1

1 இயேசுகிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனும், தேவனுடைய சுவிசேஷத்திற்காகப் பிரித்தெடுக்கப்பட்டவனுமாகிய பவுல், 2 ரோமாபுரியிலுள்ள தேவப்பிரியரும் பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களுமாகிய அனைவருக்கும் எழுதுகிறதாவது; 3 நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. 4 இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப்பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், 5 மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார். 6 அவர் சகல ஜாதிகளையும், அவர்களுக்குள் இயேசுகிறிஸ்துவினால் அழைக்கப்பட்டவர்களாகிய உங்களையும், 7 தமது நாமத்தினிமித்தம் விசுவாசத்துக்குக் கீழ்ப்படியப்பண்ணும்பொருட்டு, எங்களுக்குக் கிருபையையும் அப்போஸ்தல ஊழியத்தையும் அருளிச்செய்திருக்கிறார். 8 உங்கள் விசுவாசம் உலகமெங்கும் பிரசித்தமாகிறபடியினாலே, முதலாவது நான் உங்களெல்லாருக்காகவும் இயேசுகிறிஸ்து மூலமாய் என் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். 9 நான் ஜெபம்பண்ணும்போதெல்லாம் இடைவிடாமல் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறதைக்குறித்துத் தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே என் ஆவியோடு நான் சேவிக்கிற தேவன் எனக்குச் சாட்சியாயிருக்கிறார். 10 நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும், 11 உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடேகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறபடியினாலே, 12 எவ்விதத்திலாவது நான் உங்களிடத்தில் வருகிறதற்குத் தேவனுடைய சித்தத்தினாலே எனக்கு நல்ல பிரயாணம் சீக்கிரத்தில் கிடைக்கவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன். 13 சகோதரரே, புறஜாதிகளான மற்றவர்களுக்குள்ளே நான் பலனை அடைந்தது போல உங்களுக்குள்ளும் சில பலனை அடையும்படிக்கு, உங்களிடத்தில் வர பலமுறை யோசனையாயிருந்தேன், ஆயினும் இதுவரைக்கும் எனக்குத் தடையுண்டாயிற்று என்று நீங்கள் அறியாதிருக்க எனக்கு மனதில்லை. 14 கிரேக்கருக்கும், மற்ற அந்நியர்களுக்கும், ஞானிகளுக்கும், மூடருக்கும் நான் கடனாளியாயிருக்கிறேன். 15 ஆகையால் ரோமாபுரியிலிருக்கிற உங்களுக்கும் என்னால் இயன்றமட்டும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க விரும்புகிறேன். 16 கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்; முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு உண்டாவதற்கு அது தேவபெலனாயிருக்கிறது. 17 விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறபடி, விசுவாசத்தினால் உண்டாகும் தேவநீதி விசுவாசத்திற்கென்று அந்தச் சுவிசேஷத்தினால் வெளிப்படுத்தப்படுகிறது. 18 சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்துக்கும் விரோதமாய், தேவகோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. 19 தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். 20 எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை. 21 அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்; உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. 22 அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி, 23 அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள். 24 இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புக்கொடுத்தார். 25 தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென். 26 இதினிமித்தம் தேவன் அவர்களை இழிவான இச்சைரோகங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்; அந்தப்படியே அவர்களுடைய பெண்கள் சுபாவ அநுபோகத்தைச் சுபாவத்துக்கு விரோதமான அநுபோகமாக மாற்றினார்கள். 27 அப்படியே ஆண்களும் பெண்களைச் சுபாவப்படி அநுபவியாமல், ஒருவர்மேலொருவர் விரகதாபத்தினாலே பொங்கி, ஆணோடே ஆண் அவலட்சணமானதை நடப்பித்து, தங்கள் தப்பிதத்திற்குத் தகுதியான பலனைத் தங்களுக்குள் அடைந்தார்கள். 28 தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். 29 அவர்கள் சகலவித அநியாயத்தினாலும், வேசித்தனத்தினாலும், துரோகத்தினாலும், பொருளாசையினாலும், குரோதத்தினாலும் நிறையப்பட்டு; பொறாமையினாலும், கொலையினாலும், வாக்குவாதத்தினாலும், வஞ்சகத்தினாலும், வன்மத்தினாலும் நிறைந்தவர்களுமாய், 30 புறங்கூறுகிறவர்களுமாய், அவதூறுபண்ணுகிறவர்களுமாய், தேவபகைஞருமாய், துராகிருதம்பண்ணுகிறவர்களுமாய், அகந்தையுள்ளவர்களுமாய், வீம்புக்காரருமாய், பொல்லாதவைகளை யோசித்துப் பிணைக்கிறவர்களுமாய், பெற்றாருக்குக் கீழ்ப்படியாதவர்களுமாய், 31 உணர்வில்லாதவர்களுமாய், உடன்படிக்கைகளை மீறுகிறவர்களுமாய், சுபாவ அன்பில்லாதவர்களுமாய், இணங்காதவர்களுமாய், இரக்கமில்லாதவர்களுமாய் இருக்கிறார்கள். 32 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் மரணத்திற்குப் பாத்திரராயிருக்கிறார்களென்று தேவன் தீர்மானித்த நீதியான தீர்ப்பை அவர்கள் அறிந்திருந்தும், அவைகளைத் தாங்களே செய்கிறதுமல்லாமல், அவைகளைச் செய்கிற மற்றவர்களிடத்தில் பிரியப்படுகிறவர்களுமாயிருக்கிறார்கள்.

2

1 ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். 2 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களுக்குத் தேவனுடைய நியாயத்தீர்ப்பு சத்தியத்தின்படியே இருக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 3 இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்களைக் குற்றவாளிகளென்று தீர்த்தும், அவைகளையே செய்கிறவனே, நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குத் தப்பிக்கொள்ளலாமென்று நினைக்கிறாயோ? 4 அல்லது தேவதயவு நீ குணப்படும்படி உன்னை ஏவுகிறதென்று அறியாமல், அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ? 5 உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே. 6 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். 7 சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். 8 சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். 9 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும். 10 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். 11 தேவனிடத்தில் பட்சபாதமில்லை. 12 எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள். 13 நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள். 14 அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். 15 அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள். 16 என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும். 17 நீ யூதனென்று பெயர்பெற்று, நியாயப்பிரமாணத்தின்மேல் பற்றுதலாயிருந்து, தேவனைக்குறித்து மேன்மைபாராட்டி, 18 நியாயப்பிரமாணத்தினால் உபதேசிக்கப்பட்டவனாய், அவருடைய சித்தத்தை அறிந்து, நன்மை தீமை இன்னதென்று வகையறுக்கிறாயே. 19 நீ உன்னைக் குருடருக்கு வழிகாட்டியாகவும், அந்தகாரத்திலுள்ளவர்களுக்கு வெளிச்சமாகவும், 20 பேதைகளுக்குப் போதகனாகவும், குழந்தைகளுக்கு உபாத்தியாயனாகவும், நியாயப்பிரமாணத்தின் அறிவையும் சத்தியத்தையும் காட்டிய சட்டமுடையவனாகவும் எண்ணுகிறாயே. 21 இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா? 22 விபசாரம் செய்யக்கூடாதென்று சொல்லுகிற நீ விபசாரம் செய்யலாமா? விக்கிரகங்களை அருவருக்கிற நீ கோவில்களைக் கொள்ளையிடலாமா? 23 நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா? 24 எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே. 25 நீ நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு நடந்தால் விருத்தசேதனம் பிரயோஜனமுள்ளதுதான்; நீ நியாயப்பிரமாணத்தை மீறி நடந்தால் உன் விருத்தசேதனம் விருத்தசேதனமில்லாமையாயிற்றே. 26 மேலும் விருத்தசேதனமில்லாதவன் நியாயப்பிரமாணத்துக்கேற்ற நீதிகளைக் கைக்கொண்டால், அவனுடைய விருத்தசேதனமில்லாமை விருத்தசேதனம் என்றெண்ணப்படுமல்லவா? 27 சுபாவத்தின்படி விருத்தசேதனமில்லாதவனாயிருந்தும் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறவனாயிருந்தால், அவன் வேத எழுத்தும் விருத்தசேதனமும் உள்ளவனாயிருந்தும், நியாயப்பிரமாணத்தை மீறுகிற உன்னைக் குற்றப்படுத்துவானல்லவா? 28 ஆதலால் புறம்பாக யூதனானவன் யூதனல்ல, புறம்பாக மாம்சத்தில் செய்யப்படும் விருத்தசேதனமும் விருத்தசேதனமல்ல. 29 உள்ளத்திலே யூதனானவனே யூதன்; எழுத்தின்படி உண்டாகாமல், ஆவியின்படி இருதயத்தில் உண்டாகும் விருத்தசேதனமே விருத்தசேதனம்; இப்படிப்பட்டவனுக்குரிய புகழ்ச்சி மனுஷராலே அல்ல, தேவனாலே உண்டாயிருக்கிறது.

