண்டாமிருகம் உன்னிடத்தில் சேவிக்கச் சம்மதிக்குமோ? அது உன் முன்னணைக்கு முன்பாக இராத்தங்குமோ? 10 படைச்சால்களை உழ நீ காண்டாமிருகத்தைக் கயிறுபோட்டு ஏரிலே பூட்டுவாயோ? அது உனக்கு இசைந்து பரம்படிக்குமோ? 11 அது அதிக பெலமுள்ளதென்று நீ நம்பி அதினிடத்தில் வேலை வாங்குவாயோ? 12 உன் தானியத்தை அது உன் வீட்டில் கொண்டுவந்து, உன் களஞ்சியத்தில் சேர்க்கும் என்று நீ அதை நம்புவாயோ? 13 தீக்குருவிகள் தங்கள் செட்டைகளை அசைவாட்டி ஓடுகிற ஓட்டம், நாரை தன் செட்டைகளாலும் இறகுகளாலும் பறக்கிறதற்குச் சமானமல்லவோ? 14 அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டு, அவைகளை மணலிலே அனலுறைக்க வைத்துவிட்டுப்போய், 15 காலால் மிதிபட்டு உடைந்துபோம் என்பதையும், காட்டுமிருகங்கள் அவைகளை மிதித்துவிடும் என்பதையும் நினைக்கிறதில்லை. 16 அது தன் குஞ்சுகள் தன்னுடையதல்லாததுபோல அவைகளைக் காக்காத கடினகுணமுள்ளதாயிருக்கும்; அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாதபடியினால் அது பட்ட வருத்தம் விருதாவாம். 17 தேவன் அதற்குப் புத்தியைக் கொடாமல், ஞானத்தை விலக்கிவைத்தார். 18 அது செட்டை விரித்து எழும்பும்போது, குதிரையையும் அதின்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம்பண்ணும். 19 குதிரைக்கு நீ வீரியத்தைக் கொடுத்தாயோ? அதின் தொண்டையில் குமுறலை வைத்தாயோ? 20 ஒரு வெட்டுக்கிளியை மிரட்டுகிறதுபோல அதை மிரட்டுவாயோ? அதினுடைய நாசியின் செருக்கு பயங்கரமாயிருக்கிறது. 21 அது தரையிலே தாளடித்து, தன் பலத்தில் களித்து, ஆயுதங்களைத் தரித்தவருக்கு எதிராகப் புறப்படும். 22 அது கலங்காமலும், பட்டயத்துக்குப் பின்வாங்காமலுமிருந்து, பயப்படுதலை அலட்சியம்பண்ணும். 23 அம்பறாத்தூணியும், மின்னுகிற ஈட்டியும், கேடகமும் அதின்மேல் கலகலக்கும்போது, 24 கர்வமும் மூர்க்கமுங்கொண்டு தரையை விழுங்கிவிடுகிறதுபோல் அநுமானித்து, எக்காளத்தின் தொனிக்கு அஞ்சாமல் பாயும். 25 எக்காளம் தொனிக்கும்போது அது நிகியென்று கனைக்கும்; யுத்தத்தையும், படைத்தலைவரின் ஆர்ப்பரிப்பையும், சேனைகளின் ஆரவாரத்தையும் தூரத்திலிருந்து மோப்பம் பிடிக்கும். 26 உன் புத்தியினாலே ராஜாளி பறந்து, தெற்குக்கு எதிராகத் தன் செட்டைகளை விரிக்கிறதோ? 27 உன் கற்பனையினாலே கழுகு உயரப் பறந்து, உயரத்திலே தன் கூட்டைக் கட்டுமோ? 28 அது கன்மலையிலும், கன்மலையின் சிகரத்திலும், அரணான ஸ்தலத்திலும் தங்கி வாசம்பண்ணும். 29 அங்கேயிருந்து இரையை நோக்கும்; அதின் கண்கள் தூரத்திலிருந்து அதைப் பார்க்கும். 30 அதின் குஞ்சுகள் இரத்தத்தை உறிஞ்சும்; பிணம் எங்கேயோ அங்கே கழுகு சேரும் என்றார்.

யோபு 40

1 பின்னும் கர்த்தர் யோபுக்கு உத்தரமாக: 2 சர்வவல்லவரோடே வழக்காடி அவருக்குப் புத்தி படிப்பிக்கிறவன் யார்? தேவன்பேரில் குற்றம் பிடிக்கிறவன் இவைகளுக்கு உத்தரவு சொல்லக்கடவன் என்றார். 3 அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: 4 இதோ, நான் நீசன்; நான் உமக்கு என்ன மறுஉத்தரவு சொல்லுவேன்; என் கையினால் என் வாயைப் பொத்திக்கொள்ளுகிறேன். 5 நான் இரண்டொருதரம் பேசினேன்; இனி நான் பிரதியுத்தரம் கொடாமலும் பேசாமலும் இருப்பேன் என்றான். 6 அப்பொழுது கர்த்தர் பெருங்காற்றில் இருந்து யோபுக்கு உத்தரவு அருளினார். 7 இப்போதும் புருஷனைப்போல நீ அரைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு. 8 நீ என் நியாயத்தை அவமாக்குவாயோ? நீ உன்னை நீதிமானாக்கிக்கொள்ளும்படிக்கு என்மேல் குற்றஞ்சுமத்துவாயோ? 9 தேவனுடைய புயத்தைப்போல் உனக்குப் புயமுண்டோ? அவரைப்போல் இடிமுழக்கமாய்ச் சத்தமிடக்கூடுமோ? 10 இப்போதும் நீ முக்கியத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, மகிமையையும் கனத்தையும் தரித்துக்கொண்டு, 11 நீ உன் கோபத்தின் உக்கிரத்தை வீசி, அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்துத் தாழ்த்திவிட்டு, 12 பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து, அவனைப் பணியப்பண்ணி, துன்மார்க்கரை அவர்களிருக்கிற ஸ்தலத்திலே மிதித்துவிடு. 13 நீ அவர்களை ஏகமாய்ப் புழுதியிலே புதைத்து, அவர்கள் முகங்களை அந்தரங்கத்திலே கட்டிப்போடு. 14 அப்பொழுது உன் வலதுகை உனக்கு இரட்சிப்பு உண்டுபண்ணும் என்று சொல்லி, நான் உன்னைப் புகழுவேன். 15 இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும். 16 இதோ, அதினுடைய பெலன் அதின் இடுப்பிலும், அதின் வீரியம் அதின் வயிற்றின் நரம்புகளிலும் இருக்கிறது. 17 அது தன் வாலைக் கேதுருமரத்தைப்போல் நீட்டுகிறது; அதின் இடுப்பு நரம்புகள் பின்னிக்கொண்டிருக்கிறது. 18 அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், அதின் அஸ்திகள் இருப்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது. 19 அது தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை, அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார். 20 காட்டுமிருகங்கள் யாவும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும். 21 அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், உளையிலும் படுத்துக்கொள்ளும். 22 தழைகளின் நிழல் அதைக் கவிந்து, நதியின் அலரிகள் அதைச் சூழ்ந்துகொள்ளும். 23 இதோ, நதி புரண்டுவந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியத்தனை தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும். 24 அதின் கண்கள் பார்த்திருக்க அதை யார் பிடிக்கக்கூடும்? மூக்கணாங்கயிறுபோட அதின் மூக்கை யார் குத்தக்கூடும்?

யோபு 41

1 லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ? 2 அதின் மூக்கை நார்க்கயிறுபோட்டுக் கட்டக்கூடுமோ? குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தக்கூடுமோ? 3 அது உன்னைப் பார்த்து அநேக விண்ணப்பஞ் செய்யுமோ? உன்னை நோக்கி இச்சகவார்த்தைகளைச் சொல்லுமோ? 4 அது உன்னோடே உடன்படிக்கைபண்ணுமோ? அதைச் சதாகாலமும் அடிமைகொள்வாயோ? 5 ஒரு குருவியோடே விளையாடுகிறதுபோல், நீ அதனோடே விளையாடி, அதை நீ உன் பெண்மக்களண்டையிலே கட்டிவைப்பாயோ? 6 கூட்டாளிகள் அதைப் பிடிக்கப் பிரயத்தனப்பட்டு, அதை வியாபாரிகளுக்குப் பங்கிடுவார்களோ? 7 நீ அதின் தோலை அநேக அம்புகளினாலும், அதின் தலையை எறிவல்லையங்களினாலும் எறிவாயோ? 8 அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய். 9 இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ? 10 அதை எழுப்பத்தக்க தைரியவான் இல்லாதிருக்க, எனக்கு முன்பாக நிற்பவன் யார்? 11 தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள். 12 அதின் அங்கங்களும், அதின் வீரியமும், அதின் உடல் இசைவின் நேர்த்தியும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன். 13 அது மூடியிருக்கிற அதின் போர்வையைக் கிளப்பக்கூடியவன் யார்? அதின் இரண்டு தாடைகளின் நடுவே கடிவாளம் போடத்தக்கவன் யார்? 14 அதின் முகத்தின் கதவைத் திறக்கக்கூடியவன் யார்? சுற்றிலுமிருக்கிற அதின் பற்கள் பயங்கரமானவைகள். 15 முத்திரைப் பதிப்புப்போல அழுத்தங்கொண்டு அடர்த்தியாயிருக்கிற அதின் பரிசைகளின் அரணிப்பு மகா சிறப்பாயிருக்கிறது. 16 அவைகள் நடுவே காற்றும் புகமாட்டாத நெருக்கமாய் அவைகள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருக்கிறது. 17 அவைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு இணைபிரியாமல் பிடித்துக்கொண்டிருக்கிறது. 18 அது தும்முகையில் ஒளி வீசும், அதின் கண்கள் அருணோதயத்தின் புருவங்களைப்போல் இருக்கிறது. 19 அதின் வாயிலிருந்து எரிகிற பந்தங்கள் புறப்பட்டு, அக்கினிப்பொறிகள் பறக்கும். 20 கொதிக்கிற சட்டியிலும் கொப்பரையிலும் இருந்து புறப்படுகிறதுபோல, அதின் நாசிகளிலிருந்து புகை புறப்படும். 21 அதின் சுவாசம் கரிகளைக் கொளுத்தும், அதின் வாயிலிருந்து ஜுவாலை புறப்படும். 22 அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; பயங்கரம் அதற்குமுன் கூத்தாடும். 23 அதின் உடற்கூறுகள், அசையாத கெட்டியாய் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும். 24 அதின் நெஞ்சு கல்லைப்போலவும், ஏந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும். 25 அது எழும்பும்போது பலசாலிகள் அஞ்சி பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள். 26 அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது. 27 அது இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உளுத்த மரமாகவும் எண்ணும். 28 அம்பு அதைத் துரத்தாது; கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும். 29 அது பெருந்தடிகளைத் தாளடிகளாக எண்ணி, ஈட்டியின் அசைவை இகழும். 30 அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோலக் கருக்கான அவைகளின்மேலும் ஓடும். 31 அது ஆழத்தை உலைப்பானையைப்போல் பொங்கப்பண்ணி, கடலைத் தைலம்போலக் கலக்கிவிடும். 32 அது தனக்குப் பின்னாகப் பாதையைத் துலங்கப்பண்ணும்; ஆழமானது வெளுப்பான நரையைப்போல் விளங்கும். 33 பூமியின்மேல் அதற்கு ஒப்பானது ஒன்றுமில்லை; அது நிர்ப்பயமாயிருக்க உண்டுபண்ணப்பட்டது. 34 அது மேட்டிமையானதையெல்லாம் அற்பமாய் எண்ணுகிறது; அது அகங்காரமுள்ள ஜீவன்களுக்கெல்லாம் ராஜாவாயிருக்கிறது என்றார்.

யோபு 42

1 அப்பொழுது யோபு கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: 2 தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். 3 அறிவில்லாமல் ஆலோசனையை மறைக்கிற இவன் யார்? ஆகையால் நான் எனக்குத் தெரியாததையும், என் புத்திக்கு எட்டாததையும், நான் அறியாததையும் அலப்பினேன் என்கிறேன். 4 நீர் எனக்குச் செவிகொடும், அப்பொழுது நான் பேசுவேன்; நான் உம்மைக் கேள்விகேட்பேன், நீர் எனக்கு உத்தரவு சொல்லும். 5 என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது. 6 ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான். 7 கர்த்தர் இந்த வார்த்தைகளை யோபோடே பேசினபின், கர்த்தர் தேமானியனான எலிப்பாசை நோக்கி: உன்மேலும் உன் இரண்டு சிநேகிதர்மேலும் எனக்குக் கோபம் மூளுகிறது; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை. 8 ஆதலால் நீங்கள் ஏழு காளைகளையும், ஏழு ஆட்டுக்கடாக்களையும் தெரிந்துகொண்டு, என் தாசனாகிய யோபினிடத்தில் போய், உங்களுக்காகச் சர்வாங்க தகனபலிகளை இடுங்கள்; என் தாசனாகிய யோபும் உங்களுக்காக வேண்டுதல் செய்வான்; நான் அவன் முகத்தைப் பார்த்து, உங்களை உங்கள் புத்தியீனத்துக்குத் தக்கதாக நடத்தாதிருப்பேன்; என் தாசனாகிய யோபு பேசினதுபோல், நீங்கள் என்னைக்குறித்து நிதானமாய்ப் பேசவில்லை என்றார். 9 அப்பொழுது தேமானியனான எலிப்பாசும் சூகியனான பில்தாதும் நாகமாத்தியனான சோப்பாரும் போய், கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடியே செய்தார்கள்; அப்பொழுது கர்த்தர் யோபின் முகத்தைப் பார்த்தார். 10 யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார். 11 அப்பொழுது அவனுடைய எல்லாச் சகோதரரும் சகோதரிகளும், முன் அவனுக்கு அறிமுகமான அனைவரும் அவனிடத்தில் வந்து, அவன் வீட்டிலே அவனோடே போஜனம்பண்ணி, கர்த்தர் அவன்மேல் வரப்பண்ணின சகல தீங்கினிமித்தம் அவனுக்காக அங்கலாய்த்து, அவனுக்கு ஆறுதல் சொல்லி, அவரவர் ஒவ்வொரு தங்கக்காசையும், அவரவர் ஒவ்வொரு பொன் ஆபரணத்தையும் அவனுக்குக் கொடுத்தார்கள். 12 கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்; பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின. 13 ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள். 14 மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பேரிட்டான். 15 தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் சௌந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான். 16 இதற்குப்பின்பு யோபு நூற்றுநாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான். 17 யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான்.

சங்கீதம் 1

1 துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், 2 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 3 அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். 4 துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள். 5 ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை. 6 கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்.

சங்கீதம் 2

1 ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்? 2 கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி: 3 அவர்கள் கட்டுகளை அறுத்து, அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள். 4 பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார். 5 அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார். 6 நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார். 7 தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன்; 8 என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; 9 இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார். 10 இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள். 11 பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள். 12 குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

சங்கீதம் 3

1 கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர். 2 தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா.) 3 ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர். 4 நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.) 5 நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார். 6 எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன். 7 கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர். 8 இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.)

சங்கீதம் 4

1 என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும். 2 மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா.) 3 பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார். 4 நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.) 5 நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள். 6 எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். 7 அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர். 8 சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.

சங்கீதம் 5

1 கர்த்தாவே, என் வார்த்தைகளுக்குச் செவிகொடும், என் தியானத்தைக் கவனியும். 2 நான் உம்மிடத்தில் விண்ணப்பம்பண்ணுவேன்; என் ராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும். 3 கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். 4 நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை. 5 வீம்புக்காரர் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர் யாவரையும் வெறுக்கிறீர். 6 பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; இரத்தப்பிரியனையும் சூதுள்ள மனுஷனையும் கர்த்தர் அருவருக்கிறார். 7 நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன். 8 கர்த்தாவே, என் சத்துருக்களினிமித்தம் என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்குமுன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும். 9 அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி; தங்கள் நாவினால் இச்சகம் பேசுகிறார்கள். 10 தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீரும்; அவர்கள் தங்கள் ஆலோசனைகளாலேயே விழும்படி செய்யும்; அவர்கள் துரோகங்களினுடைய திரட்சியினிமித்தம் அவர்களைத் தள்ளிவிடும்; உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்களே. 11 உம்மை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் உம்மில் களிகூருவார்களாக. 12 கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர்.

சங்கீதம் 6

1 கர்த்தாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும், உம்முடைய உக்கிரத்திலே என்னைத் தண்டியாதேயும். 2 என்மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே, நான் பெலனற்றுப்போனேன்; என்னைக் குணமாக்கும் கர்த்தாவே, என் எலும்புகள் நடுங்குகிறது. 3 என் ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; கர்த்தாவே, எதுவரைக்கும் இரங்காதிருப்பீர். 4 திரும்பும் கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினிமித்தம் என்னை இரட்சியும். 5 மரணத்தில் உம்மை நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? 6 என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன். 7 துயரத்தினால் என் கண் குழி விழுந்துபோயிற்று, என் சத்துருக்கள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போயிற்று. 8 அக்கிரமக்காரரே, நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; கர்த்தர் என் அழுகையின் சத்தத்தைக் கேட்டார். 9 கர்த்தர் என் விண்ணப்பத்தைக் கேட்டார்; கர்த்தர் என் ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார். 10 என் பகைஞர் எல்லாரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பிச் சடிதியிலே வெட்கப்படுவார்கள்.

சங்கீதம் 7

1 என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் எல்லாருக்கும் என்னை விலக்கி இரட்சியும். 2 சத்துரு சிங்கம்போல் என் ஆத்துமாவைப் பிடித்துக்கொண்டுபோய், விடுவிக்கிறவன் இல்லாமையால், அதைப்பீறாதபடிக்கு என்னைத் தப்புவியும். 3 என் தேவனாகிய கர்த்தாவே, நான் இதைச் செய்ததும், என் கைகளில் நியாயக்கேடிருக்கிறதும், 4 என்னோடே சமாதானமாயிருந்தவனுக்கு நான் தீமைசெய்ததும், காரணமில்லாமல் எனக்குச் சத்துருவானவனை நான் கொள்ளையிட்டதும் உண்டானால், 5 பகைஞன் என் ஆத்துமாவைத் தொடர்ந்துபிடித்து, என் பிராணனைத் தரையிலே தள்ளி மிதித்து, என் மகிமையைத் தூளிலே தாழ்த்தக்கடவன். (சேலா.) 6 கர்த்தாவே, நீர் உம்முடைய கோபத்தில் எழுந்திருந்து, என் சத்துருக்களுடைய மூர்க்கங்களினிமித்தம் உம்மை உயர்த்தி, எனக்காக விழித்துக்கொள்ளும்; நியாயத்தீர்ப்பை நியமித்திருக்கிறீரே. 7 ஜனக்கூட்டம் உம்மைச் சூழ்ந்துகொள்ளும்; அவர்களுக்காகத் திரும்பவும் உன்னதத்திற்கு எழுந்தருளும். 8 கர்த்தர் ஜனங்களுக்கு நியாயஞ் செய்வார்; கர்த்தாவே, என் நீதியின்படியும் என்னிலுள்ள உண்மையின்படியும் எனக்கு நியாயஞ்செய்யும். 9 துன்மார்க்கனுடைய பொல்லாங்கை ஒழியப்பண்ணும்; நீதிமானை ஸ்திரப்படுத்துவீராக; நீதியுள்ளவராயிருக்கிற தேவரீர் இருதயங்களையும் உள்ளிந்திரியங்களையும் சோதித்தறிகிறவர். 10 செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என் கேடகம் இருக்கிறது. 11 தேவன் நீதியுள்ள நியாயாதிபதி; அவர் நாள்தோறும் பாவியின்மேல் சினங்கொள்ளுகிற தேவன். 12 அவன் மனந்திரும்பாவிட்டால் அவர் தம்முடைய பட்டயத்தைக் கருக்காக்குவார்; அவர் தம்முடைய வில்லை நாணேற்றி, அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். 13 அவனுக்கு மரணாயுதங்களை ஆயத்தம்பண்ணினார்; தம்முடைய அம்புகளை அக்கினி அம்புகளாக்கினார். 14 இதோ, அவன் அக்கிரமத்தைப் பெறக் கர்ப்பவேதனைப்படுகிறான்; தீவினையைக் கர்ப்பந்தரித்து, பொய்யைப் பெறுகிறான். 15 குழியை வெட்டி, அதை ஆழமாக்கினான்; தான் வெட்டின குழியில் தானே விழுந்தான். 16 அவன் தீவினை அவன் சிரசின்மேல் திரும்பும், அவன் கொடுமை அவன் உச்சந்தலையின்மேல் இறங்கும். 17 நான் கர்த்தரை அவருடைய நீதியின்படி துதித்து, உன்னதமான கர்த்தருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவேன்.

சங்கீதம் 8

1 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது! உம்முடைய மகத்துவத்தை வானங்களுக்கு மேலாக வைத்தீர். 2 பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர். 3 உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, 4 மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். 5 நீர் அவனைத் தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். 6 உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் நீர் அவனுக்கு ஆளுகை தந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். 7 ஆடுமாடுகளெல்லாவற்றையும், காட்டுமிருகங்களையும், 8 ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். 9 எங்கள் ஆண்டவராகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் பூமியெங்கும் எவ்வளவு மேன்மையுள்ளதாயிருக்கிறது!

சங்கீதம் 9

1 கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன். 2 உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்; உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவேன். 3 என் சத்துருக்கள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறுண்டு அழிந்துபோவார்கள். 4 நீர் என் நியாயத்தையும் என் வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாய் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறீர். 5 ஜாதிகளைக் கடிந்துகொண்டு, துன்மார்க்கரை அழித்து, அவர்கள் நாமத்தை என்றென்றைக்கும் இல்லாதபடி குலைத்துப்போட்டீர். 6 சத்துருக்கள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; அவர்கள் பட்டணங்களை நிர்மூலமாக்கினீர்; அவர்கள் பேரும் அவர்களோடேகூட ஒழிந்துபோயிற்று. 7 கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம்பண்ணினார். 8 அவர் பூச்சக்கரத்தை நீதியாய் நியாயந்தீர்த்து, சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதிசெய்வார். 9 சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர். 10 கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள். 11 சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள். 12 இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவைகளை நினைக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவார். 13 மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படிக்கு, 14 தேவரீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும். 15 ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்; அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களுடைய காலே அகப்பட்டுக்கொண்டது. 16 கர்த்தர் தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன் கைகளின் செய்கையிலே சிக்கிக்கொண்டான். (இகாயோன், சேலா.) 17 துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள். 18 எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை. 19 எழுந்தருளும் கர்த்தாவே, மனுஷன் பெலன்கொள்ளாதபடி செய்யும்; ஜாதிகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படக்கடவர்கள். 20 ஜாதிகள் தங்களை மனுஷரென்று அறியும்படிக்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், கர்த்தாவே. (சேலா.)

சங்கீதம் 10

1 கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்? 2 துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள். 3 துன்மார்க்கன் தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் பெருமைபாராட்டி, பொருளை அபகரித்துத் தன்னைத்தான் போற்றி, கர்த்தரை அசட்டைபண்ணுகிறான். 4 துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே. 5 அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கிறது; தன் எதிராளிகளெல்லார்மேலும் சீறுகிறான். 6 நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லையென்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். 7 அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு. 8 கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கிறது. 9 தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, ஏழையைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான். 10 திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக்கிடக்கிறான். 11 தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான். 12 கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறவாதேயும். 13 துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்? 14 அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே. 15 துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்; அவனுடைய ஆகாமியம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும். 16 கர்த்தர் சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறார்; புறஜாதியார் அவருடைய தேசத்திலிருந்து அழிந்துபோவார்கள். 17 கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர். 18 மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவிகளைச் சாய்த்துக் கேட்டருளுவீர்.

சங்கீதம் 11

1 நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி: பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள். 2 இதோ, துன்மார்க்கர் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும்படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள். 3 அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே, நீதிமான் என்னசெய்வான்? 4 கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது. 5 கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது. 6 துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்; அக்கினியும் கந்தகமும் கடுங்கோடைக் கொந்தளிப்பும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு. 7 கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.

சங்கீதம் 12

1 இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள். 2 அவரவர் தங்கள் தோழரோடே பொய்பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள். 3 இச்சகம்பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவார். 4 அவர்கள்: எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையது; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள். 5 ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 6 கர்த்தருடைய சொற்கள் மண்குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது. 7 கர்த்தாவே, நீர் அவர்களைக் காப்பாற்றி, அவர்களை என்றைக்கும் இந்தச் சந்ததிக்கு விலக்கிக் காத்துக்கொள்ளுவீர். 8 மனுபுத்திரரில் சண்டாளர் உயர்ந்திருக்கும்போது, துன்மார்க்கர் எங்கும் சுற்றித்திரிவார்கள்.

சங்கீதம் 13

1 கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்? 2 என் இருதயத்திலே சஞ்சலத்தை நித்தம் நித்தம் வைத்து, எதுவரைக்கும் என் ஆத்துமாவிலே ஆலோசனை பண்ணிக்கொண்டிருப்பேன்? எதுவரைக்கும் என் சத்துரு என்மேல் தன்னை உயர்த்துவான்? 3 என் தேவனாகிய கர்த்தாவே, நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும். 4 அவனை மேற்கொண்டேன் என்று என் பகைஞன் சொல்லாதபடிக்கும், நான் தள்ளாடுகிறதினால் என் சத்துருக்கள் களிகூராதபடிக்கும் இப்படிச் செய்தருளும். 5 நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும். 6 கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.

சங்கீதம் 14

1 தேவன் இல்லை என்று மதிகெட்டவன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான். அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான கிரியைகளைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. 2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். 3 எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. 4 அக்கிரமக்காரரில் ஒருவனுக்கும் அறிவுஇல்லையோ? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல, என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறதில்லை. 5 அங்கே அவர்கள் மிகவும் பயந்தார்கள்; தேவன் நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறாரே. 6 சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமாயிருக்கிறார் என்று சொல்லி, நீங்கள் அவனுடைய ஆலோசனையை அலட்சியம்பண்ணினீர்கள். 7 சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

சங்கீதம் 15

1 கர்த்தாவே, யார் உம்முடைய கூடாரத்தில் தங்குவான்? யார் உம்முடைய பரிசுத்த பர்வதத்தில் வாசம்பண்ணுவான்? 2 உத்தமனாய் நடந்து, நீதியை நடப்பித்து, மனதாரச் சத்தியத்தைப் பேசுகிறவன்தானே. 3 அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான். 4 ஆகாதவன் அவன் பார்வைக்குத் தீழ்ப்பானவன்; கர்த்தருக்குப் பயந்தவர்களையோ கனம்பண்ணுகிறான்; ஆணையிட்டதில் தனக்கு நஷ்டம் வந்தாலும் தவறாதிருக்கிறான். 5 தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.

சங்கீதம் 16

1 தேவனே, என்னைக் காப்பாற்றும், உம்மை நம்பியிருக்கிறேன். 2 என் நெஞ்சமே, நீ கர்த்தரை நோக்கி: தேவரீர் என் ஆண்டவராயிருக்கிறீர், என் செல்வம் உமக்கு வேண்டியதாயிராமல்; 3 பூமியிலுள்ள பரிசுத்தவான்களுக்கும், நான் என் முழுப் பிரியத்தையும் வைத்திருக்கிற மகாத்துமாக்களுக்கும், அது வேண்டியதாயிருக்கிறது என்று சொன்னாய். 4 அந்நிய தேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன். 5 கர்த்தர் என் சுதந்தரமும் என் பாத்திரத்தின் பங்குமானவர்; என் சுதந்தரத்தை தேவரீர் காப்பாற்றுகிறீர். 6 நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு. 7 எனக்கு ஆலோசனை தந்த கர்த்தரைத் துதிப்பேன்; இராக்காலங்களிலும் என் உள்ளிந்திரியங்கள் என்னை உணர்த்தும். 8 கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்; அவர் என் வலதுபாரிசத்தில் இருக்கிறபடியால் நான் அசைக்கப்படுவதில்லை. 9 ஆகையால் என் இருதயம் பூரித்தது, என் மகிமை களிகூர்ந்தது; என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும். 10 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர். 11 ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.

சங்கீதம் 17

1 கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும். 2 உம்முடைய சந்நிதியிலிருந்து என் நியாயம் வெளிப்படுவதாக; உம்முடைய கண்கள் நியாயமானவைகளை நோக்குவதாக. 3 நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம்பண்ணினேன். 4 மனுஷரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக் கொள்ளுகிறேன். 5 என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும். 6 தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், எனக்குச் செவிகொடுக்கிறீர்; என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என் வார்த்தையைக் கேட்டருளும். 7 உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும். 8 கண்மணியைப்போல என்னைக் காத்தருளும். 9 என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும். 10 அவர்கள் நிணந்துன்னியிருக்கிறார்கள், தங்கள் வாயினால் வீம்பு பேசுகிறார்கள். 11 நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை நோக்கிக்கொண்டிருக்கிறது. 12 பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்துக்கும், மறைவிடங்களில் பதிவிருக்கிற பாலசிங்கத்துக்கும் ஒப்பாயிருக்கிறார்கள். 13 கர்த்தாவே, நீர் எழுந்திருந்து, அவனுக்கு எதிரிட்டு, அவனை மடங்கடியும்; கர்த்தாவே, என் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு உம்முடைய பட்டயத்தினால் தப்புவியும். 14 மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலகமக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள். 15 நானோ நீதியில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.

சங்கீதம் 18

1 என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். 2 கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். 3 துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன். 4 மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது. 5 பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது. 6 எனக்கு உண்டான நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, என் தேவனை நோக்கி அபயமிட்டேன்; தமது ஆலயத்திலிருந்து என் சத்தத்தைக் கேட்டார், என் கூப்பிடுதல் அவர் சந்நிதியில் போய், அவர் செவிகளில் ஏறிற்று. 7 அப்பொழுது பூமி அசைந்து அதிர்ந்தது, அவர் கோபங்கொண்டபடியால் பர்வதங்களின் அஸ்திபாரங்கள் குலுங்கி அசைந்தது. 8 அவர் நாசியிலிருந்து புகை எழும்பிற்று, அவர் வாயிலிருந்து பட்சிக்கிற அக்கினி புறப்பட்டது; அதனால் தழல் மூண்டது. 9 வானங்களைத் தாழ்த்தி இறங்கினார்; அவர் பாதங்களின்கீழ் காரிருள் இருந்தது. 10 கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக் கொண்டு பறந்தார். 11 இருளைத் தமக்கு மறைவிடமாக்கினார்; கரும்புனல்களையும், ஆகாயத்துக் கார்மேகங்களையும் தம்மைச் சூழக் கூடாரமாக்கினார். 12 அவருடைய சந்நிதிப் பிரகாசத்தினால் அவருடைய மேகங்கள் பறந்து விலகிற்று, கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது. 13 கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல்மழையும் நெருப்புத்தழலும் விழுந்தது. 14 தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார். 15 அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் மதகுகள் திறவுண்டு, பூதலத்தின் அஸ்திபாரங்கள் காணப்பட்டது. 16 உயரத்திலிருந்து அவர் கை நீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருக்கிற என்னைத் தூக்கிவிட்டார். 17 என்னிலும் அதிக பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார். 18 என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார். 19 அவர் விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்மேல் பிரியமாயிருந்தபடியால், என்னைத் தப்புவித்தார். 20 கர்த்தர் என் நீதிக்குத்தக்கதாக எனக்குப் பதிலளித்தார்; என் கைகளின் சுத்தத்திற்குத்தக்கதாக எனக்குச் சரிக்கட்டினார். 21 கர்த்தருடைய வழிகளைக் கைக்கொண்டுவந்தேன்; நான் என் தேவனுக்குத் துரோகம்பண்ணினதில்லை. 22 அவருடைய நியாயங்களையெல்லாம் எனக்கு முன்பாக நிறுத்தினேன்; அவருடைய பிரமாணங்களை நான் தள்ளிப்போடவில்லை. 23 அவர் முன்பாக நான் மனவுண்மையாயிருந்து, என் துர்க்குணத்துக்கு என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். 24 ஆகையால் கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார். 25 தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்; 26 புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடுள்ளவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர். 27 தேவரீர் சிறுமைப்பட்ட ஜனத்தை இரட்சிப்பீர்; மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர். 28 தேவரீர் என் விளக்கை ஏற்றுவீர்; என் தேவனாகிய கர்த்தர் என் இருளை வெளிச்சமாக்குவார். 29 உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன். 30 தேவனுடைய வழி உத்தமமானது; கர்த்தருடைய வசனம் புடமிடப்பட்டது; தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார். 31 கர்த்தரையல்லாமல் தேவன் யார்? நம்முடைய தேவனையன்றிக் கன்மலையும் யார்? 32 என்னைப் பலத்தால் இடைகட்டி, என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் தேவனே. 33 அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப்போலாக்கி, என்னுடைய உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார். 34 வெண்கல வில்லும் என் புயங்களால் வளையும்படி, என் கைகளை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார். 35 உம்முடைய இரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய வலதுகரம் என்னைத் தாங்குகிறது; உம்முடைய காருணியம் என்னைப் பெரியவனாக்கும். 36 என் கால்கள் வழுவாதபடிக்கு, நான் நடக்கிற வழியை அகலமாக்கினீர். 37 என் சத்துருக்களைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடிப்பேன்; அவர்களை நிர்மூலமாக்கும்வரைக்கும் திரும்பேன். 38 அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு, என் பாதங்களின்கீழ் விழத்தக்கதாக அவர்களை வெட்டினேன். 39 யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என் கீழ் மடங்கப்பண்ணினீர். 40 நான் என் பகைஞரைச் சங்கரிக்கும்படியாக, என் சத்துருக்களின் பிடரியை எனக்கு ஒப்புக்கொடுத்தீர். 41 அவர்கள் கூப்பிடுகிறார்கள், அவர்களை இரட்சிப்பார் ஒருவருமில்லை; கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்களுக்கு அவர் உத்தரவு கொடுக்கிறதில்லை. 42 நான் அவர்களைக் காற்றுமுகத்திலே பறக்கிற தூளாக இடித்து, தெருக்களிலுள்ள சேற்றைப்போல் அவர்களை எறிந்துபோடுகிறேன். 43 ஜனங்களின் சண்டைகளுக்கு நீர் என்னைத் தப்புவித்து, ஜாதிகளுக்கு என்னைத் தலைவனாக்குகிறீர்; நான் அறியாத ஜனங்கள் என்னைச் சேவிக்கிறார்கள். 44 அவர்கள் என் சத்தத்தைக் கேட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள்; அந்நியரும் எனக்கு இச்சகம்பேசி அடங்குகிறார்கள். 45 அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள். 46 கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் துதிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக. 47 அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர். 48 அவரே என் சத்துருக்களுக்கு என்னை விலக்கி விடுவிக்கிறவர்; எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள்மேல் என்னை நீர் உயர்த்தி, கொடுமையான மனுஷனுக்கு என்னைத் தப்புவிக்கிறீர். 49 இதினிமித்தம் கர்த்தாவே, ஜாதிகளுக்குள்ளே உம்மைத் துதித்து, உம்முடைய நாமத்திற்குச் சங்கீதம் பாடுவேன். 50 தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.

சங்கீதம் 19

1 வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது. 2 பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது. 3 அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை. 4 ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறது; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை ஸ்தாபித்தார். 5 அது தன் மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போலிருந்து, பராக்கிரமசாலியைப்போல் தன் பாதையில் ஓட மகிழ்ச்சியாயிருக்கிறது. 6 அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை. 7 கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது. 8 கர்த்தருடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷிப்பிக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது. 9 கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது. 10 அவைகள் பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது. 11 அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு. 12 தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். 13 துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன். 14 என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதியாயிருப்பதாக.

சங்கீதம் 20

1 ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. 2 அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக. 3 நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா.) 4 அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக. 5 நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக. 6 கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார். 7 சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக்குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக்குறித்தே மேன்மைபாராட்டுவோம். 8 அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம். 9 கர்த்தாவே, இரட்சியும்; நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக.

சங்கீதம் 21

1 கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்! 2 அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா.) 3 உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர். 4 அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார்; நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர். 5 உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாயிருக்கிறது; மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு அருளினீர். 6 அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர்; அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர். 7 ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்; உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார். 8 உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும்; உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும். 9 உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப் போடுவீர்; கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார்; அக்கினி அவர்களைப் பட்சிக்கும். 10 அவர்கள் கனியை பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர். 11 அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள்; தீவினையை எத்தனம்பண்ணினார்கள்; ஒன்றும் வாய்க்காமற்போயிற்று. 12 அவர்களை இலக்காக வைத்து, உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே விடுகிறீர். 13 கர்த்தாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக்கீர்த்தனம்பண்ணுவோம்.

சங்கீதம் 22

1 என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்? 2 என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை. 3 இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர். 4 எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கைவைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். 5 உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள். 6 நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன். 7 என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி: 8 கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள். 9 நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடையபேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர். 10 கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்ததுமுதல் நீர் என் தேவனாயிருக்கிறீர். 11 என்னைவிட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை. 12 அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்துகொண்டது. 13 பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள். 14 தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று. 15 என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர். 16 நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள். 17 என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 18 என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள். 19 ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும். 20 என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும். 21 என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர். 22 உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன். 23 கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள். 24 உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார். 25 மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன். 26 சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும். 27 பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும். 28 ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர். 29 பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப் பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே. 30 ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும். 31 அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிற ஜனங்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.

சங்கீதம் 23

1 கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். 2 அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார். 3 அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார். 4 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். 5 என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம் நிரம்பி வழிகிறது. 6 என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.

சங்கீதம் 24

1 பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது. 2 அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார். 3 யார் கர்த்தருடைய பர்வதத்தில் ஏறுவான்? யார் அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் நிலைத்திருப்பான்? 4 கைகளில் சுத்தமுள்ளவனும் இருதயத்தில் மாசில்லாதவனுமாயிருந்து, தன் ஆத்துமாவை மாயைக்கு ஒப்புக்கொடாமலும், கபடாய் ஆணையிடாமலும் இருக்கிறவனே. 5 அவன் கர்த்தரால் ஆசீர்வாதத்தையும், தன் இரட்சிப்பின் தேவனால் நீதியையும் பெறுவான். 6 இதுவே அவரைத் தேடி விசாரித்து, அவருடைய சமுகத்தை நாடுகிற யாக்கோபு என்னும் சந்ததி. (சேலா.) 7 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். 8 யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே. 9 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். 10 யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா. (சேலா.)

சங்கீதம் 25

1 கர்த்தாவே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். 2 என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன், நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவிடாதேயும். 3 உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம்பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக. 4 கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். 5 உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன். 6 கர்த்தாவே, உம்முடைய இரக்கங்களையும் உம்முடைய காருணியங்களையும் நினைத்தருளும், அவைகள் அநாதிகாலமுதல் இருக்கிறதே. 7 என் இளவயதின் பாவங்களையும் என் மீறுதல்களையும் நினையாதிரும்; கர்த்தாவே, உம்முடைய தயவினிமித்தம் என்னை உமது கிருபையின்படியே நினைத்தருளும். 8 கர்த்தர் நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார். 9 சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். 10 கர்த்தருடைய உடன்படிக்கையையும் அவருடைய சாட்சிகளையும் கைக்கொள்ளுகிறவர்களுக்கு, அவருடைய பாதைகளெல்லாம் கிருபையும் சத்தியமுமானவைகள். 11 கர்த்தாவே, என் அக்கிரமம் பெரிது; உம்முடைய நாமத்தினிமித்தம் அதை மன்னித்தருளும். 12 கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். 13 அவன் ஆத்துமா நன்மையில் தங்கும்; அவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளும். 14 கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார். 15 என் கண்கள் எப்போதும் கர்த்தரை நோக்கிக் கொண்டிருக்கிறது; அவரே என் கால்களை வலைக்கு நீங்கலாக்கிவிடுவார். 16 என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன். 17 என் இருதயத்தின் வியாகுலங்கள் பெருகியிருக்கிறது; என் இடுக்கண்களுக்கு என்னை நீங்கலாக்கிவிடும். 18 என் துன்பத்தையும் என் வருத்தத்தையும் பார்த்து, என் பாவங்களையெல்லாம் மன்னித்தருளும். 19 என் சத்துருக்களைப் பாரும்; அவர்கள் பெருகியிருந்து, உக்கிரபகையாய் என்னைப் பகைக்கிறார்கள். 20 என் ஆத்துமாவைக் காப்பாற்றி என்னை விடுவியும்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; உம்மை நம்பியிருக்கிறேன். 21 உத்தமமும் நேர்மையும் என்னைக் காக்கக்கடவது; நான் உமக்குக் காத்திருக்கிறேன். 22 தேவனே, இஸ்ரவேலை அவனுடைய எல்லா இக்கட்டுகளுக்கும் நீங்கலாக்கி மீட்டுவிடும்.

சங்கீதம் 26

1 கர்த்தாவே, என்னை நியாயம் விசாரியும், நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்; நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன், ஆகையால் நான் தள்ளாடுவதில்லை. 2 கர்த்தாவே, என்னைப் பரீட்சித்து, என்னைச் சோதித்துப்பாரும்; என் உள்ளிந்திரியங்களையும் என் இருதயத்தையும் புடமிட்டுப்பாரும். 3 உம்முடைய கிருபை என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; உம்முடைய சத்தியத்திலே நடந்துகொள்ளுகிறேன். 4 வீணரோடே நான் உட்காரவில்லை, வஞ்சகரிடத்தில் நான் சேருவதில்லை. 5 பொல்லாதவர்களின் கூட்டத்தைப் பகைக்கிறேன்; துன்மார்க்கரோடே உட்காரேன். 6 கர்த்தாவே, நான் துதியின் சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பதற்காக, 7 நான் குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருகிறேன். 8 கர்த்தாவே, உமது ஆலயமாகிய வாசஸ்தலத்தையும், உமது மகிமை தங்கிய ஸ்தானத்தையும் வாஞ்சிக்கிறேன். 9 என் ஆத்துமாவைப் பாவிகளோடும், என் ஜீவனை இரத்தப்பிரியரோடுங்கூட வாரிக்கொள்ளாதேயும். 10 அவர்கள் கைகளிலே தீவினையிருக்கிறது; அவர்கள் வலதுகை பரிதானங்களால் நிறைந்திருக்கிறது. 11 நானோ என் உத்தமத்திலே நடப்பேன்; என்னை மீட்டுக்கொண்டு என்மேல் இரக்கமாயிரும். 12 என் கால் செம்மையான இடத்திலே நிற்கிறது; சபைகளிலே நான் கர்த்தரைத் துதிப்பேன்.

சங்கீதம் 27

1 கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவர், யாருக்குப் பயப்படுவேன்? கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்? 2 என் சத்துருக்களும் என் பகைஞருமாகிய பொல்லாதவர்கள் என் மாம்சத்தைப் பட்சிக்க, என்னை நெருக்குகையில் அவர்களே இடறிவிழுந்தார்கள். 3 எனக்கு விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும், இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன். 4 கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சிசெய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். 5 தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார். 6 இப்பொழுது என் தலை என்னைச் சுற்றிலும் இருக்கிற என் சத்துருக்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அதினிமித்தம் அவருடைய கூடாரத்திலே நான் ஆனந்த பலிகளையிட்டு, கர்த்தரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன். 7 கர்த்தாவே, நான் கூப்பிடுகிற சத்தத்தை நீர் கேட்டு, எனக்கு இரங்கி, எனக்கு உத்தரவு அருளிச்செய்யும். 8 என் முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன் கர்த்தாவே, என்று என் இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று. 9 உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; நீர் கோபத்துடன் உமது அடியேனை விலக்கிப்போடாதேயும்; நீரே எனக்குச் சகாயர்; என் இரட்சிப்பின் தேவனே, என்னை நெகிழவிடாமலும் என்னைக் கைவிடாமலும் இரும். 10 என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார். 11 கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதித்து, என் எதிராளிகளினிமித்தம் செவ்வையான பாதையில் என்னை நடத்தும். 12 என் சத்துருக்களின் இஷ்டத்துக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; பொய்ச்சாட்சிகளும் ஆக்கிரமித்துச் சீறுகிறவர்களும் எனக்கு விரோதமாய் எழும்பியிருக்கிறார்கள். 13 நானோ, ஜீவனுள்ளோர் தேசத்திலே கர்த்தருடைய நன்மையைக் காண்பேன் என்று விசுவாசியாதிருந்தால் கெட்டுப்போயிருப்பேன். 14 கர்த்தருக்குக் காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து, கர்த்தருக்கே காத்திரு.

சங்கீதம் 28

1 என் கன்மலையாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் கேளாதவர்போல மவுனமாயிராதேயும்; நீர் மவுனமாயிருந்தால் நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாவேன். 2 நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு, உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும். 3 அயலானுக்குச் சமாதான வாழ்த்துதலைச் சொல்லியும், தங்கள் இருதயங்களில் பொல்லாப்பை வைத்திருக்கிற துன்மார்க்கரோடும் அக்கிரமக்காரரோடும் என்னை வாரிக்கொள்ளாதேயும். 4 அவர்களுடைய கிரியைகளுக்கும் அவர்களுடைய நடத்தைகளின் பொல்லாங்குக்கும் தக்கதாக அவர்களுக்குச் செய்யும்; அவர்கள் கைகளின் செய்கைக்குத்தக்கதாக அவர்களுக்கு அளியும், அவர்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டும். 5 அவர்கள் கர்த்தருடைய செய்கைகளையும் அவர் கரத்தின் கிரியைகளையும் கவனியாதபடியால், அவர்களை இடித்துப்போடுவார், அவர்களைக் கட்டமாட்டார். 6 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டார். 7 கர்த்தர் என் பெலனும் என் கேடகமுமாயிருக்கிறார்; என் இருதயம் அவரை நம்பியிருந்தது; நான் சகாயம் பெற்றேன்; ஆகையால் என் இருதயம் களிகூருகிறது; என் பாட்டினால் அவரைத் துதிப்பேன். 8 கர்த்தர் அவர்களுடைய பெலன்; அவரே தாம் அபிஷேகம்பண்ணினவனுக்கு அரணான அடைக்கலமானவர். 9 தேவரீர் உமது ஜனத்தை இரட்சித்து, உமது சுதந்தரத்தை ஆசீர்வதியும்; அவர்களைப் போஷித்து, அவர்களை என்றென்றைக்கும் உயர்த்தியருளும்.

சங்கீதம் 29

1 பலவான்களின் புத்திரரே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். 2 கர்த்தருடைய நாமத்திற்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள். 3 கர்த்தருடைய சத்தம் தண்ணீர்களின்மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; கர்த்தர் திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார். 4 கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது; கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது. 5 கர்த்தருடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; கர்த்தர் லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார். 6 அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும் சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளப்பண்ணுகிறார். 7 கர்த்தருடைய சத்தம் அக்கினிஜுவாலைகளைப் பிளக்கும். 8 கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும்; கர்த்தர் காதேஸ் வனாந்தரத்தை அதிரப்பண்ணுகிறார். 9 கர்த்தருடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள யாவரும் அவருடைய மகிமையைப் பிரஸ்தாபிக்கிறார்கள். 10 கர்த்தர் ஜலப்பிரவாகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறார்; கர்த்தர் என்றென்றைக்கும் ராஜாவாக வீற்றிருக்கிறார். 11 கர்த்தர் தமது ஜனத்திற்குப் பெலன்கொடுப்பார்; கர்த்தர் தமது ஜனத்திற்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.

சங்கீதம் 30

1 கர்த்தாவே, என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு மகிழவொட்டாமல், நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால், நான் உம்மைப் போற்றுவேன். 2 என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை நீர் குணமாக்கினீர். 3 கர்த்தாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறப்பண்ணி, நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடே காத்தீர். 4 கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவரைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள். 5 அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும். 6 நான் ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லையென்று, என் வாழ்விலே சொன்னேன். 7 கர்த்தாவே, உம்முடைய தயவினால் நீர் என் பர்வதத்தைத் திடமாய் நிற்கப்பண்ணியிருந்தீர்; உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன். 8 நான் குழியில் இறங்குகையில் என் இரத்தத்தால் என்ன லாபமுண்டு? புழுதி உம்மைத் துதித்து, உமது சத்தியத்தை அறிவிக்குமோ? 9 கர்த்தாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து என்மேல் இரக்கமாயிரும்; கர்த்தாவே, நீர் எனக்குச் சகாயராயிரும் என்று சொல்லி; 10 கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; கர்த்தரை நோக்கிக் கெஞ்சினேன். 11 என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமர்ந்திராமல் உம்மைக் கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியென்னும் கட்டினால் என்னை இடைகட்டினீர். 12 என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.

சங்கீதம் 31

1 கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடி செய்யும்; உமது நீதியினிமித்தம் என்னை விடுவியும். 2 உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும், எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும். 3 என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும். 4 அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; தேவரீரே எனக்கு அரண். 5 உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்; சத்தியபரனாகிய கர்த்தாவே, நீர் என்னை மீட்டுக்கொண்டீர். 6 வீண்மாயைகளைப் பற்றிக்கொள்ளுகிறவர்களை நான் வெறுத்து, கர்த்தரையே நம்பியிருக்கிறேன். 7 உமது கிருபையிலே களிகூர்ந்து மகிழுவேன்; நீர் என் உபத்திரவத்தைப் பார்த்து, என் ஆத்துமவியாகுலங்களை அறிந்திருக்கிறீர். 8 சத்துருவின் கையில் என்னை ஒப்புக்கொடாமல், என் பாதங்களை விசாலத்திலே நிறுத்தினீர். 9 எனக்கு இரங்கும் கர்த்தாவே, நான் நெருக்கப்படுகிறேன்; துக்கத்தினால் என் கண்ணும் என் ஆத்துமாவும் என் வயிறுங்கூடக் கருகிப்போயிற்று. 10 என் பிராணன் சஞ்சலத்தினாலும், என் வருஷங்கள் தவிப்பினாலும் கழிந்து போயிற்று; என் அக்கிரமத்தினாலே என் பெலன் குறைந்து, என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. 11 என் சத்துருக்களாகிய யாவர் நிமித்தமும், நான் என் அயலாருக்கு நிந்தையும், எனக்கு அறிமுகமானவர்களுக்கு அருக்களிப்புமானேன்; வீதியிலே என்னைக் கண்டவர்கள் எனக்கு விலகி ஓடிப்போனார்கள். 12 செத்தவனைப்போல எல்லாராலும் முழுவதும் மறக்கப்பட்டேன்; உடைந்த பாத்திரத்தைப்போலானேன். 13 அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன்; எனக்கு விரோதமாக அவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணுகிறதினால் திகில் என்னைச் சூழ்ந்துகொண்டது; என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள். 14 நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நீரே என் தேவன் என்று சொன்னேன். 15 என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது; என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும். 16 நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உமது கிருபையினாலே என்னை இரட்சியும். 17 கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்; நான் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும்; துன்மார்க்கர் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாயிருக்கட்டும். 18 நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக. 19 உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது! 20 மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர். 21 கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம். 22 உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன்; ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர். 23 கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்புகூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார். 24 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.

சங்கீதம் 32

1 எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான். 2 எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான். 3 நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று. 4 இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா.) 5 நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா.) 6 இதற்காகச் சகாயங்கிடைக்குங் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான்; அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது. 7 நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா.) 8 நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன். 9 வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய்கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம். 10 துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும். 11 நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள்.

சங்கீதம் 33

1 நீதிமான்களே, கர்த்தருக்குள் களிகூருங்கள்; துதிசெய்வது செம்மையானவர்களுக்குத் தகும். 2 சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள். 3 அவருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; ஆனந்தசத்தத்தோடே வாத்தியங்களை நேர்த்தியாய் வாசியுங்கள். 4 கர்த்தருடைய வார்த்தை உத்தமமும், அவருடைய செய்கையெல்லாம் சத்தியமுமாயிருக்கிறது. 5 அவர் நீதியிலும் நியாயத்திலும் பிரியப்படுகிறார்; பூமி கர்த்தருடைய காருணியத்தினால் நிறைந்திருக்கிறது. 6 கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும், அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது. 7 அவர் சமுத்திர ஜலங்களைக் குவியலாகச் சேர்த்து, ஆழமான ஜலங்களைப் பொக்கிஷவைப்பாக வைக்கிறார். 8 பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு அஞ்சியிருப்பதாக. 9 அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும். 10 கர்த்தர் ஜாதிகளின் ஆலோசனையை விருதாவாக்கி, ஜனங்களுடைய நினைவுகளை அவமாக்குகிறார். 11 கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவருடைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும். 12 கர்த்தரைத் தங்களுக்குத் தெய்வமாகக்கொண்ட ஜாதியும், அவர் தமக்குச் சுதந்தரமாகத் தெரிந்துகொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது. 13 கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார். 14 தாம் வாசமாயிருக்கிற ஸ்தானத்திலிருந்து பூமியின் குடிகள் எல்லார்மேலும் கண்ணோக்கமாயிருக்கிறார். 15 அவர்களுடைய இருதயங்களையெல்லாம் அவர் உருவாக்கி, அவர்கள் செய்கைகளையெல்லாம் கவனித்திருக்கிறார். 16 எந்த ராஜாவும் தன் சேனையின் மிகுதியால் இரட்சிக்கப்படான்; சவுரியவானும் தன் பலத்தின் மிகுதியால் தப்பான். 17 இரட்சிக்கிறதற்குக் குதிரை விருதா; அது தன் மிகுந்த வீரியத்தால் தப்புவியாது. 18 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்; 19 பஞ்சத்தில் அவர்களை உயிரோடே காக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. 20 நம்முடைய ஆத்துமா கர்த்தருக்குக் காத்திருக்கிறது; அவரே நமக்குத் துணையும் நமக்குக் கேடகமுமானவர். 21 அவருடைய பரிசுத்த நாமத்தை நாம் நம்பியிருக்கிறபடியால், நம்முடைய இருதயம் அவருக்குள் களிகூரும். 22 கர்த்தாவே, நாங்கள் உம்மை நம்பியிருக்கிறபடியே உமது கிருபை எங்கள்மேல் இருப்பதாக.

சங்கீதம் 34

1 கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். 2 கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள். 3 என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. 4 நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். 5 அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை. 6 இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார். 7 கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார். 8 கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 9 கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை. 10 சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. 11 பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன். 12 நன்மையைக் காணும்படி, ஜீவனை விரும்பி, நீடித்த நாட்களை அபேட்சிக்கிற மனுஷன் யார்? 13 உன் நாவைப் பொல்லாப்புக்கும், உன் உதடுகளைக் கபட்டுவசனிப்புக்கும் விலக்கிக் காத்துக்கொள். 14 தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள். 15 கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது; அவருடைய செவிகள் அவர்கள் கூப்பிடுதலுக்குத் திறந்திருக்கிறது. 16 தீமைசெய்கிறவர்களுடைய பேரைப் பூமியில் இராமல் அற்றுப்போகப்பண்ண, கர்த்தருடைய முகம் அவர்களுக்கு விரோதமாயிருக்கிறது. 17 நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். 18 நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார். 19 நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார். 20 அவனுடைய எலும்புகளையெல்லாம் காப்பாற்றுகிறார்; அவைகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை. 21 தீமை துன்மார்க்கனைக் கொல்லும்; நீதிமானைப் பகைக்கிறவர்கள் குற்றவாளிகளாவார்கள். 22 கர்த்தர் தமது ஊழியக்காரரின் ஆத்துமாவை மீட்டுக்கொள்ளுகிறார்; அவரை நம்புகிற ஒருவன்மேலும் குற்றஞ்சுமராது.

சங்கீதம் 35

1 கர்த்தாவே, நீர் என் வழக்காளிகளோடே வழக்காடி, என்னோடு யுத்தம்பண்ணுகிறவர்களோடே யுத்தம்பண்ணும். 2 நீர் கேடகத்தையும் பரிசையையும் பிடித்து, எனக்கு ஒத்தாசையாக எழுந்துநில்லும். 3 என்னைத் துன்பப்படுத்துகிறவர்களோடு எதிர்த்துநின்று, ஈட்டியையோங்கி அவர்களை மறித்து: நான் உன் இரட்சிப்பு என்று என் ஆத்துமாவுக்குச் சொல்லும். 4 என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் கலங்குவார்களாக; எனக்குத் தீங்குசெய்ய நினைக்கிறவர்கள் நாணமடைவார்களாக. 5 அவர்கள் காற்றுமுகத்தில் பறக்கும் பதரைப்போலாவார்களாக; கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்துவானாக. 6 அவர்களுடைய வழி இருளும் சறுக்கலுமாயிருப்பதாக; கர்த்தருடைய தூதன் அவர்களைப் பின்தொடருவானாக. 7 முகாந்தரமில்லாமல் எனக்காகத் தங்கள் வலையைக் குழியில் ஒளித்துவைத்தார்கள்; முகாந்தரமில்லாமல் என் ஆத்துமாவுக்குப் படுகுழி வெட்டினார்கள். 8 அவன் நினையாத அழிவு அவனுக்கு வரவும், அவன் மறைவாய் வைத்த வலை அவனையே பிடிக்கவுங்கடவது; அவனே அந்தக் குழியில் விழுந்து அழிவானாக. 9 என் ஆத்துமா கர்த்தரில் களிகூர்ந்து, அவருடைய இரட்சிப்பில் மகிழ்ந்திருக்கும். 10 சிறுமைப்பட்டவனை அவனிலும் பலவானுடைய கைக்கும், சிறுமையும் எளிமையுமானவனைக் கொள்ளையிடுகிறவனுடைய கைக்கும் தப்புவிக்கிற உமக்கொப்பானவர் யார் கர்த்தாவே, என்று என் எலும்புகளெல்லாம் சொல்லும். 11 கொடுமையான சாட்சிகள் எழும்பி, நான் அறியாததை என்னிடத்தில் கேட்கிறார்கள். 12 நான் செய்த நன்மைக்குப் பதிலாகத் தீமைசெய்கிறார்கள்; என் ஆத்துமா திக்கற்றுப்போகப் பார்க்கிறார்கள். 13 அவர்கள் வியாதியாயிருந்தபோது இரட்டு என் உடுப்பாயிருந்தது; நான் உபவாசத்தால் என் ஆத்துமாவை உபத்திரப்படுத்தினேன்; என் ஜெபமும் என் மடியிலே திரும்பவந்தது. 14 நான் அவனை என் சிநேகிதனாகவும் சகோதரனாகவும் பாவித்து நடந்துகொண்டேன்; தாய்க்காகத் துக்கிக்கிறவனைப்போல் துக்கவஸ்திரம் தரித்துத் தலைகவிழ்ந்து நடந்தேன். 15 ஆனாலும் எனக்கு ஆபத்துண்டானபோது அவர்கள் சந்தோஷப்பட்டுக் கூட்டங்கூடினார்கள்; நீசரும் நான் அறியாதவர்களும் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, ஓயாமல் என்னை நிந்தித்தார்கள். 16 அப்பத்திற்காக இச்சகம்பேசுகிற பரியாசக்காரரோடே சேர்ந்துகொண்டு என்பேரில் பற்கடிக்கிறார்கள். 17 ஆண்டவரே, எதுவரைக்கும் இதைப் பார்த்துக்கொண்டிருப்பீர்? என் ஆத்துமாவை அழிவுக்கும், எனக்கு அருமையானதைச் சிங்கக்குட்டிகளுக்கும் தப்புவியும். 18 மகா சபையிலே உம்மைத் துதிப்பேன்; திரளான ஜனங்களுக்குள்ளே உம்மைப் புகழுவேன். 19 வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக. 20 அவர்கள் சமாதானமாய்ப் பேசாமல், தேசத்திலே அமைதலாயிருக்கிறவர்களுக்கு விரோதமாய் வஞ்சகமான காரியங்களைக் கருதுகிறார்கள். 21 எனக்கு விரோதமாகத் தங்கள் வாயை விரிவாய்த் திறந்து, ஆ ஆ, ஆ ஆ, எங்கள் கண் கண்டது என்கிறார்கள். 22 கர்த்தாவே, நீர் இதைக் கண்டீர், மவுனமாயிராதேயும்; ஆண்டவரே, எனக்குத் தூரமாகாதேயும். 23 என் தேவனே, என் ஆண்டவரே, எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும். 24 என் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நீதியின்படி என்னை நியாயம் விசாரியும், என்னைக்குறித்து அவர்களை மகிழவொட்டாதிரும். 25 அவர்கள் தங்கள் இருதயத்திலே: ஆ ஆ, இதுவே நாங்கள் விரும்பினது என்று சொல்லாதபடிக்கும், அவனை விழுங்கிவிட்டோம் என்று பேசாதபடிக்கும் செய்யும். 26 எனக்கு நேரிட்ட ஆபத்துக்காகச் சந்தோஷிக்கிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டுகிறவர்கள் வெட்கத்தாலும் இலச்சையாலும் மூடப்படக்கடவர்கள். 27 என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள். 28 என் நாவு உமது நீதியையும், நாள்முழுதும் உமது துதியையும் சொல்லிக்கொண்டிருக்கும்.

சங்கீதம் 36

1 துன்மார்க்கனுடைய துரோகப்பேச்சு என் உள்ளத்திற்குத் தெரியும்; அவன் கண்களுக்குமுன் தெய்வபயம் இல்லை. 2 அவன், தன் அக்கிரமம் அருவருப்பானதென்று காணப்படுமளவும், தன் பார்வைக்கேற்றபடி தனக்குத்தானே இச்சகம் பேசுகிறான். 3 அவன் வாயின் வார்த்தைகள் அக்கிரமமும் வஞ்சகமுமுள்ளது; புத்தியாய் நடந்துகொள்வதையும் நன்மைசெய்வதையும் விட்டுவிட்டான். 4 அவன் தன் படுக்கையின்மேல் அக்கிரமத்தை யோசித்து, நல்லதல்லாத வழியிலே நிலைத்து, பொல்லாப்பை வெறுக்காதிருக்கிறான். 5 கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது. 6 உமது நீதி மகத்தான பர்வதங்கள்போலவும், உமது நியாயங்கள் மகா ஆழமாகவும் இருக்கிறது; கர்த்தாவே, மனுஷரையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர். 7 தேவனே, உம்முடைய கிருபை எவ்வளவு அருமையானது! அதினால் மனுபுத்திரர் உமது செட்டைகளின் நிழலிலே வந்தடைகிறார்கள். 8 உமது ஆலயத்திலுள்ள சம்பூரணத்தினால் திருப்தியடைவார்கள்; உமது பேரின்ப நதியினால் அவர்கள் தாகத்தைத் தீர்க்கிறீர். 9 ஜீவஊற்று உம்மிடத்தில் இருக்கிறது; உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம். 10 உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும். 11 பெருமைக்காரரின் கால் என்மேல் வராமலும், துன்மார்க்கருடைய கை என்னைப் பறக்கடியாமலும் இருப்பதாக. 12 அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்.

சங்கீதம் 37

1 பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலடையாதே; நியாயக்கேடுசெய்கிறவர்கள்மேல் பொறாமைகொள்ளாதே. 2 அவர்கள் புல்லைப்போல் சீக்கிரமாய் அறுப்புண்டு, பசும்பூண்டைப்போல் வாடிப்போவார்கள். 3 கர்த்தரை நம்பி நன்மைசெய்; தேசத்தில் குடியிருந்து சத்தியத்தை மேய்ந்துகொள். 4 கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். 5 உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். 6 உன் நீதியை வெளிச்சத்தைப்போலவும், உன் நியாயத்தைப் பட்டப்பகலைப்போலவும் விளங்கப்பண்ணுவார். 7 கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு; காரியசித்தியுள்ளவன்மேலும் தீவினைகளைச் செய்கிற மனுஷன்மேலும் எரிச்சலாகாதே. 8 கோபத்தை நெகிழ்ந்து, உக்கிரத்தை விட்டுவிடு; பொல்லாப்புச்செய்ய ஏதுவான எரிச்சல் உனக்கு வேண்டாம். 9 பொல்லாதவர்கள் அறுப்புண்டுபோவார்கள்; கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். 10 இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. 11 சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். 12 துன்மார்க்கன் நீதிமானுக்கு விரோதமாய்த் தீங்கு நினைத்து, அவன்பேரில் பற்கடிக்கிறான். 13 ஆண்டவர் அவனைப்பார்த்து நகைக்கிறார்; அவனுடைய நாள் வருகிறதென்று காண்கிறார். 14 சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள். 15 ஆனாலும் அவர்கள் பட்டயம் அவர்களுடைய இருதயத்திற்குள் உருவிப்போம்; அவர்கள் வில்லுகள் முறியும். 16 அநேக துன்மார்க்கருக்குள்ள செல்வத்திரட்சியைப்பார்க்கிலும், நீதிமானுக்குள்ள கொஞ்சமே நல்லது. 17 துன்மார்க்கருடைய புயங்கள் முறியும்; நீதிமான்களையோ கர்த்தர் தாங்குகிறார். 18 உத்தமர்களின் நாட்களைக் கர்த்தர் அறிந்திருக்கிறார்; அவர்கள் சுதந்தரம் என்றென்றைக்கும் இருக்கும். 19 அவர்கள் ஆபத்துக்காலத்திலே வெட்கப்பட்டுப்போகாதிருந்து, பஞ்சகாலத்திலே திருப்தியடைவார்கள். 20 துன்மார்க்கரோ அழிந்துபோவார்கள், கர்த்தருடைய சத்துருக்கள் ஆட்டுக்குட்டிகளின் நிணத்தைப்போல் புகைந்துபோவார்கள், அவர்கள் புகையாய்ப் புகைந்துபோவார்கள். 21 துன்மார்க்கன் கடன்வாங்கிச் செலுத்தாமற்போகிறான்; நீதிமானோ இரங்கிக்கொடுக்கிறான். 22 அவரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்; அவரால் சபிக்கப்பட்டவர்களோ அறுப்புண்டுபோவார்கள். 23 நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும், அவனுடைய வழியின்மேல் அவர் பிரியமாயிருக்கிறார். 24 அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார். 25 நான் இளைஞனாயிருந்தேன், முதிர்வயதுள்ளவனுமானேன்; ஆனாலும் நீதிமான் கைவிடப்பட்டதையும், அவன் சந்ததி அப்பத்துக்கு இரந்துதிரிகிறதையும் நான் காணவில்லை. 26 அவன் நித்தம் இரங்கிக் கடன் கொடுக்கிறான், அவன் சந்ததி ஆசீர்வதிக்கப்படும். 27 தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; என்றென்றைக்கும் நிலைத்திருப்பாய். 28 கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர்; அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம். 29 நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள். 30 நீதிமானுடைய வாய் ஞானத்தை உரைத்து, அவனுடைய நாவு நியாயத்தைப் பேசும். 31 அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. 32 துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான். 33 கர்த்தரோ அவனை இவன் கையில் விடுவதில்லை; அவன் நியாயம் விசாரிக்கப்படுகையில், அவனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்ப்பதுமில்லை. 34 நீ கர்த்தருக்குக் காத்திருந்து, அவருடைய வழியைக் கைக்கொள்; அப்பொழுது நீ பூமியைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு அவர் உன்னை உயர்த்துவார்; துன்மார்க்கர் அறுப்புண்டுபோவதை நீ காண்பாய். 35 கொடிய பலவந்தனான ஒரு துன்மார்க்கனைக் கண்டேன், அவன் தனக்கேற்ற நிலத்தில் முளைத்திருக்கிற பச்சைமரத்தைப்போல் தழைத்தவனாயிருந்தான். 36 ஆனாலும் அவன் ஒழிந்துபோனான்; பாருங்கள், அவன் இல்லை; அவனைத் தேடினேன், அவன் காணப்படவில்லை. 37 நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம். 38 அக்கிரமக்காரர் ஏகமாய் அழிக்கப்படுவார்கள்; அறுப்புண்டுபோவதே துன்மார்க்கரின் முடிவு. 39 நீதிமான்களுடைய இரட்சிப்பு கர்த்தரால் வரும்; இக்கட்டுக்காலத்தில் அவரே அவர்கள் அடைக்கலம். 40 கர்த்தர் அவர்களுக்கு உதவிசெய்து, அவர்களை விடுவிப்பார்; அவர்கள் அவரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.

சங்கீதம் 38

1 கர்த்தாவே, உம்முடைய கோபத்தில் என்னைக் கடிந்துகொள்ளாதேயும்; உம்முடைய உக்கிரத்தில் என்னைத் தண்டியாதேயும். 2 உம்முடைய அம்புகள் எனக்குள்ளே தைத்திருக்கிறது; உமது கை என்னை இருத்துகிறது. 3 உமது கோபத்தினால் என் மாம்சத்தில் ஆரோக்கியமில்லை; என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை. 4 என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகிற்று, அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கக்கூடாத பாரமாயிற்று. 5 என் மதிகேட்டினிமித்தம் என் புண்கள் அழுகி நாற்றமெடுத்தது. 6 நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன். 7 என் குடல்கள் எரிபந்தமாய் எரிகிறது; என் மாம்சத்தில் ஆரோக்கியம் இல்லை. 8 நான் பெலனற்றுப்போய், மிகவும் நொறுக்கப்பட்டேன்; என் இருதயத்தின் கொந்தளிப்பினால் கதறுகிறேன். 9 ஆண்டவரே, என் ஏங்கலெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது; என் தவிப்பு உமக்கு மறைவாயிருக்கவில்லை. 10 என் உள்ளம் குழம்பி அலைகிறது; என் பெலன் என்னை விட்டு விலகி, என் கண்களின் ஒளி முதலாய் இல்லாமற்போயிற்று. 11 என் சிநேகிதரும் என் தோழரும் என் வாதையைக் கண்டு விலகுகிறார்கள்; என் இனத்தாரும் தூரத்திலே நிற்கிறார்கள். 12 என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப் பேசி, நாள்முழுதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள். 13 நானோ செவிடனைப்போலக் கேளாதவனாகவும், ஊமையனைப்போல வாய்திறவாதவனாகவும் இருக்கிறேன். 14 காதுகேளாதவனும், தன் வாயில் மறுஉத்தரவுகள் இல்லாதவனுமாயிருக்கிற மனுஷனைப்போலானேன். 15 கர்த்தாவே, உமக்குக் காத்திருக்கிறேன்; என் தேவனாகிய ஆண்டவரே, நீர் மறுஉத்தரவு கொடுப்பீர். 16 அவர்கள் என்னிமித்தம் சந்தோஷப்படாதபடிக்கு இப்படிச் சொன்னேன்; என் கால் தவறும்போது என்மேல் பெருமைபாராட்டுவார்களே. 17 நான் தடுமாறி விழ ஏதுவாயிருக்கிறேன்; என் துக்கம் எப்பொழுதும் என் முன்பாக இருக்கிறது. 18 என் அக்கிரமத்தை நான் அறிக்கையிட்டு, என் பாவத்தினிமித்தம் விசாரப்படுகிறேன். 19 என் சத்துருக்கள் வாழ்ந்து பலத்திருக்கிறார்கள்; முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் பெருகியிருக்கிறார்கள். 20 நான் நன்மையைப் பின்பற்றுகிறபடியால், நன்மைக்குத் தீமை செய்கிறவர்கள் என்னை விரோதிக்கிறார்கள். 21 கர்த்தாவே, என்னைக் கைவிடாதேயும்; என் தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும். 22 என் இரட்சிப்பாகிய ஆண்டவரே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும்.

சங்கீதம் 39

1 என் நாவினால் பாவஞ்செய்யாதபடிக்கு நான் என் வழிகளைக் காத்து, துன்மார்க்கன் எனக்கு முன்பாக இருக்குமட்டும் என் வாயைக் கடிவாளத்தால் அடக்கிவைப்பேன் என்றேன். 2 நான் மவுனமாகி, ஊமையனாயிருந்தேன், நலமானதையும் பேசாமல் அமர்ந்திருந்தேன்; ஆனாலும் என் துக்கம் அதிகரித்தது; 3 என் இருதயம் எனக்குள்ளே அனல்கொண்டது; நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது; அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன். 4 கர்த்தாவே, நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும். 5 இதோ, என் நாட்களை நாலு விரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது; எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா.) 6 வேஷமாகவே மனுஷன் திரிகிறான்; விருதாவாகவே சஞ்சலப்படுகிறான்; ஆஸ்தியைச் சேர்க்கிறான், யார் அதை வாரிக்கொள்ளுவான் என்று அறியான். 7 இப்போதும் ஆண்டவரே, நான் எதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்? நீரே என் நம்பிக்கை. 8 என் மீறுதல்கள் எல்லாவற்றிலுமிருந்து என்னை விடுதலையாக்கும், மூடனுடைய நிந்தனைக்கு என்னை ஒப்புக்கொடாதேயும். 9 நீரே இதைச் செய்தீர் என்று நான் என் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன். 10 என்னிலிருந்து உம்முடைய வாதையை எடுத்துப்போடும்; உமது கரத்தின் அடிகளால் நான் சோர்ந்துபோனேன். 11 அக்கிரமத்தினிமித்தம் நீர் மனுஷனைக் கடிந்துகொண்டு தண்டிக்கிறபோது, அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்; நிச்சயமாக எந்த மனுஷனும் மாயையே. (சேலா.) 12 கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்கு முன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன். 13 நான் இனி இராமற்போகுமுன்னே, தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும்.

சங்கீதம் 40

1 கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார். 2 பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி, 3 நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள். 4 அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான். 5 என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லிமுடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள். 6 பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை. 7 அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது; 8 என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன். 9 மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என் உதடுகளை மூடேன், கர்த்தாவே, நீர் அதை அறிவீர். 10 உம்முடைய நீதியை நான் என் இருதயத்திற்குள் மறைத்துவைக்கவில்லை; உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன்; உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை. 11 கர்த்தாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற் போகப்பண்ணாதேயும்; உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது. 12 எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்துபிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கக்கூடாதிருக்கிறது, அவைகள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது, என் இருதயம் சோர்ந்துபோகிறது. 13 கர்த்தாவே, என்னை விடுவித்தருளும்; கர்த்தாவே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும். 14 என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு இலச்சையடைவார்களாக. 15 என்பேரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள், தங்கள் வெட்கத்தின் பலனையடைந்து கைவிடப்படுவார்களாக. 16 உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக. 17 நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்.

சங்கீதம் 41

1 சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார். 2 கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர். 3 படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர். 4 கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன். 5 அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள். 6 ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாய்ப் பேசுகிறான்; அவன் தன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலேபோய், அதைத் தூற்றுகிறான். 7 என் பகைஞரெல்லாரும் என்மேல் ஏகமாய் முணுமுணுத்து, எனக்கு விரோதமாயிருந்து, எனக்குப் பொல்லாங்கு நினைத்து, 8 தீராவியாதி அவனைப் பிடித்துக்கொண்டது; படுக்கையில் கிடக்கிற அவன் இனி எழுந்திருப்பதில்லை என்கிறார்கள். 9 என் பிராணசிநேகிதனும், நான் நம்பினவனும், என் அப்பம் புசித்தவனுமாகிய மனுஷனும், என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். 10 கர்த்தாவே, நீர் எனக்கு இரங்கி, நான் அவர்களுக்குச் சரிக்கட்ட என்னை எழுந்திருக்கப்பண்ணும். 11 என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன். 12 நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர். 13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஆமென், ஆமென்.

சங்கீதம் 42

1 மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது. 2 என் ஆத்துமா தேவன்மேல், ஜீவனுள்ள தேவன்மேலேயே தாகமாயிருக்கிறது; நான் எப்பொழுது தேவனுடைய சந்நிதியில் வந்து நிற்பேன்? 3 உன் தேவன் எங்கே என்று அவர்கள் நாள்தோறும் என்னிடத்தில் சொல்லுகிறபடியால், இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று. 4 முன்னே நான் பண்டிகையை ஆசரிக்கிற ஜனங்களோடே கூட நடந்து, கூட்டத்தின் களிப்பும் துதியுமான சத்தத்தோடே தேவாலயத்திற்குப் போய்வருவேனே; இவைகளை நான் நினைக்கும்போது என் உள்ளம் எனக்குள்ளே உருகுகிறது. 5 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன். 6 என் தேவனே, என் ஆத்துமா எனக்குள் கலங்குகிறது; ஆகையால் யோர்தான் தேசத்திலும் எர்மோன் மலைகளிலும் சிறுமலையிலுமிருந்து உம்மை நினைக்கிறேன். 7 உமது மதகுகளின் இரைச்சலால் ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது; உமது அலைகளும் திரைகளும் எல்லாம் என்மேல் புரண்டுபோகிறது. 8 ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன். 9 நான் என் கன்மலையாகிய தேவனை நோக்கி: ஏன் என்னை மறந்தீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும் என்று சொல்லுகிறேன். 10 உன் தேவன் எங்கே என்று என் சத்துருக்கள் நாள்தோறும் என்னோடே சொல்லி, என்னை நிந்திப்பது என் எலும்புகளை உருவக்குத்துகிறதுபோல் இருக்கிறது. 11 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.

சங்கீதம் 43

1 தேவனே, நீர் என் நியாயத்தை விசாரித்து, பக்தியில்லாத ஜாதியாரோடு எனக்காக வழக்காடி, சூதும் அநியாயமுமான மனுஷனுக்கு என்னைத் தப்புவியும். 2 என் அரணாகிய தேவன் நீர்; ஏன் என்னைத் தள்ளிவிடுகிறீர்? சத்துருவினால் ஒடுக்கப்பட்டு நான் ஏன் துக்கத்துடனே திரியவேண்டும்? 3 உமது வெளிச்சத்தையும் உமது சத்தியத்தையும் அனுப்பியருளும்; அவைகள் என்னை நடத்தி, உமது பரிசுத்த பர்வதத்திற்கும் உமது வாசஸ்தலங்களுக்கும் என்னைக் கொண்டுபோவதாக. 4 அப்பொழுது நான் தேவனுடைய பீடத்தண்டைக்கும், எனக்கு ஆனந்த மகிழ்ச்சியாயிருக்கிற தேவனிடத்திற்கும் பிரவேசிப்பேன். தேவனே, என் தேவனே, உம்மைச் சுரமண்டலத்தால் துதிப்பேன். 5 என் ஆத்துமாவே, நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; என் முகத்திற்கு இரட்சிப்பும் என் தேவனுமாயிருக்கிறவரை நான் இன்னும் துதிப்பேன்.

சங்கீதம் 44

1 தேவனே, எங்கள் பிதாக்களுடைய நாட்களாகிய பூர்வநாட்களில் நீர் நடப்பித்த கிரியைகளை அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள்; அவைகளை எங்கள் காதுகளால் கேட்டோம். 2 தேவரீர் உம்முடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி, இவர்களை நாட்டி; ஜனங்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவப்பண்ணினீர். 3 அவர்கள் தங்கள் பட்டயத்தால் தேசத்தைக் கட்டிக்கொள்ளவில்லை; அவர்கள் புயமும் அவர்களை இரட்சிக்கவில்லை; நீர் அவர்கள்மேல் பிரியமாயிருந்தபடியால், உம்முடைய வலதுகரமும், உம்முடைய புயமும், உம்முடைய முகத்தின் பிரகாசமும் அவர்களை இரட்சித்தது. 4 தேவனே, நீர் என் ராஜா; யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும். 5 உம்மாலே எங்கள் சத்துருக்களைக் கீழே விழத்தாக்கி, எங்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை உம்முடைய நாமத்தினால் மிதிப்போம். 6 என் வில்லை நான் நம்பேன், என் பட்டயம் என்னை இரட்சிப்பதில்லை. 7 நீரே எங்கள் சத்துருக்களினின்று எங்களை இரட்சித்து, எங்களைப் பகைக்கிறவர்களை வெட்கப்படுத்துகிறீர். 8 தேவனுக்குள் நித்தம் மேன்மைபாராட்டுவோம்; உமது நாமத்தை என்றென்றைக்கும் துதிப்போம். (சேலா.) 9 நீர் எங்களைத் தள்ளிவிட்டு, நாணப்பண்ணுகிறீர்; எங்கள் சேனைகளுடனே செல்லாதிருக்கிறீர். 10 சத்துருவுக்கு நாங்கள் இடைந்து பின்னிட்டுத் திரும்பிப்போகப் பண்ணுகிறீர்; எங்கள் பகைஞர் தங்களுக்கென்று எங்களைக் கொள்ளையிடுகிறார்கள். 11 நீர் எங்களை ஆடுகளைப்போல இரையாக ஒப்புக்கொடுத்து, ஜாதிகளுக்குள்ளே எங்களைச் சிதறடிக்கிறீர். 12 நீர் உம்முடைய ஜனங்களை இலவசமாக விற்கிறீர்; அவர்கள் கிரயத்தினால் உமக்கு லாபமில்லையே. 13 எங்கள் அயலாருக்கு எங்களை நிந்தையாகவும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமாகவும் வைக்கிறீர். 14 நாங்கள் ஜாதிகளுக்குள்ளே பழமொழியாயிருக்கவும், ஜனங்கள் எங்களைக்குறித்துத் தலைதுலுக்கவும் செய்கிறீர். 15 நிந்தித்துத் தூஷிக்கிறவனுடைய சத்தத்தினிமித்தமும், சத்துருவினிமித்தமும், பழிவாங்குகிறவனிமித்தமும், 16 என் இலச்சை நித்தம் எனக்கு முன்பாக இருக்கிறது; என் முகத்தின் வெட்கம் என்னை மூடுகிறது. 17 இவையெல்லாம் எங்கள்மேல் வந்திருந்தும், உம்மை நாங்கள் மறக்கவும் இல்லை, உம்முடைய உடன்படிக்கைக்குத் துரோகம்பண்ணவும் இல்லை. 18 நீர் எங்களை வலுசர்ப்பங்களுள்ள இடத்திலே நொறுக்கி, மரண இருளினாலே எங்களை மூடியிருந்தும், 19 எங்கள் இருதயம் பின்வாங்கவும் இல்லை, எங்கள் காலடி உம்முடைய பாதையை விட்டு விலகவும் இல்லை. 20 நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நிய தேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால், 21 தேவன் அதை ஆராய்ந்து, விசாரியாதிருப்பாரோ? இருதயத்தின் அந்தரங்கங்களை அவர் அறிந்திருக்கிறாரே. 22 உமது நிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம். 23 ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரைபண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும். 24 ஏன் உம்முடைய முகத்தை மறைத்து, எங்கள் சிறுமையையும் எங்கள் நெருக்கத்தையும் மறந்துவிடுகிறீர்? 25 எங்கள் ஆத்துமா புழுதிமட்டும் தாழ்ந்திருக்கிறது; எங்கள் வயிறு தரையோடு ஒட்டியிருக்கிறது. 26 எங்களுக்கு ஒத்தாசையாக எழுந்தருளும்; உம்முடைய கிருபையினிமித்தம் எங்களை மீட்டுவிடும்.

சங்கீதம் 45

1 என் இருதயம் நல்ல விசேஷத்தினால் பொங்குகிறது; நான் ராஜாவைக்குறித்துப் பாடின கவியைச் சொல்லுகிறேன்; என் நாவு விரைவாய் எழுதுகிறவனுடைய எழுத்தாணி. 2 எல்லா மனுபுத்திரரிலும் நீர் மகா சவுந்தரியமுள்ளவர்; உம்முடைய உதடுகளில் அருள் பொழிகிறது; ஆகையால் தேவன் உம்மை என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கிறார். 3 சவுரியவானே, உமது மகிமையும் உமது மகத்துவமுமாகிய உம்முடைய பட்டயத்தை நீர் உம்முடைய அரையிலே கட்டிக்கொண்டு, 4 சத்தியத்தினிமித்தமும், நீதியுடன் கூடிய சாந்தத்தினிமித்தமும், உமது மகத்துவத்திலே ஜெயமாக ஏறிவாரும்; உமது வலதுகரம் பயங்கரமானவைகளை உமக்கு விளங்கப்பண்ணும். 5 உம்முடைய அம்புகள் கூர்மையானவைகள், அவைகள் ராஜாவுடைய சத்துருக்களின் இருதயத்திற்குள் பாயும்; ஜனசதளங்கள் உமக்குக் கீழே விழுவார்கள். 6 தேவனே, உமது சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உமது ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. 7 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுக்கிறீர்; ஆதலால் தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்ததைலத்தினால் அபிஷேகம்பண்ணினார். 8 தந்தத்தினால் செய்த அரமனைகளிலிருந்து புறப்படுகையில், நீர் மகிழும்படி உமது வஸ்திரங்களெல்லாம் வெள்ளைப்போளம் சந்தனம் லவங்கம் இவைகளின் வாசனை பொருந்தியதாயிருக்கிறது. 9 உமது நாயகிகளுக்குள்ளே அரசரின் குமாரத்திகளுண்டு, ராஜஸ்திரீ ஓப்பீரின் தங்கம் அணிந்தவளாய் உமது வலதுபாரிசத்தில் நிற்கிறாள். 10 குமாரத்தியே கேள், நீ உன் செவியைச் சாய்த்துச் சிந்தித்துக்கொள்; உன் ஜனத்தையும் உன் தகப்பன் வீட்டையும் மறந்துவிடு. 11 அப்பொழுது ராஜா உன் அழகில் பிரியப்படுவார்; அவர் உன் ஆண்டவர், ஆகையால் அவரைப் பணிந்துகொள். 12 தீரு குமாரத்தி காணிக்கை கொண்டுவருவாள்; ஜனங்களில் ஐசுவரியவான்களும் உன் தயவை நாடி வணங்குவார்கள். 13 ராஜகுமாரத்தி உள்ளாகப் பூரண மகிமையுள்ளவள்; அவள் உடை பொற்சரிகையாயிருக்கிறது. 14 சித்திரத்தையலாடை தரித்தவளாய், ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டுவரப்படுவாள்; அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் உம்மிடத்தில் கூட்டிக்கொண்டுவரப்படுவார்கள். 15 அவர்கள் மகிழ்ச்சியோடும் களிப்போடும் வந்து, ராஜ அரமனைக்குள் பிரவேசிப்பார்கள். 16 உமது பிதாக்களுக்குப் பதிலாக உமது குமாரர் இருப்பார்கள்; அவர்களைப் பூமியெங்கும் பிரபுக்களாக வைப்பீர். 17 உமது நாமத்தை எல்லாத் தலைமுறைகளிலும் பிரஸ்தாபப்படுத்துவேன், இதினிமித்தம் ஜனங்கள் உம்மை என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் துதிப்பார்கள்.

சங்கீதம் 46

1 தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமானவர். 2 ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்துபோனாலும், 3 அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.) 4 ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும். 5 தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார். 6 ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று. 7 சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.) 8 பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள். 9 அவர் பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார். 10 நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன். 11 சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)

சங்கீதம் 47

1 சகல ஜனங்களே, கைகொட்டி, தேவனுக்கு முன்பாகக் கெம்பீரசத்தமாய் ஆர்ப்பரியுங்கள். 2 உன்னதமானவராகிய கர்த்தர் பயங்கரமானவரும், பூமியின்மீதெங்கும் மகத்துவமான ராஜாவுமாயிருக்கிறார். 3 ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார். 4 தமக்குப் பிரியமான யாக்கோபின் சிறப்பான தேசத்தை நமக்குச் சுதந்தரமாகத் தெரிந்தளிப்பார். (சேலா.) 5 தேவன் ஆர்ப்பரிப்போடும், கர்த்தர் எக்காள சத்தத்தோடும் உயர எழுந்தருளினார். 6 தேவனைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள்; நம்முடைய ராஜாவைப் போற்றிப் பாடுங்கள், பாடுங்கள். 7 தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள். 8 தேவன் ஜாதிகள்மேல் அரசாளுகிறார்; தேவன் தமது பரிசுத்த சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறார். 9 ஜனங்களின் பிரபுக்கள் ஆபிரகாமின் தேவனுடைய ஜனங்களாகச் சேர்க்கப்படுகிறார்கள்; பூமியின் கேடகங்கள் தேவனுடையவைகள்; அவர் மகா உன்னதமானவர்.

சங்கீதம் 48

1 கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர். 2 வடதிசையிலுள்ள சீயோன் பர்வதம் வடிப்பமான ஸ்தானமும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமாயிருக்கிறது, அதுவே மகாராஜாவின் நகரம். 3 அதின் அரமனைகளில் தேவன் உயர்ந்த அடைக்கலமாக அறியப்பட்டிருக்கிறார். 4 இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஏகமாய்க் கடந்துவந்தார்கள். 5 அவர்கள் அதைக் கண்டபோது பிரமித்துக் கலங்கி விரைந்தோடினார்கள். 6 அங்கே நடுக்கங்கொண்டு, பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயைப்போல வேதனைப்பட்டார்கள். 7 கீழ்க்காற்றினால் தர்ஷீசின் கப்பல்களை நீர் உடைக்கிறீர். 8 நாம் கேள்விப்பட்டபடியே நமது தேவனுடைய நகரமாகிய சேனைகளுடைய கர்த்தரின் நகரத்திலே கண்டோம்; தேவன் அதை என்றென்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். (சேலா.) 9 தேவனே, உமது ஆலயத்தின் நடுவிலே, உமது கிருபையைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். 10 தேவனே, உமது நாமம் விளங்குகிறதுபோல உமது புகழ்ச்சியும் பூமியின் கடையாந்தரங்கள் பரியந்தமும் விளங்குகிறது; உமது வலதுகரம் நீதியால் நிறைந்திருக்கிறது. 11 உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் மகிழ்வதாக, யூதாவின் குமாரத்திகள் களிகூருவார்களாக. 12 சீயோனைச் சுற்றி உலாவி, அதின் கொத்தளங்களை எண்ணுங்கள். 13 பின்வரும் சந்ததிக்கு நீங்கள் விவரிப்பதற்காக, அதின் அலங்கத்தைக் கவனித்து, அதின் அரமனைகளை உற்றுப்பாருங்கள். 14 இந்தத் தேவன் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நம்முடைய தேவன்; மரணபரியந்தம் நம்மை நடத்துவார்.

சங்கீதம் 49

1 ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள். 2 பூமியின் குடிகளே, சிறியோரும் பெரியோரும் ஐசுவரியவான்களும் எளியவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் ஏகமாய்ச் செவிகொடுங்கள். 3 என் வாய் ஞானத்தைப் பேசும்; என் இருதயம் உணர்வைத் தியானிக்கும். 4 என் செவியை உவமைமொழிக்குச் சாய்த்து, என் மறைபொருளைச் சுரமண்டலத்தின்மேல் வெளிப்படுத்துவேன். 5 என்னைத் தொடருகிறவர்களுடைய அக்கிரமம் என்னைச் சூழ்ந்துகொள்ளுந் தீங்குநாட்களில், நான் பயப்படவேண்டியதென்ன? 6 தங்கள் செல்வத்தை நம்பி தங்கள் திரளான ஐசுவரியத்தினால் பெருமைபாராட்டுகிற, 7 ஒருவனாவது, தன் சகோதரன் அழிவைக் காணாமல் இனி என்றைக்கும் உயிரோடிருக்கும்படி, 8 எவ்விதத்தினாலாவது அவனை மீட்டுக்கொள்ளவும், அவனிமித்தம் மீட்கும்பொருளை தேவனுக்குக் கொடுக்கவுங்கூடாதே. 9 அவர்கள் ஆத்துமமீட்பு மிகவும் அருமையாயிருக்கிறது; அது ஒருபோதும் முடியாது. 10 ஞானிகளும் மரித்து, அஞ்ஞானிகளும் நிர்மூடரும் ஏகமாய் அழிந்து, தங்கள் ஆஸ்தியை மற்றவர்களுக்கு வைத்துப்போகிறதைக் காண்கிறான். 11 தங்கள் வீடுகள் நித்தியகாலமாகவும், தங்கள் வாசஸ்தலங்கள் தலைமுறை தலைமுறையாகவும் இருக்குமென்பது அவர்கள் உள்ளத்தின் அபிப்பிராயம்; அவர்கள் தங்கள் நாமங்களைத் தங்கள் நிலங்களுக்குத் தரிக்கிறார்கள். 12 ஆகிலும் கனம்பொருந்தியவனாயிருக்கிற மனுஷன் நிலைத்திருக்கிறதில்லை; அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். 13 இதுதான் அவர்கள் வழி, இதுதான் அவர்கள் பைத்தியம்; ஆகிலும் அவர்கள் சந்ததியார் அவர்கள் சொல்லை மெச்சிக்கொள்ளுகிறார்கள். (சேலா.) 14 ஆட்டுமந்தையைப்போலப் பாதாளத்திலே கிடத்தப்படுகிறார்கள்; மரணம் அவர்களை மேய்ந்துபோடும்; செம்மையானவர்கள் அதிகாலையில் அவர்களை ஆண்டுகொள்வார்கள்; அவர்கள் தங்கள் வாசஸ்தலத்தில் நிலைத்திருக்கக்கூடாதபடி அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும். 15 ஆனாலும் தேவன் என் ஆத்துமாவைப் பாதாளத்தின் வல்லமைக்குத் தப்புவித்து மீட்பார், அவர் என்னை ஏற்றுக்கொள்வார். (சேலா.) 16 ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே. 17 அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை. 18 அவன் உயிரோடிருக்கையில் தன் ஆத்துமாவை வாழ்த்தினாலும்: நீ உனக்கு நன்மையை நாடினாய் என்று மனுஷர் அவனைப் புகழ்ந்தாலும், 19 அவன் என்றென்றைக்கும் வெளிச்சத்தைக் காணாத தன் பிதாக்களின் சந்ததியைச் சேருவான். 20 கனம் பொருந்தினவனாயிருந்தும் அறிவில்லாத மனுஷன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான்.

சங்கீதம் 50

1 வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் வசனித்து, சூரியன் உதிக்குந் திசைதொடங்கி அது அஸ்தமிக்குந் திசைவரைக்குமுள்ள பூமியைக் கூப்பிடுகிறார். 2 பூரணவடிவுள்ள சீயோனிலிருந்து தேவன் பிரகாசிக்கிறார். 3 நம்முடைய தேவன் வருவார், மவுனமாயிரார்; அவருக்குமுன் அக்கினி பட்சிக்கும்; அவரைச் சுற்றிலும் மகா புசல் கொந்தளிப்பாயிருக்கும். 4 அவர் தம்முடைய ஜனத்தை நியாயந்தீர்க்க உயர இருக்கும் வானங்களையும் பூமியையும் கூப்பிடுவார். 5 பலியினாலே என்னோடே உடன்படிக்கை பண்ணின என்னுடைய பரிசுத்தவான்களை என்னிடத்தில் கூட்டுங்கள் என்பார். 6 வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி. (சேலா.) 7 என் ஜனமே, கேள், நான் பேசுவேன்; இஸ்ரவேலே, உனக்கு விரோதமாய்ச் சாட்சியிடுவேன்; நானே தேவன், உன் தேவனாயிருக்கிறேன். 8 உன் பலிகளினிமித்தம் உன்னைக் கடிந்துகொள்ளேன்; உன் தகனபலிகள் எப்போதும் எனக்கு முன்பாக இருக்கிறது. 9 உன் வீட்டிலிருந்து காளைகளையும், உன் தொழுவங்களிலிருந்து ஆட்டுக்கடாக்களையும் நான் வாங்கிக்கொள்வதில்லை. 10 சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள். 11 மலைகளிலுள்ள பறவைகளையெல்லாம் அறிவேன்; வெளியில் நடமாடுகிறவைகளெல்லாம் என்னுடையவைகள். 12 நான் பசியாயிருந்தால் உனக்குச் சொல்லேன்; பூமியும் அதின் நிறைவும் என்னுடையவைகளே. 13 நான் எருதுகளின் மாம்சம் புசித்து, ஆட்டுக்கடாக்களின் இரத்தம் குடிப்பேனோ? 14 நீ தேவனுக்கு ஸ்தோத்திரபலியிட்டு, உன்னதமானவருக்கு உன் பொருத்தனைகளைச் செலுத்தி; 15 ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய். 16 தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு. 17 சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய். 18 நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப்போகிறாய்; விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு. 19 உன் வாயைப் பொல்லாப்புக்குத் திறக்கிறாய், உன் நாவு சற்பனையைப் பிணைக்கிறது. 20 நீ உட்கார்ந்து உன் சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, உன் தாயின் மகனுக்கு அவதூறு உண்டாக்குகிறாய். 21 இவைகளை நீ செய்யும்போது நான் மவுனமாயிருந்தேன், உன்னைப்போல் நானும் இருப்பேன் என்று நினைவு கொண்டாய்; ஆனாலும் நான் உன்னைக் கடிந்துகொண்டு, அவைகளை உன் கண்களுக்கு முன்பாக ஒவ்வொன்றாக நிறுத்துவேன். 22 தேவனை மறக்கிறவர்களே, இதைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் நான் உங்களைப் பீறிப்போடுவேன், ஒருவரும் உங்களை விடுவிப்பதில்லை. 23 ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

சங்கீதம் 51

1 தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும், உமது மிகுந்த இரக்கங்களின்படி என் மீறுதல்கள் நீங்க என்னைச் சுத்திகரியும். 2 என் அக்கிரமம் நீங்க என்னை முற்றிலும் கழுவி, என் பாவமற என்னைச் சுத்திகரியும். 3 என் மீறுதல்களை நான் அறிந்திருக்கிறேன்; என் பாவம் எப்பொழுதும் எனக்கு முன்பாக நிற்கிறது. 4 தேவரீர் ஒருவருக்கே விரோதமாக நான் பாவஞ்செய்து, உமது கண்களுக்கு முன்பாகப் பொல்லாங்கானதை நடப்பித்தேன்; நீர் பேசும்போது உம்முடைய நீதி விளங்கவும், நீர் நியாயந்தீர்க்கும்போது உம்முடைய பரிசுத்தம் விளங்கவும் இதை அறிக்கையிடுகிறேன். 5 இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள். 6 இதோ, உள்ளத்தில் உண்மையிருக்க விரும்புகிறீர்; அந்தக்கரணத்தில் ஞானத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர். 7 நீர் என்னை ஈசோப்பினால் சுத்திகரியும், அப்பொழுது நான் சுத்தமாவேன்; என்னைக் கழுவியருளும், அப்பொழுது நான் உறைந்த மழையிலும் வெண்மையாவேன். 8 நான் சந்தோஷமும் மகிழ்ச்சியும் கேட்கும்படி செய்யும், அப்பொழுது நீர் நொறுக்கின எலும்புகள் களிகூரும். 9 என் பாவங்களைப் பாராதபடிக்கு நீர் உமது முகத்தை மறைத்து, என் அக்கிரமங்களையெல்லாம் நீக்கியருளும். 10 தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். 11 உமது சமுகத்தை விட்டு என்னைத் தள்ளாமலும், உமது பரிசுத்த ஆவியை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளாமலும் இரும். 12 உமது இரட்சணியத்தின் சந்தோஷத்தைத் திரும்பவும் எனக்குத் தந்து, உற்சாகமான ஆவி என்னைத் தாங்கும்படி செய்யும். 13 அப்பொழுது பாதகருக்கு உமது வழிகளை உபதேசிப்பேன்; பாவிகள் உம்மிடத்தில் மனந்திரும்புவார்கள். 14 தேவனே, என்னை இரட்சிக்குந் தேவனே, இரத்தப்பழிகளுக்கு என்னை நீங்கலாக்கிவிடும்; அப்பொழுது என் நாவு உம்முடைய நீதியைக் கெம்பீரமாய்ப்பாடும். 15 ஆண்டவரே, என் உதடுகளைத் திறந்தருளும்; அப்பொழுது என் வாய் உம்முடைய புகழை அறிவிக்கும். 16 பலியை நீர் விரும்புகிறதில்லை, விரும்பினால் செலுத்துவேன்; தகனபலியும் உமக்குப் பிரியமானதல்ல. 17 தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். 18 சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மைசெய்யும்; எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக. 19 அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின் பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.

சங்கீதம் 52

1 பலவானே, பொல்லாப்பில் ஏன் பெருமைபாராட்டுகிறாய்? தேவனுடைய கிருபை எந்நாளுமுள்ளது. 2 நீ கேடுகளைச் செய்ய எத்தனம்பண்ணுகிறாய், கபடுசெய்யும் உன் நாவு தீட்டப்பட்ட சவரகன் கத்தியைப்போல் இருக்கிறது. 3 நன்மையைப்பார்க்கிலும் தீமையையும், யதார்த்தம் பேசுகிறதைப்பார்க்கிலும் பொய்யையும் விரும்புகிறாய். (சேலா.) 4 கபடமுள்ள நாவே, சங்கரிக்கும் சகல வார்த்தைகளையும் நீ விரும்புகிறாய். 5 தேவன் உன்னை என்றென்றைக்கும் இராதபடி அழித்துப்போடுவார்; அவர் உன்னைப் பிடித்து, உன் வாசஸ்தலத்திலிருந்து பிடுங்கி, நீ ஜீவனுள்ளோர் தேசத்தில் இராதபடிக்கு உன்னை நிர்மூலமாக்குவார். (சேலா.) 6 நீதிமான்கள் அதைக் கண்டு பயந்து, அவனைப்பார்த்து நகைத்து: 7 இதோ, தேவனைத் தன் பெலனாக எண்ணாமல், தன் செல்வப்பெருக்கத்தை நம்பி, தன் தீவினையில் பலத்துக்கொண்ட மனுஷன் இவன்தான் என்பார்கள். 8 நானோ தேவனுடைய ஆலயத்தில் பச்சையான ஒலிவமரத்தைப்போலிருக்கிறேன், தேவனுடைய கிருபையை என்றென்றைக்கும் நம்பியிருக்கிறேன். 9 நீரே இதைச் செய்தீர் என்று உம்மை என்றென்றைக்கும் துதித்து, உமது நாமத்திற்குக் காத்திருப்பேன்; உம்முடைய பரிசுத்தவான்களுக்கு முன்பாக அது நலமாயிருக்கிறது.

சங்கீதம் 53

1 தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை. 2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார். 3 அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. 4 அக்கிரமக்காரருக்கு அறிவு இல்லையா? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல் என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ளுகிறதில்லை. 5 உனக்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளைத் தேவன் சிதறப்பண்ணினபடியால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய். 6 சீயோனிலிருந்து இஸ்ரவேலுக்கு இரட்சிப்பு வருவதாக; தேவன் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும் இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்.

சங்கீதம் 54

1 தேவனே, உமது நாமத்தினிமித்தம் என்னை இரட்சித்து, உமது வல்லமையினால் எனக்கு நியாயஞ்செய்யும். 2 தேவனே, என் விண்ணப்பத்தைக்கேட்டு, என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடும். 3 அந்நியர் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்; கொடியர் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்; தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்கார்கள். (சேலா.) 4 இதோ, தேவன் எனக்குச் சகாயர்; ஆண்டவர் என் ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடே இருக்கிறார். 5 அவர் என் சத்துருக்களுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார், உமது சத்தியத்தினிமித்தம் அவர்களை நிர்மூலமாக்கும். 6 உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்; கர்த்தாவே, உமது நாமத்தைத் துதிப்பேன், அது நலமானது. 7 அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்; என் கண் என் சத்துருக்களில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.

சங்கீதம் 55

1 தேவனே, என் ஜெபத்தைக் கேட்டருளும்; என் விண்ணப்பத்திற்கு மறைந்திராதேயும். 2 எனக்குச் செவிகொடுத்து, உத்தரவு அருளிச்செய்யும்; சத்துருவினுடைய கூக்குரலினிமித்தமும், துன்மார்க்கர் செய்யும் இடுக்கத்தினிமித்தமும் என் தியானத்தில் முறையிடுகிறேன். 3 அவர்கள் என்மேல் பழிசாட்டி, குரோதங்கொண்டு, என்னைப் பகைக்கிறார்கள். 4 என் இருதயம் எனக்குள் வியாகுலப்படுகிறது; மரணத்திகில் என்மேல் விழுந்தது. 5 பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று. 6 அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன். 7 நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். (சேலா.) 8 பெருங்காற்றுக்கும் புசலுக்கும் தப்பத் தீவிரித்துக்கொள்ளுவேன் என்றேன். 9 ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்; 10 அவைகள் இரவும் பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது; அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது; 11 கேடுபாடுகள் அதின் நடுவில் இருக்கிறது; கொடுமையும் கபடும் அதின் வீதியை விட்டு விலகிப்போகிறதில்லை. 12 என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன். 13 எனக்குச் சமமான மனுஷனும், என் வழிகாட்டியும், என் தோழனுமாகிய நீயே அவன். 14 நாம் ஒருமித்து, இன்பமான ஆலோசனைபண்ணி, கூட்டத்தோடே தேவாலயத்துக்குப் போனோம். 15 மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடே பாதாளத்தில் இறங்குவார்களாக; அவர்கள் வாசஸ்தலங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் பொல்லாங்கு இருக்கிறது. 16 நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார். 17 அந்திசந்தி மத்தியான வேளைகளிலும் நான் தியானம்பண்ணி முறையிடுவேன்; அவர் என் சத்தத்தைக் கேட்பார். 18 திரளான கூட்டமாய்க் கூடி என்னோடு எதிர்த்தார்கள்; அவரோ எனக்கு நேரிட்ட போரை நீக்கி, என் ஆத்துமாவைச் சமாதானத்துடன் மீட்டுவிட்டார். 19 ஆதிமுதலாய் வீற்றிருக்கிற தேவன் கேட்டு, அவர்களுக்குப் பதிலளிப்பார்; அவர்களுக்கு மாறுதல்கள் நேரிடாததினால், அவர்கள் தேவனுக்குப் பயப்படாமற்போகிறார்கள். (சேலா.) 20 அவன் தன்னோடே சமாதானமாயிருந்தவர்களுக்கு விரோதமாய் தன் கையை நீட்டி, தன் உடன்படிக்கையை மீறி நடந்தான். 21 அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள். 22 கர்த்தர்மேல் உன் பாரத்தை வைத்துவிடு, அவர் உன்னை ஆதரிப்பார்; நீதிமானை ஒருபோதும் தள்ளாடவொட்டார். 23 தேவனே, நீர் அவர்களை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்தப்பிரியரும் சூதுள்ள மனுஷரும் தங்கள் ஆயுளின் நாட்களில் பாதிவரையிலாகிலும் பிழைத்திருக்கமாட்டார்கள்; நானோ உம்மை நம்பியிருக்கிறேன்.

சங்கீதம் 56

1 தேவனே, எனக்கு இரங்கும்; மனுஷன் என்னை விழுங்கப்பார்க்கிறான்; நாள்தோறும் போர்செய்து, என்னை ஒடுக்குகிறான். 2 என் சத்துருக்கள் நாள்தோறும் என்னை விழுங்கப்பார்க்கிறார்கள்; உன்னதமானவரே, எனக்கு விரோதமாய் அகங்கரித்துப் போர்செய்கிறவர்கள் அநேகர். 3 நான் பயப்படுகிற நாளில் உம்மை நம்புவேன். 4 தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மாம்சமானவன் எனக்கு என்ன செய்வான்? 5 நித்தமும் என் வார்த்தைகளைப் புரட்டுகிறார்கள்; எனக்குத் தீங்குசெய்வதே அவர்கள் முழு எண்ணமாயிருக்கிறது. 6 அவர்கள் ஏகமாய்க் கூடி, பதிவிருக்கிறார்கள்; என் பிராணனை வாங்க விரும்பி, என் காலடிகளைத் தொடர்ந்துவருகிறார்கள். 7 அவர்கள் தங்கள் அக்கிரமத்தினால் தப்புவார்களோ? தேவனே, கோபங்கொண்டு ஜனங்களைக் கீழே தள்ளும். 8 என் அலைச்சல்களைத் தேவரீர் எண்ணியிருக்கிறீர்; என் கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ இருக்கிறது? 9 நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் நாளில் என் சத்துருக்கள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; தேவன் என் பட்சத்தில் இருக்கிறார் என்பதை அறிவேன். 10 தேவனை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன்; கர்த்தரை முன்னிட்டு அவருடைய வார்த்தையைப் புகழுவேன். 11 தேவனை நம்பியிருக்கிறேன், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்? 12 தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனைகள் என்மேல் இருக்கிறது; உமக்கு ஸ்தோத்திரங்களைச் செலுத்துவேன். 13 நான் தேவனுக்கு முன்பாக ஜீவனுள்ளோருடைய வெளிச்சத்திலே நடக்கும்படி, நீர் என் ஆத்துமாவை மரணத்துக்கும் என் கால்களை இடறலுக்கும் தப்புவியாதிருப்பீரோ?

சங்கீதம் 57

1 எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன். 2 எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன். 3 என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார்: (சேலா.) தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார். 4 என் ஆத்துமா சிங்கங்களின் நடுவிலிருக்கிறது; தீயை இறைக்கிற மனுபுத்திரருக்குள்ளே கிடக்கிறேன்; அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது. 5 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. 6 என் கால்களுக்குக் கண்ணியை வைத்திருக்கிறார்கள்; என் ஆத்துமா தொய்ந்துபோயிற்று; எனக்கு முன்பாகக் குழியை வெட்டி, அதின் நடுவிலே விழுந்தார்கள். (சேலா.) 7 என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது, தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம்பண்ணுவேன். 8 என் மகிமையே, விழி; வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; அதிகாலையில் விழித்துக்கொள்வேன். 9 ஆண்டவரே, ஜனங்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். 10 உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்பரியந்தமும் எட்டுகிறது. 11 தேவனே, வானங்களுக்குமேலாக உயர்ந்தருளும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.

சங்கீதம் 58

1 மவுனமாயிருக்கிறவர்களே, நீங்கள் மெய்யாய் நீதியைப் பேசுவீர்களோ? மனுபுத்திரரே, நியாயமாய்த் தீர்ப்புசெய்வீர்களோ? 2 மனதார நியாயக்கேடு செய்கிறீர்கள்; பூமியிலே உங்கள் கைகளின் கொடுமையை நிறுத்துக் கொடுக்கிறீர்கள். 3 துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் பொய் சொல்லி வழிதப்பிப் போகிறார்கள். 4 சர்ப்பத்தின் விஷத்திற்கு ஒப்பான விஷம் அவர்களில் இருக்கிறது. 5 பாம்பாட்டிகள் விநோதமாய் ஊதினாலும் அவர்கள் ஊதும் சத்தத்திற்குச் செவிகொடாதபடிக்குத் தன் காதை அடைக்கிற செவிட்டு விரியனைப்போல் இருக்கிறார்கள். 6 தேவனே, அவர்கள் வாயிலுள்ள பற்களைத் தகர்த்துப்போடும்; கர்த்தாவே, பாலசிங்கங்களின் கடைவாய்ப்பற்களை நொறுக்கிப்போடும். 7 கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; அவன் தன் அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாய்ப் போகக்கடவது. 8 கரைந்துபோகிற நத்தையைப்போல் ஒழிந்துபோவார்களாக; ஸ்திரீயின் முதிராப் பிண்டத்தைப்போல் சூரியனைக் காணாதிருப்பார்களாக. 9 முள் நெருப்பினால் உங்கள் பானைகளில் சூடேறுமுன்னே பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் சுழல்காற்றினால் அடித்துக்கொண்டுபோவார். 10 பழிவாங்குதலை நீதிமான் காணும்போது மகிழுவான்; அவன் தன் பாதங்களைத் துன்மார்க்கனுடைய இரத்தத்திலே கழுவுவான். 11 அப்பொழுது, மெய்யாய் நீதிமானுக்குப் பலன் உண்டென்றும், மெய்யாய் பூமியிலே நியாயஞ்செய்கிற தேவன் உண்டென்றும் மனுஷன் சொல்லுவான்.

சங்கீதம் 59

1 என் தேவனே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; என்மேல் எழும்புகிறவர்களுக்கு என்னை விலக்கி உயர்ந்த அடைக்கலத்திலே வையும். 2 அக்கிரமக்காரருக்கு என்னைத் தப்புவித்து, இரத்தப்பிரியரான மனுஷருக்கு என்னை விலக்கி இரட்சியும். 3 இதோ, என் பிராணனுக்குப் பதிவிருக்கிறார்கள்; கர்த்தாவே, என்னிடத்தில் மீறுதலும் பாவமும் இல்லாதிருந்தும், பலவான்கள் எனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடுகிறார்கள். 4 என்னிடத்தில் அக்கிரமம் இல்லாதிருந்தும், ஓடித்திரிந்து யுத்தத்துக்கு ஆயத்தமாகிறார்கள்; எனக்குத் துணைசெய்ய விழித்து என்னை நோக்கிப்பாரும். 5 சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலின் தேவனே, நீர் சகல ஜாதிகளையும் விசாரிக்க விழித்தெழும்பும்; வஞ்சகமாய்த் துரோகஞ்செய்கிற ஒருவருக்கும் தயை செய்யாதேயும். (சேலா.) 6 அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். 7 இதோ, தங்கள் வார்த்தைகளைக் கக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளில் பட்டயங்கள் இருக்கிறது, கேட்கிறவன் யார் என்கிறார்கள். 8 ஆனாலும் கர்த்தாவே, நீர் அவர்களைப் பார்த்து நகைப்பீர்; புறஜாதிகள் யாவரையும் இகழுவீர். 9 அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம். 10 என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்குவரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார். 11 அவர்களைக் கொன்றுபோடாதேயும், என் ஜனங்கள் மறந்துபோவார்களே; எங்கள் கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும். 12 அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக. 13 தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்பொருட்டு, அவர்களை உம்முடைய உக்கிரத்திலே நிர்மூலமாக்கும்; இனி இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கும். (சேலா.) 14 அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள். 15 அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள். 16 நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர். 17 என் பெலனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.

சங்கீதம் 60

1 தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும். 2 பூமியை அதிரப்பண்ணி, அதை வெடிப்பாக்கினீர்; அதின் வெடிப்புகளைப் பொருந்தப்பண்ணும்; அது அசைகின்றது. 3 உம்முடைய ஜனங்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர். 4 சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா.) 5 உமது பிரியர் விடுவிக்கப்படும்படி, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எனக்குச் செவிகொடுத்தருளும். 6 தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன். 7 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன். 8 மோவாப் என் பாதபாத்திரம், ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள். 9 அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவர் யார்? 10 எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீர் அல்லவோ? 11 இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா. 12 தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.

சங்கீதம் 61

1 தேவனே, என் கூப்பிடுதலைக் கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும். 2 என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும். 3 நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர். 4 நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா.) 5 தேவனே, நீர் என் பொருத்தனைகளைக் கேட்டீர்; உமது நாமத்திற்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர். 6 ராஜாவின் நாட்களோடே நாட்களைக் கூட்டுவீர்; அவர் வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். 7 அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்; தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும். 8 இப்படியே தினமும் என் பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக, உமது நாமத்தை என்றைக்கும் கீர்த்தனம்பண்ணுவேன்.

சங்கீதம் 62

1 தேவனையே நோக்கி என் ஆத்துமா அமர்ந்திருக்கிறது; அவரால் என் இரட்சிப்பு வரும். 2 அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அதிகமாய் அசைக்கப்படுவதில்லை. 3 நீங்கள் எதுவரைக்கும் ஒரு மனுஷனுக்குத் தீங்குசெய்ய நினைப்பீர்கள், நீங்கள் அனைவரும் சங்கரிக்கப்படுவீர்கள், சாய்ந்தமதிலுக்கும் இடிந்தசுவருக்கும் ஒப்பாவீர்கள். 4 அவனுடைய மேன்மையிலிருந்து அவனைத் தள்ளும்படிக்கே அவர்கள் ஆலோசனைபண்ணி, அபத்தம்பேச விரும்புகிறார்கள்; தங்கள் வாயினால் ஆசீர்வதித்து, தங்கள் உள்ளத்தில் சபிக்கிறார்கள். (சேலா.) 5 என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி அமர்ந்திரு; நான் நம்புகிறது அவராலே வரும். 6 அவரே என் கன்மலையும், என் இரட்சிப்பும், என் உயர்ந்த அடைக்கலமுமானவர்; நான் அசைக்கப்படுவதில்லை. 7 என் இரட்சிப்பும், என் மகிமையும் தேவனிடத்தில் இருக்கிறது; பெலனான என் கன்மலையும் என் அடைக்கலமும் தேவனுக்குள் இருக்கிறது. 8 ஜனங்களே, எக்காலத்திலும் அவரை நம்புங்கள்; அவர் சமுகத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்; தேவன் நமக்கு அடைக்கலமாயிருக்கிறார். (சேலா.) 9 கீழ்மக்கள் மாயையும், மேன்மக்கள் பொய்யுமாமே; தராசிலே வைக்கப்பட்டால் அவர்களெல்லாரும் மாயையிலும் லேசானவர்கள். 10 கொடுமையை நம்பாதிருங்கள்; கொள்ளையினால் பெருமைபாராட்டாதிருங்கள்; ஐசுவரியம் விருத்தியானால் இருதயத்தை அதின்மேல் வைக்காதேயுங்கள். 11 தேவன் ஒருதரம் விளம்பினார், இரண்டுதரம் கேட்டிருக்கிறேன்; வல்லமை தேவனுடையது என்பதே. 12 கிருபையும் உம்முடையது, ஆண்டவரே! தேவரீர் அவனவன் செய்கைக்குத் தக்கதாகப் பலனளிக்கிறீர்.

சங்கீதம் 63

1 தேவனே, நீர் என்னுடைய தேவன்; அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது, என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது. 2 இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ஆசையாயிருந்து, உமது வல்லமையையும் உமது மகிமையையும் கண்டேன். 3 ஜீவனைப்பார்க்கிலும் உமது கிருபை நல்லது; என் உதடுகள் உம்மைத் துதிக்கும். 4 என் ஜீவனுள்ளமட்டும் நான் உம்மைத் துதித்து, உமது நாமத்தைச் சொல்லிக் கையெடுப்பேன். 5 நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும். 6 என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன். 7 நீர் எனக்குத் துணையாயிருந்ததினால், உமது செட்டைகளின் நிழலிலே களிகூருகிறேன். 8 என் ஆத்துமா உம்மைத் தொடர்ந்து பற்றிக்கொண்டிருக்கிறது; உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது. 9 என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்களோ, பூமியின் தாழ்விடங்களில் இறங்குவார்கள். 10 அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; நரிகளுக்கு இரையாவார்கள். 11 ராஜாவோ தேவனில் களிகூருவார்; அவர்பேரில் சத்தியம்பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்; பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.

சங்கீதம் 64

1 தேவனே, என் விண்ணப்பத்தில் என் சத்தத்தைக் கேட்டருளும்; சத்துருவால் வரும் பயத்தை நீக்கி, என் பிராணனைக் காத்தருளும். 2 துன்மார்க்கர் செய்யும் இரகசிய ஆலோசனைக்கும், அக்கிரமக்காரருடைய கலகத்துக்கும் என்னை விலக்கி மறைத்தருளும். 3 அவர்கள் தங்கள் நாவைப் பட்டயத்தைப்போல் கூர்மையாக்கி, 4 மறைவுகளில் உத்தமன்மேல் எய்யும்பொருட்டுக் கசப்பான வார்த்தைகளாகிய தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றிச் சடிதியில் அவன்மேல் எய்கிறார்கள். 5 அவர்கள் பொல்லாத காரியத்தில் தங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, மறைவான கண்ணிகளை வைக்க ஆலோசனைபண்ணி, அவைகளைக் காண்பவன் யார் என்கிறார்கள். 6 அவர்கள் நியாயக்கேடுகளை ஆய்ந்துதேடி, தந்திரமான யோசனை நிறைவேறும்படி பிரயத்தனம்பண்ணுகிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுடைய உட்கருத்தும் இருதயமும் ஆழமாயிருக்கிறது. 7 ஆனாலும் தேவன் அவர்கள்மேல் அம்புகளை எய்வார், சடிதியாய் அவர்கள் காயப்படுவார்கள். 8 அவர்கள் தள்ளப்பட்டு, கீழேவிழும்படி அவர்கள் நாவுகளே அவர்களைக் கெடுக்கும்; அவர்களைக் காண்கிற யாவரும் ஓடிப்போவார்கள். 9 எல்லா மனுஷரும் பயந்து, தேவனுடைய செயலை அறிவித்து, அவர் கிரியையை உணர்ந்துகொள்வார்கள். 10 நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான்; செம்மையான இருதயமுள்ளவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்.

சங்கீதம் 65

1 தேவனே, சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது; பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும். 2 ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள். 3 அக்கிரம விஷயங்கள் என்மேல் மிஞ்சி வல்லமைகொண்டது; தேவரீரோ எங்கள் மீறுதல்களை நிவிர்த்தியாக்குகிறீர். 4 உம்முடைய பிராகாரங்களில் வாசமாயிருக்கும்படி நீர் தெரிந்துகொண்டு சேர்த்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான்; உம்முடைய பரிசுத்த ஆலயமாகிய உமது வீட்டின் நன்மையால் திருப்தியாவோம். 5 பூமியின் கடையாந்தரங்களிலும் தூரமான சமுத்திரங்களிலுமுள்ளவர்கள் எல்லாரும் நம்பும் நம்பிக்கையாயிருக்கிற எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்தரவு அருளுகிறீர். 6 வல்லமையை இடைகட்டிக்கொண்டு, உம்முடைய பலத்தினால் பர்வதங்களை உறுதிப்படுத்தி, 7 சமுத்திரங்களின் மும்முரத்தையும் அவைகளுடைய அலைகளின் இரைச்சலையும், ஜனங்களின் அமளியையும் அமர்த்துகிறீர். 8 கடையாந்தர இடங்களில் குடியிருக்கிறவர்களும் உம்முடைய அடையாளங்களினிமித்தம் பயப்படுகிறார்கள்; காலையையும் மாலையையும் களிகூரப்பண்ணுகிறீர். 9 தேவரீர் பூமியை விசாரித்து அதற்கு நீர்ப்பாய்ச்சுகிறீர்; தண்ணீர் நிறைந்த தேவநதியினால் அதை மிகவும் செழிப்பாக்குகிறீர்; இப்படி நீர் அதைத் திருத்தி, அவர்களுக்குத் தானியத்தை விளைவிக்கிறீர். 10 அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர். 11 வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர்; உமது பாதைகள் நெய்யாய்ப் பொழிகிறது. 12 வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது. 13 மேய்ச்சலுள்ள வெளிகளில் ஆடுகள் நிறைந்திருக்கிறது; பள்ளத்தாக்குகள் தானியத்தால் மூடியிருக்கிறது; அவைகள் கெம்பீரித்துப் பாடுகிறது.

சங்கீதம் 66

1 பூமியின் குடிகளே, நீங்கள் எல்லாரும் தேவனுக்கு முன்பாகக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். 2 அவர் நாமத்தின் மகத்துவத்தைக் கீர்த்தனம்பண்ணி, அவருடைய துதியின் மகிமையைக் கொண்டாடுங்கள். 3 தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்துருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள். 4 பூமியின்மீதெங்கும் உம்மைப் பணிந்துகொண்டு உம்மைத் துதித்துப் பாடுவார்கள்; அவர்கள் உம்முடைய நாமத்தைத் துதித்துப் பாடுவார்கள் என்று சொல்லுங்கள். (சேலா.) 5 தேவனுடைய செய்கைகளை வந்து பாருங்கள்; அவர் மனுபுத்திரரிடத்தில் நடப்பிக்குங் கிரியையில் பயங்கரமானவர். 6 கடலை உலர்ந்த தரையாக மாற்றினார்; ஆற்றைக் கால்நடையாய்க் கடந்தார்கள்; அங்கே அவரில் களிகூர்ந்தோம். 7 அவர் தம்முடைய வல்லமையினால் என்றென்றைக்கும் அரசாளுகிறார்; அவருடைய கண்கள் ஜாதிகள்மேல் நோக்கமாயிருக்கிறது; துரோகிகள் தங்களை உயர்த்தாதிருப்பார்களாக. (சேலா.) 8 ஜனங்களே, நம்முடைய தேவனை ஸ்தோத்திரித்து, அவரைத் துதிக்குஞ்சத்தத்தைக் கேட்கப்பண்ணுங்கள். 9 அவர் நம்முடைய கால்களைத் தள்ளாடவொட்டாமல், நம்முடைய ஆத்துமாவை உயிரோடே வைக்கிறார். 10 தேவனே, எங்களைச் சோதித்தீர்; வெள்ளியைப் புடமிடுகிறதுபோல எங்களைப் புடமிட்டீர். 11 எங்களை வலையில் அகப்படுத்தி, எங்கள் இடுப்புகளின்மேல் வருத்தமான பாரத்தை ஏற்றினீர். 12 மனுஷரை எங்கள் தலையின்மேல் ஏறிப்போகப்பண்ணினீர்; தீயையும் தண்ணீரையும் கடந்துவந்தோம்; செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர். 13 சர்வாங்க தகனபலிகளோடே உமது ஆலயத்திற்குள் பிரவேசிப்பேன்; 14 என் இக்கட்டில் நான் என் உதடுகளைத் திறந்து, என் வாயினால் சொல்லிய என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன். 15 ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக இடுவேன்; காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா.) 16 தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன். 17 அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார். 18 என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார். 19 மெய்யாய் தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார். 20 என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

சங்கீதம் 67

1 தேவனே, பூமியில் உம்முடைய வழியும், எல்லா ஜாதிகளுக்குள்ளும் உம்முடைய இரட்சணியமும் விளங்கும்படியாய், 2 தேவரீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து, உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும். (சேலா.) 3 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக. 4 தேவரீர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள ஜாதிகளை நடத்துவீர்; ஆதலால் ஜாதிகள் சந்தோஷித்து, கெம்பீரத்தோடே மகிழக்கடவர்கள். (சேலா.) 5 தேவனே, ஜனங்கள் உம்மைத் துதிப்பார்களாக; சகல ஜனங்களும் உம்மைத் துதிப்பார்களாக. 6 பூமி தன் பலனைத் தரும், தேவனாகிய எங்கள் தேவனே எங்களை ஆசீர்வதிப்பார். 7 தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்; பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.

சங்கீதம் 68

1 தேவன் எழுந்தருளுவார், அவருடைய சத்துருக்கள் சிதறுண்டு, அவரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு முன்பாக ஓடிப்போவார்கள். 2 புகை பறக்கடிக்கப்படுவதுபோல அவர்களைப் பறக்கடிப்பீர்; மெழுகு அக்கினிக்குமுன் உருகுவதுபோல துன்மார்க்கர் தேவனுக்குமுன் அழிவார்கள். 3 நீதிமான்களோ தேவனுக்குமுன்பாக மகிழ்ந்து களிகூர்ந்து, ஆனந்த சந்தோஷமடைவார்கள். 4 தேவனைப் பாடி, அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; வனாந்தரங்களில் ஏறிவருகிறவருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருடைய நாமம் யேகோவா, அவருக்கு முன்பாகக் களிகூருங்கள். 5 தம்முடைய பரிசுத்த வாசஸ்தலத்திலிருக்கிற தேவன், திக்கற்ற பிள்ளைகளுக்குத் தகப்பனும், விதவைகளுக்கு நியாயம் விசாரிக்கிறவருமாயிருக்கிறார். 6 தேவன் தனிமையானவர்களுக்கு வீடுவாசல் ஏற்படுத்தி, கட்டுண்டவர்களை விடுதலையாக்குகிறார்; துரோகிகளோ வறண்ட பூமியில் தங்குவார்கள். 7 தேவனே, நீர் உம்முடைய ஜனங்களுக்கு முன்னே சென்று, அவாந்தரவெளியிலே நடந்துவருகையில், (சேலா.) 8 பூமி அதிர்ந்தது; தேவனாகிய உமக்கு முன்பாக வானமும் பொழிந்தது; இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற தேவனுக்கு முன்பாகவே இந்தச் சீனாய் மலையும் அசைந்தது. 9 தேவனே, சம்பூரண மழையைப் பெய்யப்பண்ணினீர்; இளைத்துப்போன உமது சுதந்தரத்தைத் திடப்படுத்தினீர். 10 உம்முடைய மந்தை அதிலே தங்கியிருந்தது; தேவனே, உம்முடைய தயையினாலே ஏழைகளைப் பராமரிக்கிறீர். 11 ஆண்டவர் வசனம் தந்தார்; அதைப் பிரசித்தப்படுத்துகிறவர்களின் கூட்டம் மிகுதி. 12 சேனைகளின் ராஜாக்கள் தத்தளித்து ஓடினார்கள்; வீட்டிலிருந்த ஸ்திரீயானவள் கொள்ளைப்பொருளைப் பங்கிட்டாள். 13 நீங்கள் அடுப்பினடியில் கிடந்தவர்களாயிருந்தாலும், வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட புறாச்சிறகுகள்போலவும், பசும்பொன் நிறமாகிய அதின் இறகுகளின் சாயலாகவும் இருப்பீர்கள். 14 சர்வவல்லவர் அதில் ராஜாக்களைச் சிதறடித்தபோது, அது சல்மோன் மலையின் உறைந்த மழைபோல் வெண்மையாயிற்று. 15 தேவபர்வதம் பாசான் பர்வதம்போலிருக்கிறது; பாசான் பர்வதம் உயர்ந்த சிகரங்களுள்ளது. 16 உயர்ந்த சிகரமுள்ள பர்வதங்களே, ஏன் துள்ளுகிறீர்கள்; இந்தப் பர்வதத்தில் வாசமாயிருக்க தேவன் விரும்பினார்; ஆம், கர்த்தர் இதிலே என்றென்றைக்கும் வாசமாயிருப்பார். 17 தேவனுடைய இரதங்கள் பதினாயிரங்களும், ஆயிரமாயிரங்களுமாயிருக்கிறது; ஆண்டவர் பரிசுத்த ஸ்தலமான சீனாயிலிருந்தவண்ணமாய் அவைகளுக்குள் இருக்கிறார். 18 தேவரீர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும் பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களைப் பெற்றுக்கொண்டீர். 19 எந்நாளும் ஆண்டவருக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; நம்மேல் பாரஞ்சுமத்தினாலும் நம்மை இரட்சிக்கிற தேவன் அவரே. (சேலா.) 20 நம்முடைய தேவன் இரட்சிப்பை அருளும் தேவனாயிருக்கிறார்; ஆண்டவராகிய கர்த்தரால் மரணத்திற்கு நீங்கும் வழிகளுண்டு. 21 மெய்யாகவே தேவன் தம்முடைய சத்துருக்களின் சிரசையும், தன் அக்கிரமங்களில் துணிந்து நடக்கிறவனுடைய மயிருள்ள உச்சந்தலையையும் உடைப்பார். 22 உன் கால்கள் சத்துருக்களின் இரத்தத்தில் பதியும்படியாகவும், உன் நாய்களின் நாவு அதை நக்கும்படியாகவும், 23 என்னுடைய ஜனத்தைப் பாசானிலிருந்து திரும்ப அழைத்துவருவேன்; அதைச் சமுத்திர ஆழங்களிலிருந்தும் திரும்ப அழைத்துவருவேன் என்று ஆண்டவர் சொன்னார். 24 தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; என் தேவனும் என் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்துவருகிற நடைகளையே கண்டார்கள். 25 முன்னாகப் பாடுகிறவர்களும், பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும், சுற்றிலும் தம்புரு வாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள். 26 இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். 27 அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், அவர்கள் கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், நப்தலியின் பிரபுக்களும் உண்டு. 28 உன் தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார்; தேவனே, நீர் எங்கள்நிமித்தம் உண்டுபண்ணினதைத் திடப்படுத்தும். 29 எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்தினிமித்தம், ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள். 30 நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், ஜனங்களாகிய கன்றுகளோடுகூட ரிஷப கூட்டத்தையும் அதட்டும்; ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான்; யுத்தங்களில் பிரியப்படுகிற ஜனங்களைச் சிதறடிப்பார். 31 பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்; எத்தியோப்பியா தேவனை நோக்கி கையெடுக்கத் தீவிரிக்கும். 32 பூமியின் ராஜ்யங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள். (சேலா.) 33 ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள்; இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாய் முழங்கப்பண்ணுகிறார். 34 தேவனுடைய வல்லமையைப் பிரசித்தப்படுத்துங்கள்; அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது. 35 தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாய் விளங்குகிறீர்; இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.

சங்கீதம் 69

1 தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது. 2 ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது. 3 நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று. 4 நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்க வேண்டியதாயிற்று. 5 தேவனே, நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை. 6 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என்னிமித்தம் வெட்கப்பட்டுப்போகாதிருப்பார்களாக; இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் நாணமடையாதிருப்பார்களாக. 7 உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று. 8 என் சகோதரருக்கு வேற்று மனுஷனும், என் தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன். 9 உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது. 10 என் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; அதுவும் எனக்கு நிந்தையாய் முடிந்தது. 11 இரட்டை என் உடுப்பாக்கினேன்; அப்பொழுதும் அவர்களுக்குப் பழமொழியானேன். 12 வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்; மதுபானம்பண்ணுகிறவர்களின் பாடலானேன். 13 ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரககாலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறேன்; தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும். 14 நான் அமிழ்ந்திப்போகாதபடிக்குச் சேற்றினின்று என்னைத் தூக்கிவிடும்; என்னைப் பகைக்கிறவர்களினின்றும் நிலையாத ஜலத்தினின்றும் நான் நீங்கும்படி செய்யும். 15 ஜலப்பிரவாகங்கள் என்மேல் புரளாமலும், ஆழம் என்னை விழுங்காமலும், பாதாளம் என்மேல் தன் வாயை அடைத்துக்கொள்ளாமலும் இருப்பதாக. 16 கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும், உம்முடைய தயை நலமாயிருக்கிறது; உமது உருக்கமான இரக்கங்களின்படி என்னைக் கடாட்சித்தருளும். 17 உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும். 18 நீர் என் ஆத்துமாவினிடத்தில் வந்து அதை விடுதலைபண்ணும்; என் சத்துருக்களினிமித்தம் என்னை மீட்டுவிடும். 19 தேவரீர் என் நிந்தையையும் என் வெட்கத்தையும் என் அவமானத்தையும் அறிந்திருக்கிறீர்; என் சத்துருக்கள் எல்லாரும் உமக்கு முன்பாக இருக்கிறார்கள். 20 நிந்தை என் இருதயத்தைப் பிளந்தது; நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், ஒருவனையும் காணேன். 21 என் ஆகாரத்தில் கசப்புக் கலந்து கொடுத்தார்கள், என் தாகத்துக்குக் காடியைக் குடிக்கக்கொடுத்தார்கள். 22 அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாயிருக்கக்கடவது. 23 அவர்களுடைய கண்கள் காணாதபடி அந்தகாரப்படக்கடவது; அவர்கள் இடுப்புகளை எப்போதும் தள்ளாடப்பண்ணும். 24 உம்முடைய உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றும்; உம்முடைய கோபாக்கினி அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக. 25 அவர்கள் வாசஸ்தலம் பாழாகக்கடவது; அவர்களுடைய கூடாரங்களில் குடியில்லாமற்போவதாக. 26 தேவரீர் அடித்தவனை அவர்கள் துன்பப்படுத்தி, நீர் காயப்படுத்தினவர்களை நோகப் பேசுகிறார்களே. 27 அக்கிரமத்தின்மேல் அக்கிரமத்தை அவர்கள்மேல் சுமத்தும், அவர்கள் உமது நீதிக்கு வந்தெட்டாதிருப்பார்களாக. 28 ஜீவபுஸ்தகத்திலிருந்து அவர்கள்பேர் கிறுக்கப்பட்டுப்போவதாக; நீதிமான்கள் பேரோடே அவர்கள் பேர் எழுதப்படாதிருப்பதாக. 29 நானோ சிறுமையும் துயரமுமுள்ளவன்; தேவனே, உம்முடைய இரட்சிப்பு எனக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக. 30 தேவனுடைய நாமத்தைப் பாட்டினால் துதித்து, அவரை ஸ்தோத்திரத்தினால் மகிமைப்படுத்துவேன். 31 கொம்பும் விரிகுளம்புமுள்ள காளையெருதைப்பார்க்கிலும், இதுவே கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும். 32 சாந்தகுணமுள்ளவர்கள் இதைக் கண்டு சந்தோஷப்படுவார்கள்; தேவனைத் தேடுகிறவர்களே, உங்கள் இருதயம் வாழும். 33 கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார், கட்டுண்ட தம்முடையவர்களை அவர் புறக்கணியார். 34 வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிற யாவும் அவரைத் துதிக்கக்கடவது. 35 தேவன் சீயோனை இரட்சித்து, யூதாவின் பட்டணங்களைக் கட்டுவார்; அப்பொழுது அங்கே குடியிருந்து அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். 36 அவருடைய ஊழியக்காரரின் சந்ததியார் அதைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்; அவருடைய நாமத்தை நேசிக்கிறவர்கள் அதில் வாசமாயிருப்பார்கள்.

சங்கீதம் 70

1 தேவனே, என்னை விடுவியும், கர்த்தாவே, எனக்குச் சகாயஞ்செய்யத் தீவிரியும். 2 என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் வெட்கி நாணுவார்களாக; எனக்குத் தீங்குவரும்படி விரும்புகிறவர்கள் பின்னிட்டுத் திரும்பி இலச்சையடைவார்களாக. 3 ஆ ஆ, ஆ ஆ, என்பவர்கள் தாங்கள் அடையும் வெட்கத்தினால் பின்னிட்டுப்போவார்களாக. 4 உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உமது இரட்சிப்பில் பிரியப்படுகிறவர்கள் தேவனுக்கு மகிமையுண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக. 5 நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.

சங்கீதம் 71

1 கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் ஒருபோதும் வெட்கம் அடையாதபடி செய்யும். 2 உமது நீதியினிமித்தம் என்னை விடுவித்து, என்னைக் காத்தருளும்; உமது செவியை எனக்குச் சாய்த்து, என்னை இரட்சியும். 3 நான் எப்பொழுதும் வந்தடையத்தக்கக் கன்மலையாயிரும்; என்னை இரட்சிப்பதற்குக் கட்டளையிட்டீரே; நீரே என் கன்மலையும் என் கோட்டையுமாய் இருக்கிறீர். 4 என் தேவனே, துன்மார்க்கனுடைய கைக்கும், நியாயக்கேடும் கொடுமையுமுள்ளவனுடைய கைக்கும் என்னைத் தப்புவியும். 5 கர்த்தராகிய ஆண்டவரே, நீரே என் நோக்கமும், என் சிறுவயதுதொடங்கி என் நம்பிக்கையுமாயிருக்கிறீர். 6 நான் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன். 7 அநேகருக்கு நான் ஒரு புதுமைப்போலானேன்; நீரோ எனக்குப் பலத்த அடைக்கலமாயிருக்கிறீர். 8 என் வாய் உமது துதியினாலும், நாள்தோறும் உமது மகத்துவத்தினாலும் நிறைந்திருப்பதாக. 9 முதிர்ந்தவயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும். 10 என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ப் பேசி, என் ஆத்துமாவுக்குக் காத்திருக்கிறவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணி: 11 தேவன் அவனைக் கைவிட்டார், அவனைத் தொடர்ந்துபிடியுங்கள்; அவனை விடுவிப்பார் இல்லை என்கிறார்கள். 12 தேவனே, எனக்குத் தூரமாயிராதேயும்; என் தேவனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும். 13 என் ஆத்துமாவை விரோதிக்கிறவர்கள் வெட்கி அழியவும், எனக்குப் பொல்லாப்புத் தேடுகிறவர்கள் நிந்தையாலும் இலச்சையாலும் மூடப்படவுங்கடவர்கள். 14 நானோ எப்பொழுதும் நம்பிக்கைகொண்டிருந்து, மேன்மேலும் உம்மைத் துதிப்பேன். 15 என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்; அவைகளின் தொகையை நான் அறியேன். 16 கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமையை முன்னிட்டு நடப்பேன்; உம்முடைய நீதியைப்பற்றியே மேன்மைபாராட்டுவேன். 17 தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன். 18 இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும்வரைக்கும் என்னைக் கைவிடீராக. 19 தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்? 20 அநேக இக்கட்டுகளையும் ஆபத்துகளையும் காணும்படி செய்த என்னை நீர் திரும்பவும் உயிர்ப்பித்து, திரும்பவும் என்னைப் பூமியின் பாதாளங்களிலிருந்து ஏறப்பண்ணுவீர். 21 என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர். 22 என் தேவனே, நான் வீணையைக்கொண்டு உம்மையும் உம்முடைய சத்தியத்தையும் துதிப்பேன்; இஸ்ரவேலின் பரிசுத்தரே, சுரமண்டலத்தைக்கொண்டு உம்மைப் பாடுவேன். 23 நான் பாடும்போது என் உதடுகளும், நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமாவும் கெம்பீரித்து மகிழும். 24 எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்.

சங்கீதம் 72

1 தேவனே, ராஜாவுக்கு உம்முடைய நியாயத்தீர்ப்புகளையும், ராஜாவின் குமாரனுக்கு உம்முடைய நீதியையும் கொடுத்தருளும். 2 அவர் உம்முடைய ஜனங்களை நீதியோடும், உம்முடைய ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார். 3 பர்வதங்கள் ஜனத்திற்குச் சமாதானத்தைத் தரும், மேடுகள் நீதியின் விளைவோடிருக்கும். 4 ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார். 5 சூரியனும் சந்திரனுமுள்ளமட்டும், அவர்கள் உமக்குத் தலைமுறை தலைமுறையாகப் பயந்திருப்பார்கள். 6 புல்லறுப்புண்ட வெளியின்மேல் பெய்யும் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் தூறலைப்போலவும் இறங்குவார். 7 அவருடைய நாட்களில் நீதிமான் செழிப்பான்; சந்திரனுள்ளவரைக்கும் மிகுந்த சமாதானம் இருக்கும். 8 ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார். 9 வனாந்தரத்தார் அவருக்கு முன்பாகக் குனிந்து வணங்குவார்கள்; அவருடைய சத்துருக்கள் மண்ணை நக்குவார்கள். 10 தர்ஷீசின் ராஜாக்களும் தீவுகளின் ராஜாக்களும் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்; ஷேபாவிலும் சேபாவிலுமுள்ள ராஜாக்கள் வெகுமானங்களைக் கொண்டுவருவார்கள். 11 சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள். 12 கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். 13 பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். 14 அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும். 15 அவர் பிழைத்திருப்பார், ஷேபாவின் பொன் அவருக்குக் கொடுக்கப்படும்; அவர்நிமித்தம் இடைவிடாமல் ஜெபம்பண்ணப்படும், எந்நாளும் ஸ்தோத்திரிக்கப்படுவார். 16 பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார் செழித்தோங்குவார்கள். 17 அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியனுள்ளமட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும்; மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா ஜாதிகளும் அவரைப் பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள். 18 இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர். 19 அவருடைய மகிமைபொருந்திய நாமத்துக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக; பூமி முழுவதும் அவருடைய மகிமையால் நிறைந்திருப்பதாக. ஆமென், ஆமென். 20 ஈசாயின் புத்திரனாகிய தாவீதின் விண்ணப்பங்கள் முடிந்தது.

சங்கீதம் 73

1 சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார். 2 ஆனாலும் என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று. 3 துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன். 4 மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது. 5 நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள். 6 ஆகையால் பெருமை சரப்பணியைப்போல் அவர்களைச் சுற்றிக்கொள்ளும், கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும். 7 அவர்கள் கண்கள் கொழுப்பினால் எடுப்பாய்ப் பார்க்கிறது; அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாய் நடந்தேறுகிறது. 8 அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாய்க் கொடுமைபேசுகிறார்கள்; இறுமாப்பாய்ப் பேசுகிறார்கள். 9 தங்கள் வாய் வானமட்டும் எட்டப்பேசுகிறார்கள்; அவர்கள் நாவு பூமியெங்கும் உலாவுகிறது. 10 ஆகையால் அவருடைய ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவரும். 11 தேவனுக்கு அது எப்படித் தெரியும்? உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ? என்று சொல்லுகிறார்கள். 12 இதோ, இவர்கள் துன்மார்க்கர்; இவர்கள் என்றும் சுகஜீவிகளாயிருந்து, ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறார்கள். 13 நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன். 14 நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும், காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன். 15 இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன். 16 இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்; நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்து, 17 அவர்கள் முடிவைக் கவனித்து உணருமளவும், அது என் பார்வைக்கு விசனமாயிருந்தது. 18 நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி, பாழான இடங்களில் விழப்பண்ணுகிறீர். 19 அவர்கள் ஒரு நிமிஷத்தில் எவ்வளவு பாழாய்ப்போகிறார்கள்! பயங்கரங்களால் அழிந்து நிர்மூலமாகிறார்கள். 20 நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர். 21 இப்படியாக என் மனம் கசந்தது, என் உள்ளிந்திரியங்களிலே குத்துண்டேன். 22 நான் காரியம் அறியாத மூடனானேன்; உமக்கு முன்பாக மிருகம்போலிருந்தேன். 23 ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்; என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர். 24 உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர். 25 பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. 26 என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார். 27 இதோ, உம்மைவிட்டுத் தூரமாய்ப்போகிறவர்கள் நாசமடைவார்கள்; உம்மைவிட்டுச் சோரம்போகிற அனைவரையும் சங்கரிப்பீர். 28 எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்; நான் உமது கிரியைகளையெல்லாம் சொல்லிவரும்படி கர்த்தராகிய ஆண்டவர்மேல் என் நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.

சங்கீதம் 74

1 தேவனே, நீர் எங்களை என்றென்றைக்கும் ஏன் தள்ளிவிடுகிறீர்? உமது மேய்ச்சலின் ஆடுகள்மேல் உமது கோபம் ஏன் புகைகிறது? 2 நீர் பூர்வகாலத்தில் சம்பாதித்த உமது சபையையும், நீர் மீட்டுக்கொண்ட உமது சுதந்தரமான கோத்திரத்தையும், நீர் வாசமாயிருந்த சீயோன் பர்வதத்தையும் நினைத்தருளும். 3 நெடுங்காலமாகப் பாழாய்க்கிடக்கிற ஸ்தலங்களில் உம்முடைய பாதங்களை எழுந்தருளப்பண்ணும்; பரிசுத்த ஸ்தலத்திலே சத்துரு அனைத்தையும் கெடுத்துப்போட்டான். 4 உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஆலயங்களுக்குள்ளே கெர்ச்சித்து, தங்கள் கொடிகளை அடையாளங்களாக நாட்டுகிறார்கள். 5 கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பேர்பெற்றவனானான். 6 இப்பொழுதோ அவர்கள் அதின் சித்திரவேலைகள் முழுவதையும் வாச்சிகளாலும் சம்மட்டிகளாலும் தகர்த்துப் போடுகிறார்கள். 7 உமது பரிசுத்த ஸ்தலத்தை அக்கினிக்கு இரையாக்கி, உமது நாமத்தின் வாசஸ்தலத்தைத் தரைமட்டும் இடித்து, அசுத்தப்படுத்தினார்கள். 8 அவர்களை ஏகமாய் நிர்த்தூளியாக்குவோம் என்று தங்கள் இருதயத்தில் சொல்லி, தேசத்திலுள்ள ஆலயங்களையெல்லாம் சுட்டெரித்துப்போட்டார்கள். 9 எங்களுக்கு இருந்த அடையாளங்களைக் காணோம்; தீர்க்கதரிசியும் இல்லை; இது எதுவரைக்கும் என்று அறிகிறவனும் எங்களிடத்தில் இல்லை. 10 தேவனே, எதுவரைக்கும் சத்துரு நிந்திப்பான்? பகைவன் உமது நாமத்தை எப்பொழுதும் தூஷிப்பானோ? 11 உமது வலதுகரத்தை ஏன் முடக்கிக்கொள்ளுகிறீர்; அதை உமது மடியிலிருந்து எடுத்து ஓங்கி நிர்மூலமாக்கும். 12 பூமியின் நடுவில் இரட்சிப்புகளைச் செய்துவருகிற தேவன் பூர்வகாலமுதல் என்னுடைய ராஜா. 13 தேவரீர் உமது வல்லமையினால் சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்து, ஜலத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தலைகளை உடைத்தீர். 14 தேவரீர் முதலைகளின் தலைகளை நருக்கிப்போட்டு, அதை வனாந்தரத்து ஜனங்களுக்கு உணவாகக் கொடுத்தீர். 15 ஊற்றையும் ஆற்றையும் பிளந்துவிட்டீர்; மகா நதிகளையும் வற்றிப்போகப்பண்ணினீர். 16 பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவரீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர். 17 பூமியின் எல்லைகளையெல்லாம் திட்டம்பண்ணினீர்; கோடைகாலத்தையும் மாரிகாலத்தையும் உண்டாக்கினீர். 18 கர்த்தாவே, சத்துரு உம்மை நிந்தித்ததையும், மதியீன ஜனங்கள் உமது நாமத்தைத் தூஷித்ததையும் நினைத்துக்கொள்ளும். 19 உமது காட்டுப்புறாவின் ஆத்துமாவைத் துஷ்டருடைய கூட்டத்திற்கு ஒப்புக்கொடாதேயும்; உமது ஏழைகளின் கூட்டத்தை என்றைக்கும் மறவாதேயும். 20 உம்முடைய உடன்படிக்கையை நினைத்தருளும்; பூமியின் இருளான இடங்கள் கொடுமையுள்ள குடியிருப்புகளால் நிறைந்திருக்கிறதே. 21 துன்பப்பட்டவன் வெட்கத்தோடே திரும்பவிடாதிரும்; சிறுமையும் எளிமையுமானவன் உமது நாமத்தைத் துதிக்கும்படி செய்யும். 22 தேவனே, எழுந்தருளும், உமக்காக நீரே வழக்காடும்; மதியீனனாலே நாடோறும் உமக்கு வரும் நிந்தையை நினைத்துக்கொள்ளும். 23 உம்முடைய சத்துருக்களின் ஆரவாரத்தை மறவாதேயும்; உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் அமளி எப்பொழுதும் அதிகரிக்கிறது.

சங்கீதம் 75

1 உம்மைத் துதிக்கிறோம், தேவனே, உம்மைத் துதிக்கிறோம்; உமது நாமம் சமீபமாயிருக்கிறதென்று உமது அதிசயமான கிரியைகள் அறிவிக்கிறது. 2 நியமிக்கப்பட்ட காலத்திலே, யதார்த்தமாய் நியாயந்தீர்ப்பேன். 3 பூமியானது அதின் எல்லாக் குடிகளோடும் கரைந்துபோகிறது; அதின் தூண்களை நான் நிலைநிறுத்துகிறேன். (சேலா.) 4 வீம்புக்காரரை நோக்கி, வீம்பு பேசாதேயுங்கள் என்றும்; துன்மார்க்கரை நோக்கி, கொம்பை உயர்த்தாதிருங்கள் என்றும் சொன்னேன். 5 உங்கள் கொம்பை உயரமாய் உயர்த்தாதிருங்கள்; இறுமாப்புள்ள கழுத்துடையவர்களாய்ப் பேசாதிருங்கள். 6 கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தரதிசையிலுமிருந்து ஜெயம் வராது. 7 தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார். 8 கலங்கிப் பொங்குகிற மதுபானத்தினால் நிறைந்த பாத்திரம் கர்த்தருடைய கையிலிருக்கிறது, அதிலிருந்து வார்க்கிறார்; பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரும் அதின் வண்டல்களை உறிஞ்சிக் குடிப்பார்கள். 9 நானோ என்றென்றைக்கும் இதை அறிவித்து, யாக்கோபின் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன். 10 துன்மார்க்கருடைய கொம்புகளையெல்லாம் வெட்டிப்போடுவேன்; நீதிமானுடைய கொம்புகளோ உயர்த்தப்படும்.

சங்கீதம் 76

1 யூதாவில் தேவன் அறியப்பட்டவர்; இஸ்ரவேலில் அவருடைய நாமம் பெரியது. 2 சாலேமில் அவருடைய கூடாரமும், சீயோனில் அவருடைய வாசஸ்தலமும் இருக்கிறது. 3 அங்கேயிருந்து வில்லின் அம்புகளையும், கேடகத்தையும், பட்டயத்தையும், யுத்தத்தையும் முறித்தார். (சேலா.) 4 மகத்துவமுள்ளவரே, கொள்ளையுள்ள பர்வதங்களைப்பார்க்கிலும் நீர் பிரகாசமுள்ளவர். 5 தைரிய நெஞ்சுள்ளவர்கள் கொள்ளையிடப்பட்டு, நித்திரையடைந்து அசர்ந்தார்கள்; வல்லமையுள்ள எல்லா மனுஷருடைய கைகளும் அவர்களுக்கு உதவாமற்போயிற்று. 6 யாக்கோபின் தேவனே, உம்முடைய கண்டிதத்தினால் இரதங்களும் குதிரைகளும் உறங்கி விழுந்தது. 7 நீர், நீரே, பயங்கரமானவர்; உமது கோபம் மூளும்போது உமக்கு முன்பாக நிற்பவன் யார்? 8 நியாயம் விசாரிக்கவும் பூமியில் சிறுமைப்பட்டவர்கள் யாவரையும் இரட்சிக்கவும், தேவரீர் எழுந்தருளினபோது, 9 வானத்திலிருந்து நியாயத்தீர்ப்புக் கேட்கப்பண்ணினீர்; பூமி பயந்து அமர்ந்தது. (சேலா.) 10 மனுஷனுடைய கோபம் உமது மகிமையை விளங்கப்பண்ணும்; மிஞ்சுங்கோபத்தை நீர் அடக்குவீர். 11 பொருத்தனைபண்ணி அதை உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நிறைவேற்றுங்கள்; அவரைச் சூழ்ந்திருக்கிற அனைவரும் பயங்கரமானவருக்குக் காணிக்கைகளைக் கொண்டுவரக்கடவர்கள். 12 பிரபுக்களின் ஆவியை அடக்குவார்; பூமியின் ராஜாக்களுக்கு அவர் பயங்கரமானவர்.

சங்கீதம் 77

1 நான் தேவனை நோக்கி என் சத்தத்தை உயர்த்திக் கெஞ்சினேன், என் சத்தத்தை தேவனிடத்தில் உயர்த்தினேன், அவர் எனக்குச் செவிகொடுத்தார். 2 என் ஆபத்துநாளில் ஆண்டவரைத் தேடினேன்; இரவிலும் என் கை தளராமல் விரிக்கப்பட்டிருந்தது; என் ஆத்துமா ஆறுதலடையாமற்போயிற்று. 3 நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என் ஆவி தொய்ந்துபோயிற்று. (சேலா.) 4 நான் தூங்காதபடி என் கண்ணிமைகளைப் பிடித்திருக்கிறீர்; நான் பேசமாட்டாதபடி சஞ்சலப்படுகிறேன். 5 பூர்வநாட்களையும், ஆதிகாலத்து வருஷங்களையும் சிந்திக்கிறேன். 6 இராக்காலத்தில் என் சங்கீதத்தை நான் நினைத்து, என் இருதயத்தோடே சம்பாஷித்துக்கொள்ளுகிறேன்; என் ஆவி ஆராய்ச்சிசெய்தது. 7 ஆண்டவர் நித்தியகாலமாய்த் தள்ளிவிடுவாரோ? இனி ஒருபோதும் தயைசெய்யாதிருப்பாரோ? 8 அவருடைய கிருபை முற்றிலும் அற்றுப்போயிற்றோ? வாக்குத்தத்தமானது தலைமுறை தலைமுறைக்கும் ஒழிந்துபோயிற்றோ? 9 தேவன் இரக்கஞ்செய்ய மறந்தாரோ? கோபத்தினாலே தமது உருக்கமான இரக்கங்களை அடைத்துக்கொண்டாரோ? என்றேன். (சேலா.) 10 அப்பொழுது நான்: இது என் பலவீனம்; ஆனாலும் உன்னதமானவருடைய வலதுகரத்திலுள்ள வருஷங்களை நினைவுகூருவேன். 11 கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; 12 உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன் என்றேன். 13 தேவனே, உமது வழி பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது; நம்முடைய தேவனைப்போலப் பெரிய தேவன் யார்? 14 அதிசயங்களைச் செய்கிற தேவன் நீரே; ஜனங்களுக்குள்ளே உம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணினீர். 15 யாக்கோபு யோசேப்பு என்பவர்களின் புத்திரராகிய உம்முடைய ஜனங்களை, உமது புயத்தினாலே மீட்டுக்கொண்டீர். (சேலா.) 16 ஜலங்கள் உம்மைக் கண்டது; தேவனே, ஜலங்கள் உம்மைக் கண்டு தத்தளித்தது; ஆழங்களும் கலங்கினது. 17 மேகங்கள் ஜலங்களைப் பொழிந்தது; ஆகாயமண்டலங்கள் முழக்கமிட்டது; உம்முடைய அம்புகளும் தெறிப்புண்டு பறந்தது. 18 உம்முடைய குமுறலின் சத்தம் சுழல்காற்றில் முழங்கினது; மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி குலுங்கி அதிர்ந்தது. 19 உமது வழி கடலிலும், உமது பாதைகள் திரண்ட தண்ணீர்களிலும் இருந்தது; உமது காலடிகள் தெரியப்படாமற்போயிற்று. 20 மோசே ஆரோன் என்பவர்களின் கையால், உமது ஜனங்களை ஒரு ஆட்டுமந்தையைப்போல வழிநடத்தினீர்.

சங்கீதம் 78

1 என் ஜனங்களே, என் உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வசனங்களுக்கு உங்கள் செவிகளைச் சாயுங்கள். 2 என் வாயை உவமைகளால் திறப்பேன்; பூர்வகாலத்து மறைபொருள்களை வெளிப்படுத்துவேன். 3 அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்கள் பிதாக்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள். 4 பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், கர்த்தரின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம். 5 அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை ஸ்தாபித்து, அவைகளைத் தங்கள் பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்டார். 6 இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்கள் பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்; 7 தேவன்மேல் அவர்கள் தங்கள் நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறவாமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்; 8 இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்கள் பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார். 9 ஆயுதமணிந்த வில்வீரரான எப்பிராயீம் புத்திரர் யுத்தநாளிலே முதுகுகாட்டினார்கள். 10 அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதியாமலும், 11 அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள். 12 அவர்களுடைய பிதாக்களுக்குமுன்பாக, எகிப்துதேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார். 13 கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கப்பண்ணி, ஜலத்தைக் குவியலாக நிற்கும்படி செய்தார். 14 பகலிலே மேகத்தினாலும், இராமுழுதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார். 15 வனாந்தரத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தார். 16 கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படப்பண்ணி, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார். 17 என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, வறண்ட வெளியிலே உன்னதமானவருக்குக் கோபம் மூட்டினார்கள். 18 தங்கள் இச்சைக்கேற்ற போஜனத்தைக் கேட்டு, தங்கள் இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள். 19 அவர்கள் தேவனுக்கு விரோதமாய்ப் பேசி: தேவன் வனாந்தரத்திலே போஜனபந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ? 20 இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாய்ப் புரண்டுவந்தது; அவர் அப்பத்தையும் கொடுக்கக்கூடுமோ? தம்முடைய ஜனத்திற்கு மாம்சத்தையும் ஆயத்தப்படுத்துவாரோ? என்றார்கள். 21 ஆகையால் கர்த்தர் அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசியாமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால், 22 யாக்கோபுக்கு விரோதமாய் அக்கினி பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாய்க் கோபம் மூண்டது. 23 அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து, 24 மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாக வருஷிக்கப்பண்ணி, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார். 25 தூதர்களின் அப்பத்தை மனுஷன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாய் அனுப்பினார். 26 ஆகாசத்திலே கீழ்க்காற்றை வரப்பண்ணி, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து, 27 மாம்சத்தைத் தூளத்தனையாயும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலத்தனையாயும் வருஷிக்கப்பண்ணி, 28 அவைகளை அவர்கள் பாளயத்தின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கப்பண்ணினார். 29 அவர்கள் புசித்துத் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் இச்சித்ததை அவர்களுக்குக் கொடுத்தார். 30 அவர்கள் தங்கள் இச்சையை வெறுக்கவில்லை; அவர்களுடைய போஜனம் அவர்கள் வாயில் இருக்கும்போதே, 31 தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களைச் சங்கரித்து, இஸ்ரவேலில் விசேஷித்தவர்களை மடியப்பண்ணிற்று. 32 இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள். 33 ஆதலால் அவர்கள் நாட்களை விருதாவிலும், அவர்கள் வருஷங்களைப் பயங்கரத்திலும் கழியப்பண்ணினார். 34 அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி; 35 தேவன் தங்கள் கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்கள் மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள். 36 ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவருக்கு இச்சகம்பேசி, தங்கள் நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள். 37 அவர்கள் இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாயிருக்கவில்லை. 38 அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார். 39 அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார். 40 எத்தனைதரமோ வனாந்தரத்திலே அவருக்குக் கோபம் மூட்டி, அவாந்தரவெளியிலே அவரை விசனப்படுத்தினார்கள். 41 அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சைபார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்தரை மட்டுப்படுத்தினார்கள். 42 அவருடைய கரத்தையும், அவர் தங்களைச் சத்துருவுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினையாமற்போனார்கள். 43 அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார். 44 அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள ஜலத்தைக் குடிக்கக்கூடாதபடி செய்தார். 45 அவர்களை அழிக்கும்படி வண்டு ஜாதிகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார். 46 அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார். 47 கல்மழையினால் அவர்களுடைய திராட்சச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து, 48 அவர்களுடைய மிருகஜீவன்களைக் கல்மழைக்கும், அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார். 49 தமது உக்கிரமான கோபத்தையும், மூர்க்கத்தையும், சினத்தையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார். 50 அவர் தம்முடைய கோபத்துக்கு வழிதிறந்து, அவர்கள் ஆத்துமாவை மரணத்துக்கு விலக்கிக் காவாமல், அவர்கள் ஜீவனைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார். 51 எகிப்திலே தலைச்சன்கள் அனைத்தையும், காமின் கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பலனான யாவரையும் அழித்து; 52 தம்முடைய ஜனங்களை ஆடுகளைப்போல் புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்; 53 அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாய் வழிநடத்தினார்; அவர்கள் சத்துருக்களைக் கடல் மூடிப்போட்டது. 54 அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலதுகரம் சம்பாதித்த இந்தப் பர்வதமட்டுக்கும் அழைத்துக்கொண்டுவந்து, 55 அவர்கள் முகத்திற்கு முன்பாக ஜாதிகளைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார். 56 ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சைபார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமற்போய், 57 தங்கள் பிதாக்களைப்போல வழிவிலகி, துரோகம்பண்ணி, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு, 58 தங்கள் மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்கள் விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள். 59 தேவன் அதைக் கேட்டு உக்கிரமாகி, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து, 60 தாம் மனுஷருக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள வாசஸ்தலத்தை விட்டுவிலகி, 61 தமது பலத்தைச் சிறையிருப்புக்கும், தமது மகிமையைச் சத்துருவின் கைக்கும் ஒப்புக்கொடுத்து, 62 தமது ஜனத்தைப் பட்டயத்துக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார். 63 அவர்கள் வாலிபரை அக்கினி பட்சித்தது, அவர்கள் கன்னியாஸ்திரீகள் வாழ்க்கைப்படாதிருந்தார்கள். 64 அவர்களுடைய ஆசாரியர்கள் பட்டயத்தால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை. 65 அப்பொழுது ஆண்டவர் நித்திரை தெளிந்தவனைப்போலவும், திராட்சரசத்தால் கெம்பீரிக்கிற பராக்கிரமசாலியைப்போலவும் விழித்து, 66 தம்முடைய சத்துருக்களைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரப்பண்ணினார். 67 அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல், 68 யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார். 69 தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார். 70 தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார். 71 கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய ஜனமாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார். 72 இவன் அவர்களைத் தன் இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன் கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான்.

சங்கீதம் 79

1 தேவனே, புறஜாதியார் உமது சுதந்தரத்தில் வந்து, உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள். 2 உமது ஊழியக்காரரின் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், உமது பரிசுத்தவான்களின் மாம்சத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள். 3 எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை. 4 எங்கள் அயலாருக்கு நிந்தையும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமானோம். 5 எதுவரைக்கும் கர்த்தாவே! நீர் என்றைக்கும் கோபமாயிருப்பீரோ? உம்முடைய எரிச்சல் அக்கினியைப்போல் எரியுமோ? 6 உம்மை அறியாத ஜாதிகள்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத ராஜ்யங்கள்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும். 7 அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவன் குடியிருப்பைப் பாழாக்கினார்களே. 8 பூர்வகாலத்து அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாதேயும்; உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாய் எங்களுக்கு நேரிடுவதாக; நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம். 9 எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து, உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும். 10 அவர்களுடைய தேவன் எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்? உமது ஊழியக்காரருடைய சிந்துண்ட இரத்தத்தின் பழிவாங்குதல் ஜாதிகளுக்குள்ளே எங்கள் கண்களுக்கு முன்பாக விளங்கும்படி செய்யும். 11 கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்; கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது புயபலத்தினால் உயிரோடே காத்தருளும். 12 ஆண்டவரே, எங்கள் அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, ஏழத்தனையாக அவர்கள் மடியிலே திரும்பப்பண்ணும். 13 அப்பொழுது, உம்முடைய ஜனங்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.

சங்கீதம் 80

1 இஸ்ரவேலின் மேய்ப்பரே, யோசேப்பை ஆட்டுமந்தையைப்போல் நடத்துகிறவரே, செவிகொடும்; கேருபீன்கள் மத்தியில் வாசம்பண்ணுகிறவரே, பிரகாசியும். 2 எப்பிராயீம் பென்யமீன் மனாசே என்பவர்களுக்கு முன்பாக, நீர் உமது வல்லமையை எழுப்பி, எங்களை இரட்சிக்க வந்தருளும். 3 தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். 4 சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் விண்ணப்பத்துக்கு விரோதமாய் நீர் எதுவரைக்கும் கோபங்கொள்வீர். 5 கண்ணீராகிய அப்பத்தை அவர்களுக்கு போஜனமாகவும், மிகுதியான கண்ணீரையே அவர்களுக்குப் பானமாகவும் கொடுத்தீர். 6 எங்கள் அயலாருக்கு எங்களை வழக்காக வைக்கிறீர்; எங்கள் சத்துருக்கள் எங்களைப் பரியாசம்பண்ணுகிறார்கள். 7 சேனைகளின் தேவனே, எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம். 8 நீர் எகிப்திலிருந்து ஒரு திராட்சக்கொடியைக் கொண்டுவந்து, ஜாதிகளைத் துரத்திவிட்டு, அதை நாட்டினீர். 9 அதற்கு இடத்தை ஆயத்தப்படுத்தினீர்; அது வேரூன்றி, தேசமெங்கும் படர்ந்தது. 10 அதின் நிழலால் மலைகளும் அதின் கிளைகளால் திவ்வியமான கேதுருக்களும் மூடப்பட்டது. 11 அது தன் கொடிகளைச் சமுத்திரமட்டாகவும், தன் கிளைகளை நதிமட்டாகவும் படரவிட்டது. 12 இப்பொழுதோ வழிநடக்கிற யாவரும் அதைப் பறிக்கும்படியாக, அதின் அடைப்புகளை ஏன் தகர்த்துப்போட்டீர்? 13 காட்டுப்பன்றி அதை உழுதுபோடுகிறது, வெளியின் மிருகங்கள் அதை மேய்ந்துபோடுகிறது. 14 சேனைகளின் தேவனே, திரும்பிவாரும், வானத்திலிருந்து கண்ணோக்கிப்பார்த்து, இந்தத் திராட்சச்செடியை விசாரித்தருளும்; 15 உம்முடைய வலதுகரம் நாட்டின கொடியையும், உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் கடாட்சித்தருளும். 16 அது அக்கினியால் சுடப்பட்டும் வெட்டுண்டும் போயிற்று; உம்முடைய முகத்தின் பயமுறுத்தலால் அழிந்துபோகிறார்கள். 17 உமது கரம் உமது வலதுபாரிசத்துப் புருஷன்மீதிலும், உமக்கு நீர் திடப்படுத்தின மனுஷகுமாரன்மீதிலும் இருப்பதாக. 18 அப்பொழுது உம்மைவிட்டுப் பின்வாங்கமாட்டோம்; எங்களை உயிர்ப்பியும், அப்பொழுது உமது நாமத்தைத் தொழுதுகொள்ளுவோம். 19 சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, எங்களைத் திருப்பிக்கொண்டு வாரும்; உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்.

சங்கீதம் 81

1 நம்முடைய பெலனாகிய தேவனைக் கெம்பீரமாய்ப் பாடி, யாக்கோபின் தேவனைக்குறித்து ஆர்ப்பரியுங்கள். 2 தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, சங்கீதம் பாடுங்கள். 3 மாதப்பிறப்பிலும், நியமித்தகாலத்திலும், நம்முடைய பண்டிகைநாட்களிலும், எக்காளம் ஊதுங்கள். 4 இது இஸ்ரவேலுக்குப் பிரமாணமும், யாக்கோபின் தேவன் விதித்த நியாயமுமாயிருக்கிறது. 5 நாம் அறியாத பாஷையைக் கேட்ட எகிப்துதேசத்தைவிட்டுப் புறப்படுகையில், இதை யோசேப்பிலே சாட்சியாக ஏற்படுத்தினார். 6 அவன் தோளைச் சுமைக்கு விலக்கினேன்; அவன் கைகள் கூடைக்கு நீங்கலாக்கப்பட்டது. 7 நெருக்கத்திலே நீ கூப்பிட்டாய், நான் உன்னைத் தப்புவித்தேன்; இடிமுழக்கம் உண்டாகும் மறைவிடத்திலிருந்து உனக்கு உத்தரவு அருளினேன்; மேரிபாவின் தண்ணீர்களிடத்தில் உன்னைச் சோதித்து அறிந்தேன். (சேலா.) 8 என் ஜனமே கேள், உனக்குச் சாட்சியிட்டுச் சொல்லுவேன்; இஸ்ரவேலே, நீ எனக்குச் செவிகொடுத்தால் நலமாயிருக்கும். 9 உனக்குள் வேறு தேவன் உண்டாயிருக்கவேண்டாம்; அந்நிய தேவனை நீ நமஸ்கரிக்கவும் வேண்டாம். 10 உன்னை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே; உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன். 11 என் ஜனமோ என் சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; இஸ்ரவேல் என்னை விரும்பவில்லை. 12 ஆகையால் அவர்களை அவர்கள் இருதயத்தின் கடினத்திற்கு விட்டுவிட்டேன்; தங்கள் யோசனைகளின்படியே நடந்தார்கள். 13 ஆ, என் ஜனம் எனக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேல் என் வழிகளில் நடந்தால் நலமாயிருக்கும்! 14 நான் சீக்கிரத்தில் அவர்கள் எதிராளிகளைத் தாழ்த்தி, என் கையை அவர்கள் சத்துருக்களுக்கு விரோதமாகத் திருப்புவேன். 15 அப்பொழுது கர்த்தரைப் பகைக்கிறவர்கள் அவருக்கு இச்சகம் பேசி அடங்குவார்கள்; அவர்களுடைய காலம் என்றென்றைக்கும் இருக்கும். 16 உச்சிதமான கோதுமையினால் அவர்களைப் போஷிப்பார்; கன்மலையின் தேனினால் உன்னைத் திருப்தியாக்குவேன்.

சங்கீதம் 82

1 தேவசபையிலே தேவன் எழுந்தருளியிருக்கிறார்; தேவர்களின் நடுவிலே அவர் நியாயம் விசாரிக்கிறார். 2 எதுவரைக்கும் நீங்கள் அநியாயத்தீர்ப்புச்செய்து, துன்மார்க்கருக்கு முகதாட்சிணியம் பண்ணுவீர்கள். (சேலா.) 3 ஏழைக்கும் திக்கற்ற பிள்ளைக்கும் நியாயஞ்செய்து, சிறுமைப்பட்டவனுக்கும் திக்கற்றவனுக்கும் நீதி செய்யுங்கள். 4 பலவீனனையும் எளியவனையும் விடுவித்து, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவியுங்கள். 5 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள், அந்தகாரத்திலே நடக்கிறார்கள்; தேசத்தின் அஸ்திபாரங்களெல்லாம் அசைகிறது. 6 நீங்கள் தேவர்கள் என்றும், நீங்களெல்லாரும் உன்னதமானவரின் மக்கள் என்றும் நான் சொல்லியிருந்தேன். 7 ஆனாலும் நீங்கள் மனுஷரைப்போலச் செத்து, லோகப்பிரபுக்களில் ஒருவனைப்போல விழுந்துபோவீர்கள். 8 தேவனே, எழுந்தருளும், பூமிக்கு நியாயத்தீர்ப்புச் செய்யும்; நீரே சகல ஜாதிகளையும் சுதந்தரமாகக் கொண்டிருப்பவர்.

சங்கீதம் 83

1 தேவனே, மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும்; தேவனே, சும்மாயிராதேயும். 2 இதோ, உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள். 3 உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைபண்ணுகிறார்கள். 4 அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள். 5 இப்படி, ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மவேலரும், மோவாபியரும், ஆகாரியரும், 6 கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடு கூடிய பெலிஸ்தரும், 7 ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாய் ஒப்பந்தம்பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். 8 அசீரியரும் அவர்களோடேகூடக் கலந்து, லோத்தின் புத்திரருக்குப் புயபலமானார்கள். (சேலா.) 9 மீதியானியருக்குச் செய்ததுபோலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு, 10 நிலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச் செய்யும். 11 அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும். 12 தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்களே. 13 என் தேவனே, அவர்களைச் சுழல்காற்றின் புழுதிக்கும், காற்றுமுகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும். 14 நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினிஜுவாலைகள் மலைகளை எரிப்பதுபோலவும், 15 நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கப்பண்ணும். 16 கர்த்தாவே, அவர்கள் உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும். 17 யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி, 18 அவர்கள் என்றைக்கும் வெட்கிக்கலங்கி, நாணமடைந்து அழிந்துபோவார்களாக.

சங்கீதம் 84

1 சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்! 2 என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது. 3 என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே. 4 உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். (சேலா.) 5 உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும், தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள். 6 அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக் கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும். 7 அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள். 8 சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, என் விண்ணப்பத்தை கேளும்; யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா.) 9 எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாயிரும்; நீர் அபிஷேகம்பண்ணினவரின் முகத்தைப் பாரும். 10 ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன். 11 தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார். 12 சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

சங்கீதம் 85

1 கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் பிரியம் வைத்து, யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பினீர். 2 உமது ஜனத்தின் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவத்தையெல்லாம் மூடினீர். (சேலா.) 3 உமது உக்கிரத்தையெல்லாம் அடக்கிக்கொண்டு, உமது கோபத்தின் எரிச்சலைவிட்டுத் திரும்பினீர். 4 எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் எங்களைத் திருப்பிக்கொண்டுவாரும், எங்கள்மேலுள்ள உமது கோபத்தை ஆறப்பண்ணும். 5 என்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிருப்பீரோ? தலைமுறை தலைமுறையாக உமது கோபத்தை நீடித்திருக்கப்பண்ணுவீரோ? 6 உமது ஜனங்கள் உம்மில் மகிழ்ந்திருக்கும்படி நீர் எங்களைத் திரும்ப உயிர்ப்பிக்கமாட்டீரோ? 7 கர்த்தாவே, உமது கிருபையை எங்களுக்குக் காண்பித்து, உமது இரட்சிப்பை எங்களுக்கு அருளிச்செய்யும். 8 கர்த்தராகிய தேவன் விளம்புவதைக் கேட்பேன்; அவர் தம்முடைய ஜனங்களுக்கும் தம்முடைய பரிசுத்தவான்களுக்கும் சமாதானம் கூறுவார்; அவர்களோ மதிகேட்டுக்குத் திரும்பாதிருப்பார்களாக. 9 நம்முடைய தேசத்தில் மகிமை வாசமாயிருக்கும்படி, அவருடைய இரட்சிப்பு அவருக்குப் பயந்தவர்களுக்குச் சமீபமாயிருக்கிறது. 10 கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும். 11 சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும், நீதி வானத்திலிருந்து தாழப்பார்க்கும். 12 கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும். 13 நீதி அவருக்கு முன்னாகச் சென்று, அவருடைய அடிச்சுவடுகளின் வழியிலே நம்மை நிறுத்தும்.

சங்கீதம் 86

1 கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்து, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் சிறுமையும் எளிமையுமானவன். 2 என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும். 3 ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாடோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். 4 உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். 5 ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர். 6 கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கவனியும். 7 நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர். 8 ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை. 9 ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்கள். 10 தேவரீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாயிருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன். 11 கர்த்தாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது நாமத்திற்குப் பயந்திருக்கும்படி என் இருதயத்தை ஒருமுகப்படுத்தும். 12 என் தேவனாகிய ஆண்டவரே உம்மை என் முழு இருதயத்தோடும் துதித்து, உமது நாமத்தை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன். 13 நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர். 14 தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தார் என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி நோக்காதிருக்கிறார்கள். 15 ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன். 16 என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் குமாரனை இரட்சியும். 17 கர்த்தாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் தேற்றுகிறதை என் பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.

சங்கீதம் 87

1 அவர் அஸ்திபாரம் பரிசுத்த பர்வதங்களில் இருக்கிறது. 2 கர்த்தர் யாக்கோபின் வாசஸ்தலங்களெல்லாவற்றைப்பார்க்கிலும் சீயோனின் வாசல்களில் பிரியமாயிருக்கிறார். 3 தேவனுடைய நகரமே! உன்னைக் குறித்து மகிமையான விசேஷங்கள் வசனிக்கப்படும். (சேலா.) 4 என்னை அறிந்தவர்களுக்குள்ளே ராகாபையும் பாபிலோனையும் குறித்துப் பேசுவேன்; இதோ, பெலிஸ்தியரிலும், தீரியரிலும், எத்தியோப்பியரிலுங்கூட, இன்னான் அங்கே பிறந்தான் என்றும்; 5 சீயோனைக்குறித்து, இன்னான் இன்னான் அதிலே பிறந்தானென்றும் சொல்லப்படும்; உன்னதமானவர்தாமே அதை ஸ்திரப்படுத்துவார். 6 கர்த்தர் ஜனங்களைப் பேரெழுதும்போது, இன்னான் அதிலே பிறந்தான் என்று அவர்களைத் தொகையிடுவார். (சேலா.) 7 எங்கள் ஊற்றுகளெல்லாம் உன்னில் இருக்கிறது என்று பாடுவாரும் ஆடுவாரும் ஏகமாய்ச் சொல்லுவார்கள்.

சங்கீதம் 88

1 என் இரட்சிப்பின் தேவனாகிய கர்த்தாவே, இரவும் பகலும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். 2 என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும். 3 என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது. 4 நான் குழியில் இறங்குகிறவர்களோடு எண்ணப்பட்டு, பெலனற்ற மனுஷனைப்போலானேன். 5 மரித்தவர்களில் ஒருவனைப்போல் நெகிழப்பட்டிருக்கிறேன்; நீர் இனி ஒருபோதும் நினையாதபடி, உமது கையால் அறுப்புண்டுபோய்ப் பிரேதக்குழிகளிலே கிடக்கிறவர்களைப்போலானேன். 6 என்னைப் பாதாளக்குழியிலும் இருளிலும் ஆழங்களிலும் வைத்தீர். 7 உம்முடைய கோபம் என்னை இருத்துகிறது; உம்முடைய அலைகள் எல்லாவற்றினாலும் என்னை வருத்தப்படுத்துகிறீர். (சேலா.) 8 எனக்கு அறிமுகமானவர்களை எனக்குத் தூரமாக விலக்கி, அவர்களுக்கு என்னை அருவருப்பாக்கினீர்; நான் வெளியே புறப்படக்கூடாதபடி அடைபட்டிருக்கிறேன். 9 துக்கத்தினால் என் கண் தொய்ந்துபோயிற்று; கர்த்தாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என் கைகளை விரிக்கிறேன். 10 மரித்தவர்களுக்கு அதிசயங்களைச் செய்வீரோ? செத்துப்போன வீரர் எழுந்து உம்மைத் துதிப்பார்களோ? (சேலா.) 11 பிரேதக்குழியில் உமது கிருபையும், அழிவில் உமது உண்மையும் விவரிக்கப்படுமோ? 12 இருளில் உமது அதிசயங்களும், மறதியின் பூமியில் உமது நீதியும் அறியப்படுமோ? 13 நானோ கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; காலையிலே என் விண்ணப்பம் உமக்கு முன்பாக வரும். 14 கர்த்தாவே, ஏன் என் ஆத்துமாவைத் தள்ளிவிடுகிறீர்? ஏன் உமது முகத்தை எனக்கு மறைக்கிறீர்? 15 சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன். 16 உம்முடைய எரிச்சல்கள் என்மேல் புரண்டுபோகிறது; உம்முடைய பயங்கரங்கள் என்னை அதம்பண்ணுகிறது. 17 அவைகள் நாடோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து, ஏகமாய் என்னை வளைந்துகொள்ளுகிறது. 18 சிநேகிதனையும் தோழனையும் எனக்குத் தூரமாக விலக்கினீர்; எனக்கு அறிமுகமானவர்கள் மறைந்துபோனார்கள்.

சங்கீதம் 89

1 கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்; உமது உண்மையைத் தலைமுறை தலைமுறையாக என் வாயினால் அறிவிப்பேன். 2 கிருபை என்றென்றைக்கும் ஸ்திரப்பட்டிருக்கும்; உமது உண்மையை வானங்களிலே ஸ்தாபிப்பீர் என்றேன். 3 என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவனோடே உடன்படிக்கைபண்ணி, என் தாசனாகிய தாவீதை நோக்கி: 4 என்றென்றைக்கும் உன் சந்ததியை நிலைப்படுத்தி, தலைமுறை தலைமுறையாக உன் சிங்காசனத்தை ஸ்தாபிப்பேன் என்று ஆணையிட்டேன் என்றீர். (சேலா.) 5 கர்த்தாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும், பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும். 6 ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்? 7 தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச் சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர். 8 சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்மைப்போல் வல்லமையுள்ள கர்த்தர் யார்? உம்முடைய உண்மை உம்மைச் சூழ்ந்திருக்கிறது. 9 தேவரீர் சமுத்திரத்தின் பெருமையை ஆளுகிறவர்; அதின் அலைகள் எழும்பும்போது அவைகளை அடங்கப்பண்ணுகிறீர். 10 நீர் ராகாபை வெட்டுண்ட ஒருவனைப்போல் நொறுக்கினீர்; உமது வல்லமையான புயத்தினால் உம்முடைய சத்துருக்களைச் சிதறடித்தீர். 11 வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலுள்ள யாவையும் நீரே அஸ்திபாரப்படுத்தினீர். 12 வடக்கையும் தெற்கையும் நீர் உண்டாக்கினீர்; தாபோரும் எர்மோனும் உம்முடைய நாமம் விளங்கக் கெம்பீரிக்கும். 13 உமக்கு வல்லமையுள்ள புயமிருக்கிறது; உம்முடைய கரம் பராக்கிரமமுள்ளது; உம்முடைய வலதுகரம் உன்னதமானது. 14 நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும். 15 கெம்பீரசத்தத்தை அறியும் ஜனங்கள் பாக்கியமுள்ளவர்கள்; கர்த்தாவே, அவர்கள் உம்முடைய முகத்தின் வெளிச்சத்தில் நடப்பார்கள். 16 அவர்கள் உம்முடைய நாமத்தில் நாடோறும் களிகூர்ந்து, உம்முடைய நீதியால் உயர்ந்திருப்பார்கள். 17 நீரே அவர்கள் பலத்தின் மகிமையாயிருக்கிறீர்; உம்முடைய தயவினால் எங்கள் கொம்பு உயரும். 18 கர்த்தரால் எங்கள் கேடகமும், இஸ்ரவேலின் பரிசுத்தரால் எங்களுடைய ராஜாவும் உண்டு. 19 அப்பொழுது நீர் உம்முடைய பக்தனுக்குத் தரிசனமாகி: சகாயஞ்செய்யத்தக்க சக்தியை ஒரு சவுரியவான்மேல் வைத்து, ஜனத்தில் தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன். 20 என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன். 21 என் கை அவனோடே உறுதியாயிருக்கும்; என் புயம் அவனைப் பலப்படுத்தும். 22 சத்துரு அவனை நெருக்குவதில்லை; நியாயக்கேட்டின் மகன் அவனை ஒடுக்குவதில்லை. 23 அவன் சத்துருக்களை அவனுக்குமுன்பாக மடங்கடித்து, அவனைப் பகைக்கிறவர்களை வெட்டுவேன். 24 என் உண்மையும் என் கிருபையும் அவனோடிருக்கும்; என் நாமத்தினால் அவன் கொம்பு உயரும். 25 அவன் கையைச் சமுத்திரத்தின்மேலும், அவன் வலதுகரத்தை ஆறுகள்மேலும் ஆளும்படி வைப்பேன். 26 அவன் என்னை நோக்கி: நீர் என் பிதா, என் தேவன், என் இரட்சிப்பின் கன்மலையென்று சொல்லுவான். 27 நான் அவனை எனக்கு முதற்பேறானவனும், பூமியின் ராஜாக்களைப்பார்க்கிலும் மகா உயர்ந்தவனுமாக்குவேன். 28 என் கிருபையை என்றென்றைக்கும் அவனுக்காகக் காப்பேன்; என் உடன்படிக்கை அவனுக்காக உறுதிப்படுத்தப்படும். 29 அவன் சந்ததி என்றென்றைக்கும் நிலைத்திருக்கவும், அவன் ராஜாசனம் வானங்களுள்ளமட்டும் நிலைநிற்கவும் செய்வேன். 30 அவன் பிள்ளைகள் என் நியாயங்களின்படி நடவாமல், என் வேதத்தை விட்டு விலகி; 31 என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், என் நியமங்களை மீறிநடந்தால்; 32 அவர்கள் மீறுதலை மிலாற்றினாலும், அவர்கள் அக்கிரமத்தை வாதைகளினாலும் தண்டிப்பேன். 33 ஆனாலும் என் கிருபையை அவனை விட்டு விலக்காமலும், என் உண்மையில் பிசகாமலும் இருப்பேன். 34 என் உடன்படிக்கையை மீறாமலும், என் உதடுகள் விளம்பினதை மாற்றாமலும் இருப்பேன். 35 ஒருவிசை என் பரிசுத்தத்தின்பேரில் ஆணையிட்டேன், தாவீதுக்கு நான் பொய்சொல்லேன். 36 அவன் சந்ததி என்றென்றைக்கும் இருக்கும்; அவன் சிங்காசனம் சூரியனைப்போல எனக்கு முன்பாக நிலைநிற்கும். 37 சந்திரனைப்போல அது என்றென்றைக்கும் உறுதியாயும், ஆகாயமண்டலத்துச் சாட்சியைப்போல் உண்மையாயும் இருக்கும் என்று விளம்பினீர். (சேலா.) 38 ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர், நீர் அபிஷேகம்பண்ணுவித்தவன்மேல் உக்கிரமானீர். 39 உமது அடியானுடன் நீர் பண்ணின உடன்படிக்கையை ஒழித்துவிட்டு, அவன் கிரீடத்தைத் தரையிலே தள்ளி அவமானப்படுத்தினீர். 40 அவன் மதில்களையெல்லாம் தகர்த்துப்போட்டு, அவன் அரணான ஸ்தலங்களைப் பாழாக்கினீர். 41 வழிநடக்கிற யாவரும் அவனைக் கொள்ளையிடுகிறார்கள்; தன் அயலாருக்கு நிந்தையானான். 42 அவன் சத்துருக்களின் வலதுகையை நீர் உயர்த்தி, அவன் விரோதிகள் யாவரும் சந்தோஷிக்கும்படி செய்தீர். 43 அவன் பட்டயத்தின் கருக்கை மழுக்கிப்போட்டு, அவனை யுத்தத்தில் நிற்காதபடி செய்தீர். 44 அவன் மகிமையை அற்றுப்போகப்பண்ணி, அவன் சிங்காசனத்தைத் தரையிலே தள்ளினீர். 45 அவன் வாலிபநாட்களைக் குறுக்கி, அவனை வெட்கத்தால் மூடினீர். (சேலா.) 46 எதுவரைக்கும், கர்த்தாவே! நீர் என்றைக்கும் மறைந்திருப்பீரோ? உமது கோபம் அக்கினியைப்போல எரியுமோ? 47 என் ஜீவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனுபுத்திரர் யாவரையும் வீணாகச் சிருஷ்டிக்க வேண்டியதென்ன? 48 மரணத்தைக் காணாமல் உயிரோடிருப்பவன் யார்? தன் ஆத்துமாவைப் பாதாள வல்லடிக்கு விலக்கிவிடுகிறவன் யார்? (சேலா.) 49 ஆண்டவரே, நீர் தாவீதுக்கு உம்முடைய உண்மையைக்கொண்டு சத்தியம்பண்ணின உமது பூர்வ கிருபைகள் எங்கே? 50 ஆண்டவரே, உம்முடைய சத்துருக்கள் உம்முடைய ஊழியக்காரரையும், நீர் அபிஷேகம்பண்ணினவனின் காலடிகளையும் நிந்திக்கிறபடியினால், 51 கர்த்தாவே, உமது அடியார் சுமக்கும் நிந்தையையும், வலுமையான ஜனங்களெல்லாராலும் நான் என் மடியில் சுமக்கும் என் நிந்தையையும் நினைத்தருளும். 52 கர்த்தருக்கு என்றென்றைக்கும் ஸ்தோத்திரமுண்டாவதாக. ஆமென், ஆமென்.

சங்கீதம் 90

1 ஆண்டவரே, தேவரீர் தலைமுறை தலைமுறையாக எங்களுக்கு அடைக்கலமானவர். 2 பர்வதங்கள் தோன்றுமுன்னும், நீர் பூமியையும் உலகத்தையும் உருவாக்குமுன்னும், நீரே அநாதியாய் என்றென்றைக்கும் தேவனாயிருக்கிறீர். 3 நீர் மனுஷரை நிர்த்தூளியாக்கி, மனுபுத்திரரே, திரும்புங்கள் என்கிறீர். 4 உமது பார்வைக்கு ஆயிரம் வருஷம் நேற்றுக்கழிந்த நாள்போலவும் இராச்சாமம்போலவும் இருக்கிறது. 5 அவர்களை வெள்ளம்போல் வாரிக்கொண்டுபோகிறீர்; நித்திரைக்கு ஒத்திருக்கிறார்கள்; காலையிலே முளைக்கிற புல்லுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். 6 அது காலையிலே முளைத்துப் பூத்து, மாலையிலே அறுப்புண்டு உலர்ந்துபோம். 7 நாங்கள் உமது கோபத்தினால் அழிந்து, உமது உக்கிரத்தினால் கலங்கிப்போகிறோம். 8 எங்கள் அக்கிரமங்களை உமக்கு முன்பாகவும், எங்கள் அந்தரங்க பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர். 9 எங்கள் நாட்களெல்லாம் உமது கோபத்தால் போய்விட்டது; ஒரு கதையைப்போல் எங்கள் வருஷங்களைக் கழித்துப்போட்டோம். 10 எங்கள் ஆயுசுநாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம். 11 உமது கோபத்தின் வல்லமையையும், உமக்குப் பயப்படத்தக்கவிதமாய் உமது உக்கிரத்தையும் அறிந்துகொள்ளுகிறவன் யார்? 12 நாங்கள் ஞான இருதயமுள்ளவர்களாகும்படி, எங்கள் நாட்களை எண்ணும் அறிவை எங்களுக்குப் போதித்தருளும். 13 கர்த்தாவே, திரும்பிவாரும், எதுவரைக்கும் கோபமாயிருப்பீர்? உமது அடியாருக்காகப் பரிதபியும். 14 நாங்கள் எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும். 15 தேவரீர் எங்களைச் சிறுமைப்படுத்தின நாட்களுக்கும், நாங்கள் துன்பத்தைக் கண்ட வருஷங்களுக்கும் சரியாய் எங்களை மகிழ்ச்சியாக்கும். 16 உமது கிரியை உமது ஊழியக்காரருக்கும், உமது மகிமை அவர்கள் பிள்ளைகளுக்கும் விளங்குவதாக. 17 எங்கள் தேவனாகிய ஆண்டவரின் பிரியம் எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் கிரியையை எங்களிடத்தில் உறுதிப்படுத்தியருளும்.

சங்கீதம் 91

1 உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான். 2 நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன். 3 அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார். 4 அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். 5 இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், 6 இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய். 7 உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. 8 உன் கண்களால் மாத்திரம் நீ அதைப் பார்த்து, துன்மார்க்கருக்கு வரும் பலனைக் காண்பாய். 9 எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக்கொண்டாய். 10 ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது. 11 உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார். 12 உன் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உன்னைத் தங்கள் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள். 13 சிங்கத்தின்மேலும் விரியன் பாம்பின்மேலும் நீ நடந்து, பாலசிங்கத்தையும் வலுசர்ப்பத்தையும் மிதித்துப்போடுவாய். 14 அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன். 15 அவன் என்னை நோக்கிக் கூப்பிடுவான், நான் அவனுக்கு மறுஉத்தரவு அருளிச்செய்வேன்; ஆபத்தில் நானே அவனோடிருந்து, அவனைத் தப்புவித்து, அவனைக் கனப்படுத்துவேன். 16 நீடித்த நாட்களால் அவனைத் திருப்தியாக்கி, என் இரட்சிப்பை அவனுக்குக் காண்பிப்பேன்.

சங்கீதம் 92

1 கர்த்தரைத் துதிப்பதும், உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவதும், 2 பத்துநரம்பு வீணையினாலும், தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும், 3 காலையிலே உமது கிருபையையும், இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும். 4 கர்த்தாவே, உமது செய்கைகளால் என்னை மகிழ்ச்சியாக்கினீர், உமது கரத்தின் கிரியைகளினிமித்தம் ஆனந்தசத்தமிடுவேன். 5 கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு மகத்துவமானவைகள்! உமது யோசனைகள் மகா ஆழமானவைகள். 6 மிருககுணமுள்ள மனுஷன் அதை அறியான்; மூடன் அதை உணரான். 7 துன்மார்க்கர் புல்லைப்போலே தழைத்து, அக்கிரமக்காரர் யாவரும் செழிக்கும்போது, அது அவர்கள் என்றென்றைக்கும் அழிந்துபோவதற்கே ஏதுவாகும். 8 கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் உன்னதமானவராயிருக்கிறீர். 9 கர்த்தாவே, உமது சத்துருக்கள் அழிவார்கள்; உமது சத்துருக்கள் அழிந்தேபோவார்கள்; சகல அக்கிரமக்காரரும் சிதறுண்டுபோவார்கள். 10 என் கொம்பைக் காண்டாமிருகத்தின் கொம்பைப்போல உயர்த்துவீர்; புது எண்ணெயால் அபிஷேகம்பண்ணப்படுகிறேன். 11 என் சத்துருக்களுக்கு நேரிடுவதை என் கண் காணும்; எனக்கு விரோதமாய் எழும்புகிற துன்மார்க்கருக்கு நேரிடுவதை என் காது கேட்கும். 12 நீதிமான் பனையைப்போல் செழித்து, லீபனோனிலுள்ள கேதுருவைப்போல் வளருவான். 13 கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள். 14 கர்த்தர் உத்தமரென்றும், என் கன்மலையாகிய அவரிடத்தில் அநீதியில்லையென்றும், விளங்கப்பண்ணும்படி, 15 அவர்கள் முதிர்வயதிலும் கனி தந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்.

சங்கீதம் 93

1 கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், மகத்துவத்தை அணிந்துகொண்டிருக்கிறார்; கர்த்தர் பராக்கிரமத்தை அணிந்து, அவர் அதைக் கச்சையாகக் கட்டிக்கொண்டிருக்கிறார்; ஆதலால் பூச்சக்கரம் அசையாதபடி நிலைபெற்றிருக்கிறது. 2 உமது சிங்காசனம் பூர்வமுதல் உறுதியானது; நீர் அநாதியாயிருக்கிறீர். 3 கர்த்தாவே, நதிகள் எழும்பின; நதிகள் இரைச்சலிட்டு எழும்பின; நதிகள் அலைதிரண்டு எழும்பின. 4 திரளான தண்ணீர்களின் இரைச்சலைப்பார்க்கிலும், சமுத்திரத்தின் வலுமையான அலைகளைப்பார்க்கிலும், கர்த்தர் உன்னதத்திலே வல்லமையுள்ளவர். 5 உமது சாட்சிகள் மிகவும் உண்மையுள்ளவைகள்; கர்த்தாவே, பரிசுத்தமானது நித்தியநாளாக உமது ஆலயத்தின் அலங்காரமாயிருக்கிறது.

சங்கீதம் 94

1 நீதியைச் சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தாவே, நீதியைச் சரிக்கட்டுகிற தேவனே, பிரகாசியும். 2 பூமியின் நியாயாதிபதியே, நீர் எழுந்து, பெருமைக்காரருக்குப் பதிலளியும். 3 கர்த்தாவே, துன்மார்க்கர் எதுவரைக்கும் மகிழ்ந்து, துன்மார்க்கர் எதுவரைக்கும் களிகூர்ந்திருப்பார்கள்? 4 எதுவரைக்கும் அக்கிரமக்காரர் யாவரும் வாயாடி, கடினமாய்ப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்? 5 கர்த்தாவே, அவர்கள் உமது ஜனத்தை நொறுக்கி, உமது சுதந்தரத்தை ஒடுக்குகிறார்கள். 6 விதவையையும் பரதேசியையும் கொன்று, திக்கற்ற பிள்ளைகளைக் கொலைசெய்து: 7 கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள். 8 ஜனத்தில் மிருககுணமுள்ளவர்களே, உணர்வடையுங்கள்; மூடரே, எப்பொழுது புத்திமான்களாவீர்கள்? 9 காதை உண்டாக்கினவர் கேளாரோ? கண்ணை உருவாக்கினவர் காணாரோ? 10 ஜாதிகளை தண்டிக்கிறவர் கடிந்துகொள்ளாரோ? மனுஷனுக்கு அறிவைப் போதிக்கிறவர் அறியாரோ? 11 மனுஷனுடைய யோசனைகள் வீணென்று கர்த்தர் அறிந்திருக்கிறார். 12 கர்த்தாவே, துன்மார்க்கனுக்குக் குழிவெட்டப்படும்வரைக்கும், நீர் தீங்குநாட்களில் அமர்ந்திருக்கப்பண்ணி, 13 சிட்சித்து, உம்முடைய வேதத்தைக்கொண்டு போதிக்கிற மனுஷன் பாக்கியவான். 14 கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார். 15 நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள். 16 துன்மார்க்கருக்கு விரோதமாய் என் பட்சத்தில் எழும்புகிறவன் யார்? அக்கிரமக்காரருக்கு விரோதமாய் என் பட்சத்தில் நிற்பவன் யார்? 17 கர்த்தர் எனக்குத் துணையாயிராவிட்டால், என் ஆத்துமா சீக்கிரமாய் மவுனத்தில் வாசம்பண்ணியிருக்கும். 18 என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது. 19 என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது. 20 தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ? 21 அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள். 22 கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார். 23 அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரே அவர்களைச் சங்கரிப்பார்.

சங்கீதம் 95

1 கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள். 2 துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம். 3 கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார். 4 பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள். 5 சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று. 6 நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள். 7 அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே. 8 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள். 9 அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, என் கிரியையையும் கண்டார்கள். 10 நாற்பது வருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி, 11 என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.

சங்கீதம் 96

1 கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள். 2 கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்குநாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள். 3 ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள். 4 கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே. 5 சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர். 6 மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது. 7 ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள். 8 கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள். 9 பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்; பூலோகத்தாரே, நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள். 10 கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஆகையால் பூச்சக்கரம் அசையாதபடி உறுதிப்பட்டிருக்கும்; அவர் ஜனங்களை நிதானமாய் நியாயந்தீர்ப்பார் என்று ஜாதிகளுக்குள்ளே சொல்லுங்கள். 11 வானங்கள் மகிழ்ந்து, பூமி பூரிப்பாகி, சமுத்திரமும் அதின் நிறைவும் முழங்குவதாக. 12 நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக; அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டுவிருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும். 13 அவர் வருகிறார், அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; அவர் பூலோகத்தை நீதியோடும், ஜனங்களைச் சத்தியத்தோடும் நியாயந்தீர்ப்பார்.

சங்கீதம் 97

1 கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்; பூமி பூரிப்பாகி, திரளான தீவுகள் மகிழக்கடவது. 2 மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது; நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம். 3 அக்கினி அவருக்கு முன்சென்று, சுற்றிலும் இருக்கிற அவருடைய சத்துருக்களைச் சுட்டெரிக்கிறது. 4 அவருடைய மின்னல்கள் பூச்சக்கரத்தைப் பிரகாசிப்பித்தது; பூமி அதைக் கண்டு அதிர்ந்தது. 5 கர்த்தரின் பிரசன்னத்தினால் பர்வதங்கள் மெழுகுபோல உருகிற்று, சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போயிற்று. 6 வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது; சகல ஜனங்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள். 7 சொரூபங்களை வணங்கி, விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற யாவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக; தேவர்களே, நீங்களெல்லாரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள். 8 சீயோன் கேட்டு மகிழ்ந்தது; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் யூதாவின் குமாரத்திகள் களிகூர்ந்தார்கள். 9 கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர்; எல்லா தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர். 10 கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார். 11 நீதிமானுக்காக வெளிச்சமும், செம்மையான இருதயத்தாருக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது. 12 நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.

சங்கீதம் 98

1 கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலதுகரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது. 2 கர்த்தர் தமது இரட்சிப்பைப் பிரஸ்தாபமாக்கி, தமது நீதியை ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக விளங்கப்பண்ணினார். 3 அவர் இஸ்ரவேல் குடும்பத்துக்காகத் தமது கிருபையையும் உண்மையையும் நினைவுகூர்ந்தார்; பூமியின் எல்லைகளெல்லாம் நமது தேவனுடைய இரட்சிப்பைக் கண்டது. 4 பூமியின் குடிகளே, நீங்களெல்லாரும் கர்த்தரை நோக்கி ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள்; முழக்கமிட்டுக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். 5 சுரமண்டலத்தால் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், சுரமண்டலத்தாலும் கீதசத்தத்தாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள். 6 கர்த்தராகிய ராஜாவின் சமுகத்தில் பூரிகைகளாலும் எக்காள சத்தத்தாலும் ஆனந்தமாய் ஆர்ப்பரியுங்கள். 7 சமுத்திரமும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதின் குடிகளும் முழங்குவதாக. 8 கர்த்தருக்கு முன்பாக ஆறுகள் கைகொட்டி, பர்வதங்கள் ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடக்கடவது. 9 அவர் பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்; பூலோகத்தை நீதியோடும் ஜனங்களை நிதானத்தோடும் நியாயந்தீர்ப்பார்.

சங்கீதம் 99

1 கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஜனங்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார், பூமி அசைவதாக. 2 கர்த்தர் சீயோனில் பெரியவர், அவர் எல்லா ஜனங்கள்மேலும் உயர்ந்தவர். 3 மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது. 4 ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவரீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர்; நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர். 5 நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள்; அவர் பரிசுத்தமுள்ளவர். 6 அவருடைய ஆசாரியரில் மோசேயும் ஆரோனும், அவர் நாமத்தைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு அருளினார். 7 மேகஸ்தம்பத்திலிருந்து அவர்களோடே பேசினார்; அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள். 8 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்களுக்கு உத்தரவு அருளினீர்; நீர் அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாயிருந்தீர். 9 நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர்.

சங்கீதம் 100

1 பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். 2 மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள். 3 கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம். 4 அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள். 5 கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.

சங்கீதம் 101

1 இரக்கத்தையும் நியாயத்தையும் குறித்துப் பாடுவேன்; கர்த்தாவே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். 2 உத்தமமான வழியிலே விவேகமாய் நடப்பேன்; எப்பொழுது என்னிடத்தில் வருவீர்! என் வீட்டிலே உத்தம இருதயத்தோடு நடந்துகொள்ளுவேன். 3 தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது. 4 மாறுபாடான இருதயம் என்னைவிட்டு அகலவேண்டும்; பொல்லாதவனை அறியமாட்டேன். 5 பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன். 6 தேசத்தில் உண்மையானவர்கள் என்னோடே வாசம்பண்ணும்படி என் கண்கள் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கும்; உத்தமமான வழியில் நடக்கிறவன் என்னைச் சேவிப்பான். 7 கபடுசெய்கிறவன் என் வீட்டுக்குள் இருப்பதில்லை; பொய்சொல்லுகிறவன் என் கண்முன் நிலைப்பதில்லை. 8 அக்கிரமக்காரர் ஒருவரும் கர்த்தருடைய நகரத்தில் இராதபடி வேர் அறுப்புண்டுபோக, தேசத்திலுள்ள அக்கிரமக்காரர் யாவரையும் அதிகாலமே சங்கரிப்பேன்.

சங்கீதம் 102

1 கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும்; என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக. 2 என் ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறையாதேயும்; உமது செவியை என்னிடத்தில் சாயும்; நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும். 3 என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரியுண்டது. 4 என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது; என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன். 5 என் பெருமூச்சின் சத்தத்தினால், என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது. 6 வனாந்தர நாரைக்கு ஒப்பானேன்; பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப்போலானேன். 7 நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல் இருக்கிறேன். 8 நாடோறும் என் சத்துருக்கள் என்னை நிந்திக்கிறார்கள்; என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாய்ச் சாபம் இடுகிறார்கள். 9 நீர் என்னை உயரத் தூக்கி, தாழத்தள்ளினீர், உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன். 10 ஆதலால் நான் சாம்பலை அப்பமாகப் புசித்து, என் பானங்களைக் கண்ணீரோடே கலக்கிறேன். 11 என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது; புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன். 12 கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய பேர் பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும். 13 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்; அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்தநேரமும் வந்தது. 14 உம்முடைய ஊழியக்காரர் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து, அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள். 15 கர்த்தர் சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார். 16 திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார். 17 அப்பொழுது ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும், பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள். 18 பின்சந்ததிக்காக இது எழுதப்படும்; சிருஷ்டிக்கப்படும் ஜனம் கர்த்தரைத் துதிக்கும். 19 கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், 20 தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார். 21 கர்த்தருக்கு ஆராதனைசெய்ய, ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில், 22 சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள். 23 வழியிலே என் பெலனை அவர் ஒடுக்கி, என் நாட்களைக் குறுகப்பண்ணினார். 24 அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும்; உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். 25 நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது. 26 அவைகள் அழிந்துபோம், நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போம்; அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போம். 27 நீரோ மாறாதவராயிருக்கிறீர்; உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை. 28 உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள்; அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன்.

சங்கீதம் 103

1 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி. 2 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. 3 அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, 4 உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, 5 நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வால வயதுபோலாகிறது. 6 ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார். 7 அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார். 8 கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். 9 அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார். 10 அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். 11 பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. 12 மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். 13 தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். 14 நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார். 15 மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். 16 காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது. 17 கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது. 18 அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது. 19 கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது. 20 கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள். 21 கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள். 22 கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி.

சங்கீதம் 104

1 என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர். 2 ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். 3 தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார். 4 தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார். 5 பூமி ஒருபோதும் நிலைபேராதபடி அதின் ஆதாரங்கள்மேல் அதை ஸ்தாபித்தார். 6 அதை வஸ்திரத்தினால் மூடுவதுபோல ஆழத்தினால் மூடினீர்; பர்வதங்களின்மேல் தண்ணீர்கள் நின்றது. 7 அவைகள் உமது கண்டிதத்தால் விலகியோடி, உமது குமுறலின் சத்தத்தால் விரைந்துபோயிற்று. 8 அவைகள் மலைகளில் ஏறி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்தின இடத்தில் சென்றது. 9 அவைகள் திரும்பவும் வந்து பூமியை மூடிக்கொள்ளாதபடி கடவாதிருக்கும் எல்லையை அவைகளுக்கு ஏற்படுத்தினீர். 10 அவர் பள்ளத்தாக்குகளில் நீரூற்றுகளை வரவிடுகிறார்; அவைகள் மலைகள் நடுவே ஓடுகிறது. 11 அவைகள் வெளியின் ஜீவன்களுக்கெல்லாம் தண்ணீர் கொடுக்கும்; அங்கே காட்டுக்கழுதைகள் தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொள்ளும். 12 அவைகளின் ஓரமாய் ஆகாயத்துப் பறவைகள் சஞ்சரித்து, கிளைகள்மேலிருந்து பாடும். 13 தம்முடைய மேல்வீடுகளிலிருந்து பர்வதங்களுக்குத் தண்ணீர் இறைக்கிறார்; உமது கிரியைகளின் பலனாலே பூமி திருப்தியாயிருக்கிறது. 14 பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர்வகைகளையும் முளைப்பிக்கிறார். 15 மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார். 16 கர்த்தருடைய விருட்சங்களும், அவர் நாட்டின லீபனோனின் கேதுருக்களும் சாரத்தினால் நிறைந்திருக்கும். 17 அங்கே குருவிகள் கூடுகட்டும்; தேவதாருவிருட்சங்கள் கொக்குகளின் குடியிருப்பு. 18 உயர்ந்த பர்வதங்கள் வரையாடுகளுக்கும், கன்மலைகள் குழிமுசல்களுக்கும் அடைக்கலம். 19 சந்திரனைக் காலக்குறிப்புகளுக்காகப் படைத்தார்; சூரியன் தன் அஸ்தமனத்தை அறியும். 20 நீர் இருளைக் கட்டளையிடுகிறீர், இராக்காலமாகும்; அதிலே சகல காட்டு ஜீவன்களும் நடமாடும். 21 பாலசிங்கங்கள் இரைக்காக கெர்ச்சித்து, தேவனால் தங்களுக்கு ஆகாரம் கிடைக்கும்படித் தேடும். 22 சூரியன் உதிக்கையில் அவைகள் ஒதுங்கி, தங்கள் தாபரங்களில் படுத்துக்கொள்ளும். 23 அப்பொழுது மனுஷன் சாயங்காலமட்டும் தன் வேலைக்கும், தன் பண்ணைக்கும் புறப்படுகிறான். 24 கர்த்தாவே, உமது கிரியைகள் எவ்வளவு திரளாயிருக்கிறது! அவைகளையெல்லாம் ஞானமாய்ப் படைத்தீர்; பூமி உம்முடைய பொருள்களினால் நிறைந்திருக்கிறது. 25 பெரிதும் விஸ்தாரமுமான இந்தச் சமுத்திரமும் அப்படியே நிறைந்திருக்கிறது; அதிலே சஞ்சரிக்கும் சிறியவைகளும் பெரியவைகளுமான எண்ணிறந்த ஜீவன்கள் உண்டு. 26 அதிலே கப்பல்கள் ஓடும்; அதிலே விளையாடும்படி நீர் உண்டாக்கின திமிங்கிலங்களும் உண்டு. 27 ஏற்றவேளையில் ஆகாரத்தைத் தருவீர் என்று அவைகளெல்லாம் உம்மை நோக்கிக் காத்திருக்கும். 28 நீர் கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத்திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும். 29 நீர் உமது முகத்தை மறைக்க, திகைக்கும்; நீர் அவைகளின் சுவாசத்தை வாங்கிக்கொள்ள, அவைகள் மாண்டு, தங்கள் மண்ணுக்குத் திரும்பும். 30 நீர் உம்முடைய ஆவியை அனுப்பும்போது, அவைகள் சிருஷ்டிக்கப்படும்; நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர். 31 கர்த்தருடைய மகிமை என்றென்றைக்கும் விளங்கும்; கர்த்தர் தம்முடைய கிரியைகளிலே மகிழுவார். 32 அவர் பூமியை நோக்கிப்பார்க்க, அது அதிரும்; அவர் பர்வதங்களைத் தொட, அவைகள் புகையும். 33 நான் உயிரோடிருக்குமட்டும் என் கர்த்தரைப் பாடுவேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன். 34 நான் அவரைத் தியானிக்கும் தியானம் இனிதாயிருக்கும்; நான் கர்த்தருக்குள் மகிழுவேன். 35 பாவிகள் பூமியிலிருந்து நிர்மூலமாகி, துன்மார்க்கர் இனி இராமற்போவார்கள். என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி, அல்லேலூயா.

சங்கீதம் 105

1 கர்த்தரைத் துதித்து, அவருடைய நாமத்தைப் பிரஸ்தாபமாக்குங்கள், அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்துங்கள். 2 அவரைப் பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள். 3 அவருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக. 4 கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள். 5 அவருடைய தாசனாகிய ஆபிரகாமின் சந்ததியே! அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாகிய யாக்கோபின் புத்திரரே! 6 அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள். 7 அவரே நம்முடைய தேவனாகிய கர்த்தர், அவருடைய நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் விளங்கும். 8 ஆயிரந்தலைமுறைக்கென்று அவர் கட்டளையிட்ட வாக்கையும், ஆபிரகாமோடே அவர் பண்ணின உடன்படிக்கையையும், 9 அவர் ஈசாக்குக்கு இட்ட ஆணையையும் என்றென்றைக்கும் நினைத்திருக்கிறார். 10 அதை யாக்கோபுக்குப் பிரமாணமாகவும், இஸ்ரவேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி: 11 உங்கள் சுதந்தரபாகமான கானான் தேசத்தை உனக்குத் தருவேன் என்றார். 12 அக்காலத்தில் அவர்கள் கொஞ்சத் தொகைக்குட்பட்ட சொற்ப ஜனங்களும் பரதேசிகளுமாயிருந்தார்கள். 13 அவர்கள் ஒரு ஜனத்தைவிட்டு மறு ஜனத்தண்டைக்கும், ஒரு ராஜ்யத்தைவிட்டு மறு தேசத்தாரண்டைக்கும் போனார்கள். 14 அவர்களை ஒடுக்கும்படி ஒருவருக்கும் இடங்கொடாமல், அவர்கள் நிமித்தம் ராஜாக்களைக் கடிந்து கொண்டு: 15 நான் அபிஷேகம்பண்ணினவர்களை நீங்கள் தொடாமலும், என்னுடைய தீர்க்கதரிசிகளுக்குத் தீங்கு செய்யாமலும் இருங்கள் என்றார். 16 அவர் தேசத்திலே பஞ்சத்தை வருவித்து, ஆகாரமென்னும் ஆதரவுகோலை முற்றிலும் முறித்தார். 17 அவர்களுக்கு முன்னாலே ஒரு புருஷனை அனுப்பினார்; யோசேப்பு சிறையாக விற்கப்பட்டான். 18 அவன் கால்களை விலங்குபோட்டு ஒடுக்கினார்கள்; அவன் பிராணன் இரும்பில் அடைபட்டிருந்தது. 19 கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது. 20 ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச்சொன்னான்; ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான். 21 தன் பிரபுக்களை அவன் மனதின்படி கட்டவும், தன் மூப்பர்களை ஞானிகளாக்கவும், 22 அவனைத் தன் வீட்டுக்கு ஆண்டவனும், தன் ஆஸ்திக்கெல்லாம் அதிபதியுமாக்கினான். 23 அப்பொழுது இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்; யாக்கோபு காமின் தேசத்திலே பரதேசியாயிருந்தான். 24 அவர் தம்முடைய ஜனங்களை மிகவும் பலுகப்பண்ணி, அவர்களுடைய சத்துருக்களைப்பார்க்கிலும் அவர்களைப் பலவான்களாக்கினார். 25 தம்முடைய ஜனங்களைப் பகைக்கவும், தம்முடைய ஊழியக்காரரை வஞ்சனையாய் நடத்தவும், அவர்களுடைய இருதயத்தை மாற்றினார். 26 தம்முடைய தாசனாகிய மோசேயையும் தாம் தெரிந்துகொண்ட ஆரோனையும் அனுப்பினார். 27 இவர்கள் அவர்களுக்குள் அவருடைய அடையாளங்களையும், காமின் தேசத்திலே அற்புதங்களையும் செய்தார்கள். 28 அவர் இருளை அனுப்பி, அந்தகாரத்தை உண்டாக்கினார்; அவருடைய வார்த்தைகளை எதிர்ப்பாரில்லை. 29 அவர்களுடைய தண்ணீர்களை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய மச்சங்களைச் சாகப்பண்ணினார். 30 அவர்களுடைய தேசம் தவளைகளைத் திரளாய்ப் பிறப்பித்தது; அவர்களுடைய ராஜாக்களின் அறைவீடுகளிலும் அவைகள் வந்தது. 31 அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது. 32 அவர்களுடைய மழைகளைக் கல்மழையாக்கி, அவர்களுடைய தேசத்திலே ஜுவாலிக்கிற அக்கினியை வரப்பண்ணினார். 33 அவர்களுடைய திராட்சச் செடிகளையும் அத்திமரங்களையும் அழித்து, அவர்களுடைய எல்லைகளிலுள்ள மரங்களையும் முறித்தார். 34 அவர் கட்டளையிட, எண்ணிமுடியாத வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் வந்து, 35 அவர்களுடைய தேசத்திலுள்ள சகல பூண்டுகளையும் அரித்து, அவர்களுடைய நிலத்தின் கனியைத் தின்றுபோட்டது. 36 அவர்களுடைய தேசத்திலே தலைச்சன்கள் அனைத்தையும், அவர்களுடைய பெலனில் முதற்பெலனான யாவரையும் சங்கரித்தார். 37 அப்பொழுது அவர்களை வெள்ளியோடும் பொன்னோடும் புறப்படப்பண்ணினார்; அவர்கள் கோத்திரங்களில் பலவீனப்பட்டவன் ஒருவனும் இருந்ததில்லை. 38 எகிப்தியர் அவர்களுக்குப் பயந்ததினால், அவர்கள் புறப்பட்டபோது மகிழ்ந்தார்கள். 39 அவர் மேகத்தை மறைவுக்காக விரித்து, இரவை வெளிச்சமாக்குகிறதற்காக அக்கினியையும் தந்தார். 40 கேட்டார்கள், அவர் காடைகளை வரப்பண்ணினார்; வான அப்பத்தினாலும் அவர்களைத் திருப்தியாக்கினார். 41 கன்மலையைத் திறந்தார், தண்ணீர்கள் புறப்பட்டு, வறண்ட வெளிகளில் ஆறாய் ஓடிற்று. 42 அவர் தம்முடைய பரிசுத்த வாக்குத்தத்தத்தையும், தம்முடைய தாசனாகிய ஆபிரகாமையும் நினைத்து, 43 தம்முடைய ஜனத்தைக் களிப்போடும், தாம் தெரிந்துகொண்டவர்களைக் கெம்பீர சத்தத்தோடும் புறப்படப்பண்ணி, 44 தமது கட்டளைகளைக் காத்து நடக்கும்படிக்கும், தமது நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படிக்கும், 45 அவர்களுக்குப் புறஜாதிகளுடைய தேசங்களைக் கொடுத்தார்; அந்நிய ஜனங்களுடைய பிரயாசத்தின் பலனைச் சுதந்தரித்துக்கொண்டார்கள். அல்லேலூயா.

சங்கீதம் 106

1 அல்லேலூயா, கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. 2 கர்த்தருடைய வல்லமையான செய்கைகளைச் சொல்லி, அவருடைய துதியையெல்லாம் பிரஸ்தாபப்படுத்தத்தக்கவன் யார்? 3 நியாயத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும், எக்காலத்திலும் நீதியைச்செய்கிறவர்களும் பாக்கியவான்கள். 4 கர்த்தாவே, நீர் தெரிந்துகொண்டவர்களின் நன்மையை நான் கண்டு, உம்முடைய ஜாதியின் மகிழ்ச்சியால் மகிழ்ந்து, உம்முடைய சுதந்தரத்தோடே மேன்மைபாராட்டும்படிக்கு, 5 உம்முடைய ஜனங்களுக்கு நீர் பாராட்டும் கிருபையின்படி என்னை நினைத்து, உம்முடைய இரட்சிப்பினால் என்னைச் சந்தித்தருளும். 6 எங்கள் பிதாக்களோடுங்கூட நாங்களும் பாவஞ்செய்து, அக்கிரமம் நடப்பித்து, ஆகாமியம்பண்ணினோம். 7 எங்கள் பிதாக்கள் எகிப்திலே உம்முடைய அதிசயங்களை உணராமலும், உம்முடைய கிருபைகளின் திரட்சியை நினையாமலும் போய், சிவந்த சமுத்திர ஓரத்திலே கலகம்பண்ணினார்கள். 8 ஆனாலும் அவர் தமது வல்லமையை வெளிப்படுத்தும்படி, தம்முடைய நாமத்தினிமித்தம் அவர்களை இரட்சித்தார். 9 அவர் சிவந்த சமுத்திரத்தை அதட்டினார், அது வற்றிப்போயிற்று; வெட்டாந்தரையில் நடக்கிறதுபோல அவர்களை ஆழங்களில் நடந்துபோகப்பண்ணினார். 10 பகைஞன் கைக்கு அவர்களை விலக்கி இரட்சித்து, சத்துருவின் கைக்கு அவர்களை விலக்கி மீட்டார். 11 அவர்கள் சத்துருக்களைத் தண்ணீர்கள் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை. 12 அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள். 13 ஆனாலும் சீக்கிரமாய் அவருடைய கிரியைகளை மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திராமல், 14 வனாந்தரத்திலே இச்சையுள்ளவர்களாகி, அவாந்தரவெளியிலே தேவனைப் பரீட்சைபார்த்தார்கள். 15 அப்பொழுது அவர்கள் கேட்டதை அவர்களுக்குக் கொடுத்தார், அவர்கள் ஆத்துமாக்களிலோ இளைப்பை அனுப்பினார். 16 பாளயத்தில் அவர்கள் மோசேயின்மேலும், கர்த்தருடைய பரிசுத்தனாகிய ஆரோனின்மேலும் பொறாமைகொண்டார்கள். 17 பூமி பிளந்து தாத்தானை விழுங்கி, அபிராமின் கூட்டத்தை மூடிப்போட்டது. 18 அவர்கள் கூட்டத்தில் அக்கினி பற்றியெரிந்தது; அக்கினிஜுவாலை துன்மார்க்கரை எரித்துப்போட்டது. 19 அவர்கள் ஓரேபிலே ஒரு கன்றுக்குட்டியையுண்டாக்கி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை நமஸ்கரித்தார்கள். 20 தங்கள் மகிமையைப் புல்லைத் தின்கிற மாட்டின் சாயலாக மாற்றினார்கள். 21 எகிப்திலே பெரிய கிரியைகளையும், காமின் தேசத்திலே அதிசயங்களையும், சிவந்த சமுத்திரத்தண்டையிலே பயங்கரமானவைகளையும் செய்தவராகிய, 22 தங்கள் இரட்சகரான தேவனை மறந்தார்கள். 23 ஆகையால், அவர்களை நாசம்பண்ணுவேன் என்றார்; அப்பொழுது அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, அவர்களை அவர் அழிக்காதபடிக்கு, அவருடைய உக்கிரத்தை ஆற்றும்பொருட்டு, அவருக்கு முன்பாகத் திறப்பின் வாயிலே நின்றான். 24 அவருடைய வார்த்தையை விசுவாசியாமல், இச்சிக்கப்படத்தக்க தேசத்தை அசட்டைபண்ணினார்கள். 25 கர்த்தருடைய சத்தத்திற்குச் செவிகொடாமல், தங்கள் கூடாரங்களில் முறுமுறுத்தார்கள். 26 அப்பொழுது அவர்கள் வனாந்தரத்திலே மடியவும், அவர்கள் சந்ததி ஜாதிகளுக்குள்ளே அழியவும், 27 அவர்கள் பற்பல தேசங்களிலே சிதறடிக்கப்படவும், அவர்களுக்கு விரோதமாகத் தம்முடைய கையை எடுத்தார். 28 அவர்கள் பாகால்பேயோரைப் பற்றிக்கொண்டு, ஜீவனில்லாதவைகளுக்கு இட்ட பலிகளைப் புசித்து, 29 தங்கள் கிரியைகளினால் அவருக்குக் கோபம் மூட்டினார்கள்; ஆகையால் வாதை அவர்களுக்குள் புகுந்தது. 30 அப்பொழுது பினெகாஸ் எழுந்து நின்று நியாயஞ்செய்தான்; அதினால் வாதை நிறுத்தப்பட்டது. 31 அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. 32 மேரிபாவின் தண்ணீர்களிடத்திலும் அவருக்குக் கடுங்கோபம் மூட்டினார்கள்; அவர்கள் நிமித்தம் மோசேக்கும் பொல்லாப்பு வந்தது. 33 அவர்கள் அவன் ஆவியை விசனப்படுத்தினதினாலே, தன் உதடுகளினால் பதறிப்பேசினான். 34 கர்த்தர் தங்களுக்குச் சொன்னபடி, அவர்கள் அந்த ஜனங்களை அழிக்கவில்லை. 35 ஜாதிகளுடனே கலந்து, அவர்கள் கிரியைகளைக் கற்று; 36 அவர்களுடைய விக்கிரகங்களைச் சேவித்தார்கள்; அவைகள் அவர்களுக்குக் கண்ணியாயிற்று. 37 அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள். 38 அவர்கள் கானான்தேசத்து விக்கிரகங்களுக்குப் பலியிட்டு, தங்கள் குமாரர் குமாரத்திகளுடைய குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்; தேசம் இரத்தத்தால் தீட்டுப்பட்டது. 39 அவர்கள் தங்கள் கிரியைகளினால் அசுத்தமாகி, தங்கள் செய்கைகளினால் சோரம்போனார்கள். 40 அதினால் கர்த்தருடைய கோபம் தமது ஜனத்தின்மேல் மூண்டது; அவர் தமது சுதந்தரத்தை அருவருத்தார். 41 அவர்களை ஜாதிகளுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; அவர்களுடைய பகைஞர் அவர்களை ஆண்டார்கள். 42 அவர்களுடைய சத்துருக்கள் அவர்களை ஒடுக்கினார்கள்; அவர்களுடைய கையின்கீழ்த் தாழ்த்தப்பட்டார்கள். 43 அநேகந்தரம் அவர்களை விடுவித்தார்; அவர்களோ தங்கள் யோசனையினால் அவருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, தங்களுடைய அக்கிரமத்தினால் சிறுமைப்படுத்தப்பட்டார்கள். 44 அவர்கள் கூப்பிடுதலை அவர் கேட்கும்போதோ, அவர்களுக்கு உண்டான இடுக்கத்தை அவர் கண்ணோக்கி, 45 அவர்களுக்காகத் தமது உடன்படிக்கையை நினைத்து, தமது மிகுந்த கிருபையின்படி மனஸ்தாபப்பட்டு, 46 அவர்களைச் சிறைபிடித்த யாவரும் அவர்களுக்கு இரங்கும்படி செய்தார். 47 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நாங்கள் உமது பரிசுத்த நாமத்தைப்போற்றி, உம்மைத் துதிக்கிறதில் மேன்மைபாராட்டும்படி எங்களை இரட்சித்து, எங்களை ஜாதிகளிலிருந்து சேர்த்தருளும். 48 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அநாதியாய் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவர். ஜனங்களெல்லாரும்: ஆமென், அல்லேலூயா, என்பார்களாக.

சங்கீதம் 107

1 கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. 2 கர்த்தரால் சத்துருவின் கைக்கு நீங்கலாக்கி மீட்கப்பட்டு, 3 கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலுமுள்ள பல தேசங்களிலுமிருந்து சேர்க்கப்பட்டவர்கள், அப்படிச் சொல்லக்கடவர்கள். 4 அவர்கள் தாபரிக்கும் ஊரைக் காணாமல், வனாந்தரத்திலே அவாந்தரவழியாய், 5 பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள். 6 தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை விடுவித்தார். 7 தாபரிக்கும் ஊருக்குப்போய்ச்சேர, அவர்களைச் செவ்வையான வழியிலே நடத்தினார். 8 தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று, 9 அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. 10 தேவனுடைய வார்த்தைகளுக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உன்னதமானவருடைய ஆலோசனையை அசட்டைபண்ணினவர்கள், 11 அந்தகாரத்திலும் மரண இருளிலும் வைக்கப்பட்டிருந்து, ஒடுக்கத்திலும் இரும்பிலும் கட்டுண்டு கிடந்தார்கள். 12 அவர்களுடைய இருதயத்தை அவர் வருத்தத்தால் தாழ்த்தினார்; சகாயரில்லாமல் விழுந்துபோனார்கள். 13 தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார். 14 அந்தகாரத்திலும் மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி, அவர்கள் கட்டுகளை அறுத்தார். 15 கர்த்தர் வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று, 16 அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக. 17 நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும் தங்கள் அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள். 18 அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள். 19 தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார். 20 அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். 21 அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, 22 ஸ்தோத்திரபலிகளைச் செலுத்தி, அவருடைய கிரியைகளை ஆனந்தசத்தத்தோடே விவரிப்பார்களாக. 23 கப்பலேறி, கடல்யாத்திரைபண்ணி, திரளான தண்ணீர்களிலே தொழில் செய்கிறார்களே, 24 அவர்கள் கர்த்தருடைய கிரியைகளையும், ஆழத்திலே அவருடைய அதிசயங்களையும் காண்கிறார்கள். 25 அவர் கட்டளையிட பெருங்காற்று எழும்பி, அதின் அலைகளைக் கொந்தளிக்கப்பண்ணும். 26 அவர்கள் ஆகாயத்தில் ஏறி, ஆழங்களில் இறங்குகிறார்கள், அவர்கள் ஆத்துமா கிலேசத்தினால் கரைந்துபோகிறது. 27 வெறித்தவனைப்போல் அலைந்து தடுமாறுகிறார்கள்; அவர்களுடைய ஞானமெல்லாம் முழுகிப்போகிறது. 28 அப்பொழுது தங்கள் ஆபத்திலே அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள், அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கிறார். 29 கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. 30 அமைதலுண்டானதினிமித்தம் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்; தாங்கள் நாடின துறைமுகத்தில் அவர்களைக் கொண்டுவந்து சேர்க்கிறார். 31 அவர்கள் கர்த்தரை அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் துதித்து, 32 ஜனங்களின் சபையிலே அவரை உயர்த்தி, மூப்பர்களின் சங்கத்திலே அவரைப் போற்றுவார்களாக. 33 அவர் ஆறுகளை அவாந்தரவெளியாகவும், நீரூற்றுகளை வறண்ட ஸ்தலமாகவும், 34 குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் செழிப்பான தேசத்தை உவர் நிலமாகவும் மாற்றுகிறார். 35 அவர் அவாந்தரவெளியைத் தண்ணீர்த் தடாகமாகவும், வறண்ட நிலத்தை நீரூற்றுகளாகவும் மாற்றி, 36 பசித்தவர்களை அங்கே குடியேற்றுகிறார்; அங்கே அவர்கள் குடியிருக்கும் நகரத்தைக் கட்டி, 37 வயல்களை உண்டாக்கி விதைத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டுகிறார்கள், அவைகள் வரத்துள்ள பலனைத் தரும். 38 அவர்களை ஆசீர்வதிக்கிறார், மிகுதியும் பெருகுகிறார்கள்; அவர்களுடைய மிருகஜீவன்கள் குறையாதிருக்கப்பண்ணுகிறார். 39 பின்பு அவர்கள் இடுக்கத்தினாலும், ஆபத்தினாலும், துயரத்தினாலும் குறைவுபட்டுத் தாழ்வடைகிறார்கள். 40 அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணி, வழியில்லாத அவாந்தரவெளியிலே அவர்களைத் திரியச்செய்து, 41 எளியவனையோ சிறுமையினின்று எடுத்து, உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து, அவன் வம்சங்களை மந்தையைப்போலாக்குகிறார். 42 உத்தமர்கள் அதைக்கண்டு மகிழுவார்கள்; நியாயக்கேடெல்லாம் தன் வாயை மூடும். 43 எவன் ஞானமுள்ளவனோ அவன் இவைகளைக் கவனிக்கக்கடவன்; ஞானவான்கள் கர்த்தருடைய கிருபைகளை உணர்ந்துகொள்வார்கள்.

சங்கீதம் 108

1 தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; நான் பாடிக் கீர்த்தனம்பண்ணுவேன்; என் மகிமையும் பாடும். 2 வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன். 3 கர்த்தாவே, ஜனங்களுக்குள்ளே உம்மைத்துதிப்பேன்; ஜாதிகளுக்குள்ளே உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். 4 உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தமும் எட்டுகிறது. 5 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக. 6 உமது பிரியர் விடுவிக்கப்படும்பொருட்டு, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்கள் ஜெபத்தைக் கேட்டருளும். 7 தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன். 8 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன். 9 மோவாப் என் பாதபாத்திரம்; ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிவேன்; பெலிஸ்தியாவின் மேல் ஆர்ப்பரிப்பேன். 10 அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவன் யார்? 11 எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீரல்லவா? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீரல்லவா? 12 இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா. 13 தேவனாலே பராக்கிரமஞ்செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.

சங்கீதம் 109

1 நான் துதிக்கும் தேவனே, மவுனமாயிராதேயும். 2 துன்மார்க்கனுடைய வாயும், கபட்டுவாயும், எனக்கு விரோதமாய்த் திறந்திருக்கிறது; கள்ளநாவினால் என்னோடே பேசுகிறார்கள். 3 பகையுண்டாக்கும் வார்த்தைகளால் என்னைச் சூழ்ந்துகொண்டு, முகாந்தரமில்லாமல் என்னோடே போர்செய்கிறார்கள். 4 என் சிநேகத்துக்குப் பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், நானோ ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன். 5 நன்மைக்குப் பதிலாக எனக்குத் தீமைசெய்கிறார்கள், என் சிநேகத்துக்குப் பதிலாக என்னைப் பகைக்கிறார்கள். 6 அவனுக்கு மேலாகத் துஷ்டனை ஏற்படுத்திவையும், சாத்தான் அவன் வலதுபக்கத்தில் நிற்பானாக. 7 அவன் நியாயம் விசாரிக்கப்படும்போது குற்றவாளியாகக்கடவன்; அவன் ஜெபம் பாவமாகக்கடவது. 8 அவன் நாட்கள் கொஞ்சமாகக்கடவது; அவன் உத்தியோகத்தை வேறொருவன் பெறக்கடவன். 9 அவன் பிள்ளைகள் திக்கற்றவர்களும், அவன் மனைவி விதவையுமாகக்கடவர்கள். 10 அவன் பிள்ளைகள் அலைந்து திரிந்து பிச்சையெடுத்து, தங்கள் பாழான வீடுகளிலிருந்து இரந்துண்ணக்கடவர்கள். 11 கடன் கொடுத்தவன் அவனுக்கு உள்ளதெல்லாவற்றையும் அபகரித்துக்கொள்வானாக; அவன் பிரயாசத்தின் பலனை அந்நியர் பறித்துக்கொள்ளக்கடவர்கள். 12 அவனுக்கு ஒருவரும் இரக்கங் காண்பியாமலும், அவனுடைய திக்கற்ற பிள்ளைகளுக்குத் தயவுசெய்யாமலும் போவார்களாக. 13 அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள்; இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப்போவதாக. 14 அவன் பிதாக்களின் அக்கிரமம் கர்த்தருக்கு முன்பாக நினைக்கப்படக்கடவது, அவன் தாயின் பாவம் நீங்காமலிருப்பதாக. 15 அவைகள் நித்தமும் கர்த்தருக்கு முன்பாக இருக்கக்கடவது; அவர்கள் பேர் பூமியிலிராமல் நிர்மூலமாவதாக. 16 அவன் தயைசெய்ய நினையாமல், சிறுமையும் எளிமையுமானவனைத் துன்பப்படுத்தி, மனமுறிவுள்ளவனைக் கொலைசெய்யும்படி தேடினானே. 17 சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம். 18 சாபத்தை அவன் தனக்கு அங்கியாக உடுத்திக்கொண்டான்; அது அவன் உள்ளத்தில் தண்ணீரைப்போலவும், அவன் எலும்புகளில் எண்ணெயைப்போலவும் பாயும். 19 அது அவன் மூடிக்கொள்ளுகிற வஸ்திரமாகவும், நித்தமும் கட்டிக்கொள்ளுகிற கச்சையாகவும் இருப்பதாக. 20 இதுதான் என்னை விரோதிக்கிறவர்களுக்கும், என் ஆத்துமாவுக்கு விரோதமாய்த் தீங்கு பேசுகிறவர்களுக்கும் கர்த்தரால் வரும் பலன். 21 ஆண்டவராகிய கர்த்தாவே, நீர் உமது நாமத்தினிமித்தம் என்னை ஆதரித்து, உமது கிருபை நலமானதினால், என்னை விடுவித்தருளும். 22 நான் சிறுமையும் எளிமையுமானவன், என் இருதயம் எனக்குள் குத்துண்டிருக்கிறது. 23 சாயும் நிழலைப்போல் அகன்று போனேன்; வெட்டுக்கிளியைப்போல் பறக்கடிக்கப்படுகிறேன். 24 உபவாசத்தினால் என் முழங்கால்கள் தளர்ச்சியடைகிறது; என் மாம்சம் புஷ்டியற்று உலர்ந்து போகிறது. 25 நான் அவர்களுக்கு நிந்தையானேன்; அவர்கள் என்னைப் பார்த்து, தங்கள் தலையைத் துலுக்குகிறார்கள். 26 என் தேவனாகிய கர்த்தாவே எனக்குச் சகாயம்பண்ணும்; உமது கிருபையின்படி என்னை இரட்சியும். 27 இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக. 28 அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக; உமது அடியானோ மகிழக்கடவன். 29 என் விரோதிகள் இலச்சையால் மூடப்பட்டு, தங்கள் வெட்கத்தைச் சால்வையைப்போல் தரித்துக்கொள்ளக்கடவர்கள். 30 கர்த்தரை நான் என் வாயினால் மிகவும் துதித்து, அநேகர் நடுவிலே அவரைப் புகழுவேன். 31 ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவர்களினின்று எளியவனுடைய ஆத்துமாவை இரட்சிக்கும்படி அவர் அவன் வலதுபாரிசத்தில் நிற்பார்.

சங்கீதம் 110

1 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார். 2 கர்த்தர் சீயோனிலிருந்து உமது வல்லமையின் செங்கோலை அனுப்புவார்; நீர் உம்முடைய சத்துருக்களின் நடுவே ஆளுகைசெய்யும். 3 உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமுமுள்ளவர்களாயிருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யௌவன ஜனம் உமக்குப் பிறக்கும். 4 நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார்; மனம் மாறாமலுமிருப்பார். 5 உம்முடைய வலதுபாரிசத்திலிருக்கிற ஆண்டவர், தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார். 6 அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்ப்பார்; எல்லா இடங்களையும் பிரேதங்களால் நிரப்புவார்; விஸ்தாரமான தேசங்களின்மேல் தலைவர்களாயிருக்கிறவர்களை நொறுக்கிப்போடுவார். 7 வழியிலே அவர் நதியில் குடிப்பார்; ஆகையால் அவர் தமது தலையை எடுப்பார்.

சங்கீதம் 111

1 அல்லேலூயா, செம்மையானவர்களுடைய சங்கத்திலும் சபையிலும் கர்த்தரை முழு இருதயத்தோடும் துதிப்பேன். 2 கர்த்தரின் செய்கைகள் பெரியவைகளும், அவைகளில் பிரியப்படுகிற எல்லாராலும் ஆராயப்படுகிறவைகளுமாயிருக்கிறது. 3 அவருடைய செயல் மகிமையும் மகத்துவமுமுள்ளது, அவருடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும். 4 அவர் தம்முடைய அதிசயமான செய்கைகளை நினைவுகூரும்படி செய்தார், கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமுமுள்ளவர். 5 தமக்குப் பயந்தவர்களுக்கு ஆகாரம் கொடுத்தார்; தமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நினைப்பார். 6 ஜாதிகளின் சுதந்தரத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுத்ததினால், தமது கிரியைகளின் பெலத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினார். 7 அவருடைய கரத்தின் கிரியைகள் சத்தியமும் நியாயமுமானவைகள்; அவருடைய கட்டளைகளெல்லாம் உண்மையானவைகள். 8 அவைகள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களுக்கும் உறுதியானவைகள், அவைகள் உண்மையும் செம்மையுமாய்ச் செய்யப்பட்டவைகள். 9 அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி, தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்; அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது. 10 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; அவருடைய கற்பனைகளின்படி செய்கிற யாவருக்கும் நற்புத்தியுண்டு; அவர் புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.

சங்கீதம் 112

1 அல்லேலூயா, கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். 2 அவன் சந்ததி பூமியில் பலத்திருக்கும், செம்மையானவர்களின் வம்சம் ஆசீர்வதிக்கப்படும். 3 ஆஸ்தியும் ஐசுவரியமும் அவன் வீட்டிலிருக்கும்; அவனுடைய நீதி என்றைக்கும் நிற்கும். 4 செம்மையானவர்களுக்கு இருளிலே வெளிச்சம் உதிக்கும்; அவன் இரக்கமும் மனஉருக்கமும் நீதியுமுள்ளவன். 5 இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற மனுஷன் பாக்கியவான். 6 அவன் என்றென்றைக்கும் அசைக்கப்படாதிருப்பான்; நீதிமான் நித்திய கீர்த்தியுள்ளவன். 7 துர்ச்செய்தியைக் கேட்கிறதினால் பயப்படான்; அவன் இருதயம் கர்த்தரை நம்பித் திடனாயிருக்கும். 8 அவன் இருதயம் உறுதியாயிருக்கும்; அவன் தன் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காணுமட்டும் பயப்படாதிருப்பான். 9 வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும். 10 துன்மார்க்கன் அதைக் கண்டு மனமடிவாகி, தன் பற்களைக் கடித்துக் கரைந்துபோவான்; துன்மார்க்கருடைய ஆசை அழியும்.

சங்கீதம் 113

1 அல்லேலூயா, கர்த்தருடைய ஊழியக்காரரே, துதியுங்கள்; கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள். 2 இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தருடைய நாமம் ஸ்தோத்திரிக்கப்படக்கடவது. 3 சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது அஸ்தமிக்கும் திசைமட்டும் கர்த்தருடைய நாமம் துதிக்கப்படுவதாக. 4 கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. 5 உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்? 6 அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். 7 அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். 8 அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார். 9 மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கப்பண்ணுகிறார். அல்லேலூயா.

சங்கீதம் 114

1 இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் குடும்பம் அந்நிய பாஷைக்காரரான ஜனத்திலுமிருந்து புறப்பட்டபோது, 2 யூதா அவருக்குப் பரிசுத்த ஸ்தானமும், இஸ்ரவேல் அவருக்கு ராஜ்யமுமாயிற்று. 3 கடல் கண்டு விலகி ஓடிற்று; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது. 4 மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது. 5 கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னிட்டுத் திரும்புகிறதற்கும்; 6 மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது? 7 பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு. 8 அவர் கன்மலையைத் தண்ணீர்த் தடாகமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.

சங்கீதம் 115

1 எங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும். 2 அவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்? 3 நம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார். 4 அவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. 5 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. 6 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது. 7 அவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது. 8 அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள். 9 இஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். 10 ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். 11 கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார். 12 கர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார். 13 கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார். 14 கர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார். 15 வானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். 16 வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார். 17 மரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள். 18 நாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா.

சங்கீதம் 116

1 கர்த்தர் என் சத்தத்தையும் என் விண்ணப்பத்தையும் கேட்டதினால், அவரில் அன்புகூருகிறேன். 2 அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன். 3 மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன். 4 அப்பொழுது நான் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு: கர்த்தாவே, என் ஆத்துமாவை விடுவியும் என்று கெஞ்சினேன். 5 கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனஉருக்கமானவர். 6 கர்த்தர் கபடற்றவர்களைக் காக்கிறார்; நான் மெலிந்துபோனேன், அவர் என்னை இரட்சித்தார். 7 என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு. 8 என் ஆத்துமாவை மரணத்துக்கும், என் கண்ணைக் கண்ணீருக்கும், என் காலை இடறுதலுக்கும் தப்புவித்தீர். 9 நான் கர்த்தருக்கு முன்பாக ஜீவனுள்ளோர் தேசத்திலே நடப்பேன். 10 விசுவாசித்தேன், ஆகையால் பேசுகிறேன்; நான் மிகுதியும் வருத்தப்பட்டேன். 11 எந்த மனுஷனும் பொய்யன் என்று என் மனக்கலக்கத்திலே சொன்னேன். 12 கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். 13 இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன். 14 நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செலுத்துவேன். 15 கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது. 16 கர்த்தாவே, நான் உமது அடியேன்; நான் உமது அடியாளின் புத்திரனும், உமது ஊழியக்காரனுமாயிருக்கிறேன்; என் கட்டுகளை அவிழ்த்துவிட்டீர். 17 நான் உமக்கு ஸ்தோத்திரபலியைச் செலுத்தி, கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுவேன். 18 நான் கர்த்தருக்குச் செய்த பொருத்தனைகளை அவருடைய ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும், 19 கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரங்களிலும், எருசலேமே உன் நடுவிலும் நிறைவேற்றுவேன். அல்லேலூயா.

சங்கீதம் 117

1 ஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் போற்றுங்கள். 2 அவர் நம்மேல் வைத்த கிருபை பெரியது; கர்த்தரின் உண்மை என்றென்றைக்குமுள்ளது. அல்லேலூயா.

சங்கீதம் 118

1 கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது. 2 அவர் கிருபை என்றுமுள்ளதென்று இஸ்ரவேல் சொல்வதாக. 3 அவர் கிருபை என்றுமுள்ளதென்று, ஆரோனின் குடும்பத்தார் சொல்வார்களாக. 4 அவர் கிருபை என்றுமுள்ளதென்று, கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் சொல்வார்களாக. 5 நெருக்கத்திலிருந்து கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன், கர்த்தர் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். 6 கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார், நான் பயப்படேன்; மனுஷன் எனக்கு என்னசெய்வான்? 7 எனக்கு அநுகூலம் பண்ணுகிறவர்கள் நடுவில் கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; என் சத்துருக்களில் சரிக்கட்டுதலைக் காண்பேன். 8 மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். 9 பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலாயிருப்பதே நலம். 10 எல்லா ஜாதியாரும் என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். 11 என்னைச் சுற்றிலும் வளைந்துகொள்ளுகிறார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். 12 தேனீக்களைப்போல என்னை வளைந்துகொள்ளுகிறார்கள்; முள்ளில் பற்றின நெருப்பைப்போல அணைந்து போவார்கள்; கர்த்தருடைய நாமத்தினால் அவர்களைச் சங்கரிப்பேன். 13 நான் விழும்படி நீ என்னைத் தள்ளினாய்; கர்த்தரோ எனக்கு உதவிசெய்தார். 14 கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர்; அவர் எனக்கு இரட்சிப்புமானார். 15 நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தம் உண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். 16 கர்த்தரின் வலதுகரம் உயர்ந்திருக்கிறது; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். 17 நான் சாவாமல், பிழைத்திருந்து, கர்த்தருடைய செய்கைகளை விவரிப்பேன். 18 கர்த்தர் என்னை வெகுவாய்த் தண்டித்தும், என்னைச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கவில்லை. 19 நீதியின் வாசல்களைத் திறவுங்கள்; நான் அவைகளுக்குள் பிரவேசித்துக் கர்த்தரைத் துதிப்பேன். 20 கர்த்தரின் வாசல் இதுவே; நீதிமான்கள் இதற்குள் பிரவேசிப்பார்கள். 21 நீர் எனக்குச் செவிகொடுத்து, எனக்கு இரட்சிப்பாயிருந்தபடியால், நான் உம்மைத் துதிப்பேன். 22 வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று. 23 அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது. 24 இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம். 25 கர்த்தாவே, இரட்சியும்; கர்த்தாவே, காரியத்தை வாய்க்கப்பண்ணும். 26 கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; கர்த்தருடைய ஆலயத்திலிருந்து உங்களை ஆசீர்வதிக்கிறோம். 27 கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்; பண்டிகைப்பலியைக் கொண்டுபோய்ப் பலிபீடத்தின் கொம்புகளில் கயிறுகளால் கட்டுங்கள். 28 நீர் என் தேவன், நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என் தேவன், நான் உம்மை உயர்த்துவேன். 29 கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதம் 119

1 (ஆலேப்.) கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். 2 அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். 3 அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். 4 உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர். 5 உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும். 6 நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை. 7 உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன். 8 உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும். 9 (பேத்.) வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே. 10 என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும். 11 நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன். 12 கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும். 13 உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன். 14 திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன். 15 உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன். 16 உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன். 17 (கிமெல்.) உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன். 18 உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும். 19 பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும். 20 உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்துபோகிறது. 21 உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை நீர் கடிந்துகொள்ளுகிறீர். 22 நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளைக் கைக்கொள்ளுகிறேன். 23 பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது அடியேனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன். 24 உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது. 25 (டாலெத்.) என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும். 26 என் வழிகளை நான் உமக்கு விவரித்துக் காட்டினபோது எனக்குச் செவிகொடுத்தீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். 27 உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும்; அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன். 28 சஞ்சலத்தால் என் ஆத்துமா கரைந்துபோகிறது; உமது வசனத்தின்படி என்னை எடுத்து நிறுத்தும். 29 பொய்வழியை என்னைவிட்டு விலக்கி, உம்முடைய வேதத்தை எனக்கு அருள்செய்யும். 30 மெய்வழியை நான் தெரிந்துகொண்டு, உம்முடைய நியாயங்களை எனக்கு முன்பாக நிறுத்தினேன். 31 உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும். 32 நீர் என் இருதயத்தை விசாலமாக்கும்போது, நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன். 33 (எ.) கர்த்தாவே, உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்; முடிவுபரியந்தம் நான் அதைக் காத்துக்கொள்ளுவேன். 34 எனக்கு உணர்வைத் தாரும்; அப்பொழுது நான் உமது வேதத்தைப் பற்றிக்கொண்டு, என் முழு இருதயத்தோடும் அதைக் கைக்கொள்ளுவேன். 35 உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும்; நான் அதில் பிரியமாயிருக்கிறேன். 36 என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும். 37 மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும். 38 உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்கை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும். 39 நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள். 40 இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும். 41 (வௌ.) கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக. 42 அப்பொழுது என்னை நிந்திக்கிறவனுக்கு உத்தரவு சொல்லுவேன்; உம்முடைய வசனத்தை நம்பியிருக்கிறேன். 43 சத்திய வசனம் முற்றிலும் என் வாயினின்று நீங்கவிடாதேயும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகளுக்குக் காத்திருக்கிறேன். 44 நான் எப்பொழுதும் என்றைக்கும் உமது வேதத்தைக் காத்துக்கொள்ளுவேன். 45 நான் உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறபடியால், விசாலத்திலே நடப்பேன். 46 நான் உம்முடைய சாட்சிகளைக்குறித்து, ராஜாக்களுக்கு முன்பாகவும் வெட்கப்படாமல் பேசுவேன். 47 நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன். 48 நான் பிரியப்படுகிற உமது கற்பனைகளுக்குக் கையெடுப்பேன், உமது பிரமாணங்களைத் தியானிப்பேன். 49 (சாயீன்.) நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும். 50 அதுவே என் சிறுமையில் எனக்கு ஆறுதல், உம்முடைய வாக்கு என்னை உயிர்ப்பித்தது. 51 அகந்தைக்காரர் என்னை மிகவும் பரியாசம்பண்ணியும், நான் உமது வேதத்தைவிட்டு விலகினதில்லை. 52 கர்த்தாவே, ஆதிமுதலான உமது நியாயத்தீர்ப்புகளை நான் நினைத்து என்னைத் தேற்றுகிறேன். 53 உமது வேதத்தை விட்டு விலகுகிற துன்மார்க்கர்நிமித்தம் நடுக்கம் என்னைப் பிடித்தது. 54 நான் பரதேசியாய்த் தங்கும் வீட்டிலே உமது பிரமாணங்கள் எனக்குக் கீதங்களாயின. 55 கர்த்தாவே, இராக்காலத்தில் உமது நாமத்தை நினைத்து, உமது வேதத்தைக் கைக்கொள்ளுகிறேன். 56 நான் உமது கட்டளைகளைக் கைக்கொண்டபடியினால், இது எனக்குக் கிடைத்தது. 57 (கேத்.) கர்த்தாவே, நீரே என் பங்கு; நான் உமது வசனங்களைக் கைக்கொள்ளுவேன் என்றேன். 58 முழு இருதயத்தோடும் உம்முடைய தயவுக்காகக் கெஞ்சுகிறேன்; உமது வாக்கின்படி எனக்கு இரங்கும். 59 என் வழிகளைச் சிந்தித்துக்கொண்டு, என் கால்களை உம்முடைய சாட்சிகளுக்கு நேராகத் திருப்பினேன். 60 உமது கற்பனைகளைக் கைக்கொள்ளும்படி, நான் தாமதியாமல் தீவிரித்தேன். 61 துன்மார்க்கரின் கூட்டங்கள் என்னைக் கொள்ளையிட்டும், உம்முடைய வேதத்தை நான் மறக்கவில்லை. 62 உமது நீதியான நியாயத்தீர்ப்புகளினிமித்தம், உம்மைத் துதிக்கும்படி பாதிராத்திரியில் எழுந்திருப்பேன். 63 உமக்குப் பயந்து, உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழன். 64 கர்த்தாவே, பூமி உமது கிருபையினால் நிறைந்திருக்கிறது; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். 65 (தேத்.) கர்த்தாவே, உமது வசனத்தின்படி உமது அடியேனை நன்றாய் நடத்தினீர். 66 உத்தம நிதானிப்பையும் அறிவையும் எனக்குப் போதித்தருளும், உம்முடைய கற்பனைகளின்பேரில் விசுவாசமாயிருக்கிறேன். 67 நான் உபத்திரவப்படுவதற்கு முன் வழிதப்பி நடந்தேன்; இப்பொழுதோ உம்முடைய வார்த்தையைக் காத்து நடக்கிறேன். 68 தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். 69 அகங்காரிகள் எனக்கு விரோதமாய்ப் பொய்களைப் பிணைக்கிறார்கள்; நானோ, முழு இருதயத்தோடும் உம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவேன். 70 அவர்கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது; நானோ, உம்முடைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன். 71 நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன். 72 அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். 73 (யோட்.) உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும். 74 நான் உம்முடைய வசனத்திற்குக் காத்திருக்கிறபடியால், உமக்குப் பயந்தவர்கள் என்னைக் கண்டு சந்தோஷப்படுவார்கள். 75 கர்த்தாவே, உமது நியாயத்தீர்ப்புகள் நீதியுள்ளதென்றும், உண்மையின்படி என்னை உபத்திரவப்படுத்தினீரென்றும் அறிவேன். 76 நீர் உமது அடியேனுக்குக் கொடுத்த உமது வாக்கின்படி, உமது கிருபை என்னைத் தேற்றுவதாக. 77 நான் பிழைத்திருக்கும்படிக்கு உமது இரக்கங்கள் எனக்குக் கிடைப்பதாக; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி. 78 அகங்காரிகள் என்னைப் பொய்களினால் கெடுக்கப் பார்த்தபடியால் வெட்கப்பட்டுப்போவார்களாக; நானோ உமது கட்டளைகளைத் தியானிப்பேன். 79 உமக்குப் பயந்து, உமது சாட்சிகளை அறிந்திருக்கிறவர்கள் என்னண்டைக்குத் திரும்புவார்களாக. 80 நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது. 81 (கப்.) உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். 82 எப்பொழுது என்னைத் தேற்றுவீர் என்று, உம்முடைய வாக்கின்மேல் நோக்கமாய் என் கண்கள் பூத்துப்போகிறது. 83 புகையிலுள்ள துருத்தியைப்போலானேன்; உமது பிரமாணங்களையோ மறவேன். 84 உமது அடியேனுடைய நாட்கள் எம்மாத்திரம்? என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு நீர் எப்பொழுது நியாயத்தீர்ப்புச் செய்வீர்? 85 உம்முடைய வேதத்துக்கு விரோதமாய் அகங்காரிகள் எனக்குக் குழிகளை வெட்டினார்கள். 86 உம்முடைய கற்பனைகளெல்லாம் உண்மையாயிருக்கிறது; அநியாயமாய் என்னைத் துன்பப்படுத்துகிறார்கள்; நீர் எனக்குச் சகாயம்பண்ணும். 87 அவர்கள் என்னைப் பூமியிலிராமல் நீக்கிவிடச் சற்றே தப்பிற்று; ஆனாலும் நான் உமது கட்டளைகளை விட்டுவிடவில்லை. 88 உமது கிருபையின்படியே என்னை உயிர்ப்பியும்; அப்பொழுது நான் உம்முடைய வாக்கின் சாட்சியைக் காத்து நடப்பேன். 89 (லாமேட்.) கர்த்தாவே, உமது வசனம் என்றென்றைக்கும் வானங்களில் நிலைத்திருக்கிறது. 90 உம்முடைய உண்மை தலைமுறை தலைமுறையாக இருக்கும்; பூமியை உறுதிப்படுத்தினீர், அது நிலைத்திருக்கிறது. 91 உம்முடைய பிரமாணங்களை நிறைவேற்றும்படி அவைகள் இந்நாள்வரைக்கும் நிற்கிறது; சமஸ்தமும் உம்மைச் சேவிக்கும். 92 உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன். 93 நான் ஒருபோதும் உம்முடைய கட்டளைகளை மறக்கமாட்டேன்; அவைகளால் நீர் என்னை உயிர்ப்பித்தீர். 94 நான் உம்முடையவன், என்னை இரட்சியும்; உம்முடைய கட்டளைகளை ஆராய்கிறேன். 95 துன்மார்க்கர் என்னை அழிக்கக் காத்திருக்கிறார்கள்; நான் உமது சாட்சிகளைச் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். 96 சகல சம்பூரணத்திற்கும் எல்லையைக் கண்டேன்; உம்முடைய கற்பனையோ மகா விஸ்தாரம். 97 (மேம்.) உமது வேதத்தில் நான் எவ்வளவு பிரியமாயிருக்கிறேன்! நாள்முழுதும் அது என் தியானம். 98 நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. 99 உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன். 100 உம்முடைய கட்டளைகளை நான் கைக்கொண்டிருக்கிறபடியால், முதியோர்களைப்பார்க்கிலும் ஞானமுள்ளவனாயிருக்கிறேன். 101 உம்முடைய வசனத்தை நான் காத்து நடக்கும்படிக்கு, சகல பொல்லாத வழிகளுக்கும் என் கால்களை விலக்குகிறேன். 102 நீர் எனக்குப் போதித்திருக்கிறபடியால், நான் உம்முடைய நியாயங்களை விட்டு விலகேன். 103 உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும். 104 உமது கட்டளைகளால் உணர்வடைந்தேன், ஆதலால் எல்லாப் பொய்வழிகளையும் வெறுக்கிறேன். 105 (நூன்.) உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. 106 உம்முடைய நீதிநியாயங்களைக் காத்து நடப்பேன் என்று ஆணையிட்டேன்; அதை நிறைவேற்றுவேன். 107 நான் மிகவும் உபத்திரவப்படுகிறேன்; கர்த்தாவே, உம்முடைய வசனத்தின்படியே என்னை உயிர்ப்பியும். 108 கர்த்தாவே, என் வாயின் உற்சாகபலிகளை நீர் அங்கீகரித்து, உமது நியாயங்களை எனக்குப் போதித்தருளும். 109 என் பிராணன் எப்பொழுதும் என் கையில் இருக்கிறது; ஆனாலும் உம்முடைய வேதத்தை மறவேன். 110 துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழி தவறேன். 111 உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதயத்தின் மகிழ்ச்சி. 112 முடிவுபரியந்தம் இடைவிடாமல் உம்முடைய பிரமாணங்களின்படி செய்ய என் இருதயத்தைச் சாய்த்தேன். 113 (சாமெக்.) வீண் சிந்தனைகளை நான் வெறுத்து, உமது வேதத்தில் பிரியப்படுகிறேன். 114 என் மறைவிடமும் என் கேடகமும் நீரே; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். 115 பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன். 116 நான் பிழைத்திருப்பதற்கு உமது வார்த்தையின்படி என்னை ஆதரித்தருளும்; என் நம்பிக்கை விருதாவாய்ப்போக என்னை வெட்கத்திற்கு உட்படுத்தாதேயும். 117 என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு, எக்காலமும் உம்முடைய பிரமாணங்களின்பேரில் நோக்கமாயிருப்பேன். 118 உமது பிரமாணங்களைவிட்டு வழிவிலகுகிற யாவரையும் மிதித்துப்போடுகிறீர்; அவர்களுடைய உபாயம் வெறும் பொய்யே. 119 பூமியிலுள்ள துன்மார்க்கர் யாவரையும் களிம்பைப்போல அகற்றிவிடுகிறீர்; ஆகையால் உமது சாட்சிகளில் பிரியப்படுகிறேன். 120 உமக்குப் பயப்படும் பயத்தால் என் உடம்பு சிலிர்க்கிறது; உமது நியாயத்தீர்ப்புகளுக்குப் பயப்படுகிறேன். 121 (ஆயின்.) நியாயமும் நீதியும் செய்கிறேன்; என்னை ஒடுக்குகிறவர்களுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும். 122 உமது அடியேனுக்கு நன்மையாகத் துணைநில்லும்; அகங்காரிகள் என்னையொடுக்கவொட்டாதேயும். 123 உமது இரட்சிப்புக்கும் உமது நீதியின் வார்த்தைக்கும் காத்திருக்கிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது. 124 உமது அடியேனை உமது கிருபையின்படியே நடத்தி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். 125 நான் உமது அடியேன்; உம்முடைய சாட்சிகளை நான் அறியும்படி என்னை உணர்வுள்ளவனாக்கும். 126 நீதியைச் செய்யக் கர்த்தருக்கு வேளைவந்தது; அவர்கள் உம்முடைய நியாயப்பிரமாணத்தை மீறினார்கள். 127 ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன். 128 எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன். 129 (பே.) உம்முடைய சாட்சிகள் அதிசயமானவைகள்; ஆகையால் என் ஆத்துமா அவைகளைக் கைக்கொள்ளும். 130 உம்முடைய வசனத்தின் பிரசித்தம் வெளிச்சம் தந்து, பேதைகளை உணர்வுள்ளவர்களாக்கும். 131 உம்முடைய கற்பனைகளை நான் வாஞ்சிக்கிறபடியால், என் வாயை ஆவென்று திறந்து அவைகளுக்கு ஏங்குகிறேன். 132 உம்முடைய நாமத்தை நேசிக்கிறவர்களுக்கு வழங்கும் நியாயத்தின்படியே என்னை நோக்கிப்பார்த்து, எனக்கு இரங்கும். 133 உம்முடைய வார்த்தையிலே என் காலடிகளை நிலைப்படுத்தி, ஒரு அநியாயமும் என்னை ஆளவொட்டாதேயும். 134 மனுஷர் செய்யும் இடுக்கத்துக்கு என்னை விலக்கி விடுவித்தருளும்; அப்பொழுது நான் உம்முடைய கட்டளைகளைக் காத்துக்கொள்ளுவேன். 135 உமது அடியேன்மேல் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணி, உமது பிரமாணங்களை எனக்குப் போதியும். 136 உம்முடைய வேதத்தை மனுஷர் காத்து நடவாதபடியால், என் கண்களிலிருந்து நீர்த்தாரைகள் ஓடுகிறது. 137 (த்சாடே.) கர்த்தாவே, நீர் நீதிபரர், உமது நியாயத்தீர்ப்புகள் செம்மையானவைகள். 138 நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள். 139 என் சத்துருக்கள் உம்முடைய வசனங்களை மறந்தபடியால், என் பக்திவைராக்கியம் என்னைப் பட்சிக்கிறது. 140 உமது வார்த்தை மிகவும் புடமிடப்பட்டது, உமது அடியேன் அதில் பிரியப்படுகிறேன். 141 நான் சிறியவனும் அசட்டை பண்ணப்பட்டவனுமாயிருக்கிறேன்; ஆனாலும் உமது கட்டளைகளை மறவேன். 142 உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம். 143 இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது; ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி. 144 உம்முடைய சாட்சிகளின் நீதி என்றைக்கும் நிற்கும்; என்னை உணர்வுள்ளவனாக்கும், அப்பொழுது நான் பிழைத்திருப்பேன். 145 (கோப்.) முழு இருதயத்தோடும் கூப்பிட்டேன், கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்; உம்முடைய பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன். 146 உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், என்னை இரட்சியும்; அப்பொழுது நான் உம்முடைய சாட்சிகளைக் காத்துக்கொள்ளுவேன். 147 அதிகாலையில் நான் எழுந்து சத்தமிட்டேன்; உம்முடைய வசனத்துக்குக் காத்திருக்கிறேன். 148 உமது வசனத்தைத் தியானிக்கும்படி, குறித்த ஜாமங்களுக்கு முன்னே என் கண்கள் விழித்துக்கொள்ளும். 149 உம்முடைய கிருபையின்படி என் சத்தத்தைக் கேளும்; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தின்படி என்னை உயிர்ப்பியும். 150 தீவினையைப் பின்பற்றுகிறவர்கள் சமீபிக்கிறார்கள்; அவர்கள் உம்முடைய வேதத்துக்குத் தூரமாயிருக்கிறார்கள். 151 கர்த்தாவே, நீர் சமீபமாயிருக்கிறீர்; உமது கற்பனைகளெல்லாம் உண்மை. 152 நீர் உம்முடைய சாட்சிகளை என்றென்றைக்கும் நிற்க ஸ்தாபித்தீர் என்பதை, அவைகளால் நான் நெடுநாளாய் அறிந்திருக்கிறேன். 153 (ரேஷ்.) என் உபத்திரவத்தைப் பார்த்து, என்னை விடுவியும்; உமது வேதத்தை மறவேன். 154 எனக்காக நீர் வழக்காடி என்னை மீட்டுக்கொள்ளும், உம்முடைய வார்த்தையின்படியே என்னை உயிர்ப்பியும். 155 இரட்சிப்பு துன்மார்க்கருக்குத் தூரமாயிருக்கிறது, அவர்கள் உமது பிரமாணங்களைத் தேடார்கள். 156 கர்த்தாவே, உம்முடைய இரக்கங்கள் மிகுதியாயிருக்கிறது; உமது நியாயங்களின்படி என்னை உயிர்ப்பியும். 157 என்னைத் துன்பப்படுத்துகிறவர்களும் என்னை விரோதிக்கிறவர்களும் அநேகர்; ஆனாலும் உம்முடைய சாட்சிகளை விட்டு விலகேன். 158 உமது வசனத்தைக் காத்துக்கொள்ளாத துரோகிகளை நான் கண்டபோது, எனக்கு அருவருப்பாயிருந்தது. 159 இதோ, உம்முடைய கட்டளைகளை நேசிக்கிறேன்; கர்த்தாவே, உமது கிருபையின்படி என்னை உயிர்ப்பியும். 160 உம்முடைய வசனம் சமூலமும் சத்தியம், உம்முடைய நீதி நியாயமெல்லாம் நித்தியம். 161 (ஷீன்.) பிரபுக்கள் காரணமில்லாமல் என்னைத் துன்பப்படுத்தினார்கள், ஆனாலும் என் இருதயம் உமது வசனத்திற்கே பயப்படுகிறது. 162 மிகுந்த கொள்ளையுடைமையைக் கண்டுபிடிக்கிறவன் மகிழுகிறதுபோல, நான் உமது வார்த்தையின்பேரில் மகிழுகிறேன். 163 பொய்யைப் பகைத்து அருவருக்கிறேன்; உம்முடைய வேதத்தையோ நேசிக்கிறேன். 164 உமது நீதிநியாயங்களினிமித்தம், ஒருநாளில் ஏழுதரம் உம்மைத் துதிக்கிறேன். 165 உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை. 166 கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்புக்கு நான் காத்திருந்து, உம்முடைய கற்பனைகளின்படி செய்கிறேன். 167 என் ஆத்துமா உமது சாட்சிகளைக் காக்கும்; அவைகளை நான் மிகவும் நேசிக்கிறேன். 168 உமது கட்டளைகளையும் உமது சாட்சிகளையும் காத்து நடக்கிறேன்; என் வழிகளெல்லாம் உமக்கு முன்பாக இருக்கிறது. 169 (தௌ.) கர்த்தாவே, என் கூப்பிடுதல் உமது சந்நிதியில் வருவதாக; உமது வசனத்தின்படியே என்னை உணர்வுள்ளவனாக்கும். 170 என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும். 171 உம்முடைய பிரமாணங்களை நீர் எனக்குப் போதிக்கும்போது, என் உதடுகள் உமது துதியைப் பிரஸ்தாபப்படுத்தும். 172 உமது கற்பனைகளெல்லாம் நீதியுள்ளவைகள்; ஆதலால், என் நாவு உம்முடைய வசனத்தை விவரித்துச்சொல்லும். 173 நான் உம்முடைய கட்டளைகளைத் தெரிந்துகொண்டபடியால், உமது கரம் எனக்குத் துணையாயிருப்பதாக. 174 கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி. 175 என் ஆத்துமா பிழைத்திருந்து உம்மைத் துதிக்கக்கடவது; உமது நியாயத்தீர்ப்புகள் எனக்கு உதவியாயிருப்பதாக. 176 காணாமற்போன ஆட்டைப்போல வழிதப்பிப்போனேன்; உமது அடியேனைத் தேடுவீராக; உமது கற்பனைகளை நான் மறவேன்.

சங்கீதம் 120

1 என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார். 2 கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் கபடநாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும். 3 கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்? 4 பலவானுடைய கூர்மையான அம்புகளும், சூரைச்செடிகளை எரிக்கும் தழலுமே கிடைக்கும். 5 ஐயோ! நான் மேசேக்கிலே சஞ்சரித்தது போதும், கேதாரின் கூடாரங்களண்டையிலே குடியிருந்ததும் போதும்! 6 சமாதானத்தைப் பகைக்கிறவர்களிடத்தில் என் ஆத்துமா குடியிருந்ததும் போதும்! 7 நான் சமாதானத்தை நாடுகிறேன்; அவர்களோ, நான் பேசும்போது யுத்தத்துக்கு எத்தனப்படுகிறார்கள்.

சங்கீதம் 121

1 எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன். 2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தரிடத்திலிருந்து எனக்கு ஒத்தாசை வரும். 3 உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார். 4 இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குவதுமில்லை தூங்குகிறதுமில்லை. 5 கர்த்தர் உன்னைக் காக்கிறவர்; கர்த்தர் உன் வலதுபக்கத்திலே உனக்கு நிழலாயிருக்கிறார். 6 பகலிலே வெயிலாகிலும், இரவிலே நிலவாகிலும் உன்னைச் சேதப்படுத்துவதில்லை. 7 கர்த்தர் உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன் ஆத்துமாவைக் காப்பார். 8 கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.

சங்கீதம் 122

1 கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன். 2 எருசலேமே, உன் வாசல்களில் எங்கள் கால்கள் நிற்கலாயிற்று. 3 எருசலேம் இசைவிணைப்பான நகரமாய்க் கட்டப்பட்டிருக்கிறது. 4 அங்கே இஸ்ரவேலுக்குச் சாட்சியாகக் கர்த்தருடைய ஜனங்களாகிய கோத்திரங்கள் கர்த்தரின் நாமத்தை ஸ்தோத்திரிப்பதற்குப் போகும். 5 அங்கே தாவீதின் வம்சத்தாருடைய சிங்காசனங்களாகிய நியாயாசனங்கள் வைக்கப்பட்டிருக்கிறது. 6 எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; உன்னை நேசிக்கிறவர்கள் சுகித்திருப்பார்களாக. 7 உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும், உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. 8 என் சகோதரர் நிமித்தமும் என் சிநேகிதர் நிமித்தமும், உன்னில் சமாதானம் இருப்பதாக என்பேன். 9 எங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தினிமித்தம் உனக்கு நன்மையுண்டாகத் தேடுவேன்.

சங்கீதம் 123

1 பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன். 2 இதோ, வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், வேலைக்காரியின் கண்கள் தன் எஜமாட்டியின் கையை நோக்கியிருக்குமாப்போலவும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இரக்கஞ்செய்யும்வரைக்கும், எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது. 3 எங்களுக்கு இரங்கும் கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும்; நிந்தனையினால் மிகவும் நிறைந்திருக்கிறோம். 4 சுகஜீவிகளுடைய நிந்தனையினாலும், அகங்காரிகளுடைய இகழ்ச்சியினாலும், எங்கள் ஆத்துமா மிகவும் நிறைந்திருக்கிறது.

சங்கீதம் 124

1 மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது, கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால், 2 கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால், 3 அவர்கள் கோபம் நம்மேல் எரிகையில், நம்மை உயிரோடே விழுங்கியிருப்பார்கள். 4 அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி, 5 கொந்தளிக்கும் ஜலங்கள் நமது ஆத்துமாவின்மேல் புரண்டுபோயிருக்கும் என்று இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. 6 நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 7 வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம். 8 நம்முடைய சகாயம் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தருடைய நாமத்தில் உள்ளது.

சங்கீதம் 125

1 கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள். 2 பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார். 3 நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்கள் கைகளை நீட்டாதபடிக்கு, ஆகாமியத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சுதந்தரத்தின்மேல் நிலைத்திராது. 4 கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மைசெய்யும். 5 தங்கள் கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் கர்த்தர் அக்கிரமக்காரரோடே போகப்பண்ணுவார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.

சங்கீதம் 126

1 சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம். 2 அப்பொழுது நம்முடைய வாய் நகைப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: கர்த்தர் இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். 3 கர்த்தர் நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதினிமித்தம் நாம் மகிழ்ந்திருக்கிறோம். 4 கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்கள் சிறையிருப்பைத் திருப்பும். 5 கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள். 6 அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடே திரும்பிவருவான்.

சங்கீதம் 127

1 கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா; கர்த்தர் நகரத்தைக் காவாராகில் காவலாளர் விழித்திருக்கிறது விருதா. 2 நீங்கள் அதிகாலையில் எழுந்து, நேரப்பட வேலையிலே தரித்து, வருத்தத்தின் அப்பத்தைச் சாப்பிடுகிறதும் விருதா; அவரே தமக்குப் பிரியமானவனுக்கு நித்திரை அளிக்கிறார். 3 இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். 4 வாலவயதின் குமாரர் பலவான் கையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். 5 அவைகளால் தன் அம்பறாத்தூணியை நிரப்பின புருஷன் பாக்கியவான்; அவர்கள் நாணமடையாமல் ஒலிமுகவாசலில் சத்துருக்களோடே பேசுவார்கள்.

சங்கீதம் 128

1 கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். 2 உன் கைகளின் பிரயாசத்தை நீ சாப்பிடுவாய்; உனக்குப் பாக்கியமும் நன்மையும் உண்டாயிருக்கும். 3 உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள். 4 இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான். 5 கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பார்; நீ ஜீவனுள்ள நாளெல்லாம் எருசலேமின் வாழ்வைக் காண்பாய். 6 நீ உன் பிள்ளைகளின் பிள்ளைகளையும், இஸ்ரவேலுக்கு உண்டாகும் சமாதானத்தையும் காண்பாய்.

சங்கீதம் 129

1 என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள். 2 என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கியும், என்னை மேற்கொள்ளாமற்போனார்கள். 3 உழுகிறவர்கள் என் முதுகின்மேல் உழுது, தங்கள் படைச்சால்களை நீளமாக்கினார்கள். 4 கர்த்தரோ நீதியுள்ளவர்; துன்மார்க்கருடைய கயிறுகளை அவர் அறுத்தார் என்று, இஸ்ரவேல் இப்பொழுது சொல்வதாக. 5 சீயோனைப் பகைக்கிற அனைவரும் வெட்கிப் பின்னிட்டுத் திரும்பக்கடவர்கள். 6 வீட்டின்மேல் முளைக்கும் புல்லுக்கு அவர்கள் ஒப்பாவார்களாக; அது வளருமுன் உலர்ந்துபோம். 7 அறுக்கிறவன் அதினால் தன் கையையும், அரிகளைக் கட்டுகிறவன் தன் மடியையும் நிரப்புவதில்லை. 8 கர்த்தருடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக; கர்த்தரின் நாமத்தினால் உங்களை ஆசீர்வதிக்கிறோம் என்று வழிப்போக்கர் சொல்வதுமில்லை.

சங்கீதம் 130

1 கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன். 2 ஆண்டவரே, என் சத்தத்தைக் கேளும்; என் விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருப்பதாக. 3 கர்த்தாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே. 4 உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு. 5 கர்த்தருக்குக் காத்திருக்கிறேன்; என் ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன். 6 எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது. 7 இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு. 8 அவர் இஸ்ரவேலை அதின் சகல அக்கிரமங்களினின்றும் மீட்டுக்கொள்வார்.

சங்கீதம் 131

1 கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை. 2 தாயின் பால்மறந்த குழந்தையைப்போல நான் என் ஆத்துமாவை அடக்கி அமரப்பண்ணினேன்; என் ஆத்துமா பால்மறந்த குழந்தையைப்போல் இருக்கிறது. 3 இதுமுதல் என்றென்றைக்கும் இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக.

சங்கீதம் 132

1 கர்த்தாவே, தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளும். 2 அவன்: நான் கர்த்தருக்கு ஒரு இடத்தையும், யாக்கோபின் வல்லவருக்கு ஒரு வாசஸ்தலத்தையும் காணுமட்டும், 3 என் வீடாகிய கூடாரத்தில் பிரவேசிப்பதுமில்லை, என் படுக்கையாகிய கட்டிலின்மேல் ஏறுவதுமில்லை; 4 என் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று, 5 கர்த்தருக்கு ஆணையிட்டு, யாக்கோபின் வல்லவருக்குப் பொருத்தனை பண்ணினான். 6 இதோ, நாம் எப்பிராத்தாவிலே அதின் செய்தியைக் கேட்டு, வனத்தின் வெளிகளில் அதைக் கண்டோம். 7 அவருடைய வாசஸ்தலங்களுக்குள் பிரவேசித்து, அவர் பாதபடியில் பணிவோம். 8 கர்த்தாவே, உமது வல்லமை விளங்கும் பெட்டியுடன் நீர் உமது தாபர ஸ்தலத்திற்குள் எழுந்தருளும். 9 உம்முடைய ஆசாரியர்கள் நீதியைத் தரித்து, உம்முடைய பரிசுத்தவான்கள் கெம்பீரிப்பார்களாக. 10 நீர் அபிஷேகம்பண்ணுவித்தவனின் முகத்தை உமது தாசனாகிய தாவீதினிமித்தம் புறக்கணியாதிரும். 11 உன் கர்ப்பத்தின் கனியை உன் சிங்காசனத்தின்மேல் வைப்பேன் என்றும், 12 உன் குமாரர் என் உடன்படிக்கையையும், நான் போதிக்கும் என் சாட்சிகளையும் காத்து நடந்தால், அவர்கள் குமாரரும் என்றென்றைக்கும் உன் சிங்காசனத்தில் வீற்றிருப்பார்கள் என்றும், கர்த்தர் தாவீதுக்கு உண்மையாய் ஆணையிட்டார்; அவர் தவறமாட்டார். 13 கர்த்தர் சீயோனைத் தெரிந்துகொண்டு, அது தமக்கு வாசஸ்தலமாகும்படி விரும்பினார். 14 இது என்றென்றைக்கும் நான் தங்கும் இடம்; இதை நான் விரும்பினபடியால், இங்கே வாசம்பண்ணுவேன். 15 அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன். 16 அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை உடுத்துவேன்; அதிலுள்ள பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பீரிப்பார்கள். 17 அங்கே தாவீதுக்காக ஒரு கொம்பை முளைக்கப்பண்ணுவேன்; நான் அபிஷேகம்பண்ணுவித்தவனுக்காக ஒரு விளக்கை ஆயத்தம்பண்ணினேன். 18 அவன் சத்துருக்களுக்கு வெட்கத்தை உடுத்துவேன்; அவன்மீதிலோ அவன் கிரீடம் பூக்கும் என்றார்.

சங்கீதம் 133

1 இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? 2 அது ஆரோனுடைய சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடியிலே வடிகிறதும், அவனுடைய அங்கிகளின்மேல் இறங்குகிறதுமான நல்ல தைலத்துக்கும், 3 எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.

சங்கீதம் 134

1 இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். 2 உங்கள் கைகளைப் பரிசுத்த ஸ்தலத்திற்கு நேராக எடுத்து, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். 3 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின கர்த்தர் சீயோனிலிருந்து உன்னை ஆசீர்வதிப்பாராக.

சங்கீதம் 135

1 அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரரே, துதியுங்கள். 2 கர்த்தருடைய வீட்டிலும், நமது தேவனுடைய ஆலயப்பிராகாரங்களிலும் நிற்கிறவர்களே, கர்த்தரைத் துதியுங்கள். 3 கர்த்தர் நல்லவர்; அவருடைய நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுங்கள்; அது இன்பமானது. 4 கர்த்தர் யாக்கோபைத் தமக்காகவும், இஸ்ரவேலைத் தமக்குச் சொந்தமாகவும் தெரிந்துகொண்டார். 5 கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன். 6 வானத்திலும் பூமியிலும், சமுத்திரங்களிலும், எல்லா ஆழங்களிலும், கர்த்தர் தமக்குச் சித்தமானதையெல்லாம் செய்கிறார். 7 அவர் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடன் மின்னலையும் உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார். 8 அவர் எகிப்திலே மனுஷருடைய தலைப்பிள்ளைகளையும் மிருகத்தின் தலையீற்றுகளையும் அடித்தார். 9 எகிப்துதேசமே, உன் நடுவில் பார்வோன்மேலும் அவனுடைய எல்லா ஊழியக்காரர்மேலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்பினார். 10 அவர் அநேகம் ஜாதிகளை அடித்து, பலத்த ராஜாக்களைக் கொன்று; 11 எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் சகல ராஜ்யங்களையும் அழித்து, 12 அவர்கள் தேசத்தைத் தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகக் கொடுத்தார். 13 கர்த்தாவே, உம்முடைய நாமம் என்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும். 14 கர்த்தர் தம்முடைய ஜனத்தின் நியாயத்தை விசாரித்து, தம்முடைய ஊழியக்காரர்மேல் பரிதாபப்படுவார். 15 அஞ்ஞானிகளுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது. 16 அவைகளுக்கு வாயிருந்தும் பேசாது, அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது. 17 அவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது, அவைகளுடைய வாயிலே சுவாசமுமில்லை. 18 அவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போல் இருக்கிறார்கள். 19 இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். 20 லேவி குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; கர்த்தருக்குப் பயந்தவர்களே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள். 21 எருசலேமில் வாசம்பண்ணுகிற கர்த்தருக்கு சீயோனிலிருந்து ஸ்தோத்திரமுண்டாவதாக. அல்லேலூயா.

சங்கீதம் 136

1 கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. 2 தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 3 கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 4 ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 5 வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 6 தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 7 பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது; 8 பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 9 இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது; 10 எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 11 அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 12 பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 13 சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 14 அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 15 பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 16 தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 17 பெரிய ராஜாக்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 18 பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 19 எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 20 பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 21 அவர்கள் தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 22 அதைத் தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகவே தந்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 23 நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 24 நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 25 மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. 26 பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

சங்கீதம் 137

1 பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம். 2 அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தூக்கிவைத்தோம். 3 எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்கள் பாடல்களையும், எங்களைப் பாழாக்கினவர்கள் மங்கள கீதத்தையும் விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள். 4 கர்த்தரின் பாட்டை அந்நியதேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி? 5 எருசலேமே, நான் உன்னை மறந்தால் என் வலதுகை தன் தொழிலை மறப்பதாக. 6 நான் உன்னை நினையாமலும், எருசலேமை என் முக்கியமான மகிழ்ச்சியிலும் அதிகமாக எண்ணாமலும்போனால், என் நாவு என் மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக. 7 கர்த்தாவே, எருசலேமின் நாளில் ஏதோமின் புத்திரரை நினையும்; அவர்கள்: அதை இடித்துப்போடுங்கள், அஸ்திபாரமட்டும் இடித்துப்போடுங்கள் என்று சொன்னார்களே. 8 பாபிலோன் குமாரத்தியே, பாழாய்ப்போகிறவளே, நீ எங்களுக்குச் செய்தபடி உனக்குப் பதில் செய்கிறவன் பாக்கியவான். 9 உன் குழந்தைகளைப் பிடித்து, கல்லின்மேல் மோதியடிக்கிறவன் பாக்கியவான்.

சங்கீதம் 138

1 உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். 2 உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் பணிந்து, உமது கிருபையினிமித்தமும் உமது உண்மையினிமித்தமும் உமது நாமத்தைத் துதிப்பேன்; உமது சகல பிரஸ்தாபத்தைப்பார்க்கிலும் உமது வார்த்தையை நீர் மகிமைப்படுத்தியிருக்கிறீர். 3 நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்; என் ஆத்துமாவிலே பெலன்தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்; 4 கர்த்தாவே, பூமியின் ராஜாக்களெல்லாரும் உமது வாயின் வார்த்தைகளைக் கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள். 5 கர்த்தரின் மகிமை பெரிதாயிருப்பதினால், அவர்கள் கர்த்தரின் வழிகளைப் பாடுவார்கள். 6 கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார். 7 நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும். 8 கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்; கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக.

சங்கீதம் 139

1 கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து, அறிந்திருக்கிறீர். 2 என் உட்காருதலையும் என் எழுந்திருக்குதலையும் நீர் அறிந்திருக்கிறீர்; என் நினைவுகளைத் தூரத்திலிருந்து அறிகிறீர். 3 நான் நடந்தாலும் படுத்திருந்தாலும் என்னைச் சூழ்ந்திருக்கிறீர்; என் வழிகளெல்லாம் உமக்குத் தெரியும். 4 என் நாவில் சொல் பிறவாததற்குமுன்னே, இதோ, கர்த்தாவே, அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். 5 முற்புறத்திலும் பிற்புறத்திலும் நீர் என்னை நெருக்கி, உமது கரத்தை என்மேல் வைக்கிறீர். 6 இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், எனக்கு எட்டாத உயரமுமாயிருக்கிறது. 7 உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்? 8 நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர். 9 நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும், 10 அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும். 11 இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும். 12 உமக்கு மறைவாக இருளும் அந்தகாரப்படுத்தாது; இரவும் பகலைப்போல வெளிச்சமாயிருக்கும்; உமக்கு இருளும் வெளிச்சமும் சரி. 13 நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். 14 நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்; உமது கிரியைகள் அதிசயமானவைகள், அது என் ஆத்துமாவுக்கு நன்றாய்த் தெரியும். 15 நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை. 16 என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது. 17 தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம். 18 அவைகளை நான் எண்ணப்போனால், மணலைப்பார்க்கிலும் அதிகமாம்; நான் விழிக்கும்போது இன்னும் உம்மண்டையில் இருக்கிறேன். 19 தேவனே, நீர் துன்மார்க்கனை அழித்தீரானால் நலமாயிருக்கும்; இரத்தப்பிரியரே, நீங்கள் என்னைவிட்டு அகன்றுபோங்கள். 20 அவர்கள் உம்மைக் குறித்துத் துன்மார்க்கமாய்ப் பேசுகிறார்கள்; உம்முடைய சத்துருக்கள் உமது நாமத்தை வீணாய் வழங்குகிறார்கள். 21 கர்த்தாவே, உம்மைப் பகைக்கிறவர்களை நான் பகையாமலும், உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமலும் இருப்பேனோ? 22 முழுப்பகையாய் அவர்களைப் பகைக்கிறேன்; அவர்களை எனக்குப் பகைஞராக எண்ணுகிறேன். 23 தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். 24 வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.

சங்கீதம் 140

1 கர்த்தாவே, பொல்லாத மனுஷனுக்கு என்னைத் தப்புவியும்; கொடுமையுள்ளவனுக்கு என்னை விலக்கி இரட்சியும். 2 அவர்கள் தங்கள் இருதயத்தில் பொல்லாப்புகளைச் சிந்தித்து, யுத்தஞ்செய்ய நாள்தோறும் கூட்டங்கூடுகிறார்கள். 3 சர்ப்பத்தைப்போல் தங்கள் நாவைக் கூர்மையாக்குகிறார்கள்; அவர்கள் உதடுகளின்கீழ் விரியன் பாம்பின்விஷம் இருக்கிறது. (சேலா.) 4 கர்த்தாவே, துன்மார்க்கனுடைய கைகளுக்கு என்னை நீங்கலாக்கி, கொடியவனுக்கு என்னை விலக்கி இரட்சியும்; அவர்கள் என் நடைகளைக் கவிழ்க்கப்பார்க்கிறார்கள். 5 அகங்காரிகள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய் வைக்கிறார்கள்; வழியோரத்திலே வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை வைக்கிறார்கள். (சேலா.) 6 நான் கர்த்தரை நோக்கி: நீர் என் தேவன் என்றேன்; கர்த்தாவே, என் விண்ணப்பங்களின் சத்தத்துக்குச் செவிகொடும். 7 ஆண்டவராகிய கர்த்தாவே, என் இரட்சிப்பின் பெலனே, யுத்தநாளில் என் தலையை மூடினீர். 8 கர்த்தாவே, துன்மார்க்கனுடைய ஆசைகள் சித்தியாதபடி செய்யும்; அவன் தன்னை உயர்த்தாதபடி அவனுடைய யோசனையை நடந்தேறவொட்டாதேயும். (சேலா.) 9 என்னை வளைந்துகொள்ளுகிறவர்களுடைய உதடுகளின் தீவினைகள் அவர்கள் தலைகளையே மூடுவதாக. 10 நெருப்புத்தழல் அவர்கள்மேல் விழுவதாக; அக்கினியிலும், அவர்கள் எழுந்திருக்கக்கூடாத படுகுழிகளிலும் தள்ளப்படுவார்களாக. 11 பொல்லாத நாவுள்ளவன் பூமியிலே நிலைப்பதில்லை; கொடுமையான மனுஷனை பறக்கடிக்கப் பொல்லாப்பு அவனை வேட்டையாடும். 12 சிறுமையானவனின் வழக்கையும், எளியவர்களின் நியாயத்தையும் கர்த்தர் விசாரிப்பாரென்று அறிவேன். 13 நீதிமான்கள் உமது நாமத்தைத் துதிப்பார்கள்; செம்மையானவர்கள் உமது சமுகத்தில் வாசம்பண்ணுவார்கள்.

சங்கீதம் 141

1 கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன், என்னிடத்திற்கு வரத்தீவிரியும்; நான் உம்மை நோக்கிக் கூப்பிடுகையில், என் சத்தத்திற்குச் செவிகொடும். 2 என் விண்ணப்பம் உமக்கு முன்பாகத் தூபமாகவும், என் கையெடுப்பு அந்திப்பலியாகவும் இருக்கக்கடவது. 3 கர்த்தாவே, என் வாய்க்குக் காவல் வையும்; என் உதடுகளின் வாசலைக் காத்துக்கொள்ளும். 4 அக்கிரமஞ்செய்கிற மனுஷரோடே ஆகாமியக் கிரியைகளை நடப்பிக்கும்படி என் இருதயத்தைத் துன்மார்க்கத்திற்கு இணங்கவொட்டாதேயும்; அவர்களுடைய ருசியுள்ள பதார்த்தங்களில் ஒன்றையும் நான் சாப்பிடாமல் இருப்பேனாக. 5 நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன். 6 அவர்களுடைய நியாயாதிபதிகள் கன்மலைச் சார்புகளிலிருந்து தள்ளுண்டுபோகிறபோது, என் வார்த்தைகள் இன்பமானவைகளென்று கேட்பார்கள். 7 பூமியின்மேல் ஒருவன் மரத்தை வெட்டிப் பிளக்கிறதுபோல, எங்கள் எலும்புகள் பாதாளவாய்க்கு நேராய்ச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது. 8 ஆனாலும் ஆண்டவராகிய கர்த்தாவே, என் கண்கள் உம்மை நோக்கியிருக்கிறது; உம்மை நம்பியிருக்கிறேன்; என் ஆத்துமாவை வெறுமையாக விடாதேயும். 9 அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், அக்கிரமக்காரரின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி இரட்சியும். 10 துன்மார்க்கர் தங்கள் வலைகளில் அகப்படுவார்களாக; நானோ அதற்குத் தப்பிக் கடந்துபோவேன்.

சங்கீதம் 142

1 கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்; கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன். 2 அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்; அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன். 3 என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள். 4 வலதுபுறமாய்க் கண்ணோக்கிப்பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை; எனக்கு அடைக்கலமில்லாமற்போயிற்று; என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை. 5 கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன். 6 என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்; என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள். 7 உமது நாமத்தை நான் துதிக்கும்படி, என் ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்; எனக்கு நீர் தயவுசெய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள்.

சங்கீதம் 143

1 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும், என் விண்ணப்பங்களுக்குச் செவிகொடும்; உமது உண்மையின்படியும் உமது நீதியின்படியும் எனக்கு உத்தரவு அருளிச்செய்யும். 2 ஜீவனுள்ள ஒருவனும் உமக்கு முன்பாக நீதிமான் அல்லாததினாலே, அடியேனை நியாயந்தீர்க்கப் பிரவேசியாதேயும். 3 சத்துரு என் ஆத்துமாவைத் தொடர்ந்து, என் பிராணனைத் தரையோடே நசுக்கி, வெகுகாலத்துக்குமுன் மரித்தவர்கள்போல் என்னை இருளில் இருக்கப்பண்ணுகிறான். 4 என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது. 5 பூர்வநாட்களை நினைக்கிறேன், உமது செய்கைகளையெல்லாம் தியானிக்கிறேன்; உமது கரத்தின் கிரியைகளை யோசிக்கிறேன். 6 என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. (சேலா.) 7 கர்த்தாவே, சீக்கிரமாய் எனக்குச் செவிகொடும், என் ஆவி தொய்ந்துபோகிறது; நான் குழியில் இறங்குகிறவர்களுக்கு ஒப்பாகாதபடிக்கு, உமது முகத்தை எனக்கு மறையாதேயும். 8 அதிகாலையில் உமது கிருபையைக் கேட்கப்பண்ணும், உம்மை நம்பியிருக்கிறேன், நான் நடக்கவேண்டிய வழியை எனக்குக் காண்பியும்; உம்மிடத்தில் என் ஆத்துமாவை உயர்த்துகிறேன். 9 கர்த்தாவே, என் சத்துருக்களுக்கு என்னைத் தப்புவியும்; உம்மைப் புகலிடமாகக் கொள்ளுகிறேன். 10 உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குப் போதித்தருளும், நீரே என் தேவன்; உம்முடைய நல்ல ஆவி என்னைச் செம்மையான வழியிலே நடத்துவாராக. 11 கர்த்தாவே, உம்முடைய நாமத்தினிமித்தம் என்னை உயிர்ப்பியும்; உம்முடைய நீதியின்படி என் ஆத்துமாவை இடுக்கத்திற்கு நீங்கலாக்கிவிடும். 12 உம்முடைய கிருபையின்படி என் சத்துருக்களை அழித்து, என் ஆத்துமாவை ஒடுக்குகிற யாவரையும் சங்காரம்பண்ணும்; நான் உமது அடியேன்.

சங்கீதம் 144

1 என் கைகளைப் போருக்கும் என் விரல்களை யுத்தத்திற்கும் படிப்பிக்கிற என் கன்மலையாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 2 அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார். 3 கர்த்தாவே, மனுஷனை நீர் கவனிக்கிறதற்கும், மனுபுத்திரனை நீர் எண்ணுகிறதற்கும், அவன் எம்மாத்திரம்? 4 மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்; அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம். 5 கர்த்தாவே, நீர் உமது வானங்களைத் தாழ்த்தி இறங்கி, பர்வதங்கள் புகையும்படி அவைகளைத் தொடும். 6 மின்னல்களை வரவிட்டுச் சத்துருக்களைச் சிதறடியும், உமது அம்புகளை எய்து அவர்களைக் கலங்கடியும். 7 உயரத்திலிருந்து உமது கரத்தை நீட்டி, ஜலப்பிரவாகத்துக்கு என்னை விலக்கி இரட்சியும். 8 மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும். 9 கர்த்தாவே, நான் உமக்குப் புதுப்பாட்டைப் பாடுவேன்; தம்புரினாலும் பத்துநரம்பு வீணையினாலும் உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன். 10 நீரே ராஜாக்களுக்கு ஜெயத்தைத் தந்து, உமதடியானாகிய தாவீதைப் பொல்லாத பட்டயத்திற்குத் தப்புவிக்கிறவர். 11 மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும். 12 அப்பொழுது எங்கள் குமாரர் இளமையில் ஓங்கிவளருகிற விருட்சக்கன்றுகளைப்போலவும், எங்கள் குமாரத்திகள் சித்திரந்தீர்ந்த அரமனை மூலைக்கற்களைப்போலவும் இருப்பார்கள். 13 எங்கள் களஞ்சியங்கள் சகலவித வஸ்துக்களையும் கொடுக்கத்தக்கதாய் நிரம்பியிருக்கும்; எங்கள் கிராமங்களில் எங்கள் ஆடுகள் ஆயிரம் பதினாயிரமாய்ப் பலுகும். 14 எங்கள் எருதுகள் பலத்தவைகளாயிருக்கும்; சத்துரு உட்புகுதலும் குடியோடிப்போகுதலும் இராது; எங்கள் வீதிகளில் கூக்குரலும் உண்டாகாது. 15 இவ்விதமான சீரைப்பெற்ற ஜனம் பாக்கியமுள்ளது; கர்த்தரைத் தெய்வமாகக் கொண்டிருக்கிற ஜனம் பாக்கியமுள்ளது.

சங்கீதம் 145

1 ராஜாவாகிய என் தேவனே, உம்மை உயர்த்தி, உம்முடைய நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிப்பேன். 2 நாடோறும் உம்மை ஸ்தோத்திரித்து, எப்பொழுதும் என்றென்றைக்கும் உம்முடைய நாமத்தைத் துதிப்பேன். 3 கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்துமுடியாது. 4 தலைமுறை தலைமுறையாக உம்முடைய கிரியைகளின் புகழ்ச்சியைச் சொல்லி, உம்முடைய வல்லமையுள்ள செய்கைகளை அறிவிப்பார்கள். 5 உம்முடைய சிறந்த மகிமைப்பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான கிரியைகளையுங்குறித்துப் பேசுவேன். 6 ஜனங்கள் உம்முடைய பயங்கரமான கிரியைகளின் வல்லமையைச் சொல்லுவார்கள்; உம்முடைய மகத்துவத்தை நான் விவரிப்பேன். 7 அவர்கள் உமது மிகுந்த தயவை நினைத்து வெளிப்படுத்தி, உமது நீதியைக் கெம்பீரித்துப் பாடுவார்கள். 8 கர்த்தர் இரக்கமும் மன உருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர். 9 கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது. 10 கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள். 11 மனுபுத்திரருக்கு உமது வல்லமையுள்ள செய்கைகளையும், உமது ராஜ்யத்தின் சிறந்த மகிமைப்பிரதாபத்தையும் தெரிவிக்கும்படிக்கு; 12 உமது ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக் குறித்துப் பேசுவார்கள். 13 உம்முடைய ராஜ்யம் சதாகாலங்களிலுமுள்ள ராஜ்யம், உம்முடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாகவும் உள்ளது. 14 கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார். 15 எல்லா ஜீவன்களின் கண்களும் உம்மை நோக்கிக்கொண்டிருக்கிறது; ஏற்ற வேளையிலே நீர் அவைகளுக்கு ஆகாரங்கொடுக்கிறீர். 16 நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர். 17 கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார். 18 தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார். 19 அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார். 20 கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார். 21 என் வாய் கர்த்தரின் துதியைச் சொல்வதாக; மாம்சதேகமுள்ள யாவும் அவருடைய பரிசுத்த நாமத்தை எப்பொழுதும் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கக்கடவது.

சங்கீதம் 146

1 அல்லேலூயா, என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி. 2 நான் உயிரோடிருக்குமட்டும் கர்த்தரைத் துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைக் கீர்த்தனம்பண்ணுவேன். 3 பிரபுக்களையும், இரட்சிக்கத்திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள். 4 அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம். 5 யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான். 6 அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். 7 அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களுக்கு ஆகாரங் கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார். 8 குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். 9 பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார். 10 கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்பண்ணுகிறார். அல்லேலூயா.

சங்கீதம் 147

1 கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது. 2 கர்த்தர் எருசலேமைக் கட்டுகிறார்; துரத்துண்ட இஸ்ரவேலரைக் கூட்டிச் சேர்க்கிறார். 3 இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். 4 அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார். 5 நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது. 6 கர்த்தர் சாந்தகுணமுள்ளவர்களை உயர்த்துகிறார்; துன்மார்க்கரைத் தரைமட்டும் தாழ்த்துகிறார். 7 கர்த்தரைத் துதியுடன் பாடிக் கொண்டாடுங்கள்; நம்முடைய தேவனைச் சுரமண்டலத்தால் கீர்த்தனம் பண்ணுங்கள். 8 அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார். 9 அவர் மிருகஜீவன்களுக்கும் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் ஆகாரங்கொடுக்கிறார். 10 அவர் குதிரையின் பலத்தில் விருப்பமாயிரார்; வீரனுடைய கால்களில் பிரியப்படார். 11 தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார். 12 எருசலேமே, கர்த்தரை ஸ்தோத்திரி; சீயோனே, உன் தேவனைத் துதி. 13 அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாள்களைப் பலப்படுத்தி, உன்னிடத்திலுள்ள உன் பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார். 14 அவர் உன் எல்லைகளைச் சமாதானமுள்ளவைகளாக்கி, உச்சிதமான கோதுமையினால் உன்னைத் திருப்தியாக்குகிறார். 15 அவர் தமது வார்த்தையைப் பூமியிலே அனுப்புகிறார்; அவருடைய சொல் மகா தீவிரமாய்ச் செல்லுகிறது. 16 பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். 17 அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்? 18 அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும். 19 யாக்கோபுக்குத் தம்முடைய வசனங்களையும், இஸ்ரவேலுக்குத் தமது பிரமாணங்களையும் தமது நியாயங்களையும் அறிவிக்கிறார். 20 அவர் வேறே எந்த ஜாதிக்கும் இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற்போகிறார்கள். அல்லேலூயா.

சங்கீதம் 148

1 அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள். 2 அவருடைய தூதர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள்; அவருடைய சேனைகளே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள். 3 சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே, அவரைத் துதியுங்கள். 4 வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின்மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள். 5 அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது. 6 அவர் அவைகளை என்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நிலைக்கும்படி செய்தார்; மாறாத பிரமாணத்தை அவைகளுக்கு நியமித்தார். 7 பூமியிலுள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; மகாமச்சங்களே, சகல ஆழங்களே, 8 அக்கினியே, கல்மழையே, உறைந்தமழையே, மூடுபனியே, அவர் சொற்படி செய்யும் பெருங்காற்றே, 9 மலைகளே, சகல மேடுகளே, கனிமரங்களே, சகல கேதுருக்களே, 10 காட்டுமிருகங்களே, சகல நாட்டு மிருகங்களே, ஊரும் பிராணிகளே, இறகுள்ள பறவைகளே, 11 பூமியின் ராஜாக்களே, சகல ஜனங்களே, பிரபுக்களே, பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளே, 12 வாலிபரே, கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள். 13 அவர்கள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவர்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது; அவருடைய மகிமை பூமிக்கும் வானத்திற்கும் மேலானது. 14 அவர் தம்முடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும், தம்மைச் சேர்ந்த ஜனமாகிய இஸ்ரவேல் புத்திரருக்கும் கொண்டாட்டமாக, தம்முடைய ஜனத்திற்கு ஒரு கொம்பை உயர்த்தினார். அல்லேலூயா.

சங்கீதம் 149

1 அல்லேலூயா, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி விளங்குவதாக. 2 இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும், சீயோன் குமாரர் தங்கள் ராஜாவில் களிகூரவுங்கடவர்கள். 3 அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து, தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணக்கடவர்கள். 4 கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார். 5 பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள். 6 ஜாதிகளிடத்தில் பழிவாங்கவும், ஜனங்களைத் தண்டிக்கவும், 7 அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும், அவர்களுடைய மேன்மக்களை இருப்பு விலங்குகளாலும் கட்டவும், எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்பேரில் செலுத்தவும், 8 அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும். 9 இந்தக் கனம் அவருடைய பரிசுத்தவான்கள் யாவருக்கும் உண்டாகும். அல்லேலூயா.

சங்கீதம் 150

1 அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள். 2 அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள். 3 எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள். 4 தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள். 5 ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள். 6 சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.

நீதிமொழிகள் 1

1 தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்: 2 இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை உணர்ந்து, 3 விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய உபதேசத்தை அடையலாம். 4 இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும் விவேகத்தையும் கொடுக்கும். 5 புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி நல்லாலோசனைகளை அடைந்து; 6 நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின் வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும் அறிந்துகொள்வான். 7 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள். 8 என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. 9 அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும். 10 என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ சம்மதியாதே. 11 எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்; 12 பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல் அவர்களை முழுமையும் விழுங்குவோம்; 13 விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்; கொள்ளைப் பொருளினால் நம்முடைய வீடுகளை நிரப்புவோம். 14 எங்களோடே பங்காளியாயிரு; நம்மெல்லாருக்கும் ஒரே பை இருக்கும் என்று அவர்கள் சொல்வார்களாகில்; 15 என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக. 16 அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத் தீவிரிக்கிறது. 17 எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா. 18 இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள் பிராணனுக்கே ஒளிவைத்திருக்கிறார்கள். 19 பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும். 20 ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில் சத்தமிடுகிறது. 21 அது சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும், ஒலிமுகவாசலிலும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன் வார்த்தைகளை வசனித்துச் சொல்லுகிறது: 22 பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள் நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும். 23 என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன், என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன். 24 நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை. 25 என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள். 26 ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன். 27 நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கணும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன். 28 அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள். 29 அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்து கொள்ளாமற்போனார்கள். 30 என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள். 31 ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள். 32 பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும். 33 எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.

நீதிமொழிகள் 2

1 என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு, 2 நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி, 3 ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, 4 அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், 5 அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். 6 கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும். 7 அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேடகமாயிருக்கிறார். 8 அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார். 9 அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய். 10 ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, 11 நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப் பாதுகாக்கும். 12 அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு பேசுகிற மனுஷனுக்கும், 13 அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளை விட்டு, 14 தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில் களிகூருகிறவர்களுக்கும், 15 மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும் நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய். 16 தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய உடன்படிக்கையை மறந்து, 17 இச்சகமான வார்த்தைகளைப்பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய். 18 அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள் மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது. 19 அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை, ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை. 20 ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின் பாதைகளைக் காத்துக்கொள்வாயாக. 21 செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். 22 துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.

நீதிமொழிகள் 3

1 என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என் கட்டளைகளைக் காக்கக்கடவது. 2 அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும், சமாதானத்தையும் பெருகப்பண்ணும். 3 கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். 4 அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய். 5 உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, 6 உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார். 7 நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு. 8 அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும். 9 உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு. 10 அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும். 11 என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே. 12 தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார். 13 ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற மனுஷனும் பாக்கியவான்கள். 14 அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின் ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது. 15 முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல. 16 அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது. 17 அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம். 18 அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான். 19 கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார். 20 அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப் பெய்கிறது. 21 என் மகனே, இவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும் காத்துக்கொள். 22 அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும். 23 அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது. 24 நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும். 25 சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம். 26 கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார். 27 நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே. 28 உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே. 29 அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன் அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே. 30 ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே. 31 கொடுமையுள்ளவன்மேல் பொறாமை கொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே. 32 மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது. 33 துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார். 34 இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார். 35 ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ கனவீனத்தை அடைவார்கள்.

நீதிமொழிகள் 4

1 பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி கவனியுங்கள். 2 நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை விடாதிருங்கள். 3 நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என் தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன். 4 அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம் என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய். 5 ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின் வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு. 6 அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்; அதின்மேல் பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும். 7 ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். 8 நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும். 9 அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும். 10 என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும். 11 ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன். 12 நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய். 13 புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன். 14 துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே. 15 அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ. 16 பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம். 17 அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள். 18 நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும். 19 துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள் இடறுவது இன்னதில் என்று அறியார்கள். 20 என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். 21 அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள். 22 அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம். 23 எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும். 24 வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின் மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து. 25 உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள் உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது. 26 உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன் வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக. 27 வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே; உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக.

நீதிமொழிகள் 5

1 என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன் செவியைச் சாய்; 2 அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும். 3 பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய் எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும். 4 அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமுங் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும். 5 அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும். 6 நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக் கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடியாது. 7 ஆதலால் பிள்ளைகளே, இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வசனங்களை விட்டு நீங்காதிருங்கள். 8 உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக் கிட்டிச் சேராதே. 9 சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய். 10 அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின் பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும். 11 முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து: 12 ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே! 13 என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம்பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும் போனேனே! 14 சபைக்குள்ளும் சங்கத்துக்குள்ளும் கொஞ்சங்குறைய எல்லாத் தீமைக்குமுள்ளானேனே! என்று முறையிடுவாய். 15 உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும் பானம்பண்ணு. 16 உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக. 17 அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே உரியவைகளாயிருப்பதாக. 18 உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. 19 அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையாடும்போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக. 20 என் மகனே, நீ பரஸ்திரீயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன? 21 மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார். 22 துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால் கட்டப்படுவான். 23 அவன் புத்தியைக் கேளாததினால் மடிந்து, தன் மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.

நீதிமொழிகள் 6

1 என் மகனே, நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால், 2 நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய். 3 இப்பொழுது என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய். 4 உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள். 5 வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள். 6 சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள். 7 அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும், 8 கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும். 9 சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்? 10 இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? 11 உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும். 12 பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான். 13 அவன் தன் கண்களால் சைகைகாட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனைசெய்கிறான். 14 அவன் இருதயத்திலே திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான். 15 ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான். 16 ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள். 17 அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை, 18 துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால், 19 அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே. 20 என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே. 21 அவைகளை எப்பொழுதும் உன் இருதயத்திலே அணிந்து, அவைகளை உன் கழுத்திலே கட்டிக்கொள். 22 நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும். 23 கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி. 24 அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும், இச்சகம்பேசும் நாவையுடைய பரஸ்திரீக்கும் விலக்கிக் காக்கும். 25 உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே. 26 வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள். 27 தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ? 28 தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ? 29 பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான். 30 திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்; 31 அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழுமடங்கு கொடுத்துத் தீரவேண்டும்; தன் வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும். 32 ஸ்திரீயுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான். 33 வாதையையும் இலச்சையையும் அடைவான்; அவன் நிந்தை ஒழியாது. 34 ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும்; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான். 35 அவன் எந்த ஈட்டையும் பாரான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.

நீதிமொழிகள் 7

1 என் மகனே, நீ என் வார்த்தைகளைக் காத்து, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து. 2 என் கட்டளைகளையும் என் போதகத்தையும் உன் கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய். 3 அவைகளை உன் விரல்களில் கட்டி, அவைகளை உன் இருதய பலகையில் எழுதிக்கொள். 4 இச்சகவார்த்தைகளைப் பேசும் அந்நிய பெண்ணாகிய பரஸ்திரீக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக, 5 ஞானத்தை நோக்கி, நீ என் சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என் இனத்தாள் என்றும் சொல்வாயாக. 6 நான் என் வீட்டின் ஜன்னலருகே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்தபோது, 7 பேதையர்களாகிய வாலிபருக்குள்ளே ஒரு புத்தியீன வாலிபனைக்கண்டு அவனைக் கவனித்தேன். 8 அவன் மாலைமயங்கும் அஸ்தமனநேரத்திலும், இரவின் இருண்ட அந்தகாரத்திலும், 9 அவள் இருக்கும் சந்துக்கடுத்த தெருவில் சென்று, அவள் வீட்டுவழியாய் நடந்துபோனான். 10 அப்பொழுது இதோ, வேசியின் ஆடையாபரணந்தரித்த தந்திரமனமுள்ள ஒரு ஸ்திரீ அவனுக்கு எதிர்ப்பட்டாள். 11 அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவள் கால்கள் வீட்டிலே தரிக்கிறதில்லை. 12 சிலவேளை வெளியிலிருப்பாள், சிலவேளை வீதியிலிருப்பாள், சந்துகள்தோறும் பதிவிருப்பாள். 13 அவள் அவனைப் பிடித்து முத்தஞ்செய்து, முகம் நாணாமல் அவனைப் பார்த்து: 14 சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என் பொருத்தனைகளை நிறைவேற்றினேன். 15 ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன். 16 என் மஞ்சத்தை இரத்தின கம்பளங்களாலும், எகிப்துதேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன். 17 என் படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன். 18 வா, விடியற்காலம்வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம். 19 புருஷன் வீட்டிலே இல்லை, தூரப் பிரயாணம் போனான். 20 பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி, 21 தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள். 22 உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவது போலும், 23 ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது. 24 ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள். 25 உன் இருதயம் அவள் வழியிலே சாயவேண்டாம்; அவள் பாதையிலே மயங்கித் திரியாதே. 26 அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழப்பண்ணினாள்; பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள். 27 அவள் வீடு பாதாளத்துக்குப்போம் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.

நீதிமொழிகள் 8

1 ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ? 2 அது வழியருகேயுள்ள மேடைகளிலும், நாற்சந்திகளிலும் நிற்கிறது. 3 அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் முகப்பிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு: 4 மனுஷரே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என் சத்தம் மனுபுத்திரருக்குத் தொனிக்கும். 5 பேதைகளே, விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாயிருங்கள். 6 கேளுங்கள், மேம்பாடான காரியங்களைப் பேசுவேன்; என் உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும். 7 என் வாய் சத்தியத்தை விளம்பும், ஆகாமியம் என் உதடுகளுக்கு அருவருப்பானது. 8 என் வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை. 9 அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு யதார்த்தமுமாயிருக்கும். 10 வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப்பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள். 11 முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல. 12 ஞானமாகிய நான் விவேகத்தோடே வாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன். 13 தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன். 14 ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது. 15 என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள். 16 என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளும் ஆளுகைசெய்துவருகிறார்கள். 17 என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள். 18 ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு. 19 பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப்பார்க்கிலும் என் வருமானம் நல்லது. 20 என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும், 21 அவர்களை நீதியின் வழியிலும், நியாயபாதைகளுக்குள்ளும் நடத்துகிறேன். 22 கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார். 23 பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன். 24 ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன். 25 மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், 26 அவர் பூமியையும் அதின் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்குமுன்னும் நான் ஜநிப்பிக்கப்பட்டேன். 27 அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும், 28 உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும், 29 சமுத்திர ஜலம் தன் கரையை விட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும், 30 நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன். 31 அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு, மனுமக்களுடனே மகிழ்ந்துகொண்டிருந்தேன். 32 ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைக் காத்து நடக்கிறவர்கள் பாக்கியவான்கள். 33 நீங்கள் புத்தியைக் கேட்டு, ஞானமடையுங்கள்; அதை விட்டு விலகாதிருங்கள். 34 என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான். 35 என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான். 36 எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான்; என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.

நீதிமொழிகள் 9

1 ஞானம் தன் வீட்டைக் கட்டி, தன் ஏழு தூண்களையும் சித்திரந்தீர்த்து, 2 தன் கொழுத்த ஜந்துக்களை அடித்து, திராட்சரசத்தை வார்த்துவைத்து, தன் போஜனபந்தியை ஆயத்தப்படுத்தி, 3 தன் பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு, 4 புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன். 5 நீங்கள் வந்து என் அப்பத்தைப் புசித்து, நான் வார்த்த திராட்சரசத்தைப் பானம்பண்ணுங்கள். 6 பேதைமையை விட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று விளம்புகிறது. 7 பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் இலச்சையடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான். 8 பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான். 9 ஞானமுள்ளவனுக்குப் போதகம்பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான். 10 கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு. 11 என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும். 12 நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது. 13 மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள். 14 அவள் தன் வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் ஆசனம் போட்டு உட்கார்ந்து, 15 தங்கள் வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கரைப் பார்த்து: 16 எவன் பேதையோ அவன் இவ்விடத்தில் வரக்கடவன் என்றும், 17 மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், அந்தரங்கத்தில் புசிக்கும் அப்பம் இன்பமாயிருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள். 18 ஆயினும் மரித்தவர்கள் அவ்விடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரகபாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியான்.

நீதிமொழிகள் 10

1 சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மூடத்தனமுள்ளவனோ தாய்க்குச் சஞ்சலமாயிருக்கிறான். 2 அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும். 3 கர்த்தர் நீதிமான்களைப் பசியினால் வருந்தவிடார்; துன்மார்க்கருடைய பொருளையோ அகற்றிவிடுகிறார். 4 சோம்பற்கையால் வேலைசெய்கிறவன் ஏழையாவான்; சுறுசுறுப்புள்ளவன் கையோ செல்வத்தை உண்டாக்கும். 5 கோடைகாலத்தில் சேர்க்கிறவன் புத்தியுள்ள மகன்; அறுப்புக்காலத்தில் தூங்குகிறவனோ இலச்சையை உண்டாக்குகிற மகன். 6 நீதிமானுடைய சிரசின்மேல் ஆசீர்வாதங்கள் தங்கும்; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 7 நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்; துன்மார்க்கனுடைய பேரோ அழிந்துபோகும். 8 இருதயத்தில் ஞானமுள்ளவன் கட்டளைகளை ஏற்றுக்கொள்ளுகிறான்; அலப்புகிற மூடனோ விழுவான். 9 உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்; கோணலான வழிகளில் நடக்கிறவனோ கண்டுபிடிக்கப்படுவான். 10 கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்; அலப்புகிற மூடன் விழுவான். 11 நீதிமானுடைய வாய் ஜீவஊற்று; கொடுமையோ துன்மார்க்கனுடைய வாயை அடைக்கும். 12 பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களையும் மூடும். 13 புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்; மதிகேடனுடைய முதுகுக்கு ஏற்றது பிரம்பு. 14 ஞானவான்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; மூடனுடைய வாய்க்குக் கேடு சமீபித்திருக்கிறது. 15 ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; ஏழைகளின் வறுமையோ அவர்களைக் கலங்கப்பண்ணும். 16 நீதிமானுடைய பிரயாசம் ஜீவனையும், துன்மார்க்கனுடைய விளைவோ பாவத்தையும் பிறப்பிக்கும். 17 புத்திமதிகளைக் காத்துக்கொள்ளுகிறவன் ஜீவவழியில் இருக்கிறான்; கண்டனையை வெறுக்கிறவனோ மோசம்போகிறான். 18 பகையை மறைக்கிறவன் பொய் உதடன்; புறங்கூறுகிறவன் மதிகேடன். 19 சொற்களின் மிகுதியில் பாவமில்லாமற்போகாது; தன் உதடுகளை அடக்குகிறவனோ புத்திமான். 20 நீதிமானுடைய நாவு சுத்தவெள்ளி; துன்மார்க்கனுடைய மனம் அற்பவிலையும் பெறாது. 21 நீதிமானுடைய உதடுகள் அநேகரைப் போஷிக்கும்; மூடரோ மதியீனத்தினால் மாளுவார்கள். 22 கர்த்தரின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்; அதனோடே அவர் வேதனையைக் கூட்டார். 23 தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு. 24 துன்மார்க்கன் பயப்படும் காரியம் அவனுக்கு வந்து நேரிடும்; நீதிமான் விரும்புகிற காரியம் அவனுக்குக் கொடுக்கப்படும். 25 சுழல்காற்று கடந்துபோவதுபோல் துன்மார்க்கன் கடந்துபோவான்; நீதிமானோ நித்திய அஸ்திபாரமுள்ளவன். 26 பற்களுக்குக் காடியும், கண்களுக்குப் புகையும் எப்படியிருக்கிறதோ, அப்படியே சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு இருக்கிறான். 27 கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம். 28 நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாகும்; துன்மார்க்கருடைய அபேட்சையோ அழியும். 29 கர்த்தரின் வழி உத்தமர்களுக்கு அரண், அக்கிரமக்காரருக்கோ கலக்கம். 30 நீதிமான் என்றும் அசைக்கப்படுவதில்லை; துன்மார்க்கர் பூமியில் வசிப்பதில்லை. 31 நீதிமானுடைய வாய் ஞானத்தை வெளிப்படுத்தும்; மாறுபாடுள்ள நாவோ அறுப்புண்டுபோம். 32 நீதிமான்களுடைய உதடுகள் பிரியமானவைகளைப் பேச அறியும்; துன்மார்க்கருடைய வாயோ மாறுபாடுள்ளது.

நீதிமொழிகள் 11

1 கள்ளத்தராசு கர்த்தருக்கு அருவருப்பானது; சுமுத்திரையான நிறைகல்லோ அவருக்குப் பிரியம். 2 அகந்தை வந்தால் இலச்சையும் வரும்; தாழ்ந்த சிந்தையுள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு. 3 செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும். 4 கோபாக்கினைநாளில் ஐசுவரியம் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும். 5 உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன் துன்மார்க்கத்தினால் விழுவான். 6 செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்கள் தீவினையிலே பிடிபடுவார்கள். 7 துன்மார்க்கன் மரிக்கும்போது அவன் நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரரின் அபேட்சை கெட்டுப்போம். 8 நீதிமான் இக்கட்டினின்று விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான். 9 மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான். 10 நீதிமான்கள் நன்றாயிருந்தால் பட்டணம் களிகூரும்; துன்மார்க்கர் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும். 11 செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்றோங்கும்; துன்மார்க்கருடைய வாயினால் அது இடிந்துவிழும். 12 மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன் வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான். 13 புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான். 14 ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும். 15 அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் வெகு பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான். 16 நல்லொழுக்கமுள்ள ஸ்திரீ மானத்தைக் காப்பாள்; பராக்கிரமசாலிகள் ஐசுவரியத்தைக் காப்பார்கள். 17 தயையுள்ள மனுஷன் தன் ஆத்துமாவுக்கு நன்மைசெய்துகொள்ளுகிறான்; கடூரனோ தன் உடலை அலைக்கழிக்கிறான். 18 துன்மார்க்கன் விருதாவேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான். 19 நீதி ஜீவனுக்கு ஏதுவாகிறதுபோல், தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்துக்கு ஏதுவாகிறான். 20 மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள்; உத்தம மார்க்கத்தாரோ அவருக்குப் பிரியமானவர்கள். 21 கையோடே கைகோர்த்தாலும், துஷ்டன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும். 22 மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலுள்ள பொன்மூக்குத்திக்குச் சமானம். 23 நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும். 24 வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு; அதிகமாய்ப் பிசினித்தனம்பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு. 25 உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். 26 தானியத்தைக் கட்டிவைக்கிறவனை ஜனங்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும். 27 நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். 28 தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள். 29 தன் வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான். 30 நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன். 31 இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.

நீதிமொழிகள் 12

1 புத்திமதிகளை விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருககுணமுள்ளவன். 2 நல்லவன் கர்த்தரிடத்தில் தயைபெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார். 3 துன்மார்க்கத்தினால் மனுஷன் நிலைவரப்படான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது. 4 குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள். 5 நீதிமான்களுடைய நினைவுகள் நியாயமானவைகள்; துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானவைகள். 6 துன்மார்க்கரின் வார்த்தைகள் இரத்தஞ்சிந்தப் பதிவிருப்பதைப்பற்றியது; உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும். 7 துன்மார்க்கர் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும். 8 தன் புத்திக்குக்தக்கதாக மனுஷன் புகழப்படுவான்; மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான். 9 ஆகாரமில்லாதவனாயிருந்தும், தன்னைத்தான் கனம்பண்ணிக்கொள்ளுகிறவனைப்பார்க்கிலும், கனமற்றவனாயிருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன். 10 நீதிமான் தன் மிருகஜீவனைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கருடைய இரக்கமும் கொடுமையே. 11 தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ மதியற்றவன். 12 துன்மார்க்கன் துஷ்டருடைய வலையை விரும்புகிறான்; நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும். 13 துன்மார்க்கனுக்கு அவன் உதடுகளின் துரோகமே கண்ணி; நீதிமானோ நெருக்கத்தினின்று நீங்குவான். 14 அவனவன் தன் தன் வாயின் பலனால் திருப்தியடைவான்; அவனவன் கைக்கிரியையின் பலனுக்குத்தக்கதாக அவனவனுக்குக் கிடைக்கும். 15 மதியீனனுடைய வழி அவன் பார்வைக்குச் செம்மையாயிருக்கும்; ஆலோசனைக்குச் செவிகொடுக்கிறவனோ ஞானமுள்ளவன். 16 மூடனுடைய கோபம் சீக்கிரத்தில் வெளிப்படும்; இலச்சையை மூடுகிறவனோ விவேகி. 17 சத்தியவாசகன் நீதியை வெளிப்படுத்துவான்; பொய்ச்சாட்சிக்காரனோ வஞ்சகத்தை வெளிப்படுத்துவான். 18 பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஔஷதம். 19 சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும். 20 தீங்கைப் பிணைக்கிறவர்களின் இருதயத்தில் இருக்கிறது கபடம்; சமாதானம்பண்ணுகிற ஆலோசனைக்காரருக்கு உள்ளது சந்தோஷம். 21 நீதிமானுக்கு ஒரு கேடும் வராது; துன்மார்க்கரோ தீமையினால் நிறையப்படுவார்கள். 22 பொய் உதடுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; உண்மையாய் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியம். 23 விவேகமுள்ள மனுஷன் அறிவை அடக்கிவைக்கிறான்; மூடருடைய இருதயமோ மதியீனத்தைப் பிரசித்தப்படுத்தும். 24 ஜாக்கிரதையுள்ளவர்களுடைய கை ஆளுகைசெய்யும்; சோம்பேறியோ பகுதிகட்டுவான். 25 மனுஷனுடைய இருதயத்திலுள்ள கவலை அதை ஒடுக்கும்; நல்வார்த்தையோ அதை மகிழ்ச்சியாக்கும். 26 நீதிமான் தன் அயலானைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவன்; துன்மார்க்கருடைய வழியோ அவர்களை மோசப்படுத்தும். 27 சோம்பேறி தான் வேட்டையாடிப் பிடித்ததைச் சமைப்பதில்லை; ஜாக்கிரதையுள்ளவனுடைய பொருளோ அருமையானது. 28 நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.

நீதிமொழிகள் 13

1 ஞானமுள்ள மகன் தகப்பனுடைய போதகத்தைக் கேட்கிறான்; பரியாசக்காரனோ கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடான். 2 மனுஷன் தன் வாயின் பலனால் நன்மையைப் புசிப்பான்; துரோகிகளின் ஆத்துமாவோ கொடுமையைப் புசிக்கும். 3 தன் வாயைக் காக்கிறவன் தன் பிராணனைக் காக்கிறான்; தன் உதடுகளை விரிவாய்த் திறக்கிறவனோ கலக்கமடைவான். 4 சோம்பேறியுடைய ஆத்துமா விரும்பியும் ஒன்றும் பெறாது; ஜாக்கிரதையுள்ளவர்களுடைய ஆத்துமாவோ புஷ்டியாகும். 5 நீதிமான் பொய்ப்பேச்சை வெறுக்கிறான்; துன்மார்க்கனோ வெட்கமும் இலச்சையும் உண்டாக்குகிறான். 6 நீதி உத்தமமார்க்கத்தானைத் தற்காக்கும்; துன்மார்க்கமோ பாவியைக் கவிழ்த்துப்போடும். 7 ஒன்றுமில்லாதிருக்கத் தன்னைச் செல்வனாகப் பாராட்டுகிறவனும் உண்டு; மிகுந்த செல்வமிருக்கத் தன்னைத் தரித்திரனாகப் பாராட்டுகிறவனும் உண்டு. 8 மனுஷனுடைய ஐசுவரியம் அவன் பிராணனை மீட்கும்; தரித்திரனோ மிரட்டுதலைக் கேளாதிருக்கிறான். 9 நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோம். 10 அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு. 11 வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம்; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான். 12 நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும். 13 திருவசனத்தை அவமதிக்கிறவன் நாசமடைவான்; கற்பனைக்குப் பயப்படுகிறவனோ பலனடைவான். 14 ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். 15 நற்புத்தி தயையை உண்டாக்கும்; துரோகிகளுடைய வழியோ கரடுமுரடானது. 16 விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான். 17 துரோகமுள்ள தூதன் தீதிலே விழுவான்; உண்மையுள்ள ஸ்தானாபதியோ ஔஷதம். 18 புத்திமதிகளைத் தள்ளுகிறவன் தரித்திரத்தையும் இலச்சையையும் அடைவான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ கனமடைவான். 19 வாஞ்சை நிறைவேறுவது ஆத்துமாவுக்கு இனிது; தீமையை விட்டு விலகுவது மூடருக்கு அருவருப்பு. 20 ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான். 21 பாவிகளைத் தீவினை தொடரும்; நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும். 22 நல்லவன் தன் பிள்ளைகளின் பிள்ளைகளுக்குச் சுதந்தரம் வைத்துப்போகிறான்; பாவியின் ஆஸ்தியோ நீதிமானுக்காகச் சேர்த்துவைக்கப்படும். 23 ஏழைகளின் வயல் மிகுதியான ஆகாரத்தை விளைவிக்கும்; நியாயம் கிடையாமல் கெட்டுப்போகிறவர்களும் உண்டு. 24 பிரம்பைக் கையாடாதவன் தன் மகனைப் பகைக்கிறான்; அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான். 25 நீதிமான் தனக்குத் திருப்தியாகப் புசிக்கிறான்; துன்மார்க்கருடைய வயிறோ பசித்திருக்கும்.

நீதிமொழிகள் 14

1 புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள். 2 நிதானமாய் நடக்கிறவன் கர்த்தருக்குப் பயப்படுகிறான்; தன் வழிகளில் தாறுமாறானவனோ அவரை அலட்சியம்பண்ணுகிறான். 3 மூடன் வாயிலே அவன் அகந்தைக்கேற்ற மிலாறுண்டு; ஞானவான்களின் உதடுகளோ அவர்களைக் காப்பாற்றும். 4 எருதுகளில்லாத இடத்தில் களஞ்சியம் வெறுமையாயிருக்கும்; காளைகளின் பெலத்தினாலோ மிகுந்த வரத்துண்டு. 5 மெய்ச்சாட்சிக்காரன் பொய்சொல்லான்; பொய்ச்சாட்சிக்காரனோ பொய்களை ஊதுகிறான். 6 பரியாசக்காரன் ஞானத்தைத் தேடியும் கண்டுபிடியான்; புத்தியுள்ளவனுக்கோ அறிவு லேசாய் வரும். 7 மூடனுடைய முகத்துக்கு விலகிப்போ; அறிவுள்ள உதடுகளை அங்கே காணாய். 8 தன் வழியைச் சிந்தித்துக்கொள்வது விவேகியின் ஞானம்; மூடர்களுடைய வஞ்சனையோ மூடத்தனம். 9 மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு. 10 இருதயத்தின் கசப்பு இருதயத்திற்கே தெரியும்; அதின் மகிழ்ச்சிக்கு அந்நியன் உடந்தையாகான். 11 துன்மார்க்கனுடைய வீடு அழியும்; செம்மையானவனுடைய கூடாரமோ செழிக்கும். 12 மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள். 13 நகைப்பிலும் மனதுக்குத் துக்கமுண்டு; அந்த மகிழ்ச்சியின் முடிவு சஞ்சலம். 14 பின்வாங்கும் இருதயமுள்ளவன் தன் வழிகளிலேயும், நல்ல மனுஷனோ தன்னிலே தானும் திருப்தியடைவான். 15 பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான். 16 ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான். 17 முற்கோபி மதிகேட்டைச் செய்வான்; துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான். 18 பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள். 19 தீயோர் நல்லோருக்கு முன்பாகவும், துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு. 20 தரித்திரன் தனக்கடுத்தவனாலும் பகைக்கப்படுகிறான்; ஐசுவரியவானுக்கோ அநேக சிநேகிதருண்டு. 21 பிறனை அவமதிக்கிறவன் பாவஞ்செய்கிறான்; தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான். 22 தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு. 23 சகல பிரயாசத்தினாலும் பிரயோஜனமுண்டு; உதடுகளின் பேச்சோ வறுமையை மாத்திரம் தரும். 24 ஞானிகளுக்கு முடி அவர்கள் செல்வம்; மூடரின் மதியீனம் மூடத்தனமே. 25 மெய்ச்சாட்சி சொல்லுகிறவன் உயிர்களை இரட்சிக்கிறான்; வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான். 26 கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும். 27 கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம். 28 ஜனத்திரட்சி ராஜாவின் மகிமை; ஜனக்குறைவு தலைவனின் முறிவு. 29 நீடிய சாந்தமுள்ளவன் மகாபுத்திமான்; முற்கோபியோ புத்தியீனத்தை விளங்கப்பண்ணுகிறான். 30 சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி. 31 தரித்திரனை ஒடுக்குகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; தரித்திரனுக்குத் தயைசெய்கிறவனோ அவரைக் கனம்பண்ணுகிறான். 32 துன்மார்க்கன் தன் தீமையிலே வாரிக்கொள்ளப்படுவான்; நீதிமானோ தன் மரணத்திலே நம்பிக்கையுள்ளவன். 33 புத்திமானுடைய இருதயத்தில் ஞானம் தங்கும்; மதியீனரிடத்தில் உள்ளதோ வெளிப்படும். 34 நீதி ஜனத்தை உயர்த்தும்; பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி. 35 ராஜாவின் தயை விவேகமுள்ள பணிவிடைக்காரன்மேலிருக்கும்; அவனுடைய கோபமோ இலச்சையுண்டாக்குகிறவன் மேலிருக்கும்.

நீதிமொழிகள் 15

1 மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும். 2 ஞானிகளின் நாவு அறிவை உபயோகப்படுத்தும்; மூடரின் வாயோ புத்தியீனத்தைக் கக்கும். 3 கர்த்தரின் கண்கள் எவ்விடத்திலுமிருந்து, நல்லோரையும் தீயோரையும் நோக்கிப்பார்க்கிறது. 4 ஆரோக்கியமுள்ள நாவு ஜீவவிருட்சம்; நாவின் மாறுபாடோ ஆவியை நொறுக்கும். 5 மூடன் தன் தகப்பன் புத்தியை அலட்சியம்பண்ணுகிறான்; கடிந்துகொள்ளுதலைக் கவனித்து நடக்கிறவனோ விவேகி. 6 நீதிமானுடைய வீட்டில் அதிக பொக்கிஷமுண்டு; துன்மார்க்கனுடைய வருமானத்திலோ துன்பமுண்டு. 7 ஞானிகளின் உதடுகள் அறிவை இறைக்கும்; மூடரின் இருதயமோ அப்படியல்ல. 8 துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம். 9 துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார். 10 வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான். 11 பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ? 12 பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான். 13 மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோம். 14 புத்திமானுடைய மனம் அறிவைத் தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும். 15 சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நித்திய விருந்து. 16 சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம். 17 பகையோடிருக்கும் கொழுத்த எருதின் கறியைப்பார்க்கிலும், சிநேகத்தோடிருக்கும் இலைக்கறியே நல்லது. 18 கோபக்காரன் சண்டையை எழுப்புகிறான்; நீடியசாந்தமுள்ளவனோ சண்டையை அமர்த்துகிறான். 19 சோம்பேறியின் வழி முள்வேலிக்குச் சமானம்; நீதிமானுடைய வழியோ ராஜபாதை. 20 ஞானமுள்ள மகன் தகப்பனைச் சந்தோஷப்படுத்துகிறான்; மதியற்ற மனுஷனோ தன் தாயை அலட்சியம்பண்ணுகிறான். 21 மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான். 22 ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும். 23 மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது! 24 கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம். 25 அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார். 26 துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள். 27 பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான். 28 நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும். 29 துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார். 30 கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப் புஷ்டியாக்கும். 31 ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும். 32 புத்திமதியைத் தள்ளிவிடுகிறவன் தன் ஆத்துமாவை வெறுக்கிறான்; கடிந்துகொள்ளுதலைக் கேட்கிறவனோ ஞானமடைவான். 33 கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.

நீதிமொழிகள் 16

1 மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும். 2 மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார். 3 உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும். 4 கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார். 5 மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான். 6 கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள். 7 ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார். 8 அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம். 9 மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர். 10 ராஜாவின் உதடுகளில் திவ்விய வாக்கு பிறக்கும்; நியாயத்தில் அவன் வாய் தவறாது. 11 சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல். 12 அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும். 13 நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள். 14 ராஜாவின் கோபம் மரணதூதருக்குச் சமானம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான். 15 ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு; அவனுடைய தயை பின்மாரி பெய்யும் மேகத்தைப்போல் இருக்கும். 16 பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை! 17 தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான். 18 அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை. 19 அகங்காரிகளோடே கொள்ளைப் பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம். 20 விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மைபெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான். 21 இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும். 22 புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவ ஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே. 23 ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவையூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும். 24 இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஔஷதமுமாகும். 25 மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள். 26 பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான்; அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும். 27 பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது. 28 மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான். 29 கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான். 30 அவன் மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன் கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறான். 31 நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம். 32 பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன். 33 சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.

நீதிமொழிகள் 17

1 சண்டையோடு கூடிய வீடுநிறைந்த கொழுமையான பதார்த்தங்களைப்பார்க்கிலும், அமரிக்கையோடே சாப்பிடும் வெறும் துணிக்கையே நலம். 2 புத்தியுள்ள வேலைக்காரன் இலச்சையுண்டாக்குகிற புத்திரனை ஆண்டு, சகோதரருக்குள்ள சுதந்தரத்தில் பங்கடைவான். 3 வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர். 4 துஷ்டன் அக்கிரம உதடுகள் சொல்வதை உற்றுக்கேட்கிறான்; பொய்யன் கேடுள்ள நாவுக்குச் செவிகொடுக்கிறான். 5 ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக்குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான். 6 பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிரீடம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே. 7 மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு எவ்வளவேனும் தகாது. 8 பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும். 9 குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தை நாடுகிறான்; கேட்டதைச் சொல்லுகிறவன் பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான். 10 மூடனை நூறடி அடிப்பதைப்பார்க்கிலும், புத்திமானை வாயினால் கண்டிப்பதே அதிகமாய் உறைக்கும். 11 துஷ்டன் கலகத்தையே தேடுகிறான்; குரூரதூதன் அவனுக்கு விரோதமாக அனுப்பப்படுவான். 12 தன் மதிகேட்டில் திரியும் மதியீனனுக்கு எதிர்ப்படுவதைப்பார்க்கிலும், குட்டிகளைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவது வாசி. 13 நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது. 14 சண்டையின் ஆரம்பம் மதகைத் திறந்துவிடுகிறதுபோலிருக்கும்; ஆதலால் விவாதம் எழும்புமுன் அதை விட்டுவிடு. 15 துன்மார்க்கனை நீதிமானாக்குகிறவனும், நீதிமானைக் குற்றவாளியாக்குகிறவனுமாகிய இவ்விருவரும் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள். 16 ஞானத்தைக் கொள்ளும்படி மூடன் கையிலே ரொக்கம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே. 17 சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். 18 புத்தியீனன் தன் சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக்கொடுத்துப் பிணைப்படுகிறான். 19 வாதுப்பிரியன் பாதகப்பிரியன்; தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான். 20 மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டு நாவுள்ளவன் தீமையில் விழுவான். 21 மூடபுத்திரனைப் பெறுகிறவன் தனக்குச் சஞ்சலமுண்டாக அவனைப் பெறுகிறான்; மதியீனனுடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியில்லை. 22 மனமகிழ்ச்சி நல்ல ஔஷதம்; முறிந்த ஆவியோ எலும்புகளை உலரப்பண்ணும். 23 துன்மார்க்கன், நீதியின் வழியைப் புரட்ட, மடியிலுள்ள பரிதானத்தை வாங்குகிறான். 24 ஞானம் புத்திமானுக்கு முன்பாக இருக்கும்; மூடனுடைய கண்களோ பூமியின் கடையாந்தரங்களில் செல்லும். 25 மூடபுத்திரன் தன் பிதாவுக்குச் சலிப்பும், தன்னைப் பெற்றவர்களுக்குக் கசப்புமானவன். 26 நீதிமானைத் தண்டம்பிடிக்கிறதும், நியாயஞ்செய்கிறவனைப் பிரபுக்கள் அடிக்கிறதும் தகுதியல்ல. 27 அறிவாளி தன் வார்த்தைகளை அடக்குகிறான்; விவேகி குளிர்ந்த மனமுள்ளவன். 28 பேசாதிருந்தால் மூடனும் ஞானவான் என்று எண்ணப்படுவான்; தன் உதடுகளை மூடுகிறவன் புத்திமான் என்று எண்ணப்படுவான்.

நீதிமொழிகள் 18

1 பிரிந்துபோகிறவன் தன் இச்சையின்படி செய்யப்பார்க்கிறான், எல்லா ஞானத்திலும் தலையிட்டுக்கொள்ளுகிறான். 2 மூடன் ஞானத்தில் பிரியங்கொள்ளாமல், தன் மனதிலுள்ளவைகளை வெளிப்படுத்தப் பிரியப்படுகிறான். 3 துன்மார்க்கன் வர அவமானம் வரும்; அவமானத்தோடே நிந்தையும் வரும். 4 மனுஷனுடைய வாய்மொழிகள் ஆழமான ஜலம்போலிருக்கும்; ஞானத்தின் ஊற்று பாய்கிற ஆற்றைப்போலிருக்கும். 5 வழக்கிலே நீதிமானைத் தோற்கடிக்கிறதற்கு, துன்மார்க்கனுக்கு முகதாட்சிணியம்பண்ணுவது நல்லதல்ல. 6 மூடனுடைய உதடுகள் விவாதத்தில் நுழையும், அவன் வாய் அடிகளை வரவழைக்கும். 7 மூடனுடைய வாய் அவனுக்குக் கேடு, அவன் உதடுகள் அவன் ஆத்துமாவுக்குக் கண்ணி. 8 கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும், ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும். 9 தன் வேலையில் அசதியாயிருப்பவன் அழிம்பனுக்குச் சகோதரன். 10 கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான். 11 ஐசுவரியவானுடைய பொருள் அவனுக்கு அரணான பட்டணம்; அது அவன் எண்ணத்தில் உயர்ந்த மதில்போலிருக்கும். 12 அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை. 13 காரியத்தைக் கேட்குமுன் உத்தரம் சொல்லுகிறவனுக்கு, அது புத்தியீனமும் வெட்கமுமாயிருக்கும். 14 மனுஷனுடைய ஆவி அவன் பலவீனத்தைத் தாங்கும்; முறிந்த ஆவி யாரால் தாங்கக்கூடும்? 15 புத்திமானுடைய மனம் அறிவைச் சம்பாதிக்கும்; ஞானியின் செவி அறிவை நாடும். 16 ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும். 17 தன் வழக்கிலே முதல்பேசுகிறவன் நீதிமான்போல் காணப்படுவான்; அவன் அயலானோ வந்து அவனைப் பரிசோதிக்கிறான். 18 சீட்டுப்போடுதல் விரோதங்களை ஒழித்து, பலவான்கள் நடுவே சிக்கறுக்கும். 19 அரணான பட்டணத்தை வசப்படுத்துவதைப்பார்க்கிலும் கோபங்கொண்ட சகோதரனை வசப்படுத்துவது அரிது; அவர்களுடைய விரோதங்கள் கோட்டைத் தாழ்ப்பாள்கள்போலிருக்கும். 20 அவனவன் வாயின் பலனால் அவனவன் வயிறு நிரம்பும்; அவனவன் உதடுகளின் விளைவினால் அவனவன் திருப்தியாவான். 21 மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள். 22 மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான். 23 தரித்திரன் கெஞ்சிக்கேட்கிறான்; ஐசுவரியவான் கடினமாய் உத்தரவு கொடுக்கிறான். 24 சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.

நீதிமொழிகள் 19

1 மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப்பார்க்கிலும், உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி. 2 ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான். 3 மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும். 4 செல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும்; தரித்திரனோ தன் சிநேகிதனாலும் நெகிழப்படுவான். 5 பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை. 6 பிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன். 7 தரித்திரனை அவனுடைய சகோதரர் எல்லாரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாய் அவன் சிநேகிதர் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே. 8 ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைச் சிநேகிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான். 9 பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான். 10 மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமைக்கு எவ்வளவும் தகாது. 11 மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை. 12 ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும். 13 மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு. 14 வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு. 15 சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான். 16 கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்; தன் வழிகளை அவமதிக்கிறவன் சாவான். 17 ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார். 18 நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே. 19 கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாய் வரும். 20 உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள். 21 மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும். 22 நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை; பொய்யனைப்பார்க்கிலும் தரித்திரன் வாசி. 23 கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது. 24 சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான். 25 பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான். 26 தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன். 27 என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே. 28 பேலியாளின் சாட்சிக்காரன் நியாயத்தை நிந்திக்கிறான்; துன்மார்க்கருடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும். 29 பரியாசக்காரருக்குத் தண்டனைகளும், மூடருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.

நீதிமொழிகள் 20

1 திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற ஒருவனும் ஞானவானல்ல. 2 ராஜாவின் உறுக்குதல் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனைக் கோபப்படுத்துகிறவன் தன் பிராணனுக்கே துரோகஞ்செய்கிறான். 3 வழக்குக்கு விலகுவது மனுஷனுக்கு மேன்மை; மூடனானவன் எவனும் அதிலே தலையிட்டுக்கொள்வான். 4 சோம்பேறி குளிருகிறதென்று உழமாட்டான்; அறுப்பிலே பிச்சைகேட்டாலும் அவனுக்கு ஒன்றுங்கிடையாது. 5 மனுஷனுடைய இருதயத்திலுள்ள யோசனை ஆழமான தண்ணீர்போலிருக்கிறது; புத்திமானோ அதை மொண்டெடுப்பான். 6 மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்? 7 நீதிமான் தன் உத்தமத்திலே நடக்கிறான்; அவனுக்குப்பிறகு அவன் பிள்ளைகளும் பாக்கியவான்களாயிருப்பார்கள். 8 நியாயாசனத்தில் வீற்றிருக்கும் ராஜா தன் கண்களினால் சகல பொல்லாப்பையும் சிதறப்பண்ணுகிறான். 9 என் இருதயத்தைச் சுத்தமாக்கினேன், என் பாவமறத் துப்புரவானேன் என்று சொல்லத்தக்கவன் யார்? 10 வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் ஆகிய இவ்விரண்டும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள். 11 பிள்ளையானாலும், அதின் செய்கை சுத்தமோ செம்மையோ என்பது, அதின் நடக்கையினால் விளங்கும். 12 கேட்கிற காதும், காண்கிற கண்ணும் ஆகிய இவ்விரண்டையும் கர்த்தர் உண்டாக்கினார். 13 தூக்கத்தை விரும்பாதே, விரும்பினால் தரித்திரனாவாய்; கண்விழித்திரு, அப்பொழுது ஆகாரத்தினால் திருப்தியாவாய். 14 கொள்ளுகிறவன்: நல்லதல்ல, நல்லதல்ல என்பான்; போய்விட்டபின்போ மெச்சிக்கொள்வான். 15 பொன்னும் மிகுதியான முத்துக்களும் உண்டு; அறிவுள்ள உதடுகளோ விலையுயர்ந்த இரத்தினம். 16 அந்நியனுக்காகப் பிணைப்பட்டவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள்; அந்நிய ஸ்திரீயினிமித்தம் அவன் கையில் ஈடு வாங்கிக்கொள். 17 வஞ்சனையினால் வந்த போஜனம் மனுஷனுக்கு இன்பமாயிருக்கும்; பின்போ அவனுடைய வாய் பருக்கைக்கற்களால் நிரப்பப்படும். 18 ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்; நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு. 19 தூற்றிக்கொண்டு திரிகிறவன் இரகசியங்களை வெளிப்படுத்துவான்; ஆதலால் தன் உதடுகளினால் அலப்புகிறவனோடே கலவாதே. 20 தன் தகப்பனையும் தன் தாயையும் தூஷிக்கிறவனுடைய தீபம் காரிருளில் அணைந்துபோம். 21 ஆரம்பத்திலே துரிதமாகக் கிடைத்த சுதந்தரம் முடிவிலே ஆசீர்வாதம் பெறாது. 22 தீமைக்குச் சரிக்கட்டுவேன் என்று சொல்லாதே; கர்த்தருக்குக் காத்திரு, அவர் உன்னை இரட்சிப்பார். 23 வெவ்வேறான நிறைகற்கள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; கள்ளத் தராசு நல்லதல்ல. 24 கர்த்தராலே மனுஷருடைய நடைகள் வாய்க்கும்; ஆகையால் மனுஷன் தன் வழியை அறிந்துகொள்வதெப்படி? 25 பரிசுத்தமானதை விழுங்குகிறதும், பொருத்தனை செய்தபின்பு யோசிக்கிறதும், மனுஷனுக்குக் கண்ணியாயிருக்கும். 26 ஞானமுள்ள ராஜா துன்மார்க்கரைச் சிதறடித்து, அவர்கள்மேல் உருளையை உருட்டுவான். 27 மனுஷனுடைய ஆவி கர்த்தர் தந்த தீபமாயிருக்கிறது; அது உள்ளத்தில் உள்ளவைகளையெல்லாம் ஆராய்ந்துபார்க்கும். 28 தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான். 29 வாலிபரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்; முதிர்வயதானவர்களின் மகிமை அவர்கள் நரை. 30 காயத்தின் தழும்புகளும், உள்ளத்தில் உறைக்கும் அடிகளும், பொல்லாதவனை அழுக்கறத் துடைக்கும்.

நீதிமொழிகள் 21

1 ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார். 2 மனுஷனுடைய வழியெல்லாம் அவன் பார்வைக்குச் செம்மையாகத் தோன்றும்; கர்த்தரோ இருதயங்களை நிறுத்துப்பார்க்கிறார். 3 பலியிடுவதைப்பார்க்கிலும், நீதியும் நியாயமும் செய்வதே கர்த்தருக்குப் பிரியம். 4 மேட்டிமையான பார்வையும், அகந்தையான மனமுமுள்ள துன்மார்க்கர் போடும் வெளிச்சம் பாவமே. 5 ஜாக்கிரதையுள்ளவனுடைய நினைவுகள் செல்வத்துக்கும், பதறுகிறவனுடைய நினைவுகள் தரித்திரத்துக்கும் ஏதுவாகும். 6 பொய்நாவினால் பொருளைச் சம்பாதிப்பது சாவைத் தேடுகிறவர்கள் விடுகிற சுவாசம்போலிருக்கும். 7 துன்மார்க்கர் நியாயஞ்செய்ய மனதில்லாதிருக்கிறபடியால், அவர்கள் பாழ்க்கடிக்கப்பட்டுப்போவார்கள். 8 குற்றமுள்ளவன் தன் வழிகளில் மாறுபாடுள்ளவன்; சுத்தமுள்ளவனோ தன் கிரியையில் செம்மையானவன். 9 சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும், வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்கியிருப்பதே நலம். 10 துன்மார்க்கனுடைய மனம் பொல்லாப்பைச் செய்ய விரும்பும்; அவன் கண்களில் அவன் அயலானுக்கு இரக்கங்கிடையாது. 11 பரியாசக்காரனைத் தண்டிக்கும்போது பேதை ஞானமடைவான்; ஞானவான் போதிக்கப்படும்போது அறிவடைவான். 12 நீதிபரர் துன்மார்க்கருடைய வீட்டைக் கவனித்துப்பார்க்கிறார்; துன்மார்க்கரைத் தீங்கில் கவிழ்த்துப்போடுவார். 13 ஏழையின் கூக்குரலுக்குத் தன் செவியை அடைத்துக்கொள்ளுகிறவன், தானும் சத்தமிட்டுக் கூப்பிடும்போது கேட்கப்படமாட்டான். 14 அந்தரங்கமாய்க் கொடுக்கப்பட்ட வெகுமதி கோபத்தைத் தணிக்கும்; மடியிலுள்ள பரிதானம் குரோதத்தை ஆற்றும். 15 நியாயந்தீர்ப்பது நீதிமானுக்குச் சந்தோஷமும், அக்கிரமக்காரருக்கோ அழிவுமாம். 16 விவேகத்தின் வழியை விட்டுத் தப்பி நடக்கிற மனுஷன் செத்தவர்களின் கூட்டத்தில் தாபரிப்பான். 17 சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை. 18 நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும்பொருளாவார்கள். 19 சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்தரத்தில் குடியிருப்பது நலம். 20 வேண்டிய திரவியமும் எண்ணெயும் ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான். 21 நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான். 22 பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின அரணை இடித்துப்போடுவான். 23 தன் வாயையும் தன் நாவையும் காக்கிறவன் தன் ஆத்துமாவை இடுக்கண்களுக்கு விலக்கிக் காக்கிறான். 24 அகங்காரமும் இடும்புமுள்ளவனுக்குப் பரியாசக்காரனென்று பெயர், அவன் அகந்தையான சினத்தோடே நடக்கிறான். 25 சோம்பேறியின் கைகள் வேலைசெய்யச் சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொல்லும். 26 அவன் நாள்தோறும் ஆவலுடன் இச்சிக்கிறான்; நீதிமானோ பிசினித்தனமில்லாமல் கொடுப்பான். 27 துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சிந்தையோடே செலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும். 28 பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான். 29 துன்மார்க்கன் தன் முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன் வழியை நேர்ப்படுத்துகிறான். 30 கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை. 31 குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.