3

1 இப்படியானால், யூதனுடைய மேன்மை என்ன? விருத்தசேதனத்தினாலே பிரயோஜனம் என்ன? 2 அது எவ்விதத்திலும் மிகுதியாயிருக்கிறது; தேவனுடைய வாக்கியங்கள் அவர்களிடத்தில் ஒப்புவிக்கப்பட்டது விசேஷித்த மேன்மையாமே. 3 சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ? 4 அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபரராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக. 5 நான் மனுஷர் பேசுகிற பிரகாரமாய்ப் பேசுகிறேன்; நம்முடைய அநீதி தேவனுடைய நீதியை விளங்கப்பண்ணினால் என்ன சொல்லுவோம்? கோபாக்கினையைச் செலுத்துகிற தேவன் அநீதராயிருக்கிறார் என்று சொல்லலாமா? 6 அப்படிச் சொல்லக்கூடாது; சொல்லக்கூடுமானால், தேவன் உலகத்தை நியாயந்தீர்ப்பதெப்படி? 7 அன்றியும், என் பொய்யினாலே தேவனுடைய சத்தியம் அவருக்கு மகிமையுண்டாக விளங்கினதுண்டானால், இனி நான் பாவியென்று தீர்க்கப்படுவானேன்? 8 நன்மை வரும்படிக்குத் தீமைசெய்வோமாக என்றும் சொல்லலாமல்லவா? நாங்கள் அப்படிப் போதிக்கிறவர்களென்றும் சிலர் எங்களைத் தூஷித்துச் சொல்லுகிறார்களே; அப்படிப் போதிக்கிறவர்கள்மேல் வரும் ஆக்கினை நீதியாயிருக்கும். 9 ஆனாலும் என்ன? அவர்களைப்பார்க்கிலும் நாங்கள் விசேஷித்தவர்களா? எவ்வளவேனும் விசேஷித்தவர்களல்ல. யூதர் கிரேக்கர் யாவரும் பாவத்திற்குட்பட்டவர்களென்பதை முன்பு திருஷ்டாந்தப்படுத்தினோமே. 10 அந்தப்படியே: நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; 11 உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; 12 எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை. 13 அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட பிரேதக்குழி, தங்கள் நாவுகளால் வஞ்சனைசெய்கிறார்கள்; அவர்களுடைய உதடுகளின் கீழே பாம்பின் விஷம் இருக்கிறது; 14 அவர்கள் வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்திருக்கிறது; 15 அவர்கள் கால்கள் இரத்தஞ்சிந்துகிறதற்குத் தீவிரிக்கிறது; 16 நாசமும் நிர்ப்பந்தமும் அவர்கள் வழிகளிலிருக்கிறது; 17 சமாதான வழியை அவர்கள் அறியாதிருக்கிறார்கள்; 18 அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தெய்வபயமில்லை, என்று எழுதியிருக்கிறதே. 19 மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம். 20 இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப்பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. 21 இப்படியிருக்க, நியாயப்பிரமாணமில்லாமல் தேவநீதி வெளியாக்கப்பட்டிருக்கிறது; அதைக்குறித்து நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் சாட்சியிடுகிறது. 22 அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை. 23 எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, 24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; 25 தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், 26 கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார். 27 இப்படியிருக்க, மேன்மைபாராட்டல் எங்கே? அது நீக்கப்பட்டதே. எந்தப் பிரமாணத்தினாலே? கிரியாப்பிரமாணத்தினாலேயா? அல்ல; விசுவாசப்பிரமாணத்தினாலேயே. 28 ஆதலால், மனுஷன் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளில்லாமல் விசுவாசத்தினாலேயே நீதிமானாக்கப்படுகிறான் என்று தீர்க்கிறோம். 29 தேவன் யூதருக்குமாத்திரமா தேவன்? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? ஆம் புறஜாதிகளுக்கும் அவர் தேவன்தான். 30 விருத்தசேதனமுள்ளவர்களை விசுவாசத்தினாலும், விருத்தசேதனமில்லாதவர்களை விசுவாசத்தின் மூலமாயும் நீதிமான்களாக்குகிற தேவன் ஒருவரே. 31 அப்படியானால், விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அப்படியல்ல; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே.

4

1 அப்படியானால், நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் மாம்சத்தின்படி என்னத்தைக் கண்டடைந்தான் என்று சொல்லுவோம்? 2 ஆபிரகாம் கிரியைகளினாலே நீதிமானாக்கப்பட்டானாகில் மேன்மைபாராட்ட அவனுக்கு ஏதுவுண்டு; ஆகிலும் தேவனுக்குமுன்பாக மேன்மைபாராட்ட ஏதுவில்லை. 3 வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது. 4 கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும். 5 ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும். 6 அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு: 7 எவர்களுடைய அக்கிரமங்கள் மன்னிக்கப்பட்டதோ, எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள். 8 எவனுடைய பாவத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, அவன் பாக்கியவான் என்று தாவீது சொல்லியிருக்கிறான். 9 இந்தப் பாக்கியம் விருத்தசேதனமுள்ளவனுக்குமாத்திரம் வருமோ, விருத்தசேதனமில்லாதவனுக்கும் வருமோ? ஆபிரகாமுக்கு விசுவாசம் நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறோமே. 10 அது எப்பொழுது அவனுக்கு அப்படி எண்ணப்பட்டது? அவன் விருத்தசேதனமுள்ளவனாயிருந்தபோதோ, விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோதோ? விருத்தசேதனமுள்ளவனாயிருந்தபோதல்ல, விருத்தசேதனமில்லாதவனாயிருந்தபோதே. 11 மேலும், விருத்தசேதனமில்லாத காலத்தில் அவன் விசுவாசத்தினாலே அடைந்த நீதிக்கு முத்திரையாக விருத்தசேதனமாகிய அடையாளத்தைப் பெற்றான். விருத்தசேதனமில்லாதவர்களாய் விசுவாசிக்கிற யாவருக்கும் நீதி எண்ணப்படும்பொருட்டாக அவர்களுக்கு அவன் தகப்பனாயிருக்கும்படிக்கும், 12 விருத்தசேதனத்தைப் பெற்றவர்களாய்மாத்திரமல்ல, நம்முடைய தகப்பனாகிய ஆபிரகாம் விருத்தசேதனமில்லாத காலத்தில் அடைந்த விசுவாசமாகிய அடிச்சுவடுகளில் நடக்கிறவர்களாயுமிருக்கிறவர்களுக்குத் தகப்பனாயிருக்கும்படிக்கும், அந்த அடையாளத்தைப் பெற்றான். 13 அன்றியும், உலகத்தைச் சுதந்தரிப்பான் என்கிற வாக்குத்தத்தம் ஆபிரகாமுக்காவது அவன் சந்ததிக்காவது நியாயப்பிரமாணத்தினால் கிடையாமல் விசுவாசத்தினால் வருகிற நீதியினால் கிடைத்தது. 14 நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்கள் சுதந்தரவாளிகளானால் விசுவாசம் வீணாய்ப்போம், வாக்குத்தத்தமும் அவமாகும். 15 மேலும் நியாயப்பிரமாணம் கோபாக்கினையை உண்டாக்குகிறது, நியாயப்பிரமாணமில்லாவிட்டால் மீறுதலுமில்லை. 16 ஆதலால், சுதந்தரமானது கிருபையினால் உண்டாகிறதாயிருக்கும்படிக்கு அது விசுவாசத்தினாலே வருகிறது; நியாயப்பிரமாணத்தைச் சார்ந்தவர்களாகிய சந்ததியாருக்குமாத்திரமல்ல, நம்மெல்லாருக்கும் தகப்பனாகிய ஆபிரகாமுடைய விசுவாசத்தைச் சார்ந்தவர்களான எல்லாச் சந்ததியாருக்கும் அந்த வாக்குத்தத்தம் நிச்சயமாயிருக்கும்படிக்கு அப்படி வருகிறது. 17 அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான். 18 உன் சந்ததி இவ்வளவாயிருக்கும் என்று சொல்லப்பட்டபடியே, தான் அநேக ஜாதிகளுக்குத் தகப்பனாவதை நம்புகிறதற்கு ஏதுவில்லாதிருந்தும், அதை நம்பிக்கையோடே விசுவாசித்தான். 19 அவன் விசுவாசத்திலே பலவீனமாயிருக்கவில்லை; அவன் ஏறக்குறைய நூறுவயதுள்ளவனாயிருக்கும்போது, தன் சரீரம் செத்துப்போனதையும், சாராளுடைய கர்ப்பம் செத்துப்போனதையும் எண்ணாதிருந்தான். 20 தேவனுடைய வாக்குத்தத்தத்தைக்குறித்து அவன் அவிசுவாசமாய்ச் சந்தேகப்படாமல், 21 தேவன் வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறாரென்று முழு நிச்சயமாய் நம்பி, தேவனை மகிமைப்படுத்தி, விசுவாசத்தில் வல்லவனானான். 22 ஆகையால் அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது. 23 அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்காக மாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது. 24 நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவரை விசுவாசிக்கிற நமக்கும் அப்படியே எண்ணப்படும். 25 அவர் நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்டும், நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்.