நீதிமொழிகள் 22

1 திரளான ஐசுவரியத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியே தெரிந்துகொள்ளப்படத்தக்கது; பொன் வெள்ளியைப்பார்க்கிலும் தயையே நலம். 2 ஐசுவரியவானும் தரித்திரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவர்கள் அனைவரையும் உண்டாக்கினவர் கர்த்தர். 3 விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள். 4 தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம். 5 மாறுபாடுள்ளவனுடைய வழியிலே முள்ளுகளும் கண்ணிகளுமுண்டு; தன் ஆத்துமாவைக் காக்கிறவன் அவைகளுக்குத் தூரமாய் விலகிப்போவான். 6 பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். 7 ஐசுவரியவான் தரித்திரனை ஆளுகிறான்; கடன்வாங்கினவன் கடன்கொடுத்தவனுக்கு அடிமை. 8 அநியாயத்தை விதைக்கிறவன் வருத்தத்தை அறுப்பான்; அவன் உக்கிரத்தின் மிலாறு ஒழியும். 9 கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான்; அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான். 10 பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது வாது நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும். 11 சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; ராஜா அவனுக்குச் சிநேகிதனாவான். 12 கர்த்தருடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்; துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார். 13 வெளியிலே சிங்கம், வீதியிலே கொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான். 14 பரஸ்திரீகளின் வாய் ஆழமான படுகுழி; கர்த்தருடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான். 15 பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும். 16 தனக்கு அதிகம் உண்டாகத் தரித்திரனை ஒடுக்குகிறவன் தனக்குக் குறைச்சலுண்டாகவே ஐசுவரியவானுக்குக் கொடுப்பான். 17 உன் செவியைச் சாய்த்து, ஞானிகளுடைய வார்த்தைகளைக் கேட்டு, என் போதகத்தை உன் இருதயத்தில் வை. 18 அவைகளை உன் உள்ளத்தில் காத்து, அவைகளை உன் உதடுகளில் நிலைத்திருக்கப்பண்ணும்போது, அது இன்பமாயிருக்கும். 19 உன் நம்பிக்கை கர்த்தர்மேல் இருக்கும்படி, இன்றையதினம் அவைகளை உனக்குத் தெரியப்படுத்துகிறேன். 20 சத்திய வார்த்தைகளின் யதார்த்தத்தை நான் உனக்குத் தெரிவிக்கும்படிக்கும், நீ உன்னை அனுப்பினவர்களுக்குச் சத்திய வார்த்தைகளை மறுமொழியாகச் சொல்லும்படிக்கும், 21 ஆலோசனையையும் ஞானத்தையும் பற்றி நான் உனக்கு முக்கியமானவைகளை எழுதவில்லையா? 22 ஏழையாயிருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடாதே; சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் உபத்திரவப்படுத்தாதே. 23 கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார். 24 கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே. 25 அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய். 26 கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே. 27 செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே. 28 உன் பிதாக்கள் நாட்டின பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே. 29 தன் வேலையில் ஜாக்கிரதையாயிருக்கிறவனை நீ கண்டால், அவன் நீசருக்கு முன்பாக நில்லாமல், ராஜாக்களுக்கு முன்பாக நிற்பான்.

நீதிமொழிகள் 23

1 நீ ஒரு அதிபதியோடே போஜனம்பண்ண உட்கார்ந்தால், உனக்கு முன்பாக இருக்கிறதை நன்றாய்க் கவனித்துப்பார். 2 நீ போஜனப்பிரியனாயிருந்தால், உன் தொண்டையிலே கத்தியை வை. 3 அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே; அவைகள் கள்ளப்போஜனமாமே. 4 ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே. 5 இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போலச் சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம். 6 வன்கண்ணனுடைய ஆகாரத்தைப் புசியாதே; அவனுடைய ருசியுள்ள பதார்த்தங்களை இச்சியாதே. 7 அவன் இருதயத்தின் நினைவு எப்படியோ, அப்படியே அவன் இருக்கிறான்; புசியும், பானம்பண்ணும் என்று அவன் உன்னோடே சொன்னாலும், அவன் இருதயம் உன்னோடே இராது. 8 நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய். 9 மூடனுடைய செவிகள் கேட்கப்பேசாதே; அவன் உன் வார்த்தைகளின் ஞானத்தை அசட்டைபண்ணுவான். 10 பூர்வ எல்லைக்குறியை மாற்றாதே; திக்கற்ற பிள்ளைகளுடைய நிலங்களை அபகரித்துக்கொள்ளாதே. 11 அவர்களுடைய மீட்பர் வல்லவர்; அவர் உன்னுடனே அவர்களுக்காக வழக்காடுவார். 12 உன் இருதயத்தைப் புத்திமதிக்கும், உன் செவிகளை அறிவின் வார்த்தைகளுக்கும் சாய்ப்பாயாக. 13 பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான். 14 நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. 15 என் மகனே, உன் இருதயம் ஞானமுள்ளதாயிருந்தால், என்னிலே என் இருதயம் மகிழும். 16 உன் உதடுகள் செம்மையானவைகளைப் பேசினால், என் உள்ளிந்திரியங்கள் மகிழும். 17 உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு. 18 நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது. 19 என் மகனே, நீ செவிகொடுத்து ஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து. 20 மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே. 21 குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும். 22 உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டைபண்ணாதே. 23 சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு. 24 நீதிமானுடைய தகப்பன் மிகவும் களிகூருவான்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவன் அவனால் மகிழுவான். 25 உன் தகப்பனும் உன் தாயும் சந்தோஷப்படுவார்கள்; உன்னைப் பெற்றவள் மகிழுவாள். 26 என் மகனே, உன் இருதயத்தை எனக்குத் தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக. 27 வேசி ஆழமான படுகுழி; பரஸ்திரீ இடுக்கமான கிணறு. 28 அவள் கொள்ளைக்காரனைப்போல் பதிவிருந்து, மனுஷருக்குள்ளே பாதகரைப் பெருகப்பண்ணுகிறாள். 29 ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? 30 மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே. 31 மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். 32 முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும். 33 உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும்; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும். 34 நீ நடுக்கடலிலே சயனித்திருக்கிறவனைப்போலும், பாய்மரத்தட்டிலே படுத்திருக்கிறவனைப்போலும் இருப்பாய். 35 என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், எனக்குச் சுரணையில்லை; நான் அதைப் பின்னும் தொடர்ந்து தேட எப்பொழுது விழிப்பேன் என்பாய்.

நீதிமொழிகள் 24

1 பொல்லாத மனுஷர்மேல் பொறாமை கொள்ளாதே; அவர்களோடே இருக்கவும் விரும்பாதே. 2 அவர்கள் இருதயம் கொடுமையை யோசிக்கும், அவர்கள் உதடுகள் தீவினையைப் பேசும். 3 வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும். 4 அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும். 5 ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான். 6 நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும். 7 மூடனுக்கு ஞானம் எட்டாத உயரமாயிருக்கும்; அவன் நியாயஸ்தலத்தில் தன் வாயைத் திறவான். 8 தீவினைசெய்ய உபாயஞ்செய்கிறவன் துஷ்டன் என்னப்படுவான். 9 தீயநோக்கம் பாவமாம்; பரியாசக்காரன் மனுஷருக்கு அருவருப்பானவன். 10 ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது. 11 மரணத்துக்கு ஒப்பிக்கப்பட்டவர்களையும், கொலையுண்ணப்போகிறவர்களையும் விடுவிக்கக்கூடுமானால் விடுவி. 12 அதை அறியோம் என்பாயாகில், இருதயங்களைச் சோதிக்கிறவர் அறியாரோ? உன் ஆத்துமாவைக் காக்கிறவர் கவனியாரோ? அவர் மனுஷருக்கு அவனவன் கிரியைக்குத்தக்கதாகப் பலனளியாரோ? 13 என் மகனே, தேனைச் சாப்பிடு, அது நல்லது; கூட்டிலிருந்து ஒழுகும் தேன் உன் வாய்க்கு இன்பமாயிருக்கும். 14 அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண்போகாது. 15 துஷ்டனே, நீ நீதிமானுடைய வாசஸ்தலத்துக்கு விரோதமாய்ப் பதிவிராதே; அவன் தங்கும் இடத்தைப் பாழாக்கிப்போடாதே. 16 நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்; துன்மார்க்கரோ தீங்கிலே இடறுண்டு கிடப்பார்கள். 17 உன் சத்துரு விழும்போது சந்தோஷப்படாதே; அவன் இடறும்போது உன் இருதயம் களிகூராதிருப்பதாக. 18 கர்த்தர் அதைக் காண்பார், அது அவர் பார்வைக்குப் பொல்லாப்பாயிருக்கும்; அப்பொழுது அவனிடத்தினின்று அவர் தமது கோபத்தை நீக்கிவிடுவார். 19 பொல்லாதவர்களைக்குறித்து எரிச்சலாகாதே; துன்மார்க்கர்மேல் பொறாமை கொள்ளாதே. 20 துன்மார்க்கனுக்கு நல்முடிவு இல்லை; துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம். 21 என் மகனே, நீ கர்த்தருக்கும் ராஜாவுக்கும் பயந்து நட; கலகக்காரரோடு கலவாதே. 22 சடிதியில் அவர்களுடைய ஆபத்து எழும்பும்; அவர்கள் இருவரின் சங்காரத்தையும் அறிந்தவன் யார்? 23 பின்னும் ஞானமுள்ளவர்களின் புத்திமதிகள் என்னவெனில்: நியாயத்திலே முகதாட்சிணியம் நல்லதல்ல. 24 துன்மார்க்கனைப் பார்த்து: நீதிமானாயிருக்கிறாய் என்று சொல்லுகிறவனை ஜனங்கள் சபிப்பார்கள், பிரஜைகள் அவனை வெறுப்பார்கள். 25 அவனைக் கடிந்துகொள்ளுகிறவர்கள்மேல் பிரியமுண்டாகும், அவர்களுக்கு உத்தம ஆசீர்வாதம் கிடைக்கும். 26 செம்மையான மறுமொழி சொல்லுகிறவன் உதடுகளை முத்தமிடுகிறவனுக்குச் சமானம். 27 வெளியில் உன் வேலையை எத்தனப்படுத்தி, வயலில் அதை ஒழுங்காக்கி, பின்பு உன் வீட்டைக் கட்டு. 28 நியாயமின்றிப் பிறனுக்கு விரோதமாய்ச் சாட்சியாக ஏற்படாதே; உன் உதடுகளினால் வஞ்சகம் பேசாதே. 29 அவன் எனக்குச் செய்தபிரகாரம் நானும் அவனுக்குச் செய்வேன், அவன் செய்த செய்கைக்குத்தக்கதாக நானும் அவனுக்குச் சரிக்கட்டுவேன் என்று நீ சொல்லாதே. 30 சோம்பேறியின் வயலையும், மதியீனனுடைய திராட்சத்தோட்டத்தையும் கடந்துபோனேன். 31 இதோ, அதெல்லாம் முள்ளுக்காடாயிருந்தது; நிலத்தின் முகத்தைக் காஞ்சொறி மூடினது, அதின் கற்சுவர் இடிந்து கிடந்தது. 32 அதைக் கண்டு சிந்தனைபண்ணினேன்; அதை நோக்கிப் புத்தியடைந்தேன். 33 இன்னுங்கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங்கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ? 34 உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலும் உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலும் வரும்.

நீதிமொழிகள் 25

1 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனுஷர் பேர்த்தெழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்: 2 காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை. 3 வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது. 4 வெள்ளியினின்று களிம்பை நீக்கிவிடு, அப்பொழுது தட்டானால் நல்ல உடைமை பிறக்கும். 5 ராஜாவின் முன்னின்று துஷ்டரை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும். 6 ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய ஸ்தானத்தில் நில்லாதே. 7 உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; அவன் உன்னைப் பார்த்து: மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை. 8 வழக்காடப் பதற்றமாய்ப் போகாதே; முடிவிலே உன் அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே. 9 நீ உன் அயலானுடனேமாத்திரம் உன் வியாஜ்யத்தைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே. 10 மற்றப்படி அதைக் கேட்கிறவன் உன்னை நிந்திப்பான்; உன் அவமானம் உன்னைவிட்டு நீங்காது. 11 ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம். 12 கேட்கிற செவிக்கு, ஞானமாய்க் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் அபரஞ்சிப் பூஷணத்திற்கும் சரி. 13 கோடைகாலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான ஸ்தானாபதியும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன் எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரப்பண்ணுவான். 14 கொடுப்பேன் என்று சொல்லியும் கொடாமலிருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சரி. 15 நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கப்பண்ணலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும். 16 தேனைக் கண்டுபிடித்தாயானால் மட்டாய்ச் சாப்பிடு; மிதமிஞ்சிச் சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய். 17 உன் அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடிக்கு, அடிக்கடி அவன் வீட்டில் கால்வைக்காதே. 18 பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லுகிற மனுஷன் தண்டாயுதத்துக்கும் கட்கத்துக்கும் கூர்மையான அம்புக்கும் ஒப்பானவன். 19 ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மொழிபுரண்ட காலுக்கும் சமானம். 20 மனதுக்கமுள்ளவனுக்குப் பாட்டுகளைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் வஸ்திரத்தைக் களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் வார்த்த காடியைப்போலவும் இருப்பான். 21 உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் புசிக்க ஆகாரங்கொடு; அவன் தாகமாயிருந்தால், குடிக்கத் தண்ணீர்கொடு. 22 அதினால் நீ அவன் தலையின்மேல் எரிகிற தழல்களைக் குவிப்பாய்; கர்த்தர் உனக்குப் பலனளிப்பார். 23 வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும். 24 சண்டைக்காரியோடே ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைப்பார்க்கிலும் வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம். 25 தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி விடாய்த்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமானம். 26 துன்மார்க்கருக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன சுனைக்கும் ஒப்பாகும். 27 தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல. 28 தன் ஆவியை அடக்காத மனுஷன் மதிலிடிந்த பாழான பட்டணம்போலிருக்கிறான்.

நீதிமொழிகள் 26

1 உஷ்ணகாலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது. 2 அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்துபோவதுபோலும், காரணமில்லாமலிட்ட சாபம் தங்காது. 3 குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது. 4 மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய். 5 மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான். 6 மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன் கால்களையே தறித்துக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான். 7 நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும். 8 மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போலிருப்பான். 9 மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு. 10 பெலத்தவன் அனைவரையும் நோகப்பண்ணி, மூடனையும் வேலைகொள்ளுகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைகொள்ளுகிறான். 11 நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான். 12 தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம். 13 வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான். 14 கதவு கீல்முளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான். 15 சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான். 16 புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன். 17 வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப்போலிருக்கிறான். 18 கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, 19 அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான். 20 விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும். 21 கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன். 22 கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும். 23 நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும். 24 பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான். 25 அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு. 26 பகையை வஞ்சகமாய் மறைத்து வைக்கிறவனெவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும். 27 படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும். 28 கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவர்களைப் பகைக்கும்; இச்சகம்பேசும் வாய் அழிவை உண்டுபண்ணும்.

நீதிமொழிகள் 27

1 நாளையத்தினத்தைக்குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே. 2 உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும். 3 கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம். 4 உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்? 5 மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது. 6 சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள். 7 திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும். 8 தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தைவிட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான். 9 பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும். 10 உன் சிநேகிதனையும், உன் தகப்பனுடைய சிநேகிதனையும் விட்டுவிடாதே; உன் ஆபத்துக்காலத்தில் உன் சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள அயலானே வாசி. 11 என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து. 12 விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள். 13 அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள், அந்நிய ஸ்திரீக்காக ஈடுவாங்கிக்கொள். 14 ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்தசத்தத்தோடே தன் சிநேகிதனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும். 15 அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி. 16 அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான். 17 இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான். 18 அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான். 19 தண்ணீரில் முகத்துக்கு முகம் ஒத்திருக்குமாப்போல, மனுஷரில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும். 20 பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை. 21 வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை. 22 மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது. 23 உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு. 24 செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ? 25 புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும். 26 ஆட்டுக்குட்டிகள் உனக்கு வஸ்திரத்தையும், கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும். 27 வெள்ளாட்டுப்பால் உன் ஆகாரத்துக்கும், உன் வீட்டாரின் ஆகாரத்துக்கும், உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானபடியிருக்கும்.

நீதிமொழிகள் 28

1 ஒருவனும் தொடராதிருந்தும் துன்மார்க்கர் ஓடிப்போகிறார்கள்; நீதிமான்களோ சிங்கத்தைப்போலே தைரியமாயிருக்கிறார்கள். 2 தேசத்தின் பாவத்தினிமித்தம் அதின் அதிகாரிகள் அநேகராயிருக்கிறார்கள்; புத்தியும் அறிவுமுள்ள மனுஷனாலோ அதின் நற்சீர் நீடித்திருக்கும். 3 ஏழைகளை ஒடுக்குகிற தரித்திரன் ஆகாரம் விளையாதபடி வெள்ளமாய் அடித்துக்கொண்டுபோகிற மழையைப்போலிருக்கிறான். 4 வேதப்பிரமாணத்தை விட்டு விலகுகிறவர்கள் துன்மார்க்கரைப் புகழுகிறார்கள்; வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவர்களோ அவர்களோடே போராடுகிறார்கள். 5 துஷ்டர் நியாயத்தை அறியார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்களோ சகலத்தையும் அறிவார்கள். 6 இருவழிகளில் நடக்கிற திரியாவரக்காரன் ஐசுவரியவானாயிருந்தாலும், நேர்மையாய் நடக்கிற தரித்திரன் அவனிலும் வாசி. 7 வேதப்பிரமாணத்தைக் கைக்கொள்ளுகிறவன் விவேகமுள்ள புத்திரன்; போஜனப்பிரியருக்குத் தோழனாயிருக்கிறவனோ தன் தகப்பனை அவமானப்படுத்துகிறான். 8 அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன் ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறவன், தரித்திரர்பேரில் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான். 9 வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது. 10 உத்தமர்களை மோசப்படுத்தி, பொல்லாத வழியிலே நடத்துகிறவன் தான் வெட்டின குழியில் தானே விழுவான்; உத்தமர்களோ நன்மையைச் சுதந்தரிப்பார்கள். 11 ஐசுவரியவான் தன் பார்வைக்கு ஞானவான்; புத்தியுள்ள தரித்திரனோ அவனைப் பரிசோதிக்கிறான். 12 நீதிமான்கள் களிகூரும்போது மகா கொண்டாட்டம் உண்டாகும்; துன்மார்க்கர் எழும்பும்போதோ மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள். 13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். 14 எப்பொழுதும் பயந்திருக்கிறவன் பாக்கியவான்; தன் இருதயத்தைக் கடினப்படுத்துகிறவனோ தீங்கில் விழுவான். 15 ஏழை ஜனங்களை ஆளும் துஷ்ட அதிகாரி கெர்ச்சிக்கும் சிங்கத்துக்கும் அலைந்துதிரிகிற கரடிக்கும் ஒப்பாயிருக்கிறான். 16 பிரபு புத்தியீனனாயிருந்தால் அவன் செய்யும் இடுக்கண் மிகுதி; பொருளாசையை வெறுக்கிறவன் தீர்க்காயுசைப் பெறுவான். 17 இரத்தப்பழிக்காக ஒடுக்கப்பட்டவன் குழியில் ஒளிக்க ஓடிவந்தால், அவனை ஆதரிக்கவேண்டாம். 18 உத்தமனாய் நடக்கிறவன் இரட்சிக்கப்படுவான்; மாறுபாடான இருவழியில் நடக்கிறவனோ அவற்றில் ஒன்றிலே விழுவான். 19 தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தால் திருப்தியாவான்; வீணரைப் பின்பற்றுகிறவனோ வறுமையால் நிறைந்திருப்பான். 20 உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான். 21 முகதாட்சிணியம் நல்லதல்ல, முகதாட்சிணியமுள்ளவன் ஒரு துண்டு அப்பத்துக்காக அநியாயஞ்செய்வான். 22 வன்கண்ணன் செல்வனாகிறதற்குப் பதறுகிறான், வறுமை தனக்கு வருமென்று அறியாதிருக்கிறான். 23 தன் நாவினால் முகஸ்துதி பேசுகிறவனைப்பார்க்கிலும், கடிந்துகொள்ளுகிறவன் முடிவில் அங்கீகாரம் பெறுவான். 24 தன் தகப்பனையும் தன் தாயையும் கொள்ளையிட்டு, அது துரோகமல்ல என்பவன் பாழ்க்கடிக்கிற மனுஷனுக்குத் தோழன். 25 பெருநெஞ்சன் வழக்கைக் கொளுவுகிறான்; கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான். 26 தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்; ஞானமாய் நடக்கிறவனோ இரட்சிக்கப்படுவான். 27 தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்; தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ அநேக சாபங்கள் வரும். 28 துன்மார்க்கர் எழும்பும்போது மனுஷர் மறைந்துகொள்ளுகிறார்கள்; அவர்கள் அழியும்போதோ நீதிமான்கள் பெருகுகிறார்கள்.

நீதிமொழிகள் 29

1 அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான். 2 நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள். 3 ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன் தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான். 4 நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; பரிதானப்பிரியனோ அதைக் கவிழ்க்கிறான். 5 பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான். 6 துஷ்டனுடைய துரோகத்திலே கண்ணியிருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான். 7 நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான். 8 பரியாசக்காரர் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள். 9 ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லை. 10 இரத்தப்பிரியர் உத்தமனைப் பகைக்கிறார்கள்; செம்மையானவர்களோ அவனுடைய பிராணனைக் காப்பாற்றுகிறார்கள். 11 மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான். 12 அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள். 13 தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவ்விருவருடைய கண்களுக்கும் கர்த்தர் வெளிச்சங் கொடுக்கிறார். 14 ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும். 15 பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான். 16 துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள். 17 உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான். 18 தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான். 19 அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவுகொடான். 20 தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம். 21 ஒருவன் தன் அடிமையைச் சிறுபிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் புத்திரனாகப் பாராட்டுவான். 22 கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன். 23 மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான். 24 திருடனோடே பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான். 25 மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான். 26 ஆளுகைசெய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும். 27 நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.

நீதிமொழிகள் 30

1 யாக்கேயின் குமாரனாகிய ஆகூர் என்னும் புருஷன் ஈத்தியேலுக்கு வசனித்து, ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் உரைத்த உபதேச வாக்கியங்களாவன: 2 மனுஷரெல்லாரிலும் நான் மூடன்; மனுஷருக்கேற்ற புத்தி எனக்கு இல்லை. 3 நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை. 4 வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்திலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ? 5 தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். 6 அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய். 7 இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரிக்கும்பரியந்தமும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும். 8 மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் ஐசுவரியத்தையும் எனக்குக் கொடாதிருப்பீராக. 9 நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும். 10 எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றஞ்சுமத்தாதே; அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாகக் காணப்படுவாய். 11 தங்கள் தகப்பனைச் சபித்தும், தங்கள் தாயை ஆசீர்வதியாமலும் இருக்கிற சந்ததியாருமுண்டு. 12 தாங்கள் அழுக்கறக் கழுவப்படாமலிருந்தும், தங்கள் பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாருமுண்டு. 13 வேறொரு சந்ததியாருமுண்டு; அவர்கள் கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்கள் இமைகள் எத்தனை நெறிப்புமானவைகள். 14 தேசத்தில் சிறுமையானவர்களையும் மனுஷரில் எளிமையானவர்களையும் பட்சிப்பதற்குக் கட்கங்களையொத்த பற்களையும் கத்திகளையொத்த கடைவாய்ப்பற்களையுமுடைய சந்ததியாருமுண்டு. 15 தா, தா, என்கிற இரண்டு குமாரத்திகள் அட்டைக்கு உண்டு. திருப்தியடையாத மூன்றுண்டு, போதும் என்று சொல்லாத நான்குமுண்டு. 16 அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே. 17 தகப்பனைப் பரியாசம்பண்ணி, தாயின் கட்டளையை அசட்டைபண்ணுகிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் தின்னும். 18 எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்றுண்டு, என் புத்திக்கெட்டாதவைகள் நான்குமுண்டு. 19 அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனுஷனுடைய வழியுமே. 20 அப்படியே விபசாரஸ்திரீயினுடைய வழியும் இருக்கிறது; அவள் தின்று, தன் வாயைத் துடைத்து: நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள். 21 மூன்றினிமித்தம் பூமி சஞ்சலப்படுகிறது, நான்கையும் அது தாங்கமாட்டாது. 22 அரசாளுகிற அடிமையினிமித்தமும், போஜனத்தால் திருப்தியான மூடனினிமித்தமும், 23 பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீயினிமித்தமும், தன் நாச்சியாருக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே. 24 பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு. 25 அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும், 26 சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும், 27 ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும், 28 தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே. 29 விநோதமாய் அடிவைத்து நடக்கிறவைகள் மூன்றுண்டு; விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு. 30 அவையாவன: மிருகங்களில் சவுரியமானதும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கமும், 31 போர்க்குதிரையும், வெள்ளாட்டுக்கடாவும், ஒருவரும் எதிர்க்கக்கூடாத ராஜாவுமே. 32 நீ மேட்டிமையானதினால் பைத்தியமாய் நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாயிருந்தாயானால், கையினால் வாயை மூடு. 33 பாலைக் கடைதல் வெண்ணெயைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.

நீதிமொழிகள் 31

1 ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது: 2 என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே, 3 ஸ்திரீகளுக்கு உன் பெலனையும் ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே. 4 திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல. 5 மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள். 6 மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்; 7 அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும். 8 ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற. 9 உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய். 10 குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது. 11 அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது. 12 அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள். 13 ஆட்டுமயிரையும் சணலையும் தேடி, தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள். 14 அவள் வியாபாரக் கப்பல்களைப்போலிருக்கிறாள்; தூரத்திலிருந்து தன் ஆகாரத்தைக் கொண்டுவருகிறாள். 15 இருட்டோடே எழுந்து தன் வீட்டாருக்கு ஆகாரங்கொடுத்து, தன் வேலைக்காரிகளுக்குப் படியளக்கிறாள். 16 ஒரு வயலை விசாரித்து அதை வாங்குகிறாள்; தன் கைகளின் சம்பாத்தியத்தினால் திராட்சத்தோட்டத்தை நாட்டுகிறாள். 17 தன்னைப் பெலத்தால் இடைக்கட்டிக்கொண்டு, தன் கைகளைப் பலப்படுத்துகிறாள். 18 தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்; இரவிலே அவள் விளக்கு அணையாதிருக்கும். 19 தன் கைகளை இராட்டினத்தில் வைக்கிறாள்; அவள் விரல்கள் கதிரைப் பிடிக்கும். 20 சிறுமையானவர்களுக்குத் தன் கையைத் திறந்து, ஏழைகளுக்குத் தன் கரங்களை நீட்டுகிறாள். 21 தன் வீட்டார் அனைவருக்கும் இரட்டைப்புரை உடுப்பிருக்கிறதால், தன் வீட்டாரினிமித்தம் குளிருக்குப் பயப்படாள். 22 இரத்தினக் கம்பளங்களைத் தனக்கு உண்டுபண்ணுகிறாள்; மெல்லிய புடவையும் இரத்தாம்பரமும் அவள் உடுப்பு. 23 அவள் புருஷன் தேசத்து மூப்பர்களோடே நியாயஸ்தலங்களில் உட்கார்ந்திருக்கையில் பேர்பெற்றவனாயிருக்கிறான். 24 மெல்லிய புடவைகளை உண்டுபண்ணி விற்கிறாள்; கச்சைகளை வர்த்தகரிடத்தில் ஒப்புவிக்கிறாள். 25 அவள் உடை பலமும் அலங்காரமுமாயிருக்கிறது; வருங்காலத்தைப்பற்றியும் மகிழுகிறாள். 26 தன் வாயை ஞானம் விளங்கத் திறக்கிறாள்; தயையுள்ள போதகம் அவள் நாவின்மேல் இருக்கிறது. 27 அவள் சோம்பலின் அப்பத்தைப் புசியாமல், தன் வீட்டுக்காரியம் எப்படி நடக்கிறது என்று கண்ணோக்கமாயிருக்கிறாள். 28 அவள் பிள்ளைகள் எழும்பி, அவளைப் பாக்கியவதி என்கிறார்கள்; அவள் புருஷனும் அவளைப்பார்த்து: 29 அநேகம் பெண்கள் குணசாலிகளாயிருந்ததுண்டு; நீயோ அவர்கள் எல்லாருக்கும் மேற்பட்டவள் என்று அவளைப் புகழுகிறான். 30 சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள். 31 அவள் கைகளின் பலனை அவளுக்குக் கொடுங்கள்; அவளுடைய செய்கைகள் வாசல்களில் அவளைப் புகழக்கடவது.

பிரசங்கி 1

1 தாவீதின் குமாரனும் எருசலேமின் ராஜாவுமாகிய பிரசங்கியின் வாக்கியங்கள். 2 மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். 3 சூரியனுக்குக் கீழே மனுஷன் படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுக்குப் பலன் என்ன? 4 ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது; பூமியோ என்றைக்கும் நிலைத்திருக்கிறது. 5 சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது; தான் உதித்த இடத்திற்கே அது திரும்பவும் தீவிரிக்கிறது. 6 காற்று தெற்கே போய், வடக்கேயுஞ்சுற்றி, சுழன்று சுழன்று அடித்து, தான் சுற்றின இடத்துக்கே திரும்பவும் வரும். 7 எல்லா நதிகளும் சமுத்திரத்திலே ஓடி விழுந்தும் சமுத்திரம் நிரம்பாது; தாங்கள் உற்பத்தியான இடத்திற்கே நதிகள் மறுபடியும் திரும்பும். 8 எல்லாம் வருத்தத்தினால் நிறைந்திருக்கிறது; அது மனுஷரால் சொல்லிமுடியாது; காண்கிறதினால் கண் திருப்தியாகிறதில்லை, கேட்கிறதினால் செவி நிரப்பப்படுகிறதுமில்லை. 9 முன் இருந்ததே இனிமேலும் இருக்கும்; முன் செய்யப்பட்டதே பின்னும் செய்யப்படும்; சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை. 10 இதைப் பார், இது நூதனம் என்று சொல்லப்படத்தக்க காரியம் ஒன்றுண்டோ? அது நமக்கு முன்னுள்ள பூர்வகாலங்களிலும் இருந்ததே. 11 முன் இருந்தவைகளைப்பற்றி ஞாபகம் இல்லை; அப்படியே பின்வரும் காரியங்களைப்பற்றியும் இனிமேலிருப்பவர்களுக்கு ஞாபகம் இராது. 12 பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரவேலருக்கு ராஜாவாயிருந்தேன். 13 வானத்தின்கீழ் நடப்பதையெல்லாம் ஞானமாய் விசாரித்து ஆராய்ச்சி செய்கிறதற்கு என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; மனுபுத்திரர் இந்தக் கடுந்தொல்லையில் அடிபடும்படிக்குத் தேவன் அதை அவர்களுக்கு நியமித்திருக்கிறார். 14 சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது. 15 கோணலானதை நேராக்கக்கூடாது; குறைவானதை எண்ணிமுடியாது. 16 இதோ, நான் பெரியவனாயிருந்து, எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஞானமடைந்து தேறினேன்; என் மனம் மிகுந்த ஞானத்தையும் அறிவையும் கண்டறிந்தது என்று நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டேன். 17 ஞானத்தை அறிகிறதற்கும், பைத்தியத்தையும் மதியீனத்தையும் அறிகிறதற்கும், நான் என் மனதைப் பிரயோகம்பண்ணினேன்; இதுவும் மனதுக்குச் சஞ்சலமாயிருக்கிறதென்று கண்டேன். 18 அதிக ஞானத்திலே அதிக சலிப்புண்டு; அறிவுபெருத்தவன் நோவுபெருத்தவன்.

பிரசங்கி 2

1 நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அநுபவி என்றேன்; இதோ, இதுவும் மாயையாயிருந்தது. 2 நகைப்பைக்குறித்து, அது பைத்தியம் என்றும், சந்தோஷத்தைக்குறித்து, அது என்ன செய்யும்? என்றும் சொன்னேன். 3 வானத்தின்கீழ் மனுபுத்திரர் உயிரோடிருக்கும் நாளளவும் பெற்று அநுபவிக்கத்தக்கது இன்னதென்று அறியும்பொருட்டு, என் இருதயத்தை ஞானத்தால் தேற்றிக்கொண்டிருக்கும்போதே, நான் என் தேகத்தை மதுபானத்தால் சீராட்டிக்கொண்டிருக்கவும், மதியீனத்தைப் பற்றிக்கொண்டிருக்கவும் என் உள்ளத்தில் வகைதேடினேன். 4 நான் பெரிய வேலைகளைச் செய்தேன்; எனக்காக வீடுகளைக் கட்டினேன், திராட்சத்தோட்டங்களை நாட்டினேன். 5 எனக்காகத் தோட்டங்களையும் சிங்காரவனங்களையும் உண்டாக்கி, அவைகளில் சகலவகைக் கனிவிருட்சங்களையும் நாட்டினேன். 6 மரங்கள் பயிராகும் தோப்புக்கு நீர்ப்பாய்ச்சுகிறதற்குக் குளங்களை உண்டுபண்ணினேன். 7 வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் சம்பாதித்தேன்; வீட்டிலும் வேலைக்காரர் பிறந்தார்கள்; எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் ஆடுமாடு முதலான திரண்ட ஆஸ்திகள் எனக்கு இருந்தது. 8 வெள்ளியையும் பொன்னையும், ராஜசம்பத்தையும் மாகாணங்களிலுள்ள பொருள்களையும் சேகரித்தேன்; சங்கீதக்காரரையும் சங்கீதக்காரிகளையும், மனுபுத்திரருக்கு இன்பமான பலவித வாத்தியங்களையும் சம்பாதித்தேன். 9 எனக்குமுன் எருசலேமிலிருந்த எல்லாரைப்பார்க்கிலும் நான் பெரியவனும் திரவிய சம்பன்னனுமானேன்; என் ஞானமும் என்னோடேகூட இருந்தது. 10 என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடைபண்ணவில்லை; என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை; நான் செய்த முயற்சிகளிலெல்லாம் என் மனம் மகிழ்ச்சிகொண்டிருந்தது; இதுவே என் பிரயாசங்கள் எல்லாவற்றினாலும் எனக்கு வந்த பலன். 11 என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது; சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை. 12 பின்பு நான், ஞானமானது என்ன என்றும், பைத்தியமும் மதியீனமும் என்ன என்றும் பார்த்து அறியும்படி திரும்பினேன்; ராஜாவுக்குப் பின்வரும் மனுஷன் என்ன செய்யக்கூடும்? செய்ததையே செய்வான். 13 இருளைப்பார்க்கிலும் வெளிச்சம் எவ்வளவு உத்தமமோ, அவ்வளவாய் மதியீனத்தைப்பார்க்கிலும் ஞானம் உத்தமமென்று கண்டேன். 14 ஞானியின் கண்கள் அவன் முகத்திலே இருக்கிறது; மூடனோ இருளிலே நடக்கிறான்; ஆகிலும் அவர்களெல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது என்று கண்டேன். 15 மூடனுக்குச் சம்பவிக்கிறதுபோல எனக்கும் சம்பவிக்கிறதே; அப்படியிருக்க நான் அதிக ஞானமடைந்ததினால் காரியமென்ன என்று சிந்தித்தேன்; இதுவும் மாயை என்று என் உள்ளத்தில் எண்ணினேன். 16 மூடன் என்றாலும் ஞானியென்றாலும் என்றைக்கும் நினைவில் இருப்பதில்லை; இப்பொழுது இருக்கிறதெல்லாம் வருங்காலத்தில் மறக்கப்பட்டுப்போம்; மூடன் எப்படிச் சாகிறானோ அப்படியே ஞானியும் சாகிறான். 17 ஆகையால் இந்த ஜீவனை வெறுத்தேன்; சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது; எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது. 18 சூரியனுக்குக்கீழே நான் பட்ட பிரயாசத்தையெல்லாம் வெறுத்தேன்; எனக்குப் பின்வரப்போகிறவனுக்கு அதை நான் வைத்துப்போகவேண்டியதாகுமே. 19 அவன் புத்திமானாயிருப்பானோ, மூடனாயிருப்பானோ, அதை யார் அறிவார்? ஆகிலும் சூரியனுக்குக்கீழே நான் பிரயாசப்பட்டு ஞானமாய்ச் சம்பாதித்த சகல வஸ்துக்களின்பேரிலும் அவன் அதிகாரியாவான்; இதுவும் மாயையே. 20 ஆகையால் சூரியனுக்குக்கீழே நான் பட்ட எல்லாப் பிரயாசத்தின்மேலுமுள்ள ஆசையை விட்டுவிட வகைபார்த்தேன். 21 ஒருவன் புத்தி, யுக்தி, நிதானத்தோடு பிரயாசப்படுகிறான்; ஆகிலும் அப்படிப் பிரயாசப்படாதிருந்த வேறொருவனுக்கு அவன் அதைச் சொந்தமாக விட்டுவிடவேண்டியதாகும்; இதுவும் மாயையும் பெரிய தீங்குமாய் இருக்கிறது. 22 மனுஷன் சூரியனுக்குக்கீழே படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன? 23 அவன் நாட்களெல்லாம் அலுப்புள்ளது, அவன் வேலைகள் வருத்தமுள்ளது; இராத்திரியிலும் அவன் மனதுக்கு இளைப்பாறுதலில்லை; இதுவும் மாயையே. 24 மனுஷன் புசித்துக் குடித்து, தன் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்பார்க்கிலும், அவனுக்கு ஒரு நன்மையும் இல்லை; இதுவும் தேவனுடைய கரத்திலிருந்து வருகிறது என்று நான் கண்டேன். 25 என்னைப்பார்க்கிலும் சம்பிரமமாய்ச் சாப்பிடத்தக்கவன் யார்? என்னைப்பார்க்கிலும் துரிதமாய்ச் சம்பாதிக்கத்தக்கவன் யார்? 26 தேவன் தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவனுக்கு ஞானத்தையும் அறிவையும் இன்பத்தையும் அளிக்கிறார்; பாவஞ்செய்கிறவனுக்கோ தமது பார்வைக்கு நல்லவனாயிருக்கிறவன் வசமாய் வைத்துவிட்டுப் போகும்பொருட்டுச் சேர்த்துக் குவித்துவைக்கும் தொல்லையை அவர் நியமித்திருக்கிறார்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.

பிரசங்கி 3

1 ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. 2 பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; நட ஒரு காலமுண்டு, நட்டதைப் பிடுங்க ஒரு காலமுண்டு; 3 கொல்ல ஒரு காலமுண்டு, குணமாக்க ஒரு காலமுண்டு; இடிக்க ஒரு காலமுண்டு, கட்ட ஒரு காலமுண்டு; 4 அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு; 5 கற்களை எறிந்துவிட ஒரு காலமுண்டு, கற்களைச் சேர்க்க ஒரு காலமுண்டு; தழுவ ஒரு காலமுண்டு, தழுவாமலிருக்க ஒரு காலமுண்டு; 6 தேட ஒரு காலமுண்டு, இழக்க ஒரு காலமுண்டு; காப்பாற்ற ஒரு காலமுண்டு, எறிந்துவிட ஒரு காலமுண்டு; 7 கிழிக்க ஒரு காலமுண்டு, தைக்க ஒரு காலமுண்டு; மவுனமாயிருக்க ஒரு காலமுண்டு, பேச ஒரு காலமுண்டு; 8 சிநேகிக்க ஒரு காலமுண்டு, பகைக்க ஒரு காலமுண்டு; யுத்தம்பண்ண ஒரு காலமுண்டு, சமாதானம்பண்ண ஒரு காலமுண்டு. 9 வருத்தப்பட்டுப் பிரயாசப்படுகிறவனுக்கு அதினால் பலன் என்ன? 10 மனுபுத்திரர் பாடுபடும்படி தேவன் அவர்களுக்கு நியமித்த தொல்லையைக் கண்டேன். 11 அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்; உலகத்தையும் அவர்கள் உள்ளத்திலே வைத்திருக்கிறார்; ஆதலால் தேவன் ஆதிமுதல் அந்தம்மட்டும் செய்துவரும் கிரியையை மனுஷன் கண்டுபிடியான். 12 மகிழ்ச்சியாயிருப்பதும், உயிரோடிருக்கையில் நன்மைசெய்வதுமேயல்லாமல், வேறொரு நன்மையும் மனுஷனுக்கு இல்லையென்று அறிந்தேன். 13 அன்றியும் மனுஷர் யாவரும் புசித்துக் குடித்துத் தங்கள் சகலப் பிரயாசத்தின் பலனையும் அநுபவிப்பது தேவனுடைய அநுக்கிரகம். 14 தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங்கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங்கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார். 15 முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார். 16 பின்னும் சூரியனுக்குக் கீழே நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது; நீதிஸ்தலத்தையும் கண்டேன், அங்கே அநீதி இருந்தது. 17 சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன். 18 மனுபுத்திரர் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் காணும்படிக்கு தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய நிலைமையைக்குறித்து என் உள்ளத்தில் எண்ணினேன். 19 மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே. 20 எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது. 21 உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழப் பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்? 22 இப்படியிருக்கிறபடியால், மனுஷன் தன் செய்கைகளில் மகிழ்ச்சியாயிருக்கும் நன்மையையேயல்லாமல், வேறே நன்மை இல்லையென்று கண்டேன்; இதுவே அவன் பங்கு; தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படிக்கு அவனைத் திரும்பிவரப்பண்ணுகிறவன் யார்?

பிரசங்கி 4

1 இதற்குப்பின்பு நான் சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலம் இருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை. 2 ஆதலால் இன்னும் உயிரோடிருந்து பிழைக்கிறவர்களைப்பார்க்கிலும் முன்னமே காலஞ்சென்று மரித்தவர்களையே பாக்கியவான்கள் என்றேன். 3 இவ்விருதிறத்தாருடைய நிலைமையைப்பார்க்கிலும் இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே வாசி; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் துர்ச்செய்கைகளைக் காணவில்லையே. 4 மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது. 5 மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் சதையையே தின்கிறான். 6 வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டிருப்பதைப்பார்க்கிலும், அமைச்சலோடு ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம். 7 பின்பு நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே மாயையான வேறொரு காரியத்தைக் கண்டேன். 8 ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்; அவனுக்கு உடனாளியுமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன் படும் பிரயாசத்துக்கு முடிவில்லை; அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை, தீராத தொல்லை. 9 ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும். 10 ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே. 11 இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடுண்டாவது எப்படி? 12 ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது. 13 இனி ஆலோசனையைக் கேளாத கிழவனும் மூடனுமாகிய ராஜாவைப்பார்க்கிலும், ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே வாசி. 14 அரசாளச் சிறைச்சாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு; ராஜாங்கத்தில் பிறந்து ஏழையாவாருமுண்டு. 15 சூரியனுக்குக்கீழே ஜீவனுள்ளோர் யாவரும் ராஜாவின் பட்டத்திற்கு வரப்போகிற பிள்ளையின் பட்சத்தில் சார்ந்திருப்பதைக் கண்டேன். 16 அவர்களுக்குமுன் அப்படிச் செய்த ஜனங்களின் இலக்கத்திற்கு முடிவில்லை; இனி இருப்பவர்கள் இவன்மேலும் பிரியம் வைக்காமற்போவார்கள்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.

பிரசங்கி 5

1 நீ தேவாலயத்துக்குப் போகும்போது உன் நடையைக் காத்துக்கொள்; மூடர் பலியிடுவதுபோலப் பலியிடுவதைப்பார்க்கிலும் செவிகொடுக்கச் சேர்வதே நலம். தாங்கள் செய்கிறது தீமையென்று அறியாதிருக்கிறார்கள். 2 தேவசமுகத்தில் நீ துணிகரமாய் உன் வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்திலிருக்கிறார்; நீ பூமியிலிருக்கிறாய், ஆதலால் உன் வார்த்தைகள் சுருக்கமாயிருப்பதாக. 3 தொல்லையின் திரட்சியினால் சொப்பனம் பிறக்கிறதுபோல, வார்த்தைகளின் திரட்சியினால் மூடனுடைய சத்தம் பிறக்கும். 4 நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய். 5 நீ நேர்ந்துகொண்டதைச் செய்யாமற்போவதைப்பார்க்கிலும், நேர்ந்துகொள்ளாதிருப்பதே நலம். 6 உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே; அது புத்திபிசகினால் செய்தது என்று தூதனுக்குமுன் சொல்லாதே; தேவன் உன் வார்த்தைகளினாலே கோபங்கொண்டு, உன் கைகளின் கிரியையை அழிப்பானேன்? 7 அநேக சொப்பனங்கள் மாயையாயிருப்பதுபோல, அநேக வார்த்தைகளும் வியர்த்தமாயிருக்கும்; ஆகையால் நீ தேவனுக்குப் பயந்திரு. 8 ஒரு தேசத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுகிறதையும், நியாயமும் நீதியும் புரட்டப்படுகிறதையும் நீ காண்பாயானால், அதைக்குறித்து ஆச்சரியப்படாதே; உயர்ந்தவன்மேல் உயர்ந்தவன் காவலாளியாயிருக்கிறான்; அவர்கள்மேல் உயர்ந்தவரும் ஒருவருண்டு. 9 பூமியில் விளையும் பலன் யாவருக்குமுரியது; ராஜாவும் வயலின் பலனால் ஆதரிக்கப்படுகிறான். 10 பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே. 11 பொருள் பெருகினால் அதைத் தின்கிறவர்களும் பெருகுகிறார்கள்; அதை உடையவர்கள் தங்கள் கண்களினால் அதைக் காண்பதேயன்றி அவர்களுக்குப் பிரயோஜனம் என்ன? 12 வேலைசெய்கிறவன் கொஞ்சமாய்ப் புசித்தாலும் அதிகமாய்ப் புசித்தாலும் அவன் நித்திரை இன்பமாயிருக்கும்; செல்வனுடைய பெருக்கோ அவனைத் தூங்கவொட்டாது. 13 சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு கொடிய தீங்குமுண்டு; அதாவது, ஐசுவரியமானது அதை உடையவர்களுக்கே கேடுண்டாகும்படி சேகரித்து வைக்கப்படுவதாம். 14 அந்த ஐசுவரியம் விக்கினத்தால் அழிந்துபோகிறது; அவன் ஒரு புத்திரனைப் பெறுகிறான், அவன் கையில் யாதொன்றும் இல்லை. 15 தன் தாயின் கர்ப்பத்திலிருந்து நிர்வாணியாய் வந்தான்; வந்ததுபோலவே நிர்வாணியாய்த் திரும்பப்போவான்; அவன் தன் பிரயாசத்தினால் உண்டான பலனொன்றையும் தன் கையிலே எடுத்துக்கொண்டுபோவதில்லை. 16 அவன் வந்தபிரகாரமே போகிறான், இதுவும் கொடுமையான தீங்கு; அவன் காற்றுக்குப் பிரயாசப்பட்டதினால் அவனுக்கு லாபம் என்ன? 17 அவன் தன் நாட்களிலெல்லாம் இருளிலே புசித்து, மிகவும் சலித்து, நோயும் துன்பமும் அடைகிறான். 18 இதோ, உயிரோடிருக்கும்படி தேவன் அருளிச்செய்த நாளெல்லாம் மனுஷன் புசித்துக் குடித்து, சூரியனுக்குக் கீழே தான் படும் பிரயாசம் அனைத்தின் பலனையும் அநுபவிப்பதே நலமும் உத்தமுமான காரியமென்று நான் கண்டேன், இதுவே அவன் பங்கு. 19 தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன் பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம். 20 அவனுடைய இருதயத்திலே மகிழும்படி தேவன் அவனுக்கு அநுக்கிரகம் பண்ணுகிறபடியினால், அவன் தன் ஜீவனுள்ள நாட்களை அதிகமாய் நினையான்.

பிரசங்கி 6

1 சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்குமுண்டு; அது மனுஷருக்குள்ளே பெரும்பாலும் நடந்துவருகிறது. 2 அதாவது, ஒருவனுக்குத் தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியைத் தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும், கொடிய நோயுமானது. 3 ஒருவன் நூறு பிள்ளைகளைப் பெற்று, அநேகம் வருஷம் ஜீவித்து, தீர்க்காயுசை அடைந்திருந்தாலும், அவன் ஆத்துமா அந்தச் செல்வத்தால் திருப்தியடையாமலும், அவனுக்குப் பிரேதக்கல்லறை முதலாய் இல்லாமலும் போகுமானால், அவனைப்பார்க்கிலும் கருவழிந்த பிண்டம் வாசி என்கிறேன். 4 அது மாயையாய்த் தோன்றி இருளிலே மறைந்துபோய்விடுகிறது; அதின் பேர் அந்தகாரத்தால் மூடப்படும். 5 அது சூரியனைக் கண்டதுமில்லை, ஒன்றையும் அறிந்ததுமில்லை; அவனுக்கு இல்லாத அமைச்சல் அதற்கு உண்டு. 6 அவன் இரண்டாயிரம் வருஷம் பிழைத்திருந்தாலும் ஒரு நன்மையையும் காண்பதில்லை; எல்லாரும் ஒரே இடத்துக்குப் போகிறார்கள் அல்லவா? 7 மனுஷன் படும் பிரயாசமெல்லாம் அவன் வாய்க்காகத்தானே; அவன் மனதுக்கோ திருப்தியில்லை. 8 இப்படியிருக்க, மூடனைப்பார்க்கிலும் ஞானிக்கு உண்டாகும் மேன்மை என்ன? ஜீவனுள்ளோருக்கு முன்பாக நடந்துகொள்ளும்படி அறிந்த ஏழைக்கும் உண்டாகும் மேன்மை என்ன? 9 ஆசையானது அலைந்துதேடுகிறதைப் பார்க்கிலும் கண் கண்டதே நலம்; இதுவும் மாயையும், மனதைச் சஞ்சலப்படுத்துகிறதுமாயிருக்கிறது. 10 இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்னமே பேரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனுஷனென்று தெரிந்திருக்கிறது; தன்னிலும் பலத்தவரோடே போராட அவனால் கூடாது. 11 மாயையைப் பெருகப்பண்ணுகிற அநேக விசேஷங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதினாலே மனுஷருக்குப் பிரயோஜனமென்ன? 12 நிழலைப்போன்ற மாயையான தன் ஜீவகாலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப்பின்பு சூரியனுக்குக் கீழே சம்பவிக்குங்காரியம் இன்னதென்று மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்?

பிரசங்கி 7

1 பரிமளதைலத்தைப்பார்க்கிலும் நற்கீர்த்தியும், ஒருவனுடைய ஜநநநாளைப்பார்க்கிலும் மரணநாளும் நல்லது. 2 விருந்துவீட்டுக்குப் போவதிலும் துக்கவீட்டுக்குப் போவது நலம்; இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்; உயிரோடிருக்கிறவன் இதைத் தன் மனதிலே சிந்திப்பான். 3 நகைப்பைப் பார்க்கிலும் துக்கிப்பு நலம்; முகதுக்கத்தினாலே இருதயம் சீர்ப்படும். 4 ஞானிகளின் இருதயம் துக்கவீட்டிலே இருக்கும்; மூடரின் இருதயம் களிப்புவீட்டிலே இருக்கும். 5 ஒருவன் மூடரின் பாட்டைக் கேட்பதிலும், ஞானியின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நலம். 6 மூடனின் நகைப்பு பானையின்கீழ் எரிகிற முள்ளுகளின் படபடப்பைப்போலிருக்கும்; இதுவும் மாயையே. 7 இடுக்கணானது ஞானியையும் பைத்தியக்காரனாக்கும்; பரிதானம் இருதயத்தைக் கெடுக்கும். 8 ஒரு காரியத்தின் துவக்கத்தைப்பார்க்கிலும் அதின் முடிவு நல்லது; பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன். 9 உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே; மூடரின் நெஞ்சிலே கோபம் குடிகொள்ளும். 10 இந்நாட்களைப்பார்க்கிலும் முன்நாட்கள் நலமாயிருந்தது என்று சொல்லாதே; நீ இதைக்குறித்துக் கேட்பது ஞானமல்ல. 11 சுதந்தரத்தோடே ஞானம் நல்லது; சூரியனைக் காண்கிறவர்களுக்கு இதினாலே பிரயோஜனமுண்டு. 12 ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை. 13 தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; அவர் கோணலாக்கினதை நேர்மையாக்கத்தக்கவன் யார்? 14 வாழ்வுகாலத்தில் நன்மையை அநுபவித்திரு, தாழ்வுகாலத்தில் சிந்தனைசெய்; மனுஷன் தனக்குப்பின் வருவதொன்றையும் கண்டுபிடியாதபடிக்குத் தேவன் இவ்விரண்டையும் ஒன்றுக்கொன்று எதிரிடையாக வைத்திருக்கிறார். 15 இவை எல்லாவற்றையும் என் மாயையின் நாட்களில் கண்டேன்; தன் நீதியிலே கெட்டுப்போகிற நீதிமானுமுண்டு, தன் பாவத்திலே நீடித்திருக்கிற பாவியுமுண்டு. 16 மிஞ்சின நீதிமானாயிராதே, உன்னை அதிக ஞானியுமாக்காதே; உன்னை நீ ஏன் கெடுத்துக்கொள்ளவேண்டும்? 17 மிஞ்சின துஷ்டனாயிராதே, அதிக பேதையுமாயிராதே; உன் காலத்துக்குமுன்னே நீ ஏன் சாகவேண்டும்? 18 நீ இதைப் பற்றிக்கொள்வதும் அதைக் கைவிடாதிருப்பதும் நலம்; தேவனுக்குப் பயப்படுகிறவன் இவைகள் எல்லாவற்றினின்றும் காக்கப்படுவான். 19 நகரத்திலுள்ள பத்து அதிபதிகளைப்பார்க்கிலும், ஞானம் ஞானியை அதிக பெலவானாக்கும். 20 ஒரு பாவமும் செய்யாமல், நன்மையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை. 21 சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே; கவனித்தால் உன் வேலைக்காரன் உன்னை நிந்திப்பதைக் கேள்விப்படவேண்டியதாகும். 22 அநேகந்தரம் நீயும் பிறரை நிந்தித்தாயென்று, உன் மனதுக்குத் தெரியுமே. 23 இவை எல்லாவற்றையும் ஞானத்தினால் சோதித்துப்பார்த்தேன்: நான் ஞானவானாவேன் என்றேன், அது எனக்குத் தூரமாயிற்று. 24 தூரமும் மகா ஆழமுமாயிருக்கிறதைக் கண்டடைகிறவன் யார்? 25 ஞானத்தையும், காரணகாரியத்தையும் விசாரித்து ஆராய்ந்து அறியவும், மதிகேட்டின் ஆகாமியத்தையும் புத்திமயக்கத்தின் பைத்தியத்தையும் அறியவும் என் மனதைச் செலுத்தினேன். 26 கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடைய ஸ்திரீயானவள், சாவிலும் அதிக கசப்புள்ளவளென்று கண்டேன்; தேவனுக்கு முன்பாகச் சற்குணனாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான்; பாவியோ அவளால் பிடிபடுவான். 27 காரியத்தை அறியும்படிக்கு ஒவ்வொன்றாய் விசாரணைபண்ணி, இதோ, இதைக் கண்டுபிடித்தேன் என்று பிரசங்கி சொல்லுகிறான்: 28 என் மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம்பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன்; இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்லை. 29 இதோ, தேவன் மனுஷனைச் செம்மையானவனாக உண்டாக்கினார்; அவர்களோ அநேக உபாயதந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள்; இதைமாத்திரம் கண்டேன்.

பிரசங்கி 8

1 ஞானமுள்ளவனுக்கு ஒப்பானவன் யார்? காரியத்தின் தாற்பரியத்தை அறிந்தவன் யார்? மனுஷனுடைய ஞானம் அவன் முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அவன் முகத்தின் மூர்க்கம் மாறும். 2 ராஜாவின் கட்டளையைக் கைக்கொண்டு நட என்று நான் உனக்கு எச்சரிக்கிறேன்; நீ தேவனுக்கு இட்ட ஆணையின்படியே இதைச் செய். 3 நீ அவன் சமுகத்தை விட்டுவிலகத் துரிதப்படாதே; பொல்லாத காரியத்திலே பிடிவாதமாய் நில்லாதே; அவன் தனக்கு இஷ்டமானதெல்லாம் செய்வான். 4 ராஜாவின் வார்த்தை எங்கேயோ அங்கே அதிகாரம் உண்டு; நீர் என்ன செய்கிறீர் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்? 5 கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும். 6 எல்லாக் காரியத்துக்கும் காலமும் நியாயமுமுண்டு; ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி. 7 இன்னது சம்பவிக்கும் என்று அவன் அறியானே; அது இன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்? 8 ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது. 9 இவையெல்லாவற்றையும் நான் பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லாக் கிரியைகளையும் சிந்தித்தேன்; ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு. 10 பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன்; அவர்கள் அப்படி செய்துவந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள்; இதுவும் மாயையே. 11 துர்க்கிரியைக்குத்தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது. 12 பாவி நூறுதரம் பொல்லாப்பைச் செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி, அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன். 13 துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால், நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை. 14 பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமுமுண்டு; அதாவது, துன்மார்க்கரின் கிரியைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் கிரியைக்கு வருவதுபோல, துன்மார்க்கருக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன். 15 ஆகையால் நான் களிப்பைப் புகழ்ந்தேன்; புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்குத் தந்த ஜீவகாலத்தில் அவன் பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே. 16 நான் ஞானத்தை அறியவும், மனுஷன் இரவும் பகலும் கண்ணுறக்கமில்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என் மனதைச் செலுத்தினபோது, 17 தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுபிடிக்கக்கூடாதென்று கண்டேன். அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.

பிரசங்கி 9

1 இவை எல்லாவற்றையும் நான் என் மனதிலே வகையறுக்கும்படிக்குச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும், தங்கள் கிரியைகளுடன், தேவனுடைய கைவசமாயிருக்கிறார்கள்; தனக்குமுன் இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது வெறுப்பையாவது அறியான். 2 எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே; ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாய்ச் சம்பவிக்கும். 3 எல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீங்காம்; ஆதலால் மனுபுத்திரரின் இருதயம் தீமையினால் நிறைந்திருக்கிறது; அவர்கள் உயிரோடிருக்கும் நாளளவும் அவர்கள் இருதயம் பைத்தியங்கொண்டிருந்து, பின்பு அவர்கள் செத்தவர்களிடத்திற்குப் போகிறார்கள். 4 இதற்கு நீங்கலாயிருக்கிறவன் யார்? உயிரோடிருக்கிற அனைவரிடத்திலும் நம்பிக்கையுண்டு; செத்த சிங்கத்தைப்பார்க்கிலும் உயிருள்ள நாய் வாசி. 5 உயிரோடிருக்கிறவர்கள் தாங்கள் மரிப்பதை அறிவார்களே, மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர்முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது. 6 அவர்கள் சிநேகமும், அவர்கள் பகையும், அவர்கள் பொறாமையும் எல்லாம் ஒழிந்துபோயிற்று; சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிறதொன்றிலும் அவர்களுக்கு இனி என்றைக்கும் பங்கில்லை. 7 நீ போய், உன் ஆகாரத்தைச் சந்தோஷத்துடன் புசித்து, உன் திராட்சரசத்தை மனமகிழ்ச்சியுடன் குடி; தேவன் உன் கிரியைகளை அங்கீகாரம்பண்ணியிருக்கிறார். 8 உன் வஸ்திரங்கள் எப்பொழுதும் வெள்ளையாயும், உன் தலைக்கு எண்ணெய் குறையாததாயும் இருப்பதாக. 9 சூரியனுக்குக்கீழே தேவன் உனக்கு நியமித்திருக்கிற மாயையான நாட்களிலெல்லாம் நீ நேசிக்கிற மனைவியோடே நிலையில்லாத இந்த ஜீவவாழ்வை அநுபவி; இந்த ஜீவனுக்குரிய வாழ்விலும், நீ சூரியனுக்குக்கீழே படுகிற பிரயாசத்திலும் பங்கு இதுவே. 10 செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ, அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே. 11 நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியம் அடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும். 12 தன் காலத்தை மனுஷன் அறியான்; மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாத காலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள். 13 சூரியனுக்குக் கீழே ஞானமுள்ள காரியத்தையும் கண்டேன்; அது என் பார்வைக்குப் பெரிதாய்த் தோன்றிற்று. 14 ஒரு சிறு பட்டணம் இருந்தது, அதிலே இருந்த குடிகள் கொஞ்ச மனிதர்; அதற்கு விரோதமாய் ஒரு பெரிய ராஜா வந்து, அதை வளைந்துகொண்டு, அதற்கு எதிராகப் பெரிய கொத்தளங்களைக் கட்டினான். 15 அதிலே ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான்; அவன் தன் ஞானத்தினாலே அந்தப் பட்டணத்தை விடுவித்தான்; ஆனாலும் அந்த ஏழை மனிதனை ஒருவரும் நினைக்கவில்லை. 16 ஆகையால் ஏழையின் ஞானம் அசட்டைபண்ணப்பட்டு, அவன் வார்த்தைகள் கேட்கப்படாமற்போனாலும், பெலத்தைப்பார்க்கிலும் ஞானமே உத்தமம் என்றேன். 17 மூடரை ஆளும் அதிபதியின் கூக்குரலைப்பார்க்கிலும் ஞானிகளுடைய அமரிக்கையான வார்த்தைகளே கேட்கப்படத்தக்கவைகள். 18 யுத்த ஆயுதங்களைப்பார்க்கிலும் ஞானமே நலம்; பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான்.

பிரசங்கி 10

1 செத்த ஈக்கள் தைலக்காரனுடைய பரிமளதைலத்தை நாறிக் கெட்டுப்போகப்பண்ணும்; ஞானத்திலும் கனத்திலும் பேர்பெற்றவனைச் சொற்ப மதியீனமும் அப்படியே செய்யும். 2 ஞானியின் இருதயம் வலதுகையிலும், மூடனின் இருதயமோ இடதுகையிலும் இருக்கும். 3 மூடன் வழியிலே நடக்கிறபோதும் மதிகெட்டவனாயிருக்கிறான்; தான் மூடனென்று அவன் எல்லாருக்கும் சொல்லுகிறான். 4 அதிபதியின் கோபம் உன்மேல் எழும்பினால் உன் ஸ்தானத்தை விட்டு விலகாதே; இணங்குதல் பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும். 5 நான் சூரியனுக்குக்கீழே கண்ட ஒரு தீங்குண்டு, அது அதிபதியினிடத்தில் தோன்றும் தப்பிதமே. 6 மூடர் மகா உயர்ந்த நிலையில் வைக்கப்படுகிறார்கள்; சீமான்களோ தாழ்ந்த நிலையில் உட்கார்ந்திருக்கிறார்கள். 7 வேலைக்காரர் குதிரைகள்மேல் ஏறிப்போகிறதையும், பிரபுக்கள் வேலைக்காரர்போல் தரையிலே நடக்கிறதையும் கண்டேன். 8 படுகுழியை வெட்டுகிறவன் அதிலே விழுவான்; அடைப்பைப் பிடுங்குகிறவனைப் பாம்பு கடிக்கும். 9 கல்லுகளைப் பேர்க்கிறவன் அவைகளால் காயப்படுவான்; மரத்தைப் பிளக்கிறவன் அதினால் மோசப்படுவான். 10 இருப்பு ஆயுதம் மழுங்கலாயிருக்க, அதை ஒருவன் தீட்டாமற்போனால், அதிகபலத்தைப் பிரயோகம்பண்ணவேண்டியதாகும்; ஆகையால் ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம். 11 தடைகட்டப்படாத பாம்பு கடிக்குமே, அலப்புவாயனும் அதற்கு ஒப்பானவன். 12 ஞானியினுடைய வாய்மொழிகள் தயையுள்ளவைகள்; மூடனுடைய உதடுகளோ அவனையே விழுங்கும். 13 அவன் வாய்மொழிகளின் துவக்கம் மதியீனமும், அவன் வாக்கின் முடிவு கொடிய பைத்தியமுமாம். 14 மூடன் மிகுதியாய்ப் பேசுகிறான், நடக்கப்போகிறது இன்னதென்று மனுஷன் அறியான்; தனக்குப்பிற்பாடு சம்பவிக்கப்போகிறதை அவனுக்கு அறிவிப்பவன் யார்? 15 ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும். 16 ராஜா சிறுபிள்ளையுமாய், பிரபுக்கள் அதிகாலமே உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, உனக்கு ஐயோ! 17 ராஜா குலமகனுமாய், பிரபுக்கள் வெறிக்க உண்ணாமல் பெலன்கொள்ள ஏற்றவேளையில் உண்கிறவர்களுமாயிருக்கப்பட்ட தேசமே, நீ பாக்கியமுள்ளது. 18 மிகுந்த சோம்பலினால் மேல்மச்சுப் பழுதாகும்; கைகளின் நெகிழ்வினாலே வீடு ஒழுக்காகும். 19 விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும். 20 ராஜாவை உன் மனதிலும் நிந்தியாதே, ஐசுவரியவானை உன் படுக்கையிலும் நிந்தியாதே; ஆகாயத்துப் பறவை அந்தச் சத்தத்தைக் கொண்டுபோகும், செட்டைகளுள்ளது அந்தச் செய்தியை அறிவிக்கும்.

பிரசங்கி 11

1 உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய். 2 ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது. 3 மேகங்கள் நிறைந்திருந்தால் மழையைப் பூமியின்மேல் பொழியும்; மரமானது தெற்கே விழுந்தாலும் வடக்கே விழுந்தாலும், விழுந்த இடத்திலேயே மரம் கிடக்கும். 4 காற்றைக் கவனிக்கிறவன் விதைக்கமாட்டான்; மேகங்களை நோக்குகிறவன் அறுக்கமாட்டான். 5 ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய். 6 காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே. 7 வெளிச்சம் இன்பமும், சூரியனைக் காண்பது கண்களுக்குப் பிரியமுமாமே. 8 மனுஷன் அநேக வருஷம் ஜீவித்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாயிருந்தாலும், அவன் இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாயிருக்கும்; வந்து சம்பவிப்பதெல்லாம் மாயையே. 9 வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி. 10 நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.

பிரசங்கி 12

1 நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும், 2 சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும், அந்தகாரப்படாததற்குமுன்னும், 3 மழைக்குப்பின் மேகங்கள் திரும்பத் திரும்ப வராததற்குமுன்னும், வீட்டுக்காவலாளிகள் தள்ளாடி, பெலசாலிகள் கூனிப்போய், ஏந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்து, பலகணிவழியாய்ப் பார்க்கிறவர்கள் இருண்டுபோகிறதற்குமுன்னும், 4 ஏந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்துக்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, கீதவாத்தியக் கன்னிகைகளெல்லாம் அடங்கிப்போகாததற்குமுன்னும், 5 மேட்டுக்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, பசித்தீபனமும் அற்றுப்போகாததற்கு முன்னும், மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும், 6 வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி, 7 இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை. 8 மாயை மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். 9 மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப்போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான். 10 இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்கப் பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள். 11 ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது. 12 என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு. 13 காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. 14 ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.

உன்னதப்பாட்டு 1

1 சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு. 2 அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது. 3 உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள். 4 என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடிவருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப்பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள். 5 எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாயிருந்தாலும், அழகாயிருக்கிறேன். 6 நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெயில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை. 7 என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்துதிரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன? 8 ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு. 9 என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன். 10 ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது. 11 வெள்ளிப் பொட்டுகளுள்ள பொன் ஆபரணங்களை உனக்குப் பண்ணுவோம். 12 ராஜா தமது பந்தியிலிருக்குந்தனையும் என்னுடைய நளததைலம் தன் வாசனையை வீசும். 13 என் நேசர் எனக்கு என் ஸ்தனங்களின் நடுவில் தங்கும் வெள்ளைப்போளச் செண்டு. 14 என் நேசர் எனக்கு எங்கேதி ஊர் திராட்சத்தோட்டங்களில் முளைக்கும் மருதோன்றிப் பூங்கொத்து. 15 என் பிரியமே! நீ ரூபவதி; நீ ரூபவதி; உன் கண்கள் புறாக்கண்கள். 16 நீர் ரூபமுள்ளவர்; என் நேசரே! நீர் இன்பமானவர்; நம்முடைய மஞ்சம் பசுமையானது. 17 நம்முடைய வீட்டின் உத்திரங்கள் கேதுருமரம், நம்முடைய மச்சு தேவதாருமரம்.

உன்னதப்பாட்டு 2

1 நான் சாரோனின் ரோஜாவும், பள்ளத்தாக்குகளின் லீலிபுஷ்பமுமாயிருக்கிறேன். 2 முள்ளுகளுக்குள்ளே லீலிபுஷ்பம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரத்திகளுக்குள்ளே எனக்குப் பிரியமானவளும் இருக்கிறாள். 3 காட்டுமரங்களுக்குள்ளே கிச்சிலிமரம் எப்படியிருக்கிறதோ, அப்படியே குமாரருக்குள்ளே என் நேசர் இருக்கிறார்; அதின் நிழலிலே வாஞ்சையாய் உட்காருகிறேன், அதின் கனி என் வாய்க்கு மதுரமாயிருக்கிறது. 4 என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே. 5 திராட்சரசத்தால் என்னைத் தேற்றுங்கள், கிச்சிலிப்பழங்களால் என்னை ஆற்றுங்கள்; நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன். 6 அவர் இடதுகை என் தலையின்கீழ் இருக்கிறது; அவர் வலதுகை என்னை அணைத்துக்கொள்ளுகிறது. 7 எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும், நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன். 8 இது என் நேசருடைய சத்தம்! இதோ, அவர் மலைகள்மேல் குதித்தும் மேடுகள்மேல் துள்ளியும் வருகிறார். 9 என் நேசர் வெளிமானுக்கும் மரைக்குட்டிக்கும் ஒப்பாயிருக்கிறார்; இதோ, அவர் எங்கள் மதிலுக்குப் புறம்பே நின்று, பலகணி வழியாய்ப் பார்த்து, கிராதியின் வழியாய்த் தமது மலர்ந்த முகத்தைக் காண்பிக்கிறார். 10 என் நேசர் என்னோடே பேசி: என் பிரியமே! என் ரூபவதியே! எழுந்துவா. 11 இதோ, மாரிகாலம் சென்றது, மழைபெய்து ஒழிந்தது. 12 பூமியிலே புஷ்பங்கள் காணப்படுகிறது; குருவிகள் பாடுங்காலம் வந்தது, காட்டுப்புறாவின் சத்தம் நமது தேசத்தில் கேட்கப்படுகிறது. 13 அத்திமரம் காய்காய்த்தது; திராட்சக்கொடிகள் பூப்பூத்து வாசனையும் பரிமளிக்கிறது; என் பிரியமே! என் ரூபவதியே! நீ எழுந்துவா. 14 கன்மலையின் வெடிப்புகளிலும் சிகரங்களின் மறைவிடங்களிலும் தங்குகிற என் புறாவே! உன் முகரூபத்தை எனக்குக் காண்பி, உன் சத்தத்தை நான் கேட்கட்டும்; உன் சத்தம் இன்பமும், உன் முகரூபம் அழகுமாயிருக்கிறது என்றார். 15 திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே. 16 என் நேசர் என்னுடையவர், நான் அவருடையவள். அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார். 17 என் நேசரே! பகல் குளிர்ச்சியாகி, நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நீர் திரும்பி, குன்றும் பிளப்புமான கன்மலைகளில் குதித்துவரும் கலைமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.

உன்னதப்பாட்டு 3

1 இராக்காலங்களில் என் படுக்கையிலே என் ஆத்தும நேசரைத் தேடினேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை. 2 நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை. 3 நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள்: என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன். 4 நான் அவர்களை விட்டுக் கொஞ்சதூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன். 5 எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி, வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன். 6 வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்? 7 இதோ, சாலொமோனுடைய மஞ்சம்; இஸ்ரவேலின் சவுரியவான்களில் அறுபது சவுரியவான்கள் அதைச் சுற்றி நிற்கிறார்கள். 8 இவர்களெல்லாரும் பட்டயம் பிடித்து, யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள்; இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது. 9 சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைப் பண்ணுவித்தார். 10 அதின் தூண்களை வெள்ளியினாலும், அதின் தட்டைப் பொன்னினாலும், அதின் ஆசனத்தை இரத்தாம்பரத்தினாலும் பண்ணுவித்தார்; அதின் உட்புறத்திலே எருசலேமின் குமாரத்திகளினிமித்தம் நேசம் என்னும் சமுக்காளம் விரித்திருந்தது. 11 சீயோன் குமாரத்திகளே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய சாலொமோனின் கலியாணநாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும், அவருடைய தாயார் அவருக்குச் சூட்டின முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்.

உன்னதப்பாட்டு 4

1 நீ ரூபவதி, என் பிரியமே! நீ ரூபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது. 2 உன் பற்கள், மயிர் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாயிராமல் எல்லாம் இரட்டைக்குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது. 3 உன் உதடுகள் சிவப்புநூலுக்குச் சமானமும், உன் வாக்கு இன்பமுமாயிருக்கிறது; உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்போலிருக்கிறது. 4 உன் கழுத்து, பராக்கிரமசாலிகளின் கேடகங்களாகிய ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போலிருக்கிறது. 5 உன் இரண்டு ஸ்தனங்களும் லீலிபுஷ்பங்களில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம். 6 பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நான் வெள்ளைப்போளமலையிலும் சாம்பிராணிமலையிலும் போயிருப்பேன். 7 என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை. 8 லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் கொடுமுடியிலிருந்தும், சேனீர் எர்மோனின் கொடுமுடியிலிருந்தும், சிங்கங்களின் தாபரங்களிலிருந்தும், சிவிங்கிகளின் மலைகளிலிருந்தும் கீழே பார். 9 என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களிலொன்றினாலும் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய். 10 உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப்பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமளதைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது! 11 என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது. 12 என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய். 13 உன் தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனிமரங்களும், மருதோன்றிச் செடிகளும், நளதச்செடிகளும், 14 நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன விருட்சங்களும், சகலவித கந்தவர்க்கச்செடிகளுமுள்ள சிங்காரவனமாயிருக்கிறது. 15 தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவத்தண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது. 16 வாடையே! எழும்பு; தென்றலே! வா; கந்தப்பிசின்கள் வடிய என் தோட்டத்தில் வீசு; என் நேசர் தம்முடைய தோட்டத்துக்கு வந்து, தமது அருமையான கனிகளைப் புசிப்பாராக.

உன்னதப்பாட்டு 5

1 என் சகோதரியே! என் மணவாளியே! நான் என் தோட்டத்தில் வந்தேன், என் வெள்ளைப்போளத்தையும் என் கந்தவர்க்கங்களையும் சேர்த்தேன்; என் தேன்கூட்டை என் தேனோடு புசித்தேன்; என் திராட்சரசத்தை என் பாலோடும் குடித்தேன். சிநேகிதரே! புசியுங்கள்; பிரியமானவர்களே! குடியுங்கள், பூர்த்தியாய்க் குடியுங்கள். 2 நான் நித்திரைபண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்: என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார். 3 என் வஸ்திரத்தைக் கழற்றிப் போட்டேன்; நான் எப்படி அதைத் திரும்பவும் உடுப்பேன், என் பாதங்களைக் கழுவினேன், நான் எப்படி அவைகளைத் திரும்பவும் அழுக்காக்குவேன் என்றேன். 4 என் நேசர் தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார், அப்பொழுது என் உள்ளம் அவர் நிமித்தம் பொங்கினது. 5 என் நேசருக்குக் கதவைத்திறக்க நான் எழுந்தேன்; பூட்டின கைப்பிடிகள்மேல் என் கைகளிலிருந்து வெள்ளைப்போளமும், என் விரல்களிலிருந்து வாசனையுள்ள வெள்ளைப்போளமும் வடிந்தது. 6 என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால், என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை. 7 நகரத்தில் திரிகிற காவலாளர் என்னைக் கண்டு, என்னை அடித்து, என்னைக் காயப்படுத்தினார்கள்; அலங்கத்தின் காவற்காரர் என்மேலிருந்த என் போர்வையை எடுத்துக்கொண்டார்கள். 8 எருசலேமின் குமாரத்திகளே! என் நேசரைக் கண்டீர்களானால், நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களை ஆணையிடுகிறேன். 9 ஸ்திரீகளுக்குள் ரூபவதியே! மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? நீ இப்படி எங்களை ஆணையிட, மற்ற நேசரைப்பார்க்கிலும் உன் நேசர் எதினால் விசேஷித்தவர்? 10 என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம்பேர்களில் சிறந்தவர். 11 அவர் தலை தங்கமயமாயிருக்கிறது; அவர் தலைமயிர் சுருள் சுருளாயும், காகத்தைப்போல் கருமையாயுமிருக்கிறது. 12 அவருடைய கண்கள் தண்ணீர் நிறைந்த நதிகளின் ஓரமாய்த் தங்கும் புறாக்கண்களுக்கு ஒப்பானவைகளும், பாலில் கழுவப்பட்டவைகளும், நேர்த்தியாய்ப் பதிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது. 13 அவர் கன்னங்கள் கந்தவர்க்கப் பாத்திகளைப்போலவும், வாசனையுள்ள புஷ்பங்களைப்போலவுமிருக்கிறது; அவர் உதடுகள் லீலிபுஷ்பங்களைப் போன்றது, வாசனையுள்ள வெள்ளைப்போளம் அதிலிருந்து வடிகிறது. 14 அவர் கரங்கள் படிகப்பச்சை பதித்த பொன் வளையல்களைப்போலிருக்கிறது; அவர் அங்கம் இந்திரநீல இரத்தினங்கள் இழைத்த பிரகாசமான யானைத் தந்தத்தைப்போலிருக்கிறது. 15 அவர் கால்கள் பசும்பொன் ஆதாரங்களின்மேல் நிற்கிற வெள்ளைக்கல் தூண்களைப்போலிருக்கிறது; அவர் ரூபம் லீபனோனைப்போலவும் கேதுருக்களைப்போலவும் சிறப்பாயிருக்கிறது. 16 அவர் வாய் மிகவும் மதுரமாயிருக்கிறது; அவர் முற்றிலும் அழகுள்ளவர். இவரே என் நேசர்; எருசலேமின் குமாரத்திகளே! இவரே என் சிநேகிதர்.

உன்னதப்பாட்டு 6

1 உன் நேசர் எங்கே போனார்? ஸ்திரீகளில் ரூபவதியே! உன் நேசர் எவ்விடம் போய்விட்டார்? உன்னோடேகூட நாங்களும் அவரைத் தேடுவோம். 2 தோட்டங்களில் மேயவும், லீலிபுஷ்பங்களைக் கொய்யவும், என் நேசர் தமது தோட்டத்துக்கும் கந்தவர்க்கப் பாத்திகளுக்கும் போனார். 3 நான் என் நேசருடையவள், என் நேசர் என்னுடையவர்; அவர் லீலிபுஷ்பங்களுக்குள்ளே மேய்கிறார். 4 என் பிரியமே! நீ திர்சாவைப்போல் சௌந்தரியமும், எருசலேமைப்போல் வடிவமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமானவள். 5 உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு, அவைகள் என்னை வென்றது; உன் அளகபாரம் கீலேயாத் மலையிலே தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது. 6 உன் பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றானாலும் மலடாயிராமல் இரட்டைக் குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது. 7 உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம்பழம்போலிருக்கிறது. 8 ராஜஸ்திரீகள் அறுபதுபேரும், மறுமனையாட்டிகள் எண்பதுபேருமுண்டு; கன்னியருக்குத் தொகையில்லை. 9 என் புறாவோ, என் உத்தமியோ ஒருத்தியே; அவள் தன் தாய்க்கு ஒரே பிள்ளை; அவள் தன்னைப் பெற்றவளுக்கு அருமையானவள்; குமாரத்திகள் அவளைக் கண்டு, அவளை வாழ்த்தினார்கள்; ராஜஸ்திரீகளும் மறுமனையாட்டிகளும் அவளைப் போற்றினார்கள். 10 சந்திரனைப்போல் அழகும், சூரியனைப்போல் பிரகாசமும், கொடிகள் பறக்கும் படையைப்போல் கெடியுமுள்ளவளாய், அருணோதயம்போல் உதிக்கிற இவள் யார்? 11 பள்ளத்தாக்கிலே பழுத்த கனிகளைப் பார்க்கவும், திராட்சச்செடிகள் துளிர்விட்டு, மாதளஞ்செடிகள் பூத்ததா என்று அறியவும், வாதுமைத் தோட்டத்துக்குப் போனேன். 12 நினையாததுக்குமுன்னே என் ஆத்துமா என்னை அம்மினதாபின் இரதங்களுக்கு ஒப்பாக்கிற்று. 13 திரும்பிவா, திரும்பிவா, சூலமித்தியே! நாங்கள் உன்னைப் பார்க்கும்படிக்கு, திரும்பிவா, திரும்பிவா. சூலமித்தியில் நீங்கள் என்னத்தைப் பார்க்கிறீர்கள்? அவள் இரண்டு சேனையின் கூட்டத்துக்குச் சமானமானவள்.

உன்னதப்பாட்டு 7

1 ராஜகுமாரத்தியே! பாதரட்சைகளிட்ட உன் பாதங்கள் மிகவும் அழகாயிருக்கிறது; உன் இடுப்பின் வடிவு விசித்திரத் தொழிற்காரரின் வேலையாகிய பூஷணம்போலிருக்கிறது. 2 உன் நாபி திராட்சரசம் நிறைந்த வட்டக்கலசம்போலிருக்கிறது; உன் வயிறு லீலிபுஷ்பங்கள் சூழ்ந்த கோதுமை அம்பாரம்போலிருக்கிறது. 3 உன் இரண்டு ஸ்தனங்களும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாயிருக்கிறது. 4 உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது. 5 உன் சிரசு கர்மேல் மலையைப்போலிருக்கிறது; உன் தலைமயிர் இரத்தாம்பரமயமாயிருக்கிறது; ராஜா நடைக்காவணங்களில் மயங்கிநிற்கிறார். 6 மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! நீ எவ்வளவு ரூபவதி, நீ எவ்வளவு இன்பமுள்ளவள். 7 உன் உயரம் பனைமரத்தொழுங்குபோலவும், உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும் இருக்கிறது. 8 நான் பனைமரத்திலேறி, அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; இப்பொழுதும் உன் ஸ்தனங்கள் திராட்சக்குலைகள்போலவும், உன் மூக்கின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது. 9 உன் தொண்டை, என் நேசர் குடிக்கையில் மெதுவாயிறங்குகிறதும், உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசப்பண்ணுகிறதுமான, நல்ல திராட்சரசத்தைப்போலிருக்கிறது. 10 நான் என் நேசருடையவள், அவர் பிரியம் என்மேலிருக்கிறது. 11 வாரும் என் நேசரே! வயல்வெளியில் போய், கிராமங்களில் தங்குவோம். 12 அதிகாலையிலே திராட்சத்தோட்டங்களுக்குப் போவோம்; திராட்சக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், மாதளஞ்செடிகள் பூப்பூத்ததோ என்றும் பார்ப்போம்; அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன். 13 தூதாயீம் பழம் வாசனை வீசும்; நமது வாசல்களண்டையிலே புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான கனிகளுமுண்டு; என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன்.

உன்னதப்பாட்டு 8

1 ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போலிருந்தீரானால், நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; என்னை நிந்திக்கவுமாட்டார்கள். 2 நான் உம்மைக் கூட்டிக்கொண்டு, என் தாயின் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோவேன்; நீர் என்னைப் போதிப்பீர், கந்தவர்க்கமிட்ட திராட்சரசத்தையும், என் மாதளம்பழரசத்தையும் உமக்குக் குடிக்கக்கொடுப்பேன். 3 அவர் இடதுகை என் தலையின் கீழிருக்கும், அவர் வலதுகை என்னை அணைக்கும். 4 எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலும் இருக்க உங்களை ஆணையிடுகிறேன். 5 தன் நேசர்மேல் சார்ந்துகொண்டு வனாந்தரத்திலிருந்து வருகிற இவள் யார்? கிச்சிலிமரத்தின்கீழ் உம்மை எழுப்பினேன்; அங்கே உமது தாய் உம்மைப் பெற்றாள்; அங்கே உம்மைப் பெற்றவள் வேதனைப்பட்டு உம்மைப் பெற்றாள். 6 நீர் என்னை உமது இருதயத்தின்மேல் முத்திரையைப்போலவும், உமது புயத்தின்மேல் முத்திரையைப்போலவும் வைத்துக்கொள்ளும்; நேசம் மரணத்தைப்போல் வலிது; நேசவைராக்கியம் பாதாளத்தைப்போல் கொடிதாயிருக்கிறது; அதின் தழல் அக்கினித்தழலும் அதின் ஜுவாலை கடும் ஜுவாலையுமாயிருக்கிறது. 7 திரளான தண்ணீர்கள் நேசத்தை அவிக்கமாட்டாது, வெள்ளங்களும் அதைத் தணிக்கமாட்டாது; ஒருவன் தன் வீட்டிலுள்ள ஆஸ்திகளையெல்லாம் நேசத்துக்காகக் கொடுத்தாலும், அது முற்றிலும் அசட்டைபண்ணப்படும். 8 நமக்கு ஒரு சிறிய சகோதரியுண்டு, அவளுக்கு ஸ்தனங்களில்லை; நம்முடைய சகோதரியைக் கேட்கும் நாளில் அவளுக்காக நாம் என்ன செய்வோம்? 9 அவள் ஒரு மதிலானால், அதின்மேல் வெள்ளிக்கோட்டையைக் கட்டுவோம்; அவள் கதவானால், கேதுருப்பலகைகளை அதற்கு இணைப்போம். 10 நான் மதில்தான், என் ஸ்தனங்கள் கோபுரங்கள்; அவருடைய கண்களில் கடாட்சம்பெறலானேன். 11 பாகால் ஆமோனிலே சாலொமோனுக்கு ஒரு திராட்சத்தோட்டம் உண்டாயிருந்தது, அந்தத் தோட்டத்தைக் காவலாளிகள் வசத்திலே அதின் பலனுக்காக, ஒவ்வொருவன் ஆயிரம் வெள்ளிக்காசு கொண்டுவரும்படி விட்டார். 12 என் திராட்சத்தோட்டம் எனக்கு முன்பாக இருக்கிறது; சாலொமோனே! உமக்கு அந்த ஆயிரமும், அதின் கனியைக் காக்கிறவர்களுக்கு இருநூறும் சேரும். 13 தோட்டங்களில் வாசம்பண்ணுகிறவளே! தோழர் உன் சத்தத்தைக் கேட்கிறார்கள்; நானும் அதைக் கேட்கட்டும். 14 என் நேசரே! தீவிரியும், கந்தவர்க்கங்களின் மலைகள்மேலுள்ள வெளிமானுக்கும் மரைகளின் குட்டிக்கும் சமானமாயிரும்.

ஏசாயா 1

1 ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில், யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம். 2 வானங்களே, கேளுங்கள்; பூமியே, செவிகொடு; கர்த்தர் பேசுகிறார்; நான் பிள்ளைகளை வளர்த்து ஆதரித்தேன்; அவர்களோ எனக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினார்கள். 3 மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னணையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது என்கிறார். 4 ஐயோ, பாவமுள்ள ஜாதியும், அக்கிரமத்தால் பாரஞ்சுமந்த ஜனமும், பொல்லாதவர்களின் சந்ததியும், கேடு உண்டாக்குகிற புத்திரருமாயிருக்கிறார்கள்; கர்த்தரை விட்டு, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குக் கோபமுண்டாக்கி, பின்வாங்கிப்போனார்கள். 5 இன்னும் நீங்கள் ஏன் அடிக்கப்படவேண்டும்? அதிகம் அதிகமாய் விலகிப்போகிறீர்களே; தலையெல்லாம் வியாதியும், இருதயமெல்லாம் பலட்சயமுமாய் இருக்கிறது. 6 உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதிலே சுகமேயில்லை; அது காயமும், வீக்கமும், நொதிக்கிற இரணமுமுள்ளது; அது சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது. 7 உங்கள் தேசம் பாழாயிருக்கிறது; உங்கள் பட்டணங்கள் அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது; உங்கள் நாட்டை அந்நியர் உங்கள் கண்களுக்கு முன்பாகப் பட்சிக்கிறார்கள்; அது அந்நியரால் கவிழ்க்கப்பட்ட பாழ்ந்தேசம்போல் இருக்கிறது. 8 சீயோன் குமாரத்தி திராட்சத்தோட்டத்திலுள்ள ஒரு குச்சுபோலவும், வெள்ளரித்தோட்டத்திலுள்ள ஒரு குடிசைபோலவும், முற்றிக்கைபோடப்பட்ட ஒரு பட்டணம்போலவும் மீந்திருக்கிறாள். 9 சேனைகளின் கர்த்தர் நமக்குக் கொஞ்சம் மீதியை வைக்காதிருந்தாரானால், நாம் சோதோமைப்போலாகி, கொமோராவுக்கு ஒத்திருப்போம். 10 சோதோமின் அதிபதிகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கொமோராவின் ஜனமே, நமது தேவனுடைய வேதத்துக்குச் செவிகொடுங்கள். 11 உங்கள் பலிகளின் திரள் எனக்கு என்னத்துக்கு என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆட்டுக்கடாக்களின் தகனபலிகளும், கொழுத்த மிருகங்களின் நிணமும் எனக்கு அரோசிகமாயிருக்கிறது; காளைகள், ஆட்டுக்குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தின்மேல் எனக்குப் பிரியமில்லை. 12 நீங்கள் என் சந்நிதியில் வரும்போது, என் பிராகாரங்களை இப்படி மிதிக்கவேண்டுமென்று உங்களிடத்தில் கேட்டது யார்? 13 இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வுநாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச் சகிக்கமாட்டேன். 14 உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன். 15 நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம்பண்ணினாலும் கேளேன்; உங்கள் கைகள் இரத்தத்தினால் நிறைந்திருக்கிறது. 16 உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமைசெய்தலை விட்டு ஓயுங்கள்; 17 நன்மைசெய்யப் படியுங்கள்; நியாயத்தைத் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டவனை ஆதரித்து, திக்கற்ற பிள்ளையின் நியாயத்தையும், விதவையின் வழக்கையும் விசாரியுங்கள். 18 வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச்சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப்போலாகும். 19 நீங்கள் மனம்பொருந்திச் செவிகொடுத்தால், தேசத்தின் நன்மையைப் புசிப்பீர்கள். 20 மாட்டோம் என்று எதிர்த்துநிற்பீர்களாகில் பட்டயத்துக்கு இரையாவீர்கள்; கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. 21 உண்மையுள்ள நகரம் எப்படி வேசியாய்ப்போயிற்று! அது நியாயத்தால் நிறைந்திருந்தது, நீதி அதில் குடிகொண்டிருந்தது; இப்பொழுதோ அதின் குடிகள் கொலைபாதகர். 22 உன் வெள்ளி களிம்பாயிற்று; உன் திராட்சரசம் தண்ணீர்க்கலப்பானது. 23 உன் பிரபுக்கள் முரடரும் திருடரின் தோழருமாயிருக்கிறார்கள்; அவர்களில் ஒவ்வொருவனும் பரிதானத்தை விரும்பி, கைக்கூலியை நாடித்திரிகிறான்; திக்கற்ற பிள்ளையின் நியாயத்தை விசாரியார்கள்; விதவையின் வழக்கு அவர்களிடத்தில் ஏறுகிறதில்லை. 24 ஆகையால் சேனைகளின் கர்த்தரும் இஸ்ரவேலின் வல்லவருமாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: ஓகோ, நான் என் சத்துருக்களில் கோபம் ஆறி, என் பகைஞருக்கு நீதியைச் சரிக்கட்டுவேன். 25 நான் என் கையை உன்னிடமாய்த் திருப்பி, உன் களிம்பு நீங்க உன்னைச் சுத்தமாய்ப் புடமிட்டு, உன் ஈயத்தையெல்லாம் நீக்குவேன். 26 உன் நியாயாதிபதிகளை முன்னிருந்ததுபோலவும், உன் ஆலோசனைக்காரரை ஆதியில் இருந்ததுபோலவும் திரும்பக் கட்டளையிடுவேன்; பின்பு நீ நீதிபுரம் என்றும், சத்தியநகரம் என்றும் பெயர்பெறுவாய். 27 சீயோன் நியாயத்தினாலும், அதிலே திரும்பிவருகிறவர்கள் நீதியினாலும் மீட்கப்படுவார்கள். 28 துரோகிகளும் பாவிகளுமோ ஏகமாய் நொறுங்குண்டுபோவார்கள்; கர்த்தரை விட்டு விலகுகிறவர்கள் நிர்மூலமாவார்கள். 29 நீங்கள் விரும்பின கர்வாலிமரங்களினிமித்தம் வெட்கப்படுவீர்கள்; நீங்கள் தெரிந்துகொண்ட தோப்புகளினிமித்தம் நாணமடைவீர்கள். 30 இலையுதிர்ந்த கர்வாலிமரத்தைப்போலவும், தண்ணீரில்லாத தோப்பைப்போலவும் இருப்பீர்கள். 31 பராக்கிரமசாலி சணற்கூளமும், அவன் கிரியை அக்கினிப்பொறியுமாகி, இரண்டும் அவிப்பாரில்லாமல் ஏகமாய் வெந்துபோம் என்று சொல்லுகிறார்.

ஏசாயா 2

1 ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா யூதாவையும் எருசலேமையும் குறித்துக் கண்ட தரிசனம். 2 கடைசிநாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்படும்; எல்லா ஜாதிகளும் அதற்கு ஓடிவருவார்கள். 3 திரளான ஜனங்கள் புறப்பட்டு வந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். 4 அவர் ஜாதிகளுக்குள் நியாயந்தீர்த்து, திரளான ஜனங்களைக் கடிந்துகொள்வார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்கு விரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. 5 யாக்கோபின் வம்சத்தாரே, கர்த்தரின் வெளிச்சத்திலே நடப்போம் வாருங்கள். 6 யாக்கோபின் வம்சத்தாராகிய உம்முடைய ஜனத்தைக் கைநெகிழ்ந்தீர்; அவர்கள் கீழ்த்திசையாரின் போதகத்தால் நிறைந்து, பெலிஸ்தரைப்போல் நாள்பார்க்கிறவர்களாயிருந்து, அந்நிய புத்திரர்மேல் பிரியப்படுகிறார்களே. 7 அவர்கள் தேசம் வெள்ளியினாலும் பொன்னினாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் பொக்கிஷங்களுக்கு முடிவில்லை; அவர்கள் தேசம் குதிரைகளாலும் நிறைந்திருக்கிறது; அவர்கள் இரதங்களுக்கும் முடிவில்லை. 8 அவர்கள் தேசம் விக்கிரகங்களாலும் நிறைந்திருக்கிறது; தங்கள் கைகளின் கிரியையையும், தங்கள் விரல்கள் உண்டுபண்ணினதையும் பணிந்துகொள்ளுகிறார்கள். 9 சிறியவனும் குனிகிறான், பெரியவனும் பணிகிறான்; ஆகையால் அவர்களுக்கு மன்னியாதிருப்பீர். 10 கர்த்தரின் பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, நீ கன்மலையில் ஒதுங்கி, மண்ணில் ஒளித்துக்கொள். 11 நரரின் மேட்டிமையான கண்கள் தாழ்த்தப்படும், மனுஷரின் வீறாப்பும் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார். 12 எல்லாம் தாழ்த்தப்படும்பொருட்டுச் சேனைகளுடைய கர்த்தரின் நாளானது பெருமையும் மேட்டிமையுமானவை எல்லாவற்றின்மேலும், உயர்ந்தவை எல்லாவற்றின்மேலும், 13 லீபனோனிலுள்ள உயரமும் ஓங்கலுமான எல்லாக் கேதுருக்களின்மேலும், பாசானிலுள்ள எல்லாக் கர்வாலி மரங்களின்மேலும், 14 உன்னதமான எல்லாப் பர்வதங்களின்மேலும், உயரமான எல்லா மலைகளின்மேலும், 15 உயர்ந்த எல்லாக் கோபுரத்தின்மேலும், அரணான எல்லா மதிலின்மேலும், 16 தர்ஷீசின் கப்பல்கள் எல்லாவற்றின்மேலும், எல்லாச் சித்திர விநோதங்களின்மேலும் வரும். 17 அப்பொழுது நரரின் மேட்டிமை தாழ்ந்து, மனுஷரின் வீறாப்புத் தணியும்; கர்த்தர் ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார். 18 விக்கிரகங்கள் கட்டோடே ஒழிந்துபோம். 19 பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும்போது, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் கெபிகளிலும், பூமியின் குகைகளிலும் புகுந்துகொள்வார்கள். 20 பூமியைத் தத்தளிக்கப்பண்ணக் கர்த்தர் எழும்பும் அந்நாளிலே, அவருடைய பயங்கரத்திற்கும், அவருடைய மகிமைப்பிரதாபத்திற்கும் விலகி, கன்மலைகளின் வெடிப்புகளிலும் குன்றுகளின் சந்துகளிலும் புகுந்துகொள்ளும்படிக்கு, 21 மனுஷன் பணிந்துகொள்ளத் தனக்கு உண்டாக்கியிருந்த தன் வெள்ளி விக்கிரகங்களையும், தன் பொன் விக்கிரகங்களையும், மூஞ்சூறுகளுக்கும் துரிஞ்சில்களுக்கும் எறிந்துவிடுவான். 22 நாசியிலே சுவாசமுள்ள மனுஷனை நம்புவதை விட்டுவிடுங்கள்; எண்ணப்படுவதற்கு அவன் எம்மாத்திரம்.

ஏசாயா 3

1 இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமிலிருந்தும் யூதாவிலிருந்தும் சகலவிதமான ஆதரவுகளாகிய அப்பமென்கிற எல்லா ஆதரவையும், தண்ணீரென்கிற எல்லா ஆதரவையும்; 2 பராக்கிரமசாலியையும், யுத்தவீரனையும், நியாயாதிபதியையும், தீர்க்கதரிசியையும், சாஸ்திரியையும், மூப்பனையும்; 3 ஐம்பதுபேருக்கு அதிபதியையும், கனம்பொருந்தினவனையும், ஆலோசனைக்காரனையும், தொழில்களில் சாமர்த்தியமுள்ளவனையும், சாதுரியனையும் விலக்குவார். 4 வாலிபரை அவர்களுக்கு அதிபதிகளாகத் தருவேன் என்கிறார்; பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள். 5 ஜனங்கள் ஒடுக்கப்படுவார்கள்; ஒருவருக்கொருவரும், அயலானுக்கு அயலானும் விரோதமாயிருப்பார்கள்; வாலிபன் முதிர்வயதுள்ளவனுக்கும், கீழ்மகன் மேன்மகனுக்கும் இடும்பு செய்வான். 6 அப்பொழுது ஒருவன் தன் தகப்பன் வீட்டானாகிய தன் சகோதரனைப் பிடித்து: உனக்கு வஸ்திரம் இருக்கிறது, நீ எங்களுக்கு அதிபதியாயிரு; கேட்டுக்கு இனமான இந்தக் காரியம் உன் கையின் கீழாவதாக என்று சொல்ல; 7 அவன் அந்நாளிலே தன் கையை உயர்த்தி: நான் சீர்ப்படுத்துகிறவனாயிருக்கமாட்டேன்; என் வீட்டிலே அப்பமுமில்லை, வஸ்திரமுமில்லை; என்னை ஜனங்களுக்கு அதிபதியாக வைக்கவேண்டாம் என்பான். 8 ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோயிற்று; அவர்கள் நாவும், அவர்கள் கிரியைகளும், கர்த்தருடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்கத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது. 9 அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்கள் ஆத்துமாவுக்கு ஐயோ! தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்ளுகிறார்கள். 10 உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் கிரியைகளின் பலனை அநுபவிப்பார்கள். 11 துன்மார்க்கனுக்கு ஐயோ! அவனுக்குக் கேடு உண்டாகும்; அவன் கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும். 12 பிள்ளைகள் என் ஜனங்களை ஒடுக்குகிறவர்களாயிருக்கிறார்கள்; ஸ்திரீகள் அவர்களை ஆளுகிறார்கள். என் ஜனமே, உன்னை நடத்துகிறவர்கள் உன்னை மோசம்போக்கி, நீ நடக்கவேண்டிய வழியை அழித்துப்போடுகிறார்கள். 13 கர்த்தர் வழக்காட எழுந்திருந்து, ஜனங்களை நியாயந்தீர்க்க நிற்கிறார். 14 கர்த்தர் தமது ஜனத்தின் மூப்பரையும், அதின் பிரபுக்களையும் நியாயம் விசாரிப்பார். நீங்களே இந்தத் திராட்சத்தோட்டத்தைப் பட்சித்துப்போட்டீர்கள்; சிறுமையானவனிடத்தில் கொள்ளையிட்ட பொருள் உங்கள் வீடுகளில் இருக்கிறது. 15 நீங்கள் என் ஜனத்தை நொறுக்கிச் சிறுமையானவர்களின் முகத்தை நெரிக்கிறது என்னவென்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 16 பின்னும் கர்த்தர் சொல்லுகிறதாவது: சீயோன் குமாரத்திகள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் மருட்டிப்பார்த்து, ஒய்யாரமாய் நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள். 17 ஆதலால் ஆண்டவர் சீயோன் குமாரத்திகளின் உச்சந்தலையை மொட்டையாக்குவார்; கர்த்தர் அவர்கள் மானத்தைக் குலைப்பார். 18 அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைச்சிந்தாக்குகளையும், 19 ஆரங்களையும், அஸ்தகடகங்களையும், தலைமுக்காடுகளையும், 20 சிரபூஷணங்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்தபரணிகளையும், 21 தாயித்துகளையும், மோதிரங்களையும், மூக்குத்திகளையும், 22 விநோத வஸ்திரங்களையும், சால்வைகளையும், போர்வைகளையும், குப்பிகளையும், 23 கண்ணாடிகளையும், சல்லாக்களையும், குல்லாக்களையும், துப்பட்டாக்களையும் உரிந்துபோடுவார். 24 அப்பொழுது, சுகந்தத்துக்குப் பதிலாகத் துர்க்கந்தமும், கச்சைக்குப் பதிலாகக் கயிறும், மயிர்ச்சுருளுக்குப் பதிலாக மொட்டையும், ஆடம்பரமான வஸ்திரங்களுக்குப் பதிலாக இரட்டுக்கச்சும், அழகுக்குப் பதிலாகக் கருகிப்போகுதலும் இருக்கும். 25 உன் புருஷர் கட்கத்தினாலும், உன் பெலசாலிகள் யுத்தத்திலும் விழுவார்கள். 26 அவளுடைய வாசல்கள் துக்கித்துப் புலம்பும்; அவள் வெறுமையாக்கப்பட்டுத் தரையிலே உட்காருவாள் என்கிறார்.

ஏசாயா 4

1 அந்நாளில் ஏழு ஸ்திரீகள் ஒரே புருஷனைப் பிடித்து: நாங்கள் எங்கள் சொந்த ஆகாரத்தைப் புசித்து, எங்கள் சொந்த வஸ்திரத்தை உடுப்போம்; எங்கள் நிந்தை நீங்கும்படிக்கு உன்பேர்மாத்திரம் எங்கள்மேல் விளங்கட்டும் என்பார்கள். 2 இஸ்ரவேலில் தப்பினவர்களுக்கு அந்நாளிலே கர்த்தரின் கிளை அலங்காரமும் மகிமையுமாயிருக்கும்; பூமியின் கனி அவர்களுக்குச் சிறப்பும் அலங்காரமுமாயிருக்கும். 3 அப்பொழுது ஆண்டவர், சீயோன் குமாரத்திகளின் அழுக்கைக் கழுவி, நியாயத்தின் ஆவியினாலும், சுட்டெரிப்பின் ஆவியினாலும், எருசலேமின் இரத்தப்பழிகளை அதின் நடுவிலிருந்து நீக்கிவிடும்போது, 4 சீயோனில் மீதியாயிருந்து, எருசலேமில் தரித்திருந்து ஜீவனுக்கென்று பேரெழுதப்பட்டவனெவனும் பரிசுத்தனென்று சொல்லப்படுவான். 5 அப்பொழுது கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின்மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும். 6 பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.

ஏசாயா 5

1 இப்பொழுது நான் என் நேசரிடத்தில் அவருடைய திராட்சத்தோட்டத்தைக் குறித்து என் நேசருக்கேற்ற ஒரு பாட்டைப் பாடுவேன்; என் நேசருக்கு மகா செழிப்பான மேட்டிலே ஒரு திராட்சத்தோட்டம் உண்டு. 2 அவர் அதை வேலியடைத்து, அதிலுள்ள கற்களைப் பொறுக்கி, அதிலே நற்குல திராட்சச்செடிகளை நட்டு, அதின் நடுவில் ஒரு கோபுரத்தைக்கட்டி, அதில் ஆலையையும் உண்டுபண்ணி, அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று காத்திருந்தார்; அதுவோ கசப்பான பழங்களைத் தந்தது. 3 எருசலேமின் குடிகளே, யூதாவின் மனுஷரே, எனக்கும் என் திராட்சத்தோட்டத்துக்கும் நியாயந்தீருங்கள். 4 நான் என் திராட்சத்தோட்டத்திற்காகச் செய்யாத எந்த வேலையை அதற்கு இனிச் செய்யலாம்? அது நல்ல திராட்சப்பழங்களைத் தருமென்று நான் காத்திருக்க, அது கசப்பான பழங்களைத் தந்ததென்ன? 5 இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம். 6 அதைப் பாழாக்கிவிடுவேன்; அதின் கிளை நறுக்கப்படாமலும், களைகொத்தி எடுக்கப்படாமலும் போவதினால், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும்; அதின்மேல் மழை பெய்யாதபடிக்கு மேகங்களுக்கும் கட்டளையிடுவேன் என்கிறார். 7 சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே; அவர் நியாயத்துக்குக் காத்திருந்தார், இதோ, கொடுமை; நீதிக்குக் காத்திருந்தார், இதோ, முறைப்பாடு. 8 தாங்கள்மாத்திரம் தேசத்தின் நடுவில் வாசமாயிருக்கும்படி மற்றவர்களுக்கு இடமில்லாமற்போகுமட்டும், வீட்டோடே வீட்டைச் சேர்த்து, வயலோடே வயலைக் கூட்டுகிறவர்களுக்கு ஐயோ! 9 சேனைகளின் கர்த்தர் என் செவிகேட்கச் சொன்னது: மெய்யாகவே அந்தத் திரளான வீடுகள் பாழாகும்; பெரியவைகளும் நேர்த்தியானவைகளுமாகிய வீடுகள் குடியில்லாதிருக்கும். 10 பத்தேர் நிலமாகிய திராட்சத்தோட்டம் ஒரேபடி ரசம் தரும்; ஒரு கல விதை ஒரு குறுணி விளையும். 11 சாராயத்தை நாடி அதிகாலமே எழுந்து, மதுபானம் தங்களைச் சூடாக்கும்படி தரித்திருந்து, இருட்டிப்போகுமளவும் குடித்துக்கொண்டேயிருக்கிறவர்களுக்கு ஐயோ! 12 அவர்கள் சுரமண்டலத்தையும், தம்புருவையும், மேளத்தையும், நாகசுரத்தையும், மதுபானத்தையும் வைத்து விருந்துகொண்டாடுகிறார்கள்; ஆனாலும் கர்த்தரின் கிரியையை நோக்குகிறதுமில்லை; அவர் கரத்தின் செய்கையைச் சிந்திக்கிறதுமில்லை. 13 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சிறைப்பட்டுப்போகிறார்கள்; அவர்களில் கனமுள்ளவர்கள் பட்டினியினால் தொய்ந்துபோகிறார்கள்; அவர்களுடைய திரளான கூட்டத்தார் தாகத்தால் நாவறண்டுபோகிறார்கள். 14 அதினிமித்தம் பாதாளம் தன்னை விரிவாக்கி, தன் வாயை ஆவென்று மட்டில்லாமல் திறந்தது; அவர்கள் மகிமையும், அவர்கள் திரள்கூட்டமும், அவர்கள் ஆடம்பரமும், அவர்களில் களிகூருகிறவர்களும் அதற்குள் இறங்கிப்போவார்கள். 15 சிறியவன் தாழ்த்தப்படுவான், பெரியவனும் தாழ்ச்சியடைவான்; மேட்டிமையானவர்களின் கண்கள் தாழ்ந்துபோம். 16 சேனைகளின் கர்த்தர் நியாயத்தீர்ப்பினால் உயர்ந்து, பரிசுத்தமுள்ள தேவன் நீதியினால் பரிசுத்தராய் விளங்குவார். 17 அப்பொழுது ஆட்டுக்குட்டிகள் கண்டவிடமெல்லாம் மேயும்; கொழுத்தவர்களுடையதாயிருந்து பாழாய்ப்போன நிலங்களைப் பரதேசிகள் அநுபவிப்பார்கள். 18 மாயையின் கயிறுகளால் அக்கிரமத்தையும், வண்டியின் வடங்களால் பாவத்தையும் இழுத்துக்கொண்டு வந்து, 19 நாம் பார்க்கும்படி அவர் தீவிரித்துத் தமது கிரியையைச் சீக்கிரமாய் நடப்பிக்கட்டுமென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருடைய ஆலோசனையை நாம் அறியும்படி அது சமீபித்து வரட்டுமென்றும் சொல்லுகிறவர்களுக்கு ஐயோ! 20 தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும் சொல்லி, இருளை வெளிச்சமும், வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்புமென்று சாதிக்கிறவர்களுக்கு ஐயோ! 21 தங்கள் பார்வைக்கு ஞானிகளும், தங்கள் எண்ணத்துக்குப் புத்திமான்களுமாய் இருக்கிறவர்களுக்கு ஐயோ! 22 சாராயத்தைக் குடிக்க வீரரும், மதுவைக் கலந்துவைக்கப் பராக்கிரமசாலிகளுமாயிருந்து, 23 பரிதானத்திற்காகக் குற்றவாளியை நீதிமானாகத் தீர்த்து, நீதிமானின் நியாயத்தை அவனுக்கு விரோதமாய்ப் புரட்டுகிறவர்களுக்கு ஐயோ! 24 இதினிமித்தம் அக்கினிஜுவாலை வைக்கோலைப் பட்சிப்பதுபோலவும், செத்தையானது நெருப்புக்கு இரையாகி எரிந்துபோவதுபோலவும், அவர்கள் வேர் வாடி, அவர்கள் துளிர் தூசியைப்போல் பறந்துபோகும்; அவர்கள் சேனைகளின் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, இஸ்ரவேலிலுள்ள பரிசுத்தருடைய வசனத்தை அசட்டைபண்ணினார்களே. 25 ஆகையால் கர்த்தருடைய கோபம் தமது ஜனங்களுக்கு விரோதமாய் மூண்டது; அவர் தமது கையை அவர்களுக்கு விரோதமாய் நீட்டி, பர்வதங்கள் அதிரத்தக்கதாயும், அவர்கள் பிணங்கள் நடுவீதிகளில் குப்பைபோலாகத்தக்கதாயும், அவர்களை அடித்தார்; இவை எல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது. 26 அவர் தூரத்திலுள்ள ஜாதியாருக்கு ஒரு கொடியை ஏற்றி, அவர்களைப் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து பயில்காட்டி அழைப்பார்; அப்பொழுது அவர்கள் தீவிரமும் வேகமுமாய் வருவார்கள். 27 அவர்களில் விடாய்த்தவனும் இடறுகிறவனும் இல்லை; தூங்குகிறவனும் உறங்குகிறவனும் இல்லை; அவர்களில் ஒருவனுடைய இடுப்பின் கச்சை அவிழ்வதும், பாதரட்சைகளின் வார் அறுந்துபோவதும் இல்லை. 28 அவர்கள் அம்புகள் கூர்மையும், அவர்கள் வில்லுகளெல்லாம் நாணேற்றினவைகளும், அவர்கள் குதிரைகளின் குளம்புகள் கற்பாறையாக எண்ணப்பட்டவைகளும், அவர்கள் உருளைகள் சுழல்காற்றுக்கு ஒத்தவைகளுமாயிருக்கும். 29 அவர்கள் கெர்ச்சிப்பு சிங்கத்தின் கெர்ச்சிப்புபோலிருக்கிறது; பாலசிங்கங்களைப்போலக் கெர்ச்சித்து, உறுமி, இரையைப் பிடித்து, தப்புவிக்கிறவன் இல்லாமல், அதை எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். 30 அந்நாளில், சமுத்திரம் இரைவதுபோல் அவர்களுக்கு விரோதமாய் இரைவார்கள்; அப்பொழுது தேசத்தைப்பார்த்தால், இதோ, அந்தகாரமும் வியாகுலமும் உண்டு; அதின் மேகங்களினால் வெளிச்சம் இருண்டுபோம்.

ஏசாயா 6

1 உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. 2 சேராபீன்கள் அவருக்கு மேலாக நின்றார்கள்; அவர்களில் ஒவ்வொருவனுக்கும் அவ்வாறு செட்டைகளிருந்தன; அவனவன் இரண்டு செட்டைகளால் தன் தன் முகத்தை மூடி, இரண்டு செட்டைகளால் தன் தன் கால்களை மூடி, இரண்டு செட்டைகளால் பறந்து; 3 ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள். 4 கூப்பிடுகிறவர்களின் சத்தத்தால் வாசல்களின் நிலைகள் அசைந்து, ஆலயம் புகையினால் நிறைந்தது. 5 அப்பொழுது நான்: ஐயோ! அதமானேன், நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே என்றேன். 6 அப்பொழுது சேராபீன்களில் ஒருவன் பலிபீடத்திலிருந்து, தன் கையிலே பிடித்த குறட்டால் ஒரு நெருப்புத்தழலை எடுத்து, என்னிடத்தில் பறந்து வந்து, 7 அதினால் என் வாயைத் தொட்டு: இதோ, இது உன் உதடுகளைத் தொட்டதினால் உன் அக்கிரமம் நீங்கி, உன் பாவம் நிவிர்த்தியானது என்றான். 8 பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன். 9 அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி, நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல். 10 இந்த ஜனங்கள் தங்கள் கண்களினால் காணாமலும், தங்கள் காதுகளினால் கேளாமலும், தங்கள் இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலுமிருக்க, நீ அவர்கள் இருதயத்தைக் கொழுத்ததாக்கி, அவர்கள் காதுகளை மந்தப்படுத்தி, அவர்கள் கண்களை மூடிப்போடு என்றார். 11 அப்பொழுது நான்: ஆண்டவரே, எதுவரைக்கும் என்று கேட்டேன். அதற்கு அவர்: பட்டணங்கள் குடியில்லாமலும், வீடுகள் மனுஷசஞ்சாரமில்லாமலும் பாழாகி, பூமி அவாந்தரவெளியாகி, 12 கர்த்தர் மனுஷரைத் தூரமாக விலக்குவதினால், தேசத்தின் நடுமையம் முற்றிலும் வெறுமையாக்கப்படும் வரைக்குமே. 13 ஆகிலும் அதில் இன்னும் பத்தில் ஒரு பங்கிருக்கும், அதுவும் திரும்ப நிர்மூலமாக்கப்படும்; கர்வாலிமரமும் அரசமரமும் இலையற்றுப்போனபின்பு, அவைகளின் அடிமரம் இருப்பதுபோல, அதின் அடிமரமும் பரிசுத்த வித்தாயிருக்கும் என்றார்.

ஏசாயா 7

1 உசியாவினுடைய குமாரனாகிய யோதாமின் குமாரன் ஆகாஸ் என்னும் யூதாதேசத்து ராஜாவின் நாட்களிலே, ரேத்சீன் என்னும் சீரியாவின் ராஜாவும், ரெமலியாவின் குமாரனாகிய பெக்கா என்னும் இஸ்ரவேலின் ராஜாவும் எருசலேமின்மேல் யுத்தம்பண்ண வந்தார்கள், அவர்களால் அதைப் பிடிக்கக்கூடாமற்போயிற்று. 2 சீரியர் எப்பிராயீமைச் சார்ந்திருக்கிறார்களென்று தாவீதின் குடும்பத்துக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜாவின் இருதயமும் அவன் ஜனத்தின் இருதயமும் காட்டிலுள்ள மரங்கள் காற்றினால் அசைகிறதுபோல் அசைந்தது. 3 அப்பொழுது கர்த்தர் ஏசாயாவை நோக்கி: நீயும் உன் மகன் சேயார்யாசூபுமாக வண்ணார் துறைவழியிலுள்ள மேற்குளத்து மதகின் கடைசிமட்டும் ஆகாசுக்கு எதிர்கொண்டுபோய், 4 நீ அவனை நோக்கி: சீரியர் எப்பிராயீமோடும், ரெமலியாவின் மகனோடும் உனக்கு விரோதமாகத் துராலோசனை பண்ணி, 5 நாம் யூதாவுக்கு விரோதமாய்ப்போய், அதை நெருக்கி, அதை நமக்குள்ளே பங்கிட்டுக்கொண்டு, அதற்குத் தபேயாலின் குமாரனை ராஜாவாக ஏற்படுத்துவோம் என்று சொன்னதினிமித்தம்; 6 நீ பயப்படாமல் அமர்ந்திருக்கப் பார்; இந்த இரண்டு புகைகிற கொள்ளிக்கட்டைகளாகிய சீரியரோடே வந்த ரேத்சீனும், ரெமலியாவின் மகனும் கொண்ட உக்கிரக்கோபத்தினிமித்தம் உன் இருதயம் துவளவேண்டாம். 7 கர்த்தராகிய ஆண்டவர்: அந்த ஆலோசனை நிலைநிற்பதில்லை, அதின்படி சம்பவிப்பதுமில்லை; 8 சீரியாவின் தலை தமஸ்கு, தமஸ்குவின் தலை ரேத்சீன்; இன்னும் அறுபத்தைந்து வருஷங்களிலே எப்பிராயீம் ஒரு ஜனமாயிராதபடிக்கு நொறுங்குண்டுபோம். 9 எப்பிராயீமின் தலை சமாரியா, சமாரியாவின் தலை ரெமலியாவின் மகன்; நீங்கள் விசுவாசியாவிட்டால் நிலைபெறமாட்டீர்கள் என்று சொல் என்றார். 10 பின்னும் கர்த்தர் ஆகாசை நோக்கி: 11 நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் ஒரு அடையாளத்தை வேண்டிக்கொள்; அதை ஆழத்திலிருந்தாகிலும், உன்னதத்திலிருந்தாகிலும் உண்டாகக் கேட்டுக்கொள் என்று சொன்னார். 12 ஆகாசோ: நான் கேட்கமாட்டேன், நான் கர்த்தரைப் பரீட்சை செய்யமாட்டேன் என்றான். 13 அப்பொழுது ஏசாயா: தாவீதின் வம்சத்தாரே, கேளுங்கள்; நீங்கள் மனுஷரை விசனப்படுத்துகிறது போதாதென்று என் தேவனையும் விசனப்படுத்தப் பார்க்கிறீர்களோ? 14 ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள். 15 தீமையை வெறுத்து நன்மையைத் தெரிந்துகொள்ள அறியும் வயதுமட்டும் அவர் வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவார். 16 அந்தப் பிள்ளை தீமையை வெறுக்கவும், நன்மையைத் தெரிந்துகொள்ளவும் அறிகிறதற்குமுன்னே, நீ அருவருக்கிற தேசம் அதின் இரண்டு ராஜாக்களால் விட்டுவிடப்படும். 17 எப்பிராயீம் யூதாவைவிட்டுப் பிரிந்த நாள்முதல் வராத நாட்களைக் கர்த்தர் உன்மேலும், உன் ஜனத்தின்மேலும், உன் பிதாவுடைய வம்சத்தின்மேலும், அசீரியாவின் ராஜாவினாலே வரப்பண்ணுவார். 18 அந்நாட்களிலே, கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியா தேசத்திலிருக்கும் தேனீயையும் பயில்காட்டி அழைப்பார். 19 அவைகள் வந்து ஏகமாய் வனாந்தரங்களின் பள்ளத்தாக்குகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும், எல்லா முட்காடுகளிலும், மேய்ச்சலுள்ள எல்லா இடங்களிலும் தங்கும். 20 அக்காலத்திலே ஆண்டவர் கூலிக்குவாங்கின சவரகன் கத்தியினால், அதாவது, நதியின் அக்கரையிலுள்ள அசீரியா ராஜாவினால், தலைமயிரையும் கால்மயிரையும் சிரைப்பித்து, தாடியையும் வாங்கிப்போடுவிப்பார். 21 அக்காலத்தில் ஒருவன் ஒரு இளம்பசுவையும், இரண்டு ஆடுகளையும் வளர்த்தால், 22 அவைகள் பூரணமாய்ப் பால் கறக்கிறபடியினால் வெண்ணெயைச் சாப்பிடுவான்; தேசத்தின் நடுவில் மீதியாயிருப்பவனெவனும் வெண்ணெயையும் தேனையுமே சாப்பிடுவான். 23 அந்நாளிலே, ஆயிரம் வெள்ளிக்காசு பெறும் ஆயிரம் திராட்சச்செடியிருந்த நிலமெல்லாம் முட்செடியும் நெரிஞ்சிலுமாகும். 24 தேசமெங்கும் முட்செடியும் நெரிஞ்சிலும் உண்டாயிருப்பதினால், அம்புகளையும் வில்லையும் பிடித்து அங்கே போகவேண்டியதாயிருக்கும். 25 மண்வெட்டியால் கொத்தப்படுகிற மலைகள் உண்டே; முட்செடிகளுக்கும் நெரிஞ்சில்களுக்கும் பயப்படுவதினால் அவைகளில் ஒன்றிற்கும் போகக் கூடாமையினால், அவைகள் மாடுகளை ஓட்டிவிடுவதற்கும், ஆடுகள் மிதிப்பதற்குமான இடமாயிருக்கும் என்றான்.

ஏசாயா 8

1 பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ ஒரு பெரிய பத்திரத்தை எடுத்து மனுஷன் எழுதுகிற பிரகாரமாய் அதிலே மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்று எழுது என்றார். 2 அப்பொழுது நான் உண்மையுள்ள சாட்சிக்காரராகிய ஆசாரியனான உரியாவையும், யெபெரெகியாவின் குமாரனான சகரியாவையும் அதற்குச் சாட்சிகளாக வைத்துக்கொண்டேன். 3 நான் தீர்க்கதரிசியானவளைச் சேர்ந்தபோது, அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மகேர்-சாலால்-அஷ்-பாஸ் என்னும் பேரை அவனுக்கு இடு. 4 இந்தப் பாலகன், அப்பா, அம்மா என்று கூப்பிட அறியுமுன்னே, தமஸ்குவின் ஆஸ்தியும், சமாரியாவின் கொள்ளையும், அசீரியாவின் ராஜாவுக்கு முன்பாகக் கொண்டுபோகப்படும் என்றார். 5 பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: 6 இந்த ஜனம் மெதுவாய் ஓடுகிற சீலோவாவின் தண்ணீர்களை அசட்டைபண்ணி, ரேத்சீனையும் ரெமலியாவின் குமாரனையும் சார்ந்து சந்தோஷிக்கிறபடியினால், 7 இதோ, ஆண்டவர் வல்லமையுள்ள திரளான ஆற்றுநீரைப்போன்ற அசீரியாவின் ராஜாவையும், அவனுடைய சகல ஆடம்பரத்தையும் அவர்கள்மேல் புரளப்பண்ணுவார்; அது அவர்களுடைய ஓடைகளெல்லாவற்றின்மேலும் போய், அவர்களுடைய எல்லாக் கரைகள்மேலும் புரண்டு, 8 யூதாவுக்குள் புகுந்து பிரவாகித்துக் கடந்து, கழுத்துமட்டும் வரும் என்றார். இம்மானுவேலே, அவன் செட்டைகளின் விரிவு உமது தேசத்தின் விசாலத்தை மூடும். 9 ஜனங்களே, நீங்கள் கூட்டங்கூடுங்கள், முறியடிக்கப்படுவீர்கள்; தூரதேசத்தாராகிய நீங்கள் எல்லாரும் செவிகொடுங்கள்; இடைக்கட்டிக்கொள்ளுங்கள், முறிந்தோடுவீர்கள், 10 ஆலோசனை செய்யுங்கள், அது அபத்தமாகும்; வார்த்தையை வசனியுங்கள், அது நிற்காது; தேவன் எங்களோடே இருக்கிறார். 11 கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடனே பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடி எனக்குப் புத்திசொல்லி விளம்பினதாவது: 12 இந்த ஜனங்கள் கட்டுப்பாடு என்று சொல்லுகிறதையெல்லாம் நீங்கள் கட்டுப்பாடு என்று சொல்லாமலும், அவர்கள் பயப்படுகிற பயத்தின்படி நீங்கள் பயப்படாமலும், கலங்காமலும், 13 சேனைகளின் கர்த்தரையே பரிசுத்தம்பண்ணுங்கள்; அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக. 14 அவர் உங்களுக்குப் பரிசுத்த ஸ்தலமாயிருப்பார்; ஆகிலும் இஸ்ரவேலின் இரண்டு கோத்திரத்துக்கும் தடுக்கலின் கல்லும், இடறுதலின் கன்மலையும், எருசலேமின் குடிகளுக்குச் சுருக்கும் கண்ணியுமாயிருப்பார். 15 அவர்களில் அநேகர் இடறிவிழுந்து நொறுங்கிச் சிக்குண்டு பிடிபடுவார்கள். 16 சாட்சி ஆகமத்தைக் கட்டி, என் சீஷருக்குள்ளே வேதத்தை முத்திரையிடு என்றார். 17 நானோ யாக்கோபின் குடும்பத்துக்குத் தமது முகத்தை மறைக்கிற கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன். 18 இதோ, நானும், கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் சீயோன் பர்வதத்தில் வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தராலே இஸ்ரவேலில் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம். 19 அவர்கள் உங்களை நோக்கி: அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிகாரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ? 20 வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை. 21 இடுக்கண் அடைந்தவர்களாயும் பட்டினியாயும் தேசத்தைக் கடந்துபோவார்கள்; அவர்கள் பட்டினியாயிருக்கும்போது, மூர்க்கவெறிகொண்டு, தங்கள் ராஜாவையும் தங்கள் தேவனையும் தூஷிப்பார்கள். 22 அவர்கள் அண்ணாந்துபார்ப்பார்கள், பூமியையும் நோக்கிப்பார்ப்பார்கள்; ஆனாலும் இதோ, இக்கட்டும் அந்தகாரமும் இருக்கும்; இடுக்கத்தால் இருளடைந்து, அந்தகாரத்திலே தள்ளுண்டு அலைவார்கள்.

ஏசாயா 9

1 ஆகிலும் அவர் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் இடுக்கமாய் ஈனப்படுத்தின முந்தின காலத்திலிருந்ததுபோல அது இருண்டிருப்பதில்லை; ஏனென்றால் அவர் கடற்கரையருகிலும், யோர்தான் நதியோரத்திலுமுள்ள புறஜாதியாருடைய கலிலேயாவாகிய அத்தேசத்தைப் பிற்காலத்திலே மகிமைப்படுத்துவார். 2 இருளில் நடக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் தேசத்தில் குடியிருக்கிறவர்களின்மேல் வெளிச்சம் பிரகாசித்தது. 3 அந்த ஜாதியைத் திரளாக்கி, அதற்கு மகிழ்ச்சியைப் பெருகப்பண்ணினீர்; அறுப்பில் மகிழ்கிறதுபோலவும், கொள்ளையைப் பங்கிட்டுக்கொள்ளுகையில் களிகூருகிறதுபோலவும், உமக்கு முன்பாக மகிழுகிறார்கள். 4 மீதியானியரின் நாளில் நடந்ததுபோல, அவர்கள் சுமந்த நுகத்தடியையும், அவர்கள் தோளின்மேலிருந்த மிலாற்றையும், அவர்கள் ஆளோட்டியின் கோலையும் முறித்துப்போட்டீர். 5 அமளியாய் யுத்தம்பண்ணுகிற வீரருடைய ஆயுதவர்க்கங்களும், இரத்தத்தில் புரண்ட உடுப்பும் அக்கினிக்கு இரையாகச் சுட்டெரிக்கப்படும். 6 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக்கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும். 7 தாவீதின் சிங்காசனத்தையும் அவனுடைய ராஜ்யத்தையும் அவர் திடப்படுத்தி, அதை இதுமுதற்கொண்டு என்றென்றைக்கும் நியாயத்தினாலும் நீதியினாலும் நிலைப்படுத்தும்படிக்கு, அவருடைய கர்த்தத்துவத்தின் பெருக்கத்துக்கும், அதின் சமாதானத்துக்கும் முடிவில்லை; சேனைகளின் கர்த்தருடைய வைராக்கியம் இதைச் செய்யும். 8 ஆண்டவர் யாக்கோபுக்கு ஒரு வார்த்தையை அனுப்பினார்; அது இஸ்ரவேலின்மேல் இறங்கிற்று. 9 செங்கல்கட்டு இடிந்துபோயிற்று, பொளிந்த கல்லாலே திரும்பக் கட்டுவோம்; காட்டத்திமரங்கள் வெட்டிப்போடப்பட்டது, அவைகளுக்குப் பதிலாகக் கேதுருமரங்களை வைப்போம் என்று, 10 அகந்தையும், மனப்பெருமையுமாய்ச் சொல்லுகிற எப்பிராயீமரும், சமாரியாவின் குடிகளுமாகிய எல்லா ஜனத்துக்கும் அது தெரியவரும். 11 ஆதலால் கர்த்தர் ரேத்சீனுடைய சத்துருக்களை அவர்கள்மேல் உயர்த்தி, அவர்களுடைய மற்றச் சத்துருக்களை அவர்களோடே கூட்டிக் கலப்பார். 12 முற்புறத்தில் சீரியரும், பிற்புறத்தில் பெலிஸ்தரும் வந்து, இஸ்ரவேலைத் திறந்தவாயால் பட்சிப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது. 13 ஜனங்கள் தங்களை அடிக்கிறவரிடத்தில் திரும்பாமலும், சேனைகளின் கர்த்தரைத் தேடாமலும் இருக்கிறார்கள். 14 ஆகையால் கர்த்தர் இஸ்ரவேலிலே தலையையும், வாலையும், கிளையையும், நாணலையும், ஒரேநாளிலே வெட்டிப்போடுவார். 15 மூப்பனும் கனம்பொருந்தினவனுமே தலை, பொய்ப்போதகம்பண்ணுகிற தீர்க்கதரிசியே வால். 16 இந்த ஜனத்தை நடத்துகிறவர்கள் எத்தருமாய், அவர்களால் நடத்தப்படுகிறவர்கள் நாசமடைகிறவர்களுமாய் இருக்கிறார்கள். 17 ஆதலால், ஆண்டவர் அவர்கள் வாலிபர்மேல் பிரியமாயிருப்பதில்லை; அவர்களிலிருக்கிற திக்கற்ற பிள்ளைகள்மேலும் விதவைகள்மேலும் இரங்குவதுமில்லை; அவர்கள் அனைவரும் மாயக்காரரும் பொல்லாதவர்களுமாயிருக்கிறார்கள்; எல்லா வாயும் ஆகாமியம் பேசும்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது. 18 ஆகாமியமானது அக்கினியைப்போல எரிகிறது; அது முட்செடியையும் நெரிஞ்சிலையும் பட்சிக்கும், அது நெருங்கிய காட்டைக் கொளுத்தும், புகை திரண்டு எழும்பும். 19 சேனைகளின் கர்த்தருடைய சினத்தால் தேசம் அந்தகாரப்பட்டு, ஜனங்கள் அக்கினிக்கு இரையாவார்கள்; ஒருவனும் தன் சகோதரனைத் தப்பவிடான். 20 வலதுபுறத்தில் பட்சித்தாலும் பசித்திருப்பார்கள்; இடதுபுறத்தில் தின்றாலும் திருப்தியடையார்கள்; அவனவன் தன்தன் புயத்தின் மாம்சத்தைத் தின்பான். 21 மனாசே எப்பிராயீமையும், எப்பிராயீம் மனாசேயையும் பட்சிப்பார்கள்; இவர்கள் ஏகமாய் யூதாவுக்கு விரோதமாயிருப்பார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.

ஏசாயா 10

1 ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும், 2 அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ! 3 விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்னசெய்வீர்கள்? உதவிபெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்துவிடுவீர்கள்? 4 கட்டுண்டவர்களின்கீழ் முடங்கினாலொழிய கொலைசெய்யப்பட்டவர்களுக்குள் விழுவார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது. 5 என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம். 6 அவபக்தியான ஜனங்களுக்கு விரோதமாய் நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின ஜனத்தைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன். 7 அவனோ அப்படி எண்ணுகிறதுமில்லை, அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை; அநேகம் ஜாதிகளை அழிக்கவும், சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான். 8 அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ? 9 கல்னோபட்டணம் கர்கேமிசைப்போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப்போலானதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ? 10 எருசலேமையும் சமாரியாவையும்பார்க்கிலும் விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க, 11 நான் சமாரியாவுக்கும், அதின் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் விக்கிரகங்களுக்கும் செய்யாமலிருப்பேனோ என்று சொல்லுகிறான். 12 ஆதலால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார். 13 அவன்: என் கையின் பெலத்தினாலும், என் ஞானத்தினாலும் இதைச் செய்தேன்; நான் புத்திமான், நான் ஜனங்களின் எல்லைகளை மாற்றி, அவர்கள் பண்டகசாலைகளைக் கொள்ளையிட்டு வல்லவனைப்போல் குடிகளைத் தாழ்த்தினேன். 14 ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல் என் கை ஜனங்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் செட்டையை அசைத்ததுமில்லை, வாயைத் திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்லுகிறான். 15 கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மைபாராட்டலாமோ? வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினாற்போலவும் இருக்குமே. 16 ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய கர்த்தர், அவனைச்சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; பட்சிக்கும் அக்கினியைப்போலும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார். 17 இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினிஜுவாலையுமாகி, ஒரேநாளிலே அவனுடைய முட்செடிகளையும், நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து, 18 அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும் புறம்புமாய் அழியப்பண்ணுவார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும். 19 காட்டில் அவனுக்கு மீதியான மரங்கள் கொஞ்சமாயிருக்கும், ஒரு சிறுபிள்ளை அவைகளை எண்ணி எழுதலாம். 20 அக்காலத்திலே இஸ்ரவேலில் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள். 21 மீதியாயிருப்பவர்கள், யாக்கோபில் மீதியாயிருப்பவர்களே, வல்லமையுள்ள தேவனிடத்தில் திரும்புவார்கள். 22 இஸ்ரவேலே, உன் ஜனங்கள் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், அவர்களில் மீதியாயிருப்பவர்கள்மாத்திரம் திரும்புவார்கள்; தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோடே புரண்டுவரும். 23 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தேசத்துக்குள்ளெங்கும் தீர்மானிக்கப்பட்ட அழிவை வரச்செய்வார். 24 ஆகையால் சீயோனில் வாசமாயிருக்கிற என் ஜனமே, அசீரியனுக்குப் பயப்படாதே; அவன் உன்னைக் கோலால் அடித்து, எகிப்தியரைப்போல் தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான். 25 ஆனாலும் இன்னும் கொஞ்சக்காலத்துக்குள்ளே என் உக்கிரமும், அவர்களைச் சங்கரிக்கப்போகிறதினால் என் கோபமும் தீர்ந்துபோம் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 26 ஓரேப் கன்மலையண்டையிலே மீதியானியர் வெட்டுண்டதுபோல் சேனைகளின் கர்த்தர் அவன்மேல் ஒரு சவுக்கை எழும்பிவரப்பண்ணி, எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார். 27 அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் நுகமும் நீக்கப்படும்; அபிஷேகத்தின் நுகம் முறிந்துபோம். 28 அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான். 29 கணவாயைத் தாண்டி, கேபாவிலே பாளயமிறங்குகிறார்கள்; ராமா அதிர்கிறது; சவுலின் ஊராகிய கிபியா ஓடிப்போகிறது. 30 காலீம் குமாரத்தியே, உரத்த சத்தமாய்க் கூப்பிடு; ஏழை ஆனதோத்தே, லாயீஷ் ஊர்மட்டும் எட்ட சத்தமிட்டுக் கூப்பிடு. 31 மத்மேனா வலசைவாங்கிப்போம், கேபிமின் குடிகள் தப்பிஓடக் கூட்டங்கூடுகிறார்கள். 32 இனி ஒருநாள் நோபிலே தங்கி, சீயோன் குமாரத்தியின் பர்வதத்துக்கும், எருசலேமின் மேட்டுக்கும் விரோதமாய்க் கை நீட்டி மிரட்டுவான். 33 இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாய் வெட்டுவார்; ஓங்கி வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும். 34 அவர் காட்டின் அடர்த்தியைக் கோடரியினாலே வெட்டிப்போடுவார்; மகத்துவமானவராலே லீபனோன் விழும்.

ஏசாயா 11

1 ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும். 2 ஞானத்தையும் உணர்வையும் அருளும் ஆவியும், ஆலோசனையையும் பெலனையும் அருளும் ஆவியும், அறிவையும் கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தையும் அருளும் ஆவியுமாகிய கர்த்தருடைய ஆவியானவர் அவர்மேல் தங்கியிருப்பார். 3 கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்; அவர் தமது கண் கண்டபடி நியாயந்தீர்க்காமலும், தமது காது கேட்டபடி தீர்ப்புச்செய்யாமலும், 4 நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார். 5 நீதி அவருக்கு அரைக்கட்டும், சத்தியம் அவருக்கு இடைக்கச்சையுமாயிருக்கும். 6 அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி வெள்ளாட்டுக்குட்டியோடே படுத்துக்கொள்ளும்; கன்றுக்குட்டியும், பாலசிங்கமும், காளையும், ஒருமித்திருக்கும்; ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். 7 பசுவும் கரடியும் கூடிமேயும், அவைகளின் குட்டிகள் ஒருமித்துப் படுத்துக்கொள்ளும்; சிங்கம் மாட்டைப்போல் வைக்கோல் தின்னும். 8 பால் குடிக்குங்குழந்தை விரியன்பாம்பு வளையின்மேல் விளையாடும், பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும். 9 என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். 10 அக்காலத்திலே, ஜனங்களுக்குக் கொடியாக நிற்கும் ஈசாயின் வேருக்காக ஜாதிகள் விசாரித்துக் கேட்பார்கள்; அவருடைய தாபரஸ்தலம் மகிமையாயிருக்கும். 11 அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும், தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது கரத்தை நீட்டி, 12 ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார். 13 எப்பிராயீமின் பொறாமை நீங்கும், யூதாவின் சத்துருக்கள் சங்கரிக்கப்படுவார்கள்; எப்பிராயீம் யூதாவின்மேல் பொறாமையாயிரான், யூதா எப்பிராயீமைத் துன்பப்படுத்தான். 14 அவர்கள் இருவரும் ஏகமாய்க் கூடி மேற்கேயிருக்கிற பெலிஸ்தருடைய எல்லைகளின்மேல் பாய்ந்து, கீழ்த்திசையாரைக் கொள்ளையிட்டு, ஏதோமின்மேலும் மோவாபின்மேலும் கைபோடுவார்கள்; அம்மோன் புத்திரர் அவர்களுக்குக் கீழ்ப்படிவார்கள். 15 எகிப்தின் சமுத்திரமுனையைக் கர்த்தர் முற்றிலும் அழித்து, தம்முடைய காற்றின் வலுமையினால் நதியின்மேல் தமது கையை நீட்டி, ஏழாறுகளாகப் பிரித்து, ஜனங்கள் கால்நனையாமல் கடந்துபோகும்படி பண்ணுவார். 16 இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் அவர்களுக்கு இருந்ததுபோல, அசீரியாவிலே அவருடைய ஜனத்தில் மீதியானவர்களுக்கு ஒரு பெரும்பாதையிருக்கும்.

ஏசாயா 12

1 அக்காலத்திலே நீ சொல்வது: கர்த்தாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கிற்று; நீர் என்னைத் தேற்றுகிறீர். 2 இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர். 3 நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்வீர்கள். 4 அக்காலத்திலே நீங்கள் சொல்வது: கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம்பண்ணுங்கள். 5 கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவர் மகத்துவமான கிரியைகளைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள். 6 சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.

ஏசாயா 13

1 ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா பாபிலோன்மேல் வரக்கண்ட பாரம். 2 உயர்ந்த பர்வதத்தின்மேல் கொடியேற்றுங்கள்; உரத்த சத்தமிட்டு ஜனங்களை வரவழையுங்கள்; அவர்கள் பிரபுக்களின் வாசல்களுக்குள் பிரவேசிப்பதற்குச் சைகை காட்டுங்கள். 3 நான் பரிசுத்தமாக்கினவர்களுக்குக் கட்டளை கொடுத்தேன்; என் கோபத்தை நிறைவேற்ற என் பராக்கிரமசாலிகளை அழைத்தும் இருக்கிறேன்; அவர்கள் என் மகத்துவத்தினாலே களிகூருகிறவர்கள் என்கிறார். 4 திரளான ஜனங்களின் சத்தத்துக்கொத்த வெகு கூட்டத்தின் இரைச்சலும், கூட்டப்பட்ட ஜாதிகளுடைய ராஜ்யங்களின் அமளியான இரைச்சலும் மலைகளில் கேட்கப்படுகிறது; சேனைகளின் கர்த்தர் யுத்தராணுவத்தை இலக்கம்பார்க்கிறார். 5 கர்த்தர் வருகிறார்; அவருடைய கோபத்தின் ஆயுதங்களும், தேசத்தையெல்லாம் அழிக்க, வானங்கவிழ்ந்த கடையாந்தர தேசத்திலிருந்து வருகிறது. 6 அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது; அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும். 7 ஆதலால் எல்லாக் கைகளும் நெகிழ்ந்து, எல்லா மனுஷரின் இருதயமும் கரைந்துபோம். 8 அவர்கள் திகிலடைவார்கள்; வேதனைகளும் வாதைகளும் அவர்களைப் பிடிக்கும்; பிள்ளைபெறுகிறவளைப்போல வேதனைப்படுவார்கள்; ஒருவரையொருவர் பிரமித்துப்பார்ப்பார்கள்; அவர்கள் முகங்கள் நெருப்பான முகங்களாயிருக்கும். 9 இதோ, தேசத்தைப் பாழாக்கி, அதின் பாவிகளை அதிலிருந்து அழிப்பதற்காகக் கர்த்தருடைய நாள் கடூரமும், மூர்க்கமும், உக்கிரகோபமுமாய் வருகிறது. 10 வானத்தின் நட்சத்திரங்களும் ராசிகளும் ஒளி கொடாதிருக்கும்; சூரியன் உதிக்கையில் இருண்டுபோம்; சந்திரன் ஒளி கொடாதிருக்கும். 11 பாவத்தினிமித்தம் உலகத்தையும், அக்கிரமத்தினிமித்தம் துன்மார்க்கரையும் நான் தண்டித்து, அகங்காரரின் பெருமையை ஒழியப்பண்ணி, கொடியரின் இடும்பைத் தாழ்த்துவேன். 12 புருஷனைப் பசும்பொன்னிலும், மனுஷனை ஓப்பீரின் தங்கத்திலும் அபூருவமாக்குவேன். 13 இதினிமித்தம் சேனைகளின் கர்த்தருடைய உக்கிரத்தினால் அவருடைய கடுங்கோபத்தின் நாளிலே பூமி தன்னிடத்தைவிட்டு நீங்கும்படி வானத்தை அதிரப்பண்ணுவேன். 14 துரத்தப்பட்ட வெளிமானைப்போலும், யாரும் சேர்க்காத ஆட்டைப்போலும் இருப்பார்கள்; அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குப் போக முகத்தைத் திருப்பி, அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள். 15 அகப்பட்டவனெவனும் குத்துண்டு, அவர்களைச் சேர்ந்திருந்தவனெவனும் பட்டயத்தால் விழுவான். 16 அவர்கள் குழந்தைகள் அவர்கள் கண்களுக்கு முன்பாக மோதியடிக்கப்படும்; அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்; அவர்கள் மனைவிகள் அவமானப்படுவார்கள். 17 இதோ, நான் அவர்களுக்கு விரோதமாய் மேதியரை எழுப்புவேன்; அவர்கள் வெள்ளியை மதியாமலும், பொன்னின்மேல் பிரியப்படாமலும், 18 வில்லுகளால் இளைஞரைச் சிதைத்துவிடுவார்கள்; கர்ப்பக்கனியின்மேல் அவர்கள் இரங்குவதில்லை; அவர்கள் கண் பிள்ளைகளைத் தப்பவிடுவதுமில்லை. 19 ராஜ்யங்களுக்குள் அலங்காரமும், கல்தேயருடைய பிரதான மகிமையுமாகிய பாபிலோனானது தேவனால் சோதோமும் கொமோராவும் கவிழ்க்கப்பட்டதுபோல கவிழ்க்கப்படும். 20 இனி ஒருபோதும் அதில் ஒருவரும் குடியேறுவதுமில்லை, தலைமுறைதோறும் அதில் ஒருவரும் தங்கித் தரிப்பதுமில்லை; அங்கே அரபியன் கூடாரம்போடுவதுமில்லை; அங்கே மேய்ப்பர் மந்தையை மறிப்பதுமில்லை. 21 காட்டுமிருகங்கள் அங்கே படுத்துக்கொள்ளும்; ஊளையிடும் பிராணிகள் அவர்கள் வீடுகளை நிரப்பும்; கோட்டான்கள் அங்கே குடிகொள்ளும்; காட்டாடு அங்கே துள்ளும். 22 அவர்கள் பாழான மாளிகைகளில் ஓரிகள் ஊளையிடும்; வலுசர்ப்பங்கள் அவர்கள் செல்விக்கையான அரமனைகளில் ஏகமாய்க் கூடும்; அதின்காலம் சீக்கிரம் வரும், அதின் நாட்கள் நீடித்திராது என்கிறார்.

ஏசாயா 14

1 கர்த்தர் யாக்கோபுக்கு இரங்கி, பின்னும் இஸ்ரவேலரைத் தெரிந்துகொண்டு, அவர்களை அவர்கள் தேசத்திலே தாபரிக்கப்பண்ணுவார்; அந்நியரும் அவர்களோடு சேர்க்கையாகி, யாக்கோபின் வம்சத்தோடே கூடிக்கொள்வார்கள். 2 ஜனங்கள் அவர்களை அழைத்துக்கொண்டுபோய் அவர்கள் ஸ்தானத்தில் விடுவார்கள்; இஸ்ரவேல் வம்சத்தார் கர்த்தருடைய தேசத்திலே அவர்களை வேலைக்காரராகவும் வேலைக்காரிகளாகவும் கையாண்டு, தங்களைச் சிறையாக்கினவர்களைச் சிறையாக்கி, தங்களை ஒடுக்கினவர்களை ஆளுவார்கள். 3 கர்த்தர் உன் துக்கத்தையும், உன் தத்தளிப்பையும், நீ அடிமையாக்கப்பட்டிருந்த கடினமான அடிமைத்தனத்தையும் நீக்கி, உன்னை இளைப்பாறப்பண்ணும் அக்காலத்திலே, 4 நீ பாபிலோன் ராஜாவின்மேல் சொல்லும் வாக்கியமாவது: ஒடுக்கினவன் ஒழிந்துபோனானே! பொன்னகரி ஒழிந்துபோயிற்றே! 5 கர்த்தர் துஷ்டரின் தண்டாயுதத்தையும், அரசாண்டவர்களின் செங்கோலையும் முறித்துப்போட்டார். 6 உக்கிரங்கொண்டு ஓயாத அடியாய் ஜனங்களை அடித்து, கோபமாய் ஜாதிகளை அரசாண்டவன், தடுப்பாரில்லாமல் துன்பப்படுத்தப்படுகிறான். 7 பூமிமுழுதும் இளைப்பாறி அமைந்திருக்கிறது; கெம்பீரமாய் முழங்குகிறார்கள். 8 தேவதாரு விருட்சங்களும், லீபனோனின் கேதுருக்களும், உன்னிமித்தம் சந்தோஷப்பட்டு, நீ விழுந்துகிடந்தது முதற்கொண்டு எங்களை வெட்டவருவார் ஒருவரும் இல்லை என்று சொல்லுகிறது. 9 கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி, ஜாதிகளுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கப்பண்ணுகிறது. 10 அவர்களெல்லாரும் உன்னை நோக்கி: நீயும் எங்களைப்போலப் பலட்சயமானாயோ? எங்களுக்குச் சமானமானாயோ? என்று சொல்லுவார்கள். 11 உன் ஆடம்பரமும், உன் வாத்தியங்களின் முழக்கமும் பாதாளத்தில் தள்ளுண்டுபோயிற்று; புழுக்களே உன் படுக்கை, பூச்சிகளே உன் போர்வை. 12 அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! 13 நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், 14 நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. 15 ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய். 16 உன்னைக் காண்கிறவர்கள் உன்னை உற்றுப்பார்த்து, உன்னைக்குறித்துச் சிந்தித்து: இவன்தானா பூமியைத் தத்தளிக்கவும், ராஜ்யங்களை அதிரவும் செய்து, 17 உலகத்தை வனாந்தரமாக்கி, அதின் நகரங்களை அழித்து, சிறைப்பட்டவர்களைத் தங்கள் வீடுகளுக்குப் போகவிடாமலிருந்தவன் என்பார்கள். 18 ஜாதிகளுடைய சகல ராஜாக்களும், அவரவர் தங்கள் அறையிலே மகிமையோடே கிடத்தப்பட்டிருக்கிறார்கள். 19 நீயோ அழுகிப்போன கிளையைப்போலவும், பட்டயக்குத்தால் கொலையுண்டவர்களின் உடுப்பைப்போலவும், ஒரு குழியின் கற்களுக்குள்ளே கிடக்கிறவர்களைப்போலவும், காலால் மிதிக்கப்பட்ட பிணத்தைப்போலவும், உன் கல்லறைக்குப் புறம்பாய் எறிந்துவிடப்பட்டாய். 20 நீ அவர்களோடே அடக்கம் பண்ணப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் ஜனத்தைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை. 21 அவன் புத்திரர் எழும்பித் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, உலகத்தைப் பட்டணங்களால் நிரப்பாதபடிக்கு, அவர்கள் பிதாக்களுடைய அக்கிரமத்தினிமித்தம் அவர்களைக் கொலைசெய்ய ஆயத்தம்பண்ணுங்கள். 22 நான் அவர்களுக்கு விரோதமாய் எழும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோனுடைய பேரையும், அதில் மீந்திருக்கிறதையும், புத்திரனையும் பௌத்திரனையும் சங்கரிப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார். 23 அதை முள்ளம்பன்றிகளுக்குச் சுதந்தரமும், தண்ணீர் நிற்கும் பள்ளங்களுமாக்கி, அதைச் சங்காரம் என்னும் துடைப்பத்தினால் பெருக்கிவிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 24 நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும் என்று சேனைகளின் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்னார். 25 அசீரியனை என் தேசத்திலே முறித்து, என் மலைகளின்மேல் அவனை மிதித்துப்போடுவேன்; அப்பொழுது அவனுடைய நுகம் அவர்கள்மேலிருந்து விலகி, அவனுடைய சுமை அவர்கள் தோளிலிருந்து நீங்கும். 26 தேசமனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட யோசனை இதுவே; சகல ஜாதிகள்மேலும் நீட்டப்பட்டிருக்கிற கையும் இதுவே என்றார். 27 சேனைகளின் கர்த்தர் இப்படி நிர்ணயித்திருக்கிறார், யார் அதை வியர்த்தமாக்குவான்? அவருடைய கை நீட்டப்பட்டிருக்கிறது, யார் அதைத் திருப்புவான்? 28 ஆகாஸ் ராஜா மரணமடைந்த வருஷத்திலே உண்டான பாரம் என்னவென்றால்: 29 முழு பெலிஸ்தியாவே, உன்னை அடித்த கோல் முறிந்ததென்று அக்களிப்பாயிராதே; பாம்பின் வேரிலிருந்து கட்டுவிரியன் தோன்றும்; அதின் கனி பறக்கிற அக்கினி சர்ப்பமாயிருக்கும். 30 தரித்திரரின் தலைப்பிள்ளைகள் திருப்தியாய்ப் புசித்து, எளியவர்கள் சுகமாய்ப் படுத்திருப்பார்கள்; உன்வேரைப் பஞ்சத்தினாலே சாகப்பண்ணுவேன், உன்னில் மீதியானவர்களை அவன் கொன்றுபோடுவான். 31 வாசலே அலறு; நகரமே கதறு; பெலிஸ்தியாவே, நீ முழுதும் கரைந்துபோகிறாய்; ஏனென்றால், வடக்கே இருந்து புகைக்காடாய் வருகிறான்; அவன் கூட்டங்களில் தனித்தவனில்லை. 32 இப்போதும் இந்த ஜாதியின் ஸ்தானாபதிகளுக்கு என்ன மாறுத்தரவு சொல்லப்படும்? கர்த்தர் சீயோனை அஸ்திபாரப்படுத்தினார்; அவருடைய ஜனத்தில் சிறுமையானவர்கள் அதிலே திடன்கொண்டு தங்குவார்கள் என்பதே.

ஏசாயா 15

1 மோவாபின் பாரம். இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது சங்காரமாயிற்று. 2 அழும்படி மேடைகளாகிய பாயித்துக்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவினிமித்தமும் மேதெபாவினிமித்தமும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும். 3 அதின் வீதிகளில் இரட்டைக்கட்டிக்கொண்டு, எல்லாரும் அதின் வீடுகள்மேலும், அதின் தெருக்களிலும் அலறி, அழுதுகொண்டிருக்கிறார்கள். 4 எஸ்போன் ஊராரும் எலெயாலே ஊராரும் கூக்குரலிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்மட்டும் கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதபாணிகள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் கிலேசப்படுகிறது. 5 என் இருதயம் மோவாபினிமித்தம் ஓலமிடுகிறது; அதிலிருந்து ஓடிவருகிறவர்கள் மூன்று வயது கிடாரியைப்போல அலைகிறார்கள்; லூகித்துக்கு ஏறிப்போகிற வழியிலே அழுகையோடே ஏறுகிறார்கள்; ஒரோனாயீமின் வழியிலே நொறுங்குதலின் கூக்குரல் இடுகிறார்கள். 6 நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போம்; புல் உலர்ந்து, முளை அழிந்து, பச்சையில்லாமற்போகிறது. 7 ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும், அவர்கள் சம்பாதித்து வைத்ததையும், அலரிகளின் ஆற்றுக்கப்பாலே எடுத்துக்கொண்டுபோவார்கள். 8 கூக்குரல் மோவாபின் எல்லையெங்கும் சுற்றும்; எக்லாயிம்மட்டும் அதின் அலறுதலும், பெரேலீம்மட்டும் அதின் புலம்புதலும் எட்டும். 9 தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிக கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரப்பண்ணுவேன்.

ஏசாயா 16

1 தேசாதிபதிக்குச் செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை நீங்கள் சேலாபட்டணந்துவக்கி வனாந்தரமட்டும் சேர்த்துச் சீயோன் குமாரத்தியின் மலைக்கு அனுப்புங்கள். 2 இல்லாவிட்டால் கூட்டைவிட்டுத் துரத்தப்பட்டு அலைகிற குருவியைப்போல மோவாபின் குமாரத்திகள் அர்னோன் நதியின் துறைகளிடத்திலிருப்பார்கள். 3 நீ ஆலோசனைபண்ணி, நியாயஞ்செய்து, மத்தியானத்திலே உன் நிழலை இரவைப்போலாக்கி, துரத்தப்பட்டவர்களை மறைத்துக்கொள், ஓடிவருகிறவர்களைக் காட்டிக்கொடாதிரு. 4 மோவாபே, துரத்திவிடப்பட்ட என் ஜனங்கள் உன்னிடத்தில் தங்கட்டும்; சங்கரிக்கிறவனுக்குத் தப்ப அவர்களுக்கு அடைக்கலமாயிரு; ஒடுக்குகிறவன் இல்லாதேபோவான்; சங்கரிப்பு ஒழிந்துபோம்; மிதிக்கிறவர்கள் தேசத்தில் இராதபடிக்கு அழிந்துபோவார்கள். 5 கிருபையினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார். 6 மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் உக்கிரத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மெத்தப் பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது. 7 ஆகையால், மோவாபியர் ஒருவருக்காக ஒருவர் அலறுவார்கள், எல்லாரும் ஏகமாய் அலறுவார்கள்; கிராரேசேத் ஊரின் அஸ்திபாரங்கள் தகர்க்கப்பட்டதே என்று அவைகளுக்காகப் பெருமூச்சு விடுவார்கள். 8 எஸ்போன் ஊர் வயல்கள் வாடிப்போயின; சிப்மாஊர்த் திராட்சச்செடியின் நல்ல கொடிகளை ஜாதிகளின் அதிபதிகள் நறுக்கிப்போட்டார்கள்; அவைகள் யாசேர்மட்டும் சென்று வனாந்தரத்தில் படர்ந்திருந்தது; அவைகளின் கொடிகள் நீண்டு கடலுக்கப்பாலே எட்டியிருந்தது. 9 ஆகையால் யாசேருக்காக அழுததுபோல, சிப்மாஊர்த் திராட்சச்செடிக்காகவும் மிகவும் அழுவேன்; எஸ்போனே, எலெயாலேயே, உனக்கு என் கண்ணீரைப் பாய்ச்சுவேன்; உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும், உன் திராட்சப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோயிற்று. 10 பயிர்வெளியிலிருந்து சந்தோஷமும் களிப்பும் அற்றுப்போயின; திராட்சத்தோட்டங்களில் பாடலுமில்லை ஆர்ப்பரிப்புமில்லை; ஆலையில் இரசத்தை மிதிக்கிறவனுமில்லை; சந்தோஷ ஆரவாரத்தை ஓயப்பண்ணினேன். 11 ஆகையால் மோவாபினிமித்தம் என் குடல்களும், கிராரேசினிமித்தம் என் உள்ளமும் சுரமண்டலத்தைப் போலத் தொனிக்கிறது. 12 மோவாப் மேடைகளின்மேல் சலித்துப்போனான் என்று காணப்படும்போது, பிரார்த்தனைசெய்யத் தன் பரிசுத்த ஸ்தானத்திலே பிரவேசிப்பான்; ஆனாலும் அநுகூலப்படமாட்டான். 13 மோவாபைக்குறித்து அக்காலத்திலே கர்த்தர் சொன்ன வார்த்தை இதுவே. 14 ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த மூன்று வருஷங்களுக்குள்ளே மோவாபின் மகிமையும் அதின் மகா ஜனக்கூட்டமும் சீரழிந்துபோம்; அதில் மீதியாயிருப்பது மிகவும் சிறிதும் அற்பமுமாயிருக்கும் என்று கர்த்தர் இப்பொழுது சொல்லுகிறார்.

ஏசாயா 17

1 தமஸ்குவின் பாரம். இதோ, தமஸ்குவானது நகரமாயிராமல் தள்ளப்பட்டு, பாழான மண்மேடாகும். 2 ஆரோவேரின் பட்டணங்கள் பாழாய் விடப்பட்டு, மந்தைகளின் வெளியாயிருக்கும்; மிரட்டுவாரில்லாமல் அவைகள் அங்கே படுத்துக்கொள்ளும். 3 அரண் எப்பிராயீமையும், ராஜாங்கம் தமஸ்குவையும் விட்டொழியும்; இஸ்ரவேல் புத்திரருடைய மகிமைக்கு நேரிட்டதுபோல சீரியாவில் மீதியாயிருப்பவர்களுக்கும் நேரிடும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 4 அக்காலத்திலே யாக்கோபின் மகிமை குறைந்துபோம், அவனுடைய கொழுத்த தேகம் மெலிந்துபோம். 5 ஒருவன் ஓங்கின பயிரை அரிந்து, தன் கையினால் கதிர்களை அறுத்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே கதிர்களைச் சேர்க்கிறதுபோலிருக்கும். 6 ஆனாலும் ஒலிவ மரத்தை உலுக்கும்போது நுனிக்கொம்பிலே இரண்டு மூன்று காய்களும், காய்க்கிற அதின் கிளைகளிலே நாலைந்து காய்களும் மீதியாயிருப்பதுபோல, அதிலே பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீதியாயிருக்குமென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். 7 அக்காலத்திலே மனுஷன் தன் கைகளின் கிரியையாகிய பீடங்களை நோக்காமலும், தன் விரல்கள் உண்டுபண்ணின தோப்புவிக்கிரகங்களையும், சிலைகளையும் நோக்காமலும், 8 தன்னை உண்டாக்கினவரையே நோக்குவான், அவன் கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரையே நோக்கிக்கொண்டிருக்கும். 9 அக்காலத்திலே அவர்களுடைய அரணான பட்டணங்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு மீதியாய் வைக்கப்பட்ட தழையைப்போலவும், நுனிக்கொம்பைப்போலவுமாகி, பாழாய்க் கிடக்கும். 10 உன் பெலமாகிய கன்மலையை நீ நினையாமல், உன் இரட்சிப்பாகிய தேவனை மறந்தாய்; ஆதலால் நீ நேர்த்தியான நாற்றுகளை நட்டாலும், அந்நிய தேசத்துக் கன்றுகளை வைத்தாலும், 11 பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும், விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் பண்ணினாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும். 12 ஐயோ! கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக ஜனங்களின் திரளும், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிற ஜனக்கூட்டங்களின் அமளியும் உண்டாயிருக்கிறது. 13 ஜனக்கூட்டங்கள் திரளான தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார்; அவர்கள் தூரமாய் ஓடிப்போவார்கள்; மலைகளிலே காற்றினால் பறக்கடிக்கிற பதரைப்போலவும், சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள். 14 இதோ, சாயங்காலத்திலே கலக்கமுண்டாகும், விடியற்காலத்துக்குமுன் அவர்கள் ஒழிந்துபோவார்கள்; இதுவே நம்மைக் கொள்ளையாடுகிறவர்களின் பங்கும், நம்மைச் சூறையாடுகிறவர்களின் வீதமுமாயிருக்கும்.

ஏசாயா 18

1 எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலே நிழலிடும் செட்டைகளுடையதும், 2 கடல்வழியாய்த் தண்ணீர்களின்மேல் நாணல் படவுகளிலே ஸ்தானாபதிகளை அனுப்புகிறதுமான தேசத்துக்கு ஐயோ! வேகமான தூதர்களே, நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியண்டைக்குப் போங்கள். 3 பூச்சக்கரத்தில் வாசமாயிருக்கிறவர்களும், தேசத்துக் குடிகளுமாகிய நீங்களெல்லாரும், மலைகளின்மேல் கொடியேற்றப்படும்போது பாருங்கள், எக்காளம் ஊதப்படும்போது கேளுங்கள். 4 நான் அமர்ந்திருந்து பயிரின்மேல் காயும் காந்தியுள்ள வெயிலைப்போலவும், அறுப்புக்காலத்து உஷ்ணத்தில் உண்டாகும் பனிமேகத்தைப்போலவும், என் வாசஸ்தலத்திலிருந்து கண்ணோக்குவேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார். 5 திராட்சச்செடிகள் அறுப்புக்கு முன்னே பூப்பூத்து முற்றிக் காய்க்கிற காய்கள் பிஞ்சாயிருக்கும்போதே, அவர் அரிவாள்களினாலே கப்புக்கவர்களை அறுத்துக் கொடிகளையரிந்து அகற்றிப்போடுவார். 6 அவைகள் ஏகமாய் மலைகளின் பட்சிகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் விடப்படும்; பட்சிகள் அதின்மேல் கோடைகாலத்திலும், காட்டுமிருகங்களெல்லாம் அதின்மேல் மாரிகாலத்திலும் தங்கும். 7 அக்காலத்திலே நெடுந்தூரமாய்ப் பரவியிருக்கிறதும், சிரைக்கப்பட்டதும், துவக்கமுதல் இதுவரைக்கும் கெடியாயிருந்ததும், அளவிடப்பட்டதும், மிதிக்கப்பட்டதும், நதிகள் பாழாக்குகிறதுமான ஜாதியானது, சேனைகளின் கர்த்தரின் நாமம் தங்கும் ஸ்தலமாகிய சீயோன் மலையில், சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவரப்படும்.

ஏசாயா 19

1 எகிப்தின் பாரம். இதோ, கர்த்தர் வேகமான மேகத்தின்மேல் ஏறி எகிப்துக்கு வருவார்; அப்பொழுது எகிப்தின் விக்கிரகங்கள் அவருக்கு முன்பாகக் குலுங்கும், எகிப்தின் இருதயம் தனக்குள்ளே கரைந்துபோகும். 2 சகோதரனோடே சகோதரனும், சிநேகிதனோடே சிநேகிதனும், பட்டணத்தோடே பட்டணமும், ராஜ்யத்தோடே ராஜ்யமும் யுத்தம்பண்ணும்படியாய், எகிப்தியரை எகிப்தியரோடே போர் கலக்கப்பண்ணுவேன். 3 அதினால் எகிப்தியருடைய ஆவி அவர்களுக்குள் சோர்ந்துபோகும்; அவர்கள் ஆலோசனையை முழுகிப்போகப் பண்ணுவேன்; அப்பொழுது விக்கிரகங்களையும், மந்திரவாதிகளையும், சன்னதக்காரர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் தேடுவார்கள். 4 நான் எகிப்தியரைக் கடினமான அதிபதியின் கையில் ஒப்பிப்பேன்; கடூரமான ராஜா அவர்களை ஆளுவான் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 5 அப்பொழுது கடலின் தண்ணீர்கள் குறைந்து, நதியும் வற்றி வறண்டுபோம். 6 ஆறுகளைத் திருப்பிவிடுவார்கள்; அரணிப்பான அகழிகள் வெறுமையாகி வறண்டுபோம்; கொறுக்கையும் நாணலும் வாடும். 7 நதியோரத்திலும் நதிமுகத்திலும் இருக்கிற மடலுள்ள செடிகளும், நதியருகே விதைக்கப்பட்ட யாவும் உலர்ந்துபோம்; அது பறக்கடிக்கப்பட்டு இல்லாதேபோம். 8 மீன்பிடிக்கிறவர்கள் பெருமூச்சுவிடுவார்கள், நதியிலே தூண்டில்போடுகிற யாவரும் துக்கிப்பார்கள்; தண்ணீர்களின்மேல் வலைகளை வீசுகிறவர்கள் சலித்துப்போவார்கள். 9 மெல்லிய சணலைப் பக்குவப்படுத்துகிறவர்களும், சல்லாக்களை நெய்கிறவர்களும் நாணுவார்கள். 10 மீன் வளர்க்கிற குளங்களைக் கூலிக்கு அணைக்கட்டுகிற அனைவருடைய அணைக்கட்டுகளும் உடைந்துபோம். 11 சோவான்பட்டணத்தின் பிரபுக்களானவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமாயிற்று: நான் ஞானிகளின் புத்திரன், நான் பூர்வ ராஜாக்களின் குமாரன் என்று பார்வோனுடனே எப்படிச் சொல்லுகிறீர்கள்? 12 அவர்கள் எங்கே? உன் ஞானிகள் எங்கே? சேனைகளின் கர்த்தர் எகிப்தைக்குறித்துப் பண்ணின யோசனையை அவர்கள் உனக்குத் தெரிவிக்கட்டும்; அல்லது தாங்களே அறிந்துகொள்ளட்டும். 13 சோவான் பிரபுக்கள் மூடரானார்கள்; நோப்பின் பிரபுக்கள் மோசம்போனார்கள்; எகிப்தையும் அதின் கோத்திரத்தலைவரையும் வழிதப்பப்பண்ணுகிறார்கள். 14 கர்த்தர் அதின் நடுவில் தாறுமாறுகளின் ஆவியை வரப்பண்ணினார்; ஆனதுகொண்டு வெறியன் வாந்திபண்ணி, தள்ளாடித் திரிகிறதுபோல, அவர்கள் எகிப்தை அதின் எல்லாச் செய்கையிலும் தள்ளாடித் திரியப்பண்ணுகிறார்கள். 15 எகிப்தில் தலையாகிலும் வாலாகிலும் கிளையாகிலும் நாணலாகிலும் செய்யும் வேலை ஒன்றுமிராது. 16 அக்காலத்திலே எகிப்தியர் பெண்டுகளைப்போலிருந்து, சேனைகளின் கர்த்தர் தங்கள்மேல் அசைக்கும் கையசைவினாலே அஞ்சி நடுங்குவார்கள். 17 சேனைகளின் கர்த்தர் அவர்களுக்கு விரோதமாக நிர்ணயித்துக்கொண்ட ஆலோசனையினிமித்தம் யூதாவின் தேசம் எகிப்தியருக்குப் பயங்கரமாயிருக்கும்; தனக்குள் அதை நினைக்கிறவனெவனும் திடுக்கிடுவான். 18 அக்காலத்திலே எகிப்துதேசத்திலிருக்கும் ஐந்து பட்டணங்கள் கானான் பாஷையைப் பேசி, சேனைகளின் கர்த்தரை முன்னிட்டு ஆணையிடும்; அவைகளில் ஒன்று நிர்மூலமான பட்டணம் என்னப்படும். 19 அக்காலத்திலே எகிப்துதேசத்தின் நடுவிலே கர்த்தருக்கு ஒரு பலிபீடமும், அதின் எல்லையருகே கர்த்தருக்கு ஒரு ஸ்தம்பமும் உண்டாயிருக்கும். 20 அது எகிப்து தேசத்திலே சேனைகளின் கர்த்தருக்கு அடையாளமும் சாட்சியுமாயிருக்கும்; ஒடுக்குகிறவர்களினிமித்தம் அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; அப்பொழுது அவர்களுக்கு ஒரு இரட்சகனையும், ஒரு பெலவானையும் அனுப்பி அவர்களை விடுவிப்பார். 21 அப்பொழுது கர்த்தர் எகிப்தியருக்கு அறியப்படுவார்; எகிப்தியர் கர்த்தரை அக்காலத்திலே அறிந்து, அவருக்குப் பலிகளோடும் காணிக்கைகளோடும் ஆராதனைசெய்து, கர்த்தருக்குப் பொருத்தனைகளைப்பண்ணி அவைகளைச் செலுத்துவார்கள். 22 கர்த்தர் எகிப்தியரை வாதையினால் அடிப்பார்; அடித்துக் குணமாக்குவார்; அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள்; அப்பொழுது அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களைக் குணமாக்குவார். 23 அக்காலத்திலே எகிப்திலிருந்து அசீரியாவுக்குப் போகிற பெரும்பாதை உண்டாயிருக்கும்; அசீரியர் எகிப்துக்கும், எகிப்தியர் அசீரியாவுக்கும் வந்து, எகிப்தியர் அசீரியரோடுங்கூட ஆராதனை செய்வார்கள். 24 அக்காலத்திலே இஸ்ரவேல் எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாகப் பூமியின் நடுவில் ஆசீர்வாதமாயிருக்கும். 25 அவர்களைக்குறித்துச் சேனைகளின் கர்த்தர்: எகிப்தியராகிய என் ஜனமும், அசீரியராகிய என் கரத்தின் கிரியையும், இஸ்ரவேலராகிய என் சுதந்தரமும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதிப்பார்.

ஏசாயா 20

1 தர்த்தான், அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்துக்கு வந்து, அஸ்தோத்தின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்த வருஷத்திலே, 2 கர்த்தர் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் அரையிலிருக்கிற இரட்டை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தான். 3 அப்பொழுது கர்த்தர்: எகிப்தின்மேலும் எத்தியோப்பியாவின்மேலும் வரும் மூன்றுவருஷத்துக் காரியங்களுக்கு அடையாளமும் குறிப்புமாக என் ஊழியக்காரனாகிய ஏசாயா வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடக்கிறதுபோல, 4 அசீரியா ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய இளைஞரையும் கிழவரையும், வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் எகிப்தியருக்கு வெட்கமுண்டாகும்படி, இருப்பிடம் மூடப்படாதவர்களாய்க் கொண்டுபோவான். 5 அப்பொழுது இந்தக் கடற்கரைக் குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக்குறித்தும், தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக்குறித்தும் கலங்கி வெட்கி: 6 இதோ, அசீரிய ராஜாவின் முகத்துக்குத் தப்பும்படிக்கு நாங்கள் நம்பி, சகாயத்துக்கென்று ஓடிவந்து அண்டினவன் இப்படியானானே; நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று அக்காலத்திலே சொல்லுவார்கள் என்றார்.

ஏசாயா 21

1 கடல் வனாந்தரத்தின் பாரம். சுழல்காற்று தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்துவருகிறதுபோல, பயங்கரமான தேசமாகிய வனாந்தரத்திலிருந்து அது வருகிறது. 2 கொடிய தரிசனம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது; துரோகி துரோகம்பண்ணி, பாழாக்கிறவன் பாழாக்கிக்கொண்டே இருக்கிறான்; ஏலாமே எழும்பு; மேதியாவே முற்றிக்கைபோடு; அதினாலே உண்டான தவிப்பையெல்லாம் ஒழியப்பண்ணினேன். 3 ஆகையால், என் இடுப்பு மகா வேதனையால் நிறைந்திருக்கிறது; பிள்ளைபெறுகிறவளின் வேதனைகளுக்கு ஒத்த வேதனைகள் என்னைப் பிடித்தது; கேட்டதினால் உளைவுகொண்டு, கண்டதினால் கலங்கினேன். 4 என் இருதயம் திகைத்தது; திகில் என்னைத் திடுக்கிடப்பண்ணிற்று; எனக்கு இன்பந்தந்த இரவு பயங்கரமாயிற்று. 5 பந்தியை ஆயத்தப்படுத்துங்கள், ஜாமக்காரரை வையுங்கள், புசியுங்கள், குடியுங்கள்; பிரபுக்களே, எழுந்து பரிசைகளுக்கு எண்ணெய் பூசுங்கள். 6 ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிக்கும்படி ஜாமக்காரனை வை என்றார். 7 அவன் ஒரு இரதத்தையும், ஜோடு ஜோடான குதிரைவீரரையும், ஜோடு ஜோடாகக் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஏறிவருகிறவர்களையும் கண்டு, மிகுந்த கவனமாய்க் கவனித்துக்கொண்டே இருந்து: 8 ஆண்டவரே, நான் பகல்முழுதும் என் காவலிலே நின்று, இராமுழுதும் நான் என் காவலிடத்திலே தரித்திருக்கிறேன் என்று சிங்கத்தைப்போல் சத்தமிட்டுக் கூப்பிடுகிறான். 9 இதோ, ஒரு ஜோடு குதிரை பூண்ட இரதத்தின்மேல் ஏறியிருக்கிற ஒரு மனுஷன் வருகிறான்; பாபிலோன் விழுந்தது, விழுந்தது; அதின் விக்கிரக தேவர்களையெல்லாம் தரையோடே மோதி உடைத்தார் என்று பிரதியுத்தரம் சொல்லுகிறான். 10 என் போரடிப்பின் தானியமே, என் களத்தின் கோதுமையே, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தரால் நான் கேள்விப்பட்டதை உங்களுக்கு அறிவித்தேன். 11 தூமாவின் பாரம். சேயீரிலிருந்து என்னை நோக்கி: ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டுக் கேட்க; 12 அதற்கு ஜாமக்காரன்: விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது; நீங்கள் கேட்க மனதானால் திரும்பிவந்து கேளுங்கள் என்று சொல்லுகிறான். 13 அரபியாவின் பாரம். திதானியராகிய பயணக்கூட்டங்களே, நீங்கள் அரபியாவின் காடுகளில் இராத்தங்குவீர்கள். 14 தேமாதேசத்தின் குடிகளே, நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய், தப்பி ஓடுகிறவர்களுக்கு அப்பங்கொடுக்க எதிர்கொண்டுபோங்கள். 15 அவர்கள், பட்டயங்களுக்கும், உருவின கட்கத்துக்கும், நாணேற்றின வில்லுக்கும், யுத்தத்தின் கொடுமைக்கும் தப்பி ஓடுகிறார்கள். 16 ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த ஒரே வருஷத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போம். 17 கேதார் புத்திரராகிய பராக்கிரம வில்வீரரின் தொகையில் மீதியானவர்கள் கொஞ்சப்பேராயிருப்பார்கள் என்றார்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதை உரைத்தார்.

ஏசாயா 22

1 தரிசனப் பள்ளத்தாக்கின் பாரம். உன்னில் உள்ளவர்கள் எல்லாரும் வீடுகளின்மேல் ஏறுவதற்கு உனக்கு இப்பொழுது வந்தது என்ன? 2 சந்தடிகளால் நிறைந்து ஆரவாரம்பண்ணி, களிகூர்ந்திருந்த நகரமே, உன்னிடத்தில் கொலையுண்டவர்கள் பட்டயத்தால் கொலையுண்டதில்லை, யுத்தத்தில் செத்ததும் இல்லை. 3 உன் அதிபதிகள் எல்லாரும் ஏகமாய் ஓடி அலைந்தும், வில்வீரரால் கட்டப்படுகிறார்கள்; உன்னில் அகப்பட்ட யாவரும் தூரத்துக்கு ஓடியும் ஏகமாய்க் கட்டப்படுகிறார்கள். 4 ஆகையால், என்னை நோக்கிப் பாராதேயுங்கள்; என் ஜனமாகிய குமாரத்தி பாழாய்ப்போனதினிமித்தம் மனங்கசந்து அழுவேன்; எனக்கு ஆறுதல் சொல்ல வராதேயுங்கள் என்கிறேன். 5 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே இது தரிசனப் பள்ளத்தாக்கிலே அமளியும், மிதியுண்குதலும், கலக்கமுமுள்ள நாளாயிருக்கிறது; இது அலங்கத்தைத் தகர்த்து, பர்வதத்துக்கு நேரே ஆர்ப்பரிக்கும் நாளாயிருக்கிறது. 6 ஏலாமியன் அம்பறாத்தூணியை எடுத்து, இரதங்களோடும் காலாட்களோடும் குதிரைவீரரோடும் வருகிறான்; கீர் கேடகத்தை வெளிப்படுத்தும். 7 மகா வடிவான உன் பள்ளத்தாக்குகள் இரதங்களால் நிரப்பப்படும்; குதிரைவீரர் வாசல்கள்மட்டும் வந்து அணிவகுத்து நிற்பார்கள். 8 அவன் யூதாவின் மறைவை நீக்கிப்போடுவான்; அந்நாளிலே வனமாளிகையாகிய ஆயுதசாலையை நோக்குவாய். 9 நீங்கள் தாவீது நகரத்தின் இடிதல்கள் அநேகமாயிருப்பதைக் கண்டு, கீழ்க்குளத்துத் தண்ணீர்களைக் கட்டிவைத்து, 10 எருசலேமின் வீடுகளை எண்ணி, அலங்கத்தை அரணிப்பாக்கும்படி வீடுகளை இடித்து, 11 இரண்டு மதில்களுக்கு நடுவே பழைய குளத்துத் தண்ணீர்களுக்கு ஒரு அகழை உண்டுபண்ணுவீர்கள்; ஆனாலும் அதைச் செய்தவரை நீங்கள் நோக்காமலும், அதை ஏற்படுத்தித் தூரத்திலிருந்து வரப்பண்ணினவரைக் கவனியாமலும் போகிறீர்கள். 12 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் அக்காலத்திலே அழவும், புலம்பவும், மொட்டையிடவும், இரட்டுடுத்தவும் கட்டளையிட்டார். 13 நீங்களோ, சந்தோஷித்துக் களித்து, ஆடுமாடுகளை அடித்து, இறைச்சியைச் சாப்பிட்டு, திராட்சரசத்தைக் குடித்து: புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்வீர்கள். 14 மெய்யாகவே நீங்கள் சாகுமட்டும் இந்த அக்கிரமம் உங்களுக்கு நிவிர்த்தியாவதில்லை என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறாரென்பது என் செவி கேட்கும்படி சேனைகளின் கர்த்தரால் தெரிவிக்கப்பட்டது. 15 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் உரைத்ததாவது: நீ அரமனை விசாரிப்புக்காரனும் பொக்கிஷக்காரனுமாகிய செப்னா என்பவனிடத்தில் போய்ச் சொல்லவேண்டியது என்னவென்றால், 16 உயர்ந்த ஸ்தலத்திலே தன் கல்லறையை வெட்டி, கன்மலையிலே தனக்கு வாசஸ்தலத்தைத் தோண்டுகிறவனைப்போல, நீ உனக்கு இங்கே கல்லறையை வெட்டும்படிக்கு உனக்கு இங்கே என்ன இருக்கிறது? உனக்கு இங்கே யார் இருக்கிறார்கள்? 17 இதோ, பெலவான் ஒருவனைத் துரத்துகிறவண்ணமாகக் கர்த்தர் உன்னைத் துரத்திவிட்டு, நிச்சயமாய் உன்னை மூடிப்போடுவார். 18 அவர் உன்னை உருண்டையைப்போல அகலமும் விசாலமுமான தேசத்திலே சுழற்றி எறிந்துவிடுவார்; அங்கே நீ சாவாய்; அங்கே உன் மகிமையின் இரதங்கள் உன் ஆண்டவனுடைய வீட்டுக்கு இகழ்ச்சியாக இருக்கும். 19 உன்னை உன் நிலையைவிட்டுத் துரத்திவிடுவேன்; உன் ஸ்தானத்திலிருந்து நீ பிடுங்கிப்போடப்படுவாய். 20 அந்நாளிலே இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் என் ஊழியக்காரனை நான் அழைத்து: 21 உன் வஸ்திரத்தை அவனுக்குத் தரித்து, உன் கச்சையால் அவனை இடைக்கட்டி, உன் அதிகாரத்தை அவன் கையிலே கொடுப்பேன்; அவன் எருசலேமின் குடிகளுக்கும், யூதாவின் வம்சத்துக்கும் தகப்பனாயிருப்பான். 22 தாவீதுடைய வீட்டின் திறவுகோலை அவன் தோளின்மேல் வைப்பேன்; ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்கு அவன் திறப்பான், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்கு அவன் பூட்டுவான். 23 அவனை உறுதியான இடத்திலே ஆணியாகக் கடாவுவேன்; அவன் தன் தகப்பன் வீட்டுக்கு மகிமையான சிங்காசனமாக இருப்பான். 24 அதின்மேல் அவன் தகப்பன் வம்சத்தாராகிய புத்திரர் பௌத்திரருடைய மகிமை அனைத்தையும், சிறிதும் பெரிதுமான சகல பானபாத்திரங்களையும் தூக்கிவைப்பார்கள். 25 உறுதியான இடத்தில் கடாவப்பட்டிருந்த ஆணி அந்நாளிலே பிடுங்கப்பட்டு, முறிந்துவிழும்; அப்பொழுது அதின்மேல் தொங்கின பாரம் அறுந்துவிழும் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார்; கர்த்தரே இதை உரைக்கிறார் என்று சொல் என்றார்.

ஏசாயா 23

1 தீருவின் பாரம். தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; அது வீடு இல்லாதபடிக்கும், அதில் வருவார் இல்லாதபடிக்கும் பாழாக்கப்பட்டது; இந்தச் செய்தி கித்தீம் தேசத்திலிருந்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. 2 தீவுக்குடிகளே, மவுனமாயிருங்கள்; சீதோனின் வர்த்தகர் சமுத்திரத்திலே யாத்திரைபண்ணி உன்னை நிரப்பினார்கள். 3 சீகோர் நதியின் மிகுந்த நீர்ப்பாய்ச்சல்களால் விளையும் பயிர்வகைகளும், ஆற்றங்கரையின் அறுப்பும் அதின் வருமானமாயிருந்தது; அது ஜாதிகளின் சந்தையாயிருந்தது. 4 சீதோனே, வெட்கப்படு; நான் இனிக் கர்ப்பவேதனைப்படுகிறதும் இல்லை; பெறுகிறதும் இல்லை; இளைஞரை வளர்க்கிறதும் இல்லை; கன்னிகைகளை ஆதரிக்கிறதும் இல்லை என்று சமுத்திரக் கோட்டையான கடல்துறை சொல்லுகிறது. 5 எகிப்தின் செய்தி கேட்கப்பட்டதினால் நோய் உண்டானதுபோல, தீருவின் செய்தி கேட்கப்படுவதினாலும் நோய் உண்டாகும். 6 கரைதுறைக் குடிகளே, நீங்கள் தர்ஷீஸ்மட்டும் புறப்பட்டுப்போய் அலறுங்கள். 7 பூர்வநாட்கள்முதல் நிலைபெற்றுக் களிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா? பரதேசம்போய்ச் சஞ்சரிக்கிறதற்கு அவள் கால்களே அவளைத் தூரமாய்க் கொண்டுபோம். 8 கிரீடம் தரிப்பிக்கும் தீருவுக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வர்த்தகர் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே. 9 சர்வ சிங்காரத்தின் மேன்மையைக் குலைக்கவும், பூமியின் கனவான்கள் யாவரையும் கனஈனப்படுத்தவும், சேனைகளின் கர்த்தரே இதை யோசித்துத் தீர்மானித்தார். 10 தர்ஷீஸின் குமாரத்தியே, நதியைப்போல நீ உன் தேசத்தில் பாய்ந்துபோ, உனக்கு அணையில்லை. 11 கர்த்தர் தமது கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, ராஜ்யங்களைக் குலுங்கப்பண்ணினார்; கானானின் அரண்களை அழிக்க அவர் அதற்கு விரோதமாய்க் கட்டளைகொடுத்து: 12 ஒடுங்குண்ட கன்னியாகிய சீதோன் குமாரத்தியே, இனிக் களிகூர்ந்துகொண்டிராய்; எழுந்து கித்தீமுக்குப் புறப்பட்டுப்போ, அங்கும் உனக்கு இளைப்பாறுதல் இல்லையென்றார். 13 கல்தேயருடைய தேசத்தைப் பார்; அந்த ஜனம் முன்னிருந்ததில்லை; அசீரியன் வனாந்தரத்தாருக்காக அதை அஸ்திபாரப்படுத்தினான்; அவர்கள் அதின் கோபுரங்களை உண்டாக்கி, அதின் அரமனைகளைக் கட்டினார்கள்; அவர் அதை அழிவுக்கென்று நியமித்தார். 14 தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; உங்கள் அரண் பாழாக்கப்பட்டது. 15 அக்காலத்திலே தீரு, ஒரு ராஜாவுடைய நாட்களின்படி, எழுபது வருஷம் மறக்கப்பட்டிருக்கும்; எழுபது வருஷங்களின் முடிவிலே தீருவுக்குச் சம்பவிப்பது வேசியின் பாடலுக்குச் சமானமாயிருக்கும். 16 மறக்கப்பட்ட வேசியே, நீ வீணையை எடுத்து நகரத்தைச் சுற்றித்திரி; நீ நினைக்கப்படும்படி அதை இனிதாக வாசித்துப் பல பாட்டுகளைப் பாடு. 17 எழுபது வருஷங்களின் முடிவிலே கர்த்தர் வந்து தீருவைச் சந்திப்பார்; அப்பொழுது அது தன் பணையத்துக்கு திரும்பிவந்து, பூமியிலுள்ள சகல ராஜ்யங்களோடும் வேசித்தனம் பண்ணும். 18 அதின் வியாபாரமும், அதின் பணையமும் கர்த்தருக்குப் பரிசுத்தமாக்கப்படும்; அது பொக்கிஷமாய்ச் சேர்க்கப்படுவதும் இல்லை; பூட்டி வைக்கப்படுவதும் இல்லை; கர்த்தருடைய சமுகத்தில் வாசமாயிருக்கிறவர்கள் திருப்தியாகச் சாப்பிடவும் நல்ல வஸ்திரங்களைத் தரிக்கவும் அதின் வியாபாரம் அவர்களைச் சேரும்.

ஏசாயா 24

1 இதோ, கர்த்தர் தேசத்தை வெறுமையும் பாழுமாக்கி, அதைக் கவிழ்த்து, அதின் குடிகளைச் சிதறடிப்பார். 2 அப்பொழுது, ஜனத்துக்கு எப்படியோ அப்படியே ஆசாரியனுக்கும், வேலைக்காரனுக்கு எப்படியோ அப்படியே எஜமானுக்கும், வேலைக்காரிக்கு எப்படியோ அப்படியே எஜமானிக்கும், கொண்டவனுக்கு எப்படியோ அப்படியே விற்றவனுக்கும், கடன் கொடுத்தவனுக்கு எப்படியோ அப்படியே கடன்வாங்கினவனுக்கும், வட்டிவாங்கினவனுக்கு எப்படியோ அப்படியே வட்டிகொடுத்தவனுக்கும், எல்லாருக்கும் சரியாக நடக்கும். 3 தேசம் முழுதும் கொள்ளையாகி, முற்றிலும் வெறுமையாகும்; இது கர்த்தர் சொன்ன வார்த்தை. 4 தேசம் புலம்பி வாடும்; பூமி சத்துவமற்று உலர்ந்துபோகும்; தேசத்து ஜனத்திலே உயர்ந்தவர்கள் தவிப்பார்கள். 5 தேசம் தன் குடிகளின் மூலமாய்த் தீட்டுப்பட்டது; அவர்கள் நியாயப்பிரமாணங்களை மீறி, கட்டளையை மாறுபாடாக்கி, நித்திய உடன்படிக்கையை முறித்தார்கள். 6 இதினிமித்தம் சாபம் தேசத்தைப் பட்சித்தது, அதின் குடிகள் தண்டிக்கப்பட்டார்கள்; தேசத்தார் தகிக்கப்பட்டார்கள், சிலர்மாத்திரம் மீந்திருக்கிறார்கள். 7 திராட்சரசம் துக்கங்கொண்டாடும், திராட்சச்செடி வதங்கும்; மனக்களிப்பாயிருந்தவர்கள் எல்லாரும் பெருமூச்சுவிடுவார்கள். 8 மேளங்களின் சந்தோஷம் ஓயும், களிகூருகிறவர்களின் சந்தடி ஒழியும், வீணையின் களிப்பு நின்றுபோம். 9 பாடலோடே திராட்சரசம் குடியார்கள்; மதுபானம் அதைக் குடிக்கிறவர்களுக்குக் கசக்கும். 10 வெறுமையாய்ப்போன நகரம் தகர்ந்து, ஒருவரும் உள்ளே பிரவேசிக்கக்கூடாதபடி, வீடுகளெல்லாம் அடைபட்டுக்கிடக்கும். 11 திராட்சரசத்துக்காக வீதிகளிலே கூக்குரல் உண்டு; எல்லாச் சந்தோஷமும் மங்கி, தேசத்தின் மகிழ்ச்சி அற்றுப்போம். 12 நகரத்தில் மீதியாயிருப்பது அழிவே; வாசல்கள் இடிக்கப்பட்டுப் பாழாய்க் கிடக்கும். 13 ஒலிவமரத்தை உலுக்கும்போதும், திராட்சப்பழங்களை அறுத்துத் தீரும்போதும், பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீந்திருப்பதுபோல, தேசத்துக்குள்ளும் இந்த ஜனங்களின் நடுவிலும் கொஞ்சம் மீந்திருக்கும். 14 அவர்கள் சத்தமிட்டுக் கெம்பீரிப்பார்கள்; கர்த்தருடைய மகத்துவத்தினிமித்தம் சமுத்திரத்தினின்று ஆர்ப்பரிப்பார்கள். 15 ஆகையால் கர்த்தரை, வெளுக்குந்திசையிலும், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தைச் சமுத்திரத் தீவுகளிலும் மகிமைப்படுத்துங்கள். 16 நீதிபரனுக்கு மகிமை என்று பாடும் கீதங்களை பூமியின் கடையாந்தரத்திலிருந்து கேட்கிறோம்; நானோ, இளைத்துப்போனேன், இளைத்துப்போனேன்; எனக்கு ஐயோ! துரோகிகள் துரோகம்பண்ணுகிறார்கள்; துரோகிகள் மிகுதியாய்த் துரோகம்பண்ணுகிறார்கள் என்கிறேன். 17 தேசத்துக் குடிகளே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உங்களுக்கு நேரிடும். 18 அப்பொழுது, திகிலின் சத்தத்திற்கு விலகி ஓடுகிறவன் படுகுழியில் விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவன் கண்ணியில் அகப்படுவான்; உயர இருக்கும் மதகுகள் திறவுண்டு, பூமியின் அஸ்திபாரங்கள் குலுங்கும். 19 தேசம் நொறுங்கவே நொறுங்கும், தேசம் முறியவே முறியும், தேசம் அசையவே அசையும். 20 வெறித்தவனைப்போல தேசம் தள்ளாடி, ஒரு குடிலைப்போலப் பெயர்த்துப்போடப்படும்; அதின் பாதகம் அதின்மேல் பாரமாயிருக்கையால், அது விழுந்துபோம், இனி எழுந்திராது. 21 அக்காலத்தில் கர்த்தர் உன்னதமான சேனையை உன்னதத்திலும், பூமியின் ராஜாக்களைப் பூமியிலும் விசாரிப்பார். 22 அவர்கள் கெபியில் ஏகமாய்க் கட்டுண்டவர்களாகச் சேர்ந்து, காவலில் அடைக்கப்பட்டு, அநேகநாள் சென்றபின்பு விசாரிக்கப்படுவார்கள். 23 அப்பொழுது சேனைகளின் கர்த்தர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் ஆளுகைசெய்வதால், சந்திரன் கலங்கும், சூரியன் நாணமடையும்; அவருடைய மூப்பர்களுக்கு முன்பாக மகிமை உண்டாயிருக்கும்.

ஏசாயா 25

1 கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள். 2 நீர் நகரத்தை மண்மேடும், அரணான பட்டணத்தைப் பாழுமாக்கினீர்; அந்நியரின் ராஜதானியை ஊராயிராதபடிக்கும், என்றைக்கும் கட்டப்படாதபடிக்கும் செய்தீர். 3 ஆகையால் பலத்த ஜனங்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; கொடூரமான ஜாதிகளின் நகரம் உமக்குப் பயப்படும். 4 கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும், பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர். 5 வறட்சியான இடத்தின் காங்கை மேகத்தினால் தணிவதுபோல், அந்நியரின் மும்முரத்தைத் தணியப்பண்ணுவீர்; மேகத்தின் நிழலினால் வெயில் தணிகிறதுபோல் பெலவந்தரின் ஆரவாரம் தணியும். 6 சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும். 7 சகல ஜனங்கள்மேலுமுள்ள முக்காட்டையும், சகல ஜாதிகளையும் மூடியிருக்கிற மூடலையும், இந்த மலையிலே அகற்றிப்போடுவார். 8 அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையைப் பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார். 9 அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய இரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும். 10 கர்த்தருடைய கரம் இந்த மலையிலே தங்கும்; கூளம் எருக்களத்தில் மிதிக்கப்படுவதுபோல, மோவாப் அவர்கீழ் மிதிக்கப்பட்டுப்போம். 11 நீந்துகிறவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல் அவர் தமது கைகளை அவர்கள் நடுவிலே விரித்து, அவர்கள் பெருமையையும், அவர்கள் கைகளின் சதிசர்ப்பனைகளையும் தாழ்த்திவிடுவார். 12 அவர் உன் மதில்களுடைய உயர்ந்த அரணைக் கீழே தள்ளித் தாழ்த்தித் தரையிலே தூளாக அழிப்பார்.

ஏசாயா 26

1 அக்காலத்திலே யூதாதேசத்தில் பாடப்படும் பாட்டாவது: பெலனான நகரம் நமக்கு உண்டு; இரட்சிப்பையே அதற்கு மதிலும் அரணுமாக ஏற்படுத்துவார். 2 சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி உள்ளே பிரவேசிப்பதற்காக வாசல்களைத் திறவுங்கள். 3 உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர். 4 கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார். 5 அவர் உயரத்திலே வாசமாயிருக்கிறவர்களையும் கீழே தள்ளுகிறார், உயர்ந்த நகரத்தையும் தாழ்த்துகிறார்; அவர் தரைமட்டும் தாழ்த்தி அது மண்ணாகுமட்டும் இடியப்பண்ணுவார். 6 கால் அதை மிதிக்கும், சிறுமையானவர்களின் காலும் எளிமையானவர்களின் அடிகளுமே அதை மிதிக்கும். 7 நீதிமானுடைய பாதை செம்மையாயிருக்கிறது; மகா நீதிபரராகிய நீர் நீதிமானுடைய பாதையைச் செம்மைப்படுத்துகிறீர். 8 கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும், உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது. 9 என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள். 10 துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான். 11 கர்த்தாவே, உமது கை ஓங்கியிருக்கிறது, அவர்கள் அதைக் காணாதிருக்கிறார்கள்; ஆனாலும் உமது ஜனத்துக்காக நீர் கொண்ட வைராக்கியத்தைக்கண்டு வெட்கப்படுவார்கள்; அக்கினி உம்முடைய சத்துருக்களைப் பட்சிக்கும். 12 கர்த்தாவே, எங்களுக்குச் சமாதானத்தைக் கட்டளையிடுவீர்; எங்கள் கிரியைகளையெல்லாம் எங்களுக்காக நடத்திவருகிறவர் நீரே. 13 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, உம்மையல்லாமல் வேறே ஆண்டவன்மார் எங்களை ஆண்டார்கள்; இனி உம்மைமாத்திரம் சார்ந்து உம்முடைய நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்துவோம். 14 அவர்கள் செத்தவர்கள், ஜீவிக்கமாட்டார்கள்; மாண்ட ராட்சதர் திரும்ப எழுந்திரார்கள்; நீர் அவர்களை விசாரித்துச் சங்கரித்து, அவர்கள் பேரையும் அழியப்பண்ணினீர். 15 இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்; கர்த்தாவே, இந்த ஜாதியைப் பெருகப்பண்ணினீர்; நீர் மகிமைப்பட்டீர், தேசத்தின் எல்லை எல்லாவற்றையும் நெடுந்தூரத்தில் தள்ளிவைத்தீர். 16 கர்த்தாவே, நெருக்கத்தில் உம்மைத் தேடினார்கள்; உம்முடைய தண்டனை அவர்கள்மேலிருக்கையில் அந்தரங்க வேண்டுதல் செய்தார்கள். 17 கர்த்தாவே, பேறுகாலம் சமீபித்திருக்கையில் வேதனைப்பட்டு, தன் அம்பாயத்தில் கூப்பிடுகிற கர்ப்பவதியைப்போல, உமக்கு முன்பாக இருக்கிறோம். 18 நாங்கள் கர்ப்பமாயிருந்து வேதனைப்பட்டு, காற்றைப் பெற்றவர்களைப்போல் இருக்கிறோம்; தேசத்தில் ஒரு இரட்சிப்பையும் செய்யமாட்டாதிருக்கிறோம்; பூச்சக்கரத்துக்குடிகள் விழுகிறதுமில்லை. 19 மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடே கூட எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப்பண்ணும். 20 என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள். 21 இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலைசெய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.

ஏசாயா 27

1 அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார். 2 அக்காலத்திலே நல்ல திராட்சரசத்தைத் தரும் திராட்சத்தோட்டம் உண்டாயிருக்கும்; அதைக்குறித்துப் பாடுங்கள். 3 கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன். 4 உக்கிரம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாய் யுத்தத்தில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை ஏகமாய்க் கொளுத்திவிடுவேன்; 5 இல்லாவிட்டால் அவன் என் பெலனைப் பற்றிக்கொண்டு என்னோடே ஒப்புரவாகட்டும்; அவன் என்னோடே ஒப்புரவாவான். 6 யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும். 7 அவர் அவனை அடித்தவர்களை அடித்ததுபோல இவனை அடிக்கிறாரோ? அவர்கள் கொல்லப்படும் கொலையாய் இவன் கொல்லப்படுகிறானோ? 8 தேவரீர் ஜனத்தைத் துரத்திவிடுகையில் மட்டாய் அதனோடே வழக்காடுகிறீர்; கொண்டல்காற்றடிக்கிற நாளிலே அவர் தம்முடைய கடுங்காற்றினால் அதை விலக்கிவிடுகிறார். 9 ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நிக்கிரகம்பண்ணப்படும்; தோப்புவிக்கிரகங்களும் சிலைகளும் இனி நிற்காதபடி அவர்கள் பலிபீடங்களின் கல்லுகளையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கல்லுகளாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் அகற்றுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன். 10 அரணான நகரம் அவாந்தரையாகும், அந்த வாசஸ்தலம் தள்ளுண்டு வனாந்தரத்தைப்போல விட்டுவிடப்பட்டதாயிருக்கும்; கன்றுக்குட்டிகள் அங்கே மேய்ந்து, அங்கே படுத்துக்கொண்டு, அதின் தழைகளைத் தின்னும். 11 அதின் கொப்புகள் உலரும்போது ஒடிந்துபோம்; ஸ்திரீகள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள ஜனமல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும், அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபைசெய்யாமலும் இருப்பார். 12 அக்காலத்திலே, கர்த்தர் ஆற்றங்கரையின் விளைவுதொடங்கி எகிப்தின் நதிமட்டும் போரடிப்பார்; இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் ஒவ்வொருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள். 13 அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அப்பொழுது, அசீரியா தேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும், எகிப்துதேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து, எருசலேமிலுள்ள பரிசுத்த பர்வதத்திலே கர்த்தரைப் பணிந்துகொள்ளுவார்கள்.

ஏசாயா 28

1 எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமே! 2 இதோ, திராணியும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழைப்போலவும், சங்காரப் புசல்போலவும், புரண்டுவருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையினாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான். 3 எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடம் காலால் மிதித்துப்போடப்படும். 4 செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பாகிய வாடிய புஷ்பம், பருவகாலத்துக்குமுன் பழுத்ததும், காண்கிறவன் பார்த்து, அது தன் கையில் இருக்கும்போதே விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருக்கும். 5 அக்காலத்திலே சேனைகளின் கர்த்தர் தமது ஜனத்தில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும், 6 நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாகவும், யுத்தத்தை அதின் வாசல்மட்டும் திருப்புகிறவர்களின் பராக்கிரமமாகவும் இருப்பார். 7 ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழி தப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள். 8 போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை. 9 அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே. 10 கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள். 11 பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார். 12 இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள். 13 ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும். 14 ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜனத்தை ஆளுகிற நிந்தனைக்காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 15 நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும், பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோம் என்கிறீர்களே. 16 ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும், விசுவாசிக்கிறவன் பதறான். 17 நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்குநூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டுபோகும். 18 நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோம்; வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள். 19 அது புரண்டுவந்தமாத்திரத்தில் உங்களை அடித்துக்கொண்டுபோம்; அது நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிப் பிறக்குஞ்செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை உண்டாக்கும். 20 கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது. 21 கர்த்தர் தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார். 22 இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம்பண்ணாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியைச் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன். 23 செவிகொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள். 24 உழுகிறவன் விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ? தன் நிலத்தைக் கொத்தி நாள்தோறும் பரம்படிக்கிறது உண்டோ? 25 அவன் அதை மேலாக நிரவினபின்பு, அததற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ? 26 அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துகிறார். 27 உளுந்து தூலத்தாலே போரடிக்கப்படுகிறதில்லை; சீரகத்தின்மேல் வண்டிலின் உருளைச் சுற்ற விடப்படுகிறதுமில்லை; உளுந்து கோலினாலும் சீரகம் மிலாற்றினாலும் அடிக்கப்படும். 28 அப்பத்துக்குத் தானியம் இடிக்கப்படும்; இடைவிடாமல் அவன் அதைப் போரடிக்கிறதில்லை; அவன் தன் வண்டிலின் உருளையால் அதை நசுக்குகிறதுமில்லை, தன் குதிரைகளால் அதை நொறுக்குகிறதுமில்லை. 29 இதுவும் சேனைகளின் கர்த்தராலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.

ஏசாயா 29

1 தாவீது வாசம்பண்ணின நகரமாகிய அரியேலே, அரியேலே, ஐயோ! வருஷாவருஷம் பண்டிகைகளை அனுசரித்துவந்தாலும், 2 அரியேலுக்கு இடுக்கம் உண்டாக்குவேன்; அப்பொழுது துக்கமும் சலிப்பும் உண்டாகும்; அது எனக்கு அரியேலாகத்தான் இருக்கும். 3 உன்னைச் சூழப் பாளயமிறங்கி, உன்னைத் தெற்றுகளால் முற்றிக்கைபோட்டு, உனக்கு விரோதமாகக் கொத்தளங்களை எடுப்பிப்பேன். 4 அப்பொழுது நீ தாழ்த்தப்பட்டுத் தரையிலிருந்து பேசுவாய்; உன் பேச்சுப் பணிந்ததாய் மண்ணிலிருந்து புறப்பட்டு, உன் சத்தம் அஞ்சனம் பார்க்கிறவனுடைய சத்தத்தைப்போல் தரையிலிருந்து முணுமுணுத்து, உன் வாக்கு மண்ணிலிருந்து கசுகுசு என்று உரைக்கும். 5 உன்மேல் வருகிற அந்நியரின் திரள் பொடித்தூளத்தனையாகவும், பலவந்தரின் திரள் பறக்கும் பதர்களத்தனையாகவும் இருக்கும்; அது திடீரென்று சடிதியாய்ச் சம்பவிக்கும். 6 இடிகளினாலும், பூமி அதிர்ச்சியினாலும், பெரிய இரைச்சலினாலும், பெருங்காற்றினாலும், புசலினாலும், பட்சிக்கிற அக்கினிஜுவாலையினாலும், சேனைகளின் கர்த்தராலே விசாரிக்கப்படுவாய். 7 அரியேலின்மேல் யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும், அதின்மேலும் அதின் அரண்மேலும் யுத்தம்பண்ணி, அதற்கு இடுக்கண் செய்கிற அனைவரும், இராக்காலத்தரிசனமாகிய சொப்பனத்தைக் காண்கிறவர்களுக்கு ஒப்பாயிருப்பார்கள். 8 அது, பசியாயிருக்கிறவன் தான் புசிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் வெறுமையாயிருக்கிறதுபோலவும், தாகமாயிருக்கிறவன், தான் குடிக்கிறதாகச் சொப்பனம் கண்டும், விழிக்கும்போது அவன் விடாய்த்துத் தவனத்தோடிருக்கிறதுபோலவும் சீயோன் மலைக்கு விரோதமாக யுத்தம்பண்ணுகிற திரளான சகல ஜாதிகளும் இருக்கும். 9 தரித்துநின்று திகையுங்கள்; பிரமித்துக் கூப்பிடுங்கள்; வெறித்திருக்கிறார்கள், திராட்சரசத்தினால் அல்ல; தள்ளாடுகிறார்கள், மதுபானத்தினால் அல்ல. 10 கர்த்தர் உங்கள்மேல் கனநித்திரையின் ஆவியை வரப்பண்ணி, உங்கள் கண்களை அடைத்து, ஞானதிருஷ்டிக்காரராகிய உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும் தலைவர்களுக்கும் முக்காடுபோட்டார். 11 ஆதலால் தரிசனமெல்லாம் உங்களுக்கு முத்திரிக்கப்பட்ட புஸ்தகத்தின் வசனங்களைப்போலிருக்கும்; வாசிக்க அறிந்திருக்கிற ஒருவனுக்கு அதைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன்: இது என்னால் கூடாது, இது முத்திரித்திருக்கிறது என்பான். 12 அல்லது வாசிக்கத் தெரியாதவனிடத்தில் புஸ்தகத்தைக் கொடுத்து: நீ இதை வாசி என்றால், அவன்: எனக்கு வாசிக்கத் தெரியாது என்பான். 13 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனுஷராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது. 14 ஆதலால் இதோ, நான் அற்புதமும் ஆச்சரியமுமான பிரகாரமாக இந்த ஜனங்களுக்குள்ளே ஒரு அதிசயத்தைச் செய்வேன்; அவர்களுடைய ஞானிகளின் ஞானம் கெட்டு, அவர்களுடைய விவேகிகளின் விவேகம் மறைந்துபோகும் என்று ஆண்டவர் சொல்லுகிறார். 15 தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார்? என்கிறவர்களுக்கு ஐயோ! 16 ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ? உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ? 17 இன்னும் கொஞ்சக்காலத்திலல்லவோ லீபனோன் செழிப்பான வயல்வெளியாக மாறும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும். 18 அக்காலத்திலே செவிடர் புஸ்தகத்தின் வசனங்களைக் கேட்பார்கள்; குருடரின் கண்கள் இருளுக்கும் அந்தகாரத்துக்கும் நீங்கலாகிப் பார்வையடையும். 19 சிறுமையானவர்கள் கர்த்தருக்குள் மிகவும் மகிழ்ந்து, மனுஷரில் எளிமையானவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள் களிகூருவார்கள். 20 கொடியன் அற்றுப்போவான், சக்கந்தக்காரன் இல்லாமற்போவான். 21 ஒரு வார்த்தையினிமித்தம் மனுஷனைக் குற்றப்படுத்தி, நியாயவாசலில் தங்களைக் கடிந்துகொள்ளுகிறவனுக்குக் கண்ணிவைத்து, நீதிமானை நிர்நிமித்தமாய்த் துரத்தி, இப்படி அக்கிரமஞ்செய்ய வகைதேடுகிற யாவரும் சங்கரிக்கப்படுவார்கள். 22 ஆகையால், ஆபிரகாமை மீட்டுக்கொண்ட கர்த்தர் யாக்கோபின் வம்சத்தைக் குறித்து: இனி யாக்கோபு வெட்கப்படுவதில்லை; இனி அவன் முகம் செத்துப்போவதுமில்லை. 23 அவன் என் கரங்களின் செயலாகிய தன் பிள்ளைகளை தன் நடுவிலே காணும்போது, என் நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவார்கள்; யாக்கோபின் பரிசுத்தரை அவர்கள் பரிசுத்தப்படுத்தி, இஸ்ரவேலின் தேவனுக்குப் பயப்படுவார்கள். 24 வழுவிப்போகிற மனதை உடையவர்கள் புத்திமான்களாகி, முறுமுறுக்கிறவர்கள் உபதேசம் கற்றுக்கொள்ளுவார்கள்.

ஏசாயா 30

1 பாவத்தோடே பாவத்தைக் கூட்டும்படி, என்னை அல்லாமல் ஆலோசனைபண்ணி, என் ஆவியை அல்லாமல் தங்களை மூடிக்கொள்ளப் பார்க்கிறவர்களும், 2 என் வாக்கைக் கேளாமல் பார்வோனின் பெலத்தினாலே பெலக்கவும், எகிப்தின் நிழலிலே ஒதுங்கவும் வேண்டும் என்று எகிப்துக்குப் போகிறவர்களுமாகிய முரட்டாட்டமுள்ள புத்திரருக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார். 3 பார்வோனுடைய பெலன் உங்களுக்கு வெட்கமாகவும் எகிப்தினுடைய நிழலொதுக்கு உங்களுக்கு இலச்சையாகவும் இருக்கும். 4 அவர்கள் பிரபுக்கள் சோவானிலே போய், அவர்கள் ஸ்தானாபதிகள் ஆனேஸ்மட்டும் சேருகிறார்கள். 5 ஆனாலும் தங்கள் சகாயத்துக்கும் பிரயோஜனத்துக்கும் உதவாமல், வெட்கத்துக்கும் நிந்தைக்குமே உதவும் ஜனத்தினாலே யாவரும் வெட்கப்படுவார்கள். 6 தெற்கேபோகிற மிருகஜீவன்களின் பாரம். துஷ்டசிங்கமும், கிழச்சிங்கமும், விரியனும், பறக்கிற கொள்ளிவாய்ச்சர்ப்பமும் வருகிறதும், நெருக்கமும் இடுக்கமும் அடைவிக்கிறதுமான தேசத்துக்கு, அவர்கள் கழுதை மறிகளுடைய முதுகின்மேல் தங்கள் ஆஸ்திகளையும், ஒட்டகங்களுடைய முதுகின்மேல் தங்கள் பொக்கிஷங்களையும், தங்களுக்கு உதவாத ஜனத்தண்டைக்கு ஏற்றிக்கொண்டுபோகிறார்கள். 7 எகிப்தியர் சகாயம்பண்ணுவது வியர்த்தமும் வீணுமாம்; ஆகையால், சும்மாயிருப்பதே அவர்களுக்குப் பெலன் என்று அதற்காகக் கூறுகிறேன். 8 இப்பொழுது நீ போய், இது பிற்காலத்துக்கு என்றென்றைக்கும் இருக்கும்படி, இதை அவர்களுக்கு முன்பாக ஒரு பலகையில் எழுதி, ஒரு புஸ்தகத்தில் வரை. 9 இவர்கள் கலகமுள்ள ஜனங்களும், பொய்பேசுகிற பிள்ளைகளும், கர்த்தருடைய வேதத்தைக் கேட்க மனதில்லாத புத்திரருமாயிருக்கிறார்கள். 10 இவர்கள் தரிசனக்காரரை நோக்கி: தரிசனங் காணவேண்டாம் என்றும், ஞானதிருஷ்டிக்காரரை நோக்கி: யதார்த்தமாய் எங்களுக்குத் தரிசனஞ்சொல்லாமல், எங்களுக்கு இதமான சொற்களை உரைத்து, மாயமானவைகளைத் திருஷ்டியுங்கள் என்றும், 11 நீங்கள் வழியை விட்டு, பாதையினின்று விலகி, இஸ்ரவேலின் பரிசுத்தரை எங்கள் முன்பாக இராமல் ஓயப்பண்ணுங்கள் என்றும் சொல்லுகிறார்கள். 12 நீங்கள் இந்த வார்த்தையை வெறுத்து, இடுக்கமும் தாறுமாறும் செய்கிறதை நம்பி, அதைச் சார்ந்துகொள்ளுகிறபடியால், 13 இந்த அக்கிரமம் உங்களுக்கு உயர்ந்த சுவரில் விழப் பிதுங்கிநிற்கிறதும், திடீரென்று சடிதியாய் இடியப்போகிறதுமான வெடிப்பைப்போல இருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தர் சொல்லுகிறார். 14 அவர்களை அவர் தப்பவிடாமல் உடையும்படி குயக்கலத்தை நொறுக்குவதுபோல அவர்களை நொறுக்குவார்; அடுப்பிலே நெருப்பு எடுக்கிறதற்கும், குளத்திலே தண்ணீர் மொள்ளுகிறதற்கும் நொறுங்கின துண்டுகளில், ஒரு ஓடாகிலும் அகப்படாதேபோம். 15 நீங்கள் மனந்திரும்பி அமர்ந்திருந்தால் இரட்சிக்கப்படுவீர்கள்; அமரிக்கையும் நம்பிக்கையுமே உங்கள் பெலனாயிருக்கும் என்று இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; நீங்களோ அப்படிச் செய்ய மனதாயிராமல்; 16 அப்படியல்ல, குதிரைகளின்மேல் ஏறி ஓடிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே ஓடிப்போவீர்கள், வேகமான வாகனங்களின்மேல் ஏறிப்போவோம் என்கிறீர்கள்; அப்படியே உங்களைத் துரத்துகிறவர்கள் வேகமாய்த் துரத்துவார்கள். 17 நீங்கள் மலையுச்சியின்மேல் ஒரு கம்பத்தைப்போலவும், மேட்டின்மேல் ஒரு கொடியைப்போலவும் மீந்திருக்குமட்டாக, ஒருவன் பயமுறுத்த ஆயிரம்பேரும், ஐந்துபேர் பயமுறுத்த நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள். 18 ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார்; கர்த்தர் நீதிசெய்கிற தேவன்; அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள். 19 சீயோனைச் சேர்ந்த ஜனங்கள் எருசலேமில் வாசமாயிருப்பார்கள்; இனி நீ அழுதுகொண்டிராய்; உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி, அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார். 20 ஆண்டவர் உங்களுக்குத் துன்பத்தின் அப்பத்தையும், உபத்திரவத்தின் தண்ணீரையும் கொடுத்தாலும், உன் போதகர்கள் இனி ஒருபோதும் மறைந்திருக்கமாட்டார்கள்; உன் கண்கள் உன் போதகர்களைக் காணும். 21 நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும். 22 உன் சுரூபங்களை மூடிய வெள்ளித்தகட்டையும், உன் விக்கிரகங்களின் பொன் ஆடையாபரணத்தையும் தீட்டாக எண்ணி, அவைகளைத் தீட்டுப்பட்ட வஸ்திரம்போல எறிந்துவிட்டு, அதைச் சீ! போ என்பாய். 23 அப்பொழுது நீ நிலத்தில் விதைக்கும் உன் விதைக்கு அவர் மழையையும், நிலத்தின் பலனாகிய ஆகாரத்தையும் தருவார்; அது கொழுமையும் புஷ்டியுமாய் இருக்கும்; அக்காலத்திலே உன் ஆடுமாடுகள் விஸ்தாரமான மேய்ச்சலுள்ள ஸ்தலத்திலே மேயும்; 24 நிலத்தை உழுகிற எருதுகளும் கழுதைமறிகளும், முறத்தினாலும் தூற்றுக்கூடையினாலும் தூற்றப்பட்ட ருசியுள்ள கப்பிகளைத் தின்னும். 25 கோபுரங்கள் விழுகிற மகா சங்காரத்தின் நாளிலே, உயரமான சகல மலைகளின்மேலும், உயரமான சகல மேடுகளின்மேலும் ஆறுகளும் வாய்க்கால்களும் உண்டாகும். 26 கர்த்தர் தமது ஜனத்தின் முறிவைக் கட்டி, அதின் அடிக்காயத்தைக் குணமாக்கும் நாளிலே, சந்திரனுடைய வெளிச்சம் சூரியனுடைய வெளிச்சத்தைப்போலவும், சூரியனுடைய வெளிச்சம் ஏழத்தனையாய் ஏழு பகலின் வெளிச்சத்தைப்போலவும் இருக்கும். 27 இதோ, கர்த்தருடைய நாமம் தூரத்திலிருந்து வரும்; அவருடைய கோபம் எரிகிறதும் கனன்று புகைகிறதுமாயிருக்கும்; அவருடைய உதடுகள் சினத்தால் நிறைந்து, அவருடைய நாவு பட்சிக்கிற அக்கினிபோல இருக்கும். 28 நாசம் என்னும் சல்லடையிலே ஜாதிகளை அரிக்கும்படிக்கு அவர் ஊதும் சுவாசம் கழுத்துமட்டும் எட்டுகிற ஆற்றுவெள்ளத்தைப்போலவும், ஜனங்களுடைய வாயிலே போட்டு அலைக்கழிக்கிற கடிவாளத்தைப்போலவும் இருக்கும். 29 பண்டிகை ஆசரிக்கப்படும் இராத்திரியிலே பாடுகிறதுபோலப் பாடுவீர்கள்; கர்த்தருடைய பர்வதமாகிய இஸ்ரவேலின் கன்மலையண்டைக்குப்போக நாகசுரத்தோடே நடந்துவருகிறபோது மகிழுகிறதுபோல மகிழுவீர்கள். 30 கர்த்தர் மகத்துவமானவர்; தமது சத்தத்தைக் கேட்கப்பண்ணி, உக்கிர கோபத்தினாலும், பட்சிக்கிற அக்கினிஜுவாலையினாலும், இடி பெருவெள்ளம் கல்மழையினாலும், தமது புயத்தின் வல்லமையைக் காண்பிப்பார். 31 அப்பொழுது தண்டாயுதத்தினால் அடித்த அசீரியன் கர்த்தருடைய சத்தத்தினாலே நொறுங்குண்டுபோவான். 32 கர்த்தர் அவன்மேல் சுமத்தும் ஆக்கினைத்தண்டம் செல்லுமிடமெங்கும், மேளங்களும் வீணைகளும் அதினுடன் போகும்; கொடிய யுத்தங்களினால் அவனை எதிர்த்து யுத்தஞ்செய்வார். 33 தோப்பேத் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டது; ராஜாவுக்கு அது ஆயத்தப்படுத்தப்பட்டது; அதை ஆழமும் விசாலமுமாக்கினார்; வேகும்படி அக்கினியும் மிகுந்த விறகுமுண்டு; கர்த்தரின் சுவாசம் கெந்தகத் தீயைப்போல அதைக் கொளுத்தும்.

ஏசாயா 31

1 சகாயமடையும்படி இஸ்ரவேலுடைய பரிசுத்தரை நோக்காமலும், கர்த்தரைத் தேடாமலும், எகிப்துக்குப்போய், குதிரைகள்மேல் நம்பிக்கைவைத்து, இரதங்கள் அநேகமாயிருப்பதினால் அவைகளை நாடி, குதிரைவீரர் மகா பெலசாலிகளாயிருப்பதினால் அவர்களை நம்பிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ஐயோ! 2 அவரும் ஞானமுள்ளவர்; அவர் தம்முடைய வார்த்தைகளை மறுக்காமல், தீங்கு வரப்பண்ணி, தீமை செய்கிறவர்களின் வீட்டுக்கும், அக்கிரமக்காரருக்குச் சகாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாக எழும்புவார். 3 எகிப்தியர் தெய்வம் அல்ல, மனுஷர்தானே; அவர்களுடைய குதிரைகள் ஆவியல்ல, மாம்சந்தானே; கர்த்தர் தமது கரத்தை நீட்டுவார், அப்பொழுது சகாயம் செய்கிறவனும் இடறி, சகாயம் பெறுகிறவனும் விழுந்து, அனைவரும் ஏகமாய் அழிந்துபோவார்கள். 4 கர்த்தர் என்னுடனே சொன்னது: சிங்கமும் பாலசிங்கமும் தங்கள் இரையைப் பிடித்திருக்கும்போது கெர்ச்சித்து, தங்களுக்கு விரோதமாய்க் கூப்பிடுகிற திரளான மேய்ப்பரின் சத்தத்தினாலே கலங்காமலும், அவர்கள் அமளியினாலே பணியாமலும் இருக்கிறதுபோல, சேனைகளின் கர்த்தர் சீயோன்மலைக்காகவும், அதின் மேட்டுக்காகவும் யுத்தம்பண்ண இறங்குவார். 5 பறந்து காக்கிற பட்சிகளைப்போல, சேனைகளின் கர்த்தர் எருசலேமின்மேல் ஆதரவாக இருப்பார்; அவர் அதைக் காத்துத் தப்பப்பண்ணுவார்; அவர் கடந்துவந்து அதை விடுவிப்பார். 6 இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் முற்றிலும் விட்டுவிலகினவரிடத்தில் திரும்புங்கள். 7 உங்களுக்குப் பாவமாக உங்கள் கைகள் செய்திருந்த வெள்ளி விக்கிரகங்களையும், பொன் விக்கிரகங்களையும், உங்களில் ஒவ்வொருவரும் அக்காலத்திலே வெறுத்துவிடுவீர்கள். 8 அப்பொழுது வீரனுடைய பட்டயம் அல்லாத பட்டயத்தாலே அசீரியன் விழுவான்; நீசனுடைய பட்டயம் அல்லாத பட்டயமே அவனைப் பட்சிக்கும்; அவன் பட்டயத்துக்குத் தப்ப ஓடுவான்; அவன் வாலிபர் கலைந்துபோவார்கள். 9 அவனுடைய கன்மலை பயத்தினால் ஒழிந்துபோம், அவர்களுடைய பிரபுக்கள் கொடியைக் கண்டு கலங்குவார்கள் என்பதை, சீயோனில் நெருப்பையும் எருசலேமில் சூளையையுமுடைய கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 32

1 இதோ, ஒரு ராஜா நீதியாக அரசாளுவார்; பிரபுக்களும் நியாயமாகத் துரைத்தனம்பண்ணுவார்கள். 2 அவர் காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும் இருப்பார். 3 அப்பொழுது காண்கிறவர்களின் கண்கள் மங்கலாயிராது; கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும். 4 பதற்றமுள்ளவர்களின் இருதயம் அறிவை உணர்ந்துகொள்ளும், தெற்றுவாயருடைய நாவு தடையின்றித் தெளிவாய்ப் பேசும். 5 மூடன் இனி தயாளன் என்று மதிக்கப்படான்; லோபி இனி உதாரன் என்று சொல்லப்படுவதுமில்லை. 6 ஏனென்றால் மூடன், மூடத்தனத்தைப் பேசுகிறான்; அவன் இருதயம் அநியாயத்தை நடப்பிக்கும்; அவன் மாயம்பண்ணி, கர்த்தருக்கு விரோதமாய் விபரீதம் பேசி, பசியுள்ள ஆத்துமாவை வெறுமையாக வைத்து, தாகமுள்ளவனுக்குத் தாகந்தீர்க்காதிருக்கிறான். 7 லோபியின் எத்தனங்களும் பொல்லாதவைகள்; ஏழைகள் நியாயமாய்ப் பேசும்போது, அவன் கள்ளவார்த்தைகளாலே எளியவர்களைக் கெடுக்கும்படி தீவினைகளை யோசிக்கிறான். 8 தயாளகுணமுள்ளவன் தயாளமானவைகளை யோசிக்கிறான், தயாளமானவைகளிலே நிலைத்தும் இருக்கிறான். 9 சுகஜீவிகளாகிய ஸ்திரீகளே, எழுந்திருந்து என் வார்த்தைகளைக் கேளுங்கள்; நிர்விசாரமான குமாரத்திகளே, என் வசனத்துக்குச் செவிகொடுங்கள். 10 நிர்விசாரிகளே, ஒரு வருஷமும் சில நாட்களுமாய்த் தத்தளிப்பீர்கள்; திராட்சப்பலன் அற்றுப்போம்; அறுப்புக்காலம் வராது. 11 சுகஜீவிகளே, நடுங்குங்கள்; நிர்விசாரிகளே, தத்தளியுங்கள்; உடையை உரிந்து களைந்துபோட்டு, அரையில் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள். 12 செழிப்பான வயல்களினிமித்தமும் கனிதரும் திராட்சச் செடிகளினிமித்தமும் மாரடித்துப் புலம்புவார்கள். 13 என் ஜனத்தினுடைய நிலத்திலும், களிகூர்ந்திருந்த நகரத்திலுள்ள சந்தோஷம் நிறைந்த எல்லா வீடுகளிலும், முட்செடியும் நெரிஞ்சிலும் முளைக்கும். 14 அரமனை பாழாக விடப்படும், ஜனம் நிறைந்த நகரம் வெறுமையாகும், மேடும் துருக்கமும் என்றைக்கும் கெபிகளாகும், அவைகள் காட்டுக்கழுதைகள் களிக்கும் இடமாயும் மந்தைகளுக்கு மேய்ச்சலிடமாயும் இருக்கும். 15 உன்னதத்திலிருந்து நம்மேல் ஆவி ஊற்றப்படுமட்டும் அப்படியே இருக்கும்; அப்பொழுது வனாந்தரம் செழிப்பான வயல்வெளியாகும்; செழிப்பான வயல்வெளி காடாக எண்ணப்படும். 16 வனாந்தரத்திலே நியாயம் வாசமாயிருக்கும், செழிப்பான வயல்வெளியிலே நீதி தங்கித்தரிக்கும். 17 நீதியின் கிரியை சமாதானமும், நீதியின் பலன் என்றுமுள்ள அமரிக்கையும் சுகமுமாம். 18 என் ஜனம் சமாதான தாபரங்களிலும், நிலையான வாசஸ்தலங்களிலும், அமைதியாய்த் தங்கும் இடங்களிலும் குடியிருக்கும். 19 ஆனாலும் காடு அழிய கல்மழை பெய்யும், அந்த நகரம் மகா தாழ்வாய்த் தாழ்ந்துபோம். 20 மாடுகளையும் கழுதைகளையும் நடத்திக்கொண்டுபோய், நீர்வளம் பொருந்திய இடங்களிலெல்லாம் விதை விதைக்கிற நீங்கள் பாக்கியவான்கள்.

ஏசாயா 33

1 கொள்ளையிடப்படாதிருந்தும், கொள்ளையிடுகிறவனும், துரோகம்பண்ணாதிருக்கிறவர்களுக்குத் துரோகம்பண்ணுகிறவனுமாகிய உனக்கு ஐயோ! நீ கொள்ளையிட்டு முடிந்தபின்பு கொள்ளையிடப்படுவாய்; நீ துரோகம்பண்ணித் தீர்ந்தபின்பு உனக்குத் துரோகம்பண்ணுவார்கள். 2 கர்த்தாவே, எங்களுக்கு இரங்கும், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் காலையில் அவர்கள் புயமும், இக்கட்டுக்காலத்தில் எங்கள் இரட்சிப்புமாயிரும். 3 அமளியின் சத்தத்தினாலே ஜனங்கள் அலைந்தோடி, நீர் எழுந்திருக்கும்போது ஜாதிகள் சிதறடிக்கப்படுவார்கள். 4 வெட்டுக்கிளிகள் சேர்க்கிறதுபோல உங்கள் கொள்ளை சேர்க்கப்படும்; வெட்டுக்கிளிகள் குதித்துத் திரிகிறதுபோல மனுஷர் அதின்மேல் குதித்துத் திரிவார்கள். 5 கர்த்தர் உயர்ந்தவர், அவர் உன்னதத்தில் வாசமாயிருக்கிறார்; அவர் சீயோனை நியாயத்தினாலும் நீதியினாலும் நிரப்புகிறார். 6 பூரணரட்சிப்பும் ஞானமும் அறிவும் உன் காலங்களுடைய உறுதியாயிருக்கும்; கர்த்தருக்குப் பயப்படுதலே அதின் பொக்கிஷம். 7 இதோ, அவர்களுடைய பராக்கிரமசாலிகள் வெளியிலே அலறுகிறார்கள்; சமாதானத்து ஸ்தானாபதிகள் மனங்கசந்து அழுகிறார்கள். 8 பாதைகள் பாழாயின; வழிப்போக்கர் இல்லை; உடன்படிக்கையை மீறுகிறான்; நகரங்களை இகழ்ச்சிபண்ணுகிறான்; மனுஷனை எண்ணாதேபோகிறான். 9 தேசம் துக்கித்து விடாய்த்திருக்கிறது; லீபனோன் வெட்கி வாடுகிறது; சாரோன் வனாந்தரத்துக்கு ஒப்பாகிறது; பாசானும் கர்மேலும் பாழாக்கப்படுகிறது. 10 இப்பொழுது எழுந்தருளுவேன், இப்பொழுது உயருவேன், இப்பொழுது மேன்மைப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 11 பதரைக் கர்ப்பந்தரித்துத் தாளடியைப் பெறுவீர்கள்; அக்கினியைப்போல் உங்கள் சுவாசமே உங்களைப் பட்சிக்கும். 12 ஜனங்கள் சுண்ணாம்பைப்போல நீற்றப்படுவார்கள்; வெட்டப்பட்ட முட்செடிகளைப்போலத் தீயில் எரிக்கப்படுவார்கள். 13 தூரத்திலுள்ளவர்களே, நான் செய்கிறதைக் கேளுங்கள்; சமீபத்திலிருக்கிறவர்களே, என் பராக்கிரமத்தை அறிந்துகொள்ளுங்கள் என்கிறார். 14 சீயோனிலுள்ள பாவிகள் திகைக்கிறார்கள்; மாயக்காரரை நடுக்கம் பிடிக்கிறது; பட்சிக்கும் அக்கினிக்கு முன்பாக நம்மில் தரித்திருப்பவன் யார்? நித்தியஜுவாலைக்கு முன்பாக நம்மில் தாபரிப்பவன் யார் என்கிறார்கள். 15 நீதியாய் நடந்து, செம்மையானவைகளைப் பேசி, இடுக்கண் செய்வதால் வரும் ஆதாயத்தை வெறுத்து, பரிதானங்களை வாங்காதபடிக்குத் தன் கைகளை உதறி, இரத்தஞ்சிந்துவதற்கான யோசனைகளைக் கேளாதபடிக்குத் தன் செவியை அடைத்து, பொல்லாப்பைக் காணாதபடிக்குத் தன் கண்களை மூடுகிறவனெவனோ, 16 அவன் உயர்ந்த இடங்களில் வாசம்பண்ணுவான்; கன்மலைகளின் அரண்கள் அவனுடைய உயர்ந்த அடைக்கலமாகும்; அவன் அப்பம் அவனுக்குக் கொடுக்கப்படும்; அவன் தண்ணீர் அவனுக்கு நிச்சயமாய்க் கிடைக்கும். 17 உன் கண்கள் ராஜாவை மகிமை பொருந்தினவராகக் காணும், தூரத்திலுள்ள தேசத்தையும் பார்க்கும். 18 உன் மனம் பயங்கரத்தை நினைவுகூரும்; கணக்கன் எங்கே? தண்டல்காரன் எங்கே? கோபுரங்களை எண்ணினவன் எங்கே? 19 உனக்கு விளங்காத பாஷையையும், அறிதற்கரிய ஒருவிதமான பேச்சையுமுடைய அந்தக் குரூர ஜனங்களை இனி நீ காணாய். 20 நம்முடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் நகரமாகிய சீயோனை நோக்கிப்பார்; உன் கண்கள் எருசலேமை அமரிக்கையான தாபரமாகவும், பெயர்க்கப்படாத கூடாரமாகவும் காணும்; இனி அதின் முளைகள் என்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை, அதின் கயிறுகளில் ஒன்றும் அறுந்து போவதுமில்லை. 21 மகிமையுள்ள கர்த்தர் அங்கே நமக்கு மகா விசாலமான நதிகளும் ஆறுகளுமுள்ள ஸ்தலம்போலிருப்பார்; வலிக்கிற படவு அங்கே ஓடுவதும் இல்லை; பெரிய கப்பல் அங்கே கடந்துவருவதும் இல்லை. 22 கர்த்தர் நம்முடைய நியாயாதிபதி, கர்த்தர் நம்முடைய நியாயப்பிரமாணிகர், கர்த்தர் நம்முடைய ராஜா, அவர் நம்மை இரட்சிப்பார். 23 உன் கயிறுகள் தளர்ந்துபோம்; பாய்மரத்தைக் கெட்டிப்படுத்தவும், பாயை விரிக்கவுங் கூடாமற்போம்; அப்பொழுது திரளான கொள்ளைப்பொருள் பங்கிடப்படும்; சப்பாணிகளும் கொள்ளையாடுவார்கள். 24 வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை; அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம் மன்னிக்கப்பட்டிருக்கும்.

ஏசாயா 34

1 ஜாதிகளே, கேட்கிறதற்குக் கிட்டிவாருங்கள்; ஜனங்களே, கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்கக்கடவது. 2 சகல ஜாதிகளின்மேலும் கர்த்தருடைய கடுங்கோபமும், அவைகளுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களைச் சங்காரத்துக்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார். 3 அவர்களிலே கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியுண்டுகிடப்பார்கள்; அவர்களுடைய பிரேதங்கள் நாற்றமெடுக்கும்; அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்துபோம். 4 வானத்தின் சர்வ சேனையும் கரைந்து, வானங்கள் புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சச்செடியின் இலைகள் உதிருகிறதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிருகிறதுபோலவும் உதிர்ந்து விழும். 5 வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ, ஏதோமின்மேலும், நான் சங்காரத்துக்கு நியமித்த ஜனத்தின்மேலும், அது நியாயஞ்செய்ய இறங்கும். 6 போஸ்றாவிலே கர்த்தருக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகா சங்காரமும் உண்டு; கர்த்தருடைய பட்டயம் இரத்தத்தால் திருப்தியாகி, நிணத்தினால் பூரிக்கின்றது; ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய குண்டிக்காய்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும். 7 அவைகளோடே காண்டாமிருகங்களும், ரிஷபங்களோடே காளைகளும் வந்து மடியும்; அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு, அவர்கள் மண் நிணத்தினால் கொழுத்துப்போம். 8 அது கர்த்தர் பழிவாங்கும் நாள், சீயோனுடைய வழக்கினிமித்தம் பதிலளிக்கும் வருஷம். 9 அதின் ஆறுகள் பிசினாகவும், அதின் மண் கந்தகமாகவும் மாறி, அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போம். 10 இரவும் பகலும் அது அவியாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும்; சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை. 11 நாரையும் முள்ளம்பன்றியும் அதைச் சுதந்தரிக்கும், ஆந்தையும் காக்கையும் அதிலே குடியிருக்கும்; அதின்மேல் வெட்டவெளியின் நூலையும், வெறுமையின் தூக்கையும் பிடிப்பார். 12 ராஜ்யபாரம்பண்ண அதின் மேன்மக்களை அழைத்தால், அங்கே அவர்களில் ஒருவரும் இரார்கள்; அதின் பிரபுக்கள் அனைவரும் இல்லாமற்போவார்கள். 13 அதின் அரமனைகளில் முட்செடிகளும், அதின் கோட்டைகளில் காஞ்சொறிகளும் முட்பூண்டுகளும் முளைக்கும்; அது வலுசர்ப்பங்களின் தாபரமும், கோட்டான்களின் மாளிகையுமாயிருக்கும். 14 அங்கே காட்டுமிருகங்களும் ஓரிகளும் ஒன்றையொன்று சந்தித்து, காட்டாட்டைக் காட்டாடு கூப்பிடும்; அங்கே சாக்குருவிகளும் தங்கி, இளைப்பாறும் இடத்தைக் கண்டடையும். 15 அங்கே வல்லூறும் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சுபொரித்து, அவைகளைத் தன் நிழலிலே கூட்டிக்கொள்ளும்; அங்கே கூளிகளும் ஜோடுஜோடாகச் சேரும். 16 கர்த்தருடைய புஸ்தகத்திலே தேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும். 17 அவரே அவைகளுக்குச் சீட்டுப்போட்டார்; அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்துகொடுத்தது; அவைகள் என்றைக்கும் அதைச் சுதந்தரித்துத் தலைமுறை தலைமுறையாக அதிலே சஞ்சரிக்கும்.

ஏசாயா 35

1 வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போலச் செழிக்கும். 2 அது மிகுதியாய்ச் செழித்துப் பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள். 3 தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள். 4 மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள். 5 அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம். 6 அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும். 7 வெட்டாந்தரை தண்ணீர்த் தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும்; வலுசர்ப்பங்கள் தாபரித்துக் கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும். 8 அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையராயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை. 9 அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள். 10 கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.

ஏசாயா 36

1 எசேக்கியா ராஜா அரசாண்ட பதினாலாம் வருஷத்திலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற அரணான சகல பட்டணங்களுக்கும் விரோதமாய் வந்து, அவைகளைப் பிடித்துக்கொண்டான். 2 அப்பொழுது அசீரியா ராஜா லாகீசிலிருந்து ரப்சாக்கேயைப் பெரிய சேனையோடே எருசலேமுக்கு எசேக்கியா ராஜாவினிடத்தில் அனுப்பினான்; அவன் வந்து வண்ணார் துறையின் வழியிலுள்ள மேல்குளத்துச் சாலகத்தண்டையிலே நின்றான். 3 அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும் அவனிடத்திற்குப் புறப்பட்டுப்போனார்கள். 4 ரப்சாக்கே அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவானவர் உரைக்கிறதும், நீங்கள் எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியதும் என்னவென்றால்: நீ நம்பியிருக்கிற இந்த நம்பிக்கை என்ன? 5 யுத்தத்துக்கு மந்திராலோசனையும் வல்லமையும் உண்டென்று சொல்லுகிறாயே, அது வாய்ப்பேச்சேயன்றி வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்? 6 இதோ, நெரிந்த நாணல்கோலாகிய அந்த எகிப்தை நம்புகிறாய்; அதின்மேல் ஒருவன் சாய்ந்தால், அது அவன் உள்ளங்கையில் பட்டுருவிப்போம்; எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் தன்னை நம்புகிற யாவருக்கும் அப்படியே இருப்பான். 7 நீ என்னிடத்தில்: நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்வாயாகில், அவருடைய மேடைகளையும் அவருடைய பலிபீடங்களையும் அல்லவோ எசேக்கியா அகற்றி, யூதாவையும், எருசலேமையும் நோக்கி: இந்தப் பலிபீடத்தின்முன் பணியுங்கள் என்றானே. 8 நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத்தக்கவர்களைச் சம்பாதிக்கக்கூடுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதங்கூறு. 9 கூறாதேபோனால், நீ என் ஆண்டவனுடைய ஊழியக்காரரில் ஒரே ஒரு சிறிய தலைவனுடைய முகத்தை எப்படித் திருப்புவாய்? இரதங்களோடு குதிரைவீரரும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்? 10 இப்பொழுதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்தத் தேசத்தை அழிக்க வந்தேனோ? இந்தத் தேசத்துக்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்று சொன்னான். 11 அப்பொழுது எலியாக்கீமும் செப்னாவும் யோவாகும், ரப்சாக்கேயைப்பார்த்து: உம்முடைய அடியாரோடே சீரியபாஷையிலே பேசும், அது எங்களுக்குத் தெரியும்; அலங்கத்திலிருக்கிற ஜனத்தின் செவிகள் கேட்க எங்களோடே யூதபாஷையிலே பேசவேண்டாம் என்றார்கள். 12 அதற்கு ரப்சாக்கே: உங்களோடுங்கூடத் தங்கள் மலத்தைத் தின்னவும், தங்கள் நீரைக் குடிக்கவும், அலங்கத்திலே தங்கியிருக்கிற புருஷரண்டைக்கே அல்லாமல், உன் ஆண்டவனண்டைக்கும், உன்னண்டைக்குமா, என் ஆண்டவன் இந்த வார்த்தைகளைப் பேச என்னை அனுப்பினார் என்று சொல்லி; 13 ரப்சாக்கே நின்றுகொண்டு, யூதபாஷையிலே உரத்தசத்தமாய்: அசீரியா ராஜாவாகிய மகாராஜாவுடைய வார்த்தைகளைக் கேளுங்கள். 14 எசேக்கியா உங்களை வஞ்சியாதபடி பாருங்கள்; அவன் உங்களைத் தப்புவிக்கமாட்டான். 15 கர்த்தர் நம்மை நிச்சயமாய்த் தப்புவிப்பார், இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் கர்த்தரை நம்பப்பண்ணுவான்; அதற்கு இடங்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார். 16 எசேக்கியாவின் சொல்லைக் கேளாதிருங்கள். அசீரியா ராஜா சொல்லுகிறதாவது: நீங்கள் என்னோடே ராஜியாகி, காணிக்கையோடே என்னிடத்தில் வாருங்கள். 17 நான் வந்து, உங்களைத் தானியமும் திராட்சத்தோட்டமுமுள்ள தேசமும், அப்பமும் திராட்சரசமுமுள்ள தேசமுமாகிய உங்கள் தேசத்துக்கு ஒப்பான தேசத்துக்கு அழைத்துக்கொண்டுபோகுமளவும், அவனவன் தன் தன் திராட்சச்செடியின் கனியையும், தன் தன் அத்திமரத்தின் கனியையும் புசித்து, அவனவன் தன் தன் கிணற்றின் தண்ணீரைக் குடியுங்கள். 18 கர்த்தர் நம்மைத் தப்புவிப்பார் என்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்; ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ? 19 ஆமாத் அர்பாத் பட்டணங்களின் தேவர்கள் எங்கே? செப்பர்வாயீமின் தேவர்கள் எங்கே? அவர்கள் சமாரியாவை என் கைக்குத் தப்புவித்ததுண்டோ? 20 கர்த்தர் எருசலேமை என் கைக்குத் தப்புவிப்பார் என்பதற்கு, அந்தத்தேசங்களுடைய எல்லாத் தேவர்களுக்குள்ளும் தங்கள் தேசத்தை என் கைக்குத் தப்புவித்தவர் யார் என்று ராஜா சொல்லுகிறார் என்றான். 21 அவர்களோ அவனுக்கு ஒரு வார்த்தையையும் பிரதியுத்தரமாகச் சொல்லாமல் மவுனமாயிருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்தரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான். 22 அப்பொழுது இல்க்கியாவின் குமாரனாகிய எலியாக்கீம் என்னும் அரமனை விசாரிப்புக்காரனும், செப்னா என்னும் சம்பிரதியும், ஆசாப்பின் குமாரனாகிய யோவாக் என்னும் கணக்கனும், வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, எசேக்கியாவினிடத்தில் வந்து, ரப்சாக்கேயின் வார்த்தைகளை அவனுக்கு அறிவித்தார்கள்.

ஏசாயா 37

1 ராஜாவாகிய எசேக்கியா அதைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்துக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து, 2 அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்திற்கு இரட்டு உடுத்தவர்களாக அனுப்பினான். 3 இவர்கள் அவனை நோக்கி: இந்த நாள் நெருக்கமும், கண்டிதமும், தூஷணமும் அநுபவிக்கிற நாள்; பிள்ளைப்பேறு நோக்கியிருக்கிறது; பெறவோ பெலன் இல்லை. 4 ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படி, அசீரியா ராஜாவாகிய தன் ஆண்டவனால் அனுப்பப்பட்ட ரப்சாக்கே சொன்ன வார்த்தைகளை உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிறார்; உமது தேவனாகிய கர்த்தர் கேட்டிருக்கிற வார்த்தைகளினிமித்தம் தண்டனைசெய்வார்; ஆகையால், இன்னும் மீதியாயிருக்கிறவர்களுக்காக விண்ணப்பஞ்செய்வீராக என்று எசேக்கியா சொல்லச்சொன்னார் என்றார்கள். 5 இவ்விதமாய் எசேக்கியா ராஜாவின் ஊழியக்காரர் ஏசாயாவினிடத்தில் வந்து சொன்னார்கள். 6 அப்பொழுது ஏசாயா அவர்களை நோக்கி: அசீரியா ராஜாவின் ஊழியக்காரர் என்னைத் தூஷித்ததும் நீர் கேட்டதுமான வார்த்தைகளினாலே பயப்படாதேயும். 7 இதோ, அவன் ஒரு செய்தியைக்கேட்டு, தன் தேசத்துக்குத் திரும்புவதற்கான ஆவியை நான் அவனுக்குள் அனுப்பி, அவனை அவன் தேசத்திலே பட்டயத்தால் விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்பதை உங்கள் ஆண்டவனிடத்தில் சொல்லுங்கள் என்றான். 8 அசீரியா ராஜா லாகீசைவிட்டுப் புறப்பட்டான் என்று கேள்விப்பட்டு, ரப்சாக்கே திரும்பிப்போய், அவன் லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணுகிறதைக் கண்டான். 9 அப்பொழுது, எத்தியோப்பியாவின் ராஜாவாகிய திராக்கா உம்மோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டான் என்று சொல்லக் கேள்விப்பட்டான்; அதைக் கேட்டபோது அவன் எசேக்கியாவினிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பி: 10 நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை எத்தவொட்டாதே. 11 இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ? 12 என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ? 13 ஆமாத்தின் ராஜாவும், அர்பாத்தின் ராஜாவும், செப்பர்வாயீம் ஏனா ஈவா பட்டணங்களின் ராஜாவும் எங்கே என்று சொல்லுங்கள் என்றார். 14 எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து, 15 கர்த்தரை நோக்கி: 16 சேனைகளின் கர்த்தாவே, கேருபீன்களின் மத்தியில் வாசம்பண்ணுகிற இஸ்ரவேலின் தேவனே, நீர் ஒருவரே பூமியின் ராஜ்யங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர். 17 கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும். 18 கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும், அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி, 19 அவர்களுடைய தேவர்களை நெருப்பிலே போட்டுவிட்டது மெய்தான்; அவைகள் தேவர்கள் அல்லவே, மனுஷர் கைவேலையான மரமும் கல்லுந்தானே; ஆகையால் அவைகளை நிர்த்தூளியாக்கினார்கள். 20 இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான். 21 அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணினாயே. 22 அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள். 23 யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய். 24 உன் ஊழியக்காரரைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரு விருட்சங்களையும் நான் வெட்டி, உயர்ந்த அதின் கடைசி எல்லைமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும், 25 நான் கிணறு வெட்டித் தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்காலினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும் பண்ணினேன் என்றும் சொன்னாய். 26 நான் வெகுகாலத்துக்குமுன் அதை நியமித்து, பூர்வநாட்கள்முதல் அதைத் திட்டம்பண்ணினேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகளாக்கும்படி நானே அதைச் சம்பவிக்கப்பண்ணினேன். 27 அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கி வளருமுன் தீய்ந்துபோம் பயிருக்கும் சமானமானார்கள். 28 உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன். 29 நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளித்து, வீரியம்பேசினது என் செவிகளில் ஏறினபடியினாலே, நான் என் துறட்டை உன் மூக்கிலும், என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திரும்பப்பண்ணுவேன். 30 உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள். 31 யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள். 32 மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும். 33 ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்கு முன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம் போடுவதுமில்லை. 34 அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான். 35 என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான். 36 அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள். 37 அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டுத் திரும்பிப்போய், நினிவேயில் இருந்துவிட்டான். 38 அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்துக்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.

ஏசாயா 38

1 அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 2 அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி: 3 ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான். 4 அப்பொழுது ஏசாயாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையாவது: 5 நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன். 6 நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, இந்த நகரத்துக்கு ஆதரவாயிருப்பேன். 7 இதோ, ஆகாசுடைய சூரிய கடியாரத்தில் பாகைக்குப் பாகை இறங்கின சாயையைப் பத்துப்பாகை பின்னிட்டுத் திருப்புவேன் என்றார். 8 தாம் சொன்ன இந்த வார்த்தையின்படி கர்த்தர் செய்வார் என்பதற்கு இது கர்த்தரால் உனக்கு அடையாளமாயிருக்கும் என்று சொல் என்றார்; அப்படியே கடியாரத்தில் இறங்கியிருந்த சூரியசாயை பத்துப்பாகை திரும்பிற்று. 9 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு, தன் வியாதி நீங்கிச் சொஸ்தமானபோது எழுதிவைத்ததாவது: 10 நான் என் பூரண ஆயுசின் வருஷங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன். 11 கர்த்தரை, கர்த்தரை, நான் இனி உயிரோடிருக்கிறவர்களின் தேசத்திலே தரிசிப்பதில்லை; இனி பூலோகக் குடிகளோடே இருந்து மனுஷரை நான் காண்பதில்லை. 12 என் ஆயுசு மேய்ப்பனுடைய கூடாரத்தைப்போல என்னைவிட்டுப் பெயர்ந்துபோகிறது; நெய்கிறவன் பாவை அறுக்கிறதுபோல என் ஜீவனை அறுக்கக் கொடுக்கிறேன்; என்னைப் பாவிலிருந்து அறுத்துவிடுகிறார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர். 13 விடியற்காலமட்டும் நான் எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன்; அவர் சிங்கம்போல என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர் என்று சொல்லி, 14 நமுட்டைப்போலும், தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதினால் பூத்துப்போயின; கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை மேற்போட்டுக் கொள்ளும் என்றேன். 15 நான் என்னசொல்லுவேன்? அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப்பிரகாரமே செய்தார்; என் ஆயுசின் வருஷங்களிலெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து நடந்துகொள்வேன். 16 ஆண்டவரே, இவைகளினால் மனுஷர் பிழைக்கிறார்கள்; இவைகளெல்லாம் என் உயிர்க்கு உயிராயிருக்கிறது; என்னைச் சொஸ்தப்படவும் பிழைக்கவும்பண்ணினீர். 17 இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர். 18 பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தைத் தியானிப்பதில்லை. 19 நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான். 20 கர்த்தர் என்னை இரட்சிக்கவந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான். 21 அத்திப்பழத்து அடையைக் கொண்டுவந்து, பிளவையின்மேல் பற்றுப்போடுங்கள்; அப்பொழுது பிழைப்பார் என்று ஏசாயா சொல்லியிருந்தான். 22 அப்பொழுது எசேக்கியா: நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவதற்கு அடையாளம் என்னவென்று கேட்டிருந்தான்.

ஏசாயா 39

1 அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய மெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா, எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டு, அவனிடத்திற்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான். 2 எசேக்கியா அவர்களைக் கண்டு சந்தோஷப்பட்டு, தன் பொக்கிஷசாலையையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும், தன் பொக்கிஷசாலைகளில் உள்ளதெல்லாவற்றையும் அவர்களுக்குக் காண்பித்தான்; எசேக்கியா தன் அரமனையிலும், தன் ராஜ்யத்தில் எங்கும் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை. 3 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனுஷர் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து என்னிடத்திற்கு வந்தார்கள் என்றான். 4 அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ளதெல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான். 5 அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தையைக் கேளும். 6 இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உன் வீட்டில் உள்ளதிலும், உன் பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாய் வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும். 7 நீ பெறப்போகிற உன் சந்ததியாகிய உன் குமாரரிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 8 அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.

ஏசாயா 40

1 என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்; 2 எருசலேமுடன் பட்சமாய்ப்பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார். 3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், 4 பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவைச் சமமாக்கப்படும் என்றும், 5 கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று. 6 பின்னும் கூப்பிட்டுச் சொல் என்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேன் என்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. 7 கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல். 8 புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல் என்று உரைத்தது. 9 சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு; எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு. 10 இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது. 11 மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார். 12 தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்? 13 கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்? 14 தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனைபண்ணினார்? 15 இதோ, ஜாதிகள் ஏற்றச்சாலில் தொங்கும் துளிபோலவும், தராசிலே படியும் தூசிபோலவும் எண்ணப்படுகிறார்கள்; இதோ, தீவுகளை ஒரு அணுவைப்போல் தூக்குகிறார். 16 லீபனோன் எரிக்கும் விறகுக்குப் போதாது; அதிலுள்ள மிருகஜீவன்கள் தகனபலிக்கும் போதாது. 17 சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள். 18 இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்? 19 கன்னான் ஒரு சுரூபத்தை வார்க்கிறான், தட்டான் பொன்தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான். 20 அதற்குக் கொடுக்க வகையில்லாதவன் உளுத்துப்போகாத மரத்தைத் தெரிந்துகொண்டு, அசையாத ஒரு சுரூபத்தைச் செய்யும்படி நிபுணனான ஒரு தச்சனைத் தேடுகிறான். 21 நீங்கள் அறியீர்களா? நீங்கள் கேள்விப்படவில்லையா? ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? பூமி அஸ்திபாரப்பட்டதுமுதல் உணராதிருக்கிறீர்களா? 22 அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார். 23 அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார். 24 அவர்கள் திரும்ப நாட்டப்படுவதுமில்லை, விதைக்கப்படுவதுமில்லை; அவர்களுடைய அடிமரம் திரும்பப் பூமியிலே வேர்விடுவதுமில்லை; அவர்கள்மேல் அவர் ஊதவே பட்டுப்போவார்கள்; பெருங்காற்று அவர்களை ஒரு துரும்பைப்போல் அடித்துக்கொண்டுபோம். 25 இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார். 26 உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது. 27 யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்? 28 பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது. 29 சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். 30 இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். 31 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.

ஏசாயா 41

1 தீவுகளே, எனக்கு முன்பாக மவுனமாயிருங்கள்; ஜனங்கள் தங்கள் பெலனைப் புதிதாக்கிக்கொண்டு, சமீபித்து வந்து, பின்பு பேசக்கடவர்கள்; நாம் ஒருமிக்க நியாயாசனத்துக்கு முன்பாகச் சேருவோம். 2 கிழக்கிலிருந்து நீதிமானை எழுப்பி, தமது பாதபடியிலே வரவழைத்தவர் யார்? ஜாதிகளை அவனுக்கு ஒப்புக்கொடுத்து, அவனை ராஜாக்களுக்கு ஆண்டவனாக்கி, அவர்களை அவன் பட்டயத்துக்குத் தூசியும், அவன் வில்லுக்குச் சிதறடிக்கப்பட்ட தாளடியுமாக்கி, 3 அவன் அவர்களைத் துரத்தவும், தன் கால்கள் நடவாதிருந்த பாதையிலே சமாதானத்தோடே நடக்கவும் பண்ணினவர் யார்? 4 அதைச் செய்து நிறைவேற்றி, ஆதிமுதற்கொண்டு தலைமுறைகளை வரவழைக்கிறவர் யார்? முந்தினவராயிருக்கிற கர்த்தராகிய நான்தானே; பிந்தினவர்களோடும் இருப்பவராகிய நான்தானே. 5 தீவுகள் அதைக் கண்டு பயப்படும், பூமியின் கடையாந்தரங்கள் நடுங்கும்; அவர்கள் சேர்ந்துவந்து, 6 ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசை செய்து திடன்கொள் என்று சகோதரனுக்குச் சகோதரன் சொல்லுகிறான். 7 சித்திரவேலைக்காரன் தட்டானையும், சுத்தியாலே மெல்லிய தகடு தட்டுகிறவன் அடைகல்லின்மேல் அடிக்கிறவனையும் உற்சாகப்படுத்தி, இசைக்கிறதற்கான பக்குவமென்று சொல்லி, அது அசையாதபடிக்கு அவன் ஆணிகளால் அதை இறுக்குகிறான். 8 என் தாசனாகிய இஸ்ரவேலே, நான் தெரிந்துகொண்ட யாக்கோபே, என் சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததியே, 9 நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன். 10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். 11 இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள். 12 உன்னோடே போராடினவர்களைத் தேடியும் காணாதிருப்பாய்; உன்னோடே யுத்தம்பண்ணின மனுஷர் ஒன்றுமில்லாமல் இல்பொருளாவார்கள். 13 உன் தேவனாயிருக்கிற கர்த்தராகிய நான் உன் வலதுகையைப் பிடித்து: பயப்படாதே, நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று சொல்லுகிறேன். 14 யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார். 15 இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய். 16 அவைகளைத் தூற்றுவாய், அப்பொழுது காற்று அவைகளைக் கொண்டுபோய், சுழல்காற்று அவைகளைப் பறக்கடிக்கும்; நீயோ கர்த்தருக்குள்ளே களிகூர்ந்து, இஸ்ரவேலின் பரிசுத்தருக்குள்ளே மேன்மைபாராட்டிக் கொண்டிருப்பாய். 17 சிறுமையும் எளிமையுமானவர்கள் தண்ணீரைத் தேடி, அது கிடையாமல், அவர்கள் நாவு தாகத்தால் வறளும்போது, கர்த்தராகிய நான் அவர்களுக்குச் செவிகொடுத்து, இஸ்ரவேலின் தேவனாகிய நான் அவர்களைக் கைவிடாதிருப்பேன். 18 உயர்ந்த மேடுகளில் ஆறுகளையும், பள்ளத்தாக்குகளின் நடுவே ஊற்றுகளையும் திறந்து, வனாந்தரத்தைத் தண்ணீர்த் தடாகமும், வறண்ட பூமியை நீர்க்கேணிகளுமாக்கி, 19 வனாந்தரத்திலே கேதுருமரங்களையும், சீத்தீம்மரங்களையும், மிருதுச்செடிகளையும், ஒலிவமரங்களையும் நட்டு, அவாந்தரவெளியிலே தேவதாரு விருட்சங்களையும், பாய்மரவிருட்சங்களையும், புன்னைமரங்களையும் உண்டுபண்ணுவேன். 20 கர்த்தருடைய கரம் அதைச் செய்தது என்றும், இஸ்ரவேலின் பரிசுத்தர் அதைப் படைத்தார் என்றும், யாவரும் கண்டு உணர்ந்து சிந்தித்து அறிவார்கள். 21 உங்கள் வழக்கைக் கொண்டுவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பலமான நியாயங்களை வெளிப்படுத்துங்கள் என்று யாக்கோபின் ராஜா உரைக்கிறார். 22 அவர்கள் அவைகளைக் கொண்டுவந்து, சம்பவிக்கப்போகிறவைகளை நமக்குத் தெரிவிக்கட்டும்; அவைகளில் முந்தி சம்பவிப்பவைகள் இன்னவைகளென்று சொல்லி, நாம் நம்முடைய மனதை அவைகளின்மேல் வைக்கும்படிக்கும், பிந்தி சம்பவிப்பவைகளையும் நாம் அறியும்படிக்கும் நமக்குத் தெரிவிக்கட்டும்; வருங்காரியங்களை நமக்கு அறிவிக்கட்டும். 23 பின்வரும் காரியங்களை எங்களுக்குத் தெரிவியுங்கள்; அப்பொழுது நீங்கள் தேவர்கள் என்று அறிவோம்; அல்லது நன்மையாவது தீமையாவது செய்யுங்கள்; அப்பொழுது நாங்கள் திகைத்து ஏகமாய்க் கூடி அதைப் பார்ப்போம். 24 இதோ, நீங்கள் சூனியத்திலும் சூனியமாயிருக்கிறீர்கள்; உங்கள் செயல் வெறுமையிலும் வெறுமையானது; உங்களைத் தெரிந்துகொள்ளுகிறவன் அருவருப்பானவன். 25 நான் வடக்கேயிருந்து ஒருவனை எழும்பப்பண்ணுவேன், அவன் வருவான்; சூரியோதய திசையிலிருந்து என் நாமத்தைத் தொழுதுகொள்ளுவான்; அவன் வந்து அதிபதிகளைச் சேற்றைப்போலவும், குயவன் களிமண்ணை மிதிப்பதுபோலவும் மிதிப்பான். 26 நாம் அதை அறியும்படியாக ஆதியில் சொன்னவன் யார்? நாம் அவனை யதார்த்தவான் என்று சொல்லும்படி பூர்வகாலத்தில் அறிவித்தவன் யார்? அறிவிக்கிறவன் ஒருவனும் இல்லையே; உரைக்கிறவனும் இல்லையே; உங்கள் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறவனும் இல்லையே. 27 முதல் முதல், நானே, சீயோனை நோக்கி: இதோ, அவைகளைப் பார் என்று சொல்லி, எருசலேமுக்குச் சுவிசேஷகரைக் கொடுக்கிறேன். 28 நான் பார்த்தேன், அவர்களில் அறிவிக்கிறவன் ஒருவனுமில்லை; நான் கேட்குங் காரியத்துக்குப் பிரதியுத்தரம் கொடுக்கத்தக்க ஒரு ஆலோசனைக்காரனும் அவர்களில் இல்லை. 29 இதோ, அவர்கள் எல்லாரும் மாயை, அவர்கள் கிரியைகள் விருதா; அவர்களுடைய விக்கிரகங்கள் காற்றும் வெறுமையுந்தானே.

ஏசாயா 42

1 இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணினேன்; அவர் புறஜாதிகளுக்கு நியாயத்தை வெளிப்படுத்துவார். 2 அவர் கூக்குரலிடவுமாட்டார், தம்முடைய சத்தத்தை உயர்த்தவும் அதை வீதியிலே கேட்கப்பண்ணவுமாட்டார். 3 அவர் நெரிந்தநாணலை முறியாமலும், மங்கியெரிகிற திரியை அணையாமலும், நியாயத்தை உண்மையாக வெளிப்படுத்துவார். 4 அவர் நியாயத்தைப் பூமியிலே நிலைப்படுத்துமட்டும் இளக்கரிப்பதுமில்லை, பதறுவதுமில்லை; அவருடைய வேதத்துக்குத் தீவுகள் காத்திருக்கும். 5 வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது: 6 நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைச் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும், 7 கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப் பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன். 8 நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன். 9 பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன். 10 சமுத்திரத்தில் யாத்திரை பண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே, அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள். 11 வனாந்தரமும், அதின் ஊர்களும், கேதாரியர் குடியிருக்கிற கிராமங்களும் உரத்த சத்தமிடக்கடவது; கன்மலைகளிலே குடியிருக்கிறவர்கள் கெம்பீரித்து, பர்வதங்களின் கொடுமுடியிலிருந்து ஆர்ப்பரிப்பார்களாக. 12 கர்த்தருக்கு மகிமையைச் செலுத்தி, அவர் துதியைத் தீவுகளில் அறிவிப்பார்களாக. 13 கர்த்தர் பராக்கிரமசாலியைப்போல் புறப்பட்டு, யுத்தவீரனைப்போல் வைராக்கியமூண்டு, முழங்கிக் கெர்ச்சித்து, தம்முடைய சத்துருக்களை மேற்கொள்ளுவார். 14 நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன். 15 நான் மலைகளையும் குன்றுகளையும் பாழாக்கி, அவைகளிலுள்ள பூண்டுகளையெல்லாம் வாடப்பண்ணி, ஆறுகளைத் திட்டுகளாக்கி, ஏரிகளை வற்றிப்போகப்பண்ணுவேன். 16 குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன். 17 சித்திரவேலையான விக்கிரகங்களை நம்பி, வார்ப்பிக்கப்பட்ட சுரூபங்களை நோக்கி: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று சொல்லுகிறவர்கள் பின்னிடைந்து மிகவும் வெட்கப்படுவார்கள். 18 செவிடரே, கேளுங்கள்; குருடரே, நீங்கள் காணும்படி நோக்கிப்பாருங்கள். 19 என் தாசனையல்லாமல் குருடன் யார்? நான் அனுப்பிய தூதனையல்லாமல் செவிடன் யார்? உத்தமனையல்லாமல் குருடன் யார்? கர்த்தருடைய ஊழியக்காரனையல்லாமல் அந்தகன் யார்? 20 நீ அநேக காரியங்களைக் கண்டும் கவனியாதிருக்கிறாய்; அவனுக்குச் செவிகளைத் திறந்தாலும் கேளாதே போகிறான். 21 கர்த்தர் தமது நீதியினிமித்தம் அவன்மேல் பிரியம் வைத்திருந்தார்; அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார். 22 இந்த ஜனமோ கொள்ளையிடப்பட்டும், சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; அவர்கள் அனைவரும் கெபிகளிலே அகப்பட்டு, காவலறைகளிலே அடைக்கப்பட்டிருக்கிறார்கள்; தப்புவிப்பார் இல்லாமல் கொள்ளையாகி, விட்டுவிடு என்பார் இல்லாமல் சூறையாவார்கள். 23 உங்களில் இதற்குச் செவிகொடுத்துப் பின்வருகிறதைக் கவனித்துக் கேட்கிறவன் யார்? 24 யாக்கோபைச் சூறையிட்டு இஸ்ரவேலைக் கொள்ளைக்காரருக்கு ஒப்புக்கொடுக்கிறவர் யார்? அவர்கள் பாவஞ்செய்து விரோதித்த கர்த்தர் அல்லவோ? அவருடைய வழிகளில் நடக்க மனதாயிராமலும், அவருடைய வேதத்துக்குச் செவிகொடாமலும் போனார்களே. 25 இவர்கள்மேல் அவர் தமது கோபத்தின் உக்கிரத்தையும், யுத்தத்தின் வலிமையையும் வரப்பண்ணி, அவர்களைச்சூழ அக்கினிஜுவாலைகளைக் கொளுத்தியிருந்தும் உணராதிருந்தார்கள்; அது அவர்களைத் தகித்தும், அதை மனதிலே வைக்காதேபோனார்கள்.

ஏசாயா 43

1 இப்போதும் யாக்கோபே, உன்னைச் சிருஷ்டித்தவரும், இஸ்ரவேலே, உன்னை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: பயப்படாதே; உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன். 2 நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்; நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை; நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய்; அக்கினிஜுவாலை உன்பேரில் பற்றாது. 3 நான் இஸ்ரவேலின் பரிசுத்தரும், உன் இரட்சகருமாயிருக்கிற உன் தேவனாகிய கர்த்தர்; உன்னை மீட்கும்பொருளாக எகிப்தையும், உனக்கு ஈடாக எத்தியோப்பியாவையும் சேபாவையும் கொடுத்தேன். 4 நீ என் பார்வைக்கு அருமையானபடியினால் கனம்பெற்றாய்; நானும் உன்னைச் சிநேகித்தேன், ஆதலால் உனக்குப் பதிலாக மனுஷர்களையும், உன் ஜீவனுக்கு ஈடாக ஜனங்களையும் கொடுப்பேன். 5 பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கிலிருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன். 6 நான் வடக்கை நோக்கி: கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும், 7 நான் என் மகிமைக்கென்று சிருஷ்டித்து உருவாக்கிப் படைத்து, என் நாமந்தரிக்கப்பட்ட யாவரையும் கொண்டுவா என்பேன். 8 கண்களிருந்தும் குருடராயிருக்கிற ஜனத்தையும், காதுகளிருந்தும் செவிடராயிருக்கிறவர்களையும் புறப்பட்டு வரப்பண்ணுங்கள். 9 சகல ஜாதிகளும் ஏகமாய்ச் சேர்ந்துகொண்டு, சகல ஜனங்களும் கூடிவரட்டும்; இதை அறிவித்து, முந்தி சம்பவிப்பவைகளை நமக்குத் தெரிவிக்கிறவன் யார்? கேட்டு மெய்யென்று சொல்லக்கூடும்படிக்கு, அவர்கள் தங்கள் சாட்சிகளைக் கொண்டுவந்து யதார்த்தவான்களாய் விளங்கட்டும். 10 நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு, நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்குமுன் ஏற்பட்ட தேவன் இல்லை; எனக்குப்பின் இருப்பதும் இல்லை. 11 நான், நானே கர்த்தர்; என்னையல்லாமல் ரட்சகர் இல்லை. 12 நானே அறிவித்து, இரட்சித்து, விளங்கப்பண்ணினேன்; உங்களில் இப்படிச் செய்யத்தக்க அந்நிய தேவன் இல்லை; நானே தேவன் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 13 நாள் உண்டாகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன்; என் கைக்குத் தப்புவிக்கத்தக்கவன் இல்லை; நான் செய்கிறதைத் தடுப்பவன் யார்? 14 நான் உங்களுக்காக அரண்களெல்லாம் இடிந்துவிழவும், கல்தேயர் படவுகளிலிருந்து அலறவும் செய்யத்தக்கவர்களைப் பாபிலோனுக்கு அனுப்பினேனென்று, உங்கள் மீட்பரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய கர்த்தர் சொல்லுகிறார். 15 நானே உங்கள் பரிசுத்தராகிய கர்த்தரும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர். 16 சமுத்திரத்திலே வழியையும் வலிய தண்ணீர்களிலே பாதையையும் உண்டாக்கி, 17 இரதங்களையும் குதிரைகளையும் இராணுவங்களையும் பராக்கிரமசாலிகளையும் புறப்படப்பண்ணி, அவைகள் எழுந்திராதபடிக்கு ஒருமித்து விழுந்து கிடக்கவும், ஒரு திரி அணைகிறதுபோல் அவைகள் அணைந்துபோகவும்பண்ணுகிற கர்த்தர் சொல்லுகிறதாவது: 18 முந்தினவைகளை நினைக்கவேண்டாம்; பூர்வமானவைகளைச் சிந்திக்கவேண்டாம். 19 இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன்; இப்பொழுதே அது தோன்றும்; நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். 20 நான் தெரிந்துகொண்ட என் ஜனத்தின் தாகத்துக்கு வனாந்தரத்திலே தண்ணீர்களையும் அவாந்தரவெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவதினால், காட்டுமிருகங்களும், வலுசர்ப்பங்களும், கோட்டான் குஞ்சுகளும் என்னைக் கனம்பண்ணும். 21 இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியைச் சொல்லிவருவார்கள். 22 ஆனாலும் யாக்கோபே, நீ என்னை நோக்கிக் கூப்பிடவில்லை; இஸ்ரவேலே, நீ என்னைக்குறித்து மனஞ்சலித்துப்போனாய். 23 உன் ஆடுகளைத் தகனபலிகளாக நீ எனக்குச் செலுத்தவில்லை; உன் பலிகளாலே நீ என்னைக் கனம்பண்ணவுமில்லை; காணிக்கைகளைச் செலுத்தும்படி நான் உன்னைச் சங்கடப்படுத்தாமலும், தூபங்காட்டும்படி உன்னை வருத்தப்படுத்தாமலும் இருந்தேன். 24 நீ எனக்குப் பணங்களால் சுகந்தபட்டையைக் கொள்ளாமலும், உன் பலிகளின் நிணத்தினால் என்னைத் திருப்தியாக்காமலும், உன் பாவங்களினால் என்னைச் சங்கடப்படுத்தி, உன் அக்கிரமங்களினால் என்னை வருத்தப்படுத்தினாய். 25 நான், நானே உன் மீறுதல்களை என் நிமித்தமாகவே குலைத்துப்போடுகிறேன்; உன் பாவங்களை நினையாமலும் இருப்பேன். 26 நாம் ஒருவரோடொருவர் வழக்காடும்படி எனக்கு நினைப்பூட்டு; நீ நீதிமானாக விளங்கும்படி உன் காரியத்தைச் சொல். 27 உன் ஆதிதகப்பன் பாவஞ்செய்தான்; உனக்கு முன்னின்று பேசுகிறவர்களும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினார்கள். 28 ஆகையால், நான் பரிசுத்த ஸ்தலத்தின் தலைவர்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, யாக்கோபைச் சாபத்துக்கும், இஸ்ரவேலை நிந்தனைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.

ஏசாயா 44

1 இப்போதும், என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலே, கேள். 2 உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணைசெய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே. 3 தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்ததியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். 4 அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச்செடிகளைப்போல வளருவார்கள். 5 ஒருவன், நான் கர்த்தருடையவன் என்பான்; ஒருவன், யாக்கோபின்பேரைத் தரித்துக்கொள்வான்; ஒருவன், தான் கர்த்தருடையவன் என்று கையெழுத்துப்போட்டு, இஸ்ரவேலின் நாமத்தைத் தரித்துக்கொள்வான். 6 நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிரத் தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். 7 பூர்வகாலத்து ஜனங்களை நான் ஸ்தாபித்தது முதற்கொண்டு, என்னைப்போல எதையாகிலும் வரவழைத்து, இன்னின்னதென்று முன்னறிவித்து, எனக்கு முன்னே வரிசையாக நிறுத்தத்தக்கவன் யார்? நிகழ்காரியங்களையும் வருங்காரியங்களையும் தங்களுக்கு அவர்கள் அறிவிக்கட்டும். 8 நீங்கள் கலங்காமலும் பயப்படாமலும் இருங்கள்; அக்காலமுதற்கொண்டு நான் அதை உனக்கு விளங்கப்பண்ணினதும் முன்னறிவித்ததும் இல்லையோ? இதற்கு நீங்களே என் சாட்சிகள்; என்னைத்தவிரத் தேவனுண்டோ? வேறொரு கன்மலையும் இல்லையே; ஒருவனையும் அறியேன். 9 விக்கிரகங்களை உருவாக்குகிற யாவரும் வீணர்; அவர்களால் இச்சிக்கப்பட்டவைகள் ஒன்றுக்கும் உதவாது; அவைகள் ஒன்றும் காணாமலும், ஒன்றும் அறியாமலும் இருக்கிறதென்று தங்களுக்கு வெட்கமுண்டாக அவைகளுக்குத் தாங்களே சாட்சிகளாயிருக்கிறார்கள். 10 ஒன்றுக்கும் உதவாத தெய்வத்தை உருவாக்கி, விக்கிரகத்தை வார்ப்பிக்கிறவன் எப்படிப்பட்டவன்? 11 இதோ, அவனுடைய கூட்டாளிகளெல்லாரும் வெட்கமடைவார்கள்; தொழிலாளிகள் நரஜீவன்கள்தானே; அவர்கள் எல்லாரும் கூடிவந்து நிற்கட்டும்; அவர்கள் ஏகமாய்த் திகைத்து வெட்கப்படுவார்கள். 12 கொல்லன் இரும்பைக் குறட்டால் இடுக்கி, உலையிலே காயவைத்து, சுத்திகளால் அதை உருவாக்கி, தன் புயபலத்தினால் அதைப் பண்படுத்துகிறான்; பட்டினியாயிருந்து பெலனற்றுப்போகிறான்; தண்ணீர் குடியாமல் களைத்துப்போகிறான். 13 தச்சன் நூல்பிடித்து, மட்டப்பலகையால் மரத்துக்குக் குறிபோட்டு, உளிகளினால் உருப்படுத்தி, கவராசத்தினால் அதை வகுத்து, மனுஷசாயலாக மனுஷரூபத்தின்படி உருவமாக்குகிறான்; அதைக் கோவிலிலே நாட்டி வைக்கிறான். 14 அவன் தனக்குக் கேதுருக்களை வெட்டுகிறான்; ஒரு மருதமரத்தையாவது ஒரு கர்வாலிமரத்தையாவது, தெரிந்துகொண்டு, காட்டுமரங்களிலே பெலத்த மரத்தைத் தன் காரியத்துக்காக வளர்க்கிறான்; அல்லது அசோகமரத்தை நடுகிறான், மழை அதை வளரச்செய்யும். 15 மனுஷனுக்கு அவைகள் அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான். 16 அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப் பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி; 17 அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி: நீ என் தெய்வம், என்னை இரட்சிக்கவேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான். 18 அறியாமலும் உணராமலும் இருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது. 19 அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை. 20 அவன் சாம்பலை மேய்கிறான்; வஞ்சிக்கப்பட்ட மனம் அவனை மோசப்படுத்தினது; அவன் தன் ஆத்துமாவைத் தப்புவிக்காமலும்: என் வலது கையிலே அபத்தம் அல்லவோ இருக்கிறதென்று சொல்லாமலும் இருக்கிறான். 21 யாக்கோபே, இஸ்ரவேலே, இவைகளை நினை; நீ என் தாசன்; நான் உன்னை உருவாக்கினேன்; நீ என் தாசன்; இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. 22 உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப்போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன். 23 வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் யாக்கோபை மீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார். 24 உன் மீட்பரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவருமான கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர்; நான் ஒருவராய் வானங்களை விரித்து, நானே பூமியைப் பரப்பினவர். 25 நான் கட்டுக்கதைக்காரரின் குறிகளை அபத்தமாக்கி, குறிசொல்லுகிறவர்களை நிர்மூடராக்கி, ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர். 26 நான் என் ஊழியக்காரரின் வார்த்தையை நிலைப்படுத்தி, என் ஸ்தானாபதிகளின் ஆலோசனையை நிறைவேற்றி: குடியேறுவாய் என்று எருசலேமுக்கும், கட்டப்படுவீர்கள் என்று யூதாவின் பட்டணங்களுக்கும் சொல்லி, அவைகளின் பாழான ஸ்தலங்களை எடுப்பிப்பவர். 27 நான் ஆழத்தை நோக்கி: வற்றிப்போ என்றும், உன் நதிகளை வெட்டாந்தரையாக்குவேன் என்றும் சொல்லுகிறவர். 28 கோரேசைக் குறித்து: அவன் என் மேய்ப்பன்; அவன் எருசலேமை நோக்கி: நீ கட்டப்படு என்றும்; தேவாலயத்தை நோக்கி: நீ அஸ்திபாரப்படு என்றும் சொல்லி, எனக்குப் பிரியமானதையெல்லாம் நிறைவேற்றுவான் என்று சொல்லுகிறவர் நான்.

ஏசாயா 45

1 கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது: 2 நான் உனக்கு முன்னே போய், கோணலானவைகளைச் செவ்வையாக்குவேன். 3 உன்னைப் பெயர்சொல்லி அழைக்கிற இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் நானே என்று நீ அறியும்படிக்கு, 4 வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்; நான் என் தாசனாகிய யாக்கோபினிமித்தமும், நான் தெரிந்துகொண்ட இஸ்ரவேலினிமித்தமும், நான் உன்னைப் பெயர்சொல்லி அழைத்து, நீ என்னை அறியாதிருந்தும், உனக்கு நாமம் தரித்தேன். 5 நானே கர்த்தர், வேறொருவர் இல்லை; என்னைத்தவிரத் தேவன் இல்லை. 6 என்னைத்தவிர ஒருவரும் இல்லையென்று சூரியன் உதிக்கிற திசையிலும், அது அஸ்தமிக்கிற திசையிலும் அறியப்படும்படிக்கு நீ என்னை அறியாதிருந்தும், நான் உனக்கு இடைக்கட்டு கட்டினேன்; நானே கர்த்தர், வேறொருவர் இல்லை. 7 ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்துத் தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர். 8 வானங்களே, உயர இருந்து சொரியுங்கள்; ஆகாயமண்டலங்கள் நீதியைப்பொழியக்கடவது; பூமி திறவுண்டு, இரட்சிப்பின் கனியைத்தந்து, நீதியுங்கூட விளைவதாக; கர்த்தராகிய நான் இவைகளை உண்டாக்குகிறேன். 9 மண்ணோடுகளுக்கொத்த ஓடாயிருந்தும், தன்னை உருவாக்கினவரோடே வழக்காடுகிறவனுக்கு ஐயோ! களிமண் தன்னை உருவாக்கினவனை நோக்கி: என்ன செய்கிறாயென்று சொல்லத்தகுமோ? உன் கிரியையானது: அவருக்குக் கைகள் இல்லையென்று சொல்லலாமோ? 10 தகப்பனை நோக்கி: ஏன் ஜநிப்பித்தாய் என்றும், தாயை நோக்கி: ஏன் பெற்றாய் என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ! 11 இஸ்ரவேலின் பரிசுத்தரும் அவனை உருவாக்கினவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: வருங்காரியங்களை என்னிடத்தில் கேளுங்கள்; என் பிள்ளைகளைக்குறித்தும், என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள். 12 நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன். 13 நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 14 எகிப்தின் சம்பாத்தியமும், எத்தியோப்பியாவின் வர்த்தகலாபமும், நெடிய ஆட்களாகிய சபேயரின் வர்த்தகலாபமும், உன்னிடத்திற்குத் தாண்டிவந்து, உன்னுடையதாகும்; அவர்கள் உன் பின்னே சென்று, விலங்கிடப்பட்டு நடந்துவந்து: உன்னுடனே மாத்திரம் தேவன் இருக்கிறார் என்றும், அவரையல்லாமல் வேறே தேவன் இல்லையென்றும் சொல்லி, உன்னைப் பணிந்துகொண்டு, உன்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 15 இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர். 16 விக்கிரகங்களை உண்டுபண்ணுகிற அனைவரும் வெட்கப்பட்டு இலச்சையடைந்து, ஏகமாய்க் கலங்கிப்போவார்கள். 17 இஸ்ரவேலோ, கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள். 18 வானங்களைச் சிருஷ்டித்துப் பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை. 19 நான் அந்தரங்கத்திலும், பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப்பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர். 20 ஜாதிகளினின்று தப்பினவர்களே, கூட்டங்கூடி வாருங்கள்; ஏகமாய்ச் சேருங்கள்; தங்கள் விக்கிரகமாகிய மரத்தைச் சுமந்து, இரட்சிக்கமாட்டாத தேவனைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் அறிவில்லாதவர்கள். 21 நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி, அந்நாள்துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை. 22 பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை. 23 முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார். 24 கர்த்தரிடத்தில்மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல்கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள். 25 இஸ்ரவேலின் சந்ததியாகிய யாவரும் கர்த்தருக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள்.

ஏசாயா 46

1 பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் விக்கிரகங்கள் காட்டுமிருகங்களுக்கும் நாட்டுமிருகங்களுக்கும் சுமையாகும்; நீங்கள் சுமந்த சுமைகள் இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும். 2 அவைகள் ஏகமாய்க் குனிந்துபணியும்; சுமைகளை அவைகள் தப்புவிக்கமாட்டாது; அவைகள் தாமே சிறைப்பட்டுப்போகும். 3 யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன். 4 உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். 5 யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்? 6 பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி, வெள்ளியைத் தராசில் நிறுத்து, தட்டானுடனே கூலி பொருத்திக்கொள்ளுகிறார்கள்; அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான்; அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள். 7 அதைத் தோளின்மேல் எடுத்து, அதைச் சுமந்து, அதை அதின் ஸ்தானத்திலே வைக்கிறார்கள்; அங்கே அது நிற்கும்; தன் இடத்தைவிட்டு அசையாது; ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்தரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக்கட்டை நீக்கி அவனை இரட்சிக்கிறதுமில்லை. 8 இதை நினைத்துப் புருஷராயிருங்கள்; பாதகரே, இதை மனதில் வையுங்கள். 9 முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை. 10 அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி, 11 உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனைத் தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன். 12 முரட்டு இருதயமுள்ளவர்களே, நீதிக்குத் தூரமானவர்களே, எனக்குச் செவிகொடுங்கள். 13 என் நீதியைச் சமீபிக்கப்பண்ணுகிறேன், அது தூரமாயிருப்பதில்லை; என் இரட்சிப்புத் தாமதிப்பதுமில்லை; நான் சீயோனில் இரட்சிப்பையும், இஸ்ரவேலுக்கு என் மகிமையையும் கட்டளையிடுவேன்.

ஏசாயா 47

1 பாபிலோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ இறங்கி மண்ணிலே உட்காரு; கல்தேயரின் குமாரத்தியே, தரையிலே உட்காரு; உனக்குச் சிங்காசனமில்லை; நீ செருக்குக்காரியும் சுகசெல்வியும் என்று இனி அழைக்கப்படுவதில்லை. 2 ஏந்திரத்தை எடுத்து மாவரை; உன் முக்காட்டை நீக்கிவிடு; வெறுங்காலும் அம்மணத்தொடையுமாய் ஆறுகளைக் கடந்துபோ. 3 உன் நிர்வாணம் வெளிப்படும்; உன் இலச்சை காணப்படும்; நான் ஒருவனையும் பாராமல் நீதியைச் சரிக்கட்டுவேன். 4 எங்கள் மீட்பருடைய நாமம் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய சேனைகளுடைய கர்த்தர் என்பது. 5 கல்தேயரின் குமாரத்தியே, நீ அந்தகாரத்துக்குள் பிரவேசித்து மவுனமாய் உட்காரு; இனி நீ ராஜ்யங்களின் நாயகியென்று அழைக்கப்படுவதில்லை. 6 நான் என் ஜனத்தின்மேல் கடுங்கோபமடைந்து, என் சுதந்தரத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; நீ அவர்கள்மேல் இரக்கம்வையாமல், முதிர்வயதுள்ளவர்களின்மேல் உன் நுகத்தை மகா பாரமாக்கி, 7 என்றென்றைக்கும் நாயகியாயிருப்பேனென்று சொல்லி, இந்தக்காரியங்களை இதுவரைக்கும் உன் மனதிலே வையாமலும், அதின் முடிவை நினையாமலும் போனாய். 8 இப்பொழுதும் சுகசெல்வியே, விசாரமில்லாமல் வாழ்கிறவளே: நான்தான், என்னைத்தவிர ஒருவருமில்லை; நான் விதவையாவதில்லை, நான் சந்தான சேதத்தை அறிவதில்லையென்று உன் இருதயத்திலே சொல்லுகிறவளே, நான் சொல்லுகிறதைக் கேள். 9 சந்தான சேதமும் விதவையிருப்பும் ஆகிய இவ்விரண்டும் உனக்குச் சடிதியாக ஒரேநாளில் வரும்; உன் திரளான சூனியங்களினிமித்தமும், உன் வெகுவான ஸ்தம்பன வித்தைகளினிமித்தமும் அவைகள் பூரணமாய் உன்மேல் வரும். 10 உன் துன்மார்க்கத்திலே நீ திடநம்பிக்கையாயிருந்து: என்னைப் பார்க்கிறவர் ஒருவரும் இல்லையென்றாய். உன் ஞானமும் உன் அறிவுமே உன்னைக் கெடுத்தது; நான்தான், என்னைத்தவிர ஒருவருமில்லையென்று உன் இருதயத்தில் எண்ணினாய். 11 ஆகையால் தீங்கு உன்மேல் வரும், அது எங்கேயிருந்து உதித்ததென்று நீ அறியாய்; விக்கினம் உன்மேல் வரும், நீ அதை நிவிர்த்தியாக்கமாட்டாய்; நீ அறியாதபடிக்குச் சடிதியாய் உண்டாகும் பாழ்க்கடிப்பு உன்மேல் வரும். 12 நீ உன் சிறுவயதுமுதல் பிரயாசப்பட்டுப் பழகிவருகிற உன் ஸ்தம்பன வித்தைகளையும், உன் திரளான சூனியங்களையும் நீ அநுசரித்து நில்; அவைகளால் உனக்குப் பிரயோஜனம் உண்டோ, பலன் உண்டோ, பார்ப்போம். 13 உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்; இப்பொழுதும் ஜோசியரும், நட்சத்திரம் பார்க்கிறவர்களும், அமாவாசி கணிக்கிறவர்களும் எழும்பி, உனக்கு நேரிடுகிறவைகளுக்கு உன்னை விலக்கி இரட்சிக்கட்டும். 14 இதோ, அவர்கள் தாளடியைப்போல இருப்பார்கள், நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும்; அவர்கள் தங்கள் பிராணனை அக்கினிஜுவாலையினின்று விடுவிப்பதில்லை; அது குளிர்காயத்தக்க தழலுமல்ல; எதிரே உட்காரத்தக்க அடுப்புமல்ல. 15 உன் சிறுவயதுமுதல் நீ பிரயாசப்பட்டு எவர்களுடன் வியாபாரம் பண்ணினாயோ, அவர்களும் அப்படியே இருப்பார்கள்; அவரவர் தங்கள் போக்கிலே போய் அலைவார்கள்; உன்னை இரட்சிப்பார் இல்லை.

ஏசாயா 48

1 இஸ்ரவேலென்னும் பெயர்பெற்று, யூதாவின் நீரூற்றிலிருந்து சுரந்தவர்களும், கர்த்தருடைய நாமத்தின்மேல் ஆணையிட்டு, உண்மையும் நீதியும் இல்லாமல் இஸ்ரவேலின் தேவனை அறிக்கையிடுகிறவர்களுமான யாக்கோபின் வம்சத்தாரே, கேளுங்கள். 2 அவர்கள் தங்களைப் பரிசுத்த நகரத்தார் என்று சொல்லி, சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள இஸ்ரவேலின் தேவன்மேல் பற்றுதலாயிருக்கிறார்கள். 3 பூர்வகாலத்தில் நடந்தவைகளை ஆதிமுதல் அறிவித்தேன், அவைகள் என் வாயிலிருந்து பிறந்தன, அவைகளை வெளிப்படுத்தினேன்; அவைகளைச் சடிதியாய்ச் செய்தேன், அவைகள் நடந்தன. 4 நீ கடினமுள்ளவனென்றும், உன் பிடரி நரம்பு இரும்பென்றும், உன் நெற்றி வெண்கலமென்றும் அறிந்திருக்கிறேன். 5 ஆகையால்: என் விக்கிரகம் அவைகளைச் செய்ததென்றும், நான் செய்த சுரூபமும், நான் வார்ப்பித்த விக்கிரகமும் அவைகளைக் கட்டளையிட்டதென்றும் நீ சொல்லாதபடிக்கு, நான் அவைகளை முன்னமே உனக்கு அறிவித்து, அவைகள் வராததற்குமுன்னே உனக்கு வெளிப்படுத்தினேன். 6 அவைகளைக் கேள்விப்பட்டாயே, அவைகளையெல்லாம் பார், இப்பொழுது நீங்களும் அவைகளை அறிவிக்கலாமல்லவோ? இதுமுதல் புதியவைகளானவைகளையும், நீ அறியாத மறைபொருளானவைகளையும் உனக்குத் தெரிவிக்கிறேன். 7 அவைகள் ஆதிமுதற்கொண்டு அல்ல, இப்பொழுதே உண்டாக்கப்பட்டன; இதோ, அவைகளை அறிவேன் என்று நீ சொல்லாதபடிக்கு, இந்நாட்களுக்கு முன்னே நீ அவைகளைக் கேள்விப்படவில்லை. 8 நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; ஆதிமுதல் உன் செவி திறந்திருக்கவுமில்லை; நீ துரோகம்பண்ணுவாயென்பதையும், தாயின் கர்ப்பந்தொடங்கி நீ மீறுகிறவனென்று பெயர்பெற்றதையும் அறிந்திருக்கிறேன். 9 என் நாமத்தினிமித்தம் என் கோபத்தை நிறுத்திவைத்தேன்; உன்னைச் சங்கரிக்காதபடிக்கு நான் என் புகழ்ச்சியினிமித்தம் உன்மேல் பொறுமையாயிருப்பேன். 10 இதோ, உன்னைப் புடமிட்டேன்; ஆனாலும் வெள்ளியைப்போலல்ல, உபத்திரவத்தின் குகையிலே உன்னைத் தெரிந்துகொண்டேன். 11 என்னிமித்தம், என்னிமித்தமே, அப்படிச் செய்வேன்; என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன். 12 யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே. 13 என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும். 14 நீங்களெல்லாரும் கூடிவந்து கேளுங்கள்; கர்த்தருக்குப் பிரியமானவன் அவருக்குச் சித்தமானதைப் பாபிலோனில் செய்வான்; அவன் புயம் கல்தேயரின்மேல் இருக்கும் என்பதை இவர்களில் அறிவித்தவன் யார்? 15 நான், நானே அதைச் சொன்னேன்; நான் அவனை அழைத்தேன்; நான் அவனை வரப்பண்ணினேன்; அவன் வழி வாய்க்கும். 16 நீங்கள் என் சமீபத்தில் வந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார். 17 இஸ்ரவேலின் பரிசுத்தராயிருக்கிற உன் மீட்பரான கர்த்தர் சொல்லுகிறதாவது: பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய கர்த்தர் நானே. 18 ஆ, என் கற்பனைகளைக் கவனித்தாயானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உன் சமாதானம் நதியைப்போலும், உன் நீதி சமுத்திரத்தின் அலைகளைப்போலும் இருக்கும். 19 அப்பொழுது உன் சந்ததி மணலத்தனையாகவும், உன் கர்ப்பப்பிறப்பு அதின் அணுக்களத்தனையாகவும் இருக்கும்; அப்பொழுது அதின் பெயர் நம்மை விட்டு அற்றுப்போகாமலும் அழிக்கப்படாமலும் இருக்கும். 20 பாபிலோனிலிருந்து புறப்படுங்கள்; கல்தேயரைவிட்டு ஓடிவாருங்கள்; கர்த்தர் தம்முடைய தாசனாகிய யாக்கோபை மீட்டுக்கொண்டாரென்று சொல்லுங்கள்; இதைக் கெம்பீரசத்தமாய்க் கூறிப் பிரசித்தப்படுத்துங்கள், பூமியின் கடையாந்தரமட்டும் வெளிப்படுத்துங்கள் என்கிறார். 21 அவர் அவர்களை வனாந்தரங்களில் நடத்தும்போது, அவர்களுக்குத் தாகவிடாயிருந்ததில்லை; கன்மலையிலிருந்து தண்ணீரை அவர்களுக்குச் சுரக்கப்பண்ணினார், கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் ஓடிவந்தது. 22 துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 49

1 தீவுகளே, எனக்குச் செவிகொடுங்கள்; தூரத்திலிருக்கிற ஜனங்களே, கவனியுங்கள்; தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் என்னை அழைத்து, நான் என் தாயின் வயிற்றில் இருக்கையில் என் நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தினார். 2 அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார். 3 அவர் என்னை நோக்கி: நீ என் தாசன்; இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார். 4 அதற்கு நான்: விருதாவாய் உழைக்கிறேன், வீணும் வியர்த்தமுமாய் என் பெலனைச் செலவழிக்கிறேன்; ஆகிலும் என் நியாயம் கர்த்தரிடத்திலும், என் பலன் என் தேவனிடத்திலும் இருக்கிறது என்று சொன்னேன். 5 யாக்கோபைத் தம்மிடத்தில் திருப்பும்படி நான் தாயின் கர்ப்பத்திலிருந்ததுமுதல் கர்த்தர் தமக்குத் தாசனாக என்னை உருவாக்கினார்; இஸ்ரவேலோ சேராதேபோகிறது; ஆகிலும் கர்த்தருடைய பார்வையில் கனமடைவேன், என் தேவன் என் பெலனாயிருப்பார். 6 யாக்கோபின் கோத்திரங்களை எழுப்பவும், இஸ்ரவேலில் காக்கப்பட்டவர்களைத் திருப்பவும், நீர் எனக்குத் தாசனாயிருப்பது அற்பகாரியமாயிருக்கிறது; நீர் பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன் என்கிறார். 7 இஸ்ரவேலின் மீட்பரும் அதின் பரிசுத்தருமாகிய கர்த்தர், மனுஷரால் அசட்டைபண்ணப்பட்டவரும், ஜாதியாரால் அருவருக்கப்பட்டவரும், அதிகாரிகளுக்கு ஊழியக்காரனுமாயிருக்கிறவரை நோக்கி, உண்மையுள்ள கர்த்தர் நிமித்தமும், உம்மைத் தெரிந்துகொண்ட இஸ்ரவேலின் பரிசுத்தர் நிமித்தமும், ராஜாக்கள் கண்டு எழுந்திருந்து, பிரபுக்கள் பணிந்துகொள்வார்கள் என்று சொல்லுகிறார். 8 பின்னும் கர்த்தர்: அநுக்கிரக காலத்திலே நான் உமக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உமக்கு உதவிசெய்தேன்; நீர் பூமியைச் சீர்ப்படுத்தி, பாழாய்க்கிடக்கிற இடங்களைச் சுதந்தரிக்கப்பண்ணவும்; 9 கட்டுண்டவர்களை நோக்கி: புறப்பட்டுப்போங்கள் என்றும்; இருளில் இருக்கிறவர்களை நோக்கி: வெளிப்படுங்கள் என்றும் சொல்லவும், நான் உம்மைக் காப்பாற்றி, உம்மை ஜனங்களுக்கு உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன்; அவர்கள் வழியோரங்களிலே மேய்வார்கள்; சகல மேடுகளிலும் அவர்களுக்கு மேய்ச்சல் உண்டாயிருக்கும். 10 அவர்கள் பசியாயிருப்பதுமில்லை, தாகமாயிருப்பதுமில்லை; உஷ்ணமாகிலும், வெயிலாகிலும் அவர்கள்மேல் படுவதுமில்லை; அவர்களுக்கு இரங்குகிறவர் அவர்களை நடத்தி, அவர்களை நீரூற்றுகளிடத்திற்குக் கொண்டுபோய்விடுவார். 11 என் மலைகளையெல்லாம் வழிகளாக்குவேன்; என் பாதைகள் உயர்த்தப்படும். 12 இதோ, இவர்கள் தூரத்திலிருந்து வருவார்கள்; இதோ, அவர்கள் வடக்கிலும் மேற்கிலுமிருந்து வருவார்கள்; இவர்கள் சீனீம் தேசத்திலுமிருந்து வருவார்கள் என்கிறார். 13 வானங்களே, கெம்பீரித்துப்பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள்மேல் இரக்கமாயிருப்பார். 14 சீயோனோ: கர்த்தர் என்னைக் கைவிட்டார், ஆண்டவர் என்னை மறந்தார் என்று சொல்லுகிறாள். 15 ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. 16 இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது. 17 உன் குமாரர் தீவிரித்துவருவார்கள்; உன்னை நிர்மூலமாக்கினவர்களும் உன்னைப் பாழாக்கினவர்களும் உன்னைவிட்டுப் புறப்பட்டுப்போவார்கள். 18 உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லாரும் ஏகமாய்க் கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லாரையும் ஆபரணமாகத் தரித்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார். 19 அப்பொழுது உன் வனாந்தரங்களும், உன் பாழிடங்களும், நிர்மூலமான உன் தேசமும், இனிக் குடிகளின் திரளினாலே உனக்கு நெருக்கமாயிருக்கும்; உன்னை விழுங்கினவர்கள் தூரமாவார்கள். 20 பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப்போகிற பிள்ளைகள்: இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது; நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று, உன் காதுகள் கேட்கச் சொல்லுவார்கள். 21 அப்பொழுது நீ: இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார்? நான் பிள்ளைகளற்றும், தனித்தும், சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார்? இதோ, நான் ஒன்றியாய் விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள்? என்று உன் இருதயத்தில் சொல்லுவாய். 22 இதோ, ஜாதிகளுக்கு நேராக என் கரத்தை உயர்த்தி, ஜனங்களுக்கு நேராக என் கொடியை ஏற்றுவேன்; அப்பொழுது உன் குமாரரைக் கொடுங்கைகளில் ஏந்திக்கொண்டு வருவார்கள்; உன் குமாரத்திகள் தோளின்மேல் எடுத்துக்கொண்டு வரப்படுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 23 ராஜாக்கள் உன்னை வளர்க்கும் தந்தைகளும், அவர்களுடைய நாயகிகள் உன் கைத்தாய்களுமாயிருப்பார்கள்; தரையிலே முகங்குப்புற விழுந்து உன்னைப் பணிந்து, உன் கால்களின் தூளை நக்குவார்கள்; நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய். 24 பராக்கிரமன் கையிலிருந்து கொள்ளைப்பொருளைப் பறிக்கக்கூடுமோ? அல்லது நீதியாய்ச் சிறைப்பட்டுப்போனவர்களை விடுவிக்கக்கூடுமோ? 25 என்றாலும் இதோ, பராக்கிரமனால் சிறைப்படுத்தப்பட்டவர்களும் விடுவிக்கப்படுவார்கள்; பெலவந்தனால் கொள்ளையிடப்பட்டதும் விடுதலையாக்கப்படும்; உன்னோடு வழக்காடுகிறவர்களோடே நான் வழக்காடி, உன் பிள்ளைகளை இரட்சித்துக்கொள்ளுவேன்; 26 உன்னை ஒடுக்கினவர்களுடைய மாம்சத்தை அவர்களுக்கே தின்னக்கொடுப்பேன்; மதுபானத்தால் வெறிகொள்வதுபோல் தங்களுடைய இரத்தத்தினால் வெறிகொள்வார்கள்; கர்த்தரும் யாக்கோபின் வல்லவருமாகிய நான் உன் இரட்சகரும் உன் மீட்பருமாயிருக்கிறதை மாம்சமான யாவரும் அறிந்துகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 50

1 கர்த்தர் சொல்லுகிறார்: நான் உங்கள் தாயை அனுப்பிவிட்டபோது, அவளுக்குக் கொடுத்த தள்ளுதற்சீட்டு எங்கே? அல்லது எனக்குக் கடன்கொடுத்த எவனுக்கு உங்களை நான் விற்றுப்போட்டேன்? இதோ, உங்கள் அக்கிரமங்களினிமித்தம் நீங்கள் விற்கப்பட்டீர்கள்; உங்கள் பாதகங்களினிமித்தம் உங்கள் தாய் அனுப்பிவிடப்பட்டாள். 2 நான் வந்தபோது ஒருவனும் இல்லாமற்போனதென்ன? நான் கூப்பிட்டபோது மறுஉத்தரவு கொடுக்க ஒருவனும் இல்லாமற்போனதென்ன? மீட்கக்கூடாதபடிக்கு என் கரம் குறுகிற்றோ? விடுவிக்கிறதற்கு என்னிடத்தில் பெலனில்லாமற்போயிற்றோ? இதோ, என் கண்டிதத்தினாலே கடலை வற்றப்பண்ணி, நதிகளை வெட்டாந்தரையாக்கிப்போடுகிறேன்; அவைகளிலுள்ள மீன் தண்ணீரில்லாமல் தாகத்தால் செத்து நாறுகின்றது. 3 நான் வானங்களுக்குக் காரிருளை உடுத்தி, இரட்டை அவைகளின் மூடுசீலையாக்குகிறேன். 4 இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார். 5 கர்த்தராகிய ஆண்டவர் என்செவியைத் திறந்தார்; நான் எதிர்க்கவுமில்லை, நான் பின்வாங்கவுமில்லை. 6 அடிக்கிறவர்களுக்கு என் முதுகையும், தாடைமயிரைப் பிடுங்குகிறவர்களுக்கு என் தாடைகளையும் ஒப்புக்கொடுத்தேன்; அவமானத்துக்கும் உமிழ்நீருக்கும் என் முகத்தை மறைக்கவில்லை. 7 கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்; நான் வெட்கப்பட்டுப்போவதில்லையென்று அறிந்திருக்கிறேன்; ஆதலால் என் முகத்தைக் கற்பாறையைப்போலாக்கினேன். 8 என்னை நீதிமானாக்குகிறவர் சமீபமாயிருக்கிறார்; என்னோடே வழக்காடுகிறவன் யார்? ஏகமாய் நிற்போமாக, யார் எனக்கு எதிராளி? அவன் என்னிடத்தில் வரட்டும். 9 இதோ, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குத் துணைசெய்கிறார்; என்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? இதோ, அவர்கள் எல்லாரும் ஒரு வஸ்திரத்தைப்போலப் பழசாவார்கள்; பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும். 10 உங்களில் எவன் கர்த்தருக்குப் பயந்து, அவருடைய தாசனின் சொல்லைக் கேட்டு, தனக்கு வெளிச்சமில்லாததினால் இருட்டிலே நடக்கிறானோ, அவன் கர்த்தருடைய நாமத்தை நம்பி, தன் தேவனைச் சார்ந்துகொள்ளக்கடவன். 11 இதோ, நெருப்பைக் கொளுத்தி, அக்கினிப்பொறிகளால் சூழப்பட்டிருக்கிற நீங்கள் அனைவரும், உங்கள் அக்கினி தீபத்திலும், நீங்கள் மூட்டின அக்கினிஜுவாலையிலும் நடவுங்கள்; வேதனையில் கிடப்பீர்கள்; என் கரத்தினால் இது உங்களுக்கு உண்டாகும்.

ஏசாயா 51

1 நீதியைப் பின்பற்றி, கர்த்தரைத் தேடுகிற நீங்கள் எனக்குச் செவிகொடுங்கள்; நீங்கள் வெட்டி எடுக்கப்பட்ட கன்மலையையும், நீங்கள் தோண்டி எடுக்கப்பட்ட துரவின் குழியையும் நோக்கிப்பாருங்கள். 2 உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன். 3 கர்த்தர் சீயோனுக்கு ஆறுதல் செய்வார்; அவர் அதின் பாழான ஸ்தலங்களையெல்லாம் தேறுதலடையச் செய்து, அதின் வனாந்தரத்தை ஏதேனைப்போலவும், அதின் அவாந்தரவெளியைக் கர்த்தரின் தோட்டத்தைப்போலவும் ஆக்குவார்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் துதியும் கீதசத்தமும் அதில் உண்டாயிருக்கும். 4 என் ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; என் ஜாதியாரே, என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும்; என் பிரமாணத்தை ஜனங்களின் வெளிச்சமாக ஸ்தாபிப்பேன். 5 என் நீதி சமீபமாயிருக்கிறது; என் இரட்சிப்பு வெளிப்படும்; என் புயங்கள் ஜனங்களை நியாயந்தீர்க்கும்; தீவுகள் எனக்குக் காத்திருந்து, என் புயத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கும். 6 உங்கள் கண்களை வானத்துக்கு ஏறெடுங்கள், கீழே இருக்கிற பூமியையும் நோக்கிப்பாருங்கள்; வானம் புகையைப்போல் ஒழிந்துபோம், பூமி வஸ்திரத்தைப்போல் பழசாய்ப்போம்; அதின் குடிகளும் அப்படியே ஒழிந்துபோவார்கள்; என் இரட்சிப்போ என்றென்றைக்கும் இருக்கும்; என் நீதி அற்றுப்போவதில்லை. 7 நீதியை அறிந்தவர்களே, என் வேதத்தை இருதயத்தில் பதித்திருக்கிற ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; மனுஷரின் நிந்தனைக்குப் பயப்படாமலும், அவர்கள் தூஷணங்களால் கலங்காமலும் இருங்கள். 8 பொட்டுப்பூச்சி அவர்களை வஸ்திரத்தைப்போல் அரித்து, புழு அவர்களை ஆட்டுமயிரைப்போல் தின்னும்; என்னுடைய நீதியோ என்றென்றைக்கும் நிலைக்கும், என் இரட்சிப்புத் தலைமுறை தலைமுறைதோறும் இருக்கும். 9 எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே, முந்தினநாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ? 10 மகா ஆழத்தின் தண்ணீர்களாகிய சமுத்திரத்தை வற்றிப்போகப்பண்ணினதும், மீட்கப்பட்டவர்கள் கடந்துபோகக் கடலின் பள்ளங்களை வழியாக்கினதும் நீதானல்லவோ? 11 அப்படியே கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் ஆனந்தக்களிப்புடன் பாடி சீயோனுக்குத் திரும்பிவருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேல் இருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம். 12 நான், நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர்; சாகப்போகிற மனுஷனுக்கும், புல்லுக்கொப்பாகிற மனுபுத்திரனுக்கும் பயப்படுகிறதற்கும், வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, உன்னை உண்டாக்கின கர்த்தரை மறக்கிறதற்கும் நீ யார்? 13 இடுக்கண்செய்கிறவன் அழிக்க ஆயத்தமாகிறபோது, நீ அவனுடைய உக்கிரத்துக்கு நித்தம் இடைவிடாமல் பயப்படுகிறதென்ன? இடுக்கண்செய்கிறவனுடைய உக்கிரம் எங்கே? 14 சிறைப்பட்டுப்போனவன் தீவிரமாய் விடுதலையாவான்; அவன் கிடங்கிலே சாவதுமில்லை, அவனுடைய அப்பம் குறைவுபடுவதுமில்லை. 15 உன் தேவனாயிருக்கிற கர்த்தர் நானே; அலைகள் கொந்தளிக்கத்தக்கதாய்ச் சமுத்திரத்தைக் குலுக்குகிற சேனைகளின் கர்த்தர் என்கிற நாமமுள்ளவர். 16 நான் வானத்தை நிலைப்படுத்தி, பூமியை அஸ்திபாரப்படுத்தி, சீயோனை நோக்கி: நீ என் ஜனமென்று சொல்வதற்காக, நான் என் வார்த்தையை உன் வாயிலே அருளி, என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன். 17 எழும்பு, எழும்பு, கர்த்தருடைய உக்கிரத்தின் பாத்திரத்தை அவர் கையில் வாங்கிக் குடித்திருக்கிற எருசலேமே, எழுந்துநில், தத்தளிக்கச்செய்யும் பாத்திரத்தின் வண்டல்களை உறிஞ்சிக் குடித்தாய். 18 அவள் பெற்ற புத்திரரெல்லாரிலும் அவளை நடத்துவார் ஒருவருமில்லை; அவள் வளர்த்த குமாரரெல்லாரிலும் அவளைக் கைகொடுத்து அழைப்பார் ஒருவருமில்லை. 19 இவ்விரண்டும் உனக்குச் சம்பவித்தது; உனக்குப் பரிதபிக்கிறவன் யார்? பாழ்க்கடிப்பும், சங்காரமும், பஞ்சமும், பட்டயமும் வந்தன; யாரைக்கொண்டு உனக்கு ஆறுதல் செய்வேன்? 20 உன் குமாரர் மூர்ச்சித்து விழுந்தார்கள்; அவர்கள், வலையிலே சிக்குண்ட கலைமானைப்போல, எல்லா வீதிகளின் முனையிலும், கர்த்தருடைய உக்கிரத்தினாலும், உன் தேவனுடைய கண்டிதத்தினாலும் நிறைந்தவர்களாய்க் கிடக்கிறார்கள். 21 ஆகையால் சிறுமைப்பட்டவளே, மதுபானங்குடியாமல் வெறிகொண்டவளே, நீ கேள். 22 கர்த்தராகிய உன் ஆண்டவரும் தம்முடைய ஜனத்துக்காக வழக்காடப்போகிற உன் தேவனுமானவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, தத்தளிப்பின் பாத்திரத்தை உன் கையிலிருந்து நீக்கிப்போடுகிறேன், இனி என் உக்கிரத்தினுடைய பாத்திரத்தின் வண்டல்களை நீ குடிப்பதில்லை. 23 உன்னை நோக்கி: நாங்கள் கடந்துபோகும்படிக்குக் குனியென்றுசொல்லி, கடந்துபோகிறவர்களுக்கு நீ உன் முதுகைத் தரையும் வீதியுமாக்கும்படி, உன்னைச் சஞ்சலப்படுத்தினவர்களின் கையில் அதைக் கொடுப்பேன் என்றார்.

ஏசாயா 52

1 எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக்கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை. 2 தூசியை உதறிவிட்டு எழுந்திரு; எருசலேமே, வீற்றிரு; சிறைப்பட்டுப்போன சீயோன் குமாரத்தியே, உன் கழுத்திலுள்ள கட்டுகளை அவிழ்த்து விடு. 3 விலையின்றி விற்கப்பட்டீர்கள், பணமின்றி மீட்கப்படுவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 4 பூர்வத்தில் என் ஜனங்கள் தங்கும்படி எகிப்துக்குப் போனார்கள்; அசீரியனும் முகாந்தரமில்லாமல் அவர்களை ஒடுக்கினான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 5 இப்பொழுது எனக்கு இங்கே என்ன இருக்கிறது, என் ஜனங்கள் விருதாவாய்க் கொண்டுபோகப்பட்டார்கள்; அவர்களை ஆளுகிறவர்கள் அவர்களை அலறப்பண்ணுகிறார்கள்; நித்தமும் இடைவிடாமல் என் நாமம் தூஷிக்கப்படுகிறது என்று கர்த்தர் சொல்லுகிறார். 6 இதினிமித்தம், என் ஜனங்கள் என் நாமத்தை அறிவார்கள்; இதைச் சொல்லுகிறவர் நானே என்று அக்காலத்திலே அறிவார்கள்; இதோ, இங்கே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 7 சமாதானத்தைக் கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவித்து, இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்தி: உன் தேவன் ராஜரிகம் பண்ணுகிறாரென்று சீயோனுக்குச் சொல்லுகிற சுவிசேஷகனுடைய பாதங்கள் மலைகளின்மேல் எவ்வளவு அழகாயிருக்கின்றன. 8 உன் ஜாமக்காரருடைய சத்தம் கேட்கப்படும்; அவர்கள் சத்தமிட்டு ஏகமாய்க் கெம்பீரிப்பார்கள்; ஏனென்றால், கர்த்தர் சீயோனைத் திரும்பிவரப்பண்ணும்போது, அதைக் கண்ணாரக் காண்பார்கள். 9 எருசலேமின் பாழான ஸ்தலங்களே, முழங்கி ஏகமாய்க் கெம்பீரித்துப் பாடுங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு ஆறுதல்செய்து எருசலேமை மீட்டுக்கொண்டார். 10 எல்லா ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகவும் கர்த்தர் தம்முடைய பரிசுத்த புயத்தை வெளிப்படுத்துவார்; பூமியின் எல்லைகளில் உள்ளவர்களெல்லாரும் நமது தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள். 11 புறப்படுங்கள், புறப்படுங்கள், அவ்விடம்விட்டுப் போங்கள்; அசுத்தமானதைத் தொடாதிருங்கள்; கர்த்தருடைய பாத்திரங்களைச் சுமக்கிறவர்களே, அதின் நடுவிலிருந்து புறப்பட்டு உங்களைச் சுத்திகரியுங்கள். 12 நீங்கள் தீவிரித்துப் புறப்படுவதில்லை; நீங்கள் ஓடிப்போகிறவர்கள்போல ஓடிப்போவதுமில்லை; கர்த்தர் உங்கள் முன்னே போவார்; இஸ்ரவேலின் தேவன் உங்கள் பிறகே உங்களைக் காக்கிறவராயிருப்பார். 13 இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட்டு, மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார். 14 மனுஷனைப்பார்க்கிலும் அவருடைய முகப்பார்வையும், மனுபுத்திரரைப்பார்க்கிலும் அவருடைய ரூபமும், இவ்வளவு அந்தக்கேடு அடைந்தபடியினாலே, அவரைக்கண்ட அநேகர் பிரமிப்படைந்தார்கள். 15 அப்படியே, அவர் அநேகம் ஜாதிகள்மேல் தெளிப்பார்; அவர் நிமித்தம் ராஜாக்கள் தங்கள் வாயை மூடுவார்கள்; ஏனெனில், தங்களுக்குத் தெரிவிக்கப்படாதிருந்ததை அவர்கள் காண்பார்கள்; கேள்விப்படாதிருந்ததை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.

ஏசாயா 53

1 எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது? 2 இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார்; அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. 3 அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்; அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம்; அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம். 4 மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். 5 நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 6 நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித் திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். 7 அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார். 8 இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார்; அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார்; என் ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார். 9 துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள்; ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார்; அவர் கொடுமை செய்யவில்லை; அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. 10 கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். 11 அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்; என் தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான்களாக்குவார்; அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார். 12 அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக்கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

ஏசாயா 54

1 பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்துபாடு; கர்ப்பவேதனைப்படாதவளே, கெம்பீரமாய்ப் பாடி ஆனந்தசத்தமிடு; வாழ்க்கைப்பட்டவளுடைய பிள்ளைகளைப்பார்க்கிலும், அநாத ஸ்திரீயினுடைய பிள்ளைகள் அதிகம் என்று கர்த்தர் சொல்லுகிறார். 2 உன் கூடாரத்தின் இடத்தை விசாலமாக்கு; உன் வாசஸ்தலங்களின் திரைகள் விரிவாகட்டும்; தடைசெய்யாதே; உன் கயிறுகளை நீளமாக்கி, உன் முளைகளை உறுதிப்படுத்து. 3 நீ வலதுபுறத்திலும் இடதுபுறத்திலும் இடங்கொண்டு பெருகுவாய்; உன் சந்ததியார் ஜாதிகளைச் சுதந்தரித்துக்கொண்டு, பாழாய்க்கிடந்த பட்டணங்களைக் குடியேற்றுவிப்பார்கள். 4 பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே, நீ இலச்சையடைவதில்லை; உன் வாலிபத்தின் வெட்கத்தை நீ மறந்து, உன் விதவையிருப்பின் நிந்தையை இனி நினையாதிருப்பாய். 5 உன் சிருஷ்டிகரே உன் நாயகர்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம், இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் மீட்பர், அவர் சர்வபூமியின் தேவன் என்னப்படுவார். 6 கைவிடப்பட்டு மனம்நொந்தவளான ஸ்திரீயைப்போலவும், இளம்பிராயத்தில் விவாகஞ்செய்து தள்ளப்பட்ட மனைவியைப்போலவும் இருக்கிற உன்னைக் கர்த்தர் அழைத்தார் என்று உன் தேவன் சொல்லுகிறார். 7 இமைப்பொழுது உன்னைக் கைவிட்டேன்; ஆனாலும் உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக்கொள்வேன். 8 அற்பகாலம் மூண்ட கோபத்தினால் என் முகத்தை இமைப்பொழுது உனக்கு மறைத்தேன்; ஆனாலும் நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் என்று கர்த்தராகிய உன் மீட்பர் சொல்லுகிறார். 9 இது எனக்கு நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம்போலிருக்கும்; நோவாவின் காலத்திலுண்டான வெள்ளம் இனி பூமியின்மேல் புரண்டு வருவதில்லை என்று நான் ஆணையிட்டதுபோல, உன்மேல் நான் கோபங்கொள்வதில்லையென்றும், உன்னை நான் கடிந்துகொள்வதில்லையென்றும் ஆணையிட்டேன். 10 மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார். 11 சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி, 12 உன் பலகணிகளைப் பளிங்கும், உன் வாசல்களை மாணிக்கக் கற்களும், உன் மதில்களையெல்லாம் உச்சிதமான கற்களுமாக்குவேன். 13 உன் பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருப்பார்கள்; உன் பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும். 14 நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய்; திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை. 15 இதோ, உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல; எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள். 16 இதோ, கரிநெருப்பை ஊதி, தன் கிரியைக்கான ஆயுதத்தை உண்டுபண்ணுகிற கொல்லனையும் நான் சிருஷ்டித்தேன்; கெடுத்து நிக்கிரகமாக்குகிறவனையும் நான் சிருஷ்டித்தேன். 17 உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்; உனக்கு விரோதமாய் நியாயத்தில் எழும்பும் எந்த நாவையும் நீ குற்றப்படுத்துவாய்; இது கர்த்தருடைய ஊழியக்காரரின் சுதந்தரமும், என்னாலுண்டான அவர்களுடைய நீதியுமாயிருக்கிறதென்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 55

1 ஓ, தாகமாயிருக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் தண்ணீர்களண்டைக்கு வாருங்கள்; பணமில்லாதவர்களே, நீங்கள் வந்து, வாங்கிச் சாப்பிடுங்கள்; நீங்கள் வந்து, பணமுமின்றி விலையுமின்றித் திராட்சரசமும் பாலும் கொள்ளுங்கள். 2 நீங்கள் அப்பமல்லாததற்காகப் பணத்தையும், திருப்திசெய்யாத பொருளுக்காக உங்கள் பிரயாசத்தையும் செலவழிப்பானேன்? நீங்கள் எனக்குக் கவனமாய்ச் செவிகொடுத்து, நலமானதைச் சாப்பிடுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமா கொழுப்பான பதார்த்தத்தினால் மகிழ்ச்சியாகும். 3 உங்கள் செவியைச் சாய்த்து, என்னிடத்தில் வாருங்கள்: கேளுங்கள், அப்பொழுது உங்கள் ஆத்துமா பிழைக்கும்; தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்கு நித்திய உடன்படிக்கையாக ஏற்படுத்துவேன். 4 இதோ, அவரை ஜனக்கூட்டங்களுக்குச் சாட்சியாகவும், ஜனங்களுக்குத் தலைவராகவும், அதிபதியாகவும் ஏற்படுத்தினேன். 5 இதோ, நீ அறியாதிருந்த ஜாதியை வரவழைப்பாய்; உன்னை அறியாதிருந்த ஜாதி உன் தேவனாகிய கர்த்தரின் நிமித்தமும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் நிமித்தமும் உன்னிடத்திற்கு ஓடிவரும்; அவர் உன்னை மேன்மைப்படுத்தியிருக்கிறார். 6 கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். 7 துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார். 8 என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். 9 பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது. 10 மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ, 11 அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும். 12 நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள்; பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும். 13 முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும்; காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்.

ஏசாயா 56

1 கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது. 2 இப்படிச் செய்கிற மனுஷனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான். 3 கர்த்தரைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: கர்த்தர் என்னைத் தம்முடைய ஜனத்தைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக; அண்ணகனும்: இதோ, நான் பட்டமரமென்று சொல்லானாக. 4 என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: 5 நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன். 6 கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நியபுத்திரர் அனைவரையும், 7 நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும். 8 இஸ்ரவேலில் தள்ளுண்டவர்களைச் சேர்க்கிற கர்த்தராகிய ஆண்டவர்: அவனிடத்தில் சேர்க்கப்பட்டவர்களையல்லாமல் இன்னும் அவனிடத்தில் சேர்ப்பேன் என்கிறார். 9 வெளியில் சஞ்சரிக்கிற சகல மிருகங்களே, காட்டிலுள்ள சகல மிருகங்களே, பட்சிக்க வாருங்கள். 10 அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்; 11 திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும், அவனவன் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான். 12 வாருங்கள், திராட்சரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம்; நாளையத்தினம் இன்றையத்தினம்போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும் என்பார்கள்.

ஏசாயா 57

1 நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை. 2 நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள். 3 நாள்பார்க்கிறவளின் பிள்ளைகளே, விபசாரனுக்கும் வேசிக்கும் பிறந்த சந்ததியாரே, நீங்கள் இங்கே கிட்டிவாருங்கள். 4 நீங்கள் யாரைப் பரியாசம்பண்ணுகிறீர்கள்? யாருக்கு விரோதமாய் வாயைத் திறந்து, நாக்கை நீட்டுகிறீர்கள்? நீங்கள் துரோகம்பண்ணுகிற பிள்ளைகளும், கள்ளச் சந்ததியாருமல்லவோ? 5 நீங்கள் பச்சையான சகல மரத்தின்கீழும், விக்கிரக தேவர்களோடே மோகாக்கினியில் வெந்து, பள்ளத்தாக்குகளிலே கன்மலை வெடிப்புகளின் கீழ்ப் பிள்ளைகளைக் கொன்றுபோடுகிறவர்கள். 6 பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளிடத்தில் உன் பங்கு இருக்கிறது; அவைகள், அவைகளே உன் வீதம்; அவைகளுக்கு நீ பானபலியை வார்த்து, போஜனபலியையும் செலுத்துகிறாய்; இவைகளின்மேல் பிரியப்படுவேனோ? 7 நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் மஞ்சத்தை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய். 8 கதவுகளுக்கும் நிலைகளுக்கும் பின்னாக உன் ஞாபகக்குறியை வைக்கிறாய்; நீ என்னைவிட்டுப்போய் மற்றவர்களுக்கு உன்னை வெளிப்படுத்தினாய்; ஏறிப்போய் உன் மஞ்சத்தை அகலமாக்கி, அவர்களோடே உடன்படிக்கை பண்ணினாய்; அவர்களுடைய மஞ்சத்தைக் காண்கிற எல்லா இடத்திலும் அதை நேசிக்கிறாய். 9 நீ தைலத்தைப் பூசிக்கொண்டு ராஜாவினிடத்தில் போகிறாய்; உன் பரிமளங்களை மிகுதியாக்கி, உன் ஸ்தானாபதிகளைத் தூரத்துக்கு அனுப்பி, உன்னைப் பாதாளமட்டும் தாழ்த்துகிறாய். 10 வழிதூரமானதால் உழன்றுபோகிறாய்; அது விருதாவென்று நீ சொல்லுகிறதில்லை; உன் கைபெலத்தைக் கண்டுபிடித்தாய்; ஆகையால் நீ ஆயாசப்படவில்லை. 11 நீ யாருக்கு அஞ்சிப் பயப்படுகிறாய், நீ பொய்சொல்லுகிறாயே; நீ என்னை நினையாமலும், உன் மனதிலே வைக்காமலும் போகிறாய்; நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன் அல்லவா? ஆகையால் எனக்குப் பயப்படாதிருக்கிறாய். 12 உன் நீதியையும் உன் கிரியைகளையும் நான் வெளிப்படுத்துவேன், அவைகள் உனக்கு உதவாது. 13 நீ கூப்பிடும்போது, உன் கணங்கள் உன்னைத் தப்புவிக்கட்டும்; காற்று அவைகளையெல்லாம் பறக்கடித்து, மாயை அவைகளைக் கொண்டுபோம்; என்னை நம்பியிருக்கிறவனோ தேசத்தைச் சுதந்தரித்து, என் பரிசுத்த பர்வதத்திலே காணியாட்சிக்காரனாயிருப்பான். 14 வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, இடறல்களை என் ஜனத்தின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும். 15 நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்லுகிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்பண்ணுகிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்பண்ணுகிறேன். 16 நான் எப்போதும் வழக்காடமாட்டேன்; நான் என்றைக்கும் கோபமாயிருப்பதுமில்லை; ஏனென்றால், ஆவியும், நான் உண்டுபண்ணின ஆத்துமாக்களும், என் முகத்துக்கு முன்பாகச் சோர்ந்துபோகுமே. 17 நான் அவர்கள் பொருளாசையென்னும் அக்கிரமத்தினிமித்தம் கடுங்கோபமாகி, அவர்களை அடித்தேன்; நான் மறைந்து, கடுங்கோபமாயிருந்தேன்; தங்கள் மனம்போனபோக்கிலே மாறுபாடாய் நடந்தார்களே. 18 அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன். 19 தூரமாயிருக்கிறவர்களுக்கும் சமீபமாயிருக்கிறவர்களுக்கும் சமாதானம் சமாதானம் என்று கூறும் உதடுகளின் பலனைச் சிருஷ்டிக்கிறேன்; அவர்களைக் குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 20 துன்மார்க்கரோ கொந்தளிக்கும் கடலைப்போலிருக்கிறார்கள்; அது அமர்ந்திருக்கக் கூடாமல், அதின் ஜலங்கள் சேற்றையும் அழுக்கையும் கரையில் ஒதுக்குகிறது. 21 துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்.

ஏசாயா 58

1 சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல் உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி. 2 தங்கள் தேவனுடைய நியாயத்தை விட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற ஜாதியாரைப்போல் அவர்கள் நாடோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள்; நீதிநியாயங்களை என்னிடத்தில் விசாரித்து, தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள். 3 நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள். 4 இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள். 5 மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்? 6 அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும், 7 பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம். 8 அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும். 9 அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி, 10 பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும். 11 கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய். 12 உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க்கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய். 13 என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், 14 அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.

ஏசாயா 59

1 இதோ, இரட்சிக்கக்கூடாதபடிக்குக் கர்த்தருடைய கை குறுகிப்போகவுமில்லை; கேட்கக்கூடாதபடிக்கு அவருடைய செவி மந்தமாகவுமில்லை. 2 உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது. 3 ஏனென்றால், உங்கள் கைகள் இரத்தத்தாலும், உங்கள் விரல்கள் அக்கிரமத்தாலும் கறைப்பட்டிருக்கிறது; உங்கள் உதடுகள் பொய்யைப் பேசி, உங்கள் நாவு நியாயக்கேட்டை வசனிக்கிறது. 4 நீதியைத் தேடுகிறவனுமில்லை, சத்தியத்தின்படி வழக்காடுகிறவனுமில்லை; மாயையை நம்பி, அபத்தமானதைப் பேசுகிறார்கள்; தீமையைக் கர்ப்பந்தரித்து, அக்கிரமத்தைப் பெறுகிறார்கள். 5 கட்டுவிரியனின் முட்டைகளை அடைகாத்து, சிலந்தியின் நெசவுகளை நெய்கிறார்கள்; அவைகளின் முட்டைகளைச் சாப்பிடுகிறவன் சாவான்; அவைகள் நெருக்கப்பட்டதேயானால் விரியன் புறப்படும். 6 அவைகளின் நெசவுகள் வஸ்திரங்களுக்கேற்றவைகள் அல்ல; தங்கள் கிரியைகளாலே தங்களை மூடிக்கொள்ளமாட்டார்கள்; அவர்கள் கிரியைகள் அக்கிரமக்கிரியைகள்; கொடுமையான செய்கை அவர்கள் கைகளிலிருக்கிறது. 7 அவர்கள் கால்கள் பொல்லாப்புச் செய்ய ஓடி, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தத் தீவிரிக்கிறது; அவர்கள் நினைவுகள் அக்கிரமநினைவுகள்; பாழ்க்கடிப்பும் அழிவும் அவர்கள் வழிகளிலிருக்கிறது. 8 சமாதான வழியை அறியார்கள்; அவர்கள் நடைகளில் நியாயமில்லை; தங்கள் பாதைகளைத் தாங்களே கோணலாக்கிக்கொண்டார்கள்; அவைகளில் நடக்கிற ஒருவனும் சமாதானத்தை அறியான். 9 ஆதலால், நியாயம் எங்களுக்குத் தூரமாயிருக்கிறது; நீதி எங்களைத் தொடர்ந்து பிடிக்காது; வெளிச்சத்துக்குக் காத்திருந்தோம், இதோ, இருள்; பிரகாசத்துக்குக் காத்திருந்தோம், ஆனாலும் அந்தகாரத்திலே நடக்கிறோம். 10 நாங்கள் குருடரைப்போல் சுவரைப் பிடித்து, கண்ணில்லாதவர்களைப்போல் தடவுகிறோம்; இரவில் இடறுகிறதுபோலப் பட்டப்பகலிலும் இடறுகிறோம்; செத்தவர்களைப்போல் பாழிடங்களில் இருக்கிறோம். 11 நாங்கள் அனைவரும் கரடிகளைப்போல உறுமி, புறாக்களைப்போலக் கூவிக்கொண்டிருக்கிறோம், நியாயத்துக்குக் காத்திருந்தோம், அதைக் காணோம்; இரட்சிப்புக்குக் காத்திருந்தோம், அது எங்களுக்குத் தூரமாயிற்று. 12 எங்கள் மீறுதல்கள் உமக்கு முன்பாக மிகுதியாயிருந்து, எங்கள் பாவங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சி சொல்லுகிறது; எங்கள் மீறுதல்கள் எங்களோடே இருக்கிறது; எங்கள் அக்கிரமங்களை அறிந்திருக்கிறோம். 13 கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பொய்பேசி, எங்கள் தேவனைவிட்டுப் பின்வாங்கினோம்; கொடுமையாகவும் கலகமாகவும் பேசினோம்; கள்ளவார்த்தைகளைக் கர்ப்பந்தரித்து, இருதயத்திலிருந்து பிறப்பிக்கப்பண்ணினோம். 14 நியாயம் பின்னிட்டு அகன்றது; நீதி தூரமாய் நின்றது; சத்தியம் வீதியிலே இடறி, யதார்த்தம் வந்து சேரமாட்டாமற்போகிறது. 15 சத்தியம் தள்ளுபடியாயிற்று; பொல்லாப்பை விட்டு விலகுகிறவன் கொள்ளையாகிறான்; இதைக் கர்த்தர் பார்த்து நியாயமில்லையென்று விசனமுள்ளவரானார். 16 ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்; ஆதலால் அவருடைய புயமே அவருக்கு இரட்சிப்பாகி, அவருடைய நீதியே அவரைத் தாங்குகிறது. 17 அவர் நீதியை மார்க்கவசமாக அணிந்து, இரட்சிப்பென்னும் சீராவைத் தமது சிரசில் தரித்து, நீதிசரிக்கட்டுதலென்னும் வஸ்திரங்களை உடுப்பாக உடுத்து, வைராக்கியத்தைச் சால்வையாகப் போர்த்துக்கொண்டார். 18 கிரியைகளுக்குத்தக்க பலனை அளிப்பார்; தம்முடைய சத்துருக்களிடத்தில் உக்கிரத்தைச் சரிக்கட்டி, தம்முடைய பகைஞருக்குத்தக்க பலனையும், தீவுகளுக்குத்தக்க பலனையும் சரிக்கட்டுவார். 19 அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசைதொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார். 20 மீட்பர் சீயோனுக்கும், யாக்கோபிலே மீறுதலைவிட்டுத் திரும்புகிறவர்களுக்கும், வருவார் என்று கர்த்தர் சொல்லுகிறார். 21 உன்மேலிருக்கிற என் ஆவியும், நான் உன் வாயில் அருளிய என் வார்த்தைகளும், இதுமுதல் என்றென்றைக்கும் உன் வாயிலிருந்தும், உன் சந்ததியின் வாயிலிருந்தும், உன் சந்ததியினுடைய சந்ததியின் வாயிலிருந்தும் நீங்குவதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்; இது எனக்கு அவர்களோடிருக்கும் என் உடன்படிக்கையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 60

1 எழும்பிப் பிரகாசி; உன் ஒளி வந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது. 2 இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும். 3 உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளியினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள். 4 சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க் கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள். 5 அப்பொழுது நீ அதைக் கண்டு ஓடிவருவாய்; உன் இருதயம் அதிசயப்பட்டுப் பூரிக்கும்; கடற்கரையின் திரளான கூட்டம் உன் வசமாகத் திரும்பும், ஜாதிகளின் பலத்த சேனை உன்னிடத்துக்கு வரும். 6 ஒட்டகங்களின் ஏராளமும், மீதியான் ஏப்பாத் தேசங்களின் வேகமான ஒட்டகங்களும் உன்னை மூடும்; சேபாவிலுள்ளவர்கள் யாவரும் பொன்னையும் தூபவர்க்கத்தையும் கொண்டுவந்து, கர்த்தரின் துதிகளைப் பிரசித்தப்படுத்துவார்கள். 7 கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவித்து, அங்கிகரிக்கப்பட்டதாய் என் பலிபீடத்தின்மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன். 8 மேகத்தைப்போலவும், தங்கள் பலகணித்துவாரங்களுக்குத் தீவிரிக்கிற புறாக்களைப்போலவும் பறந்துவருகிற இவர்கள் யார்? 9 தீவுகள் எனக்குக் காத்திருக்கும்; அவர் உன்னை மகிமைப்படுத்தினார் என்று உன் பிள்ளைகளையும், அவர்களோடேகூட அவர்கள் பொன்னையும், அவர்கள் வெள்ளியையும் உன் தேவனாகிய கர்த்தரின் நாமத்துக்கென்றும், இஸ்ரவேலின் பரிசுத்தருக்கென்றும், தூரத்திலிருந்து கொண்டுவர, தர்ஷீசின் கப்பல்களும் ஏற்கனவே எனக்குக் காத்திருக்கும். 10 அந்நியரின் புத்திரர் உன் மதில்களைக் கட்டி, அவர்களுடைய ராஜாக்கள் உன்னைச் சேவிப்பார்கள்; என் கடுங்கோபத்தினால் உன்னை அடித்தேன்; ஆனாலும் என் கிருபையினால் உனக்கு இரங்கினேன். 11 உன்னிடத்துக்கு ஜாதிகளின் பலத்த சேனையைக் கொண்டுவரும்படிக்கும், அவர்களுடைய ராஜாக்களை அழைத்துவரும்படிக்கும், உன் வாசல்கள் இரவும்பகலும் பூட்டப்படாமல் எப்பொழுதும் திறந்திருக்கும். 12 உன்னைச் சேவிக்காத ஜாதியும் ராஜ்யமும் அழியும்; அந்த ஜாதிகள் நிச்சயமாய்ப் பாழாகும். 13 என் பரிசுத்த ஸ்தானத்தைச் சிங்காரிக்கும்படிக்கு, லீபனோனின் மகிமையும், தேவதாருவிருட்சங்களும், பாய்மர விருட்சங்களும், புன்னைமரங்களுங்கூட உன்னிடத்திற்குக் கொண்டுவரப்படும்; என் பாதஸ்தானத்தை மகிமைப்படுத்துவேன். 14 உன்னை ஒடுக்கினவர்களின் பிள்ளைகளும் குனிந்து உன்னிடத்தில் வந்து, உன்னை அசட்டைபண்ணின யாவரும் உன் காலடியில் பணிந்து, உன்னைக் கர்த்தருடைய நகரம் என்றும், இஸ்ரவேலுடைய பரிசுத்தரின் சீயோன் என்றும் சொல்வார்கள். 15 நீ நெகிழப்பட்டதும், கைவிடப்பட்டதும், ஒருவரும் கடந்து நடவாததுமாயிருந்தாய்; ஆனாலும் உன்னை நித்திய மாட்சிமையாகவும், தலைமுறை தலைமுறையாயிருக்கும் மகிழ்ச்சியாகவும் வைப்பேன். 16 நீ ஜாதிகளின் பாலைக் குடித்து, ராஜாக்களின் முலைப்பாலையும் உண்டு, கர்த்தராகிய நான் இரட்சகரென்றும், யாக்கோபின் வல்லவர் உன் மீட்பரென்றும் அறிந்துகொள்வாய். 17 நான் வெண்கலத்துக்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும் வரப்பண்ணி, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை நீதியுள்ளவர்களுமாக்குவேன். 18 இனிக் கொடுமை உன் தேசத்திலும், அழிவும் நாசமும் உன் எல்லைகளிலும் கேட்கப்படமாட்டாது; உன் மதில்களை இரட்சிப்பென்றும், உன் வாசல்களைத் துதியென்றும் சொல்லுவாய். 19 இனிச் சூரியன் உனக்குப் பகலிலே வெளிச்சமாயிராமலும், சந்திரன் தன் வெளிச்சத்தால் உனக்குப் பிரகாசியாமலும், கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமும், உன் தேவனே உனக்கு மகிமையுமாயிருப்பார். 20 உன் சூரியன் இனி அஸ்தமிப்பதுமில்லை; உன் சந்திரன் மறைவதுமில்லை; கர்த்தரே உனக்கு நித்திய வெளிச்சமாயிருப்பார்; உன் துக்கநாட்கள் முடிந்துபோம். 21 உன் ஜனங்கள் யாவரும் நீதிமான்களும், என்றைக்கும் பூமியைச் சுதந்தரிக்குங் குடிகளும், நான் நட்ட கிளைகளும், நான் மகிமைப்படும்படி என் கரங்களின் கிரியைகளுமாயிருப்பார்கள். 22 சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.

ஏசாயா 61

1 கர்த்தராகிய தேவனுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கக் கர்த்தர் என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நொறுங்குண்டவர்களுக்குக் காயங்கட்டுதலையும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், கட்டுண்டவர்களுக்குக் கட்டவிழ்த்தலையும் கூறவும், 2 கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தையும், நம்முடைய தேவன் நீதியைச்சரிக்கட்டும் நாளையும் கூறவும், துயரப்பட்ட அனைவருக்கும் ஆறுதல் செய்யவும், 3 சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும், ஒடுங்கின ஆவிக்குப் பதிலாகத் துதியின் உடையையும் கொடுக்கவும், அவர் என்னை அனுப்பினார்; அவர்கள் கர்த்தர் தம்முடைய மகிமைக்கென்று நாட்டின நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள். 4 அவர்கள் நெடுங்காலம் பாழாய்க் கிடந்தவைகளைக் கட்டி, பூர்வத்தில் நிர்மூலமானவைகளை எடுப்பித்து, தலைமுறை தலைமுறையாய் இடிந்துகிடந்த பாழான பட்டணங்களைப் புதிதாய்க் கட்டுவார்கள். 5 மறுஜாதியார் நின்றுகொண்டு உங்கள் மந்தைகளை மேய்த்து, அந்நிய புத்திரர் உங்கள் பண்ணையாட்களும், உங்கள் திராட்சத்தோட்டக்காரருமாயிருப்பார்கள். 6 நீங்களோ கர்த்தரின் ஆசாரியரென்று சொல்லப்படுவீர்கள்; உங்களை நமது தேவனுடைய பணிவிடைக்காரரென்பார்கள்; நீங்கள் ஜாதிகளின் செல்வத்தை அநுபவித்து, அவர்கள் மகிமையைக்கொண்டு மேன்மைபாராட்டுவீர்கள். 7 உங்கள் வெட்கத்துக்குப் பதிலாக இரண்டத்தனையாய்ப் பலன் வரும்; இலச்சைக்குப் பதிலாகத் தங்கள் பாகத்தில் சந்தோஷப்படுவார்கள்; அதினிமித்தம் தங்கள் தேசத்தில் இரட்டிப்பான சுதந்தரம் அடைவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்களுக்கு உண்டாகும். 8 கர்த்தராகிய நான் நியாயத்தை விரும்பி, கொள்ளைப்பொருளினால் இடப்பட்ட தகனபலியை வெறுக்கிறேன்; நான் அவர்கள் கிரியையை உண்மையாக்கி, அவர்களோடே நித்திய உடன்படிக்கை பண்ணுவேன். 9 அவர்கள் சந்ததியானது ஜாதிகளின் நடுவிலும், அவர்கள் சந்தானமானது ஜனங்களின் நடுவிலும் அறியப்பட்டிருக்கும்; அவர்களைப் பார்க்கிற யாவரும் அவர்கள் கர்த்தரால் ஆசீர்வாதம் பெற்ற சந்ததியென்று அறிந்துகொள்வார்கள். 10 கர்த்தருக்குள் பூரிப்பாய் மகிழுகிறேன்; என் தேவனுக்குள் என் ஆத்துமா களிகூர்ந்திருக்கிறது; மணவாளன் ஆபரணங்களினால் தன்னை அலங்கரித்துக்கொள்ளுகிறதற்கும், மணவாட்டி நகைகளினால் தன்னைச் சிங்காரித்துக்கொள்ளுகிறதற்கும் ஒப்பாக, அவர் இரட்சிப்பின் வஸ்திரங்களை எனக்கு உடுத்தி, நீதியின் சால்வையை எனக்குத் தரித்தார். 11 பூமி தன் பூண்டுகளை விளைவிப்பதுபோலவும், தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைவிப்பதுபோலவும், கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுவார்.

ஏசாயா 62

1 சீயோனினிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப்போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன். 2 ஜாதிகள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய். 3 நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய். 4 நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும். 5 வாலிபன் கன்னிகையை விவாகம்பண்ணுவதுபோல, உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள்; மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார். 6 எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும் இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது. 7 அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள். 8 இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக்கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலதுகரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார். 9 அதைச் சேர்த்தவர்களே அதைப் புசித்துக் கர்த்தரைத் துதிப்பார்கள்; அதைக் கூட்டிவைத்தவர்களே என் பரிசுத்த ஸ்தலத்தின் பிராகாரங்களில் அதைக் குடிப்பார்கள். 10 வாசல்கள் வழியாய்ப் பிரவேசியுங்கள், பிரவேசியுங்கள்; ஜனத்துக்கு வழியைச் செவ்வைப்படுத்துங்கள்; பாதையை உயர்த்துங்கள், உயர்த்துங்கள்; அதிலுள்ள கற்களைப் பொறுக்கிப்போடுங்கள்; ஜனங்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள். 11 நீங்கள் சீயோன் குமாரத்தியை நோக்கி: இதோ, உன் இரட்சிப்பு வருகிறது; இதோ, அவர் அருளும் பலன் அவரோடும், அவர் செய்யும் பிரதிபலன் அவர் முன்பாகவும் வருகிறது என்று சொல்லுங்கள் என்று, கர்த்தர் பூமியின் கடையாந்தரம்வரைக்கும் கூறுகிறார். 12 அவர்களைப் பரிசுத்த ஜனமென்றும், கர்த்தரால் மீட்கப்பட்டவர்களென்றும் சொல்லுவார்கள்; நீ தேடிக்கொள்ளப்பட்டதென்றும், கைவிடப்படாத நகரமென்றும் பெயர்பெறுவாய்.

ஏசாயா 63

1 ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த வஸ்திரங்களுடையவராகவும், மகத்துவமாய் உடுத்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாய்ப் பேசி இரட்சிக்க வல்லவராகிய நான்தானே. 2 உம்முடைய உடுப்புச் சிவப்பாகவும், உம்முடைய வஸ்திரங்கள் ஆலையை மிதிக்கிறவன் வஸ்திரங்கள்போலவும் இருக்கிறதென்ன? 3 நான் ஒருவனாய் ஆலையை மிதித்தேன்; ஜனங்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை; நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் வஸ்திரங்களின்மேல் தெறித்தது, என் உடுப்பையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன். 4 நீதியைச் சரிக்கட்டும் நாள் என் மனதிலிருந்தது; என்னுடையவர்களை மீட்கும் வருஷம் வந்தது. 5 நான் பார்த்தேன், துணைசெய்வார் ஒருவருமில்லை; தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்பட்டேன்; அப்பொழுது என் புயமே எனக்கு இரட்சிப்பாகி, என் உக்கிரமே என்னைத் தாங்கிற்று. 6 நான் என் கோபத்திலே ஜனங்களை மிதித்து, என் உக்கிரத்திலே அவர்களை வெறியாக்கி, அவர்கள் சாரத்தைத் தரையிலே இறங்கப்பண்ணினேன். 7 கர்த்தர் எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் தக்கதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்துக்குச் செய்த மகா நன்மைக்குத்தக்கதாகவும், கர்த்தருடைய கிரியைகளையும், கர்த்தருடைய துதிகளையும் பிரஸ்தாபம்பண்ணுவேன். 8 அவர்கள் என் ஜனந்தானென்றும், அவர்கள் வஞ்சனைசெய்யாதிருக்கும் பிள்ளைகளென்றும் சொல்லி, அவர்களுக்கு இரட்சகரானார். 9 அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை இரட்சித்தார்; அவர் தமது அன்பினிமித்தமும், தமது பரிதாபத்தினிமித்தமும் அவர்களை மீட்டு, பூர்வநாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார். 10 அவர்களோ கலகம்பண்ணி, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்குச் சத்துருவாய் மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணினார். 11 ஆகிலும் அவர் பூர்வநாட்களையும், மோசேயையும், தம்முடைய ஜனத்தையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும், தமது மந்தையின் மேய்ப்பனையும் சமுத்திரத்திலிருந்து ஏறப்பண்ணினவர் இப்பொழுது எங்கே? 12 அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு, மோசேயின் வலதுகையைக்கொண்டு அவர்களைத் தமது மகிமையின் புயத்தினாலே நடத்தி, தமக்கு நித்தியகீர்த்தியை உண்டாக்க அவர்களுக்கு முன்பாகத் தண்ணீரைப்பிளந்து, 13 ஒரு குதிரை வனாந்தரவெளியிலே நடக்கிறதுபோல, அவர்கள் இடறாதபடிக்கு அவர்களை ஆழங்களில் நடக்கப்பண்ணினவர் எங்கே? 14 கர்த்தருடைய ஆவியானவர் அவர்களைப் பள்ளத்தாக்கிலே போய் இறங்குகிற மிருகஜீவன்களைப்போல இளைப்பாறப்பண்ணினார்; இப்படியே தேவரீர், உமக்கு மகிமையுள்ள கீர்த்தியை உண்டாக்கும்படி உம்முடைய ஜனத்தை நடத்தினீர். 15 தேவரீர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பரிசுத்தமும் மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பாரும், உம்முடைய வைராக்கியமும், உம்முடைய வல்லமையும் எங்கே? உம்முடைய உள்ளத்தின் கொதிப்பையும், உம்முடைய மன உருக்கத்தையும் எனக்கு முன்பாக அடக்கிக்கொள்ளுகிறீரோ? 16 தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; கர்த்தாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது பூர்வகாலமுதல் உம்முடைய நாமம். 17 கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்குக் கடினப்படுத்துவானேன்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உம்முடைய சுதந்தரமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும். 18 பரிசுத்தமுள்ள உமது ஜனங்கள் கொஞ்சக்காலமாத்திரம் அதைச் சுதந்தரித்தார்கள்; எங்கள் சத்துருக்கள் உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மிதித்துப்போட்டார்கள். 19 நாங்களே உம்முடையவர்கள், அவர்களை ஒருபொழுதும் நீர் ஆண்டதில்லை; அவர்களுக்கு உமது நாமம் தரிக்கப்பட்டதுமில்லை.

ஏசாயா 64

1 ஆ, உமது நாமத்தைச் சத்துருக்களுக்குத் தெரியப்பண்ணுவதற்கும், ஜாதிகள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும், 2 தேவரீர் வானங்களைக் கிழித்திறங்கி, உருக்கும் அக்கினி எரியுமாப்போலவும், அக்கினி தண்ணீரைப் பொங்கப்பண்ணுமாப்போலவும், பர்வதங்கள் உமக்கு முன்பாக உருகும்படிசெய்யும். 3 நாங்கள் எதிர்பார்த்திராத பயங்கரமான காரியங்களை நீர் செய்தபோது, நீர் இறங்கினீர், உமது சந்நிதியில் பர்வதங்கள் உருகிப்போயின. 4 தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றம்முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை. 5 மகிழ்ச்சியாய் நீதியைச் செய்கிறவர்களையும், உம்முடைய வழிகளில் உம்மை நினைக்கிறவர்களையும் சந்திக்கிறீர்; நாங்களோ, அவைகளுக்கு விரோதமாக எப்பொழுதும் பாவஞ்செய்தபடியினாலே, தேவரீர் கடுங்கோபங்கொண்டீர்; இன்னமும் தப்பியிருக்கிறோம். 6 நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல இருக்கிறோம்; எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது, நாங்கள் அனைவரும் இலைகளைப்போல் உதிருகிறோம்; எங்கள் அக்கிரமங்கள் காற்றைப்போல் எங்களை அடித்துக்கொண்டுபோகிறது. 7 உமது நாமத்தை நோக்கிக் கூப்பிடுகிறவனும், உம்மைப் பற்றிக்கொள்ளும்படிக்கு விழித்துக்கொள்ளுகிறவனும் இல்லை; தேவரீர் உம்முடைய முகத்தை எங்களை விட்டு மறைத்து, எங்கள் அக்கிரமங்களினிமித்தம் எங்களைக் கரையப்பண்ணுகிறீர். 8 இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை. 9 கர்த்தாவே, அதிகமாய்க் கடுங்கோபங்கொள்ளாமலும், என்றைக்கும் அக்கிரமத்தை நினைத்துக்கொள்ளாமலும் இருப்பீராக; இதோ, பாரும், நாங்கள் அனைவரும் உம்முடைய ஜனங்களே. 10 உமது பரிசுத்த பட்டணங்கள் வனாந்தரமாயின; சீயோன் வனாந்தரமாயிற்று; எருசலேம் பாழாய்க்கிடக்கிறது. 11 எங்கள் பிதாக்கள் உம்மைத் துதித்த பரிசுத்தமும் மகிமையுமான எங்களுடைய ஆலயம் அக்கினிக்கு இரையாகி, இன்பமான எங்களுடைய ஸ்தானங்களெல்லாம் பாழாயின. 12 கர்த்தாவே, இவைகள் இப்படியிருந்தும் அடக்கிக்கொண்டிருப்பீரோ? மவுனமாயிருந்து, அதிகமாய் எங்களைச் சிறுமைப்படுத்துவீரோ?