5

1 இவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். 2 அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம். 3 அதுமாத்திரமல்ல, உபத்திரவம் பொறுமையையும், பொறுமை பரீட்சையையும், பரீட்சை நம்பிக்கையையும் உண்டாக்குகிறதென்று நாங்கள் அறிந்து, 4 உபத்திரவங்களிலேயும் மேன்மைபாராட்டுகிறோம். 5 மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்தஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. 6 அன்றியும் நாம் பெலனற்றவர்களாயிருக்கும்போதே, குறித்த காலத்தில் கிறிஸ்து அக்கிரமக்காரருக்காக மரித்தார். 7 நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது; நல்லவனுக்காக ஒருவேளை ஒருவன் மரிக்கத் துணிவான். 8 நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார். 9 இப்படி நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்க, கோபாக்கினைக்கு நீங்கலாக அவராலே நாம் இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. 10 நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே. 11 அதுவுமல்லாமல், இப்பொழுது ஒப்புரவாகுதலை நமக்குக் கிடைக்கப்பண்ணின நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய் நாம் தேவனைப்பற்றியும் மேன்மைபாராட்டுகிறோம். 12 இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று. 13 நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்னும் பாவம் உலகத்திலிருந்தது; நியாயப்பிரமாணம் இல்லாதிருந்தால் பாவம் எண்ணப்படமாட்டாது. 14 அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன். 15 ஆனாலும் மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது. 16 மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது. 17 அல்லாமலும், ஒருவனுடைய மீறுதலினாலே, அந்த ஒருவன்மூலமாய், மரணம் ஆண்டுகொண்டிருக்க, கிருபையின் பரிபூரணத்தையும் நீதியாகிய ஈவின் பரிபூரணத்தையும் பெறுகிறவர்கள் இயேசுகிறிஸ்து என்னும் ஒருவராலே ஜீவனை அடைந்து ஆளுவார்களென்பது அதிக நிச்சயமாமே. 18 ஆகையால் ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. 19 அன்றியும் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே அநேகர் பாவிகளாக்கப்பட்டதுபோல, ஒருவருடைய கீழ்ப்படிதலினாலே அநேகர் நீதிமான்களாக்கப்படுவார்கள். 20 மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது; அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. 21 ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

6

1 ஆகையால் என்னசொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே. 2 பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? 3 கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? 4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். 5 ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம். 6 நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ் செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். 7 மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே. 8 ஆகையால் கிறிஸ்துவுடனேகூட நாம் மரித்தோமானால், அவருடனேகூடப் பிழைத்தும் இருப்போம் என்று நம்புகிறோம். 9 மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை. 10 அவர் மரித்தது, பாவத்திற்கென்று ஒரேதரம் மரித்தார்; அவர் பிழைத்திருக்கிறது, தேவனுக்கென்று பிழைத்திருக்கிறார். 11 அப்படியே நீங்களும், உங்களைப் பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள். 12 ஆகையால், நீங்கள் சரீர இச்சைகளின்படி பாவத்திற்குக் கீழ்ப்படியத்தக்கதாக, சாவுக்கேதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாதிருப்பதாக. 13 நீங்கள் உங்கள் அவயவங்களை அநீதியின் ஆயுதங்களாகப் பாவத்திற்கு ஒப்புக்கொடாமல், உங்களை மரித்தோரிலிருந்து பிழைத்திருக்கிறவர்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்து, உங்கள் அவயவங்களை நீதிக்குரிய ஆயுதங்களாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். 14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது. 15 இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவஞ்செய்யலாமா? கூடாதே. 16 மரணத்துக்கேதுவான பாவத்துக்கானாலும், நீதிக்கேதுவான கீழ்ப்படிதலுக்கானாலும், எதற்குக் கீழ்ப்படியும்படி உங்களை அடிமைகளாக ஒப்புக்கொடுக்கிறீர்களோ, அதற்கே கீழ்ப்படிகிற அடிமைகளாயிருக்கிறீர்களென்று அறியீர்களா? 17 முன்னே நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாயிருந்தும், இப்பொழுது உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேச சட்டத்திற்கு நீங்கள் மனப்பூர்வமாய்க் கீழ்ப்படிந்ததினாலே தேவனுக்கு ஸ்தோத்திரம். 18 பாவத்தினின்று நீங்கள் விடுதலையாக்கப்பட்டு, நீதிக்கு அடிமைகளானீர்கள். 19 உங்கள் மாம்ச பலவீனத்தினிமித்தம் மனுஷர் பேசுகிறபிரகாரமாய்ப் பேசுகிறேன். அக்கிரமத்தை நடப்பிக்கும்படி முன்னே நீங்கள் உங்கள் அவயவங்களை அசுத்தத்திற்கும் அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்ததுபோல, இப்பொழுது பரிசுத்தமானதை நடப்பிக்கும்படி உங்கள் அவயவங்களை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள். 20 பாவத்திற்கு நீங்கள் அடிமைகளாயிருந்த காலத்தில் நீதிக்கு நீங்கினவர்களாயிருந்தீர்கள். 21 இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே. 22 இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். 23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

7

1 நியாயப்பிரமாணத்தை அறிந்திருக்கிறவர்களுடனே பேசுகிறேன். சகோதரரே, ஒரு மனுஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணம் அவனை ஆளுகிறதென்று அறியாமலிருக்கிறீர்களா? 2 அதெப்படியென்றால், புருஷனையுடைய ஸ்திரீ தன் புருஷன் உயிரோடிருக்குமளவும் நியாயப்பிரமாணத்தின்படியே அவனுடைய நிபந்தனைக்கு உட்பட்டிருக்கிறாள்; புருஷன் மரித்த பின்பு புருஷனைப்பற்றிய பிரமாணத்தினின்று விடுதலையாயிருக்கிறாள். 3 ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம்பண்ணினாலும் விபசாரியல்ல. 4 அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள். 5 நாம் மாம்சத்திற்கு உட்பட்டிருந்த காலத்தில் நியாயப்பிரமாணத்தினாலே தோன்றிய பாவ இச்சைகள் மரணத்திற்கு ஏதுவான கனிகளைக் கொடுக்கத்தக்கதாக நம்முடைய அவயவங்களிலே பெலன்செய்தது. 6 இப்பொழுதோ நாம் பழமையான எழுத்தின்படியல்ல, புதுமையான ஆவியின்படி ஊழியஞ்செய்யத்தக்கதாக, நம்மைக் கட்டியிருந்த நியாயப்பிரமாணத்துக்கு நாம் மரித்தவர்களாகி, அதினின்று விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். 7 ஆகையால் என்ன சொல்லுவோம்? நியாயப்பிரமாணம் பாவமோ? அல்லவே. பாவம் இன்னதென்று நியாயப்பிரமாணத்தினால் நான் அறிந்தேனேயன்றி மற்றப்படி அறியவில்லை; இச்சியாதிருப்பாயாக என்று நியாயப்பிரமாணம் சொல்லாதிருந்தால், இச்சை பாவம் என்று நான் அறியாமலிருப்பேனே. 8 பாவமானது கற்பனையினாலே சமயம் பெற்றுச் சகலவித இச்சைகளையும் என்னில் நடப்பித்தது. நியாயப்பிரமாணம் இல்லாவிட்டால் பாவம் செத்ததாயிருக்குமே. 9 முன்னே நியாயப்பிரமாணமில்லாதவனாயிருந்தபோது நான் ஜீவனுள்ளவனாயிருந்தேன்; கற்பனை வந்தபோது பாவம் உயிர்கொண்டது, நான் மரித்தவனானேன். 10 இப்படியிருக்க, ஜீவனுக்கேதுவான கற்பனையே எனக்கு மரணத்துக்கேதுவாயிருக்கக்கண்டேன். 11 பாவமானது கற்பனையினாலே சமயம்பெற்று, என்னை வஞ்சித்து, அதினாலே என்னைக் கொன்றது. 12 ஆகையால் நியாயப்பிரமாணம் பரிசுத்தமுள்ளதுதான், கற்பனையும் பரிசுத்தமாயும் நீதியாயும் நன்மையாயும் இருக்கிறது. 13 இப்படியிருக்க, நன்மையானது எனக்கு மரணமாயிற்றோ? அப்படியல்ல; பாவமே எனக்கு மரணமாயிற்று; பாவம் கற்பனையினாலே மிகுந்த பாவமுள்ளதாகும்படிக்கும், அது நன்மையானதைக் கொண்டு எனக்கு மரணத்தை உண்டாக்கினதினாலே, பாவமாகவே விளங்கும்படிக்கும் அப்படியாயிற்று. 14 மேலும், நமக்குத் தெரிந்திருக்கிறபடி, நியாயப்பிரமாணம் ஆவிக்குரியதாயிருக்கிறது, நானோ பாவத்துக்குக் கீழாக விற்கப்பட்டு, மாம்சத்துக்குரியவனாயிருக்கிறேன். 15 எப்படியெனில், நான் செய்கிறது எனக்கே சம்மதியில்லை; நான் விரும்புகிறதைச் செய்யாமல், நான் வெறுக்கிறதையே செய்கிறேன். 16 இப்படி நான் விரும்பாததைச் செய்கிறவனாயிருக்க, நியாயப்பிரமாணம் நல்லதென்று ஒத்துக்கொள்ளுகிறேனே. 17 ஆதலால் நான் அல்ல, எனக்குள் வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. 18 அதெப்படியெனில், என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. 19 ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். 20 அந்தப்படி நான் விரும்பாததை நான் செய்தால், நான் அல்ல, எனக்குள்ளே வாசமாயிருக்கிற பாவமே அப்படிச் செய்கிறது. 21 ஆனபடியால் நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டென்கிற ஒரு பிரமாணத்தைக் காண்கிறேன். 22 உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். 23 ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப்பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது. 24 நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்? 25 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துமூலமாய்த் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். ஆதலால் நானே என் மனதினாலே தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்கும், மாம்சத்தினாலேயோ பாவப்பிரமாணத்துக்கும் ஊழியஞ்செய்கிறேன்.

8

1 ஆனபடியால், கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை. 2 கிறிஸ்து இயேசுவினாலே ஜீவனுடைய ஆவியின் பிரமாணம் என்னைப் பாவம் மரணம் என்பவைகளின் பிரமாணத்தினின்று விடுதலையாக்கிற்றே. 3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததைத் தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். 4 மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நடக்கிற நம்மிடத்தில் நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படிக்கே அப்படிச் செய்தார். 5 அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள். 6 மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம். 7 எப்படியென்றால், மாம்சசிந்தை தேவனுக்கு விரோதமான பகை; அது தேவனுடைய நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது. 8 மாம்சத்துக்குட்பட்டவர்கள் தேவனுக்குப் பிரியமாயிருக்கமாட்டார்கள். 9 தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், நீங்கள் மாம்சத்துக்குட்பட்டவர்களாயிராமல் ஆவிக்குட்பட்டவர்களாயிருப்பீர்கள். கிறிஸ்துவின் ஆவியில்லாதவன் அவருடையவனல்ல. 10 மேலும் கிறிஸ்து உங்களிலிருந்தால் சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும். 11 அன்றியும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினவருடைய ஆவி உங்களில் வாசமாயிருந்தால், கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பினவர் உங்களில் வாசமாயிருக்கிற தம்முடைய ஆவியினாலே சாவுக்கேதுவான உங்கள் சரீரங்களையும் உயிர்ப்பிப்பார். 12 ஆகையால் சகோதரரே, மாம்சத்தின்படி பிழைப்பதற்கு நாம் மாம்சத்துக்குக் கடனாளிகளல்ல. 13 மாம்சத்தின்படி பிழைத்தால் சாவீர்கள்; ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழித்தால் பிழைப்பீர்கள். 14 மேலும் எவர்கள் தேவனுடைய ஆவியினாலே நடத்தப்படுகிறார்களோ, அவர்கள் தேவனுடைய புத்திரராயிருக்கிறார்கள். 15 அந்தப்படி, திரும்பவும் பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திரசுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள். 16 நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார். 17 நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும். 18 ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன். 19 மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. 20 அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, 21 அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. 22 ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது. 23 அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீர மீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம். 24 அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன? 25 நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம். 26 அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார். 27 ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தை இன்னதென்று அறிவார். 28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். 29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; 30 எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார். 31 இவைகளைக்குறித்து நாம் என்ன சொல்லுவோம்? தேவன் நம்முடைய பட்சத்திலிருந்தால் நமக்கு விரோதமாயிருப்பவன் யார்? 32 தம்முடைய சொந்தக்குமாரனென்றும் பாராமல் நம்மெல்லாருக்காகவும் அவரை ஒப்புக்கொடுத்தவர், அவரோடேகூட மற்ற எல்லாவற்றையும் நமக்கு அருளாதிருப்பதெப்படி? 33 தேவன் தெரிந்துகொண்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்? தேவனே அவர்களை நீதிமான்களாக்குகிறவர். 34 ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறவன் யார்? கிறிஸ்துவே மரித்தவர்; அவரே எழுந்துமிருக்கிறவர்; அவரே தேவனுடைய வலதுபாரிசத்திலும் இருக்கிறவர்; நமக்காக வேண்டுதல்செய்கிறவரும் அவரே. 35 உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப்போல எண்ணப்படுகிறோம் என்று எழுதியிருக்கிறபடி நேரிட்டாலும், 36 கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ, நாசமோசமோ, பட்டயமோ? 37 இவையெல்லாவற்றிலேயும் நாம் நம்மில் அன்புகூருகிறவராலே முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே. 38 மரணமானாலும், ஜீவனானாலும், தேவதூதர்களானாலும், அதிகாரங்களானாலும், வல்லமைகளானாலும், நிகழ்காரியங்களானாலும், வருங்காரியங்களானாலும், 39 உயர்வானாலும், தாழ்வானாலும், வேறெந்தச் சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன்.

9

1 எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது; 2 நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்தஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது. 3 மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாக வேண்டுமென்று விரும்புவேனே. 4 அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே; 5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவன். ஆமென். 6 தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே. 7 அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று சொல்லியிருக்கிறதே. 8 அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள். 9 அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே. 10 இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது, 11 பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு, 12 மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது. 13 அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது. 14 ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே. 15 அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார். 16 ஆகையால் விரும்புகிறவனாலும் அல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம். 17 மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது. 18 ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார். 19 இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்துநிற்பவன் யார்? என்று என்னுடனே சொல்லுவாய். 20 அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா? 21 மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ? 22 தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், 23 தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன? 24 அவர் யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே. 25 அந்தப்படி: எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன். 26 நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது. 27 அல்லாமலும் இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் இரட்சிக்கப்படுவார்கள் என்றும்; 28 அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான். 29 அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம். 30 இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினாலாகும் நீதியே. 31 நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை. 32 என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள். 33 இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.