ஏசாயா 65

1 என்னைக்குறித்து விசாரித்துக் கேளாதிருந்தவர்களாலே தேடப்பட்டேன்; என்னைத் தேடாதிருந்தவர்களாலே கண்டறியப்பட்டேன்; என்னுடைய நாமம் விளங்காதிருந்த ஜாதியை நோக்கி: இதோ, இங்கே இருக்கிறேன் என்றேன். 2 நலமல்லாத வழியிலே தங்கள் நினைவுகளின்படி நடக்கிற முரட்டாட்டமான ஜனத்தண்டைக்கு நாள் முழுதும் என் கைகளை நீட்டினேன். 3 அந்த ஜனங்கள் என் சந்நிதியிலே நித்தம் எனக்குக் கோபமுண்டாக்கி, தோட்டங்களிலே பலியிட்டு, செங்கற்களின்மேல் தூபங்காட்டி, 4 பிரேதக்குழிகளண்டையில் உட்கார்ந்து, பாழான ஸ்தலங்களில் இராத்தங்கி, பன்றியிறைச்சியைத் தின்று, தங்கள் பாத்திரங்களில் அருவருப்பானவைகளின் ஆணத்தை வைத்திருந்து: 5 நீ உன்மட்டிலிரு, என் சமீபத்தில் வராதே, உன்னைப்பார்க்கிலும் நான் பரிசுத்தன் என்று சொல்லுகிறார்கள்; இவர்கள் என் கோபத்தாலாகிய புகையும், நாள்முழுதும் எரிகிற அக்கினியுமாயிருப்பார்கள். 6 இதோ, அது எனக்கு முன்பாக எழுதியிருக்கிறது; நான் மவுனமாயிராமல் சரிக்குச் சரிக்கட்டுவேன். 7 உங்கள் அக்கிரமங்களுக்கும் மலைகளில் தூபங்காட்டி, மேடைகளின்மேல் என்னை நிந்தித்த உங்கள் பிதாக்களுடைய அக்கிரமங்களுக்கும் தக்கதாக அவர்கள் மடியிலே சரிக்கட்டுவேன்; நான் அவர்கள் முந்தின செய்கையின் பலனை அவர்கள் மடியிலே அளப்பேனென்று கர்த்தர் சொல்லுகிறார். 8 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: ஒரு திராட்சக்குலையில் இரசம் காணப்படும்போது அதை அழிக்காதே, அதிலே ஆசீர்வாதம் உண்டென்று சொல்லுகிறபடி, நான் என் ஊழியக்காரரினிமித்தம் அனைத்தையும் அழிக்காதபடி செய்வேன். 9 யாக்கோபிலிருந்து ஒரு வித்தையும், யூதாவிலிருந்து என் மலைகளைச் சுதந்தரிப்பவரையும் எழும்பப்பண்ணுவேன்; நான் தெரிந்துகொண்டவர்கள் அதைச் சுதந்தரித்துக்கொண்டு, என் ஊழியக்காரர் அங்கே வாசம்பண்ணுவார்கள். 10 என்னைத் தேடுகிற என் ஜனத்துக்குச் சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுக்கிடையாகவும் இருக்கும். 11 ஆனாலும் கர்த்தரை விட்டு, என் பரிசுத்த பர்வதத்தை மறந்து, காத் என்னும் தெய்வத்துக்குப் பந்தியை ஆயத்தம்பண்ணி, மேனி என்னும் தெய்வத்துக்குப் பானபலியை நிறைய வார்க்கிறவர்களே, 12 உங்களை நான் பட்டயத்துக்கு எண்ணிக்கொடுப்பேன்; நீங்கள் அனைவரும் கொலைசெய்யப்படக் குனிவீர்கள்; நான் கூப்பிட்டும் நீங்கள் மறுஉத்தரவு கொடுக்கவில்லை; நான் பேசியும் நீங்கள் கேட்கவில்லை; என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குப் பிரியமல்லாததைத் தெரிந்துகொண்டீர்கள். 13 ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, என் ஊழியக்காரர் புசிப்பார்கள், நீங்களோ பசியாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் குடிப்பார்கள், நீங்களோ தாகமாயிருப்பீர்கள்; இதோ, என் ஊழியக்காரர் சந்தோஷப்படுவார்கள், நீங்களோ வெட்கப்படுவீர்கள். 14 இதோ, என் ஊழியக்காரர் மனமகிழ்ச்சியினாலே கெம்பீரிப்பார்கள், நீங்களோ மனநோவினாலே அலறி, ஆவியின் முறிவினாலே புலம்புவீர்கள். 15 நான் தெரிந்துகொண்டவர்களுக்கு நீங்கள் உங்கள் நாமத்தைச் சாபவார்த்தையாகப் பின்வைத்துப்போவீர்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உன்னைக் கொன்றுபோட்டு, தம்முடைய ஊழியக்காரருக்கு வேறே நாமத்தைத் தரிப்பார். 16 அதினாலே பூமியிலே தன்னை ஆசீர்வதிக்கிறவன் சத்திய தேவனுக்குள் தன்னை ஆசீர்வதிப்பான்; பூமியிலே ஆணையிடுகிறவன் சத்திய தேவன்பேரில் ஆணையிடுவான்; முந்தின இடுக்கண்கள் மறக்கப்பட்டு, அவைகள் என் கண்களுக்கு மறைந்துபோயின. 17 இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன்; முந்தினவைகள் இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை. 18 நான் சிருஷ்டிக்கிறதினாலே நீங்கள் என்றென்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்; இதோ, எருசலேமைக் களிகூருதலாகவும், அதின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன். 19 நான் எருசலேமின்மேல் களிகூர்ந்து, என் ஜனத்தின்மேல் மகிழ்ச்சியாயிருப்பேன்; அழுகையின் சத்தமும், கூக்குரலின் சத்தமும் அதில் இனிக் கேட்கப்படுவதில்லை. 20 அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான். 21 வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். 22 அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள். 23 அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள். 24 அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன். 25 ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஏசாயா 66

1 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் ஸ்தலம் எப்படிப்பட்டது? 2 என்னுடைய கரம் இவைகளையெல்லாம் சிருஷ்டித்ததினால் இவைகளெல்லாம் உண்டாயின என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் சிறுமைப்பட்டு, ஆவியில் நொறுங்குண்டு, என் வசனத்துக்கு நடுங்குகிறவனையே நோக்கிப்பார்ப்பேன். 3 மாட்டை வெட்டுகிறவன் மனுஷனைக் கொல்லுகிறவனாகவும், ஆட்டைப் பலியிடுகிறவன் நாயைக் கழுத்தறுக்கிறவனாகவும், காணிக்கையைப் படைக்கிறவன் பன்றி இரத்தத்தைப் படைக்கிறவனாகவும், தூபங்காட்டுகிறவன் விக்கிரகத்தை ஸ்தோத்திரிக்கிறவனாகவும் இருக்கிறான்; இவர்கள் தங்கள் வழிகளையே தெரிந்துகொள்ளுகிறார்கள்; இவர்களுடைய ஆத்துமா தங்கள் அருவருப்புகளின்மேல் விருப்பமாயிருக்கிறது. 4 நான் கூப்பிட்டும் மறுஉத்தரவு கொடுக்கிறவனில்லாமலும், நான் பேசியும் அவர்கள் கேளாமலும், அவர்கள் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, நான் விரும்பாததைத் தெரிந்துகொண்டதினிமித்தம், நானும் அவர்களுடைய ஆபத்தைத் தெரிந்துகொண்டு, அவர்களுடைய திகில்களை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன். 5 கர்த்தருடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களே, அவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; என் நாமத்தினிமித்தம் உங்களைப் பகைத்து, உங்களை அப்புறப்படுத்துகிற உங்கள் சகோதரர், கர்த்தர் மகிமைப்படுவாராக என்கிறார்களே; அவர் உங்களுக்குச் சந்தோஷம் உண்டாகும்படி காணப்படுவார்; அவர்களோ வெட்கப்படுவார்கள். 6 நகரத்திலிருந்து அமளியின் இரைச்சலும் தேவாலயத்திலிருந்து சத்தமும் கேட்கப்படும்; அது தமது சத்துருக்களுக்குச் சரிக்குச் சரிக்கட்டுகிற கர்த்தருடைய சத்தந்தானே. 7 பிரசவவேதனைப்படுமுன் பெற்றாள், கர்ப்பவேதனை வருமுன் ஆண்பிள்ளையைப் பெற்றாள். 8 இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டது யார்? இப்படிப்பட்டவைகளைக் கண்டது யார்? ஒரு தேசத்துக்கு ஒரேநாளில் பிள்ளைப்பேறு வருமோ? ஒரு ஜாதி ஒருமிக்கப் பிறக்குமோ? சீயோனோவெனில், ஒருமிக்க வேதனைப்பட்டும், தன் குமாரரைப் பெற்றும் இருக்கிறது. 9 பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; பிரசவிக்கப்பண்ணுகிறவராகிய நான் பிரசவத்தைத் தடுப்பேனோ என்று உன் தேவன் சொல்லுகிறார். 10 எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லாரும் அவளோடேகூடச் சந்தோஷப்பட்டு, அவளைக்குறித்துக் களிகூருங்கள்; அவள்நிமித்தம் துக்கித்திருந்த நீங்களெல்லாரும் அவளோடேகூட மிகவும் மகிழுங்கள். 11 நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி, நீங்கள் சூப்பிக்குடித்து, அவளுடைய மகிமையின் பிரகாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்; 12 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள். 13 ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள். 14 நீங்கள் அதைக் காணும்போது, உங்கள் இருதயம் மகிழ்ந்து, உங்கள் எலும்புகள் பசும்புல்லைப் போலச் செழிக்கும்; அப்பொழுது கர்த்தருடைய ஊழியக்காரரிடத்தில் அவருடைய கரமும், அவருடைய சத்துருக்களிடத்தில் அவருடைய சினமும் அறியப்படும். 15 இதோ, தம்முடைய கோபத்தை உக்கிரமாகவும், தம்முடைய கடிந்துகொள்ளுதலை அக்கினிஜுவாலையாகவும் செலுத்தக் கர்த்தர் அக்கினியோடும் வருவார், பெருங்காற்றைப்போன்ற தம்முடைய இரதங்களோடும் வருவார். 16 கர்த்தர் அக்கினியாலும், தமது பட்டயத்தாலும், மாம்சமான எல்லாரோடும் வழக்காடுவார்; கர்த்தரால் கொலையுண்டவர்கள் அநேகராயிருப்பார்கள். 17 தங்களைத் தாங்களே பரிசுத்தப்படுத்திக்கொள்ளுகிறவர்களும், தோப்புகளின் நடுவிலே தங்களைத் தாங்களே ஒருவர்பின் ஒருவராய்ச் சுத்திகரித்துக்கொள்ளுகிறவர்களும், பன்றியிறைச்சியையும், அருவருப்பானதையும், எலியையும் சாப்பிடுகிறவர்களும் ஏகமாய்ச் சங்கரிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 18 நான் அவர்கள் கிரியைகளையும், அவர்கள் நினைவுகளையும் அறிந்திருக்கிறேன்; நான் சகல ஜாதியாரையும் பாஷைக்காரரையுங் கூட்டிச்சேர்க்குங்காலம் வரும்; அவர்கள் வந்து என் மகிமையைக் காண்பார்கள். 19 நான் அவர்களில் ஒரு அடையாளத்தைக் கட்டளையிடுவேன்; அவர்களில் தப்பினவர்களை, என் கீர்த்தியைக் கேளாமலும், என் மகிமையைக் காணாமலுமிருக்கிற ஜாதிகளின் தேசங்களாகிய தர்ஷீசுக்கும், வில்வீரர் இருக்கிற பூலுக்கும், லூதுக்கும், தூபாலுக்கும், யாவானுக்கும், தூரத்திலுள்ள தீவுகளுக்கும் அனுப்புவேன்; அவர்கள் என் மகிமையை ஜாதிகளுக்குள்ளே அறிவிப்பார்கள். 20 இஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருகிறதுபோல, உங்கள் சகோதரரெல்லாரையும் அவர்கள் குதிரைகளின்மேலும், இரதங்களின்மேலும், குலாரிவண்டில்களின்மேலும், கோவேறுகழுதைகளின்மேலும், வேகமான ஒட்டகங்களின்மேலும், சகல ஜாதிகளிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 21 அவர்களிலும் சிலரை ஆசாரியராகவும் லேவியராகவும் தெரிந்துகொள்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 22 நான் படைக்கப்போகிற புதிய வானமும் புதிய பூமியும் எனக்கு முன்பாக நிற்பதுபோல, உங்கள் சந்ததியும், உங்கள் நாமமும் நிற்குமென்று கர்த்தர் சொல்லுகிறார். 23 அப்பொழுது: மாதந்தோறும், ஓய்வுநாள்தோறும், மாம்சமான யாவரும் எனக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்களென்று கர்த்தர் சொல்லுகிறார். 24 அவர்கள் வெளியே போய் எனக்கு விரோதமாய்ப் பாதகஞ்செய்த மனுஷருடைய பிரேதங்களைப் பார்ப்பார்கள்; அவர்களுடைய பூச்சி சாகாமலும், அவர்களுடைய அக்கினி அவியாமலும் இருக்கும்; அவர்கள் மாம்சமான யாவருக்கும் அரோசிகமாயிருப்பார்கள்.

எரேமியா 1

1 பென்யமீன் தேசத்திலுள்ள ஆனதோத் ஊரிலிருந்த ஆசாரியர்களில் ஒருவனாகிய இல்க்கியாவின் குமாரன் எரேமியாவினுடைய வசனங்கள்: 2 ஆமோனுடைய குமாரனாகிய யோசியா என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களில், அவன் அரசாண்ட பதின்மூன்றாம் வருஷத்தில் இவனுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று. 3 அப்புறம் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாட்களிலும், யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா என்கிற யூதாவுடைய ராஜாவின் பதினோராம் வருஷத்து முடிவுமட்டாகவும், எருசலேம் ஊரார் ஐந்தாம் மாதத்தில் சிறைப்பட்டுப்போகும்வரைக்கும் கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று. 4 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 5 நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார். 6 அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன் என்றேன். 7 ஆனாலும் கர்த்தர்: நான் சிறுபிள்ளையென்று நீ சொல்லாதே, நான் உன்னை அனுப்புகிற எல்லாரிடத்திலும் நீ போய், நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் நீ பேசுவாயாக. 8 நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லி, 9 கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ, என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன். 10 பார், பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும், நாட்டவும் உன்னை நான் இன்றையதினம் ஜாதிகளின்மேலும் ராஜ்யங்களின்மேலும் ஏற்படுத்தினேன் என்று கர்த்தர் என்னுடனே சொன்னார். 11 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்; வாதுமைமரத்தின் கிளையைக் காண்கிறேன் என்றேன். 12 அப்பொழுது கர்த்தர்: நீ கண்டது சரியே; என் வார்த்தையைத் தீவிரமாய் நிறைவேற்றுவேன் என்றார். 13 கர்த்தருடைய வார்த்தை இரண்டாந்தரம் எனக்கு உண்டாகி, அவர்: நீ காண்கிறது என்ன என்று கேட்டார்; பொங்குகிற பானையைக் காண்கிறேன், அதின் வாய் வடக்கேயிருந்து நோக்குகிறது என்றேன். 14 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: வடக்கேயிருந்து தீங்கு தேசத்தினுடைய குடிகள் எல்லார்மேலும் வரும். 15 இதோ, நான் வடதிசை ராஜ்யங்களின் வம்சங்களையெல்லாம் கூப்பிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வந்து அவனவன் தன் தன் சிங்காசனத்தை எருசலேமின் ஒலிமுகவாசல்களுக்கும், அதின் சுற்றுமதில்கள் எல்லாவற்றிற்கும் விரோதமாகவும், யூதா தேசத்து எல்லாப் பட்டணங்களுக்கும் விரோதமாகவும் வைப்பார்கள். 16 அவர்கள் என்னைவிட்டு அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டி, தங்கள் கைகளின் கிரியையைப் பணிந்துகொண்ட அவர்களுடைய சகல தீமைகளினிமித்தமும் நான் என் நியாயத்தீர்ப்புகளை அவர்களுக்கு விரோதமாகக் கூறுவேன். 17 ஆகையால் நீ உன் அரையைக் கட்டிக்கொண்டு நின்று, நான் உனக்குக் கட்டளையிடுகிறவைகளையெல்லாம் அவர்களுக்குச் சொல்; நான் உன்னை அவர்களுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணாதபடிக்கு, நீ அவர்கள் முகத்துக்கு அஞ்சாதிரு. 18 இதோ, தேசமனைத்துக்கும், யூதாவின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அதின் ஆசாரியர்களுக்கும், தேசத்தின் ஜனங்களுக்கும் எதிராக நான் உன்னை இன்றையதினம் அரணிப்பான பட்டணமும், இருப்புத்தூணும், வெண்கல அலங்கமும் ஆக்கினேன். 19 அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள்; ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 2

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 நீ போய், எருசலேமின் செவிகள் கேட்கும்படிக் கூப்பிட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால்: விதைக்கப்படாத தேசமாகிய வனாந்தரத்திலே நீ என்னைப் பின்பற்றிவந்த உன் இளவயதின் பக்தியையும், நீ வாழ்க்கைப்பட்டபோது உனக்கிருந்த நேசத்தையும் நினைத்திருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 3 இஸ்ரவேல் கர்த்தருக்குப் பரிசுத்தமும், அவருடைய விளைவின் முதற்பலனுமாயிருந்தது; அதைப் பட்சித்த யாவரும் குற்றவாளிகளானார்கள்; பொல்லாப்பு அவர்கள்மேல் வந்ததென்று கர்த்தர் சொல்லுகிறார். 4 யாக்கோபின் குடும்பத்தாரே, இஸ்ரவேல் குடும்பத்தின் வம்சங்களே, நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 5 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணினவரும், அவாந்தரவெளியும், பள்ளங்களுமுள்ள தேசமும், வறட்சியும், மரண இருளுமுள்ள தேசமும், ஒருவனும் கடவாமலும் ஒரு மனுஷனும் குடியிராமலும் இருக்கிற தேசமுமான வனாந்தரத்தில் எங்களை நடத்தினவருமாகிய கர்த்தர் எங்கேயென்று உங்கள் பிதாக்கள் கேளாமல், 6 என்னைவிட்டுத் தூரப்பட்டு, மாயையைப் பின்பற்றி, வீணராய்ப் போகிறதற்கு என்னிடத்தில் என்ன அநியாயத்தைக் கண்டார்கள்? 7 செழிப்பான தேசத்தின் கனியையும் நன்மையையும் சாப்பிடும்படிக்கு நான் உங்களை அவ்விடத்துக்கு அழைத்துக்கொண்டுவந்தேன்; ஆனாலும் நீங்கள் அதற்குள் பிரவேசித்தபோது, என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தை அருவருப்பாக்கினீர்கள். 8 கர்த்தர் எங்கேயென்று ஆசாரியர்கள் சொல்லாமலும், வேதத்தைப் போதிக்கிறவர்கள் என்னை அறியாமலுமிருந்து, மேய்ப்பர்கள் எனக்குத் துரோகம்பண்ணினார்கள்; தீர்க்கதரிசிகள் பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, வீணானவைகளைப் பின்பற்றினார்கள். 9 ஆதலால் இன்னும் நான் உங்களோடே வழக்காடுவேன், உங்கள் பிள்ளைகளின் பிள்ளைகளோடும் வழக்காடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 10 நீங்கள் கித்தீமின் தீவுகள்மட்டும் கடந்துபோய்ப் பார்த்து, கேதாருக்கு ஆள் அனுப்பி நன்றாய் விசாரித்து, இப்படிப்பட்ட காரியம் உண்டோ என்றும், 11 எந்த ஜாதியாவது தேவர்களல்லாத தங்கள் தேவர்களை மாற்றினது உண்டோ என்றும் பாருங்கள்; என் ஜனங்களோ வீணானவைகளுக்காகத் தங்கள் மகிமையை மாற்றினார்கள். 12 வானங்களே, இதினிமித்தம் பிரமித்துக் கொந்தளித்து, மிகவும் திடுக்கிடுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 13 என் ஜனங்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய என்னை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளைத் தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள். 14 இஸ்ரவேல் ஒரு வேலைக்காரனோ? அவன் வீட்டில் பிறந்த அடிமையோ? ஏன் கொள்ளையானான்? 15 பாலசிங்கங்கள் அவன்மேல் கெர்ச்சித்து, முழங்கி, அவன் தேசத்தைப் பாழாக்கிவிட்டன; அவன் பட்டணங்கள் குடியிராமல் சுட்டெரிக்கப்பட்டன. 16 நோப், தகபானேஸ் என்னும் பட்டணங்களின் புத்திரரும், உன் உச்சந்தலையை நொறுக்கினார்கள். 17 உன் தேவனாகிய கர்த்தர் உன்னை வழியிலே நடத்திக்கொண்டுபோகுங்காலத்தில், நீ அவரை விட்டுப்போகிறதினால் அல்லவோ இதை உனக்கு நேரிடப்பண்ணினாய்? 18 இப்போதும் சீகோரின் தண்ணீரைக் குடிப்பதற்கு எகிப்துக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன? ஐப்பிராத்து நதியின் தண்ணீரைக் குடிப்பதற்கு அசீரியாவுக்குப் போகிறதினால் உனக்குப் பிரயோஜனம் என்ன? 19 உன் தீமை உன்னைத் தண்டிக்கும், உன் மாறுபாடுகள் உன்னைக் கண்டிக்கும்; நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 20 பூர்வகாலந்துவக்கி நான் உன் நுகத்தடியை முறித்து, உன் கட்டுகளை அறுத்தேன்; நான் அடிமைப்படுவதில்லையென்று நீயும் சொன்னாயே; ஆகிலும், உயரமான சகல மேட்டின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் நீ வேசியாய்த் திரிகிறாய். 21 நான் உன்னை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினேன்; நீ எனக்குக் காட்டுத் திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனது என்ன? 22 நீ உன்னை உவர்மண்ணினாலே கழுவி, அதிக சவுக்காரத்தைக் கையாடினாலும், உன் அக்கிரமத்தின் கறைகள் எனக்கு முன்பாக இருக்குமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 23 நான் தீட்டுப்படவில்லை; நான் பாகால்களைப் பின்பற்றவில்லை என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? பள்ளத்தாக்கிலே நீ நடக்கிற மார்க்கத்தைப் பார்; நீ செய்ததை உணர்ந்துகொள்; தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகம் நீ. 24 வனாந்தரத்திலே பழகினதும், தன் இச்சையின் மதவெறியிலே காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ; அதின் ஆவலை நிறுத்தி, அதைத் திருப்புகிறவன் யார்? அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை; அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள். 25 உன் கால் வெறுங்காலாகாதபடிக்கும், உன் தொண்டை வறட்சியடையாதபடிக்கும் அடக்கிக்கொள் என்றால், நீ: அது கூடாதகாரியம்; நான் அப்படிச் செய்யமாட்டேன்; அந்நியரை நேசிக்கிறேன்; அவர்கள் பிறகே போவேன் என்கிறாய். 26 திருடன் அகப்படுகிறபோது, எப்படி வெட்கப்படுகிறானோ, அப்படியே இஸ்ரவேல் வம்சத்தார் வெட்கப்படுவார்கள்; கட்டையைப் பார்த்து, நீ என் தகப்பன் என்றும்; கல்லைப்பார்த்து, நீ என்னைப்பெற்றாய் என்றும் சொல்லுகிற அவர்களும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும் வெட்கப்படுவார்கள். 27 அவர்கள் தங்கள் முகத்தையல்ல, தங்கள் முதுகை எனக்குக் காட்டினார்கள்; தங்கள் ஆபத்துக்காலத்திலோ எழுந்து எங்களை இரட்சியும் என்கிறார்கள். 28 நீ உனக்கு உண்டுபண்ணின தேவர்கள் எங்கே? உன் ஆபத்துக்காலத்தில் உன்னை இரட்சிக்கக்கூடுமானால் அவைகள் எழும்பட்டும்; யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும், உன் தேவர்களின் இலக்கமும் சரி. 29 என்னோடே நீங்கள் வழக்காடுவானேன்? நீங்கள் அனைவரும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 30 நான் உங்கள் பிள்ளைகளை அடித்தது விருதா; சிட்சையை ஏற்றுக்கொள்ளாமற்போனார்கள்; அழிக்கிற சிங்கத்தைப்போல உங்கள் பட்டயம் உங்கள் தீர்க்கதரிசிகளைப் பட்சித்தது. 31 சந்ததியாரே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைச் சிந்தித்துப்பாருங்கள்: நான் இஸ்ரவேலுக்கு வனாந்தரமும், காரிருளான பூமியுமாக இருந்தேனோ? பின்னை ஏன் என் ஜனங்கள்: நாங்களே எஜமான்கள், இனி உம்மிடத்தில் நாங்கள் வருவதில்லையென்று சொல்லுகிறார்கள். 32 ஒரு பெண் தன் ஆபரணத்தையும், ஒரு மணவாட்டி தன் ஆடைகளையும் மறப்பாளோ? என் ஜனங்களோ எண்ணிமுடியாத நாட்களாய் என்னை மறந்துவிட்டார்கள். 33 நேசத்தைத் தேடும்படிக்கு நீ உன் வழிகளை நயப்படுத்துகிறதென்ன? இவ்விதமாய் நீ பொல்லாத ஸ்திரீகளுக்கும் உன் வழிகளைக் கற்றுக்கொடுத்தாய். 34 உன் வஸ்திர ஓரங்களிலும் குற்றமில்லாத ஏழை ஆத்துமாக்களின் இரத்தம் காணப்படுகிறது; அதைத் தோண்டித் தேடுகிறதினால் அல்ல, அது எல்லாவற்றின்மேலும் வெளியாயிருக்கிறதினால் அதைக் கண்டுபிடித்தேன். 35 ஆகிலும்: குற்றமில்லாதிருக்கிறேன் என்றும், அவருடைய கோபம் என்னைவிட்டுத் திரும்பிற்று என்றும் சொல்லுகிறாய்; இதோ, நான் பாவஞ்செய்யவில்லையென்று நீ சொல்லுகிறதினிமித்தம் நான் உன்னோடே வழக்காடுவேன். 36 நீ உன் வழியை மாற்றிமாற்றி இவ்வளவாய் விலகிப்போகிறது என்ன? நீ அசீரியாவினால் வெட்கிப்போனதுபோல எகிப்தினாலும் வெட்கிப்போவாய். 37 நீ உன் கைகளை உன் தலையின்மேல் வைத்துக்கொண்டு இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போவாய்; ஏனெனில், உன் நம்பிக்கைகளைக் கர்த்தர் வெறுத்திருக்கிறார்; அவைகளால் உனக்குக் காரியம் வாய்க்காது.

எரேமியா 3

1 ஒரு புருஷன் தன் மனைவியைத் தள்ளிவிட, அவள் அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போய், அந்நியபுருஷனுக்கு மனைவியானால், அவன் அவளிடத்தில் இனித் திரும்பப்போவானோ? அந்த தேசம் மிகவும் தீட்டுப்படுமல்லவோ? என்று மனுஷர் சொல்லுவார்கள்; நீயோவென்றால் அநேக நேசரோடே வேசித்தனம்பண்ணினாய்; ஆகிலும் என்னிடத்திற்குத் திரும்பிவா என்று கர்த்தர் சொல்லுகிறார். 2 நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து, நீ வேசித்தனம்பண்ணாத இடம் ஒன்று உண்டோ என்று பார்; வனாந்தரத்திலே அரபியன் காத்துக்கொண்டிருக்கிறதுபோல, நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து, உன் வேசித்தனங்களாலும், உன் அக்கிரமங்களாலும் தேசத்தைத் தீட்டுப்படுத்தினாய். 3 அதினிமித்தம் மழை வருஷியாமலும், பின்மாரியில்லாமலும் போயிற்று; உனக்கோ, சோரஸ்திரீயின் நெற்றியிருக்கிறது; நீயோ: நாணமாட்டேன் என்கிறாய். 4 நீ இதுமுதல் என்னை நோக்கி: என் பிதாவே, தேவரீர் என் இளவயதின் அதிபதியென்று சொல்லி, 5 சதாகாலமும் கோபத்தை வைப்பாரோ? அதை என்றென்றைக்கும் காப்பாரோ என்கிறாய் அல்லவோ? இதோ, இப்படி நீ சொல்லியும் பொல்லாப்புகளைச் செய்து, மிஞ்சிப்போகிறாய் என்கிறார். 6 யோசியா ராஜாவின் நாட்களிலே கர்த்தர் என்னை நோக்கி: சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் செய்ததைக் கண்டாயா? அவள் உயரமான சகல மலையின்மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும் போய், அங்கே வேசித்தனம்பண்ணினாள். 7 அவள் இப்படியெல்லாம் செய்தபின்பு: நீ என்னிடத்தில் திரும்பிவா என்று நான் சொன்னேன்; அவளோ திரும்பவில்லை; இதை அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி கண்டாள். 8 சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் விபசாரம்பண்ணின முகாந்தரங்கள் எல்லாவற்றினிமித்தமும் நான் அவளை அனுப்பிவிட்டு, அவளுடைய தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுத்தபோதும், அவளுடைய சகோதரியாகிய யூதா என்கிற துரோகி பயப்படாமல்; இவளும் போய் வேசித்தனம்பண்ணினாள், இதை நான் கண்டேன். 9 பிரசித்தமான அவளுடைய வேசித்தனத்தினாலே தேசம் தீட்டுப்பட்டுப்போயிற்று; கல்லோடும் மரத்தோடும் விபசாரம் பண்ணிக்கொண்டிருந்தாள் என்றார். 10 இவைகளையெல்லாம் கண்டும், யூதா என்கிற அவளுடைய சகோதரியாகிய துரோகி, கள்ளத்தனமாய்த் திரும்பினாளேயன்றி, முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்பவில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். 11 பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: யூதா என்கிற துரோகியைப்பார்க்கிலும் சீர்கெட்ட இஸ்ரவேல் என்பவள் தன்னை நீதியுள்ளவளாக்கினாள். 12 நீ போய் வடதிசையை நோக்கிக் கூறவேண்டிய வார்த்தைகள் என்னவென்றால்: சீர்கெட்ட இஸ்ரவேலே, திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள்மேல் என் கோபத்தை இறங்கப்பண்ணுவதில்லை; நான் கிருபையுள்ளவரென்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் என்றைக்கும் கோபம் வைக்கமாட்டேன். 13 நீயோ, உன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, பச்சையான சகல மரத்தின்கீழும் அந்நியரோடே சோரமார்க்கமாய் நடந்து, உன் அக்கிரமத்தையும், என் சத்தத்துக்குச் செவிகொடாமற்போனதையும் ஒத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 14 சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் நாயகர்; நான் உங்களை ஊரில் ஒருவனும், வம்சத்தில் இரண்டுபேருமாகத் தெரிந்து, உங்களைச் சீயோனுக்கு அழைத்துக்கொண்டுவந்து, 15 உங்களுக்கு என் இருதயத்துக்கு ஏற்ற மேய்ப்பர்களைக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவோடும் புத்தியோடும் மேய்ப்பார்கள். 16 நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக்குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். 17 அக்காலத்திலே எருசலேமைக் கர்த்தருடைய சிங்காசனம் என்பார்கள்; சகல ஜாதியாரும் எருசலேமில் விளங்கிய கர்த்தருடைய நாமத்தினிமித்தம் அதினிடமாகச் சேர்வார்கள்; அவர்கள் இனித் தங்கள் பொல்லாத இருதயத்தின் இச்சையின்படி நடவார்கள். 18 அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள். 19 நான் உன்னைப் பிள்ளைகளின் வரிசையிலே வைத்து, ஜனக்கூட்டங்களுக்குள்ளே நல்ல சுதந்தரமாகிய தேசத்தை உனக்குக் கொடுப்பது எப்படியென்று சொன்னேன்; ஆனாலும் நீ என்னை நோக்கி, என் பிதாவே என்று அழைப்பாய்; நீ என்னைவிட்டு விலகுவதில்லை என்று திரும்பவும் சொன்னேன். 20 ஒரு மனைவி தன் புருஷனுக்குத் துரோகம் செய்வதுபோல, இஸ்ரவேல் வம்சத்தாராகிய நீங்கள் எனக்குத் துரோகம்செய்தது மெய் என்று கர்த்தர் சொல்லுகிறார். 21 இஸ்ரவேல் புத்திரர் தங்கள் வழியை மாறுபாடாக்கி, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்ததினிமித்தம் அழுதுகொண்டு விண்ணப்பஞ்செய்யும் சத்தம் உயர்ந்த ஸ்தானங்களிலே கேட்கப்படும். 22 சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன் என்றார். இதோ, உம்மிடத்தில் வருகிறோம்; நீரே எங்கள் தேவனாகிய கர்த்தர். 23 குன்றுகளையும், திரளான மலைகளையும் நம்புகிறது விருதா என்பது மெய்; இஸ்ரவேலின் இரட்சிப்பு எங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் இருப்பது என்பது மெய்யே. 24 இந்த இலச்சையானது எங்கள் சிறுவயதுமுதல் எங்கள் பிதாக்களுடைய பிரயாசத்தையும், அவர்கள் ஆடுகளையும் மாடுகளையும், அவர்கள் குமாரரையும் குமாரத்திகளையும் பட்சித்துப்போட்டது. 25 எங்கள் இலச்சையிலே கிடக்கிறோம்; எங்கள் அவமானம் எங்களை மூடியிருக்கிறது; நாங்களும், எங்கள் பிதாக்களும் எங்கள் சிறுவயதுமுதல் இந்நாள்வரைக்கும் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சொல்லைக் கேளாமலும்போனோம்.

எரேமியா 4

1 இஸ்ரவேலே, நீ திரும்புகிறதற்கு மனதாயிருந்தால் என்னிடத்தில் திரும்பு என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை. 2 நீ உண்மையோடும், நியாயத்தோடும், நீதியோடும், கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிடுவாய்; புறஜாதிகளும் அவருக்குள் ஆசீர்வதிக்கப்பட்டு, அவருக்குள் மேன்மைபாராட்டுவார்கள். 3 யூதா மனுஷரோடும், எருசலேமியரோடும் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் முள்ளுகளுக்குள்ளே விதையாதிருங்கள், உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள். 4 யூதா மனுஷரே, எருசலேமின் குடிகளே, உங்கள் கிரியைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல எழும்பி, அவிப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் கர்த்தருக்கென்று உங்களை விருத்தசேதனம்பண்ணி, உங்கள் இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுங்கள். 5 தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கப்பண்ணுங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்கு உட்படும்படிக்குச் சேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள். 6 சீயோனுக்கு நேரே கொடியேற்றுங்கள்; கூடுங்கள், நிற்காதிருங்கள்; நான் வடக்கேயிருந்து பொல்லாப்பையும், மகா சங்காரத்தையும் வரப்பண்ணுகிறேன். 7 உன் தேசத்தைப் பாழாக்கி விடும்படிக்குச் சிங்கம் தன் புதரிலிருந்து எழும்பி, ஜாதிகளைச் சங்கரிக்கிறவன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறான்; உன் பட்டணங்கள் குடியிராதபடி அழிக்கப்படும் என்கிறார். 8 இதினிமித்தம் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்; புலம்பி அலறுங்கள்; கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பவில்லையே. 9 அந்நாளிலே ராஜாவின் இருதயமும், பிரபுக்களின் இருதயமும் மடிந்துபோம்; ஆசாரியர்கள் திடுக்கிட்டு, தீர்க்கதரிசிகள் திகைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 10 அப்பொழுது நான்: ஆ! கர்த்தராகிய ஆண்டவரே, உங்களுக்குச் சமாதானமிருக்கும் என்று சொன்னதினால், மெய்யாகவே இந்த ஜனத்துக்கும் எருசலேமுக்கும் மிகுதியான மோசத்தை வரப்பண்ணினீர்; பட்டயம் பிராணன்மட்டும் எட்டுகிறதே என்றேன். 11 வனாந்தரத்திலுள்ள உயர்நிலங்களிலிருந்து, ஒரு தீக்காற்று என் ஜனமாகிய குமாரத்திக்கு நேராக அடிக்கும் என்று அக்காலத்திலே இந்த ஜனத்தோடும் எருசலேமோடும் சொல்லப்படும்; அது தூற்றவுமாட்டாது சுத்திகரிக்கவுமாட்டாது. 12 இதைப்பார்க்கிலும் பலமான காற்று என் காரியமாய் வரும்; இப்பொழுது நானும் அவர்களோடே நியாயம் பேசுவேன். 13 இதோ, மேகங்களைப்போல எழும்பிவருகிறான்; அவனுடைய இரதங்கள் பெருங்காற்றைப்போலிருக்கிறது; அவன் குதிரைகள் கழுகுகளிலும் வேகமானவைகள்; நமக்கு ஐயோ! நாம் பாழாக்கப்படுகிறோமே. 14 எருசலேமே, நீ இரட்சிக்கப்படும்படிக்கு உன் இருதயத்தைப் பொல்லாப்பறக் கழுவு; எந்தமட்டும் அக்கிரம நினைவுகள் உன் உள்ளத்திலே தங்கும். 15 தாணிலிருந்து ஒரு சத்தம் வந்து, செய்தியை அறிவிக்கிறது; எப்பிராயீமின் மலையிலிருந்து வந்து, தீங்கைப் பிரசித்தம்பண்ணுகிறது. 16 ஜாதிகளுக்கு அதை நீங்கள் பிரஸ்தாபம்பண்ணுங்கள்; இதோ, காவற்சேவகர் தூரதேசத்திலிருந்து வந்து, யூதாவுடைய பட்டணங்களுக்கு விரோதமாய் உரத்தசத்தமிடுவார்கள் என்று எருசலேமுக்குக் கூறுங்கள். 17 அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப்போலச் சுற்றிலுமிருப்பார்கள்; அது எனக்கு விரோதமாய்க் கலகஞ்செய்தது என்று கர்த்தர் சொல்லுகிறார். 18 உன் நடக்கையும் உன் கிரியைகளுமே இவைகளை உனக்கு நேரிடப்பண்ணின; இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயமட்டும் எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத்தானே. 19 என் குடல்கள், என் குடல்களே நோகிறது; என் உள்ளம் வேதனைப்படுகிறது, என் இருதயம் என்னில் கதறுகிறது; நான் பேசாமல் அமர்ந்திருக்கக்கூடாது; என் ஆத்துமாவே, எக்காளத்தின் சத்தத்தையும், யுத்தத்தின் ஆர்ப்பரிப்பையும் கேட்டாயே. 20 நாசத்துக்குமேல் நாசம் வருகிறதாகக் கூறப்படுகிறது; தேசமெல்லாம் பாழாகிறது; அசுப்பிலே என் கூடாரங்களும், ஒரு நிமிஷத்திலே என் திரைகளும் பாழாக்கப்படுகிறது. 21 நான் எதுவரைக்கும் கொடியைக்கண்டு, எக்காளத்தின் சத்தத்தைக் கேட்பேன். 22 என் ஜனங்களோ மதியற்றவர்கள், என்னை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; அவர்கள் பைத்தியமுள்ள பிள்ளைகள், அவர்களுக்கு உணர்வே இல்லை; பொல்லாப்புச்செய்ய அவர்கள் அறிவாளிகள், நன்மைசெய்யவோ அவர்கள் அறிவில்லாதவர்கள். 23 பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்களைப் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது. 24 பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன. 25 பின்னும் நான் பார்க்கும்போது, மனுஷனில்லை; ஆகாசத்துப் பறவைகளெல்லாம் பறந்துபோயின. 26 பின்னும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய உக்கிரகோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோயின. 27 தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 28 இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போம்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம் பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை. 29 குதிரைவீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினாலே சகல ஊராரும் ஓடி, அடர்த்தியான காடுகளில் புகுந்து, கன்மலைகளிலும் ஏறுவார்கள்; ஒரு மனுஷனும் அவைகளிலே குடியிராதபடி எல்லா ஊர்களும் விடப்பட்டிருக்கும். 30 பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் உடுத்தாலும், பொன்னாபரணங்களால் உன்னைச் சிங்காரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; சோரநாயகர் உன்னை அசட்டைபண்ணி, உன் பிராணனை வாங்கத் தேடுவார்கள். 31 கர்ப்பவேதனைப்படுகிறவளின் சத்தமாகவும், முதல்விசை பிள்ளை பெறுகிறவளின் வியாகுலமாகவும், சீயோன் குமாரத்தியின் சத்தத்தைக் கேட்கிறேன்; அவள் பெருமூச்சுவிட்டு, தன் கைகளை விரித்து: ஐயோ! கொலைபாதகர்களாலே என் ஆத்துமா சோர்ந்துபோகிறதே என்கிறாள்.

எரேமியா 5

1 நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன். 2 அவர்கள்: கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறோம் என்றாலும், பொய்யாணையிடுகிறார்களே. 3 கர்த்தாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது; அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு நோகாது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்; தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி, திரும்பமாட்டோம் என்கிறார்கள். 4 அப்பொழுது நான்: இவர்கள் நீசராமே, இவர்கள் மதியற்றவர்கள்; கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்; 5 நான் பெரியோர்களிடத்திலே போய், அவர்களோடே பேசுவேன்; அவர்கள் கர்த்தருடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்கள் என்றும் சொன்னேன்; அவர்களோ ஏகமாய் நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள். 6 ஆகையால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களைக் கொல்லும், வனாந்தரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும், சிவிங்கி அவர்கள் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருக்கும்; அவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான்; அவர்கள் மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது. 7 இவைகளை நான் உனக்கு மன்னிப்பது எப்படி? உன் பிள்ளைகள் என்னை விட்டுவிட்டு, தெய்வம் அல்லாதவைகள் பேரில் ஆணையிடுகிறார்கள்; நான் திருப்தியாக்கின அவர்கள் விபசாரம்பண்ணி, வேசிவீட்டிலே கூட்டங்கூடுகிறார்கள். 8 அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல் காலமே எழும்பி, அவனவன் தன்தன் அயலானுடைய பெண்ஜாதியின் பின்னாலே கனைக்கிறான். 9 இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார். 10 அதின் மதில்கள்மேலேறி அழித்துப்போடுங்கள்; ஆனாலும் சர்வசங்காரம் செய்யாதிருங்கள்; அதின் கொத்தளங்களை இடித்துப்போடுங்கள்; அவைகள் கர்த்தருடையவைகள் அல்ல. 11 இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம்பண்ணினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 12 அவர் அப்படிப்பட்டவர் அல்லவென்றும், பொல்லாப்பு நம்மேல் வராது, நாம் பட்டயத்தையாகிலும், பஞ்சத்தையாகிலும் காண்பதில்லையென்றும், 13 தீர்க்கதரிசிகள் காற்றாய்ப்போவார்கள்; திருவாக்கு அவர்களில் இல்லை; அவர்களுக்கே அப்படி ஆகக்கடவதென்றும், அவர்கள் சொல்லிக் கர்த்தரை மறுதலித்தார்கள். 14 ஆகையால் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும். 15 இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது பூர்வகாலத்து ஜாதி, அவர்கள் நீ அறியாத பாஷையைப் பேசும் ஜாதி, அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது. 16 திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்பறாத்தூணிகள் இருக்கும்; அவர்கள் அனைவரும் பராக்கிரமசாலிகள். 17 அவர்கள் உன் குமாரரும் உன் குமாரத்திகளும் சாப்பிடவேண்டிய உன் விளைச்சலையும், உன் அப்பத்தையும் சாப்பிட்டு, உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் பட்சித்து, உன் திராட்சப்பழங்களையும் உன் அத்திப்பழங்களையும் சாப்பிட்டு, நீ நம்பின உன்னுடைய அரணான பட்டணங்களைப் பட்டயத்தாலே வெறுமையாக்குவார்கள். 18 ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களைச் சர்வசங்காரம் செய்யாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 19 எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இவைகளையெல்லாம் எதினிமித்தம் செய்தார் என்று நீங்கள் கேட்டால், அப்பொழுது நீ அவர்களைப் பார்த்து: நீங்கள் என்னைவிட்டு, உங்களுடைய தேசத்திலே அந்நிய தேவர்களைச் சேவித்ததுபோல, உங்களுடையதல்லாத தேசத்திலே அந்நியர்களைச் சேவிப்பீர்களென்று சொல்வாயாக. 20 நீங்கள் யாக்கோபின் வீட்டிலே அறிவித்து, யூதாவிலே சொல்லிக் கூறவேண்டியது என்னவென்றால், 21 கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கேளாமலுமிருக்கிற அறிவில்லாத ஜனங்களே, கேளுங்கள். 22 எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாகச் சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்கு முன்பாக அதிராதிருப்பீர்களோ? 23 இந்த ஜனங்களோ முரட்டாட்டமும் கலகமுமான இருதயமுள்ளவர்கள்; முரட்டாட்டம்பண்ணிப் போய்விடுகிறார்கள். 24 அந்தந்தப் பருவத்திலே எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்திலே சொல்லுகிறதில்லை. 25 உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவொட்டாதிருக்கிறது. 26 குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறதுபோல் பதுங்கி, மனுஷரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் ஜனங்களில் காணப்படுகிறார்கள். 27 குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி ஐசுவரியவான்களாகிறார்கள். 28 கொழுத்து, சளுக்குப்பண்ணுகிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீரார்கள். 29 இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார். 30 திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்திலே நடந்துவருகிறது. 31 தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் ஜனத்துக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவிலே என்னசெய்வீர்கள்?

எரேமியா 6

1 பென்யமீன் புத்திரரே, நீங்கள் எருசலேமின் நடுவிலிருந்து ஏகமாய்க் கூடியோடி, தெக்கோவாவில் எக்காளம் ஊதி, பெத்கேரேமின்மேல் அடையாளமாகத் தீவெளிச்சங் காட்டுங்கள்; ஒரு தீங்கும் மகா சங்காரமும் வடக்கேயிருந்து தோன்றுகிறதாயிருக்கிறது. 2 செல்வமாய் வளர்ந்த ரூபவதியான சீயோன் குமாரத்தியைப் பாழாக்குவேன். 3 மேய்ப்பர் தங்கள் மந்தைகளோடே அவளிடத்துக்கு வருவார்கள்; அவர்கள் அவளுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் கூடாரம்போட்டு, அவனவன் தன் தன் ஸ்தலத்தில் மேய்த்து, 4 அவளுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்ய ஆயத்தம்பண்ணுங்கள் என்றும், மத்தியானத்தில்தானே நாம் போயேறும்படிக்கு எழுந்திருங்கள்; ஐயோ! பொழுது சாய்ந்து, அந்தி நிழல்கள் நீண்டுபோகிறதே; 5 எழுந்திருங்கள், நாம் இராக்காலத்திலாகிலும் போயேறி, அவளுடைய அரமனைகளை அழிப்போம் என்றும் சொல்லுவார்கள். 6 சேனைகளுடைய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், மரங்களை வெட்டி, எருசலேமுக்கு விரோதமாய்க் கொத்தளம் போடுங்கள்; அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை. 7 ஊற்றானது, தன் தண்ணீரைச் சுரக்கப்பண்ணுமாப்போல, அது தன் தீங்கைச் சுரக்கப்பண்ணுகிறது; அதிலே கொடுமையும் அழிம்பும் கேட்கப்படுகிறது; துக்கமும் காயங்களும் நித்தமும் எனக்கு முன்பாகக் காணப்படுகிறது. 8 எருசலேமே, என் ஆத்துமா உன்னைவிட்டுப் பிரியாதபடிக்கும், நான் உன்னைப் பாழும் குடியற்ற தேசமும் ஆக்காதபடிக்கும் புத்திகேள். 9 திராட்சக்குலைகளை அறுக்கிறவனைப்போல உன் கையைத் திரும்பக் கூடைகளின்மேல் போடென்று சொல்லி, அவர்கள் இஸ்ரவேலில் மீதியாயிருந்த கனியைத் திராட்சச்செடியின் கனியைப்போல் நன்றாய்ப் பொறுக்கிக்கொண்டு போவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 10 அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை. 11 ஆகையால் நான் கர்த்தருடைய உக்கிரத்தால் நிறைந்திருக்கிறேன்; அதை அடக்கி இளைத்துப்போனேன்; வீதிகளிலுள்ள பிள்ளைகளின்மேலும், வாலிபருடைய கூட்டத்தின்மேலும் ஏகமாய் அதை ஊற்றிவிடுவேன்; புருஷரும், ஸ்திரீகளும், கிழவரும், பூரண வயதுள்ளவர்களுங்கூடப் பிடிக்கப்படுவார்கள். 12 அவர்களுடைய வீடுகளும், அவர்களுடைய காணிபூமிகளும், அவர்களுடைய மனைவிகளோடே ஏகமாய் அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிகளுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 13 அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்மட்டும், ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்மட்டும் ஒவ்வொருவரும் பொய்யர். 14 சமாதானமில்லாதிருந்தும்: சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள். 15 அவர்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களோ? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆதலால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங் காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 16 வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ: நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள். 17 நான் உங்கள்மேல் காவலாளரையும் வைத்து, எக்காள சத்தத்துக்குச் செவிகொடுங்கள் என்றும் சொன்னேன்; அவர்களோ: நாங்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள். 18 ஆகையால் ஜாதிகளே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள். 19 பூமியே, கேள்; இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து, என் நியாயப்பிரமாணத்துக்குச் செவிகொடாமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரப்பண்ணுவேன். 20 சேபாவிலிருந்து வருகிற தூபவர்க்கமும், தூரதேசத்தினுடைய சுகந்தப்பட்டையும் எனக்கு என்னத்துக்கு? உங்கள் சர்வாங்கதகனங்கள் எனக்கு விருப்பமல்ல; உங்கள் பலிகள் எனக்கு இன்பமாயிராது. 21 ஆகையால் இதோ, நான் இந்த ஜனத்துக்கு இடறல்களை வைப்பேன்; அவைகள்மேல் பிதாக்களும், பிள்ளைகளும், குடியானவனும், அவனுக்கடுத்தவனும், ஏகமாய் இடறுண்டு அழிவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 22 இதோ, வடதேசத்திலிருந்து ஒரு ஜனம் வந்து, பூமியின் கடையெல்லைகளிலிருந்து ஒரு பெரிய ஜாதி எழும்பும். 23 அவர்கள் வில்லும் வேலும் பிடித்து வருவார்கள்; அவர்கள் கொடியர், இரக்கம் அறியாதவர்கள்; அவர்கள் சத்தம் சமுத்திர இரைச்சலுக்குச் சமானமாயிருக்கும்; சீயோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தசன்னத்தராய்க் குதிரைகளின்மேலேறி அணியணியாக வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 24 அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம்; நம்முடைய கைகள் தளர்ந்தது; இடுக்கணும், கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனைக்கொப்பான வேதனையும் நம்மைப் பிடித்தது. 25 வயல்வெளியிலே புறப்படாதிருங்கள்; வழியிலும் நடவாதிருங்கள்; சுற்றிலும் சத்துருவின் பட்டயமும் பயங்கரமுமுண்டு. 26 என் ஜனமாகிய குமாரத்தியே, நீ இரட்டைக் கட்டிக்கொண்டு, சாம்பலிலே புரண்டு, ஒரே புத்திரனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு; பாழாக்குகிறவன் சடிதியாய் நம்மேல் வருவான். 27 நீ என் ஜனத்தின் வழியை அறிந்துகொள்ளவும் சோதித்துப்பார்க்கவும் நான் உன்னை அவர்களுக்குள்ளே துருகமாகவும், அரணாகவும் வைத்தேன். 28 அவர்களெல்லாரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லாரும் கெட்டவர்கள். 29 துருத்தி வெந்தது; ஈயம் நெருப்பினால் அழிந்தது; புடமிடுகிறவனுடைய பிரயாசம் விருதாவாய்ப்போயிற்று; பொல்லாப்புகள் அற்றுப்போகவில்லை. 30 அவர்கள் தள்ளுபடியான வெள்ளி என்னப்படுவார்கள்; கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார்.

எரேமியா 7

1 கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: 2 நீ கர்த்தருடைய ஆலயத்தின் வாசலிலே நின்று, அங்கே கூறிச் சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால், கர்த்தரைப் பணிந்துகொள்ள இந்த வாசல்களுக்குள்ளே பிரவேசிக்கிற யூத ஜனங்களாகிய நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 3 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணுவேன். 4 கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம், கர்த்தரின் ஆலயம் இதுவே என்று சொல்லி, பொய்வார்த்தைகளை நம்பிக்கொள்ளாதிருங்கள். 5 நீங்கள் உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் நன்றாய்ச் சீர்ப்படுத்தி, நீங்கள் மனுஷனுக்கும் மனுஷனுக்குமுள்ள வழக்கை நியாயமாய்த் தீர்த்து, 6 பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த ஸ்தலத்திலே சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலும் இருப்பீர்களேயாகில், 7 அப்பொழுது நான் உங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசமாகிய இந்த ஸ்தலத்திலே உங்களைச் சதாகாலமும் குடியிருக்கப்பண்ணுவேன். 8 இதோ, ஒன்றுக்கும் உதவாத பொய்வார்த்தைகளை நீங்கள் நம்புகிறீர்கள். 9 நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி, 10 பிற்பாடு வந்து, என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயத்திலே எனக்கு முன்பாக நின்று: இந்த அருவருப்புகளையெல்லாம் செய்வதற்காக விடுதலை பெற்றிருக்கிறோமென்று சொல்வீர்களோ? 11 என் நாமம் தரிக்கப்பட்ட இந்த ஆலயம் உங்கள் பார்வைக்குக் கள்ளர்குகையாயிற்றோ? இதோ, நானும் இதைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 12 நான் முந்தி என் நாமம் விளங்கப்பண்ணின சீலோவிலுள்ள என் ஸ்தலத்துக்கு நீங்கள் போய், இஸ்ரவேல் ஜனத்தினுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அதற்குச் செய்ததைப் பாருங்கள். 13 நீங்கள் இந்தக் கிரியைகளையெல்லாம் செய்தீர்கள், நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிவந்திருந்தும், நீங்கள் கேளாமலும், நான் உங்களைக் கூப்பிட்டும், நீங்கள் உத்தரவுகொடாமலும் போனபடியினால், 14 என் நாமம் தரிக்கப்பட்டதும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறதுமான இந்த ஆலயத்துக்கும், உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த ஸ்தலத்துக்கும், நான் சீலோவுக்குச் செய்ததுபோலச் செய்வேன். 15 நான் உங்களுடைய எல்லாச் சகோதரருமாகிய எப்பிராயீம் சந்ததி அனைத்தையும் தள்ளிப்போட்டதுபோல, உங்களையும் என் முகத்தைவிட்டுத் தள்ளிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 16 நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம் செய்யவேண்டாம்; அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும் வேண்டாம், என்னிடத்தில் அவர்களுக்காகப் பரிந்துபேசவும் வேண்டாம், நான் உனக்குச் செவிகொடுப்பதில்லை. 17 யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் அவர்கள் செய்கிறதை நீ காணவில்லையா? 18 எனக்கு மனமடிவுண்டாக அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்க்கிறார்கள்; அவர்கள் வானராக்கினிக்குப் பணியாரங்களைச் சுடும்படி பிள்ளைகள் விறகு பொறுக்குகிறார்கள், பிதாக்கள் நெருப்பு மூட்டுகிறார்கள், ஸ்திரீகள் மாப்பிசைகிறார்கள். 19 அவர்கள் எனக்கா மனமடிவுண்டாக்குகிறார்கள்? தங்கள் முகங்கள் வெட்கத்துக்குட்படும்படி அவர்கள் தங்களுக்கே அல்லவோ மனமடிவுண்டாக்குகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 20 ஆதலால் இதோ, என் கோபமும் என் உக்கிரமும் இந்த ஸ்தலத்தின்மேலும், மனுஷர்மேலும், மிருகங்கள்மேலும், வெளியின் மரங்கள்மேலும், பூமியின் கனிகள்மேலும் ஊற்றப்படும்; அது அவியாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 21 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறதென்னவென்றால்: உங்கள் தகனபலிகளை மற்றப் பலிகளோடுங்கூட்டி, இறைச்சியைச் சாப்பிடுங்கள். 22 நான் உங்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்த நாளிலே, தகனபலியைக்குறித்தும், மற்றப் பலிகளைக்குறித்தும் நான் அவர்களோடே பேசினதையும் கட்டளையிட்டதையும்பார்க்கிலும், 23 என் வாக்குக்குச் செவிகொடுங்கள், அப்பொழுது நான் உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்; நான் உங்களுக்குக் கற்பிக்கும் எல்லா வழியிலும், நீங்கள் உங்களுக்கு நன்மையுண்டாகும்படிக்கு நடவுங்கள் என்கிற விசேஷத்தையே அவர்களுக்குச் சொல்லிக் கட்டளையிட்டேன். 24 அவர்களோ அதைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும்போய், தங்கள் பொல்லாத இருதயத்தின் யோசனைகளின்படியும் கடினத்தின்படியும் நடந்து, முன்னிட்டல்ல பின்னிட்டே போனார்கள். 25 உங்கள் பிதாக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள்முதல் இந்நாள்மட்டும் நான் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் தினந்தினம் உங்களண்டைக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தேன். 26 ஆனாலும் அவர்கள் என் சொல்லைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி, தங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் அதிக பொல்லாப்புச் செய்தார்கள். 27 நீ இந்த வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குச் சொன்னாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; நீ அவர்களை நோக்கிக் கூப்பிட்டாலும், அவர்கள் உனக்கு மறுஉத்தரவு கொடுக்கமாட்டார்கள். 28 ஆகையால் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளாமலும், புத்தியை ஏற்றுக்கொள்ளாமலும் இருக்கிற ஜாதி இதுதான் என்றும், சத்தியம் அழிந்து, அது அவர்கள் வாயிலிருந்து அற்றுப்போனதென்றும் அவர்களுக்குச் சொல். 29 நீ உன் தலைமயிரைச் சிரைத்து, எறிந்துவிட்டு, உயர்தலங்களிலே புலம்பிக்கொண்டிரு; கர்த்தர் தமது சினத்துக்கு ஏதுவான சந்ததியை வெறுத்து நெகிழவிட்டார். 30 யூதா புத்திரர் என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் நாமம் தரித்திருக்கிற ஆலயத்தைத் தீட்டுப்படுத்தத் தங்கள் அருவருப்புகளை அதிலே வைத்தார்கள். 31 தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் அக்கினியிலே தகனிக்கிறதற்காக, அவர்கள் இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கிலுள்ள தோப்பேத்தின் மேடைகளைக் கட்டினார்கள்; அதை நான் கட்டளையிடவுமில்லை, அது என் மனதில் தோன்றவுமில்லை. 32 ஆதலால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது அது அப்புறம் தோப்பேத் என்றும், இன்னோம் குமாரனின் பள்ளத்தாக்கென்றும் சொல்லப்படாமல், சங்காரப் பள்ளத்தாக்கென்று சொல்லப்படும்; தோப்பேத்திலே இடங்கிடையாமற்போகுமட்டும் சவங்களை அடக்கம்பண்ணுவார்கள். 33 இந்த ஜனத்தின் பிணங்கள் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்; அவைகளை வெருட்டுவாரும் இல்லாதிருப்பார்கள். 34 நான் யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் களிப்பின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன்; தேசம் பாழாகும்.

எரேமியா 8

1 அக்காலத்திலே யூதாவினுடைய ராஜாக்களின் எலும்புகளையும், அவர்களுடைய பிரபுக்களின் எலும்புகளையும், ஆசாரியர்களின் எலும்புகளையும், தீர்க்கதரிசிகளின் எலும்புகளையும், எருசலேமுடைய குடிகளின் எலும்புகளையும், அவர்களுடைய பிரேதக்குழிகளிலிருந்து எடுத்து, 2 அவர்கள் நேசித்ததும், சேவித்ததும், பின்பற்றினதும், நாடினதும், பணிந்துகொண்டதுமாயிருந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும், வானத்தின் சர்வசேனைக்கும் முன்பாக அவைகளைப் பரப்பிவைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் வாரி அடக்கம்பண்ணப்படாமல் பூமியின்மேல் எருவாகும். 3 இந்தத் துஷ்ட வம்சத்தில் மீதியாயிருந்து, என்னால் எல்லா இடங்களிலும் துரத்திவிடப்பட்டு மீந்திருக்கிற யாவருக்கும், ஜீவனைப்பார்க்கிலும் மரணமே விருப்பமாயிருக்குமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 4 நீ அவர்களை நோக்கி: விழுந்தவர்கள் எழுந்திருக்கிறதில்லையோ? வழிதப்பிப்போனவர்கள் திரும்புகிறதில்லையோ? 5 ஆனாலும் எருசலேமியராகிய இந்த ஜனம் என்றைக்கும் வழிதப்பிப்போகிறதென்ன? கபடத்தை உறுதியாய்ப் பிடித்திருக்கிறார்கள்; திரும்பமாட்டோம் என்கிறார்கள். 6 நான் கவனித்துக் கேட்டேன், அவர்கள் யதார்த்தம் பேசவில்லை; என்ன செய்தேனென்று சொல்லி, தன் பொல்லாப்பினிமித்தம் மனஸ்தாபப்படுகிறவன் ஒருவனுமில்லை; யுத்தத்துக்குள் பாய்கிற குதிரையைப்போல அவரவர் வேகமாய் ஓடிப்போனார்கள். 7 ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குருவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல். 8 நாங்கள் ஞானிகளென்றும், கர்த்தருடைய வேதம் எங்களிடத்திலிருக்கிறதென்றும் நீங்கள் சொல்லுகிறதெப்படி? மெய்யாகவே, இதோ, வேதபாரகரின் கள்ள எழுத்தாணி அதை அபத்தமாக்குகிறது. 9 ஞானிகள் வெட்கி, கலங்கிப் பிடிபடுவார்கள்; இதோ, கர்த்தருடைய சொல்லை வெறுத்துப்போட்டார்கள்; அவர்களுக்கு ஞானமேது? 10 ஆகையால் அவர்களுடைய ஸ்திரீகளை அந்நியருக்கும், அவர்களுடைய வயல்களை அவைகளைக் கட்டிக்கொள்பவர்களுக்கும் கொடுப்பேன்; அவர்களிலே சிறியோர்தொடங்கிப் பெரியோர்மட்டும் ஒவ்வொருவரும் பொருளாசைக்காரராயிருக்கிறார்கள்; தீர்க்கதரிசிகள்தொடங்கி ஆசாரியர்கள்மட்டும் ஒவ்வொருவரும் பொய்யராயிருந்து, 11 சமாதானமில்லாதிருந்தும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள். 12 தாங்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களா? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆகையால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங்காலத்திலே இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 13 அவர்களை முற்றிலும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; திராட்சச்செடியிலே குலைகள் இராது, அத்திமரத்திலே பழங்கள் இராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களைவிட்டுத் தாண்டிப்போகும் என்று சொல். 14 நாம் சும்மாயிருப்பானேன்? கூடிவாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் பிரவேசித்து, அங்கே சங்காரமாவோம்; நாம் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைச் சங்காரம்பண்ணி, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார். 15 சமாதானத்துக்குக் காத்திருந்தோம், பிரயோஜனமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து. 16 தாணிலிருந்து அவர்களுடைய குதிரைகளின் மூச்செறிதல் கேட்கப்படுகிறது; அவர்களுடைய பலத்த அஸ்வங்கள் கனைக்கிற சத்தத்தினால் தேசமெல்லாம் அதிருகிறது; அவர்கள் வந்து தேசத்தையும் அதில் உள்ளவைகளையும், பட்டணத்தையும் அதின் குடிகளையும் பட்சிப்பார்கள். 17 மெய்யாய், இதோ, தடைகட்டப்படாத சர்ப்பங்களையும், கட்டுவிரியன்களையும் உங்களுக்குள் அனுப்புகிறேன், அவைகள் உங்களைக் கடிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். 18 நான் சஞ்சலத்தில் ஆறுதலடையப் பார்த்தும், என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது. 19 இதோ, சீயோனில் கர்த்தர் இல்லையோ? அதில் ராஜா இல்லையோ? என்று, என் ஜனமாகிய குமாரத்தி தூரதேசத்திலிருந்து கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது; ஆனால், அவர்கள் தங்கள் சுரூபங்களினாலும் அந்நியரின் மாயைகளினாலும் எனக்குக் கோபமுண்டாக்கினது என்ன என்கிறார். 20 அறுப்புக்காலம் சென்றது, கோடைக்காலமும் முடிந்தது, நாமோ இரட்சிக்கப்படவில்லை. 21 என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது. 22 கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?

எரேமியா 9

1 ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன். 2 ஆ, வனாந்தரத்தில் வழிப்போக்கரின் தாபரம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் என் ஜனத்தைவிட்டு, அவர்களிடத்தில் இராதபடிக்குப் போய்விடுவேன்; அவர்களெல்லாரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள். 3 அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 4 நீங்கள் அவனவன் தன் தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்தச் சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்தச் சகோதரனும் மோசம்பண்ணுகிறான், எந்தச் சிநேகிதனும் தூற்றித்திரிகிறான். 5 அவர்கள் மெய்யைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை ஏய்க்கிறார்கள்; பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமஞ்செய்ய உழைக்கிறார்கள். 6 கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்; கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 7 ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; என் ஜனமாகிய குமாரத்தியை வேறெந்தப்பிரகாரமாக நடத்துவேன்? 8 அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது; அவனவன் தன் தன் அயலானோடே தன் தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப் பதிவிடை வைக்கிறான். 9 இவைகளினிமித்தம் அவர்களை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார். 10 மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்து போகாதவண்ணமாய் அவைகள் பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போயின. 11 நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தாபரமுமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாதபடி பாழாக்கிப்போடுவேன். 12 இதை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? தேசம் அழிந்து, ஒருவனும் கடந்து போகாதபடி அது பாழாக்கப்படுகிற முகாந்தரமென்னவென்று கர்த்தருடைய வாய் தன்னுடனே சொல்லுகிறதைக் கேட்டு அறிவிக்கத்தக்கவன் யார்? 13 நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாமலும், அதின்படி நடவாமலும், 14 தங்களுடைய இருதயத்தின் கடினத்தையும், தங்கள் பிதாக்கள் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தபடி பாகால்களையும் பின்தொடர்ந்தார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். 15 ஆதலால், இதோ, நான் இந்த ஜனத்துக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுத்து, 16 அவர்களும், அவர்கள் பிதாக்களும் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைச் சிதறடித்து, பட்டயம் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் அதை அவர்களுக்குப் பின்னாக அனுப்புவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 17 நீங்கள் யோசனைபண்ணி, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதிலே பழகின ஸ்திரீகளைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 18 அவர்கள் சீக்கிரமாய் வந்து, நம்முடைய கண்கள் கண்ணீராய்ச் சொரியத்தக்கதாகவும், நம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடத்தக்கதாகவும், ஒப்பாரி சொல்லக்கடவர்கள். 19 எத்தனையாய்ப் பாழாக்கப்பட்டோம்! மிகவும் கலங்கியிருக்கிறோம்; நாங்கள் தேசத்தை விட்டுப்போகிறோம், எங்கள் வாசஸ்தலங்களை அவர்கள் கவிழ்த்துப்போட்டார்கள் என்று சீயோனிலிருந்து உண்டாகிற புலம்பலின் சத்தம் கேட்கப்படும். 20 ஆதலால் ஸ்திரீகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் செவி அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் குமாரத்திகளுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன் தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள். 21 வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது. 22 மனுஷரின் சவங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னாலே ஒருவனும் வாரிக்கொள்ளாதிருக்கிற அரியைப்போலவும் கிடக்கும் என்று கர்த்தர் உரைத்தார் என்று சொல். 23 ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; 24 மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 25 இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனமில்லாதவர்களோடுங்கூட விருத்தசேதனமுள்ள யாவரையும், 26 எகிப்தையும், யூதாவையும், ஏதோமையும், அம்மோன் புத்திரரையும், மோவாபையும், கடைசி எல்லைகளிலுள்ள வனாந்தரக்குடிகளான யாவரையும் தண்டிப்பேன்; புறஜாதியார் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; ஆனாலும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் இருதயத்திலே விருத்தசேதனமில்லாதவர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 10

1 இஸ்ரவேல் வீட்டாரே, கர்த்தர் உங்களுக்குச் சொல்லுகிற வசனத்தைக் கேளுங்கள்: 2 புறஜாதிகளுடைய மார்க்கத்தைக் கற்றுக்கொள்ளாதிருங்கள்; வானத்தின் அடையாளங்களாலே புறஜாதிகள் கலங்குகிறார்களே என்று சொல்லி, நீங்கள் அவைகளாலே கலங்காதிருங்கள். 3 ஜனங்களின் வழிபாடுகள் வீணாயிருக்கிறது; காட்டில் ஒரு மரத்தை வெட்டுகிறார்கள்; அது தச்சன் கையாடுகிற வாச்சியால் பணிப்படும். 4 வெள்ளியினாலும் பொன்னினாலும் அதை அலங்கரித்து, அது அசையாதபடிக்கு அதை ஆணிகளாலும் சுத்திகளாலும் உறுதியாக்குகிறார்கள். 5 அவைகள் பனையைப்போல நெட்டையாய் நிற்கிறது, அவைகள் பேசமாட்டாதவைகள், அவைகள் நடக்கமாட்டாததினால் சுமக்கப்படவேண்டும்; அவைகளுக்குப் பயப்படவேண்டாம்; அவைகள் தீமைசெய்யக்கூடாது, நன்மைசெய்யவும் அவைகளுக்குச் சக்தி இல்லையென்று கர்த்தர் சொல்லுகிறார். 6 கர்த்தாவே, உமக்கு ஒப்பானவன் இல்லை; நீரே பெரியவர்; உமது நாமமே வல்லமையில் பெரியது. 7 ஜாதிகளின் ராஜாவே, உமக்குப் பயப்படாதிருப்பவன் யார்? தேவரீருக்கே பயப்படவேண்டியது; ஜாதிகளுடைய எல்லா ஞானிகளிலும், அவர்களுடைய எல்லா ராஜ்யத்திலும் உமக்கு ஒப்பானவன் இல்லை. 8 அவர்கள் யாவரும் மிருககுணமும் மதியீனமுமுள்ளவர்கள்; அந்தக் கட்டை மாயையான போதகமாயிருக்கிறது. 9 தகடாக்கப்பட்ட வெள்ளி தர்ஷீசிலும், பொன் ஊப்பாசிலுமிருந்து கொண்டுவரப்பட்டு, அவைகள் தொழிலாளியினாலும், தட்டான் கைகளினாலும் செய்யப்படுகிறது; இளநீலமும் இரத்தாம்பரமும் அவைகளின் உடுமானம்; அவைகளெல்லாம் தொழிலாளிகளின் கைவேலையாயிருக்கிறது. 10 கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள். 11 வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள். 12 அவரே பூமியைத் தம்முடைய வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தம்முடைய ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தம்முடைய அறிவினால் விரித்தார். 13 அவர் சத்தமிடுகையில் வானத்திலே திரளான தண்ணீர் உண்டாகிறது; அவர் பூமியின் கடையாந்தரத்திலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டகசாலைகளிலிருந்து புறப்படப்பண்ணுகிறார். 14 மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருககுணமுள்ளவர்களானார்கள்; தட்டார் அனைவரும் வார்ப்பித்த சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் ஆவி இல்லை. 15 அவைகள் மாயையும், மகா எத்தான கிரியையுமாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும். 16 யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல் அல்ல, அவர் சர்வத்தையும் உருவாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம். 17 அரணில் குடியிருக்கிறவளே, தேசத்திலிருந்து உன் பொருள்களைச் சேர்த்துக்கொள். 18 இதோ, நான் இந்த முறை தேசத்தின் குடிகளைக் கவண்கொண்டெறிந்து, அவர்கள் கண்டு உணரும்படி அவர்களுக்கு நெருக்கமுண்டாக்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 19 ஐயோ! நான் நொறுக்கப்பட்டேன்; என் காயம் கொடிதாயிருக்கிறது; ஆனாலும் இது நான் சகிக்கவேண்டிய என் நோய் என்று நான் சொல்லுவேன். 20 என் கூடாரம் அழிந்துபோயிற்று, என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின; என் பிள்ளைகள் என்னைவிட்டுப் போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து, என் திரைகளைத் தூக்கிக் கட்டுவாரில்லை. 21 மேய்ப்பர்கள் மிருககுணமுள்ளவர்களாகி, கர்த்தரைத் தேடாமற் போனார்கள்; ஆகையால், அவர்கள் காரியம் வாய்க்காமற்போய், அவர்கள் மந்தையெல்லாம் சிதறடிக்கப்பட்டது. 22 இதோ, யூதாவின் பட்டணங்களைப் பாழும் வலுசர்ப்பங்களின் தாவுமாக்கிப்போடும் செய்தியின் சத்தமும், வடதேசத்திலிருந்து பெரிய கொந்தளிப்பும் வருகிறது. 23 கர்த்தாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன். 24 கர்த்தாவே, என்னைத் தண்டியும்; ஆனாலும் நான் அவமாய்ப்போகாதபடிக்கு உம்முடைய கோபத்தினாலே அல்ல, மட்டாய்த் தண்டியும். 25 உம்மை அறியாத ஜாதிகளின்மேலும், உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத வம்சங்களின்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்; அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவனை விழுங்கி, அவனை நிர்மூலமாக்கி, அவன் வாசஸ்தலத்தைப் பாழாக்கினார்களே.

எரேமியா 11

1 கர்த்தராலே எரேமியாவுக்கு உண்டான வசனம்: 2 நீங்கள் கேட்டு யூதாவின் மனுஷருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் சொல்லவேண்டிய உடன்படிக்கையின் வார்த்தைகளாவன: 3 என் சத்தத்தைக் கேட்டு, நான் உங்களுக்குக் கற்பிக்கிறபடியே எல்லாக் காரியங்களையும் செய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன்; 4 நான் உங்கள் பிதாக்களை இருப்புக்காளவாயாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களுக்குக் கற்பித்த இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேளாத மனுஷன் சபிக்கப்பட்டவனென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்று அவர்களுக்குச் சொல்லு. 5 இன்றையதினம் இருக்கிறபடி, பாலும் தேனும் ஓடுகிற தேசத்தை உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களுக்கு இட்ட ஆணையை நான் திடப்படுத்தும்படி இப்படி ஆகும் என்றார்; அதற்கு நான் பிரதியுத்தரமாக, அப்படியே ஆகக்கடவது கர்த்தாவே என்றேன். 6 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: நீ யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் இந்த வார்த்தைகளையெல்லாம் கூறி: இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நீங்கள் கேட்டு, அவைகளின்படியே செய்யுங்கள். 7 நான் உங்கள் பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின நாள்முதல், இந்நாள்மட்டும் நான் அவர்களுக்குத் திடச்சாட்சியாய் என் சத்தத்தைக் கேளுங்களென்று ஏற்கனவே சாட்சி விளங்கத்தக்கவிதமாய் எச்சரித்துவந்தேன். 8 ஆனாலும் அவர்கள் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போய், அவரவர் தம்தம் பொல்லாத இருதயகடினத்தின்படி நடந்தார்கள்; ஆதலால் நான் அவர்கள் செய்யும்படி கட்டளையிட்டதும், அவர்கள் செய்யாமற்போனதுமான இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளையெல்லாம் அவர்களுக்குப் பலிக்கப்பண்ணுவேன் என்று சொல் என்றார். 9 பின்னையும் கர்த்தர் என்னை நோக்கி: யூதாவின் மனுஷருக்குள்ளும் எருசலேமின் குடிகளுக்குள்ளும் ஒரு கட்டுப்பாடு காணப்படுகிறது. 10 அவர்கள் என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோமென்று அந்நிய தேவர்களைச் சேவிக்க அவைகளைப் பின்பற்றி, தங்களுடைய முன்னோர்களின் அக்கிரமங்களுக்குத் திரும்பினார்கள்; நான் தங்கள் பிதாக்களோடே பண்ணின உடன்படிக்கையை இஸ்ரவேல் குடும்பத்தாரும் யூதா குடும்பத்தாரும் மீறிப்போட்டார்கள். 11 ஆகையினால் இதோ, அவர்கள் தப்பித்துக்கொள்ளமாட்டாத தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன்; அப்பொழுது என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் அவர்களைக் கேளாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 12 அப்பொழுது யூதாபட்டணங்களின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் போய்த் தாங்கள் தூபங்காட்டியிருந்த தேவர்களை நோக்கிக் கூப்பிட்டும், அவைகள் அவர்களுடைய ஆபத்துக்காலத்தில் அவர்களை இரட்சிப்பதில்லை. 13 யூதாவே, உன் பட்டணங்களின் இலக்கமும் உன் தேவர்களின் இலக்கமும் சரி; எருசலேமுடைய வீதிகளின் இலக்கமும், நீங்கள் பாகாலுக்குத் தூபங்காட்டும்படி அந்த இலச்சையான காரியத்துக்கு ஸ்தாபித்த பீடங்களின் இலக்கமும் சரி. 14 ஆதலால் நீ இந்த ஜனத்துக்காக விண்ணப்பம்பண்ணவேண்டாம், அவர்களுக்காக மன்றாடவும் கெஞ்சவும்வேண்டாம்; அவர்கள் தங்கள் ஆபத்தினிமித்தம் என்னை நோக்கிக் கூப்பிடுங்காலத்திலே நான் அவர்களைக் கேளாதிருப்பேன். 15 துர்ச்சனரோடு மகா தீவினை செய்யும்போது, என் பிரியமானவளுக்கு என் வீட்டில் என்ன இருக்கிறது? பரிசுத்த மாம்சத்தை உன்னைவிட்டுத் தாண்டிப்போகப்பண்ணுவார்கள்; உன் பொல்லாப்பு நடக்கும்போது நீ களிகூருகிறாயே. 16 நல்ல கனி உண்டாயிருக்கிற நேர்த்தியும் பச்சையுமான ஒலிவமரமென்னும் பேரைக் கர்த்தர் உனக்கு இட்டார்; ஆனால் மகா அமளியின் சத்தமாய் அதைச் சுற்றிலும் நெருப்பைக் கொளுத்துகிறார், அதின் கொம்புகள் முறிக்கப்பட்டது. 17 பாகாலுக்குத் தூபங்காட்டுகிறதினாலே எனக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தங்களுக்குக் கேடாகச் செய்த பொல்லாப்பினிமித்தம் உன்மேல் தீங்கை வரப்பண்ணுவேன் என்று உன்னை நாட்டின சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 18 அதைக் கர்த்தர் எனக்கு அறிவித்ததினாலே அறிந்துகொண்டேன்; அவர்களுடைய செய்கைகளை அப்பொழுது எனக்குத் தெரியக்காட்டினீர். 19 மரத்தை அதின் கனிகளோடுங்கூட அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும், அவன் பேர் இனி நினைக்கப்படாமலும்போக அவனைச் சங்கரிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன். 20 சேனைகளின் கர்த்தாவே, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் சோதித்தறிகிற நீதியுள்ள நியாயாதிபதியே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைப் பார்ப்பேனாக; என் வழக்கை உமக்கு வெளிப்படுத்திவிட்டேன் என்றேன். 21 ஆதலால் நீ எங்கள் கையினாலே சாகாதபடிக்குக் கர்த்தருடைய நாமத்தினாலே தீர்க்கதரிசனம் சொல்லவேண்டாம் என்று சொல்லி, உன் பிராணனை வாங்கத்தேடுகிற ஆனதோத்தின் மனுஷரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறார்: 22 இதோ, இதினிமித்தம் உங்களை விசாரிப்பேன்; இளவயதுள்ளவர்கள் பட்டயத்தாலே சாவார்கள்; அவர்கள் குமாரரும் அவர்கள் குமாரத்திகளும் பஞ்சத்தாலே சாவார்கள். 23 அவர்களில் மீதியாய் இருப்பவர்களில்லை; நான் ஆனதோத்தின் மனுஷரை விசாரிக்கும் வருஷத்திலே அவர்கள்மேல் ஆபத்தை வரப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 12

1 கர்த்தாவே, உம்மோடே நான் வழக்காடப்போனால், தேவரீர் நீதியுள்ளவராமே; ஆகிலும் உம்முடைய நியாயங்களைக் குறித்து உம்மோடே நான் பேசும்படி வேண்டுகிறேன்; ஆகாதவர்களின் வழி வாய்க்கிறதென்ன? துரோகஞ்செய்துவருகிற அனைவரும் சுகித்திருக்கிறதென்ன? 2 நீர் அவர்களை நாட்டினீர், வேர்பற்றித் தேறிப்போனார்கள், கனியும் கொடுக்கிறார்கள்; நீர் அவர்கள் வாய்க்குச் சமீபமும், அவர்கள் உள்ளிந்திரியங்களுக்கோ தூரமுமாயிருக்கிறீர். 3 கர்த்தாவே, நீர் என்னை அறிந்திருக்கிறீர், என்னைக் காண்கிறீர்; என் இருதயம் உமக்கு முன்பாக எப்படிப்பட்டதென்று சோதித்து அறிகிறீர்; அடிக்கப்படும் ஆடுகளைப்போல அவர்களைப் பிடுங்கிப்போட்டு, கொலைநாளுக்கு அவர்களை நியமியும். 4 எந்தமட்டும் தேசம் புலம்பி, எல்லா வெளியின் புல்லும் வாடி, அதின் குடிகளுடைய பொல்லாப்பினிமித்தம் மிருகங்களும் பறவைகளும் அழியவேண்டும்! எங்கள் முடிவை அவன் காண்பதில்லையென்கிறார்கள். 5 நீ காலாட்களோடே ஓடும்போதே உன்னை இளைக்கப்பண்ணினார்களானால், குதிரைகளோடே எப்படிச் சேர்ந்து ஓடுவாய்? சமாதானமுள்ள தேசத்திலேயே நீ அடைக்கலம் தேடினால், யோர்தான் பிரவாகித்து வரும்போது நீ என்னசெய்வாய்? 6 உன் சகோதரரும், உன் தகப்பன் வம்சத்தாரும் உனக்கு துரோகம்பண்ணி, அவர்களும் உன்னைப் பின்தொடர்ந்து மிகவும் ஆரவாரம்பண்ணினார்கள்; அவர்கள் உன்னோடே இனிய வார்த்தைகளைப் பேசினாலும் அவர்களை நம்பவேண்டாம். 7 நான் என் வீட்டை விட்டுவிட்டேன், என் சுதந்தரத்தை நெகிழவிட்டேன்; என் ஆத்துமா நேசித்தவனை அவனுடைய சத்துருவின் கையிலே ஒப்புக்கொடுத்தேன். 8 என் சுதந்தரம் காட்டிலுள்ள சிங்கத்தைப்போல் எனக்காயிற்று; அது எனக்கு விரோதமாய் கெர்ச்சிக்கிறது; ஆதலால் அதை வெறுக்கிறேன். 9 என் சுதந்தரம் பலவருணமான பட்சியைப்போல எனக்காயிற்று; ஆகையால், பட்சிகள் அதைச் சுற்றிலும் வருவதாக; வெளியில் சகல ஜீவன்களே அதைப் பட்சிக்கும்படி கூடிவாருங்கள். 10 அநேக மேய்ப்பர்கள் என் திராட்சத்தோட்டத்தை அழித்து, என் பங்கைக் காலால் மிதித்து, என் பிரியமான பங்கைப் பாழான வனாந்தரமாக்கினார்கள். 11 அதைப் பாழாக்கிவிட்டார்கள்; பாழாய்க் கிடக்கிற அது என்னை நோக்கிப் புலம்புகிறது; தேசமெல்லாம் பாழாயிற்று; ஒருவனும் அதை மனதிலே வைக்கிறதில்லை. 12 கொள்ளைக்காரர் வனாந்தரத்திலுள்ள எல்லா உயர்நிலங்களின்மேலும் வருகிறார்கள்; கர்த்தருடைய பட்டயம் தேசத்தின் ஒருமுனைதொடங்கித் தேசத்தின் மறுமுனைமட்டும் பட்சித்துக்கொண்டிருக்கும்; மாம்சமாகிய ஒன்றுக்கும் சமாதானமில்லை. 13 கோதுமையை விதைத்தார்கள், முள்ளுகளை அறுப்பார்கள்; பிரயாசப்படுவார்கள், பிரயோஜனமடையார்கள்; கர்த்தருடைய உக்கிரகோபத்தினால் உங்களுக்கு வரும் பலனைக்குறித்து வெட்கப்படுங்கள். 14 இதோ, நான் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்குக் காணியாட்சியாகக் கொடுத்த என் சுதந்தரத்தைத் தொடுகிற துஷ்டரான அயலார் அனைவரையும் தங்கள் தேசத்தில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன் என்று, கர்த்தர் அவர்களைக்குறித்துச் சொல்லுகிறார்; யூதா வம்சத்தாரையும் அவர்கள் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கிப்போடுவேன். 15 அவர்களை நான் பிடுங்கிப்போட்ட பிற்பாடு, நான் திரும்பவும் அவர்கள்மேல் இரங்கி, அவர்களைத் தங்கள் தங்கள் சுதந்தரத்துக்கும் தங்கள் தங்கள் பூமிக்கும் திரும்பப்பண்ணுவேன். 16 அப்புறம் அவர்கள் என் ஜனத்துக்குப் பாகாலின்மேல் ஆணையிடக் கற்றுக்கொடுத்ததுபோல, கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு என்று சொல்லி, என் நாமத்தின்மேல் ஆணையிடும்படி என் ஜனத்தின் வழிகளை நன்றாய்க் கற்றுக்கொண்டால், அவர்கள் என் ஜனத்தின் நடுவிலே ஊன்றக்கட்டப்படுவார்கள். 17 கேளார்களேயாகில், நான் அப்படிப்பட்ட ஜாதியை வேரோடே பிடுங்கிப்போட்டு அழித்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 13

1 கர்த்தர் என்னை நோக்கி: நீ போய், உனக்கு ஒரு சணல் கச்சையை வாங்கி, அதை உன் அரையிலே கட்டிக்கொள்; அதைத் தண்ணீரிலே படவொட்டாதே என்றார். 2 நான் கர்த்தருடைய வார்த்தையின்படியே ஒரு கச்சையை வாங்கி, அதை என் அரையிலே கட்டிக்கொண்டேன். 3 இரண்டாம்விசை கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 4 நீ வாங்கினதும் உன் அரையிலிருக்கிறதுமான கச்சையை எடுத்துக்கொண்டு எழுந்து, ஐப்பிராத்து நதிமட்டும் போய், அதை அங்கே ஒரு கன்மலை வெடிப்பிலே ஒளித்துவை என்றார். 5 நான் போய், கர்த்தர் எனக்குக் கட்டளையிட்டபடியே அதை ஐப்பிராத்து நதியின் ஓரத்தில் ஒளித்துவைத்தேன். 6 அநேகநாள் சென்றபின்பு கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து ஐப்பிராத்து நதிக்குப்போய் அங்கே ஒளித்துவைக்க நான் உனக்குக் கட்டளையிட்ட கச்சையை அவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுவா என்றார். 7 அப்பொழுது நான் ஐப்பிராத்து நதிக்குப்போய், கச்சையை ஒளித்துவைத்த இடத்திலே தோண்டி அதை எடுத்தேன்; ஆனால், இதோ, அந்தக் கச்சை கெட்டு ஒன்றுக்கும் உதவாமற் போயிற்று. 8 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 9 இப்படியே நான் யூதாவுடைய பெருமையையும், எருசலேமுடைய மிகுந்த பெருமையையும் கெட்டுப்போகப்பண்ணுவேன். 10 என் வார்த்தைகளைக் கேட்கமாட்டோம் என்று மறுத்து, தங்கள் இருதயத்தின் கடினத்தின்படி நடந்து, அந்நிய தேவர்களைச் சேவிக்கவும் அவர்களைப் பணிந்துகொள்ளவும் அவர்களைப் பின்பற்றுகிற இந்தப் பொல்லாத ஜனங்கள் ஒன்றுக்கும் உதவாமற்போன இந்தக் கச்சையைப்போலாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 11 கச்சையானது மனுஷனுடைய அரைக்குச் சேர்க்கையாயிருக்கிறதுபோல, நான் இஸ்ரவேல் குடும்பத்தார் அனைவரையும் யூதாவின் குடும்பத்தார் அனைவரையும், எனக்கு ஜனங்களாகவும், கீர்த்தியாகவும், துதியாகவும், மகிமையாகவும் சேர்க்கையாக்கிக் கொண்டேன்; ஆனாலும் அவர்கள் செவிகொடாமற்போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 12 சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறார் என்கிற வார்த்தையை அவர்களுடனே சொல்; அதற்கு அவர்கள்: சகல ஜாடிகளும் திராட்சரசத்தினாலே நிரப்பப்படுவது எங்களுக்குத் தெரியாதா என்று உன்னுடனே சொல்லுவார்கள். 13 அப்பொழுது நீ அவர்களை நோக்கி: இதோ, இந்தத் தேசத்தின் குடிகளெல்லாரையும், தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருக்கிற ராஜாக்களையும், ஆசாரியர்களையும், தீர்க்கதரிசிகளையும், எருசலேமின் குடிகள் எல்லாரையும் நான் வெறியினால் நிரப்பி, 14 பிதாக்களும் பிள்ளைகளுமாகிய அவர்களை ஒருவர்மேல் ஒருவர் மோதி விழும்படிப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அழிப்பதேயன்றி மன்னிப்பதுமில்லை, தப்பவிடுவதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். 15 நீங்கள் செவிகொடுத்துக் கேளுங்கள்; மேட்டிமையாய் இராதேயுங்கள்; கர்த்தர் விளம்பினார். 16 அவர் அந்தகாரத்தை வரப்பண்ணுவதற்கு முன்னும், இருண்ட மலைகளில் உங்கள் கால்கள் இடறுவதற்கு முன்னும், நீங்கள் வெளிச்சத்துக்குக் காத்திருக்கும்போது, அவர் அதை அந்தகாரமும் காரிருளுமாக மாறப்பண்ணுவதற்கு முன்னும், உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துங்கள். 17 நீங்கள் இதைக் கேளாமற் போனீர்களானால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, கர்த்தருடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும். 18 நீங்கள் ராஜாவையும் ராஜாத்தியையும் நோக்கி: தாழவந்து உட்காருங்கள்; உங்கள் சிரசின் சிங்காரமாகிய உங்கள் மகிமையின் கிரீடம் விழுந்ததென்று சொல்லுங்கள். 19 தெற்கிலுள்ள பட்டணங்கள் அடைக்கப்பட்டன; அவைகளைத் திறப்பார் இல்லை; யூதா அனைத்தும் குடிவிலக்கப்பட்டுப்போம்; அது சமூலமாய்ச் சிறைப்பட்டுப்போம். 20 உங்கள் கண்களை ஏறெடுத்து, வடக்கேயிருந்து வருகிறவர்களைப் பாருங்கள்; உனக்குக் கொடுக்கப்பட்டிருந்த மந்தையும், உன் மகிமையான ஆட்டுக்கிடையும் எங்கே? 21 அவர் உன்னை விசாரிக்கும்போது என்ன சொல்லுவாய்? அவர்கள் உன்மேல் ஆதிக்கக்காரரும் தலைவருமாயிருக்க, நீ அவர்களைப் பழக்குவித்தாயே; கர்ப்பவதிக்குப் பிரசவவேதனை உண்டாகும்போது உண்டாகும் வேதனைகளைப்போல் வேதனைகள் உன்னைப் பிடிப்பதில்லையோ? 22 இவைகள் எனக்கு நேரிட்டது ஏதென்று நீ உன் இருதயத்தில் சொன்னாயாகில், உன் திரளான அக்கிரமத்தினிமித்தமே உன் வஸ்திரத்து ஓரங்கள் விலக்கப்பட்டு, உன் பாதங்கள் பலவந்தஞ்செய்யப்படுகின்றன. 23 எத்தியோப்பியன் தன் தோலையும், சிவிங்கி தன் புள்ளிகளையும் மாற்றக்கூடுமோ? கூடுமானால், தீமைசெய்யப் பழகின நீங்களும் நன்மைசெய்யக்கூடும். 24 ஆதலால் வனாந்தரக் காற்றால் பறக்கடிக்கப்படும் துரும்பைப்போல அவர்களைச் சிதறடிப்பேன். 25 நீ என்னை மறந்து, பொய்யை நம்பினபடியினாலே, இது உன்னுடைய வீதமும், என்னால் உனக்கு அளக்கப்படும் உன்னுடைய பங்குமாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். 26 உன் மானம் காணப்பட நான் உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டாக எடுத்துப்போடுவேன். 27 உன் விபசாரங்களையும், உன் கனைக்குதல்களையும், வெளியிலே மேடுகளின்மேல் நீ பண்ணின வேசித்தனத்தின் முறைகேடுகளாகிய உன் அருவருப்புகளையும் நான் கண்டேன்; எருசலேமே, உனக்கு ஐயோ! நீ சுத்திகரிக்கப்படமாட்டாயா? இது இன்னும் எத்தனை காலத்துக்குப்பின் நடக்கும்? என்கிறார்.

எரேமியா 14

1 மழைத்தாழ்ச்சியைக் குறித்து எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்: 2 யூதா துக்கிக்கிறது, அதின் வாசல்கள் பெலனற்றுக் கிடக்கிறது; தரைமட்டும் குனிந்து, கரிகறுத்துத் திரிகிறார்கள்; எருசலேமின் கூக்குரல் எழும்புகிறது. 3 அவர்களில் பிரபலமானவர்கள் தங்கள் சிறுவர்களைத் தண்ணீருக்கு அனுப்புகிறார்கள்; இவர்கள் பள்ளங்களுக்குப் போய்த் தண்ணீரைக் காணாமல் வெறும் பாத்திரங்களோடே திரும்பிவருகிறார்கள்; வெட்கி நாணி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள். 4 தேசத்தின்மேல் மழை இல்லாததினால் தரை வெடித்திருக்கிறது; பயிர் செய்கிறவர்கள் வெட்கி, தங்கள் தலையை மூடிக்கொள்ளுகிறார்கள். 5 வெளியின் பெண்மானும் குட்டிபோட்டு, புல்லில்லாததினால் அதை விட்டு ஓடிப்போகும். 6 காட்டுக்கழுதைகள் மேடுகளில் நின்று, வலுசர்ப்பங்களைப்போல் காற்றை உட்கொள்ளுகிறது; புல் இல்லாததினால் அவைகளுடைய கண்கள் பூத்துப்போகிறது என்றார். 7 கர்த்தாவே, எங்கள் அக்கிரமங்கள் எங்களுக்கு விரோதமாய்ச் சாட்சியிட்டாலும், உம்முடைய நாமத்தினிமித்தம் கிருபைசெய்யும்; எங்கள் சீர்கேடுகள் மிகுதியாயிருக்கிறது; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம். 8 இஸ்ரவேலின் நம்பிக்கையே, ஆபத்துக்காலத்தில் அதின் இரட்சகரே, நீர் தேசத்தில் பரதேசியைப்போலவும், இராத்தங்க இறங்குகிற வழிப்போக்கனைப்போலவும் இருப்பானேன்? 9 நீர் விடாய்த்துப்போன புருஷனைப்போலவும், இரட்சிக்கமாட்டாத பராக்கிரமசாலியைப்போலவும் இருப்பானேன்? கர்த்தாவே, நீர் எங்கள் நடுவிலிருக்கிறவராமே; உம்முடைய நாமம் எங்களுக்குத் தரிக்கப்பட்டுமிருக்கிறதே; எங்களை விட்டுப் போகாதிரும். 10 அவர்கள் தங்கள் கால்களை அடக்கிக்கொள்ளாமல், அலைய விரும்புகிறார்களென்று கர்த்தர் இந்த ஜனத்தைக்குறித்துச் சொல்லுகிறார்; ஆகையால், கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிராமல், இப்பொழுது அவர்கள் அக்கிரமத்தை நினைத்து, அவர்கள் பாவங்களை விசாரிப்பார். 11 கர்த்தர் என்னை நோக்கி: நீ இந்த ஜனத்துக்கு நன்மையுண்டாக விண்ணப்பம்பண்ணவேண்டாம். 12 அவர்கள் உபவாசித்தாலும், நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பதில்லை; அவர்கள் தகனபலிகளையும் காணிக்கைகளையும் செலுத்தினாலும், நான் அவர்கள்மேல் பிரியமாயிருப்பதில்லை; பட்டயத்தினாலும் பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் நான் அவர்களை நிர்மூலமாக்குவேன் என்றார். 13 அப்பொழுது நான்: ஆ கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, நீங்கள் பட்டயத்தைக் காண்பதில்லை, உங்களுக்குப் பஞ்சமும் வருவதில்லை; உறுதியான சமாதானத்தையே இவ்விடத்தில் உங்களுக்குத் தருவோமென்றார் என்று தீர்க்கதரிசிகள் அவர்களுக்குச் சொல்லுகிறார்களே என்றேன். 14 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அவர்களோடே பேசினதுமில்லை; அவர்கள் கள்ளத் தரிசனத்தையும், கள்ள சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள். 15 ஆதலால், நான் அனுப்பாதிருந்தும், என் நாமத்தைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இந்தத் தேசத்திலே பட்டயமும் பஞ்சமும் வருவதில்லையென்கிற தீர்க்கதரிசிகளைக்குறித்து: இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சாவார்கள். 16 அவர்களிடத்தில் தீர்க்கதரிசனம் கேட்கும் ஜனங்களும், எருசலேமின் வீதிகளிலே பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்து, அவர்களும் அவர்கள் மனைவிகளும், அவர்கள் குமாரரும், அவர்கள் குமாரத்திகளும் அடக்கம் பண்ணுவாரில்லாமல் கிடப்பார்கள்; அவர்களுடைய பொல்லாப்பை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 17 என் கண்களிலிருந்து இரவும் பகலும் ஓயாமல் கண்ணீர் ஓடிக்கொண்டிருக்கும்; என் ஜனமென்கிற குமாரத்தியாகிய கன்னிகை மகா வேதனையுள்ள அடியினாலும் கொடிய காயத்தினாலும் சேதப்பட்டிருக்கிறாள். 18 நான் வெளியே போனால், இதோ, பட்டயத்தால் கொல்லப்பட்டவர்கள்; நகரத்தில் வந்தால் இதோ, பஞ்சத்தால் வருந்துகிறவர்கள்; தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் ஒன்றும் அறியாமல் தேசத்தில் அலைகிறார்கள் என்னும் இந்த வார்த்தையை அவர்களுக்குச் சொல் என்றார். 19 யூதாவை முற்றிலும் வெறுத்தீரோ? சீயோன் உம்முடைய ஆத்துமாவுக்கு அரோசிகமாயிற்றோ? நாங்கள் ஆரோக்கியம் அடையக்கூடாதபடி எங்களை ஏன் அடித்தீர்? சமாதானத்துக்குக் காத்திருந்தோம், ஒரு நன்மையுமில்லை; ஆரோக்கிய காலத்துக்குக் காத்திருந்தோம், இதோ, ஆபத்து. 20 கர்த்தாவே, எங்கள் தீமையையும் எங்கள் பிதாக்களின் அக்கிரமத்தையும் நாங்கள் அறிந்திருக்கிறோம்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தோம். 21 உம்முடைய நாமத்தினிமித்தம் எங்களை அருவருக்காதிரும், உமது மகிமையின் சிங்காசனத்தைக் கனவீனப்படுத்தாதேயும்; எங்களோடே உமக்கு இருக்கிற உடன்படிக்கை அபத்தமாகாதபடி எங்களை நினைத்தருளும். 22 புறஜாதிகளுடைய வீணான தேவர்களுக்குள் மழை வருஷிக்கப்பண்ணத்தக்கவர்கள் உண்டோ? அல்லது, வானங்கள் தானாய் மழைகளைக் கொடுக்குமோ? எங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நீரல்லவோ அதைச் செய்கிறவர்; ஆகையால், உமக்குக் காத்திருக்கிறோம்; தேவரீர் இவைகளையெல்லாம் உண்டுபண்ணினீர்.

எரேமியா 15

1 கர்த்தர் என்னை நோக்கி: மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சாராது; இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி இவர்களைத் துரத்திவிடு. 2 எங்கே புறப்பட்டுப்போவோம் என்று இவர்கள் உன்னைக் கேட்டால், நீ அவர்களை நோக்கி: சாவுக்கு ஏதுவானவர்கள் சாவுக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவர்கள் பட்டயத்துக்கும், பஞ்சத்துக்கு ஏதுவானவர்கள் பஞ்சத்துக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவர்கள் சிறையிருப்புக்கும் நேராய்ப் போகவேண்டும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லு. 3 கொன்றுபோடப் பட்டயமும், பிடித்து இழுக்க நாய்களும், பட்சித்து அழிக்க ஆகாயத்துப் பறவைகளும், பூமியின் மிருகங்களும் ஆகிய நான்குவிதமான வாதைகளை நான் அவர்கள்மேல் வரக் கட்டளையிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 4 எசேக்கியாவின் குமாரனும், யூதாவின் ராஜாவுமாகிய மனாசே எருசலேமில் செய்தவைகளினிமித்தம் அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலையப்பண்ணுவேன். 5 எருசலேமே, யார் உன்மேல் இரங்குவார்கள்? யார் உன்மேல் பரிதபிப்பார்கள்? யார் உன்னிடத்திற்குத் திரும்பி, உன் சுகசெய்தியை விசாரிப்பார்கள்? 6 நீ என்னைவிட்டுப் பின்வாங்கிப்போனாய்; ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன்; நான் பொறுத்துப் பொறுத்து இளைத்துப்போனேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 7 தேசத்தின் வாசல்களில் அவர்களைத் தூற்றுக்கூடையால் தூற்றிப்போடுவேன்; என் ஜனங்கள் தங்கள் வழிகளைவிட்டுத் திரும்பாதபடியினால் நான் அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்கி அழிப்பேன். 8 கடற்கரை மணலைப்பார்க்கிலும் அதிக விதவைகள் அவர்களில் உண்டாயிருப்பார்கள்; பட்டப்பகலிலே பாழாக்குகிறவனைத் தாயின்மேலும் பிள்ளைகளின்மேலும் வரப்பண்ணுவேன்; அவர்கள்மேல் பட்டணத்தின் கலகத்தையும், பயங்கரங்களையும் விழப்பண்ணுவேன். 9 ஏழு பிள்ளைகளைப் பெற்றவள் களைத்துப்போகிறாள்; அவள் தன் பிராணனை விட்டுவிட்டாள்; இன்னும் பகலாயிருக்கையில் அவளுடைய சூரியன் அஸ்தமித்தது; வெட்கமும் இலச்சையும் அடைந்தாள்; அவர்களில் மீதியாகிறவர்களையோ அவர்களுடைய சத்துருக்களுக்கு முன்பாகப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 10 என் தாயே, தேசத்துக்கெல்லாம் வழக்குக்கும் வாதுக்கும் உள்ளானவனாயிருக்கும்படி என்னை நீ பெற்றாயே; ஐயோ! நான் அவர்களுக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை, அவர்கள் எனக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை; ஆனாலும், எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள். 11 உன்னில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள்; தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் சத்துருவுக்கு எதிர்ப்பட்டு, உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாகவே சொல்லுகிறேன். 12 வடக்கேயிருந்து வரும் இரும்பையும் வெண்கலத்தையும் இரும்பு நொறுக்குமோ? 13 உன்னுடைய எல்லாப் பாவங்களினிமித்தமும், உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் ஆஸ்தியையும், உன் பொக்கிஷங்களையும் கிரயமில்லாமல் சூறையிடுவிப்பேன். 14 நீ அறியாத தேசத்தில் உன் சத்துருக்கள் வசமாக நான் உன்னைத் தாண்டிப்போகப் பண்ணுவேன்; உங்கள்மேல் எரியப்போகிற அக்கினி என் கோபத்தினாலே மூண்டது என்று கர்த்தர் சொன்னார். 15 கர்த்தாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து, என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு என்னிமித்தம் நீதியைச் சரிக்கட்டும்; உம்முடைய நீடிய பொறுமையினிமித்தம் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடைய நிமித்தம் நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும். 16 உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது. 17 நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை; உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்; சலிப்பினால் என்னை நிரப்பினீர். 18 என் நோவு நித்தியகாலமாகவும், என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ? 19 இதினிமித்தம்: நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்குமுன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார். 20 உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 21 நான் உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து, உன்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார்.

எரேமியா 16

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 நீ பெண்ணை விவாகம்பண்ணவேண்டாம்; இவ்விடத்தில் உனக்குக் குமாரரும் குமாரத்திகளும் இருக்கவேண்டாம் என்றார். 3 இவ்விடத்திலே பிறக்கிற குமாரரையும் குமாரத்திகளையும், இந்தத் தேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற பிதாக்களையுங்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், 4 மகா கொடிய வியாதிகளால் சாவார்கள், அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் மடிந்துபோவார்கள்; அவர்களுடைய பிரேதம் ஆகாசத்துப் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும். 5 ஆகையால், நீ துக்கவீட்டில் பிரவேசியாமலும், புலம்பப்போகாமலும், அவர்களுக்குப் பரிதபிக்காமலும் இருப்பாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், இந்த ஜனத்தைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 6 இந்தத் தேசத்திலே பெரியோரும் சிறியோரும் சாவார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாரில்லை; அவர்களுக்காகப் புலம்புவாருமில்லை; அவர்கள் நிமித்தம் கீறிக்கொண்டு, மொட்டையடித்துக்கொள்வாருமில்லை. 7 செத்தவர்கள் நிமித்தம் உண்டான துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு அப்பம் பங்கிடப்படுவதுமில்லை; ஒருவனுடைய தகப்பனுக்காவது, ஒருவனுடைய தாய்க்காவது துக்கப்படுகிறவர்களுக்குத் தேற்றரவின் பாத்திரத்தைக் குடிக்கக்கொடுப்பாருமில்லை. 8 நீ அவர்களோடே புசித்துக் குடிக்க உட்காரும்படி விருந்துவீட்டிலும் பிரவேசியாயாக. 9 ஏனெனில், இதோ, இவ்விடத்திலே நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவும், உங்கள் நாட்களிலுமே, சந்தோஷத்தின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 10 நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த ஜனத்துக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: கர்த்தர் எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கைக் கூறுவானேன் என்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகச் செய்த எங்கள் பாவம் என்ன? என்றும் கேட்பார்களானால், 11 நீ அவர்களை நோக்கி: உங்கள் பிதாக்கள் என்னைவிட்டு அந்நிய தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொண்டு, என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் என்னை விட்டுவிட்டார்களே. 12 நீங்கள் உங்கள் பிதாக்களைப்பார்க்கிலும் அதிக கேடாக நடந்தீர்களே; இதோ, உங்களில் ஒவ்வொருவரும் என் சொல்லைக் கேளாதபடிக்கு, உங்கள் பொல்லாத இருதயகடினத்தின்படி நடக்கிறீர்கள். 13 ஆதலால், உங்களை இந்தத் தேசத்திலிருந்து நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேசத்திற்குத் துரத்திவிடுவேன்; அங்கே இரவும் பகலும் அந்நிய தேவர்களைச் சேவிப்பீர்கள்; அங்கே நான் உங்களுக்குத் தயை செய்வதில்லை. 14 ஆதலால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு இனிமேல் சத்தியம்பண்ணாமல், 15 இஸ்ரவேல் புத்திரரை வடதேசத்திலும், தாம் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா தேசங்களிலுமிருந்து வரப்பண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்கள்; நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த அவர்களுடைய தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 16 இதோ, நான் மீன்பிடிக்கிற அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களைப் பிடிப்பார்கள்; அதற்குப் பின்பு வேட்டைக்காரராகிய அநேகரை அழைத்தனுப்புவேன், இவர்கள் அவர்களை எல்லா மலைகளிலும், எல்லாக் குன்றுகளிலும், கன்மலைகளின் வெடிப்புகளிலும் வேட்டையாடுவார்கள். 17 என் கண்கள் அவர்களுடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கிறது; அவைகள் என் முகத்துக்கு முன்பாக மறைந்திருக்கிறதில்லை; அவர்களுடைய அக்கிரமம் என் கண்களுக்கு முன்பாக மறைவாயிருக்கிறதுமில்லை. 18 முதலாவது நான் அவர்களுடைய அக்கிரமத்துக்கும், அவர்களுடைய பாவத்துக்கும் இரட்டிப்பாய் நீதியைச் சரிக்கட்டுவேன்; அவர்கள் என் தேசத்தைத் தீட்டுப்படுத்தி, என் சுதந்தரத்தைச் சீயென்று அருவருக்கப்படத்தக்க தங்கள் காரியங்களின் நாற்றமான விக்கிரகங்களினாலே நிரப்பினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 19 என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய கர்த்தாவே, புறஜாதிகள் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் பிதாக்கள் பிரயோஜனமில்லாத பொய்யையும் மாயையையும் கைப்பற்றினார்கள் என்பார்கள். 20 மனுஷன் தனக்குத் தேவர்களை உண்டுபண்ணலாமோ? அவைகள் தேவர்கள் அல்லவே. 21 ஆதலால், இதோ, இப்பொழுது நான் அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் கரத்தையும் என் பெலத்தையுமே அவர்களுக்குத் தெரியப்பண்ணுவேன்; என் நாமம் யேகோவா என்று அறிந்துகொள்வார்கள்.

எரேமியா 17

1 யூதாவின் பாவம் இரும்பெழுத்தாணியினாலும், வைரத்தின் நுனியினாலும் எழுதப்பட்டு, அவர்களுடைய இருதயத்தின் பலகையிலும் உங்கள் பலிபீடங்களுடைய கொம்புகளிலும் பதிந்திருக்கிறது. 2 உயர்ந்த மேடுகளின்மேல் பச்சையான மரங்களண்டையில் இருந்த அவர்களுடைய பலிபீடங்களையும் அவர்களுடைய தோப்புகளையும் அவர்கள் பிள்ளைகள் நினைக்கும்படி இப்படிச் செய்திருக்கிறது. 3 வயல்நிலத்திலுள்ள என் மலையே, நீ உன் எல்லைகளிலெல்லாம் செய்த பாவத்தினிமித்தம் நான் உன் ஆஸ்தியையும், உன் எல்லாப் பொக்கிஷங்களையும், உன் மேடைகளையுங்கூடச் சூறையிடுவிப்பேன். 4 அப்படியே நான் உனக்குக் கொடுத்த சுதந்தரத்தை நீதானே விட்டுவிடுவாய்; நீ அறியாத தேசத்தில் உன்னை உன் சத்துருக்களுக்கு அடிமையுமாக்குவேன்; என்றென்றைக்கும் எரியத்தக்க என் கோபத்தின் அக்கினியை மூட்டிவிட்டீர்களே. 5 மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாக்கிக்கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 6 அவன் அந்தரவெளியில் கறளையாய்ப்போன செடியைப்போலிருந்து, நன்மைவருகிறதைக் காணாமல், வனாந்தரத்தின் வறட்சியான இடங்களிலும், குடியில்லாத உவர்நிலத்திலும் தங்குவான். 7 கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான். 8 அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், கால்வாய் ஓரமாகத் தன் வேர்களை விடுகிறதும், உஷ்ணம் வருகிறதைக் காணாமல் இலை பச்சையாயிருக்கிறதும், மழைத்தாழ்ச்சியான வருஷத்திலும் வருத்தமின்றித் தப்பாமல் கனி கொடுக்கிறதுமான மரத்தைப்போலிருப்பான். 9 எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? 10 கர்த்தராகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கு, இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன். 11 அநியாயமாய் ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறவன் முட்டையிட்டு அவயங்காத்தும், குஞ்சுபொரிக்காமற் போகிற கவுதாரிக்குச் சமானமாயிருக்கிறான்; அவன் தன் பாதி வயதிலே அதைவிட்டு, தன் முடிவிலே மூடனாயிருப்பான். 12 எங்கள் பரிசுத்த ஸ்தானம் ஆதிமுதற்கொண்டு உயர்ந்த மகிமையுள்ள சிங்காசனமாயிருக்கிறது. 13 இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே, உம்மைவிட்டு விலகுகிற யாவரும் வெட்கப்படுவார்கள்; அவர்கள் ஜீவனுள்ள தண்ணீரின் ஊற்றாகிய கர்த்தரை விட்டு விலகிப்போனபடியால், உம்மைவிட்டு அகன்றுபோகிறவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும். 14 கர்த்தாவே, என்னைக் குணமாக்கும், அப்பொழுது குணமாவேன்; என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன்; தேவரீரே என் துதி. 15 இதோ, இவர்கள் என்னைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தை எங்கே? அது இப்பொழுது வரட்டும் என்கிறார்கள். 16 நானோ உம்மைப் பின்பற்றுகிற மேய்ப்பன், இதற்கு நான் மிஞ்சி நடக்கவில்லை; ஆபத்துநாளை விரும்புகிறதுமில்லையென்று நீர் அறிவீர்; என் உதடுகளிலிருந்து புறப்பட்டது உமக்கு முன்பாகச் செவ்வையாயிருந்தது. 17 நீர் எனக்குப் பயங்கரமாயிராதேயும்; தீங்குநாளில் நீரே என் அடைக்கலம். 18 நான் வெட்கப்படாமல், என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் வெட்கப்படுவார்களாக; நான் கலங்காமல், அவர்கள் கலங்குவார்களாக; தேவரீர் தீங்குநாளை அவர்கள்மேல் வரப்பண்ணி, இரட்டிப்பான நொறுக்குதலால் அவர்களை நொறுக்கும். 19 கர்த்தர் என்னை நோக்கி: நீ போய் யூதாவின் ராஜாக்கள் வரத்தும்போக்குமாயிருக்கிற இந்த ஜனங்களின் புத்திரருடைய வாசலிலும் எருசலேமின் எல்லா வாசல்களிலும் நின்றுகொண்டு, 20 அவர்களுடனே சொல்லவேண்டியது என்னவென்றால்: இந்த வாசல்களில் பிரவேசிக்கிற யூதாவின் ராஜாக்களும், எல்லா யூதரும், எருசலேமின் எல்லாக் குடிகளுமாகிய நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 21 நீங்கள் ஓய்வுநாளில் சுமைகளை எடுத்து, அவைகளை எருசலேமின் வாசல்களுக்குள் கொண்டுவராதபடிக்கும், 22 ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து சுமையை வெளியே கொண்டு போகாதபடிக்கும், ஒரு வேலையையும் செய்யாதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களுக்காக எச்சரிக்கையாயிருந்து, நான் உங்கள் பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 23 அவர்களோ கேளாமலும் தங்கள் செவிகளைச் சாயாமலும்போய்க் கேளாதபடிக்கும் புத்தியை ஏற்றுக்கொள்ளாதபடிக்கும், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினார்கள். 24 நீங்களோவெனில், ஓய்வுநாளில் இந்த நகரத்தின் வாசல்களுக்குள்ளே சுமையைக் கொண்டுவராதபடிக்கும், ஓய்வுநாளில் ஒரு வேலையையும் செய்யாமல் அதைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் என் சொல்லைக் கேட்பீர்களானால், 25 அப்பொழுது தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்களும், இரதங்களின்மேலும் குதிரைகளின்மேலும் ஏறுகிறவர்களுமாகிய ராஜாக்களும் ராஜகுமாரர்களும், அவர்கள் பிரபுக்களும், யூதாவின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் இந்த நகரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிப்பார்கள்; இந்த நகரமும் என்றைக்கும் குடியுள்ளதாயிருக்கும். 26 யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் சுற்றுப்புறமான ஊர்களிலும், பென்யமீன் தேசத்திலும், பள்ளத்தாக்கான சீமையிலும், மலைநாட்டிலும், தெற்கிலுமிருந்து ஜனங்கள் சர்வாங்க தகனங்களையும், பலிகளையும், போஜனபலிகளையும், தூபவர்க்கங்களையும், ஸ்தோத்திரபலிகளையும் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருவார்கள். 27 நீங்கள் ஓய்வுநாளைப் பரிசுத்தமாக்கும்படிக்கும் ஓய்வுநாளிலே சுமையை எருசலேமின் வாசல்களுக்குள் எடுத்துவராதிருக்கும்படிக்கும், என் சொல்லைக் கேளாமற்போனீர்களாகில், நான் அதின் வாசல்களில் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சித்தும், அவிந்துபோகாதிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 18

1 கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்: 2 நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப்போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார். 3 அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன்; இதோ, அவன் திரிகையினாலே வனைந்துகொண்டிருந்தான். 4 குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான். 5 அப்பொழுது கர்த்தருடைய வசனம் எனக்கு உண்டாகி, அவர்: 6 இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள். 7 பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு ஜாதிக்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்துக்கு விரோதமாகவும் சொன்னமாத்திரத்தில், 8 நான் விரோதமாய்ப் பேசின அந்த ஜாதியார் தங்கள் தீங்கைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன். 9 கட்டுவேன், நாட்டுவேன் என்றும், ஒரு ஜாதியையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு. 10 அவர்கள் என் சத்தத்தைக்கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களானால், நானும் அவர்களுக்கு அருள்செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாதபடிக்கு, மனம் மாறுவேன். 11 இப்பொழுதும், நீ யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை உருப்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தை யோசிக்கிறேன்; ஆகையால், உங்களில் ஒவ்வொருவரும் தன் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்களென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல். 12 ஆனாலும் அவர்கள்: அது கூடாதகாரியம், நாங்கள் எங்கள் யோசனைகளின்படியே நடந்து, அவரவர் தம்தம் பொல்லாத இருதயத்தினுடைய கடினத்தின்படியே செய்வோம் என்கிறார்கள். 13 ஆகையால் கர்த்தர் சொல்லுகிறார்: இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டவன் யார் என்று புறஜாதிகளுக்குள்ளே விசாரித்துப்பாருங்கள்; மிகவும் திடுக்கிடத்தக்க காரியத்தை இஸ்ரவேல் என்னும் கன்னிகை செய்கிறாள். 14 லீபனோனின் உறைந்த மழை வயல்வெளியின் கன்மலையிலிருந்து அற்றுப்போகிறதுண்டோ? ஓடிவருகிற அந்நியதேசத்துக் குளிர்ந்த தண்ணீர்கள் வடிந்துபோகிறதுண்டோ? 15 என் ஜனங்களோ என்னை மறந்து, மாயையான விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டுகிறார்கள்; செப்பனிடப்படாத பாதைகளிலும் வழியிலும் அவர்கள் நடக்கும்படி, அவைகள் அவர்களைப் பூர்வ பாதைகளாகிய அவர்களுடைய வழிகளிலிருந்து இடறும்படி செய்கிறது. 16 நான் அவர்களுடைய தேசத்தைப் பாழாக்கவும், என்றென்றைக்கும் ஈசலிட்டு நிந்திக்கும் நிந்தையாக்கவும் செய்யும்படி இப்படிச் செய்கிறார்கள்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, தன் தலையைத் துலுக்குவான். 17 கொண்டல்காற்றுப் பறக்கடிக்குமாப்போல் நான் அவர்களை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகப் பறக்கடிப்பேன்; அவர்களுடைய ஆபத்தின் நாளிலே என் முகத்தையல்ல, என் முதுகை அவர்களுக்குக் காட்டுவேன் என்று சொல் என்றார். 18 அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்திலே வேதமும், ஞானிகளிடத்திலே ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்திலே வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனியாமல், இவனை நாவினாலே வெட்டிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள். 19 கர்த்தாவே, நீர் என்னைக் கவனித்து, என்னோடே வழக்காடுகிறவர்களின் சத்தத்தைக் கேளும். 20 நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டலாமோ? என் ஆத்துமாவுக்குப் படுகுழியை வெட்டுகிறார்களே; உம்முடைய உக்கிரத்தை அவர்களைவிட்டுத் திருப்பும்படிக்கு நான் அவர்களுக்காக நன்மையைப் பேச உமக்கு முன்பாக நின்றதை நினைத்தருளும். 21 ஆகையால், அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவர்களைப் பட்டயத்துக்கு இரையாக்கிவிடும்; அவர்கள் மனைவிகள் பிள்ளைகளற்றவர்களும் விதவைகளுமாகி, அவர்கள் புருஷர்கள் கொலைசெய்யப்பட்டு, அவர்கள் வாலிபர்கள் யுத்தத்திலே பட்டயவெட்டால் மடியக்கடவர்கள். 22 நீர் சடிதியில் அவர்கள்மேல் இராணுவத்தை வரப்பண்ணுகையால், கூக்குரல் அவர்கள் வீடுகளிலிருந்து கேட்கப்படக்கடவது; என்னைப் பிடிக்கப் படுகுழியை வெட்டி, என் கால்களுக்குக் கண்ணிகளை வைத்தார்களே. 23 ஆனாலும் கர்த்தாவே, அவர்கள் எனக்கு விரோதமாய்ச் செய்யும் கொலைபாதக யோசனையையெல்லாம் நீர் அறிவீர்; அவர்களுடைய அக்கிரமத்தை உமது கண்ணுக்கு மறைவாக மூடாமலும், அவர்கள் பாவத்தைக் குலைக்காமலும் இருப்பீராக; அவர்கள் உமக்கு முன்பாகக் கவிழ்க்கப்படக்கடவர்கள்; உமது கோபத்தின் காலத்திலே இப்படி அவர்களுக்குச் செய்யும்.

எரேமியா 19

1 கர்த்தர் சொன்னது: நீ போய்க் குயவன் வேலையான ஒரு கலசத்தைக்கொண்டு, ஜனத்தின் மூப்பரிலும் ஆசாரியர்களின் மூப்பரிலும் சிலரைக் கூட்டிக்கொண்டு, 2 கிழக்கு வாசலுக்கு எதிரான இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கிலே புறப்பட்டுப்போய், நான் உன்னோடே சொல்லும் வார்த்தைகளை அங்கே பிரசித்தப்படுத்து. 3 நீ அவர்களை நோக்கி: யூதாவின் ராஜாக்களே, எருசலேமின் குடிகளே, கர்த்தருடைய வார்த்தைகளைக் கேளுங்கள்; இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: இதோ, நான் இந்த ஸ்தலத்தின்மேல் ஒரு பொல்லாப்பை வரப்பண்ணுவேன்; அதைக் கேட்கிற யாவருடைய காதுகளிலும் அது தொனித்துக்கொண்டிருக்கும். 4 அவர்கள் என்னை விட்டுவிட்டு, இந்த ஸ்தலத்தை அந்நிய ஸ்தலமாக்கி, தாங்களும், தங்கள் பிதாக்களும், யூதாவின் ராஜாக்களும், அறியாதிருந்த அந்நிய தேவர்களுக்கு அதிலே தூபங்காட்டி, இந்த ஸ்தலத்தைக் குற்றமில்லாதவர்களின் இரத்தத்தினாலே நிரப்பினபடியினாலும், 5 தங்கள் பிள்ளைகளைப் பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிக்கும்படி பாகாலின் மேடைகளைக் கட்டினபடியினாலும் இப்படி வரப்பண்ணுவேன்; இவைகளை நான் கற்பித்ததுமில்லை, சொன்னதுமில்லை, இவைகள் என் இருதயத்தில் தோன்றினதுமில்லை. 6 ஆகையால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இந்த ஸ்தலம் தோப்பேத்தென்றும், இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கென்றும் இனிச் சொல்லப்படாமல், சங்காரப் பள்ளத்தாக்கென்று சொல்லப்படும். 7 அப்பொழுது நான் யூதாவுக்கும் எருசலேமுக்கும் கொண்டிருந்த ஆலோசனையை இந்த ஸ்தலத்திலே வெறுமையாக்கி, அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாக அவர்களைப் பட்டயத்தினாலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையினாலும் விழப்பண்ணி, அவர்கள் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்து, 8 இந்த நகரத்தைப் பாழாகவும், ஈசலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைப்பேன்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, அதின் எல்லா வாதைகளினிமித்தமும் ஈசலிடுவான். 9 அவர்களுடைய சத்துருக்களும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களும், அவர்களை இறுகப்பிடிக்கப்போகிற முற்றிக்கையிலும் இடுக்கத்திலும், நான் அவர்களைத் தங்கள் குமாரரின் மாம்சத்தையும் தங்கள் குமாரத்திகளின் மாம்சத்தையும் தின்னப்பண்ணுவேன்; அவனவன் தனக்கு அடுத்தவனுடைய மாம்சத்தைத் தின்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று நீ சொல்லி, 10 உன்னோடே கூடவந்த மனுஷருடைய கண்களுக்கு முன்பாக அந்தக் கலசத்தை உடைத்துப்போட்டு, 11 அவர்களை நோக்கி: திரும்பச் செப்பனிடப்படக்கூடாத குயவனுடைய மண்பாண்டத்தை உடைத்துப்போட்டவண்ணமாக நான் இந்த ஜனத்தையும் இந்த நகரத்தையும் உடைத்துப்போடுவேன்; புதைக்கிறதற்கு இடமில்லாததினால் தோப்பேத்திலே சவங்களைப் புதைப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 12 இவ்விதமாக நான் இந்த ஸ்தலத்துக்கும் இதின் குடிகளுக்கும் செய்து, இந்த நகரத்தைத் தோப்பேத்துக்குச் சரியாக்குவேன். 13 எந்த வீடுகளின்மேல் வானத்தின் சகல சேனைக்கும் தூபங்காட்டி, அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளாகிய எருசலேமின் வீடுகளும் யூதாவுடைய ராஜாவின் வீடுகளும் தோப்பேத் என்கிற ஸ்தலத்தைப்போல் தீட்டுப்பட்டவைகளாய் இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். 14 பின்பு எரேமியா, கர்த்தர் தன்னைத் தீர்க்கதரிசனஞ்சொல்ல அனுப்பின தோப்பேத்திலிருந்து வந்து, கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, எல்லா ஜனங்களையும் பார்த்து: 15 இதோ, நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாதபடிக்கு உங்கள் கழுத்தைக் கடினப்படுத்தினபடியினால் நான் இந்த நகரத்துக்கு விரோதமாய்ச் சொன்ன எல்லாத் தீங்கையும் இதின் மேலும் இதற்கடுத்த பட்டணங்களின் மேலும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

எரேமியா 20

1 எரேமியா இந்த வார்த்தைகளைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறதை ஆசாரியனான இம்மேருடைய குமாரனும், கர்த்தருடைய ஆலயத்துப் பிரதான விசாரணைக் கர்த்தனுமாகிய பஸ்கூர் கேட்டபோது, 2 எரேமியா தீர்க்கதரிசியைப் பஸ்கூர் அடித்து, அவனைக் கர்த்தருடைய ஆலயத்திலே பென்யமீன் கோத்திரத்தாரைச் சேர்ந்த மேல்வாசலில் இருக்கும் காவலறையிலே போட்டான். 3 மறுநாளிலே பஸ்கூர் எரேமியாவைக் காவலறையிலிருந்து வெளியே போகவிட்டான்; அப்பொழுது எரேமியா அவனை நோக்கி: கர்த்தர் உன்னைப் பஸ்கூர் என்று அழைக்காமல், மாகோர்மீசாபீப் என்று அழைக்கிறார். 4 மேலும் கர்த்தர்: இதோ, நான் உன்னையும், உன் எல்லாச் சிநேகிதரையும் பயத்துக்கு ஒப்புக்கொடுக்கிறேன்; உன் கண்கள் காண இவர்கள் சத்துருக்களின் பட்டயத்தால் விழுவார்கள்; யூதா அனைத்தையும் நான் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைச் சிறைபிடித்துச் சிலரைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய்ச் சிலரைப் பட்டயத்தால் வெட்டிப்போடுவான். 5 இந்த நகரத்தின் எல்லாப் பலத்தையும், அதின் எல்லாச் சம்பத்தையும், அதின் அருமையான எல்லாப் பொருள்களையும், யூதா ராஜாக்களின் எல்லாப் பொக்கிஷங்களையும், நான் அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் அவைகளைக் கொள்ளையிட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள். 6 பஸ்கூரே, நீயும் உன் வீட்டில் வாசமாயிருக்கிற யாவரும் சிறைப்பட்டுப்போவீர்கள்; நீயும் உன் கள்ளத்தீர்க்கதரிசனத்துக்குச் செவிகொடுத்த உன் சிநேகிதர் யாவரும் பாபிலோனுக்குப் போய், அங்கே மரித்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவீர்களென்று சொல்லுகிறார் என்றான். 7 கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம்பண்ணுகிறார்கள். 8 நான் பேசினது முதற்கொண்டு கதறுகிறேன்; கொடுமையென்றும் பாழ்க்கடிப்பென்றும் சத்தமிட்டுக் கூறுகிறேன்; நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று. 9 ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக்கூடாமற்போயிற்று. 10 அநேகர் சொல்லும் அவதூறைக் கேட்டேன், பயஞ்சூழ்ந்திருந்தது; அறிவியுங்கள், அப்பொழுது நாங்கள் அதை அறிவிப்போம் என்கிறார்கள்; என்னோடே சமாதானமாயிருந்த அனைவரும் நான் தவறிவிழும்படிக் காத்திருந்து: ஒருவேளை இணங்குவான், அப்பொழுது அவனை மேற்கொண்டு, அவனில் குரோதந்தீர்த்துக்கொள்வோம் என்கிறார்கள். 11 கர்த்தரோ பயங்கரமான பராக்கிரமசாலியாய் என்னோடு இருக்கிறார், ஆகையால் என்னைத் துன்பப்படுத்துகிறவர்கள் மேற்கொள்ளாமல் இடறுவார்கள்; தங்கள் காரியம் வாய்க்காதபடியால் மிகவும் வெட்கப்படுவார்கள்; மறக்கப்படாத நித்திய இலச்சை அவர்களுக்கு உண்டாகும். 12 ஆனாலும் நீதிமானைச் சோதித்தறிந்து, உள்ளிந்திரியங்களையும் இருதயத்தையும் பார்க்கிற சேனைகளின் கர்த்தாவே, நீர் அவர்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிறதைக் காண்பேனாக; என் காரியத்தை உம்மிடத்தில் சாட்டிவிட்டேன். 13 கர்த்தரைப் பாடுங்கள், கர்த்தரைத் துதியுங்கள்; அவர் எளியவனுடைய ஆத்துமாவைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார். 14 நான் பிறந்தநாள் சபிக்கப்படுவதாக; என் தாயார் என்னைப் பெற்ற நாள் ஆசீர்வதிக்கப்படாதிருப்பதாக. 15 உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்று என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து, அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனுஷன் சபிக்கப்படக்கடவன். 16 அந்த மனுஷன், கர்த்தர் மனம் மாறாமல் கவிழ்த்துப்போட்ட பட்டணங்களைப்போலிருந்து, காலமே அலறுதலையும் மத்தியான வேளையிலே கூக்குரலையும் கேட்கக்கடவன். 17 என் தாயார் எனக்குப் பிரேதக்குழியும், நான் என்றைக்கும் பிரசவியாத சூலுமாய் இருக்கத்தக்கதாகக் கர்ப்பத்திலே நான் கொலைசெய்யப்படாமற்போனதென்ன? 18 நான் வருத்தத்தையும் சஞ்சலத்தையும் கண்டு, என் நாட்கள் வெட்கமாய்க் கழியும்படிக்கு நான் கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டதென்ன?

எரேமியா 21

1 சிதேக்கியா ராஜா மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரையும், ஆசாரியனான மாசெயாவின் குமாரனாகிய செப்பனியாவையும் எரேமியாவினிடத்தில் அனுப்பி: 2 நீர் எங்களுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரியும்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எங்களுக்கு விரோதமாய் யுத்தஞ்செய்கிறான்; ஒருவேளை கர்த்தர் தம்முடைய எல்லா அற்புதச் செயலின்படியேயும் எங்களுக்கு அநுக்கிரகஞ்செய்து, அவனை எங்களைவிட்டுப் போகப்பண்ணுவார் என்று சொல்லியனுப்பினபோது, 3 எரேமியா அவர்களைப்பார்த்து, நீங்கள் சிதேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது: 4 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்களை அலங்கத்துக்கு வெளியே முற்றிக்கைபோட்ட பாபிலோன் ராஜாவோடும் கல்தேயரோடும், நீங்கள் யுத்தம்பண்ணும்படி உங்கள் கைகளில் பிடித்திருக்கிற யுத்த ஆயுதங்களை நான் திருப்பிவிட்டு, அவர்களை இந்த நகரத்தின் நடுவிலே சேர்த்து, 5 நான் நீட்டின கையினாலும் பலத்த புயத்தினாலும் கோபமும் உக்கிரமும் மகா கடுமையுமாக உங்களோடே யுத்தம்பண்ணி, 6 இந்த நகரத்தின் குடிகளையும், மனுஷரையும், மிருகங்களையும் சங்கரிப்பேன்; மகா கொள்ளைநோயால் சாவார்கள். 7 அதற்குப்பின்பு நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும், அவன் ஊழியக்காரரையும், ஜனத்தையும், இந்த நகரத்திலே கொள்ளைநோய்க்கும் பட்டயத்துக்கும் பஞ்சத்துக்கும் தப்பி மீதியானவர்களையும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய கையிலும், அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவன் அவர்களைப் பட்டயக்கருக்கினால் வெட்டுவான்; அவன் அவர்களைத் தப்பவிடுவதுமில்லை, அவன் மன்னிப்பதுமில்லை, இரங்குவதுமில்லையென்று கர்த்தர் உரைக்கிறார் என்றான். 8 பின்னையும் அவர், இந்த ஜனங்களை நோக்கி: இதோ, நான் உங்கள் முன்னே ஜீவவழியையும் மரணவழியையும் வைக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 9 இந்த நகரத்திலே தரிக்கிறவன் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவான்; உங்களை முற்றிக்கைபோடும் கல்தேயர் வசமாய்ப் புறப்பட்டுப் போய்விடுகிறவனோ பிழைப்பான்; அவன் பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல் இருக்கும். 10 என் முகத்தை இந்த நகரத்துக்கு விரோதமாய் நன்மைக்கு அல்ல, தீமைக்கே வைத்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அக்கினியால் அதைச் சுட்டெரிப்பானென்று சொல் என்றார். 11 யூதாராஜாவின் குடும்பத்தாரையும் நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 12 தாவீதின் குடும்பத்தாரே, உங்கள் செய்கைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல் புறப்பட்டு, அவிக்கிறவன் இல்லாமல் எரியாதபடிக்கு, நீங்கள் ஏற்கனவே நியாயங்கேட்டு, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 13 இதோ, பள்ளத்தாக்கில் வாசம்பண்ணுகிறவளே, சமனான இடத்தில் கன்மலையாய் இருக்கிறவளே, எங்களுக்கு விரோதமாய் வருகிறவன் யார் என்றும், எங்கள் வாசஸ்தலங்களுக்குள் வருகிறவன் யார் என்றும் சொல்லுகிற உனக்கு நான் எதிராளியாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 14 நான் உங்கள் கிரியைகளின் பலனுக்குத்தக்கதாய் உங்களை விசாரிப்பேன்; நான் அதின் காட்டிலே தீக்கொளுத்துவேன்; அது அதைச் சுற்றிலுமுள்ள யாவையும் பட்சிக்கும் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

எரேமியா 22

1 கர்த்தர் சொன்னது: நீ யூதா ராஜாவின் அரமனைக்குப் போய், அங்கே சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால்: 2 தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிற யூதாவின் ராஜாவே, நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இந்த வாசல்களுக்குள் பிரவேசிக்கிற உம்முடைய ஜனமும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 3 நீங்கள் நியாயமும் நீதியும் செய்து, பறிகொடுத்தவனை ஒடுக்குகிறவனுடைய கைக்குத் தப்புவியுங்கள்; நீங்கள் பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், கொடுமைசெய்யாமலும், இவ்விடத்தில் குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தாமலும் இருங்கள். 4 இந்த வார்த்தையின்படியே நீங்கள் மெய்யாய்ச் செய்வீர்களாகில், தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாக்கள் இரதங்கள்மேலும் குதிரைகள்மேலும் ஏறி, அவனும் அவன் ஊழியக்காரரும் அவன் ஜனமுமாக இந்த அரமனை வாசல்களின் வழியாய் உட்பிரவேசிப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 5 நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளாமற்போனீர்களேயாகில் இந்த அரமனை பாழாய்ப்போம் என்று என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 6 யூதா ராஜாவின் அரமனையைக் குறித்துக் கர்த்தர்: நீ எனக்குக் கீலேயாத்தைப்போலவும் லீபனோனின் கொடுமுடியைப்போலவும் இருக்கிறாய்; ஆனாலும் மெய்யாகவே நான் உன்னை வனாந்தரத்தைப்போலவும், குடியில்லாத பட்டணங்களைப்போலவும் ஆக்கிவிடுவேன். 7 சங்காரக்காரரை அவரவர் ஆயுதங்களோடுங்கூட நான் உனக்கு விரோதமாக ஆயத்தப்படுத்துவேன்; உன் உச்சிதமான கேதுருக்களை அவர்கள் வெட்டி, அக்கினியிலே போடுவார்கள். 8 அநேகம் ஜாதிகள் இந்த நகரத்தைக் கடந்துவந்து, அவனவன் தன் தன் அயலானை நோக்கி: இந்தப் பெரிய நகரத்துக்குக் கர்த்தர் இப்படிச் செய்தது என்னவென்று கேட்பார்கள். 9 அதற்குப் பிரதியுத்தரமாக: அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரின் உடன்படிக்கையை விட்டுவிட்டு, அந்நிய தேவர்களைப் பணிந்துகொண்டு, அவைகளுக்கு ஆராதனைசெய்தபடியினால் இப்படியாயிற்று என்பார்கள் என்று சொல்லுகிறார். 10 மரித்தவனுக்காக அழவேண்டாம், அவனுக்காகப் பரிதபிக்கவும்வேண்டாம், சிறைப்பட்டுப்போனவனுக்காகவே அழுங்கள்; அவன் இனித் திரும்பிவருவதுமில்லை, தன் ஜநந பூமியைக் காண்பதுமில்லை. 11 தன் தகப்பனாகிய யோசியாவின் பட்டத்துக்கு வந்து, அரசாண்டு, இவ்விடத்திலிருந்து புறப்பட்டுப்போன யூதாவின் ராஜாவாயிருந்த யோசியாவின் குமாரனாகிய சல்லூமைக்குறித்து: அவன் இனி இங்கே திரும்ப வராமல், 12 தான் கொண்டுபோகப்பட்ட ஸ்தலத்திலே மரிப்பான்; இந்தத் தேசத்தை அவன் இனிக் காண்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார். 13 தனக்கு விஸ்தாரமான வீட்டையும், காற்று வீசும் விசாலமான மேலறைகளையும் கட்டுவேனென்று சொல்லி, பலகணிகளைத் தனக்குத் திறந்து, கேதுரு பலகைகளை வைத்து, ஜாதிலிங்கவருணம் பூசி, 14 அநீதியினாலே தன் வீட்டையும், அநியாயத்தினாலே தன் மேலறைகளையும் கட்டி, தன் அயலான் செய்யும் வேலைக்குக் கூலிகொடாமல், அவனைச் சும்மா வேலைகொள்ளுகிறவனுக்கு ஐயோ! 15 நீ கேதுருமர மாளிகைகளில் உலாவுகிறபடியினாலே ராஜாவாயிருப்பாயோ? உன் தகப்பன் போஜனபானம்பண்ணி, நியாயமும் நீதியுஞ் செய்தபோது அவன் சுகமாய் வாழ்ந்திருக்கவில்லையோ? 16 அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்; அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார். 17 உன் கண்களும் உன் மனதுமோவென்றால் தற்பொழிவின்மேலும், குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்துவதின்மேலும், இடுக்கமும் நொறுக்குதலும் செய்வதின்மேலுமே அல்லாமல் வேறொன்றின்மேலும் வைக்கப்படவில்லை. 18 ஆகையால் கர்த்தர் யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவின் ராஜாவைக்குறித்து: ஐயோ! என் சகோதரனே, ஐயோ! சகோதரியே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை; ஐயோ! ஆண்டவனே, ஐயோ! அவருடைய மகத்துவமே, என்று அவனுக்காகப் புலம்புவதில்லை. 19 ஒரு கழுதை புதைக்கப்படுகிற வண்ணமாய் அவன் எருசலேமின் வாசல்களுக்கு வெளியே இழுத்தெறிந்து புதைக்கப்படுவான் என்று சொல்லுகிறார். 20 லீபனோனின்மேலேறிப் புலம்பு, பாசானில் உரத்த சத்தமிடு, ஆபரீமிலிருந்து கூப்பிட்டுக்கொண்டிரு; உன் நேசர் அனைவரும் முறிந்தார்கள். 21 நீ சுகமாய் வாழ்ந்திருக்கையில் நான் உனக்குச் சொன்னேன், நீ கேளேன் என்றாய்; உன் சிறுவயதுமுதல் நீ என் சத்தத்தைக் கேளாமற்போகிறதே உன் வழக்கம். 22 உன் மேய்ப்பர்கள் எல்லாரையும் காற்று அடித்துக்கொண்டுபோகும்; உன் நேசர் சிறைப்பட்டுப்போவார்கள்; அப்போதல்லவோ உன் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நீ வெட்கப்பட்டு இலச்சையடைவாய். 23 லீபனோனில் வாசமாயிருந்து, கேதுருமரங்களில் கூடுகட்டிக்கொண்டிருக்கிறவளே, வேதனைகளும் பிள்ளைப் பெறுகிறவளுக்கொத்த வாதையும் உனக்கு வருகையில், நீ எவ்வளவு பரிதபிக்கப்படத்தக்கவளாயிருப்பாய்! 24 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் குமாரன் கோனியா, என் வலதுகையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 25 உன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும், நீ பயப்படுகிறவர்களின் கையிலும் உன்னை ஒப்புக்கொடுப்பேன்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் கல்தேயரின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன். 26 உன்னையும், உன்னைப் பெற்ற தாயையும், உங்கள் ஜநந பூமியல்லாத அந்நிய தேசத்திலே துரத்திவிடுவேன். அங்கே சாவீர்கள். 27 திரும்புவதற்குத் தங்கள் ஆத்துமா வாஞ்சிக்கும் தேசத்துக்கு அவர்கள் திரும்பிவருவதில்லை. 28 கோனியா என்கிற இந்த மனுஷன் அவமதிக்கப்பட்ட உடைந்த சிலையோ? ஒருவரும் விரும்பாத பாத்திரமோ? அவனும் அவன் சந்ததியும் தள்ளுண்டதும், தாங்கள் அறியாத தேசத்திலே துரத்திவிடப்பட்டதும் ஏன்? 29 தேசமே! தேசமே! தேசமே! கர்த்தருடைய வார்த்தையைக் கேள். 30 இந்தப் புருஷன் சந்தானமற்றவன், தன் நாட்களில் வாழ்வடையாதவன் என்று இவனைக்குறித்து எழுதுங்கள்; அவன் வித்தில் ஒருவனாகிலும் வாழ்வடைந்து, தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருந்து, யூதாவில் அரசாளப்போகிறதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 23

1 என் மேய்ச்சலின் ஆடுகளைக் கெடுத்துச் சிதறடிக்கிற மேய்ப்பர்களுக்கு ஐயோ! என்று கர்த்தர் சொல்லுகிறார். 2 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தமது ஜனத்தை மேய்க்கிற மேய்ப்பர்களுக்கு விரோதமாகச் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் என் ஆடுகளைப் பராமரியாமல், அவைகளைச் சிதறடித்து அவைகளைத் துரத்திவிட்டீர்கள்; இதோ, நான் உங்கள்பேரில் உங்கள் செய்கைகளின் பொல்லாப்புக்கேற்ற தண்டனையை உங்கள்மேல் வருவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 3 நான் என் ஆடுகளில் மீதியாயிருப்பவைகளைத் துரத்தியிருந்த எல்லாத் தேசங்களிலுமிருந்து சேர்த்து, அவைகளைத் திரும்ப அவைகளின் தொழுவங்களுக்குக் கொண்டுவருவேன்; அப்பொழுது அவைகள் பலுகிப் பெருகும். 4 அவைகளை மேய்க்கத்தக்கவர்களையும் அவைகள்மேல் ஏற்படுத்துவேன்; இனி அவைகள் பயப்படுவதுமில்லை, கலங்குவதுமில்லை, காணாமற்போவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார். 5 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது தாவீதுக்கு ஒரு நீதியுள்ள கிளையை எழும்பப்பண்ணுவேன்; அவர் ராஜாவாயிருந்து, ஞானமாய் ராஜரிகம்பண்ணி, பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார். 6 அவர் நாட்களில் யூதா இரட்சிக்கப்படும், இஸ்ரவேல் சுகமாய் வாசம்பண்ணும்; அவருக்கு இடும் நாமம் நமது நீதியாயிருக்கிற கர்த்தர் என்பதே. 7 ஆதலால், இதோ, நாட்கள் வரும், அப்பொழுது இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணாமல், 8 இஸ்ரவேல் வீட்டின் சந்ததியாரைத் தங்கள் சுயதேசத்தில் குடியிருக்கும்படிக்கு வடதேசத்திலும், நான் அவர்களைத் துரத்தியிருந்த எல்லா தேசங்களிலுமிருந்து அழைத்து வழி நடத்திக்கொண்டுவந்த கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சத்தியம்பண்ணுவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார். 9 தீர்க்கதரிசிகளினிமித்தம் என் இருதயம் என் உள்ளத்திலே நொறுங்கியிருக்கிறது; என் எலும்புகளெல்லாம் அதிருகிறது; கர்த்தர் நிமித்தமும், அவருடைய பரிசுத்த வார்த்தைகளினிமித்தமும் நான் வெறித்திருக்கிற மனுஷனைப்போலவும் மதுபானம் மேற்கொண்டவனைப்போலவும் இருக்கிறேன். 10 தேசம் விபசாரக்காரரால் நிறைந்திருக்கிறது, தேசம் சாபத்தினால் துக்கிக்கிறது, வனாந்தரத்தின் மேய்ச்சல்கள் வாடிப்போகிறது; அவர்கள் ஓட்டம் பொல்லாதது; அவர்கள் பெலன் அநியாயமாயிருக்கிறது. 11 தீர்க்கதரிசியும் ஆசாரியனும் மாயக்காரராயிருக்கிறார்கள்; என் ஆலயத்திலும் அவர்களுடைய பொல்லாப்பைக் கண்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 12 ஆதலால், அவர்கள் வழி அவர்களுக்கு இருட்டிலே சறுக்கலான வழியாயிருக்கும், துரத்துண்டு அதிலே விழுவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்திலே அவர்கள்மேல் பொல்லாப்பை வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 13 சமாரியாவின் தீர்க்கதரிசிகளிலோ மதிகேட்டைக் கண்டேன்; பாகாலைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இஸ்ரவேல் என்னும் என் ஜனத்தை மோசம்போக்கினார்கள். 14 எருசலேமின் தீர்க்கதரிசிகளிலும் திடுக்கிடத்தக்க காரியத்தைக் காண்கிறேன்; விபசாரம்பண்ணி, வஞ்சகமாய் நடந்து, ஒருவனும் தன் பொல்லாப்பை விட்டுத் திரும்பாதபடிக்குப் பொல்லாதவர்களின் கைகளைத் திடப்படுத்துகிறார்கள்; அவர்கள் எல்லாரும் எனக்குச் சோதோமைப்போலும், அதின் குடிகள் கொமோராவைப்போலும் இருக்கிறார்கள். 15 ஆதலால் சேனைகளின் கர்த்தர் தீர்க்கதரிசிகளைக்குறித்து: இதோ, நான் அவர்களுக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரம்பிற்றே என்று சொல்லுகிறார். 16 உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 17 அவர்கள் என்னை அசட்டைபண்ணுகிறவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானம் இருக்குமென்று கர்த்தர் சொன்னாரென்று சொல்லுகிறதுமல்லாமல்; தங்கள் இருதயத்தின் கடினத்திலே நடக்கிற யாவரையும் நோக்கி: உங்கள்மேல் பொல்லாப்பு வராதென்றும் சொல்லுகிறார்கள். 18 கர்த்தருடைய ஆலோசனையில் கூடநின்று, அவருடைய வார்த்தையைக் கேட்டறிந்தவன் யார்? அவருடைய வார்த்தையைக் கவனித்துக் கேட்டவன் யார்? 19 இதோ, கர்த்தருடைய பெருங்காற்றாகிய கொடிய புசல் புறப்பட்டது; அது துன்மார்க்கருடைய தலையின்மேல் உக்கிரமாய் மோதும். 20 கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய கோபம் தணியாது; கடைசிநாட்களில் அதை நன்றாய் உணருவீர்கள். 21 அந்தத் தீர்க்கதரிசிகளை நான் அனுப்பாதிருந்தும் அவர்கள் ஓடினார்கள்; அவர்களோடே நான் பேசாதிருந்தும் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். 22 அவர்கள் என் ஆலோசனையிலே நிலைத்திருந்தார்களேயாகில், அப்பொழுது அவர்கள் என் வார்த்தைகளை ஜனங்களுக்குத் தெரிவித்து, அவர்களைத் தங்கள் பொல்லாத வழிகளையும் தங்கள் செய்கைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திருப்புவார்கள். 23 நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார். 24 யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார். 25 சொப்பனங்கண்டேன், சொப்பனங்கண்டேன் என்று, என் நாமத்தைச் சொல்லிப் பொய்த்தீர்க்கதரிசனம் உரைக்கிற தீர்க்கதரிசிகள் சொல்லுகிறதைக் கேட்டேன். 26 எதுவரைக்கும் இப்படியிருக்கும்? பொய்த்தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் இருதயத்தில் ஏதாகிலுமுண்டோ? இவர்கள் தங்கள் இருதயத்தின் வஞ்சகத்தையே தீர்க்கதரிசனமாகச் சொல்லுகிறவர்கள். 27 என் ஜனத்தின் பிதாக்கள் பாகாலினிமித்தம் என் நாமத்தை மறந்ததுபோல, இவர்கள் தங்கள் அயலாருக்கு விவரிக்கிற தங்கள் சொப்பனங்களினாலே என் நாமத்தை அவர்கள் மறக்கும்படி செய்யப்பார்க்கிறார்கள். 28 சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக; கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார். 29 என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும் சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார். 30 ஆகையால், இதோ, ஒவ்வொருவராய்த் தன்தன் அயலாரிடத்தில் என் வார்த்தையைத் திருட்டுத்தனமாய் எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார். 31 இதோ, தங்கள் நாவின் சொல்லையே வழங்கி: அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார். 32 இதோ, பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் ஜனத்தைத் தங்கள் பொய்களினாலும், தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த ஜனத்துக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். 33 கர்த்தராலே சுமரும் பாரம் என்னவென்று இந்த ஜனமாகிலும் ஒரு தீர்க்கதரிசியாகிலும் ஒரு ஆசாரியனாகிலும் உன்னைக் கேட்டால், உங்களைத் தள்ளிவிடுவேன் என்பதே பாரம் என்று நீ அவர்களுடனே சொல்லவேண்டும். 34 கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிற தீர்க்கதரிசியாகிலும் ஆசாரியனாகிலும் ஜனமாகிலும் சரி, அப்படிச் சொல்லுகிற மனுஷனையும் அவன் வீட்டாரையும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 35 கர்த்தர் என்ன மறுஉத்தரவு கொடுத்தார்? கர்த்தர் என்ன சொன்னார்? என்று நீங்கள் அவரவர் தங்கள் அயலானையும் அவரவர் தங்கள் சகோதரனையும் கேட்பீர்களாக. 36 ஆனால் கர்த்தரால் சுமரும் பாரம் என்கிற சொல்லை இனி வழங்காதிருப்பீர்களாக, அவனவன் வார்த்தையே அவனவனுக்குப் பாரமாயிருக்கும்; அதேனென்றால், நமது தேவனாகிய சேனைகளின் கர்த்தர் என்கிற ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளைப் புரட்டுகிறீர்கள். 37 கர்த்தர் உனக்கு என்ன மறுஉத்தரவு கொடுத்தார்? கர்த்தர் என்ன சொன்னார்? என்று நீ தீர்க்கதரிசியைக் கேட்பாயாக. 38 நீங்களோவெனில், கர்த்தரால் சுமரும் பாரம் என்று சொல்லுகிறபடியினாலே: கர்த்தரின் பாரம் என்று சொல்லாதிருங்களென்று நான் உங்களுக்குச் சொல்லி அனுப்பியும், நீங்கள் இந்த வார்த்தையைக் கர்த்தரின் பாரம் என்று சொல்லுகிறீர்களே. 39 ஆதலால், இதோ, நான் உங்களை மறக்கவே மறந்து, உங்களையும், நான் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் கொடுத்த நகரத்தையும், எனக்கு முன்பாக இராதபடிக்குக் கைவிட்டு, 40 மறக்கப்படாத நித்திய நிந்தையையும், நித்திய இலச்சையையும் உங்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 24

1 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவின் ராஜாவையும், யூதாவின் பிரபுக்களையும், எருசலேமிலுள்ள தச்சரையும் கொல்லரையும் சிறைபிடித்து, பாபிலோனுக்குக் கொண்டுபோனபின்பு, இதோ, கர்த்தருடைய ஆலயத்தின்முன் வைக்கப்பட்டிருந்த அத்திப்பழங்களுள்ள இரண்டு கூடைகளைக் கர்த்தர் எனக்குக் காண்பித்தார். 2 ஒரு கூடையிலே முதல் கந்தாயத்து அத்திப்பழங்களுக்குச் சமானமான மிகவும் நல்ல அத்திப்பழங்களும், மற்றக் கூடையிலே புசிக்கத்தகாத மிகவும் கெட்ட அத்திப்பழங்களும் இருந்தது. 3 கர்த்தர் என்னை நோக்கி: எரேமியாவே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; அதற்கு நான்: அத்திப்பழங்களைக் காண்கிறேன்; நல்லவைகளான அத்திப்பழங்கள் மிகவும் நல்லவைகளும், கெட்டவைகளோ புசிக்கத்தகாத மிகவும் கெட்டவைகளுமாயிருக்கிறது என்றேன். 4 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 5 நான் இவ்விடத்திலிருந்து, கல்தேயர் தேசத்துக்குச் சிறைப்பட்டுப் போகவிட்ட யூதரை நான் இந்த நல்ல அத்திப்பழங்களுக்கு ஒப்பிட்டு, அவர்களுக்கு நன்மையுண்டாக அவர்களை அங்கிகரிப்பேன். 6 அவர்களுக்கு நன்மையுண்டாக நான் என் கண்களை அவர்கள்மேல் வைத்து, அவர்களை இந்த தேசத்துக்குத் திரும்பிவரப்பண்ணி, அவர்களைக் கட்டுவேன், அவர்களை இடிக்கமாட்டேன், அவர்களை நாட்டுவேன், அவர்களைப் பிடுங்கமாட்டேன். 7 நான் கர்த்தர் என்று அறியும் இருதயத்தை அவர்களுக்குக் கொடுப்பேன்; அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன்; அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்திற்குத் திரும்புவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். 8 புசிக்கத்தகாத கெட்ட அத்திப்பழங்களைத் தள்ளிவிடுவதுபோல, நான் சிதேக்கியா என்கிற யூதாவின் ராஜாவையும் அவனுடைய பிரபுக்களையும், இந்தத் தேசத்திலே மீதியான எருசலேமின் குடிகளையும், எகிப்து தேசத்தில் குடியிருக்கிறவர்களையும் தள்ளிவிட்டு, 9 அவர்களுக்குத் தீமையுண்டாக அவர்களை பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்திவிட்ட எல்லா இடங்களிலும் நிந்தையாகவும், பழமொழியாகவும், வசைச்சொல்லாகவும், சாபமாகவும் வைத்து, 10 அவர்களுக்கும் அவர்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்தில் அவர்கள் இராதபடிக்கு நிர்மூலமாகுமட்டும், அவர்களுக்குள்ளே பட்டயத்தையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அனுப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 25

1 யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்கிற யூதாவுடைய ராஜாவின் நாலாம் வருஷத்துக்குச் சரியான, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அரசாண்ட முதலாம் வருஷத்திலே யூதாவின் ஜனம் அனைத்தையும் குறித்து எரேமியாவுக்கு உண்டான வார்த்தை; 2 அதைத் தீர்க்கதரிசியாகிய எரேமியா யூதாவின் ஜனம் அனைத்துக்கும், எருசலேமின் குடிகள் எல்லாருக்கும் அறிவிக்கிறதற்காக அவர்களை நோக்கி: 3 ஆமோனின் குமாரனாகிய யோசியாவின் பதின்மூன்றாம் வருஷம் துவக்கி இந்நாள்மட்டும் சென்ற இந்த இருபத்துமூன்று வருஷமாகக் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாயிற்று; அதை நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டுவந்தும் நீங்கள் கேளாமற்போனீர்கள். 4 கர்த்தர் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய சகல ஊழியக்காரரையும் ஏற்கனவே அனுப்பிக்கொண்டேயிருந்தும், நீங்கள் கேளாமலும், கேட்கும்படிக்கு உங்கள் செவிகளைச் சாயாமலும்போனீர்கள். 5 அவர்களைக்கொண்டு அவர்: உங்களில் அவனவன் தன்தன் பொல்லாத வழியையும், உங்கள் கிரியைகளின் பொல்லாப்பையும் விட்டுத் திரும்பி, கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் கொடுத்த தேசத்தில் சதாகாலமும் குடியிருந்து, 6 அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலும், அவைகளுக்கு ஆராதனைசெய்யாமலும், அவைகளைப் பணியாமலுமிருந்து, நான் உங்களுக்குத் தீமை செய்யாதபடிக்கு உங்கள் கைகளின் செய்கைகளால் எனக்குக் கோபமுண்டாக்காமலும் இருங்கள் என்று சொல்லியனுப்பினேன். 7 நீங்களோ, உங்களுக்குத் தீமையாக உங்கள் கைகளின் செய்கைகளாலே எனக்குக் கோபமூட்டும்படிக்கு, என் சொல்லைக் கேளாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 8 நீங்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியினால், 9 இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 10 மகிழ்ச்சியின் சத்தத்தையும், சந்தோஷத்தின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும், ஏந்திரத்தின் சத்தத்தையும் விளக்கின் வெளிச்சத்தையும் அவர்களிலிருந்து நீங்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 11 இந்தத் தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்; இந்த ஜாதிகளோ, எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள். 12 எழுபது வருஷம் நிறைவேறினபின்பு, நான் பாபிலோன் ராஜாவினிடத்திலும், அந்த ஜாதியினிடத்திலும், கல்தேயருடைய தேசத்தினிடத்திலும், அவர்களுடைய அக்கிரமத்தை விசாரித்து, அதை நித்திய பாழிடமாக்கி, 13 நான் அந்தத் தேசத்துக்கு விரோதமாய் உரைத்த என் வார்த்தைகளையெல்லாம், எரேமியா சகல ஜாதிகளுக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொன்னதும், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதுமான யாவையும் அதின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 14 அநேகம் ஜாதிகளும் பெரிய ராஜாக்களும் அவர்களை அடிமைகொள்வார்கள்; நான் அவர்களுக்கு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாகவும், அவர்கள் கைகளின் செய்கைகளுக்குத்தக்கதாகவும் பதில் அளிப்பேன் என்கிறார். 15 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் என்னை நோக்கி: நான் உன்னை அனுப்புகிற ஜாதிகள் குடித்து, நான் தங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தால் அவர்கள் தள்ளாடி, புத்திகெட்டுப்போகும்படிக்கு, 16 இந்த உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரத்தை நீ என் கையிலிருந்து வாங்கி, அவர்கள் எல்லாருக்கும் அதிலே குடிக்கக்கொடு என்றார். 17 அப்பொழுது நான் அந்தப் பாத்திரத்தைக் கர்த்தருடைய கையிலிருந்து வாங்கி, கர்த்தர் என்னை அனுப்பின எல்லா ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தேன். 18 எருசலேமுக்கும் யூதாவின் பட்டணங்களுக்கும், அதின் ராஜாக்களுக்கும், அதின் பிரபுக்களுக்கும், அவர்களை இந்நாளிலிருக்கிறபடி வனாந்தரமும் பாழும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலும் சாபமுமாக்கிப்போடும்படி குடிக்கக்கொடுத்தேன். 19 எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கும், அவன் ஊழியக்காரருக்கும், அவன் பிரபுக்களுக்கும், அவனுடைய எல்லா ஜனத்துக்கும், 20 கலந்து குடியிருக்கிற அனைவருக்கும், ஊத்ஸ் தேசத்தினுடைய எல்லா ராஜாக்களுக்கும், பெலிஸ்தருடைய தேசத்தில் இருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், அஸ்கலோனுக்கும், காசாவுக்கும், எக்ரோனுக்கும், அஸ்தோத்தில் மீதியானவர்களுக்கும், 21 ஏதோமுக்கும், மோவாபுக்கும், அம்மோன் புத்திரருக்கும், 22 தீருவினுடைய எல்லா ராஜாக்களுக்கும், சீதோனுடைய எல்லா ராஜாக்களுக்கும், சமுத்திரத்துக்கு அக்கரையான தீவுகளின் ராஜாக்களுக்கும், 23 தேதானுக்கும், தேமாவுக்கும், பூசுக்கும், கடையாந்தரங்களிலுள்ள அனைவருக்கும், 24 அரபிதேசத்து எல்லா ராஜாக்களுக்கும், வனாந்தரத்தில் கலந்து குடியிருக்கிறவர்களுடைய எல்லா ராஜாக்களுக்கும், 25 சிம்ரியினுடைய எல்லா ராஜாக்களுக்கும், ஏலாமினுடைய எல்லா ராஜாக்களுக்கும், மேதியாவினுடைய எல்லா ராஜாக்களுக்கும், 26 வடக்கேயிருக்கிற எல்லா ராஜாக்களுக்கும், சமீபமானவர்களும் தூரமானவர்களுமாகிய அவரவர்களுக்கும், பூமியின்மீதிலுள்ள சகல தேசத்து ராஜ்யங்களுக்கும் குடிக்கக்கொடுத்தேன்; சேசாக்கு என்கிற ராஜாவும் அவர்களுக்குப் பிற்பாடு குடிப்பான் என்றார். 27 நீங்கள் குடித்து, வெறித்து, வாந்திபண்ணி, நான் உங்களுக்குள் அனுப்பும் பட்டயத்தாலே எழுந்திராதபடிக்கு விழுங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று நீ அவர்களுக்குச் சொல்லு. 28 அவர்கள் குடிக்கிறதற்கு அந்தப் பாத்திரத்தை உன் கையில் வாங்கமாட்டோம் என்று சொல்வார்களானால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் குடித்துத் தீரவேண்டும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல்லு. 29 இதோ, தீங்கைக் கட்டளையிட நான் என் நாமம் தரிக்கப்பட்ட நகரத்திலே துவக்கும்போது, நீங்கள் தண்டனைக்குத் தப்புவீர்களோ? நீங்கள் தப்புவதில்லை; நான் பூமியின் எல்லாக் குடிகளின்மேலும் பட்டயத்தை வரவழைக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 30 ஆதலால் நீ அவர்களுக்கு விரோதமாக இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசனமாக உரைத்து, அவர்களை நோக்கி: கர்த்தர் உயரத்திலிருந்து கெர்ச்சித்து, தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து தம்முடைய சத்தத்தைக் காட்டி, தம்முடைய தாபரத்துக்கு விரோதமாய்க் கெர்ச்சிக்கவே கெர்ச்சித்து, ஆலையை மிதிக்கிறவர்கள் ஆர்ப்பரிப்பதுபோல் பூமியினுடைய எல்லாக் குடிகளுக்கும் விரோதமாக ஆர்ப்பரிப்பார் என்று சொல் என்றார். 31 ஆரவாரம் பூமியின் கடையாந்தரமட்டும் போய் எட்டும்; ஜாதிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; மாம்சமான யாவரோடும் அவர் நியாயத்துக்குள் பிரவேசிப்பார்; துன்மார்க்கரைப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பார் என்று கர்த்தர் சொல்லுகிறார். 32 இதோ, ஜாதிஜாதிக்குத் தீமை பரம்பும், பூமியின் எல்லைகளிலிருந்து மகா புசல் எழும்பும். 33 அக்காலத்திலே பூமியின் ஒருமுனை துவக்கிப் பூமியின் மறுமுனைமட்டும் கர்த்தரால் கொலையுண்டவர்கள் கிடப்பார்கள்; அவர்கள் புலம்பப்படாமலும் சேர்க்கப்படாமலும் அடக்கம்பண்ணப்படாமலும் பூமியின்மேல் எருவாவார்கள். 34 மேய்ப்பர்களே, அலறுங்கள்; மந்தையில் பிரஸ்தாபமானவர்களே, சாம்பலில் புரண்டு கதறுங்கள்; நீங்கள் வெட்டப்படவும் சிதறடிக்கப்படவும் உங்கள் நாட்கள் நிறைவேறின; உச்சிதமான பாத்திரம்போல் விழுந்து நொறுங்குவீர்கள். 35 மேய்ப்பர்கள் ஓடிப்போகிறதற்கும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் தப்பித்துக்கொள்ளுகிறதற்கும் இடமிராது. 36 தங்கள் மேய்ச்சலைக் கர்த்தர் பாழாக்கினதினிமித்தம் மேய்ப்பர்கள் கூப்பிடுகிறதும், மந்தையில் பிரஸ்தாபமானவர்கள் அலறுகிறதுமான சத்தமுண்டாகும். 37 அவர்கள் சுகித்திருந்த தாபரங்கள் கர்த்தருடைய கோபத்தின் எரிச்சலாலே சங்காரமாயின. 38 அவர் பதிவிருந்து புறப்படும் சிங்கத்தைப்போலிருப்பார்; ஒடுக்குகிறவனுடைய உக்கிரத்தினாலும், அவனுடைய உக்கிரகோபத்தினாலும் அவர்கள் தேசம் பாழாயிற்றென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

எரேமியா 26

1 யோசியாவின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தரால் உண்டான வார்த்தை: 2 நீ கர்த்தருடைய ஆலயத்தின் பிராகாரத்திலே நின்றுகொண்டு, கர்த்தருடைய ஆலயத்திலே பணியவருகிற யூதாவுடைய பட்டணங்களின் குடிகள் அனைவரோடும் சொல்லும்படி நான் உனக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளையும் அவர்களுக்குச் சொல்லு; ஒரு வார்த்தையையும் குறைத்துப்போடாதே என்று கர்த்தர் சொல்லுகிறார். 3 அவர்கள் செய்கைகளுடைய பொல்லாப்பினிமித்தம் நான் அவர்களுக்குச் செய்ய நினைக்கிற தீங்குக்கு நான் மனஸ்தாபப்படத்தக்கதாக ஒருவேளை அவர்கள் கேட்டு, அவரவர் தம்தம் பொல்லாத வழியைவிட்டுத் திரும்புவார்கள். 4 நீ அவர்களை நோக்கி: நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் கேளாமற்போன என் ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நீங்கள் கேட்கும்படிக்கும், 5 நான் உங்கள் முன்வைத்த என் நியாயப்பிரமாணத்தின்படி நீங்கள் நடக்கும்படிக்கும், நீங்கள் என் சொல்லைக் கேளாமற்போனால், 6 நான் இந்த ஆலயத்தைச் சீலோவாவைப்போலாக்கி, இந்த நகரத்தைப் பூமியிலுள்ள எல்லா ஜாதிகளுக்கு முன்பாகவும் சாபமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். 7 எரேமியா இந்த வார்த்தைகளையெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே சொல்லும்போது, ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சகல ஜனங்களும் கேட்டார்கள். 8 சகல ஜனங்களுக்கும் சொல்லக் கர்த்தர் தனக்குக் கற்பித்தவைகளையெல்லாம் எரேமியா சொல்லி முடித்தபோது, ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும் சகல ஜனங்களும் அவனைப் பிடித்து: நீ சாகவே சாகவேண்டும். 9 இந்த ஆலயம் சீலோவைப்போலாகி, இந்த நகரம் குடியில்லாமல் பாழாய்ப்போம் என்று, நீ கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்வானேன் என்று சொல்லி, ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய ஆலயத்திலே எரேமியாவுக்கு விரோதமாய்க் கூடினார்கள். 10 யூதாவின் பிரபுக்கள் இந்த வர்த்தமானங்களைக் கேட்டு, ராஜாவின் வீட்டிலிருந்து கர்த்தருடைய ஆலயத்துக்குப் போய், கர்த்தருடைய புதிய வாசலில் உட்கார்ந்தார்கள். 11 அப்பொழுது ஆசாரியர்களும் தீர்க்கதரிசிகளும், பிரபுக்களையும் சகல ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரன்; உங்கள் செவிகளாலே நீங்கள் கேட்டபடி, இந்த நகரத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னானே என்றார்கள். 12 அப்பொழுது எரேமியா எல்லாப் பிரபுக்களையும், எல்லா ஜனங்களையும் நோக்கி: நீங்கள் கேட்ட எல்லா வார்த்தைகளையும் இந்த ஆலயத்துக்கும் இந்த நகரத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லக் கர்த்தர் என்னை அனுப்பினார். 13 இப்பொழுதும் நீங்கள் உங்கள் வழிகளையும், உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்தி, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தைக் கேளுங்கள்; அப்பொழுது கர்த்தர் உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன தீங்குக்கு மனஸ்தாபப்படுவார். 14 நானோவெனில், இதோ, உங்கள் கையில் இருக்கிறேன்; உங்கள் பார்வைக்கு நன்மையும் நியாயமுமாயிருக்கிறதை எனக்குச் செய்யுங்கள். 15 ஆகிலும் நீங்கள் என்னைக் கொன்றுபோட்டால், நீங்கள் குற்றமில்லாத இரத்தப்பழியை உங்கள்மேலும் இந்த நகரத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் சுமத்திக்கொள்வீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள்; இந்த வார்த்தைகளையெல்லாம் உங்கள் செவிகளிலே சொல்லக் கர்த்தர் மெய்யாகவே என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார் என்று சொன்னான். 16 அப்பொழுது பிரபுக்களும் சகல ஜனங்களும், ஆசாரியர்களையும் தீர்க்கதரிசிகளையும் நோக்கி: இந்த மனுஷன் மரண ஆக்கினைக்குப் பாத்திரனல்ல; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் நாமத்திலே நம்முடனே பேசினான் என்றார்கள். 17 தேசத்திலே மூப்பரானவர்களில் சிலர் எழும்பி, சபையாகிய ஜனங்களை நோக்கி: 18 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் நாட்களில் மொரேசா ஊரானாகிய மீகா தீர்க்கதரிசனஞ்சொல்லி, யூதாவின் சகல ஜனங்களையும் பார்த்து: சீயோன் வயல்வெளியாக உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம்; இந்த ஆலயத்தின் பர்வதம் காட்டிலுள்ள மேடுகளாய்ப்போம் என்று சேனைகளின் கர்த்தர் உரைத்தார் என்று சொன்னான். 19 அவனை யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவும் மற்ற யூதர்களும் சேர்ந்து கொன்றுபோட்டார்களா? அவன் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினானல்லவா? அப்பொழுது கர்த்தர் அவர்களுக்கு விரோதமாகச் சொல்லியிருந்த தீங்குக்கு மனஸ்தாபப்பட்டார்; இப்போதும், நாம் நம்முடைய ஆத்துமாவுக்கு விரோதமாக மகா பொல்லாப்பை வரப்பண்ணுகிறவர்களாயிருக்கிறோமே. 20 கீரியாத்யாரீம் ஊரானாகிய செமாயாவின் குமாரன் உரியா என்னும் ஒரு மனுஷனும் கர்த்தருடைய நாமத்திலே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவனாயிருந்தான்; அவன் எரேமியாவின் வார்த்தைகளுக்குச் சரியாக இந்த நகரத்துக்கும் இந்தத் தேசத்துக்கும் விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொன்னான். 21 யோயாக்கீம் ராஜாவும் அவனுடைய சகல பராக்கிரமசாலிகளும் பிரபுக்களும் அவன் வார்த்தைகளைக் கேட்டபோது, ராஜா அவனைக் கொன்றுபோடும்படி எத்தனித்தான்; அதை உரியா கேட்டு, பயந்து, ஓடிப்போய், எகிப்திலே சேர்ந்தான். 22 அப்பொழுது யோயாக்கீம்ராஜா அக்போரின் குமாரனாகிய எல்நாத்தானையும் அவனோடேகூட வேறே சிலரையும் எகிப்துவரைக்கும் அனுப்பினான். 23 இவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்து, அவனை யோயாக்கீம் ராஜாவினிடத்தில் விட்டார்கள்; அவன் பட்டயத்தாலே அவனை வெட்டி, அவன் உடலை நீச ஜனங்களின் பிரேதக்குழிகளிடத்திலே எறிந்துவிட்டான் என்றார்கள். 24 ஆகிலும் எரேமியாவைக் கொல்ல ஜனங்களின் கையில் ஒப்புக்கொடாதபடி, சாப்பானுடைய குமாரனாகிய அகீக்காம் அவனுக்குச் சகாயமாயிருந்தான்.

எரேமியா 27

1 யோசியாவின் குமாரனும் யூதாவின் ராஜாவுமாகிய யோயாக்கீமுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை: 2 கர்த்தர் என்னை நோக்கி: நீ உனக்குக் கயிறுகளையும் நுகங்களையும் உண்டுபண்ணி, அவைகளை உன் கழுத்திலே பூட்டிக்கொண்டு, 3 அவைகளை எருசலேமுக்குச் சிதேக்கியா ராஜாவினிடத்தில் வரும் ஸ்தானாபதிகள் கையிலே ஏதோமின் ராஜாவுக்கும், மோவாபின் ராஜாவுக்கும், அம்மோன் புத்திரரின் ராஜாவுக்கும், தீருவின் ராஜாவுக்கும், சீதோனின் ராஜாவுக்கும் அனுப்பி, 4 அவர்கள் தங்கள் எஜமான்களுக்குச் சொல்லும்படிக் கற்பிக்கவேண்டுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், 5 நான் பூமியையும் மனுஷனையும் பூமியின்மேலுள்ள மிருகஜீவன்களையும் என் மகா பலத்தினாலும் ஓங்கிய என் புயத்தினாலும் உண்டாக்கினேன்; எனக்கு இஷ்டமானவனுக்கு அதைக் கொடுக்கிறேன். 6 இப்பொழுதும் நான் இந்தத் தேசங்களையெல்லாம் என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவின் கையிலே கொடுத்தேன்; அவனுக்கு ஊழியஞ்செய்யும்படி வெளியின் மிருகஜீவன்களையும் கொடுத்தேன். 7 அவனுடைய தேசத்துக்குக் காலம் வருகிறவரையில் சகல ஜாதிகளும் அவனையும் அவனுடைய புத்திரபௌத்திரரையும் சேவிப்பார்கள்; அதின்பின்பு அநேகம் ஜாதிகளும் பெரிய ராஜாக்களும் அவனை அடிமைகொள்வார்கள். 8 எந்த ஜாதியாவது, எந்த ராஜ்யமாவது பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்பவனைச் சேவியாமலும், தன் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தாமலும்போனால், அந்த ஜாதியை நான் அவன் கையாலே நிர்மூலமாக்குமளவும், பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் தண்டிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 9 பாபிலோன் ராஜாவை நீங்கள் சேவிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிற உங்கள் தீர்க்கதரிசிகளுக்கும், உங்கள் குறிகாரருக்கும், உங்கள் சொப்பனக்காரருக்கும், உங்கள் நாட்பார்க்கிறவர்களுக்கும், உங்கள் சூனியக்காரருக்கும் நீங்கள் செவிகொடாதிருங்கள். 10 நான் உங்களை உங்கள் தேசத்திலிருந்து தூரப்படுத்துகிறதற்கும், உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்கள் அழிகிறதற்குமாக அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள். 11 ஆனாலும் எந்த ஜாதி தன் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தி, அவனைச் சேவிக்குமோ, அந்த ஜாதியைத் தன் தேசத்தைப் பயிரிட்டு, அதிலே குடியிருந்து தாபரிக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 12 இந்த எல்லா வார்த்தைகளின்படியே நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவோடு பேசி: உங்கள் கழுத்தைப் பாபிலோன் ராஜாவின் நுகத்துக்குக் கீழ்ப்படுத்தி, அவனையும் அவன் ஜனத்தையும் சேவியுங்கள்; அப்பொழுது பிழைப்பீர்கள். 13 பாபிலோன் ராஜாவைச் சேவியாமற்போகிற ஜாதிக்கு விரோதமாகக் கர்த்தர் சொன்னதின்படியே, நீயும் உன் ஜனமும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் சாவானேன்? 14 நீங்கள் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பதில்லையென்று உங்களுடனே சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள். 15 நான் அவர்களை அனுப்பினதில்லை; நான் உங்களைத் துரத்திவிடுகிறதற்கும், நீங்களும் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளும் அழிந்துபோகிறதற்கும் அல்லவோ இவர்கள் என் நாமத்தைச் சொல்லி, பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றேன். 16 மேலும் நான் ஆசாரியரையும் இந்த எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகள் இப்பொழுது சீக்கிரத்திலே பாபிலோனிலிருந்து திரும்பிக் கொண்டுவரப்படுமென்று, உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற உங்களுடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள். 17 அவர்களுக்குச் செவிகொடாதிருங்கள்; பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இந்த நகரம் பாழாய்ப்போகவேண்டியதென்ன? 18 அல்லது அவர்கள் தீர்க்கதரிசிகளாயிருந்து, அவர்களிடத்திலே கர்த்தருடைய வார்த்தை இருந்தால், கர்த்தருடைய ஆலயத்திலும், யூதாராஜாவின் அரமனையிலும், எருசலேமிலும் மீதியான பணிமுட்டுகள் பாபிலோனுக்குப் போகாதபடிக்கு அவர்கள் சேனைகளின் கர்த்தரை நோக்கி மன்றாடட்டுமே. 19 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்னும் யூதாவின் ராஜாவையும், யூதாவிலும் எருசலேமிலிருந்த பெரியோர் அனைவரையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோகையில், 20 எடுக்காமல் விட்ட சகல தூண்களையும், கடல்தொட்டியையும், ஆதாரங்களையும், இந்த நகரத்தில் மீதியான மற்றப் பணிமுட்டுகளையுங்குறித்துச் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், 21 கர்த்தருடைய ஆலயத்திலும், யூதாராஜாவின் அரமனையிலும், எருசலேமிலும் மீதியான அந்தப் பணிமுட்டுகள் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 22 நான் அவைகளை விசாரிக்கும் நாள்வரைக்கும் அவைகள் அங்கே இருக்கும்; பின்பு அவைகளைத் திரும்ப இந்த ஸ்தலத்திற்குக் கொண்டுவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றேன்.

எரேமியா 28

1 யூதாவுடைய ராஜாவாகிய சிதேக்கியா அரசாளத் துவக்கின நாலாம் வருஷம் ஐந்தாம் மாதத்திலே, அசூரின் குமாரனாகிய அனனியா என்னப்பட்ட கிபியோன் ஊரானாகிய தீர்க்கதரிசி கர்த்தருடைய ஆலயத்திலே ஆசாரியர்களும் சகல ஜனங்களும் பார்த்திருக்க என்னை நோக்கி: 2 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், பாபிலோன் ராஜாவின் நுகத்தை முறித்தேன். 3 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இவ்விடத்திலிருந்து எடுத்துப் பாபிலோனுக்குக் கொண்டுபோன கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையெல்லாம் நான் இரண்டு வருஷகாலத்திலே இவ்விடத்துக்குத் திரும்பக் கொண்டுவரப்பண்ணுவேன். 4 யோயாக்கீமின் குமாரனாகிய எகொனியா என்கிற யூதாவுடைய ராஜாவையும் பாபிலோனுக்குச் சிறையாகக் கொண்டுபோகப்பட்ட யூதர் அனைவரையும் நான் இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; பாபிலோன் ராஜாவின் நுகத்தை உடைப்பேன் என்றார் என்று சொன்னான். 5 அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி ஆசாரியர்கள் பார்த்திருக்கவும், கர்த்தருடைய ஆலயத்தில் நின்றிருந்த ஜனங்களெல்லாரும் பார்த்திருக்கவும் அனனியா தீர்க்கதரிசியை நோக்கி: 6 ஆமென், கர்த்தர் அப்படியே செய்வாராக; கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகளையும் சிறைப்பட்டுப்போன அனைவரையும் பாபிலோனிலிருந்து திரும்பிவரப்பண்ணுவாரென்று நீ தீர்க்கதரிசனமாகச் சொன்ன உன் வார்த்தைகளைக் கர்த்தர் நிறைவேற்றுவாராக. 7 ஆகிலும், உன் செவிகளும் சகல ஜனத்தின் செவிகளும் கேட்க நான் சொல்லும் வார்த்தையைக் கேள். 8 பூர்வகாலமுதல் எனக்கு முன்னும் உனக்கு முன்னும் இருந்த தீர்க்கதரிசிகள் அநேகம் தேசங்களுக்கு விரோதமாகவும், பெரிய ராஜ்யங்களுக்கு விரோதமாகவும், யுத்தத்தையும் பஞ்சத்தையும் கொள்ளைநோயையும் குறித்துத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 9 சமாதானம் வரும் என்று தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் சொல்லியிருக்க, அந்தத் தீர்க்கதரிசி சொன்ன வார்த்தையின்படியே வந்தால், அப்பொழுது அவன் கர்த்தர் மெய்யாய் அனுப்பின தீர்க்கதரிசியாக விளங்குவானென்று எரேமியா தீர்க்கதரிசி சொன்னான். 10 அப்பொழுது அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை எடுத்து அதை உடைத்துப்போட்டான். 11 பின்பு அனனியா சகல ஜனங்களுக்கு முன்பாகவும்: இந்தப்பிரகாரமாக இரண்டு வருஷகாலத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருடைய நுகத்தைச் சகல ஜாதிகளின் கழுத்திலுமிருந்து விலக உடைத்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி தன் வழியே போனான். 12 அனனியா என்கிற தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தை உடைத்துப்போட்டபிற்பாடு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்: 13 நீ போய், அனனியாவை நோக்கி: நீ மரநுகத்தை உடைத்தாய்; அதற்குப் பதிலாக இருப்பு நுகத்தை உண்டுபண்ணு என்று கர்த்தர் சொன்னார். 14 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைச் சேவிக்கும்படிக்கு இருப்பு நுகத்தை இந்த எல்லா ஜாதிகளுடைய கழுத்தின்மேலும் போட்டேன்; அவர்கள் அவனைச் சேவிப்பார்கள். வெளியின் மிருகஜீவன்களையும் அவனுக்கு ஒப்புக்கொடுத்தேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். 15 பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா என்கிற தீர்க்கதரிசியை நோக்கி: இப்போதும் அனனியாவே, கேள்; கர்த்தர் உன்னை அனுப்பினதில்லை; நீயோ இந்த ஜனத்தைப் பொய்யை நம்பும்படிச் செய்தாய். 16 ஆகையால், இதோ, உன்னைப் பூமியின்மேல் இராதபடிக்கு அகற்றிவிடுவேன்; இந்த வருஷத்திலே நீ சாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம் உண்டாகப் பேசினாயே என்றான். 17 அப்படியே அனனியா என்கிற தீர்க்கதரிசி அவ்வருஷத்திலேதானே ஏழாம் மாதத்தில் செத்துப்போனான்.

எரேமியா 29

1 எகொனியா என்னும் ராஜாவும், ராஜஸ்திரீயும், பிரதானிகளும், யூதாவிலும் எருசலேமிலுமுள்ள பிரபுக்களும், தச்சரும், கொல்லரும் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போன பிற்பாடு, 2 எரேமியா தீர்க்கதரிசி சிறைப்பட்டுப்போன மூப்பர்களில் மீதியானவர்களுக்கும், ஆசாரியர்களுக்கும், தீர்க்கதரிசிகளுக்கும், நேபுகாத்நேச்சார் சிறைப்படுத்தி எருசலேமிலிருந்து பாபிலோனுக்குக் கொண்டுபோன சகல ஜனங்களுக்கும் எழுதி, 3 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொடுக்கும்படி சாப்பானின் குமாரனாகிய எலெயாசாரின் கையிலும், இல்க்கியாவின் குமாரனாகிய கெமரியாவின் கையிலும் கொடுத்து, எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பின நிருபத்தின் விபரம்: 4 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர், தாம் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின அனைவருக்கும் அறிவிக்கிறது என்னவென்றால், 5 நீங்கள் வீடுகளைக் கட்டி, குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள். 6 நீங்கள் பெண்களை விவாகம்பண்ணி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்று, உங்கள் குமாரருக்குப் பெண்களைக்கொண்டு, உங்கள் குமாரத்திகளைப் புருஷருக்குக் கொடுங்கள்; இவர்களும் குமாரரையும் குமாரத்திகளையும் பெறட்டும்; நீங்கள் அங்கே குறுகாமல் பெருகி, 7 நான் உங்களைச் சிறைப்பட்டுப்போகப்பண்ணின பட்டணத்தின் சமாதானத்தைத் தேடி, அதற்காகக் கர்த்தரை விண்ணப்பம்பண்ணுங்கள்; அதற்குச் சமாதானமிருக்கையில் உங்களுக்கும் சமாதானமிருக்கும். 8 மேலும், உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை மோசம்போக்கவொட்டாதிருங்கள்; சொப்பனம் காணப்பண்ணுகிற உங்கள் சொப்பனக்காரருக்குச் செவிகொடாமலும் இருங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 9 அவர்கள் என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள்; நான் அவர்களை அனுப்பினதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். 10 பாபிலோனிலே எழுபதுவருஷம் நிறைவேறினபின்பு நான் உங்களைச் சந்தித்து, உங்களை இவ்விடத்துக்குத் திரும்பிவரப்பண்ணும்படிக்கு உங்கள்மேல் என் நல்வார்த்தையை நிறைவேறப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 11 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. 12 அப்பொழுது நீங்கள் கூடிவந்து, என்னைத் தொழுதுகொண்டு, என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவீர்கள்; நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன். 13 உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள். 14 நான் உங்களுக்குக் காணப்படுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பி, நான் உங்களைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளிலும் எல்லா இடங்களிலுமிருந்து உங்களைச் சேர்த்து, நான் உங்களை விலக்கியிருந்த ஸ்தலத்துக்கே உங்களைத் திரும்பிவரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 15 கர்த்தர் எங்களுக்குப் பாபிலோனிலும் தீர்க்கதரிசிகளை எழுப்பினார் என்று சொல்லுகிறீர்கள். 16 ஆனால் தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாவைக்குறித்தும், உங்களோடேகூடச் சிறையிருப்பில் புறப்பட்டுப்போகாமல் இந்த நகரத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரராகிய எல்லா ஜனங்களைக்குறித்தும், 17 இதோ, நான் பட்டயத்தையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அவர்களுக்குள் அனுப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; புசிக்கத்தகாத கெட்டுப்போன அத்திப்பழங்களுக்கு அவர்களை ஒப்பாக்குவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 18 அவர்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால், நான் அவர்களைப் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் பின்தொடர்ந்து, அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்துகிற எல்லா ஜாதிகளிடத்திலும் சாபமாகவும், பாழாகவும், ஈசலிடுதலுக்கிடமாகவும், நிந்தையாகவும் வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 19 நான் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரை ஏற்கனவே அனுப்பிக்கொண்டேயிருந்தும், நீங்கள் செவிகொடாமற்போனீர்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். 20 இப்போதும் சிறையிருக்கும்படி நான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பிவிட்ட நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 21 என் நாமத்தைச் சொல்லி, உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிற கொலாயாவின் குமாரனாகிய ஆகாபையும், மாசெயாவின் குமாரனாகிய சிதேக்கியாவையுங்குறித்து: இதோ, நான் அவர்களைப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலே ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகக் கொன்றுபோடுவான். 22 பாபிலோன் ராஜா அக்கினியினால் சுட்டுப்போட்ட சிதேக்கியாவுக்கும் ஆகாபுக்கும் கர்த்தர் உன்னைச் சமானமாக்கக்கடவரென்று, அவர்களைக் குறித்து ஒரு சாபவார்த்தை பாபிலோனிலே சிறையிருக்கிற யூதா அனைவருக்குள்ளும் வழங்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 23 அவர்கள் இஸ்ரவேலிலே மதிகெட்ட காரியத்தைச் செய்து, தங்கள் அயலாருடைய பெண்ஜாதிகளோடே விபசாரம்பண்ணி, நான் அவர்களுக்குக் கற்பியாத பொய்யான வார்த்தையை என் நாமத்தைச் சொல்லி உரைத்தார்கள்; நான் அதை அறிவேன்; அதற்கு நானே சாட்சி என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதினான். 24 பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: நீ நெகெலாமியனாகிய செமாயாவுக்கும் சொல்லியனுப்பவேண்டியது என்னவென்றால்: 25 நீ எருசலேமிலிருக்கிற எல்லா ஜனங்களுக்கும், மாசெயாவின் குமாரனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனுக்கும், மற்ற ஆசாரியர்களுக்கும் உன் நாமத்திலே நிருபத்தை எழுதியனுப்பினது என்னவென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 26 இவனுக்கு அவன் எழுதியிருந்த நிருபமாவது: நீங்கள் கர்த்தருடைய ஆலயத்தின் விசாரிப்புக்காரராயிருக்கும்படிக்கும், பிரமைகொண்டு தன்னைத் தீர்க்கதரிசியாக்கிக்கொள்ளுகிறவனாகிய எந்த மனுஷனையும் நீர் காவல் அறையிலும் தொழுவிலும் போடும்படிக்கும், கர்த்தர் உம்மை ஆசாரியனாயிருந்த யோய்தாவின் ஸ்தானத்திலே ஆசாரியனாக வைத்தாரே. 27 இப்போதும் உங்களுக்குத் தீர்க்கதரிசனம் கூறிவருகிற ஆனதோத் ஊரானாகிய எரேமியாவை நீர் கடிந்து கொள்ளாமற்போனதென்ன? 28 இந்தச் சிறையிருப்பு நெடுங்காலமாக இருக்கும்; நீங்கள் வீடுகளைக்கட்டி, அவைகளில் குடியிருந்து, தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைச் சாப்பிடுங்களென்று பாபிலோனில் இருக்கிற எங்களுக்குச் சொல்லியனுப்பினானென்று எழுதியிருந்தான். 29 இந்த நிருபத்தைச் செப்பனியா என்கிற ஆசாரியன் எரேமியா தீர்க்கதரிசியின் காதுகள் கேட்க வாசித்தான். 30 ஆதலால், கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்: 31 சிறையிருக்கிற அனைவருக்கும் நீ சொல்லியனுப்பவேண்டியது என்னவென்றால்: நெகெலாமியனாகிய செமாயாவைக்குறித்து, கர்த்தர்: செமாயாவை நான் அனுப்பாதிருந்தும், அவன் உங்களுக்குத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, உங்களைப் பொய்யை நம்பப்பண்ணுகிறபடியினால், 32 இதோ, நான் நெகெலாமியனாகிய செமாயாவையும், அவன் சந்ததியையும் தண்டிப்பேன்; இந்த ஜனத்தின் நடுவிலே குடியிருப்பவன் ஒருவனும் அவனுக்கு இல்லாதிருப்பான்; நான் என் ஜனத்துக்குச் செய்யும் நன்மையை அவன் காண்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்; கர்த்தருக்கு விரோதமாய்க் கலகமுண்டாகப் பேசினான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

எரேமியா 30

1 கர்த்தராலே எரேமியாவுக்கு உண்டான வார்த்தை: 2 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நான் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் ஒரு புஸ்தகத்தில் எழுதிக்கொள். 3 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலும் யூதாவுமாகிய என் ஜனத்தினுடைய சிறையிருப்பைத் திருப்பி, நான் அவர்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்துக்கு அவர்களைத் திரும்பிவரப்பண்ணுவேன்; அதை அவர்கள் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 4 இவைகள் கர்த்தர் இஸ்ரவேலையும் யூதாவையுங்குறித்துச் சொன்ன வார்த்தைகளே. 5 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தத்தளிப்பின் சத்தத்தைக் கேட்கிறோம்; திகிலுண்டு, சமாதானமில்லை. 6 ஆணாய்ப் பிறந்தவன் பிரசவிக்கிறதுண்டோ என்று கேட்டுப்பாருங்கள்; பிரசவிக்கிற ஸ்திரீயைப்போல் புருஷர் யாவரும் தங்கள் இடுப்புகளின்மேல் தங்கள் கைகளை வைத்திருக்கிறதையும், முகங்களெல்லாம் மாறி வெளுத்திருக்கிறதையும் நான் காண்கிறதென்ன? 7 ஐயோ! அந்த நாள் பெரியது; அதைப்போலொத்த நாளில்லை; அது யாக்கோபுக்கு இக்கட்டுக்காலம்; ஆனாலும் அவன் அதற்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவான். 8 அந்நாளில் நான் அவன் நுகத்தை உன் கழுத்தின்மேல் இராதபடிக்கு உடைத்து, உன் கட்டுகளை அறுப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அந்நியர் இனி அவனை அடிமைகொள்வதில்லை. 9 தங்கள் தேவனாகிய கர்த்தரையும், நான் தங்களுக்கு எழுப்பப்போகிற தங்கள் ராஜாவாகிய தாவீதையுமே சேவிப்பார்கள். 10 ஆகையால் என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, கலங்காதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியைத் தங்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இராதபடிக்கு இரட்சிப்பேன்; யாக்கோபு திரும்பிவந்து அமர்ந்து சுகித்திருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுகிறவனில்லை. 11 உன்னை இரட்சிப்பதற்காக நான் உன்னோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன்னைச் சிதறடித்த எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமலும், முற்றிலும் தண்டியாமல் விடாமலும், மட்டாய்த் தண்டிப்பேன். 12 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் புண் ஆறாததாயும் உன் காயம் கொடிதாயும் இருக்கிறது. 13 உன் காயங்களைக் கட்டும்படி உனக்காக ஏற்படுவாரில்லை; உன்னைச் சொஸ்தப்படுத்தும் ஔஷதங்களுமில்லை. 14 உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும், உன் பாவங்கள் பலத்துப்போனதினிமித்தமும், சத்துரு வெட்டும் வண்ணமாகவும், கொடியவன் தண்டிக்கிற வண்ணமாகவும் நான் உன்னைத் தண்டித்தேன். 15 உன் நொறுங்குதலினாலும் உன் வேதனையின் மிகுதியினாலும் நீ கூக்குரலிடுவானேன்? திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும் பலத்துப்போன உன் பாவங்களினிமித்தமும் இப்படி உனக்குச் செய்தேன். 16 ஆதலால் உன்னைப் பட்சிக்கிறவர்கள் யாவரும் பட்சிக்கப்படுவார்கள்; உன் சத்துருக்களெல்லாரும் சிறைப்பட்டுப்போவார்கள்; உன்னைச் சூறையாடுகிறவர்கள் சூறையாடப்படுவார்கள்; உன்னைக் கொள்ளையிடுகிற அனைவரையும் கொள்ளைக்கு ஒப்புக்கொடுப்பேன். 17 அவர்கள்: உன்னை விசாரிப்பாரற்ற சீயோன் என்று சொல்லி, உனக்குத் தள்ளுண்டவள் என்று பேரிட்டபடியால், நான் உனக்கு ஆரோக்கியம் வரப்பண்ணி, உன் காயங்களை ஆற்றுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 18 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் யாக்கோபுடைய கூடாரங்களின் சிறையிருப்பைத் திருப்பி, அவன் வாசஸ்தலங்களுக்கு இரக்கஞ்செய்வேன்; நகரம் தன் மண்மேட்டின்மேல் கட்டப்பட்டு, அரமனை முன்போல நிலைப்படும். 19 அவைகளிலிருந்து ஸ்தோத்திரமும் ஆடல்பாடலின் சத்தமும் புறப்படும்; அவர்களை வர்த்திக்கப்பண்ணுவேன், அவர்கள் குறுகிப்போவதில்லை; அவர்களை மகிமைப்படுத்துவேன், அவர்கள் சிறுமைப்படுவதில்லை. 20 அவர்கள் பிள்ளைகள் முன்போலிருப்பார்கள்; அவர்கள் சபை எனக்கு முன்பாகத் திடப்படும்; அவர்களை ஒடுக்கின யாவரையும் தண்டிப்பேன். 21 அவர்களுடைய பிரபு அவர்களில் ஒருவனாயிருக்க, அவர்களுடைய அதிபதி அவர்கள் நடுவிலிருந்து தோன்றுவார்; அவரைச் சமீபித்து வரப்பண்ணுவேன், அவர் சமீபித்து வருவார், என்னிடத்தில் சேரும்படி தன் இருதயத்தைப் பிணைப்படுத்துகிற இவர் யார்? என்று கர்த்தர் சொல்லுகிறார். 22 நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருப்பேன். 23 இதோ, கோராவாரிக் காற்றாகிய கர்த்தருடைய பெருங்காற்று உக்கிரமாயெழும்பி, அடித்து, துன்மார்க்கருடைய தலையின்மேல் மோதும். 24 கர்த்தர் தம்முடைய இருதயத்தின் நினைவுகளை நடப்பித்து நிறைவேற்றுமளவும், அவருடைய உக்கிரகோபம் தணியாது; கடைசிநாட்களில் அதை உணர்ந்துகொள்வீர்கள்.

எரேமியா 31

1 அக்காலத்திலே நான் இஸ்ரவேலின் வம்சங்களுக்கெல்லாம் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 2 பட்டயத்திற்குத் தப்பி, மீந்த ஜனம் வனாந்தரத்தில் இரக்கம் பெற்றது; இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கட்டளையிடப்போகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 3 பூர்வகாலமுதல் கர்த்தர் எனக்குத் தரிசனையானார் என்பாய்; ஆம் அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன். 4 இஸ்ரவேல் என்னும் கன்னிகையே, மறுபடியும் உன்னைக் கட்டுவிப்பேன், நீ கட்டப்படுவாய்; மறுபடியும் நீ மேளவாத்தியத்தோடும் ஆடல்பாடல் செய்கிறவர்களின் களிப்புள்ள கூட்டத்தோடும் புறப்படுவாய். 5 மறுபடியும் சமாரியாவின் மலைகளிலே திராட்சத்தோட்டங்களை நாட்டுவாய்; நாட்டுகிறவர்கள் அவைகளை நாட்டி, அதின் பலனை அநுபவிப்பார்கள். 6 எழுந்திருங்கள், சீயோனில் நம்முடைய தேவனாகிய கர்த்தரிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எப்பிராயீமின் மலைகளிலுள்ள ஜாமக்காரர் கூறுங்காலம் வரும். 7 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: யாக்கோபினிமித்தம் மகிழ்ச்சியாய்க் கெம்பீரித்து, ஜாதிகளுடைய தலைவரினிமித்தம் ஆர்ப்பரியுங்கள்; சத்தத்தைக் கேட்கப்பண்ணி, துதித்து: கர்த்தாவே, இஸ்ரவேலில் மீதியான உமது ஜனத்தை இரட்சியும் என்று சொல்லுங்கள். 8 இதோ, நான் அவர்களை வடதேசத்திலிருந்து வரப்பண்ணி, அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன்; குருடரும், சப்பாணிகளும், கர்ப்பவதிகளும், பிள்ளைத்தாய்ச்சிகளுங்கூட அவர்களில் இருப்பார்கள்; மகா கூட்டமாய் இவ்விடத்துக்குத் திரும்புவார்கள். 9 அழுகையோடும் விண்ணப்பங்களோடும் வருவார்கள்; அவர்களை வழிநடத்துவேன்; அவர்களைத் தண்ணீருள்ள நதிகளண்டைக்கு இடறாத செம்மையான வழியிலே நடக்கப்பண்ணுவேன்; இஸ்ரவேலுக்கு நான் பிதாவாயிருக்கிறேன், எப்பிராயீம் என் சேஷ்டபுத்திரனாயிருக்கிறான். 10 ஜாதிகளே, நீங்கள் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டு, தூரத்திலுள்ள தீவுகளில் அறிவித்து, இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார் என்று சொல்லுங்கள். 11 கர்த்தர் யாக்கோபை மீட்டு, அவனிலும் பலத்தவனுடைய கைக்கு அவனை நீங்கலாக்கி விடுவிக்கிறார். 12 அவர்கள் வந்து, சீயோனின் உச்சியிலே கெம்பீரித்து, கர்த்தர் அருளும் கோதுமை, திராட்சரசம், எண்ணெய், ஆட்டுக்குட்டிகள், கன்றுக்குட்டிகள் என்பவைகளாகிய இந்த நன்மைகளுக்காக ஓடிவருவார்கள்; அவர்களுடைய ஆத்துமா நீர்ப்பாய்ச்சலான தோட்டம்போலிருக்கும்; அவர்கள் இனித் தொய்ந்துபோவதில்லை. 13 அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன். 14 ஆசாரியர்களின் ஆத்துமாவைக் கொழுமையானவைகளினால் பூரிப்பாக்குவேன்; என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 15 ராமாவிலே புலம்பலும் கசப்பான அழுகையுமாகிய கூக்குரல் கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, தன் பிள்ளைகள் இல்லாதபடியால் அவைகளினிமித்தம் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 16 நீ அழாதபடிக்கு உன் சத்தத்தை அடக்கி, நீ கண்ணீர் விடாதபடிக்கு உன் கண்களைக் காத்துக்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உன் கிரியைக்குப் பலனுண்டென்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் சத்துருவின் தேசத்திலிருந்து திரும்பிவருவார்கள். 17 உன் முடிவைப்பற்றி உனக்கு நம்பிக்கையுண்டு; உன் பிள்ளைகள் தங்கள் தேசத்துக்குத் திரும்பிவருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 18 நீர் என்னைத் தண்டித்தீர், நான் பணியாத மாடுபோல் அடிக்கப்பட்டேன்; என்னைத் திருப்பும், அப்பொழுது திருப்பப்படுவேன்; நீரே என் தேவனாகிய கர்த்தர். 19 நான் திரும்பினபின்பு மனஸ்தாபப்பட்டுக்கொண்டிருக்கிறேன், நான் என்னை அறிந்துகொண்டதற்குப் பின்பு விலாவில் அடித்துக்கொண்டிருக்கிறேன், வெட்கி நாணிக்கொண்டுமிருக்கிறேன், என் இளவயதின் நிந்தையைச் சுமந்துவருகிறேன் என்று எப்பிராயீம் துக்கித்துப் புலம்பிக்கொண்டிருக்கிறதை நிச்சயமாய்க் கேட்டேன். 20 எப்பிராயீம் எனக்கு அருமையான குமாரன் அல்லவோ? அவன் எனக்குப் பிரியமான பிள்ளையல்லவோ? அவனுக்கு விரோதமாய்ப் பேசினதுமுதல் அவனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன்; ஆகையால் என் உள்ளம் அவனுக்காகக் கொதிக்கிறது; அவனுக்கு உருக்கமாய் இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 21 உனக்குக் குறிப்படையாளங்களை நிறுத்து; உனக்குத் தூண்களை நாட்டு; நீ நடந்த வழியாகிய பாதையின்மேல் உன் மனதை வை; இஸ்ரவேலாகிய குமாரத்தியே, திரும்பு; இந்த உன்னுடைய பட்டணங்களுக்கே திரும்பு. 22 சீர்கெட்டுப்போன குமாரத்தியே, எந்தமட்டும் விலகித் திரிவாய்? கர்த்தர் பூமியிலே ஒரு புதுமையைச் சிருஷ்டிப்பார், ஸ்திரீயானவள் புருஷனைச் சூழ்ந்துகொள்ளுவாள். 23 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, அவர்கள்: நீதியின் வாசஸ்தலமே, பரிசுத்த பர்வதமே, கர்த்தர் உன்னை ஆசீர்வதிக்கக்கடவரென்கிற வார்த்தையை யூதாவின் தேசத்திலும் அதின் பட்டணங்களிலும் சொல்லுவார்கள். 24 அதிலே யூதாவும், அதனுடைய எல்லாப் பட்டணங்களின் மனுஷரும் பயிரிடுங் குடிகளும், மந்தைகளை மேய்த்துத் திரிகிறவர்களும் ஏகமாய்க் குடியிருப்பார்கள். 25 நான் விடாய்த்த ஆத்துமாவைச் சம்பூரணமடையப்பண்ணி, தொய்ந்த எல்லா ஆத்துமாவையும் நிரப்புவேன். 26 இதற்காக நான் விழித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறேன்; என் நித்திரை எனக்கு இன்பமாயிருந்தது. 27 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தையும் யூதா குடும்பத்தையும் மனுஷவித்தினாலும், மிருகவித்தினாலும் விதைப்பேன். 28 அப்பொழுது நான் பிடுங்கவும் இடிக்கவும் நிர்மூலமாக்கவும் அழிக்கவும் தீங்குசெய்யவும் அவர்கள்பேரில் எப்படி ஜாக்கிரதையாயிருந்தேனோ, அப்படியே கட்டவும் நாட்டவும் அவர்கள்பேரில் ஜாக்கிரதையாயிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 29 பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்று அந்நாட்களில் சொல்லமாட்டார்கள். 30 அவனவன் தன்தன் அக்கிரமத்தினிமித்தமே சாவான்; எந்த மனுஷன் திராட்சக்காய்களைத் தின்பானோ அவனுடைய பற்களே கூசிப்போகும். 31 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கை பண்ணுவேன். 32 நான் அவர்கள் பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவரக் கைப்பிடித்த நாளிலே அவர்களோடே பண்ணின உடன்படிக்கையின்படி அல்ல; ஏனெனில் நான் அவர்களுக்கு நாயகராயிருந்தும், அந்த என் உடன்படிக்கையை அவர்கள் மீறி அவமாக்கிப்போட்டார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். 33 அந்நாட்களுக்குப்பிற்பாடு, நான் இஸ்ரவேல் குடும்பத்தோடே பண்ணப்போகிற உடன்படிக்கையாவது; நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 34 இனி ஒருவன் தன் அயலானையும், ஒருவன் தன் சகோதரனையும் நோக்கி: கர்த்தரை அறிந்துகொள் என்று போதிப்பதில்லை; அவர்களில் சிறியவன்முதல் பெரியவன்மட்டும், எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்து, அவர்கள் பாவங்களை இனி நினையாதிருப்பேன். 35 சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திரநட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: 36 இந்த நியமங்கள் எனக்கு முன்பாக இல்லாதபடிக்கு ஒழிந்துபோனால், அப்பொழுது இஸ்ரவேல் சந்ததியும் எனக்கு முன்பாக என்றைக்கும் ஒரு ஜாதியாயிராதபடிக்கு அற்றுப்போம் என்று கர்த்தர் சொல்லுகிறார். 37 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மேலே இருக்கிற வானங்கள் அளக்கப்படவும், கீழே இருக்கிற பூமியின் அஸ்திபாரங்கள் ஆராயப்படவும் கூடுமானால், நான் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரையும் அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெறுத்துவிடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 38 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது இந்த நகரம், அனானெயேலின் கோபுரமுதல் கோடிவாசல்மட்டும் கர்த்தருக்கென்று கட்டப்படும். 39 அப்புறமும் அளவுநூல் அதற்கு எதிராய்க் காரேப் என்னும் மேட்டின்மேல் சென்று கோவாத்புறமாக சுற்றிப்போம். 40 பிரேதங்களைப் புதைக்கிறதும், சாம்பலைக் கொட்டுகிறதுமான பள்ளத்தாக்கனைத்தும், கீதரோன் வாய்க்காலுக்கு இப்பாலே கிழக்கே இருக்கிற குதிரைவாசலின் கோடிமட்டும் உண்டான சகல நிலங்களும் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; அப்புறம் அது என்றென்றைக்கும் பிடுங்கப்படுவதுமில்லை இடிக்கப்படுவதுமில்லை என்கிறார்.

எரேமியா 32

1 நேபுகாத்நேச்சாரின் பதினெட்டாம் வருஷத்துக்குச் சரியான யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட பத்தாம் வருஷத்தில், கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை: 2 அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனை எருசலேமை முற்றிக்கை போட்டிருந்தது; எரேமியா தீர்க்கதரிசியோ, யூதா ராஜாவின் அரமனையிலுள்ள காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருந்தான். 3 ஏனென்றால், இதோ, இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதைப்பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்றும், 4 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா கல்தேயருடைய கைக்குத் தப்பிப்போகாமல், பாபிலோன் ராஜாவின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படுவான்; அவன் வாய் இவன் வாயோடே பேசும், அவன் கண்கள் இவன் கண்களைக் காணும். 5 அவன் சிதேக்கியாவைப் பாபிலோனுக்குக் கொண்டுபோவான்; நான் அவனைச் சந்திக்குமட்டும் அங்கே அவன் இருப்பான்; நீங்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணினாலும் உங்களுக்கு வாய்ப்பதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறாரென்றும், நீ தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டியது என்ன என்று சொல்லி, யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அங்கே அவனை அடைத்துவைத்தான். 6 அதற்கு எரேமியா சொன்னது: கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 7 இதோ, உன் பெரிய தகப்பனாகிய சல்லூமின் குமாரன் அனாமெயேல் உன்னிடத்தில் வந்து: ஆனதோத்திலிருக்கிற என் நிலத்தை நீ வாங்கிக்கொள்; அதைக் கொள்ளுகிறதற்கு உனக்கே மீட்கும் அதிகாரம் அடுத்ததென்று சொல்வான் என்று உரைத்தார். 8 அப்படியே என் பெரியதகப்பன் மகனாகிய அனாமெயேல், கர்த்தருடைய வார்த்தையின்படி காவற்சாலையின் முற்றத்தில் என்னிடத்துக்கு வந்து: பென்யமீன் நாட்டு ஆனதோத்தூரிலுள்ள என் நிலத்தை நீர் வாங்கிக்கொள்ளும்; சுதந்தரபாத்தியம் உமக்குண்டு, அதை மீட்கும் அதிகாரம் உமக்கு அடுத்தது; அதை வாங்கிக்கொள்ளும் என்றான்; அப்பொழுது அது கர்த்தருடைய வார்த்தை என்று அறிந்துகொண்டேன். 9 ஆகையால் என் பெரியதகப்பன் மகனாகிய அனாமெயேலின் கையில், நான் ஆனதோத்திலிருக்கிற அவனுடைய நிலத்தைக்கொண்டு, அதின் விலைக்கிரயமாகிய பதினேழு சேக்கலிடை வெள்ளியை அவனுக்கு நிறுத்துக்கொடுத்தேன். 10 நான் பத்திரத்தில் கையெழுத்தையும், முத்திரையையும் போட்டு, சாட்சிகளை வைத்து, வெள்ளியைத் தராசிலே நிறுத்துக்கொடுத்தபின்பு, 11 நான் சட்டத்துக்கும் வழக்கத்துக்கும் ஏற்றபடி முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரத்தையும் திறந்திருக்கிற பிரதியையும் எடுத்து, 12 என் பெரியதகப்பன் மகனாகிய அனாமெயேலுடைய கண்களுக்கு முன்பாகவும், கிரயப்பத்திரத்தில் கையெழுத்துப்போட்ட சாட்சிகளுடைய கண்களுக்கு முன்பாகவும், காவற்சாலையின் முற்றத்தில் உட்கார்ந்திருந்த எல்லா யூதருடைய கண்களுக்கு முன்பாகவும், அதை மாசெயாவின் குமாரனாகிய நேரியாவின் மகனான பாருக்கினிடத்தில் கொடுத்து, 13 அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் பாருக்கை நோக்கி: 14 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரமும், திறந்திருக்கிற பிரதிபத்திரமுமாகிய இந்தச் சாசனங்களை வாங்கி, அவைகள் அநேகநாளிருக்கும்படிக்கு அவைகளை ஒரு மண்பாண்டத்திலே வை. 15 ஏனெனில் இனி இந்தத் தேசத்தில் வீடுகளும் நிலங்களும் திராட்சத்தோட்டங்களும் கொள்ளப்படுமென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றேன். 16 நான் கிரயப்பத்திரத்தை நேரியாவின் குமாரனாகிய பாருக்கினிடத்தில் கொடுத்தபின்பு, நான் கர்த்தரை நோக்கிப் பண்ணின விண்ணப்பமாவது: 17 ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகா பலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. 18 ஆயிரம் தலைமுறைகளுக்கும் கிருபை செய்கிறவரும், பிதாக்களுடைய அக்கிரமத்தை அவர்களுடைய பின்னடியார் பிள்ளைகளின் மடியிலே சரிக்கட்டுகிறவருமாகிய சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள மகத்துவமும் வல்லமையுமுள்ள தேவனே, 19 யோசனையிலே பெரியவரும், செயலிலே வல்லவருமாயிருக்கிறீர்; அவனவனுக்கு அவனவனுடைய வழிக்குத்தக்கதாகவும், அவனவனுடைய கிரியைகளின் பலனுக்குத்தக்கதாகவும் அளிக்கும்படி, உம்முடைய கண்கள் மனுபுத்திரருடைய எல்லா வழிகளின்மேலும் நோக்கமாயிருக்கின்றன. 20 இஸ்ரவேலிலும் மற்ற மனுஷருக்குள்ளும் இந்நாள்வரைக்கும் விளங்குகிற அடையாளங்களையும் அற்புதங்களையும் தேவரீர் எகிப்துதேசத்திலே செய்து, இந்நாளில் நிற்கும் கீர்த்தியை உமக்கு உண்டாக்கி, 21 இஸ்ரவேலாகிய உமது ஜனத்தை அடையாளங்களினாலும், அற்புதங்களினாலும், பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், மகா பயங்கரத்தினாலும் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, 22 அவர்களுடைய பிதாக்களுக்கு நீர் கொடுப்பேன் என்று ஆணையிட்ட பாலும் தேனும் ஓடிய தேசமாயிருக்கிற இந்தத் தேசத்தை அவர்களுக்குக் கொடுத்தீர். 23 அவர்கள் அதற்குள் பிரவேசித்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டார்கள்; ஆனாலும் அவர்கள் உமது சத்தத்துக்குச் செவிகொடாமலும், உமது நியாயப்பிரமாணத்தில் நடவாமலும், செய்யும்படி நீர் அவர்களுக்குக் கற்பித்ததொன்றையும் செய்யாமலும் போனார்கள்; ஆதலால் இந்தத் தீங்கையெல்லாம் அவர்களுக்கு நேரிடப்பண்ணினீர். 24 இதோ, கொத்தளங்கள் போடப்பட்டிருக்கிறது; நகரத்தைப் பிடிக்கவருகிறார்கள்; பட்டயத்தினிமித்தமும், பஞ்சத்தினிமித்தமும், கொள்ளைநோயினிமித்தமும் இந்த நகரம் அதற்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறது; நீர் சொன்னபடி சம்பவிக்கிறது; இதோ, நீர் அதைப் பார்க்கிறீர். 25 கர்த்தராகிய ஆண்டவரே, நகரம் கல்தேயரின் கையிலே கொடுக்கப்படுகிறதாயிருந்தும், தேவரீர் என்னை நோக்கி: நீ உனக்கு ஒரு நிலத்தை விலைக்கிரயமாகக்கொண்டு, அதற்குச் சாட்சிகளை வையென்று சொன்னீரே என்றேன். 26 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்: 27 இதோ, நான் மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தர்; என்னாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுண்டோ? 28 ஆதலால், இதோ, நான் இந்த நகரத்தைக் கல்தேயரின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும் ஒப்புக்கொடுக்கிறேன், அவன் இதைப் பிடிப்பான் என்று கர்த்தர் சொல்லுகிறார். 29 இந்த நகரத்துக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிற கல்தேயர் உட்பிரவேசித்து, இந்த நகரத்தைத் தீக்கொளுத்தி, இதைச் சுட்டெரிப்பார்கள்; எனக்குக் கோபமுண்டாக்கும்படி எந்த வீடுகளின்மேல் பாகாலுக்குத் தூபங்காட்டி, அந்நிய தேவர்களுக்குப் பானபலிகளை வார்த்தார்களோ, அந்த வீடுகளையும் சுட்டெரிப்பார்கள். 30 இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும் தங்கள் சிறுவயதுமுதல் என் பார்வைக்குப் பொல்லாப்பானதையே செய்துவந்தார்கள்; இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கைகளின் செய்கையினாலே எனக்குக் கோபத்தையே உண்டாக்கி வந்தார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 31 அவர்கள் இந்த நகரத்தைக் கட்டின நாள் முதற்கொண்டு, இந்நாள்வரைக்கும் அது எனக்குக் கோபமுண்டாகவும், எனக்கு உக்கிரமுண்டாகவும், நான் அதை என் முகத்தை விட்டு அகற்றுகிறதற்கு ஏதுவாகவும் இருந்தது. 32 எனக்குக் கோபமுண்டாகும்படிக்கு இஸ்ரவேல் புத்திரரும், யூதா புத்திரரும், அவர்கள் ராஜாக்களும், அவர்கள் பிரபுக்களும், அவர்கள் ஆசாரியர்களும், அவர்கள் தீர்க்கதரிசிகளும், யூதாவின் மனுஷரும், எருசலேமின் குடிகளும் செய்த எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் இப்படி நடக்கும். 33 முகத்தையல்ல, முதுகை எனக்குக் காட்டினார்கள்; நான் ஏற்கனவே அவர்களுக்கு உபதேசித்தும் அவர்கள் புத்தியை ஏற்றுக்கொள்ளச் செவிகொடாமற்போனார்கள். 34 அவர்கள் என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்தைத் தீட்டுப்படுத்தும்படிக்கு, தங்கள் அருவருப்புகளை அதிலே வைத்தார்கள். 35 அவர்கள் மோளேகுக்கென்று தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் தீக்கடக்கப்பண்ணும்படி இன்னோமுடைய குமாரனின் பள்ளத்தாக்கிலிருக்கிற பாகாலின் மேடைகளைக் கட்டினார்கள்; யூதாவைப் பாவஞ்செய்யப்பண்ணுவதற்கு அவர்கள் இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யவேண்டுமென்று நான் அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை, அது என் மனதிலே தோன்றினதுமில்லை. 36 இப்படியிருக்கையில் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும், பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போம் என்று நீங்கள் சொல்லுகிற இந்த நகரத்தைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: 37 இதோ, என் சினத்திலும், என் கோபத்திலும், என் மகா உக்கிரத்திலும், நான் அவர்களைத் துரத்தின எல்லாத் தேசங்களிலுமிருந்து அவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களை இந்த ஸ்தலத்துக்குத் திரும்பிவரவும் இதிலே சுகமாய்த் தங்கியிருக்கவும் பண்ணுவேன். 38 அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன். 39 அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு, 40 அவர்களுக்கு நன்மைசெய்யும்படி, நான் அவர்களை விட்டுப் பின்வாங்குவதில்லையென்கிற நித்திய உடன்படிக்கையை அவர்களோடே பண்ணி, அவர்கள் என்னைவிட்டு அகன்று போகாதபடிக்கு, எனக்குப் பயப்படும் பயத்தை அவர்கள் இருதயத்திலே வைத்து, 41 அவர்களுக்கு நன்மைசெய்யும்படி அவர்கள்மேல் சந்தோஷமாயிருந்து, என் முழு இருதயத்தோடும் என் முழு ஆத்துமாவோடும் அவர்களை இந்தத் தேசத்திலே நிச்சயமாய் நாட்டுவேன். 42 நான் இந்த ஜனத்தின்மேல் இந்தப் பெரிய தீங்கையெல்லாம் வரப்பண்ணினதுபோல, அவர்களைக்குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 43 மனுஷனும் மிருகமும் இல்லாதபடிக்குப் பாழாய்ப்போயிற்று என்றும், கல்தேயரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்பட்டுப்போயிற்று என்றும், நீங்கள் சொல்லுகிற இந்தத் தேசத்திலே நிலங்கள் கொள்ளப்படும். 44 பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைக்காடான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் விலைக்கிரயமாகக் கொள்ளப்படுகிற பத்திரங்களில் கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சி வைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

எரேமியா 33

1 எரேமியா இன்னும் காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருக்கையில், கர்த்தருடைய வார்த்தை இரண்டாந்தரம் அவனுக்கு உண்டாகி, அவர்: 2 இதைச் செய்கிற கர்த்தருமாய், இதைத் திடப்படுத்தும்படிக்கு இதை உருவேற்படுத்துகிற கர்த்தருமாயிருக்கிற யேகோவா என்னும் நாமமுள்ளவர் சொல்லுகிறது என்னவென்றால்: 3 என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவுகொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன். 4 எதிர்க்கொத்தளங்களினாலும் பட்டயத்தாலும் இடிக்கப்பட்டவைகளாகிய இந்த நகரத்தின் வீடுகளையும், யூதா ராஜாக்களின் வீடுகளையுங்குறித்து: 5 இந்த நகரத்தின் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நான் என் முகத்தை மறைத்தபடியினாலே என் கோபத்திலும் உக்கிரத்திலும் வெட்டுண்ட மனுஷப் பிரேதங்களினாலே அவைகளை நான் நிரப்பும்படியாகவே, அவர்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணப்போகிறார்கள். 6 இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன். 7 நான் யூதாவின் சிறையிருப்பையும், இஸ்ரவேலின் சிறையிருப்பையும் திருப்பி, முன்னிருந்ததுபோல அவர்களைக் கட்டுவித்து, 8 அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்த அவர்களுடைய எல்லா அக்கிரமங்களுக்கும் அவர்களை நீங்கலாக்கிச் சுத்திகரித்து, அவர்கள் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணின அவர்களுடைய எல்லா அக்கிரமங்களையும் மன்னிப்பேன். 9 நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்குமுன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளிச்செய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லாச் சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். 10 மனுஷனில்லாமலும் மிருகமில்லாமலும் அவாந்தரவெளியாய்க் கிடக்கிறதென்று, நீங்கள் சொல்லுகிற இவ்விடத்திலும், யூதாவின் பட்டணங்களிலும் மனுஷனாவது மிருகமாவது இல்லாத பாழான எருசலேமின் வீதிகளிலும், 11 இன்னும் களிப்பின் சத்தமும், மகிழ்ச்சியின் சத்தமும், மணவாளனின் சத்தமும், மணவாட்டியின் சத்தமும்: சேனைகளின் கர்த்தரைத் துதியுங்கள், கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளதென்று சொல்லுகிறவர்களின் சத்தமும், கர்த்தருடைய ஆலயத்துக்கு ஸ்தோத்திரபலிகளைக் கொண்டுவருகிறவர்களின் சத்தமும் கேட்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் முன்னிருந்ததுபோலிருக்கும்படி தேசத்தின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 12 மனுஷனும் மிருகமும் இல்லாமல் அவாந்தரவெளியாய்க் கிடக்கிற இவ்விடத்திலும், இதற்கடுத்த பட்டணங்களிலும், ஆட்டுமந்தையை மேய்த்து மடக்குகிற மேய்ப்பர்களின் தாபரங்கள் உண்டாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 13 மலைத்தேசமான பட்டணங்களிலும், பள்ளத்தாக்குகளான பட்டணங்களிலும், தென்திசைப் பட்டணங்களிலும் பென்யமீன் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், ஆட்டுமந்தைகள் தங்களைத் தொகையிடுகிறவனுடைய கைக்குள்ளாகக் கடந்துவரும் என்று கர்த்தர் சொல்லுகிறார். 14 இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது நான் இஸ்ரவேலின் குடும்பத்துக்கும், யூதாவின் குடும்பத்துக்கும் சொன்ன நல்வார்த்தையை நிறைவேற்றுவேன். 15 அந்நாட்களிலும், அக்காலத்திலும் தாவீதுக்கு நீதியின் கிளையை முளைக்கப்பண்ணுவேன்; அவர் பூமியிலே நியாயத்தையும் நீதியையும் நடப்பிப்பார். 16 அந்நாட்களில் யூதா இரட்சிக்கப்பட்டு, எருசலேம் சுகமாய்த் தங்கும்; அவர் எங்கள் நீதியாயிருக்கிற கர்த்தர் என்பது அவருடைய நாமம். 17 இஸ்ரவேல் வம்சத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காரத்தக்க புருஷன் தாவீதுக்கு இல்லாமற்போவதில்லை. 18 தகனபலியிட்டு, போஜனபலிசெலுத்தி, நாள்தோறும் பலியிடும் புருஷன் எனக்கு முன்பாக ஆசாரியருக்கும் லேவியருக்கும் இல்லாமற்போவதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். 19 பின்னும் எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்: 20 குறித்த நேரங்களில் பகற்காலமும் இராக்காலமும் உண்டாகாதபடிக்கு, நீங்கள் பகற்காலத்தைக்குறித்து நான் பண்ணின உடன்படிக்கையையும், இராக்காலத்தைக்குறித்து நான் பண்ணின உடன்படிக்கையையும் அவமாக்கினால், 21 அப்பொழுது என் தாசனாகிய தாவீதோடே நான் பண்ணின உடன்படிக்கையும், அவன் சிங்காசனத்தில் அரசாளும் குமாரன் அவனுக்கு இல்லாமற்போகும்படியாக அவமாகும்; என் ஊழியக்காரராகிய லேவியரோடும் ஆசாரியரோடும் நான் பண்ணின உடன்படிக்கையும் அப்பொழுது அவமாகும். 22 வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார். 23 பின்னும் எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்: 24 கர்த்தர் தெரிந்துகொண்ட இரண்டு வம்சங்களையும் வெறுத்துப்போட்டாரென்று இந்த ஜனம் சொல்லி, தங்களுக்கு முன்பாக என் ஜனம் இனி ஒரு ஜாதியல்லவென்று அதைத் தூஷிக்கிறார்களென்பதை நீ காண்கிறதில்லையோ? 25 வானத்துக்கும் பூமிக்கும் குறித்திருக்கிற நியமங்களை நான் காவாமல், பகற்காலத்தையும் இராக்காலத்தையுங்குறித்து நான் பண்ணின உடன்படிக்கை அற்றுப்போகிறது உண்டானால், 26 அப்பொழுது நான் யாக்கோபின் சந்ததியையும், என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் தள்ளி, நான் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களின் சந்ததியை ஆளத்தக்கவர்களை அதிலிருந்து எடுக்காதபடிக்கு வெறுத்துப்போடுவேன்; அவர்களுடைய சிறையிருப்பை நான் திருப்பி, அவர்களுக்கு இரங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

எரேமியா 34

1 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய சர்வசேனையும், அவன் ஆளுகைக்குட்பட்ட பூமியின் சகல ராஜ்யங்களும், சகல ஜனங்களும் எருசலேமுக்கும் அதைச் சேர்ந்த சகல பட்டணங்களுக்கும் விரோதமாக யுத்தம்பண்ணுகையில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை: 2 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ போய், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் பேசி, அவனுக்குச் சொல்லவேண்டியது: இதோ, நான் இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதை அக்கினியால் சுட்டெரிப்பான். 3 நீ அவன் கைக்குத் தப்பிப்போகாமல், நிச்சயமாய்ப் பிடிபட்டு, அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாய்; உன் கண்கள் பாபிலோன் ராஜாவின் கண்களைக் காணும்; அவன் வாய் உன் வாயோடே பேசும்; நீ பாபிலோனுக்குப் போவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார். 4 ஆகிலும் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவே, கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; உன்னைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ பட்டயத்தாலே சாவதில்லை. 5 சமாதானத்தோடே சாவாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் பிதாக்களினிமித்தம் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உன்னிமித்தமும் கொளுத்தி, ஐயோ! ஆண்டவனே, என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று கர்த்தர் உரைத்தார் என்று சொல் என்றார். 6 இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசியாகிய எரேமியா எருசலேமிலே யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் சொன்னான். 7 அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும், யூதாவின் எல்லாப் பட்டணங்களிலும் மீந்த பட்டணங்களாகிய லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாகவும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தது; யூதாவின் அரணிப்பான பட்டணங்களில் இவைகளே மீந்திருந்தவைகள். 8 ஒருவனும் யூதஜாதியானாகிய தன் சகோதரனை அடிமைகொள்ளாதபடிக்கு, அவனவன் எபிரெயனாகிய தன் வேலைக்காரனையும், எபிரெய ஸ்திரீயாகிய தன் வேலைக்காரியையும் சுயாதீனராக அனுப்பிவிடவேண்டுமென்று அவர்களுக்கு விடுதலையைக் கூறும்படி, 9 ராஜாவாகிய சிதேக்கியா எருசலேமில் இருக்கிற எல்லா ஜனத்தோடும் உடன்படிக்கை பண்ணினபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தரால் வார்த்தை உண்டாயிற்று. 10 ஒவ்வொருவனும் தன் வேலைக்காரனையும் தன் வேலைக்காரியையும் இனி அடிமைகொள்ளாதபடிக்கு, சுயாதீனராக அனுப்பிவிடவேண்டுமென்று உடன்படிக்கைக்கு உட்பட்ட எல்லாப் பிரபுக்களும் எல்லா ஜனங்களும் கேட்டபோது, செவிகொடுத்து அவர்களை அனுப்பிவிட்டார்கள். 11 ஆனாலும் அதற்குப்பின்பு அவர்கள் மாறாட்டம்பண்ணி, தாங்கள் சுயாதீனராக அனுப்பிவிட்ட வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் மறுபடியும் அழைப்பித்து, அவர்களை வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி அடிமைப்படுத்திக்கொண்டார்கள். 12 ஆதலால், கர்த்தராலே எரேமியாவுக்கு வார்த்தை உண்டாகி, அவர்: 13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அவனவன் தனக்கு விற்கப்பட்ட எபிரெயனாகிய தன் சகோதரனை முடிவிலே நீங்கள் ஏழாம் வருஷத்திலே அனுப்பிவிடவேண்டும் என்றும், அவன் உனக்கு ஆறுவருஷம் அடிமையாயிருந்தபின்பு, அவனை உன்னிடத்தில் வைக்காமல் சுயாதீனனாக அனுப்பிவிடவேண்டும் என்றும், 14 நான் உங்கள் பிதாக்களை அடிமை வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணினேன்; ஆனாலும் உங்கள் பிதாக்கள் என் சொல்லைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போனார்கள். 15 நீங்களோ, இந்நாளிலே மனந்திரும்பி, அவனவன் தன் அயலானுக்கு விடுதலையைக் கூறின விஷயத்திலே என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்திலே இதற்காக என் முகத்துக்குமுன் உடன்படிக்கைபண்ணியிருந்தீர்கள். 16 ஆனாலும் நீங்கள் மாறாட்டம்பண்ணி, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, நீங்கள் அவனவன் விடுதலையாகவும் சுயாதீனராகவும் அனுப்பிவிட்ட தன் வேலைக்காரனையும் தன் வேலைக்காரியையும் திரும்ப அழைத்துவந்து, அவர்களை உங்களுக்கு வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி அடிமைப்படுத்தினீர்கள். 17 ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் அவனவன் தன் சகோதரனுக்கும் அவனவன் தன் அயலானுக்கும் விடுதலையைக் கூறினவிஷயத்தில் என் சொல்லைக் கேளாமற்போனீர்களே; இதோ, நான் உங்களைப் பட்டயத்துக்கும், கொள்ளைநோய்க்கும், பஞ்சத்துக்கும் ஒப்புக்கொடுக்கிற விடுதலையை உங்களுக்குக் கூறுகிறேன்; பூமியின் ராஜ்யங்களிலெல்லாம் அலைகிறதற்கும் உங்களை ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 18 என் முகத்துக்குமுன் பண்ணின உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை மீறின மனுஷரை நான் துண்டங்களின் நடுவாகக் கடந்துபோகும்படி அவர்களை இரண்டாகத் துண்டித்த கன்றுக்குட்டியைப்போல் ஆக்குவேன். 19 கன்றுக்குட்டியின் துண்டுகளின் நடுவே கடந்துபோன யூதாவின் பிரபுக்களையும், எருசலேமின் பிரபுக்களையும், பிரதானிகளையும், ஆசாரியர்களையும், தேசத்தின் சகல ஜனங்களையும் அப்படிச் செய்து, 20 நான் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவர்களுடைய பிரேதம் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும். 21 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும் அவனுடைய பிரபுக்களையும் அவர்கள் சத்துருக்களின் கையிலும்; அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், உங்களைவிட்டுப் பேர்ந்துபோன பாபிலோன் ராஜாவினுடைய சேனைகளின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன். 22 இதோ, நான் கட்டளைகொடுத்து, அவர்களை இந்த நகரத்துக்குத் திரும்பப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; யூதாவின் பட்டணங்களையும், ஒருவரும் அவைகளில் குடியிராதபடிப் பாழாய்ப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

எரேமியா 35

1 யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாட்களில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை: 2 நீ ரேகாபியருடைய வீட்டுக்குப் போய், அவர்களோடே பேசி, அவர்களைக் கர்த்தருடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றிலே அழைத்துவந்து, அவர்களுக்குத் திராட்சரசம் குடிக்கக்கொடு என்றார். 3 அப்பொழுது நான் அபசினியாவின் குமாரனாகிய எரேமியாவுக்கு மகனான யசினியாவையும், அவனுடைய சகோதரரையும், அவனுடைய குமாரர் எல்லாரையும், ரேகாபியருடைய குடும்பத்தார் அனைவரையும் அழைத்து; 4 கர்த்தருடைய ஆலயத்திலே பிரபுக்களுடைய அறையின் அருகேயும், வாசலைக்காக்கிற சல்லூமின் குமாரனாகிய மாசெயாவினுடைய அறையின்மேலுமுள்ள இத்தலியாவின் குமாரனும் தேவனுடைய மனுஷனுமாகிய ஆனான் என்னும் புத்திரருடைய அறையிலே அவர்களைக் கூட்டிக்கொண்டுவந்து, 5 திராட்சரசத்தினால் நிரப்பப்பட்ட குடங்களையும் கிண்ணங்களையும் ரேகாபியருடைய குடும்பத்தைச் சேர்ந்த புத்திரரின் முன்னே வைத்து, அவர்களை நோக்கி: திராட்சரசம் குடியுங்கள் என்றேன். 6 அதற்கு அவர்கள்: நாங்கள் திராட்சரசம் குடிக்கிறதில்லை; ஏனென்றால், ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாப், நீங்கள் பரதேசிகளாய்த் தங்குகிற தேசத்தில் நீடித்திருக்கும்படிக்கு, 7 நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சரசம் குடியாமலும், வீட்டைக் கட்டாமலும், விதையை விதையாமலும், திராட்சத்தோட்டத்தை நாட்டாமலும், அதைக் கையாளாமலும், உங்களுடைய எல்லா நாட்களிலும் கூடாரங்களிலே குடியிருப்பீர்களாக என்று எங்களுக்குக் கட்டளையிட்டார். 8 அப்படியே எங்களுடைய எல்லா நாட்களிலும் நாங்களும் எங்கள் ஸ்திரீகளும் எங்கள் குமாரரும் எங்கள் குமாரத்திகளும் திராட்சரசம் குடியாமலும், 9 நாங்கள் குடியிருக்க வீடுகளைக்கட்டாமலும், ரேகாபின் குமாரனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாபின் சத்தத்துக்குக் கீழ்ப்படிந்திருக்கிறோம்; எங்களுக்குத் திராட்சத்தோட்டமும் வயலும் விதைப்பாடுமில்லை. 10 நாங்கள் கூடாரங்களில் குடியிருந்து, எங்கள் தகப்பனாகிய யோனதாப் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் கீழ்ப்படிந்து செய்துவந்தோம். 11 ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்தத் தேசத்தில் வந்தபோது, நாம் கல்தேயருடைய இராணுவத்துக்கும் சீரியருடைய இராணுவத்துக்கும் தப்பும்படி எருசலேமுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னோம்; அப்படியே எருசலேமில் தங்கியிருக்கிறோம் என்றார்கள். 12 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்: 13 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீ போய், யூதாவின் மனுஷரையும் எருசலேமின் குடிகளையும் நோக்கி: நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்டு, புத்தியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லையோ என்று கர்த்தர் சொல்லுகிறார். 14 திராட்சரசம் குடியாதபடிக்கு, ரேகாபின் குமாரனாகிய யோனதாப் தன் புத்திரருக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்கள் இந்நாள்மட்டும் அதைக் குடியாமல், தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள்; ஆனாலும் நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டேயிருந்தும், எனக்குக் கீழ்ப்படியாமற்போனீர்கள். 15 நீங்கள் அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி அவர்களைப் பின்பற்றாமல், அவனவன் தன் பொல்லாத வழியை விட்டுத் திரும்பி, உங்கள் நடக்கையைச் சீர்திருத்துங்கள், அப்பொழுது உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்திலே குடியிருப்பீர்கள் என்று சொல்லி, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் உங்கள் செவியைச் சாயாமலும் எனக்குக் கீழ்ப்படியாமலும்போனீர்கள். 16 இப்போதும், ரேகாபின் குமாரனாகிய யோனதாபின் புத்திரர் தங்கள் தகப்பன் தங்களுக்குக் கட்டளையிட்ட கற்பனையைக் கைக்கொண்டிருக்கும்போது, இந்த ஜனங்கள் எனக்குக் கீழ்ப்படியாமற்போனபடியினாலும், 17 இதோ, நான் அவர்களிடத்தில் பேசியும் அவர்கள் கேளாமலும், நான் அவர்களை நோக்கிக் கூப்பிட்டும் அவர்கள் மறுஉத்தரவு கொடாமலும் போனபடியினாலும், யூதாவின்மேலும் எருசலேமின் குடிகள் எல்லாரின்மேலும் நான் அவர்களுக்கு விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் வரப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். 18 பின்னும் எரேமியா ரேகாபியருடைய குடும்பத்தாரை நோக்கி: நீங்கள் உங்கள் தகப்பனாகிய யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அவனுடைய கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு, அவன் உங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்துவந்தீர்களென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 19 ஆதலால் சகல நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத்தக்க புருஷன் ரேகாபின் குமாரனாகிய யோனதாபுக்கு இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

எரேமியா 36

1 யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வார்த்தை என்னவென்றால்: 2 நீ ஒரு புஸ்தகச்சுருளை எடுத்து, யோசியாவின் நாட்களிலே நான் உன்னுடனே பேசின நாள் முதற்கொண்டு இந்நாள்மட்டும் இஸ்ரவேலைக்குறித்தும், யூதாவைக்குறித்தும், சகல ஜாதிகளைக்குறித்தும் உன்னோடே சொன்ன எல்லா வார்த்தைகளையும் அதிலே எழுது. 3 யூதாவின் குடும்பத்தார், அவரவர் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பும்படியாகவும், தங்கள் அக்கிரமத்தையும் தங்கள் பாவத்தையும் நான் மன்னிக்கும்படியாகவும், தங்களுக்கு நான் செய்ய நினைத்திருக்கிற தீங்குகளைக்குறித்து ஒருவேளை அவர்கள் கேட்பார்கள் என்றார். 4 அப்பொழுது எரேமியா நேரியாவின் குமாரனாகிய பாருக்கை அழைத்தான்; பாருக்கு என்பவன் கர்த்தர் எரேமியாவுடனே சொல்லிவந்த எல்லா வார்த்தைகளையும் அவன் வாய் சொல்ல ஒரு புஸ்தகச்சுருளில் எழுதினான். 5 பின்பு எரேமியா பாருக்கை நோக்கி: நான் அடைக்கப்பட்டவன்; நான் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கக்கூடாது. 6 நீ உள்ளே பிரவேசித்து, என் வாய் சொல்ல நீ எழுதின சுருளிலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளைக் கர்த்தருடைய ஆலயத்தில் உபவாச நாளிலே ஜனங்களுடைய செவிகள் கேட்க வாசிப்பதுமன்றி, தங்கள் பட்டணங்களிலிருந்துவருகிற எல்லா யூதா கோத்திரத்தாரும் கேட்கும்படி அவைகளை வாசிப்பாயாக. 7 ஒருவேளை அவர்கள் கர்த்தருடைய முகத்துக்கு முன்பாகப் பணிந்து விண்ணப்பம்பண்ணி, அவரவர் தங்கள் பொல்லாத வழியை விட்டுத் திரும்புவார்கள்; கர்த்தர் இந்த ஜனத்துக்கு விரோதமாகக் கூறியிருக்கிற கோபமும் உக்கிரமும் பெரியது என்று சொன்னான். 8 அப்படியே நேரியாவின் குமாரனாகிய பாருக்கு அந்தப் புஸ்தகத்தில், கர்த்தருடைய ஆலயத்தில் கர்த்தருடைய வார்த்தைகளை வாசிக்கும்படி எரேமியா தீர்க்கதரிசி தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான். 9 யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் ஐந்தாம் வருஷத்து ஒன்பதாம் மாதத்திலே, எருசலேமிலிருக்கிற எல்லா ஜனத்துக்கும், யூதாவின் பட்டணங்களிலிருந்து எருசலேமுக்கு வருகிற எல்லா ஜனத்துக்கும், கர்த்தருக்கு முன்பாக உபவாசம் செய்யவேண்டுமென்று கூறப்பட்டது. 10 அப்பொழுது பாருக்கு கர்த்தருடைய ஆலயத்தின் மேற்பிராகாரத்தில், கர்த்தருடைய ஆலயத்து வாசலின் நடைக்கு அருகான சாப்பானுடைய குமாரனாகிய கெமரியா என்னும் சம்பிரதியின் அறையிலே, அந்தப் புஸ்தகத்திலுள்ள எரேமியாவின் வார்த்தைகளை ஜனங்கள் எல்லாரும் கேட்க வாசித்தான். 11 சாப்பானுடைய குமாரனாகிய கெமரியாவின் மகன் மிகாயா அந்தப் புஸ்தகத்திலுள்ள கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் வாசிக்கக்கேட்டபோது, 12 அவன் ராஜாவின் அரமனைக்குப் போய், சம்பிரதியின் அறையில் பிரவேசித்தான்; இதோ, அங்கே எல்லாப் பிரபுக்களும் சம்பிரதியாகிய எலிசாமாவும் செமாயாவின் குமாரனாகிய தெலாயாவும், அக்போரின் குமாரனாகிய எல்நாத்தானும், சாப்பானின் குமாரனாகிய கெமரியாவும், அனனியாவின் குமாரனாகிய சிதேக்கியாவும், மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்கார்ந்திருந்தார்கள். 13 பாருக்கு ஜனத்தின் செவிகள் கேட்கப் புஸ்தகத்திலுள்ளவைகளை வாசிக்கையில், தான் கேட்ட எல்லா வார்த்தைகளையும் மிகாயா அவர்களுக்குத் தெரிவித்தான். 14 அப்பொழுது எல்லாப் பிரபுக்களும் கூஷியின் குமாரனாகிய செலேமியாவின் மகனான நெத்தானியாவினுடைய குமாரனாயிருக்கிற யெகுதியைப் பாருக்கினிடத்தில் அனுப்பி, ஜனங்கள் கேட்க நீ வாசித்துக்கொண்டிருந்த சுருளை உன் கையில் எடுத்துக்கொண்டுவா என்று சொல்லச்சொன்னார்கள்; ஆகையால், நேரியாவின் குமாரனாகிய பாருக்கு சுருளைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, அவர்களிடத்துக்கு வந்தான். 15 அவர்கள் அவனை நோக்கி: நீ உட்கார்ந்துகொண்டு, நாங்கள் கேட்க வாசியென்றார்கள்; அவர்கள் கேட்க வாசித்தான். 16 அப்பொழுது அவர்கள் எல்லா வார்த்தைகளையும் கேட்கையில் பயமுற்றவர்களாய் ஒருவரையொருவர் பார்த்து, பாருக்கை நோக்கி: இந்த எல்லா வார்த்தைகளையும் ராஜாவுக்கு நிச்சயமாய் அறிவிப்போம் என்றார்கள். 17 அவன் வாய் சொல்ல, நீ இந்த வார்த்தைகளையெல்லாம் எவ்விதமாய் எழுதினாய் அதை எங்களுக்குச் சொல் என்று பாருக்கைக் கேட்டார்கள். 18 அதற்குப் பாருக்கு: அவர் தமது வாயினால் இந்த எல்லா வார்த்தைகளையும் உரைத்து, என்னுடனே சொன்னார், நான் மையினால் புஸ்தகத்தில் எழுதினேன் என்றான். 19 அப்பொழுது பிரபுக்கள் பாருக்கை நோக்கி: நீயும் எரேமியாவும் போய் ஒளித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் இருக்கும் இடத்தை ஒருவரும் அறியப்படாது என்று சொல்லி, 20 சுருளைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலே வைத்து, ராஜாவினிடத்துக்கு அரமனையிலே போய், ராஜாவின் செவிகளுக்கு இந்த வார்த்தைகளையெல்லாம் அறிவித்தார்கள். 21 அப்பொழுது ராஜா அந்தச் சுருளை எடுத்துக்கொண்டுவர யெகுதியை அனுப்பினான்; யெகுதி அதைச் சம்பிரதியாகிய எலிசாமாவின் அறையிலிருந்து எடுத்துக்கொண்டுவந்து, ராஜா கேட்கவும், ராஜாவினிடத்தில் நின்ற எல்லாப் பிரபுக்களும் கேட்கவும் வாசித்தான். 22 ஒன்பதாம் மாதத்திலே ராஜா, குளிர்காலத்துக்குத் தங்கும் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; அவனுக்கு முன்பாகக் கணப்பு மூட்டியிருந்தது. 23 யெகுதி மூன்று நாலு பத்திகளை வாசித்த பின்பு, ராஜா ஒரு சூரிக்கத்தியினால் அதை அறுத்து, சுருளனைத்தும் கணப்பிலுள்ள அக்கினியிலே வெந்துபோகும்படி, கணப்பிலிருந்த அக்கினியில் எறிந்துபோட்டான். 24 ராஜாவாயினும், அந்த வார்த்தைகளையெல்லாம் கேட்ட அவனுடைய சகல ஊழியக்காரராயினும் பயப்படவுமில்லை, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொள்ளவுமில்லை. 25 எல்நாத்தானும், தெலாயாவும், கெமரியாவுமோ: அந்தச் சுருளைச் சுட்டெரிக்கவேண்டாம் என்று ராஜாவினிடத்தில் விண்ணப்பம்பண்ணினார்கள்; ஆனாலும், அவர்களுக்கு அவன் செவிகொடாமல், 26 பாருக்கு என்னும் சம்பிரதியையும் எரேமியா தீர்க்கதரிசியையும் பிடிக்கும்படிக்கு, ராஜா அம்மெலேகின் குமாரனாகிய யெரமெயேலுக்கும், அஸ்ரியேலின் குமாரனாகிய செராயாவுக்கும், அப்தெயேலின் குமாரனாகிய செலேமியாவுக்கும் கட்டளைகொடுத்தான்; ஆனாலும் கர்த்தர் அவர்களை மறைத்தார். 27 ராஜா அந்தச் சுருளையும், அதிலே எரேமியாவின் வாய்சொல்லப் பாருக்கு எழுதியிருந்த வார்த்தைகளையும் சுட்டெரித்தபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்: 28 நீ திரும்ப வேறொரு சுருளை எடுத்து, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் சுட்டெரித்த முதலாம் சுருளிலிருந்த முந்தின வார்த்தைகளையெல்லாம் அதிலே எழுது என்றார். 29 மேலும் நீ யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமை நோக்கி: பாபிலோன் ராஜா நிச்சயமாய் வருவான் என்பதையும், அவன் இந்தத் தேசத்தை அழித்து இதிலிருந்து மனுஷரையும் மிருகங்களையும் ஒழியப்பண்ணுவான் என்பதையும் நீ அதில் எழுதினதேதென்று சொல்லி, அந்தச் சுருளை நீ சுட்டெரித்தாயே என்று கர்த்தர் சொல்லுகிறார். 30 ஆகையால் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமைக்குறித்து: தாவீதின் சிங்காசனத்தின்மேல் உட்காரும்படி அவன் வம்சத்தில் ஒருவனும் இரான்; அவனுடைய பிரேதமோவென்றால், பகலின் உஷ்ணத்துக்கும் இரவின் குளிருக்கும் எறிந்துவிடப்பட்டுக் கிடக்கும். 31 நான் அவனிடத்திலும், அவன் சந்ததியினிடத்திலும், அவன் பிரபுக்களினிடத்திலும் அவர்கள் அக்கிரமத்தை விசாரித்து, அவன்மேலும் எருசலேமின் குடிகள்மேலும், யூதா மனுஷர்மேலும், நான் அவர்களுக்குச் சொன்னதும், அவர்கள் கேளாமற்போனதுமான தீங்கனைத்தையும் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார். 32 அப்பொழுது எரேமியா வேறொரு சுருளை எடுத்து, அதை நேரியாவின் குமாரனாகிய பாருக்கு என்னும் சம்பிரதியினிடத்தில் கொடுத்தான்; அவன் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அக்கினியால் சுட்டெரித்த புஸ்தகத்தின் வார்த்தைகளையெல்லாம், அதிலே எரேமியாவின் வாய் சொல்ல எழுதினான்; இன்னும் அவைகளுக்கொத்த அநேகம் வார்த்தைகளும் அவைகளோடே சேர்க்கப்பட்டது.

எரேமியா 37

1 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாதேசத்தில் ராஜாவாக நியமித்த யோயாக்கீமுடைய குமாரனாகிய கோனியாவின் பட்டத்துக்கு யோசியாவின் குமாரனாகிய சிதேக்கியா வந்து அரசாண்டான். 2 கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியைக்கொண்டு சொன்ன வார்த்தைகளுக்கு அவனாகிலும், அவனுடைய ஊழியக்காரராகிலும், தேசத்தின் ஜனங்களாகிலும் செவிகொடுக்கவில்லை. 3 சிதேக்கியா ராஜாவோவெனில், செலேமியாவின் குமாரனாகிய யூகாலையும், மாசெயாவின் குமாரனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனையும் எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் அனுப்பி: நீ நம்முடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி எங்களுக்காக விண்ணப்பம் பண்ணவேண்டும் என்று சொல்லச்சொன்னான். 4 அப்பொழுது எரேமியா ஜனத்தின் நடுவே வரத்தும்போக்குமாயிருந்தான்; அவனை அவர்கள் காவல் வீட்டில் இன்னும் போடவில்லை. 5 பார்வோனின் சேனையோவென்றால், எகிப்திலிருந்து புறப்பட்டது; எருசலேமை முற்றிக்கைபோட்ட கல்தேயர் அவர்களுடைய செய்தியைக்கேட்டு, எருசலேமைவிட்டு நீங்கிப்போனார்கள். 6 அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்: 7 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், என்னிடத்தில் விசாரிக்கும்படி உங்களை என்னிடத்திற்கு அனுப்பின யூதாவின் ராஜாவை நீங்கள் நோக்கி: இதோ, உங்களுக்கு ஒத்தாசையாகப் புறப்பட்ட பார்வோனின் சேனை தன் தேசமாகிய எகிப்துக்குத் திரும்பிப்போகும். 8 கல்தேயரோவென்றால், திரும்பிவந்து இந்த நகரத்துக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அக்கினியால் சுட்டெரிப்பார்கள். 9 கல்தேயர் நம்மைவிட்டு நிச்சயமாய்ப் போய்விடுவார்களென்று சொல்லி, நீங்கள் மோசம்போகாதிருங்கள், அவர்கள் போவதில்லை. 10 உங்களோடே யுத்தம்பண்ணுகிற கல்தேயருடைய சேனையையெல்லாம் நீங்கள் முறிய அடித்தாலும், மீந்தவர்கள் எல்லாரும் காயம்பட்டவர்களாயிருந்தாலும், அவர்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து எழும்பி, இந்த நகரத்தை அக்கினியால் சுட்டெரிப்பார்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லுங்கள் என்றார். 11 பார்வோனின் சேனை வருகிறதென்று, கல்தேயருடைய சேனை எருசலேமைவிட்டுப் போனபோது, 12 எரேமியா அவ்விடத்தைவிட்டு, ஜனத்தின் நடுவே ஜாடையாய் விலகி, பென்யமீன் தேசத்துக்குப் போக மனதாய் எருசலேமிலிருந்து புறப்பட்டுப்போனான். 13 அவன் பென்யமீன் வாசலில் வந்தபோது, காவற்சேர்வையின் அதிபதியாகிய யெரியா என்னும் நாமமுள்ள ஒருவன் அங்கே இருந்தான்; அவன் அனனியாவின் குமாரனாகிய செலேமியாவின் மகன்; அவன்: நீ கல்தேயரைச் சேரப்போகிறவன் என்று சொல்லி, எரேமியா தீர்க்கதரிசியைப் பிடித்தான். 14 அப்பொழுது எரேமியா: அது பொய், நான் கல்தேயரைச் சேரப்போகிறவனல்ல என்றான்; ஆனாலும் யெரியா எரேமியாவின் சொல்லைக் கேளாமல், அவனைப் பிடித்து, பிரபுக்களிடத்தில் கொண்டுபோனான். 15 அப்பொழுது பிரபுக்கள்: எரேமியாவின்பேரில் கடுங்கோபங்கொண்டு, அவனை அடித்து, அவனைச் சம்பிரதியாகிய யோனத்தானுடைய வீட்டில் காவற்படுத்தினார்கள்; அவர்கள் அதைக் காவற்கூடமாக்கியிருந்தார்கள். 16 அப்படியே எரேமியா காவற்கிடங்கின் நிலவறைகளில் பிரவேசித்து, அங்கே அநேகநாள் இருந்தான். 17 பின்பு சிதேக்கியா ராஜா அவனை அழைத்தனுப்பி: கர்த்தரால் ஒரு வார்த்தை உண்டோ என்று ராஜா அவனைத் தன் வீட்டிலே இரகசியமாய்க் கேட்டான். அதற்கு எரேமியா: உண்டு, பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவீர் என்று சொன்னான். 18 பின்னும் எரேமியா, சிதேக்கியா ராஜாவை நோக்கி: நீங்கள் என்னைக் காவல் வீட்டிலே அடைப்பதற்கு, நான் உமக்கும் உம்முடைய ஊழியக்காரருக்கும் இந்த ஜனத்துக்கும் விரோதமாக என்ன குற்றஞ்செய்தேன்? 19 பாபிலோன் ராஜா உங்களுக்கும் இந்தத் தேசத்துக்கும் விரோதமாக வருவதில்லையென்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொன்ன உங்களுடைய தீர்க்கதரிசிகள் எங்கே? 20 இப்போதும் ராஜாவாகிய என் ஆண்டவனே, எனக்குச் செவிகொடுத்து, என் விண்ணப்பத்துக்குத் தயைசெய்து, என்னைச் சம்பிரதியாகிய யோனத்தானுடைய வீட்டிற்குத் திரும்ப அனுப்பவேண்டாம்; அனுப்பினால் நான் அங்கே செத்துப்போவேன் என்றான். 21 அப்பொழுது எரேமியாவைக் காவற்சாலையின் முற்றத்திலே காக்கவும், நகரத்திலே அப்பமிருக்குமட்டும் அப்பஞ்சுடுகிறவர்களின் வீதியிலே தினம் ஒரு அப்பத்தை அவனுக்கு வாங்கிக்கொடுக்கவும் கட்டளையிட்டான்; அப்படியே எரேமியா காவற்சாலையின் முற்றத்திலே இருந்தான்.

எரேமியா 38

1 இந்த நகரத்திலே தரித்திருக்கிறவன், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவான்; கல்தேயரிடத்துக்குப் புறப்பட்டுப்போகிறவனோ உயிரோடிருப்பான்; அவனுடைய பிராணன் அவனுக்குக் கிடைத்த கொள்ளையுடைமையைப்போலிருக்கும்; அவன் பிழைப்பானென்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்றும், 2 இந்த நகரம் பாபிலோன் ராஜாவினுடைய இராணுவத்தின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அதைப் பிடிப்பானென்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்றும், 3 எரேமியா எல்லா ஜனத்தோடும் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகளை மாத்தானின் குமாரனாகிய செப்பத்தியாவும், பஸ்கூரின் குமாரனாகிய கெதலியாவும், செலேமியாவின் குமாரனாகிய யூகாலும், மல்கியாவின் குமாரனாகிய பஸ்கூரும் கேட்டார்கள். 4 அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனுஷன் கொல்லப்பட உத்தரவாகவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற யுத்தமனுஷரிடத்திலும், மற்றுமுள்ள சகல ஜனங்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினாலே அவர்களுடைய கைகளைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறான்; இவன் இந்த ஜனத்தின் க்ஷேமத்தைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள். 5 அப்பொழுது சிதேக்கியா ராஜா: இதோ, அவன் உங்கள் கைகளில் இருக்கிறான்; உங்களுக்கு விரோதமாய் ராஜா ஒன்றும் செய்யக்கூடாது என்றான். 6 அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான். 7 அவர்கள் எரேமியாவைத் துரவிலே போட்டதை ராஜாவின் அரமனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலிலே உட்கார்ந்திருந்தான். 8 அப்பொழுது எபெத்மெலேக் ராஜாவின் அரமனையிலிருந்து புறப்பட்டுப்போய், ராஜாவை நோக்கி: 9 ராஜாவாகிய என் ஆண்டவனே, இந்தப் புருஷர் எரேமியா தீர்க்கதரிசியைத் துரவிலே போட்டுச் செய்தது எல்லாம் தகாத செய்கையாயிருக்கிறது; அவன் இருக்கிற இடத்திலே பட்டினியினால் சாவானே, இனி நகரத்திலே அப்பமில்லை என்றான். 10 அப்பொழுது ராஜா எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியனை நோக்கி: நீ இவ்விடத்திலிருந்து முப்பது மனுஷரை உன்னுடனே கூட்டிக்கொண்டுபோய், எரேமியா தீர்க்கதரிசிசாகாததற்குமுன்னே அவனைத் துரவிலிருந்து தூக்கிவிடு என்று கட்டளையிட்டான். 11 அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனுஷரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரமனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழம்புடவைகளையும் கந்தைத்துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவண்டைக்குத் துரவிலே இறக்கிவிட்டு, 12 எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியன் எரேமியாவுடனே: கிழிந்துபோன இந்தப் பழம்புடவைகளையும் கந்தைகளையும் உம்முடைய அக்குள்களில் கயிறுகளுக்குள் அடங்கவைத்துப் போட்டுக்கொள்ளும் என்றான்; எரேமியா அப்படியே செய்தான். 13 அப்பொழுது எரேமியாவைக் கயிறுகளால் தூக்கி, அவனைத் துரவிலிருந்து எடுத்துவிட்டார்கள்; எரேமியா காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான். 14 பின்பு சிதேக்கியா ராஜா, எரேமியா தீர்க்கதரிசியைக் கர்த்தருடைய ஆலயத்தில் இருக்கும் மூன்றாம் வாசலிலே தன்னிடத்திற்கு வரவழைத்தான்; அங்கே ராஜா, எரேமியாவைநோக்கி: நான் உன்னிடத்தில் ஒரு காரியம் கேட்கிறேன்; நீ எனக்கு ஒன்றும் மறைக்கவேண்டாம் என்றான். 15 அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நான் அதை உமக்கு அறிவித்தால் என்னை நிச்சயமாய்க் கொலைசெய்வீரல்லவா? நான் உமக்கு ஆலோசனை சொன்னாலும், என் சொல்லைக் கேட்கமாட்டீர் என்றான். 16 அப்பொழுது சிதேக்கியா ராஜா: நான் உன்னைக் கொல்லாமலும், உன் பிராணனை வாங்கத்தேடுகிற இந்த மனுஷர் கையில் உன்னை ஒப்புக்கொடாமலும் இருப்பேன் என்பதை, நமக்கு இந்த ஆத்துமாவை உண்டுபண்ணின கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று எரேமியாவுக்கு இரகசியமாய் ஆணையிட்டான். 17 அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டைக்குப் புறப்பட்டுப்போவீரானால், உம்முடைய ஆத்துமா உயிரோடிருக்கும்; இந்தப்பட்டணம் அக்கினியால் சுட்டெரிக்கப்படுவதில்லை; நீரும் உம்முடைய குடும்பமும் உயிரோடிருப்பீர்கள். 18 நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்திற்குப் புறப்பட்டுப்போகாவிட்டால், அப்பொழுது இந்த நகரம் கல்தேயர் கையில் ஒப்புக்கொடுக்கப்படும், அவர்கள் இதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; நீர் அவர்களுக்குத் தப்பிப்போவதில்லை என்கிறதை இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 19 அப்பொழுது சிதேக்கியா ராஜா எரேமியாவை நோக்கி: கல்தேயர் தங்களைச் சேர்ந்துபோன யூதரின் கையிலே என்னைப் பரியாசம்பண்ண ஒப்புக்கொடுப்பார்களோ என்று நான் ஐயப்படுகிறேன் என்றான். 20 அதற்கு எரேமியா: உம்மை ஒப்புக்கொடார்கள்; நான் உம்மிடத்தில் சொல்லுகிற கர்த்தருடைய வார்த்தைக்குச் செவிகொடும், அப்பொழுது உமக்கு நன்மையாயிருக்கும், உம்முடைய ஆத்துமா பிழைக்கும். 21 நான் புறப்படுகிறதில்லை என்பீரேயாகில், கர்த்தர் எனக்குத் தெரியப்படுத்தின வார்த்தையாவது: 22 இதோ, யூதா ராஜாவின் வீட்டிலே மீதியான எல்லா ஸ்திரீகளும் வெளியே பாபிலோன் ராஜாவின் பிரபுக்களண்டையில் கொண்டுபோகப்படுவார்கள்; அப்பொழுது, இதோ, அவர்கள்தானே உம்முடைய இஷ்டர்கள்; அவர்கள் உமக்குப் போதனைசெய்து, உம்மை மேற்கொண்டார்கள் என்றும், உம்முடைய கால்கள் உளையிலே அமிழ்ந்தினபின்பு அவர்கள் பின்வாங்கிப்போனார்கள் என்றும் அந்த ஸ்திரீகளே சொல்லுவார்கள். 23 உம்முடைய எல்லா ஸ்திரீகளையும், உம்முடைய பிள்ளைகளையும் வெளியே கல்தேயரிடத்தில் கொண்டுபோவார்கள்; நீரும் அவர்கள் கைக்குத் தப்பிப்போகாமல் பாபிலோன் ராஜாவின் கையினால் பிடிக்கப்பட்டு, இந்த நகரம் அக்கினியால் சுட்டெரிக்கப்படக் காரணமாயிருப்பீர் என்றான். 24 அப்பொழுது சிதேக்கியா எரேமியாவை நோக்கி: இந்த வார்த்தைகளை ஒருவருக்கும் அறிவிக்கவேண்டாம்; அப்பொழுது நீ சாவதில்லை. 25 நான் உன்னோடே பேசினதைப் பிரபுக்கள் கேள்விப்பட்டு, உன்னிடத்தில் வந்து: நீ ராஜாவோடே பேசிக் கொண்டதை எங்களுக்குத் தெரிவி, எங்களுக்கு ஒன்றும் மறைக்காதே, அப்பொழுது உன்னைக் கொல்லாதிருப்போம்; ராஜா உன்னோடு என்ன பேசினார் என்று உன்னைக் கேட்பார்களேயாகில், 26 நான் யோனத்தானுடைய வீட்டிலே சாகாதபடிக்கு ராஜா என்னை அங்கே திரும்ப அனுப்பவேண்டாம் என்று, அவர் முகத்துக்கு முன்பாக விண்ணப்பம்பண்ணினேன் என்று சொல்வாயாக என்றான். 27 பின்பு எல்லாப் பிரபுக்களும், எரேமியாவினிடத்தில் வந்து, அவனைக் கேட்டார்கள்; அப்பொழுது அவன்: ராஜா கற்பித்த இந்த எல்லா வார்த்தைகளின்படியே அவர்களுக்கு அறிவித்தான்; காரியம் கேள்விப்படாமற்போனபடியினால், அவனோடே பேசாமலிருந்துவிட்டார்கள். 28 அப்படியே எரேமியா, எருசலேம் பிடிபடுகிற நாள்மட்டாகக் காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான்; எருசலேம் பிடிபட்டுப்போனபோதும் அங்கேயே இருந்தான்.

எரேமியா 39

1 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதை முற்றிக்கைபோட்டார்கள். 2 சிதேக்கியா அரசாண்ட பதினோராம் வருஷம் நாலாம் மாதம், ஒன்பதாம் தேதியிலே நகரத்து மதிலில் திறப்புக்கண்டது. 3 அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர், சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், நெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்பிரவேசித்து, நடுவாசலில் இருந்தார்கள். 4 அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவும் சகல யுத்த மனுஷரும் அவர்களைக் கண்டபோது, ஓடி, இராத்திரிகாலத்தில் ராஜாவுடைய தோட்டத்துவழியே, இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார்கள்; அவன் வயல்வெளியின் வழியே போய்விட்டான். 5 ஆனாலும், கல்தேயருடைய இராணுவம் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமபூமியில் சிதேக்கியாவைக் கிட்டி, அவனைப் பிடித்து, அவனை ஆமாத்தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்கு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே இவன் அவனைக் குறித்துத் தீர்ப்புச்செய்தான். 6 பின்பு பாபிலோன் ராஜா ரிப்லாவிலே, சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டுவித்தான்; யூதா பிரபுக்கள் அனைவரையும் பாபிலோன் ராஜா வெட்டி, 7 சிதேக்கியாவின் கண்களைக் கெடுத்து, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோக அவனுக்கு இரண்டு வெண்கல விலங்குகளைப் போட்டான். 8 கல்தேயர் ராஜாவின் அரமனையையும் ஜனத்தின் வீடுகளையும் அக்கினியால் சுட்டெரித்து, எருசலேமின் மதில்களை இடித்துப்போட்டார்கள். 9 நகரத்தில் தங்கியிருந்த ஜனங்களையும், தன் பட்சத்தில் ஓடிவந்துவிட்டவர்களையும், மீதியான மற்ற ஜனங்களையும், காவற் சேனாதிபதியாகிய நேபுசராதான் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோனான். 10 காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரை யூதா தேசத்திலே வைத்து, அவர்களுக்கு அந்நாளிலே திராட்சத்தோட்டங்களையும் வயல்நிலங்களையும் கொடுத்தான். 11 ஆனாலும் எரேமியாவைக் குறித்து, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானை நோக்கி: 12 நீ அவனை அழைப்பித்து, அவனுக்கு ஒரு பொல்லாப்பும் செய்யாமல், அவனைப் பத்திரமாய்ப் பார்த்து, அவன் உன்னோடே சொல்லுகிறபடியெல்லாம் அவனை நடத்தென்று கட்டளைகொடுத்தான். 13 அப்படியே காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானும், நேபுசஸ்பான், ரப்சாரீஸ், நெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் எல்லாப் பிரபுக்களும், 14 எரேமியாவைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்து வரவழைத்து, அவனை வெளியே வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோகும்படிக்கு அவனைச் சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் ஒப்புவித்தார்கள்; அப்படியே அவன் ஜனத்துக்குள்ளே தங்கியிருந்தான். 15 இதுவுமல்லாமல், எரேமியா இன்னும் காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருக்கையில், அவனுக்குக் கர்த்தரால் உண்டான வசனம்: 16 நீ போய், எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்குக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், இதோ, என்னுடைய வார்த்தைகளை இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரப்பண்ணுவேன்; அவைகள் அந்நாளிலே உன் கண்களுக்கு முன்பாக நிறைவேறும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 17 ஆனால் அந்நாளிலே உன்னைத் தப்புவிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நீ பயப்படுகிற மனுஷரின் கையிலே ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை. 18 உன்னை நிச்சயமாக விடுவிப்பேன், நீ பட்டயத்துக்கு இரையாவதில்லை; நீ என்னை நம்பினபடியினால் உன் பிராணன் உனக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப்போல இருக்குமென்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

எரேமியா 40

1 பாபிலோனுக்குக் கொண்டுபோகும்படி எருசலேமிலும் யூதாவிலும் சிறைகளாய்ப் பிடித்துவைக்கப்பட்ட ஜனங்களுக்குள் விலங்கிடப்பட்டிருந்த எரேமியாவைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் விடுதலையாக்கி ராமாவிலிருந்து அனுப்பிவிட்ட பின்பு, எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வசனம்: 2 காவற்சேனாதிபதி எரேமியாவை அழைப்பித்து, அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தர் இந்த ஸ்தலத்துக்கு இந்தத் தீங்கு வருமென்று சொல்லியிருந்தார். 3 தாம் சொன்னபடியே கர்த்தர் வரப்பண்ணியுமிருக்கிறார்; நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனீர்கள்; ஆகையால் உங்களுக்கு இந்தக் காரியம் வந்தது. 4 இப்போதும், இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய்த் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான். 5 அவன் இன்னும் போகாமலிருக்கும்போது, அவன் இவனை நோக்கி: நீ பாபிலோன் ராஜா யூதா பட்டணங்களின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்துக்குத் திரும்பிப்போய், அவனோடே ஜனங்களுக்குள்ளே தங்கியிரு; இல்லாவிட்டால், எவ்விடத்துக்குப் போக உனக்குச் செவ்வையாய்த் தோன்றுகிறதோ, அவ்விடத்துக்குப் போ என்று சொல்லி, காவற்சேனாதிபதி அவனுக்கு வழிச்செலவையும் வெகுமதியையும் கொடுத்து அவனை அனுப்பிவிட்டான். 6 அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் போய், தேசத்தில் மீதியான ஜனங்களுக்குள் அவனோடே தங்கியிருந்தான். 7 பாபிலோன் ராஜா அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவைத் தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்டிராத குடிகளில் ஏழைகளான புருஷரையும் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற இராணுவச் சேர்வைக்காரர் அனைவரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது, 8 அவர்கள் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; யாரெனில், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், கரேயாவின் குமாரராகிய யோகனானும், யோனத்தானும், தன்கூமேத்தின் குமாரனாகிய செராயாவும், நெத்தோபாத்தியனாகிய ஏப்பாயின் குமாரரும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரனாகிய யெசனியாவும் ஆகிய இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களுமே. 9 அப்பொழுது சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகன் கெதலியா அவர்களையும் அவர்கள் மனுஷரையும் நோக்கி: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம், நீங்கள் தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும். 10 நானோவெனில், இதோ, நம்மிடத்திலே வருகிற கல்தேயரிடத்தில் சேவிக்கும்படி மிஸ்பாவிலே குடியிருக்கிறேன்; நீங்களோ போய், திராட்சரசத்தையும் பழங்களையும் எண்ணெயையும் சேர்த்து, உங்கள் பாண்டங்களில் வைத்து, உங்கள் வசமாயிருக்கிற ஊர்களில் குடியிருங்கள் என்று ஆணையிட்டுச் சொன்னான். 11 மோவாபிலும் அம்மோன் புத்திரரிடத்திலும் ஏதோமிலும் சகல தேசங்களிலும் இருக்கிற யூதரும், பாபிலோன் ராஜா யூதாவில் சிலர் மீதியாயிருக்கக் கட்டளையிட்டானென்றும், சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவை அவர்கள்மேல் அதிகாரியாக்கினானென்றும், கேட்டபோது, 12 எல்லா யூதரும் தாங்கள் துரத்துண்ட எல்லா இடங்களிலுமிருந்து, யூதாதேசத்தில் கெதலியாவினிடத்தில் மிஸ்பாவுக்கு வந்து, திராட்சரசத்தையும் பழங்களையும் மிகுதியாய்ச் சேர்த்துவைத்தார்கள். 13 அப்பொழுது கரேயாவின் குமாரனாகிய யோகனானும் வெளியிலே இருந்த சகல இராணுவச் சேர்வைக்காரரும் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்து, 14 உம்மைக் கொன்றுபோடும்படிக்கு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய பாலிஸ் என்பவன், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை அனுப்பினானென்பதை நீர் அறியவில்லையோ என்றார்கள்; ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா அவர்கள் வார்த்தையை நம்பவில்லை. 15 பின்னும் கரேயாவின் குமாரனாகிய யோகனான் மிஸ்பாவிலே கெதலியாவோடே இரகசியமாய்ப் பேசி: நான் போய் ஒருவரும் அறியாமல் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை வெட்டிப்போட உத்தரவாகவேண்டும்; உம்மிடத்தில் சேர்ந்த யூதரெல்லாரும் சிதறுண்டுபோகவும் யூதாவில் மீந்தவர்கள் அழியவும் அவன் உம்மைக் கொன்றுபோடவேண்டியதென்ன என்றான். 16 ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா கரேயாவின் குமாரனாகிய யோகனானை நோக்கி: நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே; இஸ்மவேலின்மேல் நீ பொய் சொல்லுகிறாய் என்றான்.

எரேமியா 41

1 பின்பு ஏழாம் மாதத்திலே ராஜவம்சத்தில் பிறந்தவனும், எலிசாமாவின் குமாரனாகிய நெத்தானியாவின் மகனுமான இஸ்மவேலும், அவனுடனேகூட ராஜாவின் பிரபுக்களான பத்துப்பேரும் மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வந்து, அங்கே ஏகமாய்ப் போஜனம்பண்ணினார்கள். 2 அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த பத்துப்பேரும் எழும்பி, பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவைப் பட்டயத்தால் வெட்டினார்கள். 3 மிஸ்பாவிலே கெதலியாவினிடத்தில் இருந்த எல்லா யூதரையும், அங்கே காணப்பட்ட யுத்தமனுஷராகிய கல்தேயரையும் இஸ்மவேல் வெட்டிப்போட்டான். 4 அவன் கெதலியாவைக் கொன்ற பின்பு, மறுநாளிலே அதை ஒருவரும் இன்னும் அறியாதிருக்கையில்: 5 தாடியைச் சிரைத்து, வஸ்திரங்களைக் கிழித்து, தங்களைக் கீறிக்கொண்டிருந்த எண்பதுபேர் சீகேமிலும் சீலோவிலும் சமாரியாவிலுமிருந்து, தங்கள் கைகளில் காணிக்கைகளையும் தூபவர்க்கங்களையும், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகும்படி வந்தார்கள். 6 அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டு, அவர்களுக்கு எதிராக அழுதுகொண்டே நடந்துவந்து, அவர்களைச் சந்தித்தபோது, அவர்களை நோக்கி: அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வாருங்கள் என்றான். 7 அவர்கள் நகரத்தின் மத்தியில் வந்தபோது, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த மனுஷரும் அவர்களை வெட்டி ஒரு பள்ளத்திலே தள்ளிப்போட்டார்கள். 8 ஆனாலும் அவர்களில் பத்துப்பேர் மீந்திருந்தார்கள்; அவர்கள் இஸ்மவேலைப்பார்த்து: எங்களைக் கொலை செய்யவேண்டாம்; கோதுமையும் வாற்கோதுமையும் எண்ணெயும் தேனுமுள்ள புதையல்கள் எங்களுக்கு நிலத்தின்கீழ் இருக்கிறது என்றார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் சகோதரரோடுங்கூடக் கொலைசெய்யாமல் விட்டுவைத்தான். 9 இஸ்மவேல் கெதலியாவினிமித்தம் வெட்டின மனுஷருடைய பிரேதங்களையெல்லாம் எறிந்துபோட்ட பள்ளமோவெனில், ஆசா என்னும் ராஜா இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவினிமித்தம் உண்டுபண்ணின பள்ளந்தானே; அதை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டுண்ட பிரேதங்களால் நிரப்பினான். 10 பின்பு இஸ்மவேல் மிஸ்பாவில் இருக்கிற மீதியான ஜனத்தையெல்லாம் சிறைப்படுத்திக்கொண்டுபோனான்; ராஜாவின் குமாரத்திகளையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவின் விசாரிப்புக்கு ஒப்புவித்துப்போன மிஸ்பாவிலுள்ள மீதியான சகல ஜனங்களையும் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் சிறைப்படுத்திக்கொண்டு அம்மோன் புத்திரர் பட்சத்தில் போகப் புறப்பட்டான். 11 நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் செய்த பொல்லாப்பையெல்லாம் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரும் கேட்டபோது, 12 அவர்கள் புருஷரையெல்லாம் கூட்டிக்கொண்டு, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோடே யுத்தம்பண்ணப்போய், அவனைக் கிபியோனிலிருக்கும் பெருங்குளத்துத் தண்ணீரண்டையிலே கண்டார்கள். 13 அப்பொழுது இஸ்மவேலோடிருந்த சகல ஜனங்களும் கரேயாவின் குமாரனாகிய யோகனானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரையும் கண்டு சந்தோஷப்பட்டு, 14 இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து சிறைபிடித்துக்கொண்டுபோன ஜனங்களெல்லாம் பின்னிட்டுத் திரும்பி, கரேயாவின் குமாரனாகிய யோகனானிடத்தில் வந்துவிட்டார்கள். 15 நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோ, எட்டுப்பேரோடுங்கூட யோகனானின் கைக்குத் தப்பி, அம்மோன் புத்திரரிடத்தில் போனான். 16 கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரும், அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவை வெட்டிப்போட்ட நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் கொண்டுபோனதும், தாங்கள் கிபியோனிலே விடுதலையாக்கித் திரும்பப்பண்ணினதுமான மீதியான சகல ஜனமுமாகிய சேவகரான மனுஷரையும், ஸ்திரீகளையும், குழந்தைகளையும், அரமனைப் பிரதானிகளையும் சேர்த்துக்கொண்டு, 17 பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக்கின அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டிப்போட்டதினிமித்தம், கல்தேயருக்குப் பயந்தபடியினால், 18 தாங்கள் எகிப்துக்குப் போகப் புறப்பட்டு, பெத்லெகேமூருக்கு அருகான கிம்காமின் பேட்டையில் தங்கியிருந்தார்கள்.

எரேமியா 42

1 அப்பொழுது எல்லா இராணுவச் சேர்வைக்காரரும், கரேயாவின் குமாரனாகிய யோகனானும், ஓசாயாவின் குமாரனாகிய யெசனியாவும், சிறியோர் முதல் பெரியோர்மட்டுமான சகல ஜனங்களும் சேர்ந்துவந்து, 2 தீர்க்கதரிசியாகிய எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் நாங்கள் நடக்கவேண்டிய வழியையும், செய்யவேண்டிய காரியத்தையும் எங்களுக்குத் தெரியப்பண்ணும்படிக்கு, நீர் எங்கள் விண்ணப்பத்துக்கு இடங்கொடுத்து, மீதியாயிருக்கிற இந்தச் சகல ஜனங்களாகிய எங்களுக்காக உம்முடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும். 3 உம்முடைய கண்கள் எங்களைக் காண்கிறபடியே திரளான ஜனங்களில் கொஞ்சப்பேரே மீந்திருக்கிறோம் என்றார்கள். 4 அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி அவர்களை நோக்கி: நீங்கள் சொன்னதைக் கேட்டேன்; இதோ, உங்கள் வார்த்தையின்படியே உங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணுவேன்; கர்த்தர் உங்களுக்கு மறுஉத்தரவாகச் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் நான் உங்களுக்கு ஒன்றையும் மறைக்காமல் அறிவிப்பேன் என்றான். 5 அப்பொழுது அவர்கள் எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மைக்கொண்டு எங்களுக்குச் சொல்லியனுப்பும் எல்லா வார்த்தைகளின்படியும் நாங்கள் செய்யாவிட்டால், கர்த்தர் நமக்கு நடுவே சத்தியமும் உண்மையுமான சாட்சியாயிருக்கக்கடவர். 6 அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்ப்படிந்து நடப்போம் என்றார்கள். 7 பத்துநாள் சென்றபின்பு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாயிற்று. 8 அப்பொழுது அவன், கரேயாவின் குமாரனாகிய யோகனானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரையும், சிறியோர்முதல் பெரியோர்மட்டும் உண்டான சகல ஜனங்களையும் அழைத்து, 9 அவர்களை நோக்கி: உங்களுக்காக விண்ணப்பஞ்செய்யும்படிக்கு நீங்கள் என்னை அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், 10 நீங்கள் இந்தத் தேசத்திலே தரித்திருந்தால், நான் உங்களைக் கட்டுவேன், உங்களை இடிக்கமாட்டேன்; உங்களை நாட்டுவேன், உங்களைப் பிடுங்கமாட்டேன்; நான் உங்களுக்குச் செய்திருக்கிற தீங்குக்கு மனஸ்தாபப்பட்டேன். 11 நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்குப் பயப்படவேண்டாம், அவனுக்குப் பயப்படாதிருப்பீர்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்களை இரட்சிக்கும்படிக்கும், உங்களை அவன் கைக்குத் தப்புவிக்கும்படிக்கும் நான் உங்களுடனே இருந்து, 12 அவன் உங்களுக்கு இரங்குகிறதற்கும், உங்கள் சுயதேசத்துக்கு உங்களைத் திரும்பிவரப்பண்ணுகிறதற்கும் உங்களுக்கு இரக்கஞ்செய்வேன். 13 நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமல், நாங்கள் இந்தத் தேசத்திலே இருக்கிறதில்லையென்றும், 14 நாங்கள் யுத்தத்தைக் காணாததும், எக்காள சத்தத்தைக் கேளாததும், அப்பத்தாழ்ச்சியினால் பட்டினியாய் இராததுமான எகிப்து தேசத்துக்கே போய், அங்கே தரித்திருப்போம் என்றும் சொல்வீர்களேயாகில், 15 யூதாவில் மீந்திருக்கிறவர்களே, அதைக்குறித்து உண்டான கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்: நீங்கள் எகிப்துக்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால், 16 நீங்கள் பயப்படுகிற பட்டயம் எகிப்து தேசத்திலே உங்களைப் பிடிக்கும்; நீங்கள் ஐயப்படுகிற பஞ்சம் எகிப்திலே உங்களைத் தொடர்ந்து வரும், அங்கே சாவீர்கள். 17 எகிப்திலே தங்கவேண்டுமென்று அவ்விடத்துக்குத் தங்கள் முகங்களைத் திருப்பின எல்லா மனுஷருக்கும் என்ன சம்பவிக்குமென்றால், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவார்கள்; நான் அவர்கள்மேல் வரப்பண்ணும் தீங்கினாலே அவர்களில் மீதியாகிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 18 என் கோபமும் என் உக்கிரமும் எருசலேமின் குடிகள்மேல் எப்படி மூண்டதோ, அப்படியே என் உக்கிரம் நீங்கள் எகிப்துக்குப் போகும்போது, உங்கள்மேல் மூளும்; நீங்கள் சாபமாகவும் பாழாகவும் பழிப்பாகவும் நிந்தையாகவும் இருந்து, இவ்விடத்தை இனிக்காணாதிருப்பீர்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 19 யூதாவில் மீதியானவர்களே, எகிப்துக்குப் போகாதிருங்கள் என்று கர்த்தர் உங்களைக்குறித்துச் சொன்னாரென்பதை இந்நாளில் உங்களுக்குச் சாட்சியாக அறிவித்தேன் என்று அறியுங்கள். 20 உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாய் உங்களை மோசம்போக்கினீர்கள்; நீ எங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம்பண்ணி, எங்கள் தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் எங்களுக்கு அறிவிக்கவேண்டும்; அதின்படியே செய்வோம் என்று நீங்கள் சொல்லி, என்னை உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்துக்கு அனுப்பினீர்கள். 21 நான் இந்நாளில் அதை உங்களுக்கு அறிவித்தேன்; ஆனாலும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கும், அவர் என்னைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பின எந்தக்காரியத்துக்கும் செவிகொடாமற்போனீர்கள். 22 இப்போதும் தங்கியிருப்பதற்கு நீங்கள் போக விரும்புகிற ஸ்தலத்தில்தானே பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவீர்களென்று நிச்சயமாய் அறியுங்கள் என்றான்.

எரேமியா 43

1 எரேமியா சகல ஜனங்களுக்கும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தன்னைக்கொண்டு அவர்களுக்குச் சொல்லியனுப்பின எல்லா வார்த்தைகளையும் சொன்னான்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தருடைய எல்லா வார்த்தைகளையும் அவன் அவர்களுக்குச் சொல்லிமுடித்தபின்பு, 2 ஓசாயாவின் குமாரனாகிய அசரியாவும், கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அகங்காரிகளான எல்லா மனுஷரும் எரேமியாவை நோக்கி: நீ பொய் சொல்லுகிறாய்; எகிப்திலே தங்கும்படிக்கு அங்கே போகாதிருங்கள் என்று சொல்ல, எங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை எங்களிடத்துக்கு அனுப்பவில்லை. 3 கல்தேயர் எங்களைக் கொன்றுபோடவும், எங்களைப் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகவும், எங்களை அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நேரியாவின் குமாரனாகிய பாருக்குத்தானே உன்னை எங்களுக்கு விரோதமாக ஏவினான் என்றார்கள். 4 அப்படியே யூதாவின் தேசத்திலே தரித்திருக்கவேண்டும் என்னும் கர்த்தருடைய சத்தத்துக்குக் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், சகல இராணுவச் சேர்வைக்காரரும், சகல ஜனங்களும் செவிகொடாமற்போனார்கள். 5 யூதா தேசத்தில் தங்கியிருப்பதற்கு, தாங்கள் துரத்துண்டிருந்த சகல ஜாதிகளிடத்திலுமிருந்து திரும்பிவந்த மீதியான யூதரெல்லாரையும், புருஷரையும், ஸ்திரீகளையும், குழந்தைகளையும், ராஜாவின் குமாரத்திகளையும், காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான், சாப்பானின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் விட்டுப்போன சகல ஆத்துமாக்களையும், தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் குமாரனாகிய பாருக்கையும், 6 கரேயாவின் குமாரனாகிய யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் கூட்டிக்கொண்டு, 7 கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாதபடியினாலே, எகிப்துதேசத்துக்குப் போக எத்தனித்து, அதிலுள்ள தக்பானேஸ்மட்டும் போய்ச் சேர்ந்தார்கள். 8 தக்பானேசிலே கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்: 9 நீ உன் கையிலே பெரிய கற்களை எடுத்துக்கொண்டு, யூதா ஜனங்களுக்கு முன்பாக அவைகளைத் தக்பானேசில் இருக்கிற பார்வோனுடைய அரமனையின் ஒலிமுகவாசலில் இருக்கிற சூளையின் களிமண்ணிலே புதைத்து வைத்து, 10 அவர்களை நோக்கி: இதோ, என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவை நான் அழைத்தனுப்பி, நான் புதைப்பித்த இந்தக் கற்களின்மேல் அவனுடைய சிங்காசனத்தை வைப்பேன்; அவன் தன் ராஜகூடாரத்தை அவைகளின்மேல் விரிப்பான். 11 அவன் வந்து, எகிப்துதேசத்தை அழிப்பான்; சாவுக்கு ஏதுவானவன் சாவுக்கும், சிறையிருப்புக்கு ஏதுவானவன் சிறையிருப்புக்கும், பட்டயத்துக்கு ஏதுவானவன் பட்டயத்துக்கும் உள்ளாவான். 12 எகிப்தின் தேவர்களுடைய கோவில்களில் அக்கினியைக் கொளுத்துவேன்; அவன் அவைகளைச் சுட்டெரித்து, அவைகளைச் சிறைபிடித்துப்போய், ஒரு மேய்ப்பன் தன் கம்பளியைப் போர்த்துக்கொள்ளுமாப்போல் எகிப்துதேசத்தைப் போர்த்துக்கொண்டு, அவ்விடத்திலிருந்து சுகமாய்ப் புறப்பட்டுப்போவான். 13 அவன் எகிப்துதேசத்தில் இருக்கிற பெத்ஷிமேசின் சிலைகளை உடைத்து, எகிப்தின் தேவர்களுடைய கோவில்களை அக்கினியால் சுட்டுப்போடுவான் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

எரேமியா 44

1 எகிப்துதேசத்தில் குடியேறி, மிக்தோலிலும், தக்பானேசிலும், நோப்பிலும், பத்ரோஸ் சீமையிலும் வாசமான எல்லா யூதரையுங்குறித்து, எரேமியாவுக்கு உண்டான வசனம்: 2 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் எருசலேமின்மேலும், யூதாவின் சகல பட்டணங்களின்மேலும், வரப்பண்ணின தீங்கையெல்லாம் நீங்கள் கண்டீர்கள். 3 இதோ, அவர்களும் நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேவர்களுக்குத் தூபங்காட்டவும், ஆராதனை செய்யவும் போய், எனக்குக் கோபமூட்டும்படிக்குச் செய்த அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம், அவைகள் இந்நாளில் பாழாய்க்கிடக்கிறது, அவைகளில் குடியில்லை. 4 நான் வெறுக்கிற இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யாதிருங்களென்று, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு உங்களுக்கு ஏற்கனவே சொல்லியனுப்பிக்கொண்டிருந்தேன். 5 ஆனாலும் அவர்கள் அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டாதபடிக்கு, என் சொல்லைக் கேளாமலும், பொல்லாப்பை விட்டுத் திரும்புவதற்குச் செவியைச் சாய்க்காமலும் போனார்கள். 6 ஆகையால், என் உக்கிரமும் என் கோபமும் மூண்டு, யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் பற்றியெரிந்தது; அவைகள் இந்நாளில் இருக்கிறபடி வனாந்தரமும் பாழுமாய்ப் போயிற்று. 7 இப்போதும் இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் யூதாவில் ஒருவரையும் உங்களுக்கு மீதியாக வைக்காமல், உங்களில் புருஷனையும் ஸ்திரீயையும் பிள்ளையையும் பால்குடிக்கிற குழந்தையையும் வேரற்றுப்போகப்பண்ணும்படிக்கு, உங்கள் கைகளின் கிரியைகளாலே எனக்குக் கோபமூட்டுகிற பெரிய பொல்லாப்பை உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாகச் செய்து, 8 உங்களை வேரற்றுப்போகப்பண்ணுவதற்காகவும், நீங்கள் பூமியின் சகல ஜாதிகளுக்குள்ளும் சாபமும் நிந்தையுமாயிருப்பதற்காகவும், நீங்கள் தங்கியிருக்கவந்த எகிப்துதேசத்திலே அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டுவானேன்? 9 யூதாதேசத்திலும் எருசலேமின் வீதிகளிலும் உங்கள் பிதாக்கள் செய்த பொல்லாப்புகளையும், யூதாவின் ராஜாக்கள் செய்த பொல்லாப்புகளையும், அவர்கள் ஸ்திரீகள் செய்த பொல்லாப்புகளையும், நீங்கள் செய்த பொல்லாப்புகளையும், உங்கள் ஸ்திரீகள் செய்த பொல்லாப்புகளையும் மறந்துபோனீர்களோ? 10 அவர்கள் இந்நாள்மட்டும் மனம் நொறுங்குண்டதுமில்லை, அவர்கள் பயப்படுகிறதுமில்லை; நான் உங்கள் முன்பாகவும் உங்கள் பிதாக்கள் முன்பாகவும் வைத்த என் வேதத்தின்படியும் என் கட்டளைகளின்படியும் நடக்கிறதுமில்லை. 11 ஆகையால், இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உங்களுக்குத் தீங்குண்டாகவும், யூதாவனைத்தையும் சங்கரிக்கத்தக்கதாகவும், என் முகத்தை உங்களுக்கு விரோதமாகத் திருப்பி, 12 எகிப்துதேசத்திலே தங்கும்படிக்கு வரத் தங்கள் முகங்களைத் திருப்பின மீதியான யூதரை வாரிக்கொள்ளுவேன்; அவர்கள் அனைவரும் எகிப்துதேசத்திலே நிர்மூலமாவார்கள்; அவர்கள் சிறியவன்முதல் பெரியவன்வரைக்கும், பட்டயத்துக்கு இரையாகி, பஞ்சத்தாலும் நிர்மூலமாவார்கள்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் செத்து, சாபமும் பாழும் பழிப்பும் நிந்தையுமாவார்கள். 13 நான் எருசலேமைத் தண்டித்தபடி எகிப்துதேசத்தில் குடியிருக்கிறவர்களையும் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் தண்டிப்பேன். 14 எகிப்துதேசத்திலே தங்கவும், மறுபடியும் தங்கள் ஆத்துமா வாஞ்சித்திருக்கிற யூதா தேசத்திலே குடியேறுவதற்கு அங்கே திரும்பிப்போகவும் வேண்டுமென்று இங்கே வந்த மீதியான யூதரிலே மீதியாயிருக்கிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை; தப்பிப்போகிறவர்களாகிய மற்றவர்களேயொழிய அவர்களில் ஒருவரும் அங்கே திரும்புவதில்லையென்றார் என்று சொன்னான். 15 அப்பொழுது தங்கள் ஸ்திரீகள் அந்நிய தேவர்களுக்குத் தூபங்காட்டினதாக அறிந்திருந்த எல்லாப் புருஷரும், பெரிய கூட்டமாய் நின்றிருந்த எல்லா ஸ்திரீகளும், எகிப்துதேசத்தில் பத்ரோசிலே குடியிருந்த சகல ஜனங்களும் எரேமியாவுக்குப் பிரதியுத்தரமாக: 16 நீ கர்த்தருடைய நாமத்தில் எங்களுக்குச் சொன்ன வார்த்தையின்படியே நாங்கள் உனக்குச் செவிகொடாமல், 17 எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராக்கினிக்குத் தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம்; நாங்களும், எங்கள் பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம். 18 நாங்கள் வானராக்கினிக்குத் தூபங்காட்டாமலும், அவளுக்குப் பானபலிகளை வார்க்காமலும் போனதுமுதற்கொண்டு, எல்லாம் எங்களுக்குக் குறைவுபட்டது; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் அழிந்துபோனோம். 19 மேலும் நாங்கள் வானராக்கினிக்குத் தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்த்தபோது, நாங்கள் எங்கள் புருஷரின் அனுமதியில்லாமல் அவளுக்குப் பணியாரங்களைச் சுட்டு, பானபலிகளை வார்த்து, அவளை நமஸ்கரித்தோமோ? என்றார்கள். 20 அப்பொழுது எரேமியா, தனக்கு இப்படிப்பட்ட மறுமொழி கொடுத்த சகல ஜனங்களாகிய ஸ்திரீ புருஷர்களையும் மற்ற யாவரையும் நோக்கி: 21 யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும், நீங்களும் உங்கள் பிதாக்களும் உங்கள் ராஜாக்களும், உங்கள் பிரபுக்களும், தேசத்தின் ஜனங்களும் காட்டின தூபங்களை அல்லவோ கர்த்தர் நினைத்துத் தம்முடைய மனதிலே வைத்துக்கொண்டார். 22 உங்கள் கிரியைகளின் பொல்லாப்பையும், நீங்கள் செய்த அருவருப்புகளையும், கர்த்தர் அப்புறம் பொறுத்திருக்கக்கூடாதபடியினால் அல்லவோ, உங்கள் தேசம் இந்நாளில் இருக்கிறபடி குடியற்ற அந்தரவெளியும் பாழும் சாபமுமாயிற்று. 23 நீங்கள் தூபங்காட்டி, கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, கர்த்தருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வேதத்துக்கும், அவருடைய கட்டளைகளுக்கும், அவருடைய சாட்சிகளுக்கும் இணங்கி நடவாமலும் போனபடியினாலே இந்நாளில் இருக்கிறபடி இந்தத் தீங்கு உங்களுக்கு நேரிட்டது என்றான். 24 பின்னும் எரேமியா சகல ஜனங்களையும், சகல ஸ்திரீகளையும் நோக்கி: எகிப்துதேசத்தில் இருக்கிற யூதராகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 25 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், வானராக்கினிக்குத் தூபங்காட்டவும், அவளுக்குப் பானபலிகளை வார்க்கவும், நாங்கள் நேர்ந்துகொண்ட பொருத்தனைகளை எவ்விதத்திலும் செலுத்துவோமென்று, நீங்களும் உங்கள் ஸ்திரீகளும், உங்கள் வாயினாலே சொல்லி, உங்கள் கைகளினாலே நிறைவேற்றினீர்கள்; நீங்கள் உங்கள் பொருத்தனைகளை ஸ்திரப்படுத்தினது மெய்யே, அவைகளைச் செலுத்தினதும் மெய்யே. 26 ஆகையால், எகிப்துதேசத்தில் குடியிருக்கிற யூதா ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ, கர்த்தராகிய ஆண்டவருடைய ஜீவனாணை என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூதா மனுஷன் வாயினாலும் இனி என் நாமம் வழங்கப்படுவதில்லையென்று நான் என் மகத்தான நாமத்தைக்கொண்டு ஆணையிடுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 27 இதோ, நான் அவர்கள்மேல் நன்மைக்கல்ல தீமைக்கே ஜாக்கிரதையாயிருப்பேன்; எகிப்து தேசத்திலிருக்கிற யூதா மனுஷர் எல்லாரும் ஒழிந்து தீருமளவும் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சங்காரமாவார்கள். 28 ஆனாலும் பட்டயத்துக்குத் தப்புகிறவர்கள் எகிப்துதேசத்திலிருந்து யூதாதேசத்துக்குக் கொஞ்சம் பேராய்த் திரும்புவார்கள்; அப்படியே எகிப்துதேசத்திலே தங்கியிருக்க வந்த யூதாவில் மீதியான அனைவரும் அக்காலத்திலே தங்களுடைய வார்த்தையோ, என் வார்த்தையோ, யாருடைய வார்த்தை மெய்ப்படும் என்று அறிவார்கள். 29 நான் இவ்விடத்தில் உங்களைத் தண்டிப்பேன் என்று உங்களுக்கு விரோதமாய்ச் சொன்ன என் வார்த்தைகள் மெய்ப்படுமென்று நீங்கள் அறிவதற்கு உங்களுக்கு இதுவே அடையாளம் என்று கர்த்தர் சொல்லுகிறார். 30 இதோ, நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவை, அவனுடைய சத்துருவும் அவன் பிராணனை வாங்கத் தேடினவனுமாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்ததுபோல, நான் பார்வோன் ஒப்பிரா என்னும் எகிப்தின் ராஜாவையும், அவனுடைய சத்துருக்களின் கையிலும், அவன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

எரேமியா 45

1 யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே நேரியாவின் குமாரனாகிய பாருக் இந்த வசனங்களை எரேமியாவின் வாய் சொல்ல ஒரு புஸ்தகத்தில் எழுதுகையில், எரேமியா தீர்க்கதரிசி அவனிடத்தில் பேசி, 2 பாருக்கே, உன்னைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், 3 நீ: இப்பொழுது எனக்கு ஐயோ! கர்த்தர் என் நோவைச் சஞ்சலத்தால் வர்த்திக்கப்பண்ணினார், என் தவிப்பினால் இளைத்தேன், இளைப்பாறுதலைக் காணாதேபோனேன் என்று சொன்னாய் என்கிறார். 4 இதோ, நான் கட்டினதையே நான் இடிக்கிறேன்; நான் நாட்டினதையே நான் பிடுங்குகிறேன்; இந்த முழுத்தேசத்துக்கும் இப்படியே நடக்கும். 5 நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே; இதோ, மாம்சமான யாவர்மேலும் தீங்கை வரப்பண்ணுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும், நீ போகும் சகல ஸ்தலங்களிலும் உன் பிராணனை உனக்குக் கிடைக்கும் கொள்ளைப்பொருளாகத் தருகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுடனே சொல் என்றார்.

எரேமியா 46

1 புறஜாதிகளுக்கு விரோதமாய் எரேமியா தீர்க்கதரிசிக்கு உண்டான கர்த்தருடைய வசனம்: 2 எகிப்தைக்குறித்தும், ஐப்பிராத்து நதியண்டையில் கர்கேமிசிலே இருந்ததும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே முறிய அடித்ததுமான பார்வோன்நேகோ என்னப்பட்ட எகிப்து ராஜாவின் ராணுவத்தைக்குறித்தும் அவர் சொல்லுகிறது என்னவென்றால்: 3 கேடகங்களையும் பரிசைகளையும் ஆயத்தம்பண்ணி, யுத்தத்துக்கு வாருங்கள். 4 குதிரைவீரரே, குதிரைகளின்மேல் சேணங்களை வைத்து ஏறி, தலைச்சீராயை அணிந்துகொண்டு நில்லுங்கள்; ஈட்டிகளைத் துலக்கி, கவசங்களைத் தரித்துக்கொள்ளுங்கள். 5 அவர்கள் கலங்கி, பின்வாங்குகிறதை நான் காண்கிறதென்ன? சுற்றிலுமுண்டான பயங்கரத்தினிமித்தம் அவர்களுடைய பராக்கிரமசாலிகள் முறியுண்டு, திரும்பிப்பாராமல் ஓட்டமாய் ஓடிப்போகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 6 வேகமாய் ஓடுகிறவன் ஓடிப்போகவேண்டாம்; பராக்கிரமசாலி தப்பிப்போகவேண்டாம்; வடக்கே ஐப்பிராத்து நதியண்டையிலே அவர்கள் இடறிவிழுவார்கள். 7 பிரவாகம்போல் புரண்டுவருகிற இவன் யார்? அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல் எழும்பிவருகிற இவன் யார்? 8 எகிப்தியனே பிரவாகத்தைப்போல் புரண்டுவருகிறான், அவனே அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல எழும்பிவருகிறான்; நான் போய், தேசத்தை மூடி, நகரத்தையும் அதில் குடியிருக்கிறவர்களையும் அழிப்பேன் என்றான். 9 குதிரைகளே, போய் ஏறுங்கள்; இரதங்களே, கடகட என்று ஓடுங்கள்; பராக்கிரமசாலிகளும், கேடகம் பிடிக்கிற எத்தியோப்பியரும், பூத்தியரும், வில்லைப்பிடித்து நாணேற்றுகிற லீதியரும் புறப்படக்கடவர்கள். 10 ஆனாலும், இது சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரின் நாளும், அவர் தம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளுமாயிருக்கிறது; ஆகையால், பட்டயம் பட்சித்து, அவர்களுடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்; வடதேசத்தில் ஐப்பிராத்து நதியண்டையிலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருக்கு ஒரு யாகமும் உண்டு. 11 எகிப்தின் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ கீலேயாத்துக்குப் போய், பிசின் தைலம் வாங்கு; திரளான அவிழ்தங்களை நீ கூட்டுகிறது விருதா, உனக்கு ஆரோக்கியமுண்டாகாது. 12 ஜாதிகள் உன் இலச்சையைக் கேள்விப்பட்டார்கள்; உன் கூக்குரலால் தேசம் நிறைந்தது; பராக்கிரமசாலியின்மேல் பராக்கிரமசாலி இடறி, இருவரும் ஏகமாய் விழுந்தார்கள் என்றார். 13 எகிப்துதேசத்தை அழிக்கப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் வருவானென்பதைக்குறித்து, எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் கர்த்தர் சொன்ன வசனம்: 14 ஆயத்தப்பட்டு நில், பட்டயம் உன்னைச் சுற்றிலும் உண்டானதைப் பட்சித்துப்போடுகிறதென்று சொல்லி, எகிப்திலே அறிவித்து, மிக்தோலிலே கூறி, நோப்பிலும் தக்பானேசிலும் பிரசித்தம்பண்ணுங்கள். 15 உன் வீரர் வாரிக்கொள்ளப்படுகிறதென்ன? கர்த்தர் அவர்களைத் தள்ளினதால் அவர்கள் நிலைநிற்கவில்லை. 16 அநேகரை இடறப்பண்ணுகிறார்; அவனவன் தனக்கடுத்தவன்மேல் விழுகிறான்; அவர்கள்: எழுந்திருங்கள், கொல்லுகிற பட்டயத்துக்குத் தப்ப நமது ஜனத்தண்டைக்கும், நாம் பிறந்த தேசத்துக்கும் திரும்பிப்போவோம் என்கிறார்கள். 17 எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் பாழாக்கப்பட்டான்; அவனுக்குக் குறித்த காலம் முடிந்ததென்று அங்கே சத்தமிட்டுச் சொல்லுகிறார்கள். 18 பர்வதங்களில் தாபோரும், சமுத்திரத்தின் அருகே கர்மேலும் இருக்கிற நிச்சயம்போல் அவன் வருவானென்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா தம்முடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறார். 19 எகிப்துதேசவாசியாகிய குமாரத்தியே, சிறையிருப்புக்குப் போகும் பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்து, நோப் பாழாகும்; அது குடியில்லாமல் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கும். 20 எகிப்து மகா நேர்த்தியான கடாரி, அடிக்கிறவன் வடக்கேயிருந்து வருகிறான். 21 அதின் நடுவில் இருக்கிற அதின் கூலிப்படைகள் கொழுத்த காளைகள் போலிருக்கிறார்கள்; இவர்களும் நிற்காமல், திரும்பிக்கொண்டு ஏகமாய் ஓடிப்போவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படுகிற அவர்களுடைய ஆபத்துநாள் அவர்கள்மேல் வந்தது. 22 அவன் பாம்பைப்போல் சீறிவருவான், இராணுவபலத்தோடே நடந்து, காடுவெட்டிகளைப்போல் கோடரிகளோடு அதின்மேல் வருவார்கள். 23 எண்ணப்படாத மரங்களாயிருந்தாலும் அந்தக் காட்டை வெட்டுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வெட்டுக்கிளிகளைப்பார்க்கிலும் அதிகமானவர்கள், அவர்களுக்குத் தொகையில்லை. 24 எகிப்தின் குமாரத்தி கலங்குவாள்; வடதிசை ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாள். 25 இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நோ என்னும் பட்டணத்திலுள்ள திரளான ஜனங்களையும், பார்வோனையும், எகிப்தையும், அதின் தேவர்களையும், அதின் ராஜாக்களையும், பார்வோனையும், அவனை நம்பியிருக்கிறவர்களையும் விசாரித்து, 26 அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும், அவனுடைய சேவகரின் கையிலும், அவர்களை ஒப்புக்கொடுப்பேன்; அதற்குப்பின்பு அது பூர்வகாலத்தில் இருந்ததுபோல் குடியேற்றப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். 27 என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்து இரட்சிப்பேன்; அப்பொழுது யாக்கோபு திரும்பிவந்து, அமைதியோடும் சாங்கோபாங்கத்தோடும் இருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுவார் இல்லை. 28 என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; உன்னைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமல், உன்னை மட்டாய்த் தண்டிப்பேன்; ஆனாலும் உன்னை நான் குற்றமில்லாமல் நீங்கலாக விடுவதில்லையென்கிறார்.

எரேமியா 47

1 பார்வோன் காத்சாவை அழிக்குமுன்னே, பெலிஸ்தருக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம்: 2 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, வடக்கேயிருந்து ஜலம் பொங்கிப் பிரவாகமாகித் தேசத்தின்மேலும், அதிலுள்ள எல்லாவற்றின்மேலும், நகரத்தின்மேலும், அதில் குடியிருக்கிறவர்களின்மேலும் புரண்டு ஓடும்; அப்பொழுது மனுஷர் கூக்குரலிட்டு, தேசத்தின் குடிகளெல்லாரும் அலறுவார்கள். 3 அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார் தங்கள் கை அயர்ந்துபோனதினால் தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பாராதிருப்பார்கள். 4 பெலிஸ்தரையெல்லாம் பாழாக்கவும், தீருவுக்கும் சீதோனுக்கும் மீதியான சகாயரையெல்லாம் சங்காரம்பண்ணவும் வருகிற நாளிலே இப்படியாகும்; கப்தோர் என்னும் கடற்கரையான தேசத்தாரில் மீதியாகிய பெலிஸ்தரையும் கர்த்தர் பாழாக்குவார். 5 காத்சா மொட்டையடிக்கப்படும்; அவர்களுடைய பள்ளத்தாக்கிலே மீதியாகிய அஸ்கலோன் சங்காரமாகும்; நீ எந்தமட்டுந்தான் உன்னைக் கீறிக்கொள்ளுவாய். 6 ஆ கர்த்தரின் பட்டயமே, எந்தமட்டும் அமராதிருப்பாய்? உன் உறைக்குள் திரும்பிவந்து, ஓய்ந்து அமர்ந்திரு. 7 அது எப்படி அமர்ந்திருக்கும்? அஸ்கலோனுக்கு விரோதமாகவும் கடல்துறை தேசத்துக்கு விரோதமாகவும் கர்த்தர் அதற்குக் கட்டளைகொடுத்து, அவ்விடங்களுக்கென்று அதைக் குறித்தாரே.

எரேமியா 48

1 மோவாபைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ! நேபோ பாழாக்கப்பட்டது; கீரியாத்தாயீம் வெட்கப்பட்டு, பிடிக்கப்பட்டுப்போயிற்று; மிஸ்காப் வெட்கப்பட்டு, கலங்கிப்போயிற்று. 2 எஸ்போனைக்குறித்து மோவாபுக்கு இருந்த பெத்தரிக்கம் இனி இராது; அது ஒரு ஜாதியாயிராதபடிக்கு அதை நிர்மூலமாக்குவேன் வாருங்களென்று அதற்கு விரோதமாகப் பொல்லாப்பை நினைத்திருக்கிறார்கள்; மத்மேனே, நீயும் சங்காரமாவாய்; பட்டயம் உன்னைத் தொடரும். 3 பாழ்க்கடிப்பினாலும் பெரிய நொறுக்குதலினாலும் உண்டாகிற கூப்பிடுதலின் சத்தம் ஒரொனாயிமிலிருந்து கேட்கப்படும். 4 மோவாப் நொறுங்குண்டது; அதிலுள்ள சிறுவர்கள் கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது. 5 லூகித்துக்கு ஏறிப்போகிற வழியிலே அழுகையின்மேல் அழுகை எழும்பும்; ஒரொனாயிமுக்கு இறங்கிப்போகிற வழியிலே நொறுக்குதல் செய்கிறதினால் உண்டாகிய கூக்குரலைக் சத்துருக்கள் கேட்கிறார்கள். 6 உங்கள் பிராணன் தப்ப ஓடிப்போங்கள்; வனாந்தரத்திலுள்ள கறளையாய்ப்போன செடியைப்போலிருப்பீர்கள். 7 நீ உன் சம்பத்தையும் உன் பொக்கிஷங்களையும் நம்புகிறபடியினாலே நீயும் பிடிக்கப்படுவாய், அப்பொழுது கேமோஷ் சிறையாக்கப்பட்டுப்போம்; அதின் ஆசாரியரும் பிரபுக்களும் ஏகமாய்ச் சிறைப்பட்டுப்போவார்கள். 8 பாழாக்குகிறவன் எல்லாப் பட்டணங்களின்மேலும் வருவான்; ஒரு பட்டணமும் தப்பிப்போவதில்லை; பள்ளத்தாக்குகளும் கெட்டுப்போகும்; சமனான பூமியும் அழிக்கப்படும் என்று கர்த்தர் சொன்னார். 9 மோவாபுக்குச் செட்டைகளைக் கொடுங்கள்; அது பறந்துபோகட்டும்; அதின் பட்டணங்கள் குடிகளில்லாமல் பாழாய்ப்போகும். 10 கர்த்தருடைய வேலையை அசதியாய்ச் செய்கிறவன் சபிக்கப்பட்டவன்; இரத்தம் சிந்தாதபடிக்குத் தன் பட்டயத்தை அடக்கிக்கொள்ளுகிறவன் சபிக்கப்பட்டவன். 11 மோவாப் தன் சிறுவயதுமுதல் சுகமாய் வாழ்ந்தது; அது ஒரு பாத்திரத்திலிருந்து மறு பாத்திரத்தில் வார்க்கப்படாமலும், அதின் வண்டல்களின்மேல் அசையாமலும் இருந்தது; அது சிறையிருப்புக்குப் போனதில்லை; ஆதலால் அதின் ருசி அதில் நிலைத்திருந்தது; அதின் வாசனை வேறுபடவில்லை. 12 ஆகையால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது கவிழ்த்துப்போடுகிறவர்களை அதற்கு அனுப்புவேன்; அவர்கள் அதைக் கவிழ்த்து, அதின் பாத்திரங்களை வெறுமையாக்கி, அதின் ஜாடிகளை உடைத்துப்போடுவார்கள். 13 அப்பொழுது இஸ்ரவேல் சந்ததி தங்கள் நம்பிக்கையான பெத்தேலாலே வெட்கப்பட்டதுபோல, மோவாப் கேமோஷாலே வெட்கப்படும். 14 நாங்கள் பராக்கிரமசாலிகளென்றும், நாங்கள் யுத்தசன்னத்தரென்றும் நீங்கள் சொல்லுகிறதென்ன? 15 மோவாப் அழிந்தது, அதின் பட்டணங்கள் எரிந்துபோயின; அதின் திறமையுள்ள வாலிபர் கொலைக்களத்துக்கு இறங்குகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார். 16 மோவாபின் ஆபத்துவரச் சமீபமாயிருக்கிறது; அதின் தீங்கு மிகவும் தீவிரித்துவருகிறது. 17 அதின் சுற்றுப்புறத்தாரும் அதின் பேரை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் அதற்காக அங்கலாய்த்துக் கொள்ளுங்கள்; பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல்லுங்கள். 18 தீபோன் பட்டணவாசியான குமாரத்தியே, நீ உன் மகிமையை விட்டிறங்கி, தாகத்தோடே உட்கார்ந்திரு; மோவாபைப் பாழாக்குகிறவன் உனக்கு விரோதமாய் வந்து, உன் அரண்களை அழித்துப்போடுவான். 19 ஆரோவேரில் குடியிருக்கிறவளே, நீ வழியிலே நின்று பார்த்துக்கொண்டிரு; நடந்ததென்னவென்று ஓடிவருகிறவனையும் தப்பிவருகிறவனையும் கேள். 20 மோவாப் முறிய அடிக்கப்பட்டபடியினால் கலங்கிப்போயிற்று; அலறிக்கூப்பிடுங்கள்; மோவாப் பாழாக்கப்பட்டதென்று அர்னோனில் அறிவியுங்கள். 21 சமனான பூமியாகிய ஓலோனின்மேலும், யாத்சாவின்மேலும், மேப்காத்தின்மேலும், 22 தீபோனின்மேலும், நேபோவின்மேலும், பெத்திப்லாத்தாயீமின்மேலும், 23 கீரியாத்தாயீமின்மேலும், பேத்கமூலின்மேலும், பெத்மெயோனின்மேலும், 24 கீரியோத்தின்மேலும், போஸ்றாவின்மேலும், மோவாப் தேசத்திலே தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின்மேலும் நியாயத்தீர்ப்பு வரும். 25 மோவாபின் கொம்பு வெட்டுண்டது; அவன் புயம் முறிக்கப்பட்டது என்று கர்த்தர் சொல்லுகிறார். 26 அவனை வெறிகொள்ளச் செய்யுங்கள்; கர்த்தருக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினான்; மோவாப் தான் வாந்திபண்ணி அதிலே புரளுவான்; அவன் பரியாசத்துக்கிடமாவான். 27 இஸ்ரவேல் உனக்குப் பரியாசமாயிருந்தான் அல்லவோ? அவன் திருடருக்குள் கண்டுபிடிக்கப்பட்டானோ? நீ அவனைக்குறித்துப் பேசுகிறபோதெல்லாம், தலையைத் துலுக்குகிறாயே. 28 மோவாப் தேசத்தின் குடிகளே, நீங்கள் பட்டணங்களை விட்டுப்போய், கன்மலையில் தங்கி, குகையின் வாய் ஓரங்களில் கூடுகட்டுகிற புறாவுக்கு ஒப்பாயிருங்கள். 29 அவன் மெத்தப் பெருமைக்காரன், மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகந்தையையும், அவன் பெத்தரிக்கத்தையும், அவன் இருதயத்தின் மேட்டிமையையும் குறித்துக் கேட்டேன். 30 அவன் மூர்க்கத்தை நான் அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்படியாகாது, அவன் வீம்பு செல்லாது என்கிறார். 31 ஆகையால் மோவாபினிமித்தம் நான் அலறி, மோவாப் தேசம் அனைத்தினிமித்தமும் கூக்குரலிடுவேன்; கீராரேஸ் மனுஷரினிமித்தம் பெருமூச்சு விடப்படும். 32 சிப்மாவூரின் திராட்சச்செடியே, யாசேருக்காக நான் அழுததுபோல உனக்காகவும் அழுவேன்; உன் கொடிகள் கடலைக் கடந்துபோயின; அவைகள் யாசேர் கடல்மட்டும் போய் எட்டின; பாழாக்குகிறவன் உன் வசந்த காலத்துப் பழங்களின்மேலும், உன் திராட்சப்பழ அறுப்பின்மேலும் விழுந்தான். 33 பயிர்வெளியிலும் மோவாப் தேசத்திலுமிருந்து சந்தோஷமும் களிப்பும் நீங்கிப்போயிற்று; திராட்சரசம் ஆலைகளிலிருந்து பொழிகிறதை ஓயப்பண்ணினேன்; ஆலையை மிதிக்கிறவர்களின் பாடல் இல்லை; அது ஆரவாரமேயல்லாமல் ஆலை மிதிக்கும் பாடலல்ல. 34 எஸ்போன்துவக்கி எலெயாலேமட்டும் யாகாஸ்வரைக்கும் உண்டாகும் கூக்குரலினிமித்தம் அவர்கள் மூன்றுவயதுக் கடாரியைப்போல், சோவார்துவக்கி ஒரொனாயிம்மட்டும் சத்தமிடுவார்கள்; நிம்ரீமின் ஜலங்களும் வற்றிப்போகும். 35 மோவாப்தேசத்து மேடைகளில் பலியிடுகிறவனையும் தன் தேவர்களுக்குத் தூபங்காட்டுகிறவனையும் ஓயப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 36 ஆகையால், மோவாபினிமித்தம் என் இருதயம் நாகசுரம்போல் துயரமாய்த் தொனிக்கும்; கீராரேஸ் மனுஷரினிமித்தமும், என் இருதயம் நாகசுரம்போல் துயரமாய்த் தொனிக்கும்; அவர்கள் சம்பாதித்த ஐசுவரியம் அழிந்து போகிறபடியினால் அப்படித் தொனிக்கும். 37 தலைகள் எல்லாம் மொட்டையிடப்பட்டும், தாடிகள் எல்லாம் கத்தரிக்கப்பட்டும் இருக்கும்; கைகளில் எல்லாம் கீறுதல்களும், அரைகளில் இரட்டுடுப்பும் உண்டு. 38 மோவாபின் சகல வீடுகளின்மேலும் அதின் தெருக்களிலேயும் ஏகப்புலம்பல் உண்டாகும்; ஒருவரும் விரும்பப்படாத பாத்திரம்போல மோவாபை உடைத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 39 மோவாப் எவ்வளவாய் முறிந்துபோயிற்றென்று அலறுகிறார்கள்; அது முதுகைக்காட்டி எவ்வளவாய் வெட்கப்படும்? இப்படி மோவாப் தன் சுற்றுப்புறத்தார் அனைவருக்கும் பரியாசமும் திகைப்புமாயிருக்கும். 40 இதோ, ஒருவன் கழுகைப்போல் பறந்துவந்து, மோவாபின்மேல் தன் செட்டைகளை விரிப்பான். 41 கீரியோத் பிடிக்கப்படும், கோட்டைகள் கைவசமாகும்; அந்நாளிலே மோவாபின் பராக்கிரமசாலிகளுடைய இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும். 42 மோவாப் கர்த்தருக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினபடியால், அது ஒரு ஜனமாயிராதபடிக்கு அழிக்கப்படும். 43 மோவாப் தேசத்தின் குடியானவனே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உன்மேல் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார். 44 திகிலுக்கு விலக ஓடுகிறவன் படுகுழியிலே விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவனோ கண்ணியிலே பிடிபடுவான்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்தை அதின்மேல், அதாவது, மோவாபின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 45 வல்லடிக்குத் தப்ப ஓடிப்போகிறவர்கள் எஸ்போனின் நிழலில் தரித்து நின்றார்கள், ஆனாலும் நெருப்பு எஸ்போனிலும், அக்கினிஜுவாலை சீகோன் நடுவிலுமிருந்து புறப்பட்டு, மோவாப் தேசத்தின் எல்லைகளையும், கலகஞ்செய்கிறவர்களின் உச்சந்தலையையும் பட்சிக்கும். 46 மோவாபே, உனக்கு ஐயோ! கேமோஷ் விக்கிரகத்தையடுத்த ஜனம் அழியும், உன் குமாரரும் சிறைபிடிக்கப்படுகிறார்கள், உன் குமாரத்திகளும் சிறைபிடிக்கப்பட்டுப்போகிறார்கள். 47 ஆனாலும் கடைசிநாட்களில் மோவாபின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மோவாபின்மேல் வரும் நியாயத்தீர்ப்பின் செய்தி இத்தோடே முடிந்தது.

எரேமியா 49

1 அம்மோன் புத்திரரைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலுக்குக் குமாரர் இல்லையோ? அவனுக்குச் சுதந்தரவாளி இல்லையோ? அவர்கள் ராஜா காத்தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு, அதின் ஜனம் இவன் பட்டணங்களில் குடியிருப்பானேன்? 2 ஆகையால், இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது அம்மோன் புத்திரரின் பட்டணமாகிய ரப்பாவிலே யுத்தத்தின் ஆர்ப்பரிப்பைக் கேட்கப்பண்ணுவேன்; அது பாழான மண்மேடாகும்; அதற்கடுத்த ஊர்களும் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்; ஆனாலும் இஸ்ரவேல் தன் தேசத்தைச் சுதந்தரித்துக் கொண்டவர்களின் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் என்று கர்த்தர் சொல்லுகிறார். 3 எஸ்போனே, அலறு; ஆயி பாழாக்கப்பட்டது; ரப்பாவின் குமாரத்திகளே, ஓலமிடுங்கள்; இரட்டை உடுத்திக்கொண்டு, புலம்பி, வேலிகளில் சுற்றித்திரியுங்கள்; அவர்கள் ராஜா அதின் ஆசாரியர்களோடும் அதின் பிரபுக்களோடுங்கூடச் சிறைப்பட்டுப்போவான். 4 எனக்கு விரோதமாய் வருகிறவன் யார் என்று சொல்லி, உன் செல்வத்தை நம்பின சீர்கெட்ட குமாரத்தியே, நீ பள்ளத்தாக்குகளைப்பற்றிப் பெருமைபாராட்டுவானேன்? உன் பள்ளத்தாக்குக் கரைந்துபோகிறது. 5 இதோ, உன் சுற்றுப்புறத்தார் எல்லாராலும் உன்மேல் திகிலை வரப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் அவரவர் தம்தம் முன் இருக்கும் வழியே ஓடத் துரத்தப்படுவீர்கள்; வலசைவாங்கி ஓடுகிறவர்களைச் சேர்ப்பார் ஒருவருமில்லை. 6 அதற்குப்பின்பு அம்மோன் புத்திரருடைய சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 7 ஏதோமைக்குறித்துச் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தேமானிலே இனி ஞானமில்லையோ? ஆலோசனை விவேகிகளைவிட்டு அழிந்ததோ? அவர்களுடைய ஞானம் கெட்டுப்போயிற்றோ? 8 தேதானின் குடிகளே, ஓடுங்கள், முதுகைக் காட்டுங்கள், பள்ளங்களில் பதுங்குங்கள்; ஏசாவை விசாரிக்குங்காலத்தில் அவன் ஆபத்தை அவன்மேல் வரப்பண்ணுவேன். 9 திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்திலே வந்தார்களாகில், பின்பறிக்கிறதற்குக் கொஞ்சம் வையார்களோ? இராத்திரியில் திருடர் வந்தார்களாகில், தங்களுக்குப் போதுமென்கிறமட்டும் கொள்ளையடிப்பார்கள் அல்லவோ? 10 நானோ ஏசாவை வெறுமையாக்கி, அவன் ஒளித்துக்கொள்ளக் கூடாதபடிக்கு அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்திப்போடுவேன்; அவனுடைய சந்ததியாரும் அவனுடைய சகோதரரும் அவனுடைய அயலாரும் அழிக்கப்படுவார்கள்; அவன் இனி இரான். 11 திக்கற்றவர்களாய்ப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிரோடே காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்னை நம்புவார்களாக. 12 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, பாத்திரத்தில் குடிக்கவேண்டுமென்கிற நியாயத்தீர்ப்புக்கு உள்ளாயிராதவர்கள் அதில் குடித்தார்கள்; நீ குற்றமற்று நீங்கலாயிருப்பாயோ? நீ நீங்கலாயிராமல் அதில் நிச்சயமாய்க் குடிப்பாய். 13 போஸ்றா பாழும் நிந்தையும் அவாந்தரமும் சாபமுமாக இருக்குமென்றும், அதின் பட்டணங்கள் எல்லாம் நித்திய வனாந்தரங்களாயிருக்குமென்றும் என்னைக்கொண்டு ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 14 நீங்கள் கூடிக்கொண்டு, அதற்கு விரோதமாக வந்து, யுத்தம்பண்ணுகிறதற்கு எழும்புங்கள் என்று சொல்ல, ஜாதிகளிடத்தில் ஸ்தானாதிபதியை அனுப்புகிற செய்தியைக் கர்த்தரிடத்திலே கேள்விப்பட்டேன். 15 இதோ, உன்னை ஜாதிகளுக்குள்ளே சிறியதும், மனுஷருக்குள்ளே அசட்டைபண்ணப்பட்டதுமாக்குகிறேன் என்கிறார். 16 கன்மலை வெடிப்புகளில் வாசம்பண்ணி, மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிறவனே உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம் போக்கிற்று; நீ கழுகைப்போல் உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 17 அப்படியே ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து ஈசல்போடுவான். 18 சோதோமும் கொமோராவும் அவைகளின் சுற்றுப்புறங்களும் கவிழ்க்கப்பட்டதுபோல இதுவும் கவிழ்க்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அங்கே ஒருவனும் குடியிருப்பதில்லை, அதில் ஒரு மனுபுத்திரனும் தங்குவதில்லை. 19 இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிடத்திலிருந்து சிங்கம் வருவதுபோல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனைச் சடிதியிலே அங்கேயிருந்து ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாய்க் கட்டளையிட்டு அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு மட்டுக்கட்டுகிறவன் யார்? எனக்கு முன்பாக நிலைநிற்கப்போகிற மேய்ப்பன் யார்? 20 ஆகையால் கர்த்தர் ஏதோமுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் தேமானின் குடிகளுக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மந்தையில் சிறியவர்கள் மெய்யாகவே அவர்களைப் பிடித்திழுப்பார்கள், அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் மெய்யாகவே பாழாக்குவார். 21 அவைகளுக்குள் இடிந்துவிழும் சத்தத்தினாலே பூமி அதிரும்; கூக்குரலின் சத்தம் சிவந்த சமுத்திரமட்டும் கேட்கப்படும். 22 இதோ, ஒருவன் கழுகைப்போல எழும்பி, பறந்துவந்து, தன் செட்டைகளைப் போஸ்றாவின்மேல் விரிப்பான்; அந்நாளிலே ஏதோமுடைய பராக்கிரமசாலிகளின் இருதயம் பிரசவவேதனைப்படுகிற ஸ்திரீயின் இருதயம்போல இருக்கும் என்கிறார். 23 தமஸ்குவைக் குறித்துச் சொல்வது: ஆமாத்தும் அர்ப்பாத்தும் கலங்குகிறது; பொல்லாத செய்தியை அவர்கள் கேட்டபடியினால் கரைந்துபோகிறார்கள்; சமுத்திரத்தோரமாய்ச் சஞ்சலமுண்டு; அதற்கு அமைதலில்லை. 24 தமஸ்கு தளர்ந்துபோம், புறங்காட்டி ஓடிப்போம்; திகில் அதைப் பிடித்தது; பிரசவ ஸ்திரீயைப்போல இடுக்கமும் வேதனைகளும் அதைப் பிடித்தது. 25 சந்தோஷமான என் ஊராகிய அந்தப் புகழ்ச்சியுள்ள நகரம் தப்பவிடப்படாமற்போயிற்றே! 26 ஆதலால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து, யுத்தமனுஷர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 27 தமஸ்குவின் மதில்களில் தீக்கொளுத்துவேன்; அது பெனாதாத்தின் அரமனைகளைப் பட்சிக்கும் என்கிறார். 28 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முறியடிக்கும் கேதாரையும் காத்சோருடைய ராஜ்யங்களையும் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்பி, கேதாருக்கு விரோதமாகப் போய், கீழ்த்திசைப் புத்திரரைப் பாழாக்குங்கள். 29 அவர்களுடைய கூடாரங்களையும் அவர்களுடைய மந்தைகளையும் வாங்கி, அவர்களுடைய திரைகளையும் அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் அவர்களுடைய ஒட்டகங்களையும் தங்களுக்கென்று கொண்டுபோய், எத்திசையும் பயம் என்று சொல்லி, அவர்கள்மேல் ஆர்ப்பரிப்பார்கள். 30 காத்சோரின் குடிகளே, ஓடி, தூரத்தில் அலையுங்கள்; பள்ளத்தில் ஒதுங்கிப் பதுங்குங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் உங்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்து, உங்களுக்கு விரோதமாக உபாயங்களைச் சிந்தித்திருக்கிறான். 31 அஞ்சாமல் நிர்விசாரமாய்க் குடியிருக்கிற ஜாதிக்கு விரோதமாக எழும்பிப்போங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு வாசல்களுமில்லை, தாழ்ப்பாள்களுமில்லை; அவர்கள் தனிப்படத் தங்கியிருக்கிறார்கள். 32 அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளையும், அவர்களுடைய ஆடுமாடுகளின் ஏராளம் சூறையுமாகும்; நான் அவர்களைச் சகல திசைகளுமான கடையாந்தர மூலைகளில் இருக்கிறவர்களிடத்துக்குச் சிதறடித்துவிட்டு, அதினுடைய சகல பக்கங்களிலுமிருந்து அவர்களுக்கு ஆபத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 33 ஆத்சோர் வலுசர்ப்பங்களின் தாபரமாகி, என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கும்; ஒருவனும் அங்கே குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதிலே தங்குவதுமில்லையென்கிறார். 34 யூதா ராஜாவாகிய சிதேக்கியாவினுடைய ராஜ்யபாரத்தின் துவக்கத்திலே, ஏலாமுக்கு விரோதமாக எரேமியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டான கர்த்தருடைய வசனம்: 35 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ஏலாமின் வில்லென்னும் அவர்களுடைய பிரதான வல்லமையை முறித்துப்போட்டு, 36 வானத்தின் நாலு திசைகளிலுமிருந்து நாலு காற்றுகளை ஏலாமின்மேல் வரப்பண்ணி, அவர்களை இந்த எல்லாத் திசைகளிலும் சிதறடிப்பேன்; ஏலாம் தேசத்திலிருந்து துரத்துண்டவர்கள் சகல ஜாதிகளிலும் சிதறப்படுவார்கள். 37 நான் ஏலாமியரை அவர்கள் சத்துருக்களுக்கு முன்பாகவும், அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கப்பண்ணி, என் கோபத்தின் உக்கிரமாகிய தீங்கை அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் பட்டயத்தை அவர்களுக்குப் பின்னாக அனுப்பி, 38 என் சிங்காசனத்தை ஏலாமிலே வைத்து, அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 39 ஆனாலும் கடைசிநாட்களிலே நான் ஏலாமின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

எரேமியா 50

1 கர்த்தர் தீர்க்கதரிசியாகிய எரேமியாவைக்கொண்டு பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்துக்கும் விரோதமாக உரைத்த வசனம்: 2 பாபிலோன் பிடிபட்டது; பேல் வெட்கப்பட்டது; மெரொதாக் நொறுங்குண்டது; அதினுடைய சிலைகள் இலச்சையடைந்தது; அதினுடைய விக்கிரகங்கள் நொறுங்கிப்போயின என்று ஜாதிகளுக்குள்ளே அறிவித்துப் பிரசித்தம்பண்ணுங்கள்; இதை மறைக்காமல் கொடியேற்றி விளம்பரம்பண்ணுங்கள். 3 அதற்கு விரோதமாய் வடக்கேயிருந்து ஒரு ஜாதி வந்து, அதின் தேசத்தைப் பாழாக்கிப்போடும்; அதிலே குடியிருப்பாரில்லை; மனுஷரோடே மிருகங்களும் ஓடிப்போய்விடும். 4 அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேல் புத்திரர் வருவார்கள்; அவர்களும் யூதா புத்திரரும் ஏகமாய் அழுது, நடந்துவந்து, தங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 5 மறக்கப்படாத நித்திய உடன்படிக்கையினால் நாம் கர்த்தரைச் சேர்ந்துகொள்வோம் வாருங்கள் என்று சீயோனுக்கு நேராய் முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிற வழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள். 6 என் ஜனங்கள் காணாமற்போன ஆடுகள், அவர்களுடைய மேய்ப்பர்கள் அவர்களைச் சிதறப்பண்ணி, பர்வதங்களில் அலையவிட்டார்கள்; ஒரு மலையிலிருந்து மறுமலைக்குப் போனார்கள்; தங்கள் தொழுவத்தை மறந்துவிட்டார்கள். 7 அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாரும் அவர்களைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய சத்துருக்கள்: எங்கள்மேல் குற்றமில்லை; அவர்கள் நீதியின் வாசஸ்தலத்திலே கர்த்தருக்கு விரோதமாக, தங்கள் பிதாக்கள் நம்பின கர்த்தருக்கு விரோதமாகவே, பாவஞ்செய்தார்கள் என்றார்கள். 8 பாபிலோனின் நடுவிலிருந்தோடி, கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின் முன்நடக்கும் கடாக்களைப்போல் இருங்கள். 9 இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாக வடதேசத்தில் இருக்கும் பெரிய ஜாதிகளின் கூட்டத்தை எழுப்பி, அதை வரப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக ஆயத்தம்பண்ணுவார்கள்; அங்கேயிருந்து வருகிறவர்களால் அது பிடிக்கப்படும்; அவர்களுடைய அம்புகள் சாமர்த்தியமுள்ள பராக்கிரமசாலியின் அம்புகளைப்போல் இருக்கும்; அவைகள் விருதாவாய்த் திரும்புவதில்லை. 10 கல்தேயா கொள்ளையாகும்: அதைக் கொள்ளையிடுகிறவர்கள் எல்லாரும் பரிபூரணமடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 11 என் சுதந்தரத்தைக் கொள்ளையிட்ட நீங்கள் சந்தோஷித்தீர்களே, களிகூர்ந்தீர்களே, புல்மேய்ந்து கொழுத்த கடாரியைப்போல் பூரித்து, வலியரிஷபம்போல் முக்காரம் போடுகிறீர்களே. 12 உங்கள் தாய் மிகவும் வெட்கி, உங்களைப் பெற்றவள் நாணமடைவாள்; இதோ, அவள் ஜாதிகளுக்குள்ளே கடைசியாவதுமன்றி, வனாந்தரமும் வறட்சியும் அந்தரவெளியுமாவாள். 13 கர்த்தரின் கோபத்தினாலே அது குடியற்றதும் பெரும்பாழுமாயிருக்கும்; பாபிலோனைக் கடந்துபோகிற எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து, ஈசல்போடுவான். 14 நீங்கள் எல்லாரும் பாபிலோனுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் அணிவகுத்து நின்று, வில்லை நாணேற்றி, அதின்மேல் அம்புகளை எய்யுங்கள்; அம்புச்செலவைப் பாராதேயுங்கள்; அது, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது. 15 அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் ஆர்ப்பரியுங்கள்; அது தன்னைக் கையளித்தது; அதின் அஸ்திபாரங்கள் விழுந்தது, அதின் மதில்கள் இடிக்கப்பட்டது; இது கர்த்தர் வாங்கும் பழி; அதினிடத்தில் பழிவாங்குங்கள்; அது செய்ததுபோலவே நீங்களும் அதற்குச் செய்யுங்கள். 16 விதைவிதைக்கிறவனையும் அறுப்புக்காலத்தில் அரிவாளைப் பிடிக்கிறவனையும் பாபிலோனில் இராதபடிச் சங்காரம்பண்ணுங்கள்; கொல்லுகிற பட்டயத்துக்குத் தப்ப அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குத் திரும்பிக்கொண்டு, அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள். 17 இஸ்ரவேல் தெறிப்பட்டுப்போன ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான். 18 ஆகையால், இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் அசீரியா ராஜாவைத் தண்டித்ததுபோல் பாபிலோன் ராஜாவையும் அவன் தேசத்தையும் தண்டித்து, 19 இஸ்ரவேலை அதின் வாசஸ்தலத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; அப்பொழுது அது கர்மேலிலும் பாசானிலும் மேயும்; எப்பிராயீமின் மலைகளிலும் கீலேயாத்திலும் அதின் ஆத்துமா திருப்தியாகும். 20 அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடையாதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 21 மெரதாயீம் தேசத்துக்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்பண்ணி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று கர்த்தர் சொல்லுகிறார். 22 தேசத்திலே யுத்தத்தின் சத்தமும் மகா சங்காரமும் உண்டு. 23 சர்வ பூமியின் சம்மட்டி எப்படி முறித்து உடைக்கப்பட்டது! ஜாதிகளுக்குள்ளே பாபிலோன் எப்படிப் பாழாய்ப்போயிற்று! 24 பாபிலோனே, உனக்குக் கண்ணியை வைத்தேன், நீ அதை அறியாமல் அதிலே சிக்குண்டுபோனாய்; நீ அகப்பட்டும் பிடிபட்டும் போனாய், நீ கர்த்தரோடே யுத்தங்கலந்தாயே. 25 கர்த்தர் தம்முடைய ஆயுதசாலையைத் திறந்து, தம்முடைய சினத்தின் அஸ்திராயுதங்களை எடுத்துக்கொண்டு வந்தார்; இது கல்தேயர் தேசத்திலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் செய்கிற கிரியை. 26 கடையாந்தரத்திலிருந்து அதற்கு விரோதமாக வந்து, அதின் களஞ்சியங்களைத் திறந்து, குவியல் குவியலாகக் குவித்து, அதில் ஒன்றும் மீதியாகாதபடிக்கு அதை முற்றிலும் அழித்துப்போடுங்கள். 27 அதின் காளைகளையெல்லாம் வெட்டுங்கள்; அவைகள் கொலைக்களம் சேரக்கடவது; ஐயோ! அவர்கள் விசாரிக்கப்படும் நாள் வந்ததே. 28 நம்முடைய தேவன் பழிவாங்கினதை, அவர் தமது ஆலயத்துக்காகப் பழிவாங்கினதையே, சீயோனிலே அறிவிக்கும்படிக்கு, பாபிலோன் தேசத்திலிருந்து தப்பியோடிவந்தவர்களின் சத்தம் கேட்கப்படும். 29 பாபிலோனுக்கு விரோதமாய் வரும்படி வில்வீரரை அழையுங்கள்; வில் வளைக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் பாளயமிறங்குங்கள், ஒருவரையும் தப்பவிடாதிருங்கள்; அதின் கிரியைக்குத்தக்க பலனை அதற்குச் சரிக்கட்டுங்கள்; அது செய்ததின்படியெல்லாம் அதற்குச் செய்யுங்கள்; அது இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தருக்கு விரோதமாக இடும்புசெய்தது. 30 ஆகையால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுவார்கள்; அதின் யுத்தவீரர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 31 இதோ, இடும்புள்ளவனே, நான் உனக்கு விரோதமாக வருகிறேன் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் உன்னை விசாரிக்குங்காலமாகிய உன்னுடைய நாள் வந்தது. 32 இடும்புள்ளவன் இடறிவிழுவான்; அவனை எடுத்து நிறுத்துவாரில்லை; நான் அவனுடைய பட்டணங்களில் அக்கினியைக் கொளுத்துவேன், அது அவன் சுற்றுப்புறத்தார் எல்லாரையும் பட்சிக்கும். 33 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும் ஏகமாய் ஒடுங்குண்டார்கள்; அவர்களைச் சிறையாக்கின யாவரும் அவர்களை விடமாட்டோம் என்று கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டார்கள். 34 அவர்களுடைய மீட்பரோவெனில் வல்லமையுள்ளவர், சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்; தேசத்தை இளைப்பாறப்பண்ணுவதற்கும், பாபிலோன் குடிகளைத் தத்தளிக்கப்பண்ணுவதற்கும் அவர்களுடைய வழக்கை அவர் நடத்துவார். 35 பட்டயம் கல்தேயர்மேலும், பாபிலோன் குடிகள்மேலும், அதினுடைய பிரபுக்கள்மேலும், அதினுடைய ஞானிகள்மேலும் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார். 36 பட்டயம் பொய்களைப் பிணைக்கிறவர்கள்மேலும் வரும்; அவர்கள் பைத்தியக்காரராவார்கள்; பட்டயம் அதின் பராக்கிரமசாலிகள்மேலும் வரும், அவர்கள் கலங்குவார்கள். 37 பட்டயம் அதின் குதிரைகள்மேலும், அதின் இரதங்கள்மேலும், அதின் நடுவில் இருக்கிற பலஜாதியான ஜனங்கள் யாவர்மேலும் வரும், அவர்கள் பேடிகளாவார்கள்; பட்டயம் அதின் பொக்கிஷங்களின்மேல் வரும், அவைகள் கொள்ளையாகும். 38 வறட்சி அதின் தண்ணீர்கள்மேல் வரும், அவைகள் வறண்டுபோம்; அது விக்கிரக தேசம்; அருக்களிப்பான சிலைகளின்மேல் மனமயங்கியிருக்கிறார்கள். 39 ஆகையால் காட்டுமிருகங்களும் ஓரிகளும் அதிலே குடியிருக்கும்; கோட்டான்கள் அதிலே தங்கும்; இனி என்றென்றைக்கும் அது குடியேற்றப்படுவதில்லை; தலைமுறை தலைமுறையாக ஒருவரும் அதில் சஞ்சரிப்பதுமில்லை. 40 தேவன் சோதோமையும் கொமோராவையும் அதின் சுற்றுப்புறங்களையும் கவிழ்த்துப்போட்டதுபோல இதையும் கவிழ்த்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஒருவரும் அதில் குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதில் தங்குவதுமில்லை. 41 இதோ, வடக்கேயிருந்து ஒரு ஜனமும் பெரிய ஜாதியும் வரும்; பூமியின் எல்லைகளிலிருந்து பலத்த ராஜாக்கள் எழும்புவார்கள். 42 அவர்கள் வில்லும் வேலும் பிடித்துவருவார்கள்; அவர்கள் இரக்கமில்லாத கொடியர்; அவர்கள் இரைச்சல் சமுத்திர இரைச்சல்போல் இருக்கும்; பாபிலோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட ஆட்களாய்க் குதிரைகளின்மேல் ஏறி வருவார்கள். 43 அவர்கள் வருகிற செய்தியை பாபிலோன் ராஜா கேட்கையில் அவன் கைகள் தளரும்; இடுக்கமும் பிரசவ வேதனைப்படுகிறவளுக்குண்டாகும் வேதனையைப்போன்ற வேதனையும் அவனைப் பிடிக்கும். 44 இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிலிருந்து சிங்கத்தைப்போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனை அங்கேயிருந்து சடிதியிலே ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாகக் கட்டளையிட்டு, அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்குத் திட்டஞ்சொல்பவன் யார்? எனக்கு முன்பாக நிற்கப்போகிற மேய்ப்பன் யார்? 45 ஆகையால் கர்த்தர் பாபிலோனுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் கல்தேயர் தேசத்துக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மெய்யாகவே மந்தையில் சிறியவர்கள் அவர்களைப் பிடித்திழுப்பார்கள்; மெய்யாகவே அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் பாழாக்குவார். 46 பாபிலோன் பிடிபட்டதின் சத்தத்தினால் பூமி அதிரும், அதின் கூப்பிடுதல் ஜாதிகளுக்குள்ளே கேட்கப்படும்.

எரேமியா 51

1 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாகவும், எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்களின் மத்தியில் குடியிருக்கிறவர்களுக்கு விரோதமாகவும் அழிக்கும் காற்றை எழும்பப்பண்ணி, 2 தூற்றுவாரைப் பாபிலோனுக்கு அனுப்புவேன்; அவர்கள் அதைத்தூற்றி, வெறுமையாக்கிப்போடுவார்கள்; ஆபத்துநாளிலே அதற்கு விரோதமாய்ச் சூழ்ந்துகொண்டிருப்பார்கள். 3 வில்லை நாணேற்றுகிறவனுக்கு விரோதமாகவும், தன் கவசத்தில் பெருமைபாராட்டுகிறவனுக்கு விரோதமாகவும், வில்வீரன் தன் வில்லை நாணேற்றக்கடவன்; அதின் வாலிபரைத் தப்பவிடாமல் அதின் சேனையை எல்லாம் சங்காரம்பண்ணுங்கள். 4 குத்திப்போடப்பட்டவர்கள் கல்தேயரின் தேசத்திலும், கொலைசெய்யப்பட்டவர்கள் அதின் வீதிகளிலும் விழுவார்கள். 5 அவர்கள் தேசம் இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாகச் செய்த அக்கிரமத்தினால் நிறைந்திருந்தும், யூதா தன் தேவனாலும் இஸ்ரவேல் சேனைகளின் கர்த்தராலும் கைவிடப்படவில்லை. 6 நீங்கள் பாபிலோனின் அக்கிரமத்தில் சங்காரமாகாதபடிக்கு அதின் நடுவிலிருந்து ஓடி, அவரவர் தங்கள் ஆத்துமாவைத் தப்புவியுங்கள்; இது கர்த்தர் அதினிடத்தில் பழிவாங்குகிற காலமாயிருக்கிறது; அவர் அதற்குப் பதில் செலுத்துவார். 7 பாபிலோன் கர்த்தருடைய கையிலுள்ள பொற்பாத்திரம்; அது பூமி அனைத்தையும் வெறிக்கப்பண்ணினது; அதின் மதுவை ஜாதிகள் குடித்தார்கள்; ஆகையால் ஜாதிகள் புத்திமயங்கிப்போனார்கள். 8 பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் நோவை ஆற்றப் பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும். 9 பாபிலோனைக் குணமாக்கும்படிப் பார்த்தோம், அது குணமாகவில்லை; அதை விட்டுவிடுங்கள்; நாம் அவரவர் நம்முடைய தேசங்களுக்குப் போகக்கடவோம்; அதின் ஆக்கினை வானமட்டும் ஏறி ஆகாயமண்டலங்கள் பரியந்தம் எட்டினது. 10 கர்த்தர் நம்முடைய நீதியை வெளிப்படுத்தினார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் செயலைச் சீயோனில் விவரிப்போம் வாருங்கள். 11 அம்புகளைத் துலக்குங்கள்; கேடகங்களை நன்றாய்ச் செப்பனிடுங்கள்; கர்த்தர் மேதியருடைய ராஜாக்களின் ஆவியை எழுப்பினார்; பாபிலோனை அழிக்கவேண்டுமென்பதே அவருடைய நினைவு; இது கர்த்தர் வாங்கும் பழி, இது தமது ஆலயத்துக்காக அவர் வாங்கும் பழி. 12 பாபிலோனின் மதில்கள்மேல் கொடியேற்றுங்கள், காவலைப் பலப்படுத்துங்கள், ஜாமங் காக்கிறவர்களை நிறுத்துங்கள், பதிவிருப்பாரை வையுங்கள்; ஆனாலும் கர்த்தர் எப்படி நினைத்தாரோ அப்படியே தாம் பாபிலோனின் குடிகளுக்கு விரோதமாகச் சொன்னதைச் செய்வார். 13 திரளான தண்ணீர்களின்மேல் வாசம்பண்ணுகிறவளே, திரண்ட சம்பத்துடையவளே, உனக்கு முடிவும் உன் பொருளாசைக்கு ஒழிவும் வந்தது. 14 மெய்யாகவே, பச்சைக்கிளிகளைப்போல் திரளான மனுஷரால் உன்னை நிரம்பப்பண்ணுவேன்; அவர்கள் உன்மேல் ஆரவாரம்பண்ணுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார். 15 அவர் பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தமது ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார். 16 அவர் சத்தமிடுகையில் திரளான தண்ணீர் வானத்தில் உண்டாகிறது; அவர் பூமியின் எல்லைகளிலிருந்து மேகங்களை எழும்பப்பண்ணி, மழையுடனே மின்னல்களை உண்டாக்கி, காற்றைத் தமது பண்டசாலையிலிருந்து ஏவிவிடுகிறார். 17 மனுஷர் அனைவரும் அறிவில்லாமல் மிருக குணமானார்கள்; தட்டார் அனைவரும் சுரூபங்களாலே வெட்கிப்போகிறார்கள்; அவர்கள் வார்ப்பித்த விக்கிரகம் பொய்யே, அவைகளில் சுவாசம் இல்லை. 18 அவைகள் மாயையும் மகா எத்துமான கிரியையாயிருக்கிறது; அவைகள் விசாரிக்கப்படும் நாளிலே அழியும். 19 யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல அல்ல, அவர் சர்வத்தையும் உண்டாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம். 20 நீ எனக்குத் தண்டாயுதமும் அஸ்திராயுதமுமானவன்; நான் உன்னைக்கொண்டு ஜாதிகளை நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு ராஜ்யங்களை அழிப்பேன். 21 உன்னைக்கொண்டு குதிரையையும், குதிரை வீரனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு இரதத்தையும் இரதவீரனையும் நொறுக்குவேன். 22 உன்னைக்கொண்டு புருஷனையும் ஸ்திரீயையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு கிழவனையும் இளைஞனையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு வாலிபனையும் கன்னிகையையும் நொறுக்குவேன். 23 உன்னைக்கொண்டு மேய்ப்பனையும் அவனுடைய மந்தையையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு உழவனையும் அவனுடைய உழவுகாளைகளையும் நொறுக்குவேன்; உன்னைக்கொண்டு அதிபதிகளையும் அதிகாரிகளையும் நொறுக்குவேன். 24 பாபிலோனுக்கும் கல்தேயர் தேசத்தின் சகல குடிகளுக்கும், அவர்கள் உங்கள் கண்களுக்கு முன்பாகச் சீயோனில் செய்த அவர்களுடைய எல்லாப் பொல்லாப்புக்காகவும் பழிவாங்குவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 25 இதோ, பூமியை எல்லாம் கெடுக்கிற கேடான பர்வதமே, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உன்னைக் கன்மலைகளிலிருந்து உருட்டி, உன்னை எரிந்துபோன பர்வதமாக்கிப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 26 மூலைக்கல்லுக்காகிலும் அஸ்திபாரக்கல்லுக்காகிலும் ஒரு கல்லையும் உன்னிலிருந்து எடுக்கமாட்டார்கள்; நீ என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கிற ஸ்தலமாவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார். 27 தேசத்திலே கொடியேற்றுங்கள்; ஜாதிகளுக்குள் எக்காளம் ஊதுங்கள்; ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள்; ஆரராத், மின்னி, அஸ்கெனாஸ் என்னும் ராஜ்யங்களை அதற்கு விரோதமாக வரக்கூப்பிடுங்கள்; அதற்கு விரோதமாகத் தளகர்த்தனுக்குப் பட்டங்கட்டுங்கள்; சுணையுள்ள வெட்டுக்கிளிகள்போன்ற குதிரைகளை வரப்பண்ணுங்கள். 28 மேதியாதேசத்தின் ராஜாக்களும் அதின் தலைவரும் அதின் சகல அதிகாரிகளும் அவரவருடைய ராஜ்யபாரத்துக்குக் கீழான சகல தேசத்தாருமாகிய ஜாதிகளை அதற்கு விரோதமாக ஆயத்தப்படுத்துங்கள். 29 அப்பொழுது தேசம் அதிர்ந்து வேதனைப்படும்; பாபிலோன் தேசத்தைக் குடியில்லாதபடிப் பாழாக்க, பாபிலோனுக்கு விரோதமாய்க் கர்த்தர் நினைத்தவைகள் நிலைக்கும். 30 பாபிலோனின் பராக்கிரமசாலிகள் யுத்தம்பண்ணாமல், கோட்டைகளில் இருந்துவிட்டார்கள்; அவர்கள் பராக்கிரமம் அழிந்து பேடிகளானார்கள்; அதின் வாசஸ்தலங்களைக் கொளுத்திப்போட்டார்கள்; அதின் தாழ்ப்பாள்கள் உடைக்கப்பட்டது. 31 கடையாந்தர முனைதுவக்கி அவனுடைய பட்டணம் பிடிபட்டது என்றும், துறைவழிகள் அகப்பட்டுப்போய், நாணல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், யுத்த மனுஷர் கலங்கியிருக்கிறார்கள் என்றும் பாபிலோன் ராஜாவுக்கு அறிவிக்க, 32 அஞ்சற்காரன்மேல் அஞ்சற்காரனும் தூதன்மேல் தூதனும் ஓடுகிறான். 33 பாபிலோன் குமாரத்தி மிதிக்கப்படுங் களத்துக்குச் சமானம்; அதைப் போரடிக்குங் காலம் வந்தது; இன்னும் கொஞ்சக்காலத்திலே அறுப்புக்காலம் அதற்கு வரும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 34 பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னைப் பட்சித்தான், என்னைக் கலங்கடித்தான், என்னை வெறும் பாத்திரமாக வைத்துப்போனான்; வலுசர்ப்பம்போல என்னை விழுங்கி, என் சுவையுள்ள பதார்த்தங்களால் தன் வயிற்றை நிரப்பினான், என்னைத் துரத்திவிட்டான். 35 எனக்கும் என் இனத்தாருக்கும் செய்த கொடுமையின் பழி பாபிலோன்மேல் வரக்கடவதென்று சீயோனில் வாசமானவள் சொல்லுகிறாள்; என் இரத்தப்பழி கல்தேயர் தேசத்துக் குடிகளின்மேல் வரக்கடவதென்று எருசலேம் என்பவளும் சொல்லுகிறாள். 36 ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உனக்காக வழக்காடி, உன் பழிக்குப் பழிவாங்கி, அதின் கடலை வறளவும் அதின் ஊற்றைச் சுவறவும்பண்ணுவேன். 37 அப்பொழுது பாபிலோன் குடியில்லாத மண்மேடுகளும், வலுசர்ப்பங்களின் தாபரமும், பாழும், ஈசல்போடப்படுதலுக்கு இடமுமாய்ப்போகும். 38 ஏகமாய் அவர்கள் சிங்கங்களைப்போலக் கெர்ச்சித்து, சிங்கக்குட்டிகளைப்போலச் சத்தமிடுவார்கள். 39 அவர்கள் களிக்கும் சமயத்திலே நான் அவர்கள் குடிக்கும் பானத்தை அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்து, அவர்கள் துள்ளத்தக்கதாக அவர்களை வெறியாக்குவேன்; அதினால் அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத நித்திரை அடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 40 அவர்களை ஆட்டுக்குட்டிகளைப்போலவும், ஆட்டுக்கடாக்களைப்போலவும், வெள்ளாட்டுக்கடாக்களைப்போலவும் அடிக்கப்பட இறங்கிப்போகப் பண்ணுவேன். 41 சேசாக்கு பிடியுண்டு, பூமிமுழுதும் புகழும் புகழ்ச்சி அகப்பட்டது எப்படி? ஜாதிகளுக்குள்ளே பாபிலோன் பிரமிப்பானது எப்படி? 42 சமுத்திரம் பாபிலோன்மேல் புரண்டுவந்தது; அதின் அலைகளின் திரட்சியினால் அது மூடப்பட்டது. 43 அதின் பட்டணங்கள் பாழுமாய், வறட்சியும் வனாந்தரமுமான பூமியுமாய், ஒரு மனுஷனும் குடியிராததும் ஒரு மனுபுத்திரனும் கடவாததுமான நிலமுமாய்ப்போயிற்று. 44 நான் பாபிலோனில் இருக்கிற பேலைத் தண்டிப்பேன்; அது விழுங்கினதை அதின் வாயிலிருந்து கக்கப்பண்ணுவேன்; ஜாதிகள் இனி அதினிடத்திற்கு ஓடிவரமாட்டார்கள், பாபிலோனின் மதிலும் விழும். 45 என் ஜனங்களே, நீங்கள் அதின் நடுவிலிருந்து புறப்படுங்கள்; கர்த்தருடைய கோபத்தின் உக்கிரத்துக்குத் தப்பும்படி அவனவன் தன்தன் ஆத்துமாவை இரட்சித்துக்கொள்ளக்கடவன். 46 உங்கள் இருதயம் துவளாமலும், தேசத்தில் கேட்கப்படும் செய்தியினால் நீங்கள் பயப்படாமலும் இருங்கள்; ஒரு வருஷத்திலே ஒரு செய்தி கேட்கப்பட்டு, பின்பு மறுவருஷத்திலே வேறு செய்தி கேட்கப்படும்; தேசத்திலே கொடுமை உண்டாகும்; ஆளுகிறவன்மேல் ஆளுகிறவன் வருவான். 47 ஆகையால், இதோ, நான் பாபிலோனின் விக்கிரகங்களைத் தண்டிக்கும் நாட்கள் வரும், அப்பொழுது அதின் தேசம் எல்லாம் கலங்கும்; அதில் கொலையுண்கிற யாவரும் அதின் நடுவில் விழுந்துகிடப்பார்கள். 48 வானமும் பூமியும் அவைகளிலுள்ள யாவும் பாபிலோன்மேல் கெம்பீரிக்கும்; பாழ்க்கடிக்கிறவர்கள் அதற்கு வடக்கேயிருந்து வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 49 பாபிலோன் இஸ்ரவேலில் கொலையுண்டவர்களை விழப்பண்ணினதுபோல, பாபிலோனிலும் சமஸ்த தேசங்களிலும் கொலையுண்கிறவர்கள் விழுவார்கள். 50 பட்டயத்துக்குத் தப்பினவர்களே, தங்கித்தரியாமல் நடந்துவாருங்கள்; தூரத்திலே கர்த்தரை நினையுங்கள்; எருசலேம் உங்கள் ஞாபகத்தில் வரக்கடவது. 51 நிந்தையைக் கேட்டதினால் வெட்கப்பட்டோம்; கர்த்தருடைய ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலங்களின்மேல் அந்நியர் வந்ததினால் நாணம் நம்முடைய முகங்களை மூடிற்று. 52 ஆகையால், கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் அதின் விக்கிரகங்களுக்கு விரோதமாய் விசாரிக்கும் நாட்கள் வரும்; அப்பொழுது அதின் தேசமெங்கும் கொலையுண்கிறவர்கள் கத்துவார்கள். 53 பாபிலோன் வானபரியந்தம் ஏறினாலும், அது தன் பலமான அரணை உயர்த்தினாலும், அதைப் பாழாக்குகிறவர்கள் என்னிடத்திலிருந்து வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 54 பாபிலோனிலிருந்து கூக்குரலின் சத்தமும், கல்தேயர் தேசத்திலிருந்து மகா சங்காரமும் கேட்கப்படும். 55 கர்த்தர் பாபிலோனைப் பாழாக்கி அதிலுள்ள பெரிய சத்தத்தை ஒழியப்பண்ணுவார்; அவர்களுடைய அலைகள் திரளான தண்ணீர்களைப்போல இரையும், அவர்களுடைய சத்தம் அமளியாயிருக்கும். 56 பாபிலோனைப் பாழாக்குகிறவன் அதின்மேல் வருகிறான்; அதின் பராக்கிரமசாலிகள் பிடிபடுவார்கள்; அவர்களுடைய வில்லுகள் முறிந்துபோகும்; சரிக்கட்டுகிற தேவனாகிய கர்த்தர் நிச்சயமாகப் பதில் அளிப்பார். 57 அதின் பிரபுக்களையும் அதின் ஞானிகளையும் அதின் தலைவரையும் அதின் அதிகாரிகளையும் அதின் பராக்கிரமசாலிகளையும் வெறிக்கப்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத தூக்கமாய்த் தூங்கி விழுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா சொல்லுகிறார். 58 பாபிலோனின் விஸ்தீரணமான மதில்கள் முற்றிலும் தரையாக்கப்பட்டு, அதின் உயரமான வாசல்கள் அக்கினியால் சுட்டெரிக்கப்படும்; அப்படியே ஜனங்கள் பிரயாசப்பட்டது விருதாவும், ஜாதிகள் வருத்தப்பட்டுச் சம்பாதித்தது அக்கினிக்கு இரையுமாகுமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 59 பாபிலோன்மேல் வரும் எல்லாத் தீங்கையும், பாபிலோனுக்கு விரோதமாக எழுதப்பட்ட இந்த எல்லா வசனங்களையும் எரேமியா ஒரு புஸ்தகத்தில் எழுதினான். 60 யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா ராஜ்யபாரம்பண்ணும் நாலாம் வருஷத்திலே பாபிலோனுக்குப் போன சமயத்தில் அவனோடே கூடப்போன மசெயாவின் மகனாகிய நேரியாவின் குமாரனும் சாந்தகுணமுள்ள பிரபுவுமாகிய செராயாவுக்கு எரேமியா தீர்க்கதரிசி கற்பித்த வார்த்தை. 61 எரேமியா செராயாவை நோக்கி: நீ பாபிலோனுக்கு வந்தபின்பு நீ இதைப் பார்த்து, இந்த எல்லா வசனங்களையும் வாசித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: 62 கர்த்தாவே, இந்த ஸ்தலத்திலே மனுஷனும் மிருகமுமுதலாய்த் தங்கித் தரிக்காதபடிக்கும், அது என்றென்றைக்கும் பாழாய்க் கிடக்கும்படிக்கும், அதை அழித்துப்போடுவேன் என்று தேவரீர் அதைக்குறித்து உரைத்தீர் என்பதை நீ சொல்லி, 63 நீ இந்தப் புஸ்தகத்தை வாசித்துத் தீர்ந்தபோது, அதிலே ஒரு கல்லைக்கட்டி, அதை ஐப்பிராத்து நடுவில் எறிந்துவிட்டு, 64 இப்படியே பாபிலோன் முழுகிப்போகும், நான் அதின்மேல் வரப்பண்ணும் தீங்கினால் எழுந்திருக்கமாட்டாமல் இளைத்து விழுவார்கள் என்றார் என்று சொல்லுவாயாக என்றான். எரேமியாவின் வசனங்கள் இவ்வளவோடே முடிந்தது.