10

1 சகோதரரே, இஸ்ரவேலர் இரட்சிக்கப்படவேண்டும் என்பதே என் இருதயத்தின் விருப்பமும் நான் தேவனை நோக்கிச் செய்யும் விண்ணப்பமுமாயிருக்கிறது. 2 தேவனைப்பற்றி அவர்களுக்கு வைராக்கியமுண்டென்று அவர்களைக்குறித்துச் சாட்சிசொல்லுகிறேன்; ஆகிலும் அது அறிவுக்கேற்ற வைராக்கியமல்ல. 3 எப்படியென்றால், அவர்கள் தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள். 4 விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார். 5 மோசே நியாயப்பிரமாணத்தினாலாகும் நீதியைக்குறித்து: இவைகளைச் செய்கிற மனுஷன் இவைகளால் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறான். 6 விசுவாசத்தினாலாகும் நீதியானது: கிறிஸ்துவை இறங்கிவரப்பண்ணும்படி பரலோகத்துக்கு ஏறுகிறவன் யார்? 7 அல்லது கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து ஏறிவரப்பண்ணும்படி பாதாளத்துக்கு இறங்குகிறவன் யார்? என்று உன் உள்ளத்திலே சொல்லாதிருப்பாயாக என்று சொல்லுகிறதுமன்றி; 8 இந்த வார்த்தை உனக்குச் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது என்றும் சொல்லுகிறது; இந்த வார்த்தை நாங்கள் பிரசங்கிக்கிற விசுவாசத்தின் வார்த்தையே. 9 என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு, தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவாய். 10 நீதியுண்டாக இருதயத்திலே விசுவாசிக்கப்படும், இரட்சிப்புண்டாக வாயினாலே அறிக்கைபண்ணப்படும். 11 அவரை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லையென்று வேதம் சொல்லுகிறது. 12 யூதனென்றும் கிரேக்கனென்றும் வித்தியாசமே இல்லை; எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார். 13 ஆதலால் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிற எவனும் இரட்சிக்கப்படுவான். 14 அவரை விசுவாசியாதவர்கள் எப்படி அவரைத் தொழுதுகொள்ளுவார்கள்? அவரைக்குறித்துக் கேள்விப்படாதவர்கள் எப்படி விசுவாசிப்பார்கள்? பிரசங்கிக்கிறவன் இல்லாவிட்டால் எப்படிக் கேள்விப்படுவார்கள்? 15 அனுப்பப்படாவிட்டால் எப்படிப் பிரசங்கிப்பார்கள்? சமாதானத்தைக்கூறி, நற்காரியங்களைச் சுவிசேஷமாய் அறிவிக்கிறவர்களுடைய பாதங்கள் எவ்வளவு அழகானவைகள் என்று எழுதியிருக்கிறதே. 16 ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான். 17 ஆதலால் விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும். 18 இப்படியிருக்க, அவர்கள் கேள்விப்படவில்லையா என்று கேட்கிறேன்; கேள்விப்பட்டார்கள்; அவைகளின் சத்தம் பூமியெங்கும் அவைகளின் வசனங்கள் பூச்சக்கரத்துக் கடைசிவரைக்கும் செல்லுகிறதே. 19 இஸ்ரவேலர் அதை அறியவில்லையா என்று கேட்கிறேன், அறிந்தார்கள். முதலாவது, மோசே: எனக்கு ஜனங்களல்லாதவர்களைக்கொண்டு நான் உங்களுக்கு எரிச்சல் உண்டாக்குவேன்; புத்தியீனமுள்ள ஜனங்களாலே உங்களுக்குக் கோபமூட்டுவேன் என்றான். 20 அல்லாமலும் ஏசாயா: என்னைத் தேடாதவர்களாலே கண்டறியப்பட்டேன், என்னை விசாரித்துக் கேளாதவர்களுக்கு வெளியரங்கமானேன் என்று தைரியங்கொண்டு சொல்லுகிறான். 21 இஸ்ரவேலரைக்குறித்தோ: கீழ்ப்படியாதவர்களும் எதிர்த்துப் பேசுகிறவர்களுமாயிருக்கிற ஜனங்களிடத்திற்கு நாள்முழுதும் என் கைகளை நீட்டினேன் என்று அவன் சொல்லியிருக்கிறான்.

11

1 இப்படியிருக்க, தேவன் தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிட்டாரோ என்று கேட்கிறேன், தள்ளிவிடவில்லையே; நானும் ஆபிரகாமின் சந்ததியிலும் பென்யமீன் கோத்திரத்திலும் பிறந்த இஸ்ரவேலன். 2 தேவன் தாம் முன்னறிந்துகொண்ட தம்முடைய ஜனங்களைத் தள்ளிவிடவில்லை. எலியாவைக்குறித்துச் சொல்லிய இடத்தில், வேதம் சொல்லுகிறதை அறியீர்களா? அவன் தேவனை நோக்கி: 3 கர்த்தாவே, உம்முடைய தீர்க்கதரிசிகளை அவர்கள் கொலைசெய்து, உம்முடைய பலிபீடங்களை இடித்துப்போட்டார்கள்; நான் ஒருவன்மாத்திரம் மீதியாயிருக்கிறேன், என் பிராணனையும் வாங்கத்தேடுகிறார்களே என்று இஸ்ரவேலருக்கு விரோதமாய் விண்ணப்பம்பண்ணினபோது, 4 அவனுக்கு உண்டான தேவஉத்தரவு என்ன? பாகாலுக்குமுன்பாக முழங்காற்படியிடாத ஏழாயிரம்பேரை எனக்காக மீதியாக வைத்தேன் என்பதே. 5 அப்படிப்போல இக்காலத்திலேயும் கிருபையினாலே உண்டாகும் தெரிந்துகொள்ளுதலின்படி ஒரு பங்கு மீதியாயிருக்கிறது. 6 அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே. 7 அப்படியானால் என்ன? இஸ்ரவேலர் தேடுகிறதை அடையாமலிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளப்பட்டவர்களோ அதை அடைந்திருக்கிறார்கள்; மற்றவர்கள் இன்றையத்தினம்வரைக்கும் கடினப்பட்டிருக்கிறார்கள். 8 கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று. 9 அன்றியும், அவர்களுடைய பந்தி அவர்களுக்குச் சுருக்கும் கண்ணியும் இடறுதற்கான கல்லும் பதிலுக்குப் பதிலளித்தலுமாகக்கடவது; 10 காணாதபடிக்கு அவர்களுடைய கண்கள் அந்தகாரப்படக்கடவது; அவர்களுடைய முதுகை எப்போதும் குனியப்பண்ணும் என்று தாவீதும் சொல்லியிருக்கிறான். 11 இப்படியிருக்க, விழுந்துபோகும்படிக்கா இடறினார்கள் என்று கேட்கிறேன், அப்படியல்லவே; அவர்களுக்குள்ளே வைராக்கியத்தை எழுப்பத்தக்கதாக அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது. 12 அவர்களுடைய தவறு உலகத்திற்கு ஐசுவரியமும், அவர்களுடைய குறைவு புறஜாதிகளுக்கு ஐசுவரியமுமாயிருக்க, அவர்களுடைய நிறைவு எவ்வளவு அதிகமாய் அப்படியிருக்கும். 13 புறஜாதியாராகிய உங்களுடனே பேசுகிறேன்; புறஜாதிகளுக்கு நான் அப்போஸ்தலனாயிருக்கிறதினாலே என் இனத்தாருக்குள்ளே நான் வைராக்கியத்தை எழுப்பி, அவர்களில் சிலரை இரட்சிக்க வேண்டுமென்று, 14 என் ஊழியத்தை மேன்மைப்படுத்துகிறேன். 15 அவர்களைத் தள்ளிவிடுதல் உலகத்தை ஒப்புரவாக்குதலாயிருக்க, அவர்களை அங்கிகரித்துக்கொள்ளுதல் என்னமாயிராது; மரித்தோரிலிருந்து ஜீவன் உண்டானதுபோலிருக்குமல்லவோ? 16 மேலும் முதற்பலனாகிய மாவானது பரிசுத்தமாயிருந்தால், பிசைந்தமா முழுவதும் பரிசுத்தமாயிருக்கும்; வேரானது பரிசுத்தமாயிருந்தால், கிளைகளும் பரிசுத்தமாயிருக்கும். 17 சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால், 18 நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டாதே; பெருமைபாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள். 19 நான் ஒட்டவைக்கப்படுவதற்கு அந்தக் கிளைகள் முறித்துப்போடப்பட்டதென்று சொல்லுகிறாயே. 20 நல்லது, அவிசுவாசத்தினாலே அவைகள் முறித்துப்போடப்பட்டன, நீ விசுவாசத்தினாலே நிற்கிறாய்; மேட்டிமைச் சிந்தையாயிராமல் பயந்திரு. 21 சுபாவக்கிளைகளைத் தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு. 22 ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவுகிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய். 23 அன்றியும், அவர்கள் அவிசுவாசத்திலே நிலைத்திராதிருந்தால் அவர்களும் ஒட்டவைக்கப்படுவார்கள்; அவர்களை மறுபடியும் ஒட்டவைக்கிறதற்குத் தேவன் வல்லவராயிருக்கிறாரே. 24 சுபாவத்தின்படி காட்டொலிவமரத்திலிருந்து நீ வெட்டப்பட்டு, சுபாவத்திற்கு விரோதமாய் நல்ல ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்பட்டிருந்தால், சுபாவக்கிளைகளாகிய அவர்கள் தங்கள் சுய ஒலிவமரத்திலே ஒட்டவைக்கப்படுவது அதிக நிச்சயமல்லவா? 25 மேலும், சகோதரரே, நீங்கள் உங்களையே புத்திமான்களென்று எண்ணாதபடிக்கு ஒரு இரகசியத்தை நீங்கள் அறியவேண்டுமென்றிருக்கிறேன்; அதென்னவெனில், புறஜாதியாருடைய நிறைவு உண்டாகும்வரைக்கும் இஸ்ரவேலரில் ஒரு பங்குக்குக் கடினமான மனதுண்டாயிருக்கும். 26 இந்தப்பிரகாரம் இஸ்ரவேலரெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள். மீட்கிறவர் சீயோனிலிருந்து வந்து, அவபக்தியை யாக்கோபை விட்டு விலக்குவார் என்றும்; 27 நான் அவர்களுடைய பாவங்களை நீக்கும்போது, இதுவே நான் அவர்களுடனே செய்யும் உடன்படிக்கை என்றும் எழுதியிருக்கிறது. 28 சுவிசேஷத்தைக்குறித்து அவர்கள் உங்கள்நிமித்தம் பகைஞராயிருக்கிறார்கள்; தெரிந்துகொள்ளுதலைக்குறித்து அவர்கள் பிதாக்களினிமித்தம் அன்புகூரப்பட்டவர்களாயிருக்கிறார்கள். 29 தேவனுடைய கிருபைவரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே. 30 ஆதலால், நீங்கள் முற்காலத்திலே தேவனுக்குக் கீழ்ப்படியாதிருந்து, இப்பொழுது அவர்களுடைய கீழ்ப்படியாமையினாலே இரக்கம்பெற்றிருக்கிறதுபோல, 31 அவர்களும் இப்பொழுது கீழ்ப்படியாமலிருந்தும், பின்பு உங்களுக்குக் கிடைத்த இரக்கத்தினாலே இரக்கம் பெறுவார்கள். 32 எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார். 33 ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது! அவருடைய நியாயத்தீர்ப்புகள் அளவிடப்படாதவைகள், அவருடைய வழிகள் ஆராயப்படாதவைகள்! 34 கர்த்தருடைய சிந்தையை அறிந்தவன் யார்? அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்தவன் யார்? 35 தனக்குப் பதில்கிடைக்கும்படிக்கு முந்தி அவருக்கு ஒன்றைக் கொடுத்தவன் யார்? 36 சகலமும் அவராலும் அவர் மூலமாயும் அவருக்காகவும் இருக்கிறது; அவருக்கே என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

12

1 அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. 2 நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள். 3 அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும். 4 ஏனெனில், நமக்கு ஒரே சரீரத்திலே அநேக அவயவங்களிருந்தும், எல்லா அவயவங்களுக்கும் ஒரே தொழில் இராததுபோல, 5 அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயவங்களாயிருக்கிறோம். 6 நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்களானபடியினாலே, நம்மில் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிற வரத்தையுடையவன் விசுவாசப்பிரமாணத்துக்கேற்றதாகச் சொல்லக்கடவன். 7 ஊழியஞ்செய்கிறவன் ஊழியத்திலும், போதிக்கிறவன் போதிக்கிறதிலும், 8 புத்திசொல்லுகிறவன் புத்திசொல்லுகிறதிலும் தரித்திருக்கக்கடவன்; பகிர்ந்துகொடுக்கிறவன் வஞ்சனையில்லாமல் கொடுக்கக்கடவன்; முதலாளியானவன் ஜாக்கிரதையாயிருக்கக்கடவன்; இரக்கஞ்செய்கிறவன் உற்சாகத்துடனே செய்யக்கடவன். 9 உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக; தீமையை வெறுத்து, நன்மையைப்பற்றிக்கொண்டிருங்கள். 10 சகோதர சிநேகத்திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். 11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள். 12 நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள். 13 பரிசுத்தவான்களுடைய குறைவில் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள்; அந்நியரை உபசரிக்க நாடுங்கள். 14 உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றிச் சபியாதிருங்கள். 15 சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள். 16 ஒருவரோடொருவர் ஏகசிந்தையுள்ளவர்களாயிருங்கள்; மேட்டிமையானவைகளைச் சிந்தியாமல், தாழ்மையானவர்களுக்கு இணங்குங்கள்; உங்களையே புத்திமான்களென்று எண்ணாதிருங்கள். 17 ஒருவனுக்கும் தீமைக்குத் தீமைசெய்யாதிருங்கள்; எல்லா மனுஷருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுங்கள். 18 கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள். 19 பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள். 20 அன்றியும், உன் சத்துரு பசியாயிருந்தால், அவனுக்குப் போஜனங்கொடு; அவன் தாகமாயிருந்தால், அவனுக்குப் பானங்கொடு; நீ இப்படிச் செய்வதினால் அக்கினித்தழலை அவன் தலையின்மேல் குவிப்பாய். 21 நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மையினாலே வெல்லு.

13

1 எந்த மனுஷனும் மேலான அதிகாரமுள்ளவர்களுக்குக் கீழ்ப்படியக்கடவன்; ஏனென்றால், தேவனாலேயன்றி ஒரு அதிகாரமுமில்லை; உண்டாயிருக்கிற அதிகாரங்கள் தேவனாலே நியமிக்கப்பட்டிருக்கிறது. 2 ஆதலால் அதிகாரத்திற்கு எதிர்த்து நிற்கிறவன் தேவனுடைய நியமத்திற்கு எதிர்த்து நிற்கிறான்; அப்படி எதிர்த்து நிற்கிறவர்கள் தங்களுக்குத் தாங்களே ஆக்கினையை வருவித்துக்கொள்ளுகிறார்கள். 3 மேலும் அதிகாரிகள் நற்கிரியைகளுக்கல்ல, துர்க்கிரியைகளுக்கே பயங்கரமாயிருக்கிறார்கள்; ஆகையால் நீ அதிகாரத்திற்குப் பயப்படாதிருக்கவேண்டுமானால், நன்மைசெய், அதினால் உனக்குப் புகழ்ச்சி உண்டாகும். 4 உனக்கு நன்மை உண்டாகும் பொருட்டு, அவன் தேவஊழியக்காரனாயிருக்கிறான். நீ தீமைசெய்தால் பயந்திரு; பட்டயத்தை அவன் விருதாவாய்ப் பிடித்திருக்கவில்லை; தீமைசெய்கிறவன்மேல் கோபாக்கினை வரப்பண்ணும்படி, அவன் நீதியைச் செலுத்துகிற தேவஊழியக்காரனாயிருக்கிறானே. 5 ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும் கீழ்ப்படியவேண்டும். 6 இதற்காகவே நீங்கள் வரியையும் கொடுக்கிறீர்கள். அவர்கள் இந்த வேலையைப் பார்த்துவருகிற தேவஊழியக்காரராயிருக்கிறார்களே. 7 ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச் செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத் தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; எவனுக்குப் பயப்படவேண்டியதோ அவனுக்குப் பயப்படுங்கள்; எவனைக் கனம்பண்ணவேண்டியதோ அவனைக் கனம்பண்ணுங்கள். 8 ஒருவரிடத்திலொருவர் அன்புகூருகிற கடனேயல்லாமல், மற்றொன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்; பிறனிடத்தில் அன்புகூருகிறவன் நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுகிறான். 9 எப்படியென்றால், விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, இச்சியாதிருப்பாயாக என்கிற இந்தக் கற்பனைகளும், வேறே எந்தக் கற்பனையும், உன்னிடத்தில் நீ அன்புகூருகிறதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்கிற ஒரே வார்த்தையிலே தொகையாய் அடங்கியிருக்கிறது. 10 அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது. 11 நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப்பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது. 12 இரவு சென்றுபோயிற்று, பகல் சமீபமாயிற்று; ஆகையால் அந்தகாரத்தின் கிரியைகளை நாம் தள்ளிவிட்டு, ஒளியின் ஆயுதங்களைத் தரித்துக்கொள்ளக்கடவோம். 13 களியாட்டும் வெறியும், வேசித்தனமும் காமவிகாரமும், வாக்குவாதமும் பொறாமையும் உள்ளவர்களாய் நடவாமல், பகலிலே நடக்கிறவர்கள்போலச் சீராய் நடக்கக்கடவோம். 14 துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.