எரேமியா 52

1 சிதேக்கியா ராஜாவாகிறபோது இருபத்தொரு வயதாயிருந்தான்; அவன் பதினொரு வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அவனுடைய தாயின்பேர் அமூத்தாள், அவள் லீப்னா ஊரானாகிய எரேமியாவின் குமாரத்தி. 2 யோயாக்கீம் செய்தபடியெல்லாம் அவனும் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 3 எருசலேமையும் யூதாவையும் கர்த்தர் தம்முடைய சமுகத்தைவிட்டு அகற்றித் தீருமளவும், அவைகளின்மேலுள்ள அவருடைய கோபத்தினால் இப்படி நடந்ததும் அல்லாமல், சிதேக்கியா பாபிலோனிலே ராஜாவுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினான். 4 அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிராகப் பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள். 5 அப்படியே சிதேக்கியா ராஜாவின் பதினோராம் வருஷமட்டும் நகரம் முற்றிக்கை போடப்பட்டிருந்தது. 6 நாலாம் மாதம் ஒன்பதாம் தேதியிலே பஞ்சம் நகரத்திலே அதிகரித்து, தேசத்தின் ஜனத்துக்கு ஆகாரமில்லாமல்போயிற்று. 7 நகரத்தின் மதில் இடிக்கப்பட்டது; அப்பொழுது கல்தேயர் நகரத்தைச் சூழ்ந்திருக்கையில், யுத்தமனுஷர் எல்லாரும் இராத்திரிகாலத்தில் ஓடி, ராஜாவுடைய தோட்டத்தின் வழியே இரண்டு மதில்களுக்கும் நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டு, வயல்வெளியின் வழியே போய்விட்டார்கள். 8 ஆனாலும் கல்தேயருடைய இராணுவத்தார் ராஜாவைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமனான பூமியில் சிதேக்கியாவைக் கிட்டினார்கள்; அப்பொழுது அவனுடைய இராணுவத்தார் எல்லாரும் அவனைவிட்டுச் சிதறிப்போயிருந்தார்கள். 9 அவர்கள் ராஜாவைப் பிடித்து, அவனை ஆமாத்தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்துக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே இவனுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுத்தான். 10 பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்களெல்லாரையும் ரிப்லாவிலே வெட்டினான். 11 சிதேக்கியாவின் கண்களைக் குருடாக்கி, அவனுக்கு இரண்டு விலங்குகளைப் போடுவித்தான்; பின்பு பாபிலோன் ராஜா அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் மரணமடையும் நாள்மட்டும் அவனைக் காவல் வீட்டில் அடைத்துவைத்தான். 12 ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே, பாபிலோன் ராஜாவுக்கு முன்பாக நிற்கிறவனாகிய காவற்சேனாதிபதியான நேபுசராதான் எருசலேமுக்கு வந்தான்; அது நேபுகாத்நேச்சார் என்னும் ராஜா பாபிலோனை அரசாளுகிற பத்தொன்பதாம் வருஷமாயிருந்தது. 13 அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான். 14 காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள். 15 ஜனத்தில் ஏழைகளான சிலரையும் நகரத்தில் மீதியான மற்ற ஜனத்தையும், பாபிலோன் ராஜாவின் வசமாக ஓடிவந்துவிட்டவர்களையும், மற்ற ஜனங்களையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் சிறைகளாகக் கொண்டுபோனான். 16 ஆனால் தேசத்தாரில் ஏழைகளான சிலரைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் திராட்சத்தோட்டக்காரராகவும் பயிரிடுங்குடிகளாகவும் விட்டுவைத்தான். 17 கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனார்கள். 18 செப்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப்பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டுபோனார்கள். 19 பசும்பொன்னும் சுத்தவெள்ளியுமான கிண்ணங்களையும், தூபகலசங்களையும், கலங்களையும், சட்டிகளையும், விளக்குத்தண்டுகளையும், கலயங்களையும், கரகங்களையும் காவற்சேனாதிபதி எடுத்துக்கொண்டான். 20 சாலொமோன் ராஜா கர்த்தருடைய ஆலயத்துக்காகச் செய்து வைத்த இரண்டு தூண்களும் ஒரு கடல்தொட்டியும் ஆதாரங்களின் கீழ்நின்ற பன்னிரண்டு வெண்கல ரிஷபங்களும் ஆகிய இவைகளுக்குரிய வெண்கலத்துக்கு நிறையில்லை. 21 அந்தத் தூண்களோவெனில், ஒவ்வொரு தூணும் பதினெட்டுமுழ உயரமாயிருந்தது; பன்னிரண்டு முழநூல் அதைச் சுற்றும்; நாலு விரற்கடை அதின் கனம்; உள்ளே குழாயாயிருந்தது. 22 அதின்மேல் வெண்கலக் குமிழ் இருந்தது; ஒரு குமிழின் உயரம் ஐந்து முழம், குமிழிலே சுற்றிலும் பின்னலும் மாதளம்பழங்களும் செய்திருந்தது; எல்லாம் வெண்கலமாயிருந்தது; அதற்குச் சரியாய் மற்றத் தூணுக்கும் மாதளம்பழங்களும் செய்திருந்தது. 23 தொண்ணூற்றாறு மாதளம்பழங்கள் நான்கு திசைகளுக்கும் எதிராகச் செய்திருந்தது; குமிழைச் சுற்றிலும் செய்திருந்த மாதளம்பழங்கள் நூறு. 24 காவற்சேனாதிபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசற்படியின் மூன்று காவற்காரரையும் பிடித்துக்கொண்டுபோனான். 25 நகரத்திலோவென்றால் அவன் யுத்த மனுஷரின் விசாரிப்புக்காரனாகிய பிரதானி ஒருவனையும், ராஜாவின் மந்திரிகளில் நகரத்தில் அகப்பட்ட ஏழுபேரையும், தேசத்தின் ஜனத்தைச் சேவகம் எழுதுகிற தலைமையான சம்பிரதியையும், தேசத்து ஜனத்திலே பட்டணத்தின் நடுவில் அகப்பட்ட அறுபதுபேரையும் பிடித்துக்கொண்டுபோனான். 26 அவர்களைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் பிடித்து, அவர்களை ரிப்லாவுக்குப் பாபிலோன் ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய்விட்டான். 27 அப்பொழுது பாபிலோன் ராஜா ஆமாத் என்னும் தேசத்தின் பட்டணமாகிய ரிப்லாவிலே அவர்களை வெட்டிக் கொன்றுபோட்டான்; இவ்விதமாக யூதர்கள் தங்கள் தேசத்திலிருந்து சிறைகளாய்க் கொண்டுபோகப்பட்டார்கள். 28 நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போன ஜனங்களின் தொகை எவ்வளவென்றால், ஏழாம் வருஷத்தில் மூவாயிரத்து இருபத்துமூன்று யூதரும், 29 நேபுகாத்நேச்சாருடைய பதினெட்டாம் வருஷத்தில் எருசலேமிலிருந்து எண்ணூற்று முப்பத்திரண்டுபேர்களும் கொண்டுபோகப்பட்டார்கள். 30 நேபுகாத்நேச்சாருடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் யூதரில் எழுநூற்று நாற்பத்தைந்துபேர்களைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்; ஆக நாலாயிரத்து அறுநூறுபேர்களாம். 31 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனுடைய சிறையிருப்பின் முப்பத்தேழாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் இருபத்தைந்தாம் தேதியிலே, ஏவில் மெரொதாக் என்னும் பாபிலோன் ராஜா, தான் ராஜாவான வருஷத்திலே, யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீனைச் சிறைச்சாலையிலிருந்து வெளிப்படப்பண்ணி, அவன் தலையை உயர்த்தி, 32 அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய ஆசனத்தைத் தன்னோடே பாபிலோனில் இருந்த ராஜாக்களுடைய ஆசனங்களுக்கு மேலாக வைத்து, 33 அவனுடைய சிறையிருப்பு வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் தன் சமுகத்தில் நித்தம் போஜனம்பண்ணும்படி செய்தான். 34 அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் அவனுடைய மரணநாள் பரியந்தமும், அவனுடைய செலவுக்காகப் பாபிலோன் ராஜாவினால் கட்டளையான அநுதினத் திட்டத்தின்படி, அநுதினமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டுவந்தது.

புலம்பல் 1

1 ஐயோ! ஜனம்பெருத்த நகரி தனிமையாக உட்கார்ந்திருக்கிறாளே! விதவைக்கு ஒப்பானாளே! ஜாதிகளில் பெரியவளும், சீமைகளில் நாயகியுமாயிருந்தவள் கப்பங்கட்டுகிறவளானாளே! 2 இராக்காலத்திலே அழுதுகொண்டிருக்கிறாள், அவளுடைய கண்ணீர் அவள் கன்னங்களில் வடிகிறது; அவளுடைய நேசர் எல்லாருக்குள்ளும் அவளைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; அவளுடைய சிநேகிதர் எல்லாரும் அவளுக்குத் துரோகிகளும் சத்துருக்களுமானார்கள். 3 யூதா ஜனங்கள் உபத்திரவப்படவும், கொடுமையான அடிமைவேலைசெய்யவும் சிறைப்பட்டுப்போனார்கள். அவள் புறஜாதிகளுக்குள்ளே தங்குகிறாள், இளைப்பாறுதல் அடையாள்; அவளைத் துன்பப்படுத்துகிற யாவரும் அவளை இடுக்கமான இடங்களிலே தொடர்ந்துபிடித்தார்கள். 4 பண்டிகைக்கு வருவார் இல்லாததினால், சீயோனுக்குப் போகிற வழிகள் புலம்புகிறது; அவள் வாசல்கள் எல்லாம் பாழாய்க்கிடக்கிறது; அவள் ஆசாரியர்கள் தவிக்கிறார்கள்; அவள் கன்னிகைகள் சஞ்சலப்படுகிறார்கள்; அவளுக்குக் கசப்பே உண்டாயிருக்கிறது. 5 அவள் சத்துருக்கள் தலைமையானார்கள், அவள் பகைஞர் சுகித்திருக்கிறார்கள்; அவளுடைய திரளான பாதகங்களினிமித்தம் கர்த்தர் அவளைச் சஞ்சலப்படுத்தினார்; அவள் பிள்ளைகள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனார்கள். 6 சீயோன் குமாரத்தியின் அழகெல்லாம் அவளை விட்டுப்போயிற்று; அவள் பிரபுக்கள் மேய்ச்சலைக் காணாத மான்களுக்கு ஒப்பாகி, தொடருகிறவனுக்கு முன்பாகச் சத்துவமில்லாமல் நடந்துபோனார்கள். 7 தனக்குச் சிறுமையும் தவிப்பும் உண்டாகிய நாட்களிலே எருசலேம் பூர்வநாட்கள் முதற்கொண்டு தனக்கு உண்டாயிருந்த இன்பமானவைகளையெல்லாம் நினைக்கிறாள்; அவளுக்கு உதவிசெய்வார் இல்லாமல் அவளுடைய ஜனங்கள் சத்துருவின் கையிலே விழுகையில், பகைஞர் அவளைப் பார்த்து, அவளுடைய ஓய்வுநாட்களைக் குறித்துப் பரியாசம்பண்ணினார்கள். 8 எருசலேம் மிகுதியாய்ப் பாவஞ்செய்தாள்; ஆதலால் தூரஸ்திரீயைப்போலானாள்; அவளைக் கனம்பண்ணினவர்கள் எல்லாரும் அவளை அசட்டைபண்ணுகிறார்கள்; அவளுடைய மானத்தைக் கண்டார்கள்; அவளும் பெருமூச்சுவிட்டுப் பின்னிட்டுத் திரும்பினாள். 9 அவளுடைய அசூசம் அவள் வஸ்திர ஓரங்களில் இருந்தது; தனக்கு வரப்போகிற முடிவை நினையாதிருந்தாள்; ஆகையால் அதிசயமாய்த் தாழ்த்தப்பட்டுப்போனாள்; தேற்றுவார் இல்லை; கர்த்தாவே, என் சிறுமையைப் பாரும்; பகைஞன் பெருமைபாராட்டினானே. 10 அவளுடைய இன்பமான எல்லாவற்றின்மேலும் சத்துரு தன் கையை நீட்டினான்; உம்முடைய சபையிலே வரலாகாதென்று தேவரீர் விலக்கிய புறஜாதியார் உமது பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசித்ததைக் கண்டாள். 11 அவளுடைய ஜனங்களெல்லாரும் அப்பந்தேடித் தவிக்கிறார்கள்; தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுடைய இன்பமானவைகளை ஆகாரத்துக்கென்று கொடுத்துவிட்டார்கள்; கர்த்தாவே, நோக்கிப்பாரும்; எண்ணமற்றவளானேனே. 12 வழியில் நடந்துபோகிற சகல ஜனங்களே, இதைக்குறித்து உங்களுக்குக் கவையில்லையா? கர்த்தர் தமது உக்கிரமான கோபமூண்ட நாளிலே என்னைச் சஞ்சலப்படுத்தினதினால் எனக்கு உண்டான என் துக்கத்துக்குச் சரியான துக்கம் உண்டோ என்று என்னை நோக்கிப்பாருங்கள். 13 உயரத்திலிருந்து என் எலும்புகளில் அக்கினியை அனுப்பினார், அது அவைகளில் பற்றியெரிகிறது; என் கால்களுக்கு வலையை வீசினார்; என்னைப் பின்னிட்டு விழப்பண்ணினார்; என்னைப் பாழாக்கினார்; நித்தம் நான் பலட்சயப்பட்டுப் போகிறேன். 14 என் பாதகங்களின் நுகம் அவருடைய கையால் பூட்டப்பட்டிருக்கிறது; அவைகள் பிணைக்கப்பட்டு என் கழுத்தைச் சுற்றிக்கொண்டது; என் பெலனை விழப்பண்ணினார்; நான் எழுந்திருக்கக் கூடாதபடிக்கு ஆண்டவர் என்னை ஒடுக்குகிறவர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார். 15 என்னிலுள்ள பராக்கிரமசாலிகளாகிய என்னுடையவர்களெல்லாரையும் ஆண்டவர் மிதித்துப்போட்டார்; என் வாலிபரை நொறுக்கும்படி எனக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தை வரவழைத்தார்; திராட்சப்பழத்தை ஆலையில் மிதிக்கிறதுபோல, ஆண்டவர் யூதா குமாரத்தியாகிய கன்னிகையை மிதித்தார். 16 இவைகளினிமித்தம் நான் அழுகிறேன்; என் கண், என் கண்ணே நீராய்ச் சொரிகிறது; என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர் என்னை விட்டுத் தூரமானார்; பகைஞன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள். 17 சீயோன் தன் கைகளை விரிக்கிறாள்; அவளைத் தேற்றுவார் ஒருவருமில்லை; கர்த்தர் யாக்கோபின் சுற்றுப்புறத்தாரை அவனுக்குச் சத்துருக்களாகக் கட்டளையிட்டார்; அவர்களுக்குள்ளே எருசலேம் தூரஸ்திரீக்கு ஒப்பானாள். 18 கர்த்தர் நீதிபரர்; அவருடைய வாக்குக்கு விரோதமாய் நான் எழும்பினேன்; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் சிறைப்பட்டுப்போனார்கள். 19 என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன், அவர்களோ என்னை மோசம்போக்கினார்கள்; என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுக்கு அப்பந்தேடுகையில் நகரத்தில் மூச்சொடுங்கி மாண்டார்கள். 20 கர்த்தாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்; என் குடல் கொதிக்கிறது; நான் கடுந்துரோகம்பண்ணினபடியினால் என் இருதயம் வியாகுலப்படுகிறது; வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கிற்று, வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது. 21 நான் தவிக்கிறதை அவர்கள் கேட்டாலும் என்னைத் தேற்றுவார் ஒருவரும் இல்லை; என் பகைஞர் எல்லாரும் எனக்கு வந்த ஆபத்தைக் கேட்டு, தேவரீர் அதைச் செய்தபடியால் சந்தோஷமாயிருக்கிறார்கள்; நீர் கூறின நாளை வரப்பண்ணுவீர், அப்பொழுது அவர்களும் என்னைப்போலாவார்கள். 22 அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் உமது முகத்துக்கு முன்பாக வரக்கடவது. என் சகல பாதகங்களினிமித்தமும் நீர் எனக்குச் செய்ததுபோல அவர்களுக்கும் செய்யும்; என் பெருமூச்சுகள் மிகுதியாயின, என் இருதயம் பலட்சயமாயிருக்கிறது.

புலம்பல் 2

1 ஐயோ! ஆண்டவர் தமது கோபத்தில் சீயோன் குமாரத்தியை மந்தாரத்தினால் மூடினார்; அவர் தமது கோபத்தின் நாளிலே தமது பாதபீடத்தை நினையாமல் இஸ்ரவேலின் மகிமையை வானத்திலிருந்து தரையிலே விழத்தள்ளினார். 2 ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் வாசஸ்தலங்களையெல்லாம் விழுங்கினார்; அவர் யூதா குமாரத்தியின் அரண்களையெல்லாம் தமது சினத்திலே இடித்து, தரையோடே தரையாக்கிப்போட்டார்; ராஜ்யத்தையும் அதின் பிரபுக்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார். 3 அவர் தமது உக்கிரகோபத்திலே இஸ்ரவேலின் கொம்பு முழுவதையும் வெட்டிப்போட்டார்; சத்துருவுக்கு முன்பாக அவர் தமது வலதுகரத்தைப் பின்னாகத் திருப்பி, சுற்றிலும் இருப்பதைப் பட்சிக்கிற அக்கினிஜுவாலையைப்போல் யாக்கோபுக்கு விரோதமாக எரித்தார். 4 பகைஞனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; சத்துருவைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டிநின்று, கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; சீயோன் குமாரத்தியின் கூடாரத்திலே தம்முடைய உக்கிரத்தை அக்கினியைப்போல் சொரியப்பண்ணினார். 5 ஆண்டவர் பகைஞன்போலானார்; இஸ்ரவேலை விழுங்கினார்; அதின் அரமனைகளையெல்லாம் விழுங்கினார்; அதின் அரண்களை அழித்து, யூதா குமாரத்திக்கு மிகுந்த துக்கிப்பையும் சலிப்பையும் உண்டாக்கினார். 6 தோட்டத்தின் வேலியைப்போல இருந்த தம்முடைய வேலியைப் பலவந்தமாய்ப் பிடுங்கிப்போட்டார்; சபைகூடுகிற தம்முடைய ஸ்தலங்களை அழித்தார்; கர்த்தர் சீயோனிலே பண்டிகையையும் ஓய்வுநாளையும் மறக்கப்பண்ணி, தமது உக்கிரமான கோபத்தில் ராஜாவையும் ஆசாரியனையும் புறக்கணித்துவிட்டார். 7 ஆண்டவர் தமது பலிபீடத்தை ஒழித்துவிட்டார்; தமது பரிசுத்த ஸ்தலத்தை வெறுத்துவிட்டார்; அதினுடைய அரமனைகளின் மதில்களைச் சத்துருவின் கையில் ஒப்புக்கொடுத்தார்; பண்டிகைநாளில் ஆரவாரம்பண்ணுகிறதுபோல் கர்த்தரின் ஆலயத்தில் ஆரவாரம்பண்ணினார்கள். 8 கர்த்தர் சீயோன் குமாரத்தியின் அலங்கத்தை நிர்மூலமாக்க நினைத்தார்; நூலைப்போட்டார்; அழிக்காதபடித் தம்முடைய கையை அவர் முடக்கிக்கொண்டதில்லை; அரணிப்பையும் அலங்கத்தையும் புலம்பச்செய்தார்; அவைகள் முற்றிலும் பெலனற்றுக் கிடக்கிறது. 9 அவள் வாசல்கள் தரையில் அமிழ்ந்திக்கிடக்கிறது; அவள் தாழ்ப்பாள்களை முறித்து உடைத்துப்போட்டார்; அவள் ராஜாவும் அவள் பிரபுக்களும் புறஜாதியாருக்குள் இருக்கிறார்கள்; வேதமுமில்லை; அவள் தீர்க்கதரிசிகளுக்குக் கர்த்தரால் தரிசனம் கிடைக்கிறதுமில்லை. 10 சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மௌனமாய் இருக்கிறார்கள்; தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்; இரட்டு உடுத்தியிருக்கிறார்கள்; எருசலேமின் கன்னியர்கள் தலைகவிழ்ந்து தரையை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள். 11 என் ஜனமாகிய குமாரத்தியின் நொறுங்குதலினிமித்தம் கண்ணீர் சொரிகிறதினால் என் கண்கள் பூத்துப்போகிறது; என் குடல்கள் கொதிக்கிறது; என் ஈரல் இளகித் தரையிலே வடிகிறது; குழந்தைகளும் பாலகரும் நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கிறார்கள். 12 அவைகள் குத்துண்டவர்களைப்போல நகரத்தின் வீதிகளிலே மூர்ச்சித்துக்கிடக்கும்போதும், தங்கள் தாய்களின் மடியிலே தங்கள் பிராணனை விடும்போதும், தங்கள் தாய்களை நோக்கி: தானியமும் திராட்சரசமும் எங்கே என்கிறார்கள். 13 எருசலேம் குமாரத்தியே, நான் உனக்குச் சாட்சியாக என்னத்தைச் சொல்லுவேன்? உன்னை எதற்கு ஒப்பிடுவேன்? சீயோன் குமாரத்தியாகிய கன்னிகையே, நான் உன்னைத் தேற்றும்படிக்கு உன்னை எதற்கு நிகர்சொல்லுவேன்? உன் காயம் சமுத்திரத்தைப்போல் பெரிதாயிருக்கிறதே, உன்னைக் குணமாக்குகிறவன் யார்? 14 உன் தீர்க்கதரிசிகள் அபத்தமும் வியர்த்தமுமான தரிசனங்களை உனக்காகத் தரிசித்தார்கள்; அவர்கள் உன் சிறையிருப்பை விலக்கும்படி உன் அக்கிரமத்தை எடுத்துக்காட்டாமல், அபத்தமானவைகளையும் கேடானவைகளையும் உனக்காகத் தரிசித்தார்கள். 15 வழிப்போக்கர் யாவரும் உன்பேரில் கை கொட்டுகிறார்கள்; எருசலேம் குமாரத்தியின்பேரில் ஈசற்போட்டு, தங்கள் தலைகளைத் துலுக்கி: பூரணவடிவும் சர்வபூமியின் மகிழ்ச்சியுமான நகரம் இதுதானா என்கிறார்கள். 16 உன் பகைஞர் எல்லாரும் உன்பேரில் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்; ஈசற்போட்டுப் பற்கடிக்கிறார்கள்; அதை விழுங்கினோம், நாம் காத்திருந்த நாள் இதுவே, இப்பொழுது நமக்குக் கிடைத்தது, அதைக் கண்டோம் என்கிறார்கள். 17 கர்த்தர் தாம் நினைத்ததைச் செய்தார்; பூர்வநாட்கள் முதற்கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார்; அவர் தப்பவிடாமல் நிர்மூலமாக்கி, உன்மேல் பகைஞன் சந்தோஷிக்கும்படி செய்தார்; உன் சத்துருக்களின் கொம்பை உயர்த்தினார். 18 அவர்கள் இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; சீயோன் குமாரத்தியின் மதிலே, இரவும் பகலும் நதியவ்வளவு கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, உன் கண்ணின் கறுப்புவிழி சும்மாயிருக்கவொட்டாதே. 19 எழுந்திரு, இராத்திரியிலே முதற்சாமத்தில் கூப்பிடு; ஆண்டவரின் சமுகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப்போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு. 20 கர்த்தாவே, யாருக்கு இந்தப்பிரகாரமாகச் செய்தீரென்று நோக்கிப்பாரும்; ஸ்திரீகள் கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பக்கனியைத் தின்னவேண்டுமோ? ஆண்டவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் ஆசாரியனும் தீர்க்கதரிசியும் கொலைசெய்யப்படவேண்டுமோ? 21 இளைஞனும் முதிர்வயதுள்ளவனும் தெருக்களில் தரையிலே கிடக்கிறார்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் பட்டயத்தால் விழுந்தார்கள்; உமது கோபத்தின் நாளிலே வெட்டி, அவர்களைத் தப்பவிடாமல் கொன்றுபோட்டீர். 22 பண்டிகைநாளில் கும்புகளை வரவழைப்பதுபோல் சுற்றிலுமிருந்து எனக்குத் திகில்களை வரவழைத்தீர்; கர்த்தருடைய கோபத்தின் நாளிலே தப்பினவனும் மீதியானவனுமில்லை; நான் கைகளில் ஏந்தி வளர்த்தவர்களை என் பகைஞன் நாசம்பண்ணினான்.

புலம்பல் 3

1 ஆண்டவருடைய சினத்தின் மிலாற்றினால் உண்டான சிறுமையைக் கண்ட புருஷன் நான். 2 அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார். 3 அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே நித்தமும் திருப்பினார். 4 என் சதையையும் என் தோலையும் முற்றலாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார். 5 அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைந்துகொண்டார். 6 பூர்வகாலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணினார். 7 நான் புறப்படக்கூடாதபடி என்னைச் சூழ வேலியடைத்தார்; என் விலங்கைப் பாரமாக்கினார். 8 நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார். 9 வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார். 10 அவர் எனக்குப் பதிவிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார். 11 என் வழிகளை அப்புறப்படுத்தி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப் பாழாக்கிவிட்டார். 12 தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார். 13 தம்முடைய அம்பறாத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார். 14 நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப் பாடலுமானேன். 15 கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார். 16 அவர் பருக்கைக்கற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளப்பண்ணினார். 17 என் ஆத்துமாவைச் சமாதானத்துக்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன். 18 என் பெலனும் நான் கர்த்தருக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோயிற்று என்றேன். 19 எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும். 20 என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது. 21 இதை என் மனதிலே வைத்து, நம்பிக்கைகொண்டிருப்பேன். 22 நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. 23 அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது. 24 கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன். 25 தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர். 26 கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது. 27 தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது. 28 அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மௌனமாயிருக்கக்கடவன். 29 நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாயைத் தூளில் நுழுந்துவானாக. 30 தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக. 31 ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார். 32 அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார். 33 அவர் மனப்பூர்வமாய் மனுபுத்திரரைச் சிறுமையாக்கிச் சஞ்சலப்படுத்துகிறதில்லை. 34 ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் யாவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும், 35 உன்னதமானவரின் சமுகத்தில் மனுஷருடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும், 36 மனுஷனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ? 37 ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்? 38 உன்னதமானவருடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ? 39 உயிருள்ள மனுஷன் முறையிடுவானேன்? அவன் தன் பாவத்துக்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன? 40 நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம். 41 நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுக்கக்கடவோம். 42 நாங்கள் துரோகஞ்செய்து, கலகம்பண்ணினோம்; ஆகையால் தேவரீர் மன்னியாதிருந்தீர். 43 தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர். 44 ஜெபம் உட்பிரவேசிக்கக்கூடாதபடிக்கு உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர். 45 ஜனங்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர். 46 எங்கள் பகைஞர் எல்லாரும் எங்களுக்கு விரோதமாய்த் தங்கள் வாயைத் திறந்தார்கள். 47 திகிலும் படுகுழியும் பாழ்க்கடிப்பும் சங்காரமும் எங்களுக்கு நேரிட்டது. 48 என் ஜனமாகிய குமாரத்தி அடைந்த கேட்டினிமித்தம் என் கண்களிலிருந்து நீர்க்கால்கள் பாய்கிறது. 49 கர்த்தர் பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்குமட்டும், 50 என் கண் இடைவிடாமல் ஓய்வின்றிச் சொரிகிறது. 51 என் நகரத்தினுடைய குமாரத்திகள் அனைவரினிமித்தமும், என் கண் என் ஆத்துமாவுக்கு நோவுண்டாக்குகிறது. 52 முகாந்தரம் இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பட்சியைப்போல வேட்டையாடினார்கள். 53 காவற்கிடங்கிலே என் பிராணனை ஒடுக்கி, என்மீதில் கல்லை வைத்தார்கள். 54 தண்ணீர் என் தலையின்மேல் புரண்டது; நாசமானேன் என்றேன். 55 மகா ஆழமான கிடங்கிலிருந்து, கர்த்தாவே, உம்முடைய நாமத்தைப்பற்றிக் கூப்பிட்டேன். 56 என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும். 57 நான் உம்மை நோக்கிக் கூப்பிட்ட நாளிலே நீர் அணுகி: பயப்படாதே என்றீர். 58 ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் பிராணனை மீட்டுக்கொண்டீர். 59 கர்த்தாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; என் நியாயத்தைத் தீரும். 60 அவர்களுடைய எல்லாக் குரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர். 61 கர்த்தாவே, அவர்கள் நிந்திக்கும் நிந்தையையும், அவர்கள் எனக்கு விரோதமாய் நினைத்த எல்லா நினைவுகளையும், 62 எனக்கு விரோதமாய் எழும்பினவர்களின் வாய்மொழிகளையும், அவர்கள் நாள்முழுதும் எனக்கு விரோதமாய் யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர். 63 அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப்பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன். 64 கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்த கிரியைகளுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் அளிப்பீர். 65 அவர்களுக்கு இருதய வேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும். 66 கோபமாய் அவர்களைப் பின்தொடர்ந்து கர்த்தருடைய வானங்களின் கீழ் இராதபடிக்கு அவர்களை அழித்துவிடுவீர்.

புலம்பல் 4

1 ஐயோ! பொன் மங்கி, பசும்பொன்மாறி, பரிசுத்த ஸ்தலத்தின் கற்கள் சகல வீதிகளின் முனையிலும் கொட்டுண்டுபோயிற்றே. 2 ஐயோ! தங்கத்துக்கொப்பான விலையேறப்பெற்ற சீயோன் குமாரர் குயவனுடைய கைவேலையான மண்பாண்டங்களாய் எண்ணப்படுகிறார்களே. 3 திமிங்கிலங்கள் முதலாய்க் கொங்கைகளை நீட்டி, தங்கள் குட்டிகளுக்குப் பால் கொடுக்கும்; என் ஜனமாகிய குமாரத்தியோ வனாந்தரத்திலுள்ள தீக்குருவியைப்போல் குரூரமாயிருக்கிறாளே. 4 குழந்தைகளின் நாவு தாகத்தால் மேல்வாயோடே ஒட்டிக்கொண்டிருக்கிறது; பிள்ளைகள் அப்பங்கேட்கிறார்கள், அவர்களுக்குக் கொடுப்பாரில்லை. 5 ருசியான பதார்த்தங்களைச் சாப்பிட்டவர்கள் வீதிகளில் பாழாய்க்கிடக்கிறார்கள்; இரத்தாம்பரம் உடுத்தி வளர்ந்தவர்கள் குப்பைமேடுகளை அணைத்துக் கொள்ளுகிறார்கள். 6 கைச்செய்கை இல்லாமல் ஒரு நிமிஷத்திலே கவிழ்க்கப்பட்ட சோதோமின் பாவத்துக்கு வந்த தண்டனையைப்பார்க்கிலும் என் ஜனமாகிய குமாரத்தியின் அக்கிரமத்துக்கு வந்த தண்டனை பெரிதாயிருக்கிறது. 7 அவளுடைய நசரேயர் உறைந்த மழையைப்பார்க்கிலும் சுத்தமும், பாலைப்பார்க்கிலும் வெண்மையும், பவளத்தைப்பார்க்கிலும் சிவப்பும், இந்திரநீலத்தைப்பார்க்கிலும் மேனியுமாயிருந்தார்கள். 8 இப்பொழுதோ அவர்களுடைய முகம் கரியிலும் கறுத்துப்போயிற்று; வீதிகளில் அறியப்படார்கள்; அவர்கள் தோல் அவர்கள் எலும்புகளோடு ஒட்டிக்கொண்டு, காய்ந்த மரத்துக்கு ஒப்பாயிற்று. 9 பசியினால் கொலையுண்டவர்களைப்பார்க்கிலும் பட்டயத்தால் கொலையுண்டவர்கள் பாக்கியவான்களாயிருக்கிறார்கள்; அவர்கள் வயலின் வரத்தில்லாமையால் குத்துண்டு, கரைந்துபோகிறார்கள். 10 இரக்கமுள்ள ஸ்திரீகளின் கைகள் தங்கள் பிள்ளைகளைச் சமைத்தன, என் ஜனமாகிய குமாரத்தியின் அழிவில் அவைகள் அவர்களுக்கு ஆகாரமாயின. 11 கர்த்தர் தமது கோபத்தை நிறைவேற்றி, தமது உக்கிரகோபத்தை ஊற்றி, சீயோனில் அக்கினியைக் கொளுத்தினார்; அது அதின் அஸ்திபாரங்களைப் பட்சித்துப்போட்டது. 12 சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்கிறதைப் பூமியின் ராஜாக்களும் பூச்சக்கரத்தின் சகல குடிகளும் நம்பமாட்டாதிருந்தார்கள். 13 அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது. 14 குருடர்போல வீதிகளில் அலைந்து, ஒருவரும் அவர்கள் வஸ்திரங்களைத் தொடக்கூடாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள். 15 விலகுங்கள், தீட்டுப்பட்டவர்களே, தொடாமல் விலகுங்கள், விலகுங்கள், என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்; மெய்யாய்ப் பறந்தோடி அலைந்து போனார்கள்; இனித் தங்கித் தரிக்கமாட்டார்கள் என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்பட்டது. 16 கர்த்தருடைய கோபம் அவர்களைச் சிதறடித்தது, அவர்களை இனி அவர் நோக்கார்; ஆசாரியருடைய முகத்தைப் பாராமலும் முதியோரை மதியாமலும்போனார்கள். 17 இன்னும் எங்களுக்குச் சகாயம் வருமென்று நாங்கள் வீணாய் எதிர்பார்த்திருந்ததினாலே எங்கள் கண்கள் பூத்துப்போயின; இரட்சிக்கமாட்டாத ஜாதிக்கு எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம். 18 நாங்கள் எங்கள் வீதிகளில் நடவாதபடிக்கு எங்கள் அடிச்சுவடுகளை வேட்டையாடினார்கள்; எங்கள் முடிவு சமீபித்தது; எங்கள் நாட்கள் நிறைவேறிப்போயின; எங்கள் முடிவு வந்துவிட்டது. 19 எங்களைப் பின்தொடர்ந்தவர்கள் ஆகாயத்துக் கழுகுகளைப்பார்க்கிலும் வேகமாயிருந்தார்கள்; பர்வதங்கள்மேல் எங்களைப் பின்தொடர்ந்தார்கள்; வனாந்தரத்தில் எங்களுக்குப் பதிவிருந்தார்கள். 20 கர்த்தரால் அபிஷேகம்பண்ணப்பட்டவனும், எங்கள் நாசியின் சுவாசமாயிருந்தவனும் அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டான்; அவனுடைய நிழலிலே ஜாதிகளுக்குள்ளே பிழைத்திருப்போம் என்று அவனைக்குறித்துச் சொல்லியிருந்தோமே. 21 ஊத்ஸ்தேசவாசியாகிய ஏதோம் குமாரத்தியே, சந்தோஷித்துக் களிகூரு; பாத்திரம் உன்னிடத்திற்கும் தாண்டிவரும், அப்பொழுது நீ வெறித்து, மானபங்கமாய்க் கிடப்பாய். 22 சீயோன் குமாரத்தியே, உன் அக்கிரமத்துக்கு வரும் தண்டனை தீர்ந்தது; அவர் இனி உன்னை அப்புறம் சிறைப்பட்டுப்போகவிடார்; ஏதோம் குமாரத்தியே, உன் அக்கிரமத்தை அவர் விசாரிப்பார்; உன் பாவங்களை வெளிப்படுத்துவார்.

புலம்பல் 5

1 கர்த்தாவே, எங்களுக்கு நேரிட்டதை நினைத்தருளும்; எங்கள் நிந்தையை நோக்கிப்பாரும். 2 எங்கள் சுதந்தரம் அந்நியர் வசமாகவும், எங்கள் வீடுகள் புறத்தேசத்தார்வசமாகவும் தாண்டிப்போயின. 3 திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள். 4 எங்கள் தண்ணீரைப் பணத்துக்கு வாங்கிக் குடிக்கிறோம்; எங்கள் விறகு விலைக்கிரயமாய் வருகிறது. 5 பாரஞ்சுமந்து எங்கள் கழுத்து நோகிறது; நாங்கள் உழைக்கிறோம், எங்களுக்கு இளைப்பாறுதல் இல்லை. 6 அப்பத்தால் திருப்தியாகும்படி எகிப்தியருக்கும் அசீரியருக்கும் எங்களைக் கையளித்தோம். 7 எங்கள் பிதாக்கள் பாவஞ்செய்து மாண்டுபோனார்கள்; நாங்கள் அவர்களுடைய அக்கிரமங்களைச் சுமக்கிறோம். 8 அடிமைகள் எங்களை ஆளுகிறார்கள்; எங்களை அவர்கள் கையிலிருந்து விடுவிப்பாரில்லை. 9 வனாந்தரத்தில் இருக்கிற பட்டயத்தினால் பிராணமோசத்துக்கு ஏதுவானவர்களாய் எங்கள் அப்பத்தைத் தேடுகிறோம். 10 பஞ்சத்தின் கொடுமையினால் எங்கள் தோல் அடுப்பங்கரையைப்போல் கறுத்துப்போயிற்று. 11 சீயோனில் இருந்த ஸ்திரீகளையும் யூதா பட்டணங்களில் இருந்த கன்னிகைகளையும் அவமானப்படுத்தினார்கள். 12 பிரபுக்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை ஏறத்தூக்கினார்கள்; முதியோரின் முகங்கள் மதிக்கப்படவில்லை. 13 வாலிபரை ஏந்திரம் அரைக்கக் கொண்டுபோகிறார்கள்; இளைஞர் விறகு சுமந்து இடறிவிழுகிறார்கள். 14 முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், வாலிபர் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோயிற்று. 15 எங்கள் இருதயத்தின் களிகூருதல் ஒழிந்துபோயிற்று; எங்கள் சந்தோஷம் துக்கமாய் மாறிற்று. 16 எங்கள் தலையிலிருந்து கிரீடம் விழுந்தது; ஐயோ! நாங்கள் பாவஞ்செய்தோமே. 17 அதினால் எங்கள் இருதயம் பலட்சயமாயிற்று; அதினால் எங்கள் கண்கள் இருண்டுபோயின. 18 பாழாய்க்கிடக்கிற சீயோன் மலையின்மேல் நரிகள் ஓடித்திரிகிறது. 19 கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் இருக்கிறீர்; உம்முடைய சிங்காசனம் தலைமுறை தலைமுறையாக நிலைநிற்கும். 20 தேவரீர் என்றைக்கும் எங்களை மறந்து, நெடுங்காலமாக எங்களைக் கைவிட்டிருப்பதென்ன? 21 கர்த்தாவே, எங்களை உம்மிடத்தில் திருப்பிக்கொள்ளும், அப்பொழுது திரும்புவோம்; பூர்வகாலத்திலிருந்ததுபோல எங்கள் நாட்களைப் புதியவைகளாக்கும். 22 எங்களை முற்றிலும் வெறுத்துவிடுவீரோ? எங்கள்பேரில் கடுங்கோபமாயிருக்கிறீரே.

எசேக்கியேல் 1

1 முப்பதாம் வருஷம் நாலாம் மாசம் ஐந்தாந்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன். 2 அது யோயாக்கீன் ராஜாவுடைய சிறையிருப்பின் ஐந்தாம் வருஷமாயிருந்தது. 3 அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது. 4 இதோ, வடக்கேயிருந்து புசல்காற்றும் பெரிய மேகமும், அத்தோடே கலந்த அக்கினியும் வரக்கண்டேன்; அதைச் சுற்றிலும் பிரகாசமும், அதின் நடுவில் அக்கினிக்குள்ளிருந்து விளங்கிய சொகுசாவின் நிறமும் உண்டாயிருந்தது. 5 அதின் நடுவிலிருந்து நாலு ஜீவன்கள் தோன்றின; அவைகளின் சாயல் மனுஷசாயலாயிருந்தது. 6 அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு முகங்களும், ஒவ்வொன்றுக்கும் நந்நான்கு செட்டைகளும் இருந்தன. 7 அவைகளுடைய கால்கள் நிமிர்ந்த கால்களாயிருந்தன; அவைகளுடைய உள்ளங்கால்கள் கன்றுக்குட்டியின் உள்ளங்கால்களுக்கு ஒப்பாயிருந்தன; அவைகள் துலக்கப்பட்ட வெண்கலத்தின் வருணமாய் மின்னிக்கொண்டிருந்தன. 8 அவைகளுடைய செட்டைகளின்கீழ் அவைகளின் நாலு பக்கங்களிலும் மனுஷகைகள் இருந்தன; அந்த நாலுக்கும் அதினதின் முகங்களும் அதினதின் செட்டைகளும் உண்டாயிருந்தன. 9 அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன; அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன. 10 அவைகளுடைய முகங்களின் சாயலாவது, வலதுபக்கத்தில் நாலும் மனுஷமுகமும் சிங்கமுகமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன. 11 அவைகளுடைய முகங்கள் இப்படியிருக்க, அவைகளுடைய செட்டைகள் மேலே பிரிந்திருந்தன, ஒவ்வொன்றுக்குமுள்ள இரண்டிரண்டு செட்டைகள் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன; மற்ற இரண்டிரண்டு செட்டைகள் அவைகளுடைய உடல்களை மூடின. 12 அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை. 13 ஜீவன்களுடைய சாயல் எப்படியிருந்ததென்றால், அவைகள் எரிகிற அக்கினித்தழலின் தோற்றமும் தீவர்த்திகளின் தோற்றமுமாயிருந்தது; அந்த அக்கினி ஜீவன்களுக்குள்ளே உலாவிப் பிரகாசமாயிருந்தது; அக்கினியிலிருந்து மின்னல் புறப்பட்டது. 14 அந்த ஜீவன்கள் மின்னலின் தோற்றம்போல ஓடித்திரிந்தன. 15 நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, பூமியில் ஜீவன்களண்டையிலே நாலு முகங்களையுடைய ஒரு சக்கரத்தைக் கண்டேன். 16 சக்கரங்களின் ரூபமும் அவைகளின் வேலையும் படிகப்பச்சை வருணமாயிருந்தது; அவைகள் நாலுக்கும் ஒரேவித சாயல் இருந்தது; அவைகளின் ரூபமும் அவைகளின் வேலையும் சக்கரத்துக்குள் சக்கரம் இருக்குமாபோல் இருந்தது. 17 அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகிறதில்லை. 18 அவைகளின் வட்டங்கள் பயங்கரப்படத்தக்க உயரமாயிருந்தன; அந்த நாலு வட்டங்களும் சுற்றிலும் கண்களால் நிறைந்திருந்தன. 19 அந்த ஜீவன்கள் செல்லும்போது, அந்தச் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; அந்த ஜீவன்கள் பூமியிலிருந்து எழும்பும்போது சக்கரங்களும் எழும்பின. 20 ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; அவ்விடத்துக்கு அவைகளின் ஆவியும் போகவேண்டுமென்றிருந்தது; சக்கரங்களும் அவைகளின் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது. 21 அவைகள் செல்லும்போது இவைகளும் சென்றன; அவைகள் நிற்கும்போது இவைகளும் நின்றன; அவைகள் பூமியிலிருந்து எழும்பும்போது, சக்கரங்களும் அவைகள் அருகே எழும்பின; ஜீவனுடைய ஆவி சக்கரங்களில் இருந்தது. 22 ஜீவனுடைய தலைகளின்மேல் பிரமிக்கத்தக்க வச்சிரப்பிரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது. 23 மண்டலத்தின்கீழ் அவைகளுடைய செட்டைகள் ஒன்றுக்கொன்று எதிர்நேராய் விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு செட்டைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன. 24 அவைகள் செல்லும்போது அவைகளுடைய செட்டைகளின் இரைச்சலைக் கேட்டேன்; அது பெருவெள்ளத்தின் இரைச்சல்போலவும், சர்வவல்லவருடைய சத்தம்போலவும், ஒரு இராணுவத்தின் இரைச்சலுக்கு ஒத்த ஆரவாரத்தின் சத்தம்போலவுமிருந்தது; அவைகள் நிற்கும்போது தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருந்தன. 25 அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது. 26 அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலும், அந்தச் சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது. 27 அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் மேலெல்லாம் உட்புறம் சுற்றிலும் அக்கினிமயமான சொகுசாவின் நிறமாயிருக்கக்கண்டேன்; அவருடைய இடுப்பாகக் காணப்பட்டதுமுதல் கீழெல்லாம் அக்கினிமயமாகவும், அதைச் சுற்றிலும் பிரகாசமாகவும் இருக்கக்கண்டேன். 28 மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.

எசேக்கியேல் 2

1 அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, உன் காலூன்றி நில்; உன்னுடனே பேசுவேன் என்றார். 2 இப்படி அவர் என்னோடே பேசும்போது, ஆவி எனக்குள் வந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது; அப்பொழுது அவர் என்னுடனே பேசுகிறதைக் கேட்டேன். 3 அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, எனக்கு விரோதமாய் எழும்பின கலகக்கார ஜாதியாகிய இஸ்ரவேல் புத்திரரிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; அவர்களும் அவர்கள் பிதாக்களும் இந்நாள்வரைக்கும் எனக்கு விரோதமாய்த் துரோகஞ்செய்தார்கள். 4 அவர்கள் கடினமுகமும் முரட்டாட்ட இருதயமுமுள்ள புத்திரர்; அவர்களிடத்திற்கு நான் உன்னை அனுப்புகிறேன்; கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல்லு. 5 கலகவீட்டாராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, தங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசி உண்டென்கிறதை அவர்கள் அறியவேண்டும். 6 மனுபுத்திரனே, நீ அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; அவர்கள் வார்த்தைகளுக்கும் அஞ்சவேண்டாம்; நெரிஞ்சில்களுக்குள்ளும் முள்ளுகளுக்குள்ளும் நீ தங்கியிருந்தாலும், நீ தேள்களுக்குள் வாசம்பண்ணினாலும், நீ அவர்கள் வார்த்தைகளுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகத்துக்குக் கலங்காமலுமிரு; அவர்கள் கலகவீட்டார். 7 கலகக்காரராகிய அவர்கள் கேட்டாலும் சரி, கேளாவிட்டாலும் சரி, நீ என் வார்த்தைகளை அவர்களுக்குச் சொல்லு. 8 மனுபுத்திரனே, நீ அந்தக் கலகவீட்டாரைப்போலக் கலகக்காரனாயிராமல், நான் உன்னோடே சொல்லுகிறதைக் கேள்; உன் வாயைத் திறந்து நான் உனக்குக் கொடுக்கிறதைப் புசி என்றார். 9 அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புஸ்தகச்சுருள் இருந்தது. 10 அவர் அதை எனக்குமுன்பாக விரித்தார்; அதில் உள்ளும் புறம்பும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது.

எசேக்கியேல் 3

1 பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ காண்கிறதைப் புசி; இந்தச் சுருளை நீ புசித்து, இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் போய் அவர்களோடே பேசு என்றார். 2 அப்படியே என் வாயைத் திறந்தேன்; அப்பொழுது அவர் அந்தச் சுருளை எனக்குப் புசிக்கக்கொடுத்து: 3 மனுபுத்திரனே, நான் உனக்குக் கொடுக்கிற இந்தச் சுருளை நீ உன் வயிற்றிலே உட்கொண்டு, அதினால் உன் குடல்களை நிரப்புவாயாக என்றார்; அப்பொழுது நான் அதைப் புசித்தேன்; அது என் வாய்க்குத் தேனைப்போல் தித்திப்பாயிருந்தது. 4 பின்பு அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ போய், இஸ்ரவேல் சந்ததியாரிடத்தில் சேர்ந்து, என் வார்த்தைகளைக்கொண்டு அவர்களோடே பேசு. 5 விளங்காத பேச்சும், கடினமான பாஷையுமுள்ள ஜனத்தண்டைக்கல்ல, இஸ்ரவேல் சந்ததியாரிடத்திற்கே நீ அனுப்பப்படுகிறாய். 6 விளங்காத பேச்சும், தாங்கள் சொல்லும் வார்த்தைகளை நீ அறியாத கடினமான பாஷையுமுள்ள அநேகமான ஜனங்களிடத்திற்கு நீ அனுப்பப்படவில்லை; நான் அவர்களிடத்திற்கு உன்னை அனுப்பினாலும், அவர்கள் உனக்குச் செவிகொடுப்பார்களோ? 7 இஸ்ரவேல் வீட்டாரோவெனில், உனக்குச் செவிகொடுக்கமாட்டார்கள்; எனக்கே செவிகொடுக்கமாட்டோம் என்கிறார்களே; இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் கடினமான நெற்றியும் முரட்டாட்டமுள்ள இருதயமும் உள்ளவர்கள். 8 இதோ, உன் முகத்தை அவர்கள் முகத்துக்கு எதிராகவும், உன் நெற்றியை அவர்கள் நெற்றிக்கு எதிராகவும் கெட்டியாக்கினேன். 9 உன் நெற்றியை வச்சிரக்கல்லைப்போலாக்கினேன், கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கினேன்; அவர்கள் கலகமுள்ள வீட்டாரென்று நீ அவர்களுக்குப் பயப்படாமலும் அவர்கள் முகங்களுக்குக் கலங்காமலும் இரு என்றார். 10 பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நான் உன்னுடனே சொல்லும் என் வார்த்தைகளையெல்லாம் நீ உன் செவிகளாலே கேட்டு, உன் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு, 11 நீ போய், சிறைப்பட்ட உன் ஜனத்தின் புத்திரரிடத்திலே சேர்ந்து, அவர்கள் கேட்டாலும் கேளாவிட்டாலும் அவர்களோடே பேசி, கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார். 12 அப்பொழுது ஆவி, என்னை உயர எடுத்துக்கொண்டது; கர்த்தருடைய ஸ்தானத்திலிருந்து விளங்கிய அவருடைய மகிமைக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்று எனக்குப் பின்னாகக் கூப்பிட்ட மகா சத்தத்தின் இரைச்சலைக் கேட்டேன். 13 ஒன்றோடொன்று இணைந்திருக்கிற ஜீவன்களுடைய செட்டைகளின் இரைச்சலையும், அதற்கெதிரே ஓடிய சக்கரங்களின் இரைச்சலையும், மகா சத்தத்தின் இரைச்சலையும் கேட்டேன். 14 ஆவி என்னை உயர எடுத்துக்கொண்டது; நான் என் ஆவியின் உக்கிரத்தினாலே மனங்கசந்துபோனேன்; ஆனாலும் கர்த்தருடைய கரம் என்மேல் பலமாக இருந்தது. 15 கேபார் நதியண்டையிலே தெலாபீபிலே தாபரிக்கிற சிறைப்பட்டவர்களிடத்துக்கு நான் வந்து, அவர்கள் தாபரிக்கிற ஸ்தலத்திலே தாபரித்து, ஏழுநாள் அவர்கள் நடுவிலே பிரமித்தவனாய்த் தங்கினேன். 16 ஏழுநாள் முடிந்தபின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 17 மனுபுத்திரனே, உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவலாளனாக வைத்தேன்; நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக. 18 சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கமான வழியில் இராதபடிக்கு எச்சரிக்கும்படியாகவும், அவனை உயிரோடே காக்கும்படியாகவும், அதை அவனுக்குச் சொல்லாமலும், நீ அவனை எச்சரிக்காமலும் இருந்தால், அந்தத் துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; அவன் இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன். 19 நீ துன்மார்க்கனை எச்சரித்தும், அவன் தன் துன்மார்க்கத்தையும் தன் ஆகாத வழியையும் விட்டுத் திரும்பாமற் போவானாகில், அவன் தன் துன்மார்க்கத்திலே சாவான்; நீயோவென்றால் உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய். 20 அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும்போதும், நான் அவன்முன் இடறலை வைக்கும்போதும், அவன் சாவான்; நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான்; அவன் செய்த நீதிகள் நினைக்கப்படுவதில்லை; அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன். 21 நீதிமான் பாவஞ் செய்யாதபடிக்கு நீ நீதிமானை எச்சரித்தபின்பு அவன் பாவஞ்செய்யாவிட்டால், அவன் பிழைக்கவே பிழைப்பான்; அவன் எச்சரிக்கப்பட்டான்; நீயும் உன் ஆத்துமாவைத் தப்புவித்தாய் என்றார். 22 அவ்விடத்திலே கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்தது; அவர்: நீ எழுந்திருந்து பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப்போ, அங்கே உன்னுடனே பேசுவேன் என்றார். 23 அப்படியே நான் எழுந்திருந்து, பள்ளத்தாக்குக்குப் புறப்பட்டுப் போனேன்; இதோ, கேபார் நதியண்டையிலே நான் கண்ட மகிமைக்குச் சரியாக அங்கே கர்த்தருடைய மகிமை விளங்கினது; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்தேன். 24 உடனே ஆவி எனக்குள்ளே புகுந்து, என்னைக் காலூன்றி நிற்கும்படி செய்தது, அப்பொழுது அவர் என்னுடனே பேசி: நீ போய், உன் வீட்டுக்குள்ளே உன்னை அடைத்துக்கொண்டிரு. 25 இதோ, மனுபுத்திரனே, உன்மேல் கயிறுகளைப்போட்டு, அவைகளால் உன்னைக் கட்டப்போகிறார்கள்; ஆகையால் நீ அவர்களுக்குள்ளே போகவேண்டாம். 26 நான் உன் நாவை உன் மேல்வாயோடே ஒட்டிக்கொள்ளப்பண்ணுவேன்; நீ அவர்களைக் கடிந்துகொள்ளுகிற மனுஷனாயிராமல், ஊமையனாயிருப்பாய்; அவர்கள் கலகவீட்டார். 27 நான் உன்னோடே பேசும்போது, உன் வாயைத் திறப்பேன்; அப்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் இன்னின்னதை உரைத்தார் என்று அவர்களோடே சொல்வாய்; கேட்கிறவன் கேட்கட்டும், கேளாதவன் கேளாதிருக்கட்டும்; அவர்கள் கலகவீட்டார்.

எசேக்கியேல் 4

1 மனுபுத்திரனே, நீ ஒரு செங்கலை எடுத்து, அதை உன்முன் வைத்து, அதின்மேல் எருசலேம் நகரத்தை வரைந்து, 2 அதற்கு விரோதமாக முற்றிக்கைபோட்டு, அதற்கு விரோதமாகக் கொத்தளங்களைக் கட்டி, அதற்கு விரோதமாக மண்மேடுபோட்டு, அதற்கு விரோதமாக இராணுவங்களை நிறுத்தி, சுற்றிலும் அதற்கு விரோதமாக மதிலிடிக்கும் யந்திரங்களை வை. 3 மேலும் நீ ஒரு இருப்புச்சட்டியை வாங்கி, அதை உனக்கும் நகரத்துக்கும் நடுவாக இருப்புச்சுவராக்கி, அது முற்றிக்கையாய்க் கிடக்கும்படிக்கு உன் முகத்தை அதற்கு நேராய்த் திருப்பி, அதை முற்றிக்கைபோட்டுக்கொண்டிரு; இது இஸ்ரவேல் வம்சத்துக்கு அடையாளம். 4 நீ உன் இடதுபக்கமாய் ஒருக்களித்துப் படுத்து, அதின்மேல் இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தைச் சுமத்திக்கொள்; நீ அந்தப்பக்கமாய் ஒருக்களித்திருக்கும் நாட்களின் இலக்கத்தின்படியே அவர்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பாய். 5 அவர்களுடைய அக்கிரமத்தின் வருஷங்களை உனக்கு நாட்கணக்காய் எண்ணக் கட்டளையிட்டேன்; முந்நூற்றுத் தொண்ணூறு நாட்கள்வரைக்கும் நீ இஸ்ரவேல் வம்சத்தாரின் அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும். 6 நீ இவைகளை நிறைவேற்றினபின்பு, மறுபடியும் உன் வலதுபக்கமாய் ஒருக்களித்து, யூதா வம்சத்தாரின் அக்கிரமத்தை நாற்பதுநாள்வரைக்கும் சுமக்கவேண்டும்; ஒவ்வொரு வருஷத்துக்குப் பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன். 7 நீ எருசலேமின் முற்றிக்கைக்கு நேராகத் திருப்பிய முகமும், திறந்த புயமுமாக இருந்து, அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு. 8 இதோ, நீ அதை முற்றிக்கைப்போடும் நாட்களை நிறைவேற்றுமட்டும் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்தில் புரளக்கூடாதபடிக்கு உன்னைக் கயிறுகளால் கட்டுவேன். 9 நீ கோதுமையையும் வாற்கோதுமையையும் பெரும்பயற்றையும் சிறுபயற்றையும் தினையையும் கம்பையும் வாங்கி, அவைகளை ஒரு பாத்திரத்திலே போட்டு, அவைகளால் உனக்கு அப்பஞ்சுடுவாய்; நீ ஒருக்களித்துப் படுக்கும் நாட்களுடைய இலக்கத்தின்படியே முந்நூற்றுத் தொண்ணூறுநாள் அதில் எடுத்துச் சாப்பிடுவாயாக. 10 நீ சாப்பிடும் போஜனம், நாள் ஒன்றுக்கு இருபது சேக்கல் நிறையாயிருக்கும்; அப்படி நாளுக்குநாள் சாப்பிடுவாயாக. 11 தண்ணீரையும் அளவாய் ஹின் என்னும் படியில் ஆறிலொரு பங்கைக் குடிப்பாய்; அப்படி நாளுக்குநாள் குடிப்பாயாக. 12 அதை வாற்கோதுமை அடையைப்போல் சாப்பிடுவாயாக; அது மனுஷனிலிருந்து கழிந்த கஷ்டத்தின் வறட்டிகளால் அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சுடப்படுவதாக. 13 அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் புத்திரர், நான் அவர்களைத் துரத்துகிற புறஜாதிகளுக்குள்ளே தங்கள் அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள் என்று கர்த்தர் சொன்னார். 14 அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, என் ஆத்துமா தீட்டுப்படவில்லை; தானாய்ச் செத்ததையாவது, பீறுண்டதையாவது நான் என் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை; அருவருப்பான இறைச்சி என் வாய்க்குட்பட்டதுமில்லை என்றேன். 15 அப்பொழுது அவர் என்னை நோக்கி: பார், மனுஷ கஷ்டத்தின் வறட்டிக்குப் பதிலாக உனக்கு மாட்டுச்சாணி வறட்டியைக் கட்டளையிடுகிறேன்; அதினால் உன் அப்பத்தைச் சுடுவாயாக என்றார். 16 பின்னும் அவர்: மனுபுத்திரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்கள் அக்கிரமத்திலே வாடிப்போகவும், 17 நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே விசாரத்தோடே சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே திடுக்கிடுதலோடே குடிப்பார்கள்.

எசேக்கியேல் 5

1 பின்னும் அவர்: மனுபுத்திரனே, சவரகன் கத்தியாகிய கருக்கான கத்தியை வாங்கி, அதினால் உன் தலையையும் உன் தாடியையும் சிரைத்துக்கொண்டு, பின்பு நிறுக்கும் தராசை எடுத்து, அந்த மயிரைப் பங்கிடக்கடவாய். 2 மூன்றில் ஒரு பங்கை எடுத்து முற்றிக்கைபோடும் நாட்கள் முடிகிறபோது நகரத்தின் நடுவிலே அக்கினியால் சுட்டெரித்து, மூன்றில் ஒரு பங்கை எடுத்து, அதைச் சுற்றிலும் கத்தியாலே வெட்டி, மூன்றில் ஒரு பங்கை எடுத்துக் காற்றிலே தூற்றக்கடவாய்; அவைகளின் பின்னாக நான் பட்டயத்தை உருவுவேன். 3 அதில் கொஞ்சம்மாத்திரம் எடுத்து, அதை உன் வஸ்திரத்தோரங்களில் முடிந்துவைப்பாயாக. 4 பின்னும் அதில் கொஞ்சம் எடுத்து, அதைத் தீயின் நடுவில் எறிந்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பாயாக; அதிலிருந்து இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் விரோதமாக அக்கினி புறப்படும். 5 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதுவே எருசலேம், புறஜாதிகளின் நடுவிலே நான் அதை வைத்தேன், அதைச் சுற்றிலும் தேசங்கள் இருக்கிறது. 6 அது புறஜாதிகளைப்பார்க்கிலும் என் நியாயங்களையும், தன்னைச் சுற்றிலும் இருக்கிற தேசங்களைப்பார்க்கிலும் என் கட்டளைகளையும் அக்கிரமமாக மாற்றிப்போட்டது; அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைகளில் நடவாமற் போனார்கள். 7 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளைப்பார்க்கிலும் அதிகரிக்கிறவர்களாகிய நீங்கள் என் கட்டளைகளிலே நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகளுடைய நீதிநியாயங்களின்படியாவது நடவாமலும் போனபடியினாலே, 8 இதோ, நான், நானே உனக்கு விரோதமாக வந்து, புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக உன் நடுவிலே நீதி செலுத்தி, 9 நான் முன்பு செய்யாததும் இனிச்செய்யாதிருப்பதுமானவிதமாய் உனக்கு உன் எல்லா அருவருப்புகளினிமித்தமும் செய்வேன். 10 ஆதலால் உன் நடுவிலே பிதாக்கள் பிள்ளைகளைத் தின்பார்கள்; பிள்ளைகள் பிதாக்களைத் தின்பார்கள்; நான் உன்னில் நீதிசெலுத்தி உன்னில் மீதியாயிருப்பவர்களையெல்லாம் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 11 ஆதலால், சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான உன் கிரியைகளால் நீ என் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினபடியால் என் கண் உன்னைத் தப்பவிடாது, நான் உன்னைக் குறுகிப்போகப்பண்ணுவேன், நான் இரங்கமாட்டேன், இதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 12 உன்னிலே மூன்றில் ஒரு பங்கு கொள்ளைநோயால் சாவார்கள், பஞ்சத்தாலும் உன் நடுவிலே மடிந்துபோவார்கள்; மூன்றில் ஒரு பங்கு உன்னைச் சுற்றிலும் இருக்கிற பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள்; மூன்றில் ஒரு பங்கை நான் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன். 13 இப்படி என் கோபம் நிறைவேறும்; இப்படி நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் தங்கப்பண்ணுகிறதினால் என்னை ஆற்றிக்கொள்வேன்; நான் என் உக்கிரத்தை அவர்களில் நிறைவேற்றும்போது, கர்த்தராகிய நான் என் வைராக்கியத்திலே இதைப் பேசினேன் என்று அறிவார்கள். 14 கடந்துபோகிற யாவருடைய கண்களுக்கு முன்பாகவும் உன் சுற்றுப்புறத்தாராகிய ஜாதிகளுக்குள்ளே நான் உன்னைப் பாழும் நிந்தையுமாக்குவேன். 15 நான் கோபத்தாலும் உக்கிரத்தாலும் கொடிய கண்டனைகளாலும், உன்னில் நீதிசெலுத்தும்போது, உன் சுற்றுப்புறத்தாராகிய ஜாதிகளுக்கு அது நிந்தையும் துர்க்கீர்த்தியும் எச்சரிப்பும் பிரமிப்புமாய் இருக்கும்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன். 16 உங்களை அழிப்பதற்கு நான் அனுப்பும் அழிவுக்கேதுவான பஞ்சத்தின் கொடிய அம்புகளை நான் அவர்களுக்குள்ளே எய்யும்போது, நான் பஞ்சத்தை உங்கள்மேல் அதிகரிக்கப்பண்ணி, உங்கள் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்துப்போடுவேன். 17 பஞ்சத்தையும், உன்னைப் பிள்ளையில்லாமற்போகப்பண்ணும் துஷ்டமிருகங்களையும் உங்களுக்கு விரோதமாக அனுப்புவேன்; கொள்ளைநோயும் இரத்தஞ்சிந்துதலும் உன்னில் சுற்றித்திரியும்; பட்டயத்தை நான் உன்மேல் வரப்பண்ணுவேன்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்றார்.

எசேக்கியேல் 6

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, நீ இஸ்ரவேலின் பர்வதங்களுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி, அவைகளுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால், 3 இஸ்ரவேலின் பர்வதங்களே, கர்த்தராகிய ஆண்டவரின் வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் பர்வதங்களையும் குன்றுகளையும் ஓடைகளையும் பள்ளத்தாக்குகளையும் நோக்கி: இதோ, உங்கள்மேல் நான், நானே பட்டயத்தை வரப்பண்ணி, உங்கள் மேடைகளை அழித்துப்போடுவேன். 4 உங்கள் பலிபீடங்கள் பாழாக்கப்பட்டு, உங்கள் சிலைகள் தகர்க்கப்படும்; உங்களில் கொலையுண்கிறவர்களை உங்கள் நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக விழப்பண்ணுவேன். 5 நான் இஸ்ரவேல் புத்திரருடைய பிரேதங்களை அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் முன்னே கிடக்கப்பண்ணி, உங்கள் பலிபீடங்களைச் சுற்றிலும் உங்கள் எலும்புகளைச் சிதறப்பண்ணுவேன். 6 உங்கள் பலிபீடங்கள் நிர்மூலமும் பாழுமாகும்படிக்கும், உங்கள் நரகலான விக்கிரகங்கள் தகர்க்கப்பட்டு, ஓய்ந்து, உங்கள் சிலைகள் வெட்டுண்டு, உங்கள் கிரியைகள் குலைந்துபோகும்படிக்கும், உங்களுடைய சகல வாசஸ்தலங்களிலுமுள்ள பட்டணங்கள் நிர்மூலமும் உங்கள் மேடைகள் பாழுமாகும். 7 கொலைசெய்யப்பட்டவர்கள் உங்கள் நடுவில் விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். 8 நீங்கள் தேசங்களில் சிதறடிக்கப்படும்போது, புறஜாதிகளுக்குள்ளே பட்டயத்துக்குத் தப்புவாரை உங்களுக்கு மீதியாக வைப்பேன். 9 என்னை விட்டுச் சோரம்போகிற இருதயத்தைக்குறித்தும், தங்கள் நரகலான விக்கிரகங்களின் பின்னே சோரம்போகிற தங்கள் கண்களைக்குறித்தும் மனமடிவானேன் என்று உங்களில் தப்பிப்போன அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் புறஜாதிகளுக்குள்ளே என்னை நினைத்து, தங்களுடைய சகல அருவருப்புகளினாலும் தாங்கள் செய்த பொல்லாப்புகளினிமித்தம் தங்களையே வெறுத்து, 10 இந்தத் தீங்குகளையெல்லாம் தங்களுக்கு நேரிடப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய நான் விருதாவாய்ச் சொன்னதில்லையென்று அறிந்துகொள்வார்கள் என்றார். 11 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் கையில் அடித்து, உன் காலால் தட்டி, இஸ்ரவேல் வம்சத்தாருடைய சகல பொல்லாத அருவருப்புகளினிமித்தமும் ஐயோ! என்று சொல்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் விழுவார்கள். 12 தூரத்திலிருக்கிறவன் கொள்ளைநோயால் சாவான்; சமீபத்திலிருக்கிறவன் பட்டயத்தால் விழுவான்; மீதியாயிருந்து, முற்றிக்கைபோடப்பட்டவன் பஞ்சத்தால் சாவான்; இப்படி அவர்களில் என் உக்கிரத்தைத் தீர்த்துக்கொள்ளுவேன். 13 அவர்கள் தங்கள் நரகலான சகல விக்கிரகங்களுக்கும் மதுரவாசனையான தூபத்தைக் காட்டின ஸ்தலங்களாகிய உயர்ந்த சகல மேடுகளிலும், பர்வதங்களுடைய சகல சிகரங்களிலும், பச்சையான சகல விருட்சங்களின்கீழும், தழைத்திருக்கிற சகல கர்வாலி மரங்களின்கீழும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களின் நடுவிலும் அவர்களுடைய பலிபீடங்களைச் சுற்றிலும், அவர்களில் கொலையுண்டவர்கள் கிடக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். 14 நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக நீட்டி, அவர்களுடைய எல்லா வாசஸ்தலங்களுமுள்ள தேசத்தை அழித்து, அதைத் திப்லாத்தின் வனாந்தரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்ப் பாழாக்குவேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

எசேக்கியேல் 7

1 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முடிவு வருகிறது, தேசத்தின் நாலு முனைகளின்மேலும் முடிவு வருகிறது. 3 இப்போதே உன்மேல் முடிவு வருகிறது; நான் என் கோபத்தை உன்மேல் வருவித்து, உன் வழிகளுக்குத்தக்கதாக உன்னை நியாயந்தீர்த்து, உன் எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரப்பண்ணுவேன். 4 என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். 5 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது; இதோ, ஏகமான தீங்கு வருகிறது. 6 முடிவு வருகிறது, முடிவு வருகிறது, அது உன்மேல் நோக்கமாயிருக்கிறது; இதோ, வருகிறது. 7 தேசத்தில் குடியிருக்கிறவனே, அந்நாளின் விடியற்காலம் வருகிறது, காலம் வருகிறது, அமளியின் நாள் சமீபித்திருக்கிறது, மலைகளில் சந்தோஷசத்தம் இல்லை. 8 இப்பொழுது விரைவில் என் உக்கிரத்தை உன்மேல் ஊற்றி, என் கோபத்தை உன்னில் தீர்த்துக்கொண்டு, உன்னை உன் வழிகளுக்குத்தக்கதாக நியாயந்தீர்த்து, உன் எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரப்பண்ணுவேன். 9 என் கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன் வழிகளுக்குத்தக்கதை உன்மேல் வரப்பண்ணுவேன்; உன் அருவருப்புகளுக்குத்தக்கது உன் நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது அடிக்கிறவராகிய நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். 10 இதோ, அந்த நாள், இதோ, வருகிறது, அந்நாளின் விடியற்காலம் உதிக்கிறது, மிலாறு பூக்கிறது, அகந்தை செழிக்கிறது. 11 அக்கிரமத்துக்கு மிலாறாகக் கொடுமை எழும்புகிறது; அவர்களிலும் அவர்களுடைய திரளான கும்பிலும் அவர்களுடைய அமளியிலும் ஒன்றும் மீதியாயிருப்பதில்லை; அவர்கள் நிமித்தம் புலம்பல் உண்டாயிருப்பதுமில்லை. 12 அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் கிட்டுகிறது; கொள்ளுகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக; அதின் திரளான கும்பின்மேலும் உக்கிரம் இறங்கும். 13 அவர்கள் ஜீவனுள்ளோருக்குள்ளே இன்னும் உயிரோடிருந்தாலும், விற்றவன் விற்கப்பட்டதற்குத் திரும்பிவருவதில்லை; அதின் திரளான கும்பின்மேலும் உண்டான தரிசனம் திரும்பாது; தன் அக்கிரமத்திலே வாழுகிற எவனும் தன்னைத் திடப்படுத்தமாட்டான். 14 அவர்கள் எக்காளம் ஊதி, எல்லாவற்றையும் ஆயத்தம்பண்ணியும், யுத்தத்துக்குப் போகிறவனில்லை; என் உக்கிரம் அதின் திரளான கும்பின்மேலும் இறங்குகிறது. 15 வெளியே பட்டயமும் உள்ளே கொள்ளைநோயும் பஞ்சமும் உண்டு; வயல்வெளியில் இருக்கிறவன் பட்டயத்தால் சாவான்; நகரத்தில் இருக்கிறவனையோ பஞ்சமும் கொள்ளைநோயும் பட்சிக்கும். 16 அவர்களில் தப்புகிறவர்கள் தப்புவார்கள்; ஆனாலும் அவர்கள் அனைவரும் அவனவன் தன் தன் அக்கிரமத்தினிமித்தம் துக்கித்துக் கூப்பிடுகிற பள்ளத்தாக்குகளின் புறாக்களைப்போல மலைகளில் இருப்பார்கள். 17 எல்லாக் கைகளும் சலித்து, எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போல் தத்தளிக்கும். 18 இரட்டை உடுத்திக்கொள்வார்கள்; தத்தளிப்பு அவர்களை மூடும்; எல்லா முகங்களும் வெட்கப்படும், எல்லாத் தலைகளும் மொட்டையிடப்படும். 19 தங்கள் வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாயிருக்கும்; கர்த்தருடைய சினத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களை விடுவிக்கமாட்டாது; அவர்கள் அதினால் தங்கள் ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை, தங்கள் வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்கள் அக்கிரமமே அவர்களுக்கு இடறலாயிருந்தது. 20 அவருடைய சிங்காரத்தின் மகிமையை அகந்தைக்கென்று வைத்து, அதிலே அருவருக்கப்படத்தக்கதும் சீயென்றிகழப்படத்தக்கதுமான காரியங்களின் விக்கிரகங்களை உண்டுபண்ணினார்கள்; ஆகையால் நான் அவைகளை அவர்களுக்கு வேண்டாவெறுப்பாக்கி, 21 அதை அந்நியர் கையிலே கொள்ளையாகவும், பூமியில் துஷ்டர்களுக்குச் சூறையாகவும் கொடுப்பேன்; அவர்கள் அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள். 22 என் முகத்தை அவர்களை விட்டுத் திருப்புவேன்; அதினால் என் அந்தரங்க ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்; பறிகாரர் அதற்குள் பிரவேசித்து, அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள். 23 ஒரு சங்கிலியைப் பண்ணிவை; தேசம் நியாயத்தீர்ப்புக்குள்ளான இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரம் கொடுமையால் நிறைந்திருக்கிறது. 24 ஆகையால் புறஜாதிகளின் துஷ்டர்களை வரப்பண்ணுவேன், அவர்கள் இவர்களுடைய வீடுகளைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்; பலவான்களின் பெருமையை ஒழியப்பண்ணுவேன், அவர்கள் பரிசுத்த ஸ்தலங்கள் பரிசுத்தக்குலைச்சலாகும். 25 சங்காரம் வருகிறது; அப்பொழுது சமாதானத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் அது கிடையாது. 26 விக்கினத்தின்மேல் விக்கினம் வரும்; துர்ச்செய்தியின்மேல் துர்ச்செய்தி பிறக்கும்; அப்பொழுது தீர்க்கதரிசியினிடத்திலே தரிசனத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் ஆசாரியனிடத்திலே வேதமும் மூப்பரிடத்திலே ஆலோசனையும் இராமல் ஒழிந்துபோகும். 27 ராஜா துக்கித்துக்கொண்டிருப்பான்; பிரபுவைத் திகில் மூடிக்கொண்டிருக்கும்; தேசத்து ஜனங்களின் கைகள் தளர்ந்துபோகும்; நான் அவர்கள் வழிகளின்படியே அவர்களுக்குச் செய்து, அவர்கள் நியாயங்களின்படியே அவர்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

எசேக்கியேல் 8

1 ஆறாம் வருஷத்து ஆறாம் மாதம் ஐந்தாந்தேதியிலே, நான் என் வீட்டில் உட்கார்ந்திருக்கிறபோதும், யூதாவின் மூப்பர்கள் எனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிறபோதும், கர்த்தராகிய ஆண்டவருடைய கரம் அங்கே என்மேல் அமர்ந்தது. 2 அப்பொழுது இதோ, அக்கினிச்சாயலாய்த் தோன்றுகிற ஒருவரைக் கண்டேன்; அவருடைய இடுப்புக்குக் கீழெல்லாம் அக்கினியும் அவருடைய இடுப்புக்கு மேலெல்லாம் சொகுசாவைப்போல் பிரகாசிக்கிற சாயலுமாயிருந்தது. 3 கைபோல் தோன்றினதை அவர் நீட்டி, என் தலைமயிரைப் பிடித்து என்னைத் தூக்கினார்; ஆவியானவர் என்னைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவே கொண்டுபோய், தேவதரிசனத்திலே என்னை எருசலேமில் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையிலே விட்டார்; அங்கே எரிச்சலுண்டாக்குகிற விக்கிரகத்தின் ஸ்தானம் இருந்தது. 4 இதோ, நான் பள்ளத்தாக்கிலே கண்டிருந்த தரிசனத்துக்குச் சரியாக இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அங்கே விளங்கினது. 5 அவர் என்னைப்பார்த்து: மனுபுத்திரனே, உன் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார் என்றார்; அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, வடக்கே பார்த்தேன்; இதோ, பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே பார்த்தேன்; நடையிலே எரிச்சலுண்டாக்குகிற அந்த விக்கிரகம் இருந்தது. 6 அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, அவர்கள் செய்கிறதைக் காண்கிறாயா? என் பரிசுத்த ஸ்தலத்தைவிட்டு என்னைத் தூரமாய்ப் போகப்பண்ணும்படியான இஸ்ரவேல் வம்சத்தார் இங்கே செய்கிற மிகுந்த அருவருப்புகளைக் காண்கிறாய் அல்லவா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று சொல்லி, 7 என்னைப் பிராகாரத்தின் வாசலுக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது இதோ, சுவரில் ஒரு துவாரத்தைக் கண்டேன். 8 அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ சுவரிலே துவாரமிடு என்றார்; நான் சுவரிலே துவாரமிட்டபோது, இதோ, ஒரு வாசல் இருந்தது. 9 அவர் என்னைப்பார்த்து: நீ உள்ளே போய், அவர்கள் இங்கே செய்கிற கொடிய அருவருப்புகளைப் பார் என்றார். 10 நான் உள்ளே போய்ப் பார்த்தபோது, இதோ, சகலவித ஊரும்பிராணிகளும் அருவருப்பான மிருகங்களுமாகிய இவைகளின் சுரூபங்களும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய நரகலான சகல விக்கிரகங்களும் சுவரில் சுற்றிலும் சித்திரந்தீரப்பட்டிருந்தன. 11 இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில் எழுபதுபேரும், அவர்களின் நடுவிலே சாப்பானுடைய குமாரனாகிய யசனியாவும், அவனவன் தன்தன் கையிலே தன்தன் தூபகலசத்தைப் பிடித்துக்கொண்டு, அவைகளுக்கு முன்பாக நின்றார்கள்; தூபவர்க்கத்தினால் மிகுந்த புகை எழும்பிற்று. 12 அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பர்கள் அந்தகாரத்திலே அவரவர் தங்கள் விக்கிரகங்களின் சித்திர விநோத அறைகளில் செய்கிறதை நீ கண்டாயா? கர்த்தர் எங்களைப் பார்க்கிறதில்லை; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார் என்று சொல்லுகிறார்களே என்றார். 13 பின்னும் அவர்கள் செய்கிற அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று அவர் என்னுடனே சொல்லி, 14 என்னைக் கர்த்தருடைய ஆலயத்து வடக்கு வாசலின் நடையிலே கொண்டு போனார்; இதோ, அங்கே தம்மூசுக்காக அழுதுகொண்டிருக்கிற ஸ்திரீகள் உட்கார்ந்திருந்தார்கள். 15 அப்பொழுது அவர்: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இதிலும் அதிக அருவருப்புகளை இன்னமும் காண்பாய் என்று என்னுடனே சொல்லி, 16 என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் உட்பிராகாரத்திலே கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே, ஏறக்குறைய இருபத்தைந்து புருஷர், தங்கள் முதுகைக் கர்த்தருடைய ஆலயத்துக்கும் தங்கள் முகத்தைக் கீழ்த்திசைக்கும் நேராகத் திருப்பினவர்களாய்க் கிழக்கே இருக்கும் சூரியனை நமஸ்கரித்தார்கள். 17 அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா? இங்கே யூதா வம்சத்தார் செய்கிற அருவருப்புகள் அற்பமான காரியமா? அவர்கள் தேசத்தைக் கொடுமையினால் நிரப்பி என்னை அடிக்கடி கோபமூட்டுகிறார்கள்; இதோ, அவர்கள் திராட்சக்கிளையைத் தங்கள் நாசிக்கு நேராகப் பிடிக்கிறார்கள். 18 ஆகையால் நானும் உக்கிரத்தோடே காரியத்தை நடத்துவேன்; என் கண் தப்பவிடுவதில்லை, நான் இரங்குவதில்லை; அவர்கள் மகா சத்தமாய் என் செவிகள் கேட்கக் கூப்பிட்டாலும் அவர்களுக்கு நான் செவிகொடுப்பதில்லை என்றார்.

எசேக்கியேல் 9

1 பின்பு அவர் என் காதுகள் கேட்க மகா சத்தமாய்: நகரத்தின் விசாரிப்புக்காரர் சங்கரிக்கும் ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு வரக்கடவர்கள் என்று சொன்னார். 2 அப்பொழுது இதோ, ஆறு புருஷர், வெட்டுகிற ஆயுதங்களைத் தங்கள் கைகளில் பிடித்துக்கொண்டு, வடக்கே பார்த்த உயர்ந்த வாசலின் வழியிலிருந்து வந்தார்கள்; அவர்களில் சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையில் கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற ஒருவன் இருந்தான்; அவர்கள் உள்ளே பிரவேசித்து, வெண்கல பலிபீடத்தண்டையிலே நின்றார்கள். 3 அப்பொழுது இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கேருபீன்மேலிருந்தெழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்து, சணல்நூல் அங்கிதரித்து, தன் அரையிலே கணக்கனுடைய மைக்கூட்டை வைத்திருக்கிற புருஷனைக் கூப்பிட்டு, 4 கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார். 5 பின்பு அவர் என் காதுகள் கேட்க மற்றவர்களை நோக்கி: நீங்கள் இவன் பின்னாலே நகரமெங்கும் உருவப்போய் வெட்டுங்கள்; உங்கள் கண் தப்பவிடாமலும், நீங்கள் இரங்காமலும், 6 முதியோரையும், வாலிபரையும், கன்னிகைகளையும், குழந்தைகளையும், ஸ்திரீகளையும் சங்கரித்துக் கொன்றுபோடுங்கள்; அடையாளம் போடப்பட்டிருக்கிற ஒருவனையும் கிட்டாதிருங்கள், என் பரிசுத்த ஸ்தலத்திலே துவக்குங்கள் என்று என் காதுகள் கேட்கச் சொன்னார்; அப்பொழுது அவர்கள் ஆலயத்துக்குமுன்னே இருந்த மூப்பரிடத்தில் துவக்கம் பண்ணினார்கள். 7 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, பிராகாரங்களைக் கொலையுண்டவர்களாலே நிரப்பி, புறப்பட்டுப்போங்கள் என்றார்; அவர்கள் நகரத்தில் போய் வெட்டினார்கள். 8 அவர்கள் வெட்டிக்கொண்டுபோகையில் நான்மாத்திரம் தனித்து, முகங்குப்புற விழுந்து: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் எருசலேமின்மேல் உமது உக்கிரத்தை ஊற்றுகையில் இஸ்ரவேலின் மீதியானவர்களையெல்லாம் அழிப்பீரோ என்று முறையிட்டேன். 9 அதற்கு அவர்: இஸ்ரவேலும் யூதாவுமாகிய வம்சத்தாரின் அக்கிரமம் மிகவும் பெரிது; தேசம் இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரமும் மாறுபாட்டினால் நிரப்பப்பட்டிருக்கிறது; கர்த்தர் தேசத்தைக் கைவிட்டார்; கர்த்தர் பார்க்கமாட்டார் என்று சொல்லுகிறார்கள். 10 ஆகையால் என் கண் தப்பவிடுவதுமில்லை, நான் இரக்கஞ்செய்வதுமில்லை; அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் சிரசின்மேல் இறங்கப்பண்ணுவேன் என்றார். 11 இதோ, சணல்நூல் அங்கி தரித்து, தன் அரையில் மைக்கூட்டை வைத்திருக்கிற புருஷன் வந்து: நீர் எனக்குக் கட்டளையிட்டபடியே செய்தேன் என்று காரியத்தைத் தெரிவித்தான்.

எசேக்கியேல் 10

1 இதோ, கேருபீன்களுடைய தலைக்குமேல் இருந்த மண்டலத்தில் இந்திரநீலரத்தினம்போன்ற சிங்காசனச் சாயலான ஒரு தோற்றத்தைக் கண்டேன்; அது அவைகளுக்குமேல் காணப்பட்டது. 2 அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீனின்கீழ் இருக்கிற சக்கரங்களுக்கு நடுவிலே பிரவேசித்து, கேருபீன்களின் நடுவே இருக்கிற அக்கினித்தழலில் உன் கை நிறைய எடுத்து, அதை நகரத்தின்மேல் இறையென்றார்; அப்படியே அவன் என் கண் காண உள்ளே பிரவேசித்தான். 3 அந்தப் புருஷன் உள்ளே பிரவேசிக்கையில், கேருபீன்கள் ஆலயத்தின் வலதுபுறத்தில் நின்றன; ஒரு மேகம் உட்பிராகாரத்தை நிரப்பிற்று. 4 கர்த்தருடைய மகிமை கேருபீனின் மேலிருந்து எழும்பி, ஆலயத்தின் வாசற்படியிலே வந்தது; ஆலயம் மேகத்தினாலே நிறைந்திருந்தது, பிராகாரமும் கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் நிரம்பிற்று. 5 கேருபீன்களுடைய செட்டைகளின் இரைச்சல் சர்வத்துக்கும் வல்ல தேவன் பேசுகையில் உண்டாகும் சத்தம்போல வெளிப்பிராகாரமட்டும் கேட்கப்பட்டது. 6 அவர் சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனை நோக்கி: நீ கேருபீன்களுக்குள் சக்கரங்களின் நடுவிலிருந்து அக்கினியை எடு என்று கட்டளையிட்டவுடனே, அவன் உள்ளே பிரவேசித்துச் சக்கரங்களண்டையிலே நின்றான். 7 அப்பொழுது கேருபீன்களுக்குள்ளே ஒரு கேருபீன் தன் கையைக் கேருபீன்களின் நடுவில் இருக்கிற அக்கினியில் நீட்டி, அதில் எடுத்து, சணல்நூல் அங்கி தரித்திருந்த புருஷனுடைய கையில் கொடுத்தான்; அவன் அதை வாங்கிக்கொண்டு வெளியே வந்தான். 8 கேருபீன்களுடைய செட்டைகளின் கீழ் மனுஷர் கையின் சாயலானது காணப்பட்டது. 9 இதோ, கேருபீன்களண்டையில் நாலு சக்கரங்கள் இருக்கக் கண்டேன்; ஒவ்வொரு கேருபீன் அண்டையில் ஒவ்வொரு சக்கரம் இருந்தது; சக்கரங்களின் தோற்றம் படிகப்பச்சை வருணம்போலிருந்தது. 10 அவைகள் நாலுக்கும் ஒரே சாயலான ரூபம் இருந்தது; சக்கரங்களின் நடுவிலே சக்கரம் இருக்குமாப்போல் காணப்பட்டது. 11 அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும்; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை; தலைநோக்கும் இடத்துக்கே அவைகள் அதின் பின்னாலே ஓடின; ஓடுகையில் அவைகள் திரும்பினதில்லை. 12 அவைகளின் உடல் அனைத்தும், அவைகளின் முதுகுகளும், அவைகளின் கைகளும், அவைகளின் செட்டைகளும், அந்தச் சக்கரங்களும், சுற்றிலும் கண்களினாலே நிறைந்திருந்தன; அவைகள் நாலுக்கும் இருந்த சக்கரங்களும் அப்படியே இருந்தன. 13 அந்தச் சக்கரங்களைப் பார்த்து: சக்கரமே என்று ஒருவன் கூப்பிடுகிற சத்தத்தைக் கேட்டேன். 14 ஒவ்வொன்றுக்கும் நாலு முகங்கள் இருந்தன; முதலாம் முகம் கேருபீன் முகமும், இரண்டாம் முகம் மனுஷமுகமும், மூன்றாம் முகம் சிங்கமுகமும், நாலாம் முகம் கழுகுமுகமுமாயிருந்தது. 15 கேருபீன்கள் மேலே எழும்பின; இதுதான், நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த ஜீவன். 16 கேருபீன்கள் செல்லுகையில் சக்கரங்கள் அவைகள் அருகே ஓடின; பூமியிலிருந்து எழும்பக் கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்தபோது, சக்கரங்களும் அவைகளை விட்டு விலகிப்போகவில்லை. 17 அவைகள் நிற்கையில் இவைகளும் நின்றன; அவைகள் எழும்புகையில் இவைகளும் எழும்பின; ஜீவனுடைய ஆவி இவைகளில் இருந்தது. 18 கர்த்தருடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியைவிட்டுப் புறப்பட்டு, கேருபீன்களின்மேல் நின்றது. 19 அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து, என் கண் காணப் பூமியைவிட்டு எழும்பின; அவைகள் புறப்படுகையில் சக்கரங்களும் அவைகளுக்குச் சரியாய்ச் சென்றன; கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலிலே போய் நிற்க, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது. 20 இது நான் கேபார் நதியண்டையிலே இஸ்ரவேலின் தேவனுக்குக் கீழே இருக்கக்கண்ட அந்த ஜீவன்தானே; அவைகள் கேருபீன்கள் என்று அறிந்துகொண்டேன். 21 அவைகளில் ஒவ்வொன்றுக்கும் நாலு முகமும், ஒவ்வொன்றுக்கும் நாலு செட்டைகளும் இருந்தன; அவைகளுடைய செட்டைகளின் கீழ் மனுஷகைகளின் சாயல் இருந்தது. 22 அவைகளுடைய முகங்கள் நான் கேபார் நதியண்டையிலே கண்டிருந்த அந்த முகங்களின் சாயலாயிருந்தது; ஒவ்வொன்றும் தன்தன் முகத்துக்கு எதிரான திசையை நோக்கிச் சென்றது.

எசேக்கியேல் 11

1 பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னைக் கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு முகமாயிருக்கிற வாசலுக்குக் கொண்டுபோனார்; இதோ, அந்த வாசலின் நடையில் இருபத்தைந்து புருஷர் இருந்தார்கள்; அவர்களின் நடுவே ஜனத்தின் பிரபுக்களாகிய ஆசூரின் குமாரனாகிய யசனியாவையும், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியாவையும் கண்டேன். 2 அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இவர்கள் இந்த நகரத்திலே அக்கிரமமான நினைவுகளை நினைத்து, துராலோசனை சொல்லுகிற மனுஷர். 3 இது வீடுகளைக் கட்டுவதற்குக் காலமல்ல என்றும், இந்த நகரம் பானை, நாங்கள் அதிலுள்ள இறைச்சியென்றும் சொல்லுகிறார்கள். 4 ஆகையால் அவர்களுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனஞ்சொல்லு, மனுபுத்திரனே, தீர்க்கதரிசனஞ்சொல்லு என்றார். 5 அப்பொழுது கர்த்தருடைய ஆவி என்மேல் இறங்கினார்; அவர் என்னை நோக்கி: நீ சொல்லவேண்டியது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் இப்படிப் பேசுகிறது உண்டு; உங்கள் மனதில் எழும்புகிறதை நான் அறிவேன். 6 இந்த நகரத்தில் நீங்கள் அநேகரைக் கொலைசெய்தீர்கள்; அதின் வீதிகளைக் கொலையுண்டவர்களால் நிரப்பினீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 7 ஆகையால் நீங்கள் கொலைசெய்து, அதின் நடுவிலே போட்டுவிட்டவர்களே இறைச்சியும், இந்த நகரம் பானையுமாமே; உங்களையோ அதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 8 பட்டயத்துக்குப் பயப்பட்டீர்கள், பட்டயத்தையே உங்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 9 நான் உங்களை அதற்குள் இராதபடிக்குப் புறம்பாக்கி, உங்களை அந்நியரின் கையில் ஒப்புக்கொடுத்து, உங்களில் நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவேன். 10 பட்டயத்தால் விழுவீர்கள்; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். 11 இந்த நகரம் உங்களுக்குப் பானையாயிருப்பதுமில்லை, நீங்கள் அதிலுள்ள இறைச்சியாயிருப்பதுமில்லை; இஸ்ரவேல் தேசத்தின் எல்லையிலே உங்களை நியாயந்தீர்ப்பேன். 12 என் கட்டளைகளின்படி நடவாமலும், என் நியாயங்களின்படி செய்யாமலும், உங்களைச் சுற்றிலுமிருக்கிற புறஜாதிகளுடைய முறைமைகளின்படி செய்த நீங்கள் அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார். 13 நான் இப்படித் தீர்க்கதரிசனஞ்சொல்லுகையில், பெனாயாவின் குமாரனாகிய பெலத்தியா செத்தான்; அப்பொழுது நான் முகங்குப்புற விழுந்து, மகா சத்தமாய்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் இஸ்ரவேலில் மீதியானவர்களைச் சர்வசங்காரஞ்செய்வீரோ என்று முறையிட்டேன். 14 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 15 மனுபுத்திரனே, நீங்கள் கர்த்தரை விட்டுத் தூரமாய்ப் போங்கள், எங்களுக்கு இந்தத் தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டதென்று, உன் சகோதரருக்கும், உன் குடும்பத்தாருக்கும், உன் பந்து ஜனங்களுக்கும், இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும், எருசலேமின் குடிகள் சொல்லுகிறார்கள். 16 ஆகையால் நான் அவர்களைத் தூரமாகப் புறஜாதிகளுக்குள்ளே துரத்தியிருந்தாலும், நான் அவர்களைத் தேசங்களிலே சிதறடித்திருந்தாலும், நான் அவர்கள் போன தேசங்களில் அவர்களுக்குக் கொஞ்சக்காலத்துக்குப் பரிசுத்த ஸ்தலமாக இருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல். 17 ஆதலால் நான் உங்களை ஜனங்களிடத்திலிருந்து சேர்த்து, நீங்கள் சிதறடிக்கப்பட்ட தேசங்களிலிருந்து உங்களைக் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு. 18 அவர்கள் அங்கே வந்து, அதில் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமாயிருக்கிறதையெல்லாம் அதிலிருந்து அகற்றுவார்கள். 19 அவர்கள் என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக் கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர்களுக்கு அருளுவேன். 20 அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன். 21 ஆனாலும் சீயென்றிகழப்படத்தக்கதும் அருவருக்கப்படத்தக்கதுமான தங்கள் இருதயத்தின் இச்சையிலே எவர்கள் நடக்கிறார்களோ அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலைகளின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 22 அப்பொழுது கேருபீன்கள் தங்கள் செட்டைகளை விரித்து எழும்பின; சக்கரங்களும் அவைகளுக்கு அருகே சென்றன; இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை அவைகளின்மேல் உயர இருந்தது. 23 கர்த்தருடைய மகிமை நகரத்தின் நடுவிலிருந்தெழும்பி, நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின்மேல் போய் நின்றது. 24 பின்பு ஆவியானவர் என்னை எடுத்து, என்னை தேவனுடைய ஆவிக்குள்ளான தரிசனத்திலே கல்தேயாவுக்குச் சிறைப்பட்டுப்போனவர்கள் இடத்திலே கொண்டுபோய் விட்டார்; அப்பொழுது நான் கண்ட தரிசனம் என்னிலிருந்து எடுபட்டுப்போயிற்று. 25 கர்த்தர் எனக்குக் காண்பித்த யாவையும் சிறையிருப்பிலிருந்தவர்களுக்குச் சொன்னேன்.

எசேக்கியேல் 12

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, நீ கலகவீட்டாரின் நடுவிலே தங்கியிருக்கிறாய்; காணும்படிக்கு அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படிக்கு அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேளாமற்போகிறார்கள்; அவர்கள் கலகவீட்டார். 3 இப்போதும் மனுபுத்திரனே, நீ பரதேசம் போகும்படி பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்தி, பகற்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாகப் பிரயாணப்படு; உன் ஸ்தலத்தைவிட்டு வேறே ஸ்தலத்துக்கு அவர்களுடைய கண்களுக்கு முன்பாகப் புறப்பட்டுப்போ; அவர்கள் கலகவீட்டாரானபோதிலும் ஒருவேளை சிந்தித்து உணருவார்கள். 4 சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் உன் சாமான்களை நீ பகற்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாக வெளியே வைத்து, நீ சாயங்காலத்திலே அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சிறையிருப்புக்குப் போகிறவனைப்போல் புறப்படுவாயாக. 5 அவர்களுடைய கண்களுக்கு முன்பாக நீ சுவரிலே துவாரமிட்டு, அதின் வழியாய் அவைகளை வெளியே கொண்டுபோவாயாக. 6 அவர்களுடைய கண்களுக்கு முன்பாக அவைகளை உன் தோளின்மேல் எடுத்து, மாலைமயங்கும் வேளையிலே வெளியே கொண்டுபோவாயாக; நீ தேசத்தைப் பாராதபடி உன் முகத்தை மூடிக்கொள்; இஸ்ரவேல் வம்சத்தாருக்கு உன்னை அடையாளமாக்கினேன் என்றார். 7 எனக்குக் கட்டளையிட்டபடியே நான் செய்தேன்; சிறைப்பட்டுப்போகும்போது சாமான்களைக் கொண்டுபோவதுபோல என் சாமான்களைப் பகற்காலத்தில் வெளியே வைத்தேன்; சாயங்காலத்திலோ கையினால் சுவரிலே துவாரமிட்டு, மாலை மயங்கும் வேளையிலே அவைகளை வெளியே கொண்டுபோய், அவர்கள் கண்களுக்கு முன்பாக அவைகளைத் தோளின்மேல் எடுத்துக்கொண்டுபோனேன். 8 விடியற்காலத்திலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 9 மனுபுத்திரனே, கலகவீட்டாராகிய இஸ்ரவேல் வம்சத்தார் உன்னைப் பார்த்து: நீ செய்கிறது என்னவென்று உன்னைக் கேட்டார்கள் அல்லவா? 10 இது எருசலேமில் இருக்கிற அதிபதியின்மேலும் அதின் நடுவில் இருக்கிற இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரின்மேலும் சுமரும் பாரம் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களிடத்தில் சொல்லு. 11 நீ அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு அடையாளமாயிருக்கிறேன்; நான் செய்வது எப்படியோ, அப்படியே அவர்களுக்கும் செய்யப்படும்; சிறைப்பட்டுப் பரதேசம் போவார்கள். 12 அவர்கள் நடுவில் இருக்கிற அதிபதி மாலைமயங்கும்போது தோளின்மேல் சுமைசுமந்து புறப்படுவான்; வெளியே சுமைகொண்டுபோகச் சுவரிலே துவாரமிடுவார்கள்; கண்ணினாலே அவன் தன் தேசத்தைக் காணாதபடி தன் முகத்தை மூடிக்கொள்வான். 13 நான் என் வலையை அவன்மேல் வீசுவேன், அவன் என் கண்ணியிலே பிடிபடுவான்; அவனைக் கல்தேயர் தேசமாகிய பாபிலோனுக்குக் கொண்டுபோவேன்; அங்கே அவன் சாவான்; ஆகிலும் அதைக் காணமாட்டான். 14 அவனுக்கு உதவியாக அவனைச் சுற்றிலும் இருக்கிற யாவரையும் அவனுடைய எல்லா இராணுவங்களையும் நான் சகல திசைகளிலும் தூற்றி, அவர்கள் பின்னே பட்டயத்தை உருவுவேன். 15 அப்படி நான் அவர்களை ஜாதிகளுக்குள்ளே தூற்றி, அவர்களை தேசங்களிலே சிதறடிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். 16 ஆனாலும் தாங்கள் போய்ச்சேரும் ஜாதிகளுக்குள்ளே தங்கள் அருவருப்புகளையெல்லாம் விவரிக்கும்படி, நான் அவர்களில் கொஞ்சம்பேரைப் பஞ்சத்துக்கும் பட்டயத்துக்கும் கொள்ளைநோய்க்கும் தப்பி மீந்திருக்கப்பண்ணுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார். 17 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 18 மனுபுத்திரனே, நீ உன் அப்பத்தை நடுக்கத்தோடே புசித்து, உன் தண்ணீரைத் தத்தளிப்போடும் விசாரத்தோடும் குடித்து, 19 தேசத்திலுள்ள ஜனங்களை நோக்கி: இஸ்ரவேல் தேசத்திலுள்ள எருசலேமின் குடிகளைக்குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், தங்கள் அப்பத்தை விசாரத்தோடே புசித்து, தங்கள் தண்ணீரைத் திகிலோடே குடிப்பார்கள்; அவர்களுடைய தேசத்துக் குடிகளுடைய கொடுமைகளினிமித்தம் அதிலுள்ளதெல்லாம் அழிய, அது பாழாகும். 20 குடியேறியிருக்கிற பட்டணங்கள் வனாந்தரங்களாகி, தேசம் பாழாய்ப்போகும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார். 21 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 22 மனுபுத்திரனே, நாட்கள் நீடிக்கும், தரிசனம் எல்லாம் அவமாகும் என்று இஸ்ரவேல் தேசத்திலே வழங்கும் பழமொழி என்ன? 23 ஆகையால் நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், அவர்கள் இனி இஸ்ரவேலிலே இந்தப் பழமொழியைச் சொல்லிவராதபடிக்கு நான் அதை ஒழியப்பண்ணுவேன்; நாட்களும் எல்லாத் தரிசனத்தின் பொருளும் சமீபித்து வந்தன என்று அவர்களோடே சொல்லு. 24 இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவில் இனிச் சகல கள்ளத்தரிசனமும் முகஸ்துதியான குறிசொல்லுதலும் இராமற்போகும். 25 நான் கர்த்தர், நான் சொல்லுவேன், நான் சொல்லும் வார்த்தை நிறைவேறும்; இனித் தாமதியாது; கலகவீட்டாரே, உங்கள் நாட்களிலே நான் வார்த்தையைச் சொல்லுவேன், அதை நிறைவேறவும் பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார். 26 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 27 மனுபுத்திரனே, இதோ, இஸ்ரவேல் வம்சத்தார்: இவன் காண்கிற தரிசனம் நிறைவேற அநேகநாள் செல்லும்; தூரமாயிருக்கிற காலங்களைக்குறித்து இவன் தீர்க்கதரிசனம் சொல்லுகிறான் என்கிறார்கள். 28 ஆகையால் என் வார்த்தைகளில் ஒன்றாகிலும் இனித் தாமதிப்பதில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; நான் சொன்ன வார்த்தை நிறைவேறும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று அவர்களோடே சொல் என்றார்.

எசேக்கியேல் 13

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் உரைத்து, தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 3 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ! 4 இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். 5 நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை. 6 கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தார் என்று சொல்லி, அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள். 7 நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா? 8 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நீங்கள் அபத்தமானதைச் சொல்லி, பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 9 அபத்தமானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என் கை விரோதமாயிருக்கும்; அவர்கள் என் ஜனத்தின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாரின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்துக்குள் பிரவேசிப்பதுமில்லை; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள். 10 சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என் ஜனத்தை மோசம்போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள். 11 சாரமில்லாத சாந்தைப் பூசுகிறவர்களை நோக்கி: அது இடிந்துவிழுமென்று சொல்; வெள்ளமாகப் பெருகுகிற மழை பெய்யும்; மகா கல்மழையே, நீ சொரிவாய்; கொடிய புசல்காற்றும் அதைப் பிளக்கும். 12 இதோ, சுவர் விழும்போது: நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா? 13 ஆகையால் என் உக்கிரத்திலே கொடிய புசல்காற்றை எழும்பி அடிக்கப்பண்ணுவேன்; என் கோபத்திலே வெள்ளமாக அடிக்கிற மழையும், என் உக்கிரத்திலே நிர்மூலமாக்கத்தக்க பெருங்கல் மழையும் சொரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 14 அப்பொழுது நீங்கள் சாரமில்லாத சாந்தைப் பூசின சுவரை நான் இடித்து, அதின் அஸ்திபாரம் திறந்துகிடக்கும்படி அதைத் தரையிலே விழப்பண்ணுவேன்; உள்ளே இருக்கிற நீங்கள் நிர்மூலமாகும்படி அது விழும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். 15 இப்படிச் சுவரிலும், அதற்குச் சாரமில்லாத சாந்தைப் பூசினவர்களிலும் நான் என் உக்கிரத்தைத் தீர்த்துக்கொண்டு: சுவருமில்லை, அதற்குச் சாந்து பூசினவர்களுமில்லை. 16 எருசலேமைக்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லி, சமாதானம் இல்லாதிருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 17 மனுபுத்திரனே, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து, தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற உன் ஜனத்தின் குமாரத்திகளுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: 18 ஆத்துமாக்களை வேட்டையாடும்படிக்குச் சகல கைகளுக்கும் தழுவணைகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டு பண்ணுகிறவர்களுக்கு ஐயோ! நீங்கள் என் ஜனத்தின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடே காப்பாற்றுவீர்களோ? 19 சாகத்தகாத ஆத்துமாக்களைக் கொல்வதற்கும், உயிரோடே இருக்கத்தகாத ஆத்துமாக்களை உயிரோடே காப்பாற்றுவதற்குமாக நீங்கள் பொய்க்குச் செவிகொடுக்கிற என் ஜனத்துக்குப் பொய் சொல்லுகிறதினாலே சில சிரங்கை வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் என்னை என் ஜனத்துக்குள்ளே பரிசுத்தக்குலைச்சலாக்குவீர்களோ என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 20 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீங்கள் ஆத்துமாக்களைப் பறக்கடிக்கும்படி வேட்டையாடுகிற உங்கள் தழுவணைகளுக்கு விரோதமாக நான் வந்து, அவைகளை உங்கள் புயங்களிலிருந்து பிடுங்கிக் கிழித்து, நீங்கள் பறக்கடிக்க வேட்டையாடுகிற ஆத்துமாக்களை நான் விடுதலை பண்ணி, 21 உங்கள் தலையணைகளைக் கிழித்து, என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அவர்கள் இனி வேட்டையாடப்படும்படி உங்கள் கைகளில் இரார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். 22 நான் சஞ்சலப்படுத்தாத நீதிமானின் இருதயத்தை நீங்கள் வீணாய் முறியப்பண்ணினபடியினாலும், துன்மார்க்கன் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பவும் நான் அவனை உயிரோடே காக்கவுங் கூடாதபடிக்கு நீங்கள் அவனுடைய கைகளைத் திடப்படுத்தினபடியினாலும், 23 நீங்கள் இனி அபத்தமானதைத் தரிசிப்பதுமில்லை, சாஸ்திரம் பார்ப்பதுமில்லை; நான் என் ஜனத்தை உங்கள் கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 14

1 இஸ்ரவேலுடைய மூப்பரில் சிலர் என்னிடத்தில் வந்து, எனக்கு முன்பாக உட்கார்ந்தார்கள். 2 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 3 மனுபுத்திரனே, இந்த மனுஷர் தங்கள் நரகலான விக்கிரகங்களைத் தங்கள் இருதயத்தின்மேல் நாட்டி, தங்கள் அக்கிரமமாகிய இடறலைத் தங்கள் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிறார்களே; இவர்கள் என்னிடத்தில் விசாரிக்கத்தகுமா? 4 ஆகையால், நீ அவர்களோடே பேசிச்சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாரில் தன்னுடைய நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கு எதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியினிடத்தில் வந்தால், கர்த்தராகிய நான் இஸ்ரவேல் வம்சத்தாருடைய இருதயத்தில் இருக்கிறதைப் பிடிக்கும்படியாக அப்படிப்பட்டவனுடைய நரகலான விக்கிரகங்களின் திரட்சிக்குத்தக்கதாக உத்தரவு கொடுப்பேன். 5 அவர்கள் எல்லாரும் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, என்னைவிட்டுப் பேதலித்துப்போனார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 6 ஆகையால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: திரும்புங்கள், உங்கள் நரகலான விக்கிரகங்களை விட்டுத் திரும்புங்கள்; உங்கள் சகல அருவருப்புகளையும் விட்டு உங்கள் முகங்களைத் திருப்புங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 7 இஸ்ரவேல் வம்சத்தாரிலும் இஸ்ரவேலில் தங்குகிற அந்நியரிலும் என்னைப் பின்பற்றாமல் பேதலித்து, தன் நரகலான விக்கிரகங்களைத் தன் இருதயத்தின்மேல் நாட்டி, தன் அக்கிரமமாகிய இடறலைத் தன் முகத்துக்கெதிராக வைத்துக்கொண்டிருக்கிற எவனாகிலும் தீர்க்கதரிசியின் மூலமாய் என்னிடத்தில் விசாரிக்க வந்தால், அவனுக்குக் கர்த்தராகிய நானே உத்தரவுகொடுத்து, 8 அந்த மனுஷனுக்கு விரோதமாக என் முகத்தைத் திருப்பி, அவனை அடையாளமாகவும் பழமொழியாகவும் வைத்து, அவனை என் ஜனத்தின் நடுவில் இராதபடிக்குச் சங்கரித்துப்போடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். 9 ஒரு தீர்க்கதரிசி எத்தப்பட்டு ஒரு விசேஷத்தைச் சொன்னானாகில், அப்படிக்கொத்த தீர்க்கதரிசியைக் கர்த்தராகிய நானே எத்தப்படப்பண்ணினேன்; நான் அவனுக்கு விரோதமாக என் கையை நீட்டி, அவனை இஸ்ரவேல் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அழிப்பேன். 10 அப்படியே அவரவர் தங்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள்; தீர்க்கதரிசியினிடத்தில் விசாரிக்கிறவனுடைய தண்டனை எப்படியோ அப்படியே தீர்க்கதரிசியினுடைய தண்டனையும் இருக்கும். 11 இஸ்ரவேல் வம்சத்தார் இனி என்னைவிட்டு வழிதப்பிப்போகாமலும், தங்கள் எல்லா மீறுதல்களாலும் இனி அசுசிப்படாமலும் இருக்கும்பொருட்டாக இப்படிச் சம்பவிக்கும்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார். 12 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 13 மனுபுத்திரனே, ஒரு தேசம் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணிக்கொண்டேயிருந்து, பாவஞ்செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம்பண்ணுவேன். 14 அப்பொழுது நோவா தானியேல் யோபு ஆகிய இம்மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களைமாத்திரம் தப்புவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 15 நான் தேசத்தில் துஷ்டமிருகங்களை அனுப்ப, அம்மிருகங்களினிமித்தம் ஒருவரும் அதின் வழியாய் நடக்கக்கூடாதபடி வெறுமையும் பாழுமாகும்போது, 16 அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள்; தேசமும் பாழாய்ப்போகும் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 17 அல்லது நான் அந்தத் தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணி: பட்டயமே, தேசத்தை உருவப்போ என்று சொல்லி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்போது, 18 அந்த மூன்று புருஷரும் அதின் நடுவில் இருந்தாலும், தாங்கள்மாத்திரம் தப்புவார்களேயல்லாமல், குமாரரையாகிலும் குமாரத்திகளையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 19 அல்லது நான் அந்தத் தேசத்தில் கொள்ளைநோயை அனுப்பி, அதிலுள்ள மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி அதின்மேல் இரத்தப்பழியாக என் உக்கிரத்தை ஊற்றும்போது, 20 நோவாவும் தானியேலும் யோபும் அதின் நடுவில் இருந்தாலும், அவர்கள் தங்கள் நீதியினால் தங்கள் ஆத்துமாக்களை மாத்திரம் தப்புவிப்பார்களேயல்லாமல், குமாரனையாகிலும், குமாரத்தியையாகிலும் தப்புவிக்கமாட்டார்கள் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 21 ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக சங்காரமாகும்? 22 ஆகிலும், இதோ, அதிலே தப்பி மீதியாகி வெளியே கொண்டுவரப்படுகிற குமாரரும் குமாரத்திகளும் சிலர் இருப்பார்கள்; இதோ, அவர்கள் உங்களண்டைக்குப் புறப்பட்டு வருவார்கள்; அப்பொழுது நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியைகளையும் கண்டு, நான் எருசலேமின்மேல் வரப்பண்ணின தீங்கையும் அதின்மேல் நான் வரப்பண்ணின எல்லாவற்றையுங்குறித்துத் தேற்றப்படுவீர்கள். 23 நீங்கள் அவர்கள் மார்க்கத்தையும் அவர்கள் கிரியையையும் காணும்போது, அவர்கள் உங்களுக்குத் தேற்றரவாயிருப்பார்கள்; நான் அதிலே செய்த எல்லாவற்றையும் முகாந்தரமில்லாமல் செய்யவில்லையென்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்பதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொன்னார்.

எசேக்கியேல் 15

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைப்பார்க்கிலும் திராட்சச்செடிக்கு மேன்மை என்ன? 3 யாதொரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? யாதொரு தட்டுமுட்டைத் தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ? 4 இதோ, அது அக்கினிக்கு இரையாக எறியப்படும்; அதின் இரண்டு முனைகளையும் அக்கினி எரித்துப்போடும்; அதின் நடுத்துண்டும் வெந்துபோம்; அது எந்த வேலைக்காவது உதவுமோ? 5 இதோ, அது வேகாதிருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாதிருக்க, அக்கினி அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவதெப்படி? 6 ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காட்டுச் செடிகளுக்குள்ளிருக்கிற திராட்சச்செடியை நான் அக்கினிக்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து, 7 என் முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு அக்கினியிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே அக்கினி அவர்களைப் பட்சிக்கும்; அப்படியே நான் என் முகத்தை அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். 8 அவர்கள் துரோகம்பண்ணினபடியினால், நான் தேசத்தைப் பாழாய்ப் போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

எசேக்கியேல் 16

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, நீ எருசலேமின் அருவருப்புகளை அதற்கு அறிவித்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: 3 கர்த்தராகிய ஆண்டவர் எருசலேமுக்குச் சொல்லுகிறார், கானான் தேசமே உன் உற்பத்திக்கும் உன் பிறப்புக்கும் இடம், உன் தகப்பன் எமோரியன், உன் தாய் ஏத்தித்தி. 4 உன் பிறப்பின் வர்த்தமானம் என்னவென்றால், நீ பிறந்த நாளிலே உன் தொப்புள் அறுக்கப்படவுமில்லை; நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை; உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை; துணிகளில் சுற்றப்படவுமில்லை. 5 உனக்காகப் பரிதபித்து, இவைகளில் ஒன்றையாகிலும் உனக்குச் செய்ய ஒரு கண்ணும் உன்பேரில் இரக்கமாயிருந்ததுமில்லை; நீ பிறந்தநாளில் நீ அருவருக்கப்பட்டதினால் வெளியில் எறிந்துவிடப்பட்டாய். 6 நான் உன் அருகே கடந்துபோகும்போது, மிதிக்கப்படுவதற்கு ஏதுவாய் நீ உன் இரத்தத்தில் கிடக்கிறதைக் கண்டு, உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப்பார்த்து: பிழைத்திரு என்றேன்; ஆம், உன் இரத்தத்தில் கிடக்கிற உன்னைப்பார்த்து: பிழைத்திரு என்று சொன்னேன். 7 உன்னை வயலின் பயிரைப்போல அநேகமாயிரமாய்ப் பெருகும்படி வைத்தேன்; நீ வளர்ந்து பெரியவளாகி, மகா சௌந்தரியவதியானாய்; உன் ஸ்தனங்கள் எழும்பின, உன் மயிர் வளர்ந்தது; ஆனாலும், நீ நிர்வாணமும் அம்மணமுமாயிருந்தாய். 8 நான் உன் அருகே கடந்துபோனபோது, உன்னைப் பார்த்தேன்; இதோ, உன் காலம் பருவகாலமாயிருந்தது; அப்பொழுது என் வஸ்திரத்தை உன்மேல் விரித்து, உன் நிர்வாணத்தை மூடி, உனக்கு ஆணையிட்டுக்கொடுத்து, உன்னோடு உடன்படிக்கை பண்ணினேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; இவ்விதமாய் நீ என்னுடையவளானாய். 9 நான் உன்னை ஜலத்தினால் முழுக்காட்டி, உன்னை இரத்தமற ஸ்நானம் பண்ணுவித்து, உனக்கு எண்ணெய் பூசி, 10 சித்திரத்தையலாடையை உனக்கு உடுத்தி, சாயந்தீர்ந்த பாதரட்சைகளை உனக்குத் தரித்து, கட்ட மெல்லிய புடவையையும், மூடிக்கொள்ளப் பட்டுச் சால்வையையும் உனக்குக் கொடுத்து, 11 உன்னை ஆபரணங்களால் அலங்கரித்து, உன் கைகளிலே கடகங்களையும், உன் கழுத்திலே சரப்பணியையும் போட்டு, 12 உன் நெற்றியில் நெற்றிப்பட்டத்தையும், உன் காதுகளில் காதணியையும், உன் தலையின்மேல் சிங்காரமான கிரீடத்தையும் தரித்தேன். 13 இவ்விதமாய்ப் பொன்னினாலும் வெள்ளியினாலும் நீ அலங்கரிக்கப்பட்டாய்; உன் உடுப்பு மெல்லிய புடவையும் பட்டும் சித்திரத்தையலாடையுமாயிருந்தது; மெல்லிய மாவையும் தேனையும் நெய்யையும் சாப்பிட்டாய்; நீ மிகவும் அழகுள்ளவளாகி, ராஜ்யத்தைச் சுதந்தரிக்கும் சிலாக்கியத்தையும் பெற்றாய். 14 உன் அழகினாலே உன் கீர்த்தி புறஜாதிகளுக்குள்ளே பிரசித்தமாயிற்று; நான் உன்மேல் வைத்த என் மகிமையினாலே அது குறைவற்றதாய் இருந்ததென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 15 நீயோவென்றால் உன் அழகை நம்பி, உன் கீர்த்தியினால் சோரமார்க்கமாய் நடந்து, வழிப்போக்கரில் உனக்கு நேர்பட்ட யாவரோடும் வேசித்தனம்பண்ணி, 16 உன் வஸ்திரங்களில் சிலவற்றை எடுத்து, பலவருணச் சோடிப்பான மேடைகளை உனக்கு உண்டாக்கி, அவைகளின்மேல் வேசித்தனம்பண்ணினாய்; அப்படிக்கொத்த காரியங்கள் ஒருக்காலும் சம்பவித்ததுமில்லை, சம்பவிப்பதுமில்லை. 17 நான் உனக்குக் கொடுத்த என் பொன்னும் என் வெள்ளியுமான உன் சிங்கார ஆபரணங்களை நீ எடுத்து, உனக்கு ஆண்சுரூபங்களை உண்டாக்கி, அவைகளோடே வேசித்தனம்பண்ணி, 18 உன் சித்திரத்தையலாடைகளை எடுத்து, அவைகளை மூடி, என் எண்ணெயையும் என் தூபவர்க்கத்தையும் அவைகளின்முன் படைத்து, 19 நான் உனக்குக் கொடுத்த என் அப்பத்தையும், நீ சாப்பிடும்படி உனக்குக் கொடுத்த மெல்லிய மாவையும் நெய்யையும் தேனையும் நீ அவைகளின்முன் சுகந்தவாசனையாகப் படைத்தாய்; காரியம் இப்படி ஆயிற்றென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 20 நீ எனக்குப் பெற்ற உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் எடுத்து, அவர்களை அவைகளுக்கு இரையாகப் பலியிட்டாய். 21 நீ செய்த வேசித்தனங்கள் போதாதென்று, நீ என் பிள்ளைகளை அவைகளுக்குத் தீக்கடக்கப்பண்ண ஒப்புக்கொடுத்து, அவர்களைக் கொலைசெய்தாய். 22 நீ உன் எல்லா அருவருப்புகளிலும் வேசித்தனங்களிலும் நடக்கும்போது, நிர்வாணமும் அம்மணமுமாயிருந்ததும், உன் இரத்தத்திலே மிதிக்கப்பட ஏதுவாய்க் கிடந்ததுமான உன் சிறுவயதின் நாட்களை நினையாமற்போனாய். 23 ஐயோ! உனக்கு ஐயோ! என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ செய்த பொல்லாப்புகளெல்லாம் தவிர, 24 நீ உனக்கு மண்டபங்களைக் கட்டி, உனக்குச் சகல வீதிகளிலும் உயர்ந்த மேடைகளை உண்டுபண்ணினாய். 25 நீ சகல வழிமுகனையிலும் உன் உயர்ந்த மேடைகளைக் கட்டி, உன் அழகை அருவருப்பாக்கி, வழிப்போக்கர் யாவருக்கும் உன் கால்களை விரித்து, உன் வேசித்தனங்களைத் திரளாய்ப் பெருகப்பண்ணி, 26 சதை பெருத்த உன் அயல் தேசத்தாராகிய எகிப்திய புத்திரரோடே வேசித்தனம்பண்ணி, எனக்குக் கோபம் உண்டாக்கும்படி உன் வேசித்தனங்களைப் பெருகப்பண்ணினாய். 27 ஆதலால், இதோ, நான் என் கையை உனக்கு விரோதமாக நீட்டி, உனக்கு நியமித்த போஜனத்தைக் குறுக்கி, உன் முறைகேடான மார்க்கத்தைக் குறித்து வெட்கப்பட்ட உன் பகையாளிகளாகிய பெலிஸ்தருடைய குமாரத்திகளின் இச்சைக்கு உன்னை ஒப்புக்கொடுத்தேன். 28 நீ திருப்தியடையாததினால் அசீரிய புத்திரரோடும் வேசித்தனம்பண்ணினாய்; அவர்களோடே வேசித்தனம்பண்ணியும் நீ திருப்தியடையவில்லை. 29 நீ கானான் தேசத்திலே செய்த வேசித்தனத்தைக் கல்தேயர்மட்டும் எட்டச் செய்தாய்; அதினாலும் நீ திருப்தியடையாமற்போனாய். 30 வெட்கங்கெட்ட வேசியின் கிரியைகளாகிய இவைகளையெல்லாம் நீ செய்து, 31 சகல வழிமுகனையிலும் உன் மண்டபங்களைக் கட்டி, சகல வீதிகளிலும் உன் மேடைகளை உண்டாக்கினபடியால், உன் இருதயம் எவ்வளவாய்க் களைத்துப்போயிருக்கிறது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீ பணையத்தை அலட்சியம்பண்ணுகிறதினால், நீ வேசியைப்போல இராமல், 32 தன் புருஷனுக்குப் பதிலாக அந்நியரைச் சேர்த்துக்கொள்ளுகிற விபசார ஸ்திரீயைப்போல இருக்கிறாய். 33 எல்லா வேசிகளுக்கும் பணையங் கொடுக்கிறார்கள்; நீயோ உன் நேசர்கள் சுற்றுப்புறங்களிலிருந்து உன்னிடத்தில் வேசித்தனஞ்செய்ய வரும்படி அவர்களுக்கெல்லாம் நீயே பணையங்கொடுத்து, அவர்களுக்கு வெகுமதிகளைத் தருகிறாய். 34 இவ்விதமாய் உன் வேசித்தனங்களுக்கும் வேறே ஸ்திரீகளின் வேசித்தனங்களுக்கும் வித்தியாசமுண்டு; வேசித்தனம்பண்ண அவர்கள் உன்னைப் பின் செல்லமாட்டார்கள்; பணையம் உனக்குக் கொடுக்கப்படாமல் நீயே பணையம் கொடுக்கிறபடியால் நீ செய்வது விபரீதம். 35 ஆகையால், வேசியே, கர்த்தருடைய வார்த்தையைக் கேள். 36 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உன் வேசித்தனத்தின் அசுத்தம் பாய்ந்தபடியினாலும், நீ உன் காமவிகாரிகளோடும் அருவருப்பாகிய உன் நரகலான விக்கிரகங்களோடும் வேசித்தனம்பண்ணி, இவைகளுக்கு உன் பிள்ளைகளின் இரத்தத்தைப் படைத்ததினால் உன் நிர்வாணம் திறக்கப்பட்டபடியினாலும், 37 இதோ, நீ சம்போகம்பண்ணின உன் எல்லாக் காமவிகாரிகளையும், நீ நேசித்த யாவரையும், நீ பகைத்திருக்கிற அனைவரோடும் நான் கூடிவரச்செய்து, சுற்றிலுமிருந்து அவர்களை உனக்கு விரோதமாகச் சேர்த்து, அவர்கள் உன் நிர்வாணத்தையெல்லாம் காணும்படி உன் நிர்வாணத்தை அவர்களுக்கு முன்பாகத் திறந்துவைத்து, 38 விபசாரிகளையும் இரத்தஞ்சிந்தினவர்களையும் நியாயந்தீர்க்கிறபடியே உன்னை நியாயந்தீர்த்து, உக்கிரத்தோடும் எரிச்சலோடும் இரத்தப்பழியை உன்பேரில் சுமத்தி, 39 உன்னை அவர்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் உன் மண்டபங்களை இடித்து, உன் மேடைகளைத் தரையாக்கிப்போட்டு, உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்கார ஆபரணங்களை எடுத்துக்கொண்டு, உன்னை அம்மணமும் நிர்வாணமுமாக விட்டுப்போய், 40 உனக்கு விரோதமாக ஒரு கூட்டத்தைக் கொண்டுவந்து, உன்னைக் கல்லெறிந்து, உன்னைத் தங்கள் பட்டயங்களால் குத்திபோட்டு, 41 உன் வீடுகளை அக்கினியால் சுட்டெரித்து, அநேக ஸ்திரீகளின் கண்களுக்கு முன்பாக உன்னில் நியாயத்தீர்ப்புகளைச் செய்வார்கள்; உன் வேசித்தனத்தை ஒழியப்பண்ணுவேன்; நீ இனிப் பணையங்கொடுப்பதில்லை. 42 இவ்விதமாய் என் எரிச்சல் உன்னை விட்டு நீங்கும்படி, நான் என் உக்கிரத்தை உன்னில் ஆறப்பண்ணி, இனி கோபமாயிராமல் அமருவேன். 43 நீ உன் இளவயதின் நாட்களை நினையாமல், இவைகளெல்லாவற்றினாலும் எனக்குக் கோபம் உண்டாக்கினபடியினால், இதோ, நான் உன் வழியின் பலனை உன் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அதினாலே இனி உன் எல்லா அருவருப்புகளினாலும் இப்படிப்பட்ட முறைகேடான காரியத்தைச் செய்யமாட்டாய். 44 இதோ, பழமொழி சொல்லுகிறவர்கள் எல்லாரும்: தாயைப்போல மகள் என்று உன்னைக்குறித்துப் பழமொழி சொல்லுவார்கள். 45 நீ, தன் புருஷனையும் தன் பிள்ளைகளையும் அருவருத்த உன் தாயின் மகள்; நீ, தங்கள் புருஷரையும் தங்கள் பிள்ளைகளையும் அருவருத்த உன் சகோதரிகளின் சகோதரி; உங்கள் தாய் ஏத்தித்தி; உங்கள் தகப்பன் எமோரியன். 46 உன் இடதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சமாரியா உன் தமக்கை; உன் வலதுபுறத்திலே, தானும் தன் குமாரத்திகளுமாய்க் குடியிருந்த சோதோம் உன் தங்கை. 47 ஆகிலும் நீ அவர்களுடைய மார்க்கங்களிலே நடவாமலும், அவர்களுடைய அருவருப்புகளின்படி செய்யாமலும், அது மகா அற்பகாரியம் என்கிறதுபோல நீ உன் எல்லா வழிகளிலேயும் அவர்களைப்பார்க்கிலும் கேடாய் நடந்தாய். 48 நீயும் உன் குமாரத்திகளும் செய்ததுபோல, உன் சகோதரியாகிய சோதோமும் அவளுடைய குமாரத்திகளும் செய்யவில்லை என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 49 இதோ, கெர்வமும், ஆகாரத் திரட்சியும், நிர்விசாரமான சாங்கோபாங்கமுமாகிய இவைகளே உன் சகோதரியான சோதோமின் அக்கிரமம்; இவைகளே அவளிடத்திலும் அவள் குமாரத்திகளிடத்திலும் இருந்தன; சிறுமையும் எளிமையுமானவனுடைய கையை அவள் பலப்படுத்தவில்லை. 50 அவர்கள் தங்களை உயர்த்தி, என் முகத்துக்கு முன்பாக அருவருப்பானதைச் செய்தார்கள்; அதை நான் கண்டபோது, அவர்களை ஒழித்துவிட்டேன். 51 நீ செய்த பாவங்களில் அரைவாசியும் சமாரியா செய்யவில்லை; நீ உன் சகோதரிகளைப்பார்க்கிலும் உன் பாவங்களைப் பெருகப்பண்ணி, நீ செய்த உன் எல்லா அருவருப்புகளினாலும் அவர்களை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணினாய். 52 இப்போதும் உன் சகோதரிகளைக் குற்றவாளிகள் என்று தீர்த்த நீ அவர்களைப்பார்க்கிலும் அருவருப்பாகச் செய்த உன் பாவங்களினிமித்தம் உன் இலச்சையைச் சுமந்துகொள்; உன்னைப்பார்க்கிலும் அவர்கள் நீதியுள்ளவர்கள்; உன் சகோதரிகளை நீதியுள்ளவர்களென்று விளங்கப்பண்ணின நீ வெட்கமடைந்து, உன் இலச்சையைச் சுமந்துகொள். 53 நான் சோதோமும் அவள் குமாரத்திகளும் சிறையிருக்கிற அவர்களுடைய சிறையிருப்பையும், சமாரியாவும் அவள் குமாரத்திகளும் சிறையிருக்கிற சிறையிருப்பையும் திருப்பும்போது, அவர்கள் நடுவிலே நீ சிறையிருக்கிற உன்னுடைய சிறையிருப்பையும் திருப்புவேன். 54 அதினால் நீ அவர்களுக்கு ஆறுதலாக இருந்து, உன் இலச்சையைச் சுமந்து, நீ செய்த எல்லாவற்றினாலும் வெட்கமடைவாய். 55 உன் சகோதரிகளாகிய சோதோமும் அவள் குமாரத்திகளும் தங்கள் முந்தின சீருக்குத் திரும்புவார்கள்; சமாரியாவும் அவள் குமாரத்திகளும் தங்கள் முந்தின சீருக்குத் திரும்புவார்கள்; நீயும் உன் குமாரத்திகளும் உங்கள் முந்தின சீருக்குத் திரும்புவீர்கள். 56 உன்னை வெறுக்கும் சீரியாவின் குமாரத்திகளும், அவளைச் சுற்றிலும் இருக்கிற பெலிஸ்தரின் குமாரத்திகளும் அவமானம்பண்ணினபோது உன் பொல்லாப்பு வெளியாயிற்றே. 57 அதற்குமுன் உன் கெர்வத்தின் நாளிலே உன் சகோதரியாகிய சோதோமின் பெயரை உன் வாயினாலே உச்சரிக்கவுமாட்டாய். 58 உன் முறைகேட்டையும் உன் அருவருப்புகளையும் நீ சுமப்பாய் என்று கர்த்தர் சொல்லுகிறார். 59 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உடன்படிக்கையை முறித்துப்போடுகிறதினால் ஆணையை அசட்டைபண்ணின நீ செய்ததுபோல நான் உனக்கும் செய்வேன். 60 ஆகிலும் உன் இளவயதில் உன்னோடே பண்ணின என் உடன்படிக்கையை நான் நினைத்து, நித்திய உடன்படிக்கையை உனக்கு ஏற்படுத்துவேன். 61 அப்பொழுது உன் தமக்கைகளையும் உன் தங்கைகளையும் நீ சேர்த்துக்கொள்ளுகையில், உன் வழிகளை நினைத்து நாணுவாய்; அவர்களை நான் உனக்குக் குமாரத்திகளாகக் கொடுப்பேன்; உன்னுடைய உடன்படிக்கையைப் பார்த்துக் கொடுப்பதில்லை. 62 உன்னோடே என் உடன்படிக்கையைப்பண்ணி ஏற்படுத்துவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிவாய். 63 நீ செய்த எல்லாவற்றையும் நான் மன்னித்தருளும்போது, நீ நினைத்து வெட்கி, உன் நாணத்தினால் உன் வாயை இனித் திறக்கமாட்டாதிருப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 17

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாருக்கு ஒரு விடுகதையையும் உவமையையும் கூறி, சொல்லவேண்டியது என்னவென்றால்: 3 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், பெரிய செட்டைகளையும் நீளமான இறகுகளையும் உடையதும், பலவருணமான இறகுகளால் நிறைந்ததுமாகிய ஒரு பெரிய கழுகு லீபனோனில் வந்து, ஒரு கேதுருவின் நுனிக்கிளையைப் பிடித்து, 4 அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளைக்கொய்து, அதை வர்த்தக தேசத்துக்குக் கொண்டுபோய், அதை வர்த்தகருடைய நகரத்திலே வைத்தது; 5 தேசத்தின் விதையில் ஒன்றை எடுத்து, அதைப் பயிர்நிலத்திலே போட்டு, அதை எடுத்து, மிகுந்த தண்ணீர் ஓரத்திலே பத்திரமாய் நட்டது. 6 அது துளிர்த்து, படர்ந்து, தாழ்ந்த அடிமரமுள்ள திராட்சச்செடியாயிற்று; அதின்கொடிகள் அந்தக் கழுகுக்கு நேராகவும், அதின் வேர்கள் அதின் கீழாகவும் இருந்தன; இவ்விதமாய் அது திராட்சச்செடியாகி, கிளைகளை வீசி, கொப்புகளை விட்டது. 7 அன்றியும் பெரிய செட்டைகளையும் திரளான இறகுகளையும் உடைய வேறொரு பெரிய கழுகு இருந்தது; இதோ, அது தன் நடவாகிய பாத்திகளிலிருந்து அதற்குத் தண்ணீர் பாய்ச்சும்படி இந்த திராட்சச்செடி அதற்கு நேராகத் தன் வேர்களை விட்டு, அதற்கு நேராகத் தன் கொடிகளை வீசினது. 8 கொப்புகளை விடுகிறதற்கும், கனியைத் தருகிறதற்கும், மகிமையான திராட்சச்செடியாகிறதற்கும், இது மிகுந்த தண்ணீர்களின் ஓரமாகிய நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது. 9 இது செழிக்குமா? இது பட்டுப்போகத்தக்கதாய் ஒருவன் இதின் வேர்களைப் பிடுங்காமலும், இதின் கனியை வெட்டாமலும் இருப்பானோ? துளிர்த்த எல்லா இலைகளோடும் இது பட்டுப்போகும்; இதை வேரோடே பிடுங்கும்படி ஒருவன் பலத்த புயத்தோடும் திரண்ட ஜனத்தோடும் வரத்தேவையில்லை. 10 இதோ, நடப்பட்ட இது செழிப்பாயிருக்குமோ? கொண்டல்காற்று இதின்பேரில் படும்போது இது வாடி உலர்ந்து போகாதோ? இது நடப்பட்ட பாத்திகளிலே வாடிப்போமென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார். 11 பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 12 இப்போதும் இவைகளின் தாற்பரியம் தெரியுமா என்று நீ கலகவீட்டாரைக்கேட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால், இதோ, பாபிலோன் ராஜா எருசலேமுக்கு வந்து, அதின் ராஜாவையும் அதின் பிரபுக்களையும் பிடித்து, அவர்களைத் தன்னிடமாகப் பாபிலோனுக்குக் கொண்டுபோகும்போது, 13 அவன் ராஜவம்சத்திலே ஒருவனைத் தெரிந்தெடுத்து, அவனோடே உடன்படிக்கைபண்ணி, 14 ராஜ்யம் தன்னை உயர்த்தாமல் தாழ்ந்திருக்கும்படிக்கும், தன் உடன்படிக்கையை அவன் கைக்கொள்ளுகிறதினால் அது நிலைநிற்கும்படிக்கும், அவனை ஆணைப்பிரமாணத்துக்கு உட்படுத்தி, தேசத்தில் பலசாலிகளைப் பிடித்துக் கொண்டுபோனானே. 15 இவன் அவனுக்கு விரோதமாய்க் கலகஞ்செய்து, தனக்குக் குதிரைகளையும் அநேகம் ஆட்களையும் அனுப்பவேண்டுமென்று தன் ஸ்தானாபதிகளை எகிப்துக்கு அனுப்பினான்; இப்படிப்பட்டவனுக்கு வாய்க்குமோ? இப்படிச் செய்கிறவன் தப்பித்துக்கொள்வானோ? உடன்படிக்கையை முறித்தவன் தப்பித்துக்கொள்வானோ? 16 தன்னை ராஜாவாக ஏற்படுத்திய ராஜாவினுடைய ஆணையை அசட்டைபண்ணி, அவனுடைய உடன்படிக்கையை முறித்துப்போட்டவன், அந்த ராஜாவினுடைய ஸ்தானமாகிய பாபிலோன் நடுவிலே அவனண்டையில் இருந்து மரணமடைவானென்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 17 அவன் அநேகம் ஜனங்களை நாசம்பண்ணும்படி அணைபோட்டு, கொத்தளங்களைக் கட்டும்போது, பார்வோன் பெரிய சேனையோடும், திரளான கூட்டத்தோடும் வந்து இவனுக்காக யுத்தத்தில் உதவமாட்டான். 18 இதோ, இவன் கையடித்துக் கொடுத்திருந்தும் உடன்படிக்கையை முறித்துப்போட்டு, ஆணையை அசட்டைபண்ணினான்; இப்படியெல்லாம் செய்தவன் தப்புவதில்லை. 19 அதினிமித்தம் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் என் ஆணையை அசட்டைபண்ணினதையும், என் உடன்படிக்கையை முறித்துப்போட்டதையும், நான் அவனுடைய தலையின்மேல் வரப்பண்ணுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். 20 அவன் என்னுடைய கண்ணியில் அகப்படும்படிக்கு நான் என் வலையை அவன்மேல் வீசி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் எனக்கு விரோதமாய்ப் பண்ணின துரோகத்தினிமித்தம் அங்கே அவனை நியாயம் விசாரிப்பேன். 21 அவனோடேகூட ஓடிப்போகிற யாவரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் பட்டயத்தால் விழுவார்கள்; மீதியானவர்களோ சகல திசைகளிலும் சிதறடிக்கப்படுவார்கள்; அப்பொழுது கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்று அறிந்துகொள்வீர்கள். 22 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உயர்ந்த கேதுருவின் நுனிக்கிளைகளில் ஒன்றை எடுத்து, அதை நடுவேன்; அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளில் இளசாயிருக்கிற ஒன்றைக் கொய்து, அதை உயரமும் உன்னதமுமான ஒரு பர்வதத்தின்மேல் நாட்டுவேன். 23 இஸ்ரவேலின் உயரமான பர்வதத்திலே அதை நாட்டுவேன்; அது கொப்புகளை விட்டு, கனிதந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே சகலவித பட்சிஜாதிகளும் தங்கி, அதின் கிளைகளின் நிழலிலே தாபரிக்கும். 24 அப்படியே கர்த்தராகிய நான் உயர்ந்த விருட்சத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த விருட்சத்தை உயர்த்தினேன் என்றும், நான் பச்சையான விருட்சத்தைப் பட்டுப்போகப்பண்ணி, பட்டுப்போன விருட்சத்தைத் தழைக்கப்பண்ணினேன் என்றும் வெளியின் விருட்சங்களுக்கு எல்லாம் தெரியவரும்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றினேன் என்று உரைத்தார் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 18

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 பிதாக்கள் திராட்சக்காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின என்னும் பழமொழியை நீங்கள் இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துச் சொல்லுகிறது என்ன? 3 இனி இஸ்ரவேலில் இந்தப் பழமொழியைச் சொல்வது இல்லை என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 4 இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது; பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும். 5 ஒருவன் நீதிமானாயிருந்து, நியாயத்தையும் நீதியையும் செய்து, 6 மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும் தூரஸ்திரீயோடே சேராமலும், 7 ஒருவனையும் ஒடுக்காமலும், கொள்ளையிடாமலுமிருந்து, கடன் வாங்கினவனுக்கு அடைமானத்தைத் திரும்பக்கொடுத்து, தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து, 8 வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன் கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கை உண்மையாய்த் தீர்த்து, 9 என் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, உண்மையாயிருப்பானாகில் அவனே நீதிமான்; அவன் பிழைக்கவே பிழைப்பான் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 10 ஆனாலும் அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் கள்ளனும் இரத்தஞ்சிந்துகிறவனும், மேற்சொல்லிய கடமைகளின்படி நடவாமல், 11 இவைகளில் ஒன்றுக்கொப்பானதைச் செய்கிறவனுமாயிருந்து, மலைகளின்மேல் சாப்பிட்டு, தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தி, 12 சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, கொள்ளைக்காரனாயிருந்து, அடைமானத்தைத் திரும்பக் கொடாமல், நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுத்து, அருவருப்பானதைச் செய்து, 13 வட்டிக்குக் கொடுத்து, பொலிசை வாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை; இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் சாகவே சாவான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும். 14 பின்னும், இதோ, அவனுக்கு ஒரு குமாரன் பிறந்து, அவன் தன் தகப்பன் செய்த எல்லாப் பாவங்களையும் கண்டு, தான் அவைகளின்படி செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து, 15 மலைகளின்மேல் சாப்பிடாமலும், இஸ்ரவேல் வம்சத்தாரின் நரகலான விக்கிரகங்களுக்கு நேராகத் தன் கண்களை ஏறெடுக்காமலும், தன் அயலானுடைய மனைவியைத் தீட்டுப்படுத்தாமலும், 16 ஒருவனையும் ஒடுக்காமலும், அடைமானத்தை வைத்துக்கொண்டிராமலும், கொள்ளையிடாமலும், தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரந்தரிப்பித்து, 17 சிறுமையானவனுக்கு நோவுண்டாக்காதபடித் தன் கையை விலக்கி, வட்டியும் பொலிசையும் வாங்காமலிருந்து என் நியாயங்களின்படி செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான். 18 அவன் தகப்பனோவென்றால் கொடுமைசெய்து, சகோதரனைக் கொள்ளையிட்டு, தகாததைத் தன் ஜனங்களின் நடுவிலே செய்தபடியினால், இதோ, அவன் தன் அக்கிரமத்திலே சாவான். 19 இதெப்படி, குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமக்கிறதில்லையா என்று நீங்கள் கேட்டால், குமாரன் நியாயத்தையும் நீதியையும் செய்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ததினால், அவன் பிழைக்கவே பிழைப்பான். 20 பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்; குமாரன் தகப்பனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை, தகப்பன் குமாரனுடைய அக்கிரமத்தைச் சுமப்பதுமில்லை; நீதிமானுடைய நீதி அவன்மேல்தான் இருக்கும், துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும். 21 துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை. 22 அவன் செய்த எல்லா மீறுதல்களும் நினைக்கப்படுவதில்லை; அவன் தான் செய்த நீதியிலே பிழைப்பான். 23 துன்மார்க்கன் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன் தன் வழிகளை விட்டுத் திரும்பிப் பிழைப்பது அல்லவோ எனக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 24 நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதி செய்து, துன்மார்க்கன் செய்கிற சகல அருவருப்புகளின்படியும் செய்வானேயாகில், அவன் பிழைப்பானோ? அவன் செய்த அவனுடைய எல்லா நீதிகளும் நினைக்கப்படுவதில்லை; அவன் செய்த தன் துரோகத்திலேயும் அவன் செய்த தன் பாவத்திலேயும் சாவான். 25 நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறீர்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கேளுங்கள்; என் வழி செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது. 26 நீதிமான் தன் நீதியைவிட்டு விலகி, அநீதிசெய்து அதிலே செத்தால், அவன் செய்த தன் அநீதியினிமித்தம் அவன் சாவான். 27 துன்மார்க்கன் தான் செய்த துன்மார்க்கத்தைவிட்டு விலகி, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் தன் ஆத்துமாவைப் பிழைக்கப்பண்ணுவான். 28 அவன் எச்சரிப்படைந்து, தான் செய்த எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புகிறபடியினாலே அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை. 29 இஸ்ரவேல் வம்சத்தாரோ: ஆண்டவருடைய வழி செம்மையாய் இருக்கவில்லை என்கிறார்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, என் வழிகள் செம்மையாயிராதோ? உங்கள் வழிகள் அல்லவோ செம்மையல்லாததாயிருக்கிறது. 30 ஆகையால் இஸ்ரவேல் வம்சத்தாரே, நான் உங்களில் அவனவனை அவனவன் வழிகளுக்குத் தக்கதாக நியாயந்தீர்ப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் மனந்திரும்புங்கள், உங்களுடைய எல்லா மீறுதல்களையும் விட்டுத் திரும்புங்கள்; அப்பொழுது அக்கிரமம் உங்கள் கேட்டுக்குக் காரணமாயிருப்பதில்லை. 31 நீங்கள் துரோகம்பண்ணின உங்களுடைய எல்லாத் துரோகங்களையும் உங்கள்மேல் இராதபடிக்கு விலக்கி, உங்களுக்குப் புது இருதயத்தையும் புது ஆவியையும் உண்டுபண்ணிக்கொள்ளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் ஏன் சாகவேண்டும்? 32 மனந்திரும்புங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; சாகிறவனுடைய சாவை நான் விரும்புகிறதில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 19

1 நீ இஸ்ரவேல் பிரபுக்களின்பேரில் ஒரு புலம்பல் பாடி, 2 சொல்லவேண்டியது என்னவென்றால்: உன் தாய் எப்படிப்பட்டவள்? அவள் ஒரு பெண்சிங்கம், அவள் சிங்கங்களுக்குள்ளே படுத்திருந்து, பாலசிங்கங்களின் நடுவிலே தன் குட்டிகளை வளர்த்தாள். 3 தன் குட்டிகளில் ஒன்று வளர்ந்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது. 4 புறஜாதிகளும் அதின் செய்தியைக் கேட்டார்கள், அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது; அதைச் சங்கிலிகளினால் கட்டி, எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள். 5 தாய்ச்சிங்கம் காத்திருந்து, தன் நம்பிக்கை அபத்தமாய்ப் போயிற்றென்று கண்டு, அது தன் குட்டிகளில் வேறொன்றை எடுத்து, அதைப் பாலசிங்கமாக வைத்தது. 6 அது சிங்கங்களுக்குள்ளே சஞ்சரித்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனுஷரைப் பட்சித்தது. 7 அவர்களுடைய பாழான அரமனைகளில் திரிந்து, அவர்களுடைய பட்டணங்களைப் பாழாக்கிற்று; அதினுடைய கெர்ச்சிப்பின் சத்தத்துக்குத் தேசமும் அதிலுள்ள யாவும் திகைத்தது. 8 அப்பொழுது சுற்றுப்புறத்து ஜாதிகள் அதற்கு விரோதமாக எழும்பிவந்து, தங்கள் வலையை அதின்மேல் வீசினார்கள்; அது அவர்களுடைய படுகுழியிலே அகப்பட்டது. 9 அவர்கள் அதைச் சங்கிலிகளினால் கட்டி, ஒரு கூட்டுக்குட்படுத்தி, அதைப் பாபிலோன் ராஜாவினிடத்துக்குக் கொண்டுபோனார்கள்; இனி அதின் சத்தம் இஸ்ரவேலின் பர்வதங்களின்மேல் கேட்கப்படாதபடிக்கு அதை அரணான இடங்களில் கொண்டுபோய் அடைத்தார்கள். 10 நீ அமரிக்கையோடு இருக்கையில் உன் தாய் தண்ணீர் ஓரமாய் நாட்டப்பட்டதும், மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் கனிதருகிறதும் தழைத்திருக்கிறதுமான திராட்சச்செடியாயிருந்தாள். 11 ஆளுகிறவர்களின் செங்கோலுக்கேற்ற பலத்த கொப்புகள் அதற்கு இருந்தது; அதின் வளர்த்தி அடர்த்தியான கிளைகளுக்குள்ளே உயர ஓங்கி, தன் உயர்த்தியினாலே தன் திரளான கொடிகளோடுங்கூடத் தோன்றிற்று. 12 ஆனாலும் அது உக்கிரமாய்ப் பிடுங்கப்பட்டு, தரையிலே தள்ளுண்டது; கீழ்க்காற்றினால் அதின் கனி காய்ந்துபோயிற்று; அதின் பலத்த கொப்புகள் முறிந்து, பட்டுப்போயின; அக்கினி அவைகளைப் பட்சித்தது. 13 இப்பொழுது அது வறண்டதும் தண்ணீர் இல்லாததுமான வனாந்தர பூமியிலே நடப்பட்டிருக்கிறது. 14 அதின் கொடிகளிலுள்ள ஒரு கொப்பிலிருந்து அக்கினி புறப்பட்டு, அதின் கனியைப் பட்சித்தது; ஆளுகிற செங்கோலுக்கேற்ற பலத்த கொப்பு இனி அதில் இல்லையென்று சொல்; இதுவே புலம்பல், இதுவே புலம்பலாயிருக்கும் என்றார்.

எசேக்கியேல் 20

1 ஏழாம் வருஷத்து ஐந்தாம் மாதம் பத்தாந்தேதியிலே இஸ்ரவேலின் மூப்பரில் சிலர் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படிவந்து, எனக்கு முன்பாக உட்கார்ந்தார்கள். 2 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 3 மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் மூப்பரோடே பேசி, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க வந்தீர்களோ? நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல். 4 மனுபுத்திரனே, நீ அவர்களுக்காக வழக்காடுவாயோ? வழக்காட மனதானால், நீ அவர்கள் பிதாக்களின் அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டி, அவர்களை நோக்கி: 5 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நான் இஸ்ரவேலைத் தெரிந்துகொண்ட நாளிலே யாக்கோபு வம்சத்து ஜனங்களுக்கு நான் ஆணையிட்டு, எகிப்துதேசத்தில் என்னை அவர்களுக்குத் தெரியப்படுத்தி, நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று ஆணையிட்டேன். 6 நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து அழைப்பேன் என்றும், அவர்களுக்காக நான் பார்த்துவைத்ததும், பாலும் தேனும் ஓடுகிறதும் எல்லாத் தேசங்களின் சிங்காரமுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்து விடுவேன் என்றும் அந்நாளிலே ஆணையிட்டு, 7 உங்களில் அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிவிட்டு, எகிப்தின் நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாதிருப்பீர்களாக; உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அவர்களோடே சொன்னேன். 8 அவர்களோ, என் சொல்லைக் கேட்க மனதில்லாமல் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; அவரவர் தங்கள் கண்களால் நோக்கின அருவருப்புகளைத் தள்ளிப்போடாமலும், எகிப்தின் நரகலான விக்கிரகங்களை விடாமலும் இருந்தார்கள்; ஆதலால் எகிப்து தேசத்தின் நடுவிலே என் கோபத்தை அவர்களிலே தீர்த்துக்கொள்ளும்படிக்கு என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன். 9 ஆகிலும் நான் என்னை இவர்களுக்கு வெளிப்படுத்தி, இவர்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, இவர்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன். 10 ஆகையால் நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, அவர்களை வனாந்தரத்தில் அழைத்துவந்து, 11 என் கட்டளைகளை அவர்களுக்குக் கொடுத்து, என் நியாயங்களை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; அவைகளின்படி செய்கிற மனுஷன் அவைகளால் பிழைப்பான். 12 நான் தங்களைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று அவர்கள் அறியும்படிக்கு, எனக்கும் அவர்களுக்கும் அடையாளமாய் இருப்பதற்கான என் ஓய்வுநாட்களையும் அவர்களுக்குக் கட்டளையிட்டேன். 13 ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் வனாந்தரத்தில் எனக்கு விரோதமாய் இரண்டகம்பண்ணினார்கள்; என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பான்; அவர்களோ அவைகளில் நடவாமல், என் நியாயங்களை வெறுத்து, என் ஓய்வுநாட்களின் பரிசுத்தத்தை மிகவும் குலைத்துப்போட்டார்கள்; ஆதலால் அவர்களை நிர்மூலமாக்கும்படி வனாந்தரத்திலே என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன். 14 ஆகிலும் நான் இவர்களைப் புறப்படப்பண்ணினதைக் கண்ட புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன். 15 ஆனாலும் அவர்களுடைய இருதயம் அவர்களுடைய நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றி, அவர்கள் என் நியாயங்களை வெறுத்து, என் கட்டளைகளில் நடவாமற்போய், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினபடியால், 16 நான் வாக்குத்தத்தம்பண்ணினதும், பாலும் தேனும் ஓடுகிறதும், எல்லா தேசங்களின் சிங்காரமாயிருக்கிறதுமான தேசத்திலே அவர்களைக் கொண்டுவந்து விடுவதில்லை என்று வனாந்தரத்தில் ஆணையிட்டேன். 17 ஆகிலும் அவர்களை அழிக்காதபடிக்கு, என் கண் அவர்களைத் தப்பவிட்டது; நான் அவர்களை வனாந்தரத்தில் நிர்மூலமாக்கவில்லை. 18 வனாந்தரத்தில் அவர்களுடைய பிள்ளைகளை நோக்கி: நீங்கள் உங்கள் பிதாக்களின் முறைமைகளில் நடவாமலும் அவர்களுடைய நியாயங்களைக் கைக்கொள்ளாமலும், அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உங்களைத் தீட்டுப்படுத்தாமலும் இருங்கள். 19 உங்கள் தேவனாகிய கர்த்தர் நானே; நீங்கள் என் கட்டளைகளில் நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து, 20 என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்குங்கள்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று நீங்கள் அறியும்படிக்கு அவைகள் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும் என்றேன். 21 ஆனாலும் பிள்ளைகளும் எனக்கு விரோதமாய் எழும்பினார்கள்; என் கட்டளைகளின்படியே மனுஷன் செய்தால் அவைகளால் பிழைப்பானே; அவர்களோ அவைகளில் நடவாமலும், என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி செய்யாமலும், என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கிப்போட்டார்கள்; ஆகையால் வனாந்தரத்திலே என் கோபத்தை அவர்களில் தீர்த்துக்கொள்ளும்படி என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றுவேன் என்றேன். 22 ஆகிலும் நான் என் கையைத் திருப்பி, நான் இவர்களைப் புறப்படப்பண்ணினதைக் கண்ட புறஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக என் நாமம் பரிசுத்தக்குலைச்சலாகாதபடிக்கு, என் நாமத்தினிமித்தம் கிருபைசெய்தேன். 23 ஆனாலும் அவர்கள் என் நியாயங்களின்படி செய்யாமல், என் கட்டளைகளை வெறுத்து, என் ஓய்வுநாட்களை பரிசுத்தக் குலைச்சலாக்கினபடியாலும், அவர்களுடைய கண்கள் அவர்கள் பிதாக்களின் நரகலான விக்கிரகங்களின்மேல் நோக்கமாயிருந்தபடியாலும், 24 நான் அவர்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களிலே தூற்றிப்போடுகிறதற்கு வனாந்தரத்திலே ஆணையிட்டேன். 25 ஆகையால் நன்மைக்கேதுவல்லாத கட்டளைகளையும் ஜீவனுக்கேதுவல்லாத நியாயங்களையும் நான் அவர்களுக்குக் கொடுத்தேன். 26 நான் கர்த்தர் என்று அவர்கள் அறியத்தக்கதாக, நான் அவர்களைப் பாழாக்கும்படி, அவர்கள் கர்ப்பந்திறந்து பிறக்கிறதையெல்லாம் தீக்கடக்கப்பண்ணி, இவ்விதமாய் அவர்களுடைய பலிகளினாலே அவர்களைத் தீட்டுப்படப்பண்ணினேன். 27 ஆகையால் மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாரோடே பேசி, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உங்கள் பிதாக்கள் இன்னும் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, என்னைத் தூஷித்தார்கள். 28 அவர்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்திலே நான் அவர்களைப் பிரவேசிக்கப்பண்ணினபின்பு, அவர்கள் உயர்ந்த ஒரு மேட்டையும் தழைத்த ஒரு விருட்சத்தையும் எங்கெங்கே கண்டார்களோ, அங்கங்கே தங்கள் பலிகளைச் செலுத்தி, அவ்விடங்களிலெல்லாம் எனக்கு எரிச்சல் உண்டாக்குகிற தங்கள் காணிக்கைகளைப் படைத்து, சுகந்த வாசனையான தங்கள் தூபங்களைக்காட்டி, தங்கள் பானபலிகளை வார்த்தார்கள். 29 அப்பொழுது நான் அவர்களை நோக்கி: நீங்கள் போகிற அந்த மேடு என்னவென்று கேட்டேன்; அதினால் இந்நாள்வரைக்கும் அதற்குப் பாமா என்று பேர். 30 ஆகையால் நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உங்கள் பிதாக்களுடைய மார்க்கத்தின்படியே நீங்களும் தீட்டுப்பட்டவர்கள் அல்லவோ? அவர்களுடைய அருவருப்புகளை நீங்களும் பின்பற்றிச் சோரம்போகிறீர்கள் அல்லவோ? 31 நீங்கள் உங்கள் பிள்ளைகளைத் தீக்கடக்கப்பண்ணி, உங்கள் பலிகளைச் செலுத்துகிறபோது, இந்நாள்வரைக்கும் அவர்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களாலும் நீங்கள் தீட்டுப்படுகிறீர்களே; நீங்கள் என்னிடத்தில் விசாரிக்க இடங்கொடுப்பேனோ? இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் என்னிடத்தில் விசாரிக்கும்படி இடங்கொடுப்பதில்லை என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 32 மரத்துக்கும் கல்லுக்கும் ஆராதனைசெய்து, அஞ்ஞானிகளைப்போலவும் தேசத்து ஜனங்களின் ஜாதிகளைப்போலவும் இருப்போம் என்று சொல்லுகிறீர்களே; உங்கள் மனதில் எழும்புகிற இந்த நினைவின்படி ஆவதே இல்லை. 33 பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும், ஊற்றப்பட்ட உக்கிரத்தினாலும், உங்களை ஆளுவேன் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 34 நீங்கள் ஜனங்களுக்குள் இராதபடிக்கு நான் உங்களைப் புறப்படப்பண்ணி, நீங்கள் சிதறியிருக்கிற தேசங்களில் இராதபடிக்கு நான் உங்களைப் பலத்தகையினாலும், ஓங்கிய புயத்தினாலும், ஊற்றப்பட்ட உக்கிரத்தினாலும் கூடிவரச்செய்து, 35 உங்களை ஜனசதளங்களின் வனாந்தரத்திலே கொண்டுபோய், அங்கே உங்களோடே முகமுகமாய் வழக்காடுவேன். 36 நான் எகிப்துதேசத்தின் வனாந்தரத்தில் உங்கள் பிதாக்களோடு வழக்காடினதுபோல உங்களோடும் வழக்காடுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 37 நான் உங்களைக் கோலின்கீழ் செல்லும்படி செய்து, உங்களை உடன்படிக்கையின் கட்டுக்குட்படுத்தி, 38 கலகக்காரரையும் துரோகிகளையும் உங்களைவிட்டுப் பிரித்துப்போடுவேன்; அவர்களைத் தாங்கள் தங்கும் தேசத்திலிருந்து புறப்படப்பண்ணுவேன்; ஆனாலும் அவர்கள் இஸ்ரவேல் தேசத்தில் பிரவேசிப்பதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். 39 இப்போதும் இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் என் சொல்லைக்கேட்க மனதில்லாதிருந்தால், நீங்கள் போய், அவனவன் தன் தன் நரகலான விக்கிரகங்களை இன்னும் சேவியுங்கள்; ஆனாலும் என் பரிசுத்த நாமத்தை உங்கள் காணிக்கைகளாலும் உங்கள் நரகலான விக்கிரகங்களாலும் இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்காதிருங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 40 இஸ்ரவேலின் உயரமான மலையாகிய என் பரிசுத்த மலையிலே இஸ்ரவேலுடைய எல்லா வம்சத்தாருமாகிய தேசத்திலுள்ள அனைவரும் என்னைச் சேவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அங்கே அவர்கள்மேல் பிரியம் வைப்பேன்; அங்கே நீங்கள் பரிசுத்தம்பண்ணுகிற எல்லாவற்றிலும் உங்கள் காணிக்கைகளையும் உங்கள் முதற்பலன்களையும் செலுத்தும்படி கேட்பேன். 41 நான் உங்களை ஜனங்களிலிருந்து புறப்படப்பண்ணி, நீங்கள் சிதறுண்டிருக்கிற தேசங்களிலிருந்து உங்களைச் சேர்த்துக்கொள்ளும்போது, சுகந்த வாசனையினிமித்தம் நான் உங்கள்பேரில் பிரியமாயிருப்பேன்; அப்பொழுது புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உங்களால் பரிசுத்தம்பண்ணப்படுவேன். 42 உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசமாகிய இஸ்ரவேல் தேசத்திலே நான் உங்களைத் திரும்பிவரப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று நீங்கள் அறிந்துகொண்டு, 43 அங்கே உங்களுடைய எல்லா வழிகளையும் உங்களைத் தீட்டுப்படுத்தின உங்களுடைய எல்லாக் கிரியைகளையும் நினைத்து, நீங்கள் செய்திருந்த உங்களுடைய எல்லாப் பொல்லாப்புகளினிமித்தமும் உங்களை நீங்களே அருவருப்பீர்கள். 44 இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளுக்குத் தக்கதாகவும், உங்கள் கெட்ட கிரியைகளுக்குத்தக்கதாகவும் நான் உங்களுக்குச் செய்யாமல், என் நாமத்தினிமித்தம் உங்களுக்குக் கிருபைசெய்யும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள் என்கிறதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார். 45 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 46 மனுபுத்திரனே, நீ உன் முகத்தைத் தென்திசைக்கு நேரே திருப்பி, தெற்குக்கு விரோதமாக உன் வசனத்தைப்பொழிந்து, தென்புறமான வயல்வெளியின் காட்டுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, 47 தென்திசைக் காட்டை நோக்கி: கர்த்தருடைய வார்த்தையைக் கேள், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உன்னில் அக்கினியைக் கொளுத்துவேன்; அது உன்னில் பச்சையான சகல மரங்களையும் பட்டுப்போன சகல மரங்களையும் பட்சிக்கும்; ஜுவாலிக்கிற ஜுவாலை அவிக்கப்படமாட்டாது; தெற்கு துவக்கி வடக்குமட்டுமுள்ள தேசமெங்கும் அதினால் வெந்துபோகும். 48 கர்த்தராகிய நான் அதைக் கொளுத்தினேன் என்பதை எல்லா மாம்சமும் காணும்; அது அவிக்கப்படுவதில்லை என்று சொல் என்றார். 49 அப்பொழுது நான்: ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இவன் உவமைகளையல்லவோ சொல்லுகிறான் என்று அவர்கள் என்னைக்குறித்துச் சொல்லுகிறார்கள் என்றேன்.

எசேக்கியேல் 21

1 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, நீ உன் முகத்தை எருசலேமுக்கு நேராகத் திருப்பி, பரிசுத்த ஸ்தலங்களுக்கு விரோதமாக உன் வசனத்தைப் பொழிந்து, இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, 3 இஸ்ரவேல் தேசத்தை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் பட்டயத்தை அதின் உறையிலிருந்து உருவி, உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் சங்காரம்பண்ணுவேன். 4 நான் உன்னில் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் சங்காரம்பண்ணப் போகிறபடியினால் தெற்கு துவக்கி வடக்குமட்டுமுள்ள எல்லா மாம்சத்துக்கும் விரோதமாய் என் பட்டயம் அதின் உறையிலிருந்து புறப்படும். 5 அப்பொழுது கர்த்தராகிய நான் என் பட்டயத்தை அதின் உறையிலிருந்து உருவினேன் என்பதை எல்லா மாம்சமும் அறியும்; அது இனி உறைக்குள் திரும்புவதில்லை. 6 ஆதலால் மனுபுத்திரனே, உன் இடுப்பு நொறுங்கும்படி பெருமூச்சுவிடு; அவர்கள் கண்களுக்கு முன்பாக மனங்கசந்து பெருமூச்சுவிடு. 7 நீ எதினிமித்தம் பெருமூச்சுவிடுகிறாய் என்று அவர்கள் உன்னிடத்தில் கேட்டால், நீ அவர்களை நோக்கி: துர்ச்செய்தி வருகிறதினிமித்தமே; அதினால், இருதயங்களெல்லாம் உருகி, கைகளெல்லாம் தளர்ந்து, மனமெல்லாம் தியங்கி, முழங்கால்களெல்லாம் தண்ணீரைப்போல அலைவுண்ணும்; இதோ, அது வந்து சம்பவிக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார். 8 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 9 மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: பட்டயம் கூர்மையாக்கப்பட்டது, பட்டயம் கூர்மையாக்கப்பட்டது; அது துலக்கப்பட்டுமிருக்கிறது. 10 மகா சங்காரஞ்செய்வதற்கு அது கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; மின்னத்தக்கதாய் அது துலக்கப்பட்டிருக்கிறது; சந்தோஷப்படுவோமோ? அது என் குமாரனுடைய கோல், அது சகல விருட்சங்களையும் அலட்சியம்பண்ணும். 11 அதைக் கையாடும்படி அதைத்துலக்கக் கொடுத்தார்; கொல்லுகிறவன் கையிலே கொடுக்கும்படி அந்தப் பட்டயம் கூர்மையாக்கப்பட்டிருக்கிறது; அது துலக்கப்பட்டதுமாயிருக்கிறது என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல். 12 மனுபுத்திரனே, நீ ஓலமிட்டு அலறு; பட்டயம் என் ஜனத்தின்மேல் வரும்; அது இஸ்ரவேல் பிரபுக்கள் எல்லார்மேலும் வரும்; அதினிமித்தம் என் ஜனத்துக்குள்ளே திகில் உண்டாயிருக்கும்; ஆகையால் உன் விலாவிலே அடித்துக்கொள். 13 யாவையும் கண்டிக்கிற கோல் வந்தாலொழிய இனிச் சோதனையினால் தீருகிறதென்னவென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 14 ஆகையால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லி, கையோடே கைகொட்டு; பட்டயம் மூன்றுதரம் இரட்டித்துவரும்; அது கொலையுண்டவர்களின் பட்டயம்; அது கொலையுண்ணப்போகிற பெரியவர்களின் உள்ளறைகளில் பிரவேசிக்கிற பட்டயம். 15 அவர்களுடைய இருதயம் கரைந்து, அவர்களுடைய இடையூறுகள் திரளாகும்படி, பட்டயத்தின் கூர்மையை அவர்களுடைய எல்லா வாசல்களுக்கும் நேரிடக் கட்டளையிடுவேன்; ஆ, அது மின்னும்படியாகப் பதமிடப்பட்டது, வெட்டும்படியாகத் தீட்டிவைக்கப்பட்டது. 16 ஏகபலமாய் வலதுபுறமாக வெட்டு, திரும்பி இடதுபுறமாகவும் வெட்டு; உன் முகம் திரும்புகிற திக்கெல்லாம் வெட்டு. 17 நானும் கையோடே கைகொட்டி, என் உக்கிரத்தை ஆறப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய நான் சொன்னேன் என்றார். 18 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 19 மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவின் பட்டயம் வரத்தக்கதாக இரண்டுவழிகளைக் குறித்துக்கொள்; இரண்டும் ஒரே தேசத்திலிருந்து வரவேண்டும்; நீ ஒரு இடத்தைத் தெரிந்துகொள், நகரத்துக்குப் போகிற வழியின் முனையில் அந்த இடத்தைத் தெரிந்துகொள். 20 பட்டயம் அம்மோன் புத்திரரின் பட்டணமாகிய ரப்பாவுக்கு விரோதமாக வரத்தக்க ஒரு வழியையும், யூதாவில் இருக்கிற அரணான எருசலேமுக்கு விரோதமாக வரத்தக்க ஒரு வழியையும் குறித்துக்கொள். 21 பாபிலோன் ராஜா இரண்டு வழிகளின் முனையாகிய வழிப்பிரிவிலே நிமித்தம் பார்க்கிறதற்காக நிற்பான்; அம்புகளைத் தீட்டி, விக்கிரகங்களை உசாவி, ஈரலால் குறிபார்ப்பான். 22 தலைவரை நியமிக்கிறதற்கும், சங்காரஞ்செய்யும்படி ஆர்ப்பரிக்கிறதற்கும், கெம்பீரமாய்ச் சத்தமிடுகிறதற்கும், வாசல்களை முட்டும் யந்திரங்களை வைக்கிறதற்கும், மண்மேடு போடுகிறதற்கும், கொத்தளங்களைக் கட்டுகிறதற்கும், எருசலேமைக்குறித்து நிமித்தம் பார்க்குதல் அவனுடைய வலதுபுறத்திலே உண்டாயிருக்கும். 23 இந்த நிமித்தமானது ஆணையிட்டவர்களுக்கு முன்பாகப் பொய்யாகத் தோன்றும்; ஆயினும் அவர்கள் பிடிக்கப்படும்படி அவன் அவர்கள் துரோகத்தை நினைப்பான். 24 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் துரோகங்கள் வெளியரங்கமாகிறதினாலும், உங்கள் செய்கைகளிலெல்லாம் உங்கள் பாவங்கள் தெரியவருகிறதினாலும், நீங்கள் உங்கள் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணுகிறீர்களே; நீங்கள் இப்படிப்பட்டவர்களென்று நினைக்கப்படுகிறீர்களே; ஆதலால் கைப்பிடியாய்ப் பிடிக்கப்படுவீர்கள். 25 இஸ்ரவேலை ஆளுகிற அவபக்தியுள்ள துன்மார்க்க அதிபதியே, அக்கிரமத்துக்கு முடிவுவருங்காலத்தில் உன் நாள் வந்தது. 26 பாகையைக் கழற்று, கிரீடத்தை எடுத்துப்போடு; அது இனி முன்போலிராது; தாழ்ந்தவனை உயர்த்தி, உயர்ந்தவனைத் தாழ்த்துவேன். 27 அதைக் கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன், கவிழ்ப்பேன்; உரிமைக்காரனானவர் வருமட்டும் அது இல்லாதிருக்கும்; அவருக்கே அதைக் கொடுப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 28 பின்னும் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: அம்மோன் புத்திரரையும் அவர்கள் சொல்லும் நிந்தனைகளையும் குறித்துக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், 29 அக்கிரமத்துக்கு முடிவுவருங்காலத்தில் வந்த தங்களுடைய நாளுக்கு ஏதுவாகி, கொலையுண்டுபோனவர்களுடைய பிடரிகளோடேகூட உன்னைத் துன்மார்க்கரின் கையினால் விழப்பண்ணும்படிக்கு, உனக்கு அபத்தமானது தரிசிக்கப்படுகிறபோதும், உனக்குப் பொய்நிமித்தம் பார்க்கப்படுகிறபோதும் பட்டயம் உருவப்பட்டது, பட்டயமே உருவப்பட்டது; வெட்டவும் சங்கரிக்கவும் அது மின்னத்தக்கதாய்த் துலக்கப்பட்டிருக்கிறது. 30 உன் பட்டயத்தை நீ திரும்ப அதின் உறையிலே போடு; நீ சிருஷ்டிக்கப்பட்ட ஸ்தானமாகிய உன் ஜெந்மதேசத்திலே நான் உன்னை நியாயந்தீர்த்து, 31 என் சினத்தை உன்மேல் ஊற்றுவேன்; நான் என் மூர்க்கத்தின் அக்கினியை உன்மேல் ஊதி, மிருககுணமுள்ளவர்களும், அழிக்கிறதற்குத் திறமையுள்ளவர்களுமாகிய மனுஷரின் கையில் உன்னை ஒப்புக்கொடுப்பேன். 32 நீ அக்கினிக்கு இரையாவாய்; உன் இரத்தம் உன் தேசத்தின் நடுவில் சிந்திக்கிடக்கும்; நீ இனி நினைக்கப்படுவதில்லை; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்றார்.

எசேக்கியேல் 22

1 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 இப்போதும் மனுபுத்திரனே, இரத்தஞ்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதானால், நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியக்காட்டி, 3 அதை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் காலம் வரத்தக்கதாக உன் நடுவிலே இரத்தஞ்சிந்துகிறதும், உன்னைத் தீட்டுப்படுத்தத்தக்கதாக உனக்கே விரோதமாய் நரகலான விக்கிரகங்களை உண்டுபண்ணுகிறதுமான நகரமே, 4 நீ சிந்தின உன் இரத்தத்தினால் நீ குற்றஞ்சுமந்ததாகி, நீ உண்டுபண்ணின உன் நரகலான விக்கிரகங்களால் நீ தீட்டுப்பட்டு, உன் நாட்களைச் சமீபிக்கப்பண்ணி, உன் வருஷங்களை நிறைவேற்றினாய்; ஆகையால் நான் உன்னைப் புறஜாதிகளுக்கு நிந்தையாகவும், தேசங்களுக்கெல்லாம் பரியாசமாகவும் வைப்பேன். 5 உனக்குச் சமீபமும் உனக்குத் தூரமுமான தேசங்களின் மனுஷர் நீ அவகீர்த்தியுள்ளதென்றும், அமளி பெருத்ததென்றும் உன்னைப் பரியாசம்பண்ணுவார்கள். 6 இதோ, இஸ்ரவேலின் அதிபதிகளில் அவரவர் தங்கள் புயபலத்துக்குத் தக்கதாக, உன்னில் இரத்தஞ்சிந்தினார்கள். 7 உன்னிலுள்ள தாய் தகப்பனை அற்பமாய் எண்ணினார்கள்; உன் நடுவில் பரதேசிக்கு இடுக்கண் செய்தார்கள்; உனக்குள் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்கினார்கள். 8 நீ என் பரிசுத்த வஸ்துக்களை அசட்டைபண்ணி, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய். 9 இரத்தஞ்சிந்தும்படிக்கு அபாண்டம் பேசுகிறவர்கள் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; மலைகளின்மேல் சாப்பிடுகிறவர்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; முறைகேடு செய்கிறவர்கள் உன் நடுவில் இருக்கிறார்கள். 10 தகப்பனை நிர்வாணமாக்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; தூரஸ்திரீயைப் பலவந்தப்படுத்தினவர்கள் உன்னில் இருக்கிறார்கள். 11 உன்னில் ஒருவன் தன் அயலானுடைய மனைவியோடே அருவருப்பானதைச் செய்கிறான்; வேறொருவன் முறைகேடாய்த் தன் மருமகளைத் தீட்டுப்படுத்துகிறான்; வேறொருவன் தன் தகப்பனுக்குப் பிறந்த தன் சகோதரியைப் பலவந்தம் பண்ணுகிறான். 12 இரத்தஞ்சிந்தும்படிக்குப் பரிதானம் வாங்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; நீ வட்டியையும் பொலிசையையும் வாங்கி, பொருளாசையினால் உன் அயலானுக்கு இடுக்கண் செய்து, என்னை மறந்து போனாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 13 இதோ, நீ அநியாயமாய்ச் சம்பாதித்த பொருளினிமித்தமும், உன் நடுவில் நீ சிந்தின இரத்தத்தினிமித்தமும் நான் கைகொட்டுகிறேன். 14 நான் உன்னில் நியாயஞ்செய்யும் நாட்களில் உன் இருதயம் தாங்குமோ? அப்பொழுது உன் கைகள் திடமாயிருக்குமோ? கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றுவேன். 15 நான் உன்னைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, உன்னைத் தேசங்களிலே தூற்றி, உன் அசுத்தத்தை உன்னில் ஒழியப்பண்ணுவேன். 16 நீ புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தக் குலைச்சலாயிருந்து, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய் என்று சொல் என்றார். 17 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 18 மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் எனக்குக் களிம்பாய்ப் போனார்கள்; அவர்களெல்லாரும் குகையிலுள்ள பித்தளையும் தகரமும் இரும்பும் ஈயமுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெள்ளியின் களிம்பாய்ப் போனார்கள். 19 ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்களெல்லாரும் களிம்பாய்ப் போனபடியினால், இதோ, நான் உங்களை எருசலேமுக்குள் சேர்ப்பேன். 20 வெள்ளியையும் பித்தளையையும் இரும்பையும் ஈயத்தையும் தகரத்தையும் அக்கினியில் ஊதி உருக்குவதற்காகக் குகைக்குள் சேர்க்கிறதுபோல, நான் என் கோபத்தினாலும் என் உக்கிரத்தினாலும் உங்களைச் சேர்த்துவைத்து உருக்குவேன். 21 நான் உங்களைக் கூட்டி, என் கோபமாகிய அக்கினியை உங்கள்மேல் ஊதுவேன்; அதற்குள்ளே நீங்கள் உருகுவீர்கள். 22 குகைக்குள் வெள்ளி உருகுமாப்போல, நீங்கள் அதற்குள் உருகுவீர்கள்; அப்பொழுது கர்த்தராகிய நான் என் உக்கிரத்தை உங்கள்மேல் ஊற்றிவிட்டேன் என்று அறிந்துகொள்வீர்கள் என்றார். 23 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 24 மனுபுத்திரனே, நீ தேசத்தைப் பார்த்து: நீ சுத்தம்பண்ணப்படாததேசம், கோபத்தின் காலத்தில் மழை பெய்யாத தேசம் என்று அதற்குச் சொல்லு. 25 அதிலுள்ள தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடு பண்ணுகிறார்கள்; கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் பட்சிக்கிறார்கள்; திரவியத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்; அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள். 26 அதின் ஆசாரியர்கள் என் வேதத்துக்கு அநியாயஞ்செய்து, என் பரிசுத்த வஸ்துக்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறார்கள்; பரிசுத்தமுள்ளதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணாமலும், அசுத்தமுள்ளதற்கும் அசுத்தமில்லாததற்கும் உண்டான வேற்றுமையைக் காண்பியாமலும் இருந்து, என் ஓய்வுநாட்களுக்குத் தங்கள் கண்களை மூடிக்கொள்ளுகிறார்கள்; அவர்கள் நடுவிலே நான் கனஈனம்பண்ணப்படுகிறேன். 27 அதின் நடுவில் இருக்கிற அதின் பிரபுக்கள் இரை கவ்வுகிற ஓநாய்களைப்போல் இருக்கிறார்கள்; அநியாயமாய்ப் பொருள் சம்பாதிக்கிறதற்கு இரத்தஞ்சிந்துகிறார்கள், ஆத்துமாக்களைக் கொள்ளையிடுகிறார்கள். 28 அதின் தீர்க்கதரிசிகள் அபத்தமானதைத் தரிசித்து, பொய்ச்சாஸ்திரத்தை அவர்களுக்குச் சொல்லி, கர்த்தர் உரைக்காதிருந்தும், கர்த்தராகிய ஆண்டவர் உரைத்தார் என்று சொல்லி, அவர்களுக்குச் சாரமற்ற சாந்தைப் பூசுகிறார்கள். 29 தேசத்தின் ஜனங்கள் இடுக்கண்செய்து, கொள்ளையடித்து, சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, அந்நியனை அநியாயமாய்த் துன்பப்படுத்துகிறார்கள். 30 நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன். 31 ஆகையால், நான் அவர்கள்மேல் என் கோபத்தை ஊற்றி, என் மூர்க்கத்தின் அக்கினியால் அவர்களை நிர்மூலமாக்கி, அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலையின்மேல் சுமரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்றார்.

எசேக்கியேல் 23

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, ஒரே தாயின் குமாரத்திகளாகிய இரண்டு ஸ்திரீகள் இருந்தார்கள். 3 அவர்கள் எகிப்திலே வேசித்தனம்பண்ணினார்கள்; தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள்; அங்கே அவர்களுடைய ஸ்தனங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் கொங்கைகள் தொடப்பட்டது. 4 அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள்; அவர்கள் என்னுடையவர்களாகி, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றார்கள்; இவைகளே அவர்களுடைய பெயர்கள்; அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாம். 5 அகோலாள் என்னுடையவளாயிருக்கும்போது சோரம்போனாள். 6 நீலாம்பரந்தரித்த தலைவரும், அதிபதிகளும், சௌந்தரிய வாலிபரும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரருமாயிருந்த சமீபதேசத்தாராகிய அசீரியரென்கிற தன் சிநேகிதர்மேல் அவள் மோகித்து, 7 அசீரியரின் புத்திரரில் சிரேஷ்டமான அனைவரோடும், தான் மோகித்த அனைவரோடும் தன் வேசித்தனங்களை நடப்பித்து, அவர்களுடைய நரகலான சகல விக்கிரகங்களாலும் தீட்டுப்பட்டுப்போனாள். 8 தான் எகிப்திலே பண்ணின வேசித்தனங்களை அவள் விடவில்லை; அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள். 9 ஆகையால் அவளுடைய சிநேகிதரின் கையிலே, அவள் மோகித்திருந்த அசீரியபுத்திரரின் கையிலே, நான் அவளை ஒப்புக்கொடுத்தேன். 10 அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்; அவளுடைய குமாரரையும் அவளுடைய குமாரத்திகளையும் சிறைபிடித்து, அவளையோ பட்டயத்தினால் கொன்றுபோட்டார்கள்; அப்படியே அவளிடத்தில் ஆக்கினைகள் செய்யப்பட்டபடியினால் ஸ்திரீகளுக்குள் அவகீர்த்தியுள்ளவளானாள். 11 அவளுடைய தங்கையாகிய அகோலிபாள் இதைக் கண்டும், தன் மோகவிகாரத்தில் அவளைப்பார்க்கிலும் கெட்டவளானாள்; தன் சகோதரியின் வேசித்தனங்களிலும் தன் வேசித்தனங்கள் அதிகமாயிற்று. 12 மகா அலங்கார உடுப்புள்ள தலைவரும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரரும், சௌந்தரியமுள்ள வாலிபருமான சமீபதேசத்தாராகிய அசீரிய புத்திரர்மேல் மோகங்கொண்டாள். 13 அவளும் அசுத்தமானாளென்றும், அவர்கள் இருவரும் ஒரே வழியில் போனார்களென்றும் கண்டேன். 14 அவள் தன் வேசித்தனங்களில் அதிகரித்தாள்; சுவரில் ஜாதிலிங்கத்தால் சித்திரந்தீர்ந்த கல்தேயரின் புருஷ சுரூபங்களைக் கண்டாள். 15 அவர்கள் எல்லாரும் தங்கள் ஜெந்மதேசமாகிய கல்தேயாவில் உள்ள பாபிலோன் புத்திரரின் சாயலாகத் தங்கள் அரைகளில் கச்சை கட்டினவர்களும், தங்கள் தலைகளில் சாயந்தீர்ந்த பெரிய பாகைகளைத் தரித்தவர்களும், பார்வைக்கு ராஜகுமாரர்களுமாக இருந்தார்கள். 16 அவளுடைய கண்கள் அவர்களைப் பார்த்தவுடனே, அவள் அவர்கள்மேல் மோகித்து, கல்தேயாவுக்கு அவர்களண்டையிலே ஸ்தானாதிபதிகளை அனுப்பினாள். 17 அப்பொழுது பாபிலோன் புத்திரர் அவளண்டையிலே சிநேக சம்போகத்துக்கு வந்து, தங்கள் வேசித்தனங்களால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; அவள் இவர்களால் தீட்டுப்பட்டுப் போனபின்பு, அவள் மனது அவர்களை விட்டுப் பிரிந்தது. 18 இவ்விதமாய் அவள் தன் வேசித்தனங்களை வெளிப்படுத்தி, தன்னை நிர்வாணமாக்கினபோது, என் மனம் அவளுடைய சகோதரியை விட்டுப் பிரிந்ததுபோல அவளையும் விட்டுப் பிரிந்தது. 19 அவள் எகிப்துதேசத்திலே வேசித்தனம் பண்ணின தன் வாலிபத்தின் நாட்களை நினைத்து, தன் வேசித்தனங்களில் அதிகரித்துப்போனாள். 20 கழுதைமாம்சமான மாம்சமும், குதிரை இந்திரியமான இந்திரியமுமுள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாயிருக்கும்படி அவர்கள்மேல் மோகித்தாள். 21 எகிப்தியரால் உன் கன்னிமையின் ஸ்தனங்களாகிய கொங்கைகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன் இளம்பிராயத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய். 22 ஆகையால், அகோலிபாளே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன் மனது விட்டுப் பிரிந்த உன் சிநேகிதரை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும் வரப்பண்ணுவேன். 23 சௌந்தரியமுள்ள வாலிபரும், தலைவரும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரருமாகிய பேர்பெற்ற பிரபுக்களான பாபிலோன் புத்திரரையும், கல்தேயர் எல்லாரையும், பேகோடு, சோவா, கோவா என்கிற தேசங்களின் மனுஷரையும் அவர்களோடேகூட அசீரிய புத்திரர் எல்லாரையும் வரப்பண்ணுவேன். 24 அவர்கள் வண்டில்களோடும், இரதங்களோடும், யந்திரங்களோடும், ஜனக்கூட்டத்தோடும், கேடகங்களும் பரிசைகளும் தலைச்சீராக்களும் தரித்தவர்களாய், உனக்கு விரோதமாக வந்து, உன்னைச் சுற்றிலும் பாளயமிறங்குவார்கள்; அவர்களுக்கு முன்னே நான் நியாயத்தை விளங்கப்பண்ணுவேன்; அவர்கள் தங்கள் நியாயங்களின்படி உன்னை நியாயந்தீர்ப்பார்கள். 25 உனக்கு விரோதமாக என் எரிச்சலை விளங்கப்பண்ணுவேன்; அவர்கள் உன்னை உக்கிரமாய் நடப்பித்து, உன் மூக்கையும் உன் காதுகளையும் அறுத்துப்போடுவார்கள்; உன்னில் மீதியாயிருப்பவர்கள் பட்டயத்தால் வெட்டுண்டுபோவார்கள்; அவர்கள் உன் குமாரரையும் உன் குமாரத்திகளையும் பிடித்துக்கொள்ளுவார்கள்; உன்னில் மீதியாயிருப்பவர்கள் அக்கினிக்கு இரையாவார்கள். 26 அவர்கள் உன் வஸ்திரங்களை உரிந்து, உன் சிங்காரமான ஆபரணங்களைப் பறித்துக்கொள்ளுவார்கள். 27 இவ்விதமாய் உன் முறைகேட்டையும், நீ எகிப்துதேசத்தில் துவக்கின உன் வேசித்தனத்தையும் ஒழியப்பண்ணுவேன்; நீ இனி அவர்களை நோக்க உன் கண்களை ஏறெடுக்காமலும், எகிப்துவை நினையாமலும் இருப்பாய். 28 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்களின் கையிலும், உன் மனம் விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன். 29 அவர்கள் உன்னை வெறுப்பாய் நடத்தி, உன் பிரயாசத்தின் பலனையெல்லாம் எடுத்துக்கொண்டு, உன்னை அம்மணமும் நிர்வாணமுமாக்கிவிடுவார்கள்; அப்படியே உன் வெட்கக்கேடும் உன் முறைகேடுமான உன் வேசித்தனத்தின் நிர்வாணம் வெளிப்படுத்தப்படும். 30 நீ புறஜாதிகளைப் பின்தொடர்ந்து, அவர்களுடைய நரகலான விக்கிரகங்களால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன் வேசித்தனத்தினிமித்தம் இவைகள் உனக்குச் செய்யப்படும். 31 உன் சகோதரியின் வழியிலே நீ நடந்தாய்; ஆகையால் அவளுடைய பாத்திரத்தை உன் கையிலே கொடுப்பேன். 32 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் சகோதரியினுடைய ஆழமும் அகலமுமானதும் நிறைய வார்க்கப்பட்டதுமான பாத்திரத்தைக் குடித்து, நகைப்பும் பரியாசமுமாவாய். 33 சமாரியா என்னும் உன் சகோதரியினுடைய பாத்திரமாயிருக்கிற பிரமிப்பும் பாழ்க்கடிப்பும் என்கிற பாத்திரத்தால் வெறியினாலும் சஞ்சலத்தினாலும் நிறையப்படுவாய். 34 நீ அதில் இருக்கிறதைக் குடித்து, உறிஞ்சி, அதின் ஓடுகளை உடைத்துப்போட்டு, உன் ஸ்தனங்களைக் கீறிக்கொள்வாய்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 35 ஆகையால், நீ என்னை மறந்து, என்னை உனக்குப் புறம்பே தள்ளிவிட்டதினிமித்தம், நீ உன் முறைகேட்டையும் உன் வேசித்தனங்களையும் சுமப்பாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 36 பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ அகோலாளையும் அகோலிபாளையும் குறித்து வழக்காட மனதானால், அவர்களுடைய அருவருப்புகளை அவர்களுக்குத் தெரியக்காட்டு. 37 அவர்கள் விபசாரம்பண்ணினார்கள்; அவர்கள் கைகளில் இரத்தமும் இருக்கிறது; அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களோடே விபசாரம்பண்ணி, தாங்கள் எனக்குப் பெற்ற தங்கள் பிள்ளைகளையும் அவைகளுக்கு இரையாகத் தீக்கடக்கப்பண்ணினார்கள். 38 அன்றியும் அவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்தை அந்நாளிலேதானே தீட்டுப்படுத்தி, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள். 39 அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் நரகலான விக்கிரகங்களுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்நாளில்தானே அதற்குள் பிரவேசித்தார்கள்; இதோ, என் ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள். 40 இதுவுமல்லாமல், தூரத்திலுள்ள புருஷரிடத்திற்குத் தூது அனுப்பி, அவர்களை வரவழைத்தார்கள், அவர்கள் வந்தார்கள்; அவர்களுக்கென்று நீ குளித்து, உன் கண்களில் மையிட்டுக்கொண்டு, ஆபரணங்களால் உன்னை அலங்கரித்து, 41 சிறந்த மஞ்சத்தின்மேல் உட்கார்ந்துகொண்டாய்; அதின் முன்னே ஒரு பீடம் ஆயத்தம்பண்ணப்பட்டிருந்தது; என் தூபவர்க்கத்தையும் என் எண்ணெயையும் அதின்மேல் வைத்தாய். 42 அவளிடத்திலே அந்தச் சந்தடியின் இரைச்சல் அடங்கின பின்பு, ஜனத்திரளான புருஷரையும் அழைத்தனுப்பினார்கள்; சபேயர் வனாந்தரத்திலிருந்து கொண்டுவரப்பட்டார்கள்; இவர்கள் அவர்களுடைய கைகளில் கடகங்களையும் அவர்களுடைய தலைகளில் அலங்காரமான கிரீடங்களையும் போட்டார்கள். 43 விபசாரங்களில் கிழவியானவளைக்குறித்து அவள் இன்னும் தன் வேசித்தனங்களைச் செய்வாளோ என்றேன். 44 பரஸ்திரீயினிடத்திலே பிரவேசிக்குமாப்போல அவளிடத்தில் பிரவேசித்தார்கள்; இந்தப்பிரகாரமாக முறைகேடானவர்களாகிய அகோலாளிடத்திலும் அகோலிபாளிடத்திலும் பிரவேசித்தார்கள். 45 ஆகையால், விபசாரிகளை நியாயந்தீர்க்கிற பிரகாரமாகவும், இரத்தஞ்சிந்தும் ஸ்திரீகளை நியாயந்தீர்க்கிற பிரகாரமாகவும், நீதிமான்கள் அவர்களை நியாயந்தீர்ப்பார்கள்; அவர்கள் விபசாரிகள், அவர்களுடைய கைகளில் இரத்தம் இருக்கிறது. 46 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்களுக்கு விரோதமாய் ஒரு கூட்டத்தைவரப்பண்ணி, அவர்களை அலைச்சலுக்கும் கொள்ளைக்கும் ஒப்புக்கொடுப்பேன். 47 அந்தக் கூட்டத்தார் அவர்களைக் கல்லெறிந்து, தங்கள் பட்டயங்களால் வெட்டிப்போடுவார்கள்; அவர்களுடைய குமாரரையும் அவர்களுடைய குமாரத்திகளையும் கொன்று, அவர்களுடைய வீடுகளை அக்கினியால் சுட்டெரிப்பார்கள். 48 இவ்விதமாய் எல்லா ஸ்திரீகளும் புத்தியடைந்து, உங்கள் முறைகேடுகளைச் செய்யாதிருக்கும்படி, முறைகேட்டைத் தேசத்தைவிட்டு ஒழியப்பண்ணுவேன். 49 உங்கள் முறைகேட்டை உங்கள்மேல் சுமத்துவார்கள்; அப்பொழுது நீங்கள் உங்கள் நரகலான விக்கிரகங்களைச் சேவித்த பாவங்களைச் சுமந்து, நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள்.

எசேக்கியேல் 24

1 ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, இந்த நாளின் பேரையும் இந்தத் தேதியையும் நீ எழுதிவை, இந்தத் தேதியில்தானே பாபிலோன் ராஜா எருசலேமில் பாளயமிறங்கினான். 3 இப்போதும் நீ கலகவீட்டாருக்கு ஒரு உபமானத்தைக் காண்பித்து, அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஒரு கொப்பரையை அடுப்பிலே வை; அதை அடுப்பிலே வைத்து, அதிலே தண்ணீரை விடு. 4 சகல நல்ல கண்டங்களான பின்னந்தொடைகளும் முன்னந்தொடைகளுமாகிய கண்டங்களைச் சேர்த்து அதிலே போடு; நல்ல எலும்புகளால் அதை நிரப்பு. 5 ஆட்டுமந்தையில் தெரிந்துகொள்ளப்பட்டதை அதற்காகக் கொண்டுவந்து, எலும்புகளை அதின் கீழே குவித்து எரிக்கவேண்டும்; அதிலுள்ள எலும்புகளும் வேகத்தக்கதாக அதைப் பொங்கப்பொங்கக் காய்ச்சவேண்டும். 6 இதற்காகக் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நுரை ஒட்டிக்கொண்டிருக்கிறதும் நுரை நீங்காததுமாகிய கொப்பரை என்னப்பட்ட இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! அதில் இருக்கிறதைக் கண்டங்கண்டமாக எடுத்துக்கொண்டுபோ; அதின்பேரில் சீட்டுப்போடலாகாது. 7 அவள் இரத்தம் அவள் நடுவில் இருக்கிறது; மண்ணிலே மறைந்து போகும்படி அதைத் தரையிலே ஊற்றாமல் கற்பாறையிலே ஊற்றிப்போட்டாள். 8 நீதியைச் சரிக்கட்டுவதற்காகக் கோபம் மூளும்படி நான் அவள் இரத்தத்தை மறைக்காமல் கன்மலையின்மேல் வைத்தேன். 9 ஆதலால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இரத்தஞ்சிந்திய நகரத்துக்கு ஐயோ! நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியப்பண்ணுவேன். 10 திரளான விறகுகளைக் கூட்டு, தீயை மூட்டு, இறைச்சியை முறுகவேவித்துச் சம்பாரங்களை இடு; எலும்புகளை எரித்துப்போடு. 11 பின்பு கொப்பரை காய்ந்து, அதின் களிம்பு வெந்து, அதற்குள் இருக்கிற அதின் அழுக்கு உருகி, அதின் நுரை நீங்கும்படி அதை வெறுமையாகத் தழலின்மேல் வை. 12 அது மகா வருத்தத்தை உண்டாக்கியும், அதின் திரளான நுரை அதை விட்டு நீங்கவில்லை; அதின் நுரை அக்கினிக்கு உள்ளாகவேண்டியது. 13 உன் அசுத்தத்தோடே முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாதபடியினால், இனி என் உக்கிரம் உன்னில் ஆறித்தீருமட்டும் உன் அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய். 14 கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன்; நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை; உன் வழிகளுக்கும் உன் செய்கைகளுக்குந்தக்கதாக உன்னை நியாயந்தீர்ப்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 15 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 16 மனுபுத்திரனே, இதோ, நான் உன் கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இருப்பாயாக. 17 அலறாமல் பெருமூச்சுவிடு, இழவு கொண்டாடவேண்டாம்; உன் பாகையை உன் தலையிலே கட்டி, உன் பாதரட்சைகளை உன் பாதங்களில் தொடுத்துக்கொள்; உன் தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருக்கக்கடவாய் என்றார். 18 விடியற்காலத்தில் நான் ஜனங்களோடே பேசினேன்; அன்று சாயங்காலத்தில் என் மனைவி செத்துப்போனாள்; எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன். 19 அப்பொழுது ஜனங்கள் என்னை நோக்கி: நீர் செய்கிறவைகள் எங்களுக்கு என்னத்திற்கு அடையாளம் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கமாட்டீரா என்று கேட்டார்கள். 20 நான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 21 நீ இஸ்ரவேல் வீட்டாரை நோக்கி, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, உங்கள் பலத்தின் முக்கியமும் உங்கள் கண்களின் விருப்பமும் உங்கள் ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என் பரிசுத்த ஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள். 22 அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைப் புசியாமலும் இருப்பீர்கள். 23 உங்கள் பாகைகள் உங்கள் தலைகளிலும், உங்கள் பாதரட்சைகள் உங்கள் கால்களிலும் இருக்கும்; நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்கள் அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள். 24 அப்படியே எசேக்கியேல் உங்களுக்கு அடையாளமாக இருப்பான்; அவன் செய்தபடி எல்லாம் நீங்களும் செய்வீர்கள்; இப்படி வரும்போது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று உரைத்தார் என்றேன். 25 பின்னும் மனுபுத்திரனே, நான் எந்த நாளிலே அவர்களுடைய பலத்தையும், அவர்களுடைய அலங்காரத்தின் மகிழ்ச்சியையும், அவர்களுடைய கண்களின் விருப்பத்தையும், அவர்களுடைய ஆத்துமாவின் விசேஷித்த வாஞ்சையையும், அவர்களுடைய குமாரரையும், அவர்களுடைய குமாரத்திகளையும் அவர்களைவிட்டு எடுத்துக்கொள்ளுகிறேனோ, 26 அந்த நாளிலேதானே தப்பிவந்த ஒருவன் உன்னிடத்தில் வந்து உன் காதுகள் கேட்கச் சொல்லுவான் அல்லவோ? 27 அந்த நாளிலேதானே உன் வாய் திறக்கப்பட்டு, நீ தப்பிவந்தவனோடே பேசுவாய்; இனி மவுனமாயிருக்கமாட்டாய்; இப்படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள் என்றார்.

எசேக்கியேல் 25

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, நீ அம்மோன் புத்திரருக்கு எதிராக உன் முகத்தைத்திருப்பி, அவர்களுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, 3 அம்மோன் புத்திரருக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்: என் பரிசுத்த ஸ்தலம் பரிசுத்தக்குலைச்சலாக்கப்படுகிறபோதும், இஸ்ரவேல் தேசம் பாழாக்கப்படுகிறபோதும், யூதா வம்சத்தார் சிறையிருப்பிலே போகிறபோதும், நீ அவர்களுக்கு விரோதமாக ஆ ஆ, என்று நிந்தித்தபடியினால், 4 இதோ, நான் உன்னைக் கிழக்குத் தேசத்தாருக்குச் சுதந்தரமாக ஒப்புக்கொடுப்பேன், அவர்கள் உன்னில் தங்கள் அரண்களைக் கட்டி, உன்னில் தங்கள் வாசஸ்தலங்களை உண்டுபண்ணுவார்கள்; அவர்கள் உன் கனிகளைப் புசித்து, உன் பாலைக் குடிப்பார்கள். 5 நான் ரப்பாவை ஒட்டகங்களின் கொட்டகையும், அம்மோன் புத்திரரின் தேசத்தை ஆட்டுக்கிடையுமாக்குவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். 6 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாக நீ கைகொட்டி, உன் காலால் தட்டி, வர்மம் வைத்து, ஆகடியம் பண்ணினபடியினால், 7 இதோ, உனக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, உன்னை ஜாதிகளுக்குக் கொள்ளையாக ஒப்புக்கொடுத்து, உன்னை ஜனங்களுக்குள்ளே வேரற்றுப்போகப்பண்ணி, உன்னைத் தேசங்களுக்குள்ளே அழித்து, உன்னை நிர்மூலமாக்குவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய். 8 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: இதோ, யூதா வம்சத்தார் எல்லா ஜாதிகளுக்கும் ஒத்தவர்களென்று மோவாபும் சேயீரும் சொல்லுகிறபடியினால், 9 இதோ, அம்மோன் புத்திரரின்பேர் ஜாதிகளுக்குள் இராதபடிக்கு நான் அம்மோன் புத்திரரின் தேசத்தைக் கிழக்குத் தேசத்தாருக்குத் திறந்துவைத்து, சுதந்தரமாய் ஒப்புக்கொடுக்கிறவண்ணமாக, 10 நான் மோவாப் தேசத்தின் பக்கத்திலுள்ள அதின் கடையாந்தர ஊர்களாகிய பட்டணங்கள் முதற்கொண்டுள்ள தேசத்தின் அலங்காரமாகிய பெத்யெசிமோத்தையும், பாகால்மெயோனையும், கீரியாத்தாயீமையும் அவர்களுக்குத் திறந்துவைத்து, 11 மோவாபிலே நியாயங்களைச் செய்வேன், அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். 12 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: ஏதோம் யூதா வம்சத்தாரிடத்தில் குரோதந்தீர்த்து, பழிவாங்கி, பெரிய குற்றஞ்செய்தபடியினால், 13 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் ஏதோம் தேசத்துக்கு விரோதமாக என் கையை நீட்டி அதில் மனுஷரையும் மிருகங்களையும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, அதைத் தேமான் துவக்கித் தேதான்மட்டும் வனாந்தரமாக்குவேன்; பட்டயத்தால் விழுவார்கள். 14 நான் இஸ்ரவேலாகிய என் ஜனத்தின் கையினால் ஏதோமினிடத்தில் பழிவாங்குவேன்; அவர்கள் என் கோபத்தின்படியும் என் உக்கிரத்தின்படியும் ஏதோமுக்குச் செய்வார்கள்; அப்பொழுது நான் பழிவாங்குவது இன்னதென்று அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 15 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: பெலிஸ்தியர் குரோதக்காரராயிருந்து, பழம்பகையால் கேடுசெய்யவேண்டுமென்று, வர்மம் வைத்துப் பழிவாங்கினபடியினால், 16 இதோ, நான் பெலிஸ்தியருக்கு விரோதமாக என் கையை நீட்டி, கிரேத்தியரைச் சங்கரித்து, சமுத்திரக்கரையில் மீதியானவர்களை அழித்து, 17 உக்கிரமான தண்டனைகளினால் அவர்களில் கொடிதாய்ப் பழிவாங்குவேன்; நான் அவர்களில் பழிவாங்கும்போது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 26

1 பதினோராம் வருஷம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, தீருவானது எருசலேமுக்கு விரோதமாக, ஆ ஆ, ஜனசதளங்களின் ஒலிமுகவாசலாயிருந்த நகரி இடிக்கப்பட்டதென்றும் என்னிடமாக எல்லாம் புரண்டுவரும், அது பாழாக்கப்பட்டிருக்க நான் நிரப்பப்படுவேன் என்றும் சொல்லுகிறபடியினால், 3 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: தீருவே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன்; சமுத்திரம் தன் அலைகளை எழும்பிவரப்பண்ணுகிற வண்ணமாய் நான் அநேகம் ஜாதிகளை உனக்கு விரோதமாக எழும்பி வரப்பண்ணுவேன். 4 அவர்கள் தீருவின் மதில்களை அழித்து, அதின் கொத்தளங்களை இடித்துப்போடுவார்கள்; நான் அதின் மண்ணும் அதில் இராதபடிக்கு விளக்கிப்போட்டு, அதை வெறும் பாறையாக்கிவிடுவேன். 5 அது வலைகளை விரிக்கிற இடமாகச் சமுத்திரத்தின் நடுவிலே இருக்கும்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; அது ஜாதிகளுக்குக் கொள்ளையாகும். 6 வெளியில் இருக்கிற அதின் குமாரத்திகளோ பட்டயத்தால் கொன்றுபோடப்படுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். 7 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ராஜாதிராஜாவாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவை வடக்கேயிருந்து குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் கூட்டத்தோடும் திரளான ஜனத்தோடும் தீருவுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன். 8 அவன் வெளியில் இருக்கிற உன் குமாரத்திகளைப் பட்டயத்தினால் கொன்று, உனக்கு விரோதமாகக் கொத்தளங்களைக் கட்டி, உனக்கு விரோதமாக அணைபோட்டு, உனக்கு விரோதமாகக் கேடயங்களை எடுத்து, 9 உன் மதில்களை இடிக்கிற யந்திரங்களை எதிரே வைத்து, தன் கட்டைப்பாரைகளால் உன் கொத்தளங்களை இடித்துப்போடுவான். 10 அவன் குதிரைகளின் ஏராளத்தினால் தூள் எழும்பி உன்னை மூடும்; இடித்துத் திறப்பாக்கப்பட்ட பட்டணத்தில் பிரவேசிக்கும் வண்ணமாக, அவன் உன் வாசல்களுக்குள் பிரவேசிக்கையில், குதிரைவீரரும் வண்டில்களும் இரதங்களும் இரைகிற சத்தத்தினாலே உன் மதில்கள் அதிரும். 11 தன் குதிரைகளின் குளம்புகளினால் உன் வீதிகளையெல்லாம் மிதிப்பான்; உன் ஜனத்தைப் பட்டயத்தினால் கொன்றுபோடுவான்; உன் பலமான தூண்கள் தரையில் விழுந்துபோகும். 12 அவர்கள் உன் ஆஸ்தியைக் கொள்ளையிட்டு, உன் சரக்குகளைச் சூறையாடி, உன் மதில்களை இடித்து, உனக்கு விருப்பமான வீடுகளை அழித்து, உன் கல்லுகளையும் உன் மரங்களையும் உன் மண்ணையும் கடலின் நடுவிலே போட்டுவிடுவார்கள். 13 உன் பாட்டுகளின் சத்தத்தை ஓயப்பண்ணுவேன்; உன் சுரமண்டலங்களின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை. 14 உன்னை வெறும் பாறையாக்கிவிடுவேன்; நீ வலைகளை விரிக்கிற ஸ்தலமாயிருப்பாய்; இனிக் கட்டப்படாய்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 15 தீருவுக்குக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: காயம்பட்டவர்கள் அலறும்போதும், உன் நடுவில் சங்காரம் நடக்கும்போதும், நீ விழுகிற சத்தத்தினால் தீவுகள் அதிராதோ? 16 கடலரசர் எல்லாரும் தங்கள் சிங்காசனங்களைவிட்டு இறங்கி; தங்கள் சால்வைகளைக் கழற்றி, தங்கள் சித்திரத்தையலாடைகளை உரிந்துபோடுவார்கள்; நடுக்கமே அவர்கள் உடையாகும்; தரையிலே உட்கார்ந்து, நிமிஷந்தோறும் தத்தளித்து, உன்னிமித்தம் பிரமிப்பார்கள். 17 அவர்கள் உன்னிமித்தம் புலம்பி, உன்னைக் குறித்து: கடல் சஞ்சாரிகள் குடியிருந்த புகழ்பெற்ற நகரியே, ஐயோ! உன்னில் தங்கினவர்களுக்கெல்லாம் பயமுண்டாக்கின உன் குடிகளோடுங்கூடச் சமுத்திரத்திலே பலத்திருந்த நீ அழிந்துபோனாயோ! 18 நீ விழும் நாளில் தீவுகள் தத்தளிக்கும்; நீ அகன்றுபோகும்போது சமுத்திரத்திலுள்ள தீவுகள் கலங்கும் என்பார்கள். 19 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உன்னைக் குடியில்லாத நகரங்களைப்போலப் பாழான நகரமாக்கும்போதும், மிகுந்த தண்ணீர்கள் உன்னை மூடத்தக்கதாய் நான் உன்மேல் சமுத்திரத்தை வரப்பண்ணும்போதும், 20 பூர்வகாலத்து ஜனத்தண்டைக்குக் குழியில் இறங்குகிறவர்களோடே நான் உன்னை இறங்கப்பண்ணுவேன்; நீ குடியேறாதிருக்கும்படி பூர்வகாலமுதற்கொண்டு பாழாயிருக்கிற பூமியின் தாழ்விடங்களிலே குழியில் இறங்குகிறவர்களோடேகூட நான் உன்னைத் தங்கியிருக்கப்பண்ணுவேன்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலோ மகிமை விளங்கச் செய்வேன். 21 உன்னை மகா பயங்கரமாக வைப்பேன்; இனி நீ இருக்கமாட்டாய்; நீ தேடப்பட்டாலும் இனி என்றைக்கும் காணப்படமாட்டாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.

எசேக்கியேல் 27

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனாகிய நீ இப்போது தீருவின்பேரிலே புலம்பி, 3 சமுத்திரக் கரைதுறையிலே குடியிருந்து, அநேகம் தீவுகளின் ஜனங்களோடே வியாபாரம்பண்ணுகிற தீருவை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், தீருவே, நீ உன்னைப் பூரணசௌந்தரியவதி என்கிறாய். 4 கடல்களின் நடுமையத்திலே உன் தாபரம் இருக்கிறது; உன்னைக் கட்டினவர்கள் உன்னைப் பூரணவடிவாய்க் கட்டினார்கள். 5 சேனீரிலிருந்து வந்த தேவதாருமரத்தால் உன் கப்பற் பலகைகளைச் செய்தார்கள்; பாய்மரங்களைச் செய்யும்படிக்கு லீபனோனிலிருந்து கேதுருமரங்களைக் கொண்டுவந்தார்கள். 6 பாசானின் கர்வாலிமரங்களினாலே உன் துடுப்புகளைச் செய்தார்கள்; கித்தீம் தீவுகளிலிருந்து வந்த ஆஷூர் மரத்தால் உன் வாரிபலகைகளைச் செய்து, அதிலே யானைத்தந்தம் அழுத்தியிருந்தார்கள். 7 எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையலுள்ள சணல்நூல் புடவை நீ விரித்த பாயாயிருந்தது; எலீசா தீவுகளின் இளநீலமும் இரத்தாம்பரமும் உன் விதானமாயிருந்தது. 8 சீதோன் அர்வாத் என்னும் பட்டணங்களின் குடிகள் உனக்குத் தண்டுவலிக்கிறவர்களாயிருந்தார்கள். தீருவே, உன்னிடத்திலிருந்த உன் சாஸ்திரிகள் உன் மாலுமிகளாயிருந்தார்கள். 9 கேபாரின் முதியோரும் அதின் சாஸ்திரிகளும் உன்னில் கம்பத்துப்பார்க்கிறவர்களாயிருந்தார்கள்; சமுத்திரத்தின் சகல கப்பல்களும் அவைகளிலுள்ள கப்பற்காரரும் உன்னோடே தொழில்துறை வியாபாரம் பண்ணுகிறதற்காக உன்னிடத்தில் இருந்தார்கள். 10 பெர்சியரும், லூதியரும், பூத்தியரும் உன் இராணுவத்தில் யுத்தவீரராயிருந்து உனக்குள் கேடகமும் தலைச்சீராவும் தூக்கிவைத்து, உன்னை அலங்கரித்தார்கள். 11 அர்வாத் புத்திரரும் உன் இராணுவ மனுஷரும் உன் மதில்கள்மேல் சுற்றிலும், கம்மாத்தியர் உன் கொத்தளங்களிலும் இருந்தார்கள்; இவர்கள் உன் மதில்கள்மேல் சுற்றிலும் தங்கள் பரிசைகளைத் தூக்கிவைத்து, உன் வடிவத்தைப் பூரணப்படுத்தினார்கள். 12 சகலவித பொருள்களின் திரளினாலும் தர்ஷீஸ் ஊரார் உன்னோடே வியாபாரம் பண்ணினார்கள்; வெள்ளியையும் இரும்பையும் தகரத்தையும் ஈயத்தையும் உன் சந்தைகளில் விற்கவந்தார்கள். 13 யாவான், தூபால், மேசேக் என்னும் ஜாதியார் உன் வியாபாரிகளாயிருந்து, மனுஷர்களையும் வெண்கலப்பாத்திரங்களையும் உன் தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள். 14 தொகர்மா வம்சத்தார் குதிரைகளையும் குதிரைவீரரையும் கோவேறு கழுதைகளையும் உன் சந்தைகளுக்குக் கொண்டுவந்தார்கள். 15 தேதான் புத்திரர் உன் வியாபாரிகளாயிருந்தார்கள்; அநேகம் தீவுகளின் வர்த்தகம் உன் வசமாகச் சேர்ந்தது; யானைத்தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவைகளுக்குப் பதிலாகக் கொண்டுவந்தார்கள். 16 சீரியர் உன் வேலைப்பாடான பற்பல பொருள்களினிமித்தம் உன்னோடே வியாபாரம்பண்ணி, மரகதங்களையும், இரத்தாம்பரங்களையும், சித்திரத்தையலாடைகளையும், உயர்ந்த வஸ்திரங்களையும், பவளங்களையும், பளிங்கையும் உன் சந்தைகளில் விற்கவந்தார்கள். 17 யூதரும் இஸ்ரவேல் தேசத்தாரும் உன்னோடே வியாபாரம்பண்ணி, மின்னீத், பன்னாக் என்கிற ஊர்களின் கோதுமையையும், தேனையும், எண்ணெயையும், பிசின்தைலத்தையும் உன் தொழில்துறைக்குக் கொண்டுவந்தார்கள். 18 தமஸ்கு உன் வேலைப்பாடான பற்பல பொருள்களினிமித்தமும், சகலவிதப் பொருள்களின் திரட்சியினிமித்தமும் உன்னோடே வர்த்தகம்பண்ணி, கெல்போனின் திராட்சரசத்தையும் வெண்மையான ஆட்டுமயிரையும் உனக்கு விற்றார்கள். 19 தாண் நாட்டாரும், போக்கும் வரத்துமான யாவானரும் துலக்கப்பட்ட இரும்பையும் இலவங்கத்தையும் வசம்பையும் உன் சந்தைகளில் கொண்டுவந்து உன் தொழில்துறையில் விற்றார்கள். 20 இரதங்களுக்குப் போடுகிற மேன்மையான இரத்தினக்கம்பளங்களைத் தேதானின் மனுஷர் கொண்டுவந்து, உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள். 21 அரபியரும், கேதாரின் சகல பிரபுக்களும் உனக்கு வாடிக்கையான வர்த்தகராகி, ஆட்டுக்குட்டிகளையும் ஆட்டுக்கடாக்களையும் வெள்ளாட்டுக்கடாக்களையும் கொண்டுவந்து, உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள். 22 சேபா, ராமா பட்டணங்களின் வியாபாரிகள் உன்னோடே வர்த்தகம்பண்ணி, மேல்தரமான சகலவித சம்பாரங்களையும், சகலவித இரத்தினக்கற்களையும், பொன்னையும் உன் சந்தைகளில் கொண்டுவந்தார்கள். 23 ஆரான், கன்னே, ஏதேன் என்னும் பட்டணத்தாரும், சேபாவின் வியாபாரிகளும், அசீரியரும், கில்மாத் பட்டணத்தாரும் உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள். 24 இவர்கள் சகலவித உயர்ந்த சரக்குகளையும், இளநீலப் பட்டுகளும் விசித்திரத்தையலாடைகளும் அடங்கிய புடவைக்கட்டுகளையும், விலை உயர்ந்த வஸ்திரங்கள் வைக்கப்பட்டு, கயிறுகளால் கட்டியிருக்கும் கேதுருமரப்பெட்டிகளையும் கொண்டுவந்து, உன்னோடே வியாபாரம்பண்ணினார்கள். 25 உன் தொழில்துறையில் தர்ஷீசின் கப்பலாட்கள் உன்னைப் போற்றிப் பாடினார்கள்; நீ சமுத்திரத்தின் நடுவிலே உன்னைப் பூரணப்படுத்தி, உன்னை மிகவும் மகிமைப்படுத்தினாய். 26 தண்டுவலிக்கிறவர்கள் ஆழமான தண்ணீர்களில் உன்னை வலித்துக்கொண்டுபோனார்கள்; நடுச்சமுத்திரத்திலே கொண்டற்காற்று உன்னை உடைத்துப்போட்டது. 27 நீ நாசமடையும் நாளிலே உன் ஆஸ்தியோடும், உன் சந்தைகளோடும், உன் தொழில்துறையோடுங்கூட உன் கப்பலாட்களும், உன் மாலுமிகளும், உன்னில் கம்பத்துப்பார்க்கிறவர்களும், உன் வியாபாரிகளும், உன்னிலுள்ள எல்லா யுத்தவீரரும், உன் நடுவில் இருக்கிற எல்லாக் கூட்டத்தாரும் நடுச்சமுத்திரத்திலே விழுவார்கள். 28 உன் மாலுமிகள் ஓலமிடும் சத்தத்தினால் சுற்றுப்புறங்கள் அதிரும். 29 தண்டுவலிக்கிற யாவரும், கப்பலாட்களும், கடல் மாலுமிகள் அனைவரும், தங்கள் கப்பல்களை விட்டுஇறங்கி, கரையிலே நின்று, 30 உன்னிமித்தம் சத்தமிட்டுப்புலம்பி, மனங்கசந்து அழுது, தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டு, சாம்பலில் புரண்டு, 31 உனக்காக மொட்டையிட்டு இரட்டுடுத்திக்கொண்டு, உனக்காக மனங்கசந்து அழுது, துக்கங்கொண்டாடுவார்கள். 32 அவர்கள் உனக்காகத் தங்கள் துக்கத்திலே ஓலமிட்டு, உன்னிமித்தம் புலம்பி, உன்னைக்குறித்து: சமுத்திரத்தின் நடுவிலே அழிந்துபோன தீருவுக்குச் சமான நகரம் உண்டோ? 33 உன் சந்தைச்சரக்குகள் சமுத்திரங்கள் வழியாய்க் கொண்டுவரப்படுகையில், அநேக ஜனங்களைத் திருப்தியாக்கினாய்; உன் ஆஸ்தியின் திரளினாலும் உன் வியாபாரத்தினாலும் பூமியின் ராஜாக்களை ஐசுவரியவான்களாக்கினாய். 34 நீ சமுத்திரத் திரைகளினாலே ஆழங்களில் உடைக்கப்பட்டபோது, உன் தொழில் துறையும் உன் நடுவிலுள்ள கூட்டம் அனைத்தும் அழிந்துபோயின என்பார்கள். 35 தீவுகளின் குடிகள் எல்லாம் உன்னிமித்தம் திகைப்பார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் மிகவும் பிரமித்து, கலங்கின முகமாயிருப்பார்கள். 36 சகல ஜனங்களிலுமுள்ள வர்த்தகர் உன்பேரில் ஈசல்போடுவார்கள்; நீ பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்கிறார் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 28

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, நீ தீருவின் அதிபதியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், உன் இருதயம் மேட்டிமைகொண்டு: நான் தேவன், நான் சமுத்திரத்தின் நடுவே தேவாசனத்தில் வீற்றிருக்கிறேன் என்று நீ சொல்லி, உன் இருதயத்தைத் தேவனின் இருதயத்தைப்போல் ஆக்கினாலும், நீ மனுஷனேயல்லாமல் தேவனல்ல. 3 இதோ, தானியேலைப்பார்க்கிலும் நீ ஞானவான்; இரகசியமானதொன்றும் உனக்கு மறைபொருள் அல்ல. 4 நீ உன் ஞானத்தினாலும் உன் புத்தியினாலும் பொருள் சம்பாதித்து, பொன்னையும் வெள்ளியையும் உன் பொக்கிஷசாலைகளில் சேர்த்துக்கொண்டாய். 5 உன் வியாபாரத்தினாலும் உன் மகா ஞானத்தினாலும் உன் பொருளைப் பெருகப்பண்ணினாய்; உன் இருதயம் உன் செல்வத்தினால் மேட்டிமையாயிற்று. 6 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன் இருதயத்தைத் தேவனின் இருதயத்தைப்போல ஆக்குகிறபடியினால், 7 இதோ, ஜாதிகளில் மகா பலவான்களாகிய மறுதேசத்தாரை உனக்கு விரோதமாய் வரப்பண்ணுவேன்; அவர்கள் உன் ஞானத்தின் அழகுக்கு விரோதமாய்த் தங்கள் பட்டயங்களை உருவி, உன் மினுக்கைக் குலைத்துப்போடுவார்கள். 8 உன்னைக் குழியிலே விழத்தள்ளுவார்கள்; நீ சமுத்திரங்களின் நடுவே கொலையுண்டு சாகிறவர்களைப்போல் சாவாய். 9 உன்னைக் கொல்லுகிறவனுக்கு முன்பாக: நான் தேவனென்று நீ சொல்வாயோ? உன்னைக் குத்திப்போடுகிறவன் கைக்கு நீ மனுஷனேயல்லாமல் தேவனல்லவே. 10 மறுதேசத்தாரின் கையினால் நீ விருத்தசேதனமில்லாதவர்கள் சாவதுபோல் சாவாய்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார். 11 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 12 மனுபுத்திரனே, நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி, அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன். 13 நீ தேவனுடைய தோட்டமாகிய ஏதேனில் இருந்தவன்; பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் முதலான சகலவித இரத்தினங்களும் பொன்னும் உன்னை மூடிக்கொண்டிருக்கிறது; நீ சிருஷ்டிக்கப்பட்ட நாளில் உன் மேளவாத்தியங்களும் உன் நாகசுரங்களும் உன்னிடத்தில் ஆயத்தப்பட்டிருந்தது. 14 நீ காப்பாற்றுகிறதற்காக அபிஷேகம்பண்ணப்பட்ட கேருப்; தேவனுடைய பரிசுத்த பர்வதத்தில் உன்னை வைத்தேன்; அக்கினிமயமான கற்களின் நடுவே உலாவினாய். 15 நீ சிருஷ்டிக்கப்பட்ட நாள்துவக்கி உன்னில் அநியாயம் கண்டுபிடிக்கப்பட்டதுமட்டும், உன் வழிகளில் குறையற்றிருந்தாய். 16 உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னைத் தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன். 17 உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப் பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன். 18 உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன். 19 ஜனங்களில் உன்னை அறிந்த அனைவரும் உன்னிமித்தம் திகைப்பார்கள்; மகா பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று உரைக்கிறார் என்று சொல் என்றார். 20 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 21 மனுபுத்திரனே, நீ உன் முகத்தைச் சீதோனுக்கு எதிராகத் திருப்பி, அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: 22 கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்: சீதோனே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, உன் நடுவிலே மகிமைப்படுவேன்; நான் அதிலே நியாயத்தீர்ப்புகளைச் செய்து, அதிலே பரிசுத்தரென்று விளங்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். 23 நான் அதிலே கொள்ளைநோயையும், அதின் வீதிகளில் இரத்தத்தையும் வரப்பண்ணுவேன்; அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் வந்த பட்டயத்தினால் காயம்பட்டவர்கள் அதின் நடுவிலே வெட்டுண்டு விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். 24 இஸ்ரவேல் வம்சத்தாரை இகழ்ந்த அவர்களுடைய சுற்றுப்புறத்தாராகிய அனைவரிலும், இனித் தைக்கிற முள்ளும் நோவுண்டாக்குகிற நெரிஞ்சிலும் அவர்களுக்கு இராது; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வார்கள். 25 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேல் வம்சத்தாரை, அவர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டுவந்து, அவர்களால் ஜாதிகளின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தரென்று விளங்கும்போது, அவர்கள் என் தாசனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தங்களுடைய தேசத்திலே குடியிருப்பார்கள். 26 அவர்களுடைய சுற்றுப்புறத்தாரில் அவர்களை இகழ்ந்த அனைவரிலும் நான் நியாயத்தீர்ப்புகளைச் செய்யும்போது, அவர்கள் அதிலே சுகமாய்க் குடியிருந்து, வீடுகளைக் கட்டி, திராட்சத்தோட்டங்களை நாட்டி, சுகமாய் வாழ்ந்து, நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 29

1 பத்தாம் வருஷம் பத்தாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கும் எகிப்து முழுதுக்கும் விரோதமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: 3 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே, நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு: என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து, 4 உன் வாயிலே துறடுகளை மாட்டி, உன் நதிகளின் மச்சங்களை உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன் நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன் நதிகளின் மச்சங்களெல்லாம் உன் செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும். 5 உன்னையும் உன் நதிகளின் எல்லா மச்சங்களையும் வனாந்தரத்திலே போட்டுவிடுவேன்; வெட்டவெளியிலே விழுவாய்; நீ சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை; உன்னைப் பூமியின் மிருகங்களுக்கும் ஆகாயத்தின் பறவைகளுக்கும் இரையாகக் கொடுப்பேன். 6 அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லாரும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு நாணற்கோலாயிருந்தார்களே. 7 அவர்கள் உன்னைக் கையிலே பிடிக்கும்போது, நீ ஒடிந்துபோய், அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய்; அவர்கள் உன்மேல் சாயும்போது, நீ முறிந்து, அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப்போகப்பண்ணுவாய். 8 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உன்மேல் பட்டயத்தை வரப்பண்ணி, உன்னில் மனுஷரையும் மிருகங்களையும் சங்காரம்பண்ணுவேன். 9 எகிப்து தேசம் பாழும் வனாந்தரமுமாகும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்: நதி என்னுடையது, நான் அதை உண்டாக்கினேன் என்று சொன்னானே. 10 ஆகையால், இதோ, நான் உனக்கும் உன் நதிகளுக்கும் விரோதமாக வந்து, மிக்தோல்முதல் எத்தியோப்பியாவின் எல்லையிலுள்ள செவெனேவரைக்கும் எகிப்துதேசத்தை அவாந்தரமும் பாழுமான வனாந்தரங்களாக்குவேன். 11 மனுஷனுடைய கால் அதைக் கடப்பதுமில்லை, மிருகஜீவனுடைய கால் அதை மிதிப்பதுமில்லை; அது நாற்பது வருஷம் குடியற்றிருக்கும். 12 எகிப்துதேசத்தைப் பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போகப்பண்ணுவேன்; அதின் பட்டணங்கள் அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களின் நடுவிலே நாற்பது வருஷம் பாழாய்க் கிடக்கும்; நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களுக்குள்ளே தூற்றிவிடுவேன். 13 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நாற்பதுவருஷம் முடியும்போது, நான் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டு, 14 எகிப்தியரின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய ஜநநதேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பிவரப்பண்ணுவேன்; அங்கே அவர்கள் அற்ப ராஜ்யமாயிருப்பார்கள். 15 அது இனி ஜாதிகளின்மேல் தன்னை உயர்த்தாமல், மற்ற ராஜ்யங்களிலும் அற்பமானதாயிருக்கும்; அவர்கள் இனி ஜாதிகளை ஆளாதபடிக்கு அவர்களைக் குறுகிப்போகப்பண்ணுவேன். 16 அவர்களின் பிறகே போய், அவர்களை நோக்கிக்கொண்டிருக்கிறதினால் இஸ்ரவேல் வம்சத்தார் எனக்குத் தங்கள் அக்கிரமத்தை நினைப்பூட்டாதபடிக்கு, இனி அவர்கள் இவர்களுடைய நம்பிக்கையாயிராமற்போவார்கள்; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார். 17 இருபத்தேழாம் வருஷம் முதலாம் மாதம் முதலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 18 மனுபுத்திரனே, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தீருவின் முன்னே தன் சேனையினிடத்தில் கடும் ஊழியம் வாங்கினான்; ஒவ்வொரு தலையும் மொட்டையாயிற்று; ஒவ்வொரு தோள்பட்டையின் தோலும் உரிந்துபோயிற்று; ஆனாலும் அவன் தீருவுக்கு விரோதமாகச் செய்த ஊழியத்தினாலே அவனுக்காவது அவன் சேனைக்காவது கூலி கிடைக்கவில்லை. 19 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு எகிப்துதேசத்தைக் கொடுக்கிறேன்; அவன் அதின் ஏராளமான ஜனத்தைச் சிறைபிடித்து அதின் ஆஸ்தியைச் சூறையாடி, அதின் கொள்ளைப்பொருளை எடுத்துக்கொள்வான்; இது அவனுடைய சேனைக்குக் கூலியாயிருக்கும். 20 அவன் அதிலே செய்த வேலைக்கு எகிப்துதேசத்தை நான் அவனுக்குக் கூலியாகக் கொடுத்தேன்; எனக்காக அதைச் செய்தார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 21 அந்நாளிலே நான் இஸ்ரவேல் வம்சத்தாரின் கொம்பை முளைக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே தாராளமாய்ப் பேசும் வாயை உனக்குக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

எசேக்கியேல் 30

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் சொல்லு: கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஐயோ! ஆபத்துநாள் வருகிறதென்று அலறுங்கள். 3 நாள் சமீபமாயிருக்கிறது; ஆம், கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது மந்தாரமான நாள், அது புறஜாதிகளுக்கு வரும் காலம். 4 பட்டயம் எகிப்திலே வரும்; எகிப்திலே கொலையுண்கிறவர்கள் விழும்போது எத்தியோப்பியாவிலே மகா வேதனை உண்டாயிருக்கும்; அதின் ஏராளமான ஜனத்தைப் பிடித்துக்கொண்டுபோவார்கள்; அதின் அஸ்திபாரங்கள் நிர்மூலமாக்கப்படும். 5 எத்தியோப்பியரும், பூத்தியரும், லூத்தியரும், கலந்த கூட்டமாகிய அனைவரும், கூபியரும், உடன்படிக்கைக்குள்ளான தேசத்தின் புத்திரரும் அவர்களோடேகூடப் பட்டயத்தால் விழுவார்கள். 6 எகிப்தை ஆதரிக்கிறவர்களும் விழுவார்கள்; அதினுடைய பலத்தின் முக்கியமும் தாழ்ந்துபோம் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதிலே மிக்தோல்முதல் செவெனேவரைக்கும் பட்டயத்தினால் விழுவார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 7 பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போவார்கள்; அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களில் அவர்கள் பட்டணங்களும் அவாந்தரமாகும். 8 நான் எகிப்திலே தீக்கொளுத்தும்போதும், உனக்குத் துணைநின்ற யாவரும் முறிக்கப்படும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். 9 நிர்விசாரமான எத்தியோப்பியரைத் தத்தளிக்கப்பண்ண அந்நாளிலே என் கட்டளையினால் தூதாட்கள் கப்பல்களிலே போவார்கள்; அப்பொழுது எகிப்தின் நாளிலே உண்டானதுபோல அவர்களுக்குள்ளே மகா வேதனை உண்டாயிருக்கும்; இதோ, அது வருகிறது. 10 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரைக்கொண்டு எகிப்தின் சந்ததியை ஒழியப்பண்ணுவேன். 11 இவனும் இவனோடேகூட ஜாதிகளில் மகா பலசாலிகளான இவனுடைய ஜனங்களும் தேசத்தை அழிப்பதற்காக ஏவப்பட்டு வந்து, தங்கள் பட்டயங்களை எகிப்துக்கு விரோதமாக உருவி, கொலையுண்டவர்களாலே தேசத்தை நிரப்புவார்கள். 12 அப்பொழுது நான் நதிகளை வற்றிப்போகப்பண்ணி, தேசத்தைத் துஷ்டர்களின் கையிலே விற்று, தேசத்தையும் அதிலுள்ள யாவையும் அந்நியதேசத்தாரின் கையால் பாழாக்கிப்போடுவேன்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன். 13 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் நரகலான விக்கிரகங்களை அழித்து, நோப்பின் சிலைகளை ஒழியப்பண்ணுவேன்; இனி எகிப்துதேசத்தில் ஒரு அதிபதியும் இரான்; நான் எகிப்துதேசத்தில் பயமுண்டாக்கி, 14 பத்ரோசைப் பாழாக்கி, சோவானிலே தீக்கொளுத்தி, நோ பட்டணத்தில் ஆக்கினைகளைச் செய்து, 15 எகிப்தின் பெலனாகிய சீனின்மேல் என் உக்கிரத்தை ஊற்றி, நோ பட்டணத்தின் ஏராளமான ஜனத்தைச் சங்கரிப்பேன். 16 எகிப்தில் தீக்கொளுத்துவேன்; சீன் மகா வேதனை அடையும்; நோ பட்டணம் தகர்ந்து இடிந்துபோகும்; நோப்புக்குத் தினந்தோறும் நெருக்கங்களுண்டாகும். 17 ஆவென், பிபேசெத் என்கிற பட்டணங்களின் வேலைக்காரர் பட்டயத்தால் விழுவார்கள்; அவைகளின் குடிகள் சிறையிருப்புக்குப் போவார்கள். 18 எகிப்தின் நுகங்களை நான் முறிக்கும்போதும், அதினுடைய பெலத்தின் முக்கியம் அதிலே ஓயும்போதும், மந்தாரம் அதை மூடும்; தக்பானேசிலே பகல் இருண்டுபோகும்; அதின் குமாரத்திகள் சிறைப்பட்டுப்போவார்கள். 19 இப்படி எகிப்திலே நியாயத்தீர்ப்புகளைச் செய்வேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார். 20 பதினோராம் வருஷம் முதலாம் மாதம் ஏழாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 21 மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுடைய புயத்தை முறித்துப்போடுவேன்; இதோ, அது குணமாகத்தக்கதாகக் கட்டப்படுவதில்லை; அது பட்டயத்தைப் பிடிக்கத்தக்க பெலனை அடையும்படி பத்தை வைத்துக் கட்டப்படுவதுமில்லை. 22 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு விரோதமாக வந்து, பெலனுள்ளதும் முறிந்ததுமாகிய அவனுடைய புயங்களை முறித்துப்போடுவேன்; பட்டயத்தை நான் அவன் கையிலிருந்து விழப்பண்ணி, 23 எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிவிடுவேன். 24 பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்தி, அவன் கையிலே என் பட்டயத்தைக் கொடுத்து, பார்வோனின் புயங்களை முறித்துவிடுவேன்; அப்பொழுது அவன் கொலையுண்கிறவன் தவிக்கிறதுபோல அவனுக்கு முன்பாகத் தவிப்பான். 25 பாபிலோன் ராஜாவின் புயங்களைப் பெலப்படுத்துவேன்; பார்வோனின் புயங்களோ விழுந்துபோம்; என் பட்டயத்தை நான் பாபிலோன் ராஜாவின் கையில் கொடுக்கும்போதும், அவன் அதை எகிப்துதேசத்தின்மேல் நீட்டும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். 26 நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களைத் தேசங்களில் தூற்றிப்போடுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

எசேக்கியேல் 31

1 பதினோராம் வருஷம் மூன்றாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, எகிப்தின் ராஜாவாகிய பார்வோனோடும் அவனுடைய திரளான ஜனத்தோடும் நீ சொல்லவேண்டியது என்னவென்றால்: நீ உன் மகத்துவத்திலே யாருக்கு ஒப்பாயிருக்கிறாய்? 3 இதோ, அசீரியன் லீபனோனிலே அலங்காரக் கொப்புகளோடும், நிழலிடும் தழைகளோடும், வளர்ந்தோங்கிய கேதுரு விருட்சமாயிருந்தான்; அதின் கிளைகளின் தழைகளுக்குள்ளே அதின் நுனிக்கொழுந்து உயர்ந்திருந்தது. 4 தண்ணீர்கள் அதைப் பெரிதும், ஆழம் அதை உயர்த்தியும் ஆக்கின; அதின் ஆறுகள் அதின் அடிமரத்தைச் சுற்றிலும் ஓடின; தன் நீர்க்கால்களை வெளியின் விருட்சங்களுக்கெல்லாம் பாயவிட்டது. 5 ஆகையால் வெளியின் சகல விருட்சங்களிலும் அது மிகவும் உயர்ந்தது; அது துளிர்விடுகையில் திரளான தண்ணீரினால் அதின் கிளைகள் பெருகி, அதின் கொப்புகள் நீளமாயின. 6 அதின் கொப்புகளில் ஆகாயத்தின் பறவைகளெல்லாம் கூடுகட்டின; அதின் கொப்புகளின்கீழ் வெளியின் மிருகங்களெல்லாம் குட்டிகளைப்போட்டன; பெரிதான சகல ஜாதிகளும் அதின் நிழலிலே குடியிருந்தார்கள். 7 அப்படியே அதின் வேர் திரளான தண்ணீர்களருகே இருந்ததினால் அது தன் செழிப்பினாலும் தன் கொப்புகளின் நீளத்தினாலும் அலங்காரமாயிருந்தது. 8 தேவனுடைய வனத்திலுள்ள கேதுருக்கள் அதை மறைக்கக்கூடாதிருந்தது; தேவதாரு விருட்சங்கள் அதின் கொப்புகளுக்குச் சமானமல்ல; அர்மோன் மரங்கள் அதின் கிளைகளுக்கு நிகரல்ல; தேவனுடைய வனத்திலுள்ள ஒரு விருட்சமும் அலங்காரத்திலே அதற்கு ஒப்பல்ல. 9 அதின் கிளைகளின் திரளினால் அதை அலங்கரித்தேன்; தேவனுடைய வனமாகிய ஏதேனின் விருட்சங்களெல்லாம் அதின்பேரில் பொறாமைகொண்டன. 10 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அது தன் வளர்த்தியிலே மேட்டிமையாகி, கொப்புகளின் தழைகளுக்குள்ளே தன் நுனிக்கிளையை ஓங்கவிட்டபடியினாலும், அதின் இருதயம் தன் மேட்டிமையினால் உயர்ந்துபோனபடியினாலும், 11 நான் அதை ஜாதிகளில் மகா வல்லமையுள்ளவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்; அவன் தனக்கு இஷ்டமானபடி அதற்குச் செய்வான்; அதினுடைய அக்கிரமத்தினிமித்தம் அதைத் தள்ளிப்போட்டேன். 12 ஜாதிகளில் வல்லவராகிய அந்நியதேசத்தார் அதை வெட்டிப்போட்டு, விட்டுப்போனார்கள்; அதின் கொப்புகள் மலைகளின்மேலும் சகல பள்ளத்தாக்குகளிலும் விழுந்தன; அதின் கிளைகள் தேசத்தினுடைய எல்லா ஆறுகளினருகே முறிந்தன; பூமியிலுள்ள ஜனங்களெல்லாரும் அதின் நிழலைவிட்டுக் கலைந்துபோனார்கள். 13 விழுந்துகிடக்கிற அதின்மேல் ஆகாயத்துப் பறவைகளெல்லாம் தாபரித்தன; அதின் கொம்புகளின்மேல் வெளியின் மிருகங்களெல்லாம் தங்கின. 14 தண்ணீரின் ஓரமாய் வளருகிற எந்த விருட்சங்களும் தங்கள் உயர்த்தியினாலே மேட்டிமைகொள்ளாமலும், தங்கள் கொப்புகளின் தழைக்குள்ளே தங்கள் நுனிக்கிளையை ஓங்கவிடாமலும், தண்ணீரைக் குடிக்கிற எந்த மரங்களும் தங்கள் உயர்த்தியினாலே தங்கள்மேல் நம்பிக்கைவைக்காமலும் இருக்கும்பொருட்டு இப்படிச் செய்வேன்; மனுபுத்திரரின் நடுவே அவர்கள் எல்லாரும் குழியில் இறங்குகிறவர்களோடேகூட மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களில் போனார்கள். 15 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் பாதாளத்தில் இறங்குகிற நாளிலே புலம்பலை வருவித்தேன்; நான் அவனிமித்தம் ஆழத்தை மூடிப்போட்டு, திரளான தண்ணீர்கள் ஓடாதபடிக்கு அதின் ஆறுகளை அடைத்து, அவனிமித்தம் லீபனோனை இருளடையப்பண்ணினேன்; வெளியின் விருட்சங்களெல்லாம் அவனிமித்தம் பட்டுப்போயின. 16 நான் அவனைக் குழியில் இறங்குகிறவர்களோடேகூடப் பாதாளத்தில் இறங்கப்பண்ணுகையில், அவன் விழுகிற சத்தத்தினால் ஜாதிகளை அதிரப்பண்ணினேன்; அப்பொழுது பூமியின் தாழ்விடங்களில் ஏதேனின் விருட்சங்களும், லீபனோனின் மேன்மையான சிறந்த விருட்சங்களும், தண்ணீர் குடிக்கும் சகல மரங்களும் ஆறுதல் அடைந்தன. 17 அவனோடேகூட இவர்களும், ஜாதிகளின் நடுவே அவன் நிழலில் குடியிருந்து அவனுக்குப் புயபலமாயிருந்தவர்களும், பட்டயத்தால் வெட்டுண்டவர்களண்டையிலே பாதாளத்தில் இறங்கினார்கள். 18 இப்படிப்பட்ட மகிமையிலும் மகத்துவத்திலும் ஏதேனின் விருட்சங்களில் நீ எதற்கு ஒப்பானவன்? ஏதேனின் விருட்சங்களோடேகூட நீயும் பூமியின் தாழ்விடங்களில் இறக்கப்பட்டு, பட்டயத்தாலே வெட்டுண்டவர்களோடேகூட விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவிலே கிடப்பாய்; பார்வோனும் அவன் கூட்டமும் இதுவே என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 32

1 பன்னிரண்டாம் வருஷம் பன்னிரண்டாம் மாதம் முதலாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனைக்குறித்துப் புலம்பி, அவனோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: ஜாதிகளுக்குள்ளே நீ பாலசிங்கத்துக்கு ஒப்பானவன்; நீ பெருந்தண்ணீர்களில் முதலையைப்போல் இருந்து, உன் நதிகளில் எழும்பி, உன் கால்களால் தண்ணீர்களைக் கலக்கி, அவைகளின் ஆறுகளைக் குழப்பிவிட்டாய். 3 ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: நான் வெகு ஜனக்கூட்டத்தைக்கொண்டு உன்மேல் என் வலையை வீசுவேன்; அவர்கள் என் வலையில் உன்னை இழுத்துக்கொள்வார்கள். 4 உன்னைத் தரையிலே போட்டுவிடுவேன்; நான் உன்னை வெட்டவெளியில் எறிந்துவிட்டு, ஆகாயத்துப் பறவைகளையெல்லாம் உன்மேல் இறங்கப்பண்ணி, பூமியனைத்தின் மிருகங்களையும் உன்னால் திருப்தியாக்கி, 5 உன் சதையைப் பர்வதங்களின்மேல் போட்டு, உன் உடலினாலே பள்ளத்தாக்குகளை நிரப்பி, 6 நீ நீந்தின தேசத்தின்மேல் உன் இரத்தத்தைப் பர்வதங்கள்மட்டும் பாயச்செய்வேன்; ஆறுகள் உன்னாலே நிரம்பும். 7 உன்னை நான் அணைத்துப்போடுகையில், வானத்தை மூடி, அதின் நட்சத்திரங்களை இருண்டுபோகப்பண்ணுவேன்; சூரியனை மேகத்தினால் மூடுவேன், சந்திரனும் தன் ஒளியைக்கொடாதிருக்கும். 8 நான் வானஜோதியான விளக்குகளையெல்லாம் உன்மேல் இருண்டுபோகப்பண்ணி, உன் தேசத்தின்மேல் அந்தகாரத்தை வரப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 9 உன் சங்காரத்தை ஜாதிகள்மட்டும், நீ அறியாத தேசங்கள்மட்டும் நான் எட்டப்பண்ணுகையில், அநேகம் ஜனங்களின் இருதயத்தை விசனமடையப்பண்ணுவேன். 10 அநேகம் ஜனங்களை உன்னிமித்தம் திகைக்கப்பண்ணுவேன்; அவர்களின் ராஜாக்கள், தங்கள் முகங்களுக்கு முன்பாக என் பட்டயத்தை நான் வீசுகையில் மிகவும் திடுக்கிடுவார்கள்; நீ விழும் நாளில் அவரவர் தம்தம் பிராணனுக்காக நிமிஷந்தோறும் தத்தளிப்பார்கள். 11 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: பாபிலோன் ராஜாவின் பட்டயம் உன்மேல் வரும். 12 பராக்கிரமசாலிகளின் பட்டயங்களால் உன் ஜனத்திரளை விழப்பண்ணுவேன்; அவர்களெல்லாரும் ஜாதிகளில் வல்லமையானவர்கள்; அவர்கள் எகிப்தின் ஆடம்பரத்தைக் கெடுப்பார்கள்; அதின் ஏராளமான கூட்டம் அழிக்கப்படும். 13 திரளான தண்ணீர்களின் கரைகளில் நடமாடுகிற அதின் மிருகஜீவன்களையெல்லாம் அழிப்பேன்; இனி மனுஷனுடைய கால் அவைகளைக் கலக்குவதுமில்லை, மிருகங்களுடைய குளம்புகள் அவைகளைக் குழப்புவதுமில்லை. 14 அப்பொழுது அவர்களுடைய தண்ணீர்களைத் தெளியப்பண்ணி, அவர்கள் ஆறுகளை எண்ணெயைப்போல் ஓடப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 15 நான் எகிப்துதேசத்தைப் பாழாக்கும்போதும், தேசம் தன் நிறைவை இழந்து வெறுமையாய்க் கிடக்கும்போதும், நான் அதில் குடியிருக்கிற யாவரையும் சங்கரிக்கும்போதும், நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். 16 இது புலம்பல்; இப்படிப் புலம்புவார்கள்; இப்படி ஜாதிகளின் குமாரத்திகள் புலம்புவார்கள்; இப்படி எகிப்துக்காகவும், அதினுடைய எல்லாத் திரளான ஜனங்களுக்காகவும் புலம்புவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார். 17 பின்னும் பன்னிரண்டாம் வருஷம் அந்த மாதத்தின் பதினைந்தாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 18 மனுபுத்திரனே, நீ எகிப்தினுடைய ஏராளமான ஜனத்தினிமித்தம் புலம்பி, அவர்களையும் பிரபலமான ஜாதிகளின் குமாரத்திகளையும் குழியில் இறங்கினவர்கள் அண்டையிலே பூமியின் தாழ்விடங்களில் தள்ளிவிடு. 19 மற்றவர்களைப்பார்க்கிலும் நீ அழகில் சிறந்தவளோ? நீ இறங்கி, விருத்தசேதனமில்லாதவர்களிடத்தில் கிட. 20 அவர்கள் பட்டயத்தால் வெட்டுண்டவர்களின் நடுவிலே விழுவார்கள், பட்டயத்துக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறார்கள்; அவளையும் அவளுடைய ஜனத்திரள் யாவையும் பிடித்திழுங்கள். 21 பராக்கிரமசாலிகளில் வல்லவர்களும், அவனுக்குத் துணைநின்றவர்களும், பாதாளத்தின் நடுவிலிருந்து அவனோடே பேசுவார்கள்; அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய்ப் பட்டயத்தால் வெட்டுண்டு, இறங்கி, அங்கே கிடக்கிறார்கள். 22 அங்கே அசூரும் அவனுடைய எல்லாக் கூட்டத்தாரும் கிடக்கிறார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்கள் எல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்டு விழுந்தவர்கள்தானே. 23 பாதாளத்தின் பக்கங்களில் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய கூட்டம் கிடக்கிறது, ஜீவனுள்ளோருடைய தேசத்திலே கெடியுண்டாக்கின அவர்களெல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்டு விழுந்தவர்கள்தானே. 24 அங்கே ஏலாமும் அவனுடைய பிரேதக்குழியைச் சுற்றிலும் அவனுடைய எல்லா ஏராளமான ஜனமும் கிடக்கிறார்கள்; அவர்களெல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்டு விழுந்து, விருத்தசேதனமில்லாதவர்களாய்ப் பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார்கள்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலே கெடியுண்டாக்கின அவர்கள், குழியில் இறங்கினவர்களோடேகூடத் தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள். 25 வெட்டுண்டவர்களின் நடுவே அவனை அவனுடைய எல்லா ஏராளமான ஜனத்துக்குள்ளும் கிடத்தினார்கள்; அவனைச் சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவர்களெல்லாரும் பட்டயத்தால் வெட்டுண்ட விருத்தசேதனமில்லாதவர்கள்; ஜீவனுள்ளோருடைய தேசத்திலே அவர்கள் கெடியுண்டாக்கினவர்களாயிருந்தும், அவர்கள் குழியில் இறங்கினவர்களோடேகூடத் தங்கள் அவமானத்தைச் சுமக்கிறார்கள்; அவன் வெட்டுண்டவர்களின் நடுவே வைக்கப்பட்டிருக்கிறான். 26 அங்கே மேசேக்கும் தூபாலும் அவர்களுடைய ஏராளமான ஜனங்களும் கிடக்கிறார்கள்; அவர்களைச்சுற்றிலும் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது; அவனுடைய ஜீவனுள்ளோருடைய தேசத்திலே கெடியுண்டாக்கினவர்களாயிருந்தும், அவர்களெல்லாரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; பட்டயத்தால் வெட்டுண்டு விழுவார்கள். 27 ஜீவனுள்ளோருடைய தேசத்திலே பராக்கிரமசாலிகளுக்குக் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தும், அவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களாய் விழுந்து, தங்கள் யுத்த ஆயுதங்களோடு பாதாளத்திலிறங்கின பராக்கிரமசாலிகளோடே இவர்கள் கிடப்பதில்லை; அவர்கள் தங்கள் பட்டயங்களைத் தங்கள் தலைகளின்கீழ் வைத்தார்கள்; ஆனாலும் அவர்களுடைய அக்கிரமம் தங்கள் எலும்புகளின்மேல் இருக்கும். 28 நீயும் விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவே நொறுங்குண்டு, பட்டயத்தால் வெட்டுண்டவர்களோடே கிடப்பாய். 29 அங்கே ஏதோமும் அதின் ராஜாக்களும் அதின் எல்லாப் பிரபுக்களும் கிடக்கிறார்கள்; பட்டயத்தால் வெட்டுண்டவர்களிடத்தில் இவர்கள் தங்கள் வல்லமையோடுங்கூடக் கிடத்தப்பட்டார்கள்; இவர்கள் விருத்தசேதனமில்லாதவர்களிடத்திலும், குழியில் இறங்குகிறவர்களிடத்திலும் கிடக்கிறார்கள். 30 அங்கே வடதிசை அதிபதிகள் அனைவரும் எல்லாச் சீதோனியரும் கிடக்கிறார்கள்; இவர்கள் கெடியுண்டாக்குகிறவர்களாயிருந்தாலும் தங்கள் பராக்கிரமத்தைக் குறித்து வெட்கப்பட்டு, வெட்டுண்டவர்களிடத்தில் இறங்கி, பட்டயத்தால் வெட்டுண்டவர்களோடே விருத்தசேதனமில்லாதவர்களாய்க் கிடந்து, குழியில் இறங்கினவர்களிடத்தில் தங்கள் அவமானத்தைச் சுமந்துகொண்டிருக்கிறார்கள். 31 பார்வோன் அவர்களைப் பார்த்து தன் ஏராளமான ஜனத்தின்பேரிலும் ஆறுதலடைவான்; பட்டயத்தால் வெட்டுண்டார்களென்று, பார்வோனும் அவனுடைய சர்வ சேனையும் ஆறுதலடைவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 32 என்னைப்பற்றிய கெடியை ஜீவனுள்ளோர் தேசத்தில் உண்டுபண்ணுகிறேன், பார்வோனும் அவனுடைய ஏராளமான ஜனமும் பட்டயத்தால் வெட்டுண்டவர்களிடத்தில் விருத்தசேதனமில்லாதவர்களின் நடுவே கிடத்தப்படுவார்கள் என்கிறதைக் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 33

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரோடே பேசி, அவர்களோடே சொல்லவேண்டியதாவது: நான் தேசத்தின்மேல் பட்டயத்தை வரப்பண்ணுகையில் தேசத்தின் ஜனம் தங்கள் எல்லைகளிலுள்ள ஒருவனை அழைத்து, அவனைத் தங்களுக்குக் காவற்காரனாக வைத்தபின்பு, 3 இவன் தேசத்தின்மேல் பட்டயம் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, ஜனத்தை எச்சரிக்கும்போது, 4 எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாயிராமல், பட்டயம் வந்து அவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவனுடைய இரத்தப்பழி அவன் தலையின்மேல் சுமரும். 5 அவன் எக்காளத்தின் சத்தத்தைக் கேட்டும், எச்சரிக்கையாயிருக்கவில்லை; அவனுடைய இரத்தப்பழி அவன் பேரிலே சுமரும்; எச்சரிக்கையாயிருக்கிறவனோ தன் ஜீவனைத் தப்புவித்துக்கொள்ளுவான். 6 காவற்காரன் பட்டயம் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் ஜனங்கள் எச்சரிக்கப்படாமலும், பட்டயம் வந்து அவர்களில் யாதொருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன் அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன். 7 மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரவேல் வம்சத்தாருக்குக் காவற்காரனாக வைத்தேன்; ஆகையால் நீ என் வாயினாலே வார்த்தையைக்கேட்டு, என் நாமத்தினாலே அவர்களை எச்சரிப்பாயாக. 8 நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாய் என்று சொல்லுகையில், நீ துன்மார்க்கனைத் தன் துன்மார்க்கத்தில் இராதபடி எச்சரிக்கத்தக்கதாக அதை அவனுக்குச் சொல்லாமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன் அக்கிரமத்திலே சாவான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியை உன் கையிலே கேட்பேன். 9 துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன் வழியைவிட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன் அக்கிரமத்திலே சாவான்; நீயோ உன் ஆத்துமாவைத் தப்புவிப்பாய். 10 மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: எங்கள் துரோகங்களும் எங்கள் பாவங்களும் எங்கள்மேல் இருக்கிறது, நாங்கள் சோர்ந்துபோகிறோம், நாங்கள் பிழைப்பது எப்படியென்று நீங்கள் சொல்லுகிறீர்கள். 11 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன் வழியைவிட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் சாகவேண்டும் என்கிறார் என்று அவர்களோடே சொல்லு. 12 மனுபுத்திரனே, நீ உன் ஜனத்தின் புத்திரரை நோக்கி: நீதிமான் துரோகம்பண்ணுகிற நாளிலே அவனுடைய நீதி அவனைத் தப்புவிப்பதில்லை; துன்மார்க்கன் தன் துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்புகிற நாளிலே அவன் தன் அக்கிரமத்தினால் விழுந்துபோவதுமில்லை; நீதிமான் பாவஞ்செய்கிற நாளிலே தன் நீதியினால் பிழைப்பதுமில்லை. 13 பிழைக்கவே பிழைப்பாய் என்று நான் நீதிமானுக்குச் சொல்லும்போது, அவன் தன் நீதியை நம்பி, அநியாயஞ்செய்தால், அவனுடைய நீதியில் ஒன்றும் நினைக்கப்படுவதில்லை, அவன் செய்த தன் அநியாயத்திலே சாவான். 14 பின்னும் சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, அவன் தன் பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியுஞ்செய்து, 15 துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக் கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான். 16 அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு. 17 உன் ஜனத்தின் புத்திரரோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள்; அவர்களுடைய வழியே செம்மையானதல்ல. 18 நீதிமான் தன் நீதியைவிட்டுத் திரும்பி, அநியாயஞ்செய்தால், அவன் அதினால் சாவான். 19 துன்மார்க்கன் தன் அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான். 20 நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறீர்கள், இஸ்ரவேல் வீட்டாரே, நான் உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படியே நியாயந்தீர்ப்பேன் என்று சொல் என்றார். 21 எங்கள் சிறையிருப்பின் பன்னிரண்டாம் வருஷம் பத்தாம் மாதம் ஐந்தாந்தேதியிலே எருசலேமிலிருந்து தப்பின ஒருவன் என்னிடத்தில் வந்து: நகரம் அழிக்கப்பட்டது என்றான். 22 தப்பினவன் வருகிறதற்கு முந்தின சாயங்காலத்திலே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, அவன் காலையில் என்னிடத்தில் வருமட்டும் என் வாயைத் திறந்திருக்கப்பண்ணிற்று; என் வாய் திறக்கப்பட்டது, பின்பு நான் மௌனமாயிருக்கவில்லை. 23 அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 24 மனுபுத்திரனே, இஸ்ரவேல் தேசத்தின் பாழான இடங்களிலுள்ள குடிகள்: ஆபிரகாம் ஒருவனாயிருந்து, தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டான்; நாங்கள் அநேகராயிருக்கிறோம், எங்களுக்கு இந்தத் தேசம் சுதந்தரமாகக் கொடுக்கப்பட்டது என்று சொல்லுகிறார்கள். 25 ஆகையால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் இரத்தத்தோடே கூடியதைத் தின்று, உங்கள் நரகலான விக்கிரகங்களுக்கு நேராக உங்கள் கண்களை ஏறெடுத்து, இரத்தத்தைச் சிந்தியிருக்கிறீர்கள், நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ? 26 நீங்கள் உங்கள் பட்டயத்தை நம்பிக்கொண்டு, அருவருப்பானதைச் செய்து, உங்களில் அவனவன் தன்தன் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்துகிறீர்கள்; நீங்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வீர்களோ என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு. 27 நீ அவர்களை நோக்கி: பாழான இடங்களில் இருக்கிறவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; வெளிகளில் இருக்கிறவனை மிருகங்களுக்கு இரையாக ஒப்புக்கொடுப்பேன்; கோட்டைகளிலும் கெபிகளிலும் இருக்கிறவர்கள் கொள்ளைநோயால் சாவார்கள். 28 நான் தேசத்தைப் பாழும் அவாந்தரமுமாக்குவேன்; அப்பொழுது அதினுடைய பெலத்தின் பெருமை ஒழிந்துபோகும்; அப்பொழுது இஸ்ரவேலின் மலைகள் கடந்துபோவாரில்லாமல் அவாந்தரமாய்க் கிடக்கும். 29 அவர்கள் செய்த அவர்களுடைய எல்லா அருவருப்புகளினிமித்தமும் நான் தேசத்தைப் பாழும் அவாந்தரமுமாக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள், இதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு. 30 மேலும் மனுபுத்திரனே, உன் ஜனத்தின் புத்திரர் சுவர் ஓரங்களிலும் வீட்டுவாசல்களிலும் உன்னைக்குறித்துப் பேசி, கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட வார்த்தை என்னவென்று கேட்போம் வாருங்கள் என்று ஒருவரோடொருவரும் சகோதரனோடே சகோதரனும் சொல்லி, 31 ஜனங்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என் ஜனங்கள்போல் உட்கார்ந்து, உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்கள் வாயினாலே இன்பமாய்ப் பேசுகிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப் போகிறது. 32 இதோ, நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாயிருக்கிறாய்; அவர்கள் உன் வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமற்போகிறார்கள். 33 இதோ, அது வருகிறது, அது வருகையில் தங்கள் நடுவிலே ஒரு தீர்க்கதரிசி இருந்தான் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.

எசேக்கியேல் 34

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரை; நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் மேய்ப்பருக்குச் சொல்லுகிறார்; தங்களையே மேய்க்கிற இஸ்ரவேலின் மேய்ப்பருக்கு ஐயோ! மேய்ப்பர் அல்லவா மந்தையை மேய்க்கவேண்டும். 3 நீங்கள் நெய்யைச் சாப்பிட்டு, ஆட்டுமயிரை உடுப்பாக்கிக்கொள்ளுகிறீர்கள்; கொழுத்ததை அடிக்கிறீர்கள்; மந்தையையோ மேய்க்காமற்போகிறீர்கள். 4 நீங்கள் பலவீனமானவைகளைப் பலப்படுத்தாமலும், நசல்கொண்டவைகளைக் குணமாக்காமலும், எலும்பு முறிந்தவைகளைக் காயங்கட்டாமலும், துரத்துண்டவைகளைத் திருப்பிக்கொண்டு வராமலும், காணாமற்போனவைகளைத் தேடாமலும் போய், பலாத்காரமும் கடூரமுமாய் அவைகளை ஆண்டீர்கள். 5 மேய்ப்பன் இல்லாததினால் அவைகள் சிதறுண்டுபோயின; சிதறுண்டுபோனவைகள் காட்டு மிருகங்களுக்கெல்லாம் இரையாயின. 6 என் ஆடுகள் சகல மலைகளிலும் உயரமான சகல மேடுகளிலும் அலைப்புண்டு, பூமியின்மீதெங்கும் என் ஆடுகள் சிதறித்திரிகிறது; விசாரிக்கிறவனுமில்லை, தேடுகிறவனுமில்லை. 7 ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 8 கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; மேய்ப்பன் இல்லாததினால் என் ஆடுகள் சூறையாகி, என் ஆடுகள் காட்டுமிருகங்களுக்கெல்லாம் இரையாய்ப் போயின; என் மேய்ப்பர்கள் என் ஆடுகளை விசாரியாமற்போனார்கள், மேய்ப்பர்கள் மந்தையை மேய்க்காமல் தங்களையே மேய்த்தார்கள். 9 ஆகையால் மேய்ப்பரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 10 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: இதோ, நான் மேய்ப்பருக்கு விரோதமாக வந்து, என் ஆடுகளை அவர்கள் கையிலே கேட்டு, மேய்ப்பர் இனித் தங்களையே மேய்க்காதபடி, மந்தையை மேய்க்கும் தொழிலைவிட்டு அவர்களை விலக்கி, என் ஆடுகள் அவர்களுக்கு ஆகாரமாயிராதபடி, அவைகளை அவர்கள் வாய்க்குத் தப்பப்பண்ணுவேன் என்று சொல்லு. 11 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் நானே என் ஆடுகளை விசாரித்து, அவைகளைத் தேடிப்பார்ப்பேன். 12 ஒரு மேய்ப்பன் சிதறுண்ட தன் ஆடுகளின் நடுவே இருக்கிற நாளில் தன் மந்தையைத் தேடிக்கொண்டிருக்கிறதுபோல, நான் என் ஆடுகளைத் தேடி, மப்பும் மந்தாரமுமான நாளிலே அவைகள் சிதறுண்டுபோன எல்லா இடங்களிலுமிருந்து அவைகளைத் தப்பிவரப்பண்ணி, 13 அவைகளை ஜனங்களிடத்திலிருந்து புறப்படவும் தேசங்களிலிருந்து சேரவும்பண்ணி, அவைகளுடைய சுயதேசத்திலே அவைகளைக் கொண்டுவந்து, இஸ்ரவேல் மலைகளின்மேலும் ஆறுகள் அண்டையிலும் தேசத்தின் சகல வாசஸ்தலங்களிலும் அவைகளை மேய்ப்பேன். 14 அவைகளை நல்ல மேய்ச்சலிலே மேய்ப்பேன்; இஸ்ரவேலுடைய உயர்ந்த மலைகளில் அவைகளுடைய தொழுவம் இருக்கும்; அங்கே அவைகள் நல்ல தொழுவத்தில் படுத்துக்கொள்ளும், இஸ்ரவேலின் மலைகளின்மேல் நல்ல மேய்ச்சலை மேயும். 15 என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 16 நான் காணாமற்போனதைத் தேடி, துரத்துண்டதைத் திரும்பக்கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்; நியாயத்துக்குத்தக்கதாய் அவைகளை மேய்த்து, புஷ்டியும் பெலமுமுள்ளவைகளை அழிப்பேன். 17 என் மந்தையே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஆட்டுக்கும் ஆட்டுக்கும், ஆட்டுக்கடாக்களுக்கும், வெள்ளாட்டுக்கடாக்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன். 18 நீங்கள் நல்ல மேய்ச்சலை மேய்ந்து, உங்கள் மேய்ச்சல்களில் மீதியானதை உங்கள் கால்களால் மிதிக்கலாமா? தெளிந்த தண்ணீரைக் குடித்து மீதியாயிருக்கிறதை உங்கள் கால்களால் குழப்பிப்போடலாமா? 19 என் ஆடுகள் உங்கள் கால்களால் மிதிக்கப்பட்டதை மேயவும், உங்கள் கால்களால் குழப்பப்பட்டதைக் குடிக்கவும் வேண்டுமோ? 20 ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் அவைகளை நோக்கி: இதோ, நான், நானே கொழுத்த ஆடுகளுக்கும் இளைத்த ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன். 21 நீங்கள் பலவீனமாயிருக்கிறவைகளையெல்லாம் புறம்பாக்கிச் சிதறப்பண்ணும்படி, அவைகளைப் பக்கத்தினாலும் முன்னந்தொடையினாலும் தள்ளி உங்கள் கொம்புகளைக்கொண்டு முட்டுகிறபடியினாலே, 22 நான் என் ஆடுகளை இனிச் சூறையாகாதபடிக்கு இரட்சித்து, ஆடுகளுக்கும் ஆடுகளுக்கும் நியாயந்தீர்ப்பேன். 23 அவர்களை மேய்க்கும்படி என் தாசனாகிய தாவீது என்னும் ஒரே மேய்ப்பனை நான் அவர்கள்மேல் விசாரிப்பாயிருக்க ஏற்படுத்துவேன்; இவர் அவர்களை மேய்த்து, இவரே அவர்களுக்கு மேய்ப்பனாயிருப்பார். 24 கர்த்தராகிய நான் அவர்களுக்குத் தேவனாக இருப்பேன், என் தாசனாகிய தாவீது அவர்கள் நடுவில் அதிபதியாயிருப்பார்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன். 25 நான் அவர்களோடு சமாதான உடன்படிக்கைசெய்து, துஷ்ட மிருகங்களைத் தேசத்தில் இராதபடிக்கு ஒழியப்பண்ணுவேன்; அவர்கள் சுகமாய் வனாந்தரத்தில் தாபரித்து, காடுகளில் நித்திரைபண்ணுவார்கள். 26 நான் அவர்களையும் என் மேட்டின் சுற்றுப்புறங்களையும் ஆசீர்வாதமாக்கி, ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும். 27 வெளியின் விருட்சங்கள் தங்கள் கனியைத்தரும்; பூமி தன் பலனைக் கொடுக்கும்; அவர்கள் தங்கள் தேசத்தில் சுகமாயிருப்பார்கள்; நான் அவர்கள் நுகத்தின் கயிறுகளை அறுத்து, அவர்களை அடிமைகொண்டவர்களின் கைக்கு அவர்களை நீங்கலாக்கி விடுவிக்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். 28 இனி அவர்கள் புறஜாதிகளுக்குக் கொள்ளையாவதில்லை, பூமியின் மிருகங்கள் அவர்களைப் பட்சிப்பதுமில்லை; தத்தளிக்கப்பண்ணுவார் இல்லாமல் சுகமாய்த் தங்குவார்கள். 29 நான் அவர்களுக்குக் கீர்த்திபொருந்திய ஒரு நாற்றை எழும்பப்பண்ணுவேன்; அவர்கள் இனி தேசத்திலே பஞ்சத்தால் வாரிக்கொள்ளப்படுவதுமில்லை, இனிப் புறஜாதிகள் செய்யும் அவமானத்தைச் சுமப்பதுமில்லை. 30 தங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் தங்களோடே இருக்கிறதையும், இஸ்ரவேல் வம்சத்தாராகிய தாங்கள் என் ஜனமாயிருக்கிறதையும், அவர்கள் அறிந்துகொள்வார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 31 என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்கள் மனுஷர்; நான் உங்கள் தேவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 35

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, நீ உன் முகத்தைச் சேயீர்மலைக்கு நேராகத் திருப்பி அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, 3 அதற்குச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், சேயீர்மலையே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, என் கையை உனக்கு விரோதமாகநீட்டி, உன்னைப் பாழும் அவாந்தரவெளியுமாக்குவேன். 4 உன் பட்டணங்களை வனாந்தரமாக்கிப்போடுவேன்; நீ பாழாய்ப்போவாய்; நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வாய். 5 நீ பழைய பகையை வைத்து, இஸ்ரவேல் புத்திரருடைய அக்கிரமம் நிறைவேறுகையில் அவர்களுக்கு உண்டான ஆபத்தின் காலத்திலே பட்டயத்தின் கூர்மையினால் அவர்களுடைய இரத்தத்தைச் சிந்தினபடியால், 6 நான் இரத்தப் பழிக்கு உன்னை ஒப்புவிப்பேன்; இரத்தப்பழி உன்னைப் பின்தொடரும் என்று கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; நீ இரத்தத்தை வெறுக்காதபடியினால் இரத்தம் உன்னைப் பின்தொடரும். 7 நான் சேயீர்மலையைப் பாழும் அவாந்தர இடமுமாக்கி, அதிலே போக்குவரவு செய்வார் இல்லாதபடி சங்காரஞ்செய்து, 8 அதின் மலைகளைக் கொலையுண்டவர்களாலே நிரப்புவேன்; உன் மேடுகளிலும் உன் பள்ளத்தாக்குகளிலும் உன் எல்லா ஆறுகளிலும் பட்டயத்தால் வெட்டுண்டவர்கள் விழுவார்கள். 9 நீ என்றைக்கும் அவாந்தரவெளியாயிருக்கும்படி செய்வேன்; உன் பட்டணங்கள் குடியேற்றப்படுவதில்லை; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். 10 இரண்டு ஜாதிகளும் இரண்டு தேசங்களும் கர்த்தர் வசமாயிருந்தும், அவைகள் என்னுடையவைகளாகும், நான் அவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுவேன் என்று நீ சொல்லுகிறபடியினால், 11 நீ அவர்கள்மேல் வைத்த வர்மத்தினால் செய்த உன் கோபத்துக்குத்தக்கதாகவும், உன் பொறாமைக்குத்தக்கதாகவும் நான் செய்து, கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் உன்னை நியாயந்தீர்க்கும்போது, என்னை அவர்களுக்குள் அதினால் அறியப்பண்ணுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன். 12 இஸ்ரவேலின் மலைகள் பாழாக்கப்பட்டு எங்களுக்கு இரையாகக் கொடுக்கப்பட்டது என்று, நீ அவைகளுக்கு விரோதமாய்ச் சொன்ன உன் நிந்தனைகளையெல்லாம் கர்த்தராகிய நான் கேட்டேன் என்று அப்பொழுது அறிந்துகொள்வாய். 13 நீங்கள் உங்கள் வாயினால் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு விரோதமாக உங்கள் வார்த்தைகளைப் பெருகப்பண்ணினீர்கள்; அதை நான் கேட்டேன். 14 பூமியெல்லாம் மகிழும்போது நான் உன்னைப் பாழாயிருக்கும்படி செய்வேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 15 இஸ்ரவேல் வம்சத்தாரின் சுதந்தரம் பாழாய்ப்போனதைக் கண்டு மகிழ்ந்தாயே, உனக்கும் அப்படியே சம்பவிக்கச்செய்வேன்; சேயீர்மலையே, ஏதோமே, நீ முழுதும் பாழாவாய்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்களென்று உரைத்தார் என்று சொல்லு.

எசேக்கியேல் 36

1 மனுபுத்திரனே, நீ இஸ்ரவேல் மலைகளை நோக்கித் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மலைகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 2 கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; பகைஞன் உங்களைக்குறித்து ஆ ஆ, நித்திய மேடுகள் எங்கள் வசமாயிற்று என்று சொல்லுகிறபடியினால், 3 நீ தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், நீங்கள் புறஜாதிகளில் மீதியானவர்களுக்குச் சுதந்தரமாயிருக்கும்படி அவர்கள் உங்களைப் பாழாக்கி, உங்களைச் சுற்றிலுமிருந்து விழுங்கினபடியினாலும், நீங்கள் வாயாடிகளுக்குப்பேச்சும் ஜனங்களுக்கு அவதூறுமானவர்களானபடியினாலும், 4 இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; மலைகளுக்கும், மேடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும், பாழாக்கப்பட்ட அவாந்தர இடங்களுக்கும், வெறுமையாய் விடப்பட்ட பட்டணங்களுக்கும் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: உங்களைச் சுற்றிலும் மீதியான புறஜாதிகளுக்கு நீங்கள் கொள்ளையும் பரியாசமுமாய்ப்போனபடியினால், 5 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்: என் தேசத்தைக் கொள்ளையிடப்பட்ட வெளியாக்கும்படிக்கு அதை முழு இருதயத்தின் சந்தோஷத்தோடும் கர்வமான மனதோடும் தங்களுக்குச் சுதந்தரமாக நியமித்துக்கொண்ட புறஜாதிகளில் மீதியானவர்களுக்கு விரோதமாகவும் ஏதோம் அனைத்துக்கும் விரோதமாகவும், என் அக்கினியான எரிச்சலினால் பேசினேன் என்று நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். 6 ஆகையால், நீ இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, மலைகளுக்கும், மேடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, நீங்கள் புறஜாதிகள் செய்யும் அவமானத்தைச் சுமந்தபடியினால் நான் என் எரிச்சலினாலும் என் உக்கிரத்தினாலும் பேசினேன், 7 ஆதலால், கர்த்தராகிய ஆண்டவராயிருக்கிற நான் என் கரத்தை உயர்த்துவேன், உங்களைச் சுற்றிலும் இருக்கிற புறஜாதிகள் தங்களுடைய அவமானத்தை நிச்சயமாய்ச் சுமப்பார்கள் என்று சொல்லுகிறேன். 8 இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் உங்கள் கொப்புகளை விட்டு, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு உங்கள் கனிகளைக் கொடுப்பீர்கள்; அவர்கள் சமீபமாய் வந்துவிட்டார்கள். 9 இதோ, நான் உங்கள் பட்சத்திலிருந்து, உங்களைக் கண்ணோக்குவேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள். 10 நான் உங்கள்மேல் இஸ்ரவேல் வம்சமாகிய மனுஷர் யாவரையும் வர்த்திக்கப்பண்ணுவேன்; பட்டணங்கள் குடியேற்றப்படும், அவாந்தரமான ஸ்தலங்கள் கட்டப்படும். 11 உங்கள்மேல் மனுஷரையும் மிருகஜீவன்களையும் பெருகிப் பலுகும்படி வர்த்திக்கப்பண்ணுவேன்; பூர்வநாட்களில் நீங்கள் இருந்த நிலைமையில் நான் உங்களை ஸ்தாபித்து, உங்கள் முந்தின சீரைப்பார்க்கிலும் உங்களுக்கு நற்சீர் உண்டாகச்செய்வேன்; அதினால் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். 12 நான் உங்கள்மேல் என் ஜனமாகிய இஸ்ரவேலின் மனுஷரை நடமாடப்பண்ணுவேன், அவர்கள் உன்னைக் கையாளுவார்கள்; அவர்களுக்குச் சுதந்தரமாயிருப்பாய்; நீ இனிமேல் அவர்களைச் சாகக்கொடுப்பதில்லை. 13 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஜனங்கள் உன்னைப்பார்த்து: நீ மனுஷரைப் பட்சிக்கிற தேசமென்றும், நீ உன் ஜனங்களைச் சாகக்கொடுக்கிற தேசமென்றும் சொல்லுகிறபடியினால், 14 நீ இனிமேல் மனுஷரைப் பட்சிப்பதுமில்லை, இனிமேல் உன் ஜனங்களைச் சாகக்கொடுப்பதுமில்லை என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 15 நான் இனிமேல் புறஜாதிகள் செய்யும் அவமானத்தை உன்னிடத்திலே கேட்கப்பண்ணுவதுமில்லை, நீ ஜனங்களின் நிந்தையை இனிமேல் சுமப்பதுமில்லை; நீ இனிமேல் உன் ஜாதிகளைச் சாகக்கொடுப்பதுமில்லையென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார். 16 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 17 மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் சுயதேசத்திலே குடியிருக்கையில் அதைத் தங்கள் நடக்கையினாலும் தங்கள் கிரியைகளினாலும் தீட்டுப்படுத்தினார்கள்; அவர்களுடைய நடக்கை என் முகத்துக்கு முன்பாகத் தூரஸ்திரீயின் தீட்டைப்போல் இருந்தது. 18 ஆகையினால் தேசத்திலே அவர்கள் சிந்தின இரத்தத்தினிமித்தமும், அதை அவர்கள் தங்கள் நரகலான விக்கிரகங்களால் தீட்டுப்படுத்தினதினிமித்தமும் நான் என் உக்கிரத்தை அவர்கள்மேல் ஊற்றி, 19 அவர்களைப் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்தேன்; தேசங்களில் தூற்றிப்போடப்பட்டார்கள்; அவர்களுடைய நடக்கையின்படியேயும் அவர்களுடைய கிரியைகளின்படியேயும் அவர்களை நியாயந்தீர்த்தேன். 20 அவர்கள் புறஜாதிகளிடத்தில் போனபோது அந்த ஜனங்கள் இவர்களைக்குறித்து: இவர்கள் கர்த்தருடைய ஜனங்கள், அவருடைய தேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொன்னதினால், இவர்கள் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள். 21 ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் தாங்கள் வந்துசேர்ந்த புறஜாதிகளிடத்திலே பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்த நாமத்தினிமித்தமாகவே இரங்குகிறேன். 22 ஆதலால், நீ இஸ்ரவேல் வம்சத்தாரை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் நிமித்தம் அல்ல, நீங்கள் வந்து சேர்ந்த புறஜாதிகளிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என் பரிசுத்த நாமத்தினிமித்தமே நான் இப்படிச் செய்கிறேன். 23 புறஜாதிகளின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என் மகத்தான நாமத்தை நான் பரிசுத்தம்பண்ணுவேன்; அப்பொழுது புறஜாதிகள் தங்கள் கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம்பண்ணப்படுகையில், நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 24 நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன். 25 அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான ஜலம் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா நரகலான விக்கிரகங்களையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள். 26 உங்களுக்கு நவமான இருதயத்தைக் கொடுத்து, உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன். 27 உங்கள் உள்ளத்திலே என் ஆவியை வைத்து, உங்களை என் கட்டளைகளில் நடக்கவும் என் நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்பண்ணுவேன். 28 உங்கள் பிதாக்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள்; நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள், நான் உங்கள் தேவனாயிருந்து, 29 உங்கள் அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களை இரட்சித்து, உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப்பெருகப்பண்ணி, 30 நீங்கள் இனிமேல் ஜாதிகளுக்குள்ளே பஞ்சத்தினாலுண்டாகும் நிந்தையை அடையாதபடிக்கு, விருட்சத்தின் கனிகளையும் வயலின் பலன்களையும் பெருகப்பண்ணுவேன். 31 அப்பொழுது நீங்கள் உங்கள் பொல்லாத மார்க்கங்களையும் உங்கள் தகாத கிரியைகளையும் நினைத்து, உங்கள் அக்கிரமங்களினிமித்தமும் உங்கள் அருவருப்புகளினிமித்தமும் உங்களையே அரோசிப்பீர்கள். 32 நான் இப்படிச் செய்வது உங்கள் நிமித்தமாக அல்லவென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், இது உங்களுக்கு அறியப்பட்டிருக்கக்கடவது; இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்கள் வழிகளினிமித்தம் வெட்கி நாணுங்கள். 33 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்கள் அக்கிரமங்களையெல்லாம் நீக்கி, உங்களைச் சுத்தமாக்கும் காலத்திலே பட்டணங்களில் குடியேற்றுவிப்பேன்; அவாந்தரமான ஸ்தலங்களும் கட்டப்படும். 34 பாழாக்கப்பட்ட தேசம் கடந்துபோகிற யாவருடைய பார்வைக்கும் பாழாய்க்கிடந்ததற்குப் பதிலாக பயிரிடப்படும். 35 பாழாய்க்கிடந்த இத்தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலாயிற்றென்றும், அவாந்தரமும் பாழும் நிர்மூலமுமாயிருந்த பட்டணங்கள் அரணிப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாய் இருக்கிறது என்றும் சொல்லுவார்கள். 36 கர்த்தராகிய நான் நிர்மூலமானவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான ஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; கர்த்தராகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன். 37 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நான் இதை அநுக்கிரகஞ்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம் பண்ணவேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதரைப் பெருகப்பண்ணுவேன். 38 பண்டிகை காலங்களில் எருசலேமிலே பரிசுத்தம்பண்ணப்பட்டு வருகிற மந்தைகள் எப்படித் திரளாயிருக்கிறதோ, அப்படியே அவாந்தரமாயிருந்த பட்டணங்கள் மனுஷரின் மந்தையால் நிரம்பியிருக்கும்; அதினால் நான் கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 37

1 கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்து, கர்த்தர் என்னை ஆவிக்குள்ளாக்கி வெளியே கொண்டுபோய், எலும்புகள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கின் நடுவில் நிறுத்தி, 2 என்னை அவைகளின் அருகே சுற்றி நடக்கப்பண்ணினார்; இதோ, பள்ளத்தாக்கின் வெட்டவெளியிலே அந்த எலும்புகள் மகா திரளாய்க்கிடந்தது; அவைகள் மிகவும் உலர்ந்ததுமாயிருந்தது. 3 அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் உயிரடையுமா என்று கேட்டார்; அதற்கு நான்: கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் அதை அறிவீர் என்றேன். 4 அப்பொழுது அவர்: நீ இந்த எலும்புகளைக்குறித்துத் தீர்க்கதரிசனம் உரைத்து, அவைகளைப்பார்த்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: உலர்ந்த எலும்புகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். 5 கர்த்தராகிய ஆண்டவர் இந்த எலும்புகளை நோக்கி: இதோ, நான் உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது உயிரடைவீர்கள். 6 நான் உங்கள்மேல் நரம்புகளைச் சேர்த்து, உங்கள்மேல் மாம்சத்தை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி, உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன்; அப்பொழுது நீங்கள் உயிரடைந்து, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்களென்று உரைக்கிறார் என்று சொல் என்றார். 7 எனக்குக் கட்டளையிட்டபடியே நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; நான் தீர்க்கதரிசனம் உரைக்கையில் ஒரு இரைச்சல் உண்டாயிற்று; இதோ, அசைவுண்டாகி, ஒவ்வொரு எலும்பும் தன்தன் எலும்போடே சேர்ந்துகொண்டது. 8 நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, அவைகள்மேல் நரம்புகளும் மாம்சமும் உண்டாயிற்று, மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் ஆவி இல்லாதிருந்தது. 9 அப்பொழுது அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை நோக்கித் தீர்க்கதரிசனம் உரை; மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே, நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள்மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார். 10 எனக்குக் கற்பிக்கப்பட்டபடி நான் தீர்க்கதரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி அவர்களுக்குள் பிரவேசிக்க, அவர்கள் உயிரடைந்து, காலூன்றி, மகா பெரிய சேனையாய் நின்றார்கள். 11 அப்பொழுது அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இந்த எலும்புகள் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருமே; இதோ, அவர்கள் எங்கள் எலும்புகள் உலர்ந்துபோயிற்று; எங்கள் நம்பிக்கை அற்றுப்போயிற்று; நாங்கள் அறுப்புண்டுபோகிறோம் என்கிறார்கள். 12 ஆகையால் நீ தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்களோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இதோ, என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படவும், உங்களை இஸ்ரவேல் தேசத்துக்கு வரவும்பண்ணுவேன். 13 என் ஜனங்களே, நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள். 14 என் ஆவியை உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்; நான் உங்களை உங்கள் தேசத்தில் வைப்பேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வீர்கள்; இதைச் சொன்னேன், இதைச் செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். 15 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 16 மனுபுத்திரனே, நீ ஒரு கோலை எடுத்து, அதிலே யூதாவுக்கும் அதைச் சேர்ந்த இஸ்ரவேல் புத்திரருக்கும் அடுத்தது என்று எழுதி; பின்பு வேறொரு கோலை எடுத்து, அதிலே எப்பிராயீமுக்கும் அதைச்சேர்ந்த இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் அடுத்த யோசேப்பின் கோலென்று எழுதி, 17 அவைகளை ஒரே கோலாகும்படி ஒன்றோடொன்று இசையச்செய், அவைகள் உன் கையில் ஒன்றாகும். 18 இவைகளின் பொருள் இன்னதென்று எங்களுக்கு அறிவிக்கமாட்டீரோ என்று உன் ஜனத்தின் புத்திரர் உன்னிடத்தில் கேட்டால், 19 நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, எப்பிராயீமுக்கும் அதைச்சேர்ந்த இஸ்ரவேல் கோத்திரங்களுக்கும் அடுத்த யோசேப்பின் கோலை எடுத்து, அதை யூதாவின் கோலோடே சேர்த்து, அவைகளை ஒரே கோலாக்குவேன்; அவைகள் என் கையில் ஒன்றாகும் என்கிறார் என்று சொல். 20 சொல்லும்போது, நீ எழுதின கோல்கள் அவர்களுடைய கண்களுக்கு முன்பாக உன் கையில் இருக்கவேண்டும். 21 நீ அவர்களை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அவர்கள் போயிருக்கும் ஜாதிகளிடத்திலிருந்து அழைத்து, சுற்றிலுமிருந்து அவர்களைச் சேர்த்து, அவர்களை அவர்கள் சுயதேசத்திலே வரப்பண்ணி, 22 அவர்களை இஸ்ரவேலின் மலைகளாகிய தேசத்திலே ஒரே ஜாதியாக்குவேன்; ஒரே ராஜா அவர்கள் எல்லாருக்கும் ராஜாவாக இருப்பார்; அவர்கள் இனி இரண்டு ஜாதிகளாக இருப்பதில்லை; அவர்கள் இனி இரண்டு ராஜ்யங்களாகப் பிரிவதுமில்லை. 23 அவர்கள் இனித் தங்கள் நரகலான விக்கிரகங்களினாலும் தங்கள் அருவருப்புகளினாலும் தங்களுடைய சகல மீறுதல்களினாலும் தங்களைத் தீட்டுப்படுத்துவதுமில்லை; அவர்கள் குடியிருந்து பாவஞ்செய்த எல்லா இடங்களிலிருந்தும் நான் அவர்களை நீங்கலாக்கி இரட்சித்து, அவர்களைச் சுத்தம்பண்ணுவேன்; அப்பொழுது அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள், நான் அவர்கள் தேவனாயிருப்பேன். 24 என் தாசனாகிய தாவீது என்பவர் அவர்கள்மேல் ராஜாவாக இருப்பார்; அவர்கள் எல்லாருக்கும் ஒரே மேய்ப்பர் இருப்பார்; அப்பொழுது அவர்கள் என் நியாயங்களில் நடந்து, என் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவைகளின்படியே செய்து, 25 நான் என் தாசனாகிய யாக்கோபுக்குக் கொடுத்ததும், உங்கள் பிதாக்கள் குடியிருந்ததுமான தேசத்திலே குடியிருப்பார்கள்; அவர்களும் அவர்கள் பிள்ளைகளும் அவர்களுடைய பிள்ளைகளின் பிள்ளைகளும் அதிலே என்றென்றைக்கும் குடியிருப்பார்கள்; என் தாசனாகிய தாவீது என்பவர் என்றென்றைக்கும் அவர்களுக்கு அதிபதியாயிருப்பார். 26 நான் அவர்களோடே சமாதான உடன்படிக்கை செய்வேன்; அது அவர்களுக்கு நித்திய உடன்படிக்கையாயிருக்கும்; நான் அவர்களை நிலைப்படுத்தி, அவர்களை வர்த்திக்கப்பண்ணி, அவர்கள் நடுவிலே என் பரிசுத்த ஸ்தலத்தை என்றென்றைக்கும் ஸ்தாபிப்பேன். 27 என் வாசஸ்தலம் அவர்களிடத்தில் இருக்கும், நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். 28 அப்படியே என் பரிசுத்த ஸ்தலம் அவர்கள் நடுவிலே என்றென்றைக்கும் இருக்கும்போது, நான் இஸ்ரவேலைப் பரிசுத்தம்பண்ணுகிற கர்த்தர் என்று ஜாதிகள் அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.

எசேக்கியேல் 38

1 கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 2 மனுபுத்திரனே, மேசேக் தூபால் ஜாதிகளின் தலைமையான அதிபதியாகிய மாகோகு தேசத்தானான கோகுக்கு எதிராக நீ உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, 3 சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருவேன். 4 நான் உன்னைத் திருப்பி, உன் வாயில் துறடுகளைப் போட்டு, உன்னையும் உன்னுடைய எல்லாச் சேனையையும், குதிரைகளையும், சர்வாயுதந்தரித்த குதிரைவீரர்களையும், பரிசையும் கேடகமுமுடைய திரளான கூட்டத்தையும் புறப்படப்பண்ணுவேன்; அவர்கள் எல்லாரும் பட்டயங்களைப் பிடித்திருப்பார்கள். 5 அவர்களோடேகூடப் பெர்சியரும், எத்தியோப்பியரும், லீபியரும் இருப்பார்கள்; அவர்களெல்லாரும் கேடகம் பிடித்து, தலைச்சீராவுந் தரித்திருப்பவர்கள். 6 கோமேரும் அவனுடைய எல்லா இராணுவங்களும், வடதிசையிலுள்ள தோகர்மா வம்சத்தாரும் அவர்களுடைய எல்லா இராணுவங்களுமாகிய திரளான ஜனங்கள் உன்னுடனேகூட இருப்பார்கள். 7 நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு. 8 அநேக நாட்களுக்குப் பிற்பாடு நீ விசாரிக்கப்படுவாய்; பட்டயத்துக்கு நீங்கலாகி, பற்பல ஜனங்களிலிருந்து சேர்த்துக்கொள்ளப்பட்டு வந்தவர்களின் தேசத்தில் கடைசி வருஷங்களிலே வருவாய்; நெடுநாள் பாழாய்க்கிடந்து, பிற்பாடு ஜாதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் எல்லாரும் சுகத்தோடே குடியிருக்கும் இஸ்ரவேலின் மலைகளுக்கு விரோதமாய் வருவாய்; அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் குடியிருக்கும்போது, 9 பெருங்காற்றைப்போல் எழும்பிவருவாய்; நீயும் உன்னுடைய எல்லா இராணுவங்களும் உன்னோடேகூட இருக்கும் திரளான ஜனங்களும் கார்மேகம்போல் தேசத்தை மூடுவீர்கள். 10 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே பாழாய்க்கிடந்து திரும்பக் குடியேற்றப்பட்ட ஸ்தலங்களுக்கு விரோதமாகவும், ஜாதிகளிடத்திலிருந்து சேர்க்கப்பட்டதும், ஆடுகளையும் மாடுகளையும் ஆஸ்திகளையும் சம்பாதித்து, தேசத்தின் நடுவில் குடியிருக்கிறதுமான ஜனத்துக்கு விரோதமாகவும், நீ உன் கையைத் திருப்பும்படிக்கு, 11 உன் இருதயத்தில் யோசனைகள் எழும்ப, நீ பொல்லாத நினைவை நினைத்து, 12 நான் கொள்ளையிடவும் சூறையாடவும், மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப்போவேன்; நிர்விசாரமாய்ச் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய். 13 சேபா தேசத்தாரும், தேதான் தேசத்தாரும், தர்ஷீசின் வர்த்தகரும் அதினுடைய பாலசிங்கங்களான அனைவரும் உன்னை நோக்கி: நீ கொள்ளையிட அல்லவோ வருகிறாயென்றும், நீ சூறையாடி, வெள்ளியையும் பொன்னையும் ஆஸ்தியையும் எடுத்துக்கொள்ளுகிறதற்கும், ஆடுகளையும் மாடுகளையும் பிடிக்கிறதற்கும், மிகவும் கொள்ளையிடுகிறதற்கும் அல்லவோ உன்னுடைய கூட்டத்தைக் கூட்டினாயென்றும் சொல்லுவார்கள். 14 ஆகையால் மனுபுத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, கோகை நோக்கிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார்; என் ஜனமாகிய இஸ்ரவேல் சுகமாய்க் குடியிருக்கிற அக்காலத்திலே நீ அதை அறிவாய் அல்லவோ? 15 அப்பொழுது நீயும் உன்னுடனேகூடத் திரளான ஜனங்களும் வடதிசையிலுள்ள உன் ஸ்தானத்திலிருந்து வருவீர்கள்; அவர்கள் பெரிய கூட்டமும் திரளான சேனையுமாயிருந்து, எல்லாரும் குதிரைகளின்மேல் ஏறுகிறவர்களாயிருப்பார்கள். 16 நீ தேசத்தைக் கார்மேகம்போல் மூட, என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாக எழும்பிவருவாய்; கடைசி நாட்களிலே இது சம்பவிக்கும்; கோகே, ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உன்மூலமாய் நான் பரிசுத்தர் என்று விளங்கப்படுகிறதினால் அவர்கள் என்னை அறியும்படிக்கு உன்னை என் தேசத்துக்கு விரோதமாக வரப்பண்ணுவேன். 17 உன்னை அவர்களுக்கு விரோதமாக வரப்பண்ணுவேன் என்று பூர்வநாட்களிலே அநேக வருஷகாலமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு, அந்நாட்களிலே நான் குறித்துச்சொன்னவன் நீ அல்லவோ என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 18 இஸ்ரவேல் தேசத்துக்கு விரோதமாகக் கோகு வரும்காலத்தில் என் உக்கிரம் என் நாசியில் ஏறுமென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 19 அந்நாளிலே இஸ்ரவேல் தேசத்திலே பெரிய அதிர்ச்சி உண்டாகி, 20 என் பிரசன்னத்தினால் சமுத்திரத்து மச்சங்களும், ஆகாயத்துப் பறவைகளும், வெளியின் மிருகங்களும், தரையில் ஊருகிற சகல பிராணிகளும், தேசமெங்குமுள்ள சகல நரஜீவன்களும் அதிரும்; பர்வதங்கள் இடியும்; செங்குத்தானவைகள் விழும்; எல்லா மதில்களும் தரையிலே விழுந்துபோம் என்று என் எரிச்சலினாலும் என் சினத்தின் அக்கினியினாலும் நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். 21 என் எல்லா மலைகளிலும் பட்டயத்தை அவனுக்கு விரோதமாக வரவழைப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அவனவன் பட்டயம் அவனவன் சகோதரனுக்கு விரோதமாயிருக்கும். 22 கொள்ளைநோயினாலும் இரத்தம் சிந்துதலினாலும் நான் அவனோடே வழக்காடி, அவன்மேலும் அவன் இராணுவங்களின்மேலும் அவனோடிருக்கும் திரளான ஜனங்களின்மேலும் வெள்ளமாய் அடிக்கும் மழையையும், பெருங்கல்மழையையும், அக்கினியையும், கந்தகத்தையும் வருஷிக்கப்பண்ணுவேன். 23 இவ்விதமாய் நான் அநேக ஜாதிகளின் கண்களுக்கு முன்பாக என் மகத்துவத்தையும் என் பரிசுத்தத்தையும் விளங்கப்பண்ணி, அறியப்படுவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.

எசேக்கியேல் 39

1 இப்போதும் மனுபுத்திரனே, நீ கோகுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்துச் சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், மேசேக் தூபால் ஜாதிகளின் அதிபதியாகிய கோகே, இதோ, நான் உனக்கு விரோதமாக வருகிறேன். 2 நான் உன்னைத் திருப்பி உன்னை ஆறு துறடுகளால் இழுத்து, உன்னை வடபுறங்களிலிருந்து எழும்பவும் இஸ்ரவேல் மலைகளில் வரவும்பண்ணி, 3 உன் வில்லை உன் இடதுகையிலிருந்து தட்டிவிட்டு, உன் அம்புகளை உன் வலதுகையிலிருந்து விழப்பண்ணுவேன். 4 நீயும் உன் எல்லா இராணுவங்களும் உன்னோடிருக்கிற ஜனங்களும் இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள்; உராய்ஞ்சுகிற சகலவித பட்சிகளுக்கும் வெளியின் மிருகங்களுக்கும் உன்னை இரையாகக் கொடுப்பேன். 5 விசாலமான வெளியில் விழுவாய்; நான் இதைச் சொன்னேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார். 6 நான் மாகோகிடத்திலும் தீவுகளில் நிர்விசாரமாய்க் குடியிருக்கிறவர்களிடத்திலும் அக்கினியை அனுப்புவேன்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். 7 இவ்விதமாய் நான் என் ஜனமாகிய இஸ்ரவேலின் நடுவிலே என் பரிசுத்தநாமத்தைத் தெரிவிப்பேன்; என் பரிசுத்த நாமத்தை இனிப் பரிசுத்தக்குலைச்சலாக்கவொட்டேன்; அதினால் நான் இஸ்ரவேலில் பரிசுத்தராகிய கர்த்தர் என்று புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள். 8 இதோ, அது வந்தது, அது சம்பவித்தது என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் சொன்ன நாள் இதுவே. 9 இஸ்ரவேல் பட்டணங்களின் குடிகள் வெளியே போய், கேடகங்களும், பரிசைகளும், வில்லுகளும், அம்புகளும், வளைதடிகளும், ஈட்டிகளுமாகிய ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; ஏழுவருஷம் அவைகளை எடுத்து எரிப்பார்கள். 10 அவர்கள் வெளியிலிருந்து விறகு கொண்டுவராமலும் காடுகளில் வெட்டாமலும், ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; அவர்கள் தங்களைக் கொள்ளையிட்டவர்களைக் கொள்ளையிட்டு, தங்களைச் சூறையாடினவர்களைச் சூறையாடுவார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 11 அந்நாளில் இஸ்ரவேல் தேசத்திலே சமுத்திரத்துக்குக் கிழக்கே பிரயாணக்காரரின் பள்ளத்தாக்கைப் புதைக்கிற ஸ்தானமாகக் கோகுக்குக் கொடுப்பேன்; அது வழிப்போக்கர் மூக்கைப் பொத்திக்கொண்டுபோகப்பண்ணும்; அங்கே கோகையும் அவனுடைய எல்லாச் சேனையையும் புதைத்து, அதை ஆமோன்கோகின் பள்ளத்தாக்கு என்பார்கள். 12 இஸ்ரவேல் வம்சத்தார், தேசத்தைச் சுத்தம்பண்ணும்படிக்கு அவர்களைப் புதைத்துத்தீர ஏழுமாதம் செல்லும். 13 தேசத்தின் ஜனங்களெல்லாரும் புதைத்துக்கொண்டிருப்பார்கள்; நான் மகிமைப்படும் அந்நாளிலே அது அவர்களுக்குக் கீர்த்தியாக இருக்கும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 14 தேசத்தைச் சுத்தம்பண்ணுவதற்காக அதில் கிடக்கும் மற்றப் பிரேதங்களைப் புதைக்கும்படிக்கு நித்தமும் தேசத்தில் சுற்றித்திரியும் மனுஷரையும், சுற்றித்திரிகிறவர்களோடேகூடப் புதைக்கிறவர்களையும் தெரிந்து நியமிப்பார்கள்; ஏழுமாதங்கள் முடிந்தபின்பும் இவர்கள் தேடிக்கொண்டிருப்பார்கள். 15 தேசத்தில் சுற்றித்திரிகிறவர்கள் திரிந்துகொண்டிருப்பார்கள்; யாராவது ஒருவன் மனுஷனின் எலும்பைக் காணும்போது புதைக்கிறவர்கள் அதை ஆமோன்கோகுடைய பள்ளத்தாக்கிலே புதைக்குமட்டும் அதினண்டையிலே ஒரு அடையாளத்தை நாட்டுவான். 16 அந்த நகரத்துக்கு ஆமோனா என்று பெயரிடப்படும்; இவ்விதமாய்த் தேசத்தைச் சுத்தம்பண்ணுவார்கள். 17 மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ சகலவித பட்சிகளையும் வெளியில் இருக்கிற சகல மிருகங்களையும் நோக்கி: நீங்கள் ஏகமாய்க் கூடிக்கொண்டு, இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகமாகிய மகா யாகத்துக்குச் சுற்றிலுமிருந்து வந்துசேர்ந்து, மாம்சம் தின்று இரத்தங்குடியுங்கள். 18 நீங்கள் பராக்கிரமசாலிகளின் மாம்சத்தைத் தின்று, பூமியினுடைய பிரபுக்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள்; அவர்கள் எல்லாரும் பாசானிலே கொழுத்துப்போன ஆட்டுக்கடாக்களுக்கும், ஆட்டுக்குட்டிகளுக்கும் வெள்ளாட்டுக் கடாக்களுக்கும் காளைகளுக்கும் சமானமானவர்கள். 19 நான் உங்களுக்காகச் செய்யும் யாகத்திலே நீங்கள் திருப்தியாகுமளவும் கொழுப்பைத் தின்று, வெறியாகுமளவும் இரத்தத்தைக் குடிப்பீர்கள். 20 இவ்விதமாய் என் பந்தியிலே குதிரைகளையும், இரதவீரர்களையும், பராக்கிரமசாலிகளையும், சகல யுத்தவீரர்களையும் தின்று, திருப்தியாவீர்களென்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல்லு. 21 இவ்விதமாய் என் மகிமையை நான் புறஜாதிகளுக்குள்ளே விளங்கப்பண்ணுவேன்; நான் செய்த என் நியாயத்தையும் அவர்கள்மேல் நான் வைத்த என் கையையும் எல்லா ஜாதிகளும் காண்பார்கள். 22 அன்றுமுதல் என்றும் நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று இஸ்ரவேல் வம்சத்தார் அறிந்துகொள்வார்கள். 23 இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் அக்கிரமத்தினிமித்தமே சிறைப்பட்டுப்போனார்கள் என்று அப்பொழுது புறஜாதிகள் அறிந்துகொள்வார்கள்; அவர்கள் எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினபடியால், என் முகத்தை நான் அவர்களுக்கு மறைத்து, அவர்கள் சத்துருக்களின் கையில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்கள் அனைவரும் பட்டயத்தால் விழுந்தார்கள். 24 அவர்களுடைய அசுத்தத்துக்குத் தக்கதாகவும், அவர்களுடைய மீறுதல்களுக்குத்தக்கதாகவும், நான் அவர்களுக்குச் செய்து, என் முகத்தை அவர்களுக்கு மறைத்தேன். 25 ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: 26 அவர்கள் தங்கள் அவமானத்தையும், பயப்படுத்துவார் இல்லாமல், தாங்கள் சுகமாய்த் தங்கள் தேசத்தில் குடியிருக்கும்போது எனக்கு விரோதமாய்த் தாங்கள் செய்த எல்லாத் துரோகத்தையும் சுமந்து தீர்த்தபின்பு, நான் யாக்கோபின் சிறையிருப்பைத் திருப்பி, இஸ்ரவேல் வம்சமனைத்துக்கும் இரங்கி, என் பரிசுத்த நாமத்துக்காக வைராக்கியமாயிருப்பேன். 27 நான் அவர்களை ஜனசதளங்களிலிருந்து திரும்பிவரப்பண்ணி, அவர்களுடைய பகைஞரின் தேசங்களிலிருந்து அவர்களைக் கூட்டிக்கொண்டுவந்து, திரளான ஜாதிகளுடைய கண்களுக்கு முன்பாக அவர்களுக்குள் நான் பரிசுத்தர் என்று விளங்கும்போது, 28 தங்களைப் புறஜாதிகளிடத்தில் சிறைப்பட்டுப்போகப்பண்ணின நான் தங்களில் ஒருவரையும் அங்கே அப்புறம் வைக்காமல், தங்களைத் தங்கள் சுயதேசத்திலே திரும்பக்கூட்டிக்கொண்டுவந்தேன் என்பதினால், நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள். 29 நான் இஸ்ரவேல் வம்சத்தார்மேல் என் ஆவியை ஊற்றினபடியினால் என் முகத்தை இனி அவர்களுக்கு மறைக்கமாட்டேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.

எசேக்கியேல் 40

1 நாங்கள் சிறைப்பட்டுப்போன இருபத்தைந்தாம் வருஷத்தின் ஆரம்பத்தில் முதலாம் மாதம் பத்தாந்தேதியாகிய அன்றே கர்த்தருடைய கை என்மேல் அமர்ந்தது, அவர் என்னை அவ்விடத்துக்குக் கொண்டுபோனார்; அப்பொழுது நகரம் அழிக்கப்பட்டுப் பதினாலு வருஷமாயிற்று. 2 தேவதரிசனங்களில் அவர் என்னை இஸ்ரவேல் தேசத்துக்குக் கொண்டுபோய், என்னை மகா உயரமான ஒரு மலையின்மேல் நிறுத்தினார்; அதின்மேல் தெற்காக ஒரு நகரம் கட்டியிருக்கிறதுபோல் காணப்பட்டது. 3 அவர் என்னை அங்கே கொண்டுபோனார்; இதோ, அங்கே ஒரு புருஷன் இருந்தார்; அவருடைய தோற்றம் வெண்கலமாயிருந்தது; அவர் கையில் சணற்கயிறும் ஒரு அளவுகோலும் இருந்தது; அவர் வாசலிலே நின்றார். 4 அந்தப் புருஷன் என்னை நோக்கி: மனுபுத்திரனே, நீ கண்ணாரப்பார்த்து, காதாரக் கேட்டு, நான் உனக்குக் காண்பிப்பதெல்லாவற்றின் மேலும் உன் மனதை வை; நான் உனக்கு அவைகளைக் காண்பிக்கும்படி நீ இங்கே கொண்டுவரப்பட்டாய்; நீ காண்பதையெல்லாம் இஸ்ரவேல் வம்சத்தாருக்குத் தெரிவி என்றார். 5 இதோ, ஆலயத்துக்குப் புறம்பே சுற்றிலும் ஒரு மதில் இருந்தது; அந்தப் புருஷன் கையிலே ஆறுமுழ நீளமான ஒரு அளவுகோல் இருந்தது; ஒவ்வொரு முழமும் நமது கைமுழத்திலும் நாலு விரற்கடை அதிகமானது; அவர் அந்த மதிலை அளந்தார்; அகலம் ஒரு கோலாகவும் உயரம் ஒரு கோலாகவும் இருந்தது. 6 பின்பு அவர் கிழக்குமுக வாசலுக்கு வந்து, அதின் படிகளின்மேல் ஏறி, வாசற்படியை ஒரு கோல் அகலமாகவும், மறுவாசற்படியை ஒரு கோல் அகலமாகவும் அளந்தார். 7 ஒவ்வொரு அறையும் ஒரு கோல் நீளமும் ஒரு கோல் அகலமுமாயிருந்தது; அறைவீடுகளுக்கு நடுவே ஐந்துமுழ இடம் விட்டிருந்தது; வாசலின் மண்டபத்தருகே உள்வாசற்படி ஒரு கோலளவாயிருந்தது. 8 வாசலின் மண்டபத்தையும் உள்ளே ஒரு கோலளவாக அளந்தார். 9 பின்பு வாசலின் மண்டபத்தை எட்டுமுழமாகவும், அதின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும் அளந்தார்; வாசலின் மண்டபம் உட்புறத்திலிருந்தது. 10 கீழ்த்திசைக்கெதிரான வாசலின் அறைகள் இந்தப்புறத்தில் மூன்றும் அந்தப்புறத்தில் மூன்றுமாயிருந்தது; அவைகள் மூன்றுக்கும் ஒரே அளவும், இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் இருந்த தூணாதாரங்களுக்கு ஒரே அளவும் இருந்தது. 11 பின்பு வாசல் நடையின் அகலத்தைப் பத்துமுழமாகவும், வாசலின் நீளத்தைப் பதின்மூன்று முழமாகவும் அளந்தார். 12 அறைகளுக்குமுன்னே இந்தப்புறத்தில் ஒரு முழ இடமும் அந்தப்புறத்தில் ஒரு முழ இடமும் இருந்தது; ஒவ்வொரு அறையும் இந்தப்புறத்தில் ஆறு முழமும் அந்தப்புறத்தில் ஆறு முழமுமாயிருந்தது. 13 பின்பு வாசலில் இருந்த அறையின் மெத்தையினின்று மற்ற அறையின் மெத்தைமட்டும் இருபத்தைந்து முழமாக அளந்தார்; கதவுக்குக் கதவு நேராயிருந்தது. 14 தூணாதாரங்களை அறுபது முழமாக அளந்தார்; இந்தத் தூணாதாரங்களின் அருகே சுற்றிலும் முன்வாசலின் முற்றம் இருந்தது. 15 பிரவேச வாசலின் முகப்புத்துவக்கி, உட்புறவாசல் மண்டபமுகப்புமட்டும் ஐம்பது முழமாயிருந்தது. 16 வாசலுக்கு உட்புறமாகச் சுற்றிலுமுள்ள அறைகளுக்கும் அவைகளின் தூணாதாரங்களுக்கும் ஒடுக்கமான ஜன்னல்கள் இருந்தது; மண்டபங்களிலும் அப்படியே இருந்தது; உட்புறமாய்ச் சுற்றிலும் அந்த ஜன்னல்களும் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது. 17 பின்பு என்னை வெளிப்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே அறைவீடுகளும், பிராகாரத்தின் சுற்றிலும் பதித்த தளவரிசையும் இருந்தது; அந்தத் தளவரிசையின்மேல் முப்பது அறைவீடுகள் இருந்தது. 18 வாசலுக்குப் பக்கத்திலும் வாசல்களின் நீளத்துக்கு எதிரிலுமுள்ள அந்தத் தளவரிசை தாழ்வான தளவரிசையாயிருந்தது. 19 பின்பு அவர் கீழ்வாசலின் முகப்புத்துவக்கி, உட்பிராகாரத்துப் புறமுகப்புமட்டுமுள்ள விசாலத்தை அளந்தார்; அது கிழக்கும் வடக்கும் நூறு முழமாயிருந்தது. 20 வெளிப்பிராகாரத்துக்கு அடுத்த வடதிசைக்கு எதிரான வாசலின் நீளத்தையும் அகலத்தையும் அளந்தார். 21 அதற்கு இப்புறத்தில் மூன்று அறைகளும் அப்புறத்தில் மூன்று அறைகளும் இருந்தது; அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் முதல் வாசலின் அளவுக்குச் சரியாயிருந்தது; அதின் நீளம் ஐம்பது முழமும், அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது. 22 அதின் ஜன்னல்களும், அதின் மண்டபங்களும், அதின்மேல் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும், கீழ்த்திசைக்கு எதிரான வாசலின் அளவுக்குச் சரியாயிருந்தது; அதில் ஏறுகிறதற்கு ஏழு படிகளிருந்தது; அதின் மண்டபங்கள் அவைகளுக்கு முன்னாக இருந்தது. 23 வடதிசையிலும் கீழ்த்திசையிலுமுள்ள ஒவ்வொரு வாசலுக்கு எதிராக உட்பிராகாரத்துக்கும் வாசல்கள் இருந்தது; ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறு முழமாக அளந்தார். 24 பின்பு என்னைத் தென்திசைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அங்கே தென்திசைக்கு எதிரான வாசல் இருந்தது; அதின் தூணாதாரங்களையும் அதின் மண்டபங்களையும் அதற்குரிய அளவின்படி அளந்தார். 25 அந்த ஜன்னல்களுக்குச் சரியாக அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பதுமுழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது. 26 அதில் ஏறுகிறதற்கு ஏழு படிகளிருந்தது; அதற்கு முன்பாக அதின் மண்டபங்களும் இருந்தது; அதின் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இந்தப்புறத்தில் ஒன்றும் அந்தப்புறத்தில் ஒன்றுமாக இருந்தது. 27 உட்பிராகாரத்துக்கும் ஒரு வாசல் தென்திசைக்கு எதிராக இருந்தது; தென்திசையிலுள்ள ஒரு வாசல்துவக்கி மற்ற வாசல்மட்டும் நூறுமுழமாக அளந்தார். 28 பின்பு அவர் தெற்கு வாசலால் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாகத் தெற்கு வாசலையும் அளந்தார். 29 அதின் அறைகளும், அதின் தூணாதாரங்களும், அதின் மண்டபங்களும், அந்த அளவுக்குச் சரியாக இருந்தது; அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது. 30 இருபத்தைந்து முழ நீளமும் ஐந்துமுழ அகலமுமான மண்டபங்கள் சுற்றிலும் இருந்தது. 31 அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப்படிகள் இருந்தது. 32 பின்பு அவர் கீழ்த்திசை வழியாய் என்னை உட்பிராகாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாக அந்த வாசலையும் அளந்தார். 33 அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அந்த அளவுகளுக்குச் சரியாக இருந்தது; அதற்கும் அதின் மண்டபங்களுக்கும் ஜன்னல்கள் சுற்றிலும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது. 34 அதின் மண்டபங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; அதின் தூணாதாரங்களில் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் இருந்தது; அதில் ஏறுகிறதற்கு எட்டுப் படிகள் இருந்தது. 35 பின்பு அவர் என்னை வடக்குவாசலுக்கு அழைத்துக்கொண்டுபோய், அந்த அளவுக்குச் சரியாய் அதின் வாசலை அளந்தார். 36 அதின் அறைகளும் அதின் தூணாதாரங்களும் அதின் மண்டபங்களும் அளக்கப்பட்டது; அதைச் சுற்றி ஜன்னல்களும் இருந்தது; நீளம் ஐம்பது முழமும் அகலம் இருபத்தைந்து முழமுமாயிருந்தது. 37 அதின் தூணாதாரங்கள் வெளிப்பிராகாரத்தில் இருந்தது; இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் அதின் தூணாதாரங்களில் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; அதில் ஏறுவதற்கு எட்டுப் படிகள் இருந்தது. 38 அதின் அறைகளும் அதின் கதவுகளும் வாசல்களின் தூணாதாரங்களுக்கு அருகில் இருந்தது; அங்கே தகனபலிகளைக் கழுவுவார்கள். 39 வாசலின் மண்டபத்திலே இந்தப்புறத்தில் இரண்டு பீடங்களும் அந்தப்புறத்தில் இரண்டு பீடங்களும் இருந்தது; அவைகளின்மேல் தகனபலியையும் பாவநிவாரண பலியையும் குற்றநிவாரணபலியையும் செலுத்துவார்கள். 40 வடக்குவாசலுக்குள் பிரவேசிக்கிறதற்கு ஏறிப்போகிற வெளிப்புறத்திலே இரண்டு பீடங்களும், வாசலின் மண்டபத்திலுள்ள மறுபுறத்திலே இரண்டு பீடங்களும் இருந்தது. 41 வாசலின் அருகே இந்தப்புறத்தில் நாலு பீடங்களும், அந்தப்புறத்தில் நாலு பீடங்களும், ஆக எட்டுப் பீடங்கள் இருந்தது; அவைகளின்மேல் பலிகளைச் செலுத்துவார்கள். 42 தகனபலிக்குரிய நாலு பீடங்கள் வெட்டின கல்லாயிருந்தது; அவைகள் ஒன்றரை முழ நீளமும், ஒன்றரை முழ அகலமும், ஒரு முழ உயரமுமாயிருந்தது; அவைகளின்மேல் தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்துகிற ஆயுதங்களை வைப்பார்கள். 43 நாலு விரற்கடையான முளைகள் உள்ளே சுற்றிலும் வரிசையாய் அடிக்கப்பட்டிருந்தது; செலுத்தும் பலிகளின் மாம்சம் பீடங்களின்மேல் வைக்கப்படும். 44 உட்பிராகாரத்திலே உள்வாசலுக்குப் புறம்பாகச் சங்கீதக்காரரின் அறைவீடுகள் இருந்தது; அவைகளில் வடக்கு வாசலின் பக்கமாக இருந்தவைகள் தென்திசைக்கு எதிராகவும், கிழக்கு வாசலின் பக்கமாக இருந்த வேறொரு வரிசை வடதிசைக்கு எதிராகவும் இருந்தது. 45 பின்பு அவர் என்னை நோக்கி: தென்திசைக்கு எதிராயிருக்கிற இந்த அறை ஆலயக்காவலைக் காக்கிற ஆசாரியர்களுடையது. 46 வடதிசைக்கு எதிராயிருக்கிற அறையோ, பலிபீடத்தின் காவலைக் காக்கிற ஆசாரியர்களுடையது; இவர்கள் லேவியின் புத்திரரில் கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்காக அவரிடத்தில் சேருகிற சாதோக்கின் புத்திரர் என்றார். 47 அவர் பிராகாரத்தை நூறுமுழ நீளமாகவும் நூறுமுழ அகலமாகவும் அளந்தார்; அது சதுரமாயிருந்தது; பலிபீடமோ ஆலயத்துக்கு முன்பாக இருந்தது. 48 பின்பு அவர் என்னை ஆலய மண்டபத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், மண்டபத்தின் தூணாதாரத்தை இந்தப்புறத்தில் ஐந்து முழமும் அந்தப்புறத்தில் ஐந்து முழமுமாக அளந்தார்; வாசலின் அகலம் இந்தப்புறம் மூன்று முழமும் அந்தப்புறம் மூன்று முழமுமாயிருந்தது. 49 மண்டபத்தின் நீளம் இருபது முழமும், அகலம் பதினொரு முழமுமாயிருந்தது; அதற்கு ஏறிப்போகிற படிகளும் இருந்தது; தூணாதாரங்களிலே இந்தப்புறத்தில் ஒரு தூணும் அந்தப்புறத்தில் ஒரு தூணும் இருந்தது.

எசேக்கியேல் 41

1 பின்பு அவர் என்னைத் தேவாலயத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், தூணாதாரங்களை இந்தப்புறத்தில் ஆறுமுழ அகலமும் அந்தப்புறத்தில் ஆறுமுழ அகலமுமாக அளந்தார்; அது வாசஸ்தலத்தின் அகல அளவாம். 2 வாசல் நடையின் அகலம் பத்து முழமும் வாசல் நடையின் பக்கங்கள் இந்தப்புறத்தில் ஐந்து முழமும் அந்தப்புறத்தில் ஐந்து முழமுமாயிருந்தது; அதின் நீளத்தை நாற்பது முழமும் அகலத்தை இருபது முழமுமாக அளந்தார். 3 பின்பு அவர் உள்ளே போய், வாசல் நடையின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும், வாசல் நடையை ஆறுமுழமாகவும், வாசல் நடையின் அகலத்தை ஏழுமுழமாகவும் அளந்தார். 4 பின்பு அவர் தேவாலயத்தின் முன்புறத்திலே அதின் நீளத்தை இருபதுமுழமாகவும், அதின் அகலத்தை இருபது முழமாகவும் அளந்து, என்னை நோக்கி: இது மகா பரிசுத்த ஸ்தலம் என்றார். 5 பின்பு அவர் ஆலயத்தின் சுவரை ஆறு முழமாகவும், ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த சுற்றுக்கட்டினுடைய அகலத்தை நாலுமுழமாகவும் அளந்தார். 6 இந்தச் சுற்றுக்கட்டுகள் பக்கக்கட்டின்மேல் பக்கக்கட்டான வரிசைகளாய் முப்பத்துமூன்று இருந்தது; அவைகள் ஆலயத்தின் சுவருக்குள் ஊன்றியிராமல், சுற்றுக்கட்டுகளுக்காகச் சுற்றிலும் அவைகள் ஊன்றும்படிக்கு ஆலயத்துக்கு அடுத்திருந்த ஒட்டுச்சுவரிலே பாய்ந்திருந்தது. 7 உயர உயரச் சுற்றிலும் சுற்றுக்கட்டுகளுக்கு அகலம் அதிகமாயிருந்தது; ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி அகலம் வரவர அதிகமாயிருந்தது; ஆதலால் இவ்விதமாய்க் கீழ்நிலையிலிருந்து நடுநிலைவழியாய் மேல்நிலைக்கு ஏறும் வழியிருந்தது. 8 மாளிகைக்குச் சுற்றிலும் இருந்த உயரத்தையும் பார்த்தேன், சுற்றுக்கட்டுகளின் அஸ்திபாரங்கள் ஆறு பெரிய முழங்கொண்ட ஒரு முழக்கோலின் உயரமாயிருந்தது. 9 புறம்பே சுற்றுக்கட்டுக்கு இருந்த சுவரின் அகலம் ஐந்துமுழமாயிருந்தது; ஆலயத்துக்கு இருக்கும் சுற்றுக்கட்டுகளின் மாளிகையிலே வெறுமையாய் விட்டிருந்த இடங்களும் அப்படியே இருந்தது. 10 ஆலயத்தைச் சுற்றிலும் அறைவீடுகளுக்கு நடுவாக இருந்த விசாலம் இருபது முழமாயிருந்தது. 11 சுற்றுக்கட்டினுடைய வாசல் நடைகள், வெறுமையாய் விட்டிருந்த இடங்களிலிருந்து, ஒரு வாசல் நடை வடக்கேயும், ஒரு வாசல் நடை தெற்கேயும் இருந்தது; வெறுமையாய் விட்டிருந்த இடங்களின் விசாலம் சுற்றிலும் ஐந்து முழமாயிருந்தது. 12 மேற்றிசையிலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்னிருந்த மாளிகைமட்டும் அகலம் எழுபது முழமும், மாளிகையினுடைய சுவரின் அகலம் சுற்றிலும் ஐந்து முழமும், அதினுடைய நீளம் தொண்ணூறு முழமுமாயிருந்தது. 13 அவர் ஆலயத்தை நூறு முழ நீளமாகவும், பிரத்தியேகமான இடத்தையும் மாளிகையையும் அதின் சுவர்களையும் நூறு முழ நீளமாகவும் அளந்தார். 14 ஆலயத்தின் முற்புறமும் கிழக்குக்கு எதிரான பிரத்தியேகமான இடமும் இருந்த அகலம் நூறு முழமாயிருந்தது. 15 பிரத்தியேகமான இடத்தின் பின்புறமாக அதற்கு எதிரே இருந்த மாளிகையின் நீளத்தையும், அதற்கு இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் இருந்த நடைகாவணங்களையும் அளந்தார்; உள்ளான தேவாலயமும் முற்றத்தின் மண்டபங்களும் உட்பட நூறு முழமாயிருந்தது. 16 வாசற்படிகளும், ஒடுக்கமான ஜன்னல்களும், மூன்று பக்கங்களில் சுற்றிலும் வாசல்களுக்கு எதிரான நடைகாவணங்களும் சுற்றிலும் தரைதுவக்கி ஜன்னல்கள் மட்டாகப் பலகை அடித்திருந்தது; ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தது. 17 வாசலின் மேலேதுவக்கி ஆலயத்தின் உட்புறமும் வெளிப்புறமும் சுற்றிலும் சுவரின் உட்புறமும் வெளிப்புறமும் எல்லாம் அளவிட்டிருந்தது. 18 கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; கேருபீனுக்கும் கேருபீனுக்கும் நடுவாக ஒவ்வொரு பேரீச்சமரம் இருந்தது; ஒவ்வொரு கேருபீனுக்கும் இரண்டிரண்டு முகங்கள் இருந்தது. 19 பேரீச்சமரத்துக்கு இந்தண்டையில் மனுஷமுகமும், பேரீச்சமரத்துக்கு அந்தண்டையில் சிங்கமுகமும் இருந்தது; இப்படியே ஆலயத்தைச் சுற்றிலும் செய்திருந்தது. 20 தரைதுவக்கி வாசலின் மேற்புறமட்டும், தேவாலயத்தின் சுவரிலும், கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது. 21 தேவாலயத்தின் கதவு நிலைகள் சதுரமும், பரிசுத்த ஸ்தலத்தினுடைய முகப்பின் உருவம் அந்த உருவத்துக்குச் சரியுமாயிருந்தது. 22 மரத்தினால் செய்யப்பட்ட பலிபீடத்தின் உயரம் மூன்று முழமும், அதின் நீளம் இரண்டு முழமுமாயிருந்தது; அதின் கோடிகளும் அதின் விளிம்புகளும் அதின் பக்கங்களும் மரத்தினால் செய்யப்பட்டிருந்தது. அவர் என்னை நோக்கி: இது கர்த்தருடைய சந்நிதியிலிருக்கிற பீடம் என்றார். 23 தேவாலயத்துக்கும் பரிசுத்த ஸ்தலத்துக்கும் இரண்டு வாசல்களும், 24 வாசல்களுக்கு மடக்குக் கதவுகளாகிய இரட்டைக் கதவுகளும் இருந்தது; ஒரு வாசலுக்கு இரண்டு கதவுகளும் மற்ற வாசலுக்கு இரண்டு கதவுகளும் இருந்தது. 25 சுவர்களில் சித்திரிக்கப்பட்டிருந்ததுபோல் ஆலயத்தினுடைய கதவுகளிலும் கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; புறம்பே மண்டபத்தின் முன்பாக உத்திரங்கள் வைத்திருந்தது. 26 மண்டபத்தின் பக்கங்களில் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், ஆலயத்தின் சுற்றுக்கட்டுகளிலும் ஒடுக்கமான ஜன்னல்களும் சித்திரிக்கப்பட்ட பேரீச்சமரங்களும் உத்திரங்களும் இருந்தது.

எசேக்கியேல் 42

1 பின்பு அவர் என்னை வடதிசையின் வழியாக வெளிப்பிராகாரத்திலே புறப்படப்பண்ணி, பிரத்தியேகமான இடத்துக்கு எதிராகவும், மாளிகைக்கு எதிராகவும் வடக்கே இருந்த அறைவீடுகளுக்கு என்னை அழைத்துக்கொண்டுபோனார். 2 நூறு முழ நீளத்துக்கு முன்னே வடக்கு வாசல் இருந்தது; அவ்விடத்து அகலம் ஐம்பது முழம். 3 உட்பிராகாரத்தில் இருந்த இருபது முழத்துக்கு எதிராகவும் வெளிப்பிராகாரத்தில் இருந்த தளவரிசைக்கு எதிராகவும் ஒன்றுக்கொன்று எதிரான மூன்று நிலைகளுள்ள நடைகாவணங்கள் இருந்தது. 4 உட்புறத்திலே அறைவீடுகளின் முன்பாகப் பத்து முழ அகலமான வழியும், ஒரு முழ அகலமான பாதையும் இருந்தது; அவைகளின் வாசல்கள் வடக்கே இருந்தது. 5 உயர இருந்த அறைவீடுகள் அகலக்கட்டையாயிருந்தது; நடைகாவணங்கள் கீழேயிருக்கிற அறைவீடுகளுக்கும் நடுவேயிருக்கிறவைகளுக்கும் அதிக உயரமான மாளிகையாயிருந்தது. 6 அவைகள் மூன்று அடுக்குகளாயிருந்தது; பிராகாரங்களின் தூண்களுக்கு இருந்ததுபோல, அவைகளுக்குத் தூண்களில்லை; ஆகையால் தரையிலிருந்து அளக்க, அவைகள் கீழேயும் நடுவேயும் இருக்கிறவைகளைப்பார்க்கிலும் அகலக்கட்டையாயிருந்தது. 7 புறம்பே அறைவீடுகளுக்கு எதிரே வெளிப்பிராகாரத் திசையில் அறைவீடுகளுக்கு முன்பாக இருந்த மதிலின் நீளம் ஐம்பது முழம். 8 வெளிப்பிராகாரத்திலுள்ள அறைவீடுகளின் நீளம் ஐம்பது முழம், தேவாலயத்துக்கு முன்னே நூறு முழமாயிருந்தது. 9 கிழக்கே வெளிப்பிராகாரத்திலிருந்து அந்த அறைவீடுகளுக்குள் பிரவேசிக்கிற நடை அவைகளின் கீழே இருந்தது. 10 கீழ்த்திசையான பிராகாரத்து மதிலின் அகலத்திலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்பாகவும் மாளிகைக்கு முன்பாகவும் அறைவீடுகளும் இருந்தது. 11 அவைகளுக்கு முன்னான வழியிலே அந்த அறைவீடுகள் நீளத்திலும் அகலத்திலும், எல்லா வாசற்படிகளிலும், திட்டங்களிலும், வாசல் நடைகளிலும் வடதிசையான அறைவீடுகளின் சாயலாயிருந்தது. 12 தென்திசையான அறைவீடுகளின் வாசல் நடைக்கு ஒப்பாக ஒரு வாசல் நடைவழியின் முகப்பில் இருந்தது; கீழ்த்திசையில் அவைகளுக்குப் பிரவேசிக்கும் இடத்திலே செம்மையான மதிலின் எதிரே இருந்த வழியின் முகப்பில் ஒரு வாசலிருந்தது. 13 அவர் என்னை நோக்கி: பிரத்தியேகமான இடத்துக்கு முன்னிருக்கிற வடபுறமான அறைவீடுகளும், தென்புறமான அறைவீடுகளும், பரிசுத்த அறைவீடுகளாயிருக்கிறது; கர்த்தரிடத்தில் சேருகிற ஆசாரியர் அங்கே மகா பரிசுத்தமானதையும், போஜனபலியையும், பாவநிவாரண பலியையும், குற்றநிவாரண பலியையும் வைப்பார்கள்; அந்த ஸ்தலம் பரிசுத்தமாயிருக்கிறது. 14 ஆசாரியர் உட்பிரவேசிக்கும்போது, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து வெளிப்பிராகாரத்துக்கு வராததற்குமுன்னே, அங்கே தாங்கள் ஆராதனைசெய்து, உடுத்தியிருந்த வஸ்திரங்களைக் கழற்றிவைப்பார்கள்; அவ்வஸ்திரங்கள் பரிசுத்தமானவைகள்; வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, ஜனத்தின் பிராகாரத்திலே போவார்கள் என்றார். 15 அவர் உள்வீட்டை அளந்து தீர்ந்தபின்பு, கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் என்னை வெளியே அழைத்துக்கொண்டுபோய், அதைச் சுற்றிலும் அளந்தார். 16 கீழ்த்திசைப் பக்கத்தை அளவுகோலால் அளந்தார்; அது அளவுகோலின்படியே சுற்றிலும் ஐந்நூறு கோலாயிருந்தது. 17 வடதிசைப்பக்கத்தை அளவுகோலால் சுற்றிலும் ஐந்நூறு கோலாய் அளந்தார். 18 தென்திசைப்பக்கத்தை அளவுகோலால் ஐந்நூறு கோலாய் அளந்தார். 19 மேற்றிசைப்பக்கத்துக்குத் திரும்பி அதை அளவுகோலால் ஐந்நூறு கோலாய் அளந்தார். 20 நாலு பக்கங்களிலும் அதை அளந்தார்; பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமில்லாததற்கும் வித்தியாசம்பண்ணும்படிக்கு அதற்கு ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான மதில் சுற்றிலும் இருந்தது.

எசேக்கியேல் 43

1 பின்பு அவர் என்னைக் கீழ்த்திசைக்கு எதிர் வாசலாகிய வாசலுக்கு அழைத்துக்கொண்டுபோனார். 2 இதோ, இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கீழ்த்திசையிலிருந்து வந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்தின் இரைச்சலைப்போல இருந்தது; அவருடைய மகிமையினால் பூமி பிரகாசித்தது. 3 நான் கண்ட இந்தத் தரிசனம் நகரத்தை அழிக்கவந்தபோது கண்ட தரிசனம்போல இருந்தது; இந்தத் தரிசனங்கள் கேபார் நதியண்டையிலே நான் கண்டிருந்த தரிசனத்தைப்போலும் இருந்தது; நான் முகங்குப்புற விழுந்தேன். 4 கர்த்தருடைய மகிமை கீழ்த்திசைக்கு எதிரான வாசல்வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசித்தது. 5 அப்பொழுது ஆவி என்னை எடுத்து, உட்பிராகாரத்திலே கொண்டுபோய்விட்டது; இதோ, கர்த்தருடைய மகிமை ஆலயத்தை நிரப்பிற்று. 6 அவர் ஆலயத்திலிருந்து என்னோடே பேசுகிறதைக் கேட்டேன்; அந்தப் புருஷன் என்னண்டையில் நின்றிருந்தார். 7 அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இது நான் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே என்றென்றைக்கும் வாசம்பண்ணும் என் சிங்காசனமும் என் பாதபீடத்தின் ஸ்தானமுமாயிருக்கிறது; இனி இஸ்ரவேல் வம்சத்தாரும் அவர்களுடைய ராஜாக்களும் என் பரிசுத்த நாமத்தைத் தங்கள் மேடைகளில் தங்கள் வேசித்தனத்தினாலும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களினாலும் தீட்டுப்படுத்துவதில்லை. 8 அவர்கள் எனக்கும் தங்களுக்கும் நடுவே ஒரு சுவர் இருக்கும்படி, தங்கள் வாசற்படியை என் வாசற்படியண்டையிலும், தங்கள் வாசல்நிலைகளை என் வாசல் நிலைகளண்டையிலும் சேர்த்து, என் பரிசுத்த நாமத்தைத் தாங்கள் செய்த அருவருப்புகளினால் தீட்டுப்படுத்தினார்கள்; ஆகையால் என் கோபத்திலே அவர்களை நாசமாக்கினேன். 9 இப்பொழுதும் அவர்கள் தங்கள் வேசித்தனத்தையும் தங்கள் ராஜாக்களின் பிரேதங்களையும் என் சமுகத்தினின்று அகற்றினால் நான் என்றென்றைக்கும் அவர்கள் நடுவே வாசமாயிருப்பேன். 10 மனுபுத்திரனே, இஸ்ரவேல் வம்சத்தார் தங்கள் அக்கிரமங்களினிமித்தம் வெட்கப்படும்படிக்கு, நீ அவர்களுக்கு இந்த ஆலயத்தைக் காண்பி; அதின் அளவை அளக்கக்கடவர்கள். 11 அவர்கள் செய்த எல்லாவற்றினிமித்தமும் வெட்கப்பட்டால், அப்பொழுது இந்த ஆலயத்தின் ரூபத்தையும், அதின் அளவையும், அதின் முன் வாசல்களையும், அதின் பின் வாசல்களையும், அதின் எல்லா ஒழுங்குகளையும், அதின் எல்லாக் கட்டளைகளையும், அதின் எல்லா நியமங்களையும், அதின் எல்லாச் சட்டங்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்கள் அதினுடைய எல்லா ஒழுங்குகளையும், அதினுடைய எல்லா முறைமைகளையும் கைக்கொண்டு, அவைகளின்படி செய்யும்படிக்கு அதை அவர்கள் கண்களுக்கு முன்பாக எழுதிவை. 12 ஆலயத்தினுடைய பிரமாணம் என்னவென்றால்: மலையுச்சியின்மேல் சுற்றிலும் அதின் எல்லையெங்கும் மிகவும் பரிசுத்தமாயிருக்கும்; இதுவே ஆலயத்தினுடைய பிரமாணம். 13 முழங்களின்படி அளக்கும் பலிபீடத்தின் அளவுகளாவன: ஒரு கை முழமும் நாலு விரற்கடையும் கொண்டது ஒரு முழமாகும்; அதின்படி சுற்றாதாரம், ஒரு முழ உயரமும், ஒரு முழ அகலமும், அதின் ஓரத்தைச் சுற்றிலுமுள்ள விளிம்பு ஒரு ஜாணுமாயிருக்கும்; இது பலிபீடத்தின் மேற்புறம். 14 தரையில் இருக்கிற ஆதாரந்துவக்கிக் கீழ்நிலைமட்டும் இரண்டுமுழமும், அகலம் ஒரு முழமும், சின்ன நிலைதுவக்கிப் பெரிய நிலைமட்டும் நாலு முழமும், அகலம் ஒரு முழமுமாயிருக்கும். 15 பலிபீடத்தின் சிகரம் நாலு முழ உயரமாயிருக்கும்; பலிபீடத்தின் சிகரத்துக்குமேலே நாலு கொம்புகள் இருக்கும். 16 பலிபீடத்தின் சிகரம் பன்னிரண்டு முழ நீளமும், பன்னிரண்டு முழ அகலமும் தன் நாலு பக்கங்களிலும் நாற்சதுரமுமாயிருக்கும். 17 அதின் நாலு பக்கங்களிலுள்ள சட்டத்தின் நீளம் பதிநாலு முழமும், அகலம் பதிநாலு முழமும், அதைச் சுற்றிலுமிருக்கிற விளிம்பு அரை முழமும், அதற்கு ஆதாரமானது சுற்றிலும் ஒரு முழமுமாயிருக்கும்; அதின் படிகள் கிழக்குக்கு எதிராயிருக்கும் என்றார். 18 பின்னும் அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்: பலிபீடத்தை உண்டுபண்ணும் நாளிலே அதின்மேல் தகனபலியிடுகிறதற்கும் அதின்மேல் இரத்தம் தெளிக்கிறதற்குமான கட்டளைகளாவன: 19 எனக்கு ஆராதனை செய்கிறதற்கு என்னிடத்தில் சேருகிற சாதோக்கின் வம்சத்தாரான லேவி கோத்திரத்தாராகிய ஆசாரியர்களுக்கு நீ பாவநிவாரணபலியாக ஒரு இளங்காளையைக் கொடுப்பாயாக என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 20 அதின் இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து, அதின் நாலு கொம்புகளிலும், சட்டத்தின் நாலு கோடிகளிலும், சுற்றியிருக்கிற விளிம்பிலும் பூசி பாவநிவிர்த்திசெய்து, அதைச் சுத்திகரித்து, 21 பின்பு பாவநிவாரணத்தின் காளையைக் கொண்டுபோய், அதை ஆலயத்திலே பரிசுத்த ஸ்தலத்துக்குப் புறம்பாகக் குறிக்கப்பட்ட இடத்திலே சுட்டெரிக்கவேண்டும். 22 இரண்டாம் நாளிலே பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் பாவநிவாரணத்துக்காகப் பலியிடுவாயாக; அவர்கள் இளங்காளையினாலே பலிபீடத்தைச் சுத்திசெய்ததுபோலப் பாவநிவாரணஞ் செய்யவேண்டும். 23 நீ பாவநிவாரணத்தை முடித்தபின்பு, பழுதற்ற ஒரு இளங்காளையையும், பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும் மந்தையிலிருந்தெடுத்துப் பலியிடுவாயாக. 24 அவைகளைக் கர்த்தருடைய சந்நிதியில் பலியிடுவாயாக; ஆசாரியர்கள் அவைகளின்மேல் உப்புதூவி, அவைகளைக் கர்த்தருக்குத் தகனபலியாக இடக்கடவர்கள். 25 ஏழுநாள்வரைக்கும் தினந்தினம் பாவநிவாரணத்துக்காக ஒரு வெள்ளாட்டுக்கடாவைப் படைப்பாயாக; பழுதற்றவைகளான இளங்காளையையும் மந்தையிலிருந்தெடுத்த ஆட்டுக்கடாவையும் படைப்பார்களாக. 26 ஏழுநாள்வரைக்கும் பலிபீடத்தைப் பாவநிவிர்த்திசெய்து, அதைச் சுத்திகரித்து, பிரதிஷ்டைபண்ணக்கடவர்கள். 27 அந்நாட்கள் முடிந்தபின்பு, எட்டாம் நாள்முதல் ஆசாரியர்கள் பலிபீடத்தின்மேல் உங்கள் தகனபலிகளையும் உங்கள் ஸ்தோத்திரபலிகளையும் படைப்பார்களாக; அப்பொழுது உங்களை அங்கீகரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 44

1 பின்பு, அவர் என்னைக் கிழக்குக்கு எதிரே பரிசுத்த ஸ்தலத்துக்குப் புறவாசல் வழியே திரும்பப்பண்ணினார்; அது பூட்டப்பட்டிருந்தது. 2 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப்பட்டிருக்கவேண்டும். 3 இது அதிபதிக்கே உரியது, அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, மறுபடியும் அதின் வழியாய்ப் புறப்படுவான் என்றார். 4 பின்பு அவர் என்னை வடக்கு வாசல்வழியாய் ஆலயத்தின் முகப்பிலே அழைத்துக்கொண்டுபோனார்; இதோ, கர்த்தருடைய ஆலயம் கர்த்தருடைய மகிமையால் நிறைந்ததை நான் கண்டு, முகங்குப்புற விழுந்தேன். 5 அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, கர்த்தருடைய ஆலயத்தின் சகல நியமங்களையும் அதின் சகல சட்டங்களையுங்குறித்து நான் உன்னோடே சொல்வதையெல்லாம் நீ உன் மனதிலே கவனித்து, உன் கண்களினாலே பார்த்து, உன் காதுகளினாலே கேட்டு, பரிசுத்த ஸ்தலத்தினுடைய எல்லா வாசற்படிகளின் வழியாய் ஆலயத்துக்குள் பிரவேசிப்பதும் அதிலிருந்து புறப்படுவதும் இன்னவிதமென்று நீ ஆலோசித்துப் பார்த்து, 6 இஸ்ரவேல் வம்சத்தாராகிய கலகக்காரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார், இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் செய்த சகல அருவருப்புகளும் போதும். 7 நீங்கள் எனக்குச் செலுத்தவேண்டிய ஆகாரமாகிய நிணத்தையும் இரத்தத்தையும் செலுத்துகையில், என் ஆலயத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கும்படி விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரரை என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் இருக்கிறதற்காக அழைத்துக்கொண்டுவந்தீர்கள்; நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளினாலும் அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள். 8 நீங்கள் என் பரிசுத்த வஸ்துக்களின் காவலைக் காவாமல், உங்களுக்கு இஷ்டமானவர்களை என் பரிசுத்த ஸ்தலத்திலே என் காவலைக் காக்கிறதற்காக வைத்தீர்கள். 9 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரின் நடுவில் இருக்கிற சகல அந்நிய புத்திரரிலும், விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரன் ஒருவனும் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பதில்லை. 10 இஸ்ரவேல் வழிதப்பிப்போகையில், என்னைவிட்டுத் தூரமானவர்களும், என்னைவிட்டு வழிதப்பித் தங்கள் நரகலான விக்கிரகங்களைப் பின்பற்றினவர்களுமாகிய லேவியரும் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள். 11 ஆகிலும் அவர்கள் என் ஆலயத்தின் வாசல்களைக் காத்து, என் ஆலயத்தில் ஊழியஞ்செய்து, என் பரிசுத்த ஸ்தலத்திலே பணிவிடைக்காரராயிருப்பார்கள்; அவர்கள் ஜனங்களுக்காகத் தகனபலிகளையும் மற்றப் பலிகளையும் செலுத்தி, இவர்களுக்கு ஊழியஞ்செய்கிறதற்கு இவர்கள் முன்பாக என் பரிசுத்த ஸ்தலத்திலே பணிவிடைக்காரராயிருப்பார்கள். 12 அவர்கள் இவர்களுடைய நரகலான விக்கிரகங்களுக்கு முன்பாக நின்று இவர்களுக்கு ஊழியஞ்செய்து, இஸ்ரவேல் வம்சத்தாரை அக்கிரமத்தில் விழப்பண்ணினபடியினால், நான் என் கையை அவர்களுக்கு விரோதமாய் உயர்த்தினேன், அவர்கள் தங்கள் அக்கிரமத்தைச் சுமப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 13 அவர்கள் எனக்கு ஆசாரியராய் ஆராதனை செய்யும்படி என் சமீபத்தில் வராமலும், மகா பரிசுத்தமான ஸ்தலத்தில் என் பரிசுத்த வஸ்துக்களில் யாதொன்றையும் கிட்டாமலும் இருக்கவேண்டும், அவர்கள் தங்கள் இலச்சையையும் தாங்கள் செய்த அருவருப்புகளையும் சுமக்கக்கடவர்கள். 14 ஆலயத்தின் சகல வேலைகளுக்கும் அதில் செய்யப்படவேண்டிய எல்லாவற்றிற்கும் நான் அவர்களை அதில் காவல்காக்கிறவர்களாயிருக்கக் கட்டளையிடுவேன். 15 இஸ்ரவேல் புத்திரரே, என்னைவிட்டு வழிதப்பிப்போகையில், என் பரிசுத்த ஸ்தலத்தின் காவலைக் காக்கிற சாதோக்கின் புத்திரராகிய லேவியரென்னும் ஆசாரியர்களே எனக்கு ஆராதனைசெய்ய என் சமீபத்தில் சேர்ந்து, நிணத்தையும் இரத்தத்தையும் எனக்குச் செலுத்த என் சந்நிதியில் நிற்பார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 16 இவர்கள் என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிப்பார்கள்; இவர்களே எனக்கு ஆராதனை செய்ய என் பீடத்தைக் கிட்டிவந்து, என் காவலைக் காப்பார்கள். 17 உட்பிராகாரத்தின் வாசல்களுக்குள் பிரவேசிக்கிறபோது, சணல்நூல் வஸ்திரங்களை உடுத்திக்கொள்வார்களாக; அவர்கள் உட்பிராகாரத்தின் வாசல்களிலும், உள்ளேயும் ஆராதனை செய்கையில், ஆட்டுமயிர் உடுப்பைத் தரிக்கலாகாது. 18 அவர்களுடைய தலைகளில் சணல்நூல் குல்லாக்களையும், அவர்களுடைய இடைகளில் சணல்நூல் சல்லடங்களையும் தரிக்கவேண்டும்; வேர்வையுண்டாக்கத்தக்கதொன்றையும் அரையில் கட்டலாகாது. 19 அவர்கள் வெளிப்பிராகாரமாகிய புறமுற்றத்திலே ஜனங்களிடத்தில் போகும்போது, அவர்கள் தாங்கள் ஆராதனைசெய்யும் சமயத்தில் உடுத்தியிருந்த தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, அவைகளைப் பரிசுத்த அறைவீடுகளில் வைத்து, வேறே வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளக்கடவர்கள்; தங்கள் வஸ்திரங்களாலே ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தலாகாது. 20 அவர்கள் தங்கள் தலைகளைச் சிரையாமலும், தங்கள் மயிரை நீளமாய் வளர்க்காமலும், தங்கள் தலைமயிரைக் கத்தரிக்கக்கடவர்கள். 21 ஆசாரியர்களில் ஒருவனும், உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கும்போது, திராட்சரசம் குடிக்கலாகாது. 22 விதவையையும் தள்ளிவிடப்பட்டவளையும் அவர்கள் விவாகம்பண்ணாமல், இஸ்ரவேல் வம்சத்தாளாகிய கன்னிகையையாகிலும் ஒரு ஆசாரியனின் மனைவியாயிருந்த விதவையையாகிலும் விவாகம்பண்ணலாம். 23 அவர்கள் பரிசுத்தமானதற்கும் பரிசுத்தமல்லாததற்கும், தீட்டானதற்கும் தீட்டல்லாததற்கும் இருக்கும் வித்தியாசத்தை என் ஜனத்துக்குப் போதித்து, அவர்களுக்குத் தெரியப்பண்ணக்கடவர்கள். 24 வழக்கிருந்தால் அவர்கள் நியாயந்தீர்க்க ஆயத்தமாயிருந்து, என் நியாயங்களின்படி அதைத் தீர்த்து, என்னுடைய பண்டிகைகளில் எல்லாம் என் நியாயப்பிரமாணத்தையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டு, என் ஓய்வுநாட்களைப் பரிசுத்தமாக்கக்கடவர்கள். 25 தகப்பன், தாய், குமாரன், குமாரத்தி, சகோதரன், புருஷனுக்கு வாழ்க்கைப்படாத சகோதரி என்னும் இவர்களுடைய சவத்தினால் அவர்கள் தீட்டுப்படலாமேயல்லாமல், அவர்களில் ஒருவனும் செத்த ஒருவனிடத்தில் போய்த் தீட்டுப்படலாகாது. 26 அவன் சுத்திகரிக்கப்பட்டபின்பு, அவனுக்கு ஏழுநாள் எண்ணப்படவேண்டும். 27 அவன் பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்யும்படி பரிசுத்த ஸ்தலம் இருக்கிற உட்பிராகாரத்துக்குள் பிரவேசிக்கிறநாளிலே, அவன் தனக்காகப் பாவநிவாரண பலியைச் செலுத்தக்கடவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 28 அவர்களுக்குரிய சுதந்தரம் என்னவென்றால்: நானே அவர்கள் சுதந்தரம்; ஆகையால் இஸ்ரவேலில் அவர்களுக்குக் காணியாட்சியைக் கொடாதிருப்பீர்களாக; நானே அவர்கள் காணியாட்சி. 29 போஜனபலியையும் பாவநிவாரணபலியையும் குற்றநிவாரணபலியையும் அவர்கள் புசிப்பார்கள்; இஸ்ரவேலிலே பொருத்தனை பண்ணப்பட்டதெல்லாம் அவர்களுடையதாயிருப்பதாக. 30 சகலவித முதற்கனிகளில் எல்லாம் முந்தின பலனும், நீங்கள் காணிக்கையாய்ச் செலுத்தும் எவ்விதமான பொருள்களும் ஆசாரியர்களுடையதாயிருப்பதாக; உங்கள் வீட்டில் ஆசீர்வாதம் தங்கும்படிக்கு நீங்கள் பிசைந்தமாவில் முதற்பாகத்தையும் ஆசாரியனுக்குக் கொடுக்கக்கடவீர்கள். 31 பறவைகளிலும் மிருகங்களிலும் தானாய்ச் செத்ததும் பீறுண்டதுமான ஒன்றையும் ஆசாரியர்கள் புசிக்கலாகாது.

எசேக்கியேல் 45

1 நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி தேசத்தைச் சீட்டுப்போட்டுப் பங்கிடும்போது, தேசத்தில் இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமான பரிசுத்த பங்கைக் கர்த்தருக்கு அர்ப்பிதமாகப் பிரித்து வைக்கக்கடவீர்கள்; இது தன் சுற்றெல்லை எங்கும் பரிசுத்தமாயிருக்கும். 2 இதிலே பரிசுத்த ஸ்தலத்துக்கென்று ஐந்நூறு கோல் நீளமும் ஐந்நூறு கோல் அகலமுமான நாற்சதுரம் அளக்கப்படக்கடவது; அதற்குச் சுற்றிலும் ஐம்பது முழமான வெளிநிலம் இருக்கவேண்டும். 3 இந்த அளவு உட்பட இருபத்தையாயிரங்கோல் நீளத்தையும் பதினாயிரங்கோல் அகலத்தையும் அளப்பாயாக; அதற்குள் பரிசுத்த ஸ்தலமும் மகா பரிசுத்த ஸ்தலமும் இருக்கவேண்டும். 4 தேசத்தில் பரிசுத்த பங்காகிய இது கர்த்தருக்கு ஆராதனைசெய்யச் சேருகிறவர்களும், பரிசுத்த ஸ்தலத்தில் ஆராதனை செய்கிறவர்களுமான ஆசாரியருடையது; இது அவர்களுக்கு வீடுகளுக்கான இடமும், பரிசுத்த ஸ்தலத்துக்கு அடுத்த இடமுமாயிருக்கவேண்டும். 5 பின்னும் இருபத்தையாயிரங்கோல் நீளமும் பதினாயிரங்கோல் அகலமுமான இடம் ஆலயத்தின் பணிவிடைக்காரராகிய லேவியருடையதாயிருக்கும்; அது அவர்களுடைய காணியாட்சி; அதில் இருபது அறைவீடுகள் இருக்கவேண்டும். 6 பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கு எதிரே நகரத்தின் காணியாட்சியாக ஐயாயிரங்கோல் அகலத்தையும் இருபத்தையாயிரங்கோல் நீளத்தையும் அளந்து கொடுப்பீர்களாக; அது இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் சொந்தமாயிருக்கும். 7 பரிசுத்த பங்காகப் படைக்கப்பட்டதற்கும் நகரத்தின் காணியாட்சிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், பரிசுத்த படைப்புக்கு முன்பாகவும், நகரத்தின் காணிக்கு முன்பாகவும், அதிபதியினுடைய பங்கு மேற்கிலே மேற்புறமாகவும் கிழக்கிலே கீழ்ப்புறமாகவும் இருப்பதாக; அதின் நீளம் மேல் எல்லை துவக்கிக் கீழ் எல்லைமட்டும் பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் எதிராயிருக்கவேண்டும். 8 இது அவனுக்கு இஸ்ரவேலிலே காணிபூமியாக இருக்கக்கடவது; என் அதிபதிகள் இனி என் ஜனத்தை ஒடுக்காமல் தேசத்தை இஸ்ரவேல் வம்சத்தாருக்கு அவர்களுடைய கோத்திரங்களுக்குத்தக்கதாக விட்டுவிடுவார்களாக. 9 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலின் அதிபதிகளே, நீங்கள் செய்ததுபோதும்; நீங்கள் கொடுமையையும் கொள்ளையிடுதலையும் தவிர்த்து, நியாயத்தையும் நீதியையும் செய்யுங்கள்; உங்கள் உத்தண்டங்களை என் ஜனத்தைவிட்டு அகற்றுங்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 10 சுமுத்திரையான தராசும், சுமுத்திரையான மரக்காலும், சுமுத்திரையான அளவுகுடமும் உங்களுக்கு இருக்கக்கடவது. 11 மரக்காலும் அளவுகுடமும் ஒரே அளவாயிருந்து, மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும், அளவுகுடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிடிக்கக்கடவது; கலத்தின்படியே அதின் அளவு நிருணயிக்கப்படுவதாக. 12 சேக்கலானது இருபது கேரா; இருபது சேக்கலும் இருபத்தைந்து சேக்கலும் பதினைந்து சேக்கலும் உங்களுக்கு ஒரு இராத்தலாகும். 13 நீங்கள் செலுத்தவேண்டிய காணிக்கையாவது: ஒரு கலம் கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொரு பங்கையும், ஒரு கலம் வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் ஆறிலொருபங்கையும் படைக்கக்கடவீர்கள். 14 அளவுகுடத்தால் அளக்கிற எண்ணெயின் கட்டளையாவது: பத்துக்குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி எண்ணெயிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பீர்களாக; பத்து அளவுகுடம் ஒரு கலமாகும். 15 இஸ்ரவேல் தேசத்திலே நல்லமேய்ச்சலை மேய்கிற மந்தையிலே இருநூறு ஆடுகளில் ஒரு ஆடும், அவர்களுடைய பாவநிவாரணத்திற்காகப் போஜனபலியாகவும் தகனபலியாகவும் சமாதானபலியாகவும் செலுத்தப்படக்கடவதென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 16 இஸ்ரவேலின் அதிபதிக்கு முன்பாகத் தேசத்தின் ஜனங்களெல்லாரும் இந்தக் காணிக்கையைச் செலுத்தக் கடனாளிகளாயிருக்கிறார்கள். 17 இஸ்ரவேல் வம்சத்தார் கூடிவரக் குறிக்கப்பட்ட சகல பண்டிகைகளிலும் மாதப்பிறப்புகளிலும் ஓய்வுநாட்களிலும் தகனபலிகளையும் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துவது அதிபதியின்மேல் சுமந்த கடனாயிருக்கும்; அவன் இஸ்ரவேல் வம்சத்தாருக்காகப் பாவநிவாரணம்பண்ணும்படிக்குப் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் தகனபலியையும் சமாதானபலியையும் படைப்பானாக. 18 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: முதலாம் மாதம் முதலாந்தேதியிலே நீ பழுதற்ற ஒரு காளையைக் கொண்டுவந்து, பரிசுத்த ஸ்தலத்துக்குப் பாவநிவிர்த்தி செய்வாயாக. 19 பாவநிவாரணபலியின் இரத்தத்திலே கொஞ்சம் ஆசாரியன் எடுத்து, ஆலயத்தின் வாசல் நிலைகளிலும், பலிபீடத்துச் சட்டத்தின் நாலு கோடிகளிலும், உட்பிராகாரத்தின் வாசல்நிலைகளிலும் பூசக்கடவன். 20 பிழைசெய்தவனுக்காகவும், அறியாமல் தப்பிதம் செய்தவனுக்காகவும் அந்தப்பிரகாரமாக ஏழாந்தேதியிலும் செய்வாயாக; இவ்விதமாய் ஆலயத்துக்குப் பாவநிவர்த்தி செய்வாயாக. 21 முதலாம் மாதம் பதினாலாந்தேதியிலே புளிப்பில்லாத அப்பம் புசிக்கப்படுகிற ஏழுநாள் பண்டிகையாகிய பஸ்கா ஆரம்பமாகும். 22 அந்நாளிலே அதிபதி தன்னிமித்தமும் தேசத்து எல்லா ஜனங்களிநிமித்தமும் பாவநிவாரணத்துக்காக ஒரு காளையைப் படைப்பானாக. 23 ஏழுநாள் பண்டிகையில், அவன் அந்த ஏழுநாளும் தினந்தோறும் கர்த்தருக்குத் தகனபலியாகப் பழுதற்ற ஏழு காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் தினந்தோறும் படைப்பானாக. 24 ஒவ்வொரு காளையோடே ஒரு மரக்கால் மாவும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவுமான போஜனபலியையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைப்பானாக. 25 ஏழாம் மாதம் பதினைந்தாந்தேதியில் ஆரம்பமாகிற பண்டிகையிலே அவன் அப்படியே ஏழுநாளும் அதற்குச் சரியானபிரகாரமாகப் பாவநிவாரணபலிகளையும் தகனபலிகளையும் போஜனபலிகளையும், எண்ணெயையும் படைக்கக்கடவன்.

எசேக்கியேல் 46

1 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: வேலைசெய்கிற ஆறுநாளிலும் கிழக்குக்கு எதிரான உட்பிராகாரத்தினுடைய வாசல் பூட்டப்பட்டிருந்து, ஓய்வுநாளிலும் மாதப்பிறப்பிலும் திறக்கப்படக்கடவது. 2 அப்பொழுது அதிபதி வெளிவாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, வாசல் நிலையண்டையிலே நிற்கக்கடவன்; ஆசாரியர்களோ அவனுடைய தகனபலியையும், அவனுடைய சமாதான பலிகளையும் படைக்கக்கடவர்கள்; அவன் வாசற்படியிலே ஆராதனைசெய்து, பின்பு புறப்படுவானாக; அந்த வாசல் சாயங்காலமட்டும் பூட்டப்படாதிருப்பதாக. 3 தேசத்து ஜனங்களும் ஓய்வுநாட்களிலும் மாதப்பிறப்புகளிலும் அந்த வாசலின் நடையிலே கர்த்தருடைய சந்நிதியில் ஆராதனை செய்யக்கடவர்கள். 4 அதிபதி ஓய்வுநாளிலே கர்த்தருக்குப் பலியிடும் தகனபலி, பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளும் பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவுமே. 5 ஆட்டுக்கடாவோடே போஜனபலியாக ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளோடே போஜனபலியாகத் தன் திராணிக்குத்தக்கதாய்த் தருகிற ஈவையும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்கக்கடவன். 6 மாதப்பிறப்பான நாளிலோ, அவன் பழுதற்ற ஒரு இளங்காளையையும், பழுதற்ற ஆறு ஆட்டுக்குட்டிகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும் பலியிட்டு, 7 போஜனபலியாக இளங்காளையோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவையும், ஆட்டுக்குட்டிகளோடே தன் திராணிக்குத்தக்கதாய், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயையும் படைக்கக்கடவன். 8 அதிபதி வருகிறபோது வாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, அது வழியாய்த் திரும்பப் புறப்படக்கடவன். 9 தேசத்தின் ஜனங்கள் குறிக்கப்பட்ட நாட்களில் கர்த்தருடைய சந்நிதியில் வரும்போது, ஆராதனை செய்கிறதற்காக வடக்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் தெற்கு வாசல் வழியாய்ப் புறப்படவும், தெற்கு வாசல்வழியாய் உட்பிரவேசித்தவன் வடக்கு வாசல்வழியாய்ப் புறப்படவும்கடவன்; தான் பிரவேசித்த வாசல்வழியாய்த் திரும்பிப்போகாமல், தனக்கு எதிரான வழியாய்ப் புறப்பட்டுப்போவானாக. 10 அவர்கள் உட்பிரவேசிக்கும்போது, அதிபதி அவர்கள் நடுவிலே அவர்களோடேகூட உட்பிரவேசித்து, அவர்கள் புறப்படும்போது அவனும் கூடப் புறப்படுவானாக. 11 பண்டிகைகளிலும் குறிக்கப்பட்ட காலங்களிலும் அவன் படைக்கும் போஜனபலியாவது: காளையோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்கடாவோடே ஒரு மரக்கால் மாவும், ஆட்டுக்குட்டிகளோடே அவன் திராணிக்குத்தக்கதாய்த் தருகிற ஒரு ஈவும், ஒவ்வொரு மரக்கால் மாவோடே ஒருபடி எண்ணெயும் கொடுக்கவேண்டும். 12 அதிபதி உற்சாகமான தகனபலியாகிலும், சமாதான பலிகளையாகிலும் கர்த்தருக்கு உற்சாகமாய்ச் செலுத்தவேண்டுமென்றால், அவனுக்குக் கிழக்கு நோக்கிய எதிரான வாசல் திறக்கப்படுவதாக; அப்பொழுது அவன் ஓய்வுநாளில் செய்கிறதுபோல, தன் தகனபலியையும் தன் சமாதான பலியையும் செலுத்தி, பின்பு புறப்படக்கடவன்; அவன் புறப்பட்டபின்பு வாசல் பூட்டப்படவேண்டும். 13 தினந்தோறும் ஒரு வயதான பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியைக் கர்த்தருக்குத் தகனபலியாகப் படைக்கக்கடவாய்; காலைதோறும் அதைப்படைக்கவேண்டும். 14 அதினோடே காலைதோறும் போஜனபலியாக ஒரு மரக்கால் மாவிலே ஆறத்தொரு பங்கையும், மெல்லிய மாவைப் பிசையும்படிக்கு ஒருபடி எண்ணெயிலே மூன்றத்தொரு பங்கையும் படைக்கக்கடவாய்; இது அன்றாடம் கர்த்தருக்குப் படைக்கவேண்டிய நித்திய கட்டளையான போஜனபலி. 15 இப்படிக் காலைதோறும் அன்றாட தகனபலியாக ஆட்டுக்குட்டியையும் போஜனபலியையும் எண்ணெயையும் செலுத்துவார்களாக. 16 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அதிபதி தன் குமாரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தால், அது அவன் குமாரருடையதாயிருக்கும்; அது சுதந்தரவீதமாய் அவர்களுக்குச் சொந்தமாகும். 17 அவன் தன் ஊழியக்காரரில் ஒருவனுக்குத் தன் சுதந்தரத்தில் ஒரு பங்கைக் கொடுத்தானேயாகில், அது விடுதலையின் வருஷமட்டும் அவனுடையதாயிருந்து, பின்பு திரும்ப அதிபதியின் வசமாய்ச் சேரும்; அதின் சுதந்தரம் அவன் குமாரருக்கே உரியது, அது அவர்களுடையதாயிருக்கும். 18 அதிபதியானவன் ஜனத்தை இடுக்கண் செய்து, அவர்களின் சொந்தமானதற்கு அவர்களைப் புறம்பாக்கி, அவர்களுடைய சுதந்தரத்திலிருந்து ஒன்றும் எடுக்கலாகாது; என் ஜனத்தில் ஒருவரும் தங்கள் சொந்தமானதற்குப் புறம்பாக்கப்பட்டுச் சிதறடிக்கப்படாதபடிக்கு அவன் தன் சொந்தத்திலே தன் குமாரருக்குச் சுதந்தரம் கொடுக்கக்கடவன். 19 பின்பு அவர் வாசலின் பக்கத்தில் இருந்த நடைவழியாய் என்னை வடக்குக்கு எதிரான ஆசாரியர்களுடைய பரிசுத்த அறைவீடுகளுக்கு அழைத்துக்கொண்டுபோனார்; அவ்விடத்தில் மேற்கே இருபுறத்திலும் ஒரு இடம் இருந்தது. 20 அவர் என்னை நோக்கி: குற்றநிவாரணபலியையும் பாவநிவாரணபலியையும் போஜனபலியையும் ஆசாரியர்கள் வெளிப்பிராகாரத்திலே கொண்டுபோய் ஜனங்களைப் பரிசுத்தம்பண்ணாதபடிக்கு, அவர்கள் அவைகளைச் சமைக்கிறதற்கும் சுடுகிறதற்குமான ஸ்தலம் இதுவே என்றார். 21 பின்பு அவர் என்னை வெளிப்பிராகாரத்தில் அழைத்துக்கொண்டுபோய், என்னைப் பிராகாரத்தின் நாலு மூலைகளையும் கடந்துபோகப்பண்ணினார்; பிராகாரத்து ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு முற்றம் இருந்தது. 22 பிராகாரத்தின் நாலு மூலைகளிலும் புகைத்துவாரங்களுள்ள இந்த முற்றங்கள் நாற்பது முழ நீளமும், முப்பது முழ அகலமுமானவைகள்; இந்த நாலு மூலை முற்றங்களுக்கும் ஒரே அளவு இருந்தது. 23 இந்த நாலுக்கும் சுற்றிலும் உள்ளே ஒரு சுற்றுக்கட்டு உண்டாயிருந்தது; இந்தச் சுற்றுக்கட்டுகளின் சுற்றிலும் அடுப்புகள் போடப்பட்டிருந்தது. 24 அவர் என்னை நோக்கி: இவைகள் ஜனங்கள் இடும் பலிகளை ஆலயத்தின் பணிவிடைக்காரர் சமைக்கிற வீடுகள் என்றார்.