14

1 விசுவாசத்தில் பலவீனமுள்ளவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள்; ஆனாலும் அவனுடைய மன ஐயங்களைக் குற்றமாய் நிர்ணயிக்காமலிருங்கள். 2 ஒருவன் எந்தப் பதார்த்தத்தையும் புசிக்கலாமென்று நம்புகிறான்; பலவீனனோ மரக்கறிகளைமாத்திரம் புசிக்கிறான். 3 புசிக்கிறவன் புசியாதிருக்கிறவனை அற்பமாயெண்ணாதிருப்பானாக; புசியாதிருக்கிறவனும் புசிக்கிறவனைக் குற்றவாளியாகத் தீர்க்காதிருப்பானாக; தேவன் அவனை ஏற்றுக்கொண்டாரே. 4 மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே. 5 அன்றியும், ஒருவன் ஒருநாளை மற்றொரு நாளிலும் விசேஷமாக எண்ணுகிறான்; வேறொருவன் எல்லா நாட்களையும் சரியாக எண்ணுகிறான்; அவனவன் தன்தன் மனதிலே முழு நிச்சயத்தை உடையவனாயிருக்கக்கடவன். 6 நாட்களை விசேஷித்துக்கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளுகிறான்; நாட்களை விசேஷித்துக் கொள்ளாதவனும் கர்த்தருக்கென்று விசேஷித்துக்கொள்ளாதிருக்கிறான். புசிக்கிறவன் தேவனுக்கு ஸ்தோத்திரஞ்செலுத்துகிறபடியால், கர்த்தருக்கென்று புசிக்கிறான்; புசியாதிருக்கிறவனும் கர்த்தருக்கென்று புசியாதிருந்து, தேவனுக்கு ஸ்தோத்திரஞ் செலுத்துகிறான். 7 நம்மில் ஒருவனும் தனக்கென்று பிழைக்கிறதுமில்லை, ஒருவனும் தனக்கென்று மரிக்கிறதுமில்லை. 8 நாம் பிழைத்தாலும் கர்த்தருக்கென்று பிழைக்கிறோம், நாம் மரித்தாலும் கர்த்தருக்கென்று மரிக்கிறோம்; ஆகையால் பிழைத்தாலும் மரித்தாலும் நாம் கர்த்தருடையவர்களாயிருக்கிறோம். 9 கிறிஸ்துவும் மரித்தோர்மேலும் ஜீவனுள்ளோர்மேலும் ஆண்டவராயிருக்கும்பொருட்டு, மரித்தும் எழுந்தும் பிழைத்துமிருக்கிறார். 10 இப்படியிருக்க, நீ உன் சகோதரனைக் குற்றவாளியென்று தீர்க்கிறதென்ன? நீ உன் சகோதரனை அற்பமாய் எண்ணுகிறதென்ன? நாமெல்லாரும் கிறிஸ்துவினுடைய நியாயாசனத்திற்கு முன்பாக நிற்போமே. 11 அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. 12 ஆதலால் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான். 13 இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக்கொள்ளுங்கள். 14 ஒரு பொருளும் தன்னிலே தீட்டுள்ளதல்லவென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் அறிந்து நிச்சயித்திருக்கிறேன்; ஒருபொருளைத் தீட்டுள்ளதென்று எண்ணிக்கொள்ளுகிறவனெவனோ அவனுக்கு அது தீட்டுள்ளதாயிருக்கும். 15 போஜனத்தினாலே உன் சகோதரனுக்கு விசனமுண்டாக்கினால், நீ அன்பாய் நடக்கிறவனல்ல; அவனை உன் போஜனத்தினாலே கெடுக்காதே, கிறிஸ்து அவனுக்காக மரித்தாரே. 16 உங்கள் நன்மை தூஷிக்கப்பட இடங்கொடாதிருங்கள். 17 தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது. 18 இவைகளிலே கிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்கிறவன் தேவனுக்குப் பிரியனும் மனுஷரால் அங்கிகரிக்கப்பட்டவனுமாயிருக்கிறான். 19 ஆனபடியால் சமாதானத்துக்கடுத்தவைகளையும், அந்நியோந்நிய பக்திவிருத்தி உண்டாக்கத்தக்கவைகளையும் நாடக்கடவோம். 20 போஜனத்தினிமித்தம் தேவனுடைய கிரியையை அழித்துப்போடாதே. எந்தப் பதார்த்தமும் சுத்தமுள்ளதுதான்; ஆனாலும் இடறலுண்டாகப் புசிக்கிறவனுக்கு அது தீமையாயிருக்கும். 21 மாம்சம் புசிக்கிறதும், மதுபானம் பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும். 22 உனக்கு விசுவாசமிருந்தால் அது தேவனுக்குமுன்பாக உன்மட்டும் இருக்கட்டும். நல்லதென்று நிச்சயித்த காரியத்தில் தன்னைக் குற்றவாளியாக்காதவன் பாக்கியவான். 23 ஒருவன் சமுசயப்படுகிறவனாய்ப் புசித்தால், அவன் விசுவாசமில்லாமல் புசிக்கிறபடியினால், ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுகிறான். விசுவாசத்தினாலே வராத யாவும் பாவமே.

15

1 அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம் நமக்கே பிரியமாய் நடவாமல், பலவீனருடைய பலவீனங்களைத் தாங்கவேண்டும். 2 நம்மில் ஒவ்வொருவனும் பிறனுடைய பக்திவிருத்திக்கேதுவான நன்மையுண்டாகும்படி அவனுக்குப் பிரியமாய் நடக்கக்கடவன். 3 கிறிஸ்துவும் தமக்கே பிரியமாய் நடவாமல்: உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தைகள் என்மேல் விழுந்தது என்று எழுதியிருக்கிறபடியே நடந்தார். 4 தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது. 5 நீங்கள் ஒருமனப்பட்டு நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை ஒரே வாயினால் மகிமைப்படுத்தும்படிக்கு, 6 பொறுமையையும் ஆறுதலையும் அளிக்கும் தேவன், கிறிஸ்து இயேசுவினுடைய மாதிரியின்படியே, நீங்கள் ஏகசிந்தையுள்ளவர்களாயிருக்கும்படி உங்களுக்கு அநுக்கிரகஞ்செய்வாராக. 7 ஆதலால் தேவனுக்கு மகிமையுண்டாக, கிறிஸ்து நம்மை ஏற்றுக்கொண்டதுபோல, நீங்களும் ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்ளுங்கள். 8 மேலும், பிதாக்களுக்குப் பண்ணப்பட்ட வாக்குத்தத்தங்களை உறுதியாக்கும்படிக்கு, தேவனுடைய சத்தியத்தினிமித்தம் இயேசுகிறிஸ்து விருத்தசேதனமுள்ளவர்களுக்கு ஊழியக்காரரானாரென்றும்; 9 புறஜாதியாரும் இரக்கம் பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்துகிறார்களென்றும் சொல்லுகிறேன். அந்தப்படி: இதினிமித்தம் நான் புறஜாதிகளுக்குள்ளே உம்மை அறிக்கைபண்ணி, உம்முடைய நாமத்தைச் சொல்லி, சங்கீதம் பாடுவேன் என்று எழுதியிருக்கிறது. 10 மேலும், புறஜாதிகளே, அவருடைய ஜனங்களோடேகூடக் களிகூருங்கள் என்கிறார். 11 மேலும், புறஜாதிகளே, எல்லாரும் கர்த்தரைத் துதியுங்கள்; ஜனங்களே, எல்லாரும் அவரைப் புகழுங்கள் என்றும் சொல்லுகிறார். 12 மேலும், ஈசாயின் வேரும் புறஜாதியாரை ஆளும்படிக்கு எழும்புகிறவருமாகிய ஒருவர் தோன்றுவார்; அவரிடத்தில் புறஜாதியார் நம்பிக்கைவைப்பார்கள் என்று ஏசாயா சொல்லுகிறான். 13 பரிசுத்தஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக. 14 என் சகோதரரே, நீங்கள் நற்குணத்தினால் நிறைந்தவர்களும், சகல அறிவினாலும் நிரப்பப்பட்டவர்களும், ஒருவருக்கொருவர் புத்திசொல்ல வல்லவர்களுமாயிருக்கிறீர்களென்று நானும் உங்களைக் குறித்து நிச்சயித்திருக்கிறேன். 15 அப்படியிருந்தும், சகோதரரே, புறஜாதியாராகிய பலி பரிசுத்தஆவியினாலே பரிசுத்தமாக்கப்பட்டு, தேவனுக்குப் பிரியமான பலியாகும்படிக்கு, நான் தேவனுடைய சுவிசேஷ ஊழியத்தை நடத்தும் ஆசாரியனாயிருந்து புறஜாதிகளுக்கு இயேசுகிறிஸ்துவினுடைய ஊழியக்காரனாகும்பொருட்டு, 16 தேவன் எனக்கு அளித்த கிருபையினாலே உங்களுக்கு ஞாபகப்படுத்தும்படிக்கு இவைகளை நான் அதிக தைரியமாய் எழுதினேன். 17 ஆதலால் நான் தேவனுக்குரியவைகளைக்குறித்து இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மேன்மைபாராட்ட எனக்கு இடமுண்டு. 18 புறஜாதியாரை வார்த்தையினாலும் செய்கையினாலும் கீழ்ப்படியப்பண்ணும்படிக்கு, அற்புத அடையாளங்களின் பலத்தினாலும், தேவ ஆவியின் பலத்தினாலும், கிறிஸ்துவானவர் என்னைக்கொண்டு நடப்பித்தவைகளைச் சொல்வதல்லாமல் வேறொன்றையும் சொல்ல நான் துணிவதில்லை. 19 இப்படி எருசலேம் துவக்கிச் சுற்றிலும், இல்லிரிக்கம் தேசம்வரைக்கும், கிறிஸ்துவின் சுவிசேஷத்தைப் பூரணமாய்ப் பிரசங்கித்திருக்கிறேன். 20 மேலும் அவருடைய செய்தியை அறியாதிருந்தவர்கள் காண்பார்களென்றும், கேள்விப்படாதிருந்தவர்கள் உணர்ந்துகொள்வார்களென்றும் எழுதியிருக்கிறபடியே, 21 நான் மற்றொருவனுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டாதபடிக்கு கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி நாடுகிறேன். 22 உங்களிடத்தில் வருகிறதற்கு இதினாலே அநேகந்தரம் தடைபட்டேன். 23 இப்பொழுது இந்தத் திசைகளிலே எனக்கு இடமில்லாதபடியினாலும், உங்களிடத்தில் வரும்படி அநேக வருஷமாய் எனக்கு மிகுந்த விருப்பம் உண்டாயிருக்கிறபடியினாலும், 24 நான் ஸ்பானியா தேசத்திற்குப் பிரயாணம்பண்ணுகையில் உங்களிடத்தில் வந்து, உங்களைக் கண்டுகொள்ளவும், உங்களிடத்தில் சற்றுத் திருப்தியடைந்தபின்பு, அவ்விடத்திற்கு உங்களால் வழிவிட்டனுப்பப்படவும், எனக்குச் சமயங் கிடைக்குமென்று நம்பியிருக்கிறேன். 25 இப்பொழுதோ பரிசுத்தவான்களுக்கு உதவிசெய்யுங்காரியமாக நான் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ண எத்தனமாயிருக்கிறேன். 26 மக்கெதோனியாவிலும் அகாயாவிலுமுள்ளவர்கள் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குள்ளே இருக்கிற தரித்திரருக்காகச் சில பொருள்சகாயம் செய்ய விருப்பங்கொண்டிருக்கிறார்கள்; 27 இப்படிச்செய்வது நல்லதென்று எண்ணினார்கள்; இப்படிச் செய்கிறதற்கு அவர்கள் கடனாளிகளாயும் இருக்கிறார்கள். எப்படியென்றால் புறஜாதியார் அவர்களுடைய ஞானநன்மைகளில் பங்குபெற்றிருக்க, சரீரநன்மைகளால் அவர்களுக்கு உதவிசெய்ய இவர்கள் கடனாளிகளாயிருக்கிறார்களே. 28 இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன். 29 நான் உங்களிடத்தில் வரும்போது கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் சம்பூரணமான ஆசீர்வாதத்தோடே வருவேனென்று அறிந்திருக்கிறேன். 30 மேலும் சகோதரரே, தேவசித்தத்தினாலே நான் சந்தோஷத்துடனே உங்களிடத்தில் வந்து உங்களோடு இளைப்பாறும்படியாக, 31 யூதேயாவிலிருக்கிற அவிசுவாசிகளுக்கு நான் தப்புவிக்கப்படும்படிக்கும், நான் எருசலேமிலுள்ள பரிசுத்தவான்களுக்குச் செய்யப்போகிற தர்மசகாயம் அவர்களால் அங்கிகரிக்கப்படும்படிக்கும், 32 நீங்கள் தேவனை நோக்கிச் செய்யும் ஜெபங்களில், நான் போராடுவதுபோல நீங்களும் என்னோடுகூடப் போராடவேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினிமித்தமும், ஆவியானவருடைய அன்பினிமித்தமும், உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன். 33 சமாதானத்தின் தேவன் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக. ஆமென்.