எசேக்கியேல் 47

1 பின்பு அவர் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்பிவரப்பண்ணினார்; இதோ, வாசற்படியின் கீழிருந்து தண்ணீர் புறப்பட்டுக் கிழக்கே ஓடுகிறதாயிருந்தது; ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கியிருந்தது; அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலதுபுறமாய்ப் பலிபீடத்துக்குத் தெற்கே பாய்ந்தது. 2 அவர் என்னை வடக்கு வாசல் வழியாய்ப் புறப்படப்பண்ணி, என்னை வெளியிலே கீழ்த்திசைக்கு எதிரான புறவாசல்மட்டும் சுற்றி நடத்திக்கொண்டுபோனார்; அங்கே தண்ணீர் வலதுபுறத்திலிருந்து பாய்கிறதாயிருந்தது. 3 அந்தப் புருஷன் தமது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு, கிழக்கே புறப்படுகையில் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; தண்ணீர் கணுக்கால் அளவாயிருந்தது. 4 பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து, என்னைத் தண்ணீரைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் முழங்கால் அளவாயிருந்தது; பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்து என்னைக் கடக்கப்பண்ணினார்; அங்கே தண்ணீர் இடுப்பளவாயிருந்தது. 5 பின்னும் அவர் ஆயிரமுழம் அளந்தார்; அங்கே அது நான் கடக்கக்கூடாத நதியாயிருந்தது; தண்ணீர் நீச்சாழமும் கடக்கமுடியாத நதியுமாயிருந்தது. 6 அவர் என்னை நோக்கி: மனுபுத்திரனே, இதைக் கண்டாயா என்று சொல்லி, என்னை நதியோரமாய்த் திரும்ப நடத்திக்கொண்டுபோனார். 7 நான் நடந்துவருகையில், இதோ, நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் வெகு திரளான விருட்சங்கள் இருந்தது. 8 அவர் என்னை நோக்கி: இந்தத் தண்ணீர் கிழக்குதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், வனாந்தரவழியாய் ஓடி கடலில் விழும்; இது கடலில் பாய்ந்து, விழுந்தபின்பு, அதின் தண்ணீர் ஆரோக்கியமாகும். 9 சம்பவிப்பது என்னவென்றால், இந்த நதி போகுமிடமெங்கும் சஞ்சரிக்கும் ஜீவபிராணிகள் யாவும் பிழைக்கும்; இந்தத் தண்ணீர் அங்கே வந்தபடியினால் வெகு ஏராளமான மச்சங்களும் உண்டாயிருக்கும்; இந்த நதி போகுமிடமெங்குமுள்ள யாவும் ஆரோக்கியப்பட்டுப் பிழைக்கும். 10 அப்பொழுது என்கேதிதுவக்கி எனெக்லாயிம்மட்டும் மீன்பிடிக்கிறவர்கள் அதின் கரையிலே நிற்பார்கள்; அதெல்லாம் வலைகளை விரிக்கிற ஸ்தலமாயிருக்கும்; அதின் மச்சங்கள் பெரிய சமுத்திரத்தின் மச்சங்களைப்போலப் பல ஜாதியும் மகா ஏராளமுமாயிருக்கும். 11 ஆனாலும் அதினுடைய உளையான பள்ளங்களும் அதினுடைய மடுக்களும் ஆரோக்கியமாகாமல், உப்பாகவே விட்டுவிடப்படும். 12 நதியோரமாய் அதின் இக்கரையிலும் அக்கரையிலும் புசிப்புக்கான சகலவித விருட்சங்களும் வளரும்; அவைகளின் இலைகள் உதிர்வதுமில்லை, அவைகளின் கனிகள் கெடுவதுமில்லை; அவைகளுக்குப் பாயும் தண்ணீர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பாய்கிறபடியினால் மாதந்தோறும் புதுக்கனிகளைக் கொடுத்துக்கொண்டேயிருக்கும்; அவைகளின் கனிகள் புசிப்புக்கும், அவைகளின் இலைகள் அவிழ்தத்துக்குமானவைகள். 13 கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டு குறிக்கவேண்டிய எல்லையாவது: யோசேப்புக்கு இரண்டு பங்கு உண்டு. 14 சகோதரனோடே சகோதரனுக்குச் சரிபங்கு உண்டாக அதைச் சுதந்தரித்துக்கொள்ளக்கடவீர்கள்; அதை உங்கள் பிதாக்களுக்குக் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்டுக் கொடுத்தேன்; ஆகையால் உங்களுக்கு இந்தத் தேசம் சுதந்தரமாகக் கிடைக்கும். 15 தேசத்தின் எல்லையாவது: வடபுறம் பெரிய சமுத்திரந்துவக்கி, சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாயிருக்கிற, 16 ஆமாத்தும், பேரொத்தாவும், தமஸ்குவின் எல்லைக்கும் ஆமாத்தின் எல்லைக்கும் நடுவான சிப்ராயிமும், ஆப்ரானின் எல்லையோடே சேர்ந்த ஆத்சார் அத்தீகோனுமானது. 17 அப்படியே சமுத்திரத்திலிருந்து போகிற எல்லை ஆத்சார்ஏனானும், தமஸ்குவின் எல்லையும், வடமூலையான வடக்கும் ஆமாத்தின் எல்லையுமானது; இது வடபுறம். 18 கீழ்ப்புறத்தை ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் நடுவாகவும், கீலேயாத்துக்கும் யோர்தானின் ஓரமான இஸ்ரவேல் தேசத்துக்கும் நடுவாகவும் கீழ்க்கடல்மட்டும் இருக்கும் எல்லையாய் அளப்பீர்களாக; இது கீழ்ப்புறம். 19 தென்மூலையான தென்புறம் தாமார் துவக்கி, காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள்மட்டாகவும், ஆறுமட்டாகவும், பெரிய சமுத்திரமட்டாகவும் இருப்பது; இது தென்மூலையான தென்புறம். 20 மேற்புறம் அந்த எல்லைதுவக்கி ஆமாத்துக்கு எதிராக வந்து சேருமட்டும் இருக்கிற பெரிய சமுத்திரமே; இது மேற்புறம். 21 இந்தத் தேசத்தை நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களின்படியே உங்களுக்குள்ளே பங்கிட்டுக்கொள்வீர்களாக. 22 உங்களுக்கும், உங்களுக்குள்ளே தங்கி உங்களுக்குள்ளே பிள்ளைகளைப் பெறுகிற அந்நியர்களுக்கும், நீங்கள் அதைச் சீட்டுப்போட்டுச் சுதந்தரமாக்கிக்கொள்வீர்களாக; இவர்கள் உங்களுக்கு இஸ்ரவேல் புத்திரரில் பிறந்தவர்களைப்போல இருந்து, உங்களோடேகூட இஸ்ரவேல் கோத்திரங்களின் நடுவே சுதந்தரத்துக்கு உடன்படுவார்களாக. 23 அந்நியன் எந்தக் கோத்திரத்தோடே தங்கியிருக்கிறானோ, அதிலே அவனுடைய சுதந்தரத்தை அவனுக்குக் கொடுக்கக்கடவீர்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

எசேக்கியேல் 48

1 கோத்திரங்களின் நாமங்களாவன: வடமுனைதுவக்கி ஆமாத்துக்குப்போகிற எத்லோன் வழியின் ஓரத்துக்கும், ஆத்சார்ஏனானுக்கும், ஆமாத்தருகே வடக்கேயிருக்கிற தமஸ்குவின் எல்லைக்கும் உள்ளாகக் கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் தாணுக்கு ஒரு பங்கும், 2 தாணின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் ஆசேருக்கு ஒரு பங்கும், 3 ஆசேரின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் நப்தலிக்கு ஒரு பங்கும், 4 நப்தலியின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் மனாசேக்கு ஒரு பங்கும், 5 மனாசேயின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் எப்பிராயீமுக்கு ஒரு பங்கும், 6 எப்பிராயீமின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் ரூபனுக்கு ஒரு பங்கும், 7 ரூபனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் யூதாவுக்கு ஒரு பங்கும் உண்டாவதாக. 8 யூதாவின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் நீங்கள் அர்ப்பிதமாக்கவேண்டிய பங்கு இருக்கும்; அது, இருபத்தையாயிரங்கோல் அகலமும், கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் இருக்கிற பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் சரியான நீளமுமாம்; பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக. 9 இதிலே கர்த்தருக்கு நீங்கள் அர்ப்பிதமாக்கவேண்டிய பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமாயிருப்பதாக. 10 வடக்கே இருபத்தையாயிரங்கோல் நீளமும், மேற்கே பதினாயிரங்கோல் அகலமும், கிழக்கே பதினாயிரங்கோல் அகலமும், தெற்கே இருபத்தையாயிரங்கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலமானது ஆசாரியருடையதாயிருக்கும்; கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக. 11 இஸ்ரவேல் புத்திரர் வழிதப்பிப்போகையில், லேவியர் வழிதப்பிப்போனதுபோல வழிதப்பிப்போகாமல், என் காவலைக் காத்துக்கொண்ட சாதோக்கின் புத்திரராகிய பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர்களுக்கு அது உரியதாகும். 12 அப்படியே தேசத்தில் அர்ப்பிதமாக்கப்படுகிறதிலே மகா பரிசுத்தமான பங்கு அவர்களுக்கு லேவியருடைய எல்லையருகே இருப்பதாக. 13 ஆசாரியரின் எல்லைக்கு எதிராக லேவியர் அடையும் பங்கு இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமாயிருக்கவேண்டும்; நீளம் இருபத்தையாயிரங்கோலும், அகலம் பதினாயிரங்கோலுமாயிருப்பதாக. 14 அவர்கள் அதில் ஒன்றையும் விற்கவும் தேசத்தின் முதல் விளைவை மாற்றவும் மற்றவர்களுக்குக் கொடுக்கவும் தகாது; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது. 15 இருபத்தையாயிரங்கோலுக்கு எதிராக அகலத்தில் மீதியாயிருக்கும் ஐயாயிரங்கோலோவென்றால், பரிசுத்தமாயிராமல், குடியேறும் நகரத்துக்கும் வெளிநிலங்களுக்கும் விடவேண்டும்; நகரம் அதின் நடுவில் இருப்பதாக. 16 அதின் அளவுகளாவன: வடபுறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், தென்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், கீழ்ப்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலும், மேற்புறம் நாலாயிரத்தைந்நூறு கோலுமாம். 17 நகரத்தின் வெளிநிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும், தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாயிருப்பதாக. 18 பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராக நீளத்தில் மீதியானது கிழக்கே பதினாயிரங்கோலும் மேற்கே பதினாயிரங்கோலுமாம்; அது பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கு எதிராயிருக்கும்; அதின் வருமானம் நகரத்திற்காக ஊழியஞ்செய்கிறவர்களுக்கு ஆகாரமாயிருப்பதாக. 19 இஸ்ரவேலின் சகல கோத்திரங்களிலுமிருந்து குறிக்கப்பட்ட சிலர் நகரத்திற்காகப் பணிவிடை செய்வார்கள். 20 அர்ப்பிதநிலமனைத்தும் இருபத்தையாயிரங்கோல் நீளமும், இருபத்தையாயிரங்கோல் அகலமுமாய் இருக்கக்கடவது; பட்டணத்தின் காணி உட்பட இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலம் சதுரமாய் இருக்கவேண்டும். 21 பரிசுத்த அர்ப்பிதநிலத்துக்கும் நகரத்தின் காணிக்கும் இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும், அர்ப்பிதநிலத்தினுடைய இருபத்தையாயிரங்கோலின் முன்பாகக் கிழக்கு எல்லைமட்டுக்கும், மேற்கிலே இருபத்தையாயிரங்கோலின் முன்பாக மேற்கு எல்லைமட்டுக்கும் மீதியாயிருப்பது அதிபதியினுடையது; பங்குகளுக்கு எதிரான அது அதிபதியினுடையதாயிருப்பதாக; அதற்கு நடுவாகப் பரிசுத்த அர்ப்பிதநிலமும் ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலமும் இருக்கும். 22 அதிபதியினுடையதற்கு நடுவேயிருக்கும் லேவியரின் காணிதுவக்கியும் நகரத்தின் காணிதுவக்கியும், யூதாவின் எல்லைக்கும் பென்யமீனின் எல்லைக்கும் நடுவேயிருக்கிறது அதிபதியினுடையது. 23 மற்றக் கோத்திரங்களுக்கு உண்டாகும் பங்குகளாவன: கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் பென்யமீனுக்கு ஒரு பங்கும், 24 பென்யமீன் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் சிமியோனுக்கு ஒரு பங்கும், 25 சிமியோனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் இசக்காருக்கு ஒரு பங்கும், 26 இசக்காரின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் செபுலோனுக்கு ஒரு பங்கும், 27 செபுலோனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேற்றிசைமட்டும் காத்துக்கு ஒரு பங்கும் உண்டாயிருப்பதாக. 28 காத்தின் எல்லையருகே தென்மூலையாகிய தெற்கு எல்லை, தாமார்துவக்கி காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள் மட்டாகவும் பெரிய சமுத்திரமட்டாகவும் போகும். 29 சுதந்தரிக்கும்படி இதுவே நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுப் பங்கிடும் தேசம், இவைகளே அவர்களின் பங்குகள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 30 நகரத்தினின்று புறப்படும் வழிகளாவன: வடபுறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும். 31 நகரத்தின் வாசல்கள், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய நாமங்களின்படியே பெயர் பெறக்கடவது; வடக்கே ரூபனுக்கு ஒரு வாசல், யூதாவுக்கு ஒரு வாசல், லேவிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக. 32 கீழ்ப்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் யோசேப்புக்கு ஒரு வாசல், பென்யமீனுக்கு ஒரு வாசல், தாணுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக. 33 தென்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் சிமியோனுக்கு ஒரு வாசல், இசக்காருக்கு ஒரு வாசல், செபுலோனுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக. 34 மேற்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோல், அதில் காத்துக்கு ஒரு வாசல், ஆசேருக்கு ஒரு வாசல், நப்தலிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக. 35 சுற்றிலும் அதின் அளவு பதினெண்ணாயிரங்கோலாகும்; அந்நாள் முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும்.

தானியேல் 1

1 யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பாபிலோனின் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் எருசலேமுக்கு வந்து, அதை முற்றிக்கைபோட்டான். 2 அப்பொழுது ஆண்டவர் யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமையும் தேவனுடைய ஆலயத்தின் பாத்திரங்களில் சிலவற்றையும் அவன் கையில் ஒப்புக்கொடுத்தார்; அவன் அந்தப் பாத்திரங்களைச் சினேயார் தேசத்திலுள்ள தன் தேவனுடைய கோவிலுக்குக் கொண்டுபோய், அவைகளைத் தன் தேவனுடைய பண்டசாலைக்குள் வைத்தான். 3 அப்பொழுது இஸ்ரவேல் புத்திரருக்குள்ளே ராஜகுலத்தார்களிலும் துரைமக்களிலும் யாதொரு மாசும் இல்லாதவர்களும், அழகானவர்களும், சகல ஞானத்திலும் தேறினவர்களும், அறிவில் சிறந்தவர்களும், கல்வியில் நிபுணரும், ராஜாவின் அரமனையிலே சேவிக்கத் திறமையுள்ளவர்களுமாகிய சில வாலிபரைக் கொண்டுவரவும், 4 அவர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும் பாஷையையும் கற்றுக்கொடுக்கவும் ராஜா தன் பிரதானிகளின் தலைவனாகிய அஸ்பேனாசுக்குக் கற்பித்தான். 5 ராஜா, தான் உண்ணும் போஜனத்திலேயும் தான் குடிக்கும் திராட்சரசத்திலேயும் தினம் ஒரு பங்கை அவர்களுக்கு நியமித்து, அவர்களை மூன்றுவருஷம் வளர்க்கவும், அதின் முடிவிலே அவர்கள் ராஜாவுக்கு முன்பாக நிற்கும்படி செய்யவும் கட்டளையிட்டான். 6 அவர்களுக்குள் யூதா புத்திரராகிய தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள். 7 பிரதானிகளின் தலைவன், தானியேலுக்கு பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்கு சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் மறுபெயரிட்டான். 8 தானியேல் ராஜாவின் போஜனத்தினாலும் அவர் பானம்பண்ணும் திராட்சரசத்தினாலும் தன்னைத் தீட்டுப்படுத்தலாகாதென்று, தன் இருதயத்தில் தீர்மானம்பண்ணிக்கொண்டு, தன்னைத் தீட்டுப்படுத்தாதபடி பிரதானிகளின் தலைவனிடத்தில் வேண்டிக்கொண்டான். 9 தேவன் தானியேலுக்குப் பிரதானிகளின் தலைவனிடத்தில் தயவும் இரக்கமும் கிடைக்கும்படி செய்தார். 10 பிரதானிகளின் தலைவன் தானியேலை நோக்கி: உங்களுக்குப் போஜனத்தையும் பானத்தையும் குறித்திருக்கிற ராஜாவாகிய என் ஆண்டவனுக்கு நான் பயப்படுகிறேன்; அவர் உங்களோடொத்த வாலிபரின் முகங்களைப்பார்க்கிலும் உங்கள் முகங்கள் வாடிப்போனவைகளாகக் காணவேண்டியதென்ன? அதினால் ராஜா என்னைச் சிரச்சேதம்பண்ணுவாரே என்றான். 11 அப்பொழுது பிரதானிகளின் தலைவனாலே, தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள்மேல் விசாரிப்புக்காரனாக வைக்கப்பட்ட மேல்ஷார் என்பவனைத் தானியேல் நோக்கி: 12 பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்கப் பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து, 13 எங்கள் முகங்களையும் ராஜபோஜனத்தில் புசிக்கிற வாலிபருடைய முகங்களையும் ஒத்துப்பாரும்; பின்பு நீர் காண்கிறபடி உமது அடியாருக்குச் செய்யும் என்றான். 14 அவன் இந்தக் காரியத்திலே அவர்களுக்குச் செவிகொடுத்து, பத்துநாளளவும் அவர்களைச் சோதித்துப்பார்த்தான். 15 பத்துநாள் சென்றபின்பு, ராஜபோஜனத்தைப் புசித்த எல்லா வாலிபரைப்பார்க்கிலும் அவர்கள் முகம் களையுள்ளதாயும், சரீரம் புஷ்டியுள்ளதாயும் காணப்பட்டது. 16 ஆகையால் மேல்ஷார் அவர்கள் புசிக்கக் கட்டளையான போஜனத்தையும், அவர்கள் குடிக்கக் கட்டளையான திராட்சரசத்தையும் நீக்கிவைத்து, அவர்களுக்குப் பருப்பு முதலானவைகளைக் கொடுத்தான். 17 இந்த நாலு வாலிபருக்கும் தேவன் சகல எழுத்திலும் ஞானத்திலும் அறிவையும் சாமர்த்தியத்தையும் கொடுத்தார்; தானியேலைச் சகல தரிசனங்களையும் சொப்பனங்களையும் அறியத்தக்க அறிவுள்ளவனாக்கினார். 18 அவர்களை ராஜாவினிடத்தில் கொண்டுவருகிறதற்குக் குறித்த நாட்கள் நிறைவேறினபோது, பிரதானிகளின் தலைவன் அவர்களை நேபுகாத்நேச்சாருக்கு முன்பாகக் கொண்டுவந்து விட்டான். 19 ராஜா அவர்களோடே பேசினான்; அவர்கள் எல்லாருக்குள்ளும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்களைப்போல வேறொருவரும் காணப்படவில்லை; ஆகையால் இவர்கள் ராஜசமுகத்தில் நின்றார்கள். 20 ஞானத்துக்கும் புத்திக்கும் அடுத்த எந்த விஷயத்தில் ராஜா அவர்களைக் கேட்டு விசாரித்தானோ, அதிலே தன் ராஜ்யம் எங்குமுள்ள சகல சாஸ்திரிகளிலும் ஜோசியரிலும் அவர்களைப் பத்துமடங்கு சமர்த்தராகக் கண்டான். 21 கோரேஸ் ராஜ்யபாரம்பண்ணும் முதலாம் வருஷமட்டும் தானியேல் அங்கே இருந்தான்.

தானியேல் 2

1 நேபுகாத்நேச்சார் ராஜ்யபாரம்பண்ணும் இரண்டாம் வருஷத்திலே, நேபுகாத்நேச்சார் சொப்பனங்களைக் கண்டான்; அதினால், அவனுடைய ஆவி கலங்கி, அவனுடைய நித்திரை கலைந்தது. 2 அப்பொழுது ராஜா தன் சொப்பனங்களைத் தனக்குத் தெரிவிக்கும்பொருட்டுச் சாஸ்திரிகளையும் ஜோசியரையும் சூனியக்காரரையும் கல்தேயரையும் அழைக்கச்சொன்னான்; அவர்கள் வந்து, ராஜசமுகத்தில் நின்றார்கள். 3 ராஜா அவர்களை நோக்கி: ஒரு சொப்பனம் கண்டேன்; அந்தச் சொப்பனத்தை அறியவேண்டுமென்று என் ஆவி கலங்கியிருக்கிறது என்றான். 4 அப்பொழுது கல்தேயர் ராஜாவை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; சொப்பனத்தை உமது அடியாருக்குச் சொல்லும், அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்று சீரியபாஷையிலே சொன்னார்கள். 5 ராஜா கல்தேயருக்குப் பிரதியுத்தரமாக: என்னிடத்திலிருந்து பிறக்கிற தீர்மானம் என்னவென்றால், நீங்கள் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்கு அறிவியாமற்போனால் துண்டித்துப்போடப்படுவீர்கள்; உங்கள் வீடுகள் எருக்களங்களாக்கப்படும். 6 சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் தெரிவித்தீர்களேயாகில், என்னிடத்தில் வெகுமதிகளையும் பரிசுகளையும் மிகுந்த கனத்தையும் பெறுவீர்கள்; ஆகையால் சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் எனக்குத் தெரிவியுங்கள் என்றான். 7 அவர்கள் மறுபடியும் பிரதியுத்தரமாக: ராஜா அடியாருக்குச் சொப்பனத்தைச் சொல்வாராக; அப்பொழுது அதின் அர்த்தத்தை விடுவிப்போம் என்றார்கள். 8 அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: என்னிடத்திலிருந்து தீர்மானம் பிறந்தபடியினாலே நீங்கள் காலதாமதம் பண்ணப்பார்க்கிறீர்களென்று நிச்சயமாக எனக்குத் தெரியவருகிறது. 9 காலம் மாறுமென்று நீங்கள் எனக்கு முன்பாகப் பொய்யும் புரட்டுமான விசேஷத்தைச் சொல்லும்படி எத்தனம்பண்ணி இருக்கிறீர்கள்; நீங்கள் சொப்பனத்தை எனக்குத் தெரிவிக்காமற்போனால், உங்களெல்லாருக்கும் இந்த ஒரே தீர்ப்பு பிறந்திருக்கிறது; ஆகையால் சொப்பனத்தை எனக்குச் சொல்லுங்கள்; அப்பொழுது அதின் அர்த்தத்தையும் உங்களால் காண்பிக்கக்கூடுமென்று அறிந்துகொள்ளுவேன் என்றான். 10 கல்தேயர் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கும் காரியத்தை அறிவிக்கத்தக்க மனுஷன் பூமியில் ஒருவனும் இல்லை; ஆகையால் மகத்துவமும் வல்லமையுமான எந்த ராஜாவும் இப்படிப்பட்ட காரியத்தை ஒரு சாஸ்திரியினிடத்திலாவது ஜோசியனிடத்திலாவது கல்தேயனிடத்திலாவது கேட்டதில்லை. 11 ராஜா கேட்கிற காரியம் மிகவும் அருமையானது; மாம்சமாயிருக்கிறவர்களோடே வாசம்பண்ணாத தேவர்களேயொழிய ராஜசமுகத்தில் அதை அறிவிக்கத்தக்கவர் ஒருவரும் இல்லை என்றார்கள். 12 இதினிமித்தம் ராஜா மகா கோபமும் உக்கிரமுங்கொண்டு, பாபிலோனில் இருக்கிற எல்லா ஞானிகளையும் கொலைசெய்யும்படி கட்டளையிட்டான். 13 ஞானிகளைக் கொலைசெய்ய வேண்டுமென்கிற கட்டளை வெளிப்பட்டபோது, தானியேலையும் அவன் தோழரையும் கொலைசெய்யத் தேடினார்கள். 14 பாபிலோனின் ஞானிகளைக் கொலைசெய்யப் புறப்பட்ட ராஜாவினுடைய தலையாரிகளுக்கு அதிபதியாகிய ஆரியோகோடே தானியேல் யோசனையும் புத்தியுமாய்ப் பேசி: 15 இந்தக் கட்டளை ராஜாவினால் இத்தனை அவசரமாய்ப் பிறந்ததற்குக் காரணம் என்ன என்று ராஜாவின் சேர்வைக்காரனாகிய ஆரியோகினிடத்தில் கேட்டான்; அப்பொழுது ஆரியோகு தானியேலுக்குக் காரியத்தை அறிவித்தான். 16 தானியேல் ராஜாவினிடத்தில் போய், சொப்பனத்தின் அர்த்தத்தை ராஜாவுக்குக் காண்பிக்கும்படித் தனக்குத் தவணைகொடுக்க விண்ணப்பம்பண்ணினான். 17 பின்பு தானியேல் தன் வீட்டுக்குப் போய், தானும் தன் தோழரும் பாபிலோனின் மற்ற ஞானிகளோடேகூட அழியாதபடிக்கு இந்த மறைபொருளைக்குறித்துப் பரலோகத்தின் தேவனை நோக்கி இரக்கம் கேட்கிறதற்காக, 18 அனனியா, மீஷாவேல், அசரியா என்னும் தன்னுடைய தோழருக்கு இந்தக் காரியத்தை அறிவித்தான். 19 பின்பு இராக்காலத்தில் தரிசனத்திலே தானியேலுக்கு மறைபொருள் வெளிப்படுத்தப்பட்டது; அப்பொழுது தானியேல் பரலோகத்தின் தேவனை ஸ்தோத்திரித்தான். 20 பின்பு தானியேல் சொன்னது: தேவனுடைய நாமத்துக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ஸ்தோத்திரமுண்டாவதாக; ஞானமும் வல்லமையும் அவருக்கே உரியது. 21 அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர். 22 அவரே ஆழமும் மறைபொருளுமானதை வெளிப்படுத்துகிறவர்; இருளில் இருக்கிறதை அவர் அறிவார்; வெளிச்சம் அவரிடத்தில் தங்கும். 23 என் பிதாக்களின் தேவனே, நீர் எனக்கு ஞானமும் வல்லமையும் கொடுத்து, நாங்கள் உம்மிடத்தில் வேண்டிக்கொண்டதை இப்பொழுது எனக்கு அறிவித்து, ராஜாவின் காரியத்தை எங்களுக்குத் தெரிவித்தபடியினால், உம்மைத் துதித்துப் புகழுகிறேன் என்றான். 24 பின்பு தானியேல் பாபிலோனின் ஞானிகளை அழிக்க ராஜா கட்டளையிட்ட ஆரியோகினிடத்தில் போய்: பாபிலோனின் ஞானிகளை அழிக்காதேயும், என்னை ராஜாவின் முன்பாக அழைத்துக்கொண்டுபோம்; ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பேன் என்று சொன்னான். 25 அப்பொழுது ஆரியோகு தானியேலை ராஜாவின் முன்பாகத் தீவிரமாய் அழைத்துக்கொண்டுபோய்: சிறைப்பட்டுவந்த யூதேயா தேசத்தாரில் ஒரு புருஷனைக் கண்டுபிடித்தேன்; அவன் ராஜாவுக்கு அர்த்தத்தைத் தெரிவிப்பான் என்றான். 26 ராஜா பெல்தெஷாத்சாரென்னும் நாமமுள்ள தானியேலை நோக்கி: நான் கண்ட சொப்பனத்தையும் அதின் அர்த்தத்தையும் நீ எனக்கு அறிவிக்கக்கூடுமா என்று கேட்டான். 27 தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: ராஜா கேட்கிற மறைபொருளை ராஜாவுக்குத் தெரிவிக்க ஞானிகளாலும், ஜோசியராலும், சாஸ்திரிகளாலும், குறிசொல்லுகிறவர்களாலும் கூடாது. 28 மறைபொருள்களை வெளிப்படுத்துகிற பரலோகத்திலிருக்கிற தேவன் கடைசிநாட்களில் சம்பவிப்பதை ராஜாவாகிய நேபுகாத்நேச்சாருக்குத் தெரிவித்திருக்கிறார்; உம்முடைய சொப்பனமும் உமது படுக்கையின்மேல் உம்முடைய தலையில் உண்டான தரிசனங்களும் என்னவென்றால்: 29 ராஜாவே, உம்முடைய படுக்கையின்மேல் நீர் படுத்திருக்கையில், இனிமேல் சம்பவிக்கப்போகிறதென்ன என்கிற நினைவுகள் உமக்குள் எழும்பிற்று; அப்பொழுது மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவர் சம்பவிக்கப்போகிறதை உமக்குத் தெரிவித்தார். 30 உயிரோடிருக்கிற எல்லாரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவுக்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது. 31 ராஜாவே, நீர் ஒரு பெரிய சிலையைக் கண்டீர்; அந்தப் பெரிய சிலை மிகுந்த பிரகாசமுள்ளதாயிருந்தது; அது உமக்கு எதிரே நின்றது; அதின் ரூபம் பயங்கரமாயிருந்தது. 32 அந்தச் சிலையின் தலை பசும்பொன்னும், அதின் மார்பும் அதின் புயங்களும் வெள்ளியும், அதின் வயிறும் அதின் தொடையும் வெண்கலமும், 33 அதின் கால்கள் இரும்பும், அதின் பாதங்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது. 34 நீர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, கைகளால் பெயர்க்கப்படாத ஒரு கல் பெயர்ந்து உருண்டுவந்தது; அது அந்தச் சிலையை இரும்பும் களிமண்ணுமாகிய அதின் பாதங்களில் மோதி, அவைகளை நொறுக்கிப்போட்டது. 35 அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று. 36 சொப்பனம் இதுதான்; அதின் அர்த்தத்தையும் ராஜசமுகத்தில் தெரிவிப்போம். 37 ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர்; பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார். 38 சகல இடங்களிலுமுள்ள மனுபுத்திரரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளையெல்லாம் ஆளும்படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே. 39 உமக்குப்பிறகு உமக்குக் கீழ்த்தரமான வேறொரு ராஜ்யம் தோன்றும்; பின்பு பூமியையெல்லாம் ஆண்டுகொள்ளும் வெண்கலமான மூன்றாம் ராஜ்யம் ஒன்று எழும்பும். 40 நாலாவது ராஜ்யம் இரும்பைப்போல உரமாயிருக்கும்; இரும்பு எல்லாவற்றையும் எப்படி நொறுக்கிச் சின்னபின்னமாக்குகிறதோ, அப்படியே இது நொறுக்கிப்போடுகிற இரும்பைபோல அவைகளையெல்லாம் நொறுக்கித் தகர்த்துப்போடும். 41 பாதங்களும் கால்விரல்களும் பாதி குயவனின் களிமண்ணும், பாதி இரும்புமாயிருக்க நீர் கண்டீரே, அந்த ராஜ்யம் பிரிக்கப்படும்; ஆகிலும் களிமண்ணோடே இரும்பு கலந்திருக்க நீர் கண்டபடியே இரும்பினுடைய உறுதியில் கொஞ்சம் அதிலே இருக்கும். 42 கால்விரல்கள் பாதி இரும்பும் பாதி களிமண்ணுமாயிருந்தது என்னவென்றால், அந்த ராஜ்யம் ஒருபங்கு உரமும் ஒருபங்கு நெரிசலுமாயிருக்கும். 43 நீர் இரும்பைக் களிமண்ணோடே கலந்ததாகக் கண்டீரே, அவர்கள் மற்ற மனுஷரோடே சம்பந்தங்கலப்பார்கள்; ஆகிலும் இதோ, களிமண்ணோடே இரும்பு கலவாததுபோல அவர்கள் ஒருவரோடொருவர் ஒட்டிக்கொள்ளாதிருப்பார்கள். 44 அந்த ராஜாக்களின் நாட்களிலே, பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப்பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து, உருண்டுவந்து, இரும்பையும் வெண்கலத்தையும் களிமண்ணையும் வெள்ளியையும் பொன்னையும் நொறுக்கினதை நீர் கண்டீரே, அப்படியே அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும். 45 இனிமேல் சம்பவிக்கப்போகிறதை மகா தேவன் ராஜாவுக்குத் தெரிவித்திருக்கிறார்; சொப்பனமானது நிச்சயம், அதின் அர்த்தம் சத்தியம் என்றான். 46 அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முகங்குப்புற விழுந்து, தானியேலை வணங்கி, அவனுக்குக் காணிக்கை செலுத்தவும் தூபங்காட்டவும் கட்டளையிட்டான். 47 ராஜா தானியேலை நோக்கி: நீ இந்த மறைபொருளை வெளிப்படுத்தினபடியினால், மெய்யாய் உங்கள் தேவனே தேவர்களுக்குத் தேவனும், ராஜாக்களுக்கு ஆண்டவரும், மறைபொருள்களை வெளிப்படுத்துகிறவருமாயிருக்கிறார் என்றான். 48 பின்பு ராஜா தானியேலைப் பெரியவனாக்கி, அவனுக்கு அநேகம் சிறந்த வெகுமதிகளைக் கொடுத்து, அவனைப் பாபிலோன் மாகாணம் முழுதுக்கும் அதிபதியாகவும், பாபிலோனிலுள்ள சகல ஞானிகளின் மேலும் பிரதான அதிகாரியாகவும் நியமித்தான். 49 தானியேல் ராஜாவை வேண்டிக்கொண்டதின்பேரில் அவன் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மாகாணத்துக் காரியங்களை விசாரிக்கும்படி வைத்தான்; தானியேலோவென்றால் ராஜாவின் கொலுமண்டபத்தில் இருந்தான்.

தானியேல் 3

1 ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து, பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான். 2 பின்பு ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் தேசாதிபதிகளையும், அதிகாரிகளையும், தலைவரையும், நியாயாதிபதிகளையும், பொக்கிஷக்காரரையும், நீதிசாஸ்திரிகளையும், விசாரிப்புக்காரரையும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரையும் நேபுகாத்நேச்சார் ராஜா நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்து சேரும்படி அழைத்தனுப்பினான். 3 அப்பொழுது தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், நியாயாதிபதிகளும், பொக்கிஷக்காரரும், நீதிசாஸ்திரிகளும், விசாரிப்புக்காரரும், நாடுகளிலுள்ள உத்தியோகஸ்தர் யாவரும், ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலையின் பிரதிஷ்டைக்கு வந்துசேர்ந்து, நேபுகாத்நேச்சார் நிறுத்தின சிலைக்கு எதிராக நின்றார்கள். 4 கட்டியக்காரன் உரத்த சத்தமாய்: சகல ஜனங்களும், ஜாதிகளும், பாஷைக்காரருமானவர்களே, உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது என்னவென்றால்: 5 எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள். 6 எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவான் என்றான். 7 ஆதலால் சகல ஜனங்களும், எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம் முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தைக் கேட்டவுடனே, சகல ஜனத்தாரும் ஜாதியாரும் பாஷைக்காரரும் தாழ விழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொண்டார்கள். 8 அச்சமயத்தில் கல்தேயரில் சிலர் ராஜசமுகத்தில் வந்து, யூதர்பேரில் குற்றஞ்சாற்றி, 9 ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரை நோக்கி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க. 10 எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் கேட்கிற எந்த மனுஷனும் தாழவிழுந்து, பொற்சிலையைப் பணிந்துகொள்ளவேண்டுமென்றும், 11 எவனாகிலும் தாழ விழுந்து பணிந்துகொள்ளாமற்போனால், அவன் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படவேண்டுமென்றும், ராஜாவாகிய நீர் கட்டளையிட்டீரே. 12 பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும்படி நீர் ஏற்படுத்தின சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் யூதரான மனுஷர் இருக்கிறார்களே; அவர்கள் ராஜாவாகிய உம்மை மதிக்கவில்லை; அவர்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்யாமலும், நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருக்கிறார்கள் என்றார்கள். 13 அப்பொழுது நேபுகாத்நேச்சார் உக்கிரகோபங்கொண்டு சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் அழைத்துக்கொண்டுவரும்படி கட்டளையிட்டான்; அவர்கள் அந்தப் புருஷரை ராஜாவின் சமுகத்தில் கொண்டுவந்து விட்டபோது, 14 நேபுகாத்நேச்சார் அவர்களை நோக்கி: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் என் தேவர்களுக்கு ஆராதனைசெய்யாமலும் நான் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளாமலும் இருந்தது மெய்தானா? 15 இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழ விழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்துகொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது; பணிந்துகொள்ளாதிருந்தீர்களேயாகில், அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்; உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான். 16 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி: நேபுகாத்நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. 17 நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். 18 விடுவிக்காமற்போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள். 19 அப்பொழுது நேபுகாத்நேச்சாருக்குக் கடுங்கோபமூண்டு: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுக்கு விரோதமாய் அவனுடைய முகம் வேறுபட்டது; சூளையைச் சாதாரணமாய்ச் சூடாக்குவதைப்பார்க்கிலும் ஏழுமடங்கு அதிகமாய்ச் சூடாக்கும்படி உத்தரவுகொடுத்து, 20 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களை எரிகிற அக்கினிச்சூளையிலே போடுவதற்கு அவர்களைக் கட்டும்படி, தன் இராணுவத்தில் பலசாலிகளாகிய புருஷருக்குக் கட்டளையிட்டான். 21 அப்பொழுது அவர்கள் தங்கள் சால்வைகளோடும் நிசார்களோடும் பாகைகளோடும் மற்ற வஸ்திரங்களோடும் கட்டப்பட்டு, எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்பட்டார்கள். 22 ராஜாவின் கட்டளை கடுமையாயிருந்தபடியினாலும், சூளை மிகவும் சூடாக்கப்பட்டிருந்தபடியினாலும், அக்கினிஜுவாலையானது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைத் தூக்கிக்கொண்டுபோன புருஷரைக் கொன்றுபோட்டது. 23 சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்னும் அந்த மூன்று புருஷரும் கட்டுண்டவர்களாய் எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே விழுந்தார்கள். 24 அப்பொழுது ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பிரமித்து, தீவிரமாய் எழுந்திருந்து, தன் மந்திரிமார்களை நோக்கி: மூன்று புருஷரை அல்லவோ கட்டுண்டவர்களாக அக்கினியிலே போடுவித்தோம் என்றான்; அவர்கள் ராஜாவுக்குப் பிரதியுத்தரமாக: ஆம், ராஜாவே என்றார்கள். 25 அதற்கு அவன்: இதோ, நாலுபேர் விடுதலையாய் அக்கினியின் நடுவிலே உலாவுகிறதைக் காண்கிறேன்; அவர்களுக்கு ஒரு சேதமுமில்லை; நாலாம் ஆளின் சாயல் தேவபுத்திரனுக்கு ஒப்பாயிருக்கிறது என்றான். 26 அப்பொழுது நேபுகாத்நேச்சார் எரிகிற அக்கினிச்சூளையின் வாசலண்டைக்கு வந்து, உன்னதமான தேவனுடைய தாசராகிய சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களே, நீங்கள் வெளியே வாருங்கள் என்றான்; அப்பொழுது சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் அக்கினியின் நடுவிலிருந்து வெளியே வந்தார்கள். 27 தேசாதிபதிகளும், அதிகாரிகளும், தலைவரும், ராஜாவின் மந்திரிகளும் கூடிவந்து, அந்தப் புருஷருடைய சரீரங்களின்மேல் அக்கினி பெலஞ்செய்யாமலும், அவர்களுடைய தலைமயிர் கருகாமலும், அவர்களுடைய சால்வைகள் சேதப்படாமலும், அக்கினியின் மணம் அவர்களிடத்தில் வீசாமலும் இருந்ததைக் கண்டார்கள். 28 அப்பொழுது நேபுகாத்நேச்சார் வசனித்து: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர்கள் தங்களுடைய தேவனைத்தவிர வேறொரு தேவனையும் சேவித்துப் பணியாமல், அவரையே நம்பி, ராஜாவின் கட்டளையைத் தள்ளி, தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்ததினால், அவர் தமது தூதனை அனுப்பி, தம்முடைய தாசரை விடுவித்தார். 29 ஆதலால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷண வார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்தப் பாஷைக்காரனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான். 30 பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்.

தானியேல் 4

1 ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமி எங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதுகிறது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது. 2 உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது. 3 அவருடைய அடையாளங்கள் எவ்வளவு மகத்துவமும், அவருடைய அற்புதங்கள் எவ்வளவு வல்லமையுமாயிருக்கிறது; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; அவருடைய ஆளுகை தலைமுறை தலைமுறையாக நிற்கும். 4 நேபுகாத்நேச்சாராகிய நான் என் வீட்டிலே சவுக்கியமுள்ளவனாயிருந்து என் அரமனையிலே வாழ்ந்துகொண்டிருந்தேன். 5 நான் ஒரு சொப்பனத்தைக் கண்டேன்; அது எனக்குத் திகிலை உண்டாக்கிற்று; என் படுக்கையின்மேல் எனக்குள் உண்டான நினைவுகளும், என் தலையில் தோன்றின தரிசனங்களும் என்னைக் கலங்கப்பண்ணிற்று. 6 ஆகையால் சொப்பனத்தின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்காகப் பாபிலோன் ஞானிகளையெல்லாம் என்னிடத்தில் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன். 7 அப்பொழுது சாஸ்திரிகளும், ஜோசியரும், கல்தேயரும், குறிசொல்லுகிறவர்களும் என்னிடத்திலே வந்தார்கள்; சொப்பனத்தை நான் அவர்களுக்குச் சொன்னேன்; ஆனாலும் அதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கமாட்டாமற்போனார்கள். 8 கடைசியிலே என் தேவனுடைய நாமத்தின்படியே பெல்தெஷாத்சார் என்னும் பெயரிடப்பட்டு, பரிசுத்த தேவர்களின் ஆவியையுடைய தானியேல் என்னிடத்தில் கொண்டுவரப்பட்டான்; அவனிடத்தில் நான் சொப்பனத்தை விவரித்துச் சொன்னதாவது: 9 சாஸ்திரிகளின் அதிபதியாகிய பெல்தெஷாத்சாரே, பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதென்றும், எந்த மறைபொருளையும் அறிவது உனக்கு அரிதல்லவென்றும் நான் அறிவேன்; நான் கண்ட என் சொப்பனத்தின் தரிசனங்களையும் அதின் அர்த்தத்தையும் சொல்லு. 10 நான் படுத்திருந்தபோது என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னவென்றால்: இதோ, தேசத்தின் மத்தியிலே மிகவும் உயரமான ஒரு விருட்சத்தைக் கண்டேன். 11 அந்த விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தமும் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. 12 அதின் இலைகள் நேர்த்தியும், அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின் கீழே வெளியின் மிருகங்கள் நிழலுக்கு ஒதுங்கினது; அதின் கொப்புகளில் ஆகாயத்துப் பட்சிகள் தாபரித்துச் சகல பிராணிகளும் அதினால் போஷிக்கப்பட்டது. 13 நான் படுத்திருக்கையில் என் தலையில் தோன்றின தரிசனங்களைக் காணும்போது, காவலாளனாகிய பரிசுத்தவான் ஒருவன் வானத்திலிருந்து இறங்கக்கண்டேன். 14 அவன் உரத்த சத்தமிட்டு: இந்த விருட்சத்தை வெட்டி, இதின் கொப்புகளைத் தறித்துப்போடுங்கள்; இதின் இலைகளை உதிர்த்து, இதின் கனிகளைச் சிதறடியுங்கள்; இதின் கீழுள்ள மிருகங்களும் இதின் கொப்புகளிலுள்ள பட்சிகளும் போய்விடட்டும். 15 ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் பூமியில் இருக்கட்டும்; இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; மிருகங்களோடே பூமியின் பூண்டிலே அவனுக்குப் பங்கு இருக்கக்கடவது. 16 அவனுடைய இருதயம் மனுஷ இருதயமாயிராமல் மாறும்படி, மிருக இருதயம் அவனுக்குக் கொடுக்கப்படக்கடவது; இப்படியிருக்கிற அவன்மேல் ஏழு காலங்கள் கடந்துபோகவேண்டும். 17 உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து தமக்குச் சித்தமானவனுக்கு அதைக் கொடுத்து, மனுஷரில் தாழ்ந்தவனையும் அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று நரஜீவன்கள் அறியும்படிக்குக் காவலாளரின் தீர்ப்பினால் இந்தக் காரியமும் பரிசுத்தவான்களின் மொழியினால் இந்த விசாரணையும் தீர்மானிக்கப்பட்டது என்றான். 18 நேபுகாத்நேச்சார் என்னும் ராஜாவாகிய நான் கண்ட சொப்பனம் இதுவே; இப்போது பெல்தெஷாத்சாரே, நீ இதின் அர்த்தத்தைச் சொல்லு; என் ராஜ்யத்திலுள்ள ஞானிகள் எல்லாராலும் இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கக்கூடாமற்போயிற்று; நீயோ இதைத் தெரிவிக்கத்தக்கவன்; பரிசுத்த தேவர்களுடைய ஆவி உனக்குள் இருக்கிறதே என்றான். 19 அப்பொழுது பெல்தெஷாத்சாரென்னும் பெயருள்ள தானியேல் ஒரு நாழிகைமட்டும் திகைத்துச் சிந்தித்துக் கலங்கினான். ராஜா அவனை நோக்கி: பெல்தெஷாத்சாரே, சொப்பனமும் அதின் அர்த்தமும் உன்னைக் கலங்கப்பண்ணவேண்டியதில்லை என்றான்; அப்பொழுது பெல்தெஷாத்சார் பிரதியுத்தரமாக: என் ஆண்டவனே, அந்தச் சொப்பனம் உம்முடைய பகைவரிடத்திலும், அதின் அர்த்தம் உம்முடைய சத்துருக்களிடத்திலும் பலிக்கக்கடவது. 20 நீர் கண்ட விருட்சம் வளர்ந்து பலத்து, தேசத்தின் எல்லைபரியந்தம் காணப்படத்தக்கதாக அதின் உயரம் வானபரியந்தம் எட்டினது. 21 அதின் இலைகள் நேர்த்தியும், அதின் கனி மிகுதியுமாயிருந்தது; எல்லா ஜீவனுக்கும் அதில் ஆகாரம் உண்டாயிருந்தது; அதின் கீழே வெளியின் மிருகங்கள் தங்கினது, அதின் கொப்புகளில் ஆகாயத்துப்பட்சிகள் தாபரித்தது. 22 அது பெரியவரும் பலத்தவருமாயிருக்கிற ராஜாவாகிய நீர்தாமே; உமது மகத்துவம் பெருகி வானபரியந்தமும், உமது கர்த்தத்துவம் பூமியின் எல்லைபரியந்தமும் எட்டியிருக்கிறது. 23 இந்த விருட்சத்தை வெட்டி, இதை அழித்துப்போடுங்கள்; ஆனாலும் இதின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டுமென்றும், இரும்பும் வெண்கலமுமான விலங்கு இடப்பட்டு, வெளியின் பசும்புல்லிலே தங்கி, ஆகாயத்துப் பனியிலே நனைவதாக; ஏழு காலங்கள் அவன்மேல் கடந்துபோகுமட்டும் மிருகங்களோடே அவனுடைய பங்கு இருக்கக்கடவதென்றும், வானத்திலிருந்து இறங்கிச் சொன்ன பரிசுத்த காவலாளனை ராஜாவாகிய நீர் கண்டீரே. 24 ராஜாவே, அதின் அர்த்தமும் ராஜாவாகிய என் ஆண்டவன்பேரில் வந்த உன்னதமானவருடைய தீர்மானமும் என்னவென்றால்: மனுஷரினின்று நீர் தள்ளிவிடப்படுவீர்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பீர்; மாடுகளைப்போலப் புல்லைமேய்ந்து, ஆகாயத்துப் பனியிலே நனைவீர். 25 உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறார் என்பதை நீர் அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உம்முடையபேரில் கடந்துபோகவேண்டும். 26 ஆனாலும் விருட்சத்தின் வேர்களாகிய அடிமரம் தரையில் இருக்கட்டும் என்று சொல்லப்பட்டது என்னவென்றால்: நீர் பரம அதிகாரத்தை அறிந்தபின், ராஜ்யம் உமக்கு நிலைநிற்கும். 27 ஆகையால் ராஜாவே, நான் சொல்லும் ஆலோசனையை நீர் அங்கீகரித்துக்கொண்டு நீதியைச் செய்து உமது பாவங்களையும், சிறுமையானவர்களுக்கு இரங்கி உமது அக்கிரமங்களையும் அகற்றிவிடும்; அப்பொழுது உம்முடைய வாழ்வு நீடித்திருக்கலாம் என்றான். 28 இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது. 29 பன்னிரண்டு மாதம் சென்றபின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது: 30 இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். 31 இந்த வார்த்தை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று. 32 மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று விளம்பினது. 33 அந்நேரமே இந்த வார்த்தை நேபுகாத்நேச்சாரிடத்தில் நிறைவேறிற்று; அவன் மனுஷரினின்று தள்ளப்பட்டு, மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தான்; அவனுடைய தலைமயிர் கழுகுகளுடைய இறகுகளைப்போலவும், அவனுடைய நகங்கள் பட்சிகளுடைய நகங்களைப்போலவும் வளருமட்டும் அவன் சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது. 34 அந்த நாட்கள் சென்றபின்பு, நேபுகாத்நேச்சாராகிய நான் என் கண்களை வானத்துக்கு ஏறெடுத்தேன்; என் புத்தி எனக்குத் திரும்பி வந்தது; அப்பொழுது நான் உன்னதமானவரை ஸ்தோத்திரித்து, என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவரைப் புகழ்ந்து மகிமைப்படுத்தினேன்; அவருடைய கர்த்தத்துவமே நித்திய கர்த்தத்துவம், அவருடைய ராஜ்யமே தலைமுறை தலைமுறையாக நிற்கும். 35 பூமியின் குடிகள் எல்லாம் ஒன்றுமில்லையென்று எண்ணப்படுகிறார்கள்; அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார்; அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: என்ன செய்கிறீரென்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை என்றேன். 36 அவ்வேளையில் என் புத்தி எனக்குத் திரும்பி வந்தது; என் ராஜ்யபாரத்தின் மேன்மைக்காக என் மகிமையும் என் முகக்களையும் எனக்குத் திரும்பி வந்தது; என் மந்திரிமாரும் என் பிரபுக்களும் என்னைத் தேடிவந்தார்கள்; என் ராஜ்யத்திலே நான் ஸ்திரப்படுத்தப்பட்டேன்; அதிக மகத்துவமும் எனக்குக் கிடைத்தது. 37 ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி, மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள்; அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.

தானியேல் 5

1 பெல்ஷாத்சார் என்னும் ராஜா தன் பிரபுக்களில் ஆயிரம்பேருக்கு ஒரு பெரிய விருந்துசெய்து, அந்த ஆயிரம்பேருக்கு முன்பாகத் திராட்சரசம் குடித்தான். 2 பெல்ஷாத்சார் திராட்சரசத்தை ருசித்துக்கொண்டிருக்கையில், அவன் தன் தகப்பனாகிய நேபுகாத்நேச்சார் எருசலேம் தேவாலயத்திலிருந்து கொண்டுவந்த பொன் வெள்ளி பாத்திரங்களில், ராஜாவாகிய தானும் தன் பிரபுக்களும் தன் மனைவிகளும் தன் வைப்பாட்டிகளும் குடிக்கிறதற்காக அவைகளைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான். 3 அப்பொழுது எருசலேமிலுள்ள தேவனுடைய வீடாகிய ஆலயத்திலிருந்து எடுக்கப்பட்ட பொற்பாத்திரங்களைக் கொண்டுவந்தார்கள்; அவைகளில் ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் அவனுடைய மனைவிகளும் அவனுடைய வைப்பாட்டிகளும் குடித்தார்கள். 4 அவர்கள் திராட்சரசம் குடித்து, பொன்னும் வெள்ளியும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தார்கள். 5 அந்நேரத்திலே மனுஷ கைவிரல்கள் தோன்றி, விளக்குக்கு எதிராக ராஜ அரமனையின் சாந்து பூசப்பட்ட சுவரிலே எழுதிற்று; எழுதின அந்தக் கையுறுப்பை ராஜா கண்டான். 6 அப்பொழுது ராஜாவின் முகம் வேறுபட்டது; அவனுடைய நினைவுகள் அவனைக் கலங்கப்பண்ணினது; அவனுடைய இடுப்பின் கட்டுகள் தளர்ந்தது, அவனுடைய முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டது. 7 ராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ, அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான். 8 அப்பொழுது ராஜாவின் ஞானிகளெல்லாரும் வந்து சேர்ந்தார்கள்; ஆனாலும் அவர்கள் அந்த எழுத்தை வாசிக்கவும், அதின் அர்த்தத்தை ராஜாவுக்குத் தெரிவிக்கவும் கூடாதிருந்தது. 9 அப்பொழுது ராஜாவாகிய பெல்ஷாத்சார் மிகவும் கலங்கினான்; அவனுடைய முகம் வேறுபட்டது; அவனுடைய பிரபுக்கள் திகைத்தார்கள். 10 ராஜாவும் அவனுடைய பிரபுக்களும் சொன்னவைகளை ராஜாத்தி கேள்விப்பட்டு விருந்துசாலைக்குள் பிரவேசித்தாள். அப்பொழுது ராஜாத்தி: ராஜாவே, நீர் என்றும் வாழ்க; உமது நினைவுகள் உம்மைக் கலங்கப்பண்ணவும், உமது முகம் வேறுபடவும் வேண்டியதில்லை. 11 உம்முடைய ராஜ்யத்திலே ஒரு புருஷன் இருக்கிறான், அவனுக்குள் பரிசுத்த தேவர்களுடைய ஆவி இருக்கிறது; உம்முடைய பிதாவின் நாட்களில் வெளிச்சமும் விவேகமும் தேவர்களின் ஞானத்துக்கு ஒத்த ஞானமும் அவனிடத்தில் காணப்பட்டது; ஆகையால் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சாரென்னும் ராஜாவானவர் அவனைச் சாஸ்திரிகளுக்கும் ஜோசியருக்கும் கல்தேயருக்கும் குறிசொல்லுகிறவர்களுக்கும் அதிபதியாக வைத்தார். 12 ராஜாவினால் பெல்தெஷாத்சாரென்னும் பெயரிடப்பட்ட அந்தத் தானியேலுக்குள் சொப்பனங்களை வியார்த்திபண்ணுகிறதும், புதைபொருள்களை வெளிப்படுத்துகிறதும், கருகலானவைகளைத் தெளிவிக்கிறதுமான அறிவும் புத்தியும் விசேஷித்த ஆவியும் உண்டென்று காணப்பட்டது; இப்போதும் தானியேல் அழைக்கப்படட்டும், அவன் அர்த்தத்தை வெளிப்படுத்துவான் என்றாள். 13 அப்பொழுது தானியேல் ராஜாவின்முன் உள்ளே அழைத்துவந்து விடப்பட்டான்; ராஜா தானியேலைப் பார்த்து: நீ என் பிதாவாகிய ராஜா யூதாவிலிருந்து சிறைபிடித்துவந்த யூதரில் ஒருவனாகிய தானியேல் அல்லவா? 14 உனக்குள்ளே தேவர்களின் ஆவி உண்டென்றும், வெளிச்சமும் புத்தியும் விசேஷித்த ஞானமும் உன்னிடத்தில் காணப்பட்டதென்றும் உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன். 15 இப்போதும் இந்த எழுத்தை வாசிக்கிறதற்கும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கிறதற்கும் சாஸ்திரிகளும் ஜோசியரும் எனக்கு முன்பாக அழைத்துக்கொண்டுவரப்பட்டார்கள்; ஆனாலும் இந்த வசனத்தின் அர்த்தத்தை வெளிப்படுத்த அவர்களால் கூடாமற்போயிற்று. 16 பொருளை வெளிப்படுத்தவும், கருகலானவைகளைத் தெளிவிக்கவும் உன்னாலே கூடுமென்று உன்னைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்போதும் நீ இந்த எழுத்தை வாசிக்கவும், இதின் அர்த்தத்தை எனக்குத் தெரிவிக்கவும் உன்னாலே கூடுமானால், நீ இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பாய் என்றான். 17 அப்பொழுது தானியேல் ராஜசமுகத்தில் பிரதியுத்தரமாக: உம்முடைய வெகுமானங்கள் உம்மிடத்திலேயே இருக்கட்டும்; உம்முடைய பரிசுகளை வேறொருவனுக்குக் கொடும்; இந்த எழுத்தை நான் ராஜாவுக்கு வாசித்து, இதின் அர்த்தத்தைத் தெரிவிப்பேன். 18 ராஜாவே, உன்னதமான தேவன் உம்முடைய பிதாவாகிய நேபுகாத்நேச்சாருக்கு ராஜ்யத்தையும் மகத்துவத்தையும் கனத்தையும் மகிமையையும் கொடுத்தார். 19 அவருக்குக் கொடுக்கப்பட்ட மகத்துவத்தினாலே சகல ஜனங்களும் ஜாதியாரும் பாஷைக்காரரும் அவருக்கு முன்பாக நடுங்கிப் பயந்திருந்தார்கள்; அவர் தமக்குச் சித்தமானவனைக் கொன்றுபோடுவார், தமக்குச் சித்தமானவனை உயிரோடே வைப்பார்; தமக்குச் சித்தமானவனை உயர்த்துவார், தமக்குச் சித்தமானவனைத் தாழ்த்துவார். 20 அவருடைய இருதயம் மேட்டிமையாகி, அவருடைய ஆவி கர்வத்தினாலே கடினப்பட்டபோது, அவர் தமது சிங்காசனத்திலிருந்து தள்ளப்பட்டார்; அவருடைய மகிமை அவரைவிட்டு அகன்றுபோயிற்று. 21 அவர் மனுஷரினின்று தள்ளப்பட்டார்; அவருடைய இருதயம் மிருகங்களுடைய இருதயம்போலாயிற்று; காட்டுக்கழுதைகளோடே சஞ்சரித்தார்; உன்னதமான தேவன் மனுஷரின் ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமானவனை அதின்மேல் அதிகாரியாக்குகிறார் என்று அவர் உணர்ந்துகொள்ளுமட்டும் மாடுகளைப்போல் புல்லை மேய்ந்தார்; அவருடைய சரீரம் ஆகாயத்துப் பனியிலே நனைந்தது. 22 அவருடைய குமாரனாகிய பெல்ஷாத்சார் என்னும் நீரோவென்றால், இதையெல்லாம் அறிந்திருந்தும், உமது இருதயத்தைத் தாழ்த்தாமல், 23 பரலோகத்தின் ஆண்டவருக்கு விரோதமாக உம்மை உயர்த்தினீர்; அவருடைய ஆலயத்தின் பாத்திரங்களை உமக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்; நீரும், உம்முடைய பிரபுக்களும், உம்முடைய மனைவிகளும், உம்முடைய வைப்பாட்டிகளும் அவைகளில் திராட்சரசம் குடித்தீர்கள்; இதுவுமன்றி, தம்முடைய கையில் உமது சுவாசத்தை வைத்திருக்கிறவரும், உமது வழிகளுக்கு எல்லாம் அதிகாரியுமாகிய தேவனை நீர் மகிமைப்படுத்தாமல் காணாமலும் கேளாமலும் உணராமலும் இருக்கிற வெள்ளியும் பொன்னும் வெண்கலமும் இரும்பும் மரமும் கல்லுமாகிய தேவர்களைப் புகழ்ந்தீர். 24 அப்பொழுது அந்தக் கையுறுப்பு அவரால் அனுப்பப்பட்டு, இந்த எழுத்து எழுதப்பட்டது. 25 எழுதப்பட்ட எழுத்து என்னவென்றால்: மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின் என்பதே. 26 இந்த வசனத்தின் அர்த்தமாவது: மெனே என்பதற்கு, தேவன் உன் ராஜ்யத்தை மட்டிட்டு, அதற்கு முடிவுண்டாக்கினார் என்றும், 27 தெக்கேல் என்பதற்கு, நீ தராசிலே நிறுக்கப்பட்டு, குறையக் காணப்பட்டாய் என்றும், 28 பெரேஸ் என்பதற்கு, உன் ராஜ்யம் பிரிக்கப்பட்டு, மேதியருக்கும் பெர்சியருக்கும் கொடுக்கப்பட்டது என்றும் அர்த்தமாம் என்றான். 29 அப்பொழுது பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தையும், அவனுடைய கழுத்தில் பொற்சரப்பணியையும் தரிப்பிக்கவும், ராஜ்யத்திலே அவன் மூன்றாம் அதிகாரியாயிருப்பவன் என்று அவனைக்குறித்துப் பறைமுறையிடவும் கட்டளையிட்டான். 30 அன்று இராத்திரியிலே கல்தேயரின் ராஜாவாகிய பெல்ஷாத்சார் கொலைசெய்யப்பட்டான். 31 மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டான்.

தானியேல் 6

1 ராஜ்யம் முழுவதையும் ஆளும்படிக்குத் தன் ராஜ்யத்தின்மேல் நூற்றிருபது தேசாதிபதிகளையும், 2 ராஜாவுக்கு நஷ்டம் வராதபடிக்கு அந்த தேசாதிபதிகள் கணக்கு ஒப்புவிக்கிறதற்காக அவர்களுக்கு மேலாக மூன்று பிரதானிகளையும் ஏற்படுத்துவது தரியுவுக்கு நலமென்று கண்டது; இவர்களில் தானியேல் ஒருவனாயிருந்தான். 3 இப்படியிருக்கையில் தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான். 4 அப்பொழுது பிரதானிகளும் தேசாதிபதிகளும் ராஜ்யத்தின் விசாரிப்பிலே தானியேலைக் குற்றப்படுத்தும்படி முகாந்தரம் தேடினார்கள்; ஆனாலும் ஒரு முகாந்தரத்தையும் குற்றத்தையும் கண்டுபிடிக்க அவர்களால் கூடாதிருந்தது; அவன் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் அவன்மேல் சுமத்த யாதொரு குற்றமும் குறைவும் காணப்படவில்லை. 5 அப்பொழுது அந்த மனுஷர்: நாம் இந்தத் தானியேலை அவனுடைய தேவனைப்பற்றிய வேதவிஷயத்திலே குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடித்தாலொழிய அவனை வேறொன்றிலும் குற்றப்படுத்தும் முகாந்தரத்தைக் கண்டுபிடிக்கக்கூடாது என்றார்கள். 6 பின்பு அந்தப் பிரதானிகளும் தேசாதிபதிகளும் கூட்டங்கூடி ராஜாவினிடத்தில் போய், அவனை நோக்கி: தரியு ராஜாவே, நீர் என்றும் வாழ்க. 7 எவனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்தத் தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி, யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்பட, ராஜா கட்டளை பிறப்பித்து, உறுதியான தாக்கீது செய்யவேண்டுமென்று ராஜ்யத்தினுடைய எல்லாப் பிரதானிகளும், தேசாதிபதிகளும், பிரபுக்களும், மந்திரிமார்களும், தலைவர்களும் ஆலோசனைபண்ணிக் கொண்டிருக்கிறார்கள். 8 ஆதலால் இப்போதும் ராஜாவே, மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படியே, அந்தத் தாக்கீது மாற்றப்படாதபடி நீர் அதைக் கட்டளையிட்டு, அதற்குக் கையெழுத்து வைக்கவேண்டும் என்றார்கள். 9 அப்படியே ராஜாவாகிய தரியு அந்தக் கட்டளைப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைத்தான். 10 தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராகப் பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்துவந்தபடியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான். 11 அப்பொழுது அந்த மனுஷர் கூட்டங்கூடி, தானியேல் தன் தேவனுக்கு முன்பாக ஜெபம்பண்ணி விண்ணப்பம்செய்கிறதைக் கண்டார்கள். 12 பின்பு அவர்கள் ராஜாவுக்கு முன்பாக வந்து, ராஜாவின் தாக்கீதைக்குறித்து: எந்த மனுஷனாகிலும் முப்பது நாள்வரையில் ராஜாவாகிய உம்மைத்தவிர எந்த தேவனையானாலும் மனுஷனையானாலும் நோக்கி யாதொரு காரியத்தைக்குறித்து விண்ணப்பம்பண்ணினால், அவன் சிங்கங்களின் கெபியிலே போடப்படவேண்டும் என்று நீர் கட்டளைப்பத்திரத்தில் கையெழுத்து வைத்தீர் அல்லவா என்றார்கள். அதற்கு ராஜா: அந்தக் காரியம் மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படி உறுதியாக்கப்பட்டதே என்றான். 13 அப்பொழுது அவர்கள் ராஜாவை நோக்கி: சிறைபிடிக்கப்பட்ட யூதேயா தேசத்தின் புத்திரரில் தானியேல் என்பவன் உம்மையும் நீர் கையெழுத்து வைத்துக்கொடுத்த கட்டளையையும் மதியாமல், தினம் மூன்று வேளையும் தான் பண்ணும் விண்ணப்பத்தைப் பண்ணுகிறான் என்றார்கள். 14 ராஜா இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன்னில் மிகவும் சஞ்சலப்பட்டு, தானியேலைக் காப்பாற்றும்படிக்கு அவன்பேரில் தன் மனதை வைத்து, அவனைத் தப்புவிக்கிறதற்காகச் சூரியன் அஸ்தமிக்குமட்டும் பிரயாசப்பட்டுக்கொண்டிருந்தான். 15 அப்பொழுது அந்த மனுஷர் ராஜாவினிடத்தில் கூட்டமாய் வந்து: ராஜா கட்டளையிட்ட எந்தத் தாக்கீதும் கட்டளையும் மாற்றப்படக்கூடாதென்பது மேதியருக்கும் பெர்சியருக்கும் பிரமாணமாயிருக்கிறதென்று அறிவீராக என்றார்கள். 16 அப்பொழுது ராஜா கட்டளையிட, அவர்கள் தானியேலைக் கொண்டுவந்து, அவனைச் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள். ராஜா தானியேலை நோக்கி: நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைத் தப்புவிப்பார் என்றான். 17 ஒரு கல் கெபியினுடைய வாசலின்மேல் கொண்டுவந்து வைக்கப்பட்டது; தானியேலைப்பற்றிய தீர்மானம் மாற்றப்படாதபடிக்கு ராஜா தன் மோதிரத்தினாலும் தன் பிரபுக்களின் மோதிரத்தினாலும் அதின்மேல் முத்திரைபோட்டான். 18 பின்பு ராஜா தன் அரமனைக்குப்போய், இராமுழுதும் போஜனம்பண்ணாமலும், கீதவாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவொட்டாமலும் இருந்தான்; அவனுக்கு நித்திரையும் வராமற்போயிற்று. 19 காலமே கிழக்கு வெளுக்கும்போது ராஜா எழுந்திருந்து, சிங்கங்களின் கெபிக்குத் தீவிரமாய்ப் போனான். 20 ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான். 21 அப்பொழுது தானியேல்: ராஜாவே, நீர் என்றும் வாழ்க. 22 சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்குத் தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான். 23 அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் கெபியிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் கெபியிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை. 24 தானியேலின்மேல் குற்றஞ்சாற்றின மனுஷரையோவென்றால், ராஜா கொண்டுவரச்சொன்னான்; அவர்களையும் அவர்கள் குமாரரையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; அவர்கள் கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது. 25 பின்பு ராஜாவாகிய தரியு தேசமெங்கும் குடியிருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதினது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது. 26 என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது; அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும். 27 தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார் என்று எழுதினான். 28 தரியுவின் ராஜ்யபார காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ராஜ்யபாரகாலத்திலும் தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது.

தானியேல் 7

1 பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின்மேல் தன் தலையில் தோன்றின தரிசனங்களையும் கண்டான். பின்பு அவன் அந்தச் சொப்பனத்தை எழுதி, காரியங்களின் தொகையை விவரித்தான். 2 தானியேல் சொன்னது: இராத்திரிகாலத்தில் எனக்கு உண்டான தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது. 3 அப்பொழுது வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின. 4 முந்தினது சிங்கத்தைப்போல இருந்தது; அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது; நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அதின் இறகுகள் பிடுங்கப்பட்டது; அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனுஷனைப்போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்து நிற்கும்படி செய்யப்பட்டது; மனுஷ இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது. 5 பின்பு, கரடிக்கு ஒப்பாகிய வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன்; அது ஒரு பக்கமாய்ச் சாய்ந்துநின்று, தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலாவெலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது; எழும்பி வெகு மாம்சம் தின்னென்று அதற்குச் சொல்லப்பட்டது. 6 அதின்பின்பு, சிவிங்கியைப்போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன்; அதின் முதுகின்மேல் பட்சியின் செட்டைகள் நாலு இருந்தது; அந்த மிருகத்துக்கு நாலு தலைகளும் உண்டாயிருந்தது; அதற்கு ஆளுகை அளிக்கப்பட்டது. 7 அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன்; அது கெடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது; அதற்குப் பெரிய இருப்புப்பற்கள் இருந்தது; அது நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப்பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது. 8 அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று; அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டது; இதோ, அந்தக் கொம்பிலே மனுஷகண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவைகளைப் பேசும் வாயும் இருந்தது. 9 நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போலத் துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது. 10 அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது. 11 அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துக்கொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது. 12 மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகுமட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது. 13 இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார். 14 சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும். 15 தானியேலாகிய நான் என் தேகத்தினுள் என் ஆவியிலே சஞ்சலப்பட்டேன்; என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னைக் கலங்கப்பண்ணினது. 16 சமீபத்தில் நிற்கிறவர்களில் ஒருவனிடத்தில் நான் போய், இதன் பொருள் எல்லாவற்றையும் எனக்குச் சொல்லும்படி அவனை வேண்டிக்கொண்டேன்; அவன் அந்தக் காரியங்களின் அர்த்தத்தை எனக்கு அறிவித்துச் சொன்னது என்னவென்றால்: 17 அந்த நாலு பெரிய மிருகங்களும் பூமியிலிருந்து எழும்புகிற நாலு ராஜாக்கள். 18 ஆனாலும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்கள் ராஜரிகத்தைப் பெற்று, என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்றான். 19 அப்பொழுது மற்றவைகளையெல்லாம் பார்க்கிலும் வேற்றுருவும் கெடியுமுள்ளதுமாய், இருப்புப் பற்களும், வெண்கல நகங்களுமுடையதாய் நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டதுமாயிருந்த நாலாம் மிருகத்தைக்குறித்தும், 20 அதின் தலைமேலுள்ள பத்துக் கொம்புகளைக்குறித்தும், தனக்கு முன்பாக மூன்று கொம்புகள் விழுந்துபோக எழும்பினதுமாய், கண்களையும் பெருமையானவைகளைப் பேசும் வாயையுமுடையதுமாய், மற்றவைகளைப்பார்க்கிலும் பருமனாகத் தோன்றினதுமாயிருந்த அந்த வேறே கொம்பைக்குறித்தும், அவற்றின் பொருளை அறிய மனதாயிருந்தேன். 21 நீண்ட ஆயுசுள்ளவர் வருமட்டாகவும், நியாயவிசாரிப்பு உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்குக் கொடுக்கப்பட்டு, பரிசுத்தவான்கள் ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும் காலம் வருமட்டாகவும், 22 இந்தக் கொம்பு பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை மேற்கொண்டது என்று கண்டேன். 23 அவன் சொன்னது: நாலாம் மிருகம் பூமியிலே உண்டாகும் நாலாம் ராஜ்யமாம்; அது எல்லா ராஜ்யங்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, பூமியை எல்லாம் பட்சித்து, அதை மிதித்து, அதை நொறுக்கிப்போடும். 24 அந்தப் பத்துக்கொம்புகள் என்னவென்றால், அந்த ராஜ்யத்திலே எழும்பும் பத்து ராஜாக்களாம்; அவர்களுக்குப்பின்பு வேறொருவன் எழும்புவான்; அவன் முந்தினவர்களைப்பார்க்கிலும் வேறாயிருந்து, மூன்று ராஜாக்களைத் தாழ்த்திப்போட்டு, 25 உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். 26 ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுபரியந்தம் அவனைச் சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள். 27 வானத்தின் கீழெங்குமுள்ள ராஜ்யங்களின் ராஜரிகமும் ஆளுகையும் மகத்துவமும் உன்னதமானவருடைய பரிசுத்தவான்களாகிய ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்; அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம்; சகல கர்த்தத்துவங்களும் அவரைச் சேவித்து, அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும் என்றான். 28 அவன் சொன்ன வார்த்தை இத்தோடே முடிந்தது. தானியேலாகிய நான் என் நினைவுகளால் மிகவும் கலங்கினேன்; என் முகம் வேறுபட்டது; இந்தக் காரியத்தை என் மனதிலே வைத்துக்கொண்டேன்.

தானியேல் 8

1 தானியேலாகிய எனக்கு முதலில் காண்பிக்கப்பட்ட தரிசனத்துக்குப் பின்பு, ராஜாவாகிய பெல்ஷாத்சார் ராஜ்யபாரம்பண்ணின மூன்றாம் வருஷத்திலே வேறொரு தரிசனம் எனக்குக் காண்பிக்கப்பட்டது. 2 தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: நான் பார்க்கையில் ஏலாம் தேசத்திலுள்ள சூசான் அரமனையில் இருந்தேன்; அங்கே நான் ஊலாய் என்னும் ஆற்றங்கரையில் இருந்ததாகத் தரிசனத்திலே கண்டேன். 3 நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தேன்; இதோ, இரண்டு கொம்புகளுள்ள ஒரு ஆட்டுக்கடா ஆற்றிற்கு முன்பாக நின்றது; அதின் இரண்டு கொம்புகளும் உயர்ந்தவைகளாயிருந்தது; ஆகிலும் அவைகளில் ஒன்று மற்றதைப்பார்க்கிலும் உயர்ந்திருந்தது; உயர்ந்தகொம்பு பிந்தி முளைத்தெழும்பிற்று. 4 அந்த ஆட்டுக்கடா மேற்கும் வடக்கும் தெற்கும் பாய்கிறதைக் கண்டேன்; ஒரு மிருகமும் அதின் முன்னே நிற்கக்கூடாதிருந்தது; அதின் கைக்குத் தப்புவிப்பாருமில்லை; அது தன் இஷ்டப்படியே செய்து வல்லமைகொண்டது. 5 நான் அதைக் கவனித்துக்கொண்டிருக்கையில், இதோ, மேற்கேயிருந்து ஒரு வெள்ளாட்டுக்கடா நிலத்திலே கால் பாவாமல் தேசத்தின்மீதெங்கும் சென்றது; அந்த வெள்ளாட்டுக்கடாவின் கண்களுக்கு நடுவே விசேஷித்த ஒரு கொம்பு இருந்தது. 6 நான் ஆற்றின் முன்பாக நிற்கக்கண்ட இரண்டு கொம்புகளுள்ள ஆட்டுக்கடாவினிடமட்டும் அது வந்து, தன் பலத்தின் உக்கிரத்தோடே அதற்கு எதிராகப் பாய்ந்தது. 7 அது ஆட்டுக்கடாவின் கிட்டச் சேரக்கண்டேன்; அது ஆட்டுக்கடாவின்மேல் கடுங்கோபங்கொண்டு, அதை முட்டி, அதின் இரண்டு கொம்புகளையும் முறித்துப்போட்டது; அதின் முன் நிற்க ஆட்டுக்கடாவுக்குப் பலமில்லாமையால், வெள்ளாட்டுக்கடா அதைத் தரையிலே தள்ளி மிதித்துப்போட்டது; அதின் கைக்கு ஆட்டுக்கடாவைத் தப்புவிப்பார் இல்லை. 8 அப்பொழுது வெள்ளாட்டுக்கடா மிகுதியும் வல்லமைகொண்டது; அது பலங்கொண்டிருக்கையில், அந்தப் பெரிய கொம்பு முறிந்துபோயிற்று; அதற்குப் பதிலாக ஆகாயத்தின் நாலு திசைகளுக்கும் எதிராய் விசேஷித்த நாலுகொம்புகள் முளைத்தெழும்பினது. 9 அவைகளில் ஒன்றிலிருந்து சின்னதான ஒரு கொம்பு புறப்பட்டு, தெற்குக்கும், கிழக்குக்கும் எதிராகவும், சிங்காரமான தேசத்துக்கு நேராகவும் மிகவும் பெரியதாயிற்று. 10 அது வானத்தின் சேனைபரியந்தம் வளர்ந்து, அதின் சேனையாகிய நட்சத்திரங்களில் சிலவற்றைப் பூமியிலே விழப்பண்ணி, அவைகளை மிதித்தது. 11 அது சேனையினுடைய அதிபதி பரியந்தமும் தன்னை உயர்த்தி, அவரிடத்திலிருந்து அன்றாட பலியை நீக்கிற்று; அவருடைய பரிசுத்த ஸ்தானம் தள்ளுண்டது. 12 பாதகத்தினிமித்தம் அன்றாட பலியோடுங்கூடச் சேனையும் அதற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது; அது சத்தியத்தைத் தரையிலே தள்ளிற்று; அது கிரியைசெய்து அநுகூலமடைந்தது. 13 பரிசுத்தவானாகிய ஒருவன் பேசக்கேட்டேன்; அப்பொழுது வேறொரு பரிசுத்தவான் பேசினவரை நோக்கி: அன்றாட பலியைக்குறித்தும், பாழ்க்கடிப்பை உண்டாக்கும் பாதகத்தைக்குறித்தும், பரிசுத்த ஸ்தலமும் சேனையும் மிதிபட ஒப்புக்கொடுக்கப்படுவதைக்குறித்தும், உண்டான தரிசனம் எதுவரைக்கும் இருக்கும் என்று கேட்டான். 14 அவன் என்னை நோக்கி: இரண்டாயிரத்து முந்நூறு இராப்பகல் செல்லும்வரைக்கும் இருக்கும்; பின்பு பரிசுத்தஸ்தலம் சுத்திகரிக்கப்படும் என்றான். 15 தானியேலாகிய நான் இந்தத் தரிசனத்தைக்கண்டு, அதின் பொருளை அறிய வகைதேடுகையில், இதோ, மனுஷசாயலான ஒருவன் எனக்கு எதிரே நின்றான். 16 அன்றியும் காபிரியேலே, இவனுக்குத் தரிசனத்தை விளங்கப்பண்ணென்று ஊலாயின் மத்தியிலே கூப்பிட்டுச் சொல்லுகிற ஒரு மனுஷ சத்தத்தையும் கேட்டேன். 17 அப்பொழுது அவன் நான் நின்ற இடத்துக்கு வந்தான்; அவன் வருகையில் நான் திடுக்கிட்டு முகங்குப்புற விழுந்தேன்; அவன் என்னை நோக்கி: மனுபுத்திரனே கவனி; இந்தத் தரிசனம் முடிவுகாலத்துக்கு அடுத்தது என்றான். 18 அவன் என்னோடே பேசுகையில், நான் தரையில் முகங்குப்புறக் கிடந்து, அயர்ந்த நித்திரைகொண்டேன்; அவனோ என்னைத் தொட்டு, நான் காலூன்றி நிற்கும்படி செய்து: 19 இதோ, கோபத்தின் முடிவுகாலத்திலே சம்பவிப்பதை உனக்குத் தெரிவிப்பேன்; இது குறிக்கப்பட்ட முடிவுகாலத்துக்கு அடுத்தது. 20 நீ கண்ட இரண்டு கொம்புள்ள ஆட்டுக்கடா மேதியா பெர்சியா தேசங்களின் ராஜாக்கள்; 21 ரோமமுள்ள அந்த வெள்ளாட்டுக்கடா கிரேக்கு தேசத்தின் ராஜா; அதின் கண்களுக்கு நடுவே இருந்த பெரிய கொம்பு அதின் முதலாம் ராஜா; 22 அது முறிந்துபோனபின்பு அதற்குப் பதிலாக நாலு கொம்புகள் எழும்பினது என்னவென்றால், அந்த ஜாதியிலே நாலு ராஜ்யங்கள் எழும்பும்; ஆனாலும் அவனுக்கு இருந்த வல்லமை அவைகளுக்கு இராது. 23 அவர்களுடைய ராஜ்யபாரத்தின் கடைசிக்காலத்திலோவென்றால், பாதகருடைய பாதகம் நிறைவேறும்போது, மூர்க்க முகமும் சூதான பேச்சுமுள்ள சாமர்த்தியமான ஒரு ராஜா எழும்புவான். 24 அவனுடைய வல்லமை பெருகும்; ஆனாலும் அவனுடைய சுயபலத்தினால் அல்ல, அவன் அதிசயமானவிதமாக அழிம்புண்டாக்கி, அநுகூலம் பெற்றுக்கிரியைசெய்து, பலவான்களையும் பரிசுத்த ஜனங்களையும் அழிப்பான். 25 அவன் தன் உபாயத்தினால் வஞ்சகத்தைக் கைகூடிவரப்பண்ணி, தன் இருதயத்தில் பெருமைகொண்டு, நிர்விசாரத்தோடிருக்கிற அநேகரை அழித்து, அதிபதிகளுக்கு அதிபதியாயிருக்கிறவருக்கு விரோதமாய் எழும்புவான்; ஆனாலும் அவன் கையினாலல்ல வேறுவிதமாய் முறித்துப்போடப்படுவான். 26 சொல்லப்பட்ட இராப்பகல்களின் தரிசனம் சத்தியமாயிருக்கிறது; ஆதலால் இந்தத் தரிசனத்தை நீ மறைத்துவை; அதற்கு இன்னும் அநேகநாள் செல்லும் என்றான். 27 தானியேலாகிய நான் சோர்வடைந்து, சிலநாள் வியாதிப்பட்டிருந்தேன்; பின்பு நான் எழுந்திருந்து, ராஜாவின் வேலையைச் செய்து, அந்தத் தரிசனத்தினால் திகைத்துக்கொண்டிருந்தேன்; ஒருவரும் அதை அறியவில்லை.

தானியேல் 9

1 கல்தேயருடைய ராஜ்யத்தின்மேல் ராஜாவாக்கப்பட்ட மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு ராஜ்யபாரம்பண்ணுகிற முதலாம் வருஷத்திலே, 2 தானியேலாகிய நான் எருசலேமின் பாழ்க்கடிப்புகள் நிறைவேறித்தீர எழுபதுவருஷம் செல்லுமென்று கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசியோடே சொல்லிய வருஷங்களின் தொகையைப் புஸ்தகங்களால் அறிந்துகொண்டேன். 3 நான் உபவாசம்பண்ணி, இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து, தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என்முகத்தை அவருக்கு நேராக்கி, 4 என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவ அறிக்கைசெய்து: ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே, 5 நாங்கள் பாவஞ்செய்து, அக்கிரமக்காரராயிருந்து, துன்மார்க்கமாய் நடந்து, கலகம்பண்ணி, உம்முடைய கற்பனைகளையும் உம்முடைய நியாயங்களையும் விட்டு அகன்றுபோனோம். 6 உமது நாமத்தினாலே எங்கள் ராஜாக்களோடும் எங்கள் பிரபுக்களோடும் எங்கள் பிதாக்களோடும் தேசத்தினுடைய சகல ஜனங்களோடும் பேசின தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்குச் செவிகொடாமற்போனோம். 7 ஆண்டவரே, நீதி உமக்கே உரியது; உமக்கு விரோதமாகச் செய்த துரோகத்தினிமித்தம் உம்மாலே சமீபமும் தூரமுமான எல்லா தேசங்களிலும் துரத்தப்பட்டிருக்கிற யூதமனுஷரும் எருசலேமின் குடிகளும் சகல இஸ்ரவேலருமாகிய நாங்கள் இந்நாளில் இருக்கிறபடியே, வெட்கம் எங்களுக்கே உரியது. 8 ஆண்டவரே, உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தபடியால், நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் பிரபுக்களும் எங்கள் பிதாக்களும் வெட்கத்துக்குரியவர்களானோம். 9 அவருக்கு விரோதமாக நாங்கள் கலகம்பண்ணி, அவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு எங்களுக்கு முன்பாகவைத்த அவருடைய நியாயப்பிரமாணங்களின்படி நடக்கத்தக்கதாக நாங்கள் அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம். 10 ஆனாலும் எங்கள் தேவனாகிய ஆண்டவரிடத்தில் இரக்கங்களும் மன்னிப்புகளும் உண்டு. 11 இஸ்ரவேலர் எல்லாரும் உமது நியாயப்பிரமாணத்தை மீறி, உமது சத்தத்துக்குச் செவிகொடாமல் விலகிப்போனார்கள். அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; ஆகையால் தேவனுடைய தாசனாகிய மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற சாபமும் ஆணையாக்கினையும் எங்கள்மேல் சொரியப்பட்டன. 12 எருசலேமில் சம்பவித்ததுபோல வானத்தின்கீழ் எங்கும் சம்பவியாதிருக்கிற பெரிய தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினதினால், அவர் எங்களுக்கும் எங்களை நியாயந்தீர்த்த நியாயாதிபதிகளுக்கும் விரோதமாகச் சொல்லியிருந்த தம்முடைய வார்த்தைகளை நிறைவேற்றினார். 13 மோசேயின் நியாயப்பிரமாணப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியே இந்தத் தீங்கெல்லாம் எங்கள்மேல் வந்தது; ஆனாலும் நாங்கள் எங்கள் அக்கிரமங்களை விட்டுத் திரும்புகிறதற்கும், உம்முடைய சத்தியத்தைக் கவனிக்கிறதற்கும், எங்கள் தேவனாகிய கர்த்தரின் முகத்தை நோக்கிக் கெஞ்சினதில்லை. 14 ஆதலால் கர்த்தர் கவனமாயிருந்து, அந்தத் தீங்கை எங்கள்மேல் வரப்பண்ணினார்; எங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் செய்துவருகிற தம்முடைய கிரியைகளில் எல்லாம் நீதியுள்ளவர்; நாங்களோ அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமற்போனோம். 15 இப்போதும் உமது ஜனத்தைப் பலத்த கையினால் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணி, இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி, உமக்குக் கீர்த்தியை உண்டாக்கின எங்கள் தேவனாகிய ஆண்டவரே, நாங்கள் பாவஞ்செய்து, துன்மார்க்கராய் நடந்தோம். 16 ஆண்டவரே, உம்முடைய சர்வநீதியின்படியே, உமது கோபமும் உமது உக்கிரமும் உம்முடைய பரிசுத்த பர்வதமாகிய எருசலேம் என்னும் உம்முடைய நகரத்தை விட்டுத் திரும்பும்படி செய்யும்; எங்கள் பாவங்களினாலும் எங்கள் பிதாக்களின் அக்கிரமங்களினாலும் எருசலேமும் உம்முடைய ஜனமாகிய நாங்களும் எங்கள் சுற்றுப்புறத்தார் யாவருக்கும் நிந்தையானோம். 17 இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும். 18 என் தேவனே, உம்முடைய செவியைச் சாய்த்துக் கேட்டருளும்; உம்முடைய கண்களைத் திறந்து, எங்கள் பாழிடங்களையும், உமது நாமம் தரிக்கப்பட்டிருக்கிற நகரத்தையும் பார்த்தருளும்; நாங்கள் எங்கள் நீதிகளை அல்ல, உம்முடைய மிகுந்த இரக்கங்களையே நம்பி, எங்கள் விண்ணப்பங்களை உமக்கு முன்பாகச் செலுத்துகிறோம். 19 ஆண்டவரே கேளும், ஆண்டவரே மன்னியும், ஆண்டவரே கவனியும்; என் தேவனே, உம்முடைய நிமித்தமாக அதைத் தாமதியாமல் செய்யும்; உம்முடைய நகரத்துக்கும் உம்முடைய ஜனத்துக்கும் உம்முடைய நாமம் தரிக்கப்பட்டிருக்கிறதே என்றேன். 20 இப்படி நான் சொல்லி, ஜெபம்பண்ணி, என் பாவத்தையும் என் ஜனமாகிய இஸ்ரவேலின் பாவத்தையும் அறிக்கையிட்டு, என் தேவனுடைய பரிசுத்த பர்வதத்துக்காக என் விண்ணப்பத்தை என் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாகச் செலுத்திக்கொண்டிருந்தேன். 21 அப்படி நான் ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போதே, முதல் தரிசனத்திலே நான் கண்ட புருஷனாகிய காபிரியேல், வேகமாய்ப் பறந்துவந்து, அந்திப்பலியின் நேரமாகிய வேளையிலே என்னைத் தொட்டான். 22 அவன் எனக்குத் தெளிவுண்டாக்கி, என்னோடேபேசி: தானியேலே, உனக்கு அறிவை உணர்த்தும்படி இப்போது புறப்பட்டுவந்தேன். 23 நீ மிகவும் பிரியமானவன், ஆதலால், நீ வேண்டிக்கொள்ளத் தொடங்கினபோதே கட்டளை வெளிப்பட்டது, நான் அதை அறிவிக்கவந்தேன்; இப்போதும் சொல்லுகிற வார்த்தையை நீ கவனித்துக்கேட்டு, தரிசனத்தை அறிந்துகொள். 24 மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது. 25 இப்போதும் நீ அறிந்து உணர்ந்துகொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழு வாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும்; அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும்; ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும். 26 அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார்; ஆனாலும் தமக்காக அல்ல; நகரத்தையும் பரிசுத்த ஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள்; அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும்; முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது. 27 அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார்; அருவருப்பான செட்டைகளோடே பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்.

தானியேல் 10

1 பெர்சியாவின் ராஜாவாகிய கோரேஸ் அரசாண்ட மூன்றாம் வருஷத்திலே பெல்தெஷாத்சார் என்று பெயரிடப்பட்ட தானியேலுக்கு ஒரு காரியம் வெளியாக்கப்பட்டது; அந்தக் காரியம் சத்தியமும் நீடிய யுத்தத்துக்கு அடுத்ததுமாயிருக்கிறது; அந்தக் காரியத்தை அவன் கவனித்து, தரிசனத்தின் பொருளை அறிந்துகொண்டான். 2 அந்த நாட்களில் தானியேலாகிய நான் மூன்று வாரமுழுவதும் துக்கித்துக்கொண்டிருந்தேன். 3 அந்த மூன்று வாரங்களாகிய நாட்கள் நிறைவேறுமட்டும் ருசிகரமான அப்பத்தை நான் புசிக்கவுமில்லை, இறைச்சியும் திராட்சரசமும் என் வாய்க்குள் போகவுமில்லை, நான் பரிமளதைலம் பூசிக்கொள்ளவுமில்லை. 4 முதலாம் மாதம் இருபத்துநாலாந் தேதியிலே நான் இதெக்கேல் என்னும் பெரிய ஆற்றங்கரையில் இருந்து, 5 என் கண்களை ஏறெடுக்கையில், சணல் வஸ்திரந்தரித்து, தமது அரையில் ஊப்பாசின் தங்கக்கச்சையைக் கட்டிக்கொண்டிருக்கிற ஒரு புருஷனைக் கண்டேன். 6 அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது. 7 தானியேலாகிய நான் மாத்திரம் அந்தத் தரிசனத்தைக் கண்டேன்; என்னோடே இருந்த மனுஷரோ அந்தத் தரிசனத்தைக் காணவில்லை; அவர்கள் மிகவும் நடுநடுங்கி, ஓடி ஒளித்துக்கொண்டார்கள். 8 நான் தனித்துவிடப்பட்டு அந்தப் பெரிய தரிசனத்தைக் கண்டேன்; என் பெலனெல்லாம் போயிற்று; என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன். 9 அவருடைய வார்த்தைகளின் சத்தத்தைக் கேட்டேன்; அவருடைய வார்த்தைகளின் சத்தத்தை நான் கேட்கும்போது, நான் முகங்கவிழ்ந்து, நித்திரை போகிறவனாய்த் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்தேன். 10 இதோ, ஒருவன் கை என்னைத் தொட்டு, என் முழங்கால்களும் என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்க என்னைத் தூக்கிவைத்தது. 11 அவன் என்னை நோக்கி: பிரியமான புருஷனாகிய தானியேலே, நான் இப்போது உன்னிடத்திற்கு அனுப்பப்பட்டு வந்தேன்; ஆதலால், நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளின்பேரில் நீ கவனமாயிருந்து, கால் ஊன்றி நில் என்றான்; இந்த வார்த்தையை அவன் என்னிடத்தில் சொல்லுகையில் நடுக்கத்தோடே எழுந்து நின்றேன். 12 அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன். 13 பெர்சியா ராஜ்யத்தின் அதிபதி இருபத்தொரு நாள்மட்டும் என்னோடு எதிர்த்து நின்றான்; ஆனாலும் பிரதான அதிபதிகளில் ஒருவனாகிய மிகாவேல் எனக்கு உதவியாக வந்தான்; ஆதலால் நான் அங்கே பெர்சியாவின் ராஜாக்களிடத்தில் தரித்திருந்தேன். 14 இப்போதும் கடைசிநாட்களில் உன் ஜனங்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப்பண்ணும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும் என்றான். 15 அவன் இந்த வார்த்தைகளை என்னோடே சொல்லுகையில், நான் தலைகவிழ்ந்து, தரையை நோக்கி, பேச்சற்றுப்போனேன். 16 அப்பொழுது மனுபுத்திரரின் சாயலாகிய ஒருவன் என் உதடுகளைத் தொட்டான்; உடனே நான் என் வாயைத் திறந்து பேசி, எனக்கு எதிரே நின்றவனை நோக்கி: என் ஆண்டவனே, தரிசனத்தினால் என் மூட்டுகள் புரண்டன, பெலனற்றுப்போனேன். 17 ஆகையால் என் ஆண்டவனுடைய அடியேன் என் ஆண்டவனோடே பேசக்கூடுவதெப்படி? இனி என்னில் பெலனில்லை, என்னில் மூச்சுமில்லை என்றேன். 18 அப்பொழுது மனுஷ ரூபமான ஒருவன் திரும்ப என்னைத் தொட்டு, என்னைத் திடப்படுத்தி, 19 பிரியமான புருஷனே, பயப்படாதே, உனக்குச் சமாதானமுண்டாவதாக, திடங்கொள், திடங்கொள் என்றான்; இப்படி அவன் என்னோடே பேசுகையில் நான் திடங்கொண்டு அவனை நோக்கி: என் ஆண்டவன் பேசுவாராக; என்னைத் திடப்படுத்தினீரே என்றேன். 20 அப்பொழுது அவன்: நான் உன்னிடத்திற்கு வந்த காரணம் இன்னதென்று உனக்குத் தெரியுமா? இப்போது நான் பெர்சியாவின் பிரபுவோடே யுத்தம்பண்ணத் திரும்பிப்போகிறேன்; நான் போனபின்பு, கிரேக்கு தேசத்தின் அதிபதி வருவான். 21 சத்திய எழுத்திலே கண்டிருக்கிறதை நான் உனக்குத் தெரிவிப்பேன்; உங்கள் அதிபதியாகிய மிகாவேலைத்தவிர என்னோடேகூட அவர்களுக்கு விரோதமாய்ப் பலங்கொள்ளுகிற வேறொருவரும் இல்லை.

தானியேல் 11

1 மேதியனாகிய தரியு அரசாண்ட முதலாம் வருஷத்திலே நான் அவனைத் திடப்படுத்தவும் பலப்படுத்தவும் அவனுக்குத் துணை நின்றேன். 2 இப்போது நான் மெய்யான செய்தியை உனக்கு அறிவிப்பேன்; இதோ, இன்னும் மூன்று ராஜாக்கள் பெர்சியாவில் எழும்புவார்கள்; அதின்பின்பு நாலாம் ராஜாவாயிருப்பவன் எல்லாரிலும் மகா ஐசுவரிய சம்பன்னனாகி, தன் ஐசுவரியத்தினால் பலங்கொண்டு, கிரேக்கு ராஜ்யத்துக்கு விரோதமாகச் சகலரையும் எழுப்பிவிடுவான். 3 ஆனாலும் பராக்கிரமமுள்ள ஒரு ராஜா எழும்பி, பிரபலமாய் ஆண்டு, தனக்கு இஷ்டமானபடி செய்வான். 4 அவன் எழும்பினபின்பு, அவனுடைய ராஜ்யம் உடைந்துபோய், வானத்தின் நாலு திசைகளிலும் பகுக்கப்படும்; ஆனாலும் அது அவனுடைய சந்ததியாருக்கு அல்ல, அவன் செய்த ஆளுகையின்படியும் அல்ல; அவனுடைய ராஜ்யம் பிடுங்கப்பட்டு, அவனுடையவர்களல்லாத வேறேபேர்களிடமாய்த் தாண்டிப்போம். 5 தென்றிசை ராஜா பலவானாயிருப்பான்; ஆனாலும் அவனுடைய பிரபுக்களில் ஒருவன் அவனைப்பார்க்கிலும் பலவானாகி ஆளுவான்; இவனுடைய ஆளுகை பலத்த ஆளுகையாயிருக்கும். 6 அவர்கள் சில வருஷங்களுக்குப்பின்பு, ஒருவரோடொருவர் சம்பந்தம்பண்ணும்படிக்குத் தென்றிசை ராஜாவின் குமாரத்தி வடதிசை ராஜாவினிடத்தில் வருவாள்; ஆனாலும் அவளுக்குப் புயபலம் இராமற்போம்; அவனும் அவனுடைய புயமும் நிலைநிற்பதில்லை; அவளும் அவளை அழைத்துவந்தவர்களும், அவளைப் பெற்றவனும், அவளை அக்காலங்களில் பலப்படுத்தினவனும் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். 7 ஆனாலும் அவளுடைய வேர்களின் கிளையாகிய ஒருவன் தன் ஸ்தானத்தில் எழும்பி, இராணுவத்தோடே வந்து, வடதிசை ராஜாவின் அரணிப்புக்குள் பிரவேசித்து, அவர்களை விரோதித்து, 8 அவர்களுடைய அதிபதிகளையும், அவர்களுடைய விலையேறப்பெற்ற வெள்ளியும் பொன்னுமாகிய பாத்திரங்களையும், அவர்களுடைய தெய்வங்களையுங்கூட எகிப்துக்குக் கொண்டுபோய், சில வருஷங்கள்மட்டும் வடதிசை ராஜாவைப்பார்க்கிலும் நிலையாய் நிற்பான். 9 தென்றிசை ராஜா அவன் ராஜ்யத்துக்கு விரோதமாக வந்து, தன் தேசத்துக்குத் திரும்பிப்போவான். 10 ஆனாலும் அவனுடைய குமாரர் யுத்தஞ்செய்ய எத்தனித்து, திரளான சேனைகளைக் கூட்டுவார்கள்; இவர்களில் ஒருவன் நிச்சயமாய் வந்து, வெள்ளம்போலக் கடந்து, திரும்பவும் தன்னுடைய அரண்மட்டும் யுத்தங்கலந்து சேருவான். 11 அப்பொழுது தென்றிசை ராஜா கடுங்கோபங்கொண்டு புறப்பட்டுப்போய், வடதிசை ராஜாவோடே யுத்தம்பண்ணுவான்; இவன் பெரிய சேனையை ஏகமாய் நிறுத்துவான்; ஆனாலும் இந்தச் சேனை அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படும். 12 அவன் இந்தச் சேனையை நீக்கினபின்பு, அவனுடைய இருதயம் கர்வங்கொள்ளும்; அவன் அநேகமாயிரம்பேரை மடிவிப்பான்; ஆனாலும் பலங்கொள்ளமாட்டான். 13 சில வருஷங்கள் சென்றபின்பு வடதிசை ராஜா திரும்ப முந்தின சேனையிலும் பெரிதான சேனையைச் சேர்த்து, மகா பெரிய சேனையோடும் வெகு சம்பத்தோடும் நிச்சயமாய் வருவான். 14 அக்காலங்களில் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாக அநேகர் எழும்புவார்கள்; அப்பொழுது உன் ஜனத்திலுள்ள துண்டரிக்கக்காரரின் புத்திரர் தரிசனத்தை நிறைவேற்றத் தங்களை உயர்த்துவார்கள். 15 வடதிசை ராஜா வந்து, கொத்தளம் போட்டு, அரணான நகரங்களைப் பிடிப்பான்; தென்றிசை ராஜாவின் புயபலங்களும் அவன் தெரிந்துகொண்ட ஜனமும் நில்லாமற்போம்; எதிர்க்கிறதற்குப் பெலன் இராது. 16 ஆகையால் அவனுக்கு விரோதமாக வருகிறவன் தன் இஷ்டப்படிச் செய்வான்; அவனுக்கு முன்பாக நிலைநிற்பவன் ஒருவனும் இல்லை; அவன் சிங்காரமான தேசத்தில் தங்குவான்; எல்லாம் அவன் கைவசமாகும். 17 தன் ராஜ்யத்தின் வல்லமையோடெல்லாம் தானும் தன்னோடேகூடச் செம்மைமார்க்கத்தாரும் வர, இவன் தன் முகத்தைத் திருப்புவான்; இப்படிச் செய்து கெடுதியுண்டாகும்படி அவனுக்கு ஒரு கன்னிப்பெண்ணைக் கொடுப்பான், ஆனாலும் அவளாலே ஸ்திரம்பெறான்; அவள் அவன் பட்சத்தில் நில்லாள். 18 பின்பு இவன் தன் முகத்தைத் தீவுகளுக்கு நேராகத் திருப்பி, அநேகந் தீவுகளைப் பிடிப்பான்; ஆனாலும் ஒரு சேனாபதி இவன் செய்கிற நிந்தையை ஒழியப்பண்ணுவதுமல்லாமல், இவன் செய்த நிந்தையினிமித்தம் இவனுக்குச் சரிக்குச் சரிக்கட்டுவான். 19 ஆகையால் தன் முகத்தைத் தன் தேசத்தின் அரண்களுக்கு நேராகத் திருப்புவான்; அங்கே இடறிவிழுந்து காணப்படாமற்போவான். 20 செழிப்பான ராஜ்யத்தில் தண்டல்காரனைத் திரியப்பண்ணுகிற ஒருவன் தன் ஸ்தானத்தில் எழும்புவான்; ஆகிலும் சிலநாளைக்குள் கோபமில்லாமலும் யுத்தமில்லாமலும் நாசமடைவான். 21 அவன் ஸ்தானத்தில் அவமதிக்கப்பட்டவன் ஒருவன் எழும்புவான்; இவனுக்கு ராஜ்யபாரத்தின் மேன்மையைக் கொடாதிருப்பார்கள்; ஆனாலும் இவன் சமாதானமாய் நுழைந்து, இச்சகம்பேசி, ராஜ்யத்தைக் கட்டிக்கொள்ளுவான். 22 பிரவாகமாய் வருகிற சேனைகள் இவனாலே பிரவாகமாய் முறிக்கப்படும்; உடன்படிக்கையின் தலைவனும் முறிக்கப்படுவான். 23 ஏனென்றால் அவனோடே சம்பந்தம்பண்ணின நாட்கள்முதல் அவன் சூதாய் நடந்து, கொஞ்சம் ஜனங்களோடே புறப்பட்டுவந்து பெலங்கொள்ளுவான். 24 தேசம் சுகவாழ்வோடும் சம்பூரணத்தோடும் இருக்கையில், அவன் உட்பிரவேசித்து, தன் பிதாக்களும் தன் பிதாக்களின் பிதாக்களும் செய்யாததைச் செய்வான், கொள்ளையிட்டுச் சூறையாடி, பொருளை அவர்களுக்கு இறைத்துப் பங்கிட்டு, அரண்களுக்கு விரோதமாகத் தனக்குள் உபாயங்களை யோசிப்பான்; சிலகாலமட்டும் இப்படியிருக்கும். 25 பின்னும் தென்றிசை ராஜாவுக்கு விரோதமாகப் பெரிய சேனையோடே போர்செய்யத் தன் வல்லமையையும் தன் ஸ்திரத்தையும் எழுப்புவான்; அப்பொழுது தென்றிசை ராஜா மிகவும் பலத்த பெரிய இராணுவத்தோடே போய் யுத்தங்கலப்பான்; ஆனாலும் அவர்கள் அவனுக்கு விரோதமாகத் துராலோசனை பண்ணியிருந்தபடியால், அவன் நிற்கமாட்டான். 26 அவனுடைய போஜனங்களைச் சாப்பிடுகிறவர்கள் அவனை நாசப்படுத்துவார்கள்; ஆகையால் அவனுடைய இராணுவம் பிரவாகமாய் வரும்; அநேகர் கொலையுண்டு விழுவார்கள். 27 இந்த இரண்டு ராஜாக்களின் இருதயமும் தீமை செய்ய நினைக்கும்; ஒரே பந்தியிலிருந்து பொய்பேசுவார்கள்; ஆனாலும் அது வாய்ப்பதில்லை; குறித்தகாலத்துக்கு முடிவு இன்னும் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும். 28 அவன் மகா சம்பத்தோடே தன் தேசத்துக்குத் திரும்பி, தன் இருதயத்தைப் பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாக வைத்து, அதற்கானதைச் செய்து, தன் தேசத்துக்குத் திரும்பிப் போவான். 29 குறித்தகாலத்திலே திரும்பவும் தென்தேசத்திற்கு வருவான்; ஆனாலும் அவனுடைய பின்நடபடி முன்நடபடியைப்போல் இராது. 30 அவனுக்கு விரோதமாகக் கித்தீமின் கப்பல்கள் வரும்; அதினால் அவன் மனநோவடைந்து, திரும்பிப்போய், பரிசுத்த உடன்படிக்கைக்கு விரோதமாகக் குரோதங்கொண்டு, அதற்கானதைச் செய்து, பரிசுத்த உடன்படிக்கையைத் தள்ளினவர்களை அநுசரிப்பான். 31 ஆனாலும் அவனிடத்திலிருந்து புறப்பட்டசேனைகள் எழும்பி, அரணான பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அன்றாடபலியை நீக்கி, பாழாக்கும் அருவருப்பை அங்கே வைப்பார்கள். 32 உடன்படிக்கைக்குத் துரோகிகளாயிருக்கிறவர்களை இச்சகப்பேச்சுகளினால் கள்ளமார்க்கத்தாராக்குவான்; தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் திடங்கொண்டு, அதற்கேற்றபடி செய்வார்கள். 33 ஜனங்களில் அறிவாளிகள் அநேகருக்கு அறிவை உணர்த்துவார்கள்; அநேகநாள்மட்டும் பட்டயத்தினாலும் அக்கினியினாலும் சிறையிருப்பினாலும் கொள்ளையினாலும் விழுவார்கள். 34 இப்படி அவர்கள் விழுகையில் கொஞ்சம் ஒத்தாசையால் சகாயமடைவார்கள்; அப்பொழுது அநேகர் இச்சகவார்த்தைகளோடே அவர்களை ஒட்டிக்கொள்வார்கள். 35 அறிவாளிகளைப் புடமிடுகிறதற்கும், சுத்திகரிக்கிறதற்கும், வெண்மையாக்குகிறதற்கும் அவர்களில் சிலர் விழுவார்கள்; முடிவுகாலபரியந்தம் இப்படியிருக்கும்; குறித்தகாலம் வர இன்னும் நாள் செல்லும். 36 ராஜா தனக்கு இஷ்டமானபடி செய்து, தன்னை உயர்த்தி, எந்தத் தேவனிலும் தன்னைப் பெரியவனாக்கி, தேவாதிதேவனுக்கு விரோதமாக ஆச்சரியமான காரியங்களைப் பேசுவான்; கோபம் தீருமட்டும் அவனுக்குக் கைகூடிவரும்; நிர்ணயிக்கப்பட்டது நடந்தேறும். 37 அவன் தன் பிதாக்களின் தேவர்களை மதியாமலும், ஸ்திரீகளின் சிநேகத்தையும், எந்தத் தேவனையும் மதியாமலும், எல்லாவற்றிற்கும் தன்னைப் பெரியவனாக்கி, 38 அரண்களின் தேவனைத் தன் ஸ்தானத்திலே கனம்பண்ணி, தன் பிதாக்கள் அறியாத ஒரு தேவனைப் பொன்னினாலும், வெள்ளியினாலும், இரத்தினங்களினாலும், உச்சிதமான வஸ்துக்களினாலும் கனம்பண்ணுவான். 39 அவன் அரணிப்பான கோட்டைகளுக்காகவும், அந்நிய தேவனுக்காகவும் செய்வது என்னவென்றால், அவைகளை மதிக்கிறவர்களுக்கு மகா கனமுண்டாக்கி, அவர்கள் அநேகரை ஆளும்படிச் செய்து, அவர்களுக்குத் தேசத்தைக் கிரயத்துக்காகப் பங்கிடுவான். 40 முடிவுகாலத்திலோவென்றால், தென்றிசை ராஜா அவனோடே முட்டுக்கு நிற்பான்; வடதிசை ராஜாவும் இரதங்களோடும் குதிரைவீரர்களோடும் அநேகம் கப்பல்களோடும் சூறைக்காற்றுபோல் அவனுக்கு விரோதமாய் வருவான்; அவன் தேசங்களுக்குள் பிரவேசித்து, அவைகளைப் பிரவாகித்துக் கடந்துபோவான். 41 அவன் சிங்காரமான தேசத்திலும் வருவான்; அப்பொழுது அநேக தேசங்கள் கவிழ்க்கப்படும்; ஆனாலும் ஏதோமும், மோவாபும், அம்மோன் புத்திரரில் பிரதானமானவர்களும் அவன் கைக்குத் தப்பிப்போவார்கள். 42 அவன் தேசங்களின்மேல் தன் கையை நீட்டுவான்; எகிப்துதேசம் தப்புவதில்லை. 43 எகிப்தினுடைய பொன்னும் வெள்ளியுமான ஐசுவரியங்களையும் உச்சிதமான எல்லா வஸ்துக்களையும் ஆண்டுகொள்ளுவான்; லீபியரும் எத்தியோப்பியரும் அவனுக்குப் பின்செல்லுவார்கள். 44 ஆனாலும் கிழக்கிலும் வடக்கிலும் இருந்துவரும் செய்திகள் அவனைக் கலங்கப்பண்ணும்; அப்பொழுது அவன் அநேகரை அழிக்கவும் சங்காரம்பண்ணவும் மகா உக்கிரத்தோடே புறப்பட்டுப்போய், 45 சமுத்திரங்களுக்கு இடையிலுள்ள சிங்காரமான பரிசுத்த பர்வதத்தண்டையிலே தன் அரமனையாகிய கூடாரங்களைப் போடுவான்; ஆனாலும் அவனுக்கு ஒத்தாசை பண்ணுவாரில்லாமல், அவன் முடிவடைவான்.

தானியேல் 12

1 உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்புவான்; யாதொரு ஜாதியாரும் தோன்றினதுமுதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும்; அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். 2 பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள். 3 ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள். 4 தானியேலாகிய நீயோவென்றால், முடிவுகாலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதைபொருளாக வைத்து வைத்து, இந்தப்புஸ்தகத்தை முத்திரைபோடு; அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிப்போம் என்றான். 5 அப்பொழுது, தானியேலாகிய நான் ஆற்றுக்கு இக்கரையில் ஒருவனும் ஆற்றுக்கு அக்கரையில் ஒருவனுமாகிய வேறே இரண்டுபேர் நிற்கக்கண்டேன். 6 சணல்வஸ்திரம் தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷனை ஒருவன் நோக்கி: இந்த ஆச்சரியமானவைகளின் முடிவு வர எவ்வளவுகாலம் செல்லும் என்று கேட்டான். 7 அப்பொழுது சணல்வஸ்திரம் தரித்தவரும் ஆற்றின் தண்ணீர்களின்மேல் நிற்கிறவருமாகிய புருஷன் தம்முடைய வலதுகரத்தையும் தம்முடைய இடதுகரத்தையும் வானத்துக்கு நேராக ஏறெடுத்து, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் செல்லும் என்றும்; பரிசுத்த ஜனங்களின் வல்லமையைச் சிதறடித்தல் முடிவுபெறும்போதே இவைகளெல்லாம் நிறைவேறித் தீருமென்றும் என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர்பேரில் ஆணையிடக் கேட்டேன். 8 நான் அதைக் கேட்டும், அதின் பொருளை அறியவில்லை; ஆகையால்: என் ஆண்டவனே, இவைகளின் முடிவு என்னமாயிருக்கும் என்று கேட்டேன். 9 அதற்கு அவன்: தானியேலே, போகலாம்; இந்த வார்த்தைகள் முடிவுகாலமட்டும் புதைபொருளாக வைக்கப்பட்டும் முத்திரிக்கப்பட்டும் இருக்கும். 10 அநேகர் சுத்தமும் வெண்மையுமாக்கப்பட்டு, புடமிடப்பட்டவர்களாய் விளங்குவார்கள்; துன்மார்க்கரோ துன்மார்க்கமாய் நடப்பார்கள்; துன்மார்க்கரில் ஒருவனும் உணரான், ஞானவான்களோ உணர்ந்துகொள்ளுவார்கள். 11 அன்றாடபலி நீக்கப்பட்டு, பாழாக்கும் அருவருப்பு ஸ்தாபிக்கப்படுங்காலமுதல் ஆயிரத்திருநூற்றுத் தொண்ணூறுநாள் செல்லும். 12 ஆயிரத்து முந்நூற்று முப்பத்தைந்து நாள்மட்டும் காத்திருந்து சேருகிறவன் பாக்கியவான். 13 நீயோவென்றால் முடிவுவருமட்டும் போயிரு; நீ இளைப்பாறிக்கொண்டிருந்து, நாட்களின் முடிவிலே உன் சுதந்தர வீதத்துக்கு எழுந்திருப்பாய் என்றான்.

ஓசியா 1

1 யூதா தேசத்து ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களிலும், யோவாசின் குமாரனாகிய யெஸ்ரயேலின் ராஜாவாகிய யெரொபெயாம் என்பவனின் நாட்களிலும், பெயேரியின் குமாரனாகிய ஓசியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம். 2 கர்த்தர் ஓசியாவைக்கொண்டு உரைக்கத்தொடங்கினபோது, கர்த்தர் ஓசியாவை நோக்கி: நீ போய், ஒரு சோரஸ்திரீயையும் சோரப்பிள்ளைகளையும் உன்னிடமாகச் சேர்த்துக்கொள்; தேசம் கர்த்தரை விட்டு விலகிச் சோரம்போயிற்று என்றார். 3 அவன் போய், திப்லாயிமின் குமாரத்தியாகிய கோமேரைச் சேர்த்துக்கொண்டான்; அவள் கர்ப்பந்தரித்து, அவனுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள். 4 அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: இவனுக்கு யெஸ்ரயேல் என்னும் பேரிடு; ஏனெனில் இன்னும் கொஞ்சக்காலத்திலே நான் ஏகூவின் வம்சத்தாரிடத்திலே யெஸ்ரயேலின் இரத்தப்பழியை விசாரித்து, இஸ்ரவேல் வம்சத்தாரின் ராஜ்யபாரத்தை ஒழியப்பண்ணுவேன். 5 அந்நாளில் யெஸ்ரயேலின் பள்ளத்தாக்கிலே இஸ்ரவேலின் வில்லை முறிப்பேன் என்றார். 6 அவள் திரும்பக் கர்ப்பந்தரித்து, ஒரு குமாரத்தியைப் பெற்றாள்; அப்பொழுது அவர் அவனை நோக்கி: இவளுக்கு லோருகாமா என்னும் பேரிடு; ஏனெனில் நான் இனி இஸ்ரவேல் வம்சத்தாருக்கு இரக்கஞ்செய்வதில்லை, நான் அவர்களை முழுவதும் அகற்றிவிடுவேன். 7 யூதாவின் வம்சத்தாருக்கோ நான் இரக்கஞ்செய்வேன்; வில்லினாலும், பட்டயத்தினாலும், யுத்தத்தினாலும், குதிரைகளினாலும், குதிரைவீரரினாலும் நான் அவர்களை இரட்சியாமல், அவர்களுடைய தேவனாகிய கர்த்தராலே அவர்களை இரட்சிப்பேன் என்றார். 8 அவள் லோருகாமாவை முலை மறக்கப்பண்ணினபிற்பாடு, கர்ப்பந்தரித்து ஒரு குமாரனைப் பெற்றாள். 9 அப்பொழுது அவர்: இவனுக்கு லோகம்மீ என்னும் பேரிடு; ஏனெனில் நீங்கள் என் ஜனமல்ல, நான் உங்கள் தேவனாயிருப்பதில்லை. 10 என்றாலும், இஸ்ரவேல் புத்திரரின் தொகை அளக்கவும் எண்ணவுங்கூடாத கடற்கரை மணலைப்போலிருக்கும்; நீங்கள் என் ஜனமல்ல என்று அவர்களுக்குச் சொல்வதற்குப் பதிலாக நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்று அவர்களுக்குச் சொல்லப்படும். 11 அப்பொழுது யூதா புத்திரரும் இஸ்ரவேல் புத்திரரும் ஏகமாய்க் கூட்டப்பட்டு, தங்களுக்கு ஒரே அதிபதியை ஏற்படுத்தி, தேசத்திலிருந்து புறப்பட்டு வருவார்கள்; யெஸ்ரயேலின் நாள் பெரிதாயிருக்கும்.

ஓசியா 2

1 உங்கள் சகோதரரைப்பார்த்து அம்மீ என்றும், உங்கள் சகோதரிகளைப்பார்த்து ருகாமா என்றும் சொல்லுங்கள். 2 உங்கள் தாயோடே வழக்காடுங்கள்; அவள் எனக்கு மனைவியுமல்ல, நான் அவளுக்குப் புருஷனுமல்ல; அவள் தன் வேசித்தனங்களைத் தன் முகத்தினின்றும், தன் விபசாரங்களைத் தன் ஸ்தனங்களின் நடுவினின்றும் விலக்கிப்போடக்கடவள். 3 இல்லாவிட்டால் நான் அவளை நிர்வாணமாக உரிந்து, அவள் பிறந்தநாளில் இருந்தவண்ணமாக அவளை நிறுத்தி, அவளை அந்தரவெளியைப்போலாக்கி, அவளை வறண்டபூமியைப்போல் விட்டு, அவளைத் தாகத்தால் சாகப்பண்ணுவேன்; 4 அவளுடைய பிள்ளைகள் சோரப்பிள்ளைகளாகையால் அவர்களுக்கு இரங்காதிருப்பேன். 5 அவர்களுடைய தாய் சோரம்போனாள், அவர்களைக் கர்ப்பந்தரித்தவள் இலச்சையான காரியங்களைச் செய்தாள்; அப்பத்தையும், தண்ணீரையும், ஆட்டுமயிரையும், பஞ்சையும், எண்ணெயையும், பானங்களையும் கொடுத்துவருகிற என் நேசர்களைப் பின்பற்றிப்போவேன் என்றாள். 6 ஆகையால், இதோ, நான் உன் வழியை முள்ளுகளினால் அடைப்பேன்; அவள் தன் பாதைகளைக் கண்டுபிடிக்கக் கூடாதபடிக்கு மதிலை எழுப்புவேன். 7 அவள் தன் நேசர்களைப் பின்தொடர்ந்தும் அவர்களைச் சேருவதில்லை, அவர்களைத் தேடியும் கண்டுபிடிப்பதில்லை; அப்பொழுது அவள்: நான் என் முந்தின புருஷனிடத்துக்குத் திரும்பிப்போவேன்; இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும் அப்பொழுது எனக்கு நன்மையாயிருந்தது என்பாள். 8 தனக்கு நான் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தவரென்றும், தனக்கு நான் வெள்ளியையும் பொன்னையும் பெருகப்பண்ணினவரென்றும் அவள் அறியாமற்போனாள்; அவைகளை அவர்கள் பாகாலுடையதாக்கினார்கள். 9 ஆதலால் நான் என் தானியத்தை அதின் காலத்திலும், என் திராட்சரசத்தை அதின் காலத்திலும் திரும்ப எடுத்துக்கொண்டு, அவளுடைய நிர்வாணத்தை மூடுகிறதற்கு நான் கொடுத்திருந்த ஆட்டுமயிரையும் சணலையும் திரும்பப் பிடுங்கிக்கொள்ளுவேன். 10 இப்போதும் அவளுடைய நேசர்களின் கண்களுக்கு முன்பாக அவளுடைய அவலட்சணத்தை வெளிப்படுத்துவேன்; ஒருவரும் அவளை என் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பதில்லை. 11 அவளுடைய எல்லா மகிழ்ச்சியையும், அவளுடைய பண்டிகைகளையும், அவளுடைய மாதப்பிறப்புகளையும், அவளுடைய ஓய்வுநாட்களையும், சபைகூடுகிற அவளுடைய எல்லா ஆசரிப்புகளையும் ஒழியப்பண்ணுவேன். 12 என் நேசர்கள் எனக்குக் கொடுத்த பணையம் என்று அவள் சொன்ன அவளுடைய திராட்சச்செடிகளையும், அவளுடைய அத்திமரங்களையும் நான் பாழாக்கி, அவைகளைக் காடாய்ப்போகப்பண்ணுவேன்; காட்டுமிருகங்கள் அவைகளைத் தின்னும். 13 அவள் பாகால்களுக்குத் தூபங்காட்டி, தன் நெற்றிப்பட்டங்களினாலும் தன் ஆபரணங்களினாலும் தன்னைச் சிங்காரித்துக்கொண்டு, தன் நேசரைப் பின்தொடர்ந்து, என்னை மறந்துபோன நாட்களினிமித்தம் அவளை விசாரிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 14 ஆயினும், இதோ, நான் அவளுக்கு நயங்காட்டி, அவளை வனாந்தரத்தில் அழைத்துக்கொண்டுபோய், அவளோடே பட்சமாய்ப் பேசி, 15 அவ்விடத்திலிருந்து அவளுக்கு அவளுடைய திராட்சத்தோட்டங்களையும், நம்பிக்கையின் வாசலாக ஆகோரின் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்; அப்பொழுது அவள் அங்கே, தன் இளவயதின் நாட்களிலும் தான் எகிப்துதேசத்திலிருந்து வந்த நாளிலும் பாடினதுபோல் பாடுவாள். 16 அக்காலத்தில் நீ என்னை இனி பாகாலி என்று சொல்லாமல், ஈஷி என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார். 17 பாகால்களுடைய நாமங்களை அவள் வாயிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவேன்; இனி அவைகளின் பேரைச்சொல்லி, அவைகளை நினைக்கிற நினைப்பும் இல்லாமற்போகும். 18 அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களோடும், ஆகாயத்துப் பறவைகளோடும், பூமியிலே ஊரும் பிராணிகளோடும், ஒரு உடன்படிக்கைபண்ணி, வில்லையும் பட்டயத்தையும் யுத்தத்தையும் தேசத்திலே இராதபடிக்கு முறித்து, அவர்களைச் சுகமாய்ப் படுத்துக் கொண்டிருக்கப்பண்ணுவேன். 19 நித்திய விவாகத்துக்கென்று உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீதியும் நியாயமும் கிருபையும் உருக்க இரக்கமுமாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன். 20 உண்மையாய் உன்னை எனக்கு நியமித்துக்கொள்ளுவேன்; நீ கர்த்தரை அறிந்துகொள்ளுவாய். 21 அக்காலத்தில் நான் மறுமொழி கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானங்களுக்கு மறுமொழி கொடுப்பேன், அவைகள் பூமிக்கு மறுமொழி கொடுக்கும். 22 பூமி தானியத்துக்கும் திராட்சரசத்துக்கும் எண்ணெய்க்கும் மறுமொழி கொடுக்கும், இவைகள் யெஸ்ரயேலுக்கும் மறுமொழி கொடுக்கும். 23 நான் அவளை எனக்கென்று பூமியிலே விதைத்து, இரக்கம் பெறாதிருந்தவளுக்கு இரங்குவேன்; என் ஜனமல்லாதிருந்தவர்களை நோக்கி நீ என் ஜனமென்று சொல்லுவேன்; அவர்கள் என் தேவனே என்பார்கள் என்றார்.

ஓசியா 3

1 பின்பு கர்த்தர் என்னை நோக்கி: அந்நிய தேவர்களை மதித்து, திராட்சரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் புத்திரர்பேரில் கர்த்தர் வைத்திருக்கிற அன்புக்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு ஸ்திரீயை நேசித்துக்கொள் என்று சொன்னார். 2 அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் கொண்டு, 3 அவளை நோக்கி: நீ வேசித்தனம்பண்ணாமலும், ஒருவனையும் சேராமலும் அநேகநாள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன். 4 இஸ்ரவேல் புத்திரர் அநேகநாள் ராஜா இல்லாமலும், அதிபதி இல்லாமலும், பலி இல்லாமலும், சிலை இல்லாமலும், ஏபோத் வஸ்திரம் இல்லாமலும், தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள். 5 பின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பி, தங்கள் தேவனாகிய கர்த்தரையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசிநாட்களில் கர்த்தரையும், அவருடைய தயவையும் நாடி அஞ்சிக்கையாய் வருவார்கள்.

ஓசியா 4

1 இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; தேசத்துக் குடிகளோடே கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும் இல்லை, இரக்கமும் இல்லை; தேவனைப்பற்றிய அறிவும் இல்லை. 2 பொய்யாணையிட்டு, பொய்சொல்லி, கொலைசெய்து, திருடி, விபசாரம்பண்ணி, மிஞ்சி மிஞ்சிப்போகிறார்கள்; இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகிறது. 3 இதினிமித்தம் தேசம் புலம்பும்; அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் தொய்ந்துபோகும்; கடலின் மச்சங்களும் வாரிக்கொள்ளப்படும். 4 ஆகிலும் ஒருவனும் நியாயத்தைக் காண்பிக்கவும், ஒருவனும் அவர்களைக் கடிந்துகொள்ளவும் கூடாது; உன் ஜனங்கள் ஆசாரியனோடே வழக்காடுகிறவர்களைப்போல இருக்கிறார்கள். 5 ஆகையால் நீ பகலிலே இடறிவிழுவாய்; இரவிலே உன்னோடேகூடத் தீர்க்கதரிசியும் இடறிவிழுவான்; உன் தாயை நான் சங்காரம்பண்ணுவேன். 6 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன். 7 அவர்கள் எவ்வளவாய்ப் பெருகினார்களோ, அவ்வளவாய் எனக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தார்கள்; அவர்களுடைய மகிமையை இலச்சையாக மாறப்பண்ணுவேன். 8 அவர்கள் என் ஜனத்தின் பாவத்தைத் தின்று, அவர்களுடைய அக்கிரமத்தின்பேரில் பசிதாகமாயிருக்கிறார்கள். 9 ஆதலால் ஜனங்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே; அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்கள் கிரியைகளின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன். 10 அவர்கள் கர்த்தரை மதியாமலிருக்கிறபடியினால் அவர்கள் தின்றாலும் திருப்தியடையாதிருப்பார்கள்; அவர்கள் வேசித்தனம்பண்ணினாலும் பலுகாதிருப்பார்கள். 11 வேசித்தனமும் திராட்சரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும். 12 என் ஜனங்கள் கட்டையினிடத்தில் ஆலோசனை கேட்கிறார்கள்; அவர்களுடைய கோல் அவர்களுக்குச் செய்தியை அறிவிக்குமென்றிருக்கிறார்கள்; வேசித்தன ஆவி அவர்களை வழிதப்பித் திரியப்பண்ணிற்று; அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்பட்டிராமல் சோரமார்க்கம் போனார்கள். 13 அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்; இதினிமித்தம் உங்கள் குமாரத்திகள் வேசித்தனமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரமும் செய்கிறார்கள். 14 உங்கள் குமாரத்திகள் வேசித்தனம் செய்கிறதினிமித்தமும், உங்கள் மருமக்கள்மார் விபசாரம் செய்கிறதினிமித்தமும், நான் அவர்களைத் தண்டியாமலிருப்பேனோ? அவர்கள் விலகி வேசிகளோடே கூடப்போய்த் தாசிகளோடே பலியிடுகிறார்கள்; உணர்வில்லாத ஜனங்கள் அதினால் சிக்குண்டு விழுவார்கள். 15 இஸ்ரவேலே, நீ சோரம்போனாலும், யூதாவாகிலும் அந்தப் பாவத்துக்குள்ளாகாதிருப்பதாக; கில்காலுக்கு வராமலும், பெத்தாவேனுக்குப் போகாமலும் கர்த்தருடைய ஜீவனாணை என்று ஆணையிடாமலும் இருப்பீர்களாக. 16 இஸ்ரவேல் அடங்காத கிடாரியைப்போல் அடங்காதிருக்கிறது; இப்போது கர்த்தர் அவர்களை விஸ்தாரமான வெளியிலே ஆட்டுக்குட்டியைப்போல் மேய்ந்து அலையப்பண்ணுவார். 17 எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு. 18 அவர்களுடைய மதுபானம் புளித்தது, அவர்கள் எப்போதும் சோரம்போகிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தாருங்களென்று இலச்சையானதை நாடுகிறார்கள். 19 காற்று அவர்களைத் தன் செட்டைகளில் இறுகப் பிடிக்கும்; அவர்கள் தங்கள் பலிகளால் வெட்கப்படுவார்கள்.

ஓசியா 5

1 ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் வம்சத்தாரே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாய விசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விரிக்கப்பட்ட வலையுமானீர்கள். 2 நெறிதவறினவர்கள் மிகுதியும் வதை செய்கிறார்கள்; அவர்கள் எல்லாரையும் நான் தண்டிப்பேன். 3 எப்பிராயீமை நான் அறிவேன், இஸ்ரவேல் எனக்கு மறைவானதல்ல; எப்பிராயீமே, இப்போது நீ சோரம்போனாயே, இஸ்ரவேல் தீட்டுப்பட்டதே. 4 அவர்கள் தங்கள் தேவனிடத்துக்குத் திரும்புவதற்குத் தங்கள் கிரியைகளைச் சீர்திருத்தமாட்டார்கள், வேசித்தன ஆவி அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது; கர்த்தரை அறியார்கள். 5 இஸ்ரவேலின் அகந்தை அவர்கள் முகத்துக்கு முன்பாகச் சாட்சியிடுகிறது; ஆகையால் இஸ்ரவேலும் எப்பிராயீமும் தங்கள் அக்கிரமத்தினால் இடறுண்டு விழுவார்கள்; அவர்களோடே யூதாவும் இடறுண்டு விழுவான். 6 அவர்கள் கர்த்தரைத் தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார். 7 கர்த்தருக்கு விரோதமாக துரோகம்பண்ணினார்கள்; அந்நியபிள்ளைகளைப் பெற்றார்கள்; இப்போதும் ஒரு மாதத்துக்குள்ளாக அவர்கள் தங்கள் பங்குகளோடே பட்சிக்கப்படுவார்கள். 8 கிபியாவிலே எக்காளத்தையும், ராமாவிலே பூரிகையையும் ஊதுங்கள்; பெத்தாவேனிலே கதறுங்கள்; பென்யமீனே உன்னைப் பின்தொடருகிறார்கள். 9 தண்டிப்பின் நாளிலே எப்பிராயீம் பாழாவான்; நிச்சயமாய் வரப்போகிறதை இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குள்ளே அறிவிக்கிறேன். 10 யூதாவின் பிரபுக்கள் எல்லைகளை ஒதுக்குகிறவர்களுக்கு ஒப்பானார்கள்; அவர்கள்மேல் என் உக்கிரகோபத்தைத் தண்ணீரைப்போல ஊற்றுவேன். 11 எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்குண்டு, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான். 12 நான் எப்பிராயீமுக்குப் பொட்டரிப்பைப்போலவும், யூதாவின் வீட்டுக்கு உளுப்பைப்போலவும் இருப்பேன். 13 எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனண்டைக்குப்போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் கூடாமற்போயிற்று. 14 நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே பீறிவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமல் எடுத்துக்கொண்டுபோவேன். 15 அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடுமட்டும் நான் என் ஸ்தானத்துக்குத் திரும்பிப் போய்விடுவேன்; தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாய்த் தேடுவார்கள்.

ஓசியா 6

1 கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைப் பீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். 2 இரண்டு நாளுக்குப்பின்பு அவர் நம்மை உயிர்ப்பிப்பார்; மூன்றாம் நாளில் நம்மை எழுப்புவார்; அப்பொழுது நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருப்போம். 3 அப்பொழுது நாம் அறிவடைந்து, கர்த்தரை அறியும்படி தொடர்ந்து போவோம்; அவருடைய புறப்படுதல் அருணோதயம்போல ஆயத்தமாயிருக்கிறது; அவர் மழையைப்போலவும், பூமியின்மேல் பெய்யும் முன்மாரி பின்மாரியைப்போலவும் நம்மிடத்தில் வருவார். 4 எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது. 5 ஆகையால் தீர்க்கதரிசிகளைக்கொண்டு அவர்களை வெட்டினேன்; என் வாய்மொழிகளைக்கொண்டு அவர்களை அதம்பண்ணினேன்; உன்மேல் வரும் தண்டனைகள் வெளிச்சத்தைப்போல் வெளிப்படும். 6 பலியை அல்ல இரக்கத்தையும், தகனபலிகளைப்பார்க்கிலும் தேவனை அறிகிற அறிவையும், விரும்புகிறேன். 7 அவர்களோ ஆதாமைப்போல் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணினார்கள். 8 கீலேயாத் அக்கிரமம் செய்கிறவர்களின் பட்டணம்; அது இரத்தக்காலடிகளால் மிதிக்கப்பட்டிருக்கிறது. 9 பறிகாரரின் கூட்டங்கள் ஒருவனுக்குக் காத்திருக்கிறதுபோல, சீகேமுக்குப் போகிற வழியிலே கொலைசெய்கிற ஆசாரியரின் கூட்டம் காத்திருக்கிறது; தோஷமான காரியங்களையே செய்கிறார்கள். 10 பயங்கரமான காரியத்தை இஸ்ரவேல் வம்சத்தாரில் கண்டேன்; அங்கே எப்பிராயீமின் வேசித்தனம் உண்டு; இஸ்ரவேல் தீட்டுப்பட்டுப்போயிற்று. 11 யூதாவே, உனக்கு ஒரு அறுப்புக்காலம் நியமிக்கப்பட்டிருக்கிறது.

ஓசியா 7

1 நான் என் ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போதும், நான் இஸ்ரவேலை குணமாக்க விரும்பும்போதும், எப்பிராயீமின் அக்கிரமமும் சமாரியாவின் பொல்லாப்புகளும் வெளிப்படுத்தப்படும்; அவர்கள் வஞ்சனை செய்கிறார்கள்; திருடன் உள்ளே வருகிறான்; வெளியே பறிகாரரின் கூட்டத்தார் கொள்ளையிடுகிறார்கள். 2 அவர்கள் பொல்லாப்பையெல்லாம் நான் நினைவில் வைத்திருக்கிறேன் என்று அவர்கள் தங்கள் இருதயத்தில் சிந்திக்கிறதில்லை; இப்போதும் அவர்களுடைய கிரியைகள் அவர்களைச் சூழ்ந்துகொண்டது; அவைகள் என் முகத்துக்கு முன் இருக்கிறது. 3 ராஜாவைத் தங்கள் பொல்லாப்பினாலும், அதிபதிகளைத் தங்கள் பொய்களினாலும் சந்தோஷப்படுத்துகிறார்கள். 4 அவர்கள் எல்லாரும் விபசாரக்கள்ளர்; அப்பஞ்சுடுகிறவன் எரிக்கும் அடுப்பைப்போல் இருக்கிறார்கள்; அவன் மாவைப் பிசைந்ததுமுதல் அது உப்பிப்போகுமட்டும், அனலை மூட்டாமல் ஓய்ந்திருக்கிறான். 5 நம்முடைய ராஜாவின் நாளென்று சொல்லி, அதிபதிகள் திராட்சரசத் துருத்திகளால் அவனுக்கு வியாதியுண்டாக்குகிறார்கள்; சரசக்காரரோடேகூட அவன் தன் கையை நீட்டுகிறான். 6 அவர்கள் பதிவிருக்கும்போது, தங்கள் இருதயத்தை அடுப்பைப்போல் ஆயத்தப்படுத்துகிறார்கள்; அவர்களில் அடுப்புமூட்டுகிறவன் இராமுழுதும் தூங்கினாலும், காலமேயோவென்றால் அது ஜுவாலிக்கிற அக்கினியாய் எரியும். 7 அவர்கள் எல்லாரும் அடுப்பைப்போல அனலாகி, தங்கள் நியாயாதிபதிகளைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய ராஜாக்கள் எல்லாரும் விழுந்தார்கள்; அவர்களில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறவன் ஒருவனும் இல்லை. 8 எப்பிராயீம் அந்நியஜனங்களோடே கலந்திருக்கிறான்; எப்பிராயீம் திருப்பிப்போடாத அப்பம். 9 அந்நியர் அவனுடைய பலத்தைத் தின்கிறார்கள்; அவனோ அதை அறியான்; நரைமயிரும் அவனில் தெளித்திருக்கிறது, அவனோ அதை அறியாதிருக்கிறான். 10 இஸ்ரவேலின் அகந்தை அவர்கள் முகத்துக்கு முன்பாகச் சாட்சியிட்டாலும், அவர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பாமலும், இவை எல்லாவற்றிலும் அவரைத் தேடாமலும் இருக்கிறார்கள். 11 எப்பிராயீம் பேதையான புறாவைப்போல் இருக்கிறான், அவனுக்குப் புத்தியில்லை; எகிப்தியனைக் கூப்பிடுகிறார்கள்; அசீரியனிடத்துக்கும் போகிறார்கள். 12 அவர்கள் போகும்போது, என் வலையை அவர்கள்மேல் வீசுவேன்; அவர்களை ஆகாயத்துப் பறவைகளைப்போலக் கீழே விழப்பண்ணுவேன்; அவர்களுடைய சபையில் கேள்வியானதின்படியே அவர்களைத் தண்டிப்பேன். 13 அவர்கள் என்னைவிட்டு அலைந்து திரிகிறபடியினால் அவர்களுக்கு ஐயோ! அவர்களுக்குக் கேடுவரும்; எனக்கு விரோதமாக இரண்டகம்பண்ணினார்கள்; நான் அவர்களை மீட்டிருந்தும், அவர்கள் எனக்கு விரோதமாகப் பொய்பேசுகிறார்கள். 14 அவர்கள் தங்கள் படுக்கைகளில் அலறுகிறபோது, தங்கள் இருதயத்தில் என்னை நோக்கிக் கூப்பிடுகிறதில்லை; அவர்கள் தானியத்துக்காகவும் திராட்சரசத்துக்காகவும் கூடுகிறார்கள்; என்னை வெறுத்து விலகிப்போகிறார்கள். 15 நான் அவர்களைத் தண்டித்தேன்; அவர்களுடைய புயங்கள் திரும்பப் பலப்படவும்பண்ணினேன்; ஆகிலும் எனக்கு விரோதமாகப் பொல்லாப்பு நினைக்கிறார்கள். 16 திரும்புகிறார்கள், ஆனாலும் உன்னதமானவரிடத்திற்கு அல்ல; மோசம்போக்குகிற வில்லைப்போலிருக்கிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தங்கள் நாவினுடைய உக்கிரத்தினிமித்தம் பட்டயத்தால் விழுவார்கள்; இதுவே எகிப்துதேசத்தினிமித்தம் அவர்களுக்கு வரும் நிந்தை.

ஓசியா 8

1 உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்துக்கு விரோதமாகத் துரோகம்பண்ணினபடியினால், கர்த்தருடைய வீட்டின்மேல் சத்துரு கழுகைப்போல் பறந்துவருகிறான். 2 எங்கள் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்லி இஸ்ரவேலர் கூப்பிடுவார்கள். 3 ஆனாலும் இஸ்ரவேலர் நன்மையை வெறுத்தார்கள்; சத்துரு அவர்களைத் தொடருவான். 4 அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல; அதிபதிகளை வைத்துக்கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன்; அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் தங்கள் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு விக்கிரகங்களைச் செய்வித்தார்கள். 5 சமாரியாவே, உன் கன்றுக்குட்டி உன்னை வெறுத்துவிடுகிறது; என் கோபம் அவர்கள்மேல் மூண்டது; எதுவரைக்கும் சுத்தாங்கம் அடையமாட்டாதிருப்பார்கள்? 6 அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; தட்டான் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாய்ப் போகும். 7 அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்கமாட்டாது; கொடுத்தாலும் அந்நியர் அதை விழுங்குவார்கள். 8 இஸ்ரவேலர் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனிப் புறஜாதிகளுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள். 9 அவர்கள் தனித்துத் திரிகிற காட்டுக்கழுதையைப்போல் அசீரியரண்டைக்குப் போனார்கள்; எப்பிராயீமர் நேசரைக் கூலிக்குப் பொருத்திக்கொண்டார்கள். 10 அவர்கள் புறஜாதியாரைக் கூலிக்குப் பொருத்திக்கொண்டாலும், இப்பொழுது நான் அவர்களைக் கூட்டுவேன்; அதிபதிகளின் ராஜா சுமத்தும் சுமையினால் அவர்கள் கொஞ்சக்காலத்துக்குள்ளே அகப்படுவார்கள். 11 எப்பிராயீமர் பாவஞ்செய்வதற்கேதுவாய்ப் பலிபீடங்களைப் பெருகப்பண்ணினார்கள்; ஆதலால் பலிபீடங்களே அவர்கள் பாவஞ்செய்வதற்கு ஏதுவாகும். 12 என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள். 13 எனக்குச் செலுத்தும் பலிகளின் மாம்சத்தை அவர்கள் பலியிட்டுப் புசிக்கிறார்கள்; கர்த்தர் அவர்கள்மேல் பிரியமாயிரார்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைத்து, அவர்கள் பாவத்தை விசாரிக்கும்போதோவெனில், அவர்கள் எகிப்துக்குத் திரும்பிப்போவார்கள். 14 இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா அரணான பட்டணங்களைப் பெருகப்பண்ணுகிறான்; ஆனாலும் நான் அதின் நகரங்களில் அக்கினியை வரப்பண்ணுவேன்; அது அவைகளின் கோவில்களைப் பட்சிக்கும்.

ஓசியா 9

1 இஸ்ரவேலே, மகிழ்ச்சியாயிராதே; மற்ற ஜனங்களைப்போல் களிகூராதே; உன் தேவனைவிட்டு நீ சோரம்போனாய்; தானியம் போரடிக்கிற சகல களங்களிலும் பணையத்தை நாடுகிறாய். 2 தானியக்களமும் திராட்சத்தொட்டியும் அவர்களைப் பிழைப்பூட்டுவதில்லை; அவர்களுக்குத் திராட்சரசம் ஒழிந்துபோகும். 3 அவர்கள் கர்த்தருடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர் திரும்ப எகிப்துக்குப் போவார்கள்; அசீரியாவில் தீட்டுள்ளதைப் புசிப்பார்கள். 4 அவர்கள் கர்த்தருக்குத் திராட்சரசத்தின் பானபலியை வார்ப்பதுமில்லை, அவருக்கு அங்கிகரிப்பாயிருப்பதுமில்லை; அவர்களுடைய பலிகள் அவர்களுக்குத் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைபோல இருக்கும்; அதைப் புசிக்கிற யாவரும் தீட்டுப்படுவார்கள்; அவர்களுடைய அப்பம் அவர்களுக்கேயாகும், அது கர்த்தருடைய ஆலயத்தில் வருவதில்லை. 5 ஆசரிப்புநாளிலும், கர்த்தருடைய பண்டிகைநாளிலும் என்னசெய்வீர்கள்? 6 இதோ, அவர்கள் பாழ்க்கடிப்புக்குத் தப்பும்படி போய்விட்டார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும், மோப் பட்டணம் அவர்களை அடக்கம்பண்ணும்; அவர்களுடைய வெள்ளியிருந்த விருப்பமான இடங்கள் காஞ்சொறிகளுக்குச் சுதந்தரமாகும்; அவர்களுடைய வாசஸ்தலங்களில் முட்செடிகள் முளைக்கும். 7 விசாரிப்பின் நாட்கள் வரும், நீதி சரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர் அறிந்துகொள்வார்கள்; உன் மிகுதியான அக்கிரமத்தினாலேயும், மிகுதியான பகையினாலேயும் தீர்க்கதரிசிகள் மூடரும், ஆவியைப் பெற்ற மனுஷர்கள் பித்தங்கொண்டவர்களுமாயிருக்கிறார்கள். 8 எப்பிராயீமின் காவற்காரர் என் தேவனோடு எதிர்த்துநிற்கிறார்கள்; தீர்க்கதரிசி தன் வழிகளிலெல்லாம் குருவிபிடிக்கிறவனுடைய கண்ணியாகவும், தன் தேவனுடைய ஆலயத்திலே பகையாளியாகவும் இருக்கிறான். 9 கிபியாவின் நாட்களில் நடந்ததுபோல, அவர்கள் தங்களை மிகவும் கெடுத்துக்கொண்டார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைப்பார், அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார். 10 வனாந்தரத்தில் திராட்சக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல்தரம் பழுத்த கனிகளைப்போல உங்கள் பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோர் அண்டைக்குப்போய், இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப் போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள். 11 எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்துபோம்; அது பிறப்பதுமில்லை, வயிற்றிலிருப்பதுமில்லை, கர்ப்பந்தரிப்பதுமில்லை. 12 அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தாலும், அவர்களுக்கு மனுஷர் இராதபடிக்கு அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்குவேன்; நான் அவர்களை விட்டுப்போகையில் அவர்களுக்கு ஐயோ! 13 நான் எப்பிராயீமைத் தீருவின் திசைமட்டும் இருக்கிறதைப் பார்க்கிறபோது, அது நல்ல வசதியான ஸ்தலத்திலே நாட்டப்பட்டிருக்கிறது; ஆனாலும் எப்பிராயீமர் தங்கள் குமாரரைக் கொலைசெய்கிறவனிடத்தில் வெளியே கொண்டுபோய் விடுவார்கள். 14 கர்த்தாவே, நீர் அவர்களுக்குக் கொடுப்பதைக் கொடும்; அவர்களுக்கு விழுந்துபோகிற கர்ப்பத்தையும் பாலற்ற முலைகளையும் கொடும். 15 அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும்; அங்கே நான் அவர்களை வெறுத்தேன்; அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களை நான் என் சமுகத்தைவிட்டுத் துரத்துவேன்; இனி அவர்களை நேசிக்கமாட்டேன்; அவர்களுடைய அதிபதிகள் எல்லாரும் துரோகிகள். 16 எப்பிராயீமர் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அதம்பண்ணுவேன். 17 அவர்கள் அவருக்குச் செவிகொடாமற்போனபடியால் என் தேவன் அவர்களை வெறுத்துவிடுவார்; அவர்கள் அந்நியஜாதிகளுக்குள்ளே அலைந்து திரிவார்கள்.

ஓசியா 10

1 இஸ்ரவேல் பலனற்ற திராட்சச்செடி, அது தனக்குத்தானே கனிகொடுக்கிறது; அவன் தன் கனியின் திரளுக்குச் சரியாய்ப் பலிபீடங்களைத் திரளாக்குகிறான்; தங்கள் தேசத்தின் செழிப்புக்குச் சரியாய்ச் சிறப்பான சிலைகளைச் செய்கிறார்கள். 2 அவர்கள் இருதயம் பிரிக்கப்பட்டிருக்கிறது; இப்போதும் குற்றஞ்சுமத்தப்படுவார்கள்; அவர்கள் பலிபீடங்களை இடித்து, அவர்கள் சிலைகளை நாசமாக்குவார். 3 நாம் கர்த்தருக்குப் பயப்படாமற்போனபடியினால் நமக்கு ராஜா இல்லை; ராஜா இருந்தாலும் நமக்காக என்ன செய்வான் என்று இனிச் சொல்லுவார்கள். 4 பொய்யாணையிடுகிற வார்த்தைகளைச் சொல்லி, உடன்படிக்கை பண்ணிக்கொண்டார்கள்; ஆகையால் வயல்வெளியின் படைச்சால்களில் விஷப்பூண்டுகளைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும். 5 சமாரியாவின் குடிகள் பெத்தாவேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம் பயம் அடைவார்கள்; அதற்காகக் களிகூர்ந்த அதின் ஜனமும், அதின் பூசாசாரிகளும் அதின் மகிமை அதைவிட்டு நீங்கிப்போயிற்றென்று அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள். 6 அதுவும் அசீரியாவிலே யாரேப் ராஜாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுபோகப்படும்; எப்பிராயீம் இலச்சையடைவான்; இஸ்ரவேல் தன் ஆலோசனையினாலே வெட்கப்படுவான். 7 சமாரியாவின் ராஜா தண்ணீரின்மேல் இருக்கிற நுரையைப்போல் அழிந்துபோவான். 8 இஸ்ரவேலுடைய பாவமாகிய ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும்; முட்செடிகளும் முட்பூண்டுகளும் அவர்கள் பலிபீடங்களின்மேல் முளைக்கும்; பர்வதங்களைப்பார்த்து எங்களை மூடுங்கள் என்றும், குன்றுகளைப்பார்த்து எங்கள்மேல் விழுங்கள் என்றும் சொல்லுவார்கள். 9 இஸ்ரவேலே, நீ கிபியாவின் நாட்கள்முதல் பாவஞ்செய்துவந்தாய்; கிபியாவிலே அக்கிரமக்காரர்மேல் வந்த யுத்தம் தங்களைக் கிட்டுவதில்லையென்று அந்த நிலையிலே நிற்கிறார்கள். 10 நான் அவர்களைத் தண்டிக்க விரும்புகிறேன்; அவர்கள் செய்த இரண்டுவித பாவங்களினிமித்தம் கட்டப்படும்போது, ஜனங்கள் அவர்களுக்கு விரோதமாய்க் கூடுவார்கள். 11 எப்பிராயீம் நன்றாய்ப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற கடாரியாயிருக்கிறான்; ஆனாலும் நான் அவன் அழகான கழுத்தின்மேல் நுகத்தடியை வைப்பேன்; எப்பிராயீமை ஏர் பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்குப் பரம்படிப்பான். 12 நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கொத்ததாய் அறுப்பு அறுங்கள்; உங்கள் தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; கர்த்தர் வந்து உங்கள்மேல் நீதியை வருஷிக்கப்பண்ணுமட்டும், அவரைத் தேடக் காலமாயிருக்கிறது. 13 அநியாயத்தை உழுதீர்கள், தீவினையை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைப் புசித்தீர்கள்; உங்கள் வழியையும் உங்கள் பராக்கிரமசாலிகளின் திரளையும் நம்பினீர்கள். 14 ஆகையால் உங்கள் ஜனங்களுக்குள் அமளி எழும்பும்; பிள்ளைகளின்மேல் தாய் மோதியடிக்கப்பட்ட யுத்தநாளிலே பெத்தார்பேலைச் சல்மான் அழித்ததுபோல, உங்கள் எல்லா அரண்களும் அழிக்கப்படும். 15 உங்கள் கொடிய பொல்லாப்பினால் பெத்தேல் இப்படிப்பட்டதை உங்களுக்குச் செய்யும்; அதிகாலமே இஸ்ரவேலின் ராஜா முற்றிலும் சங்கரிக்கப்படுவான்.

ஓசியா 11

1 இஸ்ரவேல் இளைஞனாயிருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன். 2 அவர்கள் தங்களை அழைக்கிறவர்களின் முகத்துக்கு விலகிப்போய்விட்டார்கள்; பாகால்களுக்குப் பலியிட்டு, விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டினார்கள். 3 நான் எப்பிராயீமைக் கைபிடித்து நடக்கப் பழக்கினேன்; ஆனாலும் நான் தங்களைக் குணமாக்குகிறவரென்று அறியாமற்போனார்கள். 4 மனுஷரைக் கட்டி இழுக்கிற அன்பின் கயிறுகளால் நான் அவர்களை இழுத்தேன், அவர்கள் கழுத்துகளின்மேல் இருந்த நுகத்தடியை எடுத்துப் போடுகிறவரைப்போல் இருந்து, அவர்கள் பட்சம் சாய்ந்து, அவர்களுக்கு ஆகாரங்கொடுத்தேன். 5 மனந்திரும்பமாட்டோமென்றதினால் அவர்கள் எகிப்துதேசத்துக்குத் திரும்பிப்போவதில்லை; அசீரியன் அவர்களுக்கு ராஜா. 6 ஆகையால் அவர்களுடைய ஆலோசனைகளினிமித்தம் பட்டயம் அவர்கள் பட்டணங்களுக்குள் பாய்ந்து, அவர்கள் தாழ்ப்பாள்களை நிர்மூலம்பண்ணி, அவர்களைப் பட்சிக்கும். 7 என் ஜனங்கள் என்னைவிட்டு விலகுகிற மாறுபாட்டைப் பற்றிக்கொண்டிருக்கிறார்கள்; அவர்களை உன்னதமானவரிடத்தில் வரவழைத்தாலும் ஒருவனும் எழும்புகிறதில்லை. 8 எப்பிராயீமே, நான் உன்னை எப்படிக் கைவிடுவேன்? இஸ்ரவேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? நான் உன்னை எப்படி அத்மாவைப்போலாக்குவேன்? உன்னை எப்படிச் செபோயீமைப்போல வைப்பேன்? என் இருதயம் எனக்குள் குழம்புகிறது; என் பரிதாபங்கள் ஏகமாய்ப் பொங்குகிறது. 9 என் உக்கிர கோபத்தின்படியே செய்யமாட்டேன்; எப்பிராயீமை அழிக்கும்படித் திரும்பமாட்டேன்; ஏனென்றால் நான் மனுஷனல்ல, தேவனாயிருக்கிறேன்; நான் உன் நடுவிலுள்ள பரிசுத்தர்; ஆகையால் பட்டணத்துக்கு விரோதமாக வரேன். 10 அவர்கள் கர்த்தரைப் பின்பற்றுவார்கள்; அவர் சிங்கத்தைப்போல் கெர்ச்சிப்பார்; அவர் கெர்ச்சிக்கும்போது அவர்கள் சந்ததியார் மேற்குத்திசையிலிருந்து நடுங்கி வருவார்கள். 11 எகிப்திலிருந்து குருவிகளைப்போலவும், அசீரியா தேசத்திலிருந்து புறாக்களைப்போலவும் பயந்து வருவார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் வீடுகளில் குடியிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 12 எப்பிராயீமர் பொய்களினாலும், இஸ்ரவேல் வம்சத்தார் வஞ்சகத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள்; யூதாவோவெனில் இன்னும் தேவனோடே அரசாண்டு, பரிசுத்தவான்களோடே உண்மையாயிருக்கிறான்.

ஓசியா 12

1 எப்பிராயீம் காற்றை மேய்ந்து, கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான்; அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் வர்த்திக்கப்பண்ணி, அசீரியரோடே உடன்படிக்கைபண்ணுகிறான்; எகிப்துக்கு எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது. 2 யூதாவோடும் கர்த்தருக்கு வழக்கு இருக்கிறது; அவர் யாக்கோபை அவன் வழிகளுக்குத்தக்கதாக விசாரிக்கப்போகிறார்; அவன் கிரியைகளுக்குத்தக்கதாக அவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவார். 3 அவன் தாயின் கர்ப்பத்திலே தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான்; தன் பெலத்தினால் தேவனோடே போராடினான். 4 அவன் தூதனானவரோடே போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார். 5 கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நாமசங்கீர்த்தனம். 6 இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு. 7 அவன் வியாபாரி, கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது; அநியாயஞ்செய்ய விரும்புகிறான். 8 எப்பிராயீம்: நான் ஐசுவரியவானானேன்; நான் பொருளைச் சம்பாதித்தேன்; நான் பிரயாசப்பட்டுத் தேடின எல்லாவற்றிலும் பாவமாகிய அக்கிரமம் என்னிடத்தில் கண்டுபிடிக்கப்படுவதில்லையென்று சொல்லுகிறான். 9 உன்னை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துவந்தது முதற்கொண்டு உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான், பண்டிகை நாட்களில் செய்யப்படுகிறதுபோல், திரும்பவும் உன்னைக் கூடாரங்களில் தாபரிக்கப்பண்ணுவேன். 10 அப்படியே தீர்க்கதரிசிகளோடே சொன்னேன்; நான் அநேகம் தரிசனங்களை அருளினேன்; தீர்க்கதரிசிகளைக்கொண்டு உவமைகளால் பேசினேன். 11 கீலேயாத் அக்கிரம ஸ்தலமோ? ஆம், அவர்கள் அபத்தரானார்கள்; கில்காலிலே காளைகளைப் பலியிடுகிறார்கள்; அவர்களுடைய பீடங்கள் வயல்வரப்புகளில் இருக்கிற கற்குவியல்களைப்போல் இருக்கிறது. 12 யாக்கோபு சீரியாதேசத்துக்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஊழியஞ்செய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான். 13 கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்; தீர்க்கதரிசியினால் காக்கப்பட்டான். 14 எப்பிராயீமோ அவரை மிகவும் கோபப்படுத்தினான்; ஆகையால் அவனுடைய ஆண்டவர் அவனுடைய இரத்தப்பழிகளை அவன்மேல் சுமத்தி, அவன் செய்த நிந்தையை அவன்மேல் திருப்புவார்.

ஓசியா 13

1 எப்பிராயீம் பேசினபோது நடுக்கமுண்டாயிற்று; அவன் இஸ்ரவேலிலே மேன்மைபெற்றான்; அவன் பாகால் விஷயத்தில் குற்றஞ்செய்து மடிந்துபோனான். 2 இப்போதும் அவர்கள் அதிகமதிகமாய்ப் பாவஞ்செய்து, தங்கள் வெள்ளியினால் வார்ப்பித்த சுரூபங்களையும், தங்கள் புத்திக்கேற்க விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டுபண்ணுகிறார்கள்; இவைகளெல்லாம் தட்டாருடைய வேலை; மனுஷரில் பலியிடுகிறவர்கள் கன்றுக்குட்டிகளை முத்தமிடலாமென்று இவைகளைக்குறித்துச் சொல்லுகிறார்கள். 3 ஆகையால் அவர்கள் காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற்காலையில் ஒழிந்துபோகிற பனியைப்போலவும், பெருங்காற்று களத்திலிருந்து பறக்கடிக்கிற பதரைப்போலவும், புகைக்கூண்டில் ஏறிப்போகிற புகையைப்போலவும் இருப்பார்கள். 4 நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை. 5 நான் உன்னை மகா வறட்சியான தேசமாகிய வனாந்தரத்திலே அறிந்துகொண்டேன். 6 தங்களுக்கு இருந்த மேய்ச்சலினால் திருப்தியானார்கள்; திருப்தியானபின்பு அவர்கள் இருதயம் மேட்டிமையாயிற்று; அதினால் என்னை மறந்தார்கள். 7 ஆகையால் நான் அவர்களுக்குச் சிங்கத்தைப்போல் இருப்பேன்; சிவிங்கியைப்போல் வழியருகே பதிவிருப்பேன். 8 குட்டிகளைப் பறிகொடுத்த கரடியைப்போல நான் அவர்களை எதிர்த்து, அவர்கள் ஈரற்குலையைக் கிழித்து, அவர்களை அங்கே சிங்கம் பட்சிக்கிறதுபோல் பட்சித்துப்போடுவேன்; காட்டுமிருகங்கள் அவர்களைப் பீறிப்போடும். 9 இஸ்ரவேலே, நீ உனக்குக் கேடுண்டாக்கிக்கொண்டாய்; ஆனாலும் என்னிடத்தில் உனக்குச் சகாயம் உண்டு. 10 எனக்கு ராஜாவையும் அதிபதிகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றாயே; இப்போதும் உன்னுடைய எல்லாப் பட்டணங்களிலும் உன்னை இரட்சிக்கும் ராஜா எங்கே? உன் நியாயாதிபதிகள் எங்கே? 11 நான் கோபத்திலே உனக்கு ராஜாவைக் கொடுத்தேன்; என் உக்கிரத்திலே அவனை எடுத்துக்கொண்டேன். 12 எப்பிராயீமின் அக்கிரமம் கட்டிவைத்திருக்கிறது; அவன் பாவம் பத்திரப்படுத்தப்பட்டிருக்கிறது. 13 பிரசவஸ்திரீயின் வேதனை அவனுக்கு வரும்; அவன் விவேகமில்லாத பிள்ளை; பேறுகாலமட்டும் அவன் நிற்கவில்லை. 14 அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்; மரணமே, உன் வாதைகள் எங்கே? பாதாளமே, உன் சங்காரம் எங்கே? மனமாறுதல் என் கண்களுக்கு மறைவானதாயிருக்கும். 15 இவன் சகோதரருக்குள்ளே ஜனம்பெருத்தவனாயிருந்தாலும், கர்த்தருடைய காற்றாகிய கீழ்க்காற்று வனாந்தரத்திலிருந்து எழும்பிவரும்; அதனால் அவனுடைய ஊற்றுகள் வற்றிப்போகும்; அவனுடைய துரவு சுவறிப்போகும்; அது இச்சிக்கப்படத்தக்க சகல பதார்த்தங்களுள்ள உத்தம பதார்த்தங்களையும் வாரிக்கொண்டுபோகும். 16 சமாரியா தன் தேவனுக்கு விரோதமாகக் கலகம்பண்ணினபடியால், குற்றஞ் சுமத்தப்பட்டதாயிருக்கும்; அவர்கள் பட்டயத்தால் விழுவார்கள்; அவர்களுடைய குழந்தைகள் மோதியடிக்கப்படும்; அவர்களுடைய கர்ப்பவதிகள் கீறப்பட்டுப்போவார்கள்.

ஓசியா 14

1 இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய். 2 வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம். 3 அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் கிரியையைப்பார்த்து: நீங்கள் எங்கள் தேவர்கள் என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள். 4 நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று. 5 நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான். 6 அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும். 7 அவன் நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சச்செடிகளைப்போலப் படருவார்கள்; அவன் வாசனை லீபனோனுடைய திராட்சரசத்தின் வாசனையைப்போல இருக்கும். 8 இனி எனக்கும் விக்கிரகங்களுக்கும் என்ன என்று எப்பிராயீம் சொல்லுவான்; நான் அவனுக்குச் செவிகொடுத்து, அவன்மேல் நோக்கமாயிருந்தேன்; நான் பச்சையான தேவதாரு விருட்சம்போலிருக்கிறேன்; என்னாலே உன் கனியுண்டாயிற்று என்று எப்பிராயீம் சொல்லுவான். 9 இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.

யோவேல் 1

1 பெத்துவேலின் குமாரனாகிய யோவேலுக்கு உண்டான கர்த்தருடைய வசனம். 2 முதியோரே, இதைக் கேளுங்கள்; தேசத்தின் சகல குடிகளே, செவிகொடுங்கள்; உங்கள் நாட்களிலாவது உங்கள் பிதாக்களின் நாட்களிலாவது இப்படிப்பட்டது சம்பவித்ததுண்டா? 3 இதின் செய்தியை உங்கள் பிள்ளைகளுக்குத் தெரிவியுங்கள்; இதை உங்கள் பிள்ளைகள் தங்கள் பிள்ளைகளுக்கும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் சந்ததியாருக்கும் தெரிவிக்கக்கடவர்கள். 4 பச்சைப்புழு விட்டதை வெட்டுக்கிளி தின்றது; வெட்டுக்கிளி விட்டதைப் பச்சைக்கிளி தின்றது; பச்சைக்கிளி விட்டதை முசுக்கட்டைப்பூச்சி தின்றது. 5 வெறியரே, விழித்து அழுங்கள்; திராட்சரசம் குடிக்கிற சகல ஜனங்களே, புது திராட்சரசத்தினிமித்தம் அலறுங்கள்; அது உங்கள் வாயினின்று விலக்கப்பட்டது. 6 எண்ணிமுடியாத ஒரு பலத்த ஜாதி என் தேசத்தின்மேல் வருகிறது; அதின் பற்கள் சிங்கத்தின் பற்கள்; துஷ்ட சிங்கத்தின் கடைவாய்ப்பற்கள் அதற்கு உண்டு. 7 அது என் திராட்சச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து, அதின் பட்டையை முற்றிலும் தின்றுபோட்டது; அதின் கிளைகள் வெண்மையாயிற்று. 8 தன் பாலியவயதின் புருஷனுக்காக இரட்டுடுத்தியிருக்கிற பெண்ணைப்போலப் புலம்பு. 9 போஜனபலியும் பானபலியும் கர்த்தருடைய ஆலயத்தை விட்டு அற்றுப்போயின; கர்த்தரின் ஊழியக்காரராகிய ஆசாரியர்கள் துக்கிக்கிறார்கள். 10 வயல்வெளி பாழாயிற்று, பூமி துக்கங்கொண்டாடுகிறது; விளைச்சல் அழிக்கப்பட்டது; புது திராட்சரசம் வற்றிப்போயிற்று; எண்ணெய் மாண்டுபோயிற்று. 11 பயிரிடுங் குடிகளே, வெட்கப்படுங்கள்; கோதுமையும் வாற்கோதுமையும் இல்லாமற்போயிற்று; திராட்சத்தோட்டக்காரரே, அலறுங்கள்; வயல்வெளியின் அறுப்பு அழிந்துபோயிற்று. 12 திராட்சச்செடி வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது; மாதளை, பேரீச்சம், கிச்சிலி முதலிய வெளியின் செடிகள் எல்லாம் வாடிப்போயின; சந்தோஷம் மனுபுத்திரரைவிட்டு ஒழிந்துபோயிற்று. 13 ஆசாரியர்களே, இரட்டுடுத்திப் புலம்புங்கள்; பலிபீடத்தின் பணிவிடைக்காரரே, அலறுங்கள்; என் தேவனுடைய தொண்டரே, நீங்கள் உள்ளே பிரவேசித்து இரட்டுடுத்தவர்களாய் இராத்தங்குங்கள். உங்கள் தேவனுடைய ஆலயத்தில் போஜனபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது. 14 பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள்; விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக் குடிகளையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள். 15 அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது சங்காரம்போலச் சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது. 16 நம்முடைய கண்களைவிட்டு ஆகாரமும், நம்முடைய தேவனின் ஆலயத்தைவிட்டுச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்படவில்லையோ? 17 விதையானது மண்கட்டிகளின்கீழ் மக்கிப்போயிற்று; பயிர் தீய்ந்துபோகிறதினால் பண்டசாலைகள் பாழாகிக் களஞ்சியங்கள் இடிந்துபோயின. 18 மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டுமந்தைகளும் சேதமாய்ப்போயிற்று. 19 கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்து, ஜுவாலை வெளியின் விருட்சங்களையெல்லாம் எரித்துப்போடுகிறது. 20 வெளியின் மிருகங்களும் உம்மை நோக்கிக் கதறுகிறது; நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போயிற்று; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்துப்போட்டது.

யோவேல் 2

1 சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது. 2 அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன் ஒரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித் தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டாவதுமில்லை. 3 அவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும், அவைகளுக்குப் பின்னாக ஜுவாலை எரிக்கும்; அவைகளுக்கு முன்னாகத் தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்தரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை. 4 அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது; அவைகள் குதிரை வீரரைப்போல ஓடும். 5 அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சல்போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினிஜுவாலையின் இரைச்சல்போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சல்போலவும், பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும். 6 அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும். 7 அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; யுத்தவீரரைப்போல மதிலேறும்; வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும். 8 ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும். 9 அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும், வீடுகளின்மேல் ஏறும்; பலகணிவழியாய்த் திருடனைப்போல உள்ளே நுழையும். 10 அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும். 11 கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளயம் மகா பெரிது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்? 12 ஆதலால் நீங்கள் இப்பொழுதே உபவாசத்தோடும் அழுகையோடும் புலம்பலோடும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னிடத்தில் திரும்புங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 13 நீங்கள் உங்கள் வஸ்திரங்களையல்ல, உங்கள் இருதயங்களைக் கிழித்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் இடத்தில் திரும்புங்கள்; அவர் இரக்கமும், மன உருக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்; அவர் தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமாயிருக்கிறார். 14 ஒருவேளை அவர் திரும்பி மனஸ்தாபப்பட்டு, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் போஜனபலிகளையும் பானபலிகளையும் செலுத்துகிறதற்கான ஆசீர்வாதத்தைத் தந்தருளுவார். 15 சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள். 16 ஜனத்தைக் கூட்டுங்கள், சபையைப் பரிசுத்தப்படுத்துங்கள்; முதியோரைச் சேருங்கள், பிள்ளைகளையும் பாலுண்கிற குழந்தைகளையும் கூட்டுங்கள்; மணவாளன் தன் அறையையும், மணவாட்டி தன் மறைவையும் விட்டுப் புறப்படுவார்களாக. 17 கர்த்தரின் பணிவிடைக்காரராகிய ஆசாரியர்கள் மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே அழுது: கர்த்தாவே, நீர் உமது ஜனத்தைத் தப்பவிட்டுப் புறஜாதிகள் அவர்களைப் பழிக்கும் நிந்தைக்கு உமது சுதந்தரத்தை ஒப்புக்கொடாதிரும்; உங்கள் தேவன் எங்கே என்று புறஜாதிகளுக்குள்ளே சொல்லப்படுவானேன் என்பார்களாக. 18 அப்பொழுது கர்த்தர் தமது தேசத்துக்காக வைராக்கியங்கொண்டு, தமது ஜனத்தைக் கடாட்சிப்பார். 19 கர்த்தர் மறுமொழி கொடுத்து, தமது ஜனத்தை நோக்கி: இதோ, நான் உங்களை இனிப் புறஜாதிகளுக்குள்ளே நிந்தையாக வைக்காமல், உங்களுக்குத் தானியத்தையும் திராட்சரசத்தையும் எண்ணெயையும் கொடுத்தேன், நீங்கள் அதினால் திருப்தியாவீர்கள். 20 வடதிசைச்சேனையை உங்களுக்குத் தூரமாக விலக்கி, அதின் முன்தண்டு கீழ்க்கடலுக்கும், அதின் பின்தண்டு மேற்கடலுக்கும் நேராக அதை வறட்சியும் பாழுமான தேசத்துக்குத் துரத்திவிடுவேன்; அங்கே அதின் நாற்றம் எழும்பி, அதின் துர்க்கந்தம் வீசும்; அது பெரிய காரியங்களைச் செய்தது. 21 தேசமே, பயப்படாதே, மகிழ்ந்து களிகூரு; கர்த்தர் பெரிய காரியங்களைச் செய்வார். 22 வெளியின் மிருகங்களே, பயப்படாதேயுங்கள்; வனாந்தரத்திலே மேய்ச்சல்கள் உண்டாகும்; விருட்சங்கள் காய்களைக் காய்க்கும்; அத்திமரமும் திராட்சச்செடியும் பலனைத் தரும். 23 சீயோன் குமாரரே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; அவர் தக்கபடி உங்களுக்கு முன்மாரியைக் கொடுத்து, உங்களுக்கு முன்மாரியையும் பின்மாரியையும் ஏற்கனவே வருஷிக்கப்பண்ணுவார். 24 களங்கள் தானியத்தினால் நிரம்பும்; ஆலைகளில் திராட்சரசமும் எண்ணெயும் வழிந்தோடும். 25 நான் உங்களிடத்தில் அனுப்பின என் பெரிய சேனையாகிய வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும், பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன். 26 நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. 27 நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறொருவர் இல்லையென்றும் அறிந்துகொள்வீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை. 28 அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். 29 ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். 30 வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன். 31 கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். 32 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்.

யோவேல் 3

1 இதோ, யூதாவுக்கும் எருசலேமுக்கும் உண்டாயிருக்கிற சிறையிருப்பை நான் திருப்பும் அந்நாட்களிலும் அக்காலத்திலும், 2 நான் சகல ஜாதியாரையும் கூட்டி, யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என் சுதந்தரத்தையும் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து என் தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும், 3 அவர்கள் என் ஜனத்தின்பேரில் சீட்டுப்போட்டு, ஆண்குழந்தைகளை வேசிப்பணையமாகக் கொடுத்து, மதுபானம் பண்ணும்படி, பெண் குழந்தைகளைத் திராட்சரசத்துக்குக் கிரயமாகக் கொடுத்ததினிமித்தமும், அங்கே அவர்களோடு வழக்காடுவேன். 4 தீருவே, சீதோனே, பெலிஸ்தியாவின் சகல எல்லைகளே, உங்களுக்கும் எனக்கும் என்ன? இப்படி எனக்குச் சரிக்கட்டுகிறீர்களோ? இப்படி எனக்குச் சரிக்கட்டுவீர்களாகில், நான் தாமதமின்றி அதிசீக்கிரமாய் நீங்கள் சரிக்கட்டுகிறதை உங்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்வேன். 5 நீங்கள் என் வெள்ளியையும் என் பொன்னையும் எடுத்து, இன்பமும் உச்சிதமுமான என் பொருள்களை உங்கள் கோவில்களிலே கொண்டுபோய், 6 யூதாவின் குமாரரையும் எருசலேமின் குமாரரையும் அவர்களுடைய எல்லைகளுக்குத் தூரமாக்கும்படிக்கு, கிரேக்கரிடத்தில் விற்றுப்போட்டீர்கள். 7 இதோ, நீங்கள் அவர்களை விற்றுப்போட்ட அவ்விடத்திலிருந்து நான் அவர்களை எழும்பிவரப்பண்ணி, நீங்கள் சரிக்கட்டினதை உங்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்து, 8 உங்கள் குமாரரையும் உங்கள் குமாரத்திகளையும் யூதா புத்திரரின் கையிலே விற்பேன்; இவர்கள் அவர்களைத் தூரதேசத்தாராகிய சபேயரிடத்தில் விற்றுப்போடுவார்கள்; கர்த்தர் இதைச் சொன்னார். 9 இதைப் புறஜாதிகளுக்குள்ளே கூறுங்கள்; யுத்தத்துக்கு ஆயத்தம்பண்ணுங்கள், பராக்கிரமசாலிகளை எழுப்புங்கள்; யுத்தவீரர் எல்லாரும் சேர்ந்து ஏறிவரக்கடவர்கள். 10 உங்கள் மண்வெட்டிகளைப் பட்டயங்களாகவும், உங்கள் அரிவாள்களை ஈட்டிகளாகவும் அடியுங்கள்; பலவீனனும் தன்னைப் பலவான் என்று சொல்வானாக. 11 சகல ஜாதிகளே, நீங்கள் சுற்றிலுமிருந்து ஏகமாய் வந்து கூடுங்கள்; கர்த்தாவே, நீரும் அங்கே உம்முடைய பராக்கிரமசாலிகளை இறங்கப்பண்ணுவீராக. 12 ஜாதிகள் எழும்பி யோசபாத்தின் பள்ளத்தாக்குக்கு வருவார்களாக; சுற்றிலுமுள்ள ஜாதிகளை நியாயந்தீர்க்க அங்கே நான் வீற்றிருப்பேன். 13 பயிர் முதிர்ந்தது, அரிவாளை நீட்டி அறுங்கள், வந்து இறங்குங்கள்; ஆலை நிரம்பியிருக்கிறது, ஆலையின் தொட்டிகள் வழிந்தோடுகிறது; அவர்களுடைய பாதகம் பெரியது. 14 நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே ஜனங்கள் திரள்திரளாய் இருக்கிறார்கள்; நியாயத்தீர்ப்பின் பள்ளத்தாக்கிலே கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது. 15 சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும், நட்சத்திரங்கள் ஒளிமழுங்கும். 16 கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; வானமும் பூமியும் அதிரும்; ஆனாலும் கர்த்தர் தமது ஜனத்துக்கு அடைக்கலமும் இஸ்ரவேல் புத்திரருக்கு அரணான கோட்டையுமாயிருப்பார். 17 என் பரிசுத்த பர்வதமாகிய சீயோனிலே வாசமாயிருக்கிற நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அப்பொழுது அறிந்துகொள்வீர்கள்; அப்பொழுது எருசலேம் பரிசுத்தமாயிருக்கும்; அந்நியர் இனி அதைக் கடந்துபோவதில்லை. 18 அக்காலத்தில் பர்வதங்கள் திராட்சரசத்தைப் பொழியும், மலைகள் பாலாய் ஓடும், யூதாவின் ஆறுகள் எல்லாம் பிரவாகித்து ஓடும்; ஒரு ஊற்று கர்த்தருடைய ஆலயத்திலிருந்து புறப்பட்டுச் சித்தீம் என்னும் பள்ளத்தாக்கை நீர்ப்பாய்ச்சலாக்கும். 19 யூதா புத்திரரின் தேசத்திலே குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தி, அவர்களுக்குச் செய்த கொடுமையினிமித்தம் எகிப்து பாழாய்ப்போகும், ஏதோம் பாழான வனாந்தரமாகும். 20 ஆனால் யூதாவோ சதாகாலமாகவும், எருசலேம் தலைமுறை தலைமுறையாகவும் குடியேற்றப்பட்டிருக்கும். 21 நான் தண்டியாமல் விட்டிருந்த அவர்களுடைய இரத்தப்பழியைத் தண்டியாமல் விடேன்; கர்த்தர் சீயோனிலே வாசமாயிருக்கிறார்.

ஆமோஸ் 1

1 தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாசுடைய குமாரனாகிய எரொபெயாமின் நாட்களிலும், பூமி அதிர்ச்சி உண்டாக இரண்டு வருஷத்துக்கு முன்னே, இஸ்ரவேலைக்குறித்துத் தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள். 2 கர்த்தர் சீயோனிலிருந்து கெர்ச்சித்து, எருசலேமிலிருந்து சத்தமிடுவார்; அதினால் மேய்ப்பரின் தாபரங்கள் துக்கங்கொண்டாடும்; கர்மேலின் கொடுமுடியும் காய்ந்துபோகும். 3 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: தமஸ்குவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கீலேயாத்தை இருப்புக் கருவிகளினால் போரடித்தார்களே. 4 ஆசகேலின் வீட்டிலே தீக்கொளுத்துவேன்; அது பெனாதாதின் அரமனைகளைப் பட்சிக்கும். 5 நான் தமஸ்குவின் தாழ்ப்பாளை உடைத்து, குடிகளை ஆவேன் என்னும் பள்ளத்தாக்கிலும், செங்கோல் செலுத்துகிறவனைப் பெத்ஏதேனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன்; அப்பொழுது சீரியாவின் ஜனங்கள் கீருக்குச் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 6 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: காத்சாவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சிறைப்பட்டவர்களை ஏதோமியரிடத்தில் ஒப்புவிக்கும்படி முழுதும் சிறையாக்கினார்களே. 7 காத்சாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதினுடைய அரமனைகளைப் பட்சிக்கும். 8 நான் குடிகளை அஸ்தோத்திலும், செங்கோல் செலுத்துகிறவனை அஸ்கலோனிலும் இராதபடிக்குச் சங்காரம்பண்ணி, பெலிஸ்தரில் மீதியானவர்கள் அழியும்படிக்கு என் கையை எக்ரோனுக்கு விரோதமாகத் திருப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 9 மேலும்: தீருவினுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அதின் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் சகோதரரின் உடன்படிக்கையை நினையாமல், சிறைப்பட்டவர்களை முழுதும் ஏதோமியர் கையில் ஒப்பித்தார்களே. 10 தீருவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது அதின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். 11 மேலும்: ஏதோமுடைய மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் தன் சகோதரனைப் பட்டயத்தோடே தொடர்ந்து, தன் மனதை இரக்கமற்றதாக்கி, தன் கோபத்தினாலே என்றைக்கும் அவனைப் பீறிப்போட்டு, தன் மூர்க்கத்தை நித்தியகாலமாக வைத்திருக்கிறானே. 12 தேமானிலே தீக்கொளுத்துவேன்; அது போஸ்றாவின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். 13 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அம்மோன் புத்திரரின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் தங்கள் எல்லைகளை விஸ்தாரமாக்கும்படிக்குக் கீலேயாத் தேசத்தின் கர்ப்பஸ்திரீகளைக் கீறிப்போட்டார்களே. 14 ரப்பாவின் மதிலுக்குள் தீக்கொளுத்துவேன்; அது யுத்தநாளின் முழக்கமாகவும், பெருங்காற்றின் புசலாகவும் அதின் அரமனைகளைப் பட்சிக்கும். 15 அவர்களுடைய ராஜாவும், அவனுடைய அதிபதிகளும் சிறைப்பட்டுப்போவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 2

1 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: மோவாபின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவன் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவன் ஏதோமுடைய ராஜாவின் எலும்புகளை நீறாகச் சுட்டுப்போட்டானே. 2 மோவாப்தேசத்தில் தீக்கொளுத்துவேன்; அது கீரியோத்தின் அரமனைகளைப் பட்சிக்கும்; மோவாபியர் அமளியோடும் ஆர்ப்பரிப்போடும் எக்காள சத்தத்தோடும் சாவார்கள். 3 நியாயாதிபதியை அவர்கள் நடுவில் இராதபடிக்கு நான் சங்காரம்பண்ணி, அவனோடேகூட அவர்களுடைய பிரபுக்களையெல்லாம் கொன்றுபோடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 4 மேலும்: யூதாவின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்கள் ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் கர்த்தருடைய வேதத்தை வெறுத்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், தங்கள் பிதாக்கள் பின்பற்றின பொய்களினால் மோசம்போனார்களே. 5 யூதாவிலே நான் தீக்கொளுத்துவேன்; அது எருசலேமின் அரமனைகளைப் பட்சிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். 6 மேலும்: இஸ்ரவேலின் மூன்று பாதகங்களினிமித்தமும், நாலு பாதகங்களினிமித்தமும், நான் அவர்களுடைய ஆக்கினையைத் திருப்பமாட்டேன்; அவர்கள் நீதிமானைப் பணத்துக்கும், எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப்போட்டார்களே. 7 அவர்கள் தரித்திரருடைய தலையின்மேல் மண்ணைவாரி இறைத்து, சிறுமையானவர்களின் வழியைப் புரட்டுகிறார்கள்; என் பரிசுத்த நாமத்தைக் குலைச்சலாக்கும்படிக்கு மகனும் தகப்பனும் ஒரு பெண்ணிடத்தில் பிரவேசிக்கிறார்கள். 8 அவர்கள் சகல பீடங்களருகிலும் அடைமானமாய் வாங்கின வஸ்திரங்களின்மேல் படுத்துக்கொண்டு, தெண்டம் பிடிக்கப்பட்டவர்களுடைய மதுபானத்தைத் தங்கள் தேவர்களின் கோவிலிலே குடிக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 9 நானோ: கேதுருமரங்களைப்போல் உயரமும், கர்வாலி மரங்களைப்போல் வைரமுமாயிருந்த எமோரியனை அவர்களுக்கு முன்பாக அழித்தேன்; உயர இருந்த அவனுடைய கனியையும், தாழ இருந்த அவனுடைய வேர்களையும் அழித்துப்போட்டு, 10 நீங்கள் எமோரியனுடைய தேசத்தைக் கட்டிக்கொள்ளும்படிக்கு உங்களை நான் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி, உங்களை நாற்பது வருஷமாக வனாந்தரத்திலே வழிநடத்தி, 11 உங்கள் குமாரரில் சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், உங்கள் வாலிபரில் சிலரை நசரேயராகவும் எழும்பப்பண்ணினேன்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படி நான் செய்யவில்லையா என்று கர்த்தர் கேட்கிறார். 12 நீங்களோ நசரேயருக்குத் திராட்சரசம் குடிக்கக் கொடுத்து, தீர்க்கதரிசிகளை நோக்கி: நீங்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டாம் என்று கற்பித்தீர்கள். 13 இதோ, கோதுமைக்கட்டுகள் நிறைபாரமாக ஏற்றப்பட்ட வண்டியில் இருத்துகிறதுபோல, நான் உங்களை நீங்கள் இருக்கிற ஸ்தலத்தில் இருத்துவேன். 14 அப்பொழுது வேகமானவன் ஓடியும் புகலிடமில்லை; பலவான் தன் பலத்தினால் பலப்படுவதுமில்லை; பராக்கிரமசாலி தன் பிராணனைத் தப்புவிப்பதுமில்லை. 15 வில்லைப் பிடிக்கிறவன் நிற்பதுமில்லை; வேகமானவன் தன் கால்களால் தப்பிப்போவதுமில்லை; குதிரையின்மேல் ஏறுகிறவன் தன் பிராணனை இரட்சிப்பதுமில்லை. 16 பலசாலிகளுக்குள்ளே தைரியவான் அந்நாளிலே நிர்வாணியாய் ஓடிப்போவான் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 3

1 இஸ்ரவேல் புத்திரரே, கர்த்தராகிய நான் எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின முழுக்குடும்பமாகிய உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லிய இந்த வசனத்தைக் கேளுங்கள். 2 பூமியின் எல்லா வம்சங்களுக்குள்ளும் உங்களைமாத்திரம் அறிந்துகொண்டேன்; ஆகையால் உங்களுடைய எல்லா அக்கிரமங்களினிமித்தமும் உங்களைத் தண்டிப்பேன். 3 இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ? 4 தனக்கு இரை அகப்படாமலிருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ? இரைபிடியாமல் இருக்கும்போது பாலசிங்கம் தன் கெபியிலிருந்து சத்தமிடுமோ? 5 குருவிக்குத் தரையிலே சுருக்குப் போடப்படாதிருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ? ஒன்றும் படாதிருக்கையில், கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ? 6 ஊரில் எக்காளம் ஊதினால், ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ? 7 கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார். 8 சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்? 9 நீங்கள் சமாரியாவின் பர்வதங்களில் வந்து கூடி, அதின் நடுவில் நடக்கிற பெரிய கலகங்களையும் அதற்குள் செய்யப்படுகிற இடுக்கண்களையும் பாருங்கள் என்று அஸ்தோத்தின் அரமனைகள்மேலும், எகிப்துதேசத்தின் அரமனைகள்மேலும் கூறுங்கள். 10 அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்கள் அரமனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 11 ஆகையால் சத்துரு வந்து, தேசத்தைச் சூழ்ந்துகொண்டு, உன் பெலத்தை உன்னிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவான்; அப்பொழுது உன் அரமனைகள் கொள்ளையிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 12 மேலும்: ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையாவது ஒரு காதின் துண்டையாவது சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிக்குமாப்போல, சமாரியாவில் குடியிருக்கிற இஸ்ரவேல் புத்திரர் ஒரு படுக்கையின் மூலையிலிருந்தும், ஒரு மஞ்சத்தின்மேலிருந்தும் தப்புவிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 13 நீங்கள் கேட்டு யாக்கோபு வம்சத்தாருக்குள்ளே சாட்சியாக அறிவிக்கவேண்டியது: சேனைகளின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், 14 நான் இஸ்ரவேலுடைய பாதகங்களினிமித்தம் அவனை விசாரிக்கும் நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டுண்டு தரையிலே விழும். 15 மாரிகாலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழிப்பேன்; அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 4

1 சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரரை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படிக் கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள். 2 இதோ, கர்த்தராகிய ஆண்டவர் உங்களைத் துறடுகளாலும், உங்கள் பின்சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் தம்முடைய பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார். 3 அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவனும் அரமனைக்குச் சுமந்துகொண்டுபோவதை எறிந்துவிட்டு, தனக்கு எதிரான திறப்புகளின் வழியாய்ப் புறப்பட்டுப்போவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 4 பெத்தேலுக்குப் போய்த் துரோகம் பண்ணுங்கள், கில்காலுக்கும் போய்த் துரோகத்தைப் பெருகப்பண்ணி, காலைதோறும் உங்கள் பலிகளையும், மூன்றாம் வருஷத்திலே உங்கள் தசமபாகங்களையும் செலுத்தி, 5 புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடே தூபங்காட்டி, உற்சாக பலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 6 ஆகையால் நான் உங்கள் பட்டணங்களில் எல்லாம் உங்கள் பல்லுகளுக்கு ஓய்வையும், உங்கள் ஸ்தலங்களில் எல்லாம் அப்பக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 7 இதுவுமல்லாமல், அறுப்புக்காலம் வர இன்னும் மூன்றுமாதம் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்து போயிற்று. 8 இரண்டு மூன்று பட்டணங்களின் மனுஷர் தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்துக்குப் போய் அலைந்தும் தாகந்தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 9 கருக்காயினாலும் விஷப்பனியினாலும் உங்களை தண்டித்தேன்; உங்கள் சோலைகளிலும் திராட்சத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 10 எகிப்திலே உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்கள் வாலிபரைப் பட்டயத்தாலே கொன்றேன்; உங்கள் குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்கள் பாளயங்களின் நாற்றத்தை உங்கள் நாசிகளிலும் ஏறப்பண்ணினேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 11 சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டது போல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் அக்கினியினின்று பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 12 ஆகையால் இஸ்ரவேலே, இந்தப்பிரகாரமாக உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிறபடியினால் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு. 13 அவர் பர்வதங்களை உருவாக்கினவரும், காற்றைச் சிருஷ்டித்தவரும், மனுஷனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

ஆமோஸ் 5

1 இஸ்ரவேல் வம்சத்தாரே, உங்களைக்குறித்து நான் புலம்பிச் சொல்லும் இந்த வசனத்தைக் கேளுங்கள். 2 இஸ்ரவேல் என்னும் கன்னிகை விழுந்தாள், அவள் இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டாள்; தன் தேசத்தில் விழுந்துகிடக்கிறாள், அவளை எடுப்பாரில்லை. 3 நகரத்திலிருந்து புறப்பட்ட ஆயிரம்பேரில் நூறுபேரும், நூறுபேரில் பத்துப்பேரும் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு மீந்திருப்பார்கள் என்று கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார். 4 கர்த்தர் இஸ்ரவேல் வம்சத்தாருக்குச் சொல்லுகிறது என்னவென்றால்: என்னைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள். 5 பெத்தேலைத் தேடாதேயுங்கள், கில்காலிலும் சேராதேயுங்கள், பெயெர்செபாவுக்கும் போகாதேயுங்கள்; ஏனென்றால் கில்கால் சிறையிருப்பாகவும், பெத்தேல் பாழான ஸ்தலமாகவும் போகும். 6 கர்த்தரைத் தேடுங்கள், அப்பொழுது பிழைப்பீர்கள்; இல்லாவிட்டால் பெத்தேலில் இருக்கிற ஒருவராலும் அவிக்கப்படாத அக்கினி யோசேப்பின் வீட்டில் பற்றி, அதைப் பட்சிக்கும். 7 நியாயத்தை எட்டியாக மாற்றி, நீதியைத் தரையிலே விழப்பண்ணுகிறவர்களே, அவரைத் தேடுங்கள். 8 அவர் அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரண இருளை விடியற்காலமாக மாற்றி, பகலை இராத்திரியாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம். 9 அரணான ஸ்தலத்தின்மேல் பாழ்க்கடிப்பு வரத்தக்கதாக, அவர் கொள்ளை கொடுத்தவனைப் பலத்தவனுக்கு விரோதமாய் லகுவடையப்பண்ணுகிறவர். 10 ஒலிமுகவாசலிலே கடிந்துகொள்ளுகிறவனை அவர்கள் பகைத்து, யதார்த்தமாய்ப் பேசுகிறவனை வெறுக்கிறார்கள். 11 நீங்கள் தரித்திரனை மிதித்து, அவன் கையிலே தானியத்தைச் சுமைசுமையாய் வாங்குகிறபடியினால், நீங்கள் பொளிந்த கற்களால் வீடுகளைக் கட்டினீர்கள், ஆனாலும் அவைகளில் நீங்கள் குடியிருப்பதில்லை; இன்பமான திராட்சத்தோட்டங்களை நாட்டினீர்கள், ஆனாலும் அவைகளின் இரசத்தை நீங்கள் குடிப்பதில்லை. 12 உங்கள் மீறுதல்கள் மிகுதியென்றும், உங்கள் பாவங்கள் பலத்ததென்றும் அறிவேன்; நீதிமானை ஒடுக்கி, பரிதானம் வாங்கி, ஒலிமுகவாசலில் ஏழைகளின் நியாயத்தைப் புரட்டுகிறீர்கள். 13 ஆகையால் புத்திமான் அந்தக் காலத்திலே மௌனமாயிருக்கவேண்டும்; அந்தக் காலம் தீமையான காலம். 14 நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்; அப்பொழுது நீங்கள் சொல்லுகிறபடியே சேனைகளின் தேவனாகிய கர்த்தர் உங்களோடே இருப்பார். 15 நீங்கள் தீமையை வெறுத்து, நன்மையை விரும்பி, ஒலிமுகவாசலில் நியாயத்தை நிலைப்படுத்துங்கள்; ஒருவேளை சேனைகளின் தேவனாகிய கர்த்தர் யோசேப்பிலே மீதியானவர்களுக்கு இரங்குவார். 16 ஆதலால் ஆண்டவரும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: எல்லாத்தெருக்களிலும் புலம்பல் உண்டாகும்; எல்லா வீதிகளிலும் ஐயோ! ஐயோ! என்று ஓலமிடுவார்கள்; பயிரிடுகிறவர்களைத் துக்கங்கொண்டாடுகிறதற்கும், ஒப்பாரிபாட அறிந்தவர்களைப் புலம்புகிறதற்கும் வரவழைப்பார்கள். 17 எல்லாத் திராட்சத்தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும், நான் உன் நடுவே கடந்துபோவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 18 கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ! அதினால் உங்களுக்கு என்ன உண்டு? கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல் அந்தகாரமாயிருக்கும். 19 சிங்கத்துக்குத் தப்பினவனுக்குக் கரடி எதிர்ப்பட்டதுபோலவும், அல்லது வீட்டுக்குள்ளே வந்து சுவரின்மேல் தன் கையை வைத்தபோது பாம்பு அவனைக் கடித்ததுபோலவும் இருக்கும். 20 கர்த்தருடைய நாள் வெளிச்சமாயிராமல், இருளும் பிரகாசமற்ற அந்தகாரமுமாயிருக்குமல்லவோ? 21 உங்கள் பண்டிகைகளைப் பகைத்து வெறுக்கிறேன்; உங்கள் ஆசரிப்பு நாட்களில் எனக்குப் பிரியமில்லை. 22 உங்கள் தகனபலிகளையும் போஜனபலிகளையும் எனக்குப் படைத்தாலும் நான் அங்கீகரிக்கமாட்டேன்; கொழுமையான உங்கள் மிருகங்களின் ஸ்தோத்திரபலிகளையும் நான் நோக்கிப் பார்க்கமாட்டேன். 23 உன் பாட்டுகளின் இரைச்சலை என்னைவிட்டு அகற்று; உன் வீணைகளின் ஓசையை நான் கேட்கமாட்டேன். 24 நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது. 25 இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலே இருந்த நாற்பது வருஷம்வரையில் பலிகளையும் காணிக்கைகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ? 26 நீங்கள் உங்களுக்கு உண்டாக்கின மோளோகுடைய கூடாரத்தையும், உங்கள் தேவர்களின் நட்சத்திரராசியாகிய உங்கள் சொரூபங்களின் சப்பரத்தையும் சுமந்துகொண்டுவந்தீர்களே. 27 ஆகையால் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பாலே குடியோட்டுவேன் என்று சேனைகளுடைய தேவன் என்னும் நாமமுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 6

1 சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்களும் சமாரியாவின் பர்வதத்தை நம்பிக்கொண்டிருக்கிறவர்களும், ஜாதிகளின் தலைமையென்னப்பட்டு, இஸ்ரவேல் வம்சத்தார் தேடிவருகிறவர்களுமாகிய உங்களுக்கு ஐயோ! 2 நீங்கள் கல்னேமட்டும் சென்று, அவ்விடத்திலிருந்து ஆமாத் என்னும் பெரிய பட்டணத்துக்குப் போய், பெலிஸ்தருடைய காத்பட்டணத்துக்கு இறங்கி, அவைகள் இந்த ராஜ்யங்களைப்பார்க்கிலும் நல்லவைகளோ என்றும், அவைகளின் எல்லைகள் உங்கள் எல்லைகளைப்பார்க்கிலும் விஸ்தாரமானவைகளோ என்றும் பாருங்கள். 3 தீங்குநாள் தூரமென்றெண்ணிக் கொடுமையின் ஆசனம் கிட்டிவரும்படி செய்து, 4 தந்தக் கட்டில்களில் படுத்துக்கொண்டு, தங்கள் மஞ்சங்களின்மேல் சவுக்கியமாய்ச் சயனித்து, மந்தையிலுள்ள ஆட்டுக்குட்டிகளையும், மாட்டுத்தொழுவத்திலுள்ள கன்றுக்குட்டிகளையும் தின்று, 5 தம்புரை வாசித்துப் பாடி, தாவீதைப்போல் கீதவாத்தியங்களைத் தங்களுக்கு உண்டுபண்ணி, 6 பெரிய பாத்திரங்களில் மதுபானத்தைக் குடித்து, சிறந்த பரிமளதைலங்களைப் பூசிக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் யோசேப்புக்கு நேரிட்ட ஆபத்துக்குக் கவலைப்படாமற்போகிறார்கள். 7 ஆகையால் அவர்கள் சிறையிருப்புக்குப் போகிறவர்களின் முன்னணியிலே போவார்கள்; இப்படியே செல்வமாய்ச் சயனித்தவர்களின் விருந்துகொண்டாடல் நின்றுபோகும். 8 நான் யாக்கோபுடைய மேன்மையை வெறுத்து, அவனுடைய அரமனைகளைப் பகைக்கிறேன்; நான் நகரத்தையும் அதின் நிறைவையும் ஒப்புக்கொடுத்துவிடுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார் என்பதைச் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார். 9 ஒரு வீட்டிலே பத்துப்பேர் மீதியாயிருந்தாலும் அவர்கள் செத்துப்போவார்கள். 10 அவர்களுடைய இனத்தானாவது, பிரேதத்தைத் தகிக்கிறவனாவது எலும்புகளை வீட்டிலிருந்து வெளியே கொண்டுபோகும்படிக்கு, அவைகளை எடுத்து, வீட்டின் உட்புறத்திலே இருக்கிறவனை நோக்கி: உன்னிடத்தில் இன்னும் யாராயினும் உண்டோ என்று கேட்பான், அவன் இல்லையென்பான்; அப்பொழுது இவன்: நீ மௌனமாயிரு; கர்த்தருடைய நாமத்தைச் சொல்லலாகாது என்பான். 11 இதோ, கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார்; பெரிய வீட்டைத் திறப்புகள் உண்டாகவும், சிறிய வீட்டை வெடிப்புகள் உண்டாகவும் அடிப்பார். 12 கன்மலையின்மேல் குதிரைகள் ஓடுமோ? அங்கே ஒருவன் மாடுகளால் உழுவானோ? நியாயத்தை நஞ்சாகவும், நீதியின் கனியை எட்டியாகவும் மாற்றினீர்கள். 13 நாங்கள் எங்கள் பலத்தினாலே எங்களுக்குக் கொம்புகளை உண்டாக்கிக்கொள்ளவில்லையோ என்று சொல்லி, வீண்காரியத்தில் மகிழுகிறார்கள். 14 இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, நான் ஒரு ஜாதியை உங்களுக்கு விரோதமாக எழுப்புவேன்; அவர்கள் ஆமாத்துக்குள் பிரவேசிக்கிற வழிதொடங்கிச் சமனான நாட்டின் ஆறுமட்டாக உங்களை ஒடுக்குவார்கள் என்று சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

ஆமோஸ் 7

1 கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, ராஜாவினுடைய புல்லறுப்புக்குப்பின்பு இரண்டாம் கந்தாயத்துப் புல் முளைக்கத் தொடங்குகையில் அவர் வெட்டுக்கிளிகளை உண்டாக்கினார். 2 அவைகள் தேசத்தின் புல்லைத்தின்று தீர்ந்தபோது, நான்: கர்த்தராகிய ஆண்டவரே, மன்னித்தருளும்; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன். 3 கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார். 4 கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, அக்கினியாலே நியாயம் விசாரிப்பேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் ஏற்பட்டார்; அது மகா ஆழியைப் பட்சித்தது, அதில் ஒரு பங்கைப் பட்சித்துத் தீர்ந்தது. 5 அப்பொழுது நான்: கர்த்தராகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன். 6 கர்த்தர் அதற்கு மனஸ்தாபப்பட்டு, அப்படி ஆவதில்லை என்றார். 7 பின்பு அவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, தூக்குநூல் பிரமாணத்தினால் கட்டப்பட்ட ஒரு மதிலின்மேல் நின்றார்; அவர் கையில் தூக்குநூல் இருந்தது. 8 கர்த்தர் என்னை நோக்கி: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்றார்; தூக்குநூலைக் காண்கிறேன் என்றேன்; அப்பொழுது ஆண்டவர்: இதோ, இஸ்ரவேலென்னும் என் ஜனத்தின் நடுவே தூக்குநூலை விடுவேன்; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன். 9 ஈசாக்கின் மேடைகள் பாழும், இஸ்ரவேலின் பரிசுத்த ஸ்தலங்கள் அவாந்தரமுமாக்கப்படும்; நான் எரொபெயாம் வீட்டாருக்கு விரோதமாய்ப் பட்டயத்தோடே எழும்பிவருவேன் என்றார். 10 அப்பொழுது பெத்தேலில் ஆசாரியனான அமத்சியா இஸ்ரவேலின் ராஜாவாகிய எரொபெயாமுக்கு ஆள் அனுப்பி: ஆமோஸ் இஸ்ரவேல் வம்சத்தாரின் நடுவே உமக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணுகிறான்; தேசம் அவன் வார்த்தைகளையெல்லாம் சகிக்கமாட்டாது. 11 எரொபெயாம் பட்டயத்தினால் சாவான் என்றும், இஸ்ரவேல் தன் தேசத்திலிருந்து சிறைபிடித்துக் கொண்டுபோகப்படுவான் என்றும் ஆமோஸ் சொல்லுகிறான் என்று சொல்லச்சொன்னான். 12 அமத்சியா ஆமோசை நோக்கி: தரிசனம் பார்க்கிறவனே, போ; நீ யூதாதேசத்துக்கு ஓடிப்போ, அங்கே அப்பம் தின்று, அங்கே தீர்க்கதரிசனம் சொல்லு. 13 பெத்தேலிலே இனித் தீர்க்கதரிசனம் சொல்லாதே; அது ராஜாவின் பரிசுத்த ஸ்தலமும் ராஜ்யத்தின் அரமனையுமாயிருக்கிறது என்றான். 14 ஆமோஸ் அமத்சியாவுக்குப் பிரதியுத்தரமாக: நான் தீர்க்கதரிசியுமல்ல, தீர்க்கதரிசியின் புத்திரனுமல்ல; நான் மந்தை மேய்க்கிறவனும், காட்டத்திப்பழங்களைப் பொறுக்குகிறவனுமாயிருந்தேன். 15 ஆனால் மந்தையின் பின்னாலே போகிறபோது என்னைக் கர்த்தர் அழைத்து, நீ போய் என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு என்று கர்த்தர் உரைத்தார். 16 இப்போதும் நீ கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; இஸ்ரவேலுக்கு விரோதமாய்த் தீர்க்கதரிசனம் சொல்லாதே, ஈசாக்கின் வம்சத்தாருக்கு விரோதமாக ஒன்றையும் சொல்லாதே என்று சொல்லுகிறாயே. 17 இதினிமித்தம்: உன் பெண்ஜாதி நகரத்தில் வேசியாவாள்; உன் குமாரரும் உன் குமாரத்திகளும் பட்டயத்தால் விழுவார்கள்; உன் வயல் அளவுநூலால் பங்கிட்டுக்கொள்ளப்படும்; நீயோவெனில் அசுத்தமான தேசத்திலே செத்துப்போவாய்; இஸ்ரவேலும் தன் தேசத்திலிருந்து சிறைபிடிக்கப்பட்டுக் கொண்டுபோகப்படுவான் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

ஆமோஸ் 8

1 பின்பு கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் காண்பித்ததாவது: இதோ, பழுத்த பழங்களுள்ள ஒரு கூடை இருந்தது. 2 அவர்: ஆமோசே, நீ என்னத்தைக் காண்கிறாய் என்று கேட்டார்? பழுத்த பழங்களுள்ள ஒரு கூடையைக் காண்கிறேன் என்றேன். அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: என் ஜனமாகிய இஸ்ரவேலுக்கு முடிவுகாலம் வந்தது; இனி அவர்களை மன்னிக்கமாட்டேன். 3 அந்நாளிலே தேவாலயப்பாட்டுகள் அலறுதலாக மாறும்; எல்லா இடத்திலும் திரளான பிரேதங்கள் புலம்பலில்லாமல் எறிந்துவிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 4 தேசத்தில் சிறுமைப்பட்டவர்களை ஒழியப்பண்ண, எளியவர்களை விழுங்கி: 5 நாங்கள் மரக்காலைக் குறைத்து, சேக்கல் நிறையை அதிகமாக்கி, கள்ளத்தராசினால் வஞ்சித்து, தரித்திரரைப் பணத்துக்கும், எளியவர்களை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் கொள்ளும்படிக்கும், தானியத்தின் பதரை விற்கும்படிக்கும், 6 நாங்கள் தவசம் விற்கத்தக்கதாக மாதப்பிறப்பும், நாங்கள் தானியத்தின் பண்டசாலைகளைத் திறக்கத்தக்கதாக ஓய்வுநாளும் எப்போது முடியும் என்று சொல்லுகிறவர்களே, இதைக் கேளுங்கள். 7 அவர்கள் செய்கைகளையெல்லாம் நான் ஒருபோதும் மறப்பதில்லையென்று கர்த்தர் யாக்கோபுடைய மகிமையின்பேரில் ஆணையிட்டார். 8 இதினிமித்தம் தேசம் அதிரவும், அதின் குடிகள் எல்லாம் துக்கிக்கவும், எங்கும் நதிகளாய்ப் புரண்டோடவும், எகிப்தின் ஆற்றுவெள்ளத்தைப்போல் அடித்து, பெருவெள்ளமாகவும் வேண்டாமோ? 9 அந்நாளிலே நான் மத்தியானத்திலே சூரியனை அஸ்தமிக்கப்பண்ணி, பட்டப்பகலிலே தேசத்தை அந்தகாரப்படுத்தி, 10 உங்கள் பண்டிகைகளைத் துக்கிப்பாகவும், உங்கள் பாட்டுகளையெல்லாம் புலம்பலாகவும் மாறப்பண்ணி, சகல அரைகளிலும் இரட்டையும், சகல தலைகளிலும் மொட்டையையும் வருவித்து, அவர்களுடைய துக்கிப்பை ஒரே பிள்ளைக்காகத் துக்கிக்கிற துக்கிப்புக்குச் சமானமாக்கி, அவர்களுடைய முடிவைக் கசப்பான நாளாக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 11 இதோ, நான் தேசத்தின்மேல் பஞ்சத்தை அனுப்பும் நாட்கள் வரும்; ஆகாரக் குறைவினால் உண்டாகிய பஞ்சமல்ல, ஜலக்குறைவினால் உண்டாகிய தாகமுமல்ல, கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சத்தை அனுப்புவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். 12 அப்பொழுது அவர்கள் கர்த்தருடைய வசனத்தைத் தேட ஒரு சமுத்திரந்தொடங்கி மறு சமுத்திரமட்டும், வடதிசைதொடங்கிக் கீழ்த்திசைமட்டும் அலைந்து திரிந்தும் அதைக் கண்டடையாமற் போவார்கள். 13 அந்நாளிலே சௌந்தரியமுள்ள கன்னிகைகளும் வாலிபரும் தாகத்தினால் சோர்ந்துபோவார்கள். 14 தாணே! உன் தேவனுடைய ஜீவனைக்கொண்டும், பெயெர்செபா மார்க்கத்தின் தேவனுடைய ஜீவனைக்கொண்டும் என்று சொல்லி, சமாரியாவின் தோஷத்தின்மேல் ஆணையிடுகிறவர்கள் விழுவார்கள்; இனி ஒருபோதும் எழுந்திருக்கமாட்டார்கள் என்றார்.

ஆமோஸ் 9

1 ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல் நிலைகள் அசையும்படி போதிகையை அடித்து, அவைகளை அவர்கள் எல்லாருடைய தலையின்மேலும் விழ உடைத்துப்போடு; அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் பட்டயத்தினால் கொன்றுபோடுவேன்; அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை. 2 அவர்கள் பாதாளபரியந்தம் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என் கை அவ்விடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானபரியந்தம் ஏறினாலும், அவ்விடத்திலுமிருந்து அவர்களை இறங்கப்பண்ணுவேன்; 3 அவர்கள் கர்மேலின் கொடுமுடியிலே ஒளித்துக்கொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் சமுத்திரத்தின் ஆழத்திலே போய் என் கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன். 4 அவர்கள் தங்கள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவர்களைக் கொன்றுபோடப் பட்டயத்துக்கு நான் கட்டளையிட்டு, என் கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன். 5 சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தேசத்தைத் தொட, அது உருகிப்போம்; அப்பொழுது அதின் குடிகளெல்லாரும் புலம்புவார்கள்; எங்கும் நதியாய்ப் புரண்டோடி, எகிப்தினுடைய ஆற்று வெள்ளத்தைப்போல் வெள்ளமாகும். 6 அவர் வானத்தில் தமது மேலறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழறைகளை அஸ்திபாரப்படுத்தி, சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம். 7 இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்துதேசத்திலிருந்தும், பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ? 8 இதோ, கர்த்தராகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ்யத்துக்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது; அதைப் பூமியின்மேல் இராதபடிக்கு அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 9 இதோ, ஜல்லடையினால் சலித்தரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமைமணியும் தரையிலே விழுவதில்லை. 10 தீங்கு எங்களை அணுகுவதுமில்லை, எங்களுக்கு நேரிடுவதுமில்லையென்று என் ஜனத்தில் சொல்லுகிற பாவிகளெல்லாரும் பட்டயத்தினால் சாவார்கள். 11 ஏதோமில் மீதியானவர்களையும், என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக்கொள்ளும்படிக்கு, 12 அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார். 13 இதோ, உழுகிறவன் அறுக்கிறவனையும், திராட்சப்பழங்களை ஆலையாடுகிறவன் விதைக்கிறவனையும் தொடர்ந்துபிடித்து, பர்வதங்கள் திராட்சரசமாய் வடிகிறதும், மேடுகளெல்லாம் கரைகிறதுமான நாட்கள் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார். 14 என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள். 15 அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

ஒபதியா 1

1 ஒபதியாவின் தரிசனம்; கர்த்தராகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்துச் சொல்லுகிறது என்னவென்றால்: எழும்புங்கள், அதற்கு விரோதமாக யுத்தம்பண்ண எழும்புவோம் வாருங்கள் என்று அறிவிக்க ஸ்தானாபதி ஜாதிகளிடத்தில் அனுப்பப்படும் செய்தியைக் கர்த்தர் சொல்லக்கேட்டோம். 2 இதோ, நான் உன்னை ஜாதிகளில் சிறுகப்பண்ணினேன்; நீ மெத்தவும் அசட்டைபண்ணப்பட்டிருக்கிறாய். 3 கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது. 4 நீ கழுகைப்போல உயரப்போனாலும், நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 5 நீ எவ்வளவாய்ச் சங்கரிப்பட்டுப்போனாய்! திருடராகிலும் இராத்திரியில் கொள்ளையடிக்கிறவர்களாகிலும் உன்னிடத்தில் வந்தால், தங்களுக்குப் போதுமானமட்டும் திருடுவார்கள் அல்லவோ? திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால், சில பழங்களை விட்டுவிடுவார்கள் அல்லவோ? 6 ஏசாவினுடையவைகள் எவ்வளவாய்த் தேடிப்பார்க்கப்பட்டது; அவனுடைய அந்தரங்கப் பொக்கிஷங்கள் எவ்வளவாய் ஆராய்ந்தெடுத்துக் கொள்ளப்பட்டது. 7 உன்னோடு உடன்படிக்கை செய்த எல்லா மனுஷரும் உன்னை எல்லைமட்டும் துரத்திவிட்டார்கள்; உன்னோடு சமாதானமாயிருந்த மனுஷர் உன்னை மோசம்போக்கி, உன்னை மேற்கொண்டார்கள்; உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள். அவனுக்கு உணர்வில்லை. 8 அந்நாளில் அல்லவோ நான் ஏதோமிலுள்ள ஞானிகளையும், ஏசாவின் பர்வதத்திலுள்ள புத்திமான்களையும் அழிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 9 தேமானே, ஏசாவின் பர்வதத்திலுள்ள மனுஷர் யாவரும் கொலையினால் சங்கரிக்கப்படும்படி உன் பராக்கிரமசாலிகள் கலங்குவார்கள். 10 நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையினிமித்தம் வெட்கம் உன்னை மூடும்; நீ முற்றிலும் சங்கரிக்கப்பட்டுப்போவாய். 11 நீ எதிர்த்துநின்ற நாளிலும், அந்நியர் அவன் சேனையைச் சிறைபிடித்துப்போன நாளிலும், மறுதேசத்தார் அவன் வாசல்களுக்குள் பிரவேசித்து எருசலேமின்பேரில் சீட்டுப்போட்ட காலத்தில், நீயும் அவர்களில் ஒருவனைப்போல் இருந்தாய். 12 உன் சகோதரன் அந்நியர்வசமான நாளாகிய அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பாராமலும், யூதா புத்திரருடைய அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும், அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே நீ பெருமையாய்ப் பேசாமலும் இருக்க வேண்டியதாயிருந்தது. 13 என் ஜனத்தின் ஆபத்துநாளிலே நீ அவர்கள் வாசல்களுக்குள் பிரவேசியாமலும், அவர்கள் ஆபத்துநாளிலே அவர்கள் அநுபவிக்கிற தீங்கை நீ பிரியத்தோடே பாராமலும், அவர்கள் ஆபத்துநாளிலே அவர்கள் ஆஸ்தியில் கைபோடாமலும், 14 அவர்களில் தப்பினவர்களைச் சங்கரிக்கும்படி வழிச்சந்திகளிலே நிற்காமலும், இக்கட்டு நாளில் அவர்களில் மீதியானவர்களைக் காட்டிக்கொடாமலும் இருக்கவேண்டியதாயிருந்தது. 15 எல்லா ஜாதிகளுக்கும் விரோதமான நாளாகிய கர்த்தருடைய நாள் சமீபமாய் வந்திருக்கிறது; நீ செய்தபடியே உனக்கும் செய்யப்படும்; உன் செய்கையின் பலன் உன் தலையின்மேல் திரும்பும். 16 நீங்கள் என் பரிசுத்த பர்வதத்தின்மேல் மதுபானம்பண்ணினபடியே எல்லா ஜாதிகளும் எப்பொழுதும் மதுபானம்பண்ணுவார்கள்; அவர்கள் குடித்து விழுங்குவார்கள், இராதவர்களைப்போல் இருப்பார்கள். 17 ஆனாலும் சீயோன் பர்வதத்திலே தப்பியிருப்பார் உண்டு, அவர்கள் பரிசுத்தமாயிருப்பார்கள்; யாக்கோபின் வம்சத்தார் தங்களுடைய சுதந்தரங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். 18 யாக்கோபு வம்சத்தார் அக்கினியும், யோசேப்பு வம்சத்தார் அக்கினிஜுவாலையுமாயிருப்பார்கள்; ஏசா வம்சத்தாரோ வைக்கோல் துரும்பாயிருப்பார்கள்; அவர்கள் இவர்களைக் கொளுத்தி, ஏசாவின் வம்சத்தில் மீதியிராதபடி இவர்களைப் பட்சிப்பார்கள்; கர்த்தர் இதைச் சொன்னார். 19 தென்தேசத்தார் ஏசாவின் மலையையும், சமனான தேசத்தார் பெலிஸ்தரின் தேசத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்; அவர்கள் எப்பிராயீமின் நாட்டையும், சமாரியாவின் நாட்டையும் சுதந்தரித்துக்கொள்வார்கள்; பென்யமீன் மனுஷர் கீலேயாத்தையும் சுதந்தரித்துக்கொள்வார்கள். 20 சர்பாத்மட்டும் கானானியருக்குள்ளே சிறைப்பட்டுப்போன இஸ்ரவேல் புத்திரராகிய இந்தச் சேனையும், சேப்பாராத்தில் சிறைப்பட்டுப்போன எருசலேம் நகரத்தாரும் தென்திசைப் பட்டணங்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள். 21 ஏசாவின் பர்வதத்தை நியாயந்தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன் பர்வதத்தில் வந்தேறுவார்கள்; அப்பொழுது ராஜ்யம் கர்த்தருடையதாய் இருக்கும்.

யோனா 1

1 அமித்தாயின் குமாரனாகிய யோனாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்: 2 நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார். 3 அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய், தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலி கொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீசுக்குப் போகக் கப்பல் ஏறினான். 4 கர்த்தர் சமுத்திரத்தின்மேல் பெருங்காற்றை வரவிட்டார்; அதினால் கடலிலே கப்பல் உடையுமென்று நினைக்கத்தக்க பெரிய கொந்தளிப்பு உண்டாயிற்று. 5 அப்பொழுது கப்பற்காரர் பயந்து, அவனவன் தன்தன் தேவனை நோக்கி வேண்டுதல்செய்து, பாரத்தை லேசாக்கும்படிக் கப்பலில் இருந்த சரக்குகளைச் சமுத்திரத்தில் எறிந்துவிட்டார்கள்; யோனாவோவென்றால் கப்பலின் கீழ்த்தட்டில் இறங்கிபோய்ப் படுத்துக்கொண்டு, அயர்ந்த நித்திரைபண்ணினான். 6 அப்பொழுது மாலுமி அவனிடத்தில் வந்து: நீ நித்திரைபண்ணுகிறது என்ன? எழுந்திருந்து உன் தேவனை நோக்கி வேண்டிக்கொள்; நாம் அழிந்துபோகாதபடிக்குச் சுவாமி ஒருவேளை நம்மை நினைத்தருளுவார் என்றான். 7 அவர்கள் யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நாம் அறியும்படிக்குச் சீட்டுப்போடுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு சீட்டுப்போட்டார்கள்; யோனாவின் பேருக்குச் சீட்டு விழுந்தது. 8 அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: யார்நிமித்தம் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டதென்று நீ எங்களுக்குச் சொல்லவேண்டும்; உன் தொழிலென்ன? நீ எங்கேயிருந்து வருகிறாய்? உன் தேசம் எது? நீ என்ன ஜாதியான் என்று கேட்டார்கள். 9 அதற்கு அவன்: நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன் என்றான். 10 அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனுஷர் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள். 11 பின்னும் சமுத்திரம் அதிகமாய்க் கொந்தளித்துக்கொண்டிருந்தபடியால், அவர்கள் அவனை நோக்கி: சமுத்திரம் நமக்கு அமரும்படி நாங்கள் உனக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். 12 அதற்கு அவன்: நீங்கள் என்னை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிடுங்கள்; அப்பொழுது சமுத்திரம் உங்களுக்கு அமர்ந்திருக்கும்; என்னிமித்தம் இந்தப் பெரிய கொந்தளிப்பு உங்கள்மேல் வந்ததென்பதை நான் அறிவேன் என்றான். 13 அந்த மனுஷர் கரைசேரும்படி வேகமாய்த் தண்டுவலித்தார்கள்; ஆனாலும் சமுத்திரம் வெகு மும்முரமாய்க் கொந்தளித்துக்கொண்டேயிருந்தபடியால் அவர்களால் கூடாமற்போயிற்று. 14 அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: ஆ கர்த்தாவே, இந்த மனுஷனுடைய ஜீவனிமித்தம் எங்களை அழித்துப்போடாதேயும்; குற்றமில்லாத இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தாதேயும்; தேவரீர் கர்த்தர்; உமக்குச் சித்தமாயிருக்கிறபடி செய்கிறீர் என்று சொல்லி, 15 யோனாவை எடுத்துச் சமுத்திரத்திலே போட்டுவிட்டார்கள்; சமுத்திரம் தன் மும்முரத்தைவிட்டு அமர்ந்தது. 16 அப்பொழுது அந்த மனுஷர் கர்த்தருக்கு மிகவும் பயந்து, கர்த்தருக்குப் பலியிட்டுப் பொருத்தனைகளைப் பண்ணினார்கள். 17 யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான்.

யோனா 2

1 அந்த மீனின் வயிற்றிலிருந்து, யோனா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: 2 என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர். 3 சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது. 4 நான் உமது கண்களுக்கு எதிரே இராதபடிக்குத் தள்ளப்பட்டேன்; ஆகிலும் இன்னமும் உம்முடைய பரிசுத்த ஆலயத்தை நோக்குவேன் என்றேன். 5 தண்ணீர்கள் பிராணபரியந்தம் என்னை நெருக்கினது; ஆழி என்னைச் சூழ்ந்தது; கடற்பாசி என் தலையைச் சுற்றிக்கொண்டது. 6 பர்வதங்களின் அடிவாரங்கள் பரியந்தமும் இறங்கினேன்; பூமியின் தாழ்ப்பாள்கள் என்றென்றைக்கும் என்னை அடைக்கிறதாயிருந்தது; ஆனாலும் என் தேவனாகிய கர்த்தாவே, நீர் என் பிராணனை அழிவுக்குத் தப்புவித்தீர். 7 என் ஆத்துமா என்னில் தொய்ந்துபோகையில் கர்த்தரை நினைத்தேன்; அப்பொழுது என் விண்ணப்பம் உமது பரிசுத்த ஆலயத்திலே உம்மிடத்தில் வந்து சேர்ந்தது. 8 பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள். 9 நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடுவேன்; நான் பண்ணின பொருத்தனையைச் செலுத்துவேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான். 10 கர்த்தர் மீனுக்குக் கட்டளையிட்டார், அது யோனாவைக் கரையிலே கக்கிவிட்டது.

யோனா 3

1 இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்: 2 நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார். 3 யோனா எழுந்து, கர்த்தருடைய வார்த்தையின்படியே நினிவேக்குப் போனான்; நினிவே மூன்றுநாள் பிரயாண விஸ்தாரமான மகா பெரிய நகரமாயிருந்தது. 4 யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான். 5 அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள். 6 இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான். 7 மேலும் ராஜா, தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக, நினிவேயிலெங்கும் மனுஷரும் மிருகங்களும், மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும், 8 மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள். 9 யாருக்குத் தெரியும்; நாம் அழிந்து போகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான். 10 அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.

யோனா 4

1 யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபங்கொண்டு, 2 கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன். 3 இப்போதும் கர்த்தாவே, என் பிராணனை என்னைவிட்டு எடுத்துக்கொள்ளும்; நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான். 4 அதற்குக் கர்த்தர்: நீ எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார். 5 பின்பு யோனா நகரத்திலிருந்து புறப்பட்டு, நகரத்துக்குக் கிழக்கேபோய், அங்கே தனக்கு ஒரு குடிசையைப் போட்டு, நகரத்துக்குச் சம்பவிக்கப்போகிறதைத் தான் பார்க்குமட்டும் அதின் கீழ் நிழலில் உட்கார்ந்திருந்தான். 6 யோனாவுடைய தலையின்மேல் நிழலுண்டாயிருக்கவும், அவனை அவனுடைய மனமடிவுக்கு நீங்கலாக்கவும் தேவனாகிய கர்த்தர் ஒரு ஆமணக்குச் செடியை முளைக்கக் கட்டளையிட்டு, அதை அவன்மேல் ஓங்கி வளரப்பண்ணினார்; அந்த ஆமணக்கின்மேல் யோனா மிகவும் சந்தோஷப்பட்டான். 7 மறுநாளிலோ கிழக்கு வெளுக்கும் நேரத்தில் தேவன் ஒரு பூச்சியைக் கட்டளையிட்டார்; அது ஆமணக்குச் செடியை அரித்துப்போட்டது; அதினால் அது காய்ந்துபோயிற்று. 8 சூரியன் உதித்தபோது தேவன் உஷ்ணமான கீழ்க்காற்றைக் கட்டளையிட்டார்; அப்பொழுது வெயில் யோனாவுடைய தலையில் படுகிறதினால் அவன் சோர்ந்துபோய், தனக்குள்ளே சாவை விரும்பி: நான் உயிரோடிருக்கிறதைப்பார்க்கிலும் சாகிறது நலமாயிருக்கும் என்றான். 9 அப்பொழுது தேவன் யோனாவை நோக்கி: நீ ஆமணக்கினிமித்தம் எரிச்சலாயிருக்கிறது நல்லதோ என்றார்; அதற்கு அவன்: நான் மரணபரியந்தமும் எரிச்சலாயிருக்கிறது நல்லதுதான் என்றான். 10 அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே. 11 வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.

மீகா 1

1 யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்னும் யூதா ராஜாக்களுடைய நாட்களில், மொரேசா ஊரானாகிய மீகாவுக்கு உண்டானதும், அவன் சமாரியாவுக்கும் எருசலேமுக்கும் விரோதமாய்த் தரிசித்ததுமான கர்த்தருடைய வார்த்தை. 2 சகல ஜனங்களே, கேளுங்கள்; பூமியே, அதிலுள்ளவைகளே, செவிகொடுங்கள்; கர்த்தராகிய ஆண்டவர், தம்முடைய பரிசுத்த ஆலயத்திலிருக்கிற ஆண்டவரே, உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருப்பார். 3 இதோ, கர்த்தர் தமது ஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வருகிறார்; அவர் இறங்கிப் பூமியின் உயர்ந்த இடங்களை மிதிப்பார். 4 மெழுகு அக்கினிக்கு முன்பாக உருகுகிறதுபோலவும், மலைகளிலிருந்து பாயுந் தண்ணீர் தரையைப் பிளக்கிறதுபோலவும், பர்வதங்கள் அவர் கீழே உருகி, பள்ளத்தாக்குகள் பிளந்துபோகும். 5 இது எல்லாம் யாக்கோபுடைய மீறுதலினிமித்தமும், இஸ்ரவேல் வம்சத்தாருடைய பாவங்களினிமித்தமும் சம்பவிக்கும்; யாக்கோபின் மீறுதலுக்குக் காரணமென்ன? சமாரியா அல்லவோ? யூதாவின் மேடைகளுக்குக் காரணமென்ன? எருசலேம் அல்லவோ? 6 ஆகையால் நான் சமாரியாவை வெளியான மண்மேடும், திராட்சச்செடி நடுகிற நிலமுமாக்கி, அதின் கற்களைப் பள்ளத்தாக்கிலே புரண்டு விழப்பண்ணி, அதின் அஸ்திபாரங்களைத் திறந்துவைப்பேன். 7 அதின் சுரூபங்கள் எல்லாம் நொறுக்கப்படும்; அதின் பணையங்கள் எல்லாம் அக்கினியால் எரித்துப்போடப்படும்; அதின் விக்கிரகங்களை எல்லாம் பாழாக்குவேன்; வேசிப்பணையத்தினால் சேர்க்கப்பட்டது, திரும்ப வேசிப்பணையமாய்ப் போகும். 8 இதினிமித்தம் நான் புலம்பி அலறுவேன்; பறிகொடுத்தவனாகவும் அம்மணமாகவும் நடப்பேன்; நான் ஓரிகளைப்போல ஊளையிட்டு, ஆந்தைகளைப்போல அலறுவேன். 9 அதின் காயம் ஆறாதது; அது யூதாமட்டும் வந்தது; என் ஜனத்தின் வாசலாகிய எருசலேம்மட்டும் வந்தெட்டினது. 10 அதைக் காத்பட்டணத்திலே அறிவியாதேயுங்கள், அழவே வேண்டாம்; பெத்அப்ராவிலே புழுதியில் புரளு. 11 சாப்பீரில் குடியிருக்கிறவளே, வெட்கத்துடன் அம்மணமாய் அப்பாலே போ; சாயனானில் குடியிருக்கிறவள் வெளியே வருவதில்லை; பெத்ஏசேலின் புலம்பல் உங்களுக்கு அடைக்கலமாயிராது. 12 மாரோத்தில் குடியிருக்கிறவள் நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள்; ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து எருசலேமின் வாசல்வரைக்கும் வந்தது. 13 லாகீசில் குடியிருக்கிறவளே, வேகமான குதிரைகளை இரதத்திலே பூட்டு; நீயே சீயோன் குமாரத்தியின் பாவத்துக்குக் காரணி; உன்னிடத்தில் இஸ்ரவேலின் பாதகங்கள் காணப்பட்டது. 14 ஆகையால் மோர்ஷேத்காத்தினிடத்தில் உனக்கு இருக்கிறதைக் கொடுத்துவிடுவாய்; அக்சீபின் வீடுகள் இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு அபத்தமாய்ப்போகும். 15 மரேஷாவில் குடியிருக்கிறவளே, உனக்கு இன்னும் ஒரு சுதந்தரவாளியை வரப்பண்ணுவேன்; அவன் இஸ்ரவேலின் மகிமையாகிய அதுல்லாம்மட்டும் வருவான். 16 உனக்கு அருமையான உன் பிள்ளைகளினிமித்தம் நீ உன் தலையைச் சிரைத்து மொட்டையிட்டுக்கொள்; கழுகைப்போல முழுமொட்டையாயிரு, அவர்கள் உன்னைவிட்டுச் சிறைப்பட்டுப்போகிறார்கள்.

மீகா 2

1 அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்பு செய்ய எத்தனம்பண்ணித் தங்கள் கையில் வல்லமை இருக்கிறபடியினால், விடியற்காலமாகிறபோது அதை நடப்பித்து, 2 வயல்களை இச்சித்துப் பறித்துக்கொண்டு, வீடுகளை இச்சித்து எடுத்துக்கொண்டு, புருஷனையும் அவன் வீட்டையும், மனுஷனையும் அவன் சுதந்தரத்தையும் ஒடுக்குகிறவர்களுக்கு ஐயோ! 3 ஆகையால் கர்த்தர்: நான் இந்த வம்சத்தாருக்கு விரோதமாய்த் தீமையை வருவிக்க நினைக்கிறேன்; அதினின்று நீங்கள் கழுத்தை நீக்கமாட்டீர்கள்; நீங்கள் மேட்டிமையாய் நடப்பதில்லை; அது தீமையான காலம். 4 அந்நாளில் உங்கள்பேரில் ஒப்புச்சொல்லி, நாம் முற்றிலும் பாழானோம்; நமது ஜனத்தின் சுதந்தரத்தை மாற்றிப்போட்டார்; என்னமாய் அதை என்னைவிட்டு நீக்கிப்போட்டார்! நமது வயல்களைப் பிடுங்கிப் பகிர்ந்துகொடுத்தாரே என்று துயரமான புலம்பலாய்ப் புலம்புவார்கள். 5 கர்த்தரின் சபையில் சுதந்தர வீதங்களை அளந்துகொடுக்கிறவர்கள் உனக்கு இல்லாதிருப்பார்கள். 6 தீர்க்கதரிசனஞ் சொல்லாதிருப்பீர்களாக என்கிறார்கள்; அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள், இந்தப்பிரகாரமாய் அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லாவிட்டால் நிந்தை நீங்காதே. 7 யாக்கோபு வம்சம் என்று பேர்பெற்றவர்களே, கர்த்தரின் ஆவி குறுகியிருக்கிறதோ? அவருடைய கிரியைகள் இவைகள்தானோ? செம்மையாய் நடக்கிறவனுக்கு என் வார்த்தைகள் நன்மை செய்யாதோ? 8 என் ஜனங்கள் பூர்வமுதல் சத்துருவைப்போல் எழும்பினார்கள். யுத்தத்திலிருந்து திரும்பிவந்து வழியில் அஞ்சாமல் கடந்துபோகிறவர்களுடைய மேலங்கியையும் வஸ்திரத்தையும் உரிந்துகொண்டீர்கள். 9 என் ஜனத்தின் ஸ்திரீகளை அவர்களுடைய சௌக்கியமான வீடுகளிலிருந்து துரத்திவிட்டீர்கள்; அவர்களுடைய குழந்தைகளுக்கு இருந்த என் அலங்காரத்தை என்றைக்கும் இல்லாதபடிக்குப் பறித்துக்கொண்டீர்கள். 10 எழுந்திருந்து போங்கள்; இது நீங்கள் இளைப்பாறும் இடம் அல்ல, இது தீட்டுப்பட்டது, இது உங்களை நாசப்படுத்தும், அந்த நாசம் மிகவும் கொடியதாயிருக்கும். 11 மனம்போகிற போக்கின்படிபோய், அபத்தமானதை உரைக்கிற ஒருவன், திராட்சரசத்தையும் மதுபானத்தையுங்குறித்து நான் உனக்குப் பிரசங்கிப்பேனென்றால், அவனே இந்த ஜனத்திற்கு ஏற்ற பிரசங்கியாயிருப்பான். 12 யாக்கோபின் ஜனங்களே, உங்களெல்லாரையும் நான் நிச்சயமாய்க் கூட்டுவேன், இஸ்ரவேலில் மீதியானவர்களை நிச்சயமாய்ச் சேர்ப்பேன்; போஸ்றாவின் ஆடுகளைப்போல் அவர்களை ஏகக்கூட்டமாக்குவேன்; தன் தொழுவத்துக்குள்ளே சேர்ந்த மந்தைக்குச் சமானமாய் ஜனத்திரளினாலே இரைச்சல் உண்டாகும். 13 தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார்; அவர்கள் தடைகளை நீக்கி, வாசலால் உட்பிரவேசித்துக் கடந்துபோவார்கள்; அவர்கள் ராஜா அவர்களுக்கு முன்பாகப் போவார், கர்த்தர் அவர்கள் முன்னணியில் நடந்துபோவார்.

மீகா 3

1 நான் சொன்னது: யாக்கோபின் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, நியாயம் இன்னதென்று அறிவது உங்களுக்கு அல்லவோ அடுத்தது. 2 ஆனாலும் நன்மையை வெறுத்து, தீமையை விரும்பி, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலையும் அவர்கள் எலும்புகள்மேல் இருக்கிற அவர்களுடைய சதையையும் பிடுங்கி, 3 என் ஜனத்தின் சதையைத் தின்று, அவர்கள்மேல் இருக்கிற அவர்களுடைய தோலை உரிந்துகொண்டு, அவர்கள் எலும்புகளை முறித்து, பானையிலே போடும்வண்ணமாகவும் இறைச்சியைக் கொப்பரைக்குள்ளே போடும்வண்ணமாகவும் அவைகளைத் துண்டிக்கிறார்கள். 4 அப்பொழுது அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவார்கள்; ஆனாலும் அவர்கள் தங்கள் கிரியைகளில் பொல்லாதவர்களானபடியினால், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு கொடாமல், தமது முகத்தை அக்காலத்திலே அவர்களுக்கு மறைத்துக்கொள்ளுவார். 5 தங்கள் பற்களினால் கடிக்கிறவர்களாயிருந்து, சமாதானமென்று சொல்லி, தங்கள் வாய்க்கு உணவைக் கொடாதவனுக்கு விரோதமாகச் சண்டைக்கு ஆயத்தம்பண்ணி, என் ஜனத்தை மோசம்போக்குகிற தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாய்க் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: 6 தரிசனங்காணக்கூடாத இராத்திரியும், குறிசொல்லக்கூடாத அந்தகாரமும் உங்களுக்கு வரும்; தீர்க்கதரிசிகளின்மேல் சூரியன் அஸ்தமித்து, அவர்கள்மேல் பகல் காரிருளாய்ப் போகும். 7 தரிசனம் பார்க்கிறவர்கள் வெட்கி, குறிசொல்லுகிறவர்கள் நாணி, உத்தரவுகொடுக்கிற தேவன் இல்லாததினால் அவர்கள் எல்லாரும் தங்கள் வாயை மூடுவார்கள். 8 நானோ, யாக்கோபுக்கு அவன் மீறுதலையும், இஸ்ரவேலுக்கு அவன் பாவத்தையும் அறிவிக்கும்படி, கர்த்தருடைய ஆவி அருளிய பலத்தினாலும், நியாயத்தினாலும், பராக்கிரமத்தினாலும் நிரப்பப்பட்டிருக்கிறேன். 9 நியாயத்தை அருவருத்து, செம்மையானவைகளையெல்லாம் கோணலாக்கி, 10 சீயோனை இரத்தப்பழியினாலும், எருசலேமை அநியாயத்தினாலும் கட்டுவிக்கிற யாக்கோபு வம்சத்துத் தலைவர்களே, இஸ்ரவேல் வம்சத்து அதிபதிகளே, இதைக் கேளுங்கள். 11 அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரைச் சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள். 12 ஆகையால் உங்கள்நிமித்தம் சீயோன் வயல்வெளியைப்போல உழப்பட்டு, எருசலேம் மண்மேடுகளாய்ப்போம், ஆலயத்தின் பர்வதம் காட்டு மேடுகளாய்ப்போம்.

மீகா 4

1 ஆனாலும், கடைசி நாட்களில் கர்த்தருடைய ஆலயமாகிய பர்வதம் பர்வதங்களின் கொடுமுடியில் ஸ்தாபிக்கப்பட்டு, மலைகளுக்கு மேலாய் உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா ஜாதிகளும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள். 2 திரளான ஜாதிகள் புறப்பட்டுவந்து: நாம் கர்த்தரின் பர்வதத்துக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்துக்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து கர்த்தரின் வசனமும் வெளிப்படும். 3 அவர் திரளான ஜனங்களுக்குள் நியாயந்தீர்த்து, தூரத்திலுள்ள பலத்த ஜாதிகளைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு ஜாதிக்கு விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை. 4 அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துவார் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய கர்த்தரின் வாய் இதைச் சொல்லிற்று. 5 சகல ஜனங்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம். 6 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் நொண்டியானவளைச் சேர்த்து, தள்ளுண்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு, 7 நொண்டியானவளை மீதியான ஜனமாகவும், தூரமாய்த் தள்ளுண்டுபோனவளைப் பலத்த ஜாதியாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் கர்த்தர் சீயோன் பர்வதத்திலே இதுமுதல் என்றென்றைக்கும் ராஜாவாயிருப்பார். 8 மந்தையின் துருக்கமே, சீயோன் குமாரத்தியின் அரணே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் எருசலேம் குமாரத்தியினிடத்தில் வரும். 9 இப்போதும் நீ சத்தமிட்டுக் கதறுவானேன்? ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ? உன் ஆலோசனைக்காரர் அழிந்துபோனார்களோ? பிரசவிக்கிற ஸ்திரீக்கு ஒத்த வேதனை உனக்கு உண்டாகும். 10 சீயோன் குமாரத்தியே, பிரசவ ஸ்திரீயைப்போல அம்பாயப்பட்டு வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி, பாபிலோன்வரைக்கும் போவாய், அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே கர்த்தர் உன்னை உன் சத்துருக்களின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார். 11 சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக ஜாதியார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள். 12 ஆனாலும் அவர்கள் கர்த்தருடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார். 13 சீயோன் குமாரத்தியே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக ஜனங்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும், அவர்களுடைய ஆஸ்தியைப் பூமிக்கெல்லாம் ஆண்டவராயிருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.

மீகா 5

1 சேனைகளையுடைய நகரமே, இப்போது தண்டுதண்டாகக் கூடிக்கொள்; நமக்கு விரோதமாக முற்றிக்கை போடப்படும்; இஸ்ரவேலுடைய நியாயாதிபதியைக் கோலினால் கன்னத்திலே அடிப்பார்கள். 2 எப்பிராத்தா என்னப்பட்ட பெத்லெகேமே, நீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள்ளே சிறியதாயிருந்தும், இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்; அவருடைய புறப்படுதல் அநாதிநாட்களாகிய பூர்வத்தினுடையது. 3 ஆனாலும் பிரசவிக்கிறவள் பிரசவிக்கிறமட்டும் அவர்களை ஒப்புக்கொடுப்பார்; அப்பொழுது அவருடைய சகோதரரில் மீதியானவர்கள் இஸ்ரவேல் புத்திரரோடுங்கூடத் திரும்புவார்கள். 4 அவர் நின்றுகொண்டு, கர்த்தருடைய பலத்தோடும் தம்முடைய தேவனாகிய கர்த்தருடைய நாமத்தின் மகத்துவத்தோடும் மேய்ப்பார்; ஆகையால் அவர்கள் நிலைத்திருப்பார்கள்; அவர் இனிப் பூமியின் எல்லைகள்பரியந்தமும் மகிமைப்படுவார். 5 இவரே சமாதான காரணர்; அசீரியன் நம்முடைய தேசத்திலே வரும்போதும், நம்முடைய அரண்மனைகளை மிதிக்கும்போதும், ஏழு மேய்ப்பரையும் மனுஷரில் எட்டு அதிபதிகளையும் அவனுக்கு விரோதமாக நிறுத்துவேன். 6 இவர்கள் அசீரியா தேசத்தையும், நிம்ரோதின் தேசத்தையும், அதினுடைய வாசல்களுக்கு உட்புறமாகப் பட்டயத்திற்கு இரையாக்குவார்கள்; அசீரியன் நம்முடைய தேசத்தில் வரும்போதும், நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார். 7 யாக்கோபிலே மீதியானவர்கள் கர்த்தராலே வருகிற பனியைப்போலவும், மனுஷனுக்குக் காத்திராமலும், மனுபுத்திரருக்குத் தாமதியாமலும், பூண்டுகள்மேல் வருகிற மழைகளைப்போலவும், அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள். 8 யாக்கோபிலே மீதியானவர்கள், சிங்கம் காட்டுமிருகங்களுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும், கடந்துபோய் மிதித்துத் தப்புவிப்பார் இல்லாமல் பீறிப்போடுகிற பாலசிங்கம் ஆட்டுமந்தைகளுக்குள்ளே இருக்கிறதற்குச் சமானமாகவும் ஜாதிகளுக்குள் அநேக ஜனங்களின் நடுவிலே இருப்பார்கள். 9 உன்னுடைய கை உன் விரோதிகளின்மேல் உயரும்; உன் சத்துருக்களெல்லாரும் சங்கரிக்கப்படுவார்கள். 10 அந்நாளிலே நான் உன் குதிரைகளை உன் நடுவில் இராதபடிக்குச் சங்கரித்து, உன் இரதங்களை அழித்து, 11 உன் தேசத்துப் பட்டணங்களைச் சங்கரித்து, உன் அரண்களையெல்லாம் நிர்மூலமாக்கி, 12 சூனிய வித்தைகள் உன் கையில் இராதபடிக்கு அகற்றுவேன்; நாள் பார்க்கிறவர்கள் உன்னிடத்தில் இல்லாமற்போவார்கள். 13 உன் சுரூபங்களையும் உன் சிலைகளையும் உன் நடுவில் இராதபடிக்கு நிர்மூலமாக்குவேன்; உன் கையின் கிரியையை நீ இனிப் பணிந்துகொள்ளாய். 14 நான் உன் விக்கிரகத்தோப்புகளை உன் நடுவில் இராதபடிக்குப் பிடுங்கி, உன் பட்டணங்களை அழித்து, 15 செவிகொடாத புறஜாதிகளிடத்திலே கோபத்தோடும் உக்கிரத்தோடும் நீதியைச் சரிக்கட்டுவேன் என்றார்.

மீகா 6

1 கர்த்தர் சொல்லுகிறதைக் கேளுங்கள்; நீ எழுந்து, பர்வதங்களுக்குமுன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தைக் கேட்கக்கடவது. 2 பர்வதங்களே, பூமியின் உறுதியான அஸ்திபாரங்களே, கர்த்தருடைய வழக்கைக் கேளுங்கள்; கர்த்தருக்கு அவர் ஜனத்தோடே வழக்கு இருக்கிறது; இஸ்ரவேலோடே அவர் வழக்காடுவார். 3 என் ஜனமே, நான் உனக்கு என்ன செய்தேன்? நான் எதினால் உன்னை விசனப்படுத்தினேன்? எனக்கு எதிரே உத்தரவு சொல். 4 நான் உன்னை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி, அடிமைத்தன வீட்டிலிருந்த உன்னை மீட்டுக்கொண்டு, மோசே ஆரோன் மீரியாம் என்பவர்களை உனக்கு முன்பாக அனுப்பினேன். 5 என் ஜனமே, மோவாபின் ராஜாவாகிய பாலாக் பண்ணின யோசனை இன்னதென்றும், பேயோரின் குமாரனான பிலேயாம் அவனுக்குப் பிரதியுத்தரமாகச் சொன்னது இன்னதென்றும், சித்தீம் தொடங்கி கில்கால்மட்டும் நடந்தது இன்னதென்றும், நீ கர்த்தருடைய நீதிகளை அறிந்துகொள்ளும்படி நினைத்துக்கொள். 6 என்னத்தைக்கொண்டு நான் கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வேன்? தகனபலிகளைக்கொண்டும், ஒரு வயது கன்றுக்குட்டிகளைக்கொண்டும் அவர் சந்நிதியில் வரவேண்டுமோ? 7 ஆயிரங்களான ஆட்டுக்கடாக்களின்பேரிலும், எண்ணெயாய் ஓடுகிற பதினாயிரங்களான ஆறுகளின்பேரிலும், கர்த்தர் பிரியமாயிருப்பாரோ? என் அக்கிரமத்தைப் போக்க என் முதற்பேறானவனையும், என் ஆத்துமாவின் பாவத்தைப் போக்க என் கர்ப்பக்கனியையும் கொடுக்கவேண்டுமோ? 8 மனுஷனே, நன்மை இன்னதென்று அவர் உனக்கு அறிவித்திருக்கிறார்; நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தைக் கர்த்தர் உன்னிடத்தில் கேட்கிறார். 9 கர்த்தருடைய சத்தம் நகரத்தை நோக்கிக் கூப்பிடுகிறது; ஞானமுள்ளவன் உம்முடைய நாமத்தை மதிப்பான்; மிலாற்றிற்கும் அதை நேமித்தவருக்கும் செவிகொடுங்கள். 10 துன்மார்க்கனுடைய வீட்டிலே துன்மார்க்கத்தினால் சம்பாதித்த பொக்கிஷங்களும், அருவருக்கப்படத்தக்க குறைந்த மரக்காலும் இன்னும் இருக்கிறதல்லவோ? 11 கள்ளத்தராசும் கள்ளப் படிக்கற்களுள்ள பையும் இருக்கும்போது, அவர்களைச் சுத்தமுள்ளவர்களென்று எண்ணுவேனோ? 12 அவர்களில் ஐசுவரியமுள்ளவர்கள் கொடுமையால் நிறைந்திருக்கிறார்கள்; அவர்களுக்குள் வாசமாயிருக்கிறவர்கள் பொய்பேசுகிறார்கள்; அவர்கள் வாயிலுள்ள நாவு கபடமுள்ளது. 13 ஆகையால் நான் உன் பாவங்களினிமித்தம் உன்னை அடித்துப் பாழாக்குகிறதினால் உன்னைப் பலட்சயமாக்குவேன். 14 நீ புசித்தும் திருப்தியடையாதிருப்பாய்; உனக்குள்ளே சோர்வுண்டாகும்; நீ பதனம் பண்ணியும் தப்புவிப்பதில்லை; நீ தப்புவிப்பதையும் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன். 15 நீ விதைத்தும் அறுக்காமற்போவாய்; நீ ஒலிவப்பழங்களையும் திராட்சப்பழங்களையும் ஆலையாடின போதிலும், எண்ணெய் பூசிக்கொள்வதுமில்லை, இரசம் குடிப்பதுமில்லை. 16 நான் உன்னைப் பாழாகவும் உன் குடிகளை ஈசலிட்டு நிந்திக்கிற நிந்தையாகவும் வைக்கும்படி, உம்ரியினுடைய கட்டளைகளும் ஆகாப் வீட்டாருடைய எல்லாச் செய்கைகளும் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்களுடைய ஆலோசனைகளிலே நடக்கிறீர்கள்; ஆகையால் என் ஜனத்தின் நிந்தையைச் சுமப்பீர்கள்.

மீகா 7

1 ஐயோ! உஷ்ணகாலத்துக் கனிகளைச் சேர்த்து, திராட்சப்பழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; புசிக்கிறதற்கு ஒரு திராட்சக்குலையும் என் ஆத்துமா இச்சித்த முதல் அறுப்பின் கனியும் இல்லை. 2 தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லாரும் இரத்தஞ்சிந்தப் பதிவிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான். 3 பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள். 4 அவர்களில் நல்லவன் முட்செடிக்கொத்தவன், செம்மையானவன் நெரிஞ்சிலைப்பார்க்கிலும் கடுங்கூர்மையானவன்; உன் காவற்காரர் அறிவித்த உன் தண்டனையின் நாள் வருகிறது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு. 5 சிநேகிதனை விசுவாசிக்கவேண்டாம், வழிகாட்டியை நம்பவேண்டாம்; உன் மடியிலே படுத்துக்கொள்ளுகிறவளுக்கு முன்பாக உன் வாயைத் திறவாமல் எச்சரிக்கையாயிரு. 6 மகன் தகப்பனைக் கனவீனப்படுத்துகிறான்; மகள் தன் தாய்க்கு விரோதமாகவும், மருமகள் தன் மாமிக்கு விரோதமாகவும் எழும்புகிறார்கள்; மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார்தானே. 7 நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன்; என் தேவன் என்னைக் கேட்டருளுவார். 8 என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார். 9 நான் கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன்; அவர் எனக்காக வழக்காடி என் நியாயத்தை விசாரிக்குமட்டும் அவருடைய கோபத்தைச் சுமப்பேன்; அவர் என்னை வெளிச்சத்திலே கொண்டுவருவார், அவருடைய நீதியைப் பார்ப்பேன். 10 உன் தேவனாகிய கர்த்தர் எங்கே என்று என்னோடே சொல்லுகிற என் சத்துருவானவள் அதைப் பார்க்கும்போது வெட்கம் அவளை மூடும்; என் கண்கள் அவளைக் காணும்; இனி வீதிகளின் சேற்றைப்போல மிதிக்கப்படுவாள். 11 உன் மதில்களை எடுப்பிக்கும் நாள் வருகிறது; அந்நாளிலே பிரமாணம் வெகுதூரம் பரவிப்போம். 12 அந்நாளிலே அசீரியாமுதல் எகிப்தின் பட்டணங்கள்வரைக்கும், எகிப்துமுதல் நதிவரைக்கும், ஒரு சமுத்திரமுதல் மறு சமுத்திரம்வரைக்கும், ஒரு பர்வதமுதல் மறு பர்வதம்வரைக்குமுள்ள ஜனங்கள் உன்னிடத்திற்கு வருவார்கள். 13 ஆனாலும் தன் குடிகளினிமித்தமும் அவர்கள் கிரியைகளுடைய பலன்களினிமித்தமும் தேசம் பாழாயிருக்கும். 14 கர்மேலின் நடுவிலே தனித்து வனவாசமாயிருக்கிற உமது சுதந்தரமான மந்தையாகிய உம்முடைய ஜனத்தை உமது கோலினால் மேய்த்தருளும்; பூர்வநாட்களில் மேய்ந்ததுபோலவே அவர்கள் பாசானிலும் கீலேயாத்திலும் மேய்வார்களாக. 15 நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன். 16 புறஜாதிகள் கண்டு தங்களுடைய எல்லாப் பராக்கிரமத்தையுங்குறித்து வெட்கப்படுவார்கள்; கையை வாயின்மேல் வைத்துக்கொள்வார்கள்; அவர்கள் காதுகள் செவிடாய்ப் போகும். 17 பாம்பைப்போல மண்ணை நக்குவார்கள்; பூமியின் ஊர்வனவற்றைப் போலத் தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுநடுங்கிப் புறப்படுவார்கள்; நமது தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திகிலோடே சேர்ந்து, உனக்குப் பயப்படுவார்கள். 18 தமது சுதந்தரத்தில் மீதியானவர்களுடைய அக்கிரமத்தைப் பொறுத்து, மீறுதலை மன்னிக்கிற தேவரீருக்கு ஒப்பான தேவன் யார்? அவர் கிருபைசெய்ய விரும்புகிறபடியால் அவர் என்றென்றைக்கும் கோபம் வையார். 19 அவர் திரும்ப நம்மேல் இரங்குவார்; நம்முடைய அக்கிரமங்களை அடக்கி, நம்முடைய பாவங்களையெல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டுவிடுவார். 20 தேவரீர் பூர்வநாட்கள்முதல் எங்கள் பிதாக்களுக்கு ஆணையிட்ட சத்தியத்தை யாக்கோபுக்கும், கிருபையை ஆபிரகாமுக்கும் கட்டளையிடுவீராக.

நாகூம் 1

1 நினிவேயின் பாரம். எல்கோசானாகிய நாகூமின் தரிசனப் புஸ்தகம். 2 கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர், அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர். 3 கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்தூளாயிருக்கிறது. 4 அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப்பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார்; பாசானும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும். 5 அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கரைந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் பூமியும் பூச்சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போம். 6 அவருடைய கோபத்துக்கு முன்பாக நிற்பவன் யார்? அவருடைய உக்கிரகோபத்திலே தரிப்பவன் யார்? அவருடைய எரிச்சல் அக்கினியைப்போல இறைக்கப்படுகிறது; அவராலே கன்மலைகள் பேர்க்கப்படும். 7 கர்த்தர் நல்லவர், இக்கட்டுநாளிலே அரணான கோட்டை; தம்மை நம்புகிறவர்களை அறிந்திருக்கிறார். 8 ஆனாலும் நினிவேயின் ஸ்தானத்தை, புரண்டுவருகிற வெள்ளத்தினால் சர்வசங்காரம்பண்ணுவார்; இருள் அவர் சத்துருக்களைப் பின்தொடரும். 9 நீங்கள் கர்த்தருக்கு விரோதமாகச் செய்ய நினைக்கிறதென்ன? அவர் சர்வசங்காரம்பண்ணுவார்; இடுக்கம் மறுபடியும் உண்டாகாது. 10 அவர்கள் சன்னபின்னலாயிருக்கிற முட்செடிகளுக்கு ஒப்பாயிருக்கையிலும், தங்கள் மதுபானத்தினால் வெறிகொண்டிருக்கையிலும், அவர்கள் முழுதும் காய்ந்துபோன செத்தையைப்போல எரிந்துபோவார்கள். 11 கர்த்தருக்கு விரோதமாகப் பொல்லாத நினைவுகொண்டிருக்கிற துராலோசனைக்காரன் ஒருவன் உன்னிடத்திலிருந்து புறப்பட்டான். 12 கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அவர்கள் சம்பூரணமடைந்து அநேகராயிருந்தாலும் அறுப்புண்டுபோவார்கள்; அவன் ஒழிந்துபோவான்; உன்னை நான் சிறுமைப்படுத்தினேன், இனி உன்னைச் சிறுமைப்படுத்தாதிருப்பேன். 13 இப்போதும் நான் உன்மேல் இருக்கிற அவன் நுகத்தை முறித்து, உன் கட்டுகளை அறுப்பேன். 14 உன்னைக்குறித்துக் கர்த்தர் கட்டளைகொடுத்திருக்கிறார்; இனி உன் பேருக்கு வித்துவிதைக்கப்படுவதில்லை; உன் தேவர்களின் கோவிலில் இருக்கிற வெட்டப்பட்ட விக்கிரகத்தையும், வார்க்கப்பட்ட விக்கிரகத்தையும் நான் நிர்மூலம்பண்ணுவேன்; நீ கனவீனனானபடியால் அதை உனக்குப் பிரேதக்குழியாக்குவேன். 15 இதோ, சமாதானத்தைக் கூறுகிற சுவிசேஷகனுடைய கால்கள் மலைகளின்மேல் வருகிறது; யூதாவே, உன் பண்டிகைகளை ஆசரி; உன் பொருத்தனைகளைச் செலுத்து; துஷ்டன் இனி உன் வழியாய்க் கடந்துவருவதில்லை, அவன் முழுவதும் சங்கரிக்கப்பட்டான்.

நாகூம் 2

1 சிதறடிக்கிறவன் உன் முகத்துக்கு முன்பாக வருகிறான்; அரணைக் காத்துக்கொள், வழியைக் காவல்பண்ணு, அரையைக் கெட்டியாய்க் கட்டிக்கொள், உன் பெலனை மிகவும் ஸ்திரப்படுத்து. 2 வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், கர்த்தர் யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரப்பண்ணுவது போல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரப்பண்ணுவார். 3 அவனுடைய பராக்கிரமசாலிகளின் கேடகம் இரத்தமயமாகும்; அவனுடைய யுத்தவீரர் இரத்தாம்பரந் தரித்துக்கொண்டிருக்கிறார்கள்; அவன் தன்னை ஆயத்தம்பண்ணும் நாளிலே இரதங்கள் ஜுவாலிக்கிற கட்கங்களை உடையதாயிருக்கும்; ஈட்டிகள் குலுங்கும். 4 இரதங்கள் தெருக்களில் கடகடவென்றோடி, வீதிகளில் இடசாரி வலசாரி வரும்; அவைகள் தீவட்டிகளைப்போல விளங்கி, மின்னல்களைப்போல வேகமாய்ப் பறக்கும். 5 அவன் தன் பிரபலஸ்தரை நினைவுகூருவான்; அவர்கள் தங்கள் நடைகளில் இடறி, அலங்கத்துக்கு விரைந்து ஓடுவார்கள்; மறைவிடம் ஆயத்தப்படுத்தப்படும். 6 ஆறுகளின் மதகுகள் திறக்கப்படும், அரமனை கரைந்துபோம். 7 அவன் சிறைப்பட்டுப்போகத் தீர்மானமாயிற்று; அவளுடைய தாதிமார்கள் தங்கள் மார்பிலே அடித்துக்கொண்டு, புறாக்களைப்போலச் சத்தமிட்டுக் கூடப்போவார்கள். 8 நினிவே பூர்வகாலமுதல் தண்ணீர்த் தடாகம்போல் இருந்தது; இப்போதோ அவர்கள் ஓடிப்போகிறார்கள்; நில்லுங்கள் நில்லுங்கள் என்றாலும், திரும்பிப்பார்க்கிறவன் இல்லை. 9 வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், பொன்னையும் கொள்ளையிடுங்கள்; சம்பத்துக்கு முடிவில்லை; இச்சிக்கப்படத்தக்க சகலவித பொருள்களும் இருக்கிறது. 10 அவள் வெறுமையும் வெளியும் பாழுமாவாள்; மனம் கரைந்துபோகிறது; முழங்கால்கள் தள்ளாடுகிறது; எல்லா இடுப்புகளிலும் மிகுந்த வேதனை உண்டு; எல்லாருடைய முகங்களும் கருகிப்போகிறது. 11 சிங்கங்களின் வாசஸ்தலம் எங்கே? பாலசிங்கம் இரைதின்கிற இடம் எங்கே? கிழச்சிங்கமாகிய சிங்கமும், சிங்கக்குட்டிகளும் பயப்படுத்துவாரில்லாமல் சஞ்சரிக்கிற ஸ்தானம் எங்கே? 12 சிங்கம் தன் குட்டிகளுக்குத் தேவையானதைப் பீறி, தன் பெண் சிங்கங்களுக்கு வேண்டியதைத் தொண்டையைப் பிடித்துக் கொன்று, இரைகளினால் தன் கெபிகளையும், பீறிப்போட்டவைகளினால் தன் தாபரங்களையும் நிரப்பிற்று. 13 இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, இரதங்களைப் புகையெழும்ப எரித்துப்போடுவேன்; பட்டயம் உன் பாலசிங்கங்களைப் பட்சிக்கும்; நீ இரைக்காகப் பிடிக்கும் வேட்டையைத் தேசத்தில் அற்றுப்போகப்பண்ணுவேன்; உன் ஸ்தானாபதிகளின் சத்தம் இனிக் கேட்கப்படுவதில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

நாகூம் 3

1 இரத்தப்பழிகளின் நகரத்திற்கு ஐயோ! அது வஞ்சகத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; கொள்ளை ஓயாமல் நடக்கிறது. 2 சவுக்குகளின் ஓசையும், உருளைகளின் அதிர்ச்சியும், குதிரைகளின் பாய்ச்சலும், இரதங்கள் கடகடவென்று ஓடுகிற சத்தமும், 3 வீரர் குதிரை ஏறுகிறதும், பட்டயங்கள் துலங்குகிறதும், ஈட்டிகள் மின்னுகிறதும், வெட்டுண்டவர்களின் திரளும், பிரேதங்களின் ஏராளமும் அங்கே உண்டாயிருக்கும்; பிணங்களுக்குத் தொகையில்லை; அவர்கள் பிணங்களில் இடறிவிழுகிறார்கள். 4 தன் வேசித்தனங்களினால் ஜாதிகளையும், தன் சூனியங்களினால் வம்சங்களையும் விற்கிற மகா சூனியக்காரியும் ரூபவதியுமாயிருக்கிற வேசியினுடைய திரளான வேசித்தனங்களினிமித்தம், 5 இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து உன் வஸ்திரத்து ஓரங்களை உன் முகமட்டும் தூக்கியெடுத்து, ஜாதிகளுக்கு உன் நிர்வாணத்தையும், ராஜ்யங்களுக்கு உன் மானத்தையும் தெரியப்பண்ணி, 6 உன்மேல் தீட்டானவைகளை எறிந்து, உன்னைக் கனவீனப்படுத்தி, உன்னை வேடிக்கையாக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 7 அப்பொழுது உன்னைக் காண்கிறவனெல்லாம் நினிவே பாழாய்ப்போயிற்று, அதற்காகப் புலம்புகிறவர் யார்? ஆறுதல் சொல்லுகிறவர்களை உனக்கு எங்கே தேடுவேனென்று சொல்லி, உன்னைவிட்டோடிப் போவான். 8 நதிகள் மத்தியிலிருந்த நோ அம்மோனைப்பார்க்கிலும் நீ சிரேஷ்டமோ? அதைச் சுற்றிலும் தண்ணீர் இருந்தது; சமுத்திரம் அதின் அரணும், சமுத்திரக்கால் அதின் மதிலுமாயிருந்தது. 9 எத்தியோப்பியாவும் எகிப்தும் எண்ணிறந்த சேனையால் அதற்குப் பெலனாக இருந்தது; பூத்தும் லூபீமும் அதற்குச் சகாயமாயிருந்தது. 10 ஆயினும் அவள் குடிவிலக்கப்பட்டுச் சிறையிருப்பிலே கொண்டுபோகப்பட்டாள்; அவள் குழந்தைகள் எல்லா வீதிகளின் முகனைகளிலும் மோதியடிக்கப்பட்டார்கள்; அவளுடைய கனவான்கள்பேரில் சீட்டுப் போட்டார்கள்; அவளுடைய பெரியவர்கள் எல்லாரும் சங்கிலிகளால் கட்டப்பட்டார்கள். 11 நீயும் வெறிகொண்டு ஒளித்துக்கொள்வாய்; நீயும் உன் சத்துருவுக்குத் தப்ப அரணான கோட்டையைத் தேடுவாய். 12 உன் அரண்களெல்லாம் முதல் பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப்போல் இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம் தின்கிறவன் வாயிலே விழும். 13 இதோ, உன் நடுவில் இருக்கிற ஜனங்கள் பேடிகள்; உன் தேசத்தின் வாசல்கள் உன் சத்துருவுக்குமுன் திறவுண்டுபோகும்; அக்கினி உன் தாழ்ப்பாள்களைப் பட்சிக்கும். 14 முற்றிகைக்குத் தண்ணீர் மொண்டு வை, உன் அரண்களைப் பலப்படுத்து; சேற்றிலே போய்க் களிமண்ணை மிதி, சூளையைக் கெட்டிப்படுத்து. 15 அங்கே அக்கினி உன்னைப் பட்சிக்கும், பட்டயம் உன்னைச் சங்கரிக்கும்; அது பச்சைக்கிளிகளைப்போல் உன்னைப் பட்சித்துப்போடும்; உன்னைப் பச்சைக்கிளிகளத்தனையாக்கிக்கொள், உன்னை வெட்டுக்கிளிகளத்தனையாக்கிக்கொள். 16 உன் வர்த்தகரை வானத்து நட்சத்திரங்களிலும் அதிகமாக்கினாய்; இந்தப் பச்சைக்கிளிகள் பரவிப் பறந்துபோகும். 17 உன் மகுடவர்த்தனர் வெட்டுக்கிளிகளுக்கும், உன் தளகர்த்தர் பெருங்கிளிகளுக்கும் சமானமாயிருக்கிறார்கள்; அவைகள் குளிர்ச்சியான நாளில் வேலிகளில் பாளையமிறங்கி, சூரியன் உதித்தமாத்திரத்தில் பறந்துபோம்; பின்பு அவைகள் இருக்கும் இடம் இன்னதென்று தெரியாது. 18 அசீரியா ராஜாவே, உன் மேய்ப்பர்கள் உறங்குவார்கள்; உன் பிரபலஸ்தர் படுத்திருப்பார்கள்; உன் ஜனங்கள் பர்வதங்களின்மேல் சிதறியிருக்கிறார்கள், அவைகளைக் கூட்டிச் சேர்ப்பவன் இல்லை. 19 உன் நொறுங்குதலுக்குப் பரிகாரம் இல்லை; உன் காயம் கொடியது; உன் செய்தியைக் கேட்பவர் யாவரும் உன்பேரில் கைகொட்டுவார்கள்; உன் பொல்லாப்பு எந்நேரமும் யார்பேரிலேதான் பாயாமற்போயிற்று?

ஆபகூக் 1

1 ஆபகூக் என்னும் தீர்க்கதரிசி தரிசனமாய்க் கண்ட பாரம். 2 கர்த்தாவே, நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் கேளாமலிருக்கிறீரே! கொடுமையினிமித்தம் நான் எதுவரைக்கும் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன், நீர் இரட்சியாமலிருக்கிறீரே! 3 நீர் எனக்கு அக்கிரமத்தைக் காண்பித்து, என்னைத் தீவினையைப் பார்க்கப்பண்ணுகிறதென்ன? கொள்ளையும் கொடுமையும் எனக்கு எதிரே நிற்கிறது; வழக்கையும் வாதையும் எழுப்புகிறவர்கள் உண்டு. 4 ஆகையால் நியாயப்பிரமாணம் பெலனற்றதாகி, நியாயம் ஒருபோதும் செல்லாமற்போகிறது; துன்மார்க்கன் நீதிமானை வளைந்துகொள்ளுகிறான்; ஆதலால் நியாயம் புரட்டப்படுகிறது. 5 நீங்கள் புறஜாதிகளை நோக்கிப்பார்த்து, ஆச்சரியப்பட்டுப் பிரமியுங்கள்; விவரிக்கப்பட்டாலும் நீங்கள் விசுவாசியாத ஒரு கிரியையை உங்கள் நாட்களில் நடப்பிப்பேன். 6 இதோ, நான் கல்தேயரென்னும் கொடிதும் வேகமுமான ஜாதியாரை எழுப்புவேன்; அவர்கள் தங்களுடையதல்லாத வாசஸ்தலங்களைக் கட்டிக்கொள்ளத் தேசத்தின் விசாலங்களில் நடந்துவருவார்கள். 7 அவர்கள் கெடியும் பயங்கரமுமானவர்கள்; அவர்களுடைய நியாயமும் அவர்களுடைய மேன்மையும் அவர்களாலேயே உண்டாகும். 8 அவர்களுடைய குதிரைகள் சிவிங்கிகளிலும் வேகமும், சாயங்காலத்தில் திரிகிற ஓநாய்களிலும் தீவிரமுமாயிருக்கும்; அவர்களுடைய குதிரைவீரர் பரவுவார்கள்; அவர்களுடைய குதிரைவீரர் தூரத்திலிருந்து வருவார்கள்; இரைக்குத் தீவிரிக்கிற கழுகுகளைப்போல் பறந்துவருவார்கள். 9 அவர்களெல்லாரும் கொடுமை செய்யவருவார்கள்; அவர்களுடைய முகங்கள் சுவறச் செய்யும் கீழ்க்காற்றைப்போலிருக்கும்; அவர்கள் மணலத்தனை ஜனங்களைச் சிறைபிடித்துச் சேர்ப்பார்கள். 10 அவர்கள் ராஜாக்களை ஆகடியம்பண்ணுவார்கள்; அதிபதிகள் அவர்களுக்குப் பரியாசமாயிருப்பார்கள்; அவர்கள் அரண்களையெல்லாம் பார்த்து நகைத்து, மண்மேடுகளைக் குவித்து அவைகளைப் பிடிப்பார்கள். 11 அப்பொழுது அவனுடைய மனம்மாற, அவன் தன் பெலன் தன் தேவனாலே உண்டானதென்று சொல்லி மிஞ்சிப்போய்க் குற்றவாளியாவான். 12 கர்த்தாவே, நீர் பூர்வகாலமுதல் என் தேவனும், என் பரிசுத்தருமானவர் அல்லவா? நாங்கள் சாவதில்லை; கர்த்தாவே, நியாயத்தீர்ப்புச் செய்ய அவனை வைத்தீர்; கன்மலையே, தண்டனை செய்ய அவனை நியமித்தீர். 13 தீமையைப் பார்க்கமாட்டாத சுத்தக்கண்ணனே, அநியாயத்தை நோக்கிக்கொண்டிருக்கமாட்டீரே; பின்னை துரோகிகளை நீர் நோக்கிக்கொண்டிருக்கிறதென்ன? துன்மார்க்கன் தன்னைப் பார்க்கிலும் நீதிமானை விழுங்கும்போது நீர் மௌனமாயிருக்கிறதென்ன? 14 மனுஷரைச் சமுத்திரத்து மச்சங்களுக்கும், அதிகாரியில்லாத ஊர்வனவற்றிற்கும் சமானமாக்குகிறதென்ன? 15 அவர்களெல்லாரையும் தூண்டிலினால் இழுத்துக்கொள்ளுகிறான்; அவர்களைத் தன் வலையினால் பிடித்து, தன் பறியிலே சேர்த்துக்கொள்ளுகிறான்; அதினால் சந்தோஷப்பட்டுக் களிகூருகிறான். 16 ஆகையால் அவைகளினால் தன் பங்கு கொழுப்புள்ளதும், தன் போஜனம் ருசிகரமுள்ளதுமாயிற்று என்று சொல்லி அவன் தன் வலைக்குப் பலியிட்டுத் தன் பறிக்குத் தூபங்காட்டுகிறான். 17 இதற்காக அவன் தன் வலையை இழுத்து அதிலுள்ளவைகளைக் கொட்டிக்கொண்டிருந்து, இரக்கமில்லாமல் ஜாதிகளை எப்போதும் கொன்றுபோட வேண்டுமோ?

ஆபகூக் 2

1 நான் என் காவலிலே தரித்து, அரணிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்றும், அவர் என்னைக் கண்டிக்கும்போது நான் என்ன உத்தரவு சொல்லுவேனென்றும் கவனித்துப் பார்ப்பேன் என்றேன். 2 அப்பொழுது கர்த்தர் எனக்குப் பிரதியுத்தரமாக: நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை. 3 குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை. 4 இதோ, அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். 5 அவன் மதுபானத்தினால் அக்கிரமஞ்செய்து அகங்காரியாகி, வீட்டிலே தரியாமல், அவன் தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கித் திருப்தியாகாமல், மரணத்துக்குச் சமானமாய்ச் சகல ஜாதிகளையும் தன் வசமாகச் சேர்த்து, சகல ஜனங்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொண்டாலும், 6 இவர்களெல்லாரும் அவன்பேரில் ஒரு பழமொழியையும், அவனுக்கு விரோதமான வசைச்சொல்லையும் வசனித்து, தன்னுடையதல்லாததைத் தனக்காகச் சேர்த்துக்கொள்ளுகிறவனுக்கு ஐயோ என்றும், அது எந்தமட்டும் நிற்கும் என்றும், அவன் தன்மேல் களிமண் சுமையையல்லவா சுமத்திக்கொள்ளுகிறான் என்றும் சொல்லுவார்கள். 7 உன்னைக் கடிப்பவர்கள் சடிதியாய் எழும்புவதும், உன்னை அலைக்கழிப்பவர்கள் விழிப்பதுமில்லையோ? நீ அவர்களுக்குச் சூறையாகாயோ? 8 நீ அநேகம் ஜாதிகளைக் கொள்ளையிட்டபடியினால் ஜனங்களில் மீதியான யாவரும் நீ சிந்தின மனுஷரத்தத்தினிமித்தமும் நீ செய்த கொடுமையினிமித்தமும் உன்னைக் கொள்ளையிடுவார்கள். 9 தீமையின் வல்லமைக்குத் தப்பவேண்டுமென்று தன் கூட்டை உயரத்திலே வைக்கும்படிக்கு, தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு ஐயோ! 10 அநேக ஜனங்களை வெட்டிப்போட்டதினால் உன் வீட்டுக்கு வெட்கமுண்டாக ஆலோசனைபண்ணினாய்; உன் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தாய். 11 கல்லு சுவரிலிருந்து கூப்பிடும், உத்திரம் மச்சிலிருந்து சாட்சியிடும். 12 இரத்தப்பழிகளாலே பட்டணத்தைக் கட்டி, அநியாயத்தினாலே நகரத்தைப் பலப்படுத்துகிறவனுக்கு ஐயோ! 13 இதோ, ஜனங்கள் அக்கினிக்கு இரையாக உழைத்து, ஜனங்கள் விருதாவாக இளைத்துப்போகிறது கர்த்தருடைய செயல் அல்லவோ? 14 சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். 15 தன் தோழருக்குக் குடிக்கக்கொடுத்துத் தன் துருத்தியை அவர்களண்டையிலே வைத்து, அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படிக்கு, அவர்களை வெறிக்கப்பண்ணுகிறவனுக்கு ஐயோ! 16 நீ மகிமையினால் அல்ல, இலச்சையினால் நிரப்பப்படுவாய்; நீயும் குடித்து விருத்தசேதனமில்லாதவன் என்று விளங்கு; கர்த்தருடைய வலதுகையில் இருக்கிற பாத்திரம் உன்னிடத்திற்குத் திரும்பும்; உன் மகிமையின்மேல் இலச்சையான வாந்திபண்ணுவாய். 17 லீபனோனுக்குச் செய்த கொடுமை உன்னை மூடும்; சிந்தின மனுஷரத்தத்தினிமித்தமும் தேசத்திற்கும் பட்டணத்திற்கும் அதின் குடிகள் எல்லாருக்கும் செய்த கொடுமையினிமித்தமும் மிருகங்கள் செய்யும் பாழ்க்கடிப்பு உன்னைக் கலங்கப்பண்ணும். 18 சித்திரக்காரனுக்கு அவன் செய்த சுரூபமும், ஊமையான தெய்வங்களை உண்டுபண்ணித் தான் உருவாக்கின சுரூபத்தை நம்பினவனுக்கு வார்க்கப்பட்டதும் பொய்ப்போதகம் பண்ணுகிறதுமான விக்கிரகமும் என்னத்துக்கு உதவும்? 19 மரத்தைப்பார்த்து விழியென்றும், ஊமையான கல்லைப்பார்த்து எழும்பு என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ! அது போதிக்குமோ? இதோ, அது பொன்னும் வெள்ளியுமான தகட்டால் மூடப்பட்டிருக்கிறது; அதற்குள்ளே சுவாசம் இல்லையே? 20 கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மௌனமாயிருக்கக்கடவது.

ஆபகூக் 3

1 ஆபகூக் தீர்க்கதரிசி சிகாயோனில் பாடின விண்ணப்பம். 2 கர்த்தாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டாயிற்று; கர்த்தாவே, வருஷங்களின் நடுவிலே உம்முடைய கிரியையை உயிர்ப்பியும், வருஷங்களின் நடுவிலே அதை விளங்கப்பண்ணும்; கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும். 3 தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் பர்வதத்திலிருந்தும் வந்தார்; (சேலா.) அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது. 4 அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது. 5 அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் அடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது. 6 அவர் நின்று பூமியை அளந்தார்; அவர் பார்த்துப் புறஜாதிகளைக் கரையப்பண்ணினார்; பூர்வ பர்வதங்கள் சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது; அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது. 7 கூஷானின் கூடாரங்கள் வருத்தத்தில் அகப்பட்டிருக்கக்கண்டேன்; மீதியான் தேசத்தின் திரைகள் நடுங்கின. 8 கர்த்தர் நதிகளின்மேல் கோபமாயிருந்தாரோ? தேவரீர் உம்முடைய குதிரைகளின்மேலும் இரட்சிப்புண்டாக்குகிற உம்முடைய இரதங்களின்மேலும் ஏறிவருகிறபோது, உமது கோபம் நதிகளுக்கும் உமது சினம் சமுத்திரத்திற்கும் விரோதமாயிருந்ததோ? 9 கோத்திரங்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த வாக்கின்படியே உம்முடைய வில் நாணேற்றப்பட்டதாக விளங்கினது; (சேலா.) நீர் பூமியைப் பிளந்து ஆறுகளை உண்டாக்கினீர். 10 பர்வதங்கள் உம்மைக் கண்டு நடுங்கின; ஜலம் பிரவாகித்துக் கடந்துபோயிற்று; ஆழி இரைந்தது, அதின் கைகளை உயர எடுத்தது. 11 சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் ஜோதியிலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன. 12 நீர் கோபத்தோடே பூமியில் நடந்தீர், உக்கிரத்தோடே ஜாதிகளைப் போரடித்தீர். 13 உமது ஜனத்தின் இரட்சிப்புக்காகவும் நீர் அபிஷேகம் பண்ணுவித்தவனின் இரட்சிப்புக்காகவுமே நீர் புறப்பட்டீர்; கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, துஷ்டனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; சேலா. 14 என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப்போல் வந்தார்கள்; சிறுமையானவனை மறைவிடத்திலே பட்சிப்பது அவர்களுக்குச் சந்தோஷமாயிருந்தது; நீர் அவனுடைய ஈட்டிகளினாலேயே அவனுடைய கிராமத்து அதிபதிகளை உருவக் குத்தினீர். 15 திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்துக்குள் உமது குதிரைகளோடே நடந்துபோனீர். 16 நான் கேட்டபொழுது என் குடல் குழம்பிற்று; அந்தச் சத்தத்துக்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் உக்கல் உண்டாயிற்று; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடே எதிர்க்கும் ஜனங்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன். 17 அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடு இல்லாமற்போனாலும், 18 நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன். 19 ஆண்டவராகிய கர்த்தர் என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான ஸ்தலங்களில் என்னை நடக்கப்பண்ணுவார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம்.

செப்பனியா 1

1 ஆமோனின் புத்திரனாகிய யோசியா என்னும் யூதா ராஜாவின் நாட்களிலே, எஸ்கியாவின் குமாரனாகிய ஆமரியாவுக்குக் குமாரனான கெதலியா என்பவனுடைய மகனாகிய கூஷின் குமாரன் செப்பனியாவுக்கு உண்டான கர்த்தருடைய வசனம். 2 தேசத்தில் உண்டானதை எல்லாம் முற்றிலும் வாரிக்கொள்ளுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 3 மனுஷரையும் மிருகஜீவன்களையும் வாரிக்கொள்ளுவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும், இடறுகிறதற்கேதுவானவைகளையும் துன்மார்க்கரோடேகூட வாரிக்கொண்டு, தேசத்தில் உண்டான மனுஷரைச் சங்காரம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 4 நான் யூதாவின்மேலும், எருசலேமிலுள்ள எல்லாக் குடிகளின்மேலும் என் கையை நீட்டி, பாகாலில் மீதியாயிருக்கிறதையும், ஆசாரியர்களோடேகூடக் கெம்மரீம் என்பவர்களின் பேரையும், 5 வீடுகளின்மேல் வானசேனையைப் பணிகிறவர்களையும், கர்த்தர்பேரில் ஆணையிட்டு, மல்காமின்பேரிலும் ஆணையிட்டுப் பணிகிறவர்களையும், 6 கர்த்தரை விட்டுப் பின்வாங்குகிறவர்களையும், கர்த்தரைத் தேடாமலும், அவரைக்குறித்து விசாரியாமலுமிருக்கிறவர்களையும், இவ்விடத்தில் இராதபடிக்குச் சங்காரம்பண்ணுவேன். 7 கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது; கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார். 8 கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜகுமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன். 9 வாசற்படியைத் தாண்டி, கொடுமையினாலும் வஞ்சகத்தினாலும் தங்கள் எஜமான்களின் வீடுகளை நிரப்புகிற யாவரையும் அந்நாளிலே தண்டிப்பேன். 10 அந்நாளிலே மீன்வாசலிலிருந்து கூக்குரலின் சத்தமும், நகரத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து அலறுதலும், மேடுகளிலிருந்து மகா சங்காரத்தின் இரைச்சலும் உண்டாகுமென்று கர்த்தர் சொல்லுகிறார். 11 மக்தேஷின் குடிகளே அலறுங்கள்; வர்த்தகரெல்லாரும் சங்காரமானார்கள்; காசுக்காரர் யாவரும் வெட்டுண்டுபோனார்கள். 12 அக்காலத்திலே நான் எருசலேமை விளக்குக்கொளுத்திச் சோதித்து, வண்டல்போலக் குழம்பியிருக்கிறவர்களும், கர்த்தர் நன்மைசெய்வதும் இல்லை தீமைசெய்வதும் இல்லையென்று தங்கள் இருதயத்தில் சொல்லுகிறவர்களுமான மனுஷரைத் தண்டிப்பேன். 13 அவர்களுடைய ஆஸ்தி கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்சத்தோட்டங்களை நாட்டியும், அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை. 14 கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது; அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்துவருகிறது; கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான். 15 அந்த நாள் உக்கிரத்தின் நாள்; அது இக்கட்டும் இடுக்கமுமான நாள்; அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள்; அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள். 16 அது அரணிப்பான நகரங்களுக்கும், உயரமான கொத்தளங்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள். 17 மனுஷர் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், அவர்கள் குருடரைப்போல் நடக்கும்படி நான் அவர்களை வருத்தப்படுத்துவேன்; அவர்கள் இரத்தம் புழுதியைப்போல் சொரியப்படும்; அவர்கள் மாம்சம் எருவைப்போல் கிடக்கும். 18 கர்த்தருடைய உக்கிரத்தின் நாளிலே அவர்கள் வெள்ளியும் அவர்கள் பொன்னும் அவர்களைத் தப்புவிக்கமாட்டாது; அவருடைய எரிச்சலின் அக்கினியினால் தேசமெல்லாம் அழியும்; தேசத்தின் குடிகளையெல்லாம் சடிதியாய் நிர்மூலம்பண்ணுவார்.

செப்பனியா 2

1 விரும்பப்படாத ஜாதியே, கட்டளை பிறக்குமுன்னும், பதரைப்போல நாள் பறந்துபோகுமுன்னும் கர்த்தருடைய உக்கிரகோபம் உங்கள்மேல் இறங்குமுன்னும், கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருமுன்னும், 2 நீங்கள் உங்களை உய்த்து ஆராய்ந்து சோதியுங்கள். 3 தேசத்திலுள்ள எல்லாச் சிறுமையானவர்களே, கர்த்தருடைய நியாயத்தை நடப்பிக்கிறவர்களே, அவரைத் தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை கர்த்தருடைய கோபத்தின்நாளிலே மறைக்கப்படுவீர்கள். 4 காத்சா குடியற்று, அஸ்கலோன் பாழாகும்; அஸ்தோத்தைப் பட்டப்பகலிலே பறக்கடிப்பார்கள்; எக்ரோன் வேரோடே பிடுங்கப்படும். 5 சமுத்திரக்கரை குடிகளாகிய கிரேத்தியருக்கு ஐயோ! பெலிஸ்தரின் தேசமாகிய கானானே, கர்த்தருடைய வார்த்தை உனக்கு விரோதமாயிருக்கிறது; இனி உன்னில் குடியில்லாதபடிக்கு உன்னை அழிப்பேன். 6 சமுத்திரக்கரை தேசம் மேய்ப்பர் தங்கும் குடில்களும் ஆட்டுத்தோழங்களுமாகும். 7 அந்தத் தேசம் யூதா வம்சத்தாரில் மீதியானவர்களின் வசமாகும்; அவர்கள் அவ்விடங்களில் மந்தை மேய்ப்பார்கள்; அஸ்கலோனின் வீடுகளிலே சாயங்காலத்திலே படுத்துக்கொள்வார்கள்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவார். 8 மோவாப் செய்த நிந்தனையையும், அம்மோன் புத்திரர் என் ஜனத்தை நிந்தித்து, அவர்கள் எல்லையைக் கடந்து பெருமைபாராட்டிச் சொன்ன தூஷணங்களையும் கேட்டேன். 9 ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின் தேசம் கொமோராவைப்போலுமாகி, காஞ்சொறி படரும் இடமும், உப்புப்பள்ளமும், நித்திய பாழுமாயிருக்கும்; என் ஜனத்தில் மீந்தவர்கள் அவர்களைக் கொள்ளையிட்டு, என் ஜாதியில் மீதியானவர்கள் அவர்களைச் சுதந்தரித்துக்கொள்வார்கள் என்பதை என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார். 10 அவர்கள் சேனைகளுடைய கர்த்தரின் ஜனத்துக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டி அவர்களை நிந்தித்தபடியினால், இது அவர்கள் அகங்காரத்துக்குப் பதிலாக அவர்களுக்குக் கிடைக்கும். 11 கர்த்தர் அவர்கள்மேல் கெடியாயிருப்பார்; பூமியிலுள்ள தேவர்களையெல்லாம் மெலிந்துபோகப்பண்ணுவார்; அப்பொழுது தீவுகளிலுள்ள சகல புறஜாதிகளும் அவரவர் தங்கள் தங்கள் ஸ்தானத்திலிருந்து அவரைப் பணிந்துகொள்வார்கள். 12 எத்தியோப்பியராகிய நீங்களும் என் பட்டயத்தினால் கொலைசெய்யப்படுவீர்கள். 13 அவர் தமது கையை வடதேசத்துக்கு விரோதமாய் நீட்டி, அசீரியாவை அழித்து, நினிவேயைப் பாழும் வனாந்தரத்துக்கொத்த வறட்சியுமான ஸ்தலமாக்குவார். 14 அதின் நடுவில் மந்தைகளும் ஜாதிஜாதியான சகல மிருகங்களும் படுத்துக்கொள்ளும்; அதினுடைய சிகரங்களின்மேல் நாரையும் கோட்டானும் இராத்தங்கும்; பலகணிகளில் கூவுகிற சத்தம் பிறக்கும்; வாசற்படிகளில் பாழ்க்கடிப்பு இருக்கும்; கேதுருமரங்களின் மச்சைத் திறப்பாக்கிப்போடுவார். 15 நான்தான், என்னைத்தவிர வேறொருவரும் இல்லை என்று தன் இருதயத்தில் சொல்லி, நிர்விசாரமாய் வாழ்ந்து களிகூர்ந்திருந்த நகரம் இதுவே; இது பாழும் மிருகஜீவன்களின் தாபரமுமாய்ப்போய்விட்டதே! அதின் வழியாய்ப்போகிறவன் எவனும் ஈசல் போட்டுத் தன் கையைக் கொட்டுவான்.

செப்பனியா 3

1 இடுக்கண் செய்து, ஊத்தையும் அழுக்குமாயிருக்கிற நகரத்துக்கு ஐயோ! 2 அது சத்தத்துக்குச் செவிகொடுக்கவில்லை; அது கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளவில்லை; அது கர்த்தரை நம்பவில்லை; அது தன் தேவனிடத்தில் சேரவில்லை. 3 அதற்குள்ளே இருக்கிற அதின் அதிபதிகள் கெர்ச்சிக்கிற சிங்கங்கள்; அதின் நியாயாதிபதிகள் சாயங்காலத்தில் புறப்படுகிறதும் விடியற்காலமட்டும் ஒரு எலும்பையும் மீதியாக வைக்காததுமான ஓநாய்கள். 4 அதின் தீர்க்கதரிசிகள் வீண்பெருமையும் வஞ்சகமுமுள்ளவர்கள்; அதின் ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, வேதத்துக்கு அநியாயஞ்செய்தார்கள். 5 அதற்குள் இருக்கிற கர்த்தர் நீதியுள்ளவர்; அவர் அநியாயஞ்செய்வதில்லை; அவர் குறைவில்லாமல் காலைதோறும் தம்முடைய நியாயத்தை விளங்கப்பண்ணுகிறார்; அநியாயக்காரனோ வெட்கம் அறியான். 6 ஜாதிகளைச் சங்கரித்தேன்; அவர்கள் துருகங்கள் பாழாயின; அவர்களுடைய வீதிகளை ஒருவரும் கடந்துபோகாதபடிக்குப் பாழாக்கினேன்; அவர்களுடைய பட்டணங்கள் மனுஷர் இல்லாதபடிக்கும் குடியில்லாதபடிக்கும் அவாந்தரையாயின. 7 உன் வாசஸ்தலம் நிர்மூலமாகாதபடிக்கு நீ எனக்குப் பயந்து, கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள் என்றேன்; நான் அவர்களை எப்படித் தண்டித்தாலும், அவர்கள் அதிகாலையில் எழுந்து தங்கள் கிரியைகளையெல்லாம் கேடாக்கினார்கள். 8 ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சினமாகிய உக்கிர கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன்; பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினால் அழியும். 9 அப்பொழுது ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன். 10 எத்தியோப்பியாவின் நதிகளுக்கு அக்கரையிலிருந்து என்னிடத்தில் விண்ணப்பம்பண்ணுகிறவர்களாகிய சிதறடிக்கப்பட்டவர்களின் குமாரத்தியானவள் எனக்குக் காணிக்கை கொண்டுவருவாள். 11 எனக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணி, நீ செய்த உன் எல்லாக் கிரியைகளினிமித்தமும் அந்நாளிலே வெட்கப்படாதிருப்பாய்; அப்பொழுது நான் உன் பெருமையைக்குறித்துக் களிகூர்ந்தவர்களை உன் நடுவிலிருந்து விலக்கிவிடுவேன்; நீ இனி என் பரிசுத்த பர்வதத்தில் அகங்காரங்கொள்ளமாட்டாய். 12 உன் நடுவில் சிறுமையும் எளிமையுமான ஜனத்தை மீதியாக வைப்பேன்; அவர்கள் கர்த்தருடைய நாமத்தின்மேல் நம்பிக்கையாயிருப்பார்கள். 13 இஸ்ரவேலில் மீதியானவர்கள் அநியாயஞ்செய்வதில்லை; அவர்கள் பொய் பேசுவதுமில்லை; வஞ்சகநாவு அவர்கள் வாயில் கண்டுபிடிக்கப்படுவதுமில்லை; அவர்கள் தங்களைப் பயப்படுத்துவாரில்லாமல் புசித்துப் படுத்துக்கொள்வார்கள். 14 சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. 15 கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய். 16 அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து, உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும். 17 உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து, தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார். 18 உன் சபையின் மனுஷராயிருந்து, பண்டிகை ஆசரிப்பில்லாமையால் உண்டான நிந்தையினிமித்தம் சஞ்சலப்பட்டவர்களை நான் ஏகமாய்க் கூட்டிக்கொள்ளுவேன். 19 இதோ, அக்காலத்திலே உன்னைச் சிறுமைப்படுத்தின யாவரையும் தண்டிப்பேன்; நொண்டியானவனை இரட்சித்து, தள்ளுண்டவனைச் சேர்த்துக்கொள்ளுவேன்; அவர்கள் வெட்கம் அநுபவித்த சகல தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச் செய்வேன். 20 அக்காலத்திலே உங்களைக் கூட்டிக்கொண்டுவருவேன்; அக்காலத்திலே உங்களைச் சேர்த்துக்கொள்ளுவேன்; உங்கள் கண்காண நான் உங்கள் சிறையிருப்பைத் திருப்பும்போது, பூமியிலுள்ள சகல ஜனங்களுக்குள்ளும் நான் உங்களைக் கீர்த்தியும் புகழ்ச்சியுமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

ஆகாய் 1

1 ராஜாவாகிய தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் முதலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுக்கும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுக்கும் உண்டாகி, அவர் சொன்னது என்னவென்றால்: 2 இந்த ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுகிறதற்கு ஏற்றகாலம் இன்னும் வரவில்லை என்கிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 3 ஆனாலும் ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர் சொல்லுகிறார்: 4 இந்த வீடு பாழாய்க் கிடக்கும்போது, நீங்கள் மச்சுப்பாவப்பட்ட உங்கள் வீடுகளில் குடியிருக்கும்படியான காலம் இதுவோ? 5 இப்போதும் சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள். 6 நீங்கள் திரளாய் விதைத்தும் கொஞ்சமாய் அறுத்துக்கொண்டுவருகிறீர்கள்; நீங்கள் புசித்தும் திருப்தியாகவில்லை; குடித்தும் பரிபூரணமடையவில்லை; நீங்கள் வஸ்திரம் உடுத்தியும் ஒருவனுக்கும் குளிர்விடவில்லை; கூலியைச் சம்பாதிக்கிறவன் பொத்தலான பையிலே போடுகிறவனாய் அதைச் சம்பாதிக்கிறான். 7 உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 8 நீங்கள் மலையின்மேல் ஏறிப்போய், மரங்களை வெட்டிக்கொண்டுவந்து, ஆலயத்தைக் கட்டுங்கள்; அதின்பேரில் நான் பிரியமாயிருப்பேன், அதினால் என் மகிமை விளங்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார். 9 அதிகமாய் வருமென்று நீங்கள் எதிர்பார்த்திருந்தும், இதோ, கொஞ்சம் கிடைத்தது; நீங்கள் அறுத்து வீட்டுக்குக் கொண்டுவந்தும், நான் அதை ஊதிப்போடுகிறேன்; எதினிமித்தமென்றால், என் வீடு பாழாய்க்கிடக்கும்போது, நீங்கள் எல்லாரும் அவனவன் தன் தன் வீட்டிற்கு ஓடிப்போகிறீர்களே, இதினிமித்தமே என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 10 ஆதலால் உங்கள்மேல் இருக்கிற வானம் பனியைப் பெய்யாமலும், பூமி பலனைக் கொடாமலும் போயிற்று. 11 நான் நிலத்தின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புது திராட்சரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளைகிற எல்லாவற்றின்மேலும், மனுஷரின்மேலும், மிருகங்களின்மேலும், கைப்பாடு அனைத்தின்மேலும் வறட்சியை வருவித்தேன் என்றார். 12 அப்பொழுது செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேலும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனும், ஜனத்தில் மீதியான அனைவரும் தங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்கும், தங்கள் தேவனாகிய கர்த்தர் அனுப்பின ஆகாய் என்னும் தீர்க்கதரிசியினுடைய வார்த்தைகளுக்கும் செவிகொடுத்தார்கள், ஜனங்கள் கர்த்தருக்கு முன்பாகப் பயந்திருந்தார்கள். 13 அப்பொழுது கர்த்தருடைய தூதனாகிய ஆகாய், கர்த்தர் தூதனுப்பிய வார்த்தையின்படி ஜனங்களை நோக்கி: நான் உங்களோடே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான். 14 பின்பு கர்த்தர் செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனுடைய ஆவியையும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய ஆவியையும், ஜனத்தில் மீதியான எல்லாருடைய ஆவியையும் எழுப்பினார்; அவர்கள் வந்து, தங்கள் தேவனாகிய சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே வேலைசெய்தார்கள். 15 தரியு ராஜாவின் இரண்டாம் வருஷம் ஆறாம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே இது நடந்தது.

ஆகாய் 2

1 ஏழாம் மாதம் இருபத்தோராந்தேதியிலே ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய், கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று; அவர்: 2 நீ செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் யூதாவின் தலைவனோடும், யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனோடும், ஜனத்தில் மீதியானவர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: 3 இந்த ஆலயத்தின் முந்தின மகிமையைக் கண்டவர்களில் உங்களுக்குள்ளே மீந்திருக்கிறவர்கள் யார்? இப்பொழுது இது உங்களுக்கு எப்படிக் காண்கிறது? அதற்கு இது உங்கள் பார்வையில் ஒன்றுமில்லாததுபோல் காண்கிறதல்லவா? 4 ஆனாலும் செருபாபேலே, நீ திடன்கொள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனே, நீ திடன்கொள்; தேசத்தின் எல்லா ஜனங்களே, நீங்கள் திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 5 நீங்கள் எகிப்திலிருந்து புறப்படுகிறபோது நான் உங்களோடே உடன்படிக்கைபண்ணின வார்த்தையின்படியே, என் ஆவியானவரும் உங்கள் நடுவில் நிலைகொண்டிருப்பார்; பயப்படாதேயுங்கள். 6 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: கொஞ்சக்காலத்துக்குள்ளே இன்னும் ஒருதரம் நான் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் வெட்டாந்தரையையும் அசையப்பண்ணுவேன். 7 சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 8 வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 9 முந்தின ஆலயத்தின் மகிமையைப்பார்க்கிலும், இந்தப் பிந்தின ஆலயத்தின் மகிமை பெரிதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார். 10 தரியுவின் இரண்டாம் வருஷம் ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே, ஆகாய் என்னும் தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று; அவர்: 11 ஒருவன் தன் வஸ்திரத்தின் தொங்கலிலே பரிசுத்த மாம்சத்தைக் கொண்டுபோகையில் தன் வஸ்திரத்தின் தொங்கல் அப்பத்தையாகிலும், சாதத்தையாகிலும், திராட்சரசத்தையாகிலும், எண்ணெயையாகிலும், மற்றெந்த போஜனபதார்த்தத்தையாகிலும் தொட்டால் அது பரிசுத்தமாகுமோ என்று நீ ஆசாரியரிடத்தில் வேத நியாயத்தைப்பற்றிக் கேள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார். 12 அதற்கு ஆசாரியர்கள் பிரதியுத்தரமாக: பரிசுத்தமாகாது என்றார்கள். 13 பிணத்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால், அது தீட்டுப்படுமோ என்று ஆகாய் பின்னும் கேட்டான்; அதற்கு ஆசாரியர்கள் பிரதியுத்தரமாக: தீட்டுப்படும் என்றார்கள். 14 அப்பொழுது ஆகாய்: அப்படியே இந்த ஜனங்களும் இந்த ஜாதியாரும் என் சமுகத்தில் இருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களுடைய கைகளின் எல்லாக் கிரியைகளும் அப்படியே இருக்கிறது; அவர்கள் அங்கே கொண்டுவந்து படைக்கிறதும் தீட்டுப்பட்டிருக்கிறது. 15 இப்போதும் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டும்படி ஒரு கல்லின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டது முதல் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள். 16 அந்த நாட்கள் முதல் ஒருவன் இருபது மரக்காலாகக் கண்ட அம்பாரத்தினிடத்தில் வந்தபோது, பத்து மரக்கால்மாத்திரம் இருந்தது; ஒருவன் ஆலையின் தொட்டியில் ஐம்பது குடம் மொள்ள ஆலையினிடத்திலே வந்தபோது இருபது குடம்மாத்திரம் இருந்தது. 17 கருக்காயினாலும் விஷப்பனியினாலும் கல்மழையினாலும் உங்களை உங்கள் கைகளின் வேலையிலெல்லாம் அடித்தேன்; ஆனாலும் நீங்கள் என்னிடத்தில் மனதைத் திருப்பாமல் போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 18 இப்போதும் இதற்கு முந்தினகாலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள்; ஒன்பதாம் மாதம் இருபத்துநாலாந்தேதியாகிய இந்நாள்முதல் கர்த்தருடைய ஆலயத்தின் அஸ்திபாரம் போடப்பட்ட அந்நாள்வரைக்கும் சென்றகாலத்தில் நடந்ததை உங்கள் மனதிலே சிந்தித்துப்பாருங்கள். 19 களஞ்சியத்தில் இன்னும் விதைத்தானியம் உண்டோ? திராட்சச்செடியும் அத்திமரமும் மாதளஞ்செடியும் ஒலிவமரமும் கனிகொடுக்கவில்லையே; நான் இன்றுமுதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று சொல்லுகிறார் என்றான். 20 இருபத்துநாலாந்தேதியாகிய அந்நாளிலே கர்த்தருடைய வார்த்தை இரண்டாம் விசை ஆகாய் என்பவனுக்கு உண்டாகி, அவர்: 21 நீ யூதாவின் தலைவனாகிய செருபாபேலோடே சொல்லவேண்டியது என்னவென்றால், நான் வானத்தையும் பூமியையும் அசையப்பண்ணி, 22 ராஜ்யங்களின் சிங்காசனத்தைக் கவிழ்த்து, ஜாதிகளுடைய ராஜ்யங்களின் பெலத்தை அழித்து, இரதத்தையும் அதில் ஏறியிருக்கிறவர்களையும் கவிழ்த்துப்போடுவேன்; குதிரைகளோடே அவைகளின்மேல் ஏறியிருப்பவர்களும் அவரவர் தங்கள் தங்கள் சகோதரனின் பட்டயத்தினாலே விழுவார்கள். 23 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: செயல்த்தியேலின் குமாரனாகிய செருபாபேல் என்னும் என் ஊழியக்காரனே, உன்னை நான் அந்நாளிலே சேர்த்துக்கொண்டு, உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னைத் தெரிந்துகொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.

சகரியா 1

1 தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம் எட்டாம் மாதத்திலே இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரனாகிய சகரியாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தை: 2 கர்த்தர் உங்கள் பிதாக்களின்மேல் கடுங்கோபமாயிருந்தார். 3 ஆகையால் நீ அவர்களை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: என்னிடத்தில் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அப்பொழுது நான் உங்களிடத்துக்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 4 உங்கள் பிதாக்களைப்போலிராதேயுங்கள்; முந்தின தீர்க்கதரிசிகள் அவர்களை நோக்கி: உங்கள் பொல்லாத வழிகளையும் உங்கள் பொல்லாத கிரியைகளையும் விட்டுத் திரும்புங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூப்பிட்டார்கள்; ஆனாலும் எனக்குச் செவிகொடாமலும் என்னைக் கவனியாமலும் போனார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 5 உங்கள் பிதாக்கள் எங்கே? தீர்க்கதரிசிகள் என்றென்றைக்கும் உயிரோடிருப்பார்களோ? 6 இராமற்போனாலும், தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரருக்கு நான் கட்டளையிட்ட என் வார்த்தைகளும் என் தீர்மானங்களும் உங்கள் பிதாக்களிடத்தில் பலிக்கவில்லையோ? எங்கள் வழிகளின்படியேயும், எங்கள் கிரியைகளின்படியேயும் சேனைகளின் கர்த்தர் எங்களுக்குச் செய்ய நிர்ணயித்தபடியே எங்களுக்குச் செய்தாரென்று அவர்கள் திரும்பவந்து சொன்னதில்லையோ என்று சொல் என்றார். 7 தரியு அரசாண்ட இரண்டாம் வருஷம், சேபாத் மாதமாகிய பதினோராம் மாதம் இருபத்துநாலாந்தேதியிலே, கர்த்தருடைய வார்த்தை இத்தோவின் மகனான பெரகியாவின் குமாரன் சகரியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டாயிற்று; அவன் சொன்னது: 8 இதோ, இன்று ராத்திரி சிவப்புக் குதிரையின்மேல் ஏறியிருந்த ஒரு புருஷனைக் கண்டேன்; அவர் பள்ளத்தாக்கில் இருக்கிற மிருதுச்செடிகளுக்குள்ளே நின்றார்; அவருக்குப் பின்னாலே சிவப்பும் மங்கின நிறமும் வெண்மையுமான குதிரைகள் இருந்தன. 9 அப்பொழுது நான்: என் ஆண்டவரே, இவர்கள் யாரென்று கேட்டேன்; என்னோடே பேசுகிற தூதனானவர்: இவர்கள் யாரென்று நான் உனக்குக் காண்பிப்பேன் என்று சொன்னார். 10 அப்பொழுது மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற அந்தப் புருஷன் பிரதியுத்தரமாக: இவர்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்க்கக் கர்த்தர் அனுப்பினவர்கள் என்றார். 11 பின்பு அவர்கள் மிருதுச்செடிகளுக்குள்ளே நின்ற கர்த்தருடைய தூதனை நோக்கி: நாங்கள் பூமியெங்கும் சுற்றிப்பார்த்தோம்; இதோ, பூமி முழுவதும் அமைதலும் அமரிக்கையுமாய் இருக்கிறது என்றார்கள். 12 அப்பொழுது கர்த்தருடைய தூதன் மறுமொழியாக: சேனைகளின் கர்த்தாவே, இந்த எழுபது வருஷமாய் நீர் கோபங்கொண்டிருக்கிற எருசலேமின்மேலும் யூதா பட்டணங்களின்மேலும் எந்தமட்டும் இரங்காதிருப்பீர் என்று சொல்ல, 13 அப்பொழுது கர்த்தர், என்னோடே பேசின தூதனுக்கு நல்வார்த்தைகளையும் ஆறுதலான வார்த்தைகளையும் பிரதியுத்தரமாகச் சொன்னார். 14 அப்பொழுது என்னோடே பேசின தூதன் என்னை நோக்கி: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நான் எருசலேமுக்காகவும் சீயோனுக்காகவும் மகா வைராக்கியம் கொண்டிருக்கிறேன். 15 நான் கொஞ்சங் கோபங்கொண்டிருந்தபோது அவர்கள் தங்கள் கேட்டை அதிகரிக்கத் தேடினபடியினால், சுகமாய் வாழுகிற புறஜாதிகள்பேரில் நான் கடுங்கோபங்கொண்டேன். 16 ஆகையால் மனஉருக்கத்தோடே எருசலேமினிடத்தில் திரும்பினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் ஆலயம் அதிலே கட்டப்படும்; எருசலேமின்மேல் அளவுநூல் பிடிக்கப்படும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று கூறு என்றார். 17 இன்னும் என் பட்டணங்கள் நன்மையினால் பரம்பியிருக்கும்; இன்னும் கர்த்தர் சீயோனைத் தேற்றரவுபண்ணுவார்; இன்னும் எருசலேமைத் தெரிந்துகொள்ளுவார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்று பின்னும் கூறு என்றார். 18 நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, நாலு கொம்புகளைக் கண்டேன். 19 அவைகள் என்னவென்று என்னோடே பேசின தூதனைக் கேட்டேன்; அதற்கு அவர்: இவைகள் யூதாவையும் இஸ்ரவேலையும் எருசலேமையும் சிதறடித்த கொம்புகள் என்றார். 20 பின்பு கர்த்தர் எனக்கு நாலு தொழிலாளிகளைக் காண்பித்தார். 21 இவர்கள் என்னசெய்ய வருகிறார்களென்று கேட்டேன்; அதற்கு அவர்: ஒருவனும் தன் தலையை ஏறெடுக்கக்கூடாதபடி அந்தக் கொம்புகள் யூதாவைச் சிதறடித்ததே, அவைகளுக்குப் பயமுறுத்துகிறதற்கும், யூதாவின் தேசத்தைப் பாழாக்கத் தங்கள் கொம்பை எடுத்த ஜாதிகளுடைய கொம்புகளை விழத்தள்ளுகிறதற்கும் இவர்கள் வந்தார்கள் என்றார்.

சகரியா 2

1 நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு புருஷனைக் கண்டேன். 2 நீர் எவ்விடத்துக்குப் போகிறீர் என்று கேட்டேன்; அதற்கு அவர்: எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் அறியும்படி அதை அளக்கிறதற்குப் போகிறேன் என்றார். 3 இதோ, என்னோடே பேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திக்கும்படிப் புறப்பட்டுவந்தான். 4 இவனை அவர் நோக்கி: நீ ஓடி இந்த வாலிபனிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் தன் நடுவிலே கூடும் மனுஷரின் திரளினாலும் மிருகஜீவன்களின் திரளினாலும் மதிலில்லாத பட்டணங்கள்போல் வாசஸ்தலமாகும். 5 நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 6 ஓகோ, நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடிவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறப்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 7 பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள். 8 பிற்பாடு மகிமையுண்டாகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். 9 இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன்; அதினால் அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள். 10 சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 11 அந்நாளிலே அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து என் ஜனமாவார்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய். 12 கர்த்தர் பரிசுத்த தேசத்திலே யூதாவாகிய தமது பங்கைச் சுதந்தரித்து, திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார். 13 மாம்சமான சகலமான பேர்களே, கர்த்தருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார்.

சகரியா 3

1 அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான். 2 அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார். 3 யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான். 4 அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார், நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார். 5 அவன் சிரசின்மேல் சுத்தமான பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின்மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள்; கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார். 6 கர்த்தருடைய தூதன் யோசுவாவுக்குச் சாட்சியாக: 7 சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் பிராகாரங்களையும் காவல்காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன். 8 இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன். 9 இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி, இந்தத் தேசத்தில் அக்கிரமத்தை ஒரேநாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 10 அந்நாளிலே நீங்கள் ஒருவரையொருவர் திராட்சச்செடியின்கீழும் அத்திமரத்தின்கீழும் வரவழைப்பீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

சகரியா 4

1 என்னோடே பேசின தூதன் திரும்பிவந்து நித்திரைபண்ணுகிற ஒருவனை எழுப்புவதுபோல் என்னை எழுப்பி: 2 நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; அதற்கு நான்: இதோ, முழுவதும் பொன்னினால் செய்யப்பட்ட குத்துவிளக்கைக் காண்கிறேன்; அதின் உச்சியில் அதின் கிண்ணமும், அதின்மேல் அதின் ஏழு அகல்களும், அதின் உச்சியில் இருக்கிற அகல்களுக்குப்போகிற ஏழு குழாய்களும் இருக்கிறது. 3 அதின் அருகில் கிண்ணத்திற்கு வலதுபுறமாக ஒன்றும், அதற்கு இடதுபுறமாக ஒன்றும், ஆக இரண்டு ஒலிவமரங்கள் இருக்கிறது என்றேன். 4 நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன். 5 என்னோடே பேசின தூதன் மறுமொழியாக: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன். 6 அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 7 பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார். 8 பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 9 செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய். 10 அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார். 11 பின்பு நான் அவரை நோக்கி: குத்துவிளக்குக்கு வலதுபுறமாகவும் அதற்கு இடதுபுறமாகவும் இருக்கிற இந்த இரண்டு ஒலிவமரங்கள் என்னவென்று கேட்டேன். 12 மறுபடியும் நான் அவரை நோக்கி: இரண்டு பொற்குழாய்களின் வழியாய்த் தொங்கி, பொன்னிறமான எண்ணெயைத் தங்களிலிருந்து இறங்கப்பண்ணுகிறவைகளாகிய ஒலிவமரங்களின் இரண்டு கிளைகள் என்னவென்று கேட்டேன். 13 அதற்கு அவர்: இவைகள் இன்னதென்று உனக்குத் தெரியாதா என்றார்; ஆண்டவனே, எனக்குத் தெரியாது என்றேன். 14 அப்பொழுது அவர்: இவைகள் இரண்டும் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவரின் சமுகத்தில் நிற்கிற அபிஷேகம் பெற்றவர்கள் என்றார்.

சகரியா 5

1 நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில், இதோ, பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் கண்டேன். 2 தூதன்: நீ காண்கிறது என்னவென்று கேட்டார்; பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் காண்கிறேன், அதின் நீளம் இருபது முழமும் அதின் அகலம் பத்து முழமுமாயிருக்கிறது என்றேன். 3 அப்பொழுது அவர்: இது பூமியின்மீதெங்கும் புறப்பட்டுப்போகிற சாபம்; எந்தத் திருடனும் அதின் ஒரு புறத்திலிருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான்; ஆணையிடுகிற எவனும், அதின் மறுபுறத்தில் இருக்கிறதின்படியே அழிக்கப்பட்டுப்போவான். 4 அது திருடன் வீட்டிலும், என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறவன் வீட்டிலும் வந்து, அவனவன் வீட்டின் நடுவிலே தங்கி, அதை அதின் மரங்களோடும் அதின் கல்லுகளோடுங்கூட நிர்மூலமாக்கும்படி அதைப் புறப்பட்டுப்போகப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார். 5 பின்பு என்னோடே பேசின தூதன் வெளியே வந்து என்னை நோக்கி: நீ உன் கண்களை ஏறெடுத்து, புறப்பட்டுவருகிறதை என்னவென்று பார் என்றார். 6 அது என்னவென்று கேட்டேன்; அதற்கு அவர்: அது புறப்பட்டுவருகிறதாகிய ஒரு மரக்கால் என்றார். பின்னும் அவர்: பூமியெங்கும் இதுதான் அவர்களுடைய கண்ணோக்கம் என்றார். 7 இதோ, ஒரு தாலந்து நிறையான ஈயமூடி தூக்கிவரப்பட்டது; மரக்காலின் நடுவிலே ஒரு ஸ்திரீ உட்கார்ந்திருந்தாள். 8 அப்பொழுது அவர்: இவள் அக்கிரமக்காரி என்று சொல்லி, அவளை மரக்காலுக்குள்ளே தள்ளி ஈயக்கட்டியை அதின் வாயிலே போட்டார். 9 அப்பொழுது நான் என் கண்களை ஏறெடுத்து, இதோ, புறப்பட்டுவருகிற இரண்டு ஸ்திரீகளைக் கண்டேன்; அவர்களுக்கு நாரையின் செட்டைகளுக்கொத்த செட்டைகள் இருந்தது; அவர்கள் செட்டைகளில் காற்றிருந்தது; இவர்கள் மரக்காலைப் பூமிக்கும் வானத்துக்கும் நடுவாய்த் தூக்கிக்கொண்டு போனார்கள். 10 நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: இவர்கள் மரக்காலை எங்கே கொண்டுபோகிறார்கள் என்று கேட்டேன். 11 அதற்கு அவர்: சிநெயார் தேசத்திலே அதற்கு ஒரு வீட்டைக் கட்டும்படிக்கு அதைக் கொண்டுபோகிறார்கள்; அங்கே அது ஸ்தாபிக்கப்பட்டு, தன் நிலையிலே வைக்கப்படும் என்றார்.

சகரியா 6

1 நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து, இதோ, இரண்டு பர்வதங்களின் நடுவாகப் புறப்பட்டுவருகிற நாலு இரதங்களைக் கண்டேன்; அந்தப் பர்வதங்கள் வெண்கலப் பர்வதங்களாயிருந்தன. 2 முதலாம் இரதத்தில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் இரதத்தில் கறுப்புக் குதிரைகளும், 3 மூன்றாம் இரதத்தில் வெள்ளைக் குதிரைகளும், நான்காம் இரதத்தில் புள்ளிபுள்ளியான சிவப்புக் குதிரைகளும் பூட்டியிருந்தன. 4 நான் என்னோடே பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன். 5 அந்தத் தூதன் எனக்குப் பிரதியுத்தரமாக: இவைகள் சர்வலோகத்துக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நாலு ஆவிகள் என்றார். 6 ஒன்றில் பூட்டப்பட்டிருந்த கறுப்புக்குதிரைகள் வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போயின; வெண்மையான குதிரைகள் அவைகளின் பின்னாலே புறப்பட்டுப்போயின; புள்ளிபுள்ளியான குதிரைகள் தென்தேசத்துக்குப் புறப்பட்டுப்போயின. 7 சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரியும்படி கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய்ப் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன. 8 பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு: பார், வடதேசத்துக்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்திபண்ணிற்று என்று என்னோடே சொன்னார். 9 பின்பு கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 10 சிறையிருப்பின் மனுஷராகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் குமாரனாகிய யோசியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, 11 அங்கே அவர்கள் கையிலே வெள்ளியையும் பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச் செய்வித்து, யோத்சதாக்கின் குமாரனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய சிரசிலே வைத்து, 12 அவனோடே சொல்லவேண்டியது: சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், இதோ, ஒரு புருஷன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார். 13 அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும். 14 இந்தக் கிரீடங்களோவென்றால், கர்த்தருடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் குமாரனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக. 15 தூரத்திலுள்ளவர்கள் வந்து கர்த்தருடைய ஆலயத்தைக் கூட இருந்து கட்டுவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிந்துகொள்வீர்கள்; நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்தைக் கேட்டு நடந்தீர்களானால் இது நிறைவேறும் என்று சொல் என்றார்.

சகரியா 7

1 தரியு ராஜா அரசாண்ட நாலாம் வருஷம், கிஸ்லே என்னும் ஒன்பதாம் மாதம், நாலாந்தேதியிலே, சகரியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று. 2 கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும், 3 நாங்கள் இத்தனை வருஷம்வரையிலே செய்ததுபோல ஐந்தாம் மாதத்திலே அழுது ஒடுக்கத்திலிருக்கவேண்டுமோ என்று சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலிருக்கும் ஆசாரியரிடத்திலும் தீர்க்கதரிசிகளிடத்திலும் கேட்கவும், சரேத்சேரும் ரெகெம்மெலேகும் அவனுடைய மனுஷரும் தேவனுடைய ஆலயத்துக்கு அனுப்பப்பட்டார்கள். 4 அப்பொழுது சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 5 நீ தேசத்தின் எல்லா ஜனத்தோடும் ஆசாரியர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால், நீங்கள் இந்த எழுபது வருஷமாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபவாசம்பண்ணி துக்கங்கொண்டாடினபோது நீங்கள் எனக்கென்றுதானா உபவாசம்பண்ணினீர்கள்? 6 நீங்கள் புசிக்கிறபோதும் குடிக்கிறபோதும் உங்களுக்கென்றல்லவா புசிக்கிறீர்கள்? உங்களுக்கென்றல்லவா குடிக்கிறீர்கள்? 7 எருசலேமும் அதைச் சுற்றிலும் இருந்த பட்டணங்களும் குடிநிறைந்து சுகமாயிருந்த காலத்திலும் தெற்கு நாடும் சமபூமியும் குடியேறியிருந்த காலத்திலும் முன்னிருந்த தீர்க்கதரிசிகளைக்கொண்டு கர்த்தர் கூறின வார்த்தைகள் இவைகள் அல்லவோ என்று சொல் என்றார். 8 பின்பு கர்த்தருடைய வார்த்தை சகரியாவுக்கு உண்டாகி, அவர்: 9 சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து, 10 விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும் இருங்கள் என்றார். 11 அவர்களோ கவனிக்க மனதில்லாமல், தங்கள் தோளை முரட்டுத்தனமாய் விலக்கி, கேளாதபடிக்குத் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டார்கள். 12 வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைரமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று. 13 ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படிக் கேளாமற்போனார்களோ, அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேளாமலிருந்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 14 அவர்கள் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைப் பறக்கடித்தேன்; அதினால் அவர்கள் பின்வைத்துப்போன தேசம் போக்குவரத்தில்லாமல் பாழாய்ப்போயிற்று; அவர்கள் இன்பமான தேசத்தைப் பாழாய்ப்போகப் பண்ணினார்கள் என்றார்.

சகரியா 8

1 சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை உண்டாகி, அவர்: 2 நான் சீயோனுக்காக கடும் வைராக்கியங்கொண்டேன்; அதற்காக மகா உக்கிரமான வைராக்கியங்கொண்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 3 நான் சீயோனிடத்தில் திரும்பி, எருசலேமின் நடுவிலே வாசம்பண்ணுவேன்; எருசலேம் சத்திய நகரம் என்றும், சேனைகளுடைய கர்த்தரின் பர்வதம் பரிசுத்த பர்வதம் என்றும் அழைக்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார். 4 திரும்பவும் எருசலேமின் வீதிகளில் முதிர்வயதினாலே தங்கள் கைகளில் கோலைப்பிடித்து நடக்கிற கிழவரும் கிழவிகளும் குடியிருப்பார்கள். 5 நகரத்தின் தெருக்களிலே விளையாடுகிற ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் அதின் வீதிகளில் நிறைந்திருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 6 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: அது இந்த ஜனத்தில் மீதியானவர்களின் பார்வைக்கு இந்நாட்களில் ஆச்சரியமாயிருந்தாலும், என் பார்வைக்கும் ஆச்சரியமாயிருக்குமோ என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 7 இதோ, கிழக்குதேசத்திலும் மேற்கு தேசத்திலுமிருந்து என் ஜனங்களை நான் இரட்சித்து, 8 அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்குத் தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 9 சேனைகளுடைய கர்த்தரின் வீடாகிய ஆலயம் கட்டப்படும்படிக்கு அதின் அஸ்திபாரங்கள் போடப்பட்ட நாள்முதற் கொண்டிருக்கிற தீர்க்கதரிசிகளின் வாயினால் இந்த வார்த்தைகளை இந்நாட்களில் கேட்டுவருகிறவர்களே, உங்கள் கைகள் திடப்படக்கடவது என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 10 இந்நாட்களுக்கு முன்னே மனுஷனுடைய வேலையால் பலனுமில்லை, மிருகஜீவனுடைய வேலையால் பலனுமில்லை; போகிறவனுக்கும் வருகிறவனுக்கும் நெருக்கிடையினிமித்தம் சமாதானமுமில்லை; எல்லா மனுஷரையும் ஒருவரையொருவர் விரோதிக்கச்செய்தேன். 11 இப்போதோ இந்த ஜனத்தில் மீதியானவர்களுக்கு நான் முந்தினநாட்களில் இருந்ததுபோல இருக்கமாட்டேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 12 விதைப்புச் சமாதானமுள்ளதாயிருக்கும்; திராட்சச்செடி தன் கனியைத் தரும்; பூமி தன் பலனைத் தரும்; வானம் தன் பனியைத் தரும்; இந்த ஜனத்தில் மீதியானவர்கள் இதையெல்லாம் சுதந்தரிக்கக் கட்டளையிடுவேன். 13 சம்பவிப்பதென்னவென்றால்: யூதா வம்சத்தாரே, இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் புறஜாதிகளுக்குள்ளே சாபமாயிருந்ததுபோலவே, ஆசீர்வாதமாயிருக்கும்படி நான் உங்களை இரட்சிப்பேன்; பயப்படாதேயுங்கள், உங்கள் கைகள் திடப்படக்கடவது. 14 சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: உங்கள் பிதாக்கள் எனக்குக் கோபமூட்டினபோது நான் உங்களைத் தண்டிக்க நினைத்து, மனம் மாறாமல் இருந்ததுபோல, 15 இந்நாட்களில் எருசலேமுக்கும் யூதாவுக்கும் நன்மைசெய்யும்படித் திரும்ப நினைத்தேன்; பயப்படாதேயுங்கள். 16 நீங்கள் செய்யவேண்டிய காரியங்கள் என்னவென்றால்: அவனவன் பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; உங்கள் வாசல்களில் சத்தியத்துக்கும் சமாதானத்துக்கும் ஏற்க நியாயந்தீருங்கள். 17 ஒருவனும் பிறனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும், பொய்யாணையின்மேல் பிரியப்படாமலும் இருங்கள்; இவைகளெல்லாம் நான் வெறுக்கிற காரியங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 18 சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்: 19 நாலாம் மாதத்தின் உபவாசமும், ஐந்தாம் மாதத்தின் உபவாசமும், ஏழாம் மாதத்தின் உபவாசமும், பத்தாம் மாதத்தின் உபவாசமும், யூதா வம்சத்தாருக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் நல்ல பண்டிகைகளாகவும் மாறிப்போகும்; ஆகையால் சத்தியத்தையும் சமாதானத்தையும் சிநேகியுங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 20 இன்னும் ஜனங்களும் அநேகம் பட்டணங்களின் குடிகளும் வருவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 21 ஒரு பட்டணத்தின் குடிகள் மறுபட்டணத்தின் குடிகளிடத்தில் போய், நாம் கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் சேனைகளின் கர்த்தரைத் தேடவும் தீவிரித்துப்போவோம் வாருங்கள்; நாங்களும் போவோம் என்று சொல்லுவார்கள். 22 அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் வருவார்கள். 23 அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

சகரியா 9

1 ஆதிராக் தேசத்துக்கு விரோதமானதும், தமஸ்குவின்மேல் வந்து தங்குவதுமான கர்த்தருடைய வார்த்தையாகிய பாரம்; மனுஷரின் கண்களும் இஸ்ரவேலுடைய சகல கோத்திரங்களின் கண்களும் கர்த்தரை நோக்கிக்கொண்டிருக்கும். 2 ஆமாத்தும், மிகவும் ஞானமுள்ள தீருவும் சீதோனும் அதின் எல்லைக்குள்ளாயிருக்கும். 3 தீரு தனக்கு அரணைக்கட்டி, தூளைப்போல் வெள்ளியையும், வீதிகளின் சேற்றைப்போல் பசும்பொன்னையும் சேர்த்துவைத்தது. 4 இதோ, ஆண்டவர் அதைத் தள்ளிவிட்டு, சமுத்திரத்தில் அதின் பலத்தை முறித்துப்போடுவார்; அது அக்கினிக்கு இரையாகும். 5 அஸ்கலோன் அதைக் கண்டு பயப்படும், காத்சாவும் அதைக்கண்டு மிகவும் துக்கிக்கும், எக்ரோனும் தன் நம்பிக்கை அற்றுப்போனபடியால் மிகவும் பிரலாபிக்கும்; காத்சாவில் ராஜா அழிந்துபோவான்; அஸ்கலோன் குடியற்றிருக்கும். 6 அஸ்தோத்தில் வேசிப்பிள்ளைகள் வாசம்பண்ணுவார்கள்; நான் பெலிஸ்தரின் கர்வத்தை அழிப்பேன். 7 அவனுடைய இரத்தத்தை அவன் வாயிலிருந்தும், அவனுடைய அருவருப்புகளை அவன் பல்லுகளின் நடுவிலிருந்தும் நீக்கிப்போடுவேன்; அவனோ நம்முடைய தேவனுக்கென்று மீதியாக வைக்கப்பட்டு, யூதாவிலே பிரபுவைப்போல இருப்பான்; எக்ரோன் எபூசியனைப்போல இருப்பான். 8 சேனையானது புறப்படும்போதும், திரும்பி வரும்போதும், என் ஆலயம் காக்கப்படும்படி அதைச் சுற்றிலும் பாளயம்போடுவேன்; இனி ஒடுக்குகிறவன் அவர்களிடத்தில் கடந்துவருவதில்லை; அதை என் கண்களினாலே பார்த்துக்கொண்டிருக்கிறேன். 9 சீயோன் குமாரத்தியே, மிகவும் களிகூரு; எருசலேம் குமாரத்தியே, கெம்பீரி; இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார். 10 எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப்பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும்; அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும். 11 உனக்கு நான் செய்வதென்னவென்றால், தண்ணீரில்லாத குழியிலே அடைபட்டிருக்கிற உன்னுடையவர்களை நான் உன் உடன்படிக்கையின் இரத்தத்தினாலே விடுதலைபண்ணுவேன். 12 நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன். 13 நான் எனக்கென்று யூதாவை நாணேற்றி, எப்பிராயீமிலே வில்லை நிரப்பி, சீயோனே, உன் புத்திரரைக் கிரேக்குதேசப் புத்திரருக்கு விரோதமாக எழுப்பி, உன்னைப் பராக்கிரமசாலியின் பட்டயத்துக்கு ஒப்பாக்குவேன். 14 அவர்கள் பட்சத்தில் கர்த்தர் காணப்படுவார்; அவருடைய அம்பு மின்னலைப்போலப் புறப்படும்; கர்த்தராகிய ஆண்டவர் எக்காளம் ஊதி, தென்திசைச் சுழல்காற்றுகளோடே நடந்துவருவார். 15 சேனைகளின் கர்த்தர் அவர்களைக் காப்பாற்றுவார்; அவர்கள் பட்சித்து, கவண்கற்களால் கீழ்ப்படுத்திக்கொள்வார்கள்; அவர்கள் குடித்துக் களிப்பினால் ஆரவாரிப்பார்கள்; பானபாத்திரங்கள்போலவும் பலிபீடத்தின் கோடிகளைப்போலவும் நிறைந்திருப்பார்கள். 16 அந்நாளில் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனமான மந்தையாகிய அவர்களை இரட்சிப்பார்; அவர்கள் அவருடைய தேசத்தில் ஏற்றப்பட்ட கொடிகளின் கிரீடத்தில் பதிந்திருப்பார்கள். 17 அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய சௌந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபரையும், புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும்.

சகரியா 10

1 பின்மாரிகாலத்து மழையைக் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொள்ளுங்கள்; அப்பொழுது கர்த்தர் மின்னல்களை உண்டாக்கி, வயல்வெளியில் அவரவருக்குப் பயிருண்டாக அவர்களுக்கு மழையைக் கட்டளையிடுவார். 2 சுரூபங்கள் அபத்தமானதைச் சொல்லிற்று; குறிசொல்லுகிறவர்கள் பொய்யைத் தரித்தார்கள்; சொப்பனக்காரர் வீணானதைச் சொல்லி, வியர்த்தமாகத் தேற்றரவுபண்ணினார்கள்; ஆகையால் ஜனங்கள் ஆடுகளைப்போலச் சிதறி, மேய்ப்பனில்லாததினால் சிறுமைப்பட்டார்கள். 3 மேய்ப்பருக்கு விரோதமாக என் கோபம் மூண்டது, கடாக்களைத் தண்டித்தேன்; சேனைகளின் கர்த்தர் யூதா வம்சத்தாராகிய தமது மந்தையை விசாரித்து, அவர்களை யுத்தத்திலே தமது சிறந்த குதிரையாக நிறுத்துவார். 4 அவர்களிலிருந்து கோடிக்கல்லும், அவர்களிலிருந்து கூடாரமுளையும், அவர்களிலிருந்து யுத்தவில்லும் வரும்; அவர்களிலிருந்து ஆளுகிற யாவரும் ஏகமாய்ப் புறப்படுவார்கள். 5 அவர்கள் யுத்தத்திலே தங்கள் சத்துருக்களை வீதிகளின் சேற்றில் மிதிக்கிற பராக்கிரமசாலிகளைப்போல இருந்து யுத்தம்பண்ணுவார்கள்; கர்த்தர் அவர்களோடேகூட இருப்பார்; குதிரைகளின்மேல் ஏறிவருகிறவர்கள் வெட்கப்படுவார்கள். 6 நான் யூதா வம்சத்தாரைப் பலப்படுத்தி, யோசேப்பு வம்சத்தாரை இரட்சித்து, அவர்களைத் திரும்ப நிலைக்கப்பண்ணுவேன்; நான் அவர்களுக்கு இரங்கினேன்; அவர்கள் என்னால் ஒருக்காலும் தள்ளிவிடப்படாதவர்களைப்போல் இருப்பார்கள்; நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர், நான் அவர்களுக்குச் செவிகொடுப்பேன். 7 எப்பிராயீமர் பராக்கிரமரைப்போல இருப்பார்கள்; மதுபானத்தால் களிப்பதுபோல, அவர்களுடைய இருதயம் களிக்கும்; அவர்களுடைய பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழுவார்கள்; அவர்கள் இருதயம் கர்த்தருக்குள் களிகூரும். 8 நான் அவர்களைப் பார்த்துப் பயில்போட்டு அவர்களைக் கூட்டிக்கொள்ளுவேன்; அவர்களை மீட்டுக்கொண்டேன்; அவர்கள் பெருகியிருந்ததுபோலவே பெருகிப்போவார்கள். 9 நான் அவர்களை ஜனங்களுக்குள்ளே இறைத்தபின்பு, அவர்கள் தூரதேசங்களிலே என்னை நினைத்து தங்கள் பிள்ளைகளோடுங்கூடப் பிழைத்துத் திரும்புவார்கள். 10 நான் அவர்களை எகிப்துதேசத்திலிருந்து திரும்பிவரப்பண்ணி, அவர்களை அசீரியாவிலிருந்து கூட்டிக்கொண்டு, அவர்களைக் கீலேயாத் தேசத்துக்கும் லீபனோனுக்கும் வரப்பண்ணுவேன்; அவர்களுக்கு இடம் போதாமற்போகும். 11 இடுக்கமென்கிற சமுத்திரத்தைக் கடக்கையில் அவர் சமுத்திரத்தின் அலைகளை அடிப்பார்; அப்பொழுது நதியின் ஆழங்கள் எல்லாம் வறண்டுபோகும்; அசீரியாவின் கர்வம் தாழ்த்தப்படும், எகிப்தின் கொடுங்கோல் விலகிப்போகும். 12 நான் அவர்களைக் கர்த்தருக்குள் பலப்படுத்துவேன்; அவர்கள் அவருடைய நாமத்திலே நடந்துகொள்ளுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

சகரியா 11

1 லீபனோனே, அக்கினி உன் கேதுருமரங்களைப் பட்சிக்கும்படி உன் வாசல்களைத் திற. 2 தேவதாரு விருட்சங்களே, புலம்புங்கள்; கேதுருமரங்கள் விழுந்ததே; பிரபலமானவைகள் பாழாக்கப்பட்டன. பாசானின் கர்வாலிமரங்களே, புலம்புங்கள்; அரணுள்ள சோலை கீழே தள்ளப்பட்டது. 3 மேய்ப்பர்களின் மகிமை அழிந்துபோனபடியால், அவர்கள் அலறுகிற சத்தம் கேட்கப்படுகிறது; யோர்தானின் பெருமை அழிந்துபோனபடியால், பாலசிங்கங்கள் கர்ச்சிக்கிற சத்தம் கேட்கப்படுகிறது. 4 என் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், கொலையுண்கிற ஆடுகளை மேய்க்கக்கடவாய். 5 அவைகளை உடையவர்கள், அவைகளைக் கொன்றுபோட்டுத் தங்களுக்குக் குற்றமில்லையென்று எண்ணுகிறார்கள். அவைகளை விற்கிறவர்கள், கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நாங்கள் ஐசுவரியமுள்ளவர்களானோம் என்கிறார்கள்; அவைகளை மேய்க்கிறவர்கள், அவைகள்மேல் இரக்கம்வைக்கிறதில்லை. 6 நான் இனித் தேசத்துக் குடிகளின்மேல் இரக்கம்வையாமல் மனுஷரில் யாவரையும் அவனவனுடைய அயலான் கையிலும், அவனவனுடைய ராஜாவின் கையிலும் அகப்படப்பண்ணுவேன்; அவர்கள் தேசத்தை அழித்தும், நான் இவர்களை அவர்கள் கைக்குத் தப்புவிப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார். 7 கொலையுண்கிற மந்தையாகிய சிறுமைப்பட்ட உங்களை நான் மேய்ப்பேன்; நான் இரண்டு கோல்களை எடுத்து, ஒன்றிற்கு அநுக்கிரகம் என்றும், ஒன்றிற்கு நிக்கிரகம் என்றும் பேரிட்டு மந்தையை மேய்த்து, 8 ஒரே மாதத்திலே மூன்று மேய்ப்பரையும் அதம்பண்ணினேன்; என் ஆத்துமா அவர்களை அரோசித்தது; அவர்கள் ஆத்துமா என்னையும் வெறுத்தது. 9 இனி நான் உங்களை மேய்ப்பதில்லை; சாகிறது சாகட்டும், அதமாகிறது அதமாகட்டும்; மீதியானவைகளோவென்றால், ஒன்றின் மாம்சத்தை ஒன்று தின்னக்கடவது என்று நான் சொல்லி, 10 அநுக்கிரகம் என்னப்பட்ட என் கோலை எடுத்து, நான் அந்த ஜனங்களெல்லாரோடும் பண்ணியிருந்த என் உடன்படிக்கை அற்றுப்போகும்படிக்கு அதை முறித்துப்போட்டேன். 11 அந்நாளிலே அது அற்றுப்போயிற்று; அப்படியே மந்தையில் எனக்குக் காத்திருந்த சிறுமைப்பட்டவைகள் அது கர்த்தருடைய வார்த்தையென்று அறிந்துகொண்டன. 12 உங்கள் பார்வைக்கு நன்றாய்க் கண்டால், என் கூலியைத் தாருங்கள்; இல்லாவிட்டால் இருக்கட்டும் என்று அவர்களோடே சொன்னேன்; அப்பொழுது எனக்குக் கூலியாக முப்பது வெள்ளிக்காசை நிறுத்தார்கள். 13 கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து, அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன். 14 நான் யூதாவுக்கும் இஸ்ரவேலுக்கும் இருக்கிற சகோதரக்கட்டை அற்றுப்போகப்பண்ணும்படிக்கு, நிக்கிரகம் என்னப்பட்ட என் இரண்டாம் கோலையும் முறித்தேன். 15 கர்த்தர் என்னை நோக்கி: நீ மதியற்ற ஒரு மேய்ப்பனுடைய ஆயுதங்களை இன்னும் எடுத்துக்கொள். 16 இதோ, நான் தேசத்திலே ஒரு மேய்ப்பனை எழும்பப்பண்ணுவேன்; அவன் அதமாகிறவைகளைப் பராமரிக்காமலும், சிதறுண்டதைத் தேடாமலும், நொறுங்குண்டதைக் குணமாக்காமலும், இளைத்திருக்கிறதை ஆதரிக்காமலும், கொழுத்ததின் மாம்சத்தைத் தின்று, அவைகளுடைய குளம்புகளை உடைத்துப்போடுவான். 17 மந்தையைக் கைவிடுகிற அபத்தமான மேய்ப்பனுக்கு ஐயோ! பட்டயம் அவன் புயத்தின்மேலும் அவன் வலதுகண்ணின்மேலும் வரும்; அவன் புயமுழுதும் சூம்பிப்போம்; அவன் வலதுகண் முற்றிலும் இருள் அடையும் என்றார்.

சகரியா 12

1 இஸ்ரவேலைக்குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம்; வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: 2 இதோ, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் நான் எருசலேமைத் தத்தளிப்பின் பாத்திரமாக்குகிறேன்; எருசலேமுக்கு விரோதமாய்ப் போடப்படும் முற்றிகையிலே யூதாவும் அப்படியேயாகும். 3 அந்நாளிலே நான் எருசலேமைச் சகல ஜனங்களுக்கும் பாரமான கல்லாக்குவேன்; அதைக் கிளப்புகிற யாவரும் சிதைக்கப்படுவார்கள்; பூமியிலுள்ள ஜாதிகளெல்லாம் அதற்கு விரோதமாய்க் கூடிக்கொள்வார்கள். 4 அந்நாளிலே நான் குதிரைகளுக்கெல்லாம் திகைப்பையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களுக்கெல்லாம் புத்திமயக்கத்தையும் வரப்பண்ணி, யூதாவம்சத்தின்மேல் என் கண்களைத் திறந்துவைத்து, ஜனங்களுடைய எல்லாக் குதிரைகளுக்கும் குருட்டாட்டத்தை உண்டுபண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 5 எருசலேமின் குடிகள், சேனைகளின் கர்த்தராகிய தங்கள் தேவனுடைய துணையினால் எங்களுக்குப் பெலனானவர்கள் என்று அப்போது யூதாவின் தலைவர் தங்கள் இருதயத்திலே சொல்லுவார்கள். 6 அந்நாளிலே யூதாவின் தலைவரை விறகுகளுக்குள்ளே எரிகிற அக்கினி அடுப்புக்கும், வைக்கோல் கட்டுகளுக்குள்ளே எரிகிற தீவட்டிக்கும் ஒப்பாக்குவேன்; அவர்கள் வலதுபுறமும் இடதுபுறமுமாகப் புறப்பட்டு, சுற்றிலும் இருக்கிற எல்லா ஜனங்களையும் பட்சிப்பார்கள்; எருசலேம் திரும்பவும் தன் ஸ்தானமாகிய எருசலேமிலே குடியேற்றப்பட்டிருக்கும். 7 தாவீது வம்சத்தாரின் மகிமையும், எருசலேமின் குடிகளுடைய மகிமையும், யூதாவின்மேல் தன்னை உயர்த்தாதபடிக்கு, கர்த்தர் யூதாவின் கூடாரங்களை முதல்முதல் இரட்சிப்பார். 8 அந்நாளிலே கர்த்தர் எருசலேமின் குடிகளைக் காப்பாற்றுவார்; அவர்களில் தள்ளாடினவன் அந்நாளிலே தாவீதைப்போல இருப்பான்; தாவீது குடும்பத்தார் அவர்களுக்கு முன்பாகத் தேவனைப்போலும் கர்த்தருடைய தூதனைப்போலும் இருப்பார்கள். 9 அந்நாளிலே எருசலேமுக்கு விரோதமாய் வருகிற எல்லா ஜாதிகளையும் அழிக்கப் பார்ப்பேன். 10 நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்; அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். 11 அந்நாளிலே மெகிதோன் பட்டணத்துப் பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத்ரிம்மோனின் புலம்பலைப்போல எருசலேமின் புலம்பல் பெரிதாயிருக்கும். 12 தேசம் புலம்பிக்கொண்டிருக்கும்; ஒவ்வொரு வம்சமும் தனித்தனியாகப் புலம்பும்; தாவீது குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், நாத்தான் குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், 13 லேவி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், சீமேயி குடும்பத்தார் தனியேயும், அவர்கள் ஸ்திரீகள் தனியேயும், 14 மற்றுமுண்டான சகல குடும்பங்களிலும் ஒவ்வொரு குடும்பத்தின் மனுஷர் தனித்தனியேயும் அவர்களுடைய ஸ்திரீகள் தனித்தனியேயும் புலம்புவார்கள்.

சகரியா 13

1 அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும். 2 அந்நாளிலே நான் விக்கிரகங்களின்பேரும் தேசத்தில் இராதபடிக்கு அழிப்பேன்; அவைகள் இனி நினைக்கப்படுவதில்லை; தரிசனம் சொல்லுகிறவர்களையும், அசுத்த ஆவியையும் தேசத்திலிருந்து போய்விடவும் பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 3 இனி ஒருவன் தரிசனம் சொன்னால், அவனைப்பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவனை நோக்கி: நீ கர்த்தருடைய நாமத்தைக்கொண்டு பொய்பேசுகிறபடியால் நீ உயிரோடிருக்கப்படாது என்று சொல்லி, அவனைப் பெற்ற அவன் தகப்பனும் அவன் தாயும் அவன் தரிசனம் சொல்லும்போது அவனைக் குத்திப்போடுவார்கள். 4 அந்நாளிலே தரிசனம் சொல்லுகிற அவனவன் தான் சொன்ன தரிசனத்தினால் வெட்கப்பட்டு, பொய்சொல்லும்படிக்கு இனி மயிர்ப்போர்வையைப் போர்த்துக்கொள்ளாமல், 5 நான் தரிசனம் சொல்லுகிறவன் அல்ல, நான் நிலத்தைப் பயிரிடுகிறவன்; என் சிறுவயதுமுதல் ஒருவன் என்னை வேலைகொண்டான் என்பான். 6 அப்பொழுது ஒருவன் அவனை நோக்கி: உன் கைகளில் இருக்கிற இந்த வடுக்கள் ஏதென்று கேட்டால், என் சிநேகிதரின் வீட்டிலே காயப்பட்டதினால் உண்டானவைகள் என்பான். 7 பட்டயமே, என் மேய்ப்பன்மேலும் என் தோழனாகிய புருஷன்மேலும் எழும்பு என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; மேய்ப்பனை வெட்டு, அப்பொழுது ஆடுகள் சிதறிப்போகும்; ஆனாலும் என் கரத்தைச் சிறுவர்மேல் திரும்ப வைப்பேன். 8 தேசமெங்கும் சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், அதில் இருக்கிற இரண்டு பங்கு மனுஷர் சங்கரிக்கப்பட்டு மாண்டுபோவார்கள்; மூன்றாம் பங்கோ அதில் மீதியாயிருக்கும். 9 அந்த மூன்றாம் பங்கை நான் அக்கினிக்குட்படப்பண்ணி, வெள்ளியை உருக்குகிறதுபோல அவர்களை உருக்கி, பொன்னைப் புடமிடுகிறதுபோல அவர்களைப் புடமிடுவேன்; அவர்கள் என் நாமத்தைத் தொழுதுகொள்வார்கள்; நான் அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்பேன்; இது என் ஜனமென்று நான் சொல்லுவேன், கர்த்தர் என் தேவன் என்று அவர்கள் சொல்லுவார்கள்.

சகரியா 14

1 இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும். 2 எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை. 3 கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார். 4 அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். 5 அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள். 6 அந்நாளில் வெளிச்சம் இல்லாமல், ஒருவேளை பிரகாசமும் ஒருவேளை மப்புமாயிருக்கும். 7 ஒருநாள் உண்டு, அது கர்த்தருக்குத் தெரிந்தது; அது பகலுமல்ல இரவுமல்ல; ஆனாலும் சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும். 8 அந்நாளிலே ஜீவத்தண்ணீர்கள் எருசலேமிலிருந்து புறப்பட்டு, பாதி கிழக்குச் சமுத்திரத்துக்கும், பாதி மேற்குச் சமுத்திரத்துக்கும் போய், மாரிகாலத்துக்கும் கோடைகாலத்துக்கும் இருக்கும். 9 அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும். 10 தேசமெல்லாம் கேபாதொடங்கி எருசலேமுக்குத் தெற்கே இருக்கிற ரிம்மோன்வரைக்கும் சமபூமியாகத் திருத்தப்படும்; எருசலேமோ உயர்ந்ததாகி, தன் ஸ்தானத்திலே பென்யமீன் வாசல்தொடங்கி முதல்வாசலென்கிற ஸ்தலமட்டும் கோடிவாசல்வரைக்கும், அனானெயேல் கோபுரம் துவக்கி ராஜாவின் திராட்ச ஆலைகள்மட்டும் குடியேற்றப்பட்டிருக்கும். 11 அதிலே ஜனங்கள் வாசம்பண்ணுவார்கள்; இனிச் சங்கரிப்பில்லாமல் எருசலேம் சுகமாய்த் தங்கியிருக்கும். 12 எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணின எல்லா ஜனங்களையும் கர்த்தர் வாதிக்கும் வாதையாவது: அவர்கள் காலூன்றி நிற்கையிலும் அவர்களுடைய சதை அழிந்துபோகும்; அவர்கள் கண்கள் தங்கள் குழிகளிலே கெட்டுப்போகும்; அவர்கள் நாவு அவர்கள் வாயிலே அழுகிப்போகும். 13 அந்நாளிலே கர்த்தரால் பெரிய கலக்கம் அவர்களுக்குள் உண்டாகும்; அவனவன் தன் தன் அயலானின் கையைப் பிடிப்பான்; அவனவனுடைய கை அவனவன் அயலானுடைய கைக்கு விரோதமாக எழும்பும். 14 யூதாவும் எருசலேமிலே யுத்தம்பண்ணும்; அப்பொழுது சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளுடைய ஆஸ்தியாகிய பொன்னும் வெள்ளியும் வஸ்திரங்களும் மகா திரளாகக் கூட்டப்படும். 15 அந்தப் பாளையங்களில் இருக்கும் குதிரைகள் கோவேறு கழுதைகள் ஒட்டகங்கள் கழுதைகள் முதலான எல்லா மிருகஜீவன்களுக்கும் வரும் வாதையும், அந்த வாதையைப் போலவே இருக்கும். 16 பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள். 17 அப்பொழுது பூமியின் வம்சங்களில் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ள எருசலேமுக்கு வராதவர்கள் எவர்களோ அவர்கள்மேல் மழை வருஷிப்பதில்லை. 18 மழை வருஷிக்காத எகிப்தின் வம்சம் வராமலும் சேராமலும் போனால், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கவராத ஜாதிகளைக் கர்த்தர் வாதிக்கும் வாதையே அவர்கள்மேலும் வரும். 19 இது எகிப்தியருடைய பாவத்துக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்க வராத சகல ஜாதிகளுடைய பாவத்துக்கும் வரும் ஆக்கினை. 20 அந்நாளிலே குதிரைகளின் மணிகளிலே கர்த்தருக்குப் பரிசுத்தம் என்னும் விலாசம் எழுதியிருக்கும்; கர்த்தருடைய ஆலயத்திலுள்ள பானைகள் பலிபீடத்துக்கு முன்பாக இருக்கிற பாத்திரங்களைப் போலிருக்கும். 21 அப்பொழுது எருசலேமிலும் யூதாவிலுமுள்ள எல்லாப் பானைகளும் சேனைகளின் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருக்கும்; பலியிடுகிற யாவரும் வந்து அவைகளில் எடுத்து, அவைகளில் சமைப்பார்கள்; அந்நாள்முதல் சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலே யாதொரு கானானியனும் இருப்பதில்லை.

மல்கியா 1

1 மல்கியாவைக்கொண்டு கர்த்தர் இஸ்ரவேலுக்குச் சொன்ன வார்த்தையின் பாரம். 2 நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரன் அல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன். 3 ஏசாவையோ நான் வெறுத்தேன்; அவனுடைய மலைகளைப் பாழும், அவனுடைய சுதந்தரத்தை வனாந்தரத்திலுள்ள வலுசர்ப்பங்களின் தாவும் ஆக்கினேன். 4 ஏதோமியர்: நாம் எளிமைப்பட்டோம்; ஆனாலும் பாழானவைகளைத் திரும்பக் கட்டுவோம் என்று சொல்லுகிறார்கள்; அதற்குக் கர்த்தர்: அவர்கள் கட்டுவார்கள், நான் இடிப்பேன். அவர்கள் துன்மார்க்கத்தின் எல்லையென்றும், கர்த்தர் என்றைக்கும் சினம் வைக்கிற ஜனமென்றும் சொல்லப்படுவார்கள் என்கிறார். 5 இதை உங்கள் கண்கள் காணும். அப்பொழுது நீங்கள்: கர்த்தர் இஸ்ரவேலுடைய எல்லை துவக்கி மகிமைப்படுத்தப்படுவார் என்பீர்கள். 6 குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம்பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டைபண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார்; அதற்கு நீங்கள்: உமது நாமத்தை எதினாலே அசட்டைபண்ணினோம் என்கிறீர்கள். 7 என் பீடத்தின்மேல் அசுத்தமான அப்பத்தைப் படைக்கிறதினாலேயே; ஆனாலும் உம்மை எதினாலே அசுத்தப்படுத்தினோம் என்கிறீர்கள்; கர்த்தருடைய பந்தி எண்ணமற்றுப்போயிற்றென்று நீங்கள் சொல்லுகிறதினாலேயே. 8 நீங்கள் கண் ஊனமானதைப் பலியிடக்கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல, நீங்கள் காலூனமானதையும் நசல் பிடித்ததையும் கொண்டுவந்தாலும் அது பொல்லாப்பல்ல என்கிறீர்களே; அதை நீ உன் அதிபதிக்குச் செலுத்து, அவன் உன்மேல் பிரியமாயிருப்பானோ? உன் முகத்தைப் பார்ப்பானோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார். 9 இப்போதும் தேவனுடைய சமுகத்தை நோக்கிக் கெஞ்சுங்கள்; அப்பொழுது நம்மேல் இரங்குவார்; இது உங்களாலே வந்த காரியம், அவர் உங்களை அங்கீகரிப்பாரோ என்று சேனைகளின் கர்த்தர் கேட்கிறார். 10 உங்களில் எவன் கூலியில்லாமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் அக்கினியைக் கூலியில்லாமல் கொளுத்தவுமாட்டீர்கள்; உங்கள்பேரில் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல. 11 சூரியன் உதிக்கிற திசைதொடங்கி, அது அஸ்தமிக்கிற திசைவரைக்கும், என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும்; எல்லா இடங்களிலும் என் நாமத்துக்குத் தூபமும் சுத்தமான காணிக்கையும் செலுத்தப்படும்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே மகத்துவமாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 12 நீங்களோ கர்த்தருடைய பந்தி அசுத்தமானது என்றும், அதின் ஆகாரமாகிய அதின் பலன் அற்பமானது என்றும் சொல்லுகிறதினாலே, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறீர்கள். 13 இதோ, இது எவ்வளவு வருத்தமென்று சொல்லி, அதை ஒரு திரணமாய்ப் பேசி, பீறுண்டதையும் கால் ஊனமானதையும் நசல்கொண்டதையும் கொண்டுவந்து காணிக்கையாகச் செலுத்துகிறீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ என்று கர்த்தர் கேட்கிறார். 14 தன் மந்தையில் கடா இருக்கையில் கெட்டுப்போனதை ஆண்டவருக்கு நேர்ந்துகொண்டு பலியிடுகிற கபடஸ்தன் சபிக்கப்பட்டவன்; என் நாமம் ஜாதிகளுக்குள்ளே பயங்கரமாயிருக்கும்; நான் மகத்துவமான ராஜா என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

மல்கியா 2

1 இப்போதும் ஆசாரியர்களே, இந்தக் கட்டளை உங்களுக்குரியது. 2 நீங்கள் கேளாமலும் என் நாமத்துக்கு மகிமையைச் செலுத்தும்படி இதைச் சிந்தியாமலுமிருந்தால், நான் உங்களுக்குள்ளே சாபத்தை அனுப்பி, உங்கள் ஆசீர்வாதங்களையும் சாபமாக்குவேன்; ஆம், நீங்கள் அதைச் சிந்தியாமற்போனதினால் அவைகளைச் சபித்தேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 3 இதோ, நான் உங்களுடைய பயிரைக் கெடுத்து, உங்கள் பண்டிகைகளின் சாணியையே உங்கள் முகங்களில் இறைப்பேன்; அதனோடுகூட நீங்களும் தள்ளுபடியாவீர்கள். 4 லேவியோடேபண்ணின என் உடன்படிக்கை நிலைத்திருக்கும்படிக்கு இந்தக் கட்டளையை உங்களிடத்திற்கு அனுப்பினேன் என்கிறதை அப்பொழுது அறிந்துகொள்வீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 5 அவனோடே பண்ணின என் உடன்படிக்கை ஜீவனும் சமாதானமுமாக இருந்தது; அவன் எனக்குப் பயப்படும் பயத்தோடே இருக்கவேண்டுமென்று, இவைகளை அவனுக்குக் கட்டளையிட்டேன்; அப்படியே அவன் என் நாமத்துக்குப் பயந்தும் இருந்தான். 6 சத்தியவேதம் அவன் வாயில் இருந்தது; அவனுடைய உதடுகளில் அநியாயம் காணப்படவில்லை; அவன் என்னோடே சமாதானமும் யதார்த்தமுமாய்ச் சஞ்சரித்து, அநேகரை அக்கிரமத்தினின்று திருப்பினான். 7 ஆசாரியனுடைய உதடுகள் அறிவைக் காக்கவேண்டும்; வேதத்தை அவன் வாயிலே தேடுவார்களே; அவன் சேனைகளுடைய கர்த்தரின் தூதன். 8 நீங்களோ வழியைவிட்டு விலகி, அநேகரை வேதத்தைக்குறித்து இடறப்பண்ணினீர்கள்; லேவியின் உடன்படிக்கையைக் கெடுத்துப்போட்டீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 9 நீங்கள் என் வழிகளைக் கைக்கொள்ளாமல் வேதத்தைக்குறித்துப் பட்சபாதம் பண்ணினபடியினால் நானும் உங்களை எல்லா ஜனத்துக்கு முன்பாகவும் அற்பரும் நீசருமாக்கினேன். 10 நம்மெல்லாருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஒரே தேவன் நம்மைச் சிருஷ்டித்ததில்லையோ? நாம் நம்முடைய பிதாக்களின் உடன்படிக்கையைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் துரோகம்பண்ணுவானேன்? 11 யூதா ஜனங்கள் துரோகம்பண்ணினார்கள்; இஸ்ரவேலிலும் எருசலேமிலும் அருவருப்பான காரியம் செய்யப்பட்டது; கர்த்தர் சிநேகிக்கிற பரிசுத்தத்தை யூதா ஜனங்கள் பரிசுத்தக் குலைச்சலாக்கி அந்நிய தேவதையின் குமாரத்திகளை விவாகம்பண்ணினார்கள். 12 இப்படிச் செய்கிறவன் எவனோ, அவன் காவல்காக்கிறவனாயினும், உத்தரவுகொடுக்கிறவனாயினும், சேனைகளின் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்துகிறவனாயினும், அவனை யாக்கோபின் கூடாரங்களில் இராதபடிக்குக் கர்த்தர் சங்கரிப்பார். 13 நீங்கள் இரண்டாந்தரமும் இதைச் செய்து, கர்த்தருடைய பீடத்தைக் கண்ணீரினாலும் அழுகையினாலும் பெருமூச்சினாலும் நிரப்புகிறீர்கள்; ஆகையால், அவர் இனிக் காணிக்கையை மதியார், அதை உங்கள் கைகளில் பிரியமாய் ஏற்றுக்கொள்ளவுமாட்டார். 14 ஏன் என்று கேட்கிறீர்கள்; கர்த்தர் உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருக்கிறார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம்பண்ணினாயே. 15 அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே, பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ஆகையால் ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம்பண்ணாதபடிக்கு, உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். 16 தள்ளிவிடுதலை நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்; அப்படிப்பட்டவன் கொடுமையினால் தன் வஸ்திரத்தை மூடுகிறான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஆகையால் நீங்கள் துரோகம்பண்ணாமல் உங்கள் ஆவியைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். 17 உங்கள் வார்த்தைகளினாலே கர்த்தரை வருத்தப்படுத்துகிறீர்கள்; ஆனாலும் எதினாலே அவரை வருத்தப்படுத்துகிறோம் என்கிறீர்கள்; பொல்லாப்பைச் செய்கிறவனெவனும் கர்த்தரின் பார்வைக்கு நல்லவன் என்றும், அப்படிப்பட்டவர்கள்பேரில் அவர் பிரியமாயிருக்கிறாரென்றும், நியாயந்தீர்க்கிற தேவன் எங்கேயென்றும், நீங்கள் சொல்லுகிறதினாலேயே.