16

1 கெங்கிரேயா ஊர் சபைக்கு ஊழியக்காரியாகிய நம்முடைய சகோதரி பெபேயாளை நீங்கள் கர்த்தருக்குள் பரிசுத்தவான்களுக்கேற்றபடி ஏற்றுக்கொண்டு, 2 எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்யவேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும் எனக்குங்கூட ஆதரவாயிருந்தவள். 3 கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன்வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள். 4 அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள். 5 அவர்களுடைய வீட்டிலே கூடிவருகிற சபையையும் வாழ்த்துங்கள். அகாயாவிலே கிறிஸ்துவுக்கு முதற்பலனாகிய என் பிரியமான எப்பனெத்தை வாழ்த்துங்கள். 6 எங்களுக்காக மிகவும் பிரயாசப்பட்ட மரியாளை வாழ்த்துங்கள். 7 அப்போஸ்தலருக்குள் பெயர்பெற்றவர்களும் எனக்கு முந்திக் கிறிஸ்துவுக்குள்ளானவர்களும் என் இனத்தாரும் என்னுடனேகூடக் காவலில் கட்டுண்டவர்களுமாயிருக்கிற அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள். 8 கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான அம்பிலியாவை வாழ்த்துங்கள். 9 கிறிஸ்துவுக்குள் நம்மோடே உடன்வேலையாளாகிய உர்பானையும், என் பிரியமான ஸ்தாக்கியையும் வாழ்த்துங்கள். 10 கிறிஸ்துவுக்குள் உத்தமனாகிய அப்பெல்லேயை வாழ்த்துங்கள். அரிஸ்தொபூலுவின் வீட்டாரை வாழ்த்துங்கள். 11 என் இனத்தானாகிய ஏரோதியோனை வாழ்த்துங்கள். நர்கீசுவின் வீட்டாரில் கர்த்தருக்குட்பட்டவர்களை வாழ்த்துங்கள். 12 கர்த்தருக்குள் பிரயாசப்படுகிற திரிபேனாளையும் திரிபோசாளையும் வாழ்த்துங்கள். கர்த்தருக்குள் மிகவும் பிரயாசப்பட்ட பிரியமான பெர்சியாளை வாழ்த்துங்கள். 13 கர்த்தருக்குள் தெரிந்துகொள்ளப்பட்ட ரூபையும், எனக்கும் தாயாகிய அவனுடைய தாயையும் வாழ்த்துங்கள். 14 அசிங்கிரீத்துவையும், பிலெகோனையும், எர்மாவையும், பத்திரொபாவையும், எர்மேயையும், அவர்களோடிருக்கிற சகோதரரையும் வாழ்த்துங்கள். 15 பிலொலோகையும், யூலியாளையும், நேரேயையும், அவனுடைய சகோதரியையும், ஒலிம்பாவையும், அவர்களோடிருக்கிற பரிசுத்தவான்களெல்லாரையும் வாழ்த்துங்கள். 16 ஒருவரையொருவர் பரிசுத்த முத்தத்தோடு வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகிறார்கள். 17 அன்றியும் சகோதரரே, நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டுமென்று உங்களுக்குப் புத்திசொல்லுகிறேன். 18 அப்படிப்பட்டவர்கள் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு ஊழியஞ்செய்யாமல் தங்கள் வயிற்றுக்கே ஊழியஞ்செய்து, நயவசனிப்பினாலும் இச்சகப்பேச்சினாலும், கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள். 19 உங்கள் கீழ்ப்படிதல் யாவருக்கும் தெரியவந்திருக்கிறது. ஆகையால் உங்களைக்குறித்துச் சந்தோஷப்படுகிறேன்; ஆனாலும் நீங்கள் நன்மைக்கு ஞானிகளும் தீமைக்குப் பேதைகளுமாயிருக்கவேண்டுமென்று விரும்புகிறேன். 20 சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின்கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென். 21 என் உடன்வேலையாளாகிய தீமோத்தேயும், என் இனத்தாராகிய லூகியும், யாசோனும், சொசிபத்தரும் உங்களை வாழ்த்துகிறார்கள். 22 இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன். 23 என்னையும் சபையனைத்தையும் உபசரித்துவருகிற காயு உங்களை வாழ்த்துகிறான். பட்டணத்து உக்கிராணக்காரனாகிய ஏரஸ்தும், சகோதரனாகிய குவர்த்தும் உங்களை வாழ்த்துகிறார்கள். 24 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். 25 ஆதிகாலமுதல் அடக்கமாயிருந்து, இப்பொழுது தீர்க்கதரிசன ஆகமங்களினாலே அநாதி தேவனுடைய கட்டளையின்படி வெளியரங்கமாக்கப்பட்டதும், சகல ஜாதிகளும் விசுவாசத்திற்குக் கீழ்ப்படியும்படிக்கு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதுமாயிருக்கிற இரகசியத்தை வெளிப்படுத்துகிறதான, 26 இயேசுகிறிஸ்துவைப்பற்றிய பிரசங்கமாகிய என் சுவிசேஷத்தின்படியே உங்களை ஸ்திரப்படுத்த வல்லவரும், 27 தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசுகிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.