மல்கியா 3

1 இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம்பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 2 ஆனாலும் அவர் வரும் நாளைச் சகிப்பவன் யார்? அவர் வெளிப்படுகையில் நிலைநிற்பவன் யார்? அவர் புடமிடுகிறவனுடைய அக்கினியைப்போலவும், வண்ணாருடைய சவுக்காரத்தைப்போலவும் இருப்பார். 3 அவர் உட்கார்ந்து வெள்ளியைப் புடமிட்டுச் சுத்திகரித்துக்கொண்டிருப்பார்; அவர் லேவியின் புத்திரரைச் சுத்திகரித்து, அவர்கள் கர்த்தருடையவர்களாயிருக்கும்படிக்கும், நீதியாய் காணிக்கையைச் செலுத்தும்படிக்கும், அவர்களைப் பொன்னைப்போலவும் வெள்ளியைப்போலவும் புடமிடுவார். 4 அப்பொழுது பூர்வநாட்களிலும் முந்தின வருஷங்களிலும் இருந்ததுபோல, யூதாவின் காணிக்கையும், எருசலேமின் காணிக்கையும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்கும். 5 நான் நியாயத்தீர்ப்புச் செய்யும்படி உங்களிடத்தில் வந்து, சூனியக்காரருக்கும் விபசாரருக்கும் பொய்யாணை இடுகிறவர்களுக்கும், எனக்குப் பயப்படாமல் விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளுமாகிய கூலிக்காரரின் கூலியை அபகரித்துக்கொள்ளுகிறவர்களுக்கும், பரதேசிக்கு அநியாயஞ்செய்கிறவர்களுக்கும் விரோதமாய்த் தீவிரமான சாட்சியாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 6 நான் கர்த்தர், நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை. 7 நீங்கள் உங்கள் பிதாக்களின் நாட்கள் தொடங்கி என் கட்டளைகளைக் கைக்கொள்ளாமல், அவைகளைவிட்டு விலகிப்போனீர்கள்; என்னிடத்திற்குத் திரும்புங்கள், அப்பொழுது உங்களிடத்திற்குத் திரும்புவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; நாங்கள் எந்த விஷயத்தில் திரும்பவேண்டும் என்கிறீர்கள். 8 மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே. 9 நீங்கள் சபிக்கப்பட்டவர்கள்; ஜனத்தாராகிய நீங்கள் எல்லாரும் என்னை வஞ்சித்தீர்கள். 10 என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 11 பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம் கண்டிப்பேன்; அவைகள் உங்கள் நிலத்தின் பலனை அழிப்பதில்லை, வெளியிலுள்ள திராட்சக்கொடி பழமில்லாமற்போவதுமில்லை என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 12 அப்பொழுது எல்லா ஜாதிகளும் உங்களைப் பாக்கியவான்கள் என்பார்கள்; தேசம் விரும்பப்படத்தக்கதாயிருக்கும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 13 நீங்கள் எனக்கு விரோதமாய்ப் பேசின பேச்சுகள் கடினமாயிருக்கிறது என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும் உமக்கு விரோதமாக என்னத்தைப் பேசினோம் என்கிறீர்கள். 14 தேவனைச் சேவிப்பது விருதா, அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதினாலும், சேனைகளின் கர்த்தருக்கு முன்பாகத் துக்கித்து நடக்கிறதினாலும் என்ன பிரயோஜனம்? 15 இப்போதும் அகங்காரிகளைப் பாக்கியவான்கள் என்கிறோம்; தீமை செய்கிறவர்கள் திடப்படுகிறார்கள்; அவர்கள் தேவனைப் பரீட்சைபார்த்தாலும் விடுவிக்கப்படுகிறார்களே என்று சொல்லுகிறீர்கள். 16 அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர் கவனித்துக்கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. 17 என் சம்பத்தை நான் சேர்க்கும் நாளிலே அவர்கள் என்னுடையவர்களாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; ஒரு மனுஷன் தனக்கு ஊழியஞ்செய்கிற தன்னுடைய குமாரனைக் கடாட்சிக்கிறதுபோல நான் அவர்களைக் கடாட்சிப்பேன். 18 அப்பொழுது நீங்கள் நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும், தேவனுக்கு ஊழியஞ்செய்கிறவனுக்கும் அவருக்கு ஊழியஞ்செய்யாதவனுக்கும் இருக்கிற வித்தியாசத்தைத் திரும்பவும் காண்பீர்கள்.

மல்கியா 4

1 இதோ, சூளையைப்போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 2 ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள். 3 துன்மார்க்கரை மிதிப்பீர்கள்; நான் இதைச் செய்யும்நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங்கால்களின்கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். 4 ஓரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும் என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும் நியாயங்களையும் நினையுங்கள். 5 இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். 6 நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான்.

The New Testament of our Lord and Saviour Jesus Christ

மத்தேயு 1

1 ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்ச வரலாறு: 2 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவன் சகோதரரையும் பெற்றான்; 3 யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்; 4 ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்; 5 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேதை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்; 6 ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாயிருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்; 7 சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்; 8 ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்; 9 உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாசைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்; 10 எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்; 11 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகுங்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரரையும் பெற்றான். 12 பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் சொரொபாபேலைப் பெற்றான்; 13 சொரொபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்; 14 ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்; 15 எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்; 16 யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார். 17 இவ்விதமாய் உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலமுதல் கிறிஸ்துவரைக்கும் பதினாலு தலைமுறைகளுமாம். 18 இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. 19 அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். 20 அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. 21 அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். 22 தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. 23 அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம். 24 யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு; 25 அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.

மத்தேயு 2

1 ஏரோதுராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லெகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்து, 2 யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்துகொள்ள வந்தோம் என்றார்கள். 3 ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். 4 அவன் பிரதான ஆசாரியர் ஜனத்தின் வேதபாரகர் எல்லாரையும் கூடிவரச்செய்து: கிறிஸ்துவானவர் எங்கே பிறப்பாரென்று அவர்களிடத்தில் விசாரித்தான். 5 அதற்கு அவர்கள்: யூதேயாவிலுள்ள பெத்லெகேமிலே பிறப்பார்; அதேனென்றால்: 6 யூதேயா தேசத்திலுள்ள பெத்லெகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார் என்று, தீர்க்கதரிசியினால் எழுதப்பட்டிருக்கிறது என்றார்கள். 7 அப்பொழுது ஏரோது, சாஸ்திரிகளை இரகசியமாய் அழைத்து, நட்சத்திரம் காணப்பட்ட காலத்தைக்குறித்து அவர்களிடத்தில் திட்டமாய் விசாரித்து: 8 நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லெகேமுக்கு அனுப்பினான். 9 ராஜா சொன்னதை அவர்கள் கேட்டுப் போகையில், இதோ, அவர்கள் கிழக்கிலே கண்ட நட்சத்திரம் பிள்ளை இருந்த ஸ்தலத்திற்குமேல் வந்து நிற்கும்வரைக்கும் அவர்களுக்குமுன் சென்றது. 10 அவர்கள் அந்த நட்சத்திரத்தைக் கண்டபோது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். 11 அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து, பிள்ளையையும் அதின் தாயாகிய மரியாளையும் கண்டு, சாஷ்டாங்கமாய் விழுந்து அதைப் பணிந்துகொண்டு, தங்கள் பொக்கிஷங்களைத் திறந்து, பொன்னையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளத்தையும் அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள். 12 பின்பு, அவர்கள் ஏரோதினிடத்திற்குத் திரும்பிப் போகவேண்டாமென்று சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, வேறு வழியாய்த் தங்கள் தேசத்திற்குத் திரும்பிப்போனார்கள். 13 அவர்கள் போனபின்பு, கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் யோசேப்புக்குக் காணப்பட்டு: ஏரோது பிள்ளையைக் கொலைசெய்யத் தேடுவான்; ஆதலால் நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போய், நான் உனக்குச் சொல்லும்வரைக்கும் அங்கே இரு என்றான். 14 அவன் எழுந்து, இரவிலே பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, எகிப்துக்குப் புறப்பட்டுப்போய், 15 ஏரோதின் மரணபரியந்தம் அங்கே இருந்தான். எகிப்திலிருந்து என்னுடைய குமாரனை வரவழைத்தேன் என்று, தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தரால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 16 அப்பொழுது ஏரோது தான் சாஸ்திரிகளால் வஞ்சிக்கப்பட்டதைக் கண்டு, மிகுந்த கோபமடைந்து, ஆட்களை அனுப்பி, தான் சாஸ்திரிகளிடத்தில் திட்டமாய் விசாரித்த காலத்தின்படியே, பெத்லெகேமிலும் அதின் சகல எல்லைகளிலுமிருந்த இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொலைசெய்தான். 17 புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதலடையாதிருக்கிறாள் என்று, 18 எரேமியா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று. 19 ஏரோது இறந்தபின்பு, கர்த்தருடைய தூதன் எகிப்திலே யோசேப்புக்குச் சொப்பனத்தில் காணப்பட்டு: 20 நீ எழுந்து, பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்குப் போ; பிள்ளையின் பிராணனை வாங்கத்தேடினவர்கள் இறந்துபோனார்கள் என்றான். 21 அவன் எழுந்து பிள்ளையையும் அதின் தாயையும் கூட்டிக்கொண்டு இஸ்ரவேல் தேசத்துக்கு வந்தான். 22 ஆகிலும், அர்கெலாயு தன் தகப்பனாகிய ஏரோதின் பட்டத்துக்கு வந்து, யூதேயாவில் அரசாளுகிறான் என்று கேள்விப்பட்டு, அங்கே போகப் பயந்தான். அப்பொழுது, அவன் சொப்பனத்தில் தேவனால் எச்சரிக்கப்பட்டு, கலிலேயா நாட்டின் புறங்களிலே விலகிப்போய், 23 நாசரேத்து என்னும் ஊரிலே வந்து வாசம்பண்ணினான். நசரேயன் என்னப்படுவார் என்று, தீர்க்கதரிசிகளால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

மத்தேயு 3

1 அந்நாட்களில் யோவான்ஸ்நானன் யூதேயாவின் வனாந்தரத்தில் வந்து: 2 மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கம் பண்ணினான். 3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டென்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டவன் இவனே. 4 இந்த யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தது. 5 அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், யூதேயா தேசத்தார் அனைவரும், யோர்தானுக்கு அடுத்த சுற்றுப்புறத்தார் யாவரும் அவனிடத்திற்குப் போய், 6 தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். 7 பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? 8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள். 9 ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 10 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். 11 மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 12 தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது; அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான். 13 அப்பொழுது யோவானால் ஞானஸ்நானம் பெறுவதற்கு இயேசு கலிலேயாவைவிட்டு யோர்தானுக்கு அருகே அவனிடத்தில் வந்தார். 14 யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான். 15 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான். 16 இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது; தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். 17 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.

மத்தேயு 4

1 அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார். 2 அவர் இரவும் பகலும் நாற்பதுநாள் உபவாசமாயிருந்தபின்பு, அவருக்குப் பசியுண்டாயிற்று. 3 அப்பொழுது சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான். 4 அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். 5 அப்பொழுது பிசாசு அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: 6 நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது என்று சொன்னான். 7 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே என்றார். 8 மறுபடியும், பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: 9 நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். 10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். 11 அப்பொழுது பிசாசானவன் அவரை விட்டு விலகிப்போனான். உடனே தேவதூதர்கள் வந்து, அவருக்குப் பணிவிடை செய்தார்கள். 12 யோவான் காவலில் வைக்கப்பட்டான் என்று இயேசு கேள்விப்பட்டு, கலிலேயாவுக்குப் போய், 13 நாசரேத்தை விட்டு, செபுலோன் நப்தலி என்னும் நாடுகளின் எல்லைகளிலிருக்கும் கடற்கரைக்கு அருகான கப்பர்நகூமிலே வந்து வாசம்பண்ணினார். 14 கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலுமுள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே, 15 இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று, 16 ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 17 அதுமுதல் இயேசு: மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கிக்கத் தொடங்கினார். 18 இயேசு கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த இரண்டு சகோதரராகிய பேதுரு என்னப்பட்ட சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும், கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு: 19 என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். 20 உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். 21 அவர் அவ்விடம் விட்டுப் போகையில், வேறே இரண்டு சகோதரராகிய செபெதேயுவின் மகன் யாக்கோபும், அவன் சகோதரன் யோவானும் தங்கள் தகப்பன் செபெதேயுவுடனே படவிலிருந்து, தங்கள் வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறபோது, அவர்களைக் கண்டு, அவர்களையும் அழைத்தார். 22 உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். 23 பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, அவர்களுடைய ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார். 24 அவருடைய கீர்த்தி சீரியா எங்கும் பிரசித்தமாயிற்று. அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார். 25 கலிலேயாவிலும், தெக்கப்போலியிலும், எருசலேமிலும், யூதேயாவிலும், யோர்தானுக்கு அப்புறத்திலும் இருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.

மத்தேயு 5

1 அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள். 2 அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்: 3 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 4 துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள். 5 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள். 6 நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள். 7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள். 8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள். 9 சமாதானம்பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள். 10 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. 11 என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; 12 சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே. 13 நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. 14 நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. 15 விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். 16 இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது. 17 நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். 18 வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 19 ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான். 20 வேதபாரகர் பரிசேயர் என்பவர்களுடைய நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 21 கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான் என்பதும், பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 22 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான். 23 ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், 24 அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. 25 எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து. 26 பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். 27 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 28 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. 29 உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். 30 உன் வலதுகை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். 31 தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், தள்ளுதற்சீட்டை அவளுக்குக் கொடுக்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது. 32 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான். 33 அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையாய்ச் செலுத்துவாயாக என்று பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 34 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; பரிச்சேதம் சத்தியம்பண்ணவேண்டாம்; வானத்தின்பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம். 35 பூமியின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம். 36 உன் சிரசின்பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அதின் ஒரு மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே. 37 உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும். 38 கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 39 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக்கொடு. 40 உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. 41 ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம்வரப் பலவந்தம்பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ. 42 உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன்வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே. 43 உனக்கடுத்தவனைச் சிநேகித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 44 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள். 45 இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவுக்குப் புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார். 46 உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா? 47 உங்கள் சகோதரரைமாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்கள் அல்லவா? 48 ஆகையால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.

மத்தேயு 6

1 மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர்மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனில்லை. 2 ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 3 நீயோ தர்மஞ்செய்யும்போது, உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக்கடவது. 4 அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா தாமே உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார். 5 அன்றியும் நீ ஜெபம்பண்ணும்போது மாயக்காரரைப் போலிருக்கவேண்டாம்; மனுஷர் காணும்படியாக அவர்கள் ஜெப ஆலயங்களிலும் வீதிகளின் சந்திகளிலும் நின்று ஜெபம்பண்ண விரும்புகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 6 நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார். 7 அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண்வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். 8 அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார். 9 நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. 10 உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக. 11 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும். 12 எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும். 13 எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே. 14 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். 15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார். 16 நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்காரரைப்போல முகவாடலாய் இராதேயுங்கள்; அவர்கள் உபவாசிக்கிறதை மனுஷர் காணும்பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்; அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 17 நீயோ உபவாசிக்கும்போது, அந்த உபவாசம் மனுஷர்களுக்குக் காணப்படாமல், அந்தரங்கத்தில் இருக்கிற உன் பிதாவுக்கே காணப்படும்படியாக, உன் தலைக்கு எண்ணெய் பூசி, உன் முகத்தைக் கழுவு. 18 அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய்ப் பலனளிப்பார். 19 பூமியிலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டாம்; இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும்; இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். 20 பரலோகத்திலே உங்களுக்குப் பொக்கிஷங்களைச் சேர்த்துவையுங்கள்; அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை; அங்கே திருடர் கன்னமிட்டுத் திருடுகிறதும் இல்லை. 21 உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். 22 கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும். 23 உன் கண் கெட்டதாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும்; இப்படி உன்னிலுள்ள வெளிச்சம் இருளாயிருந்தால், அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்! 24 இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது. 25 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? 26 ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? 27 கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? 28 உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; 29 என்றாலும், சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். 30 அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? 31 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று, கவலைப்படாதிருங்கள். 32 இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். 33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும். 34 ஆகையால், நாளைக்காகக் கவலைப்படாதிருங்கள்; நாளையத்தினம் தன்னுடையவைகளுக்காகக் கவலைப்படும். அந்தந்த நாளுக்கு அதினதின் பாடு போதும்.

மத்தேயு 7

1 நீங்கள் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதபடிக்கு மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள். 2 ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும். 3 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? 4 இதோ, உன் கண்ணில் உத்திரம் இருக்கையில் உன் சகோதரனை நோக்கி: நான் உன் கண்ணிலிருக்கும் துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? 5 மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். 6 பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துக்களைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும். 7 கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்; 8 ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். 9 உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக் கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? 10 மீனைக் கேட்டால் அவனுக்குப் பாம்பைக் கொடுப்பானா? 11 ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா? 12 ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம். 13 இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். 14 ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர். 15 கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். 16 அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா? 17 அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும்; கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும். 18 நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது; கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது. 19 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும். 20 ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள். 21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. 22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். 23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். 24 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். 25 பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. 26 நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். 27 பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார். 28 இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால், 29 ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

மத்தேயு 8

1 அவர் மலையிலிருந்து இறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள். 2 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் வந்து அவரைப் பணிந்து: ஆண்டவரே! உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்றான். 3 இயேசு தமது கையை நீட்டி அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். உடனே குஷ்டரோகம் நீங்கி அவன் சுத்தமானான். 4 இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார். 5 இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து: 6 ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான். 7 அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார். 8 நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். 9 நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான். 10 இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 11 அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள். 12 ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 13 பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான். 14 இயேசு பேதுருவின் வீட்டிலே வந்து, அவன் மாமி ஜுரமாய்க் கிடக்கிறதைக் கண்டார். 15 அவர் அவள் கையைத் தொட்டவுடனே ஜுரம் அவளைவிட்டு நீங்கிற்று; அவள் எழுந்திருந்து, அவர்களுக்குப் பணிவிடை செய்தாள். 16 அஸ்தமனமானபோது, பிசாசு பிடித்திருந்த அநேகரை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர் அந்த ஆவிகளைத் தமது வார்த்தையினாலே துரத்தி, பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார். 17 அவர் தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக்கொண்டு, நம்முடைய நோய்களைச் சுமந்தார் என்று, ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 18 பின்பு, திரளான ஜனங்கள் தம்மைச் சூழ்ந்திருக்கிறதை இயேசு கண்டு, அக்கரைக்குப் போகக் கட்டளையிட்டார். 19 அப்பொழுது, வேதபாரகன் ஒருவன் வந்து: போதகரே! நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். 20 அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு; மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். 21 அவருடைய சீஷர்களில் வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே! முன்பு நான் போய், என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். 22 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும், நீ என்னைப் பின்பற்றி வா என்றார். 23 அவர் படவில் ஏறினபோது அவருடைய சீஷர்கள் அவருக்குப் பின்சென்று ஏறினார்கள். 24 அப்பொழுது படவு அலைகளினால் மூடப்படத்தக்கதாய்க் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. அவரோ நித்திரையாயிருந்தார். 25 அப்பொழுது, அவருடைய சீஷர்கள் வந்து, அவரை எழுப்பி: ஆண்டவரே! எங்களை இரட்சியும், மடிந்துபோகிறோம் என்றார்கள். 26 அதற்கு அவர்: அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள் என்று சொல்லி; எழுந்து, காற்றையும் கடலையும் அதட்டினார். உடனே, மிகுந்த அமைதல் உண்டாயிற்று. 27 அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்றார்கள். 28 அவர் அக்கரையிலே கெர்கெசேனர் நாட்டில் வந்தபோது, பிசாசு பிடித்திருந்த இரண்டுபேர் பிரேதக்கல்லறைகளிலிருந்து புறப்பட்டு, அவருக்கு எதிராக வந்தார்கள்; அவர்கள் மிகவும் கொடியராயிருந்தபடியால், அந்த வழியாக ஒருவனும் நடக்கக்கூடாதிருந்தது. 29 அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோ என்று கூப்பிட்டார்கள். 30 அவர்களுக்குக் கொஞ்சதூரத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. 31 அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவு கொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன. 32 அதற்கு அவர்: போங்கள் என்றார். அவைகள் புறப்பட்டு, பன்றிக்கூட்டத்தில் போயின; அப்பொழுது, பன்றிக்கூட்டமெல்லாம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, ஜலத்தில் மாண்டுபோயின. 33 அவைகளை மேய்த்தவர்கள் ஓடி, பட்டணத்தில் சென்று, இந்தச் சங்கதிகள் எல்லாவற்றையும், பிசாசு பிடித்திருந்தவர்களுக்குச் சம்பவித்தவைகளையும் அறிவித்தார்கள். 34 அப்பொழுது, அந்தப் பட்டணத்தார் யாவரும் இயேசுவுக்கு எதிர்கொண்டுவந்து, அவரைக் கண்டு, தங்கள் எல்லைகளைவிட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள்.

மத்தேயு 9

1 அப்பொழுது, அவர் படவில் ஏறி, இக்கரைப்பட்டுத் தம்முடைய பட்டணத்திற்கு வந்தார். 2 அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். 3 அப்பொழுது, வேதபாரகரில் சிலர்: இவன் தேவதூஷணம் சொல்லுகிறான் என்று தங்கள் உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள். 4 இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்கள் இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன? 5 உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது? 6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார். 7 உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப் போனான். 8 ஜனங்கள் அதைக்கண்டு ஆச்சரியப்பட்டு, மனுஷருக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள். 9 இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான். 10 பின்பு அவர் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். 11 பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். 12 இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. 13 பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் என்றார். 14 அப்பொழுது, யோவானுடைய சீஷர் அவரிடத்தில் வந்து: நாங்களும் பரிசேயரும் அநேகந்தரம் உபவாசிக்கிறோமே; உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள். 15 அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள். 16 ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடே இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடே இணைத்த துண்டு வஸ்திரத்தை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும். 17 புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கிறதும் இல்லை; வார்த்துவைத்தால், துருத்திகள் கிழிந்துபோம், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்; புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார். 18 அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன் வந்து அவரைப் பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்; ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான். 19 இயேசு எழுந்து, தம்முடைய சீஷரோடுகூட அவன் பின்னே போனார். 20 அப்பொழுது, பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ: 21 நான் அவருடைய வஸ்திரத்தையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். 22 இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்நேரம்முதல் அந்த ஸ்திரீ சொஸ்தமானாள். 23 இயேசுவானவர் தலைவனுடைய வீட்டிலே வந்து, தாரை ஊதுகிறவர்களையும், இரைகிற ஜனங்களையும் கண்டு: 24 விலகுங்கள், இந்தச் சிறு பெண் மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப்பார்த்து நகைத்தார்கள். 25 ஜனங்கள் வெளியே துரத்தப்பட்ட பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள். 26 இந்தச் சங்கதி அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று. 27 இயேசு அவ்விடம் விட்டுப் போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். 28 அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள். 29 அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். 30 உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். 31 அவர்களோ புறப்பட்டு, அத்தேசமெங்கும் அவருடைய கீர்த்தியைப் பிரசித்தம்பண்ணினார்கள். 32 அவர்கள் புறப்பட்டுப் போகையில், பிசாசுபிடித்த ஊமையான ஒரு மனுஷனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். 33 பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான். ஜனங்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள். 34 பரிசேயரோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். 35 பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார். 36 அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, 37 தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; 38 ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.

மத்தேயு 10

1 அப்பொழுது, அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். 2 அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலருடைய நாமங்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான், 3 பிலிப்பு, பற்தொலொமேயு, தோமா, ஆயக்காரனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுநாமமுள்ள லெபேயு, 4 கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே. 5 இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் புறஜாதியார் நாடுகளுக்குப் போகாமலும், சமாரியர் பட்டணங்களில் பிரவேசியாமலும், 6 காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். 7 போகையில், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள். 8 வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள், இலவசமாய்க் கொடுங்கள். 9 உங்கள் கச்சைகளில் பொன்னையாவது வெள்ளியையாவது செம்பையாவது, 10 வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதரட்சைகளையாவது, தடியையாவது தேடி வைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான். 11 எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே பாத்திரமானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படுமளவும் அவனிடத்தில் தங்கியிருங்கள். 12 ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள். 13 அந்த வீடு பாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால், நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது. 14 எவனாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவது விட்டுப் புறப்படும்போது, உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள். 15 நியாயத்தீர்ப்பு நாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 16 ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள். 17 மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை வாரினால் அடிப்பார்கள். 18 அவர்களுக்கும் புறஜாதியாருக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள். 19 அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள்; நீங்கள் பேசவேண்டுவது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். 20 பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்கள் பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர். 21 சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்வார்கள். 22 என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்; முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான். 23 ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் மறு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனுஷகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிமுடியாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 24 சீஷன் தன் போதகனிலும், வேலைக்காரன் தன் எஜமானிலும் மேற்பட்டவனல்ல. 25 சீஷன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பது போதும். வீட்டெஜமானையே பெயல்செபூல் என்று சொன்னார்களானால், அவன் வீட்டாரை அப்படிச் சொல்வது அதிக நிச்சயமல்லவா? 26 அவர்களுக்குப் பயப்படாதிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை. 27 நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள். 28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். 29 ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது. 30 உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது. 31 ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். 32 மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன். 33 மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன். 34 பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன். 35 எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன். 36 ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே. 37 தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. 38 தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல. 39 தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான். 40 உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான். 41 தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான். 42 சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு 11

1 இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களுக்கும் கட்டளைகொடுத்து முடித்தபின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும் பிரசங்கிக்கவும் அவ்விடம் விட்டுப் போனார். 2 அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக்குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து: 3 வருகிறவர் நீர்தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்கவேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான். 4 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும் காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள்; 5 குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. 6 என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். 7 அவர்கள் போனபின்பு, இயேசு யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? 8 அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? மெல்லிய வஸ்திரந்தரித்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள். 9 அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப்பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 10 அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான். 11 ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை; ஆகிலும், பரலோகராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்கு மெய்யாகவே சொல்லுகிறேன். 12 யோவான்ஸ்நானன் காலமுதல் இதுவரைக்கும் பரலோகராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது; பலவந்தம்பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக்கொள்ளுகிறார்கள். 13 நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசிகள் யாவரும் யோவான்வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்ததுண்டு. 14 நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான். 15 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். 16 இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? சந்தைவெளிகளில் உட்கார்ந்து, தங்கள் தோழரைப் பார்த்து: 17 உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் மாரடிக்கவில்லை என்று குறைசொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறது. 18 எப்படியெனில், யோவான் போஜனபானம்பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்றார்கள். 19 மனுஷகுமாரன் போஜனபானம்பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறார்கள். ஆனாலும், ஞானமானது அதன் பிள்ளைகளால் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார். 20 அப்பொழுது, தமது பலத்த செய்கைகளில், அதிகமானவைகளைச் செய்யக்கண்ட பட்டணங்கள் மனந்திரும்பாமற் போனபடியினால் அவைகளை அவர் கடிந்துகொள்ளத் தொடங்கினார்: 21 கோராசினே! உனக்கு ஐயோ, பெத்சாயிதாவே! உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்திச் சாம்பலில் உட்கார்ந்து மனந்திரும்பியிருப்பார்கள். 22 நியாயத்தீர்ப்புநாளிலே உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 23 வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய்; உன்னில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் சோதோமிலே செய்யப்பட்டிருந்ததானால், அது இந்நாள்வரைக்கும் நிலைத்திருக்கும். 24 நியாயத்தீர்ப்புநாளிலே உனக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 25 அந்தச் சமயத்திலே இயேசு சொன்னது: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 26 ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது. 27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான். 28 வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். 29 நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். 30 என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.

மத்தேயு 12

1 அக்காலத்திலே, இயேசு ஓய்வுநாளில் பயிர்வழியே போனார்; அவருடைய சீஷர்கள் பசியாயிருந்து, கதிர்களைக் கொய்து, தின்னத் தொடங்கினார்கள். 2 பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள். 3 அதற்கு அவர்: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? 4 அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைத் தானும் தன்னோடிருந்தவர்களும் புசித்தார்களே. 5 அன்றியும், ஓய்வுநாட்களில் ஆசாரியர்கள் தேவாலயத்தில் ஓய்ந்திராமல், ஓய்வுநாளை வேலை நாளாக்கினாலும், குற்றமில்லாதிருக்கிறார்கள் என்று நீங்கள் வேதத்தில் வாசிக்கவில்லையா? 6 தேவாலயத்திலும் பெரியவர் இங்கே இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 7 பலியையல்ல இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று அறிந்தீர்களானால், குற்றமில்லாதவர்களை நீங்கள் குற்றப்படுத்தமாட்டீர்கள். 8 மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார். 9 அவர் அவ்விடம் விட்டுப்போய், அவர்களுடைய ஜெப ஆலயத்தில் பிரவேசித்தார். 10 அங்கே சூம்பின கையையுடைய மனுஷன் ஒருவன் இருந்தான். அப்பொழுது, அவர்மேல் குற்றஞ்சாட்டும்படிக்கு: ஓய்வுநாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார்கள். 11 அதற்கு அவர்: உங்களில் எந்த மனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ? 12 ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மைசெய்வது நியாயந்தான் என்று சொன்னார். 13 பின்பு அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல் சொஸ்தமாயிற்று. 14 அப்பொழுது, பரிசேயர் வெளியேபோய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள். 15 இயேசு அதை அறிந்து, அவ்விடம் விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி, 16 தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். 17 ஏசாயா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. அவன் உரைத்ததாவது: 18 இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார். 19 வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை. 20 அவர் நியாயத்திற்கு ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்தநாணலை முறிக்காமலும், மங்கியெரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார். 21 அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள் என்பதே. 22 அப்பொழுது, பிசாசு பிடித்த குருடும் ஊமையுமான ஒருவன் அவரிடத்தில் கொண்டுவரப்பட்டான்; குருடும் ஊமையுமானவன் பேசவுங் காணவுந்தக்கதாக அவனைச் சொஸ்தமாக்கினார். 23 ஜனங்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: தாவீதின் குமாரன் இவர்தானோ? என்றார்கள். 24 பரிசேயர் அதைக்கேட்டு: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்துகிறானேயல்லாமல் மற்றப்படியல்ல என்றார்கள். 25 இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்தப் பட்டணமும் எந்த வீடும் நிலைநிற்கமாட்டாது. 26 சாத்தானைச் சாத்தான் துரத்தினால் தனக்கு விரோதமாகத் தானே பிரிவினை செய்கிறதாயிருக்குமே; அப்படிச் செய்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? 27 நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள். 28 நான் தேவனுடைய ஆவியினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. 29 அன்றியும், பலவானை முந்திக் கட்டினாலொழியப் பலவானுடைய வீட்டுக்குள் ஒருவன் புகுந்து, அவன் உடைமைகளை எப்படிக் கொள்ளையிடக்கூடும்? கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடலாம். 30 என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான்; என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். 31 ஆதலால், நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. 32 எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை. 33 மரம் நல்லதென்றால், அதின் கனியும் நல்லதென்று சொல்லுங்கள்; மரம் கெட்டதென்றால், அதின் கனியும் கெட்டதென்று சொல்லுங்கள்; மரமானது அதின் கனியினால் அறியப்படும். 34 விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும். 35 நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான். 36 மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 37 ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என்றார். 38 அப்பொழுது, வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்மால் ஒரு அடையாளத்தைக் காண விரும்புகிறோம் என்றார்கள். 39 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. 40 யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். 41 யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள். இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள். 42 தென்தேசத்து ராஜஸ்திரீ பூமியின் எல்லைகளிலிருந்து சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்க வந்தாள். இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார். ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். 43 அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: 44 நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி; அங்கே வந்து, அந்த வீடு வெறுமையாகவும், பெருக்கி, ஜோடிக்கப்பட்டதாகவும் இருக்கக்கண்டு, 45 திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைத் தன்னோடே கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது, அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்; அப்படியே இந்தப் பொல்லாத சந்ததியாருக்கும் சம்பவிக்கும் என்றார். 46 இப்படி அவர் ஜனங்களோடே பேசுகையில், அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் பேசவேண்டுமென்று வெளியே நின்றார்கள். 47 அப்பொழுது, ஒருவன் அவரை நோக்கி: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மோடே பேசவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்றான். 48 தம்மிடத்தில் இப்படிச் சொன்னவனுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி, 49 தம்முடைய கையைத் தமது சீஷர்களுக்கு நேரே நீட்டி: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! 50 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ, அவனே எனக்குச் சகோதரனும் சகோதரியும் தாயுமாய் இருக்கிறான் என்றார்.

மத்தேயு 13

1 இயேசு அன்றையத்தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார். 2 திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கரையிலே நின்றார்கள். 3 அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குச் சொன்னார்: கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். 4 அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. 5 சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை இடங்களில் விழுந்தது; மண் ஆழமாயிராததினாலே அது சீக்கிரமாய் முளைத்தது. 6 வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்து போயிற்று. 7 சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து அதை நெருக்கிப்போட்டது. 8 சில விதையோ நல்ல நிலத்தில் விழுந்து, சிலது நூறாகவும், சிலது அறுபதாகவும், சிலது முப்பதாகவும் பலன் தந்தது. 9 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார். 10 அப்பொழுது, சீஷர்கள் அவரிடத்தில் வந்து: ஏன் அவர்களோடே உவமைகளாகப் பேசுகிறீர் என்று கேட்டார்கள். 11 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: பரலோகராஜ்யத்தின் ரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை. 12 உள்ளவன் எவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவன் எவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். 13 அவர்கள் கண்டும் காணாதவர்களாயும், கேட்டும் கேளாதவர்களாயும், உணர்ந்துகொள்ளாதவர்களாயும் இருக்கிறபடியினால், நான் உவமைகளாக அவர்களோடே பேசுகிறேன். 14 ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். 15 இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே. 16 உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள். 17 அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 18 ஆகையால் விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள். 19 ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். 20 கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; 21 ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். 22 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக்கமும் வசனத்தை நெருக்கிப் போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான். 23 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார். 24 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. 25 மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான். 26 பயிரானது வளர்ந்து கதிர்விட்ட போது, களைகளும் காணப்பட்டது. 27 வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். 28 அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். 29 அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். 30 அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப்பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார். 31 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். 32 அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார். 33 வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து, முழுவதும் புளிக்கும்வரைக்கும், மூன்றுபடி மாவிலே அடக்கிவைத்தாள் என்றார். 34 இவைகளையெல்லாம் இயேசு ஜனங்களோடே உவமைகளாகப் பேசினார்; உவமைகளினாலேயன்றி, அவர்களோடே பேசவில்லை. 35 என் வாயை உவமைகளினால் திறப்பேன்; உலகத்தோற்றமுதல் மறைபொருளானவைகளை வெளிப்படுத்துவேன் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 36 அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப்போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள். 37 அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்; 38 நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்; 39 அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். 40 ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும். 41 மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, 42 அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். 43 அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். 44 அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதைப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான். 45 மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. 46 அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான். 47 அன்றியும், பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, சகலவிதமான மீன்களையும் சேர்த்து வாரிக்கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருக்கிறது. 48 அது நிறைந்தபோது, அதைக் கரையில் இழுத்து, உட்கார்ந்து, நல்லவைகளைக் கூடைகளில் சேர்த்து, ஆகாதவைகளை எறிந்துபோடுவார்கள். 49 இப்படியே உலகத்தின் முடிவிலே நடக்கும். தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து, 50 அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார். 51 பின்பு, இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம், ஆண்டவரே, என்றார்கள். 52 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இப்படியிருக்கிறபடியால், பரலோகராஜ்யத்துக்கடுத்தவைகளில் உபதேசிக்கப்பட்டுத் தேறின வேதபாரகன் எவனும் தன் பொக்கிஷத்திலிருந்து புதியவைகளையும் பழையவைகளையும் எடுத்துக்கொடுக்கிற வீட்டெஜமானாகிய மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான் என்றார். 53 இயேசு இந்த உவமைகளைச் சொல்லி முடித்தபின்பு, அவ்விடம் விட்டு, 54 தாம் வளர்ந்த ஊரிலே வந்து, அவர்களுடைய ஜெபஆலயத்திலே அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். அவர்கள் ஆச்சரியப்பட்டு: இவனுக்கு இந்த ஞானமும் பலத்த செய்கைகளும் எப்படி வந்தது? 55 இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா? 56 இவன் சகோதரிகளெல்லாரும் நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனுக்கு எப்படி வந்தது? என்று சொல்லி, 57 அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார். 58 அவர்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவர் அங்கே அநேக அற்புதங்களைச் செய்யவில்லை.

மத்தேயு 14

1 அக்காலத்தில், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது இயேசுவின் கீர்த்தியைக் கேள்விப்பட்டு, 2 தன் ஊழியக்காரரை நோக்கி: இவன் யோவான்ஸ்நானன்; இவன் மரித்தோரிலிருந்து எழுந்தான்; ஆகையால், இவனிடத்தில் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான். 3 ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தம் யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான். 4 ஏனெனில்: நீர் அவளை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று யோவான் அவனுக்குச் சொல்லியிருந்தான். 5 ஏரோது அவனைக் கொலைசெய்ய மனதாயிருந்தும், ஜனங்கள் அவனைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தான். 6 அப்படியிருக்க, ஏரோதின் ஜென்மநாள் கொண்டாடப்படுகிறபோது, ஏரோதியாளின் குமாரத்தி அவர்கள் நடுவே நடனம்பண்ணி ஏரோதைச் சந்தோஷப்படுத்தினாள். 7 அதினிமித்தம் அவன்: நீ எதைக் கேட்டாலும் தருவேன் என்று அவளுக்கு ஆணையிட்டு வாக்குக்கொடுத்தான். 8 அவள் தன் தாயினால் ஏவப்பட்டபடியே: யோவான்ஸ்நானனுடைய தலையை இங்கே ஒரு தாலத்திலே எனக்குத் தாரும் என்று கேட்டாள். 9 ராஜா துக்கமடைந்தான். ஆகிலும், ஆணையினிமித்தமும், பந்தியில் கூட இருந்தவர்களினிமித்தமும், அதைக் கொடுக்கக் கட்டளையிட்டு, 10 ஆள் அனுப்பி, காவற்கூடத்திலே யோவானைச் சிரச்சேதம்பண்ணுவித்தான். 11 அவனுடைய சிரசை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, சிறு பெண்ணுக்குக் கொடுத்தார்கள்; அவள் அதைத் தன் தாயினிடத்தில் கொண்டுபோனாள். 12 அவனுடைய சீஷர்கள் வந்து உடலை எடுத்து அடக்கம்பண்ணி, பின்பு போய் அந்தச் சங்கதியை இயேசுவுக்கு அறிவித்தார்கள். 13 இயேசு அதைக் கேட்டு, அவ்விடம் விட்டு, படவில் ஏறி, வனாந்தரமான ஓர் இடத்துக்குத் தனியே போனார். ஜனங்கள் அதைக் கேள்விப்பட்டு, பட்டணங்களிலிருந்து கால்நடையாய் அவரிடத்திற்குப் போனார்கள். 14 இயேசு வந்து, திரளான ஜனங்களைக் கண்டு, அவர்கள்மேல் மனதுருகி, அவர்களில் வியாதியஸ்தர்களாயிருந்தவர்களைச் சொஸ்தமாக்கினார். 15 சாயங்காலமானபோது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், நேரமுமாயிற்று; ஜனங்கள் கிராமங்களுக்குப் போய்த் தங்களுக்குப் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். 16 இயேசு அவர்களை நோக்கி: அவர்கள் போகவேண்டுவதில்லை; நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். 17 அதற்கு அவர்கள்: இங்கே எங்களிடத்தில் ஐந்து அப்பமும் இரண்டு மீன்களுமேயல்லாமல், வேறொன்றும் இல்லை என்றார்கள். 18 அவைகளை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். 19 அப்பொழுது, அவர் ஜனங்களைப் புல்லின்மேல் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப் பிட்டுச் சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குக் கொடுத்தார்கள். 20 எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள். 21 ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள். 22 இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். 23 அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார். 24 அதற்குள்ளாகப் படவு நடுக்கடலிலே சேர்ந்து, எதிர்க்காற்றாயிருந்தபடியால் அலைகளினால் அலைவுபட்டது. 25 இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார். 26 அவர் கடலின்மேல் நடக்கிறதைச் சீஷர்கள் கண்டு, கலக்கமடைந்து, ஆவேசம் என்று சொல்லி, பயத்தினால் அலறினார்கள். 27 உடனே இயேசு அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். 28 பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக் கட்டளையிடும் என்றான். 29 அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக ஜலத்தின்மேல் நடந்தான். 30 காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து, அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே, என்னை ரட்சியும் என்று கூப்பிட்டான். 31 உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். 32 அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. 33 அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள். 34 பின்பு, அவர்கள் கடலைக் கடந்து, கெனேசரேத்து நாட்டில் சேர்ந்தார்கள். 35 அவ்விடத்து மனுஷர் அவரை இன்னார் என்று அறிந்து, சுற்றுப்புறமெங்கும் செய்தி அனுப்பி, பிணியாளிகளெல்லாரையும் அவரிடத்தில் கொண்டுவந்து, 36 அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.

மத்தேயு 15

1 அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபாரகரும் பரிசேயரும் இயேசுவினிடத்தில் வந்து: 2 உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் போஜனம் பண்ணுகிறார்களே! என்றார்கள். 3 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை ஏன் மீறி நடக்கிறீர்கள்? 4 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கற்பித்திருக்கிறாரே. 5 நீங்களோ, எவனாகிலும் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது கனம்பண்ணாமற்போனாலும், அவனுடைய கடமை தீர்ந்ததென்று போதித்து, 6 உங்கள் பாரம்பரியத்தினாலே தேவனுடைய கற்பனையை அவமாக்கிவருகிறீர்கள். 7 மாயக்காரரே, உங்களைக்குறித்து: 8 இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது; 9 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று, ஏசாயா தீர்க்கதரிசி நன்றாய்ச் சொல்லியிருக்கிறான் என்றார். 10 பின்பு அவர் ஜனங்களை வரவழைத்து, அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டு உணருங்கள். 11 வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். 12 அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர் இந்த வசனத்தைக் கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள். 13 அவர் பிரதியுத்தரமாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடே பிடுங்கப்படும். 14 அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடருக்கு வழிகாட்டுகிற குருடராயிருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார். 15 அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இந்த உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றான். 16 அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாயிருக்கிறீர்களா? 17 வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றில் சென்று ஆசனவழியாய்க் கழிந்துபோம் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா? 18 வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். 19 எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். 20 இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார். 21 பின்பு, இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார். 22 அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரீ ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள். 23 அவளுக்குப் பிரதியுத்தரமாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீஷர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள். 24 அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேயன்றி, மற்றப்படியல்ல என்றார். 25 அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள். 26 அவர் அவளை நோக்கி: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். 27 அதற்கு அவள்: மெய்தான் ஆண்டவரே, ஆகிலும் நாய்க்குட்டிகள் தங்கள் எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். 28 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள். 29 இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார். 30 அப்பொழுது, சப்பாணிகள், குருடர், ஊமையர், ஊனர் முதலிய அநேகரை, திரளான ஜனங்கள் கூட்டிக்கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் சொஸ்தப்படுத்தினார். 31 ஊமையர் பேசுகிறதையும், ஊனர் சொஸ்தமடைகிறதையும், சப்பாணிகள் நடக்கிறதையும், குருடர் பார்க்கிறதையும் ஜனங்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். 32 பின்பு, இயேசு தம்முடைய சீஷர்களை அழைத்து: ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்றுநாள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாய் அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியில் சோர்ந்துபோவார்களே என்றார். 33 அதற்கு அவருடைய சீஷர்கள்: இவ்வளவு திரளான ஜனங்களுக்குத் திருப்தியுண்டாகும்படி வேண்டிய அப்பங்கள் இந்த வனாந்தரத்திலே நமக்கு எப்படி அகப்படும் என்றார்கள். 34 அதற்கு இயேசு: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள். 35 அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு, 36 அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டுத் தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள். 37 எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள். 38 ஸ்திரீகளும் பிள்ளைகளும் தவிர, சாப்பிட்ட புருஷர் நாலாயிரம்பேராயிருந்தார்கள். 39 அவர் ஜனங்களை அனுப்பிவிட்டு, படவில் ஏறி, மக்தலாவின் எல்லைகளில் வந்தார்.

மத்தேயு 16

1 பரிசேயரும் சதுசேயரும் அவரைச் சோதிக்கும்படி அவரிடத்தில் வந்து: வானத்திலிருந்து ஓர் அடையாளத்தைத் தங்களுக்குக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். 2 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: அஸ்தமனமாகிறபோது, செவ்வானமிட்டிருக்கிறது, அதினால் வெளிவாங்கும் என்று சொல்லுகிறீர்கள். 3 உதயமாகிறபோது, செவ்வானமும் மந்தாரமுமாயிருக்கிறது, அதினால் இன்றைக்குக் காற்றும் மழையும் உண்டாகும் என்று சொல்லுகிறீர்கள். மாயக்காரரே, வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, காலங்களின் அடையாளங்களை நிதானிக்க உங்களால் கூடாதா? 4 இந்தப் பொல்லாத விபசார சந்ததியார் அடையாளம் தேடுகிறார்கள்; யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, அவர்களை விட்டுப் புறப்பட்டுப்போனார். 5 அவருடைய சீஷர்கள் அக்கரை சேர்ந்தபோது, அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள். 6 இயேசு அவர்களை நோக்கி: பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள் என்றார். 7 நாம் அப்பங்களைக் கொண்டுவராதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். 8 இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிகளே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன? 9 இன்னும் நீங்கள் உணரவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும்; 10 ஏழு அப்பங்களை நாலாயிரம்பேருக்குப் பகிர்ந்ததையும், மீதியானதை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்பதையும் நீங்கள் நினைவுகூராமலிருக்கிறீர்களா? 11 பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் புளித்தமாவுக்கு எச்சரிக்கையாயிருக்கவேண்டும் என்று நான் சொன்னது அப்பத்தைக்குறித்துச் சொல்லவில்லை என்று நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார். 12 அப்பொழுது, அவர் அப்பத்தின் புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருக்கவேண்டுமென்று சொல்லாமல், பரிசேயர் சதுசேயர் என்பவர்களின் உபதேசத்தைக்குறித்தே அப்படிச் சொன்னார் என்று அறிந்துகொண்டார்கள். 13 பின்பு, இயேசு பிலிப்புச் செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 14 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும்; வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். 15 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். 16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். 18 மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. 19 பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். 20 அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். 21 அதுமுதல் இயேசு, தாம் எருசலேமுக்குப்போய், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் பல பாடுகள்பட்டு, கொலையுண்டு, மூன்றாம் நாளில் எழுந்திருக்கவேண்டும் என்பதைத் தம்முடைய சீஷர்களுக்குச் சொல்லத்தொடங்கினார். 22 அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: ஆண்டவரே, இது உமக்கு நேரிடக்கூடாதே, இது உமக்குச் சம்பவிப்பதில்லை என்று அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். 23 அவரோ திரும்பிப் பேதுருவைப் பார்த்து: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ எனக்கு இடறலாயிருக்கிறாய்; தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்றார். 24 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றி வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றக்கடவன். 25 தன் ஜீவனை ரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் கண்டடைவான். 26 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? 27 மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். 28 இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு 17

1 ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய், 2 அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்; அவர் முகம் சூரியனைப்போலப் பிரகாசித்தது, அவர் வஸ்திரம் வெளிச்சத்தைப்போல வெண்மையாயிற்று. 3 அப்பொழுது மோசேயும் எலியாவும் அவரோடே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். 4 அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். 5 அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. 6 சீஷர்கள் அதைக் கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள். 7 அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாதேயுங்கள் என்றார். 8 அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுத்துப் பார்க்கையில் இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை. 9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார். 10 அப்பொழுது, அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: அப்படியானால் எலியா முந்தி வரவேண்டும் என்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படி யென்று கேட்டார்கள். 11 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான். 12 ஆனாலும், எலியா வந்தாயிற்று என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; அவனை அறியாமல் தங்கள் இஷ்டப்படி அவனுக்குச் செய்தார்கள்; இவ்விதமாய் மனுஷகுமாரனும் அவர்களால் பாடுபடுவார் என்றார். 13 அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீஷர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள். 14 அவர்கள் ஜனங்களிடத்தில் வந்தபோது, ஒரு மனுஷன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: 15 ஆண்டவரே, என் மகனுக்கு இரங்கும், அவன் சந்திரரோகியாய்க் கொடிய வேதனைப்படுகிறான்; அடிக்கடி தீயிலும், அடிக்கடி ஜலத்திலும் விழுகிறான். 16 அவனை உம்முடைய சீஷர்களிடத்தில் கொண்டுவந்தேன்; அவனைச் சொஸ்தமாக்க அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். 17 இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடுள்ள சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். 18 இயேசு பிசாசை அதட்டினார்; உடனே அது அவனை விட்டுப் புறப்பட்டது; அந்நேரமே அந்த இளைஞன் சொஸ்தமானான். 19 அப்பொழுது, சீஷர்கள் இயேசுவினிடத்தில் தனித்துவந்து: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று கேட்டார்கள். 20 அதற்கு இயேசு: உங்கள் அவிசுவாசத்தினாலேதான்; கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாதகாரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 21 இந்த ஜாதிப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார். 22 அவர்கள் கலிலேயாவிலே சஞ்சரிக்கும்போது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார். 23 அவர்கள் அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றார். அவர்கள் மிகுந்த துக்கமடைந்தார்கள். 24 அவர்கள் கப்பர்நகூமில் வந்தபோது, வரிப்பணம் வாங்குகிறவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: உங்கள் போதகர் வரிப்பணம் செலுத்துகிறதில்லையா என்று கேட்டார்கள்; செலுத்துகிறார் என்றான். 25 அவன் வீட்டிற்குள் வந்தபோது, அவன் பேசுகிறதற்கு முன்னமே இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு எப்படித் தோன்றுகிறது? பூமியின் ராஜாக்கள் தீர்வையையும் வரியையும் தங்கள் பிள்ளைகளிடத்திலோ, அந்நியரிடத்திலோ, யாரிடத்தில் வாங்குகிறார்கள் என்று கேட்டார். 26 அதற்குப் பேதுரு: அந்நியரிடத்தில் வாங்குகிறார்கள் என்றான். இயேசு அவனை நோக்கி: அப்படியானால் பிள்ளைகள் அதைச் செலுத்தவேண்டுவதில்லையே. 27 ஆகிலும், நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போய், தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப்பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும் உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்.

மத்தேயு 18

1 அவ்வேளையிலே சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாயிருப்பான் என்று கேட்டார்கள். 2 இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி: 3 நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 4 ஆகையால் இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாயிருப்பான். 5 இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான். 6 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும். 7 இடறல்களினிமித்தம் உலகத்துக்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ! 8 உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். 9 உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாய் எரிநரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக்கண்ணனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். 10 இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 11 மனுஷகுமாரன் கெட்டுப்போனதை ரட்சிக்க வந்தார். 12 உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப் போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ? 13 அவன் அதைக் கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்துச் சந்தோஷப்படுகிறதைப்பார்க்கிலும், அதைக்குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 14 இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல. 15 உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய். 16 அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. 17 அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக. 18 பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; பூலோகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 19 அல்லாமலும், உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக் குறித்தாகிலும் பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 20 ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார். 21 அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து வந்தால், நான் எத்தனைதரம் மன்னிக்கவேண்டும்? ஏழுதரமட்டுமோ என்று கேட்டான். 22 அதற்கு இயேசு: ஏழுதரமாத்திரம் அல்ல, ஏழெழுபதுதரமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன். 23 எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப் பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. 24 அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன் பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். 25 கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான். 26 அப்பொழுது, அந்த ஊழியக்காரன் தாழ விழுந்து, வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான். 27 அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். 28 அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு, அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான். 29 அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான். 30 அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான். 31 நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள். 32 அப்பொழுது, அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். 33 நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, 34 அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான். 35 நீங்களும் அவனவன் தன் தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாய் மன்னியாமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.

மத்தேயு 19

1 இயேசு இந்த வசனங்களைச் சொல்லி முடித்தபின்பு, அவர் கலிலேயாவை விட்டு யோர்தானுக்கு அக்கரையான யூதேயாவின் எல்லைகளில் வந்தார். 2 திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவ்விடத்தில் அவர்களைச் சொஸ்தமாக்கினார். 3 அப்பொழுது, பரிசேயர் அவரைச் சோதிக்கவேண்டுமென்று அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள். 4 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: ஆதியிலே மனுஷரை உண்டாக்கினவர் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார் என்பதையும், 5 இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா? 6 இப்படி இருக்கிறபடியினால், அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்; ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். 7 அதற்கு அவர்கள்: அப்படியானால், தள்ளுதற்சீட்டைக் கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே ஏன் கட்டளையிட்டார் என்றார்கள். 8 அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயகடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடங்கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படியிருக்கவில்லை. 9 ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்; தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 10 அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: மனைவியைப்பற்றிப் புருஷனுடைய காரியம் இப்படியிருந்தால், விவாகம்பண்ணுகிறது நல்லதல்ல என்றார்கள். 11 அதற்கு அவர்: வரம்பெற்றவர்களே தவிர மற்றவர்கள் இந்த வசனத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 12 தாயின் வயிற்றிலிருந்து அண்ணகர்களாய்ப் பிறந்தவர்களும் உண்டு; மனுஷர்களால் அண்ணகர்களாக்கப்பட்டவர்களும் உண்டு; பரலோகராஜ்யத்தினிமித்தம் தங்களை அண்ணகர்களாக்கிக்கொண்டவர்களும் உண்டு; இதை ஏற்றுக்கொள்ள வல்லவன் ஏற்றுக்கொள்ளக்கடவன் என்றார். 13 அப்பொழுது, சிறு பிள்ளைகளின்மேல் அவர் கைகளை வைத்து ஜெபம்பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள். 14 இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி, 15 அவர்கள்மேல் கைகளை வைத்து, பின்பு அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப்போனார். 16 அப்பொழுது ஒருவன் வந்து, அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை அடைவதற்கு நான் எந்த நன்மையைச் செய்யவேண்டும் என்று கேட்டான். 17 அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார். 18 அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக; 19 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார். 20 அந்த வாலிபன் அவரை நோக்கி: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன்; இன்னும் என்னிடத்தில் குறைவு என்ன என்றான். 21 அதற்கு இயேசு: நீ பூரண சற்குணனாயிருக்க விரும்பினால், போய், உனக்கு உண்டானவைகளை விற்று, தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது, பரலோகத்தில் உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். 22 அந்த வாலிபன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, துக்கமடைந்தவனாய்ப் போய்விட்டான். 23 அப்பொழுது, இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவான் பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பது அரிதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 24 மேலும் ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 25 அவருடைய சீஷர்கள் அதைக்கேட்டு மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால், யார் ரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். 26 இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். 27 அப்பொழுது, பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே; எங்களுக்கு என்ன கிடைக்கும் என்றான். 28 அதற்கு இயேசு: மறுஜென்மகாலத்திலே மனுஷகுமாரன் தம்முடைய மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, என்னைப் பின்பற்றின நீங்களும், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங்களின்மேல் வீற்றிருப்பீர்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 29 என் நாமத்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்தனையாய் அடைந்து, நித்தியஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; 30 ஆகிலும், முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார்.

மத்தேயு 20

1 பரலோகராஜ்யம் வீட்டெஜமானாகிய ஒரு மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது; அவன் தன் திராட்சத்தோட்டத்துக்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையிலே புறப்பட்டான். 2 வேலையாட்களுடன் நாளொன்றுக்கு ஒரு பணம் கூலிபேசி, அவர்களைத் தன் திராட்சத்தோட்டத்துக்கு அனுப்பினான். 3 மூன்றாம் மணிவேளையிலும் அவன் புறப்பட்டுப்போய், கடைத்தெருவிலே சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு: 4 நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி உங்களுக்குக் கூலி கொடுப்பேன் என்றான்; அவர்களும் போனார்கள். 5 மறுபடியும், ஆறாம் ஒன்பதாம் மணிவேளையிலும் அவன் போய் அப்படியே செய்தான். 6 பதினோராம் மணிவேளையிலும் அவன் போய், சும்மா நிற்கிற வேறு சிலரைக்கண்டு: நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன என்று கேட்டான். 7 அதற்கு அவர்கள்: ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை நோக்கி: நீங்களும் திராட்சத்தோட்டத்துக்குப் போங்கள், நியாயமானபடி கூலி பெற்றுக்கொள்வீர்கள் என்றான். 8 சாயங்காலத்தில், திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் தன் காரியக்காரனை நோக்கி: நீ வேலையாட்களை அழைத்து, பிந்திவந்தவர்கள் தொடங்கி முந்திவந்தவர்கள்வரைக்கும் அவர்களுக்குக் கூலிகொடு என்றான். 9 அப்பொழுது பதினோராம் மணிவேளையில் வேலையமர்த்தப்பட்டவர்கள் வந்து ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள். 10 முந்தி அமர்த்தப்பட்டவர்கள் வந்து, தங்களுக்கு அதிக கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள், அவர்களும் ஆளுக்கு ஒவ்வொரு பணம் வாங்கினார்கள். 11 வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை நோக்கி: 12 பிந்திவந்தவர்களாகிய இவர்கள் ஒரு மணி நேரமாத்திரம் வேலைசெய்தார்கள்; பகலின் கஷ்டத்தையும் வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களுக்கு இவர்களைச் சமமாக்கினீரே என்று முறுமுறுத்தார்கள். 13 அவர்களில் ஒருவனுக்கு அவன் பிரதியுத்தரமாக: சிநேகிதனே, நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்குச் சம்மதிக்கவில்லையா? 14 உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ, உனக்குக் கொடுத்ததுபோலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம். 15 என்னுடையதை என் இஷ்டப்படி செய்ய எனக்கு அதிகாரமில்லையா? நான் தயாளனாயிருக்கிறபடியால், நீ வன்கண்ணனாயிருக்கலாமா என்றான். 16 இவ்விதமாக, பிந்தினோர் முந்தினோராயும், முந்தினோர் பிந்தினோராயும் இருப்பார்கள்; அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். 17 இயேசு எருசலேமுக்குப் போகும்போது, வழியிலே பன்னிரண்டு சீஷரையும் தனியே அழைத்து: 18 இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, 19 அவரைப் பரியாசம்பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். 20 அப்பொழுது, செபெதேயுவின் குமாரருடைய தாய் தன் குமாரரோடுகூட அவரிடத்தில் வந்து, அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள். 21 அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலதுபாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள்செய்யவேண்டும் என்றாள். 22 இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா என்றார். அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். 23 அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலதுபாரிசத்திலும் என் இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார். 24 மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, அந்த இரண்டு சகோதரர்பேரிலும் எரிச்சலானார்கள். 25 அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 26 உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். 27 உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். 28 அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். 29 அவர்கள் எரிகோவிலிருந்து புறப்பட்டுப்போகையில், திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள். 30 அப்பொழுது வழியருகே உட்கார்ந்திருந்த இரண்டு குருடர், இயேசு அவ்வழியே வருகிறார் என்று கேள்விப்பட்டு: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். 31 அவர்கள் பேசாதிருக்கும்படி ஜனங்கள் அவர்களை அதட்டினார்கள். அவர்களோ: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று அதிகமாய்க் கூப்பிட்டார்கள். 32 இயேசு நின்று, அவர்களைத் தம்மிடத்தில் அழைத்து: நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறீர்கள் என்றார். 33 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, எங்கள் கண்களைத் திறக்கவேண்டும் என்றார்கள். 34 இயேசு மனதுருகி, அவர்கள் கண்களைத் தொட்டார்; உடனே அவர்கள் பார்வையடைந்து, அவருக்குப் பின்சென்றார்கள்.

மத்தேயு 21

1 அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷரில் இரண்டுபேரை நோக்கி: 2 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள். 3 ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். 4 இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று, 5 தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. 6 சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து, 7 கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள். 8 திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். 9 முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். 10 அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள். 11 அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள். 12 இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து: 13 என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார். 14 அப்பொழுது, குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார். 15 அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து, 16 அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார். 17 அவர்களை விட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவுக்குப் போய், அங்கே இராத்தங்கினார். 18 காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பிவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. 19 அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று. 20 சீஷர்கள் அதைக் கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப்போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள். 21 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப்பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 22 மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார். 23 அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணுகையில், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள். 24 இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். 25 யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்; 26 மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படுகிறோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி, 27 இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார். 28 ஆயினும் உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான். 29 அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான். 30 இளையவனிடத்திலும் அவன் வந்து, அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை. 31 இவ்விருவரில் எவன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன்தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 32 ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார். 33 வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான். 34 கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான். 35 தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப்பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள். 36 பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள். 37 கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான். 38 தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி; இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்வோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; 39 அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக் கொலைசெய்தார்கள். 40 அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்தத் தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார். 41 அதற்கு அவர்கள்: அந்தக் கொடியரைக் கொடுமையாய் அழித்து, ஏற்றகாலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள். 42 இயேசு அவர்களை நோக்கி: வீடுகட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? 43 ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். 44 இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 45 பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து, 46 அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசியென்று எண்ணினபடியினால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.

மத்தேயு 22

1 இயேசு மறுபடியும் அவர்களோடே உவமைகளாய்ப் பேசிச் சொன்னது என்னவென்றால்: 2 பரலோகராஜ்யம் தன் குமாரனுக்குக் கலியாணஞ்செய்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. 3 அழைக்கப்பட்டவர்களைக் கலியாணத்திற்கு வரச்சொல்லும்படி அவன் தன் ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களோ வர மனதில்லாதிருந்தார்கள். 4 அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பண்ணினேன், என் எருதுகளும் கொழுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான். 5 அழைக்கப்பட்டவர்களோ அதை அசட்டைபண்ணி, ஒருவன் தன் வயலுக்கும், ஒருவன் தன் வியாபாரத்துக்கும் போய்விட்டார்கள். 6 மற்றவர்கள் அவன் ஊழியக்காரரைப் பிடித்து, அவமானப்படுத்தி, கொலைசெய்தார்கள். 7 ராஜா அதைக் கேள்விப்பட்டு, கோபமடைந்து, தன் சேனைகளை அனுப்பி, அந்தக் கொலைபாதகரை அழித்து, அவர்கள் பட்டணத்தையும் சுட்டெரித்தான். 8 அப்பொழுது, அவன் தன் ஊழியக்காரரை நோக்கி: கலியாண விருந்து ஆயத்தமாயிருக்கிறது, அழைக்கப்பட்டவர்களோ அதற்கு அபாத்திரராய்ப் போனார்கள். 9 ஆகையால், நீங்கள் வழிச்சந்திகளிலே போய், காணப்படுகிற யாவரையும் கலியாணத்திற்கு அழைத்துக்கொண்டுவாருங்கள் என்றான். 10 அந்த ஊழியக்காரர் புறப்பட்டு, வழிகளிலே போய், தாங்கள் கண்ட நல்லார் பொல்லார் யாவரையும் கூட்டிக்கொண்டு வந்தார்கள்; கலியாணசாலை விருந்தாளிகளால் நிறைந்தது. 11 விருந்தாளிகளைப் பார்க்கும்படி ராஜா உள்ளே பிரவேசித்தபோது, கலியாண வஸ்திரம் தரித்திராத ஒரு மனுஷனை அங்கே கண்டு: 12 சிநேகிதனே, நீ கலியாண வஸ்திரமில்லாதவனாய் இங்கே எப்படி வந்தாய் என்று கேட்டான்; அதற்கு அவன் பேசாமலிருந்தான். 13 அப்பொழுது, ராஜா பணிவிடைக்காரரை நோக்கி: இவனைக் கையுங்காலும் கட்டிக் கொண்டுபோய், அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கிற புறம்பான இருளிலே போடுங்கள் என்றான். 14 அந்தப்படியே, அழைக்கப்பட்டவர்கள் அநேகர், தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ சிலர் என்றார். 15 அப்பொழுது, பரிசேயர் போய், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படி யோசனைபண்ணி, 16 தங்கள் சீஷரையும் ஏரோதியரையும் அவரிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறவரென்றும், நீர் முகதாட்சணியம் இல்லாதவராகையால் எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம். 17 ஆதலால், உமக்கு எப்படித் தோன்றுகிறது? இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ, அல்லவோ? அதை எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். 18 இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து: மாயக்காரரே, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? 19 வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார்; அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். 20 அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். 21 இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். 22 அவர்கள் அதைக்கேட்டு ஆச்சரியப்பட்டு அவரை விட்டுப் போய்விட்டார்கள். 23 உயிர்த்தெழுதல் இல்லை என்று சாதிக்கிற சதுசேயர் அன்றையத்தினம் அவரிடத்தில் வந்து: 24 போதகரே, ஒருவன் சந்தானம் இல்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டும் என்று மோசே சொன்னாரே. 25 எங்களுக்குள்ளே சகோதரர் ஏழுபேர் இருந்தார்கள்; மூத்தவன் விவாகம்பண்ணி, மரித்து, சந்தானமில்லாததினால் தன் மனைவியைத் தன் சகோதரனுக்கு விட்டுவிட்டுப்போனான். 26 அப்படியே இரண்டாம் மூன்றாம் சகோதரன்முதல் ஏழாம் சகோதரன்வரைக்கும் செய்தார்கள். 27 எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். 28 ஆகையால், உயிர்த்தெழுதலில் அவ்வேழுபேரில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? அவர்கள் எல்லாரும் அவளை விவாகம்பண்ணியிருந்தார்களே என்று கேட்டார்கள். 29 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். 30 உயிர்த்தெழுதலில் கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை; அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப்போல் இருப்பார்கள்; 31 மேலும் மரித்தோர் உயிர்த்தெழுதலைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா? 32 தேவன் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார் என்றார். 33 ஜனங்கள் இதைக் கேட்டு, அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். 34 அவர் சதுசேயரை வாயடைத்தார் என்று பரிசேயர் கேள்விப்பட்டு, அவரிடத்தில் கூடிவந்தார்கள். 35 அவர்களில் நியாயசாஸ்திரி ஒருவன் அவரைச் சோதிக்கும்படி: 36 போதகரே, நியாயப்பிரமாணத்திலே எந்தக் கற்பனை பிரதானமானது என்று கேட்டான். 37 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக; 38 இது முதலாம் பிரதான கற்பனை. 39 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால், உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே. 40 இவ்விரண்டு கற்பனைகளிலும் நியாயப்பிரமாணம் முழுமையும் தீர்க்கதரிசனங்களும் அடங்கியிருக்கிறது என்றார். 41 பரிசேயர் கூடியிருக்கையில், இயேசு அவர்களை நோக்கி: 42 கிறிஸ்துவைக்குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், அவர் யாருடைய குமாரன்? என்று கேட்டார். அவர் தாவீதின் குமாரன் என்றார்கள். 43 அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியினாலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி? 44 நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே. 45 தாவீது அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். 46 அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.

மத்தேயு 23

1 பின்பு இயேசு ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் நோக்கி: 2 வேதபாரகரும் பரிசேயரும் மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்; 3 ஆகையால், நீங்கள் கைக்கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்; ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். 4 சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக்கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள். 5 தங்கள் கிரியைகளையெல்லாம் மனுஷர் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்கள் காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்கள் வஸ்திரங்களின் தொங்கல்களைப் பெரிதாக்கி, 6 விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், 7 சந்தைவெளிகளில் வந்தனங்களையும், மனுஷரால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள். 8 நீங்களோ ரபீ என்றழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராயிருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள். 9 பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். 10 நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார். 11 உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். 12 தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான். 13 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை. 14 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்பண்ணி, விதவைகளின் வீடுகளைப் பட்சித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக ஆக்கினையை அடைவீர்கள். 15 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள். 16 குருடரான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாகிலும் தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்பண்ணினால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். 17 மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ? 18 மேலும், எவனாகிலும் பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணினால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாகிலும் அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்பண்ணினால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள். 19 மதிகேடரே, குருடரே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ? 20 ஆகையால், பலிபீடத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான். 21 தேவாலயத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான். 22 வானத்தின்பேரில் சத்தியம்பண்ணுகிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்பண்ணுகிறான். 23 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாமிலும் வெந்தையத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே. 24 குருடரான வழிகாட்டிகளே, கொசுயில்லாதபடி வடிகட்டி, ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாயிருக்கிறீர்கள். 25 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது. 26 குருடனான பரிசேயனே! போஜனபானபாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு. 27 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாயிருக்கிறீர்கள், அவைகள் புறம்பே அலங்காரமாய்க் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும். 28 அப்படியே நீங்களும் மனுஷருக்கு நீதிமான்கள் என்று புறம்பே காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள். 29 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளைச் சிங்காரித்து: 30 எங்கள் பிதாக்களின் நாட்களில் இருந்தோமானால், அவர்களோடே நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள். 31 ஆகையால், தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாயிருக்கிறீர்கள். 32 நீங்களும் உங்கள் பிதாக்களின் அக்கிரம அளவை நிரப்புங்கள். 33 சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்? 34 ஆகையால், இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபாரகரையும் உங்களிடத்தில் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொன்று சிலுவைகளில் அறைவீர்கள், சிலரை உங்கள் ஆலயங்களில் வாரினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்; 35 நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரகியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள். 36 இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 37 எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும்வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. 38 இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். 39 கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு 24

1 இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். 2 இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 3 பின்பு, அவர் ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். 4 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; 5 ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். 6 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும், முடிவு உடனே வராது. 7 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். 8 இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம். 9 அப்பொழுது, உங்களை உபத்திரவங்களுக்கு ஒப்புக்கொடுத்து, உங்களைக் கொலைசெய்வார்கள்; என் நாமத்தினிமித்தம் நீங்கள் சகல ஜனங்களாலும் பகைக்கப்படுவீர்கள். 10 அப்பொழுது, அநேகர் இடறலடைந்து, ஒருவரையொருவர் காட்டிக்கொடுத்து, ஒருவரையொருவர் பகைப்பார்கள். 11 அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள். 12 அக்கிரமம் மிகுதியாவதினால் அநேகருடைய அன்பு தணிந்துபோம். 13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். 14 ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். 15 மேலும், பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன். நீங்கள் அதைப் பரிசுத்த ஸ்தலத்தில் நிற்கக் காணும்போது, 16 யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். 17 வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டிலே எதையாகிலும் எடுப்பதற்கு இறங்காதிருக்கக்கடவன். 18 வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரங்களை எடுப்பதற்குத் திரும்பாதிருக்கக்கடவன். 19 அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ. 20 நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலாவது, ஓய்வுநாளிலாவது, சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். 21 ஏனெனில், உலகமுண்டானதுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான மிகுந்த உபத்திரவம் அப்பொழுது உண்டாயிருக்கும். 22 அந்நாட்கள் குறைக்கப்படாதிருந்தால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தெரிந்துகொள்ளப்பட்டவர்களினிமித்தமோ அந்த நாட்கள் குறைக்கப்படும். 23 அப்பொழுது, இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். 24 ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 25 இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். 26 ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால், புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள். 27 மின்னல் கிழக்கிலிருந்து தோன்றி மேற்குவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல, மனுஷகுமாரனுடைய வருகையும் இருக்கும். 28 பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும். 29 அந்நாட்களின் உபத்திரவம் முடிந்தவுடனே, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும், வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும். 30 அப்பொழுது, மனுஷகுமாரனுடைய அடையாளம் வானத்தில் காணப்படும். அப்பொழுது, மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருகிறதைப் பூமியிலுள்ள சகல கோத்திரத்தாரும் கண்டு புலம்புவார்கள். 31 வலுவாய்த் தொனிக்கும் எக்காள சத்தத்தோடே அவர் தமது தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களை வானத்தின் ஒரு முனை முதற்கொண்டு மறுமுனைமட்டும் நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார்கள். 32 அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். 33 அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். 34 இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 35 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. 36 அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். 37 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். 38 எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், 39 ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும். 40 அப்பொழுது, இரண்டுபேர் வயலில் இருப்பார்கள்; ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், ஒருவன் கைவிடப்படுவான். 41 இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக்கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள். 42 உங்கள் ஆண்டவர் இன்ன நாழிகையிலே வருவாரென்று நீங்கள் அறியாதிருக்கிறபடியினால் விழித்திருங்கள். 43 திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள். 44 நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள். 45 ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்? 46 எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான். 47 தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 48 அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு, 49 தன் உடன்வேலைக்காரரை அடிக்கத் தொடங்கி, வெறியரோடே புசிக்கவும் குடிக்கவும் தலைப்பட்டால், 50 அந்த ஊழியக்காரன் நினையாத நாளிலும், அறியாத நாழிகையிலும், அவனுடைய எஜமான் வந்து, 51 அவனைக் கடினமாய்த் தண்டித்து, மாயக்காரரோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்.

மத்தேயு 25

1 அப்பொழுது, பரலோகராஜ்யம் தங்கள் தீவட்டிகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாயிருக்கும். 2 அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாயிருந்தார்கள். 3 புத்தியில்லாதவர்கள் தங்கள் தீவட்டிகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக் கொண்டுபோகவில்லை. 4 புத்தியுள்ளவர்கள் தங்கள் தீவட்டிகளோடுங்கூடத் தங்கள் பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள். 5 மணவாளன் வரத் தாமதித்தபோது, அவர்கள் எல்லாரும் நித்திரைமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள். 6 நடுராத்திரியிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டாயிற்று. 7 அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தீவட்டிகளை ஆயத்தப்படுத்தினார்கள். 8 புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களை நோக்கி: உங்கள் எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சங்கொடுங்கள், எங்கள் தீவட்டிகள் அணைந்துபோகிறதே என்றார்கள். 9 புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். 10 அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது. 11 பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள். 12 அதற்கு அவர்: உங்களை அறியேன் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 13 மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். 14 அன்றியும், பரலோகராஜ்யம் புறத்தேசத்துக்குப் பிரயாணமாய்ப் போகிற ஒரு மனுஷன், தன் ஊழியக்காரரை அழைத்து, தன் ஆஸ்திகளை அவர்கள் வசமாய் ஒப்புக்கொடுத்ததுபோல் இருக்கிறது. 15 அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து தாலந்தும், ஒருவனிடத்தில் இரண்டு தாலந்தும், ஒருவனிடத்தில் ஒரு தாலந்துமாகக் கொடுத்து, உடனே பிரயாணப்பட்டுப் போனான். 16 ஐந்து தாலந்தை வாங்கினவன் போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் பண்ணி, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தான். 17 அப்படியே இரண்டு தாலந்தை வாங்கினவனும், வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தான். 18 ஒரு தாலந்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான். 19 வெகுகாலமானபின்பு அந்த ஊழியக்காரருடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான். 20 அப்பொழுது, ஐந்து தாலந்தை வாங்கினவன், வேறு ஐந்து தாலந்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான். 21 அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். 22 இரண்டு தாலந்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு தாலந்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு தாலந்தைச் சம்பாதித்தேன் என்றான். 23 அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான். 24 ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன். 25 ஆகையால், நான் பயந்து, போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான். 26 அவனுடைய எஜமான் பிரதியுத்தரமாக: பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே. 27 அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே, என்று சொல்லி, 28 அவனிடத்திலிருக்கிற தாலந்தை எடுத்து, பத்துத் தாலந்துள்ளவனுக்குக் கொடுங்கள். 29 உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும். 30 பிரயோஜனமற்ற ஊழியக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான். 31 அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். 32 அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, 33 செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். 34 அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். 35 பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; 36 வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். 37 அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? 38 எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? 39 எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். 40 அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். 41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். 42 பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; 43 அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார். 44 அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். 45 அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். 46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.

மத்தேயு 26

1 இயேசு இந்த வசனங்களையெல்லாம் சொல்லி முடித்தபின்பு, அவர் தம்முடைய சீஷரை நோக்கி: 2 இரண்டுநாளைக்குப்பின்பு பஸ்காபண்டிகை வருமென்று அறிவீர்கள்; அப்பொழுது, மனுஷகுமாரன் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றார். 3 அப்பொழுது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும், காய்பா என்னப்பட்ட பிரதான ஆசாரியனுடைய அரமனையிலே கூடிவந்து, 4 இயேசுவைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள். 5 ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமுண்டாகாதபடிக்குப் பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள். 6 இயேசு பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டில் இருக்கையில், 7 ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அவர் போஜனபந்தியிலிருக்கும்போது, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். 8 அவருடைய சீஷர்கள் அதைக் கண்டு விசனமடைந்து: இந்த வீண்செலவு என்னத்திற்கு? 9 இந்தத் தைலத்தை உயர்ந்த விலைக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்றார்கள். 10 இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் இந்த ஸ்திரீயை ஏன் தொந்தரவுபடுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். 11 தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். 12 இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது. 13 இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 14 அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்: 15 நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க உடன்பட்டார்கள். 16 அதுமுதல் அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். 17 புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல்நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். 18 அதற்கு அவர்: நீங்கள் நகரத்திலே இன்னானிடத்திற்குப் போய்: என் வேளை சமீபமாயிருக்கிறது, உன் வீட்டிலே என் சீஷரோடேகூடப் பஸ்காவை ஆசரிப்பேன் என்று போதகர் சொல்லுகிறார் என்று அவனுக்குச் சொல்லுங்கள் என்றார். 19 இயேசு கற்பித்தபடி சீஷர்கள் போய், பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். 20 சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூட அவர் பந்தியிருந்தார். 21 அவர்கள் போஜனம்பண்ணுகையில், அவர்: உங்களிலொருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 22 அப்பொழுது, அவர்கள் மிகவும் துக்கமடைந்து, அவரை நோக்கி: ஆண்டவரே, நானோ, நானோ? என்று ஒவ்வொருவராய்க் கேட்கத்தொடங்கினார்கள். 23 அவர் பிரதியுத்தரமாக: என்னோடேகூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக்கொடுப்பான். 24 மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். 25 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார். 26 அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். 27 பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்; 28 இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. 29 இதுமுதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம்பண்ணும் நாள்வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 30 அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள். 31 அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். 32 ஆகிலும் நான் உயிர்த்தெழுந்த பின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார். 33 பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் ஒருக்காலும் இடறலடையேன் என்றான். 34 இயேசு அவனை நோக்கி: இந்த இராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 35 அதற்குப் பேதுரு: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்றான்; சீஷர்கள் எல்லாரும் அப்படியே சொன்னார்கள். 36 அப்பொழுது, இயேசு அவர்களோடே கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்து, சீஷர்களை நோக்கி: நான் அங்கே போய் ஜெபம்பண்ணுமளவும் நீங்கள் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; 37 பேதுருவையும் செபெதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும் வியாகுலப்படவும் தொடங்கினார். 38 அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது; நீங்கள் இங்கே தங்கி, என்னோடேகூட விழித்திருங்கள் என்று சொல்லி, 39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். 40 பின்பு, அவர் சீஷர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவை நோக்கி: நீங்கள் ஒரு மணி நேரமாவது என்னோடேகூட விழித்திருக்கக்கூடாதா? 41 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். 42 அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். 43 அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தது. 44 அவர் மறுபடியும் அவர்களை விட்டுப்போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார். 45 பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளை வந்தது. 46 என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார். 47 அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள் பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள். 48 அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். 49 உடனே, அவன் இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, வாழ்க என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். 50 இயேசு அவனை நோக்கி: சிநேகிதனே, என்னத்திற்காக வந்திருக்கிறாய் என்றார். அப்பொழுது, அவர்கள் கிட்டவந்து, இயேசுவின்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். 51 அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கை நீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். 52 அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். 53 நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா? 54 அப்படிச் செய்வேனானால், இவ்விதமாய்ச் சம்பவிக்கவேண்டும் என்கிற வேதவாக்கியங்கள் எப்படி நிறைவேறும் என்றார். 55 அந்த வேளையிலே இயேசு ஜனங்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே உட்கார்ந்து தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது, நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. 56 ஆகிலும் தீர்க்கதரிசிகள் எழுதியிருக்கிற வசனங்கள் நிறைவேறும்படி இவைகளெல்லாம் சம்பவிக்கிறது என்றார். அப்பொழுது, சீஷர்களெல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். 57 இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே வேதபாரகரும் மூப்பரும் கூடிவந்திருந்தார்கள். 58 பேதுரு, தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைவரைக்கும் வந்து, உள்ளே பிரவேசித்து, முடிவைப் பார்க்கும்படி சேவகரோடே உட்கார்ந்தான். 59 பிரதான ஆசாரியரும் மூப்பரும் சங்கத்தார் யாவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி தேடினார்கள்; 60 ஒருவரும் அகப்படவில்லை; அநேகர் வந்து பொய்ச்சாட்சி சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வவில்லை; கடைசியிலே இரண்டு பொய்ச்சாட்சிகள் வந்து: 61 தேவனுடைய ஆலயத்தை இடித்துப்போடவும், மூன்றுநாளைக்குள்ளே அதைக் கட்டவும் என்னாலே ஆகும் என்று இவன் சொன்னான் என்றார்கள். 62 அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான். 63 இயேசுவோ பேசாமலிருந்தார். அப்பொழுது, பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? அதை எங்களுக்குச் சொல்லும்படி ஜீவனுள்ள தேவன்பேரில் உன்னை ஆணையிட்டுக் கேட்கிறேன் என்றான். 64 அதற்கு இயேசு: நீர் சொன்னபடிதான்; அன்றியும், மனுஷகுமாரன் சர்வவல்லவருடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும் வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் இதுமுதல் காண்பீர்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 65 அப்பொழுது பிரதான ஆசாரியன் தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இவன் தேவதூஷணம் சொன்னான்; இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? இதோ, இவன் தூஷணத்தை இப்பொழுது கேட்டீர்களே. 66 உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்று கேட்டான். அதற்கு அவர்கள்: மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார்கள். 67 அப்பொழுது, அவருடைய முகத்தில் துப்பி, அவரைக் குட்டினார்கள்; சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து: 68 கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். 69 அத்தருணத்தில் பேதுரு வெளியே வந்து அரமனை முற்றத்தில் உட்கார்ந்திருந்தான். அப்பொழுது, வேலைக்காரி ஒருத்தி அவனிடத்தில் வந்து: நீயும் கலிலேயனாகிய இயேசுவோடேகூட இருந்தாய் என்றாள். 70 அதற்கு அவன்: நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று, எல்லாருக்கும் முன்பாக மறுதலித்தான். 71 அவன், வாசல் மண்டபத்திற்குப் போனபொழுது வேறொருத்தி அவனைக் கண்டு: இவனும் நசரேயனாகிய இயேசுவோடேகூட இருந்தான் என்று அங்கே இருந்தவர்களுக்குச் சொன்னாள். 72 அவனோ: அந்த மனுஷனை நான் அறியேன் என்று ஆணையிட்டு, மறுபடியும் மறுதலித்தான். 73 சற்றுநேரத்துக்குப்பின்பு அங்கே நின்றவர்கள் பேதுருவினிடத்தில் வந்து: மெய்யாகவே நீயும் அவர்களில் ஒருவன்; உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது என்றார்கள். 74 அப்பொழுது அவன்: அந்த மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். உடனே சேவல் கூவிற்று. 75 அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துக்கொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.

மத்தேயு 27

1 விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி, 2 அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள். 3 அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: 4 குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள். 5 அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசைத் தேவாலயத்திலே எறிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான். 6 பிரதான ஆசாரியர் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தக்கிரயமானதால், காணிக்கைப் பெட்டியிலே இதைப் போடலாகாதென்று சொல்லி, 7 ஆலோசனைபண்ணினபின்பு, அந்நியரை அடக்கம்பண்ணுவதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே கொண்டார்கள். 8 இதினிமித்தம் அந்த நிலம் இந்நாள்வரைக்கும் இரத்தநிலம் என்னப்படுகிறது. 9 இஸ்ரவேல் புத்திரரால் மதிக்கப்பட்டவருக்குக் கிரயமாகிய முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து, 10 கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது அப்பொழுது நிறைவேறிற்று. 11 இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். 12 பிரதான ஆசாரியரும் மூப்பரும் அவர்மேல் குற்றஞ்சாட்டுகையில், அவர் மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. 13 அப்பொழுது, பிலாத்து அவரை நோக்கி: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான். 14 அவரோ ஒரு வார்த்தையும் மாறுத்தரமாகச் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான். 15 காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாயிருந்தது. 16 அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான். 17 பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து, 18 அவர்கள் கூடியிருக்கையில், அவர்களை நோக்கி: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான். 19 அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கையில், அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆளனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர் நிமித்தம் இன்றைக்குச் சொப்பனத்தில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச்சொன்னாள். 20 பரபாசை விட்டுவிடக் கேட்டுக்கொள்ளவும், இயேசுவைக் கொலைசெய்விக்கவும் பிரதான ஆசாரியரும் மூப்பரும் ஜனங்களை ஏவிவிட்டார்கள். 21 தேசாதிபதி ஜனங்களை நோக்கி: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள். 22 பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள். 23 தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள். 24 கலகம் அதிகமாகிறதேயல்லாமல் தன் பிரயத்தனத்தினாலே பிரயோஜனமில்லையென்று பிலாத்து கண்டு, தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான். 25 அதற்கு ஜனங்களெல்லாரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள். 26 அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான். 27 அப்பொழுது, தேசாதிபதியின் போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரமனையிலே கொண்டுபோய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து, 28 அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, 29 முள்ளுகளால் ஒரு முடியைப்பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியாசம்பண்ணி, 30 அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள். 31 அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள். 32 போகையில், சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனுஷனை அவர்கள் கண்டு, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் பண்ணினார்கள். 33 கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவர்கள் வந்தபோது, 34 கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார். 35 அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது. 36 அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள். 37 அன்றியும் அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும் பொருட்டு, இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் சிரசுக்கு மேலாக வைத்தார்கள். 38 அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு கள்ளர் அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டார்கள். 39 அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: 40 தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, உன்னை நீயே ரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கி வா என்று அவரைத் தூஷித்தார்கள். 41 அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் பரியாசம்பண்ணி: 42 மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். 43 தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள். 44 அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்ட கள்ளரும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள். 45 ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. 46 ஒன்பதாம்மணி நேரத்தில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். 47 அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். 48 உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். 49 மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். 50 இயேசு, மறுபடியும் மகா சத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். 51 அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது. 52 கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது. 53 அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள். 54 நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல்காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள். 55 மேலும், இயேசுவுக்கு ஊழியஞ்செய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடே வந்திருந்த அநேக ஸ்திரீகள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். 56 அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரருடைய தாயும் இருந்தார்கள். 57 சாயங்காலமானபோது, இயேசுவுக்குச் சீஷனும் ஐசுவரியவானுமாயிருந்த யோசேப்பு என்னும் பேர்கொண்ட அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனுஷன் வந்து, 58 பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான். 59 யோசேப்பு அந்தச் சரீரத்தை எடுத்து, துய்யதான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, 60 தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டிவைத்துப் போனான். 61 அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள். 62 ஆயத்தநாளுக்குப் பின்னான மறுநாளிலே பிரதான ஆசாரியரும் பரிசேயரும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து: 63 ஆண்டவனே, அந்த எத்தன் உயிரோடிருக்கும்போது, மூன்றுநாளைக்குப்பின் எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகமிருக்கிறது. 64 ஆகையால், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து எழுந்தானென்று ஜனங்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின எத்தைப்பார்க்கிலும் பிந்தின எத்து கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்றுநாள்வரைக்கும் கல்லறையைப் பத்திரப்படுத்தும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள். 65 அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல்சேவகர் உண்டே; போய், உங்களால் கூடியமட்டும் பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள் என்றான். 66 அவர்கள் போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பத்திரப்படுத்தினார்கள்.

மத்தேயு 28

1 ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் விடிந்துவருகையில், மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்கவந்தார்கள். 2 அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்திறங்கி வந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான். 3 அவனுடைய ரூபம் மின்னல்போலவும், அவனுடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது. 4 காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள் போலானார்கள். 5 தூதன் அந்த ஸ்திரீகளை நோக்கி: நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். 6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; 7 சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்குமுன்னே கலிலேயாவுக்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான். 8 அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையை விட்டுச் சீக்கிரமாய்ப் புறப்பட்டு, அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள். 9 அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள். 10 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார். 11 அவர்கள் போகையில், காவல்சேவகரில் சிலர் நகரத்துக்குள்ளே வந்து, நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியருக்கு அறிவித்தார்கள். 12 இவர்கள் மூப்பரோடே கூடிவந்து, ஆலோசனைபண்ணி, சேவகருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து: 13 நாங்கள் நித்திரைபண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள். 14 இது தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள். 15 அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதருக்குள்ளே இந்நாள்வரைக்கும் பிரசித்தமாயிருக்கிறது. 16 பதினொரு சீஷர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள். 17 அங்கே அவர்கள் அவரைக் கண்டு, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள். 18 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. 19 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 20 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

மாற்கு 1

1 தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம். 2 இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்கு முன்னே போய், உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்; 3 கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்; 4 யோவான் வனாந்தரத்தில் ஞானஸ்நானங்கொடுத்து, பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணிக்கொண்டிருந்தான். 5 அப்பொழுது யூதேயா தேசத்தார் அனைவரும் எருசலேம் நகரத்தார் யாவரும், அவனிடத்திற்குப்போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள். 6 யோவான் ஒட்டகமயிர் உடையைத் தரித்து, தன் அரையில் வார்க்கச்சையைக் கட்டிக்கொண்டவனாயும், வெட்டுக்கிளியையும் காட்டுத்தேனையும் புசிக்கிறவனாயும் இருந்தான். 7 அவன்: என்னிலும் வல்லவர் ஒருவர் எனக்குப்பின் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரைக் குனிந்து அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல. 8 நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தேன்; அவரோ பரிசுத்த ஆவியினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார் என்று பிரசங்கித்தான். 9 அந்த நாட்களில், இயேசு கலிலேயாவிலுள்ள நாசரேத்தூரிலிருந்து வந்து, யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். 10 அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ஆவியானவர் புறாவைப்போல் தம்மேல் இறங்குகிறதையும் கண்டார். 11 அன்றியும், நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. 12 உடனே ஆவியானவர் அவரை வனாந்தரத்திற்குப் போகும்படி ஏவினார். 13 அவர் வனாந்தரத்திலே நாற்பதுநாள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்கு ஊழியஞ்செய்தார்கள். 14 யோவான் காவலில் வைக்கப்பட்ட பின்பு, இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து: 15 காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார். 16 அவர் கலிலேயாக் கடலோரமாய் நடந்துபோகையில், மீன்பிடிக்கிறவர்களாயிருந்த சீமோனும், அவன் சகோதரன் அந்திரேயாவும் கடலில் வலைபோட்டுக்கொண்டிருக்கிறபோது அவர்களைக் கண்டார். 17 இயேசு அவர்களை நோக்கி: என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார். 18 உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். 19 அவர் அவ்விடம் விட்டுச் சற்று அப்புறம் போனபோது, செபெதேயுவின் குமாரன் யாக்கோபும் அவன் சகோதரன் யோவானும் படவிலே வலைகளைப் பழுதுபார்த்துக்கொண்டிருக்கிறதைக் கண்டு, 20 உடனே அவர்களையும் அழைத்தார்; அப்பொழுது அவர்கள் தங்கள் தகப்பனாகிய செபெதேயுவைக் கூலியாட்களோடு படவிலே விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். 21 பின்பு கப்பர்நகூமுக்குப் போனார்கள். உடனே அவர் ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, போதகம் பண்ணினார். 22 அவர் வேதபாரகரைப்போலப் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியினால், அவருடைய போதகத்தைக்குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். 23 அவர்களுடைய ஜெபஆலயத்திலே அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் இருந்தான். 24 அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன், நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று சத்தமிட்டான். 25 அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப்போ என்று அதை அதட்டினார். 26 உடனே அந்த அசுத்த ஆவி அவனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனைவிட்டுப் போய்விட்டது. 27 எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன? இந்தப் புதிய உபதேசம் எப்படிப்பட்டது? இவர் அதிகாரத்தோடே அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று தங்களுக்குள்ளே ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 28 அதுமுதல் அவருடைய கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று. 29 உடனே அவர்கள் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யாக்கோபோடும் யோவானோடுங்கூட, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள். 30 அங்கே சீமோனுடைய மாமி ஜுரமாய்க் கிடந்தாள்; உடனே அவர்கள் அவளைக்குறித்து அவருக்குச் சொன்னார்கள். 31 அவர் கிட்டப்போய், அவள் கையைப் பிடித்து, அவளைத் தூக்கிவிட்டார்; உடனே ஜுரம் அவளை விட்டு நீங்கிற்று; அப்பொழுது அவள் அவர்களுக்குப் பணிவிடைசெய்தாள். 32 சாயங்காலமாகிச் சூரியன் அஸ்தமித்தபோது, சகல பிணியாளிகளையும், பிசாசுபிடித்தவர்களையும், அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். 33 பட்டணத்தார் எல்லாரும் வீட்டு வாசலுக்கு முன்பாகக் கூடிவந்தார்கள். 34 பலவிதமான வியாதிகளினால் உபத்திரவப்பட்டிருந்த அநேகரை அவர் சொஸ்தமாக்கி, அநேகம் பிசாசுகளையும் துரத்திவிட்டார்; அந்தப் பிசாசுகள் தம்மை அறிந்திருந்தபடியால், அவைகள் பேசுகிறதற்கு அவர் இடங்கொடுக்கவில்லை. 35 அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். 36 சீமோனும் அவனோடே இருந்தவர்களும் அவரைப் பின்தொடர்ந்துபோய், 37 அவரைக் கண்டபோது: உம்மை எல்லாரும் தேடுகிறார்கள் என்று சொன்னார்கள். 38 அவர்களை அவர் நோக்கி: அடுத்த ஊர்களிலும் நான் பிரசங்கம்பண்ண வேண்டுமாதலால், அவ்விடங்களுக்குப் போவோம் வாருங்கள்; இதற்காகவே புறப்பட்டுவந்தேன் என்று சொல்லி; 39 கலிலேயா நாடெங்கும் அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் பிரசங்கம் பண்ணிக்கொண்டும், பிசாசுகளைத் துரத்திக்கொண்டும் இருந்தார். 40 அப்பொழுது குஷ்டரோகி ஒருவன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு: உமக்குச் சித்தமானால் என்னைச் சுத்தமாக்க உம்மால் ஆகும் என்று வேண்டிக்கொண்டான். 41 இயேசு மனதுருகி, கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார். 42 இப்படி அவர் சொன்னவுடனே, குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று, அவன் சுத்தமானான். 43 அப்பொழுது அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு எச்சரிக்கையாயிரு; 44 ஆயினும் நீ போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டிருக்கிறவைகளை அவர்களுக்குச் சாட்சியாகச் செலுத்து என்று கண்டிப்பாய்ச் சொல்லி, உடனே அவனை அனுப்பிவிட்டார். 45 அவனோ புறப்பட்டுப்போய், இந்தச் சங்கதி எங்கும் விளங்கும்படியாகப் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான். அதினால் அவர் வெளியரங்கமாய்ப் பட்டணத்தில் பிரவேசிக்கக்கூடாமல், வெளியே வனாந்தரமான இடங்களில் தங்கியிருந்தார்; எத்திசையிலுமிருந்து ஜனங்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.

மாற்கு 2

1 சிலநாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டிலிருக்கிறாரென்று ஜனங்கள் கேள்விப்பட்டு; 2 உடனே வாசலுக்கு முன்னும் நிற்க இடம்போதாதபடிக்கு அநேகர் கூடிவந்தார்கள்; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார். 3 அப்பொழுது நாலுபேர் ஒரு திமிர்வாதக்காரனைச் சுமந்துகொண்டு அவரிடத்தில் வந்தார்கள்; 4 ஜனக்கூட்டத்தினிமித்தம் அவருக்குச் சமீபமாய்ச் சேரக்கூடாமல், அவர் இருந்த வீட்டின் மேற்கூரையைப் பிரித்துத் திறப்பாக்கி, திமிர்வாதக்காரன் கிடக்கிற படுக்கையை இறக்கினார்கள். 5 இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். 6 அங்கே உட்கார்ந்திருந்த வேதபாரகரில் சிலர்: 7 இவன் இப்படித் தேவதூஷணம் சொல்லுகிறதென்ன? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்று தங்கள் இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள். 8 அவர்கள் தங்களுக்குள்ளே இப்படிச் சிந்திக்கிறார்களென்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறதென்ன? 9 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டதென்று சொல்வதோ, எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று சொல்வதோ, எது எளிது? 10 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: 11 நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 12 உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்குமுன்பாகப் போனான். அப்பொழுது எல்லாரும் ஆச்சரியப்பட்டு: நாம் ஒருக்காலும் இப்படிக் கண்டதில்லையென்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். 13 அவர் மறுபடியும் புறப்பட்டுக் கடலருகே போனார்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்குப் போதகம்பண்ணினார். 14 அவர் நடந்துபோகையில், அல்பேயுவின் குமாரனாகிய லேவி ஆயத்துறையில் உட்கார்ந்திருக்கிறதைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்சென்றான். 15 அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் போஜனபந்தியிருக்கையில், அநேக ஆயக்காரரும் பாவிகளும் அவரோடுகூட வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவர் சீஷரோடுங்கூடப் பந்தியிருந்தார்கள். 16 அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதை வேதபாரகரும் பரிசேயரும் கண்டு, அவருடைய சீஷரை நோக்கி: அவர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம் பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். 17 இயேசு அதைக் கேட்டு: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். 18 யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள். 19 அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர் உபவாசிப்பார்களா? மணவாளன் தங்களுடனே இருக்கும்வரைக்கும் உபவாசிக்கமாட்டார்களே. 20 மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள். 21 ஒருவனும் கோடித்துண்டைப் பழைய வஸ்திரத்தோடு இணைக்கமாட்டான், இணைத்தால், அதினோடே இணைத்த புதியதுண்டு பழையதை அதிகமாய்க் கிழிக்கும், பீறலும் அதிகமாகும். 22 ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால், புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம்; புதுரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும் என்றார். 23 பின்பு, அவர் ஓய்வுநாளில் பயிர் வழியே போனார்; அவருடைய சீஷர்கள் கூட நடந்துபோகையில், கதிர்களைக் கொய்யத் தொடங்கினார்கள். 24 பரிசேயர் அவரை நோக்கி: இதோ, ஓய்வுநாளில் செய்யத்தகாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள். 25 அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது, 26 அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர்தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தெய்வசமுகத்து அப்பங்களைத் தானும் புசித்துத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார். 27 பின்பு அவர்களை நோக்கி: மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டது; 28 ஆகையால் மனுஷகுமாரன் ஓய்வு நாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார்.

மாற்கு 3

1 மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே சூம்பின கையையுடைய ஒரு மனுஷன் இருந்தான். 2 அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில் குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள். 3 அப்பொழுது அவர் சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்று சொல்லி; 4 அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக் காப்பதோ அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். 5 அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று. 6 உடனே பரிசேயர் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண்ணினார்கள். 7 இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம்விட்டு, கடலோரத்துக்குப் போனார். 8 கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள். அல்லாமலும் தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளிலுமிருந்து திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, அவரிடத்தில் வந்தார்கள். 9 அவர் அநேகரைச் சொஸ்தமாக்கினார். நோயாளிகளெல்லாரும் அதை அறிந்து அவரைத் தொடவேண்டுமென்று அவரிடத்தில் நெருங்கிவந்தார்கள். 10 ஜனங்கள் திரளாயிருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு, தமக்காக ஒரு படவை ஆயத்தம்பண்ணவேண்டுமென்று, தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். 11 அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன. 12 தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவைகளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். 13 பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள். 14 அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும், 15 வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார். 16 அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார். 17 செபெதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார், 18 அந்திரேயா, பிலிப்பு, பற்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன், 19 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே. 20 பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள். 21 அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி, அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள். 22 எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான், பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். 23 அவர்களை அவர் அழைத்து, உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி? 24 ஒரு ராஜ்யம் தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே. 25 ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே. 26 சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலைநிற்கமாட்டாமல், அழிந்துபோவானே. 27 பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடைமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான். 28 மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்; 29 ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார். 30 அசுத்த ஆவியைக் கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர் இப்படிச் சொன்னார். 31 அப்பொழுது அவருடைய சகோதரரும் தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள். 32 அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள். 33 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி; 34 தம்மைச் சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப்பார்த்து: இதோ, என் தாயும், என் சகோதரரும் இவர்களே! 35 தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.

மாற்கு 4

1 அவர் மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் கடலிலே நின்ற ஒரு படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கடற்கரையில் நின்றார்கள். 2 அவர் அநேக விசேஷங்களை உவமைகளாக அவர்களுக்குப் போதித்தார்; போதிக்கிறபொழுது அவர்களுக்குச் சொன்னது: 3 கேளுங்கள், விதைக்கிறவன் ஒருவன் விதைக்கப் புறப்பட்டான். 4 அவன் விதைக்கையில், சில விதை வழியருகே விழுந்தது; ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. 5 சில விதை அதிக மண்ணில்லாத கற்பாறை நிலத்தில் விழுந்தது; அதற்கு ஆழமான மண்ணில்லாததினாலே சீக்கிரத்தில் முளைத்தது; 6 வெயில் ஏறினபோதோ, தீய்ந்து போய், வேரில்லாமையால் உலர்ந்துபோயிற்று. 7 சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் வளர்ந்து, அது பலன் கொடாதபடி, அதை நெருக்கிப்போட்டது. 8 சில விதை நல்ல நிலத்தில் விழுந்து, ஓங்கிவளருகிற பயிராகி, ஒன்று முப்பதும், ஒன்று அறுபதும், ஒன்று நூறுமாகப் பலன் தந்தது. 9 கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று அவர்களுக்குச் சொன்னார். 10 அவர் தனித்திருக்கிறபோது, பன்னிருவரோடுங்கூட அவரைச் சூழ்ந்திருந்தவர்கள் இந்த உவமையைக் குறித்து அவரிடத்தில் கேட்டார்கள். 11 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. 12 அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார். 13 பின்பு அவர் அவர்களை நோக்கி: இந்த உவமையை நீங்கள் அறியவில்லையா? அறியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படி அறிவீர்கள்? 14 விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான். 15 வசனத்தைக் கேட்டவுடனே சாத்தான் வந்து, அவர்கள் இருதயங்களில் விதைக்கப்பட்ட வசனத்தை எடுத்துப்போடுகிறான்; இவர்களே வசனம் விதைக்கப்படுகிற வழியருகானவர்கள். 16 அப்படியே, வசனத்தைக் கேட்டவுடனே அதைச் சந்தோஷத்தோடு ஏற்றுக்கொண்டும், 17 தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியால், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திருக்கிறார்கள், வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைகிறார்கள்; இவர்களே கற்பாறை நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள். 18 வசனத்தைக் கேட்டும், உலகக்கவலைகளும், ஐசுவரியத்தின் மயக்கமும், மற்றவைகளைப்பற்றி உண்டாகிற இச்சைகளும் உட்பிரவேசித்து, வசனத்தை நெருக்கிப்போட, அதினால் பலனற்றுப்போகிறார்கள். 19 இவர்களே முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள். 20 வசனத்தைக் கேட்டு, ஏற்றுக்கொண்டு, ஒன்று முப்பதும் ஒன்று அறுபதும் ஒன்று நூறுமாகப் பலன்கொடுக்கிறார்கள்; இவர்களே நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் என்றார். 21 பின்னும் அவர் அவர்களை நோக்கி: விளக்கைத் தண்டின்மேல் வைக்கிறதற்கேயன்றி, மரக்காலின் கீழாகிலும், கட்டிலின் கீழாகிலும், வைக்கிறதற்குக் கொண்டுவருவார்களா? 22 வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை. 23 கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார். 24 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள். எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும், கேட்கிற உங்களுக்கு அதிகம் கொடுக்கப்படும். 25 உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றார். 26 பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து; 27 இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது. 28 எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கும். 29 பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார். 30 பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தை எதற்கு ஒப்பிடுவோம்? அல்லது எந்த உவமையினாலே அதைத் திருஷ்டாந்தப்படுத்துவோம்? 31 அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அது பூமியில் விதைக்கப்படும்போது பூமியிலுள்ள சகல விதைகளிலும் சிறிதாயிருக்கிறது; 32 விதைக்கப்பட்ட பின்போ, அது வளர்ந்து, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதினுடைய நிழலின்கீழ் வந்தடையத்தக்க பெரிய கிளைகளை விடும் என்றார். 33 அவர்கள் கேட்டறியும் திராணிக்குத்தக்கதாக, அவர் இப்படிப்பட்ட அநேக உவமைகளினாலே அவர்களுக்கு வசனத்தைச் சொன்னார். 34 உவமைகளினாலேயன்றி அவர்களுக்கு ஒன்றும் சொல்லவில்லை; அவர் தம்முடைய சீஷரோடே தனித்திருக்கும்போது, அவர்களுக்கு எல்லாவற்றையும் விவரித்துச்சொன்னார். 35 அன்று சாயங்காலத்தில், அவர் அவர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார். 36 அவர்கள் ஜனங்களை அனுப்பிவிட்டு, அவர் படவிலிருந்தபடியே அவரைக் கொண்டுபோனார்கள். வேறே படவுகளும் அவரோடேகூட இருந்தது. 37 அப்பொழுது பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று. 38 கப்பலின் பின்னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார். அவர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள். 39 அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதல் உண்டாயிற்று. 40 அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார். 41 அவர்கள் மிகவும் பயந்து: இவர் யாரோ? காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று, ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.

மாற்கு 5

1 பின்பு அவர்கள் கடலுக்கு அக்கரையிலுள்ள கதரேனருடைய நாட்டில் வந்தார்கள். 2 அவர் படவிலிருந்து இறங்கினவுடனே, அசுத்த ஆவியுள்ள ஒரு மனுஷன் பிரேதக்கல்லறைகளிலிருந்து அவருக்கு எதிராக வந்தான். 3 அவனுடைய குடியிருப்பு கல்லறைகளிலே இருந்தது; அவனைச் சங்கிலிகளினாலும் கட்ட ஒருவனாலும் கூடாதிருந்தது. 4 அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது. 5 அவன் எப்பொழுதும் இரவும் பகலும், மலைகளிலும் கல்லறைகளிலும் இருந்து, கூக்குரலிட்டு, கல்லுகளினாலே தன்னைக் காயப்படுத்திக்கொண்டிருந்தான். 6 அவன் இயேசுவைத் தூரத்திலே கண்டபோது, ஓடிவந்து, அவரைப் பணிந்துகொண்டு: 7 இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்குத் தேவன்பேரில் உமக்கு ஆணையென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். 8 ஏனெனில் அவர் அவனை நோக்கி: அசுத்த ஆவியே, இந்த மனுஷனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று சொல்லியிருந்தார். 9 அப்பொழுது அவர் அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார். அதற்கு அவன்: நாங்கள் அநேகராயிருக்கிறபடியால் என் பேர் லேகியோன் என்று சொல்லி, 10 தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிடாதபடிக்கு அவரை மிகவும் வேண்டிக்கொண்டான். 11 அப்பொழுது, அவ்விடத்தில் மலையருகே அநேகம் பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தது. 12 அந்தப் பிசாசுகளெல்லாம் அவரை நோக்கி: பன்றிகளுக்குள்ளே போகும்படி, அவைகளுக்குள்ளே எங்களை அனுப்பும் என்று அவரை வேண்டிக்கொண்டன. 13 இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக் கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டது. 14 பன்றிகளை மேய்த்தவர்கள் ஓடி, இதைப் பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு; 15 இயேசுவினிடத்தில் வந்து, லேகியோனாகிய பிசாசுகள் பிடித்திருந்தவன் வஸ்திரந்தரித்து, உட்கார்ந்து, புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள். 16 பிசாசுகள் பிடித்திருந்தவனுக்கும் பன்றிகளுக்கும் சம்பவித்ததைக் கண்டவர்களும் அவர்களுக்கு விவரமாய்ச் சொன்னார்கள். 17 அப்பொழுது தங்கள் எல்லைகளை விட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொள்ளத் தொடங்கினார்கள். 18 அப்படியே அவர் படவில் ஏறுகிறபொழுது, பிசாசு பிடித்திருந்தவன், அவரோடேகூட இருக்கும்படி தனக்கு உத்தரவுகொடுக்க அவரை வேண்டிக்கொண்டான். 19 இயேசு அவனுக்கு உத்தரவுகொடாமல்: நீ உன் இனத்தாரிடத்தில் உன் வீட்டிற்குப்போய், கர்த்தர் உனக்கு இரங்கி, உனக்குச் செய்தவைகளையெல்லாம் அவர்களுக்கு அறிவியென்று சொன்னார். 20 அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் தெக்கப்போலி என்னும் நாட்டில் பிரசித்தம்பண்ணத்தொடங்கினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். 21 இயேசு படவில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்திலிருந்தபோது, திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தார்கள். 22 அப்பொழுது, ஜெபஆலயத்தலைவரில் ஒருவனாகிய யவீரு என்பவன் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்திலே விழுந்து: 23 என் குமாரத்தி மரண அவஸ்தைப்படுகிறாள், அவள் ஆரோக்கியம் அடையும்படிக்கு நீர் வந்து, அவள்மேல் உமது கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்று அவரை மிகவும் வேண்டிக்கொண்டான். 24 அவர் அவனோடேகூடப் போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்று, அவரை நெருக்கினார்கள். 25 அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, 26 அநேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளையெல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிறபொழுது, 27 இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி; 28 ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். 29 உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்றுபோயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். 30 உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். 31 அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: திரளான ஜனங்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் கண்டும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள். 32 இதைச் செய்தவளைக் காணும்படிக்கு அவர் சுற்றிலும் பார்த்தார். 33 தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்குச் சொன்னாள். 34 அவர் அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடேபோய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார். 35 அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து சிலர் வந்து: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர் என்றார்கள். 36 அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெபஆலயத்தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி; 37 பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறொருவரும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல்; 38 ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலே வந்து, சந்தடியையும் மிகவும் அழுது புலம்புகிறவர்களையும் கண்டு, 39 உள்ளே பிரவேசித்து: நீங்கள் சந்தடிபண்ணி அழுகிறதென்ன? பிள்ளை மரிக்கவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். 40 அதற்காக அவரைப் பார்த்து நகைத்தார்கள். எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, பிள்ளையின் தகப்பனையும் தாயையும் தம்மோடே வந்தவர்களையும் அழைத்துக்கொண்டு, பிள்ளையிருந்த இடத்தில் பிரவேசித்து, 41 பிள்ளையின் கையைப் பிடித்து: தலீத்தாகூமி என்றார்; அதற்கு, சிறுபெண்ணே எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்று அர்த்தமாம். 42 உடனே சிறுபெண் எழுந்து நடந்தாள்; அவள் பன்னிரண்டு வயதுள்ளவளாயிருந்தாள். அவர்கள் மிகுந்த ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். 43 அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரம் கொடுக்கும்படி சொன்னார்.

மாற்கு 6

1 அவர் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தாம் வளர்ந்த ஊருக்கு வந்தார்; அவருடைய சீஷரும் அவரோடேகூட வந்தார்கள். 2 ஓய்வுநாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத் தொடங்கினார். அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கேயிருந்து வந்தது? இவன் கைகளினால் இப்படிப்பட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படி இவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது? 3 இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபு யோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன் சகோதரிகளும் இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்று சொல்லி, அவரைக்குறித்து இடறலடைந்தார்கள். 4 இயேசு அவர்களை நோக்கி: தீர்க்கதரிசி ஒருவன் தன் ஊரிலும் தன் இனத்திலும் தன் வீட்டிலுமேயன்றி வேறெங்கும் கனவீனமடையான் என்றார். 5 அங்கே அவர் சில நோயாளிகள்மேல் கைகளை வைத்து, அவர்களைக் குணமாக்கினதேயன்றி, வேறொரு அற்புதமும் செய்யக்கூடாமல், 6 அவர்களுடைய அவிசுவாசத்தைக் குறித்து ஆச்சரியப்பட்டு; கிராமங்களிலே சுற்றித்திரிந்து, உபதேசம்பண்ணினார். 7 அவர் பன்னிருவரையும் அழைத்து, அசுத்த ஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரங்கொடுத்து, 8 வழிக்குப் பையையாகிலும், அப்பத்தையாகிலும், கச்சையில் காசையாகிலும், எடுத்துக்கொண்டுபோகாமல், ஒரு தடியை மாத்திரம் எடுத்துக்கொண்டுபோகவும்; 9 பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டுபோகவும், இரண்டு அங்கிகளைத் தரியாதிருக்கவும் கட்டளையிட்டார். 10 பின்பு அவர்களை நோக்கி: நீங்கள் எங்கேயாகிலும் ஒரு வீட்டில் பிரவேசித்தால், அவ்விடத்தை விட்டுப் புறப்படுகிறவரைக்கும் அங்கேதானே தங்கியிருங்கள். 11 எவர்களாகிலும் உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்கள் வசனங்களைக் கேளாமலும் இருந்தால், நீங்கள் அவ்விடம் விட்டுப் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களின் கீழே படிந்த தூசியை உதறிப்போடுங்கள். நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் சோதோம் கொமோரா பட்டணத்திற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, அவர்களை இரண்டு இரண்டுபேராக அனுப்பினார். 12 அவர்கள் புறப்பட்டுப்போய்: மனந்திரும்புங்கள் என்று பிரசங்கித்து; 13 அநேகம் பிசாசுகளைத் துரத்தி, அநேகம் நோயாளிகளை எண்ணெய் பூசிச் சொஸ்தமாக்கினார்கள். 14 அவருடைய பேர் பிரசித்தமானபடியினால், ஏரோதுராஜா அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு: யோவான்ஸ்நானன் மரித்தோரிலிருந்து எழுந்தான், ஆகையால் அவனிடத்தில் இந்தப் பலத்த செய்கைகள் விளங்குகிறது என்றான். 15 சிலர்: அவர் எலியா என்றார்கள். வேறு சிலர்: அவர், ஒரு தீர்க்கதரிசி, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவனைப்போலிருக்கிறாரென்று சொன்னார்கள். 16 ஏரோது அதைக் கேட்டபொழுது: அவன் நான் சிரச்சேதம் பண்ணின யோவான்தான்; அவன் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றான். 17 ஏரோது தன் சகோதரனாகிய பிலிப்புவின் மனைவி ஏரோதியாளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டபோது, 18 யோவான் ஏரோதை நோக்கி: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று சொன்னதினிமித்தம், ஏரோது சேவகரை அனுப்பி, யோவானைப் பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான். 19 ஏரோதியாளும் அவனுக்குச் சதி நினைத்து, அவனைக் கொன்றுபோட மனதாயிருந்தாள்; ஆகிலும் அவளால் கூடாமற்போயிற்று. 20 அதேனென்றால் யோவான் நீதியும் பரிசுத்தமுமுள்ளவனென்று ஏரோது அறிந்து, அவனுக்குப் பயந்து, அவனைப் பாதுகாத்து, அவன் யோசனையின்படி அநேக காரியங்களைச் செய்து, விருப்பத்தோடே அவன் சொல்லைக் கேட்டு வந்தான். 21 பின்பு சமயம் வாய்த்தது; எப்படியென்றால், ஏரோது தன் ஜென்மநாளிலே தன்னுடைய பிரபுக்களுக்கும், சேனாதிபதிகளுக்கும், கலிலேயா நாட்டின் பிரதான மனுஷருக்கும் ஒரு விருந்து பண்ணினபோது, 22 ஏரோதியாளின் குமாரத்தி சபை நடுவே வந்து நடனம்பண்ணி, ஏரோதுவையும் அவனோடேகூடப் பந்தியிருந்தவர்களையும் சந்தோஷப்படுத்தினாள். அப்பொழுது, ராஜா சிறுபெண்ணை நோக்கி: உனக்கு வேண்டியதை என்னிடத்தில் கேள், அதை உனக்குத் தருவேன் என்று சொன்னதுமல்லாமல்; 23 நீ என்னிடத்தில் எதைக் கேட்டாலும், அது என் ராஜ்யத்தில் பாதியானாலும், அதை உனக்குத் தருவேன் என்று அவளுக்கு ஆணையும் இட்டான். 24 அப்பொழுது, அவள் வெளியே போய், நான் என்ன கேட்கவேண்டும் என்று தன் தாயினிடத்தில் கேட்டாள். அதற்கு அவள்: யோவான்ஸ்நானனுடைய தலையைக் கேள் என்றாள். 25 உடனே அவள் ராஜாவினிடத்தில் சீக்கிரமாய் வந்து: நீர் இப்பொழுதே ஒரு தாலத்தில் யோவான்ஸ்நானனுடைய தலையை எனக்குத் தரவேண்டும் என்று கேட்டாள். 26 அப்பொழுது ராஜா மிகுந்த துக்கமடைந்தான்; ஆகிலும், ஆணையினிமித்தமும், கூடப்பந்தியிருந்தவர்களினிமித்தமும், அவளுக்கு அதை மறுக்க மனதில்லாமல்; 27 உடனே அவனுடைய தலையைக் கொண்டுவரும்படி சேவகனுக்குக் கட்டளையிட்டு அனுப்பினான். 28 அந்தப்படி அவன் போய், காவற்கூடத்திலே அவனைச் சிரச்சேதம்பண்ணி, அவன் தலையை ஒரு தாலத்திலே கொண்டுவந்து, அதை அந்தச் சிறுபெண்ணுக்குக் கொடுத்தான்; அந்தச் சிறுபெண் அதைத் தன் தாயினிடத்தில் கொடுத்தாள். 29 அவனுடைய சீஷர்கள் அதைக் கேள்விப்பட்டு வந்து, அவன் உடலை எடுத்து, ஒரு கல்லறையில் வைத்தார்கள். 30 அப்பொழுது அப்போஸ்தலர் இயேசுவினிடத்தில் கூடிவந்து, தாங்கள் செய்தவைகள் உபதேசித்தவைகள் யாவையும் அவருக்கு அறிவித்தார்கள். 31 அவர் அவர்களை நோக்கி: வனாந்தரமான ஓரிடத்தில் தனித்துச் சற்றே இளைப்பாறும்படி போவோம் வாருங்கள் என்றார்; ஏனெனில், வருகிறவர்களும் போகிறவர்களும் அநேகராயிருந்தபடியினால் போஜனம் பண்ணுகிறதற்கும் அவர்களுக்குச் சமயமில்லாதிருந்தது. 32 அப்படியே அவர்கள் தனிமையாய் ஒரு படவில் ஏறி வனாந்தரமான ஓர் இடத்திற்குப் போனார்கள். 33 அவர்கள் புறப்பட்டுப் போகிறதை ஜனங்கள் கண்டார்கள். அவரை அறிந்த அநேகர் சகல பட்டணங்களிலுமிருந்து கால்நடையாய் அவ்விடத்திற்கு ஓடி, அவர்களுக்கு முன்னே அங்கே சேர்ந்து, அவரிடத்தில் கூடிவந்தார்கள். 34 இயேசு கரையில் வந்து, அநேக ஜனங்களைக் கண்டு, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போலிருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, அநேக காரியங்களை அவர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். 35 வெகுநேரம் சென்றபின்பு, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: இது வனாந்தரமான இடம், வெகுநேரமுமாயிற்று; 36 புசிக்கிறதற்கும் இவர்களிடத்தில் ஒன்றுமில்லை; ஆகையால் இவர்கள் சுற்றியிருக்கிற கிராமங்களுக்கும் ஊர்களுக்கும் போய், தங்களுக்காக அப்பங்களை வாங்கிக்கொள்ளும்படி இவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். 37 அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் போய், இருநூறு பணத்துக்கு அப்பங்களை வாங்கி இவர்களுக்குப் புசிக்கும்படி கொடுக்கக்கூடுமோ என்றார்கள். 38 அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்களுண்டு, போய்ப்பாருங்கள் என்றார். அவர்கள் பார்த்துவந்து: ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் உண்டு என்றார்கள். 39 அப்பொழுது எல்லாரையும் பசும்புல்லின்மேல் பந்திபந்தியாக உட்காரவைக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார். 40 அப்படியே வரிசை வரிசையாய், நூறுநூறுபேராகவும் ஐம்பதைம்பதுபேராகவும், உட்கார்ந்தார்கள். 41 அவர் அந்த ஐந்து அப்பங்களையும், அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, ஆசீர்வதித்து, அப்பங்களைப்பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி தம்முடைய சீஷர்களிடத்தில் கொடுத்தார். அப்படியே இரண்டு மீன்களையும் எல்லாருக்கும் பங்கிட்டார். 42 எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். 43 மேலும் அப்பங்களிலும் மீன்களிலும் மீதியான துணிக்கைகளைப் பன்னிரண்டு கூடைநிறைய எடுத்தார்கள். 44 அப்பம் சாப்பிட்ட புருஷர் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள். 45 அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி, அவர்களைத் துரிதப்படுத்தினார். 46 அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார். 47 சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார். 48 அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்தபடியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப்படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்துபோகிறவர்போல் காணப்பட்டார். 49 அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள். 50 அவர்களெல்லாரும் அவரைக் கண்டு கலக்கமடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்று சொல்லி, 51 அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள். 52 அவர்களுடைய இருதயம் கடினமுள்ளதாயிருந்தபடியினால் அப்பங்களைக் குறித்து அவர்கள் உணராமற்போனார்கள். 53 அவர்கள் கடலைக் கடந்து கெனேசரேத்தென்னும் நாட்டிற்கு வந்து, கரைபிடித்தார்கள். 54 அவர்கள் படவிலிருந்து இறங்கினவுடனே, ஜனங்கள் அவரை அறிந்து, 55 அந்தச் சுற்றுப்புறமெங்கும் ஓடித்திரிந்து, பிணியாளிகளைப் படுக்கைகளில் கிடத்தி, அவர் வந்திருக்கிறாரென்று கேள்விப்பட்ட இடங்களிலெல்லாம் சுமந்து கொண்டுவந்தார்கள். 56 அல்லாமலும் அவர் பிரவேசித்த கிராமங்கள் பட்டணங்கள் நாடுகள் எவைகளோ, அவைகளின் சந்தைவெளிகளிலே வியாதிக்காரரை வைத்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும் அவர்கள் தொடும்படி உத்தரவாகவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவரைத் தொட்ட யாவரும் சொஸ்தமானார்கள்.

மாற்கு 7

1 எருசலேமிலிருந்து வந்த பரிசேயரும், வேதபாரகரில் சிலரும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். 2 அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர் கழுவாத அசுத்த கைகளாலே போஜனம்பண்ணுகிறதை அவர்கள் கண்டு குற்றம்பிடித்தார்கள். 3 ஏனெனில் பரிசேயர் முதலிய யூதர் அனைவரும் முன்னோர்களின் பாரம்பரியத்தைக் கைக்கொண்டு, அடிக்கடி கைகழுவினாலொழியச் சாப்பிடமாட்டார்கள். 4 கடையிலிருந்து வரும்போதும் ஸ்நானம்பண்ணாமல் சாப்பிடமாட்டார்கள். அப்படியே செம்புகளையும் கிண்ணங்களையும் செப்புக்குடங்களையும் மணைகளையும் கழுவுகிறதுமல்லாமல், வேறு அநேக ஆசாரங்களையும் கைக்கொண்டுவருவார்கள். 5 அப்பொழுது, அந்தப் பரிசேயரும் வேதபாரகரும் அவரை நோக்கி: உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள். 6 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும், 7 மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான். 8 நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்துவருகிறீர்கள் என்றார். 9 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்குத் தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயிருக்கிறது. 10 எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே. 11 நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி, 12 அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்; 13 நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவவசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார். 14 பின்பு அவர் ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள். 15 மனுஷனுக்குப் புறம்பே இருந்து அவனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாது; அவன் உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளே அவனைத் தீட்டுப்படுத்தும். 16 கேட்கிறதற்கு ஒருவன் காதுள்ளவனாயிருந்தால் கேட்கக்கடவன் என்றார். 17 அவர் ஜனங்களைவிட்டு வீட்டுக்குள் பிரவேசித்தபோது, அவருடைய சீஷர்கள் அவர் சொன்ன உவமையைக்குறித்து அவரிடத்தில் விசாரித்தார்கள். 18 அதற்கு அவர்: நீங்களும் இவ்வளவு உணர்வில்லாதவர்களா? புறம்பேயிருந்து மனுஷனுக்குள்ளே போகிறதொன்றும் அவனைத் தீட்டுப்படுத்தமாட்டாதென்று நீங்கள் அறிந்துகொள்ளவில்லையா? 19 அது அவன் இருதயத்தில் போகாமல் வயிற்றிலே போகிறது; அதிலிருந்து எல்லாப் போஜனங்களின் அசுத்தங்களையும் கழிக்கிற ஆசனவழியாய் நீங்கிப்போகும். 20 மனுஷனுக்குள்ளே இருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். 21 எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், 22 களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். 23 பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். 24 பின்பு, அவர் எழுந்து அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளில் போய், ஒரு வீட்டுக்குள் பிரவேசித்து, ஒருவரும் அதை அறியாதிருக்க விரும்பியும், அவர் மறைவாயிருக்கக் கூடாமற்போயிற்று. 25 அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு சிறு பெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள். 26 அந்த ஸ்திரீ சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீயாயிருந்தாள்; அவள் தன் மகளைப் பிடித்திருந்த பிசாசைத் துரத்திவிடவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டாள். 27 இயேசு அவளை நோக்கி: முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார். 28 அதற்கு அவள்: மெய்தான், ஆண்டவரே, ஆகிலும், மேஜையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளைத் தின்னுமே என்றாள். 29 அப்பொழுது, அவர்: நீ சொன்ன அந்த வார்த்தையினிமித்தம் போகலாம். பிசாசு உன் மகளை விட்டு நீங்கிப்போயிற்று என்றார். 30 அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, பிசாசு போய்விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள். 31 மறுபடியும், அவர் தீரு சீதோன் பட்டணங்களின் எல்லைகளை விட்டுப் புறப்பட்டு, தெக்கப்போலியின் எல்லைகளின் வழியாய்க் கலிலேயாக் கடலருகே வந்தார். 32 அங்கே கொன்னைவாயுடைய ஒரு செவிடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவர் தமது கையை அவன்மேல் வைக்கும்படி வேண்டிக்கொண்டார்கள். 33 அப்பொழுது, அவர் அவனை ஜனக்கூட்டத்தை விட்டுத் தனியே அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய விரல்களை அவன் காதுகளில் வைத்து, உமிழ்ந்து, அவனுடைய நாவைத் தொட்டு; 34 வானத்தை அண்ணாந்துபார்த்து, பெருமூச்சுவிட்டு: எப்பத்தா என்றார்; அதற்குத் திறக்கப்படுவாயாக என்று அர்த்தமாம். 35 உடனே அவனுடைய செவிகள் திறக்கப்பட்டு, அவனுடைய நாவின் கட்டும் அவிழ்ந்து, அவன் செவ்வையாய்ப் பேசினான். 36 அதை ஒருவருக்கும் சொல்லவேண்டாமென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்; ஆகிலும் எவ்வளவு அதிகமாய் அவர்களுக்குக் கட்டளையிட்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்கள் அதைப் பிரசித்தம்பண்ணி, 37 எல்லாவற்றையும் நன்றாய்ச் செய்தார்; செவிடர் கேட்கவும், ஊமையர் பேசவும்பண்ணுகிறார் என்று சொல்லி, மேன்மேலும் ஆச்சரியப்பட்டார்கள்.

மாற்கு 8

1 அந்த நாட்களிலே திரளான ஜனங்கள் கூடிவந்திருக்கையில், அவர்கள் சாப்பிடுகிறதற்கு ஒன்றுமில்லாதபோது, இயேசு தம்முடைய சீஷரை அழைத்து: 2 ஜனங்களுக்காகப் பரிதபிக்கிறேன், இவர்கள் இப்பொழுது என்னிடத்தில் தங்கியிருந்த மூன்றுநாளாய்ச் சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள். 3 இவர்களில் சிலர் தூரத்திலிருந்து வந்தவர்களாகையால், நான் இவர்களைப் பட்டினியாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டால் வழியில் சோர்ந்துபோவார்களே என்றார். 4 அதற்கு அவருடைய சீஷர்கள்: இந்த வனாந்தரத்திலே ஒருவன் எங்கேயிருந்து அப்பங்களைக் கொண்டுவந்து இத்தனை பேர்களைத் திருப்தியாக்கக்கூடும் என்றார்கள். 5 அதற்கு அவர்: உங்களிடத்தில் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்கள் உண்டு என்றார்கள். 6 அப்பொழுது அவர் ஜனங்களைத் தரையிலே பந்தியிருக்கக் கட்டளையிட்டு, அந்த ஏழு அப்பங்களையும் எடுத்து, ஸ்தோத்திரம் பண்ணி, பிட்டு, அவர்களுக்குப் பரிமாறும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார்; அவர்கள் ஜனங்களுக்குப் பரிமாறினார்கள். 7 சில சிறுமீன்களும் அவர்களிடத்தில் இருந்தது; அவர் அவைகளையும் ஆசீர்வதித்து அவர்களுக்குப் பரிமாறும்படி சொன்னார். 8 அவர்கள் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான துணிக்கைகளை ஏழு கூடைநிறைய எடுத்தார்கள். 9 சாப்பிட்டவர்கள் ஏறக்குறைய நாலாயிரம்பேராயிருந்தார்கள். பின்பு அவர் அவர்களை அனுப்பிவிட்டார். 10 உடனே அவர் தம்முடைய சீஷரோடேகூடப் படவில் ஏறி, தல்மனூத்தாவின் எல்லைகளில் வந்தார். 11 அப்பொழுது பரிசேயர் வந்து அவரோடே தர்க்கிக்கத்தொடங்கி, அவரைச் சோதிக்கும்படி, வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும் என்று கேட்டார்கள். 12 அவர் தம்முடைய ஆவியில் பெருமூச்சுவிட்டு: இந்தச் சந்ததியார் அடையாளம் தேடுகிறதென்ன? இந்தச் சந்ததியாருக்கு ஒரு அடையாளமும் கொடுக்கப்படுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, 13 அவர்களை விட்டு மறுபடியும் படவில் ஏறி, அக்கரைக்குப் போனார். 14 சீஷர்கள் அப்பங்களைக் கொண்டுவர மறந்துபோனார்கள்; படவிலே அவர்களிடத்தில் ஒரு அப்பம் மாத்திரம் இருந்தது. 15 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்தும் ஏரோதின் புளித்தமாவைக்குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் என்று கற்பித்தார். 16 அதற்கு அவர்கள்: நம்மிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியால் இப்படிச் சொல்லுகிறார் என்று தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டார்கள். 17 இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா? 18 உங்களுக்குக் கண்களிருந்தும் காணாதிருக்கிறீர்களா? காதுகளிருந்தும் கேளாதிருக்கிறீர்களா? நினைவுகூராமலுமிருக்கிறீர்களா? 19 நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். பன்னிரண்டு என்றார்கள். 20 நான் ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார். ஏழு என்றார்கள். 21 அப்படியானால், நீங்கள் உணராதிருக்கிறது எப்படி என்றார். 22 பின்பு அவர் பெத்சாயிதா ஊருக்கு வந்தார்; அப்பொழுது ஒரு குருடனை அவரிடத்தில் கொண்டுவந்து, அவனைத் தொடும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். 23 அவர் குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து: எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார். 24 அவன் ஏறிட்டுப்பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான். 25 பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான். 26 பின்பு அவர் அவனை நோக்கி: நீ கிராமத்தில் பிரவேசியாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். 27 பின்பு, இயேசுவும் அவருடைய சீஷர்களும் புறப்பட்டு, பிலிப்புச் செசரியா பட்டணத்தைச் சேர்ந்த கிராமங்களுக்குப் போனார்கள். வழியிலே அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 28 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். 29 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் கிறிஸ்து என்றான். 30 அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார். 31 அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு, மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்பட்டு, கொல்லப்பட்டு, மூன்றுநாளைக்குப்பின்பு உயிர்த்தெழுந்திருக்கவேண்டியதென்று அவர்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். 32 இந்த வார்த்தையை அவர் தாராளமாகச் சொன்னார். அப்பொழுது, பேதுரு அவரைத் தனியே அழைத்துக்கொண்டுபோய், அவரைக் கடிந்துகொள்ளத் தொடங்கினான். 33 அவர் திரும்பித் தம்முடைய சீஷரைப் பார்த்து, பேதுருவை நோக்கி: எனக்குப் பின்னாகப்போ, சாத்தானே, நீ தேவனுக்கு ஏற்றவைகளைச் சிந்தியாமல் மனுஷருக்கு ஏற்றவைகளைச் சிந்திக்கிறாய் என்று சொல்லி, அவனைக் கடிந்து கொண்டார். 34 பின்பு அவர் ஜனங்களையும் தம்முடைய சீஷர்களையும் தம்மிடத்தில் அழைத்து: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். 35 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாகவும் சுவிசேஷத்தினிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். 36 மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? 37 மனுஷன் தன் ஜீவனுக்கு ஈடாக என்னத்தைக் கொடுப்பான்? 38 ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக் குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமைபொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார்.

மாற்கு 9

1 அன்றியும், அவர் அவர்களை நோக்கி: இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யம் பலத்தோடே வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 2 ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். 3 அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போல் பூமியிலே எந்த வண்ணானும் வெளுக்கக்கூடாத வெண்மையாய்ப் பிரகாசித்தது. 4 அப்பொழுது மோசேயும் எலியாவும் இயேசுவுடனே பேசுகிறவர்களாக அவர்களுக்குக் காணப்பட்டார்கள். 5 அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான். 6 அவர்கள் மிகவும் பயந்திருந்தபடியால், தான் பேசுகிறது இன்னதென்று அறியாமல் இப்படிச் சொன்னான். 7 அப்பொழுது, ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. 8 உடனே அவர்கள் சுற்றிலும் பார்த்தபோது, இயேசு ஒருவரைத்தவிர வேறொருவரையும் காணவில்லை. 9 அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, அவர் அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும், நீங்கள் கண்டவைகளை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார். 10 மரித்தோரிலிருந்து எழுந்திருப்பது என்னவென்று அவர்கள் ஒருவரிடத்தில் ஒருவர் விசாரித்து, அந்த வார்த்தையைத் தங்களுக்குள்ளே அடக்கிக்கொண்டு: 11 எலியா முந்தி வரவேண்டுமென்று வேதபாரகர் சொல்லுகிறார்களே, அதெப்படியென்று அவரிடத்தில் கேட்டார்கள். 12 அவர் பிரதியுத்தரமாக: எலியா முந்திவந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்துவது மெய்தான்; அல்லாமலும், மனுஷகுமாரன் பல பாடுகள்பட்டு, அவமதிக்கப்படுவாரென்று, அவரைக்குறித்து எழுதியிருக்கிறதே அது எப்படி என்றார். 13 ஆனாலும் எலியா வந்தாயிற்று, அவனைக்குறித்து எழுதியிருக்கிற பிரகாரம் தங்களுக்கு இஷ்டமானபடி அவனுக்குச் செய்தார்களென்று, உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 14 பின்பு அவர் சீஷரிடத்தில் வந்தபோது, அவர்களைச் சுற்றித் திரளான ஜனங்கள் நிற்கிறதையும், அவர்களோடே வேதபாரகர் தர்க்கிக்கிறதையும் கண்டார். 15 ஜனங்களெல்லாரும் அவரைக் கண்டவுடனே மிகவும் ஆச்சரியப்பட்டு, ஓடிவந்து, அவருக்கு வந்தனஞ்செய்தார்கள். 16 அவர் வேதபாரகரை நோக்கி: நீங்கள் இவர்களோடே என்னத்தைக் குறித்துத் தர்க்கம்பண்ணுகிறீர்கள் என்று கேட்டார். 17 அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஊமையான ஒரு ஆவி பிடித்த என் மகனை உம்மிடத்தில் கொண்டுவந்தேன். 18 அது அவனை எங்கே பிடித்தாலும் அங்கே அவனை அலைக்கழிக்கிறது; அப்பொழுது அவன் நுரைதள்ளி, பல்லைக்கடித்து, சோர்ந்துபோகிறான். அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரிடத்தில் கேட்டேன்; அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். 19 அவர் பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடு இருப்பேன்? எதுவரைக்கும் உங்களிடத்தில் பொறுமையாய் இருப்பேன்? அவனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். 20 அவனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடனே, அந்த ஆவி அவனை அலைக்கழித்தது; அவன் தரையிலே விழுந்து, நுரைதள்ளிப் புரண்டான். 21 அவர் அவனுடைய தகப்பனை நோக்கி: இது இவனுக்கு உண்டாகி எவ்வளவு காலமாயிற்று என்று கேட்டார். அதற்கு அவன்: சிறுவயதுமுதற்கொண்டே உண்டாயிருக்கிறது; 22 இவனைக் கொல்லும்படிக்கு அது அநேகந்தரம் தீயிலும் தண்ணீரிலும் தள்ளிற்று. நீர் ஏதாகிலும் செய்யக்கூடுமானால், எங்கள்மேல் மனதிரங்கி, எங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்றான். 23 இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றார். 24 உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான். 25 அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே, இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அதை அதட்டினார். 26 அப்பொழுது அது சத்தமிட்டு, அவனை மிகவும் அலைக்கழித்துப் புறப்பட்டுப்போயிற்று. அவன் செத்துப்போனான் என்று அநேகர் சொல்லத்தக்கதாகச் செத்தவன்போல் கிடந்தான். 27 இயேசு அவன் கையைப்பிடித்து, அவனைத் தூக்கினார்; உடனே அவன் எழுந்திருந்தான். 28 வீட்டில் அவர் பிரவேசித்தபொழுது, அவருடைய சீஷர்கள்: அதைத் துரத்திவிட எங்களால் ஏன் கூடாமற்போயிற்று என்று அவரிடத்தில் தனித்துக் கேட்டார்கள். 29 அதற்கு அவர்: இவ்வகைப் பிசாசு ஜெபத்தினாலும் உபவாசத்தினாலுமேயன்றி மற்றெவ்விதத்தினாலும் புறப்பட்டுப்போகாது என்றார். 30 பின்பு அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவைக் கடந்துபோனார்கள்; அதை ஒருவரும் அறியாதிருக்க வேண்டுமென்று விரும்பினார். 31 ஏனெனில், மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுவார் என்றும், அவர்கள் அவரைக் கொன்றுபோடுவார்கள் என்றும்; கொல்லப்பட்டு, மூன்றாம் நாளிலே உயிர்த்தெழுந்திருப்பார் என்றும் அவர் தம்முடைய சீஷர்களுக்குப் போதகம்பண்ணிச் சொல்லியிருந்தார். 32 அவர்களோ அந்த வார்த்தையை அறிந்துகொள்ளவில்லை, அதைக்குறித்து அவரிடத்தில் கேட்கவும் பயந்தார்கள். 33 அவர் கப்பர்நகூமுக்கு வந்து, வீட்டிலே இருக்கும்போது, அவர்களை நோக்கி: நீங்கள் வழியிலே எதைக்குறித்து உங்களுக்குள்ளே தர்க்கம்பண்ணினீர்கள் என்று கேட்டார். 34 அதற்கு அவர்கள் பேசாமல் இருந்தார்கள்; ஏனெனில் அவர்கள் தங்களுக்குள்ளே எவன் பெரியவன் என்று வழியில் தர்க்கம்பண்ணினார்கள். 35 அப்பொழுது அவர் உட்கார்ந்து, பன்னிருவரையும் அழைத்து: எவனாகிலும் முதல்வனாயிருக்க விரும்பினால் அவன் எல்லாருக்கும் கடையானவனும், எல்லாருக்கும் ஊழியக்காரனுமாயிருக்கக்கடவன் என்று சொல்லி; 36 ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அதை அவர்கள் நடுவிலே நிறுத்தி, அதை அணைத்துக்கொண்டு: 37 இப்படிப்பட்ட சிறு பிள்ளைகளில் ஒன்றை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அல்ல, என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்றார். 38 அப்பொழுது யோவான் அவரை நோக்கி: போதகரே, நம்மைப் பின்பற்றாதவன் ஒருவன் உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதைக் கண்டோம்; அவன் நம்மைப் பின்பற்றாதவனானதால், அவனைத் தடுத்தோம் என்றான். 39 அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதஞ் செய்கிறவன் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான். 40 நமக்கு விரோதமாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான். 41 நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களாயிருக்கிறபடியினாலே, என் நாமத்தினிமித்தம் உங்களுக்கு ஒரு கலசம் தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன் பலனை அடையாமற்போவதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 42 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும். 43 உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். 44 அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். 45 உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். 46 அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். 47 உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். 48 அங்கே அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். 49 எந்தப் பலியும் உப்பினால் உப்பிடப்படுவதுபோல, எந்த மனுஷனும் அக்கினியினால் உப்பிடப்படுவான். 50 உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார்.

மாற்கு 10

1 அவர் அவ்விடம் விட்டெழுந்து, யோர்தானுக்கு அக்கரையிலுள்ள தேசத்தின் வழியாய் யூதேயாவின் எல்லைகளில் வந்தார். ஜனங்கள் மறுபடியும் அவரிடத்தில் கூடிவந்தார்கள். அவர் தம்முடைய வழக்கத்தின்படியே மறுபடியும் அவர்களுக்குப் போதகம்பண்ணினார். 2 அப்பொழுது பரிசேயர், அவரைச் சோதிக்கவேண்டுமென்று, அவரிடத்தில் வந்து: புருஷனானவன் தன் மனைவியைத் தள்ளிவிடுவது நியாயமா என்று கேட்டார்கள். 3 அவர் பிரதியுத்தரமாக: மோசே உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறது என்ன என்று கேட்டார். 4 அதற்கு அவர்கள்: தள்ளுதற்சீட்டை எழுதிக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே உத்தரவுகொடுத்திருக்கிறார் என்றார்கள். 5 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்கள் இருதயகடினத்தினிமித்தம் இந்தக் கட்டளையை உங்களுக்கு எழுதிக்கொடுத்தான். 6 ஆகிலும், ஆதியிலே மனுஷரைச் சிருஷ்டித்த தேவன் அவர்களை ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். 7 இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; 8 அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்; இவ்விதமாய் அவர்கள் இருவராயிராமல் ஒரே மாம்சமாயிருக்கிறார்கள். 9 ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். 10 பின்பு வீட்டிலே அவருடைய சீஷர்கள் அந்தக் காரியத்தைக்குறித்து மறுபடியும் அவரிடத்தில் விசாரித்தார்கள். 11 அப்பொழுது அவர்: எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாய் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான். 12 மனைவியும் தன் புருஷனைத் தள்ளிவிட்டு, வேறொருவனை விவாகம்பண்ணினால், விபசாரஞ்செய்கிறவளாயிருப்பாள் என்றார். 13 அப்பொழுது, சிறு பிள்ளைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டுவந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள். 14 இயேசு அதைக் கண்டு, விசனமடைந்து: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. 15 எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, 16 அவர்களை அணைத்துக்கொண்டு, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். 17 பின்பு அவர் புறப்பட்டு வழியிலே போகையில், ஒருவன் ஓடிவந்து, அவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். 18 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே. 19 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, வஞ்சனை செய்யாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை அறிந்திருக்கிறாயே என்றார். 20 அதற்கு அவன்: போதகரே, இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். 21 இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார். 22 அவன் மிகுந்த ஆஸ்தியுள்ளவனாயிருந்தபடியால், இந்த வார்த்தையைக் கேட்டு, மனமடிந்து, துக்கத்தோடே போய்விட்டான். 23 அப்பொழுது இயேசு சுற்றிப்பார்த்து, தம்முடைய சீஷரை நோக்கி: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது என்றார். 24 சீஷர்கள் அவருடைய வார்த்தைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு பின்னும் அவர்களை நோக்கி: பிள்ளைகளே, ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கையாயிருக்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறது எவ்வளவு அரிதாயிருக்கிறது! 25 ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். 26 அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். 27 இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான், தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். 28 அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே, என்று சொல்லத்தொடங்கினான். 29 அதற்கு இயேசு பிரதியுத்தரமாக: என்னிமித்தமாகவும், சுவிசேஷத்தினிமித்தமாகவும், வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனும், 30 இப்பொழுது இம்மையிலே, துன்பங்களோடேகூட நூறத்தனையாக, வீடுகளையும், சகோதரரையும், சகோதரிகளையும், தாய்களையும், பிள்ளைகளையும், நிலங்களையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடைவான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 31 ஆகிலும் முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும் இருப்பார்கள் என்றார். 32 பின்பு அவர்கள் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகையில், இயேசு அவர்களுக்கு முன்னே நடந்துபோனார்; அவர்கள் திகைத்து, அவருக்குப் பின்னே, பயத்தோடே போனார்கள். அப்பொழுது அவர் பன்னிருவரையும் அழைத்து, தமக்குச் சம்பவிக்கப்போகிறவைகளை அவர்களுக்கு மறுபடியும் சொல்லத்தொடங்கினார்: 33 இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; அங்கே மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, புறத்தேசத்தாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள். 34 அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி, அவரை வாரினால் அடித்து, அவர்மேல் துப்பி, அவரைக் கொலைசெய்வார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். 35 அப்பொழுது செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அவரிடத்தில் வந்து: போதகரே, நாங்கள் கேட்டுக்கொள்ளப்போகிறதை நீர் எங்களுக்குச் செய்யவேண்டுமென்று விரும்புகிறோம் என்றார்கள். 36 அவர் அவர்களை நோக்கி: நான் உங்களுக்கு என்னசெய்யவேண்டுமென்று விரும்புகிறீர்கள் என்று கேட்டார். 37 அதற்கு அவர்கள்: உமது மகிமையிலே, எங்களில் ஒருவன் உமது வலதுபாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எங்களுக்கு அருள்செய்யவேண்டும் என்றார்கள். 38 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்கே தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும், உங்களால் கூடுமா என்றார். 39 அதற்கு அவர்கள்: கூடும் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள். 40 ஆனாலும் என் வலதுபாரிசத்திலும் என் இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி எவர்களுக்கு ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார். 41 மற்றப் பத்துப்பேரும் அதைக்கேட்டு, யாக்கோபின் மேலும் யோவானின் மேலும் எரிச்சலானார்கள். 42 அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருக்கு அதிகாரிகளாக எண்ணப்பட்டவர்கள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், அவர்களில் பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்றும் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 43 உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். 44 உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் எல்லாருக்கும் ஊழியக்காரனாயிருக்கக்கடவன். 45 அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார் என்றார். 46 பின்பு அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். அவரும் அவருடைய சீஷர்களும் திரளான ஜனங்களும் எரிகோவைவிட்டுப் புறப்படுகிறபோது, திமேயுவின் மகனாகிய பர்திமேயு என்கிற ஒரு குருடன், வழியருகே உட்கார்ந்து, பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். 47 அவன் நசரேயனாகிய இயேசு வருகிறாரென்று கேள்விப்பட்டு: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத் தொடங்கினான். 48 அவன் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று, முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான். 49 இயேசு நின்று, அவனை அழைத்துவரச் சொன்னார். அவர்கள் அந்தக் குருடனை அழைத்து: திடன்கொள், எழுந்திரு, உன்னை அழைக்கிறார் என்றார்கள். 50 உடனே அவன் தன் மேல்வஸ்திரத்தை எறிந்துவிட்டு, எழுந்து, இயேசுவினிடத்தில் வந்தான். 51 இயேசு அவனை நோக்கி: நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்றார். அதற்கு அந்தக் குருடன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். 52 இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான்.

மாற்கு 11

1 அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது, அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: 2 உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள். 3 ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார். 4 அவர்கள் போய், வெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக் கண்டு, அதை அவிழ்த்தார்கள். 5 அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் குட்டியை அவிழ்க்கிறது என்னவென்றார்கள். 6 இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது, அவர்களைப் போகவிட்டார்கள். 7 அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார். 8 அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள். 9 முன்நடப்பாரும் பின்நடப்பாரும்: ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; 10 கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். 11 அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்தில் பிரவேசித்து, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து, சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூடப் பெத்தானியாவுக்குப் போனார். 12 மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று. 13 அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக் காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது அதில் இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை. 14 அப்பொழுது இயேசு அதைப் பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள். 15 அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து, 16 ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டுபோகவிடாமல்: 17 என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா? நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார். 18 அதை வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் கேட்டு, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள். 19 சாயங்காலமானபோது அவர் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார். 20 மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள். 21 பேதுரு நினைவுகூர்ந்து, அவரை நோக்கி: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான். 22 இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள். 23 எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 24 ஆதலால், நீங்கள் ஜெபம்பண்ணும்போது எவைகளைக் கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன். 25 நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். 26 நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார். 27 அவர்கள் மறுபடியும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கையில், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் வந்து: 28 நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் என்று கேட்டார்கள். 29 இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு உத்தரவு சொல்லுங்கள், அப்பொழுது நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன். 30 யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ, மனுஷரால் உண்டாயிற்றோ, எனக்கு உத்தரவு சொல்லுங்கள் என்றார். 31 அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லையென்று கேட்பார். 32 மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படவேண்டியதாயிருக்கும்; எல்லாரும் யோவானை மெய்யாகத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறார்களே என்று தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி; 33 இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.

மாற்கு 12

1 பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான். 2 தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டுவரும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். 3 அவர்கள் அவனைப் பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள். 4 பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். 5 மறுபடியும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள். 6 அவனுக்குப் பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான். 7 தோட்டக்காரரோ: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்தரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; 8 அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள். 9 அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா? 10 வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று; 11 அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று எழுதியிருக்கிற வாக்கியத்தை நீங்கள் வாசிக்கவில்லையா என்றார். 12 இந்த உவமையைத் தங்களைக்குறித்துச் சொன்னாரென்று அவர்கள் அறிந்து, அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் ஜனத்துக்குப் பயந்து, அவரை விட்டுப் போய்விட்டார்கள். 13 அவர்கள், பேச்சிலே அவரை அகப்படுத்தும்படிக்கு, பரிசேயரிலும் ஏரோதியரிலும் சிலரை அவரிடத்தில் அனுப்பினார்கள். 14 அவர்கள் வந்து: போதகரே, நீர் சத்தியமுள்ளவரென்றும், எவனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும் அறிந்திருக்கிறோம், நீர் முகதாட்சணியம் இல்லாதவராய்த் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீர், இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ? நாம் கொடுக்கலாமோ, கொடுக்கக்கூடாதோ? என்று கேட்டார்கள். 15 அவர்களுடைய மாயத்தை அவர் அறிந்து: நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? நான் பார்க்கும்படிக்கு ஒரு பணத்தை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றார். 16 அவர்கள் அதைக் கொண்டுவந்தார்கள். அப்பொழுது அவர்: இந்தச் சுரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்; இராயனுடையது என்றார்கள். 17 அதற்கு இயேசு: இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். அவர்கள் அவரைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். 18 உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயர் அவரிடத்தில் வந்து: 19 போதகரே, ஒருவனுடைய சகோதரன் சந்தானமில்லாமல் தன் மனைவியை விட்டு இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானம் உண்டாக்கவேண்டுமென்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே. 20 இப்படியிருக்க, ஏழுபேர் சகோதரர் இருந்தார்கள்; மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனான். 21 இரண்டாம் சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் சந்தானமில்லாமல் இறந்துபோனான். மூன்றாம் சகோதரனும் அப்படியேயானான். 22 ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, சந்தானமில்லாமல் இறந்துபோனார்கள். எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். 23 ஆகையால், உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள்? ஏழுபேரும் அவளை மனைவியாகக் கொண்டிருந்தார்களே என்று கேட்டார்கள். 24 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலல்லவா தப்பான எண்ணங் கொள்ளுகிறீர்கள்? 25 மரித்தோர் உயிரோடெழுந்திருக்கும்போது கொள்வனையும் கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்தில் இருக்கிற தேவதூதரைப்போலிருப்பார்கள். 26 மரித்தோர் எழுந்திருப்பதைப்பற்றி: நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாய் இருக்கிறேன் என்று, தேவன் முட்செடியைக்குறித்துச் சொல்லிய இடத்தில், மோசேயின் ஆகமத்தில் அவனுக்குச் சொன்னதை, நீங்கள் வாசிக்கவில்லையா? 27 அவர் மரித்தோருக்குத் தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார்; ஆகையால் நீங்கள் மிகவும் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள் என்றார். 28 வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டு, அவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்து, அவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான். 29 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். 30 உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. 31 இதற்கு ஒப்பாயிருக்கிற இரண்டாம் கற்பனை என்னவென்றால்: உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோல் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பதே; இவைகளிலும் பெரிய கற்பனை வேறொன்றுமில்லை என்றார். 32 அதற்கு வேதபாரகன்: சரிதான், போதகரே, நீர் சொன்னது சத்தியம்; ஒரே தேவன் உண்டு, அவரைத்தவிர வேறொரு தேவன் இல்லை. 33 முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழுப் பலத்தோடும் அவரிடத்தில் அன்புகூருகிறதும், தன்னிடத்தில் அன்புகூருகிறதுபோல் பிறனிடத்தில் அன்புகூருகிறதுமே சர்வாங்கதகனம் முதலிய பலிகளைப்பார்க்கிலும் முக்கியமாயிருக்கிறது என்றான். 34 அவன் விவேகமாய் உத்தரவுசொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார். அதன்பின்பு ஒருவரும் அவரிடத்தில் யாதொரு கேள்வியுங் கேட்கத் துணியவில்லை. 35 இயேசு தேவாலயத்திலே உபதேசம்பண்ணுகையில், அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்? 36 நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று தாவீது பரிசுத்த ஆவியினாலே சொல்லியிருக்கிறானே. 37 தாவீதுதானே அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். அநேக ஜனங்கள் அவருடைய உபதேசத்தை விருப்பத்தோடே கேட்டார்கள். 38 பின்னும் அவர் உபதேசம்பண்ணுகையில் அவர்களை நோக்கி: நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தைவெளிகளில் வந்தனங்களை அடையவும், 39 ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி, 40 விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம் பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார். 41 இயேசு காணிக்கைப் பெட்டிக்கு எதிராக உட்கார்ந்து, ஜனங்கள் காணிக்கைப் பெட்டியில் பணம் போடுகிறதைப் பார்த்துக்கொண்டிருந்தார்; ஐசுவரியவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள். 42 ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு துட்டுக்குச் சரியான இரண்டு காசைப் போட்டாள். 43 அப்பொழுது அவர் தம்முடைய சீஷரை அழைத்து, காணிக்கைப் பெட்டியில் பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்; 44 அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்து எடுத்துப்போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார்.

மாற்கு 13

1 அவர் தேவாலயத்தை விட்டுப் புறப்படும்போது, அவருடைய சீஷர்களில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, இதோ, இந்தக் கல்லுகள் எப்படிப்பட்டது! இந்தக் கட்டடங்கள் எப்படிப்பட்டது! பாரும் என்றான். 2 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பெரிய கட்டடங்களைக் காண்கிறாயே, ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்றார். 3 பின்பு, அவர் தேவாலயத்துக்கு எதிராக ஒலிவமலையின்மேல் உட்கார்ந்திருக்கையில், பேதுருவும் யாக்கோபும் யோவானும் அந்திரேயாவும் அவரிடத்தில் தனித்துவந்து: 4 இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? இவைகளெல்லாம் நிறைவேறுங்காலத்துக்கு அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். 5 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். 6 ஏனெனில் அநேகர் வந்து, என் நாமத்தைக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள். 7 யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படும்போது கலங்காதேயுங்கள்; இவைகள் சம்பவிக்கவேண்டியதே. ஆனாலும், முடிவு உடனே வராது. 8 ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், பஞ்சங்களும் கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம். 9 நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள், ஏனெனில் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்கள், நீங்கள் ஜெபஆலயங்களில் அடிக்கப்படுவீர்கள்; என்னிமித்தம் தேசாதிபதிகளுக்கும் ராஜாக்களுக்கும் சாட்சியாக அவர்களுக்கு முன்பாக நிறுத்தப்படுவீர்கள். 10 சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம் முந்திப் பிரசங்கிக்கப்படவேண்டும். 11 அவர்கள் உங்களைக் கொண்டுபோய் ஒப்புக்கொடுக்கும்போது, நீங்கள் என்ன பேசுவோமென்று முன்னதாகக் கவலைப்படாமலும் சிந்தியாமலுமிருங்கள்; அந்த நாழிகையிலே உங்களுக்கு எது அருள் செய்யப்படுமோ அதையே பேசுங்கள்; ஏனெனில் பேசுகிறவர்கள் நீங்களல்ல, பரிசுத்த ஆவியே பேசுகிறவர். 12 அன்றியும் சகோதரன் சகோதரனையும், தகப்பன் பிள்ளையையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றாருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி, அவர்களைக் கொலைசெய்வார்கள். 13 என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான். 14 மேலும் பாழாக்குகிற அருவருப்பைக்குறித்துத் தானியேல் தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே; வாசிக்கிறவன் சிந்திக்கக்கடவன்; அது நிற்கத்தகாத இடத்திலே நீங்கள் அதை நிற்கக் காணும்போது, யூதேயாவில் இருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகக்கடவர்கள். 15 வீட்டின்மேல் இருக்கிறவன் தன் வீட்டுக்குள் இறங்காமலும், தன் வீட்டில் எதையாகிலும் எடுத்துக்கொள்ள உள்ளே போகாமலும் இருக்கக்கடவன். 16 வயலில் இருக்கிறவன் தன் வஸ்திரத்தை எடுப்பதற்குப் பின்னிட்டுத் திரும்பாதிருக்கக்கடவன். 17 அந்நாட்களிலே கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ! 18 நீங்கள் ஓடிப்போவது மாரிகாலத்திலே சம்பவியாதபடிக்கு வேண்டிக்கொள்ளுங்கள். 19 ஏனெனில் தேவன் உலகத்தைச் சிருஷ்டித்ததுமுதல் இதுவரைக்கும் சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான உபத்திரவம் அந்நாட்களில் உண்டாயிருக்கும். 20 கர்த்தர் அந்நாட்களைக் குறைத்திராவிட்டால், ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை; தாம் தெரிந்துகொண்டவர்களினிமித்தமோ, அவர் அந்த நாட்களைக் குறைத்திருக்கிறார். 21 அப்பொழுது: இதோ, கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ, அங்கேயிருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால், நம்பாதேயுங்கள். 22 ஏனெனில் கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாக அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 23 நீங்களோ எச்சரிக்கையாயிருங்கள்; இதோ, எல்லாவற்றையும் முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். 24 அந்நாட்களிலே, அந்த உபத்திரவத்திற்குப் பின்பு, சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும்; 25 வானத்தின் நட்சத்திரங்கள் விழும், வானங்களிலுள்ள சத்துவங்களும் அசைக்கப்படும். 26 அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள். 27 அப்பொழுது அவர் தம்முடைய தூதரை அனுப்பி, தாம் தெரிந்துகொண்டவர்களைப் பூமியின் கடைமுனை முதற்கொண்டு, வானத்தின் கடைமுனைமட்டுமுள்ள நாலு திசைகளிலுமிருந்து கூட்டிச் சேர்ப்பார். 28 அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். 29 அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள். 30 இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 31 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. 32 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார். 33 அக்காலத்தை நீங்கள் அறியாதபடியால் எச்சரிக்கையாயிருங்கள், விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். 34 ஒரு மனுஷன் தன் வீட்டைவிட்டு, புறத்தேசத்துக்குப் பிரயாணம்போக எத்தனிக்கும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காக்கிறவனுக்குக் கற்பிப்பான். 35 அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள். 36 நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள். 37 நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள் என்றார்.

மாற்கு 14

1 இரண்டு நாளைக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள். 2 ஆகிலும் ஜனங்களுக்குள்ளே கலகம் உண்டாகாதபடிக்கு, பண்டிகையிலே அப்படிச் செய்யலாகாது என்றார்கள். 3 அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். 4 அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து: இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்? 5 இதை முந்நூறு பணத்துக்கு அதிகமான கிரயத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடுக்கலாமே என்று சொல்லி, அவளைக்குறித்து முறுமுறுத்தார்கள். 6 இயேசு அவர்களை நோக்கி: அவளை விட்டுவிடுங்கள்; ஏன் அவளைத் தொந்தரவு படுத்துகிறீர்கள்? என்னிடத்தில் நற்கிரியையைச் செய்திருக்கிறாள். 7 தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள், உங்களுக்கு மனதுண்டாகும்போதெல்லாம் நீங்கள் அவர்களுக்கு நன்மை செய்யலாம், நானோ எப்போதும் உங்களிடத்தில் இரேன். 8 இவள் தன்னால் இயன்றதைச் செய்தாள்; நான் அடக்கம்பண்ணப்படுவதற்கு எத்தனமாக, என் சரீரத்தில் தைலம்பூச முந்திக்கொண்டாள். 9 இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 10 அப்பொழுது, பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ்காரியோத்து என்பவன் அவரைப் பிரதான ஆசாரியருக்குக் காட்டிக்கொடுக்கும்படி அவர்களிடத்திற்குப் போனான். 11 அவர்கள் அதைக் கேட்டு, சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுப்போம் என்று வாக்குத்தத்தம் பண்ணினார்கள்; அவன் அவரைக் காட்டிக்கொடுப்பதற்குத் தகுந்த சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். 12 பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற முதலாம் நாளிலே, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம்பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். 13 அவர் தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: நீங்கள் நகரத்திற்குள்ளே போங்கள், அங்கே தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான், அவன் பின்னே போங்கள்; 14 அவன் எந்த வீட்டிற்குள் பிரவேசிக்கிறானோ அந்த வீட்டு எஜமானை நீங்கள் நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கேயென்று போதகர் கேட்கிறார் என்று சொல்லுங்கள். 15 அவன் கம்பளம் முதலானவைகள் விரித்து ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற விஸ்தாரமான மேல்வீட்டறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே நமக்காக ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார். 16 அப்படியே, அவருடைய சீஷர் புறப்பட்டு நகரத்தில் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். 17 சாயங்காலமானபோது, அவர் பன்னிருவரோடுங்கூட அவ்விடத்திற்கு வந்தார். 18 அவர்கள் பந்தியமர்ந்து போஜனம்பண்ணுகையில், இயேசு அவர்களை நோக்கி: என்னுடனே புசிக்கிற உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 19 அப்பொழுது அவர்கள் துக்கமடைந்து: நானோ? நானோ? என்று ஒவ்வொருவரும், அவரிடத்தில் கேட்கத் தொடங்கினார்கள். 20 அவர் பிரதியுத்தரமாக: என்னுடனேகூடத் தாலத்தில் கையிடுகிறவனாகிய பன்னிருவரிலொருவனே அவன் என்று சொல்லி; 21 மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ! அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். 22 அவர்கள் போஜனம்பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார். 23 பின்பு, பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதை அவர்களுக்குக் கொடுத்தார். அவர்களெல்லாரும் அதிலே பானம்பண்ணினார்கள். 24 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: இது அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது. 25 நான் தேவனுடைய ராஜ்யத்தில் நவமான ரசத்தைப் பானம்பண்ணும் நாள்வரைக்கும் திராட்சப்பழரசத்தை இனி நான் பானம்பண்ணுவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 26 அவர்கள் ஸ்தோத்திரப்பாட்டைப் பாடினபின்பு, ஒலிவமலைக்குப் புறப்பட்டுப்போனார்கள். 27 அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், ஆடுகள் சிதறடிக்கப்படும், என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்களெல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். 28 ஆகிலும் நான் உயிர்த்தெழுந்தபின்பு, உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போவேன் என்றார். 29 அதற்குப் பேதுரு: உமதுநிமித்தம் எல்லாரும் இடறலடைந்தாலும், நான் இடறலடையேன் என்றான். 30 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு, இந்த இராத்திரியிலே, சேவல் இரண்டுதரம் கூவுகிறதற்குமுன்னே, நீ மூன்றுதரம் என்னை மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 31 அதற்கு அவன்: நான் உம்மோடே மரிக்கவேண்டியதாயிருந்தாலும் உம்மை மறுதலிக்கமாட்டேன் என்று உறுதியாய்ச் சொன்னான்; எல்லாரும் அப்படியே சொன்னார்கள். 32 பின்பு கெத்செமனே என்னப்பட்ட இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: நான் ஜெபம்பண்ணுமளவும் இங்கே உட்கார்ந்திருங்கள் என்று சொல்லி; 33 பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார். 34 அப்பொழுது அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி, 35 சற்று அப்புறம்போய், தரையிலே விழுந்து, அந்த வேளை தம்மைவிட்டு நீங்கிப்போகக்கூடுமானால் அது நீங்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டு: 36 அப்பா பிதாவே, எல்லாம் உம்மாலே கூடும்; இந்தப் பாத்திரத்தை என்னிடத்திலிருந்து எடுத்துப்போடும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்றார். 37 பின்பு அவர் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக்கண்டு, பேதுருவை நோக்கி: சீமோனே, நித்திரைபண்ணுகிறாயா? ஒரு மணிநேரம் நீ விழித்திருக்கக்கூடாதா? 38 நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்பண்ணுங்கள். ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். 39 அவர் மறுபடியும் போய் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார். 40 அவர் திரும்ப வந்தபோது, அவர்கள் மறுபடியும் நித்திரைபண்ணுகிறதைக் கண்டார்; அவர்களுடைய கண்கள் மிகுந்த நித்திரைமயக்கம் அடைந்திருந்தபடியால், தாங்கள் மறுமொழியாக அவருக்குச் சொல்வது இன்னதென்று அறியாதிருந்தார்கள். 41 அவர் மூன்றாந்தரம் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; போதும், வேளை வந்தது, இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிறார். 42 என்னைக் காட்டிக்கொடுக்கிறவன், இதோ, வந்துவிட்டான், எழுந்திருங்கள், போவோம் என்றார். 43 உடனே, அவர் இப்படிப் பேசுகையில், பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் வந்தான்; அவனோடேகூடப் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அனுப்பின திரளான ஜனங்கள், பட்டயங்களையும் தடிகளையும் பிடித்துக்கொண்டு வந்தார்கள். 44 அவரைக் காட்டிக்கொடுக்கிறவன்: நான் எவனை முத்தஞ்செய்வேனோ அவன்தான், அவனைப் பிடித்துப் பத்திரமாய்க் கொண்டுபோங்கள் என்று அவர்களுக்குக் குறிப்புச் சொல்லியிருந்தான். 45 அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தஞ்செய்தான். 46 அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். 47 அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். 48 இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; 49 நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக் கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேற வேண்டியதாயிருக்கிறது என்றார். 50 அப்பொழுது எல்லாரும் அவரைவிட்டு ஓடிப்போனார்கள். 51 ஒரு வாலிபன் ஒரு துப்பட்டியை மாத்திரம் தன்மேல் போர்த்துக்கொண்டு அவர் பின்னே போனான்; அவனைப் பிடித்தார்கள். 52 அவன் தன் துப்பட்டியைப் போட்டு விட்டு, நிர்வாணமாய் அவர்களை விட்டு ஓடிப்போனான். 53 இயேசுவை அவர்கள் பிரதான ஆசாரியனிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே ஆசாரியர் மூப்பர் வேதபாரகர் எல்லாரும் கூடிவந்திருந்தார்கள். 54 பேதுரு தூரத்திலே அவருக்குப் பின்சென்று, பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் வந்து, சேவகரோடேகூட உட்கார்ந்து, நெருப்பண்டையிலே குளிர்காய்ந்துகொண்டிருந்தான். 55 அப்பொழுது பிரதான ஆசாரியரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் இயேசுவைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாகச் சாட்சி தேடினார்கள்; அகப்படவில்லை. 56 அநேகர் அவருக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி சொல்லியும், அந்தச் சாட்சிகள் ஒவ்வவில்லை. 57 அப்பொழுது சிலர் எழுந்து, கைவேலையாகிய இந்தத் தேவாலயத்தை நான் இடித்துப்போட்டு, கைவேலையல்லாத வேறொன்றை மூன்று நாளைக்குள்ளே கட்டுவேன் என்று இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம் என்று, 58 அவருக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொன்னார்கள். 59 அப்படிச் சொல்லியும் அவர்கள் சாட்சி ஒவ்வாமற்போயிற்று. 60 அப்பொழுது பிரதான ஆசாரியன் எழுந்து நடுவே நின்று, இயேசுவை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதைக் குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். 61 அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். 62 அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். 63 பிரதான ஆசாரியன் இதைக் கேட்டவுடனே, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு: இனிச் சாட்சிகள் நமக்கு வேண்டியதென்ன? 64 தேவதூஷணத்தைக் கேட்டீர்களே, உங்களுக்கு என்னமாய்த் தோன்றுகிறது என்றான். அதற்கு அவர்களெல்லாரும்: இவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்று தீர்மானம்பண்ணினார்கள். 65 அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள். 66 அத்தருணத்திலே பேதுரு கீழே அரமனை முற்றத்திலிருக்கையில், பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரிகளில் ஒருத்தி வந்து, 67 குளிர்காய்ந்துகொண்டிருக்கிற பேதுருவைக் கண்டு, அவனை உற்றுப்பார்த்து: நீயும் நசரேயனாகிய இயேசுவோடே இருந்தாய் என்றாள். 68 அதற்கு அவன்: நான் அறியேன்; நீ சொல்லுகிறது எனக்குத் தெரியாது என்று மறுதலித்து, வெளியே வாசல் மண்டபத்துக்குப் போனான்; அப்பொழுது சேவல் கூவிற்று. 69 வேலைக்காரி அவனை மறுபடியும் கண்டு: இவன் அவர்களில் ஒருவன் என்று அருகே நின்றவர்களுக்குச் சொன்னாள். 70 அவன் மறுபடியும் மறுதலித்தான். சற்றுநேரத்துக்குப்பின்பு மறுபடியும் அருகே நிற்கிறவர்கள் பேதுருவைப் பார்த்து: மெய்யாகவே நீ அவர்களில் ஒருவன், நீ கலிலேயன், உன் பேச்சு அதற்கு ஒத்திருக்கிறது என்றார்கள். 71 அதற்கு அவன்: நீங்கள் சொல்லுகிற மனுஷனை அறியேன் என்று சொல்லி, சபிக்கவும் சத்தியம்பண்ணவும் தொடங்கினான். 72 உடனே சேவல் இரண்டாந்தரம் கூவிற்று. சேவல் இரண்டுதரங் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தனக்குச் சொன்ன வார்த்தையைப் பேதுரு நினைவுகூர்ந்து, மிகவும் அழுதான்.

மாற்கு 15

1 பொழுது விடிந்தவுடனே, பிரதான ஆசாரியரும் மூப்பரும் வேதபாரகரும் ஆலோசனைச் சங்கத்தாரனைவரும் கூடி ஆலோசனைபண்ணி, இயேசுவைக் கட்டிக் கொண்டுபோய், பிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள். 2 பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். 3 பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங் குற்றங்களைச் சாட்டினார்கள். அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. 4 அப்பொழுது பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, அதற்கு நீ உத்தரவு ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். 5 இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்லவில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான். 6 காவல்பண்ணப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்வார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் பிலாத்துவுக்கு வழக்கமாயிருந்தது. 7 கலகம்பண்ணி அந்தக் கலகத்தில் கொலைசெய்து, அதற்காகக் காவல்பண்ணப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட ஒருவன் இருந்தான். 8 ஜனங்கள், வழக்கத்தின்படியே தங்களுக்கு ஒருவனை விடுதலையாக்கவேண்டுமென்று சத்தமிட்டுக் கேட்டுக்கொள்ளத் தொடங்கினார்கள். 9 பொறாமையினாலே பிரதான ஆசாரியர்கள் அவரை ஒப்புக்கொடுத்தார்களென்று பிலாத்து அறிந்து, 10 அவர்களை நோக்கி: நான் யூதருடைய ராஜாவை உங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்றிருக்கிறீர்களா என்று கேட்டான். 11 பரபாசைத் தங்களுக்கு விடுதலையாக்கவேண்டுமென்று ஜனங்கள் கேட்டுக்கொள்ளும்படி, பிரதான ஆசாரியர்கள் அவர்களை ஏவிவிட்டார்கள். 12 பிலாத்து மறுபடியும் அவர்களை நோக்கி: அப்படியானால், யூதருடைய ராஜாவென்று நீங்கள் சொல்லுகிறவனை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். 13 அவனைச் சிலுவையில் அறையும் என்று மறுபடியும் சத்தமிட்டுச் சொன்னார்கள். 14 அதற்குப் பிலாத்து: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும் என்று பின்னும் அதிகமாய்க் கூக்குரலிட்டுச் சொன்னார்கள். 15 அப்பொழுது பிலாத்து ஜனங்களைப் பிரியப்படுத்த மனதுள்ளவனாய், பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ வாரினால் அடிப்பித்து, சிலுவையில் அறையும்படிக்கு ஒப்புக்கொடுத்தான். 16 அப்பொழுது போர்ச்சேவகர் அவரைத் தேசாதிபதியின் அரமனையாகிய மாளிகையில் கொண்டுபோய், அவ்விடத்தில் போர்ச்சேவகருடைய கூட்டமுழுவதையும் கூடிவரச்செய்து, 17 சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி, முள்முடியைப் பின்னி அவருக்குச் சூட்டி: 18 யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி, 19 அவரைச் சிரசில் கோலால் அடித்து, அவர்மேல் துப்பி, முழங்கால்படியிட்டு அவரை வணங்கினார்கள். 20 அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, சிவப்பான அங்கியைக் கழற்றி, அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி வெளியே கொண்டுபோனார்கள். 21 சிரேனே ஊரானும், அலெக்சந்தருக்கும் ரூப்புக்கும் தகப்பனுமாகிய சீமோன் என்னப்பட்ட ஒருவன் நாட்டிலிருந்து அவ்வழியே வருகையில், அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம்பண்ணினார்கள். 22 கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்துக்கு அவரைக் கொண்டுபோய், 23 வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. 24 அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள். 25 அவரைச் சிலுவையில் அறைந்தபோது மூன்றாம்மணி வேளையாயிருந்தது. 26 அவர் அடைந்த ஆக்கினையின் முகாந்தரத்தைக் காண்பிக்கும்பொருட்டு, யூதருடைய ராஜா என்று எழுதி, சிலுவையின்மேல் கட்டினார்கள். 27 அல்லாமலும், அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக, இரண்டு கள்ளரை அவரோடேகூடச் சிலுவைகளில் அறைந்தார்கள். 28 அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்கிற வேதவாக்கியம் அதனாலே நிறைவேறிற்று. 29 அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி: ஆ! ஆ! தேவாலயத்தை இடித்து, மூன்று நாளைக்குள்ளே கட்டுகிறவனே, 30 உன்னை நீயே இரட்சித்துக்கொள்; சிலுவையிலிருந்திறங்கிவா என்று அவரைத் தூஷித்தார்கள். 31 அப்படியே பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களுக்குள்ளே பரியாசம்பண்ணி: மற்றவர்களை இரட்சித்தான், தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை. 32 நாம் கண்டு விசுவாசிக்கத்தக்கதாக இஸ்ரவேலுக்கு ராஜாவாகிய கிறிஸ்து இப்பொழுது சிலுவையிலிருந்திறங்கட்டும் என்று சொல்லிக்கொண்டார்கள். அவரோடேகூடச் சிலுவைகளில் அறையப்பட்டவர்களும் அவரை நிந்தித்தார்கள். 33 ஆறாம்மணி நேரமுதல் ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டாயிற்று. 34 ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். 35 அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள். 36 ஒருவன் ஓடி, கடற்காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனை இறக்க வருவானோ பார்ப்போம் என்றான். 37 இயேசு மகா சத்தமாய்க் கூப்பிட்டு ஜீவனை விட்டார். 38 அப்பொழுது, தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது. 39 அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக் கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான். 40 சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று ஊழியஞ்செய்துவந்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், 41 அவருடனேகூட எருசலேமுக்கு வந்திருந்த வேறே அநேக ஸ்திரீகளும் அவர்களோடே இருந்தார்கள். 42 ஓய்வுநாளுக்கு முந்தினநாள் ஆயத்தநாளாயிருந்தபடியால், சாயங்காலமானபோது, 43 கனம்பொருந்திய ஆலோசனைக்காரனும் அரிமத்தியா ஊரானும் தேவனுடைய ராஜ்யம் வரக் காத்திருந்தவனுமாகிய யோசேப்பு என்பவன் வந்து, பிலாத்துவினிடத்தில் துணிந்துபோய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். 44 அவர் இத்தனை சீக்கிரத்தில் மரித்துப்போனாரா என்று பிலாத்து ஆச்சரியப்பட்டு, நூற்றுக்கு அதிபதியை அழைப்பித்து: அவர் இதற்குள்ளே மரித்தது நிச்சயமா என்று கேட்டான். 45 நூற்றுக்கு அதிபதியினாலே அதை அறிந்துகொண்டபின்பு, சரீரத்தை யோசேப்பினிடத்தில் கொடுத்தான். 46 அவன் போய், மெல்லிய துப்பட்டியை வாங்கிக்கொண்டுவந்து, அவரை இறக்கி, அந்தத் துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டியிருந்த கல்லறையிலே அவரை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு கல்லைப் புரட்டிவைத்தான். 47 அவரை வைத்த இடத்தை மகதலேனா மரியாளும் யோசேயின் தாயாகிய மரியாளும் பார்த்தார்கள்.

மாற்கு 16

1 ஓய்வுநாளானபின்பு மகதலேனா மரியாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும், அவருக்குச் சுகந்தவர்க்கமிடும்படி அவைகளை வாங்கிக்கொண்டு, 2 வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே சூரியன் உதயமாகிறபோது கல்லறையினிடத்தில் வந்து, 3 கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித்தள்ளுவான் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 4 அந்தக் கல் மிகவும் பெரிதாயிருந்தது; அவர்கள் ஏறிட்டுப்பார்க்கிறபோது, அது தள்ளப்பட்டிருக்கக் கண்டார்கள். 5 அவர்கள் கல்லறைக்குள் பிரவேசித்து, வெள்ளையங்கி தரித்தவனாய் வலதுபக்கத்தில் உட்கார்ந்திருந்த ஒரு வாலிபனைக் கண்டு பயந்தார்கள். 6 அவன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள், சிலுவையில் அறையப்பட்ட நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிர்த்தெழுந்தார்; அவர் இங்கேயில்லை; இதோ, அவரை வைத்த இடம். 7 நீங்கள் அவருடைய சீஷரிடத்திற்கும் பேதுருவினிடத்திற்கும் போய்: உங்களுக்கு முன்னே கலிலேயாவுக்குப் போகிறார், அவர் உங்களுக்குச் சொன்னபடியே அங்கே அவரைக் காண்பீர்கள் என்று, அவர்களுக்குச் சொல்லுங்கள் என்றான். 8 நடுக்கமும் திகிலும் அவர்களைப் பிடித்தபடியால், அவர்கள் சீக்கிரமாய் வெளியே வந்து, கல்லறையை விட்டு ஓடினார்கள்; அவர்கள் பயந்திருந்தபடியினால் ஒருவருக்கும் ஒன்றும் சொல்லாமற் போனார்கள். 9 வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார். 10 அவளிடத்திலிருந்து அவர் ஏழு பிசாசுகளைத் துரத்தியிருந்தார். அவள் புறப்பட்டு, அவரோடேகூட இருந்தவர்கள் துக்கப்பட்டு அழுதுகொண்டிருக்கையில், அவர்களிடத்தில் போய், அந்தச் செய்தியை அறிவித்தாள். 11 அவர் உயிரோடிருக்கிறாரென்றும் அவளுக்குக் காணப்பட்டார் என்றும் அவர்கள் கேட்டபொழுது நம்பவில்லை. 12 அதன்பின்பு அவர்களில் இரண்டுபேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிறபொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த் தரிசனமானார். 13 அவர்களும் போய், அதை மற்றவர்களுக்கு அறிவித்தார்கள்; அவர்களையும் அவர்கள் நம்பவில்லை. 14 அதன்பின்பு பதினொருவரும் போஜனபந்தியிலிருக்கையில் அவர்களுக்கு அவர் தரிசனமாகி, உயிர்த்தெழுந்திருந்த தம்மைக் கண்டவர்களை அவர்கள் நம்பாமற்போனதினிமித்தம் அவர்களுடைய அவிசுவாசத்தைக்குறித்தும் இருதயகடினத்தைக்குறித்தும் அவர்களைக் கடிந்துகொண்டார். 15 பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். 16 விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். 17 விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; 18 சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார். 19 இவ்விதமாய்க் கர்த்தர் அவர்களுடனே பேசினபின்பு, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்தார். 20 அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம்பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து, அவர்களால் நடந்த அடையாளங்களினாலே வசனத்தை உறுதிப்படுத்தினார். ஆமென்.

லூக்கா 1

1 மகா கனம்பொருந்திய தெயோப்பிலுவே, நாங்கள் முழுநிச்சயமாய் நம்புகிற சங்கதிகளை, 2 ஆரம்பமுதல் கண்ணாரக்கண்டு வசனத்தைப் போதித்தவர்கள் எங்களுக்கு ஒப்புவித்தபடியே அவைகளைக்குறித்துச் சரித்திரம் எழுத அநேகம்பேர் ஏற்பட்டபடியினால், 3 ஆதிமுதல் எல்லாவற்றையும் திட்டமாய் விசாரித்தறிந்த நானும் உமக்கு உபதேசிக்கப்பட்ட விசேஷங்களின் நிச்சயத்தை நீர் அறியவேண்டுமென்று, 4 அவைகளை ஒழுங்காய் உமக்கு எழுதுவது எனக்கு நலமாய்த் தோன்றிற்று. 5 யூதேயாதேசத்தின் ராஜாவாகிய ஏரோதின் நாட்களில், அபியா என்னும் ஆசாரிய வகுப்பில் சகரியா என்னும் பேர்கொண்ட ஆசாரியன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி ஆரோனுடைய குமாரத்திகளில் ஒருத்தி, அவள் பேர் எலிசபெத்து. 6 அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள். 7 எலிசபெத்து மலடியாயிருந்தபடியினால், அவர்களுக்குப் பிள்ளையில்லாதிருந்தது; இருவரும் வயதுசென்றவர்களாயும் இருந்தார்கள். 8 அப்படியிருக்க, அவன் தன் ஆசாரிய வகுப்பின் முறைப்படி தேவசந்நிதியிலே ஆசாரிய ஊழியம் செய்துவருகிற காலத்தில், 9 ஆசாரிய ஊழிய முறைமையின்படி அவன் தேவாலயத்துக்குள் பிரவேசித்துத் தூபங்காட்டுகிறதற்குச் சீட்டைப் பெற்றான். 10 தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். 11 அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலதுபக்கத்திலே நின்று அவனுக்குத் தரிசனமானான். 12 சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான். 13 தூதன் அவனை நோக்கி: சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது; உன் மனைவியாகிய எலிசபெத்து உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு யோவான் என்று பேரிடுவாயாக. 14 உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள். 15 அவன் கர்த்தருக்கு முன்பாகப் பெரியவனாயிருப்பான், திராட்சரசமும் மதுவும் குடியான், தன் தாயின் வயிற்றிலிருக்கும்போதே பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருப்பான். 16 அவன் இஸ்ரவேல் சந்ததியாரில் அநேகரை அவர்கள் தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திருப்புவான். 17 பிதாக்களுடைய இருதயங்களைப் பிள்ளைகளிடத்திற்கும், கீழ்ப்படியாதவர்களை நீதிமான்களுடைய ஞானத்திற்கும் திருப்பி, உத்தமமான ஜனத்தைக் கர்த்தருக்கு ஆயத்தப்படுத்தும்படியாக, அவன் எலியாவின் ஆவியும் பலமும் உடையவனாய் அவருக்கு முன்னே நடப்பான் என்றான். 18 அப்பொழுது சகரியா தேவதூதனை நோக்கி: இதை நான் எதினால் அறிவேன்; நான் கிழவனாயிருக்கிறேன், என் மனைவியும் வயதுசென்றவளாயிருக்கிறாளே என்றான். 19 தேவதூதன் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் தேவசந்நிதானத்தில் நிற்கிற காபிரியேல் என்பவன்; உன்னுடனே பேசவும், உனக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கவும் அனுப்பப்பட்டு வந்தேன்; 20 இதோ, தகுந்தகாலத்திலே நிறைவேறப்போகிற என் வார்த்தைகளை நீ விசுவாசியாதபடியினால் இவைகள் சம்பவிக்கும் நாள்மட்டும் நீ பேசக்கூடாமல் ஊமையாயிருப்பாய் என்றான். 21 ஜனங்கள் சகரியாவுக்குக் காத்திருந்து, அவன் தேவாலயத்தில் தாமதித்ததினால் ஆச்சரியப்பட்டார்கள். 22 அவன் வெளியே வந்தபோது அவர்களிடத்தில் பேசக்கூடாமலிருந்தான்; அதினாலே தேவாலயத்தில் ஒரு தரிசனத்தைக் கண்டானென்று அறிந்தார்கள். அவனும் அவர்களுக்குச் சைகை காட்டி ஊமையாயிருந்தான். 23 அவனுடைய ஊழியத்தின் நாட்கள் நிறைவேறினவுடனே தன் வீட்டுக்குப்போனான். 24 அந்நாட்களுக்குப்பின்பு, அவன் மனைவியாகிய எலிசபெத்து கர்ப்பவதியாகி: ஜனங்களுக்குள்ளே எனக்கு உண்டாயிருந்த நிந்தையை நீக்கும்படியாகக் கர்த்தர் இந்த நாட்களில் என்மேல் கடாட்சம் வைத்து, 25 எனக்கு இப்படிச் செய்தருளினார் என்று சொல்லி, ஐந்து மாதம் வெளிப்படாதிருந்தாள். 26 ஆறாம் மாதத்திலே காபிரியேல் என்னும் தூதன், கலிலேயாவிலுள்ள நாசரேத்தென்னும் ஊரில், 27 தாவீதின் வம்சத்தானாகிய யோசேப்பு என்கிற நாமமுள்ள புருஷனுக்கு நியமிக்கப்பட்டிருந்த ஒரு கன்னிகையினிடத்திற்கு தேவனாலே அனுப்பப்பட்டான்; அந்தக் கன்னிகையின் பேர் மரியாள். 28 அவள் இருந்த வீட்டில் தேவதூதன் பிரவேசித்து: கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக்கிறார், ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள் என்றான். 29 அவளோ அவனைக் கண்டு, அவன் வார்த்தையினால் கலங்கி, இந்த வாழ்த்துதல் எப்படிப்பட்டதோ என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். 30 தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபைபெற்றாய். 31 இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக. 32 அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார். 33 அவர் யாக்கோபின் குடும்பத்தாரை என்றென்றைக்கும் அரசாளுவார்; அவருடைய ராஜ்யத்துக்கு முடிவிராது என்றான். 34 அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள். 35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்தஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். 36 இதோ, உனக்கு இனத்தாளாயிருக்கிற எலிசபெத்தும் தன் முதிர்வயதிலே ஒரு புத்திரனைக் கர்ப்பந்தரித்திருக்கிறாள்; மலடியென்னப்பட்ட அவளுக்கு இது ஆறாம் மாதம். 37 தேவனாலே கூடாதகாரியம் ஒன்றுமில்லை என்றான். 38 அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள். அப்பொழுது தேவதூதன் அவளிடத்திலிருந்து போய்விட்டான். 39 அந்நாட்களில் மரியாள் எழுந்து, மலைநாட்டிலே யூதாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குத் தீவிரமாய்ப் போய், 40 சகரியாவின் வீட்டுக்குள் பிரவேசித்து, எலிசபெத்தை வாழ்த்தினாள். 41 எலிசபெத்து மரியாளுடைய வாழ்த்துதலைக் கேட்டபொழுது, அவளுடைய வயிற்றிலிருந்த பிள்ளை துள்ளிற்று; எலிசபெத்து பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, 42 உரத்த சத்தமாய்: ஸ்திரீகளுக்குள்ளே நீ ஆசீர்வதிக்கப்பட்டவள், உன் கர்ப்பத்தின் கனியும் ஆசீர்வதிக்கப்பட்டது. 43 என் ஆண்டவருடைய தாயார் என்னிடத்தில் வந்தது எனக்கு எதினால் கிடைத்தது. 44 இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று. 45 விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள். 46 அப்பொழுது மரியாள்: என் ஆத்துமா கர்த்தரை மகிமைப்படுத்துகிறது. 47 என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. 48 அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள். 49 வல்லமையுடையவர் மகிமையானவைகளை எனக்குச் செய்தார்; அவருடைய நாமம் பரிசுத்தமுள்ளது. 50 அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது. 51 தம்முடைய புயத்தினாலே பராக்கிரமஞ்செய்தார்; இருதயசிந்தையில் அகந்தையுள்ளவர்களைச் சிதறடித்தார். 52 பலவான்களை ஆசனங்களிலிருந்து தள்ளி, தாழ்மையானவர்களை உயர்த்தினார். 53 பசியுள்ளவர்களை நன்மைகளினால் நிரப்பி, ஐசுவரியமுள்ளவர்களை வெறுமையாய் அனுப்பிவிட்டார். 54 நம்முடைய பிதாக்களுக்கு அவர் சொன்னபடியே, ஆபிரகாமுக்கும் அவன் சந்ததிக்கும் என்றென்றைக்கும் இரக்கஞ்செய்ய நினைத்து, 55 தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலை ஆதரித்தார் என்றாள். 56 மரியாள் ஏறக்குறைய மூன்றுமாதம் அவளுடனே இருந்து, தன் வீட்டுக்குத் திரும்பிப்போனாள். 57 எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது அவள் ஒரு புத்திரனைப் பெற்றாள். 58 கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனேகூடச் சந்தோஷப்பட்டார்கள். 59 எட்டாம்நாளிலே பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணும்படிக்கு அவர்கள் வந்து, அதின் தகப்பனுடைய நாமத்தின்படி அதற்குச் சகரியா என்று பேரிடப்போனார்கள். 60 அப்பொழுது அதின் தாய்: அப்படியல்ல, அதற்கு யோவான் என்று பேரிடவேண்டும் என்றாள். 61 அதற்கு அவர்கள்: உன் உறவின் முறையாரில் இந்தப் பேருள்ளவன் ஒருவனும் இல்லையே என்று சொல்லி, 62 அதின் தகப்பனை நோக்கி: இதற்கு என்ன பேரிட மனதாயிருக்கிறீர் என்று சைகையினால் கேட்டார்கள். 63 அவன் எழுத்துப் பலகையைக் கேட்டு வாங்கி, இவன் பேர் யோவான் என்று எழுதினான்; எல்லாரும் ஆச்சரியப்பட்டார்கள். 64 உடனே அவனுடைய வாய் திறக்கப்பட்டு, அவனுடைய நாவும் கட்டவிழ்க்கப்பட்டு, தேவனை ஸ்தோத்திரித்துப் பேசினான். 65 அதினால் அவர்களைச்சுற்றி வாசமாயிருந்த யாவருக்கும் பயமுண்டாயிற்று. மேலும் யூதேயாவின் மலைநாடெங்கும் இந்த வர்த்தமானங்களெல்லாம் சொல்லிக்கொள்ளப்பட்டது. 66 அவைகளைக் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது. 67 அவனுடைய தகப்பனாகிய சகரியா பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, தீர்க்கதரிசனமாக: 68 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. 69 அவர் நம்முடைய பிதாக்களுக்கு வாக்குத்தத்தம்பண்ணின இரக்கத்தைச் செய்வதற்கும்; 70 தம்முடைய பரிசுத்த உடன்படிக்கையை நினைத்தருளி: 71 உங்கள் சத்துருக்களின் கைகளினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, உயிரோடிருக்கும் நாளெல்லாம் பயமில்லாமல் எனக்கு முன்பாகப் பரிசுத்தத்தோடும் நீதியோடும் எனக்கு ஊழியஞ்செய்யக் கட்டளையிடுவேன் என்று, 72 அவர் நம்முடைய பிதாவாகிய ஆபிரகாமுக்கு இட்ட ஆணையை நிறைவேற்றுவதற்கும்; 73 ஆதிமுதற்கொண்டிருந்த தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் வாக்கினால் தாம் சொன்னபடியே, 74 தமது ஜனத்தைச் சந்தித்து மீட்டுக்கொண்டு, நம்முடைய சத்துருக்களினின்றும், நம்மைப் பகைக்கிற யாவருடைய கைகளினின்றும், நம்மை இரட்சிக்கும்படிக்கு, 75 தம்முடைய தாசனாகிய தாவீதின் வம்சத்திலே நமக்கு இரட்சணியக் கொம்பை ஏற்படுத்தினார். 76 நீயோ பாலகனே, உன்னதமானவருடைய தீர்க்கதரிசி என்னப்படுவாய்; நீ கர்த்தருக்கு வழிகளை ஆயத்தம்பண்ணவும், 77 நமது தேவனுடைய உருக்கமான இரக்கத்தினாலே அவருடைய ஜனத்துக்குப் பாவமன்னிப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும், அவருக்கு முன்னாக நடந்துபோவாய். 78 அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், 79 நம்முடைய கால்களைச் சமாதானத்தின் வழியிலே நடத்தவும், அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது என்றான். 80 அந்தப் பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பலங்கொண்டு, இஸ்ரவேலுக்குத் தன்னைக் காண்பிக்கும் நாள்வரைக்கும் வனாந்தரங்களிலே இருந்தான்.

லூக்கா 2

1 அந்நாட்களில் உலகமெங்கும் குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அகுஸ்துராயனால் கட்டளை பிறந்தது. 2 சீரியாநாட்டிலே சிரேனியு என்பவன் தேசாதிபதியாயிருந்தபோது இந்த முதலாம் குடிமதிப்பு உண்டாயிற்று. 3 அந்தப்படி குடிமதிப்பெழுதப்படும்படிக்கு எல்லாரும் தங்கள் தங்கள் ஊர்களுக்குப் போனார்கள். 4 அப்பொழுது யோசேப்பும், தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே, தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, 5 கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லெகேம் என்னும் தாவீதின் ஊருக்குப் போனான். 6 அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. 7 அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். 8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். 9 அவ்வேளையில் கர்த்தருடைய தூதன் அவர்களிடத்தில் வந்து நின்றான், கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது; அவர்கள் மிகவும் பயந்தார்கள். 10 தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். 11 இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். 12 பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான். 13 அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: 14 உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள். 15 தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லெகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, 16 தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள். 17 கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள். 18 மேய்ப்பராலே தங்களுக்குச் சொல்லப்பட்டதைக் கேட்ட யாவரும் அவைகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். 19 மரியாளோ அந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்து, சிந்தனைபண்ணினாள். 20 மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். 21 பிள்ளைக்கு விருத்தசேதனம் பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே, அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள். 22 மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படியே அவர்களுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபோது, 23 முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்னப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறபடி அவரைக் கர்த்தருக்கென்று ஒப்புக்கொடுக்கவும், 24 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் சொல்லியிருக்கிறபடி, ஒரு ஜோடு காட்டுப்புறாவையாவது இரண்டு புறாக்குஞ்சுகளையாவது பலியாகச் செலுத்தவும், அவரை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள். 25 அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன்மேல் பரிசுத்தஆவி இருந்தார். 26 கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது. 27 அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டுவருகையில், 28 அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து: 29 ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்; 30 புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், 31 தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின 32 உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான். 33 அவரைக்குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள். 34 பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவேலில் அநேகர் விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். 35 உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்றான். 36 ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள். 37 ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள். 38 அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள். 39 கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தின்படி சகலத்தையும் அவர்கள் செய்து முடித்தபின்பு, கலிலேயாநாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள். 40 பிள்ளை வளர்ந்து, ஆவியிலே பெலன்கொண்டு, ஞானத்தினால் நிறைந்தது. தேவனுடைய கிருபையும் அவர்மேல் இருந்தது. 41 அவருடைய தாய் தகப்பன்மார் வருஷந்தோறும் பஸ்கா பண்டிகையில் எருசலேமுக்குப் போவார்கள். 42 அவருக்குப் பன்னிரண்டு வயதானபோது, அவர்கள் அந்தப் பண்டிகை முறைமையின்படி எருசலேமுக்குப்போய், 43 பண்டிகைநாட்கள் முடிந்து, திரும்பிவருகிறபோது, பிள்ளையாகிய இயேசு எருசலேமிலே இருந்துவிட்டார்; இது அவருடைய தாயாருக்கும் யோசேப்புக்கும் தெரியாதிருந்தது. 44 அவர் பிரயாணக்காரரின் கூட்டத்திலே இருப்பாரென்று அவர்கள் நினைத்து, ஒருநாள் பிரயாணம் வந்து, உறவின் முறையாரிடத்திலும் அறிமுகமானவர்களிடத்திலும் அவரைத் தேடினார்கள். 45 காணாததினாலே அவரைத் தேடிக்கொண்டே எருசலேமுக்குத் திரும்பிப் போனார்கள். 46 மூன்றுநாளைக்குப் பின்பு, அவர் தேவாலயத்தில் போதகர் நடுவில் உட்கார்ந்திருக்கவும், அவர்கள் பேசுகிறதைக் கேட்கவும், அவர்களை வினாவவும் கண்டார்கள். 47 அவர் பேசக்கேட்ட யாவரும் அவருடைய புத்தியையும் அவர் சொன்ன மாறுத்தரங்களையுங்குறித்துப் பிரமித்தார்கள். 48 தாய் தகப்பன்மாரும் அவரைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது அவருடைய தாயார் அவரை நோக்கி: மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்? இதோ, உன் தகப்பனும் நானும் விசாரத்தோடே உன்னைத் தேடினோமே என்றாள். 49 அதற்கு அவர்: நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களா என்றார். 50 தங்களுக்கு அவர் சொன்ன வார்த்தையை அவர்கள் உணர்ந்துகொள்ளவில்லை. 51 பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள். 52 இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்.

லூக்கா 3

1 திபேரியுராயன் ராஜ்யபாரம் பண்ணின பதினைந்தாம் வருஷத்திலே, பொந்தியுபிலாத்து யூதேயாவுக்குத் தேசாதிபதியாயும், ஏரோது காற்பங்கு தேசமாகிய கலிலேயாவுக்கு அதிபதியாயும், அவன் சகோதரனாகிய பிலிப்பு காற்பங்கு தேசமாகிய இத்துரேயாவுக்கும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாயும், லிசானியா காற்பங்கு தேசமாகிய அபிலேனேக்கு அதிபதியாயும், 2 அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியராயும் இருந்தகாலத்தில் வனாந்தரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்குத் தேவனுடைய வார்த்தை உண்டாயிற்று. 3 அப்பொழுது: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்றும், 4 பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், சகல மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் செவ்வையாகும், கரடானவைகள் சமமாகும் என்றும், 5 மாம்சமான யாவரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்று ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தில் எழுதியிருக்கிறபிரகாரம், 6 அவன் யோர்தான் நதிக்கு அருகான தேசமெங்கும் போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான். 7 அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறும்படிக்குப் புறப்பட்டுவந்த திரளான ஜனங்களை நோக்கி: விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்? 8 மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லத்தொடங்காதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 9 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும் என்றான். 10 அப்பொழுது ஜனங்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார்கள். 11 அவர்களுக்கு அவன் பிரதியுத்தரமாக: இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன் என்றான். 12 ஆயக்காரரும் ஞானஸ்நானம் பெறவந்து, அவனை நோக்கி: போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். 13 அதற்கு அவன்: உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறதற்கு அதிகமாய் ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான். 14 போர்ச்சேவகரும் அவனை நோக்கி: நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன்: நீங்கள் ஒருவருக்கும் இடுக்கண்செய்யாமலும் பொய்யாய்க் குற்றஞ்சாட்டாமலும், உங்கள் சம்பளமே போதுமென்றும் இருங்கள் என்றான். 15 யோவானைக்குறித்து: இவன்தான் கிறிஸ்துவோ என்று ஜனங்களெல்லாரும் எண்ணங்கொண்டு, தங்கள் இருதயங்களில் யோசனையாயிருக்கையில், 16 யோவான் எல்லாருக்கும் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன், என்னிலும் வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சைகளின் வாரை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல, அவர் பரிசுத்தஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுப்பார். 17 தூற்றுக்கூடை அவர் கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாய் விளக்கி, கோதுமையைத் தமது களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அவியாத அக்கினியினால் சுட்டெரிப்பார் என்றான். 18 வேறு அநேக புத்திமதிகளையும் அவன் ஜனங்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான். 19 காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது தன் சகோதரனான பிலிப்புவின் மனைவி ஏரோதியாளினிமித்தமாகவும், தான் செய்த மற்றப் பொல்லாங்குகளினிமித்தமாகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது, 20 தான் செய்த மற்றெல்லாப் பொல்லாங்குகளும் தவிர, யோவானையும் காவலில் அடைத்துவைத்தான். 21 ஜனங்களெல்லாரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணுகையில், வானம் திறக்கப்பட்டது; 22 பரிசுத்த ஆவியானவர் ரூபங்கொண்டு புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தமும் உண்டாகி: நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. 23 அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்; 24 ஏலி மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்; லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசேப்பின் குமாரன்; 25 யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின் குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன். 26 நங்காய் மாகாத்தின் குமாரன்; மாகாத் மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா சேமேயின் குமாரன்; சேமேய் யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யூதாவின் குமாரன்; யூதா யோவன்னாவின் குமாரன். 27 யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா சொரொபாபேலின் குமாரன்; சொரொபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன். 28 நேரி மெல்கியின் குமாரன்; மெல்கி அத்தியின் குமாரன்; அத்தி கோசாமின் குமாரன்; கோசாம் எல்மோதாமின் குமாரன்; எல்மோதாம் ஏரின் குமாரன்; ஏர் யோசேயின் குமாரன். 29 யோசே எலியேசரின் குமாரன்; எலியேசர் யோரீமின் குமாரன்; யோரீம் மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன். 30 லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்; யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனான் எலியாக்கீமின் குமாரன். 31 எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன். 32 தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேதின் குமாரன்; ஓபேத் போவாசின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன். 33 நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன். 34 யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன். 35 நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன். 36 சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன். 37 லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேதின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கேனான் ஏனோசின் குமாரன். 38 ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.

லூக்கா 4

1 இயேசு பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவராய் யோர்தானை விட்டுத் திரும்பி, ஆவியானவராலே வனாந்தரத்திற்குக் கொண்டுபோகப்பட்டு, 2 நாற்பதுநாள் பிசாசினால் சோதிக்கப்பட்டார். அந்த நாட்களில் அவர் ஒன்றும் புசியாதிருந்தார்; அந்த நாட்கள் முடிந்தபின்பு அவருக்குப் பசியுண்டாயிற்று. 3 அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான். 4 அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார். 5 பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து: 6 இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன். 7 நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான். 8 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார். 9 அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும். 10 ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும், 11 உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான். 12 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார். 13 பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான். 14 பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று. 15 அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார். 16 தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார். 17 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது: 18 கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம் பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், 19 கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு, 20 வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது. 21 அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார். 22 எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள். 23 அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம். 24 ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 25 அன்றியும் எலியாவின் நாட்களிலே மூன்று வருஷமும் ஆறுமாதமும் வானம் அடைபட்டு, தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள். 26 ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா (சாறிபாத்) ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை. 27 அல்லாமலும் எலிசா தீர்க்கதரிசியின் காலத்திலே இஸ்ரவேலருக்குள்ளே அநேகம் குஷ்டரோகிகள் இருந்தார்கள்; ஆயினும் சீரியா தேசத்தானாகிய நாகமானேயல்லாமல் அவர்களில் வேறொருவனும் சுத்தமாக்கப்படவில்லை என்று சத்தியத்தின்படியே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 28 ஜெபஆலயத்திலிருந்த எல்லாரும், இவைகளைக் கேட்டபொழுது, கோபமூண்டு, 29 எழுந்திருந்து, அவரை ஊருக்குப் புறம்பே தள்ளி, தங்கள் ஊர் கட்டப்பட்டிருந்த செங்குத்தான மலையின் சிகரத்திலிருந்து அவரைத் தலைகீழாய்த் தள்ளிவிடும்படிக்கு அவ்விடத்திற்குக் கொண்டுபோனார்கள். 30 அவரோ அவர்கள் நடுவினின்று கடந்துபோய்விட்டார். 31 பின்பு அவர் கலிலேயாவிலுள்ள கப்பர்நகூம் பட்டணத்துக்கு வந்து, ஓய்வுநாட்களில் ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார். 32 அவருடைய வசனம் அதிகாரமுள்ளதாயிருந்தபடியால் அவருடைய போதகத்தைக்குறித்து அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். 33 ஜெபஆலயத்திலே அசுத்த ஆவி பிடித்திருந்த ஒரு மனுஷன் இருந்தான். 34 அவன்: ஐயோ! நசரேயனாகிய இயேசுவே, எங்களுக்கும் உமக்கும் என்ன? எங்களைக் கெடுக்கவா வந்தீர்? உம்மை இன்னார் என்று அறிவேன்; நீர் தேவனுடைய பரிசுத்தர் என்று உரத்தசத்தமிட்டான். 35 அதற்கு இயேசு: நீ பேசாமல் இவனை விட்டுப் புறப்பட்டுப் போ என்று அதை அதட்டினார்; அப்பொழுது பிசாசு அவனை ஜனங்களின் நடுவே விழத்தள்ளி, அவனுக்கு ஒரு சேதமுஞ்செய்யாமல், அவனை விட்டுப் போய்விட்டது. 36 எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப்போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். 37 அவருடைய கீர்த்தி சுற்றிலுமிருந்த நாடுகளிலுள்ள இடங்களிலெல்லாம் பிரசித்தமாயிற்று. 38 பின்பு அவர் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, சீமோன் வீட்டில் பிரவேசித்தார், சீமோனுடைய மாமி கடும் ஜுரமாய்க் கிடந்தாள். அவளுக்காக அவரை வேண்டிக்கொண்டார்கள். 39 அவர் அவளிடத்தில் குனிந்துநின்று, ஜுரம் நீங்கும்படி கட்டளையிட்டார், அது அவளை விட்டு நீங்கிற்று; உடனே அவள் எழுந்திருந்து அவர்களுக்குப் பணிவிடை செய்தாள். 40 சூரியன் அஸ்தமித்தபோது, ஜனங்களெல்லாரும் தங்களுக்குள்ளே பலபல வியாதிகளால் வருத்தப்பட்டவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவர்மேலும் அவர் தம்முடைய கைகளை வைத்து, அவர்களைச் சொஸ்தமாக்கினார். 41 பிசாசுகளும்: நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று சத்தமிட்டு, அநேகரைவிட்டுப் புறப்பட்டது. அவரைக் கிறிஸ்து என்று பிசாசுகள் அறிந்திருந்தபடியால் அவர் அவைகளைப் பேசவொட்டாமல் அதட்டினார். 42 உதயமானபோது, அவர் புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப் போனார். திரளான ஜனங்கள் அவரைத் தேடி, அவரிடத்தில் வந்து, தங்களை விட்டுப் போகாதபடிக்கு அவரை நிறுத்திக்கொண்டார்கள். 43 அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார். 44 அந்தப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம் பண்ணிக்கொண்டுவந்தார்.

லூக்கா 5

1 பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள். 2 அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலைசிக்கொண்டிருந்தார்கள். 3 அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார். 4 அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார். 5 அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான். 6 அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள். 7 அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள். 8 சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான். 9 அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான். 10 சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார். 11 அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள். 12 பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான். 13 அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று. 14 அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலி செலுத்து என்று கட்டளையிட்டார். 15 அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று. திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள். 16 அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். 17 பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று. 18 அப்பொழுது சில மனுஷர் திமிர்வாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடே எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டுபோகவும் அவர் முன்பாக வைக்கவும் வகைதேடினார்கள். 19 ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோகிறதற்கு வகைகாணாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில் இயேசுவுக்கு முன்பாக அவனைப் படுக்கையோடே இறக்கினார்கள். 20 அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார். 21 அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள். 22 இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்கள் இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறதென்ன? 23 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது? 24 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனுஷகுமாரனுக்கு அதிகாரம் உண்டென்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, திமிர்வாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 25 உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டுக்குப் போனான். 26 அதினாலே எல்லாரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள். 27 இவைகளுக்குப் பின்பு, அவர் புறப்பட்டு, ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பேருடைய ஒரு ஆயக்காரனைக் கண்டு: எனக்குப் பின்சென்று வா என்றார். 28 அவன் எல்லாவற்றையும் விட்டு, எழுந்து, அவருக்குப் பின்சென்றான். 29 அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக ஆயக்காரரும் மற்றவர்களும் அவர்களோடேகூடப் பந்தியிருந்தார்கள். 30 வேதபாரகரும் பரிசேயரும் அவருடைய சீஷருக்கு விரோதமாக முறுமுறுத்து: நீங்கள் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனபானம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள். 31 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பிணியாளிகளுக்கு வைத்தியன் வேண்டியதேயல்லாமல் சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை. 32 நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார். 33 பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீஷர் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம்பண்ணிக்கொண்டு வருகிறார்கள், பரிசேயருடைய சீஷரும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீஷர் போஜனபானம்பண்ணுகிறார்களே, அதெப்படியென்று கேட்டார்கள். 34 அதற்கு அவர்: மணவாளன் தங்களோடிருக்கையில் மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் செய்யக்கூடுமா? 35 மணவாளன் அவர்களை விட்டு எடுபடும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார். 36 அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய வஸ்திரத்துண்டைப் பழைய வஸ்திரத்தின்மேல் போட்டு இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதிய வஸ்திரத்துண்டு பழைய வஸ்திரத்துக்கு ஒவ்வாது. 37 ஒருவனும் புது திராட்சரசத்தைப் பழந்துருத்திகளில் வார்த்துவைக்கமாட்டான்; வார்த்துவைத்தால் புதுரசம் துருத்திகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போம், துருத்திகளும் கெட்டுப்போம். 38 புது ரசத்தைப் புது துருத்திகளில் வார்த்துவைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும். 39 அன்றியும் ஒருவனும் பழைய ரசத்தைக் குடித்தவுடனே புது ரசத்தை விரும்பமாட்டான், பழைய ரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.

லூக்கா 6

1 பஸ்காபண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, அவர் பயிர்வழியே நடந்துபோகையில், அவருடைய சீஷர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித் தின்றார்கள். 2 பரிசேயரில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யத்தகாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள். 3 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டில் பிரவேசித்து, ஆசாரியர் மாத்திரமே தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமுகத்து அப்பங்களைக் கேட்டு வாங்கி, 4 தான் புசித்ததுமன்றி, தன்னுடனே கூட இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார். 5 மேலும் மனுஷகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறார் என்றார். 6 வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்து உபதேசித்தார். அங்கே சூம்பின வலதுகையையுடைய ஒரு மனுஷன் இருந்தான். 7 அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் குற்றம் பிடிக்கும்படி, ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவாரோ என்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள். 8 அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனுஷனை நோக்கி: நீ எழுந்து, நடுவே நில் என்றார். அவன் எழுந்து நின்றான். 9 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடத்தில் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ, ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ, எது நியாயம் என்று கேட்டு, 10 அவர்களெல்லாரையும் சுற்றிப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று. 11 அவர்களோ மூர்க்கவெறிகொண்டு, இயேசுவை என்ன செய்யலாமென்று ஒருவரோடொருவர் ஆலோசித்தார்கள். 12 அந்நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இராமுழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். 13 பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார். 14 அவர்கள் யாரெனில், பேதுரு என்று தாம் பேரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பற்தொலொமேயு, 15 மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன், 16 யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே. 17 பின்பு அவர் அவர்களுடனேகூட இறங்கி, சமனான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீஷரில் அநேகம்பேரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படிக்கும், தங்கள் வியாதிகளினின்று குணமாக்கப்படும்படிக்கும், யூதேயாதேசத்துத் திசைகள் யாவற்றிலிருந்தும், எருசலேம் நகரத்திலிருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்திலிருந்தும் வந்தவர்களாகிய திரளான ஜனங்களும் இருந்தார்கள். 18 அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள். 19 அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லாரையும் குணமாக்கினபடியினாலே, ஜனங்கள் யாவரும் அவரைத் தொடும்படிக்கு வகைதேடினார்கள். 20 அப்பொழுது அவர் தம்முடைய சீஷர்களை நோக்கிப்பார்த்து: தரித்திரராகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய ராஜ்யம் உங்களுடையது. 21 இப்பொழுது பசியாயிருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி நகைப்பீர்கள். 22 மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். 23 அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள். 24 ஐசுவரியவான்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்கள் ஆறுதலை நீங்கள் அடைந்து தீர்ந்தது. 25 திருப்தியுள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு ஐயோ; பசியாயிருப்பீர்கள். இப்பொழுது நகைக்கிற உங்களுக்கு ஐயோ; இனி துக்கப்பட்டு அழுவீர்கள். 26 எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய்ப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள். 27 எனக்குச் செவிகொடுக்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மைசெய்யுங்கள். 28 உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள். 29 உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் கொடு; உன் அங்கியை எடுத்துக்கொள்ளுகிறவனுக்கு உன் வஸ்திரத்தையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே. 30 உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேளாதே. 31 மனுஷர் உங்களுக்கு எப்படிச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். 32 உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களைச் சிநேகிக்கிறவர்களைச் சிநேகிக்கிறார்களே. 33 உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்கள் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே. 34 திரும்பக் கொடுப்பார்களென்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும்படியாகப் பாவிகளும் பாவிகளுக்குக் கடன்கொடுக்கிறார்களே. 35 உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறு கருதாமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள் பிள்ளைகளாயிருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே. 36 ஆகையால் உங்கள் பிதா இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள். 37 மற்றவர்களைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகளென்று தீர்க்கப்படாதிருப்பீர்கள்; மற்றவர்களை ஆக்கினைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள். 38 கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார். 39 பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா? 40 சீஷன் தன் குருவுக்கு மேற்பட்டவனல்ல, தேறினவன் எவனும் தன் குருவைப்போலிருப்பான். 41 நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன? 42 அல்லது நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போடட்டும் என்று நீ சொல்வதெப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய். 43 நல்ல மரமானது கெட்ட கனி கொடாது, கெட்ட மரமானது நல்ல கனி கொடாது. 44 அந்தந்த மரம் அதனதன் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை. 45 நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும். 46 என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமற்போகிறதென்ன? 47 என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாயிருக்கிறானென்று உங்களுக்குக் காண்பிப்பேன். 48 ஆழமாய்த் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம் போட்டு, வீடுகட்டுகிற மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்கக் கூடாமற்போயிற்று; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. 49 என் வார்த்தைகளைக் கேட்டும் அவைகளின்படி செய்யாதவனோ அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாயிருக்கிறான்; நீரோட்டம் அதின்மேல் மோதினவுடனே அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.

லூக்கா 7

1 அவர் தம்முடைய வார்த்தைகளையெல்லாம் ஜனங்களுடைய காதுகள் கேட்கும்படி சொல்லி முடித்தபின்பு, கப்பர்நகூமுக்குப் போனார். 2 அங்கே நூற்றுக்கு அதிபதியாகிய ஒருவனுக்குப் பிரியமான வேலைக்காரன் வியாதிப்பட்டு மரண அவஸ்தையாயிருந்தான். 3 அவன் இயேசுவைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அவர் வந்து தன் வேலைக்காரனைக் குணமாக்கவேண்டுமென்று, அவரை வேண்டிக்கொள்ளும்படி யூதருடைய மூப்பரை அவரிடத்தில் அனுப்பினான். 4 அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவரைக் கருத்தாய் வேண்டிக்கொண்டு: நீர் இந்தத் தயவுசெய்கிறதற்கு அவன் பாத்திரனாயிருக்கிறான். 5 அவன் நம்முடைய ஜனத்தை நேசிக்கிறான், நமக்கு ஒரு ஜெபஆலயத்தையும் கட்டினான் என்றார்கள். 6 அப்பொழுது இயேசு அவர்களுடனே கூடப்போனார். வீட்டுக்குச் சமீபமானபோது, நூற்றுக்கு அதிபதி தன் சிநேகிதரை நோக்கி: நீங்கள் அவரிடத்தில் போய், ஆண்டவரே! நீர் வருத்தப்படவேண்டாம்; நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; 7 நான் உம்மிடத்தில் வரவும் என்னைப் பாத்திரனாக எண்ணவில்லை; ஒரு வார்த்தைமாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான். 8 நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான்; என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்று நான் சொன்னதாகச் சொல்லுங்கள் என்று அவர்களை அனுப்பினான். 9 இயேசு இவைகளைக் கேட்டு அவனைக் குறித்து ஆச்சரியப்பட்டு, திரும்பி, தமக்குப் பின்செல்லுகிற திரளான ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 10 அனுப்பப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பிவந்தபோது, வியாதியாய்க் கிடந்த வேலைக்காரன் சுகமடைந்திருக்கிறதைக் கண்டார்கள். 11 மறுநாளிலே அவர் நாயீன் என்னும் ஊருக்குப் போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள். 12 அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்தபோது, மரித்துப்போன ஒருவனை அடக்கம்பண்ணும்படி கொண்டுவந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்ணாயிருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவளுடனேகூட வந்தார்கள். 13 கர்த்தர் அவளைப் பார்த்து, அவள்மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, 14 கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்: வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 15 மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். 16 எல்லாரும் பயமடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைச் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். 17 இந்தச் செய்தி யூதேயா தேசமுழுவதிலும் சுற்றியிருக்கிற திசைகள் யாவற்றிலும் பிரசித்தமாயிற்று. 18 இவைகளையெல்லாம் யோவானுடைய சீஷர்கள் அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது யோவான் தன் சீஷரில் இரண்டுபேரை அழைத்து, 19 நீங்கள் இயேசுவினிடத்திற்குப் போய்: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேளுங்கள் என்று சொல்லி அனுப்பினான். 20 அந்தப்படி அவர்கள் அவரிடத்தில் வந்து: வருகிறவர் நீர்தானா? அல்லது வேறொருவர் வரக் காத்திருக்கவேண்டுமா? என்று கேட்கும்படி யோவான்ஸ்நானன் எங்களை உம்மிடத்திற்கு அனுப்பினார் என்றார்கள். 21 அந்தச் சமயத்திலே நோய்களையும் கொடிய வியாதிகளையும் பொல்லாத ஆவிகளையும் கொண்டிருந்த அநேகரை அவர் குணமாக்கி, அநேகங் குருடருக்குப் பார்வையளித்தார். 22 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் போய், கண்டவைகளையும் கேட்டவைகளையும் யோவானுக்கு அறிவியுங்கள்; குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. 23 என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார். 24 யோவானுடைய தூதர்கள் போனபின்பு அவர் யோவானைக்குறித்து ஜனங்களுக்குச் சொன்னது என்னவென்றால்: எதைப்பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? 25 அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ? அலங்கார வஸ்திரந்தரித்துச் செல்வமாய் வாழ்கிறவர்கள் அரசர் மாளிகைகளிலே இருக்கிறார்கள். 26 அல்லவென்றால், எதைப்பார்க்கப் போனீர்கள்? தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 27 இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னே போய், உமது வழியை ஆயத்தம்பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன்தான். 28 ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப்பார்க்கிலும் பெரிய தீர்க்கதரிசி ஒருவனுமில்லை; ஆகிலும், தேவனுடைய ராஜ்யத்தில் சிறியவனாயிருக்கிறவன் அவனிலும் பெரியவனாயிருக்கிறானென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 29 யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள். 30 பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாகத் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள். 31 பின்னும் கர்த்தர் சொன்னது: இந்தச் சந்ததியை யாருக்கு ஒப்பிடுவேன்? இவர்கள் யாருக்கு ஒப்பாயிருக்கிறார்கள்? 32 சந்தை வெளியில் உட்கார்ந்து, ஒருவரையொருவர் பார்த்து: உங்களுக்காகக் குழல் ஊதினோம், நீங்கள் கூத்தாடவில்லை; உங்களுக்காகப் புலம்பினோம், நீங்கள் அழவில்லை என்று குறை சொல்லுகிற பிள்ளைகளுக்கு ஒப்பாயிருக்கிறார்கள். 33 எப்படியெனில், யோவான்ஸ்நானன் அப்பம் புசியாதவனும் திராட்சரசம் குடியாதவனுமாய் வந்தான்; அதற்கு நீங்கள்: அவன் பிசாசு பிடித்திருக்கிறவன் என்கிறீர்கள். 34 மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு நீங்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் சிநேகிதன் என்கிறீர்கள். 35 ஆனாலும் ஞானமானது அதன் பிள்ளைகளெல்லாராலும் நீதியுள்ளதென்று ஒப்புக்கொள்ளப்படும் என்றார். 36 பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம்பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார். 37 அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒரு ஸ்திரீ அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டுவந்து, 38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள். 39 அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசியாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திரீ இன்னாளென்றும் இப்படிப்பட்டவளென்றும் அறிந்திருப்பார்; இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான். 40 இயேசு அவனை நோக்கி: சீமோனே, உனக்கு நான் ஒரு காரியம் சொல்லவேண்டும் என்றார். அதற்கு அவன்: போதகரே, சொல்லும் என்றான். 41 அப்பொழுது அவர்: ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள்; ஒருவன் ஐந்நூறு வெள்ளிக்காசும், மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்கவேண்டியதாயிருந்தது. 42 கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார். 43 சீமோன் பிரதியுத்தரமாக: எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்; அதற்கு அவர்: சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி, 44 ஸ்திரீயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி: இந்த ஸ்திரீயைப் பார்க்கிறாயே; நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள். 45 நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள். 46 நீ என் தலையில் எண்ணெய் பூசவில்லை, இவளோ, என் பாதங்களில் பரிமளதைலம் பூசினாள். 47 ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன்: இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது; இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்சமாய் அன்புகூருவான் என்று சொல்லி; 48 அவளை நோக்கி: உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்றார். 49 அப்பொழுது கூடப் பந்தியிருந்தவர்கள்: பாவங்களை மன்னிக்கிற இவன் யார் என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். 50 அவர் ஸ்திரீயை நோக்கி: உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார்.

லூக்கா 8

1 பின்பு, அவர் பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பிரயாணம்பண்ணி, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைக் கூறிப் பிரசங்கித்துவந்தார். பன்னிருவரும் அவருடனேகூட இருந்தார்கள். 2 அவர் பொல்லாத ஆவிகளையும் வியாதிகளையும் நீக்கிக் குணமாக்கின சில ஸ்திரீகளும், ஏழு பிசாசுகள் நீங்கின மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும், 3 ஏரோதின் காரியக்காரனான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்கள் ஆஸ்திகளால் அவருக்கு ஊழியஞ்செய்துகொண்டுவந்த மற்ற அநேகம் ஸ்திரீகளும் அவருடனே இருந்தார்கள். 4 சகல பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் அவரிடத்தில் வந்து கூடினபோது, அவர் உவமையாகச் சொன்னது: 5 விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப்போட்டது. 6 சில விதை கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோயிற்று. 7 சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது. 8 சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார். 9 அப்பொழுது அவருடைய சீஷர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள். 10 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது. 11 அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம். 12 வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான். 13 கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆயினும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமாத்திரம் விசுவாசித்து, சோதனை காலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள். 14 முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாயிருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், பிரபஞ்சத்திற்குரிய கவலைகளினாலும் ஐசுவரியத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடாதிருக்கிறார்கள். 15 நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாயிருக்கிறார்கள். 16 ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடவுமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவுமாட்டான்; உள்ளே பிரவேசிக்கிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான். 17 வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளிக்குவராத மறைபொருளுமில்லை. 18 ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும் என்றார். 19 அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரரும் அவரிடத்தில் வந்தார்கள்; ஜனக்கூட்டத்தினாலே அவரண்டையில் அவர்கள் சேரக்கூடாதிருந்தது. 20 அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள். 21 அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக் கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரருமாயிருக்கிறார்கள் என்றார். 22 பின்பு ஒருநாள் அவர் தமது சீஷரோடுங்கூடப் படவில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள். 23 படவு ஓடுகையில் அவர் நித்திரையாயிருந்தார். அப்பொழுது கடலிலே சுழல்காற்றுண்டானதால், அவர்கள் மோசமடையத்தக்கதாய்ப் படவு ஜலத்தினால் நிறைந்தது. 24 அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, மடிந்துபோகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் ஜலத்தின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டாயிற்று. 25 அவர் அவர்களை நோக்கி: உங்கள் விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் ஜலத்துக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 26 பின்பு கலிலேயாவுக்கு எதிரான கதரேனருடைய நாட்டில் சேர்ந்தார்கள். 27 அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாய்ப் பிசாசுகள் பிடித்தவனும், வஸ்திரந்தரியாதவனும், வீட்டில் தங்காமல் பிரேதக் கல்லறைகளிலே தங்கினவனுமாயிருந்த அந்தப் பட்டணத்து மனுஷன் ஒருவன் அவருக்கு எதிராக வந்தான். 28 அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தத்தோடே சொன்னான். 29 அந்த அசுத்தஆவி அவனை விட்டுப் போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்தஆவி வெகுகாலமாய் அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்தரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான். 30 இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான். 31 தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. 32 அவ்விடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாய் மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவுகொடுத்தார். 33 அப்படியே பிசாசுகள் அந்த மனுஷனைவிட்டு நீங்கி, பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து, மாண்டது. 34 அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள். 35 அப்பொழுது, சம்பவித்ததைப் பார்க்கும்படி ஜனங்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனுஷன் வஸ்திரந்தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள். 36 பிசாசுகள் பிடித்திருந்தவன் சொஸ்தமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள். 37 அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள திரளான ஜனங்கள் எல்லாரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களை விட்டுப் போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படவில் ஏறி, திரும்பிப்போனார். 38 பிசாசுகள் நீங்கின மனுஷன் அவரோடேகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான். 39 இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டுக்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் அறிவி என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன் போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் பிரசித்தப்படுத்தினான். 40 இயேசு திரும்பிவந்தபோது ஜனங்களெல்லாரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள். 41 அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால், 42 தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகையில் திரளான ஜனங்கள் அவரை நெருக்கினார்கள். 43 அப்பொழுது பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ளவளாயிருந்து, தன் ஆஸ்திகளையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சொஸ்தமாக்கப்படாதிருந்த ஒரு ஸ்திரீ, 44 அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய பெரும்பாடு நின்றுபோயிற்று. 45 அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லாரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனே கூட இருந்தவர்களும்: ஐயரே, திரளான ஜனங்கள் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக் கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள். 46 அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார். 47 அப்பொழுது அந்த ஸ்திரீ தான் மறைந்திருக்கவில்லையென்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சொஸ்தமானதையும் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள். 48 அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார். 49 அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், ஜெபஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய குமாரத்தி மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்த வேண்டாம் என்றான். 50 இயேசு அதைக் கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாயிரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார். 51 அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டாமல், 52 எல்லாரும் அழுது அவளைக்குறித்துத் துக்கங்கொண்டாடுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள் என்றார். 53 அவள் மரித்துப்போனாளென்று அவர்கள் அறிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள். 54 எல்லாரையும் அவர் வெளியே போகப்பண்ணி, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார். 55 அப்பொழுது அவள் உயிர் திரும்ப வந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரங்கொடுக்கக் கட்டளையிட்டார். 56 அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

லூக்கா 9

1 அவர் தம்முடைய பன்னிரண்டு சீஷரையும் வரவழைத்து, சகல பிசாசுகளையும் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும் அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து, 2 தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், பிணியாளிகளைச் சொஸ்தமாக்கவும் அவர்களை அனுப்பினார். 3 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: வழிக்குத் தடியையாவது பையையாவது அப்பத்தையாவது காசையாவது எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு அங்கிகளைக் கொண்டுபோகவும் வேண்டாம். 4 எந்த வீட்டிலே பிரவேசிக்கிறீர்களோ, அங்கே தங்கி, அங்கிருந்து புறப்படுங்கள். 5 உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள் எவர்களோ அவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்களுக்குச் சாட்சியாக உங்கள் கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள் என்றார். 6 அவர்கள் புறப்பட்டுப்போய், கிராமங்கள்தோறும் திரிந்து, எங்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, பிணியாளிகளைக் குணமாக்கினார்கள். 7 அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்ட யாவையும் கேள்விப்பட்டதுமன்றி; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து எழுந்தான் என்றும், 8 சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து: 9 யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்க விரும்பினான். 10 அப்போஸ்தலர் திரும்பிவந்து, தாங்கள் செய்த யாவையும் அவருக்கு விவரித்துச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனித்திருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தைச் சேர்ந்த வனாந்தரமான ஒரு இடத்துக்குப் போனார். 11 ஜனங்கள் அதை அறிந்து, அவர் பின்னே போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்து அவர்களுடனே பேசி, சொஸ்தமடையவேண்டுமென்றிருந்தவர்களைச் சொஸ்தப்படுத்தினார். 12 சாயங்காலமாகிறபோது, பன்னிருவரும் சேர்ந்துவந்து, அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்தரமாயிருக்கிறது, சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும் ஜனங்கள் போய்த் தங்கி, போஜனபதார்த்தங்களைச் சம்பாதித்துக்கொள்ளும்படி அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள். 13 அவர் அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்குப் போஜனங்கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடத்தில் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களுமாத்திரமுண்டு, இந்த ஜனங்களெல்லாருக்கும் போஜனங் கொடுக்கவேண்டியதானால், நாங்கள் போய் வாங்கிக்கொண்டு வரவேண்டுமே என்றார்கள். 14 ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார். 15 அவர்கள் அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள். 16 அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, ஜனங்கள்முன் வைக்கும்படி சீஷர்களிடத்தில் கொடுத்தார். 17 எல்லாரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான துணிக்கைகள் பன்னிரண்டு கூடைநிறைய எடுக்கப்பட்டது. 18 பின்பு அவர் தமது சீஷரோடேகூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். 19 அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். 20 அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான். 21 அப்பொழுது அவர்கள் அதை ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார். 22 மேலும் மனுஷகுமாரன் பல பாடுகள்படவும், மூப்பராலும் பிரதான ஆசாரியராலும் வேதபாரகராலும் ஆகாதவனென்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார். 23 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். 24 தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தமாகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான். 25 மனுஷன் உலகமுழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத் தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? 26 என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனுஷகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார். 27 இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 28 இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டுநாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார். 29 அவர் ஜெபம்பண்ணுகையில், அவருடைய முகரூபம் மாறிற்று, அவருடைய வஸ்திரம் வெண்மையாகிப் பிரகாசித்தது. 30 அன்றியும் மோசே எலியா என்னும் இரண்டுபேரும் மகிமையோடே காணப்பட்டு, அவருடனே சம்பாஷணைபண்ணி, 31 அவர் எருசலேமிலே நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். 32 பேதுருவும் அவனோடிருந்தவர்களும் நித்திரைமயக்கமாயிருந்தார்கள். ஆகிலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடே நின்ற அவ்விரண்டுபேரையும் கண்டார்கள். 33 அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்துபோகையில், பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது இன்னதென்று அறியாமல் சொன்னான். 34 இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது; அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள். 35 அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று. 36 அந்தச் சத்தம் உண்டாகையில் இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் அந்நாட்களில் ஒருவருக்கும் சொல்லாமல் அடக்கிவைத்திருந்தார்கள். 37 மறுநாளில் அவர்கள் மலையிலிருந்திறங்கினபோது, திரளான ஜனங்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்தார்கள். 38 அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனைக் கடாட்சித்தருள வேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாயிருக்கிறான். 39 ஒரு ஆவி அவனைப் பிடிக்கிறது, அப்பொழுது அலறுகிறான், அது அவனை நுரைதள்ள அலைக்கழித்து, அவனைக் கசக்கினபின்பும், அவனை விட்டு நீங்குவது அரிதாயிருக்கிறது. 40 அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீஷரை வேண்டிக்கொண்டேன், அவர்களால் கூடாமற்போயிற்று என்றான். 41 இயேசு பிரதியுத்தரமாக: விசுவாசமில்லாத மாறுபாடான சந்ததியே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடத்தில் பொறுமையாயிருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார். 42 அவன் சமீபித்துவருகையில், பிசாசு அவனைக் கீழே தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தார். 43 அப்பொழுது எல்லாரும் தேவனுடைய மகத்துவத்தைக் குறித்துப் பிரமித்தார்கள். இயேசு செய்த யாவையுங்குறித்து அனைவரும் ஆச்சரியப்படுகையில் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: 44 நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாய்க் கேளுங்கள்; மனுஷகுமாரன் மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார். 45 அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை அறிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்குத் தோன்றாமல் மறைபொருளாயிருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் பயந்தார்கள். 46 பின்பு தங்களில் எவன் பெரியவனாயிருப்பானென்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டாயிற்று. 47 இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தமதருகே நிறுத்தி, 48 அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்களெல்லாருக்குள்ளும் எவன் சிறியவனாயிருக்கிறானோ அவனே பெரியவனாயிருப்பான் என்றார். 49 அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களுடனேகூட உம்மைப் பின்பற்றாதவனானபடியால், அவனைத் தடுத்தோம் என்றான். 50 அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாயிராதவன் நமது பட்சத்திலிருக்கிறான் என்றார். 51 பின்பு, அவர் எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் சமீபித்தபோது, அவர் எருசலேமுக்குப் போகத் தமது முகத்தைத்திருப்பி, 52 தமக்கு முன்னாகத் தூதர்களை அனுப்பினார். அவர்கள் போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள். 53 அவர் எருசலேமுக்குப் போக நோக்கமாயிருந்தபடியினால் அவ்வூரார் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 54 அவருடைய சீஷராகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்குச் சித்தமா என்று கேட்டார்கள். 55 அவர் திரும்பிப்பார்த்து: நீங்கள் இன்ன ஆவியுள்ளவர்களென்பதை அறியீர்கள் என்று அதட்டி, 56 மனுஷகுமாரன் மனுஷருடைய ஜீவனை அழிக்கிறதற்கு அல்ல, இரட்சிக்கிறதற்கே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்துக்குப் போனார்கள். 57 அவர்கள் வழியிலே போகையில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான். 58 அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலைசாய்க்க இடமில்லை என்றார். 59 வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முன்பு நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். 60 அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார். 61 பின்பு வேறொருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முன்பு நான் போய் வீட்டிலிருக்கிறவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டுவரும்படி எனக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்றான். 62 அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.

லூக்கா 10

1 இவைகளுக்குப்பின்பு கர்த்தர் வேறே எழுபதுபேரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும் அவர்களைத் தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார். 2 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்; ஆகையால் அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள். 3 புறப்பட்டுப்போங்கள்; ஆட்டுக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன். 4 பணப்பையையும் சாமான் பையையும் பாதரட்சைகளையும் கொண்டுபோகவேண்டாம்; வழியிலே ஒருவரையும் வினவவும் வேண்டாம். 5 ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம் உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள். 6 சமாதான பாத்திரன் அங்கே இருந்தால், நீங்கள் கூறின சமாதானம் அவனிடத்தில் தங்கும், இல்லாதிருந்தால் அது உங்களிடத்திற்குத் திரும்பிவரும். 7 அந்த வீட்டிலேதானே நீங்கள் தங்கியிருந்து, அவர்கள் கொடுக்கிறவைகளைப் புசித்துக் குடியுங்கள்; வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான். வீட்டுக்கு வீடு போகாதிருங்கள். 8 ஒரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொண்டால் அவர்கள் உங்கள்முன் வைக்கிறவைகளை நீங்கள் புசித்து, 9 அவ்விடத்திலுள்ள பிணியாளிகளைச் சொஸ்தமாக்கி: தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறது என்று அவர்களுக்குச் சொல்லுங்கள். 10 யாதொரு பட்டணத்தில் நீங்கள் பிரவேசிக்கிறபொழுது, ஜனங்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதின் வீதிகளிலே நீங்கள் போய்: 11 எங்களில் ஒட்டின உங்கள் பட்டணத்தின் தூசியையும் உங்களுக்கு விரோதமாய்த் துடைத்துப்போடுகிறோம்; ஆயினும் தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குச் சமீபமாய் வந்திருக்கிறதென்பதை அறிந்துகொள்வீர்களாக என்று சொல்லுங்கள். 12 அந்தப் பட்டணத்திற்கு நேரிடுவதைப்பார்க்கிலும் அந்த நாளிலே சோதோம் நாட்டிற்கு நேரிடுவது இலகுவாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 13 கோராசீன் பட்டணமே, உனக்கு ஐயோ, பெத்சாயிதா பட்டணமே, உனக்கு ஐயோ, உங்களில் செய்யப்பட்ட பலத்த செய்கைகள் தீருவிலும் சீதோனிலும் செய்யப்பட்டிருந்ததானால், அப்பொழுதே இரட்டுடுத்தி, சாம்பலில் உட்கார்ந்து, மனந்திரும்பியிருப்பார்கள். 14 நியாயத்தீர்ப்புநாளில் உங்களுக்கு நேரிடுவதைப்பார்க்கிலும், தீருவுக்கும் சீதோனுக்கும் நேரிடுவது இலகுவாயிருக்கும். 15 வானபரியந்தம் உயர்த்தப்பட்ட கப்பர்நகூமே, நீ பாதாளபரியந்தம் தாழ்த்தப்படுவாய் என்று சொல்லி, 16 சீஷரை நோக்கி: உங்களுக்குச் செவிகொடுக்கிறவன் எனக்குச் செவிகொடுக்கிறான், உங்களை அசட்டைபண்ணுகிறவன் என்னை அசட்டைபண்ணுகிறான், என்னை அசட்டைபண்ணுகிறவன் என்னை அனுப்பினவரை அசட்டைபண்ணுகிறான் என்றார். 17 பின்பு அந்த எழுபதுபேரும் சந்தோஷத்தோடே திரும்பிவந்து: ஆண்டவரே, உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளும் எங்களுக்குக் கீழ்ப்படிகிறது என்றார்கள். 18 அவர்களை அவர் நோக்கி: சாத்தான் மின்னலைப்போல வானத்திலிருந்து விழுகிறதைக் கண்டேன். 19 இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங்கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது. 20 ஆகிலும், ஆவிகள் உங்களுக்குக் கீழ்ப்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள் பரலோகத்தில் எழுதியிருக்கிறதற்காகச் சந்தோஷப்படுங்கள் என்றார். 21 அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது. 22 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார். 23 பின்பு தமது சீஷரிடத்தில் திரும்பி, தனித்து அவர்களை நோக்கி: நீங்கள் காண்கிறவைகளைக் காணுங் கண்கள் பாக்கியமுள்ளவைகள். 24 அநேக தீர்க்கதரிசிகளும் ராஜாக்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 25 அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். 26 அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார். 27 அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான். 28 அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார். 29 அவன் தன்னை நீதிமான் என்று காண்பிக்க மனதாய் இயேசுவை நோக்கி: எனக்குப் பிறன் யார் என்று கேட்டான். 30 இயேசு பிரதியுத்தரமாக: ஒரு மனுஷன் எருசலேமிலிருந்து எரிகோவுக்குப் போகையில் கள்ளர் கையில் அகப்பட்டான்; அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்துகொண்டு, அவனைக் காயப்படுத்தி, குற்றுயிராக விட்டுப் போனார்கள். 31 அப்பொழுது தற்செயலாய் ஒரு ஆசாரியன் அந்த வழியே வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். 32 அந்தப்படியே ஒரு லேவியனும் அந்த இடத்துக்கு வந்து, அவனைக் கண்டு, பக்கமாய் விலகிப்போனான். 33 பின்பு சமாரியன் ஒருவன் பிரயாணமாய் வருகையில், அவனைக் கண்டு, மனதுருகி, 34 கிட்ட வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சரசமும் வார்த்து, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சுயவாகனத்தின்மேல் ஏற்றி, சத்திரத்துக்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான். 35 மறுநாளிலே தான் புறப்படும்போது இரண்டு பணத்தை எடுத்து, சத்திரத்தான் கையில் கொடுத்து: நீ இவனை விசாரித்துக்கொள், அதிகமாய் ஏதாகிலும் இவனுக்காகச் செலவழித்தால், நான் திரும்பிவரும்போது அதை உனக்குத் தருவேன் என்றான். 36 இப்படியிருக்க, கள்ளர்கையில் அகப்பட்டவனுக்கு இந்த மூன்றுபேரில் எவன் பிறனாயிருந்தான்? உனக்கு எப்படித் தோன்றுகிறது என்றார். 37 அதற்கு அவன்: அவனுக்கு இரக்கஞ்செய்தவனே என்றான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீயும் போய் அந்தப்படியே செய் என்றார். 38 பின்பு, அவர்கள் பிரயாணமாய்ப் போகையில், அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தார். அங்கே மார்த்தாள் என்னும் பேர்கொண்ட ஒரு ஸ்திரீ அவரைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டாள். 39 அவளுக்கு மரியாள் என்னப்பட்ட ஒரு சகோதரி இருந்தாள்; அவள் இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து, அவருடைய வசனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தாள். 40 மார்த்தாளோ பற்பல வேலைகளைச் செய்வதில் மிகவும் வருத்தமடைந்து, அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, நான் தனியே வேலைசெய்யும்படி என் சகோதரி என்னை விட்டுவந்திருக்கிறதைக் குறித்து உமக்குக் கவையில்லையா? எனக்கு உதவிசெய்யும்படி அவளுக்குச் சொல்லும் என்றாள். 41 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக்குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். 42 தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.

லூக்கா 11

1 அவர் ஒரு இடத்தில் ஜெபம்பண்ணி முடித்தபின்பு, அவருடைய சீஷரில் ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, யோவான் தன் சீஷருக்கு ஜெபம்பண்ணப் போதித்ததுபோல, நீரும் எங்களுக்குப் போதிக்கவேண்டும் என்றான். 2 அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; உம்முடைய ராஜ்யம் வருவதாக; உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோலப் பூமியிலேயும் செய்யப்படுவதாக; 3 எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்றும் எங்களுக்குத் தாரும்; 4 எங்கள் பாவங்களை எங்களுக்கு மன்னியும்; நாங்களும் எங்களிடத்தில் கடன்பட்ட எவனுக்கும் மன்னிக்கிறோமே; எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக் கொள்ளும், என்று சொல்லுங்கள் என்றார். 5 பின்னும் அவர் அவர்களை நோக்கி: உங்களில் ஒருவன் தனக்குச் சிநேகிதனாயிருக்கிறவனிடத்தில் பாதிராத்திரியிலே போய்: சிநேகிதனே, 6 என் சிநேகிதன் ஒருவன் வழிப்பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கிறான், அவன்முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை, நீ மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகத் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். 7 வீட்டுக்குள் இருக்கிறவன் பிரதியுத்தரமாக: என்னைத் தொந்தரவு செய்யாதே, கதவு பூட்டியாயிற்று, என் பிள்ளைகள் என்னோடேகூடப் படுத்திருக்கிறார்கள், நான் எழுந்திருந்து, உனக்குத் தரக்கூடாது என்று சொன்னான். 8 பின்பு, தனக்கு அவன் சிநேகிதனாயிருக்கிறதினிமித்தம் எழுந்து அவனுக்குக் கொடாவிட்டாலும், தன்னிடத்தில் அவன் வருந்திக் கேட்கிறதினிமித்தமாவது எழுந்திருந்து, அவனுக்குத் தேவையானதைக் கொடுப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 9 மேலும் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். 10 ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். 11 உங்களில் தகப்பனாயிருக்கிற ஒருவனிடத்தில் மகன் அப்பங்கேட்டால், அவனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக் கேட்டால் மீனுக்குப் பதிலாய்ப் பாம்பைக் கொடுப்பானா? 12 அல்லது முட்டையைக் கேட்டால், அவனுக்குத் தேளைக் கொடுப்பானா? 13 பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா என்றார். 14 பின்பு அவர் ஊமையாயிருந்த ஒரு பிசாசைத் துரத்தினார். பிசாசு புறப்பட்டுப்போனபின்பு ஊமையன் பேசினான்; ஜனங்கள் ஆச்சரியப்பட்டார்கள். 15 அவர்களில் சிலர்: இவன் பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூலைக்கொண்டு பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். 16 வேறு சிலர் அவரைச் சோதிக்கும்படி வானத்திலிருந்து ஒரு அடையாளத்தைக் காட்டவேண்டுமென்று அவரிடத்தில் கேட்டார்கள். 17 அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, அவர்களை நோக்கி: தனக்குத் தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த ராஜ்யமும் பாழாய்ப்போம்; தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருக்கிற எந்த வீடும் விழுந்துபோம். 18 சாத்தானும் தனக்குத்தானே விரோதமாய்ப் பிரிந்திருந்தால் அவன் ராஜ்யம் எப்படி நிலைநிற்கும்? இப்படியிருக்க, பெயெல்செபூலைக்கொண்டு நான் பிசாசுகளைத் துரத்துகிறேன் என்கிறீர்களே. 19 நான் பெயெல்செபூலினாலே பிசாசுகளைத் துரத்தினால், உங்கள் பிள்ளைகள் அவைகளை யாராலே துரத்துகிறார்கள்? ஆகையால், அவர்களே உங்களை நியாயந்தீர்க்கிறவர்களாயிருப்பார்கள். 20 நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே. 21 ஆயுதந்தரித்த பலவான் தன் அரமனையைக் காக்கிறபோது, அவனுடைய பொருள் பத்திரப்பட்டிருக்கும். 22 அவனிலும் அதிக பலவான் வந்து, அவனை மேற்கொள்வானேயாகில், அவன் நம்பியிருந்த சகல ஆயுதவர்க்கத்தையும் பறித்துக்கொண்டு, அவனுடைய கொள்ளைப்பொருளைப் பங்கிடுவான். 23 என்னோடே இராதவன் எனக்கு விரோதியாயிருக்கிறான், என்னோடே சேர்க்காதவன் சிதறடிக்கிறான். 24 அசுத்தஆவி ஒரு மனுஷனை விட்டுப் புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல் தேடியும் கண்டடையாமல்: நான் விட்டுவந்த என் வீட்டுக்குத் திரும்பிப்போவேன் என்று சொல்லி, 25 அதில் வரும்போது, அது பெருக்கி ஜோடிக்கப்பட்டிருக்கக் கண்டு, 26 திரும்பிப்போய், தன்னிலும் பொல்லாத வேறு ஏழு ஆவிகளைக் கூட்டிக்கொண்டுவந்து, உட்புகுந்து, அங்கே குடியிருக்கும்; அப்பொழுது அந்த மனுஷனுடைய முன்னிலைமையிலும் அவன் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும் என்றார். 27 அவர் இவைகளைச் சொல்லுகையில், ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள். 28 அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள் என்றார். 29 ஜனங்கள் திரளாய்க் கூடிவந்திருக்கிறபொழுது அவர்: இந்தச் சந்ததியார் பொல்லாதவர்களாயிருக்கிறார்கள், அடையாளத்தைத் தேடுகிறார்கள்; ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையாளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. 30 யோனா நினிவே பட்டணத்தாருக்கு அடையாளமாயிருந்ததுபோல, மனுஷகுமாரனும் இந்தச் சந்ததிக்கு அடையாளமாயிருப்பார். 31 தென்தேசத்து ராஜஸ்திரீ சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கப் பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்; இதோ, சாலொமோனிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்பு நாளிலே அந்த ராஜஸ்திரீ இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவாள். 32 யோனாவின் பிரசங்கத்தைக் கேட்டு நினிவே பட்டணத்தார் மனந்திரும்பினார்கள்; இதோ, யோனாவிலும் பெரியவர் இங்கே இருக்கிறார்; ஆதலால் நியாயத்தீர்ப்புநாளிலே நினிவே பட்டணத்தார் இந்தச் சந்ததியாரோடெழுந்து நின்று, இவர்கள்மேல் குற்றஞ்சுமத்துவார்கள். 33 ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, மறைவிடத்திலாவது, மரக்காலின் கீழேயாவது வைக்காமல், உள்ளே வருகிறவர்கள் வெளிச்சம் காணும்படி, அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான். 34 கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும்; உன் கண் கெட்டதாயிருந்தால் உன் சரீரம் முழுவதும் இருளாயிருக்கும். 35 ஆகையால் உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு. 36 உன் சரீரம் ஒருபுறத்திலும் இருளடைந்திராமல் முழுவதும் வெளிச்சமாயிருந்தால், ஒரு விளக்கு தன் பிரகாசத்தினாலே உனக்கு வெளிச்சம் கொடுக்கிறதுபோல உன் சரீரமுழுவதும் வெளிச்சமாயிருக்கும் என்றார். 37 அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கையில், பரிசேயன் ஒருவன் தன்னுடனேகூட அவர் பகற்போஜனம் பண்ணவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான்; அவர் போய்ப் பந்தியிருந்தார். 38 அவர் போஜனம்பண்ணுகிறதற்குமுன் கைகழுவாமலிருந்ததைப் பரிசேயன் கண்டு, ஆச்சரியப்பட்டான். 39 கர்த்தர் அவனை நோக்கி: பரிசேயராகிய நீங்கள் போஜனபான பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள், உங்கள் உள்ளமோ கொள்ளையினாலும் பொல்லாப்பினாலும் நிறைந்திருக்கிறது. 40 மதிகேடரே, வெளிப்புறத்தை உண்டாக்கினவர் உட்புறத்தையும் உண்டாக்கவில்லையோ? 41 உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள், அப்பொழுது சகலமும் உங்களுக்குச் சுத்தமாயிருக்கும். 42 பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒற்தலாம் மருக்கொழுந்து முதலிய சகலவித பூண்டுகளிலும் தசமபாகம் கொடுத்து, நியாயத்தையும் தேவ அன்பையும் விட்டுவிடுகிறீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே. 43 பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, ஜெப ஆலயங்களில் முதன்மையான ஆசனங்களையும், சந்தைகளில் வந்தனங்களையும் விரும்புகிறீர்கள். 44 மாயக்காரராகிய வேதபாரகரே, பரிசேயரே, உங்களுக்கு ஐயோ, மறைந்திருக்கிற பிரேதக்குழிகளைப்போலிருக்கிறீர்கள், அவைகள்மேல் நடக்கிற மனுஷருக்கு அவைகள் தெரியாதிருக்கிறது என்றார். 45 அப்பொழுது நியாயசாஸ்திரிகளில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, நீர் இப்படிச் சொல்லுகிறதினால் எங்களையும் நிந்திக்கிறீரே என்றான். 46 அதற்கு அவர்: நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, சுமக்க அரிதான சுமைகளை மனுஷர்மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ உங்கள் விரல்களில் ஒன்றினாலும் அந்தச் சுமைகளைத் தொடவும்மாட்டீர்கள். 47 உங்களுக்கு ஐயோ, உங்கள் பிதாக்கள் கொலைசெய்த தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். 48 ஆகையால் உங்கள் பிதாக்களுடைய கிரியைகளுக்கு நீங்களும் உடன்பட்டவர்களென்று சாட்சியிடுகிறீர்கள்; எப்படியென்றால், உங்கள் பிதாக்கள் அவர்களைக் கொலைசெய்தார்கள், நீங்களோ அவர்களுக்குக் கல்லறைகளைக் கட்டுகிறீர்கள். 49 ஆதலால் தேவஞானமானது: நான் தீர்க்கதரிசிகளையும் அப்போஸ்தலர்களையும் அவர்களிடத்தில் அனுப்புவேன்; அவர்களில் சிலரைக் கொலைசெய்து, சிலரைத் துன்பப்படுத்துவார்கள்; 50 ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது. 51 நிச்சயமாகவே இந்தச் சந்ததியினிடத்தில் அது கேட்கப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 52 நியாயசாஸ்திரிகளே, உங்களுக்கு ஐயோ, அறிவாகிய திறவுகோலை எடுத்துக் கொண்டீர்கள், நீங்களும் உட்பிரவேசிக்கிறதில்லை, உட்பிரவேசிக்கிறவர்களையும் தடைபண்ணுகிறீர்கள் என்றார். 53 இவைகளை அவர்களுக்கு அவர் சொல்லுகையில், வேதபாரகரும் பரிசேயரும் அவர்மேல் குற்றஞ்சாட்டும் பொருட்டு, அவர் வாய்மொழியில் ஏதாகிலும் பிழை கண்டுபிடிக்கவேண்டும் என்று உபாயம்பண்ணி அவரை மிகவும் நெருக்கவும், 54 அநேக காரியங்களைக்குறித்துப் பேசும்படி அவரை ஏவவும் தொடங்கினார்கள்.

லூக்கா 12

1 அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். 2 வெளியாக்கப்படாத மறைபொருளுமில்லை, அறியப்படாத இரகசியமுமில்லை. 3 ஆதலால், நீங்கள் இருளிலே பேசினது எதுவோ, அது வெளிச்சத்திலே கேட்கப்படும்; நீங்கள் அறைகளில் காதிலே சொன்னது எதுவோ, அது வீடுகளின்மேல் கூறப்படும். 4 என் சிநேகிதராகிய உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: சரீரத்தைக் கொலைசெய்து, அதன்பின்பு அதிகமாக ஒன்றும் செய்யத் திராணியில்லாதவர்களுக்குப் பயப்படாதிருங்கள். 5 நீங்கள் இன்னாருக்குப் பயப்படவேண்டுமென்று உங்களுக்குக் காண்பிக்கிறேன்: கொலைசெய்தபின்பு நரகத்திலே தள்ள வல்லமையுள்ளவருக்குப் பயப்படுங்கள்; ஆம், அவருக்கே பயப்படுங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 6 இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப் படுகிறதில்லை. 7 உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது, ஆகையால் பயப்படாதிருங்கள், அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். 8 அன்றியும் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ, அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார். 9 மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் தேவதூதர் முன்பாக மறுதலிக்கப்படுவான். 10 எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான விசேஷத்தைச் சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்த ஆவிக்கு விரோதமாய்த் தூஷணஞ் சொல்லுகிறவனுக்கோ மன்னிக்கப்படுவதில்லை. 11 அன்றியும், ஜெப ஆலயத்தலைவர்களுக்கும் துரைத்தனத்தார்களுக்கும் அதிகாரமுள்ளவர்களுக்கும் முன்பாக உங்களைக் கொண்டுபோய் விடும்போது: எப்படி, என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள். 12 நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார் என்றார். 13 அப்பொழுது ஜனக்கூட்டத்தில் ஒருவன் அவரை நோக்கி: போதகரே, ஆஸ்தியைப் பாகம்பிரித்து என் வீதத்தை எனக்குத் தரும்படி என் சகோதரனுக்குக் கட்டளையிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். 14 அதற்கு அவர்: மனுஷனே, என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார் என்றார். 15 பின்பு அவர் அவர்களை நோக்கி: பொருளாசையைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்தி இருந்தாலும் அது அவனுக்கு ஜீவன் அல்ல என்றார். 16 அல்லாமலும், ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: ஐசுவரியமுள்ள ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந்தது. 17 அப்பொழுது அவன்: நான் என்ன செய்வேன்? என் தானியங்களைச் சேர்த்து வைக்கிறதற்கு இடமில்லையே; 18 நான் ஒன்று செய்வேன், என் களஞ்சியங்களை இடித்து, பெரிதாகக் கட்டி, எனக்கு விளைந்த தானியத்தையும் என் பொருள்களையும் அங்கே சேர்த்துவைத்து, 19 பின்பு: ஆத்துமாவே, உனக்காக அநேக வருஷங்களுக்கு அநேகம் பொருள்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது; நீ இளைப்பாறி, புசித்துக் குடித்து, பூரிப்பாயிரு என்று என் ஆத்துமாவோடே சொல்லுவேன் என்று தனக்குள்ளே சிந்தித்துச் சொல்லிக்கொண்டான். 20 தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். 21 தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படியே இருக்கிறான் என்றார். 22 பின்னும் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: இப்படியிருக்கிறபடியினால், என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 23 ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகளாயிருக்கிறது. 24 காகங்களைக் கவனித்துப்பாருங்கள், அவைகள் விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவைகளுக்குப் பண்டசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை, இல்லாவிட்டாலும் அவைகளையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப்பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். 25 கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான். 26 மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன? 27 காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை, என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 28 இப்படியிருக்க, அற்பவிசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? 29 ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று, நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள். 30 இவைகளையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவைகள் உங்களுக்கு வேண்டியவைகளென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார். 31 தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும். 32 பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார். 33 உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை. 34 உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும். 35 உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும், 36 தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள். 37 எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 38 அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள். 39 திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள். 40 அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார். 41 அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான். 42 அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்? 43 எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான். 44 தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 45 அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால், 46 அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான். 47 தன் எஜமானுடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான். 48 அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள். 49 பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன். 50 ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன். 51 நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 52 எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். 53 தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார். 54 பின்பு அவர் ஜனங்களை நோக்கி: மேற்கே மேகம் எழும்புகிறதை நீங்கள் காணும்போது, மழை வருமென்று சொல்லுகிறீர்கள்; அந்தப்படியுமாகும். 55 தென்றல் அடிக்கிறதை நீங்கள் காணும்போது உஷ்ணம் உண்டாகுமென்று சொல்லுகிறீர்கள், அந்தப்படியுமாகும். 56 மாயக்காரரே, பூமியின் தோற்றத்தையும் வானத்தின் தோற்றத்தையும் நிதானிக்க உங்களுக்குத் தெரியுமே, இந்தக் காலத்தையோ நிதானியாமற்போகிறதென்ன? 57 நியாயம் இன்னதென்று நீங்களே தீர்மானியாமலிருக்கிறதென்ன? 58 உனக்கு எதிராளியானவன் உன்னை அதிகாரியினிடத்திற்குக் கொண்டுபோகிறபோது, வழியிலேதானே அவனிடத்திலிருந்து விடுதலையாகும்படி பிரயாசப்படு, இல்லாவிட்டால், அவன் உன்னை நியாயாதிபதிக்கு முன்பாகக் கொண்டுபோவான், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுப்பான், சேவகன் உன்னைச் சிறைச்சாலையில் போடுவான். 59 நீ கடைசிக்காசைக் கொடுத்துத் தீர்க்குமட்டும், அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லூக்கா 13

1 பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச் செய்தியை அவருக்கு அறிவித்தார்கள். 2 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? 3 அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள். 4 சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ? 5 அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார். 6 அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத்தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. 7 அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடி வருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். 8 அதற்கு அவன்: ஐயா, இது இந்த வருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், 9 கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார். 10 ஒரு ஓய்வுநாளில் அவர் ஜெபஆலயத்தில் போதகம்பண்ணிக்கொண்டிருந்தார். 11 அப்பொழுது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள். 12 இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, 13 அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள். 14 இயேசு ஓய்வுநாளிலே சொஸ்தமாக்கினபடியால், ஜெப ஆலயத்தலைவன் கோபமடைந்து, ஜனங்களை நோக்கி: வேலைசெய்கிறதற்கு ஆறுநாள் உண்டே, அந்த நாட்களிலே நீங்கள் வந்து சொஸ்தமாக்கிக்கொள்ளுங்கள், ஓய்வுநாளிலே அப்படிச் செய்யலாகாது என்றான். 15 கர்த்தர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: மாயக்காரனே, உங்களில் எவனும் ஓய்வுநாளில் தன் எருதையாவது தன் கழுதையையாவது தொழுவத்திலிருந்து அவிழ்த்துக்கொண்டுபோய், அதற்குத் தண்ணீர் காட்டுகிறதில்லையா? 16 இதோ, சாத்தான் பதினெட்டு வருஷமாய்க் கட்டியிருந்த ஆபிரகாமின் குமாரத்தியாகிய இவளை ஓய்வுநாளில் இந்தக் கட்டிலிருந்து அவிழ்த்துவிடவேண்டியதில்லையா என்றார். 17 அவர் அப்படிச் சொன்னபோது, அவரை விரோதித்திருந்த அனைவரும் வெட்கப்பட்டார்கள். ஜனங்களெல்லாரும் அவரால் செய்யப்பட்ட சகல மகிமையான செய்கைகளைக்குறித்தும் சந்தோஷப்பட்டார்கள். 18 அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யம் எதற்கொப்பாயிருக்கிறது; அதை எதற்கு ஒப்பிடுவேன்? 19 அது ஒரு கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் தோட்டத்திலே போட்டான்; அது வளர்ந்து, பெரிய மரமாயிற்று; ஆகாயத்துப் பறவைகள் வந்து, அதின் கிளைகளில் அடைந்தது என்றார். 20 மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்? 21 அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடிமாவிலே அடக்கிவைத்தாள் என்றார். 22 அவர் எருசலேமுக்குப் பிரயாணமாய்ப் போகும்போது, பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் உபதேசம் பண்ணிக்கொண்டு போனார். 23 அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்: 24 இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 25 வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டினபின்பு, நீங்கள் வெளியே நின்று: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார். 26 அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். 27 ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்லுவார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 28 நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும். 29 கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற்கிலும் இருந்து ஜனங்கள் வந்து, தேவனுடைய ராஜ்யத்தில் பந்தியிருப்பார்கள். 30 அப்பொழுது முந்தினோர் பிந்தினோராவார்கள், பிந்தினோர் முந்தினோராவார்கள் என்றார். 31 அந்த நாளிலே சில பரிசேயர் அவரிடத்தில் வந்து: நீர் இவ்விடத்தை விட்டுப் போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாய் இருக்கிறான் என்றார்கள். 32 அதற்கு அவர்: நான் இன்றைக்கும் நாளைக்கும் பிசாசுகளைத் துரத்தி, வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்கி, மூன்றாம் நாளில் நிறைவடைவேன். 33 இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லையென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள். 34 எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. 35 இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்; கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுங்காலம் வருமளவும் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

லூக்கா 14

1 ஒரு ஓய்வுநாளிலே பரிசேயரில் தலைவனாகிய ஒருவனுடைய வீட்டிலே அவர் போஜனம் பண்ணும்படிக்குப் போயிருந்தார். 2 அப்பொழுது நீர்க்கோவை வியாதியுள்ள ஒரு மனுஷன் அவருக்கு முன்பாக இருந்தான். என்ன செய்வாரோவென்று ஜனங்கள் அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள். 3 இயேசு நியாயசாஸ்திரிகளையும் பரிசேயரையும் பார்த்து: ஓய்வு நாளிலே சொஸ்தமாக்குகிறது நியாயமா என்று கேட்டார். 4 அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள். அப்பொழுது அவர் அவனை அழைத்து, சொஸ்தமாக்கி, அனுப்பிவிட்டு, 5 அவர்களை நோக்கி: உங்களில் ஒருவனுடைய கழுதையாவது எருதாவது ஓய்வுநாளில் துரவிலே விழுந்தால், அவன் அதை உடனே தூக்கிவிடானோ என்றார். 6 அதற்கு உத்தரவுசொல்ல அவர்களால் கூடாமற்போயிற்று. 7 விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தெரிந்துகொண்டதை அவர் பார்த்து, அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: 8 ஒருவனால் கலியாணத்துக்கு நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, பந்தியில் முதன்மையான இடத்தில் உட்காராதே; உன்னிலும் கனமுள்ளவன் ஒருவேளை அவனால் அழைக்கப்பட்டிருப்பான். 9 அப்பொழுது உன்னையும் அவனையும் அழைத்தவன் உன்னிடத்தில் வந்து: இவருக்கு இடங்கொடு என்பான்; அப்பொழுது நீ வெட்கத்தோடே தாழ்ந்த இடத்திற்குப் போகவேண்டியதாயிருக்கும். 10 நீ அழைக்கப்பட்டிருக்கும்போது, போய், தாழ்ந்த இடத்தில் உட்காரு; அப்பொழுது உன்னை அழைத்தவன் வந்து: சிநேகிதனே, உயர்ந்த இடத்தில் வாரும் என்று சொல்லும்போது, உன்னுடனேகூடப் பந்தியிருக்கிறவர்களுக்கு முன்பாக உனக்குக் கனமுண்டாகும். 11 தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். 12 அன்றியும் அவர் தம்மை விருந்துக்கு அழைத்தவனை நோக்கி: நீ பகல்விருந்தாவது இராவிருந்தாவது பண்ணும்போது, உன் சிநேகிதரையாகிலும் உன் சகோதரரையாகிலும், உன் பந்து ஜனங்களையாகிலும், ஐசுவரியமுள்ள அயலகத்தாரையாகிலும் அழைக்கவேண்டாம்; அழைத்தால் அவர்களும் உன்னை அழைப்பார்கள், அப்பொழுது உனக்குப் பதிலுக்குப் பதில் செய்ததாகும். 13 நீ விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக. 14 அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார். 15 அவரோடேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவன் இவைகளைக் கேட்டபொழுது, அவரை நோக்கி: தேவனுடைய ராஜ்யத்தில் போஜனம்பண்ணுகிறவன் பாக்கியவான் என்றான். 16 அதற்கு அவர்: ஒரு மனுஷன் பெரியவிருந்தை ஆயத்தம்பண்ணி, அநேகரை அழைப்பித்தான். 17 விருந்து வேளையில் தன் ஊழியக்காரனை நோக்கி: நீ அழைக்கப்பட்டவர்களிடத்தில் போய், எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது, வாருங்கள், என்று சொல்லென்று அவனை அனுப்பினான். 18 அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக்கொண்டேன், நான் அகத்தியமாய்ப்போய், அதைப் பார்க்கவேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். 19 வேறொருவன்: ஐந்தேர்மாடு கொண்டேன், அதைச் சோதித்துப் பார்க்கப் போகிறேன், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். 20 வேறொருவன்: பெண்ணை விவாகம்பண்ணினேன், அதினால் நான் வரக்கூடாது என்றான். 21 அந்த ஊழியக்காரன் வந்து, இவைகளைத் தன் எஜமானுக்கு அறிவித்தான். அப்பொழுது வீட்டெஜமான் கோபமடைந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ பட்டணத்தின் தெருக்களிலும் வீதிகளிலும் சீக்கிரமாய்ப் போய், ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் இங்கே கூட்டிக்கொண்டுவா என்றான். 22 ஊழியக்காரன் அப்படியே செய்து: ஆண்டவரே, நீர் கட்டளையிட்டபடி செய்தாயிற்று, இன்னும் இடம் இருக்கிறது என்றான். 23 அப்பொழுது எஜமான் ஊழியக்காரனை நோக்கி: நீ பெருவழிகளிலும் வேலிகளருகிலும் போய், என் வீடு நிறையும்படியாக ஜனங்களை உள்ளே வரும்படி வருந்திக் கூட்டிக்கொண்டுவா; 24 அழைக்கப்பட்டிருந்த அந்த மனுஷரில் ஒருவனாகிலும் என் விருந்தை ருசிபார்ப்பதில்லை யென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றான் என்று சொன்னார். 25 பின்பு அநேக ஜனங்கள் அவரோடேகூடப் பிரயாணமாய்ப் போகையில், அவர்களிடமாய் அவர் திரும்பிப்பார்த்து: 26 யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். 27 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். 28 உங்களில் ஒருவன் ஒரு கோபுரத்தைக் கட்ட மனதாயிருந்து, 29 அஸ்திபாரம் போட்டபின்பு முடிக்கத் திராணியில்லாமற்போனால், பார்க்கிறவர்களெல்லாரும்: 30 இந்த மனுஷன் கட்டத்தொடங்கி, முடிக்கத் திராணியில்லாமற்போனான் என்று சொல்லித் தன்னைப் பரியாசம்பண்ணாதபடிக்கு, அதைக் கட்டித் தீர்க்கிறதற்குத் தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு அவன் உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பாராமலிருப்பானோ? 31 அன்றியும் ஒரு ராஜா மற்றொரு ராஜாவோடே யுத்தஞ்செய்யப் போகிறபோது, தன்மேல் இருபதினாயிரம் சேவகரோடே வருகிற அவனைத் தான் பதினாயிரம் சேவகரைக்கொண்டு எதிர்க்கக் கூடுமோ கூடாதோ என்று முன்பு உட்கார்ந்து ஆலோசனைபண்ணாமலிருப்பானோ? 32 கூடாதென்று கண்டால், மற்றவன் இன்னும் தூரத்திலிருக்கும்போதே, ஸ்தானாபதிகளை அனுப்பி, சமாதானத்துக்கானவைகளைக் கேட்டுக்கொள்வானே. 33 அப்படியே உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். 34 உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்? 35 அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப் போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்.

லூக்கா 15

1 சகல ஆயக்காரரும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்து சேர்ந்தார்கள். 2 அப்பொழுது பரிசேயரும் வேதபாரகரும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடே சாப்பிடுகிறார் என்றார்கள். 3 அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது: 4 உங்களில் ஒரு மனுஷன் நூறு ஆடுகளை உடையவனாயிருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்தரத்திலே விட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்குமளவும் தேடித்திரியானோ? 5 கண்டுபிடித்தபின்பு, அவன் சந்தோஷத்தோடே அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு, 6 வீட்டுக்கு வந்து, சிநேகிதரையும் அயலகத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன் என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பான் அல்லவா? 7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 8 அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ? 9 கண்டுபிடித்தபின்பு, தன் சிநேகிதிகளையும் அயல் வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப்படுங்கள் என்பாள் அல்லவா? 10 அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 11 பின்னும் அவர் சொன்னது: ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். 12 அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, ஆஸ்தியில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் ஆஸ்தியைப் பங்கிட்டுக்கொடுத்தான். 13 சில நாளைக்குப்பின்பு, இளையமகன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாய் ஜீவனம்பண்ணி, தன் ஆஸ்தியை அழித்துப்போட்டான். 14 எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்தத் தேசத்திலே கொடிய பஞ்சமுண்டாயிற்று. அப்பொழுது அவன் குறைவுபடத்தொடங்கி, 15 அந்தத் தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் ஒட்டிக்கொண்டான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான். 16 அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை. 17 அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய கூலிக்காரர் எத்தனையோ பேருக்குப் பூர்த்தியான சாப்பாடு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன். 18 நான் எழுந்து, என் தகப்பனிடத்திற்குப் போய்: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன். 19 இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி; 20 எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான். 21 குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். 22 அப்பொழுது தகப்பன் தன் ஊழியக்காரரை நோக்கி: நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, இவனுக்கு உடுத்தி, இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள். 23 கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் புசித்து, சந்தோஷமாயிருப்போம். 24 என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் சந்தோஷப்படத் தொடங்கினார்கள். 25 அவனுடைய மூத்தகுமாரன் வயலிலிருந்தான். அவன் திரும்பி வீட்டுக்குச் சமீபமாய் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு; 26 ஊழியக்காரரில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான். 27 அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்த கன்றை அடிப்பித்தார் என்றான். 28 அப்பொழுது அவன் கோபமடைந்து, உள்ளே போக மனதில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து, அவனை வருந்தியழைத்தான். 29 அவன் தகப்பனுக்குப் பிரதியுத்தரமாக: இதோ, இத்தனை வருஷகாலமாய் நான் உமக்கு ஊழியஞ்செய்து, ஒருக்காலும் உம்முடைய கற்பனையை மீறாதிருந்தும், என் சிநேகிதரோடே நான் சந்தோஷமாயிருக்கும்படி நீர் ஒருக்காலும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை. 30 வேசிகளிடத்தில் உம்முடைய ஆஸ்தியை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்த கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான். 31 அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடிருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாயிருக்கிறது. 32 உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் சந்தோஷப்பட்டு மகிழ்ச்சியாயிருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.

லூக்கா 16

1 பின்னும் அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனுக்கு ஒரு உக்கிராணக்காரன் இருந்தான்; அவன் தன் எஜமானுடைய ஆஸ்திகளை அழித்துப்போடுகிறதாக எஜமானுக்கு அறிவிக்கப்பட்டது. 2 அப்பொழுது எஜமான் அவனை வரவழைத்து: உன்னைக்குறித்து நான் இப்படிக் கேள்விப்படுகிறதென்ன? உன் உக்கிராணக் கணக்கை யொப்புவி, இனி நீ உக்கிராணக்காரனாயிருக்கக்கூடாது என்றான். 3 அப்பொழுது உக்கிராணக்காரன்: நான் என்ன செய்வேன், என் எஜமான் உக்கிராண விசாரிப்பிலிருந்து என்னைத் தள்ளிப்போடுகிறானே; கொத்துகிறதற்கு எனக்குப் பெலனில்லை, இரக்கவும் வெட்கப்படுகிறேன். 4 உக்கிராண விசாரிப்பைவிட்டு நான் தள்ளப்படும்போது, என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்வார் உண்டாகும்படி செய்யவேண்டியது இன்னதென்று எனக்குத் தெரியவந்தது, என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு; 5 தன் எஜமானிடத்தில் கடன்பட்டவர்களை ஒவ்வொருவனாக வரவழைத்து: முதலாவது வந்தவனை நோக்கி: நீ என் எஜமானிடத்தில் பட்ட கடன் எவ்வளவு என்றான். 6 அவன்: நூறுகுடம் எண்ணெய் என்றான். அப்பொழுது உக்கிராணக்காரன் அவனை நோக்கி: நீ உன் சீட்டை வாங்கி, உட்கார்ந்து, ஐம்பது என்று சீக்கிரமாய் எழுது என்றான். 7 பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு கலம் கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான். 8 அநீதியுள்ள உக்கிராணக்காரன் புத்தியாய்ச் செய்தான் என்று எஜமான் கண்டு, அவனை மெச்சிக்கொண்டான். இவ்விதமாய் ஒளியின் பிள்ளைகளைப்பார்க்கிலும் இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் தங்கள் சந்ததியில் அதிக புத்திமான்களாயிருக்கிறார்கள். 9 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக் கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப்பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள். 10 கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான். 11 அநீதியான உலகப்பொருளைப்பற்றி நீங்கள் உண்மையாயிராவிட்டால், யார் உங்களை நம்பி உங்களிடத்தில் மெய்யான பொருளை ஒப்புவிப்பார்கள்? 12 வேறொருவனுடைய காரியத்தில் நீங்கள் உண்மையுள்ளவர்களாயிராவிட்டால், உங்களுக்கு யாதொன்றைச் சொந்தமாகக் கொடுப்பவர் யார்? 13 எந்த ஊழியக்காரனும் இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்யக்கூடாது; ஒருவனைப் பகைத்து மற்றவனைச் சிநேகிப்பான், அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு மற்றவனை அசட்டைபண்ணுவான். தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களாலே கூடாது என்றார். 14 இவைகளையெல்லாம் பொருளாசைக்காரராகிய பரிசேயரும் கேட்டு, அவரைப் பரியாசம்பண்ணினார்கள். 15 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷர்முன்பாக உங்களை நீதிமான்களாகக் காட்டுகிறீர்கள், தேவனோ உங்கள் இருதயங்களை அறிந்திருக்கிறார்; மனுஷருக்குள்ளே மேன்மையாக எண்ணப்படுகிறது தேவனுக்கு முன்பாக அருவருப்பாயிருக்கிறது. 16 நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன வாக்கியங்களும் யோவான்வரைக்கும் வழங்கிவந்தது; அதுமுதல் தேவனுடைய ராஜ்யம் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிறது, யாவரும் பலவந்தமாய் அதில் பிரவேசிக்கிறார்கள். 17 வேதத்தில் ஒரு எழுத்தின் உறுப்பு அவமாய்ப் போவதைப்பார்க்கிலும், வானமும் பூமியும் ஒழிந்துபோவது எளிதாயிருக்கும். 18 தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணுகிறவன் விபசாரஞ்செய்கிறான், புருஷனாலே தள்ளப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறான். 19 ஐசுவரியமுள்ள ஒரு மனுஷன் இருந்தான்; அவன் இரத்தாம்பரமும் விலையேறப்பெற்ற வஸ்திரமும் தரித்து, அநுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்துகொண்டிருந்தான். 20 லாசரு என்னும் பேர்கொண்ட ஒரு தரித்திரனும் இருந்தான்; அவன் பருக்கள் நிறைந்தவனாய், அந்த ஐசுவரியவானுடைய வாசலருகே கிடந்து, 21 அவனுடைய மேஜையிலிருந்து விழுந் துணிக்கைகளாலே தன் பசியை ஆற்ற ஆசையாயிருந்தான்; நாய்கள் வந்து அவன் பருக்களை நக்கிற்று. 22 பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டான். 23 பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது, தன் கண்களை ஏறெடுத்து, தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே லாசருவையும் கண்டான். 24 அப்பொழுது அவன்: தகப்பனாகிய ஆபிரகாமே, நீர் எனக்கு இரங்கி, லாசரு தன் விரலின் நுனியைத் தண்ணீரில் தோய்த்து, என் நாவைக் குளிரப்பண்ணும்படி அவனை அனுப்பவேண்டும்; இந்த அக்கினிஜுவாலையில் வேதனைப்படுகிறேனே என்று கூப்பிட்டான். 25 அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங் காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய். 26 அதுவுமல்லாமல், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்குக் கடந்துவரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடிக்கு, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருக்கிறது என்றான். 27 அப்பொழுது அவன்: அப்படியானால், தகப்பனே, எனக்கு ஐந்துபேர் சகோதரருண்டு, அவர்களும் வேதனையுள்ள இந்த இடத்துக்கு வராதபடி, அவன் போய் அவர்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும் பொருட்டு, 28 நீர் அவனை என் தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். 29 ஆபிரகாம் அவனை நோக்கி: அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு, அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்றான். 30 அதற்கு அவன்: அப்படியல்ல, தகப்பனாகிய ஆபிரகாமே, மரித்தோரிலிருந்து ஒருவன் அவர்களிடத்திற்குப் போனால் மனந்திரும்புவார்கள் என்றான். 31 அதற்கு அவன்: அவர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவிகொடாவிட்டால், மரித்தோரிலிருந்து ஒருவன் எழுந்துபோனாலும், நம்பமாட்டார்கள் என்று சொன்னான் என்றார்.

லூக்கா 17

1 பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ! 2 அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும். 3 உங்களைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். உன் சகோதரன் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்தால், அவனைக் கடிந்துகொள்; அவன் மனஸ்தாபப்பட்டால், அவனுக்கு மன்னிப்பாயாக. 4 அவன் ஒருநாளில் ஏழுதரம் உனக்கு விரோதமாய்க் குற்றஞ்செய்து, ஏழுதரமும் உன்னிடத்தில் வந்து: நான் மனஸ்தாபப்படுகிறேன் என்று சொன்னால், அவனுக்கு மன்னிப்பாயாக என்றார். 5 அப்பொழுது அப்போஸ்தலர் கர்த்தரை நோக்கி: எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணவேண்டும் என்றார்கள். 6 அதற்குக் கர்த்தர்: கடுகுவிதையளவு விசுவாசம் உங்களுக்கு உண்டாயிருந்தால், நீங்கள் இந்தக் காட்டத்திமரத்தை நோக்கி: நீ வேரோடே பிடுங்குண்டு கடலிலே நடப்படுவாயாக என்று சொல்ல, அது உங்களுக்குக் கீழ்ப்படியும். 7 உங்களில் ஒருவனுடைய ஊழியக்காரன் உழுது அல்லது மந்தைமேய்த்து வயலிலிருந்து வரும்போது, எஜமான் அவனை நோக்கி: நீ முன்பு போய்ச் சாப்பிட்டுவா என்று அவனுக்குச் சொல்வானோ? 8 நீ எனக்குச் சாப்பாடு ஆயத்தம்பண்ணி, அரைகட்டிக்கொண்டு, நான் போஜனபானம்பண்ணுமளவும் எனக்கு ஊழியஞ்செய், அதற்குப்பின் நீ புசித்துக்குடிக்கலாம் என்று அவனுக்குச் சொல்லுவானல்லவா? 9 தான் கட்டளையிட்டவைகளை அந்த வேலைக்காரன் செய்ததற்காக அவனுக்கு உபசாரஞ்செய்வானோ? அப்படிச் செய்யமாட்டானே. 10 அப்படியே நீங்களும் உங்களுக்குக் கட்டளையிடப்பட்ட யாவற்றையும் செய்த பின்பு: நாங்கள் அப்பிரயோஜனமான ஊழியக்காரர், செய்யவேண்டிய கடமையைமாத்திரம் செய்தோம் என்று சொல்லுங்கள் என்றார். 11 பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார். 12 அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று: 13 இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். 14 அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள். 15 அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, 16 அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான். 17 அப்பொழுது இயேசு: சுத்தமானவர்கள் பத்துப்பேர் அல்லவா, மற்ற ஒன்பதுபேர் எங்கே? 18 தேவனை மகிமைப்படுத்துகிறதற்கு, இந்த அந்நியனே ஒழிய மற்றொருவனும் திரும்பிவரக்காணோமே என்று சொல்லி, 19 அவனை நோக்கி: நீ எழுந்துபோ, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். 20 தேவனுடைய ராஜ்யம் எப்பொழுது வருமென்று, பரிசேயர் அவரிடத்தில் கேட்டபொழுது, அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: தேவனுடைய ராஜ்யம் பிரத்தியட்சமாய் வராது. 21 இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும் சொல்லப்படுகிறதற்கும் ஏதுவிராது; இதோ, தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே என்றார். 22 பின்பு அவர் சீஷர்களை நோக்கி: மனுஷகுமாரனுடைய நாட்களிலொன்றைக் காணவேண்டுமென்று நீங்கள் ஆசைப்படுங்காலம் வரும்; ஆனாலும் அதைக் காணமாட்டீர்கள். 23 இதோ, இங்கே என்றும், அதோ, அங்கே என்றும், சிலர் உங்களிடத்தில் சொல்லுவார்கள்; நீங்களோ போகாமலும் பின்தொடராமலும் இருங்கள். 24 மின்னல் வானத்தின் ஒரு திசையில் தோன்றி மறுதிசைவரைக்கும் பிரகாசிக்கிறதுபோல மனுஷகுமாரனும் தம்முடைய நாளிலே தோன்றுவார். 25 அதற்கு முன்பு அவர் அநேகம் பாடுபட்டு, இந்தச் சந்ததியினால் ஆகாதவனென்று தள்ளப்படவேண்டியதாயிருக்கிறது. 26 நோவாவின் நாட்களில் நடந்ததுபோல மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும். 27 நோவா பேழைக்குள் பிரவேசித்த நாள்வரைக்கும் ஜனங்கள் புசித்துக் குடித்தார்கள், பெண்கொண்டு கொடுத்தார்கள்; ஜலப்பிரளயம் வந்து எல்லாரையும் அழித்துப்போட்டது. 28 லோத்தினுடைய நாட்களில் நடந்ததுபோலவும் நடக்கும்; ஜனங்கள் புசித்தார்கள், குடித்தார்கள், கொண்டார்கள், விற்றார்கள், நட்டார்கள், கட்டினார்கள். 29 லோத்து சோதோமை விட்டுப் புறப்பட்ட நாளிலே வானத்திலிருந்து அக்கினியும் கந்தகமும் வருஷித்து, எல்லாரையும் அழித்துப்போட்டது. 30 மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும். 31 அந்த நாளிலே வீட்டின்மேலிருப்பவன் வீட்டிலுள்ள தன் பண்டங்களை எடுத்துக்கொண்டுபோக இறங்காமல் இருக்கக்கடவன்; அப்படியே வயலிலிருக்கிறவன் பின்னிட்டுத் திரும்பாமலும் இருக்கக்கடவன். 32 லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள். 33 தன் ஜீவனை இரட்சிக்க வகைதேடுகிறவன் அதை இழந்து போவான்; இழந்துபோகிறவன் அதை உயிர்ப்பித்துக் கொள்ளுவான். 34 அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான். 35 திரிகை திரிக்கிற இரண்டு ஸ்திரீகளில் ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், மற்றவள் கைவிடப்படுவாள். 36 வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 37 அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: எங்கே, ஆண்டவரே, என்றார்கள். அதற்கு அவர்: பிணம் எங்கேயோ அங்கே கழுகுகள் வந்து கூடும் என்றார்.

லூக்கா 18

1 சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார். 2 ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனுஷரை மதியாதவனுமாயிருந்தான். 3 அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள். 4 வெகுநாள்வரைக்கும் அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனுஷரை மதியாமலும் இருந்தும், 5 இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார். 6 பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள். 7 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? 8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார். 9 அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார். 10 இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். 11 பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 12 வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான். 13 ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான். 14 அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார். 15 பின்பு குழந்தைகளையும் அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீஷர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள். 16 இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது. 17 எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 18 அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். 19 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே. 20 விபசாரஞ் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்கிற கற்பனைகளை நீ அறிந்திருக்கிறாயே என்றார். 21 அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறு வயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான். 22 இயேசு அதைக் கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரருக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார். 23 அவன் அதிக ஐசுவரியமுள்ளவனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான். 24 அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: ஐசுவரியமுள்ளவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாயிருக்கிறது. 25 ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்றார். 26 அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள். 27 அதற்கு அவர்: மனுஷரால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார். 28 அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான். 29 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றாரையாவது, சகோதரரையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும், 30 இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்திய ஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 31 பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனுஷகுமாரனைக் குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும். 32 எப்படியெனில், அவர் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரியாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார். 33 அவரை வாரினால் அடித்து, கொலை செய்வார்கள்; மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார். 34 இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாயிருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை. 35 பின்பு அவர் எரிகோவுக்குச் சமீபமாய் வரும்போது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான். 36 ஜனங்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான். 37 நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான். 38 முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாய்க் கூப்பிட்டான். 39 இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார். 40 அவன் கிட்டவந்தபோது, அவர் அவனை நோக்கி: 41 நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான். 42 இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். 43 உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்சென்றான். ஜனங்களெல்லாரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.

லூக்கா 19

1 அவர் எரிகோவில் பிரவேசித்து, அதின் வழியாக நடந்துபோகையில், 2 ஆயக்காரருக்குத் தலைவனும் ஐசுவரியவானுமாயிருந்த சகேயு என்னப்பட்ட ஒரு மனுஷன், 3 இயேசு எப்படிப்பட்டவரோ என்று அவரைப் பார்க்க வகைதேடினான். அவன் குள்ளனானபடியால், ஜனக்கூட்டத்தில் அவரைக் காணக்கூடாமல், 4 அவர் போகும் வழியில் முன்னாக ஓடி, அவரைப் பார்க்கும்படி ஒரு காட்டத்தி மரத்தில் ஏறினான். 5 இயேசு அந்த இடத்தில் வந்தபோது, அண்ணாந்து பார்த்து, அவனைக் கண்டு: சகேயுவே, நீ சீக்கிரமாய் இறங்கிவா, இன்றைக்கு நான் உன் வீட்டிலே தங்கவேண்டும் என்றார். 6 அவன் சீக்கிரமாய் இறங்கி, சந்தோஷத்தோடே அவரை அழைத்துக்கொண்டுபோனான். 7 அதைக் கண்ட யாவரும்: இவர் பாவியான மனுஷனிடத்தில் தங்கும்படி போனார் என்று முறுமுறுத்தார்கள். 8 சகேயு நின்று, கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன், நான் ஒருவனிடத்தில் எதையாகிலும் அநியாயமாய் வாங்கினதுண்டானால், நாலத்தனையாகத் திரும்பச் செலுத்துகிறேன் என்றான். 9 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு இந்த வீட்டுக்கு இரட்சிப்பு வந்தது; இவனும் ஆபிரகாமுக்குக் குமாரனாயிருக்கிறானே. 10 இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார். 11 அவர்கள் இவைகளைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் எருசலேமுக்குச் சமீபித்திருந்தபடியினாலும், தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று அவர்கள் நினைத்தபடியினாலும், அவர் ஒரு உவமையைச் சொன்னார்: 12 பிரபுவாகிய ஒருவன் ஒரு ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவரும்படி தூரதேசத்துக்குப் போகப் புறப்பட்டான். 13 புறப்படும்போது, அவன் தன் ஊழியக்காரரில் பத்துப்பேரை அழைத்து, அவர்களிடத்தில் பத்துராத்தல் திரவியங்கொடுத்து: நான் திரும்பிவருமளவும் இதைக்கொண்டு வியாபாரம்பண்ணுங்கள் என்று சொன்னான். 14 அவனுடைய ஊரார் அவனைப் பகைத்து, இவன் எங்கள்மேல் ராஜாவாயிருக்கிறது எங்களுக்கு மனதில்லையென்று சொல்லும்படி அவன் பின்னே ஸ்தானாபதிகளை அனுப்பினார்கள். 15 அவன் ராஜ்யத்தைப் பெற்றுக்கொண்டு திரும்பிவந்தபோது, தன்னிடத்தில் திரவியம் வாங்கியிருந்த அந்த ஊழியக்காரரில் அவனவன் வியாபாரம்பண்ணிச் சம்பாதித்தது இவ்வளவென்று அறியும்படி, அவர்களைத் தன்னிடத்தில் அழைத்துவரச் சொன்னான். 16 அப்பொழுது முந்தினவன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் பத்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான். 17 எஜமான் அவனை நோக்கி: நல்லது உத்தம ஊழியக்காரனே, நீ கொஞ்சத்தில் உண்மையுள்ளவனாயிருந்தபடியால் பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான். 18 அப்படியே இரண்டாம் ஊழியக்காரன் வந்து: ஆண்டவனே, உம்முடைய ராத்தலினால் ஐந்துராத்தல் ஆதாயம் கிடைத்தது என்றான். 19 அவனையும் அவன் நோக்கி: நீயும் ஐந்து பட்டணங்களுக்கு அதிகாரியாயிரு என்றான். 20 பின்பு வேறொருவன் வந்து: ஆண்டவனே, இதோ, உம்முடைய ராத்தல், இதை ஒரு சீலையிலே வைத்திருந்தேன். 21 நீர் வைக்காததை எடுக்கிறவரும், விதைக்காததை அறுக்கிறவருமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்து, உமக்குப் பயந்திருந்தேன் என்றான். 22 அதற்கு அவன்: பொல்லாத ஊழியக்காரனே, உன் வாய்ச்சொல்லைக்கொண்டே உன்னை நியாயந்தீர்க்கிறேன். நான் வைக்காததை எடுக்கிறவனும், விதைக்காததை அறுக்கிறவனுமான கடினமுள்ள மனுஷனென்று அறிந்தாயே, 23 பின்னை ஏன் நீ என் திரவியத்தைக் காசுக்கடையிலே வைக்கவில்லை; வைத்திருந்தால் நான் வரும்போது, அதை வட்டியோடே வரப்பற்றிக் கொள்வேனே என்று சொல்லி; 24 சமீபமாய் நிற்கிறவர்களை நோக்கி: அந்த ராத்தலை அவன் கையிலிருந்தெடுத்து, பத்துராத்தல் உள்ளவனுக்குக் கொடுங்கள் என்றான். 25 அதற்கு அவர்கள்: ஆண்டவனே, அவனுக்குப் பத்துராத்தல் இருக்கிறதே என்றார்கள். 26 அதற்கு அவன்: உள்ளவன் எவனுக்குங் கொடுக்கப்படும், இல்லாதவனிடத்தில் உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். 27 அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார். 28 இவைகளை அவர் சொன்னபின்பு எருசலேமுக்குப் புறப்பட்டு, முந்திநடந்துபோனார். 29 அவர் ஒலிவமலையென்னப்பட்ட மலையின் அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்குச் சமீபித்தபோது, தம்முடைய சீஷரில் இரண்டுபேரை நோக்கி: 30 உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள், அதிலே பிரவேசிக்கும்போது மனுஷரிலொருவனும் ஒருக்காலும் ஏறியிராத கழுதைக்குட்டியைக் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள். 31 அதை ஏன் அவிழ்க்கிறீர்களென்று யாராவது உங்களிடத்தில் கேட்டால், அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள் என்றார். 32 அனுப்பப்பட்டவர்கள் போய், தங்களுக்கு அவர் சொன்னபடியே கண்டார்கள். 33 கழுதைக்குட்டியை அவர்கள் அவிழ்க்கும்போது, அதற்கு உடையவர்கள்: குட்டியை ஏன் அவிழ்க்கிறீர்கள் என்று கேட்டார்கள். 34 அதற்கு அவர்கள்: அது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லி, 35 அதை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, தங்கள் வஸ்திரங்களை அதின்மேல் போட்டு, இயேசுவை அதின்மேல் ஏற்றினார்கள். 36 அவர் போகையில், அவர்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள். 37 அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளான கூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித்துச் சந்தோஷப்பட்டு, 38 கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர், பரலோகத்திலே சமாதானமும் உன்னதத்திலே மகிமையும் உண்டாவதாக என்று மிகுந்த சத்தத்தோடே தேவனைப் புகழ்ந்தார்கள். 39 அப்பொழுது கூட்டத்திலிருந்த பரிசேயரில் சிலர் அவரை நோக்கி: போதகரே, உம்முடைய சீஷரை அதட்டும் என்றார்கள். 40 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 41 அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர் விட்டழுது, 42 உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. 43 உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, 44 உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் உனக்கு வரும் என்றார். 45 பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத்தொடங்கி: 46 என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர்குகையாக்கினீர்கள் என்றார். 47 அவர் நாடோறும் தேவாலயத்தில் உபதேசம் பண்ணிக்கொண்டிருந்தார். பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் ஜனத்தின் மூப்பரும் அவரைக் கொலைசெய்ய வகைதேடியும், 48 ஜனங்களெல்லாரும் அவருக்குச் செவிகொடுத்து அவரை அண்டிக்கொண்டிருந்தபடியால், அதை இன்னபடி செய்யலாமென்று வகைகாணாதிருந்தார்கள்.

லூக்கா 20

1 அந்நாட்களில் ஒன்றில், அவர் தேவாலயத்திலே ஜனங்களுக்கு உபதேசித்து, சுவிசேஷத்தைப் பிரசங்கித்தபோது, பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் கூடிவந்து: 2 நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? அதை எங்களுக்குச் சொல்லும் என்றார்கள். 3 அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுங்கள். 4 யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? என்று கேட்டார். 5 அவர்கள் தங்களுக்குள்ளே யோசனைபண்ணி: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று கேட்பார். 6 மனுஷரால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், ஜனங்களெல்லாரும் யோவானைத் தீர்க்கதரிசியென்று எண்ணுகிறபடியினால் நம்மேல் கல்லெறிவார்கள் என்று சொல்லி: 7 அது யாரால் உண்டாயிற்றோ, எங்களுக்குத் தெரியாது என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். 8 அப்பொழுது இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார். 9 பின்பு அவர் ஜனங்களுக்குச் சொல்லத்தொடங்கின உவமையாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைத் தோட்டக்காரருக்குக் குத்தகையாக விட்டு, நெடுநாளாகப் புறத்தேசத்துக்குப் போயிருந்தான். 10 அந்தத் தோட்டக்காரர் திராட்சத்தோட்டத்தின் கனிகளில் தன் பாகத்தைக் கொடுத்தனுப்பும்படி, பருவகாலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அந்தத் தோட்டக்காரர் அவனை அடித்து, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள். 11 பின்பு அவன் வேறொரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் அடித்து, அவமானப்படுத்தி, வெறுமையாக அனுப்பிவிட்டார்கள். 12 அவன் மூன்றாந்தரமும் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான்; அவனையும் அவர்கள் காயப்படுத்தி, துரத்திவிட்டார்கள். 13 அப்பொழுது திராட்சத்தோட்டத்தின் எஜமான்: நான் என்ன செய்யலாம், எனக்குப் பிரியமான குமாரனை அனுப்பினால், அவனையாகிலும் கண்டு அஞ்சுவார்கள் என்று எண்ணி, அவனை அனுப்பினான். 14 தோட்டக்காரர் அவனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, சுதந்தரம் நம்முடையதாகும்படிக்கு இவனைக் கொல்லுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு, 15 அவனைத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளி, கொன்றுபோட்டார்கள். இப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் அவர்களை என்னசெய்வான்? 16 அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை வேறு தோட்டக்காரரிடத்தில் கொடுப்பான் அல்லவா என்றார். அவர்கள் அதைக்கேட்டு, அப்படியாகாதிருப்பதாக என்றார்கள். 17 அப்பொழுது அவர் அவர்களைப் பார்த்து: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே, மூலைக்குத் தலைக்கல்லாயிற்று என்று எழுதியிருக்கிற வேதவாக்கியத்தின் கருத்தென்ன? 18 அந்தக் கல்லின்மேல் விழுகிறவன் எவனோ அவன் நொறுங்கிப்போவான், அது எவன்மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்றார். 19 பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் தங்களைக்குறித்து இந்த உவமையைச் சொன்னாரென்று அறிந்து, அந்நேரத்திலே அவரைப் பிடிக்க வகைதேடியும் ஜனங்களுக்குப் பயந்திருந்தார்கள். 20 அவர்கள் சமயம்பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை அவரிடத்தில் அனுப்பினார்கள். 21 அவர்கள் வந்து: போதகரே, நீர் நிதானமாய்ப் பேசி உபதேசிக்கிறீரென்றும், முகதாட்சணியமில்லாமல் தேவனுடைய மார்க்கத்தைச் சத்தியமாய்ப் போதிக்கிறீரென்றும் அறிந்திருக்கிறோம். 22 இராயனுக்கு வரிகொடுக்கிறது நியாயமோ அல்லவோ, எங்களுக்குச் சொல்லும் என்று கேட்டார்கள். 23 அவர்களுடைய தந்திரத்தை அவர் அறிந்து, நீங்கள் என்னை ஏன் சோதிக்கிறீர்கள்? 24 ஒரு பணத்தை எனக்குக் காண்பியுங்கள். இதிலிருக்கிற சொரூபமும் மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார். அதற்கு அவர்கள்: இராயனுடையது என்றார்கள். 25 அதற்கு அவர்: அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதைத் தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். 26 அவர்கள் அவரை ஜனங்களுக்கு முன்பாகப் பேச்சிலே குற்றம்பிடிக்கக்கூடாமல், அவர் சொன்ன உத்தரவைக்குறித்து ஆச்சரியப்பட்டு, மவுனமாயிருந்தார்கள். 27 உயிர்த்தெழுதல் இல்லையென்று சாதிக்கிற சதுசேயரில் சிலர் அவரிடத்தில் வந்து: 28 போதகரே, ஒருவன் மனைவியையுடையவனாயிருந்து பிள்ளையில்லாமல் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் அவன் மனைவியை விவாகம்பண்ணி, தன் சகோதரனுக்குச் சந்தானமுண்டாக்கவேண்டும் என்று மோசே எங்களுக்கு எழுதிவைத்திருக்கிறாரே. 29 சகோதரர் ஏழுபேரிருந்தார்கள், அவர்களில் மூத்தவன் ஒரு பெண்ணை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனான். 30 பின்பு இரண்டாஞ்சகோதரன் அவளை விவாகம்பண்ணி, அவனும் பிள்ளையில்லாமல் இறந்துபோனான். 31 மூன்றாஞ்சகோதரனும் அவளை விவாகம்பண்ணினான். அப்படியே ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணி, பிள்ளையில்லாமல் இறந்துபோனார்கள். 32 எல்லாருக்கும் பின்பு அந்த ஸ்திரீயும் இறந்துபோனாள். 33 இவ்விதமாய் ஏழுபேரும் அவளை விவாகம்பண்ணியிருக்க, உயிர்த்தெழுதலில் அவர்களில் எவனுக்கு அவள் மனைவியாயிருப்பாள் என்று கேட்டார்கள். 34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள். 35 மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண்கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை. 36 அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள். 37 அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப்பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார். 38 அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே என்றார். 39 அப்பொழுது வேதபாரகரில் சிலர் அதைக் கேட்டு: போதகரே, நன்றாய்ச் சொன்னீர் என்றார்கள். 40 அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றுங்கேட்கத் துணியவில்லை. 41 அவர் அவர்களை நோக்கி: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்? 42 நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று, 43 கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று தாவீது தானே சங்கீத புஸ்தகத்தில் சொல்லுகிறானே. 44 தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, அவனுக்கு அவர் குமாரனாயிருப்பது எப்படி என்றார். 45 பின்பு ஜனங்களெல்லாரும் கேட்கையில் அவர் தம்முடைய சீஷரை நோக்கி: 46 நீண்ட அங்கிகளைத் தரித்துக்கொண்டு திரியவும், சந்தை வெளிகளில் வந்தனங்களை அடையவும், ஜெபஆலயங்களில் முதன்மையான ஆசனங்களில் உட்காரவும், விருந்துகளில் முதன்மையான இடங்களில் இருக்கவும் விரும்பி, 47 விதவைகளின் வீடுகளைப் பட்சித்து, பார்வைக்கு நீண்ட ஜெபம்பண்ணுகிற வேதபாரகரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள், அவர்கள் அதிக ஆக்கினையை அடைவார்கள் என்றார்.

லூக்கா 21

1 அவர் கண்ணேறிட்டுப் பார்த்தபோது, ஐசுவரியவான்கள் காணிக்கைப் பெட்டியிலே தங்கள் காணிக்கைகளைப் போடுகிறதைக் கண்டார். 2 ஒரு ஏழை விதவை அதிலே இரண்டு காசைப் போடுகிறதையும் கண்டு: 3 இந்த ஏழை விதவை மற்றெல்லாரைப் பார்க்கிலும் அதிகமாகப் போட்டாள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 4 அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள் என்றார். 5 பின்பு, சிறந்த கற்களினாலும் காணிக்கைகளினாலும் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டிருக்கிறதைக்குறித்துச் சிலர் சொன்னபோது, 6 அவர்: நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும் என்றார். 7 அவர்கள் அவரை நோக்கி: போதகரே, இவைகள் எப்பொழுது சம்பவிக்கும், இவைகள் சம்பவிக்கும் காலத்துக்கு அடையாளம் என்ன என்று கேட்டார்கள். 8 அதற்கு அவர்: நீங்கள் வஞ்சிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் அநேகர் வந்து என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நான்தான் கிறிஸ்து என்றும், காலம் சமீபித்தது என்றும் சொல்லுவார்கள்; அவர்களைப் பின்பற்றாதிருங்கள். 9 யுத்தங்களையும் கலகங்களையுங்குறித்து நீங்கள் கேள்விப்படும்போது, பயப்படாதிருங்கள்; இவைகள் முன்னதாகச் சம்பவிக்கவேண்டியதே; ஆனாலும் முடிவு உடனே வராது என்றார். 10 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும். 11 பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும், பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும். 12 இவைகளெல்லாம் நடப்பதற்கு முன்னே என் நாமத்தினிமித்தம், அவர்கள் உங்களைப் பிடித்து, ஜெப ஆலயங்களுக்கும் சிறைச்சாலைகளுக்கும் ஒப்புக்கொடுத்து, ராஜாக்கள் முன்பாகவும் அதிபதிகள் முன்பாகவும் உங்களை இழுத்துத் துன்பப்படுத்துவார்கள். 13 ஆனாலும் அது உங்களுக்குச் சாட்சியாவதற்கு ஏதுவாயிருக்கும். 14 ஆகையால் என்ன உத்தரவு சொல்லுவோமென்று கவலைப்படாதிருக்கும்படி உங்கள் மனதிலே நிர்ணயம்பண்ணிக்கொள்ளுங்கள். 15 உங்களை விரோதிக்கிறவர்கள் ஒருவரும் எதிர்பேசவும் எதிர்நிற்கவும் கூடாத வாக்கையும் ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுப்பேன். 16 பெற்றாராலும், சகோதரராலும், பந்துஜனங்களாலும், சிநேகிதராலும் காட்டிக்கொடுக்கப்படுவீர்கள்; உங்களில் சிலரைக் கொலைசெய்வார்கள். 17 என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள். 18 ஆனாலும் உங்கள் தலைமயிரில் ஒன்றாகிலும் அழியாது. 19 உங்கள் பொறுமையினால் உங்கள் ஆத்துமாக்களைக் காத்துக்கொள்ளுங்கள். 20 எருசலேம் சேனைகளால் சூழப்பட்டிருப்பதை நீங்கள் காணும்போது, அதின் அழிவு சமீபமாயிற்றென்று அறியுங்கள். 21 அப்பொழுது யூதேயாவிலிருக்கிறவர்கள் மலைகளுக்கு ஓடிப்போகவும், எருசலேமிலிருக்கிறவர்கள் வெளியே புறப்படவும், நாட்டுப்புறங்களிலிருக்கிறவர்கள் நகரத்தில் பிரவேசியாமலிருக்கவும் கடவர்கள். 22 எழுதியிருக்கிற யாவும் நிறைவேறும்படி நீதியைச் சரிக்கட்டும் நாட்கள் அவைகளே. 23 அந்நாட்களில் கர்ப்பவதிகளுக்கும் பால்கொடுக்கிறவர்களுக்கும் ஐயோ, பூமியின்மேல் மிகுந்த இடுக்கணும் இந்த ஜனத்தின்மேல் கோபாக்கினையும் உண்டாகும். 24 பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும்வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும். 25 சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்; சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும். 26 வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம். 27 அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள். 28 இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார். 29 அன்றியும் அவர்களுக்கு ஒரு உவமையைச் சொன்னார்: அத்திமரத்தையும் மற்றெல்லா மரங்களையும் பாருங்கள். 30 அவைகள் துளிர்க்கிறதை நீங்கள் காணும்போது வசந்தகாலம் சமீபமாயிற்றென்று அறிகிறீர்கள். 31 அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள். 32 இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 33 வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை. 34 உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். 35 பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும். 36 ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷகுமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள் என்றார். 37 அவர் பகற்காலங்களில் தேவாலயத்திலே உபதேசம்பண்ணிக்கொண்டிருந்து, இராக்காலங்களில் வெளியே போய், ஒலிவமலை என்னப்பட்ட மலையிலே தங்கிவந்தார். 38 ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக் கேட்கும்படி அதிகாலமே தேவாலயத்தில் அவரிடத்திற்கு வருவார்கள்.

லூக்கா 22

1 பஸ்கா என்னப்பட்ட புளிப்பில்லாத அப்பப்பண்டிகை சமீபமாயிற்று. 2 அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவரைக் கொலைசெய்யும்படி யோசித்து, ஜனங்களுக்குப் பயப்பட்டபடியினால், எவ்விதமாய் அப்படிச் செய்யலாமென்று வகைதேடினார்கள். 3 அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான். 4 அவன் பிரதான ஆசாரியர்களிடத்திலும் சேனைத்தலைவர்களிடத்திலும் போய், அவரைக் காட்டிக்கொடுக்கும் வகையைக் குறித்து அவர்களோடே ஆலோசனை பண்ணினான். 5 அவர்கள் சந்தோஷப்பட்டு, அவனுக்குப் பணங்கொடுக்க உடன்பட்டார்கள். 6 அதற்கு அவன் சம்மதித்து, ஜனக்கூட்டமில்லாத வேளையில் அவரை அவர்களுக்குக் காட்டிக்கொடுக்கும்படி சமயந்தேடினான். 7 பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாள் வந்தது. 8 அப்பொழுது அவர் பேதுருவையும் யோவானையும் அழைத்து: நாம் பஸ்காவைப் புசிக்கும்படிக்கு நீங்கள் போய், அதை நமக்கு ஆயத்தம்பண்ணுங்கள் என்றார். 9 அதற்கு அவர்கள்: நாங்கள் அதை எங்கே ஆயத்தம்பண்ணும்படி சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள். 10 அதற்கு அவர்: நீங்கள் நகரத்தில் பிரவேசிக்கும்போது, தண்ணீர்க்குடம் சுமந்துவருகிற ஒரு மனுஷன் உங்களுக்கு எதிர்ப்படுவான்; நீங்கள் அவனுக்குப் பின்சென்று, அவன் போகும் வீட்டிற்குள் நீங்களும் போய், 11 அந்த வீட்டெஜமானை நோக்கி: நான் என் சீஷரோடுகூடப் பஸ்காவைப் புசிக்கிறதற்குத் தகுதியான இடம் எங்கே என்று போதகர் உம்மிடத்தில் கேட்கச் சொன்னார் என்று சொல்லுங்கள். 12 அவன் கம்பளமுதலானவைகள் விரித்திருக்கிற மேல்வீட்டிலுள்ள ஒரு பெரிய அறையை உங்களுக்குக் காண்பிப்பான்; அங்கே ஆயத்தம்பண்ணுங்கள் என்று சொல்லி அனுப்பினார். 13 அவர்கள் போய், தங்களிடத்தில் அவர் சொன்னபடியே கண்டு, பஸ்காவை ஆயத்தம்பண்ணினார்கள். 14 வேளைவந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள். 15 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன். 16 தேவனுடைய ராஜ்யத்திலே இது நிறைவேறுமளவும் நான் இனி இதைப் புசிப்பதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சொல்லி, 17 அவர் பாத்திரத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி: நீங்கள் இதை வாங்கி, உங்களுக்குள்ளே பங்கிட்டுக் கொள்ளுங்கள்; 18 தேவனுடைய ராஜ்யம் வருமளவும் நான் திராட்சப்பழரசத்தைப் பானம்பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 19 பின்பு அவர் அப்பத்தை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். 20 போஜனம்பண்ணினபின்பு அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் கொடுத்து: இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது என்றார். 21 பின்பு: இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது. 22 தீர்மானிக்கப்பட்டபடியே மனுஷகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனுஷனுக்கு ஐயோ என்றார். 23 அப்பொழுது அவர்கள் நம்மில் யார் அப்படிச் செய்வான் என்று தங்களுக்குள்ளே விசாரிக்கத் தொடங்கினார்கள். 24 அன்றியும் தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று. 25 அவர் அவர்களை நோக்கி: புறஜாதியாரின் ராஜாக்கள் அவர்களை ஆளுகிறார்கள்; அவர்கள்மேல் அதிகாரம் செலுத்துகிறவர்களும் உபகாரிகள் என்னப்படுகிறார்கள். 26 உங்களுக்குள்ளே அப்படியிருக்கக்கூடாது; உங்களில் பெரியவன் சிறியவனைப்போலவும், தலைவன் பணிவிடைக்காரனைப்போலவும் இருக்கக்கடவன். 27 பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன். 28 மேலும் எனக்கு நேரிட்ட சோதனைகளில் என்னோடேகூட நிலைத்திருந்தவர்கள் நீங்களே. 29 ஆகையால், என் பிதா எனக்கு ஒரு ராஜ்யத்தை ஏற்படுத்தினதுபோல, நானும் உங்களுக்கு ஏற்படுத்துகிறேன். 30 நீங்கள் என் ராஜ்யத்திலே என் பந்தியில் போஜனபானம்பண்ணி, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்க்கிறவர்களாய்ச் சிங்காசனங்களின்மேல் உட்காருவீர்கள் என்றார். 31 பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். 32 நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார். 33 அதற்கு அவன்: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்றான். 34 அவர் அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 35 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள். 36 அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன். 37 அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது என்றார். 38 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார். 39 பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார், அவருடைய சீஷரும் அவரோடேகூடப் போனார்கள். 40 அவ்விடத்தில் சேர்ந்தபொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு ஜெபம்பண்ணுங்கள் என்று சொல்லி, 41 அவர்களை விட்டுக் கல்லெறிதூரம் அப்புறம்போய், முழங்கால்படியிட்டு: 42 பிதாவே, உமக்குச் சித்தமானால் இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கும்படி செய்யும்; ஆயினும் என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். 43 அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான். 44 அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது. 45 அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரை பண்ணுகிறதைக் கண்டு: 46 நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார். 47 அவர் அப்படிப் பேசுகையில் ஜனங்கள் கூட்டமாய் வந்தார்கள். அவர்களுக்கு முன்னே பன்னிருவரில் ஒருவனாகிய யூதாஸ் என்பவனும் வந்து, இயேசுவை முத்தஞ்செய்யும்படி அவரிடத்தில் சேர்ந்தான். 48 இயேசு அவனை நோக்கி: யூதாசே, முத்தத்தினாலேயா மனுஷகுமாரனைக் காட்டிக்கொடுக்கிறாய் என்றார். 49 அவரைச் சூழநின்றவர்கள் நடக்கப்போகிறதைக் கண்டு: ஆண்டவரே, பட்டயத்தினாலே வெட்டுவோமா என்றார்கள். 50 அந்தப்படியே அவர்களில் ஒருவன் பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான். 51 அப்பொழுது இயேசு: இம்மட்டில் நிறுத்துங்கள் என்று சொல்லி, அவனுடைய காதைத்தொட்டு, அவனைச் சொஸ்தப்படுத்தினார். 52 பின்பு இயேசு தமக்கு விரோதமாய் வந்த பிரதான ஆசாரியர்களையும் தேவாலயத்துச் சேனைத்தலைவர்களையும் மூப்பர்களையும் நோக்கி: ஒரு கள்ளனைப் பிடிக்கப் புறப்பட்டு வருகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துப் புறப்பட்டு வந்தீர்களே. 53 நான் தினந்தோறும் தேவாலயத்தில் உங்களுடனேகூட இருக்கையில் நீங்கள் என்னைப் பிடிக்கக் கைநீட்டவில்லை; இதுவோ உங்களுடைய வேளையும் அந்தகாரத்தின் அதிகாரமுமாயிருக்கிறது என்றார். 54 அவர்கள் அவரைப் பிடித்தபின்பு, பிரதான ஆசாரியனுடைய வீட்டில் கொண்டுபோய் விட்டார்கள். பேதுருவும் தூரத்திலே பின்சென்றான். 55 அவர்கள் முற்றத்தின் நடுவிலே நெருப்பை மூட்டி, அதைச் சுற்றி உட்கார்ந்தபோது, பேதுருவும் அவர்கள் நடுவிலே உட்கார்ந்தான். 56 அப்பொழுது ஒரு வேலைக்காரி அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்றாள். 57 அதற்கு அவன்: ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுதலித்தான். 58 சற்றுநேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான். 59 ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான். 60 அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று. 61 அப்பொழுது கர்த்தர் திரும்பி, பேதுருவை நோக்கிப் பார்த்தார். சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று கர்த்தர் தன்னிடத்தில் சொன்ன வசனத்தை உடனே பேதுரு நினைவுகூர்ந்து, 62 வெளியே போய், மனங்கசந்து அழுதான். 63 இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்து, 64 அவருடைய கண்களைக் கட்டி, அவருடைய முகத்தில் அறைந்து: உன்னை அடித்தவன் யார், அதை ஞானதிருஷ்டியினால் சொல் என்று அவரைக் கேட்டதுமன்றி, 65 மற்றும் அநேக தூஷணவார்த்தைகளையும் அவருக்கு விரோதமாகச் சொன்னார்கள். 66 விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும் பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கூடிவந்து, தங்கள் ஆலோசனைச் சங்கத்தில் அவரைக் கொண்டுவந்து நிறுத்தி: 67 நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச் சொல் என்றார்கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள். 68 நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள். 69 இதுமுதல் மனுஷகுமாரன் சர்வவல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார். 70 அதற்கு அவர்களெல்லாரும்: அப்படியானால், நீ தேவனுடைய குமாரனா என்று கேட்டார்கள். அதற்கு அவர்: நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர்தான் என்றார். 71 அப்பொழுது அவர்கள்: இனி வேறு சாட்சி நமக்கு வேண்டுவதென்ன? நாமே இவனுடைய வாயினாலே கேட்டோமே என்றார்கள்.

லூக்கா 23

1 அவர்களுடைய கூட்டத்தாரெல்லாரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்: 2 இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டுவதில்லையென்றும் சொல்லி, ஜனங்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சாட்டத் தொடங்கினார்கள். 3 பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். 4 அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் ஜனங்களையும் நோக்கி: இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான். 5 அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இவ்விடம்வரைக்கும் யூதேயாதேசமெங்கும் உபதேசம்பண்ணி, ஜனங்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடே சொன்னார்கள். 6 கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனுஷன் கலிலேயனா என்று விசாரித்து, 7 அவர் ஏரோதின் அதிகாரத்துக்குள்ளானவர் என்றறிந்து, அந்நாட்களில் எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான். 8 ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாய் ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைக் கண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டு, 9 அநேக காரியங்களைக்குறித்து அவரிடத்தில் வினாவினான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை. 10 பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் அவர்மேல் பிடிவாதமாய்க் குற்றஞ்சாட்டிக்கொண்டே நின்றார்கள். 11 அப்பொழுது ஏரோது தன் போர்ச்சேவகரோடுகூட அவரை நிந்தித்துப் பரியாசம்பண்ணி, மினுக்கான வஸ்திரத்தை அவருக்கு உடுத்தி, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான். 12 முன்னே ஒருவருக்கொருவர் பகைவராயிருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையத்தினம் சிநேகிதரானார்கள். 13 பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்து, 14 அவர்களை நோக்கி: ஜனங்களைக் கலகத்துக்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனுஷனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை. 15 உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்துக்கேதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே. 16 ஆனபடியால் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான். 17 பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது அவசியமாயிருந்தபடியால் அப்படிச் சொன்னான். 18 ஜனங்களெல்லாரும் அதைக் கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக் கேட்டார்கள். 19 அந்தப் பரபாசென்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான். 20 பிலாத்து இயேசுவை விடுதலையாக்க மனதாய், மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான். 21 அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூக்குரலிட்டார்கள். 22 அவன் மூன்றாந்தரம் அவர்களை நோக்கி: ஏன், இவன் என்ன பொல்லாப்புச் செய்தான்? மரணத்துக்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகையால் நான் இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான். 23 அப்படியிருந்தும் அவரைச் சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியரும் இட்ட சத்தம் மேற்கொண்டது. 24 அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து, 25 கலகத்தினிமித்தமும் கொலைபாதகத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் இஷ்டத்துக்கு ஒப்புக்கொடுத்தான். 26 அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவர்பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள். 27 திரள்கூட்டமான ஜனங்களும் அவருக்காகப் புலம்பி அழுகிற ஸ்திரீகளும் அவருக்குப் பின்சென்றார்கள். 28 இயேசு அவர்கள் முகமாய்த் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்கள் பிள்ளைகளுக்காகவும் அழுங்கள். 29 இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும். 30 அப்பொழுது மலைகளை நோக்கி: எங்கள்மேல் விழுங்களென்றும், குன்றுகளை நோக்கி: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள். 31 பச்சைமரத்துக்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்துக்கு என்ன செய்யமாட்டார்கள் என்றார். 32 குற்றவாளிகளாகிய வேறே இரண்டுபேரும் அவரோடேகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள். 33 கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள். 34 அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள். 35 ஜனங்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுடனேகூட அதிகாரிகளும் அவரை இகழ்ந்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள். 36 போர்ச்சேவகரும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து: 37 நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைப் பரியாசம்பண்ணினார்கள். 38 இவன் யூதருடைய ராஜா என்று, கிரேக்கு லத்தீன் எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது. 39 அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இகழ்ந்தான். 40 மற்றவன் அவனை நோக்கி: நீ இந்த ஆக்கினைக்குட்பட்டவனாயிருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா? 41 நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் நடப்பித்தவைகளுக்குத்தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் நடப்பிக்கவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு, 42 இயேசுவை நோக்கி: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான். 43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 44 அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம்மணி நேரம்வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று. 45 சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது. 46 இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார். 47 நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக்கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான். 48 இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த ஜனங்களெல்லாரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்கள் மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள். 49 அவருக்கு அறிமுகமானவர்களெல்லாரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்சென்று வந்த ஸ்திரீகளும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். 50 யோசேப்பு என்னும் பேர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாயிருந்தான். 51 அவன் யூதருடைய பட்டணங்களிலொன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்துக்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதியாதவனுமாயிருந்தான். 52 அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு, 53 அதை இறக்கி, மெல்லிய துப்பட்டியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதுமாய் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்படாததுமாயிருந்த ஒரு கல்லறையிலே வைத்தான். 54 அந்த நாள் ஆயத்தநாளாயிருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமாயிற்று. 55 கலிலேயாவிலிருந்து அவருடனேகூட வந்திருந்த ஸ்திரீகளும் பின்சென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து, 56 திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கற்பனையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

லூக்கா 24

1 வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே தாங்கள் ஆயத்தம்பண்ணின கந்தவர்க்கங்களை அவர்கள் எடுத்துக்கொண்டு வேறு சில ஸ்திரீகளோடுங்கூடக் கல்லறையினிடத்தில் வந்தார்கள். 2 கல்லறையை அடைத்திருந்த கல் புரட்டித் தள்ளப்பட்டிருக்கிறதைக்கண்டு, 3 உள்ளே பிரவேசித்து, கர்த்தராகிய இயேசுவின் சரீரத்தைக் காணாமல், 4 அதைக்குறித்து மிகுந்த கலக்கமடைந்திருக்கையில், பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த இரண்டுபேர் அவர்கள் அருகே நின்றார்கள். 5 அந்த ஸ்திரீகள் பயப்பட்டுத் தலைகவிழ்ந்து தரையை நோக்கி நிற்கையில், அந்த இரண்டுபேரும் அவர்களை நோக்கி: உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன? 6 அவர் இங்கே இல்லை, அவர் உயிர்த்தெழுந்தார். 7 மனுஷகுமாரன் பாவிகளான மனுஷர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்படவும், சிலுவையில் அறையப்படவும், மூன்றாம் நாளில் எழுந்திருக்கவும் வேண்டுமென்பதாக அவர் கலிலேயாவிலிருந்த காலத்தில் உங்களுக்குச் சொன்னதை நினைவுகூருங்கள் என்றார்கள். 8 அப்பொழுது அவர்கள் அவருடைய வார்த்தைகளை நினைவுகூர்ந்து, 9 கல்லறையை விட்டுத் திரும்பிப்போய், இந்தச் சங்கதிகளெல்லாவற்றையும் பதினொருவருக்கும் மற்றெல்லாருக்கும் அறிவித்தார்கள். 10 இவைகளை அப்போஸ்தலருக்குச் சொன்னவர்கள் மகதலேனா மரியாளும், யோவன்னாளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும், இவர்களுடனேகூட இருந்த மற்ற ஸ்திரீகளுமே. 11 இவர்களுடைய வார்த்தைகள் அவர்களுக்கு வீண்பேச்சாகத் தோன்றினதினால், அவர்கள் இவர்களை நம்பவில்லை. 12 பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளே குனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான். 13 அன்றையத்தினமே அவர்களில் இரண்டுபேர் எருசலேமுக்கு ஏழு அல்லது எட்டுமைல் தூரமான எம்மாவு என்னும் கிராமத்துக்குப் போனார்கள். 14 போகையில் இந்த வர்த்தமானங்கள் யாவையுங்குறித்து அவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். 15 இப்படி அவர்கள் பேசி, சம்பாஷித்துக்கொண்டிருக்கையில், இயேசு தாமே சேர்ந்து அவர்களுடனேகூட நடந்துபோனார். 16 ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது. 17 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நீங்கள் துக்கமுகமுள்ளவர்களாய் வழிநடந்து, ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்னவென்று கேட்டார். 18 அவர்களில் ஒருவனாகிய கிலெயோப்பா என்பவன் பிரதியுத்தரமாக: இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ என்றான். 19 அவர்: எவைகள் என்றார். அதற்கு அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே; அவர் தேவனுக்கு முன்பாகவும் ஜனங்களெல்லாருக்கு முன்பாகவும் செய்கையிலும் வாக்கிலும் வல்லமையுள்ள தீர்க்கதரிசியாயிருந்தார். 20 நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் அறைந்தார்கள். 21 அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம். இவைகள் சம்பவித்து இன்று மூன்று நாளாகிறது. 22 ஆனாலும் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சில ஸ்திரீகள் அதிகாலமே கல்லறையினிடத்திற்குப்போய், 23 அவருடைய சரீரத்தைக் காணாமல், திரும்பிவந்து, அவர் உயிரோடிருக்கிறார் என்று சொன்ன தேவதூதரைத் தரிசித்தோம் என்று சொல்லி, எங்களைப் பிரமிக்கப்பண்ணினார்கள். 24 அப்பொழுது எங்களிலே சிலர் கல்லறையினிடத்திற்குப் போய், ஸ்திரீகள் சொன்னபடியே கண்டார்கள்; அவரையோ காணவில்லை என்றார்கள். 25 அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, 26 கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, 27 மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தார். 28 அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார். 29 அவர்கள் அவரை நோக்கி: நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று, பொழுதும் போயிற்று, என்று அவரை வருந்திக் கேட்டுக்கொண்டார்கள். அப்பொழுது அவர் அவர்களுடனே தங்கும்படி உள்ளே போனார். 30 அவர்களோடே அவர் பந்தியிருக்கையில், அவர் அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப்பிட்டு, அவர்களுக்குக் கொடுத்தார். 31 அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார். 32 அப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக்காட்டினபொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா என்று சொல்லிக்கொண்டு, 33 அந்நேரமே எழுந்திருந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போய், பதினொருவரும் அவர்களோடிருந்தவர்களும் கூடியிருக்கக்கண்டு: 34 கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார் என்று அவர்கள் சொல்லக் கேட்டு, 35 வழியில் நடந்தவைகளையும், அவர் அப்பத்தைப் பிட்கையில் தாங்கள் அவரை அறிந்துகொண்டதையும் விவரித்துச் சொன்னார்கள். 36 இவைகளைக்குறித்து அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், இயேசு தாமே அவர்கள் நடுவிலே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். 37 அவர்கள் கலங்கி, பயந்து, ஒரு ஆவியைக் காண்கிறதாக நினைத்தார்கள். 38 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? 39 நான்தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப்பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறதுபோல ஒரு ஆவிக்கு இராதே என்று சொல்லி, 40 தம்முடைய கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். 41 ஆனாலும் சந்தோஷத்தினால் அவர்கள் இன்னும் விசுவாசியாமல் ஆச்சரியப்படுகையில்: புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா என்று அவர்களிடத்தில் கேட்டார். 42 அப்பொழுது பொரித்த மீன்கண்டத்தையும் தேன்கூட்டுத் துணிக்கையையும் அவருக்குக் கொடுத்தார்கள். 43 அவைகளை அவர் வாங்கி அவர்களுக்கு முன்பாகப் புசித்து, 44 அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த விசேஷங்கள் இவைகளே என்றார். 45 அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி: 46 எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; 47 அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. 48 நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள். 49 என் பிதா வாக்குத்தத்தம்பண்ணினதை, இதோ, நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்களோ உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும்வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார். 50 பின்பு அவர் பெத்தானியாவரைக்கும் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், தம்முடைய கைகளை உயர்த்தி, அவர்களை ஆசீர்வதித்தார். 51 அவர்களை ஆசீர்வதிக்கையில், அவர்களை விட்டுப் பிரிந்து, பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். 52 அவர்கள் அவரைப் பணிந்துகொண்டு, மிகுந்த சந்தோஷத்தோடே எருசலேமுக்குத் திரும்பிவந்து, 53 நாடோறும் தேவாலயத்திலே தேவனைப் புகழ்ந்து துதித்துக்கொண்டிருந்தார்கள். ஆமென்.

யோவான் 1

1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. 2 அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். 3 சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. 4 அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. 5 அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை. 6 தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான். 7 அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான். 8 அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான். 9 உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. 10 அவர் உலகத்தில் இருந்தார், உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று, உலகமோ அவரை அறியவில்லை. 11 அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார். 13 அவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். 14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது. 15 யோவான் அவரைக்குறித்துச் சாட்சிகொடுத்து: எனக்குப் பின்வருகிறவர் எனக்கு முன்னிருந்தவர், ஆகையால் அவர் என்னிலும் மேன்மையுள்ளவர் என்று நான் சொல்லியிருந்தேனே, அவர் இவர்தான் என்று சத்தமிட்டுக் கூறினான். 16 அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபைபெற்றோம். 17 எப்படியெனில், நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின. 18 தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். 19 எருசலேமிலிருந்து யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடத்தில் அனுப்பி: நீர் யார் என்று கேட்டபொழுது, 20 அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான். 21 அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள். அதற்கும்: அல்ல என்றான். 22 அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள். 23 அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான். 24 அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள். 25 அவர்கள் அவனை நோக்கி: நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங் கொடுக்கிறீர் என்று கேட்டார்கள். 26 யோவான் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுக்கிறேன்; நீங்கள் அறியாதிருக்கிற ஒருவர் உங்கள் நடுவிலே நிற்கிறார். 27 அவர் எனக்குப் பின்வந்தும் என்னிலும் மேன்மையுள்ளவர்; அவருடைய பாதரட்சையின் வாரை அவிழ்ப்பதற்கும் நான் பாத்திரனல்ல என்றான். 28 இவைகள் யோர்தானுக்கு அக்கரையில் யோவான் ஞானஸ்நானங்கொடுத்த பெத்தாபராவிலே நடந்தன. 29 மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி. 30 எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவர் எனக்கு முன்னிருந்தபடியால் என்னிலும் மேன்மையுள்ளவரென்று நான் சொன்னேனே, அவர் இவர்தான். 31 நானும் இவரை அறியாதிருந்தேன்; இவர் இஸ்ரவேலுக்கு வெளிப்படும் பொருட்டாக, நான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுக்கவந்தேன் என்றான். 32 பின்னும் யோவான் சாட்சியாகச் சொன்னது: ஆவியானவர் புறாவைப்போல வானத்திலிருந்திறங்கி, இவர்மேல் தங்கினதைக் கண்டேன். 33 நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்: ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவர் என்று எனக்குச் சொல்லியிருந்தார். 34 அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்துவருகிறேன் என்றான். 35 மறுநாளிலே யோவானும் அவனுடைய சீஷரில் இரண்டுபேரும் நிற்கும்போது, 36 இயேசு நடந்துபோகிறதை அவன் கண்டு: இதோ, தேவ ஆட்டுக்குட்டி என்றான். 37 அவன் அப்படிச் சொன்னதை அவ்விரண்டு சீஷருங்கேட்டு, இயேசுவுக்குப் பின்சென்றார்கள். 38 இயேசு திரும்பி, அவர்கள் பின் செல்லுகிறதைக் கண்டு: என்ன தேடுகிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: ரபீ, நீர் எங்கே தங்கியிருக்கிறீர் என்று கேட்டார்கள்; ரபீ என்பதற்குப் போதகரே என்று அர்த்தமாம். 39 அவர்: வந்து பாருங்கள் என்றார். அவர்கள் வந்து அவர் தங்கியிருந்த இடத்தைக் கண்டு, அன்றையத்தினம் அவரிடத்தில் தங்கினார்கள். அப்பொழுது ஏறக்குறையப் பத்துமணி வேளையாயிருந்தது. 40 யோவான் சொன்னதைக் கேட்டு, அவருக்குப் பின்சென்ற இரண்டுபேரில் ஒருவன் சீமோன் பேதுருவின் சகோதரனாகிய அந்திரேயா என்பவன். 41 அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம். 42 பின்பு, அவனை இயேசுவினிடத்தில் கூட்டிக்கொண்டுவந்தான். இயேசு அவனைப் பார்த்து: நீ யோனாவின் மகனாகிய சீமோன், நீ கேபா என்னப்படுவாய் என்றார்; கேபா என்பதற்குப் பேதுரு என்று அர்த்தமாம். 43 மறுநாளிலே இயேசு கலிலேயாவுக்குப்போக மனதாயிருந்து, பிலிப்புவைக் கண்டு: நீ எனக்குப் பின்சென்று வா என்றார். 44 பிலிப்பென்பவன் அந்திரேயா பேதுரு என்பவர்களுடைய ஊராகிய பெத்சாயிதா பட்டணத்தான். 45 பிலிப்பு நாத்தான்வேலைக் கண்டு: நியாயப்பிரமாணத்திலே மோசேயும் தீர்க்கதரிசிகளும் எழுதியிருக்கிறவரைக் கண்டோம்; அவர் யோசேப்பின் குமாரனும் நாசரேத்தூரானுமாகிய இயேசுவே என்றான். 46 அதற்கு நாத்தான்வேல்: நாசரேத்திலிருந்து யாதொரு நன்மை உண்டாகக்கூடுமா என்றான். அதற்குப் பிலிப்பு: வந்து பார் என்றான். 47 இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார். 48 அதற்கு நாத்தான்வேல்: நீர் என்னை எப்படி அறிவீர் என்றான். இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்குமுன்னே, நீ அத்திமரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார். 49 அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான். 50 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: அத்திமரத்தின் கீழே உன்னைக் கண்டேன் என்று நான் உனக்குச் சொன்னதினாலேயா விசுவாசிக்கிறாய்; இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார். 51 பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

யோவான் 2

1 மூன்றாம் நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். 2 இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். 3 திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை என்றாள். 4 அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். 5 அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள். 6 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. 7 இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். 8 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள். 9 அந்தத் திராட்சரசம் எங்கேயிருந்து வந்ததென்று தண்ணீரை மொண்ட வேலைக்காரருக்குத் தெரிந்ததேயன்றி பந்திவிசாரிப்புக்காரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சரசமாய் மாறின தண்ணீரை ருசிபார்த்தபோது, மணவாளனை அழைத்து: 10 எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான். 11 இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். 12 அதன்பின்பு அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சிலநாள் தங்கினார்கள். 13 பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய், 14 தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு, 15 கயிற்றினால் ஒரு சவுக்கையுண்டுபண்ணி, அவர்கள் யாவரையும் ஆடுமாடுகளையும் தேவாலயத்துக்குப் புறம்பே துரத்திவிட்டு, காசுக்காரருடைய காசுகளைக் கொட்டி, பலகைகளைக் கவிழ்த்துப்போட்டு, 16 புறா விற்கிறவர்களை நோக்கி: இவைகளை இவ்விடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார். 17 அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்தார்கள். 18 அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள். 19 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். 20 அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம் சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள். 21 அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துப் பேசினார். 22 அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்தெழுந்தபின்பு அவருடைய சீஷர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள். 23 பஸ்காபண்டிகையிலே அவர் எருசலேமிலிருக்கையில், அவர் செய்த அற்புதங்களை அநேகர் கண்டு, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள். 24 அப்படியிருந்தும், இயேசு எல்லாரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பி இணங்கவில்லை. 25 மனுஷருள்ளத்திலிருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனுஷரைக் குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சி கொடுக்கவேண்டியதாயிருக்கவில்லை.

யோவான் 3

1 யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான். 2 அவன் இராக்காலத்திலே இயேசுவினிடத்தில் வந்து: ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான். 3 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 4 அதற்கு நிக்கொதேமு: ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ என்றான். 5 இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். 6 மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். 7 நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம். 8 காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார். 9 அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான். 10 இயேசு அவனை நோக்கி: நீ இஸ்ரவேலில் போதகனாயிருந்தும் இவைகளை அறியாமலிருக்கிறாயா? 11 மெய்யாகவே மெய்யாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் கண்டதைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறோம்; நீங்களோ எங்கள் சாட்சியை ஏற்றுக் கொள்ளுகிறதில்லை. 12 பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரமகாரியங்களை உங்களுக்குச் சொல்வேனானால் எப்படி விசுவாசிப்பீர்கள்? 13 பரலோகத்திலிருந்திறங்கினவரும் பரலோகத்திலிருக்கிறவருமான மனுஷகுமாரனேயல்லாமல் பரலோகத்துக்கு ஏறினவன் ஒருவனுமில்லை. 14 சர்ப்பமானது மோசேயினால் வனாந்தரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனுஷகுமாரனும், 15 தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, உயர்த்தப்படவேண்டும். 16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். 17 உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார். 18 அவரை விசுவாசிக்கிறவன் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படான்; விசுவாசியாதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசமுள்ளவனாயிராதபடியினால், அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்பட்டாயிற்று. 19 ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிற படியினால் அவர்கள் ஒளியைப்பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. 20 பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான். 21 சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார். 22 இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங்கொடுத்துவந்தார். 23 சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள். 24 அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை. 25 அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று. 26 அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக் குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள். 27 யோவான் பிரதியுத்தரமாக: பரலோகத்திலிருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, அவன் ஒன்றையும் பெற்றுக்கொள்ளமாட்டான். 28 நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள். 29 மணவாட்டியை உடையவனே மணவாளன்; மணவாளனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்கிறவனாய் மணவாளனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமாயிற்று. 30 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும். 31 உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர்; பூமியிலிருந்துண்டானவன் பூமியின் தன்மையுள்ளவனாயிருந்து, பூமிக்கடுத்தவைகளைப் பேசுகிறான்; பரலோகத்திலிருந்து வருகிறவர் எல்லாரிலும் மேலானவர். 32 தாம் கண்டதையும் கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. 33 அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியமுள்ளவரென்று முத்திரைபோட்டு நிச்சயப்படுத்துகிறான். 34 தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார். 35 பிதாவானவர் குமாரனில் அன்பாயிருந்து எல்லாவற்றையும் அவர் கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார். 36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான்.

யோவான் 4

1 யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள்விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது, 2 யூதேயாவைவிட்டு மறுபடியுங் கலிலேயாவுக்குப் போனார். 3 இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள். 4 அவர் சமாரியா நாட்டின் வழியாய்ப் போகவேண்டியதாயிருந்தபடியால், 5 யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார். 6 அங்கே யாக்கோபுடைய கிணறு இருந்தது; இயேசு பிரயாணத்தினால் இளைப்படைந்தவராய் அந்தக் கிணற்றினருகே உட்கார்ந்தார்; அப்பொழுது ஏறக்குறைய ஆறாம்மணி வேளையாயிருந்தது. 7 அவருடைய சீஷர்கள் போஜனபதார்த்தங்களைக் கொள்ளும்படி ஊருக்குள்ளே போயிருந்தார்கள். 8 அப்பொழுது சமாரியா நாட்டாளாகிய ஒரு ஸ்திரீ தண்ணீர் மொள்ள வந்தாள். இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத் தா என்றார். 9 யூதர்கள் சமாரியருடனே சம்பந்தங்கலவாதவர்களானபடியால், சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க, சமாரியா ஸ்திரீயாகிய என்னிடத்தில், தாகத்துக்குத்தா என்று எப்படிக் கேட்கலாம் என்றாள். 10 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார். 11 அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும். 12 இந்தக் கிணற்றை எங்களுக்குத் தந்த நம்முடைய பிதாவாகிய யாக்கோபைப்பார்க்கிலும் நீர் பெரியவரோ? அவரும் அவர் பிள்ளைகளும் அவர் மிருகஜீவன்களும் இதிலே குடித்ததுண்டே என்றாள். 13 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும். 14 நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்திய ஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார். 15 அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, எனக்குத் தாகமுண்டாகாமலும், நான் இங்கே மொண்டுகொள்ள வராமலுமிருக்கும்படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள். 16 இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டுவா என்றார். 17 அதற்கு அந்த ஸ்திரீ: எனக்குப் புருஷன் இல்லை என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்குப் புருஷன் இல்லையென்று நீ சொன்னது சரிதான். 18 எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார். 19 அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். 20 எங்கள் பிதாக்கள் இந்த மலையிலே தொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள். 21 அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது. 22 நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. 23 உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். 24 தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுதுகொள்ளவேண்டும் என்றார். 25 அந்த ஸ்திரீ அவரை நோக்கி: கிறிஸ்து என்னப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும்போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார் என்றாள். 26 அதற்கு இயேசு: உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார். 27 அத்தருணத்தில் அவருடைய சீஷர்கள் வந்து, அவர் ஸ்திரீயுடனே பேசுகிறதைப்பற்றி ஆச்சரியப்பட்டார்கள். ஆகிலும் என்ன தேடுகிறீரென்றாவது, ஏன் அவளுடனே பேசுகிறீரென்றாவது, ஒருவனும் கேட்கவில்லை. 28 அப்பொழுது அந்த ஸ்திரீ, தன் குடத்தை வைத்துவிட்டு, ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி: 29 நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள். 30 அப்பொழுது அவர்கள் ஊரிலிருந்து புறப்பட்டு அவரிடத்தில் வந்தார்கள். 31 இப்படி நடக்கையில் சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, போஜனம்பண்ணும் என்று வேண்டிக்கொண்டார்கள். 32 அதற்கு அவர்: நான் புசிப்பதற்கு நீங்கள் அறியாத ஒரு போஜனம் எனக்கு உண்டு என்றார். 33 அப்பொழுது சீஷர்கள் ஒருவரையொருவர் பார்த்து: யாராவது அவருக்குப் போஜனம் கொண்டுவந்திருப்பானோ என்றார்கள். 34 இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது. 35 அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். 36 விதைக்கிறவனும் அறுக்கிறவனுமாகிய இருவரும் ஒருமித்துச் சந்தோஷப்படத்தக்கதாக, அறுக்கிறவன் கூலியை வாங்கி, நித்திய ஜீவனுக்காகப் பலனைச் சேர்த்துக்கொள்ளுகிறான். 37 விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது. 38 நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார். 39 நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள். 40 சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டுநாள் அங்கே தங்கினார். 41 அப்பொழுது அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து, 42 அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள். 43 இரண்டுநாளைக்குப்பின்பு அவர் அவ்விடம்விட்டுப் புறப்பட்டு, கலிலேயாவுக்குப் போனார். 44 ஒரு தீர்க்கதரிசிக்குத் தன் சொந்த ஊரிலே கனமில்லையென்று இயேசு தாமே சொல்லியிருந்தார். 45 அவர் கலிலேயாவில் வந்தபோது, எருசலேமில் பண்டிகையிலே அவர் செய்த எல்லாவற்றையும் பார்த்திருந்த கலிலேயர் அவரை ஏற்றுக்கொண்டார்கள்; அவர்களும் பண்டிகைக்குப் போயிருந்தார்கள். 46 பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான். 47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான். 48 அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார். 49 அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என்றான். 50 இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப் போனான். 51 அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டுவந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள். 52 அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜுரம் அவனை விட்டது என்றார்கள். 53 உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள். 54 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாம் அற்புதம்.

யோவான் 5

1 இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார். 2 எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டுவாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு. 3 அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். 4 ஏனெனில் சில சமயங்களிலே தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான். 5 முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான். 6 படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார். 7 அதற்கு வியாதிஸ்தன்: ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான். 8 இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார். 9 உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது. 10 ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள். 11 அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான். 12 அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள். 13 சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னாரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார். 14 அதற்குப்பின்பு இயேசு அவனைத் தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார். 15 அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான். 16 இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள். 17 இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியை செய்து வருகிறார், நானும் கிரியை செய்து வருகிறேன் என்றார். 18 அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள். 19 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார். 20 பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார். 21 பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். 22 அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். 23 குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். 24 என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 25 மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 26 ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார். 27 அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். 28 இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; 29 அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். 30 நான் என் சுயமாய் ஒன்றுஞ் செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. 31 என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது. 32 என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன். 33 நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்குச் சாட்சிகொடுத்தான். 34 நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன். 35 அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள். 36 யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது. 37 என்னை அனுப்பின பிதா தாமே என்னைக்குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை. 38 அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை. 39 வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. 40 அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை. 41 நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை. 42 உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன். 43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுயநாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள். 44 தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? 45 பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள்; நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான். 46 நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே. 47 அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.

யோவான் 6

1 இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியாக்கடல் என்னப்பட்ட கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார். 2 அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள். 3 இயேசு மலையின்மேல் ஏறி, அங்கே தம்முடைய சீஷருடனேகூட உட்கார்ந்தார். 4 அப்பொழுது யூதருடைய பண்டிகையாகிய பஸ்கா சமீபமாயிருந்தது. 5 இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து, திரளான ஜனங்கள் தம்மிடத்தில் வருகிறதைக் கண்டு, பிலிப்புவை நோக்கி: இவர்கள் சாப்பிடத்தக்கதாக அப்பங்களை எங்கே கொள்ளலாம் என்று கேட்டார். 6 தாம் செய்யப்போகிறதை அறிந்திருந்தும், அவனைச் சோதிக்கும்படி இப்படிக் கேட்டார். 7 பிலிப்பு அவருக்குப் பிரதியுத்தரமாக: இவர்களில் ஒவ்வொருவனும் கொஞ்சங் கொஞ்சம் எடுத்துக்கொண்டாலும், இருநூறு பணத்து அப்பங்களும் இவர்களுக்குப் போதாதே என்றான். 8 அப்பொழுது அவருடைய சீஷரிலொருவனும், சீமோன் பேதுருவின் சகோதரனுமாகிய அந்திரேயா அவரை நோக்கி: 9 இங்கே ஒரு பையன் இருக்கிறான், அவன் கையில் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உண்டு, ஆனாலும் அவைகள் இத்தனை ஜனங்களுக்கு எம்மாத்திரம் என்றான். 10 இயேசு: ஜனங்களை உட்காரவையுங்கள் என்றார். அந்த இடம் மிகுந்த புல்லுள்ளதாயிருந்தது. பந்தியிருந்த புருஷர்கள் ஏறக்குறைய ஐயாயிரம்பேராயிருந்தார்கள். 11 இயேசு அந்த அப்பங்களை எடுத்து, ஸ்தோத்திரம்பண்ணி, சீஷர்களிடத்தில் கொடுத்தார்; சீஷர்கள் பந்தியிருந்தவர்களுக்குக் கொடுத்தார்கள்; அப்படியே மீன்களையும் அவர் எடுத்து அவர்களுக்கு வேண்டியமட்டும் கொடுத்தார். 12 அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார். 13 அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஐந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள். 14 இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள். 15 ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டுபோக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார். 16 சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய், 17 படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப்போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார். 18 பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது. 19 அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போனபொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள். 20 அவர்களை அவர் நோக்கி: நான்தான், பயப்படாதிருங்கள் என்றார். 21 அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது. 22 மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற ஜனங்கள் அவருடைய சீஷர் ஏறின அந்த ஒரே படவுதவிர அங்கே வேறொரு படவும் இருந்ததில்லையென்றும், இயேசு தம்முடைய சீஷருடனேகூடப் படவில் ஏறாமல் அவருடைய சீஷர்மாத்திரம் போனார்களென்றும் அறிந்தார்கள். 23 கர்த்தர் ஸ்தோத்திரஞ்செய்தபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்துக்குச் சமீபமாய்த் திபேரியாவிலிருந்து வேறே படவுகள் வந்தது. 24 அப்பொழுது இயேசுவும் அவருடைய சீஷரும் அங்கே இல்லாததை ஜனங்கள் கண்டு, உடனே அந்தப் படவுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள். 25 கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைக் கண்டபோது: ரபீ, நீர் எப்பொழுது இவ்விடம் வந்தீர் என்று கேட்டார்கள். 26 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 27 அழிந்துபோகிற போஜனத்திற்காக அல்ல, நித்தியஜீவன்வரைக்கும் நிலைநிற்கிற போஜனத்திற்காகவே கிரியை நடப்பியுங்கள்; அதை மனுஷகுமாரன் உங்களுக்குக் கொடுப்பார்; அவரைப் பிதாவாகிய தேவன் முத்திரித்திருக்கிறார் என்றார். 28 அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். 29 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார். 30 அதற்கு அவர்கள்: அப்படியானால் உம்மை விசுவாசிக்கும்படிக்கு நாங்கள் காணத்தக்கதாக நீர் என்ன அடையாளத்தைக் காண்பிக்கிறீர்? என்னத்தை நடப்பிக்கிறீர்? 31 வானத்திலிருந்து அவர்களுக்கு அப்பத்தைப் புசிக்கக்கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடி, நம்முடைய பிதாக்கள் வனாந்தரத்தில் மன்னாவைப் புசித்தார்களே என்றார்கள். 32 இயேசு அவர்களை நோக்கி: வானத்திலிருந்து வந்த அப்பத்தை மோசே உங்களுக்குக் கொடுக்கவில்லை; என் பிதாவோ வானத்திலிருந்து வந்த மெய்யான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 33 வானத்திலிருந்திறங்கி, உலகத்துக்கு ஜீவனைக் கொடுக்கிற அப்பமே தேவன் அருளிய அப்பம் என்றார். 34 அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த அப்பத்தை எப்பொழுதும் எங்களுக்குத் தரவேண்டும் என்றார்கள். 35 இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான். 36 நீங்கள் என்னைக் கண்டிருந்தும் விசுவாசியாமலிருக்கிறீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன். 37 பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்; என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை. 38 என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன். 39 அவர் எனக்குத் தந்தவைகளில் ஒன்றையும் நான் இழந்துபோகாமல், கடைசி நாளில் அவைகளை எழுப்புவதே என்னை அனுப்பின பிதாவின் சித்தமாயிருக்கிறது. 40 குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார். 41 நான் வானத்திலிருந்து வந்த அப்பம் என்று அவர் சொன்னதினிமித்தம் யூதர்கள் அவரைக்குறித்து முறுமுறுத்து: 42 இவன் யோசேப்பின் குமாரனாகிய இயேசு அல்லவா, இவனுடைய தகப்பனையும் தாயையும் அறிந்திருக்கிறோமே; அப்படியிருக்க, நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன் என்று இவன் எப்படிச் சொல்லுகிறான் என்றார்கள். 43 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களுக்குள்ளே முறுமுறுக்கவேண்டாம். 44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன். 45 எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான். 46 தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை, இவரே பிதாவைக் கண்டவர். 47 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டென்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 48 ஜீவ அப்பம் நானே. 49 உங்கள் பிதாக்கள் வனாந்தரத்திலே மன்னாவைப் புசித்திருந்தும் மரித்தார்கள். 50 இதிலே புசிக்கிறவன் மரியாமலிருக்கும்படி வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே. 51 நானே வானத்திலிருந்திறங்கின ஜீவ அப்பம்; இந்த அப்பத்தைப் புசிக்கிறவன் என்றென்றைக்கும் பிழைப்பான்; நான் கொடுக்கும் அப்பம் உலகத்தின் ஜீவனுக்காக நான் கொடுக்கும் என் மாம்சமே என்றார். 52 அப்பொழுது யூதர்கள்: இவன் தன்னுடைய மாம்சத்தை எப்படி நமக்குப் புசிக்கக் கொடுப்பான் என்று தங்களுக்குள்ளே வாக்குவாதம்பண்ணினார்கள். 53 அதற்கு இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனுடைய மாம்சத்தைப் புசியாமலும், அவருடைய இரத்தத்தைப் பானம்பண்ணாமலும் இருந்தால் உங்களுக்குள்ளே ஜீவனில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 54 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன். 55 என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது. 56 என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான், நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன். 57 ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான். 58 வானத்திலிருந்திறங்கின அப்பம் இதுவே; இது உங்கள் பிதாக்கள் புசித்த மன்னாவைப்போலல்ல, அவர்கள் மரித்தார்களே; இந்த அப்பத்தைப் புசிக்கிறவனோ என்றென்றைக்கும் பிழைப்பான் என்றார். 59 கப்பர்நகூமிலுள்ள ஜெபஆலயத்திலே அவர் உபதேசிக்கையில் இவைகளைச் சொன்னார். 60 அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள். 61 சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ? 62 மனுஷகுமாரன் தாம் முன்னிருந்த இடத்திற்கு ஏறிப்போகிறதை நீங்கள் காண்பீர்களானால் எப்படியிருக்கும்? 63 ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது. 64 ஆகிலும் உங்களில் விசுவாசியாதவர்கள் சிலர் உண்டு என்றார்; விசுவாசியாதவர்கள் இன்னாரென்றும், தம்மைக் காட்டிக்கொடுப்பவன் இன்னானென்றும் ஆதிமுதலாக இயேசு அறிந்திருந்தபடியால், அவர் பின்னும்: 65 ஒருவன் என் பிதாவின் அருளைப் பெறாவிட்டால் என்னிடத்திற்கு வரமாட்டான் என்று இதினிமித்தமே உங்களுக்குச் சொன்னேன் என்றார். 66 அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். 67 அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார். 68 சீமோன் பேதுரு அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே. 69 நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான். 70 இயேசு அவர்களை நோக்கி: பன்னிருவராகிய உங்களை நான் தெரிந்துகொள்ளவில்லையா? உங்களுக்குள்ளும் ஒருவன் பிசாசாயிருக்கிறான் என்றார். 71 சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து பன்னிருவரிலொருவனாயிருந்தும், தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனாயிருந்தபடியினால் அவனைக்குறித்து இப்படிச் சொன்னார்.

யோவான் 7

1 இவைகளுக்குப்பின்பு, யூதர்கள் இயேசுவைக் கொலைசெய்ய வகைதேடினபடியால், அவர் யூதேயாவிலே சஞ்சரிக்க மனதில்லாமல் கலிலேயாவிலே சஞ்சரித்துவந்தார். 2 யூதருடைய கூடாரப்பண்டிகை சமீபமாயிருந்தது. 3 அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம். 4 பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள். 5 அவருடைய சகோதரரும் அவரை விசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள். 6 இயேசு அவர்களை நோக்கி: என் வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது. 7 உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது. 8 நீங்கள் இந்தப் பண்டிகைக்குப் போங்கள்; என் வேளை இன்னும் வராதபடியால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார். 9 இவைகளை அவர்களுடனே சொல்லி, பின்னுங் கலிலேயாவிலே தங்கினார். 10 அவருடைய சகோதரர் போனபின்பு, அவர் வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் பண்டிகைக்குப் போனார். 11 பண்டிகையிலே யூதர்கள் அவரைத் தேடி: அவர் எங்கேயிருக்கிறார் என்றார்கள். 12 ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டாயிற்று. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள். 13 ஆனாலும் யூதருக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்துத் தாராளமாய்ப் பேசவில்லை. 14 பாதிப்பண்டிகையானபோது, இயேசு தேவாலயத்துக்குப்போய், உபதேசம்பண்ணினார். 15 அப்பொழுது யூதர்கள்: இவர் கல்லாதவராயிருந்தும் வேத எழுத்துக்களை எப்படி அறிந்திருக்கிறார் என்று ஆச்சரியப்பட்டார்கள். 16 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது. 17 அவருடைய சித்தத்தின்படி செய்ய மனதுள்ளவனெவனோ அவன் இந்த உபதேசம் தேவனால் உண்டாயிருக்கிறதோ, நான் சுயமாய்ப் பேசுகிறேனோ என்று அறிந்துகொள்ளுவான். 18 சுயமாய்ப் பேசுகிறவன் தன் சுயமகிமையைத் தேடுகிறான், தன்னை அனுப்பினவரின் மகிமையைத் தேடுகிறவனோ உண்மையுள்ளவனாயிருக்கிறான், அவனிடத்தில் அநீதியில்லை. 19 மோசே நியாயப்பிரமாணத்தை உங்களுக்குக் கொடுக்கவில்லையா? அப்படியிருந்தும் உங்களில் ஒருவனும் அந்த நியாயப்பிரமாணத்தின்படி நடக்கிறதில்லை; நீங்கள் ஏன் என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள் என்றார். 20 ஜனங்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நீ பிசாசுபிடித்தவன்; உன்னைக் கொலைசெய்யத் தேடுகிறவன் யார் என்றார்கள். 21 இயேசு அவர்களை நோக்கி: ஒரே கிரியையைச் செய்தேன், அதைக்குறித்து எல்லாரும் ஆச்சரியப்படுகிறீர்கள். 22 விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல், பிதாக்களால் உண்டாயிற்று; பின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்; நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம் பண்ணுகிறீர்கள். 23 மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால், நான் ஓய்வுநாளில் ஒரு மனுஷனை முழுவதும் சுகமாக்கினதினாலே என்மேல் எரிச்சலாயிருக்கலாமா? 24 தோற்றத்தின்படி தீர்ப்புசெய்யாமல், நீதியின்படி தீர்ப்புசெய்யுங்கள் என்றார். 25 அப்பொழுது எருசலேம் நகரத்தாரில் சிலர்: இவனையல்லவா கொலைசெய்யத்தேடுகிறார்கள்? 26 இதோ, இவன் தாராளமாய்ப் பேசுகிறானே, ஒருவரும் இவனுக்கு ஒன்றும் சொல்லுகிறதில்லையே, மெய்யாய் இவன் கிறிஸ்துதான் என்று அதிகாரிகள் நிச்சயமாக அறிந்திருக்கிறார்களோ? 27 இவன் இன்ன இடத்திலிருந்து வந்தவனென்று நாம் அறிந்திருக்கிறோம், கிறிஸ்து வரும்போதோ, அவர் இன்ன இடத்திலிருந்து வருகிறவரென்று ஒருவனும் அறியமாட்டானே என்றார்கள். 28 அப்பொழுது இயேசு தேவாலயத்தில் உபதேசிக்கையில் சத்தமிட்டு: நீங்கள் என்னை அறிவீர்கள், நான் எங்கேயிருந்து வந்தேனென்றும் அறிவீர்கள்; நான் என்சுயமாய் வரவில்லை, என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர், அவரை நீங்கள் அறியாதிருக்கிறீர்கள். 29 நான் அவரால் வந்திருக்கிறபடியினாலும், அவர் என்னை அனுப்பியிருக்கிறபடியினாலும், நானே அவரை அறிந்திருக்கிறேன் என்றார். 30 அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை. 31 ஜனங்களில் அநேகர் அவரை விசுவாசித்து: கிறிஸ்து வரும்போது, இவர் செய்கிற அற்புதங்களைப்பார்க்கிலும் அதிகம் செய்வாரோ என்றார்கள். 32 ஜனங்கள் அவரைக்குறித்து இப்படி முறுமுறுக்கிறதைப் பரிசேயர் கேட்டபொழுது, அவரைப் பிடித்துக்கொண்டு வரும்படிக்குப் பரிசேயரும் பிரதான ஆசாரியரும் சேவகரை அனுப்பினார்கள். 33 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: இன்னுங் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருந்து, பின்பு என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன். 34 நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள்; நான் இருக்கும் இடத்திற்கு நீங்கள் வரவுங்கூடாது என்றார். 35 அப்பொழுது யூதர்கள்: இவரை நாம் காணாதபடிக்கு எங்கே போவார், கிரேக்கருக்குள்ளே சிதறியிருக்கிறவர்களிடத்திற்குப் போய், கிரேக்கருக்கு உபதேசம்பண்ணுவாரோ? 36 நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனாலும் என்னைக் காணமாட்டீர்கள் என்றும், நான் இருக்கும் இடத்துக்கு நீங்கள் வரக்கூடாது என்றும், இவர் சொன்ன வார்த்தையின் கருத்து என்னவென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். 37 பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். 38 வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். 39 தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்தஆவி இன்னும் அருளப்படவில்லை. 40 ஜனங்களில் அநேகர் இந்த வசனத்தைக் கேட்டபொழுது: மெய்யாகவே இவர் தீர்க்கதரிசியானவர் என்றார்கள். 41 வேறுசிலர்: இவர் கிறிஸ்து என்றார்கள். வேறுசிலர்: கிறிஸ்து கலிலேயாவிலிருந்தா வருவார்? 42 தாவீதின் சந்ததியிலும், தாவீது இருந்த பெத்லெகேம் ஊரிலுமிருந்து கிறிஸ்து வருவார் என்று வேதவாக்கியம் சொல்லவில்லையா என்றார்கள். 43 இவ்விதமாக அவரைக்குறித்து ஜனங்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று. 44 அவர்களில் சிலர் அவரைப் பிடிக்க மனதாயிருந்தார்கள்; ஆகிலும் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை. 45 பின்பு அந்தச் சேவகர் பிரதான ஆசாரியரிடத்திற்கும் பரிசேயரிடத்திற்கும் திரும்பிவந்தார்கள்; இவர்கள் அவர்களை நோக்கி: நீங்கள் அவனை ஏன் கொண்டுவரவில்லை என்று கேட்டார்கள். 46 சேவகர் பிரதியுத்தரமாக: அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள். 47 அப்பொழுது பரிசேயர்: நீங்களும் வஞ்சிக்கப்பட்டீர்களா? 48 அதிகாரிகளிலாவது பரிசேயரிலாவது யாதாமொருவர் அவனை விசுவாசித்ததுண்டா? 49 வேதத்தை அறியாதவர்களாகிய இந்த ஜனங்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றார்கள். 50 இராத்திரியிலே அவரிடத்திற்கு வந்தவனும் அவர்களிலொருவனுமாகிய நிக்கொதேமு என்பவன் அவர்களை நோக்கி: 51 ஒரு மனுஷன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான். 52 அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள். 53 பின்பு அவரவர் தங்கள் தங்கள் வீட்டுக்குப் போனார்கள்.

யோவான் 8

1 இயேசு ஒலிவமலைக்குப் போனார். 2 மறுநாள் காலையிலே அவர் திரும்பித் தேவாலயத்திற்கு வந்தபோது, ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள். அவர் உட்கார்ந்து அவர்களுக்கு உபதேசம்பண்ணினார். 3 அப்பொழுது விபசாரத்திலே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை வேதபாரகரும் பரிசேயரும் அவரிடத்தில் கொண்டுவந்து, அவளை நடுவே நிறுத்தி: 4 போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள். 5 இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசே நியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்ன சொல்லுகிறீர் என்றார்கள். 6 அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம் உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள். இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். 7 அவர்கள் ஓயாமல் அவரைக் கேட்டுக்கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன் என்று சொல்லி, 8 அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். 9 அவர்கள் அதைக் கேட்டு, தங்கள் மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல் சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசு தனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். 10 இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். 11 அதற்கு அவள்: இல்லை, ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை; நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார். 12 மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார். 13 அப்பொழுது பரிசேயர் அவரை நோக்கி: உன்னைக்குறித்து நீயே சாட்சி கொடுக்கிறாய்; உன்னுடைய சாட்சி உண்மையானதல்ல என்றார்கள். 14 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: என்னைக்குறித்து நானே சாட்சி கொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது; ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன்; நீங்களோ நான் எங்கேயிருந்து வருகிறேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறியீர்கள். 15 நீங்கள் மாம்சத்துக்கேற்றபடி நியாயந்தீர்க்கிறீர்கள், நான் ஒருவனையும் நியாயந்தீர்க்கிறதில்லை; 16 நான் நியாயந்தீர்த்தால், என் தீர்ப்பு சத்தியத்தின்படியிருக்கும்; ஏனெனில் நான் தனித்திருக்கவில்லை, நானும் என்னை அனுப்பின பிதாவுமாக இருக்கிறோம். 17 இரண்டுபேருடைய சாட்சி உண்மையென்று உங்கள் நியாயப்பிரமாணத்திலும் எழுதியிருக்கிறதே. 18 நான் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவனாயிருக்கிறேன், என்னை அனுப்பின பிதாவும் என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறார் என்றார். 19 அப்பொழுது அவர்கள்: உம்முடைய பிதா எங்கே என்றார்கள். இயேசு பிரதியுத்தரமாக: என்னையும் அறியீர்கள், என் பிதாவையும் அறியீர்கள்; நீங்கள் என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிவீர்கள் என்றார். 20 தேவாலயத்திலே இயேசு உபதேசம்பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்கவில்லை. 21 இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நான் போகிறேன், நீங்கள் என்னைத் தேடி உங்கள் பாவங்களிலே சாவீர்கள்; நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்றார். 22 அப்பொழுது யூதர்கள்: நான் போகிற இடத்துக்கு வர உங்களால் கூடாது என்கிறானே, தன்னைத்தான் கொலைசெய்துகொள்வானோ என்று பேசிக்கொண்டார்கள். 23 அவர் அவர்களை நோக்கி: நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்; நீங்கள் இந்த உலகத்திலிருந்துண்டானவர்கள், நான் இந்த உலகத்திலிருந்துண்டானவனல்ல. 24 ஆகையால் நீங்கள் உங்கள் பாவங்களில் சாவீர்கள் என்று உங்களுக்குச் சொன்னேன்; நானே அவர் என்று நீங்கள் விசுவாசியாவிட்டால் உங்கள் பாவங்களிலே சாவீர்கள் என்றார். 25 அதற்கு அவர்கள்: நீர் யார் என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நான் ஆதிமுதலாய் உங்களுக்குச் சொல்லியிருக்கிறவர்தான். 26 உங்களைக்குறித்துப் பேசவும் நியாயந்தீர்க்கவும் எனக்கு அநேக காரியங்களுண்டு. என்னை அனுப்பினவர் சத்தியமுள்ளவர்; நான் அவரிடத்தில் கேட்டவைகளையே உலகத்துக்குச் சொல்லுகிறேன் என்றார். 27 பிதாவைக்குறித்துப் பேசினாரென்று அவர்கள் அறியாதிருந்தார்கள். 28 ஆதலால் இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் மனுஷகுமாரனை உயர்த்தின பின்பு, நானே அவரென்றும், நான் என் சுயமாய் ஒன்றும் செய்யாமல், என் பிதா எனக்குப் போதித்தபடியே இவைகளைச் சொன்னேன் என்றும் அறிவீர்கள். 29 என்னை அனுப்பினவர் என்னுடனேகூட இருக்கிறார், பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால் அவர் என்னைத் தனியே இருக்கவிடவில்லை என்றார். 30 இவைகளை அவர் சொல்லுகையில், அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். 31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; 32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். 33 அவர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நாங்கள் ஆபிரகாமின் சந்ததியாயிருக்கிறோம், நாங்கள் ஒருக்காலும் ஒருவனுக்கும் அடிமைகளாயிருக்கவில்லை; விடுதலையாவீர்களென்று நீர் எப்படிச் சொல்லுகிறீர் என்றார்கள். 34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: பாவஞ்செய்கிறவன் எவனும் பாவத்துக்கு அடிமையாயிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 35 அடிமையானவன் என்றைக்கும் வீட்டிலே நிலைத்திரான்; குமாரன் என்றைக்கும் நிலைத்திருக்கிறார். 36 ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். 37 நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம்பெறாதபடியால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள். 38 நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார். 39 அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே. 40 தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே. 41 நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்குண்டு, அவர் தேவன் என்றார்கள். 42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார். 43 என் வசனத்தை நீங்கள் ஏன் அறியாமலிருக்கிறீர்கள்? என் உபதேசத்தைக் கேட்க மனதில்லாதிருக்கிறதினால் அல்லவா? 44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான். 45 நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொல்லுகிறபடியினாலே நீங்கள் என்னை விசுவாசிக்கிறதில்லை. 46 என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. 47 தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள் என்றார். 48 அப்பொழுது யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: உன்னைச் சமாரியனென்றும், பிசாசுபிடித்தவனென்றும் நாங்கள் சொல்லுகிறது சரிதானே என்றார்கள். 49 அதற்கு இயேசு: நான் பிசாசு பிடித்தவனல்ல, நான் என் பிதாவைக் கனம்பண்ணுகிறேன், நீங்கள் என்னைக் கனவீனம்பண்ணுகிறீர்கள். 50 நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார். 51 ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லை என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 52 அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: நீ பிசாசுபிடித்தவனென்று இப்பொழுது அறிந்திருக்கிறோம்; ஆபிரகாமும் தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள். நீயோ: ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால் என்றென்றைக்கும் மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்கிறாய். 53 எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள். 54 இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள். 55 ஆயினும் நீங்கள் அவரை அறியவில்லை, நான் அவரை அறிந்திருக்கிறேன்; அவரை அறியேன் என்று சொல்வேனாகில் உங்களைப்போல நானும் பொய்யனாயிருப்பேன்; அவரை நான் அறிந்து, அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டிருக்கிறேன். 56 உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார். 57 அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள். 58 அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 59 அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.

யோவான் 9

1 அவர் அப்புறம் போகையில் பிறவிக் குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார். 2 அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள். 3 இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான். 4 பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது. 5 நான் உலகத்திலிருக்கையில் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன் என்றார். 6 இவைகளைச் சொல்லி, அவர் தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களின்மேல் பூசி: 7 நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான். 8 அப்பொழுது அயலகத்தாரும், அவன் குருடனாயிருக்கையில் அவனைக் கண்டிருந்தவர்களும்: இவன் உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தவனல்லவா என்றார்கள். 9 சிலர்: அவன்தான் என்றார்கள். வேறுசிலர்: அவனுடைய சாயலாயிருக்கிறான் என்றார்கள். அவனோ: நான்தான் அவன் என்றான். 10 அப்பொழுது அவர்கள் அவனை நோக்கி: உன் கண்கள் எப்படித் திறக்கப்பட்டது என்றார்கள். 11 அவன் பிரதியுத்தரமாக: இயேசு என்னப்பட்ட ஒருவர் சேறுண்டாக்கி, என் கண்களின்மேல் பூசி, நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். அப்படியே நான் போய்க் கழுவி, பார்வையடைந்தேன் என்றான். 12 அப்பொழுது அவர்கள்: அவர் எங்கே என்றார்கள். அவன்: எனக்குத் தெரியாது என்றான். 13 குருடனாயிருந்த அவனைப் பரிசேயரிடத்திற்குக் கொண்டுபோனார்கள். 14 இயேசு சேறுண்டாக்கி, அவன் கண்களைத் திறந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது. 15 ஆகையால் பரிசேயரும் அவனை நோக்கி: நீ எப்படிப் பார்வையடைந்தாய் என்று மறுபடியும் கேட்டார்கள். அதற்கு அவன்: அவர் என் கண்களின்மேல் சேற்றைப் பூசினார், நான் கழுவினேன், காண்கிறேன் என்றான். 16 அப்பொழுது பரிசேயரில் சிலர்: அந்த மனுஷன் ஓய்வுநாளைக் கைக்கொள்ளாததினால் அவன் தேவனிடத்திலிருந்து வந்தவனல்ல என்றார்கள். வேறுசிலர்: பாவியாயிருக்கிற மனுஷன் இப்படிப்பட்ட அற்புதங்களை எப்படிச் செய்வான் என்றார்கள். இவ்விதமாய் அவர்களுக்குள்ளே பிரிவினையுண்டாயிற்று. 17 மறுபடியும் அவர்கள் குருடனை நோக்கி: உன் கண்களைத் திறந்தானே, அவனைக்குறித்து நீ என்ன சொல்லுகிறாய் என்றார்கள். அதற்கு அவன்: அவர் தீர்க்கதரிசி என்றான். 18 அவன் குருடனாயிருந்து பார்வையடைந்ததை யூதர்கள் நம்பாமல், பார்வையடைந்தவனுடைய தாய்தகப்பன்மாரை அழைப்பித்து, 19 அவர்களை நோக்கி: உங்கள் குமாரன் குருடனாய்ப் பிறந்தான் என்று சொல்லுகிறீர்களே, அவன் இவன்தானா? இவனானால், இப்பொழுது இவன் எப்படிப் பார்வையடைந்தான் என்று கேட்டார்கள். 20 தாய்தகப்பன்மார் பிரதியுத்தரமாக: இவன் எங்கள் குமாரன்தான் என்றும், குருடனாய்ப் பிறந்தான் என்றும் எங்களுக்குத் தெரியும். 21 இப்பொழுது இவன் பார்வையடைந்த வகை எங்களுக்குத் தெரியாது; இவன் கண்களைத் திறந்தவன் இன்னான் என்பதும் எங்களுக்குத் தெரியாது; இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனைக் கேளுங்கள், இவனே சொல்லுவான் என்றார்கள். 22 அவனுடைய தாய்தகப்பன்மார் யூதர்களுக்குப் பயந்ததினால் இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவைக் கிறிஸ்து என்று எவனாவது அறிக்கைபண்ணினால் அவனை ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கவேண்டுமென்று யூதர்கள் அதற்குமுன்னமே கட்டுப்பாடு செய்திருந்தார்கள். 23 அதினிமித்தம்: இவன் வயதுள்ளவனாயிருக்கிறான், இவனையே கேளுங்கள் என்று அவன் தாய்தகப்பன்மார் சொன்னார்கள். 24 ஆதலால் அவர்கள் குருடனாயிருந்த மனுஷனை இரண்டாந்தரம் அழைத்து: நீ தேவனை மகிமைப்படுத்து; இந்த மனுஷன் பாவியென்று நாங்கள் அறிந்திருக்கிறோம் என்றார்கள். 25 அவன் பிரதியுத்தரமாக: அவர் பாவியென்று எனக்குத் தெரியாது; நான் குருடனாயிருந்தேன், இப்பொழுது காண்கிறேன்; இது ஒன்றுதான் எனக்குத் தெரியும் என்றான். 26 அவர்கள் மறுபடியும் அவனை நோக்கி: உனக்கு என்னசெய்தான், உன் கண்களை எப்படித் திறந்தான் என்றார்கள். 27 அவன் பிரதியுத்தரமாக: முன்னமே உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் கேளாமற்போனீர்கள்; மறுபடியும் கேட்க வேண்டியதென்ன? அவருக்குச் சீஷராக உங்களுக்கும் மனதுண்டோ என்றான். 28 அப்பொழுது அவர்கள் அவனை வைது: நீ அவனுடைய சீஷன், நாங்கள் மோசேயினுடைய சீஷர். 29 மோசேயுடனே தேவன் பேசினாரென்று அறிவோம், இவன் எங்கேயிருந்து வந்தவனென்று அறியோம் என்றார்கள். 30 அதற்கு அந்த மனுஷன்: அவர் என் கண்களைத் திறந்திருந்தும், அவர் எங்கேயிருந்து வந்தவரென்று நீங்கள் அறியாதிருக்கிறது ஆச்சரியமான காரியம். 31 பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். 32 பிறவிக்குருடனுடைய கண்களை ஒருவன் திறந்தானென்று உலகமுண்டானதுமுதல் கேள்விப்பட்டதில்லையே. 33 அவர் தேவனிடத்திலிருந்து வராதிருந்தால் ஒன்றும் செய்யமாட்டாரே என்றான். 34 அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: முழுவதும் பாவத்தில் பிறந்த நீ எங்களுக்குப் போதிக்கிறாயோ என்று சொல்லி, அவனைப் புறம்பே தள்ளிவிட்டார்கள். 35 அவனை அவர்கள் புறம்பே தள்ளிவிட்டதை இயேசு கேள்விப்பட்டு, அவனைக் கண்டபோது: நீ தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறாயா என்றார். 36 அதற்கு அவன்: ஆண்டவரே, அவரிடத்தில் நான் விசுவாசமாயிருக்கும்படிக்கு அவர் யார் என்றான். 37 இயேசு அவனை நோக்கி: நீ அவரைக் கண்டிருக்கிறாய், உன்னுடனே பேசுகிறவர் அவர்தான் என்றார். 38 உடனே அவன்: ஆண்டவரே, விசுவாசிக்கிறேன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டான். 39 அப்பொழுது இயேசு: காணாதவர்கள் காணும்படியாகவும், காண்கிறவர்கள் குருடராகும்படியாகவும் நியாயத்தீர்ப்புக்கு நான் இந்த உலகத்தில் வந்தேன் என்றார். 40 அவருடனேகூட இருந்த பரிசேயரில் சிலர் இவைகளைக் கேட்டபொழுது: நாங்களும் குருடரோ என்றார்கள். 41 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் குருடராயிருந்தால் உங்களுக்குப் பாவமிராது; நீங்கள் காண்கிறோம் என்று சொல்லுகிறபடியினால் உங்கள் பாவம் நிலைநிற்கிறது என்றார்.

யோவான் 10

1 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். 2 வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான். 3 வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக் கொண்டு போகிறான். 4 அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது. 5 அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார். 6 இந்த உவமையை இயேசு அவர்களுடனே சொன்னார்; அவர்களோ அவர் சொன்னவைகளின் கருத்தை அறியவில்லை. 7 ஆதலால் இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: நானே ஆடுகளுக்கு வாசல் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். 8 எனக்கு முன்னே வந்தவர்களெல்லாரும் கள்ளரும் கொள்ளைக்காரருமாயிருக்கிறார்கள்; ஆடுகள் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை. 9 நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும் சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான். 10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். 11 நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான். 12 மேய்ப்பனாயிராதவனும், ஆடுகள் தனக்குச் சொந்தமல்லாதவனுமான கூலியாள் ஓநாய் வருகிறதைக் கண்டு ஆடுகளை விட்டு ஓடிப்போகிறான்; அப்பொழுது ஓநாய் ஆடுகளைப்பீறி, அவைகளைச் சிதறடிக்கும். 13 கூலியாள் கூலிக்காக வேலைசெய்கிறவனாகையால் ஓடிப்போகிறான், ஆடுகளுக்காக அவன் கவலைப்படான். 14 நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறதுபோலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறதுபோலவும், 15 நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன். 16 இந்தத் தொழுவத்திலுள்ளவைகளல்லாமல் வேறே ஆடுகளும் எனக்கு உண்டு; அவைகளையும் நான் கொண்டுவரவேண்டும், அவைகள் என் சத்தத்துக்குச் செவிகொடுக்கும், அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனுமாகும். 17 நான் என் ஜீவனை மறுபடியும் அடைந்துகொள்ளும்படிக்கு அதைக் கொடுக்கிறபடியினால் பிதா என்னில் அன்பாயிருக்கிறார். 18 ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு. இந்தக் கட்டளையை என் பிதாவினிடத்தில் பெற்றுக்கொண்டேன் என்றார். 19 இந்த வசனங்களினிமித்தம் யூதருக்குள்ளே மறுபடியும் பிரிவினையுண்டாயிற்று. 20 அவர்களில் அநேகர்: இவன் பிசாசுபிடித்தவன், பயித்தியக்காரன்; ஏன் இவனுக்குச் செவிகொடுக்கிறீர்கள் என்றார்கள். 21 வேறே சிலர்: இவைகள் பிசாசுபிடித்தவனுடைய வசனங்களல்லவே. குருடருடைய கண்களைப் பிசாசு திறக்கக்கூடுமா என்றார்கள். 22 பின்பு எருசலேமிலே தேவாலயப் பிரதிஷ்டைபண்டிகை வந்தது; மாரிகாலமுமாயிருந்தது. 23 இயேசு தேவாலயத்தில் சாலொமோனுடைய மண்டபத்திலே உலாவிக்கொண்டிருந்தார். 24 அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள். 25 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அதை உங்களுக்குச் சொன்னேன், நீங்கள் விசுவாசிக்கவில்லை; என் பிதாவின் நாமத்தினாலே நான் செய்கிற கிரியைகளே என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறது. 26 ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள். 27 என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது. 28 நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக் கொள்வதுமில்லை. 29 அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. 30 நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். 31 அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். 32 இயேசு அவர்களை நோக்கி: நான் என் பிதாவினாலே அநேக நற்கிரியைகளை உங்களுக்குக் காண்பித்தேன், அவைகளில் எந்தக் கிரியையினிமித்தம் என்மேல் கல்லெறிகிறீர்கள் என்றார். 33 யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள். 34 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? 35 தேவவசனத்தைப் பெற்றுக்கொண்டவர்களைத் தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேதவாக்கியமும் தவறாததாயிருக்க, 36 பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? 37 என் பிதாவின் கிரியைகளை நான் செய்யாதிருந்தால், நீங்கள் என்னை விசுவாசிக்கவேண்டியதில்லை. 38 செய்தேனேயானால், நீங்கள் என்னை விசுவாசியாதிருந்தாலும், பிதா என்னிலும் நான் அவரிலும் இருக்கிறதை நீங்கள் அறிந்து விசுவாசிக்கும்படி அந்தக் கிரியைகளை விசுவாசியுங்கள் என்றார். 39 இதினிமித்தம் அவர்கள் மறுபடியும் அவரைப் பிடிக்கத் தேடினார்கள், அவரோ அவர்கள் கைக்குத் தப்பி, 40 யோர்தானுக்கு அக்கரையிலே முன்னே யோவான் ஞானஸ்நானங் கொடுத்துக்கொண்டிருந்த இடத்துக்குத் திரும்பிப்போய், அங்கே தங்கினார். 41 அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றார்கள். 42 அவ்விடத்திலே அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

யோவான் 11

1 மரியாளும் அவள் சகோதரியாகிய மார்த்தாளும் இருந்த பெத்தானியா கிராமத்திலுள்ளவனாகிய லாசரு என்னும் ஒருவன் வியாதிப்பட்டிருந்தான். 2 கர்த்தருக்குப் பரிமளதைலம் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தவள் அந்த மரியாளே; அவளுடைய சகோதரனாகிய லாசரு வியாதியாயிருந்தான். 3 அப்பொழுது அவனுடைய சகோதரிகள்: ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள். 4 இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார். 5 இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார். 6 அவன் வியாதியாயிருக்கிறதாக அவர் கேள்விப்பட்டபொழுது, தாம் இருந்த இடத்திலே பின்னும் இரண்டுநாள் தங்கினார். 7 அதன்பின்பு அவர் தம்முடைய சீஷரை நோக்கி: நாம் மறுபடியும் யூதேயாவுக்குப் போவோம் வாருங்கள் என்றார். 8 அதற்குச் சீஷர்கள்: ரபீ, இப்பொழுதுதான் யூதர் உம்மைக் கல்லெறியத் தேடினார்களே, மறுபடியும் நீர் அவ்விடத்திற்குப் போகலாமா என்றார்கள். 9 இயேசு பிரதியுத்தரமாக: பகலுக்குப் பன்னிரண்டு மணிநேரம் இல்லையா? ஒருவன் பகலிலே நடந்தால் அவன் இந்த உலகத்தின் வெளிச்சத்தைக் காண்கிறபடியினால் இடறமாட்டான். 10 ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் என்றார். 11 இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார். 12 அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள். 13 இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள். 14 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாய்ச் சொல்லி; 15 நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார். 16 அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான். 17 இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார். 18 பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டுமைல் தூரத்திலிருந்தது. 19 யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள். 20 இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள். 21 மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். 22 இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். 23 இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். 24 அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். 25 இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; 26 உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். 27 அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள். 28 இவைகளைச் சொன்னபின்பு, அவள்போய், தன் சகோதரியாகிய மரியாளை இரகசியமாய் அழைத்து: போதகர் வந்திருக்கிறார், உன்னை அழைக்கிறார் என்றாள். 29 அவள் அதைக் கேட்டவுடனே, சீக்கிரமாய் எழுந்து, அவரிடத்தில் வந்தாள். 30 இயேசு இன்னும் கிராமத்துக்குள் வராமல், மார்த்தாள் தம்மைச் சந்தித்த இடத்திலே இருந்தார். 31 அப்பொழுது, வீட்டிலே அவளுடனேகூட இருந்து அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்த யூதர்கள், மரியாள் சீக்கிரமாய் எழுந்துபோகிறதைக் கண்டு: அவள் கல்லறையினிடத்தில் அழுகிறதற்குப் போகிறாள் என்று சொல்லி, அவளுக்குப் பின்னே போனார்கள். 32 இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள். 33 அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து: 34 அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள். 35 இயேசு கண்ணீர் விட்டார். 36 அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்! 37 அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர், இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள். 38 அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது. 39 இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள். 40 இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார். 41 அப்பொழுது மரித்தவன் வைக்கப்பட்ட இடத்திலிருந்த கல்லை எடுத்துப்போட்டார்கள். இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். 42 நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார். 43 இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார். 44 அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார். 45 அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். 46 அவர்களில் சிலர் பரிசேயரிடத்தில் போய், இயேசு செய்தவைகளை அவர்களுக்கு அறிவித்தார்கள். 47 அப்பொழுது பிரதான ஆசாரியரும் பரிசேயரும் ஆலோசனைச் சங்கத்தைக் கூடிவரச்செய்து, நாம் என்னசெய்கிறது? இந்த மனுஷன் அநேக அற்புதங்களைச் செய்கிறானே. 48 நாம் இவனை இப்படி விட்டுவிட்டால், எல்லாரும் இவனை விசுவாசிப்பார்கள்; அப்பொழுது ரோமர் வந்து நம்முடைய ஸ்தானத்தையும் ஜனத்தையும் அழித்துப் போடுவார்களே என்றார்கள். 49 அப்பொழுது அவர்களில் ஒருவனும் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனுமாகிய காய்பா என்பவன் அவர்களை நோக்கி: உங்களுக்கு ஒன்றுந் தெரியாது; 50 ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள் என்றான். 51 இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும், 52 அந்த ஜனங்களுக்காகமாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான். 53 அந்நாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள். 54 ஆகையால் இயேசு அதன்பின்பு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல், அவ்விடம்விட்டு வனாந்தரத்துக்குச் சமீபமான இடமாகிய எப்பிராயீம் என்னப்பட்ட ஊருக்குப்போய், அங்கே தம்முடைய சீஷருடனேகூடத் தங்கியிருந்தார். 55 யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது. அதற்கு முன்னே அநேகர் தங்களைச் சுத்திகரித்துக்கொள்ளும்பொருட்டு நாட்டிலிருந்து எருசலேமுக்குப் போனார்கள். 56 அங்கே அவர்கள் இயேசுவைத் தேடிக்கொண்டு தேவாலயத்தில் நிற்கையில், ஒருவரையொருவர் நோக்கி: உங்களுக் கெப்படித் தோன்றுகிறது, அவர் பண்டிகைக்கு வரமாட்டாரோ என்று பேசிக்கொண்டார்கள். 57 பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவரைப் பிடிக்கும்படி யோசித்து, அவர் இருக்கிற இடத்தை எவனாவது அறிந்திருந்தால், அதை அறிவிக்கவேண்டுமென்று கட்டளையிட்டிருந்தார்கள்.

யோவான் 12

1 பஸ்காபண்டிகை வர ஆறுநாளைக்கு முன்னே இயேசு தாம் மரணத்திலிருந்து எழுப்பின லாசரு இருந்த பெத்தானியாவுக்கு வந்தார். 2 அங்கே அவருக்கு இராவிருந்து பண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனேகூடப் பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான். 3 அப்பொழுது மரியாள் விலையேறப்பெற்ற களங்கமில்லாத நளதம் என்னும் தைலத்தில் ஒரு இராத்தல் கொண்டுவந்து, அதை இயேசுவின் பாதங்களில் பூசி, தன் தலைமயிரால் அவருடைய பாதங்களைத் துடைத்தாள்; அந்த வீடு முழுவதும் தைலத்தின் பரிமளத்தினால் நிறைந்தது. 4 அப்பொழுது அவருடைய சீஷரில் ஒருவனும் அவரைக் காட்டிக்கொடுக்கப் போகிறவனுமாகிய சீமோனுடைய குமாரனான யூதாஸ்காரியோத்து: 5 இந்தத் தைலத்தை முந்நூறு பணத்துக்கு விற்று, தரித்திரருக்குக் கொடாமல் போனதென்ன என்றான். 6 அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான். 7 அப்பொழுது இயேசு: இவளை விட்டுவிடு, என்னை அடக்கம்பண்ணும் நாளுக்காக இதை வைத்திருந்தாள். 8 தரித்திரர் எப்பொழுதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்; நான் எப்பொழுதும் உங்களிடத்தில் இரேன் என்றார். 9 அப்பொழுது யூதரில் திரளான ஜனங்கள் அவர் அங்கேயிருக்கிறதை அறிந்து, இயேசுவினிமித்தமாகமாத்திரம் அல்ல, அவர் மரித்தோரிலிருந்தெழுப்பின லாசருவைக் காணும்படியாகவும் வந்தார்கள். 10 லாசருவினிமித்தமாக யூதர்களில் அநேகர் போய், இயேசுவினிடத்தில் விசுவாசம் வைத்தபடியால், 11 பிரதான ஆசாரியர்கள் லாசருவையும் கொலைசெய்ய ஆலோசனைபண்ணினார்கள். 12 மறுநாளிலே இயேசு எருசலேமுக்கு வருகிறாரென்று பண்டிகைக்கு வந்த திரளான ஜனங்கள் கேள்விப்பட்டு, 13 குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு, அவருக்கு எதிர்கொண்டுபோகும்படி புறப்பட்டு: ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இஸ்ரவேலின் ராஜா ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று ஆர்ப்பரித்தார்கள். 14 அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிறபிரகாரமாக, 15 இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார். 16 இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக் குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள். 17 அன்றியும் அவருடனேகூட இருந்த ஜனங்கள் அவர் லாசருவைக் கல்லறையிலிருந்து வெளியே வரவழைத்து, அவனை உயிரோடே எழுப்பினாரென்று சாட்சிகொடுத்தார்கள். 18 அப்படிப்பட்ட அற்புதத்தை அவர் செய்தார் என்று ஜனங்கள் கேள்விப்பட்டதினால் அவர்கள் அவருக்கு எதிர்கொண்டு போனார்கள். 19 அப்பொழுது பரிசேயர் ஒருவரையொருவர் நோக்கி: நீங்கள் செய்கிறதெல்லாம் வீணென்று அறிகிறதில்லையா? இதோ, உலகமே அவனுக்குப் பின்சென்று போயிற்றே என்றார்கள். 20 பண்டிகையில் ஆராதனை செய்யவந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள். 21 அவர்கள் கலிலேயாநாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள். 22 பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள். 23 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது. 24 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும். 25 தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான். 26 ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன், நான் எங்கே இருக்கிறேனோ அங்கே என் ஊழியக்காரனும் இருப்பான்; ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார். 27 இப்பொழுது என் ஆத்துமா கலங்குகிறது, நான் என்ன சொல்லுவேன். பிதாவே, இந்த வேளையினின்று என்னை இரட்சியும் என்று சொல்வேனோ; ஆகிலும், இதற்காகவே இந்த வேளைக்குள் வந்தேன். 28 பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. 29 அங்கே நின்றுகொண்டிருந்து, அதைக் கேட்ட ஜனங்கள்: இடிமுழக்கமுண்டாயிற்று என்றார்கள். வேறுசிலர்: தேவதூதன் அவருடனே பேசினான் என்றார்கள். 30 இயேசு அவர்களை நோக்கி: இந்தச் சத்தம் என்னிமித்தம் உண்டாகாமல் உங்கள் நிமித்தமே உண்டாயிற்று. 31 இப்பொழுதே இந்த உலகத்துக்கு நியாயத்தீர்ப்பு உண்டாகிறது; இப்பொழுதே இந்த உலகத்தின் அதிபதி புறம்பாகத் தள்ளப்படுவான். 32 நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார். 33 தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறிக்கும்படி இப்படிச் சொன்னார். 34 ஜனங்கள் அவரை நோக்கி: கிறிஸ்து என்றென்றைக்கும் இருக்கிறார் என்று வேதத்தில் சொல்லியதை நாங்கள் கேட்டிருக்கிறோம், அப்படியிருக்க மனுஷகுமாரன் உயர்த்தப்படவேண்டியதென்று எப்படிச் சொல்லுகிறீர்; இந்த மனுஷகுமாரன் யார் என்றார்கள். 35 அதற்கு இயேசு: இன்னும் கொஞ்சக்காலம் ஒளி உங்களிடத்தில் இருக்கும்; இருளில் நீங்கள் அகப்படாதபடிக்கு ஒளி உங்களோடிருக்கையில் நடவுங்கள்; இருளில் நடக்கிறவன் தான் போகிற இடம் இன்னதென்று அறியான். 36 ஒளி உங்களோடிருக்கையில் நீங்கள் ஒளியின் பிள்ளைகளாகும்படிக்கு, ஒளியினிடத்தில் விசுவாசமாயிருங்கள் என்றார். இவைகளை இயேசு சொல்லி, அவர்களை விட்டு மறைந்தார். 37 அவர் இத்தனை அற்புதங்களை அவர்களுக்கு முன்பாகச் செய்திருந்தும், அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை. 38 கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடைய புயம் யாருக்கு வெளிப்பட்டது என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்ன வசனம் நிறைவேறும்படி இப்படி நடந்தது. 39 ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல்போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்: 40 அவர்கள் கண்களினால் காணாமலும், இருதயத்தினால் உணராமலும், குணப்படாமலும் இருக்கும்படிக்கும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமல் இருக்கும்படிக்கும், அவர்களுடைய கண்களை அவர் குருடாக்கி, அவர்கள் இருதயத்தைக் கடினமாக்கினார் என்றான். 41 ஏசாயா அவருடைய மகிமையைக்கண்டு, அவரைக்குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான். 42 ஆகிலும் அதிகாரிகளிலும் அநேகர் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள். அப்படியிருந்தும் ஜெபஆலயத்துக்குப் புறம்பாக்கப்படாதபடி, பரிசேயர்நிமித்தம் அதை அறிக்கைபண்ணாதிருந்தார்கள். 43 அவர்கள் தேவனால் வருகிற மகிமையிலும் மனுஷரால் வருகிற மகிமையை அதிகமாய் விரும்பினார்கள். 44 அப்பொழுது இயேசு சத்தமிட்டு: என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் என்னிடத்தில் அல்ல, என்னை அனுப்பினவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறான். 45 என்னைக் காண்கிறவன் என்னை அனுப்பினவரைக் காண்கிறான். 46 என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன். 47 ஒருவன் என் வார்த்தைகளைக் கேட்டும் விசுவாசியாமற்போனால், அவனை நான் நியாயந்தீர்ப்பதில்லை; நான் உலகத்தை நியாயந்தீர்க்கவராமல், உலகத்தை இரட்சிக்கவந்தேன். 48 என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும். 49 நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். 50 அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார்.

யோவான் 13

1 பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார். 2 சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம் பண்ணிக்கொண்டிருக்கையில்; 3 தம்முடைய கையில் பிதா எல்லாவற்றையும் ஒப்புக்கொடுத்தாரென்பதையும், தாம் தேவனிடத்திலிருந்து வந்ததையும், தேவனிடத்திற்குப் போகிறதையும் இயேசு அறிந்து; 4 போஜனத்தை விட்டெழுந்து, வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, 5 பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினார். 6 அவர் சீமோன் பேதுருவினிடத்தில் வந்தபோது, அவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா என்றான். 7 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் செய்கிறது இன்னதென்று இப்பொழுது நீ அறியாய், இனிமேல் அறிவாய் என்றார். 8 பேதுரு அவரை நோக்கி: நீர் ஒருக்காலும் என் கால்களைக் கழுவப்படாது என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னைக் கழுவாவிட்டால் என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை என்றார். 9 அதற்குச் சீமோன் பேதுரு: ஆண்டவரே, என் கால்களைமாத்திரமல்ல, என் கைகளையும் என் தலையையும்கூடக் கழுவவேண்டும் என்றான். 10 இயேசு அவனை நோக்கி: முழுகினவன் தன் கால்களைமாத்திரம் கழுவவேண்டியதாயிருக்கும், மற்றப்படி அவன் முழுவதும் சுத்தமாயிருக்கிறான்; நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள்; ஆகிலும் எல்லாரும் அல்ல என்றார். 11 தம்மைக் காட்டிக்கொடுக்கிறவனை அவர் அறிந்திருந்தபடியினால் நீங்களெல்லாரும் சுத்தமுள்ளவர்கள் அல்ல என்றார். 12 அவர்களுடைய கால்களை அவர் கழுவினபின்பு, தம்முடைய வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, திரும்ப உட்கார்ந்து, அவர்களை நோக்கி: நான் உங்களுக்குச் செய்ததை அறிந்திருக்கிறீர்களா? 13 நீங்கள் என்னைப் போதகரென்றும், ஆண்டவரென்றும் சொல்லுகிறீர்கள், நீங்கள் சொல்லுகிறது சரியே, நான் அவர்தான். 14 ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். 15 நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். 16 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல. 17 நீங்கள் இவைகளை அறிந்திருக்கிறபடியினால், இவைகளைச் செய்வீர்களானால், பாக்கியவான்களாயிருப்பீர்கள். 18 உங்களெல்லாரையுங்குறித்து நான் பேசவில்லை, நான் தெரிந்துகொண்டவர்களை அறிவேன்; ஆகிலும் வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, என்னுடனே அப்பம் புசிக்கிறவன் என்மேல் தன் குதிகாலைத் தூக்கினான். 19 அது நடக்கும்போது நானே அவரென்று நீங்கள் விசுவாசிக்கும்பொருட்டு, இப்பொழுது அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன். 20 நான் அனுப்புகிறவனை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான், என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். 21 இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார். 22 அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள். 23 அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான். 24 யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான். 25 அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றான். 26 இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார். 27 அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார். 28 அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவனும் அறியவில்லை. 29 யூதாஸ் பணப்பையை வைத்துக் கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள். 30 அவன் அந்தத் துணிக்கையை வாங்கினவுடனே புறப்பட்டுப்போனான்; அப்பொழுது இராக்காலமாயிருந்தது. 31 அவன் புறப்பட்டுப்போனபின்பு இயேசு: இப்பொழுது மனுஷகுமாரன் மகிமைப்படுகிறார், தேவனும் அவரில் மகிமைப்படுகிறார். 32 தேவன் அவரில் மகிமைப்பட்டிருந்தால், தேவன் அவரைத் தம்மில் மகிமைப்படுத்துவார், சீக்கிரமாய் அவரை மகிமைப்படுத்துவார். 33 பிள்ளைகளே, இன்னும் கொஞ்சக்காலம் நான் உங்களுடனேகூட இருப்பேன்; நீங்கள் என்னைத் தேடுவீர்கள்; ஆனாலும் நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரக்கூடாதென்று நான் யூதரோடே சொன்னதுபோல இப்பொழுது உங்களோடும் சொல்லுகிறேன். 34 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள்; நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருங்கள் என்கிற புதிதான கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன். 35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார். 36 சீமோன்பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போகிறீர் என்றான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் போகிற இடத்துக்கு இப்பொழுது நீ என் பின்னே வரக்கூடாது, பிற்பாடு என் பின்னே வருவாய் என்றார். 37 பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, நான் இப்பொழுது உமக்குப் பின்னே ஏன் வரக்கூடாது? உமக்காக என் ஜீவனையும் கொடுப்பேன் என்றான். 38 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்காக உன் ஜீவனைக் கொடுப்பாயோ? சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாயென்று, மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

யோவான் 14

1 உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். 2 என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். 3 நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். 4 நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார். 5 தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். 6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். 7 என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இதுமுதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். 8 பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும் என்றான். 9 அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படிச் சொல்லுகிறாய்? 10 நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். 11 நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள். 12 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான். 13 நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். 14 என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன். 15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். 16 நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். 17 உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். 18 நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன். 19 இன்னும் கொஞ்சக்காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள். 20 நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள். 21 என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். 22 ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப்போகிற காரணமென்ன என்றான். 23 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம். 24 என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக்கொள்ளமாட்டான். நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது. 25 நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன். 26 என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார். 27 சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக. 28 நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக் குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார். 29 இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன். 30 இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை. 31 நான் பிதாவில் அன்பாயிருக்கிறேன் என்றும், பிதா எனக்குக் கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.

யோவான் 15

1 நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத்தோட்டக்காரர். 2 என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார். 3 நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள். 4 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். 5 நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. 6 ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம். 7 நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும். 8 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள். 9 பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள். 10 நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். 11 என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன். 12 நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது. 13 ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. 14 நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள். 15 இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன். 16 நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன். 17 நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்றே இவைகளை உங்களுக்குக் கற்பிக்கிறேன். 18 உலகம் உங்களைப் பகைத்தால், அது உங்களைப் பகைக்கிறதற்குமுன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள். 19 நீங்கள் உலகத்தாராயிருந்தால், உலகம் தன்னுடையதைச் சிநேகித்திருக்கும்; நீங்கள் உலகத்தாராயிராதபடியினாலும், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்துகொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது. 20 ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்லவென்று நான் உங்களுக்குச் சொன்ன வார்த்தையை நினைத்துக்கொள்ளுங்கள். அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்; அவர்கள் என் வசனத்தைக் கைக்கொண்டதுண்டானால், உங்கள் வசனத்தையும் கைக்கொள்ளுவார்கள். 21 அவர்கள் என்னை அனுப்பினவரை அறியாதபடியினால் என் நாமத்தினிமித்தமே இவைகளையெல்லாம் உங்களுக்குச் செய்வார்கள். 22 நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை. 23 என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான். 24 வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள். 25 முகாந்தரமில்லாமல் என்னைப் பகைத்தார்கள் என்று அவர்களுடைய வேதத்தில் எழுதியிருக்கிற வாக்கியம் நிறைவேறும்படிக்கு இப்படியாயிற்று. 26 பிதாவினிடத்திலிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிறவரும், பிதாவினிடத்திலிருந்து புறப்படுகிறவருமாகிய சத்திய ஆவியான தேற்றரவாளன் வரும்போது, அவர் என்னைக்குறித்துச் சாட்சி கொடுப்பார். 27 நீங்களும் ஆதிமுதல் என்னுடனேகூட இருந்தபடியால் எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.

யோவான் 16

1 நீங்கள் இடறலடையாதபடிக்கு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். 2 அவர்கள் உங்களை ஜெபஆலயங்களுக்குப் புறம்பாக்குவார்கள்; மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும். 3 அவர்கள் பிதாவையும் என்னையும் அறியாதபடியினால் இவைகளை உங்களுக்குச் செய்வார்கள். 4 அந்தக் காலம் வரும்போது நான் இவைகளை உங்களுக்குச் சொன்னேனென்று நீங்கள் நினைக்கும்படி இவைகளை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்; நான் உங்களுடனேகூட இருந்தபடியினால் ஆரம்பத்திலே இவைகளை உங்களுக்குச் சொல்லவில்லை. 5 இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடத்திற்குப் போகிறேன்; எங்கே போகிறீரென்று உங்களில் ஒருவனும் என்னைக் கேட்கவில்லை. 6 ஆனாலும் நான் இவைகளை உங்களுக்குச் சொன்னதினால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிறைந்திருக்கிறது. 7 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன். 8 அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். 9 அவர்கள் என்னை விசுவாசியாதபடியினாலே பாவத்தைக்குறித்தும், 10 நீங்கள் இனி என்னைக் காணாதபடிக்கு நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினாலே நீதியைக்குறித்தும், 11 இந்த உலகத்தின் அதிபதி நியாயந்தீர்க்கப்பட்டதினாலே நியாயத்தீர்ப்பைக்குறித்தும், கண்டித்து உணர்த்துவார். 12 இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். 13 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். 14 அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார். 15 பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன். 16 நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார். 17 அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர்: நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள் என்றும், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றும் அவர் நம்முடனே சொல்லுகிறதின் கருத்தென்ன என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டதுமன்றி: 18 கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே என்றார்கள். 19 அதைக்குறித்துத் தம்மிடத்தில் கேட்கும்படி அவர்கள் விரும்புகிறதை இயேசு அறிந்து, அவர்களை நோக்கி: கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ? 20 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். 21 ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள். 22 அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான். 23 அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக் கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். 24 இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக் கொள்வீர்கள். 25 இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன். 26 அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக் கொள்வீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக் கொள்வேனென்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. 27 நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார். 28 நான் பிதாவினிடத்திலிருந்து புறப்பட்டு உலகத்திலே வந்தேன்; மறுபடியும் உலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகிறேன் என்றார். 29 அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: இதோ, இப்பொழுது நீர் உவமையாய்ப் பேசாமல், வெளிப்படையாய்ப் பேசுகிறீர். 30 நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவ வேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள். 31 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். 32 இதோ, நீங்கள் சிதறுண்டு, அவனவன் தன் தன் இடத்துக்குப் போய், என்னைத் தனியே விட்டுவிடுங்காலம் வரும்; அது இப்பொழுது வந்திருக்கிறது; ஆனாலும் நான் தனித்திரேன், பிதா என்னுடனேகூட இருக்கிறார். 33 என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும்பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

யோவான் 17

1 இயேசு இவைகளைச் சொன்னபின்பு தம்முடைய கண்களை வானத்துக்கு ஏறெடுத்து: 2 பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும். 3 ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன். 4 பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன். 5 பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும். 6 நீர் உலகத்தில் தெரிந்தெடுத்து எனக்குத் தந்த மனுஷருக்கு உம்முடைய நாமத்தை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாயிருந்தார்கள், அவர்களை எனக்குத் தந்தீர், அவர்கள் உம்முடைய வசனத்தைக் கைக்கொண்டிருக்கிறார்கள். 7 நீர் எனக்குத் தந்தவைகளெல்லாம் உம்மாலே உண்டாயினவென்று இப்பொழுது அறிந்திருக்கிறார்கள். 8 நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்; அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான் உம்மிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேன் என்று நிச்சயமாய் அறிந்து, நீர் என்னை அனுப்பினீர் என்று விசுவாசித்திருக்கிறார்கள். 9 நான் அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; உலகத்துக்காக வேண்டிக்கொள்ளாமல், நீர் எனக்குத் தந்தவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் உம்முடையவர்களாயிருக்கிறார்களே. 10 என்னுடையவைகள் யாவும் உம்முடையவைகள், உம்முடையவைகள் என்னுடையவைகள்; அவர்களில் நான் மகிமைப்பட்டிருக்கிறேன். 11 நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும். 12 நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக் கொண்டுவந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை. 13 இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாய் அடையும்படி உலகத்தில் இருக்கையில் இவைகளைச் சொல்லுகிறேன். 14 நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது. 15 நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். 16 நான் உலகத்தானல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல. 17 உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம். 18 நீர் என்னை உலகத்தில் அனுப்பினதுபோல, நானும் அவர்களை உலகத்தில் அனுப்புகிறேன். 19 அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன். 20 நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன். 21 அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன். 22 நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். 23 ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். 24 பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால், நீர் எனக்குத் தந்த என்னுடைய மகிமையை நீர் எனக்குத் தந்தவர்கள் காணும்படியாக, நான் எங்கே இருக்கிறேனோ அங்கே அவர்களும் என்னுடனேகூட இருக்க விரும்புகிறேன். 25 நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள். 26 நீர் என்னிடத்தில் வைத்த அன்பு அவர்களிடத்திலிருக்கும்படிக்கும், நானும் அவர்களிலிருக்கும்படிக்கும், உம்முடைய நாமத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தினேன்; இன்னமும் தெரியப்படுத்துவேன் என்றார்.

யோவான் 18

1 இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள். 2 இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான். 3 யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொண்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு வந்தான். 4 இயேசு தமக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார். 5 அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான். 6 நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள். 7 அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். 8 இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார். 9 நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லை என்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது. 10 அப்பொழுது சீமோன்பேதுரு, தன்னிடத்திலிருந்த பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனை வலதுகாதற வெட்டினான்; அந்த வேலைக்காரனுக்கு மல்குஸ் என்று பெயர். 11 அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலே போடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார். 12 அப்பொழுது போர்ச்சேவகரும், ஆயிரம் போர்ச்சேவகருக்குத் தலைவனும், யூதருடைய ஊழியக்காரரும் இயேசுவைப்பிடித்து, அவரைக் கட்டி, 13 முதலாவது அவரை அன்னா என்பவனிடத்திற்குக் கொண்டுபோனார்கள்; அவன் அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனாகிய காய்பாவுக்கு மாமனாயிருந்தான். 14 ஜனங்களுக்காக ஒரே மனுஷன் சாகிறது நலமாயிருக்குமென்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே. 15 சீமோன்பேதுருவும் வேறொரு சீஷனும் இயேசுவுக்குப் பின்சென்றார்கள். அந்தச் சீஷன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்ததினால், இயேசுவுடனேகூடப் பிரதான ஆசாரியனுடைய அரமனைக்குள் பிரவேசித்தான். 16 பேதுரு வாசலருகே வெளியே நின்றான். அப்பொழுது பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானவனாயிருந்த மற்றச் சீஷன் வெளியே வந்து, வாசல்காக்கிறவர்களுடனே பேசி, பேதுருவை உள்ளே அழைத்துக்கொண்டுபோனான். 17 அப்பொழுது வாசல்காக்கிற வேலைக்காரி பேதுருவை நோக்கி: நீயும் அந்த மனுஷனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றாள். அவன்: நான் அல்ல என்றான். 18 குளிர்காலமானபடியினாலே ஊழியக்காரரும் சேவகரும் கரிநெருப்புண்டாக்கி, நின்று, குளிர்காய்ந்துகொண்டிருந்தார்கள்; அவர்களுடனேகூடப் பேதுருவும் நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். 19 பிரதான ஆசாரியன் இயேசுவினிடத்தில் அவருடைய சீஷரைக்குறித்தும் போதகத்தைக்குறித்தும் விசாரித்தான். 20 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நான் வெளியரங்கமாய் உலகத்துடனே பேசினேன்; ஜெப ஆலயங்களிலேயும் யூதர்களெல்லாரும் கூடிவருகிற தேவாலயத்திலேயும் எப்பொழுதும் உபதேசித்தேன்; அந்தரங்கத்திலே நான் ஒன்றும் பேசவில்லை. 21 நீர் என்னிடத்தில் விசாரிக்கவேண்டியதென்ன? நான் சொன்னவைகளைக் கேட்டவர்களிடத்தில் விசாரியும்; நான் பேசினவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றார். 22 இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான். 23 இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார். 24 பின்பு அன்னா என்பவன் பிரதான ஆசாரியனாகிய காய்பாவினிடத்திற்கு அவரைக் கட்டுண்டவராக அனுப்பினான். 25 சீமோன்பேதுரு நின்று குளிர்காய்ந்துகொண்டிருந்தான். அப்பொழுது சிலர் அவனை நோக்கி: நீயும் அவனுடைய சீஷரில் ஒருவனல்லவா என்றார்கள். அவன்: நான் அல்ல என்று மறுதலித்தான். 26 பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரரில் பேதுரு காதறவெட்டினவனுக்கு இனத்தானாகிய ஒருவன் அவனை நோக்கி: நான் உன்னை அவனுடனேகூடத் தோட்டத்திலே காணவில்லையா என்றான். 27 அப்பொழுது பேதுரு மறுபடியும் மறுதலித்தான்; உடனே சேவல் கூவிற்று. 28 அவர்கள் காய்பாவினிடத்திலிருந்து இயேசுவைத் தேசாதிபதியின் அரமனைக்குக் கொண்டுபோனார்கள்; அப்பொழுது விடியற்காலமாயிருந்தது. தீட்டுப்படாமல் பஸ்காவைப் புசிக்கத்தக்கதாக, அவர்கள் தேசாதிபதியின் அரமனைக்குள் பிரவேசியாதிருந்தார்கள். 29 ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனுஷன்மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்றான். 30 அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள். 31 அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இவனை நீங்களே கொண்டுபோய், உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள். 32 தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக் குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள். 33 அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். 34 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார். 35 பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான். 36 இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார். 37 அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார். 38 அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன். 39 பஸ்காபண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலைபண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான். 40 அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.

யோவான் 19

1 அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான். 2 போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி: 3 யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள். 4 பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான். 5 இயேசு, முள்முடியும் சிவப்பங்கியும் தரித்தவராய், வெளியே வந்தார். அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இதோ, இந்த மனுஷன் என்றான். 6 பிரதான ஆசாரியரும் சேவகரும் அவரைக் கண்டபோது: சிலுவையில் அறையும் சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: நீங்களே இவனைக் கொண்டுபோய்ச் சிலுவையில் அறையுங்கள், நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்றான். 7 யூதர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்கு ஒரு நியாயப்பிரமாணமுண்டு, இவன் தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொன்னபடியினால், அந்த நியாயப்பிரமாணத்தின்படியே, இவன் சாகவேண்டும் என்றார்கள். 8 பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது அதிகமாய்ப் பயந்து, 9 மறுபடியும் அரமனைக்குள்ளே போய், இயேசுவை நோக்கி: நீ எங்கேயிருந்து வந்தவன் என்றான். அதற்கு இயேசு மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. 10 அப்பொழுது பிலாத்து: நீ என்னோடே பேசுகிறதில்லையா? உன்னைச் சிலுவையில் அறைய எனக்கு அதிகாரமுண்டென்றும், உன்னை விடுதலைபண்ண எனக்கு அதிகாரமுண்டென்றும் உனக்குத் தெரியாதா என்றான். 11 இயேசு பிரதியுத்தரமாக: பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது; ஆனபடியினாலே என்னை உம்மிடத்தில் ஒப்புக்கொடுத்தவனுக்கு அதிக பாவமுண்டு என்றார். 12 அதுமுதல் பிலாத்து அவரை விடுதலைபண்ண வகைதேடினான். யூதர்கள் அவனை நோக்கி: இவனை விடுதலைபண்ணினால் நீர் இராயனுக்குச் சிநேகிதனல்ல; தன்னை ராஜாவென்கிறவனெவனோ அவன் இராயனுக்கு விரோதி என்று சத்தமிட்டார்கள். 13 பிலாத்து இந்த வார்த்தையைக் கேட்டபொழுது, இயேசுவை வெளியே அழைத்துவந்து, தளவரிசைப்படுத்தின மேடையென்றும், எபிரெயு பாஷையிலே கபத்தா என்றும் சொல்லப்பட்ட இடத்திலே, நியாயாசனத்தின்மேல் உட்கார்ந்தான். 14 அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான். 15 அவர்கள்: இவனை அகற்றும் அகற்றும், சிலுவையில் அறையும் என்று சத்தமிட்டார்கள். அதற்குப் பிலாத்து: உங்கள் ராஜாவை நான் சிலுவையில் அறையலாமா என்றான். பிரதான ஆசாரியர் பிரதியுத்தரமாக: இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை என்றார்கள். 16 அப்பொழுது அவரைச் சிலுவையில் அறையும்படிக்கு அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தான். அவர்கள் இயேசுவைப் பிடித்துக்கொண்டுபோனார்கள். 17 அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார். 18 அங்கே அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; அவரோடேகூட வேறிரண்டுபேரை இரண்டு பக்கங்களிலும் இயேசுவை நடுவிலுமாகச் சிலுவைகளில் அறைந்தார்கள். 19 பிலாத்து ஒரு மேல்விலாசத்தை எழுதி, சிலுவையின்மேல் போடுவித்தான். அதில் நசரேயனாகிய இயேசு யூதருடைய ராஜா என்று எழுதியிருந்தது. 20 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்குச் சமீபமாயிருந்தபடியினால், யூதரில் அநேகர் அந்த மேல்விலாசத்தை வாசித்தார்கள்; அது எபிரெயு கிரேக்கு லத்தீன் பாஷைகளில் எழுதியிருந்தது. 21 அப்பொழுது யூதருடைய பிரதான ஆசாரியர் பிலாத்துவை நோக்கி: யூதருடைய ராஜா என்று நீர் எழுதாமல், தான் யூதருடைய ராஜா என்று அவன் சொன்னதாக எழுதும் என்றார்கள். 22 பிலாத்து பிரதியுத்தரமாக: நான் எழுதினது எழுதினதே என்றான். 23 போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது. 24 அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள். 25 இயேசுவின் சிலுவையினருகே அவருடைய தாயும், அவருடைய தாயின் சகோதரி கிலெயோப்பா மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றுகொண்டிருந்தார்கள். 26 அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். 27 பின்பு அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய் என்றார். அந்நேரமுதல் அந்தச் சீஷன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான். 28 அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். 29 காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். 30 இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார். 31 அந்த நாள் பெரிய ஓய்வுநாளுக்கு ஆயத்தநாளாயிருந்தபடியினால், உடல்கள் அந்த ஓய்வுநாளிலே சிலுவைகளில் இராதபடிக்கு, யூதர்கள் பிலாத்துவினிடத்தில் போய், அவர்களுடைய காலெலும்புகளை முறிக்கும்படிக்கும், உடல்களை எடுத்துப்போடும்படிக்கும் உத்தரவு கேட்டுக்கொண்டார்கள். 32 அந்தப்படி போர்ச்சேவகர் வந்து, அவருடனேகூடச் சிலுவையில் அறையப்பட்ட முந்தினவனுடைய காலெலும்புகளையும் மற்றவனுடைய காலெலும்புகளையும் முறித்தார்கள். 33 அவர்கள் இயேசுவினிடத்தில் வந்து, அவர் மரித்திருக்கிறதைக் கண்டு, அவருடைய காலெலும்புகளை முறிக்கவில்லை. 34 ஆகிலும் போர்ச்சேவகரில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவில் குத்தினான்; உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. 35 அதைக் கண்டவன் சாட்சிகொடுக்கிறான், அவனுடைய சாட்சி மெய்யாயிருக்கிறது; நீங்கள் விசுவாசிக்கும்படி, தான் சொல்லுகிறது மெய்யென்று அவன் அறிந்திருக்கிறான். 36 அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது. 37 அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது. 38 இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான். 39 ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான். 40 அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள். 41 அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது. 42 யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள்.

யோவான் 20

1 வாரத்தின் முதல்நாள் காலையில், அதிக இருட்டோடே, மகதலேனா மரியாள் கல்லறையினிடத்திற்கு வந்து கல்லறையை அடைத்திருந்த கல் எடுத்துப் போட்டிருக்கக்கண்டாள். 2 உடனே அவள் ஓடி, சீமோன்பேதுருவினிடத்திலும் இயேசுவுக்கு அன்பாயிருந்த மற்றச் சீஷனிடத்திலும் போய்: கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை என்றாள். 3 அப்பொழுது பேதுருவும் மற்றச் சீஷனும் கல்லறையினிடத்திற்குப் போகும்படி புறப்பட்டு, இருவரும் ஒருமித்து ஓடினார்கள். 4 பேதுருவைப்பார்க்கிலும் மற்றச் சீஷன் துரிதமாய் ஓடி, முந்திக் கல்லறையினிடத்தில் வந்து, 5 அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை. 6 சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து, 7 சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான். 8 முந்திக் கல்லறையினிடத்திற்கு வந்த மற்றச் சீஷனும் அப்பொழுது உள்ளே பிரவேசித்து, கண்டு விசுவாசித்தான். 9 அவர் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும் என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் இன்னும் அறியாதிருந்தார்கள். 10 பின்பு அந்தச் சீஷர்கள் தங்களுடைய இடத்திற்குத் திரும்பிப்போனார்கள். 11 மரியாள் கல்லறையினருகே வெளியே நின்று அழுதுகொண்டிருந்தாள்; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து கல்லறைக்குள்ளே பார்த்து, 12 இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள். 13 அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள். 14 இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள். 15 இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள். 16 இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம். 17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார். 18 மகதலேனா மரியாள் போய், தான் கர்த்தரைக் கண்டதையும், அவர் தன்னுடனே சொன்னவைகளையும் சீஷருக்கு அறிவித்தாள். 19 வாரத்தின் முதல்நாளாகிய அன்றையத்தினம் சாயங்காலவேளையிலே, சீஷர்கள் கூடியிருந்த இடத்தில், யூதர்களுக்குப் பயந்ததினால் கதவுகள் பூட்டியிருக்கையில், இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். 20 அவர் இப்படிச் சொல்லித் தம்முடைய கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீஷர்கள் கர்த்தரைக்கண்டு சந்தோஷப்பட்டார்கள். 21 இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி, 22 அவர்கள்மேல் ஊதி: பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்; 23 எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார். 24 இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை. 25 மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான். 26 மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டுக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார். 27 பின்பு அவர் தோமாவை நோக்கி: நீ உன் விரலை இங்கே நீட்டி, என் கைகளைப் பார், உன் கையை நீட்டி, என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு என்றார். 28 தோமா அவருக்குப் பிரதியுத்தரமாக: என் ஆண்டவரே! என் தேவனே! என்றான். 29 அதற்கு இயேசு: தோமாவே, நீ என்னைக் கண்டதினாலே விசுவாசித்தாய், காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் பாக்கியவான்கள் என்றார். 30 இந்தப் புஸ்தகத்தில் எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். 31 இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

யோவான் 21

1 இவைகளுக்குப்பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மறுபடியும் சீஷருக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விவரமாவது: 2 சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது, 3 சீமோன்பேதுரு மற்றவர்களை நோக்கி: மீன்பிடிக்கப்போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்முடனேகூட வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படவேறினார்கள். அந்த இராத்திரியிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை. 4 விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள். 5 இயேசு அவர்களை நோக்கி: பிள்ளைகளே, புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றுமில்லை என்றார்கள். 6 அப்பொழுது அவர்: நீங்கள் படவுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு அகப்படும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு, திரளான மீன்கள் அகப்பட்டதினால், அதை இழுக்கமாட்டாதிருந்தார்கள். 7 ஆதலால் இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் வஸ்திரமில்லாதவனாயிருந்தபடியினால், தன் மேற்சட்டையைக் கட்டிக்கொண்டு கடலிலே குதித்தான். 8 மற்றச் சீஷர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்தபடியினால் படவிலிருந்து கொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள். 9 அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் கண்டார்கள். 10 இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார். 11 சீமோன்பேதுரு படவில் ஏறி, நூற்றைம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை. 12 இயேசு அவர்களை நோக்கி: வாருங்கள், போஜனம்பண்ணுங்கள் என்றார். அவரைக் கர்த்தரென்று சீஷர்கள் அறிந்தபடியினால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை. 13 அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார். 14 இயேசு மரித்தோரிலிருந்தெழுந்த பின்பு தம்முடைய சீஷருக்கு அருளின தரிசனங்களில் இது மூன்றாவது தரிசனம். 15 அவர்கள் போஜனம்பண்ணினபின்பு, இயேசு சீமோன்பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார். 16 இரண்டாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 17 மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். 18 நீ இளவயதுள்ளவனாயிருந்தபோது உன்னை நீயே அரைகட்டிக்கொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாகும்போது உன் கைகளை நீட்டுவாய்; வேறொருவன் உன் அரையைக் கட்டி, உனக்கு இஷ்டமில்லாத இடத்துக்கு உன்னைக் கொண்டுபோவான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். 19 இன்னவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறானென்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனை நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். 20 பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவுக்கு அன்பாயிருந்தவனும், இராப்போஜனம்பண்ணுகையில் அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்டவனுமாகிய சீஷன் பின்னே வருகிறதைக் கண்டான். 21 அவனைக் கண்டு, பேதுரு இயேசுவை நோக்கி: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான். 22 அதற்கு இயேசு: நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார். 23 ஆகையால் அந்தச் சீஷன் மரிப்பதில்லையென்கிற பேச்சு சகோதரருக்குள்ளே பரம்பிற்று. ஆனாலும், அவன் மரிப்பதில்லையென்று இயேசு சொல்லாமல், நான் வருமளவும் இவனிருக்க எனக்குச் சித்தமானால் உனக்கென்னவென்று சொன்னார். 24 அந்தச் சீஷனே இவைகளைக்குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம். 25 இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்.

அப்போஸ்தலர் 1

1 தெயோப்பிலுவே, இயேசுவானவர் தாம் தெரிந்துகொண்ட அப்போஸ்தலருக்குப் பரிசுத்தஆவியினாலே கட்டளையிட்ட பின்பு, 2 அவர் எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும் செய்யவும் உபதேசிக்கவும் தொடங்கின எல்லாவற்றையுங்குறித்து, முதலாம் பிரபந்தத்தை உண்டுபண்ணினேன். 3 அவர் பாடுபட்டபின்பு, நாற்பது நாளளவும் அப்போஸ்தலருக்குத் தரிசனமாகி, தேவனுடைய ராஜ்யத்துக்குரியவைகளை அவர்களுடனே பேசி, அநேகம் தெளிவான திருஷ்டாந்தங்களினாலே அவர்களுக்குத் தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். 4 அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்தஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள். 5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார். 6 அப்பொழுது கூடிவந்திருந்தவர்கள் அவரை நோக்கி: ஆண்டவரே, இக்காலத்திலா ராஜ்யத்தை இஸ்ரவேலுக்குத் திரும்பக் கொடுப்பீர் என்று கேட்டார்கள். 7 அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல. 8 பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார். 9 இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. 10 அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று: 11 கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். 12 அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். 13 அவர்கள் அங்கே வந்தபோது மேல்வீட்டில் ஏறினார்கள்; அதில் பேதுருவும், யாக்கோபும், யோவானும், அந்திரேயாவும், பிலிப்பும், தோமாவும், பற்தொலொமேயும், மத்தேயும், அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபும், செலோத்தே என்னப்பட்ட சீமோனும், யாக்கோபின் சகோதரனாகிய யூதாவும் தங்கியிருந்தார்கள். 14 அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள். 15 அந்நாட்களிலே, சீஷர்களில் ஏறக்குறைய நூற்றிருபதுபேர் கூடியிருந்தபோது, அவர்கள் நடுவிலே பேதுரு எழுந்து நின்று: 16 சகோதரரே, இயேசுவைப் பிடித்தவர்களுக்கு வழிகாட்டின யூதாசைக்குறித்துப் பரிசுத்தஆவி தாவீதின் வாக்கினால் முன் சொன்ன வேதவாக்கியம் நிறைவேற வேண்டியதாயிருந்தது. 17 அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்திலே பங்கு பெற்றவனாயிருந்தான். 18 அநீதத்தின் கூலியினால் அவன் ஒரு நிலத்தைச் சம்பாதித்து, தலைகீழாக விழுந்தான்; அவன் வயிறுவெடித்து, குடல்களெல்லாம் சரிந்துபோயிற்று. 19 இது எருசலேமிலுள்ள குடிகள் யாவருக்கும் தெரிந்திருக்கிறது; அதினாலே அந்த நிலம் அவர்களுடைய பாஷையிலே இரத்தநிலம் என்று அர்த்தங்கொள்ளும் அக்கெல்தமா என்னப்பட்டிருக்கிறது. 20 சங்கீத புஸ்தகத்திலே: அவனுடைய வாசஸ்தலம் பாழாகக்கடவது, ஒருவனும் அதில் வாசம்பண்ணாதிருப்பானாக என்றும்; அவனுடைய கண்காணிப்பை வேறொருவன் பெறக்கடவன் என்றும் எழுதியிருக்கிறது. 21 ஆதலால், யோவான் ஞானஸ்நானங்கொடுத்த நாள்முதற்கொண்டு, கர்த்தராகிய இயேசுவானவர் நம்மிடத்திலிருந்து உயர எடுத்துக்கொள்ளப்பட்ட நாள்வரைக்கும், 22 அவர் நம்மிடத்தில் சஞ்சரித்திருந்த காலங்களிலெல்லாம் எங்களுடனேகூட இருந்த மனுஷர்களில் ஒருவன் அவர் உயிரோடெழுந்ததைக்குறித்து, எங்களுடனேகூடச் சாட்சியாக ஏற்படுத்தப்படவேண்டும் என்றான். 23 அப்பொழுது அவர்கள் யுஸ்து என்னும் மறுநாமமுள்ள பர்சபா என்னப்பட்ட யோசேப்பும் மத்தியாவும் ஆகிய இவ்விரண்டுபேரையும் நிறுத்தி: 24 எல்லாருடைய இருதயங்களையும் அறிந்திருக்கிற கர்த்தாவே, யூதாஸ் என்பவன் தனக்குரிய இடத்துக்குப் போகும்படி இழந்துபோன இந்த ஊழியத்திலும் இந்த அப்போஸ்தலப்பட்டத்திலும் பங்கு பெறுவதற்காக, 25 இவ்விரண்டு பேரில் தேவரீர் தெரிந்துகொண்டவனை எங்களுக்குக் காண்பித்தருளும் என்று ஜெபம்பண்ணி; 26 பின்பு, அவர்களைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்; சீட்டு மத்தியாவின்பேருக்கு விழுந்தது; அப்பொழுது அவன் பதினொரு அப்போஸ்தலருடனே சேர்த்துக்கொள்ளப்பட்டான்.

அப்போஸ்தலர் 2

1 பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். 2 அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. 3 அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு, அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. 4 அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். 5 வானத்தின்கீழிருக்கிற சகல தேசத்தாரிலுமிருந்துவந்த தேவபக்தியுள்ள யூதர்கள் அப்பொழுது எருசலேமிலே வாசம்பண்ணினார்கள். 6 அந்தச் சத்தம் உண்டானபோது, திரளான ஜனங்கள் கூடிவந்து, தங்கள் தங்கள் பாஷையிலே அவர்கள் பேசுகிறதை அவரவர்கள் கேட்டபடியினாலே கலக்கமடைந்தார்கள். 7 எல்லாரும் பிரமித்து ஆச்சரியப்பட்டு, ஒருவரையொருவர் பார்த்து: இதோ, பேசுகிற இவர்களெல்லாரும் கலிலேயரல்லவா? 8 அப்படியிருக்க, நம்மில் அவரவர்களுடைய ஜென்மபாஷைகளிலே இவர்கள் பேசக் கேட்கிறோமே, இதெப்படி? 9 பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா, பிரிகியா, 10 பம்பிலியா, எகிப்து என்னும் தேசத்தார்களும், சிரேனேபட்டணத்தைச் சுற்றியிருக்கிற லீபியாவின் திசைகளிலே குடியிருக்கிறவர்களும், இங்கே சஞ்சரிக்கிற ரோமாபுரியாரும், யூதரும், யூதமார்க்கத்தமைந்தவர்களும், 11 கிரேத்தரும், அரபியருமாகிய நாம் நம்முடைய பாஷைகளிலே இவர்கள் தேவனுடைய மகத்துவங்களைப் பேசக்கேட்கிறோமே என்றார்கள். 12 எல்லாரும் பிரமித்துச் சந்தேகப்பட்டு, இதென்னமாய் முடியுமோ என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள். 13 மற்றவர்களோ: இவர்கள் மதுபானத்தினால் நிறைந்திருக்கிறார்களென்று பரியாசம்பண்ணினார்கள். 14 அப்பொழுது பேதுரு பதினொருவரோடுங்கூட நின்று, அவர்களை நோக்கி, உரத்த சத்தமாய்: யூதர்களே, எருசலேமில் வாசம்பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்துகொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். 15 நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிகொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. 16 தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது. 17 கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்; 18 என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள். 19 அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழப் பூமியிலே இரத்தம், அக்கினி, புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். 20 கர்த்தருடைய பெரிதும் பிரகாசமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். 21 அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான் என்று தேவன் உரைத்திருக்கிறார். 22 இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைக்கொண்டு தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார். 23 அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள். 24 தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது. 25 அவரைக்குறித்துத் தாவீது: கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக நிறுத்தி நோக்கிக்கொண்டிருக்கிறேன்; நான் அசைக்கப்படாதபடி அவர் என் வலதுபாரிசத்திலே இருக்கிறார்; 26 அதினாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது, என் மாம்சமும் நம்பிக்கையோடே தங்கியிருக்கும்; 27 என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர், உம்முடைய பரிசுத்தர் அழிவைக்காணவொட்டீர்; 28 ஜீவமார்க்கங்களை எனக்குத் தெரியப்படுத்தினீர்; உம்முடைய சந்நிதானத்திலே என்னைச் சந்தோஷத்தினால் நிரப்புவீர் என்று சொல்லுகிறான். 29 சகோதரரே, கோத்திரத்தலைவனாகிய தாவீதைக்குறித்து நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள்; அவன் மரணமடைந்து அடக்கம்பண்ணப்பட்டான்; அவனுடைய கல்லறை இந்நாள்வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது. 30 அவன் தீர்க்கதரிசியாயிருந்து: உன் சிங்காசனத்தில் வீற்றிருக்க மாம்சத்தின்படி உன் சந்ததியிலே கிறிஸ்துவை எழும்பப்பண்ணுவேன் என்று தேவன் தனக்குச் சத்தியம்பண்ணினதை அறிந்தபடியால், 31 அவன் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்த்தெழுதலைக்குறித்து இப்படிச் சொன்னான். 32 இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம். 33 அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்தஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். 34 தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே. நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், 35 நீர் என் வலதுபாரிசத்தில் உட்காருமென்று கர்த்தர் என் ஆண்டவருடனே சொன்னார் என்று அவனே சொல்லியிருக்கிறான். 36 ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான். 37 இதை அவர்கள் கேட்டபொழுது, இருதயத்திலே குத்தப்பட்டவர்களாகி, பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து: சகோதரரே, நாங்கள் என்னசெய்யவேண்டும் என்றார்கள். 38 பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்தஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். 39 வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி; 40 இன்னும் அநேக வார்த்தைகளாலும் சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான். 41 அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். 42 அவர்கள் அப்போஸ்தலருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம்பண்ணுதலிலும் உறுதியாய்த் தரித்திருந்தார்கள். 43 எல்லாருக்கும் பயமுண்டாயிற்று. அப்போஸ்தலர்களாலே அநேக அற்புதங்களும் அடையாளங்களும் செய்யப்பட்டது. 44 விசுவாசிகளெல்லாரும் ஒருமித்திருந்து, சகலத்தையும் பொதுவாய் வைத்து அநுபவித்தார்கள். 45 காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள். 46 அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய்த் தேவாலயத்திலே அநுதினமும் தரித்திருந்து, வீடுகள்தோறும் அப்பம்பிட்டு மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம்பண்ணி, 47 தேவனைத் துதித்து, ஜனங்களெல்லாரிடத்திலும் தயவுபெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகிறவர்களைக் கர்த்தர் அநுதினமும் சபையிலே சேர்த்துக்கொண்டு வந்தார்.

அப்போஸ்தலர் 3

1 ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள். 2 அப்பொழுது தன் தாயின் வயிற்றிலிருந்து சப்பாணியாய்ப் பிறந்த ஒரு மனுஷனைச் சுமந்துகொண்டுவந்தார்கள்; தேவாலயத்திலே பிரவேசிக்கிறவர்களிடத்தில் பிச்சைகேட்கும்படி, நாடோறும் அவனை அலங்கார வாசல் என்னப்பட்ட தேவாலய வாசலண்டையிலே வைப்பார்கள். 3 தேவாலயத்திலே பிரவேசிக்கப்போகிற பேதுருவையும் யோவானையும் அவன் கண்டு பிச்சைகேட்டான். 4 பேதுருவும் யோவானும் அவனை உற்றுப்பார்த்து: எங்களை நோக்கிப்பார் என்றார்கள். 5 அவன் அவர்களிடத்தில் ஏதாகிலும் கிடைக்குமென்று எண்ணி, அவர்களை நோக்கிப்பார்த்தான். 6 அப்பொழுது பேதுரு: வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை; என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்; நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே நீ எழுந்து நட என்று சொல்லி; 7 வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன்கொண்டது. 8 அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூடத் தேவாலயத்திற்குள் பிரவேசித்தான். 9 அவன் நடக்கிறதையும், தேவனைத் துதிக்கிறதையும், ஜனங்களெல்லாரும் கண்டு: 10 தேவாலயத்தின் அலங்கார வாசலண்டையிலே பிச்சைகேட்க உட்கார்ந்திருந்தவன் இவன்தான் என்று அறிந்து, அவனுக்குச் சம்பவித்ததைக்குறித்து மிகவும் ஆச்சரியப்பட்டுப் பிரமித்தார்கள். 11 குணமாக்கப்பட்ட சப்பாணி பேதுருவையும் யோவானையும் பற்றிக்கொண்டிருக்கையில், ஜனங்களெல்லாரும் பிரமித்து, சாலொமோன் மண்டபம் என்னப்பட்ட மண்டபத்திலே அவர்களிடத்திற்கு ஓடிவந்தார்கள். 12 பேதுரு அதைக் கண்டு ஜனங்களை நோக்கி: இஸ்ரவேலரே, இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படுகிறதென்ன? நாங்கள் எங்கள் சுயசக்தியினாலாவது, எங்கள் சுயபக்தியினாலாவது, இவனை நடக்கப்பண்ணினோமென்று நீங்கள் எங்களை நோக்கிப் பார்க்கிறதென்ன? 13 ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களுடைய தேவனாகிய நம்முடைய பிதாக்களின் தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை மகிமைப்படுத்தினார்; அவரை நீங்கள் ஒப்புக்கொடுத்தீர்கள்; பிலாத்து அவரை விடுதலையாக்கத் தீர்மானித்தபோது, அவனுக்குமுன்பாக அவரை மறுதலித்தீர்கள். 14 பரிசுத்தமும் நீதியுமுள்ளவரை நீங்கள் மறுதலித்து, கொலைபாதகனை உங்களுக்காக விடுதலைபண்ணவேண்டுமென்று கேட்டு, 15 ஜீவாதிபதியைக் கொலைசெய்தீர்கள்; அவரைத் தேவன் மரித்தோரிலிருந்தெழுப்பினார்; அதற்கு நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். 16 அவருடைய நாமத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே அவருடைய நாமமே நீங்கள் பார்த்து அறிந்திருக்கிற இவனைப் பெலப்படுத்தினது; அவரால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக, இந்தச் சர்வாங்க சுகத்தை இவனுக்குக் கொடுத்தது. 17 சகோதரரே, நீங்களும் உங்கள் அதிகாரிகளும் அறியாமையினாலே இதைச்செய்தீர்களென்று அறிந்திருக்கிறேன். 18 கிறிஸ்து பாடுபடவேண்டுமென்று தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் முன்னறிவித்தவைகளை இவ்விதமாய் நிறைவேற்றினார். 19 ஆனபடியினாலே கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து இளைப்பாறுதலின் காலங்கள் வரும்படிக்கும், முன்னே குறிக்கப்பட்ட இயேசுகிறிஸ்துவை அவர் உங்களிடத்தில் அனுப்பும்படிக்கும், 20 உங்கள் பாவங்கள் நிவிர்த்திசெய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள். 21 உலகத்தோற்றமுதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளெல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் வருமளவும் பரலோகம் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும். 22 மோசே பிதாக்களை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக. 23 அந்தத் தீர்க்கதரிசியின் சொற்கேளாதவனெவனோ, அவன் ஜனத்திலிராதபடிக்கு நிர்மூலமாக்கப்படுவான் என்றான். 24 சாமுவேல் முதற்கொண்டு, எத்தனைபேர் தீர்க்கதரிசனம் உரைத்தார்களோ, அத்தனைபேரும் இந்த நாட்களை முன்னறிவித்தார்கள். 25 நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்குப் புத்திரராயிருக்கிறீர்கள்; உன் சந்ததியினாலே பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்குச் சொல்லி, நம்முடைய முன்னோர்களோடே பண்ணின உடன்படிக்கைக்கும் புத்திரராயிருக்கிறீர்கள். 26 அவர் உங்களெல்லாரையும் உங்கள் பொல்லாங்குகளிலிருந்து விலக்கி, உங்களை ஆசீர்வதிக்கும்படி தேவன் தம்முடைய பிள்ளையாகிய இயேசுவை எழுப்பி, முதலாவது உங்களிடத்திற்கே அவரை அனுப்பினார் என்றான்.

அப்போஸ்தலர் 4

1 அவர்கள் ஜனங்களுடனே பேசிக்கொண்டிருக்கையில், ஆசாரியர்களும் தேவாலயத்துச் சேனைத்தலைவனும் சதுசேயரும் அவர்களிடத்தில் வந்து, 2 அவர்கள் ஜனங்களுக்கு உபதேசிக்கிறதினாலும், இயேசுவை முன்னிட்டு, மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுதலைப் பிரசங்கிக்கிறதினாலும், சினங்கொண்டு, 3 அவர்களைப் பிடித்து, சாயங்காலமாயிருந்தபடியினால், மறுநாள்வரைக்கும் காவலில் வைத்தார்கள். 4 வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது. 5 மறுநாளிலே ஜனங்களுடைய அதிகாரிகளும் மூப்பரும் வேதபாரகரும், 6 பிரதான ஆசாரியனாகிய அன்னாவும், காய்பாவும், யோவானும், அலெக்சந்தரும், பிரதான ஆசாரியருடைய குடும்பத்தார் யாவரும் எருசலேமிலே கூட்டங்கூடி, 7 அவர்களை நடுவே நிறுத்தி: நீங்கள் எந்த வல்லமையினாலே, எந்த நாமத்தினாலே, இதைச் செய்தீர்கள் என்று கேட்டார்கள். 8 அப்பொழுது பேதுரு பரிசுத்தஆவியினாலே நிறைந்து, அவர்களை நோக்கி: ஜனத்தின் அதிகாரிகளே, இஸ்ரவேலின் மூப்பர்களே, 9 பிணியாளியாயிருந்த இந்த மனுஷனுக்குச் செய்யப்பட்ட உபகாரத்தைக்குறித்து எதினாலே இவன் ஆரோக்கியமானானென்று நீங்கள் இன்று எங்களிடத்தில் விசாரித்துக்கேட்டால், 10 உங்களால் சிலுவையில் அறையப்பட்டவரும், தேவனால் மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டவருமாயிருக்கிற நசரேயனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலேயே இவன் உங்களுக்கு முன்பாகச் சொஸ்தமாய் நிற்கிறானென்று உங்களெல்லாருக்கும், இஸ்ரவேல் ஜனங்களெல்லாருக்கும் தெரிந்திருக்கக்கடவது. 11 வீடுகட்டுகிறவர்களாகிய உங்களால் அற்பமாய் எண்ணப்பட்ட அவரே மூலைக்குத் தலைக்கல்லானவர். 12 அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். 13 பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களென்றும் பேதைமையுள்ளவர்களென்றும் அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனேகூட இருந்தவர்களென்றும் அறிந்துகொண்டார்கள். 14 சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் அவர்கள் அருகே நிற்கிறதைக் கண்டபடியால், எதிர்பேச அவர்களுக்கு இடமில்லாதிருந்தது. 15 அப்பொழுது அவர்களை ஆலோசனைச் சங்கத்தைவிட்டு வெளியே போகும்படி கட்டளையிட்டு, தங்களுக்குள்ளே யோசனைபண்ணிக்கொண்டு: 16 இந்த மனுஷரை நாம் என்ன செய்யலாம்? எருசலேமில் வாசம்பண்ணுகிற எல்லாருக்கும் தெரிந்திருக்கிறபடி வெளியரங்கமான அற்புதம் இவர்களால் செய்யப்பட்டதே, அதை நாம் இல்லையென்று சொல்லக்கூடாது. 17 ஆகிலும் இது அதிகமாய் ஜனத்துக்குள்ளே பரம்பாதபடிக்கு, இதுமுதல் ஒருவரோடும் இந்த நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று, அவர்களை உறுதியாய்ப் பயமுறுத்தவேண்டுமென்று சொல்லிக்கொண்டு, 18 அவர்களை அழைத்து: இயேசுவின் நாமத்தைக்குறித்து எவ்வளவும் பேசவும் போதிக்கவும் கூடாதென்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். 19 பேதுருவும் யோவானும் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: தேவனுக்குச் செவிகொடுக்கிறதைப்பார்க்கிலும் உங்களுக்குச் செவிகொடுக்கிறது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமோ என்று நீங்களே நிதானித்துப்பாருங்கள். 20 நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமலிருக்கக்கூடாதே என்றார்கள். 21 நடந்த சங்கதிகளைக்குறித்து எல்லாரும் தேவனை மகிமைப்படுத்தினபடியால், ஜனங்களுக்குப் பயந்து அவர்களைத் தண்டிக்க வகையொன்றுங்காணாமல், அவர்களைப் பயமுறுத்தி விட்டுவிட்டார்கள். 22 அற்புதமாய்ச் சொஸ்தமாக்கப்பட்ட மனுஷன் நாற்பது வயதுக்கு மேற்பட்டவனாயிருந்தான். 23 அவர்கள் விடுதலையாக்கப்பட்டபின்பு, தங்களைச் சேர்ந்தவர்களிடத்தில் வந்து, பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் தங்களுக்குச் சொன்ன யாவையும் அறிவித்தார்கள். 24 அவர்கள் அதைக் கேட்டு, ஒருமனப்பட்டுத் தேவனை நோக்கிச் சத்தமிட்டு: கர்த்தாவே, நீர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனாயிருக்கிறீர். 25 புறஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதா காரியங்களைச் சிந்திப்பானேன் என்றும், 26 கர்த்தருக்கு விரோதமாகவும் அவருடைய கிறிஸ்துவுக்கு விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய்க் கூட்டங்கூடினார்கள் என்றும் தேவரீர் உம்முடைய தாசனாகிய தாவீதின் வாக்கினால் உரைத்தீரே. 27 அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன்குறித்தவைகள் யாவையும் செய்யும்படி, 28 ஏரோதும் பொந்தியுபிலாத்தும், புறஜாதிகளோடும் இஸ்ரவேல் ஜனங்களோடுங்கூட, நீர் அபிஷேகம்பண்ணின உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவுக்கு விரோதமாய், மெய்யாகவே கூட்டங்கூடினார்கள். 29 இப்பொழுதும், கர்த்தாவே, அவர்கள் பயமுறுத்தல்களைத் தேவரீர் கவனித்து, 30 உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும் அற்புதங்களும் நடக்கும்படி செய்து, பிணியாளிகளைக் குணமாக்கும்படி உம்முடைய கரத்தை நீட்டி, உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அநுக்கிரகஞ்செய்தருளும் என்றார்கள். 31 அவர்கள் ஜெபம்பண்ணினபோது, அவர்கள் கூடியிருந்த இடம் அசைந்தது. அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினால் நிரப்பப்பட்டு, தேவவசனத்தைத் தைரியமாய்ச் சொன்னார்கள். 32 விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றையும் தன்னுடையதென்று சொல்லவில்லை; சகலமும் அவர்களுக்குப் பொதுவாயிருந்தது. 33 கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்; அவர்களெல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது. 34 நிலங்களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, விற்கப்பட்டவைகளின் கிரயத்தைக் கொண்டுவந்து, 35 அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தார்கள். அவனவனுக்குத் தேவையானதற்குத்தக்கதாய்ப் பகிர்ந்துகொடுக்கப்பட்டது; அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை. 36 சீப்புருதீவானும் லேவியனும் அப்போஸ்தலராலே ஆறுதலின் மகன் என்று அர்த்தங்கொள்ளும் பர்னபா என்னும் மறுபேர்பெற்றவனுமாகிய யோசே என்பவன், 37 தனக்கு உண்டாயிருந்த நிலத்தைவிற்று, அதின் கிரயத்தைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.

அப்போஸ்தலர் 5

1 அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள். 2 தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான். 3 பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்தஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? 4 அதை விற்கும் முன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றபின்பும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன? நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான். 5 அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று. 6 வாலிபர் எழுந்து, அவனைச் சீலையில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம்பண்ணினார்கள். 7 ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள். 8 பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள். 9 பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான். 10 உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள். வாலிபர் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு, அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய புருஷனண்டையிலே அடக்கம்பண்ணினார்கள். 11 சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று. 12 அப்போஸ்தலருடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் ஜனங்களுக்குள்ளே செய்யப்பட்டது. எல்லாரும் ஒருமனப்பட்டுச் சாலொமோனுடைய மண்டபத்தில் இருந்தார்கள். 13 மற்றவர்களில் ஒருவரும் அவர்களுடனே சேரத் துணியவில்லை. ஆகிலும் ஜனங்கள் அவர்களை மேன்மைப்படுத்தினார்கள். 14 திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடமாக அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். 15 பிணியாளிகளைப் படுக்கைகளின் மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகையில் அவனுடைய நிழலாகிலும் அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள். 16 சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் பிணியாளிகளையும் அசுத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லாரும் குணமாக்கப்பட்டார்கள். 17 அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்த சதுசேய சமயத்தாரனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து, 18 அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள். 19 கர்த்தருடைய தூதன் இராத்திரியிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து: 20 நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவவார்த்தைகள் எல்லாவற்றையும் ஜனங்களுக்குச் சொல்லுங்கள் என்றான். 21 அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்துப் போதகம்பண்ணினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடனேகூட இருந்தவர்களும் வந்து, ஆலோசனைச் சங்கத்தாரையும் இஸ்ரவேல் புத்திரரின் மூப்பரெல்லாரையும் வரவழைத்து, அப்போஸ்தலர்களைக் கொண்டுவரும்படி சிறைச்சாலைக்குச் சேவகரை அனுப்பினார்கள். 22 சேவகர் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து: 23 சிறைச்சாலை மிகுந்த பத்திரமாய்ப் பூட்டப்பட்டிருக்கவும், காவற்காரர் வெளியே கதவுகளுக்குமுன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள். 24 இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற சேனைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இதென்னமாய் முடியுமோ என்று, அவர்களைக்குறித்துக் கலக்கமடைந்தார்கள். 25 அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனுஷர் தேவாலயத்திலே நின்று ஜனங்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான். 26 உடனே சேனைத்தலைவன் சேவகரோடேகூடப் போய், ஜனங்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான். 27 அப்படி அவர்களை அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்துக்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி: 28 நீங்கள் அந்த நாமத்தைக்குறித்துப் போதகம்பண்ணக்கூடாதென்று நாங்கள் உங்களுக்கு உறுதியாய்க் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்கள் போதகத்தினாலே நிரப்பி, அந்த மனுஷனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான். 29 அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது. 30 நீங்கள் மரத்திலே தூக்கிக் கொலைசெய்த இயேசுவை நம்முடைய பிதாக்களின் தேவன் எழுப்பி, 31 இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் அருளுகிறதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலதுகரத்தினாலே உயர்த்தினார். 32 இந்தச் சங்கதிகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்தஆவியும் சாட்சி என்றார்கள். 33 அதை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனைபண்ணினார்கள். 34 அப்பொழுது சகல ஜனங்களாலும் கனம்பெற்ற நியாயசாஸ்திரியாகிய கமாலியேல் என்னும் பேர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலரைச் சற்றுநேரம் வெளியே கொண்டுபோகச்சொல்லி, 35 சங்கத்தாரை நோக்கி: இஸ்ரவேலரே, இந்த மனுஷருக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள். 36 ஏனென்றால் இந்நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனைச் சேர்ந்தார்கள்; அவன் மடிந்துபோனான்; அவனை நம்பின அனைவரும் சிதறி, அவமாய்ப்போனார்கள். 37 அவனுக்குப்பின்பு, குடிமதிப்பின் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக ஜனங்களை இழுத்தான்; அவனும் அழிந்துபோனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறடிக்கப்பட்டார்கள். 38 இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால், இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் ஒழிந்துபோம்; 39 தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள் என்றான். 40 அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள். 41 அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய், 42 தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி, இயேசுவே கிறிஸ்துவென்று பிரசங்கித்தார்கள்.

அப்போஸ்தலர் 6

1 அந்நாட்களிலே, சீஷர்கள் பெருகினபோது, கிரேக்கரானவர்கள், தங்கள் விதவைகள் அன்றாடக விசாரணையில் திட்டமாய் விசாரிக்கப்படவில்லையென்று, எபிரெயருக்கு விரோதமாய் முறுமுறுத்தார்கள். 2 அப்பொழுது பன்னிருவரும் சீஷர் கூட்டத்தை வரவழைத்து: நாங்கள் தேவவசனத்தைப் போதியாமல், பந்திவிசாரணைசெய்வது தகுதியல்ல. 3 ஆதலால் சகோதரரே, பரிசுத்தஆவியும் ஞானமும் நிறைந்து, நற்சாட்சி பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள்; அவர்களை இந்த வேலைக்காக ஏற்படுத்துவோம். 4 நாங்களோ ஜெபம்பண்ணுவதிலும் தேவவசனத்தைப் போதிக்கிற ஊழியத்திலும் இடைவிடாமல் தரித்திருப்போம் என்றார்கள். 5 இந்த யோசனை சபையாரெல்லாருக்கும் பிரியமாயிருந்தது. அப்பொழுது விசுவாசமும் பரிசுத்தஆவியும் நிறைந்தவனாகிய ஸ்தேவானையும், பிலிப்பையும், பிரொகோரையும், நிக்கானோரையும், தீமோனையும், பர்மெனாவையும், யூதமார்க்கத்தமைந்தவனான அந்தியோகியா பட்டணத்தானாகிய நிக்கொலாவையும் தெரிந்துகொண்டு, 6 அவர்களை அப்போஸ்தலருக்குமுன்பாக நிறுத்தினார்கள். இவர்கள் ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள். 7 தேவவசனம் விருத்தியடைந்தது; சீஷருடைய தொகை எருசலேமில் மிகவும் பெருகிற்று; ஆசாரியர்களில் அநேகரும் விசுவாசத்துக்குக் கீழ்ப்படிந்தார்கள். 8 ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். 9 அப்பொழுது லிபர்த்தீனர் என்னப்பட்டவர்களின் ஆலயத்தைச் சேர்ந்தவர்களிலும், சிரேனே பட்டணத்தாரிலும், அலெக்சந்திரியா பட்டணத்தாரிலும், சிலிசியா நாட்டாரிலும், ஆசியா தேசத்தாரிலும் சிலர் எழும்பி, ஸ்தேவானுடனே தர்க்கம்பண்ணினார்கள். 10 அவன் பேசின ஞானத்தையும் ஆவியையும் எதிர்த்துநிற்க அவர்களால் கூடாமற்போயிற்று. 11 அப்பொழுது அவர்கள்: மோசேக்கும் தேவனுக்கும் விரோதமாக இவன் தூஷண வார்த்தைகளைப் பேசக்கேட்டோம் என்று சொல்லும்படியாக மனுஷரை ஏற்படுத்தி; 12 ஜனங்களையும் மூப்பரையும் வேதபாரகரையும் எழுப்பிவிட்டு; அவன்மேல் பாய்ந்து, அவனைப் பிடித்து, ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுபோய்; 13 பொய்ச்சாட்சிகளையும் நிறுத்தினார்கள். இவர்கள்: இந்த மனுஷன் இந்தப் பரிசுத்த ஸ்தலத்துக்கும் வேதப்பிரமாணத்துக்கும் விரோதமாகத் தூஷண வார்த்தைகளை ஓயாமற் பேசுகிறான்; 14 எப்படியென்றால், நசரேயனாகிய அந்த இயேசு இந்த ஸ்தலத்தை அழித்துப்போட்டு, மோசே நமக்குக் கொடுத்த முறைமைகளை மாற்றுவானென்று இவன் சொல்லக்கேட்டோம் என்றார்கள். 15 ஆலோசனைச் சங்கத்தில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவன்மேல் கண்ணோக்கமாயிருந்து, அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள்.

அப்போஸ்தலர் 7

1 பிரதான ஆசாரியன் அவனை நோக்கி: காரியம் இப்படியாயிருக்கிறது என்று கேட்டான். 2 அதற்கு அவன்: சகோதரரே, பிதாக்களே, கேளுங்கள். நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் காரானூரிலே குடியிருக்கிறதற்கு முன்னமே மெசொப்பொத்தாமியா நாட்டிலே இருக்கும்போது மகிமையின் தேவன் அவனுக்குத் தரிசனமாகி: 3 நீ உன் தேசத்தையும் உன் இனத்தையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்கு வா என்றார். 4 அப்பொழுது அவன் கல்தேயர் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, காரானூரிலே வாசம்பண்ணினான். அவனுடைய தகப்பன் மரித்தபின்பு, அவ்விடத்தை விட்டு நீங்கள் இப்பொழுது குடியிருக்கிற இத்தேசத்திற்கு அவனை அழைத்துக்கொண்டுவந்து குடியிருக்கும்படி செய்தார். 5 இதிலே ஒரு அடி நிலத்தையாகிலும் அவனுடைய கையாட்சிக்குக் கொடாமலிருக்கையில், அவனுக்குப் பிள்ளையில்லாதிருக்கும்போது: உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் இதைச் சுதந்தரமாகத் தருவேன் என்று அவனுக்கு வாக்குத்தத்தம்பண்ணினார். 6 அந்தப்படி தேவன் அவனை நோக்கி: உன் சந்ததியார் அந்நிய தேசத்தில் சஞ்சரிப்பார்கள்; அத்தேசத்தார் அவர்களை அடிமைகளாக்கி, நானூறு வருஷம் துன்பப்படுத்துவார்கள். 7 அவர்களை அடிமைப்படுத்தும் ஜனத்தையோ நான் ஆக்கினைக்குட்படுத்துவேன். அதற்குப்பின்பு அவர்கள் புறப்பட்டுவந்து இவ்விடத்திலே எனக்கு ஆராதனை செய்வார்கள் என்றார். 8 மேலும் விருத்தசேதன உடன்படிக்கையையும் அவனுக்கு ஏற்படுத்தினார். அந்தப்படியே அவன் ஈசாக்கைப் பெற்றபோது, எட்டாம் நாளிலே அவனை விருத்தசேதனம்பண்ணினான். ஈசாக்கு யாக்கோபையும், யாக்கோபு பன்னிரண்டு கோத்திரப்பிதாக்களையும் பெற்றார்கள். 9 அந்தக் கோத்திரப்பிதாக்கள் பொறாமைகொண்டு யோசேப்பை எகிப்துக்குக் கொண்டுபோகும்படியாக விற்றுப்போட்டார்கள். 10 தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீடனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான். 11 பின்பு எகிப்து கானான் என்னும் தேசங்களிலெங்கும் பஞ்சமும் மிகுந்த வருத்தமும் உண்டாகி, நம்முடைய பிதாக்களுக்கு ஆகாரம் கிடையாமற்போயிற்று. 12 அப்பொழுது எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு கேள்விப்பட்டு, நம்முடைய பிதாக்களை முதலாந்தரம் அனுப்பினான். 13 இரண்டாந்தரம் யோசேப்பு தன்னுடைய சகோதரருக்குத் தன்னைத் தெரியப்படுத்தினான். யோசேப்புடைய வம்சமும் பார்வோனுக்குத் தெரியவந்தது. 14 பின்பு யோசேப்பு, தன்னுடைய தகப்பன் யாக்கோபும் தன்னுடைய இனத்தார் யாவருமாகிய, எழுபத்தைந்துபேரை அழைக்க அனுப்பினான். 15 அந்தப்படி யாக்கோபு எகிப்துக்குப் போனான். அவனும் நம்முடைய பிதாக்களும் மரித்து, 16 அங்கேயிருந்து சீகேமுக்குக் கொண்டுவரப்பட்டு, ஆபிரகாம் சீகேமின் தகப்பனாகிய ஏமோருடைய சந்ததியாரிடத்தில் ரொக்கக்கிரயத்துக்கு வாங்கியிருந்த கல்லறையில் வைக்கப்பட்டார்கள். 17 ஆபிரகாமுக்குத் தேவன் ஆணையிட்டு அருளின வாக்குத்தத்தம் நிறைவேறுங்காலம் சமீபித்தபோது, 18 யோசேப்பை அறியாத வேறொரு ராஜா தோன்றின காலமளவும், ஜனங்கள் எகிப்திலே பலுகிப் பெருகினார்கள். 19 அவன் நம்முடைய ஜனங்களை வஞ்சனையாய் நடப்பித்து, நம்முடைய பிதாக்களின் குழந்தைகள் உயிரோடிராதபடிக்கு அவர்கள் அவைகளை வெளியே போட்டுவிடும்படி செய்து, அவர்களை உபத்திரவப்படுத்தினான். 20 அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான். 21 அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள். 22 மோசே எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும் கற்பிக்கப்பட்டு, வாக்கிலும் செய்கையிலும் வல்லவனானான். 23 அவனுக்கு நாற்பது வயதானபோது, இஸ்ரவேல் புத்திரராகிய தன்னுடைய சகோதரரைக் கண்டு சந்திக்கும்படி அவனுடைய இருதயத்தில் எண்ணமுண்டாயிற்று. 24 அப்பொழுது அவர்களில் ஒருவன் அநியாயமாய் நடத்தப்படுகிறதை அவன் கண்டு, அவனுக்குத் துணைநின்று, எகிப்தியனை வெட்டி, துன்பப்பட்டவனுக்கு நியாயஞ்செய்தான். 25 தன்னுடைய கையினாலே தேவன் தங்களுக்கு இரட்சிப்பைத் தருவாரென்பதைத் தன்னுடைய சகோதரர் அறிந்துகொள்வார்களென்று அவன் நினைத்தான்; அவர்களோ அதை அறியவில்லை. 26 மறுநாளிலே சண்டைபண்ணிகொண்டிருக்கிற இரண்டுபேருக்கு அவன் எதிர்ப்பட்டு: மனுஷரே, நீங்கள் சகோதரராயிருக்கிறீர்கள்: ஒருவருக்கொருவர் அநியாயஞ்செய்கிறதென்ன என்று, அவர்களைச் சமாதானப்படுத்தும்படி பேசினான். 27 பிறனுக்கு அநியாயஞ்செய்தவன் அவனைப் பிடித்துத் தள்ளி: எங்கள்மேல் அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் உன்னை ஏற்படுத்தினவன் யார்? 28 நேற்று நீ அந்த எகிப்தியனைக் கொன்றதுபோல என்னையும் கொன்றுபோட மனதாயிருக்கிறாயோ என்றான். 29 இந்த வார்த்தையினிமித்தம் மோசே ஓடிப்போய், மீதியான் தேசத்திலே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்; அங்கே இருக்கும்போது அவனுக்கு இரண்டு குமாரர்கள் பிறந்தார்கள். 30 நாற்பது வருஷம் சென்றபின்பு, சீனாய்மலையின் வனாந்தரத்திலே கர்த்தருடைய தூதனானவர் முட்செடி எரிகிற அக்கினிஜுவாலையிலே அவனுக்குத் தரிசனமானார். 31 மோசே அந்தத் தரிசனத்தைக் கண்டு, அதிசயப்பட்டு, அதை உற்றுப்பார்க்கும்படி சமீபித்துவருகையில்: 32 நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்று கர்த்தர் திருவுளம்பற்றின சத்தம் அவனுக்கு உண்டாயிற்று. அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப்பார்க்கத் துணியாமலிருந்தான். 33 பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது. 34 எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, அவர்கள் பெருமூச்சைக்கேட்டு, அவர்களை விடுவிக்கும்படி இறங்கினேன்; ஆகையால், நீ வா, நான் உன்னை எகிப்திற்கு அனுப்புவேன் என்றார். 35 உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார் என்று சொல்லி அவர்கள் மறுதலித்திருந்த இந்த மோசேயைத்தானே தேவன், முட்செடியில் அவனுக்குத் தரிசனமான தூதனாலே, தலைவனாகவும் மீட்பனாகவும் அனுப்பினார். 36 இவனே அவர்களை அங்கேயிருந்து அழைத்துக்கொண்டுவந்து, எகிப்து தேசத்திலேயும் சிவந்த சமுத்திரத்திலேயும், நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்திலேயும், அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான். 37 இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் சகோதரரிலிருந்து என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக எழும்பப்பண்ணுவார், அவருக்குச் செவிகொடுப்பீர்களாக என்று சொன்னவன் இந்த மோசேயே. 38 சீனாய்மலையில் தன்னுடனே பேசின தூதனோடும் நம்முடைய பிதாக்களோடுங்கூட வனாந்தரத்திலே சபைக்குள்ளிருந்தவனும், நமக்குக் கொடுக்கும்படி ஜீவவாக்கியங்களைப் பெற்றவனும் இவனே. 39 இவனுக்கு நம்முடைய பிதாக்கள் கீழ்ப்படிய மனதாயிராமல், இவனைத் தள்ளிவிட்டு, தங்கள் இருதயங்களில் எகிப்துக்குத் திரும்பி, 40 ஆரோனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்கு உண்டுபண்ணும் என்று சொல்லி; 41 அந்நாட்களில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, அந்த விக்கிரகத்திற்குப் பலியிட்டு, தங்கள் கையின் கிரியைகளில் களிகூர்ந்தார்கள். 42 அப்பொழுது தேவன் அவர்களை விட்டு விலகி, வானசேனைக்கு ஆராதனைசெய்ய அவர்களை ஒப்புக்கொடுத்தார். அதைக்குறித்து: இஸ்ரவேல் வம்சத்தாரே, நீங்கள் வனாந்தரத்திலிருந்த நாற்பது வருஷம்வரையில் காணிக்கைகளையும் பலிகளையும் எனக்குச் செலுத்தினீர்களோ என்றும், 43 பணிந்துகொள்ளும்படி நீங்கள் உண்டாக்கின சொரூபங்களாகிய மோளோகினுடைய கூடாரத்தையும், உங்கள் தேவனாகிய ரெம்பான் என்னும் நட்சத்திர சொரூபத்தையும் சுமந்தீர்களே; ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப்பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதே. 44 மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டுபண்ணுவாயாக என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்ட பிரகாரமாக, அந்தக் கூடாரம் வனாந்தரத்திலே நம்முடைய பிதாக்களோடு இருந்தது. 45 மேலும், யோசுவாவுடனேகூட நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக்கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக்கொள்ளுகையில், அதை அந்தத் தேசத்தில் கொண்டுவந்து, தாவீதின் நாள்வரைக்கும் வைத்திருந்தார்கள். 46 இவன் தேவனிடத்தில் தயவு பெற்றபடியினால், யாக்கோபின் தேவனுக்கு ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்டவேண்டுமென்று விண்ணப்பம்பண்ணினான். 47 சாலொமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான். 48 ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். 49 வானம் எனக்குச் சிங்காசனமும் பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது; 50 இவைகள் எல்லாவற்றையும் என்னுடைய கரம் உண்டாக்கவில்லையா என்று கர்த்தர் உரைக்கிறார் என்று தீர்க்கதரிசி சொல்லியிருக்கிறானே. 51 வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப்போல நீங்களும் பரிசுத்தஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்துநிற்கிறீர்கள். 52 தீர்க்கதரிசிகளில் யாரை உங்கள் பிதாக்கள் துன்பப்படுத்தாமலிருந்தார்கள்? நீதிபரருடைய வருகையை முன்னறிவித்தவர்களையும் அவர்கள் கொலைசெய்தார்கள். இப்பொழுது நீங்கள் அவருக்குத் துரோகிகளும் அவரைக் கொலைசெய்த பாதகருமாயிருக்கிறீர்கள். 53 தேவதூதரைக்கொண்டு நீங்கள் நியாயப்பிரமாணத்தைப் பெற்றிருந்தும், அதைக் கைக்கொள்ளாமற்போனீர்கள் என்றான். 54 இவைகளை அவர்கள் கேட்டபொழுது, மூர்க்கமடைந்து, அவனைப் பார்த்துப் பல்லைக் கடித்தார்கள். 55 அவன் பரிசுத்தஆவியினாலே நிறைந்தவனாய், வானத்தை அண்ணாந்துபார்த்து, தேவனுடைய மகிமையையும், தேவனுடைய வலதுபாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டு: 56 அதோ வானங்கள் திறந்திருக்கிறதையும், மனுஷகுமாரன் தேவனுடைய வலதுபாரிசத்தில் நிற்கிறதையும் காண்கிறேன் என்றான். 57 அப்பொழுது அவர்கள் உரத்தசத்தமாய்க் கூக்குரலிட்டுத் தங்கள் காதுகளை அடைத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அவன்மேல் பாய்ந்து, 58 அவனை நகரத்துக்குப் புறம்பே தள்ளி, அவனைக் கல்லெறிந்தார்கள். சாட்சிக்காரர் தங்கள் வஸ்திரங்களைக் கழற்றி, சவுல் என்னப்பட்ட ஒரு வாலிபனுடைய பாதத்தினருகே வைத்தார்கள். 59 அப்பொழுது: கர்த்தராகிய இயேசுவே, என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று ஸ்தேவான் தொழுதுகொள்ளுகையில், அவனைக் கல்லெறிந்தார்கள். 60 அவனோ, முழங்காற்படியிட்டு: ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். இப்படிச் சொல்லி, நித்திரையடைந்தான்.

அப்போஸ்தலர் 8

1 அவனைக் கொலைசெய்கிறதற்குச் சவுலும் சம்மதித்திருந்தான். அக்காலத்திலே எருசலேமிலுள்ள சபைக்கு மிகுந்த துன்பம் உண்டாயிற்று. அப்போஸ்தலர்தவிர, மற்ற யாவரும் யூதேயா சமாரியா தேசங்களில் சிதறப்பட்டுப்போனார்கள். 2 தேவபக்தியுள்ள மனுஷர் ஸ்தேவானை எடுத்து அடக்கம்பண்ணி, அவனுக்காக மிகவும் துக்கங்கொண்டாடினார்கள். 3 சவுல் வீடுகள்தோறும் நுழைந்து, புருஷரையும் ஸ்திரீகளையும் இழுத்துக்கொண்டுபோய், காவலில் போடுவித்து, சபையைப் பாழாக்கிக்கொண்டிருந்தான். 4 சிதறிப்போனவர்கள் எங்குந்திரிந்து, சுவிசேஷவசனத்தைப் பிரசங்கித்தார்கள். 5 அப்பொழுது பிலிப்பென்பவன் சமாரியாவிலுள்ள ஒரு பட்டணத்திற்குப் போய், அங்குள்ளவர்களுக்குக் கிறிஸ்துவைக்குறித்துப் பிரசங்கித்தான். 6 பிலிப்பு செய்த அதிசயங்களை ஜனங்கள் கேள்விப்பட்டுக் கண்டு, அவனால் சொல்லப்பட்டவைகளை ஒருமனப்பட்டுக் கவனித்தார்கள். 7 அநேகரிலிருந்த அசுத்தஆவிகள் மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டு அவர்களை விட்டுப் புறப்பட்டது. அநேகந் திமிர்வாதக்காரரும் சப்பாணிகளும் குணமாக்கப்பட்டார்கள். 8 அந்தப் பட்டணத்திலே மிகுந்த சந்தோஷம் உண்டாயிற்று. 9 சீமோன் என்று பேர்கொண்ட ஒரு மனுஷன் அந்தப் பட்டணத்திலே மாயவித்தைக்காரனாயிருந்து, தன்னை ஒரு பெரியவனென்று சொல்லி, சமாரியாநாட்டு ஜனங்களைப் பிரமிக்கப்பண்ணிக்கொண்டிருந்தான். 10 தேவனுடைய பெரிதான சக்தி இவன்தான் என்று எண்ணி, சிறியோர் பெரியோர் யாவரும் அவனுக்குச் செவிகொடுத்துவந்தார்கள். 11 அவன் அநேக காலமாய்த் தன்னுடைய மாயவித்தைகளினாலே அவர்களைப் பிரமிக்கப்பண்ணினதினால் அவனை மதித்துவந்தார்கள். 12 தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக்குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம் பெற்றார்கள். 13 அப்பொழுது சீமோனும் விசுவாசித்து ஞானஸ்நானம் பெற்று, பிலிப்பைப் பற்றிக்கொண்டு, அவனால் நடந்த அடையாளங்களையும் பெரிய அற்புதங்களையும் கண்டு பிரமித்தான். 14 சமாரியர் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டதை எருசலேமிலுள்ள அப்போஸ்தலர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடத்திற்கு அனுப்பினார்கள். 15 இவர்கள் வந்தபொழுது அவர்களில் ஒருவனும் பரிசுத்தஆவியைப் பெறாமல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானத்தை மாத்திரம் பெற்றிருந்தவர்களாகக் கண்டு, 16 அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி, 17 அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள். 18 அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து: 19 நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்தஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான். 20 பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது. 21 உன் இருதயம் தேவனுக்குமுன்பாகச் செம்மையாயிராதபடியால், இந்த விஷயத்திலே உனக்குப் பங்குமில்லை பாகமுமில்லை. 22 ஆகையால் நீ உன் துர்க்குணத்தை விட்டு மனந்திரும்பி, தேவனை நோக்கி வேண்டிக்கொள்; ஒருவேளை உன் இருதயத்தின் எண்ணம் உனக்கு மன்னிக்கப்படலாம். 23 நீ கசப்பான பிச்சிலும் பாவக்கட்டிலும் அகப்பட்டிருக்கிறதாகக் காண்கிறேன் என்றான். 24 அதற்குச் சீமோன்: நீங்கள் சொன்ன காரியங்களில் ஒன்றும் எனக்கு நேரிடாதபடிக்கு, எனக்காகக் கர்த்தரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றான். 25 இவ்விதமாய் அவர்கள் கர்த்தருடைய வசனத்தைச் சாட்சியாய் அறிவித்துச் சொன்னபின்பு, சமாரியருடைய அநேக கிராமங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள். 26 பின்பு கர்த்தருடைய தூதன் பிலிப்பை நோக்கி: நீ எழுந்து, தெற்குமுகமாய் எருசலேமிலிருந்து காசா பட்டணத்துக்குப் போகிற வனாந்தரமார்க்கமாய்ப் போ என்றான். 27 அந்தப்படி அவன் எழுந்துபோனான். அப்பொழுது எத்தியோப்பியருடைய ராஜஸ்திரீயாகிய கந்தாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷமெல்லாவற்றிற்கும் தலைவனுமாயிருந்த எத்தியோப்பியனாகிய ஒருவன் பணிந்துகொள்ளும்படி எருசலேமுக்கு வந்திருந்து; 28 ஊருக்குத் திரும்பிப்போகும்போது, தன் இரதத்திலே உட்கார்ந்து, ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக்கொண்டிருந்தான். 29 ஆவியானவர்: நீ போய், அந்த இரதத்துடனே சேர்ந்துகொள் என்று பிலிப்புடனே சொன்னார். 30 அப்பொழுது பிலிப்பு ஓடிப்போய்ச்சேர்ந்து, அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசிக்கிறதைக் கேட்டு: நீர் வாசிக்கிறவைகளின் கருத்து உமக்குத் தெரியுமா என்றான். 31 அதற்கு அவன்: ஒருவன் எனக்குத் தெரிவிக்காவிட்டால் அது எனக்கு எப்படித் தெரியும் என்று சொல்லி; பிலிப்பு ஏறி, தன்னோடே உட்காரும்படி அவனை வேண்டிக்கொண்டான். 32 அவன் வாசித்த வேதவாக்கியம் என்னவென்றால்: அவர் ஒரு ஆட்டைப்போல அடிக்கப்படுவதற்குக் கொண்டு போகப்பட்டார்; மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டுக்குட்டியைப்போல அவர் தமது வாயைத் திறவாதிருந்தார். 33 அவர் தம்மைத் தாழ்த்தினபோது அவருடைய நியாயம் எடுத்துப்போடப்பட்டது; அவருடைய ஜீவன் பூமியிலிருந்து எடுபட்டுப்போயிற்று; அவருடைய வம்சத்தை யாராலே சொல்லிமுடியும் என்பதே. 34 மந்திரி பிலிப்பை நோக்கி: தீர்க்கதரிசி யாரைக்குறித்து இதைச் சொல்லுகிறார்? தம்மைக்குறித்தோ, வேறொருவரைக்குறித்தோ? எனக்குச் சொல்லவேண்டும் என்று கேட்டுக்கொண்டான். 35 அப்பொழுது பிலிப்பு பேசத்தொடங்கி, இந்த வேதவாக்கியத்தை முன்னிட்டு இயேசுவைக்குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான். 36 இவ்விதமாய் அவர்கள் வழிநடந்துபோகையில், தண்ணீருள்ள ஓரிடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மந்திரி: இதோ, தண்ணீர் இருக்கிறதே, நான் ஞானஸ்நானம் பெறுகிறதற்குத் தடையென்ன என்றான். 37 அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன்: இயேசுகிறிஸ்துவைத் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி; 38 இரதத்தை நிறுத்தச்சொன்னான். அப்பொழுது பிலிப்பும் மந்திரியும் ஆகிய இருவரும் தண்ணீரில் இறங்கினார்கள்; பிலிப்பு அவனுக்கு ஞானஸ்நானங் கொடுத்தான். 39 அவர்கள் தண்ணீரிலிருந்து கரையேறினபொழுது, கர்த்தருடைய ஆவியானவர் பிலிப்பைக் கொண்டுபோய்விட்டார். மந்திரி அப்புறம் அவனைக் காணாமல், சந்தோஷத்தோடே தன் வழியே போனான். 40 பிலிப்பு ஆசோத்திலே காணப்பட்டு, அவ்விடத்திலிருந்து பிரயாணம்பண்ணி, செசரியாவுக்கு வருகிறவரையில் சகல பட்டணங்களிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டுவந்தான்.

அப்போஸ்தலர் 9

1 சவுல் என்பவன் இன்னுங் கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலைசெய்யும்படி சீறிப் பிரதான ஆசாரியரிடத்திற்குப் போய்; 2 இந்த மார்க்கத்தாராகிய புருஷரையாகிலும் ஸ்திரீகளையாகிலும் தான் கண்டுபிடித்தால், அவர்களைக் கட்டி எருசலேமுக்குக் கொண்டுவரும்படி, தமஸ்குவிலுள்ள ஜெபஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கினான். 3 அவன் பிரயாணமாய்ப் போய், தமஸ்குவுக்குச் சமீபித்தபோது, சடிதியிலே வானத்திலிருந்து ஒரு ஒளி அவனைச் சுற்றிப் பிரகாசித்தது; 4 அவன் தரையிலே விழுந்தான். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று தன்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். 5 அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் யார், என்றான். அதற்குக் கர்த்தர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே; முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்றார். 6 அவன் நடுங்கித் திகைத்து: ஆண்டவரே, நான் என்ன செய்யச் சித்தமாயிருக்கிறீர் என்றான். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, பட்டணத்துக்குள்ளே போ, நீ செய்யவேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். 7 அவனுடனேகூடப் பிரயாணம்பண்ணின மனுஷர்கள் சத்தத்தைக் கேட்டும் ஒருவரையுங் காணாமல் பிரமித்து நின்றார்கள். 8 சவுல் தரையிலிருந்தெழுந்து, தன் கண்களைத் திறந்தபோது ஒருவரையுங் காணவில்லை. அப்பொழுது கைலாகு கொடுத்து, அவனைத் தமஸ்குவுக்குக் கூட்டிக்கொண்டுபோனார்கள். 9 அவன் மூன்று நாள் பார்வையில்லாதவனாய்ப் புசியாமலும் குடியாமலும் இருந்தான். 10 தமஸ்குவிலே அனனியா என்னும் பேருள்ள ஒரு சீஷன் இருந்தான். அவனுக்குக் கர்த்தர் தரிசனமாகி: அனனியாவே, என்றார். அவன்: ஆண்டவரே, இதோ, அடியேன் என்றான். 11 அப்பொழுது கர்த்தர்: நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்; 12 அனனியா என்னும் பேருள்ள ஒரு மனுஷன் தன்னிடத்தில் வரவும், தான் பார்வையடையும்படி தன்மேல் கைவைக்கவும் தரிசனங்கண்டான் என்றார். 13 அதற்கு அனனியா: ஆண்டவரே, இந்த மனுஷன் எருசலேமிலுள்ள உம்முடைய பரிசுத்தவான்களுக்கு எத்தனையோ பொல்லாங்குகளைச் செய்தானென்று அவனைக்குறித்து அநேகரால் கேள்விப்பட்டிருக்கிறேன். 14 இங்கேயும் உம்முடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற யாவரையுங் கட்டும்படி அவன் பிரதான ஆசாரியர்களால் அதிகாரம் பெற்றிருக்கிறானே என்றான். 15 அதற்குக் கர்த்தர்: நீ போ; அவன் புறஜாதிகளுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் என்னுடைய நாமத்தை அறிவிக்கிறதற்காக நான் தெரிந்துகொண்ட பாத்திரமாயிருக்கிறான். 16 அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபடவேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன் என்றார். 17 அப்பொழுது அனனியா போய், வீட்டுக்குள் பிரவேசித்து, அவன்மேல் கையை வைத்து: சகோதரனாகிய சவுலே, நீ வந்தவழியிலே உனக்குத் தரிசனமான இயேசுவாகிய கர்த்தர், நீ பார்வையடையும்படிக்கும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்படும்படிக்கும் என்னை அனுப்பினார் என்றான். 18 உடனே அவன் கண்களிலிருந்து மீன் செதிள்கள் போன்றவைகள் விழுந்தது. அவன் பார்வையடைந்து, எழுந்திருந்து, ஞானஸ்நானம் பெற்றான். 19 பின்பு அவன் போஜனம்பண்ணிப் பலப்பட்டான். சவுல் தமஸ்குவிலுள்ள சீஷருடனே சிலநாள் இருந்து, 20 தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான். 21 கேட்டவர்களெல்லாரும் ஆச்சரியப்பட்டு: எருசலேமில் இந்த நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவர்களை நாசமாக்கி, இங்கேயும் அப்படிப்பட்டவர்களைக் கட்டிப் பிரதான ஆசாரியர்களிடத்திற்குக் கொண்டுபோகும்படி வந்தவன் இவனல்லவா என்றார்கள். 22 சவுல் அதிகமாகத் திடன்கொண்டு, இவரே கிறிஸ்துவென்று திருஷ்டாந்தப்படுத்தி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப்பண்ணினான். 23 அநேகநாள் சென்றபின்பு, யூதர்கள் அவனைக் கொலைசெய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள். 24 அவர்களுடைய யோசனை சவுலுக்குத் தெரியவந்தது. அவனைக் கொலைசெய்யும்படி அவர்கள் இரவும் பகலும் கோட்டைவாசல்களைக் காத்துக்கொண்டிருந்தார்கள். 25 சீஷர்கள் இராத்திரியிலே அவனைக் கூட்டிக்கொண்டுபோய், ஒரு கூடையிலே வைத்து, மதில்வழியாய் இறக்கிவிட்டார்கள். 26 சவுல் எருசலேமுக்கு வந்து, சீஷருடனே சேர்ந்துகொள்ளப் பார்த்தான்; அவர்கள் அவனைச் சீஷனென்று நம்பாமல் எல்லாரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள். 27 அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்ட விதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான். 28 அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து; 29 கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்து, கிரேக்கருடனே பேசித் தர்க்கித்தான்; அவர்களோ அவனைக் கொலைசெய்ய எத்தனம்பண்ணினார்கள். 30 சகோதரர் அதை அறிந்து, அவனைச் செசரியாவுக்கு அழைத்துக்கொண்டுபோய், தர்சுவுக்கு அனுப்பிவிட்டார்கள். 31 அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளிலெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்திவிருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்தஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின. 32 பேதுரு போய் எல்லாரையும் சந்தித்துவருகையில், அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான். 33 அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க் கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான். 34 பேதுரு அவனைப் பார்த்து: ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான். 35 லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். 36 யோப்பா பட்டணத்தில் கிரேக்குப்பாஷையிலே தொற்காள் என்று அர்த்தங்கொள்ளும் தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்; அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள். 37 அந்நாட்களில் அவள் வியாதிப்பட்டு மரணமடைந்தாள். அவளைக் குளிப்பாட்டி, மேல்வீட்டிலே கிடத்திவைத்தார்கள். 38 யோப்பா பட்டணம் லித்தா ஊருக்குச் சமீபமானபடியினாலே, பேதுரு அவ்விடத்தில் இருக்கிறானென்று சீஷர்கள் கேள்விப்பட்டு, தாமதமில்லாமல் தங்களிடத்தில் வரவேண்டுமென்று சொல்லும்படி இரண்டு மனுஷரை அவனிடத்திற்கு அனுப்பினார்கள். 39 பேதுரு எழுந்து, அவர்களுடனே கூடப்போனான். அவன் போய்ச் சேர்ந்தபொழுது, அவர்கள் அவனை மேல்வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்கள். அப்பொழுது விதவைகளெல்லாரும் அழுது, தொற்காள் தங்களுடனேகூட இருக்கையில் செய்திருந்த அங்கிகளையும் வஸ்திரங்களையும் காண்பித்து, அவனைச் சூழ்ந்துநின்றார்கள். 40 பேதுரு எல்லாரையும் வெளியே போகச்செய்து, முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, பிரேதத்தின் புறமாய்த் திரும்பி: தபீத்தாளே, எழுந்திரு என்றான். அப்பொழுது அவள் தன் கண்களைத் திறந்து, பேதுருவைப் பார்த்து உட்கார்ந்தாள். 41 அவன் அவளுக்குக் கைகொடுத்து, அவளை எழுந்திருக்கப்பண்ணி, பரிசுத்தவான்களையும் விதவைகளையும் அழைத்து, அவளை உயிருள்ளவளாக அவர்களுக்கு முன் நிறுத்தினான். 42 இது யோப்பா பட்டணம் எங்கும் தெரியவந்தது. அப்பொழுது அநேகர் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். 43 பின்பு அவன் யோப்பா பட்டணத்திலே தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் அநேகநாள் தங்கியிருந்தான்.

அப்போஸ்தலர் 10

1 இத்தாலியா பட்டாளம் என்னப்பட்ட பட்டாளத்திலே நூற்றுக்கு அதிபதியாகிய கொர்நேலியு என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் செசரியா பட்டணத்திலே இருந்தான். 2 அவன் தேவபக்தியுள்ளவனும் தன்வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான். 3 பகலில் ஏறக்குறைய ஒன்பதாம்மணி நேரத்திலே தேவனுடைய தூதன் தன்னிடத்தில் வரவும், கொர்நேலியுவே, என்று அழைக்கவும் பிரத்தியட்சமாய்த் தரிசனங்கண்டு, 4 அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது. 5 இப்பொழுது நீ யோப்பா பட்டணத்துக்கு மனுஷரை அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைப்பி. 6 அவன் தோல் பதனிடுகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்திலே தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான். 7 கொர்நேலியு தன்னுடனே பேசின தேவதூதன் போனபின்பு, தன் வீட்டு மனுஷரில் இரண்டுபேரையும் தன்னிடத்தில் சேவிக்கிற போர்ச்சேவகரில் தேவபக்தியுள்ள ஒருவனையும் அழைத்து, 8 எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச் சொல்லி, அவர்களை யோப்பா பட்டணத்துக்கு அனுப்பினான். 9 மறுநாளிலே அவர்கள் பிரயாணப்பட்டு, அந்தப் பட்டணத்துக்குச் சமீபித்து வருகையில், பேதுரு ஆறாம்மணி நேரத்திலே ஜெபம்பண்ணும்படி மேல்வீட்டில் ஏறினான். 10 அவன் மிகுந்த பசியடைந்து சாப்பிட மனதாயிருந்தான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணுகையில், அவன் ஞானதிருஷ்டியடைந்து, 11 வானம் திறந்திருக்கிறதாகவும், நாலுமுனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒருவிதமான கூடு தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும், 12 அதிலே பூமியிலுள்ள சகலவிதமான நாலுகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான். 13 அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் உண்டாயிற்று. 14 அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான். 15 அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று. 16 மூன்றாந்தரமும் அப்படியே உண்டாயிற்று. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 17 அப்பொழுது பேதுரு, தான் கண்ட தரிசனத்தைக்குறித்துத் தனக்குள்ளே சந்தேகப்படுகையில், இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனுஷர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்து நின்று: 18 பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள். 19 பேதுரு அந்தத் தரிசனத்தைக் குறித்துச் சிந்தனை பண்ணிக்கொண்டிருக்கையில், ஆவியானவர்: இதோ, மூன்று மனுஷர் உன்னைத் தேடுகிறார்கள். 20 நீ எழுந்து, இறங்கி, ஒன்றுக்குஞ் சந்தேகப்படாமல், அவர்களுடனே கூடப்போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார். 21 அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனுஷரிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற காரியம் என்ன என்றான். 22 அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதஜனங்களெல்லாராலும் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூற்றுக்கு அதிபதி உம்மைத் தம்முடைய வீட்டுக்கு அழைப்பித்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி பரிசுத்த தூதனாலே தேவயத்தனமாய்க் கட்டளைபெற்றார் என்றார்கள். 23 அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, அவர்களுக்கு உபசாரஞ்செய்து, மறுநாளிலே அவர்களுடனேகூடப் புறப்பட்டான்; யோப்பா பட்டணத்தாராகிய சகோதரரில் சிலரும் அவனுடனேகூடப் போனார்கள். 24 மறுநாளிலே செசரியா பட்டணத்தில் பிரவேசித்தார்கள். கொர்நேலியு தன் உறவின்முறையாரையும் தன்னுடைய விசேஷித்த சிநேகிதரையும் கூடவரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான். 25 பேதுரு உள்ளே பிரவேசிக்கிறபொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிர்கொண்டுபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான். 26 பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான். 27 அவனுடனே பேசிக்கொண்டு, உள்ளே போய், அநேகர் கூடிவந்திருக்கிறதைக் கண்டு, 28 அவர்களை நோக்கி: அந்நிய ஜாதியானோடே கலந்து அவனிடத்தில் போக்குவரவாயிருப்பது யூதனானவனுக்கு விலக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனுஷனையும் தீட்டுள்ளவனென்றும் அசுத்தனென்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குக் காண்பித்திருக்கிறார். 29 ஆகையால் நீங்கள் என்னை அழைப்பித்தபோது நான் எதிர்பேசாமல் வந்தேன். இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைப்பித்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான். 30 அதற்குக் கொர்நேலியு: நாலு நாளைக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, ஒன்பதாம்மணி நேரத்தில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது பிரகாசமுள்ள வஸ்திரந்தரித்த மனுஷன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று: 31 கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவசந்நிதியில் நினைத்தருளப்பட்டது. 32 யோப்பா பட்டணத்துக்கு ஆள் அனுப்பி, பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிடுகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார். 33 அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்ல காரியம்; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட யாவையும் கேட்கும்படிக்கு நாங்கள் எல்லாரும் இப்பொழுது இங்கே தேவசமுகத்தில் கூடியிருக்கிறோம் என்றான். 34 அப்பொழுது பேதுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும், 35 எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன். 36 எல்லாருக்கும் கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தைச் சுவிசேஷமாய்க் கூறி, இஸ்ரவேல் புத்திரருக்கு அனுப்பின வார்த்தையை அறிந்திருக்கிறீர்களே. 37 யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தபின்பு, கலிலேயா நாடு முதற்கொண்டு யூதேயா தேசமெங்கும் நடந்த சங்கதி இதுவே. 38 நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார். 39 யூதருடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்தவைகளெல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாயிருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள். 40 மூன்றாம் நாளிலே தேவன் அவரை எழுப்பிப் பிரத்தியட்சமாய்க் காணும்படி செய்தார். 41 ஆயினும் எல்லா ஜனங்களுக்கும் பிரத்தியட்சமாகும்படி செய்யாமல், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தபின்பு அவரோடே புசித்துக் குடித்தவர்களும் தேவனால் முன்பு நியமிக்கப்பட்ட சாட்சிகளுமாகிய எங்களுக்கே பிரத்தியட்சமாகும்படி செய்தார். 42 அன்றியும் அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் ஏற்படுத்தப்பட்ட நியாயாதிபதியென்று ஜனங்களுக்குப் பிரசங்கிக்கவும், சாட்சியாக ஒப்புவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். 43 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவானென்று தீர்க்கதரிசிகளெல்லாரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான். 44 இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக்கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். 45 அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும், 46 பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்தஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள். 47 அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்தஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி, 48 கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்.

அப்போஸ்தலர் 11

1 புறஜாதியாரும் தேவவசனத்தை ஏற்றுக்கொண்டார்களென்று யூதேயாவிலிருக்கிற அப்போஸ்தலரும் சகோதரரும் கேள்விப்பட்டார்கள். 2 பேதுரு எருசலேமுக்குத் திரும்பிவந்தபோது, விருத்தசேதனமுள்ளவர்கள் அவனை நோக்கி: 3 விருத்தசேதனமில்லாத மனுஷரிடத்தில் நீர் போய், அவர்களோடே போஜனம்பண்ணினீர் என்று, அவனோடே வாக்குவாதம்பண்ணினார்கள். 4 அதற்குப் பேதுரு காரியத்தை முதலிலிருந்து வரிசையாய் அவர்களுக்கு விவரிக்கத் தொடங்கி: 5 நான் யோப்பா பட்டணத்தில் ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தபோது ஞானதிருஷ்டியடைந்து, ஒரு தரிசனத்தைக்கண்டேன்; அதென்னவென்றால், நாலு முனைகளும் கட்டப்பட்ட பெரிய துப்பட்டியைப்போல ஒரு கூடு வானத்திலிருந்து என்னிடத்தில் இறங்கிவந்தது. 6 அதிலே நான் உற்றுப்பார்த்துக் கவனிக்கிறபோது, பூமியிலுள்ள நாலுகால் ஜீவன்களையும், காட்டுமிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், ஆகாயத்துப் பறவைகளையும் கண்டேன். 7 அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்துப் புசி என்று என்னுடனே சொல்லுகிற சத்தத்தையும் கேட்டேன். 8 அதற்கு நான்: ஆண்டவரே, அப்படியல்ல, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றும் ஒருக்காலும் என் வாய்க்குள்ளே போனதில்லை என்றேன். 9 இரண்டாந்தரமும் வானத்திலிருந்து சத்தம் உண்டாகி: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதேயென்று மறுமொழி சொல்லிற்று. 10 இப்படி மூன்றுதரம் சம்பவித்த பின்பு, எல்லாம் வானத்திற்குத் திரும்ப எடுத்துக்கொள்ளப்பட்டது. 11 உடனே செசரியாவிலிருந்து என்னிடத்திற்கு அனுப்பப்பட்ட மூன்று மனுஷர் நான் இருந்த வீட்டுக்குமுன்னே வந்து நின்றார்கள். 12 நான் ஒன்றுக்கும் சந்தேகப்படாமல் அவர்களோடேகூடப் போகும்படி ஆவியானவர் எனக்குக் கட்டளையிட்டார். சகோதரராகிய இந்த ஆறுபேரும் என்னோடேகூட வந்தார்கள்; அந்த மனுஷனுடைய வீட்டுக்குள் பிரவேசித்தோம். 13 அவனோ தன் வீட்டிலே ஒரு தேவதூதன் நிற்கிறதைக் கண்டதாகவும், யோப்பா பட்டணத்திலிருக்கிற பேதுரு என்று மறுபேர்கொண்ட சீமோனை அழைக்கும்படிக்கு மனுஷரை அவ்விடத்திற்கு அனுப்பு; 14 நீயும் உன் வீட்டாரனைவரும் இரட்சிக்கப்படுவதற்கேதுவான வார்த்தைகளை அவன் உனக்குச் சொல்லுவான் என்று அந்தத் தூதன் தனக்குச் சொன்னதாகவும் எங்களுக்கு அறிவித்தான். 15 நான் பேசத்தொடங்கினபோது, பரிசுத்த ஆவியானவர் ஆதியிலே நம்மேல் இறங்கினதுபோலவே, அவர்கள்மேலும் இறங்கினார். 16 யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தான், நீங்களோ பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள் என்று கர்த்தர் சொன்ன வார்த்தையை அப்பொழுது நினைவுகூர்ந்தேன். 17 ஆதலால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்குத் தேவன் வரத்தை அநுக்கிரகம்பண்ணினதுபோல அவர்களுக்கும் அந்த வரத்தையே அநுக்கிரகம்பண்ணியிருக்கும்போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம் என்றான். 18 இவைகளை அவர்கள் கேட்டபொழுது அமர்ந்திருந்து: அப்படியானால் ஜீவனுக்கேதுவான மனந்திரும்புதலைத் தேவன் புறஜாதியாருக்கும் அருளிச்செய்தார் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள். 19 ஸ்தேவான் நிமித்தமாய் எழும்பின உபத்திரவத்தினாலே சிதறப்பட்டவர்கள் சுவிசேஷ வசனத்தை யூதர்களுக்கேயன்றி மற்ற ஒருவருக்கும் அறிவியாமல், பெனிக்கேநாடு, சீப்புருதீவு, அந்தியோகியா பட்டணம்வரைக்கும் சுற்றித்திரிந்தார்கள். 20 அவர்களில் சீப்புருதீவாரும் சிரேனே பட்டணத்தாருமாகிய சிலர் அந்தியோகியா பட்டணத்துக்கு வந்து, கிரேக்கருடனே பேசிக் கர்த்தராகிய இயேசுவைக்குறித்துப் பிரசங்கித்தார்கள். 21 கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். 22 எருசலேமிலுள்ள சபையார் இந்தக் காரியங்களைக்குறித்துக் கேள்விப்பட்டபோது, அந்தியோகியாவரைக்கும் போகும்படிக்குப் பர்னபாவை அனுப்பினார்கள். 23 அவன் போய்ச் சேர்ந்து, தேவனுடைய கிருபையைக் கண்டபோது, சந்தோஷப்பட்டு, கர்த்தரிடத்தில் மனநிர்ணயமாய் நிலைத்திருக்கும்படி எல்லாருக்கும் புத்திசொன்னான். 24 அவன் நல்லவனும், பரிசுத்தஆவியினாலும் விசுவாசத்தினாலும் நிறைந்தவனுமாயிருந்தான்; அநேக ஜனங்கள் கர்த்தரிடமாய்ச் சேர்க்கப்பட்டார்கள். 25 பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப்போய், அவனைக்கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டுவந்தான். 26 அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று. 27 அந்நாட்களிலே எருசலேமிலிருந்து சில தீர்க்கதரிசிகள் அந்தியோகியாவுக்கு வந்தார்கள். 28 அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு ராயனுடைய நாட்களிலே உண்டாயிற்று. 29 அப்பொழுது சீஷரில் அவரவர் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்கதாக யூதேயாவில் குடியிருக்கிற சகோதரருக்கு உதவியாகப் பணஞ் சேகரித்து அனுப்பவேண்டுமென்று தீர்மானம்பண்ணினார்கள். 30 அப்படியே அவர்கள் சேகரித்து, பர்னபா சவுல் என்பவர்களுடைய கையிலே கொடுத்து, மூப்பரிடத்திற்கு அனுப்பினார்கள்.

அப்போஸ்தலர் 12

1 அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத்தொடங்கி; 2 யோவானுடைய சகோதரனாகிய யாக்கோபைப் பட்டயத்தினாலே கொலைசெய்தான். 3 அது யூதருக்குப் பிரியமாயிருக்கிறதென்று அவன் கண்டு, பேதுருவையும் பிடிக்கத்தொடர்ந்தான். அப்பொழுது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களாயிருந்தது. 4 அவனைப் பிடித்துச் சிறைச்சாலையிலே வைத்து, பஸ்காபண்டிகைக்குப் பின்பு ஜனங்களுக்கு முன்பாக அவனை வெளியே கொண்டுவரலாமென்று எண்ணி, அவனைக் காக்கும்படி வகுப்புக்கு நான்கு போர்ச்சேவகராக ஏற்படுத்திய நான்கு வகுப்புகளின் வசமாக ஒப்புவித்தான். 5 அப்படியே பேதுரு சிறைச்சாலையிலே காக்கப்பட்டிருக்கையில் சபையார் அவனுக்காகத் தேவனை நோக்கி ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார்கள். 6 ஏரோது அவனை வெளியே கொண்டுவரும்படி குறித்திருந்த நாளுக்கு முந்தின நாள் இராத்திரியிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளினாலே கட்டப்பட்டு, இரண்டு சேவகர் நடுவே நித்திரைபண்ணிக்கொண்டிருந்தான்; காவற்காரரும் கதவுக்கு முன்னிருந்து சிறைச்சாலையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். 7 அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான். உடனே சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது. 8 தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான். 9 அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல், தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தான். 10 அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான். 11 பேதுருவுக்குத் தெளிவு வந்தபோது: ஏரோதின் கைக்கும் யூதஜனங்களின் எண்ணங்களுக்கும் என்னை விடுதலையாக்கும்படிக்குக் கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்பினாரென்று நான் இப்பொழுது மெய்யாய் அறிந்திருக்கிறேன் என்றான். 12 அவன் இப்படி நிச்சயித்துக்கொண்டு, மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானுடைய தாயாகிய மரியாள் வீட்டுக்கு வந்தான்; அங்கே அநேகர் கூடி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள். 13 பேதுரு வாசற்கதவைத் தட்டினபோது ரோதை என்னும் பேர்கொண்ட ஒரு பெண் ஒற்றுக்கேட்க வந்தாள். 14 அவள் பேதுருவின் சத்தத்தை அறிந்து சந்தோஷத்தினால் கதவைத் திறவாமல், உள்ளேயோடி, பேதுரு வாசலுக்குமுன்னே நிற்கிறார் என்று அறிவித்தாள். 15 அவர்கள்: நீ பிதற்றுகிறாய் என்றார்கள். அவளோ அவர்தானென்று உறுதியாய்ச் சாதித்தாள். அப்பொழுது அவர்கள்: அவருடைய தூதனாயிருக்கலாம் என்றார்கள். 16 பேதுரு பின்னும் தட்டிக்கொண்டிருந்தான். அவர்கள் திறந்தபோது அவனைக் கண்டு பிரமித்தார்கள். 17 அவர்கள் பேசாமலிருக்கும்படி அவன் கையமர்த்தி, கர்த்தர் தன்னைக் காவலிலிருந்து விடுதலையாக்கின விதத்தை அவர்களுக்கு விவரித்து, இந்தச் செய்தியை யாக்கோபுக்கும் சகோதரருக்கும் அறிவியுங்கள் என்று சொல்லி; புறப்பட்டு, வேறொரு இடத்திற்குப் போனான். 18 பொழுது விடிந்தபின்பு பேதுருவைக்குறித்துச் சேவகருக்குள்ளே உண்டான கலக்கம் கொஞ்சமல்ல. 19 ஏரோது அவனைத் தேடிக் காணாமற்போனபோது, காவற்காரரை விசாரணைசெய்து, அவர்களைக் கொலைசெய்யும்படி கட்டளையிட்டு, பின்பு யூதேயாதேசத்தை விட்டுச் செசரியா பட்டணத்துக்குப்போய், அங்கே வாசம்பண்ணினான். 20 அக்காலத்திலே ஏரோது தீரியர்பேரிலும் சீதோனியர்பேரிலும் மிகவுங் கோபமாயிருந்தான். தங்கள் தேசம் ராஜாவின் தேசத்தினால் போஷிக்கப்பட்டபடியினால், அவர்கள் ஒருமனப்பட்டு, அவனிடத்தில் வந்து, ராஜாவின் வீட்டு விசாரணைக்காரனாகிய பிலாஸ்துவைத் தங்கள் வசமாக்கிச் சமாதானம் கேட்டுக்கொண்டார்கள். 21 குறித்தநாளிலே, ஏரோது ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான். 22 அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள். 23 அவன் தேவனுக்கு மகிமையைச் செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான்; அவன் புழுப்புழுத்து இறந்தான். 24 தேவவசனம் வளர்ந்து பெருகிற்று. 25 பர்னபாவும் சவுலும் தர்ம ஊழியத்தை நிறைவேற்றினபின்பு மாற்கு என்னும் மறுபேர்கொண்ட யோவானைக் கூட்டிக்கொண்டு எருசலேமைவிட்டுத் திரும்பிவந்தார்கள்.

அப்போஸ்தலர் 13

1 அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபையிலே பர்னபாவும், நீகர் என்னப்பட்ட சிமியோனும், சிரேனே ஊரானாகிய லூகியும், காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோதுடனேகூட வளர்க்கப்பட்ட மனாயீனும், சவுலும், தீர்க்கதரிசிகளாயும் போதகர்களாயும் இருந்தார்கள். 2 அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது: பர்னபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்தஆவியானவர் திருவுளம்பற்றினார். 3 அப்பொழுது உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்து, அவர்களை அனுப்பினார்கள். 4 அப்படியே அவர்கள் பரிசுத்தஆவியினால் அனுப்பப்பட்டுச் செலூக்கியாபட்டணத்துக்கு வந்து, கப்பல் ஏறி, அங்கிருந்து சீப்புருதீவுக்குப் போனார்கள். 5 சாலமி பட்டணத்தில் வந்தபோது அவர்கள் யூதருடைய ஜெபஆலயங்களில் தேவவசனத்தைப் பிரசங்கித்தார்கள். யோவானும் அவர்களுக்கு உதவிக்காரனாயிருந்தான். 6 அவர்கள் பாப்போ பட்டணம்வரைக்கும் தீவைக் கடந்துவந்தபோது, பர்யேசு என்னும் பேர்கொண்ட மாயவித்தைக்காரனும் கள்ளத் தீர்க்கதரிசியுமான ஒரு யூதனைக் கண்டார்கள். 7 அவன் விவேகமுள்ள மனுஷனாகிய செர்கியுபவுல் என்னும் அதிபதியுடனேகூட இருந்தான். அந்த அதிபதி பர்னபாவையும் சவுலையும் அழைப்பித்து, அவர்களிடத்தில் தேவவசனத்தைக் கேட்க ஆசையாயிருந்தான். 8 மாயவித்தைக்காரன் என்று அர்த்தங்கொள்ளும் பேரையுடைய அந்த எலிமா என்பவன் அதிபதியை விசுவாசத்தினின்று திருப்பும்படி வகைதேடி, அவர்களோடு எதிர்த்துநின்றான். 9 அப்பொழுது பவுல் என்று சொல்லப்பட்ட சவுல் பரிசுத்தஆவியினால் நிறைந்தவனாய் அவனை உற்றுப்பார்த்து: 10 எல்லாக் கபடமும் எல்லாப் பொல்லாங்கும் நிறைந்தவனே, பிசாசின் மகனே, நீதிக்கெல்லாம் பகைஞனே, கர்த்தருடைய செம்மையான வழிகளைப் புரட்டுவதில் ஓயமாட்டாயோ? 11 இதோ, இப்பொழுதே, கர்த்தருடைய கை உன்மேல் வந்திருக்கிறது, சிலகாலம் சூரியனைக் காணாமல் நீ குருடனாயிருப்பாய் என்றான். உடனே மந்தாரமும் இருளும் அவன்மேல் விழுந்தது; அவன் தடுமாறி, கைலாகு கொடுக்கிறவர்களைத் தேடினான். 12 அப்பொழுது அதிபதி சம்பவித்ததைக் கண்டு, கர்த்தருடைய உபதேசத்தைக்குறித்து அதிசயப்பட்டு, விசுவாசித்தான். 13 பின்பு பவுலும் அவனைச் சேர்ந்தவர்களும் பாப்போ பட்டணத்தைவிட்டுக் கப்பல் ஏறிப் பம்பிலியாவிலிருக்கும் பெர்கே பட்டணத்துக்கு வந்தார்கள். யோவான் அவர்களை விட்டுப் பிரிந்து, எருசலேமுக்குத் திரும்பிப்போனான். 14 அவர்கள் பெர்கே பட்டணத்தை விட்டுப் புறப்பட்டு, பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்து, ஓய்வுநாளிலே ஜெபஆலயத்தில் பிரவேசித்து, உட்கார்ந்தார்கள். 15 நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசன ஆகமமும் வாசித்துமுடிந்தபின்பு: சகோதரரே, நீங்கள் ஜனங்களுக்குப் புத்திசொல்ல விரும்பினால் சொல்லுங்கள் என்று சொல்லும்படி ஜெபஆலயத்தலைவர்கள் அவர்களிடத்தில் ஆள் அனுப்பினார்கள். 16 அப்பொழுது பவுல் எழுந்திருந்து, கையமர்த்தி: இஸ்ரவேலரே, தேவனுக்குப் பயந்து நடக்கிற சகல ஜனங்களே, கேளுங்கள். 17 இஸ்ரவேலராகிய இந்த ஜனத்தினுடைய தேவன் நம்முடைய பிதாக்களைத் தெரிந்துகொண்டு, எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாய்ச் சஞ்சரித்தபோது ஜனங்களை உயர்த்தி, தமது புயபலத்தினாலே அதிலிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி, 18 நாற்பது வருஷகாலமாய் வனாந்தரத்தில் அவர்களை ஆதரித்து, 19 கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, அவர்களுடைய தேசத்தை இவர்களுக்குச் சுதந்தரமாகப் பங்கிட்டுக்கொடுத்து, 20 பின்பு ஏறக்குறைய நானூற்றைம்பது வருஷகாலமாய் சாமுவேல் தீர்க்கதரிசிவரைக்கும் அவர்களுக்கு நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார். 21 அதுமுதல் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்; அப்படியே தேவன் பென்யமீன் கோத்திரத்தானாகிய கீசுடைய குமாரனான சவுலை நாற்பது வருஷகாலமாய் அவர்களுக்குக் கொடுத்தார். 22 பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார். 23 அவனுடைய சந்ததியிலே தேவன் தமது வாக்குத்தத்தத்தின்படியே இஸ்ரவேலுக்கு இரட்சகராக இயேசுவை எழும்பப்பண்ணினார். 24 இவர் வெளிப்படுவதற்குமுன்னே மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக்குறித்து யோவான் இஸ்ரவேலர் யாவருக்கும் பிரசங்கித்தான். 25 யோவான் தன் பணிவிடை ஓட்டத்தை நிறைவேற்றுகிறபோது: நீங்கள் என்னை யார் என்று நினைக்கிறீர்கள், நான் அவர் அல்ல, இதோ, எனக்குப்பின் ஒருவர் வருகிறார், அவருடைய பாதரட்சையை அவிழ்க்கிறதற்கும் நான் பாத்திரன் அல்ல என்றான். 26 சகோதரரே, ஆபிரகாமின் சந்ததியில் பிறந்தவர்களே, தேவனுக்குப் பயந்து நடக்கிறவர்களே, இந்த இரட்சிப்பின் வசனம் உங்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. 27 எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும், ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும், அவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்ததினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள். 28 மரணத்திற்கு ஏதுவானதொன்றும் அவரிடத்தில் காணாதிருந்தும், அவரைக் கொலைசெய்யும்படிக்குப் பிலாத்துவை வேண்டிக்கொண்டார்கள். 29 அவரைக்குறித்து எழுதியிருக்கிறவைகள் யாவையும் அவர்கள் நிறைவேற்றினபின்பு, அவரை மரத்திலிருந்து இறக்கி, கல்லறையிலே வைத்தார்கள். 30 தேவனோ அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார். 31 தம்முடனேகூடக் கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குப் போனவர்களுக்கு அவர் அநேகநாள் தரிசனமானார்; அவர்களே ஜனங்களுக்கு முன்பாக அவருக்குச் சாட்சிகளாயிருக்கிறார்கள். 32 நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறபடியே, 33 இயேசுவை எழுப்பினதினாலே தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தத்தை அவர்களுடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் என்று நாங்களும் உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கிறோம். 34 இனி அவர் அழிவுக்குட்படாதபடிக்கு அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்பதைக்குறித்து: தாவீதுக்கு அருளின நிச்சயமான கிருபைகளை உங்களுக்குக் கட்டளையிடுவேன் என்று திருவுளம்பற்றினார். 35 அன்றியும், உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர் என்று வேறொரு சங்கீதத்தில் சொல்லியிருக்கிறது. 36 தாவீது தன் காலத்திலே தேவனுடைய சித்தத்தின்படி அவருக்கு ஊழியஞ்செய்தபின்பு நித்திரையடைந்து, தன் பிதாக்களிடத்திலே சேர்க்கப்பட்டு, அழிவைக் கண்டான். 37 தேவனால் எழுப்பப்பட்டவரோ அழிவைக் காணவில்லை. 38 ஆதலால் சகோதரரே, இவர் மூலமாய் உங்களுக்குப் பாவமன்னிப்பு உண்டாகும் என்று அறிவிக்கப்படுகிறதென்றும், 39 மோசேயின் நியாயப்பிரமாணத்தினாலே நீங்கள் எவைகளினின்று விடுதலையாகி நீதிமான்களாக்கப்படக்கூடாதிருந்ததோ, விசுவாசிக்கிறவன் எவனும் அவைகளினின்று இவராலே விடுதலையாகி நீதிமானாக்கப்படுகிறான் என்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது. 40 அன்றியும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்திலே: 41 அசட்டைக்காரரே, பாருங்கள், பிரமித்து அழிந்துபோங்கள்! உங்கள் நாட்களில் ஒரு கிரியையை நான் நடப்பிப்பேன், ஒருவன் அதை உங்களுக்கு விவரித்துச் சொன்னாலும் நீங்கள் விசுவாசிக்கமாட்டீர்கள் என்று சொல்லியிருக்கிறபடி, உங்களுக்கு நேரிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்றான். 42 அவர்கள் யூதருடைய ஜெபஆலயத்திலிருந்து புறப்படுகையில், அடுத்த ஓய்வுநாளிலே இந்த வசனங்களைத் தங்களுக்குச் சொல்லவேண்டும் என்று புறஜாதியார் வேண்டிக்கொண்டார்கள். 43 ஜெபஆலயத்தில் கூடின சபை கலைந்துபோனபின்பு, யூதரிலும் யூதமார்க்கத்தமைந்த பக்தியுள்ளவர்களிலும் அநேகர் பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். அவர்களுடனே இவர்கள் பேசி, தேவனுடைய கிருபையிலே நிலைகொண்டிருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொன்னார்கள். 44 அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள். 45 யூதர்கள் ஜனக்கூட்டங்களைக் கண்டபோது பொறாமையினால் நிறைந்து, பவுலினால் சொல்லப்பட்டவைகளுக்கு எதிரிடையாய்ப் பேசி, விரோதித்துத் தூஷித்தார்கள். 46 அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம். 47 நீர் பூமியின் கடைசிபரியந்தமும் இரட்சிப்பாயிருக்கும்படி உம்மை ஜாதிகளுக்கு ஒளியாக வைத்தேன் என்கிற வேதவாக்கியத்தின்படி கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் இப்படிச் செய்கிறோம் என்றார்கள். 48 புறஜாதியார் அதைக் கேட்டுச் சந்தோஷப்பட்டு, கர்த்தருடைய வசனத்தை மகிமைப்படுத்தினார்கள். நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்டவர்கள் எவர்களோ அவர்கள் விசுவாசித்தார்கள். 49 கர்த்தருடைய வசனம் அத்தேசமெங்கும் பிரசித்தமாயிற்று. 50 யூதர்கள் பக்தியும் கனமுமுள்ள ஸ்திரீகளையும் பட்டணத்து முதலாளிகளையும் எடுத்துவிட்டு, பவுலையும் பர்னபாவையும் துன்பப்படுத்தும்படி செய்து, தங்கள் எல்லைகளுக்குப் புறம்பாக அவர்களைத் துரத்திவிட்டார்கள். 51 இவர்கள் தங்கள் கால்களில் படிந்த தூசியை அவர்களுக்கு எதிராக உதறிப்போட்டு, இக்கோனியா பட்டணத்துக்குப் போனார்கள். 52 சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள்.

அப்போஸ்தலர் 14

1 இக்கோனியா பட்டணத்திலே அவர்கள் இருவரும் யூதருடைய ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதரிலும் கிரேக்கரிலும் திரளான ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாகப் பிரசங்கித்தார்கள். 2 விசுவாசியாத யூதர்கள் சகோதரருக்கு விரோதமாகப் புறஜாதியாருடைய மனதை எழுப்பிவிட்டு, பகையுண்டாக்கினார்கள். 3 அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்துக் கர்த்தரை முன்னிட்டுத் தைரியமுள்ளவர்களாய்ப் போதகம்பண்ணினார்கள்; அவர் தமது கிருபையுள்ள வசனத்திற்குச் சாட்சியாக அடையாளங்களும் அற்புதங்களும் அவர்கள் கைகளால் செய்யப்படும்படி அநுக்கிரகம்பண்ணினார். 4 பட்டணத்து ஜனங்கள் பிரிந்து, சிலர் யூதரையும் சிலர் அப்போஸ்தலரையும் சேர்ந்துகொண்டார்கள். 5 இவர்களை அவமானப்படுத்தவும் கல்லெறியவும் வேண்டுமென்று, புறஜாதியாரும் யூதரும் அவர்கள் அதிகாரிகளும் அமளிபண்ணுகையில், 6 இவர்கள் அதை அறிந்து, லிக்கவோனியா நாட்டிலுள்ள பட்டணங்களாகிய லீஸ்திராவுக்கும் தெர்பைக்கும் அவைகளின் சுற்றுப்புறங்களுக்கும் ஓடிப்போய்; 7 அங்கே சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணினார்கள். 8 லீஸ்திராவிலே ஒருவன் தன் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்து, ஒருபோதும் நடவாமல், கால்கள் வழங்காதவனாய் உட்கார்ந்து, 9 பவுல் பேசுகிறதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனைப் பவுல் உற்றுப்பார்த்து, இரட்சிப்புக்கேற்ற விசுவாசம் அவனுக்கு உண்டென்று கண்டு: 10 நீ எழுந்து காலூன்றி நிமிர்ந்து நில் என்று உரத்த சத்தத்தோடே சொன்னான். உடனே அவன் குதித்தெழுந்து நடந்தான். 11 பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி, 12 பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள். 13 அல்லாமலும் பட்டணத்துக்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான். 14 அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்: 15 மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம். 16 சென்ற காலங்களில் அவர் சகல ஜனங்களையும் தங்கள் தங்கள் வழிகளிலே நடக்கவிட்டிருந்தும், 17 அவர் நன்மை செய்துவந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக்குறித்துச் சாட்சி விளங்கப்பண்ணாதிருந்ததில்லை என்றார்கள். 18 இப்படி அவர்கள் சொல்லியும் தங்களுக்கு ஜனங்கள் பலியிடாதபடிக்கு அவர்களை அமர்த்துகிறது அரிதாயிருந்தது. 19 பின்பு அந்தியோகியாவிலும் இக்கோனியாவிலுமிருந்து சில யூதர்கள் வந்து, ஜனங்களுக்குப் போதனைசெய்து, பவுலைக் கல்லெறிந்து, அவன் மரித்துப்போனானென்று எண்ணி, அவனைப் பட்டணத்துக்கு வெளியிலே இழுத்துக்கொண்டு போனார்கள். 20 சீஷர்கள் அவனைச் சூழ்ந்துநிற்கையில், அவன் எழுந்து, பட்டணத்திற்குள் பிரவேசித்தான். மறுநாளில் பர்னபாவுடனேகூடத் தெர்பைக்குப் புறப்பட்டுப்போனான். 21 அந்தப் பட்டணத்தில் அவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அநேகரைச் சீஷராக்கினபின்பு, லீஸ்திராவுக்கும் இக்கோனியாவுக்கும் அந்தியோகியாவுக்கும் திரும்பிவந்து, 22 சீஷருடைய மனதைத் திடப்படுத்தி, விசுவாசத்திலே நிலைத்திருக்கும்படி அவர்களுக்குப் புத்திசொல்லி, நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய்த் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கவேண்டுமென்று சொன்னார்கள். 23 அல்லாமலும் அந்தந்தச் சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக்கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள். 24 பின்பு பிசீதியாநாட்டைக் கடந்து, பம்பிலியா நாட்டிற்கு வந்து, 25 பெர்கே ஊரில் வசனத்தைப் பிரசங்கித்து, அத்தலியா பட்டணத்திற்குப் போனார்கள். 26 அங்கே கப்பல் ஏறி, தாங்கள் நிறைவேற்றின கிரியைக்காகத் தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டுப் புறப்பட்டு அந்தியோகியாவுக்கு வந்தார்கள். 27 அவர்கள் அங்கே சேர்ந்தபொழுது சபையைக் கூடிவரச்செய்து, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையும், அவர் புறஜாதிகளுக்கு விசுவாசத்தின் கதவைத்திறந்ததையும் அறிவித்து, 28 அங்கே சீஷருடனேகூட அநேகநாள் சஞ்சரித்திருந்தார்கள்.

அப்போஸ்தலர் 15

1 சிலர் யூதேயாவிலிருந்து வந்து: நீங்கள் மோசேயினுடைய முறைமையின்படியே விருத்தசேதனமடையாவிட்டால், இரட்சிக்கப்படமாட்டீர்கள் என்று சகோதரருக்குப் போதகம்பண்ணினார்கள். 2 அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும் பர்னபாவும் அவர்களைச் சேர்ந்த வேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள். 3 அந்தப்படி அவர்கள் சபையாரால் வழிவிட்டனுப்பப்பட்டு, பெனிக்கே சமாரியா நாடுகளின் வழியாய்ப் போய், புறஜாதியார் மனந்திரும்பின செய்தியை அறிவித்து, சகோதரர் எல்லாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கினார்கள். 4 அவர்கள் எருசலேமுக்கு வந்து, சபையாராலும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, தேவன் தங்களைக்கொண்டு செய்தவைகளையெல்லாம் அறிவித்தார்கள். 5 அப்பொழுது பரிசேய சமயத்தாரில் விசுவாசிகளான சிலர் எழுந்து, அவர்களை விருத்தசேதனம்பண்ணுகிறதும் மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்குக் கற்பிக்கிறதும் அவசியம் என்றார்கள். 6 அப்போஸ்தலரும் மூப்பரும் இந்தக் காரியத்தைக் குறித்து ஆலோசனைபண்ணும்படி கூடினார்கள். 7 மிகுந்த தர்க்கம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி: சகோதரரே, நீங்கள் அறிந்திருக்கிறபடி புறஜாதியார் என்னுடைய வாயினாலே சுவிசேஷ வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்னே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார். 8 இருதயங்களை அறிந்திருக்கிற தேவன் நமக்குப் பரிசுத்தஆவியைத் தந்தருளினதுபோல அவர்களுக்கும் தந்தருளி, அவர்களைக்குறித்துச் சாட்சிகொடுத்தார்; 9 விசுவாசத்தினாலே அவர்கள் இருதயங்களை அவர் சுத்தமாக்கி, நமக்கும் அவர்களுக்கும் யாதொரு வித்தியாசமுமிராதபடி செய்தார். 10 இப்படியிருக்க, நம்முடைய பிதாக்களாலும் நம்மாலும் சுமக்கக்கூடாதிருந்த நுகத்தடியைச் சீஷர் கழுத்தின்மேல் சுமத்துவதினால், நீங்கள் தேவனைச் சோதிப்பானேன்? 11 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையினாலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான். 12 அப்பொழுது கூடிவந்திருந்த யாவரும் அமைந்திருந்து, பர்னபாவும் பவுலும் தங்களைக்கொண்டு தேவன் புறஜாதிகளுக்குள்ளே செய்த அடையாளங்கள் அற்புதங்கள் யாவையும் விவரித்துச் சொல்லக்கேட்டார்கள். 13 அவர்கள் பேசி முடிந்தபின்பு, யாக்கோபு அவர்களை நோக்கி: சகோதரரே, எனக்குச் செவிகொடுங்கள். 14 தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி முதல்முதல் அவர்களுக்குக் கடாட்சித்தருளின விதத்தைச் சிமியோன் விவரித்துச் சொன்னாரே. 15 அதற்குத் தீர்க்கதரிசிகளுடைய வாக்கியங்களும் ஒத்திருக்கிறது. 16 எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமந்தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு, 17 நான் இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுபடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்ப்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. 18 உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது. 19 ஆதலால் புறஜாதிகளில் தேவனிடத்தில் திரும்புகிறவர்களைக் கலங்கப்பண்ணலாகாதென்றும், 20 விக்கிரகங்களுக்குப் படைத்த அசுசியானவைகளுக்கும், வேசித்தனத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், இரத்தத்திற்கும், விலகியிருக்கும்படி அவர்களுக்கு நாம் எழுதவேண்டுமென்றும் நான் தீர்மானிக்கிறேன். 21 மோசேயின் ஆகமங்கள் ஓய்வுநாள்தோறும் ஜெபஆலயங்களில் வாசிக்கப்பட்டு வருகிறபடியால், பூர்வகாலந்தொடங்கிச் சகல பட்டணங்களிலும் அந்த ஆகமங்களைப் பிரசங்கிக்கிறவர்களும் உண்டே என்றான். 22 அப்பொழுது தங்களில் சிலரைத் தெரிந்துகொண்டு பவுலோடும் பர்னபாவோடும் அந்தியோகியாவுக்கு அனுப்புகிறது அப்போஸ்தலருக்கும் மூப்பருக்கும் சபையாரெல்லாருக்கும் நலமாகக்கண்டது. அவர்கள் யாரென்றால், சகோதரரில் விசேஷித்தவர்களாகிய பர்சபா என்று மறுபேர்கொண்ட யூதாவும் சீலாவுமே. 23 இவர்கள் கையில் அவர்கள் எழுதிக்கொடுத்தனுப்பின நிருபமாவது: அப்போஸ்தலரும் மூப்பரும் சகோதரருமாகிய நாங்கள் அந்தியோகியாவிலும் சீரியாவிலும் சிலிசியாவிலும் இருக்கும் புறஜாதியாராகிய சகோதரருக்கு வாழ்த்துதல் சொல்லி எழுதிய நிருபம் என்னவென்றால்: 24 எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடைய வேண்டுமென்றும், நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி, உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே, 25 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்காகத் தங்கள் பிராணனையும் ஒப்புக்கொடுக்கத் துணிந்தவர்களும் எங்களுக்குப் பிரியமானவர்களுமாயிருக்கிற பர்னபா பவுல் என்பவர்களோடுங்கூட, 26 எங்களால் தெரிந்துகொள்ளப்பட்ட சில மனுஷரை உங்களிடத்திற்கு அனுப்புகிறது ஒருமனப்பட்டுக் கூடின எங்களுக்கு நலமாகக் கண்டது. 27 அந்தப்படியே யூதாவையும் சீலாவையும் அனுப்பியிருக்கிறோம். அவர்களும் இவைகளை வாய்மொழியாக உங்களுக்கு அறிவிப்பார்கள். 28 எவையெனில், விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்கவேண்டுமென்பதே. 29 அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்தஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள். 30 அவர்கள் அனுப்பிவிடப்பட்டு, அந்தியோகியாவுக்கு வந்து, சபையைக் கூடிவரச்செய்து, நிருபத்தை ஒப்புவித்தார்கள். 31 அதை அவர்கள் வாசித்து, அதனாலுண்டாகிய ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள். 32 யூதா சீலா என்பவர்களும் தீர்க்கதரிசிகளாயிருந்தபடியினாலே அநேக வார்த்தைகளினால் சகோதரருக்குப் புத்திசொல்லி, அவர்களைத் திடப்படுத்தி; 33 சிலகாலம் அங்கேயிருந்து, பின்பு சகோதரரால் சமாதானத்தோடே அப்போஸ்தலரிடத்திற்கு அனுப்பிவிடப்பட்டார்கள். 34 ஆகிலும் சீலாவுக்கு அங்கே தரித்திருக்கிறது நலமாய்க் கண்டது. 35 பவுலும் பர்னபாவும் அந்தியோகியாவிலே சஞ்சரித்து, வேறே அநேகரோடுங்கூடக் கர்த்தருடைய வசனத்தை உபதேசித்துப் பிரசங்கித்துக்கொண்டிருந்தார்கள். 36 சிலநாளைக்குப்பின்பு பவுல் பர்னபாவை நோக்கி: நாம் கர்த்தருடைய வசனத்தை அறிவித்திருக்கிற சகல பட்டணங்களிலுமுள்ள சகோதரர்கள் எப்படியிருக்கிறார்களென்று போய்ப்பார்ப்போம் வாரும் என்றான். 37 அப்பொழுது பர்னபா என்பவன் மாற்கு என்னும் பேர்கொண்ட யோவானைக்கூட அழைத்துக்கொண்டு போகவேண்டும் என்றான். 38 பவுலோ: அவன் பம்பிலியா நாட்டிலே நம்மை விட்டுப் பிரிந்து நம்மோடேகூட ஊழியத்துக்கு வராததினாலே, அவனை அழைத்துக்கொண்டு போகக்கூடாது என்றான். 39 இதைப்பற்றி அவர்களுக்குள்ளே கடுங்கோபமூண்டபடியினால் அவர்கள் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தார்கள். பர்னபா மாற்குவைக் கூட்டிக்கொண்டு கப்பல் ஏறிச் சீப்புருதீவுக்குப் போனான். 40 பவுலோ சீலாவைத் தெரிந்துகொண்டு, சகோதரராலே தேவனுடைய கிருபைக்கு ஒப்புவிக்கப்பட்டு, புறப்பட்டு, 41 சீரியாவிலும் சிலிசியாவிலும் திரிந்து, சபைகளைத் திடப்படுத்தினான்.

அப்போஸ்தலர் 16

1 அதன்பின்பு அவன் தெர்பைக்கும் லீஸ்திராவுக்கும் போனான். அங்கே தீமோத்தேயு என்னப்பட்ட ஒரு சீஷன் இருந்தான்; அவன் தாய் விசுவாசமுள்ள யூதஸ்திரீ, அவன் தகப்பன் கிரேக்கன். 2 அவன் லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான். 3 அவனைப் பவுல் தன்னுடனே கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்று விரும்பி, அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்று அவ்விடங்களிலிருக்கும் யூதர்களெல்லாரும் அறிந்திருந்தபடியால், அவர்கள் நிமித்தம் அவனுக்கு விருத்தசேதனம்பண்ணினான். 4 அவர்கள் பட்டணங்கள்தோறும் போகையில், எருசலேமிலிருக்கும் அப்போஸ்தலராலும் மூப்பராலும் விதிக்கப்பட்ட சட்டங்களைக் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு ஒப்புவித்தார்கள். 5 அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின. 6 அவர்கள் பிரிகியா கலாத்தியா நாடுகளைக் கடந்துபோனபோது, ஆசியாவிலே வசனத்தைச் சொல்லாதபடிக்குப் பரிசுத்தஆவியினாலே தடைபண்ணப்பட்டு, 7 மீசியா தேசமட்டும் வந்து, பித்தினியா நாட்டுக்குப் போகப் பிரயத்தனம் பண்ணினார்கள்; ஆவியானவரோ அவர்களைப் போகவொட்டாதிருந்தார். 8 அப்பொழுது அவர்கள் மீசியா பக்கமாய்ப் போய், துரோவாவுக்கு வந்தார்கள். 9 அங்கே இராத்திரியிலே பவுலுக்கு ஒரு தரிசனம் உண்டாயிற்று; அதென்னவெனில், மக்கெதோனியா தேசத்தான் ஒருவன் வந்துநின்று: நீர் மக்கெதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று தன்னை வேண்டிக்கொண்டதாக இருந்தது. 10 அந்தத் தரிசனத்தை அவன் கண்டபோது, அவர்களுக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி கர்த்தர் எங்களை அழைத்தாரென்று நாங்கள் நிச்சயித்துக்கொண்டு, உடனே மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப்போகப் பிரயத்தனம்பண்ணி, 11 துரோவாவில் கப்பல் ஏறி, சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாளிலே நெயாப்போலி பட்டணத்துக்கும் நேராய் ஓடி, 12 அங்கேயிருந்து மக்கெதோனியா தேசத்து நாடுகளில் ஒன்றிற்குத் தலைமையானதும் ரோமர் குடியேறினதுமான பிலிப்பி பட்டணத்துக்கு வந்து, அந்தப் பட்டணத்திலே சிலநாள் தங்கியிருந்தோம். 13 ஓய்வுநாளில் நாங்கள் பட்டணத்துக்கு வெளியே போய், ஆற்றினருகே வழக்கமாய் ஜெபம்பண்ணுகிற இடத்தில் உட்கார்ந்து, அங்கே கூடிவந்த ஸ்திரீகளுக்கு உபதேசித்தோம். 14 அப்பொழுது தியத்தீரா ஊராளும் இரத்தாம்பரம் விற்கிறவளும் தேவனை வணங்குகிறவளுமாகிய லீதியாள் என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீ கேட்டுக்கொண்டிருந்தாள்; பவுல் சொல்லியவைகளைக் கவனிக்கும்படி கர்த்தர் அவள் இருதயத்தைத் திறந்தருளினார். 15 அவளும் அவள் வீட்டாரும் ஞானஸ்நானம் பெற்றபின்பு, அவள் எங்களை நோக்கி: நீங்கள் என்னைக் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவளென்று எண்ணினால், என் வீட்டிலே வந்து தங்கியிருங்கள் என்று எங்களை வருந்திக் கேட்டுக்கொண்டாள். 16 நாங்கள் ஜெபம்பண்ணுகிற இடத்துக்குப் போகையில் குறிசொல்ல ஏவுகிற ஆவியைக்கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால் தன் எஜமான்களுக்கு மிகுந்த ஆதாயத்தை உண்டாக்கின ஒரு பெண் எங்களுக்கு எதிர்ப்பட்டாள். 17 அவள் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து: இந்த மனுஷர் உன்னதமான தேவனுடைய ஊழியக்காரர், இரட்சிப்பின் வழியை நமக்கு அறிவிக்கிறவர்கள் என்று சத்தமிட்டாள். 18 இப்படி அநேகநாள் செய்துகொண்டுவந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிப்பார்த்து: நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்; அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று. 19 அவளுடைய எஜமான்கள் தங்கள் ஆதாயத்து நம்பிக்கை அற்றுப்போயிற்றென்று கண்டு, பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைவெளியிலுள்ள அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டு போனார்கள். 20 அவர்களை அதிகாரிகளிடத்தில் ஒப்புவித்து: யூதர்களாகிய இந்த மனுஷர் நம்முடைய பட்டணத்தில் கலகம்பண்ணி, 21 ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவும் அநுசரிக்கவும் தகாத முறைமைகளைப் போதிக்கிறார்கள் என்றார்கள். 22 அப்பொழுது ஜனங்கள் கூட்டங்கூடி, அவர்களுக்கு விரோதமாய் எழும்பினார்கள். அதிகாரிகள் அவர்கள் வஸ்திரங்களைக் கிழித்துப்போடவும், அவர்களை அடிக்கவும் சொல்லி; 23 அவர்களை அநேக அடி அடித்தபின்பு, சிறைச்சாலையிலே வைத்து அவர்களைப் பத்திரமாய்க் காக்கும்படி சிறைச்சாலைக்காரனுக்குக் கட்டளையிட்டார்கள். 24 அவன் இப்படிப்பட்ட கட்டளையைப் பெற்று, அவர்களை உட்காவலறையிலே அடைத்து, அவர்கள் கால்களைத் தொழுமரத்தில் மாட்டிவைத்தான். 25 நடுராத்திரியிலே பவுலும் சீலாவும் ஜெபம்பண்ணி, தேவனைத் துதித்துப் பாடினார்கள்; காவலில் வைக்கப்பட்டவர்கள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். 26 சடிதியிலே சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசையும்படியாகப் பூமி மிகவும் அதிர்ந்தது; உடனே கதவுகளெல்லாம் திறவுண்டது; எல்லாருடைய கட்டுகளும் கழன்றுபோயிற்று. 27 சிறைச்சாலைக்காரன் நித்திரை தெளிந்து, சிறைச்சாலையின் கதவுகள் திறந்திருக்கிறதைக் கண்டு, கட்டுண்டவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி, பட்டயத்தை உருவித் தன்னைக் கொலைசெய்து கொள்ளப்போனான். 28 பவுல் மிகுந்த சத்தமிட்டு: நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே; நாங்கள் எல்லாரும் இங்கேதான் இருக்கிறோம் என்றான். 29 அப்பொழுது அவன் தீபங்களைக் கொண்டுவரச்சொல்லி, உள்ளே ஓடி, நடுநடுங்கி, பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, 30 அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான். 31 அதற்கு அவர்கள்: கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள் என்று சொல்லி, 32 அவனுக்கும் அவன் வீட்டிலிருந்த யாவருக்கும் கர்த்தருடைய வசனத்தைப் போதித்தார்கள். 33 மேலும் இராத்திரியில் அந்நேரத்திலேதானே அவன் அவர்களை அழைத்துக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான். அவனும் அவனுடையவர்கள் அனைவரும் உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள். 34 பின்பு அவன் அவர்களைத் தன் வீட்டிற்குக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்குப் போஜனங்கொடுத்து, தன் வீட்டார் அனைவரோடுங்கூடத் தேவனிடத்தில் விசுவாசமுள்ளவனாகி மனமகிழ்ச்சியாயிருந்தான். 35 பொழுது விடிந்தபின்பு: அந்த மனுஷரை விட்டுவிடுங்கள் என்று சொல்ல அதிகாரிகள் சேவகர்களை அனுப்பினார்கள். 36 சிறைச்சாலைக்காரன் பவுலுக்கு இந்த வார்த்தைகளை அறிவித்து: உங்களை விடுதலையாக்கும்படிக்கு அதிகாரிகள் கட்டளை அனுப்பினார்கள்; ஆகையால் நீங்கள் இப்பொழுது புறப்பட்டுச் சமாதானத்துடனே போங்கள் என்றான். 37 அதற்குப் பவுல்: ரோமராகிய எங்களை அவர்கள் நியாயம் விசாரியாமல், வெளியரங்கமாய் அடித்து, சிறைச்சாலையிலே போட்டார்கள்; இப்பொழுது இரகசியமாய் எங்களை விடுதலையாக்குகிறார்களோ? அப்படியல்ல, அவர்களே வந்து, எங்களை வெளியே அழைத்து அனுப்பி விடட்டும் என்றான். 38 சேவகர் இந்த வார்த்தைகளை அதிகாரிகளுக்கு அறிவித்தார்கள். ரோமராயிருக்கிறார்களென்று அவர்கள் கேட்டபொழுது பயந்துவந்து, 39 அவர்களுடனே தயவாய்ப் பேசி, அவர்களை வெளியே அழைத்துக்கொண்டுபோய், பட்டணத்தை விட்டுப் புறப்பட்டுப்போகும்படி கேட்டுக்கொண்டார்கள். 40 அந்தப்படி அவர்கள் சிறைச்சாலையிலிருந்து புறப்பட்டு லீதியாளிடத்திற்குப்போய், சகோதரரைக் கண்டு, அவர்களுக்கு ஆறுதல் சொல்லிப் போய்விட்டார்கள்.

அப்போஸ்தலர் 17

1 அவர்கள் அம்பிபோலி பட்டணத்தையும் அப்பொலோனியா பட்டணத்தையும் கடந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்கு வந்தார்கள்; அங்கே யூதருக்கு ஒரு ஜெபஆலயம் இருந்தது. 2 பவுல் தன் வழக்கத்தின்படியே அவர்களிடத்தில் போய், மூன்று ஓய்வுநாட்களில் வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து அவர்களுடனே சம்பாஷித்து, 3 கிறிஸ்து பாடுபடவும் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதென்றும், நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து என்றும் காண்பித்து, திருஷ்டாந்தப்படுத்தினான். 4 அவர்களில் சிலரும், பக்தியுள்ள கிரேக்கரில் திரளான ஜனங்களும், கனம்பொருந்திய ஸ்திரீகளில் அநேகரும் விசுவாசித்து, பவுலையும் சீலாவையும் சேர்ந்து கொண்டார்கள். 5 விசுவாசியாத யூதர்கள் வைராக்கியங்கொண்டு வீணராகிய சில பொல்லாதவர்களைச் சேர்த்துக்கொண்டு, கூட்டங்கூடி, பட்டணத்தில் அமளியுண்டாக்கி, யாசோனுடைய வீட்டை வளைந்துகொண்டு, அவர்களைப் பட்டணத்தாருக்கு முன்பாக இழுத்துக்கொண்டுவர வகைதேடினார்கள். 6 அவர்களைக் காணாமல், யாசோனையும் சில சகோதரரையும் பட்டணத்து அதிகாரிகளிடத்தில் இழுத்துக்கொண்டுவந்து: உலகத்தைக் கலக்குகிறவர்கள் இங்கேயும் வந்திருக்கிறார்கள். 7 இவர்களை யாசோன் ஏற்றுக்கொண்டான். இவர்களெல்லாரும் இயேசு என்னும் வேறொருவனை ராஜா என்று சொல்லி, இராயனுடைய கட்டளைகளுக்கு விரோதமாகச் செய்கிறார்களென்று கூக்குரலிட்டு, 8 இவைகளைக் கேட்டுக்கொண்டிருந்த ஜனங்களையும் பட்டணத்து அதிகாரிகளையும் கலங்கப்பண்ணினார்கள். 9 பின்பு அவர்கள் யாசோனிடத்திலும் மற்றவர்களிடத்திலும் ஜாமீன் வாங்கிக்கொண்டு, அவர்களை விட்டுவிட்டார்கள். 10 உடனே சகோதரர் இராத்திரிகாலத்திலே பவுலையும் சீலாவையும் பெரோயா பட்டணத்துக்கு அனுப்பிவிட்டார்கள்; அவர்கள் அங்கே சேர்ந்து, யூதருடைய ஜெபஆலயத்திற்குப் போனார்கள். 11 அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள். 12 அதனால் அவர்களில் அநேகம்பேரும் கனம்பொருந்திய கிரேக்கரில் அநேக ஸ்திரீகளும் புருஷர்களும் விசுவாசித்தார்கள். 13 பெரோயாவிலும் தேவவசனம் பவுலினால் அறிவிக்கப்படுகிறதென்று தெசலோனிக்கேயரான யூதர்கள் அறிந்தபோது, அங்கேயும் வந்து, ஜனங்களைக் கிளப்பிவிட்டார்கள். 14 உடனே சகோதரர் பவுலைச் சமுத்திரவழியாய்ப் போக அனுப்பிவிட்டார்கள். சீலாவும் தீமோத்தேயும் அங்கே தங்கியிருந்தார்கள். 15 பவுலை வழிநடத்தினவர்கள் அவனை அத்தேனே பட்டணம்வரைக்கும் அழைத்துக்கொண்டுபோய்; அங்கே சீலாவும் தீமோத்தேயும் அதிசீக்கிரமாகத் தன்னிடத்திற்கு வரும்படி அவர்களுக்குச் சொல்லக் கட்டளை பெற்றுக்கொண்டு புறப்பட்டுப்போனார்கள். 16 அத்தேனே பட்டணத்தில் பவுல் அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருக்கையில், அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக் கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து, 17 ஜெபஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில் எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான். 18 அப்பொழுது எப்பிக்கூரரும் ஸ்தோயிக்கருமான ஞானிகளில் சிலர் அவனுடனே வாக்குவாதம்பண்ணினார்கள். சிலர்: இந்த வாயாடி என்ன பேசப்போகிறான் என்றார்கள். சிலர்: இவன் அந்நிய தேவதைகளை அறிவிக்கிறவனாகக் காண்கிறது என்றார்கள். அவன் இயேசுவையும் உயிர்த்தெழுதலையும் அவர்களுக்குப் பிரசங்கித்தபடியினாலே அப்படிச் சொன்னார்கள். 19 அவர்கள் அவனை மார்ஸ் மேடைக்கு அழைத்துக்கொண்டுபோய்: நீ சொல்லுகிற புதிதான உபதேசம் இன்னதென்று நாங்கள் அறியலாமா? 20 நூதனமான காரியங்களை எங்கள் காதுகள் கேட்கப்பண்ணுகிறாய்; அவைகளின் கருத்து இன்னதென்று அறிய மனதாயிருக்கிறோம் என்றார்கள். 21 அந்த அத்தேனே பட்டணத்தாரெல்லாரும், அங்கே தங்குகிற அந்நியரும், நவமான காரியங்களைச் சொல்லுகிறதிலும் கேட்கிறதிலுமேயொழிய வேறொன்றிலும் பொழுதுபோக்குகிறதில்லை. 22 அப்பொழுது பவுல் மார்ஸ் மேடையின் நடுவிலே நின்று: அத்தேனரே, எந்த விஷயத்திலும் நீங்கள் மிகுந்த தேவதாபக்தியுள்ளவர்களென்று காண்கிறேன். 23 எப்படியென்றால், நான் சுற்றித்திரிந்து, உங்கள் ஆராதனைக்குரியவைகளைக் கவனித்துப் பார்த்தபொழுது, அறியப்படாத தேவனுக்கு என்று எழுதியிருக்கிற ஒரு பலிபீடத்தைக் கண்டேன்; நீங்கள் அறியாமல் ஆராதிக்கிற அவரையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். 24 உலகத்தையும் அதிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின தேவனானவர் வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறபடியால் கைகளினால் கட்டப்பட்ட கோவில்களில் அவர் வாசம்பண்ணுகிறதில்லை. 25 எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிற அவர், தமக்கு யாதொன்று தேவையானதுபோல, மனுஷர் கைகளால் பணிவிடைகொள்ளுகிறதுமில்லை. 26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்; 27 கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே. 28 ஏனெனில் அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர், நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள். 29 நாம் தேவனுடைய சந்ததியாராயிருக்க, மனுஷருடைய சித்திரவேலையினாலும் யுக்தியினாலும் உருவாக்கின பொன், வெள்ளி, கல் இவைகளுக்குத் தெய்வம் ஒப்பாயிருக்குமென்று நாம் நினைக்கலாகாது. 30 அறியாமையுள்ள காலங்களைத் தேவன் காணாதவர்போலிருந்தார்; இப்பொழுதோ மனந்திரும்பவேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார். 31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான். 32 மரித்தோரின் உயிர்த்தெழுதலைக்குறித்து அவர்கள் கேட்டபொழுது, சிலர் இகழ்ந்தார்கள். சிலர்: நீ சொல்லுகிறதை இன்னொருவேளை கேட்போம் என்றார்கள். 33 இப்படியிருக்க, பவுல் அவர்களை விட்டுப் போய்விட்டான். 34 சிலர் அவனைப் பற்றிக்கொண்டு, விசுவாசிகளானார்கள். அவர்களில் மார்ஸ்மேடையின் நியாயாதிபதிகளில் ஒருவனாகிய தியொனீசியு என்பவனும், தாமரி என்னும் பேருள்ள ஒரு ஸ்திரீயும், இவர்களுடனே வேறு சிலரும் இருந்தார்கள்.

அப்போஸ்தலர் 18

1 அதன்பின்பு பவுல் அத்தேனே பட்டணத்தை விட்டு, கொரிந்து பட்டணத்துக்கு வந்து; 2 யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டுப் போகும்படி கிலவுதியுராயன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாய் வந்திருந்த பொந்துதேசத்தானாகிய ஆக்கில்லா என்னும் நாமமுள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே கண்டு, அவர்களிடத்திற்குப் போனான். 3 அவர்கள் கூடாரம்பண்ணுகிற தொழிலாளிகளாயிருந்தார்கள்; தானும் அந்தத் தொழில் செய்கிறவனானபடியினாலே அவர்களிடத்தில் தங்கி, வேலைசெய்துகொண்டு வந்தான். 4 ஓய்வுநாள்தோறும் அவன் ஜெபஆலயத்திலே சம்பாஷணைபண்ணி, யூதருக்கும் கிரேக்கருக்கும் புத்திசொன்னான். 5 மக்கெதோனியாவிலிருந்து சீலாவும் தீமோத்தேயும் வந்தபோது, பவுல் ஆவியில் வைராக்கியங்கொண்டு, இயேசுவே கிறிஸ்து என்று யூதருக்குத் திருஷ்டாந்தப்படுத்தினான். 6 அவர்கள் எதிர்த்துநின்று தூஷித்தபோது, அவன் தன் வஸ்திரங்களை உதறி: உங்கள் இரத்தப்பழி உங்கள் தலையின்மேல் இருக்கும்; நான் சுத்தமாயிருக்கிறேன்; இதுமுதல் புறஜாதியாரிடத்திற்குப் போகிறேனென்று அவர்களுடனே சொல்லி, 7 அவ்விடத்தைவிட்டு, தேவனை வணங்குகிறவனாகிய யுஸ்து என்னும் பேருள்ள ஒருவனுடைய வீட்டிற்கு வந்தான்; அவன் வீடு ஜெபஆலயத்திற்கு அடுத்ததாயிருந்தது. 8 ஜெபஆலயத்தலைவனாகிய கிறிஸ்பு என்பவன் தன் வீட்டார் அனைவரோடும் கர்த்தரிடத்தில் விசுவாசமுள்ளவனானான். கொரிந்தியரில் அநேகரும் சுவிசேஷத்தைக் கேட்டு, விசுவாசித்து, ஞானஸ்நானம் பெற்றார்கள். 9 இராத்திரியிலே கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே; 10 நான் உன்னுடனேகூட இருக்கிறேன், உனக்குத் தீங்குசெய்யும்படி ஒருவனும் உன்மேல் கைபோடுவதில்லை; இந்தப் பட்டணத்தில் எனக்கு அநேக ஜனங்கள் உண்டு என்றார். 11 அவன் ஒரு வருஷமும் ஆறு மாதமும் அங்கே தங்கி, தேவவசனத்தை அவர்களுக்குள்ளே உபதேசம்பண்ணிக்கொண்டுவந்தான். 12 கல்லியோன் என்பவன் அகாயா நாட்டிற்கு அதிபதியானபோது, யூதர்கள் ஒருமனப்பட்டு, பவுலுக்கு விரோதமாய் எழும்பி, அவனை நியாயாசனத்துக்கு முன்பாகக் கொண்டுபோய்: 13 இவன் வேதப்பிரமாணத்துக்கு விகற்பமாய்த் தேவனைச் சேவிக்கும்படி மனுஷருக்குப் போதிக்கிறான் என்றார்கள். 14 பவுல் பேசுவதற்கு எத்தனப்படுகையில், கல்லியோன் யூதரை நோக்கி: யூதர்களே, இது ஒரு அநியாயமாய், அல்லது பொல்லாத நடக்கையாயிருக்குமேயானால் நான் உங்களுக்குப் பொறுமையாய்ச் செவிகொடுப்பது நியாயமாயிருக்கும். 15 இது சொற்களுக்கும், நாமங்களுக்கும், உங்கள் வேதத்துக்கும் அடுத்த தர்க்கமானபடியினாலே, இப்படிப்பட்டவைகளைக்குறித்து விசாரணைசெய்ய எனக்கு மனதில்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி, 16 அவர்களை நியாயாசனத்தினின்று துரத்திவிட்டான். 17 அப்பொழுது கிரேக்கரெல்லாரும் ஜெபஆலயத்தலைவனாகிய சொஸ்தேனேயைப் பிடித்து, நியாயாசனத்துக்கு முன்பாக அடித்தார்கள். இவைகளில் ஒன்றையுங்குறித்துக் கல்லியோன் கவலைப்படவில்லை. 18 பவுல் அநேகநாள் அங்கே தரித்திருந்தபின்பு, சகோதரரிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, தனக்கு ஒரு பிரார்த்தனை உண்டாயிருந்தபடியினால் கெங்கிரேயா பட்டணத்தில் தலைச்சவரம் பண்ணிக்கொண்டு, சீரியாதேசத்துக்குப் போகக் கப்பல் ஏறினான். பிரிஸ்கில்லாளும் ஆக்கில்லாவும் அவனுடனே கூடப்போனார்கள். 19 அவன் எபேசுபட்டணத்துக்கு வந்தபோது, அங்கே அவர்களை விட்டு நீங்கி, ஜெபஆலயத்தில் பிரவேசித்து, யூதருடனே சம்பாஷணைபண்ணினான். 20 அவன் இன்னுஞ் சிலகாலம் தங்களுடனே இருக்கவேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டபோது, அவன் சம்மதியாமல், 21 வருகிற பண்டிகையிலே எப்படியாயினும் நான் எருசலேமில் இருக்கவேண்டும், தேவனுக்குச் சித்தமானால் திரும்பி உங்களிடத்திற்கு வருவேனென்று சொல்லி, அவர்களிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கப்பல் ஏறி, எபேசுவை விட்டுப் புறப்பட்டு, 22 செசரியா பட்டணத்துக்கு வந்து, எருசலேமுக்குப் போய், சபையைச் சந்தித்து, அந்தியோகியாவுக்குப் போனான். 23 அங்கே சிலகாலம் சஞ்சரித்தபின்பு, புறப்பட்டு, கிரமமாய்க் கலாத்தியா நாட்டிலேயும் பிரிகியா நாட்டிலேயும் சுற்றித்திரிந்து, சீஷரெல்லாரையும் திடப்படுத்தினான். 24 அப்பொழுது அலெக்சந்திரியா பட்டணத்தில் பிறந்தவனும் சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யூதன் எபேசுபட்டணத்துக்கு வந்தான். 25 அவன் கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தைமாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம்பண்ணிக்கொண்டுவந்தான். 26 அவன் ஜெபஆலயத்தில் தைரியமாய்ப் பேசத்தொடங்கினபோது ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அவன் பேசுகிறதைக் கேட்டு, அவனைச் சேர்த்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக்காண்பித்தார்கள். 27 பின்பு அவன் அகாயா நாட்டிற்குப் போகவேண்டுமென்றிருக்கையில், சீஷர்கள் அவனை ஏற்றுக்கொள்ளும்படி சகோதரர் அவர்களுக்கு எழுதினார்கள். 28 அவன் அங்கே வந்தபின்பு வெளியரங்கமாக யூதர்களுடனே பலமாய்த் தர்க்கம்பண்ணி, இயேசுவே கிறிஸ்து என்று வேதவாக்கியங்களைக்கொண்டு திருஷ்டாந்தப்படுத்தினபடியால், கிருபையினாலே விசுவாசிகளானவர்களுக்கு மிகவும் உதவியாயிருந்தான்.

அப்போஸ்தலர் 19

1 அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: 2 நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். 3 அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். 4 அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். 5 அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். 6 அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். 7 அந்த மனுஷரெல்லாரும் ஏறக்குறையப் பன்னிரண்டுபேராயிருந்தார்கள். 8 பின்பு பவுல் ஜெபஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய்ப் பிரசங்கித்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்துச் சம்பாஷணைபண்ணி, புத்திசொல்லிக்கொண்டு வந்தான். 9 சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது, அவன் அவர்களை விட்டு விலகி, சீஷரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும் சம்பாஷித்துக்கொண்டுவந்தான். 10 இரண்டு வருஷகாலம் இப்படி நடந்ததினாலே ஆசியாவில் குடியிருந்த யூதரும் கிரேக்கருமாகிய எல்லாரும் கர்த்தராகிய இயேசுவின் வசனத்தைக் கேட்டார்கள். 11 பவுலின் கைகளினாலே தேவன் விசேஷித்த அற்புதங்களைச் செய்தருளினார். 12 அவனுடைய சரீரத்திலிருந்து உறுமால்களையும் கச்சைகளையும் கொண்டுவந்து, வியாதிக்காரர்மேல் போட வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; பொல்லாத ஆவிகளும் அவர்களைவிட்டுப் புறப்பட்டன. 13 அப்பொழுது தேசாந்தரிகளாய்த் திரிகிற மந்திரவாதிகளாகிய யூதரில் சிலர் பொல்லாத ஆவிகள் பிடித்திருந்தவர்கள்மேல் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தைச் சொல்லத் துணிந்து: பவுல் பிரசங்கிக்கிற இயேசுவின்பேரில் ஆணையிட்டு உங்களுக்குக் கட்டளையிடுகிறோம் என்றார்கள். 14 பிரதான ஆசாரியனாகிய ஸ்கேவா என்னும் ஓர் யூதனுடைய குமாரர் ஏழுபேர் இப்படிச் செய்தார்கள். 15 பொல்லாத ஆவி அவர்களை நோக்கி: இயேசுவை அறிவேன், பவுலையும் அறிவேன், நீங்கள் யார் என்று சொல்லி, 16 பொல்லாத ஆவியையுடைய மனுஷன் அவர்கள்மேல் பாய்ந்து, பலாத்காரம்பண்ணி, அவர்களை மேற்கொள்ள, அவர்கள் நிருவாணிகளும் காயப்பட்டவர்களுமாகி அந்த வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். 17 இது எபேசுவிலே குடியிருந்த யூதர் கிரேக்கர் அனைவருக்கும் தெரியவந்தபோது, அவர்களெல்லாரும் பயமடைந்தார்கள்; கர்த்தராகிய இயேசுவின் நாமம் மகிமைப்பட்டது. 18 விசுவாசித்தவர்களில் அநேகர் வந்து, தங்கள் செய்கைகளை வெளிப்படுத்தி அறிக்கையிட்டார்கள். 19 மாயவித்தைக்காரராயிருந்தவர்களில் அநேகர் தங்கள் புஸ்தகங்களைக் கொண்டுவந்து, எல்லாருக்கு முன்பாகச் சுட்டெரித்தார்கள்; அவைகளின் கிரயத்தைத் தொகைபார்த்து, ஐம்பதினாயிரம் வெள்ளிக்காசாகக் கண்டார்கள். 20 இவ்வளவு பலமாய்க் கர்த்தருடைய வசனம் விருத்தியடைந்து மேற்கொண்டது. 21 இவைகள் முடிந்தபின்பு, பவுல் மக்கெதோனியா அகாயா என்னும் நாடுகளில் சுற்றிநடந்து, எருசலேமுக்குப்போகும்படி ஆவியில் நிருணயம்பண்ணிக்கொண்டு: நான் அங்கே போனபின்பு ரோமாபுரியையும் பார்க்கவேண்டியதென்று சொல்லி, 22 தனக்கு உதவிசெய்தவர்களில் இரண்டுபேராகிய தீமோத்தேயுவையும் எரஸ்துவையும் மக்கெதோனியாவுக்கு அனுப்பிவிட்டு; தான் பின்னுஞ் சிலகாலம் ஆசியாவிலே தங்கினான். 23 அக்காலத்திலே இந்த மார்க்கத்தைக்குறித்துப் பெரிய கலகம் உண்டாயிற்று. 24 எப்படியென்றால், தெமேத்திரியு என்னும் பேர்கொண்ட ஒரு தட்டான் தியானாளின் கோவிலைப்போல வெள்ளியினால் சிறிய கோவில்களைச் செய்து, தொழிலாளிகளுக்கு மிகுந்த ஆதாயம் வருவித்துக்கொண்டிருந்தான். 25 இவர்களையும் இப்படிப்பட்ட தொழில்செய்கிற மற்ற வேலையாட்களையும் அவன் கூடிவரச்செய்து: மனுஷர்களே, இந்தத் தொழிலினால் நமக்கு நல்ல பிழைப்பு உண்டாயிருக்கிறதென்று அறிவீர்கள். 26 இப்படியிருக்க, கைகளினால் செய்யப்பட்ட தேவர்கள் தேவர்களல்லவென்று இந்தப் பவுல் என்பவன் சொல்லி, எபேசுவிலேமாத்திரமல்ல, கொஞ்சங்குறைய ஆசியா எங்கும் அநேக ஜனங்களுக்குப் போதித்து, அவர்களை வசப்படுத்திக்கொண்டான் என்று நீங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறீர்கள். 27 இதனால் நம்முடைய தொழில் அற்றுப்போகும்படியான அபாயம் நேரிட்டிருக்கிறதுமல்லாமல், மகா தேவியாகிய தியானாளுடைய கோவில் எண்ணமற்றுப் போகிறதற்கும், ஆசியா முழுமையும் பூச்சக்கரமும் சேவிக்கிற அவளுடைய மகத்துவம் அழிந்துபோகிறதற்கும் ஏதுவாயிருக்கிறது என்றான். 28 அவர்கள் இதைக் கேட்டு, கோபத்தால் நிறைந்து: எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று சத்தமிட்டார்கள். 29 பட்டணம் முழுவதும் கலகத்தினால் நிறைந்தது. பவுலுக்கு வழித்துணையாய் வந்த மக்கெதோனியராகிய காயுவையும் அரிஸ்தர்க்குவையும் அவர்கள் இழுத்துக்கொண்டு, ஒருமனப்பட்டு அரங்கசாலைக்குப் பாய்ந்தோடினார்கள். 30 பவுல் கூட்டத்துக்குள்ளே போக மனதாயிருந்தபோது, சீஷர்கள் அவனைப் போகவிடவில்லை. 31 ஆசியாநாட்டுத் தலைவரில் அவனுக்குச் சிநேகிதராயிருந்த சிலரும் அவனிடத்திற்கு ஆள் அனுப்பி, அரங்கசாலைக்குள் போகவேண்டாம் என்று எச்சரித்தார்கள். 32 கூட்டத்தில் அமளியுண்டாகி, சிலர் இப்படியும் சிலர் அப்படியுமாகப் பேசினார்கள்; தாங்கள் கூடிவந்த காரணம் இன்னதென்று அநேகருக்குத் தெரியாதிருந்தது. 33 அப்பொழுது யூதர்கள் அலெக்சந்தர் என்பவனை முன்னிற்கத் தள்ளுகையில், கூட்டத்திலே சிலர் அவனை முன்னே இழுத்துவிட்டார்கள். அலெக்சந்தர் கையமர்த்தி, ஜனங்களுக்கு உத்தரவுசொல்ல மனதாயிருந்தான். 34 அவன் யூதனென்று அவர்கள் அறிந்தபோது, எபேசியருடைய தியானாளே பெரியவள் என்று இரண்டுமணி நேரமளவும் எல்லாரும் ஏகமாய்ச் சத்தமிட்டுக்கொண்டிருந்தார்கள். 35 பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி: எபேசியரே, எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ? 36 இது எதிர்பேசப்படாத காரியமாகையால், நீங்கள் ஒன்றும் பதறிச்செய்யாமல் அமர்ந்திருக்கவேண்டும். 37 இந்த மனுஷரை இங்கே கொண்டுவந்தீர்கள்; இவர்கள் கோவிற்கொள்ளைக்காரருமல்ல, உங்கள் தேவியைத் தூஷிக்கிறவர்களுமல்ல. 38 தெமேத்திரியுக்கும் அவனைச் சேர்ந்த தொழிலாளிகளுக்கும் ஒருவன்மேல் ஒருகாரியம் உண்டாயிருந்தால், நியாயம் விசாரிக்கிற நாட்களுண்டு, தேசாதிபதிகளும் இருக்கிறார்கள்; ஒருவர்பேரிலொருவர் வழக்காடிக்கொள்ளட்டும். 39 நீங்கள் வேறே யாதொரு காரியத்தைக்குறித்து விசாரிக்கவேண்டியதானால், அது நியாயசங்கத்திலே தீர்க்கப்படும். 40 இன்றைக்கு உண்டான கலகத்தைக்குறித்து நாம் உத்தரவுசொல்லுகிறதற்கு ஏதுவில்லாதபடியால், இந்தக் கலகத்தைக்குறித்து நாங்கள் விசாரிக்கப்படும்போது, குற்றவாளிகளாகிறதற்கு ஏதுவாயிருப்போமே என்று சொல்லி, 41 பின்பு கூட்டத்தை அனுப்பிவிட்டான்.

அப்போஸ்தலர் 20

1 கலகம் அமர்ந்தபின்பு, பவுல் சீஷரைத் தன்னிடத்திற்கு வரவழைத்து, வினவிக்கொண்டு, மக்கெதோனியாவுக்குப் போகப் புறப்பட்டான். 2 அவன் அந்தத் திசைகளிலே சுற்றி நடந்து, சீஷர்களுக்கு வெகுவாய்ப் புத்திசொல்லி, கிரேக்கு தேசத்திலே சேர்ந்தான். 3 அங்கே மூன்றுமாதம் சஞ்சரித்தபின்பு, அவன் கப்பல் ஏறி, சீரியாதேசத்துக்குப்போக மனதாயிருந்தபோது, யூதர்கள் அவனுக்குத் தீமைசெய்யும்படி இரகசியமான யோசனைகொண்டிருந்தபடியால், மக்கெதோனியா தேசத்தின் வழியாய்த் திரும்பிப்போகத் தீர்மானம் பண்ணினான். 4 பெரோயா ஊரானாகிய சோபத்தரும், தெசலோனிக்கேயரில் அரிஸ்தர்க்கும், செக்குந்தும், தெர்பையானாகிய காயுவும், தீமோத்தேயும், ஆசியா நாட்டாராகிய தீகிக்கும் துரோப்பீமும், ஆசியாநாடுவரைக்கும் அவனுக்கு வழித்துணையாய் வந்தார்கள். 5 இவர்கள் முன்னாகப் போய், துரோவாபட்டணத்திலே எங்களுக்காகக் காத்திருந்தார்கள். 6 புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களுக்குப்பின்பு நாங்கள் கப்பல் ஏறிப் பிலிப்பிபட்டணத்தை விட்டு ஐந்து நாளைக்குள்ளே துரோவாபட்டணத்துக்கு அவர்களிடத்தில் வந்து, அங்கே ஏழுநாள் தங்கியிருந்தோம். 7 வாரத்தின் முதல்நாளிலே, அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடிவந்திருக்கையில், பவுல் மறுநாளிலே புறப்படவேண்டுமென்றிருந்து, அவர்களுடனே சம்பாஷித்து, நடுராத்திரிமட்டும் பிரசங்கித்தான். 8 அவர்கள் கூடியிருந்த மேல்வீட்டிலே அநேக விளக்குகள் வைத்திருந்தது. 9 அப்பொழுது ஐத்திகு என்னும் பேர்கொண்ட ஒரு வாலிபன் ஜன்னலில் உட்கார்ந்திருந்து, பவுல் நெடுநேரம் பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கையில், மிகுந்த தூக்கமடைந்து, நித்திரைமயக்கத்தினால் சாய்ந்து, மூன்றாம் மெத்தையிலிருந்து கீழே விழுந்து, மரித்தவனாய் எடுக்கப்பட்டான். 10 உடனே பவுல் இறங்கிப்போய், அவன்மேல் விழுந்து, அவனை அணைத்துக்கொண்டு: கலங்காதிருங்கள், இவன் உயிர் இவனுக்குள் இருக்கிறது என்றான். 11 பின்பு ஏறிப்போய், அப்பம் பிட்டுப் புசித்து, விடியற்காலமளவும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து, பின்பு புறப்பட்டான். 12 அந்த வாலிபனை அவர்கள் உயிருள்ளவனாகக் கூட்டிக்கொண்டுவந்து, மிகுந்த ஆறுதலடைந்தார்கள். 13 பவுல் ஆசோபட்டணம்வரைக்கும் கரைவழியாய்ப் போக மனதாயிருந்தபடியால், அவன் திட்டம்பண்ணியிருந்தபடியே, நாங்கள் கப்பல் ஏறி, அந்தப் பட்டணத்தில் அவனை ஏற்றிக்கொள்ளும்படி முன்னாக அங்கே போயிருந்தோம். 14 அவன் ஆசோபட்டணத்திலே எங்களைக் கண்டபோது, நாங்கள் அவனை ஏற்றிக்கொண்டு, மித்திலேனே பட்டணத்துக்கு வந்தோம். 15 அவ்விடம்விட்டு, மறுநாளிலே கீயுதீவுக்கு எதிராக வந்து, 16 பவுல் கூடுமானால் பெந்தெகொஸ்தே பண்டிகைநாளிலே எருசலேமிலிருக்கவேண்டுமென்று தீவிரப்பட்டதினிமித்தம், தான் ஆசியாவிலே காலம்போக்காதபடிக்கு, எபேசு பட்டணத்தைக் கடந்து போகவேண்டுமென்று தீர்மானித்ததினால், மறுநாளிலே சாமுதீவு பிடித்து, துரோகில்லியோன் ஊர்த்துறையிலே தங்கி, மறுநாள் மிலேத்துபட்டணத்துக்கு வந்தோம். 17 மிலேத்துவிலிருந்து அவன் எபேசுவுக்கு ஆள் அனுப்பி, சபையின் மூப்பரை வரவழைத்தான். 18 அவர்கள் தன்னிடத்தில் வந்து சேர்ந்தபொழுது, அவன் அவர்களை நோக்கி: நான் ஆசியாநாட்டில் வந்த முதல்நாள் தொடங்கி எல்லாக் காலங்களிலும் உங்களுடனே இன்னவிதமாய் இருந்தேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 19 வெகு மனத்தாழ்மையோடும், மிகுந்த கண்ணீரோடும், யூதருடைய தீமையான யோசனைகளால் எனக்கு நேரிட்ட சோதனைகளோடும், நான் கர்த்தரைச் சேவித்தேன். 20 பிரயோஜனமானவைகளில் ஒன்றையும் நான் உங்களுக்கு மறைத்துவைக்காமல், வெளியரங்கமாக வீடுகள்தோறும் உங்களுக்குப் பிரசங்கித்து, உபதேசம்பண்ணி, 21 தேவனிடத்திற்கு மனந்திரும்புவதைக்குறித்தும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதைக்குறித்தும், நான் யூதருக்கும் கிரேக்கருக்கும் சாட்சியாக அறிவித்தேன். 22 இப்பொழுதும் நான் ஆவியிலே கட்டுண்டவனாய் எருசலேமுக்குப் போகிறேன்; அங்கே எனக்கு நேரிடுங்காரியங்களை நான் அறியேன். 23 கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்தஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன். 24 ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன். 25 இதோ, நான் உங்களுக்குள்ளே சஞ்சரித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கம்பண்ணினதைக் கேட்டவர்களாகிய நீங்களெல்லாரும் இனி என் முகத்தைப் பார்க்கமாட்டீர்களென்று அறிந்திருக்கிறேன். 26 தேவனுடைய ஆலோசனையில் ஒன்றையும் நான் மறைத்துவைக்காமல், எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தபடியினாலே, 27 எல்லாருடைய இரத்தப்பழிக்கும் நீங்கி நான் சுத்தமாயிருக்கிறேனென்பதற்கு உங்களை இன்றையத்தினம் சாட்சிகளாக வைக்கிறேன். 28 ஆகையால், உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். 29 நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே வரும். 30 உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன். 31 ஆனபடியால், நான் மூன்றுவருஷ காலமாய் இரவும் பகலும் கண்ணீரோடே இடைவிடாமல் அவனவனுக்குப் புத்திசொல்லிக்கொண்டுவந்ததை நினைத்து விழித்திருங்கள். 32 இப்பொழுதும் சகோதரரே, நீங்கள் பக்திவிருத்தியடையவும், பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்குள்ளும் உங்களுக்குச் சுதந்தரத்தைக் கொடுக்கவும் வல்லவராயிருக்கிற தேவனுக்கும் அவருடைய கிருபையுள்ள வசனத்துக்கும் உங்களை ஒப்புக்கொடுக்கிறேன். 33 ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன்னையாகிலும் வஸ்திரத்தையாகிலும் நான் இச்சிக்கவில்லை. 34 நீங்கள் அறிந்திருக்கிறபடி, எனக்கும் என்னுடனேகூட இருந்தவர்களுக்கும் வேண்டியவைகளுக்காக இந்தக் கைகளே வேலைசெய்தது. 35 இப்படிப் பிரயாசப்பட்டு, பலவீனரைத் தாங்கவும், வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் என்று கர்த்தராகிய இயேசு சொன்ன வார்த்தைகளை நினைக்கவும் வேண்டுமென்று எல்லா விதத்திலேயும் உங்களுக்குக் காண்பித்தேன் என்றான். 36 இவைகளைச் சொன்னபின்பு, அவன் முழங்காற்படியிட்டு, அவர்களெல்லாரோடுங்கூட ஜெபம்பண்ணினான். 37 அவர்களெல்லாரும் மிகவும் அழுது, என் முகத்தை நீங்கள் இனிப் பார்க்கமாட்டீர்களென்று அவன் சொன்ன வார்த்தையைக்குறித்து அதிகமாய்த் துக்கப்பட்டு, 38 பவுலின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்து, கப்பல்வரைக்கும் அவனுடனே கூடப்போனார்கள்.

அப்போஸ்தலர் 21

1 நாங்கள் அவர்களை விட்டுப் பிரிந்து, துறைபெயர்ந்தபின்பு, நேராயோடி, கோஸ்தீவையும், மறுநாளில் ரோதுதீவையும் சேர்ந்து, அவ்விடம் விட்டுப் பத்தாரா பட்டணத்துக்கு வந்து, 2 அங்கே பெனிக்கே தேசத்திற்குப்போகிற ஒரு கப்பலைக் கண்டு, அதிலே ஏறிப்போனோம். 3 சீப்புருதீவைக் கண்டு, அதை இடதுபுறமாக விட்டு, சீரியாநாட்டிற்கு ஓடி, தீருபட்டணத்துறையில் இறங்கினோம்; அங்கே கப்பலின் சரக்குகளை இறக்கவேண்டியதாயிருந்தது. 4 அவ்விடத்திலுள்ள சீஷரைக் கண்டுபிடித்து, அங்கே ஏழுநாள் தங்கினோம். அவர்கள் பவுலை நோக்கி: நீர் எருசலேமுக்குப் போகவேண்டாம் என்று ஆவியின் ஏவுதலினாலே சொன்னார்கள். 5 அந்த நாட்கள் நிறைவேறினபின்பு, நாங்கள் புறப்பட்டுப்போகையில், அவர்களெல்லாரும் மனைவிகளோடும் பிள்ளைகளோடுங்கூடப் பட்டணத்துக்குப் புறம்பே எங்களை வழிவிட்டனுப்பும்படி வந்தார்கள். அப்பொழுது கடற்கரையிலே நாங்கள் முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணினோம். 6 ஒருவரிடத்திலொருவர் உத்தரவு பெற்றுக்கொண்டபின்பு, நாங்கள் கப்பல் ஏறினோம்; அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப்போனார்கள். 7 நாங்கள் கப்பல்யாத்திரையை முடித்து, தீருபட்டணத்தை விட்டுப் பித்தொலோமாய் பட்டணத்துக்கு வந்து, சகோதரரை வினவி, அவர்களிடத்தில் ஒருநாள் தங்கினோம். 8 மறுநாளிலே பவுலைச் சேர்ந்தவர்களாகிய நாங்கள் புறப்பட்டுச் செசரியாபட்டணத்துக்கு வந்து, ஏழுபேரில் ஒருவனாகிய பிலிப்பென்னும் சுவிசேஷகனுடைய வீட்டிலே பிரவேசித்து, அவனிடத்தில் தங்கினோம். 9 தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற கன்னியாஸ்திரீகளாகிய நாலு குமாரத்திகள் அவனுக்கு இருந்தார்கள். 10 நாங்கள் அநேகநாள் அங்கே தங்கியிருக்கையில், அகபு என்னும் பேர்கொண்ட ஒரு தீர்க்கதரிசி யூதேயாவிலிருந்து வந்தான். 11 அவன் எங்களிடத்தில் வந்து, பவுலினுடைய கச்சையை எடுத்துத் தன் கைகளையும் கால்களையும் கட்டிக்கொண்டு: இந்தக் கச்சையையுடையவனை எருசலேமிலுள்ள யூதர் இவ்விதமாய்க் கட்டிப் புறஜாதியார் கைகளில் ஒப்புக்கொடுப்பார்கள் என்று பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறார் என்றான். 12 இவைகளை நாங்கள் கேட்டபொழுது, எருசலேமுக்குப் போகவேண்டாமென்று, நாங்களும் அவ்விடத்தாரும் அவனை வேண்டிக்கொண்டோம். 13 அதற்குப் பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்குமாத்திரமல்ல, மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் என்றான். 14 அவன் சம்மதியாதபடியினாலே, கர்த்தருடைய சித்தம் ஆகக்கடவதென்று அமர்ந்திருந்தோம். 15 அந்த நாட்களுக்குப்பின்பு நாங்கள் பிரயாண சாமான்களை ஆயத்தம்பண்ணிக்கொண்டு எருசலேமுக்குப் போனோம். 16 செசரியாபட்டணத்திலுள்ள சீஷரில் சிலர் எங்களுடனேகூட வந்ததுமன்றி, சீப்புருதீவானாகிய மினாசோன் என்னும் ஒரு பழைய சீஷனிடத்திலே நாங்கள் தங்கும்படியாக அவனையும் தங்களோடே கூட்டிக்கொண்டு வந்தார்கள். 17 நாங்கள் எருசலேமுக்கு வந்தபோது, சகோதரர் எங்களைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டார்கள். 18 மறுநாளிலே பவுல் எங்களைக் கூட்டிக்கொண்டு, யாக்கோபினிடத்திற்குப் போனான்; மூப்பரெல்லாரும் அங்கே கூடிவந்தார்கள். 19 அவர்களை அவன் வினவி, தன் ஊழியத்தினாலே தேவன் புறஜாதிகளிடத்தில் செய்தவைகளை ஒவ்வொன்றாய் விவரித்துச்சொன்னான். 20 அதை அவர்கள் கேட்டுக் கர்த்தரை மகிமைப்படுத்தினார்கள். பின்பு அவர்கள் அவனை நோக்கி: சகோதரனே, யூதர்களுக்குள் அநேகமாயிரம்பேர் விசுவாசிகளாயிருக்கிறதைப் பார்க்கிறீரே, அவர்களெல்லாரும் நியாயப்பிரமாணத்துக்காக வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறார்கள். 21 புறஜாதிகளிடத்திலிருக்கிற யூதரெல்லாரும் தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் பண்ணவும், முறைமைகளின்படி நடக்கவும் வேண்டுவதில்லையென்று நீர் சொல்லி, இவ்விதமாய் அவர்கள் மோசேயை விட்டுப் பிரிந்துபோகும்படி போதிக்கிறீரென்று இவர்கள் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். 22 இப்பொழுது செய்யவேண்டியது என்ன? நீர் வந்திருக்கிறீரென்று இவர்கள் கேள்விப்பட்டு, நிச்சயமாகக் கூட்டங்கூடுவார்கள். 23 ஆகையால் நாங்கள் உமக்குச் சொல்லுகிறபடி நீர் செய்யவேண்டும்; அதென்னவென்றால், பிரார்த்தனை பண்ணிக்கொண்டவர்களாகிய நாலுபேர் எங்களிடத்தில் இருக்கிறார்கள். 24 அவர்களை நீர் சேர்த்துக்கொண்டு, அவர்களுடனேகூடச் சுத்திகரிப்பு செய்துகொண்டு, அவர்கள் தலைச்சவரம்பண்ணிக் கொள்வதற்குச் செல்லுமானதைச் செலவுசெய்யும்; அப்படிச் செய்தால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்ட காரியங்கள் அபத்தமென்றும், நீரும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடக்கிறவரென்றும் எல்லாரும் அறிந்துகொள்வார்கள். 25 விசுவாசிகளான புறஜாதியார் இப்படிப்பட்டவைகளைக் கைக்கொள்ளாமல், விக்கிரகங்களுக்குப் படைத்ததற்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், விலகியிருக்கவேண்டுமென்று நாங்கள் தீர்மானம்பண்ணி, அவர்களுக்கு எழுதியனுப்பினோமே என்றார்கள். 26 அப்பொழுது பவுல் அந்த மனுஷரைச் சேர்த்துக்கொண்டு, மறுநாளிலே அவர்களுடனேகூடத் தானும் சுத்திகரிப்பு செய்துகொண்டு, தேவாலயத்தில் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும் வேண்டிய பலிசெலுத்தித் தீருமளவும் சுத்திகரிப்பு நாட்களை நிறைவேற்றுவேனென்று அறிவித்தான். 27 அந்த ஏழுநாட்களும் நிறைவேறி வருகையில், ஆசியாநாட்டிலிருந்து வந்த யூதர்கள் அவனைத் தேவாலயத்திலே கண்டு, ஜனங்களெல்லாரையும் எடுத்துவிட்டு, அவன்மேல் கைபோட்டு: 28 இஸ்ரவேலரே, உதவிசெய்யுங்கள். நம்முடைய ஜனத்திற்கும் வேதப்பிரமாணத்திற்கும் இந்த ஸ்தலத்திற்கும் விரோதமாக எங்கும் எல்லாருக்கும் போதித்துவருகிறவன் இவன்தான்; இந்தத் தேவாலயத்திற்குள்ளே கிரேக்கரையும் கூட்டிக்கொண்டுவந்து, இந்தப் பரிசுத்த ஸ்தலத்தைத் தீட்டுப்படுத்தினான் என்று சத்தமிட்டார்கள். 29 எபேசியனாகிய துரோப்பீமு என்பவன் முன்னே நகரத்தில் பவுலுடனேகூட இருக்கிறதைக் கண்டிருந்தபடியால், பவுல் அவனைத் தேவாலயத்தில் கூட்டிக்கொண்டு வந்திருப்பானென்று நினைத்தார்கள். 30 அப்பொழுது நகரமுழுவதும் கலக்கமுற்றது; ஜனங்கள் கூட்டமாய் ஓடிவந்து, பவுலைப்பிடித்து, அவனைத் தேவாலயத்திற்குப் புறம்பே இழுத்துக்கொண்டுபோனார்கள்; உடனே கதவுகள் பூட்டப்பட்டது. 31 அவர்கள் அவனைக் கொலைசெய்ய எத்தனித்திருக்கையில், எருசலேம் முழுவதும் கலக்கமாயிருக்கிறதென்று போர்ச்சேவகரின் சேனாபதிக்குச் செய்திவந்தது. 32 உடனே அவன் போர்ச்சேவகரையும் அவர்களுடைய அதிபதிகளையும் கூட்டிக்கொண்டு, அவர்களிடத்திற்கு ஓடினான்; சேனாபதியையும் போர்ச்சேவகரையும் அவர்கள் கண்டபோது பவுலை அடிக்கிறதை விட்டு நிறுத்தினார்கள். 33 அப்பொழுது சேனாபதி கிட்டவந்து அவனைப் பிடித்து, இரண்டு சங்கிலிகளினாலே கட்டும்படி சொல்லி: இவன் யார் என்றும் என்ன செய்தான் என்றும் விசாரித்தான். 34 அதற்கு ஜனங்கள் பலவிதமாய்ச் சத்தமிட்டார்கள்; சந்தடியினாலே நிச்சயத்தை அவன் அறியக்கூடாமல், அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். 35 அவன் படிகள்மேல் ஏறினபோது ஜனக்கூட்டம் திரண்டு பின்சென்று, 36 இவனை அகற்றும் என்று உக்கிரமாய்க் கூப்பிட்டபடியினாலே, போர்ச்சேவகர் அவனைத் தூக்கிக்கொண்டு போகவேண்டியதாயிருந்தது. 37 அவர்கள் பவுலைக் கோட்டைக்குள்ளே கொண்டுபோகிற சமயத்தில், அவன் சேனாபதியை நோக்கி: நான் உம்முடனே ஒரு வார்த்தை பேசலாமா என்றான். அதற்கு அவன்: உனக்குக் கிரேக்குபாஷை தெரியுமா? 38 நீ இந்த நாட்களுக்குமுன்னே கலகமுண்டாக்கி, நாலாயிரங் கொலைபாதகரை வனாந்தரத்திற்குக் கொண்டுபோன எகிப்தியன் அல்லவா என்றான். 39 அதற்குப் பவுல்: நான் சிலிசியா நாட்டிலுள்ள கீர்த்திபெற்ற தர்சுபட்டணத்து யூதன்; ஜனங்களுடனே பேசும்படி எனக்கு உத்தரவாகவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். 40 உத்தரவானபோது, பவுல் படிகளின்மேல் நின்று ஜனங்களைப் பார்த்துக் கையமர்த்தினான்; மிகுந்த அமைதலுண்டாயிற்று; அப்பொழுது அவன் எபிரெயு பாஷையிலே பேசத்தொடங்கினான்.

அப்போஸ்தலர் 22

1 சகோதரரே, பிதாக்களே, நான் இப்பொழுது உங்களுக்குச் சொல்லப்போகிற நியாயங்களுக்குச் செவிகொடுப்பீர்களாக என்றான். 2 அவன் எபிரெயு பாஷையிலே தங்களுடனே பேசுகிறதை அவர்கள் கேட்டபொழுது, அதிக அமைதலாயிருந்தார்கள். அப்பொழுது அவன்: 3 நான் யூதன், சிலிசியாநாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன். 4 நான் இந்த மார்க்கத்தாராகிய புருஷரையும் ஸ்திரீகளையும் கட்டி, சிறைச்சாலைகளில் ஒப்புவித்து, மரணபரியந்தம் துன்பப்படுத்தினேன். 5 அதற்குப் பிரதான ஆசாரியரும் மூப்பர் யாவரும் சாட்சிகொடுப்பார்கள்; அவர்கள் கையிலே நான் சகோதரருக்கு நிருபங்களை வாங்கிக்கொண்டு, தமஸ்குவிலிருக்கிறவர்களும் தண்டிக்கப்படும்படிக்கு, அவர்களைக் கட்டி, எருசலேமுக்குக் கொண்டுவரும்படி அவ்விடத்திற்குப்போனேன். 6 அப்படி நான் பிரயாணப்பட்டுத் தமஸ்குவுக்குச் சமீபமானபோது, மத்தியான வேளையிலே, சடிதியாய் வானத்திலிருந்து பேரொளி உண்டாகி, என்னைச்சுற்றிப் பிரகாசித்தது. 7 நான் தரையிலே விழுந்தேன். அப்பொழுது: சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்று என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். 8 அதற்கு நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அவர்: நீ துன்பப்படுத்துகிற நசரேயனாகிய இயேசு நானே என்றார். 9 என்னுடனேகூட இருந்தவர்கள் வெளிச்சத்தைக் கண்டு, பயமடைந்தார்கள்; என்னுடனே பேசினவருடைய சத்தத்தையோ அவர்கள் கேட்கவில்லை. 10 அப்பொழுது நான்: ஆண்டவரே, நான் என்னசெய்யவேண்டும் என்றேன். அதற்குக் கர்த்தர்: நீ எழுந்து, தமஸ்குவுக்குப் போ; நீ செய்யும்படி நியமிக்கப்பட்டதெல்லாம் அங்கே உனக்குச் சொல்லப்படும் என்றார். 11 அந்த ஒளியின் மகிமையினாலே நான் பார்வையற்றுப்போனபடியினால், என்னோடிருந்தவர்களால் கைலாகு கொடுத்து வழிநடத்தப்பட்டுத் தமஸ்குவுக்கு வந்தேன். 12 அப்பொழுது வேதப்பிரமாணத்தின்படியே பக்தியுள்ளவனும், அங்கே குடியிருக்கிற சகல யூதராலும் நல்லவனென்று சாட்சிபெற்றவனுமாகிய அனனியா என்னும் ஒருவன், 13 என்னிடத்தில் வந்துநின்று: சகோதரனாகிய சவுலே, பார்வையடைவாயாக என்றான்; அந்நேரமே நான் பார்வையடைந்து, அவனை ஏறிட்டுப்பார்த்தேன். 14 அப்பொழுது அவன்: நம்முடைய முன்னோர்களின் தேவனுடைய திருவுளத்தை நீ அறியவும், நீதிபரரைத் தரிசிக்கவும், அவருடைய திருவாய்மொழியைக் கேட்கவும், அவர் உன்னை முன்னமே தெரிந்துகொண்டார். 15 நீ கண்டவைகளையும் கேட்டவைகளையும் குறித்துச் சகல மனுஷருக்குமுன்பாக அவருக்குச் சாட்சியாயிருப்பாய். 16 இப்பொழுது நீ தாமதிக்கிறதென்ன? நீ எழுந்து கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஞானஸ்நானம்பெற்று, உன் பாவங்கள் போகக் கழுவப்படு என்றான். 17 பின்பு நான் எருசலேமுக்குத் திரும்பிவந்து, தேவாலயத்திலே ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், ஞானதிருஷ்டியடைந்து, அவரைத் தரிசித்தேன். 18 அவர் என்னை நோக்கி: நீ என்னைக்குறித்துச் சொல்லும் சாட்சியை இவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்; ஆதலால் நீ தாமதம்பண்ணாமல் சீக்கிரமாய் எருசலேமைவிட்டுப் புறப்பட்டுப்போ என்றார். 19 அதற்கு நான்: ஆண்டவரே, உம்மிடத்தில் விசுவாசமாயிருக்கிறவர்களை நான் காவலில் வைத்து ஜெபஆலயங்களிலே அடித்ததையும், 20 உம்முடைய சாட்சியாகிய ஸ்தேவானுடைய இரத்தம் சிந்தப்படுகிறபோது, நானும் அருகே நின்று, அவனைக் கொலைசெய்வதற்குச் சம்மதித்து, அவனைக் கொலைசெய்தவர்களின் வஸ்திரங்களைக் காத்துக்கொண்டிருந்ததையும், இவர்கள் அறிந்திருக்கிறார்களே என்றேன். 21 அதற்கு அவர்: நீ போ, நான் உன்னைத் தூரமாய்ப் புறஜாதிகளிடத்திலே அனுப்புவேன் என்று சொன்னார் என்றான். 22 இந்த வார்த்தைவரைக்கும் அவனுக்குச் செவிகொடுத்தார்கள். பின்பு: இப்படிப்பட்டவனைப் பூமியிலிருந்து அகற்றவேண்டும்; இவன் உயிரோடிருக்கிறது நியாயமல்லவென்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னார்கள். 23 இவ்விதமாய் அவர்கள் கூக்குரலிட்டுத் தங்கள் மேல்வஸ்திரங்களை எறிந்துவிட்டு, ஆகாயத்திலே புழுதியைத் தூற்றிக்கொண்டிருக்கையில், 24 சேனாபதி அவனைக் கோட்டைக்குள்ளே கொண்டுவரும்படி கட்டளையிட்டு, அவர்கள் அவனுக்கு விரோதமாய் இப்படிக் கூக்குரலிட்ட முகாந்தரத்தை அறியும்படிக்கு அவனைச் சவுக்கால் அடித்து விசாரிக்கச் சொன்னான். 25 அந்தப்படி அவர்கள் அவனை வாரினால் அழுந்தக் கட்டும்போது, பவுல் சமீபமாய் நின்ற நூற்றுக்கு அதிபதியை நோக்கி: ரோமனும் நியாயம் விசாரிக்கப்படாதவனுமாயிருக்கிற மனுஷனை அடிக்கிறது உங்களுக்கு நியாயமா என்றான். 26 நூற்றுக்கு அதிபதி அதைக்கேட்டு, சேனாபதியினிடத்திற்குப் போய், அதை அறிவித்து: நீர் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாயிரும்; இந்த மனுஷன் ரோமன் என்றான். 27 அப்பொழுது சேனாபதி பவுலினிடத்தில் வந்து: நீ ரோமனா? எனக்குச் சொல் என்றான். அதற்கு அவன்: நான் ரோமன்தான் என்றான். 28 சேனாபதி பிரதியுத்தரமாக: நான் மிகுந்த திரவியத்தினாலே இந்தச் சிலாக்கியத்தைச் சம்பாதித்தேன் என்றான். அதற்குப் பவுல்: நானோ இந்தச் சிலாக்கியத்திற்குரியவனாகப் பிறந்தேன் என்றான். 29 அவனை அடித்து விசாரிக்கும்படி எத்தனமாயிருந்தவர்கள் உடனே அவனை விட்டுவிட்டார்கள். சேனாபதி அவன் ரோமனென்று அறிந்து, அவனைக் கட்டுவித்ததற்காகப் பயந்தான். 30 பவுலின்மேல் யூதராலே ஏற்படுத்தப்பட்ட குற்றம் இன்னதென்று நிச்சயமாய் அறிய விரும்பி, அவன் மறுநாளிலே அவனைக் கட்டவிழ்த்து, பிரதான ஆசாரியரையும் ஆலோசனைச் சங்கத்தார் அனைவரையும் கூடிவரும்படி கட்டளையிட்டு, அவனைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக நிறுத்தினான்.

அப்போஸ்தலர் 23

1 பவுல் ஆலோசனைச் சங்கத்தாரை உற்றுப்பார்த்து: சகோதரரே, இந்நாள்வரைக்கும் எல்லா விஷயங்களிலும் நான் நல்மனச்சாட்சியோடே தேவனுக்குமுன்பாக நடந்துவந்தேன் என்று சொன்னான். 2 அப்பொழுது பிரதான ஆசாரியனாகிய அனனியா அவனுக்குச் சமீபமாய் நின்றவர்களை நோக்கி: இவன் வாயில் அடியுங்கள் என்று கட்டளையிட்டான். 3 அப்பொழுது பவுல் அவனைப்பார்த்து: வெள்ளையடிக்கப்பட்ட சுவரே, தேவன் உம்மை அடிப்பார்; நியாயப்பிரமாணத்தின்படி என்னை நியாயம் விசாரிக்கிறவராய் உட்கார்ந்திருக்கிற நீர் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய் என்னை அடிக்கச் சொல்லலாமா என்றான். 4 சமீபத்திலே நின்றவர்கள்: தேவனுடைய பிரதானஆசாரியரை வைகிறாயா என்றார்கள். 5 அதற்குப் பவுல்: சகோதரரே, இவர் பிரதான ஆசாரியரென்று எனக்குத் தெரியாது; உன் ஜனத்தின் அதிபதியைத் தீது சொல்லாயாக என்று எழுதியிருக்கிறதே என்றான். 6 பின்பு அவர்களில், சதுசேயர் ஒரு பங்கும் பரிசேயர் ஒரு பங்குமாயிருக்கிறார்களென்று பவுல் அறிந்து: சகோதரரே, நான் பரிசேயனும் பரிசேயனுடைய மகனுமாயிருக்கிறேன். மரித்தோருடைய உயிர்த்தெழுதலைப்பற்றிய நம்பிக்கையைக்குறித்து நான் நியாயம் விசாரிக்கப்படுகிறேன் என்று ஆலோசனைச் சங்கத்திலே சத்தமிட்டுச் சொன்னான். 7 அவன் இப்படிச் சொன்னபோது, பரிசேயருக்கும் சதுசேயருக்கும் வாக்குவாதமுண்டாயிற்று; கூட்டம் இரண்டாகப் பிரிந்தது. 8 என்னத்தினாலென்றால், சதுசேயர் உயிர்த்தெழுதல் இல்லையென்றும், தேவதூதனும் ஆவியும் இல்லையென்றும் சொல்லுகிறார்கள். பரிசேயரோ அவ்விரண்டும் உண்டென்று ஒப்புக்கொள்ளுகிறார்கள். 9 ஆகையால் மிகுந்த கூக்குரல் உண்டாயிற்று. பரிசேய சமயத்தாரான வேதபாரகரில் சிலர் எழுந்து: இந்த மனுஷனிடத்தில் ஒரு பொல்லாங்கையும் காணோம்; ஒரு ஆவி அல்லது ஒரு தேவதூதன் இவனுடனே பேசினதுண்டானால், நாம் தேவனுடனே போர்செய்வது தகாது என்று வாதாடினார்கள். 10 மிகுந்த கலகம் உண்டானபோது, பவுல் அவர்களால் பீறுண்டுபோவானென்று சேனாபதி பயந்து, போர்ச்சேவகர் போய், அவனை அவர்கள் நடுவிலிருந்து இழுத்துக் கோட்டைக்குக் கொண்டுபோகும்படி கட்டளையிட்டான். 11 அன்று இராத்திரியிலே கர்த்தர் பவுலின் அருகே நின்று: பவுலே, திடன்கொள்; நீ என்னைக்குறித்து எருசலேமிலே சாட்சிகொடுத்ததுபோல ரோமாவிலும் சாட்சிகொடுக்கவேண்டும் என்றார். 12 விடியற்காலமானபோது, யூதரில் சிலர் ஒருமித்து, தாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டார்கள். 13 இப்படிக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டவர்கள் நாற்பதுபேருக்கு அதிகமாயிருந்தார்கள். 14 அவர்கள் பிரதானஆசாரியர்களிடத்திலும் மூப்பர்களிடத்திலும் போய்: நாங்கள் பவுலைக் கொலைசெய்யுமளவும் ஒன்றும் புசிப்பதில்லையென்று உறுதியான சபதம் பண்ணிக்கொண்டோம். 15 ஆனபடியினால் நீங்கள் ஆலோசனைச் சங்கத்தாரோடே கூடப்போய், அவனுடைய காரியத்தை அதிக திட்டமாய் விசாரிக்க மனதுள்ளவர்கள்போலச் சேனாபதிக்குக் காண்பித்து, அவர் நாளைக்கு அவனை உங்களிடத்தில் கூட்டிக்கொண்டு வரும்படி அவரிடத்தில் கேட்பீர்களாக. அவன் கிட்டவருகிறதற்குள்ளே நாங்கள் அவனைக் கொலைசெய்ய ஆயத்தமாயிருப்போம் என்றார்கள். 16 இந்தச் சர்ப்பனையைப் பவுலினுடைய சகோதரியின் குமாரன் கேள்விப்பட்டு, கோட்டைக்குள்ளே போய், பவுலுக்கு அறிவித்தான். 17 அப்பொழுது பவுல் நூற்றுக்கு அதிபதிகளில் ஒருவனை அழைத்து, இந்த வாலிபனைச் சேனாபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோம்; அவரிடத்தில் இவன் அறிவிக்கவேண்டிய ஒரு காரியம் உண்டு என்றான். 18 அந்தப்படியே அவன் இவனைச் சேனாபதியினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோய்: காவலில் வைக்கப்பட்டிருக்கிற பவுல் என்னை அழைத்து, உமக்கொரு காரியத்தைச் சொல்லவேண்டுமென்றிருக்கிற இந்த வாலிபனை உம்மிடத்திற்குக் கொண்டுபோகும்படி என்னைக் கேட்டுக்கொண்டான் என்றான். 19 அப்பொழுது சேனாபதி அவனுடைய கையைப் பிடித்துத் தனியே அழைத்துக்கொண்டுபோய்: நீ என்னிடத்தில் அறிவிக்கவேண்டிய காரியம் என்னவென்று கேட்டான். 20 அதற்கு அவன்: யூதர்கள் பவுலின் காரியத்தை அதிக திட்டமாய் விசாரிக்க மனதுள்ளவர்கள்போல, நீர் நாளைக்கு அவனை ஆலோசனைச் சங்கத்தாரிடத்தில் கொண்டுவரும்படி உம்மை வேண்டிக்கொள்ள உடன்பட்டிருக்கிறார்கள். 21 நீர் அவர்களுக்குச் சம்மதிக்கவேண்டாம்; அவர்களில் நாற்பதுபேருக்கு அதிகமானவர்கள் அவனைக் கொலைசெய்யுமளவும் தாங்கள் புசிப்பதுமில்லை குடிப்பதுமில்லையென்று சபதம்பண்ணிக்கொண்டு, அவனுக்குப் பதிவிருந்து, உம்முடைய உத்தரவுக்காக இப்பொழுது காத்துக்கொண்டு ஆயத்தமாயிருக்கிறார்கள் என்றான். 22 அப்பொழுது சேனாபதி: நீ இவைகளை எனக்கு அறிவித்ததாக ஒருவருக்குஞ் சொல்லாதே என்று கட்டளையிட்டு, வாலிபனை அனுப்பிவிட்டான். 23 பின்பு அவன் நூற்றுக்கு அதிபதிகளில் இரண்டுபேரை அழைத்து, செசரியாபட்டணத்திற்குப் போகும்படி இருநூறு காலாட்களையும், எழுபது குதிரைவீரரையும், இருநூறு ஈட்டிக்காரரையும், இராத்திரியில் மூன்றாம்மணி வேளையிலே, ஆயத்தம்பண்ணுங்களென்றும்; 24 பவுலை ஏற்றி, தேசாதிபதியாகிய பேலிக்ஸினிடத்திற்குப் பத்திரமாய்க் கொண்டுபோகும்படிக்குக் குதிரைகளை ஆயத்தப்படுத்துங்களென்றும் சொன்னதுமன்றி, 25 ஒரு நிருபத்தையும் எழுதினான்; அதின் விவரமாவது: 26 கனம்பொருந்திய தேசாதிபதியாகிய பேலிக்ஸ் என்பவருக்குக் கிலவுதியு லீசியா வாழ்த்துதல் சொல்லி அறிவிக்கிறது என்னவென்றால்: 27 இந்த மனுஷனை யூதர் பிடித்துக் கொலைசெய்யப்போகிற சமயத்தில், நான் போர்ச்சேவகரோடே கூடப்போய், இவன் ரோமனென்று அறிந்து, இவனை விடுவித்தேன். 28 அவர்கள் இவன்மேல் சாட்டின குற்றத்தை நான் அறியவேண்டுமென்று இவனை அவர்கள் ஆலோசனைச் சங்கத்துக்குமுன் கொண்டுபோனேன். 29 இவன் அவர்களுடைய வேதத்திற்கடுத்த விஷயங்களைக்குறித்துக் குற்றஞ்சாட்டப்பட்டவனென்று விளங்கினதேயல்லாமல், மரணத்துக்காவது விலங்குக்காவது ஏற்ற குற்றம் யாதொன்றும் இவனிடத்தில் இல்லையென்று கண்டறிந்தேன். 30 யூதர்கள் இவனுக்கு விரோதமாய்ச் சர்ப்பனையான யோசனை செய்கிறார்களென்று எனக்குத் தெரியவந்தபோது, உடனே இவனை உம்மிடத்திற்கு அனுப்பினேன்; குற்றஞ்சாட்டுகிறவர்களும் இவனுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற காரியங்களை உமக்கு முன்பாக வந்து சொல்லும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டேன். சுகமாயிருப்பீராக, என்றெழுதினான். 31 போர்ச்சேவகர் தங்களுக்குக் கட்டளையிட்டபடியே, பவுலைக் கூட்டிக்கொண்டு, இராத்திரியிலே அந்திப்பத்திரி ஊருக்குப் போய், 32 மறுநாளில் குதிரைவீரரை அவனுடனேகூடப் போகும்படி அனுப்பிவிட்டு, தாங்கள் கோட்டைக்குத் திரும்பினார்கள். 33 அவர்கள் செசரியாபட்டணத்தில் சேர்ந்து, நிருபத்தைத் தேசாதிபதியினிடத்தில் கொடுத்து, பவுலையும் அவன் முன்பாக நிறுத்தினார்கள். 34 தேசாதிபதி அதை வாசித்து: எந்த நாட்டானென்று கேட்டு, சிலிசியா நாட்டானென்று அறிந்தபோது: 35 உன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்களும் வந்திருக்கும்போது உன் காரியத்தைத் திட்டமாய்க் கேட்பேனென்று சொல்லி, ஏரோதின் அரமனையிலே அவனைக் காவல்பண்ணும்படி கட்டளையிட்டான்.

அப்போஸ்தலர் 24

1 ஐந்துநாளைக்குப்பின்பு பிரதான ஆசாரியனாகிய அனனியா மூப்பர்களோடும் தெர்த்துல்லு என்னும் ஒரு நியாயசாதுரியனோடும்கூடப் போனான், அவர்கள் பவுலுக்கு விரோதமாய்த் தேசாதிபதியினிடத்தில் பிராதுபண்ணினார்கள். 2 அவன் அழைக்கப்பட்டபோது, தெர்த்துல்லு குற்றஞ்சாட்டத்தொடங்கி: 3 கனம்பொருந்திய பேலிக்ஸே, உம்மாலே நாங்கள் மிகுந்த சமாதான சவுக்கியத்தை அநுபவிக்கிறதையும், உம்முடைய பராமரிப்பினாலே இந்தத் தேசத்தாருக்குச் சிறந்த நன்மைகள் நடக்கிறதையும் நாங்கள் எப்பொழுதும் எங்கும் மிகுந்த நன்றியறிதலுடனே அங்கிகாரம்பண்ணுகிறோம். 4 உம்மை நான் அநேக வார்த்தைகளினாலே அலட்டாதபடிக்கு, நாங்கள் சுருக்கமாய்ச் சொல்வதை நீர் பொறுமையாய்க் கேட்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். 5 என்னவென்றால், இந்த மனுஷன் கொள்ளைநோயாகவும், பூச்சக்கரத்திலுள்ள சகல யூதர்களுக்குள்ளும் கலகம் எழுப்புகிறவனாகவும், நசரேயருடைய மதபேதத்துக்கு முதலாளியாகவும் இருக்கிறானென்று கண்டறிந்தோம். 6 இவன் தேவாலயத்தையும் தீட்டுப்படுத்தப் பார்த்தான். நாங்கள் இவனைப்பிடித்து எங்கள் வேதப்பிரமாணத்தின்படியே நியாயந்தீர்க்க மனதாயிருந்தோம். 7 அப்பொழுது சேனாபதியாகிய லீசியா வந்து, மிகுந்த பலாத்காரமாய் இவனை எங்கள் கைகளிலிருந்து பறித்துக்கொண்டுபோய், 8 இவன்மேல் குற்றஞ்சாட்டுகிறவர்கள் உம்மிடத்தில் வரும்படி கட்டளையிட்டார். இவனிடத்தில் நீர் விசாரித்தால் நாங்கள் இவன்மேல் சாட்டுகிற குற்றங்கள் யாவையும் அறிந்துகொள்ளலாம் என்றான். 9 யூதர்களும் அதற்கு இசைந்து, இவைகள் யதார்த்தந்தான் என்றார்கள். 10 பவுல் பேசும்படி தேசாதிபதி சைகைகாட்டினபோது, அவன் உத்தரவாக: நீர் அநேக வருஷகாலமாய் இந்தத் தேசத்தாருக்கு நியாயாதிபதியாயிருக்கிறீரென்றறிந்து, நான் என் காரியங்களைக்குறித்து அதிக தைரியத்துடன் உத்தரவு சொல்லுகிறேன். 11 நான் தொழுதுகொள்ளும்படியாக எருசலேமுக்குப் போனதுமுதல் இதுவரைக்கும் பன்னிரண்டு நாள்மாத்திரம் ஆயிற்றென்று நீர் அறிந்துகொள்ளலாம். 12 தேவாலயத்திலே நான் ஒருவரிடத்திலாவது தர்க்கம்பண்ணினதையும், நான் ஜெபஆலயங்களிலாகிலும் நகரத்திலாகிலும் ஜனங்களுக்குள்ளே கலகமெழுப்பினதையும், இவர்கள் கண்டதில்லை. 13 இப்பொழுது என்மேல் சாட்டுகிற குற்றங்களை இவர்கள் ரூபிக்கவுமாட்டார்கள். 14 உம்மிடத்தில் ஒன்றை ஒத்துக்கொள்ளுகிறேன்; அதென்னவென்றால், இவர்கள் மதபேதம் என்று சொல்லுகிற மார்க்கத்தின்படியே எங்கள் முன்னோர்களின் தேவனுக்கு ஆராதனைசெய்து நியாயப்பிரமாணத்திலேயும் தீர்க்கதரிசிகள் புஸ்தகங்களிலேயும் எழுதியிருக்கிற எல்லாவற்றையும் நான் விசுவாசித்து, 15 நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று இவர்கள் தேவனிடத்தில் நம்பிக்கைகொண்டிருக்கிறது போல, நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன். 16 இதனால் நான் தேவனுக்கும் மனுஷருக்கும் முன்பாக எப்பொழுதும் குற்றமற்ற மனச்சாட்சியை உடையவனாயிருக்கப் பிரயாசப்படுகிறேன். 17 அநேக வருஷங்களுக்குப் பின்பு நான் என் ஜனத்தாருக்குத் தர்மப்பணத்தை ஒப்புவிக்கவும், காணிக்கைகளைச் செலுத்தவும் வந்தேன். 18 அப்பொழுது கூட்டமில்லாமலும் அமளியில்லாமலும் தேவாலயத்திலே சுத்திகரித்துக்கொண்டவனாயிருக்கையில், ஆசியா நாட்டாரான சில யூதர்கள் என்னைக் கண்டார்கள். 19 அவர்களுக்கு என்பேரில் விரோதமான காரியம் ஏதாகிலும் உண்டாயிருந்தால், அவர்களே இங்கே வந்து, உமக்கு முன்பாகக் குற்றஞ்சாட்டவேண்டும். 20 நான் ஆலோசனைச் சங்கத்தாருக்கு முன்பாக நின்றபோது அவர்கள் யாதொரு அநியாயத்தை என்னிடத்தில் கண்டதுண்டானால் இவர்களே அதைச்சொல்லட்டும். 21 நான் அவர்களுக்குள்ளே நின்றபோது மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பதைக்குறித்து, இன்று உங்களாலே நியாயந்தீர்க்கப்படுகிறேனென்று நான் சொன்ன ஒரு சொல்லினிமித்தமேயன்றி வேறொன்றினிமித்தமும் குற்றங்காணப்படவில்லை என்றான். 22 இந்த மார்க்கத்தின் விஷயங்களை விவரமாய் அறிந்திருந்த பேலிக்ஸ் இவைகளைக் கேட்டபொழுது: சேனாபதியாகிய லீசியா வரும்போது உங்கள் காரியங்களைத் திட்டமாய் விசாரிப்பேன் என்று சொல்லி; 23 பவுலைக் காவல்பண்ணவும், கண்டிப்பில்லாமல் நடத்தவும், அவனுக்கு ஊழியஞ்செய்கிறதற்கும் அவனைக் கண்டுகொள்ளுகிறதற்கும் வருகிற அவனுடைய மனுஷர்களில் ஒருவரையும் தடைசெய்யாதிருக்கவும் நூற்றுக்கு அதிபதியானவனுக்குக் கட்டளையிட்டு, அவர்களைக் காத்திருக்கும்படிசெய்தான். 24 சில நாளைக்குப்பின்பு பேலிக்ஸ் யூதஸ்திரீயாகிய தன் மனைவி துருசில்லாளுடனேகூட வந்து, பவுலை அழைப்பித்து, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தைக் குறித்து அவன் சொல்லக்கேட்டான். 25 அவன், நீதியையும், இச்சையடக்கத்தையும், இனிவரும் நியாயத்தீர்ப்பையும்குறித்துப் பேசுகையில், பேலிக்ஸ் பயமடைந்து: இப்பொழுது நீ போகலாம், எனக்குச் சமயமானபோது உன்னை அழைப்பிப்பேன் என்றான். 26 மேலும், அவன் பவுலை விடுதலைபண்ணும்படி தனக்கு அவன் பணங்கொடுப்பானென்று நம்பிக்கையுள்ளவனாயிருந்தான்; அதினிமித்தம் அவன் அநேகந்தரம் அவனை அழைத்து, அவனுடனே பேசினான். 27 இரண்டு வருஷம் சென்றபின்பு பேலிக்ஸ் என்பவனுக்குப் பதிலாய்ப் பொர்க்கியுபெஸ்து தேசாதிபதியாக வந்தான்; அப்பொழுது பேலிக்ஸ் யூதருக்குத் தயவுசெய்ய மனதாய்ப் பவுலைக் காவலில் வைத்துவிட்டுப்போனான்.

அப்போஸ்தலர் 25

1 பெஸ்து என்பவன் நாட்டிற்கு அதிபதியாக வந்து, மூன்றுநாளானபின்பு, செசரியாவிலிருந்து எருசலேமுக்குப் போனான். 2 அப்பொழுது பிரதான ஆசாரியனும் யூதரில் முதன்மையானவர்களும் அவனிடத்தில் வந்து, பவுலுக்கு விரோதமாகப் பிராதுபண்ணி, 3 அவனை வழியிலே கொன்றுபோடும்படி சர்ப்பனையான யோசனையுள்ளவர்களாய், தங்கள்மேல் தயவுசெய்து, அவனை எருசலேமுக்கு அழைப்பிக்கவேண்டுமென்று வேண்டிக்கொண்டார்கள். 4 அதற்குப் பெஸ்து பிரதியுத்தரமாக: பவுலைச் செசரியாவிலே காவல்பண்ணியிருக்கிறதே; நானும் சீக்கிரமாக அங்கே போகிறேன். 5 ஆகையால் உங்களில் திறமுள்ளவர்கள் கூடவந்து, அந்த மனுஷனிடத்தில் குற்றம் ஏதாகிலும் உண்டானால், அந்தக் குற்றத்தை அவன்மேல் சாட்டட்டும் என்றான். 6 அவன் அவர்களிடத்திலே ஏறக்குறைய பத்துநாள் சஞ்சரித்து, பின்பு செசரியாவுக்குப் போய், மறுநாளிலே நியாயாசனத்தில் உட்கார்ந்து, பவுலைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டான். 7 அவன் வந்தபோது, எருசலேமிலிருந்துவந்த யூதர்கள் அவனைச் சூழ்ந்துநின்று, தங்களால் ரூபிக்கக்கூடாத அநேகங் கொடிய குற்றங்களை அவன்மேல் சாட்டினார்கள். 8 அதற்கு அவன் உத்தரவாக: நான் யூதருடைய வேதப்பிரமாணத்துக்காகிலும், தேவாலயத்துக்காகிலும், இராயருக்காகிலும் விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லையென்று சொன்னான். 9 அப்பொழுது பெஸ்து யூதருக்குத் தயவுசெய்ய மனதாய், பவுலை நோக்கி: நீ எருசலேமுக்குப் போய், அவ்விடத்திலே இந்தக் காரியங்களைக்குறித்து எனக்கு முன்பாக நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்றான். 10 அதற்குப் பவுல்: நான் இராயருடைய நியாயாசனத்துக்கு முன்பாக நிற்கிறேன்; அதற்கு முன்பாக நான் நியாயம் விசாரிக்கப்படவேண்டியது; யூதருக்கு நான் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை, அதை நீரும் நன்றாய் அறிந்திருக்கிறீர். 11 நான் அநியாயஞ்செய்து, மரணத்துக்குப் பாத்திரமானது ஏதாகிலும் நடப்பித்ததுண்டானால், நான் சாகாதபடிக்கு மனுகேட்கமாட்டேன். இவர்கள் என்மேல் சாட்டுகிற குற்றங்கள் முற்றிலும் அபத்தமானால், அவர்களுக்குத் தயவுபண்ணும்பொருட்டு ஒருவரும் என்னை அவர்களுக்கு ஒப்புக்கொடுக்கலாகாது. இராயருக்கு அபயமிடுகிறேன் என்றான். 12 அப்பொழுது பெஸ்து தன் ஆலோசனைக்காரருடனே ஆலோசித்து: நீ இராயருக்கு அபயமிட்டாயே; இராயரிடத்திற்கே போகக்கடவாயென்று உத்தரவு சொன்னான். 13 சிலநாள் சென்றபின்பு, அகிரிப்பா ராஜாவும் பெர்னீக்கேயாளும் பெஸ்துவைக் கண்டுகொள்ளும்படி செசரியாவுக்கு வந்தார்கள். 14 அவர்கள் அங்கே அநேகநாள் சஞ்சரித்திருக்கையில், பெஸ்து பவுலின் சங்கதியை ராஜாவுக்கு விவரித்து: பேலிக்ஸ் காவலில் வைத்துப்போன ஒரு மனுஷன் இருக்கிறான். 15 நான் எருசலேமில் இருந்தபோது, பிரதான ஆசாரியர்களும் யூதருடைய மூப்பர்களும் அவனைக்குறித்து என்னிடத்தில் பிராதுபண்ணி, அவனுக்கு விரோதமாகத் தீர்ப்புசெய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். 16 அவர்களுக்கு நான் பிரதியுத்தரமாக: குற்றஞ்சாட்டப்பட்ட மனுஷன் குற்றஞ்சாட்டினவர்களுக்கு முகமுகமாய் நின்று, சாட்டின குற்றத்துக்குத் தனக்காக எதிருத்தரவு சொல்ல அவனுக்கு இடங்கிடைக்கிறதற்குமுன்னே, குற்றஞ்சாட்டினவர்கள் பட்சமாய் அவனை மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கிறது ரோமருக்கு வழக்கமல்ல என்றேன். 17 ஆகையால் அவர்கள் இங்கே கூடிவந்தபோது, நான் எவ்வளவும் தாமதம்பண்ணாமல், மறுநாள் நியாயாசனத்தில் உட்கார்ந்து, அந்த மனுஷனைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டேன். 18 அப்பொழுது குற்றஞ்சாட்டினவர்கள் வந்துநின்று, நான் நினைத்திருந்த குற்றங்களில் ஒன்றையும் அவன்மேல் சுமத்தாமல், 19 தங்களுடைய மார்க்கத்தைக்குறித்தும், மரித்துப்போன இயேசு என்னும் ஒருவன் உயிரோடிருக்கிறானென்று பவுல் சாதித்ததைக்குறித்தும் சில தர்க்கவிஷயங்களை அவன் பேரில் விரோதமாய்ச் சொன்னார்கள். 20 இப்படிப்பட்ட தர்க்க விஷயங்களைக்குறித்து எனக்குச் சந்தேகமிருந்தபடியினால்: நீ எருசலேமுக்குப் போய், அங்கே இவைகளைக்குறித்து நியாயம் விசாரிக்கப்பட உனக்குச் சம்மதியா என்று கேட்டேன். 21 அதற்குப் பவுல், தான் இராயருக்குமுன்பாக நியாயம் விசாரிக்கப்படும்படிக்கு நிறுத்திவைக்கப்படவேண்டுமென்று அபயமிட்டபோது, நான் அவனை இராயனிடத்திற்கு அனுப்புமளவும் காவல்பண்ணும்படி கட்டளையிட்டேன் என்றான். 22 அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: அந்த மனுஷன் சொல்லுகிறதை நானும் கேட்க மனதாயிருக்கிறேன் என்றான். அதற்கு அவன்: நாளைக்கு நீர் கேட்கலாம் என்றான். 23 மறுநாளிலே அகிரிப்பாவும் பெர்னீக்கேயாளும் மிகுந்த ஆடம்பரத்துடனே வந்து சேனாபதிகளோடும் பட்டணத்துப்பிரதான மனுஷரோடுங்கூட நியாயஸ்தலத்தில் பிரவேசித்தார்கள். உடனே பெஸ்துவினுடைய கட்டளையின்படி பவுல் கொண்டுவரப்பட்டான். 24 அப்பொழுது பெஸ்து: அகிரிப்பா ராஜாவே, எங்களோடேகூட இவ்விடத்தில் வந்திருக்கிறவர்களே, நீங்கள் காண்கிற இந்த மனுஷனைக்குறித்து யூதஜனங்களெல்லாரும் எருசலேமிலும் இவ்விடத்திலும் என்னை வருந்திக் கேட்டுக்கொண்டு, இவன் இனி உயிரோடிருக்கிறது தகாதென்று சொல்லிக் கூக்குரலிட்டார்கள். 25 இவன் மரணத்துக்குப் பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று நான் அறிந்துகொண்டதினாலும், இவன்தானே இராயனுக்கு அபயமிட்டபடியினாலும், அவரிடத்தில் இவனை அனுப்பும்படி தீர்மானம்பண்ணினேன். 26 இவனைக்குறித்து ஆண்டவனுக்கு எழுதுகிறதற்கு நிச்சயப்பட்ட காரியமொன்றும் எனக்கு விளங்கவில்லை. காவல்பண்ணப்பட்ட ஒருவன் செய்த குற்றங்களை எடுத்துக்காட்டாமல் அனுப்புகிறது புத்தியீனமான காரியமென்று எனக்குத் தோன்றுகிறபடியினாலே, 27 இவனை விசாரித்துக் கேட்டபின்பு எழுதத்தக்க விசேஷம் ஏதாகிலும் எனக்கு விளங்கும்படி, இவனை உங்களுக்கு முன்பாகவும், விசேஷமாய் அகிரிப்பா ராஜாவே, உமக்கு முன்பாகவும் கொண்டுவந்தேன் என்றான்.

அப்போஸ்தலர் 26

1 அகிரிப்பா பவுலை நோக்கி: நீ உனக்காகப் பேச உனக்கு உத்தரவாகிறது என்றான். அப்பொழுது பவுல் கையை நீட்டி, தனக்காக உத்தரவு சொல்லத்தொடங்கினான். 2 அகிரிப்பா ராஜாவே, யூதர்கள் என்மேல் சாட்டுகிற சகல காரியங்களைக்குறித்தும் நான் இன்றைக்கு உமக்கு முன்பாக உத்தரவு சொல்லப்போகிறபடியினாலே என்னைப் பாக்கியவான் என்றெண்ணுகிறேன். 3 விசேஷமாய் நீர் யூதருடைய சகல முறைமைகளையும் தர்க்கங்களையும் அறிந்தவரானதால் அப்படி எண்ணுகிறேன்; ஆகையால் நான் சொல்வதைப் பொறுமையோடே கேட்கும்படி உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். 4 நான் என் சிறுவயதுமுதற்கொண்டு, எருசலேமிலே என் ஜனத்தாருக்குள்ளே இருந்தபடியால், ஆதிமுதல் நான் நடந்த நடக்கையை யூதரெல்லாரும் அறிந்திருக்கிறார்கள். 5 நம்முடைய மார்க்கத்திலுள்ள சமயபேதங்களில் மிகவும் கண்டிப்பான சமயத்துக்கு இசைந்தபடி பரிசேயனாய் நடந்தேனென்று சாட்சிசொல்ல அவர்களுக்கு மனதிருந்தால் சொல்லலாம். 6 தேவன் நம்முடைய பிதாக்களுக்கு அருளிச்செய்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்கிற நம்பிக்கைக்காகவே நான் இப்பொழுது நியாயத்தீர்ப்படைகிறவனாய் நிற்கிறேன். 7 இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்துவருகிற நம்முடைய பன்னிரண்டு கோத்திரத்தாரும் அந்த வாக்குத்தத்தம் நிறைவேறுமென்று நம்பியிருக்கிறார்கள். அகிரிப்பா ராஜாவே, அந்த நம்பிக்கையினிமித்தமே யூதர்கள் என்மேல் குற்றஞ்சாட்டுகிறார்கள். 8 தேவன் மரித்தோரை எழுப்புகிறது நம்பப்படாத காரியமென்று நீங்கள் எண்ணுகிறதென்ன? 9 முன்னே நானும் நசரேயனாகிய இயேசுவின் நாமத்திற்கு விரோதமாய் அநேக காரியங்களை நடப்பிக்கவேண்டுமென்று நினைத்திருந்தேன். 10 அப்படியே நான் எருசலேமிலும் செய்தேன். நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரம் பெற்று, பரிசுத்தவான்களில் அநேகரைச் சிறைச்சாலைகளில் அடைத்தேன்; அவர்கள் கொலைசெய்யப்படுகையில் நானும் சம்மதித்திருந்தேன். 11 சகல ஜெபஆலயங்களிலும் நான் அவர்களை அநேகந்தரம் தண்டித்து, தேவதூஷணஞ் சொல்லக் கட்டாயப்படுத்தினேன்; அவர்கள் பேரில் மூர்க்கவெறி கொண்டவனாய் அந்நியபட்டணங்கள்வரைக்கும் அவர்களைத் துன்பப்படுத்தினேன். 12 இப்படிச் செய்துவருகையில், நான் பிரதான ஆசாரியர்களிடத்தில் அதிகாரமும் உத்தரவும் பெற்று, தமஸ்குவுக்குப் போகும்போது, 13 மத்தியான வேளையில், ராஜாவே, நான் வழியிலே சூரியனுடைய பிரகாசத்திலும் அதிகமான ஒளி வானத்திலிருந்து என்னையும் என்னுடனேகூடப் பிரயாணம்பண்ணினவர்களையும் சுற்றிப் பிரகாசிக்கக்கண்டேன். 14 நாங்களெல்லாரும் தரையிலே விழுந்தபோது: சவுலே, சவுலே, நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? முள்ளில் உதைக்கிறது உனக்குக் கடினமாம் என்று எபிரெயு பாஷையிலே என்னுடனே சொல்லுகிற ஒரு சத்தத்தைக் கேட்டேன். 15 அப்பொழுது நான்: ஆண்டவரே, நீர் யார் என்றேன். அதற்கு அவர்: நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே. 16 இப்பொழுது நீ எழுந்து, காலுன்றி நில். நீ கண்டவைகளையும் நான் உனக்குத் தரிசனமாகிக் காண்பிக்கப்போகிறவைகளையும் குறித்து உன்னை ஊழியக்காரனாகவும் சாட்சியாகவும் ஏற்படுத்துகிறதற்காக உனக்குத் தரிசனமானேன். 17 உன் சுயஜனத்தாரிடத்தினின்றும் அந்நிய ஜனத்தாரிடத்தினின்றும் உன்னை விடுதலையாக்கி, 18 அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டுத் தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். 19 ஆகையால், அகிரிப்பா ராஜாவே, நான் அந்தப் பரமதரிசனத்துக்குக் கீழ்ப்படியாதவனாயிருக்கவில்லை. 20 முன்பு தமஸ்குவிலும் எருசலேமிலும் யூதேயா தேசமெங்குமுள்ளவர்களிடத்திலும், பின்பு புறஜாதியாரிடத்திலும் நான் போய், அவர்கள் தேவனிடத்திற்கு மனந்திரும்பிக் குணப்படவும், மனந்திரும்புதலுக்கேற்ற கிரியைகளைச் செய்யவும் வேண்டுமென்று அறிவித்தேன். 21 இதினிமித்தமே யூதர்கள் தேவாலயத்திலே என்னைப் பிடித்துக் கொலைசெய்யப் பிரயத்தனம்பண்ணினார்கள். 22 ஆனாலும் தேவ அநுக்கிரகம் பெற்று, நான் இந்நாள்வரைக்கும் சிறியோருக்கும் பெரியோருக்கும் சாட்சிகூறி வருகிறேன். 23 தீர்க்கதரிசிகளும் மோசேயும் முன்னமே சொல்லியிருந்தபடியே, கிறிஸ்து பாடுபடவேண்டியதென்றும், மரித்தோர் உயிர்த்தெழுதலில் அவர் முதல்வராகி, சுய ஜனங்களுக்கும் அந்நிய ஜனங்களுக்கும் ஒளியை வெளிப்படுத்துகிறவரென்றும் சொல்லுகிறேனேயன்றி, வேறொன்றையும் நான் சொல்லுகிறதில்லை என்றான். 24 இவ்விதமாய் அவன் தனக்காக உத்தரவு சொல்லுகையில், பெஸ்து உரத்த சத்தமாய்: பவுலே, நீ பிதற்றுகிறாய், அதிகக் கல்வி உனக்குப் பயித்தியமுண்டாக்குகிறது என்றான். 25 அதற்கு அவன்: கனம்பொருந்திய பெஸ்துவே, நான் பயித்தியக்காரனல்ல, சத்தியமும் சொஸ்தபுத்தியுமுள்ள வார்த்தைகளைப் பேசுகிறேன். 26 இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல. 27 அகிரிப்பா ராஜாவே, தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கிறீரா? விசுவாசிக்கிறீர் என்று அறிவேன் என்றான். 28 அப்பொழுது அகிரிப்பா பவுலை நோக்கி: நான் கிறிஸ்தவனாகிறதற்குக் கொஞ்சங்குறைய நீ என்னைச் சம்மதிக்கப்பண்ணுகிறாய் என்றான். 29 அதற்குப் பவுல்: நீர் மாத்திரமல்ல, இன்று என் வசனத்தைக் கேட்கிற யாவரும், கொஞ்சங்குறையமாத்திரம் அல்ல, இந்தக் கட்டுகள் தவிர, முழுவதும் என்னைப்போலாகும்படி தேவனை வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான். 30 இவைகளை அவன் சொன்னபோது, ராஜாவும் தேசாதிபதியும் பெர்னீக்கேயாளும் அவர்களுடனேகூட உட்கார்ந்திருந்தவர்களும் எழுந்து, 31 தனியே போய்: இந்த மனுஷன் மரணத்துக்காவது கட்டுகளுக்காவது பாத்திரமானதொன்றையும் செய்யவில்லையென்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள். 32 அகிரிப்பா பெஸ்துவை நோக்கி: இந்த மனுஷன் இராயனுக்கு அபயமிடாதிருந்தானானால், இவனை விடுதலைபண்ணலாகும் என்றான்.

அப்போஸ்தலர் 27

1 நாங்கள் இத்தாலியா தேசத்துக்குக் கப்பல் ஏறிப் போகும்படி தீர்மானிக்கப்பட்டபோது, பவுலையும் காவலில் வைக்கப்பட்டிருந்த வேறுசிலரையும் அகுஸ்து பட்டாளத்தைச்சேர்ந்த யூலியு என்னும் பேர்கொண்ட நூற்றுக்கு அதிபதியினிடத்தில் ஒப்புவித்தார்கள். 2 அதிரமித்தியம் ஊர்க்கப்பலில் நாங்கள் ஏறி, ஆசியா நாட்டுக் கரைபிடித்தோடவேண்டுமென்று நினைத்துப் புறப்பட்டோம். மக்கெதோனியா தேசத்துத் தெசலோனிக்கே பட்டணத்தானாகிய அரிஸ்தர்க்கு எங்களுடனேகூட இருந்தான். 3 மறுநாள் சீதோன் துறைபிடித்தோம். யூலியு பவுலைப் பட்சமாய் நடப்பித்து, அவன் தன் சிநேகிதரிடத்திலே போய்ப் பராமரிப்படையும்படிக்கு உத்தரவு கொடுத்தான். 4 அவ்விடம்விட்டு நாங்கள் புறப்பட்டு, எதிர்காற்றாயிருந்தபடியினால், சீப்புருதீவின் ஒதுக்கிலே ஓடினோம். 5 பின்பு சிலிசியா பம்பிலியா நாடுகளின் கடல்வழியாய் ஓடி, லீசியா நாட்டு மீறாப்பட்டணத்தில் சேர்ந்தோம். 6 இத்தாலியாவுக்குப் போகிற அலெக்சந்திரியாபட்டணத்துக் கப்பலை நூற்றுக்கு அதிபதி அங்கே கண்டு, எங்களை அதில் ஏற்றினான். 7 காற்று எங்களைத் தடுத்தபடியினாலே, நாங்கள் அநேகநாள் மெதுவாய்ச் சென்று, வருத்தத்தோடே கினீதுபட்டணத்திற்கு எதிரே வந்து, சல்மோனே ஊருக்கு எதிராய்க் கிரேத்தாதீவின் ஒதுக்கில் ஓடினோம். 8 அதை வருத்தத்தோடே கடந்து, நல்ல துறைமுகம் என்னப்பட்ட ஒரு இடத்திற்கு வந்தோம்; லசேயபட்டணம் அதற்குச் சமீபமாயிருந்தது. 9 வெகுகாலம் சென்று, உபவாசநாளும் கழிந்துபோனபடியினாலே, இனிக் கப்பல்யாத்திரை செய்கிறது மோசத்திற்கு ஏதுவாயிருக்குமென்று, பவுல் அவர்களை நோக்கி: 10 மனுஷரே, இந்த யாத்திரையினாலே சரக்குக்கும் கப்பலுக்கும் மாத்திரமல்ல, நம்முடைய ஜீவனுக்கும் வருத்தமும் மிகுந்த சேதமும் உண்டாயிருக்குமென்று காண்கிறேன் என்று சொல்லி, அவர்களை எச்சரித்தான். 11 நூற்றுக்கு அதிபதி பவுலினால் சொல்லப்பட்டவைகளைப் பார்க்கிலும் மாலுமியையும் கப்பல் எஜமானையும் அதிகமாய் நம்பினான். 12 அந்தத் துறைமுகம் மழைகாலத்திலே தங்குவதற்கு வசதியாயிராதபடியினால், அவ்விடத்தை விட்டுத் தென்மேற்கையும் வடமேற்கையும் நோக்கியிருக்கும் கிரேத்தாதீவிலுள்ள துறைமுகமாகிய பேனிக்ஸ் என்னும் இடத்தில் சேரக்கூடுமானால் சேர்ந்து, மழைகாலத்தில் தங்கும்படி அநேகம்பேர் ஆலோசனை சொன்னார்கள். 13 தென்றல் மெதுவாயடித்தபடியால், தாங்கள் கோரினது கைகூடிவந்ததென்று எண்ணி, அவ்விடம்விட்டுப் பெயர்ந்து கிரேத்தாதீவுக்கு அருகாக ஓடினார்கள். 14 கொஞ்சநேரத்துக்குள்ளே யூரோக்கிலிதோன் என்னுங் கடுங்காற்று அதில் மோதிற்று. 15 கப்பல் அதில் அகப்பட்டுக்கொண்டு, காற்றுக்கு எதிர்த்துப்போகக்கூடாதபடியினால் காற்றின் போக்கிலே கொண்டுபோகப்பட்டோம். 16 அப்படிக் கிலவுதா என்னப்பட்ட ஒரு சின்ன தீவின் ஒதுக்கிலே ஓடுகையில் வெகு வருத்தத்தோடே படவை வசப்படுத்தினோம். 17 அதை அவர்கள் தூக்கியெடுத்தபின்பு, பல உபாயங்கள் செய்து, கப்பலைச்சுற்றிக் கட்டி, சொரிமணலிலே விழுவோமென்று பயந்து, பாய்களை இறக்கி, இவ்விதமாய்க் கொண்டுபோகப்பட்டார்கள். 18 மேலும் பெருங்காற்று மழையில் நாங்கள் மிகவும் அடிபட்டபடியினால், மறுநாளில் சில சரக்குகளைக் கடலில் எறிந்தார்கள். 19 மூன்றாம் நாளிலே கப்பலின் தளவாடங்களை எங்கள் கைகளினாலே எடுத்து எறிந்தோம். 20 அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக் கொண்டிருந்தபடியினால், இனி தப்பிப் பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று. 21 அநேகநாள் அவர்கள் போஜனம்பண்ணாமல் இருந்தபோது, பவுல் அவர்கள் நடுவிலே நின்று: மனுஷரே, இந்த வருத்தமும் சேதமும் வராதபடிக்கு என் சொல்லைக்கேட்டு, கிரேத்தாதீவை விட்டுப்புறப்படாமல் இருக்கவேண்டியதாயிருந்தது. 22 ஆகிலும், திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது. 23 ஏனென்றால், என்னை ஆட்கொண்டவரும் நான் சேவிக்கிறவருமான தேவனுடைய தூதனானவன் இந்த இராத்திரியிலே என்னிடத்தில் வந்துநின்று: 24 பவுலே, பயப்படாதே, நீ இராயனுக்கு முன்பாக நிற்கவேண்டும். இதோ, உன்னுடனேகூட யாத்திரைபண்ணுகிற யாவரையும் தேவன் உனக்குத் தயவுபண்ணினார் என்றான். 25 ஆனபடியினால் மனுஷரே, திடமனதாயிருங்கள். எனக்குச் சொல்லப்பட்ட பிரகாரமாகவே நடக்கும் என்று தேவனிடத்தில் நம்பிக்கையாயிருக்கிறேன். 26 ஆயினும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான். 27 பதினாலாம் இராத்திரியானபோது, நாங்கள் ஆதிரியாக் கடலிலே அலைவுபட்டு ஓடுகையில், நடுஜாமத்திலே கப்பலாட்களுக்கு ஒரு கரை கிட்டிவருகிறதாகத் தோன்றிற்று. 28 உடனே அவர்கள் விழுதுவிட்டு இருபது பாகமென்று கண்டார்கள்; சற்றப்புறம் போனபொழுது, மறுபடியும் விழுது விட்டுப் பதினைந்து பாகமென்று கண்டார்கள். 29 பாறையிடங்களில் விழுவோமென்று பயந்து, பின்னணியத்திலிருந்து நாலு நங்கூரங்களைப்போட்டு, பொழுது எப்போது விடியுமோ என்றிருந்தார்கள். 30 அப்பொழுது கப்பலாட்கள் கப்பலை விட்டோடிப்போக வகைதேடி, முன்னணியத்திலிருந்து நங்கூரங்களைப் போடப்போகிற பாவனையாய்ப் படவைக் கடலில் இறக்குகையில், 31 பவுல் நூற்றுக்கு அதிபதியையும் சேவகரையும் நோக்கி: இவர்கள் கப்பலில் இராவிட்டால் நீங்கள் தப்பிப் பிழைக்கமாட்டீர்கள் என்றான். 32 அப்பொழுது, போர்ச்சேவகர் படவின் கயிறுகளை அறுத்து, அதைத் தாழவிழவிட்டார்கள். 33 பொழுது விடிகையில் எல்லாரும் போஜனம்பண்ணும்படி பவுல் அவர்களுக்குத் தைரியஞ்சொல்லி: நீங்கள் இன்று பதினாலுநாளாய் ஒன்றும் சாப்பிடாமல் பட்டினியாயிருக்கிறீர்கள். 34 ஆகையால் போஜனம்பண்ணும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன், நீங்கள் தப்பிப் பிழைப்பதற்கு அது உதவியாயிருக்கும்; உங்கள் தலையிலிருந்து ஒரு மயிரும் விழாது என்றான். 35 இப்படிச் சொல்லி, அப்பத்தை எடுத்து, எல்லாருக்குமுன்பாகவும் தேவனை ஸ்தோத்திரித்து, அதைப் பிட்டுப் புசிக்கத்தொடங்கினான். 36 அப்பொழுது எல்லாரும் திடமனப்பட்டுப் புசித்தார்கள். 37 கப்பலில் இருநூற்றெழுபத்தாறு பேர் இருந்தோம். 38 திருப்தியாகப் புசித்தபின்பு அவர்கள் கோதுமையைக் கடலிலே எறிந்து, கப்பலை இலகுவாக்கினார்கள். 39 பொழுது விடிந்தபின்பு, இன்னபூமியென்று அறியாதிருந்தார்கள். அப்பொழுது சமமான கரையுள்ள ஒரு துறைமுகம் அவர்களுக்குத் தென்பட்டது; கூடுமானால் அதற்குள் கப்பலையோட்ட யோசனையாயிருந்து, 40 நங்கூரங்களை அறுத்துக் கடலிலே விட்டுவிட்டு, சுக்கான்களுடைய கட்டுகளைத் தளரவிட்டு, பெரும்பாயைக் காற்றுமுகமாய் விரித்து, கரைக்கு நேராய் ஓடி, 41 இருபுறமும் கடல் மோதிய ஒரு இடத்திலே கப்பலைத் தட்டவைத்தார்கள்; முன்னணியம் ஊன்றி அசையாமலிருந்தது, பின்னணியம் அலைகளுடைய பலத்தினால் உடைந்துபோயிற்று. 42 அப்பொழுது காவல்பண்ணப்பட்டவர்களில் ஒருவனும் நீந்தி ஓடிப்போகாதபடிக்கு அவர்களைக் கொன்றுபோடவேண்டுமென்று போர்ச்சேவகர் யோசனையாயிருந்தார்கள். 43 நூற்றுக்கு அதிபதி பவுலைக் காப்பாற்ற மனதாயிருந்து, அவர்களுடைய யோசனையைத் தடுத்து, நீந்தத்தக்கவர்கள் முந்திக் கடலில் விழுந்து கரையேறவும், 44 மற்றவர்களில் சிலர் பலகைகள்மேலும், சிலர் கப்பல் துண்டுகள்மேலும் போய்க் கரையேறவும் கட்டளையிட்டான்; இவ்விதமாய் எல்லாரும் தப்பிக் கரைசேர்ந்தார்கள்.

அப்போஸ்தலர் 28

1 நாங்கள் தப்பிக் கரைசேர்ந்தபின்பு, அந்தத் தீவின்பேர் மெலித்தா என்று அறிந்தோம். 2 அந்நியராகிய அந்தத் தீவார் எங்களுக்குப் பாராட்டின அன்பு கொஞ்சமல்ல. அந்த வேளையிலே பிடித்திருந்த மழைக்காகவும் குளிருக்காகவும் அவர்கள் நெருப்பை மூட்டி, எங்கள் அனைவரையும் சேர்த்துக்கொண்டார்கள். 3 பவுல் சில விறகுகளை வாரி அந்த நெருப்பின்மேல் போடுகையில், ஒரு விரியன்பாம்பு அனலுறைத்துப் புறப்பட்டு அவனுடைய கையைக் கவ்விக்கொண்டது. 4 விஷப்பூச்சி அவன் கையிலே தொங்குகிறதை அந்நியராகிய அந்தத் தீவார் கண்டபோது, இந்த மனுஷன் கொலைபாதகன், இதற்குச் சந்தேகமில்லை; இவன் சமுத்திரத்துக்குத் தப்பிவந்தும், பழியானது இவனைப் பிழைக்கவொட்டவில்லையென்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். 5 அவன் அந்தப் பூச்சியைத் தீயிலே உதறிப்போட்டு, ஒரு தீங்கும் அடையாதிருந்தான். 6 அவனுக்கு வீக்கங்கண்டு, அல்லது அவன் சடிதியாய் விழுந்து சாவானென்று அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள்; நெடுநேரமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தும், ஒரு சேதமும் அவனுக்கு வராததைக் கண்டபோது, வேறு சிந்தையாகி, இவன் தேவனென்று சொல்லிக்கொண்டார்கள். 7 தீவுக்கு முதலாளியாகிய புபிலியு என்னும் பேர்கொண்டவனுடைய நிலங்கள் அந்த இடத்திற்குச் சமீபமாயிருந்தது; அவன் எங்களை ஏற்றுக்கொண்டு, மூன்றுநாள் பட்சமாய் விசாரித்தான். 8 புபிலியுவினுடைய தகப்பன் ஜுரத்தினாலும் இரத்தபேதியினாலும் வருத்தப்பட்டுக் கிடந்தான்; பவுல் அவனிடத்திற்குப் போய் ஜெபம்பண்ணி, அவன்மேல் கைகளை வைத்து, அவனைக் குணமாக்கினான். 9 இது நடந்தபின்பு, தீவிலே இருந்த மற்ற வியாதிக்காரரும் வந்து, குணமாக்கப்பட்டார்கள். 10 அவர்கள் எங்களுக்கு அநேக மரியாதை செய்து, நாங்கள் கப்பல் ஏறிப்போகிறபோது எங்களுக்குத் தேவையானவைகளை ஏற்றினார்கள். 11 மூன்றுமாதம் சென்றபின்பு, அந்தத் தீவிலே மழைகாலத்திற்குத் தங்கியிருந்த மிதுனம் என்னும் அடையாளமுடைய அலெக்சந்திரியாபட்டணத்துக் கப்பலிலே நாங்கள் ஏறிப் புறப்பட்டு, 12 சீரகூசா பட்டணத்தைச் சேர்ந்து, அங்கே மூன்றுநாள் தங்கினோம். 13 அவ்விடம்விட்டுச் சுற்றியோடி, ரேகியுதுறைமுகத்துக்கு வந்து சேர்ந்தோம். மறுநாளில் தென்றற் காற்றெடுக்கையில் புறப்பட்டு, இரண்டாம் நாள் புத்தேயோலிபட்டணத்திற்கு வந்து, 14 அங்கே சகோதரரைக் கண்டோம்; அவர்கள் எங்களை ஏழுநாள் தங்களிடத்தில் இருக்கும்படி வேண்டிக்கொண்டார்கள்; அந்தப்படி நாங்கள் இருந்து, பின்பு ரோமாபுரிக்குப் போனோம். 15 அவ்விடத்திலுள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிற செய்தியைக் கேள்விப்பட்டு, சிலர் அப்பியுபுரம்வரைக்கும், சிலர் மூன்று சத்திரம்வரைக்கும், எங்களுக்கு எதிர்கொண்டுவந்தார்கள்; அவர்களைப் பவுல் கண்டு, தேவனை ஸ்தோத்திரித்துத் தைரியமடைந்தான். 16 நாங்கள் ரோமாபுரியில் சேர்ந்தபோது, நூற்றுக்கு அதிபதி தன் காவலிலிருந்தவர்களைச் சேனாபதியினிடத்தில் ஒப்புக்கொடுத்தான்; அப்பொழுது பவுல் தன்னைக் காத்திருக்கிற சேவகனுடனே தனித்துக் குடியிருக்கும்படி உத்தரவு பெற்றுக்கொண்டான். 17 மூன்றுநாளைக்குப்பின்பு, பவுல் யூதரில் பிரதானமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரரே, நம்முடைய ஜனங்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் முறைமைகளுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன். 18 அவர்கள் என்னை நியாயம் விசாரித்தபோது மரணத்துக்கேதுவான குற்றம் ஒன்றும் என்னிடத்தில் காணாதபடியினால், என்னை விடுதலையாக்க மனதாயிருந்தார்கள். 19 யூதர்கள் அதற்கு எதிர்பேசினபோது, நான் இராயனுக்கு அபயமிடவேண்டியதாயிருந்தது; ஆயினும் என் ஜனத்தார்மேல் யாதொரு குற்றஞ் சாட்டவேண்டுமென்று நான் அப்படிச் செய்யவில்லை. 20 இந்தக் காரியத்தினிமித்தமே உங்களைக் காணவும் உங்களுடனே பேசவும் உங்களை அழைப்பித்தேன். இஸ்ரவேலுடைய நம்பிக்கைக்காகவே இந்தச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறேன் என்றான். 21 அதற்கு அவர்கள்: உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து எங்களுக்குக் காகிதம் வரவுமில்லை, வந்த சகோதரரில் ஒருவனும் உன்பேரில் ஒரு பொல்லாங்கை அறிவித்ததுமில்லை, அதைப்பற்றிப் பேசினதுமில்லை. 22 எங்கும் இந்த மதபேதத்துக்கு விரோதமாய்ப் பேசுகிறதாக நாங்கள் அறிந்திருக்கிறபடியால், இதைக்குறித்து உன்னுடைய அபிப்பிராயம் என்னவென்று கேட்டறிய விரும்புகிறோம் என்றார்கள். 23 அதற்காக அவர்கள் ஒரு நாளைக்குறித்து, அநேகம்பேர் அவன் தங்கியிருந்த வீட்டிற்கு அவனிடத்தில் வந்தார்கள். அவன் காலமே தொடங்கிச் சாயங்காலமட்டும் மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் இருந்து இயேசுவுக்கடுத்த விசேஷங்களை அவர்களுக்குப் போதித்து, தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துச் சாட்சிகொடுத்து விஸ்தரித்துப் பேசினான். 24 அவன் சொன்னவைகளைச் சிலர் விசுவாசித்தார்கள், சிலர் விசுவாசியாதிருந்தார்கள். 25 இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் ஒவ்வாமலிருந்து, புறப்பட்டுப்போகையில், பவுல் அவர்களுக்குச் சொன்ன வாக்கியமாவது: 26 நீங்கள் காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் பாராதிருப்பீர்கள். 27 இவர்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து குணப்படாமலும், நான் இவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படிக்கு, இந்த ஜனத்தின் இருதயம் கொழுத்திருக்கிறது; காதுகளினால் மந்தமாய்க் கேட்டுத் தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்று இந்த ஜனத்தினிடத்தில் போய்ச் சொல்லு என்பதைப் பரிசுத்தஆவி ஏசாயா தீர்க்கதரிசியைக்கொண்டு நம்முடைய பிதாக்களுடனே நன்றாய்ச் சொல்லியிருக்கிறார். 28 ஆதலால் தேவனுடைய இரட்சிப்பு புறஜாதியாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறதென்றும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்களென்றும் உங்களுக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றான். 29 இப்படி அவன் சொன்னபின்பு, யூதர்கள் தங்களுக்குள்ளே மிகவும் தர்க்கம் பண்ணிக்கொண்டு, போய்விட்டார்கள். 30 பின்பு பவுல் தனக்காக வாடகைக்கு வாங்கியிருந்த வீட்டிலே இரண்டு வருஷமுழுதும் தங்கி, தன்னிடத்தில் வந்த யாவரையும் ஏற்றுக்கொண்டு, 31 மிகுந்த தைரியத்துடனே தடையில்லாமல், தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைப்பற்றிய விசேஷங்களை உபதேசித்துக்கொண்டிருந்தான்.

ரோமர் 1

1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல், 2 ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது; 3 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 4 இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், 5 மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார். 6 அவர் சகல ஜாதிகளையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும், 7 தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார். 8 உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். 9 நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார். 10 நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும், 11 உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடேகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே, 12 எவ்விதத்திலாவது நான் உங்களிடத்தில் வருகிறதற்குத் தேவனுடைய சித்தத்தினாலே எனக்கு நல்ல பிரயாணம் சீக்கிரத்தில் கிடைக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். 13 சகோதரரே, புறஜாதிகளான மற்றவர்களுக்குள்ளே நான் பலனை அடைந்தது போல உங்களுக்குள்ளும் சில பலனை அடையும்படிக்கு, உங்களிடத்தில் வர பலமுறை யோசனையாயிருந்தேன், ஆயினும் இதுவரைக்கும் எனக்குத் தடையுண்டாயிற்று என்று நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. 14 கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன். 15 ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன். 16 கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. 17 விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது. 18 சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. 19 தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். 20 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. 21 அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. 22 அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, 23 அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். 24 இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். 25 தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். 26 இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். 27 அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். 28 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். 29 அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், 30 புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய், 31 உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள். 32 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.

ரோமர் 2

1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். 2 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 3 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ? 4 அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? 5 உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே. 6 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். 7 சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். 8 சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். 9 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும். 10 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். 11 தேவனிடத்தில் பட்சபாதமில்லை. 12 எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள். 13 நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள். 14 அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். 15 அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள். 16 என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும். 17 நீ யூதனென்று பெயர்பெற்று, நியாயப்பிரமாணத்தின்மேல் பற்றுதலாயிருந்து, தேவனைக்குறித்து மேன்மைபாராட்டி, 18 நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாய், அவருடைய சித்தத்தை அறிந்து, நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கிறாயே. 19 நீ உன்னைக் குருடருக்கு வழிகாட்டியாகவும், அந்தகாரத்திலுள்ளவர்களுக்கு வெளிச்சமாகவும், 20 பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு உபாத்தியாயனாகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே. 21 இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா? 22 விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா? 23 நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா? 24 எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே. 25 நீ நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்; நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாயிற்றே. 26 மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக் கைக்கொண்டால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா? 27 சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாயிருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாயிருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானல்லவா? 28 ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. 29 உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.

ரோமர் 3

1 இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? 2 அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே. 3 சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ? 4 அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக. 5 நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா? 6 அப்படிச் சொல்லக்கூடாது; சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி? 7 அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்? 8 நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும். 9 ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே. 10 அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; 11 உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; 12 எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. 13 அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; 14 அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது; 15 அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது; 16 நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது; 17 சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; 18 அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே. 19 மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம். 20 இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. 21 இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. 22 அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. 23 எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, 24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; 25 தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், 26 கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார். 27 இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப்பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே. 28 ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம். 29 தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான். 30 விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே. 31 அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.

ரோமர் 4

1 அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்? 2 ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை. 3 வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது. 4 கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும். 5 ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும். 6 அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு: 7 எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். 8 எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான். 9 இந்தப் பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்குமாத்திரம் வருமோ, விருத்தசேதனமில்லாதவனுக்கும் வருமோ? ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறோமே. 10 அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனமுள்ளவனாயிருந்தபோதோ, விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோதோ? விருத்தசேதனமுள்ளவனாயிருந்தபோதல்ல, விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோதே. 11 மேலும், விருத்தசேதனமில்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனமில்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும்பொருட்டாக அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும், 12 விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாய்மாத்திரமல்ல, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனமில்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாயுமிருக்கிறவர்களுக்குத் தகப்பனாயிருக்கும்படிக்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான். 13 அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது. 14 நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால் விசுவாசம் வீணாய்ப்போம், வாக்குத்தத்தமும் அவமாகும். 15 மேலும் நியாயப்பிரமாணம் கோபாக்கினையை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணமில்லாவிட்டால் மீறுதலுமில்லை. 16 ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது. 17 அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான். 18 உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான். 19 அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறுவயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். 20 தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், 21 தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். 22 ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. 23 அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காக மாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. 24 நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். 25 அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.

ரோமர் 5

1 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். 2 அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம். 3 அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, 4 உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். 5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. 6 அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். 7 நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். 8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். 9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. 10 நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. 11 அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம். 12 இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. 13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது. 14 அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன். 15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது. 16 மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது. 17 அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே. 18 ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. 19 அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். 20 மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. 21 ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

ரோமர் 6

1 ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே. 2 பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? 3 கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? 4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். 5 ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். 6 நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். 7 மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. 8 ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூடப் பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம். 9 மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை. 10 அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். 11 அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். 12 ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. 13 நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். 14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது. 15 இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவஞ்செய்யலாமா? கூடாதே. 16 மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா? 17 முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம். 18 பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள். 19 உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள். 20 பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள். 21 இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே. 22 இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். 23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

ரோமர் 7

1 நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே, ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா? 2 அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள். 3 ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம்பண்ணினாலும் விபசாரியல்ல. 4 அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். 5 நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது. 6 இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். 7 ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே. 8 பாவமானது கற்பனையினாலே சமயம் பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே. 9 முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன். 10 இப்படியிருக்க, ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு மரணத்துக்கேதுவாயிருக்கக்கண்டேன். 11 பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது. 12 ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது. 13 இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று. 14 மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன். 15 எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். 16 இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே. 17 ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. 18 அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. 19 ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். 20 அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. 21 ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். 22 உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். 23 ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. 24 நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? 25 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.

ரோமர் 8

1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. 2 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. 3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். 4 மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். 5 அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். 6 மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். 7 எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. 8 மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். 9 தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. 10 மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். 11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். 12 ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல. 13 மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். 14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். 15 அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். 16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார். 17 நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். 18 ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். 19 மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. 20 அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, 21 அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. 22 ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. 23 அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். 24 அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? 25 நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம். 26 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். 27 ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார். 28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; 30 எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். 31 இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? 32 தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? 33 தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். 34 ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே. 35 உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், 36 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? 37 இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. 38 மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், 39 உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.

ரோமர் 9

1 எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது; 2 நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்தஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது. 3 மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே. 4 அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே; 5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென். 6 தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே. 7 அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே. 8 அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள். 9 அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே. 10 இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது, 11 பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு, 12 மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது. 13 அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது. 14 ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே. 15 அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார். 16 ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம். 17 மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது. 18 ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். 19 இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்துநிற்பவன் யார்? என்று என்னுடனே சொல்லுவாய். 20 அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா? 21 மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? 22 தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், 23 தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன? 24 அவர் யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே. 25 அந்தப்படி: எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன். 26 நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது. 27 அல்லாமலும் இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள் என்றும்; 28 அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான். 29 அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம். 30 இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினாலாகும் நீதியே. 31 நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை. 32 என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள். 33 இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.

ரோமர் 10

1 சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது. 2 தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல. 3 எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள். 4 விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார். 5 மோசே நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து: இவைகளைச் செய்கிற மனுஷன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான். 6 விசுவாசத்தினாலாகும் நீதியானது: கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்? 7 அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக என்று சொல்லுகிறதுமன்றி; 8 இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே. 9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். 10 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். 11 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. 12 யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். 13 ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். 14 அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? 15 அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே. 16 ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான். 17 ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். 18 இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே. 19 இஸ்ரவேலர் அதை அறியவில்லையா என்று கேட்கிறேன், அறிந்தார்கள். முதலாவது, மோசே: எனக்கு ஜனங்களல்லாதவர்களைக்கொண்டு நான் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன்; புத்தியீனமுள்ள ஜனங்களாலே உங்களுக்குக் கோபமூட்டுவேன் என்றான். 20 அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று தைரியங்கொண்டு சொல்லுகிறான். 21 இஸ்ரவேலரைக்குறித்தோ: கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாயிருக்கிற ஜனங்களிடத்திற்கு நாள்முழுதும் என் கைகளை நீட்டினேன் என்று அவன் சொல்லியிருக்கிறான்.

ரோமர் 11

1 இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன். 2 தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறியீர்களா? அவன் தேவனை நோக்கி: 3 கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத்தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு விரோதமாய் விண்ணப்பம்பண்ணினபோது, 4 அவனுக்கு உண்டான தேவஉத்தரவு என்ன? பாகாலுக்குமுன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே. 5 அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது. 6 அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே. 7 அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள். 8 கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று. 9 அன்றியும், அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும் கண்ணியும் இடறுதற்கான கல்லும் பதிலுக்குப் பதிலளித்தலுமாகக்கடவது; 10 காணாதபடிக்கு அவர்களுடைய கண்கள் அந்தகாரப்படக்கடவது; அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும் என்று தாவீதும் சொல்லியிருக்கிறான். 11 இப்படியிருக்க, விழுந்துபோகும்படிக்கா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படியல்லவே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது. 12 அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும். 13 புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்க வேண்டுமென்று, 14 என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன். 15 அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானதுபோலிருக்குமல்லவோ? 16 மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும். 17 சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால், 18 நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமைபாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள். 19 நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப்போடப்பட்டதென்று சொல்லுகிறாயே. 20 நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு. 21 சுபாவக்கிளைகளைத் தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு. 22 ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவுகிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய். 23 அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்குத் தேவன் வல்லவராயிருக்கிறாரே. 24 சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா? 25 மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும். 26 இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்; 27 நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது. 28 சுவிசேஷத்தைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக்குறித்து அவர்கள் பிதாக்களினிமித்தம் அன்புகூரப்பட்டவர்களாயிருக்கிறார்கள். 29 தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. 30 ஆதலால், நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதிருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம்பெற்றிருக்கிறதுபோல, 31 அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள். 32 எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். 33 ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! 34 கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? 35 தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? 36 சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

ரோமர் 12

1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. 2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். 3 அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும். 4 ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல, 5 அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம். 6 நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன். 7 ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், 8 புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன். 9 உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள். 10 சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். 11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள். 12 நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள். 13 பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள். 14 உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றிச் சபியாதிருங்கள். 15 சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள். 16 ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள். 17 ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். 18 கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். 19 பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். 20 அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய். 21 நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

ரோமர் 13

1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. 2 ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள். 3 மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும். 4 உனக்கு நன்மை உண்டாகும் பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே. 5 ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும். 6 இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே. 7 ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள். 8 ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். 9 எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது. 10 அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது. 11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. 12 இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம். 13 களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம். 14 துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.

ரோமர் 14

1 விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள். 2 ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளைமாத்திரம் புசிக்கிறான். 3 புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே. 4 மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே. 5 அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன். 6 நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான். 7 நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை. 8 நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம். 9 கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார். 10 இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே. 11 அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. 12 ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான். 13 இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள். 14 ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒருபொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும். 15 போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே. 16 உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள். 17 தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. 18 இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான். 19 ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம். 20 போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும். 21 மாம்சம் புசிக்கிறதும், மதுபானம் பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும். 22 உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்குமுன்பாக உன்மட்டும் இருக்கட்டும். நல்லதென்று நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான். 23 ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.

ரோமர் 15

1 அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். 2 நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன். 3 கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார். 4 தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது. 5 நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு, 6 பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக. 7 ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். 8 மேலும், பிதாக்களுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்; 9 புறஜாதியாரும் இரக்கம் பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது. 10 மேலும், புறஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார். 11 மேலும், புறஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார். 12 மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கைவைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான். 13 பரிசுத்தஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. 14 என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன். 15 அப்படியிருந்தும், சகோதரரே, புறஜாதியாராகிய பலி பரிசுத்தஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு, நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டு, 16 தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரியமாய் எழுதினேன். 17 ஆதலால் நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மைபாராட்ட எனக்கு இடமுண்டு. 18 புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வேறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை. 19 இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன். 20 மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள் காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே, 21 நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன். 22 உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன். 23 இப்பொழுது இந்தத் திசைகளிலே எனக்கு இடமில்லாதபடியினாலும், உங்களிடத்தில் வரும்படி அநேக வருஷமாய் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும், 24 நான் ஸ்பானியா தேசத்திற்குப் பிரயாணம்பண்ணுகையில் உங்களிடத்தில் வந்து, உங்களைக் கண்டுகொள்ளவும், உங்களிடத்தில் சற்றுத் திருப்தியடைந்தபின்பு, அவ்விடத்திற்கு உங்களால் வழிவிட்டனுப்பப்படவும், எனக்குச் சமயங் கிடைக்குமென்று நம்பியிருக்கிறேன். 25 இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன். 26 மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம் செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள்; 27 இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயும் இருக்கிறார்கள். எப்படியென்றால் புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே. 28 இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன். 29 நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன். 30 மேலும் சகோதரரே, தேவசித்தத்தினாலே நான் சந்தோஷத்துடனே உங்களிடத்தில் வந்து உங்களோடு இளைப்பாறும்படியாக, 31 யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படும்படிக்கும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மசகாயம் அவர்களால் அங்கிகரிக்கப்படும்படிக்கும், 32 நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராடவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். 33 சமாதானத்தின் தேவன் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. ஆமென்.

ரோமர் 16

1 கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு, 2 எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும் எனக்குங்கூட ஆதரவாயிருந்தவள். 3 கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன்வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள். 4 அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள். 5 அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவுக்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள். 6 எங்களுக்காக மிகவும் பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள். 7 அப்போஸ்தலருக்குள் பெயர்பெற்றவர்களும் எனக்கு முந்திக் கிறிஸ்துவுக்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னுடனேகூடக் காவலில் கட்டுண்டவர்களுமாயிருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள். 8 கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள். 9 கிறிஸ்துவுக்குள் நம்மோடே உடன்வேலையாளாகிய உர்பானையும், என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள். 10 கிறிஸ்துவுக்குள் உத்தமனாகிய அப்பெல்லேயை வாழ்த்துங்கள். அரிஸ்தொபூலுவின் வீட்டாரை வாழ்த்துங்கள். 11 என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் வீட்டாரில் கர்த்தருக்குட்பட்டவர்களை வாழ்த்துங்கள். 12 கர்த்தருக்குள் பிரயாசப்படுகிற திரிபேனாளையும் திரிபோசாளையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாளை வாழ்த்துங்கள். 13 கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள். 14 அசிங்கிரீத்துவையும், பிலெகோனையும், எர்மாவையும், பத்திரொபாவையும், எர்மேயையும், அவர்களோடிருக்கிற சகோதரரையும் வாழ்த்துங்கள். 15 பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும், அவர்களோடிருக்கிற பரிசுத்தவான்களெல்லாரையும் வாழ்த்துங்கள். 16 ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். 17 அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 18 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள். 19 உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன். 20 சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின்கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென். 21 என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள். 22 இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன். 23 என்னையும் சபையனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்து உக்கிராணக்காரனாகிய ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள். 24 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். 25 ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்கமாக்கப்பட்டதும், சகல ஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறதான, 26 இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின்படியே உங்களை ஸ்திரப்படுத்த வல்லவரும், 27 தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

1 கொரிந்தியர் 1

1 தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும், 2 கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது: 3 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 4 கிறிஸ்துவைப்பற்றிய சாட்சி உங்களுக்குள்ளே ஸ்திரப்படுத்தப்பட்டபடியே, 5 நீங்கள் இயேசுகிறிஸ்துவுக்குள்ளாய் எல்லா உபதேசத்திலும் எல்லா அறிவிலும், மற்றெல்லாவற்றிலும், சம்பூரணமுள்ளவர்களாக்கப்பட்டிருக்கிறபடியால், 6 அவர் மூலமாய் உங்களுக்கு அளிக்கப்பட்ட தேவகிருபைக்காக, நான் உங்களைக்குறித்து எப்பொழுதும் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். 7 அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள். 8 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார். 9 தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர். 10 சகோதரரே, நீங்களெல்லாரும் ஒரே காரியத்தைப் பேசவும், பிரிவினைகளில்லாமல் ஏகமனதும் ஏகயோசனையும் உள்ளவர்களாய்ச் சீர்பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 11 ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது. 12 உங்களில் சிலர்: நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும், நான் கேபாவைச் சேர்ந்தவனென்றும், நான் கிறிஸ்துவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால், நான் இப்படிச் சொல்லுகிறேன். 13 கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்? 14 என் நாமத்தினாலே ஞானஸ்நானங் கொடுத்தேனென்று ஒருவனும் சொல்லாதபடிக்கு, 15 நான் கிறிஸ்புவுக்கும் காயுவுக்குமேயன்றி, உங்களில் வேறொருவனுக்கும் ஞானஸ்நானங் கொடுக்கவில்லை; இதற்காகத் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். 16 ஸ்தேவானுடைய வீட்டாருக்கும் நான் ஞானஸ்நானங் கொடுத்ததுண்டு. இதுவுமல்லாமல் இன்னும் யாருக்காவது நான் ஞானஸ்நானங் கொடுத்தேனோ இல்லையோ அறியேன். 17 ஞானஸ்நானத்தைக் கொடுக்கும்படி கிறிஸ்து என்னை அனுப்பவில்லை; சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவே அனுப்பினார்; கிறிஸ்துவின் சிலுவை வீணாய்ப்போகாதபடிக்கு, சாதுரிய ஞானமில்லாமல் பிரசங்கிக்கவே அனுப்பினார். 18 சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. 19 அந்தப்படி ஞானிகளுடைய ஞானத்தை நான் அழித்து, புத்திசாலிகளுடைய புத்தியை அவமாக்குவேன் என்று எழுதியிருக்கிறது. 20 ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தைத் தேவன் பைத்தியமாக்கவில்லையா? 21 எப்படியெனில், தேவஞானத்துக்கேற்றபடி உலகமானது சுயஞானத்தினாலே தேவனை அறியாதிருக்கையில், பைத்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்கத் தேவனுக்குப் பிரியமாயிற்று. 22 யூதர்கள் அடையாளத்தைக் கேட்கிறார்கள், கிரேக்கர் ஞானத்தைத் தேடுகிறார்கள்; 23 நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்; அவர் யூதருக்கு இடறலாயும் கிரேக்கருக்குப் பைத்தியமாயும் இருக்கிறார். 24 ஆகிலும் யூதரானாலும் கிரேக்கரானாலும் எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார். 25 இந்தப்படி, தேவனுடைய பைத்தியம் என்னப்படுவது மனுஷருடைய ஞானத்திலும் அதிக ஞானமாயிருக்கிறது; தேவனுடைய பலவீனம் என்னப்படுவது மனுஷருடைய பலத்திலும் அதிக பலமாயிருக்கிறது. 26 எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள்; மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை. 27 ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார். 28 உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார். 29 மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். 30 அந்தப்படி, நீங்கள் அவராலே கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டிருக்கிறீர்கள். எழுதியிருக்கிறபடி மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டத்தக்கதாக, 31 அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.

1 கொரிந்தியர் 2

1 சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்தபோது, தேவனைப்பற்றிய சாட்சியைச் சிறந்த வசனிப்போடாவது ஞானத்தோடாவது அறிவிக்கிறவனாக வரவில்லை. 2 இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன். 3 அல்லாமலும் நான் பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும் உங்களிடத்தில் இருந்தேன். 4 உங்கள் விசுவாசம் மனுஷருடைய ஞானத்திலல்ல, தேவனுடைய பெலத்தில் நிற்கும்படிக்கு, 5 என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது. 6 அப்படியிருந்தும், தேறினவர்களுக்குள்ளே ஞானத்தைப் பேசுகிறோம்; இப்பிரபஞ்சத்தின் ஞானத்தையல்ல, அழிந்துபோகிறவர்களாகிய இப்பிரபஞ்சத்தின் பிரபுக்களுடைய ஞானத்தையுமல்ல, 7 உலகத்தோற்றத்திற்குமுன்னே தேவன் நம்முடைய மகிமைக்காக ஏற்படுத்தினதும், மறைக்கப்பட்டதுமாயிருந்த இரகசியமான தேவஞானத்தையே பேசுகிறோம். 8 அதை இப்பிரபஞ்சத்துப் பிரபுக்களில் ஒருவனும் அறியவில்லை; அறிந்தார்களானால், மகிமையின் கர்த்தரை அவர்கள் சிலுவையில் அறையமாட்டார்களே. 9 எழுதியிருக்கிறபடி: தேவன் தம்மில் அன்புகூருகிறவர்களுக்கு ஆயத்தம்பண்ணினவைகளைக் கண் காணவுமில்லை, காது கேட்கவுமில்லை, அவைகள் மனுஷனுடைய இருதயத்தில் தோன்றவுமில்லை; 10 நமக்கோ தேவன் அவைகளைத் தமது ஆவியினாலே வெளிப்படுத்தினார்; அந்த ஆவியானவர் எல்லாவற்றையும், தேவனுடைய ஆழங்களையும், ஆராய்ந்திருக்கிறார். 11 மனுஷனிலுள்ள ஆவியேயன்றி மனுஷரில் எவன் மனுஷனுக்குரியவைகளை அறிவான்? அப்படிப்போல, தேவனுடைய ஆவியேயன்றி, ஒருவனும் தேவனுக்குரியவைகளை அறியமாட்டான். 12 நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்குத் தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். 13 அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்தஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக் காண்பிக்கிறோம். 14 ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். 15 ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். 16 கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.

1 கொரிந்தியர் 3

1 மேலும், சகோதரரே, நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்களென்றும், கிறிஸ்துவுக்குள் குழந்தைகளென்றும் எண்ணிப் பேசவேண்டியதாயிற்று. 2 நீங்கள் பெலனில்லாதவர்களானதால், உங்களுக்குப் போஜனங்கொடாமல், பாலைக் குடிக்கக்கொடுத்தேன்; இன்னமும் நீங்கள் மாம்சத்துக்குரியவர்களாயிருக்கிறபடியால், இப்பொழுதும் உங்களுக்குப் பெலனில்லை. 3 பொறாமையும் வாக்குவாதமும் பேதகங்களும் உங்களுக்குள் இருக்கிறபடியால், நீங்கள் மாம்சத்திற்குரியவர்களாயிருந்து மனுஷமார்க்கமாய் நடக்கிறீர்களல்லவா? 4 ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா? 5 பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர்தானே. 6 நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். 7 அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும். 8 மேலும் நடுகிறவனும் நீர்ப்பாய்ச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் வேலைக்குத் தக்கதாய்க் கூலியைப் பெறுவான். 9 நாங்கள் தேவனுக்கு உடன்வேலையாட்களாயிருக்கிறோம்; நீங்கள் தேவனுடைய பண்ணையும், தேவனுடைய மாளிகையுமாயிருக்கிறீர்கள். 10 எனக்கு அளிக்கப்பட்ட தேவகிருபையின்படியே புத்தியுள்ள சிற்பாசாரியைப்போல அஸ்திபாரம்போட்டேன். வேறொருவன் அதின்மேல் கட்டுகிறான். அவனவன் தான் அதின்மேல் இன்னவிதமாய்க் கட்டுகிறானென்று பார்க்கக்கடவன். 11 போடப்பட்டிருக்கிற அஸ்திபாரமாகிய இயேசுகிறிஸ்துவை அல்லாமல் வேறே அஸ்திபாரத்தைப் போட ஒருவனாலும் கூடாது. 12 ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மேல் பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கல், மரம், புல், வைக்கோல் ஆகிய இவைகளைக் கட்டினால், 13 அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும். 14 அதின்மேல் ஒருவன் கட்டினது நிலைத்தால், அவன் கூலியைப் பெறுவான். 15 ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும். 16 நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா? 17 ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனைத் தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம். 18 ஒருவனும் தன்னைத்தானே வஞ்சியாதிருப்பானாக; இவ்வுலகத்திலே உங்களில் ஒருவன் தன்னை ஞானியென்று எண்ணினால் அவன் ஞானியாகும்படிக்குப் பைத்தியக்காரனாகக்கடவன். 19 இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கிறது. அப்படியே, ஞானிகளை அவர்களுடைய தந்திரத்திலே பிடிக்கிறாரென்றும், 20 ஞானிகளுடைய சிந்தனைகள் வீணாயிருக்கிறதென்று கர்த்தர் அறிந்திருக்கிறாரென்றும் எழுதியிருக்கிறது. 21 இப்படியிருக்க, ஒருவனும் மனுஷரைக்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பானாக; எல்லாம் உங்களுடையதே; 22 பவுலாகிலும், அப்பொல்லோவாகிலும், கேபாவாகிலும், உலகமாகிலும், ஜீவனாகிலும் மரணமாகிலும், நிகழ்காரியங்களாகிலும், வருங்காரியங்களாகிலும், எல்லாம் உங்களுடையது; 23 நீங்கள் கிறிஸ்துவினுடையவர்கள்; கிறிஸ்து தேவனுடையவர்.

1 கொரிந்தியர் 4

1 இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கடவன். 2 மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம். 3 ஆயினும் நான் உங்களாலேயாவது மனுஷருடைய நியாயநாளின் விசாரணையினாலேயாவது தீர்ப்பைப் பெறுவது எனக்கு மிகவும் அற்ப காரியமாயிருக்கிறது; நானும் என்னைக்குறித்துத் தீர்ப்புச்சொல்லுகிறதில்லை. 4 என்னிடத்தில் நான் யாதொரு குற்றத்தையும் அறியேன்; ஆகிலும் அதினாலே நான் நீதிமானாகிறதில்லை; என்னை நியாயம் விசாரிக்கிறவர் கர்த்தரே. 5 ஆனதால், கர்த்தர் வருமளவும் நீங்கள் காலத்துக்குமுன்னே யாதொன்றைக்குறித்தும் தீர்ப்புச்சொல்லாதிருங்கள்; இருளில் மறைந்திருக்கிறவைகளை அவர் வெளியரங்கமாக்கி, இருதயங்களின் யோசனைகளையும் வெளிப்படுத்துவார்; அப்பொழுது அவனவனுக்குரிய புகழ்ச்சி தேவனால் உண்டாகும். 6 சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன். 7 அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்? 8 இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாயிருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே; நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உங்களுடனேகூட நாங்களும் ஆளுவோமே. 9 எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்கள்போலக் கடைசியானவர்களாய்க் காணப்படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம். 10 நாங்கள் கிறிஸ்துவினிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவான்கள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர். 11 இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும், தாகமுள்ளவர்களும், நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடமில்லாதவர்களுமாயிருக்கிறோம். 12 எங்கள் கைகளினாலே வேலைசெய்து, பாடுபடுகிறோம்; வையப்பட்டு, ஆசீர்வதிக்கிறோம்; துன்பப்பட்டு, சகிக்கிறோம். 13 தூஷிக்கப்பட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவுமானோம். 14 உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 15 கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன். 16 ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 17 இதினிமித்தமாக, எனக்குப் பிரியமும், கர்த்தருக்குள் உண்மையுமுள்ள என் குமாரனாகிய தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பினேன்; நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்துவருகிறபிரகாரம் கிறிஸ்துவுக்குள்ளான என் நடக்கைகளை அவன் உங்களுக்கு ஞாபகப்படுத்துவான். 18 நான் உங்களிடத்திற்கு வருகிறதில்லை என்கிறதாகச் சிலர் இறுமாப்படைந்திருக்கிறார்கள். 19 ஆகிலும் கர்த்தருக்குச் சித்தமானால் நான் சீக்கிரமாய் உங்களிடத்திற்கு வந்து, இறுமாப்படைந்திருக்கிறவர்களுடைய பேச்சையல்ல, அவர்களுடைய பெலத்தையே அறிந்துகொள்வேன். 20 தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது. 21 உங்களுக்கு என்னவேண்டும்? நான் பிரம்போடு உங்களிடத்தில் வரவேண்டுமோ? அல்லது அன்போடும் சாந்தமுள்ள ஆவியோடும் வரவேண்டுமோ?

1 கொரிந்தியர் 5

1 உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே; ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே. 2 இப்படிப்பட்ட காரியஞ்செய்தவனை நீங்கள் உங்களைவிட்டு நீக்காமலும் துக்கப்படாமலும், இறுமாப்படைந்திருக்கிறீர்கள். 3 நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடேகூட இருக்கிறவனாய், இப்படிச் செய்தவனைக்குறித்து நான் கூட இருக்கிறதுபோல, 4 நீங்களும், என்னுடைய ஆவியும், நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அதிகாரத்தோடே கூடிவந்திருக்கையில், 5 அப்படிப்பட்டவனுடைய ஆவி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாளிலே இரட்சிக்கப்படும்படி, மாம்சத்தின் அழிவுக்காக, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே அவனைச் சாத்தானுக்கு ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று தீர்ப்புச்செய்கிறேன். 6 நீங்கள் மேன்மைபாராட்டுகிறது நல்லதல்ல; கொஞ்சம் புளித்தமா பிசைந்தமா முழுவதையும் புளிப்பாக்குமென்று அறியீர்களா? 7 ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே. 8 ஆதலால் பழைய புளித்தமாவோடே அல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம். 9 விபசாரக்காரரோடே கலந்திருக்கக்கூடாதென்று நிருபத்தில் உங்களுக்கு எழுதினேன். 10 ஆனாலும், இவ்வுலகத்திலுள்ள விபசாரக்காரர், பொருளாசைக்காரர், கொள்ளைக்காரர், விக்கிரகாராதனைக்காரர் இவர்களோடு எவ்வளவும் கலந்திருக்கக்கூடாதென்று நான் எழுதவில்லை; அப்படியானால் நீங்கள் உலகத்தைவிட்டு நீங்கிப்போகவேண்டியதாயிருக்குமே. 11 நான் உங்களுக்கு எழுதினதென்னவென்றால், சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது, கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது. 12 புறம்பே இருக்கிறவர்களைக் குறித்துத் தீர்ப்புச்செய்கிறது என் காரியமா? உள்ளே இருக்கிறவர்களைக் குறித்தல்லவோ நீங்கள் தீர்ப்புச்செய்கிறீர்கள்? 13 புறம்பே இருக்கிறவர்களைக் குறித்துத் தேவனே தீர்ப்புச்செய்வார். ஆகையால் அந்தப் பொல்லாதவனை உங்களைவிட்டுத் தள்ளிப்போடுங்கள்.

1 கொரிந்தியர் 6

1 உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன? 2 பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா? 3 தேவ தூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக்கொள்ளக்கூடாதிருக்கிறது எப்படி? 4 இந்த ஜீவனுக்கேற்ற வழக்குகள் உங்களுக்கு இருந்தால், தீர்ப்புச்செய்கிறதற்கு, சபையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள். 5 உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க விவேகி ஒருவனாகிலும் உங்களுக்குள் இல்லையா? 6 சகோதரனோடே சகோதரன் வழக்காடுகிறான், அவிசுவாசிகளுக்கு முன்பாகவும் அப்படிச் செய்கிறான். 7 நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக்கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை? 8 நீங்களே அநியாயஞ்செய்கிறீர்கள், நஷ்டப்படுத்துகிறீர்கள்; சகோதரருக்கும் அப்படிச் செய்கிறீர்களே. 9 அநியாயக்காரர் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிரகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும், 10 திருடரும், பொருளாசைக்காரரும், வெறியரும், உதாசினரும், கொள்ளைக்காரரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை. 11 உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள். 12 எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன். 13 வயிற்றுக்குப் போஜனமும் போஜனத்துக்கு வயிறும் ஏற்கும்; ஆனாலும் தேவன் இதையும் அதையும் அழியப்பண்ணுவார். சரீரமோ வேசித்தனத்திற்கல்ல, கர்த்தருக்கே உரியது; கர்த்தரும் சரீரத்திற்கு உரியவர். 14 தேவன் கர்த்தரை எழுப்பினாரே, நம்மையும் தமது வல்லமையினாலே எழுப்புவார். 15 உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே. 16 வேசியோடு இசைந்திருக்கிறவன் அவளுடனே ஒரே சரீரமாயிருக்கிறானென்று அறியீர்களா? இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று சொல்லியிருக்கிறதே. 17 அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான். 18 வேசித்தனத்திற்கு விலகியோடுங்கள். மனுஷன் செய்கிற எந்தப் பாவமும் சரீரத்திற்குப் புறம்பாயிருக்கும்; வேசித்தனஞ் செய்கிறவனோ தன் சுயசரீரத்திற்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறான். 19 உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா? 20 கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்களே; ஆகையால் தேவனுக்கு உடையவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும் உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்.

1 கொரிந்தியர் 7

1 நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது. 2 ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும். 3 புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள். 4 மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி. 5 உபவாசத்திற்கும் ஜெபத்திற்கும் தடையிராதபடிக்கு இருவரும் சிலகாலம் பிரிந்திருக்கவேண்டுமென்று சம்மதித்தாலன்றி, ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்; உங்களுக்கு விரதத்துவம் இல்லாமையால் சாத்தான் உங்களைத் தூண்டிவிடாதபடிக்கு, மறுபடியும் கூடி வாழுங்கள். 6 இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், யோசனையாகச் சொல்லுகிறேன். 7 எல்லா மனுஷரும் என்னைப்போலவே இருக்க விரும்புகிறேன். ஆகிலும் அவனவனுக்குத் தேவனால் அருளப்பட்ட அவனவனுக்குரிய வரமுண்டு; அது ஒருவனுக்கு ஒருவிதமாயும், மற்றொருவனுக்கு வேறுவிதமாயும் இருக்கிறது. 8 விவாகமில்லாதவர்களையும், கைம்பெண்களையும்குறித்து நான் சொல்லுகிறது என்னவென்றால், அவர்கள் என்னைப்போல இருந்துவிட்டால் அவர்களுக்கு நலமாயிருக்கும். 9 ஆகிலும் அவர்கள் விரத்தராயிருக்கக்கூடாதிருந்தால் விவாகம்பண்ணக்கடவர்கள்; வேகிறதைப்பார்க்கிலும் விவாகம்பண்ணுகிறது நலம். 10 விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது. 11 பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது. 12 மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன். 13 அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள். 14 என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன. 15 ஆகிலும் அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப்பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும்படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். 16 மனைவியானவளே, நீ உன் புருஷனை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? புருஷனே, நீ உன் மனைவியை இரட்சிப்பாயோ அல்லவோ உனக்கு எப்படித் தெரியும்? 17 தேவன் அவனவனுக்குப் பகிர்ந்ததெப்படியோ, கர்த்தர் அவனவனை அழைத்ததெப்படியோ, அப்படியே அவனவன் நடக்கக்கடவன். எல்லாச் சபைகளிலேயும் இப்படியே திட்டம்பண்ணுகிறேன். 18 ஒருவன் விருத்தசேதனம் பெற்றவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனமில்லாதவனாயிருக்க வகைதேடானாக; ஒருவன் விருத்தசேதனமில்லாதவனாய் அழைக்கப்பட்டிருந்தால், விருத்தசேதனம் பெறாதிருப்பானாக. 19 விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம். 20 அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே நிலைத்திருக்கக்கடவன். 21 அடிமையாய் நீ அழைக்கப்பட்டிருந்தால், கவலைப்படாதே; நீ சுயாதீனனாகக்கூடுமானால் அதை நலமென்று அநுசரித்துக்கொள். 22 கர்த்தருக்குள் அழைக்கப்பட்ட அடிமையானவன் கர்த்தருடைய சுயாதீனனாயிருக்கிறான்; அப்படியே அழைக்கப்பட்ட சுயாதீனன் கிறிஸ்துவினுடைய அடிமையாயிருக்கிறான். 23 நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள். 24 சகோதரரே, அவனவன் தான் அழைக்கப்பட்ட நிலைமையிலே தேவனுக்கு முன்பாக நிலைத்திருக்கக்கடவன். 25 அன்றியும் கன்னிகைகளைக்குறித்து, கர்த்தரால் எனக்குக் கட்டளை இல்லை. ஆகிலும் நான் உண்மையுள்ளவனாயிருக்கிறதற்குக் கர்த்தரால் இரக்கம்பெற்று, என் அபிப்பிராயத்தைத் தெரியப்படுத்துகிறேன். 26 அதென்னவெனில், இப்பொழுது உண்டாயிருக்கிற துன்பத்தினிமித்தம் விவாகமில்லாமலிருக்கிறது மனுஷனுக்கு நலமாயிருக்குமென்று எண்ணுகிறேன். 27 நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால், அவிழ்க்கப்பட வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாயிருந்தால், மனைவியைத் தேடாதே. 28 நீ விவாகம்பண்ணினாலும் பாவமல்ல; கன்னிகை விவாகம்பண்ணினாலும் பாவமல்ல. ஆகிலும் அப்படிப்பட்டவர்கள் சரீரத்திலே உபத்திரவப்படுவார்கள்; அதற்கு நீங்கள் தப்பவேண்டுமென்றிருக்கிறேன். 29 மேலும், சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும், 30 அழுகிறவர்கள் அழாதவர்கள்போலவும், சந்தோஷப்படுகிறவர்கள் சந்தோஷப்படாதவர்கள்போலவும், கொள்ளுகிறவர்கள் கொள்ளாதவர்கள்போலவும், 31 இவ்வுலகத்தை அனுபவிக்கிறவர்கள் அதைத் தகாதவிதமாய் அனுபவியாதவர்கள்போலவும் இருக்கவேண்டும்; இவ்வுலகத்தின் வேஷம் கடந்துபோகிறதே. 32 நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன் கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். 33 விவாகம்பண்ணினவன் தன் மனைவிக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான். 34 அதுபோல, மனைவியானவளுக்கும் கன்னிகைக்கும் வித்தியாசமுண்டு. விவாகமில்லாதவள் சரீரத்திலும் ஆத்துமாவிலும் பரிசுத்தமாயிருக்கும்படி, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள்; விவாகம்பண்ணினவள் தன் புருஷனுக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, உலகத்திற்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறாள். 35 இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன். 36 ஆகிலும் ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் விவாகம்பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன்; அது பாவமல்ல, விவாகம்பண்ணட்டும். 37 ஆயினும் அதற்கு அவசியத்தைக் காணாமல், தன் இருதயத்திலே உறுதியுள்ளவனாயும், சுயசித்தத்தின்படி செய்ய அதிகாரமுள்ளவனாயுமிருந்து, தன் புத்திரியின் கன்னிகைப் பருவத்தைக் காக்கவேண்டுமென்று தன் இருதயத்தில் தீர்மானிக்கிறவன் நன்மைசெய்கிறான். 38 இப்படியிருக்க, அவளை விவாகம்பண்ணிக் கொடுக்கிறவனும் நன்மைசெய்கிறான்; கொடாமலிருக்கிறவனும் அதிக நன்மைசெய்கிறான். 39 மனைவியானவள் தன் புருஷன் உயிரோடிருக்குங் காலமளவும் பிரமாணத்தினால் கட்டப்பட்டிருக்கிறாள்; தன் புருஷன் மரித்தபின்பு தனக்கு இஷ்டமானவனாயும் கர்த்தருக்குட்பட்டவனாயுமிருக்கிற எவனையாகிலும் விவாகம்பண்ணிக்கொள்ள விடுதலையாயிருக்கிறாள். 40 ஆகிலும் என்னுடைய அபிப்பிராயத்தின்படி அவள் அப்படியே இருந்துவிட்டால் பாக்கியவதியாயிருப்பாள். என்னிடத்திலும் தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.

1 கொரிந்தியர் 8

1 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைக்குறித்த விஷயத்தில், நம்மெல்லாருக்கும் அறிவு உண்டென்று நமக்குத் தெரியுமே. அறிவு இறுமாப்பை உண்டாக்கும், அன்போ பக்திவிருத்தியை உண்டாக்கும். 2 ஒருவன் தான் ஏதேனும் ஒன்றை அறிந்தவனென்று எண்ணிக்கொள்வானானால், ஒன்றையும் அறியவேண்டியபிரகாரமாக அவன் இன்னும் அறியவில்லை. 3 தேவனில் அன்புகூருகிறவனெவனோ, அவன் தேவனால் அறியப்பட்டிருக்கிறான். 4 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிக்கிற விஷயத்தைப்பற்றி, உலகத்திலே விக்கிரகமானது ஒன்றுமில்லையென்றும் ஒருவரேயன்றி வேறொரு தேவன் இல்லையென்றும் அறிந்திருக்கிறோம். 5 வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், 6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 7 ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி, விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது. 8 போஜனமானது நம்மைத் தேவனுக்கு உகந்தவர்களாக்கமாட்டாது; என்னத்தினாலெனில், புசிப்பதினால் நமக்கு ஒரு மேன்மையுமில்லை, புசியாதிருப்பதினால் நமக்கு ஒரு குறைவுமில்லை. 9 ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப் பாருங்கள். 10 எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா? 11 பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே. 12 இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள். 13 ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்.

1 கொரிந்தியர் 9

1 நான் அப்போஸ்தலனல்லவா? நான் சுயாதீனனல்லவா? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை நான் தரிசிக்கவில்லையா? கர்த்தருக்குள் நீங்கள் என் கிரியையாயிருக்கிறீர்களல்லவா? 2 நான் மற்றவர்களுக்கு அப்போஸ்தலனாயிராவிட்டாலும், உங்களுக்கல்லவோ அப்போஸ்தலனாயிருக்கிறேன்; கர்த்தருக்குள் நீங்கள் என் அப்போஸ்தல ஊழியத்திற்கு முத்திரையாயிருக்கிறீர்களே. 3 என்னை நியாயம் விசாரிக்கிறவர்களுக்கு நான் சொல்லுகிற மாறுத்தரமாவது: 4 புசிக்கவும் குடிக்கவும் எங்களுக்கு அதிகாரமில்லையா? 5 மற்ற அப்போஸ்தலரும், கர்த்தருடைய சகோதரரும், கேபாவும் செய்கிறதுபோல, மனைவியாகிய ஒரு சகோதரியைக் கூட்டிக்கொண்டு திரிய எங்களுக்கும் அதிகாரமில்லையா? 6 அல்லது, கைத்தொழில் செய்யாதிருக்கிறதற்கு எனக்கும் பர்னபாவுக்கும்மாத்திரந்தானா அதிகாரமில்லை? 7 எவன் தன் சொந்தப்பணத்தைச் செலவழித்து, தண்டிலே சேவகம்பண்ணுவான்? எவன் திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதின் கனியில் புசியாதிருப்பான்? எவன் மந்தையை மேய்த்து, அதின் பாலைச் சாப்பிடாதிருப்பான்? 8 இவைகளை மனுஷர் வழக்கத்தின்படி சொல்லுகிறேனோ? நியாயப்பிரமாணமும் இவைகளைச் சொல்லுகிறதில்லையா? 9 போரடிக்கிற மாட்டை வாய்கட்டாயாக என்று மோசேயின் பிரமாணத்திலே எழுதியிருக்கிறதே. தேவன் மாடுகளுக்காகவே கவலையாயிருக்கிறாரோ? 10 நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால், அது நமக்காகவே எழுதியிருக்கிறது. 11 நாங்கள் உங்களுக்கு ஞானநன்மைகளை விதைத்திருக்க, உங்கள் சரீரநன்மைகளை அறுத்தால் அது பெரிய காரியமா? 12 மற்றவர்கள் உங்களிடத்திலே இந்த அதிகாரத்தைச் செலுத்தினால், அவர்களிலும் நாங்கள் அதிகமாய்ச் செலுத்தலாமல்லவா? அப்படியிருந்தும், கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்கு யாதொரு தடையும் உண்டாகாதபடிக்கு, நாங்கள் இந்த அதிகாரத்தைச் செலுத்தாமல் எல்லாப் பாடும் படுகிறோம். 13 ஆசாரிய ஊழியஞ்செய்கிறவர்கள் தேவாலயத்திற்குரியவைகளில் புசிக்கிறார்களென்றும், பலிபீடத்தை அடுத்துப் பணிவிடை செய்கிறவர்களுக்குப் பலிபீடத்திலுள்ளவைகளில் பங்கு உண்டென்றும் அறியீர்களா? 14 அந்தப்படியே சுவிசேஷத்தை அறிவிக்கிறவர்களுக்குச் சுவிசேஷத்தினாலே பிழைப்பு உண்டாகவேண்டுமென்று கர்த்தரும் கட்டளையிட்டிருக்கிறார். 15 அப்படியிருந்தும், நான் இவைகளில் ஒன்றையும் அநுபவிக்கவில்லை; இப்படி எனக்கு நடக்கவேண்டுமென்று இவைகளை நான் எழுதுகிறதுமில்லை. என் மேன்மைபாராட்டலை ஒருவன் அவத்தமாக்குகிறதைப்பார்க்கிலும் சாகிறது எனக்கு நலமாயிருக்கும். 16 சுவிசேஷத்தை நான் பிரசங்கித்துவந்தும், மேன்மைபாராட்ட எனக்கு இடமில்லை; அது என்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது; சுவிசேஷத்தை நான் பிரசங்கியாதிருந்தால், எனக்கு ஐயோ. 17 நான் உற்சாகமாய் அப்படிச் செய்தால் எனக்குப் பலன் உண்டு; உற்சாகமில்லாதவனாய்ச் செய்தாலும், உக்கிராண உத்தியோகம் எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிறதே. 18 ஆதலால் எனக்குப் பலன் என்ன? நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கையில் அதைப்பற்றி எனக்கு உண்டாயிருக்கிற அதிகாரத்தை முற்றிலும் செலுத்தாமல், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைச் செலவில்லாமல் ஸ்தாபிப்பதே எனக்குப் பலன். 19 நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். 20 யூதரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப் போலவுமானேன். 21 நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு நியாயப்பிரமாணம் இல்லாதவனைப் போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன். 22 பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். 23 சுவிசேஷத்தில் நான் உடன்பங்காளியாகும்படிக்கு, அதினிமித்தமே இப்படிச் செய்கிறேன். 24 பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். 25 பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். 26 ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். 27 மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.

1 கொரிந்தியர் 10

1 இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறியவேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்துவந்தார்கள். 2 எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள். 3 எல்லாரும் ஒரே ஞானபோஜனத்தைப் புசித்தார்கள். 4 எல்லாரும் ஒரே ஞானபானத்தைக் குடித்தார்கள். எப்படியெனில், அவர்களோடேகூடச் சென்ற ஞானக்கன்மலையின் தண்ணீரைக் குடித்தார்கள்; அந்தக் கன்மலை கிறிஸ்துவே. 5 அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை; ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். 6 அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது. 7 ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள் என்று எழுதியிருக்கிறபடி, அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள். 8 அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக. 9 அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக. 10 அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள். 11 இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. 12 இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன். 13 மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார். 14 ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள். 15 உங்களைப் புத்திமான்களென்று எண்ணிப் பேசுகிறேன்; நான் சொல்லுகிறதை நீங்களே நிதானித்துப்பாருங்கள். 16 நாம் ஆசீர்வதிக்கிற ஆசீர்வாதத்தின் பாத்திரம் கிறிஸ்துவினுடைய இரத்தத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? நாம் பிட்கிற அப்பம் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் ஐக்கியமாயிருக்கிறதல்லவா? 17 அந்த ஒரே அப்பத்தில் நாமெல்லாரும் பங்குபெறுகிறபடியால், அநேகரான நாம் ஒரே அப்பமும் ஒரே சரீரமுமாயிருக்கிறோம். 18 மாம்சத்தின்படியான இஸ்ரவேலரைப் பாருங்கள்; பலிகளைப் புசிக்கிறவர்கள் பலிபீடத்தோடே ஐக்கியமாயிருக்கிறார்களல்லவா? 19 இப்படியிருக்க, விக்கிரகம் ஒரு பொருளென்றும், விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டது ஒரு பொருளென்றும் நான் சொல்லுகிறேனோ? 20 அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்களென்று சொல்லுகிறேன்; நீங்கள் பேய்களோடே ஐக்கியமாயிருக்க எனக்கு மனதில்லை. 21 நீங்கள் கர்த்தருடைய பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே; நீங்கள் கர்த்தருடைய போஜனபந்திக்கும் பேய்களுடைய போஜனபந்திக்கும் பங்குள்ளவர்களாயிருக்கக்கூடாதே. 22 நாம் கர்த்தருக்கு எரிச்சலை மூட்டலாமா? அவரிலும் நாம் பலவான்களா? 23 எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது. 24 ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன். 25 கடையிலே விற்கப்படுகிற எதையும் வாங்கிப் புசியுங்கள்; மனச்சாட்சியினிமித்தம் நீங்கள் ஒன்றையும் விசாரிக்கவேண்டியதில்லை. 26 பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. 27 அன்றியும் அவிசுவாசிகளில் ஒருவன் உங்களை விருந்துக்கு அழைக்கும்போது, போக உங்களுக்கு மனதிருந்தால், மனச்சாட்சியினிமித்தம் ஒன்றையும் விசாரியாமல், உங்கள் முன் வைக்கப்படுகிற எதையும் புசியுங்கள். 28 ஆயினும் இது விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டதென்று ஒருவன் உங்களுக்குச் சொன்னால், அப்படி அறிவித்தவனிமித்தமும் மனச்சாட்சியினிமித்தமும் புசியாதிருங்கள்; பூமியும் அதின் நிறைவும் கர்த்தருடையது. 29 உன்னுடைய மனச்சாட்சியைக் குறித்து நான் இப்படிச் சொல்லாமல், மற்றொருவனுடைய மனச்சாட்சியைக் குறித்தே சொல்லுகிறேன். என் சுயாதீனம் மற்றொருவனுடைய மனச்சாட்சியினாலே குற்றமாய் எண்ணப்படவேண்டுவதென்ன? 30 மேலும் நான் அதை ஸ்தோத்திரிப்புடனே அநுபவித்தால், ஸ்தோத்திரித்து அநுபவிக்கிற பொருளைக்குறித்து நான் தூஷிக்கப்படுவானேன்? 31 ஆகையால் நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள். 32 நான் என் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், அநேகருடைய பிரயோஜனத்தைத் தேடி, அவர்கள் இரட்சிக்கப்படும்படிக்கு, எவ்விதத்திலும் எல்லாருக்கும் பிரியமாய் நடக்கிறதுபோல; 33 நீங்களும் யூதருக்கும், கிரேக்கருக்கும், தேவனுடைய சபைக்கும் இடறலற்றவர்களாயிருங்கள்.

1 கொரிந்தியர் 11

1 நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறதுபோல, நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள். 2 சகோதரரே, நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைத்துக்கொண்டு, நான் உங்களுக்கு ஒப்புவித்தபடி நீங்கள் கட்டளைகளைக் கைக்கொண்டு வருகிறதினிமித்தம் உங்களைப் புகழுகிறேன். 3 ஒவ்வொரு புருஷனுக்கும் கிறிஸ்து தலையாயிருக்கிறாரென்றும், ஸ்திரீக்குப் புருஷன் தலையாயிருக்கிறானென்றும், கிறிஸ்துவுக்குத் தேவன் தலையாயிருக்கிறாரென்றும், நீங்கள் அறியவேண்டுமென்று விரும்புகிறேன். 4 ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொண்டிருக்கிற எந்தப் புருஷனும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறான். 5 ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறபோதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத் தலை சிரைக்கப்பட்டதுபோலிருக்குமே. 6 ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்; தலைமயிர் கத்தரிக்கப்படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக்கொண்டிருக்கக்கடவள். 7 புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ளவேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள். 8 புருஷன் ஸ்திரீயிலிருந்து தோன்றினவனல்ல, ஸ்திரீயே புருஷனிலிருந்து தோன்றினவள். 9 புருஷன் ஸ்திரீக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவனல்ல, ஸ்திரீயே புருஷனுக்காகச் சிருஷ்டிக்கப்பட்டவள். 10 ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின்மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும். 11 ஆகிலும் கர்த்தருக்குள் ஸ்திரீயில்லாமல் புருஷனுமில்லை, புருஷனில்லாமல் ஸ்திரீயுமில்லை. 12 ஸ்திரீயானவள் புருஷனிலிருந்து தோன்றுகிறதுபோல, புருஷனும் ஸ்திரீயினால் தோன்றுகிறான்; சகலமும் தேவனால் உண்டாயிருக்கிறது. 13 ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம்பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக்கொள்ளுங்கள். 14 புருஷன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவனுக்கு கனவீனமாயிருக்கிறதென்றும், 15 ஸ்திரீ தன் மயிரை நீளமாய் வளர்க்கிறது அவளுக்கு மகிமையாயிருக்கிறதென்றும் சுபாவமே உங்களுக்குப் போதிக்கிறதில்லையா? தலைமயிர் அவளுக்கு முக்காடாகக் கொடுக்கப்பட்டிருக்கிறதே. 16 ஆகிலும் ஒருவன் வாக்குவாதஞ்செய்ய மனதாயிருந்தால், எங்களுக்கும், தேவனுடைய சபைகளுக்கும், அப்படிப்பட்ட வழக்கமில்லையென்று அறியக்கடவன். 17 உங்களைப் புகழாமல் இதைக்குறித்து உங்களுக்குக் கட்டளைகொடுக்கிறேன்; நீங்கள் கூடிவருதல் நன்மைக்கேதுவாயிராமல், தீமைக்கேதுவாயிருக்கிறதே. 18 முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன்; அதில் சிலவற்றை நம்புகிறேன். 19 உங்களில் உத்தமர்கள் இன்னாரென்று வெளியாகும்படிக்கு மார்க்கபேதங்களும் உங்களுக்குள்ளே உண்டாயிருக்கவேண்டியதே. 20 நீங்கள் ஓரிடத்தில் கூடிவரும்போது, அவனவன் தன்தன் சொந்த போஜனத்தை முந்திச் சாப்பிடுகிறான்; ஒருவன் பசியாயிருக்கிறான், ஒருவன் வெறியாயிருக்கிறான். 21 இப்படிச் செய்கிறது கர்த்தருடைய இராப்போஜனம்பண்ணுதலல்லவே. 22 புசிக்கிறதற்கும் குடிக்கிறதற்கும் உங்களுக்கு வீடுகள் இல்லையா? தேவனுடைய சபையை அசட்டைபண்ணி, இல்லாதவர்களை வெட்கப்படுத்துகிறீர்களா? உங்களுக்கு நான் என்னசொல்லுவேன்? இதைக்குறித்து உங்களைப் புகழ்வேனோ? புகழேன். 23 நான் உங்களுக்கு ஒப்புவித்ததைக் கர்த்தரிடத்தில் பெற்றுக்கொண்டேன்; என்னவெனில், கர்த்தராகிய இயேசு தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து, 24 ஸ்தோத்திரம்பண்ணி, அதைப் பிட்டு: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது உங்களுக்காகப் பிட்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது; என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். 25 போஜனம்பண்ணினபின்பு, அவர் அந்தப்படியே பாத்திரத்தையும் எடுத்து: இந்தப் பாத்திரம் என் இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது; நீங்கள் இதைப் பானம்பண்ணும்போதெல்லாம் என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார். 26 ஆகையால் நீங்கள் இந்த அப்பத்தைப் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணும்போதெல்லாம் கர்த்தர் வருமளவும் அவருடைய மரணத்தைத் தெரிவிக்கிறீர்கள். 27 இப்படியிருக்க, எவன் அபாத்திரமாய்க் கர்த்தருடைய அப்பத்தைப் புசித்து, அவருடைய பாத்திரத்தில் பானம்பண்ணுகிறானோ, அவன் கர்த்தருடைய சரீரத்தையும் இரத்தத்தையும் குறித்துக் குற்றமுள்ளவனாயிருப்பான். 28 எந்த மனுஷனும் தன்னைத்தானே சோதித்தறிந்து, இந்த அப்பத்தில் புசித்து, இந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணக்கடவன். 29 என்னத்தினாலெனில், அபாத்திரமாய்ப் போஜனபானம்பண்ணுகிறவன், கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானித்து அறியாததினால், தனக்கு ஆக்கினைத்தீர்ப்பு வரும்படி போஜனபானம்பண்ணுகிறான். 30 இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள். 31 நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். 32 நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம். 33 ஆகையால், என் சகோதரரே, நீங்கள் போஜனம்பண்ணக் கூடிவரும்போது, ஒருவருக்காக ஒருவர் காத்திருங்கள். 34 நீங்கள் ஆக்கினைக்கேதுவாகக் கூடிவராதபடிக்கு, ஒருவனுக்குப் பசியிருந்தால் வீட்டிலே சாப்பிடக்கடவன். மற்றக் காரியங்களை நான் வரும்போது திட்டம்பண்ணுவேன்.

1 கொரிந்தியர் 12

1 அன்றியும், சகோதரரே, ஆவிக்குரிய வரங்களைக்குறித்து நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. 2 நீங்கள் அஞ்ஞானிகளாயிருந்தபோது ஏவப்பட்டபடியே, ஊமையான விக்கிரகங்களிடத்தில் மனதைச் செலுத்தினீர்களென்று உங்களுக்குத் தெரியுமே. 3 ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 4 வரங்களில் வித்தியாசங்கள் உண்டு, ஆவியானவர் ஒருவரே. 5 ஊழியங்களிலேயும் வித்தியாசங்கள் உண்டு, கர்த்தர் ஒருவரே. 6 கிரியைகளிலேயும் வித்தியாசங்கள் உண்டு, எல்லாருக்குள்ளும் எல்லாவற்றையும் நடப்பிக்கிற தேவன் ஒருவரே. 7 ஆவியினுடைய அநுக்கிரகம் அவனவனுடைய பிரயோஜனத்திற்கென்று அளிக்கப்பட்டிருக்கிறது. 8 எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், 9 வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், 10 வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது. 11 இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார். 12 எப்படியெனில், சரீரம் ஒன்று, அதற்கு அவயவங்கள் அநேகம்; ஒரே சரீரத்தின் அவயவங்களெல்லாம் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றாகவேயிருக்கிறது; அந்தப்பிரகாரமாகக் கிறிஸ்துவும் இருக்கிறார். 13 நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம். 14 சரீரமும் ஒரே அவயவமாயிராமல் அநேக அவயவங்களாயிருக்கிறது. 15 காலானது நான் கையாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ? 16 காதானது நான் கண்ணாயிராதபடியினாலே, நான் சரீரத்தின் அவயவமல்லவென்றால், அதினாலே அது சரீரத்தின் அவயவமாயிராதோ? 17 சரீரம் முழுவதும் கண்ணானால், செவி எங்கே? அது முழுவதும் செவியானால், மோப்பம் எங்கே? 18 தேவன் தமது சித்தத்தின்படி, அவயவங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார். 19 அவையெல்லாம் ஒரே அவயவமாயிருந்தால், சரீரம் எங்கே? 20 அவயவங்கள் அநேகமாயிருந்தும், சரீரம் ஒன்றே. 21 கண்ணானது கையைப்பார்த்து: நீ எனக்கு வேண்டுவதில்லையென்றும்; தலையானது கால்களை நோக்கி: நீங்கள் எனக்கு வேண்டுவதில்லையென்றும் சொல்லக்கூடாது. 22 சரீர அவயவங்களில் பலவீனமுள்ளவைகளாய்க் காணப்படுகிறவைகளே மிகவும் வேண்டியவைகளாயிருக்கிறது. 23 மேலும், சரீர அவயவங்களில் கனவீனமாய்க் காணப்படுகிறவைகளுக்கே அதிக கனத்தைக் கொடுக்கிறோம்; நம்மில் இலட்சணமில்லாதவைகளே அதிக அலங்காரம் பெறும்; 24 நம்மில் இலட்சணமுள்ளவைகளுக்கு அலங்கரிப்பு வேண்டியதில்லை. 25 சரீரத்திலே பிரிவினையுண்டாயிராமல், அவயவங்கள் ஒன்றைக்குறித்து ஒன்று கவலையாயிருக்கும்படிக்கு, தேவன் கனத்தில் குறைவுள்ளதற்கு அதிக கனத்தைக் கொடுத்து, இப்படிச் சரீரத்தை அமைத்திருக்கிறார். 26 ஆதலால் ஒரு அவயவம் பாடுபட்டால் எல்லா அவயவங்களும் கூடப் பாடுபடும்; ஒரு அவயவம் மகிமைப்பட்டால் எல்லா அவயவங்களும் கூடச் சந்தோஷப்படும். 27 நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள். 28 தேவனானவர் சபையிலே முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது தீர்க்கதரிசிகளையும், மூன்றாவது போதகர்களையும், பின்பு அற்புதங்களையும், பின்பு குணமாக்கும் வரங்களையும், ஊழியங்களையும், ஆளுகைகளையும், பலவித பாஷைகளையும் ஏற்படுத்தினார். 29 எல்லாரும் அப்போஸ்தலர்களா? எல்லாரும் தீர்க்கதரிசிகளா? எல்லாரும் போதகர்களா? எல்லாரும் அற்புதங்களைச் செய்கிறவர்களா? 30 எல்லாரும் குணமாக்கும் வரங்களுடையவர்களா? எல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசுகிறார்களா? எல்லாரும் வியாக்கியானம் பண்ணுகிறார்களா? 31 இப்படியிருக்க, முக்கியமான வரங்களை நாடுங்கள்; இன்னும் அதிக மேன்மையான வழியையும் உங்களுக்குக் காண்பிக்கிறேன்.

1 கொரிந்தியர் 13

1 நான் மனுஷர் பாஷைகளையும் தூதர் பாஷைகளையும் பேசினாலும், அன்பு எனக்கிராவிட்டால், சத்தமிடுகிற வெண்கலம்போலவும், ஓசையிடுகிற கைத்தாளம்போலவும் இருப்பேன். 2 நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாகச் சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. 3 எனக்கு உண்டான யாவற்றையும் நான் அன்னதானம்பண்ணினாலும், என் சரீரத்தைச் சுட்டெரிக்கப்படுவதற்குக் கொடுத்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் எனக்குப் பிரயோஜனம் ஒன்றுமில்லை. 4 அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளது; அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, 5 அயோக்கியமானதைச் செய்யாது, தற்பொழிவை நாடாது, சினமடையாது, தீங்கு நினையாது, 6 அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படும். 7 சகலத்தையும் தாங்கும், சகலத்தையும் விசுவாசிக்கும், சகலத்தையும் நம்பும், சகலத்தையும் சகிக்கும். 8 அன்பு ஒருக்காலும் ஒழியாது. தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம், அந்நிய பாஷைகளானாலும் ஓய்ந்துபோம், அறிவானாலும் ஒழிந்துபோம். 9 நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது. 10 நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம். 11 நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன். 12 இப்பொழுது கண்ணாடியிலே நிழலாட்டமாய்ப் பார்க்கிறோம், அப்பொழுது முகமுகமாய்ப் பார்ப்போம்; இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்ளுவேன். 13 இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.

1 கொரிந்தியர் 14

1 அன்பை நாடுங்கள்; ஞானவரங்களையும் விரும்புங்கள்; விசேஷமாய்த் தீர்க்கதரிசன வரத்தை விரும்புங்கள். 2 ஏனெனில், அந்நியபாஷையில் பேசுகிறவன், ஆவியினாலே இரகசியங்களைப் பேசினாலும், அவன் பேசுகிறதை ஒருவனும் அறியாதிருக்கிறபடியினாலே, அவன் மனுஷரிடத்தில் பேசாமல், தேவனிடத்தில் பேசுகிறான். 3 தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவனோ மனுஷருக்குப் பக்திவிருத்தியும், புத்தியும், ஆறுதலும் உண்டாகத்தக்கதாகப் பேசுகிறான். 4 அந்நியபாஷையில் பேசுகிறவன் தனக்கே பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான்; தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவனோ சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகப் பேசுகிறான். 5 நீங்களெல்லாரும் அந்நியபாஷைகளைப் பேசும்படி விரும்புகிறேன்; ஆகிலும், அந்நியபாஷைகளில் பேசுகிறவன் சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகும்படிக்கு அர்த்தத்தையும் சொல்லாவிட்டால், தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவன் அவனிலும் மேன்மையுள்ளவன்; ஆதலால் நீங்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களாக வேண்டுமென்று அதிகமாய் விரும்புகிறேன். 6 மேலும், சகோதரரே, நான் உங்களிடத்தில் வந்து உங்களுக்கு இரகசியங்களை வெளிப்படுத்துவதற்காவது, அறிவுண்டாக்குவதற்காவது, தீர்க்கதரிசனத்தை அறிவிக்கிறதற்காவது, போதகத்தைப் போதிக்கிறதற்காவது ஏதுவானதைச் சொல்லாமல், அந்நியபாஷைகளில் பேசினால் என்னாலே உங்களுக்குப் பிரயோஜனம் என்ன? 7 அப்படியே புல்லாங்குழல், சுரமண்டலம் முதலாகிய சத்தமிடுகிற உயிரில்லாத வாத்தியங்கள் தொனிகளில் வித்தியாசம் காட்டாவிட்டால், குழலாலே ஊதப்படுகிறதும், சுரமண்டலத்தாலே வாசிக்கப்படுகிறதும் இன்னதென்று எப்படித் தெரியும்? 8 அந்தப்படி எக்காளமும் விளங்காத சத்தமிட்டால் எவன் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணுவான்? 9 அதுபோல, நீங்களும் தெளிவான பேச்சை நாவினால் வசனியாவிட்டால் பேசப்பட்டது இன்னதென்று எப்படித்தெரியும்? ஆகாயத்தில் பேசுகிறவர்களாயிருப்பீர்களே. 10 உலகத்திலே எத்தனையோவிதமான பாஷைகள் உண்டாயிருக்கிறது, அவைகளில் ஒன்றும் அர்த்தமில்லாததல்ல. 11 ஆயினும், பாஷையின் கருத்தை நான் அறியாமலிருந்தால், பேசுகிறவனுக்கு அந்நியனாயிருப்பேன், பேசுகிறவனும் எனக்கு அந்நியனாயிருப்பான். 12 நீங்களும் ஆவிக்குரிய வரங்களை நாடுகிறவர்களானபடியால், சபைக்குப் பக்திவிருத்தி உண்டாகத்தக்கதாக அவைகளில் தேறும்படி நாடுங்கள்; 13 அந்தப்படி அந்நியபாஷையில் பேசுகிறவன் அதின் அர்த்தத்தையும் சொல்லத்தக்கதாக விண்ணப்பம்பண்ணக்கடவன். 14 என்னத்தினாலெனில், நான் அந்நியபாஷையிலே விண்ணப்பம்பண்ணினால், என் ஆவி விண்ணப்பம்பண்ணுமேயன்றி, என் கருத்து பயனற்றதாயிருக்கும். 15 இப்படியிருக்க, செய்யவேண்டுவதென்ன? நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்; நான் ஆவியோடும் பாடுவேன், கருத்தோடும் பாடுவேன். 16 இல்லாவிட்டால், நீ ஆவியோடு ஸ்தோத்திரம்பண்ணும்போது, கல்லாதவன் உன் ஸ்தோத்திரத்திற்கு ஆமென் என்று எப்படிச் சொல்லுவான்? நீ பேசுகிறது இன்னதென்று அவன் அறியானே. 17 நீ நன்றாய் ஸ்தோத்திரம்பண்ணுகிறாய், ஆகிலும் மற்றவன் பக்திவிருத்தியடையமாட்டானே. 18 உங்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பாஷைகளைப் பேசுகிறேன், இதற்காக என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். 19 அப்படியிருந்தும், நான் சபையிலே அந்நியபாஷையில் பதினாயிரம் வார்த்தைகளைப் பேசுகிறதிலும், மற்றவர்களை உணர்த்தும்படி என் கருத்தோடே ஐந்து வார்த்தைகளைப் பேசுகிறதே எனக்கு அதிக விருப்பமாயிருக்கும். 20 சகோதரரே, நீங்கள் புத்தியிலே குழந்தைகளாயிராதேயுங்கள்; துர்க்குணத்திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர்களாயுமிருங்கள். 21 மறுபாஷைக்காரராலும், மறுஉதடுகளாலும் இந்த ஜனங்களிடத்தில் பேசுவேன்; ஆகிலும் அவர்கள் எனக்குச் செவிகொடுப்பதில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார் என்று வேதத்தில் எழுதியிருக்கிறதே. 22 அப்படியிருக்க, அந்நியபாஷைகள் விசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது; தீர்க்கதரிசனமோ அவிசுவாசிகளுக்கு அடையாளமாயிராமல், விசுவாசிகளுக்கு அடையாளமாயிருக்கிறது. 23 ஆகையால், சபையாரெல்லாரும் ஏகமாய்க் கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது, கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது உள்ளே பிரவேசித்தால், அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா? 24 எல்லாரும் தீர்க்கதரிசனஞ் சொல்லுகையில், அவிசுவாசியொருவன், அல்லது கல்லாதவனொருவன், உள்ளே பிரவேசித்தால், அவன் எல்லாராலும் உணர்த்துவிக்கப்பட்டும், எல்லாராலும் நிதானிக்கப்பட்டும் இருப்பான். 25 அவனுடைய இருதயத்தின் அந்தரங்கங்களும் வெளியரங்கமாகும்; அவன் முகங்குப்புற விழுந்து, தேவனைப்பணிந்துகொண்டு, தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று அறிக்கையிடுவான். 26 நீங்கள் கூடிவந்திருக்கிறபோது, உங்களில் ஒருவன் சங்கீதம் பாடுகிறான், ஒருவன் போதகம்பண்ணுகிறான், ஒருவன் அந்நியபாஷையைப் பேசுகிறான், ஒருவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான், ஒருவன் வியாக்கியானம் பண்ணுகிறான். சகோதரரே, இது என்ன? சகலமும் பக்திவிருத்திக்கேதுவாகச் செய்யப்படக்கடவது. 27 யாராவது அந்நியபாஷையிலே பேசுகிறதுண்டானால், அது இரண்டுபேர்மட்டில், அல்லது மிஞ்சினால் மூன்றுபேர்மட்டில் அடங்கவும், அவர்கள் ஒவ்வொருவராய்ப் பேசவும், ஒருவன் அர்த்தத்தைச் சொல்லவும் வேண்டும். 28 அர்த்தஞ் சொல்லுகிறவனில்லாவிட்டால், சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும் தெரியப் பேசக்கடவன். 29 தீர்க்கதரிசிகள் இரண்டுபேராவது மூன்றுபேராவது பேசலாம், மற்றவர்கள் நிதானிக்கக்கடவர்கள். 30 அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் பேசாமலிருக்கக்கடவன். 31 எல்லாரும் கற்கிறதற்கும் எல்லாரும் தேறுகிறதற்கும், நீங்கள் அனைவரும் ஒவ்வொருவராகத் தீர்க்கதரிசனஞ்சொல்லலாம். 32 தீர்க்கதரிசிகளுடைய ஆவிகள் தீர்க்கதரிசிகளுக்கு அடங்கியிருக்கிறதே. 33 தேவன் கலகத்திற்குத் தேவனாயிராமல், சமாதானத்திற்குத் தேவனாயிருக்கிறார்; பரிசுத்தவான்களுடைய சபைகளெல்லாவற்றிலேயும் அப்படியே இருக்கிறது. 34 சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது. 35 அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ள விரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே. 36 தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது? 37 ஒருவன் தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன். 38 ஒருவன் அறியாதவனாயிருந்தால், அவன் அறியாதவனாயிருக்கட்டும். 39 இப்படியிருக்க, சகோதரரே, தீர்க்கதரிசனஞ்சொல்ல நாடுங்கள், அந்நிய பாஷைகளைப் பேசுகிறதற்கும் தடைபண்ணாதிருங்கள். 40 சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.

1 கொரிந்தியர் 15

1 அன்றியும், சகோதரரே, நான் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தை மறுபடியும் உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்; நீங்களும் அதை ஏற்றுக்கொண்டு, அதிலே நிலைத்திருக்கிறீர்கள். 2 நான் உங்களுக்குப் பிரசங்கித்தபிரகாரமாய், நீங்கள் அதைக் கைக்கொண்டிருந்தால், அதினாலே நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள்; மற்றப்படி உங்கள் விசுவாசம் விருதாவாயிருக்குமே. 3 நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து, 4 அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து, 5 கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார். 6 அதன்பின்பு அவர் ஐந்நூறுபேருக்கு அதிகமான சகோதரருக்கும் ஒரேவேளையில் தரிசனமானார்; அவர்களில் அநேகர் இந்நாள்வரைக்கும் இருக்கிறார்கள், சிலர் மாத்திரம் நித்திரையடைந்தார்கள். 7 பின்பு யாக்கோபுக்கும், அதன்பின்பு அப்போஸ்தலரெல்லாருக்கும் தரிசனமானார். 8 எல்லாருக்கும் பின்பு, அகாலப்பிறவிபோன்ற எனக்கும் தரிசனமானார். 9 நான் அப்போஸ்தலரெல்லாரிலும் சிறியவனாயிருக்கிறேன்; தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தினதினாலே, நான் அப்போஸ்தலனென்று பேர்பெறுவதற்கும் பாத்திரன் அல்ல. 10 ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன்; ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது. 11 ஆகையால் நானாகிலும் அவர்களாகிலும் இப்படியே பிரசங்கித்துவருகிறோம், நீங்களும் இப்படியே விசுவாசித்திருக்கிறீர்கள். 12 கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின் உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில் சிலர் எப்படிச் சொல்லலாம்? 13 மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே. 14 கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால், எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா. 15 மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், தேவன் எழுப்பாத கிறிஸ்துவை அவர் எழுப்பினாரென்று நாங்கள் தேவனைக்குறித்துச் சாட்சிசொன்னதினாலே, தேவனுக்காகப் பொய்ச்சாட்சி சொல்லுகிறவர்களாகவும் காணப்படுவோமே. 16 மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லை. 17 கிறிஸ்து எழுந்திராவிட்டால், உங்கள் விசுவாசம் வீணாயிருக்கும்; நீங்கள் இன்னும் உங்கள் பாவங்களில் இருப்பீர்கள். 18 கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே. 19 இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப்பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம். 20 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். 21 மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. 22 ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 23 அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 24 அதன்பின்பு முடிவு உண்டாகும்; அப்பொழுது அவர் சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும் பரிகரித்து, தேவனும் பிதாவுமாயிருக்கிறவருக்கு ராஜ்யத்தை ஒப்புக்கொடுப்பார். 25 எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டியது. 26 பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம். 27 சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும்போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. 28 சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார். 29 மேலும் மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுகிறவர்கள் என்ன செய்வார்கள்? மரித்தவர்களுக்காக ஏன் ஞானஸ்நானம் பெறுகிறார்கள்? 30 நாங்களும் ஏன் எந்நேரமும் நாசமோசத்திற்கு ஏதுவாயிருக்கிறோம்? 31 நான் அநுதினமும் சாகிறேன்; அதை நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினால் உங்களைக்குறித்து, நான் பாராட்டுகிற மேன்மையைக்கொண்டு சத்தியமாய்ச் சொல்லுகிறேன். 32 நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர் வழக்கமாய்ச் சொல்லுகிறேன்; அப்படிப் போராடினதினாலே எனக்குப் பிரயோஜனமென்ன? மரித்தோர் உயிர்த்தெழாவிட்டால், புசிப்போம் குடிப்போம், நாளைக்குச் சாவோம் என்று சொல்லலாமே? 33 மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும். 34 நீங்கள் பாவஞ்செய்யாமல் நீதிக்கேற்க விழித்துக்கொண்டு, தெளிந்தவர்களாயிருங்கள்; சிலர் தேவனைப்பற்றி அறிவில்லாதிருக்கிறார்களே; உங்களுக்கு வெட்கமுண்டாக இதைச் சொல்லுகிறேன். 35 ஆகிலும், மரித்தோர் எப்படி எழுந்திருப்பார்கள், எப்படிப்பட்ட சரீரத்தோடே வருவார்களென்று ஒருவன் சொல்வானாகில், 36 புத்தியீனனே, நீ விதைக்கிற விதை செத்தாலொழிய உயிர்க்கமாட்டாதே. 37 நீ விதைக்கிறபோது, இனி உண்டாகும் மேனியை விதையாமல், கோதுமை, அல்லது மற்றொரு தானியத்தினுடைய வெறும் விதையையே விதைக்கிறாய். 38 அதற்குத் தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அததற்கேற்ற மேனியையே கொடுக்கிறார். 39 எல்லா மாம்சமும் ஒரேவிதமான மாம்சமல்ல; மனுஷருடைய மாம்சம் வேறே, மிருகங்களுடைய மாம்சம் வேறே, மச்சங்களுடைய மாம்சம் வேறே, பறவைகளுடைய மாம்சம் வேறே. 40 வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய மகிமையும் வேறே; 41 சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே; மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது. 42 மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்; 43 கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். 44 ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்; ஜென்ம சரீரமுமுண்டு, ஆவிக்குரிய சரீரமுமுண்டு. 45 அந்தப்படியே முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான் என்றெழுதியிருக்கிறது; பிந்தின ஆதாம் உயிர்ப்பிக்கிற ஆவியானார். 46 ஆகிலும் ஆவிக்குரிய சரீரம் முந்தினதல்ல, ஜென்மசரீரமே முந்தினது; ஆவிக்குரிய சரீரம் பிந்தினது. 47 முந்தின மனுஷன் பூமியிலிருந்துண்டான மண்ணானவன்; இரண்டாம் மனுஷன் வானத்திலிருந்து வந்த கர்த்தர். 48 மண்ணானவன் எப்படிப்பட்டவனோ மண்ணானவர்களும் அப்படிப்பட்டவர்களே; வானத்துக்குரியவர் எப்படிப்பட்டவரோ, வானத்துக்குரியவர்களும் அப்படிப்பட்டவர்களே. 49 மேலும் மண்ணானவனுடைய சாயலை நாம் அணிந்திருக்கிறதுபோல, வானவருடைய சாயலையும் அணிந்துகொள்வோம். 50 சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், மாம்சமும் இரத்தமும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்கமாட்டாது; அழிவுள்ளது அழியாமையைச் சுதந்தரிப்பதுமில்லை. 51 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம். 52 எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். 53 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும். 54 அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும். 55 மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? 56 மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். 57 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 58 ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.

1 கொரிந்தியர் 16

1 பரிசுத்தவான்களுக்காகச் சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக்குறித்து நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே நீங்களும் செய்யுங்கள். 2 நான் வந்திருக்கும்போது பணஞ் சேர்க்குதல் இராதபடிக்கு, உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன். 3 நான் வரும்போது உங்கள் உபகாரத்தை எருசலேமுக்குக் கொண்டுபோகும்படிக்கு, நீங்கள் தகுதியுள்ளவர்களாகக் குறிக்கிறவர்கள் எவர்களோ, அவர்களிடத்தில் நிருபங்களைக் கொடுத்து, அவர்களை அனுப்புவேன். 4 நானும் போகத்தக்கதானால், அவர்கள் என்னுடனேகூட வரலாம். 5 நான் மக்கெதோனியா நாட்டின் வழியாய்ப் போகிறபடியால், மக்கெதோனியா நாட்டைக் கடந்தபின்பு உங்களிடத்திற்கு வருவேன். 6 நான் எங்கே போனாலும் நீங்கள் என்னை வழிவிட்டனுப்பும்படிக்கு, நான் உங்களிடத்தில் சிலகாலம் தங்கவேண்டியதாயிருக்கும்; ஒருவேளை மழைகாலம் முடியும்வரையும் இருப்பேன். 7 இப்பொழுது வழிப்பிரயாணத்திலே உங்களைக் கண்டுகொள்ளமாட்டேன்; கர்த்தர் உத்தரவுகொடுத்தால் உங்களிடத்தில் வந்து சிலகாலம் தங்கியிருக்கலாமென்று நம்புகிறேன். 8 ஆகிலும் பெந்தெகொஸ்தே பண்டிகைவரைக்கும் எபேசு பட்டணத்தில் இருப்பேன். 9 ஏனெனில் இங்கே பெரிதும் அநுகூலமுமான கதவு எனக்குத் திறக்கப்பட்டிருக்கிறது; விரோதஞ்செய்கிறவர்களும் அநேகர் இருக்கிறார்கள். 10 தீமோத்தேயு உங்களிடத்திற்கு வந்தானேயாகில், அவன் உங்களிடத்தில் பயமில்லாமலிருக்கப் பாருங்கள்; என்னைப்போல அவனும் கர்த்தருடைய கிரியையை நடப்பிக்கிறானே. 11 ஆனபடியினால் ஒருவனும் அவனை அற்பமாய் எண்ணாதிருப்பானாக; சகோதரரோடேகூட அவன் வருகிறதற்கு நான் காத்திருக்கிறபடியால், என்னிடத்தில் வரும்படிக்கு அவனைச் சமாதானத்தோடே வழிவிட்டனுப்புங்கள். 12 சகோதரனாகிய அப்பொல்லோவைக் குறித்தோவெனில், சகோதரரோடேகூட உங்களிடத்தில் வரும்படிக்கு அவனை மிகவும் வேண்டிக்கொண்டேன்; ஆகிலும் இப்பொழுது வர அவனுக்கு மனதில்லை; அவனுக்கு நற்சமயம் உண்டாயிருக்கும்போது வருவான். 13 விழித்திருங்கள், விசுவாசத்திலே நிலைத்திருங்கள், புருஷராயிருங்கள், திடன்கொள்ளுங்கள். 14 உங்கள் காரியங்களெல்லாம் அன்போடே செய்யப்படக்கடவது. 15 சகோதரரே, ஸ்தேவானுடைய வீட்டார் அகாயாநாட்டிலே முதற்பலனானவர்களென்றும், பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்குத் தங்களை ஒப்புவித்திருக்கிறார்களென்றும் அறிந்திருக்கிறீர்களே. 16 இப்படிப்பட்டவர்களுக்கும், உடன்வேலையாட்களாய்ப் பிரயாசப்படுகிற மற்ற யாவருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்திருக்கவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 17 ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு என்பவர்கள் வந்ததற்காகச் சந்தோஷமாயிருக்கிறேன், நீங்கள் எனக்குச் செய்யவேண்டியதாயிருந்ததை அவர்கள் செய்திருக்கிறார்கள். 18 அவர்கள் என் ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் ஆறுதல் செய்தார்கள்; இப்படிப்பட்டவர்களை அங்கிகாரம்பண்ணுங்கள். 19 ஆசியா நாட்டிலுள்ள சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் தங்கள் வீட்டிலே கூடுகிற சபையோடுங்கூடக் கர்த்தருக்குள் உங்களை மிகவும் வாழ்த்துகிறார்கள். 20 சகோதரரெல்லாரும் உங்களை வாழ்த்துகிறார்கள். ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள். 21 பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன். 22 ஒருவன் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அன்புகூராமற்போனால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன், கர்த்தர் வருகிறார். 23 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. 24 கிறிஸ்து இயேசுவுக்குள்ளான என்னுடைய அன்பு உங்களெல்லாரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

2 கொரிந்தியர் 1

1 தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், கொரிந்துபட்டணத்திலுள்ள தேவனுடைய சபைக்கும், அகாயாநாடெங்குமுள்ள எல்லாப் பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது: 2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 3 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். 4 தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல்செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர். 5 எப்படியெனில், கிறிஸ்துவினுடைய பாடுகள் எங்களிடத்தில் பெருகுகிறதுபோல, கிறிஸ்துவினாலே எங்களுக்கு ஆறுதலும் பெருகுகிறது. 6 ஆதலால், நாங்கள் உபத்திரவப்பட்டாலும் அது உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் ஆறுதலடைந்தாலும் அதுவும் உங்கள் ஆறுதலுக்கும் இரட்சிப்புக்கும் ஏதுவாகும்; நாங்கள் பாடுபடுகிறதுபோல நீங்களும் பாடுபட்டுச் சகிக்கிறதினாலே அந்த இரட்சிப்பு பலன்செய்கிறது. 7 நீங்கள் எங்களோடேகூடப் பாடுபடுகிறதுபோல, எங்களோடேகூட ஆறுதலும் அடைகிறீர்களென்று நாங்கள் அறிந்து, உங்களைக்குறித்து உறுதியான நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கிறோம். 8 ஆகையால் சகோதரரே, ஆசியாவில் எங்களுக்கு நேரிட்ட உபத்திரவத்தை நீங்கள் அறியாதிருக்க எங்களுக்கு மனதில்லை. என்னவெனில், பிழைப்போம் என்கிற நம்பிக்கை அற்றுப்போகத்தக்கதாக, எங்கள் பலத்திற்கு மிஞ்சின அதிக பாரமான வருத்தம் எங்களுக்கு உண்டாயிற்று. 9 நாங்கள் எங்கள்மேல் நம்பிக்கையாயிராமல், மரித்தோரை எழுப்புகிற தேவன்மேல் நம்பிக்கையாயிருக்கத்தக்கதாக, மரணம் வருமென்று நாங்கள் எங்களுக்குள்ளே நிச்சயித்திருந்தோம். 10 அப்படிப்பட்ட மரணத்தினின்றும் அவர் எங்களைத் தப்புவித்தார், இப்பொழுதும் தப்புவிக்கிறார், இன்னும் தப்புவிப்பார் என்று அவரை நம்பியிருக்கிறோம். 11 அநேகர்மூலமாய் எங்களுக்கு உண்டான தயவுக்காக அநேகரால் எங்கள் நிமித்தம் ஸ்தோத்திரங்கள் செலுத்தப்படும்பொருட்டு, நீங்களும் விண்ணப்பத்தினால் எங்களுக்கு உதவிசெய்யுங்கள். 12 மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது. 13 ஏனென்றால், நீங்கள் வாசித்தும் ஒத்துக்கொண்டுமிருக்கிற காரியங்களையேயன்றி, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுபரியந்தமும் அப்படியே ஒத்துக்கொள்வீர்களென்று நம்பியிருக்கிறேன். 14 கர்த்தராகிய இயேசுவினுடைய நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாயிருக்கிறதை ஒருவாறு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே. 15 நான் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறபடியினால், உங்களுக்கு இரண்டாந்தரமும் பிரயோஜனமுண்டாகும்படி, முதலாவது உங்களிடத்தில் வரவும், 16 பின்பு உங்கள் ஊர்வழியாய் மக்கெதோனியா நாட்டுக்குப் போகவும், மக்கெதோனியாவை விட்டு மறுபடியும் உங்களிடத்திற்கு வரவும், உங்களால் யூதேயாதேசத்துக்கு வழிவிட்டனுப்பப்படவும் யோசனையாயிருந்தேன். 17 இப்படி நான் யோசித்தது வீணாக யோசித்தேனோ? அல்லது ஆம் ஆம் என்கிறதும், அல்ல அல்ல என்கிறதும், என்னிடத்திலே இருக்கத்தக்கதாக, நான் யோசிக்கிறவைகளை மாம்சத்தின்படி யோசிக்கிறேனோ? 18 நாங்கள் உங்களுக்குச் சொன்ன வார்த்தை ஆம் அல்ல என்று இருக்கவில்லை; அதற்கு உண்மையுள்ள தேவனே சாட்சி. 19 என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும், உங்களுக்குள்ளே பிரசங்கிக்கப்பட்ட தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்துவும் ஆம் என்றும் அல்ல என்றும் இராமல், ஆம் என்றே இருக்கிறார். 20 எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே. 21 உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே. 22 அவர் நம்மை முத்திரித்து, நம்முடைய இருதயங்களில் ஆவியென்னும் அச்சாரத்தையும் கொடுத்திருக்கிறார். 23 மேலும் நான் உங்களைத் தப்பவிடும்படிக்கே இதுவரைக்கும் கொரிந்துபட்டணத்திற்கு வராதிருக்கிறேனென்று, என் ஆத்துமாவின்பேரில் தேவனையே சாட்சியாகக் கோருகிறேன். 24 உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளாயிராமல், உங்கள் சந்தோஷத்திற்குச் சகாயராயிருக்கிறோம்; விசுவாசத்தினாலே நிலைநிற்கிறீர்களே.

2 கொரிந்தியர் 2

1 நான் துக்கத்துடனே உங்களிடத்தில் மறுபடியும் வராதபடிக்கு எனக்குள்ளே தீர்மானித்துக்கொண்டேன். 2 நான் உங்களைத் துக்கப்படுத்தினால், என்னாலே துக்கமடைந்தவனேயல்லாமல், எவன் என்னைச் சந்தோஷப்படுத்துவான்? 3 என்னுடைய சந்தோஷம் உங்களெல்லாருக்கும் சந்தோஷமாயிருக்குமென்று, நான் உங்களெல்லாரையும்பற்றி நம்பிக்கையுள்ளவனாயிருந்து, நான் வரும்போது, என்னைச் சந்தோஷப்படுத்தவேண்டியவர்களால் நான் துக்கமடையாதபடிக்கு, அதை உங்களுக்கு எழுதினேன். 4 அன்றியும், நீங்கள் துக்கப்படும்படிக்கு எழுதாமல், உங்கள்மேல் நான் வைத்த அன்பின் மிகுதியை நீங்கள் அறியும்படிக்கே, மிகுந்த வியாகுலமும் மன இடுக்கமும் அடைந்தவனாய் அதிகக் கண்ணீரோடே உங்களுக்கு எழுதினேன். 5 துக்கமுண்டாக்கினவன் எனக்குமாத்திரமல்ல, ஒருவாறு உங்களெல்லாருக்கும் துக்கமுண்டாக்கினான்; நான் உங்கள் எல்லார்மேலும் அதிக பாரஞ்சுமத்தாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். 6 அப்படிப்பட்டவனுக்கு அநேகரால் உண்டான இந்த தண்டனையே போதும். 7 ஆதலால் அவன் அதிக துக்கத்தில் அமிழ்ந்துபோகாதபடிக்கு, நீங்கள் அவனுக்கு மன்னித்து ஆறுதல்செய்யவேண்டும். 8 அந்தப்படி, உங்கள் அன்பை அவனுக்குக் காண்பிக்கும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். 9 நீங்கள் எல்லாவற்றிலேயும் கீழ்ப்படிந்திருக்கிறீர்களோ என்று உங்களைச் சோதித்தறியும்படி இப்படி எழுதினேன். 10 எவனுக்கு நீங்கள் மன்னிக்கிறீர்களோ, அவனுக்கு நானும் மன்னிக்கிறேன்; மேலும் எதை நான் மன்னித்திருக்கிறேனோ, அதை உங்கள்நிமித்தம் கிறிஸ்துவினுடைய சந்நிதானத்திலே மன்னித்திருக்கிறேன். 11 சாத்தானாலே நாம் மோசம்போகாதபடிக்கு அப்படிச் செய்தேன்; அவனுடைய தந்திரங்கள் நமக்குத் தெரியாதவைகள் அல்லவே. 12 மேலும் நான் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி துரோவாபட்டணத்தில் வந்தபோது, கர்த்தராலே எனக்குக் கதவு திறக்கப்பட்டிருக்கையில், 13 நான் என் சகோதரனாகிய தீத்துவைக் காணாததினாலே, என் ஆவிக்கு அமைதலில்லாதிருந்தது. ஆதலால் நான் அவர்களிடத்தில் அனுப்புவித்துக்கொண்டு, மக்கெதோனியா நாட்டுக்குப் புறப்பட்டுப்போனேன். 14 கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 15 இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம். 16 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே மரணத்திற்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம். இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்? 17 அநேகரைப்போல, நாங்கள் தேவவசனத்தைக் கலப்பாய்ப் பேசாமல், துப்புரவாகவும், தேவனால் அருளப்பட்டபிரகாரமாகவும், கிறிஸ்துவுக்குள் தேவசந்நிதியில் பேசுகிறோம்.

2 கொரிந்தியர் 3

1 எங்களை நாங்களே மறுபடியும் மெச்சிக்கொள்ளத் தொடங்குகிறோமோ? அல்லது சிலருக்கு வேண்டியதாயிருக்கிறதுபோல, உங்களுக்கு உபசார நிருபங்களை அனுப்பவும், உங்களிடத்தில் உபசார நிருபங்களைப் பெற்றுக்கொள்ளவும் எங்களுக்கு வேண்டியதோ? 2 எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள்தானே. 3 ஏனெனில் நீங்கள் எங்கள் ஊழியத்தினால் உண்டாகிய கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; அது மையினாலல்ல, ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்; கற்பலகைகளிலல்ல, இருதயங்களாகிய சதையான பலகைகளிலேயும் எழுதப்பட்டிருக்கிறது. 4 நாங்கள் தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவின் மூலமாய் இப்படிப்பட்ட நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம். 5 எங்களால் ஏதாகிலும் ஆகும் என்பதுபோல ஒன்றை யோசிக்கிறதற்கு நாங்கள் எங்களாலே தகுதியானவர்கள் அல்ல; எங்களுடைய தகுதி தேவனால் உண்டாயிருக்கிறது. 6 புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்; அந்த உடன்படிக்கை எழுத்திற்குரியதாயிராமல், ஆவிக்குரியதாயிருக்கிறது; எழுத்து கொல்லுகிறது, ஆவியோ உயிர்ப்பிக்கிறது. 7 எழுத்துக்களினால் எழுதப்பட்டுக் கற்களில் பதிந்திருந்த மரணத்துக்கேதுவான ஊழியத்தைச் செய்த மோசேயினுடைய முகத்திலே மகிமைப்பிரகாசம் உண்டானபடியால், இஸ்ரவேல் புத்திரர் அவன் முகத்தை நோக்கிப் பார்க்கக்கூடாதிருந்தார்களே. 8 ஒழிந்துபோகிற மகிமையையுடைய அந்த ஊழியம் அப்படிப்பட்ட மகிமையுள்ளதாயிருந்தால், ஆவிக்குரிய ஊழியம் எவ்வளவு அதிக மகிமையுள்ளதாயிருக்கும்? 9 ஆக்கினைத்தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம் மகிமையுள்ளதாயிருந்தால், நீதியைக் கொடுக்கும் ஊழியம் அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. 10 இப்படியாக, மகிமைப்பட்டிருந்த அந்த ஊழியம் இந்த ஊழியத்திற்கு உண்டாயிருக்கிற சிறந்த மகிமைக்குமுன்பாக மகிமைப்பட்டதல்ல. 11 அன்றியும் ஒழிந்துபோவதே மகிமையுள்ளதாயிருந்ததானால், நிலைத்திருப்பது அதிக மகிமையுள்ளதாயிருக்குமே. 12 நாங்கள் இப்படிப்பட்ட நம்பிக்கையை உடையவர்களாதலால், மிகவும் தாராளமாய்ப் பேசுகிறோம். 13 மேலும் ஒழிந்துபோவதின் முடிவை இஸ்ரவேல் புத்திரர் நோக்கிப்பாராதபடிக்கு, மோசே தன் முகத்தின்மேல் முக்காடு போட்டுக்கொண்டதுபோல நாங்கள் போடுகிறதில்லை. 14 அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது. 15 மோசேயின் ஆகமங்கள் வாசிக்கப்படும்போது, இந்நாள்வரைக்கும் முக்காடு அவர்கள் இருதயத்தின்மேல் இருக்கிறதே. 16 அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்பும்போது, அந்த முக்காடு எடுபட்டுப்போம். 17 கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. 18 நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுரூபப்படுகிறோம்.

2 கொரிந்தியர் 4

1 இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை. 2 வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப்பண்ணுகிறோம். 3 எங்கள் சுவிசேஷம் மறைபொருளாயிருந்தால், கெட்டுப்போகிறவர்களுக்கே அது மறைபொருளாயிருக்கும். 4 தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான். 5 நாங்கள் எங்களையே பிரசங்கியாமல், கிறிஸ்து இயேசுவைக் கர்த்தரென்றும், எங்களையோ இயேசுவினிமித்தம் உங்கள் ஊழியக்காரரென்றும் பிரசங்கிக்கிறோம். 6 இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுகிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார். 7 இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம். 8 நாங்கள் எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டும் ஒடுங்கிப்போகிறதில்லை; கலக்கமடைந்தும் மனமுறிவடைகிறதில்லை; 9 துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்து போகிறதில்லை. 10 கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம். 11 எப்படியெனில், சாவுக்கினமான எங்கள் மாம்சத்திலே இயேசுவினுடைய ஜீவனும் விளங்கும்படிக்கு உயிரோடிருக்கிற நாங்கள் எப்பொழுதும் இயேசுவினிமித்தம் மரணத்திற்கு ஒப்புக்கொடுக்கப்படுகிறோம். 12 இப்படி மரணமானது எங்களிடத்திலும், ஜீவனானது உங்களிடத்திலும் பெலன்செய்கிறது. 13 விசுவாசித்தேன், ஆகையால் பேசினேன் என்று எழுதியிருக்கிறபடி, நாங்களும் அந்த விசுவாசத்தின் ஆவியை உடையவர்களாயிருந்து, விசுவாசிக்கிறபடியால் பேசுகிறோம். 14 கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக்கொண்டு எழுப்பி, உங்களுடனேகூடத் தமக்குமுன்பாக நிறுத்துவாரென்று அறிந்திருக்கிறோம். 15 தேவனுடைய மகிமை விளங்குவதற்கேதுவாகக் கிருபையானது அநேகருடைய ஸ்தோத்திரத்தினாலே பெருகும்படிக்கு, இவையெல்லாம் உங்கள்நிமித்தம் உண்டாயிருக்கிறது. 16 ஆனபடியினாலே நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது. 17 மேலும் காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு, அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. 18 ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.

2 கொரிந்தியர் 5

1 பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம். 2 ஏனெனில், இந்தக் கூடாரத்திலே நாம் தவித்து, நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்; 3 தரித்துக்கொண்டவர்களானால், நிர்வாணிகளாய்க் காணப்படமாட்டோம். 4 இந்தக் கூடாரத்திலிருக்கிற நாம் பாரஞ்சுமந்து தவிக்கிறோம்; இந்தப் போர்வையைக் களைந்துபோடவேண்டுமென்று விரும்பாமல், மரணமானது ஜீவனாலே விழுங்கப்படுவதற்காகப் போர்வை தரித்தவர்களாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறோம். 5 இதற்கு நம்மை ஆயத்தப்படுத்துகிறவர் தேவனே; ஆவியென்னும் அச்சாரத்தை நமக்குத் தந்தவரும் அவரே. 6 நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். 7 இந்தத் தேகத்தில் குடியிருக்கையில் கர்த்தரிடத்தில் குடியிராதவர்களாயிருக்கிறோமென்று அறிந்தும், எப்பொழுதும் தைரியமாயிருக்கிறோம். 8 நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம். 9 அதினிமித்தமே நாம் சரீரத்தில் குடியிருந்தாலும் குடியிராமற்போனாலும் அவருக்குப் பிரியமானவர்களாயிருக்க நாடுகிறோம். 10 ஏனென்றால், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்படவேண்டும். 11 ஆகையால் கர்த்தருக்குப் பயப்படத்தக்கதென்று அறிந்து, மனுஷருக்குப் புத்திசொல்லுகிறோம்; தேவனுக்கு முன்பாக வெளியரங்கமாயிருக்கிறோம்; உங்கள் மனச்சாட்சிக்கும் வெளியரங்கமாயிருக்கிறோம் என்று நம்புகிறேன். 12 இதனாலே நாங்கள் உங்களுக்கு முன்பாக எங்களை மறுபடியும் மெச்சிக்கொள்ளாமல், இருதயத்திலல்ல, வெளிவேஷத்தில் மேன்மைபாராட்டுகிறவர்களுக்கு எதிரே எங்களைக்குறித்து நீங்கள் மேன்மைபாராட்டும்படிக்கு ஏதுவுண்டாக்குகிறோம். 13 நாங்கள் பைத்தியங்கொண்டவர்களென்றால் தேவனுக்காக அப்படியிருக்கும்; தெளிந்தபுத்தியுள்ளவர்களென்றால் உங்களுக்காக அப்படியிருக்கும். 14 கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; 15 பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம். 16 ஆகையால், இதுமுதற்கொண்டு, நாங்கள் ஒருவனையும் மாம்சத்தின்படி அறியோம்; நாங்கள் கிறிஸ்துவையும் மாம்சத்தின்படி அறிந்திருந்தாலும், இனி ஒருபோதும் அவரை மாம்சத்தின்படி அறியோம். 17 இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின. 18 இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது; அவர் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு நம்மைத் தம்மோடே ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் ஊழியத்தை எங்களுக்கு ஒப்புக்கொடுத்தார். 19 அதென்னவெனில், தேவன் உலகத்தாருடைய பாவங்களை எண்ணாமல், கிறிஸ்துவுக்குள் அவர்களைத் தமக்கு ஒப்புரவாக்கி, ஒப்புரவாக்குதலின் உபதேசத்தை எங்களிடத்தில் ஒப்புவித்தார். 20 ஆனபடியினாலே, தேவனானவர் எங்களைக்கொண்டு புத்திசொல்லுகிறதுபோல, நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து, தேவனோடே ஒப்புரவாகுங்கள் என்று, கிறிஸ்துவினிமித்தம் உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். 21 நாம் அவருக்குள் தேவனுடைய நீதியாகும்படிக்கு, பாவம் அறியாத அவரை நமக்காகப் பாவமாக்கினார்.

2 கொரிந்தியர் 6

1 தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம். 2 அநுக்கிரக காலத்திலே நான் உனக்குச் செவிகொடுத்து, இரட்சணியநாளிலே உனக்கு உதவிசெய்தேன் என்று சொல்லியிருக்கிறாரே; இதோ, இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணியநாள். 3 இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு, நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்தினாலேயும், எங்களைத் தேவஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம். 4 மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும், 5 அடிகளிலும், காவல்களிலும், கலகங்களிலும், பிரயாசங்களிலும், கண்விழிப்புகளிலும், உபவாசங்களிலும், 6 கற்பிலும், அறிவிலும், நீடிய சாந்தத்திலும், தயவிலும், பரிசுத்தஆவியிலும், மாயமற்ற அன்பிலும், 7 சத்தியவசனத்திலும், திவ்விய பலத்திலும்; நீதியாகிய வலதிடதுபக்கத்து ஆயுதங்களைத் தரித்திருக்கிறதிலும், 8 கனத்திலும், கனவீனத்திலும், துர்க்கீர்த்தியிலும், நற்கீர்த்தியிலும்; எத்தரென்னப்பட்டாலும் நிஜஸ்தராகவும், 9 அறியப்படாதவர்களென்னப்பட்டாலும் நன்றாய் அறியப்பட்டவர்களாகவும், சாகிறவர்கள் என்னப்பட்டாலும் உயிரோடிருக்கிறவர்களாகவும், தண்டிக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் கொல்லப்படாதவர்களாகவும், 10 துக்கப்படுகிறவர்கள் என்னப்பட்டாலும் எப்பொழுதும் சந்தோஷப்படுகிறவர்களாகவும், தரித்திரர் என்னப்பட்டாலும் அநேகரை ஐசுவரியவான்களாக்குகிறவர்களாகவும், ஒன்றுமில்லாதவர்களென்னப்பட்டாலும் சகலத்தையுமுடையவர்களாகவும் எங்களை விளங்கப்பண்ணுகிறோம். 11 கொரிந்தியரே, எங்கள் வாய் உங்களோடே பேசத் திறந்திருக்கிறது, எங்கள் இருதயம் பூரித்திருக்கிறது. 12 எங்கள் உள்ளம் உங்களைக்குறித்து நெருக்கமடையவில்லை, உங்கள் உள்ளமே எங்களைக்குறித்து நெருக்கமடைந்திருக்கிறது. 13 ஆதலால் அதற்குப் பதிலீடாக நீங்களும் பூரிப்பாகுங்களென்று, பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, உங்களுக்குச் சொல்லுகிறேன். 14 அந்நிய நுகத்திலே அவிசுவாசிகளுடன் பிணைக்கப்படாதிருப்பீர்களாக; நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? 15 கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? 16 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே. 17 ஆனபடியால், நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். 18 அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.

2 கொரிந்தியர் 7

1 இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம். 2 எங்களுக்கு இடங்கொடுங்கள்; நாங்கள் ஒருவனுக்கும் அநியாயஞ்செய்யவில்லை, ஒருவனையும் கெடுக்கவில்லை, ஒருவனையும் வஞ்சிக்கவில்லை. 3 உங்களைக் குற்றவாளிகளாக்கும் பொருட்டாக இப்படி நான் சொல்லுகிறதில்லை; முன்னே நான் சொல்லியபடி, உங்களுடனேகூடச் சாகவும் கூடப் பிழைக்கவுந்தக்கதாக எங்களிருதயங்களில் நீங்கள் இருக்கிறீர்களே. 4 மிகுந்த தைரியத்தோடே உங்களுடன் பேசுகிறேன்; உங்களைக்குறித்து மிகவும் மேன்மைபாராட்டுகிறேன், ஆறுதலால் நிறைந்திருக்கிறேன், எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன். 5 எப்படியென்றால், நாங்கள் மக்கெதோனியா நாட்டிலே வந்தபோது, எங்கள் சரீரத்திற்கு இளைப்பாறுதல் ஒன்றுமில்லாமல், எப்பக்கத்திலேயும் உபத்திரவப்பட்டோம்; புறம்பே போராட்டங்களும், உள்ளே பயங்களும் இருந்தன. 6 ஆகிலும், சிறுமைப்பட்டவர்களுக்கு ஆறுதல் செய்கிற தேவன் தீத்து வந்ததினாலே எங்களுக்கு ஆறுதல்செய்தார். 7 அவன் வந்ததினாலே மாத்திரமல்ல, உங்கள் வாஞ்சையையும், உங்கள் துக்கிப்பையும், என்னைப்பற்றி உங்களுக்கு உண்டான பக்திவைராக்கியத்தையும் அவன் கண்டு, உங்களால் அடைந்த ஆறுதலைத் தெரியப்படுத்தினதினாலும், நானும் ஆறுதலடைந்து அதிகமாய்ச் சந்தோஷப்பட்டேன். 8 ஆதலால் நான் நிருபத்தினாலே உங்களைத் துக்கப்படுத்தியிருந்தும், அந்த நிருபம் கொஞ்சப்பொழுதாகிலும் உங்களைத் துக்கப்படுத்தினதென்று கண்டு நான் மனஸ்தாபப்பட்டிருந்தும், இப்பொழுது மனஸ்தாபப்படுகிறதில்லை. 9 இப்பொழுது சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் துக்கப்பட்டதற்காக அல்ல, மனந்திரும்புகிறதற்கேதுவாகத் துக்கப்பட்டதற்காகவே சந்தோஷப்படுகிறேன்; நீங்கள் ஒன்றிலும் எங்களால் நஷ்டப்படாதபடிக்கு, தேவனுக்கேற்ற துக்கம் அடைந்தீர்களே. 10 தேவனுக்கேற்ற துக்கம் பின்பு மனஸ்தாபப்படுகிறதற்கு இடமில்லாமல் இரட்சிப்புக்கேதுவான மனந்திரும்புதலை உண்டாக்குகிறது; லௌகிக துக்கமோ மரணத்தை உண்டாக்குகிறது. 11 பாருங்கள், நீங்கள் தேவனுக்கேற்ற துக்கமடைந்ததுண்டே; அது உங்களிடத்தில் எவ்வளவு ஜாக்கிரதையையும், குற்றந்தீர எவ்வளவு நியாயஞ்சொல்லுதலையும், எவ்வளவு வெறுப்பையும், எவ்வளவு பயத்தையும், எவ்வளவு ஆவலையும், எவ்வளவு பக்திவைராக்கியத்தையும், எவ்வளவு கண்டிப்பையும் உண்டாக்கிற்று. இந்தக் காரியத்திலே நீங்கள் எல்லாவிதத்திலும் உங்களைச் சுத்தவான்களென்று விளங்கப்பண்ணினீர்கள். 12 ஆதலால் நான் உங்களுக்கு அப்படி எழுதியிருந்தும், அநியாயஞ்செய்தவனிமித்தமுமல்ல, அநியாயஞ்செய்யப்பட்டவனிமித்தமுமல்ல, தேவனுக்குமுன்பாக உங்களைக்குறித்து எங்களுக்கு உண்டாயிருக்கிற ஜாக்கிரதை உங்களுக்கு வெளிப்படும்பொருட்டே அப்படி எழுதினேன். 13 இதினிமித்தம் நீங்கள் ஆறுதலடைந்ததினாலே நாங்களும் ஆறுதலடைந்தோம்; விசேஷமாகத் தீத்துவினுடைய ஆவி உங்கள் அனைவராலும் ஆறுதலடைந்ததினாலே, அவனுக்கு உண்டான சந்தோஷத்தினால் அதிக சந்தோஷப்பட்டோம். 14 இப்படியிருக்க, உங்களுக்குப் புகழ்ச்சியாய் நான் அவனுடனே சொன்ன யாதொன்றைக்குறித்தும், வெட்கப்படமாட்டேன்; நாங்கள் சகலத்தையும் உங்களுக்குச் சத்தியமாய்ச் சொன்னதுபோல, தீத்துவுடனே நாங்கள் உங்களுக்குப் புகழ்ச்சியாய்ச் சொன்னதும் சத்தியமாக விளங்கிற்றே. 15 மேலும் நீங்களெல்லாரும் கட்டளைக்கு அமைந்து, பயத்தோடும் நடுக்கத்தோடும் தன்னை ஏற்றுக்கொண்டதை அவன் நினைக்கையில், அவனுடைய உள்ளம் உங்களைப்பற்றி அதிக அன்பாயிருக்கிறது. 16 ஆகையால் எல்லாவிதத்திலும் உங்களைக்குறித்து எனக்குத் திடநம்பிக்கை உண்டாயிருக்கிறதென்று சந்தோஷப்படுகிறேன்.

2 கொரிந்தியர் 8

1 அன்றியும் சகோதரரே, மக்கெதோனியா நாட்டுச் சபைகளுக்குத் தேவன் அளித்த கிருபையை உங்களுக்கு அறிவிக்கிறோம். 2 அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள். 3 மேலும் அவர்கள் தங்கள் திராணிக்குத் தக்கதாகவும், தங்கள் திராணிக்கு மிஞ்சியும் கொடுக்க, தாங்களே மனதுள்ளவர்களாயிருந்தார்களென்பதற்கு, நான் சாட்சியாயிருக்கிறேன். 4 தங்கள் உபகாரத்தையும், பரிசுத்தவான்களுக்குச் செய்யப்படும் தர்ம ஊழியத்தின் பங்கையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள். 5 மேலும் நாங்கள் நினைத்தபடிமாத்திரம் கொடாமல், தேவனுடைய சித்தத்தினாலே முன்பு தங்களைத்தாமே கர்த்தருக்கும், பின்பு எங்களுக்கும் ஒப்புக்கொடுத்தார்கள். 6 ஆதலால் தீத்து இந்தத் தர்மகாரியத்தை உங்களிடத்தில் தொடங்கினபடியே, அதை முடிக்கவும் வேண்டுமென்று அவனைக் கேட்டுக்கொண்டோம். 7 அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும். 8 இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய ஜாக்கிரதையைக்கொண்டு, உங்கள் அன்பின் உண்மையைச் சோதிக்கும்பொருட்டே சொல்லுகிறேன். 9 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே. 10 இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மாத்திரமல்ல, செய்யவேண்டுமென்று உற்சாகப்படுகிறதற்கும் ஒரு வருஷமாய் ஆரம்பம்பண்ணின உங்களுக்கு இது தகுதியாயிருக்கும். 11 ஆகையால் அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக. 12 ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும். 13 மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே சொல்லுகிறேன். 14 எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம், 15 சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக. 16 அன்றியும் உங்களுக்காக இப்படிப்பட்ட ஜாக்கிரதை உண்டாயிருக்கும்படி தீத்துவின் இருதயத்தில் அருளின தேவனுக்கு ஸ்தோத்திரம். 17 நாங்கள் கேட்டுக்கொண்டதை அவன் அங்கிகரித்ததுமல்லாமல், அவன் அதிக ஜாக்கிரதையாயிருந்து, தன் மனவிருப்பத்தின்படியே உங்களிடத்திற்கு வரப் புறப்பட்டான். 18 சுவிசேஷ ஊழியத்தில் எல்லாச் சபைகளிலும் புகழ்ச்சிபெற்ற ஒரு சகோதரனை அவனோடேகூட அனுப்பியிருக்கிறோம். 19 அதுமாத்திரமல்ல, கர்த்தருக்கு மகிமையுண்டாகவும், உங்கள் மனவிருப்பம் விளங்கவும், எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் தர்மப்பணத்தைக் கொண்டுபோகையில், எங்களுக்கு வழித்துணையாயிருக்கும்படி, அவன் சபைகளால் தெரிந்து ஏற்படுத்தப்பட்டவனாயும் இருக்கிறான். 20 எங்கள் ஊழியத்தினாலே சேர்க்கப்படும் இந்த மிகுதியான தர்மப்பணத்தைக்குறித்து ஒருவனும் எங்களைக் குற்றப்படுத்தாதபடிக்கு நாங்கள் எச்சரிக்கையாயிருந்து, 21 கர்த்தருக்கு முன்பாகமாத்திரமல்ல, மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம். 22 மேலும், அநேக காரியங்களில் ஜாக்கிரதையுள்ளவனென்று நாங்கள் பலமுறை கண்டறிந்தவனும், இப்பொழுது உங்கள்மேலுள்ள மிகுந்த நம்பிக்கையினாலே அதிக ஜாக்கிரதையுள்ளவனுமாகிய நம்முடைய சகோதரனையும் இவர்களோடே கூட அனுப்பியிருக்கிறோம். 23 தீத்துவைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவன் எனக்குக் கூட்டாளியும், உங்களுக்காக என் உடன்வேலையாளுமாயிருக்கிறானென்றும்; எங்கள் சகோதரரைக்குறித்து ஒருவன் விசாரித்தால், அவர்கள் சபைகளுடைய ஸ்தானாபதிகளும், கிறிஸ்துவுக்கு மகிமையுமாயிருக்கிறார்களென்றும் அறியக்கடவன். 24 ஆதலால் உங்கள் அன்பையும், நாங்கள் உங்களைக்குறித்துச் சொன்ன புகழ்ச்சியையும், சபைகளுக்கு முன்பாக அவர்களுக்குத் திருஷ்டாந்தப்படுத்துங்கள்.

2 கொரிந்தியர் 9

1 பரிசுத்தவான்களுக்குச் செய்யவேண்டிய தர்மசகாயத்தைக்குறித்து, நான் அதிகமாக உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை. 2 உங்கள் மனவிருப்பத்தை அறிந்திருக்கிறேன்; அகாயாவிலுள்ளவர்கள் ஒருவருஷமாக ஆயத்தமாயிருக்கிறார்களென்று, நான் மக்கெதோனியருடனே சொல்லி, உங்களைப் புகழ்ந்தேனே; உங்கள் ஜாக்கிரதை அநேகரை எழுப்பிவிட்டதுமுண்டு. 3 அப்படியிருந்தும், உங்களைக்குறித்து நாங்கள் சொன்ன புகழ்ச்சி இந்தக் காரியத்தில் வீணாய்ப்போகாமல், நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தப்பட்டவர்களாயிருப்பதற்கு, இந்தச் சகோதரரை அனுப்பினேன். 4 மக்கெதோனியர் என்னுடனேகூட வந்து, உங்களை ஆயத்தப்படாதவர்களாகக் கண்டால், இவ்வளவு நிச்சயமாய் உங்களைப் புகழ்ந்ததற்காக, நீங்கள் வெட்கப்படுவீர்களென்று நாங்கள் சொல்லாமல், நாங்களே வெட்கப்படவேண்டியதாயிருக்கும். 5 ஆகையால், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கிற உங்கள் தானதர்மமானது லோபத்தனமாய்க் கொடுக்கப்பட்டதாயிராமல், உதாரத்துவமாய்க் கொடுக்கப்பட்டதாயிருக்கும்படியாக அதை ஆயத்தப்படுத்துகிறதற்குச் சகோதரரை ஏவி, உங்களிடத்தில் முன்னதாக அனுப்புவது எனக்கு அவசியம் என்று காணப்பட்டது. 6 பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். 7 அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார். 8 மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார். 9 வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும் என்று எழுதியிருக்கிறபடியாகும். 10 விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார். 11 தேவனுக்கு எங்களால் ஸ்தோத்திரமுண்டாவதற்கு ஏதுவாயிருக்கும் மிகுந்த உதாரகுணத்திலே நீங்கள் எவ்விதத்திலும் சம்பூரணமுள்ளவர்களாவீர்கள். 12 இந்தத் தர்மசகாயமாகிய பணிவிடை பரிசுத்தவான்களுடைய குறைவுகளை நீக்குகிறதுமல்லாமல், அநேகர் தேவனை ஸ்தோத்திரிப்பதினாலே சம்பூரண பலனுள்ளதாயும் இருக்கும். 13 அவர்கள் இந்தத் தர்மசகாயத்தினாலாகிய நன்மையை அனுபவித்து, நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் கீழ்ப்படிதலோடே அறிக்கையிட்டிருக்கிறதினிமித்தமும், தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் நீங்கள் உதாரத்துவமாய்த் தர்மஞ்செய்கிறதினிமித்தமும், அவர்கள் தேவனை மகிமைப்படுத்தி; 14 உங்களுக்காக வேண்டுதல்செய்து, தேவன் உங்களுக்கு அளித்த மிகவும் விசேஷித்த கிருபையினிமித்தம் உங்கள்மேல் வாஞ்சையாயிருக்கிறார்கள். 15 தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம்.

2 கொரிந்தியர் 10

1 உங்களுக்கு முன்பாக இருக்கும்போது தாழ்மையாயும், தூரத்திலே இருக்கும்போது உங்கள்மேல் கண்டிப்பாயும் இருக்கிற பவுலாகிய நான் கிறிஸ்துவின் சாந்தத்தையும் தயவையும் முன்னிட்டு உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 2 எங்களை மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் என்று எண்ணுகிற சிலரைக்குறித்து நான் கண்டிப்பாயிருக்கவேண்டுமென்று நினைத்திருக்கிற தைரியத்தோடே, உங்கள்முன்பாக இருக்கும்போது, நான் கண்டிப்புள்ளவனாயிராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருக்க உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். 3 நாங்கள் மாம்சத்தில் நடக்கிறவர்களாயிருந்தும், மாம்சத்தின்படி போர்செய்கிறவர்களல்ல. 4 எங்களுடைய போராயுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக்குகிறதற்குத் தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. 5 அவைகளால் நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையையும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். 6 உங்கள் கீழ்ப்படிதல் நிறைவேறும்போது, எல்லாக் கீழ்ப்படியாமைக்குந்தக்க நீதியுள்ள தண்டனையைச் செலுத்த ஆயத்தமாயுமிருக்கிறோம். 7 வெளித்தோற்றத்தின்படி பார்க்கிறீர்களா? ஒருவன் தன்னைக் கிறிஸ்துவுக்குரியவனென்று நம்பினால், தான் கிறிஸ்துவுக்குரியவனாயிருக்கிறதுபோல நாங்களும் கிறிஸ்துவுக்குரியவர்களென்று அவன் தன்னிலேதானே சிந்திக்கக்கடவன். 8 மேலும், உங்களை நிர்மூலமாக்குகிறதற்கல்ல, உங்களை ஊன்றக் கட்டுகிறதற்குக் கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக்குறித்து, நான் இன்னும் சற்றே அதிகமாய் மேன்மைபாராட்டினாலும் நான் வெட்கப்படுவதில்லை. 9 நான் நிருபங்களாலே உங்களைப் பயமுறுத்துகிறவனாய்த் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். 10 அவனுடைய நிருபங்கள் பாரயோசனையும் பலமுமுள்ளவைகள்; சரீரத்தின் தோற்றமோ பலவீனமும், வசனம் அற்பமுமாயிருக்கிறதென்கிறார்களே. 11 அப்படிச் சொல்லுகிறவன், நாங்கள் தூரத்திலிருக்கும்போது எழுதுகிற நிருபங்களால் வசனத்தில் எப்படிப்பட்டவர்களாயிருக்கிறோமோ, அப்படிப்பட்டவர்களாகவே சமீபத்திலிருக்கும்போதும் கிரியையிலும் இருப்போம் என்று சிந்திக்கக்கடவன். 12 ஆகிலும் தங்களைத் தாங்களே மெச்சிக்கொள்ளுகிற சிலருக்கு நாங்கள் எங்களைச் சரியாக்கவும் ஒப்பிடவும் துணியமாட்டோம்; தங்களைக்கொண்டு தங்களை அளந்துகொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக்கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல. 13 நாங்கள் அளவுக்கு மிஞ்சி மேன்மைபாராட்டாமல், உங்களிடம்வரைக்கும் வந்தெட்டத்தக்கதாக, தேவன் எங்களுக்கு அளந்து பகிர்ந்த அளவுப்பிரமாணத்தின்படியே மேன்மைபாராட்டுகிறோம். 14 உங்களிடத்தில் வந்தெட்டாதவர்களாய் நாங்கள் அளவுக்கு மிஞ்சிப்போகிறதில்லை; நாங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து உங்களிடம்வரைக்கும் வந்தோமே. 15 எங்கள் அளவைக் கடந்து மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு மேன்மைபாராட்டமாட்டோம். 16 ஆகிலும் உங்கள் விசுவாசம் விருத்தியாகும்போது, மற்றவர்களுடைய எல்லைகளுக்குள்ளே செய்யப்பட்டவைகளை நாங்கள் செய்ததாக மேன்மைபாராட்டாமல், உங்களுக்கு அப்புறமான இடங்களில் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கத்தக்கதாக, எங்கள் அளவின்படி உங்களால் மிகவும் பெருகி விருத்தியடைவோமென்று நம்பிக்கையாயிருக்கிறோம். 17 மேன்மைபாராட்டுகிறவன் கர்த்தரைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன். 18 தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன்.

2 கொரிந்தியர் 11

1 என் புத்தியீனத்தை நீங்கள் சற்றே சகித்தால் நலமாயிருக்கும்; என்னைச் சகித்துமிருக்கிறீர்களே. 2 நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காகத் தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன். 3 ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன். 4 எப்படியெனில், உங்களிடத்தில் வருகிறவன் நாங்கள் பிரசங்கியாத வேறொரு இயேசுவைப் பிரசங்கித்தானானால், அல்லது நீங்கள் பெற்றிராத வேறொரு ஆவியையும், நீங்கள் ஏற்றுக்கொள்ளாத வேறொரு சுவிசேஷத்தையும் பெற்றீர்களானால், நன்றாய்ச் சகித்திருப்பீர்களே. 5 மகா பிரதான அப்போஸ்தலரிலும், நான் ஒன்றிலும் குறைவுள்ளவனல்லவென்று எண்ணுகிறேன். 6 நான் பேச்சிலே கல்லாதவனாயிருந்தாலும், அறிவிலே கல்லாதவனல்ல; எந்த விஷயத்திலும் எல்லாருக்குமுன்பாகவும் உங்களுக்குள்ளே நாங்கள் வெளிப்பட்டிருக்கிறோமே. 7 நீங்கள் உயர்த்தப்படும்படி நான் என்னைத்தானே தாழ்த்தி, தேவனுடைய சுவிசேஷத்தை இலவசமாய் உங்களுக்குப் பிரசங்கித்ததினாலே குற்றஞ்செய்தேனோ? 8 உங்களுக்கு ஊழியஞ்செய்யும்படிக்கு, மற்றச் சபைகளிடத்தில் சம்பளத்தைப் பெற்று, அவர்களைக் கொள்ளையிட்டேன். 9 நான் உங்களோடிருந்து குறைவுபட்டபோதும், ஒருவரையும் நான் வருத்தப்படுத்தவில்லை; மக்கெதோனியாவிலிருந்து வந்த சகோதரர் என் குறைவை நிறைவாக்கினார்கள்; எவ்விதத்திலேயும் உங்களுக்குப் பாரமாயிராதபடிக்கு ஜாக்கிரதையாயிருந்தேன், இனிமேலும் ஜாக்கிரதையாயிருப்பேன். 10 அகாயாநாட்டின் திசைகளிலே இந்தப் புகழ்ச்சி என்னைவிட்டு நீங்குவதில்லையென்று என்னிலுள்ள கிறிஸ்துவினுடைய சத்தியத்தைக்கொண்டு சொல்லுகிறேன். 11 இப்படிச் சொல்லவேண்டியதென்ன? நான் உங்களைச் சிநேகியாதபடியினாலேயோ? தேவன் அறிவார். 12 மேலும், எங்களை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்களுக்குச் சமயம் கிடையாதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன். 13 அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள். 14 அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. 15 ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும். 16 பின்னும் நான் சொல்லுகிறேன்; ஒருவனும் என்னைப் புத்தியீனனென்று எண்ணவேண்டாம்; அப்படி எண்ணினால், நானும் சற்றே மேன்மைபாராட்டும்படி, என்னைப் புத்தியீனனைப்போலாகிலும் ஏற்றுக்கொள்ளுங்கள். 17 இப்படி நான் சொல்லுகிறது கர்த்தருக்கேற்றபடி சொல்லாமல், மேன்மைபாராட்டும் தைரியத்தினாலே புத்தியீனனைப்போலச் சொல்லுகிறேன். 18 அநேகர் மாம்சத்திற்கேற்றபடி மேன்மைபாராட்டிக்கொள்ளுகையில், நானும் மேன்மைபாராட்டுவேன். 19 நீங்கள் புத்தியுள்ளவர்களாயிருந்து புத்தியில்லாதவர்களைச் சந்தோஷமாய்ச் சகித்திருக்கிறீர்களே. 20 ஒருவன் உங்களைச் சிறையாக்கினாலும், ஒருவன் உங்களைப் பட்சித்தாலும், ஒருவன் உங்களைக் கைவசப்படுத்தினாலும், ஒருவன் தன்னை உயர்த்தினாலும், ஒருவன் உங்களை முகத்தில் அறைந்தாலும் சகித்திருக்கிறீர்களே. 21 நாங்கள் பலவீனரானதுபோல, எங்களுக்கு வந்த கனவீனத்தைக்குறித்துப் பேசுகிறேன்; ஒருவன் எதிலே துணிவுள்ளவனாயிருக்கிறானோ அதிலே நானும் துணிவுள்ளவனாயிருக்கிறேன்; இப்படிப் புத்தியீனமாய்ப் பேசுகிறேன். 22 அவர்கள் எபிரெயரா? நானும் எபிரெயன்; அவர்கள் இஸ்ரவேலரா? நானும் இஸ்ரவேலன்; அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரா? நானும் ஆபிரகாமின் சந்ததியான். 23 அவர்கள் கிறிஸ்துவின் ஊழியக்காரரா? நான் அதிகம்; புத்தியீனமாய்ப் பேசுகிறேன்; நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டவன், அதிகமாய் அடிபட்டவன், அதிகமாய்க் காவல்களில் வைக்கப்பட்டவன், அநேகந்தரம் மரண அவதியில் அகப்பட்டவன். 24 யூதர்களால் ஒன்றுகுறைய நாற்பதடியாக ஐந்துதரம் அடிபட்டேன்; 25 மூன்றுதரம் மிலாறுகளால் அடிபட்டேன், ஒருதரம் கல்லெறியுண்டேன், மூன்றுதரம் கப்பற்சேதத்தில் இருந்தேன், கடலிலே ஒரு இராப்பகல் முழுவதும் போக்கினேன். 26 அநேகந்தரம் பிரயாணம்பண்ணினேன்; ஆறுகளால் வந்த மோசங்களிலும், கள்ளரால் வந்த மோசங்களிலும், என் சுயஜனங்களால் வந்த மோசங்களிலும், அந்நிய ஜனங்களால் வந்த மோசங்களிலும், பட்டணங்களில் உண்டான மோசங்களிலும், வனாந்தரத்தில் உண்டான மோசங்களிலும், சமுத்திரத்தில் உண்டான மோசங்களிலும், கள்ளச்சகோதரரிடத்தில் உண்டான மோசங்களிலும்; 27 பிரயாசத்திலும், வருத்தத்திலும், அநேகமுறை கண்விழிப்புகளிலும், பசியிலும் தாகத்திலும், அநேகமுறை உபவாசங்களிலும், குளிரிலும், நிர்வாணத்திலும் இருந்தேன். 28 இவை முதலானவைகளையல்லாமல், எல்லாச் சபைகளைக்குறித்தும் உண்டாயிருக்கிற கவலை என்னை நாள்தோறும் நெருக்குகிறது. 29 ஒருவன் பலவீனனானால் நானும் பலவீனனாகிறதில்லையோ? ஒருவன் இடறினால் என் மனம் எரியாதிருக்குமோ? 30 நான் மேன்மைபாராட்டவேண்டுமானால், என் பலவீனத்திற்கடுத்தவைகளைக் குறித்து மேன்மைபாராட்டுவேன். 31 என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவுமானவர் நான் பொய் சொல்லுகிறதில்லையென்று அறிவார். 32 தமஸ்குபட்டணத்து அரேத்தா ராஜாவினுடைய சேனைத்தலைவன் என்னைப் பிடிக்கவேண்டுமென்று தமஸ்கருடைய பட்டணத்தைக் காவல்வைத்துக் காத்தான்; 33 அப்பொழுது நான் கூடையிலே வைக்கப்பட்டு, ஜன்னலிலிருந்து மதில் வழியாய் இறக்கிவிடப்பட்டு, அவனுடைய கைக்குத் தப்பினேன்.

2 கொரிந்தியர் 12

1 மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியல்லவே; ஆகிலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன். 2 கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார். 3 அந்த மனுஷன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனுஷர் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமாகிய வார்த்தைகளைக் கேட்டானென்று அறிந்திருக்கிறேன். 4 அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார். 5 இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களிலேயன்றி, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன். 6 சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட மனதாயிருந்தாலும், நான் புத்தியீனனல்ல, ஆனாலும் ஒருவனும் என்னிடத்தில் காண்கிறதற்கும், என்னாலே கேட்கிறதற்கும் மேலாக என்னை எண்ணாதபடிக்கு அப்படிச் செய்யாதிருப்பேன். 7 அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது. 8 அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு, நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன். 9 அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். 10 அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன். 11 மேன்மைபாராட்டி, புத்தியீனனாயினேன்; நீங்களே இதற்கு என்னைப் பலவந்தப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லையென்றாலும், மகா பிரதான அப்போஸ்தலருக்கும் நான் எவ்வளவும் குறைந்தவனாயிராதபடியால், உங்களாலே மெச்சிக்கொள்ளப்படவேண்டியதாயிருந்ததே. 12 அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடப்பிக்கப்பட்டதே. 13 எதிலே மற்றச் சபைகளுக்குக் குறைவாயிருந்தீர்கள்? நான் உங்களை வருத்தப்படுத்தாதிருந்ததே உங்களுக்குக் குறைவு; இந்த அநியாயத்தை எனக்கு மன்னியுங்கள். 14 இதோ, உங்களிடத்திற்கு மூன்றாந்தரம் வர ஆயத்தமாயிருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவதில்லை; நான் உங்களுடையதையல்ல, உங்களையே தேடுகிறேன்; பெற்றாருக்குப் பிள்ளைகளல்ல, பிள்ளைகளுக்குப் பெற்றார்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும். 15 ஆதலால், நான் உங்களில் எவ்வளவு அதிகமாய் அன்புகூருகிறேனோ அவ்வளவு குறைவாய் உங்களால் அன்புகூரப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாய் நான் உங்கள் ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன். 16 அப்படியாகட்டும்; நான் உங்களுக்குப் பாரமாயிருக்கவில்லை; ஆனாலும், உபாயமுள்ளவனாயிருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம். 17 நான் உங்களிடத்திற்கு அனுப்பினவர்களில் எவன்மூலமாயாவது உங்களிடத்தில் பொழிவைத் தேடினதுண்டா? 18 தீத்து உங்களிடத்தில் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனுடனேகூட ஒரு சகோதரனை அனுப்பினேன்; தீத்து உங்களிடத்தில் ஏதாவது பொழிவைத் தேடினானா? நாங்கள் ஒரே ஆவியையுடையவர்களாய், ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோமல்லவா? 19 நாங்கள் யோக்கியர்களென்று விளங்கும்படி உங்களிடத்தில் பேசுகிறோமென்று எண்ணுகிறீர்களோ? தேவனுக்குமுன்பாகக் கிறிஸ்துவுக்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, சகலத்தையும் உங்கள் பக்திவிருத்திக்காகச் செய்கிறோம். 20 ஆகிலும் நான் வந்து, உங்களை என் மனதின்படியிருக்கிறவர்களாகக் காணாமலும், நானும் உங்கள் மனதின்படியிருக்கிறவனாகக் காணப்படாமலுமிருப்பேனோவென்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோட்சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோவென்றும்; 21 மறுபடியும் நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடத்தில் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன் பாவஞ்செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் நடப்பித்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும் விட்டு மனந்திரும்பாமலிருக்கிறதைக்குறித்து, நான் துக்கப்படவேண்டியதாயிருக்குமோவென்றும் பயந்திருக்கிறேன்.

2 கொரிந்தியர் 13

1 இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன்; சகல காரியங்களும் இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும். 2 நான் இரண்டாந்தரம் உங்களிடத்திலிருந்தபோது சொன்னதுபோல, இப்பொழுது தூரமாயிருந்தும் உங்களிடத்திலிருக்கிறவனாக, நான் மறுபடியும் வந்தால் தப்பவிடமாட்டேனென்று முன்பு பாவஞ்செய்தவர்களுக்கும் மற்ற எல்லாருக்கும் முன்னறிவித்து எழுதுகிறேன். 3 கிறிஸ்து எனக்குள்ளே பேசுகிறாரென்பதற்கு அத்தாட்சி தேடுகிறீர்களே; அவர் உங்களிடமாய்ப் பலவீனரல்ல, உங்களிடத்தில் வல்லவராயிருக்கிறார். 4 ஏனெனில் அவர் பலவீனத்தால் சிலுவையில் அறையப்பட்டிருந்தும், தேவனுடைய வல்லமையினால் பிழைத்திருக்கிறார்; அப்படி நாங்களும் அவருக்குள் பலவீனராயிருந்தும், உங்களிடமாய் விளங்கிய தேவனுடைய வல்லமையினால் அவருடனேகூடப் பிழைத்திருப்போம். 5 நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்; உங்களை நீங்களே பரீட்சித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள். 6 நாங்களோ பரீட்சைக்கு நில்லாதவர்களல்லவென்பதை அறிவீர்களென்று நம்புகிறேன். 7 மேலும் நீங்கள் ஒரு பொல்லாங்கும் செய்யாதிருக்கும்படியாக, தேவனை நோக்கி விண்ணப்பம்பண்ணுகிறேன். நாங்கள் பரீட்சைக்கு நின்றவர்களென்று காணப்படும்பொருட்டல்ல, நாங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்கள்போலிருந்தாலும், நீங்கள் நலமானதைச் செய்யும்பொருட்டே விண்ணப்பம்பண்ணுகிறேன். 8 சத்தியத்திற்கு விரோதமாக நாங்கள் ஒன்றுஞ்செய்யக்கூடாமல், சத்தியத்திற்கு அநுகூலமாகவே செய்யக்கூடும். 9 நாங்கள் பலவீனரும் நீங்கள் பலமுள்ளவர்களுமாயிருக்கையில், சந்தோஷப்படுகிறோம்; நீங்கள் நற்சீர்பொருந்தும்படிக்கும் விண்ணப்பம்பண்ணுகிறோம். 10 ஆனதால் இடித்துப்போடவல்ல, ஊன்றக் கட்டவே கர்த்தர் எனக்குக் கொடுத்த அதிகாரத்தின்படி, நான் உங்களிடத்தில் வந்திருக்கும்போது, கண்டிதம்பண்ணாதபடிக்கு, நான் தூரமாயிருந்து இவைகளை எழுதுகிறேன். 11 கடைசியாக, சகோதரரே, சந்தோஷமாயிருங்கள், நற்சீர் பொருந்துங்கள், ஆறுதலடையுங்கள்; ஏகசிந்தையாயிருங்கள், சமாதானமாயிருங்கள், அப்பொழுது அன்புக்கும் சமாதானத்துக்கும் காரணராகிய தேவன் உங்களோடேகூட இருப்பார். 12 ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். 13 பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 14 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

கலாத்தியர் 1

1 மனுஷராலுமல்ல, மனுஷன் மூலமாயுமல்ல, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின பிதாவாகிய தேவனாலும், அப்போஸ்தலனாயிருக்கிற பவுலாகிய நானும், 2 என்னுடனேகூட இருக்கிற சகோதரரெல்லாரும், கலாத்தியா நாட்டிலுள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது: 3 பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக; 4 அவர் நம்மை இப்பொழுதிருக்கிற பொல்லாத பிரபஞ்சத்தினின்று விடுவிக்கும்படி நம்முடைய பிதாவாகிய தேவனுடைய சித்தத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; 5 அவருக்கு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். 6 உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; 7 வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. 8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். 9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன். 10 இப்பொழுது நான் மனுஷரையா, தேவனையா, யாரை நாடிப் போதிக்கிறேன்? மனுஷரையா பிரியப்படுத்தப் பார்க்கிறேன்? நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே. 11 மேலும், சகோதரரே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம் மனுஷருடைய யோசனையின்படியானதல்லவென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன். 12 நான் அதை ஒரு மனுஷனால் பெற்றதுமில்லை, மனுஷனால் கற்றதுமில்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார். 13 நான் யூதமார்க்கத்திலிருந்தபோது என்னுடைய நடக்கையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் மிகவும் துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி; 14 என் ஜனத்தாரில் என் வயதுள்ள அநேகரைப்பார்க்கிலும் யூதமார்க்கத்திலே தேறினவனாய், என் பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக மிகவும் பக்திவைராக்கியமுள்ளவனாயிருந்தேன். 15 அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன், 16 தம்முடைய குமாரனை நான் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கும்பொருட்டாக, அவரை எனக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருந்தபோது, உடனே நான் மாம்சத்தோடும் இரத்தத்தோடும் யோசனைபண்ணாமலும்; 17 எனக்கு முன்னே அப்போஸ்தலரானவர்களிடத்திலே எருசலேமுக்குப் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மறுபடியும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன். 18 மூன்று வருஷம் சென்றபின்பு, பேதுருவைக் கண்டுகொள்ளும்படி நான் எருசலேமுக்குப் போய், அவனிடத்தில் பதினைந்துநாள் தங்கியிருந்தேன். 19 கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத் தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் காணவில்லை. 20 நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய்யல்லவென்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாய்ச் சொல்லுகிறேன். 21 பின்பு, சீரியா சிலிசியா நாடுகளின் புறங்களில் வந்தேன். 22 மேலும் யூதேயாதேசத்திலே கிறிஸ்துவுக்குள்ளான சபைகளுக்கு முகமறியாதவனாயிருந்தேன். 23 முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கத்தேடின விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதைமாத்திரம் அவர்கள் கேள்விப்பட்டிருந்து, 24 என்னைப்பற்றித் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

கலாத்தியர் 2

1 பதினாலு வருஷம் சென்றபின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு பர்னபாவுடனேகூட மறுபடியும் எருசலேமுக்குப் போனேன். 2 நான் தேவ அறிவிப்பினாலே போய், புறஜாதிகளிடத்தில் நான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தேன்; ஆயினும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகாதபடிக்கு எண்ணிக்கையுள்ளவர்களுக்கே தனிமையாய் விவரித்துக் காண்பித்தேன். 3 ஆனாலும் என்னுடனேகூட இருந்த தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படவில்லை. 4 கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று. 5 சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை. 6 அல்லாமலும் எண்ணிக்கையுள்ளவர்களாயிருந்தவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை; அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, தேவன் மனுஷரிடத்தில் பட்சபாதமுள்ளவரல்லவே. 7 அதுவுமல்லாமல், விருத்தசேதனமுள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி பேதுருவைப் பலப்படுத்தினவர் புறஜாதிகளுக்கு அப்போஸ்தலனாயிருக்கும்படி என்னையும் பலப்படுத்தினபடியால், 8 விருத்தசேதனமுள்ளவர்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி பேதுருவுக்குக் கையளிக்கப்பட்டதுபோல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிக்கும்படி அது எனக்கும் கையளிக்கப்பட்டதென்று அவர்கள் கண்டு; 9 எனக்கு அளிக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக எண்ணப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனமுள்ளவர்களுக்கும், நாங்கள் புறஜாதிகளுக்கும் பிரசங்கிக்கும்படி, அந்நியோந்நிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவுக்கும் வலதுகை கொடுத்து, 10 தரித்திரரை நினைத்துக்கொள்ளும்படிக்குமாத்திரம் சொன்னார்கள்; அப்படிச் செய்யும்படி அதற்கு முன்னமே நானும் கருத்துள்ளவனாயிருந்தேன். 11 மேலும், பேதுரு அந்தியோகியாவுக்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ் சுமந்ததினால், நான் முகமுகமாய் அவனோடே எதிர்த்தேன். 12 எப்படியெனில், யாக்கோபினிடத்திலிருந்து சிலர் வருகிறதற்குமுன்னே அவன் புறஜாதியாருடனே சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனமுள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான். 13 மற்ற யூதரும் அவனுடனேகூட மாயம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாயத்தினாலே பர்னபாவும் இழுப்புண்டான். 14 இப்படி அவர்கள் சுவிசேஷத்தின் சத்தியத்திற்கேற்றபடி சரியாய் நடவாததை நான் கண்டபோது, எல்லாருக்கும் முன்பாக நான் பேதுருவை நோக்கிச் சொன்னது என்னவென்றால்: யூதனாயிருக்கிற நீர் யூதர் முறைமையாக நடவாமல், புறஜாதியார் முறைமையாக நடந்துகொண்டிருக்க, புறஜாதியாரை யூதர் முறைமையாக நடக்கும்படி நீர் எப்படிக் கட்டாயம்பண்ணலாம்? 15 புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல, கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம். 16 நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே எந்த மனுஷனும் நீதிமானாக்கப்படுவதில்லையே. 17 கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்படும்படி நாடுகிற நாமும் பாவிகளாகக் காணப்படுவோமானால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? அல்லவே. 18 நான் இடித்துப்போட்டவைகளையே நான் மறுபடியும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனென்று காணப்படுவேன். 19 தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே. 20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன். 21 நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.

கலாத்தியர் 3

1 புத்தியில்லாத கலாத்தியரே, நீங்கள் சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போகத்தக்கதாக உங்களை மயக்கினவன் யார்? இயேசுகிறிஸ்து சிலுவையிலறையப்பட்டவராக உங்கள் கண்களுக்குமுன் பிரத்தியட்சமாய் உங்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருந்தாரே. 2 ஒன்றைமாத்திரம் உங்களிடத்தில் அறிய விரும்புகிறேன்; நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே ஆவியைப் பெற்றீர்கள்? 3 ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நீங்கள் இப்பொழுது மாம்சத்தினாலே முடிவுபெறப்போகிறீர்களோ? நீங்கள் இத்தனை புத்தியீனரா? 4 இத்தனை பாடுகளையும் வீணாய்ப் பட்டீர்களோ? அவைகள் வீணாய்ப்போயிற்றே. 5 அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்? 6 அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. 7 ஆகையால் விசுவாசமார்க்கத்தார்கள் எவர்களோ அவர்களே ஆபிரகாமின் பிள்ளைகளென்று அறிவீர்களாக. 8 மேலும் தேவன் விசுவாசத்தினாலே புறஜாதிகளை நீதிமான்களாக்குகிறாரென்று வேதம் முன்னாகக் கண்டு: உனக்குள் சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்று ஆபிரகாமுக்குச் சுவிசேஷமாய் முன்னறிவித்தது. 9 அந்தப்படி விசுவாசமார்க்கத்தார் விசுவாசமுள்ள ஆபிரகாமுடனே ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். 10 நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. 11 நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே. 12 நியாயப்பிரமாணமோ விசுவாசத்திற்குரியதல்ல; அவைகளைச் செய்கிற மனுஷனே அவைகளால் பிழைப்பான். 13 மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து நமக்காகச் சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக்கொண்டார். 14 ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும், ஆவியைக்குறித்துச் சொல்லப்பட்ட வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தினாலே பெறும்படியாகவும் இப்படியாயிற்று. 15 சகோதரரே, மனுஷர் முறைமையின்படி சொல்லுகிறேன்; மனுஷர்களுக்குள்ளே உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை ஒருவனும் தள்ளுகிறதுமில்லை, அதினோடே ஒன்றையும் கூட்டுகிறதுமில்லை. 16 ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே. 17 ஆதலால் நான் சொல்லுகிறதென்னவெனில், கிறிஸ்துவை முன்னிட்டுத் தேவனால் முன் உறுதிபண்ணப்பட்ட உடன்படிக்கையை நானூற்றுமுப்பது வருஷத்திற்குப்பின்பு உண்டான நியாயப்பிரமாணமானது தள்ளி, வாக்குத்தத்தத்தை வியர்த்தமாக்கமாட்டாது. 18 அன்றியும், சுதந்தரமானது நியாயப்பிரமாணத்தினாலே உண்டானால் அது வாக்குத்தத்தத்தினாலே உண்டாயிராது; தேவன் அதை ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தத்தினாலே அருளிச்செய்தாரே. 19 அப்படியானால், நியாயப்பிரமாணத்தின் நோக்கமென்ன? வாக்குத்தத்தத்தைப்பெற்ற சந்ததி வருமளவும் அது அக்கிரமங்களினிமித்தமாகக் கூட்டப்பட்டு, தேவதூதரைக்கொண்டு மத்தியஸ்தன் கையிலே கட்டளையிடப்பட்டது. 20 மத்தியஸ்தன் ஒருவனுக்குரியவனல்ல, தேவனோ ஒருவர். 21 அப்படியானால், நியாயப்பிரமாணம் தேவனுடைய வாக்குத்தத்தங்களுக்கு விரோதமா? அல்லவே; உயிரைக் கொடுக்கத்தக்க நியாயப்பிரமாணம் அருளப்பட்டிருந்ததானால், நீதியானது நியாயப்பிரமாணத்தினால் உண்டாயிருக்குமே. 22 அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது. 23 ஆதலால் விசுவாசம் வருகிறதற்குமுன்னே, வெளிப்படப்போகிற விசுவாசத்திற்கு ஏதுவாக நாம் அடைக்கப்பட்டவர்களாய் நியாயப்பிரமாணத்தின்கீழ் காவல்பண்ணப்பட்டிருந்தோம். 24 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்கு நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் வழிநடத்துகிற உபாத்தியாய் இருந்தது. 25 விசுவாசம் வந்தபின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்களல்லவே. 26 நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினால் தேவனுடைய புத்திரராயிருக்கிறீர்களே. 27 ஏனெனில், உங்களில் கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றவர்கள் எத்தனைபேரோ, அத்தனைபேரும் கிறிஸ்துவைத் தரித்துக்கொண்டீர்களே. 28 யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள். 29 நீங்கள் கிறிஸ்துவினுடையவர்களானால், ஆபிரகாமின் சந்ததியாராயும், வாக்குத்தத்தத்தின்படியே சுதந்தரராயும் இருக்கிறீர்கள்.

கலாத்தியர் 4

1 பின்னும் நான் சொல்லுகிறதென்னவெனில், சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானாயிருந்தும், அவன் சிறுபிள்ளையாயிருக்குங்காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை. 2 தகப்பன் குறித்த காலம்வரைக்கும் அவன் காரியக்காரருக்கும் வீட்டு விசாரணைக்காரருக்கும் கீழ்ப்பட்டிருக்கிறான். 3 அப்படியே நாமும் சிறுபிள்ளைகளாயிருந்த காலத்தில் இவ்வுலகத்தின் வழிபாடுகளுக்கு அடிமைப்பட்டவர்களாயிருந்தோம். 4 நாம் புத்திரசுவிகாரத்தையடையும்படி நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களை மீட்டுக்கொள்ளத்தக்கதாக, 5 காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனைத் தேவன் அனுப்பினார். 6 மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாகத் தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார். 7 ஆகையால் இனி நீ அடிமையாயிராமல் புத்திரனாயிருக்கிறாய்; நீ புத்திரனேயானால், கிறிஸ்துமூலமாய்த் தேவனுடைய சுதந்தரனாயுமிருக்கிறாய். 8 நீங்கள் தேவனை அறியாமலிருந்தபோது, சுபாவத்தின்படி தேவர்களல்லாதவர்களுக்கு அடிமைகளாயிருந்தீர்கள். 9 இப்பொழுதோ நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி? 10 நாட்களையும், மாதங்களையும், காலங்களையும், வருஷங்களையும் பார்க்கிறீர்களே. 11 நான் உங்களுக்காகப் பிரயாசப்பட்டது வீணாய்ப்போயிற்றோ என்று உங்களைக்குறித்துப் பயந்திருக்கிறேன். 12 சகோதரரே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; நான் உங்களைப்போலுமானேனே. எனக்கு நீங்கள் அநியாயம் ஒன்றும் செய்யவில்லை. 13 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நான் சரீர பலவீனத்தோடு முதலாந்தரம் உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தேன். 14 அப்படியிருந்தும், என் சரீரத்தில் உண்டாயிருக்கிற சோதனையை நீங்கள் அசட்டைபண்ணாமலும், அரோசியாமலும், தேவதூதனைப்போலவும், கிறிஸ்து இயேசுவைப்போலவும், என்னை ஏற்றுக்கொண்டீர்கள். 15 அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்த பாக்கியம் எங்கே? உங்கள் கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கக்கூடுமானால், அப்படியும் செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச் சாட்சியாயிருக்கிறேன். 16 நான் உங்களுக்குச் சத்தியத்தைச் சொன்னதினாலே உங்களுக்குச் சத்துருவானேனோ? 17 அவர்கள் உங்களை நாடி வைராக்கியம் பாராட்டுகிறார்கள்; ஆகிலும் நல்மனதோடே அப்படிச் செய்யாமல், நீங்கள் அவர்களை நாடி வைராக்கியம் பாராட்டும்பொருட்டு உங்களைப் புறம்பாக்க விரும்புகிறார்கள். 18 நல்விஷயத்தில் வைராக்கியம் பாராட்டுவது நல்லதுதான்; அதை நான் உங்களிடத்தில் இருக்கும்பொழுதுமாத்திரமல்ல, எப்பொழுதும் பாராட்டவேண்டும். 19 என் சிறுபிள்ளைகளே, கிறிஸ்து உங்களிடத்தில் உருவாகுமளவும் உங்களுக்காக மறுபடியும் கர்ப்பவேதனைப்படுகிறேன்; 20 உங்களைக்குறித்து நான் சந்தேகப்படுகிறபடியால், நான் இப்பொழுது உங்களிடத்தில் வந்திருந்து, வேறுவகையாகப் பேச விரும்புகிறேன். 21 நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிருக்க விரும்புகிற நீங்கள் நியாயப்பிரமாணம் சொல்லுகிறதைக் கேட்கவில்லையா? இதை எனக்குச் சொல்லுங்கள். 22 ஆபிரகாமுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள் என்று எழுதியிருக்கிறது; ஒருவன் அடிமையானவளிடத்தில் பிறந்தவன், ஒருவன் சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன். 23 அடிமையானவளிடத்தில் பிறந்தவன் மாம்சத்தின்படி பிறந்தான், சுயாதீனமுள்ளவளிடத்தில் பிறந்தவன் வாக்குத்தத்தத்தின்படி பிறந்தான். 24 இவைகள் ஞான அர்த்தமுள்ளவைகள்; அந்த ஸ்திரீகள் இரண்டு ஏற்பாடுகளாம்; ஒன்று சீனாய்மலையிலுண்டான ஏற்பாடு, அது அடிமைத்தனத்திற்குள்ளாகப் பிள்ளைபெறுகிறது, அது ஆகார் என்பவள்தானே. 25 ஆகார் என்பது அரபிதேசத்திலுள்ள சீனாய்மலை; அந்த ஆகார் இப்பொழுதிருக்கிற எருசலேமுக்குச் சரி; இவள் தன் பிள்ளைகளோடேகூட அடிமைப்பட்டிருக்கிறாளே. 26 மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள். 27 அந்தப்படி பிள்ளைபெறாத மலடியே, மகிழ்ந்திரு; கர்ப்பவேதனைப்படாதவளே, களிப்பாய் எழும்பி ஆர்ப்பரி; புருஷனுள்ளவளைப்பார்க்கிலும் அநாத ஸ்திரீக்கே அதிக பிள்ளைகளுண்டு என்று எழுதியிருக்கிறது. 28 சகோதரரே, நாம் ஈசாக்கைப்போல வாக்குத்தத்தத்துப் பிள்ளைகளாயிருக்கிறோம். 29 ஆகிலும் மாம்சத்தின்படி பிறந்தவன் ஆவியின்படி பிறந்தவனை அப்பொழுது துன்பப்படுத்தினதுபோல, இப்பொழுதும் நடந்துவருகிறது. 30 அதைக்குறித்து வேதம் என்ன சொல்லுகிறது: அடிமையானவளின் மகன் சுயாதீனமுள்ளவளுடைய குமாரனோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை; ஆகையால் அடிமையானவளையும், அவளுடைய மகனையும் புறம்பே தள்ளு என்று சொல்லுகிறது. 31 இப்படியிருக்க, சகோதரரே, நாம் அடிமையானவளுக்குப் பிள்ளைகளாயிராமல், சுயாதீனமுள்ளவளுக்கே பிள்ளைகளாயிருக்கிறோம்.

கலாத்தியர் 5

1 ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள். 2 இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். 3 மேலும், விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறான் என்று மறுபடியும் அப்படிப்பட்டவனுக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன். 4 நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள். 5 நாங்களோ நீதிகிடைக்குமென்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம். 6 கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும். 7 நீங்கள் நன்றாய் ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்? 8 இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானதல்ல. 9 புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும். 10 நீங்கள் வேறுவிதமாய்ச் சிந்திக்கமாட்டீர்களென்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாயிருக்கிறேன்; உங்களைக் கலக்குகிறவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் தனக்கேற்ற ஆக்கினையை அடைவான். 11 சகோதரரே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாயிருந்தால், இதுவரைக்கும் என்னத்திற்குத் துன்பப்படுகிறேன்? அப்படியானால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே. 12 உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும். 13 சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள். 14 உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும். 15 நீங்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்தீர்களானால் அழிவீர்கள், அப்படி ஒருவராலொருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். 16 பின்னும் நான் சொல்லுகிறதென்னவென்றால், ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள். 17 மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது; நீங்கள் செய்யவேண்டுமென்றிருக்கிறவைகளைச் செய்யாதபடிக்கு, இவைகள் ஒன்றுக்கொன்று விரோதமாயிருக்கிறது. 18 ஆவியினால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்களல்ல. 19 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், 20 விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், 21 பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன். 22 ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், 23 சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை. 24 கிறிஸ்துவினுடையவர்கள் தங்கள் மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள். 25 நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக்கேற்றபடி நடக்கவும் கடவோம். 26 வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்.

கலாத்தியர் 6

1 சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக்குறித்து எச்சரிக்கையாயிரு. 2 ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள். 3 ஒருவன், தான் ஒன்றுமில்லாதிருந்தும், தன்னை ஒரு பொருட்டென்று எண்ணினால், தன்னைத்தானே வஞ்சிக்கிறவனாவான். 4 அவனவன் தன்தன் சுயகிரியையைச் சோதித்துப்பார்க்கக்கடவன்; அப்பொழுது மற்றவனைப் பார்க்கும்போதல்ல, தன்னையே பார்க்கும்போது மேன்மைபாராட்ட அவனுக்கு இடமுண்டாகும். 5 அவனவன் தன்தன் பாரத்தைச் சுமப்பானே. 6 மேலும், திருவசனத்தில் உபதேசிக்கப்படுகிறவன் உபதேசிக்கிறவனுக்குச் சகல நன்மைகளிலும் பகிர்ந்துகொடுக்கக்கடவன். 7 மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். 8 தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான்; ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்தியஜீவனை அறுப்பான். 9 நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். 10 ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம். 11 என் கையெழுத்தாய் எவ்வளவு எழுதினேனென்று பாருங்கள். 12 மாம்சத்தின்படி நல்வேஷமாய்க் காணப்பட விரும்புகிறவர்கள் எவர்களோ, அவர்கள் தாங்கள் கிறிஸ்துவினுடைய சிலுவையினிமித்தம் துன்பப்படாதபடிக்கே உங்களை விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளக் கட்டாயம்பண்ணுகிறார்கள். 13 விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமலிருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்கள் மாம்சத்தைக்குறித்து மேன்மைபாராட்டும்படிக்கு நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறார்கள். 14 நானோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சிலுவையைக் குறித்தேயல்லாமல் வேறொன்றையுங்குறித்து மேன்மைபாராட்டாதிருப்பேனாக; அவரால் உலகம் எனக்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறது, நானும் உலகத்திற்குச் சிலுவையிலறையுண்டிருக்கிறேன். 15 கிறிஸ்து இயேசுவுக்குள் விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; புது சிருஷ்டியே காரியம். 16 இந்தப் பிரமாணத்தின்படி நடந்துவருகிறவர்கள் எவர்களோ, அவர்களுக்கும், தேவனுடைய இஸ்ரவேலருக்கும், சமாதானமும் இரக்கமும் உண்டாயிருப்பதாக. 17 இனிமேல் ஒருவனும் எனக்கு வருத்தம் உண்டாக்காதிருப்பானாக; கர்த்தராகிய இயேசுவினுடைய அச்சடையாளங்களை நான் என் சரீரத்திலே தரித்துக்கொண்டிருக்கிறேன். 18 சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென்.

எபேசியர் 1

1 தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது: 2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 3 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். 4 தமக்குமுன்பாக நாம் அன்பில் பரிசுத்தமுள்ளவர்களும் குற்றமில்லாதவர்களுமாயிருப்பதற்கு, அவர் உலகத்தோற்றத்துக்குமுன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்துகொண்டபடியே, 5 பிரியமானவருக்குள் தாம் நமக்குத் தந்தருளின தம்முடைய கிருபையின் மகிமைக்குப் புகழ்ச்சியாக, 6 தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார். 7 அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. 8 அந்தக் கிருபையை அவர் சகல ஞானத்தோடும் புத்தியோடும் எங்களிடத்தில் பெருகப்பண்ணினார். 9 காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று, 10 தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தத்தின் இரகசியத்தை எங்களுக்கு அறிவித்தார். 11 மேலும் கிறிஸ்துவின்மேல் முன்னே நம்பிக்கையாயிருந்த நாங்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாயிருக்கும்படிக்கு, 12 தமது சித்தத்தின் ஆலோசனைக்குத்தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம். 13 நீங்களும் உங்கள் இரட்சிப்பின் சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்டு, விசுவாசிகளானபோது, வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட பரிசுத்தஆவியால் அவருக்குள் முத்திரைபோடப்பட்டீர்கள். 14 அவருக்குச் சொந்தமானவர்கள் அவருடைய மகிமைக்குப் புகழ்ச்சியாக மீட்கப்படுவார்கள் என்பதற்கு ஆவியானவர் நம்முடைய சுதந்தரத்தின் அச்சாரமாயிருக்கிறார். 15 ஆனபடியினாலே, கர்த்தராகிய இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நான் கேள்விப்பட்டு, 16 இடைவிடாமல் உங்களுக்காக ஸ்தோத்திரம்பண்ணி, என் ஜெபங்களில் உங்களை நினைத்து, 17 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், 18 தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்; 19 தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன். 20 எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, 21 அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, 22 எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, 23 எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.

எபேசியர் 2

1 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். 2 அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். 3 அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம். 4 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, 5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். 6 கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, 7 கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார். 8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; 9 ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; 10 ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார். 11 ஆனபடியினால் முன்னே மாம்சத்தின்படி புறஜாதியாராயிருந்து, மாம்சத்தில் கையினாலே செய்யப்படுகிற விருத்தசேதனமுடையவர்களால் விருத்தசேதனமில்லாதவர்களென்னப்பட்ட நீங்கள், 12 அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள். 13 முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள். 14 எப்படியெனில், அவரே நம்முடைய சமாதான காரணராகி, இருதிறத்தாரையும் ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, 15 சட்டதிட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தைத் தம்முடைய மாம்சத்தினாலே ஒழித்து, இருதிறத்தாரையும் தமக்குள்ளாக ஒரே புதிய மனுஷனாகச் சிருஷ்டித்து, இப்படிச் சமாதானம்பண்ணி, 16 பகையைச் சிலுவையினால் கொன்று, அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாகத் தேவனுக்கு ஒப்புரவாக்கினார். 17 அல்லாமலும் அவர் வந்து, தூரமாயிருந்த உங்களுக்கும், சமீபமாயிருந்த அவர்களுக்கும், சமாதானத்தைச் சுவிசேஷமாக அறிவித்தார். 18 அந்தப்படியே நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம். 19 ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து, 20 அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்; 21 அவர்மேல் மாளிகை முழுவதும் இசைவாய் இணைக்கப்பட்டு, கர்த்தருக்குள் பரிசுத்த ஆலயமாக எழும்புகிறது; 22 அவர்மேல் நீங்களும் ஆவியினாலே தேவனுடைய வாசஸ்தலமாகக் கூட்டிக்கட்டப்பட்டுவருகிறீர்கள்.

எபேசியர் 3

1 இதினிமித்தம், பவுலாகிய நான் புறஜாதியாராயிருக்கிற உங்கள்பொருட்டுக் கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டுண்டவனாயிருக்கிறேன். 2 உங்களுக்காக எனக்கு அளிக்கப்பட்டிருக்கிற தெய்வகிருபைக்குரிய நியமமும் இன்னதென்று கேட்டிருப்பீர்களே; 3 அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன் சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார். 4 இதைக்குறித்து நான் முன்னமே சுருக்கமாய் எழுதியிருக்கிறேன். 5 அதை நீங்கள் வாசிக்கையில் கிறிஸ்துவின் இரகசியத்தைக்குறித்து எனக்கு உண்டாயிருக்கிற அறிவை அறிந்துகொள்ளலாம்; 6 இந்த இரகசியம் இப்பொழுது அவருடைய பரிசுத்த அப்போஸ்தலருக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் ஆவியானவராலே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறதுபோல, முற்காலங்களில் மனுபுத்திரருக்கு அறிவிக்கப்படவில்லை. 7 தேவனுடைய பலத்த சத்துவத்தால் எனக்கு அளிக்கப்பட்ட வரமாகிய அவருடைய கிருபையினாலே இந்தச் சுவிசேஷத்துக்கு ஊழியக்காரனானேன். 8 பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 9 தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே, 10 உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின்மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக, 11 இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த இரகசியத்தினுடைய ஐக்கியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு, இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 12 அவரைப் பற்றும் விசுவாசத்தால் அவருக்குள் நமக்குத் தைரியமும் திடநம்பிக்கையோடே தேவனிடத்தில் சேரும் சிலாக்கியமும் உண்டாயிருக்கிறது. 13 ஆகையால் உங்கள்நிமித்தம் நான் அநுபவிக்கிற உபத்திரவங்களினால் நீங்கள் சோர்ந்துபோகாதிருக்க வேண்டிக்கொள்ளுகிறேன்; அவைகள் உங்களுக்கு மகிமையாயிருக்கிறதே. 14 இதினிமித்தம் நான் பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராகிய, 15 நம்முடைய கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய பிதாவை நோக்கி முழங்கால்படியிட்டு, 16 நீங்கள் அவருடைய ஆவியினாலே உள்ளான மனுஷனில் வல்லமையாய்ப் பலப்படவும், 17 விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசமாயிருக்கவும், நீங்கள் அன்பிலே வேரூன்றி, நிலைபெற்றவர்களாகி, 18 சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து; 19 அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். 20 நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, 21 சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

எபேசியர் 4

1 ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து, 2 மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி, 3 சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள். 4 உங்களுக்கு உண்டான அழைப்பினாலே நீங்கள் ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டதுபோல, ஒரே சரீரமும், ஒரே ஆவியும் உண்டு; 5 ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே ஞானஸ்நானமும், 6 எல்லாருக்கும் ஒரே தேவனும் பிதாவும் உண்டு; அவர் எல்லார்மேலும், எல்லாரோடும், உங்கள் எல்லாருக்குள்ளும் இருக்கிறவர். 7 கிறிஸ்துவினுடைய ஈவின் அளவுக்குத்தக்கதாக நம்மில் அவனவனுக்குக் கிருபை அளிக்கப்பட்டிருக்கிறது. 8 ஆதலால், அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கி, மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார் என்று சொல்லியிருக்கிறார். 9 ஏறினார் என்பதினாலே அவர் அதற்குமுன்னே பூமியின் தாழ்விடங்களில் இறங்கினார் என்று விளங்குகிறதல்லவா? 10 இறங்கினவரே எல்லாவற்றையும் நிரப்பத்தக்கதாக, எல்லா வானங்களுக்கும் மேலாக உன்னதத்திற்கு ஏறினவருமாயிருக்கிறார். 11 மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும், 12 பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், 13 அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார். 14 நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமல், 15 அன்புடன் சத்தியத்தைக் கைக்கொண்டு, தலையாகிய கிறிஸ்துவுக்குள் எல்லாவற்றிலேயும், நாம் வளருகிறவர்களாயிருக்கும்படியாக அப்படிச் செய்தார். 16 அவராலே சரீரம் முழுதும், அதற்கு உதவியாயிருக்கிற சகல கணுக்களினாலும் இசைவாய்க் கூட்டி இணைக்கப்பட்டு, ஒவ்வொரு அவயவமும் தன்தன் அளவுக்குத்தக்கதாய்க் கிரியைசெய்கிறபடியே, அது அன்பினாலே தனக்குப் பக்திவிருத்தி உண்டாக்குகிறதற்கேதுவாகச் சரீரவளர்ச்சியை உண்டாக்குகிறது. 17 ஆதலால், கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறதுபோல நீங்கள் இனி நடவாமலிருங்கள். 18 அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதயகடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து; 19 உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். 20 நீங்களோ இவ்விதமாய்க் கிறிஸ்துவைக் கற்றுக்கொள்ளவில்லை. 21 இயேசுவினிடத்திலுள்ள சத்தியத்தின்படியே, நீங்கள் அவரிடத்தில் கேட்டறிந்து, அவரால் போதிக்கப்பட்டீர்களே. 22 அந்தப்படி, முந்தின நடக்கைக்குரிய மோசம்போக்கும் இச்சைகளாலே கெட்டுப்போகிற பழைய மனுஷனை நீங்கள் களைந்துபோட்டு, 23 உங்கள் உள்ளத்திலே புதிதான ஆவியுள்ளவர்களாகி, 24 மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள். 25 அன்றியும், நாம் ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறபடியால், பொய்யைக் களைந்து, அவனவன் பிறனுடனே மெய்யைப் பேசக்கடவன். 26 நீங்கள் கோபங்கொண்டாலும் பாவஞ்செய்யாதிருங்கள்; சூரியன் அஸ்தமிக்கிறதற்கு முன்னாக உங்கள் எரிச்சல் தணியக்கடவது; 27 பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள். 28 திருடுகிறவன் இனித் திருடாமல், குறைச்சலுள்ளவனுக்குக் கொடுக்கத்தக்கதாகத் தனக்கு உண்டாயிருக்கும்படி, தன் கைகளினால் நலமான வேலைசெய்து, பிரயாசப்படக்கடவன். 29 கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். 30 அன்றியும், நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்தஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள். 31 சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் உங்களைவிட்டு நீங்கக்கடவது. 32 ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.

எபேசியர் 5

1 ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போலத் தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, 2 கிறிஸ்து நமக்காகத் தம்மைத் தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள். 3 மேலும், பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி, வேசித்தனமும், மற்றெந்த அசுத்தமும், பொருளாசையும் ஆகிய இவைகளின் பேர்முதலாய் உங்களுக்குள்ளே சொல்லப்படவுங்கூடாது. 4 அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும். 5 விபசாரக்காரனாவது, அசுத்தனாவது, விக்கிரகாராதனைக்காரனாகிய பொருளாசைக்காரனாவது தேவனுடைய ராஜ்யமாகிய கிறிஸ்துவின் ராஜ்யத்திலே சுதந்தரமடைவதில்லையென்று அறிந்திருக்கிறீர்களே. 6 இப்படிப்பட்டவைகளினிமித்தமாகக் கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வருவதால், ஒருவனும் உங்களை வீண்வார்த்தைகளினாலே மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; 7 அவர்களுக்குப் பங்காளிகளாகாதிருங்கள். 8 முற்காலத்தில் நீங்கள் அந்தகாரமாயிருந்தீர்கள், இப்பொழுதோ கர்த்தருக்குள் வெளிச்சமாயிருக்கிறீர்கள்; வெளிச்சத்தின் பிள்ளைகளாய் நடந்துகொள்ளுங்கள். 9 ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும். 10 கர்த்தருக்குப் பிரியமானது இன்னதென்று நீங்கள் சோதித்துப்பாருங்கள். 11 கனியற்ற அந்தகாரக் கிரியைகளுக்கு உடன்படாமல், அவைகளைக் கடிந்துகொள்ளுங்கள். 12 அவர்களால் ஒளிப்பிடத்தில் செய்யப்படும் கிரியைகளைச் சொல்லுகிறதும் அவலட்சணமாயிருக்கிறதே. 13 அவைகளெல்லாம் கடிந்துகொள்ளப்பட்டு வெளிச்சத்தினால் வெளியரங்கமாகும்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது. 14 ஆதலால், தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார். 15 ஆனபடியினாலே, நீங்கள் ஞானமற்றவர்களைப்போல நடவாமல், ஞானமுள்ளவர்களைப்போலக் கவனமாய் நடந்துகொள்ளப்பார்த்து, 16 நாட்கள் பொல்லாதவைகளானதால் காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். 17 ஆகையால், நீங்கள் மதியற்றவர்களாயிராமல், கர்த்தருடைய சித்தம் இன்னதென்று உணர்ந்துகொள்ளுங்கள். 18 துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து; 19 சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, 20 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, 21 தெய்வ பயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள். 22 மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள். 23 கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார். 24 ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்கவேண்டும். 25 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, 26 தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், 27 கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார். 28 அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான். 29 தன் சொந்த மாம்சத்தைப் பகைத்தவன் ஒருவனுமில்லையே; கர்த்தர் சபையைப் போஷித்துக் காப்பாற்றுகிறதுபோல ஒவ்வொருவனும் தன் மாம்சத்தைப் போஷித்துக் காப்பாற்றுகிறான். 30 நாம் அவருடைய சரீரத்தின் அவயவங்களாயும், அவருடைய மாம்சத்திற்கும் அவருடைய எலும்புகளுக்கும் உரியவர்களாயும் இருக்கிறோம். 31 இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள். 32 இந்த இரகசியம் பெரியது; நான் கிறிஸ்துவைப்பற்றியும் சபையைப்பற்றியும் சொல்லுகிறேன். 33 எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.

எபேசியர் 6

1 பிள்ளைகளே, உங்கள் பெற்றாருக்குக் கர்த்தருக்குள் கீழ்ப்படியுங்கள், இது நியாயம். 2 உனக்கு நன்மை உண்டாயிருப்பதற்கும், பூமியிலே உன் வாழ்நாள் நீடித்திருப்பதற்கும், 3 உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்பதே வாக்குத்தத்தமுள்ள முதலாங் கற்பனையாயிருக்கிறது. 4 பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக. 5 வேலைக்காரரே, நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கும் பயத்தோடும் நடுக்கத்தோடும் கபடற்ற மனதோடும் கீழ்ப்படிந்து; 6 மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். 7 அடிமையானவனானாலும், சுயாதீனமுள்ளவனானாலும், அவனவன் செய்கிற நன்மையின்படியே கர்த்தரிடத்தில் பலனை அடைவானென்று அறிந்து, 8 மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். 9 எஜமான்களே, அப்படியே நீங்களும், வேலைக்காரருக்குச் செய்யவேண்டியவைகளைச் செய்து, அவர்களுக்கும் உங்களுக்கும் எஜமானானவர் பரலோகத்தில் இருக்கிறாரென்றும், அவரிடத்தில் பட்சபாதம் இல்லையென்றும் அறிந்து, கடுஞ்சொல்லை விட்டுவிடுங்கள். 10 கடைசியாக, என் சகோதரரே, கர்த்தரிலும் அவருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள். 11 நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். 12 ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. 13 ஆகையால், தீங்குநாளிலே அவைகளை நீங்கள் எதிர்க்கவும், சகலத்தையும் செய்துமுடித்தவர்களாய் நிற்கவும் திராணியுள்ளவர்களாகும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். 14 சத்தியம் என்னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும், நீதியென்னும் மார்க்கவசத்தைத் தரித்தவர்களாயும்; 15 சமாதானத்தின் சுவிசேஷத்திற்குரிய ஆயத்தம் என்னும் பாதரட்சையைக் கால்களிலே தொடுத்தவர்களாயும்; 16 பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில்லுங்கள். 17 இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவவசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். 18 எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள். 19 சுவிசேஷத்திற்காகச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிற ஸ்தானாபதியாகிய நான் அதைப்பற்றிப் பேசவேண்டியபடி தைரியமாய்ப் பேசத்தக்கதாக, 20 நான் தைரியமாய் என் வாயைத் திறந்து சுவிசேஷத்தின் இரகசியத்தை அறிவிக்கிறதற்கு வாக்கு எனக்குக் கொடுக்கப்படும்படி எனக்காகவும் விண்ணப்பம்பண்ணுங்கள். 21 அன்றியும், எனக்கடுத்த காரியங்களும், என் சுகசெய்திகளும் உங்களுக்குத் தெரியவரும்படிக்கு, அவைகளையெல்லாம் நமக்குப் பிரியமான சகோதரனும் கர்த்தருக்குள் உண்மையுள்ள ஊழியக்காரனுமாயிருக்கிற தீகிக்கு உங்களுக்கு அறிவிப்பான். 22 நீங்கள் எங்கள் செய்திகளை அறியவும், அவன் உங்கள் இருதயங்களுக்கு ஆறுதல் செய்யவும், அவனை உங்களிடத்தில் அனுப்பினேன். 23 பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், சகோதரருக்குச் சமாதானமும் விசுவாசத்தோடு கூடிய அன்பும் உண்டாவதாக. 24 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிடத்தில் அழியாத அன்புடனே அன்புகூருகிற யாவரோடும் கிருபை உண்டாயிருப்பதாக. ஆமென்.

பிலிப்பியர் 1

1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரராகிய பவுலும் தீமோத்தேயும், பிலிப்பி பட்டணத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் அனைவருக்கும், கண்காணிகளுக்கும், உதவிக்காரருக்கும் எழுதுகிறதாவது: 2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 3 சுவிசேஷம் உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நாள்முதல் இதுவரைக்கும் நீங்கள் அதற்கு உடன்பட்டவர்களானபடியால், 4 நான் பண்ணுகிற ஒவ்வொரு விண்ணப்பத்திலும் உங்கள் அனைவருக்காகவும் எப்போதும் சந்தோஷத்தோடே விண்ணப்பம்பண்ணி, 5 உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசுகிறிஸ்துவின் நாள்பரியந்தம் முடிய நடத்திவருவாரென்று நம்பி, 6 நான் உங்களை நினைக்கிறபொழுதெல்லாம் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். 7 என் கட்டுகளிலும், நான் சுவிசேஷத்திற்காக உத்தரவுசொல்லி அதைத் திடப்படுத்திவருகிறதிலும், நீங்கள் அனைவரும் எனக்கு அளிக்கப்பட்ட கிருபையில் பங்குள்ளவர்களானதால், உங்களை என் இருதயத்தில் தரித்துக்கொண்டிருக்கிறபடியினாலே, உங்களெல்லாரையுங் குறித்து நான் இப்படி நினைக்கிறது எனக்குத் தகுதியாயிருக்கிறது. 8 இயேசுகிறிஸ்துவின் உருக்கமான அன்பிலே உங்களெல்லார்மேலும் எவ்வளவோ வாஞ்சையாயிருக்கிறேன் என்பதற்குத் தேவனே எனக்குச் சாட்சி. 9 மேலும், உத்தமமானவைகளை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தக்கதாக உங்கள் அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் இன்னும் அதிகமதிகமாய்ப் பெருகவும், 10 தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசுகிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால் நிறைந்தவர்களாகி, 11 நீங்கள் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்புரவானவர்களும் இடறலற்றவர்களுமாயிருக்கவும் வேண்டுதல் செய்கிறேன். 12 சகோதரரே, எனக்குச் சம்பவித்தவைகள் சுவிசேஷம் பிரபலமாகும்படிக்கு ஏதுவாயிற்றென்று நீங்கள் அறிய மனதாயிருக்கிறேன். 13 அரமனை யெங்குமுள்ளவர்களுக்கும் மற்ற யாவருக்கும் என் கட்டுகள் கிறிஸ்துவுக்குள்ளான கட்டுகளென்று வெளியரங்கமாகி, 14 சகோதரரில் அநேகர் என் கட்டுகளாலே கர்த்தருக்குள் திடன்கொண்டு பயமில்லாமல் திருவசனத்தைச் சொல்லும்படி அதிகமாய்த் துணிந்திருக்கிறார்கள். 15 சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதினாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள். 16 சிலர் என் கட்டுகளோடே உபத்திரவத்தையுங்கூட்ட நினைத்து, சுத்தமனதோடே கிறிஸ்துவை அறிவியாமல், விரோதத்தினாலே அறிவிக்கிறார்கள். 17 சுவிசேஷத்திற்காக நான் உத்தரவு சொல்ல ஏற்படுத்தப்பட்டவனென்று அறிந்து, சிலர் அன்பினாலே அறிவிக்கிறார்கள். 18 இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன். 19 அது உங்கள் வேண்டுதலினாலும் இயேசுகிறிஸ்துவினுடைய ஆவியின் உதவியினாலும் எனக்கு இரட்சிப்பாக முடியுமென்று அறிவேன். 20 நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல், எப்பொழுதும்போல இப்பொழுதும், மிகுந்த தைரியத்தோடே ஜீவனாலாகிலும், சாவினாலாகிலும், கிறிஸ்து என் சரீரத்தினாலே மகிமைப்படுவாரென்று எனக்கு உண்டாயிருக்கிற வாஞ்சைக்கும் நம்பிக்கைக்கும் தக்கதாய், அப்படி முடியும். 21 கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம். 22 ஆகிலும் சரீரத்தில் பிழைத்திருக்கிறதினாலே என் கிரியைக்குப் பலனுண்டாயிருப்பதால், நான் தெரிந்துகொள்ளவேண்டியது இன்னதென்று அறியேன். 23 ஏனெனில் இவ்விரண்டினாலும் நான் நெருக்கப்படுகிறேன்; தேகத்தைவிட்டுப் பிரிந்து, கிறிஸ்துவுடனேகூட இருக்க எனக்கு ஆசையுண்டு, அது அதிக நன்மையாயிருக்கும்; 24 அப்படியிருந்தும், நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு அதிக அவசியம். 25 இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மறுபடியும் உங்களிடத்தில் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவுக்குள் பெருகும்படிக்கு, 26 உங்கள் விசுவாசத்தின் வர்த்தனைக்காகவும் சந்தோஷத்துக்காகவும் நான் பிழைத்து, உங்கள் அனைவரோடுங்கூட இருப்பேனென்று அறிந்திருக்கிறேன். 27 நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராக மாத்திரம் நடந்துகொள்ளுங்கள். 28 நீங்கள் மருளாதிருக்கிறது அவர்கள் கெட்டுப்போகிறதற்கும், நீங்கள் இரட்சிக்கப்படுகிறதற்கும் அத்தாட்சியாயிருக்கிறது; இதுவும் தேவனுடைய செயலே. 29 ஏனெனில் கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்குமாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. 30 நீங்கள் என்னிடத்திலே கண்டதும் எனக்கு உண்டென்று இப்பொழுது கேள்விப்படுகிறதுமான போராட்டமே உங்களுக்கும் உண்டு.

பிலிப்பியர் 2

1 ஆதலால் கிறிஸ்துவுக்குள் யாதொரு ஆறுதலும், அன்பினாலே யாதொரு தேறுதலும், ஆவியின் யாதொரு ஐக்கியமும், யாதொரு உருக்கமான பட்சமும் இரக்கங்களும் உண்டானால், 2 நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள். 3 ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். 4 அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. 5 கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; 6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், 7 தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். 8 அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். 9 ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, 10 இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், 11 பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். 12 ஆதலால், எனக்குப் பிரியமானவர்களே, நீங்கள் எப்பொழுதும் கீழ்ப்படிகிறபடியே, நான் உங்களுக்குச் சமீபமாயிருக்கும்பொழுது மாத்திரமல்ல, நான் தூரமாயிருக்கிற இப்பொழுதும், அதிக பயத்தோடும் நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்படுங்கள். 13 ஏனெனில் தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் உண்டாக்குகிறவராயிருக்கிறார். 14 நான் வீணாக ஓடினதும் வீணாகப் பிரயாசப்பட்டதுமில்லையென்கிற மகிழ்ச்சி கிறிஸ்துவின் நாளில் எனக்கு உண்டாயிருப்பதற்கு, ஜீவவசனத்தைப் பிடித்துக்கொண்டு, உலகத்திலே சுடர்களைப்போலப் பிரகாசிக்கிற நீங்கள், 15 கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கபடற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளுமாயிருக்கும்படிக்கு, 16 எல்லாவற்றையும் முறுமுறுப்பில்லாமலும் தர்க்கிப்பில்லாமலும் செய்யுங்கள். 17 மேலும், உங்கள் விசுவாசமாகிய பலியின்மேலும் ஊழியத்தின்மேலும் நான் வார்க்கப்பட்டுப்போனாலும், நான் மகிழ்ந்து, உங்களனைவரோடுங்கூடச் சந்தோஷப்படுவேன். 18 இதினிமித்தம் நீங்களும் மகிழ்ந்து, என்னோடேகூடச் சந்தோஷப்படுங்கள். 19 அன்றியும், நானும் உங்கள் செய்திகளை அறிந்து மனத்தேறுதல் அடையும்படிக்குச் சீக்கிரமாய்த் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்பியிருக்கிறேன். 20 அதேனென்றால், உங்கள் காரியங்களை உண்மையாய் விசாரிக்கிறதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வேறொருவனும் என்னிடத்திலில்லை. 21 மற்றவர்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குரியவைகளைத் தேடாமல், தங்களுக்குரியவைகளையே தேடுகிறார்கள். 22 தகப்பனுக்குப் பிள்ளை ஊழியஞ்செய்வதுபோல, அவன் என்னுடனேகூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியஞ்செய்தானென்று அவனுடைய உத்தமகுணத்தை அறிந்திருக்கிறீர்கள். 23 ஆகையால் என் காரியங்கள் இன்னபடி நடக்கும் என்று நான் அறிந்தவுடனே அவனை அனுப்பலாமென்று நினைத்திருக்கிறேன். 24 அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேனென்று கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறேன். 25 மேலும், என் சகோதரனும், உடன்வேலையாளும், உடன்சேவகனும், உங்கள் ஸ்தானாபதியும், என் குறைச்சலுக்கு உதவிசெய்தவனுமான எப்பாப்பிரோதீத்துவை உங்களிடத்தில் அனுப்பவேண்டுமென்று எண்ணினேன். 26 அவன் உங்கள் எல்லார்மேலும் வாஞ்சையுள்ளவனும், தான் வியாதிப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டதினாலே மிகவும் வியாகுலப்படுகிறவனுமாயிருந்தான். 27 அவன் வியாதிப்பட்டு மரணத்திற்குச் சமீபமாயிருந்தது மெய்தான். ஆகிலும், தேவன் அவனுக்கு இரங்கினார்; அவனுக்கு இரங்கினதுமல்லாமல், துக்கத்தின்மேல் துக்கம் எனக்கு உண்டாகாதபடிக்கு, எனக்கும் இரங்கினார். 28 ஆகையால் நீங்கள் அவனை மறுபடியும் கண்டு சந்தோஷப்படவும், என் துக்கங் குறையவும், அவனை அதிசீக்கிரமாய் அனுப்பினேன். 29 ஆனபடியினாலே நீங்கள் கர்த்தருக்குள் மிகுந்த சந்தோஷத்தோடே அவனை ஏற்றுக்கொண்டு, இப்படிப்பட்டவர்களைக் கனமாய் எண்ணுங்கள். 30 ஏனெனில் நீங்கள் எனக்குச் செய்யவேண்டிய ஊழியத்திலே உங்கள் குறைவை நிறைவாக்கும்படிக்கு, அவன் தன் பிராணனையும் எண்ணாமல், கிறிஸ்துவின் ஊழியத்தினிமித்தம் மரணத்திற்குச் சமீபமாயிருந்தான்.

பிலிப்பியர் 3

1 மேலும், என் சகோதரரே, கர்த்தருக்குள் சந்தோஷப்படுங்கள். எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல, அது உங்களுக்கு நலமாயிருக்கும். 2 நாய்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், பொல்லாத வேலையாட்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள், சுன்னத்துக்காரருக்கு எச்சரிக்கையாயிருங்கள். 3 ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள். 4 மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைக்கவேண்டுமானால் நானும் வைக்கலாம்; வேறொருவன் மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிருக்க நினைத்தால் நான் அதிகமாய் அப்படிச் செய்யலாம். 5 நான் எட்டாம் நாளில் விருத்தசேதனமடைந்தவன், இஸ்ரவேல் வம்சத்தான், பென்யமீன் கோத்திரத்தான், எபிரெயரில் பிறந்த எபிரெயன், நியாயப்பிரமாணத்தின்படி பரிசேயன்; 6 பக்திவைராக்கியத்தின்படி சபையைத் துன்பப்படுத்தினவன், நியாயப்பிரமாணத்திற்குரிய நீதியின்படி குற்றஞ்சாட்டப்படாதவன். 7 ஆகிலும், எனக்கு லாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணினேன். 8 அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். 9 நான் கிறிஸ்துவை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கும், நியாயப்பிரமாணத்தினால் வருகிற சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினால் வருகிறதும் விசுவாசமூலமாய்த் தேவனால் உண்டாயிருக்கிறதுமான நீதியை உடையவனாயிருந்து, கிறிஸ்துவுக்குள் இருக்கிறவனென்று காணப்படும்படிக்கும், 10 இப்படி நான் அவரையும் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், 11 அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன். 12 நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன். 13 சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை; ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, 14 கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன். 15 ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார். 16 ஆகிலும் நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக. 17 சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின்பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழிகாட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள். 18 ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். 19 அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். 20 நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். 21 அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.

பிலிப்பியர் 4

1 ஆதலால், எனக்குப் பிரியமும் வாஞ்சையுமான சகோதரரே, எனக்குச் சந்தோஷமும் கிரீடமுமானவர்களே, பிரியமானவர்களே, இந்தப்படியே கர்த்தருக்குள் நிலைத்திருங்கள். 2 கர்த்தருக்குள் ஒரே சிந்தையாயிருக்க எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் புத்திசொல்லுகிறேன். 3 அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது. 4 கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன். 5 உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார். 6 நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். 7 அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும். 8 கடைசியாக, சகோதரரே, உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள். 9 நீங்கள் என்னிடத்தில் கற்றும் அடைந்தும் கேட்டும் கண்டும் இருக்கிறவைகளெவைகளோ, அவைகளையே செய்யுங்கள்; அப்பொழுது சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார். 10 என்னை விசாரிப்பதற்கு நீங்கள் இப்பொழுது மறுபடியும் மனமலர்ந்தபடியினாலே கர்த்தருக்குள் மிகவும் சந்தோஷப்பட்டேன்; இப்படிச் செய்ய எண்ணங்கொண்டிருந்தீர்கள், சமயம்மாத்திரம் உங்களுக்கு நேரிடவில்லை. 11 என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன். 12 தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். 13 என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. 14 ஆகிலும் நீங்கள் என் உபத்திரவத்தில் என்னோடே உடன்பட்டது நலமாயிருக்கிறது. 15 மேலும், பிலிப்பியரே, சுவிசேஷத்தின் ஆரம்பத்திலே நான் மக்கெதோனியாவிலிருந்து புறப்பட்டபோது, கொடுக்கல் வாங்கல் காரியத்தில் நீங்கள்மாத்திரம் எனக்கு உடன்பட்டதேயல்லாமல், வேறொரு சபையும் உடன்படவில்லை என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 16 நான் தெசலோனிக்கேயிலிருந்தபோதும், என் குறைச்சலை நீக்கும்படி நீங்கள் இரண்டொருதரம் அனுப்பினீர்கள். 17 உபகாரத்தை நான் நாடாமல், உங்கள் கணக்குக்குப் பலன் பெருகும்படியே நாடுகிறேன். 18 எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்த வாசனையும் தேவனுக்குப் பிரியமான உகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன். 19 என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார். 20 நம்முடைய பிதாவாகிய தேவனானவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். 21 கிறிஸ்து இயேசுவுக்குள்ளான பரிசுத்தவான்கள் யாவருக்கும் வாழ்த்துதல் சொல்லுங்கள். என்னோடிருக்கிற சகோதரர்கள் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 22 பரிசுத்தவான்கள் அனைவரும், விசேஷமாக இராயனுடைய அரமனையிலுள்ளவர்களும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 23 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

கொலோசெயர் 1

1 தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், 2 கொலோசெ பட்டணத்தில் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களும் விசுவாசிகளுமாயிருக்கிற சகோதரர்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 3 கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தையும், பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள உங்கள் அன்பையுங்குறித்து நாங்கள் கேள்விப்பட்டு, 4 பரலோகத்தில் உங்களுக்காக வைத்திருக்கிற நம்பிக்கையினிமித்தம், 5 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தி, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டுதல் செய்கிறோம். 6 அந்த நம்பிக்கையைக்குறித்து, நீங்கள் முன்னமே சத்தியவசனமாகிய சுவிசேஷத்தினாலே கேள்விப்பட்டீர்கள்; அந்தச் சுவிசேஷம் உலகமெங்கும் பரம்பிப் பலன்தருகிறதுபோல, உங்களிடத்திலும் வந்து, நீங்கள் அதைக் கேட்டு, தேவகிருபையைச் சத்தியத்தின்படி அறிந்துகொண்ட நாள்முதல், அது உங்களுக்குள்ளும் பலன்தருகிறதாயிருக்கிறது; 7 அதை எங்களுக்குப் பிரியமான உடன்வேலையாளும், உங்களுக்காகக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரனுமாயிருக்கிற எப்பாப்பிராவினிடத்தில் நீங்கள் கற்றறிந்திருக்கிறீர்கள்; 8 ஆவிக்குள்ளான உங்கள் அன்பையும் அவனே எங்களுக்குத் தெரியப்படுத்தினான். 9 இதினிமித்தம், நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணுகிறோம்; நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற அறிவினாலே நிரப்பப்படவும், 10 சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற அறிவில் விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பிரியமுண்டாக அவருக்குப் பாத்திரராய் நடந்துகொள்ளவும், 11 சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படவும், உங்களுக்காக வேண்டுதல்செய்கிறோம். 12 ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும், 13 இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம். 14 [குமாரனாகிய] அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. 15 அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். 16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. 17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது. 18 அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர். 19 சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கவும், 20 அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் அவர் மூலமாய்த் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் அவருக்குப் பிரியமாயிற்று. 21 முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயும் இருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார். 22 நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும். 23 அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது; அதற்கென்றே பவுலாகிய நான் ஊழியக்காரனானேன். 24 இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடைந்து, கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன். 25 ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்து, இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்ட இரகசியமாகிய தேவவசனத்தைப் பூரணமாய்த் தெரியப்படுத்துகிறதற்கு, 26 உங்கள்பொருட்டுத் தேவனால் எனக்கு அளிக்கப்பட்ட உத்தியோகத்தின்படியே நான் அந்தச் சபைக்கு ஊழியக்காரனானேன். 27 புறஜாதிகளுக்குள்ளே விளங்கிய இந்த இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரியம் இன்னதென்று, தேவன் தம்முடைய பரிசுத்தவான்களுக்குத் தெரியப்படுத்தச் சித்தமானார்; கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையாக உங்களுக்குள் இருப்பதே அந்த இரகசியம். 28 எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம். 29 அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.

கொலோசெயர் 2

1 உங்களுக்காகவும் லவோதிக்கேயாவிலிருக்கிறவர்களுக்காகவும், சரீரத்தில் என் முகத்தைக் காணாதிருக்கிற மற்றெல்லாருக்காகவும் மிகுந்த போராட்டம் எனக்கு உண்டென்று நீங்கள் அறிய விரும்புகிறேன். 2 அவர்களுடைய இருதயங்கள் தேற்றப்பட்டு, அவர்கள் அன்பினால் இணைக்கப்பட்டு, பிதாவாகிய தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் உரிய இரகசியத்தை அறிந்துகொள்ளுகிற உணர்வின் பூரண நிச்சயத்தினுடைய எல்லா ஐசுவரியத்திற்கும் உரியவர்களாகவேண்டுமென்றே இப்படி விரும்புகிறேன். 3 அவருக்குள் ஞானம் அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்களெல்லாம் அடங்கியிருக்கிறது. 4 ஒருவனும் நயவசனிப்பினாலே உங்களை வஞ்சியாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். 5 சரீரத்தின்படி நான் தூரமாயிருந்தும், ஆவியின்படி உங்களுடனேகூட இருந்து, உங்கள் ஒழுங்கையும், கிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பார்த்துச் சந்தோஷப்படுகிறேன். 6 ஆகையால், நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொண்டபடியே, அவருக்குள் வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, 7 நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக. 8 லௌகிக ஞானத்தினாலும், மாயமான தந்திரத்தினாலும், ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலகவழிபாடுகளையும் பற்றினதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல. 9 ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது. 10 மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள். 11 அல்லாமலும், நீங்கள் கிறிஸ்துவைப்பற்றும் விருத்தசேதனத்தினாலே மாம்சத்துக்குரிய பாவசரீரத்தைக் களைந்துவிட்டதினால், கையால் செய்யப்படாத விருத்தசேதனத்தை அவருக்குள் பெற்றீர்கள். 12 ஞானஸ்நானத்திலே அவரோடேகூட அடக்கம்பண்ணப்பட்டவர்களாகவும், அதிலே அவரை மரித்தோரிலிருந்தெழுப்பின தேவனுடைய செயலின்மேலுள்ள விசுவாசத்தினாலே அவரோடேகூட எழுந்தவர்களாகவும் இருக்கிறீர்கள். 13 உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து; 14 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து; 15 துரைத்தனங்களையும் அதிகாரங்களையும் உரிந்துகொண்டு, வெளியரங்கமான கோலமாக்கி, அவைகளின்மேல் சிலுவையிலே வெற்றிசிறந்தார். 16 ஆகையால், போஜனத்தையும் பானத்தையும் குறித்தாவது, பண்டிகைநாளையும் மாதப்பிறப்பையும் ஓய்வுநாட்களையுங்குறித்தாவது, ஒருவனும் உங்களைக் குற்றப்படுத்தாதிருப்பானாக. 17 அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது. 18 கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப் பற்றிக்கொள்ளாமல், 19 மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள். 20 நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் வழிபாடுகளுக்கு மரித்ததுண்டானால், இன்னும் உலக வழக்கத்தின்படி பிழைக்கிறவர்கள்போல, 21 மனுஷருடைய கற்பனைகளின்படியும் போதனைகளின்படியும் நடந்து: தொடாதே, ருசிபாராதே, தீண்டாதே என்கிற கட்டளைகளுக்கு உட்படுகிறதென்ன? 22 இவையெல்லாம் அநுபவிக்கிறதினால் அழிந்துபோகுமே. 23 இப்படிப்பட்ட போதனைகள் சுய இஷ்டமான ஆராதனையையும், மாயமான தாழ்மையையும், சரீர ஒடுக்கத்தையும்பற்றி ஞானமென்கிற பேர்கொண்டிருந்தாலும், இவைகள் மாம்சத்தைப் பேணுகிறதற்கே ஒழிய மற்றொன்றிற்கும் பிரயோஜனப்படாது.

கொலோசெயர் 3

1 நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள். 2 பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள். 3 ஏனென்றால், நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது. 4 நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள். 5 ஆகையால், விபசாரம், அசுத்தம், மோகம், துர்இச்சை, விக்கிரகாராதனையான பொருளாசை ஆகிய இவைகளைப் பூமியில் உண்டுபண்ணுகிற உங்கள் அவயவங்களை அழித்துப்போடுங்கள். 6 இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும். 7 நீங்களும் முற்காலத்தில் அவர்களுக்குள்ளே சஞ்சரித்தபோது, அவைகளைச் செய்துகொண்டுவந்தீர்கள். 8 இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். 9 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, 10 தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே. 11 அதிலே கிரேக்கனென்றும் யூதனென்றுமில்லை, விருத்தசேதனமுள்ளவனென்றும் விருத்தசேதனமில்லாதவனென்றுமில்லை, புறஜாதியானென்றும் புறதேசத்தானென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை; கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாயிருக்கிறார். 12 ஆகையால், நீங்கள் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட பரிசுத்தரும் பிரியருமாய், உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; 13 ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர்பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். 14 இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள். 15 தேவசமாதானம் உங்கள் இருதயங்களில் ஆளக்கடவது, இதற்கென்றே நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள்; நன்றியறிதலுள்ளவர்களாயுமிருங்கள். 16 கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் பரிபூரணமாக வாசமாயிருப்பதாக; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் போதித்துப் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்திலே கர்த்தரைப் பக்தியுடன் பாடி; 17 வார்த்தையினாலாவது கிரியையினாலாவது, நீங்கள் எதைச் செய்தாலும், அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள். 18 மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள். 19 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்துகொள்ளாதிருங்கள். 20 பிள்ளைகளே, உங்களைப் பெற்றாருக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படியுங்கள்; இது கர்த்தருக்குப் பிரியமானது. 21 பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடனற்றுப்போகாதபடி, அவர்களுக்குக் கோபமூட்டாதிருங்கள். 22 வேலைக்காரரே, சரீரத்தின்படி உங்கள் எஜமான்களாயிருக்கிறவர்களுக்கு எல்லாக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்து, நீங்கள் மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், தேவனுக்குப் பயப்படுகிறவர்களாகக் கபடமில்லாத இருதயத்தோடே ஊழியஞ்செய்யுங்கள். 23 நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, 24 எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். 25 அநியாயஞ்செய்கிறவன் தான் செய்த அநியாயத்துக்கேற்ற பலனை அடைவான்; பட்சபாதமே இல்லை.

கொலோசெயர் 4

1 எஜமான்களே, உங்களுக்கும் பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று அறிந்து, வேலைக்காரருக்கு நீதியும் செவ்வையுமானதைச் செய்யுங்கள். 2 இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள். 3 கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டியபிரகாரமாய்ப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு, 4 திருவசனம் செல்லும்படியான வாசலைத் தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள். 5 புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள். 6 அவனவனுக்கு இன்னின்னபடி உத்தரவு சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்கள் வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாயும் உப்பால் சாரமேறினதாயுமிருப்பதாக. 7 பிரியமான சகோதரனும், உண்மையுள்ள ஊழியக்காரனும், கர்த்தருக்குள் எனக்கு உடன்வேலையாளுமாயிருக்கிற தீகிக்கு என்பவன் என் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான். 8 உங்கள் செய்திகளை அறியவும், உங்கள் இருதயங்களைத் தேற்றவும், 9 அவனையும், உங்களிலொருவனாயிருக்கிற உண்மையும் பிரியமுமுள்ள சகோதரனாகிய ஒநேசிமு என்பவனையும், உங்களிடத்தில் அனுப்பியிருக்கிறேன்; அவர்கள் இவ்விடத்துச் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள். 10 என்னோடேகூடக் காவலிலிருக்கிற அரிஸ்தர்க்கு உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; பர்னபாவுக்கு இனத்தானாகிய மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறான், இவனைக்குறித்துக் கட்டளைபெற்றீர்களே; இவன் உங்களிடத்தில் வந்தால் இவனை அங்கிகரித்துக்கொள்ளுங்கள். 11 யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான். விருத்தசேதனமுள்ளவர்களில் இவர்கள்மாத்திரம் தேவனுடைய ராஜ்யத்தின்பொருட்டு என் உடன்வேலையாட்களாயிருந்து, எனக்கு ஆறுதல் செய்துவந்தவர்கள். 12 எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகளெல்லாவற்றிலும் தேறினவர்களாயும் பூரண நிச்சயமுள்ளவர்களாயும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான். 13 இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த ஜாக்கிரதையுள்ளவனாயிருக்கிறானென்பதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன். 14 பிரியமான வைத்தியனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 15 லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரரையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள். 16 இந்த நிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லவோதிக்கேயாவிலிருந்து வரும் நிருபத்தை நீங்களும் வாசியுங்கள். 17 அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாயிருப்பாயாகவென்று சொல்லுங்கள். 18 பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

1 தெசலோனிக்கேயர் 1

1 பவுலும், சில்வானும், தீமோத்தேயும், பிதாவாகிய தேவனுக்குள்ளும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 2 தேவனுக்குப் பிரியமான சகோதரரே, உங்கள் விசுவாசத்தின் கிரியையையும், உங்கள் அன்பின் பிரயாசத்தையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள உங்கள் நம்பிக்கையின் பொறுமையையும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குமுன்பாக நாங்கள் இடைவிடாமல் நினைவுகூர்ந்து, 3 நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து, 4 எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். 5 எங்கள் சுவிசேஷம் உங்களிடத்தில் வசனத்தோடேமாத்திரமல்ல, வல்லமையோடும், பரிசுத்த ஆவியோடும், முழு நிச்சயத்தோடும் வந்தது; நாங்களும் உங்களுக்குள்ளே இருந்தபோது உங்கள்நிமித்தம் எப்படிப்பட்டவர்களாயிருந்தோமென்று அறிந்திருக்கிறீர்களே. 6 நீங்கள் மிகுந்த உபத்திரவத்திலே, பரிசுத்த ஆவியின் சந்தோஷத்தோடே, திருவசனத்தை ஏற்றுக்கொண்டு, எங்களையும் கர்த்தரையும் பின்பற்றுகிறவர்களாகி, 7 இவ்விதமாய் மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ள விசுவாசிகள் யாவருக்கும் மாதிரிகளானீர்கள். 8 எப்படியெனில், உங்களிடத்திலிருந்து கர்த்தருடைய வசனம் மக்கெதோனியாவிலும் அகாயாவிலும் தொனித்ததுமல்லாமல், நாங்கள் அதைக்குறித்து ஒன்றும் சொல்லவேண்டியதாயிராதபடிக்கு, தேவனைப்பற்றின உங்கள் விசுவாசம் எங்கும் பிரசித்தமாயிற்று. 9 ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டுத் தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், 10 அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே.

1 தெசலோனிக்கேயர் 2

1 சகோதரரே, நாங்கள் உங்களிடத்தில் பிரவேசித்தது வீணாயிருக்கவில்லையென்று நீங்களே அறிந்திருக்கிறீர்கள். 2 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, முன்னே பிலிப்பிபட்டணத்திலே நாங்கள் பாடுபட்டு நிந்தையடைந்திருந்தும், வெகு போராட்டத்தோடே தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குச் சொல்லும்படி, நம்முடைய தேவனுக்குள் தைரியங்கொண்டிருந்தோம். 3 எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையினாலும் உண்டாகவில்லை, அது கபடமுள்ளதாயுமிருக்கவில்லை. 4 சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம். 5 உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை; தேவனே சாட்சி. 6 நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலராக உங்களுக்குப் பாரமாயிருக்கக் கூடியவர்களானாலும், உங்களிடத்திலாவது, மற்றவர்களிடத்திலாவது, மனுஷரால் வரும் மகிமையை நாங்கள் தேடவில்லை. 7 உங்களிடத்தில் பட்சமாய் நடந்துகொண்டோம்; பால் கொடுக்கிற தாயானவள் தன் பிள்ளைகளைக் காப்பாற்றுகிறதுபோல, 8 நாங்கள் உங்கள்மேல் வாஞ்சையாயிருந்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களுக்குக் கொடுத்ததுமல்லாமல், நீங்கள் எங்களுக்குப் பிரியமானவர்களானபடியினாலே, எங்கள் ஜீவனையும் உங்களுக்குக் கொடுக்க மனதாயிருந்தோம். 9 சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம். 10 விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையுமாய் நடந்தோமென்பதற்கு நீங்களும் சாட்சி, தேவனும் சாட்சி. 11 மேலும், தம்முடைய ராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைத்த தேவனுக்கு நீங்கள் பாத்திரராய் நடக்கவேண்டுமென்று, 12 தகப்பன் தன் பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல, நாங்கள் உங்களில் ஒவ்வொருவனுக்கும் புத்தியும் தேறுதலும் எச்சரிப்பும் சொன்னதை அறிந்திருக்கிறீர்கள். 13 ஆகையால், நீங்கள் தேவவசனத்தை எங்களாலே கேள்விப்பட்டு ஏற்றுக்கொண்டபோது, அதை மனுஷர் வசனமாக ஏற்றுக்கொள்ளாமல், தேவவசனமாகவே ஏற்றுக்கொண்டதினாலே நாங்கள் இடைவிடாமல் தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறோம்; அது மெய்யாகவே தேவவசனந்தான், விசுவாசிக்கிற உங்களுக்குள்ளே அது பெலனும் செய்கிறது. 14 எப்படியெனில், சகோதரரே, யூதேயா தேசத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள்ளான தேவனுடைய சபைகளை நீங்கள் பின்பற்றினவர்களாகி, அவர்கள் யூதராலே எப்படிப் பாடுபட்டார்களோ, அப்படியே நீங்களும் உங்கள் சுய ஜனங்களாலே பாடுபட்டீர்கள். 15 அந்த யூதர்கள் கர்த்தராகிய இயேசுவையும், தங்கள் தீர்க்கதரிசிகளையும் கொலைசெய்தவர்களும், எங்களைத் துன்பப்படுத்தினவர்களும், தேவனுக்கேற்காதவர்களும், மனுஷர் யாவருக்கும் விரோதிகளுமாயிருந்து, 16 புறஜாதியார் இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் அவர்களோடே பேசாதபடிக்குத் தடைபண்ணுகிறார்கள்; இவ்விதமாய் எக்காலத்திலும் தங்கள் பாவங்களை நிறைவாக்குகிறார்கள்; அவர்கள்மேல் கோபாக்கினை பூரணமாய் வந்திருக்கிறது. 17 சகோதரரே, நாங்கள் இருதயத்தின்படி உங்களோடிருந்து, சரீரத்தின்படி கொஞ்சக்காலம் உங்களைவிட்டுப் பிரிந்திருந்தபடியினாலே, உங்கள் முகத்தைப் பார்க்கவேண்டுமென்று மிகுந்த ஆசையோடே அதிகமாய்ப் பிரயத்தனம்பண்ணினோம். 18 ஆகையால், நாங்கள் உங்களிடத்தில் வர இரண்டொருதரம் மனதாயிருந்தோம், பவுலாகிய நானே வர மனதாயிருந்தேன்; சாத்தானோ எங்களைத் தடைபண்ணினான். 19 எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்; 20 நீங்களே எங்களுக்கு மகிமையும் சந்தோஷமுமாயிருக்கிறீர்கள்.

1 தெசலோனிக்கேயர் 3

1 ஆகையால், நாங்கள் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், அத்தேனே பட்டணத்தில் தனித்துவிடப்படுகிறது நன்மையென்று நினைத்து, 2 இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம். 3 இப்படிப்பட்ட உபத்திரவங்களைச் சகிக்க நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே. 4 நமக்கு உபத்திரவம் வருமென்று நாங்கள் உங்களிடத்திலிருந்தபோது, உங்களுக்கு முன்னறிவித்தோம்; அப்படியே வந்து நேரிட்டதென்றும் அறிந்திருக்கிறீர்கள். 5 ஆகையால், நான் இனிப் பொறுத்திருக்கக்கூடாமல், எங்கள் வேலை வீணாய்ப் போகத்தக்கதாகச் சோதனைக்காரன் உங்களைச் சோதனைக்குட்படுத்தினதுண்டோவென்று, உங்கள் விசுவாசத்தை அறியும்படிக்கு, அவனை அனுப்பினேன். 6 இப்பொழுது தீமோத்தேயு உங்களிடத்திலிருந்து எங்களிடத்தில் வந்து, உங்கள் விசுவாசத்தையும் அன்பையும் குறித்தும், நீங்கள் எப்பொழுதும் எங்களைப் பட்சமாய் நினைத்துக்கொண்டு, நாங்கள் உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறதுபோல நீங்களும் எங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறீர்களென்பதைக்குறித்தும், எங்களுக்கு நற்செய்தி சொன்னதினாலே, 7 சகோதரரே, எங்களுக்கு நேரிட்ட எல்லா இக்கட்டிலும் உபத்திரவத்திலும் உங்கள் விசுவாசத்தினாலே உங்களைக்குறித்து ஆறுதலடைந்தோம். 8 நீங்கள் கர்த்தருக்குள் நிலைத்திருந்தால் நாங்கள் பிழைத்திருப்போம். 9 மேலும், நம்முடைய தேவனுக்கு முன்பாக நாங்கள் உங்களைக்குறித்து அடைந்திருக்கிற மிகுந்த சந்தோஷத்திற்காக, நாங்கள் தேவனுக்கு எவ்விதமாய் ஸ்தோத்திரம் செலுத்துவோம்? 10 உங்கள் முகத்தைக் கண்டு, உங்கள் விசுவாசத்தின் குறைவுகளை நிறைவாக்கும்பொருட்டு, இரவும் பகலும் மிகவும் வேண்டிக்கொள்ளுகிறோமே. 11 நம்முடைய பிதாவாகிய தேவனும் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் உங்களிடத்திற்கு எங்களை நேராக வழிநடத்துவாராக. 12 நாங்கள் உங்களிடத்தில் வைத்திருக்கிற அன்புக்கொப்பாய், நீங்களும் ஒருவரிடத்தில் ஒருவர் வைக்கும் அன்பிலும் மற்றெல்லா மனுஷரிடத்தில் வைக்கும் அன்பிலும் கர்த்தர் உங்களைப் பெருகவும் நிலைத்தோங்கவும் செய்து, 13 இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக.

1 தெசலோனிக்கேயர் 4

1 அன்றியும், சகோதரரே, நீங்கள் இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் வேண்டுமென்று, நீங்கள் எங்களால் கேட்டு ஏற்றுக்கொண்டபடியே, அதிகமதிகமாய்த் தேறும்படிக்கு, கர்த்தராகிய இயேசுவுக்குள் உங்களை வேண்டிக்கொண்டு புத்திசொல்லுகிறோம். 2 கர்த்தராகிய இயேசுவினாலே நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை அறிந்திருக்கிறீர்களே. 3 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து, 4 தேவனை அறியாத அஞ்ஞானிகளைப்போல மோக இச்சைக்குட்படாமல், 5 உங்களில் அவனவன் தன்தன் சரீர பாண்டத்தைப் பரிசுத்தமாயும் கனமாயும் ஆண்டுகொள்ளும்படி அறிந்து: 6 இந்த விஷயத்தில் ஒருவனும் மீறாமலும் தன் சகோதரனை வஞ்சியாமலும் இருக்கவேண்டும்; முன்னமே நாங்கள் உங்களுக்குச் சொல்லி, சாட்சியாக எச்சரித்தபடியே இப்படிப்பட்ட விஷயங்களெல்லாவற்றையுங்குறித்துக் கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவராயிருக்கிறார். 7 தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார். 8 ஆகையால் அசட்டைபண்ணுகிறவன் மனுஷரை அல்ல, தமது பரிசுத்தஆவியை நமக்குத் தந்தருளின தேவனையே அசட்டைபண்ணுகிறான். 9 சகோதர சிநேகத்தைக்குறித்து நான் உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை; நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்குத் தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கிறீர்களே. 10 அந்தப்படி நீங்கள் மக்கெதோனியா நாடெங்குமுள்ள சகோதரரெல்லாருக்கும் செய்துவருகிறீர்கள். சகோதரரே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்; 11 புறம்பேயிருக்கிறவர்களைப் பற்றி யோக்கியமாய் நடந்து, ஒன்றிலும் உங்களுக்குக் குறைவில்லாதிருக்கும்படிக்கு, 12 நாங்கள் உங்களுக்குக் கட்டளையிட்டபடியே, அமைதலுள்ளவர்களாயிருக்கும்படி நாடவும், உங்கள் சொந்த அலுவல்களைப் பார்க்கவும், உங்கள் சொந்தக் கைகளினாலே வேலைசெய்யவும் வேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம். 13 அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. 14 இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார். 15 கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது: கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு முந்திக்கொள்வதில்லை. 16 ஏனெனில், கர்த்தர் தாமே ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். 17 பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். 18 ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்.

1 தெசலோனிக்கேயர் 5

1 சகோதரரே, இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை. 2 இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள். 3 சமாதானமும் சவுக்கியமும் உண்டென்று அவர்கள் சொல்லும்போது, கர்ப்பவதியானவளுக்கு வேதனை வருகிறதுபோல, அழிவு சடிதியாய் அவர்கள்மேல் வரும்; அவர்கள் தப்பிப்போவதில்லை. 4 சகோதரரே, அந்த நாள் திருடனைப்போல உங்களைப் பிடித்துக்கொள்ளத்தக்கதாக, நீங்கள் அந்தகாரத்திலிருக்கிறவர்களல்லவே. 5 நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே. 6 ஆகையால், மற்றவர்கள் தூங்குகிறதுபோல நாம் தூங்காமல், விழித்துக்கொண்டு தெளிந்தவர்களாயிருக்கக்கடவோம். 7 தூங்குகிறவர்கள் இராத்திரியிலே தூங்குவார்கள்; வெறிகொள்ளுகிறவர்கள் இராத்திரியிலே வெறிகொள்ளுவார்கள். 8 பகலுக்குரியவர்களாகிய நாமோ தெளிந்தவர்களாயிருந்து, விசுவாசம் அன்பு என்னும் மார்க்கவசத்தையும், இரட்சிப்பின் நம்பிக்கையென்னும் தலைச்சீராவையும் தரித்துக்கொண்டிருக்கக்கடவோம். 9 தேவன் நம்மைக் கோபாக்கினைக்கென்று நியமிக்காமல், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் இரட்சிப்படைவதற்கென்று நியமித்தார். 10 நாம் விழித்திருப்பவர்களானாலும், நித்திரையடைந்தவர்களானாலும், தம்முடனேகூட நாம் ஏகமாய்ப் பிழைத்திருக்கும்படி அவர் நமக்காக மரித்தாரே. 11 ஆகையால் நீங்கள் செய்துவருகிறபடியே, ஒருவரையொருவர் தேற்றி, ஒருவருக்கொருவர் பக்திவிருத்தி உண்டாகும்படி செய்யுங்கள். 12 அன்றியும், சகோதரரே, உங்களுக்குள்ளே பிரயாசப்பட்டு, கர்த்தருக்குள் உங்களை விசாரணைசெய்கிறவர்களாயிருந்து, உங்களுக்குப் புத்திசொல்லுகிறவர்களை நீங்கள் மதித்து, 13 அவர்களுடைய கிரியையினிமித்தம் அவர்களை மிகவும் அன்பாய் எண்ணிக்கொள்ளும்படி உங்களை வேண்டிக்கொள்ளுகிறோம். உங்களுக்குள்ளே சமாதானமாயிருங்கள். 14 மேலும், சகோதரரே, நாங்கள் உங்களுக்குப் போதிக்கிறதென்னவென்றால், ஒழுங்கில்லாதவர்களுக்குப் புத்திசொல்லுங்கள், திடனற்றவர்களைத் தேற்றுங்கள், பலவீனரைத் தாங்குங்கள், எல்லாரிடத்திலும் நீடிய சாந்தமாயிருங்கள். 15 ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற யாவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய நாடுங்கள். 16 எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். 17 இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள். 18 எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக்குறித்துத் தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 19 ஆவியை அவித்துப்போடாதிருங்கள். 20 தீர்க்கதரிசனங்களை அற்பமாயெண்ணாதிருங்கள். 21 எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள். 22 பொல்லாங்காய்த் தோன்றுகிற எல்லாவற்றையும் விட்டு விலகுங்கள். 23 சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. 24 உங்களை அழைக்கிறவர் உண்மையுள்ளவர், அவர் அப்படியே செய்வார். 25 சகோதரரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள். 26 சகோதரரெல்லாரையும் பரிசுத்த முத்தத்தோடே வாழ்த்துங்கள். 27 இந்த நிருபம் பரிசுத்தமான சகோதரர் யாவருக்கும் வாசிக்கப்படும்படி செய்யவேண்டுமென்று கர்த்தர்பேரில் ஆணையிட்டு உங்களுக்குச் சொல்லுகிறேன். 28 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்.

2 தெசலோனிக்கேயர் 1

1 பவுலும், சில்வானும், தீமோத்தேயும், நம்முடைய பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள்ளும் இருக்கிற தெசலோனிக்கேயர் சபைக்கு எழுதுகிறதாவது: 2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 3 சகோதரரே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காகத் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்; உங்கள் விசுவாசம் மிகவும் பெருகுகிறபடியினாலும், நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரிக்கிறபடியினாலும், அப்படிச் செய்கிறது தகுதியாயிருக்கிறது. 4 நீங்கள் சகிக்கிற சகல துன்பங்களிலும் உபத்திரவங்களிலும் பொறுமையையும் விசுவாசத்தையும் காண்பிக்கிறதினிமித்தம் உங்களைக்குறித்து நாங்கள் தேவனுடைய சபைகளில் மேன்மைபாராட்டுகிறோம். 5 நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச்செய்கிறவரென்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது. 6 உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே. 7 தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, 8 கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். 9 அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது, 10 அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். 11 ஆகையால், நம்முடைய தேவனும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் அளிக்கும் கிருபையின்படியே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் உங்களிடத்திலும், நீங்கள் அவரிடத்திலும் மகிமைப்படும்பொருட்டாக; 12 நம்முடைய தேவன் உங்களைத் தமது அழைப்புக்குப் பாத்திரராக்கவும், தமது தயையுள்ள சித்தம் முழுவதையும் விசுவாசத்தின் கிரியையையும் பலமாய் உங்களிடத்தில் நிறைவேற்றவும் வேண்டுமென்று, எப்பொழுதும் உங்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறோம்.

2 தெசலோனிக்கேயர் 2

1 அன்றியும், சகோதரரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து, நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால், 2 ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால், உடனே சஞ்சலப்படாமலும் கலங்காமலும் இருங்கள். 3 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. 4 அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவனென்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான். 5 நான் உங்களிடத்திலிருந்தபோது இவைகளைச் சொன்னது உங்களுக்கு ஞாபகமில்லையா? 6 அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடைசெய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே. 7 அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது. 8 நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார். 9 அந்த அக்கிரமக்காரனுடைய வருகை சாத்தானுடைய செயலின்படி சகல வல்லமையோடும் அடையாளங்களோடும் பொய்யான அற்புதங்களோடும், 10 கெட்டுப்போகிறவர்களுக்குள்ளே அநீதியினால் உண்டாகும் சகலவித வஞ்சகத்தோடும் இருக்கும். இரட்சிக்கப்படத்தக்கதாய்ச் சத்தியத்தின்மேலுள்ள அன்பை அவர்கள் அங்கிகரியாமற்போனபடியால் அப்படி நடக்கும். 11 ஆகையால் சத்தியத்தை விசுவாசியாமல் அநீதியில் பிரியப்படுகிற யாவரும் ஆக்கினைக்குள்ளாக்கப்படும்படிக்கு, 12 அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார். 13 கர்த்தருக்குப் பிரியமான சகோதரரே, நீங்கள் ஆவியினாலே பரிசுத்தமாக்கப்படுகிறதினாலும், சத்தியத்தை விசுவாசிக்கிறதினாலும் இரட்சிப்படையும்படிக்கு, ஆதிமுதல் தேவன் உங்களைத் தெரிந்துகொண்டபடியினாலே, நாங்கள் உங்களைக்குறித்து எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். 14 நீங்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையை அடையும்பொருட்டாக எங்கள் சுவிசேஷத்தினாலே அந்த இரட்சிப்புக்கு அவர் உங்களை அழைத்தார். 15 ஆகையால், சகோதரரே, நீங்கள் நிலைகொண்டு, வார்த்தையினாலாவது நிருபத்தினாலாவது நாங்கள் உங்களுக்கு உபதேசித்த முறைமைகளைக் கைக்கொள்ளுங்கள். 16 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், 17 உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.

2 தெசலோனிக்கேயர் 3

1 கடைசியாக, சகோதரரே, உங்களிடத்தில் கர்த்தருடைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கும், 2 துர்க்குணராகிய பொல்லாத மனுஷர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும், எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; விசுவாசம் எல்லாரிடத்திலுமில்லையே. 3 கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார். 4 மேலும், நாங்கள் கட்டளையிடுகிறவைகளை நீங்கள் செய்துவருகிறீர்களென்றும், இனிமேலும் செய்வீர்களென்றும், உங்களைக்குறித்துக் கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறோம். 5 கர்த்தர் உங்கள் இருதயங்களைத் தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக. 6 மேலும், சகோதரரே, எங்களிடத்தில் ஏற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரனையும் நீங்கள் விட்டு விலக வேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம். 7 இன்னவிதமாய் எங்களைப் பின்பற்ற வேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்று நடவாமலும், 8 ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம். 9 உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேண்டுமென்றே அப்படிச் செய்தோம். 10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே. 11 உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம். 12 இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம். 13 சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள். 14 மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள். 15 ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல், சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள். 16 சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. 17 பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன். 18 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

1 தீமோத்தேயு 1

1 நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல், 2 விசுவாசத்தில் உத்தம குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. 3 வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடும்பொருட்டாக, 4 நான் மக்கெதோனியாவுக்குப் போகும்போது உன்னை எபேசு பட்டணத்திலிருக்க வேண்டிக்கொண்டபடியே செய்வாயாக. 5 கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே. 6 இவைகளைச் சிலர் நோக்காமல் வீண்பேச்சுக்கு இடங்கொடுத்து விலகிப்போனார்கள். 7 தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்புகிறார்கள். 8 ஒருவன் நியாயப்பிரமாணத்தை நியாயப்படி அநுசரித்தால், நியாயப்பிரமாணம் நல்லதென்று அறிந்திருக்கிறோம். 9 எங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் நீதிமானுக்கு விதிக்கப்படாமல், அக்கிரமக்காரருக்கும், அடங்காதவர்களுக்கும், பக்தியில்லாதவர்களுக்கும், பாவிகளுக்கும், அசுத்தருக்கும், சீர்கெட்டவர்களுக்கும், தாய்தகப்பன்மாரை அடிக்கிறவர்களுக்கும், கொலைபாதகருக்கும், 10 வேசிக்கள்ளருக்கும், ஆண்புணர்ச்சிக்காரருக்கும், மனுஷரைத் திருடுகிறவர்களுக்கும், பொய்யருக்கும், பொய்யாணை இடுகிறவர்களுக்கும், 11 நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது. 12 என்னைப் பலப்படுத்துகிற நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னை உண்மையுள்ளவனென்றெண்ணி, இந்த ஊழியத்திற்கு ஏற்படுத்தினபடியால், அவரை ஸ்தோத்திரிக்கிறேன். 13 முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச் செய்தபடியினால் இரக்கம்பெற்றேன். 14 நம்முடைய கர்த்தரின் கிருபை கிறிஸ்து இயேசுவின்மேலுள்ள விசுவாசத்தோடும் அன்போடுங்கூட என்னிடத்தில் பரிபூரணமாய்ப் பெருகிற்று. 15 பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமானது; அவர்களில் பிரதான பாவி நான். 16 அப்படியிருந்தும், நித்திய ஜீவனை அடையும்படி இனிமேல் இயேசுகிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருப்பவர்களுக்குத் திருஷ்டாந்தம் உண்டாகும்பொருட்டுப் பிரதான பாவியாகிய என்னிடத்தில் அவர் எல்லா நீடிய பொறுமையையும் காண்பிக்கும்படிக்கு இரக்கம்பெற்றேன். 17 நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். 18 குமாரனாகிய தீமோத்தேயுவே, உன்னைக்குறித்து முன் உண்டான தீர்க்கதரிசனங்களின்படியே, நீ அவைகளை முன்னிட்டு நல்ல போராட்டம்பண்ணும்படி, இந்தக் கட்டளையை உனக்கு ஒப்புவிக்கிறேன்; நீ விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு. 19 இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள். 20 இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.

1 தீமோத்தேயு 2

1 நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; 2 நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். 3 நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது. 4 எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 5 தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6 எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. 7 இதற்காகவே நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு விசுவாசத்தையும் சத்தியத்தையும் விளங்கப்பண்ணுகிற போதகனாகவும் நியமிக்கப்பட்டிருக்கிறேன்; நான் பொய் சொல்லாமல் கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன். 8 அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன். 9 ஸ்திரீகளும் மயிரைப் பின்னுதலினாலாவது, பொன்னினாலாவது, முத்துக்களினாலாவது, விலையேறப்பெற்ற வஸ்திரத்தினாலாவது தங்களை அலங்கரியாமல், 10 தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும், தெளிந்த புத்தியினாலும், தேவபக்தியுள்ளவர்களென்று சொல்லிக்கொள்ளுகிற ஸ்திரீகளுக்கு ஏற்றபடியே நற்கிரியைகளினாலும், தங்களை அலங்கரிக்கவேண்டும். 11 ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும் அடக்கமுடையவளாயிருந்து, அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். 12 உபதேசம்பண்ணவும், புருஷன்மேல் அதிகாரஞ் செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும். 13 என்னத்தினாலெனில், முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு ஏவாள் உருவாக்கப்பட்டாள். 14 மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். 15 அப்படியிருந்தும், தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும் நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே இரட்சிக்கப்படுவாள்.

1 தீமோத்தேயு 3

1 கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை. 2 ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும். 3 அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து, 4 தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும். 5 ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்? 6 அவன் இறுமாப்படைந்து, பிசாசு அடைந்த ஆக்கினையிலே விழாதபடிக்கு, நூதன சீஷனாயிருக்கக்கூடாது. 7 அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும். 8 அந்தப்படியே, உதவிக்காரரும் இருநாக்குள்ளவர்களாயும், மதுபானப்பிரியராயும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவர்களாயும் இராமல், நல்லொழுக்கமுள்ளவர்களாயும், 9 விசுவாசத்தின் இரகசியத்தைச் சுத்த மனச்சாட்சியிலே காத்துக்கொள்ளுகிறவர்களாயும் இருக்கவேண்டும். 10 மேலும், இவர்கள் முன்னதாகச் சோதிக்கப்படவேண்டும்; குற்றஞ்சாட்டப்படாதவர்களானால் உதவிக்காரராக ஊழியஞ்செய்யலாம். 11 அந்தப்படியே ஸ்திரீகளும் நல்லொழுக்கமுள்ளவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், எல்லாவற்றிலேயும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கவேண்டும். 12 மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும். 13 இப்படி உதவிக்காரருடைய ஊழியத்தை நன்றாய்ச் செய்கிறவர்கள் தங்களுக்கு நல்ல நிலையையும், கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தில் மிகுந்த தைரியத்தையும் அடைவார்கள். 14 நான் உன்னிடத்திற்குச் சீக்கிரமாய் வருவேனென்று நம்பியிருக்கிறேன். 15 தாமதிப்பேனாகில், தேவனுடைய வீட்டிலே நடக்கவேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன்; அந்த வீடு ஜீவனுள்ள தேவனுடைய சபையாய்ச் சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது. 16 அன்றியும், தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார், தேவதூதர்களால் காணப்பட்டார், புறஜாதிகளிடத்தில் பிரசங்கிக்கப்பட்டார், உலகத்திலே விசுவாசிக்கப்பட்டார், மகிமையிலே ஏறெடுத்துக்கொள்ளப்பட்டார்.

1 தீமோத்தேயு 4

1 ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள். 2 விவாகம்பண்ணாதிருக்கவும், 3 விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள். 4 தேவன் படைத்ததெல்லாம் நல்லதாயிருக்கிறது; ஸ்தோத்திரத்தோடே ஏற்றுக்கொள்ளப்படுமாகில் ஒன்றும் தள்ளப்படத்தக்கதல்ல. 5 அது தேவவசனத்தினாலும் ஜெபத்தினாலும் பரிசுத்தமாக்கப்படும். 6 இவைகளை நீ சகோதரருக்குப் போதித்துவந்தால், விசுவாசத்திற்குரிய வார்த்தைகளிலும் நீ அநுசரித்த நற்போதகத்திலும் தேறினவனாகி, இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல ஊழியக்காரனாயிருப்பாய். 7 சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவ பக்திக்கேதுவாக முயற்சிபண்ணு. 8 சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. 9 இந்த வார்த்தை உண்மையும் எல்லா அங்கிகரிப்புக்கும் பாத்திரமுமாயிருக்கிறது. 10 இதினிமித்தம் பிரயாசப்படுகிறோம், நிந்தையும் அடைகிறோம்; ஏனெனில் எல்லா மனுஷருக்கும், விசேஷமாக விசுவாசிகளுக்கும் இரட்சகராகிய ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறோம். 11 இவைகளை நீ கட்டளையிட்டுப் போதித்துக்கொண்டிரு. 12 உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு. 13 நான் வருமளவும் வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு. 14 மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப்பற்றி அசதியாயிராதே. 15 நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு. 16 உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.

1 தீமோத்தேயு 5

1 முதிர்வயதுள்ளவனைக் கடிந்துகொள்ளாமல், அவனைத் தகப்பனைப்போலவும், பாலிய புருஷரைச் சகோதரரைப்போலவும், 2 முதிர்வயதுள்ள ஸ்திரீகளைத் தாய்களைப்போலவும், பாலிய ஸ்திரீகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப்போலவும் பாவித்து, புத்திசொல்லு. 3 உத்தம விதவைகளாகிய விதவைகளைக் கனம்பண்ணு. 4 விதவையானவளுக்குப் பிள்ளைகளாவது, பேரன் பேர்த்திகளாவது இருந்தால், இவர்கள் முதலாவது தங்கள் சொந்தக் குடும்பத்தைத் தேவபக்தியாய் விசாரித்து, பெற்றார் செய்த நன்மைகளுக்குப் பதில் நன்மைகளைச் செய்யக் கற்றுக்கொள்ளக்கடவர்கள்; அது நன்மையும் தேவனுக்கு முன்பாகப் பிரியமுமாயிருக்கிறது. 5 உத்தம விதவையாயிருந்து தனிமையாயிருக்கிறவள் தேவனிடத்தில் நம்பிக்கையுள்ளவளாய், இரவும் பகலும் வேண்டுதல்களிலும் ஜெபங்களிலும் நிலைத்திருப்பாள். 6 சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள். 7 அவர்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி இவைகளைக் கட்டளையிடு. 8 ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான். 9 அறுபது வயதுக்குக் குறையாதவளும், ஒரே புருஷனுக்கு மனைவியாயிருந்தவளுமாகி, 10 பிள்ளைகளை வளர்த்து, அந்நியரை உபசரித்து, பரிசுத்தவான்களுடைய கால்களைக்கழுவி, உபத்திரவப்படுகிறவர்களுக்கு உதவிசெய்து, சகலவித நற்கிரியைகளையும் ஜாக்கிரதையாய் நடப்பித்து, இவ்விதமாய் நற்கிரியைகளைக்குறித்து நற்சாட்சி பெற்றவளுமாயிருந்தால், அப்படிப்பட்ட விதவையையே விதவைகள் கூட்டத்தில் சேர்த்துக்கொள்ளவேண்டும். 11 இளவயதுள்ள விதவைகளை அதிலே சேர்த்துக்கொள்ளாதே; ஏனெனில், அவர்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்க் காமவிகாரங்கொள்ளும்போது விவாகம்பண்ண மனதாகி, 12 முதலில் கொண்டிருந்த விசுவாசத்தை விடுவதினாலே, ஆக்கினைக்குட்படுவார்கள். 13 அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள். 14 ஆகையால் இளவயதுள்ள விதவைகள் விவாகம்பண்ணவும், பிள்ளைகளைப் பெறவும், வீட்டை நடத்தவும், விரோதியானவன் நிந்திக்கிறதற்கு இடமுண்டாக்காமலிருக்கவும் வேண்டுமென்றிருக்கிறேன். 15 ஏனெனில் இதற்குமுன்னே சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள். 16 விசுவாசியாகிய ஒருவனிடத்திலாவது ஒருத்தியிடத்திலாவது விதவைகளிருந்தால், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்யக்கடவர்கள்; சபையானது உத்தம விதவைகளானவர்களுக்கு உதவிசெய்யவேண்டியதாகையால் அந்தப் பாரத்தை அதின்மேல் வைக்கக்கூடாது. 17 நன்றாய் விசாரணைசெய்கிற மூப்பர்களை, விசேஷமாகத் திருவசனத்திலும் உபதேசத்திலும் பிரயாசப்படுகிறவர்களை, இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரராக எண்ணவேண்டும். 18 போரடிக்கிற மாட்டை வாய்கட்டாயாக என்றும், வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றும், வேதவாக்கியம் சொல்லுகிறதே. 19 மூப்பனானவனுக்கு விரோதமாக ஒருவன் செய்யும் பிராதை இரண்டு மூன்று சாட்சிகள் இல்லாமல் நீ ஏற்றுக்கொள்ளக்கூடாது. 20 மற்றவர்களுக்குப் பயமுண்டாகும்படி, பாவஞ்செய்தவர்களை எல்லாருக்கும் முன்பாகக் கடிந்துகொள். 21 நீ பட்சபாதத்தோடே ஒன்றும் செய்யாமலும், விசாரிக்குமுன் நிருணயம்பண்ணாமலும், இவைகளைக் காத்து நடக்கும்படி, தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும், தெரிந்துகொள்ளப்பட்ட தூதருக்கும் முன்பாக, உறுதியாய்க் கட்டளையிடுகிறேன். 22 ஒருவன்மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே; மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே; உன்னைச் சுத்தவானாகக் காத்துக்கொள். 23 நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள். 24 சிலருடைய பாவங்கள் வெளியரங்கமாயிருந்து, நியாயத்தீர்ப்புக்கு முந்திக்கொள்ளும்; சிலருடைய பாவங்கள் அவர்களைப் பின்தொடரும். 25 அப்படியே சிலருடைய நற்கிரியைகளும் வெளியரங்கமாயிருக்கும்; அப்படி இராதவைகளும் மறைந்திருக்கமாட்டாது.

1 தீமோத்தேயு 6

1 தேவனுடைய நாமமும் உபதேசமும் தூஷிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தன நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர் யாவரும் தங்கள் எஜமான்களை எல்லாக் கனத்திற்கும் பாத்திரரென்று எண்ணிக்கொள்ளக்கடவர்கள். 2 விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்கள் எஜமான்கள் சகோதரராயிருக்கிறதினாலே அவர்களை அசட்டைபண்ணாமல், நல்வேலையின் பலனைப் பெற்றுக்கொள்ளுகிற அவர்கள் விசுவாசிகளும் பிரியருமாயிருக்கிறபடியால், அவர்களுக்கு அதிகமாய் ஊழியஞ்செய்யக்கடவர்கள்; இந்தப்படியே போதித்துப் புத்திசொல்லு. 3 ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால், 4 அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும்பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி, 5 கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு. 6 போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். 7 உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டுவந்ததுமில்லை, இதிலிருந்து நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம். 8 உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக் கடவோம். 9 ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். 10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள். 11 நீயோ, தேவனுடைய மனுஷனே, இவைகளை விட்டோடி, நீதியையும் தேவபக்தியையும் விசுவாசத்தையும் அன்பையும் பொறுமையையும் சாந்தகுணத்தையும் அடையும்படி நாடு. 12 விசுவாசத்தின் நல்ல போராட்டத்தைப் போராடு, நித்தியஜீவனைப் பற்றிக்கொள்; அதற்காகவே நீ அழைக்கப்பட்டாய்; அநேக சாட்சிகளுக்கு முன்பாக நல்ல அறிக்கை பண்ணினவனுமாயிருக்கிறாய். 13 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமாகும்வரைக்கும், நீ இந்தக் கற்பனையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள்ளும்படிக்கு, 14 எல்லாவற்றையும் உயிரோடிருக்கச் செய்கிற தேவனுடைய சந்நிதானத்திலேயும், பொந்தியுபிலாத்துவின் முன்னின்று நல்ல அறிக்கையைச் சாட்சியாக விளங்கப்பண்ணின கிறிஸ்து இயேசுவினுடைய சந்நிதானத்திலேயும் உனக்குக் கட்டளையிடுகிறேன். 15 அந்தப் பிரசன்னமாகுதலைத் தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார். அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும், 16 ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென். 17 இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும், 18 நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும், 19 நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு. 20 ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. 21 சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள். கிருபையானது உன்னோடேகூட இருப்பதாக. ஆமென்.

2 தீமோத்தேயு 1

1 கிறிஸ்து இயேசுவினால் உண்டாயிருக்கிற ஜீவனைப்பற்றிய வாக்குத்தத்தத்தின்படி, தேவனுடைய சித்தத்தினாலே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல், 2 பிரியமுள்ள குமாரனாகிய தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: பிதாவாகிய தேவனாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. 3 நான் இரவும் பகலும் இடைவிடாமல் என் ஜெபங்களில் உன்னை நினைத்து, உன் கண்ணீரை ஞாபகம்பண்ணி, சந்தோஷத்தால் நிறையப்படும்படிக்கு உன்னைக் காண வாஞ்சையாயிருந்து, 4 உன்னிலுள்ள மாயமற்ற விசுவாசத்தை நினைவுகூருகிறதினால், என் முன்னோர்கள் முதற்கொண்டு சுத்த மனச்சாட்சியோடே ஆராதித்துவரும் தேவனை நான் ஸ்தோத்திரிக்கிறேன். 5 அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன். 6 இதினிமித்தமாக, நான் உன்மேல் என் கைகளை வைத்ததினால் உனக்கு உண்டான தேவவரத்தை நீ அனல்மூட்டி எழுப்பிவிடும்படி உனக்கு நினைப்பூட்டுகிறேன். 7 தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். 8 ஆகையால் நம்முடைய கர்த்தரைப் பற்றிய சாட்சியைக்குறித்தாவது, அவர் நிமித்தம் கட்டப்பட்டிருக்கிற என்னைக் குறித்தாவது, நீ வெட்கப்படாமல், தேவவல்லமைக்கேற்றபடி சுவிசேஷத்திற்காக என்னோடேகூடத் தீங்கநுபவி. 9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார். 10 நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமானதினாலே அந்தக் கிருபை இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டது; அவர் மரணத்தைப் பரிகரித்து, ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார். 11 அதற்கு நான் பிரசங்கியாகவும், அப்போஸ்தலனாகவும், புறஜாதியாருக்குப் போதகனாகவும் நியமிக்கப்பட்டேன். 12 அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னார் என்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன். 13 நீ கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தோடும் அன்போடும் என்னிடத்தில் கேட்டிருக்கிற ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிரு. 14 உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்ட அந்த நற்பொருளை நமக்குள்ளே வாசம்பண்ணுகிற பரிசுத்த ஆவியினாலே காத்துக்கொள். 15 ஆசியாநாட்டிலிருக்கிற யாவரும், அவர்களில் பிகெல்லு எர்மொகெனே முதலாய் என்னைவிட்டு விலகினார்களென்று அறிந்திருக்கிறாய். 16 ஒநேசிப்போருவின் வீட்டாருக்குக் கர்த்தர் இரக்கங் கட்டளையிடுவாராக; அவன் அநேகந்தரம் என்னை இளைப்பாற்றினான்; என் விலங்கைக்குறித்து அவன் வெட்கப்படவுமில்லை; 17 அவன் ரோமாவில் வந்திருந்தபோது அதிக ஜாக்கிரதையாய் என்னைத் தேடிக் கண்டுபிடித்தான். 18 அந்நாளிலே அவன் கர்த்தரிடத்தில் இரக்கத்தைக் கண்டடையும்படி, கர்த்தர் அவனுக்கு அனுக்கிரகஞ்செய்வாராக; அவன் எபேசுவிலே செய்த பற்பல உதவிகளையும் நீ நன்றாய் அறிந்திருக்கிறாயே.

2 தீமோத்தேயு 2

1 ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு. 2 அநேக சாட்சிகளுக்கு முன்பாக நீ என்னிடத்தில் கேட்டவைகளை மற்றவர்களுக்குப் போதிக்கத்தக்க உண்மையுள்ள மனுஷர்களிடத்தில் ஒப்புவி. 3 நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி. 4 தண்டில் சேவகம்பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக்கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக்கொள்ளமாட்டான். 5 மேலும் ஒருவன் மல்யுத்தம்பண்ணினாலும், சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படான். 6 பிரயாசப்பட்டுப் பயிரிடுகிறவன் பலனில் முந்திப் பங்கடையவேண்டும். 7 நான் சொல்லுகிறவைகளைச் சிந்தித்துக்கொள்; கர்த்தர் எல்லாக் காரியங்களிலும் உனக்குப் புத்தியைத் தந்தருளுவார். 8 தாவீதின் சந்ததியில் பிறந்த இயேசுகிறிஸ்து, என் சுவிசேஷத்தின்படியே, மரித்தோரிலிருந்தெழுப்பப்பட்டவரென்று நினைத்துக்கொள். 9 இந்தச் சுவிசேஷத்தினிமித்தம் நான் பாதகன்போலக் கட்டப்பட்டு, துன்பத்தை அநுபவிக்கிறேன்; தேவவசனமோ கட்டப்பட்டிருக்கவில்லை. 10 ஆகையால், தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பை நித்திய மகிமையோடே பெற்றுக்கொள்ளும்படி, சகலத்தையும் அவர்கள் நிமித்தமாகச் சகிக்கிறேன். 11 இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்; 12 அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; 13 நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார். 14 இவைகளை அவர்களுக்கு நினைப்பூட்டி, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாமல், கேட்கிறவர்களைக் கவிழ்த்துப்போடுகிறதற்கேதுவான வாக்குவாதம் செய்யாதபடிக்கு, கர்த்தருக்கு முன்பாக அவர்களுக்கு எச்சரித்துப் புத்திசொல்லு. 15 நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. 16 சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்; 17 அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்; 18 அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள். 19 ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது. 20 ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள். 21 ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான். 22 அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு. 23 புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு. 24 கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும். 25 எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும், 26 பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந்தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத்தக்கதாகவும், சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும்.

2 தீமோத்தேயு 3

1 மேலும், கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. 2 எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், 3 சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், 4 துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், 5 தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. 6 பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு, 7 எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள். 8 யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள். 9 ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை; அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும். 10 நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும், 11 அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாய் அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவையெல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார். 12 அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள். 13 பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள். 14 நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், 15 கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். 16 வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, 17 அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

2 தீமோத்தேயு 4

1 நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது: 2 சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும் ஜாக்கிரதையாய்த் திருவசனத்தைப் பிரசங்கம்பண்ணு; எல்லா நீடிய சாந்தத்தோடும் உபதேசத்தோடும் கண்டனம்பண்ணி, கடிந்துகொண்டு, புத்திசொல்லு. 3 ஏனென்றால், அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, 4 சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். 5 நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை நிறைவேற்று. 6 ஏனென்றால், நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன்; நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. 7 நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன். 8 இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார். 9 நீ சீக்கிரமாய் என்னிடத்தில் வரும்படி ஜாக்கிரதைப்படு. 10 ஏனென்றால், தேமா இப்பிரபஞ்சத்தின்மேல் ஆசைவைத்து, என்னைவிட்டுப் பிரிந்து, தெசலோனிக்கே பட்டணத்துக்குப் போய்விட்டான்; கிரெஸ்கே கலாத்தியா நாட்டிற்கும், தீத்து தல்மாத்தியா நாட்டிற்கும் போய்விட்டார்கள். 11 லூக்காமாத்திரம் என்னோடே இருக்கிறான். மாற்குவை உன்னோடே கூட்டிக்கொண்டுவா; ஊழியத்தில் அவன் எனக்குப் பிரயோஜனமுள்ளவன். 12 தீகிக்குவை நான் எபேசுவுக்கு அனுப்பினேன். 13 துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் நான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா. 14 கன்னானாகிய அலெக்சந்தர் எனக்கு வெகு தீமைசெய்தான்; அவனுடைய செய்கைக்குத்தக்கதாகக் கர்த்தர் அவனுக்குப் பதிலளிப்பாராக. 15 நீயும் அவனைக்குறித்து எச்சரிக்கையாயிரு; அவன் நம்முடைய வார்த்தைகளுக்கு மிகவும் எதிர்த்துநின்றவன். 16 நான் முதல்விசை உத்தரவுசொல்ல நிற்கையில் ஒருவனும் என்னோடேகூட இருக்கவில்லை, எல்லாரும் என்னைக் கைவிட்டார்கள்; அந்தக் குற்றம் அவர்கள்மேல் சுமராதிருப்பதாக. 17 கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியாரெல்லாரும் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; சிங்கத்தின் வாயிலிருந்தும் நான் இரட்சிக்கப்பட்டேன். 18 கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். 19 பிரிஸ்காளுக்கும் ஆக்கில்லாவுக்கும், ஒநேசிப்போருவின் வீட்டாருக்கும் என் வாழ்த்துதலைச் சொல்லு. 20 எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன். 21 மாரிகாலத்துக்குமுன் நீ வந்து சேரும்படி ஜாக்கிரதைப்படு. ஐபூலுவும், புதேஞ்சும், லீனுவும், கலவுதியாளும், மற்றெல்லாச் சகோதரரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 22 கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

தீத்து 1

1 தேவனுடைய ஊழியக்காரனும், இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனுமாகிய பவுல், பொதுவான விசுவாசத்தின்படி உத்தம குமாரனாகிய தீத்துவுக்கு எழுதுகிறதாவது: 2 பிதாவாகிய தேவனாலும், நம்முடைய இரட்சகராயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும் உண்டாவதாக. 3 பொய்யுரையாத தேவன் ஆதிகாலமுதல் நித்திய ஜீவனைக்குறித்து வாக்குத்தத்தம்பண்ணி, அதைக்குறித்த நம்பிக்கையைப்பற்றி தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி, 4 ஏற்றகாலங்களிலே நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய கட்டளையின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்ட பிரசங்கத்தினாலே தமது வார்த்தையை வெளிப்படுத்தினார். 5 நீ குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும், உன்னைக் கிரேத்தாதீவிலே விட்டுவந்தேனே. 6 குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம். 7 ஏனெனில், கண்காணியானவன் தேவனுடைய உக்கிராணக்காரனுக்கேற்றவிதமாய், குற்றஞ்சாட்டப்படாதவனும், தன் இஷ்டப்படி செய்யாதவனும், முற்கோபமில்லாதவனும், மதுபானப்பிரியமில்லாதவனும், அடியாதவனும், இழிவான ஆதாயத்தை இச்சியாதவனும், 8 அந்நியரை உபசரிக்கிறவனும், நல்லோர்மேல் பிரியமுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், நீதிமானும், பரிசுத்தவானும், இச்சையடக்கமுள்ளவனும், 9 ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும் வல்லவனுமாயிருக்கும்படி, தான் போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்கவேண்டும். 10 அநேகர், விசேஷமாய் விருத்தசேதனமுள்ளவர்கள், அடங்காதவர்களும், வீண்பேச்சுக்காரரும், மனதை மயக்குகிறவர்களுமாயிருக்கிறார்கள். 11 அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள். 12 கிரேத்தாதீவார் ஓயாப்பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள் என்று அவர்களிலொருவனாகிய அவர்கள் தீர்க்கதரிசியானவனே சொல்லியிருக்கிறான். 13 இந்தச் சாட்சி உண்மையாயிருக்கிறது; இது முகாந்தரமாக, அவர்கள் யூதருடைய கட்டுக்கதைகளுக்கும், சத்தியத்தை விட்டு விலகுகிற மனுஷருடைய கற்பனைகளுக்கும் செவிகொடாமல், 14 விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாயிருக்கும்படி, நீ அவர்களைக் கண்டிப்பாய்க் கடிந்துகொள். 15 சுத்தமுள்ளவர்களுக்குச் சகலமும் சுத்தமாயிருக்கும்; அசுத்தமுள்ளவர்களுக்கும் அவிசுவாசமுள்ளவர்களுக்கும் ஒன்றும் சுத்தமாயிராது; அவர்களுடைய புத்தியும் மனச்சாட்சியும் அசுத்தமாயிருக்கும். 16 அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கைபண்ணுகிறார்கள், கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ்செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்.

தீத்து 2

1 நீயோ ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசு. 2 முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்திசொல்லு. 3 முதிர்வயதுள்ள ஸ்திரீகளும் அப்படியே பரிசுத்தத்துக்கேற்றவிதமாய் நடக்கிறவர்களும், அவதூறுபண்ணாதவர்களும், மதுபானத்துக்கு அடிமைப்படாதவர்களுமாயிருக்கவும், 4 தேவவசனம் தூஷிக்கப்படாதபடிக்குப் பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும், 5 தெளிந்த புத்தியுள்ளவர்களும், கற்புள்ளவர்களும், வீட்டில் தரித்திருக்கிறவர்களும், நல்லவர்களும், தங்கள் புருஷருக்குக் கீழ்ப்படிகிறவர்களுமாயிருக்கும்படி, அவர்களுக்குப் படிப்பிக்கத்தக்க நற்காரியங்களைப் போதிக்கிறவர்களுமாயிருக்கவும் முதிர்வயதுள்ள ஸ்திரீகளுக்குப் புத்திசொல்லு. 6 அப்படியே, பாலிய புருஷரும் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருக்கவும் நீ புத்திசொல்லி, 7 நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, 8 எதிரியானவன் உங்களைக்குறித்துப் பொல்லாங்கு சொல்லுகிறதற்கு ஒன்றுமில்லாமல் வெட்கப்படத்தக்கதாக, உபதேசத்திலே விகற்பமில்லாதவனும், நல்லொழுக்கமுள்ளவனும் குற்றம்பிடிக்கப்படாத ஆரோக்கியமான வசனத்தைப் பேசுகிறவனுமாயிருப்பாயாக. 9 வேலைக்காரர் நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்கத்தக்கதாக, 10 தங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருந்து எதிர்த்துப்பேசாமல், எல்லாவற்றிலும் பிரியமுண்டாக நடந்துகொள்ளவும், திருடாமலிருந்து, சகலவிதத்திலும் நல்லுண்மையைக் காண்பிக்கவும் புத்திசொல்லு. 11 ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி, 12 நாம் அவபக்தியையும் லௌகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய் இவ்வுலகத்திலே ஜீவனம்பண்ணி, 13 நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது. 14 அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார். 15 இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொள். ஒருவனும் உன்னை அசட்டைபண்ண இடங்கொடாதிருப்பாயாக.

தீத்து 3

1 துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் கீழ்ப்படிந்து அடங்கியிருக்கவும், சகலவிதமான நற்கிரியைகளையும் செய்ய ஆயத்தமாயிருக்கவும், 2 ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. 3 ஏனெனில், முற்காலத்திலே நாமும் புத்தியீனரும், கீழ்ப்படியாதவர்களும், வழிதப்பி நடக்கிறவர்களும், பலவித இச்சைகளுக்கும் இன்பங்களுக்கும் அடிமைப்பட்டவர்களும், துர்க்குணத்தோடும் பொறாமையோடும் ஜீவனம்பண்ணுகிறவர்களும், பகைக்கப்படத்தக்கவர்களும், ஒருவரையொருவர் பகைக்கிறவர்களுமாயிருந்தோம். 4 நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, 5 நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். 6 தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, 7 அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார். 8 இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள். 9 புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும். 10 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு. 11 அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே. 12 நான் அர்த்தெமாவையாவது தீகிக்குவையாவது உன்னிடத்தில் அனுப்பும்போது நீ நிக்கொப்போலிக்கு என்னிடத்தில் வர ஜாக்கிரதைப்படு; மாரிகாலத்திலே அங்கே தங்கும்படி தீர்மானித்திருக்கிறேன். 13 நியாயசாஸ்திரியாகிய சேனாவுக்கும் அப்பொல்லோவுக்கும் ஒரு குறைவுமில்லாதபடிக்கு அவர்களை ஜாக்கிரதையாய் விசாரித்து வழிவிட்டனுப்பு. 14 நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப்பழகட்டும். 15 என்னோடிருக்கிற யாவரும் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். விசுவாசத்திலே நம்மைச் சிநேகிக்கிறவர்களுக்கு வாழ்த்துதல் சொல்லு. கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

பிலேமோன் 1

1 கிறிஸ்து இயேசுவினிமித்தம் கட்டப்பட்டவனாயிருக்கிற பவுலும், சகோதரனாகிய தீமோத்தேயும், எங்களுக்குப் பிரியமுள்ளவனும் உடன்வேலையாளுமாயிருக்கிற பிலேமோனுக்கும், 2 பிரியமுள்ள அப்பியாளுக்கும், எங்கள் உடன் போர்ச்சேவகனாகிய அர்க்கிப்புவுக்கும், உம்முடைய வீட்டிலே கூடிவருகிற சபைக்கும் எழுதுகிறதாவது: 3 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 4 கர்த்தராகிய இயேசுவினிடத்திலும், எல்லாப் பரிசுத்தவான்களிடத்திலுமுள்ள உம்முடைய அன்பையும் உம்முடைய விசுவாசத்தையும் நான் கேள்விப்பட்டு, 5 என் ஜெபங்களில் உம்மை நினைத்து, எப்பொழுதும் என் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செய்து, 6 உங்களிலுள்ள சகல நன்மைகளும் தெரியப்படுகிறதினாலே உம்முடைய விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்துஇயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று வேண்டுதல்செய்கிறேன். 7 சகோதரனே, பரிசுத்தவான்களுடைய உள்ளங்கள் உம்மாலே இளைப்பாறினபடியால், உம்முடைய அன்பினாலே மிகுந்த சந்தோஷமும் ஆறுதலும் அடைந்திருக்கிறோம். 8 ஆகையால், பவுலாகிய நான் முதிர்வயதுள்ளவனாகவும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் இப்பொழுது கட்டப்பட்டவனாகவும் இருக்கிறபடியால், 9 நீர் செய்யத்தக்கதை உமக்குக் கட்டளையிடும்படிக்குக் கிறிஸ்துவுக்குள் நான் துணியத்தக்கவனாயிருந்தாலும், அப்படிச் செய்யாமல், அன்பினிமித்தம் மன்றாடுகிறேன். 10 என்னவென்றால், கட்டப்பட்டிருக்கையில் நான் பெற்ற என் மகனாகிய ஒநேசிமுக்காக உம்மை மன்றாடுகிறேன். 11 முன்னே அவன் உமக்குப் பிரயோஜனமில்லாதவன், இப்பொழுதோ உமக்கும் எனக்கும் பிரயோஜனமுள்ளவன். 12 அவனை நான் உம்மிடத்திற்கு அனுப்புகிறேன்; என் உள்ளம்போலிருக்கிற அவனை நீர் ஏற்றுக்கொள்ளும். 13 சுவிசேஷத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற எனக்கு ஊழியஞ்செய்யும்படி உமக்குப் பதிலாக அவனை என்னிடத்தில் வைத்துக்கொள்ளவேண்டுமென்றிருந்தேன். 14 ஆனாலும் நீர் செய்யும் நன்மையைக் கட்டாயத்தினாலல்ல, மனப்பூர்வமாய்ச் செய்யத்தக்கதாக, நான் உம்முடைய சம்மதியில்லாமல் ஒன்றும் செய்ய எனக்கு மனதில்லை. 15 அவன் என்றென்றைக்கும் உம்முடையவனாயிருக்கும்படிக்கும், இனிமேல் அவன் அடிமையானவனாகவல்ல, அடிமையானவனுக்கு மேலானவனாகவும் பிரியமுள்ள சகோதரனாகவுமிருக்கும்படிக்கும் கொஞ்சக்காலம் உம்மைவிட்டுப் பிரிந்துபோனானாக்கும். 16 எனக்கு அவன் பிரியமான சகோதரனானால், உமக்குச் சரீரத்தின்படியேயும் கர்த்தருக்குள்ளும் எவ்வளவு பிரியமுள்ளவனாயிருக்கவேண்டும்! 17 ஆதலால், நீர் என்னை உம்மோடே ஐக்கியமானவனென்று எண்ணினால், என்னை ஏற்றுக்கொள்வதுபோல அவனையும் ஏற்றுக்கொள்ளும். 18 அவன் உமக்கு யாதொரு அநியாயஞ்செய்ததும், உம்மிடத்தில் கடன்பட்டதும் உண்டானால், அதை என் கணக்கிலே வைத்துக்கொள்ளும். 19 பவுலாகிய நான் இதை என் சொந்தக்கையாலே எழுதினேன், நான் அதைச் செலுத்தித் தீர்ப்பேன். நீர் உம்மைத்தாமே எனக்குக் கடனாகச் செலுத்தவேண்டுமென்று நான் உமக்குச் சொல்லவேண்டியதில்லையே. 20 ஆம், சகோதரனே, கர்த்தருக்குள் உம்மாலே எனக்குப் பிரயோஜனமுண்டாகட்டும்; கர்த்தருக்குள் என் உள்ளத்தை இளைப்பாறப்பண்ணும். 21 நான் சொல்லுகிறதிலும் அதிகமாய்ச் செய்வீரென்று அறிந்து, இதற்கு நீர் இணங்குவீரென்று நிச்சயித்து, உமக்கு எழுதியிருக்கிறேன். 22 மேலும், உங்கள் விண்ணப்பங்களினாலே நான் உங்களுக்கு அநுக்கிரகிக்கப்படுவேனென்று நம்பியிருக்கிறபடியால், நான் இருக்கும்படிக்கு ஓரிடத்தை எனக்காக ஆயத்தம்பண்ணும். 23 கிறிஸ்து இயேசுவினிமித்தம் என்னோடேகூடக் காவலில் வைக்கப்பட்டிருக்கிற எப்பாப்பிராவும், 24 என் உடன்வேலையாட்களாகிய மாற்குவும், அரிஸ்தர்க்கும், தேமாவும், லூக்காவும் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 25 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் ஆவியுடனேகூட இருப்பதாக. ஆமென்.

எபிரெயர் 1

1 பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம் பற்றின தேவன், 2 இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக்கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார். 3 இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார். 4 இவர் தேவதூதரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார். 5 எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா? 6 மேலும், தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார். 7 தேவதூதரைக்குறித்தோ: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது. 8 குமாரனை நோக்கி: தேவனே, உம்முடைய சிங்காசனம் என்றென்றைக்குமுள்ளது, உம்முடைய ராஜ்யத்தின் செங்கோல் நீதியுள்ள செங்கோலாயிருக்கிறது. 9 நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்; 10 கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது; 11 அவைகள் அழிந்துபோம்; நீரோ நிலைத்திருப்பீர்; அவைகளெல்லாம் வஸ்திரம்போலப் பழைமையாய்ப்போம்; 12 ஒரு சால்வையைப்போல அவைகளைச் சுருட்டுவீர், அப்பொழுது மாறிப்போம்; நீரோ மாறாதவராயிருக்கிறீர், உம்முடைய ஆண்டுகள் முடிந்துபோவதில்லை என்றும் சொல்லியிருக்கிறது. 13 மேலும், நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் அவர் சொன்னதுண்டா? 14 இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களினிமித்தமாக ஊழியஞ்செய்யும்படிக்கு அவர்களெல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாயிருக்கிறார்களல்லவா?

எபிரெயர் 2

1 ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு, அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்கவேண்டும். 2 ஏனெனில், தேவதூதர் மூலமாய்ச் சொல்லப்பட்ட வசனத்திற்கு விரோதமான எந்தச் செய்கைக்கும் கீழ்ப்படியாமைக்கும் நீதியான தண்டனை வரத்தக்கதாக அவர்களுடைய வசனம் உறுதிப்படுத்தப்பட்டிருக்க, 3 முதலாவது கர்த்தர் மூலமாய் அறிவிக்கப்பட்டு, பின்பு அவரிடத்தில் கேட்டவர்களாலே நமக்கு உறுதியாக்கப்பட்டதும், 4 அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் பலவிதமான பலத்த செய்கைகளினாலும், தம்முடைய சித்தத்தின்படி பகிர்ந்துகொடுத்த பரிசுத்த ஆவியின் வரங்களினாலும், தேவன் தாமே சாட்சிகொடுத்ததுமாயிருக்கிற இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம். 5 இனிவரும் உலகத்தைக்குறித்துப் பேசுகிறோமே, அதை அவர் தூதர்களுக்குக் கீழ்ப்படுத்தவில்லை. 6 ஒரு இடத்திலே ஒருவன் சாட்சியாக: மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷனுடைய குமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்? 7 அவனை தேவதூதரிலும் சற்றுச் சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனுக்கு முடிசூட்டி, உம்முடைய கரத்தின் கிரியைகளின்மேல் அவனை அதிகாரியாக வைத்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர் என்று சொன்னான். 8 சகலத்தையும் அவனுக்குக் கீழ்ப்படுத்தினார் என்கிற விஷயத்தில், அவர் அவனுக்குக் கீழ்ப்படுத்தாத பொருள் ஒன்றுமில்லை; அப்படியிருந்தும், இன்னும் அவனுக்குச் சகலமும் கீழ்ப்பட்டிருக்கக் காணோம். 9 என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம். 10 ஏனென்றால் தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது. 11 எப்படியெனில், பரிசுத்தஞ்செய்கிறவரும் பரிசுத்தஞ்செய்யப்படுகிறவர்களுமாகிய யாவரும் ஒருவராலே உண்டாயிருக்கிறார்கள்; இதினிமித்தம் அவர்களைச் சகோதரரென்று சொல்ல அவர் வெட்கப்படாமல்: 12 உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபை நடுவில் உம்மைத் துதித்துப் பாடுவேன் என்றும்; 13 நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார். 14 ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், 15 ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார். 16 ஆதலால், அவர் தேவதூதருக்கு உதவியாகக் கைகொடாமல், ஆபிரகாமின் சந்ததிக்கு உதவியாகக் கைகொடுத்தார். 17 அன்றியும், அவர் ஜனத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்கேதுவாக, தேவகாரியங்களைக்குறித்து இரக்கமும் உண்மையுமுள்ள பிரதான ஆசாரியராயிருக்கும்படிக்கு எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாகவேண்டியதாயிருந்தது. 18 ஆதலால், அவர்தாமே சோதிக்கப்பட்டுப் பாடுபட்டதினாலே, அவர் சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார்.

எபிரெயர் 3

1 இப்படியிருக்க, பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்; 2 மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்ததுபோல, இவரும் தம்மை ஏற்படுத்தினவருக்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். 3 வீட்டை உண்டுபண்ணினவன் வீட்டைப்பார்க்கிலும் அதிக கனத்திற்குரியவனாயிருக்கிறான்; அதுபோல மோசேயைப்பார்க்கிலும் இவர் அதிக மகிமைக்குப் பாத்திரராயிருக்கிறார். 4 ஏனெனில், எந்த வீடும் ஒருவனால் உண்டாக்கப்படும்; எல்லாவற்றையும் உண்டுபண்ணினவர் தேவன். 5 சொல்லப்படப்போகிற காரியங்களுக்குச் சாட்சியாக, மோசே பணிவிடைக்காரனாய், அவருடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான். 6 கிறிஸ்துவோ அவருடைய வீட்டிற்கு மேற்பட்டவரான குமாரனாக உண்மையுள்ளவராயிருக்கிறார்; நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மைபாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், நாமே அவருடைய வீடாயிருப்போம். 7 ஆகையால், பரிசுத்தஆவியானவர் சொல்லுகிறபடியே: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், 8 வனாந்தரத்திலே கோபமூட்டினபோதும், சோதனைநாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள். 9 அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சைபார்த்து, நாற்பது வருஷகாலம் என் கிரியைகளைக் கண்டார்கள். 10 ஆதலால், நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் எப்பொழுதும் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி; 11 என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். 12 சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள். 13 உங்களில் ஒருவனாகிலும் பாவத்தின் வஞ்சனையினாலே கடினப்பட்டுப் போகாதபடிக்கு, இன்று என்னப்படுமளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லுங்கள். 14 நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம். 15 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், கோபமூட்டுதலில் நடந்ததுபோல உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று சொல்லியிருக்கிறதே. 16 கேட்டவர்களில் கோபமூட்டினவர்கள் யார்? மோசேயினால் எகிப்திலிருந்து புறப்பட்ட யாவரும் அப்படிச் செய்தார்களல்லவா? 17 மேலும், அவர் நாற்பது வருஷமாய் யாரை அரோசித்தார்? பாவஞ்செய்தவர்களையல்லவா? அவர்களுடைய சவங்கள் வனாந்தரத்தில் விழுந்துபோயிற்றே. 18 பின்னும், என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று அவர் யாரைக்குறித்து ஆணையிட்டார்? கீழ்ப்படியாதவர்களைக்குறித்தல்லவா? 19 ஆதலால், அவிசுவாசத்தினாலே அவர்கள் அதில் பிரவேசிக்கக்கூடாமற்போனார்களென்று பார்க்கிறோம்.

எபிரெயர் 4

1 ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க, உங்களில் ஒருவனும் அதை அடையாமல் பின்வாங்கிப்போனவனாகக் காணப்படாதபடிக்குப் பயந்திருக்கக்கடவோம். 2 ஏனெனில், சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுபோல நமக்கும் அறிவிக்கப்பட்டது; கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை. 3 விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும்: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார். 4 மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார் என்று ஏழாம் நாளைக்குறித்து ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். 5 அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார். 6 ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாயிருக்கிறபடியினாலும், சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே அதில் பிரவேசியாமற்போனபடியினாலும், 7 இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒருநாளைக் குறித்திருக்கிறார். 8 யோசுவா அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், பின்பு அவர் வேறொரு நாளைக்குறித்துச் சொல்லியிருக்கமாட்டாரே. 9 ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. 10 ஏனெனில், அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசித்தவன், தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்ததுபோல, தானும் தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான். 11 ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே விழுந்துபோகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக்கடவோம். 12 தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. 13 அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்குமுன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும். 14 வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம். 15 நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார். 16 ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம்.

எபிரெயர் 5

1 அன்றியும், மனுஷரில் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காகத் தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான். 2 தானும் பலவீனமுள்ளவனானபடியினாலே, அறியாதவர்களுக்கும் நெறிதப்பிப்போனவர்களுக்கும் இரங்கத்தக்கவனாயிருக்கிறான். 3 அதினிமித்தம் அவன் ஜனங்களுடைய பாவங்களுக்காகப் பலியிடவேண்டியதுபோல, தன்னுடைய பாவங்களுக்காகவும் பலியிடவேண்டியதாயிருக்கிறது. 4 மேலும், ஆரோனைப்போலத் தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை. 5 அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார். 6 அப்படியே வேறொரு இடத்திலும்: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லியிருக்கிறார். 7 அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, 8 அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு, 9 தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணராகி, 10 மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று தேவனாலே நாமம் தரிக்கப்பட்டார். 11 இந்த மெல்கிசேதேக்கைப்பற்றி நாம் விஸ்தாரமாய்ப் பேசலாம்; நீங்கள் கேள்வியில் மந்தமுள்ளவர்களானபடியால், அதை விளங்கப்பண்ணுகிறது அரிதாயிருக்கும். 12 காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது; நீங்கள் பலமான ஆகாரத்தையல்ல, பாலை உண்ணத்தக்கவர்களானீர்கள். 13 பாலுண்கிறவன் குழந்தையாயிருக்கிறபடியினாலே நீதியின் வசனத்தில் பழக்கமில்லாதவனாயிருக்கிறான். 14 பலமான ஆகாரமானது நன்மை தீமையின்னதென்று பயிற்சியினால் பகுத்தறியத்தக்கதாக முயற்சிசெய்யும் ஞானேந்திரியங்களையுடையவர்களாகிய பூரண வயதுள்ளவர்களுக்கே தகும்.

எபிரெயர் 6

1 ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், 2 ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக. 3 தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம். 4 ஏனெனில், ஒருதரம் பிரகாசிப்பிக்கப்பட்டும், பரமஈவை ருசிபார்த்தும், பரிசுத்த ஆவியைப் பெற்றும், 5 தேவனுடைய நல்வார்த்தையையும் இனிவரும் உலகத்தின் பெலன்களையும் ருசிபார்த்தும், 6 மறுதலித்துப்போனவர்கள், தேவனுடைய குமாரனைத் தாங்களே மறுபடியும் சிலுவையில் அறைந்து அவமானப்படுத்துகிறபடியால், மனந்திரும்புதற்கேதுவாய் அவர்களை மறுபடியும் புதுப்பிக்கிறது கூடாதகாரியம். 7 எப்படியெனில், தன்மேல் அடிக்கடி பெய்கிற மழையைக் குடித்து, தன்னிடத்தில் பயிரிடுகிறவர்களுக்கேற்ற பயிரை முளைப்பிக்கும் நிலமானது தேவனால் ஆசீர்வாதம் பெறும். 8 முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப்படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு. 9 பிரியமானவர்களே, நாங்கள் இப்படிச் சொன்னாலும், நன்மையானவைகளும் இரட்சிப்புக்குரியவைகளுமான காரியங்கள் உங்களிடத்தில் உண்டாயிருக்கிறதென்று நம்பியிருக்கிறோம். 10 ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே. 11 நீங்கள் அசதியாயிராமல், வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாயிருந்து, 12 உங்களுக்கு நம்பிக்கையின் பூரண நிச்சயமுண்டாகும்படி நீங்கள் யாவரும் முடிவுபரியந்தம் அப்படியே ஜாக்கிரதையைக் காண்பிக்கவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். 13 ஆபிரகாமுக்குத் தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமதுபேரிலே தானே ஆணையிட்டு: 14 நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார். 15 அந்தப்படியே, அவன் பொறுமையாய்க் காத்திருந்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெற்றான். 16 மனுஷர் தங்களிலும் பெரியவர்பேரில் ஆணையிடுவார்கள்; உறுதிபண்ணும்படிக்கு ஆணையிடுதலே சகல விவாதத்திற்கும் முடிவு. 17 அந்தப்படி, தேவனும் வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களுக்குத் தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார். 18 நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார். 19 அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது. 20 நமக்கு முன்னோடினவராகிய இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி நித்திய பிரதான ஆசாரியராய் நமக்காக அந்தத் திரைக்குள் பிரவேசித்திருக்கிறார்.

எபிரெயர் 7

1 இந்த மெல்கிசேதேக்கு சாலேமின் ராஜாவும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனுமாயிருந்தான்; ராஜாக்களை முறியடித்துவந்த ஆபிரகாமுக்கு இவன் எதிர்கொண்டுபோய், அவனை ஆசீர்வதித்தான். 2 இவனுக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான்; இவனுடைய முதற்பேராகிய மெல்கிசேதேக்கு என்பதற்கு நீதியின் ராஜா என்றும், பின்பு சாலேமின் ராஜா என்பதற்குச் சமாதானத்தின் ராஜா என்றும் அருத்தமாம். 3 இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான். 4 இவன் எவ்வளவு பெரியவனாயிருக்கிறான் பாருங்கள்; கோத்திரத்தலைவனாகிய ஆபிரகாம் முதலாய் கொள்ளையிடப்பட்ட பொருள்களில் இவனுக்குத் தசமபாகம் கொடுத்தான். 5 லேவியின் புத்திரரில் ஆசாரியத்துவத்தை அடைகிறவர்களும், ஆபிரகாமின் அரையிலிருந்துவந்த தங்கள் சகோதரரான ஜனங்களின் கையிலே நியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குகிறதற்குக் கட்டளைபெற்றிருக்கிறார்கள். 6 ஆகிலும், அவர்களுடைய வம்சவரிசையில் வராதவனாகிய இவன் ஆபிரகாமின் கையில் தசமபாகம் வாங்கி, வாக்குத்தத்தங்களைப் பெற்றவனை ஆசீர்வதித்தான். 7 சிறியவன் பெரியவனாலே ஆசீர்வதிக்கப்படுவான், அதற்குச் சந்தேகமில்லை. 8 அன்றியும், இங்கே, மரிக்கிற மனுஷர்கள் தசமபாகம் வாங்குகிறார்கள்; அங்கேயோ, பிழைத்திருக்கிறான் என்று சாட்சிபெற்றவன் வாங்கினான். 9 அன்றியும், மெல்கிசேதேக்கு ஆபிரகாமுக்கு எதிர்கொண்டுபோனபோது, லேவியானவன் தன் தகப்பனுடைய அரையிலிருந்தபடியால், 10 தசமபாகம் வாங்குகிற அவனும் ஆபிரகாமின் மூலமாய்த் தசமபாகம் கொடுத்தான் என்று சொல்லலாம். 11 அல்லாமலும், இஸ்ரவேல் ஜனங்கள் லேவிகோத்திர ஆசாரிய முறைமைக்குட்பட்டிருந்தல்லவோ நியாயப்பிரமாணத்தைப் பெற்றார்கள்; அந்த ஆசாரிய முறைமையினாலே பூரணப்படுதல் உண்டாயிருக்குமானால், ஆரோனுடைய முறைமையின்படி அழைக்கப்படாமல், மெல்கிசேதேக்கினுடைய முறைமையின்படி அழைக்கப்பட்ட வேறொரு ஆசாரியர் எழும்பவேண்டுவதென்ன? 12 ஆசாரியத்துவம் மாற்றப்பட்டிருக்குமேயானால், நியாயப்பிரமாணமும் மாற்றப்படவேண்டியதாகும். 13 இவைகள் எவரைக்குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவர் வேறொரு கோத்திரத்துக்குள்ளானவராயிருக்கிறாரே; அந்தக் கோத்திரத்தில் ஒருவனாகிலும் பலிபீடத்து ஊழியம் செய்ததில்லையே. 14 நம்முடைய கர்த்தர் யூதாகோத்திரத்தில் தோன்றினாரென்பது பிரசித்தமாயிருக்கிறது; அந்தக் கோத்திரத்தாரைக்குறித்து மோசே ஆசாரியத்துவத்தைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே. 15 அல்லாமலும், மெல்கிசேதேக்குக்கு ஒப்பாய் வேறொரு ஆசாரியர் எழும்புகிறார் என்று சொல்லியிருப்பதினால், மேற்சொல்லியது மிகவும் பிரசித்தமாய் விளங்குகிறது. 16 அவர் மாம்ச சம்பந்தமான கட்டளையாகிய நியாயப்பிரமாணத்தின்படி ஆசாரியராகாமல், 17 நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று சொல்லிய சாட்சிக்குத்தக்கதாக அழியாத ஜீவனுக்குரிய வல்லமையின்படியே ஆசாரியரானார். 18 முந்தின கட்டளை பெலவீனமுள்ளதும் பயனற்றதுமாயிருந்ததினிமித்தம் மாற்றப்பட்டது. 19 நியாயப்பிரமாணமானது ஒன்றையும் பூரணப்படுத்தவில்லை, அதிக நன்மையான நம்பிக்கையை வருவிப்பதோ பூரணப்படுத்துகிறது; அந்த நம்பிக்கையினாலே தேவனிடத்தில் சேருகிறோம். 20 அன்றியும், அவர்கள் ஆணையில்லாமல் ஆசாரியராக்கப்படுகிறார்கள்; இவரோ: நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம் மாறாமலுமிருப்பார் என்று தம்முடனே சொன்னவராலே ஆணையோடே ஆசாரியரானார். 21 ஆனதால், இயேசுவானவர் ஆணையின்படியே ஆசாரியராக்கப்பட்டது எவ்வளவு விசேஷித்த காரியமோ, 22 அவ்வளவு விசேஷித்த உடன்படிக்கைக்குப் பிணையாளியானார். 23 அன்றியும், அவர்கள் மரணத்தினிமித்தம் நிலைத்திருக்கக்கூடாதவர்களானபடியால், ஆசாரியராக்கப்படுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். 24 இவரோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறபடியினாலே, மாறிப்போகாத ஆசாரியத்துவமுள்ளவராயிருக்கிறார். 25 மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார். 26 பரிசுத்தரும், குற்றமற்றவரும், மாசில்லாதவரும், பாவிகளுக்கு விலகினவரும், வானங்களிலும் உயர்ந்தவருமாயிருக்கிற இவ்விதமான பிரதான ஆசாரியரே நமக்கு ஏற்றவராயிருக்கிறார். 27 அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்துமுடித்தார். 28 நியாயப்பிரமாணமானது பெலவீனமுள்ள மனுஷர்களைப் பிரதான ஆசாரியராக ஏற்படுத்துகிறது; நியாயப்பிரமாணத்திற்குப்பின்பு உண்டான ஆணையோடே விளங்கிய வசனமோ என்றென்றைக்கும் பூரணரான குமாரனை ஏற்படுத்துகிறது.

எபிரெயர் 8

1 மேற்சொல்லியவைகளின் முக்கியமான பொருளென்னவெனில்; பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலதுபாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய், 2 பரிசுத்த ஸ்தலத்திலும், மனுஷரால் அல்ல, கர்த்தரால் ஸ்தாபிக்கப்பட்ட மெய்யான கூடாரத்திலும் ஆசாரிய ஊழியஞ் செய்கிறவருமாயிருக்கிற பிரதான ஆசாரியர் நமக்கு உண்டு. 3 ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி நியமிக்கப்படுகிறான்; ஆதலால் செலுத்தும்படிக்கு ஏதோ ஒன்று இவருக்கும் அவசியம் வேண்டியதாயிருக்கிறது. 4 பூமியிலே அவர் இருப்பாரானால் ஆசாரியராயிருக்கமாட்டார்; ஏனெனில், நியாயப்பிரமாணத்தின்படி காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் இருக்கிறார்களே; 5 இவர்கள் செய்யும் ஆராதனை பரலோகத்திலுள்ளவைகளின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கிறது; அப்படியே, மோசே கூடாரத்தை உண்டுபண்ணப் போகையில்: மலையிலே உனக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே நீ எல்லாவற்றையும் செய்ய எச்சரிக்கையாயிரு என்று தேவன் அவனுக்குக் கட்டளையிட்டார். 6 இவரோ விசேஷித்த வாக்குத்தத்தங்களின்பேரில் ஸ்தாபிக்கப்பட்ட விசேஷித்த உடன்படிக்கைக்கு எப்படி மத்தியஸ்தராயிருக்கிறாரோ, அப்படியே முக்கியமான ஆசாரிய ஊழியத்தையும் பெற்றிருக்கிறார். 7 அந்த முதலாம் உடன்படிக்கை பிழையில்லாதிருந்ததானால், இரண்டாம் உடன்படிக்கைக்கு இடம் தேடவேண்டுவதில்லையே. 8 அவர்களைக் குற்றப்படுத்தி, அவர்களை நோக்கி: இதோ, கர்த்தர் சொல்லுகிறதென்னவெனில்: இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் நான் புது உடன்படிக்கையை ஏற்படுத்துங்காலம் வருகிறது. 9 அவர்களுடைய பிதாக்களை எகிப்துதேசத்திலிருந்து கொண்டுவரும்படிக்கு நான் அவர்களுடைய கையைப் பிடித்தநாளிலே அவர்களோடு பண்ணின உடன்படிக்கையைப்போல இது இருப்பதில்லை; அந்த உடன்படிக்கையிலே அவர்கள் நிலைநிற்கவில்லையே, நானும் அவர்களைப் புறக்கணித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 10 அந்த நாட்களுக்குப்பின்பு நான் இஸ்ரவேல் குடும்பத்தாரோடே பண்ணும் உடன்படிக்கையாவது: என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய மனதிலே வைத்து, அவர்களுடைய இருதயங்களில் அவைகளை எழுதுவேன்; நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள். 11 அப்பொழுது சிறியவன் முதற்கொண்டு பெரியவன்வரைக்கும் எல்லாரும் என்னை அறிவார்கள்; ஆகையால், கர்த்தரை அறிந்துகொள் என்று ஒருவன் தன் அயலானுக்கும், ஒருவன் தன் சகோதரனுக்கும் போதிக்கவேண்டுவதில்லை. 12 ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். 13 புது உடன்படிக்கை என்று அவர் சொல்லுகிறதினாலே முந்தினதைப் பழமையாக்கினார்; பழமையானதும் நாள்பட்டதுமாயிருக்கிறது உருவழிந்துபோகக் காலம் சமீபித்திருக்கிறது.

எபிரெயர் 9

1 அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்கேற்ற முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த ஸ்தலமும் உடையதாயிருந்தது. 2 எப்படியெனில், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவசமுகத்தப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த ஸ்தலமென்னப்படும். 3 இரண்டாந் திரைக்குள்ளே மகா பரிசுத்த ஸ்தலமென்னப்பட்ட கூடாரம் இருந்தது. 4 அதிலே பொன்னாற்செய்த தூபகலசமும், முழுவதும் பொற்றகடு பொதிந்திருக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும், ஆரோனுடைய தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. 5 அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைக்குறித்து விவரமாய்ப்பேச இப்பொழுது சமயமில்லை. 6 இவைகள் இவ்விதமாய் ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்றும்படிக்கு முதலாங்கூடாரத்திலே நித்தமும் பிரவேசிப்பார்கள். 7 இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான். 8 அதினாலே, முதலாங்கூடாரம் நிற்குமளவும் பரிசுத்த ஸ்தலத்திற்குப்போகிற மார்க்கம் இன்னும் வெளிப்படவில்லையென்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார். 9 அந்தக் கூடாரம் இக்காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாயிருக்கிறது; அதற்கேற்றபடியே செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தக்கூடாதவைகளாம். 10 இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் நடந்தேறும்படி கட்டளையிடப்பட்ட போஜனபானங்களும், பலவித ஸ்நானங்களும், சரீரத்திற்கேற்ற சடங்குகளுமேயல்லாமல் வேறல்ல. 11 கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராய் வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தச் சிருஷ்டிசம்பந்தமான கூடாரத்தின் வழியாக அல்ல, பெரிதும் உத்தமமுமான கூடாரத்தின் வழியாகவும், 12 வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேதரம் மகா பரிசுத்த ஸ்தலத்திலே பிரவேசித்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். 13 அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், 14 நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! 15 ஆகையால் முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நிவிர்த்திசெய்யும்பொருட்டு அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்தரத்தை அடைந்துகொள்வதற்காக, புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராயிருக்கிறார். 16 ஏனென்றால், எங்கே மரணசாசனமுண்டோ, அங்கே அந்தச் சாசனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும். 17 எப்படியெனில், மரணமுண்டான பின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடிருக்கையில் அதற்குப் பெலனில்லையே. 18 அந்தப்படி, முதலாம் உடன்படிக்கையும் இரத்தமில்லாமல் பிரதிஷ்டை பண்ணப்படவில்லை. 19 எப்படியெனில், மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து, புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளித்து: 20 தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான். 21 இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய சகல பணிமுட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான். 22 நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது. 23 ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியதாமே. 24 அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காகத் தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார். 25 பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை. 26 அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபடவேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார். 27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே, 28 கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாந்தரம் பாவமில்லாமல் தரிசனமாவார்.

எபிரெயர் 10

1 இப்படியிருக்க, நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் பொருளாயிராமல், அவைகளின் நிழலாய்மாத்திரம் இருக்கிறபடியால், வருஷந்தோறும் இடைவிடாமல் செலுத்தப்பட்டுவருகிற ஒரேவிதமான பலிகளினாலே அவைகளைச் செலுத்த வருகிறவர்களை ஒருக்காலும் பூரணப்படுத்தமாட்டாது. 2 பூரணப்படுத்துமானால், ஆராதனை செய்கிறவர்கள் ஒருதரம் சுத்தமாக்கப்பட்டபின்பு, இன்னும் பாவங்களுண்டென்று உணர்த்தும் மனச்சாட்சி அவர்களுக்கு இல்லாதிருப்பதினால், அந்தப் பலிகளைச் செலுத்துகிறது நிறுத்தப்படுமல்லவா? 3 அப்படி நிறுத்தப்படாதபடியால், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது. 4 அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே. 5 ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; 6 சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர். 7 அப்பொழுது நான்: தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது என்று சொன்னேன் என்றார். 8 நியாயப்பிரமாணத்தின்படி செலுத்தப்பட்டுவருகிற பலிகளைக்குறித்து மேற்சொல்லியபடி: பலியையும், காணிக்கையையும், சர்வாங்க தகனபலிகளையும், பாவநிவாரணபலிகளையும் நீர் விரும்பவில்லை, அவைகள் உமக்குப் பிரியமானதல்ல என்று சொன்னபின்பு: 9 தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன் என்று சொன்னார். இரண்டாவதை நிலைநிறுத்துவதற்கு முதலாவதை நீக்கிப்போடுகிறார். 10 இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். 11 அன்றியும், எந்த ஆசாரியனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக்கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான். 12 இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, 13 இனித் தம்முடைய சத்துருக்களைத் தமது பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் காத்துக்கொண்டிருக்கிறார். 14 ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார். 15 இதைக்குறித்துப் பரிசுத்த ஆவியானவரும் நமக்குச் சாட்சிசொல்லுகிறார்; எப்படியெனில்: 16 அந்த நாட்களுக்குப்பின்பு நான் அவர்களோடே பண்ணும் உடன்படிக்கையாவது: நான் என்னுடைய பிரமாணங்களை அவர்களுடைய இருதயங்களில் வைத்து, அவைகளை அவர்களுடைய மனதில் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறாரென்பதை உரைத்தபின்பு, 17 அவர்களுடைய பாவங்களையும் அவர்களுடைய அக்கிரமங்களையும் நான் இனி நினைப்பதில்லை என்பதைச் சொல்லுகிறார். 18 இவைகள் மன்னிக்கப்பட்டதுண்டானால், இனிப் பாவத்தினிமித்தம் பலி செலுத்தப்படுவதில்லையே. 19 ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்தஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், 20 அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினாலும், 21 தேவனுடைய வீட்டின்மேல் அதிகாரியான மகா ஆசாரியர் நமக்கு ஒருவர் இருக்கிறபடியினாலும், 22 துர்மனச்சாட்சி நீங்கத் தெளிக்கப்பட்ட இருதயமுள்ளவர்களாயும், சுத்த ஜலத்தால் கழுவப்பட்ட சரீரமுள்ளவர்களாயும், உண்மையுள்ள இருதயத்தோடும் விசுவாசத்தின் பூரண நிச்சயத்தோடும் சேரக்கடவோம். 23 அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே. 24 மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; 25 சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும். 26 சத்தியத்தை அறியும் அறிவை அடைந்தபின்பு நாம் மனப்பூர்வமாய்ப் பாவஞ்செய்கிறவர்களாயிருந்தால், பாவங்களினிமித்தம் செலுத்தத்தக்க வேறொருபலி இனியிராமல், 27 நியாயத்தீர்ப்பு வருமென்று பயத்தோடே எதிர்பார்க்குதலும், விரோதிகளைப் பட்சிக்கும் கோபாக்கினையுமே இருக்கும். 28 மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; 29 தேவனுடைய குமாரனைக் காலின்கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப்பாருங்கள். 30 பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றும், கர்த்தர் தம்முடைய ஜனங்களை நியாயந்தீர்ப்பார் என்றும் சொன்னவர் இன்னாரென்று அறிவோம். 31 ஜீவனுள்ள தேவனுடைய கைகளில் விழுகிறது பயங்கரமாயிருக்குமே. 32 முந்தின நாட்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் பிரகாசமாக்கப்பட்டிருந்த அந்த நாட்களில் உபத்திரவங்களாகிய மிகுந்த போராட்டத்தைச் சகித்தீர்களே. 33 நிந்தைகளாலும் உபத்திரவங்களாலும் நீங்கள் வேடிக்கையாக்கப்பட்டதுமல்லாமல், அப்படி நடத்தப்பட்டவர்களுக்குப் பங்காளிகளுமானீர்கள். 34 நான் கட்டப்பட்டிருக்கையில் நீங்கள் என்னைக்குறித்துப் பரிதபித்ததுமன்றி, பரலோகத்தில் அதிக மேன்மையும் நிலையுள்ளதுமான சுதந்தரம் உங்களுக்கு உண்டென்று அறிந்து, உங்கள் ஆஸ்திகளையும் சந்தோஷமாய்க் கொள்ளையிடக்கொடுத்தீர்கள். 35 ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள். 36 நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. 37 வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார். 38 விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார். 39 நாமோ கெட்டுப்போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா ஈடேற விசுவாசிக்கிறவர்களாயிருக்கிறோம்.

எபிரெயர் 11

1 விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. 2 அதினாலே முன்னோர்கள் நற்சாட்சிபெற்றார்கள். 3 விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையினால் உண்டாக்கப்பட்டதென்றும், இவ்விதமாய், காணப்படுகிறவைகள் தோன்றப்படுகிறவைகளால் உண்டாகவில்லையென்றும் அறிந்திருக்கிறோம். 4 விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்துத் தேவனே சாட்சி கொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான். 5 விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான். 6 விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும். 7 விசுவாசத்தினாலே நோவா தற்காலத்திலே காணாதவைகளைக்குறித்துத் தேவஎச்சரிப்புப் பெற்று, பயபக்தியுள்ளவனாகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினான்; அதினாலே அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்து, விசுவாசத்தினாலுண்டாகும் நீதிக்குச் சுதந்தரவாளியானான். 8 விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான். 9 விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் சுதந்தரராகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்; 10 ஏனெனில், தேவன் தாமே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்களுள்ள நகரத்துக்கு அவன் காத்திருந்தான். 11 விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள். 12 ஆனபடியால், சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும் ஒருவனாலே, வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப்போலவும், மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள். 13 இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள். 14 இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சுயதேசத்தை நாடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள். 15 தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்களானால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்குச் சமயங்கிடைத்திருக்குமே. 16 அதையல்ல, அதிலும் மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகையால் தேவன் அவர்களுடைய தேவனென்னப்பட வெட்கப்படுகிறதில்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே. 17 மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான். 18 ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்தும் எழுப்பத் தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, 19 தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான். 20 விசுவாசத்தினாலே ஈசாக்கு வருங்காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான். 21 விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான். 22 விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்களென்பதைப்பற்றித் தன் அந்தியகாலத்தில் பேசி, தன் எலும்புகளைக்குறித்துக் கட்டளைகொடுத்தான். 23 மோசே பிறந்தபோது அவனுடைய தாய்தகப்பன்மார் அவனை அழகுள்ள பிள்ளையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்றுமாதம் ஒளித்துவைத்தார்கள். 24 விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்னப்படுவதை வெறுத்து, 25 அநித்தியமான பாவசந்தோஷங்களை அநுபவிப்பதைப்பார்க்கிலும் தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அநுபவிப்பதையே தெரிந்துகொண்டு, 26 இனிவரும் பலன்மேல் நோக்கமாயிருந்து, எகிப்திலுள்ள பொக்கிஷங்களிலும் கிறிஸ்துவினிமித்தம் வரும் நிந்தையை அதிக பாக்கியமென்று எண்ணினான். 27 விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான். 28 விசுவாசத்தினாலே, முதற்பேறானவைகளைச் சங்கரிக்கிறவன் இஸ்ரவேலரைத் தொடாதபடிக்கு, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான். 29 விசுவாசத்தினாலே அவர்கள் சிவந்த சமுத்திரத்தை உலர்ந்த தரையைக் கடந்துபோவதுபோலக் கடந்துபோனார்கள்; எகிப்தியர் அப்படிச் செய்யத்துணிந்து அமிழ்ந்துபோனார்கள். 30 விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது. 31 விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள். 32 பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையுங்குறித்து நான் விவரஞ்சொல்லவேண்டுமானால் காலம் போதாது. 33 விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், 34 அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன்கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள். 35 ஸ்திரீகள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலைபெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்; 36 வேறு சிலர் நிந்தைகளையும் அடிகளையும் கட்டுகளையும் காவலையும் அநுபவித்தார்கள்; 37 கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைபார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும் உபத்திரவத்தையும் துன்பத்தையும் அநுபவித்தார்கள்; 38 உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை; அவர்கள் வனாந்தரங்களிலேயும் மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள். 39 இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள். 40 அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றைத் தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.

எபிரெயர் 12

1 ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; 2 அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். 3 ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு, தமக்கு விரோதமாய்ப் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள். 4 பாவத்திற்கு விரோதமாய்ப் போராடுகிறதில் இரத்தஞ்சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்துநிற்கவில்லையே. 5 அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. 6 கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். 7 நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? 8 எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே. 9 அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா? 10 அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். 11 எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும். 12 ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி, 13 முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள். 14 யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே. 15 ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாதபடிக்கும் யாதொரு கசப்பான வேர் முளைத்தெழும்பிக் கலக்கமுண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாதபடிக்கும், 16 ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். 17 ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான். 18 அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிறதுமான மலையினிடத்திற்கும், மந்தாரம் இருள் பெருங்காற்று ஆகிய இவைகளினிடத்திற்கும், 19 எக்காளமுழக்கத்தினிடத்திற்கும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடத்திற்கும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடிக்கு வேண்டிக்கொண்டார்கள். 20 ஏனெனில் ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியுண்டு, அல்லது அம்பினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமாட்டாதிருந்தார்கள். 21 மோசேயும்: நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லத்தக்கதாக அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாயிருந்தது. 22 நீங்களோ சீயோன் மலையினிடத்திற்கும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமினிடத்திற்கும், ஆயிரம் பதினாயிரமான தேவதூதர்களினிடத்திற்கும், 23 பரலோகத்தில் பேரெழுதியிருக்கிற முதற்பேறானவர்களின் சர்வசங்கமாகிய சபையினிடத்திற்கும், யாவருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடத்திற்கும், பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடத்திற்கும், 24 புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப்பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடத்திற்கும் வந்து சேர்ந்தீர்கள். 25 பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க, பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பிப்போவோம்? 26 அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணிற்று; இன்னும் ஒருதரம் நான் பூமியை மாத்திரமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தஞ் செய்திருக்கிறார். 27 இன்னும் ஒருதரம் என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருக்கத்தக்கதாக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல மாறிப்போம் என்பதைக் குறிக்கிறது. 28 ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். 29 நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.

எபிரெயர் 13

1 சகோதர சிநேகம் நிலைத்திருக்கக்கடவது. 2 அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு. 3 கட்டப்பட்டிருக்கிறவர்களோடே நீங்களும் கட்டப்பட்டவர்கள்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; நீங்களும் சரீரத்தோடிருக்கிறவர்களென்று அறிந்து, தீங்கநுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள். 4 விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார். 5 நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே. 6 அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்னசெய்வான் என்று சொல்லலாமே. 7 தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள். 8 இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 9 பலவிதமான அந்நிய போதனைகளால் அலைப்புண்டு திரியாதிருங்கள். போஜனபதார்த்தங்களினாலல்ல, கிருபையினாலே இருதயம் ஸ்திரப்படுகிறது நல்லது; போஜனபதார்த்தங்களில் முயற்சிசெய்கிறவர்கள் பலனடையவில்லையே. 10 நமக்கு ஒரு பலிபீடமுண்டு, அதற்குரியவைகளைப் புசிக்கிறதற்குக் கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரமில்லை. 11 ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களினிமித்தமாகப் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் பாளயத்துக்குப் புறம்பே சுட்டெரிக்கப்படும். 12 அந்தப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே ஜனத்தைப் பரிசுத்தஞ்செய்யும்படியாக நகரவாசலுக்குப் புறம்பே பாடுபட்டார். 13 ஆகையால், நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, பாளயத்துக்குப் புறம்பே அவரிடத்திற்குப் புறப்பட்டுப்போகக்கடவோம். 14 நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம். 15 ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர்மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம். 16 அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார். 17 உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச் செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே. 18 எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; நாங்கள் நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறோமென்று நிச்சயித்திருக்கிறோம். 19 நான் அதிசீக்கிரமாய் உங்களிடத்தில் வரும்படிக்கு நீங்கள் இப்படி வேண்டிக்கொள்ளும்படி அதிகமாய்க் கேட்டுக்கொள்ளுகிறேன். 20 நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், 21 இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய சித்தத்தின்படிசெய்ய உங்களைச் சகலவித நற்கிரியையிலும் சீர்பொருந்தினவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். 22 சகோதரரே, நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாய் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டிக்கொள்ளுகிறேன். 23 சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டானென்று அறிவீர்களாக; அவன் சீக்கிரமாய் வந்தால், அவனோடேகூட நான் வந்து, உங்களைக் காண்பேன். 24 உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் யாவரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் யாவரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 25 கிருபையானது உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.

யாக்கோபு 1

1 தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது: 2 என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, 3 உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். 4 நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது. 5 உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும். 6 ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். 7 அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக. 8 இருமனமுள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவனாயிருக்கிறான். 9 தாழ்ந்த சகோதரன் தான் உயர்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன். 10 ஐசுவரியவான் தான் தாழ்த்தப்பட்டதைக்குறித்து மேன்மைபாராட்டக்கடவன்; ஏனெனில் அவன் புல்லின் பூவைப்போல் ஒழிந்துபோவான். 11 சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான். 12 சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கினபின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான். 13 சோதிக்கப்படுகிற எவனும், நான் தேவனால் சோதிக்கப்படுகிறேன் என்று சொல்லாதிருப்பானாக; தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல. 14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். 15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும். 16 என் பிரியமான சகோதரரே, மோசம்போகாதிருங்கள். 17 நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை. 18 அவர் சித்தங்கொண்டு தம்முடைய சிருஷ்டிகளில் நாம் முதற்பலன்களாவதற்கு நம்மைச் சத்திய வசனத்தினாலே ஜெநிப்பித்தார். 19 ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருக்கக்கடவர்கள்; 20 மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே. 21 ஆகையால், நீங்கள் எல்லாவித அழுக்கையும் கொடிய துர்க்குணத்தையும் ஒழித்துவிட்டு, உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும் உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள். 22 அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள். 23 என்னத்தினாலெனில், ஒருவன் திருவசனத்தைக் கேட்டும் அதின்படி செய்யாதவனானால், கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்க்கிற மனுஷனுக்கு ஒப்பாயிருப்பான்; 24 அவன் தன்னைத்தானே பார்த்து, அவ்விடம்விட்டுப் போனவுடனே, தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடுவான். 25 சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான். 26 உங்களில் ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து, தன்னைத் தேவபக்தியுள்ளவனென்று எண்ணினால் அவனுடைய தேவபக்தி வீணாயிருக்கும். 27 திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்குமுன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.

யாக்கோபு 2

1 என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக. 2 ஏனெனில், பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒரு மனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது, 3 மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திரனைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், 4 உங்களுக்குள்ளே பேதகம்பண்ணி, தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவர்களாயிருப்பீர்களல்லவா? 5 என் பிரியமான சகோதரரே, கேளுங்கள்; தேவன் இவ்வுலகத்தின் தரித்திரரை விசுவாசத்தில் ஐசுவரியவான்களாகவும், தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத் தாம் வாக்குத்தத்தம்பண்ணின ராஜ்யத்தைச் சுதந்தரிக்கிறவர்களாகவும் தெரிந்துகொள்ளவில்லையா? 6 நீங்களோ தரித்திரரைக் கனவீனம் பண்ணுகிறீர்கள். ஐசுவரியவான்களல்லவோ உங்களை ஒடுக்குகிறார்கள்? அவர்களல்லவோ உங்களை நியாயாசனங்களுக்கு முன்பாக இழுக்கிறார்கள்? 7 உங்களுக்குத் தரிக்கப்பட்ட நல்ல நாமத்தை அவர்களல்லவோ தூஷிக்கிறார்கள்? 8 உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று வேதவாக்கியம் சொல்லுகிற ராஜரிக பிரமாணத்தை நீங்கள் நிறைவேற்றினால் நன்மைசெய்வீர்கள். 9 பட்சபாதமுள்ளவர்களாயிருப்பீர்களானால், பாவஞ்செய்து, மீறினவர்களென்று நியாயப்பிரமாணத்தால் தீர்க்கப்படுவீர்கள். 10 எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான். 11 ஏனென்றால், விபசாரஞ்செய்யாதிருப்பாயாக என்று சொன்னவர் கொலைசெய்யாதிருப்பாயாக என்றும் சொன்னார்; ஆதலால், நீ விபசாரஞ்செய்யாமலிருந்தும் கொலைசெய்தாயானால் நியாயப்பிரமாணத்தை மீறினவனாவாய். 12 சுயாதீனப்பிரமாணத்தினால் நியாயத்தீர்ப்படையப்போகிறவர்களாய் அதற்கேற்றபடி பேசி, அதற்கேற்றபடி செய்யுங்கள். 13 ஏனென்றால், இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும். 14 என் சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியும், கிரியைகளில்லாதவனானால் அவனுக்குப் பிரயோஜனமென்ன? அந்த விசுவாசம் அவனை இரட்சிக்குமா? 15 ஒரு சகோதரனாவது சகோதரியாவது வஸ்திரமில்லாமலும் அநுதின ஆகாரமில்லாமலும் இருக்கும்போது, 16 உங்களில் ஒருவன் அவர்களை நோக்கி: நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள் என்று சொல்லியும், சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால் பிரயோஜனமென்ன? 17 அப்படியே விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னிலேதானே செத்ததாயிருக்கும். 18 ஒருவன்: உனக்கு விசுவாசமுண்டு, எனக்குக் கிரியைகளுண்டு; கிரியைகளில்லாமல் உன் விசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என் விசுவாசத்தை என் கிரியைகளினாலே உனக்குக் காண்பிப்பேன் என்பானே. 19 தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. 20 வீணான மனுஷனே, கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறியவேண்டுமோ? 21 நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? 22 விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே. 23 அப்படியே ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்கிற வேதவாக்கியம் நிறைவேறிற்று; அவன் தேவனுடைய சிநேகிதனென்னப்பட்டான். 24 ஆதலால், மனுஷன் விசுவாசத்தினாலேமாத்திரமல்ல, கிரியைகளினாலேயும் நீதிமானாக்கப்படுகிறானென்று நீங்கள் காண்கிறீர்களே. 25 அந்தப்படி ராகாப் என்னும் வேசியும் தூதர்களை ஏற்றுக்கொண்டு வேறுவழியாய் அனுப்பிவிட்டபோது, கிரியைகளினாலே அல்லவோ நீதியுள்ளவளாக்கப்பட்டாள்? 26 அப்படியே, ஆவியில்லாத சரீரம் செத்ததாயிருக்கிறதுபோல, கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.

யாக்கோபு 3

1 என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக. 2 நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்; ஒருவன் சொல்தவறாதவனானால் அவன் பூரணபுருஷனும், தன் சரீரமுழுவதையும் கடிவாளத்தினாலே அடக்கிக்கொள்ளக்கூடியவனுமாயிருக்கிறான். 3 பாருங்கள், குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படிக்கு அவைகளின் வாய்களில் கடிவாளம்போட்டு, அவைகளுடைய முழுச்சரீரத்தையும் திருப்பி நடத்துகிறோம். 4 கப்பல்களையும் பாருங்கள், அவைகள் மகா பெரியவைகளாயிருந்தாலும், கடுங்காற்றுகளால் அடிபட்டாலும், அவைகளை நடத்துகிறவன் போகும்படி யோசிக்கும் இடம் எதுவோ அவ்விடத்திற்கு நேராக மிகவும் சிறிதான சுக்கானாலே திருப்பப்படும். 5 அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது! 6 நாவும் நெருப்புத்தான், அது அநீதி நிறைந்த உலகம்; நம்முடைய அவயவங்களில் நாவானது முழுச்சரீரத்தையும் கறைப்படுத்தி, ஆயுள் சக்கரத்தைக் கொளுத்திவிடுகிறதாயும், நரக அக்கினியினால் கொளுத்தப்படுகிறதாயும் இருக்கிறது! 7 சகலவிதமான மிருகங்கள், பறவைகள், ஊரும்பிராணிகள், நீர்வாழும் ஜெந்துக்கள் ஆகிய இவைகளின் சுபாவம் மனுஷசுபாவத்தால் அடக்கப்படும், அடக்கப்பட்டதுமுண்டு. 8 நாவை அடக்க ஒரு மனுஷனாலும் கூடாது; அது அடங்காத பொல்லாங்குள்ளதும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாயிருக்கிறது. 9 அதினாலே நாம் பிதாவாகிய தேவனைத் துதிக்கிறோம்; தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலேயே சபிக்கிறோம். 10 துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது. 11 ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து தித்திப்பும் கசப்புமான தண்ணீர் சுரக்குமா? 12 என் சகோதரரே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அப்படியே உவர்ப்பான நீரூற்றுத் தித்திப்பான ஜலத்தைக் கொடுக்கமாட்டாது. 13 உங்களில் ஞானியும் விவேகியுமாயிருக்கிறவன் எவனோ, அவன் ஞானத்திற்குரிய சாந்தத்தோடே தன் கிரியைகளை நல்ல நடக்கையினாலே காண்பிக்கக்கடவன். 14 உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள்; சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய்சொல்லாமலுமிருங்கள். 15 இப்படிப்பட்ட ஞானம் பரத்திலிருந்து இறங்கிவருகிற ஞானமாயிராமல், லௌகிக சம்பந்தமானதும், ஜென்மசுபாவத்துக்குரியதும், பேய்த்தனத்துக்கடுத்ததுமாயிருக்கிறது. 16 வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டோ, அங்கே கலகமும் சகல துர்ச்செய்கைகளுமுண்டு. 17 பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது. 18 நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது.

யாக்கோபு 4

1 உங்களுக்குள்ளே யுத்தங்களும் சண்டைகளும் எதினாலே வருகிறது; உங்கள் அவயவங்களில் போர்செய்கிற இச்சைகளினாலல்லவா? 2 நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும்பண்ணியும், நீங்கள் விண்ணப்பம்பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை. 3 நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள். 4 விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான். 5 நம்மில் வாசமாயிருக்கிற ஆவியானவர் நம்மிடத்தில் வைராக்கிய வாஞ்சையாயிருக்கிறாரென்று வேதவாக்கியம் வீணாய்ச் சொல்லுகிறதென்று நினைக்கிறீர்களா? 6 அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது. 7 ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான். 8 தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார். பாவிகளே, உங்கள் கைகளைச் சுத்திகரியுங்கள்; இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள். 9 நீங்கள் துயரப்பட்டுத் துக்கித்து அழுங்கள்; உங்கள் நகைப்பு துக்கிப்பாகவும், உங்கள் சந்தோஷம் சஞ்சலமாகவும் மாறக்கடவது. 10 கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார். 11 சகோதரரே, ஒருவருக்கொருவர் விரோதமாய்ப் பேசாதிருங்கள்; சகோதரனுக்கு விரோதமாய்ப் பேசி, தன் சகோதரனைக் குற்றப்படுத்துகிறவன் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாய்ப்பேசி நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துகிறான்; நியாயப்பிரமாணத்தைக் குற்றப்படுத்துவாயானால், நீ நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவனாயிராமல், அதற்கு நியாயாதிபதியாயிருப்பாய். 12 நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? 13 மேலும், நாங்கள் இன்றைக்கு அல்லது நாளைக்கு இன்ன பட்டணத்திற்குப் போய், அங்கே ஒருவருஷம் தங்கி, வியாபாரஞ்செய்து, சம்பாத்தியம் பண்ணுவோமென்கிறவர்களே, கேளுங்கள். 14 நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரியாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே. 15 ஆதலால்: ஆண்டவருக்குச் சித்தமானால், நாங்களும் உயிரோடிருந்தால், இன்னின்னதைச் செய்வோம் என்று சொல்லவேண்டும். 16 இப்பொழுது உங்கள் வீம்புகளில் மேன்மைபாராட்டுகிறீர்கள்; இப்படிப்பட்ட மேன்மைபாராட்டல் யாவும் பொல்லாங்காயிருக்கிறது. 17 ஆதலால், ஒருவன் நன்மைசெய்ய அறிந்தவனாயிருந்தும், அதைச் செய்யாமற்போனால், அது அவனுக்குப் பாவமாயிருக்கும்.

யாக்கோபு 5

1 ஐசுவரியவான்களே, கேளுங்கள், உங்கள்மேல் வரும் நிர்ப்பந்தங்களினிமித்தம் அலறி அழுங்கள். 2 உங்கள் ஐசுவரியம் அழிந்து, உங்கள் வஸ்திரங்கள் பொட்டரித்துப்போயின. 3 உங்கள் பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்தது; அவைகளிலுள்ள துரு உங்களுக்கு விரோதமாகச் சாட்சியாயிருந்து, அக்கினியைப்போல உங்கள் மாம்சத்தைத் தின்னும். கடைசிநாட்களிலே பொக்கிஷத்தைச் சேர்த்தீர்கள். 4 இதோ, உங்கள் வயல்களை அறுத்த வேலைக்காரருடைய கூலி உங்களால் அநியாயமாய்ப் பிடிக்கப்பட்டுக் கூக்குரலிடுகிறது; அறுத்தவர்களுடைய கூக்குரல் சேனைகளுடைய கர்த்தரின் செவிகளில் பட்டது. 5 பூமியிலே நீங்கள் சம்பிரமமாய் வாழ்ந்து, சுகபோகத்தில் உழன்றீர்கள்; கொழுத்தவைகளை அடிக்கும் நாளில் நடக்கிறதுபோல உங்கள் இருதயங்களைப் போஷித்தீர்கள். 6 நீதிமானை நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்துக் கொலைசெய்தீர்கள்; அவன் உங்களோடே எதிர்த்துநிற்கவில்லை. 7 இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். 8 நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே. 9 சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். 10 என் சகோதரரே, கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக வைத்துக்கொள்ளுங்கள். 11 இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே. 12 விசேஷமாய், என் சகோதரரே, வானத்தின்பேரிலாவது, பூமியின்பேரிலாவது, வேறெந்த ஆணையினாலாவது சத்தியம்பண்ணாதிருங்கள்; நீங்கள் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லக்கடவீர்கள். 13 உங்களில் ஒருவன் துன்பப்பட்டால் ஜெபம்பண்ணக்கடவன்; ஒருவன் மகிழ்ச்சியாயிருந்தால் சங்கீதம் பாடக்கடவன். 14 உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக; அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய்பூசி, அவனுக்காக ஜெபம்பண்ணக்கடவர்கள். 15 அப்பொழுது விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்; கர்த்தர் அவனை எழுப்புவார்; அவன் பாவஞ்செய்தவனானால் அது அவனுக்கு மன்னிக்கப்படும். 16 நீங்கள் சொஸ்தமடையும்படிக்கு, உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம்பண்ணுங்கள். நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது. 17 எலியா என்பவன் நம்மைப்போலப்பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழைபெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம்பண்ணினான், அப்பொழுது மூன்றுவருஷமும் ஆறுமாதமும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை. 18 மறுபடியும் ஜெபம்பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது. 19 சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், 20 தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.

1 பேதுரு 1

1 இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பேதுரு, பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா தேசங்களிலே சிதறியிருக்கிறவர்களில், 2 பிதாவாகிய தேவனுடைய முன்னறிவின்படியே, ஆவியானவரின் பரிசுத்தமாக்குதலினாலே, கீழ்ப்படிதலுக்கும் இயேசுகிறிஸ்துவினுடைய இரத்தந்தெளிக்கப்படுதலுக்கும் தெரிந்துகொள்ளப்பட்ட பரதேசிகளுக்கு எழுதுகிறதாவது: கிருபையும் சமாதானமும் உங்களுக்குப் பெருகக்கடவது. 3 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக; 4 அவர், இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்ததினாலே, அழியாததும் மாசற்றதும் வாடாததுமாகிய சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி, தமது மிகுந்த இரக்கத்தின்படியே நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். 5 கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச் சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. 6 இதிலே நீங்கள் மிகவும் சந்தோஷப்படுகிறீர்கள்; என்றாலும், துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். 7 அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். 8 அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து, 9 உங்கள் விசுவாசத்தின் பலனாகிய ஆத்துமரட்சிப்பை அடைகிறீர்கள். 10 உங்களுக்கு உண்டான கிருபையைக் குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொன்ன தீர்க்கதரிசிகள் இந்த இரட்சிப்பைக்குறித்துக் கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனைபண்ணினார்கள்; 11 தங்களிலுள்ள கிறிஸ்துவின் ஆவியானவர் கிறிஸ்துவுக்கு உண்டாகும் பாடுகளையும், அவைகளுக்குப் பின்வரும் மகிமைகளையும் முன்னறிவித்தபோது, இன்னகாலத்தைக் குறித்தாரென்பதையும், அந்தக் காலத்தின் விசேஷம் இன்னதென்பதையும் ஆராய்ந்தார்கள். 12 தங்கள்நிமித்தமல்ல, நமதுநிமித்தமே இவைகளைத் தெரிவித்தார்களென்று அவர்களுக்கு வெளியாக்கப்பட்டது; பரலோகத்திலிருந்து அனுப்பப்பட்ட பரிசுத்த ஆவியினாலே உங்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தவர்களைக்கொண்டு இவைகள் இப்பொழுது உங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது; இவைகளை உற்றுப்பார்க்கத் தேவதூதரும் ஆசையாயிருக்கிறார்கள். 13 ஆகையால், நீங்கள் உங்கள் மனதின் அரையைக் கட்டிக்கொண்டு, தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து; இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்கு அளிக்கப்படுங் கிருபையின்மேல் பூரண நம்பிக்கையுள்ளவர்களாயிருங்கள். 14 நீங்கள் முன்னே உங்கள் அறியாமையினாலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்ப்படிகிற பிள்ளைகளாயிருந்து, 15 உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள். 16 நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் என்று எழுதியிருக்கிறதே. 17 அன்றியும், பட்சபாதமில்லாமல் அவனவனுடைய கிரியைகளின்படி நியாயந்தீர்க்கிறவரை நீங்கள் பிதாவாகத் தொழுதுகொண்டுவருகிறபடியால், இங்கே பரதேசிகளாய்ச் சஞ்சரிக்குமளவும் பயத்துடனே நடந்துகொள்ளுங்கள். 18 உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்துவந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், 19 குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே. 20 அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய்த் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக் காலங்களில் வெளிப்பட்டார். 21 உங்கள் விசுவாசமும் நம்பிக்கையும் தேவன்மேலிருக்கும்படி, அவரை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவருக்கு மகிமையைக் கொடுத்தார். 22 ஆகையால் நீங்கள் மாயமற்ற சகோதர சிநேகமுள்ளவர்களாகும்படி, ஆவியினாலே சத்தியத்திற்குக் கீழ்ப்படிந்து, உங்கள் ஆத்துமாக்களைச் சுத்தமாக்கிக்கொண்டவர்களாயிருக்கிறபடியால், சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்; 23 அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே. 24 மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமையெல்லாம் புல்லின் பூவைப்போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது. 25 கர்த்தருடைய வசனமோ என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்; உங்களுக்குச் சுவிசேஷமாய் அறிவிக்கப்பட்டுவருகிற வசனம் இதுவே.

1 பேதுரு 2

1 இப்படியிருக்க, கர்த்தர் தயையுள்ளவரென்பதை நீங்கள் ருசிபார்த்ததுண்டானால், 2 சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு, 3 நீங்கள் வளரும்படி, புதிதாய்ப் பிறந்த குழந்தைகளைப்போல, திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருங்கள். 4 மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும், 5 ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள். 6 அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது. 7 ஆகையால் விசுவாசிக்கிற உங்களுக்கு அது விலையேறப்பெற்றது; கீழ்ப்படியாமலிருக்கிறவர்களுக்கோ வீட்டைக் கட்டுகிறவர்களால் தள்ளப்பட்ட பிரதான மூலைக்கல்லாகிய அந்தக் கல் இடறுதற்கேதுவான கல்லும் விழுதற்கேதுவான கன்மலையுமாயிற்று; 8 அவர்கள் திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள். 9 நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள். 10 முன்னே நீங்கள் தேவனுடைய ஜனங்களாயிருக்கவில்லை, இப்பொழுதோ அவருடைய ஜனங்களாயிருக்கிறீர்கள்; முன்னே நீங்கள் இரக்கம் பெறாதவர்களாயிருந்தீர்கள், இப்பொழுதோ இரக்கம் பெற்றவர்களாயிருக்கிறீர்கள். 11 பிரியமானவர்களே, அந்நியர்களும் பரதேசிகளுமாயிருக்கிற நீங்கள் ஆத்துமாவுக்கு விரோதமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகளை விட்டு விலகி, 12 புறஜாதிகள் உங்களை அக்கிரமக்காரரென்று விரோதமாய்ப் பேசும் விஷயத்தில், அவர்கள் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, அவற்றினிமித்தம் சந்திப்பின் நாளிலே தேவனை மகிமைப்படுத்தும்படி நீங்கள் அவர்களுக்குள்ளே நல்நடக்கையுள்ளவர்களாய் நடந்துகொள்ளுங்கள் என்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 13 நீங்கள் மனுஷருடைய கட்டளைகள் யாவற்றிற்கும் கர்த்தர்நிமித்தம் கீழ்ப்படியுங்கள். 14 மேலான அதிகாரமுள்ள ராஜாவுக்கானாலுஞ்சரி, தீமைசெய்கிறவர்களுக்கு ஆக்கினையும் நன்மைசெய்கிறவர்களுக்குப் புகழ்ச்சியும் உண்டாகும்படி அவனால் அனுப்பப்பட்ட அதிகாரிகளுக்கானாலுஞ்சரி, கீழ்ப்படியுங்கள். 15 நீங்கள் நன்மைசெய்கிறதினாலே புத்தியீன மனுஷருடைய அறியாமையை அடக்குவது தேவனுடைய சித்தமாயிருக்கிறது. 16 சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும் உங்கள் சுயாதீனத்தைத் துர்க்குணத்திற்கு மூடலாகக் கொண்டிராமல், தேவனுக்கு அடிமைகளாயிருங்கள். 17 எல்லாரையும் கனம்பண்ணுங்கள்; சகோதரரிடத்தில் அன்புகூருங்கள்; தேவனுக்குப் பயந்திருங்கள்; ராஜாவைக் கனம்பண்ணுங்கள். 18 வேலைக்காரரே, அதிக பயத்துடனே உங்கள் எஜமான்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; நல்லவர்களுக்கும் சாந்தகுணமுள்ளவர்களுக்கும் மாத்திரம் அல்ல, முரட்டுக்குணமுள்ளவர்களுக்கும் கீழ்ப்படிந்திருங்கள். 19 ஏனெனில், தேவன்மேல் பற்றுதலாயிருக்கிற மனச்சாட்சியினிமித்தம் ஒருவன் அநியாயமாய்ப் பாடுபட்டு உபத்திரவங்களைப் பொறுமையாய்ச் சகித்தால் அதுவே பிரீதியாயிருக்கும். 20 நீங்கள் குற்றஞ்செய்து அடிக்கப்படும்போது பொறுமையோடே சகித்தால், அதினால் என்ன கீர்த்தியுண்டு? நீங்கள் நன்மைசெய்து பாடுபடும்போது பொறுமையோடே சகித்தால் அதுவே தேவனுக்குமுன்பாகப் பிரீதியாயிருக்கும். 21 இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார். 22 அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை; 23 அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார். 24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். 25 சிதறுண்ட ஆடுகளைப்போலிருந்தீர்கள்; இப்பொழுதோ உங்கள் ஆத்துமாக்களுக்கு மேய்ப்பரும் கண்காணியுமானவரிடத்தில் திருப்பப்பட்டிருக்கிறீர்கள்.

1 பேதுரு 3

1 அந்தப்படி மனைவிகளே, உங்கள் சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடு கூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, 2 போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள். 3 மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக்கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், 4 அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. 5 இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள். 6 அந்தப்படியே சாராள் ஆபிரகாமை ஆண்டவன் என்று சொல்லி, அவனுக்குக் கீழ்ப்படிந்திருந்தாள்; நீங்கள் நன்மைசெய்து ஒரு ஆபத்துக்கும் பயப்படாதிருந்தீர்களானால் அவளுக்குப் பிள்ளைகளாயிருப்பீர்கள். 7 அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்திய ஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள். 8 மேலும், நீங்களெல்லாரும் ஒருமனப்பட்டவர்களும், இரக்கமுள்ளவர்களும், சகோதர சிநேகமுள்ளவர்களும், மனஉருக்கமுள்ளவர்களும், இணக்கமுள்ளவர்களுமாயிருந்து, 9 தீமைக்குத் தீமையையும், உதாசனத்துக்கு உதாசனத்தையும் சரிக்கட்டாமல், அதற்குப் பதிலாக, நீங்கள் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அழைக்கப்பட்டிருக்கிறவர்களென்று அறிந்து, ஆசீர்வதியுங்கள். 10 ஜீவனை விரும்பி, நல்ல நாட்களைக் காணவேண்டுமென்றிருக்கிறவன் பொல்லாப்புக்குத் தன் நாவையும், கபடத்துக்குத் தன் உதடுகளையும் விலக்கிக்காத்து, 11 பொல்லாப்பைவிட்டு நீங்கி, நன்மைசெய்து, சமாதானத்தைத் தேடி, அதைப் பின்தொடரக்கடவன். 12 கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது. 13 நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்? 14 நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து; 15 கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். 16 கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள். 17 தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும். 18 ஏனெனில், கிறிஸ்துவும் நம்மைத் தேவனிடத்தில் சேர்க்கும்படி அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய்ப் பாவங்களினிமித்தம் ஒருதரம் பாடுபட்டார்; அவர் மாம்சத்திலே கொலையுண்டு, ஆவியிலே உயிர்ப்பிக்கப்பட்டார். 19 அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார். 20 அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள். 21 அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாயிராமல், தேவனைப்பற்றும் நல்மனச்சாட்சியின் உடன்படிக்கையாயிருந்து, இப்பொழுது நம்மையும் இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது; 22 அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

1 பேதுரு 4

1 இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக மாம்சத்திலே பாடுபட்டபடியால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாகத் தரித்துக்கொள்ளுங்கள். 2 ஏனென்றால் மாம்சத்தில் பாடுபடுகிறவன் இனி மாம்சத்திலிருக்கும் காலம்வரைக்கும் மனுஷருடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய சித்தத்தின்படியே பிழைக்கத்தக்கதாகப் பாவங்களை விட்டோய்ந்திருப்பான். 3 சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம். 4 அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடேகூட நீங்கள் விழாமலிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள். 5 உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள். 6 இதற்காக மரித்தோரானவர்கள், மனுஷர்முன்பாக மாம்சத்திலே ஆக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக, அவர்களுக்கும் சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது. 7 எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று; ஆகையால் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து, ஜெபம்பண்ணுவதற்கு ஜாக்கிரதையுள்ளவர்களாயிருங்கள். 8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும். 9 முறுமுறுப்பில்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள். 10 அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள். 11 ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். 12 பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக்குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், 13 கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள். 14 நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார். 15 ஆதலால் உங்களில் ஒருவனும் கொலைபாதகனாயாவது, திருடனாயாவது, பொல்லாங்கு செய்தவனாயாவது, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாயாவது பாடுபடுகிறவனாயிருக்கக்கூடாது. 16 ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமலிருந்து, அதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்தக்கடவன். 17 நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே துவக்குங்காலமாயிருக்கிறது; முந்தி நம்மிடத்திலே அது துவக்கினால் தேவனுடைய சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு என்னமாயிருக்கும்? 18 நீதிமானே இரட்சிக்கப்படுவது அரிதானால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பான்? 19 ஆகையால் தேவனுடைய சித்தத்தின்படி பாடநுபவிக்கிறவர்கள் நன்மைசெய்கிறவர்களாய்த் தங்கள் ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கக்கடவர்கள்.

1 பேதுரு 5

1 உங்களிலுள்ள மூப்பருக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்காளியுமாயிருக்கிற நான் புத்திசொல்லுகிறதென்னவென்றால்: 2 உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், 3 சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள். 4 அப்படிச் செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெறுவீர்கள். 5 அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். 6 ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். 7 அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். 8 தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான். 9 விசுவாசத்தில் உறுதியாயிருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்திலுள்ள உங்கள் சகோதரரிடத்திலே அப்படிப்பட்ட பாடுகள் நிறைவேறிவருகிறதென்று அறிந்திருக்கிறீர்களே. 10 கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மைத் தமது நித்திய மகிமைக்கு அழைத்தவராயிருக்கிற சகல கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடநுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; 11 அவருக்கு மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். 12 உங்களுக்குப் புத்திசொல்லும்படிக்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை தேவனுடைய மெய்யான கிருபைதானென்று சாட்சியிடும்படிக்கும், நான் சுருக்கமாய் உங்களுக்கு எழுதி, எனக்குத் தோன்றுகிறபடி உண்மையுள்ள சகோதரனாகிய சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன். 13 உங்களுடனேகூடத் தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் குமாரனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். 14 ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடே வாழ்த்துதல் செய்யுங்கள். கிறிஸ்து இயேசுவுக்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானமுண்டாவதாக. ஆமென்.

2 பேதுரு 1

1 நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது: 2 தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது. 3 தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி, 4 இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. 5 இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், 6 ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், 7 தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். 8 இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது. 9 இவைகள் இல்லாதவன் எவனோ, அவன் முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்து கண்சொருகிப்போன குருடனாயிருக்கிறான். 10 ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. 11 இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும். 12 இதினிமித்தம், இவைகளை நீங்கள் அறிந்தும், நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கிற சத்தியத்தில் உறுதிப்பட்டிருந்தும், உங்களுக்கு இவைகளை எப்பொழுதும் நினைப்பூட்ட நான் அசதியாயிரேன். 13 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து எனக்கு அறிவித்தபடி நான் என் கூடாரத்தைவிட்டுப்போவது சீக்கிரத்தில் நேரிடுமென்று அறிந்து, 14 இந்தக் கூடாரத்தில் நான் இருக்குமளவும் உங்களை நினைப்பூட்டி எழுப்பிவிடுவது நியாயமென்று எண்ணுகிறேன். 15 மேலும், நான் சென்றுபோனபின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள ஏதுவுண்டாயிருக்கும்படி பிரயத்தனம்பண்ணுவேன். 16 நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். 17 இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது, 18 அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம். 19 அதிக உறுதியான தீர்க்கதரிசனவசனமும் நமக்கு உண்டு; பொழுது விடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும். 20 வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. 21 தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்.

2 பேதுரு 2

1 கள்ளத்தீர்க்கதரிசிகளும் ஜனங்களுக்குள்ளே இருந்தார்கள், அப்படியே உங்களுக்குள்ளும் கள்ளப்போதகர்கள் இருப்பார்கள்; அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி, தங்களைக் கிரயத்துக்குக்கொண்ட ஆண்டவரை மறுதலித்து, தங்களுக்குத் தீவிரமான அழிவை வருவித்துக்கொள்ளுவார்கள். 2 அவர்களுடைய கெட்ட நடக்கைகளை அநேகர் பின்பற்றுவார்கள்; அவர்கள்நிமித்தம் சத்தியமார்க்கம் தூஷிக்கப்படும். 3 பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது. 4 பாவஞ்செய்த தூதர்களைத் தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து; 5 பூர்வ உலகத்தையும் தப்பவிடாமல், நீதியைப் பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டுப்பேரைக் காப்பாற்றி, அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த உலகத்தின்மேல் ஜலப்பிரளயத்தை வரப்பண்ணி; 6 சோதோம் கொமோரா என்னும் பட்டணங்களையும் சாம்பலாக்கிக் கவிழ்த்துப்போட்டு, ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து; 7 அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு; 8 நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க; 9 கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார். 10 விசேஷமாக அசுத்த இச்சையோடே மாம்சத்திற்கேற்றபடி நடந்து, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணுகிறவர்களை அப்படிச் செய்வார். இவர்கள் துணிகரக்காரர், அகங்காரிகள், மகத்துவங்களைத் தூஷிக்க அஞ்சாதவர்கள். 11 அதிக பெலனையும் வல்லமையையுமுடைய தேவதூதர்கள் முதலாய்க் கர்த்தருக்கு முன்பாக அவர்களைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தமாட்டார்களே. 12 இவர்களோ பிடிபட்டழிக்கப்படுவதற்கு உண்டான புத்தியற்ற மிருகஜீவன்களைப்போலத் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷித்து, தங்கள் கேட்டிலே கெட்டழிந்து, அநீதத்தின் பலனை அடைவார்கள். 13 இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து; உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்; 14 விபசாரமயக்கத்தால் நிறைந்தவைகளும், பாவத்தை விட்டோயாதவைகளுமாயிருக்கிற கண்களையுடையவர்கள்; உறுதியில்லாத ஆத்துமாக்களைத் தந்திரமாய்ப் பிடித்து, பொருளாசைகளில் பழகின இருதயத்தையுடைய சாபத்தின் பிள்ளைகள். 15 செம்மையான வழியைவிட்டுத் தப்பிநடந்து, பேயோரின் குமாரனாகிய பிலேயாமின் வழியைப் பின்பற்றிப்போனவர்கள்; அவன் அநீதத்தின் கூலியை விரும்பி, 16 தன்னுடைய அக்கிரமத்தினிமித்தம் கடிந்துகொள்ளப்பட்டான்; பேசாத மிருகம் மனுஷர்பேச்சைப் பேசித் தீர்க்கதரிசியினுடைய மதிகேட்டைத் தடுத்தது. 17 இவர்கள் தண்ணீரில்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடியுண்டோடுகிற மேகங்களுமாயிருக்கிறார்கள்; என்றென்றைக்குமுள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. 18 வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்த்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள். 19 தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே. 20 கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும். 21 அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்தபின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும். 22 நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.

2 பேதுரு 3

1 பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன். 2 பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளையும், இரட்சகராயிருக்கிற கர்த்தருடைய அப்போஸ்தலராகிய எங்களுடைய கட்டளைகளையும் நீங்கள் நினைவுகூரும்படி இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன். 3 முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுய இச்சைகளின்படியே நடந்து, 4 அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின்தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள். 5 பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், ஜலத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உண்டாயினவென்பதையும், 6 அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள். 7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது. 8 பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம் வருஷம்போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம். 9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். 10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம். 11 இப்படி இவைகளெல்லாம் அழிந்து போகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்க வேண்டும்! 12 தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம். 13 அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம். 14 ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள். 15 மேலும் நம்முடைய கர்த்தரின் நீடிய பொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்; 16 எல்லா நிருபங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள். 17 ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து, 18 நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

1 யோவான் 1

1 ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டதுமாயிருக்கிற ஜீவவார்த்தையைக்குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம். 2 அந்த ஜீவன் வெளிப்பட்டது; பிதாவினிடத்திலிருந்ததும், எங்களுக்கு வெளிப்பட்டதுமான நித்தியமாயிருக்கிற அந்த ஜீவனை நாங்கள் கண்டு, அதைக்குறித்துச் சாட்சிகொடுத்து, அதை உங்களுக்கு அறிவிக்கிறோம். 3 நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது. 4 உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம். 5 தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை; இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. 6 நாம் அவரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்தால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம். 7 அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். 8 நமக்குப் பாவமில்லையென்போமானால், நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. 9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். 10 நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப் பொய்யராக்குகிறவர்களாயிருப்போம், அவருடைய வார்த்தை நமக்குள் இராது.

1 யோவான் 2

1 என் பிள்ளைகளே, நீங்கள் பாவஞ்செய்யாதபடிக்கு இவைகளை உங்களுக்கு எழுதுகிறேன்; ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். 2 நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். 3 அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். 4 அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. 5 அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்; நாம் அவருக்குள் இருக்கிறோமென்பதை அதினாலே அறிந்திருக்கிறோம். 6 அவருக்குள் நிலைத்திருக்கிறேனென்று சொல்லுகிறவன், அவர் நடந்தபடியே தானும் நடக்கவேண்டும். 7 சகோதரரே, நான் உங்களுக்குப் புதிய கற்பனையை அல்ல, ஆதிமுதல் நீங்கள் பெற்றிருக்கிற பழைய கற்பனையையே எழுதுகிறேன்; அந்தப் பழைய கற்பனை நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிற வசனந்தானே. 8 மேலும், நான் புதிய கற்பனையையும் உங்களுக்கு எழுதுகிறேன், இது அவருக்குள்ளும் உங்களுக்குள்ளும் மெய்யாயிருக்கிறது; ஏனென்றால், இருள் நீங்கிப்போகிறது, மெய்யான ஒளி இப்பொழுது பிரகாசிக்கிறது. 9 ஒளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கிறவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான். 10 தன் சகோதரனிடத்தில் அன்புகூருகிறவன் ஒளியிலே நிலைகொண்டிருக்கிறான்; அவனிடத்தில் இடறல் ஒன்றுமில்லை. 11 தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்; இருளானது அவன் கண்களைக் குருடாக்கினபடியால் தான் போகும் இடம் இன்னதென்று அறியாதிருக்கிறான். 12 பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். 13 பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். வாலிபரே, பொல்லாங்கனை நீங்கள் ஜெயித்ததினால் உங்களுக்கு எழுதுகிறேன். பிள்ளைகளே, நீங்கள் பிதாவை அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன். 14 பிதாக்களே, ஆதிமுதலிருக்கிறவரை நீங்கள் அறிந்திருக்கிறதினால் உங்களுக்கு எழுதியிருக்கிறேன். வாலிபரே, நீங்கள் பலவான்களாயிருக்கிறதினாலும், தேவவசனம் உங்களில் நிலைத்திருக்கிறதினாலும், நீங்கள் பொல்லாங்கனை ஜெயித்ததினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 15 உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை. 16 ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள். 17 உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான். 18 பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம். 19 அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்துபோனார்கள், ஆகிலும் அவர்கள் நம்முடையவர்களாயிருக்கவில்லை; நம்முடையவர்களாயிருந்தார்களானால் நம்முடனே நிலைத்திருப்பார்களே; எல்லாரும் நம்முடையவர்களல்லவென்று வெளியாகும்படிக்கே பிரிந்துபோனார்கள். 20 நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள். 21 சத்தியத்தை நீங்கள் அறியாததினாலல்ல, நீங்கள் சத்தியத்தை அறிந்திருக்கிறதினாலும், சத்தியத்தினால் ஒரு பொய்யுமுண்டாயிராதென்பதை நீங்கள் அறிந்திருக்கிறதினாலும், உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 22 இயேசுவைக் கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து. 23 குமாரனை மறுதலிக்கிறவன் பிதாவையுடையவனல்ல, குமாரனை அறிக்கையிடுகிறவன் பிதாவையும் உடையவனாயிருக்கிறான். 24 ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள். 25 நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். 26 உங்களை வஞ்சிக்கிறவர்களைக்குறித்து இவைகளை உங்களுக்கு எழுதியிருக்கிறேன். 27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக. 28 இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள். 29 அவர் நீதியுள்ளவராயிருக்கிறாரென்று உங்களுக்குத் தெரிந்திருப்பதினால், நீதியைச் செய்கிறவனெவனும் அவரில் பிறந்தவனென்று அறிந்திருக்கிறீர்கள்.

1 யோவான் 3

1 நாம் தேவனுடைய பிள்ளைகளென்று அழைக்கப்படுவதினாலே பிதாவானவர் நமக்குப் பாராட்டின அன்பு எவ்வளவு பெரிதென்று பாருங்கள்; உலகம் அவரை அறியாதபடியினாலே நம்மையும் அறியவில்லை. 2 பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போமென்று இன்னும் வெளிப்படவில்லை; ஆகிலும் அவர் வெளிப்படும்போது அவர் இருக்கிறவண்ணமாகவே நாம் அவரைத் தரிசிப்பதினால், அவருக்கு ஒப்பாயிருப்போமென்று அறிந்திருக்கிறோம். 3 அவர்மேல் இப்படிப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறவனெவனும், அவர் சுத்தமுள்ளவராயிருக்கிறதுபோல, தன்னையும் சுத்திகரித்துக்கொள்ளுகிறான். 4 பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம். 5 அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை. 6 அவரில் நிலைத்திருக்கிற எவனும் பாவஞ்செய்கிறதில்லை; பாவஞ்செய்கிற எவனும் அவரைக் காணவுமில்லை, அவரை அறியவுமில்லை. 7 பிள்ளைகளே, நீங்கள் ஒருவராலும் வஞ்சிக்கப்படாதிருங்கள்; நீதியைச் செய்கிறவன் அவர் நீதியுள்ளவராயிருக்கிறதுபோலத் தானும் நீதியுள்ளவனாயிருக்கிறான். 8 பாவஞ்செய்கிறவன் பிசாசினாலுண்டாயிருக்கிறான்; ஏனெனில் பிசாசானவன் ஆதிமுதல் பாவஞ்செய்கிறான்; பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார். 9 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான். 10 இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல. 11 நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்பதே நீங்கள் ஆதிமுதல் கேள்விப்பட்ட விசேஷமாயிருக்கிறது. 12 பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப்போலிருக்கவேண்டாம்; அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்? தன் கிரியைகள் பொல்லாதவைகளும், தன் சகோதரனுடைய கிரியைகள் நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந்தானே. 13 என் சகோதரரே, உலகம் உங்களைப் பகைத்தால் ஆச்சரியப்படாதிருங்கள். 14 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். 15 தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள். 16 அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். 17 ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி? 18 என் பிள்ளைகளே, வசனத்தினாலும் நாவினாலுமல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கடவோம். 19 இதினாலே நாம் நம்மைச் சத்தியத்திற்குரியவர்களென்று அறிந்து, நம்முடைய இருதயத்தை அவருக்கு முன்பாக நிச்சயப்படுத்திக்கொள்ளலாம். 20 நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார். 21 பிரியமானவர்களே, நம்முடைய இருதயம் நம்மைக் குற்றவாளிகளென்று தீர்க்காதிருந்தால், நாம் தேவனிடத்தில் தைரியங்கொண்டிருந்து, 22 அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாகப் பிரியமானவைகளைச் செய்கிறபடியினால் நாம் வேண்டிக்கொள்ளுகிறதெதுவோ அதை அவராலே பெற்றுக்கொள்ளுகிறோம். 23 நாம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தின்மேல் விசுவாசமாயிருந்து, அவர் நமக்குக் கட்டளையிட்டபடி ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே அவருடைய கற்பனையாயிருக்கிறது. 24 அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறவன் அவரில் நிலைத்திருக்கிறான், அவரும் அவனில் நிலைத்திருக்கிறார்; அவர் நம்மில் நிலைத்திருக்கிறதை அவர் நமக்குத் தந்தருளின ஆவியினாலே அறிந்திருக்கிறோம்.

1 யோவான் 4

1 பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள். 2 தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. 3 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது. 4 பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். 5 அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும். 6 நாங்கள் தேவனால் உண்டானவர்கள்; தேவனை அறிந்தவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறான்; தேவனால் உண்டாயிராதவன் எங்களுக்குச் செவிகொடுக்கிறதில்லை; இதினாலே சத்திய ஆவி இன்னதென்றும், வஞ்சகஆவி இன்னதென்றும் அறிந்திருக்கிறோம். 7 பிரியமானவர்களே, ஒருவரிலொருவர் அன்பாயிருக்கக்கடவோம்; ஏனெனில் அன்பு தேவனால் உண்டாயிருக்கிறது; அன்புள்ள எவனும் தேவனால் பிறந்து, அவரை அறிந்திருக்கிறான். 8 அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார். 9 தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. 10 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. 11 பிரியமானவர்களே, தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். 12 தேவனை ஒருவரும் ஒருபோதும் கண்டதில்லை; நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூர்ந்தால் தேவன் நமக்குள் நிலைத்திருக்கிறார்; அவருடைய அன்பும் நமக்குள் பூரணப்படும். 13 அவர் தம்முடைய ஆவியில் நமக்குத் தந்தருளினதினாலே நாம் அவரிலும் அவர் நம்மிலும் நிலைத்திருக்கிறதை அறிந்திருக்கிறோம். 14 பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். 15 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனில் தேவன் நிலைத்திருக்கிறார், அவனும் தேவனில் நிலைத்திருக்கிறான். 16 தேவன் நம்மேல் வைத்திருக்கிற அன்பை நாம் அறிந்து விசுவாசித்திருக்கிறோம். தேவன் அன்பாகவே இருக்கிறார்; அன்பில் நிலைத்திருக்கிறவன் தேவனில் நிலைத்திருக்கிறான், தேவனும் அவனில் நிலைத்திருக்கிறார். 17 நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம். 18 அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல. 19 அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். 20 தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்? 21 தேவனிடத்தில் அன்புகூருகிறவன் தன் சகோதரனிடத்திலும் அன்புகூரவேண்டுமென்கிற இந்தக் கற்பனையை அவராலே பெற்றிருக்கிறோம்.

1 யோவான் 5

1 இயேசுவானவரே கிறிஸ்து என்று விசுவாசிக்கிற எவனும் தேவனால் பிறந்திருக்கிறான்; பிறப்பித்தவரிடத்தில் அன்புகூருகிற எவனும் அவரால் பிறப்பிக்கப்பட்டவனிடத்திலும் அன்புகூருகிறான். 2 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்து அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய பிள்ளைகளிடத்தில் அன்புகூருகிறோமென்று அறிந்துகொள்ளுகிறோம். 3 நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல. 4 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். 5 இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்? 6 இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர். 7 [பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள்; 8 பூலோகத்திலே] சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே, இம்மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது. 9 நாம் மனுஷருடைய சாட்சியை ஏற்றுக்கொண்டால், அதைப்பார்க்கிலும் தேவனுடைய சாட்சி அதிகமாயிருக்கிறது; தேவன் தமது குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சி இதுவே. 10 தேவனுடைய குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் அந்தச் சாட்சியைத் தனக்குள்ளே கொண்டிருக்கிறான்; தேவனை விசுவாசியாதவனோ, தேவன் தம்முடைய குமாரனைக்குறித்துக் கொடுத்த சாட்சியை விசுவாசியாததினால், அவரைப் பொய்யராக்குகிறான். 11 தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். 12 குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். 13 உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். 14 நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். 15 நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம். 16 மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைத் தன் சகோதரன் செய்ய ஒருவன் கண்டால், அவன் வேண்டுதல்செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு ஜீவனைக் கொடுப்பார்; யாருக்கென்றால், மரணத்துக்கு ஏதுவல்லாத பாவத்தைச் செய்தவர்களுக்கே; மரணத்துக்கு ஏதுவான பாவமுண்டு, அதைக்குறித்து வேண்டுதல்செய்ய நான் சொல்லேன். 17 அநீதியெல்லாம் பாவந்தான்; என்றாலும் மரணத்துக்கு ஏதுவல்லாத பாவமுமுண்டு. 18 தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான். 19 நாம் தேவனால் உண்டாயிருக்கிறோமென்றும், உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறதென்றும் அறிந்திருக்கிறோம். 20 அன்றியும், நாம் சத்தியமுள்ளவரை அறிந்துகொள்வதற்குத் தேவனுடைய குமாரன் வந்து நமக்குப் புத்தியைத் தந்திருக்கிறாரென்றும் அறிவோம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார். 21 பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.

2 யோவான் 1

1 நமக்குள் நிலைநிற்கிறதும் என்றென்றைக்கும் நம்மோடிருப்பதுமாகிய சத்தியத்தினிமித்தம், நான் மாத்திரமல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற யாவரும் சத்தியத்தின்படி நேசித்திருக்கிறவளும், 2 தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கும் அவளுடைய பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது: 3 பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாயிருக்கிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும் சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடுங்கூட, உங்களோடிருப்பதாக. 4 பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே உம்முடைய பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் கண்டு மிகவும் சந்தோஷப்பட்டேன். 5 இப்பொழுதும் அம்மாளே, நாம் ஒருவரிலொருவர் அன்புகூரவேண்டுமென்று, உமக்குப் புதிய கற்பனையாக எழுதாமல், ஆதிமுதல் நமக்கு உண்டாயிருக்கிற கற்பனையாக எழுதி, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன். 6 நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள் ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே. 7 மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான். 8 உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். 9 கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன். 10 ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக் கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள். 11 அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான். 12 உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன். 13 தெரிந்துகொள்ளப்பட்ட உம்முடைய சகோதரியின் பிள்ளைகள் உமக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். ஆமென்.

3 யோவான் 1

1 மூப்பனாகிய நான் சத்தியத்தின்படி நேசிக்கிற பிரியமான காயுவுக்கு எழுதுகிறதாவது: 2 பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன். 3 சகோதரர் வந்து நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன். 4 என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை. 5 பிரியமானவனே, நீ சகோதரருக்கும் அந்நியருக்கும் செய்கிற யாவற்றையும் உண்மையாய்ச் செய்கிறாய். 6 அவர்கள் உன்னுடைய அன்பைக் குறித்துச் சபைக்குமுன்பாகச் சாட்சி சொன்னார்கள்; தேவனுக்கு முன்பாகப் பாத்திரமானபடி அவர்களை நீ வழிவிட்டனுப்பினால் நலமாயிருக்கும். 7 ஏனெனில் அவர்கள் புறஜாதியாரிடத்தில் ஒன்றும் வாங்காமல் அவருடைய நாமத்தினிமித்தம் புறப்பட்டுப்போனார்கள். 8 ஆகையால் நாம் சத்தியத்திற்கு உடன்வேலையாட்களாயிருக்கும்படி அப்படிப்பட்டவர்களைச் சேர்த்துக்கொள்ளக் கடனாளிகளாயிருக்கிறோம். 9 நான் சபைக்கு எழுதினேன்; ஆனாலும் அவர்களில் முதன்மையாயிருக்க விரும்புகிற தியோத்திரேப்பு எங்களை ஏற்றுக்கொள்ளவில்லை. 10 ஆனபடியால், நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிரியைகளை நினைத்துக்கொள்வேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தான் சகோதரரை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறதுமன்றி, ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்குப் புறம்பே தள்ளுகிறான். 11 பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை. 12 தேமேத்திரியு எல்லாராலும் நற்சாட்சிபெற்றதுமல்லாமல், சத்தியத்தாலும் நற்சாட்சிபெற்றவன்; நாங்களும் சாட்சிகொடுக்கிறோம், எங்கள் சாட்சி மெய்யென்று அறிவீர்கள். 13 எழுதவேண்டிய காரியங்கள் அநேகமுண்டு; ஆனால் மையினாலும் இறகினாலும் எழுத எனக்கு மனதில்லை. 14 சீக்கிரமாய் உன்னைக் காணலாமென்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாய்ப் பேசிக்கொள்ளுவோம். உனக்குச் சமாதானம் உண்டாவதாக. சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக.

யூதா 1

1 இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசுகிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது: 2 உங்களுக்கு இரக்கமும் சமாதானமும் அன்பும் பெருகக்கடவது. 3 பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது. 4 ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்கவழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது. 5 நீங்கள் முன்னமே அறிந்திருந்தாலும், நான் உங்களுக்கு நினைப்பூட்ட விரும்புகிறதென்னவெனில், கர்த்தர் தமது ஜனத்தை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணி இரட்சித்து, பின்பு விசுவாசியாதவர்களை அழித்தார். 6 தங்களுடைய ஆதிமேன்மையைக் காத்துக்கொள்ளாமல், தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்களையும், மகாநாளின் நியாயத்தீர்ப்புக்கென்று நித்திய சங்கிலிகளினாலே கட்டி, அந்தகாரத்தில் அடைத்துவைத்திருக்கிறார். 7 அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப்போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். 8 அப்படிப்போலவே, சொப்பனக்காரராகிய இவர்களும் மாம்சத்தை அசுசிப்படுத்திக்கொண்டு, கர்த்தத்துவத்தை அசட்டைபண்ணி, மகத்துவங்களைத் தூஷிக்கிறார்கள். 9 பிரதான தூதனாகிய மிகாவேல் மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக என்று சொன்னான். 10 இவர்கள் தங்களுக்குத் தெரியாதவைகளைத் தூஷிக்கிறார்கள்; புத்தியில்லாத மிருகங்களைப்போலச் சுபாவப்படி தங்களுக்குத் தெரிந்திருக்கிறவைகளாலே தங்களைக் கெடுத்துக்கொள்ளுகிறார்கள். 11 இவர்களுக்கு ஐயோ! இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து, பிலேயாம் கூலிக்காகச்செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி, கோரா எதிர்த்துப்பேசின பாவத்திற்குள்ளாகி, கெட்டுப்போனார்கள். 12 இவர்கள் உங்கள் அன்பின் விருந்துகளில் கறைகளாயிருந்து, பயமின்றிக் கூட விருந்துண்டு, தங்களைத் தாங்களே மேய்த்துக்கொள்ளுகிறார்கள்; இவர்கள் காற்றுகளால் அடியுண்டோடுகிற தண்ணீரற்ற மேகங்களும், இலையுதிர்ந்து கனியற்று இரண்டுதரஞ் செத்து வேரற்றுப்போன மரங்களும், 13 தங்கள் அவமானங்களை நுரைதள்ளுகிற அமளியான கடலலைகளும், மார்க்கந்தப்பி அலைகிற நட்சத்திரங்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுக்காக என்றென்றைக்கும் காரிருளே வைக்கப்பட்டிருக்கிறது. 14 ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், 15 தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூடக் கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான். 16 இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப் பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள். 17 நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள். 18 கடைசிக்காலத்திலே தங்கள் துன்மார்க்கமான இச்சைகளின்படி நடக்கிற பரியாசக்காரர் தோன்றுவார்கள் என்று உங்களுக்குச் சொன்னார்களே. 19 இவர்கள் பிரிந்துபோகிறவர்களும், ஜென்மசுபாவத்தாரும், ஆவியில்லாதவர்களுமாமே. 20 நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்தஆவிக்குள் ஜெபம்பண்ணி, 21 தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள். 22 அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து, 23 மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள். 24 வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களை மாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும், 25 தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.

வெளி 1

1 சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, தேவன் இயேசுகிறிஸ்துவுக்கு ஒப்புவித்ததும், இவர் தம்முடைய தூதனை அனுப்பி, தம்முடைய ஊழியக்காரனாகிய யோவானுக்கு வெளிப்படுத்தினதுமான விசேஷம். 2 இவன் தேவனுடைய வசனத்தைக்குறித்தும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியைக்குறித்தும், தான் கண்ட யாவற்றையும் சாட்சியாக அறிவித்திருக்கிறான். 3 இந்தத் தீர்க்கதரிசன வசனங்களை வாசிக்கிறவனும், கேட்கிறவர்களும், இதில் எழுதியிருக்கிறவைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும் பாக்கியவான்கள், காலம் சமீபமாயிருக்கிறது. 4 யோவான் ஆசியாவிலுள்ள ஏழுசபைகளுக்கும் எழுதுகிறதாவது: இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமானவராலும், அவருடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருக்கிற ஏழு ஆவிகளாலும், 5 உண்மையுள்ள சாட்சியும், மரித்தோரிலிருந்து முதற்பிறந்தவரும், பூமியின் ராஜாக்களுக்கு அதிபதியுமாகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 6 நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக. ஆமென். 7 இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென். 8 இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன் என்று திருவுளம்பற்றுகிறார். 9 உங்கள் சகோதரனும், இயேசுகிறிஸ்துவினிமித்தம் வருகிற உபத்திரவத்திற்கும் அவருடைய ராஜ்யத்திற்கும் அவருடைய பொறுமைக்கும் உங்கள் உடன்பங்காளனுமாயிருக்கிற யோவானாகிய நான் தேவவசனத்தினிமித்தமும், இயேசுகிறிஸ்துவைப்பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன். 10 கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது எனக்குப் பின்னாலே எக்காளசத்தம்போன்ற பெரிதான ஒரு சத்தத்தைக் கேட்டேன். 11 அது: நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். நீ காண்கிறதை ஒரு புஸ்தகத்தில் எழுதி, ஆசியாவிலிருக்கிற எபேசு, சிமிர்னா, பெர்கமு, தியத்தீரா, சர்தை, பிலதெல்பியா, லவோதிக்கேயா என்னும் பட்டணங்களிலுள்ள ஏழு சபைகளுக்கும் அனுப்பு என்று விளம்பினது. 12 அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், 13 அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். 14 அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது; 15 அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம்போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. 16 தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது. 17 நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; 18 மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். 19 நீ கண்டவைகளையும், இருக்கிறவைகளையும், இவைகளுக்குப்பின்பு சம்பவிப்பவைகளையும் எழுது; 20 என் வலதுகரத்தில் நீ கண்ட ஏழு நட்சத்திரங்களின் இரகசியத்தையும், ஏழு பொன் குத்துவிளக்குகளின் இரகசியத்தையும் எழுது; அந்த ஏழு நட்சத்திரங்களும் ஏழு சபைகளின் தூதர்களாம்; நீ கண்ட ஏழு குத்துவிளக்குகளும் ஏழு சபைகளாம்.

வெளி 2

1 எபேசு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: ஏழு நட்சத்திரங்களைத் தம்முடைய வலதுகரத்தில் ஏந்திக்கொண்டு, ஏழு பொன் குத்துவிளக்குகளின் மத்தியிலே உலாவிக்கொண்டிருக்கிறவர் சொல்லுகிறதாவது; 2 உன் கிரியைகளையும், உன் பிரயாசத்தையும், உன் பொறுமையையும், நீ பொல்லாதவர்களைச் சகிக்கக்கூடாமலிருக்கிறதையும், அப்போஸ்தலரல்லாதவர்கள் தங்களை அப்போஸ்தலரென்று சொல்லுகிறதை நீ சோதித்து அவர்களைப் பொய்யரென்று கண்டறிந்ததையும்; 3 நீ சகித்துக்கொண்டிருக்கிறதையும், பொறுமையாயிருக்கிறதையும், என் நாமத்தினிமித்தம் இளைப்படையாமல் பிரயாசப்பட்டதையும் அறிந்திருக்கிறேன். 4 ஆனாலும், நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு. 5 ஆகையால், நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன். 6 நான் வெறுக்கிற நிக்கொலாய் மதஸ்தரின் கிரியைகளை நீயும் வெறுக்கிறாய், இது உன்னிடத்திலுண்டு. 7 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்குத் தேவனுடைய பரதீசின் மத்தியிலிருக்கிற ஜீவவிருட்சத்தின் கனியைப் புசிக்கக்கொடுப்பேன் என்றெழுது. 8 சிமிர்னா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது; 9 உன் கிரியைகளையும், உன் உபத்திரவத்தையும், நீ ஐசுவரியமுள்ளவனாயிருந்தும் உனக்கிருக்கிற தரித்திரத்தையும், தங்களை யூதரென்று சொல்லியும் யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருக்கிறவர்கள் செய்யும் தூஷணத்தையும் அறிந்திருக்கிறேன். 10 நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன். 11 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது. 12 பெர்கமு சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை உடையவர் சொல்லுகிறதாவது; 13 உன் கிரியைகளையும், சாத்தானுடைய சிங்காசனமிருக்கிற இடத்தில் நீ குடியிருக்கிறதையும், நீ என் நாமத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறதையும், சாத்தான் குடிகொண்டிருக்கிற இடத்திலே உங்களுக்குள்ளே எனக்கு உண்மையுள்ள சாட்சியான அந்திப்பா என்பவன் கொல்லப்பட்ட நாட்களிலும் என்னைப் பற்றும் விசுவாசத்தை நீ மறுதலியாமலிருந்ததையும் அறிந்திருக்கிறேன். 14 ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு; விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர் முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனைசெய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு. 15 அப்படியே நிக்கொலாய் மதஸ்தருடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்களும் உன்னிடத்திலுண்டு; அதை நான் வெறுக்கிறேன். 16 நீ மனந்திரும்பு, இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, என் வாயின் பட்டயத்தால் அவர்களோடே யுத்தம்பண்ணுவேன். 17 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது. 18 தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது; 19 உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன். 20 ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய். 21 அவள் மனந்திரும்பும்படியாய் அவளுக்குத் தவணைகொடுத்தேன்; தன் வேசிமார்க்கத்தை விட்டு மனந்திரும்ப அவளுக்கு விருப்பமில்லை. 22 இதோ, நான் அவளைக் கட்டில்கிடையாக்கி, அவளுடனே விபசாரஞ்செய்தவர்கள் தங்களுடைய கிரியைகளைவிட்டு மனந்திரும்பாவிட்டால் அவர்களையும் மிகுந்த உபத்திரவத்திலே தள்ளி, 23 அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன். 24 தியத்தீராவிலே இந்தப் போதகத்தைப் பற்றிக்கொள்ளாமலும், சாத்தானுடைய ஆழங்கள் என்று அவர்கள் சொல்லுகிறார்களே, அந்த ஆழங்களை அறிந்துகொள்ளாமலுமிருக்கிற மற்றவர்களாகிய உங்களுக்கு நான் சொல்லுகிறதாவது; உங்கள்மேல் வேறொரு பாரத்தையும் சுமத்தமாட்டேன். 25 உங்களுக்குள்ளதை நான் வருமளவும் பற்றிக்கொண்டிருங்கள். 26 ஜெயங்கொண்டு முடிவுபரியந்தம் என் கிரியைகளைக் கைக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு, நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகள்மேல் அதிகாரம் கொடுப்பேன். 27 அவன் இருப்புக்கோலால் அவர்களை ஆளுவான்; அவர்கள் மண்பாண்டங்களைப்போல நொறுக்கப்படுவார்கள். 28 விடிவெள்ளி நட்சத்திரத்தையும் அவனுக்குக் கொடுப்பேன். 29 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது.

வெளி 3

1 சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய். 2 நீ விழித்துக்கொண்டு, சாகிறதற்கேதுவாயிருக்கிறவைகளை ஸ்திரப்படுத்து; உன் கிரியைகள் தேவனுக்குமுன் நிறைவுள்ளவைகளாக நான் காணவில்லை. 3 ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவுகூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும்வேளையை அறியாதிருப்பாய். 4 ஆனாலும் தங்கள் வஸ்திரங்களை அசுசிப்படுத்தாத சிலபேர் சர்தையிலும் உனக்குண்டு; அவர்கள் பாத்திரவான்களானபடியால் வெண்வஸ்திரந்தரித்து என்னோடேகூட நடப்பார்கள். 5 ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்படும்; ஜீவபுஸ்தகத்திலிருந்து அவனுடைய நாமத்தை நான் கிறுக்கிப்போடாமல், என் பிதா முன்பாகவும் அவருடைய தூதர் முன்பாகவும் அவன் நாமத்தை அறிக்கையிடுவேன். 6 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது. 7 பிலதெல்பியா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: பரிசுத்தமுள்ளவரும், சத்தியமுள்ளவரும், தாவீதின் திறவுகோலை உடையவரும், ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர் சொல்லுகிறதாவது; 8 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்டபடியினாலே, இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். 9 இதோ, யூதரல்லாதிருந்தும் தங்களை யூதரென்று பொய் சொல்லுகிறவர்களாகிய சாத்தானுடைய கூட்டத்தாரில் சிலரை உனக்குக் கொடுப்பேன்; இதோ, அவர்கள் உன் பாதங்களுக்கு முன்பாக வந்து பணிந்து, நான் உன்மேல் அன்பாயிருக்கிறதை அறிந்துகொள்ளும்படி செய்வேன். 10 என் பொறுமையைக்குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைகாலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். 11 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு. 12 ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் தேவனால் பரலோகத்திலிருந்திறங்கிவருகிற புதிய எருசலேமாகிய என் தேவனுடைய நகரத்தின் நாமத்தையும், என் புதிய நாமத்தையும் அவன்மேல் எழுதுவேன். 13 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது. 14 லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது; 15 உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன்; நீ குளிருமல்ல அனலுமல்ல; நீ குளிராயாவது அனலாயாவது இருந்தால் நலமாயிருக்கும். 16 இப்படி நீ குளிருமின்றி அனலுமின்றி வெதுவெதுப்பாயிருக்கிறபடியினால் உன்னை என் வாயினின்று வாந்திபண்ணிப்போடுவேன். 17 நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்; 18 நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். 19 நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு. 20 இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான். 21 நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடேகூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன். 22 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றெழுது என்றார்.

வெளி 4

1 இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது. 2 உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார். 3 வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அது பார்வைக்கு மரகதம்போல் தோன்றிற்று. 4 அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி, அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன். 5 அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன. 6 அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடலிருந்தது; அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன. 7 முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம் போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன. 8 அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன. 9 மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது, 10 இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து: 11 கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.

வெளி 5

1 அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன். 2 புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரவான் யார் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூறுகிற பலமுள்ள ஒரு தூதனையுங் கண்டேன். 3 வானத்திலாவது, பூமியிலாவது, பூமியின்கீழாவது, ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறக்கவும், அதைப் பார்க்கவும் கூடாதிருந்தது. 4 ஒருவனும் அந்தப் புஸ்தகத்தைத் திறந்து வாசிக்கவும் அதைப் பார்க்கவும் பாத்திரவானாகக் காணப்படாததினால் நான் மிகவும் அழுதேன். 5 அப்பொழுது மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: நீ அழவேண்டாம்; இதோ, யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார் என்றான். 6 அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக்கண்டேன்; அது ஏழு கொம்புகளையும் ஏழு கண்களையும் உடையதாயிருந்தது; அந்தக் கண்கள் பூமியெங்கும் அனுப்பப்படுகிற தேவனுடைய ஏழு ஆவிகளேயாம். 7 அந்த ஆட்டுக்குட்டியானவர் வந்து, சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்தவருடைய வலதுகரத்திலிருந்த புஸ்தகத்தை வாங்கினார். 8 அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து: 9 தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, 10 எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள். 11 பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. 12 அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். 13 அப்பொழுது, வானத்திலும் பூமியிலும் பூமியின்கீழுமிருக்கிற சிருஷ்டிகள் யாவும், சமுத்திரத்திலுள்ளவைகளும், அவற்றுளடங்கிய வஸ்துக்கள் யாவும்: சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் ஸ்தோத்திரமும் கனமும் மகிமையும் வல்லமையும் சதாகாலங்களிலும் உண்டாவதாக என்று சொல்லக்கேட்டேன். 14 அதற்கு நான்கு ஜீவன்களும்: ஆமென் என்று சொல்லின. இருபத்துநான்கு மூப்பர்களும் வணக்கமாய் விழுந்து சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டார்கள்.

வெளி 6

1 ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன். 2 நான் பார்த்தபோது, இதோ, ஒரு வெள்ளைக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் வில்லைப் பிடித்திருந்தான்; அவனுக்கு ஒரு கிரீடங் கொடுக்கப்பட்டது; அவன் ஜெயிக்கிறவனாகவும் ஜெயிப்பவனாகவும் புறப்பட்டான். 3 அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். 4 அப்பொழுது சிவப்பான வேறொரு குதிரை புறப்பட்டது; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு, பூமியிலுள்ளவர்கள் ஒருவரையொருவர் கொலைசெய்யத்தக்கதாகச் சமாதானத்தைப் பூமியிலிருந்தெடுத்துப் போடும்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டது; ஒரு பெரிய பட்டயமும் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. 5 அவர் மூன்றாம் முத்திரையை உடைத்தபோது, மூன்றாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன். நான் பார்த்தபோது, இதோ, ஒரு கறுப்புக்குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவன் ஒரு தராசைத் தன் கையிலே பிடித்திருந்தான். 6 அப்பொழுது, ஒரு பணத்துக்கு ஒருபடி கோதுமையென்றும், ஒரு பணத்துக்கு மூன்றுபடி வாற்கோதுமையென்றும், எண்ணெயையும் திராட்சரசத்தையும் சேதப்படுத்தாதே என்றும், நான்கு ஜீவன்களின் மத்தியிலிருந்து உண்டான சத்தத்தைக் கேட்டேன். 7 அவர் நாலாம் முத்திரையை உடைத்தபோது, நாலாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லுஞ் சத்தத்தைக் கேட்டேன். 8 நான் பார்த்தபோது, இதோ, மங்கின நிறமுள்ள ஒரு குதிரையைக் கண்டேன்; அதின்மேல் ஏறியிருந்தவனுக்கு மரணம் என்று பெயர்; பாதாளம் அவன்பின் சென்றது. பட்டயத்தினாலும், பஞ்சத்தினாலும், சாவினாலும், பூமியின் துஷ்ட மிருகங்களினாலும், பூமியின் காற்பங்கிலுள்ளவர்களைக் கொலைசெய்யும்படியான அதிகாரம் அவைகளுக்குக் கொடுக்கப்பட்டது. 9 அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன். 10 அவர்கள்: பரிசுத்தமும் சத்தியமுமுள்ள ஆண்டவரே, தேவரீர் பூமியின்மேல் குடியிருக்கிறவர்களிடத்தில் எங்கள் இரத்தத்தைக்குறித்து எதுவரைக்கும் நியாயத்தீர்ப்புச்செய்யாமலும் பழிவாங்காமலும் இருப்பீர் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டார்கள். 11 அப்பொழுது அவர்கள் ஒவ்வொருவருக்கும் வெள்ளை அங்கிகள் கொடுக்கப்பட்டது; அன்றியும், அவர்கள் தங்களைப்போலக் கொலைசெய்யப்படப்போகிறவர்களாகிய தங்கள் உடன்பணிவிடைக்காரரும் தங்கள் சகோதரருமானவர்களின் தொகை நிறைவாகுமளவும் இன்னுங்கொஞ்சக்காலம் இளைப்பாறவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லப்பட்டது. 12 அவர் ஆறாம் முத்திரையை உடைக்கக்கண்டேன்; இதோ, பூமி மிகவும் அதிர்ந்தது; சூரியன் கறுப்புக் கம்பளியைப்போலக் கறுத்தது; சந்திரன் இரத்தம் போலாயிற்று. 13 அத்திமரமானது பெருங்காற்றினால் அசைக்கப்படும்போது, அதின் காய்கள் உதிருகிறதுபோல, வானத்தின் நட்சத்திரங்களும் பூமியிலே விழுந்தது. 14 வானமும் சுருட்டப்பட்ட புஸ்தகம் போலாகி விலகிப்போயிற்று; மலைகள் தீவுகள் யாவும் தங்கள் இடங்களைவிட்டு அகன்றுபோயின. 15 பூமியின் ராஜாக்களும், பெரியோர்களும், ஐசுவரியவான்களும், சேனைத்தலைவர்களும், பலவான்களும், அடிமைகள் யாவரும், சுயாதீனர் யாவரும், பர்வதங்களின் குகைகளிலும் கன்மலைகளிலும் ஒளித்துக்கொண்டு, 16 பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்; 17 அவருடைய கோபாக்கினையின் மகாநாள் வந்துவிட்டது, யார் நிலைநிற்கக்கூடும் என்றார்கள்.

வெளி 7

1 இவைகளுக்குப்பின்பு, பூமியின் நான்கு திசைகளிலும் நான்கு தூதர்கள் நின்று, பூமியின்மேலாவது, சமுத்திரத்தின்மேலாவது, ஒரு மரத்தின்மேலாவது, காற்று அடியாதபடிக்கு, பூமியின் நான்கு காற்றுகளையும் பிடித்திருக்கக்கண்டேன். 2 ஜீவனுள்ள தேவனுடைய முத்திரைக் கோலையுடைய வேறொரு தூதன் சூரியன் உதிக்குந்திசையிலிருந்து ஏறிவரக்கண்டேன்; அவன், பூமியையும் சமுத்திரத்தையும் சேதப்படுத்துகிறதற்கு அதிகாரம் பெற்ற அந்த நான்கு தூதரையும் நோக்கி: 3 நாம் நமது தேவனுடைய ஊழியக்காரரின் நெற்றிகளில் முத்திரைபோட்டுத் தீருமளவும் பூமியையும் சமுத்திரத்தையும் மரங்களையும் சேதப்படுத்தாதிருங்கள் என்று மகா சத்தமிட்டுக் கூப்பிட்டான். 4 முத்திரைபோடப்பட்டவர்களின் தொகையைச் சொல்லக்கேட்டேன்; இஸ்ரவேல் புத்திரருடைய சகல கோத்திரங்களிலும் முத்திரைபோடப்பட்டவர்கள் இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேர். 5 யூதா கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். ரூபன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். காத் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். 6 ஆசேர் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். நப்தலி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். மனாசே கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். 7 சிமியோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். லேவி கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். இசக்கார் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். 8 செபுலோன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். யோசேப்பு கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். பென்யமீன் கோத்திரத்தில் முத்திரைபோடப்பட்டவர்கள் பன்னீராயிரம். 9 இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன். 10 அவர்கள் மகா சத்தமிட்டு: இரட்சிப்பின் மகிமை சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிற எங்கள் தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் உண்டாவதாக என்று ஆர்ப்பரித்தார்கள். 11 தூதர்கள் யாவரும் சிங்காசனத்தையும் மூப்பர்களையும் நான்கு ஜீவன்களையும் சூழநின்று, சிங்காசனத்திற்குமுன்பாக முகங்குப்புற விழுந்து, தேவனைத் தொழுதுகொண்டு: 12 ஆமென், எங்கள் தேவனுக்குத் துதியும் மகிமையும் ஞானமும் ஸ்தோத்திரமும் கனமும் வல்லமையும் பெலனும் சதாகாலங்களிலும் உண்டாவதாக; ஆமென், என்றார்கள். 13 அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். 14 அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள். 15 ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார். 16 இவர்கள் இனி பசியடைவதுமில்லை, இனி தாகமடைவதுமில்லை; வெயிலாவது உஷ்ணமாவது இவர்கள்மேல் படுவதுமில்லை. 17 சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான்.

வெளி 8

1 அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று. 2 பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன்; அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது. 3 வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. 4 அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று. 5 பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின. 6 அப்பொழுது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள். 7 முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று. 8 இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது; அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று. 9 சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று. 10 மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீரூற்றுகளின்மேலும் விழுந்தது. 11 அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள். 12 நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று. 13 பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன்; அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காளசத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ, (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.

வெளி 9

1 ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன்; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. 2 அவன் பாதாளக்குழியைத் திறந்தான்; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகைஎழும்பிற்று; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது. 3 அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது. 4 பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல், தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது. 5 மேலும் அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்படாமல், ஐந்துமாதமளவும் அவர்களை வேதனைப்படுத்தும்படிக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது; அவைகள் செய்யும் வேதனை தேளானது மனுஷரைக் கொட்டும்போது உண்டாகும் வேதனையைப்போலிருக்கும். 6 அந்நாட்களில் மனுஷர்கள் சாவைத்தேடியும் அதைக் காணாதிருப்பார்கள், சாகவேண்டுமென்று ஆசைப்படுவார்கள், சாவோ அவர்களுக்கு விலகி ஓடிப்போம். 7 அந்த வெட்டுக்கிளிகளின் உருவம் யுத்தத்திற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட குதிரைகளுக்கு ஒப்பாயிருந்தது; அவைகளுடைய தலைகளின்மேல் பொன்மயமான கிரீடம் போன்றவைகளிருந்தன; அவைகளின் முகங்கள் மனுஷருடைய முகங்கள்போலிருந்தன. 8 அவைகளுடைய கூந்தல் ஸ்திரீகளுடைய கூந்தல்போலிருந்தது; அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போலிருந்தன. 9 இருப்புக் கவசங்களைப்போல மார்க்கவசங்கள் அவைகளுக்கு இருந்தன; அவைகளுடைய சிறகுகளின் இரைச்சல் யுத்தத்திற்கு ஓடுகிற அநேகங் குதிரைகள் பூண்ட இரதங்களின் இரைச்சலுக்கு ஒப்பாயிருந்தன. 10 அவைகள் தேள்களின் வால்களுக்கு ஒப்பான வால்களையும், அந்த வால்களில் கொடுக்குகளையும் உடையவைகளாயிருந்தன; அவைகள் ஐந்து மாதமளவும் மனுஷரைச் சேதப்படுத்துவதற்கு அதிகாரம் உடையவைகளாயிருந்தன. 11 அவைகளுக்கு ஒரு ராஜன் உண்டு, அவன் பாதாளத்தின் தூதன்; எபிரெயு பாஷையிலே அபெத்தோன் என்றும், கிரேக்கு பாஷையிலே அப்பொல்லியோன் என்றும் அவனுக்குப் பெயர். 12 முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று; இவைகளுக்குப்பின்பு இன்னும் இரண்டு ஆபத்துகள், இதோ, வருகிறது. 13 ஆறாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தந்தோன்றி, 14 எக்காளத்தைப் பிடித்திருந்த ஆறாம் தூதனை நோக்கி: ஐபிராத்தென்னும் பெரிய நதியண்டையிலே கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்துவிடு என்று சொல்லக்கேட்டேன். 15 அப்பொழுது மனுஷரில் மூன்றிலொருபங்கைக் கொல்லும்படிக்கு ஒருமணிநேரத்திற்கும், ஒரு நாளுக்கும், ஒரு மாதத்திற்கும், ஒரு வருஷத்திற்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் அவிழ்த்துவிடப்பட்டார்கள். 16 குதிரைச்சேனைகளாகிய இராணுவங்களின் தொகை இருபது கோடியாயிருந்தது; அவைகளின் தொகையைச் சொல்லக்கேட்டேன். 17 குதிரைகளையும் அவைகளின்மேல் ஏறியிருந்தவர்களையும் நான் தரிசனத்தில் கண்டவிதமாவது; அவர்கள் அக்கினிநிறமும் நீலநிறமும் கந்தகநிறமுமான மார்க்கவசங்களையுடையவர்களாயிருந்தார்கள்; குதிரைகளுடைய தலைகள் சிங்கங்களின் தலைகளைப்போலிருந்தன; அவைகளுடைய வாய்களிலிருந்து அக்கினியும் புகையும் கந்தகமும் புறப்பட்டன. 18 அவைகளுடைய வாய்களிலிருந்து புறப்பட்ட அக்கினி புகை கந்தகம் என்னும் இம்மூன்றினாலும் மனுஷரில் மூன்றிலொருபங்கு கொல்லப்பட்டார்கள். 19 அந்தக் குதிரைகளின் வல்லமை அவைகளுடைய வாயிலேயும் வால்களிலேயும் இருக்கிறது; அவைகளுடைய வால்கள் பாம்புகளுக்கு ஒப்பானவைகளாயும், தலைகளுள்ளவைகளாயுமிருக்கிறது, அவைகளாலே சேதப்படுத்துகிறது. 20 அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும் வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு மனந்திரும்பவுமில்லை; 21 தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை.

வெளி 10

1 பின்பு, பலமுள்ள வேறொரு தூதன் வானத்திலிருந்திறங்கி வரக்கண்டேன்; மேகம் அவனைச் சூழ்ந்திருந்தது, அவனுடைய சிரசின்மேல் வானவில்லிருந்தது, அவனுடைய முகம் சூரியனைப்போலவும், அவனுடைய கால்கள் அக்கினி ஸ்தம்பங்களைப்போலவும் இருந்தது. 2 திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து, 3 சிங்கம் கெர்ச்சிக்கிறதுபோல மகா சத்தமாய் ஆர்ப்பரித்தான்; அவன் ஆர்ப்பரித்தபோது ஏழு இடிகளும் சத்தமிட்டு முழங்கின. 4 அவ்வேழு இடிகளும் தங்கள் சத்தங்களை முழங்கினபோது, நான் எழுதவேண்டுமென்றிருந்தேன். அப்பொழுது: ஏழு இடிமுழக்கங்கள் சொன்னவைகளை நீ எழுதாமல் முத்திரைபோடு என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன். 5 சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி: 6 இனி காலம் செல்லாது; ஆனாலும் தேவன் தம்முடைய ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகளுக்குச் சுவிசேஷமாய் அறிவித்தபடி, ஏழாம் தூதனுடைய சத்தத்தின் நாட்களிலே அவன் எக்காளம் ஊதப்போகிறபோது தேவரகசியம் நிறைவேறும் என்று, 7 வானத்தையும் அதிலுள்ளவைகளையும், பூமியையும் அதிலுள்ளவைகளையும், சமுத்திரத்தையும் அதிலுள்ளவைகளையும் சிருஷ்டித்தவரும், சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருமானவர்மேல் ஆணையிட்டுச் சொன்னான். 8 நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல, 9 நான் தூதனிடத்தில் போய்: அந்தச் சிறு புஸ்தகத்தை எனக்குத் தாரும் என்றேன். அதற்கு அவன்: நீ இதை வாங்கிப் புசி; இது உன் வயிற்றுக்குக் கசப்பாயிருக்கும், ஆகிலும் உன் வாய்க்கு இது தேனைப்போல மதுரமாயிருக்கும் என்றான். 10 நான் அந்தச் சிறு புஸ்தகத்தைத் தூதனுடைய கையிலிருந்து வாங்கி, அதைப் புசித்தேன்; என் வாய்க்கு அது தேனைப்போல மதுரமாயிருந்தது; நான் அதைப் புசித்தவுடனே என் வயிறு கசப்பாயிற்று. 11 அப்பொழுது அவன் என்னை நோக்கி: நீ மறுபடியும் அநேக ஜனங்களையும், ஜாதிகளையும், பாஷைக்காரரையும், ராஜாக்களையுங்குறித்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லவேண்டும் என்றான்.

வெளி 11

1 பின்பு கைக்கோலுக்கு ஒப்பான ஒரு அளவுகோல் என்னிடத்தில் கொடுக்கப்பட்டது. அப்பொழுது தேவதூதன் நின்று, என்னை நோக்கி: நீ எழுந்து, தேவனுடைய ஆலயத்தையும், பலிபீடத்தையும், அதில் தொழுதுகொள்ளுகிறவர்களையும் அளந்துபார். 2 ஆலயத்திற்குப் புறம்பே இருக்கிற பிராகாரம் புறஜாதியாருக்குக் கொடுக்கப்பட்டபடியால் அதை அளவாமல் புறம்பாக்கிப்போடு; பரிசுத்த நகரத்தை அவர்கள் நாற்பத்திரண்டு மாதமளவும் மிதிப்பார்கள். 3 என்னுடைய இரண்டு சாட்சிகளும் இரட்டு வஸ்திரமுடுத்திக்கொண்டிருக்கிறவர்களாய், ஆயிரத்திருநூற்றறுபது நாளளவும் தீர்க்கதரிசனஞ்சொல்லும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுப்பேன். 4 பூலோகத்தின் ஆண்டவருக்குமுன்பாக நிற்கிற இரண்டு ஒலிவமரங்களும் இரண்டு விளக்குத்தண்டுகளும் இவர்களே. 5 ஒருவன் அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருந்தால், அவர்களுடைய வாயிலிருந்து அக்கினி புறப்பட்டு, அவர்களுடைய சத்துருக்களைப் பட்சிக்கும்; அவர்களைச் சேதப்படுத்த மனதாயிருக்கிறவன் எவனோ அவன் அப்படியே கொல்லப்படவேண்டும். 6 அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லிவருகிற நாட்களிலே மழைபெய்யாதபடிக்கு வானத்தை அடைக்க அவர்களுக்கு அதிகாரமுண்டு; அவர்கள் தண்ணீர்களை இரத்தமாக மாற்றவும், தங்களுக்கு வேண்டும்போதெல்லாம் பூமியைச் சகலவித வாதைகளாலும் வாதிக்கவும் அவர்களுக்கு அதிகாரமுண்டு. 7 அவர்கள் தங்கள் சாட்சியைச் சொல்லி முடித்திருக்கும்போது, பாதாளத்திலிருந்தேறுகிற மிருகம் அவர்களோடே யுத்தம்பண்ணி, அவர்களை ஜெயித்து, அவர்களைக் கொன்றுபோடும். 8 அவர்களுடைய உடல்கள் மகா நகரத்தின் விசாலமான வீதியிலே கிடக்கும். அந்த நகரம் சோதோம் என்றும் எகிப்து என்றும் ஞானார்த்தமாய்ச் சொல்லப்படும்; அதிலே நம்முடைய கர்த்தரும் சிலுவையிலே அறையப்பட்டார். 9 ஜனங்களிலும், கோத்திரங்களிலும், பாஷைக்காரரிலும், ஜாதிகளிலுமுள்ளவர்கள் அவர்களுடைய உடல்களை மூன்றரை நாள்வரைக்கும் பார்ப்பார்கள், அவர்களுடைய உடல்களைக் கல்லறைகளில் வைக்கவொட்டார்கள். 10 அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் பூமியின் குடிகளை வேதனைப்படுத்தினபடியால் அவர்கள் நிமித்தம் பூமியில் குடியிருக்கிறவர்கள் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து, ஒருவருக்கொருவர் வெகுமதிகளை அனுப்புவார்கள். 11 மூன்றரை நாளைக்குப்பின்பு தேவனிடத்திலிருந்து ஜீவஆவி அவர்களுக்குள் பிரவேசித்தது, அப்பொழுது அவர்கள் காலூன்றி நின்றார்கள்; அவர்களைப் பார்த்தவர்களுக்கு மிகுந்த பயமுண்டாயிற்று. 12 இங்கே ஏறிவாருங்கள் என்று வானத்திலிருந்து தங்களுக்கு உண்டான பெரிய சத்தத்தை அவர்கள் கேட்டு, மேகத்தில் ஏறி வானத்திற்குப் போனார்கள்; அவர்களுடைய சத்துருக்கள் அவர்களைப் பார்த்தார்கள். 13 அந்நேரத்திலே பூமி மிகவும் அதிர்ந்தது, உடனே அந்த நகரத்தில் பத்திலொருபங்கு இடிந்து விழுந்தது; மனுஷரில் ஏழாயிரம்பேர் பூமியதிர்ச்சியினால் அழிந்தார்கள்; மீதியானவர்கள் பயமடைந்து பரலோகத்தின் தேவனை மகிமைப்படுத்தினார்கள். 14 இரண்டாம் ஆபத்து கடந்துபோயிற்று; இதோ, மூன்றாம் ஆபத்து சீக்கிரமாய் வருகிறது. 15 ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின. 16 அப்பொழுது தேவனுக்கு முன்பாகத் தங்கள் சிங்காசனங்கள்மேல் உட்கார்ந்திருந்த இருபத்துநான்கு மூப்பர்களும் முகங்குப்புற விழுந்து: 17 இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய தேவனே, உம்மை ஸ்தோத்திரிக்கிறோம்; தேவரீர் உமது மகா வல்லமையைக்கொண்டு ராஜ்யபாரம்பண்ணுகிறீர். 18 ஜாதிகள் கோபித்தார்கள், அப்பொழுது உம்முடைய கோபம் மூண்டது; மரித்தோர் நியாயத்தீர்ப்படைகிறதற்கும், தீர்க்கதரிசிகளாகிய உம்முடைய ஊழியக்காரருக்கும் பரிசுத்தவான்களுக்கும் உமது நாமத்தின்மேல் பயபக்தியாயிருந்த சிறியோர் பெரியோருக்கும் பலனளிக்கிறதற்கும், பூமியைக் கெடுத்தவர்களைக் கெடுக்கிறதற்கும், காலம் வந்தது என்று சொல்லி, தேவனைத் தொழுதுகொண்டார்கள். 19 அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது; அப்பொழுது மின்னல்களும், சத்தங்களும், இடிமுழக்கங்களும், பூமியதிர்ச்சியும், பெருங்கல்மழையும் உண்டாயின.

வெளி 12

1 அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு ஸ்திரீ சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் சிரசின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன. 2 அவள் கர்ப்பவதியாயிருந்து, பிரசவவேதனையடைந்து, பிள்ளைபெறும்படி வருத்தப்பட்டு அலறினாள். 3 அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு முடிகளையுமுடைய சிவப்பான பெரிய வலுசர்ப்பமிருந்தது. 4 அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளிற்று; பிரசவவேதனைப்படுகிற அந்த ஸ்திரீ பிள்ளை பெற்றவுடனே, அவளுடைய பிள்ளையைப் பட்சித்துப்போடும்படிக்கு அந்த வலுசர்ப்பம் அவளுக்கு முன்பாக நின்றது. 5 சகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது. 6 ஸ்திரீயானவள் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள்; அங்கே ஆயிரத்திருநூற்றறுபதுநாளளவும் அவளைப் போஷிப்பதற்காகத் தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அவளுக்கு உண்டாயிருந்தது. 7 வானத்திலே யுத்தமுண்டாயிற்று; மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் வலுசர்ப்பத்தோடே யுத்தம்பண்ணினார்கள்; வலுசர்ப்பமும் அதைச்சேர்ந்த தூதரும் யுத்தம்பண்ணியும் ஜெயங்கொள்ளவில்லை. 8 வானத்தில் அவர்கள் இருந்த இடமும் காணப்படாமற்போயிற்று. 9 உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். 10 அப்பொழுது வானத்திலே ஒரு பெரிய சத்தமுண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ் சுமத்தும்பொருட்டு அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தாழத் தள்ளப்பட்டுப்போனான். 11 மரணம் நேரிடுகிறதாயிருந்தாலும் அதற்குத் தப்பும்படி தங்கள் ஜீவனையும் பாராமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்கள் சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள். 12 ஆகையால் பரலோகங்களே! அவைகளில் வாசமாயிருக்கிறவர்களே! களிகூருங்கள். பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்லக்கேட்டேன். 13 வலுசர்ப்பமானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண்பிள்ளையைப்பெற்ற ஸ்திரீயைத் துன்பப்படுத்தினது. 14 ஸ்திரீயானவள் அந்தப் பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாய் வனாந்தரத்திலுள்ள தன் இடத்திற்குப் பறந்துபோகும்படி பெருங்கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது. 15 அப்பொழுது அந்த ஸ்திரீயை வெள்ளங்கொண்டுபோகும்படிக்குப் பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற வெள்ளத்தை அவளுக்குப் பின்னாக ஊற்றிவிட்டது. 16 பூமியானது ஸ்திரீக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, வலுசர்ப்பம் தன் வாயிலிருந்து ஊற்றின வெள்ளத்தை விழுங்கினது. 17 அப்பொழுது வலுசர்ப்பமானது ஸ்திரீயின்மேல் கோபங்கொண்டு, தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய சந்ததியான மற்றவர்களுடனே யுத்தம்பண்ணப்போயிற்று.

வெளி 13

1 பின்பு நான் கடற்கரை மணலின்மேல் நின்றேன். அப்பொழுது சமுத்திரத்திலிருந்து ஒரு மிருகம் எழும்பிவரக் கண்டேன்; அதற்கு ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் இருந்தன; அதின் கொம்புகளின்மேல் பத்து முடிகளும், அதின் தலைகளின்மேல் தூஷணமான நாமமும் இருந்தன. 2 நான் கண்ட மிருகம் சிறுத்தையைப்போலிருந்தது; அதின் கால்கள் கரடியின் கால்களைப்போலவும், அதின் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன; வலுசர்ப்பமானது தன் பலத்தையும் தன் சிங்காசனத்தையும் மிகுந்த அதிகாரத்தையும் அதற்குக் கொடுத்தது. 3 அதின் தலைகளிலொன்று சாவுக்கேதுவாய்க் காயப்பட்டிருக்கக் கண்டேன்; ஆனாலும் சாவுக்கேதுவான அந்தக் காயம் சொஸ்தமாக்கப்பட்டது. பூமியிலுள்ள யாவரும் ஆச்சரியத்தோடே அந்த மிருகத்தைப் பின்பற்றி, 4 அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள். 5 பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; அல்லாமலும், நாற்பத்திரண்டு மாதம் யுத்தம்பண்ண அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது. 6 அது தேவனைத் தூஷிக்கும்படி தன் வாயைத் திறந்து, அவருடைய நாமத்தையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாசமாயிருக்கிறவர்களையும் தூஷித்தது. 7 மேலும், பரிசுத்தவான்களோடே யுத்தம்பண்ணி அவர்களை ஜெயிக்கும்படிக்கு அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டதுமல்லாமல், ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும் பாஷைக்காரர்மேலும் ஜாதிகள்மேலும் அதற்கு அதிகாரங்கொடுக்கப்பட்டது. 8 உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள். 9 காதுள்ளவனெவனோ அவன் கேட்கக்கடவன். 10 சிறைப்படுத்திக்கொண்டு போகிறவன் சிறைப்பட்டுப்போவான்; பட்டயத்தினாலே கொல்லுகிறவன் பட்டயத்தினாலே கொல்லப்படவேண்டும். பரிசுத்தவான்களுடைய பொறுமையும் விசுவாசமும் இதிலே விளங்கும். 11 பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஒரு ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது. 12 அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச் சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது. 13 அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து, 14 மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று. 15 மேலும் அம்மிருகத்தின் சொரூபம் பேசத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்தை வணங்காத யாவரையும் கொலைசெய்யத்தக்கதாகவும், மிருகத்தின் சொரூபத்திற்கு ஆவியைக் கொடுக்கும்படி அதற்குச் சத்துவங்கொடுக்கப்பட்டது. 16 அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், 17 அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. 18 இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷனுடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.

வெளி 14

1 பின்பு நான் பார்த்தபோது, இதோ, சீயோன் மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரையும், அவரோடேகூட அவருடைய பிதாவின் நாமம் தங்கள் நெற்றிகளில் எழுதப்பட்டிருந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரையும் நிற்கக்கண்டேன். 2 அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது. 3 அவர்கள் சிங்காசனத்திற்கு முன்பாகவும், நான்கு ஜீவன்களுக்கு முன்பாகவும், மூப்பர்களுக்கு முன்பாகவும் புதுப்பாட்டைப் பாடினார்கள்; அந்தப் பாட்டு பூமியிலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட இலட்சத்து நாற்பத்துநாலாயிரம் பேரேயல்லாமல் வேறொருவரும் கற்றுக்கொள்ளக் கூடாதிருந்தது. 4 ஸ்திரீகளால் தங்களைக் கறைப்படுத்தாதவர்கள் இவர்களே; கற்புள்ளவர்கள் இவர்களே; ஆட்டுக்குட்டியானவர் எங்கே போனாலும் அவரைப் பின்பற்றுகிறவர்கள் இவர்களே; இவர்கள் மனுஷரிலிருந்து தேவனுக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் முதற்பலனாக மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள். 5 இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள். 6 பின்பு, வேறொரு தூதன் வானத்தின் மத்தியிலே பறக்கக்கண்டேன்; அவன் பூமியில் வாசம்பண்ணுகிற சகல ஜாதிகளுக்கும், கோத்திரத்தாருக்கும், பாஷைக்காரருக்கும், ஜனக்கூட்டத்தாருக்கும் அறிவிக்கத்தக்கதாக நித்திய சுவிசேஷத்தை உடையவனாயிருந்து, 7 மிகுந்த சத்தமிட்டு: தேவனுக்குப் பயந்து, அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் வேளை வந்தது; வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் நீரூற்றுகளையும் உண்டாக்கினவரையே தொழுதுகொள்ளுங்கள் என்று கூறினான். 8 வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக் கொடுத்தாளே! என்றான். 9 அவர்களுக்குப் பின்னே மூன்றாம் தூதன் வந்து, மிகுந்த சத்தமிட்டு: மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்கித் தன் நெற்றியிலாவது தன் கையிலாவது அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிறவனெவனோ, 10 அவன் தேவனுடைய கோபாக்கினையாகிய பாத்திரத்திலே கலப்பில்லாமல் வார்க்கப்பட்ட அவருடைய உக்கிரமாகிய மதுவைக் குடித்து, பரிசுத்த தூதர்களுக்குமுன்பாகவும், ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாகவும் அக்கினியினாலும் கந்தகத்தினாலும் வாதிக்கப்படுவான். 11 அவர்களுடைய வாதையின் புகை சதாகாலங்களிலும் எழும்பும்; மிருகத்தையும் அதின் சொரூபத்தையும் வணங்குகிறவர்களுக்கும், அதினுடைய நாமத்தின் முத்திரையைத் தரித்துக்கொள்ளுகிற எவனுக்கும் இரவும் பகலும் இளைப்பாறுதலிராது. 12 தேவனுடைய கற்பனைகளையும் இயேசுவின் மேலுள்ள விசுவாசத்தையும் காத்துக்கொள்ளுகிறவர்களாகிய பரிசுத்தவான்களுடைய பொறுமை இதிலே விளங்கும் என்று கூறினான். 13 பின்பு, பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது: கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இதுமுதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்; ஆவியானவரும் ஆம் என்று திருவுளம்பற்றுகிறார் என்று சொல்லிற்று. 14 பின்பு நான் பார்த்தபோது, இதோ, வெண்மையான மேகத்தையும், அந்த மேகத்தின்மேல் மனுஷகுமாரனுக்கொப்பானவராய்த் தமது சிரசின்மேல் பொற்கிரீடத்தையும் தமது கையிலே கருக்குள்ள அரிவாளையுமுடைய ஒருவர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டேன். 15 அப்பொழுது வேறொரு தூதன் தேவாலயத்திலிருந்து புறப்பட்டு, மேகத்தின்மேல் உட்கார்ந்திருக்கிறவரை நோக்கி: பூமியின் பயிர் முதிர்ந்தது, அறுக்கிறதற்குக் காலம் வந்தது, ஆகையால் உம்முடைய அரிவாளை நீட்டி அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொன்னான். 16 அப்பொழுது மேகத்தின்மேல் உட்கார்ந்தவர் தமது அரிவாளைப் பூமியின்மேல் நீட்டினார், பூமியின் விளைவு அறுப்புண்டது. 17 பின்பு வேறொரு தூதனும் கருக்குள்ள அரிவாளைப் பிடித்துக்கொண்டு பரலோகத்திலுள்ள தேவாலயத்திலிருந்து புறப்பட்டுவந்தான். 18 அக்கினியின்மேல் அதிகாரமுள்ள வேறொரு தூதனும் பலிபீடத்திலிருந்து புறப்பட்டுவந்து, கருக்குள்ள அரிவாளைப் பிடித்திருக்கிறவனை நோக்கி: பூமியின் திராட்சப்பழங்கள் பழுத்திருக்கிறது, கருக்குள்ள உமது அரிவாளை நீட்டி, அதின் குலைகளை அறுத்துவிடும் என்று மிகுந்த சத்தத்தோடே சொன்னான். 19 அப்பொழுது அந்தத் தூதன் தன் அரிவாளைப் பூமியின்மேலே நீட்டி, பூமியின் திராட்சப்பழங்களை அறுத்து, தேவனுடைய கோபாக்கினையென்னும் பெரிய ஆலையிலே போட்டான். 20 நகரத்திற்குப் புறம்பேயுள்ள அந்த ஆலையிலே அது மிதிக்கப்பட்டது; அந்த ஆலையிலிருந்து ஆயிரத்தறுநூறு ஸ்தாதி தூரத்திற்கு இரத்தம் புறப்பட்டுக் குதிரைகளின் கடிவாளங்கள்மட்டும் பெருகிவந்தது.

வெளி 15

1 பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதரைக் கண்டேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிகிறது. 2 அன்றியும், அக்கினிகலந்த கண்ணாடிக் கடல்போன்ற ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் சொரூபத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் நாமத்தின் இலக்கத்திற்கும் உள்ளாகாமல் ஜெயங்கொண்டவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் கண்டேன். 3 அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள். 4 கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள். 5 இவைகளுக்குப்பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய ஆலயம் திறக்கப்பட்டது; 6 அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அவ்வேழு தூதர்களும் சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரந்தரித்து, மார்பருகே பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள். 7 அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிற தேவனுடைய கோபாக்கினையால் நிறைந்த பொற்கலசங்கள் ஏழையும் அந்த ஏழு தூதர்களுக்குங் கொடுத்தது. 8 அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவாலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் பிரவேசிக்கக் கூடாதிருந்தது.

வெளி 16

1 அப்பொழுது தேவாலயத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தம் அந்த ஏழு தூதருடனே: நீங்கள் போய்த் தேவனுடைய கோபகலசங்களைப் பூமியின்மேல் ஊற்றுங்கள் என்று சொல்லக்கேட்டேன். 2 முதலாம் தூதன் போய், தன் கலசத்திலுள்ளதைப் பூமியின்மேல் ஊற்றினான்; உடனே மிருகத்தின் முத்திரையைத் தரித்தவர்களும் அதின் சொரூபத்தை வணங்குகிறவர்களுமாகிய மனுஷர்களுக்குப் பொல்லாத கொடிய புண்ணுண்டாயிற்று. 3 இரண்டாம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சமுத்திரத்திலே ஊற்றினான்; உடனே அது செத்தவனுடைய இரத்தம் போலாயிற்று; சமுத்திரத்திலுள்ள பிராணிகள் யாவும் மாண்டுபோயின. 4 மூன்றாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆறுகளிலும், நீரூற்றுகளிலும் ஊற்றினான்; உடனே அவைகள் இரத்தமாயின. 5 அப்பொழுது தண்ணீர்களின் தூதன்: இருக்கிறவரும் இருந்தவரும் பரிசுத்தருமாகிய தேவரீர் இப்படி நியாயந்தீர்க்க நீதியுள்ளவராயிருக்கிறீர். 6 அவர்கள் பரிசுத்தவான்களுடைய இரத்தத்தையும் தீர்க்கதரிசிகளுடைய இரத்தத்தையும் சிந்தினபடியினால், இரத்தத்தையே அவர்களுக்குக் குடிக்கக்கொடுத்தீர்; அதற்குப் பாத்திரராயிருக்கிறார்கள் என்று சொல்லக்கேட்டேன். 7 பலிபீடத்திலிருந்து வேறொருவன்: ஆம், சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள் என்று சொல்லக்கேட்டேன். 8 நான்காம் தூதன் தன் கலசத்திலுள்ளதைச் சூரியன்மேல் ஊற்றினான்; தீயினால் மனுஷரைத் தகிக்கும்படி அதற்கு அதிகாரங் கொடுக்கப்பட்டது. 9 அப்பொழுது மனுஷர்கள் மிகுந்த உஷ்ணத்தினாலே தகிக்கப்பட்டு, இந்த வாதைகளைச் செய்ய அதிகாரமுள்ள தேவனுடைய நாமத்தைத் தூஷித்தார்களேயல்லாமல், அவரை மகிமைப்படுத்த மனந்திரும்பவில்லை. 10 ஐந்தாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை மிருகத்தினுடைய சிங்காசனத்தின்மேல் ஊற்றினான்; அப்பொழுது அதின் ராஜ்யம் இருளடைந்தது; அவர்கள் வருத்தத்தினாலே தங்கள் நாவுகளைக் கடித்துக்கொண்டு, 11 தங்கள் வருத்தங்களாலும், தங்கள் புண்களாலும், பரலோகத்தின் தேவனைத் தூஷித்தார்களேயல்லாமல், தங்கள் கிரியைகளை விட்டு மனந்திரும்பவில்லை. 12 ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐபிராத் என்னும் பெரிய நதியின்மேல் ஊற்றினான்; அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்துவரும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று. 13 அப்பொழுது, வலுசர்ப்பத்தின் வாயிலும் மிருகத்தின் வாயிலும் கள்ளத்தீர்க்கதரிசியின் வாயிலுமிருந்து தவளைகளுக்கு ஒப்பான மூன்று அசுத்த ஆவிகள் புறப்பட்டுவரக் கண்டேன். 14 அவைகள் அற்புதங்களைச் செய்கிற பிசாசுகளின் ஆவிகள்; அவைகள் பூலோகமெங்குமுள்ள ராஜாக்களைச் சர்வவல்லமையுள்ள தேவனுடைய மகாநாளில் நடக்கும் யுத்தத்திற்குக் கூட்டிச்சேர்க்கும்படிக்குப் புறப்பட்டுப்போகிறது. 15 இதோ, திருடனைப்போல் வருகிறேன். தன் மானம் காணப்படத்தக்கதாக நிர்வாணமாய் நடவாதபடிக்கு விழித்துக்கொண்டு, தன் வஸ்திரங்களைக் காத்துக்கொள்ளுகிறவன் பாக்கியவான். 16 அப்பொழுது எபிரெயு பாஷையிலே அர்மகெதோன் என்னப்பட்ட இடத்திலே அவர்களைக் கூட்டிச் சேர்த்தான். 17 ஏழாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஆகாயத்தில் ஊற்றினான்; அப்பொழுது பரலோகத்தின் ஆலயத்திலுள்ள சிங்காசனத்திலிருந்து: ஆயிற்று என்று சொல்லிய பெருஞ்சத்தம் பிறந்தது. 18 சத்தங்களும் இடிமுழக்கங்களும் மின்னல்களும் உண்டாயின; பூமி மிகவும் அதிர்ந்தது, பூமியின்மேல் மனுஷர்கள் உண்டான நாள்முதற்கொண்டு அப்படிப்பட்ட பெரிய அதிர்ச்சியுண்டானதில்லை. 19 அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்குத் தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது. 20 தீவுகள் யாவும் அகன்றுபோயின; பர்வதங்கள் காணப்படாமற்போயின. 21 தாலந்து நிறையான பெரிய கல்மழையும் வானத்திலிருந்து மனுஷர்மேல் விழுந்தது; அந்தக் கல்மழையினால் உண்டான வாதையினிமித்தம் மனுஷர்கள் தேவனைத் தூஷித்தார்கள்; அந்த வாதை மகா கொடிதாயிருந்தது.

வெளி 17

1 ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் வந்து என்னோடே பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடே பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் குடிகளும் வெறிகொண்டிருந்தார்களே; 2 அவளுக்கு வருகிற ஆக்கினையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி; 3 ஆவிக்குள் என்னை வனாந்தரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையும் உடையதும் தூஷணமான நாமங்களால் நிறைந்ததுமான சிவப்புநிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு ஸ்திரீ ஏறியிருக்கக்கண்டேன். 4 அந்த ஸ்திரீ இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையுந்தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள். 5 மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது. 6 அந்த ஸ்திரீ பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைக் கண்டேன்; அவளைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். 7 அப்பொழுது, தூதனானவன் என்னை நோக்கி: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்த ஸ்திரீயினுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாய் இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன். 8 நீ கண்ட மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறிவந்து, நாசமடையப்போகிறது. உலகத்தோற்றமுதல் ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள், இருந்ததும், இராமற்போனதும், இனி இருப்பதுமாயிருக்கிற மிருகத்தைப்பார்த்து ஆச்சரியப்படுவார்கள். 9 ஞானமுள்ள மனம் இதிலே விளங்கும். அந்த ஏழு தலைகளும் அந்த ஸ்திரீ உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம். 10 அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும். 11 இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான். 12 நீ கண்ட பத்துக் கொம்புகளும் பத்து ராஜாக்களாம்; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடனேகூட ஒருமணி நேரமளவும் ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள். 13 இவர்கள் ஒரே யோசனையுள்ளவர்கள்; இவர்கள் தங்கள் வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள். 14 இவர்கள் ஆட்டுக்குட்டியானவருடனே யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாயிருக்கிறபடியால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடுகூட இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாயிருக்கிறார்கள் என்றான். 15 பின்னும் அவன் என்னை நோக்கி: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைக் கண்டாயே; அவைகள் ஜனங்களும் கூட்டங்களும் ஜாதிகளும் பாஷைக்காரருமாம். 16 நீ மிருகத்தின்மேல் கண்ட பத்துக் கொம்புகளானவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள். 17 தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார். 18 நீ கண்ட ஸ்திரீயானவள் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம்பண்ணுகிற மகா நகரமேயாம் என்றான்.

வெளி 18

1 இவைகளுக்குப்பின்பு, வேறொரு தூதன் மிகுந்த அதிகாரமுடையவனாய், வானத்திலிருந்திறங்கி வரக்கண்டேன்; அவனுடைய மகிமையினால் பூமி பிரகாசமாயிற்று. 2 அவன் பலத்த சத்தமிட்டு: மகா பாபிலோன் விழுந்தது! விழுந்தது! அது பேய்களுடைய குடியிருப்பும், சகலவித அசுத்தஆவிகளுடைய காவல்வீடும், அசுத்தமும் அருவருப்புமுள்ள சகலவித பறவைகளுடைய கூடுமாயிற்று. 3 அவளுடைய வேசித்தனத்தின் உக்கிரமான மதுவை எல்லா ஜாதிகளும் குடித்தார்கள்; பூமியின் ராஜாக்கள் அவளோடே வேசித்தனம்பண்ணினார்கள்; பூமியின் வர்த்தகர் அவளுடைய செல்வச்செருக்கின் மிகுதியினால் ஐசுவரியவான்களானார்கள் என்று விளம்பினான். 4 பின்பு, வேறொரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக் கேட்டேன். அது: என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள். 5 அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார். 6 அவள் உங்களுக்குப் பலனளித்ததுபோல நீங்களும் அவளுக்குப் பலனளியுங்கள்; அவளுடைய கிரியைகளுக்குத்தக்கதாக அவளுக்கு இரட்டிப்பாகக் கொடுத்துத் தீருங்கள்; அவள் உங்களுக்குக் கலந்துகொடுத்த பாத்திரத்திலே இரட்டிப்பாக அவளுக்குக் கலந்துகொடுங்கள். 7 அவள் தன்னை மகிமைப்படுத்தி, செல்வச்செருக்காய் வாழ்ந்ததெவ்வளவோ அவ்வளவாய் வாதையையும் துக்கத்தையும் அவளுக்குக் கொடுங்கள். நான் ராஜஸ்திரீயாய் வீற்றிருக்கிறேன்; நான் கைம்பெண்ணல்ல, நான் துக்கத்தைக் காண்பதில்லையென்று அவள் தன் இருதயத்திலே எண்ணினாள். 8 ஆகையால் அவளுக்கு வரும் வாதைகளாகிய சாவும் துக்கமும் பஞ்சமும் ஒரேநாளிலே வரும்; அவள் அக்கினியினாலே சுட்டெரிக்கப்படுவாள்; அவளுக்கு நியாயத்தீர்ப்புக் கொடுக்கும் தேவனாகிய கர்த்தர் வல்லமையுள்ளவர். 9 அவளுடனே வேசித்தனஞ்செய்து செல்வச்செருக்காய் வாழ்ந்த பூமியின் ராஜாக்களும் அவள் வேகிறதினால் உண்டான புகையைக் காணும்போது அவளுக்காக அழுது புலம்பி, 10 அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று: ஐயையோ! பாபிலோன், மகா நகரமே! பலமான பட்டணமே! ஒரே நாழிகையில் உனக்கு ஆக்கினை வந்ததே! என்பார்கள். 11 பூமியின் வர்த்தகர்களும் தங்கள் தங்கள் சரக்குகளாகிய பொன்னையும், வெள்ளியையும், இரத்தினங்களையும், முத்துக்களையும், சல்லாவையும், இரத்தாம்பரத்தையும், பட்டாடைகளையும், சிவப்பாடைகளையும், 12 சகலவித வாசனைக் கட்டைகளையும், தந்தத்தினால் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும், விலையுயர்ந்த மரத்தினாலும் வெண்கலத்தினாலும் இரும்பினாலும் வெள்ளைக் கல்லினாலும் செய்திருக்கிற சகலவித வஸ்துக்களையும், 13 இலவங்கப்பட்டையையும், தூபவர்க்கங்களையும், தைலங்களையும், சாம்பிராணியையும், திராட்சரசத்தையும், எண்ணெயையும், மெல்லிய மாவையும், கோதுமையையும், மாடுகளையும், ஆடுகளையும், குதிரைகளையும், இரதங்களையும், அடிமைகளையும், மனுஷருடைய ஆத்துமாக்களையும் இனிக் கொள்வாரில்லாதபடியால், அவளுக்காக அழுது புலம்புவார்கள். 14 உன் ஆத்துமா இச்சித்த பழவர்க்கங்கள் உன்னைவிட்டு நீங்கிப்போயின; கொழுமையானவைகளும் சம்பிரமமானவைகளும் உன்னைவிட்டு நீங்கிப்போயின; நீ அவைகளை இனிக் காண்பதில்லை. 15 இப்படிப்பட்டவைகளைக் கொண்டு வர்த்தகம்பண்ணி, அவளால் ஐசுவரியவான்களானவர்கள் அவளுக்கு உண்டான வாதையினால் பயந்து, தூரத்திலே நின்று; 16 ஐயையோ! சல்லாவும் இரத்தாம்பரமும் சிவப்பாடையும் தரித்து, பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டிருந்த மகா நகரமே! ஒரு நாழிகையிலே இவ்வளவு ஐசுவரியமும் அழிந்துபோயிற்றே! என்று சொல்லி, அழுது துக்கிப்பார்கள். 17 மாலுமிகள் யாவரும், கப்பல்களில் யாத்திரை பண்ணுகிறவர்கள் யாவரும், கப்பலாட்களும், சமுத்திரத்திலே தொழில்செய்கிற யாவரும் தூரத்திலே நின்று, 18 அவள் வேகிறதினால் உண்டான புகையைப் பார்த்து: இந்த மகா நகரத்திற்கொப்பான நகரம் உண்டோ என்று சத்தமிட்டு, 19 தங்கள் தலைகள்மேல் புழுதியைப்போட்டுக்கொண்டு: ஐயையோ, மகா நகரமே! சமுத்திரத்திலே கப்பல்களையுடைய அனைவரும் இவளுடைய உச்சிதமான சம்பூரணத்தினால் ஐசுவரியவான்களானார்களே! ஒரு நாழிகையிலே இவள் பாழாய்ப்போனாளே! என்று அழுது துக்கித்து ஓலமிடுவார்கள். 20 பரலோகமே! பரிசுத்தவான்களாகிய அப்போஸ்தலர்களே! தீர்க்கதரிசிகளே! அவளைக்குறித்துக் களிகூருங்கள். உங்கள் நிமித்தம் தேவன் அவளை நியாயந்தீர்த்தாரே! என்று தூதன் சொன்னான். 21 அப்பொழுது, பலமுள்ள தூதனொருவன் பெரிய ஏந்திரக்கல்லையொத்த ஒரு கல்லை எடுத்துச் சமுத்திரத்திலே எறிந்து: இப்படியே பாபிலோன் மகாநகரம் வேகமாய்த் தள்ளுண்டு, இனி ஒருபோதும் காணப்படாமற்போகும். 22 சுரமண்டலக்காரரும், கீதவாத்தியக்காரரும், நாகசுரக்காரரும், எக்காளக்காரருமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை; எந்தத் தொழிலாளியும் இனி உன்னிடத்தில் காணப்படுவதுமில்லை; ஏந்திரசத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. 23 விளக்குவெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணவாளனும் மணவாட்டியுமானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன் வர்த்தகர் பூமியில் பெரியோர்களாயிருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே. 24 தீர்க்கதரிசிகளுடைய இரத்தமும் பரிசுத்தவான்களுடைய இரத்தமும் பூமியில் கொல்லப்பட்ட அனைவருடைய இரத்தமும் அவளிடத்தில் காணப்பட்டது என்று விளம்பினான்.

வெளி 19

1 இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள். 2 தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரரின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே என்றார்கள். 3 மறுபடியும் அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். 4 இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் வணக்கமாய் விழுந்து: ஆமென், அல்லேலூயா, என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள். 5 மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது. 6 அப்பொழுது திரளான ஜனங்கள் இடும் ஆரவாரம்போலவும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தமுண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார். 7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய கலியாணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன். 8 சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம் தரித்துக்கொள்ளும்படி அவளுக்கு அளிக்கப்பட்டது; அந்த மெல்லிய வஸ்திரம் பரிசுத்தவான்களுடைய நீதிகளே. 9 பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின் கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான். 10 அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னை நோக்கி: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரரோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாயிருக்கிறது என்றான். 11 பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். 12 அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப்போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. 13 இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. 14 பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந் தரித்தவர்களாய், வெள்ளைக்குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின்சென்றார்கள். 15 புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். 16 ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது. 17 பின்பு ஒரு தூதன் சூரியனில் நிற்கக்கண்டேன்; அவன் வானத்தின் மத்தியில் பறக்கிற சகல பறவைகளையும் பார்த்து: 18 நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், சேனைத்தலைவர்களின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுயாதீனர் அடிமைகள், சிறியோர் பெரியோர், இவர்களெல்லாருடைய மாம்சத்தையும் பட்சிக்கும்படிக்கு, மகா தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தத்தோடே கூப்பிட்டான். 19 பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய சேனைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய சேனையோடும் யுத்தம்பண்ணும்படிக்குக் கூடிவரக்கண்டேன். 20 அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின்முன்பாகச் செய்த அற்புதங்களால் அதின் முத்திரையைத் தரித்தவர்களையும் அதின் சொரூபத்தை வணங்கினவர்களையும் மோசம்போக்கின கள்ளத்தீர்க்கதரிசியுங்கூடப் பிடிக்கப்பட்டான்; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடே தள்ளப்பட்டார்கள். 21 மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற பட்டயத்தால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.

வெளி 20

1 ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கி வரக்கண்டேன். 2 பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவுங் கட்டிவைத்து, அந்த ஆயிரம் வருஷம் நிறைவேறும்வரைக்கும் அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான். 3 அதற்குப் பின்பு அது கொஞ்சக்காலம் விடுதலையாகவேண்டும். 4 அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்துக் கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். 5 மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். 6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள். 7 அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி, 8 பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்; அவர்களுடைய தொகை கடற்கரை மணலத்தனையாயிருக்கும். 9 அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது. 10 மேலும் அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள். 11 பின்பு, நான் பெரிய வெள்ளைச் சிங்காசனத்தையும் அதின்மேல் வீற்றிருக்கிறவரையும் கண்டேன்; அவருடைய சமுகத்திலிருந்து பூமியும் வானமும் அகன்றுபோயின; அவைகளுக்கு இடங்காணப்படவில்லை. 12 மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்குமுன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள். 13 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். 14 அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். 15 ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

வெளி 21

1 பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின; சமுத்திரமும் இல்லாமற்போயிற்று. 2 யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கி வரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது. 3 மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். 4 அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது. 5 சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார். 6 அன்றியும், அவர் என்னை நோக்கி: ஆயிற்று, நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன். தாகமாயிருக்கிறவனுக்கு நான் ஜீவத்தண்ணீரூற்றில் இலவசமாய்க் கொடுப்பேன். 7 ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்; நான் அவன் தேவனாயிருப்பேன், அவன் என் குமாரனாயிருப்பான். 8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். 9 பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி, 10 பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்தநகரம் பரலோகத்தைவிட்டுத் தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான். 11 அதின் பிரகாசம் மிகவும் விலையுயர்ந்த இரத்தினக்கல்லைப்போலவும், பளிங்கினொளியுள்ள வச்சிரக்கல்லைப்போலவும் இருந்தது. 12 அதற்குப் பெரிதும் உயரமுமான மதிலும், கிழக்கே மூன்று வாசல்கள், வடக்கே மூன்று வாசல்கள், தெற்கே மூன்று வாசல்கள், மேற்கே மூன்று வாசல்கள் ஆகப் பன்னிரண்டு வாசல்களும் இருந்தன. 13 வாசல்களின் அருகே பன்னிரண்டு தூதர்களிருந்தார்கள்; அந்த வாசல்களின்மேல் இஸ்ரவேல் சந்ததியாராகிய பன்னிரண்டு கோத்திரத்தாருடைய நாமங்களும் எழுதப்பட்டிருந்தன. 14 நகரத்தின் மதிலுக்குப் பன்னிரண்டு அஸ்திபாரக் கற்களிருந்தன; அவைகள்மேல் ஆட்டுக்குட்டியானவருடைய பன்னிரண்டு அப்போஸ்தலரின் பன்னிரண்டு நாமங்களும் பதிந்திருந்தன. 15 என்னுடனே பேசினவன், நகரத்தையும் அதின் வாசல்களையும் அதின் மதிலையும் அளக்கிறதற்கு ஒரு பொற்கோலைப் பிடித்திருந்தான். 16 அந்த நகரம் சதுரமாயிருந்தது, அதின் அகலமும் நீளமும் சமமாயிருந்தது. அவன் அந்தக் கோலினால் நகரத்தை அளந்தான்; அது பன்னீராயிரம் ஸ்தாதி அளவாயிருந்தது; அதின் நீளமும் அகலமும் உயரமும் சமமாயிருந்தது. 17 அவன் அதின் மதிலை அளந்தபோது, அது தூதனுடைய அளவாகிய மனுஷ அளவின்படியே நூற்றுநாற்பத்துநான்கு முழமாயிருந்தது. 18 அதின் மதில் வச்சிரக்கல்லால் கட்டப்பட்டிருந்தது; நகரம் தெளிந்த பளிங்குக்கு ஒப்பான சுத்தப்பொன்னாயிருந்தது. 19 நகரத்து மதில்களின் அஸ்திபாரங்கள் சகலவித இரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாம் அஸ்திபாரம் வச்சிரக்கல், இரண்டாவது இந்திரநீலம், மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம், 20 ஐந்தாவது கோமேதகம், ஆறாவது பதுமராகம், ஏழாவது சுவர்ணரத்தினம், எட்டாவது படிகப்பச்சை, ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது சுநீரம், பன்னிரண்டாவது சுகந்தி இவைகளே. 21 பன்னிரண்டு வாசல்களும் பன்னிரண்டு முத்துக்களாயிருந்தன; ஒவ்வொரு வாசலும் ஒவ்வொரு முத்தாயிருந்தது. நகரத்தின் வீதி தெளிவுள்ள பளிங்குபோலச் சுத்தப்பொன்னாயிருந்தது. 22 அதிலே தேவாலயத்தை நான் காணவில்லை; சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரும் ஆட்டுக்குட்டியானவருமே அதற்கு ஆலயம். 23 நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு. 24 இரட்சிக்கப்படுகிற ஜனங்கள் அதின் வெளிச்சத்திலே நடப்பார்கள். பூமியின் ராஜாக்கள் தங்கள் மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். 25 அங்கே இராக்காலம் இல்லாதபடியால், அதின் வாசல்கள் பகலில் அடைக்கப்படுவதே இல்லை. 26 உலகத்தாருடைய மகிமையையும் கனத்தையும் அதற்குள்ளே கொண்டுவருவார்கள். 27 தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை; ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டவர்கள் மாத்திரம் அதில் பிரவேசிப்பார்கள்.

வெளி 22

1 பின்பு, பளிங்கைப்போல் தெளிவான ஜீவத்தண்ணீருள்ள சுத்தமான நதி தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனத்திலிருந்து புறப்பட்டுவருகிறதை எனக்குக் காண்பித்தான். 2 நகரத்து வீதியின் மத்தியிலும், நதியின் இருகரையிலும், பன்னிரண்டுவிதமான கனிகளைத்தரும் ஜீவவிருட்சம் இருந்தது, அது மாதந்தோறும் தன் கனியைக் கொடுக்கும்; அந்த விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள். 3 இனி ஒரு சாபமுமிராது. தேவனும் ஆட்டுக்குட்டியானவரும் இருக்கிற சிங்காசனம் அதிலிருக்கும். 4 அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும். 5 அங்கே இராக்காலமிராது; விளக்கும் சூரியனுடைய வெளிச்சமும் அவர்களுக்கு வேண்டுவதில்லை; தேவனாகிய கர்த்தரே அவர்கள்மேல் பிரகாசிப்பார். அவர்கள் சதாகாலங்களிலும் அரசாளுவார்கள். 6 பின்பு, அவர் என்னை நோக்கி: இந்த வசனங்கள் உண்மையும் சத்தியமுமானவைகள். சீக்கிரமாய்ச் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு, பரிசுத்த தீர்க்கதரிசிகளின் கர்த்தராகிய தேவனானவர் தம்முடைய தூதனை அனுப்பினார். 7 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கைக்கொள்ளுகிறவன் பாக்கியவான் என்றார். 8 யோவானாகிய நானே இவைகளைக் கண்டும் கேட்டும் இருந்தேன். நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன். 9 அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் தீர்க்கதரிசிகளோடும், இந்தப் புஸ்தகத்தின் வசனங்களைக் கைக்கொள்ளுகிறவர்களோடுங்கூட நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான். 10 பின்னும், அவர் என்னை நோக்கி: இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களை முத்திரைபோடவேண்டாம்; காலம் சமீபமாயிருக்கிறது. 11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். 12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. 13 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். 14 ஜீவவிருட்சத்தின்மேல் அதிகாரமுள்ளவர்களாவதற்கும், வாசல்கள் வழியாய் நகரத்திற்குள் பிரவேசிப்பதற்கும் அவருடைய கற்பனைகளின்படி செய்கிறவர்கள் பாக்கியவான்கள். 15 நாய்களும், சூனியக்காரரும், விபசாரக்காரரும், கொலைபாதகரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யை விரும்பி அதின்படி செய்கிற யாவரும் புறம்பே இருப்பார்கள். 16 சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். 17 ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன். 18 இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். 19 ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். 20 இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். 21 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.